‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !

  • இரா. குமரகுருபரன்

(நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவலை பற்றி சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் – ஆசிரியர் குழு)

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழில் 1774-ஆவது ஆண்டில் தனியாரால் தொடங்கப்பட்டது, உலகிலேயே துரிதமாகச் செயல்படும் சுரங்கங்களில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கே. உலகின் மிகப்பெரும் பத்து சுரங்க விபத்துகளில் இரண்டு இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

தன்பாத் (ஜார்கண்ட்) தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் 28 மே 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் வெடித்துச்சிதறி 268 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சுரங்கம் தனியாரான ராஜா ராம்கருக்குச் சொந்தமானது.  இந்த விபத்தின் எதிர்வினையாக, தனியார் நிலக்கரிச் சுரங்கங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுத்தன.  இந்நிலையில், மத்திய அரசு 1971-72 ஆம் ஆண்டில் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியது. உலோகவியல் நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972 நிலக்கரிச் சுரங்கம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973 ஆகியன நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக. 27 டிசம்பர், 1975 சாஸ்நளா (ஜார்கண்ட்) நிலக்கரிச் சுரங்கம் வெடித்து அதன் உடனடி விளைவாக 32,000 கியூபிக் மில்லியன் தண்ணீர் உட்புகுந்த வெள்ளப்பெருக்கில் 383 சுரங்கத் தொழிலாளர்கள் (இதில் 130 பேர் ஒப்பந்த ஊழியர்கள்) சிக்கிப் புதைந்து மாண்டனர். இந்தச் சுரங்கம் பொதுத்துறை இஸ்கோவுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் உலகத்தரத்தில் உள்ளதாகச் சொல்லித் தப்பித்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றது. நாற்பது ஆண்டுகள் கழித்து 2012 ல் விபத்து குறித்த தீர்ப்பு வெளியானது. கவனக்குறைவினால் நடைபெற்ற விபத்து என்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஓராண்டுச் சிறையும் ஆளுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி

சரஸ்வதி’ சிற்றிதழ் தொடங்கிய காலம் முதலாகவே 1950களிலிருந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வந்தவர் கு.சி. பா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் மிக்கவர்.

ஜனசக்தி, தீக்கதிர் முதலான நாளிதழ்களிலும் தாமரை, செம்மலர், சிகரம் முதலான மாத இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய ‘சங்கம்’ புதினம் 1985 இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “செம்மலர் மாத இதழில் இவர் எழுதிய தாகம், சங்கம், சர்க்கரை உள்ளிட்ட படைப்புகள் தொடராக வெளிவந்தன. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி. தலைமுறை மாற்றம் முதலான நாவல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

‘சுரங்கம்’ நாவலின் பின்புலம்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புரமோத் தாஸ்குப்தா மையத்தில் கு.சி.பா. 1998 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது, அசன்சால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பிகாஸ் சௌதரியைச் சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவரது தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதும் முயற்சியைத் தொடங்கினார்.

பிகாஸ் சௌதரியின் வழிகாட்டலில் தன்பாத், ஜாரியா, அசன்சால் பகுதிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களிடையே தங்கி எண்ணூறு அடி முதல் ஆயிரத்து நூறு அடி ஆழம் வரை கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றறிந்து மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான தமது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி துணையுடன் வங்காளி, இந்தித் தொழிலாளர்களிடம் பேசிப்பழகி விவாதித்து, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை அறிந்து, புதினமாகப் படைத்துள்ளார்.

“மனித வாழ்வின் சிரமங்களும் பிரச்சினைகளும் எங்கும் ஒரேவகைப்பட்டதானதால் மனிதர்களைப் புரிந்து கொள்வதிலான தடைகள் இடையூறுகளாக அமையவில்லை என்பது சாதகமான விஷயம். இருப்பினும் அம் மக்களின் முழு ஆன்மாவையும் தரிசிப்பதென்பது சாத்தியமற்ற விஷயம். அம் மனிதர்களுடன் கைபிடித்து, அம்மனிதர்களுக்குள் உருவாகும் அகமனப் போராட்டத்தை வெளிப்படுத்துவதும் கடினமான ஒன்று. இச் சிரமங்களுக்கு மத்தியில்தான் அவர்களின் கரங்களைப் பற்றவும் ஆன்மாவை தரிசிக்கவும் முயன்றிருக்கிறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘சுரங்கம்’ கதைச் சுருக்கம்

வேலை, கூலி, உயிர்ப் பாதுகாப்பு என எந்த உத்தரவாதமும் அற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், இழப்பதற்கு ஏதுமின்றி. தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே விரயப்படுத்தி உழல்கின்றனர் முதலாளிமார்களின் கஜானாவை நிரப்புகிறார்கள். சிறு சிறு தவறுகளைச் சொல்லி நியாயமான கூலியையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் மேலதிகாரிகள். இதைக் களைவதற்காக போராடத் தங்களுள் ஒருவனான பிகாஸ் சௌதரியிடம் தலைமைப்பண்பு இருப்பதை மக்கள் சோதனைக்காலங்களில் உணர்கிறார்கள். பிகாஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறான். போராட்டம் தொடர்கிறது. பண்ணையடிமைகளாக இருந்தபோதிருந்து தொடரும் அச்சம் போராட்டப்பாதை ஊடாகக் குறுக்கிட்டுத் தடைசெய்கிறது.

எப்படியாவது காலம் மாறிவிடும்; காளி கண்திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பல தொழிலாளர்கள் இப்போது நிலைமையை உணர்ந்து தொழிற்சங்க உணர்வோடு வேலைநிறுத்தத்தில் இறங்கி, நிலக்கரிச் சுரங்கத் தொழில் நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டுமென அணிதிரள்கிறார்கள். சுரங்கம் அமைக்கத் தங்களது விளைச்சல் நிலங்களை இழப்பீடு ஏதுமற்று விட்டுக்கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளையும் தனி அமைப்பின் கீழ் இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறார் பிகாஸ். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம், உண்ணாவிரதம், முற்றுகை, சிறை என்று பலவழிகளில் போராட்டப்பாதை தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி ஒருவாறாக, நிலக்கரிச் சுரங்கம் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. ஆனால், முதலாளி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக, அரசுத் தலைமைப் பொறுப்பு, தனி அமைச்சர், பெர்சனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று நிர்வாக அமைப்பின் பெயர்களில் மட்டுமே மாற்றம். கூலி கூடினாலும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் அதே நடைமுறையான முறையற்ற சுரண்டல் தொடர்கிறது. தொழிற்சங்கத்தலைவராக பிகாஸ் பலமுறை எச்சரித்தும் சுரங்கக் கட்டமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக விபத்து நேர்ந்து, பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். சகலபகுதித் தொழிலாளர்களும் உயிர் நீத்தோரின் நினைவாகத் திரண்டெழுப்பிய அஞ்சலி கீதம் எதிர்கால சமத்துவ வளவாழ்வுக்கான எழுச்சி கீதமாகிறது.

யதார்த்த சூழல் சித்திரிப்பு

மனிதர்கள், கறையான் புற்றுப் போன்ற குடிசைகளில் குடும்பம் நடத்துகின்றனர். கறையான் புற்றுக்கு பாம்புகள் வருவது வழக்கம்தானே? விஷப்பாம்புக்கடிக்கு இரையாகும் மக்களும் உண்டு. பன்றிகள், நாய்கள் படுத்த கெட்ட வாடை பகலில் உட்கார உதவும் கயிற்றுக் கட்டில், இரவில் குழந்தைகளிடமிருந்து கணவன் மனைவியின் அந்தரங்கம் காக்கும் தடுப்புச்சுவராக எழுந்து நிற்கும். ஆறுமணிக்கு காலைச்சங்கு ஒலித்ததும் கூண்டிலிருந்து சர்க்கஸ் வளையத்துக்குள் நுழையும் மிருகங்களைப்போல் சுரங்கத்துக்குள் நுழையும் தொழிலாளர்கள் கறையான் புற்றிலிருந்து ஈசல்கள் இறக்கை முளைத்துப் பறப்பது போல லிப்டிலிருந்து வெளியேறுகிறார்கள். மேல்பகுதி இயந்திரக் கொட்டகையில் ‘பிட் பாட்டத்தில்’ (உள் அடித்தளம்; இருப்பவர்களுக்குக் கேட்குமாறு மின்சார மணியொலிப்பு பணிநேரம் முடிவடைவதைத் தெரிவிப்பதும் விளக்கையும் ஹெல்மெட்டையும் தொப்பியையும் காவலாளியிடம் ஒப்படைத்துக் கையெழுத்திட்டு தொழிலாளர்கள் கீழிருந்து மேலாக வெளியேறுவதும் அடுத்த ‘ஷிப்ட் தொழிலாளர்கள் மேலிருந்து கீழிறங்கி அவசர அவசரமாக உள்வேலைக்கான உடைகளை மாற்றிக் கொண்டு கேப் லேம்ப்’ அறைக்குச் செல்வதும், ஹெல்மெட்-ஹெட்லைட்-பேட்டரி அணிகலன்களை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும் எந்திரத்தனமாக நடைபெறுகின்றன.

