மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி

அபிவ் சூர்யா

அறிவியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், தற்காலத்தில் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் உச்சத்தை எட்டியுள்ளது. யார் அறிவியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றனர்; யாரிடத்தில் தொழில்நுட்ப மேம்பாடு நிரம்பி உள்ளது போன்றவை தேசங்கள் இடையேயான உறவுகளையும், சர்வதேச அளவில் சுரண்டல் முறையின் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது.

இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? அதன் போக்கு என்ன? அதன் போக்கை எது தீர்மானிக்கிறது?  தற்காலத்தில் நிலவும் உற்பத்தி முறைக்கும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே என்ன தொடர்பு? உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி அறிவியல் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு மார்க்சிய ஆய்வு முறைப்படி விடை கண்டறிந்து, அதன் வாயிலாக புரட்சியின் பாதையில் அறிவியல் ஆற்றும் பணிகளையும், அதை நிர்ணயிக்க ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாளித்துவ அறிஞர்கள், அறிவியல் என்பதை வெறும் லாபத்திற்கான கருவியாக மட்டுமே புரிந்து கொள்கின்றனர். இதனால் லாப நோக்கை மேம்படுத்தும் வகையில் அறிவியலுக்கான கட்டமைப்புகள் இருப்பின் (அதாவது அறிவியல் குறித்த கொள்கைகள், காப்புரிமம் குறித்த சட்டங்கள் போன்றவை) அது அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என வாதிடுகின்றனர். அதுவும் நவ தாராளமய ஆதரவாளர்கள், கட்டற்ற வர்த்தகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளும் தொழில்நுட்பத்தை பெற்று வளர்ச்சி அடையலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இது ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்தும் அப்பட்டமான நச்சு சொல்லாடலே ஆகும். அறிவியல் என்பது உற்பத்தியை பெருக்கி லாபத்தை கூட்ட வல்ல “தங்க முட்டையிடும் வாத்து” என்றே பார்ப்பதால், அந்த அறிவியல் தொழில்நுட்பங்களை எந்த ஏழை நாட்டிற்கும் வளர்ந்த நாடுகள் தானாக அளிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

அறிவியலை புறந்தள்ளுவதா?

உண்மையில், அறிவியல் என்பது ஆளும் வர்க்கங்களின் கையில் இருக்கும் சுரண்டல் கருவி மட்டுமே அல்ல. மானுட மேம்பாட்டிற்கான மகத்தான கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்கு எப்போதும் அளித்து தான் வருகின்றது. அண்மைக்கால பின் நவீனத்துவ சித்தாந்தங்கள், அறிவியலையே முற்றாக புறந்தள்ளவும் சொல்கின்றன. அது மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் பெருகுவதை தடுக்கின்றது. இதுவும், சுரண்டும் வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்து விடுகின்றது.

உழைக்கும் மக்கள் அறிவியலை வெறுப்பதனால், அதன் மீதான தங்களின் நியாயமான உரிமையை கோராமல் போய் விடுகின்றனர். இதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி மீதான கட்டுப்பாடு சுரண்டும் வர்க்கம் கையில் வலுவாக சென்றடைகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. அண்மை காலங்களில் இது போன்ற அறிவியல் குறித்த பிற்போக்கான புரிதல் இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் ஊடுருவத் துவங்கி உள்ளன. இந்த பின் நவீனத்துவ போக்குகளின் காரணமாக “இடதுசாரிகள் பிற்போக்காளர்கள்” என முத்திரை குத்த வலதுசாரி சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆனால் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை மார்க்சிய ஆய்வு மட்டுமே வழங்க முடியும். “லாப நோக்கமே அறிவியலுக்கு சிறந்தது” என்ற வலதுசாரி புரிதலையும், “லாபத்திற்கு மட்டுமே அறிவியல்” என்ற “சர்வதேச சதித் திட்டம்” நிலவுவது போல சித்தரிக்கும் நுட்பமாற்ற புரிதலையும் புறந்தள்ளி, அறிவார்ந்த முறையில் அறிவியல் வளர்ச்சியை அணுகுவது அவசியமாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அறிவியலும்

மார்க்சியம் என்பது இயங்கியல் விதிகளை பொருளியல் தளத்தில் பொருத்தி, இந்த அண்டத்தையும், மானுட சமூகத்தையும் புரிந்து கொள்கிறது. “இயங்கியல்”, அதாவது எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் மோதல் வழியாக வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த காலகட்டத்தில் நிலவும் எதிர்மறையான சக்திகளை புரிந்து கொள்வது அவசியம். “பொருள்முதல்வாதம்” என்றால் இந்த எதிர்மறை சக்திகளை எவரின் எண்ண ஓட்டங்களிலும் தேடாமல், “பொருள்” அல்லது பொருளியல் தளத்தில் தேட வேண்டும் என்கிறது. ஆக, மார்க்சிய ஆய்வு என்பது அந்த அந்த வரலாற்று சூழலுக்கும் ஏற்ப, அந்த அந்த கால கட்டத்தில் நிலவும் பொருள்நிலை சக்திகளையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதில் அடங்கி உள்ளது. இதே போல தான் அறிவியல் குறித்த மார்க்சிய பார்வையும் அமைய வேண்டும்.

இதனை சுறுக்கமாக சொன்னால், “அறிவியல்” என்பது – மனிதர்கள் மேற்கொள்ளும் சமூக உற்பத்தி முறையின் ஒரு அங்கமாக உள்ள மனித உழைப்பில் ஒரு பகுதியை அறிவு மேம்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப் படுவதையே “அறிவியல்” என்கிறோம். மனிதர்களின் மற்ற உழைப்பைப் போலவே இந்த “அறிவியல்” உழைப்பும் முக்கியமான பணியாற்றுகின்றது. இந்த உழைப்பின் மூலமாக இயற்கை மற்றும் இந்த அண்டத்தின் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இயற்கையோடு மனிதன் உறவாடுவதே “உற்பத்தி”. இதனால் இந்த “அறிவியலில்” செலுத்தப்படும் உழைப்பானது இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவினை மேம்படுத்துகிறது. வழிநடத்துகிறது.

இந்த சுறுக்கமான விளக்கத்தின் மேல் இயங்கியல் பொருள்முதல்வாத ஆய்வை பொருத்தி பார்ப்போம். இப்போது “அறிவியல்” என்பதும் ஒரு வகை மனித உழைப்பு, மற்றும் அதன் வெளிப்பாடு தான். ஆக, மற்ற மனித உழைப்பு போலவே, இந்த உழைப்பும் ஒரு “சமூக” உற்பத்தி முறையின் அங்கமாகத் தான் நிகழ்கிறது. ஆக, எந்த ஒரு காலத்திலும், அறிவியல் ஆய்வு முறையின் நோக்கம் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, முன்னேற்றத்திற்கான அதன் திட்டம் என்ன, அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அறிவியல் ஆய்வில் யார் ஈடுபடுகின்றனர் மற்றும் யார் ஒதுக்கப்படுகின்றனர் என்பது போன்ற அனைத்தையும் வெறும் முந்தைய கால அறிவியல் வளர்ச்சியின் நிலை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்த அந்த காலத்தில் நிலவும் சமூக அமைப்பும், உற்பத்தி முறையும் தீர்மானிக்கின்றது.

ஆனால் சமூக சூழல் அறிவியல் மீது தாக்கம் ஏற்படுத்துவது போலவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்தின் பொருளியல் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம், மீண்டும் அறிவியல் ஆய்வின் வளர்ச்சிப் பாதையின் மேல் சுழற்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, அறிவியலில் ஈடுபட்டுள்ள “அறிவுசார்” உழைப்பின் மீது, சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் பிரதிபலிக்கும். சமூக சூழலுக்கு ஏற்ப, இந்த “அறிவுசார்” உழைப்பின் தன்மை, தரம் ஆகிய அனைத்துமே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு காலத்திலும், அறிவியல் வளர்ச்சியின் போக்கு எதேச்சையாகவோ, கையளவு மனிதர்களின் அசாதாரண திறமையால் மட்டுமோ ஏற்படுவது இல்லை.

மனித வாழ்வில் ஏற்படும் இயங்கியல் மாற்றங்களானது அறிவியல் “எப்படி பயன்படுத்தப்படுகிறது” என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் தன்மை மற்றும் தரத்தையும் கூட தீர்மானிக்கின்றது.

மார்க்சிய புரிதலில் அறிவியல்

“மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பது மார்க்சிய கூற்று. அறிவியல் என்பதை “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின் உற்பத்தி” என புரிந்து கொண்டால், மனிதனின் இருப்பும், மனிதனின் அன்றாட பொருளியல் வாழ்விற்கான உழைப்பு மற்றும் உற்பத்தியும் தானே இந்த “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின்” உற்பத்தியையும் தீர்மானிக்க வேண்டும்? இதன் காரணமாகத் தான், ஆதிகால மனித சமூகத்தில் “அறிவியல்” என்பதற்காக தனியே எந்த உழைப்பையும் ஒதுக்கி வைக்காத போதும், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தான் செய்தது. ஏனென்றால் அன்றாட வாழ்வின் பொருளியல் உற்பத்தியில் ஏற்படும் உழைப்பின் பழக்க வழக்கங்கள் தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படை.

எனவே, அறிவியலின் எந்த வளர்ச்சியும் வெறும் ஒரு மனிதனின் மூளையில் “உதிப்பது” அல்ல. ஒரு சிந்தனையின் உண்மை தன்மையானது, அன்றாட வாழ்வின் உழைப்பின் வாயிலாகத் தான் நிரூபணம் ஆகிறது. ஆகையால் அன்றாட பொருளியல் வாழ்வின் முன்னேற்றம் தான், அறிவியல் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கின்றது. இதன் பொருள், எந்த ஒரு கால கட்டத்திலும், “மனித உழைப்பு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது” என்பதே அறிவியலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதாகும். குறிப்பிட்ட காலத்தின் “உற்பத்தி முறை” (எ.கா. – ஆதி பொதுவுடைமை, நிலப்பிரபுத்துவம்,..) அதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் காலத்தில் நிலவும் நிலவும் உற்பத்தி முறையில் “அளவு மாற்றம்” ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உற்பத்தி முறையில் முரண்பாடுகளும், நெருக்கடிகளும் உருவாகின்றன. இந்த நெருக்கடியானது அறிவியலில் தாக்கம் செலுத்துகிறது. “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடயே விரிசல் உண்டாக்கின்றது. உற்பத்தி முறையில் ஏற்படும் “புரட்சிகர” மாற்றமானது, “சிந்தனை முறை”, அதாவது அறிவியல் முறையிலும் மற்றதை ஏற்படுத்தும்.

இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ளலாம். இயற்கையில் நிலவும் கடுமையான சூழலில் உயிர் பிழைக்க போராடும் ஆதி கால மனிதனின் சிந்தனைகள் எல்லாம் இயற்கையில் திறம்பட பிழைப்பதை நோக்கியே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் “அறிவார்ந்த சிந்தனைகள்” அனைத்துமே பிழைத்திருப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நோக்கியதாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு கண்டுபிடிப்பாளரின் சிந்தனைகள் முழுவதும், விற்பனைக்கான ஒரு பண்டத்தை உருவாக்குவதை நோக்கி மட்டுமே இருக்கும்.

இப்போது ஆதி கால மனித சமூகத்தில் நெருக்கடி உண்டானால் என்னாகும்? இப்போது ஆதி மனிதனின் போராட்டம் இயற்கையோடு இல்லாமல், சக மனிதர்களோடு போராட்டம் என மாறிப் போனால், என்னாகும்? இது நாள் வரை “பிழைத்திருப்பது” என்பதை நோக்கி கட்டமைக்கப்பட்ட “அறிவுச் சிந்தனைகளின்” இலக்கு மாற்றப்படும். எனவே சிந்தனைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும். மனிதர்களோடு போராட்டம் என்ற இலக்கை நோக்கிய சிந்தனைகள் வெளிப்படும். ‘பிழைத்திருப்பதற்கான’ சிந்தனைகளை அமலாக்க பயன்படுத்தப்பட்டு வந்த வழிமுறைகள், கட்டமைப்புகள் பயன் குறைந்தவையாக ஆகிடும்.

இவ்வாறுதான் உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி, அறிவியல் முறையிலும் பிரதிபலிக்கின்றது.

அறிவியலை வளர விடாமல் தடுக்கும் உத்தியோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றோ, குறிப்பிட்ட வர்க்கம் முயற்சிக்கிறது என்றோ ‘சதித்திட்ட கதையாடலை’ மார்க்சியம் முன்வைப்பதில்லை. அறிவியலின் உண்மையைத் தேடிக் கண்டறியும் அடிப்படையை, வலிமையை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் புதிய சிந்தனை/கண்டுபிடிப்புகளில் ஏற்படும் நெருக்கடியானது அக்கால உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியின் விளைவு என்றே அது விளக்குகிறது.

முதலாளித்துவமும் அறிவியலும்

மேற்கண்ட புரிதலினை, தற்கால முதலாளித்துவ உற்பத்திக்கு பொருத்தி, இந்த சூழலில் அறிவியல் வளர்ச்சியை புரிந்த கொள்வதை மார்க்ஸ், எங்கல்ஸ் தொடங்கி பல மார்க்சிய அறிஞர்கள் செய்துள்ளனர்.

முதலாளித்துவ முறையில் நிலவும் போட்டியின் விளைவாக, அதிவேக அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதை தனது “மூலதனம்” நூலில் மார்க்ஸ் விவரித்துள்ளார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஏகபோக கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையிலான வர்க்கப் போராட்டம் காரணமாகவும், முதலாளி வர்க்கம் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு எந்திரமயமாக்கலை விரைவு படுத்துகிறது. இதன் விளைவாக லாப விகித நெருக்கடி உருவாகிறது. அதீத உற்பத்தி நெருக்கடி உருவாகிறது.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடி என்ன? முதலாளித்துவம் வளர வளர உழைப்பு மேலும் மேலும் “சமூகமயம்” ஆகிறது (அதாவது மேலும் மேலும் தொழிலாளர்களின் உழைப்பு அனைவரும் சேர்ந்து புரியும் “சமூக” உழைப்பாக மாறுகிறது). ஆனால் உழைப்பின் பலனான உற்பத்தி பண்டங்கள் தனிச்சொத்து குவியலுக்கு செல்கின்றன. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படையான சிக்கல். இது நாள் வரை முதலாளித்துவத்தில் அறிவியல் முறையானது தனிச்சொத்து குவியலை மேம்படுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் “சமூகமயம்” ஆன தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு எழுச்சிபெறும்போது முன்பு கட்டமைக்கப்பட்ட அறிவியல் முறை அந்த தேவைகளுக்கு முரணாக அமைகிறது. இந்த நெருக்கடியானது அறிவியலிலும் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவ முறையில் அறிவியல் தழைக்கும் என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், உண்மையில் மேற்சொன்ன நெருக்கடி ஏற்பட்ட பின், அறிவியல் நச்சுப்படுகிறது. முதலாளித்துவத்தில் “அறிவு” வர்த்தகமாக்கப்பட்டதன் விளைவாக, அறிவியல் ஆய்வும் சந்தை நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது நிகழ்த்தப்பட்டுவரும் “டிஜிட்டல் புரட்சி” என்பதன் அடிப்படையை பார்த்தால் கூட, மக்களின் தரவுகளை சேகரித்து, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் நம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த “டிஜிட்டல் புரட்சி”க்கு அடிப்படையாக உள்ள இணையதளம், நுண்கணினி (Microprocessor), போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் மக்கள் செல்வத்தின் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தனியாருக்கு அதன் காப்புரிமங்கள் உரிமையாக்கப்பட்டன. இது, தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளை தீர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பில், அறிவியலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியின் ஒரு உதாரணமாகும்.

வளரும் அறிவியலை, மூலதனம் தனது லாப நோக்கங்களுக்காக கட்டுப்பாட்டில் வைப்பதனால் மக்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆழமான அவநம்பிக்கை வளர்வதை பார்க்கிறோம். உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ பொருளாதாரமான அமெரிக்காவில் கூட இதை பார்க்கலாம். சுகாதாரத்தில் தனியார் ஏகபோகம், நவீன மருந்து தொழில்நுட்பத்தை தனியார் காப்புரிமம், புதிய ஆய்வுகள் பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டுமே தீர்வு தேடுவது போன்ற போக்குகளின் காரணமாக மக்கள் ஏமாற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அறிவியலற்ற “மாற்று” முறைகள் பிரபலமாவது, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் போன்ற போக்குகள் எழுவதும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைக்கு எதிர்ப்பு உருவாவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற நெருக்கடியும், அறிவியலுக்கு எதிரான  போக்குகளும் கல்வி, வேளாண்மை போன்ற பல துறைகளில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெளிப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக முழக்கமிட்டு வலதுசாரிகள் வெற்றிபெறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், சோசலிச நாடுகள் மக்களை அறிவியல் பூர்வமாக ஒன்று திரட்டி போராடினார்கள், ஆனால் முதலாளித்துவ நாடுகள் மக்களை கைவிட்டன, போராட்டத்தையும் கைவிட்டன. இதுவே முதலாளித்துவத்தில் “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் தெளிவான வெளிப்பாடு.

அறிவியல் துறையில் உழைப்பின் தன்மையை பார்த்தால், அதுவும் நெருக்கடியிலேயே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பல்லாயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளை அடிமட்ட பணியில் அமர்த்திக் கொண்டு, முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சர்வதேச திறமைகளையும் தன் வசம் குவித்து வைத்துள்ளன. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் – வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. மேலும் “அறிவுசார்” உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும், இயற்கை பற்றிய அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் இடையிலான விரிசலையும் தொடரச் செய்கிறது. இவை எல்லாம் உழைப்பு தளத்தில் முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே.

அதிலும் குறிப்பாக, இன்று மானுடம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் “பருவநிலை மாற்றம்” பற்றிய பிரச்சனையில், அடிப்படை காரணம் என்ன?

முதலாளித்துவத்தில் “அந்நியமாதல்” கோட்பாட்டை மார்க்ஸ் விவரித்தார். தொழிலாளர் உழைப்பை செலுத்தி உருவாக்குவது தான் பண்டங்கள். ஆனால் அதிலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டு, அது தனிச்சொத்து குவியலுக்கு செல்கிறது. ஆக, மனிதர்கள் தம் உழைப்பின் பலனிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் இடையேயான “உயிரோட்டமான பிணைப்பு” முறிவுற்று போகிறது. இவ்வாறு தன் உழைப்பில் இருந்தே அந்நியமாகிப் போகும் தொழிலாளி, அந்த உழைப்பு எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற அதிகாரமோ, வழிமுறையோ இல்லாமல் போகிறார். இதன் காரணத்தால், மூலதனம் தன் லாப நோக்கிற்கு வேண்டியது போல  செயல்பட்டு, அது உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது, இயற்கையையும் பாதிக்கிறது. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தன்னை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே “பருவநிலை நெருக்கடி”யின் அடிப்படை ஆகும்.

இன்று இந்த பருவ நிலை நெருக்கடிக்கு தீர்வு காண அறிவியல் முறைகள் இருப்பினும் கூட, அதனை அமலாக்க இங்கே உள்ள கட்டமைப்பு, மூலதனக் குவியலினை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு, ஏகாதிபத்திய நிதி மூலதனம் தடையாக இருக்கின்றது.

அறிவியல் குறித்த தத்துவார்த்த போக்குகள்

முதலாளித்துவத்தில் அறிவியலின் நெருக்கடி பற்றி புரிந்து கொண்டோம். இங்கே “அறிவியல்” குறித்த மார்க்சிய தத்துவார்த்த போக்குகளின் பரிணாமம் குறித்து பார்ப்போம்.

இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வலுவாக்கும் விதமாக எங்கல்ஸ் இந்த கோட்பாட்டை இயற்கை மற்றும் அண்டத்தையும் புரிந்து கொள்ள பயன்படுத்தி எழுதிய நூல்  தான் “இயற்கையின் இயங்கியல்”. இதன் மூலம் அறிவியலாளர்களுக்கு இயங்கியல் பார்வை ஏன் அவசியம் என்பது குறித்தும் விவரித்தார். இவ்வாறு அறிவியல் ஆய்வில் இயங்கியலை பயன்படுத்தும் தத்துவத்தை ஜே.டி.பெர்னால், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகளும் முன்னெடுத்துச் சென்றனர்.

அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையேயான உறவு குறித்த தத்துவங்களும் மார்க்சிய மரபில் பரவலாக புகழ் பெற்றன. முதலாளித்துவ நெருக்கடியால் அறிவியல் நசுக்கப்படாததன் காரணத்தால் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தழைத்தோங்கியது. மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு அறிவியல் ஒன்றிப் போனதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் ஆய்வுக்குள் “ஆலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு”, “சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” போன்ற துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு தழைத்தன. இதன் தொடர்ச்சியாக அறிவியல் குறித்த தத்துவ விவாதங்களும் விரிவடைந்தன. போரிஸ் ஹெசன் அவர்களின் பணி எவ்வாறு நியூட்டனின் ஆய்வுகள் பதினேழாம் நூற்றாண்டின் வர்த்தகம் சார் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டியது. நிகோலாய் புக்கரின், நிகோலாய் வாவிலோவ் போன்றோரின் அறிவியல்-சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், அறிவியல் தன் முழு திறனை வெளிக்கொண்டு வர சோசலிச சமூகத்தில் தான் முடியும் என்பதை நிறுவின.

இரண்டாம் உலகப்போருக்கு பின், பிரபல பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகளான ரிச்சர்ட் லேவின்ஸ், ரிச்சர்ட் லியோன்டிஃப் போன்றவர்கள் மார்க்சியத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் பணியை தொடர்ந்தனர். ஆனால் 1970களில் தொடங்கி, இடதுசாரி ஆய்வாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல்கள் எழத் தொடங்கின. ஆர்.எம்.யங் என்ற மார்க்சிய ஆய்வாளர், அதி தீவிர நிலைபாட்டை எடுப்பதாக எண்ணி, “அறிவியல் என்றாலே முதலாளித்துவ அறிவியல் மட்டும் தான்” என வாதிட்டார். ஆனால் இது பொருள்முதல்வாத புரிதலுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து எழுந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள் இடதுசாரி போர்வையில் முற்றிலும் அறிவியலற்ற கோட்பாடுகளை முன் வைத்தன. அவர்கள் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தில் அறிவியல் மீது வைக்கும் அதே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே கருத்துமுதல்வாத கோட்பாட்டு நிலை எடுக்கின்றனர். இவர்கள், “அறிவியல் மூலம் உண்மை நிலையை கண்டறியவே முடியாது. அந்தந்த வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றார்போல கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன” என வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின், நவ தாராளமய காலத்தில் இந்த கோட்பாடுகள் மேலும் வலுப்பெற்றன.

இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கோட்பாடுகள் அறிவியலில் மனித உழைப்பின் பங்கையும், அறிவியல்-உழைப்பு-இயற்கை இடையேயான உறவையும் நிராகரிக்கின்றன. அறிவியல் என்பதை மனித உழைப்பின் அங்கமாக பார்ப்பதையும், அறிவியலின் நெருக்கடியை உற்பத்தி முறையின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக பார்ப்பதையும் நிராகரிப்பதன் மூலமாக, இந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள், இயங்கியல் போராட்டம் வழியாக மனித சமூகம் அடையும் வளர்ச்சியையும், அந்த போராட்டத்தில் அறிவியல் ஆற்றும் பங்களிப்பையும் முற்றிலுமாக மறைக்கின்றன.

இறுதியாக

மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து மானுட பிரச்சனைகளுக்கும்  நூதன தீர்வை அளிக்கக் கூடியதாக அறிவியலை பார்க்கும் பார்வையும் தவறு. அதே வேளையில், அறிவியலின் உண்மை அறியும் திறனை முற்றிலுமாக நிராகரித்து, அறிவியல் மொத்தமும் முதலாளித்துவ அறிவியல் என நிராகரிப்பதும் தவறு.

மார்க்சிய புரிதல் மூலம் மட்டுமே இந்த இரண்டு தவறுகளையும் களைந்து, மனித உழைப்பின் வடிவமான அறிவியலின் ஆற்றலை உணரும் அதே வேளையில், அந்த அந்த காலத்தின் சமூக கட்டமைப்பு எவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் தன்மையை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டுமே கோவிட் தடுப்பு மருந்து போன்ற அறிவியலின் வியக்கத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதம் போன்ற அறிவியலின் கோர முகத்தையும் புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டும் தான் அறிவியலின் உண்மை திறனை புரிந்து கொண்டு, அந்த திறன் உழைக்கும் மக்களுக்கு பயன்பட தேவையான இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை கட்டமைக்க முடியும். இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம், இக்கால ஏகாதிபத்திய சூழலில் அறிவியல்-முதலாளித்துவம் இடையேயான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை கூர்மைப்படுத்த இயலும். அறிவியல் பற்றிய மார்க்சிய புரிதல் மட்டுமே பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்க்கும் அதே வேளையில், முதலாளித்துவ தளையில் இருந்து இருந்து அறிவியலை விடுவிக்க உதவும்.

ஏங்கெல்ஸ் எழுத்துகளில் இந்தியா!

கார்ல் மார்க்சின் மிக  நெருங்கிய தோழர் என்ற முறையில், ஏங்கெல்ஸ் அவருடைய (அரசியல்/சித்தாந்த) கூட்டாளி மட்டுமல்ல; அவருடைய சீடரும் ஆவார். 1848இல் கம்யூனிஸ்ட் அறிக்கை எனும் மகத்தான ஆவணத்தை மார்க்சுடன் சேர்ந்து எழுதிய இணை ஆசிரியரும் ஆவார். ஏங்கெல்ஸ் தன்னடக்கமானவர். அதனாலேயே “மார்க்சிய அறிவுக் களஞ்சியத்துக்கு” அவரது பங்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.  இந்தியா குறித்து ஏங்கெல்சின் எழுத்துக்கள் அவரது ஆழமான மார்க்சிய ஆய்வுகளுக்கு ஒரு உதாரணம். இந்தியாவின் வரலாறு பற்றியும் பிரிட்டன் எப்படி இந்தியாவை சுரண்டியது என்பது பற்றியும் அவரது எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் தாய்வழி சமூகங்கள்

இதுவரை உள்ள வரலாறு முழுவதும் வர்க்க போராட்டங்களின் வரலாறுதான் என கம்யூனிஸ்ட் அறிக்கை கூறினாலும், உபரி உற்பத்தி தோன்றிய பிறகுதான் சுரண்டலும் வர்க்கங்களும் தோன்றியிருக்க முடியும் எனும் ஆய்வு கருத்தாக்கம் உருவானது. அந்த சமயத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பற்றிய தொல்பொருள் ஆய்வு போதுமான அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. எனினும் 1884இல் “குடும்பம், தனி சொத்துரிமை, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் மகத்தான படைப்பை ஏங்கெல்ஸ் எழுதிய பொழுது மொழியியலும் மானுடவியலும் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தன. எல்.எச். மார்கன் அவர்களின் மானுடவியல் ஆய்வுகளை குறிப்பாக படித்த பின்னர், ஆதிகால சமூகங்களில் வர்க்கங்கள் மட்டுமல்ல; குடும்பம் மற்றும் அரசு ஆகிய நிறுவனங்களும் தோன்றியிருக்க இயலாது எனும் முடிவுக்கு ஏங்கெல்ஸ் வந்தார். கொலம்பியாவுக்கு முந்தைய அமெரிக்க சமூகங்களில் மட்டுமல்லாது, சில ஆதிகால இந்திய சமூகங்களிலும் குடும்பத்துக்கு முந்தைய தாய் வழி சமூகங்கள் இருந்தன என்பதை ஏங்கெல்ஸ் கண்டுபிடித்தார்.

மனித சமூகம் எப்படி “உபரி உற்பத்தியை” உற்பத்தி செய்ய முடிந்தது என்பதை அறிவதில் ஏங்கெல்ஸ் இயற்கையிலேயே ஆர்வமாக இருந்தார். உபரி உற்பத்தியின் தோற்றுவாய் விலங்குகளை, குறிப்பாக கால்நடைகளை வளர்ப்பதில்தான் இருந்திருக்க முடியும் என அவர் கருதினார். குறிப்பாக யூதர்கள்/ அரேபியர்கள்/ மத்திய ஆசியர்கள்/ஆரியர்கள் ஆகியோர் விலங்குகளை முதலில் வளர்த்தனர் என ஏங்கெல்ஸ் மொழியிலாளார்களின் ஆய்வுகளின் அடிப்படையில் கருதினார்.

விலங்குகளின் வலிமைக்கு பின்னர்தான் விவசாயம் உருவாகியிருக்க முடியும் என ஏங்கெல்ஸ் கருதினார்.   ஆனால் இப்பொழுது தொல்பொருள் ஆய்வுகளும் மொழியியல் ஆய்வுகளும் ஒரு தெளிவான சித்திரத்தை முன்வைக்கின்றன. விலங்குகளை வளர்ப்பதும் விவசாயமும் அடுத்தடுத்து உருவாகவில்லை; மாறாக ஒரே சமயத்தில் இரண்டும் நிகழ்ந்தன என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் கோர்டன் சைல்டி இதனை  புதிய கற்கால புரட்சி என அழைக்கிறார்.  குறைந்தபட்சம் இந்தியாவில் இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டப்பட்டு அதன் உச்சகட்டமாக இண்டஸ் எனப்படும் சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு.2500-1800) உருவானது. இது ஆரியர்கள் இந்தியாவில் காலடி வைப்பதற்கு பல நூறாண்டுகளுக்கும் முன்பே நிகழ்ந்தது.

ஆனால் விலங்கு வளர்ப்பும் விவசாயமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தனவா அல்லது ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவா என்பது ஏங்கெல்சின் அடிப்படை கருத்தாக்கத்துக்கு முக்கியமல்ல. அவர் நிலைநாட்ட முனைந்தது இதுதான்: வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலைமை காரணமாக உபரி உற்பத்தி என்பது இல்லை; எனவே குடும்பம்/தனி சொத்துரிமை/ அரசு போன்ற அமைப்புகள் உருவாகியிருக்க முடியாது. இந்த முக்கியமான அம்சத்தை நிலைநாட்டிய பின்னர், உபரி உற்பத்தி உருவான பின்னர்தான் வர்க்கங்கள்/ வர்க்க சுரண்டல்/ அரசு அமைப்புகள்/ ஆண் தலைமையிலான குடும்பம் ஆகியவை பரிணமித்தன என்பதை ஏங்கெல்ஸ் வலுவாக பொதுமைப்படுத்துகிறார்.

இந்தியாவில் நீர்ப்பாசனம்: சர்வாதிகாரிகளும் நாகரிகவாதிகளும்

இந்த கருத்தாக்கத்தை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆசிய சமூகங்களில் அரசு எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்ய ஏங்கெல்ஸ் ஆரவம் காட்டினார். 1853ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏங்கெல்ஸ் அவர்கள் தான் பெர்சிய மொழி கற்று கொண்டதும் கவிஞர் ஹஃபீஸ் அவர்களின் கவிதைகளை ரசித்தது பற்றியும் குறிப்பிடுகிறார். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிர் கோண்ட் அவர்களின் உலக வரலாறு படித்தது குறித்தும் சொல்கிறார். இந்த கடிதத்தில் ஏங்கெல்ஸ் அவர்கள் சகாரா முதல் அரேபியா- பெர்சியா-வடமேற்கு இந்தியா- துர்கிஸ்தான்-மங்கோலியா வரை பாலைவன தொடர்ச்சி இருப்பதையும் இந்த பகுதியில் விவசாயத்தின் முதல் முக்கிய தேவை “மனிதனால் உருவாக்கப்படும் நீர்ப்பாசனம்” எனவும் சுட்டிக்காட்டுகிறார். எனவே இந்த பகுதிகளை நிர்வாகம் செய்யும் அரசுகள் நிதி/போர் ஆகிய துறைகளுடன் சேர்த்து பாசனத்துக்காக பொதுப்பணி துறையையும் உருவாக்க வேண்டியிருந்தது எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் பிரிட்டன் அரசாங்கம் இந்த முக்கிய பணியை உதாசீனப்படுத்தினர் எனவும், எனவே இந்திய விவசாயம் அழியப்போகிறது எனவும் ஏங்கெல்ஸ் தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

ஏங்கெல்சின் இந்த முக்கியமான கருத்தாக்கத்தை மார்க்ஸ் அவர்கள் 10.06.1853 தேதிய நியூயார்க் டெய்லி டிரிபியூன் இதழுக்கு எழுதிய “இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி” எனும் கட்டுரைக்கு பயன்படுத்தியது மட்டுமின்றி அந்த கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தினார். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏங்கெல்ஸ் அவர்களே இந்தப் பிரச்சனை குறித்து கீழ்கண்டவாறு எழுதினார்:

“பெர்சியாவிலும் இந்தியாவிலும் எவ்வளவு சர்வாதிகார மன்னர்களின் ஆட்சிகள் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டிருந்தாலும் அத்தகைய ஒவ்வொரு அரசும் ஒரு முக்கிய தேவையை உணர்ந்திருந்தனர். அவர்களின் முதல் கடமை பள்ளத்தாக்குகள் முழுவதிலும் பாசனத்தை உருவாக்க வேண்டும்; அது இல்லாமல் விவசாயம் என்பது சாத்தியமே இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். தங்களை மிகவும் அறிவாளிகள் என எண்ணிக்கொண்ட பிரிட்டஷ் ஆட்சியினர் இந்த முக்கிய கடமையைதான் மறந்தனர்.”

இந்தியாவின் கிராமிய சமூகங்கள்

1878ஆம் ஆண்டு டூரிங்குக்கு மறுப்பு எனும் நூலில் “கிராம சமூகங்கள்” எனும் அமைப்புகள் குறித்து ஏங்கெல்ஸ் தனது கவனத்தை செலுத்தினார். இதில் தனது (மார்க்ஸ் உட்பட) கிராம சமூகங்கள் குறித்த ஒரு இறுதியான மதிப்பீடை உருவாக்கினார். விவசாயத்தின் அடிப்படையிலான கிராம சமூகம் என்பது “பொது உழைப்பு” மற்றும் “பொதுவான நில உரிமை” அடிப்படையிலான ஒரு வடிவத்தில் இருந்தது எனவும், அது நவீன காலம் வரை அரசு என்ற நிறுவனம் இருந்தாலும், அதனுடன் இந்த கிராம சமூகமும் இணையாக இயங்கியது  எனவும் ஏங்கெல்ஸ் முன்வைக்கிறார். இத்தகைய அமைப்பு இந்தியாவிலும் இருந்தது என்பது ஏங்கெல்சின் மதிப்பீடு. நவீன காலத்தில்தான் ஏனைய சமூக முறைகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக “கிராம சமூகங்கள்” சிதைந்து “சொத்துரிமையில் அசமத்துவம்” உருவானது  எனவும் அவர் கூறுகிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மன்னராட்சியும் வெளி படையெடுப்புகளும் “கிராம சமூகங்கள்” எனும் அமைப்பை இந்தியாவில் சிதைக்க முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார். இத்தகைய “கிராம சமூகங்கள்” தமக்கென அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டனர் எனவும், அவர்கள்தான் பின்னாளில் இந்தியாவில் மிக எளிதாக ஆளும் வர்க்கங்களாக மாறினர் எனவும் ஏங்கெல்ஸ் ஒரு முக்கியமான மதிப்பீடை முன்வைக்கிறார். ஏங்கெல்ஸ் இதனை கூறிய பொழுது இது ஒரு மிகப்பெரிய “யூகம்தான்” என்றாலும் பின்னர் 1956ஆம் ஆண்டு கொசாம்பியின் மிக முக்கிய ஆய்வான “கீழிருந்து நிலப்பிரபுத்துவம்” என்பதுடன் இசைந்து போவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அரசு அமைப்புகள் குறித்த ஏங்கெல்சின் ஆய்வுகளுக்கு மீண்டும் வருவோம். காலனிக்கு முந்தைய இந்தியாவில் அதிக அளவுக்கு நகரமயம் இருந்தது என ஏங்கெல்ஸ் மதிப்பிட்டார் என்பது மிக முக்கியமானது. ஆப்கானிய மற்றும் முகலாய ஆட்சியாளர்கள் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆக்ரா/ தில்லி/ லாகூர்/முல்தான் போன்ற நகரங்களை உருவாக்கினர் என பாராட்டுகிறார். ஆகவே சில மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுவது போல ஆசிய சமூகங்கள் பிற்போக்குத்தனமானவை எனவும், காட்டுமிராண்டி சமூகங்கள் எனவும் ஏங்கெல்ஸ் மதிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தியக் கொள்ளை

மார்க்சை போலவே எங்கெல்சும் பிரிட்டன் ஆட்சி  இந்தியாவுக்கு எத்தகைய அழிவுகளை உருவாக்கியது என்பதில் தெளிவாக இருந்தார். 1890ஆம் ஆண்டு சி. ஸ்மித் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டன் காலனிய ஆட்சி இந்தியாவை வென்ற பொழுது அதன் தொடக்ககால நோக்கம் குறித்து கீழ்கண்ட முக்கிய கருத்தை குறிப்பிடுகிறார்:

“போர்த்துகீசியர்கள்/ டச்சுக்காரர்கள்/ஆங்கிலேயர்கள் 1500 முதல் 1800ம் ஆண்டு வரை இந்தியாவை வென்ற பொழுது அங்கிருந்து தமது தேசங்களுக்கு இறக்குமதி என்பதுதான் நோக்கமாக இருந்தது. எவரும் இந்தியாவுக்கு ஏற்றுமதி  குறித்து சிந்திக்கவில்லை. எனினும் இந்தியாவின் பல  பகுதிகளை கண்டுபிடித்ததும் அவற்றை வெற்றி கொண்டதும் முற்றிலும் வர்த்தக நோக்கங்களுக்குதான் என்றாலும் பின்னர் அவை எத்தகைய மலையளவு பின்விளைவுகளை தொழில்கள் மீது உருவாக்கின! இந்தியா போன்ற தேசங்களுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதிதான்  பிரிட்டனின் நவீன பெரிய தொழில்கள் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன.”

ஏங்கெல்ஸ் இந்த கருத்தை அச்சுக்கு எழுதவில்லை. மாறாக தனது சக போராளிக்கு கடிதமாக அவசரத்தில் எழுதுகிறார். எனினும் இந்த கருத்து மிக முக்கியமான செழுமையான மதிப்பீடு! இந்தியாவை காலனியம் வென்றதற்கு முக்கிய காரணம் இங்கிருந்து தம்முடைய நாடுகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்யவே! தம்முடைய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அல்ல! எனினும் இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல பகுதிகளை கண்டுபிடித்ததும் வென்றதும் வேறு தொடர் விளைவுகளை உருவாக்கியது. இந்தியாவிலிருந்து இறக்குமதி என்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி என்பதும் முக்கிய நோக்கமாக மாறியது. இதன் விளைவாக இங்கிலாந்தின் பொருளாதார மாற்றமும் அதற்கு ஏற்ற வகையில் தொழில் புரட்சியும் இந்த ஏற்றுமதிக்கு இசைந்தவாறு உருவாயின. இப்பொழுது இந்தியாவும் ஏனைய காலனிய தேசங்களும் தொழில் வளர்ச்சி கண்ட பிரிட்டனுக்கு மட்டுமேயான சந்தையாகவும் செயல்பட வேண்டி வந்தது. ஒரு வருத்தமான அம்சம் என்னவெனில், ஏங்கெல்சின் இந்த முக்கிய மதிப்பீடை பிரிட்டனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த பல  மேற்கத்திய மார்க்சிய ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. உதாரணத்துக்கு 1945இல் லண்டனில் வெளியிடப்பட்ட மவுரிஸ் டாப் அவர்களின் “முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறித்த ஆய்வுகள்” எனும் ஆவணத்தில் ஏங்கெல்சின் இந்த கருத்து இடம்பெறவில்லை.

ஏங்கெல்ஸ் அவர்களே 1870 வரை பிரிட்டனின் தொழில் நகரமான மான்செஸ்டரில் ஆலையில் பணியாற்றினார். அவரது தந்தையின் நிறுவனம் பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.  எனவே எந்த அளவுக்கு பருத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது எனவும் இங்கிலாந்திலிருந்து ஆடைகள் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் அவர் அறிந்திருந்தார். இந்த வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள் பிரிட்டனின் வர்த்தக நெருக்கடியின் ஏற்ற  இறக்கங்களை பிரதிபலிக்கும் குறியீடாகவும் ஏங்கெல்ஸ் கணித்தார். 11.12.1868 அன்று மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டனின் நூல் மற்றும் பஞ்சாலை உற்பத்தியாளர்கள் எவ்வாறு மேலும் மேலும் இந்திய சந்தைகளை நம்பி உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அதீத உற்பத்தி காரணமாக அந்த சந்தையும் தேக்கமடைவது பற்றியும் விவாதிக்கிறார். இந்தியாவின் மீதான கட்டுப்பாடு, குறிப்பாக வரிகள் மூலம், மிக முக்கிய தேவையாக பிரிட்டன் முன் எழுகிறது. 18.07.1892 அன்று டேனியல்சன் எனும் தமது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “உலகின்  மையப்படுத்தப்பட்ட ஒரு பெரிய உற்பத்தி கூடமான இங்கிலாந்தின்” ஒரு பிரிவாக இந்தியா மாறிவிட்டது என்பதை குறிப்பிட்டு ரஷ்யாவும் தனது வரிகள் மூலம் தன்னை பாதுகாத்து கொள்ளவில்லை எனில் இந்தியா போல ஆகிவிடும் எனவும் எச்சரிக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களின் நன்மைக்காக எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்ய விரும்பவில்லை என மார்க்சை போலவே ஏங்கெல்சும் உறுதியாக நம்பினார். 1853ஆம் ஆண்டின் இந்தியா குறித்த சட்டத்தை   அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் ஆளும் கட்சியும் இந்தியாவை சீர்திருத்தும் மிகப்பெரிய சட்டம் என சிலாகித்தனர். ஆனால் இந்த  சட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பதவிகளையும் ஊதியத்தையும் உயர்த்திகொள்வதுதான் எனவும் இந்தியாவை கொள்ளை அடித்ததை தமக்குள் பிரித்து கொள்ளும் பிரிட்டன் ஆளும் கட்சியின் சூழ்ச்சிதான் என்பதையும் ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்தினார். இந்தியாவுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

1857 மகத்தான கிளர்ச்சி குறித்து ஏங்கெல்ஸ்

1857 கிளர்ச்சியை பிரிட்டிஷார் அடக்கியதன் ராணுவ அம்சங்கள் பற்றி தனக்கு எழுதுமாறு மார்க்ஸ் ஏங்கெல்சை வேண்டினார். இந்த கிளர்ச்சி குறித்து பதினொரு கட்டுரைகளை ஏங்கெல்சின் பேனா 5.12.1857 முதல் 1.10.1858 வரை எழுதியது. இந்த கட்டுரைகளை பெரும்பாலானவற்றில் ஏங்கெல்ஸ் ராணுவ நிபுணரின் ஆய்வு போல  எழுதுகிறார். அவர் உண்மையிலேயே மிகப்பெரிய ராணுவ நிபுணர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்! இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் அதிகாரபூர்வ கட்டுரைகளை விமர்சன ரீதியாகவே ஏங்கெல்ஸ் அணுகினார். எனினும் அந்த கட்டத்தில் இந்த கிளர்ச்சி குறித்து பிரிட்டனில் உலவிய ஆவணங்கள் இவை மட்டுமே என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை ஆய்வு செய்துதான் ஏங்கெல்ஸ் கட்டுரைகளை எழுதவேண்டி இருந்தது. ராணுவ ரீதியாக நவீன ஆயுதங்களை கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் சரியான வியூகத்தையும் கிளர்ச்சியாளர்களிடையே இருந்த குழப்பங்களையும் மையப்படுத்தப்பட்ட தலைமையகம் இல்லாததையும் ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். கிளர்ச்சியின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷார் ஏவிய கடும் கொலைவெறி அடக்குமுறையையும் கொள்ளைகளையும் ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சிக்கிறார். அவுத் பகுதியில் பிரிட்டிஷார் அனைத்து நிலத்தையும் பறிமுதல் செய்து பிறப்பித்த கானிங் அறிக்கையை வன்மையாக கண்டித்தார். மக்களின் ஒவ்வொரு ஏக்கர் மட்டுமின்றி ஒவ்வொரு சிறு இடத்தையும்ம் கூட இந்த சட்டம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சி பறித்து கொண்டது. லக்னோவிலும் அதற்கு முன்னர் தில்லியிலும் பிரிட்டிஷார் அடித்த கொள்ளைகளை ஏங்கெல்ஸ் கடும் வார்த்தைகளில் கண்டிக்கிறார். 1870ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இதழுக்கு எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ராணுவம் 1857 கிளர்ச்சியை அடக்கிய பின்னர் சிறைக் கைதிகளை சுட்டுக்கொன்றதும் பிரிட்டிஷார் நடந்து கொண்ட விதமும் போர் விதிகளை மீறியதாகும் எனவும் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்ஸ் அவர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது பெரும் அனுதாபமும் ஆதரவும் கொண்டிருந்தார்.  அதனாலேயே அவர்கள் போர்க்களத்தில் செய்த சில தவறுகள் காரணமாக  கோபமும் கொண்டார். பகிரங்க போர் களத்தில் தோல்விக்கு பின்னர் கிளர்ச்சியாளர்கள் கொரில்லா போரில் ஈடுபடுவார்கள் என 1858 ஜூனில் அவர் எதிர்பார்த்தார். ஏனெனில் இன்னும் 1,50,000 கிளர்ச்சியாளர்கள் களத்தில் இருந்தனர். மேலும் அந்த தேசிய கிளர்ச்சியில் மக்களின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருந்தது. பிரிட்டஷ் படைகள் சாதாரண மக்களிடம் எவ்வித உதவியையும் அல்லது தகவலையும் கூட பெற முடியவில்லை. அடுத்த மாதம் அவர் எழுதிய கட்டுரையில் இந்திய மக்கள் வெள்ளை முகத்தை கொண்ட ஆக்கிரமிப்பாளர்களை வெறுத்தனர் என்றாலும் கிளர்ச்சியாளர்கள் தமது போரை விரிவுபடுத்தவில்லை எனில் அவர்கள் அனைவரும் ஒடுக்கப்படும் ஆபத்து உள்ளது என மதிப்பிட்டார்.

