மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச. வீரமணி

மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.

1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின் உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 94 ஆம் ஆண்டு தினமாகும்.

1982 ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக, 1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம், கட்சி பிளவுபடுவதிலும் 1963-64 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும் முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள் கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.’’

மேலும், அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும் வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச் சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:

“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும்,   புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின் வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”

இதன் பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை, சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.

“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது என்றே பொருளாகும்.’’

புரட்சியின் ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம், இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம்.   இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன் முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட விரும்புகிறேன்.

ஆயினும், இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக் கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின், கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.

மேலே நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாவது:

“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத் தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது, கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை நடைமுறையில் பார்க்கலாம்.’’

பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில் இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும். 1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக் கையாள்வதும் அவசியம்.

ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?… ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’

இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே – அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே – மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.

ஆம். இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக் கொண்ட நம்முடைய அமைப்பின் மீது – அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (manual labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’

ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.

ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித் துவத்தின் இயல்பான குணம் – அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் – அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.

உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.

இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதேசமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’, `நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.

நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன் நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.

ஆயினும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள் என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத் தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட, இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில் துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம் நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’

நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:

“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)

ஆனாலும் பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும், அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து, வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

“(2010 ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:

“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)

“ஜனநாயக அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம் முதலாளித் துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக் கும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)

“இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில், நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும் இணைக்கப்பட வேண்டும்.

“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட் நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம் அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும் மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

“மேலும், அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும் நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.

“இன்றைய நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும், சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம். சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

“இத்தகைய திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக் கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச் செல்லும். `அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல் நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் முடிந்திடாது.

“மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும் பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில் சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும் நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின் நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் – விவசாயிகள் வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக் களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில் புறச்சூழ்நிலை (objective situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் – ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

“ஆயினும் இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில் அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து, சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும் திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

“தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம்.

அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை, இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான் சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில், முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும் மாற்றுகிறது.

“மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும், அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.

“அடையாள அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில் இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும் அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

“அடையாள அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று. அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும், நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில் அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’, சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல் வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில் தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக் கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.

சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில் திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும் அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல் நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன் என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசு தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.

வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி, அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப் பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.

“எண்ணற்ற பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

“சர்வதேச நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக, இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது. மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

“இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில் ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’

எனவே, இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின் தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:

“சோசலிசம் மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில் எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம் என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

 

இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

மார்க்சிஸ்ட் கட்சியின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் பரிசீலனையில், பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. வலதுசாரி திருப்பம் என்று எதைச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது.

முதலில் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்பிரயோகம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். 1789 பிரெஞ்ச் புரட்சியின் போது, தேசிய நாடாளுமன்றத்தில் புரட்சிக்கு ஆதரவானவர்கள் அவைத் தலைவருக்கு இடதுபுறமும், மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வலதுபுறமும் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர். பொதுவாக முற்போக்குவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் சமத்துவம், ஜனநாயகம், பரந்த பார்வை, சமத்துவ பார்வை, பாகுபாடுகள் எதிர்ப்பு, பொதுநலன் நாடல் போன்றவை இணைந்தது இடதுசாரிக் கண்ணோட்டம். பிற்போக்குவாதம், சமூகப் படிநிலை அப்படியே இருக்க வேண்டும் என்ற கருத்து, பாசிசம், சர்வாதிகாரம், ஆளும் வர்க்க நலன்களை பகிரங்கமாக ஆதரிப்பது, மதவாதம், சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்கள் இணைந்தது வலதுசாரிக் கண்ணோட்டம். பொதுவாக இடதுசாரிக் கருத்தியல் முற்போக்கு என்றும், வலதுசாரி கருத்தியல் பிற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு ஒரு விஷயத்தில் முற்போக்குப் பார்வையும், மற்றொன்றில் பிற்போக்குப் பார்வையும் இருக்கலாம். அதை மட்டும் வைத்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று எடை போட்டுவிட முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தப் பார்வை இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று பார்க்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி கருத்தாக்கங்களிலும் பல நிறங்கள், நீரோட்டங்கள் உள்ளன.

பொதுவாக இந்த அளவுகோலில் உலக அரசியல் அரங்கில் கட்சிகள், கொள்கைகள், தத்துவங்கள் எடை போடப்படுகின்றன. இந்தியா உட்பட எந்த ஒரு சமூகத்திலும் இரு பகுதியாளர்களும் உள்ளனர். இரண்டு கருத்துக்களும் இருக் கின்றன. இருப்பதை மாற்றாமல், அதற்குள்ளேயே சில முன்னேற்றங்களைத் தேடும் மையத்துவவாதிகளும் (Centrists) உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அல்லது ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் எந்த வகை என்று பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் தேசத்தை அவ்வகையில் செலுத்த அந்தக் கட்சி முயற்சிக்கும். அது இடதுசாரிப் பாதையில் செலுத்த முயற்சிக்கிற கட்சியின் ஆட்சியாக இருந்தால், மக்களுக்கு அது நன்மை தரும். வலதுசாரிப் பாதையில் செலுத்துகிற ஆட்சியாக இருந்தால் பொது நலனுக்கு அது ஆபத்தாக முடியும்.

தேசியவாதம் என்பது முற்போக்கா?

உதாரணமாக, ஹிட்லரின் ஆட்சியின் அடிப்படையாக ஆளும் வர்க்க நலன் என்பதுடன் பாசிஸம், இன அழிப்பு உள்ளிட்டவை இருந்ததால் வலதுசாரி என்று சொல்கிறோம். தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளை, மத அடிப்படைவாதம், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம் போன்ற குணாம்சங்களின் அடிப் படையில் வலதுசாரி என்றே வரையறுக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் அடிப்படை பார்வை யூத இனவெறி, எனவே அதை வலதுசாரி அரசு என்று பார்க்கிறோம். அமெரிக்காவில் செயல்பட்ட கூக்ளக்ஸ் கிளான் போன்ற அமைப்புகளைப் போல் தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வந்து உழைக்கும் தொழிலாளிகளை வேட்டையாடும் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசியம் என்ற பெயரில் இவை வன்முறையில் இறங்குகின்றன. இவை வலதுசாரி அமைப்புகளே. மதம், தேசியம், இனம், மொழி என்று பல அடையாளங்களில் எது வேண்டுமானாலும் அல்லது எல்லாமே வலது சாரிக் கருத்தியலின் மையமாகப் பயன்படக் கூடும்.

உலகின் பல நாடுகளில் தேசியம் அல்லது தேசியவாதம் என்பது வலதுசாரிப் பாதையின் முகமூடியாகப் பயன்படுகிறது. தேசியம் என்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழக்கூடும். தேசியம் என்பதில் பல வகை உண்டு. அதிலும் வலதுசாரி இடதுசாரி கண்ணோட்டங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் கூடிய வர்க்க நலன் இணைந்த தேசியம் உண்டு. சில அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரபு தேசியம் என்பது பேசப்படுகிறது. ஹிட்லர் முன்வைத்தது உயர் இனப் பெருமையை மையப்படுத்தும் தேசியம். இதன் மூலம் இதர தேசிய இனங்களை அழித்தொழிப் பது என்பது நியாயப்படுத்தப்பட்டது. இது பாசிஸத்துக்குப் பயன்பட்டது. தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுத்தும் மத அடிப்படைவாத தேசியம் இருக்கிறது. அமெரிக்கா தன் பல்வேறு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உள்நாட்டுக்குள் தேசியத்தை முன்வைத்துப் பேசுகிறது. இந்தியாவில் பிஜேபியின் பிரச்சாரம் கலாச்சார தேசியம் என்பதை மையப்படுத்துகிறது. அதாவது இந்துக் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல என்பது. தேர்தல் காலத்தில், நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத் வம்தான் இந்தியாவின் அடையாளம் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இது இதர மதங்களைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக உருவகப்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைப்பது, காப்பது அல்ல. எனவே, தேசியம் என்பதே முற்போக்கு ஆகி விடாது. அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே நிர்ணயிப்புக்கு வர முடியும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவீன இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மத அடிப்படையில் இந்துராஷ்டிரமாக இந்தியா அமைய வேண்டும் என்று வற்புறுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உட்பட பெரும்பான்மையினர் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, சமத்துவம் என்ற அஸ்திவாரம் தேவை என்று வலியுறுத் தினர். இறுதியில் அரசியல் நிர்ணய சபையால் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, பன்முகத்தன்மை கொண்ட நவீன இந்தியா உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விட்டுவிடவில்லை என்பது தான் உண்மை.

மேல்பூச்சு

காந்தி கொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தடையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகப் பிகடனம் செய்துகொண்டது. ஆனால், அதன் அரசியலை கவனிப்பதற்காக பாரதீய ஜனசங்கம் உருவாகி, அதன் தொடர்ச்சி யாகத் தற்போது பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலாச்சார தேசியம், இந்து தேசியம் என்ற பேரில் சங் அமைப்பின் வலதுசாரி இந்துத்வ அரசியல் கருத்தியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது நடந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் தீவிரமாக நடக்கும் என்பதைத்தான் வாஜ்பாயி ஆட்சியில் பார்த்தோம். ஆனால், அப்போது பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை யில் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், பல விஷ யங்களை நினைத்த அளவு செய்யமுடியவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி என்ற பெயர் இருந் தாலும், இது பிரதானமாக பிஜேபி ஆட்சியாகவே இருக்கிறது. முக்கிய அமைச்சரகங்கள் உள்துறை, பாதுகாப்பு, அயல்துறை, தொழில், வர்த்தகம், மனிதவளம், ஊரக வளர்ச்சி எல் லாமே பிஜேபி கையில்தான். இந்துத்துவக் கருத்தியல்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர இது மிக உதவியாக இருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தர பிரதேசத்தில் மட்டும் 27க்கும் மேற்பட்ட மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றைப் பற்றிய சிறு விமர்சனம் கூட மோடியால் செய்யப்பட வில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் சுதந்திர தின உரையில் வகுப்புவாத, சாதிய மோதல்களுக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த மதவெறிக் கொடுமைகளுக்கு, பிரதமர் வேட் பாளராக இருந்த போது கூட வருத்தம் தெரிவிக்காதவர் திடீரென மாற்றிப் பேசுவதால் யார் நம்பிவிடப் போகிறார்கள்? கடந்த காலத்தில் பிரதான மதவெறித்தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுக் களின் அறிக்கையைப் பார்த்தாலே உண்மை புரியும். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் (மும்பை 1992-93), டி.பி.மதான் கமிஷன் (பிவாண்டி, ஜால்காவ், மஹத் 1970) ஜோசஃப் வித்யாத்தில் கமிஷன் (தலைச்சேரி 1971), ஜக்மோஹன் ரெட்டி கமிஷன் (ஆமதாபாத் 1969), வேணுகோபால் கமிஷன் (கன்னியாகுமரி 1982), ஜிதேந்திர நாராயண் கமிஷன் (ஜாம்ஷெட்பூர் 1979) ஆகிய கமிஷன்கள் எல்லாமே, இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஒன்று, மத மோதல் களைத் தூண்டுவதில், நடத்துவதில் இந்துத்துவ அமைப்புகளின் கிரிமினல் நடவடிக்கைகள், வன் முறைகள்; இரண்டு, காவல்துறையின் சிறு பான்மை விரோத அணுகுமுறை. விசாரணைகளின் போது, இந்துத்துவ ஆசாமிகளின் பங்கேற்பை மறைப்பதற்குக் காவல்துறையும், நிர்வாகமும் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி பார்வை இருப்பவர்கள் பொருத்தப் படுவார்கள் என்பதும் புரிகிறது. இதையெல்லாம் செய்து கொண்டே, மோதல்களை நிறுத்த வேண்டும் என்று ஒரே ஒரு உரையில் மட்டும் பொதுவாகப் பேசுவது மேல் பூச்சு தான்.

