இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் நூல் விமர்சனம்

வெறுப்பின் வேர்கள்

சிந்தன்

ஏ.ஜி. நூரானி எழுதிய, ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற நூல் அண்மையில் தமிழில் வெளியானது. ஃபிரண்ட்லைன் ஆங்கில இருவார இதழின் ஆசிரியராக இருந்த ஆர். விஜயசங்கர், தன் பணிக் காலத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பைச் செலுத்தி இந்த நூலை தமிழில் கொடுத்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் இந்த நூலை நேர்த்தியாக வடிவமைத்து, அச்சிட்டுள்ளது.

நேர்கோட்டில் எழுதப்பட்ட வரலாற்றுச் சித்திரமாக இது இல்லை. அதேசமயம், கடந்தகால வரலாற்றில் தொடங்கி சமகால அரசியல் வரையிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வாதங்களை, நுணுக்கமாகப் புரிந்துகொள்ள அவசியமான ஒரு கையேடாக இது பயன்படுகிறது. 824 பக்கங்களில் 25 கட்டுரைகளும், பின்இணைப்புகளும், ஆதாரங்களின் பட்டியலும் கொண்டு, கடுமையான உழைப்பில் வழங்கப்பட்டிருக்கும் ஆவணத் தொகுப்பாக இது உள்ளது.

புத்தகத்தின் ஊடாக, ஏ.ஜி. நூரானி இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்: ”நவீனத்தின் சவால்களை  சந்திக்கும் திறன் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கோ அதன் அரசியல்பிரிவான பிஜேபிக்கோ இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது நிதர்சனம். ஆனால் இந்தக் கேள்வியுடன் நின்றுவிடக் கூடாது. பொதுவாழ்வில் இதுபோன்ற தீயசக்தி எழுகிற அளவுக்கு நம்வரலாற்றில் என்னதான் நடந்தது என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் சில நவீனத்துவவாதிகளான இந்துக்கள் உட்பட அவர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்களுடைய கவலைகளை உதாசீனம் செய்வது தவறாகும். நம் அரசியலின் அமைப்பு குறித்த அறிவார்ந்த ஆய்வுகள் நடத்தி இந்தப் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிவது அவசியம்.”

அது இந்தியாவை பாதுகாக்கும் அனைவருக்கும் முன்கடமை. அதற்கு உதவி செய்யும் நூல்களில் இந்த நூலும் முக்கியமான இடம் பெறும்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. (முதல் 16 அத்தியாயங்கள், 386 பக்கங்கள்)

சமரசத்தில் பிறந்த ‘இந்துத்துவா’

முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி நாடு தழுவிய அளவில் வளரத் தொடங்கியது. அதே காலகட்டத்தில்தான், ‘இந்துத்துவா’ கருத்தியலும் உருவானது.

அந்தமான் சிறையில் கைதியாக இருந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் இழிபுகழ்பெற்ற பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அவைகளில் ஏகாதிபத்தியத்தோடு சமரசரத்திற்கு தூதுவிட்டார். அதில்   அவரின் வகுப்புவாத கண்ணோட்டமும் கெட்டிப்பட்டது. ‘இந்துத்துவா’ கருத்தியலாக வடிவம் எடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் அரசியல்திட்டத்திற்கு அது உகந்ததாகவும் அமைந்தது.

இந்துத்துவா பழைய சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களை மீட்டமைக்க விரும்பும் ‘இந்து மீட்புவாதத்தில்’ இருந்து எழுந்த ‘இந்துதேசியவாத’ கண்ணோட்டத்தை உள்ளடக்கியது. அதற்கு முன்பிருந்த மதவாதத்தில் இருந்து வேறுபட்டது. அதற்கான பல ஆதாரங்களை ஏ.ஜி.நூரானி தருகிறார்.

“இந்தியாவைத் தந்தைநாடாகவும் (பித்ருபூமி) புண்ணியபூமியாகவும் கருதுபவனே ஓர் இந்து” என்கிறார் சாவர்க்கர். இது ஆன்மீக வகைப்பட்ட விளக்கம் அல்ல. நேரடியாகவே மக்களை பிளவுபடுத்தும் அரசியல் திட்டம். அதன்படி யார் இந்து என்று அறிவதற்கான சோதனையை இன்னும் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறார்: “சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரதபூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது. அதாவது ‘தந்தைபூமியாகவும்’, ‘புண்ணியபூமியாகவும்’ இருக்கிறது.”

மேலும், “நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துகளையும் – மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார்கதைகள், வரலாறு போன்றவற்றையும் வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது” என்கிறார் சாவர்க்கர்.

“இந்த வரையறையைச் செய்த விதத்தில் சாவர்க்கரின் இரு நோக்கங்கள் வெளிப்படுகின்றன” என்கிறார் அம்பேத்கர். முதல் நோக்கம்: முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும், பார்சிகளையும், யூதர்களையும் விலக்கி வைப்பது. இரண்டாவது நோக்கம்: இந்துவாக இருப்பதற்கு வேதங்களின் புனிதத்தில் நம்பிக்கை இருப்பது அவசியமில்லை என்று வலியுறுத்திக் கூறுவதன் மூலம் பவுத்தர்களையும், சமணர்களையும், சீக்கியர்களையும் சேர்த்துக் கொள்வது. இப்படி செய்வதன் மூலம், ஒரே நிலத்தில் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தாலும்கூட, மதத்தின் அடிப்படையிலும், நம்பிக்கை அடிப்படையிலும் மக்களை கூறுபோடுவதுதான் ’இந்துத்துவா’ என்பதை அம்பேத்கர் தெளிவாக்கினார்.

இப்படிப்பட்ட புரிதலின் காரணமாகத்தான் 1924 ஆம் ஆண்டிலேயே, முதல் முறையாக நாட்டுப்பிரிவினைக்கான முழக்கத்தை சாவர்க்கர் முன்வைத்தார்.

உள்ளுக்குள்ளேயே எதிரிகள்

ஜூன் 21, 1940 வரை ஹெட்கேவாரும், அவரின் மறைவுக்குபின் கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் ஆக இருந்தார்கள். கோல்வால்கர்  ‘இந்துத்துவா’ கருத்தியலை மேலும் விரிவாக்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலுக்கும், வன்முறைக்கும் தோதான ’உள்நாட்டு எதிரிகளை’ வகைப்படுத்தினார்.

கோல்வால்கரின் ‘சிந்தனைக்கொத்து’ என்ற நூலில்  ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயம் ”முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” ஆகியோரை உள்நாட்டு எதிரிகளாக சுட்டுகிறது. “அன்னிய சக்திகளுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன: அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது தேசியஇனம் அனுமதிக்கும்வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும்போது வெளியேற வேண்டும்” என்கிறார் கோல்வால்கர். ”குடிமக்களின் உரிமைகள்கூட இல்லாமல் இந்துதேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதாக இருந்தால், நாட்டில் அவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கலாம். அவர்களுக்கு வேறுவழி ஏதுமில்லை;இருக்கவும் கூடாது” என்றும் கூறுகிறார்.

மேலேகுறிப்பிட்டுள்ள பத்திகளில் ‘அன்னியர்கள்’ என்பது, இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்துவரும் மக்களேஅன்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ பிற சுரண்டல் சக்திகளோ அல்ல. அதனால்தான் பிரிட்டிஷ் அரசின் உள்துறைச் செயலகம் 1943இல் தயாரித்த அறிக்கை, “ஆர்எஸ்எஸ், சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உடனடி அபாயம் என்று வாதிடுவது கடினம்” என்றது.

பாசிச விருப்பங்கள்

     பிறந்தநாடு எதுவாக இருந்தாலும், புனிதபூமி எது என்பதை வைத்தே ‘அன்னியர்’ என்று வகைப்படுத்தும் அறிவியலற்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பித்ருபூமியாக’ பிரிட்டிஷ் ஏகாதியத்தியமும், ‘புனித பூமியாக’ ஜெர்மனியும், இத்தாலியும் உள்ளன. பாசிச அமைப்புகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் உள்ள நெருக்கமான பிணைப்பை இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.ஜெர்மனியின் ஃப்யூரர் கோட்பாடு அதனுள் பதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சட்டத்தின் 12வதுபிரிவில் இது இடம்பெற்றுள்ளது.1931 மார்ச் 19 ஆம்தேதி மூஞ்சே, இத்தாலிக்குச் சென்று முசோலினியிடம் கூறியது இதுதான்: “இதேபோன்ற நோக்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பை நான் ஏற்கெனவே இந்தியாவில் தொடங்கிவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பொதுமேடைகளில் உங்களுடைய பலில்லா போன்ற ஃபாசிஸ்டு அமைப்புகளைப் புகழ்ந்துபேசத் தயங்க மாட்டேன்.”

இப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜகத்குரு (உலகிற்கே வழிகாட்டி) என்ற பேராசையினை தனக்குள் அடைகாக்கிறது. அந்த விருப்பத்துடனே அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நேசிக்கிறது. இஸ்ரேல் முன்னெடுக்கும் ஜியோனிச ராணுவ தாக்குதலை ஆதரிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை பற்றி ஆர்கனைசர் இதழில் 1967, ஜூன் 18 ஆம்தேதி இவ்வாறு எழுதியது: “உலகில் நமக்குரிய இடத்தை மீண்டும் அடைய வேத கலாச்சாரம் என்ன செய்யமுடியும் என்கிற சிறிய சிந்தனைப்பொறி இந்தப் போரில் இஸ்ரேலின் ஆயுதங்கள் பெற்ற வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.”

சிறுபான்மையை மறுத்தல்

‘சிறுபான்மை’ என்ற கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ் முற்றாக மறுக்கிறது. ஆனால் தேன் தடவிய சொற்களில் அதனை முன்வைக்கிறது. “இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்” என்று பலமுறை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியதாக ஊடகங்களில் படித்திருப்போம்.அது சாதாரண பொருளில் சொல்லப்படுவது அல்ல; ‘கலாச்சார தேசியம்’ என்ற பழுதுபட்ட பார்வையின் வெளிப்பாடு. சிறுபான்மையினர் என்ற நிலையையே மறுதலிப்பதன் அபாயத்தை நூரானி விரிவாக விளக்குகிறார்.

கோல்வால்கர் பவுத்த, சமண சிறுபான்மையினர்களையும் கூட பின்வருமாறு சிறுமைப்படுத்துகிறார்: “பவுத்தம், சமணம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவர்கள் சமூக, அரசியல் சிந்தனைகளுக்கு எந்தப் பங்கையும் அளிக்கவில்லை; அவற்றிலிருந்து நாம் எந்த அர்த்தசாஸ்திரத்தையும் (அரசியல், பொருளாதாரஞானம்) அல்லது தர்மசாஸ்திரத்தையும் (சமூகவிதிகள்) வரித்துக் கொள்ளவில்லை”.

தேசிய இயக்கத்தின் வலிமை

     தேசிய விடுதலை இயக்கத்தினூடாக எழுந்த மதச்சார்பின்மை கண்ணோட்டத்தின் காரணமாக,  ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய திட்டத்திற்கு மக்கள் ஆதரவை பெற முடியவில்லை. தேசிய இயக்கம் மதவாத கண்ணோட்டத்தை நிராகரித்தது என்பதற்கான ஏராளமான ஆதாரங்களை இந்த நூல் தருகிறது. நாட்டுப் பிரிவினைக்கான திட்டம் ஜூன் 3, 1947 அன்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 10ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல், பிர்லாவிற்கு பதில் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அவர் எழுதியது இதுதான்: “இந்துமதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்துநாடாக இந்துஸ்தானைக் கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறுசில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பது நம் முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது ஜாதி, மதங்களைக் கடந்து அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.”

ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதை ஏற்கவில்லை.1946-47இல் பிரிவினையின்போது நடந்த மதக்கலவரங்களில் அது தீவிரமாகப் பங்கெடுத்தது. அதன் நச்சுக் கருத்தியலை செயல்படுத்தியது. பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு என்ற உத்தியை தொடர்ந்ததுடன், பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்; முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

இவ்வாறாக நூரானி பட்டியலிடும் 4 வரலாற்று உண்மைகள்:

 1. 1885 முதலே இந்தியா மதச்சார்பின்மைக் கொள்கையைத் தழுவிக் கொண்டது.

2. பழமையை மீட்டமைக்க விரும்பிய ‘இந்துமீட்புவாதம்’ இந்துமகாசபையும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உருவாகக் காரணமாக இருந்தது.

3. இந்த இயக்கங்கள் அவை பிறந்தபோதிலிருந்தே இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்துடன் போர்புரியத் துவங்கிவிட்டன.