இந்திய மக்கள் குறித்து அசாத்திய நம்பிக்கை

கிளர்ச்சி தோல்வி அடைந்த பின்னரும் ஏங்கெல்ஸ் நம்பிக்கையை கை விடவில்லை.  கிளர்ச்சி பற்றிய இறுதி கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதினார்:

“வங்காளத்தை சேர்ந்த ராணுவத்தின் கலகத்தால் தொடங்கப்பட்ட அந்த மகத்தான கிளர்ச்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் போல தோன்றுகிறது. ஆனால் இந்த இரண்டாவது வெற்றி மூலம் இங்கிலாந்து இந்திய மக்களின் மனதை வென்றுவிடவில்லை. உள்ளூர் இந்திய வீரர்கள் சில கொடூரங்களை மேற்கொண்டனர் எனக் கூறப்படும் மிகைபடுத்தப்பட்ட பொய்யான அறிக்கைகள் அடிப்படையில் பிரிட்டிஷ் துருப்புகள் நடத்திய பதில் வெறியாட்டமும் அவுத் பகுதியை மொத்தமாகவும் சில்லறையாகவும் கைப்பற்றியதும் வெற்றியாளர்கள் குறித்து எவ்வித சாதகமான பிரதிபலிப்பையும் இந்திய மக்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இரு பிரிவினருமே கிறித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இதுவரை கண்டிராத பெரும் வெறுப்பை கொண்டுள்ளனர் என பிரிட்டன் ராணுவத்தினரே கூறுகின்றனர். “

1882ஆம் ஆண்டு அதாவது  1857 கிளர்ச்சியின் 25வது ஆண்டிற்கு சற்று முன்னதாக ஏங்கெல்ஸ் இந்திய புரட்சி பற்றி மதிப்பிட்டார். கார்ல் கவுட்சிக்கு செப்டம்பர் 12 அன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறினார்:

“இந்தியா நிச்சயமாக புரட்சியை நடத்தும் வாய்ப்பு உள்ளது. பிரிட்டனின் தொழிலாளி வர்க்கம் தனது சுய விடுதலை பயணத்தில் ஒரு காலனிய போரை நிகழ்த்த முடியாது. எனவே இந்திய புரட்சி தனது பயணத்தை பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். எனினும் இந்த புரட்சி எவ்வித அழிவும் (வன்முறையும்) இல்லாமல் நடக்கும் என கூறமுடியாது. ஆனால் இத்தகைய அம்சங்கள் எத்தகைய புரட்சியாக இருந்தாலும் பிரிக்க முடியாதவை!”

இந்த மதிப்பீடு எழுதப்பட்ட 66 ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்றது. ஏங்கெல்சின் மதிப்பீடு இந்திய மக்களின் விடுதலை தாகம் குறித்த அசாத்திய நம்பிக்கையின் அடிப்படையிலானது! இந்திய விடுதலையை பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் எதிர்க்கக் கூடாது எனும் அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் ஏங்கெல்சின் எழுத்துகளில் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழில்: அன்வர் உசேன்

(உப தலைப்புகள் மொழி பெயர்ப்பாளருடையது)

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

முதல் அத்தியாயம் சுருக்கம

தமிழில்: சிவலிங்கம்

அத்தியாயம் 1

[கற்பனாவாத சோசலிசம்]

ஃபிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனத்தை வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த …  மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும்.

பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று … பழைய மரபுவழிக் கருத்தாக்கம் ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது…

இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) சமூக ஒப்பந்தம் (Contrat Social)27 ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். …

ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது.

அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது.

…சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாய் இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல,  வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாய் இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians):

பாட்டாளி  வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon);

முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம்  பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).

மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்காலகட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை…

நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராய் உள்ளது.

தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம்.

இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார்.

500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு எவ்வாறு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசாங்கமும், பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயமும் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து].

முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாய் ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை ரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட  ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாய் ஆனது.

புரட்சிகர முழக்கமான “சகோதரத்துவம்”33 என்பது, [மேலாதிக்கப்] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாய் ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது.

முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம், என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்திச் சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே மாபெரும் உற்பத்திச் சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது.

… பாட்டாளி வர்க்கமானது, “ஏதும் இல்லாத” சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத்தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.

இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோசலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது.

முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன.

சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பரப்புரையின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்].

… சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

… சான்-சிமோனைப் பொறுத்தவரை, …  சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை “தொழிலாளர்களுக்கும்” “சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். “தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம்.

… சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், “அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கிறார். அதே கடிதங்களில், பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் அவர் கண்டு கொள்கிறார். “ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்;  அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்ற ஒன்று எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருட்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. …

சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம்.

… அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காண்கிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாய், எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. … முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். …

ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஓர் அங்கத* எழுத்தாளராகவும், நிச்சயமாய் எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும்  கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.

*புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்.

… இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. … நாகரிகம், “ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”; தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது; எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, “நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். … அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.

3

ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், கருவிகளைத் தயாரிக்கும் புதிய எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. …

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட  ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். [அவர்தான் ராபர்ட் ஓவன்]. ராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். … ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராய் இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாய் இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும்  மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார்.

அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. … ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. “இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” [என்று எழுதினார்]. …

1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். …

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாக [இங்கிலாந்துத்] தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார்.

(அவர்) இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பாய் இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராய் இருந்தார்38. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாகக் குறைந்தது அவை, வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. …

கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோசலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது.

… உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோசலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோசலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களில் இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டாகும். சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதைக் [கற்பனை அல்லாத] ஒரு மெய்யான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.

பகுதி 1 : கற்பனாவாத சோசலிசம்

குரல்: உ.வாசுகி

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 2 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

இரண்டாம் பகுதி சுருக்கம்

தமிழில்: சிவலிங்கம்

பகுதி 2

[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]

… பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாய் இருந்தனர். இவர்கள் அனைவருள்ளும் பல்துறை அறிவுசான்றவரான அரிஸ்டாட்டில் (Aristotle) இயக்கவியல் சிந்தனையின் மிகமிகத் தலையாய வடிவங்களை ஏற்கெனவே பகுத்தாய்ந்திருந்தார். இதற்கு மாறாகப் [பிற்காலத்தைய] புதிய ஜெர்மன் தத்துவமானது, முக்கியமாய் ஆங்கிலச் செல்வாக்கின் விளைவாக, பகுத்தாய்வுப் போக்கில் இயக்க மறுப்பியல் முறை என்று சொல்லப்படும்  போக்குடன் மென்மேலும் இறுக்கமாக ஒன்றிவிட்டது. …

பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ, நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, … அனைத்துமே இயங்கிக்கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கக் காண்கிறோம். …

இயக்க மறுப்பியல்வாதிக்கு, பொருள்களும் அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், கருத்துகளும் தனித்தனியானவை; அவற்றை ஒன்றின்பின் ஒன்றாகவும் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். …

முதல்பார்வையில் இந்தச் சிந்தனைப் பாங்கு மிகவும் அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இது மேம்பட்ட பொதுப்புத்தி என்று சொல்லப்படும் சிந்தனைப் பாங்காகும். இந்த மேம்பட்ட பொதுப் புத்தியானது, அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள், ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாய் எதிர்கொள்கிறது.

… தனித்தனிப் பொருள்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகையில், அவற்றுக்கு இடையேயான தொடர்பினை அது மறந்துவிடுகிறது. அப்பொருள்களின் இருத்தலில் கவனம் செலுத்துகையில், அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்துவிடுகிறது. அவற்றின் ஓய்வில் கவனம் செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்துவிடுகிறது. மரங்களைப் பார்க்கும் அது காட்டினைப் பார்க்க முடியவில்லை. [தனிக் கூறுகளை மட்டும் பார்த்து, ஒட்டுமொத்த முழுமையைப் பார்க்கத் தவறுகிறது].

… எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், நெருங்கிச் சென்று ஆய்கையில், பல சூழ்நிலைகளில் இது மிகவும் சிக்கலான கேள்வியாய் இருக்கக் காண்கிறோம். சட்ட வல்லுநர்கள் இதை நன்கு அறிவர். தாயின் கருப்பையிலிருக்கும் சிசுவைக் கொல்லுதல் எந்த வரம்புக்கு அப்பால் கொலைக்குற்றம் ஆகிறது என்று … எவ்வளவுதான் தங்கள் மூளையைக் கசக்கிப் பார்த்தும் பலனில்லை. மரணம் நிகழும் தருணத்தை ஐயமின்றித் தீர்மானிப்பதும் இதேபோல இயலாதது. …

மேலும், நெருங்கிச் சென்று கூர்ந்து ஆராய்கையில் ஒரு முரண்நிலையின் இரு துருவங்களும், எடுத்துக்காட்டாக, நேர்நிலையும் எதிர்நிலையும், அவை எந்த அளவுக்கு எதிரெதிராய் இருக்கின்றனவோ அந்த அளவுக்குப் பிரிக்க முடியாதனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கிடையே எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவை பரஸ்பரம் [ஒன்றுள் ஒன்று] ஊடுருவக் காண்கிறோம். அதே முறையில், காரணம், விளைவு ஆகிய கருத்தாக்கங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துகையில் மட்டுமே உண்மையாய் [காரணம் காரணமாகவும், விளைவு விளைவாகவும்] இருக்கக் காண்கிறோம். இந்தத் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவை பிரபஞ்ச முழுமையுடன் கொண்டுள்ள பொதுத் தொடர்பில் வைத்துப் பரிசீலிக்கத் தொடங்கியதுமே, காரணமும் விளைவும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுவக் காண்கிறோம். …

இயக்கவியலானது, பொருள்களையும் அவற்றின் உருவகிப்புகளையும், அதாவது கருத்துகளையும், அவற்றின் அத்தியாவசியத் தொடர்பிலும், தொடரிணைப்பிலும், இயக்கத்திலும், தொடக்கத்திலும் முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. …

இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது…

டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். அனைத்து வாழும் உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் பரிணாம நிகழ்முறையின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப் பற்றிய இயக்க மறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார்.

… சூரியனும் அதன் அனைத்து கோள்களும் சுழலும் முகில்படலப் பொருண்மையிலிருந்து உருவாயின என்பது கான்ட் தந்த தீர்வாகும். அதே வேளையில், சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியது என்ற இந்தக் கருத்திலிருந்தே, வருங்காலத்தில்  அதன் அழிவும் தவிர்க்க முடியாது பின்தொடரும் என்கிற முடிவுக்கு அவர் வந்தடைந்தார். கான்ட்டின் கொள்கை முடிவை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, லாப்லாஸ் (Laplace) கணித வழியில் நிலைநாட்டினார்…

இந்தப் புதிய ஜெர்மன் தத்துவம் ஹெகலியத் தத்துவ அமைப்பில் உச்சத்தைத் தொட்டது….

இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் மனிதகுலத்தின் வரலாறு என்பது, … மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் நிகழ்முறையாகவே தோன்றியது. இந்த நிகழ்முறையின் படிப்படியான முன்னேற்றப் பயணத்தை, வளைந்து நெளிந்து செல்லும் அதன் வழிநெடுகப் பின்தொடர்வதும், தற்செயலானவையாய்த் தோற்றமளிக்கும் அதன் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியைப் புலப்படுத்துவதும்தான் இப்போது அறிவாளர்களின் பணியாய் இருந்தது.

ஹெகலிய [தத்துவ] அமைப்புமுறை, தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமன்று. இந்தப் பிரச்சினையை முன்வைத்தது என்பதுதான் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும்.

… ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தில் இருந்த இந்த அடிப்படை முரண்பாடு பற்றிய புரிதல், தவிர்க்க முடியாதபடி பொருள்முதல்வாதத்துக்குத் திரும்பவும் இட்டுச் சென்றது. [ஆனால்] வெறும் இயக்க மறுப்பியலான, 18-ஆம் நூற்றாண்டுக்கே உரிய எந்திரத்தனமான பொருள்முதல்வாதத்துக்கு அல்ல … [புதிதாகப்] பிறந்துகொண்டும், [இறந்து] அழிந்து கொண்டும் உள்ளன. [2] ஒட்டுமொத்த இயற்கை, திரும்பத் திரும்ப நிகழும் சுழல்வட்டப் பாதையில் இயங்குவதாய் இன்னமும் சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பிலாப் பெரும் பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன. இரண்டு கூறுகளிலும் நவீனப் பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் இயக்கவியல் தன்மை கொண்டதாகும். …

கடந்தகால வரலாறு அனைத்தையும் ஒரு புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய உண்மைகள் கட்டாயமாக்கின. அதன்பிறகே பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டன:

கடந்தகால வரலாறு அனைத்தும், அதன் புராதன கட்டங்களைத் தவிர்த்து, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது;

சமுதாயத்தின் இந்தப் போரிடும் வர்க்கங்கள் எப்போதுமே, உற்பத்தி முறைகள், பரிவர்த்தனை முறைகளின் படைப்புகளே. சுருங்கக் கூறின், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளின் படைப்புகளே.

சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் எப்போதுமே மெய்யான அடித்தளத்தை அமைக்கிறது. இதிலிருந்து தொடங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் நீதி, அரசியல் சார்ந்த  நிறுவனங்கள், அவற்றுடன் மதம், தத்துவம் சார்ந்த கருத்துகள், பிற கருத்துகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய [சமுதாயத்தின்] மேற்கட்டுமானம் முழுமைக்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும்.

… இதுநாள்வரை செய்ததுபோல், மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பைக் கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கு ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.

அக்காலம் முதற்கொண்டு, இனிமேலும் சோசலிசம் என்பது ஏதோவோர் அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பாய் இருக்கவில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாய் உள்ளது. …

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கம், உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய ரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, சோசலிசம் ஒரு விஞ்ஞானம் ஆகியது. அதன் விவரங்கள், உறவுகள் அனைத்தையும் வகுத்தமைப்பதுதான் அடுத்த பணியாய் இருந்தது.

பகுதி 2 (இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்)

குரல்: உ.வாசுகி

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 3 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

மூன்றாம் பகுதி சுருக்கம்

தமிழில்: சிவலிங்கம்

பகுதி 3

[விஞ்ஞான சோசலிசம்]

… வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும்,

[அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது,

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது,

உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளன.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.

இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்துச் சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல.

அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட  சகாப்தத்தின் பொருளாதாரவியலில்  கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, தத்துவத்தில் அல்ல. தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறி விட்டன* என்கிற மன உணர்வு [நாளுக்குநாள்] வளர்ந்து வருகிறது.

[அனைவரும் அறிய] வெளிக்கொணரப்பட்டுள்ள  இந்த முரண்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும், மாறிவிட்ட இந்த உற்பத்தி முறைகளுக்குள்ளேதான், ஏறத்தாழ வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழிமுறைகள், அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தருவிப்பதன் மூலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட (invented) வேண்டியவை அல்ல. தற்போது நிலவும் உற்பத்தி அமைப்புமுறையின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தே கண்டறியப்பட (discovered) வேண்டியவை.

அப்படியெனில், இது தொடர்பாக நவீன சோசலிசத்தின் நிலைபாடு என்ன?

சமுதாயத்தின் தற்போதைய கட்டமைப்பு,, இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்ததாகும். …

… முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து, அதன் இடிபாடுகள் மீது முதலாளித்துவச் சமுதாய அமைப்பை நிறுவியது. கட்டற்ற [வணிகப்] போட்டி, தனிமனித சுதந்திரம், சட்டத்தின் முன் சரக்குடைமையாளர்கள் அனைவருக்குமான சமத்துவம், ஏனைய மீதமுள்ள அனைத்து முதலாளித்துவ அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் சாம்ராஜ்யமாய் அது விளங்கியது.

அதனைத் தொடர்ந்து, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி [தங்கு தடையின்றி] சுதந்திரமாக வளர முடிந்தது. நீராவியும், எந்திர சாதனங்களும், எந்திரங்களைக் கொண்டே எந்திரங்களைத் தயாரித்தலும், பழைமையான பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றியமைத்தன.

அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டுதலில் பரிணமித்த உற்பத்திச் சக்திகள், இதற்குமுன் கண்டு கேட்டிராத வேகத்திலும், அளவிலும் வளர்ச்சி பெற்றன.

…இப்போது நவீனத் தொழில்துறையானது, அதன் முழுமையான வளர்ச்சி நிலையில், முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வரம்புகள் மீது முட்டி மோதுகிறது. புதிய உற்பத்திச் சக்திகளோ அவற்றைப் பயன்படுத்திவரும் முதலாளித்துவ முறையை விஞ்சி ஏற்கெனவே வளர்ந்துவிட்டன. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி முறைக்கும் இடையேயான இந்த மோதல், ஆதிப் பாவத்துக்கும் தெய்வ நீதிக்கும் இடையேயான மோதலைப் போன்று, மனிதனின் மனத்திலே உதித்தெழுந்ததல்ல. உண்மையில் இம்மோதல், புறநிலை ரீதியாக, நமக்குப் புறத்தே, இம்மோதலை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் சுயேச்சையாய் நிலவுகிறது.

நவீன சோசலிசம் என்பது, உண்மையில் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலால் நேரடியாகப் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல.

சரி, இந்த மோதல் எதில் அடங்கியிருக்கிறது?

தொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாறுதல் அடைகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழில்கூடங்களாய் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாய் இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கைவசப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கைவசப்படுத்திக் கொண்டு அவற்றைச் சரக்குகளாய் மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கைவசப்படுத்தலும் னிப்பட்ட செயல்களாக, அதாவது தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கைவசப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

() உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறார். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுகிறார். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை [உருவாகிறது].

() சரக்குகளின் உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கம் வளர்கிறது; அவற்றின் பயனுறுதி அதிகரிக்கிறது. கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயப்பட்ட ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக ஒழுங்கின்மைக்கும் இடையேயான முரண்பாடு [தோன்றுகிறது.[

() ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாகத் தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [அதனால்] தொழில்துறை சேமப் பட்டாளம் [உருவாகிறது]. மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம் ஒவ்வோர் உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகச் சரக்குகளின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகை – அங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்திச் சக்திகளைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்கள் முதலில் மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் சுற்றோட்டத்தில் செல்லவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்திப் பொருள்களின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாய் மாற்ற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாய் வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்திச் சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

() உற்பத்திச் சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்கு நிறுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

III.         பட்டாளி வர்க்கப் புரட்சி – முரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுநாள்வரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. … தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்.

பகுதி 3 (விஞ்ஞான சோசலிசம்)

குரல்: சிந்தன்

#RedBooksDay2022 : செயலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்திய விஞ்ஞான சோசலிசம்

ஆசாத்

(தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தின கொண்டாட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ நூலை வாசிக்க உதவியாக மார்க்சிஸ்ட் இதழில் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.)

”பகுத்தறிவின் தீர்ப்பு மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும்; அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கின்ற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று”

18 ஆம் நூற்றாண்டின் போது வளர்ச்சி பெற்றுவந்த பிரெஞ்சு தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளின் வழிவந்த பகுத்தறிவின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் கருத்துமுதல்வாதத்தின் வாதங்கள் நிற்கமுடியாமல் காணாமல் போனது.

“புதிய சூழலின் நிலைமைகள், முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை.” பகுத்தறிவின் ஆட்சி என்று முதலாளித்துவம் கூறியது, முதலாளித்துவ வர்க்கம் மிகைப்படுத்திக் கூறிக்கொண்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை. நித்தியமான நீதி என்று அவர்கள் கூறியது முதலாளித்துவத்தின் நீதியே ஆகும். சமத்துவம் என்பதும் சட்டத்தின் முன்பான குறுகிய முதலாளித்துவ சமத்துவமாகவே இருந்தது.

“நவீன தொழில் துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவ தன்மைக்கு முடிவு கட்டுவதையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது.”
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. பாட்டாளிகளான உழைக்கும் மக்களும் அவர்களின் உழைப்பு சக்தியும் இல்லாமல் முதலாளித்துவம் நிலவ முடியாது. தொழிலாளர்களின் உழைப்பின் பலனை கொண்டு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம், உழைக்கும் அம்மக்களுக்கு வறுமை மற்றும் துயரத்தையும் சமூகத்தின் வாழ்க்கை நிலைமையாக மாற்றியது. “பாட்டாளி வர்க்கமானது, ‘ஏதும் இல்லாத’ இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன் முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்கு சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது.

இந்த வரலாற்று சூழலே சோசலிசம் குறித்த துவக்ககால சிந்தனையை கொண்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. ”முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும், முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவாக முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்துகிடந்த அந்தத் தீர்வினை, கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றனர்.”

சான் சிமோன், பூரியே, ஓவன் ஆகியோரை அக்காலத்திய மூன்று மிகப்பெரிய கற்பனாவாதிகள் என்கிறார் எங்கெல்ஸ். மனிதனின் சிந்தனையில் உதித்த கடவுள் எனும் கருத்தே உலகை படைத்தது எனும் கருத்துமுதல்வாதத்தைபோல், இந்த கற்பனாவாதிகள் சமூக வளர்ச்சியின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் மனித மூளையின் சிந்தனையைக் கொண்டே அவற்றை கண்டறிய முனைந்தனர். முரண்பாட்டிற்குள் ஒற்றுமை என்கிற வகையில் “வரலாற்று ரீதியான வளர்ச்சியின் விளைவாய் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பரதிநிதியாக (கற்பனாவதிகள்) தோன்றவில்லை.” அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும். பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே. அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும். என்கிற சான் சிமோனின் கருத்து, பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் என்கிற அரசியல் அறிவு கரு வடிவில்தான் இருந்தது என்பதை எடுத்துரைத்தது.
கடைசி முடிவாக பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல், மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் பூரியே புகுத்தினார்.

எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரி பரிசோதனைகள் மூலம் அந்த அமைப்புகளை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியம் என கற்பனாவாதிகள் கருதினர். அந்த வகையில் ஓவன் சில முயற்சிகளை தான் சார்ந்த நிறுவனத்தில் செய்து வெற்றி கண்டார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என பலவற்றை செய்தார். ஆனபோதும் நிறுவனத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக இருந்ததை நிரூபித்தார். ஆனால், இம்மக்கள் (அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்) என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” என்கிறார் ஓவன். ஏனெனில் “தன்னுடைய தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாக செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன.

” புறச்சூழலே ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதே அன்றி, அது வெளியிலிருந்து திட்டமிட்டு புகுத்தப்படுவதன் மூலம் சாத்தியப்படுத்தக் கூடியதல்ல. “சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க முதலில் அதை கற்பனை அல்லாத ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது” கற்பனை அல்லாத ஓர் உண்மையின் அடித்தளத்தின் மீது சோசலிசத்தை இருத்த மார்க்சின் இரண்டு கண்டுபிடிப்புகளே வழி செய்தன. “வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தியது” எனும் மார்க்சின் இவ்விரண்டு கண்டுபிடிப்புகளுமே விஞ்ஞான சோசலிசத்தின் அடித்தளமாகியது.

இயற்கை அறிவியலையும் சமூக அறிவியலையும் இணைத்த, இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்குகொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க பார்வையுடன் விஞ்ஞான சோசலிசம் வளர்ச்சி பெற்றது. இயற்கை அறிவியலிலும் சமூக அறிவியலிலும் கிடைக்கப்பெற்ற புதிய தரவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இவற்றை சாத்தியப்படுத்தியது. நவீன தொழில் வளர்ச்சி வர்க்கப் பிரிவினையை கூர்மைப்படுத்தியது. மேலும் வர்க்கங்களுக்கிடையேயான நட்பையும் முரணையும் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. முந்தைய சிந்தனை போக்குகள் எல்லாம் அதற்கே உரிய குறுகிய இயக்க மறுப்பியல் தன்மையை கெண்டிருந்தன. அவற்றின் “அறிவுணர்வானது அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாக திகழ்ந்தது. (இயற்கை அறிவியலின் வள்ர்ச்சியின்போது) ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள் ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொண்டது.”

“மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பை கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கான வழிமுறை கண்டறியப்பட்டது.“ சோசலிசம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வு என்று நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய சோசலிச கருத்துரு இந்த இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை அற்றதாக இருந்தது.

முந்தைய சோசலிச கருத்துரு “முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான்.’‘ ஆனால், அவை எந்த வகையில் தீயவையாக உள்ளது? அத்தீமை எதன் பொருட்டு, எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? என்பதை விளக்க அதனால் முடியவில்லை. அதன் முழுவடிவத்தை விளக்கிட முடியாமல் அது தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. “முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை எந்த அளவுக்கு முந்தைய சோசலிசம் வெளிப்படையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் விளக்கிட முடியவில்லை.

இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் “(1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதோடு, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாதபடியான அதன் வீழ்ச்சியையும் எடுத்துரைப்பது (2) இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையை தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது.” உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுணர்ந்ததன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.

“ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது.” அந்த வகையில், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத கருத்துரு மற்றும் உபரி மதிப்பை கண்டறிந்து முதலாளித்துவ உற்பத்தியின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டறிந்ததின் மூலம் சோசலிசம் விஞ்ஞானமானது என்கிறார் எங்கெல்ஸ்.

விஞ்ஞான சோசலிசம்

“சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, விநியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல.” சோசலிசம் என்பது மனிதர்களின் சிந்தனையில் திடீரென முகிழ்ந்த ஒன்றல்ல. “எதார்த்தத்தில் நிலவும் (வர்க்கங்களுக்கு இடையேயான) மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. இம்மோதலால் நேரடியாக பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே சோசலிசமாகும்.”

“மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒரு முனையில் செல்வம் திரள்வதும் எதிர்முனையில் மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கம் துயரமும், உழைப்பின் வேதனையும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடுமையும் மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதை குறிக்கிறது.“ (மூலதனம்)

முதலாளித்துவ அமைப்பு முறையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் கூடுதலான உழைப்புச் சுரண்டலின் காரணமாகவும் உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கிறது என்றால் சுரண்டலின் அளவும் அதிகரித்துள்ளது என்பதே அதன் உள்ளீடு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே உற்பத்தியின் அளவை உயர்த்துகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிடைக்கப்பெறும் இயந்திரங்களோடு நவீன பாட்டாளிகளின் மேம்பட்ட உழைப்பு சக்தியின் பங்களிப்புமே உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் அதே நேரம் தொழிலாளி அதிக அளவில் சுரண்டப்படுவதும் நிகழ்கிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப்பெறாமல் அவர்களின் வாங்கும் சக்தி குறைகிறது. வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவே உற்பத்தியாகியுள்ள அதிகமான பொருட்கள் சந்தையில் தேங்குகிறது. தொடர்ந்து வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலை தணிக்க ஆளும் வர்க்கத்தின் சார்பில் அரசு நிற்கிறது. “இறுதியில், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக உற்பத்தியின் நெறியாண்மையை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’‘

புரட்சியின் மூலம் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது. இதைச் செய்வதன் மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவு கட்டுகிறது. அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்க பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது. அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவு கட்டுகிறது.”அரசு ஒழிக்கப்படுவதில்லை. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும், முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்” என்கிற வாக்கியத்துடன் இந்நூலை எங்கெல்ஸ் நிறைவு செய்கிறார். இந்த இறுதி வரிகளை பற்றிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும் கடமையை நிறைவேற்றுவதே சிவப்பு புத்தக தினத்தின் குறியிலக்காகும்.

எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. இதற்காக 1 லட்சம் புத்தக பிரதிகள் அச்சிடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ஒலி வடிவில் இந்த புத்தகத்தை மார்க்சிஸ்ட் செயலி வழியே கேட்கலாம்.

கீழ்க்காணும் உரைகள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மாலை 7 மணிக்கு நேரலையாக கேட்கலாம். (Youtube I Facebook )

28.09.2020 – கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – சீத்தாராம் யெச்சூரி (தொடக்க நிகழ்வு)

5.10.2020 – 21 ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் – என்.குணசேகரன்

12.10.2020 – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஜி.ராமகிருஷ்ணன்

19.10.2020 – குடியிருப்புப் பிரச்சினை – அ.பாக்கியம்

26.10.2020 – டூரிங்குக்கு மறுப்பு – மு.சிவலிங்கம்

2.11.2020 – இயற்கையின் இயக்கவியல் – டாக்டர் த வி.வெங்கடேஸ்வரன்

9.11.2020 ஜெர்மன் சித்தாந்தம் – பேரா.முத்துமோகன்

15.11.2020 – மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் – சகஸ்ரநாமம்

16.11.2020 – இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் – அ.சவுந்தரராசன்

17.11.2020 – குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – பேரா.வீ.அரசு

18.11.2020 – எங்கெல்ஸ் முன்னுரைகள் – இரா.சிந்தன்

19.11.2020 – அரசு பற்றிய எங்கெல்ஸின் எழுத்துக்கள் – ச.லெனின்

20.11.2020 – எங்கெல்ஸின் எழுத்துக்களில் தொழிலாளி வர்க்கம் – எஸ்.கண்ணன்

21.11.2020 – ஜெர்மனியில் விவசாயப் புரட்சி – வி.மீனாட்சி சுந்தரம்

22.11.2020 – எங்கெல்சும் மார்க்சின் மூலதனமும் – டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா

23.11.2020 – புனிதக் குடும்பம் – வீ.பா.கணேசன்

24.11.2020 – எங்கெல்சும் அறிவியலும் – டாக்டர் டி.ஜெயராமன்

25.11.2020 – எங்கெல்ஸ் கடிதங்கள் – உ.வாசுகி

26.11.2020 – ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – ஆர்.பத்ரி

27.11.2020 – வரலாற்றில் பலப்பிரயோகம் வகிக்கும் பாத்திரம் – ச.தமிழ்ச்செல்வன்

28.11.2020 – லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் – டி.கே.ரங்கராஜன்

நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்

ச. லெனின்


“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற எங்கெல்சின் இந்நூல் மார்க்சின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். மார்க்ஸ் மறைந்த பிறகு “மூலதனம்” நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் பெரும் முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்தார். அந்தப் பணிகளின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. 1884 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் இதைக் காண முடியும். 

“ஓர் அர்த்தத்தில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே… (எங்களின்) பொருள் முதல்வாத ஆராய்ச்சியின் மூலம், தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களின் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் (மார்கனது நூல் வெளியாவதற்கு) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்” என்கிறார் எங்கெல்ஸ்.

எல்.எச்.மார்கன் என்கிற அமெரிக்க மானுடவியலாளர், அமெரிக்க பூர்வகுடி மக்கள் மத்தியில் வாழ்ந்து அங்கு நீண்ட ஆய்வை மேற்கொண்டார். அதன் முடிவுகளை உள்ளடக்கி “பண்டைய சமூகம்” (Ancient Society) எனும் நூலை 1877ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எங்கெல்ஸ் இந்த நூலை எழுதினார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் 

1848இல் மார்க்ஸ் எங்கெல்சின் கூட்டுப் படைப்பாக வெளியான வரலாற்று ஆவணமான “கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் முதல் அத்தியாயத்தின் முதல் வரி “இதுநாள் வரையில் நிலவி வந்த சமுதாயத்தின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று தொடங்கும். மார்கனின் படைப்பு வெளியான பிறகே, எங்கெல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் இந்நூலில்தான் இதுவரையான வரலாறு என்பதை மாற்றி “ஏடறிந்த வரலாறுகள்” எல்லாம் வர்க்கப் முரண்பாடுகளையும், வர்க்கப் போராட்டங்களையும் உள்ளடக்கியது என்று மாற்றுகிறார்.

ஏனெனில், அதுவரை ஏட்டில் ஏறாதிருந்த ஆதிப்பொதுவுடமைச் சமூக வாழ்க்கை முறையை மார்கன் தனது கள ஆய்வின் மூலம் தனது நூலில் எடுத்துரைக்கிறார். அச்சமூகம் வர்க்க முரண்பாடற்ற நிலையை உள்ளடக்கியதாக இருந்தது. இதையே “நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்தைய, அடிப்படையான, முக்கியமான அம்சங்களைக் கண்டுபிடித்து, மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்ததுதான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும்.” என்று மார்கனின் பங்களிப்பை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

பல்வேறு நாடுகளில், பல குழுக்களாகவும், குலங்களாகவும் வாழ்ந்து வந்த மனிதக் கூட்டம் தன்னகத்தே பலவிதமான வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தது. அதில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் எவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

குடும்பம் 

குடும்பம் என்பது “சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமுதாயம் முன்னேற, அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற, அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும்….. நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனால் அதற்குப் பின்னல் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆரூடம் கூற முடியாது” என்ற மார்கனின் வரிகளை எங்கெல்ஸ் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். 

அன்று, அதாவது சுமார் 142 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரூடம் கூற முடியாத விஷயங்கள் இன்றைய முதலாளித்துவ வாழ்க்கை நிலையில் நமக்கு  சில வளர்ச்சிப் போக்குகளை காட்டுகின்றன. ஏனெனில் நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது. திருமணம் என்கிற பதிவு இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்வது (Live in Relation)  சட்டரீதியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கெட்டியான பழமைவாதம் நிறைந்த வரைமுறைகளை கடந்து,  பிடித்திருந்தால் இந்த உறவை தொடர்வது அல்லது பிரிந்து செல்வது என்ற இந்நிலையை ஒருபடி முன்னேற்றமாகவே அறிவார்ந்த சமூகம் பார்க்கிறது. அதே நேரம் குடும்பம், குழந்தை, ஒரு வரைமுறை ஆகியவை இல்லாத இந்நிலை முதலாளித்துவத்திற்கு தேவையான சூழல் என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.


இரவு, பகல், ஓய்வு நாள், குடும்பத்துடன் ஒருநாள் என்பது போன்ற எவ்வித பந்தமும், அதற்காக ஒதுக்க வேண்டிய நேரமும் தேவை இல்லை என்ற நிலையே, தற்போது மாறிவரும் வேலைச் சூழலுக்கு தேவைப்படுகிறது. எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தே குடும்ப  முறையும் மாற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே, காலநேரம் இன்றி தனது உழைப்பை முதலாளிக்கு விற்கும் நிலையை தக்கவைக்கும் போக்கையே நவீன குடும்ப உறவுமுறைகள் வளர்க்கின்றன என்பது கண்கூடு.

எது நாகரிகம் ?

“மலைவாழ் மக்கள் மத்தியில் பாலியல் வல்லுறவு என்பதை நான் கேள்விப்பட்டதில்லை, அதேபோல் திருட்டு என்பதும் அங்கு கிடையாது” என்று பழங்குடியின மக்கள் மத்தியில் பணியாற்றிய ஒருவர் பதிவு செய்துள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற, பஞ்சமும் பசியும் நிறைந்த இன்றைய நவீன சமூகத்தை பொதுவாக நாகரிக சமூகம் என்றும், மலைவாழ் மக்களின் வாழ் நிலையை அநாகரிகம் என்றும் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

“அன்றைய மனிதர்களுடைய நிலையை இன்றைய நாகரிக மக்களின் மிகப் பெரும்பாலோருடைய நிலையுடன் ஒப்பிட்டால் அது…. மிகப் பெரும் இடைவெளியுடன் இருப்பதை காண்போம். எனினும் இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மறக்கக் கூடாது… இனக்குழுக்களின் கூட்டு அதன் வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு சமிக்ஞையாக இருந்தது”  என்கிறார் எங்கெல்ஸ். 

அதேநேரம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முடிவுகட்டி எழும் புதிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் எங்கெல்ஸ் இந்நூலில் குறிப்பிடுகிறார். அங்கு “பணத்தை கொண்டோ, சமூக ரீதியான இதர அதிகார சாதனைகளை கொண்டோ ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி என்றைக்கும் நேராது. பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணக்கமாட்டார்கள்; அல்லது பொருளாதார விளைவுகளை பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மை கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது.” என்ற உண்மையான, பண்பட்ட நாகரிக  நிலை கம்யூனிச சமூகத்திலேயே சாத்தியம் என்பதை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

வரலாற்றுப் பொருள்முதல் வாதம்  

“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி (கடைசியாக பார்க்கும் பொழுது) உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான‌ சாதனங்களை உற்பத்தி செய்வது. அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும், அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதாகும். மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது – அதாவது மனித இனத்தை பெருக்குவது”  

அதே போல் “சமூக அமைப்பை உற்பத்தியின் இந்த இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதும், மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதுமே அந்த சமூக அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.” என்று எங்கெல்ஸ் தனது முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார்.  இதற்கு ஆதாரமாக மார்கனின் ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை எங்கெல்ஸ் இந்நூலில் வலுவாக நிறுவுகிறார்.

சொத்துடைமை வர்க்கத்தின் “அரசு” 

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் எழுந்த புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு எவ்வாறு குடும்ப அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது குறித்தும், தலைமை நிலையிலிருந்த பெண்கள், ஆணுக்கு சரிநிகராக இருந்த பெண்கள், எவ்வாறு சொத்து மற்றும் அதன் வாரிசுரிமை என்ற அழுத்தத்தினால் கட்டுப்பாடுகளுக்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளானார்கள் என்பதை பல்வேறு குலங்கள் மற்றும் குழுக்களின் பழங்கால வாழ்வியலை கொண்டு இந்நூல் விளக்குகிறது.

சொத்துடைமையின் வளர்ச்சி அரசு எனும் ஒரு அமைப்பு உருவாகும் நிலையை ஏற்படுத்தியது. “அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம்” தான் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்துடைமை வர்க்கம் தங்களது சொத்துக்களை பாதுகாக்க அரசு எனும் அமைப்பை கட்டமைத்தன. ஏனெனில் “வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்தே அரசு தோன்றியது; அதேசமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில்  நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது…. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களை பெறுகிறது” (வர்க்கங்களுக்கு இடையேயான)  “சண்டை”யின் கடுமையைத் தணிப்பது. “ஒழுங்கு” என்னும் வரம்புக்குள் அதைக் கட்டுப்படுத்துவது அதன் (அரசின்)  நோக்கமாகும்.” என்று அரசின் தோற்றம் மற்றும் அதன் செயல்கள் குறித்த எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார்.

ஆதிப்பொதுவுடைமை சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தொடங்கி, வர்க்க சமூகங்களாக அவை வளர்ந்த அம்சங்களையும், சொத்துடைமையை பாதுகாக்க குடும்ப அமைப்பு எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பப்பட்டது என்றும், அதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்நூல் பேசுவதோடு, சொத்துடமை வர்க்கத்தின்  நலன் சார்ந்து அரசு உருவானதையும், வர்க்க நலன் சார்ந்த அதன் செயல்பாடுகளையும் இந்நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கியுள்ளார்.

மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*

குரல்: தேவி பிரியா

– பிரடெரிக் எங்கெல்ஸ்

சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையிலே அதுதான் தோற்றுவாய் – இயற்கைக்கு அடுத்தபடியாக; அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. ஆனால் அளவிடற்கரிய வகையில் அதை விட அது இன்னும் அதிகமும் கூட. ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூறவேண்டிய அளவுக்கு அது மனித வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாக நிர்ணயிக்கப்படாத, மூன்றாம் காலக்கூறு (Tertiary period) எனப் புவியியல்வாதிகள் அறிந்துள்ள பூமியின் வரலாற்றின் ஒரு சகாப்தத்தில் – அதனுடைய முடிவுக்கட்டத்தில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு – மிகவும் உன்னதமான வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கு இனமானது வெப்பமண்டலத்தில் – தற்போது இந்துமாகடலின் அடியில் ஒரு வேளை மூழ்கிப்போன ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் – ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. நம்முடைய இந்த மூதாதையர்களைக் குறித்த ஒரு உத்தேசமான வர்ணனையை டார்வின் நமக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் முழுமையாகவே உரோமத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்கள் தாடிகளையும் கூர் முனையுள்ள காதுகளையும் பெற்றிருந்தனர் ; மரங்களின் மீது கூட்டங்கூட்டமாக வாழ்ந்தனர்.

மரமேறுதல் என்பது கை கால்களுக்கு வித்தியாசப்பட்டதொழில்களைப் பகிர்ந்து விடுகிறது; அவர்களுடைய வாழ்க்கைமுறையில் தட்டையான நிலத்தின் மீது நிலை பெயர்ந்து செல்ல வேண்டிஏற்பட்ட போது இந்த மனிதக் குரங்குகள் படிப்படியாகக் கைகளைப்பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டன; மேலும் மேலும் அதிகமாக ஒரு நிமிர்ந்த உடற்பாணியையே அனுசரித்தன. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலையில் இது நிர்ணயமானதொரு படி ஆகும். தற்போதுள்ள எல்லா மனிதக் குரங்குகளுக்கும் நிமிர்ந்து நிற்கவும் பாதங்களினால் நடக்கவும் இயலும்; ஆனால் அது அவசரகாலங்களிலேதான், அதுவும் விகாரமாகத்தான். அவற்றினுடைய இயல்பான நடை பாதி நிமிர்ந்தும் பாதி குனிந்தும் செல்லும் நடை, அதில் அவை கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை தங்களது முஷ்டியின் விரல் கணுக்களைப் பூமியின் மீது ஊன்றிக் கால்களை உள்இழுத்து நீண்ட கைகளிடையே உடலை ஊசலாட்டிச் செலுத்துகின்றன – நடக்கும் திறனில்லாத ஒருவர் கவைக் கோல்களினால் நடந்து செல்வதற்கு ஒப்பாக இதனைக் கூறலாம்.

பொதுவாக, நான்கு கால்களினால் நடப்பது முதல் இரண்டு கால்களினால் நடப்பது வரை உள்ள இடைநிலைக் கட்டங்களை எல்லாம் இன்றைய மனிதக் குரங்குகளிடமே காணலாம். இருந்தாலும், பின் சொன்ன நடை அவற்றில் எதற்கும் தாற்காலிகமாகச் சமாளித்துக் கொள்வதற்கு மேலாக முக்கியத்துவம் உடையதாக இருக்கவில்லை. உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் ஓர் அவசியமாகவும் ஆயிற்று, இதற்குள்ளாக கைகளுக்குப் பல்வேறுவகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிய முடியும். மனிதக் குரங்குகளிடையே ஏற்கெனவே கைகளும் பாதங்களும் பயன்படுத்தப் படுவதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. மேலே சொன்னதற்கொப்ப, மரமேறுவதில் கைகளுக்கும் பாதங்களுக்கும் வெவ்வேறு உபயோகங்கள் உள்ளன. கீழ்ப்படியில் உள்ள சில பாலூட்டிகள் தங்களது முன்பாதங்களை உபயோகிப்பதைப் போல உணவைச் சேகரிக்கவும் பிடிக்கவுமே கைகள் பிரதானமாக உபயோகிக்கப் படுகின்றன.