திருத்தப்படும் வரலாறு:

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்து தான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப் படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய நிபுணர்களின் சந்தேகத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய அவ சியம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத் திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங் களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிஹார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் எழுதியதை, தோழர் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியிருக்கிறார். பூகோள ஆய்வுகளை இது மீறுகிறது என்பது மட்டுமல்ல, மக்களை விட்டு விட்டு நிலப் பிரதேசம் மட்டும் இடம் மாறுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். திப்பு சுல்தான் போன்றவர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்ததும், சில இந்து மன்னர்கள் கோயில்களை இடித்ததும் வரலாற்றின் பகுதிதான். வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திருத்துவது பேராபத்தில் போய் முடியும்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உரு வாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக் கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக்கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும் என்கிற செய்திகள் அண்மையில் வெளிவந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத் தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார். இது, மார்க்சிஸ்ட் கட்சியால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது, அரசு அதை மறுத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் வரலாற்றைத் திருத்துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது.

அதேபோல் இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இல்லை. இந்தியாவுக்குள் குடியிருப்பது என்பதுதான் அடிப்படை. எனவேதான் குடியுரிமை அடிப்படையில் மதச்சார்பில்லாமல் சம உரிமை கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இரண்டாம் தரத்தினராக நடத்தப் பட வேண்டும் என்ற கோல்வால்கரின் கூற்றும் இதில் அடிபட்டுப் போகிறது. அரசியல் சட்டத் தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த காலத்தில் ஓயாமல் எழுந்ததற்கு இதுவே பிரதான காரணம். தற்போதும் இதை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படும்.

கற்பனைகள் மட்டுமே கல்வியாய்:

அரசியல் அமைப்புச் சட்டக் கோட்பாடுகள், பொதுவாக ஒரு நாட்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை. அப்படிப் பார்த்தால், கல்வித் திட்டம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல், சமத்துவக் கருத்துக்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நவீன தாராளமய காலத்தில் கல்வி வணிகமயமான சூழலில், இந்த மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். இந்த மதிப்பீடுகள் மேற் கத்திய மதிப்பீடுகள் என்று குறை சொல்லி, கல்வியை இந்திய மயமாக்கப் போகிறோம் என்று பிஜேபி புறப்பட்டிருக்கிறது. இந்திய மரபில் முற்போக்குக் கருத்தியல்கள் எப்போதும் இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால், பிஜேபி அமல்படுத்த முனையும் இந்தியமயம், இந்திய மரபின் பிற்போக்கு அம்சங்களைத் திணிப்பது தான். வாஜ்பாயி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தீனா நாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங் கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன் னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத் துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மஹாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன் றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ் டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்தார், ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாத வர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாத்ரா தலைமையில் ஒரு தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டு, கல்வியை இந்தியமயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அது அரசுக்குக் கொடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்வியின் உள்ளடக்கம் கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டதாக மாறினால் அரசியல் சட்டத்தின் முற்போக்கு மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிவைத்து விட்டு, சமத்துவத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியலைக் கற்றுக் கொடுப்பது எத்தகைய ஒரு முரண்பாடு? எதிர்கால சந்ததியைக் கடைந்தெடுத்த மதவாதிகளாக, அறிவியலின் வாசனையேபடாத அறிவிலிகளாக வளர்ப் பதற்காகவா கல்விக்கூடங்கள்? சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தப் பாடத்திட்டத்தைத் திணிப்பது ஒருமைப்பாட் டுக்கு எவ்வாறு உதவும்? தனியார் கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது உட்பட முக்கிய அம்சங்களில் அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது, அரசியல் சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதற்குத் தானே தவிர, அடுத்த தலைமுறையைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்துவதற்காக நிச்சயம் அல்ல. அனைத்து மதங்களைச் சார்ந்த நூல் களையும் அறிமுகப் படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவை நூலகத்தில் இருக்கட்டும். எல்லோரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்காகப் பயன்படட்டும்.

அயல்துறை கொள்கையில்:

பொதுவாக அணிசேரா இயக்கம், சோஷலிச நாடுகளுடன் நட்புறவு போன்ற அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்டது. ஏகாதிபத்திய நாடுகளுடன் நெருக்கம், அதற்கேற்ப உலக நிகழ்வுகளின் மீது ஏகாதிபத்திய சாய்மான நிலைபாடுகளை எடுப்பது என்பது அயல்துறை கொள்கையை வலதுசாரிப் பாதையில் திருப்புவதாகும். இப்பாதை ஏகாதிபத்திய உலகமய கட்டத்தில் காங்கிரசாலும் பின்பற்றப்பட்டதுதான்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியது காங்கிரசாக இருந்தாலும், அன்றைக்கு அதை ஆதரித்து, இன்றும் அதில் தொடர்வது பிஜேபி. பாலஸ்தீனத்தை அநீதியாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு, ராணுவ ஒத்துழைப்பு போன்றவையும் வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒரு கடினமான, வெறியை உருவாக்கும் அணுகுமுறையையே (Jingoism) கடைப்பிடித்தது. மோடி பதவி ஏற்பின் போது சார்க் நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்து ஒரு பொது தோற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தியது அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

பகிரங்கப்படும் ஆணாதிக்கம்

பெண் சமத்துவம் மறுக்கப்படுவதும், ஆணாதிக்கக் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதும் நிச்சயம் வலதுசாரிப் பார்வை தான்.

1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனு ஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. இதில், நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கோல்வால்கர் கேள்வி எழுப்பினார். சாவர்க்கர், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவர்கள் சொல்லுகிற மனு சாஸ்திரம், பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறது. அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உடைமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது என்பதுதான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலை இதிலிருந்து உருவானதுதான். எனவேதான் மனுதர்மத்தில் பெண் அடிமை நிலையில் வைக்கப்படுகிறாள். பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனுதர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை. எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும் என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, சுதந்திர இந்தியாவிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்துவ சக்திகளால் முன்னிறுத்தப்படுகிறது.

இந்து கோட்பாட்டு மசோதாவை 4 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாமல் இழுத்தடித்து, ஒரு கட்டத்தில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்தி, அம்பேத்கர் அவர்களையே நோக வைத்து, சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலக வைத்தது அன்றைய இந்துத்துவவாதிகள்தான். பிஜேபி ஆண்ட பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்பட்டன.

மகள், மருமகள், சகோதரியின் மானத்தைக் காப்போம் என்று மகா பஞ்சாயத்துக்களை நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகள், சிறுபான்மை எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் நின்றே அதைப் பார்க்கின்றனர். காதல் போர் (Love Jihad)என்று பெயர் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கும் இவர்கள், பெண்கள் தேர்வு செய்வது முஸ்லீம் இளைஞனாக இருந்தால், அதைப் பாலியல் தாக்குதல் என்று வர்ணித்துத் தலையிட்டு மத மோதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் 2013-ல் பதிவு செய்யப்பட்ட 34,000 பாலியல் வல்லுறவு வழக்குகளில் எத்தனையில் தலையிட்டி ருப்பார்கள்? எனவே இந்துத்துவ சக்திகளின் தலையீடுகள் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கு விதையாகியிருக்கிறதே தவிர, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் இல்லை.

பெண்கள் அணியும் உடை காரணமாகத்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதை வலுவாகச் சொல்லும் பகுதியினரில் சங் பரிவார ஆட்களுக்கு முதல் மதிப்பெண் கொடுக்கலாம். ஒரு ‘சின்ன ரேப்’ நடந்ததால் சுற்றுலா பாதிக்கப்பட்டுவிட்டது என்று உலகையே அதிரவைத்த டெல்லி நிர்பயா வழக்கு குறித்து மத்திய பிஜேபி அமைச்சரே அண்மையில் பேசியிருக்கிறார். கௌரவக் கொலைகளைத் திட்டமிட்டுக் கொடுக்கும் காப் பஞ்சாயத்துக்களில் இவர்களுக்குப் பங்கு உண்டு. காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதுடன், தம்பதியர் அல்லாத ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலியுடன் ‘கலாச்சார காவலர்களாக’ வலம் வருகிற இந்துத்துவ அமைப்புகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண் சமத்துவம் இவர்களுக்கு ஏற்புடையதல்ல; பெண்ணைத் தாய், மகள், சகோதரி என்ற கோட்டுக்குள் நிறுத்துகிறார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதவாதம், சாதியம் போன்ற கருத்தியலில் பகிரங்கப்படுவது ஆணாதிக்கம்தான்.

சமூக நலம் மெல்ல இனிச் சாகும்:

தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பது, சமூகச் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது, தேச வளர்ச்சியை காவு கொடுத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமான பொதுத்துறை பங்குகளை விற்று தனியார்மய மாக்குவது, உள்நாட்டு வெளிநாட்டு பெருமுத லாளிகளின் நலனுக்காக எல்லா விதிகளையும், சட்டங்களையும் வளைப்பது போன்றவை வலது சாரிப் பொருளாதாரப் பாதையின் முக்கிய மைல் கற்களாகும். காங்கிரசாலும் பின்பற்றப்பட்ட இப்பாதை, மோடி ஆட்சியில் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களிலேயே வெளிப்படு கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே தனித் துறையை உருவாக்கியது பிஜேபியே. பல்வேறு காரணங் களுக்காகக் காங்கிரஸ் செய்யத் தயங்கிய கார்ப்ப ரேட் ஆதரவு காரியங்கள் எல்லாம் மோடி ஆட்சி யில் துரித கதியில் நடக்கின்றன. ரயில்வேயில் அந்நிய நேரடி மூலதனம், காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத் துறையில் இருப்பதை உயர்த்துவது போன்றவை இதற்கு உதாரணம். திட்டக் கமிஷனை ஒழிப்பது என்ற அவர்களது ஆலோ சனை இதன் உச்சகட்டம். கொஞ்சநஞ்சம் இருக்கும் சமூக நலத்திட்டங்களைக் கண்காணிப் பது, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் இனி அவ்வளவுதான். சமூக நலம் மெல்லச் சாகும் என்பது நிதர்சனம். இது கூட்டாட்சி முறைமைக்கும் முரணானது. தொழிலாளர் நலச்சட்டங்களும் தளர்த்தப்படுகின்றன.

