2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

உக்ரைன் – அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம்

முந்தைய பனிப்போர் அரசியலுக்குப் பிறகு கிழக்கு - மேற்கு நாடுகளிடையே மிகப்பெரும் நெருக்கடி உருவாகி வருவதாக வரலாறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைனில் தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருப்போருக்கும் எதிர்த்து நிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்குமிடையே கடும் மோதல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; உக்ரைனின் தென்பகுதியில் உள்ள நகரமான ஒடிச்சாவில் ஒரு தொழிற்சங்க கட்டிடத்திற்குள் அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்த 42 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவாளர் என கருதப்பட்ட உக்ரைனின் ஆட்சித் தலைவர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிகவும் மோசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுப் போர் விரிவாக நடத்தப்படுமென்றும் உக்ரைன் பல துண்டுகளாக சிதைந்து போகுமென்றும் அரசியல் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை திடீரென்று வெடித்த நிகழ்வுகள் அல்ல. நீண்ட காலமாக தீட்டப்பட்ட ஏகாதிபத்திய சதித் திட்டத்தின் விளைவுகளை உக்ரைன் சந்திக்கிறது.