4. அவை விடுதலைப்போரில் பங்கேற்கவில்லை. மாறாக, காங்கிரசை ஓரங்கட்ட அல்லது ஒழிப்பதற்காக, பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து செயல்பட்டது.

காந்தியின்படுகொலை

     காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த தொடர்பினை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. உத்திரபிரதேசத்தின் பிரதம அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக பெறப்பட்ட ஒரு டிரங்க் பெட்டி நிரம்ப சாட்சியங்கள் இருந்தபோதும் அந்த அமைப்பை ஏன் தப்பவிட்டார் என்ற கேள்வியையும் இந்தநூல் பலமுறை முன்வைக்கிறது.

வழக்கில் இருந்து சாவர்க்கர் தப்பித்தார். அப்ரூவராக மாறிய பாட்கேயின் சாட்சியம் உண்மையானதாக இருந்தாலும், அது தெளிவற்றது; போதுமானதாக இல்லை என்று சொல்லியே நீதிபதி ஆத்மசரண் சாவர்க்கரை விடுதலை செய்தார்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி கொலைவழக்கினை விசாரிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜீவன்லால் கபூரின் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குள் சாவர்க்கர் மரணமடைந்து விட்டார் (1966) சாட்சியங்களைத் தீர விசாரித்த கபூர் செப்டம்பர் 30, 1969 அன்று, “இந்த விவரங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அவை சாவர்க்கரும் அவரது குழுவும் செய்த சதி காந்தியின் படுகொலைக்குக் காரணமில்லை என்கிற வாதத்தைத் தகர்க்கின்றன” என்றார்.

அப்படியானால், ஆத்மசரண் ஏன் வேறுவிதமாக தீர்ப்புக் கொடுத்தார்? என்ற கேள்விக்கும் இந்த நூல் விடைகொடுக்கிறது. சாவர்க்கரின் இரு உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஏன் ஆஜராக்கப்படவில்லை? என நூரானி கேட்கிறார். அரசுக்கு உள்ளிருந்தே கோல்வால்கருக்கு கிடைத்துவந்த ஆதரவினை விவரிக்கிறார்.

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். சதிச்செயல் பற்றிய ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது காந்தியை காப்பாற்றியிருக்கும். அல்லது சதிச்செயலை முற்றாக அம்பலப்படுத்தி, மொத்தமாக அந்த அமைப்பையே முடக்கியிருக்க முடியும் என்பது நூரானி வெளிப்படுத்தும் ஆதங்கம்.

காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டுநாட்களுக்குள்ளாகவே, பிப்ரவரி 1, 1948 அன்று கோல்வால்கர் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 4 அன்று, ஆர்எஸ்எஸ். ‘ஒரு சட்டவிரோத அமைப்பு’ என்று அறிவித்து அதனைத் தடைசெய்தது அரசு. இருப்பினும் தடைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தி வைக்கவில்லை. அது மாணவர்களை திரட்டத் துவங்கியது.

தன்னுடைய அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொண்டு, அது இந்திய தேசத்துக்கு விசுவாசமானதாகவும், தேசியக்கொடியை மதிப்பதாகவும், ரகசிய முறைகளைத் தவிர்த்தும், வன்முறையைக் கைவிட்டும் நடக்கும் ஒரு ஜனநாயக, கலாச்சார இயக்கமாகச் செயல்படும் என்ற உறுதியைக் கொடுத்த அடிப்படையில் அதன் மீதான தடை விலக்கப்பட்டது.

காந்தியின் படுகொலைக்கு பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 1954இலிருந்து 1960 வரை மதக்கலவரங்களின் எண்ணிக்கை தெளிவாகவும் சீராகவும் குறைந்து வந்தது; 1960 இல் குறிப்பிடத்தக்க வகையில் 26 மதக்கலவரங்களே நாட்டில் நடந்தன.

அரசியலில் ஆர்.எஸ்.எஸ்.

     ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு ‘கலாச்சார’ அமைப்பு என்றும், ‘ஆன்மீக’ அமைப்பு என்றும், ‘சேவை’ அமைப்பு என்றும் அவ்வப்போது கூறிவந்தாலும், அது ஒரு அரசியல் இயக்கமே. அது முன்வைத்த மதவகைப்பட்ட தேசியம் என்ற பார்வையை மக்கள் நிராகரித்தபோதிலும், பெரும் தொழில் அதிபர்களுடைய ஆதரவை அது தொடர்ந்து பெற்று வந்துள்ளது. அதன் வழியாக தான் பெற்ற பண பலத்தையும், உறுப்பினர்களின் பலத்தையும் பயன்படுத்தி பல்வேறு கட்சிகளின்மீது செல்வாக்கு செலுத்தியது. அதில் அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்போது தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் அந்த அமைப்புக்கு இருந்த பிடிமானத்தை இந்த நூலின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக ஒரு நிகழ்வினை குறிப்பிடலாம். 1949 அக்டோபர் 7 ஆம் தேதி கூடிய காங்கிரஸ் செயற்குழு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர்களாக இணையலாம் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியது. அப்போது நேரு அமெரிக்கா சென்றிருந்தார். அவர் நாடு திரும்பியபின் அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு தன் முந்தைய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பதவியைக் கைவிட்டால் மட்டுமே ஒருவர் காங்கிரசில் சேரலாம் என்று முடிவெடுத்தது.

ஜனசங்கத்தின் உருவாக்கம்

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்துத்துவா ஆதரவாளராகவும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாகவும் இருந்தார். அவரைப் பற்றிய விரிவான பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.அவர் 1920 களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வங்க மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.1939 ஆம் ஆண்டில் இந்துமகாசபையில் சேர்ந்தார்.1941 ஆம் ஆண்டில் வங்க மாகாணத்தின் ஃபஸ்லூல் ஹக் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றார். அந்த ஃபஸ்லூல் ஹக் யார் என்று பார்த்தால், லாகூரில் மார்ச் 23, 1940 அன்று நடந்த முஸ்லிம்லீக் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்வைத்தவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்தபோது (1942) காங்கிரசை எப்படி நசுக்குவது என்று வங்க மாநில ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார். அதிகாரத்திற்காக எப்படிப்பட்ட சமரசத்தையும் கொள்ளும் முகர்ஜியை, பாசிச இத்தாலி ஆட்சியின் துணை தூதரகம் ‘கூட்டாளி’ என்ற அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அவரை முன்னிறுத்தி தனக்காக ஒரு ‘அரசியல் இயக்கத்தை’ தொடங்கிட ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. அந்த ஒப்பந்தத்தில் பிறந்ததுதான் ‘ஜனசங்கம்’. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களும், பணமும் இதில் பயன்பட்டன.

மரணமும், அம்பலப்பட்ட சதியும்

ஜன சங்கத்தின் தலைவராக இருந்த தீன்தயாள் உபாத்யாயா மரணமும், அதை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட இழிவான அரசியலையும் இந்த நூல் விவரிக்கிறது.

பிப்ரவரி 11, 1968 அன்று முகல்சராய் ரயில்நிலையத்தில் ஒரு முனையிலிருந்து 748 அடி தொலைவில் உபாத்யாயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள்மீதும் கம்யூனிஸ்டுகள்மீதும் குற்றம்சாட்டியது ஜனசங்கம்.

இந்த வழக்கை விசாரிக்க சந்திரசூட் ஆணையம் அமைக்கப்பட்டது. உண்மையை துல்லியமாக வெளிப்படுத்தியது விசாரணை அறிக்கை. இந்த மரணத்தில் கம்யூனிஸ்டுகளுக்கோ அல்லது,  முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஜெ. ஃபாரிதிக்கோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில்லை என நிரூபணமானது. அதுமட்டும் அல்லாமல், “ஆதாரமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலிஆவணத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டது சரியல்ல என்று நான் அழுத்திக் கூறுகிறேன்” என சந்திரசூட் ஆணையம் தெரிவிக்கிறது.

தன்னுடய சொந்த தலைவரின் மரணத்தையும் கூட, கீழ்த்தரமான விதத்தில் பயன்படுத்தி தன்னுடைய வன்முறை, வெறுப்பு திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் என்பது இந்த முறையும் வெளிப்பட்டது.

அவசரநிலையும், மன்னிப்புக் கடிதங்களும்

1974ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயண் துவக்கிய முழுப்புரட்சி இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் இணைந்தது. மறுபுறத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கவும், ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நீக்கவும் கோரி ரகசியக் கடிதங்களை இந்திரா காந்திக்கு எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கடிதங்களில் அவசரநிலைக்கால அறிவிப்பைப் பின்வாங்குவது குறித்தும், பிற அரசியல் கைதிகளை விடுதலை செய்வது பற்றியும் ஒன்றும் இல்லை.

தேவரஸ் 6 மாத காலத்தில் 10 மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அதில் மிக மோசமான ஒன்றை நவம்பர் 10, 1975 அன்று எழுதினார். அதில் தேவரஸ் கூறுகிறார் “உங்களுடைய தேர்தல் செல்லும் என்று ஐந்துநீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன்” அந்த கடிதத்தில் மேலும், “ஆர்எஸ்எஸ்ஸின் பெயர் காரணமேதுமின்றி குஜராத், பீஹார் மாநிலங்களில் நடக்கும் இயக்கங்களுடன் திரும்பத் திரும்ப இணைத்துப் பேசப்படுகிறது. இந்த இயக்கங்களுடன் சங் அமைப்பிற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றார். ஆம் அவர் அதில் ஜெயபிரகாஷ் நாராயணனை கைவிட்டார். சிறையில் நடந்த பவுதிக் என்கிற கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்னும் மோசமாக பேசினார்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய விஷக் கொடுக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர்கள் எதார்த்தத்திற்கு புறம்பாக எதிர்பார்த்தார்கள். அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் போக்குக் காட்டியது, இரட்டை வேடம் போட்டது என்பதை இந்த நூல் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. 1951இல் ஜனசங்கம் பிறந்தது முதல் 1977இல் அது கலைக்கப்பட்டு ஜனதா கட்சியுடன் ஐக்கியமானது. பிறகு அதிலிருந்து உடைத்துக்கொண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கியது.

வழிக்கு வந்தது பாஜக

     ஜனதா கட்சியோடு நெருங்கி தன்னை சற்று வலுப்படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பின் பாஜகவை உருவாக்கியது. பாஜகவின் தலைவர்கள் முதலில் ‘காந்திய சோசலிசம்’ பேசினார்கள். அத்வானியும், வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ். வழியில் இருந்து மாறி நடப்பது போல போக்குக் காட்டினார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக எழுதி வந்தது. அது பழைய ஜனசங்கத்தையே மீளுருவாக்க விரும்பியது என்கிறார் நூரானி.

“1985 மார்ச் 17,18 தேதிகளில் கூடிய பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு ஜனசங்கத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து விவாதித்தது. பாஜக தோற்றுவிக்கப்பட்டு (ஏப்ரல் 5, 1980) ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும்கூட ஜனசங்கத்தினை மீளுருவாக்கம் செய்வது குறித்து பேச்சு நிலவியது என்பதே புதிதாகத் தோன்றிய பாஜக வேரூன்றவில்லை என்பதையே காட்டுகிறது” என்கிறார். இறுதியாக, பாஜகவின் தேசிய நிர்வாகக்குழு தவிர்க்கமுடியாத வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழுத்தத்திற்கு தலைவணங்கியது. காந்திய சோசலிசம் என்கிற தன் சந்தர்ப்பவாத முழக்கத்தை கைவிட்டது.

ராமர் கோயிலும்ஆர்.எஸ்.எஸ். திட்டமும் !

‘ராமஜென்ம பூமி’ பிரச்சாரம்தான் அதற்கு முதல்முறையாக வெகுஜன பரப்பில் ஊடுருவுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது.

பாபர்மசூதி குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கோரிக்கைக்கு நியாயமே இல்லை என்பதை வரலாற்றுப்பூர்வமான காரணங்களோடு நூரானி பட்டியலிடுகிறார்.

1. 19ஆம் நூற்றாண்டில் பாபர்மசூதி குறித்து ஒரு மஹாந்த் தொடர்ந்த வழக்கில் மசூதிக்கு வெளியே இருந்த ராம்ச புத்ரா எனப்படும் பகுதிதான் ராமர் பிறந்த இடம் எனக் கூறப்பட்டது; மசூதி இருக்குமிடம் என்று எப்போதுமே கூறப்படவில்லை.

2. ராமர் எங்கு பிறந்தார் என்று குறிப்பாகச் சொல்லமுடியாதென்றே பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தினால் தீர்வு சொல்ல முடியாது என்றும் அவை கூறின.