மரங்களில் தங்களுக்குக் கூடுகளைக்கட்டிக் கொள்ளவும் அல்லது உதாரணமாக சிம்பன்ஸி குரங்கைப் போலத் தங்களை பருவமாற்ற நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கிளைகளிடையே கூரைகள் வேய்ந்து கொள்ளவும் கூடப் பல மனிதக் குரங்குகள் கைகளைப் பயன்படுத்துகின்றன. பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்ளத் தங்களது கைகளினால் கழிகளைப் பிடிக்கின்றன; தங்களது கைகளைக் கொண்டு எதிரிகளைப் பழங்களாலும் கற்களாலும் தாக்குகின்றன. அவை கூண்டில் பிடிபடும் போது மனிதர்களிடமிருந்து சில சிறிய செயல்களை ஒத்த வடிவத்தில் செய்யத் தங்களது கைகளைப் பயன்படுத்துகின்றன. இதில்தான், மனிதனை அதிகபட்சம் ஒத்தமனிதக் குரங்குகளின் வளர்ச்சியடையாத கைக்கும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பினால் உன்னதமான சிறப்பு பெற்றுள்ள மனிதக் கைக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியை ஒருவன் காண்கிறான். இந்த இரு கைகளிலும் உள்ள எலும்புகளும் தசைகளும் எண்ணிக்கையிலும் பொதுவான இணைப்பு ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியானவை; ஆனால் எந்தக் குரங்கின் கையும் ஒத்த மாதிரி செய்யமுடியாத நூற்றுக்கணக்கான செயல்களை மிகக் கீழ்ப் படியிலுள்ள ஒரு காட்டுமிராண்டியின் கை செய்ய முடியும் – எந்தக் குரங்கின் கையும் எந்தக்காலத்திலும் மிகக் கரடுமுரடான கல் கத்தியைக் கூட உருவாக்கியதில்லை.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரமாண்டுகளில் நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தங்களது கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்தக் கற்றுக்கொண்ட முதற்செயல்கள் மிக சாதாரணமானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும். எவரிடையே மிருகங்களையொத்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடிய நிலைமை அதிகமாகவிருக்கவும், அதேசமயத்தில் உடல் துறையிலும் பின்னடைவு ஏற்படுவதும் அனுமானிக்க இயலுகிறதோ, அப்படிப்பட்ட மிகக் கீழ்ப்படியிலிருந்த காட்டுமிராண்டிகளும் கூட அந்த இடைநிலைவாசிகளை விட எவ்வளவோ மேம்பட்டவர்களே. முதல் சக்கிமுக்கிக் கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு முன்பு ஒப்பு நோக்கினால் நாமறிந்த வரலாற்றுக்காலம் அற்பமாகிவிடுகிற ஒரு காலக்கூறு கடந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் நிர்ணயமான அடி எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது; கை சுதந்திரம் பெற்று விட்டது; இனிமேற்கொண்டு அது மேலும் மேலும் அதிக நுண்திறத்தைப் பெறமுடியும்; இவ்வாறு பெறப்பட்ட அதிக நெகிழ்ச்சித்திறமும் வழி வழியாக அடையப்பட்டு தலைமுறைக்குத் தலைமுறை பெருகி வந்தது.

இவ்வாறாக கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே. உழைப்பு, எப்பொழுதும் புதியசெயல்களுக்குப் பொருந்தியவாறு அமைத்துக் கொள்ளல், இவ்விதத்தில் விசேஷ வளர்ச்சி அடைந்த தசைகள், தசை நார்கள், காலத்தின் மிக நீண்டகூறுகளில் எலும்புகள் இவற்றை வழி வழியாகப் பெறுதல், இவ்வாறுவழி வழியாகப் பெறப்பட்ட நுண்ணயங்களைப் புதிய, மேலும் மேலும்கூடுதலான சிக்கலான செயல்களுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தல் ஆகியன ஒரு ரஃப யேலின் ஓவியங்களையும் ஒரு தொர்வால்ட்ஸனின் சிற்பங்களையும் ஒரு பகனீனியின் சங்கீதத்தையும் செப்பிடுவித்தையின் விளைவு போல முன்கொண்டு வந்து நிறுத்தத்தக்க மகோன்னதத் தேர்ச்சியை மனிதனின் கைக்கு அளித்தன. ஆனால் கை மட்டும் தனித்து இருக்கவில்லை; அது முழு மொத்தமான, உயர்ந்தபட்ச பல்கூட்டுத்தொகுதியான அங்கஜீவியின் ஓர் உறுப்பாகும். கை என்ன நற்பயனைப்பெற்றதோ, அதை அது பணி புரிந்த உடலமைப்பு முழுவதும் பெற்றது; இது இரண்டு வழிகளில் நடந்தேறியது.

முதலாவதாக, வளர்ச்சியின் பரஸ்பரத் தொடர்பு விதி என டார்வின்அழைத்ததற்கொப்ப உடலமைப்பு அந்த நற்பயனைப் பெற்றது. ஓர்அங்கஜிவியின் தனிப்பட்ட உறுப்புகளின் பிரத்யேகத் தன்மை வாய்ந்தவடிவங்கள் எப்போதுமே மேலீடாக அவற்றுடன் தொடர்பற்றதாகத் தெரிகிற இதர உறுப்புகளின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அந்த விதி அறிவிக்கிறது. இவ்வாறாக ஜீவ அணுக் கருவற்ற சிவப்பு ரத்த அணுக்களையும் முதுகெலும்பின் முதல் எலும்புடன் இரட்டை மூட்டுகளால் இணைக்கப்பட்ட தலையையும் உள்ள எல்லா மிருகங்களும் எவ்வித விதிவிலக்குமின்றித் தங்களது குட்டிகளுக்குப் பாலூட்டப் பால் சுரப்பிகள் பெற்றிருக்கின்றன. அதைப்போலவே, பாலூட்டும் மிருகங்களின் பிளவுபட்ட குளம்புகள் என்பது அசைபோடுவதற்கான பல் கூறடங்கிய வயிற்றைப் பெற்றிருப்பது என்பதுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்டவடிவங்களில் மாற்றங்கள் என்பதில் உடலினுடைய இதர உறுப்புகளின்வடிவங்களில் மாற்றங்கள் என்பன அடங்கியுள்ளன- இந்தத் தொடர்பை நம்மால் விளக்க முடியவில்லையெனினும் இது உண்மையே. நீலக்கண்களைப் பெற்ற தூய வெள்ளைப் பூனைகள் எப்போதுமே அல்லது கிட்டத்தட்ட எப்போதுமே செவிடாக உள்ளன. படிப்படியாக மேலும் மேலும் நிறைவுபெற்று வந்த மனிதக் கையும் இதை ஒத்து ஒரே அளவில் நிமிர்ந்த நடைக்கு உகந்த வகையில் பாதங்கள் பொருந்திவந்தமையும் சேர்ந்து இந்தப் பரஸ்பரத் தொடர்பு இணைப்பின் காரணமாக அங்க ஜீவிகளின் இதர உறுப்புகள் மீது நிச்சயமாக எதிர்ச்செயல் கொண்டன. இருந்தபோதிலும் கூட, யதார்த்த உண்மையைப் பொதுப்படையாக அன்றி அதற்கு மேல் அதிகமாகச் சொல்லுவதற்குச் சாத்தியமல்லாத வகையில் போதுமான அளவுக்கு இந்தச் செயற்பாடுபரிசீலிக்கப் படவில்லை.

உடலமைப்பின் இதர பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின்நேரடியான, எடுத்துக் காட்டத்தக்க செயலாட்சி அதைவிட அதிகமுக்கியத்துவம் உடையதாகும். நமது வானர மூதாதையர்கள் சமூகஉணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பது ஏற்கெனவே கவனத்தில்கொள்ளப்பட்டது; மிருகங்களிலேயே மிக அதிக சமூக உணர்வுகொண்ட மனிதனின் தோற்றத்தை சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை என்பது தெளிவு. கையின்வளர்ச்சியுடன், உழைப்புடன் இயற்கையின் மீது ஆளுகை கொள்வதுதொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடையஅறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருள்களின் அது வரைஅறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போலஅவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பரஆதரவு, கூட்டுச் செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்ஒவ்வொரு தனி நபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத்தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடி வர உழைப்பின்வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால்உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவைஎன்பது ஓர் உறுப்பைப் படைத்தது; மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாதகுரல்வளை மெதுவாக ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் மூலம்இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்யமாற்றியமைக்கப்பட்டது; வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒருதீர்க்கமான ஒலிக்குப் பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டன.

உழைப்பிலிருந்தும் அதனுடைய மாற்றப் போக்கிலிருந்தும் மொழியின் பிறப்பை விளக்குவது ஒன்றே சாலவும் பொருத்தமுடையது என மிருகங்களுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் நிரூபிக்கப்படுகிறது. மிக அதிகபட்சம் வளர்ச்சி பெற்ற மிருகங்களுக்கும் தங்களுக்குள்பரஸ்பரத் தொடர்பு கொள்ள அவசியமான அந்தச் சிறிய அளவுக்கும்கூடத் தீர்க்கமான பேச்சு தேவைப்படுவதில்லை. இயற்கை நிலையில்அதற்குப் பேசுவதற்கு அல்லது மனிதப் பேச்சைப் புரிவதற்குச்சாத்தியப்படவில்லை என்பதினால் தனக்கு ஏதோ ஒரு தடை இருப்பதானஉணர்ச்சி எந்த மிருகத்திற்கும் இல்லை. மனிதனால் பழக்கப்படும்பொழுது இது முற்றாகவே வேறுபடுகிறது. நாயும் குதிரையும்மனிதனுடன் கொண்ட நட்புக் கூட்டு காரணமாக, அவற்றினுடையகருத்து வீச்சின் எல்லைக்குள், எம்மொழியையும் புரிய எளிதாகக் கற்றுக்கொள்ளுகிற அளவுக்குத் தீர்க்கமான பேச்சைக் கூர்ந்து கேட்கக் கூடியகாதுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முன்புஅப்பாற்பட்ட தாக இருந்த, மனிதனின் பால் அபிமானம், நன்றியுணர்வு,முதலான உணர்ச்சிகளைக் கொள்ளுவதற்கான திறனையும் அவைபெற்று உள்ளன. இப்படிப்பட்ட மிருகங்களுடன் அதிகமாகப் பழகவாய்ப்புள்ள ஒருவன், அனேக வழக்குகளில் அவை இப்பொழுதுபேசுவதற்குச் சாத்தியமற்ற தங்களது நிலையை ஒரு குறைபாடாகஉணருகின்றன என்ற நம்பிக்கையிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியாது;இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குறைபாடு இனி நேர் செய்யமுடிகிற ஒன்றல்ல; ஏனெனில் அவற்றினுடைய வாய்த் தொனிஉறுப்புகள் ஒரு திட்டமான திசையில் மிகப் பிரத்யேகத் தன்மை பெற்ற விட்டன.

ஆனாலும் வாய்த் தொனி உறுப்புகள் உள்ளவற்றில் இந்தத்திறமின்மையும் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மறைந்து விடுகிறது.பறவைகளின் குரல் கொடுக்கும் உறுப்புகள் மனிதனுடையவற்றை விடஎவ்வளவு மாறுபட முடியுமோ அவ்வளவு மாறுபட்டிருந்தாலும் கூட,எல்லா விலங்குகளிலும் பறவைகள் மட்டுமே பேசுவதற்குக் கற்றுக்கொள்ள வல்லவை: மிகவும் அருவருக்கத்தக்க குரலைக் கொண்டுள்ளகிளிதான் மிகச் சிறப்பாகப் பேசுகிறது. கிளி என்ன பேசுகிறதோ, அதைப்புரிந்து கொள்வதில்லை என்று யாரும் ஆட்சேபிக்க வேண்டாம்.மனிதர்களுடன் பேசவும் நட்புறவு கொள்ளவுமான இன்பத்திற்காகமட்டும் கிளி ஒரேயடியாய் மணிக் கணக்கில் பேசும்; தொடர்ந்தாற்போலத்தனது சொற்செல்வம் முழுவதையும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் என்பதுஉண்மையே. ஆனால் அதனுடைய கருத்துகளின் வீச்சு எல்லைக்குட்பட்டுதான் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்ள முடியும். வசைச் சொற்களின்பொருளைப் பற்றிய கருத்தைப் பெறத்தக்க வகையில் ஒரு கிளிக்குஅவற்றைச் சொல்லிக் கொடுங்கள் (வெப்ப மண்டலத்திலிருந்துதிரும்புகிற மாலுமிகளின் ஓர் இன்பமான பொழுதுபோக்கு இது); பிறகுஅதைத் தொந்தரவு செய்யுங்கள்; வசைச் சொற்களை பெர்லினில் உள்ளஒரு தள்ளுவண்டிப் பழம் விற்பவனைப் போல மிகப் பொருத்தமாகஉபயோகிக்க அது தெரிந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவீர்கள். தின்பண்டங்கள் கொடுக்கக் கெஞ்சும் போதும் இது பொருந்துகிறது.

முதலில் உழைப்பு, அதன் பின்னரும், அத்துடன் சேர்ந்தும் பேச்சு-இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால்மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாகமாறியது; இது அதை ஒத்ததாக இருந்தபோதிலும் அதை விட இன்னும்பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின்வளர்ச்சியுடன் கைகோத்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியானகருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியானவளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவதுஎன்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போல மூளையின் வளர்ச்சிமுழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன.மனிதனுடையதை விடப் பருந்தின் கண்கள் மிக தூரத்தைப் பார்க்கின்றன;ஆனால் மனிதனுடைய கண்கள் பருந்தினதைவிடக் கணிசமாகவேஅதிகமானவற்றைப் பொருள்களில் உய்த்துணருகின்றன. மனிதனதைவிட நாயின் முகரும் உணர்வு மிகக் கூர்மையானதே; ஆனாலும்மனிதனுக்கு வெவ்வேறான பொருள்களைக் குறிக்கிற திட்டமானஅறிகுறிகளாக உள்ள வாசனைகளில் நூற்றில் ஒரு பகுதியைக் கூடஅதனால் வகைவேறுபாடு காணமுடியாது. மனிதக் குரங்கு ஸ்பரிசஉணர்வைக் கரடுமுரடான, ஆரம்ப நிலையில் மட்டுமே பெற்றிருக்கும்;மனிதக் கையின் வளர்ச்சியுடன் அக்கம்பக்கமாகவே, அதுவும் உழைப்பின்மூலமாக, வளர்ச்சி பெற்றது.

மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன்ஆகியவற்றின் வளர்ச்சி உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்தியஎதிர்ச் செயற்பாடு உழைப்பு, பேச்சு இவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத்திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது. மனிதக்குரங்கிலிருந்து வேறுபட்டவனாக மனிதன் இறுதியாக மாறியவுடன்இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விட வில்லை; ஆனால் ஒட்டுமொத்தத்தில்கூடுதலான வலு மிக்க முன்னேற்றத்தைப் பெற்றது; இது வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு மக்களினங்களிடையே அளவிலும் திசையிலும்மாறுபடவும் அங்குமிங்கும் ஸ்தல அல்லது தற்காலிகப் பின்னேற்றத்தால்இடைமறிக்கப்படவும் செய்தது. இந்தக் கூடுதலான அபிவிருத்தி,முழு வளர்ச்சி பெற்ற மனிதன் தோன்றியவுடன் செயலுக்கு வந்தபுதியதோர் ஆக்கக் கூறான சமூகம் என்பதினால் ஒரு புறத்தில் வலுவுடன்முன்னோக்கி உந்தப்படவும் மறுபுறம் இன்னும் திட்டமான திசைகளில்வழி நடத்தப்படவும் செய்தது.மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம்தோன்றுவதற்குள் லட்சக்கணக்கான ஆண்டுகள் – மனிதனுடையஆயுளில் ஒரு வினாடிக்கு இருப்பதை விட அதிக முக்கியத்துவம்இதற்குப் பூமியின் வரலாற்றில் ஏதும் இல்லை*– நிச்சயமாகவேகடந்து சென்றன. ஆனால் இறுதியாக அது தோன்றத்தான் செய்தது.

குரங்குகளின் ஒரு கூட்டத்திற்கும் மனித சமூகத்திற்கும் இயல்பு ரீதியானவேறுபாடாகத் திரும்பவும் நாம் எதைக் காண்கிறோம்? உழைப்பு.பூகோளச் சூழ்நிலைகளால் அல்லது அண்டையிலுள்ள மந்தைகளின்எதிர்ப்பால் வரையறை செய்யப்பட்ட தீனிப் பிரதேசத்திற்குள்இரை தேடிக் கொண்டிருப்பதுடன் ஒரு மனிதக் குரங்குக் கூட்டம்திருப்தியடைந்தது; புதிய தீனிப் பிரதேசங்களைப் பெறுவதற்காக அதுகுடி பெயர்ச்சிகளை அல்லது போராட்டங்களை மேற்கொண்டது; தனதுகழிவுப் பொருளைக் கொண்டு அப்பிரதேசங்களுக்குத் தன்னுணர்வின்றிஉரமளித்ததைத் தவிர்த்து அவை இயற்கை நிலையில் அளித்ததற்குமேலாக வலிந்தெடுக்க அது திறனற்றிருந்தது. எல்லாத் தகுந்ததீனி நிலங்களும் வியாபிக்கப்பட்டவுடன் மனிதக் குரங்குகளின்மொத்த தொகையில் பெருக்கம் ஏற்படவில்லை; அதிகபட்சம்அவற்றின் எண்ணிக்கை ஒரே நிலையில் தங்கிவிட்டது. ஆனால் எல்லாமிருகங்களும் பெருமளவு உணவை விரயம் செய்கின்றன; அத்துடன்கூடுதலாக, உணவின் அடுத்த தலைமுறையை முளையிலேயே அழித்துவிடுகின்றன. வேட்டைக்காரனைப் போலன்றி ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டுவைப்பதில்லை; முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே இளம் புதர்களைத்தின்று விடுகிற கிரேக்க நாட்டு வெள்ளாடுகள் நாட்டிலுள்ள எல்லாமலைகளையும் பசுமையின்றி வெறிச்சோட வைத்தன. மிருகங்களின்இந்தச் “சூறையாடும் பொருளாதாரம்”, இனவகைகள் தங்களதுவழக்கமான உணவைக் கைவிட்டு இதர வகைக்கு ஏற்றவாறு தங்களைஅமைத்துக் கொள்ள நிர்ப்பந்தித்து அவை படிப்படியாக நிலைமாறுதல்அடைவதில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது: இதன் புண்ணியத்தால்அவற்றின் ரத்தம் ஒரு வேறுபட்ட இரசாயன ஆக்கத்தைப் பெறவும்உடலமைப்பு படிப்படியாக வேறுபடவும் செய்கிறது; அதே பொழுதில்தங்களைத் திருத்தியமைத்துக் கொள்ளாத இனவகைகள் சிறுகச் சிறுகஇறந்து விடுகின்றன. நமது மூதாதையர்கள் மனிதக் குரங்கிலிருந்துமனிதனாக மாறியதில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம் பெரும்அளவில் நற்பங்காற்றியுள்ளது என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

மனிதக் குரங்குகளில் புத்திக் கூர்மையிலும் சூழ்நிலைமைகளுக்குப்பொருந்தியவாறு அமைத்துக் கொள்வதிலும் மற்றெல்லாவற்றையும் விடமேலோங்கி நின்ற ஓர் இனத்தில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம்உணவாக உபயோகிக்கப்பட்ட செடிகளின் எண்னிக்கையைத்தொடர்ந்து பெருக்குவதற்கும் உணவு வகைச் செடிகளின் உண்ணத்தக்கபகுதிகளை மேலும் மேலும் கூடுதலாக உண்ணப்படுவதற்கும் இட்டுச்சென்றது. சுருக்கத்தில், “உணவு மேலும் மேலும் பல்வகையதாயிற்றுஉடலுக்குள் செல்லும் பொருட்சத்துகளின் வகையும் அவ்வாறேயாயிற்று;இந்தப் பொருட்சத்துகளே மனிதனாக மாறுவதற்கான இரசாயனஆதாரப்படிகளாகும். ஆனால் அவை அத்தனை சேர்ந்தும் கூட இன்னும்உழைப்பு என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருளைப் பெற்றுவிடவில்லை. உழைப்புக் கருவிகளைச் செய்வதிலிருந்தே உழைப்புஆரம்பமாகிறது. நாம் காண்கிற மிகப் புராதனமான உழைப்புக்கருவிகள்-இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வரலாற்றுக் காலத்திற்குமுற்பட்ட மனிதனின் வழிவழியாக வந்த உடை மைகளைக் கொண்டும்வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப மக்களுடையவும் மிக மிக முதிர்ச்சியற்றதற்காலத்துக் காட்டுமிராண்டிகளுடையவும் வாழ்க்கைப் பாங்கைக்கொண்டும் நிர்ணயிப்பதெனில் மிகப் புராதன உழைப்புக் கருவிகள் தான்என்ன? வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான அக்கருவிகளில்முன்சொன்னவை அதே சமயத்தில் ஆயுதங்களாகவும் பயன்பட்டன.

வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்றால் தாவர உணவை மட்டும்உட்கொள்வது என்பது மாறி அத்துடன் இறைச்சியையும் உபயோகிக்கிறநிலை ஏற்பட்டது என்று பொருள்; மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலை மாற்றப்போக்கில் இது மற்றொரு முக்கியமான படியாகும். அங்கஜீவியின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான எல்லாமுக்கியமான ஆக்கக் கூறுகளும் ஏறக்குறையப் பக்குவப்பட்ட நிலையில் இறைச்சி உணவில் உள்ளன; ஜீரணத்திற்கு ஆகும் நேரத்தைக் குறைத்ததின் மூலமாக அது தாவர வாழ்விற்கு ஒத்த, உடலின் தாவரத் தன்மை சார்ந்த இதர மாற்றப்போக்குகளையும் குறைத்தது; இவ்வாறு மிருக வாழ்வுஎன்பது செயல்திறனுடன் வெளிப்பட்டுச் செயல்படுவதற்குக் கூடுதலானநேரம், பொருள், சக்தி ஆகியவற்றை அது பெற்றுக் கொடுத்தது. உருவாகிவந்த மனிதர் தாவர இனத்திலிருந்து விலகிச் சென்ற அளவுக்கு மனிதர் மிருகத்தை விட மேல் நிலைக்கு உயர்ந்தார். இறைச்சியுடனேயே அக்கம்பக்கமாக ஏற்பட்டதாவர உணவின் பழக்கம் காட்டுப் பூனை, காட்டு நாய் ஆகியவற்றை மனிதனுக்கு ஊழியர்களாக மாற்றியதைப்போலவே, தாவர உணவிற்கு அக்கம்பக்கமாக இறைச்சி உணவையும்பொருந்த அமைத்துக் கொண்டது உருப்பெற்று வந்த மனிதன் உடல்வலுவையும் சுதந்திரத்தையும் பெறுவதில் நற்பங்காற்றியது. ஆயினும் இறைச்சி உணவு மிக அதிகபட்சம் மூளைக்கே நற்பயனை விளைவித்தது; அதனுடைய ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருள்களை இப்பொழுது இன்னும் செழுமையாக அது பெற்றது; எனவே தலைமுறைக்குத் தலைமுறை அதிக விரைவாகவும் முழுநிறைவாகவும் அபிவிருத்தியடைய அதற்குச் சாத்தியமாயிற்று. தாவர உணவு உண்போருக்கு முழு மதிப்புக் கொடுத்த போதிலும், சொல்லவேண்டியதென்னவெனில் இறைச்சி உணவின்றி மனிதர் வாழ்நிலைபெற்று விடவில்லை. இறைச்சி உணவினால் ஏதோ ஒரு காலத்தில் நாமறிந்த சகல மக்கள் இனங்களிலுமே நரமாமிசப்பட்சணியாக மாறஅது இட்டுச் சென்றது எனினும் (பெர்லின் வாசிகளின் மூதாதையர்களானவெலெடாபியன்கள் அல்லது வில்ட்ஸியன்கள் ஆகியோர் பத்தாவதுநூற்றாண்டு வரைக்கும் தங்களது பெற்றோரை உண்பதை வழக்கமாகப்பெற்றிருந்தனர்) அது இன்று நமக்கு முக்கியமல்ல.