சர்வதேச நிதி மூலதனம் கோலோச்சும் உலகமய காலத்தில், மூலதனம் பொது சொத்துக்களை சூறையாடும், அடித்துப் பிடுங்கும், ஆட்சியாளர் களை அதற்கேற்றாற் போல ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் தத்துவார்த்த தீர்மானம் கூறியதை நடப்பவை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரம், பண்பாடு படும்பாடு

புராதன இந்தியாவின் சாதிய அமைப்பு நியாயமானது, மேன்மையானது என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புதிய தலைவரும், கல்வியை இந்தியமயப் படுத்துவதற்குக் குத்தகை எடுத்திருக்கும் பாத்ராவும் அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூக அமைப்பின் அருவருப்பான, அநீதியான அம்சத்தை ஆரத் தழுவுகிறார்கள். அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதற்கு மாறாக, கோல் வால்கர் கூறிய படி, இந்தி நிச்சயம், சமஸ்கிருதம் லட்சியம் என்ற பாதையில் பிரதேச மொழிகளை சில மாற்றுக் குறைந்தவையாக ஆக்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. பண்டி கைகள் ஏற்கனவே பலிகடா ஆகிவிட்டன. ஏகே 47 துப்பாக்கியுடன், டைனோசார் மீது வலம் வரும் பிள்ளையார்தான் இப்போது கதா நாயகன். கலாச்சார தேசியம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பலி கொடுத்து, மதம் சார்ந்த அதுவும் அவர்கள் நினைக்கும் உயர் சாதிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற அவர்களது கடந்த கால முயற்சிகளைத் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சடங்குகள், விழாக்கள் அனைத்துப் பகுதியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாக மாற்றப் படுகின்றன. அதில் வணிக நோக்கமும் உண்டு.

பல்வேறு வகை ராமாயணங்கள் இந்தியாவில் புழங்குகின்றன என்பது குறித்து பத்மஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய நூல், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தி லிருந்து சமீபத்தில் நீக்கப் பட்டிருக்கிறது. விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம் என்று ஒரு பழமொழி இருந்தாலும், சீதை ராமனின் தங்கை என்று ஒரு வகை ராமாயணம் கூறுகிறது. புத்த ஜாதகக் கதைகள் அதற்கு ஒரு சாட்சி. ஒரு குறிப்பிட்ட வகை ராமாயணம் தான் அக்மார்க் முத்திரை பெற்றது என்று எப்படிக் கூறமுடியும்? கதை களும், கற்பனைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுபவை. அவற்றை செழுமையான அனுப வங்களாக, பன்முகத்தன்மையைப் பிரதிபலிப் பவையாகப் பார்க்க வேண்டும். மதச் சார்பற்ற நிறுவனங்கள் வலதுசாரி நிர்ப்பந்தத்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி இரையாவது எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்து கூறும் உரிமையை அடித்து நொறுக்குகின்றனர். சர்வ தேசப் புகழ் பெற்ற வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்தைப் பெங்குவின் நிறுவனம் விலக்கிக் கொள்ள வைத்தது, தலித் செயல்பாட்டாளர் ஷீத்தல் சாத்தே மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வருவதைத் தடுத்தது போன்ற சமீபத்திய உதாரணங்கள் நமக்கு முன் உண்டு. திரைப்படங் களுக்கு, மத்திய தணிக்கைக்குழுவுக்கும் மேலான சூப்பர் தணிக்கையாளராக சங்கப் பரிவாரம் நடப்பதும் நமக்குத் தெரியும். மோடி ஆட்சி மத்தியில் இருப்பது, இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால், முன்னைக் காட்டிலும் வேகமாக வும், வெறியுடனும் இவை நடந்தேறுகின்றன.

மன வயல்களில் ஊன்றப்படும் விஷநாற்று

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்பிற்போக்குக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை சொல்லத் தயங்கிய பிற்போக்குக் கருத்தியல்கள் பெருமிதத்துடன் சொல்லப் படுகின்றன. பத்தி ரிகைகளில் அத்தகைய கருத்தியலைக் கொண்ட கட்டுரைகள் அதிகரித்திருக்கின்றன. சமூக பொது புத்தியின் ஓர் அம்சமாக இவை மாற்றப்படு வதற்கு நீண்ட காலம் ஆகாது. இல்லை இல்லை, இந்திய மக்கள் விட்டுக்கொடுத்து விட மாட்டார் கள், தமிழகப் பாரம்பரியம் அப்படிப் பட்டதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், இதை மட்டுமே கூறுவது நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதாகும். வலதுசாரிக் கருத்தியல் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாகக் கொள்ளை நோய் போல் பரவி வருகின்றது. தொட்டால் பரவும் நோயை ஒட்டுவார் ஒட்டி (Contagious)என்பார்கள். அதைப்போலவே இது பரவும். கிராம்சி சொல்வதைப் போல், இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தின் தாக்கம் என்பது அணுவுக்குள் நடக்கும் மாலிக்யூல்களின் மாற்றம் போல் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு பொருளாக அதாவது வேறுபட்ட உணர்வாக, கண்ணோட்டமாக அது உரு மாறும்.

ஏற்கனவே உள்ள பிரதான ஆளும் வர்க்கக் கட்சி அம்பலப்பட்டுப் போய் நிற்கும் போது, மக்கள் நெருக்கடிகளுக்குள் சிக்கி விழி பிதுங்கும் போது அந்த அதிருப்தியை மதவாத சக்திகள் பயன்படுத்தி முன்னேறுமா அல்லது இடதுசாரிகள் அதைப் பயன்படுத்தி வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஜனநாயகம் நோக்கி முன்னேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. அப்படிப்பட்ட திருப்பு முனையில் இந்தியா இன்று உள்ளது.

சமூகத்தை, அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் வலதுசாரிப் பாதையில் இழுத்துச் செல்லும் பணி கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தூண்கள் தூக்கி நிறுத்தியுள்ள மோடி அரசால் அவசரமாக செய்யப் படுகின்றது. பொருளாதாரத்தில் நவீன தாராளமயம், இதர துறைகளில் மத அடிப்படை வாதம் என்பதே இவர்களின் பாதை. இதர பல அரசியல் கட்சிகள் நவீன தாராளமயத்தை ஆதரிக்கிறார்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிஜேபியுடன் அணி சேர்ந்தவர்களாக அல்லது சேரத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர். எனவே, இரண்டு துhண் களையும் தகர்ப்பதில் இடதுசாரிகள் மட்டுமே இதில் முன்முயற்சி எடுக்க முடியும்.

இடதுசாரிகளும், தொழிலாளி வர்க்க அரசியலும் பின்னுக்குப் போகும் போது, பிற்போக்கு அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கும், வலுப்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக, அறிவியல், மதச்சார்பற்ற, இடதுசாரிப் பார்வையைப் பாதுகாத்து முன்னேற்ற அவசரமாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. அப்படியானால் இடதுசாரிகள் பலப்பட வேண்டும். ஒரு பொது மேடைக்கு வர வேண்டும். வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள மேலும் நண்பர்களை அடையாளம் கண்டு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் கெட்டிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே ஒரு பரந்த மேடையை உருவாக்குவது முன்னெப்போதையும்விட அவசரம். அதற்கான செயலில் இறங்குவது பெரும் அவசியம்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா – ஒரு பின்னணி

“பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை”.

– கோபி அன்னான், ஐ.நா. பொதுச் செயலாளர்

பாகுபாடுகள் ஒழிக்கப்படும் போதுதான் சமத்துவம் கிடைக்கும். எனவே தான், (CEDAW) என்று அழைக்கப்படுகிற, பெண்கள் மீதான அனைத்துவிதப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான நடவடிக்கை சர்வதேச அளவில் 1979ல் உருவாக்கப்பட்டது. சோசலிச நாடுகளான சோவியத் யூனியனும், சீனாவும் உடனேயே அதில் கையெழுத்திட்டன. இந்தியா 1973ல் தான் கையெழுத்திட்டது. மனித உரிமைப்புகழ் அமெரிக்காவோ இன்று வரை கையெழுத்து இடவில்லை.

நமது இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளும் சமத்துவம் குறித்துப் பேசுகின்றன. சொல்லப்போனால், பல்வகை உரிமைகள் அடிப்படை உரிமைகளாகவே ஆக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பணி யிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பிரிவு களாக அவற்றை எப்படிப் பொருத்திப் பார்ப்பது? என்பது தான் முக்கிய அம்சம்.

பிரிவு 14  “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”

பிரிவு 15  “மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற காரணங்களின் அடிப்படையில், அரசு எந்தக்குடிமகனையும் பாகுபடுத்தாது இந்த இரண்டு பிரிவுகளும், மற்ற பல அம்சங்களுடன், ஆணும், பெண்ணும் சமம் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. அவர்களை பாகுபடுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகின்றன”.

அப்படியானால், பெண்களுக்கென விசேச நடவடிக்கைகள் எடுப்பதும், ஒரு வகையான பாகுபாடு – அதாவது, பெண்களுக்கு ஆதரவான பாகுபாடு – தானே என வாதிக்கலாம். எனவேதான், பெண்களின் தற்போதைய அசமத்துவ நிலையை அங்கீகரித்து, இதே பிரிவு (15) ன் 3-வது உப பிரிவு –  “பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்  அரசு விசேச நடவடிக்கைகள் எடுப்பதை, பிரிவு 15 தடுக்காது” என்றும் கூறுகிறது.

இந்த விசேச நடவடிக்கைகளைக் கூட எப்படி வேண்டுமானாலும் எடுத்து விட முடியாது. அடிப்படை உரிமைகள் பறிபோகும் போதுதான் எடுக்க முடியும். பாலியல் துன்புறுத்தல் என்பது, பாலின சமத்துவம் என்கிற அடிப்படை உரிமையைப் பறிக்கிற விசயம் தான் என்பது நமக்கு அனுபவத்திலிருந்து பளிச்சென புரிந்தாலும், சட்ட ரீதியாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது.

உதாரணமாக, அரசியல் சட்டப்பிரிவு 19 (1) (ப)-  சட்டத்திற்குட்பட்டு எந்தத் தொழிலும், வியாபாரமும், வேலையும் செய்யலாம் என்பதை அடிப்படை உரிமை என்கிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது, இந்த உரிமையை நீர்த்துப்போகச் செய்கிறது அல்லது குந்தகம் விளைவிக்கிறது. அதாவது, சட்ட ரீதியான பணிசெய்ய நாம் முன் வரும்போது, பாதுகாப்பான பணிச்சூழல் தேவைப்படும் தானே? பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அது பாதுகாப்பற்ற பணிச்சூழலாக மாறும். பணிச்சூழல் பாதுகாப்பற்றதாக இருந்தால், பணி செய்யும் உரிமையும் தானே பாதிக்கப்படுகிறது?

இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம். அரசியல் சட்டப்பிரிவு 21 – (Right of Life) கண்ணியமாய் வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால், பாலியல் துன்புறுத்தல் அதைப் பறிக்கிறது.

ஆக, அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள சில அடிப்படை உரிமைகளை, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பறிக்கிறது. எனவே, இதைச் சமன் செய்ய சில விசேச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

அரசியல் சட்டப்பிரிவு 42 “அரசு நியாயமான, மனிதத் தன்மையுடனான பணி நிலைமைகளை உருவாக்க வேண்டும்” என்று அரசின் கடமையை வரையறுப்பதோடு, பிரிவு 51 A(e) பெண்களின் கண்ணியத்துக்குப் பங்கம் விளைவிக்கிற எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது, இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமையென்றும் வரையறுக்கிறது. இத்துடன், சர்வதேச உடன் படிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏதுவாக சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்றும் பல பிரிவுகள் கூறுகின்றன.

எனவே, அரசியல் சட்டம், அடிப்படை உரிமை எனக் கூறுகிற பாலின சமத்துவத்துக்குத் தடையாக உள்ள, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இது குறித்து, சர்வதேச உடன்படிக்கைகளிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த, விசேச நடவடிக்கைகள் எடுக்கவும், சட்டம் இயற்றவும் பாராளுமன்றத்துக்கு உரிமை உண்டு என்ற பின்னணியில் தான், “பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புச் சட்டம்” இயற்ற எடுக்கப்படுகிற முயற்சிகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

முதலில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை, CEDAW எப்படி வரையறுத்துள்ளது?

