நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

  • அருண்குமார்

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சி தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனாலும், பல மாநிலங்களில் அது முறையாக நடப்பதில்லை.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொருளாதார தாக்குதலோடு கலாச்சார அரசியல் ரீதியான தாக்குதல்களும்  நிகழ்கிறது. மக்களின் பங்கேற்போடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்காகவே, விரிவான ஜனநாயகத்தை கொண்டதாக, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்ததாக இல்லாமல் மையப்படுத்தப்பட்ட  அதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே தனது கொள்கையாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து விதமான ஜனநாயக உள்ளடக்கங்களையும் நசுக்கி வருகிறது.

74வது சட்ட திருத்தத்தின்படி 18 வகையான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ளவேண்டும். கல்வி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த 18 பணிகளில் 5 க்கும் குறைவான பணிகளே மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 7 பணிகள் மும்பை மாநகராட்சியில் மட்டுமே நடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து பல ஆவணங்களும் அரசாணைகளும் சிறப்பாக உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்பதையே மேற்கண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது? 13 வது நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் செயல்படவேண்டும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியை எதிர்பார்க்கக்கூடாது என்றது. மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஜி.எஸ்.டி போன்ற மத்தியப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைகளால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வரி வருவாயை அதிகமாக இழக்க நேரிட்டது. நிதிக்குழு கூறியதுபோல், நிதியை உருவாக்க சொத்து வரியை உயர்த்துவது, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான  சேவை கட்டணத்தை உயர்த்துவதென மக்கள் மீதான சுமை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் மீது நிதிச்சுமை

தற்போது 15வது நிதிக்குழு மேலும் இக்கட்டணங்களை உயர்த்த சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் பட்டியலிட்டு சிறு பகுதியையும் விடாமல் வரி தீர்மானிக்க வேண்டும் என்கிறது. அதேபோல், சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவகையில் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்கிறது. மேலும், தீர்மானிக்கப்பட்ட சொத்து வரியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்கிறது.

சொத்துவரியை முறைப்படுத்துவதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கக் கூடும். எங்கு சிக்கல் உள்ளதோ அங்கு அதை முறைபடுத்துவது தவறல்ல.  ஆனால், அதை பொதுமைப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வடிவமைப்பதில்தான் சிக்கல் உள்ளது. வர்த்தக பயன்பாடு நிறைந்த பகுதியில் வரி தீர்மானிக்கும்போது, அப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்கும்  வர்த்தக நிலங்களுக்கு உள்ளதுபோல், குடியிருப்புக்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் உயர் நடுத்தர மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குடிசை பகுதிகளையும் சொத்துவரிக்கு உட்படுத்தி ஏழை மக்களையும் நசுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி உயர்வு, வாடகைதாரர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது வாடகைதாரர்களை மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து வரி உயர்வின் மூலம் ஒரு பகுதி நிதியை உள்ளாட்சி அமைப்புகள் திரட்டுகின்றன. மற்றொரு பகுதி நிதியை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய குடிநீர், குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயத்துவதன் மூலம் திரட்டுகின்றன.

15வது நிதிக்குழுவின் வலியுறுத்தலோடு, கரோனா காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தமும், சொத்து வரி மற்றும் சேவை கட்டண உயர்வாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய 5வது முறையாக பொருளாதார நிதி ஒதுக்கீட்டை அறிவித்த ஒன்றிய அரசு, இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரியையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தவேண்டும் என்றது. மேலும் 2021 – 22 க்குள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். 2022 -23க்குள் இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  2023 – 24க்குள் இந்த கட்டண உயர்வை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதுவே தற்போது அரங்கேறி வருகிறது. நிதி தேவையின் காரணமாக அனைத்து மாநிலங்களும் இந்த கட்டண உயர்வை அமலாக்குகின்றன.

