சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !

 • இரா. சிந்தன்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை விரட்டத் தொடங்குகிறது.

ஓட்டுனர் இல்லாமலே இயங்கும் ஒரு பேருந்து நிறுவனத்தின் அறிமுக பின்னணியில்தான் இந்த பிரச்சனை நடக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் பேருந்து நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?. அந்த பெண்ணுக்கு பிரச்சனை கொடுக்கும் உலக நிறுவனம் எது?. உலகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து எப்படிப்பட்டது? என்று படம் வேகமாக நகர்கிறது.

நெதர்லாந்து நாட்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதையில், சீனாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சில உயர் தொழில்நுட்பங்களை, ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தும்போது, அதனால் அந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆபத்து வரும் என்பதாக சித்தரித்திருந்தார்கள்.

அமெரிக்க ஊடகங்களில், இது போன்ற கதைகள் வெளியாவது நமக்கு புதிதில்லை. கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யாவினை எதிரியாக சித்தரித்து, ஏராளமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்க உளவு, ராணுவ அதிகாரிகள் அந்த அபாயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுவார்கள். இப்போது அந்த பிரச்சாரம் சீனாவை மையப்படுத்துகிறது.

பண்பாட்டு மேலாதிக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, உலக ஊடகங்களின் மீது உள்ள பிடி சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட உலகின் 75% தொலைக்காட்சிகளை அமெரிக்க பெருமுதலாளிகளே சொந்தமாக வைத்துள்ளனர். உலகம் தழுவிய செய்தி ஏஜென்சி நிறுவனங்களில் அறுதிப் பெரும்பான்மை அமெரிக்காசார்பானவை. இணைய ஊடகங்களான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப்) ,கூகிள் (ஜி மெயில், கூகிள் தேடுபொறி மற்றும் ஆன்ட்ராய்ட்) டுவிட்டர், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பெரும்பான்மை அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள். உலகின் பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. இவை தவிர, உலகம் முழுவதுமே கல்வி நிறுவனங்களிலும், பிற அரசு சாரா நிறுவனங்கள், கலை இலக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தாக்கம் கூடுதலாகவே உள்ளது. இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்க உதவுகின்றன.

முதலில் குறிப்பிட்ட திரைப்படத்தின் கதையில், சீனாவில் தயாரிக்கப்படும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்துகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் இயந்திரங்களின் நுட்பங்களும், அதிவேக இணைய வசதிகளையும் ஆபத்தானதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு தொழில்நுட்பத்திலும், போதுமான கட்டுப்பாடுகள், சட்டப்பாதுகாப்புகள் இல்லாது, லாபவெறியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வழிநடத்தப்பட்டால், அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கு கவலை உண்டா? அமெரிக்காவின் கவலை அதுவல்ல.

தொழில்நுட்ப மேலாதிக்கம்

சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் காப்புரிமை பதிவுகளில் 80 சதவீதமானவை அமெரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இப்போதும் அறிவுசார் காப்புரிமங்களை ஏற்றுமதி செய்து அதற்கான கட்டணத்தொகை (ராயல்ட்டி) மூலம்  பொருளீட்டும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. (ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்கள்).

உலகம் முழுவதும் நடக்கும் இந்த வர்த்தகத்தில் அமெரிக்காவின் வசம் 45% உள்ளது. 24% வர்த்தகத்துடன் ஐரோப்பா இரண்டாவது இடத்திலும், 14% ஏற்றுமதி மேற்கொள்ளும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும்  உள்ளது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்கு கண்டறியப்பட்ட தடுப்பூசிகளிலேயே அதி நவீனமானவை, அமெரிக்க கண்டுபிடிப்புகளே. ஆனால் அந்த தொழில்நுட்பங்களை உலக நன்மைக்காக பயன்படுத்தவோ, குறிப்பிட்ட காலத்திற்கு அதன் உரிமக் கட்டணங்களை விட்டுக் கொடுக்கவோ அமெரிக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. அமெரிக்க அரசாங்கமும் தனியார் பண முதலைகளின் நலன் காத்து நின்றது. ஏகாதிபத்தியம், தொழில்நுட்பத்தின் மீது செலுத்தக்கூடிய மேலாதிக்கத்தினால் ஏற்படும் கெடு விளைவுக்கு கொரோனா தடுப்பூசிகள் மிகச் சிறந்த உதாரணமாக ஆகிப்போயின. இன்றுவரை உலக நாடுகளால் கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து மீள முடியவில்லை.

வரலாற்றில், அமெரிக்கா கொண்டிருக்கும் தொழில்நுட்ப மேலாதிக்கம், வளரும் நாடுகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நம் இந்தியாவும் அதில் விதி விலக்கல்ல. கடந்த காலங்களில், அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பெற முடியாத நிலையில் இந்தியாவினை தடுத்தது அமெரிக்கா. இப்போதும் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவால் பெற முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் இருந்தே நிலக்கரி மின் உற்பத்தி, அணு உலைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மறுக்கப்பட்டுள்ளன. அல்லது அதீத விலையில் தலையில் கட்டப்பட்டுள்ளன.

சீனாவின் எதிர்வினை

உலகத்தின் தொழிற்சாலையாக பரிணமித்திருக்கும் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் அதற்கான செலவாக ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு சீனா மேற்கொள்கிறது. எனவே, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு, சொந்த நாட்டு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து முன்னுக்கு வந்தது. தனது ஐந்தாண்டு திட்டங்களில் இதற்காக சிறப்பு கவனத்தை குவிக்கத் தொடங்கியது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தனர். இப்போது உலகத்திலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் செலவிடும் நாடாக சீனா உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.44 சதவீதம் தொகையை (ரூ.28 லட்சம் கோடிகள் வரை) இதற்காகச் செலவு செய்கின்றனர்.

இதற்கான ஒரு உதாரணமாக, சீனா தனது ஆராய்ச்சியில் உருவாக்கிய பெய்டோ என்ற வழிகாட்டி/வரைபட தொழில்நுட்பத்தை சொல்லலாம். 1994 ஆம் ஆண்டில்தான் சீனா இதற்கான தனது செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. பல ஆண்டுகள் தொடர்முயற்சியில் இப்போது பெய்டோ தொழில்நுட்பம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ் உட்பட அனைத்து வசதிகளிலும் மேம்பட்டதாக, அதி நவீன வசதிகளை உள்ளடக்கியதாக, குறைந்த செலவு பிடிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் உலகச்சந்தையில் 25 சதவீதத்தை விரைவில் பிடிக்கும் என்றும். 3 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்றும் சீன வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய தொழில்நுட்ப மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக, சீனாவின் கால்களை பிடித்து இழுக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. எனவேதான் தொழில்நுட்ப துறையில் பல தடைகளும், தடுப்புகளும் அமெரிக்காவால் சீனாவிற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் ஊடகங்களில் பலவாறாகவும் இடம்பிடிக்கின்றன. அதன் விபரங்களை இந்தக் கட்டுரையில் இறுதியில் பார்ப்போம்.

ஒரு துருவ உலகம்

முதலில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வராத ஆத்திரம், சீனாவின் மீது வருவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் இப்போதைய கட்டத்தை நவ தாராள உலகமயம் என்கிறோம். இந்த காலகட்டத்தில் நிதி மூலதனம் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. அதாவது, நிதியாக சேகரமான மூலதனம் எந்தவித உற்பத்தி நடவடிக்கைகளிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், உலகத்தின் எந்த நாடுகளுக்குள்ளும், எந்த உற்பத்தியிலும், வணிகத்திலும் தங்கு தடையில்லாமல் நுழையவும், வெளியேறவும் முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இறையாண்மையை தாக்கவும், பலவீனப்படுத்தவும் அதனால் முடிகிறது. யூக அடிப்படையில் லாபம் ஈட்டும் அதன் தன்மையின் காரணமாக பொருளாதார குமிழிகள் உருவாகின்றன. அவை, புதிய புதிய பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. தங்குதடையில்லாத நிதி மூலதனத்திற்கு ஏற்ற அரசியலை வடிவமைப்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணியாகும்.

“காலனி ஆதிக்கத்திற்கு பின் நாம் கண்டுவரும் இந்த நியாயமில்லாத உலக நடைமுறையை நிலைநிறுத்திட சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்றவை கருவிகளாக பயன்படுகின்றன. ஊக நிதிமூலதனத்தின் இந்த ஆதிக்கம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியை மந்தப்படுத்தியுள்ளது”, இதன் காரணமாக “வளர்ச்சியடைந்த, பணக்கார முதலாளித்துவ நாடுகள் ஒருபுறம், பெரும்பகுதி மக்கள் வாழும் மூன்றாம் உலக நாடுகள் மறுபுறம் என்று, ஏகாதிபத்திய நடைமுறை உலகையே இரு கூறாகப் பிரித்துள்ளது.” என நம் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

மேலும், இந்த காலகட்டத்தின் மையமான சமூக முரண்பாட்டினை, “சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்கிறோம். இந்த முரண்பாடு குறித்து 23வது கட்சி காங்கிரஸ்  விவாதித்தது. சீனா – அமெரிக்கா இடையிலான மோதல் வளர்வதையும், கியூபா, வடகொரியா மீதான நெருக்கடிகள் அதிகரித்திருப்பதையும் சுட்டியுள்ளது. ஆம். இதுதான் சீனாவின் மீது அமெரிக்காவின் பாய்ச்சலுக்கான காரணம் ஆகும்.

சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன.

சீன அறிஞர்கள் சென்என்பு மற்றும் லுபாலின் ஆகியோர் இதனை ஒரு ஆய்வின் விபரங்களைக் கொண்டு கீழ்க்காணும் விதத்தில் தெளிவுபடுத்துகின்றனர்.

“நாம் சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை எடுத்துக்கொள்வோம். சீனாவின் நிலத்தையும், சூழலியல் வளங்களையும், மலிவான உழைப்பையும் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்காக, அதற்கு ஈடான உற்பத்தி எதையும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. டாலர்  நோட்டுக்களை அச்சடித்தால் மட்டுமே போதுமானது”

அந்த நோட்டுக்களை வைத்தும் கூட சீனாவால் உண்மையான சொத்துக்களை வாங்க முடியாது. அமெரிக்க கருவூலத்தின் பத்திரங்களையோ அல்லது வேறு சில நிதிசார் நடவடிக்கைகளையோதான் சீனா மேற்கொள்ள முடியும். அவர்கள் குறிப்பிடும் ஆய்வு ஒன்று, அமெரிக்கா தனது மேலாதிக்கதினால் பெறக்கூடிய லாபத்தை கணக்கிட்டு நமக்கு தருகிறது. அதன்படி அமெரிக்கா தனது மேலாதிக்கத்தின் வழியாக அடையக் கூடிய லாபம் (hegemonic dividends), 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் சற்று கூடுதலாகும். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக அமெரிக்கா ரூ.16 லட்சம் கோடிகளை பெறுகிறது. இப்போது இந்த தொகை இன்னும் கூடுதலாக இருக்கலாம். ‘சீனாவின் உழைப்பாளர்களின் உழைப்பில் 60 சதவீதம், சர்வதேச ஏகபோக முதலாளிகளுக்கு இலவசமாக தரப்பட்டுள்ளது’. ஆய்வின் விபரங்கள் அதிர்ச்சியாகத்தான் உள்ளன.

இந்தப் ‘பலன்களை ’இழப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. சோவியத் ஒன்றியத்தின் தகர்விற்குப் பின், இனி ஒரு புதிய போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி காட்டியது.

சீன – அமெரிக்க உறவு

      “சீனாவுடனான உறவினை புதுப்பிக்கிற அதே சமயத்தில், சோசலிசத்தை கைவிடும்படி நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். சீனத்தின் கொள்கைகளை மென்மையாக்குவதற்கு இந்த உறவினை பயன்படுத்த வேண்டும். இந்த முக்கியமான விசயத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். (1990, மே)

      அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மக்கள் சீனத்தின் தலைவரான ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர். அமெரிக்காவிற்கும் – சீனாவுக்கும் இடையிலான உறவு, பெரிய நாடுகள் தங்களுக்கு இடையில் கொள்ளும் உறவுக்கான ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெறும் மேல் பூச்சுதான்.  2010 ஆம் ஆண்டிலேயே சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவினை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மேற்கொண்டு விட்டது.

2015ஆம் ஆண்டில், ஜி ஜின்பிங் அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரத்திற்கு சென்றார். அங்கே பேசும்போது, அமெரிக்காவின் அணுகுமுறைக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றினார்.

“அமைதியான போக்கில் வளர்ச்சியை சாதிப்பதுதான் சரியான வழியாகும் என்பது  உலக வரலாறு நமக்கு கற்பிக்கும் முக்கியமான பாடம்… வரலாற்றின் ஓட்டத்திற்கு மாறாக, வலிமையைக் கொண்டு  மேலாதிக்கத்தை சாதிக்க நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியடையும். “நாடு இப்போது வலிமையாக இருக்கலாம், சண்டை அதன் அழிவுக்கு வழிவகுக்கும்” என்று சீனர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

      மேலும், வளரும் நாடுகளின் பிரதிநிதியாக நின்று, நாடுகளுக்கிடையிலான உறவில் சமத்துவத்தை மேம்படுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக் காட்டினார். அனைத்து நாடுகளுக்கும் நன்மை தருவதாகவும், மனித குலத்தின் நன்மையை மனதில் கொண்டதாகவும் உலக நாடுகளுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

      அமெரிக்கா – சீனா இடையிலான உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். அப்போதே சீனா தனது பட்டுப்பாதை நிதியை உருவாக்கி, பெல்ட் & ரோட் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருந்தது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உருவாக்கம், ஆசிய- பசிபிக் பிரதேசத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தியது. 2008ஆம் ஆண்டு வெளிப்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, பல துருவ உலகத்தை நோக்கிய போக்குகள் வலுப்பட்டும் வருகின்றன. சர்வதேச தொடர்புகள் விசயத்தில் சீனாவின் அணுகுமுறை பல துருவ உலகத்தை நோக்கியதாகவே உள்ளன.

      தற்போது நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டின் தொடக்க உரையில், வெளியில் இருந்து நடக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ‘சர்வதேச தளத்தில் ஏற்பட்டு வரும் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம், குறிப்பாக மிரட்டவும், கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் சீனாவின் மீது கூடுதலான அழுத்தங்களை சுமத்தவும்’ முயற்சிகள் நடக்கின்றன என சுட்டிக்காட்டுகிறார்கள். இனி வரும் நாட்கள், எதிர்பாராத சவால்களை உள்ளடக்கி இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.     

நவதாராள உலகமயம் மேலாதிக்கம்

      ஏகாதிபத்தியத்தின் நோக்கம் நிதி மூலதனத்திற்கு சாதகமான உலக சூழலை பராமரிப்பதே என்பதை மேலே கண்டோம். அதற்காக அரசியல், ராணுவ, பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்கிறது. பொருளாதார உறவுகளை தனக்கு சாதகமாக வடிவமைக்கிறது.

அமெரிக்க டாலர்தான் உலக நாடுகளால் ஏற்கப்பட்ட செலாவணியாக உள்ளது. உலக நாடுகளின் வசம் இருக்கும் அன்னியச் செலவாணி கையிருப்பில் 70 சதவீதம் அமெரிக்க டாலரே ஆகும். 68 சதவீதமான சர்வதேச ஒப்பந்தங்களில் டாலர் பயன்படுத்தப்படுகிறது. அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் 80 சதவீதமும்,சர்வதேச வங்கி பரிவர்த்தனையில் 90 சதவீதம் டாலரில் நடக்கிறது. அமெரிக்க டாலரின் இந்த மேலாதிக்கத்தின் காரணமாக, ஏழை நாடுகளின் கடன் சுமையும், வட்டிச்சுமையும் அதிகரிக்கின்றன. டாலர் மதிப்பு உயரும்போதும், சரியும்போதும் இந்த சமனற்ற நிலைமையின் சிக்கலை நாம் வெளிப்படையாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட துறைகளில் ஏகபோக ஆதிக்கம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. உதாரணமாக உலகில் ஒட்டுமொத்த சோயாபீன்ஸ் உற்பத்தியையும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன. அதில் மான்சாண்டோ என்ற நிறுவனம் விதை உற்பத்திக்கான கச்சா பொருட்களை கட்டுப்படுத்துகிறது, மற்ற 4 நிறுவனங்கள் பயிர் செய்தல், வர்த்தகம் மற்றும் பிராசசிங் துறைகளை கட்டுப்படுத்துகின்றன. இந்த ஏகபோக நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, லாபத்தைக் குவிக்கிறார்கள்.

இதுபோல சமூகத்தின் சொத்துக்கள் மிகச் சில முதலாளித்துவ முதலைகளின் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமும், லாபக்குவிப்பும் உலகம் தழுவியதாக நடக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரும் விபரங்களின்படி உலகத் தொழிலாளர்களில் 73 சதவீதம் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மிகக் குறைந்த கூலியே பெறுகின்றனர். அதில் 40 சதவீதம்பேர் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் வாழ்கிறார்கள். அதே சமயத்தில் 500 தனியார் பெருநிறுவனங்களுடைய வருவாய், ஒட்டுமொத்த உலக வருவாயில் 30 சதவீதமாக உள்ளது.

நேரடியான ராணுவ மேலாதிக்கத்தையும் அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது. தனது  பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்கிற போதிலும் ராணுவச் செலவினத்தை அதிகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 193 நாடுகளில் சரிபாதியானவைகளில் அமெரிக்க படைகள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன. இந்த தாக்குதல்கள் சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கு பின் அதிகரித்துள்ளன. உலகப்போர் காலத்திற்கு பின் உலகின் 36 அரசாங்கங்களை அமெரிக்கா நேரடி தலையீட்டின் மூலம் கவிழ்த்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடந்த 85 தேர்தல்களில் தலையிட்டுள்ளது. 30 நாடுகளில் அப்பாவி மக்கள் குழுமியிருந்த இடங்களில் குண்டு வீசியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 50 தலைவர்களை கொலை செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் பின்னணியில் இதுபற்றி நாம் கூடுதலாக பேசியிருக்கிறோம்.

அமெரிக்காவின் ஆசியா – பசுபிக் உத்தி, சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்திலானதாகும். தனது நோக்கத்தில் இந்தியாவையும் துணைக்கு இழுக்கிறது. எதிரி வலிமையாவதாக உணர்ந்தால் அதனை வம்புச் சண்டைக்கு இழுக்க வேண்டும் என்ற உத்தியைத்தான் அமெரிக்கா பின்பற்றுகிறது என்கின்றனர் மேற்கத்திய வல்லுனர்கள்.

மேற்சொன்ன ஏகாதிபத்தியத்தின் 5 வெளிப்பாடுகளை, 5 தன்மைகளை கீழ்க்காணும் விதத்தில் வகைப்படுத்தலாம்.

1) உலகத்தின் சந்தையை கட்டுப்படுத்தும் நிதி மூலதனம்,

2) பூமியின் இயற்கை வளங்களை கட்டுப்படுத்தும் ஏகபோக பெருநிறுவனங்கள்.

3) ஊடகங்கள், தகவல் தொடர்பை கட்டுப்படுத்துவதன் வழியாக மக்களின் பண்பாட்டில், சிந்தனையில் ஆதிக்கம்

4) பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் ஏகபோக உடைமை

5) தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு

சீனாவுடன் மோதல் போக்கு

      முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்பதை லெனின் வரையறுத்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது  “ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம் ஆகும்; அது ஒட்டுண்ணி வகைப்பட்ட, அழுகல் நிலையில் உள்ள முதலாளித்துவம்; மரணக் கட்டிலில் உள்ள முதலாளித்துவம்” என்றார். அந்த வார்த்தைகள் இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கச்சிதமாக சுட்டுகிறது.

