இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்

முசாபர் அகமது

(“இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்” என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு: “தீக்கதிர்” நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு புதுமை புத்தகாலயம் சார்பில் நூல் வடிவில் வெளியிடப்பட்டது – சி.பி.ஐ(எம்) கருவூலம்)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பரில்தான் ஸ்தாபிக்கப்ட்டது என்று 1959ல் கட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தினம் 1920 அக்டோபர்-17” என்று கட்சியின் மத்தியக்குழு அறிவிக்கிறது. எப்படியெனில், அன்றுதான் சோவியத் நாட்டிலுள்ள தாஷ்கண்டில் ஒன்று கூடிய இந்தியப் புரட்சிவாதிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தார்கள். அன்று முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், கட்சியையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

ரஷ்யப் புரட்சியின் எதிரொலி

1917இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்தது. இந்தப் புரட்சியை பற்றி ஏகாதிபத்திய உலகம் ஏராளமான அவதூறுகளைப் பரப்பியது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் பெண்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டனர் என்றும், குழந்தைகள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டனர் என்றும், இது போன்ற வேறு பல அவதூறுகளும் ஏகாதிபத்திய உலகத்தினால் பரப்பப்பட்டன. இப்படிப்பட்ட அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் ரஷ்யப் புரட்சியின் எதிரொலி நமது நாட்டிலும் ஒலிக்கவே செய்தது.

கிலாபாத் இயக்கம்

மேற்கு வங்கத்தில் பயங்கரவாதப் புரட்சி இயக்கத்தின் ஆரம்ப முன்னேற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்ட போதிலும், அந்த ஆண்டில் ஏனைய பல இயக்கங்கள் வீறு கொண்டு முன்னேறின. கிலாபாத் இயக்கமும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் இயக்கமும் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஏராளமான பெரிய கூட்டங்களும், ஊர்வலங்களும், தடைசெய்யப்பட்டன.

அக்காலத்தில் கல்கத்தாவில் எல்லா கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் நான் கலந்து கொள்வது வழக்கம். 1918 முதல் பல இடங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழ ஆரம்பித்தன. 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. கொஞ்ச காலம் வரை நாட்டில் பெரும் கண்டன இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. 1919இல் சீர்திருத்தச்சட்டம் (The Reforms Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

1920இல் அரசியலையே எனது வாழ்க்கையாக்கிக் கொள்ளுவது என முடிவு செய்தேன். அதற்கு முன்னர் நான் ஒரு இலக்கியக் கழகத்தின் முழு நேர ஊழியனாகப் பணிசெய்து வந்தேன். இந்தக் கழகத்தின் மூலம் 49ஆம் வங்க ரெஜிமெண்டின் (பட்டாளத்தின் ) ஹவில்தாராக இருந்த காஸி நஸ்ருல் இஸ்லாமை தெரிந்து கொண்டேன். அவர் பின்னர் ஒரு கவிஞராக நாடு முழுவதும் பிரபலமடைந்தார். வங்க ரெஜிமெண்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் என்னுடன் சேர்ந்து கல்கத்தாவில் வசிக்க ஆரம்பித்தார்.

‘நவ யுக்’ ஏடு

ஏ.கே பஸலுல் ஹக் என்பவர் அன்று ஓர் இடதுசாரித் தலைவராக அறிமுகமானார். அவர் வங்கத்தில் ஒரு பிரசுரம் கொண்டுவரத் தீர்மானித்தார். அதற்கு நஸ்ருல் இஸ்லாமும், நானும் பொறுப்பேற்றுக் கொண்டோம். எங்களது கூட்டு ஆசிரியர் குழுவின் சார்பில் ‘நவ யுக்’ என்னும் மாலை நாள் இதழ் வெளிவந்தது. நஸ்ருல் இஸ்லாமின் கனல் பறக்கும் எழுத்து வண்ணத்தினால் முதல் நாளிலிருந்தே பத்திரிக்கை பிரசித்தி பெற்றது. பெரும்பாலும் வழக்கமாகத் தலையங்கங்களை நான்தான் எழுதுவேன்.

‘நவ யுக்’ பத்திரிக்கையானது பிற வங்கப் பத்திரிக்கையிடமிருந்து வேறுபட்ட தன்மையுடையதாக இருந்தது. காரணம் அது தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திரு. பஸலுல் ஹக் (இடதுசாரி தலைவர் ) இதைத் தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்தச் சிறப்பு அம்சத்தை ஊக்கப்படுத்தவும் செய்தார்.

உணர்ச்சிமயமானவை

என் நண்பர் ஒருவர் கூறினார் “வங்கப் பத்திரிக்கைகள் முழுமையாகவே உணர்ச்சிமயமானவை. நீங்கள் பத்திரிக்கையின் கொஞ்ச இடத்தை  சாதாரண மக்களைப்பற்றி – குறிப்பாக தொழிலாளர்களை, விவசாயிகளைப் பற்றி எழுதுவதற்கு ஒதுக்கி வையுங்கள்”

நான் அவரது வேண்டுதலுக்கு முற்றிலும் உடன்பட்டேன். ஏற்கனவே கப்பலில் வேலை செய்பவர்களுக்கும், விசைப்படகுகளில் வேலை செய்பவர்களுக்குமிடையே என் பணியை ஆரம்பித்திருந்தேன்.

நான் பிறந்த இடத்தில் வங்காள விரிகுடாவிலுள்ள ‘ஸான்ட்விப்’ என்னும் தீவில்தான் நான் பிறந்தேன்) வசிக்கும் மக்களில் அதிகமான பேர் வழக்கமாக கப்பலில் வேலை செய்பவர்கள்தாம். இப்பொழுதும் அங்குள்ள ஏராளமான மக்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் கப்பல் ஊழியர்களைப் பற்றி நான் அதிகமாக எழுதினேன். இவர்களின் பிரச்சனைகளுக்கு ‘நவ யுக்’ பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் பத்திரிகையில் எழுதுவதன் வாயிலாக மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நோக்கி கவரப்படுவேன் என்பதை அன்று நான் கனவில்கூட கருதவில்லை.

கம்யூனிஸ்ட் அகிலம்

1920இல் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ், காலனி நாடுகள் பற்றிய லெனினது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது.  அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் அகிலம் காலனி நாடுகளுடன் தொடர்பு கொள்ள முயன்றது.

ரஷ்யப் புரட்சி நடந்தது முதலே பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கத் துவங்கியது. இங்கும் ஏதாவது நடந்து விடுமோ என்று – குறைந்தது ஒரு கம்யூனிஸ்ட்கட்சியாவது உருவாகிவிடுமோ என்று-  இந்திய அரசாங்கம் அஞ்சியது. அதனால், அரசாங்கம் தனக்கு ஒரு மத்திய ரகசிய புலனாய்வுத் துறையைப் புதிதாக உருவாக்கியது. பல்வேறு பிரதேசங்களிலிருந்த அரசியல் ஊழியர்களின் செயல்களை இந்தப் புலனாய்வுத்துறை மிகக் கவனமாக கண்காணித்து வந்தது.

மத்திய இரகசியப் புலனாய்வுத்துறையின் உளவாளிகள் நாடெங்கும் பரப்பப்பட்டனர். இந்த உளவாளிகள் உளவு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்டதொரு சூழலில் எங்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகக் கஷ்டமான பணிகளை நிறைவேற்றச்சென்றோம்.

இலட்சியம்

எங்களது இலட்சியம், இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்க வேண்டுமென்பதாக இருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தினால் நான் உத்வேகமூட்டப்பட்டேன் என்பதை உறுதியுடன் சொல்லுகிறேன். கல்கத்தா, பம்பாய், லாகூர் ஆகிய இடங்களை மையமாகக்கொண்டு நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.

1921இல் பிரான்சிலும், சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவானவர்களாக இருந்தோம். மிகக் குறைந்தபட்சம் எனது திறமையின்மை பற்றி முழுதும் உணர்ந்திருந்தேன்.  மார்க்சிசத்தைப் பற்றிய எனது ஞானம் ஆழமின்றி மேலோட்டமாக இருந்தது. அனுபவமில்லாத துறையில் நான் நுழைந்தபோது எனக்கிருந்த ஒரே கைமுதல் மக்களிடம் நான் பெற்றிருந்த நம்பிக்கையும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்களின் மீதான எனது நம்பிக்கையுமே என்பதை நான் உணர்ந்தேன்

என் கையில் பணமோ, ஜீவிதத்திற்கான வேறு மார்க்கமோ இல்லை. இப்படிப்பட்ட வேளையில் நான் மனமொடிந்து போகாமலிருந்ததற்கு முக்கிய காரணம் எனது மன வலிமைதான். அந்த மனவலிமை இல்லாமலிருந்திருந்தால் இன்று முப்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் எங்கு போய்ச் சோந்திருப்பேன்! அதுபற்றி எண்ணும்போது நான் வியப்பில் மூழ்கிவிடுவேன்.

‘ஹிஜ்ரத்’ இயக்கம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்காக கல்கத்தாவின் திட்டங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கவிஞர் நஸ்ருல் இஸ்லாமும் அந்தப் பணியில் கலந்து கொண்டார். எனினும், அவர் இறுதியில்  கட்சியில் சேரவில்லை. ஆனால், அவர் எல்லா சமயங்களிலும் எங்கள் ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராய் ஆனார் அவர்.

எனது பணிகளோடு இணைந்து முன்னேறிச் செல்ல விரும்புவதாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். அந்த விஷயத்தில் தங்களது உதவியையும் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களது நிலைப்பாட்டிற்கு எனது நிலைபாட்டோடு ஒருமைப்பாடு இல்லையென்பது பிறகு தெளிவானது.

1922இல் முதலில் அப்துல் ரசாக் கானும், அடுத்து அப்துல் ஹலீமும் என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர். ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் ரசாக் கான் ஒருமுறையும், அப்துல் ஹலீம் மூன்று முறைகளும் சிறை தண்டனை ஏற்றனர்.

1922இல் வேறொருவரும் எங்கள் நண்பரானார். அவர் பெயர் குத்புதீன் அகமது. ஒரு காலத்தில் ‘அல் ஹிலால், அல் பிலால்’ ஆகியவற்றை நடத்துவதில் மௌலானா அப்துல்கலாம் ஆஸாத்தின் சக ஊழியராக இருந்தார். அக்காலத்தில், கல்கத்தாவில் மார்க்சிஸ்ட் இலக்கியங்கள் கிடைப்பது மிக மிக அரிதாக இருந்தது. அவை எங்கேனும் கிடைத்தால்கூட, அவற்றை வாங்க எங்களுக்கு யாதொரு வசதியுமில்லை. ஜனாப், குத்புதீன் ஏராளமான புத்தகங்கள் வாங்குவதையும், படிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்துதான் நான் ஃப்லிப்ஸ் ரைஸர் எழுதிய ‘ரஷ்யப் புரட்சி பற்றிய எனது நினைவுகள்’ என்ற நூலை வாங்கிப் படித்தேன். ரஷ்யப் புரட்சி பற்றி நான் படித்த முதல் புத்தகம் அதுதான். 18 ஷில்லிங் விலையுள்ள அந்தப் புத்தகத்தை கொடுத்து வாங்க எங்களால் இயலவில்லை.

ஜனாப் குத்புதீனின் வீட்டு வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பிறகு அவர் ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற மற்றொரு கட்சியின்  ஸ்தாபகரானார். இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1948 பிப்ரவரி1ம் தேதியன்று அவர் காலமானார்.

அந்தச் சமயத்தில் ஏனைய சிலரும் எங்களோடு சேர்ந்தனர். எல்லோரையும் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை மிக அதிகம் நீண்டு விடும். ஆகவே, அதைச் செய்ய நான் துணியவில்லை.

பம்பாயைப் பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீபாத் அமிர்த டாங்கேயின் பெயரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். கல்லூரிப் புகுமுக வகுப்பில் படிக்கும்போது மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்டதால் அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் காந்தியத் தத்துவத்தை விரும்பாததால், 1921லேயே “காந்தி வெர்சஸ் லெனின்” என்ற நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதினார். அது அந்தக் காலத்தில் செய்ய முடியாத பெருந்தீவிரச் செயலாக இருந்தது. 1922இல் அவர் “சோஷலிஸ்ட்” என்ற ஆங்கில வார இதழொன்றைத் துவக்கினார். இந்தப் பெயரில் வேறொரு இதழ் முன்னெப்போதும் வந்ததில்லை. டாங்கே தொழிலாளர்களுடன் என்னைக் காட்டிலும் அதிகத் தொடர்பு வைத்திருந்தார். பம்பாயிலிருந்த மற்றவர்களைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன்.

‘குலாம் ஹுசேன் லாகூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் ஓர் அரசாங்கக் கல்லூரியில் (பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் சுல்லூரியில்) பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஹுசேன், முகமத் அலியின் நண்பராக இருந்தார்.

ஒரு சமயம் லாகூர் மாணவர்கள் சிலர் புரட்சிப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள இந்தியாவுக்கு வெளியே சென்றிருந்தார்கள். அக்குழுவில் முகமது அலியும் ஒருவர். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் அவர் ரஷ்யாவுக்குச்சென்றார், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குலாம் ஹு சேனை காபூலுக்கு அழைத்தவரும், அவருக்கு மார்கசிஸத்தின்பால் பற்று ஏற்பட செய்தவரும் அவர்தான்.

இறுதியில் குலாம் ஹுசேன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்காக தம்முடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் “இன்குலாப்” என்ற உருது மாத இதழை ஆரம்பித்தார். பிரசித்தி பெற்ற தென்மேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளரானார்.

கான்பூர் சிறையில்

1921இல் நான் கான்பூர் சிறையில்தான் முதலில் டாங்கேயைக் கண்டேன். எனினும், கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால், குலாம் ஹுசேனை நான் ஒரு போதும் கண்டது இல்லை. அதுமட்டுமல்ல, கடிதத்தின் மூலம் கூட அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதில்லை.

1922இல் சென்னையில் பழக்கம் வாய்ந்த வழக்கறிஞரான மலயாபுரம்  சிங்காரவேலு, தம்மை ஒரு கம்யூனிஸ்ட் என தாமாகவே அறிவித்துக்  கொண்டார். மார்க்சிஸ்ட் நூல்களைக் கொண்ட அவரது நூலகம் மிகப் பிரமாதமாக இருந்தது. அவர் தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.

இந்திய (கம்யூனிஸ்ட்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. அந்நிய நாட்டில்தான் என்பதை இங்குச் சுட்டிக்காட்டுகிறேன். 1920ஆம் ஆண்டின் நடுவில் ‘ஹிஜ்ரத்’ என்றழைக்கப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் கொண்ட ஓர் இயக்கம் சண்டீகரிலும், பஞ்சாபிலும் ஆரம்பமானது,

அடக்கு முறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன் நாட்டை விட்டு- தன் நண்பர்களை விட்டு வெளிநாடு செல்லுதல் என்பதே ‘ஹிஜ்ரத்’ என்னும் சொல்லின் பொருள். இந்த இயக்கத்தின் விளைவாக சுமார் 18 ஆயிரம் முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றனர். பிறகு மக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்தது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவைக் காட்டிலும் பின் தங்கிய நாடாக  இருந்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை இளைய முகாஜிர்மார்களும், (ஹிஜ்ரத் இயக்கத்தில் சேர்ந்தவர்களும்) விரும்பவில்லை. தாங்கள் துருக்கிக்குச் சென்று யுத்தத்தில் துருக்கி பக்கம் சேரப் போவதாக அவர்கள் நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். கடைசியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்த இளைஞர்கள் இந்துகுஷ் கணவாயைக் கடந்து திர்மீஸை (இப்போது இந்தப் பிரதேசம் தாஜிகஸ்தானில் இருக்கிறது) அடைந்தனர். அங்கிருந்து அவர்கள் படகு மூலம் அமுதாரியைக் கடக்கும் பொழுது டாக்மென் இனத்தைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தாக்கினர். இவர்களுக்குப் பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து பணமும், ஆயுதங்களும் கிடைப்பது வழக்கம்.

செம்படையினர் காப்பாற்றினர்

இந்தத் தாக்குதல் நடக்கும்போது செம்படை அங்கு வந்து சேர்ந்ததனால் இந்த முஸ்லீம் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். முஸ்லிம்களான அவர்கள், முஸ்லீம்களான துருக்கியர்களால் தாக்கப்பட்டது அவர்களிடத்தில் பெரியதொரு பிரதிபலிப்பை உண்டாக்கியது. அதனால் அவர்கள் கிர்க்கியில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக செம்படையுடன் சேர்ந்து ஆயுதமேந்திப் போராடினார்கள்.

பிறகு இந்த இளைஞர்களில் சிலர் தாஷ்கண்டிலிருக்கும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே, அவர்கள் மாஸ்கோவில் புதிதாக நிறுவப்பட்ட “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி” (கீழ்த்திசை பல்கலைக்கழகம்)யில் சேர்ந்தார்கள்.

அங்கு கொஞ்ச காலம் வரை படித்து பின்னர், மார்க்சிசமே தங்களது கொள்கையென உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள் அங்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். அதற்குப் பிறகு “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி நீடித்திருந்தது வரை” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளை அங்கு செயல்பட்டது. ஒரு சமயம் பஞ்சாபைச் சோத்த நமது நைனாசிங் அந்தக் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

‘ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி’ யில் ஒன்பது மாதங்கள் படித்த பின்னர் தங்களது சொந்த நாட்டுக்கு வருவதற்கும் அங்கு இயங்குவதற்கும் இந்திய தோழர்கள் விரும்பினர். அவர்களில் இருவர் இரான் நாட்டு வழியே இந்தியாவுக்குத் திரும்புவதில் வெற்றி பெற்றனர். மற்ற சிலரால் இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கான சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பாமீர் வழியே இந்தியாவுக்குத் திரும்புவதற்காக ஆலோசித்தனர்.

அதன் விளைவாக, பாமீர் வரை அவர்களைக் கொண்டு சேர்க்க பாதுகாப்புக் குழு ஒன்றைக் கம்யூனிஸ்ட் அகிலம் அனுப்பி வைத்தது. இந்தியாவுக்கு உட்பட்டிருந்த சித்ரால் எனும் இடம் வரை அத்தோழர்களுடன் பாதுகாப்புக் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்களை இந்தியப் போலீஸ் கைது செய்தது. பிறகு அவர்கள் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலம் வரை பெஷாவர் சிறையிலிருந்தனர்.

பெஷாவர் சதிவழக்கும், தண்டனையும்

1923ஆம் ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலருக்கு ஓராண்டு சிறையென்றும், இருவருக்கு பத்தாண்டுகள் கடுஞ்சிறையென்றும், ஒருவருக்குப் பத்தாண்டுகள் சிறையென்றும் தண்டனை விதிக்கப்பட்டது. பெஷாவர் சதிவழக்குத்தான் உண்மையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள்  மீதான முதலாவது சதிவழக்கு, எனினும், இந்தச் செய்தி அட்டோக்கு நதியின் இக்கரைக்கு வந்து சேரவில்லை. அக்காலத்தில் வடமேற்கு எல்லைப் பிரதேச நிலைமை அப்படி இருந்தது.

பெஷாவர் வழக்குக் கைதிகளில் – பின்னர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் மீர்அப்துல் மஜீத், பிரோஸ்தீன் மன்சூர், கூஹார் ரஹான் கான் ஆகியோர் ஆவர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கு இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திய முயற்சிகள்தாம் முதலில் சொல்லப்பட்டவை என்றாலும், 1925 டிசம்பருக்கு முன்பு கட்சியின் மத்தியக் கமிட்டி உருவாக்கப்படவில்லை.

கான்பூர் சதிவழக்கு

1923 மே மாதத்தில் கான்பூரில் சௌக்கத் உஸ்மானியும் (இவர் மாஸ்கோவிலிருந்து ஈரான் வழியாகத் திரும்பி வந்திருந்தார்) கல்கத்தாவில் நானும் கைது செய்யப்பட்டோம். சில நாட்களுக்குப்பிறகு லாகூரில் குலாம் ஹுசேனும் கைது செய்யப்பட்டார்.

வங்காளச் சிறைச்சட்டம் 1818ன்படி (1818வது ரெகுலேஷன் 111) எங்கள் மூவரையும் விசாரணையின்றி வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். 1923ஆம் ஆண்டு டிசம்பரில் நளினி குப்தாவையும் கைது செய்து விசாரணையில்லாமல் சிறையிலிட்டனர். அவர் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. என்றாலும், அவர் தம்மை ஒரு தேசியப் புரட்சிவாதியென்று அறிவித்துக் கொண்டார். அதிதீவிர செயல்களுடன் தாம் வைத்திருந்த பற்றின் காரணமாக, அவர் ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எங்களது செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.

இந்தியன் பீனல் கோடு, 121ஏ பிரிவின்படி இந்திய அரசாங்கத்திற்காக கான்பூர் மாவட்ட மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 1924 மார்ச் மாதத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரதிகளாக –

(1) எஸ் ஏ டாங்கே, (2) சௌக்கத் உஸ்மானி, (3) முசாபர் அகமது (4) நளினி குப்தா, (5) குலாம் ஹுசேன், (6) சிங்காரவேலர் (7) ராமச்சந்திரலால் சர்மா, (8) மனபேந்திர நாத் ராய் (எம்.என் ராய்) ஆகியோர் இருந்தனர்.

ஆரம்பத்தில் நால்வர் மட்டுமே கோர்ட்டில் ஆஜராக்கப்பட்டனர். சிங்காரவேலு செட்டியார் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வரவில்லை. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குலாம் ஹுசேன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணைக்கு இரைஞ்சி தமது சுதந்திரத்தை விலைக்கு விற்றார்.

ராமச்சந்திரலால் சாமா பாண்டிச் சேரியில் இருந்ததனால், அவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. எம் என் ராய் ஐரோப்பாவில் இருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வருவதென்ற பிரச்னையே எழவில்லை.

சோவியத் எதிர்ப்புக்காக

மத்திய இரகசிய புலனாய்வுத் துறையின் டைரக்டர் கானல் கேயின் வேண்டுகோளின்படி பத்திரிகைகள் இந்த வழக்கை கான்பூர் போல்ஷெவிக் சதிவழக்கு என்று விசேடமாகக் குறிப்பிட்டன. இதன் மூலம் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத் தேவைக்காக சோவியத் ரஷ்யாவையும் உட்படுத்துவதென கேய் கருதினார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒருவரை அடிக்கடி பார்வையாளர் காலரியில் கண்டேன். அவரது பெயர் சத்யபக்தன். அது எவ்விதத்தில் பார்த்தாலும் அவரது தாய்-தந்தையர் இட்ட பெயராக இல்லை. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட பெயரே இது. ஒருவேளை, அங்கு அவருக்கு சத்தியத்துடன் ஏராளமான பரிசோதனைகள் நடந்திருக்க வேண்டும்.

இந்த வழக்கு பிறகு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஜட்ஜ் ஒவ்வொருவருக்கும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்த ஜட்ஜ் எச் எல் ஹோமே என்பவர் ஒரு பிரசித்தி பெற்ற நபர். இவர்தான்  பிரசித்தி பெற்ற சௌரி சௌரா வழக்கில் 172 பேரைத் தூக்கிலிட்டுக் கொல்ல தீர்ப்பளித்தார்.

வெவ்வேறான நான்கு சிறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த எங்களது கழுத்திலும், காலிலும் இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருந்தன. அக்காலத்தில் உத்திரப்பிரதேச சிறைகளில் அப்படிச் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.

புற உலகிலிருந்து எங்களை முற்றிலும் தனிமைப்படுத்தினர். ஒரு பக்கத்தில் இப்படியிருக்க, மறு பக்கத்தில் முதலில் சொல்லப்பட்ட சத்ய பகதன் என்பவர் தாம் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் அறிவித்தார்.

ஒரு தடவை ராய்பரேலி மாவட்டச் சிறையில் நான் இரத்த வாந்தி எடுத்தேன். சரியான உணவு தேவையான அளவு கிடைக்காததினாலும் தங்கும் வசதி மோசமாக இருந்ததனாலும் ஏற்பட்ட ஆரோக்கியச் சீர்குலைவே இதற்குக் காரணம்.

சிறையிலிருக்கும் சிவில் சர்ஜன் என் உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது என் உடல்நிலை சிறிதும் மோசமில்லை என்று சொன்னாலும், நான் படிப்படியாக பலவீனமடைந்தே வந்தேன். கடுங்குளிரில் வாடுவதினால் எனக்கு மிக அதிகம் தூக்கம் குறைந்து போனது.

இந்த நிலையிலிருந்த என்னை அல்மோரா மாவட்டச் சிறைக்கு மாற்றினர். விடுதலைக்காலம் முடிவதற்கு முன்னரே உடல்நிலை மோசமான காரணத்தால் இந்திய அரசாங்க உத்தரவுப்படி 1925ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை விடுதலை செய்தனர்.

கான்பூர் மாநாட்டில்

சத்தியபக்தனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நான் அங்கு பத்திரிகையில் முதன்முதலில் படித்தறிந்தேன். டிசம்பர் கடைசி வாரத்தில் கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கவிருக்கிறதென்பதையும் பத்திரிக்கைகளில் படித்தேன். மாநாட்டில் தலைமை வகிப்பதற்காக, லண்டனிலிருக்கும் சபூர்ஜி சாக்லத்வாலாவைக் கேட்டுக் கொண்டனர். முதலில் மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும், கடைசியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அதற்கான அனுமதியை வழங்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

அல்மோராவில் இருந்த எனக்கு சத்தியபக்தன் ஒரு கடிதம் அனுப்பிபினார். சிறையிலிருந்து விடுதலையான என்னை அதில் வாழ்த்தியிருந்தார். கான்பூர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் என்னை அவர் கடிதத்தில் அழைத்திருந்தார்.

தன்னம்பிக்கை

அந்த வேளையில், நான் பெரும்பாலும் உடல்நலமடைந்திருந்தேன். அதுமட்டுமன்றி, அல்மோராவில் தட்பவெப்ப நிலை டிசம்பர் கடைசியில் தண்ணீரைப் பனிக்கட்டியாக்கும் நிலையை அடைந்திருந்தது. கான்பூரை அடைந்தபோது அங்கு எஸ்.வி காட்டே, கே.எல் ஜோக்லேகர், ஆர். எஸ் நிங்கார் ஆகியோர் முன்கூட்டியே வந்திருந்ததைக் கண்டேன். அவர்களைக் கண்டபோது எனக்குத் தன்னம்பிக்கை – கிட்டத்தட்ட மீண்டும் கிடைத்தது.

எப்படியெனில், சிறையில் இருந்தபோது இந்த மூவரைப் பற்றியும் டாங்கேயிடமிருந்து தெரிந்து கொண்டேன். கான்பூரில் அயோத்யா பிரசாத், ஜானகி பிரசாத், பாகர்ஹட்டா முதலிய ஏனைய சிலரையும் நான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன்.