தண்டா (மூங்கில் கழி கொண்டு சுவற்றைத் தட்டிப்பார்த்து சுவர்க்கூரை வலுவை சோதிப்பது, ‘சேப்டி லேம்ப்’ மூலம் மீதேன் கேஸ், கார்பன்-டை- ஆக்ஸைடு கசிவு சோதிப்பது மைனிங் சர்தார் கடமை. நீர்க்கசிவு உடைப்பு சோதனை, நீர் எந்திரம் செயல்பாட்டைக் கண்காணிப்பது ‘பம்ப் கலாசி யின் பணி, நிலக்கரிப் படிவத்தை லேசான வெடிவைத்துத் தகர்க்கும் டிரில்லர்’ உடைபட்ட கரியை வெட்டிக் குவிப்பவர், அதை இரும்புத் தொட்டியில் அள்ளிப்போட்டுப் பாரம் ஏற்றுபவர்கள் என்று மூவகைப் பிரிவினர் இங்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.

கிணற்றுத்துளை வழி மேல்தளத்திலிருந்து இறங்கிவரும் மின்சார ஏணி, குடைவுச்சுவர் வழி ஒழுகும் நீர், மேற்கூரை இற்றுவிழும் ஓட்டை ஏணி, ஏணியின் துரு வாடை, கிரீசின் எண்ணெய் கமறல் ஏற்படுத்தும் குமட்டல் வாடை இருளில் ஏணி செல்லும்போது கூரையிலும் சுவர்களிலும் புரண்டோடும் ஊற்றுவெள்ளம். சுவர்ப்பக்கவாட்டு வாய்க்காலில் மழைவெள்ள இரைச்சல், ராட்சத மின் எந்திரங்கள் பள்ளங்களில் சேகரமான நீரை உறிஞ்சி தாரையாகக்கொட்டுவது, ஏணியிலிருந்து இறங்கிய தொழிலாளர்கள் ஒரேசமயத்தில் தங்களது ஹெல்மெட்கள் மூலம் இயக்கும் பேட்டரி வெளிச்சம் குறுக்களவு பதிமூன்று அடி – உயரம் ஒன்பது அடியுள்ள குடைவுப்பாதைகள், ஐம்பது அடி தடிமனான கிளைக் குடைவுத் தூண்கள் கரிப்படிவம் வரையிலான தோண்டுமிட எல்லைகள் என்ற சித்திரிப்புகள் யதார்த்தமான சுரங்கப்பாதைக்குள் திகிலுடன் நம்மைப் பயணிக்க வைப்பன.

கதை மாந்தர்கள்

பிகாஸ் சௌதரி

கதை எழுதத் தூண்டிய பிகாஸ் சௌதரியின் சொந்த தொழிற்சங்க வாழ்க்கை காரணமாக, நாயகன் பெயரும் பிகாஸ் சௌதரியாகவே அமைந்துவிட்டது. அரசியல் தொழிற்சங்க வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் நிஜ மனிதர் தோழர் பிகாஸ் சௌதரி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் சௌதரி குறித்த நாடாளுமன்ற இணையதள விவரக்குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது மேற்கு வங்க மாநில சிபிஐ எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க மாநில இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில செயற்குழு உறுப்பினராகவும், நான்கு முறை மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற அவை உறுப்பினராகவும். மத்திய அரசின் நிலக்கரித்துறை தொடர்பான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றவர். புதின நாயகனும் இவரைப்போலவே தொழிற்சங்கவாதி; மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். தத்துவப் பார்வையும் அரசியல் வழிகாட்டுதலும் தீர்மானம் மேற்கொள்வதில் தெளிந்த ஞானமும் பெறவேண்டும். அத்தோடு நிறையப் படிக்க வேண்டும் என எண்ணினான். அன்றாட உழைக்கும் மக்கள் நடத்தும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் அரசியல் பொருளாதார. நடவடிக்கைகளையும் கற்றுத்தெளிவடைய ‘கணசக்தி’ பத்திரிகையைத் தற்பொழுது முறையாகப் படிக்க ஆரம்பித்தான். “கணசக்தி” என்பது மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஐ (எம்) கட்சி வெளியிட்டுவரும் வங்காள நாளிதழ் ஆகும்.

ஜமுனா குமாரி

பிகாஸ் பெற்றோர் இருவரும் காலமான பின்னர் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்துப் படிக்சு வைத்த பிகாஸின் அக்கா தம்பிக்குத் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமானால் வாழ்க்கை முன்னேறிவிடும் என்று நம்புபவள். ஒவ்வொரு முறையும் சுரங்கத்தில் தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம், மறியல் நடக்கும் போதும் நிர்வாகம், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகும் பிகாஸ், துர்காதேவி அருளால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிப்பதாக’ நம்பும் ஜமுனா குமாரி தம்பியின் சமூக வாழ்க்கைக்குத் தடை செய்யவில்லை. எனவே தம்பியின் தொழிற்சங்க சமூக வாழ்வு இடையறாது தொடர்கிறது.

சகுந்தலா தேவி

வஞ்சகனான சுரங்க முதலாளி திவாரியின் மனைவி சகுந்தலா தேவி ’கருணைமிக்க சூழல் கைதி’ பூர்வீக கிராம வாழ்க்கையை ஏக்கத்துடன் அசைபோடுபவள். ஏழையான தன் பெற்றோருடன் உறவு அறுபடக் காரணம் கணவனின் ‘ திடீர் ‘ பணக்கார புத்தியும், பணக்கார ஒழுக்கக்கேடும் என்பதை நன்குணர்ந்தவள். அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட சமூக உயர்வட்டாரம்’ பங்கேற்கும் தமது மகளின் ஆடம்பரத் திருமண நிச்சயதார்த்தத்தில் தன் பெற்றோர் பங்கேற்பது இழிவு எனக் கணவன் கருதவே மனவேதனை கொள்கிறாள். அவனைப்பழிக்கிறாள். அவ்வப்போது பல பெண்களுடன் பாலியல் சகவாசம் வைத்திருக்கும் தன் கணவனை அறிவாள். தட்டிக்கேட்டு தனது மணவாழ்வு முறிந்துபட்டால் வரும் வலியை உணரக்கூடியவள் என்பதால், எதிர்க்க இயலாது அமைதி காக்கிறாள். ஆனால் தன்னையொத்த

சீமாட்டிகளைப் போல, கணவனின் ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகும் பாத்திரமல்ல. பொதுவாக வில்லன் என்றாலே அவன் மனைவியும் அப்படித்தான் என்று சித்திரிக்கும் இலக்கிய பாத்திரங்களைப் போலல்லாதது சகுந்தலாதேவியின் பாத்திரப்படைப்பு.

கதையில் இடம்பெறும் அங்கத காட்சிகள் சமூக அழுக்குகள் அலசப்படும் இடமாக அமைகின்றன.

மாண்பற்ற முதலாளித்துவம்

ஒருமுறை சுரங்கத்தினுள் சிறுவெடி வைத்துக் கரிப்படிவத்தைப் பிளந்தெடுக்கத் துளையிடும்பொழுது தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கி விட்டது. அதை உடனடியாக அடைத்து விடும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் பெரிய விரிசல் ஏற்பட்டு நீர்ப்பிரவாகம் எடுத்து விடும். உள்ளே உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் ஒரு தொழிலாளி தன் முதுகை அத்துவாரத்தின் மீது சாய்த்து தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கி நின்று கொண்டான். தொழிலாளர்கள் முட்டுப்பலகையை எடுத்தோடி வந்தனர். உடன் புதிய நெருக்கடி ஒன்று உருவாகிவிட்டது. அவன் அமுக்கிக் கொண்டிருந்த துவார வடும்பை ஒட்டி தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கிவிட்டது. அவன் நகர்ந்து ஒதுங்கினால் போதும், சுவரில் பெரும்பிளவு உருவாகிவிடும் இதையுணர்ந்த பொறியாளர் உடன் ஆபத்தைத் தடுக்க அமுக்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீதே பலகைகளை அழுத்தி முட்டடிக்க உத்தரவிட்டான். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல உயிரோடு அத்தொழிலாளி சுவற்றில் அறையப்பட்டான் தன் சக தொழிலாளியின் உடல் மீது மனதைக் கல்லாக்கிக் கொண்டு மற்றவர்கள் அவ்வேலையைச் செய்து முடித்தனர். அவர்களால் மறுத்துப் பேசமுடியாத நிலை. சுரங்கப் பாதுகாப்புக்காகவும் தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகவும் அவன் தவிர்க்க முடியாமல் தன் உயிரைத் தியாகம் செய்தான். அந்த கொடும் நிர்ப்பந்தத்தால் விளைந்த தியாகம், நிர்வாகத்தால் சர்வ சாதாரணமாக கடந்து செல்லப்படுகிறது.

