மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!

மேற்குவங்க இடது முன்னணியின் மீது திருணாமுல் காங்கிரஸ் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கின்றன. 2009 துவங்கி இப்போது வரை 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பர்துவான் மாவட்டத்தில் மட்டும் 8000 பேர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை நமது தோழர்களும், ஆதரவாளர்களும் தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். இன்று நடக்கும் தேர்தல் மோசடிகளும், தாக்குதல்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதியதல்ல. இதைவிட மோசமான அரை பாசிஸ தாக்குதல்களை சந்தித்துத்தான் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். மேலும் இடது முன்னணி என்ற அணி சேர்க்கை, ஓரிரு நாட்களில் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக ஜனநாயகத்துக்காக, மக்கள் முன்னேற்றத்துக்காக, வர்க்க நலனுக்காக இடையறாது நடந்த சமரசமற்ற போராட்டங்களின் விளைபொருளே இடது முன்னணி. அது தேர்தல்களிலும் வெற்றியை ஈட்டியது.

ஒற்றுமையும் போராட்டமும்

1947ல் அரசியல் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து காங்கிரசுக்கு மாறினாலும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் காங்கிரசிடமிருந்தும் தொடர்ந்தது. ஏழை எளிய மக்கள் மீதான சுமைகளும் தொடர்ந்தன.

1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, மேற்கு வங்கமும் அந்நிலையைச் சந்தித்தது. 1950ல் கல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை விலக்கப்பட்டது. அந்த நேரம் தொட்டு, ஜனநாயக உரிமைகளுக்கான தொடர் போராட்டத்தில் மேற்கு வங்கக் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த கவனம் செலுத்தியது.

பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1952ல் நடந்த முதல் பொது தேர்தலின் போது, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 4 கட்சிகளைக் கொண்ட ஐக்கிய சோஷலிச அமைப்புக்கும் (United Socialist Organisation) உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இதில் இடம் பெற வேண்டிய சில இடதுசாரி கட்சிகள் வெளியே நின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் 9ல் போட்டியிட்டு 5ல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்ட முடிந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம், வீரம் செறிந்த ஆசிரியர் போராட்டம், உணவுக்கான இயக்கம், கல்கத்தா டிராம்வே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற போராட்டம், பெங்கால் பீகார் இணைப்பை எதிர்த்த இயக்கம், கோவா விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு (போர்ச்சுகீசிய ஆதிக்கத்திலிருந்து) என்று ஒரு பட்டியலே போட முடியும்.

திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி

இப்பின்னணியில் 1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அனைத்து சோஷலிச, ஜனநாயக, தேச பக்த, முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவல் விட்டது. மேற்குவங்கக் கமிட்டி, இடதுசாரிகளின் ஒற்றுமையைக் கட்டுவதிலும், ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தியது. அடுத்து 1957ல் சட்டமன்றத் தேர்தல் வந்த போது, கம்யூனிஸ்ட் கட்சி, 37 அம்ச திட்டத்தை (ஜனநாயக ஒற்றுமைக்கான திட்டம்) உருவாக்கி, அதன் அடிப்படையில் 4 இடதுசாரி கட்சிகளுடன் தேர்தலுக்கான அணியை உருவாக்கியது. 253 தொகுதிகளில் இந்த அணிக்கு 81 கிட்டியது.

கம்யூனிஸ்ட் கட்சி 46 பெற்று, இந்த அணியின் வலுமிக்க பங்குதாரராக உயர்ந்தது. கூட்டு போராட்டங்களும், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களும் தொடர்ந்தன. இடைப்பட்ட காலத்தில், அணியிலிருந்து சிலர் விலகி, சிலர் சேர்ந்தனர். 1962-67 காலகட்டம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் ஒரு சோதனை காலமாக இருந்தது.

காங்கிரசின் பொதுவான அடக்குமுறையும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த சூழலில் இந்திய சீன எல்லை பிரச்னையைப் பயன்படுத்தி கம்யூனிஸ்டுகளை ஓரம் கட்டுதலும் நடந்தேறின. ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சிக்குள் இருந்த திருத்தல்வாத கோஷ்டிகளும் தம் பங்குக்குப் பிரச்சனைகளை உருவாக்கியதோடு, ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தன. சில இடதுசாரி கட்சிகளும் 2 கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையை எடுத்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

1964ல் திருத்தல்வாதத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பிறகு, மேற்குவங்கத்தில் ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்துவதிலும், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை நடத்துவதிலும் வேகம் பிறந்தது. ஆனால் 1967 தேர்தல் வந்தபோது, காங்கிரஸ் எதிர்ப்பு நிலை எடுக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டுவர முடியவில்லை. சிபிஐயின் அணுகுமுறை தொடர்ந்து உதவிகரமாக இருக்கவில்லை என்பதே உண்மை. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் கொண்ட ஐக்கிய இடது முன்னணியும், சிபிஐ, பார்வர்டு பிளாக், பங்களா காங்கிரஸ் சேர்ந்த முற்போக்கு ஐக்கிய இடது முன்னணியும் என்று இரண்டு அணிகள் உருவாயின. தேர்தலுக்கு சற்று முன்னதாகக் காங்கிரசிலிருந்து விலகி உருவான பங்களா காங்கிரசை, சிபிஐ சேர்த்துக் கொண்டது. 1967 தேர்தல்தான், 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கியது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் சிறுபான்மையானது. சிபிஎம் இருந்த அணிக்கு 68 தொகுதிகளும், சிபிஐ இருந்த அணிக்கு 65 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் அணிகளில் இருந்த கட்சிகள் என்று பார்க்கும் போது, சிபிஎம்-முக்குத்தான் அதிக தொகுதிகள் கிடைத்தன. மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் இடதுசாரிகளை வழி நடத்தும் சக்தியாகப் பார்த்தனர்.

கிடைக்கும் அதிகாரம் மக்கள் நலனுக்கே:

காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டின என்பதால், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் இரு அணிகளும் இணைந்து, முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தன. 32 அம்ச திட்டத்தின் அடிப்படையில் அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவானது.

மக்கள் நலனுக்காக சிபிஎம் விட்டுக் கொடுத்த அடிப்படையில், பங்களா காங்கிரசின் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வரானார். தோழர் ஜோதிபாசு துணை பிரதமர் பொறுப்புடன் நிதி, போக்குவரத்து துறைகள் பொறுப்பை ஏற்றார். மேலும் இரு சிபிஎம் தோழர்கள் நில சீர்திருத்தத் துறையையும், அகதிகள் மறுவாழ்வு துறையையும் பெற்றனர்.

மத்திய அரசின் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாத பின்னணி உருவானது. நிதி ஒதுக்கீட்டில் பிரச்னை, பஞ்ச நிவாரணத்தில் தடை, வறட்சி மாவட்டங்களுக்கு உணவு தானிய ஒதுக்கீடு மறுப்பு என்று பழிவாங்கல் தொடந்தது. இதற்கிடையே, குறுகிய அதிகாரங்கள் மட்டுமே இருந்த போதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த அரசு சில சிறப்பான முடிவுகளை எடுத்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணியில் இருந்ததும், வலுவான சக்தியாக இருந்து பங்களிப்பு செய்ததும்தான் காரணம். உதாரணத்திற்கு ஒன்றாக முதலாளி தொழிலாளி பிரச்சனையில் முதலாளிக்கு ஆதரவாகக் காவல்துறை தலையிடாது என்ற முடிவைக் குறிப்பிடலாம். அதேபோல் முன்னெச்சரிக்கை கைது (Preventive Arrest) தடை செய்யப்பட்டது, பழிவாங்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டனர், ஒரு லட்சம் தற்காலிக அரசு ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். உபரி நிலம், ஆக்கிரமிப்பு நிலம் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடு என்று அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தச் சூழல், உரிமைகளுக்கான ஏராளமான போராட்டங்களை உருவாக்கியது. நிலத்துக்கான போராட்டம் வலுவாக நடந்தது. ஒரு சில மாதங்களில் 2.34 லட்சம் ஏக்கர் நிலம் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இது மேலாதிக்க சக்திகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலை நீண்ட காலம் நீடிக்காது என்பதைக் கட்சி புரிந்து வைத்திருந்தது. ஒரு புறம் மத்திய காங்கிரஸ் அரசின் ஒத்துழையாமையும், மறுபுறம் இடதுசாரி எதிர்ப்பு சக்திகள் மற்றும் வர்க்க எதிரிகளின் குறுக்கீடுகளும், சதிகளும் ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமையை உருவாக்கின. காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த பிரித்தாளும் சூழ்ச்சியும் நடந்தது. இச்சூழலில் ஆளுநர் தலையிட்டு சட்ட விரோதமாக 9 மாதங்களில் அரசைக் கலைத்தார்.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரசின் ஆட்சிக் கனவு நொறுங்கி, இடைக்கால தேர்தல் (1969) 3 அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஐக்கிய முன்னணியில் மிச்சமிருந்த கட்சிகள் தம் வலுவை உறுதிப்படுத்தி, திருப்திகரமாக தொகுதிப் பங்கீடும் நடத்தி, தேர்தலை சந்தித்தன. 214 தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு போட்டியிட்ட 101 தொகுதிகளில் 83 கிடைத்தன. இருப்பினும், மீண்டும் முதல்வர் பொறுப்பை விட்டுக்கொடுத்து, இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு பிப்ரவரி 1969ல் அமைக்கப்பட்டது. அஜாய் முகர்ஜி முதல்வர், தோழர் ஜோதிபாசு, உள்துறை இலாகாவையும் சேர்த்து துணை முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டது. உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களுக்கு அரசு உறுதுணையாக இருந்தது. முதல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட நிலத்துக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆக்கிரமிப்பிலும், பினாமி பெயரிலும் இருந்த சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் கைப்பற்றினர். விவசாயிகளை வெளியேற்றும் நிலை தடுக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டரை லட்சம் மில் தொழிலாளிகள், 2 லட்சத்துக்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளிகள், 50000 சணல் ஆலை தொழிலாளிகள் கணிசமாக சம்பள உயர்வு பெற்றனர். 8ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அறிவிக்கப்பட்டது. 6000 ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட்டன. குடிசைப் பகுதிகளில் வீட்டு வாடகை குறைக்கப்பட்டது. ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த சில ஜனநாயகக் கட்சிகளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள், முன்னணியை உடைத்தனர். ஒரு போலீஸ்காரரை யாரோ கொலை செய்ய, அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக திட்டமிட்டு மாற்றப்பட்டது. சட்டமன்றத்துக்குள்ளேயே ஒரு கூட்டம் புகுந்து, ஜோதிபாசுவைத் தூக்கில் போடு, அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய் என்று கலவரம் செய்தது.

முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாக உண்ணாவிரதம் அமர்ந்து, இந்த அரசு (தனது தலைமையிலான அரசையே!) காட்டுமிராண்டித்தனமானது என்று அறிவித்தார். சிபிஎம் இல்லாமல் அரசு அமைக்க பங்களா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் முயற்சி எடுத்து, அதன் ஒரு பகுதியாக அஜாய் கோஷ் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தன் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று தோழர் ஜோதிபாசு, ஆளுநரை சந்தித்துப் பேசினார். ஆனால் பங்களா காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மார்க்சிஸ்டுகளுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற நிலை எடுத்தனர். இச்சூழலில் 13 மாதங்களில் இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு கலைக்கப்பட்டு, மார்ச் 1970ல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. உண்மையில் அது கடுமையான போலீஸ் ராஜ்யமாக செயல்பட்டது.

காங்கிரசின் காட்டு தர்பார்:

குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது தினம், ஜோதிபாசுவைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. குண்டு தவறி, அருகிலிருந்த ஒரு தோழர் மீது பாய்ந்து அவர் இறந்து போனார். அன்று மாலையே, அதைக் கண்டித்து 20,000 பேர் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி நிலயங்களைப் புறக்கணித்துத் தெருவுக்கு வந்தனர். ஆலைகள் மூடப்பட்டன. பொது வேலை நிறுத்தம் நடந்தது.

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய காங்கிரஸ் ஆட்சியால் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ராணுவமும், சிஆர்பிஎஃப்-ம் பயன்படுத்தப்பட்டன. கண்மூடித்தனமான தாக்குதல், வரைமுறையற்ற கைது, ஒழித்துக்கட்டுவது, உரிமைகளை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக சக்திகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது ஏவப்பட்டன. சமூகவிரோதிகள், நக்சலைட்டுகள், சில இடங்களில் சிபிஐயும் சேர்ந்து இக்கொடுஞ்செயல்களில் ஈடுபட்டன. இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. 20,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். ஒரு லட்சம் பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 250 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பார்வர்டு பிளாக் தலைவர் ஹேமந்த பாசு பட்டப்பகலில் படுகொலையானார். அந்தக் கொலை பழி சிபிஎம் மீது சுமத்தப்பட்டு, அந்த அவதூறையும் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு நடுவே 5வது பொதுத் தேர்தலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலும் 1971ல் நடந்தன.

சிபிஎம் தலைமையில் 6 கட்சிகள் சேர்ந்து இடதுசாரி ஐக்கிய முன்னணியை உருவாக்கித் தேர்தலை சந்தித்தன. பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த கெடுபிடி, மீண்டும் ஜோதிபாசுவைக் கொல்ல முயற்சி, அவரது தொகுதியான பாராநகருக்குள் அவர் செல்ல தடை என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இருப்பினும். சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கு 123 தொகுதிகள், இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் 111 கிடைத்தன. ஆனால், ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்து, மத்திய காங்கிரஸ் ஆட்சியின் தூண்டுதலில், ஆளுநர், தனிப் பெரும் கட்சியான சிபிஎம்-ஐ ஆட்சி அமைக்க அழைக்காமல், காங்கிரஸ், பங்களா காங்கிரஸ், முஸ்லீம் லீக், கோர்க்கா லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற உதிரிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வழி கோலினார். சிபிஐ மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சிகள், இந்த அவியலுக்கு ஆதரவு கொடுத்தன. மார்க்சிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

இந்த உதிரிகளின் ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் கொலை வெறித் தாக்குதல் துவங்கியது. ராணுவம், சிஆர்பிஎஃப், உள்ளூர் போலீஸ் இவர்களுடன் சமூக விரோதிகள், முதலாளிகள், நில உடமையாளர்கள் இணைந்து தாக்குதல் தொடுத்தனர். நிலங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இடது ஜனநாயக சக்திகளின் சார்பில் இருந்த அரசு சாத்தியமாக்கிய அனைத்தும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. தொடர்ச்சியான 144 தடை உத்தரவு அமலாக்கத்தில் கூட்டங்கள் கூடப் போட முடியவில்லை. 3 மாதங்களில் அரசு பெரும்பான்மையை இழந்தது. அப்போதும் ஆளுநர் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஜனநாயக மாண்புகள் தூக்கி வீசப்பட்டன. மத்திய காங்கிரஸ் அரசு அடாவடியாக, அரசைக் கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது.

ஆளுநருக்கும் மேலாக, மத்திய அமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே என்பவரைப் பொறுப்பாக்கியது. சுதந்திர இந்தியாவில் இந்நிலை வேறு எந்த மாநிலத்துக்கும் ஏற்படவில்லை. மேற்கு வங்கத்தை இப்படியே விட்டால், இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவின் இதர பகுதிகளையும் உசுப்பேற்றும், இது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு வேட்டு வைக்கும் என்ற ஆளும் வர்க்கத்தின் பீதி, இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வைத்தது. 1969-71 காலகட்டத்தில் 543 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1967-71 காலத்தில் 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

பாராளுமன்ற ஜனநாயகத்துக்குக் கம்யூனிஸ்டுகளால் பாதிப்பு வராது. இருப்பதைப் பாதுகாத்து, மேம்படுத்தி மக்கள் ஜனநாயக மாண்புகளை உருவாக்குவதுதான் அவர்கள் நோக்கம். ஆபத்து, ஆளும் வர்க்கத்தால்தான் வரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டுவது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

மோசடி தேர்தல்:

தேர்தல் நடத்த சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மறுத்து வந்தார். இறுதியில் 1972ல் நடந்த வேண்டி வந்தது. அந்த சட்டமன்றத் தேர்தலை, சிபிஐ தவிர மற்ற அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஓரணியில் நின்று சந்திக்க முடிவெடுத்தன. இந்த விரிவான ஒற்றுமை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளின் பலன், மக்களின் நிர்ப்பந்தம் என்று பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கடுமையான, அப்பட்டமான மோசடிகளை நடத்தியது. காவல்துறை, சமூக விரோதிகள், நக்சலைட்டுகளின் உதவியுடன் வாக்குச்சாவடிகளைக் கத்தி முனையில் கைப்பற்றுதல், வன்முறை, மார்க்சிஸ்ட் ஊழியர்களைக் கொலை செய்வது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை நாம் நினைக்க முடியாத அளவு நடந்தது. 20000 தோழர்களும், ஆதரவாளர்களும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். தோழர் ஜோதிபாசு கூட, தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவிக்க நேர்ந்தது. அவரால் தொகுதிக்குள் நுழையவே முடியவில்லை. மோசடி செய்ய முடியாத இடங்களில் இடது முன்னணி வேட்பாளர்கள் அபார வாக்குகளை அள்ளினர். அந்த வாக்கு சீட்டுகள் காங்கிரசுக்கு விழுந்த வாக்குகளுடன்

இணைக்கப்பட்டு, காங்கிஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று பல இடங்களில் அறிவிக்கப்பட்டது. 51 தொகுதிகளில் தேர்தலே நடக்கவில்லை. சுமார் 200ல் மேற்கூறிய ரவுடித்தனம் நடந்தது. இப்படியாக காங்கிரஸ் ஆட்சியை அமைத்து, சித்தார்த்த சங்கர் ரே முதல்வரானார்.

‘சட்ட ரீதியாகவே’ அரை பாசிஸ அடக்குமுறையைக் காங்கிரஸ் அரசு தொடர்ந்தது. படுகொலைகள் தொடர்ந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே, நமது தோழர்கள் கடும் தாக்குதலை சந்தித்தனர். நமது தோழர்களும், அவர்களின் குடும்பங்களும் சேர்ந்து சுமார் 50,000 பேர் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்து அடைக்கலம் கேட்டனர். மாநில மையம் விரைந்து செயல்பட்டு, சத்திரங்கள் பிடித்து அவர்களைத் தங்க வைத்து, உணவுக்கான ஏற்பாட்டை செய்தது. பாதுகாப்புக்காக இரவு பகலாக செந்தொண்டர்கள் அங்கே நிறுத்தப்பட்டனர். இந்த ஏற்பாடு பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. சுமார் 5,000 தோழர்கள் பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது போலத் தெரிந்தால், உடனே அவர்கள் மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிஐடியு அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நிதி களவாடப்பட்டது. கல்லூரி தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேட்பாளர்களை நிறுத்துவது தடுக்கப்பட்டது. கட்சியும், இடதுசாரிகளும் வலுவாக இருந்த இடங்களில் கூட அரசியல் பணி செய்ய முடியவில்லை. திரிணாமுல், அடாவடித்தனத்தையும், அக்கிரமங்களையும் எங்கிருந்து கற்றுக் கொண்டது என்பது புரிகிறதா? அன்றைக்கும் நாம்தான் குறி, இன்றைக்கும் நம்மைத்தான் ரவுண்டு கட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 1970ல் தான் மம்தா பானர்ஜி காங்கிரசில் சேர்ந்து அவரது அரசியல் பிரவேசம் துவங்குகிறது. 1976ல் மாநில மகிளா காங்கிரசின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1970களில் நடந்த இந்த அடக்குமுறையில் அவர் வகித்த பங்கும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு தொழிற்சாலையில் 20% உறுப்பினர் இருந்தால்தான் தொழிற்சங்க அங்கீகாரம் என்பது அவசர சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. 5 ஆண்டுகளுக்குக் கீழ் பணி செய்த தொழிலாளிகளை எந்த அனுமதியும் இல்லாம வெளியேற்றலாம் என்பதும் அவசரச் சட்டத்தின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலை நிறுத்தமே கூடாது என்று தடுக்கும் யோசனை மத்திய அரசுக்கு தோன்றிக் கொண்டிருந்த காலம் இது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் இதையெல்லாம் கடுமையாக எதிர்த்தன. செய்தித்தாள்கள் இந்த அராஜகங்களை மூடி மறைத்தன. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உண்மைகளே தெரியவில்லை. ருசி கண்ட பூனையைப் போல, ஒரு மாநிலத்தில் ருசி கண்டுவிட்டால், சர்வாதிகாரப் போக்கை, காங்கிரஸ் இதர இடங்களுக்கும் விஸ்தரிக்கும் என்று கட்சி எச்சரிக்கை செய்ததோடு, இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்று அறைகூவல் விட்டது. 1972ன் மத்தியில் கட்சி கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில் நடந்தேவிட்டது. ஆம், இந்திரா காந்தியால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