கான்பூர் மாநாடு

கான்பூர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மௌலானா ஹஸ்ரத் மொகானியும், முக்கியத் தலைவராக சிங்காரவேலு செட்டியாரும் இருந்தனர். (எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, சிங்காரவேலு செட்டியார் கான்பூர் கோர்ட்டில் ஆஜரான போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. உண்மையில் அவருக்கு எதிராக அதிகமான சான்றுகள் இல்லை) 

கருத்து மோதல்

மாநாட்டின் ஆரம்பத்திலேயே எங்களது கருத்து, சத்தியபக்தனின் கருத்தோடு மோதியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழக்கப்படி கட்சியின் பெயர், ”கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா” என இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதினோம். சத்யபக்தனோ தனக்குச் சர்வ தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்தார். தம்முடைய கட்சி இந்தியத் தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பது அவரது கருத்து.

நாங்கள் எங்கள் கருத்தில் ஊன்றி நின்றோம். சத்திய பக்தன் தம்முடைய காகிதங்களையும் ஃபைல்களையும் விட்டுவிட்டு மாநாட்டு இடத்தை விட்டே போய்விட்டார். அவர் தமது கட்சியில் 300க்கு மேலான உறுப்பினர்கள் இருப்பதாகச்சொன்னார். இவர்கள் யார் யார் என்பதை எங்களால் ஒருபோதும் அறிய முடியவில்லை. மாநாட்டுக்குப் பிறகு நான் ஒருபோதும் சத்யபக்தனைக் காணவில்லை. ஒருமுறை பம்பாயில் அவரை எஸ்.வி.காட்டே கண்டதாகக் கேள்விப்பட்டேன். தான் அரசியலிலிருந்து விலகிவிட்டதாக காட்டேயிடம் சத்யபக்தன் சொன்னாராம்.

மத்தியக் கமிட்டி உருவானது

பல்வேறு இடங்களிலுள்ள கம்யூனிஸ்டுகளை ஒன்று சேர்த்து நாங்கள் கான்பூரில் முதலாவதாக ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) யின் ஒரு மத்தியக் கமிட்டியை அமைத்தோம். மாநாடு பகிரங்கமாக நடந்தது. அதனால் மத்திய கமிட்டியும் பகிரங்கமாகவே உருவாக்கப்பட்டது.

இதன்பேரில் நாட்டிற்குள்ளும் வெளியிலுமிருந்து வந்த ஏராளமான விமாசனங்களை நாங்கள் எதிர்நோக்க நேர்ந்தது. இந்த விமாசனங்களுக்கு நாங்கள் தகுதி உடையவர்கள்தாம். ஆனால் எங்களுக்கு வேறுவழி கிடைக்கவில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

கான்பூர் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கவில்லையெனில் சத்யபக்தனின் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் எங்களது நடவடிக்கைகளை பெருமளவில் தடுத்திருக்கும்.

கான்பூர் மாநாட்டைத் தொடர்ந்து கொஞ்சகாலம் வரை மௌலானா ஹஜரத் மொஹானி எங்களோடு சேர்ந்து நின்றார். அவர் பிரபலமான உருது கவிஞராகவும், சுதந்திரப்போராட்டத்தில் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார். பலமுறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏராளமான கொடுமைகளையும் ஏற்றிருக்கிறார். காங்கிரசின் அலகாபாத் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை அவர் சமர்ப்பித்தார்.

இந்தத் தீர்மானத்தைப் பிரதிநிதிகள் நிராகரித்தனர். இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த காரணத்திற்காக அவர் மீது செஷன்ஸ் கோர்ட் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை விதித்தது. எனினும், பம்பாய் ஹைகோர்ட் அந்தத் தண்டனையை ரத்து செய்தது. அவர் 1927இல் கட்சியை விட்டு விலகி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். முஸ்லீம் லீகில் சேர்ந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனினும் பெருந்தலைவர்கள், 1928 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கூட்டுச் செயலாளர்கள்

கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியை உருவாக்கியபோது எஸ். வி. காட்டே, ஜானகி பிரசாத், பாகர் ஹட்டா ஆகியோர் அதன் கூட்டுச் செயலாளர்களாயினர். 1927இல் ஜானகி பிரசாத்தின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்குப் போதிய காரணங்களும் இருந்தன. தம்மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்பதை உணர்ந்தபோது, ஜானகி பிரசாத் தாமாகவே எங்களிடமிருந்து போய்விட்டார்.

பொதுச் செயலாளர்

அதற்குப் பின்னர் எஸ். வி. காட்டே கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1929 மார்ச் 20 வரை அவர் இந்தப் பதவியில் நீடித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 முதல் 1929 ஜனவரி வரை மத்தியக் கமிட்டியின் ஏராளமான இரகசிய கூட்டங்கள் நடந்தன. சில ஆண்டுகளில் மத்தியக்கமிட்டி நான்கு முறை கூட கூடியிருக்கிறது. 1928 அக்டோபரில் பம்பாயில் கூட மத்தியக் கமிட்டி கூட்டத்தை ‘யுத்தக்குழு’ என்று எதற்காக மீரத் செஷன்ஸ் கோர்ட் ஜடஜ் குறிப்பிட்டாரென்பது எனக்குத் தெரியவில்லை. 1928இல் கட்சிக்காக ஓர் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

‘தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி’

இங்கு, தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியைப் பற்றி சிலவற்றை சொல்வது அவசியம். நான் 1923இல் கைது செய்யப்பட்ட பிறகு, 1926 ஜனவரி 2இல் கல்கத்தாவுக்குத் திரும்பினேன். நான் கல்கத்தாவுக்கு திரும்புவதற்கு முன்பு அங்கு ஒரு கட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்திய காங்கிரஸின் லேபர் ஸ்வராஜ் கட்சி என்ற பெயரால் அது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கட்சியின் சார்பில் ‘லங்கால்’ என்றொரு வார இதழ் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் முதலாவது இதழில் நஸ்ருல் இஸ்லாமின் பிரசித்தி பெற்ற ’சாம்யவாதி’ என்னும் கவிதையொன்று வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை ரஷ்ய மொழியில் கூட மொழி பெயர்க்கப்பட்டிருந்தது என்பதைக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அந்த மொழிபெயர்ப்பைப் பார்த்ததில்லை.

நான்கு நண்பர்கள் முன் முயற்சி செய்ததுதான் “லேபர்  ஸ்வராஜ்’ கட்சி உருவாக்கப்பட்டது. இரண்டு நண்பர்களின் பெயர்களை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஹேமந்தகுமார் சர்க்கார், சம்ஸுதீன் ஹுசேன் ஆகியோர் ஏனைய இருவர். கடைசியாகக் குறிப்பிட்ட நண்பர் அப்துல் ஹலமின் சகோதரர். இன்று நஸ்ருல் இஸ்லாமை  தவிர மற்ற எவரும் உயிருடன் இல்லை. அவர்கூட மூளை செயலற்ற நிலையை அடைந்து இறந்தது போன்ற நிலையில் வாழ்கிறார்.

1926 பிப்ரவரியில் கிருஷ்ணா நகரில் (நாடியா மாவட்டம்) விவசாயிகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் லேபர் ஸ்வராஜ் கட்சியின் பெயரை ‘பெஸண்ட்ஸ் அண்ட் ஒர்க்காஸ் பார்ட்டி’ (விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி) என மாற்றினர். இனிமேல் இந்திய தேசியக் காங்கிரஸின் கீழ் இக்கட்சி செயல்படாது என்பதுதான் இதன் பொருள்.

கிருஷ்ணாநகர் மாநாட்டில் விவசாயிகளின் பிரதிநிதிகள் அதிகம் பேர் வந்திருந்ததால் கட்சிப் பெயரின் ஆரம்பத்தில் ‘ஓர்க்கர்ஸ்’ என்பதைச் சேர்க்க முடியவில்லை. எனவேதான் ‘பெசண்ட்ஸ்’ என்பது முதலில் வந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற மாநாட்டில் இந்தப் பெயர் ’ஓர்க்கர்ஸ் அண்ட பெசண்ட்ஸ்’ என மாற்றப்பட்டது. படிப்படியாக நான் கட்சியின் ‘லங்கால்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஓர் உறுப்பினரானேன். இந்தச் சமயத்தில் பத்திரிக்கையின் பெயர் ‘கண வாணி’ என மாற்றப்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்படவில்லை என்றாலும், அதன் பெயரில் வெளிப்படையாகச் செயல்படுவது கஷ்டமாகவே இருந்தது.

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு

கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் உண்மையில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மூலம் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிதான் தயாரித்தது.

வங்கத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்கள்தான் அதிகம் பேர். அதனால் எங்களது நடவடிக்கைகளுக்கு ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை. 1927ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பம்பாயிலும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டுவிட்டது. எஸ். எஸ். மிராஜ்கர், கட்சியின் செயலாளராக இருந்தார். அந்த ஆண்டில் நடந்த அகில இந்தியத் தொழிற்சங்க மாநாட்டில் பஞ்சாப்பைச் சேர்ந்த சோகன் சிங் ஜோஷ், பாக்சிங் கனேடியன் ஆகியோருடன் எங்களுக்கு ஆரம்பப் பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சோகன் சிங் ‘கீர்த்தி’ என்ற ஒரு மாத இதழ் ஆசிரியராக இருந்தார். குருமுகி லிபியில் பஞ்சாபி மொழியில் அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தது.

மாஸ்கோவில் உள்ள ‘கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக’ கத்திலிருந்து திரும்பி வந்த சந்தோக் சிங் என்பவர் இந்த இதழின் ஸ்தாபகர். அவர் க்ஷயரோகத்தினால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு இறுதியில் நோயினாலேயே மாணம் அடைந்தார். அவருடனோ அப்துல் மஜீத்துடனோ எங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.

1924இல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் லாகூரில் தம்முடைய பணியை ஆரம்பித்தார். பஞ்சாபில் பிரபல நௌஜவான் பாரத் சபையின் ஸ்தாபகர்களாக இருந்த மிகச் சிலருள் ஒருவராக அப்துல் மஜீத் இருந்தார்.

சோகன்சிங்குடன் நாங்கள் சில விவாதங்கள் நடத்தினோம். சம்பந்தப்பட்ட விவாதங்களின் பலனாக, 1927இல் பஞ்சாபில் கீர்த்தி-கிஸான் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. பஞ்சாபிலும் தொழிற் சங்கப் பணிகள் பரவிக் கொண்டிருந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லையல்லவா?

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி

மீரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதையொட்டி நானும் பிலிப்ஸ் ப்ராட்டும்1928 அகடோபரில் மாநாட்டுக்குச் சென்றோம். அப்துல் மஜீத், சோகன்சிங் ஜோஷ். பூரண சந்திர  ஜோஷி (பி.ஸி.ஜோஷி) ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு அச் சமயத்தில் அலகாபாத்தில் சட்டக் கல்லூரியில் பி. ஸி. ஜோஷி படித்துக் கொண்டிருந்தார். கடிதங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொள்ள என்னால் முடிந்தது. மீரத் மாநாட்டில்தான் நான் அவரை முதன் முதலில் கண்டேன்.

மீரத் மாநாட்டில் உத்திரப் பிரதேசத்திற்கும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக பி.ஸி. ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டைக் கல்கத்தாவில் நடத்தவேண்டுமென பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்சிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அகில இந்திய தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியை உருவாக்க வேண்டுமெனவும்-மாநாடு நடப்பதற்கு முன்னரே நாங்கள் முடிவு செய்திருந்தோம் அதற்குப் பின்னர் மாநாடு நடத்தி, அகில இந்தியக்கட்சி உருவாக்கப்பட்டது. சோகன்சிங் ஜோஷ் மாநாட்டின் தலைவராக இருந்தார்.

இந்த மாநாட்டின் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி இரண்டு முறை கூடியது. ஒரு கூட்டம், மாநாடு நடந்து கொண்டிருந்தபோது நடந்தது. மற்றொரு கூட்டம் 1929 ஜனவரியின் ஆரம்பத்தில்-அதாவது மாநாட்டின் கடைசியில் கூடியது.

இரண்டாவது கூட்டத்தில் எனது பரிந்துரையின் பேரில் பி.ஸி. ஜோஷியும், சோகன்சிங் ஜோஷும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் மத்தியிலிருந்து முதலாவதாக அதிகாரப் பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் சோகன்சிங் ஜோஷ்தான். சந்தோக் சிங்கை கட்சியின் உறுப்பினராக மதிப்பிடுவதென்றால் சோகன்சிங்குக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும்.

பி.ஸி.ஜோஷியின் பெயரை ஓரிடத்திலும் எழுதக்கூடாதென்று தீர்மாணிக்கப்பட்டது. 1927-28இல் குறிப்பாக1928இல் நடந்த தொழிலாளர் போராட்டத்திற்குப்பிறகு அடக்குமுறையின் ஆபத்து உருவாகுமென்பது எங்களுக்குத் தோன்றியது. அதனால் இளைஞரான பி.ஸி ஜோஷியைப் பாதுகாப்பதற்காக அவரைப் பொறுத்தளவில் முதலில் சொல்லப்பட்டவாறு தீர்மானித்தோம். ஆனால் நாங்கள் எண்ணியவாறு அவரைப் பாதுகாக்க முடியவில்லை.

கல்கத்தாவில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தபோது, தோழர் கங்காதர் அதிகாரி ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். ஆறு ஆண்டு காலம் வரை அவர் ஜெர்மனியில் இருந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் பௌதீக இரசாயனத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றபின், டாக்டர் அதிகாரி, கொஞ்சகாலம் அங்கு பணி செய்தார். அவர் ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். மத்தியக்கமிட்டிதான் இதற்கான முடிவு செய்தது.

அதுவரை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் அகிலத்துடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படவில்லை. நாங்கள் விரும்பியிருந்தால் அது நடந்திருக்கும். கட்சி உறுப்பினர்கள் மிகக் குறைவானவர்களாக இருந்ததால் நாங்கள் அதற்குத் திட்டமிடவேயில்லை. எனினும் கம்யூனிஸ்ட் அகிலமானது தனது ஓர் அங்கம் என்ற நிலையில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் எங்கள் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை குழுவுக்கு மாற்றுப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்தோம். எங்களது மத்தியக் கமிட்டிக் கூட்டமும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தது. இந்தப் பிரதிநிதிகள் இருவரில் ஒருவரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவுக்கு அனுப்புவதென மத்தியக்கமிட்டி முடிவு செய்தது. ஆனால் இதைச் செய்வதற்கு முன்பே மீரத் சம்பவங்கள் எங்கள் மீது விழுந்தன.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் விமர்சனம்

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு ஒரு செய்தி அனுப்பியது. மாநாட்டின் ஆரம்பத்தில் இந்தச்செய்தி எங்களுக்குக் கிடைத்தது. செய்தியின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதி அல்லவென்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இரண்டு வர்க்கங்களின் அடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு எதிரான விமர்சனம் அதில் இருந்தது. அதனால் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டியதிருந்தது. அந்தச் சமயத்தில் இது குறித்து ஏதாவது விவாதிப்பதற்கு எங்களால் முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் அப்போதுதான் நடந்து முடிந்துவிட்டிருந்தது. எனினும் தனிப்பட்ட அளவில் எங்களில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த விமர்சனத்தின் பிரதான உள்ளடக்கம் என்னவென்பது புரிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும், மறக்கவொண்ணா மீரத் சதிவழக்கும்

1927ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல பகுதிகளிலும்  தொழிலாளர்களின் போராட்டங்கள் துவங்கின. 1928இல் இந்தப் போராட்டங்கள் வலிமை பெற்று விரிந்தளவில் பற்றிப் படர்ந்தது.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமல்ல; தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் உறுப்பினர்களும் பரந்த அளவில் உணர்வுபூர்வமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்ல; அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சொற்பொழிவுகள் நடந்தன

பம்பாயிலும், வங்கத்தில் சில இடங்களிலும் தொழிலாளர் மத்தியில் நமது தலைமை வலிமைப்படுத்தப்பட்டது. 1928இல் தொழிலாளர் போராட்டங்களின் விளைவினால் தொழிற்சங்க இயக்கம் போராட்ட வலிமை படைத்த புதியதொரு வடிவத்தைப் பெற்றது. இந்த இயக்கத்தின் தன்மை முற்றிலும் புதியதாக இருந்தது.

1923இல் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வழியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலிமை கொண்ட கட்சியாக ஆக்குவதற்கு ஏற்றதொரு மகத்தான சந்தர்ப்பம் கிட்டியது. தொழிலாளர்களிடையே இருந்த புரட்சிகரமான ஒரு பகுதியினர் கட்சியில் சேருவதற்கு இச்சந்தர்ப்பம் இடமளித்தது.

முதல் முழக்கம்

1928இல் நடந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்களிடையில் பொதுவாக செல்வாக்கைப் பெறவும் முடிந்தது. அவர்களில் ஏராளமானவர்கள் கட்சிக்கு வருவதற்குத் தயாராயினர். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் எங்களைக் கடுமையாகத் தாக்குவதற்காக தனது ஆயுதங்களை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. சட்ட மன்றத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் வந்தபோது அதன் உட்பொருள் எங்களுக்குப் புரிந்தது

அந்தக் காலத்தில் தலைமறைவாகச் செயல்படுவதற்கு தேவையான யாதொரு ஏற்பாடும் எங்களிடம் இருக்கவில்லை. இக்காலத்தில்தான் பம்பாயில் எஸ்.வி தேஷ்பாண்டேயும் பி.டி.ரணதிவேயும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். ஒத்துழையாமை இயக்க நாட்களில் தேஷ்பாண்டே தம்முடைய சகஊழியர்களை ஈடுபடுத்தினார்.

பி.டி. ரணதிவே பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற மாணவராய் விளங்கினார். அவருக்கு எம் ஏ பொருளியலில் முதல் மார்க கிடைத்தது. டாகடர் காங்காதர் அதிகாரி, அவரது சிற்றன்னை மகன் ஆவார். டாக்டர் அதிகாரியிடமிருந்து உத்வேகம் பெற்ற ரணதிவே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கவரப்பட்டார்.

1929 பிப்ரவரியில் சைமன் கமிஷனுக்கு எதிராகப் பெரியதொரு ஊர்வலம் நடத்துவதற்கு நாங்கள் கல்கத்தாவில் இந்திய தேசியக் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தோம். எங்கள் சார்பாக பலவகை முழக்கங்களைக் கொண்ட அட்டைகள் ஊர்வலத்தில் தாங்கி வரப்பட்டன. இதுதான் அந்த ஊர்வலத்தில்  இருந்த ஒரு சிறப்பு:

“புரட்சி ஓங்குக !” இந்த முழக்கத்தைத்தான் அந்த ஊர்வலத்தில் நாங்கள் முதன் முறையாக ஒலித்தோம்.

முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தைக் காங்கிரஸின் அகமதாபாத் மாநாட்டில் சமர்ப்பித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு எதிராகக் குற்றஞ் சாட்டித் தொடுத்த வழக்கின் நடுவே, மௌலானா ஹஸ்ரத் மொஹானிதான் இந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பினாரெனச் சிலர் சொல்வதுண்டு.  

ஒருநாள் தமது அறிக்கையை அவர் எனக்கு வாசித்துக் காட்டினார். அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததா என்பது இப்போது எனக்கு நினைவில்லை. அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததென்றால், அதை இந்தியாவில் முதலாவதாக எழுப்பிய பெருமை அவரையே சேரும். இல்லையெனில், அந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பியவர்கள் நாங்கள் தான்.

இதற்குப் பிறகு கல்கத்தாவில் எங்களது கடைசி இயக்கம் கிளைவ் சணல் ஆலையில் நடத்திய வேலை நிறுத்தம்தான். திடீரென மறக்க முடியாத 1929 மார்ச் 20 வந்து சேர்ந்தது.

மீரத் சதிவழக்கு

உண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் 1929 மார்ச் 20.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதிர்நோக்கியிருந்த ஆபத்தான தாக்குதல் முடிவில் வந்து சேர்ந்தது அன்றுதான். அன்றைய தினம் மீரத்தில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாரண்டின்படி, இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் 31 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெஞ்சமின், ப்ரான்சிஸ், ப்ராட்லியையும், ப்லிப்ஸ் ஸ்ப்ராட்டுவும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டளைப்படி எங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள்.

முசாபர் அகமது, சாஸுல் ஹுடா, அயோத்யா பிரசாத், சோஹன் சிங் ஜோஷ், மீர்அப்துல் மஜீத், பூரணசந்திர ஜோசி, ஸ்ரீபாத் அமிர்த டாங்கே, சச்சிதானந்த விஷ்ணு காட்டே, கேசவுநில் ஜோகலேகர், சாந்தாராம் சவ்லா, ராமமிராஜ்கர், ரகுநாத் சிவராம் நிம்புகார், காங்காதர் மொரேஸ்வார் அதிகாரி, சௌகத் உஸ்மானி, ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

பிரதிவாதிகளின் பட்டியலில் கடைசியாக மேலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எச்.எல். ஹச்சின்ஸன் என்பவரும் ஒருவர். எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராய் இருக்கவில்லை. அமீர் ஹைதர் கான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராய் இருந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ராதாரமன் மித்ரா தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் சேருவதென்ற தமது ஆவலைத் தெரிவித்திருந்தார். சிபநாத் பானர்ஜியும். கிசோரிலால் கோஷூம் யாதொரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. எனினும் அவர்கள் எங்களது ஒரு நல்ல நண்பராக இருந்தனர். ஏனைய பிரதிவாதிகள் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் அங்கத்தினராயிருந்தனர்.

வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஓர் அறிக்கை வெளியிடுவதற்கான வாய்ப்பு பிரதிவாதிகளுக்குக் கிடைத்தது. தருகின்ற அறிக்கையானது, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் நாடெங்கும் பரப்புவதற்கு ஏற்ற வகையிலுள்ள ஓர் அறிக்கையாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தோம்.

கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மார்க்சிஸம் பயின்றது எங்கே?

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு பிரதிவாதியும் ஒவ்வொரு அறிக்கையைத் தந்தனர். தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியைச் சோந்த பலர் தாங்கள் கட்சியின் உறுப்பினர்களென்பதை ஒப்புக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள், முன்னரே நிச்சயித்தபடி அறிக்கைகள் தந்தனர். தனித்தனியாக அறிக்கைகள் தருவதற்குப் பதிலாக அவர்கள் ஒரு கூட்டறிக்கையாகத் தந்தனர்.

நமது கட்சி உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வாசித்தார்களென்றால்-குறிப்பாக கூட்டறிக்கையை வாசித்தார்களென்றால் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கட்சியின் உறுப்பினர்கள்தான் என்பதை கோர்ட்டில் ஒப்புக்கொண்டனர்.

தரணிகாந்த் கோஸ்வாமி, கோபேந்தர கிருஷ்ண சக்கரவர்த்தி, கோபால் பாசக் ராதாரமன் மித்ரா, ஆகியோர் மனச் சாட்சிப்படி தாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அறிவித்தனர். கட்சியின் ஆலோசனைப்படி பி.சி.ஜோஷியும் அத்தகையதொரு அறிக்கையை அளித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கக் காரணம், அவர் இந்திய கமயூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினர்தான் என்பதற்கு எவ்விடத்திலும் யாதொரு சான்றும் இருந்ததில்லை.

சௌதரி தரம்பீர் சிங், மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் விடுதலை செய்யப்பட்டார். சிவநாத் பானர்ஜியும், கிஸோரிலால் கோஷூம் செஷன்ஸ் கோர்ட் மூலம் விடுதலையாயினர் எஞ்சியவர்களில் சிலரை ஆயுள்காலம் முழுவதும் நாடுகடத்துவதற்கும், மற்ற சிலரை 12 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 8 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 4ஆண்டுகள் என சிறைத் தண்டனை அனுபவிக்கவும் கோர்ட் தீர்ப்பளித்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பு 68 வயதான பழைய இஞ்சினியர் பண்டிராஜ் தேஜ்டி காலமானார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் புனாவுக்குச் சென்றிருந்தார். அவர் பம்பாயில் உள்ள தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் தலைவராக இருந்தார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் ‘கமிட்’ செய்யப்பட்ட பின்னர் அரசாங்தத் தரப்பு வக்கீல் லாங்போர்ட் ஜேம்ஸ் காலமானார்.

உலகத்தின் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்று

1929 மார்ச் 20-ம் தேதிதான் நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1933 ஜனவரி 16-ம் தேதியன்று செஷன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கிற்காக அச்சிடப்பட்ட காகிதங்கள் பத்தாயிரம் முழுப்பக்கங்கள் வரும்.  மீரத் சதிவழக்கு என்பது உலகத்தின் மிகப் பெரிய வழக்குகளில் ஒன்றாயிருந்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை அறிவிப்பதற்குச் சற்று நேரத்திற்குமுன் சௌக்கத் உஷ்மானி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர வேறு யாதொரு வழியுமில்லை என்ற விதத்தில் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தலும், ஆண்டுகள் பலவாக கடுஞ்சிறையும்.  12 ஆண்டுகால கடுஞ்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபிறகு நிம்ப்கரின்  பலவீனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீரத் சதிவழக்கின் கால கட்டத்திலிருந்துதான் கம்யூனிஸ்ட் கொள்கையும், கருத்தும் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டன. வங்காளச் சிறைகளிலும், தனிமைச் சிறைகளிலும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் மார்க்சிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். 1929இல் எங்கள் மீதான வழக்குகள் ஆரம்பமானதற்குப் பிறகு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எம்.என்.ராய் வெளியேற்றப்பட்டார்.

ஒருசமயம் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்குப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் அவரது நடவடிக்கையில் எனக்கு ஆட்சேபணை இருந்தது. அவரை வெளியேற்றியதற்கான காரணங்களில் ஒன்றாக எனது ஆட்சேபனையும் இருக்குமோ என்பது பற்றிய விவரம் கிடைப்பதற்கு எனக்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து எதாவது ஒரு செயலில் ஈடுபடுவார் என்று நாங்கள் கருதியிருந்தோம். உண்மையில் அவர் அவ்வாறே செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக் குழு’ என்பதன் பேரில் அவர் இரகசியக் குறிப்புக்களை விநியோகிக்க ஆரம்பித்தார்.

மீரத் சதி வழக்கிற்குப் பிறகு

1930-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக்குழு’வின் பேரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை எம்.என். ராய் நிறுத்திக் கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கம்பூனிஸ்ட் அகிலத்தில் இணைப்புக் கிடைத்த சமயத்தில்தான் இந்தோ-சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுக்கான நகல்திட்டம் பிரசுரிக்கப்பட்டது.

1930 டிசம்பர் 19ஆம் தேதியன்று நகல் திட்டம் ‘இன்டர் நேஷனல் ‘கரஸ்பான்டன்ஸ்’ என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. பம்பாயைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு, அகில இந்திய கட்சி விஷயத்தில் ஏற்பட்ட பிளவு, கருத்து வேறுபாடுகள் ஆகியவை காரணமாக இந்தச்சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்திருந்த இணைப்பை ரத்து செய்துவிட்டது.