இறைச்சி உணவு நிர்ணயமான முக்கியத்துவம் உடைய இரண்டு புதியமுன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது – நெருப்பைப் பயன்படுத்தல்,மிருகங்களைப் பழக்குதல். முதலாவது அரை ஜீரண நிலையில் உணவைவாய்க்கு வழங்கியதால் ஜீரண மாற்றப்போக்கை மேலும் சுருக்கியது;இரண்டாவது வேட்டையாடுவதோடு கூட இறைச்சி இன்னும்அபரிமிதமாகவும் ஒழுங்காகவும் கிடைப்பதற்கான புதியதொருதோற்றுவாயைத் திறந்து விட்டது; மேலும், பாலிலும் அதைச்சேர்ந்த விளைபொருள்களிலும் ஊட்டத்தில் இறைச்சிக்குக் குறைந்தபட்சம் சமமான மதிப்புள்ள புதியதோர் உணவுப் பண்டத்தைஅளித்தது. இவ்வாறு இவ்விரண்டு முன்னேற்றங்களும் மனிதனுடையவிடுதலைக்குப் புதிய சாதனங்களாக விளங்கின. மனிதனுடையவும்சமூகத் தினுடையவும் அபிவிருத்திக்கு அவை மகத்தான முக்கியத்துவம்உடையனவாக இருந்தாலும், அவற்றின் மறைமுக விளைவுகளைப் பற்றிஇங்கு நாம் விரித்துக் கூறினால் அது நம்மை வேறு புறம் வெகு தூரம்இட்டுச் சென்று விடும். உண்ணத்தக்கவற்றை எல்லாம் உண்ணக் கற்றுக்கொண்டதைப் போலவே மனிதன் எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழவும்கற்றுக்கொண்டான். குடியிருக்கத்தக்க உலகம் முழுவதிலும் அவன் வியாபித்தான்; தனது சொந்தப் போக்கில் அதை முழுமையாகச் சாதித்தஒரே மிருகம் அவனே. எல்லா சீதோஷ்ண நிலைகளுக்கும் தங்களைப்பழக்கப்படுத்திக் கொண்ட இதர மிருகங்கள் – வீட்டுப் பிராணிகளும்பூச்சி இனங்களும் – தங்களது சொந்தப் போக்கில் சுயேச்சையாகஅவ்வாறு மாறவில்லை; மனிதனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச்சென்றே அவ்வாறு மாறின. ஒரே மாதிரியான வெப்ப சீதோஷ்ணநிலை நிலவிய தனது அசல் குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து மனிதன்வேனிற்காலம், பனிக்காலம் என வருடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளகுளிர் பிரதேசங்களுக்குப் பெயர்ந்து சென்றதானது புதிய தேவைகளை– குளிரையும் ஈரத்தையும் எதிர்த்துக் காப்பாகப் புகலிடமும் உடுப்பும்என்பதாக – படைத்தது; இதனால் உழைப்புக்கான புதிய துறைகளும்செயலுக்கான புதிய வடிவங்களும் தோன்றின; இவை மேலும் மேலும்மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தின.

கைகள், பேச்சு உறுப்புகள், மூளை இவற்றினுட ையஒருங்கிணைப்பான செயற்பாட்டினால் – ஒவ்வொரு தனி மனிதனிடத்தில்மட்டுமின்றிச் சமூகத்திலும் கூட-மனிதர்கள் மேலும் மேலும் சிக்கல்மிகுந்த காரியங்களை நிறைவேற்றத் திறன் பெற்றனர்; மேலும்மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தங்களுக்கு நிர்ணயித்துக்கொள்வதும் அவற்றை அடைவதும் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று.ஒவ்வொரு தலைமுறையின் வேலையும் கூட வித்தியாசப்பட்டது;கூடுதலான செய்நேர்த்தியும் பல்வகைத் தன்மையும் அது பெற்றது.வேட்டையாடுவது, கால்நடைகளை வளர்ப்பது என்பதுடன்விவசாயமும் சேர்ந்தது; அதைத் தொடர்ந்து நூற்பு, நெசவு வேலைகள்,உலோக வேலைகள், மண் பாண்டங்கள் செய்தல், கடற்பயணம்ஆகியனவும் வந்தன. வாணிபம், தொழில் இவற்றுடன் இறுதியாகக்கலைகளும் விஞ்ஞானமும் தோன்றின: குலங்கள் தேசங்களாகவும்அரசுகளாகவும் வளர்ந்தன. சட்டமும் அரசியலும், அவற்றோடுமனிதனுடைய உள்ளத்தில் மனித விவகாரங்களின் அந்த வினோதமானபிரதிபிம்பமான மதமும் எழுந்தன. உள்ளத்தின் விளைபொருள்களாகமுதலாவதாகத் தோற்றமளித்தவையும் மனித சமூகங்களில் மேலாதிக்கம்செலுத்தியவையுமான இந்த எல்லாப் பிம்பங்களுக்கும் எதிராகஉழைக்கும் கையின் மிகையான தன்னடக்கம் உள்ள விளைபொருள்கள்பின்னணிக்குச் சென்றன; சமூக வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்திலேயே(உதாரணமாக, புராதனக் குடும்பத்திலேயே) உழைப்புக்குத் திட்டம்வகுத்த உள்ளம் தன்னுடையதன்றி இதர கைகளால் அவ்வாறுதிட்டமிடப்பட்ட உழைப்பை நிறைவேற்றவும் சாத்தியமாக்கியதால்அது இன்னும் கூடுதலாகவே நிகழ்ந்தது. நாகரிகத்தினுடைய துரிதவளர்ச்சியின் பெருமை முழுவதும் உள்ளத்திற்கே, மூளையின் வளர்ச்சிக்கும் செயலுக்குமே வழங்கப்பட்டது. (எவ்வாறாயினும் உள்ளத்தில்புலன் நுகர்ச்சி செய்யப்பட்டு அதில் பிரதிபலிக்கிற) தங்களுடையதேவைகளிலிருந்தன்றிக் கருத்துகளிலிருந்தே எழுகின்றன என்று தங்களுடைய செயல்களை விளக்க மனிதர்கள் வழக்கப்படுத்திக்கொண்டனர்; எனவே காலப் போக்கில், விசேஷமாகப் பண்டைய உலகின்வீழ்ச்சிக்குப் பிறகு மனிதர்களின் மனதில் மேலாதிக்கம் செலுத்தியஒரு கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டம் எழுந்தது. டார்வின்கருத்தோட்டத்தைச் சேர்ந்த அதிகப் பொருள்முதல்வாத இயற்கைவிஞ்ஞானிகள் கூட மனிதனுடைய ஆரம்ப பிறப்பைக் குறித்து ஒருதெளிவான கருத்தை இன்னும் கூடப் பெற இயலாத அளவுக்கு அதுஇன்னும் மனிதர் களை ஆட்சி செய்து வருகிறது; ஏனெனில் அதனுடையகருத்தியல் செல்வாக்கின் கீழ்ப்பட்டுள்ள அவர்கள் அதில் உழைப்புஆற்றியுள்ள பங்கை அங்கீகரிப்பதில்லை.

ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல, மிருகங்கள் தங்களதுசெயல்களால் – மனிதனைப் போலவே, ஆனால் அந்த அளவுக்குஇல்லாமல் இருந்தாலும் – சுற்றுச்சார்புகளை மாற்றுகின்றன; இந்தமாற்றங்கள் தங்களது முறைக்கு அவற்றை நிகழ்த்தியவர்களின் மீதுஎதிர்ச்செயல் புரிந்து அவர்களை மாற்றுகின்றன என்பதையும் கண்டோம்.இயற்கையில் எதுவுமே தனிமைப்பட்ட நிலையில் நிகழ்வதில்லை.ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப்படுகிறது.பெரும்பாலான இனங்களில் இந்தப் பல தரப் பட்ட இயக்கமும் பரஸ்பரச்செயற்பாடும் மறக்கப்படுவதால் மட்டுமே நமது இயற்கை விஞ்ஞானிகள்மிக எளிய விஷயங்களிலும் கூட ஒரு தெளிவான உட்பார்வைபெறுவதினின்றும் தடுக்கப்படுகின்றனர். கிரேக்க நாட்டில் வெள்ளாடுகள்காடுகள் புத்துயிர் பெறுவதை எப்படி தடுத்தன என்பதைக் கண்டோம்;செயின்ட்ஹெலேனா தீவில் ஆரம்பத்தில் குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட வெள்ளாடுகளும் பன்றிகளும் ஏறக்குறையப் பூரணமாகவேஅங்கிருந்த பழைய செடிகொடியினத்தையே ஒழித்து விடுவதில் வெற்றிகண்டு, பின்னால் வந்த மாலுமிகள், குடியேறியவர்கள் இவர்களால்கொணரப்பட்ட செடிகள் பரவுவதற்கு இவ்வாறு வழி வகுத்தன.

ஆனால் மிருகங்கள் சுற்றுச்சார்புகள் மீது எவ்வித உட்கருத்தின்றிஅவற்றைப் பொறுத்த வரை தற்செயலாகவும் நிரந்தரமான பாதிப்பைநிகழ்த்துகின்றன. ஆனால் மனிதர்கள் மிருகங்களிடமிருந்து விலகிச்செல்கிற அளவுக்கு இயற்கையின் மீது அவர்களின் பாதிப்பு முன்கூட்டியேநிர்ணயித்த, திட்டமான குறிக்கோள்களை நோக்கிய திசைமுகம் கொண்ட,முன்னரே சிந்தித்துத் திட்ட மிட்ட செயலின் இயல்பை மேலும் மேலும்கொள்கிறது. அவை என்ன செய்கின்றன என்பதை உணராமலேயேமிருகங்கள் ஓர் இடத்தில் உள்ள செடிகொடியினத்தை அழிக்கின்றன.மனிதன் அதை அழிப்பது அவ்வாறு செய்வதினால் விடுபடுகிறநிலத்தில் வேளாண்மைப் பயிரை விதைக்க அல்லது மரங்களை அல்லதுதிராட்சைக் கொடிகளை நடு வதற்காகவேயாம்; விதைப்பதைப் போலப்பல மடங்கை அவை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.உபயோககரமான செடிகளையும் வீட்டுப் பிராணிகளையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அவன் மாற்றி கண்டங்கள் அனைத்தின் மாவடை, மரவடை வகைகளையே இவ்வாறு மாற்றிவிடுகிறான்.

இதை விட இன்னும் அதிகமாக. செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம்செடிகளும் மிருகங்களும் மனிதனுடைய கையினால் அடையாளம்தெரியாத அளவுக்கு மாற்றப்படுகின்றன. நமது தானிய வகைகள்எந்தக் காட்டுச் செடிகளிலிருந்து தோன்றினவோ, அவை பயனற்றவகையில் இன்னும் கூடத் தேடப்பட்டு வருகின்றன. மிகவித்தியாசப்பட்ட வளர்ப்பினங்களைச் சேர்ந்த நமது நாய்கள் அல்லதுஇவற்றிற்குச் சமமான எண்ணிக்கையுள்ள வளர்ப்பினங்களைச் சேர்ந்தகுதிரைகள் எந்தக் காட்டு மிருகங்களின் வழிமரபாக வந்தன என்பதைக்குறித்து இன்னும் சர்ச்சை உள்ளது.

முன்கூட்டியே சிந்தித்த, திட்டமிட்ட முறையில் செயல்படமிருகங்களுக்கு உள்ள ஆற்றலைக் குறித்து சர்ச்சை புரிய நமக்குமனதிற்படாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதற்குஎதிர்மாறாக, எங்கெங்கு புரோடோபிளாஸம், உயிருள்ள அல்புமின்நிலை வாழ்ந்து எதிர்ச்செயல் புரிகிறதோ, அதாவது திட்டமான புறநிலைத்தூண்டுகைகளின் விளைவாக மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும்திட்டமான சலனங்களை உண்டாக்கி நிறைவேற்றுகின்றதோ,அங்கெல்லாம் கரு உருவத்தில் திட்டமிட்ட செயல்முறை நிலைவாழ்கிறது. ஒரு நரம்பு அணு இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க ஓர்அணு கூட இன்னும் இல்லாத இடத்தில் கூட இவ்வாறான எதிர்ச்செயல்நிகழ்கிறது. பூச்சிகளை உண்ணும் செடிகள் உளவிழிப்பின்றிச் செய்தாலும்கூட தங்களுடைய இரையைப் பிடிக்கும் முறையில் திட்டமிட்டசெயலின் ஏதோ ஒன்று இருக்கிறது. மிருகங்களில் உளவிழிப்புள்ளதிட்டமிட்ட செயலுக்கான திறன் என்பது அவற்றின் நரம்பு மண்டலஅபிவிருத்தியுடன் தகவுப் பொருத்தம் உடையதாகும்; பாலூட்டிகளில்அது இன்னும் கணிசமான உயர் மட்டத்தை அடைகிறது. இங்கிலாந்தில்நரி வேட்டையின்போது தன்னைத் துரத்துகிறவர்களிடமிருந்துதப்பிக்க ஸ்தலத்தைப் பற்றிய தனது சிறந்த அறிவை நரி எவ்வாறுஒரு பிழையுமின்றி உபயோகிக்கிறது என்பதையும் மோப்பத்தைஇழக்கும்படிச் செய்ய நிலத்தில் உள்ள எல்லாச் சாதகமானஅம்சங்களையும் அது எவ்வளவு நன்கு உணர்ந்து பயன்படுத்துகிறதுஎன்பதையும் ஒருவன் தினசரி கவனிக்க முடியும். மனிதனுடன் உறவுபூண்டதின் புண்ணியத்தால் மிக ஓங்கிய வளர்ச்சி பெற்ற நமது வீட்டுப்பிராணிகளிடையே குழந்தைகளுக்குச் சரி ஈடாக உள்ள சூழ்ச்சித்திறமுள்ள செயல்களை ஒருவன் இடைவிடாமல் கவனிக்கமுடியும்.தாயின் கர்ப்பத்தில் உள்ள மனிதக் கருவின் வளர்ச்சி வரலாறு பலபத்து லட்சம் ஆண்டுகளாக நடந்தேறிய நமது மிருக மூதாதையர்களின்புழுவிலிருந்து தொடங்கிய உடல் பரிணாமத்தின் சுருங்கிய புனர்நிகழ்வேயாம்; இதைப் போலவே, மனிதக் குழந்தையின் உள வளர்ச்சிஅதே மூதாதையர்களின்-குறைந்த பட்சம், பிற்காலத்தவருடைய-அறிவுத் துறை வளர்ச்சியின் இன்னும் கூடுதலான சுருங்கிய புனர்நிகழ்வு மட்டுமேயாகும். ஆனால் எல்லா மிருகங்களின் எல்லாத் திட்டமிட்டசெயல்கள் சேர்ந்தாலும் பூமியின் மீது அவற்றினுடைய மனோசித்தத்தின்முத்திரையை இடுவதில் அவை வெற்றி பெற வில்லை. அதுமனிதனுக்கே விடப்பட்டது.

சுருக்கத்தில், ஒரு மிருகம் தனது சுற்றுச் சார்பைச் சும்மா பயன்படுத்தமட்டுமே செய்கிறது; தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில்மாற்றங்களை உண்டாக்குகிறது; மனிதன் தனது மாற்றங்களால் தனதுகுறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான், அதற்குஎசமானனாகிறான். மனிதனுக்கும் இதர மிருகங்கள் அனைத்திற்கும்உள்ள இறுதியான, சாராம்சமான வித்தியாசம் இதுவே: இந்தவித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு தடவைகுறிப்பிட வேண்டும்.

*

இருந்தபோதிலும் இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளைவைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றிஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொருவெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளைநிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவதுநிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன் களையும்அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதைரத்து செய்துவிடுகின்றன. மெசப்பொடேமியா, கிரீஸ், ஆசியாமைனர், இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களைப்பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன்கூடவே நீர்த் தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும்ஒழித்ததினால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்றநிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை. ஆல்ப்ஸ்மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வட புறச் சரிவுகளில் அவ்வளவுபரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக் காடுகளைத் தென் புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டிப் பயன்படுத்தி விட்டபொழுது, அவ்விதம்செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டி விட்டதின் சூசகத்தையும் கூடக் காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைச் சுனைகளுக்குத்தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப் பற்றியும் மழைக் காலங்களில்கூடுதலான வெள்ளப் பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்குவகை செய்யப்பட்டது என்பதைப் பற்றியுமோ, அந்த அளவு சூசகமும்கூடக் காணவில்லை. ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை யார் பரவவைத்தனரோ, அவர்கள் அந்த மாச்சத்துள்ள கிழங்குகளுடன் அதேசமயத்தில் கண்டமாலை என்ற வியாதியையும் கூடப் பரப்ப ஏதுவாயினர் என்பதை அவர்கள் அறியவில்லை. இவ்வாறாக அயல்நாட்டு மக்கள்மீது வெற்றிவாகை சூடியவனைப் போல, இயற்கைக்குப் புறத்தில்நிற்கும் ஒருவனைப் போல, இயற்கையின் மீது எவ்விதத்திலும் நாம்ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்குப் பதிலாக நமது சதை, ரத்தம்,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில்வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டுஅவற்றைப் பொருந்தியவாறு கடைப்பிடிப்பதில் இதர எல்லாப்பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயேஅதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொருபடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

உள்ளபடியாகவே, கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நாம்இந்த நியதிகளை மேலும் நன்கு புரிந்துகொண்டும் இயற்கையின்பரம்பரையான செல்வழியில் நாம் குறுக்கிடும்போது உண்டாகும் உடனடிவிளைவுகளையும் எதிர்காலத்தில் நிகழும் விளைவுகளையும் புலனாக்கிக்கொண்டும் வருகிறோம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இயற்கைவிஞ்ஞானங்களில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்களுக்குப்பிறகு குறைந்தபட்சம் நமது தினசரி உற்பத்திச் செயல்களின்இயற்கையான எதிர்கால விளைவுகளையும் கூட உணரவும் எனவேஅவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையில் எப்பொழுதையும்விட இன்றுள்ளோம். இது முன்னேற்றம் அடைய அடைய மனிதர்கள்இயற்கையுடன் தங்களுக்குள்ள ஒருமைப்பாட்டை மேலும் மேலும் உணருவது மட்டுமின்றி – ஐரோப்பாவில் பண்டையகிரேக்க – லத்தீன் நாகரிகம் �ணமடைந்த பிறகு தோன்றி கிறிஸ்துவமதத்தில் மிக அதிக நுட்பம் பெற்ற, மனது – பருப்பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆன்மா என்பதையும்வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகிற பொருளற்ற, இயற்கைக்குமுரணான கருத்தானது மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும். உற்பத்தித் துறையில் நமது செயல்களின் கூடுதலான தொலைவிலுள்ளஇயற்கையான பலன்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் ஒருசிறிதைக் கற்றுக்கொள்ள நமக்குப் பல்லாயிரமாண்டுகள் உழைப்புதேவைப்பட்டது; ஆனால் இந்தச் செயல்க ளி ன் கூ டு த ல ா னதொலைவிலுள்ள சமுதாய ரீதியான பலன்களைப் பற்றியது இன்னும்அதிகக் கடினமுள்ளதாக இருக்கிறது. உருளைக் கிழங்கைப் பற்றியும்அதன் பலனாக விளைந்து பரவிய கண்டமாலை வியாதியைப்பற்றியும் மேலே சொன்னோம். ஆனால் உருளைக் கிழங்கு உணவுடன்தொழிலாளிகள் கட்டுப்பட்டுப் போனதால் பல நாடுகளில் பாமரமக்கள் பகுதிகள் அனைத்தின் வாழ்க்கை நிலைமைகளில் நிகழ்ந்தவிளைவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் அல்லது உருளைக்கிழங்கு ஒன்றை மட்டுமே அல்லது கிட்டத்தட்ட அதை மட்டுமேஉணவாகக் கொண்ட ஐரிஷ் மக்களில் பத்து லட்சம் பேரைப் புதைகுழிக்கு அனுப்பியும் அத்துடன் இருபது லட்சம் பேரைக் கடல்கடந்து குடிபெயரவும் செய்த, அயர்லாந்தில் 1847இன் உருளைக்கிழங்கு நோய் நிகழ்த்திய பஞ்சத்துடன் ஒப்பு நோக்கினாலும்கண்ட மாலை என்பது எந்த மூலைக்கு? மதுபானங்களை வடிக்கஅராபியர்கள் கற்றுக் கொண்ட போது, அவ்விதம் செய்ததின் மூலம்அவர்கள் அப்பொழுது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தஅமெரிக்கக் கண்டத்தின் பூர்வீகக் குடிகளைக் களைந்தெறிவதற்கானபிரதான கருவிகளில் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொண்டிருப்பதாகஅவர்கள் மூளையில் கிஞ்சிற்றும் தோன்றவில்லை. அதன் பின்னர்அந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தபொழுது, அவ்வாறுசெய்ததின் மூலம் ஐரோப்பாவில் என்றோ ஒழிக்கப்பட்டுப் போனஅடிமைத்தனத்துக்குப் புத்துயிரளிப்பதாகவும் நீக்ரோ அடிமைவர்த்தகத்திற்கு அடிகோலுவதாகவும் அவர் அறியவே இல்லை.பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் நீராவி எஞ்சினைப்படைக்க உழைத்த மனிதர்களுக்கு, உலகம் முழுவதிலும் வேறு எதைக்காட்டிலும் சமூக உறவுகளைப் புரட்சிகரமாக்குகிற ஒரு சாதனத்தைஅவர்கள் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணமேஇல்லை; விசேஷமாக ஐரோப்பாவில் ஒரு சிறுபான்மையோர் கையில்செல்வத்தைக் குவித்தும், பெரும்பான்மையோரின் உடைமைகளைப்பறித்தும் இந்தச் சாதனம் முதலில் முதலாளி வர்க்கத்திற்குச் சமூக,அரசியல் மேலாதிக்கத்தை அளிப்பதையும் ஆனால் பிற்பாடுமுதலாளி வர்க்கம் துக்கியெறியப்படுவதிலும் எல்லாவித வர்க்கப்பகைமைகளும் ஒழிக்கப்படுவதிலும் மாத்திரமே முடிவு பெறக் கூடிய,முதலாளி, பாட்டாளி வர்க்கங்களிடையில் வர்க்கப் போராட்டத்தைத்தோற்றுவிப்பதையும் தனது விதியாகக் கொண்டிருந்தது. ஆனால்இந்தத் துறையிலும் கூட நீண்ட, அடிக்கடி குரூரத் தன்மை வாய்ந்தஅனுபவத்தின் மூலமாகவும் வரலாற்று விஷயாதாரங்களை சேகரித்துப்பகுப்பாய்வு நடத்தியதின் மூலமாகவும் நமது உற்பத்திச் செயல்களின்மறைமுகமான, மேலும் தொலைவிலுள்ள சமூக விளைபயன்களைப்பற்றித் தெளிவானதொரு கண்ணோட்டம் பெற நாம் படிப்படியாகக்கற்று வருகிறோம்; எனவே இந்த விளைபயன்களையும் கட்டுப்படுத்திமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.

