நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

(டிரைகாண்டினெண்டல் இணைய இதழிற்காக விஜய் பிரசாத் தயாரித்த ஆவணப் பதிவின் சுருக்கம், தமிழில் – சிந்தன்)

2020, அக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூறாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில் அறிந்துகொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே நாட்டுப்பற்றோடு இயங்கினார்கள். இந்தியாவின் சமூக – பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில், அவர்களின் நடவடிக்கைகள் வேர்விட்டிருக்கின்றன. அதே நேரத்தில், உலகின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், உலக மக்களின் விடுதலையையும் தங்கள் சிந்தனையில் பிரிக்க முடியாத அங்கமாக கொண்டே செயல்பட்டார்கள். இவ்வாறு செயல்படுவதால் உடனடி அரசியலில் பலன் கொடுக்காது என்றபோதிலும் அவர்கள் இந்த கண்ணோட்டத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்:

சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனென்றால் அது சோவியத் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுதலையை பெற்றுத்தரவில்லை; உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு திசைவழி காட்டுவதாகவும் இருந்தது.

இந்திய புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் (இப்போதைய ரஷ்யாவின்) தாஷ்கெண்ட் பகுதியில் சந்தித்தார்கள். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவாக்கினார்கள். இதற்கு இந்தியரும், மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.என்.ராய் உதவி செய்தார்.

1920 காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி இயங்கின. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர், லாகூரில் குலாம் உசேன் ஆகியவர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி உருவான குழுக்களுக்கு மார்க்சிய-லெனினிய தத்துவக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

எம்.என்.ராயுடன் தொடர்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் , இப்போதைய உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கான்பூர் நகரத்தில் ஒரு மாநாடு கூட்டினார்கள். 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 முதல் 28 வரை 3 நாட்கள் அந்த மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதி கம்யூனிஸ்டுகள் கான்பூர் மாநாட்டினை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.

தடைக் கற்களே படிக்கட்டாக:

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து முழுவிடுதலை வேண்டும் என்ற குரலை இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே எழுப்பினார்கள். இந்திய மக்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியம் முன்னுதாரணமாக  அமைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் கூட்டத்தில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்தார்கள். அந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றபோதிலும் தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகரித்தது.

1920களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் தொழிற்சங்கங்கள் உதயமாகின. 1928-29 காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அலையடித்தன. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர் போராட்டங்களும், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தீரம் மிகுந்த உதாரணமாக அமைந்தன.

பிரிட்டிஷ் அரசாங்கம் சதி வழக்குகளை புனைந்து கம்யூனிஸ்டுகளை முடக்க முயன்றது. 1929 முதல் 1933 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மீரட் சதிவழக்கு அவற்றில் முக்கியமானதாகும். குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 27 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேடையாக்கி, தங்களின் நோக்கங்களை பிரச்சாரம் செய்தார்கள்.

1934 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளையும் தடை செய்தது. உறுப்பினராக ஆவதே குற்ற நடவடிக்கை என அறிவித்தது. இதனாலெல்லாம் கம்யூனிச லட்சியங்கள் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) இடையிலும் சோவியத் ஒன்றியம் நிகழ்த்திவந்த சாதனைகள், கம்யூனிசத்தை நோக்கிய ஈர்ப்பை அதிகப்படுத்தின.

பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தையே, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியினால் முடக்கிப் போட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நிரூபித்துக் காட்டினார்கள். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். அதே சமயம் 80 சதவீதம் வேளாண் சமுகமாக அமைந்த இந்தியாவின் விடுதலை, விவசாயிகளைத் திரட்டாமல் சாத்தியமாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். தொடக்க காலத்தில் நகர்ப்புறங்களில் குவிமையமாக வளர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ஊரகப் பகுதிகளுக்கும் தன் வேர்களைப் பரப்பியது.

விவசாயிகள் சங்கம் 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கத்தை உருவாக்கியதும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் என பல்வேறு வழிமுறைகளில் மக்களை திரட்டி, புரட்சிகர உணர்வை வளர்த்தெடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.

நிலவுடைமைக்கும் சாதிக்கும் எதிராக:

சாதியும் – வர்க்கமும் கலவையாக இயங்கிய ஊரக இந்தியாவின் பிரச்சனைகளை அவர்கள் எதிர்த்து நின்றார்கள். நிலவுடைமை சக்திகள், வட்டிக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விவசாயிகளை திரட்டினார்கள். கடன் சுழலில் சிக்கி, தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளையும், தீண்டாமையை எதிர்கொண்டதுடன், கட்டாய உழைப்பைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராகப்  போராடினார்கள்.

கம்யூனிஸ்டுகள் தலைமையின் காரணமாக விவசாயிகள் இயக்கம் வலுவடைந்தது. 1938 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 60 லட்சம் பேர் சேர்ந்திருந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்தது.

நிலவுடைமை சமூகத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராகவும், நில உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி நில உடைமையாளர்களோடு வெளிப்படையாக கூட்டு சேர்ந்து செயல்பட்டது. இந்தியத் தொழில் முதலாளிகளும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி பிரிவுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய மாகாண அரசுகள் வெளிப்படையாகவே நில உடைமையாளர்களையும், தொழில் முதலாளிகளையும் ஆதரித்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனை நினைவுகூரும்போது, இ.எம்.எஸ் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் சிலரும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வெளியேறி தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.

இரண்டாவது உலகப்போர் :

1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. இந்திய பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யாமலே, இந்திய வீரர்களை போர் முனைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும், இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு எதிரான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதனால், 1941 ஆம் ஆண்டில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறைப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

1942 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்டது. தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது, வங்கத்தை பஞ்சம் சூழ்ந்தது. மாபெரும் இந்தப் பஞ்சத்தினால் வங்கம், ஒரிஸா, அசாம், பீகார் பகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.

லாப நோக்கில் விலையை அதிகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையே இந்தப் பெரும் பஞ்சத்தினை விளைவித்தது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். உணவு தானியங்களை பதுக்கி வைத்து விலையேற்றிய வணிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. பெண்கள் தற்காப்புக் குழு அமைக்கப்பட்டு இளம் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்தார்கள். தன்னார்வலர்களும், மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அயர்வில்லாத இந்தப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத்தளத்தை விரிவாக்கின.

போருக்குப் பிறகான எழுச்சி:

இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வணிகர்கள் கடையடைப்புச் செய்தார்கள், மாணவர்கள் கல்விநிலையங்களை புறக்கணித்தார்கள். கடைசியாக, கப்பல்படை வீரர்கள் சரணடைய நேர்ந்தபோதிலும், நாடு முழுவதிலும் அவர்களுக்கு ஆதரவாக எழுந்த கிளர்ச்சியே அவர்களை அழித்தொழிப்பதில் இருந்து காத்துநின்றது.

தெபாகா இயக்கம்:

தெபாகா இயக்கம், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய மாபெரும் விவசாய எழுச்சியாகும். தெபாகா என்றால் மூன்று பங்கு என்று பொருள். விளைச்சளினை மூன்றாக பங்கிட்டு அதில் 2 பங்குகள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையே அதில் பிரதானமாக இருந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம்  4 ஆண்டுகள் இடைவிடாமல்  நடைபெற்றது.

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் வகுப்புவாத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக தெபாகா எழுச்சி அமைந்தது. மேற்குவங்கத்தில் அமைந்திருந்த முஸ்லீம் லீக் அரசாங்கம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை  ஏவியது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னணியில் போராடிய இந்து, முஸ்லிம், பழங்குடி ஆண்களும், பெண்களுமாக 73 பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது.

தெலங்கானா ஆயுதப்போராட்டம்:

தெலங்கானா ஆயுதப் போராட்டம், இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் எழுச்சிகளிலேயே மிகப்பெரியதாகும். ‘வெட்டி’என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு, நியாயப்படுத்த முடியாத வரி முறைமை ஆகியவைகளை எதிர்த்தும், நில உரிமையை முன்நிறுத்தியும் இந்த போராட்டம் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹைதராபாத்தினை ஆண்ட நிஜாம் மன்னன் ரசாக்கர்கள் என்ற குண்டர் படையையும், காவல்துறையையும் ஏவி, அடக்குமுறை செய்தபோது, ஆயுதங்களை ஏந்தி தங்களை தற்காத்தபடி விவசாயிகள் போராடினார்கள். 30 லட்சம் மக்கள் தொகை இருந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கே விநியோகம் செய்யப்பட்டன. கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலி முறை அமலாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுய நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தினார்கள்.

நிஜாமின் ஆளுகைப் பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் விதமாக 1948, செப்டம்பர் 13 ஆம் தேதி தனது நடவடிக்கையை தொடங்கியது இந்திய ஒன்றிய அரசு. இதற்கு நிஜாம் மன்னன் ஒப்புக்கொண்டதும் இந்திய ராணுவமும், காவல்துறையும் நுழைந்தன. தற்காப்பு போராட்டம் நடந்தது என்றாலும் – 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும், விவசாய போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில், 10 ஆயிரம் பேர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 3 – 4 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி, நிலவுடைமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்தது இந்திய அரசு.

புன்னப்புரா வயலார் எழுச்சி :

1946 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சியில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று பிரதமர் இருந்தார். அவர்கள் இந்தியாவின் நாடாளுமன்ற முறையை ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவைப் போன்ற ஏற்பாட்டை வலியுறுத்தினார்கள். இப்போதைய ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்த புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அமைந்தன. போராட்டக் களத்தில் பல தொழிலாளர்களை சுட்டுக் கொல்லவும் காவல்துறை தயங்கவில்லை. இருப்பினும் திருவிதாங்கூர் விரைவில் இந்தியாவின் பகுதியானது. மொழிவழி மாநிலத்திற்கான அடித்தளத்தை இப்போராட்டமே கொடுத்தது. கொச்சி, திருவிதாங்கூர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த மலபார் மாவட்டம் (மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. தமிழ்நாடு உட்பட மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்திற்கான அவசியத்தினை வலியுறுத்தி, சாத்தியமாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்கள் :

இந்தியாவின் விடுதலையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்களை உருவாக்கியது. அதுவரை அவர்கள் தீவிரமாக எதிர்த்துவந்த பிரிட்டிஷ் ஆதிக்கம் அகன்றுவிட்டது. இப்போது இந்தியர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

இந்த  அரசின் தன்மை என்ன? ஆட்சியாளர்கள் யார்? இது காலனி ஆதிக்க அரசாங்கத்தின் கைப்பாவைதானா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற சுதந்திர அரசாங்கமா? புதிய அரசையும், ஆளும் வர்க்கங்களையும் கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களோடு இணைந்து நிற்க வேண்டுமா? அல்லது அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதா? ‘ரஷ்ய’ வழிமுறையா அல்லது ‘சீன’ வழிமுறையா? இந்திய வழிமுறை என ஏதாவது உள்ளதா? இவையெல்லாம் அந்த காலகட்டத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்விகள் ஆகும். இந்த கருத்துமோதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு போக்குகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.

1950களின் மத்தியில் இருந்தே கருத்து மோதல்கள் தீவிரமாகின. விடுதலைக்கு பிறகான இந்திய அரசாங்கத்தை எப்படி மதிப்பீடு செய்வது என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது; பொருளாதார திட்டமிடலுக்கு முயன்றது; தனது இலக்கு சோசலிச வகைப்பட்ட சமுதாயத்தைக் கட்டமைப்பதே என்று கூட காங்கிரஸ் கட்சி சொல்லியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடது தன்மை கொண்ட சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு நிலவுடைமைக்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வாதிட்டனர். இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டில் கட்சியின் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என உருவானது. 1969 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் அவசியம் என நம்பிய கம்யூனிஸ்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தினார்கள். 

இடதுசாரி மாநில அரசாங்கங்கள் :

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான காலமாக, கம்யூனிஸ்டுகளின் தலைமையில் மாநில அரசுகள் அமைந்ததைப் பார்க்கலாம். பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அதன்  அரசியலும் மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் வடிவம் பெற்றுள்ளது.

மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலைப் போராட்ட காலத்தை போலவே, விடுதலைக்கு பின்னரும் வெற்றிகரமான மக்கள் போராட்டங்களை வழிநடத்தியது. இதனால் திரண்ட மக்கள் செல்வாக்கினால்தான் சில மாநிலங்களின் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. தேர்தல்களில் வெற்றி பெறுவதோ, மாநில ஆட்சிகளை வழிநடத்துவதோ, தொழிலாளிகள்-விவசாயிகளின் கையில் அரசு அதிகாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறை இல்லை என்றபோதிலும், இத்தகைய  ஆட்சிகளை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி ஒரு சில நிவாரணங்களைக் கொடுக்க முடிந்தது.

கேரளா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட சமயத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று வெற்றி சாத்தியமானது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளத்தில்  1957 ஆம் ஆண்டு முதல்  சட்டமன்ற தேர்தல் நடந்தது.   1957 ஏப்ரல் 5 ஆம் தேதி, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆட்சி உருவான ஆறாவது நாளில், அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளை அவர்களுடைய குத்தகை நிலங்களில் இருந்து வெளியேற்றத் தடை செய்தது கம்யூனிஸ்ட் அரசு. நிலச் சீர்திருத்த சட்டத்தையும் அறிமுகம் செய்தது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே நில உரிமை, நியாயமான வாடகை நிர்ணயம், நில உடைமைக்கு உச்ச வரம்பு மற்றும் விவசாயிகளே தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றிற்காக சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, கல்வித்தளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகப்படுத்தினார்கள். பொது சுகாதார கட்டமைப்பை விரிவாக்கினார்கள். நியாய விலைக் கடைகளின் வழியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நியாய விலையில் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்கள்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களை  கலகலக்கச் செய்தது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் தொடர் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியினை கலைத்தது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர்கள் நிலச்சீர்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். இதற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையோ, அடுத்து ஆட்சிக்குவந்த பிறகு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பதையோ தனித்து குறிப்பிடுவது அவசியமில்லை.

1993 ஆம் ஆண்டில் 28 லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 60 லட்சம் ஹெக்டேர் நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டுவாக்கில்  5 லட்சத்து 28 ஆயிரம் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமைக் கட்டமைப்பின் முதுகெலும்பினை தாக்குவதாக அமைந்தன. கம்யூனிஸ்டுகளின் கொள்கைளால் கல்வியறிவும், மனிதவளமும் மேம்பட்டன. இந்த மேம்பாடுகளை  1970 ஆம் ஆண்டு முதலே பல்வேறு ஆய்வுகளில் அறிய முடிந்தது.

1) மக்களின் பொருளாயத வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு நாடு அல்லது மாநிலம் செல்வச் செழிப்போடு வளர்ந்தபிறகே சாத்தியம் என்பது உண்மையில்லை.

2) மக்களால் முன்னெடுக்கப்படும் பொது நடவடிக்கைகள் வழியாக மறுபங்கீட்டை சாத்தியப்படுத்திட முடியும் – என்ற இரு படிப்பினைகளை கேரள முன்மாதிரி நமக்கு வழங்குகிறது.

மேற்கு வங்கம் :

வங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணம் ஆகும். வங்கப் பஞ்சம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்திய விடுதலையின் போது பிரிவினையும், அதையொட்டி எழுந்த வகுப்புவாத வன்முறைகளும், அந்த மாகாணத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ஏராளமான மக்கள் அகதிகளானார்கள். அகதிகளின் வாழ்விட உரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் நின்றார்கள்.