முன்பு குப்பைகளை பெறுவதற்கு கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தண்டம் விதிக்கப்படும் என்றனர். மலைபோல் குப்பைகளை குவிக்கும் வேலையைதான் மாநகராட்சிகள் மேற்கொண்டன. அது பல சுற்றுச்சூழல் கேட்டிற்கும் உயிர் சேதத்திற்கும்  வழிவகுத்தது. தற்போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதாக கூறினாலும், அதற்கும் கூடுதலாக கட்டணம் தீர்மானித்து மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வும் உலக வங்கியின் தலையீடும்

சொத்து வரி உயர்வு, சேவை கட்டண உயர்வு என மக்கள் மீது இந்த அழுத்தம் ஏன் சுமத்தப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்தால் அது உலக வங்கியிடம் போய் நிற்கிறது. 2010 முதல் 2015 ஆண்டு வரை இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சுயமான நிதி திரட்டலின் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவேண்டும் என்பது இங்கிருந்து வந்த முன்மொழிவேயாகும். உலகம் முழுக்க எங்கும் உள்ளாட்சி அமைப்புகளால் சுயமான நிதி திரட்டுதல் மூலம் செயலாற்ற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். மும்பை மாநகராட்சிதான் அதிகபட்சமாக தனக்கு தேவையான நிதியில் 60 சதத்தை சுயமாக திரட்டுவது சாத்தியமாகியுள்ளது.

பிறகு ஏன் இத்தகைய விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் தரப்படுகிறது என்பதை 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சர்வதேச நிதி மூலதனத்தினால் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலவில்லை. எனவே, சர்வதேச அளவில் அதன் நிதி மூலதனத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முனைகிறது. நாம் இதை புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவையில் சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட மாநகராட்சி அனுமதித்ததை எதிர்த்து போராடினோம். அந்த நிறுவனம் டில்லி மாநகராட்சியில் இப்பணியை மேற்கொண்டது. அது நிர்ணயித்த அதிகமான கட்டணத்தை டில்லி மாநகராட்சியால் வசூல் செய்து கட்ட முடியாமல் போனது. இந்த தொகைக்கு ஈடாக தில்லி மாநகராட்சியின் மையப்பகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி உலக வங்கி கூறியது. இதுதான் அதன் நோக்கமும். நிலம் தற்போது பணம் கொழிக்கும் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடங்கள் தற்போது இவர்களின் இலக்காக மாறியுள்ளன. அரசுகளும் அதற்கு ஏற்ற வகையில்தான் செயல்படுகின்றன.

ஒன்றிய அரசு டில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ள சென்ட்ரல் விஸ்தாவிற்குள் கொண்டுவரவுள்ளது. உண்மையில், பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களை இங்கு மாற்றும்போது டில்லியின் முக்கியமான இடங்களில் உள்ள அதன் பழைய அலுவலகங்களை தனியாருக்கு கைமாற்றும் திட்டம் அதில் உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்துஸ்தான் எலக்ட்ரிக்கல் நிறுவனம் ஆதிவாசி மக்களின் நிலத்தில் முன்பு உருவாக்கப்பட்டது. தேசத்தின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அந்த நிலத்தை தானமாக வழங்கினர். 1990களுக்கு பிறகான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.  அப்படித்தான் இந்த நிறுவனமும் ஆக்கப்பட்டது.

மக்களை திரட்டுதல்

நம்மை சுற்றி இவ்வளவு நடந்தாலும், மக்களை திரட்டாமல், இதில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம், அதன் பிரதிநிதிகளுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மன்றங்களில் பேசுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கைகளை அதிகாரிகளே தயார் செய்கின்றனர். அதை மன்றம் ஏற்காவிட்டாலும், மாநில அரசு ஏற்காவிட்டாலும், நிதிநிலை அறிக்கை மேல் நடவடிக்கைக்கு சென்றுவிடும். மக்களின் பங்கேற்போடே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது 74 வது சட்ட திருத்தம். ஆனால், அவை மக்களை புறக்கணித்து அதிகாரிகளை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் நம்மைப் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உரிய தலையீடு செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் முதல் நபராக உள்ளாட்சி பிரதிநிதிகளே உள்ளனர். எனவே, மக்கள் நலனுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் அமையும்போது, உள்ளாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையும் நம்போன்ற கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. எப்படியும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் போகிறீர்கள்.  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநியாக உங்களை அமர வைத்தாலும் அங்கு எதையும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை. பிறகு உங்களை தேர்ந்தெடுப்பதைவிட, எனது சாதி, மதத்தை சார்ந்தவர்களை தேர்வு செய்வது எனக்கு வேறு வகையில் உதவக்கூடும் என்கிற குறுகிய மனநிலைக்கும் அவர்கள் செல்லும் நிலை ஏற்படுகிறது. மக்களை முற்போக்கு அரசியலில் இருந்து, குறுகிய பிற்போக்கு அரசியலுக்கு அவை அழைத்து செல்வது நம்போன்ற கட்சிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேநேரம் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் இது தடையாக அமையும். 