3. திலகர், லஜபதிராய், காந்தி, மதன்மோஹன் மாளவியா போன்றோர் அந்தக் கோரிக்கையை வைக்கவே இல்லை.

ராமர்கோயில் இயக்கம் முழுக்க அரசியல் தன்மை கொண்டது. அதனை அத்வானியே பகிரங்கமாக பேசினார். “1985இல் இரண்டு பாராளுமன்ற இடங்களையே பெற்றிருந்த நாங்கள், 1991இல் 117 இடங்கள் என்கிற நிலையை அடைந்தோம். அயோத்திப் பிரச்சினையை நாங்கள் கையிலெடுத்ததே இதற்கு பிரதான காரணம்” என்றார்.

பாஜகவிற்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.தான் ராம ஜென்ம பூமி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்தது. அது பலன் கொடுத்தது. அதனை பயன்படுத்தி வளர்ச்சி கண்டது. 38 முன்னணி அமைப்புகளின் வழியாக 50 லட்சம் பேரோடு தொடர்பினை உருவாக்கியது. தென்னிந்தியாவிலும் வளர்ச்சியடைந்தது.

ராமர்கோவிலைக் கட்டுவதற்காக 2,000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ‘ராம்ஷிலா’ என்கிற பெயரில் பூஜையால் புனிதப்படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்துசெல்லும் இந்த இயக்கத்தை விஎச்பி நடத்தியது. மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த இயக்கம் பரவலான கவனத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ். எழுச்சிபெற்றதும் பாஜகவின்மீது பிடிமானத்தை கூடுதலாக்கியது.

ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டுமுறை இதுதான்… முதலில் அது இந்துக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது; பிறகு அதைப் பயன்படுத்தி அவர்கள் மேலாதிக்கம் பெறவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறது. வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட ‘கொடுமைகளுக்கு’ பழிதீர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து உணர்ச்சியை கிளப்பியது.

இவ்வாறு அது மேற்கொண்ட அரசியல் விளையாட்டுகளின் உயிர்ப்பலி ஏராளம். இந்தப் பலிகள் 1993இல் இன்னும் அதிகரித்தன. 1990இல் நடந்த கலவரங்களில் 693 பேர் கொல்லப்பட்டதாகவும், 2773 பேர் காயமடைந்ததாகவும், மத்திய உள்துறை விபரங்கள் காட்டின.

.எம்.எஸ் செய்த எச்சரிக்கை

காங்கிரஸ் பலவீனமடைந்தபோது, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது சிபிஐ(எம்) முன்வைத்த காலப்பொருத்தமான எச்சரிக்கையை இந்தநூல் எடுத்துக் காட்டுகிறது. சி.பி.ஐ.(எம்) பொதுச்செயலாளராகஇருந்த  இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ஒரு விரிவான கட்டுரையை நூரானி மேற்கோள் காட்டுகிறார். 

அதில், “ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கருத்தாக்கங்களான இந்துத்துவம், இந்துராஷ்டிரம் ஆகியவை மார்க்சிஸ்ட்கட்சியும் பிற இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கும் உறுதியான  மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், ஜனதாதளம், தேசியமுன்னணி போன்ற கூட்டமைப்புகளில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தார்மீக அரசியல் மதிப்பீடுகளும், பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மதிப்பீடுகளுக்கு எதிரானவை. “எனவேதான் கம்யூனிஸ்டுகளான நாங்கள், ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற மதவாத, பிளவுசக்திகளுடனும், அவர்கள் எழுப்பும் மூன்று பிரச்சினைகள் (அரசியல்சட்டப்பிரிவு 370, பாபர்மசூதி, பொதுசிவில்சட்டம்) பற்றியும்  -அவர்களுடன் எந்தவித கூட்டணியையோ, தேர்தல் ஒப்பந்தத்தையோ அல்லது தொகுதி உடன்பாடுகளையோ செய்துகொள்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் இருக்கும் எங்கள் நண்பர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த சக்திகளுடன் மதச்சார்பற்ற சக்திகள் ஒத்துப்போகவே முடியாது என்றும் சொல்கிறோம்.”

“இந்த இந்துப் பேரினவாத அமைப்புடன் கூட்டணி வைத்துக்கொள்வதோ அல்லது தொகுதிஉடன்பாடுகள் செய்துகொள்வதோ தேசஒற்றுமைக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு உடன்படுவது போன்றதாகும்” என இ.எம்.எஸ். எச்சரித்தார். பழமைக்குத் திரும்பும் ‘மீட்புவாதம்’ என்பது பெரும்பான்மையினரின் அடிப்படைவாதமென்றும் அதைச் சுமந்துசெல்லும் வாகனம் ஆர்எஸ்எஸ் என்கிற அரைப்பாசிச அமைப்பு என்றும் எழுதிய அவர், “எந்தவிதப் பதட்டத்திலும் தலையிட்டு அதனை மதக்கலவரமாக மாற்ற ஆர்எஸ்எஸ் தீவிரமாகச் செயல்படும்” என்றும் சுட்டிக் காட்டினார். பிஜேபியை தனியான ஒரு ஆளுங்கட்சியாகவோ அல்லது ஒரு கூட்டணிஅரசின் வலுமிக்க அங்கமாகவோ ஆக அனுமதிப்பது தேசத்தின் சிதைவின் தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தெளிவாக எச்சரித்தார். இஎம்எஸ் அவர்களின் எச்சரிக்கையை  பலரும் ஏற்கவில்லை. இதுதான் ஆர்.எஸ்.எஸ்/பாஜக வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தது.

மதச்சார்பின்மைக்கான அவசியம்

     ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலை வீழ்த்துவதற்கு முக்கியமான ஆயுதம் ‘உறுதியான மதச்சார்பின்மையே’. இந்த கருத்தியல் வலிமை சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளிடம் மட்டுமே இருந்தது என்கிறார் நூரானி. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற அறிவுஜீவிகள், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த புனைசுருட்டுக்களை எதிர்த்தார்கள். அவர்கள் ராமஜென்மபூமி என்கிற புனைவினை அம்பலப்படுத்தினார்கள்.  இந்தியப் பண்பின் மதச்சார்பற்ற அடித்தளத்தில் இருந்து எழுந்த எதிர்ப்பு இது.

     ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை அரசியல் களத்தில் எதிர்கொண்ட பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பின்மை விசயத்தில் உறுதியற்று இயங்கினார்கள். முஸ்லிம் அமைப்புகள் சூழலை மிகமோசமாக கையாண்டார்கள். ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் முஸ்லிம் ‘செயல்’ குழுக்களை அமைத்தனர்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற அணுகுமுறையும் தேசம்தழுவிய இயக்கமும்தான் தேவையாக இருந்தது. ஆனால் அந்த அமைப்பிற்கு  ‘உண்மையான சவால் ஏதும் ஏற்படவே இல்லை’ என்று இந்த நூல் கவலையுடன் பதிவு செய்கிறது.

சில விமர்சனங்கள்:

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான உறவுகுறித்து இந்த நூலில் குறைவான தகவல்களே இருப்பது பெரும் குறையாகும். அதன் காரணமாக, இந்த நூல் ஒரு காலில் மட்டும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் இருந்தார்கள் என்பதை சில தனிநபர் சார்ந்த பிரச்சனையாகவே எழுத்தாளர் கருதுவதாக அய்யம் எழுகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தது. இப்போதும் அதன் வர்க்கச்சார்பு தொடர்கிறது என்ற மார்க்சிய புரிதல், இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.

பாஜக கடைப்பிடிக்க வேண்டிய ‘வெகுஜன’ அணுகுமுறை பற்றிய கருத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படுத்தி வந்த அதிருப்தி மற்றும் சமரசத்தை விளக்குவதற்கான ஏராளமான உழைப்பை நூல் ஆசிரியர் செலுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தனக்கான வாகனங்களில் ஒன்றாகவே பாஜகவை உருவாக்கியது என்பதை அது நிறுவினாலும் சற்று குறைவான விபரங்களிலேயே அதனை சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

‘ராமஜென்மபூமி’ இயக்கம் பற்றிய பகுதிகள் முக்கியமானவை. அதற்கு வெகுஜன ஆதரவு கிடைத்ததற்கான காரணங்களில் ஒன்று ஆளும் வர்க்கங்கள் கொடுத்த ஒத்துழைப்பு. அதனையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்க வேண்டும்.

பாஜக/ஆர்.எஸ்.எஸ் வலுப்பட்ட காலத்தில் காங்கிரஸ் சரிவை எதிர்கொண்டு வந்தது. இதே காலகட்டத்தில் முன்னுக்கு வந்த பிற இயக்கங்களை பற்றி குறைவாகவே பேசுகிறார். விடுதலைக்குப்பின், காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரி மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மாநில கட்சிகள் முன்னுக்கு வந்தார்கள். சமூகநீதிக்கான முழக்கங்களும் எழுந்தன. 1980களுக்குப் பின் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் தீவிரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.1991 ஆம் ஆண்டில் உலகமய கொள்கைகளை இந்தியா ஏற்றது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று ஊடாடிய நிகழ்வுகள் என்பதால் அதற்காக ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருந்தால், சிக்கலான இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு பருந்துப்பார்வை கிடைத்திருக்கும்.

அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?

குரல்: தோழர் பீமன்

இரா. சிந்தன்

முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.

‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில்  சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?

அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.

அமெரிக்காவின் பிறப்பு

அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”

ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.

அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.

அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.

அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.

ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.

புதிய ஒழுங்கு

உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது.  பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.

ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.

ஐ.நாவும், காலனிய நீக்கமும்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.

1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.

இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.

ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

சுக்கா மிளகா சுதந்திரம்?

1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.

1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.

காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.

“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.

கலப்பு யுத்தங்கள்

சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.

அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும்  முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.

இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.

காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.

சில உதாரணங்களை பார்க்கலாம்!

பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.

அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.

ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.

1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.

உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அரசு சாரா அமைப்புகள்

சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.

என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.

பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.

அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.

பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.

ஆதிக்கத்தின் செயல் திட்டம்

‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.

இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.

அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.

  1. பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
  2. ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
  3. கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
  4. பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
  5. பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
  6. பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
  7. அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
  8.  மறக்கச் செய்தல்
  9. முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்

பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.

மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.

  1. இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
  2. அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
  3. அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.

இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.

இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.

கியூபாவில் எழுந்த நம்பிக்கை

எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.

இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.

1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.

1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.

குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.

உலகம் தழுவிய வர்க்கப்போர்

ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை  போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.

மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’

சில விமர்சனங்கள்

கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.

கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!

இரா. சிந்தன்

Download : Marxist Reader (android)

(டிசம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் இடம்பெறும் இக்கட்டுரை, முன்னுக்கு வந்துள்ள குடியுரிமை சிக்கலை ஒட்டி இணைய வாசிப்புக்காக பகிரப்படுகிறது)

குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத் தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

அசாமில்,  ‘இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு’ பட்டியல் வெளியிடப்பட்டதும், அது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம். இப்பட்டியலில் இடம் பெறாத 19 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பாஜக இப்படியொரு பதிவேடு இந்தியா முழுவதுமே கொண்டு வரப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறது. அசாம் மாநில பட்டியல் வெளியான சில நாட்களுக்குப் பின் அவர்கள் கூச்சலை சற்று குறைத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம், 40 லட்சம் பேர் அதுவும் ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள் என்ற தங்கள் பிரச்சாரம் பொய்த்துப்போனதே ஆகும். அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்கள்  பெரும்பான்மையாக இல்லை. 

அவர்களுக்கு இது சிறிய ஏமாற்றம்தான். உத்திரப் பிரதேச மாநிலத்தில், மீரட் கண்டோன்மென்ட் தொகுதியின் எம்.எல்.ஏவான சத்ய பிரகாஷ் அகர்வால் ‘வடிகட்டும் வேலையை’ நாடு முழுவதும் செய்வோம் என திமிராகவே இப்போதும்  பேசுகிறார்.பாஜகவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ‘முஸ்லிம்களை’ மட்டும் குறிவைத்து தங்கள் திட்டத்தை மாறுதலுக்கு உள்ளாக்கி செயல்படுத்துவோம் என்கிறார். அசாமில் கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவோம் என்கிறார். (அந்த மாநிலத்தில் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கெடுப்பிற்கே சுமார் ரூ.1,600 கோடி செலவு ஆகியிருக்கிறது). அமித் ஷா பேச்சின் ஒரு பகுதி ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாஜக ‘தயவு’  உண்டு என்பதாகும்’. இது முஸ்லிம் அல்லாத வாக்கு வங்கியை நோக்கிய தூண்டில். மற்றொரு பகுதி, அவர்களுடைய திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்துவது. இந்திய நாட்டின் குடியுரிமையையே மத அடிப்படையிலானதாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாஜக இந்த முயற்சியை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கியது.