அவசர கால நிலை பிரச்னைகளை இங்குக் குறிப்பிடவில்லை. சிபிஐ காங்கிரசுக்கான தன் ஆதரவைத் தொடர்ந்தது. திரும்பத் திரும்ப மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சிபிஐக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இடதுசாரிகள் ஒற்றுமை வேண்டும், ஆனால் அது சர்வாதிகார எதிர்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

1976ல் பொது தேர்தல் நடைபெற வேண்டும் என்றாலும், இந்திரா காந்தி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார். 1977 தேர்தலில் மக்கள், தீர்மானகரமாக வாக்களித்தனர். 30 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரசும், சிபிஐயும் சேர்ந்து தேர்தலில் நின்றனர். 42 தொகுதிகளில் 3ல் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. சிபிஐக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சி, தான் போட்டியிட்ட 20ல் 17ஐக் கைப்பற்றியது.

அந்த நேரத்தில் தோழர் ஜோதிபாசுவும், பிரமோத் தாஸ் குப்தாவும் வெளியிட்ட செய்தியில், அமைதி காக்க வேண்டும், நமது தோழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்கள் நடத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கை வைக்கக் கூடாது என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. 1972 துவங்கி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தோழர்களும், ஆதரவாளர்களும் வீடு திரும்பினர். 1972-76 காலகட்டத்தில் சுமார் 1200 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே முக்கியம்:

மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, ஜனநாயக உரிமைகள் பலவற்றை மீட்டது. மேற்கு வங்கம் உட்பட 9 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாவுடன் ஏற்பட்ட உடன்பாடு, தேச நலனின் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கீழ் தேர்தலை சந்திக்கலாம், தொகுதி பங்கீட்டை செய்யலாம் என்ற ஆலோசனையை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 52 தொகுதிகளை அதாவது 153 தொகுதிகளை ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்தது. இத்தனைக்கும் இடதுசாரிகள் வலுவாக இருந்த சூழல் அது; ஜனதாவுக்குப் பெரிதாக தளம் எதுவும் இல்லை. ஆனால், மாநில ஜனதா கட்சி, கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இல்லை, நேர்மையான தொகுதிப் பங்கீட்டுக்கும் தயாராக இல்லை. 204 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுப் பிரச்னை செய்தது. தேர்தல் தேதியும் நெருங்கவே வேறு வழியில்லாமல், இடது முன்னணி சார்பில் 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் வன்முறை, மோசடிகளை முயற்சித்தது. அவை எதிர்கொள்ளப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்று 230 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை! காங்கிரசுக்கு 20 இடங்களும், ஜனதாவுக்கு 29 இடங்களும் கிடைத்தன. முன்னணியில் இடம் பெற மறுத்த சிபிஐ 2 இடங்களிலும், எஸ்.யு.சி. 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 2 முறை ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தாலும், அணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைத்ததால் என்ன நடந்தது என்று மக்கள் பார்த்தார்கள்.

எனவே, இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் தனிப்பெரும்பான்மையை, 190 தொகுதிகளை மக்கள் அளித்தார்கள். தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தாலும், இடதுசாரி ஒற்றுமையைக் காக்க, கட்சி, கூட்டணி ஆட்சியையே அமைத்தது. அமைச்சரவையிலும் தாராளமாக இதர கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு, ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார் இடது முன்னணி ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து ஆட்சி நடத்தாது. மக்களுடன் நின்று அவர்களது ஒத்துழைப்புடன் ஆட்சி நடத்தும்!

ஆட்சிக்கு வந்தவுடன் எடுக்கப்பட்ட முதல் முடிவு….

விசாரணையின்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை, நக்சலைட்டுகள் உட்பட, விடுதலை செய்வது என்பதுதான். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. நிலச்சீர்திருத்தம் முன்னுரிமை பெற்றது. காங்கிரஸ் காலத்தில் சீரழிக்கப்பட்ட கல்வித்துறை சீரமைக்கப்பட்டது. வேலைக்கு உணவுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மத்திய மாநில அரசு உறவுகளை சீரமைக்க தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னணியில் மேற்கு வங்கம் நின்றது.

செங்கொடி குடும்பங்கள்

34 ஆண்டு ஆட்சியில் மகத்தான முன்னேற்றங்கள், சாதனைகள். நிலச்சீர்திருத்தம் உட்பட இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக பல நடவடிக்கைகள். இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2014 தேர்தலில் மிரட்டலுக்கு அஞ்சாமல் இடது முன்னணிக்கு வாக்களித்ததற்காக திருணாமுல் குண்டர்களால் வெட்டப்பட்ட சந்தனா மண்டல், கட்சி உறுப்பினர் கூடக் கிடையாது. நிலச்சீர்திருத்தம் காரணமாக நிலம் கிடைத்து தலைநிமிர்ந்த தலித் குடும்பங்களில் சந்தனாவின் குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பங்கள் தம்மை செங்கொடி குடும்பம் என்று அழைத்துக் கொள்கின்றன. அந்த விசுவாசத்தில் உயிரைப் பணயம் வைத்து செங்கொடி தாழாமல் காக்க வேண்டும் என்று செயல்பட்டிருக்கிறார்கள். தேர்தலின் போது கொல்லப்பட்ட 10 பேரும் அடிப்படை வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். பலர் கட்சி உறுப்பினர் கிடையாது. ஆனாலும், செங்கொடி காக்க, வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.

காலச் சக்கரம் ஒரு முறை முழுதாகச் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 34 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்ததற்கான அரசியல், ஸ்தாபன, நிர்வாகக் காரணங்களைக் கட்சி பரிசீலித்து, சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. நிலைமை சரியாகி, கட்சியிடமிருந்து அந்நியப் பட்ட மக்கள் பகுதியினர் மீண்டும் திரும்ப வர சற்று காலம் பிடிக்கலாம். 2014 தேர்தலில் இவ்வளவு வன்முறைக்கு மத்தியில் 30 வாக்குகள் கிடைத்திருக்கிறது. கணிசமான பகுதி மக்கள் இப்போதும் இடது முன்னணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்! தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது உண்மை, ஆனாலும் எல்லாம் போய் விட்டது என்று எண்ணத் தேவையில்லை.

1947 முதல் 1977 வரை 30 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் சந்திக்காத பிரச்னைகளோ அடக்குமுறைகளோ இல்லை. அதற்கு இடையில்தான் கட்சிக்கு வெகுஜன தளம் உருவானது. தற்போது 2008 தேர்தல் துவங்கி 6 வருடங்களாக கட்சி தன் வாக்கு பலத்தில், வெகுஜன தளத்தில் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கணிசமான தோழர்கள், கட்சி ஆட்சி நடத்திய 34 ஆண்டுகளில் வந்தவர்கள். அவர்களை வைத்துத்தான் நிலைமை எதிர்கொள்ளப்படுகிறது. அவர்களது அரசியல், தத்துவார்த்த தரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள கட்சியின் செயல்வீரர்கள் செய்யக் கூடியதெல்லாம், இந்தப் பின்னணியை மக்களுக்கு சென்று சேர்ப்பதுதான். இது விவாதப் பொருளாக மாற்றப்பட வேண்டும்.

இது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி பதவி இழந்த பிரச்னை அல்ல. இடதுசாரிகளின் வலு குறைந்தால் சமூக விரோத போக்குகள் தலைதூக்கும். 34 ஆண்டு ஆட்சியில், சாதிக் கலவரமும், மத மோதல்களும் நடக்கவில்லை என்பது இயல்பாக நடந்தேறியது அல்ல. இடதுசாரி கண்ணோட்டமும், அரசியலும் பலமாக இருக்கும் போது இத்தகைய போக்குகள் ஒதுக்கப்படும், ஓரங்கட்டப்படும். வலு குறைந்த இன்றைய பின்னணியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது, மதச்சார்பின்மை பின்னுக்குப் போய் மதவாதக் கண்ணோட்டம் வலுவாகிறது. சாதி பஞ்சாயத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாட்டாமை செய்ய ஆரம்பித்துள்ளன. ஜனநாயக உரிமைகள் அனைத்து மட்டங்களிலும் பறிக்கப்படுகின்றன. எனவே, இடதுசாரி இயக்கம் வலுவடைவது இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவேதான் தேர்தலில் தற்காலிகமாகப் பின்னடைவை சந்தித்திருந்தாலும், இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. அத்தகைய இடதுசாரி இயக்கத்துக்குப் பெருமை சேர்த்த, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் இருப்பை உறுதி செய்த, இடது ஜனநாயக மேடையின் அஸ்திவாரமாக விளங்கிய மேற்குவங்கக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தருணம் இது. அதை உறுதியாய் செய்வோம்!