மக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்காமல் நம்மால் அவர்களை நமது அரசியலின்பால் ஈர்க்க முடியது. இதை ஒருநாளில் செய்துவிட முடியாது. சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளாக

74 வது சட்ட திருத்தம் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்போடுதான் அனைத்து‌ முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் வார்டு கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. மற்ற இடங்களில் பெயர் அளவிற்கு வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதும் அவை செயல்படுவதில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை கொண்ட கமிட்டி போலவும் அவை அமைக்கப்படுகிறது. 

நகர்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர் என்கிற வகையில் வார்டு கமிட்டிகள் போன்ற அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அரசு இதுபோன்ற அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அரசு அதை செய்யாததால் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை கூடுதலாக நடத்தி மக்களிடம் கருத்துக்களை பெற்று, எது சாத்தியம் என்பதையும், எது சாத்தியமற்றதாக உள்ளது என்பதையும் பேசுவதோடு ஏன் இது சாத்தியமாகவில்லை என்பதற்கான காரணங்களையும், அதன் பின்புலத்ததையும் நாம் மக்களோடு பேசவேண்டும். வழக்கமாக நாம் வீதியில் செல்லும்போது இதுபோன்று பேசுவோம். அது போதுமானதல்ல. நாம் பேசும் அந்த நபரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியாது. மேலும் ஓரிடத்தில் மக்களை கூடச் செய்து அவர்களோடு உரையாடுவதுதான் அவர்களை அரசியல்படுத்தவும். நம்மோடு அவர்களை இணைக்கவும் உதவும். பெண்கள், இளைஞர்கள் என பலரை இணைப்பதும் சாத்தியப்படும்.

சமூக வானொலி மூலம் நமது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கேட்கும் வகையில் வானொலியில் நமது செயல்பாடுகளையும் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும்.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு

வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு அவசியம். அந்தந்த அமைப்புகள் அதன் வர்க்க வெகுஜன பணிகளை மேற்கொள்வது அவசியம்தான். அதேநேரம் குடியிருப்புகளில் களத்தில் செயலாற்றும் தொழிற்சங்கம், மாதர், வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்த சில கோரிக்கைகளை தீர்மானித்து, மக்களை விழிப்படைய செய்து போராட்டங்களில் இணைக்கவேண்டும். அந்தந்த அமைப்புகள் குறுகிய எண்ணிக்கையில் சில போராட்டங்களை அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவது பயன்தராது. குறிப்பிட்ட மக்கள் கோரிக்கையை தீர்மானித்து, அதில் வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து  உடனடி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட குழுக்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். மக்களுக்கு பாதகமான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டிலே அதிகமான காலிப்பணியிடங்கள் கோவை மாநகராட்சியில்தான் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 35 சதவீத  இடங்கள் காலியாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை. இது தொழிற்சங்க கோரிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய  அன்றாட பணிகளை இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசவேண்டும். சுகாதாரம், குடிநீர், கழிவு குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர் இல்லாதது மக்களின் உடனடி பிரச்சினையோடு இணைந்தது. தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கங்கள் இதை பொது கோரிக்கையாக மாற்றி மக்களை போராட்டத்தில் இணைக்க வேண்டும்.

குடியிருப்புகளில் நமது பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். பொங்கல் போன்ற பண்டிகைகளை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், மேலும் வலுவாக நடத்திடவேண்டும். விசாகப்பட்டினத்தில் மே தினத்தை ஒரு நாள் நிகழ்வாக, கொடியேற்றி பேசி முடிக்கும் வழக்கமான நடைமுறையாக அல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. அது மே வாரம் போல் ஒரு வாரம் நடைபெற்றது. மகளிர் தினம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் நம்மோடு வருவார்கள். பிரச்சாரம், அறைகூவல்கள், போராட்டங்கள் இவைகளுக்கிடையேயான தொடர்பையும் புரிந்து செயலாற்ற வேண்டும். கொல்கத்தா பிளீனத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

 தமிழில்: ச. லெனின்

இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

  • தாமஸ் ஐசக்

(மார்க்சிஸ்ட் இதழ் நடத்திய விடுதலை 75 தொடர் கருத்தரங்கத்தில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும் பேராசிரியருமான தாமஸ் ஐசக் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இங்கே தரப்படுகிறது)

நாடு விடுதலை பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தருணத்திலேயே, இது ‘முழுமைபெறாத கூட்டாட்சியாக இருக்கிறது’ என்று பலரும் விமர்சித்தார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால் இரண்டு போக்குகளை நம்மால் காணமுடிகிறது. ஒன்று, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது; மற்றொன்று. அதிகாரத்தை பரவலாக்கம் செய்வது.