அசாம் ஒப்பந்தம் – வரலாற்று சுருக்கம்

ஆர்.எஸ்.எஸ்/பாஜக திட்டம் குறித்து பேசுவதற்கு முன், அசாம் மாநிலத்தின் சூழலை சுருக்கமாக பார்ப்போம். 1970களின் இறுதியில் அசாம் மாநிலத்தில் மாணவர் இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்று அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களை (வங்க தேசத்தவர்களை) வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் 1985 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் (அசாம் அக்கார்ட்) ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி ஒருவருடைய குடும்பத்தாரின் பெயர் 1951 அசாமில் ஏற்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 1971 மார்ச் 24 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை அல்லாமல் வேறு சான்றுகளையும் கொடுக்கலாம். இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு நெறிப்படுத்தியது.

இந்திய குடிமக்களின் தேசியப் பதிவேடு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றை படிக்கும் எவருக்கும் அது அசாம் மாநிலத்துக்கு மட்டுமேயான தனித்துவமான சூழலில் எழுந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். மேலும், 1951 ஆம் ஆண்டிலேயே அந்த மாநிலத்தில் இவ்வாறான ஒரு பதிவேடு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அதனை அடிப்படையாகக் கொள்ள முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். (புதுவை 1963 ஆம் ஆண்டில்தான் யூனியன் பிரதேசமானது என்பதையும்,கோவா 1974 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைந்தது என்பதையும் பார்க்கும்போது குடியுரிமை என்பதற்கு ஆண்டு அளவுகோல் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது)

ஆனால், அறிவியல் பூர்வமான வரையறை எது என்ற கேள்வியையே பாஜக விரும்பவில்லை. அசாமின் சூழலில் எழுந்த ஒரு முடிவை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் குடியுரிமை குறித்த வரையரையை மாற்றியமைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஏக காலத்தில் அவர்களுடைய செயல் திட்டத்தை பல்வேறு முனைகளில் முன்னெடுக்கின்றனர்.  இந்தக் கட்டுரையில்   ‘குடியுரிமை’ பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்தியக் குடியுரிமை பற்றிய ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குருஜி கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டில் ‘நாம் அல்லது நமது தேசியம் – ஒரு விளக்கம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்த விரும்புகிற தேசம் குறித்து பின்வருமாறு விளக்குகிறார். “இந்து இனம் தனது இந்து மத கலாச்சாரம் மற்றும் மொழியுடன் (சமஸ்கிருதம் மற்றும் அதிலிருந்த பிறந்த மொழிகளுடன்) அதன் தேசிய கருதுகோள் முழுமையடைகிறது” என்பதே அவரது விளக்கமாகும். மேலும், மேற்சொன்ன வரம்பிற்குள் வராத குடிமக்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம்.

மேலும் 1923இல் வி.டி. சாவர்க்கர் ’இந்துத்துவா’ என்ற புத்தகத்தை வெளியிடும்போது ‘இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார். ஏனென்றால் அது ஒரு அரசியல் திட்டமே ஆகும். மதத்திற்கும், ஆன்மீகத்திற்குமான சொல் அல்ல. ‘இராணுவத்தை இந்துமயமாக்கு; இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militariseHindudom’) என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்ததை இத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக அவர்கள் கட்டமைக்கும் ‘தேசத்தில்’ மற்றவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்?. இதுபற்றி கோல்வால்கர் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது “இந்துஸ்தானத்தில் அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்க வேண்டும்” என சொல்வதுடன் அவ்வாறு ஏற்காதவர்கள் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும்; அவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது; எந்த முன்னுரிமையையும் பெற முடியாது; மிகக் குறைவான முன்னுரிமையைக் கூட –குடியுரிமையைக் கூட பெற முடியாது” (பக்கம் 104-105) என்கிறார்.

இப்போதுள்ள ‘அனைவருக்குமான இந்தியா’ என்ற நிலையை மாற்றி சொந்த குடிமக்களுக்குள்ளேயே மோதலை தீவிரப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவமும் செயல்திட்டமும் ஆகும். இந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு உதவியாக அமைந்தது ஜெர்மனியில் அமைந்த நாஜி அரசாங்கம். கோல்வால்கர் தன்னுடைய புத்தகத்தில் நாஜி அரசு யூதர்களுக்கு இழைத்துக் கொண்டிருந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு அவைகளை வரவேற்று எழுதியிருக்கிறார். அதுபற்றி கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுகிறார் ‘செமிட்டிக் மொழிகள் பேசுகிற – யூதர் – இனத்தை வெளியேற்றியதன் மூலம் ஜெர்மனி உலகை அதிரச் செய்தாள். அதன் மூலமே ஒரு இனத்தின் பெருமை உச்சம் தொட வைக்கப்பட்டது.” என்றதுடன் அந்த கொடூரத்தில் இருந்து ‘இந்துஸ்தான்’ கற்றுக் கொள்ள வேண்டும்;  லாபமடைய வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல; ஜெர்மனியிலும், இத்தாலியிலும் செயல்பட்ட அமைப்புகளுடன் தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்துத்துவா எதற்காக உருவாக்கப்பட்டது?

சாவர்க்கர் 1907 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் எழுதினார்.அந்த புத்தகம் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தை பற்றியது. இந்தப் போராட்டக் களத்தில்தான் “இந்துக்களும் முஸ்லிம்களும் முதல் முறையாக இணைந்தார்கள்” என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்திருக்காவிட்டால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்காது என எழுதியிருக்கிறார். 1913 ஆம் ஆண்டில்  சவார்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அந்தமான் சிறையில்,அடுக்கடுக்கான துன்பங்களுக்கு பிறகும் விடுதலைப் போரைக் காட்டிக் கொடுக்காத வீரத் தியாகிகளைப் போன்றவர் அல்ல சவார்க்கர். அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதுகிறார். 6 முறை மனுப் போடுகிறார். அதில் ஒரு கடிதத்தில்,“(பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு) பெருந்தன்மையுடன், கருணையுடன் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், நான் (பிரிட்டிஷ் காலனி) அரசின் அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பவனாக இருப்பேன். பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன்’ என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாற்றத்தின் பிறகே அவர் ‘இந்த்துவா” என்ற அரசியல் சித்தாந்தத்தை வடிவமைக்கிறார்.

அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தத் தொடங்கியிருந்த காலகட்டமாகும். அந்த திட்டத்திற்கு உதவியாகவே ‘இந்துத்துவா’ கருத்தியல் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த ‘இரு தேசக்கொள்கையையும்’ சவார்க்கரே முதலில் முன்வைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுமார் 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் மத அடிப்படையிலான இடப்பெயர்வையும் ஏற்படுத்திய அந்த பிரிவினை, வரலாற்றின் ஆறாத வடுவாக அமைந்தது. இவ்வகையில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே ‘இந்துத்துவா’ உருவானது; செயல்பட்டது.

இதன் காரணமாகவே, பாஜக முன்வைக்கும் தேசியமும், குடியுரிமையும் ‘காலனி ஆதிக்க எதிர்ப்பை’ அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்க எதிர்ப்பின் மூலம் வடிவம் பெற்ற இந்திய தேசியத்தையும், மக்களிடையே வலுப்பட்ட மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசியல் என அனைத்தையும் நிராகரிப்பதுடன், அதனைச் சிதைத்து அழிக்கவே திட்டமிட்டது. இப்போதும் அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுக்கிறது.

பாசிசம்: உருவாக்கம் – வளர்ச்சி

முதல் உலகப் போருக்குப் பின் சில காலம் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவது போல் தோன்றினாலும் மீண்டும் நெருக்கடிக்குச் சென்றது. இத்தகைய பொருளாதார சூழலில்தான் பாசிச அரசியல் பிறப்பெடுத்தது என்பது வரலாறு.

பாசிச அரசியலானது தானாகவே ஒரு பெரும் சக்தியாக வளர முடியாது. “முதலாளித்துவ வர்க்கம் தனது ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குகிறபோதே பாசிசமானது தன்னை ஒரு இயக்கமாக அமைத்துக் கொள்ள முடியும், கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கு சக்திகளை திரட்டி அமைப்பின் பின் படை சேர்ப்பது இவ்வாறுதான் சாத்தியமாகும்” என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் ஜான் பெல்லோமி போஸ்டர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தயவோடு உருவாகி வளர்ந்த பாசிச கருத்தியல் மக்களிடையே வேர் விடவோ, வலிமை பெறவோ முடியவில்லை. இந்திய முதலாளித்துவ சக்திகளுக்கு பாசிசம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

இப்போது, உலக முதலாளித்துவ உற்பத்தி அமைப்புசார் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறபோது அது லாபத்தில் சரிவை ஏற்படுத்தும். குறைந்த பலன்களே கிடைக்கும்போதும் அதில் பெரும் பகுதியை தன் வசமாக்க விரும்புகிறது முதலாளித்துவம். எனவே அது பழைய ‘தாராளவாத ஜனநாயக’ அரசாங்கமும், அரசியலும் போதாது என நினைக்கிறது. தன்னுடைய வெளிப்படையான கொள்ளை நடவடிக்கைகளுக்கும், வரன்முறையற்ற சுரண்டலுக்கும் யார் சேவையாற்ற முடியும் என தேடுகிறது. இதற்காகத்தான் பாசிச சக்திகளுக்கு பெரும் பணமும், ஆதரவும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போல் அல்லாமல் இப்போதைய பாசிச அரசியல் சக்திகளின் செயல்பாடு சற்று வேறுபடுகின்றன. ‘நவ-பாசிசத்தின்’ கூறுகள் நாட்டுக்கு நாடு, சூழலைப் பொறுத்து மாறுபடும். அதன் அடிப்படையான கூறு வெகுமக்களிடையே ஒற்றுமையைச் சிதைத்து, வரன்முறையற்ற சுரண்டலுக்கு வழிவகுப்பதுதான்.

உள்ளிருக்கும் எதிரிகளும், உண்மை குடிமக்களும்:

பாசிசம் தன்னை உயிரோடு வைத்திருப்பதற்காக தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கிறது. அது திட்டமிட்ட வகையில் ‘உள்ளிருக்கும் எதிரிகளைக்’ கற்பனையாகக் கட்டமைக்கிறது. வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கிறது. காலனி ஆதிக்க காலத்திலும் சரி, விடுதலைக்கு பிறகும் சரி ஹைதராபாத், ஜம்மு, ஆல்வார்-பாரத்பூர்-மிவாட், பாட்டியாலா என எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மோதல்கள் நடந்தனவோ அங்கெல்லாம் இந்து மஹாசபாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பங்கெடுத்தன என்பதை பல்வேறு ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன. பிரிவினையின்போது நடைபெற்ற வன்முறைகளிலும்  இவர்களின் கை இருந்தது.

‘உள்ளிருக்கும் எதிரிகளை’ கட்டமைத்து அதன் உதவியுடன் ஒரு நாட்டின் ‘உண்மையான’ உறுப்பினர்கள் என்ற மாய நம்பிக்கையையும் அது ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ‘உண்மையான’ உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசம் உருவாகிறபோது, அது அந்த நாட்டுக்கே ‘மறு பிறவியாக’ அமையும் என்ற நம்பிக்கையை தன் ஆதரவுத்தளத்தில் விதைக்கிறது. இந்த மாற்றம் நடந்துவிட்டால் அரசியலும், கலாச்சாரமும் மாற்றம் பெற்றுவிடும்; நெருக்கடிகள் தீரும்; ஊழல் முடைநாற்றங்கள் முடிவுக்கு வரும் என்று பிரச்சாரம் செய்கிறது. அடிப்படையை மாற்றாமலே எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்கிற போலியான இந்த ‘நம்பிக்கை’யே பாசிசத்தின் தத்துவம், பிரச்சாரம், அரசியல் மற்றும் நடவடிக்கைகளின் அடிநாதமாகும். இன்றும் பாசிச சக்திகளின் செயல்பாட்டில் இதை நாம் உணர்கிறோம். மேலும்,அதே பாஜக-வானது மற்றொரு பக்கம் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு அப்பட்டமான சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

குடியுரிமை சிக்கலின் அடுத்த கட்டம் என்ன?:

இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை நாடு முழுவதும் விரிவாக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டம், நாஜிக்களின் வரலாற்றில் இருந்து ஊக்கம் பெற்றது என்பதைப் பார்த்தோம். நாஜிக்களின் சட்ட நிபுணரான கார்ல் ஸ்மிட் இந்த திட்டம் குறித்து மேலும் விரிவாக கூறியிருக்கிறார். ஆரியர் அல்லாதவர்களை நீக்குவது,  தலைவரை சட்டத்திற்கு மேலானவராக நிறுத்துதல் என இரண்டு வழிமுறைகளை  ஆளுகை செலுத்துவதற்கான உத்திகளாக அவர் முன்வைத்தார். ‘ஒற்றைத்தன்மை மற்றும் தூய்மை ஆகிய லட்சியங்களை ‘பன்மைத்துவத்தை அழிப்பதன்” மூலமே அடைய முடியும் என்கிறார்.