எனினும் இவ்வாறு முறைப்படுத்தல் என்பதற்கு வெறும் அறிவுமட்டும் போதாது; ஏதோ ஒன்று அதிகமாகவும் தேவையாகிறது. இன்றுவரை நிலைப்பிலுள்ள நமது உற்பத்தி முறையில் ஒரு முழுப் புரட்சியும்,அதே சமயத்தில் நமது இன்றைய சமூக அமைப்பு முழுவதிலும் ஒருபுரட்சியும் தேவைப்படுகின்றன.

இதுவரை நிலைப்பிலிருந்து வரும் எல்லா உற்பத்தி முறைகளும்உழைப்பினுடைய மிக அடுத்த, நேரடியான பயன் அளிக்கிற விளைவைப்பெறுவதை மட்டுமே வெறும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. பிற்பாடு மட்டுமே வெளிப்படுகிற, படிப்படியாகத் திரும்பத் திரும்பச்செய்யப்படுவதாலும் திரட்சி பெறுவதினாலும் மட்டுமே பயன்தருகின்ற மேலும் கூடி வரும் விளைவுகள் பூரணமாகவே உதாசீனம்செய்யப்பட்டன. முதலாக இருந்த நிலப் பொது உடைமை, ஒருபுறம், உடனடியாகக் கிட்டக்கூடியதுடன் மட்டுமே பொதுவாகவரையறுக்கப்பட்ட அறிவு வரம்பு பெற்ற மனிதகுல வளர்ச்சிமட்டத்துக்கு ஒத்திசைந்திருந்தது; மற்றொரு புறம், அது இந்தப்பூர்வீகத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் சாத்தியப்பாடுள்ள தீயவிளைவுகளை நேர் செய்ய இடமளிக்கிற நிலத்தின் ஓர் உபரியைமுன்னூகம் செய்து கொண்டது. இந்த உபரி நிலம் தீர்ந்த பிறகுபொதுவான உடைமை என்பதும் நசித்தது. இருந்தாலும் உற்பத்தியின்உயர் வடிவங்கள் அனைத்தும் மக்கள்தொகை பல்வேறு வர்க்கங்களாகப்பிரிக்கப்படுவதற்கும் அதன் மூலம் ஆளும் வர்க்கம், ஒடுக்கப்படுகிறவர்க்கம் இவற்றிடையே பகைமை தோன்றுவதற்கும் இட்டுச் சென்றன.இவ்வாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களே உற்பத்தியை முன்னோக்கிநடத்திச் செல்லும் காரணியாக அமைந்தன; ஏனெனில் ஒடுக்கப்பட்டமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களை அளிப்பதுடன்உற்பத்தி கட்டுப்பட்டு விடவில்லை. மேற்கு ஐரோப்பாவில் ஓங்கிப்பரவியுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் இது முழுக்க முழுக்கஅமுலாக்கப்பட்டுள்ளது. உற்பத்தியிலும் பரிவர்த் தனையிலும்மேலாதிக்கம் கொண்டுள்ள தனிப்பட்ட முதலாளிகள் தங்களுடையசெயல்களின் மிக உடனடியான பிரயோசனமுள்ள பலன்களைப் பற்றிமட்டுமே கவலைப்பட முடிகிறவர்களாக உள்ளனர். உண்மையில்இந்தப் பிரயோசனமுள்ள பலன் என்பதும் கூட-உற்பத்தி செய்யப்படுகிறஅல்லது பரிவர்த்தனைக்குட்படுகிற பண்டத்தின் பிரயோ சனம் என்பதேபிரச்சனையாக இருப்பதால் – பின்னணிக்குள் வெகு தூரம் பின்வாங்கிப்போய், விற்பனையினால் கிடைக்கும் லாபம் மட்டும் ஒரே உந்தும்சக்தியாகிவிடுகிறது.

முதலாளி வர்க்கத்தின் சமூகவியலான, மூலச் சிறப்புள்ள அரசியல்பொருளாதாரம் உற்பத்தி, பரிவர்த்தனை ஆகிய துறைகளில்உண்மையாகவே குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகின்ற மனிதச்செயல்களின் சமூக விளைவுகளை மட்டுமே பிரதானமாக ஆராய்கிறது.சமூக அமைப்பின் தத்துவார்த்த வெளியீடாக உள்ள அத்துடன் இதுமுழு ஒத்திசைவு உள்ளதாகவே இருக்கிறது. தனிப்பட்ட முதலாளிகள்உடனடியான லாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும்ஈடுபட்டிருப்பதால் முதலில் மிக நெருங்கிய, மிக அடுத்துள்ளவிளைவுகள் மட்டுமே கணக்கிலெடுக்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்டஉற்பத்தியாளன் அல்லது வியாபாரி உற்பத்தி செய்த அல்லது விலைக்குவாங்கப்பட்டசரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்கும் வரை அவன் அத்துடன் திருப்தியடைகிறான்; அதன் பிறகு அந்தச்சரக்கிற்கோ அல்லது அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறதுஎன்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை. அதேசெயல்களின் இயற்கை விளைபயன்களுக்கும் இதுவே பொருத்தமாகஉள்ளது. கியூபாவில் மலைச் சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக்கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காப்பிச் செடிகளின் ஒருதலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்தச் சாம்பலிலிருந்து பெறஸ்பானிய காப்பித் தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள்-வெப்பப் பிரதேசத்துக் கன மழை பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவமண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும்மொட்டையாக விட்டுச் சென்றது என்பதைப் பற்றித்தான் அவர்கள்என்ன கவலைப்பட்டார்கள்! சமூகத்தைப் போலவே இயற்கைசம்பந்தமாகவும் கூட இக்காலத்திய உற்பத்தி முறை உடனடியான, மிகஉருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறைகொண்டுள்ளது; பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ளசெயல்களின் எதிர்கால விளைவுகள் மிக வேறுபட்டவையாக, இயல்பில்பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன என்றும்தொழில்துறையின் பத்தாண்டு கால சக்கரவட்டச் செல்வழி காட்டியதுபோல அளிப்புக்கும் தேவைக்கும் இருந்த நல்லிணக்கம் நேர் எதிரானதாக-“வீழ்ச்சியில்” *ஜெர்மனியும் கூட சிறிது பூர்வாங்க அனுபவத்தை அதைக்குறித்து பெற்றது-மாறி விடுகிறது என்றும் தன் சொந்த உழைப்பைஅடிப்படையாகக் கொண்டுள்ள தனி உடைமை அத்தியாவசியமாகவேஉழைப்பாளிகளின் உடைமை கவரப்பட்டு வெளியேற்றப்படுவதாகவளர்ந்து உழைப்பாளிகளல்லாதவர் கைகளில் மேன்மேலும் செல்வம்குவிக்கப்படுகிறது என்றும் மேலும் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது….**

1876 இல் பி. எங்கெல்சினால்எழுதப்பட்டது…

  • இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய
    பிறவியாக, மணிதனாக எப்படி மாறியது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரை அநேகமாக 1876 ஜூனில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
  • இங்கு கையெழுத்துப் பிரதி துண்டாக நின்றுவிடுகிறது.-ப.ர்,

எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் !

ரகுராம் நாராயணன்

(ஜெர்மனியின் ரைன் பகுதியிலும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியிலும் செயல்பட்டு வந்த பருத்தி ஆலைகளின் உரிமையாளரான பிரெடெரிக் எங்கெல்ஸ் (சீனியர்) –  அவரது மனைவி எலிசபெத் பிரான்சிஸ்கா மெளரிஷியா தம்பதியினருக்கு நவம்பர் 28, 1820 ஆண்டு பிறந்தார் பிரெடெரிக் எங்கெல்ஸ். அவர் பிறந்த 200 வது ஆண்டு நவம்பர் 28, 2019 தொடங்குகிறது. இந்தக் கட்டுரை கார்ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இடையிலான அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் மிக முக்கியமான படைப்புகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு கவனப்படுத்துகிறது – ஆசிரியர் குழு)

துடிப்புமிக்க இளைஞராக இருந்த பிரெடெரிக் எங்கெல்ஸ், தனது புரட்சித் தோழன் கார்ல் மார்க்சுடன் பழகுவதற்கு முன்னரே (அக்டோபர் 1842) மார்க்ஸ் ஆசிரியராக இயங்கிய ரைனிஸ் ஜைதுங் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். “உள்நெருக்கடிகள் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை”, “உள் நெருக்கடிகள்”, “இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை” மற்றும் “கார்ன் விதிகள்” போன்றவை அவரின் முக்கியமான கட்டுரைகளாகும். இங்கிலாந்தின் சமூக அமைப்பையும், வெவ்வேறு வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையேயான சமூக உறவுகளையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அக்கட்டுரைகளை அவர் எழுதினார்.

இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்க இயக்கமான “சார்டிஸ்டு இயக்கத்தை” அவர் ஆர்வமுடன் நோக்கினார். அந்த இயக்கத்தின் பாட்டாளிகளைச் சந்தித்தார். அதே சமயம் “சட்டரீதியான புரட்சி என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று” என மிகச் சரியான விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார்.

அவர் எழுத்தராகப் பணிபுரிந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த மேரி பர்ன்ஸ் என்பவரை மணம் புரிந்தார். அவரோடு இணைந்து மான்செஸ்டர் நகரில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்.

சோசலிச, கம்யூனிச இயக்கங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஆங்கிலேய சோசலிஸ்டுகளின் பத்திரிக்கையான “நியூ மாரல் வேல்டிற்க்காக எழுதிய கட்டுரையில் “ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலான நாடுகள் அனைத்திலும் பொதுச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பைப் புரட்சியின் மூலம் உருவாக்குவது தவிர்க்கமுடியாததாகவும், அவசியமானதாகவும் உள்ளது” என முன்வைத்தார். அதேசமயம் அவர் கற்பனாவாத கம்யூனிசத்தை ஏற்கவில்லை.

மார்க்ஸ்–எங்கெல்ஸ் சந்திப்பு:

கார்ல் மார்க்சும் ரூகேவும் இணைந்து நிறுவிய டச்சு-பிரன்சு ஆண்டறிக்கை என்ற பத்திரிக்கையில் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் வரையறுப்பு என்ற கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை மார்க்சும், எங்கெல்சும் இணைந்து பணிபுரியவும், விவாதிக்கவும் உதவியாக அமைந்தது. 1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியிலிருந்து மான்செஸ்டர் நகருக்குச் செல்லும் வழியில் பாரிஸ் நகரில் எங்கெல்ஸ், மார்க்சை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மார்க்சுடன் சுமார் 10 நாட்கள் தங்கியிருந்தார். மார்க்சுடனான இச்சந்திப்பைப்பற்றி “1844 இல் பாரீஸ் நகரில் மார்க்சை சந்தித்தபோது தத்துவார்த்த தளத்தில் அவருடன் இணைந்து இயங்குவது என்ற முடிவை இருவரும் எட்டினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே காலகட்டத்தில் ஹெகலின் மாணவர்களான ப்ருனோ பவுர்(Bruno Bauer) உள்ளிட்டவர்களுக்கு எதிரான தத்துவச் சமருக்கு கார்ல் மார்க்ஸ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.1844ஆம் ஆண்டில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம்” என்ற நூலை எழுதினார்கள். 1845இல் வெளியான இந்நூலே அவர்கள் இருவரும் பொறுப்புகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய முதல் நூல் ஆகும்.

1844 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பர்மன் நகருக்குத் திரும்பிய எங்கெல்ஸ் கம்யூனிஸம் மற்றும் சோசலிஸத்திற்கு ஆதரவாக பர்மன் மற்றும் எல்பேர்பில்த் நகரங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்றார். பிப். 8 நடைபெற்ற முதல் கூட்டத்தில் சுமார் 40 நபர்கள் பங்கேற்றனர். பிப். 15, இரண்டாவது கூட்டத்தில் 130 பேரும், 22 ஆம் தேதி கூட்டத்தில் சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.  எங்கெல்ஸ் தனது சொற்பொழிவில் முதலாளித்துவத்தால் நேர்ந்த, நேர்ந்து கொண்டிருக்கின்ற, நேரஇருக்கின்ற பல இன்னல்களை விரிவாக விளக்கியிருந்தார். சுருக்கமாக “தாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காகபொதுநலம்என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது, சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள்உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்தது” எனக் கடுமையாகச் சாடினார்.

பாட்டாளி வர்க்கம் பற்றிய ஆய்வு:

நவம்பர் 19, 1844 இல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்சின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் நிலையைப் பற்றி மார்க்சுக்கு தெரியப்படுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் நிலையை எழுதும்போது எங்கெல்ஸின்வயது 24 மட்டுமே. தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தம் பற்றிப் பேசிய முதல் கம்யூனிஸ்டு எங்கெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்காக தயார்ப்படுத்துகிற ஒரு இராணுவப் பள்ளி என்றும், அப்பெரும் போராட்டத்தை ஒருவராலும், ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது என்றும், உழைக்கும் மக்கள் யாவரையும் ஒரே இயக்கமாக இணைக்கும் பாலமே பொதுவேலைநிறுத்தம்” எனக் கூறியுள்ளார்.

1845 ஆம் ஆண்டில் பாரிஸிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்கு மார்க்ஸ் குடிபெயர்ந்தார். தன்னுடைய பதிப்பாளர் உடனான ஒப்பந்தத்தின்படி “அரசியல் மீதான விமர்சனம் (Critique of Politics)” மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் இரண்டு தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை மிக விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். இவ்விரு தொகுதிகளை முடிக்கவேண்டுமெனில் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. மார்க்சின் ஆங்கிலப் புலமை சற்று குறைவு. ஆகையால் எங்கெல்சையும் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.

ஜூலை 12, 1845லிருந்து ஆகஸ்ட் 21 ஆம்தேதி வரை மான்செஸ்டர் நகரில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற நூலகமான சாத்தம்(Chatham) நூலகத்தில் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பலவற்றை இருவரும் வாசித்தனர். இருவரும் சார்டிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் லீக் ஆப் ஜஸ்ட்-ன் தலைவர்கள் பலரைச் சந்தித்தனர். சார்டிஸ்ட் இயக்கக் குழுஉறுப்பினர்களையும், அவ்வியக்கத்தின் இடதுசாரி உறுப்பினர்களையும் சந்தித்தனர். ஆகஸ்ட் மாத மத்தியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஜனநாயக வாதிகளின் கூட்டத்தில் மார்க்சும், எங்கெல்சும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில் “சகோதர ஜனநாயக வாதிகள் (Fraternal Democrats)” என்னும் ஒரு குழு தோற்றுவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் எங்கெல்ஸ் “வெவ்வேறு தேசங்களில் நிலவுகின்ற அநீதிக்கும், தேசியவாதத்திற்கும் எதிரானதாகவும், மனித நேயத்திற்கு ஆதரவாகவும் பாட்டாளி  வர்க்கம் வளர்ந்து வருகின்றது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே தேசிய வாதத்தை அழித்தொழித்து, தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் நட்புறவையும் வென்றெடுக்க இயலும்” என முதல்முறையாக “சர்வதேசியம்” வேண்டி அறைகூவல் விடுத்தார்.

விஞ்ஞான கம்யூனிசத்தின் பிறப்பு:

1845 ஆம் ஆண்டு ஹெகலின் தத்துவார்த்தங்களை விமர்சிக்கும் விதத்திலும், அதே ஆண்டு வெளிவந்த பயர்பாக்கின் கட்டுரைகளை விமர்சிக்கும் விதத்திலும் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து மிகப்பெரிய தத்துவார்த்த போரில் ஈடுபடத் துவங்கினர். இத்தத்துவார்த்த போரின் இறுதிவடிவமே உலக கம்யூனிச வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “ஜெர்மானிய சித்தாந்தம்(German Ideology)”ஆகும்.

ஜெர்மன் சித்தாந்தத்தில் இருவரும் முதலாளித்துவ அமைப்பில் அரசு என்பது சுதந்திரமாகத் தனித்துச் செயல்படுகிறது என்று நிலவிவந்த மாயையைத் தகர்த்தெறிந்துள்ளனர். மேலும் தற்போது நிறுவப்பட்டுள்ள அரசு என்பது “முதலாளிகளின் சொத்துகளைப் பாதுகாக்கவும், அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான அனைத்து நிபந்தனைகளைக் கொண்ட அமைப்பு” என அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளனர். மேலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கம் பெருந்திரளான மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆளும் வர்க்க கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதாவது ஆளும் வர்க்கம், சமூகத்திலிருந்த உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அதேநேரத்தில் தத்துவார்த்தக் கோட்பாடுகளையும், அறிவார்ந்த கோட்பாடுகளையும் தனக்குக் கீழ் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது.

ஜெர்மன் சித்தாந்தத்தில் மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிச சித்தாந்தத்தை “கற்பனாவாத கம்யூனிசம்” என்னும் நிலையிலிருந்து “விஞ்ஞான கம்யூனிசம்” என்னும் உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அக்காலகட்டத்தில் ஸ்டிர்னர் என்பவர் “கம்யூனிச சமூகத்தில் தனியுடைமை சொத்து அழித்தொழிக்கப்படுவதால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் அழிக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு தனிமனிதர்களும் சமூகத்தின் அடிமையாகும் அபாயம் உள்ளது” எனக் குற்றம் சாட்டிப் பல இடங்களில் கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சும், எங்கெல்சும் “தனியுடைமை சொத்து என்பது முதலாளித்துவ அமைப்பில் பின்பற்றப்படும் தனிமனிதத்துவத்துக்கான அடிப்படைக் கூறாகும். முதலாளித்துவ அமைப்பு சொத்து ஏதுமில்லாத பெருவாரியான மக்களின் தனித்தன்மையை சூறையாடுகின்றது. அவ்வாறு சூறையாடப்பட்ட பாட்டாளி மற்றும் ஏழை, எளிய மக்களின் தனித்தன்மையை முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க இயலும்” என ஜெர்மன் சித்தாந்தத்தில் விவரித்துள்ளனர்.

“சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றுரீதியான அணுகுமுறைகளை அளித்ததோடு, ஒவ்வொரு சகாப்தத்திலும் நிலவியிருந்த ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக உறவு முறைகளுக்குத் தகுந்தாற் போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் குழு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தைப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்தனர். சமூக உறவு முறையின் மிகவும் உச்சகட்ட வளர்ச்சியான கம்யூனிச சமூகத்தில் மட்டுமே, மனித குலம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்.” என இருவரும் வாதிட்டனர்.

இடைவிடாத விமர்சனத்துக்குள்ளான இப்படைப்பை கையெழுத்துப் பிரதி வடிவத்திலேயே நாங்கள் பல காலம் வைத்திருந்தோம் என 1859 ஆம் ஆண்டு மார்க்ஸ் வேடிக்கையாகக் கூறியிருந்தார். இவ்வரிய நூலின் முதற்பதிப்பு சோவியத் ஒன்றியத்தில் 1933 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் லீக் உருவானது:

மார்க்சும், எங்கெல்சும் “லீக் ஆப் ஜஸ்ட்” அமைப்பில் இணைந்தபிறகு சங்கத்தின் முதல் மாநாடு ஜூன் 2 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு லண்டன் நகரில் துவங்கியது. பாரிஸ் கமிட்டியின் பிரதிநிதியாக எங்கெல்சும், பிரஸ்ஸல்ஸ் கமிட்டியின் பிரதிநிதியாக வில்ஹம் வொல்ஃப் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மார்க்ஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் அந்த அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாற்றம் செய்யப்பட்டது. சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்த “அனைவரும் சகோதரர்களே” என்பது “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என பிரகடனம் செய்யப்பட்டது. இம்மாநாடு கம்யூனிஸ்டுகளின் பொதுவேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு எங்கல்சிடம் கேட்டுக்கொண்டது. வினா-விடை வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of Communism)” எனும் சிறு புத்தகத்தை இதனை ஒட்டியே எங்கெல்ஸ் எழுதினார்.

கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது மாநாடு அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி துவங்கியது. இம்மாநாட்டில் மார்க்சும் கலந்து கொண்டார். பின்னாளில் இம்மாநாட்டை மார்க்ஸ் “முதல் அகிலம்” எனக் கூறினார். பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும் கம்யூனிஸ்டுகளுக்கான “பொது வேலைத்திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு மார்க்சையும் எங்கல்சையும் கேட்டுக் கொண்டனர்.

முதல் அகிலம் முடிவடைந்தபிறகு எங்கெல்ஸ் பாரிஸ் நகருக்கும் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகருக்கும் திரும்பினர். 1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் பொது வேலைத்திட்டத்தை அவர்கள் எழுதி முடித்தார்கள். இதற்கு “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” எனப் பெயரிட்டனர்.

கிளர்ச்சிப் போராட்டக் களத்தில்:

1848 முதல் 1849 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் இருவரது வாழ்வும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. பிப்ரவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை குடியரசு வேண்டி மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து பாரிஸ் நகரத் தொழிலாளர்கள், பிரான்சு நாட்டில் நடைபெற்று வந்த லூயிஸ் பிலிப்பேயின் ஏகாதிபத்திய முடியாட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே காலகட்டத்தில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா எனப் பல நாடுகளில் குடியரசு வேண்டி பல எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. பெல்ஜியத்திலும் ஜனநாயக வாதிகள் பலர் குடியரசு வேண்டி கிளர்ச்சிப் போராட்டங்களைத் துவங்கினர்.

கம்யூனிஸ்ட் லீகின் பிரஸ்ஸல்ஸ் குழு தினமும் கூடி கிளர்ச்சிப் போராட்டங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கக் கமிட்டி மிக விரிவான இயக்கத்தை ஆரம்பிக்கவும், முனிசிபல் கமிட்டியின் கவுன்சில்கள் ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவற்றில் பூர்சுவா சிவில் படையுடன் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரவும் தீர்மானித்தது. ஜனநாயக சங்கமே நேரடியாகத் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கத் தொடங்கியது. இதற்குச் சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் மார்க்சிற்கு அவருடைய தகப்பனாருடைய சொத்துக்களிலிருந்து பங்குத்தொகையாக பணம் கிடைத்தது. அதிலிருந்து கணிசமான அளவு தொகையை தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்க அவர் செலவிட்டார்.

1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மார்க்சும், எங்கெல்சும் அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள் தாய்நாடு திரும்பியதோடு, சொந்தமாக பத்திரிக்கையொன்றை துவக்க முடிவு செய்து ரைனிஷ் ஜைதுன் பத்திரிக்கையை புதிப்பித்து புதிய ரைனிஷ் ஜைதுங் எனும் பெயரில் வெளியிட்டனர்.