வங்க பஞ்சத்தின்போது நிவாரண நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். 1950  ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தாவின் தெருக்களில்  ‘பட்டினிப் பேரணிகள்’ நடைபெற்றன. ஏழைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரண்டார்கள். நிலச்சீர்திருத்தத்திற்கான முழக்கம் ‘தெபாகா’ இயக்கத்தின் பகுதியாக ஆனது. விவசாயிகள் சங்கம் குத்தகைதாரர்களின் உரிமைக்காக போராடியது. இவற்றால் கம்யூனிஸ்டுகள் வலிமைபெற்றார்கள்.

குறுகிய காலமே செயல்பட்ட ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணி அமைந்தது. தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஜோதிபாசு முதலமைச்சரானார். 34 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியை இடது முன்னணி வழங்கியது.

இடதுமுன்னணி அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குத்தகை விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் வகையில் ஆபரேசன் பர்க்கா முன்னெடுக்கப்பட்டது. நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதிகப்படியான நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் மூலம் பலனடைந்த பயனாளிகளில் 50% மேற்குவங்கத்திலேயே உள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தின் வழியாக நாம் அங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அளவினை உணரலாம்.

2008 ஆம் ஆண்டு வாக்கில் 29 லட்சம் விவசாயிகள் சாகுபடிக்கான நிலங்களை மறுவிநியோக திட்டங்களின் வழியாக பெற்றிருந்தனர். 15 லட்சம் விவசாயிகள் குத்தகை பதிவு பெற்றார்கள். 55 லட்சம்பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பயனடைந்தவர்களில் 55% பேர் தலித் மற்றும் பழங்குடிகள் ஆவர்.

மேற்கு வங்கத்தின் வேளாண்மையை மறுகட்டமைத்து, அதன் வழியாக  ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தியதுதான் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாகும். ஊரக வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரித்ததன் வழியாக பாசன திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட்டன. இதன் வழியாக மூன்று போக விவசாயம் சாத்தியமானது. நாட்டிலேயே அரிசி சாகுபடியில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் உருவானது.

அதிகார பரவலாக்கல் நடவடிக்கை மேற்கு வங்கத்தின் ஊரக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் உட்பட உள்ளூர் முடிவுகளை திறம்பட மேற்கொள்வதில் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான பங்குவகித்தன. இந்த சீர்திருத்தங்களால், மேற்கு வங்கத்தின் ஊரக பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள், வட்டிக்காரர்கள், சாதி ஆதிக்க சக்திகள் பலவீனமடைந்தன. தலித், பழங்குடி மக்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் மக்கள் தொகையில் அவர்களின் பங்கினை விட அதிகமாக உயர்ந்தது. இது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக வர்க்க பலம் அதிகரிக்கச் செய்தது.

திரிபுரா :

திரிபுராவில் , 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான மக்கள் விடுதலைக் குழு உருவாக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் போராட்டங்களை முன்னெடுத்தது. கந்துவட்டிக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி அகதிகள் பல்லாயிரக் கணக்கில் அலை அலையாக வரும் சிக்கலை திரிபுரா எதிர்கொண்டது. அகதிகள் தஞ்சம் அடைவது 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சூழலில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது, பழங்குடிகளை குத்தகைய நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுப்பது, அகதிகளுக்கு முறையான மறுவாழ்வு என கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலைக் குழு போராட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையை இந்தப் போராட்டங்கள் அதிகரித்தன.

1978 ஆம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்குவந்தது. நிருபன் சக்ரபர்த்தி முதலமைச்சராக தேர்வானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட விரோதமாக பழங்குடி மக்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்வதை தடுத்ததுடன், பழங்குடி நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன, குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்காக நிலச்சீர்திருத்த சட்டத்தில்  திருத்தம் செய்யப்பட்டது. 

மாவட்ட கவுன்சில் தன்னாட்சி சட்டம் மூலமாக, பழங்குடி மக்களுக்கு பிராந்திய அளவில் தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. கோக்பொரோக் என்ற பழங்குடி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பிரிவினைவாத கிளர்ச்சிகளை திரிபுரா எதிர்கொண்டது. இடது முன்னணி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த வன்முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. கல்வியறிவு, நலவாழ்வு, தனிநபர் வருமானம் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றில் திரிபுரா தனித்துவமான சாதனைகளை எட்டியது.

1978 முதல் 1988 வரையிலும், 1993 முதல் 2018 வரையிலும் இடது முன்னணி மாநில ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது மிகப்பெரும் அளவில் பணத்தைக் கொட்டியும், சமூக ஊடகங்களின் வழி மோசடிப் பிரச்சாரம் செய்தும் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் தோல்வியைக் கடந்தும் களத்தில் முன்னணியில் நிற்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம்.

நவ தாராளமய காலகட்டமும், ஒன்றிய ஆட்சிகளும்:

1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நவதாராளமய கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அமலாகத் தொடங்கின. இந்தக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை கண்டுணர்ந்துவருகிறோம். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவும் தகர்வும், இந்திய அரசின் முரட்டுத்தனமான முதலாளித்துவப் போக்கிற்கு உதவி செய்தது. மேலும், நவதாராளமய கொள்கைகள் வலதுசாரி அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சக்திகள் இந்தியாவை ஒரு இந்துத்துவ அரசாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள் நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இடைவிடமல் போராடுவதுடன், பாசிச சக்திகளையும் இடைவிடாமல் எதிர்க்கின்றனர்.

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநில கட்சிகளின் பங்களிப்பைக் கொண்டு அமைந்த கூட்டணி அரசுகளுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்தார்கள். மத்திய ஆட்சியின் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் மிக அதிகமான காணப்பட்ட ஆண்டு 2004-07 வரையிலான காலம் ஆகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி,மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கான நில உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் நவதாராளமய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு தனது நெருக்கத்தை இந்திய அரசு அதிகரித்தது. இதனை ஒட்டி இடதுசாரிகளும் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டார்கள்.

மேற்கு வங்கத்தில் பின்னடைவு:

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மாபெரும் வெற்றியை சாதித்தது. ஆனால் பொருளாதாரத்தில் நவ தாராளமயத்தின் தாக்கம் அதிகரித்த பின்னணியில் மாநிலங்கள் தங்கள் சுயாட்சியை இழந்துகொண்டிருந்தன. மாநிலங்களுக்கிடையே போட்டிச் சூழல் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் பொது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன, தொழிலாளர் உரிமைகளில் சலுகை கொடுத்து, வரிச் சலுகைகளை அள்ளி வழங்கும் மாநிலங்களை நோக்கி அந்நிய முதலீடுகள் சென்றன. இந்தப் போட்டியில்  மேற்கு வங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம் சாதித்திருந்த வளர்ச்சி மிதமாகிய நிலையில், மாற்று வழிமுறைகளை இடது முன்னணி நாட வேண்டி வந்தது.

தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சியெடுத்த இடதுமுன்னணி அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது சர்ச்சைகள் வெடித்தன. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சிகள் விவசாயிகளில் ஒரு பகுதியை இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக திருப்பினார்கள். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுமுன்னணி தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வலதுசாரிகளின் மோசடிப் பிரச்சாரங்களும், தாக்குதல்களும் தொடர்கின்றன. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வங்கத்திலும் நாடு முழுவதும் இடதுசாரிகள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தே வருகிறார்கள். அமைப்புசாராதவர்களை அமைப்பாக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் முன்கையெடுக்கிறார்கள். அரசின் திட்டப்பணிகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை வெற்றிகரமாக திரட்டியுள்ளார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பல்வேறு வேலை சூழலில் இருப்பவர்களையும் திரட்டுவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த அனைத்துப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக சாதிக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமும் அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்தே நடந்துவரும் இந்த போராட்டம் இப்போதும் தொடர்கிறது. சாதி ஒழிப்பை முன்வைத்து பல்வேறு அமைப்புகளை இணைத்த மேடையை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.

இந்துத்துவ சக்திகளின் எழுச்சியின் காரணமாக வகுப்புவாத திரட்டல் அதிகரிக்கிறது. இது கம்யூனிஸ்டுகள் கட்டமைக்கும் போராட்ட ஒற்றுமைக்கு ஆபத்தாக எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகளின் பாசிச வகைப்பட்ட திரட்சியும், பிரச்சாரமும் நவ தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சியை எதிர்கொள்ள பரந்துபட்ட மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் கூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர். இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

நவ தாராளமய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளிகளும் அரசியல் தலையீடுகளை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அடையாள அரசியலும், தனிப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளும் அதற்கான கருவிகளாக இருக்கின்றன.

முடிவாக:

இப்படியான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகால தீரம் மிக்க வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் இந்த சமயத்தில், நவ தாராளமய காலகட்டம் குறித்தும், இந்த காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களையே தங்கள் லட்சிய இலக்காக கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், அயர்வில்லாத போராட்டங்களுக்கான உற்சாகத்தை, தங்கள் சொந்த வரலாற்றிலிருந்தே பெற்றிட வேண்டும்.

சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

பி. கோவிந்தபிள்ளை, ஏகேஜி ஆராய்ச்சி & கல்வி மையம்

தமிழில்: வீ.பா.கணேசன்

சிங்காரவேலர் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில், மார்க்சிய – லெனினிய இயக்கத்தில், என்றும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரம் என்றே கூறலாம். அவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி, 18-ம் தேதியன்று பிறந்தார். சிங்காரவேலரின் வாழ்விலும், சிந்தனையிலும், அவரது பங்களிப்பிலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், சிந்திப்பதை இறுதியாக நிறுத்திக் கொள்வதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, நாசிசத்தையும் பாசிசத்தையும் சோசலிச – ஜனநாயக சக்திகள் வெற்றி கொள்வதைக் கண்ட பின்பு 1946 பிப்ரவரி 11-ம் நாள் அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அதாவது மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்களிடையே கார்ல் மார்க்ஸ்  (1818 – 1883), பிரடெரிக் எங்கெல்ஸ் (1820 -1895) ஆகியோரின் காலத்தால் என்றும் அழியாத கருத்துக்கள் உருவாகி, வெற்றியை நோக்கி நடைபோட்ட காலத்தில் சிங்காரவேலர் வாழ்ந்தார் என்று கூறுவது பொருத்தமாக அமையும். சிங்காரவேலர் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது 1948ஆம் ஆண்டிற்குள், இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்து, 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதும், சீனாவில் புரட்சி வெற்றி பெற்றதுமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. சிங்காரவேலர் போராடிய லட்சியங்கள், அதற்காக அவர் அடைந்த துயரங்கள் ஆகியவை நிறைவேறியதை சுட்டிக்காட்டுவதாகவும் அவை அமைந்தன. மேலும் அவரது தீர்க்க தரிசனம் என்பது அரசியல் விடுதலைக்கு அப்பால் சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் நோக்கியதாக அமைந்தன. தென் இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இயக்கத்தின் முதல் முன்னோடியாக அவர் விளங்கியதோடு, அதிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களை இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இகக்கம் தோன்றுவதற்கும் அர்ப்பணித்தார். சிங்காரவேலருக்கு முன்பாகக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தோற்றம் குறித்து ஒரு பார்வையை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கம்.

சிங்காரவேலருக்கு முன் இந்திய கம்யூனிசத்தின்  தோற்றம்

கம்யூனிச சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கும் சமத்துவம், மனிதநேயம் என்பவை மனித சமூகத்தின் தோற்றத்தைப் போன்றே மிகப் பழமையானவையே ஆகும். குறிப்பாக வர்க்க பேதமற்ற புராதன கம்யூனிச சமுதாயம்  உடைந்து நொறுங்கிய பிறகு இதுதான் நிலைமை. மார்க்ஸூம் எங்கல்ஸூம் தங்களது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் புராதன சமூக வரலாற்றினைத் தொடர்ந்த காலத்தில் வரலாறு என்பது ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று சுட்டிக் காட்டியதோடு, வர்க்கங்கள் தோன்றியது குறித்த விஞ்ஞான பூர்வமான பார்வையை அவர்கள் முன்வைத்து, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி முறையுடன் கூடவே ஏற்பட்ட மனித குல முன்னேற்றம் என்பதும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலின் மீது மனிதர்களின் ஆதிக்கமும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் குறிப்பிடுவது ஆகும் என்றும் எடுத்துக் கூறினர். இந்த முன்னேற்றமானது சமத்துவமற்ற நிலையையும், சுரண்டலையும், பெரும்பாலோர் துன்புறுவதையும் அதிகரிப்பதாகவே அமைந்தது. எனவே அடித்தட்டு மக்கள் காணாமல் போன புராதன சமூகத்தை நினைத்து ஏங்கி நின்றது என்பது இயற்கையான ஒன்றே ஆகும். கம்யூனிசத்தின் வித்துக்கள் அடங்கிய இந்தச் சமூகம் குறித்த புராதன கதைகளுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் வழிவகுப்பதாகவும் இந்த ஏக்கம் அமைந்திருந்தது. உலகளாவிய இத்தன்மையில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடையே வளர்ந்து மேலோங்கி நின்ற இத்தகைய கருத்துகள் முதலில் வெளிப்படையாகத் தென்படாமல் போனபோதிலும், காலப்போக்கில் படிப்படியாக மேல் தட்டு வர்க்கத்தினரின் புராணங்கள், இலக்கியங்கள், எழுத்துகள், ஆகியவற்றிலும் இடம் பெறத் துவங்கின.

மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமான சமூகத்திலிருந்தே சோசலிசம், கம்யூனிசம் போன்ற நவீன கருத்துக்கள் தோன்றின என்பதை ஒப்புக்கொண்ட பி.சி.ஜோஷி, கே.தாமோதரன் ஆகியோர் நமது புராதனகால கதைகளில் இக்கருத்துக்கள் வடிவமற்ற, புராதன வடிவங்களில் தென்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறுவதாவது:

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூகமானது நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டபோதே இந்தியாவில் மனிதநேயம் என்பது நிலவி வந்தது என்பது ஒன்றும் விசித்திரமான விசயமல்ல. ரிக்வேதத்தின் பின்னாளைய கவிஞர்களில் சிலரும், உபநிடதங்களை உருவாக்கிய தத்துவஞானிகளில் முன்னோடிகள் சிலரும் புராதன காலத்தில் மேய்ச்சலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடி சமூகத்தினரின் ஒற்றுமை சிதைந்து போனது கண்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியதோடு, மக்களிடையே அதிகரித்து வரும் சமத்துவமற்ற தன்மைக்கு எதிராகவும் தங்களது குரலை எழுப்பியுள்ளனர். மனிதகுலத்தின் ஒன்றுபட்ட தன்மை, ஒற்றுமை ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்திய அவர்கள் அன்பையும் கருணையையும், நீதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினர். காலப்போக்கில் இவைதான் மதரீதியான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாக மாறின. தங்களது சொந்த நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மக்களின் மனங்களை ஆட்டிப் படைப்பதற்குச் சுரண்டும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் அநீதி, சமத்துவமற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக மதத்தைப் பயன்படுத்தினர். நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், மனித நேயத்திற்காகவுமான போராட்டங்கள் மத்திய காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடைபெற்றே வந்தன. உதாரணமாக, 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கபீர், சைதன்யர், குரு நானக் போன்ற பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் சாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியதோடு ‘மனிதர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகளே!’ என்ற கோசத்தின் கீழ் மனிதர்கள் அனைவருக்கிடையேயும் சமத்தும் தேவை என்று போராடி வந்தனர்.