உலகம் முழுவதுமே வலதுசாரிகள் இந்த நிலைப்பாட்டினை எடுத்து வருகிறார்கள். அந்தந்த நாடுகளின் சிறுபான்மையினரை ‘இரண்டாந்தரக் குடிமக்கள்’ என்ற நிலைக்கு தாழ்த்துகின்றனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் அந்தப் பாதையில் சற்று வேகமாகவே பயணிக்கிறது. இதுவரையிலும் அவர்கள் மேற்கொண்டுவந்த ஒடுக்குமுறைகளை இப்போது நிறுவனமயப் படுத்துகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் இதனை எளிதாக அனுமதிப்பதில்லை என்பது அவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்துகிறது. ‘பாஜக விரும்புகிற’ குடியுரிமையை முன்வைக்கும் மசோதாவும் அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால், சில அண்டை நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதனை முன்வைத்து, ‘முஸ்லிம் அல்லாத’ அளவுகோலை, குடியுரிமைக்கு பொருத்துகிற தன் வாதத்தினை பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறது பாஜக.

இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களுடன் சேர்த்து, இந்தி மொழியை திணிப்பது மற்றும் மும்மொழித் திட்டம் ஆகியவற்றிற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் அவர்களுடைய செயல்திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலில் அவர்கள் ‘முஸ்லிம்களை’ மட்டும் குறி வைக்கிறார்கள். அதே சமயம் “முதலில் முஸ்லிம்கள், அடுத்தது கிறுத்துவர்கள்” என்ற வி.எச்.பி. முழக்கத்தைப் போல படிப்படியாக நகர்வோம் என்கிறார்கள் சங்க பரிவாரங்கள். குடியுரிமை சட்டம் மற்றும் பதிவேடு ஏற்படுத்துகிற முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் இப்படித்தான் இருக்கும். அந்நிய குடியேற்றத்தை நீக்குவதல்ல; இந்தியாவிலேயே காலம் காலமாக வசித்துவரும் பலவகைப்பட்ட மத, இன, மொழி அடையாளம் கொண்டிருக்கும் மக்களிடையே  ‘உயர்ந்த’ மற்றும் ‘இரண்டாந்தர’ என்ற எண்ணத்தை உருவாக்கி மோதச் செய்வதுதான் அந்த செயல்திட்டத்தின் மெய்யான நோக்கம்.

ஆதாவது, கும்பல் கொலைகள், பசுக்காப்புபடையினர், லவ் ஜிகாத் என்ற பெயரால் ‘உதிரிகளை’ உருவாக்கி நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளை இனி சட்டத்தின் பேரால் நடத்த விரும்புகிறார்கள். அந்த தாக்குதல்கள், அரசின் நலத் திட்டங்களை மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பது, சட்ட உரிமைகளை மறுப்பது என வளர்த்தெடுக்கப்படும்.

பாசிசமும், முதலாளித்துவ நெருக்கடியும்:

உலகம் முழுவதுமே சூழல்கள் மாறிவருவது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது 22வது மாநாட்டில் விவாதித்தது. உலக முதலாளித்துவம் மீள முடியாத அமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் விளைவுகள் பல வழிகளில் வெளிப்படுகின்றன. “இனவாதம், இனவெறுப்பு மற்றும் வலது அதிதீவிர நவ-பாசிச போக்குகள்” வளர்கின்றன. நிதி மூலதனத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே இந்தியாவிலும் வலதுசாரி அரசியல் வலுவடைகிறது. அதன் விளைவுகளில் ஒன்றாக மக்களுடைய ஜனநாயக உரிமைகளும், நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பும், ஜனநாயக நிறுவனங்களும் தாக்கப்பட்டு எதேச்சதிகாரம் மேலோங்குகிறது.

பாசிசம் என்பது “வெளித்தோற்றத்தில் அது பிற்போக்கு சக்திகளின் பயங்கரவாத சர்வாதிகாரம், பெருமளவில் ஆதிக்கத் தன்மையுடையது. மேலும் நிதி மூலதனத்தின் அனைத்து ஏகாதிபத்திய வடிவங்களையும் உள்ளடக்கிய ஒன்று” என்கிறார் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் டிமிட்ரோவ். மேலும், முதலாளித்துவத்தின் துணை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலன்களை உச்ச அளவில் அமலாக்கக்கூடியதே பாசிசம். அதற்கு ‘அந்நியச் சுரண்டல்’ மீது ‘அளவுகடந்த பாசமே’ உண்டு. அதே சமயம் மக்களிடையே “அவமதிக்கப்பட்ட தேசத்தின் மேலங்கியாகவும்,  வெடித்துக் கிளம்பும் ‘தேசிய’ உணர்வுகளின் முறையீடாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் வெற்றியடைகிறது. அதற்கு முகம் ஒன்று; முகமூடி வேரொன்று.

முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், வரன்முறையற்ற சுரண்டலை கட்டவிழ்த்து விடுகிறது. அதனால்தான், வேலையின்மையும், உற்பத்தி நெருக்கடியும் தீவிரமடைகின்றன. ஆனால், இந்த நிலைமையை மாற்றியமைக்க பாசிச அரசியலில் தீர்வு எதுவும் கிடையாது. பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான்.

இத்தாலியின் முசோலினி பேசும்போது, ‘முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை’ என வெளிப்படையாக அறிவித்தார். ஹிட்லர் தனது ஆட்சியில் தனிச்சொத்துடைமையை பாதுகாத்ததுடன், தனியார்மயத்தை வேகமாக முன்னெடுத்தார். உழைக்கும் மக்களின் கூலியை வெட்டிச் சுறுக்கப்பட்டது. கீனிசியன் பொருளாதார கோட்பாடுகளை அமலாக்கி அதன் வழியாகவும் முதலாளித்துவத்தையே ஊக்கப்படுத்தினார். இவ்வகையில் முதலாளித்துவத்தின் வேட்டை நாயாகவே வளரும் பாசிசத்தை வீழ்த்துவது, முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தாமல் சாத்தியமில்லை.

ஜனநாயக உரிமைகளை காப்போம்:

குடியுரிமை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பிற்குள்ளாகவே போராடிப் பெறப்பட்ட பல உரிமைகளை அழித்தொழிக்க முயல்கிறது பாஜக அரசு. குடியுரிமையின் பேரால் மதவழி சிறுபான்மையினரை குறிவைக்கும் அவர்களின் இந்தப் போக்கு உண்மையில் ‘ஒற்றை இந்தியா’ என்ற ஆதிக்கப் போக்கின் வெளிப்பாடாகும். அவர்கள் முன்வைக்கும் ‘இந்து’ மதம், சாதிப்படிநிலை ஏற்றத்தாழ்வை நிலைநாட்டுகிற ஒன்றாகும். அவர்கள் முன்வைக்கும் மொழி ஆதிக்கம், தேசிய இனங்களுக்கு எதிரானதாகும். அவர்களுடைய அரசாங்கக் கட்டமைப்பு ‘கூட்டாட்சி’க்கும் சவால் விடுப்பது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தார் மற்றும் பெண்கள், தேசிய இனங்கள் என பாதிக்கப்படும் மக்கள் திரளே பெரும்பான்மையிலும் பெரும்பான்மையாகும்.

மேலும், பாசிச செயல் திட்டத்தின் அங்கமாகிய ‘வரன்முறையற்ற சுரண்டலும், முதலாளித்துவக் கொள்ளையும்’ நேரடியாகவே அனைத்து தரப்பு மக்களையும் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. அது ஏகாதிபத்திய நலன்களோடு கைகோர்த்துக் கொள்வதால் உலக அமைதிக்கும் ஆபத்தாக எழுகிறது. இந்த சூழலை மாற்றியமைப்பது இடது – ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தாலேயே சாத்தியமாகும்.

கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

இரா.சிந்தன்

மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது.  இப்போது  நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கருந்துளையின் படமா கும். பூமியில் இருந்து  5,349 கோடி  ஒளியாண் டுகள் தொலைவில் அது அமைந்திருக்கிறது. அதாவது அங்கிருந்து ஒளி  நம்மை வந்து அடைய சுமார் 5,349 கோடி ஆண்டுகள் ஆகும். நம் சூரியனுடைய நிறையை விட 65 லட்சம்  மடங்கு பெரியதாக அந்தக் கருந்துளை உள்ளது.

கருந்துளையை படம்பிடித்தல் எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த முயற்சி, இனி வரும் நாட்களில் பூமியை விட பெரிய தொலைநோக்கியை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு நடந்தால் கருந்துளை பற்றிய வேறு பல சந்தேகங் களுக்கும் விடை கிடைக்கும். ஐன்ஸ்டீனின் தத்து வம் எவ்வளவு தூரம் சரி; குவண்டாம் தத்துவத் துடன் ஐன்ஸ்டீன் தத்துவத்தை இணைத்து புதிய இயற்பியல் தத்துவத்தை ஏற்படுத்துவது போன்ற, மேலும், வானில் அறிய முடியாத பல உண்மை களை கூர்நோக்கி ஆராய முடியும். 

கருந்துளை என்பது என்ன?

சூரியன் போன்ற விண்மீன்களை எடுத்துக் கொண்டால் அவற்றுள் எப்போதும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரண்டு விசைகள் செயல்பட்டுக் கொண்டிருகின்றன. முதலாவதாக அவற்றின் சொந்த நிறை ஏற்படுத்தும் ஈர்ப்பு விசை காரணமாக அவை சுருங்கும்.  அவ்வாறு சுருங்கும்போது மையத்தில் அழுத்தம் கூடி கருப் பிணைவு ஆற்றல் எனும் ஒருவகை  அணுவிசை ஏற்படும். இதன் காரணமாகவே  சூரியன் ஒளிர் கிறது. வெப்ப ஆற்றல் எல்லாவற்றையும் விரிவு படுத்தும். ஆகவே இந்த விரிவுபடுத்தும் வெப்ப விசை சுருங்க செய்யும் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு எப்போதும் சூரியனுள் எதிர் எதிர் முரண்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.  சூரியன் நிலையாக இருப்பதும் ஒளிர்வதும் இந்த எதிர் எதிர்முரண்களின் செயலால்தான். எதிர்மறை களின் ஒற்றுமையும், முரண்களும் என்ற இயக்க வியல் பொருள்முதல்வாத விதி இங்கே நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

பருப்பொருள் அளவில் ஏற்படுகின்ற மாற்றம் அதன் பண்பிலும் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்  என்ற பொருள்முதல்வாத இயக்கவியல் விதிக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவை விட விண்மீனின் நிறை கூடினால் அதன் தன்மை மாறிவிடும். சூரியனை போல சுமார் மூன்று மடங்குக்கு மேலே நிறை கொண்ட விண்மீன்கள் தமது வரலாற்றில் ஒரு கட்டத்தில் சொந்த ஈர்ப்பு விசையின் காரணமாக சுருங்கி வெள்ளைக்குள்ள விண்மீன் என்ற ஒரு வகை விண்மீனாக மாறும்  என முதன்முதலில் கூறியவர் விஞ்ஞானி சந்திரசேகர் . இவர்தான் குறிப்பிட்ட விண்மீனின் நிறை கூடக் கூட அந்த விண்மீனின் தன்மை மாறுபடும் என முதலில் நிறுவியவர்.

அதே போல சூரியனை விட சுமார் இருபது மடங்கு கூடுதல் நிறை கொண்ட ராட்சச குண்டு விண்மீன்கள், தமது இயல்பு வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அந்த விண்மீன் வெளியிடும் வெப்ப ஆற்றல், அதன் ஈர்ப்பு விசையை தாக்கு பிடிக்க முடியாமல் போகும். ஈர்ப்பு விசையின் கை ஓங்குவதுடன் அந்த விண்மீன்  தனக்குள்ளேயே சுருங்கத் தொடங்கும். இப்படி சுருங்கத் தொடங் கும் விண்மீன்கள் “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் என்ற அளவுக்கு சுருங்குகின்றன.

