பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

ஆனால், மனிதன் தன்னுடைய சகமனிதர்களின் பரிபூரணத்திற்காக, நன்மைக்காக பாடுபடுவதன் மூலமாகவே தன்னுடைய சுயபரிபூர்ணத்துவத்தை அடைய முடியும்.

நாம் தேர்ந்தெடுக்கும் தொழில், மனித குலத்தின் நன்மை, நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும். மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியுடையவராகிறார் என்று அனுபவம் தெரிவிக்கிறது.”

– காரல் மார்க்ஸ்

பி.சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டு 2007 ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அவரது வாழ்வும், அவர் ஆற்றிய பணியும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். சுமார் 19 ஆண்டுகள் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். ஆம்! 1907 ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பர் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் இறந்தார். குறுகிய காலத்தில் அனைவராலும் போற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார் என்றால் அது எவ்வாறு?

1943 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு பி.எஸ்.ஆர். செல்கிறபோது, அவருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாக படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது, மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளை மீறி பி.எஸ்.ஆர். விவசாயிகள் இயக்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் தலைவராக, சிறந்த போராளியாக எவ்வாறு ஜொலிக்க முடிந்தது? “பி.சீனிவாசராவ் செய்த சேவையின் மதிப்பு எல்லோராலும் உணரப்படக்கூடிய காலம் வரும்” அவரோடு கட்சிப் பணியாற்றிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜீவா இவ்வாறு கூறியிருக்கிறார்.

பி.எஸ்.ஆர். கர்நாடகத்தில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் உள்ள கிருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, “மாணவர்களே அந்நியக் கல்வி முறையை எதிர்த்து வெளியேறுங்கள்” பெற்றோர்களே! பிள்ளைகளை அந்நியர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்” என 1920 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. காங்கிரஸ் கமிட்டியின் அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி.எஸ்.ஆரும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஆர். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

சென்னையில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத் துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளானார். காங்கிரஸ் கட்சியிலும், பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அமீர் ஹைதர்கானை (தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றியவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமீர் ஹைதர்கான் தான் பி.எஸ்.ஆர் ஐ கம்யூனிஸ்ட்டாக்கினார்.

சென்னையில் பி.எஸ்.ஆர்., பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு கூடி தஞ்சையில் விவசாயிகளை திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்கிறார்.

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்ல வேண்டுமென்று கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்து அவர் சென்றபோது அவருக்கு மண்ணைத் தாலுக்கா களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. காக்கி அரைக்கால் சட்டையிலும், வெள்ளை அரைக்கை சட்டையிலும் செக்கச் செவேலென்று நெடிய உருவமுடைய பி.எஸ்.ஆர். வர வேற்பை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்.

“நீங்களெல்லாம் தாய் வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும் கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே? அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான்! உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே? வேறென்ன வித்தியாசம்? அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! அடியாட்கள் ஆயுதங் களுடன் தாக்க வந்தால், பிடித்து கட்டிப்போடுங்கள். ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.

எல்லா ஊர்களிலும், நமது கொண்டான் கொடுத்தான் களிருப்பதால், அங்கெல்லாம் போய்க் கொடி ஏற்றுங்கள். எல்லா இடங்களிலும் சங்கம் வந்து விட்டால், அடிக்குப் பதிலடி கொடுப் போம் என்று தெரிந்தால், நம்மை வாட்டி வதைக்கும், “எஜமானர்கள்” பயப்படுவார்கள். பழைய காலம் போல், போலீசும் காட்டு ராஜா தர்பார் நடத்தப் பயப்படும். அவர்கள் சட்டப்படி நடக்கச் செய்வதில் சங்கத்தின் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். நாங்களிருக்கும் தைரியத்தில் நீங்கள் துணிந்து செயல்படுங்கள்”

பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை படிப்போர் அன்று கீழத் தஞ்சையில் இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச் சுவான்தார்கள், மடாதிபதிகள், மடங்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்கு சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம். மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் தலித் பண்ணையாட்கள், தலித் மக்களின் பெரும்பான்மையோர் நிலமற்றவர்களாகவும், பண்ணை யாட்களாகவும் வேலை செய்து வந்தார்கள். சாதி இந்து மக்களில் பெரும்பாலோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் சாதி இந்துக்கள்தான். இதில் ஒரு பகுதியினர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். தலித் பண்ணையாட்கள் தீண்டாமை கொடுமைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளாகியிருந்தார்கள். குத்தகைய விவசாயிகள் சாகுபடிதாரர்களாக இருந்தாலும், நிலவுடைமையாளர்களின் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். அன்றைய ஆங்கிலேயே காலனியாதிக்க அரசு நிலச்சுவான்தார் களுக்கு அரணாகவும், பண்ணையாட்களுக்கும் குத்தகை விவசாயி களுக்கும் எதிராகவும் இருந்தது. இதனால்தான், 1940களில் விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் தீண்டாமை கொடுமையையும் எதிர்ப்பதோடு, காலனியாதிக்கத்தையும் எதிர்த்து பேராட வேண்டியிருந்தது. சாதியும், நிலவுடைமையும் தீண்டாமை கொடுமையும் பின்னிணிப் பிணைந்து இருந்த சூழல்தான் ஒன்றுபட்ட தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையில்.

பி.எஸ்.ஆர். தனக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கூடியிருந்தவர்களின் சிந்தனையில் மின்சாரத்தை பாய்ச்சியது போல் ஆயிற்று. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணை யாட்கள் மற்றும் சாதி இந்து குத்தகைதாரர்கள் மத்தியில் புதிய தெம்பு ஏற்பட்டது.

தென்பரை

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்வதற்கு முன்பே தென்பரை (கோட்டூர் ஒன்றியம்) கிராமத்தில் குத்தகை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பரையில் உள்ள பெரும்பகுதி நிலத்திற்கு சொந்தக்காரரான உத்திராபதி மடத்தை எதிர்த்து, குத்தகை விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தென்பரை கிராமத்திற்கு மாவட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களோடு சென்ற பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க முதல் கிளையை துவக்கி வைத்து கொடியேற்றுகிறார். குத்தகை விவசாயிகள் போராட்டம் சில கோரிக்கைகளை வென்றெடுத்தது.

தென்பரையில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி காட்டுத் தீயைப் போல் கீழத்தஞ்சை முழுவதும் பரவியது. குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மாவட்டத்தில் உள்ள பண்ணை யாட்களையும் உற்சாகப்படுத்தியது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை பாதுகாக்கும். தங்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தருமென தலித் மக்கள் உண்மையாகவே நம்பினார்கள்.

தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆர்.ரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயச் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்கள். விவசாயிகள் சங்க கிளைகளும், கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் பரவலாக துவங்கப் பட்டது. விவசாய சங்கத்தினுடைய உதயமும், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய துவக்கமும் கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர்.அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி.கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர்.உடன் கிராமம், கிராமமாக சென்று விவசாயச் சங்கக் கிளைகளையும், கட்சிக் கிளைகளையும் உருவாக்கினார்கள்.

சாணிப்பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பண்ணையாளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், குத்தகைய விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமானக் குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத் தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1944 இல் ஒப்பந்தம் உருவானது.

சாணிப்பால் சாட்டையடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. பண்ணையாளுக்கு அளிக்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது. குத்தகைய விவசாயிகளின் கோரிக்கையின் ஒரு பகுதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிலப்பிரபுக்களும் – தலித் பிரதிநிதிகளும் சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்கள் கையில் இருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயச் சங்கமும் பறித்து மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை அக்காலத்தில் பல வடிவங்களில் இருந்தது. சாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு சமமான இடமில்லை. தலித் மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாது. இதுபோன்ற மோசமான வடிவத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவு கட்டியது. சாதிய வேறுபாடும், தீண்டாமை கொடுமையின் மிச்ச சொச்சமும் கீழத் தஞ்சையில் இன்றும் நீடித்தாலும் அதன் குரூரத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தகைய போராட்டத்தில் பி.எஸ்.ஆர். பிரதான பங்காற்றினார்.