      நிலைமையை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தை பின்னுக்கு இழுக்கவும், தாமதப்படுத்தவும் அது தொடர்ந்து முயலும். தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தும். சீனாவின் விசயத்தை பொருத்தமட்டில் அதை தன்னுடைய கேந்திர போட்டியாளராக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. தான் மற்றும் தனது நண்பர்கள், கூட்டாளிகளின் நலனை பாதுகாக்கும் விதத்தில் சீனாவின் புறச் சூழலை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் உத்தியாக வகுத்துள்ளது. சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்கிறது.

சீனா ஒரு சோசலிச நாடாக தொடர்வதும், வலிமையடைவதும் ஒரு துருவ ஏற்பாட்டிற்கும் சவாலாக அவர்கள் பார்க்கிறார்கள்.

அண்மைய நிகழ்வுகள்

2022 ஆகஸ்ட் 2022 அன்று அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனை சீனா கடுமையாக எதிர்த்தது.

தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சீன புரட்சி சமயத்தில் தைவானில் தஞ்சம் புகுந்த எதிர்ப் புரட்சி சக்திகள், அங்கே ஏற்படுத்திய முதலாளித்துவ அரசாங்கத்தை சீனா முற்றாக அழித்து ஒழிக்கவில்லை. அமைதியான முறையில் நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்கள். இருப்பினும் அதற்கு சாதகமான சூழல் இப்போதுவரை உருவாகவில்லை.

இந்த நிலையில், தைவான் ஆட்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமான பயணத்தை பெலோசி மேற்கொண்டார். இந்த பயணம் அவருடைய தனிப்பட்ட முடிவு என்பது போல அமெரிக்கா காட்டிக் கொண்டது. ஆனால் அங்கே அவர் ‘தைவான் செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனத்தினரோடு’ சந்திப்பு மேற்கொண்டார்.

      ராணுவ நடவடிக்கைகளை தூண்டுவது போல தொடங்கிய இந்த நிகழ்வுப்போக்கு, சீனாவின் மீது மட்டுமல்லாமல், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தாக்கம் செலுத்தியது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாடுகள் பலவும் தங்கள் தற்காப்புக்காக ராணுவ செலவினங்களை அதிகப்படுத்தினார்கள். சீனாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் இந்த நகர்வு உயர் தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாட்டை நோக்கியதாகவும் இருந்தது.

பலமும், பலவீனமும்

      இப்போதும் சீனாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடு அமெரிக்காவே ஆகும். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு செல்லும் நேரடி முதலீடும் அதிகரித்தே வருகிறது. உலகமய காலத்தில், உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதார நலன்களும் பிரிக்க முடியாத விதத்தில் பிணைந்திருக்கின்றன.

அதே சமயத்தில், ஒபாமா காலத்தில்  இருந்தே சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், சீனாவின் மீதான இனவாத வெறுப்பும், பொருளாதார தடைகளும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டன.

5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஹுவாவை நிறுவனம் உட்பட சில நிறுவனங்களை முடக்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் ‘சிப்புகள் மற்றும் அறிவியல் சட்டம்’ என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர சந்தை, உலகமயம் ஆகிய தாரக மந்திரங்களுக்கு நேர்மாறான இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க ஏகபோக பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தை தொடரும் நோக்குடனே எடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், தொழில் இணையம், அதிவேக இணைய உபகரணங்கள் தயாரிப்பிலும், அறிவியல் தொழில்நுட்ப துறையிலும் சீனாவை பின்னுக்கு தள்ளும் என்று அமெரிக்கா கருதுகிறது.

சீனா, உலகின் இரண்டாவது பொருளாதாரம் என்ற நிலைமையை எட்டியுள்ள போதிலும், இப்போதும் அது வளரும் நாடுதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனங்கள் மற்றும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்திக்காக அது இறக்குமதிகளையும், பிறநாட்டு அறிவுசார் கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப கருவிகளையும் அதிகம் சார்ந்திருக்கிறது.

அண்மை ஆண்டுகளில் ஆராய்ச்சிகளில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது எனினும் அமெரிக்கா மேற்கொள்வதில் அது பாதியளவுதான் என்பதும், மேலும், அமெரிக்கா பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அறிவுசார் வளங்களை எடுத்துக் கொண்டால், சீனா செய்துவரும் பங்களிப்பை போல 6 மடங்கு இறக்குமதி செய்கிறது. எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

அதுவும், அமெரிக்காவின் சமீபத்திய கட்டுப்பாடுகள் உற்பத்தி இயந்திரங்களை மறுப்பதாகவும், முக்கிய கச்சாப்பொருட்களை மறுப்பதாகவும் உள்ளதுடன் தொழில்நுட்பம் படித்த, அமெரிக்க குடியுரிமை கொண்ட நிபுணர்கள், சீனாவில் வேலை பார்ப்பதை மட்டுமல்ல, சீனாவுக்காக உற்பத்தி நடந்தால் அதில் பங்கெடுப்பதையும் கூட தடை செய்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்களையும் கூட சீனாவில் மேற்கொள்ளும் உற்பத்தியில் பயன்படுத்த முடியாது என்று இந்த விதிகள் நெருக்குகின்றன.

உலகச் சந்தையில் 40 லட்சம் கோடி புழங்கும் சிப்/செமிகண்டெக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 8 ஆண்டுகளில் அதன் சந்தை இருமடங்காக உயரும் என்றும் கணிக்கிறார்கள்.

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் 16 நானோமீட்டர், 14 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த அளவிலான லாஜிக் சிப்கள், 18 நானோமீட்டர் கொண்ட டைனமிக் ராம் சிப்கள், 128 லேயர் கொண்ட மெமரி சிப்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு கொண்ட சிப்கள் குறைவான மின் பயன்பாடு கொண்டவையாகும், அதிவேக செயல்திறன் கொண்டவை எனவே இவற்றை நுகர்வோர் பயன்பாட்டுக்கானவை. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 18.4 சதவீதம் சீனாவில் நடக்கும் நிலைமையில் சீனாவை இதில் இருந்து அகற்றுவது எளிதல்ல.

இதன் உற்பத்திச் சங்கிலி உலகம் தழுவியதாக உள்ளது. எனவே இந்த துறையில் இருந்து சீனாவை மட்டும் தனிமைப்படுத்துவது எளிதல்ல. உதாரணமாக, சிப்/ செமிகண்டக்டர் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவமைப்பு பிரதானமாக அமெரிக்காவில் செய்யப்படுகிறது. அதற்கான சிலிகான் தகடுகள் ஜப்பானில் உற்பத்தியாகின்றன. அந்த தகடுகளில் இழை சேர்ப்பது, சாயப் பூச்சு ஆகியவை அமெரிக்கா, தைவான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடக்கிறது. சரியாக அடுக்கி பரிசோதிப்பது மலேசியாவில் நடக்கிறது. சிங்கப்பூரில் இருந்து அது கப்பலில் ஏற்றப்படுகிறது. சீனாவில் அது பல்வேறு உபகரணங்களில் இணைக்கப்பட்டு சந்தைக்கான பொருளாக வடிவம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கும்போதும், தன்னுடைய வருமானத்தில் 18 சதவீதத்தை ஆய்வுக்காக செலவிடும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு, இனி வரும் காலத்தில் அவற்றின் மேம்பட்ட நிலையையே சரியச் செய்யக் கூடும். சீனா தனது ஆராய்ச்சியில் முன்னேறினால் அது சீனாவிற்கு சாதகங்களை அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது.

முடிவாக…

      உலகம் தழுவிய நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்கள் இருப்பதும், விநியோகம் உலகளாவியதாக இருப்பதன் காரணமாக, ஏகபோக நிறுவனங்கள், தமக்குள்ளாக ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு, குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள். உலகச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமக்கு சாதகமான உலக ஒழுங்கினை பராமரிக்கிறார்கள்.

அமெரிக்காவின் ராணுவ பலமும், ராணுவ தலையீடுகளும், அமெரிக்க டாலரின் ஆதிக்கமும், உயர்ந்த தொழில்நுட்பங்களின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் கட்டுப்பாடும் ஏழை/வளரும் நாடுகளுக்கு பாதகமாக இருக்கின்றன.

சோசலிச சீனா வலுப்படுமானால் அது இந்த ஆதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் என்பதாலேயே, சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறது அமெரிக்கா. ஆனால், உலக முதலாளித்துவம் நெருக்கடியிலேயே இருக்கிறது. தனது நெருக்கடிகளை உலக நாடுகளின் மீது தள்ளிவிடுவதும் தொடர்கிறது. இந்த நிலைமைகளை உணர்ந்திருக்கும் சீனா, சவால்களை எதிர்கொண்டு சோசலிச கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம் என்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் வெல்வது சோசலிசமா, லாபவெறி மேலாதிக்கமா என்பதைப் பொருத்தே மனித குலத்தின் எதிர்காலம் அமையும். 

வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்

கே. பாலகிருஷ்ணன்

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முத்திரை பதித்தவர் வ.உ.சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிராக விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியவர். மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு கப்பலோட்டிய தமிழன்.  தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், கொத்தடிமைகள் என்ற நிலையை மாற்றி பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராட வைத்தவர். பிரிட்டிஷ் புகுத்திய ஆங்கில மோகத்திற்கு எதிராக விடுதலை இயக்கத்தில் மக்களை தமிழ் வழி நின்று திரட்டியவர். சாதி அபிமானம், மத அபிமானம் ஆகியவை மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளே என புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவ்வாறு பிரிட்டிஷ் பேயாட்சியை எதிர்த்து தனித்த அடையாளங்களோடு விடுதலை போராட்டப் பயணத்தை மேற்கொண்ட பெருமை கொண்டவர் வ.உ.சி.

..சி யின் எலும்பும் ராஜ துவேசத்தை ஊட்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்த அளவு இவர் மீது கோபம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவருக்கு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்புரையை படித்தாலே புரியும்.

“சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே (ஆங்கிலேயர்,  இந்தியர்) பகைமையையும், வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பின் ராஜ துவேசத்தை ஊட்டும்”.

அவருக்கு வழங்கிய தண்டனையும் அளவுக்கு அதிகமானதாகும். ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு  20  ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக மேலும்  20  ஆண்டுகள்,  மொத்தத்தில் இரட்டை ஆயுள் தண்டனைகள். இத்தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமென அந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்.  

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது தண்டனை  6  ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வ.உ.சி ஒரு ராஜதுரோகி என்ற நீதிபதி பின்ஹேவின் கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டனர்.

சிறைக் கொடுமை

வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் அந்தமான் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் அந்தமான் சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவரை முதலில் கோவை சிறையிலும், பிறகு கண்ணனூர் சிறையிலும் அடைத்தனர். கோவை சிறையில் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை வேறு எந்த அரசியல் கைதிக்கும் இழைக்கப்பட்டதாக கூற முடியாது. எருதுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை, சுட்டெரிக்கும் வெயிலில்  இவரது தோளிலே கட்டி இழுக்க வைத்ததும், அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்த போதும், அவரை சவுக்கால் அடித்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். வ.உ.சி.யின் மீதான கொடுமை தாங்காமல் சிறை அதிகாரிகளுக்கே தெரியாமல் சக கைதிகள் செக்கை இழுத்துச் செல்ல உதவுவார்களாம். இன்றைக்கும் கோவை சிறைச்சாலையில் வ.உ.சி. கட்டி இழுத்த அந்த செக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய செக்கை இழுக்குமாறு வ.உ.சி.யை சித்தரவதை செய்த கொடுமையை எண்ணி அதிர்ச்சியடைவர்.

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இளமை பருவத்தில் நீதிக்கான குரல்

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தென்னகத்தில் பெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷாரைப் எதிர்த்த போராட்டத்தில் பாஞ்சாலக் குறிச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.  ஊமத்துரையும்,  சிவகங்கையில் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர்,  கோயம்புத்தூரில் கான்கிசா கான்,  மலபாரில் கேரள வர்மன் இப்படி பலரும் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இத்திட்டத்தை அறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அதை முறியடித்து கலகப் படை வீரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மருதுபாண்டியர்,  வெள்ள மருது ஆகியோரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். அதே தேதியில் மருதுபாண்டியரின் மகன்கள் சிவத்தம்பி,  சிவஞானம், வெள்ளமருதுவின் மகன்கள் கருத்தம்பி,  குட்டித்தம்பி, முத்துச்சாமி,  ராமநாதபுரம் மன்னர் முத்துக்கருப்ப தேவர் ஆகிய அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என வித்தியாசமில்லாமல் கைது செய்த அனைவரையும் பிரிட்டிஷார் கூட்டம் கூட்டமாக தூக்கிலேற்றினார்கள். மருதுபாண்டியரின் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த இத்தகைய போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான பேர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் இவர்களின் தியாகம் வீரகாவியங்களாக பேசப்பட்டு வந்தன. இவர்களைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கிராமங்கள் தோறும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய பாடல்களை கூட பாடக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

இந்த தியாக வடுக்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில்தான்  1872ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வ.உ.சி ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இளம் பருவம் முதலேயே இந்த வீர காவியங்கள் அவரது சிந்தனையில் ஆழமாக பதிந்தன. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்த வ.உ.சி க்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிவதில் ஆர்வமில்லை. பிறகு வழக்கறிஞர் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக பணியாற்றும்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடினார். தவறு செய்யும் அரசு அதிகாரிகள், நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட யாரானாலும் அவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். அதேபோல ஜமீன்தார்கள், பண்ணையார்கள், போலீசார் ஆகியோர் சாதாரண ஏழை விவசாயிகள் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை எதிர்த்து, தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். பொதுமக்களிடம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட துணை நீதிபதிகள் மீது வழக்காடி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது போன்ற காரணங்களால் வ.உ.சி.யினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்தது. ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயக் கூலிகள், பணக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வ.உ.சி.யை நாடிவந்து தங்களுக்கு நியாயம் கேட்கும் நிலை உருவானது. அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்.

ஏழை மக்களுக்காக குரலெழுப்பிய வ.உ.சி. படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தார். அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து தேசிய இயக்கத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.

மூன்று கோட்பாடுகள்

வ.உ.சி மூன்று முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தி வந்தார். அதாவது கூட்டுறவு இயக்கம்,  சுதேசி இயக்கம்,  தொழிலாளர் இயக்கம் என்ற இந்த மூன்றையும் முன்னிறுத்தினார். தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலை ஒன்றை அமைத்து சுதேசிப் பொருட்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி வைத்தார். சுதேசி நூற்பாலை ஒன்றை கட்டி அதை செயல்படுத்தினார். சென்னை விவசாய சங்கம் என்ற அமைப்பை துவக்கினார். இவருடைய மொத்த நோக்கமும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாற்றாக சுதேசிப் பொருளாதாரத்தை பலப்படுத்திட வேண்டுமென்பதே. தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வு மேம்படுவது,  மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது,  தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயிகளையும்,  தொழிலாளர்களையம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்து முழுவதும் பிரிட்டிஷ் கைவசமே இருந்தது. சில சுதேசி கம்பெனிகள் கப்பல்களை இயக்கினாலும் பிரிட்டிஷ் கம்பெனிகளோடு போட்டி போட முடியாமல் அது தள்ளாடிக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் கம்பெனிகள்தான் இந்தியா, இலங்கை, ரங்கூன்,  மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, கொண்டு வருவது என்ற வியாபாரத்தை நடத்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு போட்டியாக,  சுதேசி நேவிகேசன் கம்பெனி என்ற கம்பெனியை வ.உ.சி துவக்கினார். வாடகைக்கு கப்பல் எடுத்து ஓட்டி நடத்த முடியாது என்கிற அடிப்படையில் கப்பல்களை விலைக்கு வாங்கி சொந்தமாக இயக்க முடிவு செய்தார். இந்த கம்பெனிக்கான பங்குதாரர்களை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் பயணம் செய்து பங்குகளை சேர்த்தார். இவ்வாறு இந்த பங்குகளை சேர்க்க பம்பாய் நகரத்தில் அவர் தங்கியிருந்த போது அவரது மூத்த மகன் உலகநாதன் உடல் நலமின்றி மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரமுடியாமல் சுதேசி நேவிகேசன் கம்பெனிக்கு பங்குகளை திரட்டும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்த கம்பெனியில் இயக்குநர்களாக 15பேர் இருந்தார்கள்.

சுதேசி கப்பல் இயக்குவது பொதுமக்கள் மற்றும் பயணிகள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணத்தை விட அதிக கட்டணம் கொடுத்து சுதேசி கப்பலில் பயணிப்பதை அனைவரும் பெருமையாக கருதினார்கள். சுதேசி கப்பல் வெற்றிகரமாக இயங்குவது நாடு முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து திலகர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் இயக்குவது, சுதேசி இயக்கத்திற்கு அவர் செய்துள்ள பெரும் பணி என பாராட்டினார். எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் முதலாளிகளை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கியது எண்ணிப் பார்க்க முடியாத இமாலய சாதனையாகும். சுதேசி கம்பெனி இயங்குவது பிரிட்டிஷ் கம்பெனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் ஒவ்வொரு மாதமும் இக்கம்பெனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்கிற நிலை உருவானது. எனவே பிரிட்டிஷ் கம்பெனி கப்பல் உரிமையாளர்கள் சுதேசி கப்பலை முடக்கி விட வேண்டும்;  இதற்கு பொறுப்பாக இருக்கிற வ.உ.சி. யை மிரட்டி பணியவைப்பது; பணியாவிட்டால் சிறைக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து முயற்சிகளிலும் வரிந்து கட்டி செயல்பட்டனர். தங்கள் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதி விட்டது என பொய்ப்புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இத்தகைய சதிகளை எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களின் ஆதரவோடு வ.உ.சி முறியடித்தார். பிரிட்டிஷாரின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆதரவு வ.உ.சி.க்கு இருந்தபோதும் சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இவர்களைப் பொறுத்தவரை லாபமே குறி. சுதேசி உணர்வை பயன்படுத்தி லாபமடைய வேண்டுமென்பதே இவர்களுடைய அடிப்படையான எண்ணம்.

எனவே, பிரிட்டிஷாரின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வ.உ.சி.யை கம்பெனி நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வ.உ.சி.யோ சுதேசி கப்பல் கம்பெனி நடத்துவதை ஏகாதிபத்திய எதிர்ப்பின் பகுதியாகவே மேற்கொண்டிருந்தார். எனவே, இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆரம்பத்தில் அடிபணிய மறுத்த வ.உ.சி. வேறு வழியின்றி நாடு முழுவதும் இரவு – பகலாக அலைந்து கண்ணின் இமை போல காத்து உருவாக்கிய சுதேசி கம்பெனியிலிருந்து கடைசியாக வெளியேறினார்.