அரசமைப்பும், அதிகார குவிப்பும்:

அதிகார பரவலாக்கம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதற்கு வடிவம் கொடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1990களின் தொடக்கத்தில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதிப்படுத்தும் விதமான திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு பிறகும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை உண்மையான தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய நிர்வாக அதிகாரமாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை. இந்தப் போக்கினை இந்தியாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சியுடன் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே ஒன்றிய அரசின் அதிகாரம் மாநில அரசுகளைவிட கூடுதலாக இருப்பது அனைவருக்கும் புரிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதும் அதனை பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு அத்துமீறும் போக்கும் கண்கூடாகவே தெரிந்தது.

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும்.

அரசு நிர்வாக அதிகாரத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான வரைமுறைகள் தெளிவாக வகுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நீதித்துறையை நிர்வகிக்க மாநிலங்களுக்கு துளிக்கூட அதிகாரமில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக எந்த மாநிலத்தையும் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும். இதனால்தான் இந்தியாவை முழுமையற்ற கூட்டாட்சி என்கிறோம்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில், மொழிவாரியான கமிட்டிக்களே இடம்பெற்றிருந்தன. விடுதலைப் போராட்டத்தின்போது உயர்த்தி பிடிக்கப்பட்ட கோட்பாடாகவும் அது  இருந்தது. அப்படிஇருந்த நிலையில், அதிகாரக் குவிப்பிற்கான சாத்தியம் எப்படி ஏற்பட்டது?

இதற்கு தோழர் இ.எம்.எஸ். ஒரு முக்கியமான காரணத்தை முன்வைக்கிறார். அதாவது, நாடு விடுதலை பெறுகிற சமயத்தில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதனால் மக்கள் அனுபவித்த கடும் துயரங்களையும் கணக்கில் கொண்டு இதுபோல் ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதாக தோழர் இ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார். அரசியலமைப்பு இவ்வாறு இருக்க தொடக்கம் முதலே அதிகார குவிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முரண்பட்ட போக்குகள்:

1956-இல் கேரளாவில் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைத்தவுடன், நிலச்சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், அதிகார பரவலாக்கம், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மற்றும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது.

1959-இல் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் விருப்பத்திற்கு ஏற்றபடி கேரளாவில் சில குழப்பங்களை ஏற்படுத்தி, பின் சட்டஒழுங்கை காரணம் காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கிறது. இது ஏதோ இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் நடந்துவிட்டதாக நாம் கருதிவிடக் கூடாது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இடதுசாரி அரசுகள் (இவை கம்யூனிச அரசுகள் கூட இல்லை) ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் ஆட்சிக்கு வந்தன. காங்கோ, இரான், பிரேசில் இன்னும் பல நாடுகளைச் சொல்லலாம். இங்கெல்லாம் மிக மோசமான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் இடதுசாரி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இவைகுறித்து இன்று ஏராளமான ஆய்வுகள் நமக்கு கிடைக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் கேரளத்திலும் நமது ஆட்சி பறிக்கப்பட்டது.

அடுத்து ஒன்றிய அரசு மூலம் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை பார்த்தால் அவர்களும் ஒன்றிய அரசின் முகவர்களாக மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். பொருளாதார தளத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசு நேரடியாக சில பொருளாதார திட்டங்களை கொண்டுவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு இடமேயில்லை. மாநில அரசுகள் சில வரிகளை வசூலிக்கலாம். ஒன்றிய அரசு சில வரிகளை வசூலிக்கலாம். வசூலிக்கப்படும் வரிகளை எவ்வாறு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக பகிர்ந்தளிப்பது என்று முடிவெடுக்க இந்திய நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வளவுதான் பொருளாதார தளத்தை பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. (அதிலும் ஒன்றிய அரசின் வரிவசூலிக்கும் அதிகாரம் மாநிலங்களைவிட மிகக் கூடுதலாகவே இருக்கிறது)

ஆனால் ஒன்றிய அரசுகள் மாநிலங்களின் உரிமைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற தளங்களில் தமது திட்டங்களை மாநில அரசுகளை மீறி திணிப்பதிலிருந்து அதிகாரக் குவிப்பு தெளிவாகிறது.

நல்வாய்ப்பாக இதற்கு எதிரான போக்கும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த போக்கு பன்முகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.