                     (மார்க்ஸ் இந்தியாவிற்கு வருகிறார் – முன்னுரை – 1975)

நிலப்பிரபுத்துவ உறவுகளை மாற்றியமைத்து, அதனிடத்தில் வந்தமர்ந்த நவீனத்துவமும் முதலாளித்துவமும் தான் இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் காலம் என்று பின்னாளில் குறிப்பிடப்பட்ட எழுச்சிக்கு வழிவகுத்தன. மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பல்வேறு கருத்துக்களுமே,  மறுமலர்ச்சி காலத்தில் உருவான பல்வேறு கருத்துக்களுமே, கம்யூனிச தத்துவத்திற்கான விதைகளைக் கொண்டதாகவே இருந்தன. மறுமலர்ச்சி காலத் தலைவர்கள் சில பண்டைய இந்தியாவின் புராதன கதைகளிலிருந்து உத்வேகம் பெற்ற அதே நேரத்தில் வேறு சிலர் தங்களது மனித நேய கருத்துக்களை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தீவிர ஜனநாயகவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகளிடமிருந்தும் பெற்றனர்.

இந்திய மறுலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் ராஜா ராம் மோகன் ராய்(1772 – 1833) 1789-ம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியினால் பெரிதும் கவரப்பட்டவராக இருந்தார். எனினும் அவரது கூர்மையான அறிவும் மனித நேயமும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தாண்டி சோசலிச கருத்துக்களின் மீதும் அவரை ஆர்வம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாகத்தான் 1833-இல் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தபோது கற்பனாவாத சோசலிஸ்டான ராபர் ஓவன் -ஐ (1771 – 1858) சந்தித்தார். தூரதிர்ஷ்டவசமாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு உடனேயே அவர் உயிர் நீத்ததன் விளைவாக ஓவன் பற்றியோ அவரது கருத்துக்கள் பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் அவர் விட்டுச் செல்லவில்லை.

சோசலிச கருத்துக்களைப்  பாராட்டிப் பேசிய மற்றொரு புகழ் பெற்ற வங்காளி “வந்தே மாதரம்” கவிதையை எழுதிய நாவலாசிரியர்  பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (1838 – 94) ஆவார்.

இவை அனைத்தையும் விட புகழ்மிக்க வார்த்தைகளாக அமைந்தது சுவாமி விவேகானந்தரின் (1863 – 1902) பட்டவர்த்தமான அறிவிப்பே ஆகும். 1888-ம் ஆண்டில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “அது ஒரு சிறந்த அமைப்பு என்பதனால் மட்டுமே நான் ஒரு சோசலிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட அரை வயிற்றுக் கஞ்சி எவ்வளவோ மேல்”

                                                 (தொகுப்பு நூல்கள் – தொகுதி 6 பக். 381-82)

ஒரு கருத்து என்ற வகையில் சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அதற்கு விளக்கம் கூறுவதற்கும் விவேகானந்தருக்கு அவருக்கேயுரிய காரணங்கள் இருக்கலாம். நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அது ஒரு பொருட்டல்ல. இதில் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில் அந்த நாட்களில் கிடைத்த அறிவை வைத்துக் கொண்டு, வரலாறு குறித்த விவேகானந்தரின் விளக்கங்களையும் வைத்துப் பார்க்கையில் சோசலிசம் குறித்து அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பலவீனங்களை, குறைந்தபட்சம் அதை நாம் அடைவதற்கு முன்பாகவே, புரிந்து கொள்வதில் தனது காலத்தையும் விஞ்சியவராக அவர் விளங்குகிறார். அடுத்து வித்தியாசமான ஒன்றாக விளங்குவது என்னவெனில் அவர் சொல்வது நிச்சயமாக சரியாக இல்லை என்றபோதிலும் கூட, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைத் பொருத்திப் பார்க்க மேற்கொண்ட அவரது முயற்சி ஆகும்.

அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “எனினும் ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்களின் வர்க்கம், அவர்களது சூத்திரத் தன்மை உடனேயே எழுச்சி பெறுவார்கள். இப்போது வைசியர்கள் அல்லது கூசத்திரியர்களின் பிரத்தியேகமான குணங்களைப் பெற்று பெரிய மனிதர்களாக சூத்திரர்கள் தற்போது மாறி வருகிறார்களே அதைப்போன்று அல்ல; மாறாக, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சூத்திரர்கள் அவர்களுக்கே உரிய சூத்திர தன்மையுடனும், பழக்கவழக்கங்களுடன் வைசிரியர்களாகவோ அல்லது சத்திரியர்களாகவோ மாறாமல், சூத்திரர்களாகவே இருந்து – ஒவ்வொரு சமூகத்திலும் மேலாதிக்கத்தைப் பெறுவார்கள். இந்தப் புதிய சக்தி தோன்றுவதற்கான முதல் வெளிச்சம் ஏற்கனவே மேற்கத்திய உலகத்தின் மீது மெதுவாகக் கவியத் தொடங்கிவிட்டது. இந்தப் புத்தம் புதிய அம்சத்தின் இறுதி வடிவம் எப்படி பிரதிபலிக்கக் கூடும் என்று சிந்தனை உடையோர் இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சமூகப் புரட்சிக்கு சோசலிசம், அராஜக வாதம், நிகிலிசம் போன்ற இதரப் பிரிவுகளும் முன்னணிப் படைகளாக விளங்கப் போகின்றன.

                                                     (தொகுப்பு நூல்கள் – தொகுதி 4 – பக் 467 -68)

முதலாவது அகிலமும் இந்தியாவும்

இத்தகைய தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பிரதிபலிப்புகளைவிட மிக முக்கியமானதாக அமைவது 1864-இல் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதக் குழு கார்ல் மார்க்சை தொடர்பு கொண்டு, அவர் தோற்றுவித்த சர்வதேச உழைக்கும் மக்கள் கழகத்தில் (முதலாவது அகிலம்) சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததாகும். துரதிர்ஷ்டவசமாக இக்குழுவின் பெயரோ, அதன் தன்மையோ முற்றிலுமாகத் தெரியவராமலே போய்விட்டது. 1871-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு நடவடிக்கைகள் குறித்த பத்திரிக்கைச் செய்தியில் இருந்துதான் இது குறித்த தகவலை நம்மால் பெற முடிகிறது. இந்தப் பொதுக்குழுதான் பாரீஸ்கம்யூன் வீழ்ச்சி அடைந்தது குறித்து விவாதித்தது; அது குறித்து மார்க்ஸ் உருவாக்கிய புகழ்பெற்ற ஆவணத்தை ஏற்றுக் கொண்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 1871 ஆகஸ்ட் 19-ம் தேதிய ‘ஈஸ்டர்ன் போஸ்ட்’ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இடதுசாரி சார்பு பத்திரிக்கைதான் கல்கத்தா குழுவினரின் கடிதம் குறித்து தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதன் ஒரு பகுதி கீழ் வருமாறு:

“மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமானது முற்றிலுமாக வெறுக்கப்பட்டு வருகிறது. வரி விதிப்பானது அபரிமிதமாக இருப்பதோடு அத்தகைய வருவாயில் பெரும்பகுதி அதிகாரவர்க்கம் என்ற செலவுமிக்க அமைப்பை நிலைநாட்டுவதற்கே உறிஞ்சப்பட்டு விடுகிறது. மற்ற இடங்களில் நடப்பதைப் போலவே, (மிக மோசமான நிலையில் உள்ள) செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களின் நிலைக்கு முற்றிலும் நேர்விரோதமான முறையில் ஆளும் வர்க்கங்களின் ஆடம்பரச் செலவுகள் அச்செல்வத்தை வீணடிக்கின்றன. இதற்கென ஒரு பிரிவு மட்டும் துவக்கப்படுமேயானால், அகிலத்தின் குறிக்கோள்கள் பெரும்பகுதி மக்களை இந்த அமைப்பிற்குள் கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கிறது.”

கல்கத்தா தோழர்களின் கோரிக்கையை அகிலத்தின் பொதுக்குழு மிகுந்த கவனத்துடன், தீவிரமாகப் பரிசீலித்தது என்பதை இக்கூட்ட நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் தொழிலாளர்களை எவ்வாறு அணி திரட்ட வேண்டும் என்பது குறித்தும், தத்துவார்த்த கல்வியின் அவசியம் குறித்துமான வழிகாட்டுதல்களுடன் பொதுக்குழு கல்கத்தா தோழர்களுக்குப் பதிலளித்திருந்தது. இந்தக் குழுவைப் பற்றி மேலும் அதிகமான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கம்யூனிச கருத்துக்கள் மட்டுமின்றி, ஐரோப்பாவில் அக்கருத்தை வெற்றி பெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளும்கூட இந்தியாவில் இருந்த தீவிரவாத குழுவினருக்குத் தெரிய வந்திருந்தது என்பது தெளிவாகிறது.

ஹர் தயாள் – பிள்ளை – பட்டேல்

பல்வேறு இந்தியர்களின் இது போன்ற கருத்துக்களையும் எடுத்துக் கூறி விட முடியும். ஆனால் மார்க்ஸ் பற்றியும் சோசலிசத்தைப் பற்றியும் இந்தியாவில் முழுமையாக எடுத்துக் கூற 1912-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முதலில் அவ்வாறு எழுதியவர் மகத்தான புரட்சிகர தேசியவாதியான லாலா ஹர் தயாள் (1884 – 1939) ஆவார். அந்நாட்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மாத இதழான ‘மாடர்ன் ரிவ்யூ’வின் 1912 மார்ச் இதழில் அவர் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது கருத்துக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். அவரது கட்டுரையின் தலைப்பு “கார்ல் மார்க்ஸ் நவீன யுக ரிஷி”.

ஒரு இந்தியனால், ஒரு இந்திய இதழில் மார்க்ஸ் பற்றி எழுதப்பட்ட கட்டுரை என்பது ஹர் தயாளுடையதுதான் எனில் ஸ்வதேசாபிமானி கே.ராமகிருஷ்ண பிள்ளை (1878 – 1916)யின் மார்க்ஸின் சுயசரிதைதான், இந்திய மொழி ஒன்றில் வெளியான சுயசரிதை ஆகும். இந்த இரண்டையும் மேலோட்டமாகப் படிக்கும்போது ராமகிருஷ்ண பிள்ளை தனது நூலை லாலா ஹர் தயாளின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார் என்பது தெரியவரும். ஏனெனில் ஹர் தாயாளின் கட்டுரை மார்ச் மாதத்தில் வெளிவந்த அதே நேரத்தில், பிள்ளையின் நூல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. ஹர் தயாளின் கட்டுரை தலைப்பான கார்ல் மார்க்ஸ், “நவீன யுக ரிஷி” என்று கூறியது போல அவரது கட்டுரையானது கதாநாயகரான கார்ல் மார்க்ஸின் தனிப்பட்ட மேன்மையையும், அவரது துயரங்களையும் தியாகங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்தது என்றே கூறலாம். மார்க்ஸின் தத்துவம் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஹர் தயாளுக்கு பலவகையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும் பி.சி.ஜோஷி சுட்டிக் காட்டுவது போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மார்க்சியவாதிகள் பலரையும் சந்தித்து, மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்த பல நூல்களையும் படிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்த போதிலும், மார்க்சியம் குறித்த அவரது புரிதல் என்பது குறைபாடு உடையதாகவே இருந்தது. இதற்கு மாறாகக் திருவாங்கூர் மகாராஜாவின் ஊழல் மற்றும் உறவினர்களைச் செழிப்பாக்கும் போக்குகளை எவ்வித அச்சமுமின்றிச் சுட்டிக் காட்டியதன் விளைவாகத் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்தே வெளியேற்றப்பட்ட ஸ்வதேசாபிமான ராமகிருஷ்ண பிள்ளையோ இந்தியாவிற்கு வெளியே எங்கும் சென்றவரல்லர்.

மகாராஜாவையும் அவரது அடிவருடிகளையும் கோப்படுத்திய செய்தித்தாளின் பெயர்தான் ஸ்வதேசாபிமானி. அதே பெயரால்தான் அவரும் அழைக்கப்பட்டார். மார்க்சிய கருத்துக்களின் செறிவான கருத்தையும், மார்க்ஸின் முக்கியமான நூல்களையும் சுட்டிக்காட்டுவதாக ராமகிருஷ்ண பிள்ளையின் நூல் அமைந்திருந்தது. சமஸ்தானத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தனது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளிலும், வேறு சில பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளிலும்கூட சோசலிசத்தை விளக்கும் வகையிலும் அதை நியாயப்படுத்தியுமே எழுதி வந்தார், போதிய தகவல்கள் கிடைக்காததால் இக்கட்டுரைகளில் ஒரு சில குறைகளைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர, ராமகிருஷ்ண பிள்ளை – சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு அதை ஆதரிப்பவராகவே செயல்பட்டார். இவை அனைத்துமே மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தவை என்பதை நினைவில் கொள்ளும்போது இந்த இரு பெரும் மனிதர்களின் நினைவைப் போற்றுவது மிகவும் பொருந்தமானதே ஆகும்.