அவ்வாறு “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் எனும் அளவுக்கு குறைவாக சுருங்கி போனால் அதன் ஈர்ப்பு விசை வெகுவாக அதிகரிக்கும். இவ்வாறு உருவாவதுதான் கருந்துளை.

கருந்துளைகளுக்கு ஈர்ப்பு விசை எந்த அளவுக்கு  உச்சமாக இருக்குமெனில்,  அது தான் வெளியிடும் வெளிச்சத்தைக் கூட தானே விழுங் கிக்கொள்ளும். அதன் மீது ஒளியை பாய்ச்சினால் அதனை திரும்ப பிரதிபலிக்கவும் செய்யாது.  இதன் காரணமாக கருந்துளைகளைப் பார்க்க முடியாது. எனவே, அவைகளை ஆராய்வதும் எளிதல்ல. 

சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு குறித்த முதல் அனு மானம் எழுந்தது. ஆய்வுகள் தொடங்கின. இது நாள் வரையில் கருந்துளைகள் அண்டங்களில் நிலவுவதற்கான தற்செயல் ஆதாரங்கள்தான் கிடைத்து வந்தன. இப்போது கருந்துளையின் படம் கொடுக்கும் சில விபரங்கள் சார்பியல் கோட்பாட்டின் அனுமானங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

சார்பியல் கோட்பாடும் கருந்துளைகளும்:

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஒளியின் திசை வேகத்தை கணக்கிடும் அளவுக்கு இயற்பியல் முன்னேற்றமடைந்தது. ஒளியின் திசைவேகமானது, ஆராய்ச்சியாளரின் திசை வேகத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் என்றுதான் அதுவரை நிலவிவந்த விசையியல் (மெக்கானிக்ஸ்) அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒளியின் திசைவேகம் நிலையானது என்ற முடிவு வந்தது. இக்கண்டுபிடிப்பு விசையியல் மற்றும் மின் காந்தவியல் (எலெக்ட்ரோ மேக்னெட்டிக்ஸ்) ஆகிய துறைகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது.

இச்சிக்கலைத் தீர்க்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்ட ஐன்ஸ்டைன், அதன் முடிவில், 1905ஆம் ஆண்டு, சிறப்பு  சார்பியல் கோட்பாட்டை வகுத் தளித்தார். அந்தச் சமயத்தில் அவர் ஸ்விட்சர் லாந்து நாட்டின் காப்புரிமை அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். மேற் சொன்ன கோட்பாடுதான் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

1905ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் மொத்தம் நான்கு கருத்துகளை வெளியிட்டு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில்  இரண்டு கருத்துகள் சார்பியல் தொடர்பான வையாகும். மேலும் ஒன்று நிறையைஆற்றலாக மாற்ற முடியும் என நிரூபித்த சமன்பாடான நு=ஆஊ2 என்பதும், மற்றொன்று அணுக்களின் இருப்பை நிரூபித்தலும் ஆகும். சார்பியல் குறித்தான ஐன்ஸ்டைனின் கருத்துக்கள், காலம் – வெளி ஆகியவை இரண்டும் அறுதியானவை அல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. காலத்தையும், வெளியையும் உணர்கிற நபர் அல்லது பொருட்களின் இயக்கத்தை சார்ந்து, காலம், வெளி ஆகிய இரண்டுமே வேறுபடும். மேலும் காலம், வெளி இரண்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று தனித்திருக்காது. எனவே, காலம், வெளி ஆகியவைகளை காலம்-வெளி என இணைத்துக் குறிப்பிடவேண்டும் எனவும் நிறுவுகிறார்.

அதன் பிறகு, மேற்சொன்ன சிறப்பு சார்பியல் கோட்பாட்டினை அடித்தளமாக கொண்டு, ஈர்ப்பு விசையை விளக்குவதற்கானமுயற்சியில் ஐன்ஸ்டைன் ஈடுபடுகிறார். 10 ஆண்டுகள் கழித்து, இவ்வாராய்ச்சியின் முடிவில்  பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிடுகிறார். காலம்-வெளி இரண்டினுடைய வளைவின் காரணமாக ஏற் படுகிற விளைவே ஈர்ப்பு விசை என்றும், பெரும் நிறை கொண்ட ஒரு பொருளை ஒளி கடந்து செல்லும்போது அது வளைகிறது எனவும் குறிப்பிடுகிறார். 

மேற்சொன்ன கோட்பாட்டு விளக்கங்களின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு முதலில் அனுமானிக்கப்பட்டது. இந்த அனு மானங்கள் விஞ்ஞான ஆய்வுகளின் வழியே பரிசோதிக்கப்படுகின்றன. கருந்துளை பற்றிய ஐன்ஸ்டைனின் கருத்தை நவீன காலம் வரையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து வளர்த்தெடுக்கின்றனர்.

1974ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் வகுத்துக் கொடுத்த கோட்பாடு கருந்துளைகளின் இருப்பை புரிந்துகொள்ள உதவுவதாக அமைந்தது. கருந் துளைகள் வெளியிடும் கதிரியக்கம் (ரேடியேசன்) பற்றிய கருத்துக்களையும் அவரே  வெளியிட்டார். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு பின் அவரது குழுவினர் கருந்துளைகளின் இயக்கம் குறித்த மேலும் சில கருத்துகளை வெளியிட்டனர். அதாவது கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் எந்த ஒரு பொருளும் அதன் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதும் மேலும் கருந்துளைகளில் இருந்து ஹாக்கிங் கதிரியக்கம் மட்டுமல்லாது போட்டான் இழைகள் வெளியேறலாம் எனவும் குறிப்பிட்ட னர். (போட்டான் இழைகள் குறித்த கருத்து நிரூபிக்கப்படாத அனுமானமே) இப்படியான ஆராய்ச்சிகள் பிரபஞ்ச வெளியைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.

கருந்துளைகளும் கருத்துமுதல்வாதிகளும்

அறிவியலில், அனுமானங்களுக்கு இடம் உண்டு; கற்பனைகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் அந்த கற்பனைகளும், அனுமானங்களும் மந்திரத்தில் விழும் மாங்காய்கள் அல்ல. ஐன்ஸ் டைன் முன்வைத்த சிறப்பு சார்பியல் கோட்பாடு, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த இருவேறு அறிவியல் உண்மைகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் இருந்து உதித்தது என்பதை குறிப்பிட்டோம். அதனை மேலும் கூர்ந்து நோக்கினால் அனுமானங்களுக்கு உள்ள இயக்கவியல் அடிப்படையும் புரிபடும்.

காலம் குறித்த மனிதர்களுடைய அறிவு மிக இயல்பானது என்றே தோன்றுகிறது.  ஏனென் றால் மனிதர்கள் பிறந்தது முதலே காலத்தோடு உறவாடுகிறார்கள். காலத்தைக் கணக்கிட்டு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த அறிவு போதுமானது போல் தோன்றுகிறது. ஆனால், மனித ஆராய்ச்சி, விண்ணைத் தாண்டி வெளியை எட்டுகிறபோது, முற்றிலும் புதிய சூழலில், காலம் குறித்த அறிவு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது புரிகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிப்பது சாத்தியமே இல்லாத ஒருவருக்கு, வேகத்திற்கேற்ப நிறை அதிகரிக்கும் என்ற உண்மை அனுபவத்தில் புரியாது. பல்வேறு கதிர்களையும், அணுப்பிளவு களையும்ஆராய்கிற நவீன காலத்திற்கு ஐன்ஸ் டைன் தத்துவ வெளியில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், எத்தனை முக்கியமானது என்பது புரிகிறது.

ஒரு குவளையில் தண்ணீர் இருக்கிறது. குடித்து முடித்தவுடன் காலியாகி விட்டதாகச் சொல்கிறோம். இல்லை; குவளைக்குள் காற்று நிறைந்து விட்டது. மேற்சொன்ன தகவல் அன்றாட உரையாடலுக்கு தேவைப்படும் தகவ லாக இல்லை. ஆனால் அறிவியல் இவ்வுண் மையை சாதாரணமாக கடந்து செல்லாது. அண்டத்தில் பல்வேறு துகள்கள், வாயுக்கள், கோள்கள், ஆற்றல் என நிறைந்திருக்கின்றன. இவை நிறைந்துள்ள வெளியை காலியிடம் என்பதா? வேறு எப்படிக் குறிப்பிடுவது என நுணுகி ஆராயும்.

ஒரு ஆப்பிள் பழம், மரத்திலிருந்து கீழே விழுவதைக் கொண்டு புவி ஈர்ப்பினை வரையறுக் கத் தொடங்கலாம். அதுவே, பூமியும், சூரியனும் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டிருப்பதும், நிலவும் பூமியும் ஒன்றை ஒன்று ஈர்த்தபடி சுழன்று கொண்டிருப்பதும் தெரியவரும்போது, ஈர்ப்பு விசையின் வரையறைகள் மாறுகின்றன.

காலம் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதாக நியூட்டன் கருதினார். அவருடைய கோட்பாடு இயற்பியலில், விசையியலில் தாக்கம் செலுத் தியது. காலம் என்ற குவளைக்குள்ளே அனைத் தும் இருப்பதாகவும், மாறிவருவதாகவும் நியூட்டன் அனுமானித்தார். ஈதர் என்ற ஒரு கற்பனை பொருளையும் அவர் வசதிக்காக அனுமானித்துக் கொண்டார். ஐன்ஸ்டைன் மேற்சொன்ன அனு மானங்களை காலாவதியாக்கினார். 

உண்மையில் ஒளியின் இயல்பு குறித்த திட்ட வட்டமான கண்டுபிடிப்புதான், அதுவரையிலான போக்குகளை புரட்டிப் போட்டது. நியூட்டனின் கருத்துக்களுடைய எல்லையை புரிய வைத்தது. ஐன்ஸ்டனின் கோட்பாடானது, காலனம், வெளி  குறித்த புரிதலில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தது. மேற்சொன்னவைகளில் இருந்து பார்த்தால், ஐன்ஸ்டைனின் கோட்பாடு உருவான இயக்கவியல் அடிப்படையும் புரியும். இயற்பியலில் ஒட்டுமொத்த மனித சமூகம் முன்னேற்றமடைந்த இரு வேறு கட்டங்களோடு இணைத்து புரிந்து கொள்ள முடியும்.

வெளி என்பது அனைத்து பொருட்களும் இடம்பெற்றுள்ள, நகர்கின்ற கலனாகும் (ஒரு பாத்திரம் போல). காலம் என்பது எண்ணற்ற நகர்வுகளின் அண்டம் தழுவிய ஓட்டம். மேற் சொன்ன பார்வையை ஈர்ப்புவிசையோடு இணைத்து பொது சார்பியல்கோட்பாட்டை ஐன்ஸ்டைன் உருவாக்கினார். அது நியூட்டனின் ஈர்ப்புவிசைத் தத்துவத்தின் மெய்த்தன்மையை நிரூபித்து அதனை வளர்த்தெடுத்தது.

சூரியனை நெருங்கிச் செல்லும் வெளிச்சக் கதிர்கள் சிறிதளவு வளையும் என்பதும், சூரியனை சுற்றி கோள்கள் நகரும் பாதை ஒரே நீள்வட்ட மல்ல என்பதும், அது சற்றே மாறி மாறி ரோசாப் பூவின் இதழோரங்களை ஒத்த வடிவத்தில் அமைந்திருப்பதும், ஈர்ப்புவிசை காரணமாகத் தான். சூரியனில் இருந்து வெளிவருகிற ஒளியா னது பூமியைஅடையும்போது செம்மை நிறம் பெறுகிறது என்பதையும் அவர் நிரூபித்தார். 

சிறப்பு, சார்பியல் கோட்பாட்டின் அடிப் படையில் வெளியும் காலமும் ‘காலவெளி’ (Space-Time) என்ற பிரிக்க முடியாத ஒரு கட்ட மைப்பு என்ற வரையறைக்கு அவர் வந்தார். அதன் பொருள், இனிமேல் காலம் என ஒன்றோ, வெளியென ஒன்றோ கிடையாது என்பதல்ல. காலம் அதனுடைய தனித்தன்மையைக் கொண் டுள்ளது, வெளி அதற்கேற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது ஆனால் இவை இரண்டும் ஒன்றில்லாமல் தனித்து நின்று பொருள் தருகிறவை அல்ல என்பதே ஆகும்.