1967 பொதுத்தேர்தலில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத இடதுசாரி மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி பெற்ற வெற்றி ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிற்பகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் (இ.எம்.எஸ், ஜோதிபாசு, ஷேக் அப்துல்லா மற்றும் பலர்) ஸ்ரீநகரில் கூட்டிய மாநாடு, மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடும் அதிகார குவிப்பை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. இதன் விளைவாகத்தான் 2007-இல் பூஞ்சி கமிஷன் உருவாக்கப்பட்டது. இக்குழு ஆழமாக விவாதித்து ஒன்றிய அரசின் அதிகார குவிப்பிற்கு கடிவாளம் போடும் விதமான வலுவான பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த இரண்டு போக்குகளும் 1991 வரை முரண்பாட்டுடன் தொடர்ந்தன.

1990களுக்கு பின்:

1990 களுக்கு பிறகு இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளின் இயக்கத்தில் ஒரு தடை ஏற்பட்டு அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் போக்கு வேகமெடுத்து இன்று அதன் விளைவாக இந்திய கூட்டாட்சி அமைப்புமுறையே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்கிறது. ஆனால் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை உருவாக்கிடவும் கலைத்திடவும் முடியும் என்ற அளவிற்கு அதிகார குவிப்பு வளர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும்ஏற்படலாம்.

அடுத்து ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களைப் பார்ப்போம். 3 வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கல்விக்கொள்கை, மின்சாரச் சட்டம் என அனைத்தும் மாநில அதிகாரத்தில் செய்யப்பட்ட வரம்புமீறிய தலையீடுகளே.

விவாதத்தில் இருக்கும் மின்சாரச் சட்டத் திருத்தத்தின்படி ஒரு மாநிலத்தின் மின்சாரவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்களை ஒன்றிய அரசுதான் நியமிக்கும். இந்த வாரியத்தை எப்போது வேண்டுமானாலும் கலைத்து வேறு மாநிலத்தின் வாரியத்தின்கீழ் கொண்டுவரவும் இச்சட்டதிருத்தத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதில் தலையீடு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற சில நீதிபதிகளுக்கு சலுகைகள் வழங்குவது என நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த வரிசையில் தற்போது சமீபமாக மாநிலங்களில் அமர்த்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரிகளை மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்று வேறு அதிகாரியை பணியில் அமர்த்தும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கிக் கொள்கிறது ஒன்றிய அரசு.

நீதித்துறையைப் போலவே திட்ட ஆணையமும் ஒரு தன்னிச்சையான அமைப்பு. இதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பற்றி எடுத்துரைக்கும் உரிமை இருந்தது. ஆனால் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு, அதனிடத்தில் ‘நிதிஆயோக்’ என்ற ஒரு குழுவை அமர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனை கலைத்ததால் ஏற்பட்ட விளைவு என்ன? மாநிலங்களின் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை கேட்டுப்பெற இயலாது. ஒன்றிய நிதிஅமைச்சரின் நிதிஒதுக்கீடு முடிவுகளை சார்ந்தேஇருக்க வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்மீது மாநில அரசுகளுக்கு நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை. அதற்கும் ஒன்றிய அரசையே நாட வேண்டியுள்ளது. நிதிசார் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை  (FRBM-Fiscal Responsibility & Budget Management) என்கிற சட்டத்தை 2000ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து எவ்வளவு கடன் வாங்கமுடியும் என்பதை ஒன்றியஅரசு இதன்மூலம் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியிலிருந்து 3% வரை மட்டுமே கடன்வாங்க முடியும் என்றும், அப்படி வாங்கும் கடன்தொகையை மாநிலங்கள் மூலதன செலவீனங்களுக்காக மட்டுமே செலவுசெய்ய வேண்டும்எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிபந்தனைகள் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. உதாரணத்திற்கு, இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க நேர்ந்தது. இதனால் வேலை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு உணவு தேவைப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனையால், அரசுக் கருவூலத்தில் பணம் இருந்தும் மாநில அரசுகளால் மக்களின் உடனடி தேவைகளுககு செலவுசெய்ய முடியவில்லை.

நவம்பர் 31, 2021 அன்று மாநிலங்களின் கருவூலத்தில் வைத்திருந்த ஒட்டுமொத்த இருப்பு 3லட்சம் கோடி ரூபாய்கள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளானார்கள் என்று அரசுக்கு தெரியாதா? அந்த பணத்தை செலவுசெய்ய முடியாத நிலை ஏன்?