மார்க்ஸ் குறித்த ஆய்வுகளில் ஹர் தயாள் மற்றும் ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோருக்குப் பிறகு முயற்சி செய்தவர் குஜராத்தைச் சேர்ந்த அம்பாலால் பட்டேல் ஆவார். அவர் 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அதாவது அக்டோபர் புரட்சிக்கு சரியாக ஓர் ஆண்டிற்கு முன்னால் ‘நவஜீவன் மற்றும் சத்யா’ என்ற குஜராத்தி மொழி இதழில் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் ஆகியோரின் புகழ்பெற்ற அறைகூவலான ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்: நீங்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை: ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!’ என்பது பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் முன்னுரையில் அவர் எழுதியிருந்தார்:

“1847-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு ஏழை மக்களை சுரண்டுவதை நியாயப்படுத்துவதற்கான தத்துவஞானிகளின் முயற்சிகள் வீணாகத்தான் போயின”

(குறிப்பு: கம்யூனிஸ்ட் அறிக்கை 1848ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அது எழுதி முடிக்கப்பட்டிருந்தது)

புரட்சிக்குப் பிறகு

1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இத்தகைய சோசலிச, கம்யூனிச கருத்துக்களை மேலும் வலுவாகப் பரவத்துவங்கின. ‘ஆதி பராசக்தி’ போன்ற பாரம்பரியமான கருத்துக்களைப் பயன்படுத்தியபோதிலும், தமிழ்மொழியின் நவீனயுக கவிஞர்களில் மகத்தானவரான சுப்ரமணிய பாரதி இப்புரட்சியை வரவேற்று – போற்றி கவிதை பாடினார். விடுதலைப் போராட்டத்திலும், பகுத்தறிவு இயக்கத்திலும் அப்போது தீவிரமாக ஈடுபட்டு வந்த பெரியார் ஈ.வே.ரா கூட சோசலிசம், புரட்சி ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்பவராக மாறினார். இவர்கள் இருவருமே சிங்காரவேலரின் நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிங்காரவேலர் விடுதலை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சூரத் நகரில் (1907) நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு குழுக்களாகப் பிளவுபட்டது. மிதவாதிகளின் குழுவிற்குக் கோபாலகிருஷ்ண கோகலே, சர் ஃபிரோஸ் ஷா மேத்தா மற்றும் பலர் தலைவர்களாக இருந்தனர். தீவிரவாதிகள் குழுவிற்குப் பால் -லால் – பால் என்றறியப்பட்ட முப்பெரும் தலைவர்கள், அதாவது பாலகங்காதர திலகர். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். இயற்கையாகவே சிங்காரவேலர் இந்தத் தீவிரவாதிகளின் குழுவைச் சார்ந்தவராகவே இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பாலகங்காதர திலகரை அன்றைய பர்மாவில் (இப்போது மியான்மார்) இருந்த மாண்டலே சிறையில் நாடு கடத்தியபோது, மும்பை மற்றும் தூத்துக்குடி நகர்களில் இருந்த தொழிலாளர்கள் திலகர் கைது செய்யப்பட்டதையும் நாடு கடத்தப்பட்டதையும் எதிர்த்து ஓர் அரசியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சிங்காரவேலரை பின்பற்றியவர்கள்தான் இந்த வேலைநிறுத்தத்தை முன்நின்று நடத்தினார்கள். வி.ஐ.லெனின், தொழிலாளர்களின் இத்தகைய அரசியல் நடவடிக்கையானது இந்தியத் தொழிலாளி வர்க்கம் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் புரட்சியினால் உற்சாகம் பெற்று, 1919-ம் ஆண்டில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டதைக் தொடர்ந்து, மற்ற இடங்களைப் போலவே இந்தியாவிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்தத் துவக்க கால முயற்சிகளில் குறிப்பிடத்தக்க இரண்டு முயற்சிகள் என்பது சோவியத் ஒன்றியத்தின் தென் பகுதியில் இருந்த தாஷ்கெண்ட்டிலும் மற்றொன்று கான்பூரிலும் மேற்கொள்ளப்பட்டது. தாஷ்கெண்ட் நகரில் மேற்கொள்ளப்ட்ட முயற்சி வி.ஐ.லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தூண்டுதலுக்கு இணங்க செயல்பட்ட எம்.என்.ராயினால் வழிகாட்டப்பட்டதாகும். இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய இயக்கத்தையும் வளர்த்தெடுப்பது பற்றிய பிரச்சனையில் எம்.என்.ராய் சிங்காரவேலருடன் தொடர்ந்து கடிதங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாஷ்கெண்ட் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபானி முகர்ஜி நேரடியாகச் சென்னைக்கு வந்து சிங்காரவேலரைச் சந்தித்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவில் அதன் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்தக் காலப்பகுதியில் சிங்காரவேலர் தேசிய இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் என்பதும், 1922-இல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உருப்பெற்ற எஸ்.ஏ.டாங்கேயை அவர் இந்தக் கயா மாநாட்டில்தான் சந்தித்தார்.

அவருடனும் மாநாட்டு பிரதிநிதிகளாக வந்திருந்த இதர கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் இணைந்து அந்த கயா காங்கிரஸில் இந்தியத் தேசிய காங்கிரஸை மேலும் தீவிரமானதொரு  அமைப்பாக மாற்றும் முயற்சியாக அணிதிரட்டப்பட்டதொரு முகாமை சிங்காரவேலர் உருவாக்கினார்.  ‘முழுமையான விடுதலை’ என்பதே அதன் இலட்சியம் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதை வற்புறுத்தும் வகையில் இந்த மாநாட்டில் இக்குழுவினர் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் அப்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட நடுக்கத்துடனேயேதான் இருந்தது. மாண்டேகு – செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் பிரிட்டனின் தலைமையின் கீழ் மேலாதிக்கமான இடம் என்ற விசயங்களுக்கு இடையே அன்றைய காங்கிரஸ் இயக்கம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, அதன் நடவடிக்கைகள் முழுவேகத்தில் செயல்படத் துவங்கின, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வேன்கார்ட்’ (முன்னணிப்படை) என்ற இதழ் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது. என்.என்.ராயின் நூலான ‘மாற்றத்தை நோக்கி இந்தியா’ என்ற நூல் முதல்முறையாக இந்தியப் பின்னணியில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளைச் செயல்படுத்த முற்பட்டது. மகத்தான தோழரான முசாபர் அகமது, ஷெளகத் உஸ்மானி, நளினி குப்தா, அபானி முகர்ஜி போன்றவர்கள் தாஷ்கெண்ட் மாநாட்டின் அறைகூவலை ஏற்று, கல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களிலும் சட்டவிரோதமான ஆரம்பக் கட்சிக் கிளைகளை உருவாக்கினர். 1920-ம் ஆண்டில் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பான அகில இந்தியத் தொழிற் சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

சிங்காரவேலரின் இந்துஸ்தான் லோபர் – இசான் கட்சி 1923-ம் ஆண்டில் பேரணி ஒன்றை நடத்தி பொதுக்கூட்டத்தையும் நடத்தி, மே தினத்தைக் கடைப்பிடித்த முதல் இந்தியத் தொழிற்சங்கமாகும்

என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். லேபர் – கிசான் கெஜட் என்று ஆங்கில இருவார இதழையும் தொழிலாளர் என்ற வார இதழையும் அவர் நடத்தத் துவங்கினார். வலுவான சோசலிச உணர்வு கொண்ட தீவிர காங்கிரஸ்காரர் என்று சிங்காரவேலர் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்தார். அநேகமாக 1925-ம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தபோதுதான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ‘ஞான ஸ்நானம்’ பெற்றார் என்றும் கூடக் குறிப்பிடலாம். எஸ்.ஏ.டாங்கேயுடன் இந்தக் கான்பூர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்கு ஒன்றையும் ஜோடித்தது. சிங்காரவேலரும் கைது செய்யப்பட்டதோடு, வன்முறையின் மூலம் பிரிட்டிஷ் அரசை தூக்கி ஏறிய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த விளக்கியதைப் போல கான்பூர் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, அவைகளை ஒன்றுபட்டதொரு கட்சியாக மாற்றுவது என்பதே ஆகும். பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புகழ் பெற்ற சக்லத் வாலா இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மாபெரும் தோழரான முசாபர் அகமது அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று வந்ததால் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த மாநாட்டிற்கு தனது ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக அவர் ரூ.30 அனுப்பியிருந்தார். அந்த நாட்களில் அது மிகப் பெரிய தொகையாகும். வரவேற்புக் குழுவின் தலைவராக ஹசரத் மோகானி இருந்தார். தவிர்க்க இயலாத காரணகங்களால் சக்லத் வாலா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. எனினும் வாழ்த்துச் செய்தியையும் தனது ஆதரவினையும் அவர் அனுப்பியிருந்தார். அவர் பங்கேற்காத நிலையில் மாநாட்டிற்குத் தலைமை ஏற்கச் சிங்காரவேலர் தேந்தெடுக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 28 வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைமை உரையில் சிங்காரவேலர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று துணிவுடன் அறிவித்தார். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்களுடன் மாறுபட்டு நின்ற நிலையில் மாநாட்டை விட்டு மட்டுமின்றி கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்தே வெளியேறினார்.

தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அணி திரட்டும் முயற்சியாகக் கான்பூர் மாநாடு விளங்கியது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்தப் கான்பூர் மாநாட்டினை முன்முயற்சி எடுத்து நடத்தியது சத்ய பக்த் என்ற துணிச்சலான பத்திரிக்கையாளர் ஆவார். நாணயமானவராக இருந்த போதிலும் மார்க்ஸிய – லெனினிய தத்துவம் மற்றும் நடைமுறையில அனுபவம் மிக்கவராக அவர் விளங்கவில்லை. எஸ்.ஏ. டாங்கேயின் முதல் நூலான ‘காந்தியும் லெனினும்’ என்ற நூலைப் பார்க்கும்போது, அவரது தத்துவார்த்த நிலைப்பாடும்கூட தெளிவாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அவர் நடத்தி வந்த ‘சோசலிஸ்ட்’ இதழ் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் அங்கமாக இடம் பெற்ற போதிலும், காந்தியம், சோசலிசம் ஆகியவற்றின் குழப்பமான கலவையாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கான்பூர் மாநாடு தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூறி வருகிறது. தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாட்டைப் போல் இல்லாமல், கான்பூர் மாநாடு இந்திய மண்ணிலேயே நடைபெற்றது என்பதுதான் அவர்களது வாதம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கம்யூனிஸ்ட் அகிலத்தால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டு தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாடுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று வலியுறுத்துகிறது.

தோழர் முசாபர் அகமது எழுதிய ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோற்றமும்’ என்ற நூல் இது குறித்த நிலைபாட்டைத் தெளிவாக விளக்குவதோடு. தாஷ்கெண்ட் மாநாட்டிற்கான தனது ஆதரவை பலப்படுத்தியது. இன்றைய நோக்கத்திற்கு இந்த சச்சரவிற்குள் இதற்கு மேலும் நாம் போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் கான்பூர் மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்போது நாம் சற்றே பின்னோக்கி போய் சமூக சீர்திருத்தவாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரருமாக இருந்த சிங்காரவேலர் முழுமையானதொரு கம்யூனிஸ்டாக உருப்பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பதைச் சற்றே காணலாம்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

சிங்காரவேலரின் குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்ததாகும். மிகக் கடுமையான தொழிலைச் செய்து வந்து போதிலும் மீனவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. கடற்கரையில் குடிசைகளுக்கிடையே சுகாதாரமில்லாத, மிக மோசமான சூழ்நிலையில், வழக்கமான கல்வியோ, மரியாதைமிக்க குடியுரிமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் வசித்து வந்தனர். இச்சமூகத்தினை சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவிற்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதிய புறக்கணிப்பு மற்றும் ஒடுக்குமுறை என்ற தளையிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை. வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான சிங்காரவேலர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிறுவயதிலேயே உணர்வு தூண்டப்பட்டவராக இருந்தார். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று. வளமான வருமானம் தரும் வக்கீல் தொழிலில் இறங்கிய போதும் நிலைமைகள் அவரைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டேதான் இருந்தன. எனவே சமூக சேவை நடவடிக்கைகளிலும் அவர் இறங்கினார். இத்தகைய அனுபவங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவரை கவர்ந்திழுக்க உதவின என்றும் உறுதியாகக் கூறலாம்.

அங்கும்கூட நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் மிதவாதிகளை விட, தீவிரவாத பிரிவினருடன் தான்அவர் தன்னை இணைத்துக் கொண்டார். மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து 1907-ம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே ஆண்டில்தான் முறையான பயிற்சிக்குப் பிறகு சிங்காரவேலர்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இந்த நீதிமன்றங்களும், அதில் செயல்பட்டு வந்த வழக்கறிஞர்களின் வெற்றி என்பதும் சட்ட வழிமுறைகளின் நுணுக்கமான தன்மைகள் மட்டுமின்றி பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களும் அடங்கியதே ஆகும். எனினும் பணத்தையும் பதவியையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கறிஞர்களின் கண்களில் இதுபோன்ற விசயங்கள் தென்படுவதில்லை. ஆனால் சிங்காரவேலரோ மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். இவை அனைத்துமே அவரது இளம் பருவத்தில் உருப்பெற்ற கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. பொதுவாகவே வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ எந்தவொரு சூழ்நிலையிலும் அடக்கு முறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எப்போதும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.

பல்வேறு வகையிலும் 1902-ம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர்  மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம். அந்தநேரத்தில்தான் மகத்தான சோசலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோசலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கி விட்டுச் சென்ற ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தது. இவையனைத்துமே இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த இளைஞரின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அதுதான் உலக புத்த மதத்தவரின் மாநாடாகும். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்திற்கு அவர் மாறி விட்டார் என்றே கூறிவிடலாம். சாதிய முறைக்கு எதிரான, பிராமணிய பலியிடல், சடங்கு முறைகள் ஆகியவற்றிற்கு எதிரான கௌதமபுத்தரின் கருத்துக்கள் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்த இளம் புரட்சியாளரின் இதயத்திலும், மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்த கருத்துக்களே ஆகும்.

இந்தியாவிற்குத் திரும்பி வந்த அவர், மகா போதி சமூகத்தின் மாநாடு நடைபெற உதவி செய்ததோடு அதில் பங்கேற்கவும் செய்தார். அந்த நேரத்தில்தான் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் நுழைய மட்டுமல்ல; பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தவும் தடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் சாதிய மேலாதிக்கத்திலிருந்து விடுபடும் வகையில் புத்தமதத்திற்கு மாறி விடலாமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்தான் தலித்துகள் பெருமளவில் புத்தமதத்திற்கு மாறுவதற்கு ஏற்பாடு செய்தார். இவ்வாறு மதம் மாறியவர்கள் புதிய புத்த மதத்தவராகக் கருதப்பட்டனர். எனவே சிங்காரவேலரை, அவரது முப்பதாவது வயதிலேயே, புதிய புத்த மதத்தவராக அழைப்பதும் தவறாகாது.

காங்கிரஸ் அரசியலின் கடுமையான பாதை

1919-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமும், இந்தியத் தேசிய காங்கிரஸில் மகாத்மா காந்தியின் நுழைவும், இந்தியத் தேசிய விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாக அமைகின்றன. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் படுகொலை சம்பவமானது படுமோசமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு பழி வாங்கும் படலமாக அமைந்தது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் குரல்வளையை நெறித்து அரசியல் ரீதியாக அவர்கள் கிளர்ந்தெழாத வண்ணம் செய்வதற்காக பயன்படுத்திய வரன்முறை ஏதுமற்ற சட்டம்தான் ரௌலட் சட்டம். ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அணிதிரளும் வகையில் காந்தி மிகவும் புத்திக் கூர்மையுடன், பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பது மது விற்பனையைத் தடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முழுமையாக மறுப்பது போன்றவைதான் அவரது போராட்ட வடிவங்களாக இருந்தன. இவை அனைத்தையும் அஹிம்சை முறையிலான சத்தியாக்கிரக இயக்கம் என்று அவர் அழைத்தார். 1922-ம் ஆண்டில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்ற நேரத்தில், பீஹாரில் சௌரி சௌரா என்ற கிராமத்து மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி வன்முறையில் இறங்கினார்கள் என்று கூறி, சக ஊழியர்கள் எவரையும் கலந்து ஆலோசிக்காமலேயே காந்தி இந்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.

காந்திஜியின் இந்த நடவடிக்கையானது பொதுவாக மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் அவநம்பிக்கை கொள்ள வைத்தது. மோதிலால்நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு குழுவை உருவாக்கி அதற்கு ஸ்வராஜ்ய கட்சி என்று பெயரிட்டு அரசியல்  சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடப்போம் என்றும் அறிவித்தனர். மேல் தட்டில் இருந்த தலைவர்களில் சி.ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிராசாத், வல்லபாய் பட்டேல் போன்ற மற்றொரு பிரிவினர், காந்திய வழிமுறையையே பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். எனினும் இந்த மாற்றத்தை விரும்பாதவர்களிடம் காதி நூல் நூற்பது, ஹரிஜன மேம்பாடு, மதுவிலக்கு போன்ற திட்டங்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட தீவிரமான அரசியல் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்பதாகவே இருந்தது.