சோசலிச எதார்த்தவாதம்

எஸ். தோதாத்ரி சோசலிச எதார்த்தவாதத்தின் அடிப்படைகள் எனும் தமது நூலில் அதன் பண்புகளைக் கீழ்க்காணுமாறு கூறுவார். “உலக இலக்கிய அரங்கில் யதார்த்தவாதம் வளர்த்து வைத்திருந்த விதிமுறைகளை அடியொற்றியே சோசலிச எதார்த்தவாதம் எழுந்தது; எதார்த்தவாதத்தில் காணப்படும் சமூக ஆய்வு முறை வகைப்பாடான பாத்திரப்படைப்பு. சமூகத்தைப் புறவயமாக (objective) ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலும் தொடருகின்றன. சமூக விமரிசனமும் ஆழமாக இடம் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக சோசலிச எதார்த்தவாதத்தில் வேறு சில புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. உழைப்பு மனிதனது வாழ்வின் அடிப்படை என்ற நோக்கம் இந்த இலக்கியங்களில் காணப்படுகிறது சமூகம் இயங்கியல் பொருள்முதல்வாத முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை சித்தரிக்கப்படுகிறது. உழைப்பவனைச் சார்ந்து நிற்கும் போக்கு காணப்படுகிறது. இதனையொட்டிய வரலாற்று உணர்வும் மனிதநேயமும் சமூக உணர்வும் மற்ற இலக்கியங்களில் காணமுடியாத அளவிற்கு இந்தவகை இலக்கியங்களில் மிகவும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சூழமைவு

சுரங்கம் புதினம் முழுவதுமாக தொழிலையும் தொழிற்சங்கத்தையும் வளர்ப்பதாகவும், படிப்படியாக சமூக மாற்றம் கோரியுமாக வளர்கிறது. ஒடுக்கப்பட்ட முதல் போராட்டத்தில் சுரங்க முதலாளிகளின் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தெளிகிறான் பிகாஸ்.  சகதொழிலாளிகளிடமிருந்து எழுச்சி பெறும் ஒரு தலைமைப் பண்பாளனை அடையாளம் கண்டடைந்து, மேலும் போராட்டத்திற்கு ஊக்குவிக்கிறது தொழிலாளி வர்க்கம். எதார்த்தமான சூழலுடன் கிளர்ச்சிப் பிரச்சாரம் இணையவே கூடுதல் வலு கிடைக்கிறது. போராட்டம் வெற்றிபெறுகிறது. சூழல் கனியவே, சுரங்கத்தொழில் பொதுத்துறை வசமாகிறது,

கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பின் மீதான உரையாடல் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தனியார் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் தந்து ஏமாந்த விவசாயிகளையும் போராட்டத்தில் இணைப்பதன் தேவையை உணர்த்தும் தொழிற்சங்கத்தலைவர். வர்க்க சமரசமின்றிப் போராடும் தலைமையின் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் சமூக விமர்சனமாக விவாதங்களில் இடம் பெறுவதோடு முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றன.

சுரண்டலின் உச்சம்

கூலியைக் கூட ஏமாற்றிப் பிடித்தம் செய்து சுரண்டுவது முதலாளித்துவ நடைமுறை கந்துவட்டிக்காரர்களும் சாராயக்கடைக்காரர்களும் முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவைபுரிவது முதலாளித்துவ சுதந்திரத்தில் அனுமதிக்கப்படுகிறது. நியாயமான கூலிகேட்டு அணிதிரளாமல் பார்த்துக் கொள்வதில் இது முதலாளிகளுக்கு உதவுகிறது. சாராயம், கந்துவட்டியில் அவதியுறும் தொழிலாளர் வர்க்கம் இற்று அழிவதை முதலாளி வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. தன்னுயிரைத் திரணமாக மதித்து வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்கள் ஒருமுறையே சாகிறார்கள்; அடிமைகள் அன்றாடம் சாகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

வர்க்கப் போராட்ட பார்வை நாவலின் ஆதாரமாக ஓடுகிறது.  தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் மீண்டும் பிகாஸ் சௌதரி தலைமையில் அணிதிரள்கிறார்கள் வர்க்கப் போராட்ட எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத நிர்வாகம், தொழிலாளர்களை உளவறிய முயல்வதையும், திரள விடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டம்

‘சுரங்கம்’ புதினம் முழுவதுமே அனுபவ ரீதியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறியதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமை எவ்வாறு நிறைவேறியது? ஒன்றுபட்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் உருக்குப்போன்ற ஒற்றுமையினால் தான். அளவில் ஏற்படும் மாற்றம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோலக் குணத்தில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை முதலாளிகளுக்குச் சாதகமே. கூடுதல் எண்ணிக்கை இதர பகுதி தொழிலாளர்களையும் வேலை இழப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. ‘ஒற்றுமைக்கான போராட்டம், போராட்டத்திற்கான ஒற்றுமை என்பதை தொழிற்சங்க இயக்கம் இயங்கியல் அடிப்படையில் அணுகுவதால் முதல் தோல்வியிலிருந்து பெறும் படிப்பினை படிநிலைகளில் வெற்றியடைவதில் முடிகிறது.

முடிவுரை

நாவலின் காலகட்டம் 1975 வரைக்குமானது என்று ஆசிரியர் கு.சி.பா., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எண்ணற்ற போராட்டங்கள் மூலம் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்கு சுரங்கத்தொழில் மாறியது. இருந்தபின்னும் சுரண்டல் முறை தொடர்கிறது சுரங்கத் தொழில் இப்போது மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டும் சுரங்கத்தொழில் மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. 1972- 73 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட சுரங்கத்தொழில் சட்டங்கள், மார்ச் 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரியற்ற சக்கையான சுரங்கங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களை நாடுவதற்கு ஒப்பாக தொழிலாளர்களும் சக்கையானபின் தூக்கி வீசப்படுகிறார்கள். மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறைக்கு முடிவுகட்டும் வரை விடியல் இல்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் ‘மீண்டும் லாபம், அதிக லாபம் மட்டுமே குறிக்கோள்’ எனும் சுரண்டல் புதுப்புது வடிவங்களில் உருவாகிறது.

சுரங்கம் நாவலில்,“தன்பாத் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி பிறருக்காக எப்படி தன்னைத்தானே உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டான்? என்ற தொழிலாளர்களின் அடிமனதில் உறைந்துவிட்ட சித்திரம் வீரயுக எழுச்சிப்பாடலாக ஒலிக்கும். பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு.  சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

எழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி

நீங்கள் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டீர்கள்? கதைகள் எப்படி எழுவது என்பதைப் பற்றி ஒரு நூல் தயாரிக்குமாறு,”புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்” என்ற கூற்றிற்கு ஏற்ப உலகப் புகழ்பெற்ற காவியமான “தாய்” நாவலை எழுதியவரும், உலக இலக்கியங்களுக்கும் படைப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவருமான தோழர் மாக்சிம் கார்க்கி அவர்களிடம் பலரும் கேட்டு வந்தனர். இறுதியில் அவர், இலக்கியம் எவ்வாறு படைப்பது, கதை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி பாடப் புத்தகமெல்லாம் எழுத முடியாது என்றும், அதற்கான சாத்தியமும் இல்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் எழுதத் தொடங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய, கவனிக்க வேண்டிய பல அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். தான் எப்படி எழுதக் கற்றுக் கொண்டேன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார் அவற்றில் சில….

வாழ்க்கையின் போக்கைப் பற்றிய எனது “கருத்துக்கள்” மெல்ல மெல்லத்தான், கஷ்டத்தோடுதான் உருவாகின. காரணம், எனது நாடோடி வாழ்க்கை, நான் முறையான கல்வியறவு பெறாத குறை. சுய முயற்சியாகக் கற்றுக் கொள்ள நேரமில்லாது போன குறை – ஆகியவற்றின் குறை.

மக்களுக்குச் சொல்ல முடிகிற அளவுக்கு, சொல்ல வேண்டிய அளவிற்கு நான் கண்டும், கேட்டும், அனுபவித்தும் இருக்கிறேன் என்பதை உணர்ந்தும், மற்றவர்கள் சில விசயங்களை அறிந்தும் உணர்ந்தும் வைத்திருந்ததற்கும் மாறாக நான் அறிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறேன் என்று தோன்றியது.

சொற்களைக் கொண்டு மக்களைச் சித்தரிப்பதில் இருக்கும் கலையிலும், அவர்களுடைய பேச்சுக்களை உயிர் ததும்புவனவாயும், நேரடியாகக் காதில் கேட்கிற மாதிரியும் செய்கிறதிலிருக்கிற கலையிலும் நிறைய எழுத்தளார்கள் வெளிப்படுத்திய திறன், வசனங்களை உருவாக்குவதில் அவர்களுக்கிருந்த உன்னதமான திறன், எப்பொழுதுமே என்னை ஆட்கொண்டவாறிருந்தன. இதன் பின்தான் எழுத ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு எல்லா நாட்டு இலக்கியத்திலும் ஞானம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் சாராம்சத்தில் பார்த்தால், எல்லா நாடுகளிலும் எல்லா மக்கள் சமூகங்களிடையிலும், இலக்கிய படைப்புத் தன்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது.