ஒற்றை ஆட்சி விருப்பங்கள்:

இந்தியா வேகமாக அதன் கூட்டாட்சி குணங்களை இழந்துவருகிறது. இப்போது மத்திய ஆட்சியில், கூட்டாட்சி முறையை விரும்பாத, பன்முகத் தன்மையை ஏற்காத, இந்தியா பல்வேறு தேசியஇனங்களின் கூட்டு என்பதை ஏற்காத ஒரு கட்சி அமர்ந்துள்ளது.

இன்று ஒருவர் தன்னை எந்த அளவிற்கு இந்தியன் என்று உணர்கிறாரோ, அதேஅளவுக்கு தான் ஒரு தமிழன், மலையாளி, கன்னடிகா, … என தங்கள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் உணர்கிறார்கள் என்பதே உண்மை. முன்பு இருந்த ஒன்றிய அரசுகளுக்கும் தற்போது இருக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே வரி என அனைத்தையுமே ஒற்றைத்தன்மையை நோக்கி செலுத்துவதே. இப்படி ஒரு சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சி எப்படி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும்?

வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், 1990களுக்கு முன் வலுவாக இருந்த எதிர்ப்புகள் இப்போது அப்படி இல்லை.

1990 இல் ஏற்பட்ட நெருக்கடி

விடுதலைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் தன்னிறவை எட்டிட முடிவு செய்தோம். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட பொதுத்துறை நிறுவனங்கள் பிரதான பங்காற்றின. மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை குறைக்க திட்டக் குழு அவசியப்பட்டது.

ஆனால் இதில் சில சிக்கல்களை நாம் சந்திக்க நேர்ந்தது. வெளிநாடுகளிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமாட்டோம் என்றால், உள்நாட்டு வளர்ச்சி உள்நாட்டு சந்தையை சார்ந்து இருக்கிறது என்று பொருள். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் செலவுசெய்ய போதுமான அளவு வருமானம் ஈட்டினால்தான் உள்நாட்டு சந்தை விரிவடையும். ஆனால் அது நிகழவில்லை. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் விவசாயத் தொழிலை சார்ந்துதான் வாழ வேண்டியிருந்தது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலைமைகள் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு நிலச்சீர்திருத்தம் அடிப்படையான முன்நிபந்தனை. அதை செய்யாத காரணத்தால் சீர்குலைவு ஏற்பட்டது.

எனவே 1980களில் வேறு முடிவுகளை அரசு எடுக்கிறது. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று. ஆனால் உற்பத்திக்குத் தேவைப்படும் இடுபொருட்களையும், நவீன இயந்திரங்களையும், இன்னபிறவற்றையும் இறக்குமதி செய்யும் முடிவிற்கு மீண்டும் அரசு வருகிறது. ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவில் நிகழவில்லை.

இந்த தொடர் நிகழ்வுகளால் உள்நாட்டில் நமது கடன்சுமை அதிகரித்து ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சென்றது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர ஐ.எம்.எஃப் மற்றும் உலகவங்கியிடம் கடன்வாங்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் கையாட்களே. நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவதற்குதான் இவர்கள் கடன்கொடுக்கிறார்கள்.

இந்திய முதலாளிகளுக்கும் அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவைப்பட்டது. அரசின் கொள்கைகள் அவர்களுக்கு லாபகரமாக இல்லைஎன்பதை அவர்கள் புரிந்துகொண்டு உலகசந்தையில் அவர்கள் வலைவீச விருப்பப்பட்டனர். விடுதலைக்குப்பின் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்திருந்தன.எனவே இந்திய முதலாளிகள் நவீன தாராளமயக் கொள்கையின் தனியார் மயத்தை ஆதரித்து அந்நிய மூலதனத்தின்பக்கம் நின்றனர்.

இது எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பதற்குள் நான் ஆழமாக போகவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் முன்வைக்கிறேன். அனைத்து துறைகளிலும் இருந்த ஒழுங்குமுறைகள் யாவும் உலகசந்தையோடு ஒத்துப்போகும்படி அந்நிய மூலதனத்துக்கு ஆதரவாக மாற்றிஅமைக்கப்பட்டது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் அந்நிய மூலதனத்தின் தடையற்ற போக்குவரத்திற்காக விதிகள் தளர்த்தப்பட்டன.

இதன்விளைவாக என்னநடந்தது?