ஆதாரம்:

  1. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள்
  2. மேற்கு வங்க சிபிஎம் இணைய தளக் கட்டுரைகள்
  3. The Founders of the CPI(M) – என்.ராமகிருஷ்ணன்

இடது முன்னணி அரசும், தொழில் மயமாகும் மேற்கு வங்கமும்

மேற்குவங்கம் தொழில் வளர்ச்சி காணும் சாத்தியக் கூறு தோன்றியிருக்கிறது. எந்தப் பின்னணியில்? ஏகாதிபத்திய உலகமயம், தாராளமயத்தின் தாக்குதல், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதி பத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுதல், அதன் விளைவாக பாரம்பரிய தொழில்கள் மூடப்படுதல் – ஆகிய இந்தப் பின்னணியில் தான் மேற்கு வங்க மாநிலம் தொழில் வளர்ச்சியினைக் காண வேண்டியிருக்கிறது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தொழிற் புரட்சியினைக் கண்டன; ஆனால் அது காலனி நாடுகளை சுரண்டு வதன் மூலமும், சந்தையினை தங்கள் நலனுக்கு ஏற்ப இயக்கிய முறையிலும்தான் அதைக்காண முடிந்தது. தொழிற் புரட்சியின் தேவைக்கு இந்தியாவின் நூல் மற்றும் பருத்தி துணி உற்பத்தித் தொழில் நசுக்கப்பட்டது. அதற்கோர் உதாரணம் : 1840 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சார்லஸ் டிரிவ்லென் ஆணவத்தோடு சொன்னார். இந்தியாவின் தொழில் மற்றும் பட்டறை உற்பத்தியினை துடைத் தெறிந்து விட்டோம்.

தொழிற்புரட்சி விவசாயத் துறையிலும், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கினை வேகப்படுத்தியது. அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க அம்சங்கள் இத்துறையில் பயன்படுத்தப்பட்டன; அதன் மூலம் முதலாளித்துவ போட்டிச் சந்தையின் விதிகளின் வழியே இராட்சச முதலாளித்துவ பண்ணைகள் சிறு விவசாயத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டன. நிலத்திலிருந்து வெளியேற்றப் பட்ட விவசாயிகளை வளர்ந்து வரும் தொழில் துறை உள்வாங்கிக் கொண்டது. அவர்கள் தங்களுடைய போராட்டங்கள் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை கடந்த கால (விவசாயிகளாக இருந்த) நிலையிருந்து கொஞ்சம் உயர்த்திக் கொள்ள முடிந்தது.

அமெரிக்காவில் அபரிமிதமான விவசாய நிலம் உண்டு; ஆனால் அந்தத்துறையில் மொத்த மக்கள் தொகையில் 1.5 சதம் தான் ஈடுபட்டுள்ளனர்; மொத்த தேசிய வருமானத்தில் 1.5 சதம் தான் அந்தத் துறையிலிருந்து வருகிறது. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயப் பண்ணைகள் மிகவும் குறைந்த அளவிலேயே மனித உழைப்பைப் பயன்படுத்துகின்றன. அதில் உழைக்கும் விவசாயத் தொழிலாளிக்கும், நம்நாட்டு விவசாயத் தொழிலாளிக்கும் நிறைய வேறுபாடு உண்டு, வெற்றுக்காலுடன் திறந்த உடம்போடு சேற்றில் இறங்கி அமெரிக்க விவசாயத் தொழிலாளி வேலை செய்வதில்லை; மாறாக, நல்ல உடையணிந்து பண்ணைகளில் வேலையில் ஈடுபடுகின்றனர்; அவரவர்கள் திறமைக் கேற்ப ஒரு மணிக்கு 7.5 டாலரிலிருந்து (சுமார் ரூ.344/-) 9 டாலர் வரை (சுமார் ரூ.414/-) ஊதியமாகப் பெறுகின்றனர், அவர்களின் வேலை நேரமும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான்; ஒரு மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்கின்றனர், ஆக அவர்கள் மாத வருமானம் ரூ.55000 லிருந்து ரூ.70000 வரை இருக்கும். அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு அதிகம் என்று இருந்த போதிலும், அவர்களை நம்நாட்டு விவசாயத் தொழிலாளியோடு எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பண்ணை முதலாளிகள் இந்த அளவு ஊதியம் கொடுக்க முடிகிறது என்பதற்கு இரண்டு பிரதானமான காரணங்கள் உண்டு. ஒன்று, வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க அம்சங்களின் உதவியோடு ஒரு தொழிலாளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிகிறது; இரண்டாவது உற்பத்திக்கு அரசு கொடுக்கும் மானியம் பண்ணை முதலாளிகளுக்கு உதவுகிறது. இதன் காரணமாக உயர் ஊதியம் கிடைத்தாலும் விவசாயத் தொழிலாளர் கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டே வேலை செய்கிறார்கள். அதிக வருமானம் பெறும் பகுதியினருக்கும், மிகக் குறைந்த வருமானம் பெறும் பகுதியினருக்கும் இடையே உள்ள இடைவெளி நம் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனைக்கான தீர்வு என்பது பெரிய பண்ணைகளை சிறு சிறு உடமைகளாக மாற்று வதில் இல்லை; மார்க்ஸ் சொன்னபடி அந்த நிலங்களை சமூகமயமாக்குவதில் தான் உள்ளது.

நம்நாட்டில் மேலே குறிப்பிட்ட முறையில் தொழிற் புரட்சி ஏதும் நடக்கவில்லை. ஏனெனில் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகபோக மூலதனத்திற்கு எதிராக மக்களைப் பல்வேறு போராட்டங்களில் திரட்டும் போது தான் அது நிகழும். தொழில் துறை கூட முழுமையற்ற தனித் தனிப்பகுதிகளாகத் தான் வளர்ந்தி ருக்கின்றன. விவசாயத் துறையில் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் தான் முதலாளித்துவ உறவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நம் நாட்டில் சிறு விவசாயம் தான் பிரதானமான அம்சமாக இருந்த போதிலும், போட்டி என்ற அம்சம் நுழைந்த பிறகு அதன் இடம் மாறுகிறது. ஏகாதிபத்திய உலகமயம் அந்த மாற்றத்தை வேகப்படுத்துகிறது. சமச் சீரற்ற போட்டியின் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் 30000 விவசாயிகள் வாழ்க்கை சீரழிந்து தற்கொலை செய்து கொண்டனர் என மத்திய விவசாய கமிஷன் சொல்லுகிறது. மந்தமான தொழில் வளர்ச்சிக்கு மக்கள் தொகை உயர்வோடு அதிகரித்து வரும் உழைப்பு சக்தியினைப் பயன்படுத்தும் வலுவும் இல்லை. பாரம்பரிய தொழில்களும் இதை எதிர் கொள்ள முடியவில்லை. அவைகளும் மூடப்படுகின்றன. மக்கள் தொகையின் தாக்கம் விவசாயத்தின் மீது அதிகரித்துக்கொண்டு வருகிறது. தேசிய வருமானத்தில் 21 சதம் விவசாயத் துறையிலிருந்து வருகிறது; அதே சமயம் 60 சதம் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு ஆண்டில் 130 நாட்களுக்கும் மேல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. பெறும் கூலியும் மிகவும் குறைவு; பணி நிலைமைகளும் மனிதாபி மானமற்ற நிலையில் உள்ளன.

வங்காளத்தில் நாம் காண்பது

மேற்கு வங்கம் இந்தப் பொதுவான அகில இந்திய நிலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே விவசாயிகளின் எழுச்சி மிக்க போராட்டங்களின் விளைவாக நிலச் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அது ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசின் வடிவத்திற்குள் நின்று முடிந்த அளவுக்கு நிறைவேற்றப் பட்டன. நிலப்பிரபுத்துவ பிடிப்பு என்பது கரைந்து போனது. பஞ்சாயத்துகளில் விவசாயிகளின் உற்சாகமான பங்கேற்பின் விளைவாக நீர்ப்பாசன விஸ்தரிப்பும் விளைவினை பெருக்கும் வகையில் பயிரிடுதலும் மேற்கொள்ளப்பட்டன. விவசாய உற்பத்தி யின் உயர்வு விகிதத்தில் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது. தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கின்றன. தொழில் முறை வணிகம் மற்றும் விவசாயமல்லாத துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. விவசாயமல்லாத துறைகளில் ஈடுபட்டோர் எண்ணிக்கை 1991 – 2001 ஆண்டு கால இடைவெளியில் 12.3 சதம் உயர்ந்தது. அதே விகிதத்தில் விவசாயத்தில் ஈடுபட்டோர் எண்ணிக்கை குறைந்தது. மேற்கு வங்கத்தில் மக்கள் தொகையின் அழுத்தம் அதிகம். அகில இந்திய சராசரி கணக்கில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 223 பேர் வாழ்கிறார்கள்.

ஆனால், மேற்கு வங்கத்தில் 948 பேர் வாழ்கிறார்கள். ஆகவே தான் வேலையின்மை என்பது இம்மாநிலத்தில் கடுமையான பிரச்சனை யாக உள்ளது. விவசாய குடும்பங்களில் ஓரளவு படித்த இளைஞர்கள் சேற்றிலும், சகதியிலும் பாடுபட வேண்டிய விவசாயத் தொழிலாளி யின் மோசமான நிலைமைகளை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இதைப்புரிந்து கொள்ள யாரும் பெரிய பொருளாதார நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில் நுட்பங்களின் வளர்ச்சியினை விவசாயத் துறையில் நுழைக்கிற போது அது அந்தத் துறையில் படிப்படியாக வேலை வாய்ப்பினை குறைக்கும் என்றும், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் தொழில் துறை வளர்ச்சியினைச் சார்ந்தது என்றும் புரிந்து கொள்வதற்கு பொருளாதார அரிச்சுவடிப் பாடங்களை படித்திருந்தாலே போதுமானது. ஏன், விவசாய வளர்ச்சி கூட நவீன தொழில் துறை வளர்ச்சியினைச் சார்ந்தது தான்.

இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 80 களில் மாநிலத்தை தொழில் மயமாக்கும் முயற்சியினை மேற்கொண்டது. ஆனால், உரிமம் வழங்குவது மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல விதிக்கப்படும் கட்டணங்களை சமச் சீராக்குவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசின் கொள்கை களால் அந்த முயற்சியில் முன்னேற்றம் காண முடியவில்லை. பக்ரேஷ்வர் மின் நிலையம் துவங்குவதற்கும், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கும் மேற்கு வங்கம் தாண்டிய தடைகள், அதற்காக மேற்கு வங்க மக்கள் நடத்திய போராட்டங்கள் யாவரும் அறிந்தது தான். தடைகள் நீக்கப்பட்டவுடன் மேற்கு வங்க அரசு தனது முயற்சியினை மேற்கொண்டது. 1994 ல் அன்றைய முதல்வர் ஜோதிபாசு அரசின் தொழிற் கொள்கையினை அறிவித்தார். இன்றைய இடது முன்னணி அரசும் அதே பாரம்பரியத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. அதன் பலனாக விவசாய சந்தை விரிவாக்கம் பெற்றது துணைக் கட்டுமான அமைப்புகளும், மின் உற்பத்தியும் அதன் பயன்பாடும் முன்னேற்றம் பெற்றன. திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும், விழிப்புடனும் செயல்படும் உழைப்பாளி மக்களையும் அறிவுசார் மக்கட் பகுதியினையும் மேற்கு வங்கம் பெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டது. நாணயத்துடன் செயல்படும் அமைச்சரவை அங்கே பணியாற்றுகிறது. மேற்கு வங்கம்தான் கிழக்காசியாவின் நுழைவாயில். ஆகவே தொழில் ரீதியில் செயல்படும் மூலதனம் உள்ளே வரத் துவங்கியது.

ஆனால் தொழில் துவங்க நிலம் வேண்டும். அதை மேற்கு வங்க அரசு தெரிந்தெடுக்க முயற்சி எடுக்கும் போது திடீரென்று நிலத்தைக் காக்க புதிய புரவலர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் யார்? கடந்த காலத்தில் விவசாயிகளின் எதிரிகளாக இருந்தவர்கள். விவசாயிகளுக்கு சொல்லொண்ணாத் துன்பத்தை தந்து நிலத்திற்கான இயக்கங்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த நிலப்பிரபுக்களோடு கைகோர்த்து நின்றவர்கள். அரைபாசிச பயங்கர அடக்குமுறை ஆட்சியினை அந்த இயக்கங்களில் பங்கு பெற்ற விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விட்டவர்கள் – இவர்கள்தான் இன்று விவசாயிகளின் நலம் மற்றும் அவர்களின் நிலம் காக்கும் நண்பர்கள் தாங்கள்தானென்றும் தொண்டை கிழிய கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. நிலச் சீர்திருத்தங்கள் இவர்களது முதுகெலும்பை முறித்தது. அதைப் போலவே தொழில் மயமாக்குதலும் செய்யும் என்று அச்சமுற்று  நிற்கின்றனர். அவர்களது எதிர்ப்பின் நோக்கத்தினை மேற்கு வங்க மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தத்துவார்த்த மயக்கத்தில் எதிர்ப்பியக்கம்

இடது முன்னணி அரசின் தொழிற் கொள்கையினை, மார்க்சிஸ் டுகள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் எதிர்த்து நிற்பது என்பது சற்றே கவலை தரும் நிகழ்வாகும். இவர்களின் கேள்வி இது தான் – மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, சந்தைக்கு இணக்கமான உற்பத் திக் கொள்கைகளை மேற்கு வங்க அரசு ஏன் கடைப்பிடிக்கிறது? மேற்கு வங்க அரசின் நிலையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏகாதிபத் திய உலகமயம் புகுத்தும் சந்தைப் பொருளாதாரம் இடது முன்னணி அரசுக்கு உடன்பாடானதல்ல. இங்கே சந்தைப் பொருளாதாரம் என்பதை எப்படிப் பார்க்கிறோம்? உலகமயம் புகுத்தும் சந்தைப் பொருளாதாரத்தில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அந்த நாட்டின் அரசு எந்த கட்டுப்பாட்டையும் எந்த ஒரு வடிவத்திலும் செயல்படுத்த முடியாது; நலிந்த மக்கட் பிரிவின் நலன்களைப் பாதுகாக்க முடியாது; உணவு, கல்வி, உடல்நலம், குடிநீர் மற்றும் வீடு போன்ற சில அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு கொடுக்க அரசுக்கு எந்தப் பொறுப்பும் இருக்க முடியாது. அத்தகைய சந்தைப் பொருளாதாரம் மேற்கு வங்க அரசுக்கு ஏற்புடையதல்ல. ஆனாலும், மேற்கு வங்க அரசு கபட வேடம் போடுவதாக மீண்டும் மீண்டும் அந்த மார்க்சிஸ்ட் நண்பர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முதலாளிகள் மேற்கு வங்கம் வந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் சந்தையில் விலை போகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் சோசலிச அமைப்பு உருவாக்கப் போராடுகிறார்கள். ஆனால், முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சங்க போராட்டங்களின் மூலம் கூட்டு பேர உரிமைக்கும் போராடுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தனிச் சொத்து ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் நிலச் சீர்திருத்தங்கள் என்று வரும் போது விவசாயிகளுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையும் கபடவேடம் என்று சொல்லிவிட முடியுமா? இவர்களின் கூற்றுப் படி, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் கூட கபட வேடம் போடுபவர்கள் தானோ? அந்த மார்க்சீய ஆசான்கள் இன்று உயிருடன் இருந்தால் தங்கள் வழிகாட்டுதலின் விளைவு இப்படி அவலச் சுவை கொண்டதாக இருப்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள்.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரமோ திரும்ப திரும்பச் சொல்லும் மந்திரங்களோ அல்ல. பிரபஞ்சம் மற்றும் சமூக இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் பற்றிய மூலக் கூறுகளை அதன் இயக்கப் போக்கிலேயே தர்க்க ரீதியில் ஆய்வு செய்து கண்டறியும் முறைதான் மார்க்சியம். வளர்ச்சிப் போக்கின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி முழுமையும், எங்கே போக வேண்டும் என்ற அதன் இலக்கும் செயல்படுத்தும் வழிமுறையும் மாறாதிருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலில், அன்றைய வளர்ச்சியின் கட்டத்தையும் வர்க்க சக்திகளின் பலாபலத்தையும் கணக்கில் கொண்டு நிலைமைகளுக்கேற்ப பொருத்தமான முடிவுகளை எடுக்க வழிகாட்டுவதுதான் மார்க்சியம் ஆகும். லெனின் குறிப்பிடுகிறார்  பொதுவாக, சோசலிசம் அல்லது கம்யூனிசத்தின் மீது பற்று கொண்டவர்களாக இருப்பது மட்டும் போதாது. குறிப்பிட்ட காலத்தில் சமூக இணைப்பின் ஒவ்வொரு கண்ணியின் தன்மையினைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கண்ணியினை அழுத்திப் பிடித்தால் சங்கிலி இணைப்பையே கைக்கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அடுத்த முன்னேறிய சமூக அமைப்புக்கு மாறிச் செல்ல ஒரு உறுதியான தயாரிப்பு வடிவத்தைக் கொடுக்கும். இணைப்புகளின் வரிசை, அதன் வடிவங்கள், அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் முறை, வரலாற்று நிகழ்வுகளின் சங்கிலிப் பிணைப்பில் அவைகளிடையே உள்ள மாறுபட்ட அம்சங்கள் – இவையாவும் கொல்லன் செய்யும் சங்கிலி இணைப் பைப் போல் அவ்வளவு எளிதானதல்ல. (லெனின் நூல்கள் தொகுப்பு – தொகுதி 33 பக்கம் 112 – 113).  அந்த விமர்சகர்கள், சந்தைக்கு இணக்கமான தொழில்கள் உருவாக்கப்படுவதை ஏற்றுக் கொள்வ தாகச் சொல்கிறார்கள். ஆனால், டாடா போன்ற தனிமுதலாளிகளை அழைத்து தொழில் துவங்க அனுமதிப்பது என்பது முழுமையாக முதலாளித்துவத்தை வளர்க்கும் என்று வாதிடுகிறார்கள்.

இடது முன்னணி அரசு முதலாளித்துவத்தை கட்டுகிறதே என்று அதிர்ச்சி யடைந்துள்ளனர். சோசலிசம் சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு இடது முன்னணி அரசு சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அழித்துவிட்டது என்றும் கவலைப்படுகிறார்கள். தனது மூலதனம் என்ற நூலில் முதலாளித்துவ மூலதனச் சேர்க்கையின் வரலாற்று ரீதியான போக்கு என்ற பகுதியில் சோசலிசத்தின் தத்துவார்த்த அடிப்படையினை மார்க்ஸ் விளக்கிச் சொல்கிறார். விவசாயம் மற்றும் தொழில் துறையில் சிறு உற்பத்தியாளர்கள் துடைத்தெறியப் படும்போது, அபரிமிதமான உற்பத்தியினை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுணுக்க உதவியுடன் கையில் வைத்திருக்கும் பெரிய முதலாளிகள் எண்ணிலடங்கா சிறு உற்பத்தியாளர்களின் இடத் தைப் பிடித்துக் கொள்ளும் போது, சமூகச் சொத்து முழுமையும் ஒரு சிலர் கையில் குவியும்போது, உற்பத்தி முழுவதும் சமூக உற்பத்தியாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி அவைகளை கூட்டு உழைப்புக்கு உட்படுத்தாமல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலை எழுகிறபோது, உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைத் தாண்டிச் செல்லுகிறபோது, சமூக சொத்தைப் பறிப்பவர்கள் பறிக்கப்படு வார்கள். இந்த நிலை அடைய வேண்டுமானால் தொழிலாளி வர்க்க அரசு முதலாளித்துவ அரசை தூக்கி எறிய வேண்டும். அப்படி யென்றால் அதற்கு என்ன பொருள்? வளர்ந்த நாடுகளில் தொழிலாளி வர்க்கம், புரட்சியின் மூலம் அரசு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தனியார் சொத்தாக இருக்கும் அளப்பரிய சமூக உற்பத்தியினை சமூகத்தின் பொதுச் சொத்தாக மாற்றி சோசலிசத்தை உருவாக்கும் என்று பொருள். அந்த நிலை தான் மேற்கு வங்கத்தில் நிலவுகிறதா? ஆகவே, மார்க்ஸியத்திலிருந்து விலகிச் செல்வதாகச் சொல்ல முடியுமா?