மனித நினைவுக்கெட்டாத நாளிலிருந்து மனிதனின் ஆன்மாவைச் சிக்கவைத்துப் பிடிக்க எங்குப் பார்த்தாலும் ஒரு வலை பின்னப்பட்டு வந்திருக்கிறது, இன்னொரு புறத்தில் மனிதர்களிடயேயிருந்து மூட நம்பிக்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் சார்புக் கருத்துக்களையும் நீக்குவதையே தமது பணியுன் குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே, மனிதர்களுக்குப் பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றைக்கும் இருந்துவருவது போலவே, தம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனின் முக்கியக் கடமையாகும்.

மனிதனுக்கு முன்னேற்றப் பாதையைச் சுட்டிக் காட்டி அந்தப் பாதையலேயே செல்லும்படி உற்சாகப்படுத்திய கலகக்காரர்களின் கைதான் மேலோங்குகிறது.  பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய அருவருக்கத்தக்க கெட்ட குணங்களை உழைப்பாளி மக்களுக்குத் தொற்றிக் கொள்ளச் செய்திருக்கிற முதலாளித்துவ சமுதாயத்தால் உண்டாக்கப்பட்டுள்ள மோசமான நிலைமைகளைத் தட்டிக் கொடுத்துத் திருப்திப்படுத்தும்படியோ அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளும்படியோ பேசுகிற பிரச்சாரகர்களின் கை விழத்தான் செய்கிறது என்பதை உணர வேண்டியது முக்கியமாகும்.

“மனிதனைப் பற்றிய வரலாற்றை விட மனித உழைப்பின் படைப்புத் தன்மையின் வரலாறு எவ்வளவோ சுவையுள்ளதாகும். பொருள் நிறைந்ததாகும். நூறு வயது எட்டுமுன் மனிதன் இறந்துவிடுகிறான். ஆனால், அவனது படைப்புகளோ பல நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து வாழ்கின்றன”.

எழுத்தாளனின் வேலை விஞ்ஞானியின் வேலையைப் போன்றதே.

ஒரு விஞ்ஞானிதான் தனித்திறன் ஆய்ந்த துறையின் வளர்ச்சி வரலாற்றை அறிந்திருந்ததால்தான் அவனால் கற்பனைக் கதைபோல் தோன்றுகிற விஞ்ஞானத்தின் சாதனைகளையும் அதன் வளர்ச்சியையும் விளக்க முடியும். விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் பொதுவானவை நிறைய உண்டு; கவனித்தறிதல், ஒப்புநோக்குதல், பயில்வது ஆகியன இவைகள் இரண்டிலும் தலைமைப் பாத்திரம் வகிக்கின்றன. எழுத்தாளனுக்கும் சரி, விஞ்ஞானிக்கும் சரி கற்பனையும்  உள்ளுணர்வும் இருந்தே தீர வேண்டும்.

விபரங்களின் சங்கிலியிலே விடுபட்டுப்போன கண்ணிகளை கற்பனையும், உள்ளுணர்வும் தந்து பூர்த்தி செய்ய உதவுகின்றன. இதனால் விஞ்ஞானிக்கு உத்தேசக் கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்க முடியாது, இவை மனித சிந்தனை இயற்கையின் சக்திகளைப் பற்றியும் தோற்றங்களைப் பற்றியும் நடத்துகிற விசாரணைகளுக்கு ஏறத்தாழ பயனுள்ள வகையில் வழிகாட்டுகின்றன. இந்த இயற்கையின் சக்திகளையும் தோற்றங்களையும் படிப்படியாகக் கீழ்ப்படியச் செய்வதன் வழியாக மனிதனின் சிந்தனையும் சித்தமும் மனிதப் பண்பாட்டைப் படைக்கின்றன. இந்தப் பண்பாடுதான் மொத்தத்தில் நமது “இரண்டாவது இயல்பாக” இருப்பது. இரண்டு உண்மைகள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

ஒன்று, டிமிட்ரி மெண்டலிவ் என்ற புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி தம் காலத்தில் தெரிந்திருந்த இரும்பு, ஈயம்,கந்தகம், பாதரசம் முதலானவற்றைப் பயின்றதன் அடிப்படையில் தமது தனிம வரிசை அட்டவணையை உருவாக்க முடிந்தது. இயற்கையிலேயே இருக்கிற கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சில தனிமங்களையும் கண்டறிந்தார். ஒவ்வொன்றின் பண்புகளையும் குறித்தார். அது மட்டுமின்றி மெண்லிவின் முறை பிற்காலத்தில் இதர பல தனிமங்களையும் கண்டுபிடிக்க உதவியது.

இரண்டு, ஹொனர் டி பால்ஸாக் ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர். தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் நூல்களில் ஒன்றில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத சில சக்தி மிகுந்த திரவக் கசிவுகள் மனித உடம்பில் வேலை செய்கின்றன என்றும், அவை அந்த உடம்பின் மனக்கூறு-உடற்கூறு வகைப்பட்ட பல்வேறு குணாம்சங்களை விளக்குமென்றும் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார். பல பத்தாண்டுகள் கழித்த பிறகு அதுவரை அறிந்திராத பல சுரப்பிகள் மனித உடம்பில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சுரப்பிகளே ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன;இந்தக் கண்டுபிடிப்பு என்ஜைம் சுரப்பிகள் பற்றிய மிக முக்கியமான விஞ்ஞானத்தைப் படைப்பதில் போய் கொண்டுபோய்விட்டது. இவ்வாறு விஞ்ஞானிகளின், முன்னணி எழுத்தாளர்களின், படைப்புத் திறனுள்ள நடவடிக்கைகள் இணைந்து செல்வது அப்படியொன்றும் அரிய விசயமல்ல. ஒரே சமயத்தில் கவிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் பலர் இருந்ததாக கார்க்கி கூறுகிறார்.

“இலக்கியத்தின் படைப்புத் தன்மை என்பது குணச்சித்திரங்களையும் “மாதிரிகளையும்” (Types) உருவாக்கும் விசயம் சம்பந்தப்பட்டதாகும். அதற்குக் கற்பனையும் புனைத்திறனும் தேவைப்படுகின்றன. ஒரு எழுத்தாளன் தனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரனையோ அரசு ஊழியரையோ தொழிலாளியையோ பாத்திரமாக வடிக்கும்போது, அவன் ஒரு குறிப்பிட்ட தனி நபரை ஏறத்தாழ அப்படியே படம் பிடித்த மாதிரி படைத்தால் அது வெறும் புகைப்படமாகுமே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதற்கு ஒரு சமுதாய முக்கியத்துவமோ அறிவூட்டவல்ல பொருட் குறிப்போ கொஞ்சம் கூட கிடையாது. இவ்வாறு படைக்கும் படைப்பு மனிதனைப் பற்றியோ, வாழ்கையைப் பற்றியோ நாம் பெற்றிருக்கும் அறிவை விரிவாக்க அறவே உதவாது.

ஆனால், ஓர் இருபது, ஐம்பது அல்லது ஒரு நூறு கடைக்காரர்களுக்கோ, அரசு ஊழியர்களுக்கோ,தொழிலாளிகளுக்கோ அலாதியாயமைந்த மிகவும் குறிப்பான வர்க்க குணாம்சங்களையும், பழக்கவழக்கங்களையும்,பேச்சுத் தோரணையையும் பொதுவாக்கி சுருக்கித்தர ஓர் எழுத்தாளனாலோ கலைஞனாலோ முடியுமானால்,அவற்றையெல்லாம் தனி ஒரு கடைக்காரனாக, ஒரு அரசு ஊழியராக, ஒரு தொழிலாளியாக சுருக்கிதர முடியுமானால், அதன் வழியாக அந்த எழுத்தாளன் ஒரு மாதிரியை படைக்க முடியும். அதுவே கலையாகும். கலைஞனிடமுள்ள விரிவும், வாழ்கையைப் பற்றிய வளமான அனுபவமும் அவனுக்கு ஒரு சக்தியைத் தருகின்றன. விசயங்களைப் பற்றி அவன் கொண்டிருக்கிற கண்ணோட்டத்தைத் தவிர, அதாவது அவனுடைய அகநிலைத் தன்மையைவிட அந்தச் சக்தி மேலானது. அகநிலைப் போக்கிலே பார்க்கும்போது முதலாளித்துவ அமைப்பையோ அல்லது வேறு சில கருத்துக்களை ஆதரித்து நிற்பவராக ஆகிவிடுவர்.”

“எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கியத்தின் வரலாற்றில் ஞானம் இருந்தாக வேண்டும்”.

தனது வர்க்கத்தையும் தனது நாட்டையும் பாதிக்கிற சகலத்தையும் நுண்மையாக வாங்கிக் கொள்பவனே கலைஞன். தனது வர்க்கத்தின், தனது நாட்டின், காது, கண், இதயம் எல்லாமே அவன். அவனது குரல் அவன் காலத்திய குரலாகும். முடிந்தவரைக்கும் சகலத்தையும் அவன் அறிந்திருக்க வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை. மேலும் அவன் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டிதும் அத்தியாவசியம். அதேபோல் மக்களின் சமுதாய, அரசியல் சிந்தனைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”.