“என்ன விளைவுகள் இருந்தால் என்ன, இது பொருளாதார வளர்ச்சியைஅதிகரித்துள்ளது” என ஒருசிலர் வாதிடுகின்றனர். இப்படி வாதம் செய்பவர்கள் எதையும், எதையும் ஒப்பிடுகிறார்கள்? கொரோனாவுக்கு முன், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7% ஆக இருந்தது. 1951 முதல் 1980 வரையான காலக்கட்டத்தில் 3.5% ஆகயிருந்த வளர்ச்சி விகிதம் நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்குப்பிறகு இருமடங்காக அதிகரித்து 7% ஆகியிருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இவர்கள் 1980 ஆம் ஆண்டிலேயே பொருளாதார வளர்ச்சி 3.5% என்பதில் இருந்து 5% ஆகிவிட்டிருந்ததை கூறமாட்டார்கள். தனியார் மயத்திற்கு முன்பே ஒரு சீரான வளர்ச்சிப்போக்கில்தான் பொருளாதாரம் வளர்ந்தது.

விடுதலைக்கு முன் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். அப்போது 1% என்ற அளவிற்கும் குறைவாக இருந்த வளர்ச்சி, விடுதலைக்கு பின் 5% ஆனது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 1990களுக்கு பின்  ஏற்பட்டது அல்ல.

வரலாறு காணாத ஏற்றத்தாழ்வு:

உண்மையில், நவீன தாராளமயக் கொள்கையின் நடைமுறையால் கிடைத்த வளர்ச்சிக்கு இந்திய மக்கள் பெருந்தொகையை இழக்க வேண்டியிருந்தது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் ஆழமாக வளரத் துவங்கியது. இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல் சமத்துவமின்மை எக்காலத்திலும் இருந்ததில்லை. அவ்வளவு இடைவெளி கொண்ட ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

உதாரணத்திற்கு சில புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் அதிக பணம்படைத்த 1% மேல்தட்டு மக்களின் வருமானத்தைப் பார்ப்போம். 1961-இல் அவர்களின் வருமானம் 13% இருந்தது. 1981 வரைஇது ஏறத்தாழ இப்படியே நீடித்தது. 1991-இல் இது 10.4% ஆக குறைகிறது. ஆனால் தனியார்மயமும் நவீன தாராளமய கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தபிறகு 2020-இல் அவர்களுடைய வருமானம் 21% ஆக அதிகரித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் அடித்தட்டில் இருக்கும் 50% மக்களின் வருமானம் எப்படி இருந்தது?

1961-இல் 21% ஆகவும், 1981-இல் 23% ஆகவும் உயர்ந்திருந்தது. பின் தனியார்மயம் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு பிறகு 2020-இல் 14.7% ஆக குறைந்திருக்கிறது. நினைவில் கொள்க. இதில் வெறும் 1% செல்வந்தர்களையும் 50% அடித்தட்டு உழைக்கும் மக்களையும் மட்டுமே நாம் ஒப்பிடுகிறோம்.

சொத்துக்குவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அடித்தட்டு மக்களின் சொத்துக்கள் 1961-இல் 10% லிருந்து 1981 வரை 12% ஆக உயர்ந்தது. இன்று 2020-இல் வெறும் 2.8% ஆக சுருங்கியுள்ளது! 1% மேல்தட்டு மக்களிடம் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991 வரை 11% ஆக சீராக இருந்த சொத்துசேர்ப்பு, இன்று 43% ஆக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூக கொந்தளிப்பாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.க போன்றொதொரு கட்சியின் ஆட்சி முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. இதன் அரசியல், மக்களை மதம், சாதிசார்ந்த இந்துத்துவ வெறுப்பு அடிப்படையில் எப்போதும் பிரித்து வைக்கிறது. அதோடு ஒரு எதேச்சதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்ளக்கூடிய, பன்முகத்தன்மையை புறம்தள்ளி அனைத்தையும் ஒற்றைஅதிகாரத்தின்கீழ் கொண்டுவரக்கூடிய ஒற்றைஆட்சியை நோக்கிய ஒரு கட்சியாக அது செயல்படுகிறது. அதிகாரகுவிப்பு என்பது நவீன தாராளமயக் கொள்கையின் உள்ளார்ந்த பண்பும்கூட என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகார பரவலின் நிலை:

இப்போது மாநிலகட்சிகளின் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் போலவே இவர்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதன் விளைவாகவே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கஜானாவில் பணம்கொட்டிக்கிடந்தும் வாழ்வாதாரத்தை இழந்த, வேலையிழந்த மக்களுக்கு அதனை பயன்படுத்தாத நிலையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.