1944 ஆம் ஆண்டின் பண்ணையாட்களுக்கு கூலி உயர்வும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகப் பங்கும் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் மன்னார்குடியில் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் நிலச்சுவான் தார்கள் கையெழுத்திட்டாலும், அமலாக்குவதற்கு மறுத்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் ஒரு முத்தரப்பு மாநாடு நடை பெற்றது. இதில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் அய்யங்காரும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகள் சிலரும் விவசாயச் சங்கத்தின் சார்பில், பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷன் வழங்கிய “கூலி உயர்வை” ரத்து செய்ய வேண்டும் என்பதே. சாமியப்ப முதலியார் என்ற நிலப்பிரபு குடும்பத்திற்கு வழக்கறிஞராக பணியாற்றுபவர் தான் மாநில அமைச்சர் பாஷ்யம். இந்தப் பின்னணியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரின் பேச்சு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பி.எஸ்.ஆர்., “ஏஜண்டுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அமைச்சரைப் பார்த்து கேட்க”, அமைச் சரோ! “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க? அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார்? பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே! நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை! ஆனால், நான் “புரட்சி ஓங்குக!” என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்று கோபத்தோடு கூறினார். நிலப்பிரபுவின் வாலாக செயல்பட்ட பாஷ்யம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு ஓடிப்போய் விட்டார்.

இதற்குப் பின் பி.எஸ்.ஆர். கூலி உயர்வு பெறும் வரையில் யாரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று விவசாயி களுக்கு கூற, போராட்டத்தின் வீச்சைக் கண்டு கலங்கிப்போன நிலப்பிரபுக்கள் “நெல் கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டனர்” பி.எஸ்.ஆரின் பெருங் கோபம் நிலப்பிரபுக்களுக்கு கிலிப்பிடிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

நாடு விடுதலையடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணையாட்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சி மாறினாலும், நிலச்சுவான்தார்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

1948 – 51 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர். பி.எஸ்.ஆர். மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டார்.

1952 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டியில் பி.எஸ்.ஆர். முன் முயற்சியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குத்தகை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு சாகுபடிதாரர் மற்றும் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பண்ணையாள் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய மற்றும் குத்தகை விவசாயி களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய இச்சட்டம் விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தலைவர்களை உருவாக்கிய தலைவர்

கீழத் தஞ்சையில் நடைபெற்ற மகத்தான இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் தலைமை தாங்கியது. தமிழகத்திலேயே தீண்டாமை கொடுமை ஒப்பீட்டளவில் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே. இத்தகைய சாதனையை ஓரிரு தலைவர்கள் சாதித்ததல்ல மக்கள் இயக்கம்தான் மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமை வலுவான இயக்கத்திற்கு வழிகாட்டியது. இருப்பினும் இம்மகத்தான இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தவர் பி.எஸ்.ஆர். 1940 களில் துவங்கிய இவ்வியக் கத்தால் பண்ணையாட்களும், சாதாரண விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் தலைவர்களானார்கள். பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தார்கள். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் பி.எஸ்.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறுவார்கள்.

ஒருமுறை மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் ஒரு இயக்கம் வெற்றிபெற இரண்டு முக்கிய அம்சங்கள் தேவை என்றார். முதலாவது, சரியான கொள்கை இருக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைக்காக தியாகம் செய்யும் செயல்வீரர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்திருந்தால் அந்த இயக்கம் வெற்றி பெறும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் நிலக்குவியல் அதிகமாக இருந்ததும், தீண்டாமை கொடுமை மோசமான வடிவத்தில் இருந்ததும் ஒன்றுபட்ட தஞ்சையில் குறிப்பாக கீழத்தஞ்சையில்தான். (கீழத்தஞ்சை என்பது இன்றைய திருவாரூர், நாகை மாவட்டங்கள்) தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் குரல் கொடுத்தன. தந்தை பெரியார் சாதி வேறுபாட்டை, சாதிக் கொடுமையை கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் காந்திஜி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் போராட்டத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணல் காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தீண்டாமைக் கொடுமை யையும், சாதிக் கொடுமையையும் எதிர்ப்பதில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருக்கிறதோ அங்குதான் தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கேரளா, திரிபுரா, தமிழகத் தில் கீழத்தஞ்சை. காரணம் இங்கெல்லாம் சாதிக் கொடுமையை எதிர்ப்பதோடு கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தது. நில விநியோகத்திற்காகப் போராடியது.

கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாணிப்பால், சாட்டையடி என்ற அப்பட்டமான தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததோடு நிலப்பிரபுத்துவ கொடுமைகளையும் சேர்த்து எதிர்த் தது. பி.எஸ்.ஆர். 1947 இல் எழுதி வெளியிட்ட “தஞ்சையில் நடப்ப தென்ன” என்ற பிரசுரத்தில் கீழத்தஞ்சையில் தலித் பண்ணை யாட்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நிலச்சுவான் தார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். சாதிக் கொடுமையும் நிலப்பிரபுத்துவ, சுரண்டலும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்.

“பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதிதிராவிட மக்களே. இவர்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும்அரை மரக்கால் நெல்தான். …. அவர்களது மனைவி மார்களும் குழந்தை குட்டிகளும் மிராசுதார் பண்ணையில் பாடுபட வேண்டும் என்பதை யும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந் தைகள் மிராசுதாரின் மாடுகளை மேய்க்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்…. பண்ணையாட்களின் பரிதாபம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவு இரக்கம் இல்லாமல் மிராசுதார் அடிப்பார் அல்லது அவரது ஏஜண்டுகள் அடிப்பார்கள்”.

கீழத்தஞ்சையில் அக்கால நிலப்பிரபுக்கள் பலர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும், திராவிட இயக்கத்தை சார்ந்தவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் தலித் பண்ணையாட்களை இரண்டு விதமானக் கொடுமைகளுக்கு உட்படுத்துவதில் நிலப் பிரபுக்க ளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய அணுகுமுறையை கீழத்தஞ்சை யில் நிலைமைக்கேற்ப அமலாக்குவதில் பி.எஸ்.ஆர். பிரதானப் பங்காற்றினார்.

1952 ஆம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு அடுத்த சில ஆண்டுகளில் நிலப்பிரபுக்கள், பண்ணையாள் என்ற தன்மை மாறி நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளி என்ற நிலைமை உருவானது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு, குத்தகை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு புதிய நிலைமை உருவானது. புதிய நிலைமைக்கேற்றவாறு கோரிக்கை உருவானது. கூலி உயர்வு, குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான பங்குக்காக மற்றும் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பி.எஸ்.ஆர். கீழத்தஞ்சையில் விவசாயிகளின் இயக்கத் தலைவராக மட்டுமல்ல மாநில விவசாயிகளின் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

நில உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலவிநியோகம் செய்திட வேண்டுமென்று 1961 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர். பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு வழிகாட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அ7ரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்ட மசோதாவை திருத்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நில விநியோகம் செய்ய வேண்டி வற்புறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. மறியல் தயாரிப்பிற்காக எழுதிய கட்டுரையில் பி.எஸ்.ஆர். கீழ்வருமாறு கூறுகிறார்.

“1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள சர்க்கார் நிலவுறவு மசோதாவை வெளியிட்டது. உச்சவரம்பை 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு இருபோக நிலம் 15 ஏக்கர் என இந்த மசோதா நிர்ணயித்தது.

இந்தியா பூராவிலும் இது ஒரு பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் காங்கிரஸ் மகாசபை கூட, தன்பெயர் போன நாகபுரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எல்லா ராஜ்யங்களும் 1959 இறுதிக்குள் நிலவுடைமை உச்ச வரம்புச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தத் தீர்மானம் பணித்தது.