கல்கத்தாவை சேர்ந்த தோழர்கள் (ஹலீம் உள்பட) கல்கத்தா கமிட்டி ஆஃப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தாகுழு) என்னும் பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு விரிந்த கூட்டத்திலோ கம்யூனிஸ்ட் அகிலத்தின் மத்தியக்கமிட்டி கூட்டத்திலோ, கல்கத்தாவின் கமிட்டியை குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக் கூட்டத்தில் என்பது எனக்குத் தெளிவாக நினைவில்லை

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் அகில இந்திய வடிவம் தரவேண்டுமென கல்கத்தா கமிட்டி எழுப்பிய வேண்டுகோளுக்கு பம்பாயிலிருந்து யாதொரு பிரதிபலிப்பும் உண்டாகவில்லை. அப்போது அவர்கள் பல வழிகளின் மூலம் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்பினர்.

1932ஆம் ஆண்டின் கடைசியில் ப்லிப்ஸ் ஸ்பாரட்டுக்கும், பெல் ப்ராட்டுக்கும் எனக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கை அனுப்புவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கைகள் பயனளிப்பவையாக இருந்தன.

அடக்குமுறை கொடுமைகளுக்கிடையிலும் மீண்டும் கட்சியை புனரமைத்தல்

1932 மேமாதம் சீனா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய கமிட்டிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பகிரங்கக்கடிதம் அனுப்பின, அந்தக் கடிதத்தில் அக்கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், நடவடிக்கை முறைகளை கடுமையாக விமர்சித்திருந்தன. நடவடிக்கைக்கான நகல் திட்டத்தின் அடிப்படையில் அகில இந்தியக் கட்சியை உருவாக்க நிர்பந்திக்கவும் செய்தன.

ஓராண்டுக்கு மேலான பின்னர்,1933 ஜூலை 16ஆம் தேதியன்று மீண்டும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கடிதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது. இந்தக் கடிதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் கிட்டத்தட்ட கடுமையாகவும் உறுதியாகவும் இருந்தது.

சோவியத், சீனக் கம்யூனிஸ்ட கட்சிகளின் நடவடிக்கைகளிலிருந்து பல உதாரணங்களைத் தந்து இந்தியாவில் ஓர் அகில இந்தியக் கட்சியை உருவாக்குவதற்கான தேவையை இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குப் பல வழிகளிலும் விளக்கிட சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. தொடர்ந்து அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா கமிட்டியினுடைய நடவடிக்கைகளை வாழ்த்தவும் செய்தது. மேலும் பின்வருமாறு குறிப்பிடவும் செய்தது:

“எனவேதான். ஓர் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்ற அறைகூவலை விடாப்பிடியாக ஏற்றுக் கொண்டும், கட்சி வேலைகளை அகில இந்திய மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுகின்ற தேவையில்லாத கோஷ்டிப் பூசல்களை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டும், வலுவான, ஒருமைப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைத் தட்டியெழுப்பி, புதியதொரு அத்தியாயத்தை உருவாக வேண்டுமென வேண்டுகோள் விடுத்துக் கொண்டும்,  வரும் ‘கல்கத்தா கமிட்டி ஆப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியாவை (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா குழுவை) நாங்கள் வாழ்த்துகிறோம்.

மீரத் சதிவழக்கில் எங்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மோசமான தண்டனைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தோம். 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று இந்த அப்பீலின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. எங்கள் மீதான தண்டனைகள் தளர்த்தப்பட்டன. டாங்கே, உஸ்மானி ஆகியோர் மீதும், என் மீதும் உள்ள தண்டனை 3 ஆண்டுகள் கடுஞ்சிறையாகத் தளர்த்தப்பட்டது.

பிலிபஸ் ஸ்ப்ராட்டின் மீதான தண்டனை 2 ஆண்டுகள் கடுஞ்சிறையாகவும் காட்டே, பென்பராட்லி மிராஜ்கர் ஜோகலேக்கர், நிம்ப்கார், சோகன்சிங் ஜோஷ், அப்துல் மஜீத், தரானி கோஸ்வாமி ஆகியோரின் மீதான தண்டனை 1 ஆண்டு கடுஞ்சிறையாகவும், கோபால் சகரவர்த்தி மீதான தண்டனை 7 மாதங்கள் கடுஞ்சிறையாகவும் தளர்த்தப்பட்டது. தேசாயி ஹச்சின்ஸன் ராமன்மித்ரா முதலிய 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாகடர் அதிகாரி, பி.ஸி ஜோஷி அயோத்யா பிரசாத், ஷாம்ஸுல் ஹூதா, கோபால் பாஸ்க் ஆகியோர் அதுவரை அனுபவித்த சிறைத் தண்டனையை (1933 ஆகஸ்ட் 30 வரை) அவர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்டது. அதாவது அதே நாளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே அதன் பொருள். ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கல்கத்தா கமிட்டியின் உதவியுடன் மீண்டும் கட்சியை உருவாக்க முயன்றனர். பம்பாய் தோழர்கள் சிலர் இந்த முயற்சிக்கு வந்தனர். சிலர் வரவில்லை. இந்த முயற்சியின் பயனாக 1933 டிசம்பர் மாதத்தில் கட்சியின் ஒரு இரகசிய மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அந்த மாநாட்டில் கட்சிக்குப் புதியதொரு அரசியல் திட்டமும், அமைப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. புதிய மத்தியக் கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டது. டாக்டர் அதிகாரி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்திகள் அடங்கிய அறிக்கையுடன் பென் பிராட்லி ஐரோப்பாவிற்குச் சென்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுபடியும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினரானது.

நடைமுறையில் சட்ட விரோதமாக இருந்தாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக தடை செய்துவிட்டதாக ஒருபோதும் அறிவித்திருக்கவில்லை. மீரத் சதிவழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ள ஓர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தினால் முடிந்தது. அதனால் 1934இல் கம்யூனிஸ்ட் சுட்சியை சட்ட விரோதமானது என அறிவிக்கும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

கடைசியாக ஒன்று…

ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு நான் எனது கட்டுரையை முடித்து கொள்கிறேன். ஆர். பாமி தத்தும், பென் பிராட்லியும் சேர்ந்து ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக முன்னணி’ அறிக்கையை எழுதி உருவாக்குவதற்கு முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்ததில்லை என்று நமது தோழர்களில் பலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து தவறானதாகும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முயன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள்.

1926க்கு முன்பு நான் மட்டுமே காங்கிரசில் உறுப்பினனாக இல்லாமலிருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியில் (1925இல் உருவாக்கப்பட்டது) இருந்த 3 உறுப்பினர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராயிருந்தனர். மீரத் சதிவழக்கின் பிரதிவாதிகளில் எழுவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்தவர்களே. இந்த எழுவரில் ஐவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்கள்.

இந்திய தேசிய காங்கிரசுக்குள் நாட்டின் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மீண்டும் போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. எல்லா சமயங்களிலும் அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தவறான கருத்தின் அடிப்படையில் வரலாற்று ரீதியான பிசகு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருதித்தான் இந்த உண்மைகளை நான் இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)

(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வகுப்புவாத மோதல்கள்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத மோதல்களால் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அது அவநம்பிக்கை தரக்கூடிய ஒரு அம்சம்தான். என்றாலும் கூட, ஒரு மக்கள் கட்சி அதற்குத் தீர்வு காணும். உயர் வர்க்கங்கள் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடும் அதே நேரத்தில், இந்து-முஸ்லீம் ஆகிய இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்களிடையே மிக முக்கியமானதொரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. அதுவே சுரண்டல். இந்து-முஸ்லீம் தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலை கூரையின் கீழ் வேர்வை சிந்தப் பாடுபடுகின்றனர். இந்து –முஸ்லீம் விவசாயிகள் கொளுத்தும் வெய்யிலில் நிலத்தில் பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் இந்த இரு பிரிவினருமே சமமான அளவில் நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாலும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவரது முதலாளி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒரு முஸ்லீம் தொழிலாளிக்கு நல்ல ஊதியம் வழங்குவதில்லை. அதைப் போலவே,  ஓர் இந்து நிலப்பிரபு முஸ்லீம் குத்தகை விவசாயியை விட குறைவான குத்தகையை இந்து விவசாயியிடம் இருந்து பெறுவதில்லை. (குட்டி அறிவுஜீவிகள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுரண்டலுக்கு ஆளாகும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே விதி பொருந்தும்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம்பேர் சுரண்டல் என்ற ஒற்றைச் சரடால் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய வகுப்புவாத மோதல்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. பொருளாதார நலன்களைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்;  பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட துணிவுமிக்க ஒரு தலைமையை அவர்களுக்கு வழங்குங்கள். அப்போது இத்தகைய வகுப்புவாத மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சதிகாரக் கொள்கையின் அடித்தளம் உடைத்தெறியப்படும். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பது உண்மையே. எனினும், தேசியவாத இயக்கத்திற்குள் புகுந்து அதன் உயிரோட்டமான உறுப்புகளை அரித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு இதைத் தவிர வேறெந்த மருந்தும் இல்லை.

தேசியவாத இயக்கத்தின் சரிவுதான் வகுப்புவாத மோதலுக்கான உந்துதலை அளித்திருக்கிறது. தீவிரமான வெகுஜன நடவடிக்கை என்ற திட்டத்துடன் தேசியவாத இயக்கத்தை சீரமைத்தோம் எனில், அதுவே இத்தகைய உந்துதலை அப்புறப்படுத்தி விடும். அரசியல் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் கிளர்ச்சியும் மதவாத வெறித்தனத்தை விரைவுபடுத்தியுள்ளன. தேசியவாத இயக்கத்தை உறுதியானதொரு மதசார்பற்ற அடித்தளத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் இந்த மாபெரும் தவறினை திருத்திக் கொள்ள வேண்டும். உடனடி பொருளாதார கோரிக்கைகளுக்கான முழக்கங்களுடன், தேசியவாதம் என்ற பதாகையின்கீழ், பெருந்திரளான மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நிலக் குத்தகை, நில வாடகை, கந்துவட்டிக்காரர்களின் கொடும் வட்டி, விலைவாசி, ஊதியம், வேலைநிலைமைகள், தொடக்கக் கல்வி ஆகியவையே கிளர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மிகப் பெருமளவிற்குப் பாதிக்கின்ற இந்த ஒவ்வொரு அம்சத்தின் மீதும், அதன் வழியாகப் பெறவிருக்கும் நலனுக்கான அடையாளத்தை மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நம்மால் உணர்த்தவும் முடியும். எனவே, இவ்வகையிலான கிளர்ச்சியானது தேசிய இயக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் வகுப்புவாத நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கும்.

எனினும் ஜனநாயகரீதியான குறிக்கோள்கள் தேசிய சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை ஒரு வரலாற்றுரீதியான பின்னணியைக் கொண்டதாகும். எனவே, இந்த வகுப்புவாதப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் என்றதொரு பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும். தேசிய சிறுபான்மையினரின் நலன்கள் தேசியவாத மேடையின் முக்கியமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பினை தேசியவாத இயக்கம் தரத் தவறுமானால், அதைத் தருவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் நாடு முழுவதிலும் நேர்க்கோடாக ஒரு பிளவை ஏற்படுத்தும் வசதியும் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலமான இந்து தேசியத் தலைவர்களின் நடத்தையும் அறிவிப்புகளும் முஸ்லீம்களிடையே சந்தேகம் எழுவதற்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. மறுபுறத்தில், முஸ்லீம் தலைவர்களில் ஒரு பிரிவினரின் தாய்நாட்டை மீறிய தேசப் பற்று என்பது இந்து பிற்போக்குவாதிகளின் ஊறுவிளைவிக்கும் பிரச்சாரத்திற்குத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே அதீதமான போக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான நிச்சயமான காப்புறுதி என்பது பெருந்திரளான மக்களை அவர்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதே ஆகும். இந்த வர்க்க ரீதியான எல்லைகள் வகுப்புவாத அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மேலெழுந்தவாரியான பிரிவினைகளை மிக ஆழமாகவே தாண்டிச் செல்வதாக அமைகின்றன.

தேசிய நலனும் வர்க்க நலனும்

தொடர்ந்து வெடித்து வரும் வகுப்புவாத மோதல்கள் தேசிய இயக்கத்திற்கு பெருமளவிற்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. எனினும் இந்த இயக்கத்தின் இப்போதைய சீரழிவு தேசியவாத அணிகளுக்கு உள்ளே வர்க்க நலன்களின் அடிப்படையில் உருவாகும் மோதல்களின் காரணமாகவே உருவானதாகும். வேறெந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சமூகத்தைப் போலவே இந்திய சமூகமும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உறவு என்பது ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இந்த நாடு அந்நிய சக்தி ஒன்றினால் ஒடுக்கப்படுகிறது; சுரண்டப்படுகிறது. எனினும் இந்த ஒடுக்குமுறையின் அழுத்தமானது இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினரின் மீதும் சமமாக விழுவதில்லை. அதன் குறிக்கோள் என்பது அனைத்து மக்களையும் சுரண்ட வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தச் சுரண்டல் தங்கள் உழைக்கும் சக்தியைக் கொண்டு செல்வத்தை உருவாக்கும் வர்க்கங்களின் மீது மட்டுமே விழுகிறது. நாட்டின் 98 சதவீதம் பேராக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளுமே உள்ளனர். இந்திய சமூகத்தின் உயர் வர்க்கத்தினருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சச்சரவு என்பது அடிக்கும் கொள்ளையை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில்தான்.

உள்ளூரில் உள்ள நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகக் கொள்கையானது தங்குதடையற்ற பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் தங்கள் திறனை அவர்களால் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்திய தொழிலாளிகளும் விவசாயிகளும் உற்பத்தி செய்கின்ற மதிப்பில் பெரும்பகுதி ஏகாதிபத்தியத்தின் சட்டைப் பைகளை மேலும் ஊதிப் பெரிதாக்குகிறது. இந்திய முதலாளிகள் பெயரளவிற்கு இடைத்தரகருக்கான பங்கைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் கொள்ளையில் கிடைக்கும் இந்தச் சிறிய பங்கைக் கண்டு அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இறுதியில், இந்திய மக்களின் உழைப்புச் சக்தியின் ஆதாரம் முழுவதன் மீதான முன்னுரிமையை, அதிகரித்துக் கொண்டே போகும் பங்கைத்தான் அவர்கள் கோருகின்றனர்.

எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகத்திற்கு சவால் விடாமல் நாட்டை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை இந்திய முதலாளிகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. மேலும் இதை அவர்களால் தானாகவே செய்துவிடவும் முடியாது. அனைத்து மக்களின் புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக அல்லாமல் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டுவிட முடியாது. எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுமக்களின் எழுச்சி என்பது தேசிய முதலாளிகளின் மனக்குறைகளால் உருவானது. அதற்கேயுரிய காரணங்கள் அந்த எழுச்சிக்கு உண்டு. பெருந்திரளான மக்கள் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். அதன் காரணமாகவே, நாட்டின் ஒரே எஜமானனாக, ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிற தேசிய முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்தியத்திற்கு மிக மோசமான அச்சுறுத்தலை தரக்கூடிய வலிமை வாய்ந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிவதில்லை. இவ்வகையில் தேசிய நலன்கள் – அதாவது 98 சதவீதம் பேரின் நலன்கள் – வர்க்க நலன்களுக்காக பலி கொடுக்கப்படுகின்றன. நாட்டின் மீதான முழுமையான ஆளுமையை பெறுவதற்கான அதன் முயற்சி, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ற நிலையில் தேசிய முதலாளிகள் கூட்டாகச் சேர்ந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டதொரு உள்நாட்டு அம்சத்தின் உதவியின்றி எந்தவொரு அந்நிய சக்தியுமே ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. நிலையானதொரு அரசுக்கு ஒரு சமூக அடிப்படை இருக்க வேண்டும். (முதல்) உலகப் போர் வரையிலான காலத்தில் இரண்டு வகையான சமூக அம்சங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்து வந்தன. அவையே நிலப்பிரபுத்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஆகும். இந்த இரண்டு பிரிவினருமே மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர். இவ்வகையில் ஏகாதிபத்தியத்திற்கு உறுதியானதொரு அடித்தளம் இருந்தது.

எனினும் இந்த இரு சமூக சக்திகளுமே ஒரே மாதிரியான வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சாதகமான, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வந்த அதே நேரத்தில், விவசாயிகள் அவர்களது செயலூக்கமற்ற விசுவாசத்தின் காரணமாக உணர்வுபூர்வமற்ற ஆதரவை வழங்கி வந்தனர். உலகப் போருக்குப் பின்பு நிலைமை மாறிவிட்டது. விவசாயிகளின் செயலூக்கமற்ற விசுவாசம் சீர்குலைந்தது. அதற்குப் பதிலாக அவர்களின் கோபக் கனல் மிக்க கொந்தளிப்பு அவ்வப்போது எழத் தொடங்கியது. இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இப்போது மிக மோசமான வகையில் கலகலக்கத் தொடங்கியது. அதனை சமப்படுத்துவதற்கு புதியதொரு கூட்டாளியை அது கண்டெடுக்க வேண்டியதாயிற்று.

அந்தப் புதிய கூட்டாளிதான் (வங்கியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் இந்த வர்க்கத்தினரோடு நெருங்கிய தொடர்புடைய தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய) தேசிய முதலாளி வர்க்கம் ஆகும். உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் தேசிய இயக்கம் ஒரு புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதன் மோசமான விளைவுகளைக் கண்டு தேசிய முதலாளிகள் அஞ்சினர். பாதுகாப்பானதொரு வழியில் பயணம் செய்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். இவ்வகையில் இந்திய மக்களை சுரண்டுவதில் ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கட்சி மாறல் தேசிய இயக்கத்திலும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. சமரசமும் சரணாகதியுமே கொள்கையாக மாறின. வர்க்க நலன்கள் என்ற பலிபீடத்தில் மக்களை பலி கொடுப்பது என்பது 1922ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக நடைபெற்று வருகிறது. கூடவிருக்கின்ற புதிய சட்டமன்றமும் கவுன்சிலும் இதன் இறுதிக் கட்டமாக அமைகிறது. அது எத்தகைய வடிவத்தை மேற்கொள்ள இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆனால் அடிப்படையில் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான எதிர்ப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, ‘நாகரீகமாகவோ’ அல்லது ‘பதில் நடவடிக்கையாகவோ’ பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் இடையிலான பகைமையின் சமரசம் ஒரு தேசியப் புரட்சிக்கான அடிப்படைக் காரணத்தை அகற்றிவிடாது. இந்திய மக்களுக்கு விடுதலையின் அவசியம் தேசியவாத முதலாளித்துவ பிரிவின் நலன்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்திய மக்களை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவிப்பதில்லை. கிட்டத்தட்ட 98 சதவீத மக்கள் இன்னமும் அரசியல் உரிமைகள் இல்லாமல்தான் உள்ளனர். ஏகாதிபத்தியம் தனது பங்கைக் குறைத்துக் கொள்வதன்மூலம் உள்நாட்டு முதலாளித்துவத்திற்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவதில்லை. மாறாக, உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்காக செய்யும் உற்பத்திக்கும் மேலாக உள்நாட்டு முதலாளித்துவத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அதன்மூலம் உழைக்கும் மக்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில், தேசிய விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமாகும். தேசியவாத இயக்கம் என்பது பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய வெகுஜன இயக்கமாக இருக்கவேண்டும். இயக்கத்தின் வேலைத்திட்டம் சுயராஜ்யத் திட்டத்தில் இருந்ததைப் போன்ற குழப்பம் மற்றும் தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயப் பிரச்சினையில் தேசியவாத இயக்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கவேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயிகள். இந்திய சமூகத்தின் தற்போதைய நிலையில் இது மிக முக்கியமான பொருளாதார காரணியாகும். தேசிய விடுதலைக்கான இயக்கத்தில் அது உறுதியான பங்கை வகிக்கும். விவசாயிகளுக்கான போராட்டம் என்பது தேசியவாத இயக்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற ஏகாதிபத்தியம் சாமர்த்தியமாக முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பல மாகாணங்களில் நில உரிமையாளர் வர்க்கத்தின்மீது குத்தகை சீர்திருத்தச் சட்டங்களை அது கட்டாயப்படுத்தியுள்ளது. இது 1919-21இல் கடுமையான விவசாயக் குழப்பங்களால் உருவான ஆபத்தான சூழ்நிலையை கையில் எடுக்க உதவியது. விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, விவசாயத்திற்கான அரச ஆணையம் இருந்தது. இந்த நகர்வுகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உள்நோக்கம் விவசாயிகளுக்கு உதவுவது அல்ல; மாறாக அவர்களை ஏமாற்றுவதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்து ஏகாதிபத்தியம் எடுத்துச் செல்லும் இலாபத்தின் முக்கிய ஆதாரமாக விவசாயிகள் மீதான மிருகத்தனமான  சுரண்டல் அமைகிறது. ஏகாதிபத்தியத்தின் மோசமான திட்டங்களை முறியடிக்கவும், விவசாயிகளின் நம்பிக்கையை மீளப் பெறவும் தேசியவாத இயக்கம் ஒரு தீவிரமான விவசாயத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

1923 தேர்தலுக்கு முன்னதாக சுயராஜ்ய கட்சி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“குத்தகைதாரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நிற்கிறது என்பது உண்மைதான்; எனினும் அது நிலஉரிமையாளருக்கு ஏதேனும் அநீதி விளைவிப்பதாக இருந்தால், அந்த நீதியின் தரம் மோசமாக இருக்கும்.”

தேசியவாத இயக்கம் விவசாயிகளின் தீவிர ஆதரவைப் பெற விரும்பினால், இந்த மேற்கோளில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நிலவுடைமை பெற்றவர்களின் வாக்குக்காக மீன்பிடிக்கும் கட்சிக்கு இத்தகைய வேலைத்திட்டம் அவசியம்; ஆனால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களை வழிநடத்த முன்மொழியும் ஒரு கட்சிக்கு இது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். நிலவுடைமையாளர்களின் சலுகைகள் நிரம்பிய நிலையைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால், விவசாயிகளுக்கு அநீதியை மட்டுமே இழைக்க முடியும். நிலவுடைமை வர்க்கம் என்பது விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சமூக ஒட்டுண்ணி. மேலும், கிட்டத்தட்ட நாட்டில் பாதியில் உள்ள நிலங்களுக்கு அரசாங்கமே நிலப்பிரபுவாக உள்ளது. நீதியின் சாரம் அங்கேயும் பொருந்துவதாக வேண்டும். எனவே, விவசாயிகளைப் பற்றிய சுயராஜ்யத் திட்டம் ஒட்டுண்ணி நிலஉரிமையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. தேசியவாத இயக்கத்தின் விவசாய வேலைத்திட்டம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். விவசாயிகளைச் சுரண்டும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முகவர்களுக்கு எதிராக இரக்கமின்றி அது இயங்க வேண்டும்.

தேசியவாத இயக்கத்தின் திட்டம்

தேசிய விடுதலைக்கான இயக்கம் ஒரு மக்கள் கட்சியால் மட்டுமே தலைமை தாங்கப்பட்டு வெற்றிபெற முடியும். தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி செயல்படும் ஒரு கட்சியால் அது வழிநடத்தப்படாவிட்டால், தேசிய விடுதலை இயக்கம் ஒரு சுக்கான் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கும். தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை பல ஆண்டுகளாகவே இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயராஜ்யம் என்பது தேசவிடுதலை என்பதைத் தவிர மற்ற எல்லாமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தேசத்தின் விடுதலையைப் பெறவேண்டும் என்பதாக இல்லாமல் இருக்குமானால், அத்தகைய தேசிய இயக்கம் அதன் உண்மையான பொருளை இழந்துவிடும். இதற்கு சட்டபூர்வமான அல்லது அரசியல்சட்ட ரீதியான விளக்கம் எதுவும் தேவைப்படாது.

இதன் பொருள் என்னவெனில், தனக்கே உரிய அரசாங்கத்தை நிறுவவும், அரசியல்ரீதியான, பொருளாதாரரீதியான, கலாச்சார ரீதியான என்பது போன்ற தனது காரியங்களை தானே பார்த்துக் கொள்ளவும் ஆன சுதந்திரம் என்பதே ஆகும். தேசியவாத வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படையான அம்சம் இதுவரை தெள்ளத்தெளிவாக நாட்டின்முன் வைக்கப்படவில்லை. தேசியவாத இயக்கத்தை மறுசீரமைப்பதற்கான முதல் செயலாக இது செய்யப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளின்கீழ் தேசியவாதிகள் பதவி ஏற்க வேண்டும் என்ற சர்ச்சையானது இந்த முக்கிய பிரச்சினையை குழப்பிவிடக் கூடாது. இன்று இருக்கும் அனைத்து தேசியவாத கட்சிகளும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அந்தஸ்து என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளன. அதையும்கூட உடனடியாகத் தரவேண்டும் என்றுகூட அவை கோரவில்லை. தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவம்அற்ற சட்டமன்றத்திற்கு ஓரளவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தீவிரமான சில பிரிவினரை திருப்திப்படுத்துவதாகவும்கூட இருக்கக்கூடும். இது தேசவிடுதலைக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது ஒரு கேலிக்கூத்தே ஆகும். அப்பட்டமான தேசத்துரோகம் என்றுகூடக் கூறலாம்.

மக்களுக்கு முழுமையான சுதந்திரம், அதுவும் நிபந்தனையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தைக் கோருவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் என ஒரு மக்கள் கட்சி இருக்க வேண்டும்.

மேம்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு குடியரசு வகைப்பட்ட அரசை நிறுவுவது என்பதே தேசவிடுதலையின் உறுதியான வடிவமாகும்.

வயதுவந்தோர் அனைவரின் (ஆண் – பெண் உள்ளிட்டு) வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய சட்டமன்றம் மக்களின் உயர்ந்தபட்ச அமைப்பாக இருக்கும்; சாதி, வர்க்கரீதியான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். நாடு முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தப்படும்.

இந்த தேசிய விடுதலையானது மக்களுக்கு மேலும் உறுதியான வசதிகளைத் தருவதாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் உடனடியான பொருளாதாரக் குறைகளை நீக்குவதாக, உயர்ந்ததொரு வாழ்க்கைத்தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும். தேசவிடுதலையானது கீழ்க்கண்ட குறிக்கோளை நிறுவுவதாக அமைய வேண்டும்: நிலம் என்பது உழவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழும் ஒட்டுண்ணி வர்க்கங்கள் தங்கள் நலன்களை இழக்க நேரிடும். நிலவுடைமை வர்க்கத்தின் பாக்கெட்டுகளை வீங்கவைத்துக் கொண்டிருந்த பெரும்தொகைகள் இப்போது விவசாயிகளை, அவர்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதாக இருக்கும். நிலவாடகையானது அனைத்துவகையிலும் குறைக்கப்படும். பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத நிலங்களை வைத்துக்கொண்டு பரிதாபகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஏழை விவசாயிகளுக்கு நிலவாடகையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். கடன் கொடுப்பவர்களின் அத்துமீறலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேசிய அரசாங்கம் விரிவான விவசாயக் கடன்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும். விவசாயத்தில் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இலவச ஆரம்பக்கல்வி மூலமாகவும் விவசாயிகளின் கலாச்சார நிலை உயர்த்தப்படும்.