பாரதி – வ..சி. இரட்டையர்கள்

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரும், வ.உ.சி. யின் தந்தை உலகநாதப் பிள்ளையும் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரே காலத்தில் பணியாற்றியுள்ளனர். குடும்ப ரீதியாக இவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் பாரதியும் – வ.உ.சியும் சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ளவில்லை.  1906ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்ற வ.உ.சி  “இந்தியா” என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரோடு மண்டையம் திருமாலாச்சாரி, சீனிவாச ராகவாச்சாரியார் ஆகியோர் நெருங்கி பழகியதன் விளைவாக நாளடைவில் வ.உ.சி. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். இவர்களது முயற்சியில் சென்னை ஜன சங்கம் என்ற தேசாபிமானச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி திரும்பிய வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

1907ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநாடு சூரத் நகரில் நடைபெறவிருந்தது. இதற்கு முன்னர் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது மோதலாக உருவாகியிருந்தது. தீவிரவாதிகள் எனவும், மிதவாதிகள் எனவும் காங்கிரஸ் தலைவருக்குள் இரண்டு பிரிவு உருவாகியிருந்தது. லால் – பால் – லால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர்,  பிபன் சந்திரபால் ஆகியோர் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது,  இவர்கள் சுதேசி, சுயராஜ்ஜிய சுதந்திரத்திற்கு இந்தியா போராட வேண்டுமென்றனர். இன்னொரு பிரிவுக்கு தலைவராக இருந்த திரசா மேத்தா, கோபால கிருஷ்ண கோகுலே, ராஷ் பிகாரி போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் மிதவாதக் கருத்துக்களை கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் முக்கியமான காரணமாகும். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது ‘மேன்மை தங்கிய’ பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாகவே துவக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொண்டு இந்திய மக்களை சுரண்டிய போதிலும் உள்நாட்டில் ஒரு வலுவான முதலாளித்துவம் வளராமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு உள்நாட்டு முதலாளித்துவம் வளருமானால் அது தங்களை எதிர்த்து குரல் கொடுக்க முனையும் என்பதை சரியாகவே கணித்து எச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் குடையின் நிழலிலேயே உள்நாட்டு முதலாளித்துவம் படிப்படியாக வளர்ந்ததும், உலக அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியாவில் புதியதொரு சூழ்நிலையை உருவாக்கின. அதாவது, உள்நாட்டு முதலாளிகள் மனு கொடுத்து மன்றாடினால் மட்டும் தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தனர். இத்தகைய புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக சுயராஜ்ஜியம், சுதேசி பொருட்கள் விற்பனை, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற கோஷங்கள் எழுந்தன. இத்தகைய கோஷங்களை திலகர் தலைமையிலான தீவிரவாதக்குழு எழுப்பிய நிலையில் மக்களது பேராதரவு இவருக்கு பின்னால் திரண்டது. எனவே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது தீவிரவாதக்குழுவின் தலைவராக இருந்த திலகரை தலைவராக்க வேண்டுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிதவாதக்குழுவினர் சமரச ஏற்பாட்டின் மூலம் இதை முறியடித்தனர். இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் வலுவடைந்திருந்தது. சென்னையிலிருந்த பாரதிக்கும் இந்த கருத்து ஆழமாக இருந்தது.

சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டம்

பாரதி – வஉசி தலைமையில் சூரத் மாநாட்டிற்கு ஏராளமானோர் சென்றார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் மாநாட்டு அரங்கில் கூடியபோது, மாநாடு துவங்கிய உடனேயே தலைவர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டது. மிதவாத குழுவினர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தாக்குதலால் கூட்டம் தொடர முடியாமல் மாநாடு கலைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் அரவிந்தர் தலைமையில் நடந்த தேசியவாதிகள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வங்கத்துக்கு – அரவிந்தர்,  மராட்டியத்திற்கு திலகர், சென்னை மாகாணத்திற்கு வ.உ.சி பொறுப்பாளர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ஆரம்ப முதலே சுதேசி, சுயராஜ்ஜிய கோட்பாடுகளோடு திலகரின் ஆதரவாளராக இருந்த வ.உ.சி சுயராஜ்ஜியத்தில் தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளராக தீர்மானிக்கப்பட்டது இயற்கையானதே.

சென்னை திரும்பிய வ.உ.சி.யும்,  பாரதியும் சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டத்தினை நிறைவேற்றினார்கள். சென்னையை தொடர்ந்து வ.உ.சி தூத்துக்குடி சென்று தனது பணிகளை துவக்கினார். சுயராஜ்ஜிய ஆட்சிக்கு முதல் வழி கடல் வாணிபத்தை கைப்பற்ற வேண்டும். வெள்ளையர்களின் கம்பெனிகளை திவாலாக்க வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதே சுதேசி நேவிகேசன் கம்பெனி.

வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்ட பிபின் சந்திரபால் விடுதலையானதைக்  கொண்டாட வேண்டுமென திலகர் அறைகூவல் விடுத்தார். பல நகரங்களில் சிறப்பாக கொண்டாட வ.உ.சி ஏற்பாடு செய்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கலந்து கொண்டு உரையாற்றினர். மக்கள் எழுச்சியுடன் திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெள்ளையர்களையும் அவர்களது எடுபிடிகளையும் மக்கள் புறக்கணித்தார்கள். மக்களின் உணர்ச்சி கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் வ.உ.சி.யையும் – சிவாவையும் மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்கள். மார்ச் 9ஆம் தேதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாஜிஸ்திரேட் எழுதி கொடுக்க வற்புறுத்தினார். இருவரும் மறுத்து விட்டனர். இருவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் விஞ்ச் மிரட்டிய விபரங்களை பாரதியார் பாடல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்பாடல்களில் கலெக்டர் எவ்வாறு மிரட்டினார்; அதற்கு வ.உ.சி. எவ்வாறு எதிர்குரல் கொடுத்தார் என்பதையும் வடித்துள்ளார். 

தனது மிரட்டலுக்கு பணிய மறுக்கும் இருவரையும் ஓராண்டு பாளை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். செய்தியறிந்து நெல்லை நகரமே போர்க்களமாகிறது. மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள், பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆஷ் என்ற உதவி கலெக்டரை துப்பாக்கியால் சுட்டு ஒரு இளைஞன் உள்பட 4 பேர் மரணமடைந்து விடுகிறார்கள். போலீசார் மீது மக்கள் நடத்திய எதிர்தாக்குதலில் கலெக்டர் விஞ்சுக்கு மண்டை உடைந்தது.

இந்த கலகத்துக்கு தலைமை தாங்கியதாக காரணம் கூறியே வ.உ.சி – சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில்தான் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை என்பது இந்த சம்பவத்தை கணக்கில் கெண்டு கொடுக்கப்பட்டவையல்ல. வெள்ளயர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியது; மக்கள் திரள் போராட்டங்களை உருவாக்கியது போன்ற பழைய காழ்ப்புணர்ச்சிகளின் தொகுப்பாகவே இத்தண்டனை அமைந்திருந்தது.

சிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி சென்னைக்கு வந்தார். குடும்பத்தை நடத்துவதற்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் உரிய பலன் ஏற்படவில்லை. சிறை தண்டனை பெற்றதால் வழக்கறிஞராக பணியாற்றும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிறந்த தேச பக்தராகவும், இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகத்தை செய்த வ.உ.சி. தனது கடைசி நாட்களில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார் என்பது வேதனை மிக்கதாகும்.

வ.உ.சி. சிறந்த இலக்கியவாதியுமாவார். தனது சுய சரித்திரத்தை செய்யுள் வடிவில் எழுதியதில் வ.உ.சி.யே முதலும் கடைசியுமாவார். சிறைத் தண்டனையின்போதும் அதற்கு பின்னரும் இலக்கிய பணியில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ்நாட்டில் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எளிய தமிழை பயன்படுத்தினார். மேடைப் பேச்சு என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு ஆங்கில கல்வி மூலம் ஆங்கில மோகத்தை புகுத்தியது. ஆங்கில மோகமும் சமஸ்கிருத மோகமும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தாய்மொழி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் வ.உ.சி. எழுதுவன எல்லாம் எளிய நடையில் இருத்தல் வேண்டும். மக்களுக்கு அர்த்தமாகும் இலக்கியத்திலேதான் உயிர் உண்டு என வலியுறுத்தினார். திருக்குறளின் அறத்துப் பாலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். முழு திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமென்ற  அவரது ஆசை நிறைவேறவில்லை.

தொழிலாளர் இயக்கத்தில் வ..சி

திருநெல்வேலி பாபநாசத்தில் ஹார்வி என்ற பிரிட்டிஷ் கம்பெனி நூற்பாலை இயக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கோரல் மில் (பவள ஆலை) என்ற நூற்பாலையை உருவாக்கியிருந்தார்கள். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்தனர். 10 வயது, 12 வயது சிறுவர்கள் கூட ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட்டனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இடையில் ஓய்வெடுக்கவோ, விடுமுறை எடுக்கவோ கூடாது என்கிற காட்டுத் தர்பார். இந்தக் கொடுமையான தொழிலாளர் சுரண்டலை கண்ட வ.உ.சி கோரல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினார். வ.உ.சி.யின் அறைகூவலுக்கேற்ப தொழிலாளர்களும், 1908ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் 144 தடையுத்தரவு போட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. குண்டர்களை ஏவி தொழிலாளர்களை தாக்கியது. மில் நிர்வாகமும், காவல்துறையும் தொடுத்த அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும்,  பவானந்த ஐயங்காரும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். தொழிலாளர்களின் உறுதியை கண்ட நிர்வாகம் 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது உரிமைக்கு போராடும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை பெற்றது. இது தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி.யை தொழிலாளர்களும், மக்களும் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டாடினார்கள். பிரிட்டிஷ் எஜமானர்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது புதிய வரலாறாகும். தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்க ,இயக்கம் என்று எதுவும் கேள்விப்படாத நேரத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும என்பதே பிரிட்டிஷாரின் விதி. அந்த விதியை மாற்றி எழுதியவர் வ.உ.சி.

தேசிய நோக்கும் சமூக சமத்துவப் பார்வையும்

ஆரம்பத்திலிருந்தே தேச விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார். சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வாக்குமூலத்தின்படியே திலகர்,  லாலா லஜபதிராய்,  அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து பூரண சுயராஜ்யத்திற்கு உறுதியாக குரல் கொடுத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதி மத சனாதான கருத்துக்கள் கோலோச்சி இருந்த நிலையில் சாதியும் மதமும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சுதேசி சிந்தனையை பாழ்படுத்தி விடுமென முழக்கமிட்டவர்.

தேசிய தலைவர்கள் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சினையை பேச மறுத்த காலத்தில், தேசிய சிந்தனையில் வ.உ.சி தீவிரமாக இருந்தபோதும் இப்பிரச்சனை சமூகத்தில் நிலவிவருவதை சுட்டிக் காட்டி அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.   தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்தினார்கள். நீதிக்கட்சியோடு எந்த தொடர்பையும் கொண்டிராத வ.உ.சி. தமிழகத்தில் நிலவும் பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்திட வேண்டுமென வற்புறுத்தினார்.

தேசிய சிந்தனையோடு பல்வேறு போராட்டங்களை வ.உ.சி. முன்னெடுத்தார். அதேநேரம் சாதி மத சிக்கல்கள் குறித்தும், சமூக சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவர் வாழ்ந்தபோதும்  இவர் மறைந்த பிறகும் இவரது அளப்பரிய தியாகத்தை காங்கரஸ் கட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்கள் என்றென்றும் அவரை நினைவில் வைத்து போற்றுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் வ.உ.சி திகழ்கிறார்.

மானுட எதிரி ஏகாதிபத்தியம்; வர்க்கப் புரட்சியே தீர்வு !

என். குணசேகரன்                           

ரஷ்ய சோசலிசப் புரட்சி இன்றைக்கும் பல பாடங்களை மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது. முதலாளித்துவம் உலகளாவிய ஒரு அமைப்பு முறையாக செயல்பட்டு வந்தாலும் அது சமச்சீரற்ற முறையில் வளர்கிறது.

 உலகின் பல பிரதேசங்கள் வளர்ச்சியில் பின்தங்கி, வறுமை, வேலையின்மை பிரச்சனைகளால் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றன. ஆனால் உலகின் ஒரு பகுதி மேலும் மேலும்  செல்வக் குவிப்புக்கான தளங்களாக உள்ளன. ஒரு சிறு முதலாளித்துவ கூட்டம் பெரும்பான்மை மக்களை சுரண்டி வேட்டையாடி வருகிறது. இந்த சமச்சீரற்ற வளர்ச்சி பல பகுதிகளில் புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்துகிறது. 

1917நவம்பரில் மானுட வரலாற்றில் ஒரு திருப்பமாக ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியும் உலக முதலாளித்துவத்தின் ஒரு பலவீனமான பகுதியில் வெடித்து எழுந்தது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி என்பது ஒரு விதியாகவே நிகழ்ந்து வருகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய கட்டமான ஏகாதிபத்தியமும் அந்த விதிக்கு உட்பட்டு இயங்கிவருகிறது. எனவே புரட்சிகர எழுச்சிக்கான  வாய்ப்புகள் மங்கிவிடவில்லை. மாறாக, மேலும் மேலும் சோசலிசத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வருகின்றன.

ஏகாதிபத்தியத்தின் தோற்றம் 

லெனின் 1916- ஆம் ஆண்டில் சூரிச் நகரில் தலைமறைவு வாழ்க்கையின்போது  “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலை எழுதினார். அதில் கடந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் வந்தடைந்த புதிய கட்டத்தினை  லெனின் விளக்கியிருந்தார்.

முதலாளித்துவத்தின்  வளர்ச்சி  நீண்ட வரலாறு கொண்டது. வெகு நீண்ட பாதையைக் கடந்து தற்போதைய நிலைக்கு இன்றைய முதலாளித்துவம் வந்துள்ளது.  பல வளர்ச்சிக் கட்டங்களை தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் உருப்பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது. இதனை லெனின் ஏகாதிபத்திய கட்டம் என்று விவரித்தார். இந்தக் கட்டத்தில் உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார வளர்ச்சி பல வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருந்தது.

அரசியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறையும், பல நாடுகளில் சர்வாதிகார முறையும் இருந்தன. பல நாடுகளில் ஒரு ஜனநாயக அமைப்பு வளர்ச்சி பெறாத சூழலும் இருந்துவந்தது. பொருளாதாரத்திலும் வேறுபாடுகள் இருந்தன.சில நாடுகள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. பல நாடுகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தன.

உலகின் முன்னணி நாடுகள் தங்களது பொருளாதார ஆதிக்கத்தை வெளிநாடுகளில் வலுப்படுத்திக் கொள்ளவும் , நாட்டின் எல்லைகளை பங்கு போட்டுக் கொள்ளவும் முனைந்தன. இதற்கான நாடுகளின் கூட்டணி அமைந்தன. இவை பொருளாதார ஆதிக்கத்திற்கும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைக்கார கூட்டணிகள். இந்த கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டி , இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது.

கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தளுக்கு இரண்டு உலகப் போர்களின் பாதிப்பை ஆசிய நாடுகளும் , ஏழை நாடுகளும் எதிர்கொண்டன.

கடுமையான வறுமையும், மோசமான பொருளாதார நிலைமைகளும் அந்த நாடுகளை வாட்டி வதைத்தன. போர்களால் உலகத்தின் முன்னேறிய நாடுகளின்  முதலாளித்துவ வர்க்கங்கள் அதிகமாக பலன் பெற்றன.

சில நாடுகள் புரட்சிகரமாக உலக முதலாளித்துவ பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. அவை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகளாக இருந்தாலும், சோசலிச  வளர்ச்சிப் பாதையை பின்பற்றத் தொடங்கின. அந்த சோஷலிச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட முன்னேற்றம் கண்டது.

உலகில் முதலாளித்துவ முகாமிற்கும் சோசலிச முகாமிற்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இதனால், உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடிகளுக்கு ஆளானது. எனினும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1980-90-களில் நவீன தாராளமய காலம் துவங்கியது. இந்தக் கொள்கைகள் முதலாளித்துவ மூலதன  வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தன. 

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய உலக மேலாதிக்கம் மேலும் வலுப்பெற்றது. பொருளாதார சுரண்டல் மட்டுமல்லாது இயற்கை வளங்களை கொள்ளையடித்தல், பாட்டாளி வர்க்க புரட்சி மீண்டும் எழுந்திடாமல் தடுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்துவது, இன்றுள்ள சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளையும், பல கூட்டணிகளையும் உருவாக்குவது என பல வழிகளில் அமரிக்கா உள்ளடங்கிய உலக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாது முயற்சித்து வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் இயல்புகள் 

லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலின் ஏழாவது அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து இயல்புகளை விளக்குகிறார்.

 1) உற்பத்தியும்  மூலதனமும் ஒன்றுகுவியும்  நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவாகின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன.

 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றன. இந்த “நிதி மூலதனம்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது.

 3) அதுவரை முக்கியத்துவம் கொண்ட  சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி, மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது.

 4) சர்வதேச அளவில்  ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றன.

5) முன்னணி முதலாளித்துவ அரசுகள்  உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன.

இது கடந்த நூற்றாண்டில், நூற்றாண்டின் துவக்கத்தில்  ஏகாதிபத்தியம் வளர முற்பட்ட சூழலில், அதன் இயல்புகளைப் பற்றி லெனின் வழங்கியுள்ள ஆய்வு. அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து  அடிப்படை இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கிறதா? இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் அவை பொருந்துவதாக உள்ளதா? மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்தையு ஆராய்ந்து விளக்கியது போன்று, அவருக்குப் பிறகு லெனின், முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கினார். இவர்கள் வகுத்தளித்த பாதையில் இன்றைய ஏகாதிபத்தியத்தையும்,  அதன் இயல்புகளையும் அறிதல் அவசியம். ஏனெனில், முதலாளித்துவத்தை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், சோசலிச மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் மிக அவசியமானது.

லெனின் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்தின் அந்த  ஐந்து இயல்புகளும் இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும் ; எனினும் கடந்த நூற்றாண்டிற்கும், இந்த 21-வது நூற்றாண்டிற்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய சூழல், புதிய நிலைமைகளை உள்வாங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை சோஷலிச சக்திகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

லெனின் உற்பத்தியும் , மூலதனமும்  மையப்படுவது ஏகாதிபத்தியத்திற்குரிய தன்மையாக குறிப்பிடுகிறார். தீவிரமான போட்டி முதலாளித்துவ சமூகத்தில் நடப்பதால் உற்பத்தியும் மூலதனமும் மையப்படுகிறது. போட்டியினால் பெரிய சில கம்பெனிகள்  உற்பத்தியின் குவி மையமாக மாறுகின்றன. இவ்வாறு மையப்படுவது ஒரு கட்டத்தில் தொழில் ஏகபோகங்களை உருவாக்குகிறது. சுதந்திரமான போட்டி என்ற இடத்தில் ஏகபோக கூட்டணிகள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை வருகிறது. இந்த ஏகபோகங்கள் பொருளாதார வாழ்வில் நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதற்கு லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து விளக்குகிறார்.

மூலதனக் குவியல் 

லெனின் காலத்திற்குப் பிறகு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.1970-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக கடும் நெருக்கடியையும் தேக்கத்தையும் உலகப் பொருளாதாரம் சந்தித்தது. அதன் வளர்ச்சி விகிதமும் வீழ்ந்தது. உள்நாட்டு சந்தை வீழ்ச்சியால் ஏகபோக மூலதனம் வெளிநாடுகளில் வாய்ப்புக்கள்ளை தேய்ந்த நிலையில்யாது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் நேரடி அந்நிய முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்தி முதலாளித்துவம் புதிய வளர்ச்சியை அடைந்தது. உற்பத்தியும் விநியோகமும் மேலும் கடந்த காலங்களை விட மேலும் சர்வதேசமயமானது.