இடிந்து ஒடுங்கிப் போனவர்களைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்று பலரும் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். காரணம் சாதாரணமானதுதான். “அற்பப் புத்தி படைத்த, பிறருடைய ரத்தத்தை உறிஞ்சி அந்த ரத்தத்தை பணமாக மாற்ற முயற்சிப்பதிலே வெறி கொண்டு திரிந்த மனிதர்கள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்”.

கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது.

எழுத்தின் வேலைப்பாடுகள் குறித்து சில…

மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணிய பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை உன்னிப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடை வேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒருமைப்பாடுகளையும் ஆழ்ந்து கவனித்தறியும் ஆற்றலும், இடையறாத முடிவில்லாத பயிற்சியும் இருந்தால்தான் மாதிரிப் படைப்புகளாக உள்ள மனிதர்களைப் பற்றி பளிச்சென சித்தரித்துத் தர முடியும்.”

இலக்கியத்தில் கற்பனாவாதம், யதார்த்தவாதம் என்ற இரண்டு போக்குகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன. யதார்த்தவாதம் என்பது, மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளையும் உண்மையாக,மேல்பூச்செதுவும் பூசாமல் சித்தரித்துக் காட்டுவதாகும். கற்பனாவாதத்துக்கு பல வரையறைகள் கூறப்படுகின்றன. ஆனால், எல்லா வரலாற்றாசிரியர்களுக்கும் திருப்தியளிக்கிற மாதிரி இதுவரை கறாரான, முழுமையான வரையறை எதுவும் வகுக்கப் பெறவில்லை. கற்பனாவாதத்தில் வினைச் சிறப்புடையது, வினைச்சிறப்பற்றது என்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு போக்குகள் உண்டு. பூச்சு இட்டு அழகுபடுத்தி அத்துடன் மனிதனைச் சமரசப்பட்டுப் போகும்படி செய்ய முயற்சிக்கிறது அல்லது மனிதனை “வாழ்வின் தீராப் பிரச்சனைகளில் – விஞ்ஞானத்தாலன்றி மற்றபடி தன் சிந்தனையினால் சரி செய்ய முடியாத பிரச்சனைகளில் மலட்டுத்தனமான உள்நோக்கு விசாரணை நடத்தும்படி செய்வதன் வழியாகத் தன்னை சூழ்ந்திருக்கும் விசயங்களிலிருந்து மனிதனின் கவனத்தை திருப்பிவிடவும் முயற்சிக்கிறது. வினைச் சிறப்புள்ள கற்பனாவாதம், வாழ வேண்டும் என்கிற மனிதனின் சிந்தனையை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தன்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கை நிலைமைகளையும் மீறி, அது சுமத்தப் பார்க்கும் எந்தவிதமான நுகத்தையும் தள்ளிவிட்டு, நிமிர்ந்து மேலேறிவரச் செய்வதற்கு முயற்சிக்கிறது”.

“கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி”.

“உலகின் பகைச் சக்திகளை தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் அடக்க முடியும். மேலும், வெற்றி பெற்ற பிறகு தேவையான எல்லா நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் உருவாக்க முடியும்”.

தோழர் மாக்சிம் கார்க்சியின் நினைவு தினம் 18 ஜூன் 1936

உதவியவைகள்

1. நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன் – மாக்சிம் கார்க்கி
2. தமிழ் விக்கிப்பீடியா

(தொகுப்பு ஆர்.சுதிர்)

இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்

 

மார்க்சிய இலக்கியம் எனும் சொல்லாட்சியில் இரு அம்சங்கள் உள்ளன: ஒன்று: வாழ்வு பற்றிய கண்ணோட்டம்: இரண்டு: இலக்கியம் பற்றிய கண்ணோட்டம்.

மனித வாழ்வின் சகல கூறுகளையும் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்பது தான். அது பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்பதாக அது உருவான காலத்திலேயே பேச ஆரம்பித்தார்கள். இதை அப்போதே சட்டென்று மறுத்துக் கூறினார் மார்க்சின் மனசாட்சியாகத் திகழ்ந்த ஏங்கெல்ஸ். ஜோசப் பிளாக்கிற்கு அவர் எழுதிய (21-9-1890) கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.

இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி என்பதற்கும் ஒரே காரணி என்பதற்கும் மலையளவு உயரத்திற்கும் கடலளவு அகலத்திற்கும் வேறுபாடு உண்டு. அதே கடிதத்தில் மனித வாழ்வைத் தீர்மானிக்கிற இதர காரணிகள் பற்றி – தனி மனிதர்கள் மற்றும் அவர்களது சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளிட்ட இதரவை பற்றி – பட்டியலிட்டுச் சொல்லி இறுதியாக அதிலே பொருளாதார இயக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றார் அந்த இரட்டை மாமேதைகளில் ஒருவர்.

வாழ்வு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தின் சாரம் இதுதான். உவமைகள் எல்லாம் குறையுடையவையே என்பார்கள். இந்தக் கண்ணோட்டத்தை விளக்கப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் உதாரணத்தை – அஸ்திவாரம், மேற்கட்டுக்கோப்பு எனும் விவரணத்தை – சிலர் இயந்திரகதியில் புரிந்து கொண்டார்கள். அதிகாரத்தின் மீது செல்வாக்கு செலுத்தாத மேற்கட்டுக்கோப்பாக – பொருளியல் வாழ்வு மீது இதர காரணிகளுக்கு பங்களிப்பே இல்லை என்பதாக –புரிந்து கொண்டார்கள். இதைத்தான் ஏங்கெல்ஸ் தனது காலத்திலேயே சரி செய்தார். பல காரணிகளுக்கிடையே பரபர செல்வாக்கு நடக்கிறது. முடிவில் அங்கே பொருளியல் காரணி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்ன?

ஒரு சிந்தனைத்துறை என்ற முறையில் ஒரு காலகட்டத்திய இலக்கியத்தில் அந்தக் காலகட்டத்திய ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே ஆளுகை செலுத்துகிறது. வாழ்வைப் பிரதிபலிப்பதே, அதைப் போலி செய்து மறுஉருவாக்கம் செய்வதே. அப்படிச் செய்யும் போது படைப்பாளி தனது கைச்சரக்கையும் – கற்பிதத்தையும் – சேர்ப்பதே இலக்கியம் என்பதால் வர்க்க சமுதாயம் எனும் வாழ்வின் அடிப்படை உண்மை அதிலும் தனது இயங்கு நிலையைத் தக்கவைத்துக் கொள்கிறது.

அதேநேரத்தில், மற்றொரு உண்மையும் உள்ளது. மனிதனின் கலை-இலக்கியப் படைப்பாற்றல் வளர்ந்ததற்கு உழைப்பின் மகத்தான பங்கு உண்டு என்பதை 1844-லேயே உணர்ந்து கூறினார் மார்க்ஸ். அவ்வமயம், “அழகின் விதிகளுக்கு (Laws of Beauty) ஏற்பவே அந்தப் படைப்பு வேலை நடக்கிறது என்பதையும் சேர்த்தே  கூறினார். “சமுதாய விதிகள்” (Laws of Society) எனும் பரந்த யதார்த்தத்தின் ஊடே இந்த அழகின் விதிகளையும் இயல்பாகக் கைவரப் பெற்று அல்லது முயற்சி செய்து, கற்று ஒரு படைப்பாளி தனது சிருஷ்டியை வார்த்தெடுக்கிறான். அப்போதுதான் இலக்கியமானது இதர அறிவுத் துறையிலிருந்து தனித்து வெளிப்படுகிறது. வெறும் பேச்சிலிருந்து – சைகையிலிருந்து கலையும், வெறும் எழுத்திலிருந்து – உரை நடையிலிருந்து இலக்கியமும் வேறுபடும் இடம் அதுதான். இதர அறிவுத்துறைகள் தராத கலை இன்பம் – இலக்கிய இன்பம் என்பதை அது தரவேண்டும். அதை வரவழைப்பதற்கான வித்தையின் தொகுப்பே அழகின் விதிகள், அதாவது அழகியல் எனப்படுவது.

மார்க்சிய இலக்கியமானது தனது உள்ளடக்கமாக உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது என்றால், தனது உருவமாக முழு மனிதகுலமும் காலப்போக்கில் உருவாக்கிய அழகியல் விதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் முயங்கி எழுந்த யதார்த்தவாதம் எனும் இலக்கியக் கோட்பாட்டை வரித்து அதே மனிதகுலத்திற்கு – குறிப்பாக உழைப்பாளி வர்க்கத்திற்கு – அது அருமையான கலை-இலக்கியப் படைப்புகளை அள்ளித் தருகிறது.

யதார்த்தவாதம் என்பது வாழ்வின் மெய்ம்மைகளை சார்பு இன்றி விண்டு காட்டுவதாகவும் இருக்கலாம், உழைப்பாளி வர்க்க சார்பு நிலை எடுத்து அவற்றை விமர்சனப்பூர்வமாகச் சித்தரிப்பதாகவும் இருக்கலாம். பின்னதை விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் என்கிறோம். இவற்றின் அடுத்த நிலையாக, வாழ்வின் அவலமான மெய்ம்மைகள் அவற்றின் உள் முரண்களால் மோதி உடைந்து இன்னும் சிறந்த சமுதாயம் நோக்கி நகர்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்வது அமைகிறது. அதையே சோசலிச யதார்த்தவாதம் என்கிறோம்.