தேசிய அரசாங்கம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். நாகரீகமான வேலைநிலைமைகள் மற்றும் வீட்டுவசதி குறித்து சட்டம் இயற்றப்படும். வேலையில்லாத தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்.

ரயில்வே, நீர்வழிகள், தந்தி போன்ற பொதுப்பயன்பாடுகள் தேசத்தின் சொத்தாக இருக்கும். அவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே இயக்கப்படும்.

தொழிலாளர்கள் (விவசாயிகளும்) ஒன்றிணைவதற்கான முழு சுதந்திரமும், தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக வேலைநிறுத்த உரிமையையும் பெறுவார்கள்.

மதம் மற்றும் வழிபாடுகளில் முழுமையான சுதந்திரம் இருக்கும். தேசிய இன மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினர் சுயாட்சி உரிமையை அனுபவிப்பார்கள்.

பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து, தவிர்க்கமுடியாத வகையில் அவர்களை செயலில் ஈடுபடுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவை. (முதலாளித்துவ மற்றும் நிலஉடைமை வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல்) என்ற முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் துரோகத்தையும் தயக்கத்தையும் பொருட்படுத்தாமல் நாடு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலையை நோக்கி நகர வேண்டும். பாசாங்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து தேசிய காங்கிரஸ் விடுவிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நேர்மையாகவும் தைரியமாகவும் போராடத் தயாராக இருப்பவர்களே மக்களின் குரலை எதிரொலிக்கும் பேச்சாளர்களாக மாறவேண்டும். தேசவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் கட்சி, வாக்காளர்களில் சில அதிர்ஷ்டசாலிகளை அல்ல; வாக்குரிமையற்ற பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கட்சியாக மாற வேண்டும். தற்போது கவுன்சிலின் மாமன்றம் மக்கள் கட்சியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவே விழைகிறது. அது மேலும் பரந்த செயல்பாட்டுக் களங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தேசிய விடுதலை, அனைத்து வகையிலும் தேசிய வாழ்க்கையை முழுமையாக ஜனநாயகப்படுத்துவது – இதுதான் தேசியவாத மேடையின் அடிப்படையான தூண்கள். இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான போர் முழக்கம் இதுதான்: ”நிலம்- உணவு- கல்வி.”

தமிழில் : வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) , Download தொகுதி 36, இதழ் 3-4, ஜூலை-டிசம்பர் 2021 இல் வெளியானது. (சுருக்கப்பட்டது)

மார்க்சிய கல்வியின் அவசியம்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மார்க்சிய கல்விப் பணி என்பது மிக முக்கியமானது. தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாதர், வாலிபர், மாணவர், மாற்றுத் திறனாளர், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பு வெகுமக்கள் இயங்கும் சங்கங்களில்  செயல்படும் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு அப்பால் உள்ள மக்கள் என அனைவருக்குமே மார்க்சிய கல்வி அவசியமான ஒன்று.

இப்படிக் கூறும்போது, சாதாரண மக்களுக்கும் மார்க்சியம் தேவையா? எனும் கேள்வி எழலாம். இன்றைய உலகில் 99 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் இன்னல்களில் இருந்தும், துன்பங்களிலிருந்தும் தாங்கள் எதிர்நோக்கக் கூடிய வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்தும் தீர்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கம், மேலும் மேலும் வாழ்வாதாரப்  பறிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறபோது இதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்கிற ஏக்கத்தோடு உள்ளது. இந்தியாவிலும் இதே நிலைதான்.

கொரோனா பேரிடர் காலத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்திருக்கிறார்கள். அது முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் சரி, ஏழை நாடுகளாக இருந்தாலும் சரி, வாழ்வாதார இழப்பு, கல்வி மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்வாதார சிக்கல்கள் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டன. கொரோனா பேரிடரின் போது இவை தீவிரமடைந்தன. முறைசாரா தொழில்கள் அழிக்கப்படுவது, சிறு குறு தொழில்கள் அழிக்கப்படுவது என்பதெல்லாம் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.  இந்த பிரச்சினைகளிலிருந்து தீர்வை அடைவதற்கு என்ன வழி என்பது குறித்து இன்றைக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய துயரங்களே  என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்? எனவேதான்  முதலாளித்துவ அமைப்பை அகற்றி ஒரு புதிய சமூகம் படைக்க வழிகாட்டும் மார்க்சியத்தை சாதாரண மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

காலம் காலமாக சமூகத்தினுடைய பெரும்பகுதி துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். மக்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் கர்மவினை, பாவம், புண்ணியம் என்கிற ஆன்மிக கருத்தாக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைத்து நீடித்து வருகிறது. மனிதனுடைய  கவலைகளை, துன்பங்களை, பிரச்சனைகளை, பல  தத்துவஞானிகளும் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அதில் கணிசமான தத்துவஞானிகள் முக்தி, மோட்சம்  என்ற வகையில் சமய நோக்கிலான தீர்வுகளை சொன்னார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் மக்களுடைய துன்பங்களைக் கண்டு இரக்கப்பட்டார். இந்த துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தார். அப்படி சிந்தித்தபோது, அவர் தனிமனித பேராசைதான்  இதற்கெல்லாம் காரணம் என்கிற முடிவுக்கு வந்தார். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டு “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினால், “நிர்வாணம்” என்கிற நிலையை அடையலாம் என்றும், அதுவே துன்பங்களிலிருந்து விடுதலைக்கான வழி என்றும் புத்தர் போதித்தார்.

ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது அந்தக் காலகட்டத்தில்  ஒரு வகையில் முற்போக்கான கருத்துதான். ஏனெனில்  கடவுளிடம் தீர்வை எதிர்பார்க்காமல் முக்தி, மோட்சம் ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல் ஆசைதான் காரணம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

ஆன்மீகம் பேசாத  தத்துவஞானிகளும் கூட நிலவும் பிரச்சனைகளுக்கு  முறையான தீர்வு சொல்வதற்கு பதிலாக இருக்கிற நிலைமைகளை விளக்கினார்கள். சமூக  நிலைமைகள் குறித்த விளக்கங்கள்,சமூக நிலை பற்றிய மனிதனுடைய  மனப் பரிமாணங்கள், மனிதனுக்கான வாழ்க்கை நெறிகள், நீதி போதனைகள் என  பல தத்துவக் கருத்துக்கள் படைக்கப்பட்டன.

உலகை அடியோடு மாற்றிடும் தத்துவம்

மனித சமூகத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில்,19ஆம் நூற்றாண்டில், ஒரு முக்கிய திருப்புமுனையாக மார்க்சியம் உருவானது. மார்க்சியம்  விடுதலைக்கு வழி காட்டுகிறது. காலம் காலமாக துன்பங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து விடுதலைக்கான மேம்போக்கான தீர்வை சொல்லாமல், அறிவியல் பூர்வமான வழியைக் காட்டுகிறது மார்க்சியம். இன்றும் பல்லாயிரக்கணக்கான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலிருந்தும் மார்க்சியம் எதில் வேறுபட்டுள்ளது? எனில் மார்க்சியம் மனித விடுதலைக்கு வழி காட்டுகிறது.

இதுகாறும் இருந்து வந்திருக்கிற மானுட வரலாறு, தத்துவம், சமூகவியல், அறிவியல் என பன்முக சிந்தனைகளை உள்வாங்கி, மானுட சிந்தனை வளர்ச்சி எட்டியுள்ள அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, விடுதலைக்கான பாதையை கண்டதுதான் மார்க்சின் சாதனை. அந்த வகையில் மக்களுக்கு வழிகாட்டும் உன்னத தத்துவமாக  மார்க்சியம் விளங்குகிறது. அதனால்தான் அதனை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மார்க்சியமல்லாத பல  சிந்தனைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை, உள்வாங்க வேண்டியவை ஏராளமாக இருக்கிறது. மற்ற மனித நேய தத்துவங்களோடு நட்பு பாராட்டலாம். அந்த  தத்துவங்களில் நல்ல விஷயங்கள் பல இருக்கலாம். ஆனால் மார்க்சியம் மட்டும்தான் சுரண்டல், அடிமைத்தனத்திலிருந்து முற்றாக விடுதலையை காட்டுகிற தத்துவம். இந்த உலகத்தை மாற்றுவதன் மூலம் புதிய உலகை படைத்து, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமத்துவம் சாதிக்கிற ஒரு தத்துவம் இருக்கிறது என்று சொன்னால், அது மார்க்சியம் மட்டும்தான்.

இதுவரை வந்திருக்கக்கூடிய தத்துவஞானிகள் அனைவரும் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கி இருக்கிறார்கள்: ஆனால் இதை மாற்ற வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது என்று கூறிய மார்க்ஸ்,அதே நோக்கத்துடன்  உலகை அடியோடு மாற்றிடும் தத்துவத்தை உருவாக்கினார். கடுமையான வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மத்தியில் குடும்பத்தின் வறுமை சூழலில் மார்க்ஸ் மார்க்சிய தத்துவத்தை படைத்தார். மானுட விடுதலை என்கிற லட்சியத்துக்காக  அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களை அர்ப்பணித்தனர்.

மூன்று தளங்களில் மார்க்சிய கல்வி

மார்க்சியத்தை பயில வேண்டும் என்கிற ஆர்வத்தை கட்சி உறுப்பினர், கட்சி ஆதரவாளர்கள்  மட்டுமல்லாது மக்களுக்கும், ஏற்படுத்த வேண்டும். எனவே, கட்சிக் கல்விப் பணிகள் என்பது  மூன்று தளங்களில் அமைய வேண்டும்.

1. மக்களிடையே இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

2. கட்சி உறுப்பினர்களிடையே இடையறாது இப்பணி நடந்திட வேண்டும்.

3. கட்சியின் ஆதரவு தளங்களில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தின் இலக்கு பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் அடிமைப்பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் சமூகத்தினுடைய அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற   “உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்று மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார். அவருடைய வழிகாட்டுதல்களை உள்வாங்கிய பாட்டாளி வர்க்கம் சோவியத் யூனியனில் சோஷலிச ஆட்சியை லெனின் தலைமையில் நடத்தியது. 70 ஆண்டுகள் சோவியத் யூனியன் இருந்தது. சோசலிசம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்தி இனிமேல் கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிற பிரசாரத்தை முதலாளித்துவவாதிகள் செய்கிறார்கள். சோவியத் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒரு காரணம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்த பாட்டாளி வர்க்கம் அரசியல் தத்துவார்த்த கல்வியில் பலவீனமாக இருந்தது; இதுவும் அதன்  வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அரசியல் தத்துவார்த்த கல்வியும், பயிற்சியும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் தத்துவார்த்த ஞானம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதில் தவறு நேர்ந்த காரணத்தினால் சோவியத் சிதைவு ஏற்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சி அந்நிய முதலாளிகள் கூட்டணியோடு அதிகாரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பாட்டாளி வர்க்கத்தை மாற்றத்திற்கான பாதையில் அணிவகுக்கச் செய்திட,  அரசியல் தத்துவார்த்தப்  பணி  மிக முக்கியமானது ஆகும்.

கட்சியின் தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   2015இல் கொல்கத்தாவில் ஒரு சிறப்பு மாநாட்டை (பிளீனம்) கூட்டி அமைப்பு சந்திக்கும்  பிரச்னைகளை ஆழமாக விவாதித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கான சரியான மாற்றுக் கொள்கைகள் கொண்ட கட்சி. உழைப்பாளி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்க கூடிய கட்சி. தெளிவான சித்தாந்தமும் கொள்கைகளும் கொண்ட  கட்சியாக, மக்களிடையே மதிப்புமிக்க  கட்சியாக இருந்தாலும் கூட, அது வேகமான வளர்ச்சியை எட்டுவது  இன்னமும் கடினமாக உள்ளது. வேகமான வளர்ச்சியை அடைவதற்கான ஒரு முக்கியமான தேவையாக, கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்தும் பணி இருப்பதாக கொல்கத்தா சிறப்பு மாநாடு சுட்டிக் காட்டியது.

மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் “தரம்” என்பதற்கு ஒரு தனிப்பொருள் இருக்கிறது. கட்சியின் ஒரு உறுப்பினர், பல்வேறு கோரிக்கைகளுக்காக  மக்களைத் திரட்டுவதில் சிறந்த திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன்,மார்க்சிய லெனினியத்தில் தேர்ச்சி  பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி என்பது இடையறாது மேற்கொள்ளப்பட வேண்டும்; அது தொடர்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும். அதே போன்று கட்சிக் கல்வி ஒரு ஒழுங்குமுறையான பாடதிட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே முரண்பாடு தொடர்கிறது. உழைக்கும் மக்களின் உணர்வுகளை, அதிருப்தியை வெளிப்படுத்த கோரிக்கைகளுக்காக இயக்கம் நடத்தப்படுகிறது. ஏனெனில் வர்க்கப் போராட்டம்தான் வரலாற்றை மாற்றக்கூடியது. இவற்றுக்கு மத்தியில் கட்சிக் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் இருக்கிறது. மார்க்சிய கல்வியும் இடையறாது நடத்தப்பட வேண்டும். வெகு மக்கள்  அமைப்புகள் நடத்தும் வர்க்கப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெகுமக்களை அரசியல் தத்துவார்த்த கல்வியில் இணைக்க வேண்டும்.

கடுமையான சூழலிலும் கட்சிக் கல்வி

 இன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தைக் கட்டுவதில் ஒரு பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. 1949இல் சீனத்தில் புரட்சி நடைபெற்றது. சீனாவில் ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி விவசாய, தொழிலாளி வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தன. இதற்காக அங்கு ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. வரலாற்றில் ‘லாங் மார்ச்’ என முக்கியத்துவம் பெற்றுள்ள , மாசேதுங் தலைமையிலான நெடும்பயணம் நடத்தப்பட்டது. இதுதான் புரட்சிக்கு வித்திட்ட ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம். எதிரிகளை முறியடித்து முன்னேறி கொண்டிருந்த இந்த இயக்கத்தின் ஊடாகவே அரசியல் தத்துவார்த்தப் பணியும் நடந்தது. மலைகளிலும் காடுகளிலும் இரவு நேரங்களிலும் தன்னோடு வந்து கொண்டிருக்க கூடிய தோழர்களுக்கு மாசேதுங்  மார்க்சிய கல்வி வகுப்புக்களை நடத்தினார்.

ராணுவப்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல்,கடந்து செல்கிற வழியில் உள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் புரட்சி இலட்சியத்தை விளக்கும்  வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த பணியை செய்தால்தான் புரட்சி வெற்றி பெறும்; புரட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மக்களை தயார் செய்ய வேண்டும்; அதே போன்று கட்சி உறுப்பினர்களை புரட்சிகர உணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும்; இது போன்ற நோக்கங்களுடன்  மார்க்சிய பாடத்தை கற்பிக்க கடும் முயற்சிகளை மேகொண்டனர். செய்தார்கள். எனவே கட்சிக் கல்வி என்பது ஒரு முக்கியமான புரட்சிகர பணி.

அன்றாட பணிகளால் கட்சி கல்வி வகுப்பை நடத்த முடியவில்லை என்று சமாதானம் சொல்வது கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவிடாது. இந்தியாவில் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த கடுமையான சூழலில் கூட  கட்சி இப்பணிகளை நடத்தியுள்ளது. தீக்கதிர் ஆசிரியராக பணியாற்றிய கட்சியின் முன்னோடி தலைவரான கே.முத்தையா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு அவர்  செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சிக் கிளைக்கு வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. கட்சி தடை செய்யப்பட்டிருந்த அந்தக் காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கூடி, வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு தோழர்களுக்கு கட்சி வகுப்பெடுத்தவர் கோவில் குருக்கள் தோற்றத்தில் வந்த ஒரு தலைவர்.  அவர்தான் பின்னாளில் கட்சியின் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்ட  தோழர். ஏ.கே.கோபாலன். கட்சி தடை செய்யப்பட்ட அக்காலத்தில் மாறுவேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். மக்கள் போற்றும் தலைவராக இருந்த அவர் அந்த இக்கட்டான காலத்திலும் கூட கட்சிக் கல்வி வகுப்பை தோழர்களுக்கு எடுத்து வந்தார். எந்த சூழலிலும் கட்சிக் கல்வியை கைவிடுவது புரட்சியைக் கைவிடுவதாக அமையும்.

கட்சிக் கல்வி தொடர்ச்சியானதாகவும், குறிப்பிட்ட பாடத்திட்ட ஒழுங்குமுறையுடனும் நடைபெற வேண்டும். ஒருவர் ஏற்கெனவே பல தலைப்புக்களில் வகுப்பைக் கேட்டிருந்தாலும் கூட, மாறுகிற சூழலில்  மேலும் மேலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் மூத்த தோழர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தனிப் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. அதேபோன்று பல வெகு மக்கள் அமைப்புக்களில்  பணியாற்றும் ஆதரவாளர்களாக வரக்கூடியவர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது.

முதலாளித்துவத்தின் சகல பரிமாணங்களையும் அறிந்திட வேண்டும். முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது என்பனவற்றவற்றை விளக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துக்கள், கட்சி கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களை தரும் லெனினின் எழுத்துக்கள், இந்திய நாட்டில் புரட்சிக்கான வழி குறித்து விளக்குகின்ற மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், முதலாளித்துவ கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகளை அறிந்து கொள்ளவும், இடது மாற்றை எப்படி கொண்டு வர வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களையும் உள்வாங்கிட வேண்டும். இவற்றில் தெளிவாக இருப்பவராலேயே கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அப்போதுதான் அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியும்.

மார்க்சிய லட்சியம், இந்தியப்  புரட்சி லட்சியம், கட்சித் திட்டம், இடது ஜனநாயக அணி ஆகியவை மீது பிடிப்புடன் இருக்கும் ஒருவர், வர்க்க உணர்வுடன் ,உள்ளூர் அளவில் கட்சியை விரிவாக்கம் செய்திடும்  பணியை சிறப்பாக மேற்கொள்வார். உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டுகிற கடமையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சிந்தனையில்  ஆதிக்கம்

சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் எண்ணிக்கையில் சிறுபான்மையினரே. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிகள், உற்பத்தி தேக்கம் ஆகியவை  தவிர்க்க முடியாது. அதேபோன்றுதான் வேலையின்மையும், வறுமையும் தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ சமூகத்தில் தாண்டவமாடுகிறது. எனினும் முதலாளித்துவ முறையிலிருந்து ஏன் நாடுகள் வெளியேற மறுக்கின்றன? சீனா போன்ற சோசலிசத்தை தழுவிய நாடுகளைத் தவிர இதர நாடுகள் முதலாளித்துவத்தையே கட்டியழுவது ஏன்? இந்த இடத்தில் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது.முதலாளித்துவம்  பொருளாதார ஆதிக்கம் மட்டுமின்றி சமூகத்தில் சிந்தனை ஆதிக்கத்தையும் செலுத்துகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வகுப்புவாத வன்முறைகள், வாழ்வாதார இழப்புக்கள்  போன்ற கொடூர தாக்குதல்களை மேற்கொண்ட போதும், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.  எங்களைத் தவிர வேறு சரியான மாற்று இல்லை எனும் கருத்தாக்கத்தை சங்பரிவாரின் பிரச்சார இயந்திரம் மக்கள் மத்தியில் விதைக்கிறது. இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் இடையறாது நடக்கிறது. தனிநபரை பெரும் ஆளுமையாக மலையளவிற்கு கட்டமைப்பது எல்லா நாடுகளிலும் நடந்திருக்கிறது. இந்தியாவில்  அது அதிகமாகவே உள்ளது. பல வழிகளில்  மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் முதலாளித்துவ ஆதரவு கருத்துக்கள் மக்களிடம் திணிக்கப்படுகிறது.

 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்ற பகுதிகளை ஆராயும்போது எங்கெல்லாம் மக்களை மதத்தின் அடிப்படையில் திரட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளனரோ, அங்கெல்லாம் அதிகமான ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர். ஒருவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்து எனும் மத அடையாளத்தை தூண்டி, இந்து மதத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜகவினால்தான் முடியும் என்கிற பிரசாரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டனர். வர்க்க ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தை பரவ விடாமல் தடுக்க,  ஆளும் வர்க்கங்களுக்கு அடையாள திரட்டல் உதவுகிறது. சமூகத்தில் நன்றாக வாழ வேண்டுமென்றால், தன்னைப் பற்றி  மட்டும் கவலைப்பட வேண்டும்; தான் மட்டும் அதிக  சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்களை  தனி மனித உணர்வில் நவீன தாராளமயம் திணிக்கிறது. அதுவே கிட்டத்தட்ட நடுத்தர மக்களை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டுவித்து வருகிறது.

களத்தில் மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதும்,முதலாளித்துவ, தாராளமய சிந்தனைகளுக்கெதிராக, மத, சாதியவாதத்திற்கு எதிராக சோசலிச கருத்தாக்கங்களை விதைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி பயன்படுகிறது.முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு பொருளாதார கொள்கைகளை எதிர்த்துப் போராடுகிற அதேவேளையில், கருத்தியல் ரீதியாலான அதன் ஆதிக்கத்தை வீழ்த்திட,  கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டும். உழைக்கும் மக்களிடம் திணிக்கப்பட்டிருக்கும் கருத்தியலை வீழ்த்த மார்க்சிய முற்போக்கு, சமத்துவ கருத்தியலை கொண்டு செல்ல வேண்டும்.

கட்சிக் கல்வியை பல வடிவங்களில் நடத்த வேண்டும். அதில் சுய கல்வி மற்றும் வாசிப்பை மேம்படுத்துவது முக்கியமானது. நாட்டு நடப்புகளை, உலக நடப்புகளை, தத்துவார்த்தப்  போக்குகளை விளக்கும் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்து படிக்க வேண்டும். அனைத்து நூல்களையும் விமர்சன பூர்வமாக படிக்க வேண்டும். திட்டமிட்ட கட்சிக் கல்வி வகுப்பு, படிப்பு வட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிய கண்ணோட்டத்துடன் அரசியல் தத்துவார்த்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

மாநாட்டு முடிவுகள்

முத்தாய்ப்பாக  கட்சி கல்வி பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு முடிவுகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவை வருமாறு:

1) “வலிமையான மாநிலங்கள் உட்பட, எல்லா மாநிலங்களிலுமே போதுமான தரம்வாய்ந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த குறைபாட்டில் இருந்து மீளும் முயற்சிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

2) பல்வேறு தலைப்புகளில் வகுப்பு குறிப்புகளை உடனடியாக இறுதி செய்திட வேண்டும். நாடு முழுவதும் கட்சி கல்வி வகுப்புகளுக்கிடையே ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர இது உதவிடும்.

3) கொல்கத்தா ஸ்தாபன பிளீனம் மேற்கொண்ட முடிவின் அடிப்படையில், கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறைந்தது 4 தலைப்புகளில் கல்வி வகுப்புக்களை மேற்கொள்ளும் கடமையை, அதற்குரிய காலத்தைத் தீர்மானித்து, அமலாக்கிட வேண்டும். இது அல்லாமல், ஆர்.எஸ்.எஸ். பற்றிய வகுப்பினை நம்முடைய கட்சி கல்வி பயிற்சிகளில் கட்டாயமாக்க வேண்டும்.

4) படிப்பு வட்டங்களுடைய முக்கியத்துவம் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் தொடர்கிறது. இந்த குறைபாட்டை களைந்திட வேண்டும். ‘படிப்பு வட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது’ என்ற தலைப்பில் பயிற்சியினை திட்டமிட்டு வழங்கலாம்.

5) அகில இந்திய மையத்தில், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில், நிரந்தர பள்ளி தயாராக உள்ளது. இந்த வசதியை, முறையாக பயன்படுத்த திட்டம் மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல வேறு சில மாநிலங்களிலும் நிரந்தர பள்ளி கட்டப்பட்டுள்ளது. அவற்றில் வகுப்புக்களை தொடர்ந்து நடத்திட உரிய திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். நிரந்தர பள்ளி இல்லாத மாநிலங்களில், அத்தகைய ஒன்றைத் தொடங்கிட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, மார்க்சியத்தை பயில்வோம், பரவலாக்குவோம்,  புரட்சிகர இயக்கத்தை வலிமைப்படுத்துவோம்.

நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

(டிரைகாண்டினெண்டல் இணைய இதழிற்காக விஜய் பிரசாத் தயாரித்த ஆவணப் பதிவின் சுருக்கம், தமிழில் – சிந்தன்)

2020, அக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூறாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில் அறிந்துகொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே நாட்டுப்பற்றோடு இயங்கினார்கள். இந்தியாவின் சமூக – பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில், அவர்களின் நடவடிக்கைகள் வேர்விட்டிருக்கின்றன. அதே நேரத்தில், உலகின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், உலக மக்களின் விடுதலையையும் தங்கள் சிந்தனையில் பிரிக்க முடியாத அங்கமாக கொண்டே செயல்பட்டார்கள். இவ்வாறு செயல்படுவதால் உடனடி அரசியலில் பலன் கொடுக்காது என்றபோதிலும் அவர்கள் இந்த கண்ணோட்டத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்:

சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனென்றால் அது சோவியத் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுதலையை பெற்றுத்தரவில்லை; உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு திசைவழி காட்டுவதாகவும் இருந்தது.

இந்திய புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் (இப்போதைய ரஷ்யாவின்) தாஷ்கெண்ட் பகுதியில் சந்தித்தார்கள். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவாக்கினார்கள். இதற்கு இந்தியரும், மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.என்.ராய் உதவி செய்தார்.

1920 காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி இயங்கின. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர், லாகூரில் குலாம் உசேன் ஆகியவர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி உருவான குழுக்களுக்கு மார்க்சிய-லெனினிய தத்துவக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

எம்.என்.ராயுடன் தொடர்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் , இப்போதைய உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கான்பூர் நகரத்தில் ஒரு மாநாடு கூட்டினார்கள். 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 முதல் 28 வரை 3 நாட்கள் அந்த மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதி கம்யூனிஸ்டுகள் கான்பூர் மாநாட்டினை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.

தடைக் கற்களே படிக்கட்டாக:

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து முழுவிடுதலை வேண்டும் என்ற குரலை இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே எழுப்பினார்கள். இந்திய மக்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியம் முன்னுதாரணமாக  அமைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் கூட்டத்தில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்தார்கள். அந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றபோதிலும் தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகரித்தது.

1920களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் தொழிற்சங்கங்கள் உதயமாகின. 1928-29 காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அலையடித்தன. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர் போராட்டங்களும், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தீரம் மிகுந்த உதாரணமாக அமைந்தன.