“பாலியல் துன்புறுத்தல் என்பது, விரும்பத்தகாத பாலியல் நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாகும். உடல் ரீதியான தொடர்பு, பாலியல் வார்த்தைகள், ஆபாசப் படங்கள், கதைகளைக்காட்டுவது, வார்த்தைகள் அல்லது சைகையால் பாலியல் கோரிக்கைகளை முன் வைப்பது போன்றவை இதில் உள்ளடங்கும். இது பெண்களை அவமானப்படுத்தக்கூடும். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும். இந்த நடவடிக்கைகளுக்கு உடன்பட மறுத்தால், வேலை, பதவி உயர்வு, பணி நிலை போன்றவை பாதிக்கப்படக்கூடும் என்று அப்பெண் நினைப்பதற்கு நேரிய (reasonable) அடிப்படை இருந்தால்,  அச்செயல், பாகுபாடாகவும் பார்க்கப்பட வேண்டும்”.

– இதுதான் CEDAW வின் விளக்கம்.

1997ல் நமது உச்ச நீதி மன்றம் விசாக்காவிற்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் ஏற்பட்ட தாவா (Visakha Vs State of Rajasthan) வழக்கில், மேற்கூறிய அடிப்படையிலேயே, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

விரும்பத்தகாத பாலியல் நடவடிக்கை என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்போம். பாலியல் மொழியும், வார்த்தைகளும் நம் சமூகத்தில் காலம் காலமாகப் பிரயோகிக்கப்பட்டே வருகின்றன. ஆனால் அவை பூடகமாக இருக்கும். அதைப்புரிந்து கொண்டு, பூடகமாகவே பதில் சொல்பவர்களும் உண்டு. வெளிப்படையாகக் கூறப்படுவதைக்கூடக் கூட சிலர் கருத்தில் கொள்ளாமல், அலட்சியப்படுத்திவிடுவார்கள். சொல்பவர்களுக்கும், ஏற்பவர்களுக்கும் பிரச்சனையாகாத பட்சத்தில், அதைச் சட்டம் தடுக்காது. சில சமயம், இரட்டை அர்த்தத்தில் வார்த்தைகளை விடுவார்கள். பெண் அதை ஆட்சேபித்தால், நான் அப்படி நினைத்துக் கூற வில்லை, வேறு அர்த்தத்தில் தான் சொன்னேன் என்கிற பதில்கள் வரும். இங்கு தான், இந்த வரையறை தேவைப்படுகிறது. சொல்லுபவர் என்ன நோக்கத்துடன் சொன்னார் என்பதைவிட, அதைப் பெறுபவர் எப்படி உணர்கிறார் என்பதற்கே இந்த வரையறை முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்காக, ஒன்றுமே இல்லாவிடினும், நான் இப்படித் தான் உணர்ந்தேன் என்றும் கூற முடியாது. பாலியல் நடவடிக்கை, சைகை, வார்த்தை போன்றவை, அந்தப் பெண் மீது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய நேரிய கண்ணோட்டம் (Reasonable Perception) இருக்க வேண்டும்.

ஒரு மாநில அரசு பொதுத்துறை அலுவலகத்தில், குறிப்பிட்ட கிளையின் மேலதிகாரி, ஒரு டைப்பிட்டை ஹோட்டலுக்கு வருமாறு நிர்பந்தப்படுத்திய பிரச்சனை வந்தது. அவரை அழைத்து விசாரித்த போது, “ஏன் மேடம், சக ஊழியரை ஒரு காபி குடிக்க அழைப்பது பாலியல் துன்புறுத்தலா?” என்று கேட்டார். வழக்கை விரிவாக விசாரித்தபோது, அக்கிளையில் பணி புரியும் எந்த ஆணையும் அவர் அழைக்கவில்லை என்பதும், இப்பெண் மறுத்த பிறகும் கூட வலுக்கட்டாயப்படுத்தியதும், அந்த ஹோட்டல், நெடுஞ்சாலையில் அந்த அலுவலகத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் தனியாக உள்ள நட்சத்திர ஹோட்டல் என்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அவர் செய்யும் துன்புறுத்தலின் ஒரு பகுதிதான் இது என்பதையும் உணர முடிந்தது. காபி குடிக்க அழைப்பதே பாலியல் நடவடிக்கையாக முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்த அழைப்பின் தன்மை, நோக்கம், அழைக்கும் போது அவர் பயன்படுத்துகிற உடல் மொழி (Body Language), முக பாவம் என்று பல அம்சங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் சேர்த்துத்தான், reasonable perception என்கிற வார்த்தையை மசோதா உபயோகிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அச் சிறிய கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவியவர்கள் உட்பட, விசாரணையில் மேலதிகாரிகளுக்கு ஆதரவாகவே சாட்சி கூறினர். இருந்தும், அந்த சாட்சியங்களில் இருந்த முரண்பாடுகளைக் காரணம் காட்டி, தவறிழைத்த அதிகாரி பொய் சாட்சி கூற நிர்பந்தப்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடிந்தது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில், அனைத்து வேலைத் தளங்களிலும், ஒரு பெண்ணின் தலைமையில் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில் குறைந்தது 50 சதம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒரு அரசுசாரா/பெண்கள் அமைப்புப் பிரதிநிதி அதில் இடம் பெற வேண்டும் என்கிற பல அம்சங்கள் இருந்தன. இவையெல்லாம் ஒரு முக்கிய விசயத்தை சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கனவே பணியிடங்களில், ஊழியர்களின் தவறான நடவடிக்கைக்கு விசாரணை ஏற்பாடுகள், முறைகள் உண்டு. பாலியல் துன்புறுத்தலையும்,  தவறான நடத்தை பட்டியலில் பத்தோடு பதினொன்றாக உச்ச நீதிமன்றம் நினைத்திருந்தால், நடத்தை விதிகளில் இதையும் இணைக்க ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதோடு விட்டிருக்கும். இந்த தவறான நடத்தை வித்தியாசமானது என்பதால் தான், தனியான கமிட்டி அமைக்கப்பட வேண்டும், தனி விசாரணை முறை வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதுவரை எவ்வித பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகதவர்கள், பாலியல் துன்புறுத்தல் எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு. பாலியல் வன்முறை பெண்ணின் சுய உணர்வை, தன்னம்பிக்கையை தவிடுபொடியாக்கி, அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்களும் உணர வைக்க ஒரு விழிப்புணர்வு இயக்கமே தேவைப்படுகிறது.

– கல்பனா சர்மா

“வேலை செய்யும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறை நடப்பது, குறிப்பாகப் பாலியல் துன்புறுத்தல் நடப்பது, வேலையில் சமத்துவம் என்ற உரிமையை சீரியசாகப் பாதிக்கும்”.

– CEDAW

புகார் கமிட்டியில், பணியில் உள்ளவர்கள் தவிர, இப்பிரச்சனையில் தலையீடு செய்து, இப்பிரச்சனைகளில் விழிப்பணர்வு பெற்ற பெண்கள் அமைப்பிலிருக்கும் பெண் பிரதிதி, அரசுசாரா/பெண்கள் அமைப்புப் பிரதிநிதி இடம் பெற வேண்டும் என்ற பிரிவு மிக முக்கியமானது; தேவையானது. தவறு செய்தவர் உயர்பதவியில் இருந்தால், கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் – அதே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், அவரை எதிர்த்த நிலைபாடு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. எனவேதான், வெளிநபர் ஒருவர், பெண்கள் பிரச்சனைகளில் பணி செய்த அனுபவம் உள்ளவர் இதில் இருக்க வேண்டும். அப்போது தான், அச்சமின்றி சரியான நிலைபாடு எடுக்க முடியும்.

இதைச்சட்டமாக்க வேண்டும் என்றவுடன், தேசிய மகளிர் ஆணையம், ஒரு நகல் சட்டத்தைத் தயாரித்தது. மும்பையில் உள்ள தன்னார்வ அமைப்புக்கள் மற்றொரு நகல் சட்டத்தைத் தயாரித்தன. AIDWA அதன் கருத்துக்களை விமர்சனமாக அளித்து. டெல்லியில் Lawyers Collective என்கிற அமைப்பு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு மசோதாவை தயாரித்தது. தேசிய மகளிர் ஆணையம் அதில் சில மாற்றங்களைச் செய்து, இறுதிப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா, 2005ன் மீது ஒரு விவாதத்திற்கு அனைத்து அமைப்புகளையும் அழைத்தது.

இரண்டு நாட்கள் ஆழமான விவாதம் நடந்தது. வந்த விமர்சனங்களைப் பரிசீலித்து, தேவையான மாற்றங்களைச் செய்ய ஒரு சிறு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் AIDWA ஜனநாயக மாதர்சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். பிரிவுவாரியாக, வரி வரியாக விவாதம் நடத்தியிருந்தாலும், உண்மையிலேயே சிக்கலான சில அம்சங்களை மட்டுமாவது இங்கு பார்க்க வேண்டியுள்ளது.

பணியிடம் குறித்த வரையறையில் எது எது அடங்கும்?

பணியிடம் என்னும் போது, அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாராத் துறைகள் அடங்கும். கல்வி நிலையங்கள் குறிப்பாக, பல்கலைக் கழகங்களில் மாணவர் – ஆசிரியர் உறவு என்பது, முதலாளி – தெழிலாளி உறவு இல்லையென்றாலுங்கூட, அதுவும் ஒரு Power Relation அதிகாரம் சார்ந்த உறவுதான். மாணவி உடன்பட மறுத்தால், தேர்வில் மதிப்பெண் குறையலாம், பழிவாங்கப்படலாம். எனவே, பல்கலைக்கழகங்களையும், கல்வி நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்பது உச்ச நீதி மன்ற 1997 வழிகாட்டுதலிலும் உள்ளது என்பதால், அவற்றையும் இச்சட்டத்தின் வரையறைக்கு உட்படுத்தப்படலாம்.

 1. அப்படியானால், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றவர்கள், அவர்களிடம் வருகிற பெண் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொண்டால்?
 2. நுகர்வோர் என்கிற அடிப்படையில் கடைகளுக்கு, ஹோட்டல்கள், வங்கிகளுக்கு வருபவர்களுக்கு, அங்கு பணி செய்பவர்களால் பாலியல் பிரச்சனை ஏற்பட்டால்?
 3. ஜெயில், அபய இல்லம், காவல் நிலையம் போன்ற இடங்களில் கடடியில் உள்ள பெண்களுக்கு அங்கு இருப்பவர்களால் பாலியல் துன்புறுத்தல் நேர்ந்தால்?
 4. நீதித்துறையைப் பொறுத்தமட்டில், நீதி கேட்க கோர்ட்டுக்கு வரும் பெண்களிடம் நீதித்துறை வல்லுநர்கள் தவறாக நடந்து கொண்டால்?

