’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்

  • உ. வாசுகி

இந்தியாவின் அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்டதிலிருந்தே, அதனுடனான ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வாமை, பல விதங்களில் ,வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ”இதில் நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியிலிருந்து, ”மனுவின் கோட்பாடுகளை விட சிறந்த சட்டம் எதுவும் இல்லை” என்ற வாக்குமூலம் வரை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘நம்முடையது’ என்று அவர்கள் சொல்லும்போது, அரசியல் சாசனத்தில் இருப்பது வேறு யாருடையதோ என்று பொருள்.  அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கூட்டாட்சி கோட்பாடு, சம நீதி, சமூக நீதி, அறிவியல் கண்ணோட்டம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவுமே நம்முடையது இல்லை என்பது அவர்கள் வாதம். இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால், இவை எதுவுமே இருக்காது என்றுதான் இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படை நிலைபாடான இந்துத்துவ ராஷ்டிரம் அமைவதை குறிக்கோளாக வைத்தே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவ நகல் அரசியல் சாசனம்:

சில மாதங்களுக்கு முன், வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்கள், இந்துத்துவ ராஜ்யத்தின் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்ற நகலை வெளியிட்டனர். இது நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்.சோ, பாஜகவோ, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறவில்லை. இந்திய தலைநகர் வாரணாசி என்றும், நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் அல்ல; மத பிரதிநிதிகளின் மன்றம் என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது. இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்தியாவின் குடிமக்களாகத் தொடரலாம்; ஆனால் ஓட்டுரிமை இருக்காது என்பது அதில் ஒன்று. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர், பஞ்சஜன்யா இதழ்களுக்கு அளித்த பேட்டியிலும் இது பிரதிபலிக்கிறது.   “இசுலாமியர்கள் இங்கு இருந்தாலும் இருக்கலாம். அவர்களின் முன்னோர்கள் இடத்துக்குப் போவதென்றாலும் போகலாம். இங்கு இருக்க வேண்டும் என்றால், அவர்களின் உயர்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். இந்துக்கள் 1000 ஆண்டுகளாக அந்நிய சதிகளை முறியடிக்க ஒரு யுத்தம் நடத்தி வருகின்றனர். யுத்தத்தில், ஆக்ரோஷமாக இருப்பது இயல்பானது” என்ற அவரின் பேச்சு, சிறுபான்மையினர் மீதான சங் அமைப்பின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல; வன்முறையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அடுத்து, நீதி பரிபாலன முறை, இந்துத்துவ ராஷ்டிரத்தில் திரேதா யுகம், துவாபர யுகத்தில் பின்பற்றப்பட்ட முறையாக இருக்கும் என அந்த நகலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சங் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக இல்லை. பல சுற்று விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்கள், திருத்தங்கள், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உட்பட நிராகரிக்கப்படும்.  இத்தகைய யுகங்கள், இந்து மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, மத அடிப்படையிலான அசமத்துவ கோட்பாடுகள் இவற்றில் பிரதிபலிக்கும். சிறுபான்மையினரை இரண்டாம் நிலையில் நிறுத்துவது மட்டுமல்ல; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பிரிவுகளுக்கும் சமநீதி இல்லை. இந்த வரைவு அறிக்கையின் மைய அம்சம், வருண அமைப்பின் அடிப்படையில்தான் அரசு நிர்வாகம் இயங்கும் எனக் கூறுகிறது. வருண, சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தோழர் பிரகாஷ் கராத், இந்துத்துவ ராஷ்டிரத்தைப் பற்றிக்  கூறும்போது,  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒன்றல்ல:

அதன் ஒரு பகுதியாகவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று பட்டியல் நீள்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையின் சீருடை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என பிரதமர் சமீபத்தில் முன்மொழிந்தது இதற்கு ஒரு உதாரணம். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகள், கடந்த கால அரசாங்கமும் எடுத்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.  வகுப்புவாத சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற வேறுபாடு முக்கியமானது.  இந்தி திணிக்கப்படுவதும், சமஸ்கிருதம் போற்றப்படுவதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல்துறையின் எல்லையை மீறி நேரடியாகத் தலையிடலாம் என்பது, இசுலாமியர்களை அல்லது அரசியல் எதிரிகளைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசின் கைவசம் வைக்கும் முடிவு.  இந்த வரிசையில்தான் ஆளுநரின் அதிகார மீறல் பிரச்னையும் வருகிறது.

அரசியல் ஆயுதமாக ஆளுநர்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் குறுகிய அரசியல் ஆதாயம் மட்டும் பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியலாம். ஆனால், விளைவு அது மட்டுமல்ல; பாஜக அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் நோக்கமும் இதில் உண்டு. அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு மீறல், கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுதல் போன்ற விளைவுகளுடன்,  அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை ஒட்டியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது. சகல அதிகாரமும் பெற்ற ஒன்றிய அரசாங்கமாக இருந்தால்தான், எதிர்ப்புகளை நசுக்கி,  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலையும், கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலையும், சுயசார்பு அற்ற அயல்துறை கொள்கையையும் துரிதமாக நடத்தி செல்ல முடியும்.