மேலும் மேலும் மூலதனம் குவிந்து, மிகப்பெரும் பிரம்மாண்டமான, ஏகபோக, பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் வளர்ந்தன. அவற்றில் பல,  நாடுகள் பலவற்றின் சொத்துக்களை விட அதிக சொத்து படைத்ததாக வளர்ச்சி பெற்றன. உண்மையில், சர்வதேச, ஏகபோக முதலாளித்துவத்தின் இன்றைய பிரதிநிதிகளாக இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் விளங்குகின்றன. 

உலக அளவில் இந்த வகையிலான கார்ப்பரேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நேரடி அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய கிளைகளையும், ,இணைப்பு நிறுவனங்களையும்  உலகம் முழுதும் அமைத்து செயல்படுகின்றன.1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை  நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து பத்தாயிரம் வரை  உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் பெரும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தக இணைப்புகளில் இணைந்துள்ளனர். உலகப் பெரும் கார்ப்பரேஷன்களின் இந்த வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டமாக உருவாகியுள்ளது. இது மூலதனத்தின் சர்வதேச தன்மையை வலுப்படுத்தியுள்ளது.,உற்பத்தி மற்றும் மூலதனம் மேலும் மேலும் ஓர் இடத்தில் குவியும் நிலை மிகப்பெரும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சில ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனம் மேலும் மேலும் குவிந்து பெருகி வருகிற நிலையில் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் பேரரசு உருவாகியுள்ளது.

பன்னாட்டு முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை மிகப்பெரும் பலம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. அவை வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின்ள் பயன்பாடு, சந்தை செயல்பாடு, இயற்கை வளங்கள், நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால்தான் உற்பத்தி பொருட்கள் மற்றும் அவற்றின் விநியோகத்தில் ஏகபோக கட்டுப்பாடும், போட்டியில் பெரும் கார்பரேஷன்களுக்கு சாதகமான நிலையும் உள்ளது. இந்த பெரும் கார்ப்பரேஷன்கள் அரசு அதிகாரம், மற்றும் அரசு நிறுவனங்களுடன் வலுவான கூட்டணி கொண்டுள்ளன.

உலகமயமாக்கலும், ஏகபோக மூலதனம் நிதிமயமாக்கலும் இந்த கம்பெனிகளின் சொத்துக் குவியலுக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, வால்மார்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு  நிறுவனம். 2017- ஆம் ஆண்டு அதனுடைய மொத்த வருமானம் 500 பில்லியன் டாலரை தாண்டியது. இது பெல்ஜியம் நாட்டினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையைவிட மிக அதிகம்.

இந்த கம்பெனிகளின் கிளைகளின் பொருளாதார செயல்பாடுகள் உலகம் முழுவதும் பல மையங்களில் பரவியிருந்தாலும், அதிக அளவிலான லாபம் வளர்ந்த நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. ஏனென்றால் முன்னணி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் முன்னேறிய நாடுகளை மையப்படுத்தியே உள்ளன. 2017- ஆம் ஆண்டில் உலகின் முன்னணி 500 கம்பெனிகளில் 250 கம்பெனிகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த பெரும் கார்ப்பரேஷன்கள். உலகின் முதல் 100 பன்னாட்டு கம்பெனிகளில் மூன்றில் ஒரு பங்கு முன்னணி நிறுவனங்கள் இந்த நாடுகளைச் சார்ந்தவை.

கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை அவை தளர்த்தி உள்ளன. இந்திய நாட்டில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இன்றுவரை பொருளாதாரத்தை அந்நிய  பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் வேகமாக பின்பற்றப்பட்டு  வருகின்றன. சமீபத்திய பணமயமாக்கல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் இன்றுவரை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் விளைவாக மூலதனக் குவியல் மேலும் அதிகரித்து வந்தது. பல கம்பெனிகள் மேலும் மேலும் பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டன. சிறிய, நடுத்தர கம்பெனிகள் பன்னாட்டு கம்பெனிகளுடன் இணைய வேண்டியந்திடும் கட்டாயத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. பல சிறிய நடுத்தர கம்பெனிகள்ளில் திவாலாகி மூட வேண்டிய நிலை ஏற்பட்டன. 

பெரும் கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்கம் 

ஒவ்வொரு தொழிலிலும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, விதை, பூச்சிக்கொல்லி மருந்தின் உலக சந்தை, ஆறு பன்னாட்டு கம்பெனிகளின்ள் கட்டுப்பாட்டில்டுக்குள் உள்ளது. டூபாண்ட், மான்சான்டோ, சின்ஜென்டா, பாயர், டவ், பிஎஎஸ்எப் ஆகிய கம்பெனிகள் 2015 விவரங்கள் அடிப்படையில், 75 சதம் பூச்சிக்கொல்லி மருந்தின்  உலக சந்தையையும், 63 சதம் விதைக்கான உலக சந்தையையும் மும், 75 சதம் உலக தனியார் ஆராய்ச்சியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 10 பெரும் பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் உலக சந்தையில் 47 சதம் அளவிற்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இந்த வகையில் தனியார் பகாசுர முதலாளித்துவ கம்பெனிகள் அதிக அளவிலான சமூக சொத்தினை கையகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், அவை தொழிலாளர் உழைப்பின் மீது கடுமையான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. அத்துடன், சுரண்டலையும் மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் மூலதனக் குவியலை அதிகரிக்கிறது. உலக அளவில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்துள்ளது.

பெரும் கம்பெனிகளின் மூலதனக் குவியல்  அதிகரிப்புக்கு முக்கிய காரணம், குறைந்த ஊதிய செலவில் உலக அளவில் தொழிலாளர் உழைப்பு கிடைப்பதுதான். பன்னாட்டு கம்பெனிகள் சிறந்த முறையில் வலுவான அமைப்பாக செயல்படுகின்றன. உலக உழைக்கும் மக்களால் ஒன்று சேர்வதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், வளரும் ஏழை நாடுகளிலும்ல் அமைத்தன. அங்கு வேலையில்லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன.

வளரும் நாடுகளின் அரசாங்கங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது மூலதன தேவை மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை பின்பற்ற தூண்டுகின்றனர். சர்வதேச முதலீடுகள் வழியாக மொத்த உள்நாட்டு வளர்ச்சியை பெருக்கிடலாம் என்ற நோக்கில் ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். இதற்கு விலையாக தங்களது மக்களுக்கான சமூக நல  திட்டங்களை குறைப்பது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு காப்பரேட் கம்பெனிகளுக்கு  ஏராளமான வரிச்சலுகைகள், கடன் ஏற்பாடு போன்றவற்றை இந்த அரசாங்கங்கள் உறுதி செய்கின்றன. இத்தகையந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்தியாவிலும் நடந்து வருவது கண்கூடானது. இதனால் இந்தப் பெரும் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைக்கும் மொத்த லாபத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இலாபம் 1950-இல்  4 சதம் மட்டுமே இருந்தது ஆனால் 2019இல் இது 29 சதமாக உயர்ந்து, இன்று பெரும் கொள்ளை லாபமாக வடிவெடுத்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன. நிதி மூலதன கூட்டமும் அவர்களின் ஏஜெண்டுகளும் வர்த்தகம் மற்றும்  முதலீடுகளின் விதிகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். பல பொருளாதார நிபுணர்களும் உலக நிதி மூலதனத்தின் குரலாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்வார்கள். உலகமயமாக்கல், நிதிமயமாக்கல் போன்றவற்றிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளிப்படுத்தி, ஏகபோகங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த அவர்கள் உதவுகின்றனர். நிதி ஏகபோக மூலதனம் ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு உடனடி லாப வேட்டையை துரிதப்படுத்துகிறது. 

மதிப்பிழந்த ஜனநாயகம் 

கடந்த 30 ஆண்டுகளில் நிதி மூலதனம், தொடர்ச்சியான  தொழில்மயத்தை தடுத்து வந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. பெரிய கம்பெனிகளின் மூலதனம் நிரந்தர தொழில் முதலீட்டிலிருந்து மாறி, அதிகமாக ஊக வணிக நிதி பரிமாற்ற செயல்பாடுகளாக மாறின.

மக்களின் வாக்குகள், ஜனநாயக அமைப்பு முறை எதுவுமே பெரும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு தடையாக இருப்பதில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைகளை நிர்ணயிப்பது வால் ஸ்ட்ரீட் நிதி மூலதன கும்பல் மற்றும் ராணுவ தொழில் கம்பெனிகள்தான். அவற்றின் நலன்கள்தான் நாட்டின் நலன்களானாக முன்னிறுத்தப்படுகின்றனது. அரசு பெரும் கம்பெனிகளின் சேவகனாக செயல்பட்டு வருகிறது. இது அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாணயமான டாலர் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் எண்பது சதவீதமான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளும் 90 சதவீதமான சர்வதேச வங்கி பரிவர்த்தனை களும் டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன.  இதனை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. டாலர் மதிப்பை குறைத்து அமெரிக்கா தனது அந்நிய கடன்களை குறைக்கிறது. இந்த வகையிலும் ஏழை நாடுகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

லெனின் ஏகாதிபத்தியம் நூலில் முதலாளித்துவ கூட்டணிகள் வளர்ந்து உலகம் பங்கு போடப்படுவதை குறிப்பிடுகிறார். இது இன்றைய உலகுக்கும் பொருந்துகிறது. சர்வதேச பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றவைக்கிற பிரிட்டன்வுட் ஓட்ஸ்  அமைப்புநிறுவனம் முறை என்று சொல்லப்படுகின்லுகிற உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு போன்றவைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன குவியலுக்கு ஏற்ற வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றன. சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணி நலன்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ(NATO) இராணுவக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்கானக இராணுவக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சோஷலிச நாடுகளுக்கு எதிராகவும் பல கூட்டணிகளை அமெரிக்கா அமைத்து வருகிறது.

பல விஷயங்களில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான சர்வதேச கருத்தை உருவாக்குவதற்கு ஊடகங்களைள்யும், பண்பாட்டு தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சார மதிப்பீடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவுடன் பரப்பி வருகின்றனர்.

இராணுவ கூட்டணிகள் 

ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை பெருமளவுக்கு பலப்படுத்தி வருகின்றனர். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போர்கள்  என ஆறு ஆக்கிரமிப்பு  போர்களை அமெரிக்கா மேற்கொண்டது. அவையும், தற்போது நடந்து வரும் ராணுவ மோதல்கள் அனைத்தும் ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவே நடைபெறுகின்றன. மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவையும் நாசத்தையும் அவை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கை வளங்களை சூறையாடும் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டையும், சுரண்டலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏகபோக மூலதனத்தின் நலனுக்காக தங்களுடைய நாடுகளில் நவீன தாராளமயத்தை பின்பற்றிய பல நாடுகளில் தற்போது இனவெறி, நிறவெறி, வகுப்புவாத வெறி போன்ற சமூகப் பிளவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வாழ்வாதார பாதிப்பு, வேலையின்மை,வறுமை போன்ற ஏகாதிபத்திய கொள்கைகளின் விளைவுகள் இப்படிப்பட்ட சமூகப்பிளவுகளுக்கு வழியஅமைக்கின்றன. குறிப்பாக பல மூன்றாம் உலக நாடுகளில்ள் இவைதைத் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன.

லெனின்  குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும்  அழிவு சக்தியாக உள்ளது. மனித நாகரிகத்தை அழிக்கும் இந்த கொடூரமான அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மார்க்சிய-லெனினியமும், ரஷிய புரட்சி வரலாறும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும்.

===============================================================.

கட்டுரை உதவி:

Five Characteristics of Neo-imperialism: Building on Lenin’s Theory of Imperialism in the Twenty-First Century by Cheng Enfu and Lu Baolin; (Monthly Review; May 01, 2021)

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மீண்டு வருமா வெனிசுவேலா?

இ. பா. சிந்தன்

வெனிசுவேலா என்கிற தென்னமெரிக்க நாட்டை 1999 வரையிலும் அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் ஆட்சி புரிந்து வந்தவரை மேற்குலக நாடுகளோ ஊடகங்களோ அந்த நாடு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை, செய்திகளாக நமக்குத் தெரிவிக்க விருப்பப்பட வுமில்லை. அதன் பிறகு 1999-ல் மக்களின் பேராதரவுடன் `ஹூகோ சாவேசின் ஆட்சி மலர்ந்த பின்னர்தான், வெனிசுவேலாவை அது வரையிலும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந் தவர்கள் எல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கத் துவங்கினர்.

சாவேசும் அவரது அரசும், மக்கள் நலத் திட்டங்களையே அதற்கெல்லாம் பதிலாக கொடுத்தனர்.

 • 1999-ல் 90 பில்லியன் டாலராக இருந்த வெனிசுவேலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2013-ல் 330ரூ வளர்ச்சியடைந்து 385 பில்லியன் டாலராகியது.
 • வெனிசுவேலாவின் அயல்நாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19ரூ ஆக குறைந்தது. ஆனால் அதேகாலகட்டத்தில், அமெரிக்காவின் கடனோ 106ரூ ஆகவும், ஜெர்மனி 147ரூ ஆகவும், ஜப்பான் 60ரூ ஆகவும் உயர்ந்தது குறிப்பிடத் தக்கது.
 • 1999-ல் 66ரூ மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்தார்கள்; அது 2013இல் 23ரூ ஆக குறைந்தது.

வறுமையினை ஒழிப்பதற்காக, 1999 முதல் 2013 வரையிலான 14 ஆண்டுகளில் மக்கள் நலப்பணி களுக்காக 550 பில்லியன் டாலர் செலவிடப் பட்டது.

 • குழந்தை இறப்புவிகிதம் 1 லட்சத்திற்கு 27 என்கிற எண்ணிக்கையிலிருந்து, 13 ஆக குறைந்தது.

நாட்டின் எண்ணெய் வளங்களை எல்லாம் நாட்டுடைமையாக்கி, அதில் வரும் வருமானத்தை வறுமை ஒழிப்பிற்கு பயன்படுத்தியது சாவேஸ் அரசு.

 • 1999 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் 22 புதிய பல்கலைக் கழகங்கள் துவங்கப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் மட்டுமே கல்வி பயின்று கொண்டிருந்த நிலை மாறி, இலவசக் கல்வியால் அனைவருக்கும் கல்வி சாத்தியமாகியிருக்கிறது. உயர் கல்வியும் கூட முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் என்கிற வார்த்தையே இல்லாமல் போயிருக்கிறது.
 • 2000-ஆம் ஆண்டில் 53ரூ  பேர் மட்டுமே எழுத வும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருந்த வெனிசுவேலாவில், 2013க்குள்ளாகவே 95ரூத்தைத் தொட்டு, தற்போது 97ரூ  த்தையும் தாண்டிச் சென்றிருக்கிறது. இத்தகைய சாதனையைப் புரிவ தற்கு கியூபாவும் பெருமளவில் உதவியிருக்கிறது.
 • காலங்காலமாக பணக்காரர்கள் மட்டுமே பட்டம் பெற்று வந்த சூழல் மாறி, இன்று உலகிலேயே உயர் கல்வியில் அதிகமான மாண வர்கள் சேர்ந்து படிக்கும் நாடுகளில் வெனி சுவேலா 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. தென்னமெரிக்க நாடுகளில் கியூபாவுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருக்கிறது வெனிசுவேலா.

இத்தனையையும் மிகக் குறைந்த காலகட்டத் தில் சாதித்திருக்கிற மக்கள் நல வெனிசுவேலா அரசுக்கு இன்று என்னவாயிற்று?

அமெரிக்காவின் தொடர் சதித்திட்டங்கள்

உலகிலேயே மிக அதிக அளவில் எண்ணை இருப்பு கொண்ட நாடு வெனிசுவேலாதான் (சவுதி அரேபியா கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது). சாவேசின் சோசலிச அரசு அமைவதற்கு முன்பு வரை அமெரிக்காவின் கைப் பாவை அரசுகள் பல ஆண்டுகளாக வெனிசு வேலாவை ஆண்டு வந்தமையால், அமெரிக் காவைப் பொறுத்தவரையில் எண்ணை இறக்கு மதிக்கு வெனிசுவேலா எப்போதும் ஒரு நம்பிக் கையான நாடாகவே இருந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த எண்ணை வளமும் வெனிசுவேலாவை ஆண்டுவந்த ஆளும் வர்க்கத்தின் தனிச் சொத்தாகவே இருந்து வந்தது.

உலகிலேயே மிக அதிகமான எண்ணை இருப்பு கொண்ட வெனிசுவேலாவில் 80 சதவீதத் திற்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வந்தார்கள். வெனிசுவேலா மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹூகோ சாவேசின் அரசு பதவியேற்ற பின் நிலைமை தலைகீழாக மாறத் துவங்கியது. பிப்ரவரி 2002-ல் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டு டைமையாக்கியது சாவேஸ் அரசு. அதில் வரும் இலாபம் முழுவதையும் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் 80ரூ  மக்களின் வாழ்க்கையை உயர்த் தப் பயன்படுத்தப்படும் என்றும் பல்லாயிரக் கணக்கான மக்களின் கரகோஷங்களுக்கிடையே அறிவித்ததோடு நிற்காமல், அதற்கு செயல் வடிவமும் கொடுத்தார்.

காலங்காலமாக எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்த வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகளும் அமெரிக்காவும் இணைந்து, வெனிசுவேலாவில் எப்படியாவது ஒரு ஆட்சி மாற்றத்தினை உருவாக்கவேண்டுமென காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்த/எடுத்துவருகிற முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

 • 2002-ல் சாவேசைக் கடத்தி, ஆட்சிக் கவிழ்ப் பினை நடத்த முயற்சித்தது அமெரிக்கா. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வெனிசுவேலா மக்கள் தெருவில் இறங்கிப் போராடி இராணு வத்திற்கு நெருக்கடி கொடுத்து அச்சதியை முறியடித்தனர்
 • உலகிலேயே மிகச் சிறந்த நம்பகமான தேர்தல் முறையினைக் கொண்ட நாடு வெனிசுவேலா தான் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் குழுவே ஆய்வு செய்து பாராட்டியும், அதனை முறைகேடான தேர்தல் முறையென்று சொல்லி, 2005-ல் எதிர்க்கட்சி யினரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வைத்தது அமெரிக்கா. அதன் மூலம், உலக அரங் கில் வெனிசுவேலாவின் பெயரையும் தரத்தையும் தாழ்த்திடலாம் என்கிற கணக்கினை போட்டது அமெரிக்கா. ஆனால், இம்முறையும் அமெரிக்கா வின் எண்ணம் ஈடேறாமல் போனது.
 • 2012 வெனிசுவேலா தேர்தலுக்கு முன்பாக எண்ணைக் கிணறுகள் சில தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்திற்கு, முன்னாள் எண்ணைக் கிணறு முதலாளிகள் காரணமாக இருக்கலாம் என்பதற் கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
 • சாவேசின் மரணத்திற்குக் காரணமான கேன்சர் உருவான விதத்திலேயே மர்மங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
 •  சாவேசிற்குப் பின் வந்த மதுரோவும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், ஒட்டுமொத்த தேர் தலையே முறைகேடாக நடந்ததென குற்றஞ் சாட்டினர். அதனைத் தொடர்ந்து நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அடுத்தடுத்த அதிபர் தேர்தல்களில் மதுரோ வின் அரசை விட்டுவைத்தால், நிரந்தரமாக வெனிசுவேலாவைக் கைப்பற்றவே முடியாமல் போய்விடும் என்று கருதி, ஒவ்வொரு முறையும் தேர்தல் நடப்பதற்கு முன்பும், பின்பும் குழப்பங் களை விளைவிக்கத் துவங்கிவிட்டனர்.