சார்பியல் கோட்பாட்டையும், கருந்துளைகள் பற்றிய அனுமானங்களையும் கருத்துமுதல்வாதத் திற்கான எடுத்துக்காட்டாக கைப்பற்றும் முயற்சிகள் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விட்டன. அதாவது, அறிவியலால் அறியவே முடியாத ஒன்று உண்டு என்றும், அண்டம் படைக்கப்பட்ட ஒன்றே என்றும் மேற்சொன்ன கோட்பாடுகள் நிறுவி விட்டதாக அவர்கள் முன்வைக்கின்றனர். உண்மைக்கு மாறாக, மேற் சொன்ன வகையில் கருத்துக்களை முன்வைக்கிற வர்கள் முதலாளித்துவத்தின் தேவையில் இருந்தே செயல்படுகின்றனர். காரண காரியத்தை தாக்கி அழிப்பதே அவர்களுடைய கெட்ட நோக்கம்.  அறிவியலுக்கு விரோதமான கருத்துமுதல்வாதத்தை திணிக்க, அறிவியலையே கையகப்படுத்திக் கொள்கிற முயற்சிகளை, பொருள்முதல்வாதிகள் தொடர்ந்து எதிர்க்க வேண்டியுள்ளது. மேலும் அதனை காரண காரியத்தை பாதுகாத்து முன்னெடுக்கவும் வேண்டியுள்ளது.

சார்பியல் கோட்பாட்டை முன்வைத்து அறிவியலைத் திரிப்பவர்கள் பற்றி லெனின் குறிப்பிடும்போது, “ஐன்ஸ்டைன், பொருள் முதல் வாதத்தின் அடிப்படையின் மீது எந்த தாக்கு தலையும் நடத்தவில்லை” ஆனால் அவருடைய கோட்பாடு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதலாளித்துவ அறிஞர்களால் கைப்பற்றப்பட்டிருக் கிறது. இந்த நிலைமை ஐன்ஸ்டைனுக்கு மட்டும் ஏற்படவில்லை, இயற்கை அறிவியலை சீர்திருத்தி அமைத்த பெரும்பாலான அறிஞர்களுக்கு நேர்ந் துள்ளது” என்றார்.

அறிவியலும்  மார்க்சியமும் 

மனித குல வரலாற்றில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எங்கல்ஸ் விதந்தோதுகிறார். அவரது காலத்தில் நிக்கோலஸ் கோபர்நிகஸ், பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்ற உண்மையை உலகுக்குச் சொன்னபோது இதுவொரு ‘புரட்சிகர நடவடிக்கை’ என்றார் எங்கல்ஸ். அதே போல மார்க்சும் எங்கல்சும் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை வரவேற்றுக் கொண்டாடியதை நாம் அறிவோம்.

மனித அறிவை தத்துவப் பார்வையில் நோக்கும் போது, புலனறிதல், பகுத்தறிதல் என இருவேறு கட்டங்களாக சொல்லலாம். புலனறிதலை மட்டும் சார்ந்து சிந்திக்கும்போது அது அனுபவ வாதத்திற்கு வழிகோலுகிறது. பகுத்தறிவை மட்டும் சார்ந்து நின்றால் அது பகுத்துப் பார்த்து, ஆய்வு செய்கிற திறனை புலனுணர்தலுக்கு மேலான ஒரு உயர்நிலையாக நிலைநிறுத்தி விடுகிறது. மார்க்சியம் இவை இரண்டையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்கிறது. அறிவுச் செயல்பாடு என்பது உண்மை நிலையைப் பற்றி புலன்களின் உணர்வு மற்றும் பகுத்து நோக்கி ஆராயும் நடவடிக்கை ஆகிய இரண்டுமே பிரதிபலிப்பதன் ஒருங்கிணைவே என்கிறது மார்க்சியம்.

மேலும் அது அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது, விஞ்ஞானிகளின் ‘அனுமானங்களுக்கு’ ஒரு முக்கிய இடம் இருப்பதை அங்கீகரிக்கிறது. புனைவாற்றலுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் கணக்கில் கொள் கிறது. இத்தகைய புனைவாற்றல் இயல்புணர்வு ஒரு மாயாஜாலம் போல நேர்வது அல்ல; மனித குலத்தின் கடந்த கால சமுதாய அறிவாற்றலை உள்வாங்கிய ஒரு தனிநபருடைய அறிவாற்றல் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றில் இருந்து தான் வெளிப்படுகிறது.

உத்தேசக் கருத்துக்களில் இருந்து உருவாகும் அனுமானங்கள், புனைவுகள் என்பதோடு முடிந்து விட்டால் அது அறிவியல் ஆகாது. அந்த அனு மானத்தை சாரப்படுத்தி, அதனை பகுத்தாய்ந்து பின்னர் நிரூபணம் செய்வது அவசியம். இதிலிருந்து தான் கோட்பாடுகள் பிறக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட அறிவுக் கட்டத்தில் சரி என அறியப் பட்ட கருத்துக்கள், மற்றொரு கட்டத்தில் மேலும் மேம்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு வருகின்றன. நியூட்டனின் மேதமையோ, பாரடே வின் ஆய்வுக் கருத்துக்களோ போலியானவை அல்ல. அவர்களின் அனுமானங்கள் அறிவி யலுக்கு விரோதமானவையோ அல்ல. ஆனால் அறிவின் வளர்ச்சிக் கட்டத்தில் அவை மேலும் திட்டவட்டமாக வேண்டும். அறிவு வளர்ச்சியும் இயக்கவியலுக்கு உட்பட்டது என்பதையே கருந்துளை பற்றிய வரலாற்றுப் பருந்துப் பார்வை நமக்கு விளக்குகிறது.

பொதுவானதில் இருந்து, குறிப்பான ஒன்றை நோக்கி நகர்வதும். குறிப்பான நிகழ்வுகளை, பொதுவானவைகளுடன் இணைப்பதுமே மார்க் சிய நோக்கு. இந்த இயக்கம் தொடர்ந்து நடக் கிறபோதுதான் அறிவு வளர்கிறது.

கருத்துளை ஒளியை உமிழாது; அதன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது – அப்படி என்றால் எப்போதும் காட்சியே தராத பொருளாக இருக்குமா?  ஐன்ஸ்டீனுக்கே பெரும் கலக்கம் ஏற்பட்டது.   காட்சியே தராத ஒன்றை சந்தர்ப்ப சூழல் தரவுகள் கொண்டு அனுமானம் செய்யலாம். ஆனால் எப்போதும் காட்சியே தராது என்றால் அது மெய்யாக இருக்கிறது என அறிவியல் பார்வையில் ஏற்றுக் கொள்வது கடினம்.  எனவேதான் நேரடிச் சான்று தேடி அலைந்தனர் விஞ்ஞானிகள்.   ஐன்ஸ்டீன்னின் தத்துவத்தை வைத்து மேலும் கருந்துளையை கூர்ந்து ஆராய்ந்தபோது அதன் அருகே குறிப் பிட்ட தொலைவில் செல்லும் ஒளி கற்றை கருந் துளையை வலம் வந்து வந்த திசையிலேயே வெளிப் படும் என கண்டனர். அதாவது கருந்துகளை இருந்தால் அங்கே ஒளிவட்டம் போல காட்சி தரவேண்டும்.

ஏற்கனவே எம் 87  கேலக்சி மையத்தில் கருந் துளை உள்ளது என அனுமானம் செய்து வைத் திருந்தோம். அங்கே கண்ணுக்கு தெரியாத கருந் துளையை சுற்றி ஒளிவட்டம் இருக்கிறதா என தேடி எடுத்த புகைப்படமே தற்போது வெளியாகி யுள்ள புகைப்படம்.  இரண்டு ஆண்டுகள் போராடி, உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்பட்டு  ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, இதுவரை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என சந்தேகத் துடன் வெறும் அனுமானமாக இருந்த கருந் துளை எனும் வான்பொருள் மெய்யாக  இருக்கிறது எனபது உறுதியாகியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் மனித அறிவுப் பரப்பு புதிய திசையில் விரிவடைந்து வருகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறித்து லெனின் “எழுதும்போது எலெக்ட்ரோன் குறித்து எப்போதும் எல்லாம் அறிந்துவிட்டோம் என்ற நிலை ஏற்படாது” என்றார். அதாவது எப்போதும் அறிவுத் தேடல் இருந்து கொண்டே தான் இருக் கும் என்றார் லெனின். அந்தந்த காலகட்டத்தில் உள்ள உற்பத்தி சக்திகள், அதாவது கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது அறிவின் ஆழம் அமை யும். நிலை மறுப்பின்  நிலை மறுப்பு மற்றும் பருப்பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற இயக்கவியல் விதிக்கு இணங்க, புதிய அறிவியல் துறைகளின் பிறப்புக்கும், நவீன கோட்பாடுகள் வளர்த் தெடுக்கப்படுவதற்கேற்ற, புதிய அனுமானங்கள், புதிய ஆய்வுகளுக்குமான சூழல் பிறந்து கொண்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

நவம்பர் புரட்சி நூற்றாண்டு கட்டுரை

இரா.சிந்தன்

பொதுவாக ஒருநாடு தன்னை ‘ஜனநாயக’ நாடென அழைத்துக் கொண்டாலும் அந்த நாட்டின் அரசு எந்த வர்க்கத்தின் கருவியாகவுள்ளது என்பதை வைத்தே, அதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வரமுடியும். முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. குடிமக்களுக்கு சிலஉரிமைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அந்த சமூகத்தில் நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டல் தொடர்கிறது. எனவே பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் தவிர்க்க இயலாததாகின்றன.

மிகச் சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஆட்சிக்குத் தலைமையேற்கும்போது – எப்போது அது தன்னுடைய நலன்களை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறது. நெருக்கடிகள் எழுந்தால், அதன் பாதகமான விளைவுகளை பெரும்பகுதி மக்களின் மீது சுமத்த ஆளும்வர்க்கம் தயங்குவதில்லை. அத்தகைய சுரண்டலுக்கான கருவியாகவே அரசும் பிறநிறுவனங்களும் தொடர்கின்றன.

சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ்:

சோவியத் ஒன்றிய அரசானது – பாட்டாளிகள், விவசாயிகளின் அரசுதான் என்பதை அவர்களின் அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியது.

1917, நவம்பர் 7 ஆம் தேதியில் குளிர்கால அரண்மனை கைப்பற்றப்பட்டது. நவம்பர் 8ஆம் தேதி சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் உலக சமாதானத்திற்கான அழுத்தமான குரல் எழுந்தது. மேலும், அப்போது நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் மூலம் 40 கோடி ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் விவசாயி வர்க்கத்தின் ஆளுகையின்கீழ் வந்தது. குத்தகைச் சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.

’மனிதனை மனிதன் சுரண்டும் முறை இனி இங்கில்லை, சோசலிசப் பொருளாதார அமைப்பில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் பொருளில்லை’ என்று பெருமையோடு அறிவித்தது சோவியத் யூனியன். அதைநோக்கிய பயணத்திற்கு லெனின் தலைமையேற்று பாதை வகுத்தார். ரஷ்யாவின் காலனிநாடுகள் விடுவிக்கப்பட்டன.

1918ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாலினம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு முடிவுகட்டியது. பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக்கியது சோவியத் அரசேயாகும். ஆண் – பெண்திருமணம், விவாகரத்து, வேலை, குழந்தைப்பேறு போன்ற தேர்வுகளை அது சாத்தியமாக்கியது.

1930களில் உலகமும் சோவியத்தும்:

1930களில் உலகம் முழுவதுமே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. அமெரிக்காவில் 25% வேலையின்மை நிலவியது. பல நாடுகளில் 33% வரை வேலையின்மை அதிகரித்தது. விவசாய விளைபொருட்களுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உலகப் போர்களின் வழியாகவும், போருக்குப் பிறகும் அந்த நெருக்கடியின் சுமைகள் முழுமையாக குடிமக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன. ஆனால் சோவியத் பொருளாதாரம் நெருக்கடிகளையோ, விலையேற்றங்களையோ காணாத பேரதிசயமாக இயங்கியது.

1920களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலில் இருந்தன. அதாவது அங்கே முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் நிலவின. முதலாளிகள் இருந்தார்கள். கூட்டுப்பண்ணைகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. குலாக்குகள் இருந்தார்கள்.

1936 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, விவசாயத்தில் குலாக்குகள் என்ற பிரிவின் தேவை ஒழிக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் வெற்றிகரமாக, பிரம்மாண்டமாக இயங்கின.