எதேச்சாதிகார பாதை

பாஜக அல்லாத மாநில அரசுகளை முடக்க ஆர்.எஸ்.எஸ். பாஜக எடுக்கும் முயற்சிகள் பலவிதம். மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்றவற்றைக் காட்டி அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது, பல நூறு கோடிகள் கொடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஏற்பாடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி, தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பிடிப்புள்ளவர்களை ஊடுருவ வைப்பது எனப் பல வடிவங்களில் இவை வருகின்றன. ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான ஊடகங்களைத் தம் ஊதுகுழலாக்கி வைத்திருப்பதும் இதில் உள்ளடங்கும். வரி வருவாய் உட்பட நிதி பகிர்வு விஷயத்தில் மாநில அரசுகளைத் திணற வைப்பது, மாநில அரசுகளின் நல திட்டங்களை இலவசம் என்று முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் அதிகம் முன்னுக்கு வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது போல, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அமல்படுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், எதேச்சாதிகார பாதையில் செல்லத்தான் வேண்டும். ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்து வேறுபாடுகளும், எதிர்க்கட்சிகளும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களும். மக்கள் தம் விருப்பப்படி வாக்களிப்பதும் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமானது, மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பதாகும். அனைத்துக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்க வேண்டும் என்பதை மறுதலிப்பது, கருத்து சுதச்திரத்தை முடக்குவது, ஊடகங்களைத் தம் கைப்பாவையாக வைத்திருக்கும் முயற்சி, பிபிசி ஆவண படத்துக்குத் தடை, சமூக ஊடகங்கள் மீது நிர்ப்பந்தம், வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் போன்றவற்றைக் கூறலாம். உயர்கல்வி துறை, குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள், மாணவர்களின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கக் கூடிய இடங்களாகும். ஆளுநர் என்பவர், பல்கலைக்கழக  வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, சங் சிந்தனையாளர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து ஊடுருவது என்பதும், சுதந்திர சிந்தனையை சீர்குலைக்கும் போக்காகும். தேசிய கல்வி கொள்கை முழுக்க முழுக்க, சங் சிந்தனை கூடாரமாகக் கல்வி நிலையங்களை மாற்றும் போக்கே.

ஆளுநரின் பங்கு பாத்திரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அணுகுமுறையை இந்தப் பின்புலத்தில் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். அதிகார வரம்பு தெரியாமல் அவர் செயல்படவில்லை. தெரிந்தே அதை மீறுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி அது.  டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆளுநருக்கு என்று எந்த வேலையும் இல்லை; அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கடமைகள்தான் உண்டு என சுட்டிக் காட்டுகிறார். சர்க்காரியா கமிஷன், ஆளுநர் என்பவர் தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்பவராகவும், தீவிர அரசியல் தொடர்புகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விளக்குகிறது. எனவே, தம் சொந்த அரசியல் – சித்தாந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் வாசிக்க மறுத்த பகுதிகள் முழுவதும் சங் சித்தாந்தத்துக்கு எதிரானவை.

மத்திய – மாநில உறவுகள் சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட பல கமிஷன்கள், ஆளுநர் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. உதாரணமாக, சர்க்காரியா கமிஷன் (1983), ஆளுநரை அகற்றும் போது, மாநில அரசுடன் கலந்து பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  நிர்வாக சீர்திருத்த கமிஷன் (1969) அரசியல் சார்பு தன்மை இல்லாத ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறது. பூஞ்ச்சி கமிஷன் (2007). ஆளுநர்களை அகற்ற (இம்பீச்மெண்ட்) மாநில அரசுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வேண்டும்.; ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சரின் கருத்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், ஆளுநரின் அதிகாரங்களை இன்னும் ஸ்தூலமாக வரையறுக்கக் கூடிய அரசியல் சாசன திருத்தம் (பிரிவு 153ஐ திருத்துவது சம்பந்தமாக) கோரி தனிநபர் மசோதாவை சமீபத்தில் முன்மொழிந்துளார். மாநில முதலமைச்சரிடம் 3 பெயர்களைப் பெற்று, அதில் ஒன்றைப் பரிசீலிக்கலாம என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது ஆளுநர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தது போன்ற அணுகுமுறை ஜனநாயக கட்டமைப்பில் பொருந்தாது என்ற அவரது வாதம்  சரியானது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுநரின் அவசியத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புவதோடு, மேலிருந்து நியமிக்கப்படுபவராக ஆளுநர் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நீதிபதிகள் நியமனம்

இதனை ஒட்டியே நீதிபதிகள் நியமனம் குறித்த சர்ச்சையைப் பார்க்க வேண்டும். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜிஜு,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, ஒன்றிய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அரசியல் சாசன பிரிவுகளின் சாராம்சம், அரசாங்கமே நீதிபதிகளை நியமிக்கக் கூறுகிறது என்றும், இந்த முடிவை எடுக்காவிட்டால், நீதிபதிகளின் காலி இடங்கள் நீடிக்கும் என்றும் அச்சுறுத்தும் விதத்தில் கூறி வந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் ஒன்றிய அரசாங்கம் தலையிடும் வாய்ப்பை உருவாக்க முனைகிறார்.