பிரிட்டிஷ் அரசாங்கம் சதி வழக்குகளை புனைந்து கம்யூனிஸ்டுகளை முடக்க முயன்றது. 1929 முதல் 1933 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மீரட் சதிவழக்கு அவற்றில் முக்கியமானதாகும். குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 27 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேடையாக்கி, தங்களின் நோக்கங்களை பிரச்சாரம் செய்தார்கள்.

1934 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளையும் தடை செய்தது. உறுப்பினராக ஆவதே குற்ற நடவடிக்கை என அறிவித்தது. இதனாலெல்லாம் கம்யூனிச லட்சியங்கள் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) இடையிலும் சோவியத் ஒன்றியம் நிகழ்த்திவந்த சாதனைகள், கம்யூனிசத்தை நோக்கிய ஈர்ப்பை அதிகப்படுத்தின.

பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தையே, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியினால் முடக்கிப் போட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நிரூபித்துக் காட்டினார்கள். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். அதே சமயம் 80 சதவீதம் வேளாண் சமுகமாக அமைந்த இந்தியாவின் விடுதலை, விவசாயிகளைத் திரட்டாமல் சாத்தியமாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். தொடக்க காலத்தில் நகர்ப்புறங்களில் குவிமையமாக வளர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ஊரகப் பகுதிகளுக்கும் தன் வேர்களைப் பரப்பியது.

விவசாயிகள் சங்கம் 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கத்தை உருவாக்கியதும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் என பல்வேறு வழிமுறைகளில் மக்களை திரட்டி, புரட்சிகர உணர்வை வளர்த்தெடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.

நிலவுடைமைக்கும் சாதிக்கும் எதிராக:

சாதியும் – வர்க்கமும் கலவையாக இயங்கிய ஊரக இந்தியாவின் பிரச்சனைகளை அவர்கள் எதிர்த்து நின்றார்கள். நிலவுடைமை சக்திகள், வட்டிக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விவசாயிகளை திரட்டினார்கள். கடன் சுழலில் சிக்கி, தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளையும், தீண்டாமையை எதிர்கொண்டதுடன், கட்டாய உழைப்பைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராகப்  போராடினார்கள்.

கம்யூனிஸ்டுகள் தலைமையின் காரணமாக விவசாயிகள் இயக்கம் வலுவடைந்தது. 1938 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 60 லட்சம் பேர் சேர்ந்திருந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்தது.

நிலவுடைமை சமூகத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராகவும், நில உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி நில உடைமையாளர்களோடு வெளிப்படையாக கூட்டு சேர்ந்து செயல்பட்டது. இந்தியத் தொழில் முதலாளிகளும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி பிரிவுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய மாகாண அரசுகள் வெளிப்படையாகவே நில உடைமையாளர்களையும், தொழில் முதலாளிகளையும் ஆதரித்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனை நினைவுகூரும்போது, இ.எம்.எஸ் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் சிலரும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வெளியேறி தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.

இரண்டாவது உலகப்போர் :

1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. இந்திய பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யாமலே, இந்திய வீரர்களை போர் முனைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும், இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு எதிரான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதனால், 1941 ஆம் ஆண்டில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறைப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

1942 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்டது. தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது, வங்கத்தை பஞ்சம் சூழ்ந்தது. மாபெரும் இந்தப் பஞ்சத்தினால் வங்கம், ஒரிஸா, அசாம், பீகார் பகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.

லாப நோக்கில் விலையை அதிகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையே இந்தப் பெரும் பஞ்சத்தினை விளைவித்தது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். உணவு தானியங்களை பதுக்கி வைத்து விலையேற்றிய வணிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. பெண்கள் தற்காப்புக் குழு அமைக்கப்பட்டு இளம் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்தார்கள். தன்னார்வலர்களும், மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அயர்வில்லாத இந்தப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத்தளத்தை விரிவாக்கின.

போருக்குப் பிறகான எழுச்சி:

இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வணிகர்கள் கடையடைப்புச் செய்தார்கள், மாணவர்கள் கல்விநிலையங்களை புறக்கணித்தார்கள். கடைசியாக, கப்பல்படை வீரர்கள் சரணடைய நேர்ந்தபோதிலும், நாடு முழுவதிலும் அவர்களுக்கு ஆதரவாக எழுந்த கிளர்ச்சியே அவர்களை அழித்தொழிப்பதில் இருந்து காத்துநின்றது.

தெபாகா இயக்கம்:

தெபாகா இயக்கம், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய மாபெரும் விவசாய எழுச்சியாகும். தெபாகா என்றால் மூன்று பங்கு என்று பொருள். விளைச்சளினை மூன்றாக பங்கிட்டு அதில் 2 பங்குகள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையே அதில் பிரதானமாக இருந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம்  4 ஆண்டுகள் இடைவிடாமல்  நடைபெற்றது.

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் வகுப்புவாத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக தெபாகா எழுச்சி அமைந்தது. மேற்குவங்கத்தில் அமைந்திருந்த முஸ்லீம் லீக் அரசாங்கம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை  ஏவியது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னணியில் போராடிய இந்து, முஸ்லிம், பழங்குடி ஆண்களும், பெண்களுமாக 73 பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது.

தெலங்கானா ஆயுதப்போராட்டம்:

தெலங்கானா ஆயுதப் போராட்டம், இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் எழுச்சிகளிலேயே மிகப்பெரியதாகும். ‘வெட்டி’என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு, நியாயப்படுத்த முடியாத வரி முறைமை ஆகியவைகளை எதிர்த்தும், நில உரிமையை முன்நிறுத்தியும் இந்த போராட்டம் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹைதராபாத்தினை ஆண்ட நிஜாம் மன்னன் ரசாக்கர்கள் என்ற குண்டர் படையையும், காவல்துறையையும் ஏவி, அடக்குமுறை செய்தபோது, ஆயுதங்களை ஏந்தி தங்களை தற்காத்தபடி விவசாயிகள் போராடினார்கள். 30 லட்சம் மக்கள் தொகை இருந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கே விநியோகம் செய்யப்பட்டன. கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலி முறை அமலாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுய நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தினார்கள்.

நிஜாமின் ஆளுகைப் பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் விதமாக 1948, செப்டம்பர் 13 ஆம் தேதி தனது நடவடிக்கையை தொடங்கியது இந்திய ஒன்றிய அரசு. இதற்கு நிஜாம் மன்னன் ஒப்புக்கொண்டதும் இந்திய ராணுவமும், காவல்துறையும் நுழைந்தன. தற்காப்பு போராட்டம் நடந்தது என்றாலும் – 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும், விவசாய போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில், 10 ஆயிரம் பேர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 3 – 4 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி, நிலவுடைமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்தது இந்திய அரசு.

புன்னப்புரா வயலார் எழுச்சி :

1946 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சியில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று பிரதமர் இருந்தார். அவர்கள் இந்தியாவின் நாடாளுமன்ற முறையை ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவைப் போன்ற ஏற்பாட்டை வலியுறுத்தினார்கள். இப்போதைய ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்த புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அமைந்தன. போராட்டக் களத்தில் பல தொழிலாளர்களை சுட்டுக் கொல்லவும் காவல்துறை தயங்கவில்லை. இருப்பினும் திருவிதாங்கூர் விரைவில் இந்தியாவின் பகுதியானது. மொழிவழி மாநிலத்திற்கான அடித்தளத்தை இப்போராட்டமே கொடுத்தது. கொச்சி, திருவிதாங்கூர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த மலபார் மாவட்டம் (மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. தமிழ்நாடு உட்பட மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்திற்கான அவசியத்தினை வலியுறுத்தி, சாத்தியமாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்கள் :

இந்தியாவின் விடுதலையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்களை உருவாக்கியது. அதுவரை அவர்கள் தீவிரமாக எதிர்த்துவந்த பிரிட்டிஷ் ஆதிக்கம் அகன்றுவிட்டது. இப்போது இந்தியர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

இந்த  அரசின் தன்மை என்ன? ஆட்சியாளர்கள் யார்? இது காலனி ஆதிக்க அரசாங்கத்தின் கைப்பாவைதானா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற சுதந்திர அரசாங்கமா? புதிய அரசையும், ஆளும் வர்க்கங்களையும் கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களோடு இணைந்து நிற்க வேண்டுமா? அல்லது அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதா? ‘ரஷ்ய’ வழிமுறையா அல்லது ‘சீன’ வழிமுறையா? இந்திய வழிமுறை என ஏதாவது உள்ளதா? இவையெல்லாம் அந்த காலகட்டத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்விகள் ஆகும். இந்த கருத்துமோதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு போக்குகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.

1950களின் மத்தியில் இருந்தே கருத்து மோதல்கள் தீவிரமாகின. விடுதலைக்கு பிறகான இந்திய அரசாங்கத்தை எப்படி மதிப்பீடு செய்வது என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது; பொருளாதார திட்டமிடலுக்கு முயன்றது; தனது இலக்கு சோசலிச வகைப்பட்ட சமுதாயத்தைக் கட்டமைப்பதே என்று கூட காங்கிரஸ் கட்சி சொல்லியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடது தன்மை கொண்ட சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு நிலவுடைமைக்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வாதிட்டனர். இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டில் கட்சியின் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என உருவானது. 1969 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் அவசியம் என நம்பிய கம்யூனிஸ்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தினார்கள். 

இடதுசாரி மாநில அரசாங்கங்கள் :

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான காலமாக, கம்யூனிஸ்டுகளின் தலைமையில் மாநில அரசுகள் அமைந்ததைப் பார்க்கலாம். பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அதன்  அரசியலும் மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் வடிவம் பெற்றுள்ளது.

மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலைப் போராட்ட காலத்தை போலவே, விடுதலைக்கு பின்னரும் வெற்றிகரமான மக்கள் போராட்டங்களை வழிநடத்தியது. இதனால் திரண்ட மக்கள் செல்வாக்கினால்தான் சில மாநிலங்களின் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. தேர்தல்களில் வெற்றி பெறுவதோ, மாநில ஆட்சிகளை வழிநடத்துவதோ, தொழிலாளிகள்-விவசாயிகளின் கையில் அரசு அதிகாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறை இல்லை என்றபோதிலும், இத்தகைய  ஆட்சிகளை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி ஒரு சில நிவாரணங்களைக் கொடுக்க முடிந்தது.

கேரளா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட சமயத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று வெற்றி சாத்தியமானது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளத்தில்  1957 ஆம் ஆண்டு முதல்  சட்டமன்ற தேர்தல் நடந்தது.   1957 ஏப்ரல் 5 ஆம் தேதி, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆட்சி உருவான ஆறாவது நாளில், அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளை அவர்களுடைய குத்தகை நிலங்களில் இருந்து வெளியேற்றத் தடை செய்தது கம்யூனிஸ்ட் அரசு. நிலச் சீர்திருத்த சட்டத்தையும் அறிமுகம் செய்தது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே நில உரிமை, நியாயமான வாடகை நிர்ணயம், நில உடைமைக்கு உச்ச வரம்பு மற்றும் விவசாயிகளே தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றிற்காக சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, கல்வித்தளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகப்படுத்தினார்கள். பொது சுகாதார கட்டமைப்பை விரிவாக்கினார்கள். நியாய விலைக் கடைகளின் வழியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நியாய விலையில் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்கள்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களை  கலகலக்கச் செய்தது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் தொடர் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியினை கலைத்தது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர்கள் நிலச்சீர்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். இதற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையோ, அடுத்து ஆட்சிக்குவந்த பிறகு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பதையோ தனித்து குறிப்பிடுவது அவசியமில்லை.

1993 ஆம் ஆண்டில் 28 லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 60 லட்சம் ஹெக்டேர் நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டுவாக்கில்  5 லட்சத்து 28 ஆயிரம் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமைக் கட்டமைப்பின் முதுகெலும்பினை தாக்குவதாக அமைந்தன. கம்யூனிஸ்டுகளின் கொள்கைளால் கல்வியறிவும், மனிதவளமும் மேம்பட்டன. இந்த மேம்பாடுகளை  1970 ஆம் ஆண்டு முதலே பல்வேறு ஆய்வுகளில் அறிய முடிந்தது.

1) மக்களின் பொருளாயத வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு நாடு அல்லது மாநிலம் செல்வச் செழிப்போடு வளர்ந்தபிறகே சாத்தியம் என்பது உண்மையில்லை.

2) மக்களால் முன்னெடுக்கப்படும் பொது நடவடிக்கைகள் வழியாக மறுபங்கீட்டை சாத்தியப்படுத்திட முடியும் – என்ற இரு படிப்பினைகளை கேரள முன்மாதிரி நமக்கு வழங்குகிறது.

மேற்கு வங்கம் :

வங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணம் ஆகும். வங்கப் பஞ்சம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்திய விடுதலையின் போது பிரிவினையும், அதையொட்டி எழுந்த வகுப்புவாத வன்முறைகளும், அந்த மாகாணத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ஏராளமான மக்கள் அகதிகளானார்கள். அகதிகளின் வாழ்விட உரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் நின்றார்கள்.

வங்க பஞ்சத்தின்போது நிவாரண நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். 1950  ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தாவின் தெருக்களில்  ‘பட்டினிப் பேரணிகள்’ நடைபெற்றன. ஏழைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரண்டார்கள். நிலச்சீர்திருத்தத்திற்கான முழக்கம் ‘தெபாகா’ இயக்கத்தின் பகுதியாக ஆனது. விவசாயிகள் சங்கம் குத்தகைதாரர்களின் உரிமைக்காக போராடியது. இவற்றால் கம்யூனிஸ்டுகள் வலிமைபெற்றார்கள்.

குறுகிய காலமே செயல்பட்ட ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணி அமைந்தது. தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஜோதிபாசு முதலமைச்சரானார். 34 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியை இடது முன்னணி வழங்கியது.

இடதுமுன்னணி அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குத்தகை விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் வகையில் ஆபரேசன் பர்க்கா முன்னெடுக்கப்பட்டது. நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதிகப்படியான நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் மூலம் பலனடைந்த பயனாளிகளில் 50% மேற்குவங்கத்திலேயே உள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தின் வழியாக நாம் அங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அளவினை உணரலாம்.

2008 ஆம் ஆண்டு வாக்கில் 29 லட்சம் விவசாயிகள் சாகுபடிக்கான நிலங்களை மறுவிநியோக திட்டங்களின் வழியாக பெற்றிருந்தனர். 15 லட்சம் விவசாயிகள் குத்தகை பதிவு பெற்றார்கள். 55 லட்சம்பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பயனடைந்தவர்களில் 55% பேர் தலித் மற்றும் பழங்குடிகள் ஆவர்.

மேற்கு வங்கத்தின் வேளாண்மையை மறுகட்டமைத்து, அதன் வழியாக  ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தியதுதான் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாகும். ஊரக வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரித்ததன் வழியாக பாசன திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட்டன. இதன் வழியாக மூன்று போக விவசாயம் சாத்தியமானது. நாட்டிலேயே அரிசி சாகுபடியில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் உருவானது.

அதிகார பரவலாக்கல் நடவடிக்கை மேற்கு வங்கத்தின் ஊரக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் உட்பட உள்ளூர் முடிவுகளை திறம்பட மேற்கொள்வதில் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான பங்குவகித்தன. இந்த சீர்திருத்தங்களால், மேற்கு வங்கத்தின் ஊரக பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள், வட்டிக்காரர்கள், சாதி ஆதிக்க சக்திகள் பலவீனமடைந்தன. தலித், பழங்குடி மக்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் மக்கள் தொகையில் அவர்களின் பங்கினை விட அதிகமாக உயர்ந்தது. இது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக வர்க்க பலம் அதிகரிக்கச் செய்தது.

திரிபுரா :

திரிபுராவில் , 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான மக்கள் விடுதலைக் குழு உருவாக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் போராட்டங்களை முன்னெடுத்தது. கந்துவட்டிக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி அகதிகள் பல்லாயிரக் கணக்கில் அலை அலையாக வரும் சிக்கலை திரிபுரா எதிர்கொண்டது. அகதிகள் தஞ்சம் அடைவது 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சூழலில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது, பழங்குடிகளை குத்தகைய நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுப்பது, அகதிகளுக்கு முறையான மறுவாழ்வு என கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலைக் குழு போராட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையை இந்தப் போராட்டங்கள் அதிகரித்தன.

1978 ஆம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்குவந்தது. நிருபன் சக்ரபர்த்தி முதலமைச்சராக தேர்வானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட விரோதமாக பழங்குடி மக்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்வதை தடுத்ததுடன், பழங்குடி நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன, குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்காக நிலச்சீர்திருத்த சட்டத்தில்  திருத்தம் செய்யப்பட்டது. 

மாவட்ட கவுன்சில் தன்னாட்சி சட்டம் மூலமாக, பழங்குடி மக்களுக்கு பிராந்திய அளவில் தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. கோக்பொரோக் என்ற பழங்குடி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பிரிவினைவாத கிளர்ச்சிகளை திரிபுரா எதிர்கொண்டது. இடது முன்னணி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த வன்முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. கல்வியறிவு, நலவாழ்வு, தனிநபர் வருமானம் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றில் திரிபுரா தனித்துவமான சாதனைகளை எட்டியது.

1978 முதல் 1988 வரையிலும், 1993 முதல் 2018 வரையிலும் இடது முன்னணி மாநில ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது மிகப்பெரும் அளவில் பணத்தைக் கொட்டியும், சமூக ஊடகங்களின் வழி மோசடிப் பிரச்சாரம் செய்தும் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் தோல்வியைக் கடந்தும் களத்தில் முன்னணியில் நிற்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம்.

நவ தாராளமய காலகட்டமும், ஒன்றிய ஆட்சிகளும்:

1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நவதாராளமய கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அமலாகத் தொடங்கின. இந்தக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை கண்டுணர்ந்துவருகிறோம். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவும் தகர்வும், இந்திய அரசின் முரட்டுத்தனமான முதலாளித்துவப் போக்கிற்கு உதவி செய்தது. மேலும், நவதாராளமய கொள்கைகள் வலதுசாரி அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சக்திகள் இந்தியாவை ஒரு இந்துத்துவ அரசாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள் நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இடைவிடமல் போராடுவதுடன், பாசிச சக்திகளையும் இடைவிடாமல் எதிர்க்கின்றனர்.

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநில கட்சிகளின் பங்களிப்பைக் கொண்டு அமைந்த கூட்டணி அரசுகளுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்தார்கள். மத்திய ஆட்சியின் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் மிக அதிகமான காணப்பட்ட ஆண்டு 2004-07 வரையிலான காலம் ஆகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி,மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கான நில உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் நவதாராளமய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு தனது நெருக்கத்தை இந்திய அரசு அதிகரித்தது. இதனை ஒட்டி இடதுசாரிகளும் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டார்கள்.

மேற்கு வங்கத்தில் பின்னடைவு:

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மாபெரும் வெற்றியை சாதித்தது. ஆனால் பொருளாதாரத்தில் நவ தாராளமயத்தின் தாக்கம் அதிகரித்த பின்னணியில் மாநிலங்கள் தங்கள் சுயாட்சியை இழந்துகொண்டிருந்தன. மாநிலங்களுக்கிடையே போட்டிச் சூழல் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் பொது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன, தொழிலாளர் உரிமைகளில் சலுகை கொடுத்து, வரிச் சலுகைகளை அள்ளி வழங்கும் மாநிலங்களை நோக்கி அந்நிய முதலீடுகள் சென்றன. இந்தப் போட்டியில்  மேற்கு வங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம் சாதித்திருந்த வளர்ச்சி மிதமாகிய நிலையில், மாற்று வழிமுறைகளை இடது முன்னணி நாட வேண்டி வந்தது.

தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சியெடுத்த இடதுமுன்னணி அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது சர்ச்சைகள் வெடித்தன. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சிகள் விவசாயிகளில் ஒரு பகுதியை இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக திருப்பினார்கள். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுமுன்னணி தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வலதுசாரிகளின் மோசடிப் பிரச்சாரங்களும், தாக்குதல்களும் தொடர்கின்றன. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வங்கத்திலும் நாடு முழுவதும் இடதுசாரிகள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தே வருகிறார்கள். அமைப்புசாராதவர்களை அமைப்பாக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் முன்கையெடுக்கிறார்கள். அரசின் திட்டப்பணிகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை வெற்றிகரமாக திரட்டியுள்ளார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பல்வேறு வேலை சூழலில் இருப்பவர்களையும் திரட்டுவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த அனைத்துப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக சாதிக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமும் அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்தே நடந்துவரும் இந்த போராட்டம் இப்போதும் தொடர்கிறது. சாதி ஒழிப்பை முன்வைத்து பல்வேறு அமைப்புகளை இணைத்த மேடையை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.

இந்துத்துவ சக்திகளின் எழுச்சியின் காரணமாக வகுப்புவாத திரட்டல் அதிகரிக்கிறது. இது கம்யூனிஸ்டுகள் கட்டமைக்கும் போராட்ட ஒற்றுமைக்கு ஆபத்தாக எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகளின் பாசிச வகைப்பட்ட திரட்சியும், பிரச்சாரமும் நவ தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சியை எதிர்கொள்ள பரந்துபட்ட மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் கூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர். இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

நவ தாராளமய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளிகளும் அரசியல் தலையீடுகளை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அடையாள அரசியலும், தனிப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளும் அதற்கான கருவிகளாக இருக்கின்றன.

முடிவாக:

இப்படியான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகால தீரம் மிக்க வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் இந்த சமயத்தில், நவ தாராளமய காலகட்டம் குறித்தும், இந்த காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களையே தங்கள் லட்சிய இலக்காக கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், அயர்வில்லாத போராட்டங்களுக்கான உற்சாகத்தை, தங்கள் சொந்த வரலாற்றிலிருந்தே பெற்றிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

 

(குரல் : யாழினி)

  • ஹர்கிசன் சிங் சுர்ஜித்

(மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது…

முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது உருக்குப் போல் வலுப்பெறவும் பங்களித்தது.  ஒற்றுமைக்கான விவாதங்களில் அனைத்து பகுத்தறிவுள்ள முன்மொழிவுகளையும் நிராகரித்த (அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) டாங்கே தலைமையிலான திரிபுவாதிகளுடன் ஏற்பட்ட கடைசிப் பிரிவை விளக்கும்போது அறிக்கை கூறுகிறது, “இரண்டு நாட்கள் சூழலை மீளாய்வு செய்யும்போது, டாங்கேயைப் பின்பற்றுவோரின்   அணுகுமுறைக்கெதிரான எங்களது போராட்டம் கட்சி விரோத குறுங்குழு முறைக்கும், திரிபுவாத அரசியல் வழிமுறைக்கும் எதிரான போராட்டம் என்ற ஒருமனதான முடிவுக்கு நாங்கள் வந்தோம்”.  சில தத்துவார்த்த விஷயங்களில் எங்களுக்கிடையே எந்த வேறுபாடுகளும் இல்லையென்பதில்லை, ஆனால் தற்காலிகமாக ஏற்கப்பட்டுள்ள நகல் திட்டத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம்.  தத்துவார்த்த, அரசியல் கேள்விகளில் மேற்கொண்டு கருத்துப் பரிமாற்றத்தை ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் இந்த விவாதத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  நாடு முழுவதிலும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு, ஊக்கமளிப்பதாக இருந்தது.  ஏழாவது மாநாட்டை நடத்த அழைப்பு விடுக்கவும், முந்தைய பத்தாண்டுகளுக்கு நடந்த விவாதங்களின் அடிப்படையில் நகல் கட்சித் திட்டத்தை நிறைவேற்றவும் தெனாலியில் நாங்கள் கூடினோம்.

1964இல் கல்கத்தாவில் நடந்த கட்சியின் ஏழாவது மாநாடு ஒன்றுபட்ட கட்சியிக்குள் திரிபுவாத்துக்கெதிரான நமது போராட்டத்தின் முடிவைக் குறித்தது.  அது திரிபுவாதத்திடமிருந்து ஒரு திட்டம் சார்ந்த, ஸ்தாபன, தத்துவார்த்த உடைப்பைக் குறித்தது.  அதனுடன் நீண்டகால உத்தியில் ஒட்டுமொத்த வரையறையும் சேர்ந்தது.  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறில் கட்சியின் ஏழாவது மாநாடு நிச்சயமாக ஒரு திருப்புமுனை.   அது ஒரு புதிய கட்சித் திட்டத்தையும், கடமைகள் குறித்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.  அதில் இந்தியப் புரட்சியில் நீண்ட கால உத்தியும், உடனடி உத்தியும் தீர்மானிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருந்தன.  இந்திய நிலைமை குறித்த அனைத்து திரிபுவாத உருவாக்கங்களையும் அது நிராகரித்து நாட்டின் வர்க்க குணாம்சத்தை சரியான முறையில் நிர்ணயித்து பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படும் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ வர்க்கம் என வரையறை செய்து விளக்கியது.  இந்திய அரசு தேசிய முதலாளிகளால் தலைமை தாங்கப்படுவது, எனவே அதை ஆதரிக்க வேண்டுமென்ற அன்றைய  சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை அது நிராகரித்தது.  அதே நேரத்தில் கட்சி மாநாடு சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருந்த நிலைபாட்டையும் ஏற்கவில்லை.  ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்படும் அரசு ஒரு பொம்மை அரசு, தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற நிலைபாடு ஏற்கப்படவில்லை.  அணிசேராக் கொள்கையில் முன்னணியில் அது இருந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்துள்ளது என்ற நிலைபாட்டையும் கட்சியானது ஏற்கவில்லை.

ஒரு மார்க்சிய-லெனினியப் பாதைக்கான நமது கட்சியின் போராட்டம் மிகவும் தீவீரமான, கடினமான சூழலில் நடத்தப்பட்டது.  1962 இந்திய-சீனப் போரின்போது ஒன்றுபட்ட கட்சியின் நமது தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டனர்.  இது வர்க்கக் கூட்டணி என்ற பாதையை ஆதரித்தோருக்கு “கடவுளே” அளித்த வாய்ப்பாகி விட்டது.  அவர்கள் புதிய சூழலில் தேசிய கவுன்சிலில் பெரும்பான்மை பெற்று விட்டனர்.  அவர்கள் இந்த வாய்ப்பை காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற திரிபுவாதப் பாதையை எதிர்த்தவர்களுக்கெதிராக அரசியல், ஸ்தாபனத் தாக்குதலைத் தொடுக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

மொத்தத்தில் ஏழாவது மாநாடு 1951இன் நீண்டகால உத்திப் பாதையை ஏற்றதுடன், ஒரு புரட்சிகரக் கட்சிக்குத் தேவையான சில மாற்றங்களையும் அமைப்புச் சட்டத்தில் செய்தது.

ஏழாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சியின் நீண்டகால உத்திக்கான பாதைக்கான தீர்மானம் அந்த சூழலில் இயக்கத்தை வளர்த்தெடுக்க சரியான திசையை அளித்தது.  தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள் இயக்கம் மற்றும் கட்சி ஸ்தாபனங்களில் நிலவிய பலவீனங்களை விரைவில் அகற்றுமாறும், அனைத்து வகையிலும் ஒரு கட்சி உணர்வை ஊட்டுமாறும் அது உத்தரவிட்டது.  ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை வளர்த்தெடுக்க, தீர்மானம் ஒரு எச்சரிக்கையை விடுத்தது: “மார்க்சிய லெனினியத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தை தொடக்கமாக, வளர்ப்பதாக, தலைவராக வெகுஜன இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் மாற்றி கட்சியை வளர்க்காமல் இந்தப் பணிகளை நிறைவேற்ற முடியாது.  நமது செயல்பாடு அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.  அது மட்டுமே ஒட்டுமொத்த கட்சியையும் புத்துயிரூட்டும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.

”கட்சிக்குள் திரிபுவாதத்துக்கெதிரான போராட்டம் திட்டமுறையில் நடத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், குறுங்குழுவாத வெளிப்பாடுகளுக்கெதிராகக் கட்சி விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.   இந்த நோக்கத்துக்காக மத்தியக்குழு கட்சிக்குள் இவற்றின் வெளிப்பாடுகள், அவற்றின் அரசியல், தத்துவார்த்த வேர்கள், திரிபுவாதத்துக்கெதிரான போராட்டத்தின் பலவீனங்கள் ஆகியவற்றை விளக்கும் ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும், ஒட்டுமொத்த கட்சிக்கும் கற்பிக்க வேண்டும்.

”கட்சி மூலப்புத்தகங்களைப் படிப்பதை ஏற்பாடு செய்து ஊக்குவிப்பதுடன், நமது நாடு மற்றும் இயக்கத்தின் சரியான பிரச்சனைகளை திட்டமிட்ட முறையில் ஆய்வு செய்து, அவற்றை மாற்றிட மார்க்சியக் கோட்பாட்டைப் பயன்படுத்தக் கற்க வேண்டும்.”

இந்த விஷயத்தில் ஏங்கெல்சின் வலியுறுத்தலை நினைவில் கொள்ளலாம்.  ஜெர்மெனியில் விவசாயிகள் போராட்டம் என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் வர்க்கப் போராட்டம் மூன்று வகைகளில் நடத்தப்படுவதாகச் சுட்டிக் காட்டுகிறார்.   அவை தத்துவார்த்த, அரசியல், நடைமுறைப் பொருளாதார வழிமுறைகள் ஆகும். இவற்றில் அவர் சரியான போராட்டங்களின்  முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறினார்.  அதில்தான் இயக்கத்தின் வலுவும், வெல்லமுடியாத தன்மையும் அடங்கியுள்ளன.

ஏழாவது மாநாடு கட்சியின் உருவாக்கத்திலிருந்து மிகவும் முக்கியமான, தீர்மானகரமான கட்சி மாநாடாக நிலைத்துள்ளது.  மார்க்சிய லெனினியத்தை மிகச்சரியாக புதிய, புதிய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுத்துவது என்பதை நாம் அதிகமாகக் கற்க வேண்டியுள்ளது.  இந்தத் தொகுதியில் ஏழாவது மாநாட்டின் உறுதிப்பாடு இந்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

(இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்கள், முதல் பாகத்திற்கு எழுதிய  முன்னுரை)

 

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை

விஜூ கிருஷ்ணன்

இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம்.

புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. விடுதலை ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து இந்தியாவை முழுமையாக விடு விக்கவில்லை. நிலப்பிரபுத்துவத் தில் இருந்து முதலாளித்துவத்திற்கான பயணத்தையும் நிறைவு செய்யவில்லை.

விடுதலைக்குப்பின் இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்கி உற்பத்தி சக்தி களை கட்டவிழ்த்து விடுவதற்கு பதில் அவர்கள் ஒருபுறம் அரை நிலப்பிரபுத்துவ நில உடைமையாளர்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதற்கான கொள்கைகளை பின்பற்றினர். மறுபுறம், ஒரு பணக்கார விவசாயப் பகுதியையும் வளர்த்தனர். நிலப்பிரபுக்களுக்கு அதிகமான நட்ட ஈடு வழங்கப் பட்டது. அதேசமயம், ஜமீன்தாரி மற்றும் முந்தையகால சட்டபூர்வமான நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திட எடுக்கப்பட்ட சட்டபூர்வநடவடிக்கைகள் அரைமனதுடன் அமலாக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் தொடர்ந்து தம் கைகளில் பினாமி நிலம் உள்ளிட்டு பிரம்மாண்ட மான நிலக்குவியலை வைத்துக்கொண்டனர். குத்தகை தொடர்பான சட்டங்களை முடக்கி, சொந்த சாகுபடி என்றபெயரில் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி பல லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். பலலட்சக் கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மறு விநியோகம் நடக்கவில்லை. ஆளும் வர்க்கக்கொள் கைகள், பொதுமுதலீடுகள், கடன் வசதி, மானியங் கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாசனம் மற்றும் இதர அரசு திட்டங்களால் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் பயன்பெற்றனர். இது ஏற்றத்தாழ்வை அதிகரித்தன.

பெரும்பகுதி மக்களுக்கு வறுமையும் வேலையின்மையும் ஊட்டச்சத்தின் மையும் தான் கிடைத்தது. முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ ஆட்சி ஜனநாயக தன்மையில் வேளாண் பிரச்சினையை தீர்க்க தவறியது.

இந்திய புரட்சி ஜனநாயக கட்டத்தில் உள்ளது. புரட்சியின் தன்மை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிப்ரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு என்பதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி வேளாண் புரட்சியாகும். இதன் மையப்புள்ளியும் இயக்குசக்தியும் தொழிலாளி – விவசாயி கூட்டணி யாகும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறுதியான கூட்டணியின் அடிப் படையில் தான் நாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி செல்ல முடியும். மக்கள் முன்னுள்ள உடனடி இலக்கு இக்கூட்டணியின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் இணைத்து மக்கள் ஜனநாயக அமைப்பை நிறுவுவதாகும். திட்ட வட்டமான மாற்றின் அடிப்படையில் கிராமப்புற மக்களை மக்கள் ஜனநாயக முன்னணி திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை யான நேச சக்திகள் முற்றிலும் கருணையற்று சுரண்டப்படுகின்ற விவசாயத்தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ஆகும். சுரண்டலுக்கு உள்ளா கும் நடுத்தர விவசாயிகளும் நம்பகமான நேச சக்திகள். பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நமது வர்க்க கூட்டணியை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்பிரிவு உறுதியற்ற தன்மைகொண்டது. மைய மற்றும் நம்பகமான நேச சக்திகள் வலுவடைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் என்ற கருத்து உருவாகும் நிலையில் தான் ஒருபகுதி பணக்கார விவசாயிகள் மக்கள் ஜனநாயக முன்னணியின் பக்கம் வரக்கூடும்.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வேளாண் திட்டம் என்ன? மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான கடமை வேளாண் துறையில் உற்பத்தி சக்திகளை கட்டிப்போட்டுள்ள நிலப்பிரபுத்துவ, அரை நிலப் பிரபுத்துவ மிச்சங்களை எல்லாம் தவிர வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் முற்றிலும் அகற்றுவதாகும். நில ஏகபோகத்தை தகர்க்காமல், ஏழை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் லேவாதேவிக் காரர்களிடம் சிக்கியுள்ள கடன்சுமையில் இருந்து விடுவிக்காமல் நாட்டின் பொருளாதார, சமூக மாற்றம் சாத்தியமல்ல.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கடமை சாதி அமைப் பில் வேரூன்றியுள்ள ஒடுக்கும் சமூக அமைப்பை முற்றிலும் அழிப்பதாகும். பாலின அசமத்துவமும் ஆணாதிக்கமும் அழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம் மற்றும் கடன் ஒழிப்பை தொடர்ந்து, அரசு தலைமையில், பெரு வியாபாரிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பனிகளிடம் இருந்தும், கடுமையான விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தும், விவசாயி களை பாதுகாக்கின்ற சந்தை அமைப்பு உருவாக்கப் படும். வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவை வருமாறு: நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள்; எரிசக்தி மற்றும் பாசன வசதிகளை அதிகப்படுத்துவதும், அவற்றின் முறையான மற்றும் நியாயமான பயன்பாடும்; வேளாண் துறையில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவது; விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் இருப்பிட வசதிகள்; வேளாண்மைக்கும் இதர சேவைகளுக்கும் விவசாயி கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டுறவு அமைப்பு களை ஊக்குவித்தல்; உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை மலிவாக மக்களுக்கு அளிக்கும் வகையிலான முழுமையான பொது விநியோக அமைப்பு.

இத்தகைய மாற்று வேளாண் திட்டத்தின் அடிப் படையில் கிராமப்புற மக்களில் பெரும்பான்மை யோரை மக்கள் ஜனநாயக முன்னணியில் திரட்ட முடியும். அதன் மூலம் ஆளும் வர்க்கங்களை தூக்கி யெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெல்ல முடியும். இது சோசலிசம் நோக்கிய நமது பயணத் தில் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

(கட்டுரையாளர் நிரந்தர அழைப்பாளர், மத்தியக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட். தமிழில் : வெங்கடேஷ் ஆத்ரேயா)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …

தமிழில்: இரா.சிந்தன்

இந்தக் கட்டுரையை Pdf கோப்பாக தரவிறக்க இங்கே சொடுக்கவும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும், தொலைநோக்கு உத்தி ரீதியான இலக்குகளைக் காட்டும் கட்சித் திட்டம்தான், முக்கியமான அடிப்படை ஆவணமாகும்.

இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தில், குறிப்பாக விடுதலைக்கு பின்னர், அப்படியொரு திட்டத்தை வடித்தெடுப்பது பற்றி ஒன்றுக்கொன்று வேறுபட்ட, வித்தியாசமான பார்வைகள் நிறைந்திருந்தன. ஆளும் வர்க்கத்தின் அடிப்படைப் பண்புகள், அரசு அதிகாரம் ஆகியவைகளுடன் இந்தியப் புரட்சிக்கான அடிப்படை செயல்திட்டத்தையும், உத்தியையும் உருவாக்கி ஏற்பதற்கான போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளே சுமார் பத்தாண்டுகள் நடந்தது.

விஜயவாடாவில் 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 6 வது அகில இந்திய மாநாட்டில், ஒன்றுபட்ட கட்சிக்குள் ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரண்டு வரைவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, சமரசம் காண முடியாத வேறுபாடுகள் காரணமாக அந்தத் திட்டங்கள் அலமாரிக்குச் சென்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சிபிஐ(எம்) உருவான பின்னர், 1964 ஆம் ஆண்டில்தான், பம்பாயில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கல்கத்தாவில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விவாதித்து தங்களுக்கான தனித்தனியான திட்டங்களை ஏற்படுத்தினர்.

மிக நெடிய போராட்டத்திற்குப் பிறகும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிப்படையான திட்டம், கருத்தென்ற அளவிலேயே தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த சூழலில், கட்சி பிரிக்கப்பட்டு அவரவருக்கான திட்டங்களை உருவாக்கிக் கொள்வதுதான் அப்போதைய ஒரே தீர்வாக இருந்தது. ஒருவேளை அந்த வேறுபாடுகள் நடைமுறை உத்தி தொடர்பானதாகவோ அல்லது சில கருத்தியல் பிரச்சனைகளில் புரிதலில் வேறுபாடாகவோ இருந்திருந்தால் கட்சிப் பிளவு ஏற்பட்டிருக்காது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் அடிப்படை செயல்திட்ட ஆவணங்களை உருவாக்கி ஏற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு அரசியல் பிரச்சனைகளிலும், குறிப்பிட்ட அரசியல் சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகளிலும் இரண்டு கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வர முடிந்துள்ளது. இதுதான் (நமது) இணைந்த செயல்பாட்டுக்கும், இடதுசாரி ஒற்றுமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ(எம்) கடந்த 2000 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தனது கட்சித் திட்டத்தை மேம்படுத்தியது. சர்வதேச அளவிலும், தேசிய நிலைமைகளிலும், குறிப்பாக வர்க்க உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி, மறு ஆய்வுக்கு உட்படுத்தி கட்சித் திட்டம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புரட்சியின் கட்டம், அரசின் தன்மை மற்றும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கங்களின் கூட்டணி மற்றும் அதன் தலைமை குறித்த அடிப்படையான வரையறுப்புக்கள் அப்படியே தக்கவைக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14 வது மாநாடு, கட்சித் திட்டத்தை மேம்படுத்த முடிவெடுத்து, அந்தப் பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு நீண்டது.

நீடித்த முயற்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் புதிய கட்சித் திட்டத்தை வரைவு செய்யும் பணி கூடுதல் காலமெடுத்ததுடன் பல கட்டங்களையும் கடந்து வந்தது. 1986 ஆம் ஆண்டு அதன் 13 வது மாநாட்டில் கட்சி ஒரு வரைவுக் குழுவை ஏற்படுத்தி 1964 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட கட்சித் திட்டத்தை மறு வரையறுக்க முடிவு செய்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்னா மாநாட்டில், ஏழு பேர் கொண்ட ஆணையத்தால் ஒரு வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாநாட்டில் வரைவு அறிக்கை ஏற்கப்படவில்லை. ஹைதராபாத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மாநாட்டில் வரைவு திட்ட ஆவணம் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. சர்வதேச, தேசிய சூழல்களில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை கணக்கில் கொண்ட இடைக்கால நடவடிக்கையாக அது அமைந்தது. இருப்பினும், அது அரசின் தன்மை, ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான கட்சித் திட்டமாக இல்லை.

இந்த வகையில், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 16 வது மாநாடு, புதிய தேசியக் குழு உடனடியாக ஒரு ஆணையம் அமைத்து வரைவுத் திட்டம் உருவாக்க பணித்தது. அந்த முயற்சிகள் தொடர்ந்தன.

இறுதியாக, புதிய கட்சித் திட்டத்தை, புதுவையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 22 வது மாநாட்டில் நிறைவேற்றியது. நீண்டகால விவாதத்தின் வெளிப்பாடாக உருவான இந்த திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தைக் குறித்து விமர்சனப்பூர்வமான மதிப்பீட்டுக்கு வர முயற்சிப்பது உபயோகமானதாக இருக்கும். புரட்சியின் கட்டத்தை நிர்ணயிக்கும் வர்க்க பகுப்பாய்வு, அரசின் தன்மை மற்றும் தற்போதுள்ள அரசமைப்பை மாற்றியமைத்து, சோசலிசத்தை நோக்கிய மாறுதலை உருவாக்கும் புரட்சிகர அணிச்சேர்க்கை மற்றும் அதன் தலைமை ஆகியவைதான் அடிப்படையாக ஒரு கட்சித் திட்டத்தின் சாராம்சம்.

அரசு அதிகாரத்தின் தன்மை:

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போதைய புரட்சியின் கட்டத்தை ஜனநாயக கட்டம் என்றே வரையறுத்தனர். முழுமையடையாமல் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தே (இரு கட்சிகளும்) இந்த முடிவுக்கு வந்தோம்.

அரசியல் விடுதலையை எட்டிய பின்னர், (புதிதாக அமைந்த) அரசின் தன்மை குறித்து முடிவு செய்வதிலும், ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எதிரான புரட்சிகர இயக்கத்தை கட்டமைத்து முன்னெடுக்க அவசியமான வர்க்க கூட்டணி பற்றியும் தீர்மானிப்பதிலும், மாற்றுக் கருத்துக்கள் எழுந்தன. இன்றைய சமூகத்தில் ஆளும் வர்க்கமாக அமைந்து ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல் வர்க்கங்கள் மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றை, இந்திய சமூகம் குறித்த வர்க்கப் பகுப்பாய்வில் நிறுவ வேண்டும். இந்த ஆளும் வர்க்கம்தான் அரசினைக் கட்டுப்படுத்தி அதன் தன்மையை முடிவு செய்கிறது. முக்கியமான எதிரி யார்? யாருக்கு எதிராக ஒரு புரட்சிகர இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று தீர்மானிப்பதுதான் நீண்டகால உத்தியில் (strategy) மிக முக்கியமானது.

அரசு அதிகாரம் பற்றிய மாறுபட்ட பார்வைகள்:

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், அரசின் தன்மை கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டது:

இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது. (V அரசு கட்டமைப்பும், ஜனநாயகமும் 5.1)

அரசின் தன்மை குறித்த மேற்சொன்ன வரையறுப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் தொடர்கிறது.

சிபிஐ 1964 ஆம் ஆண்டு தனது திட்டத்தில் அரசினை கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசானது, இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தையும், முதலாளித்துவ உற்பத்தி முறை, விநியோகம் மற்றும் பரிமாற்றத்தையும் உயர்த்திப் பிடித்து வளர்த்தெடுக்கும் தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது.

அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதில் பெருமுதலாளிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்திக் கொண்டுள்ளனர். நிலப்பிரபுக்களுடன் தேசிய முதலாளிகள் சமரசம் செய்துகொண்டு அமைச்சரவையிலும், அரசாங்கக் கட்டமைப்பிலும், குறிப்பாக அரசின் மட்டங்களிலும் இடமளிக்கின்றனர்.

மேற்சொன்ன வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வது மாநாட்டில் கீழ்க்காணுமாறு திருத்தப்பட்டது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசு பெரு முதலாளிகளின் வலுவான தலையீட்டுடன் கூடிய, தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது. இந்த வர்க்க ஆட்சி நிலப்பிரபுக்களிடம் வலிமையான தொடர்பு கொண்டுள்ளது. அரசு அதிகாரத்தில் இந்த காரணிகள் பிற்போக்குத்தன்மைக்கு ஊக்கமளிக்கின்றன.

அரசின் தன்மை குறித்த வரையறுப்பில் இரண்டு திட்டங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடு உள்ளது, இது இரண்டு கட்சிகளின் நீண்டகால திட்டத்திலும், வர்க்கக் கூட்டு மற்றும் நடைமுறைத் திட்டம் ஆகியவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தினுடனான குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் பின்வருமாறு:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமானது, பெரு முதலாளிகளை, இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் வர்க்கக் கூட்டின் தலைமைப் பொறுப்பில் வைத்துப் பார்க்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமைப் பொறுப்பை மறுக்கிறது. தங்களின் 1964 ஆம் ஆண்டு திட்டத்தில் பெரு முதலப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறார்கள்” என்றவாறு அமைத்துக் கொண்டவர்கள் 1968 ஆம் ஆண்டு திருத்தத்தில் வலிமையான தாக்கத்தை கொண்டிருக்கின்றனர்” என்று மாற்றினர். இதுதான் இரண்டு திட்டங்களிலும் இந்திய அரசின் தன்மையை வரையறுப்பதில் முக்கிய மாறுபாடாக அமைந்தது.

பெருமுதலாளிகள் தொடக்கம் முதலே இந்திய முதலாளிகளுக்கிடையே ஒரு சக்திவாய்ந்த அடுக்குமுறையை ஏற்படுத்திவிட்டனர். முதலாளித்துவ வளர்ச்சியின் முதிர்வு நிலையில், பெருமுதலாளிகளின் ஏகபோகக் கட்டத்திற்கு வந்தடைந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் போல் அல்லாமல், இந்திய முதலாளித்துவம் காலனிய ஆதிக்கத்தின் கீழானதொரு தனித்துவமான சூழலில் வளர்ந்தது, பெரு முதலாளிகளும் ஏகபோக நிறுவனங்களும் முன்கூட்டியே உருவாகி வளரத்தொடங்கின. பெரு முதலாளிகளின். இந்திய விடுதலைக்குப் பிறகான பத்தாண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வலுவான பிடிப்போடு பெரு முதலாளிகள் வளர்ச்சியடைந்தனர்.

பெரு முதலாளிகளே அரசின் தலைவர்களாக இருந்ததானது ஒரு குறிப்பிட்ட விதமான முதலாளித்துவ வளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசு ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டதுடன், நிலப்பிரபுக்களிடமும் தன் கூட்டணியை பராமரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் சொல்வதைப் போல:

ஒருபுறம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களைச் சுரண்டி தனது வர்க்க நலனை வலுப்படுத்திக் கொண்டுள்ளதோடு, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் தனது மோதல்களையும், முரண்பாடுகளையும் பேரம் பேசியும், சமரசம் செய்து கொண்டும், அழுத்தம் கொடுத்தும் சரி செய்துகொண்டது.

மேற்சொன்ன நடவடிக்கைகளின் மூலம், அன்னிய ஏகபோகங்களுடன் தன் பிணைப்புகளை வலுப்படுத்தி தனது அதிகாரத்தை நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் பகிர்ந்துகொண்டது.

இந்தியாவில் அரசு ஒட்டுமொத்தமாக தேசிய முதலாளிகளுடையதென்று குறிப்பிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமானது பெரு முதலாளிகள் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்பதில்லை, மாறாக வலுவான தாக்கத்தைசெலுத்துவதாக மட்டும் சொல்கிறது. மேலும் முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்கக் கூட்டணி இந்திய அரசின் அடித்தளமாக அமைந்திருக்கிறதென்று சொல்லும் மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வைக்கு மாறாக ”நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்பு” கொண்டிருப்பதாக மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசுக் கட்டமைப்பின் பகுதி அல்ல; அதன் பொருள் அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பகுதி அல்லர் என்றாகிறது.

இரண்டு கட்சித்திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு அரசின் தன்மை குறித்தானதாகும். முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள ஆளும் வர்க்கத்தோடு அன்னிய நிதி மூலதனம் கைகோர்த்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் காண்கிறது. அதாவது, நிலப்பிரபுத்துவமும், ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களுடனும், அரசு கட்டமைப்பிலும் வலுவான பிணைப்புக் கொண்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வகைப்படுத்துதலில் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு எதுவாக இருந்தாலும், ஏகாதிபத்தியமும், அன்னிய நிதி மூலதனமும் வகிக்கும் பாத்திரங்கள் குறித்து எதுவுமில்லை.

மேற்சொன்ன, அரசின் தன்மை குறித்த வகைப்படுத்துதல் நடைமுறையில் பெருத்த விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் தேசிய முதலாளிகள் தலைமையிலான அரசில், பெருமுதலாளிகள் வலிமையான ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனும்போது அரசின் மீதான அவர்களின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியினுடையதிலிருந்து வேறுபடும். மேலும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினர் ஆளும் வர்க்கத்தின் உள்ளார்ந்த பாகமாக இருந்து அரசைக் கட்டுப்படுத்தவில்லை எனும்போது முதலாளித்துவ அரசின், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கடமைகள் பற்றி மிகை மதிப்பீடு உருவாகும். “தேசிய முதலாளிகளின்” பாத்திரம் குறித்த விசயத்திலும் மேற்சொன்ன பாதிப்பு ஏற்படும்.

இந்திய அரசு, தேசிய முதலாளிகளுடையதென்று வரையறுக்கும்போது, அது எதிரி வர்க்கத்தின் கையில் இல்லை என்றாகிறது. தேசிய முதலாளிகள் அரசை தலைமையேற்றபடியே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்கும் தகுதியுடைய வர்க்கமாகவும் உள்ளனர். உழைக்கும் வர்க்கத்தால் முற்போக்கு திசையில் உந்தித் தள்ளி, திசை மாற்றி, ஊக்கப்படுத்த வேண்டியதொரு வர்க்கமாகவும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் அரசால் கொடுக்கப்படும் பிற்போக்கு அழுத்தங்களை உழைக்கும் வர்க்கத்தின் துணைகொண்டு தடுத்தாளும் நிலைமையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருக்கிறது. இந்திய அரசு பற்றிய இந்தக் கருத்து, 1956 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பார்வையின் தாக்கத்துடன் ஒத்திசைந்து ஏற்பட்டதாகும்.

இது ஆளும் வர்க்கத்தின் மீதும், முதன்மையான ஆளும் வர்க்க கட்சியின் (காங்கிரஸ்) மீதும் ஒரு மென்மையான போக்கிற்கு இட்டுச் சென்றது. ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சிக்கு அதாவது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகபோகத்தை எதிர்த்த புரட்சிக்கு அரசும், தேசிய முதலாளிகளின் ஆளும் கட்சியும் தகுதிவாய்ந்த கூட்டாளிகளாகப் பார்க்கப்பட்டனர். நிலப்பிரபுத்துத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆளும் வர்க்கத்தோடு இணைத்துப் பார்க்கத் தவறியது இத்தகைய நீண்டகால உத்தியை முடிவு செய்ய வைத்தது. அதே சமயம் நடைமுறை உத்தி அளவிலும் இந்த வரையறுப்பானது முதலாளித்துவக் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் மத்திய அரசுகளில் இணைய வாய்ப்பு ஏற்பட்டபோது, அரசாட்சியில் பங்கேற்கும் முடிவுக்கு இட்டுச்சென்றது (1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில்)

கட்சித் திட்டம் பற்றிய விவாதங்களில் இந்த வரையறைகளை மறுஆய்வு செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1989 மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுத் திட்டத்தில் அரசு குறித்த வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு 8 வது மாநாட்டில் செய்யப்பட்ட திருத்தத்தை ஒத்தேதான் இருந்தது.

இந்தியாவில் உள்ள அரசு, பெரு முதலாளிகள் வலிமையான தாக்கம் செலுத்துவதாகவும், தேசிய முதலாளிகளான ஆளும் வர்க்கத்தாரின் கருவியாகவும் உள்ளது. இந்த வர்க்க ஆட்சியானது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்புக் கொண்டுள்ளது. இந்த நிலைமையானது அரசு அதிகாரத்தில் பிற்போக்கு அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணியை எடுத்துக் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் சர்க்கார் வேறுபட்ட பார்வையை கொண்டிருந்தார். அரசின் தன்மை குறித்த தன்னுடைய திருத்தத்தையும் முன்வைத்திருந்தார். அந்த திருத்தத்தின் முதல் பகுதி பின்வருமாறு:

இந்தியாவில் உள்ள அரசு இந்திய முதலாளி வர்க்கத்தின் கருவியாகும், அதற்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் கூட்டாளியாக உள்ளதுடன் பெரு முதலாளி வர்க்கம் தீர்மானகரமான ஆதிக்கத்தை அதன் மீது செலுத்திவருகிறது. நிலப்பிரபு வர்க்கத்துடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டும், பெரு முதலாளிவர்க்கத்தின் தீர்மானகரமான ஆதிக்கமும் இந்திய அரசின் மீது தாக்கம் செலுத்தி பிற்போக்குத்தனத்தை இயம்பியுள்ளன.