மின்னாகாட்கி என்பாருக்கு அவரது நாவல் பற்றி எழுதியபோது இந்த அர்த்தத்திலேயே சோசலிச பிரச்சனை நாவல் எனும் சொல்லாடலை ஏங்கெல்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். தான் சித்தரிக்கிற சமூக முரண்பாடுகளின் எதிர்கால வரலாற்றுத் தீர்வை சொல்லுகிற படைப்பையே அவர் அப்படி அழைத்தார். அதை வெளிப்படையாகப் படைப்பாளி சொல்லாமல் – ஒரு தாம்பாளத்தில் வைத்து  வாசகன் முன் நீட்டாமல் கதைச் சூழலிலிருந்தும் பாத்திரங்களின் செயல்பாடுகளிலிருந்தும் – வெளிப்பட வேண்டும் என்று அவர் அதற்கான அழகியல் விதியைக் அருமையாக வகுத்துக் கொடுத்தார்.

ரஷ்யாவில் புரட்சி வெற்றிபெற்று, கம்யூஸ்னிட் கட்சி அங்கே சோசலிச நிர்மாணத்தில் இறங்கிய போது, புதிய சமுதாயத்திற்கான எதிர்கால நம்பிக்கை துவக்கமாக வெளிப்பட்டபோது இத்தகைய யதார்த்தவாதத்தின் கூடுதல் தேவை  முன்னுக்கு வந்தது. அந்த 1936 இல் சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டில் – மாக்சிம் கார்க்கி சோசலிச யதார்த்தவாதம் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்.

உலக வாழ்வின் மகத்தான மகிழ்ச்சிக்கான தனிமனித ஆற்றல்களின் தடையற்ற வளர்ச்சியே இதன் நோக்கமாகும் என்று அதற்கு இலக்கணம் தந்தார்.

ரஷ்ய எழுத்தாளர்களின் இரண்டாவது மாநாட்டில் (1965) பேசிய மகத்தான இலக்கிய வாதியாகிய ஷோலக்கோவ் புதியதோர் உலகைப் படைப்பதில் சிறப்பாக மனிதனுக்கு உதவி செய்கிற எந்தக் கலையும் சோசலிச யதார்த்தவாதக் கலையே என்று அதற்கு  இன்னும் அகலமான அதிவாரம் போட்டார்.

ஆக, மார்க்சிய இலக்கியம் என்பது யதார்த்தவாதம் – விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் – சோசலிச யதார்த்தவாதம் என்று அதன் சகல கூறுகளையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தகைய இலக்கிய ஆக்கமானது வெகுகாலமாகவே நடந்து வந்தது என்றாலும் 1975-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்தது அதற்கு ஓர் புதிய  உத்வேகத்தைத் தந்தது. அந்த அமைப்பின் கொள்கை அறிக்கையானது மார்க்சிய இலக்கியம் பற்றிய கொள்கைச் சாரத்தை எல்லாம் உள்வாங்கியும், தற்போதைய இந்திய – தமிழக நிலைமைக்கு ஏற்ப அதைப் பிரயோகிக்கும் வகையிலும் அன்று இப்படிக் கூறியது: வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதைச் சித்தரிப்பதோடல்லாமல்  அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தங்களது படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளர் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்ய முடியும். இதையே இலக்கியத்தில் சோசலிச யதார்த்த அணுகுமுறை என்று கூறுகிறோம். எனினும், இன்றுள்ள நிலைமையில் முற்போக்கு எழுத்தாளர்களாகிய நம்மிடையே யதார்த்த சித்தரிப்பு என்ற அணுகுமுறையினைப் பொதுவாக நிலவ வேண்டிய வழிமுறையாகக் கொள்கிறோம்.

யதார்த்தவாதத்தைப் பொது நோக்காகவும், சோசலிச யதார்த்தவாதத்தை லட்சிய இலக்காகவும் கொண்டு படைப்புத் தொழிலில் இறங்கச் சொன்ன அமைப்பு தமுஎச என்பதால் அதில் இணைந்த மார்க்சிய இலக்கியவாதிகள் தமது சிருஷ்டி ஆக்கத்தில் தீவிரமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டார்கள். சிறுகதை, கவிதை, நாவல் எனும் இலக்கியத்தின் அந்த மூன்று துறைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.

1990 இல் தமுஎச படைப்பாளிகளின் முதல் சிறுகதைத் தொகுப்பாகிய புதிய காற்று வந்தது. பின்னர் விரியும் சிறகுகள்,  தொடரும் வெளிச்சம், ஆடிப்பெருக்கு என்று மொத்தம் நான்கு தொகுப்புகள் வந்தன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் கூட சில உண்மைகள் சட்டென்று புலப்பட்டன. கந்தர்வன், மேலாண்மை, டி.செல்வராஜ், காயபன், தமிழ்ச் செல்வன், வேல.ராமமூர்த்தி, முத்துநிலவன், மாதவராஜ், பிரேமா, பவா.செல்லதுரை, தேனி சீருடையான், ஷாஜஹான், காமுத்துரை, உதய சங்கர், அல்லி உதயன், ரோஜாகுமார்,  கிருஷி, கமலாலயன் போன்றோரைக் கொண்ட ஒரு பட்டாளம் விடாதோ அல்லது விட்டுவிட்டோ சிறுகதை உலகில் சஞ்சரித்து வந்தது.

சஞ்சாரம் என்றால் ஏதோ என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்கிற மாதிரியாக அல்ல.  படைப்புத் தொழிலில் புதுப்புது சிகரங்களைத் தொட்டார்கள். விதவிதமான விஷயங்கள், வகைவகையான மனிதர்கள் இந்தக்  குயவர்கள் கையில் கச்சாப் பொருளாகி, சிருஷ்டி எனும் வண்டிச் சக்கரத்தில் சுழன்று அழகழகான பூஜாடிகளும், பயனுள்ள பாண்டங்களும் வந்தன.

தொடக்க காலத்திலிருந்தே சிறுகதை எழுத்தாளர்களைப் போலக் கவிஞர்களும் தமுஎச-வில் அதிகம் இருந்தனர். தமிழில் புதுக்கவிதைக்கு வழிவிட்டு மரபுக் கவிதை ஒடுங்கிக் கொண்ட போது தமுஎசவிலும் அதுவே நடந்தது. எவரும் கையாளத்தக்க எளியதாய்க் கவிதை ஆகிப்போனது. அதற்காக, எவரும் வெற்றி பெறத்தக்க துறையாக அது மாறிவிடவில்லை. அப்போதும் சில கவிஞர்களே அல்லது பல கவிதைகளே இந்தக் கலையின் அரசியைக் கட்டியாண்டார்கள். கட்டியாண்டன. கந்தர்வன், வெண்மணி, ஜீவி, சு.வெங்கடேசன், நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம், வல்லம் தாஜுபால், சூரியதா, முருகேஷ் கம்பம் மாயவன், வெண்ணிலா, ஸ்ரீரசா, இரா.தெ.முத்து போன்றோர் புதுக்கவிதையில் தடம் பதித்தார்கள் என்றால் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி போன்றோர் அப்போதும் மரபுக்கவிதையை விட்டுவிடாது அதில் வெற்றிக்கொடி நாட்டினார்கள். குழந்தை இலக்கியமானது மரபுக் கவிதையின் ஒரு கிளையாகவே இருக்கமுடியும். குழந்தைகள் மனதில் கவிதை ஏறி உட்கார சந்தநயம் கூட்ட வேண்டியது அவசியம். அதை உணர்ந்து பாப்பா பாட்டு பாடினார்கள் நன்மாறன், எரியீட்டி, கு.பாரதிமோகன், புதுச்சேரி ஆ.கோவிந்தராஜுலு போன்றோர்.

நாவல்துறையில் துவக்கம் முதலே நமக்கு நல்ல வழிகாட்டிகள் உண்டு. கு.சின்னப்ப பாரதியின் தாகம், சங்கம், டி.செல்வராஜின் மலரும் சருகும், தேநீர், கே.முத்தையாவின் உலைக் களம் ஆகியவை தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. மேலாண்மையின் முற்றுகை, இனி பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை.  தமுஎச நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற மணிவண்ணனின் ஓரடி முன்னால, இரண்டாம் பரிசு பெற்ற முகிலின் ஞானம் புதுசு மூன்றாம் பரிசு பெற்ற சீருடையானின் கடை ஆகிய மூன்றுமே மிகத் தகுதிவாய்ந்த படைப்புகளாக இருந்தன. சோலைசுந்தர பெருமாளின் செந்நெல் நம்மிடையே இருந்த வெகுநாளைய ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது. வெண்மணிக் கொடூரம் பற்றி தமுஎசவினர் யாரும் நாவல் படைக்கவில்லையே எனும் ஆதங்கத்தைப் போக்கியது.