காந்திஜியின் எதேச்சாதிகாரமான, முன்யோசனையில்லாத நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பெரும் இடைவெளியில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பகத்சிங் போன்ற தீவிர இளைஞர் குழுக்கள் போன்ற அமைப்புகள் தோன்ற வழி கிடைத்தது. முசாபர் அகமது, சிங்காரவேலர்  எஸ்.ஏடாங்கே போன்றவர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த சோசலிஸ்டுகளையோ, அல்லது பகத்சிங் போன்றவர்கள் தனி நபர் வீரச் செயல் போன்ற வன்முறை நடவடிக்கைகளையோ பின்பற்ற மறுத்தனர். கான்பூர் மாநாட்டிற்குப் பிறகு சிங்காரவேலர்  உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் நாட்டின் பல பகுதிகளிலும் சட்டபூர்வமாகச் செயல்படுவதற்காகத் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியை உருவாக்கினர்.

சிங்காரவேலரின், சாதிக்கு எதிரான உறுதியான நிலைபாடும், இந்துச் சடங்குகள், அவர்களது மனுஸ்மிருதி போன்ற நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் மற்றும் அவரது சுயமரியாதைக் கட்சியுடன் நெருக்கமாக அவரைச் செயல்பட வைத்தது எனலாம். 1925-ம் ஆண்டு வாக்கிலேயே ஈ.வே.ரா., காங்கிரஸின் மீதும் அதன் மேல்சாதி தலைமையின் மீதும், நம்பிக்கை இழந்திருந்தார். சுயமரியாதைக் கட்சியின் முக்கிய நோக்கம் என்பது சாதி அடக்குமுறை அமைப்பை எதிர்த்துப் போராடுவதே ஆகும். இந்து மதச் சடங்குகள், புராண ரீதியான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகவே இருந்தது. ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமனை வழிபடுவதற்குப் பதிலாக ராவணனின் சிறப்பான குண நலன்களையும், அறிவுத் திறனையும், ஈ.வே.ரா. போற்றிப் புகழ்ந்தார். அவரது பகுத்தறிவு வாதம் என்பது மார்க்ஸின் இயக்கவியல் பொருள் முதல்வாதத்திலிருந்து ஒரு சில விசயங்களில் வேறுபட்டதாக இருந்தபோதிலும் சிங்காரவேலர் அதனால் கவரப்பட்டார். அதேநேரத்தில் ஈ.வே.ரா.வின் அதீதமான பேச்சுக்களையும் அவர் விமர்சித்தார். ஈ.வே.ரா.நடத்தி வந்த “குடியரசு” இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.

1925-ம் ஆண்டில் சுயமரியாதைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே, 1916-ம் ஆண்டில் நீதிக்கட்சி தோன்றியது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், 1934-ம் ஆண்டு முதல் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அதுவே பின்னாளில் திராவிடக் கழகமாக உருப்பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் குறித்து சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கினைச் சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார். இந்த இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதோ அல்லது அதற்கு இணையானதோ அல்ல. எனவேதான் அவரறிந்திருந்த மூத்த கம்யூனிஸ்டுகளில் ஒருவரான எஸ்..ஏ.டாங்கேவை 1936-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை சோசலிஸ்டுகளின் மாநாட்டை துவக்கி வைக்க அழைத்தார்.

சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு பெற்ற அடிகளிலிருந்து மெதுவாக விடுதலை பெற்று, உறுதியுடன் புத்தெழுச்சி பெற்றதாக இந்திய அரசியல் சூழ்நிலை நிலவியது. சைமன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் வெள்ளையர்களே ஆன கமிசன் இந்தியாவிற்கு வருகை தர நியமிக்கப்பட்டதை அறிந்து இந்திய மக்கள் மிகுந்த கோபமுற்றனர். இந்தக் கமிசன் இந்தியத் தலைவர்களுடன் பேசி, இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பரிந்துரைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சைமன் கமிசன் இந்தியாவில் சென்ற இடங்களில் எல்லாம் புறக்கணிக்கப்பட்தோடு வலுவான எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது.

1928-ம் ஆண்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பங்கேற்ற முதல் காங்கிரஸ் மாநாடும் இதுவேயாகும். தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பியிருந்த இளைஞரான ஜவகர்லால் நேருவும் இந்தச் சென்னை மாநாட்டில் பங்கேற்றதோடு, முழுமையான விடுதலையே காங்கிரஸ் இலக்கு என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். அவரது இந்த முயற்சியை அவரது தந்தையும் மாகத்மா காந்தியும் கூட எதிர்த்தனர் என்பதோடு அதீதமானதொரு நடவடிக்கை இது என்றும் கருதினர். எனினும் அத்தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து வந்த 1929-ம் ஆண்டானது இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதற்குமே மிகவும் முக்கியமானதொரு ஆண்டாகத் திகழ்ந்தது. இந்த 1929-ம் ஆண்டில்தான் அமெரிக்காவிலும், இதர மேற்கந்திய முதலாளித்துவ நாடுகளிலும் ‘மாபெரும் பொருளாதார வீழ்ச்சி’ வெடித்தெழுந்தது. இது இந்தியா உள்ளிட்டு முதலாளித்துவ உலகம் முழுவதிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்ழுடுத்தின.

1930-ம் ஆண்டில் உப்பு ‘சத்தியாக்கிரம்’ ‘தண்டி   யாத்திரை’ என்ற வடிவங்களில் அடுத்த சுற்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தினை மகாத்மா காந்தி துவங்கினார். இதே நேரத்தில்தான் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பிரிட்டிஷ் ஆட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஜெனரல் டயர் மாபெரும் தேசியத் தலைவரான லாலா லஜபதிராய் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்க, படுகாயமுற்ற அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இந்த ஜெனரல் டயரை சுட்டுக் கொல்ல முயன்ற பகத்சிங் பின்பு தூக்கிலிடப்பட்டார்.

1929-ம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கநிகழ்ச்சி என்பது மீரட் சதி வழக்கு ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் – விவசாய கட்சியின் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டடனர். சட்டபூர்வமானதொரு அரசைத் தூக்கியெறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1934ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி ஒன்றை உருவாக்கித் தங்களைச் சீரமைத்துக் கொண்னட கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத் தலைவர்களின் பெரும்பாலோர் இந்த மீரட் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிலிப் ஸ்பராட், பென் பிராட்லி, ஹட்சின்சன் உள்ளிட்டு பி.சி.ஜோஷி, ஜி.அதிகாரி, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.எஸ்.மிராஜ்கர் மற்றும் பலர் இச்சதிவழக்கில் குற்றவாளிகளாக இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களோ புரட்சிகரக் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும், கம்யூனிஸ்ட்டுகளின் செயல் திட்டத்தை விளக்குவதற்குமான ஒரு மேடையாகவே இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கம்யூனிச தத்துவம் குறித்த நூல்கள் அப்போது தடை செய்யப்பட்டு, கிடைக்காத நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மார்க்சியம் பற்றியும், சோசலிசம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய நாளிதழ்களும் இந்த வாதங்களை விரிவாக வெளியிட்டன. ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்றிற்காகச் சிங்காரவேலர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மீரட் சதி வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் 1930-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 70. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தலைவர்கள் ஏற்கனவே இயக்கத்தை வலுப்படுத்தி, போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். வயதும், முதுமையும், உடல் நலக்குறைவும் இருந்தபோதிலும் அவர் ஓய்வு பெற விரும்பினாரில்லை. தனது நடவடிக்கைகளையும் எழுத்துப் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார்.

1933-ம் ஆண்டில் மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்ற தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை பெற்றனர். அவர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல 1934-ம் ஆண்டில் ஒரு மத்திய தலைமை உருவாக்கப்பட்டது. மீரட் குழுவில் வயதில் மிகவும் இளைஞராக இருந்த தோழர் பி.சி. ஜோஷி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் டாக்டர். கங்காதர் அதிகாரிதான் அந்தப் பொறுப்பிற்கு வருவதாக இருந்தது. எனினும் அந்த நேரத்தில் அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்தததால் தோழர் ஜோஷியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரி  சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட ஜோஷி தொடர்ந்து பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1948-ம் ஆண்டில்தான் அவருக்குப் பதிலாகத் தோழர் பி.டிரணதிவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1934-ம் ஆண்டிலிருந்துதான் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” அந்நிய ஆட்சியாளர்களின் அனைத்து விதமான அடக்குமுறைகள், தாக்குதல்கள் ஆகியவற்றை மீறி முதிர்ச்சி அடைந்தது. எனினும் 1942-ம் ஆண்டு வரை கட்சி சட்டவிரோதமான ஒன்றாகவே இருந்தது.

1934-ம் ஆண்டில் மத்திய தலைமை ஒன்றின் மூலம் மறுசீரமைப்புச் செய்ததன் மூலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு அத்தியாயம் துவங்கியது. இந்தத் துவக்கத்தில் தோழர் சிங்காரவேலரின் பங்களிப்பு தீர்மானகரமானதாகவும், மகத்தானதாகவும் இருந்தது. இதில் அவரது பங்களிப்பு குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டனர்:

“….. அவரது இந்த உண்மைத் தன்மையுடன் வெளிப்படையான பேச்சும் அவருக்கு எந்த வகையிலும் பெரிய அளவில் ஊறு எதையும் விளைத்துவிடவில்லை. ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, சுயமரியானை இயக்கத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே அவர் ஊசலாட்டமில்லாததொரு கம்யூனிஸ்ட் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ள அவர் எப்போதுமே பயந்தவரல்ல; அதுவும் அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களது பிரச்சாரமும் கம்யூனிசம் என்பது ஏதோ பயங்கரமானது போன்று சித்தரிக்கத் தயங்கியதே இல்லை. அப்போதுதான் விழிப்புணர்வு பெற்றிருந்த தேசியவாதிகளின் மனங்களில் கம்யூனிசத்தோடோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ தொடர்பு கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை உண்டாக்கி இருந்தனர். அல்லது அவ்வாறு உண்டாக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து உறுதியாகத் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்ற நிலையெடுத்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்ததானது கம்யூனிசம் என்ற தத்துவத்திற்கு ஆதரவாக எத்தகைய வீரமான, துணிச்சலான, வீரராக சிங்காரவேலு இருந்தார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது”

             (சிங்காரவேலு – தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் –        பி.பி.எச்.   புதுதில்லி 1975)

நன்றி: சிங்காரவேலர் நினைவு அறக்கட்டளை

தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது

புகழ்பெற்ற இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு, தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 17, 1920 அன்று “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. மாதம் இரு முறை வரவிருக்கும் இக்கட்டுரைத் தொடரில், கடந்த நூறாண்டுகளாக இந்திய கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், தியாகங்கள், முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கவுள்ளோம்!

அக்டோபர் 17, 1920 அன்று, சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் நிகழ்ந்த சந்திப்பில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த சந்திப்பில் எம்.என்.ராய், எவெலின் ட்ரென்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷஃபிக் மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோர் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த துவக்க சந்திப்பில் கம்யூனிச அகிலத்தின் (Communist International) கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, “இந்திய நிலைமைகளுக்கு உகந்த” ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

எம்.என்.ராய் , 1920-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் பொதுக்குழு கூட்டத்தில், மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றார். அபானி முகர்ஜியும், ஆச்சார்யாவும் அதே கூட்டத்தில் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் இதில் ஒரு பார்வையாளராக பங்கேற்றார்.

அமெரிக்க கம்யூனிஸ்டான எவெலின், தோழர் எம்.என்.ராயின் துணைவியார் ஆவார். ரஷ்ய கம்யூனிஸ்டான ரோசா, அபானி முகர்ஜியை மணம் முடித்தார்.

அந்த குழுவிலிருந்த இந்தியர்கள், அளவில்லா தேசப்பற்று உணர்வின் உந்துதலால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கியெறிய ஒரு புரட்சிகர இயக்கத்தையோ அல்லது ஆயுதம் தாங்கிய போராட்டத்தையோ ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்ற இளைஞர்கள். எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் இந்த வகையில் அடங்குவர். முகமது அலியும், முகமது ஷஃபிக்கும் பிரிட்டிஷாரை எதிர்க்க உதவி தேடி தாஷ்கண்ட் நகரம் சென்ற “முகாஜிர்”கள். இந்த புரட்சியாளர்களின் சாகசங்கள், துணிச்சலான பயணங்கள் பற்றி வேறொரு தருணத்தில் பேசவேண்டும்.

தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதுதான்.

ரஷ்யாவில் 1917-ல்நிகழ்ந்த அக்டோபர் புரட்சி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புரட்சியின் தன்மை குறித்த செய்தி பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவை வந்து சேர்வதற்கு முன்னால், வெளிநாட்டு வாழ் இந்திய புரட்சியாளர்களை அடைந்தது. அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோசலிசப் புரட்சியால் ஈர்க்கப்பட்டனர்.

பெர்லினில் வாழ்ந்து வந்த ஒரு புரட்சியாளர்களின் குழு, மாஸ்கோவில் இருந்த போல்ஷெவிக் புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முடிவெடுத்தனர். அக்குழுவின் தலைவர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய். அக்குழுவில் பூபேந்திரநாத் தத், முகமது பர்க்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் இருந்தனர்.

அமெரிக்காவில், பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, “கோமகட்டா மாரு” நிகழ்விற்குப் பின்பு நசுக்கப்பட்ட, எழுச்சிமிக்க “கத்தார் கட்சி”யின் தலைவர்கள் ரஷ்ய புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முயன்றனர்.

இந்தியாவிலிருந்து, 1920-21ல் ஒத்துழையாமை-கிலாபத் இயக்கத்தின் சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய பல கிலாபத் போராளிகள் ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கிருந்து பலரும் தாஷ்கண்ட் நகரம் சென்றடைந்தனர். சோவியத் அதிகாரிகள் அந்த முகாஜிர்களை வரவேற்று, பிரிட்டிஷாருக்கு எதிரான அவர்களின் போராட்டத்திற்கு துணை புரிய தயாராக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியுடனும் போல்ஷெவிக் புரட்சியாளர்களுடனும் தொடர்பு கிடைத்த பின், அவர்களில் சிலர் கம்யூனிசத்தை தழுவினர் – அதில் 25 பேர், 1921-ல் மாஸ்கோவில் “கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகம்” துவங்கப்பட்டபோது, அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எம்.என்.ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தாஷ்கண்ட் நகரிலுள்ள மத்திய ஆசிய பணியகத்திற்கு பிரதிநிதி ஆக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இருந்த பொழுதுதான் முகாஜிர்கள் பலரையும் தொடர்பு கொள்ளத் துவங்கினார் – முகாஜிர்கள் பலரும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பெற்றது குறித்து பெரும் ஆர்வம் கொண்டனர்.

உலகம் முழுவதும் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்தில் சிறியதொரு புரட்சியாளர்களின் குழுக்களால் உருவாக்கப்பட்டவையே. சீனாவில், 1921-ல் ஷாங்காய் நகரில் 13 பிரதிநிதிகளின் சந்திப்பின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனத்தில் (பிற்காலத்தில் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என தனி நாடுகளாகஉருவானது இந்தோசீனம்), இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத்தை தழுவி பிரான்சில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தோசீன குடியேற்ற வாசிகளால் துவங்கப்பட்டது.

தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் குழுவின் பதிவுகள், அவர்கள் மேலும் இரண்டு சந்திப்புகள் நடத்தியதைக் காட்டுகின்றன. டிசம்பர் 15, 1920-ல் நடந்த அந்த சந்திப்பில் இருந்து, மேலும் மூன்று பேர் கட்சியின் பரீட்சார்த்த உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. அப்துல் ஆதேர் சேராய், முகமது அலி ஷாகாஜி மற்றும் அக்பர் ஷா (சலீம்). மூன்று மாத தகுதி காணும் காலம் முடிந்த பின் பரீட்சார்த்த உறுப்பினருக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கும்.