இவையெல்லாம் கூட பணியிடங்கள் (மற்றவர்களின் பணியிடம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் பணியிடம் அல்ல) தானே? எனவே, இச்சட்டம் இவற்றையும் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழ இடமுண்டு. நகல் மசோதா இவற்றை இணைத்தும் இருந்தது. அனைத்து இடங்களிலும் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான். அவற்றை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், உழைக்கும் பெண்களுக்கு, பணி செய்யும் இடத்தில் நிலவுவது ஒரு குறிப்பான சூழல். வேலை கொடுப்பவர், பெறுபவர் என்கிற உறவு ஏற்படுகிறது. அதில் சுரண்டலும் நிலவுகிறது. அச்சூழலும், உறவுகளும், பாதுகாப்பதற்காக, அசமத்துவமாக இருக்கக் கூடாது என்பது தான், 1997 விசாக தீர்ப்பின் அடிப்படை. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் பணியிடத்தில், அவர்களுக்கு, அங்கு இருப்பவர்களால் நடக்கும் துன்புறுத்தலையே குறிக்கிறது. எனவே, சட்டம், இந்த ஓர் அம்சத்தை மையமாக வைத்தாலே போதும். எல்லாவற்றையும் போட்டு மிகவும் பரந்ததாக்கி சிக்கலாக்க வேண்டாமே என்கிற ஆலோசனையும் மேலோங்கி எழுந்தது. அதே சமயம், பணி நிமித்தமாக வெளியே போகும்போது, கூட வரும் பணியாளர் பாலியல் துன்புறுத்தல் செய்தால் அது குற்றமாக்கப்படும். அதாவது, பணியின் காரணமாக எங்கு போனாலும், அப்படிப் போகிற இடமும், பணியிடம் என்கிற வரையறைக்குள் அடங்கும்.

புகார் கமிட்டி சார்பில் நடத்தப்படும் விசாரணையின் முறை என்னவாக இருக்க வேண்டும்?

இது மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு விசயம். ஒரு சில மாற்றங்களுடன், துறை வாரியான விசாரணைபோல் நடத்தப்பட வேண்டும் என்றும், எனவே, இரு தரப்பும் யாரை வேண்டுமானாலும், அவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் பிரதிநிதியாக அழைத்து வரலாம் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் மனுதாரரையும், அவர் சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும், இக்கமிட்டி அளிக்கும் தீர்ப்பை, முதலாளி/ நிர்வாகம் நிராகரிக்கலாம், மாற்றலாம் என்றும், ஒரு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது! இதுதான் மசோதாவிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது கூடாது என்பது AIDWA ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பலரின் அழுத்தமான கருத்து.

ஏனெனில், வருமானம் ஈட்டுவதற்காக, வெளியிடங்களுக்கு வருகின்ற ஆயிரக்கணக்கான பெண்கள், பணியிடங்களில் பாலியல் ரீதியான பிரச்சனைகள் வரும்போது, வெளியில் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள் என்பதே யதார்த்தம். வெளியில் சொன்னால், அது அவளது நடத்தையையே அல்லது வேலையிலிருந்து வெளியே தள்ளப்படுகிற சாத்தியக்கூறும் ஏற்படலாம். எனவே, தம்மீது இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை வாய்மூடி சகித்துக் கொள்வதைத் தவிர, பொதுவாக அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. எனவேதான், இதைத் தடுப்பதற்காக அமைக்கப்படும் கமிட்டி, அதன் விதிமுறை மற்றும் விசாரணை முறை மேற் கூறிய யதார்த்தத்தை உள்வாங்கியதாக அமைய வேண்டும்.

பொதுவாக, குற்றம் சாட்டப்பட்டவர், தன்னை நிரபராதி என நிரூபிக்க அனைத்து வாய்ப்புக்களும் அளிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை நீதிக் கோட்பாடு Principles of Natural Justice). இதற்கு மாறாக, எதை முன் வைத்தாலும், அது சட்டமாக்கப்படாது. ஆயினும், இன்றுள்ள யதார்த்த நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டி யுள்ளது. இந்தியா முழுதும் இது வரை வந்த வழக்குகளின் தன்மையையும் பார்க்க வேண்டியுள்ளது.

இருதரப்பு பிரதிநிதித்துவ உரிமை (Right of Representation)

ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விளக்கமாகப் பேசுவது சிரமமான விசயம். எனவே, அவர் தரப்பில் ஒரு சக ஊழியரோ, தொழிற்சங்கப் பிரதிநிதியோ, அரசுசாரா/மாதர் அமைப்பு பிரதிநிதியோ எடுத்துரைப்பது உதவியாக இருக்கும் என்பது உண்மை தான்! ஆனால்! மனுதாரருக்கு எடுத்துரைக்க ஒரு பிரதிநிதி என்றால், இயற்கை நீதிக்கோட்பாடு அடிப்படையில், பிரதிவாதிக்கும் வேண்டும் தானே! அவர் பிரபலமான வக்கீலைக் கொண்டு வரலாம்; உள்ளூர் தாதாவைக் கூட அழைத்து வரலாம். இது கூடுதல் பிரச்சனைகளையல்லவா உருவாக்கும்? துறைவாரி விசாரணையில் எப்போதும், நிர்வாகம் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிலிருந்து தொழிலாளியை விடுவிக்க, தொழிற்சங்கத் தரப்பில் வாதிக்கப்படும். விசாரணை அதிகாரி, நிர்வாகத் தரப்பினராக இருப்பார். அவருக்கு வழி காட்ட நிர்வாகத் தரப்பு வக்கீல் இருப்பார். எனவே, விசாரணை விதிமுறைகள், சட்ட நுணுக்கங்கள் போன்றவை தொழிலாளிக்குத் தெரியாத பின்னணியில், அவர் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதி வாதிடுவார். அதில் எப்போதும் நிர்வாகம் Vsதொழிலாளி தான்.

ஆனால், நாம் பேசுகிற பிரச்சனையில், வாதியும், பிரதிவாதியும் இருவருமே தொழிலாளியாக இருக்கலாம் அல்லது ஒருவர் அதிகாரியாக இருக்கலாம் அல்லது இருவருமே அதிகாரியாக இருக்கலாம். அவரவர் தரப்பில் நடந்ததைச் சொல்வதற்கு சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, பிரதிநிதித்துவம் தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியான ஆதரவு அளிக்க ஒரு ஆலோசகர் கூட இருக்கலாம் என்கிற உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் பிரிவு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

குறுக்கு விசாரணையும்  செய்யலாம். ஆனால், இப்போது நடப்பது போல், நேருக்கு நேராக அல்ல. நேருக்கு நேர் அமர்ந்து குறுக்கு விசாரணை செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். மாநில அரசுத்துறை ஒன்றில், புகார் கொடுத்த பெண், தட்டுத் தடுமாறி தனக்கு நேர்ந்த துன்புறுத்தலைக் கமிட்டியிடம் விவரித்துக் கொண்டிருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் எதிரே அமர்ந்து, அதைக் குறிப்பெடுத்துக் கொண்டு, கேலியாகச் சிரித்துக் கொண்டு, நன்றாக உளறுகிறாய். இதை வைத்தே உன்னை மடக்குகிறேன் பார், என்று சொல்லிக் கொண்டு இருந்தார். கமிட்டியும், அதைக் கட்டுப்படுத்த மறுக்கவே, அந்தப் பெண் விசாரணையைப் புறக்கணித்து, நேரடியாக கோர்ட்டுக்குச் சென்றுவிட்டார். எனவே, பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையில் நுட்பத்தை உணர்ந்த குறுக்கு விசாரணையாக (Modified Cross Examination) அது அமைய வேண்டும். இரு தரப்புமே, அவரவர் கேள்விகளை எழுதிக்கொடுத்து விட்டால், புகார் கமிட்டி அந்தந்தக் கேள்விகளைக் கேட்கட்டும் என்பது தான் சரியாக இருக்கும். ஏதாவது ஒரு வேலை தளத்தில் பரவலாகப் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒருவர் கூடப் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றால், முறைசாரா துறையில், இதற்கெனப் பொறுப்பாக உள்ள அதிகாரி அவராகவே (Suo Moto) நடவடிக்கை எடுக்கலாமா? அதாவது, புகார் வந்ததாகக் கருதி விசாரணையைத் துவக்கலாமா? துவக்கலாம் என்று மசோதா கூறுகிறது.

உண்மையாகவே, இப்படிப்பட்ட நிலை பல இடங்களில் இருக்கலாம். ஆனால், அரசு தரப்பில் நியமிக்கப்படுகிற இந்த அதிகாரிக்கு, இப்படி ஒரு எல்லையற்ற அதிகாரம் தேவையில்லை, அது ஆபத்தானது. இத்தகைய நிலையிருந்தால், தொழிற்சங்க இயக்கங்களும், மாதர் இயக்கங்களும் போராட்டம் நடத்தி, அரசைத் தலையிட வைப்பது தான் ஒரே வழி.

அமைப்பு சார் துறையிலாவது கட்டமைப்பு உள்ளது. எனவே கமிட்டிகள் அமைப்பதும், செயல்படுத்துவதும் ஒப்பு நோக்கில் சுலபம். ஆனால், முறைசாராத் துறையில், ஒழுங்கான கட்டமைப்பு இல்லை. சில சமயம் நேரடி முதலாளி இல்லை. ஏஜெண்டுகள், இடைத் தரகர்கள் மூலம் நடக்கிறது. இதில் புகார் கமிட்டிகள் அமைப்பதும், செயல்பட வைப்பதும் தான் உண்மையிலேயே மிகப் பெரும் சவால். மாவட்ட வாரியாகவும், வட்ட வாரியாகவும் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் இதற்குப் பொறுப்பாக உதவி லேபர் கமிஷ்னர் அந்தத்துக்கு குறையாத அதிகாரி பொறுப்பாக வேண்டும். பெண்ணுரிமை பணிகளில் ஈடுபடும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெறுவார்கள் என்றும், முதலாளி சங்கப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் மசோதா கூறுகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதகளும் இணைக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவரும், சாட்சிகளும், விசாரணைக்கு வந்து போவதற்கான பயணப்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவின் பிரிவு மிகப் பொருத்தமானதும், தேவையானதும் ஆகும். விசாரணைக்கு வருவதால் அவர்களுக்கு ஊதிய இழப்பு நேரக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் துவக்க கட்ட நகலில், (Mediation) சமரசம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆட்சேபனைக்குப்பின் தகராறுக்கான தீர்வு  Dispute resolution என்று மாற்றப்பட்டது. வார்த்தைகள் மாறினாலும், பொருள் ஒன்றுதான். அதாவது, புகார் வந்தவுடன், விசாரணையை உடனடியாகத் துவங்காமல், சமரசம் செய்கிற வேலையை கமிட்டி மேற்கொள்ளும். இதற்கு ஒரு காலவரையறை (ஒரு மாதம்) உண்டு. அதற்குள், சமரச முயற்சி தோல்வியுற்றாலோ, இருவருக்கும் ஏற்புடையதாக இல்லை யென்றாலோ, அதைப் பதிவு செய்துவிட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் விசாரணை துவங்கும். அதாவது, புகார் கொடுத்து 45 நாட்களுக்குப் பின்பே விசாரணை துவங்கும் என்கிற நிலை ஏற்படுகிறது. இது நியாயமல்ல. தவிர, முக்கிய அம்சம் என்னவெனில், சமரசம் செய்வதற்கு அதிகாரப்பூர்வ அந்தது அளிக்கப்படக் கூடாது என்பது தான். ஒரு பெண் புகார்கொடுக்க முற்பட்ட உடனேயே, சுற்றியுள்ளவர்கள் சமரசம் செய்வது தொடங்கிவிடும். அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டிய பின்பே, புகார் வந்து சேருகிறது. எனவே, புகார் வந்த பிறகு, விசாரணை என்பது தான் சரியாக இருக்குமே தவிர, கமிட்டி உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது தேவையில்லை. கமிட்டிக்கே அது கடமையாக்கப்படும் போது, சமரசத்துக்கு உட்பட வேண்டிய மறைமுக நிர்பந்தம் அப்பெண்ணுக்கு நேரலாம். கடந்த பல கலந்துரையாடல்களில், விடாமல் இக்கருத்து வலுவாக முன் வைக்கப்பட்ட அடிப்படையில், தற்போது, பல பாதுகாப்பு நிபந்தனைகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போதும் சரி, முடிந்த பின்னும் சரி, புகார் நிரூபிக்கப்படவில்லையென்றாலும் கூட, புகார் கொடுத்தவர் மற்றும் சாட்சிகள் மீது, பழி வாங்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என, மசோதா திட்டவட்டமாக அறிவுறுத்துகிறது.