அவர்களின் தோற்ற மயக்கத்தில் இ.மு. அரசு

இடது முன்னணி அரசு பற்றி மாயைகள் நிறைந்த ஒரு தோற்ற மயக்கத்தினை அவர்கள் உருவாக்குகிறார்கள். மக்களைக் குழப்ப அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மேற்கு வங்கம் முழு ஆட்சி உரிமை பெற்ற தனிநாடு அல்ல. நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசில் அது ஒரு மாநிலம். மேற்கு வங்கம் புரட்சியில் விளைந்ததல்ல. அது சோசலிச அரசையோ மக்கள் ஜனநாயக அரசையோ பெற்றிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசின் சமூகப் பொருளாதார வடிவத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரு ஜனநாயக அரசினைப் பெற்றிருக்கிறது. அதன் செயல்முறை மற்றும் திட்டங்கள் சில உடனடி நோக்கங்களை கொண்டவை. விவசாயம் மற்றும் தொழில் துறை உற்பத்தியினை அதன் முழு உற்பத்தித் திறனுக்கேற்ப வளர்ப்பதும், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சில உடனடி நிவாரணங்களை மக்களுக்கு வழங்கு வதும், ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதும், மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் மக்கள் விரோத சமூகப் பொருளாதார அமைப்பின் உள்ளார்ந்த தன்மையினை அவர்கள் புரிந்து கொள்ள வைப்பதும், ஒரு மாற்றுக் கொள்கையினை மக்கள் முன்பு வைப்பதும் – அதன் நோக்கங்களாக உள்ளன.

இடது முன்னணி அரசின் அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும். முதலாளித் துவ  வளர்ச்சி பற்றி நவம்பர் புரட்சியின் அனுபவங்களை நினைவில் கொள்வது இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்கும். அதனை சோசலிச புரட்சி என்று குறிப்பிட்ட போதிலும், உண்மையில் அது தொழிலாளி வர்க்க – விவசாயப் புரட்சி என்றுதான் லெனின் குறிப்பிட்டார். அதன் பொருள் என்ன? தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடந்த ஒரு ஜனநாயகப் புரட்சி என்று பொருள். முதலாளி வர்க்க – ஜனநாயகப் புரட்சியின் கடமையினை முடித்துவிட்டு, சோசலிசத்தை சென்றடைவது என்பது தான் அதன் பிரதானமான கடமையாகும். சீனாவில் இது புதிய ஜனநாயகப் புரட்சி என்றழைக்கப்பட்டது. நம்முடைய கட்சித் திட்டத்தில் இதை மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று குறிப்பிடுகிறோம். வரலாற்று இயல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் பற்றி விளக்கும்போது ஏங்கல்ஸ் எழுதுகிறார், சமூக மாற்றங்களையும், அரசியல் புரட்சியினையும் முடிவாகத் தீர்மானிக்கும் காரணங்களை, மனிதர்களின் மூளையிலோ நிரந்தர உண்மையினையும் நீதியினையும் புரிந்து கொள்ளும் மனிதனின் நுண்ணறிவுத் திறனிலோ தேடிக் கொண்டிருக்க முடியாது. மாறாக, சமூகத்தின் பொருள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையில் ஏற்படும் மாற்றங்களில் அவைகளைக் காண வேண்டும். அவைகளைத் தத்துவ விளக்கங்களில் தேட முடியாது. குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதாரத்தில் தேட வேண்டும். (கற்பனாவாத மற்றும் விஞ்ஞான சோசலிசம் –  ஏங்கல்ஸ் அழுத்தம் கொடுத்து இதைப் பதிவு செய்கிறார்.)

இதே கருத்தினை லெனினும் வெளியிடுகிறார். எழுச்சி அலை உயர்ந்து எழுந்தது, அதன் உச்சிப் பரப்பில் முதலில் மக்களின் அரசியல் எழுச்சியும், பின்பு ராணுவ எழுச்சியும் இடம் பெற்றன. அரசியல் மற்றும் ராணுவக் கடமைகளை அந்த எழுச்சியின் வேகத்தில் எப்படி நாம் நிறைவேற்றினோமா, அதே வேகத்தில் அதே அளவு மிகப் பெரிய பொருளாதாரக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்தோம். இன்னும் சொல்லப்போனால், போதுமான கவனம் செலுத்தாமல், அதுதான்  மெய்யெனக் கருதினோம். அதாவது கம்யூனிச வழியில் ஒரு சிறிய விவசாய நாட்டில் தொழிலாளி வர்க்க அரசு நேரடியாக உற்பத்தியினையும், விநியோகத்தையும் மேற்கொள்ளும் என நாம் எதிர்பார்த்தோம். நமது அனுபவம் அந்த எதிர்பார்ப்பு தவறு என்று நிருபித்துக்காட்டியிருக்கிறது. (லெனின் தொகுப்பு நூல்கள் – தொகுப்பு 33, பக்கம் 58)

மேலும், கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் லெனின் எழுதுகிறார், நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை யில் பெரிய அளவிலான முதலாளித்துவ தொழில் நுணுக்கத் திறனை எடுத்து கையாளாமல், சோசலிசம் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கோடிக்கணக்கான மக்களை ஈடுபடுத்தி திட்டமிட்டு செயல்படும் அரசு அமைப்பு இன்றி சோசலிசம் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. மார்க்சிஸ்ட்டுகளாகிய நாம் இதைப் பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவர் களிடம் இரண்டு விநாடிகள் கூட நாம் பேசிக் காலத்தை வீணாக்க வேண்டாம். (அராஜகவாதிகள் மற்றும் இடது சோசலிசப் புரட்சியாளர்களில் பாதிக்கு மேல் உள்ளவர்களைப் பற்றித் தான் புரிந்து கொள்ளாதவர்கள் என லெனின் குறிப்பிடுகிறார். லெனின் தொகுப்பு நூல்கள் – தொகுப்பு 32, பக்கம் 334). லெனின் இதைச் சொல்லி 85 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், அதே மாதிரி புரிந்து கொள்ளாத குழுக்களை நாம் மீண்டும் சந்திக்க வேண்டியி ருக்கிறது. சோவியத் யூனியன் புதிய பொருளாதாரக் கொள்கையினை தேர்ந்ததெடுத்த போது, லெனின் குறிப்பிடுகிற அந்த உண்மையான மார்க்சிஸ்டுகள் லெனின் முதலாளித்துவத் தோடு சமரசம் செய்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். ஆம், நாங்கள் சமரசம் தான் செய்து கொள்கிறோம் என்று பதில் சொல்லி, ஒரு வரலாற்று நிகழ்வினைச் சுட்டிக் காட்டினார்.

உலகின் மிகச் சிறந்த போர்த் தளபதி என்று கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த நோகி, ஆர்தர் துறைமுகத்தை விடுவிக்க வலிமை பொருந்திய எதிரியோடு நேரே மோதும் போது மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப் பட்டார். ஆனால்,வளைத்து முற்றுகையிடும் நீண்ட காலப் போர்த் தந்திரத்தை கடைப்பிடித்தபோது வெற்றி பெற்றார். அதைப் போலவே, நம்மை விட வலிமை படைத்த முதலாளித்துவ சக்திகளை நேரடியாக எதிர்த்து மோதும் தவறினை நாம் செய்திருக்கிறோம். நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டும், பொறுமை காத்திட வேண்டும், வெற்றி யினை ஈட்டுவதற்கு தேவையான வலிமையை பெருக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு மாற்று வழி ஏதும் இல்லை என்று லெனின் பதிலுரைத்தார். இதுதான் நமது கடைசிப் போராட்டம் என்று மக்கள் பாடும் பாடலைக் குறிப்பிட்டு லெனின், இதை நாம் பாடினாலும் கூட, அது உண்மையல்ல. பல கட்டங்களில் நாம் போராட வேண்டிய தேவை இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். இதனால், லெனின் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல என்று கூறிவிட முடியுமா?

மார்க்சியத்தின் புனிதம்

மாநிலத்தில் தொழில் வளர்ச்சி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு சில திட்டங்களை முன் வைக்கிறது. ஒப்பந்தம் காண உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்துகிறது. இதைப்பற்றி இந்த இடது விமர்சகர்கள் கேட்கிறார்கள். எதற்காக அவர்களை (முதலாளிகளை) திருப்திப்படுத்தி உள்ளே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்?. அந்த நண்பர்களின்ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்படித் தான் இருக்கிறது. புத்ததேவ் பட்டார்சார்ஜி அரசுக் கட்டிலில் கவலையற்று வீற்றிருக்க வேண்டும். அவர்முன் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசினை தங்கள் கையில் வைத்திருக்கும் முதலாளிகள் கடவுளிடம் மண்டியிட்டு வேண்டும் பக்தர்களைப் போல், முழந்தால் மண்டியிட்டு ஆசி பெற வேண்டும். இந்த ஆசையில் தான் அவர்களின் மார்க்சிய புனிதம் தொங்கிக் கொண்டிருக்கிறது. புரட்சி முடிந்த பிறகு லெனின் கூறியவைகளை இங்கே நினைவு கூறுவது சரியாக இருக்கும். வெளிநாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளும் (நாம் நிறையப் பேருக்கு சலுகை வழங்கியும், ஒரு சிலரே ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை) தொழில் நிறுவனங்களை ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறையில் (டுநயளபே) தனி முதலாளிகளுக்கு கொடுப்பதும், நிச்சயமாக முதலாளித் துவத்தை மீண்டும் கொண்டு வரும் செயல்தான். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் பகுதிதான். (தொகுப்பு 33, பக்கம் 64).