அந்நேரத்தில், தாஷ்கண்ட் நகரில், பெருமளவில் முகாஜிர் மற்றும் குடிபெயர்ந்த புரட்சியாளர்களைக் கொண்ட இந்திய புரட்சிகர கமிட்டி இருந்தது. இந்த அமைப்பிலிருந்துதான் கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகத்தில் சேர நபர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

பெர்லினைச் சேர்ந்த, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் தலைமையிலான குழு இறுதியாக 1921-ல் கம்யூனிச அகிலத்தின் தலைமையை சந்திக்க மாஸ்கோ வந்ததை இங்கே குறிப்பிடுவது மேலும் சுவையூட்டும். இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னரே கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். அவர்கள் தேசிய விடுதலைக்காக கம்யூனிச அகிலத்தின் உதவியை நாடினர். அவர்கள் எம்.என்.ராய் மற்றும் அவரின் குழு “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி”யாக அங்கீகரிக்கப்படுவதை விரும்பவில்லை. கம்யூனிச அகிலத்தின் ஆணையம் ஒன்று, அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த பின்னர், தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் குழுவாக அங்கீகரித்தது.

கம்யூனிச அகிலத்துடன் இணைந்து செயல்பட அவசியமாகிய “கட்சித் திட்டம்” ஒன்றை தாஷ்கண்ட் நகரில் உதித்த இந்த கம்யூனிஸ்ட் கட்சியால் இறுதி செய்ய முடியவில்லை. எனினும், இந்தக் குழு, குறிப்பாக எம்.என்.ராய், இந்தியாவில் பல இடங்களிலும் உருவாக்கப்பட்டு வந்த பல கம்யூனிச குழுக்களிடம் சென்று கம்யூனிச கருத்துக்களை பரப்ப முக்கிய பங்காற்றினர்.

எம்.என்.ராயும் அபானி முகர்ஜியும், 1921-ல் அகமதாபாதில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய கமிட்டியின் அமர்வுக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினர்.

அந்த அறிக்கையில் அவர்கள் அறிவுறுத்த, காங்கிரஸ் “தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை அதன் சொந்த கோரிக்கையாக ஆக்கிட; விவசாய சங்கங்களின் திட்டத்தை அதன் சொந்த திட்டமாக ஆக்கிட; காங்கிரஸை எந்தவொரு தடையும் தடுத்து நிறுத்த இயலாத நேரம் கூடிய விரைவிலேயே வரும்; முனைப்போடு தன் பொருளியல் தேவைகளுக்காக போராடும், அசைக்க இயலாத சக்தியான பெருவாரியான மக்களின் ஆதரவை அது பெறும்”, என்று எழுதினார்.

கட்சி உருவானதில் இருந்தே, இந்தியாவின் எந்தவொரு கட்சியோ, குழுவோ செய்வதற்கு முன்பே, “பூரண சுதந்திரம்” என்ற முழக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பி வந்தது. எம்.என்.ராய் காங்கிரசின் அகமதாபாத் அமர்விற்கு திறந்த மடல் அனுப்பிய அதே நேரத்தில், காங்கிரசின் உள்ளேயே ஹஜ்ரத் மொகானி என்பவர் “விடுதலை” (சுவராஜ்) என்பதை “அந்நிய ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரம் அடைவது” என்பதாக வரையறுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி இந்த தீர்மானத்தை, நடைமுறைக்கு ஒத்துவராத தீர்மானம் எனக் கூறி எதிர்த்தார்.

கம்யூனிச அகிலத்தின் உதவியோடு, எம்.என்.ராய் இந்தியாவின் பல கம்யூனிச குழுக்களையும் தொடர்பு கொள்ள முனைந்தார். எஸ்.ஏ.டாங்கே (பம்பாய்), முசாஃபர் அகமது (கல்கத்தா), சிங்காரவேலர் (மதராஸ்) மற்றும் பலருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது பற்றியும், அவர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை கூறி அவர் கடிதங்கள் எழுதினர்.

1922 முதல் 1923 வரை, பெர்லினிலிருந்து என்.என்.ராய் பதிப்பித்து வெளியிட்ட “இந்திய விடுதலையின் முன்னணிப் படை” (Vanguard of Indian Independence) என்ற இதழே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த இதழ் இந்தியாவில் கம்யூனிச பரப்புரைக்கும், கருத்துப் பரவலுக்கும் உதவியது. அப்படிப்பட்ட கம்யூனிச பரப்புரை தன் ஆட்சிக்கு ஏற்படுத்தும் ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம், அந்த இதழ் இந்தியாவில் நுழையக்கூடாது என தடை விதித்தது.

1920-ல் தான் அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (AITUC) நிறுவப்பட்டது – அந்த வகையில், அது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. சீர்திருத்தவாத சார்புடன் அது துவங்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்டுகளின் பங்கெடுப்பால், சில ஆண்டுகளிலேயே உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணம் உள்ள அமைப்பாக அது மாறியது.

இதனடிப்படையில், 1920 தாஷ்கண்ட் நகரில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டது. அதையே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதற்கான முதல் படியாக நாம் பார்க்க வேண்டும்.

அக்டோபர் 17, 1920-ல் நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்வுக் குறிப்புகள் (மினிட்ஸ்):

அக்டோபர் 17, 1920-ல், தாஷ்கண்ட்டில் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பின்வருமாறு: 1) எம்.என்.ராய், 2) எவெலின் ட்ரென்ட்-ராய், 3) ஏ.என்.முகர்ஜி, 4) ரோசா ஃபிடிங்கோவ், 5) முகமது அலி (அகமது ஹாசன்), 6) முகமது ஷஃபிக் சித்திகி, 7) ஆச்சார்யா (எம்.பிரதிவாதி பயங்கர்).

கட்சியில் சேர விரும்பும் நபர்களுக்கு (பரீட்சார்த்த உறுப்பினர்களுக்கு) மூன்று மாத தகுதி காணும் காலத்தை நிபந்தனையாக நிறுவும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது.

தோழர் ஷஃபிக் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மூன்றாம் கம்யூனிச அகிலம் பிரகடனம் செய்த கோட்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டு, இந்திய நிலைமைக்கு ஏற்புடைய ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்கிறது.

தலைமை: எம். ஆச்சார்யா

செயலாளர்: ராய்

முத்திரை

தமிழில்: அபிநவ் சூர்யா

அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்

  • இரா.சிந்தன்

நூறாண்டு கண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில், தாதா அமீர் ஹைதர் கான் என்ற பெயர் மிகுந்த ஊக்கத்தைக் கொடுப்பதாகும். தென்னிந்தியாவின் மாபெரும் கம்யூனிச ஆளுமைகளான பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், ஜீவானந்தம் ஆகியோரை இயக்கத்திற்குள் ஈர்த்த பெருமை இந்தப் பெயருக்கு உண்டு. அவரே தென்னிந்தியாவுக்கு வருகை தந்த முதல் கம்யூனிஸ்ட்.

அமீர் ஹைதர் கான் சொந்த வாழ்க்கையும், இயக்க வாழ்க்கையும் பல்வேறு திருப்பங்களை உள்ளடக்கியதாகும். அவரின் வாழ்க்கை, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றோடு பிணைந்த ஒன்றாகும்.

குழந்தைப் பருவம்

பிரிட்டிஷ் இந்தியாவில் ராவல்பிந்தி மாவட்டத்தில் (பஞ்சாப்) குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அமீர் ஹைதர் கான். இப்போது அப்பகுதி பாகிஸ்தானில் உள்ளது. 1900 ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு அண்ணனும், அக்காவும் இருந்தனர். 4 வயதில் தந்தையை இழந்தார். அதன் பின்னர் தாய் மறுமணம் செய்துகொண்டார். மாற்றாந்தந்தையுடன் ஹைதருக்கு பிணக்குகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் சொந்த கிராமத்திலிருந்து வெளியேறினார். முதலில் தன் அண்ணனைத் தேடி பெஷாவர் சென்றார். பிறகு கல்கத்தாவுக்கு பயணித்தார். டிக்கெட் எடுக்கவும், உணவுக்கும் பணம் இல்லாத அந்த பயணமே பெரும் போராட்டமாக அமைந்தது. இறுதியில் அவர் அண்ணனை கண்டுபிடித்தார். அண்ணன் நன்கு படிக்கத் தெரிந்தவர், திறமையானவர். அங்கே கணக்குப்பிள்ளையாக இருந்தார். ஆனால், அது கொகெய்னும், கஞ்சாவும், விலைமாதர்களும் புழங்கிவந்த இடமாகும். அங்கே ஆங்கிலேயர்களும் வந்தார்கள், இந்தியர்களும் இருந்தார்கள். சிறிது காலம் கழித்தே நடப்பதை அறிந்துகொண்ட ஹைதரின் மனம் வாடியது. ஒரு நாள் அங்கே காவல்துறை வந்தது, ஹைதரின்  அண்ணன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தது.

கைவிடப்பட்ட சிறுவனான ஹைதர், கப்பலைச் சுரண்டும் வேலை செய்தார். இந்த வேலை கடுமையாக உடலை பாதித்தது. 12 மணி நேரம் வேலை செய்து, 6 அணா சம்பாதிக்க வேண்டும். சாலையோரத்தில் படுத்து உறங்கினார். சாலையோரத்தில் வசித்த சிறுவர்கள் பலர் ரவுடிகளால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் சிறுவர்களுக்கு உடல்நலம் குன்றியது. ரவுடிகளுக்கு எதிராக நண்பர்கள் அனைவரும் இணைந்து போராடி, அடித்து விரட்ட முடிவு செய்தனர். அதில்  வெற்றியும் பெற்றனர். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் ஹைதர் பயணிகள் கப்பலில் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு 14 வயதாகியிருந்தது. முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. கப்பல் பணியாளராக, போர் முனைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ராணுவ வீரர்களுடன் உரையாடினார். துருக்கி போர் முனையில், பிரிட்டிஷ் படையில் இருந்த முஸ்லிம் ராணுவ வீரர்களிடம்  ஒருவித   ஊசலாட்டத்தை அவரால் உணர முடிந்தது.

அமீர் ஹைதர் கான் தன் இளமைக்கால போராட்டங்களை அவரே விவரிக்கும்போது கல்வி கற்பதற்கு தன்னிடம் இருந்த ஏக்கத்தை குறிப்பிடுகிறார். மதப் பள்ளிகளில் அவர் திருப்தியடையவில்லை. பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளானாலும் கற்றுக் கொண்டேயிருந்தார். ஓரிடத்தில் தேங்கிப் போகவில்லை. முதல் உலகப்போர் சூழல் அவருக்கு ஆட்சியதிகாரங்களின் வேறொரு முகத்தைக் காட்டியது.

அரசியல் அறிமுகம்

18 வயதாகும்போது அமீர் ஹைதர் கானுக்கு அமெரிக்க கப்பல் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிரான விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வந்தன. இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அதிர்ச்சி தரும் செய்தியாகின. இக்கொடூரச் செயலுக்கு எதிராக உலகம் முழுவதும் விவாதங்கள் எழும்பின. ஐரிஷ் தேசியவாதியான ஜோசப் முல்கானே என்பவரின் உதவியுடன் காலனியாதிக்கத்தை குறித்து படிக்கத் தொடங்கினார் ஹைதர். இக்காலகட்டத்தில் அமெரிக்காவில் கதார் கட்சி உருவானது. 1920 இல் அவர் அக்கட்சியின் அறிமுகம் பெற்றார். ஆங்கிலம் படித்ததுடன், இரண்டாம் நிலை பொறியியல் படித்து தேர்ச்சி பெற்றார்.

இந்திய விடுதலையின் நண்பர்கள் என்ற அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. அது இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற கோரிக்கையை எழுப்பியது. கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த அமீர் ஹைதர் கான், பிரிட்டிஷ் எதிர்ப்பு பிரசுரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் சேர்க்கும் பணியை செய்தார். அவருடைய கப்பல் அறையில் கதார் கட்சியின் இதழ் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரசுரங்கள் இருந்தன. பிரிட்டிஷ் காவல்துறை அவரை மோப்பம் பிடித்துவிட்டது. ஹாங்காங்கில் வைத்து, கப்பலுக்குள் புகுந்து சோதித்தது. பிரசுரங்கள் சிக்கவில்லை ஆனாலும்  அவரை கைது செய்தது. அமெரிக்க கப்பலில் பணியாற்றும் ஒருவரை பிரிட்டிஷ் காவலர்கள் எப்படி கைது செய்யலாம் என்று சக பணியாளர்கள் கப்பலின் கேப்டனிடம் முறையிட்டனர். ஆனால், ஹைதர் சாகும் வரை சிறையில்தான் இருக்கப்போகிறான் என்று எகத்தாளம் பேசினார்கள் பிரிட்டிஷ் காவலர்கள்.  அவரை மீட்பதற்கான முயற்சியே இறுதியில் வென்றது.

சோசலிச கல்வி

அமீர் ஹைதர் கானின் வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள், ‘பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு அச்சம் கொடுக்கும் ஒரு மனிதராக ஹைதர் இருந்தார்’ என்கின்றனர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு நெருப்பு எப்போதும் அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

மாலுமிகள் சங்கத்தின் உதவியுடன் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ரயில்வே பட்டறை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் விமானம் ஓட்டிப் பழகினார். புகழ்பெற்ற டெட்ராய்ட் நகரத்தில் ஒரு தொழிலாளியாக இருந்தார். இக்காலகட்டங்கள் அவருக்கு சோசலிச அரசியலுக்கு ஒரு அறிமுகம் கொடுத்தன. தொழிற்சங்கத்தினருடன் விவாதித்தார். மேலும் நிறவெறிக் கொடுமைகளையும் எதிர்கொண்டார்.

மார்கனுடன் விவாதம்

டெட்ராய்ட் நகரில் அவர் வசித்தபோது, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கன் ஜான் அங்கே வருகை தந்தார். அவர் பங்கெடுக்கவுள்ள நிகழ்ச்சிக்கு நேரில் சென்றார் அமீர் ஹைதர் கான்

இந்திய நிலைமை பற்றி தொழிலாளர் கட்சியின் கருத்து என்ன என்ற கேள்விகளும் அங்கே எழுந்தன. மார்கனின் பதிலை ஆர்வத்துடன் கவனித்தார் ஹைதர். மார்கன் ஜான் ‘இந்தியர்களுக்கே அவர்களுக்கு என்ன வேண்டுமென்று தெரியவில்லை’ என்று விளக்கியபோது, ஹைதர் வெகுண்டெழுந்தார். “மன்றோ கொள்கையின்படி அமெரிக்கா அமெரிக்கர்களுடையது என்பதைப் போல இந்தியா இந்தியர்களுடையது” என ஆணித்தரமாக கூறினார். மேலும், மார்கனிடம் பல கேள்விகளை முன்வைத்தார். அந்த அவையில் வாக்குவாதம் நடந்தது. பதில் இல்லாமல் வெளியேறினார் மார்கன்.

ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் எதிர்ப்பாளராக இருந்த ஹைதர், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகமும் பெற்றார்.