கமிட்டியின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், புகார் கொடுத்தவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ, மேல் முறையீடு செய்யலாம். பொதுவாக, நிர்வாகத்தை எதிர்த்து எந்த நீதி மன்றத்துக்கு வழக்கமாகப் போக உரிமை உண்டோ, அதே நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் அளவு/தன்மையைப் பொறுத்து, தண்டணை வழங்க கமிட்டி பரிந்துரைக்கும். இது தவிர, நிவாரணத் தொகை ஏதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்யலாம். எழுத்து மூலமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தலாம். வழக்கு நடக்கும் போதே, புகார் கொடுப்பவர் மற்றும் அவரது சாட்சிகளைப் பாதுகாக்க இடைக்கால உத்தரவுகளைக் கமிட்டி பிறப்பிக்கலாம். புகார் கொடுக்கும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மற்றும் அவரது எழுத்து மூலமான அதிகாரமளிப்பு அடிப்படையில்

அ) பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம்,

ஆ) பெண்கள் அமைப்பு/தன்னார்வ நிறுவனம்

இ) சக ஊழியர் போன்றோருக்கு உண்டு என இம்மசோதா வரையறுக்கிறது.

பணியிடங்களை, பாலியல் துன்புறுத்தல் இன்றி ஆரோக்கியமாக வைக்கிற பொறுப்பு முதலாளிக்கு/நிறுவனங்களுக்கு உண்டு. நிர்வாகம் – தொழிலாளர் கூடங்களில் இது குறித்து விவாதிப்து, பெண்ணியம் குறித்த உணர்வூட்டும் பயிற்சி உள்ளிட்ட நடவடிக் கைகள் இதில் அடங்கும். பாலியல் துன்புறுத்தல் நடந்தால், அது நிர்வாகத் தரப்பில் மேலே கூறப்பட்ட போதுமான முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னும் நடந்தது என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இல்லையேல், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக எடுக்காததற்காக, முதலாளி/நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் கொடுத்த பெண்ணின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதாவது மீடியாவிற்கு வெளியிடப்படாது.

சம்பவம் நடந்த உடனே புகார் கொடுக்காமல் தாமதமாகக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை ஏற்றுக் கொள்ளலாமா? உடனே கொடுக்க வில்லை என்பதால், திட்டமிட்டு பொய் புகார் கொடுக்கப்படுகிறது. எனவே தான் தாமதம் என்ற முடிவுக்குப் போய் விடலாமா? கூடாது என்கிறது மசோதா. பாலியல் வல்லுறவு வழக்குகளில் கூட, தாமதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏன் என்றால், இத்தகைய சம்பவம் கொடுக்கிற அதிர்ச்சி, இதை வெளியே சொல்லலாமா? வேண்டாமா? என்கிற மனப்போராட்டம், யோசிப்பதற்குத் தேவைப்படுகிற நேரம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து, காலதாமதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குப் போவது தான் சரியாக இருக்கும்.

இச்சட்டம், தொழிற்சங்க வாதிகளுக்கும், நிர்வாகத்துக்கு வேண்டப்படாதவர்களுக்கும் எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுமா? என்றால், பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அனைத்து சட்டங்களும், துஷ்பிரயோகத்துக்கு விதிவிலக்கல்ல. எ.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் கூட ஆதிக்க சாதியினரால், காவல் துறையால், வேண்டாத ஆட்கள் மீது பாய்கிறது என்பதும், பல உண்மையான வன்கொடுமை சம்பவங்களில் புகாரைப் பதிவு செய்யவும் மறுக்கப்படுகிறது என்பதும், நிதர்சனமாகத் தெரிகிற விசயம்தான். அதற்காக சட்டமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறோமா? இல்லையே? தவிரவும், உழைக்கும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பெருமளவில் நடக்கிற சூழல் இருப்பதனால் தான், இத்தகைய சட்டமே கொண்டு வரப்படுகிறது. எனவே, பொதுவாக நாடெங்கிலும் பெருவாரியான உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையக் கூடிய இச்சட்டம் வரவேற்கப்படத் தான் வேண்டும். இந்தச்சட்டம் ஒழுங்காக அமுலாக வலுவான இயக்கங்கள் அவசியம் என்பதை மறந்துவிடலாகாது.

சம உரிமைகள், சம சட்டங்கள்

நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன்.

– தஸ்லீமா  நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர் இங்கு வசிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என நாம் பெருமிதம் கொள்கிறோம். பாரதிய ஜனதா கட்சி போன்ற மதவாத கட்சிகள் இந்துத்வா கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்துகின்றன. மதத்தின் பெயரால், ஆணாதிக்க சமுதாயம் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துவதை எதிர்த்து, இடதுசாரி மகளிர் அமைப்பும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வருகின்றன. தவிர தனிப்பட்ட பெண்களும் போராடி வருகின்றனர்.

பொதுவாகவே, பெண்களுக்கு நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை அணுக தயக்கம் இருப்பதை காணமுடியும். நிறைய பெண்கள் மத்தியில் சட்டம் ஒன்றும் தங்களுக்கு பெரிய உதவியை செய்து விடப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு காரணம் என்ன என ஆராயும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஆணாதிக்க மனப்பான்மை பிரதானமாக வெளிப்படுகிறது என்கிறார் பிரபல பெண்ணியவாதி கமலா பாசின். இதைப் பற்றி நந்திதா ஹக்சர் தனது பெண்களுக்கான சட்டம் என்ற நூலில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி, பதிலும் தருகிறார்.

சட்டத்தை இயற்றுவது யார்? மிஸ்டர் எம்.பி.
சட்டத்தை அமுலாக்குவது யார்? மிஸ்டர் காவல்துறை
சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து தீர்ப்பளிப்பது யார்? மிஸ்டர் நிதிபதி
சட்டம் என்பது ஆண்களுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. ஆனாலும், சட்டம் பெண்களுக்கு உரிமைகளை அளிக்க இயலும். ஆண் உயர்ந்தவன் என்றும், ஆண்தான் குடும்பத்தின் தலைவன் என்றும், மதங்கள் வலியுறுத்துவதையே, சட்டங்களும் உறுதிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும்போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமமான உரிமைகள் எவ்வாறு கிட்டும்?

மதங்களும் சட்டங்களும்

காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வருகின்ற கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்கள் குற்றவியல் அல்லது கிரிமினல் சட்டத்திற்குட்பட்டவையாகும். மாறாக, திருமணம், சொத்து, விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் போன்றவை சிவில் சட்டத்திற்குட்பட்டவையாகும். ஆனால், இவற்றிலேயே சொத்துக்கான கொலை, வரதட்சணை கொலை ஆகியவை சிவில், கிரிமினல் இரண்டிற்குமே பொருந்தும்.

இந்து மதத்தை பின்பற்றுவோரின் சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் மனு என்பவரால் எழுதப்பட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மனு 9அ) தர்மம் என்ன சொல்கிறது? குழந்தை பருவத்தில் தந்தைக்கும், குமரி பருவத்தில் கணவனுக்கும், முதுமை பருவத்தில் மகன்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு பெண் இருக்க வேண்டும். கணவன் கெட்டவனாக இருப்பினும், மனைவி அவனிடம், விசுவாசமாக இருக்க வேண்டும். இந்து மதத் தலைவர்கள் இதையே வலியுறுத்துகின்றனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன கூறுகிறார்? பெண்ணும், சொத்தும், உலகம் முழுவதையும் பாவம் என்ற குழிக்குள் தள்ளுகின்றனர் பெண்கள் மோசமானவர்கள். அழிவுக்கு காரணமானவர்கள் என்ற கருத்தே நிலவி வந்துள்ளது. ராமாயணம் எழுதிய துளசிதாசர், பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பது மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. மேளம், கிராமத்து முட்டாள், சூத்திரர்கள், மிருகங்கள், பெண்கள்… ஆகியவற்றை அடித்தால்தான் சரிப்பட்டு வரும் என்கிறார்.

புனித பைபிள் என்ன சொல்கிறது?

கடவுளிடம் உங்களை ஒப்படைப்பது போல, பெண்களே கணவனிடம் உங்களை ஒப்படையுங்கள், யேசு தேவாலயத்தின் தலைவர். அது போல கணவன் மனைவிக்கு தலைவன். அவன்தான் அவளது உடலுக்கு பாதுகாவலன் (6, 22-24)

புனித குரான் சொல்வதென்ன?

ஆணுக்கு பெண் மீது அதிகாரம் உண்டு. அல்லாஹ் ஒருவரை, மற்றவரைவிட உயர்வாக படைத்துள்ளான்…. நல்ல பெண்கள் கீழ்படிந்து நடப்பார்கள். அவர்கள் தங்கள் உடலின் மறைவாக இருக்கும் பகுதிகளை காப்பாற்றிக் கொள்வார்கள். கீழ்படியாத பெண்ணை படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அவர்களை திட்டுங்கள், அடியுங்கள். அதன்பின் அவர்கள் கீழ்படிந்தால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் அவர்களுக்கெதிராக எடுக்க வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைவருக்கும் மேலானவன்

சீக்கிய மதத்தில் பெண்ணுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது. கணவன் இறந்தால் மைத்துனரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். கணவன் சொத்தில் பங்கு உண்டென்ற போதிலும் ஒரு பெண் நடத்தை ஆசாரப்படி இல்லையெனில் பங்கு கேட்க இயலாது. இவ்வாறு, எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை மிகத் தெளிவாக காண முடியும்.

இந்திய அரசியல் சாசனம் சொல்வதென்ன?

இந்திய அரசியல் சாசனத்தில் 14ஆம் பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். 15ஆம் பிரிவின்படி மதம், ஜாதி, இனம், பால் அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் காண்பிக்கக்கூடாது. 21ஆம் பிரிவின்படி, உயிர் வாழ உரிமை, தனி மனித சுதந்திரம் உண்டு.

அரசியல் சாசனம் சமஉரிமை அளித்த பின்பும், நடைமுறையில் ஏன் பிரச்சினைகள் எழுகின்றன?

25வது பிரிவு மதச் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இந்த பிரிவு பெண்களை பாதிக்கிறது. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை இல்லை. குடும்பத்திற்குள் சம அந்தஸ்து இல்லை. திருமணத்திற்கு பின்னர் எங்கு வசிப்பதென்ற உரிமை இல்லை. விவாகரத்து செய்யும் உரிமை ஆண்களைப் போல இல்லை. பொதுவான ஒரு சிவில் சட்டம் இல்லாத சூழலில், எந்த மதத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அந்த மதச் சட்டம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையையும் நிர்ணயிக்கிறது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே பெண்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. அகில இந்திய பெண்கள் மாநாடு பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அன்று காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிற்போக்குவாதிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. பிற்போக்குவாதிகளை எதிர்க்கும் திராணி தலைமைக்கு இல்லை. இந்த சட்டம் தொடர்பான திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா 1952இல் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க வழி இருந்தது. ஆனால் மந்திரி சபைக்குள்ளேயே சட்ட திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்து மதத்தின் அடித்தளமே அசைந்து விட்டதாக, இந்து மதவாதிகள் கருதினர். அப்போது ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், எனது மனைவியோ, சகோதாரியோ கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே இந்த மசோதா வந்தாலும் கையெழுத்திட மாட்டேன் என்றார். எனவே, இதையொட்டி பிரதமர் நேருவும் பின்வாங்கினார். இப்படிப்பட்ட பிற்போக்கான கருத்தை கண்டித்து அன்று சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தனிநபர் சட்டங்கள் தான் ஒருவரின் மதத்திற்கு முத்திரை, அடித்தளம், ஒரு சமூகத்தினரின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது என்ற தவறான கருத்து அன்று மட்டுமல்ல இன்றும் பரவலாக உள்ளது என்பது கசப்பான உண்மை.