உங்களுக்குப் பக்கத்தில் முதலாளிகள், அந்நிய முதலாளிகள், சலுகைகளை பெற்றவர்கள், ஒப்பந்தக் கட்டுப்பாட்டினில் நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றவர்களும் இருப்பார்கள். 100 சதம் லாபத்தினை உங்களிடமிருந்து பிழிந்தெடுப்பார்கள். அவர்கள் உங்கள் பக்கத்திலிருந்து செயல்பட்டே பணம் படைத்தவர்களாக மாறுவார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். அதற்கிடையில் பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என்பதை நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வீர்கள். அப்படிச் செய்யும் போது தான் ஒரு கம்யூனிசக் குடியரசைக் கட்டுவதற்கு உங்களால் இயலும். நாம் வெகு விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தயக்கம் காட்டினால் கடுமையான குற்றம் புரிந்தவர்களாக இருப்போம். நாம் இந்தப் பயிற்சியினை – மேற்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் இருக்கும் நிலைகளினின்று வெளியே வர வேறு வழியேதும் இல்லை. (தொகுப்பு 33, பக்கம் 72). முதலாளிகளின் திறமையினைப் பயன்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றால் நமது பொருளாதா ரத்தைச் சரியான வழியில் நடத்திச் செல்ல முடியும். இடைப்பட்ட காலத்தில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். அவர்கள் எந்தப் பாதையில் பயணம் செய்ய வேண்டுமென நாம் விரும்பு கிறோமோ அதற்கு வழிகாட்டுகிறோம்  என்றும் லெனின் எழுதுகிறார்.

ஆகவே, மார்க்சிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர்கள் அப்படி ஒன்றும் நிலை குலைந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. வேறுசில கேள்விகளும் எழுகின்றன. டாடாவுக்கு என்பது சரிதான். ஏன் இந்தோனேசியாவின் சலிம் குழுமத்திற்கு வரவேற்பு? இந்த நிறுவனம் கம்யூனிஸ்டுகளின் ரத்தத்தில் குளித்த சுகார்தோவின் நண்பனாயிற்றே என்பது தான் அவர்கள் கவலை? முதலாளித் துவத்தின் குணாம்சங்கள் பற்றி மார்க்ஸ் பரிசீலித்தாரே தவிர மூலதனச் சொந்தக் காரர்களான முதலாளிகளைப் பற்றி அல்ல. மூலதனம் என்பது உறைந்து மாண்டு கிடக்கும் உழைப்பு. அந்த ரத்தக் காட்டேரி உயிருள்ள மனித உழைப்பை உறிஞ்சித்தான் வாழ்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அதிக உழைப்பை உறிஞ்சு கிறதோ, அவ்வளவு அதிகம் அது வாழும் என தன்னுடைய மூலதனம்என்ற நூலில் மார்க்ஸ் எழுதுகிறார். லாபத்தின் சதவீதம் உயர உயர மூலதனத்தின் செயல் எப்படி இருக்கும் என்பதை டி.ஜே. டன்னிங் என்பவரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, மார்க்ஸ் … 300 சதம் லாபத்தை பெறும்போது, அது செய்யத் தயங்கும் குற்றம் ஏதும் இல்லை. அதன் உரிமையாளனை தூக்கில் தொங்கவைக்கும் ஆபத்து மிக்க வேலை உட்பட எதையும் எடுக்கத் தயங்குவதில்லை என்று குறிப்பிடுகிறார். சியாங்கை ஷேக் லட்சக்கணக்கில் கம்யூனிஸ் டுகளை படுகொலை செய்யவில்லையா? இருந்த போதிலும் ஜப்பானை எதிர்த்து நடந்த இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு அவர் வர வேண்டியிருந்தது அல்லவா?

சரி, இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைப் பற்றிய நமது நிலைதான் என்ன? படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தோழர்களின் ரத்தத்தில் கறையான கைகள் தான் அவர்களின் கைகள். அதற்காக அவர்கள் தலைமையில் செயல்படும் மத்திய அரசைக் கவிழ்த்து விட்டு பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதிக்கலாமா? உயரிய நோக்கங்களுக்காக அண்மையில் இருக்கும் எதிரியோடு சேரும் அரசியலை மார்க்சிசம் ஏற்றுக் கொள்கிறது என்றால், பொருளாதாரத்தில் ஏன் அது கூடாது? ஒன்றுமறியா லட்சக்கணக்கான சீனா மற்றும் வியட்நாம் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால், அமெரிக்க மூலதனத்தை அவர்கள் நிராகரிக்கிறார்களா? கியூபா அமெரிக்க முதலீட்டை விரும்பவில்லையா? மீண்டும் நாம் லெனினிடம் வருவோம். பிரிட்டிஷ் முதலாளியும், எதிர்ப் புரட்சிக்காரருமான உர்டு ஹார்ட் என்பவரைக் குறிப்பிட்டு, மீண்டும் கற்றுத் தெளிய வேண்டி, நாம் ஒவ்வொருவருக்கும் ஒன்றை உறுதியளிக்க வேண்டும். புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், புதியது எதையும் கைவிட்டு விட வேண்டி நாம் பின்னோக்கிப் பார்க்கவில்லை. முதலாளிகளுக்கு சில வாய்ப்புகளைக் கொடுக்கிறோம். அது நம்மைக் கடுமையாக எதிர்க்கும் நாடு கூட நம்மோடு உறவு கொண்டு ஒப்பந்தம் காண அவர்களை நிர்பந்திக்கும். தோழர் கிராசின், நமது நாட்டிற்குள் எதிர்மறையான தலையீட்டிற்கு (எதிர்ப் புரட்சிக்கு) முதுகெலும்பாக இருந்து செயல்பட்ட உர்டு ஹார்டுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். (நவம்பர் 20, 1922 அன்று மாஸ்கோ சோவியத் நிறைவுக் கூட்டத்தில்  பேசியது)

ரத்தம் சிந்தி நடந்து முடிந்த புரட்சிக்குப் பிறகு தொழிலாளி வர்க்க அரசு உருவான பின் தான் லெனின் இந்தக் கருத்தைச் சொன்னார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் என்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆளும் வர்க்கங் களாக உள்ள நாட்டில் கூட்டாட்சி அடிப்படையில் செயல்பட வேண்டிய மாநிலம். இங்கே இடது முன்னணி எடுத்திருப்பது, லெனின் தவிர்க்க இயலாமல் மேற்கொண்ட செயல்களின் தன்மை யோடு  ஒப்பிடும் போது ஒரு சிறிய நடவடிக்கை தான். இதுவே இந்த உண்மையான மார்க்சிஸ்டுகளை நிலை குலையச் செய்யுமானால், நாம் அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. தயவு செய்து உங்கள் கற்பனை உலகிலிருந்து வெளியே வந்து யதார்த்த உலகில் காலடி எடுத்து வையுங்கள்.

அக்டோபர் 8, 2006 பிப்பிள்ஸ் டெமாக்கரசி வார இதழில் தோழர். பினாய் கோனார் எழுதிய கட்டுரையினைத் தழுவியது.

அக்டோபர் 8, 2006 பிப்பிள்ஸ் டெமாக்கரசி

தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!

“கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்து கதிர் வளர்த்தேன் – அதன்
கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை நாம் சகியோம்.”

என்றார் பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை

இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் நிலவுடைமையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இதே மாறுதல்கள் தமிழகத்திலும் நடைபெற்றது. இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதின் மூலம் தான் மக்களின் ஏழ்மை, வேலையின்மை இவற்றைப் போக்க முடியும். இது தமிழகத்திற்கும் பொறுத்தமானதே.

ஆனால், விவசாயத் துறையில் தமிழகத்தில் நடந்தது என்ன? 1960 க்குப் பின்னர் நடந்த பசுமைப்புரட்சியின் மூலம், விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. உணவு உற்பத்தி பல மடங்கு பெருகியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், விவசாய நிலங்களில் இருபோகங்கள், முப்போகங்கள் சாகுபடியாயின. தண்ணீர்த் தேவை அதிகமானது. இடுபொருட்களின் விலைகள் அதிகமாகியது. நிலத்தடி நீரின் தேவை அதிகமாகி, தமிழக நிலத்தடி நீர் முற்றிலும் தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 சதவீத நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது. நீர்ப்பாசன வசதிகளைக் காப்பாற்றுவதற்கும், பெருக்குவதற்கும் அரசு உரிய கவனம் செலுத்த வில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக சிறு, குறு விவசாயிகள் கடனிலும், வறுமையிலும் உழன்றனர். கிராமப்புறங்கள் வறுமை யில் உழன்றது. தங்களிடமிருந்த சிறுபகுதி நிலங்களை விவசாயிகள் விற்கத் தொடங்கினர் அல்லது ஈடுவைத்தனர். நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறினர். விவசாயக் கூலி வேலை வாய்ப்புக்களும் குறைந்ததால் வேலைக்காக நகரங்களை நோக்கிச் சென்றனர். தற்போது நகர வளர்ச்சியும், நெருக்கடியில் உள்ளது. தமிழகத்தில் ஏராளமான சிறு நகரங்கள் உருவாகி வருகின்றன.

நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையின் படி, 1961லும், 1970லும் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் தமிழகத்தில் அமலாக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டிருந்தால், தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் உபரியாகக் கிடைக்கும் என்று நில வருவாய் சீர்திருத்தக் கமிட்டி அறிவித் துள்ளது. 1990 வரை உபரி என அறிவிக்கப்பட்ட நிலம் 1.75 லட்சம் ஏக்கர். இந்த நிலங்களைக் கைப்பற்ற முடியாமல், நிலங்கள் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்கவில்லை.