மாஸ்கோ பயணம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைக்கும் முயற்சியில், எம்.என்.ராய் ஈடுபட்டார். ஆனால் இந்திய தொடர்புகள் கிடைக்கவில்லை. இதற்காக எம்.என்.ராய்  அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம்  உதவியை நாடியபோது, அவர்கள் கதார் இயக்கத்தின் துணையைப் பெற்றனர்.இவ்வாறு 5 மாணவர்கள் மாஸ்கோ அனுப்பப்பட்டனர். அதில் ஒருவராக அமீர் ஹைதர் கான் மாஸ்கோ சென்றார். அங்கு அவர் சோசலிச அரசியல் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பின் அவர் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார்.

20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான ரோசா லக்சம்பர்க், க்ளாரா ஜெட்கின், கார்ல் ரடெக், லியூ ஷோ சி ஆகியோரையும் எங்கல்சின் மானவர் தாமஸ் மன், ஸ்டாலினுடைய செயலராக இருந்த பியாட்னிஸ்கி ஆகியோரையும் சந்தித்து உரையாடியிருப்பதை அவருடைய சுய சரிதையில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. உலக தலைவர்களைப் போலவே இந்தியாவிலும் அவருக்கு புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது.

மீரட் சதி வழக்கு

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் இணைந்துகொள்வதற்காக அமீர் ஹைதர் கான் இந்தியா வந்தார் ஹைதர் இந்தியா வந்தபோது தோழர்கள் அவரை வரவேற்றனர். அதே சமயம் ஹைதரின் செலவுகளுக்கு கொடுக்க அவர்களிடம் பணம் ஏதும் இல்லை. ஹைதர் ஆலைத் தொழிலாளியாக பணியாற்றி ஈட்டிய பணத்திலேயே கட்சிப் பணிகளை ஆற்றினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் மீரட் சதி வழக்கினை புனைந்து, இந்திய கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியது. உடனே இச்செய்தியை கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு எடுத்துச் சென்றார். உலகம் முழுவதும் இச்சதி வழக்கிற்கு எதிரான குரல்கள் எழுந்தன. 1931 ஆம் ஆண்டில் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி, சவுகத் உஸ்மானி என்ற மீரட் சதி வழக்கு கைதியை பொதுத்தேர்தல் வேட்பாளராக  நிறுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய விடுதலை மற்றும் மீரட் சதி வழக்கை அம்பலப்படுத்துவதை முன்வைத்தது.  75 ஆயிரம் வாக்குகளை பெற்றது.

அமீர் ஹைதர் கான் மீண்டும் இந்தியா திரும்பினார். தோழர் பி.டி.ரணதிவே யிடம் பயணத்தை விவரித்தார். கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தகவல் தொடர்பு ஹைதரின் மூலமே நடைபெற்றது. தொலைத்தொடர்பு இயந்திரங்களை இயக்குவது உட்பட கற்றுக் கொண்டார். மேலும் தனது கப்பல் தொடர்புகளை அதற்காக பயன்படுத்தினார். இதனை அறிந்துகொண்ட பிரிட்டிஷ் காவல்துறை அவரைத் தேடியது. இந்த சூழலில்தான் அவர் மெட்ராஸ் அனுப்பப்பட்டார்.

தென்னிந்தியாவில் அமீர் ஹைதர் கான்

முன்னுரையில் குறிப்பிட்டதைப் போல, தென்னிந்தியாவின் மாபெரும் புரட்சியாளர்களை கண்டறிந்த பெருமை அமீர் ஹைதர் கானைச் சேரும். உண்மையில் அவர் தென்னிந்தியாவுக்கு விருப்பத்தின் பேரில் அனுப்பப்படவில்லை. பாம்பேயில் இருப்பது ஹைதருக்கு பாதுகாப்பில்லை என முடிவு செய்த கட்சி அவரை மெறாஸ் செல்ல பணித்தது. இந்த தகவலை டாக்டர் சாரி அவரிடம் தெரிவித்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை ஏற்ற கம்யூனிஸ்ட்டான அவர் கமிட்டி முடிவை ஏற்று அங்கிருந்து புறப்பட்டார்.

மெட்ராஸ் காஸ்மாபாலிடன் கிளப்பில் பணியாற்றும் சீனிவாசன் என்பவருடன் பேசி ஹைதருக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (தோழர் சுஹாசினி இந்த ஏற்பாட்டை செய்தார்). ஆனால் மெட்ராஸ் வந்த ஹைதருக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை. சில நாட்கள் பின் ஹைதரை சந்தித்த சீனிவாசன், “இங்கே மேல் சாதி, கீழ் சாதி என சமூகம் பிரிந்துகிடக்கிறது. உங்கள் கோட்பாட்டை இங்கே ஏற்பது மிகவும் கடினம். நீங்கள் புரிந்துகொண்டது தவறு. இந்தப் பணி மிகவும் கடினம்” என தெரிவித்தார். உண்மையில் அவர் ஹைதருக்கு உதவ முடியாது என்பதைத்தான் அப்படித் தெரிவித்தார்.

உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் காந்தி அதன் அழுத்தத்தை இர்வின் ஒப்பந்தத்திற்கு திருப்பிவிட்டார். முழுச் சுதந்திரம் என்ற முழக்கம் பின்னடைந்ததால் பெரும் ஏமாற்றம் பரவியது. ஹைதர் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சங்கர் என்ற புனைப்பெயரோடு பணியாற்றினார். அவரே உருவாக்கிய சில தொடர்புகளை வைத்து முதலில் ஒரு படிப்பகமும் பின் அதைத் தொடர்ந்து இளம் தொழிலாளர்கள் லீக் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

இக்காலத்தில் வடிவேலு முதலியாருடன் சந்திப்பு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த ஜனமித்திரன் என்ற பத்திரிக்கையை பற்றி அறிந்து இளம் தொழிலாளர் லீக் அமைப்பிற்கு அவரை அறிமுகம் செய்தார். பிறகு முன்னேற்றம் என்ற பெயரில் பத்திரிக்கை கொண்டுவருவதென அவர்கள் முடிவு செய்தனர். மெல்ல மெல்ல இளம் தொழிலாளர் லீக் வளர்ந்தது. மீரட் சதி வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டது செய்தியாகியது. கம்யூனிசம் பரவுவதை அறிந்த போலீசும் எச்சரிக்கையானது.

சுந்தரய்யாவுடன் சந்திப்பு

இளம் அரசியல் செயல்பாட்டாளராக இருந்துவந்த சுந்தரய்யா, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தவர். ஜெயராமன் உதவியுடன் அவரை சந்திக்க முடிவுசெய்த அமீர் ஹைதர் கான், சுந்தரய்யாவை தேடி பெங்களூரு சென்றார். ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கான வாய்புகள் இருந்தும், உள்ளூர் அளவில் சரியான தலைவர்கள் இல்லாமல் அதை சாதிக்க முடியாது. தொழிலாளர் லீக் அமைத்துவிட்டோம். உள்ளூர் மொழிகளை அறிந்த தலைவர்கள் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்’ இதுதான் அவர் பேசியது. அந்த சந்திப்பு சுந்தரய்யாவுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹைதர் ஒரு முஸ்லீம் என்றபோதும் தென்னிந்தியாவில் சங்கராக, பிராமணராக அடையாளத்தை மாற்றி மாற்றி செயல்பட வேண்டிவந்தது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். ஓராண்டுக்கு பின் இளம் தொழிலாளர் லீக் அவர்கள் நினைவுதினத்தை கடைப்பிடித்தது. துண்டறிக்கை வெளியிட்டு விநியோகித்தார்கள். இதனை அறிந்த காவல்துறை, மோப்பம் பிடித்து வந்து பாலன் என்பவரை கைது செய்தது. அவர் இறுதி வரை ஹைதரையோ, அமைப்பையோ காட்டிக் கொடுக்கவில்லை. காவல்துறை தாக்குதலில் மரணமடைந்தார். தற்கொலை வழக்காக அதை ஜோடித்தது காவல்துறை.

சுபாஸ் சந்திர போசுடன் உரையாடல்

பின்னர் ஹைதர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு முதலில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். துண்டறிக்கை வெளியீட்டுக்காக அவர் மீது வழக்குப் போடப்பட்டது. இவ்வழக்கில் சுபாஸ் சந்திரபோஸ் சாட்சியாக சேர்க்கப்பட்ட சுவாரசியம் அவரின் சுய சரிதையில் விளக்கப்படுகிறது. போஸ், ஹைதரிடம் மாஸ்கோவில் என்ன கற்றுக் கொண்டார் என்பதை பற்றி கேட்டு அறிந்துகொண்டார். மேலும் ‘வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் சுதந்திரத்தை அதே முறையில் எடுத்துக்கொள்வது சரியானதும் நியாயமானதுமே ஆகும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சுதந்திரத்தின் எதிர்காலம் என்ற புத்தகத்தை எழுதச் செய்யும் அளவுக்கு அவர்களின் உரையாடல் தாக்கம் செலுத்துவதாக இருந்தது. மெட்ராஸ் சிறையில் இருந்தபடி ‘சேவாவாதி சங்கா’ என்ற புத்தகத்தை போஸ் எழுதினார். 

சிறைத் தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பிய ஹைதர், இளம் தொழிலாளர் லீக் கூட்டத்தில் பங்கெடுத்தார். அந்த கூட்டத்தில் பி.சுந்தரய்யாவும் வந்திருந்தார். அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. கட்சி பரவிக்கொண்டிருந்தது. திருச்சி சிறையில் சந்தித்த சீனிவாசராவ், ஹைதரை வந்து சந்தித்தார். இக்காலகட்டத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் ஆகியோரையும் ஹைதர் சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. அவர்  இத்தோழர்களின் வாழ்வில் மறக்கவியலா தாக்கம் செலுத்தினார்.

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹைதர் ராஜமுந்திரியிலும், அம்பாலாவிலும் சிறை வைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கம் மீரட் சதிவழக்கை எதிர்கொண்டு முன்சென்றது. ஹைதரால் அடையாளம் காணப்பட்ட சுந்தரய்யா தன் 22 வயதில் கட்சியின் மத்தியக் குழுவில் இடம்பெற்றார்.

சிங்காரவேலருடன் தொடர்பு இருந்ததா?

1931 முதல் 1934 வரை மெட்ராஸ் ராஜதானியில் ஊக்கத்துடன் இயங்கி முன்னணி செயல்பாட்டாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்த தாதா அமீர் ஹைதர் கான், அதே காலத்தில் இங்கே வாழ்ந்த தோழர் சிங்காரவேலரை சந்தித்தாரா என்ற கேள்வி வருகிறது. மீரட் சதி வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் சிங்காரவேலரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் உடல் நிலையை பரிசோதிக்க அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் குழு, 1500 மைல் தொலைவில் உள்ள மீரட்டுக்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டால் அவர் உயிரோடு இருக்கமாட்டார் என்று கூறியதன் காரணமாக இவ்வழக்கில் அவர் இணைக்கப்படவில்லை என்று பி.ராமமூர்த்தி (தமிழ்நாட்டு தொழிற்சங்க இயக்கம் என் நினைவுகள்)  புத்தகத்தில் குறிப்பிடுகிறார். முதல் கட்சிக்கிளை உறுப்பினராக இருந்த சி.சுப்பிரமணியம் தனது குறிப்பில் எழுதும்போது, 1933 ஆம் ஆண்டு, மெட்ராஸ் ராஜதானியில் முதல் கட்சிக்கிளை அமைக்கப்பட்டது. அதற்கு தோழர்கள் ம.சிங்காரவேலு மற்றும் அமீர் ஹைதர் கான் ஆகியோர் வழிகாட்டியதாகவும். முதல் கிளையில் கே.பாஸ்யம் (எ) ஆர்யா, பி.சுந்தரய்யா, கம்மம்பட்டி சத்தியநாராயணா, வி.சுப்பய்யா மற்றும் ரஷ்யா மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றதாக தெரிவிக்கிறார். சிங்காரவேலர், அமீர் ஹைதர் கான் நேரடி சந்திப்பு ஒருமுறை நடந்திருப்பதாக ‘சிங்காரவேலர் வாழ்வும் சிந்தனையும்’ புத்தகத்தில் பாஸ்யம் தெரிவித்தாக குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சிறுபான்மை இந்துக்களைக் காத்தவர்

1934களில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  கட்சி முடிவின்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து  வெளிப்படையாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அந்த நேரத்தில் 2 வது உலகப்போர் வெடித்தது. இந்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட அமீர் ஹைதர் கான் நாசிக் சிறையில் தனது நினைவுக் குறிப்பினை எழுதினார். ‘இழக்கப்போவது அடிமைச் சங்கிலியே’ என்றபெயரில் வெளியான அந்த சுய சரிதை இரண்டு பாகங்களாக ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அக்காலத்தின் உலக, இந்திய அரசியலைக் காட்டும் மிக முக்கியமான பதிவாக அது அமைந்துள்ளது.

சிறையிலிருந்து 1942 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். தொழிற்சங்கத்திலும், விவசாயிகள் சங்கத்திலும் பாடுபட்டார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனது சொந்த கிராமத்தில் இயங்கினார். பிரிவினை நேரத்தில் மிகப்பெரும் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் சதி வேலைகளை மிகத் தெளிவாக உணர்ந்தவராக அமீர் ஹைதர் கான் இருந்தார். ஏற்கனவே பம்பாயில் திட்டமிட்ட வதந்திகளின் மூலம் கலவர முயற்சிகளை எதிர்கொண்ட அனுபவம் அவருக்கு இருந்தது. பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்பட்டபோது முன்நின்று காக்க உழைத்தார். இந்துக்களைக் காக்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார். முஸ்லிம் அல்லாதவர்களை ரயிலேற்றிவிட்டு வந்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் இதயம் நொறுங்கியது.

பாகிஸ்தானில் ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஊக்கமிழந்திருந்த இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்தார். ஆனால் முஸ்லீம் லீக் அரசு எச்சரிக்கையானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேல் அடக்குமுறைகள் ஏவுவது தொடர்ந்தது. வகுப்புவாத சட்டத்தின்படி அவர் வெறுப்பு விதைப்பதாக சொல்லி வைது செய்தது. இந்த சதிவழக்கில் தாதா அமீர் ஹைதர் கான்  1949 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 15 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்து சதி வழக்குகளின் மூலம் அவரை முடக்க முயன்றது பாகிஸ்தான் அரசாங்கம்.

1954 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு ராவல்பிண்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 1958, 1970 என மீண்டும் கைது செய்யப்பட்டார். அரசிய சூழல் மீண்டும் மீண்டும் குழப்பங்களை சந்தித்தது.

அமீர் ஹைதர் கான் இறுதி வரையிலும் ஒரு போராளியாகவும், கம்யூனிஸ்டாகவும் செயல்பட்டார். அவரின் சொந்த கிராமத்தில் இருந்த நிலத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார். பிறகு அதில் பெண்களுக்கான பள்ளியும், அறிவியல் ஆய்வகமும் ஏற்படுத்தப்பட்டது. கட்டமைப்பை ஏற்படுத்தி பின் அதனை அரசிடம் ஒப்படைத்தார். தனது 88 வது வயதில், பேருந்தில் ஏற முயன்றபோது விபத்துக்கு ஆளானார். அதில் உடல் நலம் குன்றிய அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் காலமானார்.