இப்படிக் காரியமே கண்ணாக மார்க்சிய எழுத்தாளர்கள் சிருஷ்டி உலகில் பயணப்பட்டு வந்தபோது சில கொள்கைப் பிரச்சனைகள் கிளம்பின. தமிழ் இலக்கிய உலகில் எழுந்த அவற்றை தமுஎச எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துணிவோடு எதிர்கொண்டது. 1996 இல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதன் ஏழாவது மாநில மாநாடு தலித்தியம், பெண்ணியம் எனும் இரு இலக்கியச் சிந்தனைகளை உற்சாகத்தோடு உள்வாங்கியது. அவற்றை யதார்த்தவாதம் எனும் அடிப்படை இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிரானவையாகப் பார்க்காமல், அதன் இயல்பான உட்கூறுகளாக அவதானித்தது.

மனித சமுதாயம் அடிப்படையில் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளது என்றாலும், அதற்குள்ளேயே சாதி, பால் போன்ற உப பிரிவுகள் இருக்கின்றன. வாழ்க்கை இப்படிக் கிடக்கும் போது அதைப் பிரதிபலிக்கிற இலக்கியத்தில் மட்டும் உபபிரிவுகள் எப்படி இல்லாமல் போகும்? விரிந்தும், நுணுகியும் வாழ்வை அலசுகிற படைப்புலகின் தனித்தன்மையின் விளைவுகளே யதார்த்தவாதமும் அதன் உட்கூறுகளும் என்பதை மாநாடு சுட்டிக்காட்டியது.

அதே நேரத்தில், வர்க்கப் போராட்டத்தையும் சாதி – ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று முரணாகப் பார்த்து ஒடுக்கப்பட்ட மாந்தரைத் தனித்து  ஒதுக்குகிற வேலையை மாநாடு ஏற்கவில்லை. அந்தப் போக்கு தலித்துகள் எழுதுவதே தலித் இலக்கியம் என்றும், பெண்ணின் மனோநிலையை ஆனால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது என்றும் ஒருவித இலக்கிய உத்தரவுகளாகவே தமிழகத்தில் உலாவந்தது. இதை தமுஎச மாநாடு ஏற்கவில்லை.

தலித்துகள் பற்றி தலித்துகளே, பெண்கள் பற்றி பெண்களே எழுதினால் சொந்த அனுபவம் பேசும் என்பது உண்மையே. ஆனால் படைப்புத் தொழில் எனும் வினோத வித்தைக்கு அது மட்டுமே போதுமானதல்ல, அதற்கு அழகியல் விதிகளைப் பிரயோகிக்கும் ஆற்றலும் வேண்டும். அந்த இரண்டும் சேர்ந்து படைக்கப்படுமேயானால் நிச்சயம் அது தனிச்சிறப்போடு திகழும், அத்தகைய படைப்புகளை தமுஎச உற்சாகத்தோடு வரவேற்கும்.

அதற்காக மற்றவர்கள் அந்த விஷயங்களுக்குள் நுழையவே கூடாது என்று தடை விதிப்பது நியாயமல்ல. ஒரு பகுதி மாந்தர்களின் வாழ்வைக் கருப்பொருளாகக் கொள்ள முயலுகிற படைப்பாளி கள ஆய்வின் மூலமும், கூர்ந்த கவனிப்பின்  மூலமும், மனோரீதியாக அதே மாந்தர்களாகக் கூடுவிட்டுக் கூடு பாய்வதன் மூலமும் தமக்குச் சொந்த அனுபவம் இல்லாததை ஈடுகட்ட முடியும். அற்புதமான பெண் பாத்திரங்களைப் படைத்த உலகப் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களும், அருமையான கறுப்பினப் பாத்திரங்களைப் படைத்த அமெரிக்க – ஐரோப்பிய வெள்ளை இன எழுத்தாளர்களும், துடிப்பான தலித் பாத்திரங்களைப் படைத்த தலித் அல்லாத இந்திய எழுத்தாளர்களும் அந்தப்படியாகவே தங்களின் சிருஷ்டித் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை இப்படிப்பட்ட சட்டாம்பிள்ளைத் தனமான  ஆணைகளைச் சொல்லிக் கெடுத்துவிட வேண்டாம் என்று மாநாடு கேட்டுக் கொண்டது.

அடுத்த மாநாடு 1999 இல் கோவையில் நடை பெற்றபோது பின்-நவீனத்துவம் எனும் கோட்பாடு தமிழகத்தில் தீவிரமாக அடிபட்டது. இது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தது தமுஎச. யதார்த்தவாதத்திற்கு மாற்றாகவே இந்தக் கோட்பாடு முன்வைக்கப்படுவதை அது புரிந்துகொண்டது. கலை கலைக்காகவே என்று பழைய பாணியில் பச்சையாகச் சொன்னால் எடுபடாது என்பதால் தங்களுடையது நவீனத்திலும் நவீனம் என்றார்கள். உள்ளே புகுந்து பார்த்தாலோ பழசிலும் அரதப் பழசாக இருந்தது; கலை – இலக்கியத்தின் சமூக நோக்கைக் கழித்துவிட்டு மற்ற கூறுகளை – குறிப்பாக வடிவப் பிரச்சனைகளை – மட்டும் உயர்த்திப் பிடிக்கிற வேலையாக  இருந்தது. இதைக் கறாராக மறுதலித்த மாநாடு, அதே வேளையில் பின்-நவீனத்துவம் முன்மொழிகிற சில உத்திகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்றது. விஷயம் என்னவென்றால் கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் மார்க்சிய நோக்கிலிருந்து எழுந்த யதார்த்தவாதக் கோட்பாட்டை சிதைத்துவிடக் கூடாது என்பதுதான்.

இந்த மாநாட்டில்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு, பின்-நவீனத்துவம் குறித்து அருமையானதொரு கருத்துரை வழங்கினார். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள கற்பனை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் படைப்பாக்கம் உள்ளதே தவிர, அதைச் சிதைப்பதில் இல்லை, அதை வெறும் மாயாஜாலமாக மாற்றுவதில் இல்லை, அதை சர்ரியலிசமாக – குழப்பமான கனவு நிலையாக-ஆக்குவதில் இல்லை என்று நறுக் கென்று சொன்னார் அந்த மேதை.

பிறகு என்னாயிற்று? சமையலின் சிறப்பு அது பற்றிய கையேடு தயாரிப்பதில் இல்லை. அதன் ருசியில் உள்ளது. அதுபோல, இலக்கியத்தின் சிறப்பு அது பற்றிய இசங்களில் இல்லை, அதன் படைப்பாக்க வெற்றியில் உள்ளது. பின்- நவீனத்துவத்தின் பிரிவுகளாக சர்-ரியலிசம், டிரக்சுரலிசம், எசிடென்சியலிசம்- இத்யாதி இத்யாதிகள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று சில நாவல்களுக்கு முத்திரை குத்தி வெளியிடப்பட்டன. வேடிக்கை என்னவென்றால் ஒரு பின்-நவீனவாதி எழுதியதை இதர பின்-நவீனவாதிகள் ஏற்கவில்லை. மொத்தத்தில் எதையும் எவரும் ஏற்கவில்லை. கூடுதல் வாசக அனுபவம் உள்ள வாசகருக்குக் கூட அவை புரிபடவில்லை. இந்த இசங்களின் பொதுமை இருண்மைவாதம் என்பது மட்டுமே புரிபட்டது. முடிவில் அவை படுதோல்வி கண்டன.

தமிழ் இலக்கிய உலகம் தனது யதார்த்தவாதப் படைப்புப் பாரம்பரியத்தை நல்லவேளையாக விட்டுவிடாதிருந்ததால் அதிலேயே தொடர்ந்து நடைபோட்டு சில சாதனைகளைச் செய்தது. மார்க்சிய வட்டாரத்திற்கு உள்ளும் வெளியிலும் யதார்த்தவாதப் படைப்புகளே பரவலாகப் பேசப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் சரி 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சரி.

மார்க்சிய இலக்கியம் இந்தக் காலத்தில் சில புதிய உச்சங்களைத் தொட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட தோழர்கள் பலரும் இந்தக் காலத்திலும் படைப்பிலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்தார்கள். கு.சி.பா. புதிய  நாவல்களைத் தந்தார் என்பது மட்டுமல்லாது, அவரது படைப்புகள் உலக மொழிகள் பலவற்றிலும் பெயர்க்கப்பட்டு நானாதிசைகளிலும் பேசப்பட்டது. டி.செல்வராஜும் தொடர்ந்து எழுதியது மட்டுமல்லாது அவரின் தோல் நாவல் சாகித்ய அகாதமி பரிசைப் பெற்று சிரசு உயர்த்தி நின்றது. அதுவும், அதற்கும் முன்னதாக மின்சாரப் பூ  சிறுகதைத் தொகுப்புக்கு மேலாண்மைக்கு அந்தப் பரிசு கிடைத்திருந்ததும் யதார்த்தவாத இலக்கியத்திற்கு சூட்டப்பட்ட கிரீடங்களாகத் தகதகத்தன. யதார்த்தவாதத்தில் காலூன்றி படைப்புவானில் கர்ணங்கள் அடிக்க பின்-நவீனத்துவ உத்திகள் சிலவற்றைப் பயன்படுத்தலாம் என்றோம். அதற்கோர் உதாரணமாய் வந்தது காவல் கோட்டம் வரலாற்றுப் புதினம். அதற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. இளமைக்கும், நமது கோட்பாட்டிற்கும் ஒருங்கே கிடைத்த வெற்றி.