மகாத்மா காந்தியின் சீடரான ஆச்சார்யா வினோ பாபாவே, 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி, பூமிதான இயக்கம் என்பதைத் துவக்கினார். இதன்படி, பெரும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளிடமிருந்து நிலங்கள் தானமாகப் பெற்று, அவற்றை ஏழை, எளிய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்ற கொள்கை வகுக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் மட்டும் 85,744 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, அதில் 62,745 ஏக்கர் நிலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலங்கள் ஏழை மக்களால் சாகுபடி செய்யப்படாமல், நாளடைவில் அந்தந்த பணக்கார விவசாயிகளே நிலங்களைக் கையகப்படுத்திக் கொண்டனர். ஏப்ரல் 2006 ல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் பூதான் இயக்கத்தில் பெறப்பட்ட 3536 ஏக்கர் நிலத்தில், 1579 ஏக்கர் நிலம் மட்டுமே ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1957 ஏக்கர் நிலம் விநியோகம் செய்யப்படவில்லை.

ஏழை விவசாய மக்களுக்காக ஏற்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், பூதான் இயக்கம் போன்றவை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அதே சமயம், இடது முன்னணி ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கடுமையாக்கி 13 லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. மேலும், விவசாயத்திற்குப் பொருத்தமில்லாத, அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க பஞ்சாயத்துக்கள் விவசாயிகளின், குறிப்பாக ஏழை விவசாயிகளின் அதிகாரத்தை அதிகரித்துள்ளது.

தமிழகத்திலோ, ஏழை விவசாயிகளின் அதிகாரம் பறிபோகத் தொடங்கியது. சென்ற அதிமுக ஆட்சியில் தமிழக அரசு ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது.  (அரசாணை எம்.எஸ். எண்.189 – 2.7.2002) இதன்படி, தமிழகத்தில் உள்ள 50 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான தரிசு நிலங்களை பெரும் தொழிற்கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் அளிக்கப்படும் நிலத்தின் அதிக பட்ச அளவு 1000 ஏக்கர்கள் ஆகும். தேவை ஏற்பட்டால் இதற்கு மேலும் கூட நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதை 30.11.2004 அன்று திட்டக்குழு துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.அலுவாலியா அவர்களுடன் நடத்திய விவாதத்தின் போது, அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிடுகையில், தமிழகத்தில் தற்போது தரிசாக உள்ள சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் மற்றும் நிரந்தரமாக தரிசாக இருக்கும் நிலங்களையும் படிப்படியாக சாகுபடியின் கீழ் கொண்டு வருவதற்காக தரிசு நில மேம்பாட்டு அடங்கல் திட்டம் ஒன்றையும் நான் தொடங்கி வைத்துள்ளேன். இவ்வாண்டில், இத்திட்டத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதல் நிலைத் துறைக்கான எங்களது புதிய உத்திகளில் பயிர்களைப் பல திறப்படுத்துதல், பண்ணை உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய தொழில் நுட்ப உத்திகள் போன்றவை அடங்கும்.

அன்றைய முதலமைச்சரின் இந்த அணுகு முறை, உலகமயமாதல் கொள்கையோடு ஒன்றிணைந்தது. இக்கொள்கை யின் காரணமாக ஆங்காங்கு விவசாயக் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகத்தின் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து இச்செயலைக் கண்டித்தனர்.

தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசு ஏழை விவசாயிகளின், நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் வறுமை நிலையைப் போக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கும் திட்டத்தைத் துவக்க உள்ளது. இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 17 ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு. முதல்வர். கருணாநிதி அவர்கள் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குகிறார்.

இத்திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்பட்டால், ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒரு விடியலைக் காணலாம். தற்போது தமிழகத்தில் 2003 – 04 ஆண்டின் பருவம் மற்றும் பயிர் அறிக்கையின் படி, நடப்புத் தரிசு நிலங்கள் 9,53,963 ஹெக்டேரும், மற்ற தரிசு நிலங்கள் 18,62,861 ஹெக்டேரும் உள்ளது. மேய்ச்சல் நிலங்கள் 1,13,474 ஹெக்டேரும் உள்ளது. இந்த நிலங்களைத் தவிர

மடங்களுக்கான நிலங்கள் – 23,207 ஹெக்டேர்
கோயில் நிலங்கள் – 1,75,759 ஹெக்டேர்

நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி, ஏழை விவசாயிகளுக்கு வழங்க முடியும். தமிழகத்தில் தற்போது 60,62,786 ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலித் தொழிலாளர் களாக உள்ளனர். சராசரியாக 15,15,696 விவசாயக் கூலிக் குடும்பங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் கோயில், மடங்களின் நிலங்கள்

நிலங்கள் ஹெக்டேர் ஏக்கர்
நடப்புத் தரிசு நிலங்கள் 9,53,963 23,57,293
மற்ற தரிசுகள் 18,62,861 46,03,229
மொத்தம் 28,16,824 69,60,522
நிலங்கள் ஹெக்டேர் ஏக்கர்
மடங்களுக்கான நிலங்கள் 23,207 57,345
கோயில் நிலங்கள் 1,75,759 4,34,309
மொத்தம் 1,98,966 4,91,654

 ஆதாரம் பருவம் மற்றும் பயிர் அறிக்கை (2003 – 04) – தெற்கு ஆசியாவில் நிலச்சீர்திருத்தம் – பக்கம் 36

இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப் பட்டால், விவசாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படும். உலகில் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 6 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் நில விநியோகம் செய்யப்பட்ட சிறு விவசாயிகளின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகவங்கியின் உலக வறுமையைத் தகர்ப்போம் என்ற வெளியீட்டில், தாய்லாந்து நாட்டில் 2 ஏக்கரிலிருந்து 7 ஏக்கர் வரை உள்ள விவசாய நிலங்களின் நெல் உற்பத்தி ஏக்கருக்கு 60 சதம் வரை உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரான்ஸஸ் லேப்பி மற்றும் ஜோசப் காலின்ஸ் என்ற இரு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 1960 லிருந்து 1973 வரை உள்ள 13 ஆண்டுகளில் சிறு விவசாயிகளின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள 2000 ஆம் ஆண்டு விவசாயத்தை நோக்கி என்ற வெளியீட்டில், நிலங்களைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பு முறை விவசாயத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். பெரு விவசாயிகள் உற்பத்தி செய்வதை விட, சிறு விவசாயிகள் அதிக உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இதன் மூலம் அந்தந்த நாட்டின் வறுமையும், வேலை யின்மையும் ஒழியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இந்தியாவின் மொத்த நிலங்களில் 5 சதவீத நிலங்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டால், அது நாட்டின் 35 சதவீத ஏழ்மையை ஒழித்து விடும் என்பதை திரு.பாரத் தோக்ரா என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

1979 ல் கூடிய நிலச் சீர்திருத்தமும், ஊரக வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்த உலக மாநாட்டில் தங்களுடைய உறுதி மொழியாக கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலங்களின் மீது உரிமை வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல், 1995, 1996 ல் கூடிய பசியும், வறுமையும், உலக உணவு ஆகிய இரண்டு மாநாடுகளிலும், வறுமையையும், பசியையும் போக்க மக்களுக்கு நில உரிமை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் விநியோகம் செய்ய உள்ள தரிசு நிலங்களில் 22 சதவீதம் மாநிலத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். எனவேதான் இத்திட்டம் ஒரு தொலை நோக்குப் பார்வையோடு செயல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அரசும் மேற் கொள்ளாத இந்தத் திட்டத்தை தற்போதைய தமிழக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அண்டை  மாநிலங்களான ஆந்திராவில் 42.02 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடகாவில் 13.72 லட்சம் ஹெக்டேர் நிலமும், 4.57 லட்சம் ஹெக்டேரும் தரிசு நில விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக் கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவரை 2.7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இதுவரை விநியோகிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மட்டுமல்லாது, கோயில்கள், மடங்கள் மற்றும் டிரஸ்ட் போன்றவைகளின் பெயர் களில் ஏகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலக் குவியல் களையும், முறைப்படி அரசு கையகப்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமாகிறது. இந்த நிலங்களையும், கையகப்படுத்திக் கூட ஏழை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய முடியும். இதுவும் தற்போதைய தமிழக அரசின் கவனத்தில் உள்ளது.

இந்த தரிசு நில விநியோகத் திட்டத்தில் அரசு பிரதானமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:-

  1. கிராம விவசாயக் கணக்குகளில் கொடுக்கப்படும் நிலங்களின் உரிமை அந்தந்த விவசாயிகளின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  2. கொடுக்கப்படும் நிலங்களை வாங்கவோ, விற்கவோ, ஈடுவைக்கவோ முடியாதபடி பதிவு செய்தல் அவசியம்.
  3. நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிக்கான கடன்கள், பயிர்க் கடன்கள் போன்றவை நீண்டகாலத் தவணைகளில் திருப்பிச் செலுத்துதல் திட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இவைகளின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
  4. அந்தந்த கிராமங்களில் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, வருவாய் அதிகாரிகளுக்கு உதவியாக இக்குழு செயல்பட வேண்டும்.

இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப் பட்டால், தமிழகத்தின் விவசாயம், பொருளாதாரம் இவைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களையும், வளர்ச்சிகளையும் இத்திட்டம் உருவாக்கும். அந்த மக்களின் வாங்கும் சக்தி, வாழ்க்கைத் தரம் முதலியன உயரும். இத்திட்டத்தை முழு முயற்சியோடு செயல்படுத்த தமிழக அரசும், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்த முன்வர வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் போது, பொறுப்பற்ற அதிகாரிகள், திட்டத்தை நசுக்க நினைக்கும் அரசியல்வாதிகள், கிராமப்புறத்தில் ஏழை விவசாயிகளை அடக்கியாளும் நில உடைமையாளர்கள் மற்றும் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் ஏழை மற்றும் தலித் மக்களின் வாழ்வில் ஒரு மிகப் பெரும் மறுமலர்ச்சி ஏற்படும்.