சென்னை ராஜ்ய சர்க்காரும் 1960 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நிலவுடைமைக்கு உச்சவரம்புக் கட்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா பரிசுரிக்கப்படுவதற்குள்ளாகவே, நிலவுடை மைக்கு உச்சவரம்புக் கட்டும் நோக்கத்தையே சிதறடிக்கும் முறையில் நிலச்சுவான்தார்கள் நிலங்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றுவதையெல்லாம் முடித்துவிட்டார்கள். இந்த நில மாற்றங்களை ரத்து செய்வதற்கு சர்க்கார் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்களுக்கெல்லாம் சர்க்கார் உடந்தையே.

சென்னை உச்சவரம்பு நிர்ணய மசோதா, 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று உயர்வான உச்ச வரம்பை நிர்ணயித்தது மட்டுமின்றி, இதர ராஜ்யங்களின் மசோதாக்களில் உள்ள எல்லாப் பாதகமான அம்சங்களும் இம்மசோதாவிலும் உள்ளன.

மேற்கண்ட மாநிலந் தழுவிய விவசாயிகள் மறியல் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எதிர்காலத்தில் கீழத்தஞ்சையில் ஒரளவுக்கு நடைபெற்ற நிலவிநி யோகத்திற்கு இப்போராட்டம் நிர்பந்தமாக அமைந்தது.

இத்தகைய மறியல் போராட்டம் நடைபெறுகிறபோது தோழர் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் சென்றார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் குன்றி இருந்தார். 1961 செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தஞ்சையில் இரவு பின்நேரத்தில் அவர் இறந்தார்.

தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அமரர் பி.எஸ்.ஆர் ரின் இறுதி நிகழ்ச்சி தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் பி. ராமமூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், எம்.காத்தமுத்து, கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன், கே.டி. ராஜூ மற்றும் பலர் பேசினார்கள். இரங்கல் கூட்டம் இரவு 1.10 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன் போன்ற பல தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

பி.எஸ்.ஆர். மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.எஸ்.ஆரின் குணநலன்களைப் பற்றி எழுதியிருக்கிறார். “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவென்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அல்லது அநீதி என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டிக்கத் தவறமாட்டார். அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, இத்தகைய அவரது பிரதிபலிப்புகள், பல சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன.

பி.எஸ்.ஆர். பற்றி பி.ராமமூர்த்தி கூறியது. “மாவீரர் தோழர் .பி. சீனிவாசராவ் அவர்களை 1930 ஆம் வருடத்திலிருந்து எனக்குத் தெரியும். 1930 ஆம் வருடம் தேசிய மறியல் போராட்டத்தில் அவர் செய்த வீரத் தியாகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்நிய துணி பகிஷ்கார மறியலில் தன்னந்தனியாக நின்று மறியல் செய்வார். கொடூரமான தடியடிப் பிரயோகத்தில் அவர் மண்டை உடைந்து ரத்தம் ஓடும். ஜனங்கள் இதைப்பார்த்து ஆத்திரமுற்று கதர் துணியை அதிகமாக வாங்கிக் கட்டுவார்கள். அன்று கதர் கடைகளில் அதிக வியாபாரம் நடந்தால், “இன்று சென்னையில் சீனிவாசராவ் மறியலா?” என்று கேட்பார்கள். என்னைப் போன்ற தோழர்களைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.”

பி.எஸ்.ஆர். பற்றி ஏராளம் கூற முடியும். அர்ப்பணிப்பு, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவு, வாழ்க்கையில் எளிமை, நேர்மை என விளக்கிக் கொண்டே போகலாம். அண்ணல் காந்திஜியை அவருடைய இறுதிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது, என் வாழ்வுதான்தான் விடுக்கும் செய்தி எனக் கூறினார். அதைப்போலவே பி.எஸ்.ஆர் இன் வாழ்வும், பணியும் தான் இன்றைய தலைமுறைக்கு அவர் விடுத்த செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

பி.எஸ்.ஆர். இன் நூற்றாண்டு ஏப்ரல் 10, 2007 இல் நிறைவுறுகிறது. ஆனால், அவர் துவக்கிய பணி நிறைவு பெறவில்லை. மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.