மாபெரும் வாழ்க்கை

ஹைதர் என்ற சிறுவன் ராவல்பிண்டியில் இருந்து வெளியேறியபோது அவனிடம் கல்விக்கும், நல்ல வாழ்க்கைக்குமான தேடல் இருந்தது. ஆதரவற்ற, கடும் சுரண்டலுக்கு ஆளான சிறுவனாக, குழந்தைத் தொழிலாளியாக இருந்த அவர், தன் விதியே என்று நொந்துகொள்ளவில்லை. முதல் உலகப்போர் அவருக்கு ஏகாதிபத்தியங்களின் உண்மை முகத்தைக் காட்டியது. நிறவெறியும், ஆதிக்க வெறியும் அவரைத் தாக்கியபோது தனி மனிதராக மட்டும் அதனை எதிர்கொள்ளாமல், ஒரு சரியான இயக்கத்தை தேடினார். ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வெற்றி எல்லாத் தொழிலாளர்களையும் போலவே அவரையும் ஊக்கப்படுத்தியது. ஒரு சரியான தத்துவப் பாதையின் தேவையை உணர்ந்தார். மார்க்சியத்தைக் கற்றதுடன் தன் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணித்தார். இவ்வாறு அவர் தாதா அமீர் ஹைதர் கானாக மாறினார்.

அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது. அதற்காக பல ஆண்டுகள் சிறைவாழ்க்கையையும், தலைமறைவு வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டார். தேசப்  பிரிவினை அவர் இதயத்தை நொறுக்கியது. ஆனாலும் தன்னால் ஆன அளவில் கம்யூனிச லட்சியத்தை பரவலாக்க உழைத்தார்.  அவர் தொடங்கி வைத்த போராட்டம் மிக நீண்ட ஒன்று என்பதை நாமறிவோம். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான ஊக்கத்தை, நம் முன்னோடித் தோழர்களின் வாழ்க்கையிலிருந்து பெற்றிடுவோம். கற்றிடுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)

கட்சியின் கான்பூர் மாநாடு (1925)

1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.

இந்திய நிலைமை குறித்து ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குவது பற்றி எடுத்த நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 1925ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் உருவாகியிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியினைப் பற்றியும், கான்பூரில் டிசம்பர் 26 – 28 தேதிகளில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்தும் தகவல்கள் நிறைய கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கட்சியின் அமைப்புச்சட்டமும், கட்சியின் குறிக்கோளும் நிறைவேற்றப்பட்டன. வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற குறிக்கோளை முன்வைத்த முதல் அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் என்ற இர்பான் ஹபீபி ன் கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்து – முஸ்லீம் மோதல் என்ற சமூக கலாச்சார பிரச்சனையை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்ற அரசியல் பிரச்னையுடன் தொடர்புபடுத்திக் காட்டியது கம்யூனிஸ்ட்  இயக்கம். இது ஒரு புதிய மாறுபட்ட அணுகு முறை என்று இந்நூல் குறிப்பிடுகிறது. கம்யூனிஸ்ட்டு குழுக்களும் தனி நபர்களும் கூட்டாக செயல்பட்டு வரும் மேடையினை கான்பூர் மாநாடு கொடுத்தது. மத்திய ஸ்தாபன அமைப்பின் கீழ் செயல்படும் வாய்ப்பினையும் அது கொடுத்தது. இ.எம்.எஸ். கூறியபடி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவில் வளர்ப்பதற்கான முதல் முயற்சி  தாஷ்கெண்டில் தொடங்கப்பட்டது என்றால், இரண்டாவது முயற்சி கான்பூரில் எடுக்கப்பட்டது என்றும் கூறலாம். கான்பூர் சதி வழக்கின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதுவே நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியான சக்தியாக மாற்றி அமைத்தது. 1926ம் ஆண்டிலேயே இந்திய அரசியல் சூழ்நிலைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக தலையிடத் துவங்கி விட்டது என்பதும் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது.

தேசிய நிலைமைகளில் கட்சியின் தலையீடு

இந்த தலையிட்டின் விளைவாக, தேச விடுதலைப் போராட்டத்தில், எந்த வகையான சுதந்திரம் என்பதில் குழப்பத்திலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் டொமினியின் அந்தஸ்து கோரிக்கையிலிருந்து முழு சுதந்திரக் கோரிக்கையினை நோக்கி இயக்கம் நடத்த வேண்டி வந்தது. 1928ல் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மோதிலால் நேரு கமிட்டியின் அறிக்கையின் படி டொமினியன் அந்தஸ்த்துக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனால், மாநாட்டுக்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளேயும் தொழிலாளர் -விவசாயிகள் கட்சியின் சார்பாக நடந்த பேரணியில் முழு சுதந்திரத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றினார்கள் என்பதும் ஒருசெய்தி. இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல், தொழிலாளி வர்க்கம் ஓர் அமைப்பு ரீதியான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள உண்மையை பறைசாற்றும் தெளிவான அடையாளமாக அது இருந்தது. தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வர்க்க ரீதியான பார்வையை கொடுப்பதிலும், சமூக, பொருளாதார சுரண்டலை தோலுரித்துக்காட்டுவதிலும், கம்யூனிஸ்டுகளின் பணி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை சுட்டிக் காட்டும் பல நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய நிலைமை பற்றிய மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள்

சில தத்துவார்த்த மற்றும் நடைமுறை உக்திகளில் சறுக்கல்களையும் இந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்கம் சந்தித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது மாநாடு 1928ம் ஆண்டு நடந்தது. அந்த ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே 5,00,000 கம்யூனிஸ்டுகள் இருந்தனர் என்று மாநாட்டு அறிக்கை சுட்டிக்காட்டியது. உலக கம்யுனிஸ்ட் இயக்கத்துக்கான பொதுத்திட்டம் முதன்முறையாக உருவானதும் அந்த மாநாட்டில் தான். ஆனால், காலனி ஆதிக்கம் பற்றி லெனின் வழிகாட்டுதலுடன் இரண்டாவது மாநாட்டில் (1920) உருவாக்கப்பட்ட கொள்கை திருத்தப்பட்டது. தேசிய விடுதலை இயக்கங்கள் பின்பற்ற வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் உத்திகள் தொடர்பான பிரச்சனைகளிலும் தேசிய முதலாளிவர்க்கத்தின் பங்கு பற்றியும் தவறான நிலைபாடுகளைக் கொண்ட ஆவணத்தை அந்த மாநாடு ஏற்றுக்கொண்டது. தேசிய விடுதலைப்போராட்டத்தில் தேசிய முதலாளித்துவம் ஒரு சக்தியாக இல்லை என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; தேச விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு சற்று மிகையான வகையில் மதிப்பீடு செய்தது. இதன் விளைவு? காலனி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து கட்சி தனிமைப்படுத்தப்பட்டது; விடுதலைக்குப் போராடும் மக்களிடத்தில் நமது மாற்றுத் திட்டத்தினை வைப்பதற்கான வாய்ப்பினை கட்சி இழந்தது. ஆனால், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை உலக அளவில் நடந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களோடு இணைக்கும் பணியினை கட்சி சிறப்பாகச் செய்தது.

மீரட் சதி வழக்கு

பிரிட்டிஷ் அரசாங்கம் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு (1929 – 33). 4 1/2 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு இந்திய தேச விடுதலைப் போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். முதலாளித்துவம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி யினை சந்தித்துக் கொண்டிருந்த காலம்: சோவியத் யூனியன் கண்ட வளர்ச்சியின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பத் துவங்கியிருந்த காலம்; மார்க்சிய சிந்தனைகள் இந்திய நாட்டில் வேர்பிடித்து முளைவிடத்துவங்கிய காலம். ஆகவே, கம்யூனிஸ்ட்டுகளை தனிமைப் படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் எடுத்த நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு. அதைப்பற்றி தோழர். பி.டி.ரணதிவே சொன்ன கருத்து சரியாகவே இந்நூலில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது; தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பணிக்கு அளிக்கப்பட்ட புகழ்மாலையாக மீரட் சதி வழக்கு விசாரணை அமைந்திருந்தது. முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். வழக்கு பற்றிய பல்வேறு விவரங்கள் இந்த நூலில் நமக்கு கிடைக்கின்றன. குற்றவாளிக் கூண்டில் நின்றவர்கள் நீதி மன்றத்தை கட்சியின் செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்யும் மேடையாகப் பயன்படுத்தினர். தங்களது பொது அறிக்கையில்… எங்கள் செயல் திட்டம் புரட்சியை நிறைவேற்றும் ஆற்றலுடைய அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் செயல் திட்டமாகும். இதுவே, புரட்சியினை வென்றெடுப்பதற்கான சரியான செயல் திட்டமாக இருக்கும், என மிகுந்த துணிச்சலுடனும், உறுதியோடும் குறிப்பிட்டனர்.

உலகம் பூராவும் இந்த சதி வழக்குக்கு எதிரான இயக்கங்கள் நடைபெற்றன. மீரட் கைதிகள் பற்றி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், அறிஞருமான ரொமெய்ன் ரோலண்டு சொன்னார்,… மனித குலத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுத்து நிறுத்த முடியாதபடி எழுச்சியுடன் முன்னேறிவரும் புரட்சிகர சக்திகளுக்கு அவர்கள் சாட்சிகளாக உள்ளனர். இனி எந்த வொரு சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கத்தின் எண்ணற்ற பாவகாரியங்களை மறைப்பதற்காகத் தான் கம்யூனிசத் திற்கு எதிரான இப்படிப்பட்ட கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன என்று நேரு மீரட் சதி வழக்கு பற்றி கருத்து தெரிவித்தார். மீரட் சதி வழக்கின் தீர்ப்பு பிரிட்டிஷ் அரசாங்க கொள்கையின் கொடூரமான பிரதிபலிப்பாக இருந்தது. முசாபர் அகமதுக்கு ஆயுட்காலம் முழுவது மான நாடுகடத்தல் தண்டனை வழங்கப்பட்டது; மற்ற பலருக்கும் பல ஆண்டுகளுக்கு நாடுகடத்தல் தண்டனை வழங்கப் பட்டது. மேல் முறையீட்டில் தண்டனைகள் குறைக்கப்பட்டன. அனால், இந்த வழக்கு நடத்தப்பட்ட விதம், குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதி மன்றத்தில் எழுப்பிய போர்க்குரல் இவையாவும் உலகின் மனசாட்சி யினை உலுக்கி எடுத்த நிகழ்வாக இருந்தது என்பது உண்மை. மீரட் சதி வழக்கின் தவிர்க்க முடியாத ஆனால், கம்யூனிச இயக்கத்தை மேலே எடுத்துச் செல்கிற நிகழ்வு ஒன்று நடந்தது. முதன் முதலாக கட்சிக்கு ஒரு அகில இந்திய மையம் உருவானது தான் அது.

அகில இந்திய மையம்

ஒரு அகில இந்திய மையத்தை நோக்கி என்ற அத்தியாயத்தில் எவ்வளவு சோதனைகளைக்கடந்து கட்சிக்கான அகில இந்திய மையம் உருவாக்கப்பட்டது என்பது பற்றி நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டு தலும், அதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள்,  பின்னடைவுகள், பின்பு அவைகளை சரி செய்து எப்படி அகில இந்திய மையம் உருவாக்கப் பட்டது என்பதை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மீரட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் செயல்திட்டத்தை வெளியிட்டது. இந்திய மக்களின் அடிமை நிலையை ஒழித்துக்கட்டவும், தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயி களையும், நசுக்கி வரும் வறுமையிலிருந்து அவர்களை மீட்கவும், நாட்டு விடுதலையை வென்றெடுப்பது இன்றியமையாதது. இதற்கு மத்திய காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்கக்கூடிய விவசாயப்புரட்சி பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது என்று செயல் திட்ட மேடை பிரகடனப்படுத்தியது. முன்பே குறிப்பிட்டது போல், விடுதலைப் போராட்டத்தில் முதலாளி வர்க்கத்தின் பங்கு பற்றிய தவறான கண்ணோட்டமும் அந்த பிரகடனத்தில் இருந்தது. இத்தகைய மதிப்பீடுகள் தான் 1930 களின் தொடக்கத்தில் பின்பற்றப்பட்ட குறுங்குழுவாத (Sectarian) அணுகு முறைக்கு காரணமாக அமைந்தது என்று இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.

1935ல் நடந்த  கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டிற்குப் பிறகு இது சரிசெய்யப் பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டாக எழுதிய கடிதம் கட்சிக்குள் இருந்த பல்வேறு குழுக்களை ஒற்றுமைப்படுத்த உதவியது. 1933 ம் ஆண்டு டிசம்பரில் நடந்த அகில இந்திய மாநாட்டில், தற்காலிக மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது; தற்காலிக அமைப்பு சட்ட நகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நகல் அரசியல் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தவறுகளை சரி செய்து ஒரு ஒன்றுபட்ட கட்சியினைக் கட்டும் முயற்சியோடு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு புதிய பாதையில் பயனிக்கத் தொடங்கியது என்ற வாசகங்களோடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் முதல் தொகுதி முடிவடைகிறது.

13 ஆண்டுகால வரலாறு இது. தேச விடுதலைப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு, தெளிவான வழிகாட்டுதலுக்காக அவர்கள் நடத்திய தத்துவார்த்த மற்றும் நடைமுறை போராட் டங்கள் பற்றிய வரலாறு. இந்த அறிமுகக் கட்டுரையில் அனைத்து விபரங்களையும், மதிப்பீடுகளையும் விவரிப்பது கடினம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் தணியாத தாகம் கொண்டவர்கள், இயக்க செயல் விரர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் அனைவரும் ஊன்றிப்படித்து தேச விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள உதவும் நூல் இது. சில புதிய செய்திகளைக் கூட இந்நூல் சொல்கிறது. உதாரணமாக, லெனின் மறைவு குறித்த அஞ்சலித் தீர்மானம் கூட பெல்காம் காங்கிரஸ் கூட்டத்தில் 63 – 54 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது என்ற அவலச்சுவை நிறைந்த செய்தி இதில் உண்டு. இதையெல்லாம் தாண்டி இயக்கம் வளர ஆரம்பித்தது. நூலின் வாசகங்களிலேயே சொல்வதென்றால், இந்தியாவின் தேச விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்ற வேறு எந்தப்பிரிவும், இந்த நூலின் வரலாற்றுக் காலமாகிய 1920 – 1933 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்ட அடக்கமுறையை காலனி ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சில சமயம் தெளிந்த நீரோடையில் நீராடும் உணர்வினையும், சில சமயம் நெருப்பாற்றில் நீந்தும் உணர்வினையும் கொடுக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்டது போன்று உணர்கிறோம். ஆங்கில மூலத்தின் அழுத்தம் ஏதும் குறையாமல் எளிய வார்த்தைகளில் சிக்கலான தத்துவார்த்த கோட்பாடுகளை விளக்கியிருப்பது பாராட்டுக்குறியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை கூர்ந்து கவனித்து அதில் பங்கு பெறும் தோழர் தான் அப்பணியினை சிறப்பாகச் செய்ய முடியும். தோழர். கி.இலக்குவன் அந்த கடினமான பணியினை மிகச் சிறப்பாக, மிகக் குறுகிய காலத்தில் செய்து முடித்திருப்பது பாராட்டுக்குரியது.

மற்ற நான்கு தொகுதிகளின் வெளியிட்டுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – 1
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
421, 2வது தளம்,
அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 016.
விலை ரூ.180/-