இந்திய அரசின் முக்கிய பகுதியான முதலாளிகள் பாரம்பரியமாகவே நிலப்பிரபுக்களிடம் நெருக்கமான உறவுகொண்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது குறு மன்னர்களும், பெரு நிலக்கிழார்களும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தபோது சிறு நில உடைமையாளர்களும், நடுத்தர நிலவுடைமையாளர்களும் பொதுவாக காலனிய எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்தனர். இது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசியல் தளத்தில் முதலாளிகளுக்கு நெருக்கமாக்க வகை செய்தது. இந்தக் கூட்டு விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவுத் திட்டம், 1989)

சர்க்காரின் வரையறுப்பின் படி, பெரு முதலாளிகள் “தீர்மானகரமான கட்டுப்பாட்டை” இந்திய அரசின் மீது செலுத்துகின்றனர். மேலும், அவரின் திருத்தத்தில் முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபு வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டு அறியப்படுகிறது. அவர் மேலும் பெரு முதலாளிகள்தான், முதலாளித்துவ வர்க்கத்திலேயே பலம்வாய்ந்த அடுக்கு என்பதை வெளிக்கொண்டுவருவதற்காக “தேசிய முதலாளிகள்” என்ற பதத்தை தவிர்க்கிறார்.

கட்சித் திட்டத்திற்கான குழுவின் மற்றொரு உறுப்பினர் பி.கே.வாசுதேவன் நாயர் முன்வைத்த திருத்தத்திலும் பெரு முதலாளிகள் “தீர்மானகரமான தாக்கம்” செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

22 வது மாநாட்டில் ஏற்கப்பட்ட புதிய திட்டத்தில், அரசு பற்றிய வரையறுப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்வருமாரு:

8.1 இந்தியாவில் உள்ள அரசு கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மற்றும் ஏகபோகங்களின் தலைமையிலான முதலாளிகளின் அரசாகும். இந்த வர்க்க ஆட்சி, அரைநிலப்பிரபு அரை முதலாளித்துவ நிலப்பிரபுக்களோடு வலுவான பிணைப்புக் கொண்டுள்ளது. இது ஒரு அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை தீர்மானிக்கிறது. விவசாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை செயலாக்க பணிக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புக்குள் செயல்பட்டு அமெரிக்கா மற்றும் உலக வங்கி, .எம்.எப் ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளால் வழிநடத்தப்படு சர்வதேச நிதி மூலதனத்தோடு நெருக்கமான பிணைப்பை வளர்க்கிறது.

(புதிய திட்டத்தில்) ”தேசிய முதலாளிகள்” என்ற வார்த்தைப் பயன்பாடு கைவிடப்பட்டுள்ளது ஒரு சரியான முடிவாகும். முந்தைய வரையறுப்புகளில் இருந்து மாறுபட்ட வகையில், இந்த அரசானது ”கார்பரேட் பெரு நிறுவனங்கள், ஏகபோகங்களால் தலைமையேற்கப்படும்” முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருவியாக அறியத்தருகிறது. நிலப்பிரபுக்களுடனான உறவு இப்போதும் “வலிமையான பிணைப்பு என்றே குறிக்கப்படுவதுடன், நிலப்பிரபுக்கள் “அரை நிலப்பிரபுத்துவ” “முதலாளித்துவ” தன்மையுடையதாய் குறிக்கப்படுகின்றனர். முந்தையவற்றிலிருந்து கூடுதலாக மேற்சொன்ன வரையறுப்பில் இடம்பெற்றுள்ள புதிய பகுதி சர்வதேச நிதி மூலதனத்துடன் அரசுக் கட்டமைப்பு “நெருக்கமான பிணைப்பை” வளர்த்துக் கொள்கிறது.

இந்தியாவிலுள்ள அரசுக்கு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் மற்றும் ஏகபோகங்கள் தலைமையேற்பதை அறியத்தருவதன் மூலம், தனது முந்தைய வரையறுப்புகளை விடவும் தெளிவானதொரு வரையறுப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடைந்துள்ளது. இந்த குணநலன் குறிப்புகளுக்கு முன், வர்க்க நிலைமைகளின் மேம்பாடு குறித்த ஆய்வு வருகிறது:

பெரும் பகுதி இந்திய முதலாளிகள் உள்ளிட்டு மக்கள் நலன்களைக் காவுகொடுத்து சில பெரும் ஏகபோக முதலாளிகள் பொருளாதார வலிமையையும், மூலதனக் குவிப்பையும் மேற்கொண்டுவருவது முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கில் ஏற்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான விளைவாகும்.

இருந்தாலும், ஏன் “பெருமுதலாளிகள்” என் வார்த்தைக்கு பதிலாக கார்ப்பரேட் பெருந்தொழில் மற்றும் ஏகபோகம் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.பெருமுதலாளிகள்” பெரும் மூலதனப் பிரிவின் அனைத்துத் தரப்பையும் முழுமையாக உள்ளடக்கும் சொல்லாகும். கார்ப்பரேட் அல்லது நிறுவனங்கள் என்பவை உடைமையின் சட்டப்பூர்வ பெயர்கள் உதாரணமாக “பொது நிறுவனம்/கூட்டுப் பொறுப்பு நிறுவனங்கள். பெரும் கார்ப்பரேட்டுகள் ஆகியோர் பெரு முதலாளிகளின் ஒரு பகுதி, பெரும் ஏகபோக நிறுவனங்களும் அப்படியே. மேலும், பெரும் மூலதனம் உற்பத்தித் துறைக்கு வெளியே பல்வேறு துறைகளில், முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும். (உதாரணத்திற்கு ஊடகத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள்). இவையெல்லாம், மூலதனச் செறிவில் குறிப்பிட்ட அளவு குவிக்கப்படும்போது, பெரு முதலாளிகளின் பகுதியாகத்தான் கருதப்பட வேண்டும். “கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் மற்றும் ஏகபோகங்கள்” என்று குறிப்பிடுவதற்கான நோக்கம் சரியானதாக இருந்தாலும் “பெரு முதலாளிகள்” என்ற சொல்லின் விரிவான பொருளைக் குறிப்பிட அது போதுமானதாக இல்லை.

நிலப்பிரபுக்களை அரசுக் கட்டமைப்பிற்கு வெளியே வைத்துப் பார்ப்பதானது, அரசு அதிகாரம் குறித்த விளக்கத்தின் பின்னடைவாக உள்ளது. விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ ஆதிக்கம் வளரும் அதே சமயம் அரை நிலவுடைமை நிலப்பிரபுத்துவத்தில் முறையாக வீழ்ச்சி இல்லாததால் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவம் மேலோங்குகிறது. “வலிமையான பிணைப்பு” மட்டுமே இருப்பதாகக் கருத எந்த அடிப்படையும் இல்லை. அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவுள்ளனர். “நிலப்பிரபு” என்ற வார்த்தை இன்னமும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம், அழிக்கப்படவேண்டிய அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் இன்னமும் தொடர்வதேயாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் ஒரு இடத்தில் “ஊரக முதலாளிகள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் இந்த ஊரக முதலாளிகளில் ஒரு பகுதியாகும். அவர்கள் அரசு கட்டமைப்பின் வெளியில் இருப்பதாகக் கருதுவதானது நடைமுறைக்கு மாறானது. இந்திய அரசு குறித்து சரியான புரிதலுக்கு வருவதற்கு பெரு முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து நிலச் சீர்திருத்தத்தை அமலாக்குவதையும், ஜனநாயகப் புரட்சியை முழுமை பெறச் செய்வதையும் தவிர்த்திருப்பதை கவனிப்பது அவசியம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இந்திய அரசுக்குமான பிணைப்பினை அங்கீகரிப்பது, சரியான திசையில் ஒரு படி முன்னேற்றம். இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் காரணமாக இந்திய முதலாளிகளுக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இடையிலான கூட்டிற்கு வந்து சேர்ந்ததென்ற தருக்க ரீதியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும். “இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் அன்னிய நிதி மூலதனத்திற்கும் இடையில் அதிகரிக்கும் கூட்டு, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக நிகழ்கிறது” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் வரையறுப்பில் இது பிரதிபலிக்கிறது.

தொகுத்துப் பார்த்தால், இந்திய அரசு குறித்த சிபிஐ கட்சித் திட்டத்தில் சில பலவீனங்களும் பிரச்சனைகளும் இருக்கின்ற போதிலும், இந்திய அரசின் தன்மை குறித்த இந்த மதிப்பீடு, சரியான சித்தரிப்பை நோக்கிய சரியான முன் நகர்வு ஆகும்.

ஜனநாயகப் புரட்சிக்கு யார் தலைமையேற்பார்கள்?:

இரண்டு கட்சித் திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு, ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக சாதிக்கும் அணி அல்லது வர்க்க அணிச்சேர்க்கையும் அந்த அணிக்கு யார் தலைமையேற்பார்கள் என்பதுமாகும்.

இரண்டு கட்சிகளின் திட்டமுமே புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தைப் பற்றியும், ஜனநாயக முன்னணி அல்லது அணிச்சேர்க்கையில் எந்த வர்க்கங்கள் இடம்பெரும் என்பதிலும் ஒன்றுபோல பேசுகின்றன. அந்த அணிக்கு யார் தலைமையேற்க வேண்டும் என்பதில் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணிக்கு தேசிய ஜனநாயக அணி என்று பெயரிட்டுள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அணி அல்லது முன்னணி என்று அழைக்கிறது.

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தேசிய ஜனநாயக அணியின் தலைமை குறித்து கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

தேசிய ஜனநாயக அணியின் கைகளிலிருக்கும் தேசிய ஜனநாயக அரசு (சோசலிசத்தை நோக்கி) மாறும் கட்டத்தில் அமைந்திடும், அதன் அதிகாரம் ஏகாதிபத்திய ஒழிப்பிற்காகவும் அரை நிலப்பிரபுத்துவ சக்திகளையும், பெருகிவரும் ஏகபோகங்களின் சக்தியையும் எதிர்த்துப் போராடிய அனைத்து வர்க்கங்களாலும் கூட்டாக கைக்கொள்ளப்படும். இந்தக் கூட்டில், உழைக்கும் வர்க்கத்தின் தலைமை இன்னும் பரவலாக்கப்படவில்லை என்றபோதிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனித்த அதிகாரம் தொடராது” (பக்கம் 41, ஆங்கில புத்தகத்தில்)

உழைக்கும் வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ முதலாளி வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ இல்லை என்றால் அது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டு அதிகாரமாகும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 8 வது கட்சி மாநாட்டில் கடைசியாக ஒரு பாராவை சேர்த்து கூடுதல் விளக்கமளித்தது. அந்த பத்தி பின்வருமாரு: “இந்தக் கூட்டணியின் தலைமை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவ, ஏகபோக எதிர்ப்பு சக்திகளிடம் இருக்கும்”. மேற்சொன்ன வரையறுப்புக்கு பிறகும், பல்வேறு வர்க்கங்களின் கூட்டுத் தலைமையையே அது உணர்த்துகிறது.

1964 ஆம் ஆண்டு திட்டத்தில் அடுத்த பத்தி பின்வருமாறு இருந்தது:

தேசிய ஜனநாயக அணியின் அரசும், அந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க கூட்டும் தனது ஈட்டி முனையாக  உழைப்பாளர்கள் விவசாயிகளின் அணியையே கொண்டிருக்கும், அதன் தலைமைக்கு உழைக்கும் வர்க்கம்  அதிக அளவில் வந்து சேரும், இந்த வர்க்கம்தான் தேசிய ஜனநாயக அணியின் உணர்வுப்பூர்வ வாரிசாகவும், அதன் கட்டமைப்பாளராகவும் இருக்கும். (பக்கம் 48)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் உள்ள (முதலாளித்துவ வர்க்கம் உழைப்பாளி வர்க்கத்தின் ) கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தை விடவும், மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது:

7.1 இந்தியப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை முழுமையாகவும், முழு நிறைவாகவும் பூர்த்தி செய்வதற்கு இப்போதுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும், இன்றைய சகாப்தத்தில், சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் முன்னேறிச் செல்வதற்கு தேவையான ஒரு முன் நடவடிக்கையான ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டியுள்ளது. இது பழைய பாணி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அல்ல, மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி நடத்தப்படும் புதிய வகையிலான மக்கள் ஜனநாயகப் புரட்சி ஆகும். (பத்தி 7.2)

இதுவொரு வரட்டுத்தனமான வலியுறுத்தல் அல்ல புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் முதலாளித்துவ வர்க்கங்களால் ஜனநாயக்ப் புரட்சியை முன்னெடுக்க முடியவில்லை என்ற வரலாற்று அனுபவத்திலிருந்து வந்தடைந்த வரையறுப்பாகும். குறிப்பாக, பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் இந்திய அரசில், பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்க கூட்டின் அரசு அதிகாரத்தை அகற்றுவதுதான் மையமான பணியாகும். தொழிலாளி விவசாயி இடையே வலிமையான கூட்டு உருவாவது தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலேயே சாத்தியமாகும். பெரு முதலாளிகள் அல்லாத வர்க்கப் பகுதிகளும் மக்கள் ஜனநாயக அணியின் பகுதியாக இடம்பெறலாம் என்றபோதும், அவர்கள் உறுதியான கூட்டாளிகளாக இருக்க முடியாது, தொழிலாளி விவசாயி இடையிலான கூட்டு எத்தனை வலுவாக இருக்கிறதென்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் பங்களிப்பு இருக்கும்.

இந்தியாவில், விடுதலைக்குப் பிறகான அறுபதாண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், குறிப்பாக புதிய தாராளவாத முதலாளித்துவக் கட்டம் தொடங்கிய பின் பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத பகுதியினருக்கும் இடையிலான வேறுபாடுகள் மெளனமாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வரலாற்றின் இந்த அம்சம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் எங்கும் கணக்கில்கொள்ளப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திட்டம் இப்போதும், ஜனநாயகப் புரட்சியை முழுமையாக்கி சோசலிச கட்டத்திற்கு மாறிச் செல்லும் கட்டத்திற்கு பல்வேறு வர்க்கங்கள் படிநிலைகளின் கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தில் நிலைபெற்றுள்ளது. அதில் கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படுகிறது:

ஜனநாயகப் புரட்சிக்கான பணிகளை நடைமுறையில் முன்னெடுக்கும் வர்க்கங்கள் மற்றும் மக்கள் பகுதிகள் தொழிலாளி வர்க்கம், ஊரக (கிராமப்புற) பாட்டாளிகள், உழைக்கும் விவசாயிகள், முற்போக்கு ஜனநாயகவாதிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் புரட்சிகர பகுதியினர், ஒரு பகுதி நடுத்தர மற்றும் சிறு முதலாளிகள் ஆவர். வலிமையான விவசாயி தொழிலாளி கூட்டணியை நோக்கி அணிவகுக்கும், ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து தலைமையில் உள்ள பெரு முதலாளிகளை மாற்றியமைக்கும் வரையில் முன்னணியில் இருப்பார்கள் (பத்தி 9.1)

தொழிலாளி வர்க்கம், ஊரக பாட்டாளிகள் தொடங்கி நடுத்தர, சிறு முதலாளிகள் வரையிலான வர்க்கங்களுக்கு, சோசலிசத்தை நோக்கிய மாறுதல் கட்டம் வரையிலான தலைமையை வழங்குவதானது பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் அரை நிலப்பிரபுத்துவ எச்சங்களுக்கு எதிராக தொய்வில்லாத தலைமையை யார் கொடுக்க முடியும் என்பதை மங்கச் செய்கிறது.

மாறுதலுக்கான காலகட்டத்தில் இருக்க வேண்டிய வர்க்கக் கூட்டினை தொழிலாளி வர்க்க தலைமை இல்லாமலே கொண்டு செல்ல முடியுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கருதுகிறது. மாறுதல் காலகட்டத்தின் முடிவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும், பரந்த ஜனநாயக கூட்டும் அமைக்கப்படும் என்று வெறுமனே சொல்லிச் செல்கிறது.

முதலாளிகளின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும் ஆதன் பரந்த ஜனநாயக அணிகளும் இடம்பெறுவதானது, பல அதிர்ச்சிகளுக்கும் சமூக எழுச்சிகளுக்கும் இட்டுச்செல்லும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலுக்கும், செயல்நோக்கிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலே தெளிவான அடிப்படை வேறுபாடு உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் ஜனநாயகப் புரட்சியை முழுமைப் படுத்திய பிறகு சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டமானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் புரட்சிகர வர்க்கக் கூட்டணியின் தலைமையிலேயே சாத்தியமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மாறுதல் கட்டத்தின் உச்சத்திலேயே தொழிலாளி வர்க்கத்தலைமையை நிறுவ முடியும் என்று கருதுகிறது.

பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் தற்போதைய அரசமைப்பை மாற்றியமைப்பது மிகமிக அத்தியாவசியம் என்று மார்க்சிஸ்ட் கட்சியைப் போல, சிபிஐ பார்க்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியையே சமூகத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று சொல்வதில் அது வெளிப்படையாகிறது.

புரட்சிகர மக்கள் இயக்கங்களை வளர்த்தெடுத்து, இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பரவலாக்குவதன் மூலமும், அத்தகைய மக்கள் இயக்கங்களின் துணையோடு நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையைப் பெறுவதன் மூலமும் தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு எதிர்ப்பு சக்திகளின் தடுப்பை தகர்த்து நாடாளுமன்றத்தை மக்கள் விருப்பங்களுக்கான ஒரு கருவியாகவும், சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகவும் மாற்றுவார்கள் (பத்தி 9.4)

இதன் பொருள் தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்குள்ளேயே செயலாற்றுவதன் மூலம் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதாகும். வெளிப்படையாக 1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில், இந்திய அரசுக் கட்டமைப்பில் ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகள் சில உள்ளதாக கூறப்பட்டது, இப்போதைய வரையறுப்பிலும் தொடர்கிறது.

வர்க்க பகுப்பாய்வு:

கட்சித் திட்டம் சுட்டும் நீண்டகால உத்தியில் உள்ள சில பலவீனங்கள், முழுமையற்றதும் பல்நோக்குடையுதுமான வர்க்கப் பகுப்பாய்விலிருந்து எழுகின்றன. கட்சியின் திட்டமானது இந்திய சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் இருப்பது அவசியமானது. அதன் மூலம்தான் பொருளாதார அடிப்படையிலும், சமூக ரீதியிலும் சுரண்டும் வர்க்கம் யார், சுரண்டப்படும் வர்க்கங்கள், பகுதிகள் யார் என்பதை கண்டறிய முடியும்.

நிலப்பிரபுத்துவத்தைக் கண்டுகொள்ளாமை:

விடுதலைக்குப் பிறகான விவசாய உறவுகள்”” என்ற பகுதியில் விவசாயத்துறை கண்டுள்ள பல்வேறு முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. எனினும், நிலப்பிரபுக்களின் இயல்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகள் இடையேயான அடுக்குகளின் உருவாக்கம் குறித்த ஆய்வோ நிலக்குவியலும் பிற உடைமைகளும் எப்படி நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகளிடம் தொடர்கின்றன என்பது பற்றிய ஆய்வோ இல்லை. அந்தப் பகுதியில், நிலக்குவியல் மற்றும் இதர சொத்துக்களின் மீது நிலப்பிரபுத்துவ பிடிமானம் பற்றி பேசாமலே நிலவிநியோகம் பற்றியும் நிலத்துக்கான போராட்டம் பற்றியும் பேசப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் விவசாய வர்க்கத்திடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் பெயரளவில் குறிக்கப்பட்டுள்ளன, விவசாயிகளிடையே உள்ள (ஏழை, நடுத்தர, பணக்கார) அடுக்குகள் குறித்தோ, வர்க்கப் போராட்டத்தில் அவர்களின் பாத்திரம் குறித்த அனுமானமோ, புரிதலோ குறிப்பிடப்படவில்லை.

உண்மையில், விவசாயிகளின் பல்வேறு பகுதிகள் குறித்த பத்தி, ஊரக (கிராமப்புற) வர்க்கங்கள் குறித்த ஆய்வின் பலவீனத்தையே காட்டுகின்றன.

பெரிய விவசாயிகளின் செல்வாக்கு காரணமாக, புதிய கொள்கையை நோக்கிய நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. முதலில் அவர்கள் விவசாய தொழில்மயமும், தாராள வர்த்தகமும் தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கருதினர். பின்னர், தாராள வர்த்தகத்தை எதிர்த்ததுடன் அரசு தலையீட்டின் மூலம் தங்கள் பொருளாதார தளத்தை பாதுகாக்க கோரிக்கை வைக்கத் தொடங்கினர். நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் பெரிய விவசாயிகளின் தலைமையையே பொதுவாகப் பின்பற்றினர். சிறு, நடுத்தர விவசாயிகள் அதிக அளவில் தங்கள் நிலங்களில் இருந்தும் இதர வளங்களில் இருந்தும் விரட்டப்பட்டுள்ளனர்.(பத்தி 6.6)

இங்கே “பெரிய விவசாயிகள்” என்று குறிப்பிடப்படுவோர் நிலப்பிரபுக்களா? முதலாளித்துவ விவசாயிகளா அல்லது பணக்கார விவசாயிகளா? “நடுத்தர, சிறு விவசாயிகள்” நடுத்தர விவசாயிகளாகவோ அல்லது ஏழை விவசாயிகளாகவோ இருக்கலாம். “வர்க்கங்கள் மற்றும் பிற பிரிவினர்: அவர்களின் பாத்திரம்” என்ற பகுதியில் ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் பாத்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் ஆகியோர் நிலமற்ற தொழிலாளர்களின் போராட்டத்தோடோ, நில விநியோகத்துக்கான போராட்டத்தோடோ இணைய மாட்டார்கள். அதே சமயம் பிற விசயங்களில் உதாரணமாக இடுபொருட்கள் விலையேற்றம், உள் கட்டமைப்பு வசதிகள், கட்டுப்படியான விலை மற்றும் விவசாயத்தை சாட்தியமானதாக்குதல் மற்றும் அரசு வலுக்கட்டாயமான விவசாய நிலங்களைக் கைப்பற்றுதல் ஆகிய பிரச்சனைகளில் எல்லோரும் கைகோர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். (பத்தி 7.15)

மேற்கண்ட பத்தியில், ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் விவசாயிகள் ஒட்டுமொத்த போராட்டத்தின் பகுதியாக உள்ளனர். இது ஊரக முதலாளிகளின் பாத்திரம் குறித்த தவறான புரிதலாகும். உண்மையில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகளின் போராட்டமானது அரசு வளங்களில் அதிகமான பங்கைப் பெறுவதற்கானதாகும். அந்த வளங்கள் மானியமாக இருக்கலாம், கடன் மற்றும் கட்டமைப்பு வசதியாக இருக்கலாம். மற்ற பகுதி விவசாயிகளை மேற்கண்டவைகளுக்காக அவர்கள் திரட்டுவார்கள். அதே சமயம் முதலாளி நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைவை எதிர்த்த போராட்டங்களின் பகுதியாக மாட்டார்கள். உண்மையில், விவசாயிகளின் ஜனநாயக இயக்கத்திற்கு எதிராக உருவெடுப்பார்கள்.

நிலப்பிரபுக்களும் ஆளும் வர்க்கத்தின் பகுதியாக இருந்து அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் உண்மை முழுமையாகத் தவறவிடப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், ஊரக ஏழைகள் மீது அவர்களால் நடத்தப்படும் வர்க்கச் சுரண்டல் பற்றிய கவனமும் முழுமையாகத் தவறியுள்ளது. அப்படியான வர்க்கப் பகுப்பாய்வும், அணுகுமுறையும் இல்லாமல் அரசு அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக வலுவானதொரு இயக்கத்தைக் கட்டமைப்பதோ, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான உழைப்பாளி விவசாயி கூட்டணியை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லை.

தொழில் மற்றும் வணிக மூலதனத்தைப் பொருத்தமட்டில் இந்த பகுப்பாய்வு புதிய தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவை மட்டுமே கணக்கில் கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கங்களில் இருந்து வலிமையான கார்பரேட் நிறுவனங்களின் வலிமையான படிநிலைகள் எழுந்துள்ளன, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவிதமான கூட்டணிகளை ஏற்படுத்துவதை அது கவனப்படுத்துகிறது. கார்பரேட் முதலாளித்துவத்தின் மீது கவனம் குவிந்துள்ளது.

பெரு முதலாளிகளை உருவாக்கும் பெரும் மூலதனத்தின் அனைத்துப் பிரிவுகளின் மீதும் கவனம் விரிவாக்கப்படவேண்டும். முன்னமே குறிப்பிட்டதைப் போல, அது பெரும் கார்ப்பரேட்டுகளைக் குறித்தானது மட்டுமல்ல, மற்ற வகையிலான மூலதனவுடைமை மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாடு என அனைத்துமாகும்.

பிராந்திய முதலாளிகள் மற்றும் பெருமுதலாளி அல்லாதவர்கள்:

பிராந்திய முதலாளிகளின் நிலை குறித்த ஆய்வும், சித்தரிப்பும் போதுமான அளவு இல்லாதது மற்றுமொரு பிரச்சனை. அதில் பெரும்பான்மை பெரு முதலாளி அல்லாதார் என்ற வரையறுப்பின் கீழ் வருகிறது. ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தில் பிராந்திய முதலாளிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக அவர்களுக்கு பெரு முதலாளிகளுடனான உறவிலும் மாற்றம் வந்துள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற சிறு பிரிவுகள் இடையிலான முரண்பாடுகளைக் குறிப்பது மட்டும் போதுமானதல்ல. தாராளவாதம் அமலானதற்கு பின், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் தங்கள் மூலதனத்தை விரிவாக்கவும் அனைத்திந்திய பெரு முதலாளிகளோடு கைகோர்க்கவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்முறையின் வழியாக, பெரு முதலாளி அல்லாத முதலாளிகளில் சில பகுதியினர், தங்கள் பிராந்தியத்தில் மூலதன அடித்தளத்தை தக்கவைத்துக் கொண்டே பெரு முதலாளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அன்னிய மூலதனத்திற்கும் பெரு முதலாளி அல்லாதோருக்கும் இடையிலான நீடித்த உறவு இல்லாதது பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களின் ஒன்றாகவிருந்தது. தாராளவாத அமலாக்கத்திற்குப் பின் இது மாறிவிட்டது. பெரு முதலாளி அல்லாத பகுதியினரும் அன்னிய மூலதனத்தோடு கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்று அதன் பலன்களையும் அடைந்துள்ளனர். இதுவெல்லாம் பெரு முதலாளிகளுக்கும், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களை மெளனமாக்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில், பிராந்தியக் கட்சிகளின் பாத்திரத்தைப் பற்றிய வரையறுப்பில் மேற்சொன்ன மாற்றங்கள் கணக்கில்கொள்ளப்படவில்லை. பிராந்தியக் கட்சிகளின் சில இயலாமைகளைக் குறிப்பிடுவதோடு பெரும்பாலும், பிராந்தியக் கட்சிகளை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்கின்றது. அவர்களின் ஆவணம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

அவர்கள் (பிராந்தியக் கட்சிகள்) குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்தின் முக்கியப் பிரிவுகளுடைய குரலையும், தேவைகளையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அந்தக் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் முன்னேற்றத்திற்கான குரலை எழுப்புகின்றனர்தீர்மானகரமான அரசியல் கண்ணோட்டம் இல்லாதபோதும், சூழலின் அவசியத்தைப் பொருத்து இந்த பிராந்தியக் கட்சிகள் கம்யூனிஸ்டுகளோடு கரம்கோர்க்க விரும்புகின்றனர்.