குடியரசு துணை தலைவர், இப்பிரச்னையில், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை (basic tenets of constitution) வரையறுத்து, சட்டங்கள் இதற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் சாசன அடிப்படையில் அமைந்ததாகும். தம் விருப்பம் போல் கருத்துக்களைக் கூற முடியாது.   நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் சாசனத்தை மீறியும் கூட எவ்வித சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையின் மாற்றங்கள் வேண்டும் என்பது உண்மைதான். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்கக் கூடிய, சார்புத்தன்மை அற்ற  கமிஷன் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், கொலிஜியத்தின் கோளாறுகளை முன்வைத்து, அந்த இடத்தில், ஒன்றிய அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டு வர, ஒன்றிய அரசு முனைவதை அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசின் இந்த முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல; தம் சித்தாந்த அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க வைக்கும் ஆபத்தும் மிக அதிகமாகத் தெரிகிறது. மோடியும், மோகன் பகவத்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் தீர்ப்புகளாகி விட்டால், இந்திய குடியரசின் குணாம்சம் முற்றிலும் மாற்றப்படும். எனவே, ஒன்றிய அரசின் நகர்வுகளை, ஒவ்வொன்றாகத் தனித்து பார்ப்பதை விட, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற ஒட்டு மொத்த பார்வையுடன் அணுகுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை ஒருங்கிணைப்பதும், மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவதும் நமக்கு முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்

  • . வாசுகி

 கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஸ்தாபனம் என்பது தனித்துப் பார்க்க இயலாதது. கட்சியின் அரசியல் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்கக் கூடாதது. ஜோசப் ஸ்டாலின் அவர்கள், “சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி, கூரை மேல் நின்று அதை கூவினால் போதும்; அதை தீர்மானமாக இயற்றி ஏகமனதாக நிறைவேற்றினால் போதும்; வெற்றி தானாக வந்து விடும் என சிலர் நினைக்கிறார்கள்…. வெற்றி பொதுவாக தானாக வராது; அதனை அடைய வேண்டும்….. தீர்மானம் போடுவது வெற்றி அடையும் விருப்பத்தை காட்டுகிறதே தவிர, அதுவே வெற்றி அல்ல… சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதனை நடைமுறைப்படுத்த ஸ்தாபன ரீதியாக போராட வேண்டும்…. அதாவது சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதன் தலைவிதியை, வெற்றி தோல்வியை, ஸ்தாபனமே தீர்மானிக்கிறது” என்கிறார்.

 அரசியல் நோக்கமும்  ஸ்தாபனமும் கம்யூனிச இயக்கத்தின் இரு கால்களைப் போல… இரண்டும் ஒரே திசையில் ஒத்திசைந்து  பயணிப்பது முக்கியம்.

 எனவேதான், அகில இந்திய மாநாட்டில், அரசியல் ஸ்தாபன அறிக்கை என்ற பெயரிலேயே ஸ்தாபன அறிக்கை வைக்கப்படுகிறது. சென்ற மாநாட்டு அரசியல் நடைமுறை உத்தி பற்றிய பரிசீலனை, கட்சி அமைப்பு, வர்க்க வெகுஜன அமைப்புகள் என மூன்று பகுதிகள் இதில் இடம்பெறும்.

இடது ஜனநாயக அணி

1978இல் 10வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது. அதுவரை காங்கிரஸ் என்ற  பெரு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதி மட்டுமே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்திய சூழலில்,  காங்கிரஸ் கட்சியை முறியடிப்பது;  அதன் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைப்பது   என்பதே  அரசியல் நடைமுறை உத்தியின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1978 மாநாட்டின்போது  ஜனதா கட்சி உருவாகி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பின்னணியில், காங்கிரஸ், ஜனதா கட்சி இரண்டுமே அடிப்படையில்  முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளைக்  கடைப்பிடிக்கக் கூடிய கட்சிகள். எனவே இவற்றுக்கு மாற்று என்பது இதே கொள்கைகளை ஏற்ற இறக்கத்தில் கடைப்பிடிக்கும் இன்னொரு அணியாக இருக்க முடியாது.  இந்தக் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறாக,  மக்களுக்கான ஒரு திட்டத்தை  உருவாக்குவதும், அந்த திட்டத்தின் அடிப்படையில்  அணி சேர்க்கையைக் கட்டமைப்பதும்  தேவை என்ற புரிதலோடு, இடது ஜனநாயக அணியைக் கட்டமைப்பது என்ற நிலைபாடு எடுக்கப்பட்டது. இதன் வளர்ச்சி மக்கள் ஜனநாயக அணி கட்டமைக்கப்பட உதவும். இதில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களுக்கு என்று ஒரு வர்க்க அமைப்போ, வெகுமக்கள் அமைப்போ உருவாக்கப்பட்டால்தான் அணிதிரட்ட முடியும்.