இந்தக் காலத்தின் மிகப்பெரிய சோகம் கந்தர்வனின் மறைவு. அது கவிதைக்கும் சிறுகதைக்கும் நேர்ந்த அகால விபத்து. சொல்லப் போனால் நாவலுக்கும் கூட அந்த கதியே. அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாவல் உலகில் அடியெடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார். முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக் காகிலும் அதை ஈடுகட்டும் வகையில் புதிய படைப்பாளிகள் வந்தார்கள். புதிய படைப்புகளும் வந்தன. ம.காமுத்துரை நாவலாசிரியராய் பரிணாமம் பெற்றது, சீருடையான் இத்துறையில் புதிய சாதனைகள் செய்தது என்பவை நமது  படைப்புக் கண்ணி அறுபடவில்லை; மாறாக வலுப்பெற்றது என்பதற்கு உதாரணங்கள். வரலாற்று நாவல்கள், இதிகாச மறுவாசிப்புகள் என்று அருணன் படைப்புலகில் புகுந்து வந்தது. இந்தத் துறைகளிலும் மார்க்சியவாதிகளால் காலூன்ற முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்தில் செந்தில் நாதனும் நாவல்துறையில் இறங்கியிருக்கிறார். விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறும் ரசவாதம் தொடர்கிறது. நமது படைப்பாளிகள் மூவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது மட்டுமல்லாது இன்னும் சில எழுத்தாளர்களுக்கும் வேறு சில முக்கிய இலக்கியப் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் மார்க்சிய  இலக்கியங்கள் அவற்றின் சொந்த வட்டாரத்தில் மட்டுமல்லாது வெளி வட்டாரத்திலும் அங்கீகரிக்கப்படுவதின் சத்தான ஆதாரங்கள்.

நம்மவர்களின் படைப்புகள் சில பாடப்புத்தகங்களாக அல்லது அவற்றின் அங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மார்க்சிய இலக்கியங்களின் பங்களிப்பைக் கழித்துவிட்டு இனி எவராலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது. அப்படி ஒருவர் எழுதினால் அவரது நாணயம் கேள்விக்குறியாகிவிடும்.

இப்படியெல்லாம் எழுதி வருவது திருப்தி மனோபாவத்திலிருந்து அல்ல. மார்க்சிய இலக்கியத்தின் நியாயமான பெருமைகளைப் பதிவு செய்யத்தான். அதே நேரத்தில், இவையெல்லாம் காலத்தின் தேவைக்குப் போதுமானவையல்ல என்பதும் உண்மையே. இருப்பதை முதலில் அங்கீகரித்துவிட்டு அடுத்த இலக்கைச் சுட்ட வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது சாதியச் சிந்தனைகளும், பழமைவாதச் சிந்தனைகளும், முதலாளித்துவ கட்டமைப்பே இயல்பானது – சாதகமானது எனும் ஆளும் வர்க்கச் சிந்தனைகளும் மண்டி வருகின்றன. அறிவுஜீவிகள் மத்தியிலேயே இவைதான் கோலோச்சுகின்றன என்றால் வெகுமக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

1920-களில் இங்கே காந்தியம் – பெரியாரியம் – மார்க்சியம் என்பவை வேர்விடத் தொடங்கின, 1950-கள் வரை காந்தியம் தழைத்தோங்கி பிறகு பட்டுப்போக, பிறகு பெரியாரியம் பற்றிப் படர்ந்தது. 1980-களிலோ அதனுடைய சத்தும் வடிந்துபோனது. சோகம் என்னவென்றால் அந்த இடத்தை மார்க்சியம் இன்னும் கைப்பற்றவில்லை என்பதுதான். காந்தியம் – பெரியாரியத்தின் போதாமையை அல்லது தோல்வியை சாதிய – பழமைவாத – முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றி வருகின்றன. இந்த ஆபத்தைச் சமாளிக்க மார்க்சியம் புத்தெழுச்சியோடு புறப்பட வேண்டிய காலமிது.

காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ளி பெரியாரியம் முன்னுக்கு வந்ததற்கு அது பண்பாட்டுத் தளத்தை – குறிப்பாக கலை, இலக்கியப் பரப்பை – வசமாகப் பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாகும். இன்று அந்தத் துறையில் அனேகமாக நிலவும் அதன் வெறுமை அதனுடைய போதாமை அல்லது தோல்வியின் தெளிவான அடையாளமாகும். அப்படியெனில், விழுந்திருக்கிற வெற்றிடம் பழமைவாதிகள் கையில் போகாமல் மார்க்சியவாதிகளின் கையில் வரவேண்டுமென்றால் பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

இதை மார்க்சிய இலக்கியவாதிகள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சந்தேகமில்லை முன்பைக் காட்டிலும் த.மு.எ.ச.வில் அவர்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். கலைஞர்களை அங்கே அதிகம் சேர்த்து அதன் வெளிப்பாடாய் அதை த.மு.எ.க.ச.வாக மாற்றியிருக்கிறார்கள். காலத்திற் கேற்றவாறு அதன் கொள்கை அறிக்கையை நவீனப்படுத்தி அந்த வெளிச்சத்தில் வேக நடைபோடுகிறார்கள். எல்லாம் சரி, ஆனால் ஆறரைக் கோடித் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் வளரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பண்பாட்டின் சகல கூறுகளில் இல்லாவிட்டாலும் ஏற்கெனவே நல்ல பாரம்பரியத்தளம் உள்ள படைப்பிலக்கியத்திலும் கூட பெருவாரியான வாசகர்களை நாம் எட்டவில்லை.

கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் முழக்கம் காரியார்த்த வடிவம் எடுக்க அந்த மக்கள் திரளின் பலவித அடுக்குகள் மற்றும் பலவித ரசனைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். சகல அடுக்குகளுக்கும், சகல ரசனைகளுக்கும் கலை-இலக்கியம் படைப்பதில் தவறில்லைதான். ஆனால் உயர் அடுக்கு மற்றும் உயர் ரசனைக்கு மட்டுமே படைத்து, அவர்களது பாராட்டைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டால் அந்த மைய முழக்கம் தனது புரட்சிகர அர்த்தத்தை இழந்து போகும். உழைப்பாளி வர்க்கம் மற்றும் சாதாரண மத்தியதர வர்க்கத்தின் சராசரி வாசகர்களே – ரசிகர்களே ஆகப் பெரும்பாலோர். அவர்களையும், அவர்களது ரசனையையும் எட்டுவது, எட்டி அவர் களது கைப்பிடித்து மேலே உயர்த்துவது என்பதே அந்த முழக்கத்தின் மையக் கருத்தாகும். அந்த இலக்கை நோக்கி பயணப்படுவதில் இன்னும் சிரமப்படுகிறார்கள் மார்க்சிய இலக்கியவாதிகள். வேறு வார்த்தைகளில் சொன்னால் தரத்தையும் ஜனரஞ்சகத்தையும் கச்சிதமாகக் கலந்து கொடுப்பதில் இன்னும் பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும் தேவைப்படுகிறது. உதாரணமாக, உழைப்பாளி மக்களை எளிதில் அடையக்கூடிய, வாசிக்க சுகமான சந்தம் தழுவிய கவிதை, அதன் இயல்பான நீட்சியாகிய இசைப் பாடல் ஆகியவற்றை எழுதுவதில் சுணக்கம் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

படைப்பாளிகள் பக்கம் இப்படிச் சில ஊனங்கள் உண்டு, அவற்றைக் களைய அவர்கள் தன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றால், உழைப்பாளி வர்க்கமானது இவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், மக்களுக்கு ஏற்ற படைப்புகள் வரும்போது அவற்றை வரவேற்றுக் கொண்டாடி மகிழ வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பணியை மேற்கொள்ள வேண்டும். பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டியிருக்கும் காலமிது. குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல இலக்கியவாதியும் கூட கொண்டாடும் இடத்தில்தான்.

இப்படி படைப்பாளியும் உழைப்பாளியும் சரியான புள்ளியில் சந்தித்தால் அதுதான் மார்க்சிய இலக்கியத்திற்கு யோகம் பிறக்கும் வேளை. அது நடந்துதான் தீரும்.

ரவி நுழைய முடியாத இடத்திலும் கவி நுழைவான். அந்தக் கவியை ராஜாக்கள் நிராகரித்தாலும் குடிமக்கள் வரவேற்பார்கள்.

மழையாய் மாறிவிட்ட மேகம் மண்ணை அடைந்தே தீரும். மார்க்சியப் பயிர் செழிக்க தமிழ் இலக்கியம் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கும் நாள் வெகுதொலைவில் இருக்க முடியாது.