எங்கெல்ஸ் இப்பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதியது மட்டுமின்றி, பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். மார்க்ஸ் “எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியம், இரவு-பகல் பாராமல் மிகவும் களிப்பாகத் தன் பணியைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை பெற்றவர்” என புகழ்ந்துள்ளார் கார்ல் மார்க்ஸ். தெற்கு ஜெர்மனியில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்திலிருந்த சமயத்தில் மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளிகளை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். எல்பேர் பில்த் செல்லும் வழியில் சுமார் 400 உழைப்பாளிகளைக் கொண்ட கிளர்ச்சிப் படையொன்றை மே 10, 1849 ஆம் தேதி சொளிங்கேன் எனும் ஊரில் உருவாக்கினர். இக்கிளர்ச்சிப் படையுடன் எல்பேர் பில்த் நகரில் உள்ள பாலம் ஒன்றை அடையும்போது தேவாலயம் சென்று கொண்டிருந்த தனது தந்தையை சந்தித்தார் எங்கெல்ஸ். ஆங்காங்கே நடைபெற்று வந்த கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்ற எங்கெல்சை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்கிளர்ச்சிப் போராட்டங்களுக்கிடையில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து நடத்தி வந்த பத்திரிக்கையின் இறுதிப்பதிப்பைக் குறிக்கும் விதத்தில் “சிகப்பு நிறத்தில்” மே 19, 1849 ஆம்தேதி வெளியிட்டனர்.

1851 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது. மார்க்ஸ் முதலில் பாரிஸ் நகருக்கும் பிறகு லண்டன் நகருக்கும் இடம்பெயர வேண்டியதாயிற்று. பிரஷ்ய அரசு மார்க்சுக்கு குடியுரிமை தர மறுத்துவிட்டது.

தந்தையின் ஆலையில் எங்கெல்ஸ்:

எங்கெல்ஸ் இரு காரணங்களுக்காகவே மான்செஸ்டர் நகரில் உள்ள தனது தந்தை பங்குதாரராகவுள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்சின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி அளிக்கவும், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பரவிவந்த கிளர்ச்சிகளை ஐரோப்பிய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பின், புரட்சியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்த புரட்சிப் போராட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்வதற்குக் காலஅவகாசம் தேவைப்படுகிறது என்பதை மனதில் கொண்டும் அவர் இதைச் செய்தார். 1850 முதல் 1869 ஜூலை வரை பணியாற்றினார்.

மார்க்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டெய்லி எனும் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அப்போது ஆங்கிலத்தில் குறைந்த புலமையுடையவராக இருந்த மார்க்ஸ் எங்கெல்சின் உதவியை நாடினார். மார்க்சின் கட்டுரைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் எங்கெல்ஸ். பின்னர் அதே பத்திரிக்கைக்கு மார்க்சின் பெயரிலேயே எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

எங்கெல்ஸ் “துருக்கி நாட்டின் உண்மையான பிரச்சினை”, “துருக்கியின் பிரச்சினைகள் (The Turkish Question)” மற்றும் “ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி என்னவாகவுள்ளது? (What is to Become of Turkey in Europe?)” போன்ற கட்டுரைகளில் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய பேரரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் துருக்கி நாட்டின் உள்விவகாரங்களில் ஈடுபட்டு வருவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஐரோப்பியப் பேரரசுகளின் தலையீட்டால் தனிநாடு பெற்றிராத ஸ்லாவோனிய இன மக்களின் விடுதலையை நசுக்கிய துருக்கி அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். இக்கட்டுரைகளின் வாயிலாக எங்கெல்ஸ் இன விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இச்சமூகம் மற்றும் உலக வரலாற்றின் தனது புரிதலிலிருந்து எதிர்காலத்தில் வரஇருந்த புரட்சி இயக்கங்களையும் அவர் யூகித்திருந்தார். “ஐரோப்பியக் கண்டத்தில் ஏற்பட்ட புரட்சிகர அடையாளங்கள் 1789 ஆம் ஆண்டு முதல் நிதானமாக முன்னேறியிருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளின் அரணாக வார்சா (Warsaw), தெப்ரஜின் (Debreczin) மற்றும் புச்சறேஸ்ட் (Bucharest) ஆகிய இடங்கள் இருந்தன. அடுத்த கட்ட முன்னேற்றமடைந்த புரட்சி பீட்டர்ஸ்பர்க் (Petersburg) மற்றும் கோன்ச்டண்டி நோப்லே (Constantinople) ஆகிய இடங்களாக இருக்க வேண்டும்” என அவர் கணித்திருந்தார். எங்கெல்சின் இக்கணிப்பை தோழர் லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி உண்மையென நிரூபித்துக் காட்டியது.

இந்தியாவைக் குறித்து எங்கெல்ஸ்:

1856 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அன்றைய உலகின் பேரரசுகள் அனைத்தும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் காலனி நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சக்திகளின் காலனி வெறியை நுட்பமாகக் கவனித்து அவர்களின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தார் ஏங்கெல்ஸ். காலனி நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களைக் கவனிக்கத் தவறவில்லை. இதுபற்றிய கட்டுரை ஒன்றில் “பொருளாதாரம், இராணுவம் மற்றும் பொதுப்பணித் துறையென மூன்று துறைகளை மட்டுமே கொண்டிருந்த கீழை நாடுகளில் முதல் இரண்டு துறைகளும் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. மேலும் பொதுப்பணித் துறையைக் கைவிட்டதோடு கீழை நாடுகளின் முக்கிய தொழிலான விவசாயத்தை முற்றிலுமாக அழித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்சின் காலனி ஆதிக்கம் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் பின்னாளில் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” எனும் புகழ்பெற்ற நூல் ஒன்றை எழுதினார். தேசிய எழுச்சியில் ஆர்வம் கொண்ட எங்கெல்ஸ் இந்தியாவில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய்கள் எழுச்சி, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்கள் கலகம் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் “டெல்லியைக் கைப்பற்றுதல் (The Capture of Delhi)”, “லக்னோவின் விடுதலை (The Relief of Lucknow)”, “வின்தமின் தோல்வி(The Defeat of Windham)” மற்றும் “இந்தியாவில் கிளர்ச்சி (The Revolt in India)” போன்றவை முக்கியமான கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் உதவியுடன், பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்சிய மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையுடன் தொடர்கட்டுரைகளைத் தோழர் இ.எம்.எஸ். எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிப்பாய்க் கலகத்தைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளில் ஒன்றில் “கலகத்தை ஒடுக்கியபின் இந்தியாவின் பெரும்பகுதிகளை பிடிக்கத் தொடங்கிய இங்கிலாந்து அரசு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்தை இந்திய மக்கள் முன்பை காட்டிலும் அதிகமாகவே வெறுத்தனர்” எங்கெல்சின் இக்கூற்றை இந்திய விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் காட்டியது.

தொடர் எழுத்தும், இயக்கப் பணியும்:

மனிதவியலாளர் (anthropologist) எங்கெல்ஸ் அவர்கள் அறிவியலையும் விட்டுவைக்கவில்லை. அறிவியலின் உட்பிரிவுகளான இயற்பியல், உடல் உட்கூறு அமைப்பியல், கரிமவேதியியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் கற்கத் துவங்கினார். மேலும் மத்தியாஸ் ஸ்ஹெளேய்டன் (Matthias Scheleiden) அவர்களின் செல் பற்றிய கண்டுபிடிப்புகளிலும், தியோடர் ஸ்வான் அவர்களின் ஆற்றல் பரிமாற்ற விதிகளிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவ முறை பிறந்த சில ஆண்டுகளிலேயே குறிப்பாக 1857 ஆம் ஆண்டு ஐரோப்பியக் கண்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படத் துவங்கியது. இப்பொருளாதார நெருக்கடியால் மேலும் உத்வேகமடைந்த எங்கெல்ஸ் “பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகே கம்யூனிச மற்றும் சோசலிச புரட்சி இச்சமூகத்தில் சாத்தியப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். கட்டுரைகள் பல எழுதிவந்த எங்கெல்ஸ் பிரசுரங்கள் எழுதவும் துவங்கியிருந்த அத்தருணங்களில் “Po and the Rhine” எனும் தலைப்பில் மூன்றாவது நெப்போலியனின் அரசியல் நடவடிக்கைகளை விவரிக்கும் விதத்தில் பிரசுரத்தைப் பெயரின்றி ஜெர்மனியில் வெளியிட்டார். ஜெர்மானிய பாட்டாளிகளுடனான தங்களது உறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக மார்க்சும் எங்கெல்சும் தாஸ் வொலக்(Das Volk) எனும் ஜெர்மானியப் பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினர்.

1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கெல்சின் தந்தை காலமானார். அவர் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே  எங்கெல்சால் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிந்தது. அவரது தந்தையின் சொத்துக்கள் பங்குபிரித்தபோது மான்செஸ்டர் நகரில் உள்ள எர்மென் மற்றும் எங்கெல்ஸ் நிறுவனத்தில் 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பங்குகள் எங்கெல்சுக்கு கிடைத்தது. அவருடைய தந்தையாரின் மரணம் எங்கெல்சை பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 1863 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி எங்கெல்சின் மனைவி மேரி பர்ன்ஸ் காலமானார்.

சுமார் 19 ஆண்டுகள் தான் பணியாற்றிவந்த நிறுவனத்திலிருந்து 1869 ஆம் ஆண்டு சூன் 30ஆம் தேதி எங்கெல்ஸ் ஓய்வு பெற்றார். மார்க்சின் மகள் எலீனார், எங்கெல்ஸ் ஓய்வுபெற்ற தினத்தை இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார். “அன்றைய தினம் நான் ஜெனரல் எங்கல்சுடன் இருந்தேன். சுமார் 19 ஆண்டுகள் அவர் அடைந்த வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அன்று வெகுசீக்கிரமாகவே அலுவலகம் சென்ற எங்கெல்சின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். சில மணி நேரத்திற்குப் பிறகு தன் கைத்தடியைக் காற்றில் சுழற்றியவாறு முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க, பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டே  அவர் வந்தார். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திராட்சை ஒயினை அருந்தி அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு எங்கெல்ஸ் தன்னை முழுவதுமாகப் பாட்டாளி வர்க்க இயக்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1867 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசிய பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முடிவுகளின்படி 1869 மற்றும் 1870 ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டின் வரலாற்றையும், பல நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இதர நாடுகளைப் பற்றியும் வாசிக்கத் துவங்கினார். இத்தகைய காலகட்டங்களில் அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட புரட்சி இயக்கங்களுக்கு ஆதரவாளராகவிருந்த தனது முதல் மனைவி மேரி பர்ன்ஸின் சகோதரி லிஸ்ஜி பர்ன்ஸை மணந்துகொண்டார். “பண்டைய அயர்லாந்து” எனும் தலைப்பில் இரண்டாவது அத்தியாயத்தை எழுதத் துவங்கியபோது 1870 மற்றும் 1871 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பிரான்கோ-பிரஷ்யா போர் பற்றி எழுதுமாறு பாரீஸ் கம்யூன் எங்கெல்சை கேட்டுக் கொண்டது.

1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த எங்கெல்ஸ் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகிலேயே வசித்தார். லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த நாள்முதல் இருவரும் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பாரீஸ் நகரத்தில் பாட்டாளிகளின் கிளர்ச்சி:

1871 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பாரீஸ் நகர உழைப்பாளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவங்கினார்கள். இக்கிளர்ச்சிப் போராட்டத்திற்கு சில காலம் முன்னரே சர்வதேச ஜெனரல் கவுன்சிலின் உறுப்பினரான எங்கெல்ஸ், பாரீஸ் நகரில் துவங்கிய புரட்சிப் போராட்டங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இதைத் தொடர்ந்து மார்க்சுக்கு எழுதிய கடிதமொன்றில் “பாரீஸ் நகரில் ஆயுதமேந்தி போராடத் துவங்கியுள்ள பாட்டாளி மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரு அமைதியான சூழல் திரும்பும்வரை அனைத்துப் பாட்டாளிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜெர்மன் படைகளிடமிருந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவிடாதவாறு காக்க வேண்டும். இல்லையெனில் கிளர்ந்தெழுந்துள்ள பாட்டாளி வர்க்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அவலநிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடும்” எனக் கூறினார்.

1871, செப்டம்பர் 17 ஆம் தேதி லண்டன் நகரில் துவங்கிய மாநாட்டில் புரட்சி பற்றி உரையாற்றிய எங்கெல்ஸ் “புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாய கடமையாகும். பாட்டாளி வர்க்கத்திற்கான நமது அரசியலில் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவ கட்சிகளையோ, நிறுவனங்களையோ அண்டிப் பிழைக்கக் கூடாது என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கென தன்னிச்சையான குறிக்கோள்களும், கொள்கைகளும் அவசியம்” எனக் கூறினார். இம்மாநாட்டிற்குப் பிறகு அகிலத்தின் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டிற்கான தொடர்பாடல் குழுவிற்கு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டில் உள்ள புரட்சியாளர்களுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டார்.

பக்கூனிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம்:

1870 களின் துவக்கத்தில் கற்பனாவாத கம்யூனிச கொள்கைகள் சமூகத்தில் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியது. பல பாட்டாளி குழுக்களும், சமூக ஜனநாயக வாதிகளும் இணைந்து செயல்படத் துவங்கியிருப்பதை மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் இதர விஞ்ஞானரீதியான கம்யூனிஸ்டுகளும் எச்சரிக்கையுடன் கவனித்தனர்.

பக்கூனிஸ்டுகளின் வேலைத் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்து மார்க்சும் எங்கெல்சும் கீழ்க்கண்டவாறு விவரித்தனர். “அது வெறும் பகட்டான வெற்று வார்த்தைகளால் ஆன கருத்துக் குப்பையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்தக் கருத்துக்கள் வெகுகாலத்திற்க்கு முன்பே செத்துவிட்டவை. அவை சில முதலாளித்துவ அசடுகளைப் பயமுறுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதுவும் செய்யத் திறனற்றவை அல்லது அகிலத்தின் உறுப்பினர்களுக்கு எதிராகப் போனபார்ட்டிஸ்டுகளோ அல்லது இதர காவல்துறை மற்றும் வழக்குமன்ற அதிகாரிகளோ சாட்சியமாக உபயோகப்படுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதற்கும் பயன்படாது.” அராஜக வாதம், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரமான தத்துவத்திற்கும் ஒத்துவராததும் பகைமையானதுமாகும் என்று அவர்கள் நிரூபித்தனர்.

1872 – 73 ஆம் ஆண்டு காலங்களில் எங்கெல்ஸ் எழுதிய புத்தகம், கட்டுரை மற்றும் பிரசுரங்கள் என அனைத்திலும், அனைத்து விதமான அராஜகவாதத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

டூரிங்கிற்கு எதிர்ப்பு:

பல்வேறு தரப்பட்ட குட்டி பூர்ஷ்வா கற்பனாவாதக் கருத்துக்களும் புத்தம்புதிய பாணிகளில் பூர்ஷ்வா தத்துவஞான மற்றும் பொருளாதார தத்துவக் கருத்துக்களும் வளர்ந்து கொண்டிருந்தன. யுஜின் டூரிங் (Eugen Duhring) பெர்லின் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்தார். அவர் தன்னை “ஒரு புதிய உலகு தழுவிய சர்வாம்ச விஞ்ஞான முறையின் சிற்பி” என்று வர்ணித்துக் கொண்டார். தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசக் கருத்துக்கள் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனம் செய்துவந்த அவர் மார்க்சியத்தையும் தாக்கினார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் செல்வாக்கின்கீழ் கட்சித்தலைவர்கள் டூரிங்கியனிஸத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1877 ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து 1878 ஜூலை 7 ஆம் தேதி வரை எங்கெல்ஸ் ஜெர்மானிய சோசலிஸ்டு தொழிலாளர் கட்சியின் பத்திரிக்கையான வோர்வார்ட்ஸில் தொடர்ச்சியாக விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். எங்கெல்சின் அக்கட்டுரைகளில் சில பிரசுரங்களாகவும் வெளியிடப்பட்டன.

அவற்றில் தத்துவ ஞானத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற்றி விவரித்துள்ளார். டூரிங், பொருள் மற்றும் அதன் இயக்கங்களை வேறுவேறாகப் பார்த்தார். ஆனால் “பொருளின் இயக்கம் என்பது அப்பொருளின் இருத்தலுக்கான காரணமேயன்றி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது தவறாகும்” என்றார் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மறைவிற்குப் பின்

1878 செப்டம்பர் 12 ஆம்தேதி எங்கெல்சின் மனைவி லிஸ்ஜெ பர்ன்ஸ் காலமானார். “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டாளியான என் மனைவி என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான காலங்களைக் கடந்து செல்வதற்கு உறுதுணையாகவும், பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருந்தார்” என எங்கெல்ஸ் கூறினார்.

1881 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாடிய மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் அதே ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அப்போது படுத்த படுக்கையாக இருந்த மார்க்ஸ் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த மார்க்சிற்கு அடுத்ததாக மீண்டும் ஒரு துயர நிகழ்வு நிகழ்ந்தது. மார்க்சின் மூத்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883, ஜனவரி 11 ஆம் தேதி இறந்தார். மார்க்ஸ்  ஏழ்மையில் வாடிய போதெல்லாம் அவரது குடும்பச் சுமையை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். தன் ஆருயிர் மனைவி மற்றும் அருமை மகள் இறந்தபிறகு மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த மார்க்ஸ் அதே ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இரத்தபோக்கு காரணமாக மதியம் 2:45 மணியளவில் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிர் நீத்தார். அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மார்ச் 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது “அரசுகள், அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதிகள் ஆயினும் சரி,  அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர்.  இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார்… கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர்கூட இருந்ததில்லை. யுகயுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு எங்கெல்ஸ் மார்க்சுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் தலைவராகவும், உலக பாட்டாளி வர்க்கத்தினரை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றார்.

மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்டது. மூலதனத்தின் மற்ற இரு தொகுதிகளை வெளியிடும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டு திறம்பட செய்து முடித்தார். “இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” எனக் கூறியுள்ளார். ஒருகால் எங்கெல்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் மூலதனம் என்னும் அறியப் படைப்பைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்திருப்போம்.

மார்க்ஸ் இறந்தபிறகு “குடும்பம், தனிச்சொத்து, அரசுஆகியவற்றின்தோற்றம்” என்னும் புத்தகத்தை இரண்டே மாதங்களில் எழுதி முடித்தார். இப்புத்தகத்தில் மனிதகுல வரலாற்றையும், எவ்வாறு மனித சமூகம் பழமையான சமூகத்திலிருந்து தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்புவாத சமூகமாக மாறியது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து விவரித்துள்ளார். “நவீன சோசலிஸத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்ட முக்கிய நூல்களில் ஒன்று” என லெனின்  இந்நூலைப் பற்றிக் கூறியுள்ளார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு உலக பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களை வழிநடத்திய எங்கெல்ஸ் ஐரோப்பியக் கண்டங்களில் உள்ள பல நாடுகளில் சோசலிஸ கட்சிகளைத் தோற்றுவித்ததில் பெரும் பங்காற்றினார். 1885 ஆம் ஆண்டுகளில் பெல்ஜியத்திலும் மற்றும் சுவீடனிலும், 1887 ல் நார்வே நாட்டிலும், 1888ல் சுவிட்சர்லாந்திலும் மற்றும் ஆஸ்திரியாவிலும், 1879 ல் ஸ்பெயினிலும் பொதுவுடைமைக் கட்சிகளைத் துவக்குவதில் அரும்பணியாற்றினார். எங்கெல்சின்  வீடு இருந்த  122, ரிஜென்டு பார்க் சாலை அக்கால புரட்சியாளர்களின் “புனிததளமாகவேகருதப்பட்டது.

1893 ஆம் ஆண்டு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசிய எங்கெல்ஸ் “ஐரோப்பாவால் ஆயுதங்களைக் குறைக்க முடியுமா?” என்னும் கட்டுரையொன்றை எழுதினார். அக்கட்டுரையில் உலக அமைதியை நிலைநாட்டவும் ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்கவும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு போராட வேண்டும் எனவும் விவரித்துள்ளார். 8 மணி நேர வேலை வேண்டி லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட எங்கெல்ஸ் முதலாளித்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த மாற்றங்களை உற்றுக் கவனித்து வந்தார்.

1894 ஆம் ஆண்டு தனது உயிலை எழுதிய எங்கெல்ஸ், தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை மார்க்சின் குடும்பத்தினருக்கே எழுதி வைத்தார். தன்னுடைய 74 ஆவது வயதில் பவுல் லஃபர்குவெ (Lafargue) அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் “நான் இரு இளைஞர்களைப் போன்றே பணியாற்ற விரும்புகிறேன். முதலாவது இளைஞனுக்கு 40 வயதும், இரண்டாவது இளைஞனுக்கு 34 வயதுமாக இருக்கவேண்டும்.” (ஆம். தனது 74 வயதை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்.)

1894 ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் அவர் அவதியுற்றார். 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனைவாதிகளில் ஒருவரான எங்கெல்ஸ், 1895 ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி காலமானார். மார்க்சியம் என்ற தத்துவம் நிலைத்திருக்கும் வரையில் எப்படி மார்க்சின் பெயர் நிலைத்திருக்குமோ, அதே போன்று மார்க்சின் இணைபிரியாத் தோழனான எங்கெல்சின் பெயரும் அவரோடு இணைந்து என்றும் நிலைத்திருக்கும்.

அவரது இறுதிச் சடங்கில் சொற்பொழிவாற்றிய வில்ஹெம் லிம்கினெட்ச் “உலக பாட்டாளி வர்க்க மக்களின் தலைவரும், போராளியுமான ஏங்கெல்ஸ் அமைத்துக்கொடுத்த புரட்சிகர பாதையில் நாம் பயணிப்பதின் மூலம் முதலாளித்துவ முறையை அழிக்க முடியும்” எனக் கூறினார்.

“ஜென்ரல் ஏங்கெல்ஸ் இன்று நம்மை விட்டுப் பிரிந்த போதிலும், எண்ணற்ற பாட்டாளி வர்க்க படைகளை வழிநடத்திய தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கருத்துக்களைக் கொண்டு உலகத் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதன் மூலம் அவர்களுடைய தத்துவார்த்த கோட்பாடுகள் மென்மேலும் வலுவடைவதோடு சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதில் வெற்றி காண இயலும்” எனப் பவுல் லஃபர்குவெ கூறினார்.

தோழர் லெனின் குறிப்பிடுவதைப் போல, “ஒவ்வொரு பாட்டாளியும் ஏங்கெல்ஸின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்”