எனவே 1980களுக்கு பிறகு பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசியல் நோக்கத்திற்கு ஏதுவாக கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்கவே, சால்கியா பிளீனம் நடத்தப்பட்டது. அதே போல், மீண்டும் 20வது மாநாட்டில், நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்துக்குப் பின், கட்சி உருவாக்கிய அரசியல் நடைமுறை உத்திகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இடது ஜனநாயக அணியின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்பட்ட பின், அதற்கேற்ப ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்க, கொல்கத்தா பிளீனம் நடத்தப்பட்டது. இருப்பினும், பொதுவாக இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான துவக்க கட்ட வேலைகள் கூட செய்யப்படவில்லை என்பதை மாநாட்டு அறிக்கைகள் சுய விமர்சனமாக முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் நாடாளுமன்ற வாதமும், சித்தாந்தப் பிடிப்பில் ஏற்பட்டுவரும் சரிவும், இதற்குக் காரணம் என கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியது இப்போதும் தொடர்கிறது. இதில் ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்த பின்னரே  அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதனுடன் இணைத்துப் பார்த்தால், இதனால்  உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விடும்  என்பதை விட, கட்சி உறுப்பினர்களின் தரத்தை கெட்டிப்படுத்தி கட்சி விரிவாக்கத்திற்கு இது  வழி வகுக்கும் என்கிற புரிதல் தெளிவாக முன்னுக்கு வரும்.

வர்க்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரையும் அவரவருக்கான அமைப்பில் திரட்டி அரசியல்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக அணியோடும், வர்க்க சேர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதோடும்  இணைந்தது என்கிற வெளிச்சத்தில், வர்க்க வெகுஜன அமைப்புகளின் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். இந்த அமைப்புகளில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகள், இந்த அரசியல் ஸ்தாபன நோக்கத்தை புரிந்துகொண்டு  அதில் செயலாற்ற வேண்டும். தான் பொறுப்பு வகிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் அப்பொறுப்புகளைத்  திறம்பட நிறைவேற்றுவதோடு, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் கடமை முடிந்து போகலாம். ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, பொறுப்பைத் திறம்பட நிறைவேற்றுவது என்பதோடு சேர்த்து, அதில் வரும் வெகு மக்களை ஸ்தாபனப்படுத்துவதும், அரசியல்படுத்துவதும், இடதுசாரி அரசியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும், தொடர்புகளைப் பயன்படுத்தி கட்சியை விரிவாக்கம் செய்வதும், கட்சியின் முடிவுகளை அந்த அரங்கின் வெகுஜனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பொருந்தக் கூடிய விதத்தில் நிறைவேற்றுவதும் என கடமைகளின் பட்டியல் நீண்டது. வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அல்லது அதில் பணியாற்றக்கூடிய கட்சி ஊழியர்களையும் இரண்டாம் நிலையில் வைப்பது அரசியல் ஸ்தாபன புரிதல் பற்றாக்குறையின் வெளிப்பாடே.

23வது மாநாட்டு முடிவுகள்

இருபத்தி மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான பணிகள், சாதியம், ஆணாதிக்கம், மதவெறி அனைத்தின் கலவையுமான இந்துத்துவா  சித்தாந்தத்தை முறியடிப்பது, அதை முன்வைக்கும் சங் பரிவாரங்களின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வது, தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது, இதற்குத் தேவைப்படும் கூட்டு செயல்பாடுகள், கூட்டு மேடைகள், பரந்த மேடைகள் உள்ளிட்ட ஸ்தாபன பணிகளில் கவனம் செலுத்துவது, இந்தப் புரிதலுடன் ஊழியர்களை வளர்த்தெடுத்து செயல்பட வைப்பது, அதில் இளைஞர்கள் பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, மக்களோடு  உயிர்ப்புடன் கூடிய தொடர்பு போன்றவற்றை ஸ்தாபன கடமைகளாக வரையறுத்துள்ளது. இதை செய்யக்கூடிய திறன்  படைத்தவையாக மாநிலக்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு, கிளை மாற வேண்டும். அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் இதை நோக்கியே தங்களது வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். வேலை முறையில் மாற்றம் என்பது இதுதான்.

உதாரணமாக, ஸ்தல போராட்டங்கள் அல்லது உள்ளூர் மட்ட போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பிளீனம் மற்றும் நடந்துமுடிந்த மாநாடுகளின்  அறிவுறுத்தலாக உள்ளது. அகில இந்திய மாநாடு  ஸ்தல போராட்டங்கள் குறித்து ஏன் பேசுகிறது, எந்த அடிப்படையில் பேசுகிறது என்று பார்த்தால், மாஸ் லைன் என்று சொல்லப்படுகிற மக்களோடு உயிர்ப்பான தொடர்பு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் மட்ட  இயக்கங்களே பெரும் வாய்ப்பு என்பதுதான். எனவே நாம் நடத்தும் ஸ்தல போராட்டங்களின் மூலம் உள்ளூர் மக்களோடு கட்சிக்கு, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளுக்கு, தொடர்பு பலப்பட்டு, அது இடதுசாரி அரசியலாக, கருத்தியலாக, அமைப்புகளாக பரிணமிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தை கணக்கில் எடுக்காமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதோடு நிறுத்திவிட்டால் கம்யூனிஸ்ட் பணி முழுமை பெறாது, அரசியல் நோக்கம் ஈடேறாது. இத்தகைய போராட்டங்கள் ஒரு சில கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நீடித்து   நடத்தப்பட வேண்டும். உள்ளூர் மட்ட போராட்டங்கள் நீடித்து நடக்காமல் போவதற்கு காரணங்களாக, அரசியல், பொருளாதார, சமூக, ஆதிக்க சக்திகளுடன் மோதல்கள் கடுமையாக வரும் சூழல், நாடாளுமன்ற வாதம் போன்றவற்றை அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எதிர்கொண்டு  போராட்டங்களை உத்தரவாதப்படுத்துவது மேல் கமிட்டிகளின் பொறுப்பாகும்.