மாதிரி திருமண ஒப்பந்தம்: பின்னணி, வளர்ச்சி போக்குகள்

அனைத்து மதங்களுமே, பெண்களுக்கு இரண்டாந்தர குடிமக்கள் என்ற அந்தஸ்தை அளிக்கின்றன என்ற போதிலும், முஸ்லீம் பெண்கள் கூடுதலான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 13 சதம் உள்ளனர். ஆயினும், அரசு வேலைகளில் வெறும் 3 சதம் மட்டுமே உள்ளனர். அதிலும் முஸ்லீம் பெண்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட  நிலையில் உள்ளனர். மிகவும் சிறிய வயதில் திருமணம், அடுத்தடுத்து பிள்ளைப்பேறு, கல்வியின்மை, சுகாதாரம் குறைவான சூழலில், ஏழ்மை காரணமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம், வீட்டிற்குள்ளேயே அடைபடும் நிலை என இந்தப் பெண்கள் படும் துயரம் சொல்லில் அடங்கா.

முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்க்கையில், செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். என்னிடம் உதவி கேட்டு வரும் முஸ்லீம் பெண்கள் எங்கு இந்த முஸ்லீம் சட்டம் எழுத்து வடிவத்தில் உள்ளதா என்று கேட்கின்றனர். அது இல்லை என்பது தான் உண்மை. வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளனவோ, அவ்வளவு முல்லாக்களும், மதகுருமார்களும் இங்கு உண்டு. முஸ்லீம் சட்டத்தைப் பற்றி தங்களுக்குத்தான் தெரியுமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்குவார்கள். (பதர் சயீத்)

முஸ்லீம் திருமணம் என்பது இரண்டுபேர் செய்து கொள்கின்ற ஒப்பந்தம் நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது. சன்னி சட்டப்படி நிக்காஹ் செல்லுபடியாக வேண்டுமென்றால், இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். ஷியா பிரிவினருக்கு இந்த நிபந்தனை இல்லை. இரண்டு பேரும் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்ற போதிலும், மணப் பெண்ணைப் பொறுத்த மட்டில் மௌனம் சம்மதம் என ஏற்கப்படும். விவாகரத்து என்பது முஸ்லீம் சட்டத்தில் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருக்க அனுமதி உண்டு. நான்கு மனைவிகள் வரை இருக்கலாமென முஸ்லீம் சட்டம் கூறுகிறது.

மெஹர் : மெஹர் என்பது ஆண், பெண்ணுக்குத் தருகின்ற தொகை பரிசுப்பணம் என மணமகன் வீட்டார் கொடுப்பதைப் போன்றதாகும். திருமணத்திற்கு பின்னர் கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டு மனைவியை கைவிட்டு விட்டால், அவளுக்கு பாதுகாப்பு கருதி அளிக்கப்படும் தொகை இது. சன்னி பிரிவினரைப் பொறுத்தவரை மெஹர் தொகை எப்படி செலுத்த வேண்டுமென்பதற்கு வரையறைகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஷியா பிரிவினர் மத்தியில் மெஹர் தொகை கறாராக கட்டப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மனைவியின் உரிமைகளும், கடமைகளும்

கணவனுக்கு கீழ்ப்படிந்து, அவனுடன் இணைந்து வாழ வேண்டும். பர்தா அணிய வேண்டும். மனைவியின் பொருளாதார பின்னணி எப்படி இருப்பினும் சரி, கணவனின் அந்தஸ்துக்கு ஏற்ப அவள் பராமரிக்கப்படுவாள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பின், அனைத்து மனைவிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். கணவன் வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு. மனைவி தனது சொத்தை பராமரிக்கும் உரிமை உண்டு.

மூத்தா திருமணம்

மூத்தா திருமணம் என்பது, இரண்டு பேர் ஏற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் திருமணம். திருமணம் நீடிக்கும் காலம், மெஹர் தொகை போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த அடிப்படையில் இருவரும் வாழ்க்கை நடத்த மூத்தா திருமணம் ஷியா பிரிவினரிடையே அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது போன்ற திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கு உண்டு. அங்கீகாரம் உண்டு.

மூத்தா திருமணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் என்பதால், அந்த காலம் முடிந்தவுடன், திருமணமும் முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் கணவன் விரும்பினால், திருமணத்தை முறித்து கொள்ளலாம். கணவன் மனைவியிடையே உறவு ஏற்பட்டால் மனைவிக்கு முழு மெஹர் தொகை தரப்பட வேண்டும். உறவு ஏற்படாவிடில், திருமணம் முறிந்தால், மெஹர் தொகையில் பாதி அளிக்கப்பட வேண்டும். மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது.

முறையற்ற திருமணங்கள்

சாட்சிகள் இல்லாத திருமணங்கள், நான்கு மனைவிகள் உயிருடன் இருக்கும் போதே, ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செல்தல், இத்தக் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தல் (விவாகரத்தான பெண் எந்த காலம் வரை மறுமணம் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறாளோ அதற்கு இத்தத் என்று பெயர்). சாதாரணமாக, விவாகரத்து ஆனபின் 3 மாதவிடாய் காலம் வரை அவள் கர்ப்பிணியாக இருப்பின் பிள்ளை பெற்று முடியும் வரை) தடை செய்யப்பட்ட மதத்து பெண்ணை திருமணம் செய்தல் (கிறித்துவ, இந்து, யூத) ஆகியவற்றை முறையற்ற திருமணங்கள் என முஸ்லீம் சட்டம் கருதுகிறது.

தனது கர்ப்பத்திற்கு காரணமாக இல்லாத ஒரு ஆணை, ஒரு கர்ப்பிணிப் பெண் மணம் புரிந்தால், அது குற்றமாக கருதப்படுகிறது. செல்லுபடியாக திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு அதிகாரம் கிடையாது. இந்த திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடையாது.

விவாகரத்து

முஸ்லீம்கள் விவாகரத்து செய்ய காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவை:
கணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை விவாகரத்து செய்யலாம். அதற்கு எந்த காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்த திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று அர்த்தம்.

தலாக் சொல்லப்படும் முறைகள்

 1. அஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தத் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
 2. ஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.
 3. தலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.
 4. தலாக்-ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.
 5. முபாரா – கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு விவாகரத்து செய்தல்.
 6. குலா – மனைவி விவாக ரத்து கோருதல் குலா முறைப்படி விவாகரத்து பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.

முஸ்லீம் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்

திருமணம், விவாகரத்து போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாக பெண்களுக்கெதிராக நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. ஷாபானு என்ற பெண் ஐம்பதாண்டு மணவாழ்க்கைக்குப் பின், விவாகரத்து செய்யப்பட்டு, வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார். ஷாபானுவின் கணவரே ஒரு வக்கீல். குற்றவியல் சட்டம் 125வது பிரிவின் கீழ் ஏழை முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முஸ்லீம் மதவாதிகள் தங்கள் மத உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பிரச்சாரம் செய்தனர். ஷாபானு வழக்கில், முஸ்லீம் தனிநபர் சட்டக்குழு சார்பில் முகமது யூனுஸ் சலீம் என்பவர் வாதாடினார். மனைவி கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டுப் பெறுவதென்பது லஞ்சம் வாங்குவதற்கு சமம். இது இஸ்லாத்திற்கு புறம்பானது எனக் கூறினார். ஷாபானு வழக்கில் 12வது பிரிவு முஸ்லீம் பெண்களுக்கு பொருந்தா வகையில் சட்டம் கொண்டு வந்து, மதவாதிகளை திருப்திப்படுத்தினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாபானு வழக்கு ஆரம்பித்தது முதல் மகளிர் அமைப்புகள் குறிப்பாக அ.இ. ஜனநாயக மாதர் சங்கம், முஸ்லீம் பெண்கள் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தன. பல மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், குரானில் சொல்லப்படாத, ஆனால் நடைமுறையில் பின்பற்றப்படும் விஷயங்கள் வெளி வந்துள்ளன.

வரதட்சணை என்பது குரானில் இல்லை

மெஹர் தொகை எனபதை வாங்கிய பின்னரே பெண்ணின் கையை தொட முடியும். ஆனால் தவணை முறையில் மெஹர் பணம் கொடுப்பது சர்வ சாதாரணமாக உள்ளது.

அரபு நாட்டில் பெண்கள் நகை, பணம், கார்கூட கேட்கின்றனர். அதை கொடுக்க முடியாத ஆண்கள் இங்கு வந்து ஏழைப் பெண்களை போதிய அளவு மெஹர் கொடுக்காமல் கல்யாணம் செய்து கொள்கின்றனர். மூத்தா திருமணம் கேரளத்தில் நிறைய நடக்கிறது. ஒரு பெண்ணுக்கு இப்படி 22 தடவை அரபுகாரர்களுடன் திருமணம் நடந்துள்ளது. ஒருஅரபுகாரன் இப்படி மூத்தா திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாளில் அந்த பெண்களை விட்டு விட்டு போய் விடுவான். ஒரு கட்டத்தில் தன் பெண்ணையே அவன் கல்யாணம் செய்து கொள்ள இருந்தான். ஒரு வாரம் கூட நீடிக்காத மூத்தா திருமணங்கள் உண்டு. வறுமை காரணமாக, ஒரு வாரமாவது நல்ல சாப்பாடு, நல்ல இடத்தில் வசிப்பது என்றிருப்பதால், பெண்களிடமிருந்தே இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.

குரானில், ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை எப்படி, எந்த சூழலில் திருமணம் செய்து கொள்லளாம் என கூறப்பட்டுள்ளது. நபிகள் காலத்தில் போரில் நிறைய பேர் மாண்டு போனதால், விதவைகள் அதிகமிருந்தனர். எனவே, அத்தகைய சூழலில் நான்கு திருமணங்கள் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று நிலையான வருமானமின்றி, ஒரு மனைவியையே சரியாக பராமரிக்க முடியாத ஆண்கள் இப்படி சட்டத்தை தவறாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களுக்கு துன்பம் தருகின்றனர்.

முஸ்லீம் பெண்களை அதிகம் படிக்க வைப்பதில்லை. வயதுக்கு வந்தவுடன், இரண்டாம் தாரமாகவோ அல்லது எப்படியோ ஒரு ஆணுக்கு திருமணம் செய்து விட துடிக்கும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் நிலைமை இது போன்றுள்ளது. படித்த, வசதியான குடும்பங்களில், பெண்களின் திருமணம் செய்விக்கையில் ஓரளவு அக்கறை காட்டப்படுகிறது.

ஜீவனாம்சம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கேரளத்தில் செய்தித்தாள் மூலம் தலாக் சொன்ன சம்பவம் நடந்துள்ளது. இணையதளம் மூலம் தலாக் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் தலாக் சொல்லப்படும் போது, வயது வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜீவனாம்சமும் கிடைக்காமல், நிர்க்கதியாகப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஜமாத்துக்களிலும் பணத்தை வாங்கிக் கொண்டு தலாக் தரப்படுகிறது.
அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளது இதில் இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒரு அமைப்பில் உள்ள நூறு உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே உள்ளார். மற்றொரு அமைப்பு பொதுக்குழுவாகும். இதில் 25 சதம் பெண்கள் உள்ளனர்.