மேற்சொன்ன வகைப்படுத்துதலானது இந்தக் கட்சிகளை இடது ஜனநாயக அணியில் இணைக்க முனைகிறது.

பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராந்தியக் கட்சிகளுடன் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை நடைமுறை உத்திக்குள் அடங்கும் என்கிறபோதும், பிராந்தியக் கட்சிகளின் வர்க்க அம்சத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொலைநோக்கு உத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது, இது நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வேலைத்திட்ட பிரச்சனைகளை விவாதிப்போம்:

தொகுத்துக் கூறினால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு குறித்த வகைப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது, அது மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலோடு நெருங்கச் செய்கிறது. வேலைத்திட்டத்தின் மேலும் சில அம்சங்களில் பல்வேறு வர்க்கங்களின் மீது முதலாளித்துவ வளர்ச்சியின் தாக்கம் சரியாக ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும், வர்க்க பகுப்பாய்வுகளிலும், மற்ற வர்க்கங்களின் பங்கு பற்றி விளக்குவதிலும் சில குறைபாடுகள் இன்னமும் உள்ளன. ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதிலும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதிலும் தொழிலாளி வர்க்கம் தலைமைப்பாத்திரத்தை ஏற்கவேண்டியது அடையாளம்காணப்படவில்லை. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவ்வபோதைய உத்தி சார்ந்த முடிவுகளில் பழைய புரிதல்கள் நீடிக்கின்றன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்துவது கூடுதல் ஊக்கமளிக்கிறது. புதிய திட்டத்தை ஏற்றுக் கொண்ட 22 வது மாநாட்டில், கட்சியின் திட்டத்தை மறு ஆய்வு செய்து தொடர்ந்து மேம்படுத்த ஏ.பி.பரதன் தலைமையில் ஒரு வேலைத் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தோழர் பரதனின் எதிர்பாராத இழப்பின்போதும், மேற்சொன்ன பணி தொய்வின்றித் தொடருமென நாம் நம்புகிறோம்.

தற்போதைய அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய உத்திகள் தொடர்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையில் விவாதங்கள் தொடர்கின்றன. தொடரும் விவாதங்கள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளின் இடையே, திட்டம் சார்ந்த விவாதங்களையும் மேற்கொள்வதும் பயனுள்ளதாக அமைந்திடும் என்று எதிர்பார்க்கலாம்.

(மார்க்சிஸ்ட் இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. விவாதிக்க அழைக்கிறோம்)

இடது ஜனநாயக அணி: தேவையும், நம் கடமையும்

  • உ.வாசுகி

கட்சியின் அகில இந்திய 21வது மாநாடு, இடது ஜனநாயக அணி கட்டுகிற கடமைக்கான முக்கியத்துவதை மீட்டெடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்தியாவில் சோஷலிச அமைப்பை உருவாக்குவதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம் என்றாலும், அதற்கு முன்னதாக மக்கள் ஜனநாயகமே இந்திய சூழலில் புரட்சியின் கட்டமாக இருக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்த தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அணி அமைக்கப் பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது. இதில் இடது ஜனநாயக அணி எங்கு இடம் பெறுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். Continue reading “இடது ஜனநாயக அணி: தேவையும், நம் கடமையும்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச. வீரமணி

மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.

1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின் உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 94 ஆம் ஆண்டு தினமாகும்.

1982 ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக, 1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம், கட்சி பிளவுபடுவதிலும் 1963-64 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும் முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள் கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.’’

மேலும், அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும் வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச் சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:

“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும்,   புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின் வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”

இதன் பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை, சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.

“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது என்றே பொருளாகும்.’’

புரட்சியின் ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம், இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம்.   இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன் முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட விரும்புகிறேன்.

ஆயினும், இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக் கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின், கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.

மேலே நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாவது:

“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத் தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது, கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை நடைமுறையில் பார்க்கலாம்.’’

பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில் இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும். 1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக் கையாள்வதும் அவசியம்.

ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?… ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’

இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே – அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே – மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.

ஆம். இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக் கொண்ட நம்முடைய அமைப்பின் மீது – அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (manual labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’

ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.

ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித் துவத்தின் இயல்பான குணம் – அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் – அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.

உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.

இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதேசமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’, `நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.

நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன் நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.

ஆயினும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள் என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத் தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட, இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில் துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம் நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’

நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:

“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)

ஆனாலும் பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும், அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து, வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

“(2010 ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:

“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)

“ஜனநாயக அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம் முதலாளித் துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக் கும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)

“இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில், நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும் இணைக்கப்பட வேண்டும்.

“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட் நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம் அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும் மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

“மேலும், அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும் நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.

“இன்றைய நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும், சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம். சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

“இத்தகைய திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக் கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச் செல்லும். `அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல் நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் முடிந்திடாது.

“மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும் பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில் சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும் நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின் நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் – விவசாயிகள் வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக் களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில் புறச்சூழ்நிலை (objective situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் – ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

“ஆயினும் இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில் அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து, சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும் திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

“தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம்.

அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை, இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான் சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில், முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும் மாற்றுகிறது.

“மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும், அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.

“அடையாள அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில் இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும் அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

“அடையாள அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று. அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும், நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில் அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’, சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல் வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில் தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக் கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.

சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில் திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும் அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல் நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன் என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசு தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.

வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி, அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப் பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.

“எண்ணற்ற பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

“சர்வதேச நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக, இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது. மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

“இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில் ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’

எனவே, இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின் தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:

“சோசலிசம் மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில் எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம் என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

 

மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி II

அனில் பிஸ்வாஸ்

மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா யுத்தக் கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உபதேசத்தின் உள்ளடக்கத்தின் அமைப்பை லெனினைக் கொண்டே நாம் விளக்கலாம்.  ஒரு தொழிலாளி வர்க்க கட்சியானது கொரில்லா யுத்தத்தை மட்டும் தனது பாதையாக  பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்ள கூடாது என்று லெனின் எழுதியுள்ளார். கொரில்லா யுத்தமானது மற்ற போராட்ட வடிவங்களுக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும். இதை சோசலிசத்தை புரிந்து கொள்வது மற்றும் ஸ்தாபனங்களை வளர்த்தெடுக்க முயற்சிப்பதன் மூலமாக பலப்படுத்த வேண்டும்.  மிகவும் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் எல்லா வகையான போராட்டங்கள் அது வேலைநிறுத்தம் மூலமாகவோ, பாராளுமன்ற வடிவம் மூலமாக அல்லது பத்திரிக்கை வாயிலாகவோ இருக்கலாம் என்று லெனின் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார். பழங்கால சோசலிச வடிவத்திலிருந்து விலக நேர்கிற பொழுது புறப்படும்போது பல தரப்பட்ட வடிவங்களைக் கொண்ட போராட்டங்களையும்  மார்க்சியம் அங்கீகரிக்கிறது என்று லெனின் விளக்குகிறார். ஆனால் மாவோயிஸ்ட்டுகள் பரவலாக இந்த ஆய்வை மறுக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் காரணமாக  வெகு ஜனங்களிடமிருந்து தவிர்க்க இயலாத விரோதத்தை உருவாக்கியுள்ளது. வெகுஜனங்களின் சொந்த முயற்சிகளும் இதன் காரணமாக  பாதிக்கப்படுகிறது.  பெரும் திரள் மக்களின்  அரசியல் முன்முயற்சிகளுக்கே உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

போராட்ட வடிவத்தை பற்றி சிந்திக்கும்போது வரலாற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற மார்க்சியத்தின் கோரிக்கையை வற்புறுத்துவதற்கு லெனின் எந்தவொரு சமரசத்திற்கும் இடம்தரவில்லை. இதில் திருகுதாளம் செய்தால் அது மார்க்சிய, லெனினியத்தின் அடிப்படையான  கோட்பாடுகளிலிருந்து விலகி நிற்பதாகும். ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவம் சரியா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் கூறு முன் குறிப்பிட்ட கட்டத்தின் ஸ்தூலமான நிலவரங்களை விரிவாக ஆராயயமல் சொல்வது மார்க்சிஸ்ட நிலைபாட்டை கைவிடுவதாகும் என்று லெனின் கூறினார்.

ஆனால் மாவோயிஸ்ட்டுகள் இவைகளை கணக்கிடாமல் அனைத்து வழிகளிலும் கடுமையாக தவறு செய்கிறார்கள்.  புரட்சிக் காலத்தில் கொரில்லா யுத்தம் தான்வெற்றியை கொணரும் மற்ற வழிகள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாததும் பொருத்தமற்றதாகும் என்ற கோட்பாட்டினை மார்க்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை.  சீனாவில் ஆயுதமேந்திய விவசாயிகள் புரட்சி மற்றும் ஆயுத தாங்கிய புரட்சிகர மண்டலங்களாக தீர்மானிப்பதற்கான சூழ்நிலைகளையும் நிர்பந்தங்களையும் மாவோ கண்டறிந்தார். அவைகள் பின்வாறு முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலார்களின் தார்மீக ரீதியான சட்டரீதியான  அவர்களின் வேலைநிறுத்தங்கள் மூலமாகவும், சட்டத்தின் போராட்டங்கள் மூலமாகவும் திடீர் போராட்டங்கள், பாராளுமன்றம்,  அரசியல் மற்றும் பொருளாதா போராட்டங்கள் பயன்களால் அவர்கள் வளர்ச்சியடைந் துள்ளார்கள். சீனாவில் அங்கு பாராளுமன்றம் இல்லை. சட்டப்பூர்வ அமைப்புக்களை பயன்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.  சீனாவின் விவசாயப் பொருளாதாரம் உள்ளுர் மட்டத்தை தாண்டவில்லை. குறைந்த அளவிலான முதலாளித்து வளர்ச்சி காரணமாக நாடு தழுவிய முதலாளித்துவ பொருளாதார அனுபவம் சீனாவில் இல்லை. வட்டார அளவில் ஆட்சி செய்யும் படைவைத்திருக்கும் பிரபுக்கள், தனிமைப்பட்டே இருந்தனர். மேலும், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டுடிருந்தனர்.

ஏகாதிபத்திய சக்திகள் சீனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக  துண்டு துண்டாக்கினர். இது சீனாவில் அடிக்கடி  ஏகாதிபத்தியவாதிகளிடையே மோதல்களை உருவாக்கின.

சீனாவில் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தலைமை இல்லாத பலவீனம் காரணமாக நிர்வாகத்திலும், இராணுவத்திலும் டெயல் இசைவு இன்றி ஒழுங்கீனம் மலிந்து கிடந்தது.

இந்தியாவின்  தற்போதைய எதார்த்தமான நிலையினை கவனத்தில் கொண்டால் தொலைதுர கிராமங்களை ஆதரவு தளங்களாக கட்ட முயற்சிகள் எடுத்து அதனை விடுதலை பெற்ற மண்டலங்களாக  உருவாக்கி பின்னர் நகரங்களை சுற்றி வளைப்பது என்ற கருத்து ஒரு கற்பனை புனைவாகவே இருக்க முடியும். புரட்சிகர மாறுதல்களுக்கான கடுமையாக முயற்சிக்கும் காலத்தில் மத்திய அரசியல் மையம் மற்றும் சக்திவாய்ந்த இராணுவம்  ஆகியவை பற்றி மாவோயிஸ்ட்டுகள் கவலைப்படுவ்தில்லை.  கொரில்லா யுத்த அடிப்படையிலான ஆயுத தாங்கிய போராட்டக் கருத்துடன் தற்போதை சூழ்நிலைகள் ஏதாவது விதத்தில் இனக்கமாக உள்ளதா என்பதைக் கூட இவர்கள் பார்ப்பதில்லை.

இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி, உலக பொருளா தாரத்துடன் கொண்டுள்ள பிணைப்பு, பாராளுமன்ற ஜனநாயக அனுபவம், சமூக, பொருளாதார மாற்றங்கள், வர்க்கங்களின் சமூக அந்தஸ்த்து, இந்திய மக்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை, தத்துவ சாதனங்கள் மற்றும் செய்தித்துறை வளர்ச்சி போன்ற முக்கிய அம்சங்கள் விடுதலை பெற்ற மண்டலங்களை உருவாக்க  அடிப்படை கொரில்லா யுத்தத்திற்கான பொருத்தமானவையாக இருக்க வேண்டும். வெகுஜன போராட்டத்தில் பலவீனங்கள் இருந்தபோதிலும் நகர மற்றம் கிராமப்புற உழைக்கும் வர்க்கங்கள் அவர்கள் அமைப்புக்கள்  ஆகிய இரண்டிலும் முன்னேற்றத்தை பதிய வேண்டும். மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய ஜீவாதார விசயமாகும்.  இந்திய பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொள்ளும்போது  கொரில்லா யுத்த  தந்திரங்களால் ஒரு நிரந்தரத்தை உருவாக்க முடியாது அவை மின்னல் போல விழும் அத்தோடு மாபெரும் சக்தியை திரட்டுவதற்கும் மாபெரும் போராட்டங்களுக்கும் கெடுதல் ஏற்பட்டு முடிவிற்கு வரும் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.   நடைமுறை பற்றிய நுலில் மாவோ கீழ்கண்டவாறு எழுதுகிறார். எதார்த்த நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்குக் கேற்ப மாறாத கடும் பிற்போக்காளர்களை நாம் எதிர்க்கிறோம். இது வரலாற்றுரீதியாக வலதுசாரி சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்களது சிந்தனை சமூக நடைமுறைகளில்லிருந்து விலகி நிற்கிறது. சமூகத்தோரை முன்னோக்கி கொண்டு செல்ல அவர்களால் வழிகாட்டுகிற முறையில் நடைபோட முடியாது. பின்னால் இருந்து அது வேகமாக போவதாக புலம்பிக் கொண்டே பின்னோக்கி எதிர் திசையில் இழுக்க முயற்சிப்பர் என்று மா-சே-துங், நடைமுறை பற்றி என்ற ஆய்வு நூலில குறிப்பிடுகிறார்.

நமக்கு கிடைத்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் ஆவணங்களில்  சாதகமான சூழ்நிலைகள் உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது.  ஏகாதிபத்திய சக்திகளக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் இந்திய ஆளும் வர்க்கத்தை பாதிக்கும்.  இது அரசியலில் நிச்சயமற்ற தன்மையும், நிர்வாகம் பலவீனமாகவும் இருக்கும் என்று நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் தரகு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக மாபெரும் கிளர்ச்சிகளுக்கு அழைத்து செல்லும், இதனால் காவல்துறை மற்றும் இராணுவம் பாதிக்கும். இந்த திருப்பம் உலக போருக்கு இட்டுச் செல்லும் என்று மாவோயிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். இதை பகல் கனவு அல்ல எனில் வேறு  என்னவென்று சொல்வது?  தொழிலாளி மற்றும் விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்ட கால தன்மை கொண்டதும் ஆகும். வேறுபட்ட சூழல்களில் வெவ்வேறு கட்டமாக இதை நடத்த வேண்டியிருக்கும். புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவ கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும் ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும் பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள் ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும். இத்தகைய கட்சியால் தான் மிகுந்த அக்கரை கொண்ட சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டு வந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப் பங்களின்போது மக்களுக்கு தலைமை தாங்கி செல்ல முடியும். (கட்சித் திட்டம் பாரா 7.16)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுத்தவரை வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுதான் இன்றைய கட்டத்தின்  பிரதான கடமையாக நம்புகிறது.  ஒரு உண்யைன மார்க்சிஸ்ட்டுக்காக ஆயுத போராட்டத்திற்கான பலமான உறுதிமொழி ஒரு போதும்  ஒருவருடைய புரட்சிக்கான தகுதியின் முன் நிபந்தனையாக  இருக்காது.   தொழிலாளி வர்க்கமோ அல்லது உழைக்கும் மக்களோ தாங்களகவே வன்முறையில் இறங்காதவரை ஒரு தொழிலாளி வர்க்க கட்சியின் நிலை என்னவாக இருக்க வேண்டும் ?  மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வர பாடுபடுவர் எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒரு போதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாகவும் வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய திருப்பங்கள் திருகல்கள்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். (கட்சித் திட்டம் பாரா 7.18)

எதார்த்த நிலைமை 

வன்முறையும், எதிரிகளை பூண்டோடு அழிப்பது உட்பட  அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களிலும் வெஜனங்களை பங்கேற்பதற்கான முயற்சிகளை வழங்குவதும் தங்களுடைய கடமைகளுடன் இணைந்த ஒன்றாகும் என மாவோயிஸ்ட்டு கொரில்லாக்கள் குறிப்பிடுகிறார்கள்.  அதன் விளைவுகளை ஒவ்வொருவரும் இப்பொழுது பார்க்க முடிகிறது.

தனிநபர்களை படுகொலை செய்யும் வழியான  இடது குறுங்குழுவாதக் கொள்கையைத் தான் நக்சலைட்டுகள் இயக்கம் துவங்கப்பட்ட  காலம் முதல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சாரு மஜூம்தார், கானு சன்யால், சோரின் போஸ், சி.டெஜெஸ்வர் ராவ், மற்றும் டி.நாகபூஷன் பட்நாயக் உட்பட 6 நக்சலைட்  தலைவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில்  நகசலைட்டுகளின் நாசகர பாதையினை   சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.  லீன்பியோவின் மக்கள் யுத்த கோட்பாட்டை இயந்திரத்தனமாக கடைபிடித்த நக்சலைட்டுகள் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது மேலும் வர்க்க எதிரியின் இரத்தத்தில் கையை மூழ்கி எடுப்பதன் மூலம் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுக்களை உருவாக்க முடியாது.  மறுபக்கம் கட்சியானது  மேலும்  கம்யூனிஸ்ட் கட்சியாக  இருக்கவும் முடியாது என்பதையும் உறுதி செய்யும்.

மக்கள் யுத்த குழு (PWG) மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  உள்ளடக்கிய இடது குறுங்குழு வாதிகள் பல ஆண்டு காலம் வன்முறை நடவடிக்கைகளில் மனம் போன போக்கினை கொண்டிருந்தனர். 1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில் நக்சலைட்டுகள் தொடர்புடைய வன்முறைகளால் 2077 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.  இவர்களின் பெரும்பகுதியினர் சாதாரண குடிமக்கள் ஆவர். உயிரோடு எரித்துக் கொல்வது, உள்நாட்டு ஆயுதங்கள்,  நாட்டு வெடிமருந்துகள் வெடிவைத்து  சிதறச் செய்வது என்ற கொடூரமான முறைகளில் கொன்றனர்.

2002ல் 90 பேர் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டனர். இது 2003ல் 136 ஆகவும்,  2004ல் 70 பேரும், 2005ல் 122 பேருமாக கொல்லப்பட்டனர். இவர்களை படுகொலை செய்வதற்கு முன்னர் அவர்கள் போலீசாருக்கு உளவு பார்த்தவர்கள் என்று சொல்லி அடையாளப்படுத்தினர். இவர்களில் 80 சதவீதத்திற்கு அதிக மானோர் மாவோயிஸ்ட்டுகளால் வகைப்படுத்தப்பட்ட  வர்க்க எதிரிகள் அல்ல சாதாரண மக்கள் ஆவர். இவர்களில் சிலர் நக்சலைட்டுகளின் எதிர்குழுக்களின் ஆதரவாளர்கள், அவர்களின் உண்மையான தொண்டர்களாக இருந்தவர்களும் கொல்லப் பட்டுள்ளனர். சுருக்கமாக இது  இவர்களுக்குள் ஒருவரையொருவர் ஒழித்துக் கட்டும் போராட்டம் என்பது தெளிவாகும்.

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் திடீர் தாக்குதல்களால் 12 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும், 17 காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். தொலைப் பகுதியில் தனித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நிலக் கன்னி வெடிகளைக் கொண்டு வெடிக்கச் செய்து அழித்தனர்.  கிராமப்புற மக்கள் மத்தியில் அச்ச உணர்வுகளை பரப்பவும் முயற்சித்தனர். மிகச் சிறிய எல்லை கொண்டுள்ள ஒரிசா, சதீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிர பகுதிகளில்  விரிவுபடுத்துகிறார்கள். பயங்கர வாத நடவடிக்கைகளை  ஒட்டு மொத்தமாக என்றில்லாமல்  ஒருபகுதியில்  பரப்புவதையும் புரட்சிகர வழி என்பதன் பெயரால் வன்முறைகளையும்  மேற்கொள்கிறார்கள். அவர்கள் எங்கு செயல்படுகிறார்களோ அங்கே  தொடர்புடைய பகுதியில் மண்டலங்களை கட்டுவதற்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

சமீபகாலமாக இடது குறுங்குழுவாதிகளிடையே, உறுதீ குலையும் போக்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆந்திர பிரதேசத்தில் மக்கள் யுத்தக்குழுவால் சரனடைந்தோர் சராசரி ஆண்டு 550 ஆக இருக்கிறது.  இதேபோன்றே பீகார், ஜார்கண்டிலும் அழிவு வேலைகளில் ஈடுபட்டனர்.

அண்டை நாடான நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின்  அதிகரித்து வரும் நடவடிக்கைகளையும், தெற்காசிய மாவோ யிஸ்ட்டுகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதையும் தங்களது பயங்கரவாத தந்திரங்களை பலப்படுத்திட மாவோயிஸ்ட்டுகள்  பயன்படுத்திக் கொள்கிறார்கள். பீகாருக்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள நீண்ட கண்காணிப்பற்ற  இரு எல்லைப் பகுதிகளை சட்டவிரோத கடத்தல்களுக்காகவும், பயற்சி முகாம்களை நடத்தவும் பயன்படுத்துகிறார்கள்.  அவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்திய தீவிரவாதக்குழுக்கள், விடுதலைப் புலிகள் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளையும், அவர்களிடமிருந்து ஆயுத உதவிகளையும் பெறுகிறார்கள்.  2004 நவம்பரில் வெளியான செய்திகளின்படி அவர்களி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புடன் கூட தொடர்பு வைத்துள்ளது தெரிய வருகிறது.

எவ்வாறாயினும்,  மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளின் மொத்த அரசியல் விளைவுகளை பொறுத்தளவில் மிகவும்  சுருங்கியும், தற்காலிகமானதாகவும் உள்ளது. உதாரணமாக  பீகார், ஜார்கன்ட் மாநிலங்களில் நிலபிரபுக்களுடைய உச்சவரம்பிற்கு மேல் உள்ள உபரி நிலங்களை கைப்பற்றவோ அதை நிலமற்றவர்களுக்கு அல்லது கிராமப்புற ஏழை மக்களுக்கு மறு விநியோகமோ செய்யப்படவில்லை.  மாவோயிஸ்ட்டுகளின்  பிரதானமான வருவாய் என்பது கிராமப்புற பணக்காரர்களிடமிருந்தும், நிலபிரபுக் களிடமிருந்தும் லெவியாக வசூல் செய்வதிலிருந்து தான் வருகிறது.  கிராமப்புற ஏழைகளின் நலன்களை பாதுகாப்பதற்கோ அல்லது இயற்கை ஆதாரங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு வெகு தொலைவில் அவர்கள் உள்ளனர்.  ஆனால் மறுபுறம்  வியாபாரிகள் மற்றும் வர்த்தக சூதாடிகளுடன் பரவலாக உறவுகளையும், விரிவான தகவல் தொடர்புகளையும் மாவோயிஸ்ட்டுகள் வைத்துள்ளனர்.  சத்தீஸ்கரிலும் ஒரிசாவிலும் வனத்திலிருந்து பீடி இலைகளையும், நார் சத்து மிக்க வனப் பொருட்களையும் கடத்தும் மாவோயிஸ்ட்டு களுக்கும் அப்பகுதி கிராம மக்களுக்கும்  இடையே தொடர்ச்சியான மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

துப்பாக்கி முனையை வைத்து கிராமங்களையும், கிராம மக்களையும் தங்களது பிடிமானத்தை கெட்டிப்படுத்தியுள்ளனர். இது அவர்கள் மீதான பற்று காரணமாக அல்ல மாறாக கிராம மக்களின் அச்சத்திலிருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் மற்ற தீர்ப்பு என்று, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று நீதி வழங்குமுறை நன்றாவே ஆவணமாக்கப்பட்டுள்ளன. மேலும் மாவேயிஸ்ட்டுகள் முதலா ளித்துவ அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக மாறி வருவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கு தேச  கட்சியின் கீழ் மட்ட அளவில்  நக்சலைட்டுகள் வைத்துக் கொண்ட உறவை நக்சலைட்  கவிஞர் வற வற ராவ் வழக்கறிஞர் குழு முன்பு ஒப்புதல் அளித்தார். தெலுங்கு தேசமும், காங்கிரசும் பணத்தை கொடுத்து மாவோயிஸ்ட்டுகளின் சேவையை பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் வறவறராவ் மேலும் சொல்லியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாவோயிஸ்ட்டுகளை பயன்படுத்த கணிசமான தொகையினை அவர்களுக்கு வழங்கப் பட்டதாக  ஜார்கன்ட் மாநில முண்டா அரசியல் அமைச்சராக உள்ள பிஜேபி தலைவர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார். பீகாரில் பகலில் முதலாளித்து கட்சிகளின் பிரதிநிதிகளாகவும் இரவில் மாவோயிஸ்ட்டுகளாகவும் இருப்பார்கள் என்ற பழமொழியே உள்ளது. இது தொடர்பாக மற்றொரு விசயத்தில் திரினாமுல் காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டதாக மக்கள் யுத்தக்குழுவின் (PWG) முன்னாள் மாநில செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னேற்றத்திற்கான தோற்றம் 

வளர்ச்சியின்மை காரணமாக மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெருகும் என்று மீடிய நிறுவனங்கள் தொடர்ந்து சொல்லிவரும் கருத்தாகும். மாவோயிஸ்ட்டுகளால் மேற்கொள்ளப் படும் ஒவ்வொரு படுகொலைகளையும் முன்னேற்றத்திற்கான குறைபாடுதான் அடிப்படை என்று நியாயப்படுத்துகின்றன.  அவர்கள் கிராமப்புற மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் நலன் களுக்காக வேலை செய்வதற்காக அவர்கள் கிராமங்களில் நீடித் திருக்கவில்லை என்று மாவோயிஸ்ட்டுகளின் ஆவணங்களே தெளிவுபடுத்துகின்றன. கிராமப்புற பகுதிகளை அவர்கள் தேர்ந் தெடுப்பதற்கு வசதியான காரணம் அவர்களின் கொரில்லா யுத்தத் திற்கு தக்கவாறு பொருந்துவதுதான். தனிமைப்பட்டுள்ள இப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஏற்ற இயற்கை சூழலைப் பயன்படுத்த கணக்கிடு.

I