1936 ஆம் ஆண்டு திருத்தங்கள்:

சோவியத் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 7 வது காங்கிரசில் முடிவு செய்தவுடன், ஸ்டாலின் தலைமையில் 31 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையம் எழுதிய வரைவு அரசமைப்புச் சட்டம், நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. மக்கள் அந்த திருத்தங்களை விவாதித்தார்கள். சுமார் 160 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன; திருத்தங்கள் பெறப்பட்டன. பிறகு எட்டாவது மாநாட்டில் இறுதி வடிவத்தை நிறைவேற்றினார்கள். உலக முதலாளித்துவ நாடுகளின் விமர்சனங்களும், அவை எத்தனை கொச்சையாக இருப்பினும், மாநாட்டின் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான இந்த விவாதமே மிகப்பெரிய ஜநாயக நடவடிக்கை என்பதை கவனிக்கவேண்டும்.

புதியதோர் சமூகச் சூழல்:

புதிய அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து, ஸ்டாலின் உரையாற்றியபோது மிகுந்த உற்சாகம் நிலவியது. அவர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களைக் குறிப்பிட்டார். கூட்டுப்பண்ணை உற்பத்தியும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பிரம்மாண்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ‘3,16,000 டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் குதிரைத் திறன் 57,00,000. அரசின் பண்ணைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 4,00,000 டிரேக்டர்கள் 75,80,000 குதிரைத் திறனோடு செயல்பட்டுவருகின்றன’ என்றார்.

வர்க்கங்களின் புதிய நிலைமைகள்:

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால் சுரண்டும் வர்க்கங்கள் இல்லை. உற்பத்திக் கருவிகளும், நிலம் உள்ளிட்ட வளங்களும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் செயல்படும் சோசலிச அரசுடையதாக இருந்தன. இவ்வாறு பாட்டாளிவர்க்கம் ஒரு புதிய நிலையை எட்டியது. முதலாளித்துவ நாடுகளில் இருப்பதுபோன்ற நிலையில் அது இல்லை. இனியும் அது சுரண்டப்படும் வர்க்கமில்லை. விவசாயிகளும் கூட, கூட்டுப்பண்ணை முறையால் புதிய வளர்ச்சியை எட்டியிருந்தார்கள். விவசாயத்தில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டிருந்தன. அறிவுஜீவிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டத்திற்கு பாதை வகுப்போராக இருந்தார்கள். இதையெல்லாம் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல், வாக்களித்தல், திரும்பப் பெறுதல்:

பொதுப்புத்தியில் ஜனநாயகம் என்பது ஒரு தேர்தல் நடைமுறையாக மட்டுமே கருதப்படுகிறது. தேர்தல், நாடாளுமன்றங்களில் ஜனநாயகம் நிலவுவது மிக முக்கியமே என்ற போதிலும், அவற்றையும் தாண்டிய ஜனநாயக உரிமைகளை சோவியத் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

சோவியத் அரசாங்க அமைப்பில் உச்ச அதிகாரம் பெற்றது ‘சுப்ரீம் சோவியத்’ ஆகும். அதில் இரண்டு அவைகள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றிய அவை; மற்றொன்று, தேசிய இனங்களின் சோவியத் அவை. இந்த அவைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது. 18 வயது வந்த அனைவருக்கும் சம மதிப்பிலான வாக்கும், மறைமுகமான தேர்தல் முறையும் உறுதி செய்யப்பட்டன. (இக்காலகட்டத்தில் பல முதலாளித்துவ நாடுகளில் வாக்குரிமை அனைவருக்குமானதாக இல்லை. வசதி, பாலினம், கல்வியறிவு, இனம், மொழி, வாழிடம் சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன) சோவியத் ஒன்றிய அவை உறுப்பினரை தேர்வு செய்ய – ஒவ்வொரு 3 லட்சம் பேருக்கும், ஒரு பிரதிநிதி என்ற வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

தேசிய இனங்களின் சோவியத் அவைக்கான பிரதிநிதிகள் -ஒவ்வொரு ஒன்றியக் குடியரசிலிருந்தும் தலா 25 , தன்னாட்சிக் குடியரசிலிருந்து 11, தன்னாட்சிப் பிரதேசங்களில் இருந்தும், தேசியப் பகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு அவைகளும் சமஅதிகாரம் கொண்டவையாக இருந்தன. அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்த அமைப்புச் சட்டம், போட்டியிடும் உரிமையையும் உறுதி செய்தது. அதே சமயம், சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து கம்யூனிசத்திற்கு பாதையமைக்கும் லட்சியத்தை வென்றெடுக்கும் நோக்கில், பாட்டாளிவர்க்க அமைப்புகளே வேட்பாளர்களை நிறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. தனியுடைமையை ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகளுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டது – இதைத்தான் முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக விரோத நடவடிக்கையாக வர்ணித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்ப அழைப்பதற்கான உரிமையும் அத்தியாயம் 11இல் பிரிவு 142 உறுதி செய்தது. குடியரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கான தேர்தல்:

மேலும்,சுவாரசியம் தரும் வகையில் சோவியத் ஒன்றியத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் அனைவருக்கும் நேரடியான, சம வாக்கு உறுதிசெய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தில், குடிமக்கள் அரசாங்க நிர்வாகப் பணிகளில் பங்கேற்கவும், அரசு நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளை அனுப்புதல், அரசுப்பணிகளில் நிலவும் தொய்வுகளைக் கேள்வி கேட்பதற்கான உரிமைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டன. ஊழல் முறைகேடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளாக இவை அமைந்தன.

குடிமக்கள் உரிமைகள்:

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பாட்டாளிக்கு உழைப்பு என்பது அவளின்/அவனின் இயல்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. அவள்/அவன் உற்பத்தி நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாக அமைவதில்லை. வேலைசெய்யாத போதுதான் ஒரு பாட்டாளி மகிழ்ச்சியடைவதாகக் கருதும் நிலை உள்ளது. இதனை மார்க்ஸ் அன்னியமாதல் (alienation) என்று குறிப்பிடுகிறார். உற்பத்திப் பொருளில் இருந்து உழைப்பு நடவடிக்கையை அன்னியப்படுத்துவதானது ஒரு மனிதனை அவரது வாழ்க்கை நடவடிக்கைகளில் இருந்தும், சமூக இயல்பிலிருந்தும் தனிமைப்படுத்தி, துண்டிக்கிறது.

சோசலிச சமூகத்தில் உழைப்பு வயிற்றுத்தேவைக்கான ஒரு உயிரற்ற நடவடிக்கையாக இல்லை. மாறாக அது, சொந்த வாழ்க்கைக்கும், சமூகத்தின் நலனுக்குமான சேவையாகிறது. எனவே, ஒரு உழைப்பாளி தன் உழைப்பை மதிப்புமிக்கதொரு பணியாக மேற்கொள்கிறார். இந்தப் பின்னணியில்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏட்டளவில்கூட வழங்கப்படாத உரிமைகளை, சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு உறுதி செய்தது.

உழைப்பும், ஓய்வும் உரிமைகள்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

ஓய்வுக் காலத்தில், உடல் நலம் குன்றிய சூழலில் சோவியத் குடிமக்களைப் பாதுகாப்பதும் உரிமைகளாக்கப்பட்டன. கல்வி உரிமையும், பெண்களுக்கான சம உரிமையும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டன. இனம், மொழி, பண்பாடு, சமூகம் சார்ந்த எந்த வகையிலான வெறுப்பும் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல; தண்டமைக்குரியதாகவும் ஆக்கப்பட்டன.

மத வழிபாடுகளும், பிரச்சாரமும், நாத்திகப் பிரச்சாரமும் அனைத்து மனிதர்களுக்கும் உறுதி செய்யப்பட்டன. பேச்சுரிமை, கூட்டம் கூடுவது, போராடும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

1977ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தன் வேலையைத் தேர்வு செய்வதற்கான உரிமையும், சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. தனிநபர்களின் விருப்பத் தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் தலையீடு செய்வது குற்றமாக்கப்பட்டது.

தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் ஒன்றியம். பிறநாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடியவர்கள், தேசிய விடுதலைக்காக போராடியவர்கள், அறிவியல்ஆய்வுகளைத் தொடர முடியாமல் அபயம் கேட்டு வருவோருக்கு, தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் யூனியன்.

சோவியத் ஒன்றிய கூட்டாட்சி:

சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த குடியரசுகள் 14 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் அவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதுடன், அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் அரசமைப்புச் சட்டம் விவரிக்கிறது. அந்தந்தப் பிராந்திய நீதிமன்ற நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளுக்கான மொழியில் நடப்பது உறுதி செய்யப்பட்டன. 1944 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் செம்படைக் கிளைகள் ஏற்படுத்தவும், வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகம் ஏற்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் வழங்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டாட்சி குறித்த பகுதிகளும், அனுபவமும் வேறொரு முழுநீளக் கட்டுரைக்கானவை.

இதுபற்றி பெருமிதம் பொங்க குறிப்பிடும் தோழர் ஸ்டாலின், ’தேசியங்களும், இனங்களும் சமஉரிமையோடு வாழமுடியாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு கீழே பல காலனி நாடுகளை வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகள், ஆளும் ‘தேசியங்களின்’ சாசனமாகவே அரசமைப்புச் சட்டத்தை வடிக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டது சோவியத் ஒன்றியம்.’ என்கிறார்.

மேலும், ‘சர்வதேசத் தன்மையோடும், அனைத்து தேசியங்களுக்கும் இனங்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்வதாகவும், நிறம், மொழி, கலாச்சாரம், அரசியல் முன்னேற்றம் என ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் எந்தப் பிரிவும் அமையப் பெறாத ஒன்றாக சோவியத் அரசமைப்புச் சட்டம் உள்ளது.’ என்கிறார். அரசியல் வலிமையோ, கடந்த கால நிலைமைகளோ ஒரு குடியரசின் சம அந்தஸ்தை மறுக்கும் காரணியாக அமைய முடியாது என்கிறார் அவர்.

மறக்கவியலாச் சுவை:

சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருக்கையிலே அனைவரும் சமம் என்று இறுமாப்புக் கொள்வதன் பொருள்தான் என்ன? என்ற கேள்விக்கு முதலாளித்துவ நாடுகளில் பதில் இல்லை. சோவியத் ஒன்றியம் அந்த நிலைமையிலிருந்தே மாற்றத்தை தொடங்கியது. அங்கு நிலவிய உற்பத்தி முறையும், உற்பத்தி சக்திகளின் உடைமையும் தனியொரு வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இதன் விளைவாகவே முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத பல உரிமைகளை சோவியத் உறுதி செய்தது. இது குறித்து உலகத் தொழிலாளி வர்க்கமே பிரமிப்போடு நோக்கியது. சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வராமல், இத்தகைய வாழ்க்கைச்சூழல் சாத்தியமில்லை என்ற நிலையில்தான் விமர்சனங்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அவர்கள் இதனை ஒரு விளம்பர நடவடிக்கையாக மட்டுமே சுருக்க விரும்பினார்கள்.

ஆனால், சோவியத் தனது லட்சியப்பாதையில் நடைபோட்டது. அதன் அரசமைப்புச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. அது தனக்குத்தானே வரித்துக் கொண்ட உயர்ந்த லட்சியங்களை அமலாக்கும் போராட்டத்தில் ‘உலகப் பாட்டாளிகளுக்கு இன்றுவரை கனவாக அமைந்திருக்கும் உரிமைகளை, அது சாத்தியமாக்கிக் காட்டியதென்பதை’ யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறை திருத்தத்தின் போதும் சோவியத் ஜனநாயகம் மெருகூட்டப்பட்டது. “நாங்கள் பெற்ற வெற்றிகளின் கனிகளைத் தருகிறோம்” என்ற மகிழ்ச்சியோடு ஸ்டாலின் அதனை வர்ணித்தார். உலகமே அந்தக் கனிகளைச் சுவைத்தது. பின்னடைவுக்குப் பிறகும் தன் கனிகளின் சுவையை சோவியத் வரலாறு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

  • பிரகாஷ் காரத்

இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.

நிதி மூலதன ஆதிக்கம்:

நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.

மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கைவிடப்படும் கொள்கைகள்:

குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.

மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.

கிளறப்படும் அடையாளங்கள்

பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.

மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.

இந்துத்துவப் பரவலின் பின்னணி

பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.

தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.

தமிழக முதலாளித்துவம்

தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல்

வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.

திமுக-அதிமுக

திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.

சித்தாந்தப் போராட்டம்

எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.

இந்துத்வ திட்டம்

இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.

இடது ஜனநாயக மாற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.

தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.

  • தமிழில்: சிந்தன்