பல முறை மதுரோவைக் கொல்ல முயற்சி நடந்தது; அவரது சீனப் பயணத்தின்போது போர்டோ ரிகோ வழியாக பயணிக்கவிடாமல் தடுத்தது; வீதிகளில் இறங்கி அரசைக் கவிழ்க்க கலவரங்களைத் தூண்டியது; தேர்தலுக்கு மறுநாளே குழந்தைகள் உட்பட பலரை அந்தக் கலவரத்தில் கொன்றது என பலவழிகளையும் கையாண்டு பார்த்தது அமெரிக்கா.

சாவேஸ் காலத்திலிருந்தே அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிவந்த அமெரிக்க சதியாளன் ரோஜர் நொரிகா மற்றும் ஒட்டோ ரெய்க் ஆகியோர், அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த மதுரோவை கலவரமேற்படுத்திக் கொல்ல மிகப்பெரிய சத்தித் திட்டம் தீட்டியதை வெனிசுவேலா அரசு அம்பலப் படுத்தியது.

2013-ல் சாவேசின் மரணம்

நூற்றாண்டுகளாக ஆதிக்க சக்திகளின் கை களில் நேரடியாகவோ அல்லது கைப்பாவை அரசுகளின் வழியாகவோ அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு தேசம், ஒட்டுமொத்தமாக சுரண்ட லைப் புரிந்துகொன்டு எழுச்சிபெற்று ஒரு புரட் சிகர அரசை அமைத்துவிடவில்லை. அந்நாட்டில் ஏற்கனவே இருந்த தேர்தல் முறைகளைப் பயன் படுத்தி மாற்றத்தை உருவாக்கிக்காட்டுகிறேன் என்று `ஹூகோ சாவேஸ் என்கிற ஒரு தனி மனிதனின் நம்பிக்கைக் குரலும் அவருடன் இணைந்த சில சமூக இயக்கங்களும் இணைந்து அங்கே 1998-ல் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதனால் கீழிருந்து வலிமையாக கட்டமைக்கப் பட்ட ஒரு புரட்சிகர அரசாக அவ்வரசு உருவாக வில்லை.

சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர். அதனை மக்களும் நம்பத் துவங்கினர். அதன் காரணமாகவே மக்கள்நல அரசை நடத்துவதற்கு உதவுகிற வகையிலான சட்டங்களை இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் உருவாக்கப்பட்ட புதிய அரசிய லமைப்புச் சட்டத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக எண்ணை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக அரசுடைமை யாக்கியது; கல்வியையும் மருத்துவத்தையும் முற்றிலு மாக இலவசமாக்கியது; நாடு முழுவதிலுமுள்ள மக்களை அரசில் நேரடியாகவோ மறைமுகமாக வோ பங்கெடுக்க வைத்து மக்கள் பங்கெடுப்பு ஜனநாயகமாக மாற்றத் துவங்கியது என சாவேஸ் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பெரும்பான் மையான மக்கள் ஒத்திசைவு வழங்கினர்.

சோசலிசம் குறித்து வெனிசுவேலாவின் பெரு வாரியான மக்களுக்கு புரிதல் ஏற்படுகிற வரையி லும் தேர்தல்களின் அவசியத்தை சாவேஸ் நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேயே பாராளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலு மான அனைத்துத் தேர்தல்களையும் வர்க்கப் போராக மாற்றி பிரச்சாரம் செய்தார். உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் இருப்பதற்கு தேர்தல் வெற்றிகளும், அதனைத் தொடர்ந்த திட்ட நிறைவேற்றங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்தையும் பிரச்சாரமாக்கினார்.

தன்னுடைய அதிகார எல்லைக்குட்பட்டிருந்த எண்ணை நிறுவனங்களை நாட்டுடைமையாக்க முடிந்த சாவேஸ் அரசால், அதற்கு அடுத்த படியாக இருந்த மற்ற முக்கியமான உற்பத்தித் துறைகளான விவசாயம் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளை அரசுடைமையாக்கவோ மக்களின் வசம் ஒப்படைக்கவோ அவ்வளவு எளிதாக இயலவில்லை. உற்பத்தி மட்டுமின்றி, உற்பத்தி செய்தவற்றை கொன்டு சேர்க்கும் விநி யோக மற்றும் விற்பனை வலைப்பின்னல்களை யும் ஆக்கிரமித்திருக்கிற பெருமுதலாளிகளிட மிருந்து பறிக்கவும் முடியவில்லை. அதனால் அதற்கு மாற்றாக மக்களிடமே அதிகாரம் அதிக மாக இருக்கும்படியான கூட்டுறவு அமைப்புகளை (சமூக உற்பத்தி நிறுவனங்கள்) சாவேஸ் அரசு அதிவேகமாக நாடெங்கிலும் உருவாக்கத் துவங் கியது. 2006-ல் சாவேஸ் தேர்தல் வாக்குறுதியாக சொல்லியபடி, தன்னாட்சி பெற்ற மக்கள் கம்யூன்கள் உருவாக்கப்பட்டன. அரசு வழங்கும் நிதியினை எவ்வாறு செலவு செய்யலாம், தங் களது கம்யூனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கலாம் என்பதை அந்தந்த கம்யூன்களே கூடி விவாதித்து முடிவெடுக்கலாம். ஆனால் இவையெல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முன்னரே யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் சாவேஸ் 2013-ல் மரணமடைந்தார். சோசலிசக் கட்டமைப்பு அரசு அமைவதற்கு முந்தைய ஒரு மக்கள் நல அரசில் தலைமையின் பாத்திரம் மிகமுக்கியம் என்பதை சாவேஸ் பதவி வகித்த அந்த 14 ஆண்டுகளிலும் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

சாவேஸ் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரைக் கொல்லவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் அமெரிக்கா பலமுறை முயன்று தோற்றிருந்தது. அதனை சாவேஸ் மக்களின் உதவியோடே மிக லாவகமாகக் கையாண்டு அனைத்து சதிகளையும் முறியடித்தார் (அவருடைய மர்மமான மரணத் தைத் தவிர). அவருக்குப் பின்வந்த மதுரோவுக்கு, தன்னைச் சுற்றியுள்ள சதி வலைகளும், அவர் வந்து சேர்ந்திருக்கிற பதவியின் நிலையும் புரிவதற்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது.

வெனிசுவேலா மீதான பொருளாதாரப் போர்

இப்படியான சூழலில், தனக்கு ஆதரவான கட்சிகளை தேர்தல்களில் வெற்றி பெற வைத் தோ, ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்தியோ மதுரோ வைக் கொன்றோ, வெனிசுவேலாவினுள் நுழைய முடியாமல் போன அமெரிக்கா, எத்தனை பில்லி யன் டாலர் செலவானாலும் வெனிசுவேலாவை தனது கைப்பாவை நாடாக மாற்றவேண்டு மென்பதற்காக ஒரு புதுவகையான போரினை ஆயுதமாகக் கையிலெடுத்திருக்கிறது. அதுதான் “பொருளாதாரப் போர்”. வெனிசுவேலாவில் செயற்கையான பொருளாதார நெருக்கடியினை உருவாக்கி, அரசின் மீது மக்களுக்கு வெறுப் பினை உண்டாக்கி, மிகப்பெரிய குழப்பத்தினை விளைவிப்பதே இப்பொருளாதாரப் போரின் குறிக்கோள்.

இதன் முதலாவது சதியாக, 1999 முதல் மக்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டு வந்திருக்கிற உள்கட்டமைப்பு வசதியினை தகர்த்துவிட்டால், வெனிசுவேலாவின் பொருளாதார வளர்ச்சி யினை தடுத்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. அதன்படி, சாவேஸ் இறந்ததிலிருந்தே,, வெனிசுவேலாவின் மின்சார பகிர்வு நிலையங்கள் ஒவ்வொன்றாக குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. மின்சாரத்தை தடைசெய்து, அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு உண்டாக்க முயல்கிற முயற்சி இது. அதனைத் தொடர்ந்து, “இருளில் வெனிசுவேலா”, “மின்சாரம் கூட வழங்காத அரசு” என்று ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் வெனிசுவேலா அரசு, மின்பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வருகிறது.

இரண்டாவது சதியாக, உணவுப் பொருட் களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யத் திட்டமிட்டது அமெரிக்க ஆதரவுக் கூட்டணி. முந்தைய ஆண்டைவிட, 30ரூ  கூடுதலாக உற்பத் தியாகியிருக்கிறது சோளம்; 5.5 லட்சம் டன் அரிசியும், 2.2 லட்சம் உருளைக்கிழங்கும் 2013-ல் உற்பத்தியாகியிருக்கிறது. இறக்குமதியே செய்யத் தேவையில்லாத அளவிற்கான உற்பத்தியிது. ஆனாலும், திடீரென சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறியோ, பாலொ, அரிசியோ கிடைக்காமல் போனது. அதிரடியாக அரசு அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து பார்த்தால், அவர் களது குடோனில் டன் கணக்கில் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். உற்பத்தியான உணவுப் பொருட்களை மொத்த மாக விலைக்கு வாங்கி, ஊருக்கு வெளியே இன்னும் ஏராளமான குடோன்களில் பதுக்கும் வேலையினை செய்துவருகிறார்கள்.

வெனிசுவேலாவின் மிகப் பெரிய பணக்கார வியாபாரிகள், முன்னாள் எண்ணை நிறுவன முதலாளிகள், எதிர்க்கட்சியினர் துணையோடு அமெரிக்க அரசு கோடிக்கணக்கான டாலர் களை செலவழித்து இப்பணியினை செய்து வரு கிறது. வெனிசுவேலா அரசோ தன்னால் இயன்ற வரை அதனை மீட்டெடுத்து மக்களுக்கு நியாய மான விலையில் வழங்கிவருகிறது.

மூன்றாவது சதியாக, பதுக்கிய உணவுப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து விற்பனைக்கு விடுவதன் மூலம், விலை யேற்றத்தை விண்ணுயரச் செய்துவிட்டால், அரசின் மீதான அவநம்பிக்கை மக்களுக்கு அதிகமாகும் என்று சதியாளர்கள் திட்டமிட்டனர். இதனால், உணவு உற்பத்தியில் வெனிசுவேலா தன்னிறைவு பெற்றிருந்தாலும், பற்றாக்குறையினை தீர்க்க முடியாமல் போகிற கட்டாயத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, உற்பத்தியான உணவுப் பொருட்கள் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கப்பட்டு, அண்டை நாடான கொலம்பியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுபோய் விற்கப்பட்டன. இவற்றின் மூலம் எதிராளிகளின் சதிப்படி உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் வெனிசுவேலாவின் பணவீக்கம் 2013-ல் இருந்தே அதிகரிக்கத் துவங்கியது.

இப்படியொரு சூழலுக்காகவே காத்திருந்த மேற்குலக ஊடகங்கள், “சோமாலியாவாக மாறிக் கொண்டிருக்கிறது வெனிசுவேலா” என்று தனது பிரச்சாரப் பணியினை முடுக்கிவிட்டன. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், வெனிசுவேலாவின் தற்போதைய உணவு உற்பத்திமுறை பல மடங்கு முன்னேறி யிருக்கிறது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வுப்படி, வறுமை ஒழிப்பில் வெனிசுவேலாவின் உற்பத்திமுறை மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என பாராட்டியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் வெனிசு வேலாவைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியு மிருந்தது.

நான்காவது சதியாக, உணவுப் பொருளல்லாத இன்னபிற தொழிற்சாலைகளின் உற்பத்தியைக் குறைப்பதற்கு தொழில் நிறுவனங்களுக்கு பெரு மளவில் பணம் வழங்கப்பட்டும், உற்பத்தியான பொருட்கள் சந்தைக்கு வராமல் இரகசியக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவும் விநியோ கிப்பாளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டு வாடா நடந்துவருகிறது. வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்த, அமெரிக்க மக் களின் வரிப்பணம் வாரியிறைக்கப்படுகிறது. இதற்காகவே செயல்பட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களை வீடியோ ஆதாரத்துடன் அம் பலப்படுத்தி, வெனிசுவேலாவிலிருந்து வெளி யேற்றியது மதுரோவின் அரசு.

ஐந்தாவது சதியாக, மேலே குறிப்பிட்டிருக்கிற அனைத்து சதித்திட்டங்களின் மூலம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய வெறுப்பினை மக்களிடம் வரவைத்து, தேர்தல்களில் மதுரோ அரசைத் தோல்வியுறச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை நடத் தத் திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா தலைமை யிலான சதிக் கூட்டணி.

ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா தலைமையில் சதிக் கூட்டணி

2013-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, வெனி சுவேலா ஆட்சியினை கவிழ்ப்பது எப்படி? என்பதை விவாதிக்க ஒரு இரகசியக் கூட்டம் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் பங்குபெற்றவர் களின் விவரங்களையும், கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளையும் ஆர்.டி. செய்தித் தொலைக் காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது.

1. டெமாக்ரடிக் இண்டெர்னஷனலிசம் பவுண் டேசன் – இந்நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க ஆதரவு கொலம்பிய தீவிர வலதுசாரியுமான அல்வரோ உரிபே மிக முக்கியமான நபராக இக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.

2. கொலம்பியா ஃபர்ஸ்ட் – இவ்வியக்கம்தான் அல்வரோ உரிபேவை கொலம்பியாவின் அதிபராக்க ஆதரவளிக்கிறது.

3. எப்.டி.ஐ. கல்சல்டிங் – ஆட்சிக் கவிழ்ப் பிற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்

4. யு.எஸ்.ஏ.ஐ.டி. (யுஎஸ் எய்ட்) லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உதவும் அமெரிக்க நிறுவனம். இது ஒரு அமெரிக்க அரசு நிறுவனம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருக்கும் அரசுகளை கண்காணிப்பதற்காகவும், அமெரிக்க எதிர்ப்பு அரசுகளை கவிழ்க்கிற திட்டங்களை மறைமுக மாகத் தீட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பிது. அதன் தலைவரான மார்க் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

5. ஜே.ஜே. ரெண்டன் – லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கிற தேர்தல்களில், அமெரிக்க ஆதரவு நபர்களை வெல்லவைக்க, அரசியல் தந்திரங்களையும் வியூகங்களையும் அமைக்கிற பணியினைச் செய்கிறவர்.

6. மரியா கொரினா – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி.

7. ஜோலியோ போர்சஸ் – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி. அக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டவைகளையும் எடுக்கப்பட்ட முடிவுகளை யும் தொகுத்து அவர்கள் தயாரித்த இரகசிய ஆவணத்தின் சில பகுதிகள் கீழே:

வெனிசுவேலாவில் நடந்து கொண்டிருக்கிற ஆட்சியை மாற்ற, அந்நாட்டின் எதிர்கட்சியின ரோடு விவாதித்து தயாரிக்கப்பட்ட வியூகத் திட்டம் இது.

செயல்திட்டம்

வெனிசுவேலா மக்களின் இன்றைய பிரச் சனைகளான உணவுப் பற்றாக்குறை, பொருள் கிடைக்காமை போன்றவற்றை பெரியளவில் மக்களிடையே கொண்டு சென்று, ஹென்றிக் கேப்ரைல்சின் எதிர்க்கட்சியினை வெற்றிபெறச் செய்வது.

மக்களின் அன்றாடத் தேவைகளை தடை செய்வதை தொடர்ந்து செய்வதோடு மட்டு மல்லாமல், அதிகப்படுத்தவும் வேண்டும். குறிப் பாக, மின்சாரம் கிடைக்காமல் செய்து, அரசின் இயலாமையாகவும், பொறுப்பற்ற தன்மையாக வும் மக்களை உணரவைப்பது.

அமெரிக்க-வெனிசுவேலா உறவை ஆதரித்து பிரச்சாரம் செய்தால், தேவைப்படும்போது அமெரிக்க ஆதரவு அமைப்புகளை தலையிட வைக்க ஏதுவான சூழலை உருவாக்குவது.

நெருக்கடி நிலையினை வெனிசுவேலா தெருக் களில் கொண்டுவந்து, அதன்மூலம் கொலம்பிய அரசின் உதவியுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை தலையிட வைக்க முயற்சிப்பது.

வன்முறையை வெடிக்க வைத்து, அதன்மூலம் முடிந்தால் உயிரிழப்புகளையும் படுகாயங்களை யும் நிகழவைப்பது.

தொடர் உண்ணாவிரதங்களை ஊக்குவிப் பது, மக்களை கூட்டங்கூட்டமாக தெருவில் போராடவைப்பது, பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ன பிற அரசுத்துறைகளில் குழப்பங்கள் விளை விப்பது.

இருக்கிற எல்லா வாய்ப்புகளையும், அமைப்பு களையும் பயன்படுத்தி அரசுக்கு இழிவினை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிக்கு நம்பகத்தன்மையினை அதிகரிப்பது.

அமெரிக்காவின் உதவியோடு, வெனிசுவேலா அரசையும் அரசின் உயரதிகாரிகளையும் போதை மருந்து கடத்தலிலும், பணமோசடியிலும் ஈடு பட்டதாக செய்தி பரப்புவது.

அமெரிக்க ஆதரவு லத்தீன் அமெரிக்க நாடு களின் அரசுகளை வெனிசுவேலாவிற்கு எதிரான நிலையில் வைத்திருப்பது.

வெனிசுவேலாவிற்கு ஆதரவாக இருக்கிற அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்வடார், நிகாரகுவா போன்ற நாடுகளின் நன்மதிப்பை குறைத்து லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் பிரச் சாரம் மேற்கொள்வது.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பெரும் பாலான பதவிகளை எதிர்க்கட்சியினர் பிடிப் பதற்கு, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனை வருக்கும் மேலும் கூடுதலாக நிதி வழங்குவது.

எதிர்கட்சியினர்தான் மிகச்சிறந்த மாற்று என்கிற கருத்தைப் பரப்ப, ஒன்பது சர்வதேச ஊடகங்களின் பத்திரிகையாளர்களை ஏற்பாடு செய்வது, (பி.பி.சி., சி.என்.என்., நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் போஸ்ட், ரிவ்டர்ஸ், இஎப்இ, ஏ.பி., மியாமி ஹெரால்ட், டைம், எநnளைரஎநடடயய கிளாரின், ஏபிசி, …). வெனிசுவேலா தலைநகரில் இருக்கும் அயல்நாட்டு ஊடக சங்கத்துடனும் தொடர்பு வைத்துக்கொள்வது.

வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி குறித்து, சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவது.

அமெரிக்காவிலிருக்கிற வெனிசுவேலா மற்றும் க்யூபாவிற்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வெனிசுவேலா அரசை வீழ்த்து கிற இவ்வியூகத்திட்டத்திற்கு உதவிகோருவது.

முன்னாள் இராணுவத்தினர், அதிருப்தி இராணுவத்தினர் என இதற்கு ஆதவளிப்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து, ஒரு ஆயுதந்தாங்கிய இராணுவப்படையினை தயார்செய்து வைப்பது, தேவைப்படுகிறபோது அந்த இராணுவத்தை பயன்படுத்துவது அல்லது அந்நிய படைகளை அனுமதிக்க உதவப் பயன் படுத்துவது.

 அமெரிக்கா ஒரு சதிக் கூட்டணி அமைத்து இப்படியானதொரு திட்டத்தினை முன்வைத்தே வெனிசுவேலாவில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் வெனிசுவேலாவை தனதாக்கிவிட வேண்டு மென்று வெனிசுவேலாவின் பெருமுதலாளிகள், எண்ணைக்காகக் காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகள், பக்கத்து நாடான கொலம்பியாவின் அதிதீவிர வலதுசாரிகள், மற்றும் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலை யாட்டி எதிர்க்கட்சிகள் – என்று ஒரு மிகப்பெரிய சுரண்டல் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது.