மற்றோர் உதாரணம் கூட்டு இயக்கங்கள், கூட்டு மேடைகள் குறித்ததாகும். இதன் அரசியல் நோக்கம் என்ன? பல்வேறு கட்சிகளை அமைப்புகளை திரட்டும் போது, கோரிக்கைகளுக்கு வலு கிடைக்கும், இந்த அமைப்புகளுக்கு பின்னாலுள்ள மக்களுக்கு செய்தி போகும் என்பது ஒருபுறம். இதன் மறுபக்கம் அதுவும் முக்கியமான பக்கம் என்பது, அவர்களிடம் நம்முடைய மாற்று அரசியலையும் கருத்துக்களையும் முன் வைப்பதற்கும், ஈர்ப்பதற்குமான வாய்ப்பு என்பதாகும். எனவே, கூட்டு இயக்கங்கள் நடந்த பிறகு, அதன் மீதான பரிசீலனையில், நமக்கு அரசியல், ஸ்தாபன ரீதியாக கிடைத்த பலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ சக்திகளின் சவால்களை சந்திப்பதற்கு பன்முக செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வாழ்வுரிமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களை அணிதிரட்டி ஒன்றுபட்ட போராட்டம் நடத்தினாலே மதவெறி செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட முடியும் எனக் கருதிவிட முடியாது. இந்துத்துவ சக்திகளுடைய தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரம் மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைக்கிறது. வெற்றிகரமாக ஓராண்டுக்கும் மேல் நடந்த விவசாயிகளுடைய மகத்தான போராட்டத்திற்கு பின்பும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக வாக்கு சதவீதத்தோடு ஆட்சியைக் கைப்பற்றியது இதற்கோர் எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் போது மட்டும் மதவெறி சித்தாந்தம் குறித்து பிரச்சாரம் செய்வது போதாது. கருத்தியல் தளத்தில் வர்க்க ஒற்றுமைக்கும் சமூக நீதிக்குமான தொடர் பிரச்சாரம் நிகழ்த்தப்பட வேண்டும்.

கட்சியின் முக்கிய ஸ்தாபன கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு இன்றைக்கு பலராலும் விமர்சிக்கப்படும்  அம்சமாக உள்ளது. கட்சிக் கட்டுப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதும் கட்சியின் அரசியல் நோக்கோடும், இலக்கோடும் இணைந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,  ஏகபோக எதிர்ப்பு  என்ற அம்சங்களை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை  இலக்காக முன்வைக்கும்போது, பல்வேறு சவால்களை, அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தில்  மிக உயர்ந்த ஜனநாயகமும், முடிவெடுத்த பின் அதை அமல்படுத்துவதில் மிக உயர்ந்த கட்டுப்பாடும் தேவைப்படும்.

கட்சித் திட்டம் முன்வைக்கும் இலக்கை நோக்கிய பயணம் முன்னேறக் கூடிய விதத்திலேயே அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்படுகிறது. இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பது அரசியல் நடைமுறை உத்தியின்  ஒரு பகுதி, மையப்பகுதி. அதை விட்டுவிட்டு அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட முடியாது. இந்த ஒட்டுமொத்த புரிதலோடு கட்சி ஸ்தாபனம் முழுமையும் களத்தில் இறங்கினால், முன்னேற்றம் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சியின் திட்டத்தைப்  புரிந்து கொண்டவர்களாக,  அதை ஒட்டிய மாநாட்டு கடமைகள்,  மத்திய, மாநிலக் குழு  முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டு, தம் அன்றாட பணிகளை அமைத்துக் கொள்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். கட்சி உறுப்பினர்கள்  சிறு சிறு குழுக்களாக இருந்தால் தான்,  அன்றாட வேலைகளை பங்கீடு செய்வதும், கண்காணிப்பதும் சாத்தியம் என்கிற அடிப்படையிலேயே கிளைகள் உருவாக்கப்படுகின்றன. கிளைகளே கூடா விட்டால்  இந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. இந்தப் பின்னணியில் மாநாட்டு ஸ்தாபன முடிவுகளை, கட்சியின் அரசியல் நோக்கத்தோடு இணைத்துப் பார்க்கக்கூடிய புரிதலை, கட்சி அணிகள் மத்தியில் உருவாக்குவதே, பிரதான கடமையாக முன்னுக்கு வருகிறது.

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

முதல் அத்தியாயம் சுருக்கம

தமிழில்: சிவலிங்கம்

அத்தியாயம் 1

[கற்பனாவாத சோசலிசம்]

ஃபிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனத்தை வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த …  மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும்.

பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று … பழைய மரபுவழிக் கருத்தாக்கம் ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது…

இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) சமூக ஒப்பந்தம் (Contrat Social)27 ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். …

ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது.

அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது.

…சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாய் இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல,  வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாய் இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians):

பாட்டாளி  வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon);

முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம்  பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).

மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்காலகட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை…

நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராய் உள்ளது.

தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம்.

இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார்.

500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு எவ்வாறு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசாங்கமும், பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயமும் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து].

முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாய் ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை ரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட  ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாய் ஆனது.

புரட்சிகர முழக்கமான “சகோதரத்துவம்”33 என்பது, [மேலாதிக்கப்] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாய் ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது.

முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம், என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்திச் சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே மாபெரும் உற்பத்திச் சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது.

… பாட்டாளி வர்க்கமானது, “ஏதும் இல்லாத” சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத்தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.

இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோசலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது.

முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன.

சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பரப்புரையின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்].

… சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

… சான்-சிமோனைப் பொறுத்தவரை, …  சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை “தொழிலாளர்களுக்கும்” “சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். “தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம்.

… சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், “அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கிறார். அதே கடிதங்களில், பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் அவர் கண்டு கொள்கிறார். “ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்;  அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்ற ஒன்று எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருட்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. …

சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம்.

… அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காண்கிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாய், எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. … முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். …

ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஓர் அங்கத* எழுத்தாளராகவும், நிச்சயமாய் எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும்  கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.

*புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்.

… இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. … நாகரிகம், “ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”; தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது; எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, “நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். … அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.

3

ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், கருவிகளைத் தயாரிக்கும் புதிய எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. …

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட  ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். [அவர்தான் ராபர்ட் ஓவன்]. ராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். … ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராய் இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாய் இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும்  மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார்.

அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. … ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. “இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” [என்று எழுதினார்]. …

1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். …

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாக [இங்கிலாந்துத்] தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார்.

(அவர்) இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பாய் இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராய் இருந்தார்38. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாகக் குறைந்தது அவை, வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. …

கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோசலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது.

… உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோசலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோசலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களில் இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டாகும். சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதைக் [கற்பனை அல்லாத] ஒரு மெய்யான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.

பகுதி 1 : கற்பனாவாத சோசலிசம்

குரல்: உ.வாசுகி

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 2 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

இரண்டாம் பகுதி சுருக்கம்

தமிழில்: சிவலிங்கம்

பகுதி 2

[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]

… பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாய் இருந்தனர். இவர்கள் அனைவருள்ளும் பல்துறை அறிவுசான்றவரான அரிஸ்டாட்டில் (Aristotle) இயக்கவியல் சிந்தனையின் மிகமிகத் தலையாய வடிவங்களை ஏற்கெனவே பகுத்தாய்ந்திருந்தார். இதற்கு மாறாகப் [பிற்காலத்தைய] புதிய ஜெர்மன் தத்துவமானது, முக்கியமாய் ஆங்கிலச் செல்வாக்கின் விளைவாக, பகுத்தாய்வுப் போக்கில் இயக்க மறுப்பியல் முறை என்று சொல்லப்படும்  போக்குடன் மென்மேலும் இறுக்கமாக ஒன்றிவிட்டது. …

பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ, நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, … அனைத்துமே இயங்கிக்கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கக் காண்கிறோம். …

இயக்க மறுப்பியல்வாதிக்கு, பொருள்களும் அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், கருத்துகளும் தனித்தனியானவை; அவற்றை ஒன்றின்பின் ஒன்றாகவும் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். …

முதல்பார்வையில் இந்தச் சிந்தனைப் பாங்கு மிகவும் அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இது மேம்பட்ட பொதுப்புத்தி என்று சொல்லப்படும் சிந்தனைப் பாங்காகும். இந்த மேம்பட்ட பொதுப் புத்தியானது, அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள், ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாய் எதிர்கொள்கிறது.

… தனித்தனிப் பொருள்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகையில், அவற்றுக்கு இடையேயான தொடர்பினை அது மறந்துவிடுகிறது. அப்பொருள்களின் இருத்தலில் கவனம் செலுத்துகையில், அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்துவிடுகிறது. அவற்றின் ஓய்வில் கவனம் செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்துவிடுகிறது. மரங்களைப் பார்க்கும் அது காட்டினைப் பார்க்க முடியவில்லை. [தனிக் கூறுகளை மட்டும் பார்த்து, ஒட்டுமொத்த முழுமையைப் பார்க்கத் தவறுகிறது].

… எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், நெருங்கிச் சென்று ஆய்கையில், பல சூழ்நிலைகளில் இது மிகவும் சிக்கலான கேள்வியாய் இருக்கக் காண்கிறோம். சட்ட வல்லுநர்கள் இதை நன்கு அறிவர். தாயின் கருப்பையிலிருக்கும் சிசுவைக் கொல்லுதல் எந்த வரம்புக்கு அப்பால் கொலைக்குற்றம் ஆகிறது என்று … எவ்வளவுதான் தங்கள் மூளையைக் கசக்கிப் பார்த்தும் பலனில்லை. மரணம் நிகழும் தருணத்தை ஐயமின்றித் தீர்மானிப்பதும் இதேபோல இயலாதது. …

மேலும், நெருங்கிச் சென்று கூர்ந்து ஆராய்கையில் ஒரு முரண்நிலையின் இரு துருவங்களும், எடுத்துக்காட்டாக, நேர்நிலையும் எதிர்நிலையும், அவை எந்த அளவுக்கு எதிரெதிராய் இருக்கின்றனவோ அந்த அளவுக்குப் பிரிக்க முடியாதனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கிடையே எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவை பரஸ்பரம் [ஒன்றுள் ஒன்று] ஊடுருவக் காண்கிறோம். அதே முறையில், காரணம், விளைவு ஆகிய கருத்தாக்கங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துகையில் மட்டுமே உண்மையாய் [காரணம் காரணமாகவும், விளைவு விளைவாகவும்] இருக்கக் காண்கிறோம். இந்தத் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவை பிரபஞ்ச முழுமையுடன் கொண்டுள்ள பொதுத் தொடர்பில் வைத்துப் பரிசீலிக்கத் தொடங்கியதுமே, காரணமும் விளைவும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுவக் காண்கிறோம். …

இயக்கவியலானது, பொருள்களையும் அவற்றின் உருவகிப்புகளையும், அதாவது கருத்துகளையும், அவற்றின் அத்தியாவசியத் தொடர்பிலும், தொடரிணைப்பிலும், இயக்கத்திலும், தொடக்கத்திலும் முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. …

இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது…

டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். அனைத்து வாழும் உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் பரிணாம நிகழ்முறையின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப் பற்றிய இயக்க மறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார்.

… சூரியனும் அதன் அனைத்து கோள்களும் சுழலும் முகில்படலப் பொருண்மையிலிருந்து உருவாயின என்பது கான்ட் தந்த தீர்வாகும். அதே வேளையில், சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியது என்ற இந்தக் கருத்திலிருந்தே, வருங்காலத்தில்  அதன் அழிவும் தவிர்க்க முடியாது பின்தொடரும் என்கிற முடிவுக்கு அவர் வந்தடைந்தார். கான்ட்டின் கொள்கை முடிவை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, லாப்லாஸ் (Laplace) கணித வழியில் நிலைநாட்டினார்…

இந்தப் புதிய ஜெர்மன் தத்துவம் ஹெகலியத் தத்துவ அமைப்பில் உச்சத்தைத் தொட்டது….

இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் மனிதகுலத்தின் வரலாறு என்பது, … மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் நிகழ்முறையாகவே தோன்றியது. இந்த நிகழ்முறையின் படிப்படியான முன்னேற்றப் பயணத்தை, வளைந்து நெளிந்து செல்லும் அதன் வழிநெடுகப் பின்தொடர்வதும், தற்செயலானவையாய்த் தோற்றமளிக்கும் அதன் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியைப் புலப்படுத்துவதும்தான் இப்போது அறிவாளர்களின் பணியாய் இருந்தது.

ஹெகலிய [தத்துவ] அமைப்புமுறை, தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமன்று. இந்தப் பிரச்சினையை முன்வைத்தது என்பதுதான் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும்.

… ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தில் இருந்த இந்த அடிப்படை முரண்பாடு பற்றிய புரிதல், தவிர்க்க முடியாதபடி பொருள்முதல்வாதத்துக்குத் திரும்பவும் இட்டுச் சென்றது. [ஆனால்] வெறும் இயக்க மறுப்பியலான, 18-ஆம் நூற்றாண்டுக்கே உரிய எந்திரத்தனமான பொருள்முதல்வாதத்துக்கு அல்ல … [புதிதாகப்] பிறந்துகொண்டும், [இறந்து] அழிந்து கொண்டும் உள்ளன. [2] ஒட்டுமொத்த இயற்கை, திரும்பத் திரும்ப நிகழும் சுழல்வட்டப் பாதையில் இயங்குவதாய் இன்னமும் சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பிலாப் பெரும் பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன. இரண்டு கூறுகளிலும் நவீனப் பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் இயக்கவியல் தன்மை கொண்டதாகும். …

கடந்தகால வரலாறு அனைத்தையும் ஒரு புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய உண்மைகள் கட்டாயமாக்கின. அதன்பிறகே பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டன:

கடந்தகால வரலாறு அனைத்தும், அதன் புராதன கட்டங்களைத் தவிர்த்து, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது;

சமுதாயத்தின் இந்தப் போரிடும் வர்க்கங்கள் எப்போதுமே, உற்பத்தி முறைகள், பரிவர்த்தனை முறைகளின் படைப்புகளே. சுருங்கக் கூறின், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளின் படைப்புகளே.

சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் எப்போதுமே மெய்யான அடித்தளத்தை அமைக்கிறது. இதிலிருந்து தொடங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் நீதி, அரசியல் சார்ந்த  நிறுவனங்கள், அவற்றுடன் மதம், தத்துவம் சார்ந்த கருத்துகள், பிற கருத்துகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய [சமுதாயத்தின்] மேற்கட்டுமானம் முழுமைக்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும்.

… இதுநாள்வரை செய்ததுபோல், மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பைக் கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கு ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.