ஆனால் கேரளா இதனை கொரோனா காலம் முழுவதும் செலவு செய்தது. 2021-இல் ஒருநாள்கூட கேரள அரசு கஜானாவில் பணம் விட்டுவைத்ததில்லை. இதுதான் எங்கள்கொள்கை. இடதுசாரி கொள்கை. இக்காலத்தில் கடனாக பெற்ற பணத்தை உணவு, மருத்துவ தொகுப்புகளை வழங்கவும், ஓய்வூதியத்தை உயர்த்தவும், சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்யவும் செலவிட்டது. 2021-இல் கேரளாவின் சமூகநல செலவினங்கள் 162% உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் 30% மட்டுமே உயர்ந்துள்ளது.

அதிகார பரவலாக்கம் என்று சொல்லும்பொழுது,

1. மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

2. மாநிலங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பகிரப்படவேண்டும்.

ஆனால்,பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொருத்தமட்டில் அதிகார பரவலாக்கம் என்பது மாநிலங்களின் உரிமைகளை மீறி, நேரடியாக தங்கள் அதிகார எல்லைக்குள்உள்ளாட்சிகளை கொண்டுவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ராஜிவ்காந்தி ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு செய்யவிருந்த 64 மற்றும் 65வதுதிருத்தங்கள். அவை பின் முறியடிக்கப்பட்டன.

பா.ஜ.க உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல்காரியம் உள்ளாட்சி துறைக்கு இருந்த அதிகாரத்தை குறைத்ததுதான்.

அதீத வறுமை ஒழிப்பு:

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரள மாடலுக்கு இப்படி பல தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி “Peoples Planning” (மக்களின் திட்டமிடல்) என ஒரு தனி புத்தகமே வெளிவந்துள்ளது. புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கேரளா உள்ளாட்சி அமைப்புகள் மூலமே மீண்டெழுகிறது.

தோழர் இ.எம்.எஸ். தொடங்கி வைத்த “மக்களின் திட்டமிடல்” என்ற பாதையில் கேரளா பயணிக்கத் தொடங்கி தற்போது 25வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கேரளாவில் அதீத வறுமைஒழிப்பு என்ற பிரச்சாரத்தை நாங்கள் கையிலெடுத்திருக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறுகிறேன். அதீத வறுமையில்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறோம்.

இதனால் கேரளாவில் அனைத்துமே சரியாக நடக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். நல்ல உள்ளாட்சிகளும் உள்ளன; மோசமாக செயல்படும் உள்ளாட்சிகளும் உள்ளன. ஆனால் அதிகார பரவலாக்கம் திட்டமிடலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதுதான் கேரள அனுபவம் உணர்த்தும் உண்மை.

தனியார் மயத்திற்கு மாற்று மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமிடல்தான். அவரவர் வசிக்கும் பகுதிகளில் என்ன வரவேண்டும் என்று மக்கள் திட்டமிட அதிகாரம் வேண்டும். இருக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், கூட்டாக எப்படி, என்ன பயிர் செய்யவேண்டும் என அனைவரின் பங்களிப்பு மட்டுமே தனியார் மயத்திற்கு மாற்றாகும். (Participation is the answer to Privatization)

முடிவாக:

“ஜனநாயக மத்தியத்துவம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஜனநாயக பரவலாக்கம்” குறித்து பேசமுடியும் என தோழர் இ.எம்.எஸ்இடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில், “ஜனநாயக மத்தியத்துவம் என்பது எங்கள் கட்சிக்குள் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. அதில் ஒருவருக்கு உடன்பாடில்லை என்றால் அவர் தாராளமாக விலகலாம். ஆனால் ஜனநாயக பரவலாக்கம் என்பது அரசுகளின் கொள்கையாக இருக்கவேண்டும்.” ஜனநாயக அதிகார பரவலாக்கம் அதிகாரத்தை மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாநிலத்திடமிருந்து உள்ளாட்சிக்கும் கடத்திடும்.

கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவை மிகவும் வலுவற்றதாக இருக்கின்றன. எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், எவ்வளவு வலுவற்றதாக இருந்தாலும் அதிகார பரவலாக்கத்திற்கு நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகளை இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, விரிவுபடுத்த நாம் பயன்படுத்தவேண்டும் என்பதையே முடிவாக நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழில்: பிரசன்னா வெங்கடேஷ்