போபால் பிரகடனம்

2005 மே மாதம் 1ஆம் தேதி போபலில், தனது 18வது பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அ.இ. முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் மாதிரி திருமண ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இந்த வாரியத்தில் மொத்தம் 400 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லீம் மதத்திலுள்ள எல்லா பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இந்த நாட்டில் ஷரியத் சட்டத்தை பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட இந்த வாரியம், இன்று மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக, முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதிகளை உருவாக்கும் அமைப்பாக மாறியுள்ளது. மிகவும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போபால் கூட்டம், ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.

மாதிரி திருமண ஒப்பந்தம், முத்தலாக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, முத்தலாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நியாயமற்ற, இந்த முத்தலாக்கு முறை கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும், வாரியம், மென்மையாக இதை அணுகி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போதுமான அளவு ஜீவனாம்சம் கொடுக்காமல், மனைவி கைவிடப்படும்போது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தத்தில் எதுவுமே கூறப்படவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

பெற்றோர் சம்மதித்தாலும், குழந்தை திருமணமென்பது சட்ட விரோதமானது. மாதிரி திருமண ஒப்பந்தத்தில் குழந்தை திருமணம், பலதார மணம் ஆகிய இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லையென்பது கண்டிக்கதக்கதாகும். முஸ்லீம் மகளிர் அமைப்புகள், முற்போக்கு மாதர் சங்கங்கள், வாரியத்தின் மாதிரி ஒப்பந்தம் பெண்களுக்கு சாதகமான சூழலை தோற்றுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இந்த ஒப்பந்தம் எந்த மாற்றத்தையும் அளிக்கப் போவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது நிலவுகின்ற முறையை மாற்றி முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யும் என்ற எண்ணம் பொய்த்து விட்டது. 2004 டிசம்பரில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற போதே வாரியம் முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டன.

மாதிரி திருமண ஒப்பந்தம் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 1. நிக்காஹ்நாமா (திருமண ஒப்பந்தம்)
 2. ஹிதயத்நாமா (ஷரியத் சட்டத்தின் படி திருமணத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்),
 3. கரார் ஷரியத்தை கடைப்பிடிக்க பின்பற்ற வேண்டிய பிரகடனம்.

அதாவது சச்சரவு ஏற்படும் போது தம்பதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. ஷரியத் சட்டத்திற்குட்பட்டு பிரச்சினை எப்படி தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது பிணக்கை தீர்த்து வைக்க சமசரசம் செய்து வைப்போரை பயன்படுத்திக் கொள்வதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. அதனால் தீர்வு கிட்டவில்லையெனில் தாரூல் காபாவை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தாரூல் காஸா என்பது ஷரியத் நீதிமன்றமாகும். கணவன் மனைவி இருவரும் நீதிமன்றம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள, வேண்டிய விஷயமாகும்.

மாதிரி ஒப்பந்தத்தில் மெஹர் தொகை அசையா, சொத்தாக கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம், திருமணத்தின் போது, மெஹர் தொகையில் பாதியை கொடுத்தால் கூட போதும் என்றும் சொல்கிறது. விதிமுறைகள் தெளிவாக இல்லையெனில், அவரவர் இஷ்டத்திற்கு விளக்கம் அளிக்கப்படுவதென்பது தவிர்க்க இயலாது.

போபால் பிரகடனம் வரதட்சணை கூடாது எனக் குறிப்பிடுகிறது.

ஒரு ஆண், தன் மனைவியின் சகதரிகளையோ, அத்தைகளையோ திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினால், முதல் மனைவியிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற வேண்டும்.

ஆனால் இவை எதுவுமே கட்டாயமாக அமுலாக்க வேண்டும் என்றோ, அப்படி இல்லையெனில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றோ, கூறப்படவில்லை.

ஹிதயத் நாமாவைப் பொறுத்தவரை சில விதிமுறைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கணவனுக்கு மனைவி கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது, கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது வியப்பில்லை.

திருமண ஒப்பந்தத்தில், கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால், சமரசம் செய்பவர்கள் காலம் தாழ்த்தாமல் நான்கு மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும். மேலும், திருமணம் தொடர்பான அனைத்து ரெக்கார்டுகளும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டுமென்பதுடன், கணவன் மனைவி இருவரிடமும், அதன் நகல்களை தரப்பட வேண்டுமென்பது நல்ல அம்சம். திருமணத்தின் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும். இது கட்டாய திருமணத்தை தடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போபால் பிரகடனத்தின் எதிரொளி

போபால் கூட்டம் முடிந்து அறிக்கை வெளியிடப்பட்டதும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.
அகில இந்திய முஸ்லீம் மகளிர் தனிநபர் சட்டவாரியம் ஒட்டுமொத்தமாக மாதிரி திருமண ஒப்பந்தம் பற்றிய அறிக்கையை நிராகரித்துள்ளது. பல மகளிர் அமைப்புகள் ஒன்றுகூடி மும்பையில் ஒரு அறிக்கை வெளியிட்டன. நிக்காஹ் நாமாவை கண்டித்துள்ள அந்த அறிக்கை, போபால் பிரகடனம் பிற்போக்குத்தனமானது என்றும், பாலின சமத்துவத்திற்கெதிரானது என்றும் வலியுறுத்தியுள்ளது. மனைவி கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி, அவன் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, தன் கௌரவம், பொறுப்பு உணர்ந்து செயல்பட்டு தேவை ஏற்பட்டால் மட்டுமே பெற்றோர், உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பன அபத்தனமானவையாகும்.

முஸ்லீம் பெண்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு இருந்தும், அவர்களுக்கு தெரியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையிலுள்ள மகளிர் அமைப்புகள் சேர்ந்து மாதிரி நிக்காஹ் நாமா ஒன்றை தயாரித்தன. அதில் தாஃபீஸ், ஏ-தலாக் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த பிரிவின்படி மனைவியின் ஒப்புதலின்றி கணவன் வேறு திருமணம் செய்து கொண்டால், அவனை விவாகரத்து செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு. ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொன்னால், அந்த ஆண் இரண்டு மடங்கு மெஹர் தொகை அளிக்க வேண்டும். ஆனால் இதை அ.இ.மு. தனிநபர் சட்டவாரியம் ஏற்க மறுத்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தாஃபீஸ் – ஏ – தலாக் இருந்ததென்றும், இருமடங்கு மெஹர் அளித்தற்கான சான்றுகள் சன்னி முஸ்லீம்களின் மதச்சட்டங்களில் உள்ளன எனக் கூறப்படுகிறது.

பெண்களுக்கு குலா (பெண் விவாகரத்து கோருதல்) கொடுக்கும் உரிமை உள்ளது என்றாலும், அதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதால் பெண்கள் விவாகரத்து கோருவதில்லை. அது மட்டுமல்ல குலா பற்றி முஸ்லீம் பெண்களுக்கு தெரியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆவாஸ் ஏ நிஸ்வான் என்ற முஸ்லீம் மகளிர் அமைப்பு, அற்ப காரணங்களுக்காக தலாக் சொல்வதால், பெண்களின் வாழ்க்கையே நாசமாகி விடுகிறது என்றும், வாரியம், மகளிர் அமைப்புகளை கலந்தாலோசித்து, ஆவணத்தை தயாரித்திருக் வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளிலேயே முத்தலாக்கு முறை இல்லை. அவர்கள் இம்முறையை சாடுகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக முத்தலாக்கு முறை அழிந்து விடுமென வாரியத்தின் முக்கிய உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

முஸ்லீம் பெண்கள் வாரியம் தயாரித்த இக்ரார் நாமாவில் முத்தலாக்கினால், முஸ்லீம் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. குரானில் குறிப்பிடப் பட்டுள்ளபடி கணவன் முதலில் தலாக் சொன்னபிறகு ஒரு மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும். பின்னர் 2வது முறை தலாக் சொல்லாம். அதற்கு பின்னரும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். கடைசியில் மூன்றாவது முறையாக சொல்ல வேண்டும். இதன் மூலம் அவகாசம் தரப்படுவதால், தம்பதிகள் பேசி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வது குரானில் தரப்பட்டுள்ள உரிமைகளை புறக்கணிப்பதாகும் என்ற கருத்து வலுவாக உள்ளது.

ஏற்க இயலாத அம்சங்கள் போபால் பிரகடனத்தில் இருந்த போதிலும், ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி கோரி இருக்கிறதென்று அ.இ. ஜனநாயக மாதர் சங்கம் கருதுகின்றது. ஒரு சிலர் குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்பது என்ற பெயரில் பொது சட்டத்திலிருந்து முழு விதி விலக்கு அளிப்பது என்ற தவறான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் தத்துவ ரீதியில் இந்த வாதத்தை இடதுசாரி கட்சிகள் ஏற்கவில்லை. எனவேதான், இரண்டு கோஷங்கள் வைக்கப்பட்டன.

 1. பொது சிவில் சட்டத்திற்கான நடைமுறைக்கான கோஷம்.
 2. பொது சிவில் சட்டத்திற்கான பிரச்சார கோஷம்.

இன்றைய சூழலில் அனைத்து மத மக்களும் பொது சிவில் சட்டத்தை ஏற்க தயாராக இல்லை. எனவேதான், அப்படிப்பட்ட சூழலை, பெரும்பான்மை கருத்தை உருவாக்க இரண்டு கோஷங்கள் உதவும். தவிர, சில இடைக்கால கோஷங்களை ஸ்தூலமாக அனுபவ அடிப்படையில் உருவாக்க வேண்டும். அனைத்துப் பகுதி பெண்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் கொண்டுவர நாம் போராட வேண்டும்.

சமத்துவத்திற்கான எந்த போராட்டமும் (பெண் சமத்துவம் உட்பட) மனித சமத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்பது உலகெங்கும் பொருந்தும். கலாச்சார தனித்தன்மை என்ற பெயரில் அதை சுருக்குவதை மார்க்சிஸ்ட்டுகள் ஏற்க இயலாது. சமத்துவத்தை அடைய பல படிகளை கடந்தாக வேண்டும். அதற்கு, முதல்படியாக தனிநபர் சட்டங்களில் சில மாற்றங்கள் தேவை. அந்தந்த மதத்திலுள்ள முற்போக்கு சக்திகளை திரட்ட வேண்டும். அத்துடன், அனைத்து சமூகப் பெண்களையும் பாதிக்கும் விஷயங்களில், அனைவரையும் திரட்டும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்துரிமை, திருமணங்களை பதிவு செய்வது போன்ற பிரச்சினைகளை அக்கறையுடன் அணுகி, பெண்களை இணைக்கும் கோஷங்களை வைத்து, மதசீர்திருத்தங்கள் பற்றி இயக்கங்கள் நடத்தி, அனைத்து பகுதி மக்களையும் வென்றெடுக்க வேண்டும். சம சட்டங்களுக்கான அணுகுமுறை படிப்படியாக தொடர வேண்டும். சம உரிமைகள், சம சட்டங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.

உதவி நூல்கள்

 1. The Law and India Women – a YWCA Publication
 2. Women’s Equality Jan-June 1993
 3. Women and Law – SWB Publication 1990
 4. Our Laws, Ourselves
 5. Demystification of Law of Ivomea – Nandita Thakar Kamala Basia.
 6. பெண்களும், சட்டமும் – தமிழ்நாடு சமூக நல வாரியம் மாதிரி.
 7. திருமண ஒப்பந்தம் – இணையதள கட்டுரைகள்