குழப்பம் விளைவித்து, ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, மக்களாட்சியினை மீண்டும் வராமல் பார்த்துக் கொள்கிற நடவடிக்கைகளில் இறங்கு வது  அமெரிக்காவிற்கு ஒன்றும்  புதிதல்ல. சிலி நாட்டு மக்களின் ஏகோபித்த  ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் சால்வடாரை 1973-ல் இதே போன்றதொரு குழப்பம் விளைவித்தே கொலை செய்து ஆட்சிக் கவிழ்ப்பையும் நிகழ்த் தியது அமெரிக்கா. இதன் விளைவாக 40 ஆண்டு களாகியும், இன்று வரையில் சிலி நாட்டில் நம்பிக்கை தரும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசினை ஏற்படுத்த முடியாமலே போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2014 இல் துவங்கிய எரிபொருள் விலை வீழ்ச்சி

2013-2014 ஆண்டுகளில் வெனிசுவேலாவுக்கு பாதகமான இரண்டு முக்கியமான, எதிர்பாராத, அதிர்ச்சியான நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று சாவேசின் மரணம், மற்றொன்று பல்வேறு சர்வதேச புறக்காரணிகளால் வீழ்ச்சியடையத் துவங்கிய எண்ணை விலை. 2012-2013 வரையிலும் ஒரு பேரல் 100 டாலருக்குக் குறையாமல் விற்றுக்கொண்டிருந்த ஒரு பேரல் எண்ணை, 30 டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. வெனி சுவேலாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 98ரூ  த்தையும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50ரூ த்திற்கு மேலும் ஆக்கிரமித்திருப்பது எண்ணை உற்பத்திதான். அதில் 80ரூ த்தை அப்படியே மக்கள் நலத் திட்டங்களுக்கு வெனிசுவேலா திருப்பியனுப்பி ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருசேர முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில், அந்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழக்க வேண்டி வந்ததால், வெனிசு வேலாவால் சமாளிக்கவே முடியவில்லை என்பது தான் உண்மை. உற்பத்திச் செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலை வெனிசுவேலா அரசு எண்ணைத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

எண்ணை ஏற்றுமதியை மட்டுமே பெரு மளவில் நம்பியிருக்கும் பொருளாதாரத்தைக் கொன்டிருக்கும் ஒரு நாட்டில், சர்வதேச கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடையும் போதெல் லாம், அந்நாட்டின்  கடனின் அளவு கூடும். வெனிசுவேலாவிலும் அது நடந்து கொண்டிருக் கிறது. 1980களில் ஒருமுறை சர்வதேச சந்தையில் எண்ணை விலை குறைந்தபோதும், இதேபோன்று வெனிசுவேலாவில் நடந்திருக்கிறது.

இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, வெனி சுவேலா மீது பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் இரன்டு முக்கியமான பிரச்சனைகளில் வெனிசுவேலா சிக்கிகொன்டிருக்கிறது. ஒன்று, அமெரிக்காவுக்கோ அல்லது அமெரிக்கத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கோ நேரடியாக பெட்ரோலை விற்க முடியாமல் போகிறது. அதற்கு சுற்றிவளைத்து சில தீர்வுகள் இருக்கிறபோதிலும், அப்படியாக பெட்ரோலை விற்பதற்கு, ஒரு பேரலுக்கு குறைந்தது 6 டாலராவது கூடுதலாக செலவா கிறது. அதனால் வெனிசுவேலா விற்கிற பெட் ரோலின் விலையும் கூடுகிறது. இதன்காரணமாக வெனிசுவேலாவின் பெட்ரோல் விற்பனையும் குறைகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணைக் கிணறுகளில் இருந்து கள்ள சந்தையில் விற்கப்படும் எண்ணையின் விலை பேரலுக்கு கிடைக்கும்போது, 6 டாலர் கூடுதலாக விற்கப்படும் வெனிசுவேலா பெட் ரோலை வாங்க முன்வரமாட்டார்கள் தானே. ஆக, சர்வதேச பெட்ரோல் விலையும் குறைந்து, வெனிசுவேலாவின் இலாபமும் குறைந்து, விற்பனை யும் குறைந்து போயிருக்கிறது. வெனிசுவேலாவின் எண்ணை விற்பனையில் 40ரூ  அளவிற்கு ஏற்கனவே முன் தேதியிட்டு எண்ணை வழங்குவதாக வாக் குறுதி வழங்கி கொடுக்கப்படுபவைதான். ஆக அதற்கான காசும் வந்து சேராது. 15,000 ரூபாய் மாத வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஒரு குடும்பத்தின் மாத வருமானம், திடீரென 5,000 ஆக மாறினால், என்னவாகும்? செலவை சமாளிக்க கடன் வாங்குவதும், அந்தக் கடனுக்கு வட்டி கட்ட மீண்டும் கடன்வாங்குவதும், அந்தக் கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்குவது மாகத் தானே இருப்போம். ஏறக்குறைய வெனிசு வேலாவும் அப்படியான சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறது. வேறு வருமானத்தை உருவாக்கு தற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி யான பிரச்சனையை எதிர்கொள்வது கடினமான தாக இருக்கிறது வெனிசுவேலாவிற்கு.

ஒரு நாளைக்கு சராசரியாக 15 இலட்சம் பேரல்கள் வரையிலும் உற்பத்தி செய்து கொண்டிருந்த வெனிசுவேலா, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பின்னர் 9 இலட்சம் பேரல்கள் அளவுக்கே உற்பத்தி செய்ய முடிகிறது. அதுமட்டுமில்லாமல் தனக்கு அருகாமையில் இருக்கும் நாடுகளுக்குக் கூட சுதந்திரமாக விற்பனை செய்யமுடியாத காரணத்தில் வெகுதூரத்தில் இருக்கும் ஆசிய கண்டத்து நாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. 2019 இல் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணையில் 70ரூ  அளவிற்கு ஆசியாவிற்குத்தான் விற்றிருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 10 இலட்சம் பேரல்கள் (கடந்த காலங்களில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பேரல்கள்) வரையி லும் உற்பத்தி செய்ய வேண்டிய ஒப்பந்தங்கள் கிடைத்திருந்தும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சில நாடுகள் பின்வாங்கியிருக்கின் றன. அதனால் உற்பத்தியும் விற்பனையும் தொடர்ந்து குறைந்துகொண்டே தான் இருக்கின்றன.

தென்னமெரிக்காவில் புதிய வலதுசாரி அரசுகளின் உருவாக்கம்

ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களையும் இயற்கை வளங்களையும் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு சுரண்டி, திவாலாக்கிவிட்ட பின்னர் அங்கிருந்து தனது மூலதனத்தையும் அதுவரை பெற்ற இலாபத்தையும் அள்ளிக் கொண்டு வேறெங்காவது நகர்ந்துவிடும் முதலாளித்துவம். பின்னர் அதனை சரிசெய்வதற்கு மாற்று சக்தி களும் முற்போக்கு அமைப்புகளும் இடதுசாரி களும் அரும்பாடுபட்டு அத்தேசத்தையும் அதன் மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான வாழ்க்கைக்கு மீட்டெடுத்து வரும் பணியினை மேற்கொள்வார்கள். ஓரளவுக்கு அத்தேசம் எழுந்து நிற்கிற தருவாயில், மீண்டும் சுரண்டு வதற்கு முதலாளித்துவம் வண்டிபிடித்து சரியான நேரத்திற்கு வந்து சேரும். இதனை தென்னமெரிக்க நாடுகளின் வரலாற்றை உற்று நோக்கினாலே விளங்கிக்கொள்ளலாம்.

கடுமையான நிதிநெருக்கடிகளை உருவாக்கி விட்டு அர்ஜன்டைனா, ஈக்வடார், வெனிசுவெலா என பல நாடுகளிலிருந்து காலங்காலமாக சுரண்டியவர்கள் இரவோடு இரவாக தப்பித்து ஓடிவிட்டு, நிலைமை ஓரளவுக்கு சீரானதும் மீண்டும் புதிய பெயர்களாகவும் புதிய கட்சிகளா கவும் திரும்ப வந்துகொண்டிருக்கின்றனர்.

2002 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் மட்டும் தென்னமெரிக்க நாடுகளில் 7 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து இயல்பான நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்த தென்னமெரிக்க இடதுசாரி அரசுகள்தான். அவர்களில் பிரேசிலில் மட்டுமே 3 கோடி பேரின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பிரேசிலில் சமீபத்தில் அதிதீவிர வலதுசாரியான பொல் சோனாரோ சமீபத்திய தேர்தலில் அமோ கமாக வென்று  பிரேசிலின் அதிபராகியிருக்கிறார். இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதை ஆதரித்துப் பேசிவருபவர் அவர். இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த இராணுவ ஆட்சியையும் அப்போது நடத்தப்பட்ட சித்தரவதைகளையும் கூட பாராட்டிப் பேசுகிறார். தென்னமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதிக்கும் மேலான பகுதிகளை உள்ளடக்கிய தேசம் பிரேசில். அதிலும் வெனிசுவேலாவோடு 2,199 கிலோ மீட்டர் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் நாடும் கூட.

வெனிசுவேலாவுடன் 2,219 கிலோமீட்டர் அளவிற்கான எல்லையைக் கொண்டிருக்கும் கொலம்பியாவும் வெனிசுவேலாவில் குழப்பம் விளைவிக்க உதவும் நாடாக இருந்துவருகிறது. 1998-ல் சாவேஸ் ஆட்சியைப் பிடித்த அதே வேளையில், கொலம்பியாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. “ப்ளான் கொலம்பியா” என்கிற பெயரில் துவக்கப்பட்ட அத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் கடத் தலைத் தடுக்க கொலம்பியாவுக்கு அமெரிக்கா உதவும் என்பதுதான் ஒப்பந்தம். 2000-ம் ஆண்டில் அதற்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்க காங்கிர சின் அனுமதியும் கிடைத்துவிடுகிறது. உடனே 500 அமெரிக்க இராணுவப்படையினரும் 300 அமெரிக்க ஒப்பந்தப் படையினரும் கொலம் பியாவிற்குள் நுழைந்தனர். அதுவே 2004-ல் 800 அமெரிக்க இராணுவப்படையினராகவும் 600 ஒப்பந்தக்காரர்களாகவும் அதிகரித்தது. ஆனால் அதேகாலகட்டத்தில் கொலம்பியா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட போதைப்பொருளின் அளவும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது. ஆனால் கொலம்பிய அரசுகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, உதவி என்கிற பெயரில் கோடிக்கணக்கில் கொலம்பியாவுக்கு அமெரிக்கா வாரி இறைத்த தும் ஒரு முக்கியமான காரணம்.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் கொலம் பியாவில் இராணுவ தளவாடம் அமைத்தால், அதற்கு அருகிலிருக்கும் வெனிசுவேலா, ஈக்வடார், ப்ரேசில் போன்ற இடதுசாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க வும், தேவைப்பட்டால் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும் என்பதாலேயே எவ்வளவு செலவு செய் தாலும் கொலம்பியாவை மட்டும் தன் கட்டுப் பாட்டில் வைத்துகொண்டே இருக்க விரும்பியது அமெரிக்கா. வழக்கம்போல உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அட்டூழியங்கள் நிகழ்த் தும் அமெரிக்க இராணுவம் கொலம்பியாவை யும் விட்டுவைக்க வில்லை. 2003-2007 வரை யிலான ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கொலம்பியாவில் அமெரிக்க இராணுவப் படையினர் 54 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர அமெரிக்க இராணுவப்படையினர் இருக்கும் பகுதிகளில் வாழும் பெண்களை கட்டாயப் படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்திருப் பதாக மனித உரிமை ஆர்வலர்களின் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இன்றைக்கு வெனிசுவேலா குறித்து எதிர்மறையான செய்திகளை வெளியிட் டுக் கொண்டே இருக்கிற சர்வதேச ஊடகங்கள், அமெரிக்கப் படைகள் குடியிருக்கும் கொலம் பியாவில் தான் உலகிலேயே சிரியா, சூடான் நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியாக, 50 இலட்சம் மக்களுக்கும் மேல் உள்நாட்டு அகதிகளாக தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள் என்பதை மறைக்கின்றன. ப்ரேசிலில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததும், ஈக்வடாரில் ரஃபேல் கொரேயா என்கிற இடதுசாரி அதிபருக்கு அடுத்ததாக அதிபராகியிருக்கும் மொரானோ மேற்குலகிற்கு எதிராகப் பேசாத போக்கினைக் கடைப்பிடிப்பதாலும், கொலம்பியாவில் இருக் கும் அமெரிக்கப் படையினருக்கும் வெனிசு வேலா ஒன்றுதான் வேலை என்றாகிவிட்டது.

அதனால் கொலம்பியா-வெனிசுவேலா எல்லை யில் குழப்பம் விளைவிப்பது, பெட்ரோலிய பொருட்களின் கள்ள சந்தையை உருவாக்குவது, போலி பொலிவார் பண நோட்டுகளை அச்சிட்டு உள்ளே இறக்குவது, வெனிசுவேலாவின் இறக்கு மதியில் கைவைப்பது, வெனிசுவேலா சந்தையில் பொருட்களை மொத்தமாக வாங்கி தட்டுப்பாடு களை உருவாக்குவது என தொடர்ந்து கொலம் பியா வழியாகவே அமெரிக்கா அனைத்தையும் சாதித்துக் கொள்கிறது.

அதேபோல 2008-ல் தென்னமெரிக்க நாடு களின் கூட்டமைப்பை வெனிசுவேலாவின் சாவேஸ், ஈக்வடாரின் ரஃபேல் கொரேயா, பொலிவியா வின் இவா மொரால்ஸ் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கினர். பன்னிரண்டு தென்னமெரிக்க நாடுகள் அதில் இணைந்திருந்தன. கடந்து சில ஆண்டுகளாக தென்னமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் வலதுசாரிகள், அந்த கூட்டமைப்பையே இல்லாமல் செய்யும் முயற் சியாக, ப்ரோசூர் (தென்னமெரிக்க முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு) என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கின்றன. ப்ரேசில், ஈக்வடார், சிலி, அர்ஜன்டைனா, கொலம்பியா, பராகுவே, உருகுவே மற்றும் கயானா ஆகிய எட்டு நாடுகள் இணைந்திருக்கின்றன. வெனிசு வேலா அங்கம் வகித்த தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைக் கட்டிடத்தையே காலி செய்துவிட்டு வெளியேறுமாறு ஈக்வடார் அதிபர் மொரானோ கட்டளையிட்டிருக்கிறார்.

இறுதியாக…

வெனிசுவேலாவுக்கு பெட்ரோலை விற்க வேண்டும்; சீனாவுக்கோ அதிகமாக பெட்ரோல் வேண்டும். ஆக வெனிசுவேலாவுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் சீனா பண உதவி செய்து வருகிறது. அதற்கு பதிலாக வெனிசுவேலாவும் பெட்ரோல் அனுப்பி வைக்கிறது. சீனாவுக்கு சென்று சேர்கிற பெட்ரோலை நிறுத்தினாலே சீனாவின் வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிற அமெரிக்கா, சீனாவுக்கு பெட்ரோல் வழங்குகிற ஒவ்வொரு நாட்டையும் குறிவைக் கிறது. அதன் ஒரு அம்சமாகத்தான் ஈரானுடன் போர் தொடுக்கவும், வெனிசுவேலாவின் மதுரோ வின் ஆட்சியைக் கவிழ்க்கவும், சீனாவுக்கு பெட்ரோல் கொண்டுசெல்லும் கப்பல்களின் பாதையில் இருக்கும் இலங்கையில் நுழைந்து இராணுவத் தளவாடத்தை அமைக்கவும் அமெரிக்கா துடி யாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் வெனிசுவேலாவில் மட்டுமே தேர் தலின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா நினைத்தால் இன்றைய தேதிக்கு அங்கே தேர்தலின் மூலமே மதுரோவின் ஆட்சியை எதிர்க்கட்சியின் வசம் கொண்டு சேர்த்துவிடமுடியும். ஏனெனில், ஏற்கனவே வெனிசுவேலா நாடாளுமன்றத்தில் மதுரோவின் கட்சி பெரும்பான்மையை 2015-ல் நடந்த தேர்தலில் இழந்துவிட்டது. ஆனால், மக்கள் நல சட்டங்களும் அரசியலமைப்பும் இருக்கிற இதே கட்டமைப்பில் ஆட்சியைப் பிடித்தால் அது பெரியளவுக்கு நன்மை தராது என்பதால், சாவேஸ் வருகைக்கு முன்பிருந்ததைப் போன்ற வெனிசுவேலாவை உருவாக்கி அதில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அமெரிக் காவின் திட்டமாக இருக்கிறது. அப்போதுதான் இனி ஒருபோதும் சோசலிசம் பேசுபவர்களின் அரசு உருவாகாமல் தடுக்கமுடியும் என்பதை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதற்காகத்தான் அவ்வப்போது சதிசெயல்  களை முடுக்கிவிட்டுக் கொண்டே இருக்கிறது.

வெனிசுவேலாவைப் பொருத்தவரையில் 95ரூ  ஏற்றுமதியான பெட்ரோலிய உற்பத்தியைத் தவிர மற்ற துறைகளையும் அதிவேகமாக மக்கள் பங் களிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் என்றா லும், இன்றைக்கு இருக்கிற மிகநெருக்கடியான சூழலிலிருந்து மீண்டு வருவதற்கு முதலில் எண்ணை உற்பத்தியில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அமெரிக்கா விதித்திருக்கிற தடை களை உடைத்தோ, தாண்டிச் சென்றோதான் அதனை சாதிக்க முடியும். எப்போதும் காலங் காலமாக அமெரிக்க டாலரின் மூலமாகவே நடைபெற்றுவரும் எண்ணை விற்பனையை வேறு நாணயத்தில் செய்ய வேண்டும். அதன் ஒரு முயற் சியாகவே பெட்ரோஸ் என்கிற நாணயத்தை உருவாக்குவதாக மதுரோ சமீத்தில் அறிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை களை ஒன்றுமில்லாமல் செய்திடலும் வேண்டும்.

தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை அழித்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக் கடியையும், கொலம்பியா வழியாக பயங்கரவாத மற்றும் இராணுவ நெருக்கடியையும், பொருளா தாரத் தடைகளைத் திணித்து சர்வதேச ஏற்றுமதி -இறக்குமதிகளை தடுத்து கடன்சுமையை ஏற்றிய நெருக்கடியையும், உள்நாட்டிலேயே அதிதீவிர வலதுசாரிகளுக்கு பணமாகவும் ஆயுதமாகவும் கொடுக்கிற நெருக்கடியையும் வெனிசுவேலாவின் மக்கள் ஒருங்கிணைந்து தங்களின் சக்திக்கேற்ப குரல் கொடுத்து எதிர்த்துக் கொண்டே இருக் கிறார்கள்.