அக்காலம் முதற்கொண்டு, இனிமேலும் சோசலிசம் என்பது ஏதோவோர் அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பாய் இருக்கவில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாய் உள்ளது. …

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கம், உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய ரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, சோசலிசம் ஒரு விஞ்ஞானம் ஆகியது. அதன் விவரங்கள், உறவுகள் அனைத்தையும் வகுத்தமைப்பதுதான் அடுத்த பணியாய் இருந்தது.

பகுதி 2 (இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்)

குரல்: உ.வாசுகி

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 3 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

மூன்றாம் பகுதி சுருக்கம்

தமிழில்: சிவலிங்கம்

பகுதி 3

[விஞ்ஞான சோசலிசம்]

… வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும்,

[அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது,

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது,

உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளன.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.

இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்துச் சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல.

அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட  சகாப்தத்தின் பொருளாதாரவியலில்  கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, தத்துவத்தில் அல்ல. தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறி விட்டன* என்கிற மன உணர்வு [நாளுக்குநாள்] வளர்ந்து வருகிறது.

[அனைவரும் அறிய] வெளிக்கொணரப்பட்டுள்ள  இந்த முரண்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும், மாறிவிட்ட இந்த உற்பத்தி முறைகளுக்குள்ளேதான், ஏறத்தாழ வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழிமுறைகள், அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தருவிப்பதன் மூலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட (invented) வேண்டியவை அல்ல. தற்போது நிலவும் உற்பத்தி அமைப்புமுறையின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தே கண்டறியப்பட (discovered) வேண்டியவை.

அப்படியெனில், இது தொடர்பாக நவீன சோசலிசத்தின் நிலைபாடு என்ன?

சமுதாயத்தின் தற்போதைய கட்டமைப்பு,, இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்ததாகும். …

… முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து, அதன் இடிபாடுகள் மீது முதலாளித்துவச் சமுதாய அமைப்பை நிறுவியது. கட்டற்ற [வணிகப்] போட்டி, தனிமனித சுதந்திரம், சட்டத்தின் முன் சரக்குடைமையாளர்கள் அனைவருக்குமான சமத்துவம், ஏனைய மீதமுள்ள அனைத்து முதலாளித்துவ அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் சாம்ராஜ்யமாய் அது விளங்கியது.

அதனைத் தொடர்ந்து, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி [தங்கு தடையின்றி] சுதந்திரமாக வளர முடிந்தது. நீராவியும், எந்திர சாதனங்களும், எந்திரங்களைக் கொண்டே எந்திரங்களைத் தயாரித்தலும், பழைமையான பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றியமைத்தன.

அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டுதலில் பரிணமித்த உற்பத்திச் சக்திகள், இதற்குமுன் கண்டு கேட்டிராத வேகத்திலும், அளவிலும் வளர்ச்சி பெற்றன.

…இப்போது நவீனத் தொழில்துறையானது, அதன் முழுமையான வளர்ச்சி நிலையில், முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வரம்புகள் மீது முட்டி மோதுகிறது. புதிய உற்பத்திச் சக்திகளோ அவற்றைப் பயன்படுத்திவரும் முதலாளித்துவ முறையை விஞ்சி ஏற்கெனவே வளர்ந்துவிட்டன. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி முறைக்கும் இடையேயான இந்த மோதல், ஆதிப் பாவத்துக்கும் தெய்வ நீதிக்கும் இடையேயான மோதலைப் போன்று, மனிதனின் மனத்திலே உதித்தெழுந்ததல்ல. உண்மையில் இம்மோதல், புறநிலை ரீதியாக, நமக்குப் புறத்தே, இம்மோதலை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் சுயேச்சையாய் நிலவுகிறது.

நவீன சோசலிசம் என்பது, உண்மையில் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலால் நேரடியாகப் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல.

சரி, இந்த மோதல் எதில் அடங்கியிருக்கிறது?

தொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாறுதல் அடைகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழில்கூடங்களாய் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாய் இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கைவசப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கைவசப்படுத்திக் கொண்டு அவற்றைச் சரக்குகளாய் மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கைவசப்படுத்தலும் னிப்பட்ட செயல்களாக, அதாவது தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கைவசப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

() உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறார். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுகிறார். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை [உருவாகிறது].

() சரக்குகளின் உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கம் வளர்கிறது; அவற்றின் பயனுறுதி அதிகரிக்கிறது. கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயப்பட்ட ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக ஒழுங்கின்மைக்கும் இடையேயான முரண்பாடு [தோன்றுகிறது.[

() ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாகத் தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [அதனால்] தொழில்துறை சேமப் பட்டாளம் [உருவாகிறது]. மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம் ஒவ்வோர் உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகச் சரக்குகளின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகை – அங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்திச் சக்திகளைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்கள் முதலில் மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் சுற்றோட்டத்தில் செல்லவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்திப் பொருள்களின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாய் மாற்ற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாய் வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்திச் சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

() உற்பத்திச் சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்கு நிறுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

III.         பட்டாளி வர்க்கப் புரட்சி – முரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுநாள்வரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. … தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்.

பகுதி 3 (விஞ்ஞான சோசலிசம்)

குரல்: சிந்தன்