உலகிலேயே அதிகமான எண்ணை வளத்தைக் கொண்டிருக்கிற நாடான வெனிசுவேலாவை தனக்கு ஆதரவான நாடாக மாற்றிவிட்டால், அதன்பிறகு தென்னமெரிக்கா முழுவதையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என்பதும் அமெரிக்காவின் கனவு. வெனிசுவேலாவை அவர்களிடம் காவு கொடுப்பதன்மூலம், அங்கே இலவசமாகவும் எல்லொருக்கும் சமமாகவும் கிடைக்கத் துவங்கியிருக்கிற கல்வியும் மருத்துவ மும் இன்னபிற அத்தியாவசிய வசதிகளும் பறிக் கப்பட்டுவிடும். எண்ணைக் கிணறுகள் அனைத் தும் வெனிசுவேலாவுக்கு சற்றும் தொடர் பில்லாத பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடும். அதனை முறியடிப்பதும், சர்வதேச நேச சக்திகளைத் திரட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் திமிர்த்தனைத்தை வளரவிடாமல் தடுப்ப தும் உலகின் குடிமக்களாகிய நம் ஒவ்வொரு வரின் கடமையுமாகும்.…

citu struggle

ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

  (ஏ ஆர் சிந்து,  மத்திய குழு உறுப்பினர்,  சி பி எம்)

தமிழில்: ஜி.பாலச்சந்திரன்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:

“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது. வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின் கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின் சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின் வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில் அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”

அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த, வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.

பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான  “எல்லோ வெஸ்ட் “’இயக்கம்  (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருப்பர்)  இன்னும் தொடர்கிறது  இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும், குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும், திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின் பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின் ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.

“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள். பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும் ‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும், பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள் அணிவகுத்தனர்.

வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும் பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர். ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.

இந்தியாவில்:

எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும் இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள் ‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை ‘  இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது. முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில்   தகர்க்கப்பட்டன,

உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும் 92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில் 46 சதவீதமான  57 சதவீத சுய தொழில் புரிவோர் மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ 5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும் ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின் வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).

கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த, வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர். இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால்  ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும். பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற, 2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர், மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக போராடினர்

வளர்ந்துவரும் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை:  இந்தியாவில் தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு, விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின் நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,( கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர் கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க  சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின் போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான், வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின் கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)  அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின் சில முக்கிய பிரச்சனைகளை நடை  பெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..

முன்னோக்கிய பாதை:

நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.

ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது, பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும் மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத, தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.

அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது. பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க, வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப் போகிறது.

 எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான்   தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..

தமிழாக்கம்: ஜி.பாலசந்திரன்

பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

 • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
 • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
 • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
 • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
 • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
 • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
 • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
 • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
 • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
 • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
 • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
 • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
 • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
 • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
 • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

 • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
 • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
 • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

 • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
 • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
 • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
 • அதாவது “லிபரல்” சக்திகள்
 • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

 • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !

ஆறுமுக நயினார்

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலக அமைதிக்கான தினத்தை கடைபிடிக்குமாறு 2017 ஜூலை மாதம் கூடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருந்தது.

மக்கள் வாழ்வுரிமைக் கோரிக்கைகளுக்காகவும், வகுப்புவாத பேரிடரை எதிர்த்தும், சமூக நீதி காக்கவும் இக்காலத்தில் – ஆகஸ்டு பிரச்சாரமாக – நடைபெற்ற போராட்டங்களுக்கு நடுவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் கூடவே நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

இன்றைய காலகட்டத்தில், இந்திய மக்கள் சந்திக்கும் சமூக, பொருளாதார அரசியல் சிக்கல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக, பின்புலமாக சமகால முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் நெருக்கடிகளே முதன்மை காரணங்களாகத் திகழ்கின்றன. அவை சர்வதேசத் தன்மை படைத்தாக உள்ளன. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் பின்னிப் பிணைந்ததுமாகவும் அவை உள்ளன.

மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா நாடுகளிலும் நடைபெறும் செய்திகள் தனித் தன்மை பெற்றதாகத் தோன்றினாலும் இயல்பாகவே அவை அனைத்தும் முதலாளித்துவ நலன்களை பாதுகாக்கவும், நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள இந்த அமைப்பை நிலை நிறுத்தவும் ஆகத் திட்டமிட்ட திசைவழிகளில் இயங்குகின்றன. நெருக்கடிகளை, வளர்கிற மற்றும் ஏழை நாடுகளிலுள்ள மக்களின் தோள்கள் மீது சுமத்த ஏகாதிபத்தியம்,  தேசிய அரசுகள் மூலம் வலுக்கட்டாயங்களை உருவாக்குகின்றன.

ஏகாதிபத்தியம் தனது மேலாண்மையை உலகளாவிய அளவில் நிறுவும் பொருட்டு ராணுவ நடவடிக்கைகளில் இறங்குகின்றன. எதிர்க்கிற / முரண்படுகிற அரசுகளைச் சுற்றி வளைத்து சின்னா பின்னப்படுத்துகின்றன. எனவே உலக அமைதிக்கான இயக்கமும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் வலுப்பட வேண்டிய ஓர் உலகச் சூழல் உள்ள பின்னணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறைகூவலைப் பார்க்க வேண்டியுள்ளது.

1

முதலாளித்துவ சமூக அமைப்புதான் உலக சமூக வளர்ச்சிப் போக்கின் இறுதிக்கட்டம் எனவும், வரலாற்றின் முடிவு இதுவே எனவும் ஏகாதிபத்திய நாடுகள் கொக்கரிக்கின்றன. முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம் புரட்சிகரமானதாகவும், முந்தைய சமூக அமைப்பின் கொடூரங்களைக் கொன்று புதைத்து நவீன ஜனநாயக அமைப்பினைக் கொண்டு வருவதில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்ததாகவும், அதன் வரவு அமைந்தது. இருந்த போதிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்கின் ஒரு படி நிலையாகவே உலக அளவில் முதலாளித்துவ சமூக அமைப்பு விளங்குகிறது என்ற உண்மையை முதலாளித்துவம் மறுதலிக்க முயற்சி செய்கிறது. நவீன நாகரீக மனிதன் தோன்றிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. புராதனப் பொதுவுடமை அமைப்புகளும், பல வடிவ முடியாட்சி / அடிமை சமூக அமைப்பு முறைகளும் – அப்பட்டமான நிலவுடமை சமூக அமைப்பின் கொடிய அடக்குமுறை வடிவங்களும் கடந்த 17ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. மனிதனை, ‘சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்” போன்ற முழக்கங்களுடன் – உழைப்புக் கருவிகளிலிருந்தும், உடைமைகளிலிருந்தும் கூட – விடுவித்துக் கொண்டு வந்த வரலாறு முதலாளித்துவத்துக்குச் சொந்தமானதே. பின்னர் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்த நவீன கண்டுபிடிப்புகள், கடல் கடந்த பயணங்கள், நாடுகளின் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போதல், காலனி ஆதிக்கம், போர்கள், உழைப்புச் சுரண்டல் என – முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்ததும் அந்த வரலாற்றின் அடுத்த கட்டமாகும்.

காரல் மார்க்சின் “மூலதனம்” நூல் வெளியிடப்பட்டதின் 150ஆம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மூலதனத்தின் அதீத வளர்ச்சியும், உழைப்புச் சுரண்டலும் தேச எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து கொண்டிருப்பதை உணர்ந்து, அதை எதிர்த்து சமூக மாற்றத்தைக் கொண்டு வர “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்தை, மார்க்சும் ஏங்கெல்சும் முன்மொழிந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே உலக முதலாளித்துவம் அதன் வளர்ச்சிப் போக்கின் புதிய கட்டத்தை அடைந்திருப்பதை லெனின் கண்டார். அந்த நூற்றாண்டின் துவக்கத்தில், முதலாளித்துவத்தின் பேரரசுத் தன்மையை  – ஏகாதிபத்திய – பரிமாணத்தைப் பற்றி சில பொருளாதார வல்லுநர்கள் எழுதலாயினர்.

லெனின் நாடு கடத்தப்பட்டு ஜூரிச் நகரில் தலைமறைவில் இருந்த காலத்தில் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய ஒரு பிரசுரத்தை ஆய்ந்து எழுதத் துவங்கினர். அது 1917 ல் ருஷ்யப் புரட்சிக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதுதான் “ஏகாதிபத்தியம் – உலக முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற பிரசுர நூலாகும்.

இந்த நூலில் ஏகாதிபத்தியம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? அதன் தன்மைகள் என்ன? அது எவ்வாறு சோசலிச சமூக மாற்றத்தின் வாயிற்படியில் நிற்கக் கூடிய, முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம் என்பதை லெனின் விளக்குகிறார்.

ஏகபோகங்களின் தங்கு தடையற்ற வளர்ச்சி என்பது ‘கட்டுப்பாடற்ற போட்டியின் வளர்ச்சி’ – உச்சக்கட்டத்திலிருந்த 1860-80 காலங்களில் நடைபெற்றது. 1873ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடியின் அனுபவத்தில் முதலாளித்துவம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பல கூட்டமைப்புகளை, தொகுப்புகளை கார்ட்டல் / டிரஸ்ட் / கார்ப்பரேசன் ஆகிய வடிவங்களில் துவக்கி கொழுக்கத் துவங்கினர். பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும், 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும், செல்வச் செழிப்பும் செல்வாக்குப் பகுதிகளை ஏகபோக முதலாளித்துவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1898இல் நடைபெற்ற ஸ்பானிஷ் – அமெரிக்க யுத்தம், ஆங்கிலோ – போயர் யுத்தம் (1899-1902) ஆகிய காலக் கட்டங்கள் முழுமையும் அரசியல் இலக்கியத்திலும், எழுத்திலும் ‘ஏகாதிபத்தியம்’ என்ற பதம் பரவலாகக் கையாளப்பட்டது. 1902 ஜெ.ஏ. ஹாப்ஸன் ஏகாதிபத்தியம் என்ற நூலை வெளியிட்டிருந்தார். சமூக சீர்திருத்தம் மற்றும் அமைதிவாதத்தை முன்மொழிந்த காரல் கௌட்ஸ்கி போன்றோர் ஏகாதிபத்தியம் பற்றி வெளியிட்ட கருத்துகள் – உலக முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தைப் பற்றிய பல தவறான கணிப்புகளை தளத்துக்குக் கொண்டு வந்த சூழலில், லெனின் நிலைமையைத் தெளிவு செய்து, தனது பங்களிப்பை உறுதியுடன் நிலைநாட்டி 1916 கோடை காலத்தில், இந்த நூலை வெளியிட்டார்.

அதில் உலக முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டத்தை லெனின் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

“சமூக பொருளாதார வாழ்விலும், உற்பத்தித் துறையிலும் உலகளாவிய அளவில் மூலதனக்குவிதலும் / உற்பத்திக் குவிதலும் ஏற்பட்டு ஏகபோகங்களாக முதலாளித்துவம் நிலைமாறுகின்றது.

தொழில் மற்றும் வர்த்தக மூலதனங்கள் வங்கி மூலதனத்துடன் இணைந்து ஏகபோக நிதி மூலதனங்களாக உருப்பெற்றுள்ளன.

பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதி என்ற இடத்தில், நாடுகளுக்கிடையே மூலதனம் – “ஏற்றுமதி – இறக்குமதி” – என மூலதனப் பாய்ச்சல் என்பது ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மூலதனங்கள் தங்களுக்கிடையே ஏகபோக முதலாளித்துவ கூட்டமைப்புகளையும் / நிறுவனங்களையும் உருவாக்கி உலக உற்பத்தி / விநியோகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

உலக முதலாளித்துவம் இன்னொரு படி மேலே போய் தேச எல்லைகளை, தங்கள் செல்வாக்குப் பிரதேசங்களாக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளுகிறார்கள்”.

மேற்கண்ட படப்பிடிப்பு மூலம் பொதுவான முறையில் இன்றளவும் ஏகாதிபத்தியத்தையும், நிதி மூலதனத்தையும் அதன் அடிப்படைகளையும் புரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய பங்களிப்பை லெனின் செய்தார்.

2

“1914-18 ஆம் வருடங்களில் நடைபெற்ற முதல் உலகமகா யுத்தமானது ஓர் ஏகாதிபத்திய, அதாவது நாடு பிடிக்கிற, சூறையாடுகிற, கொள்ளையடிக்கிற யுத்தமாக, உலகைத் துண்டு போடுவதற்கும், காலனிகளை, நிதி மூலதனத்தின் ‘செல்வாக்கு மண்டலங்கள்’ ஆகப் பங்கிடுவதற்கும், மீண்டும் மறு பங்கீடு செய்வதற்கும் ஆகப் புரியப்பட்ட யுத்தம்” என்பதை ‘ஏகாதிபத்தியம் – உலக முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ என்ற அவரது படைப்பில் லெனின் விளக்குகின்றார். மேலும், …. “பொருளாதார அடிப்படையில், உற்பத்திச் சாதனங்களில் தனிச் சொத்துடைமை நீடிக்கும் வரை ஏகாதிபத்திய யுத்தங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாதவை” – என அதே நூலில் அவர் விவரிக்கிறார்.

எனவே, “முதலாளித்துவமும் நெருக்கடியும்”, “முதலாளித்துவமும் – போர்களும்” ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை; பிரிக்க முடியாதவை என்பதை உலக அரசியல் வரலாறு நமக்கு விளக்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி, பின்னர் 1924-39 களில் தோன்றிய பொருளாதாரப் பெரு நெருக்கடி – ஆகியவை எல்லாம் உலக யுத்தத்தில் தான் சென்று முடிந்தன.

அன்று, பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லின்னும், ஹிட்லரும் செய்து கொண்ட எழுதப்படாத உடன்படிக்கை மூலம், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் மூலம் (1942-45) நாஜி ஜெர்மனி கிழக்கு நோக்கி எல்லைகளை விரிக்கத் துவங்கியது. மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் மறைமுகமாக ஒத்துழைப்புக்கொடுத்த நாஜி யுத்தத்தின் உண்மையான கூர்முனை சோவியத் யூனியனை அழிக்க வேண்டும் என்பதே ஆகும்.

பொருளாதாரப் பெருநெருக்கடியில் உலக முதலாளித்துவம் மூச்சு திணறிக் கொண்டிருந்த போது, கடுமையான வறுமையிலும், அதிருப்தியிலும் தங்களது நாட்டுப் பிரஜைகள், ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய நேரத்தில், நாஜி போர் எந்திரத்தை தூண்டி விட்டு உலகப்போரை உருவாக்கியது அன்றைய ஏகாதிபத்தியம். ஹிட்லரை வீழ்த்துவதற்கு ஒரு கோடியே நாற்பது லட்சம் செஞ்சேனை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது, தலா 4 லட்சம் போர் வீரர்களை மட்டுமே அமெரிக்காவும், பிரிட்டனும் போரில் இழந்தது என்பது ஏகாதிபத்தியத்தின் நயவஞ்சக நழுவல் வேலையை உலகுக்கு வெளிப்படுத்தியது.

1929-40 காலத்தில் அமெரிக்க மூலதனம் என்பது, முழு ஐரோப்பிய கண்டத்திற்குள் முதலீடு செய்ததை விட மிக மிகுதியாக நாஜி ஜெர்மனிக்குள் மட்டும் பாய்ந்தது என்பது தற்செயலானதல்ல. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களை மீறி அமெரிக்க / பிரிட்டிஷ் மூலதனம் ஜெர்மானிய மறுநிர்மாணத்தை / ஏகாதிபத்திய மூலதனத்தின் ஒத்துழைப்பின் மூலம் அதேகாலத்தில் செய்தார்கள் என்பது சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் மூலம் ஏகாதிபத்தியம் சோவியத் ரஷ்யாவை அழித்து ஒழிக்க நினைத்தது. அது நடைபெறவில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியம் தன்னை மீட்டுக் கொள்ள நினைத்த நோக்கத்தை ஓரளவுக்கு அது நிறைவேற்றிக் கொண்டது.

எனவே, “ஏகாதிபத்தியம் – நெருக்கடி – போர்கள்” என்பது பிரிக்க முடியாதவை என்பது மறு நிரூபணம் ஆனது.

3

இன்றளவும், 2006-08 காலத்தில் துவங்கிய பொருளாதாரப் பெரு நெருக்கடி, பத்தாண்டுகளுக்கு மேலாகத் தீர்கிறபாடாக இல்லை. பொருளுற்பத்தி – வர்த்தகம் முடங்கிப் போய் உள்ளது. வேலைவாய்ப்பு குறுக்கப்படுகிறது. மார்க்சின் சொற்களில் சொல்வதானால், “தயாராக உள்ள வேலை வாய்ப்பற்றோரின் படை” என்பது எல்லா தேசங்களிலும் குவிந்து கிடக்கின்றது. பொருளாதார நெருக்கடியின் சிக்கலில் மாட்டியவர்கள் குறுகிய காலத்தில் பலன் வேண்டும் என்று கருதுவதனால், பொய்க் முழக்கங்களில் மயங்கிப் போவதனால், அரசியலில் உலகளாவிய அளவில் ஒரு வலதுசாரி சார்புத் திருப்பம் என்பது ஏற்பட்டுள்ளது. கடினமான பொருளாதாரக் கொள்கைகள், சலுகைகள் வெட்டு, சிக்கன நடவடிக்கை, பொதுச் செலவினத்தில் வெட்டு, பொருளாதாரக் குறுக்கம் ஆகிய நடவடிக்கைகள் மக்கள் திரளை நாடுகள் தோறும் கொதிப்படையச் செய்துள்ளன.

இதைத் திசை திருப்புவதற்கு உலகெங்கும் பலவகையான “வெறுப்பு அரசியல்” பொதுத்தளத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தவர்கள், சிறுபான்மையினர், இசுலாமியர்கள், நிறவெறிக்கு ஆளாக்கப்படுபவர்கள், அகதிகள், பெண்கள், குழந்தைகள் என பல பிரிவினர் மீது பெரும்பான்மையின் தாக்குதல், ஏகாதிபத்தியத்தின் திருகல் நடவடிக்கையாகச் செய்யப்படுகின்றன.

ஏகாதிபத்தியம் – பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கும், தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளவும் மேற்கொள்கிற மிதமிஞ்சிய முயற்சி, இன்றைய காலகட்டத்தில் பிராந்திய யுத்தங்களாக / யுத்த முஸ்தீபுகளாக வெடிப்பதையும் பார்க்க முடிகிறது.

சிரியாவில் அல் ஆசாத்துக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம், இரானுக்கு எதிராக தொடுக்கப்படும் மறைமுக யுத்தம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை தரைமட்டமாக்கியது, பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மூலம் கொடுக்கப்படும் நெருக்குதல்கள், ஏமன் மீது சவூதிய அரேபியா தொடுக்கும் யுத்தம், லெபனார், கத்தார், எகிப்து, லிபியா, சூடான் உட்பட நாடுகளுக்குள் நடத்தும் உள்நாட்டுப் போர், ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்புகள் அனைத்துக்கும் பின்னால் “வளர்ந்த முதலாளித்துவத்தின் – ஏகபோகத்தின் – பேரரசின்” ஆதரவுகள் ஆன ஏகாதிபத்தியத்தின் போர் வலைப்பின்னல் உள்ளதை நாம் அறிவோம். லத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செய்து வரும் நச்சு பிரச்சாரம், பொருளாதாரத் தடைகள், சி.ஐ.ஏ. ஊடுருவல், நேரடி ராணுவத் தலையீடு ஆகியவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மெக்சிகோவையும், பனாமா கால்வாயையும், மத்திய தரைக் கடலையும், சூயஸ் கால்வாயையும், இந்துமகா சமுத்திரம் தெற்காசியப் பகுதியில் உள்ள தெற்கு சீனக்கடல் மற்றும் மலாக்கா  ஜலசந்தி ஆகிய கடல்வழிப் பிரதேசங்களை ஏகாதிபத்தியம் தனது முழுக் கட்டுப்பாடுகள் வைக்க முயற்சி செய்வதன் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் வியட்னாம், கம்போடியா, கொரியா, சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஜப்பான் / தென்கொரியாவுடன் அமெரிக்கா செய்யக் கூடிய இராணுவக் கூட்டு நடவடிக்கைகள் இவையனைத்தின் பின்னாலும் வலுவான ஏகாதிபத்திய “வளர்ந்த உலக முதலாளித்துவத்தின்” – நலன்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

4

கடந்த 25.09.2017 அன்று கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இதனுடன் இணைத்துப் பரிசீலனை செய்யலாம்.

‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வடகொரியா என்ற நாட்டினை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறுவழியில்லை’.

‘கியூபா அரசாங்கம் அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால், எனது நிர்வாகம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கப் போவது இல்லை”

“வெனிசுவேலா மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அது தொடரும். அவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் மிகவும் உள்ள சுத்தியுடன் சோசலிசத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்..”

“சோவியத் யூனியனிலிருந்து கியூபா / வெனிசுவேலா வரை எங்கே உண்மையான சோசலிசமும், கம்யூனிசமும் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் அதிருப்தியும், தோல்வியும், அழிவுமே ஏற்பட்டுள்ளன”.

இவையெல்லாம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வாரம் அமெரிக்க குடியரசுத்தலைவர் உதிர்த்த பொன்மொழிகள். ஆக, சிக்கல் என்ன என்பது தற்போது தெளிவாகிறது. ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான முரண்பாடு முற்றுவதையே இது வெளிக்காட்டுகிறது. வரலாற்றின் இறுதிக்கட்டம் முதலாளித்துவ சமூக அமைப்புதான் என்று உலக முதலாளித்துவம் கூறும் போது – அது இல்லை சோசலிசம் தான் மாற்று – என உலகத் தொழிலாளி வர்க்கத்தின் குரல் ஒலிப்பதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே டிரம்ப்-பின் பேச்சு தெரிவிக்கிறது.

பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை இராணுவம் மூலமாகத் தீர்க்கும் நோக்கத்தையே அமெரிக்க குடியரசுத்தலைவரின் பேச்சு வெளிப்படுத்துகிறது.

நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க  ஏகாதிபத்தியம் பல வழிகளில் செயல்படுகிறது. ஒன்று, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்துவது, இரண்டாவது இராணுவ ரீதியாக போர் தொடுத்து நாடுகளை கைப்பற்றுவது, அடுத்து தனக்கு ஏதுவான சர்வாதிகாரிகளை அந்தந்த நாடுகளில் ஆதரித்து அந்த நாடுகளை தனது ஆதிக்கத்தில் நிறுத்திக் கொள்வது – இதைச் செய்ய வசதியாக உலகம் முழுவதும் தனது இராணுவ தளங்களை நிறுவி உலகப் போலீஸ்காரனாகத் திகழ்வது. இது தான் இன்று ஏகாதிபத்தியங்கள் செய்து வருகிற சர்வதேச அரசியல் பணி ஆகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டின ரொட்ரிகோ டியூடெர்ட்டே, எகிப்தின் அப்துல் அல்-சிசி, துருக்கியின் தாயிப் எர்டகான், தாய்லாந்தின் ப்ரயூத் சனோச்சா, பஹ்ரைன் அமீர் இசா – அல் – கலீபா, டிஜிபோட்டியின் இஸ்மாயில் ஓமர் ஆகியோர் அந்தந்த நாடுகளில் அமெரிக்க ஒத்துழைப்புடன சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள்.

ஏறத்தாழ 80 நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ளன. அவற்றின் பல நாடுகளில் ஜனநாயக ரீதியாக ஆட்சி நடைபெற்று விடக்கூடாது; தனக்கு ஒத்துழைப்பான ஆட்களே தொடர்ந்து ஆட்சியில் நீட்டிக்க வேண்டுமென அமெரிக்கா நினைக்கிறது.

அவ்வாறான நாடுகளின் பட்டியல் – காமரூபம், சாட், எத்தியோப்பியா, ஜோர்டான், குவைத், நைஜர், ஓமன், சவூதி அரேபியா, (ஐக்கிய)அமீரகம்  ஆகியவை ஆகும். இந்த நாடுகளுக்குள் ஜனநாயகம் வந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இவ்வாறு தனது தளங்கள் உள்ள 80 நாடுகளில் 45 நாடுகளை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இன்று இந்த 80 நாடுகளல்லாது, சர்வதேசக் கடல் எல்லைகளுக்குள் உள்ள தீவுகள் உட்பட ஏறத்தாழ 790க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க இராணுவத் தளங்கள் உலகெங்கும் உள்ளன. பென்டகன் புள்ளி விபரப்படி ஜெர்மனியில் 181 தளங்களும், ஜப்பானில் 122 தளங்களும், தென்கொரியாவில் 83 தளங்களும் உள்ளன. ஆர்க்டிக் முதல் அன்டார்ட்டிக் வரை கொலம்பியா முதல் கத்தார் வரை அனைத்துக் கண்டங்களிலும், பெருங் கடல்களிலும் நினைத்தறியா நேரத்தில் யார் மீதும் போர் தொடுக்கும் ஆற்றல் பெற்ற இராணுவ வல்லரசாக அமெரிக்கா விளங்குகிறது. இவற்றை நிர்மாணிக்க அமெரிக்க வரிப்பணத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது. இதுபோக வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள்  என்ற அமைப்பும் அதே போல SEATO, CENTO போன்ற ராணுவக் கூட்டுகளையும் அமெரிக்கா ஏற்படுத்தி உலக அமைதி(?)க்குப் பங்களிப்பை செய்து வருகிறது.

இந்த ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையில் இன்னொரு வடிவமாகவே ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் வீட்டோ (எதையும் ரத்து செய்யும்) அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். பொருளாதாரத்தடை உட்பட நாடுகள் மீது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றுகிற வலிமை அவர்களுக்கு உள்ளது. 193 நாடுகள் கொண்ட சபையில் 80க்கும் மேற்பட்ட சிறிய வலுவற்ற அமெரிக்க ஒத்துழைப்பு நாடுகள் உள்ளதை நாம் பார்த்தோம்.

இது தவிர சர்வதேச நிதி ஆணையம் (IMF), உலக வங்கி , உலக வர்த்தக ஸ்தாபனம்  உள்ளிட்ட அமைப்புகள் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியை உலக நாடுகளின் நிதி மற்றும் வர்த்தகம் சார்ந்த தேவைகளில் இறுக்குகிறார்கள். உலக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கூட்டங்களில் எடுக்கிற முடிவுகளை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள்  வளர்கிற நாடுகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றன; தாங்கள் அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இல்லை எனப் பிரகடனம் செய்கிறார்கள். சர்வதேச அணுசக்தி முகைமை மற்றும்  அணு மூலப்பொருள் வர்த்தகம் செய்யும் குழு மூலமாக ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் அணுசக்தியை ஆயுதப்படுத்திக் கொண்டு, மற்றவர்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டினை விதிக்கிறார்கள். ழு-7  குழு என அழைக்கப்படும் வளர்ந்த நாடுகள் கூட்டமைப்பு, பின்னர் ழு-20  என அழைக்கப்படும் 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகியவை உலக அளவிலான உற்பத்தி, வினியோகம், நிதிச்சேவை, வட்டி விழுக்காடு உள்ள அனைத்து சமூக பொருளாதார விஷயங்கள் குறித்தும் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தன்னிச்சையாகத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே, இந்த சர்வதேச அமைப்புகள் ஐநா. சபை துவங்கி ழு-20 வரை அனைத்துமே ஓரவஞ்சனையான, ஜனநாயகத் தன்மையற்ற, ஏகாதிபத்தியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற, அவர்களது வரம்புமீறல்களைப் பாதுகாக்கிற/அங்கீகரிக்கிற சமனற்ற அமைப்புகளாக விளங்குகின்றன. இது ஏகாதிபத்தியத்தின் பிடி சர்வாம்சமாக உலக நடப்புகளில் ஆக்கிரமிப்பு செய்வதை உறுதிப்படுத்துகின்றன.

5

இந்தப் பின்னணியில்தான் உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தேவையையும், முனைப்பையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த மட்டிலும், இந்திய ஆளும் வர்க்கத்தின் இரட்டைத்தன்மையைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக விளக்குகிறது. இந்திய முதலாளிகள் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் துவங்கி, இயல்பாகவே ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் சோசலிச நாடுகளுக்கிடையே பேரம் பேசி, தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, தன்னுடைய வளர்ச்சியை உத்தரவாதப்படுத்திக் கொண்டதை அனைவரும் அறிவர். இன்னும் கூடுதலாக இன்று, உலகமயமாக்கல் சூழலில் இந்தியப் பெருமுதலாளிகள் உலக முதலாளித்துவத்தின், சர்வதேச நிதிமூலதனத்தின் பகுதியாகவே மாறிப் போய் விட்டிருக்கிறார்கள். இந்தப் பெருமுதலாளிகளின் மூலதனம் உலக நாடுகள் பலவற்றிலும் போய் இலாபமீட்டுகின்றன. இத்தகைய சூழலில் உலக முதலாளித்துவத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை இணைக்கிற வேலையையும் அவர்கள் செய்கிறார்கள். அரசியல் பொருளாதாரத்தில் அந்நிய மூலதன ஆதரவு நிலைபாடு பல்கிப் பெருகி வருகிறது. நாட்டின் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படைகள் மெதுவாக அசைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் மீது, அனைத்து நாடுகளைப் போலவே, ஏகாதிபத்தியத்தின் பிடி இறுகுகிறது.

‘எந்த ஒரு தேசத்தின்/அரசின் வெளி உறவுக்கொள்கை என்பதும், இறுதியாகப் பார்க்குமிடத்து அது அந்த அரசுக்குத் தலைமை தாங்குகிற வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  உள்நாட்டுக் கொள்கைகளின் வெளிப்பாடேயன்றி வேறல்ல’- என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 4.1-இல் கூறப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச மூலதனத்தின் பகுதியாய் மாறியுள்ள, உலகச் சந்தையுடன் இந்தியப் பொருளாதாரத்தை இணைக்க விரும்புகிற, ஏகாதிபத்தியத்தின் கூட்டுப்பங்காளிகளாக மாறிப் போய் உள்ள இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களை ஒத்தே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைகிறது. இதன் விளைவுகள் பல வகைப்பட்டவை.

¨           சமீப காலமாக ஆட்சிக்கட்டிலில் வீற்றிருக்கிற பாஜக ஆட்சிக்கு ஏகாதிபத்தியம் – அமெரிக்காவின் ‘முக்கிய இராணுவக்கூட்டாளி’ என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது. அமெரிக்க செனட் இதுகுறித்த அறிவிப்பை ஒப்புதலுக்காக விவாதிக்க உள்ள சூழலில், இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

¨           இதன் பகுதியாக வரக்கூடிய துணை ஒப்பந்தங்கள் ஏராளம். தளவாடப் பரிவர்த்தனை ஒப்பந்தம், எரிபொருள் நிரப்புகிற ஏற்பாடு, தகவல் தொடர்புக்கான ஒப்பந்தம், இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் இறங்கி உலாவ அனுமதி, இந்திய இராணுவத்தளவாடங்களை பயன்படுத்த, கூட்டுப்பயிற்சி செய்ய அனுமதி போன்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

¨           கடந்த 2005ல் புஷ் வருகையை ஒட்டி போடப்பட்ட இராணுவக் கட்டமைப்பு ஒப்பந்தம் 2015ல் இருந்து மீண்டும் பத்தாண்டுகளுக்கு நீட்டித்திட பாஜக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

¨           சர்வதேசப் படைகளில் பங்கேற்பு, ஏவுகணைத்தொழில் நுட்பக்கூட்டமைப்பு, இராணுவத்தளவாட வியாபாரம், கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பு ஆகியவற்றுக்கான  ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

¨           இராணுவத்தளவாட தொழில்நுட்பம்/வர்த்தகம்  ஆகியவற்றுக்கான முன்முயற்சி ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் நமது நாட்டின் இராணுவ பலம்/தளவாடங்கள் குறித்த அனைத்து உள்விபரங்களையும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் – ஒற்றர்களை வைத்து வேவு பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இராணுவ இரகசியங்களை எல்லாம் தங்கத்தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

¨           வருகிற 2020 ஆம் ஆண்டுகக்குள் சீனாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்தியா தனது  ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு வழங்குவது.

¨           ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் வர்த்தக/இராணுவக் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிற அமெரிக்க வேலைக்கு ஒத்துழைப்பு வழங்குவது.

¨           இஸ்ரேல் நாட்டுடன் ஒத்துழைப்பைப் பெருக்க உறுதி பூணுவது. இஸ்ரேல் நாடு மிக அதிகமான இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரத்தில் இளைஞர்கள் மீது சுடப்பட்ட “பெல்லட்” குண்டுகளை சப்ளை செய்வது இஸ்ரேல்தான்.

¨           வடகொரியாவுடன் இருந்து வரும் பாரம்பரிய உறவை அமெரிக்க நலன்களைக் கருதி படிப்படியாகக் குறைத்துக் கொள்வது.

¨           இது தவிர வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல சமரசங்களுக்கு இந்திய – அமெரிக்க உடன்பாடு வழிகோலி உள்ளது.

¨           காலாவதியாகிப் போன தொழில்நுட்பத்தைக் கொண்ட வெஸ்டிங்க் ஹவுஸ் அணுவுலையை பல கோடி ரூபாய் செலவழித்து வாங்கி கொவ்வாடாவில் அந்த அணுவுலையை நிறுவுகிறார்கள். அந்த திவாலாகிப் போன வணிக நிறுவனத்தைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை.

¨           டிஜிட்டல் பரிவர்த்தனை, அனைத்திலும் ஆதார் விரிவாக்கம், வரிவிதிப்புக் கொள்கைகளில் மாற்றம், பொதுத்துறை தனியார் மயமாக்கல்- உட்பட எல்லா நடவடிக்கைகளும் சர்வதேச நிதி மூலதனத்தின் தேவையை ஒட்டி, அமெரிக்கா உட்பட நாடுகளின் வலுக்கட்டாயத்தின் பேரிலேயே இந்தியாவில் நிறைவேற்றப்படுகின்றன.

இதுபோன்ற ஏகாதிபத்திய நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இந்திய அரசு, அவற்றை வேகமாக நடைமுறைப்படுத்திவிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்ப வகுப்புவாத- பிளவுவாத வெறுப்பு அரசியலை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கிராமப்புற விவசாயம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இடம் பெயர்தலும், விவசாயிகள் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்வதும் அன்றாடச் செய்தியாக மாறியுள்ளது. தொழில்வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது.  மூலதனம் உற்பத்திக்கு வரவில்லை. வேலைவாய்ப்பு சுருங்குவதன்  காரணமாகச் சமூகக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வறுமையும், வேலையின்மையும்  கோரத்தாண்டவம் ஆடும்போது சலுகைகள் வெட்டு, பொதுச்செலவினச் சுருக்கம் என்பது அரசாங்கத்தின் முதன்மை முழக்கமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி வீழ்ந்து வருவது குறித்த விவாதம் அரசாங்கம்/ஆளும் கட்சி வட்டாரத்துக்குள்ளேயே அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

இருந்த போதிலும், நிதி மூலதன ஆதரவு அறிவுஜீவிகள், அதிகாரிகள், மந்திரிப் பிரதானிகள், சீர்திருத்தங்கள் மெதுவாக நடைபெறுவதன் விளைவே இது; எனவே, தீவிரச்சீர்திருத்தங்களை – ‘பெரு முதலாளிகளுக்கு’ ஒத்துழைப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலுப்படுத்துகிறார்கள். ஊடகங்களின் கள்ள மௌனம் கண்டனத்துக்குரியது. அரசின் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்திவிட்டு, மக்கள் விரோத, சமூக விரோத நடவடிக்கைகளைக் கண்டு கொள்வதே இல்லை. இவை அனைத்துக்கும் பின்னால், வளர்ந்த முதலாளித்துவத்தின் – ஏகாதிபத்தியத்தின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த மையமான சிக்கலை சாதாரண மக்கள் புரிந்து கொள்வதில் சிரமமிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்து ஜனநாயகப்பகுதிகளை உழைக்கும் மக்களின் தலைமையில் திரட்ட வேண்டிய அவசரமும், அவசியமும் இடதுசாரி இயக்கங்களுக்கு முன் உள்ளன. இது ஐரோப்பாவிலும், வளைகுடா நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் இயக்கங்களை உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வலுப்படுத்த வேண்டும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பை தேசங்கள் ரீதியாக வலுப்படுத்துவதும், உலகளாவிய அளவில் இணைப்பதும் ஆகிய வரலாற்றுக் கடமையை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவல் ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5

முப்பெரும் எதிரிகள்

ஆர்.சந்திரா

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.

புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.       

சோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.

புரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில்  ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம்  அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது.  நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.  

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில்  அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும்.  நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில்  நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை  தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  வர்க்க ஆட்சியில்   அவர்களுக்கு  ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு  சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால்  நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின்  ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்துவம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”  

புரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:

நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளிவிவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)

மக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:

] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;

] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;

] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு 

இந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான்,  மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப்  பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென   கட்சித் திட்டம்   வலியுறுத்துகிறது.

நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும்  இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.

பெரு முதலாளிகள் தலைமையிலான  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும்  ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..”   மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து  அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும்  எதிர்க்கிறது” என்பதை கட்சி திட்டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளைபெருமுதலாளிகளைஎதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.

ஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.

‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!

[பீப்பிள்ஸ் டெமாக்ரசி (04.09.2016) இதழில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் Subversion of Concept என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.  – தொகுப்பு  : இ.எம். ஜோசப் ]

பொருளாதாரம் குறித்த விவாதங்களில் பொதுவாக இன்று இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, ‘மூலதனத்தின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது. இரண்டு, “ பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.“.

மேற்கண்ட இரண்டு வாதங்களுமே ஏறக்குறைய ஒன்று தான் என்று சிலர் கருதக் கூடும். முதல் வாதத்தினை சற்று மேலும் கூர்படுத்திக் குறிப்பாகக் கூறுவதே,  இரண்டாவது வாதம் எனவும் சிலர் கருதக் கூடும்.  ஆனால், அந்தக் கருத்து தவறானது. இரண்டிற்குமிடையில் பெருத்த வேறுபாடுகள்  உண்டு.

அதே போன்று, “அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), “தீய சாம்ராஜ்யம்” (Evil Empire), “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony) போன்ற சொல்லாடல்களும்,  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடலும்,  உள்ளடக்கத்தில் ஒரே பொருள் கொண்டவை அல்ல. இவை அனைத்தையும் குறித்தும் இங்கு சற்று விரிவாக விவாதிக்கலாம்.

மூலதனமும், முதலாளிகளும்!

சமூக உறவு எனும் வகையில், மூலதனம் சில உள்ளார்ந்த குணப் போக்குகளைக் கொண்டது. இது பல பொருளாதார முகமைகளின் (Economic Agents) செயலாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு முகமையும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளின் அடிப்படையிலேயே  இயங்குகிறது.

எடுத்துகாட்டாக, முதலாளிகள் செல்வத்தைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அப்படித்தான் குவிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதி அவர்களை அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கிறது. தாங்கள் நினைத்தவாறெல்லாம் செயல்படும் சுதந்திரம் முதலாளிகளுக்குக் கிடையாது.  அவர்கள், முதலாளித்துவ அமைப்பு எழுதி இயக்கும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களும் கூட, முதலாளித்துவ அமைப்பிற்குள் அந்நியப்பட்டு நிற்பவர்களேயாவர். எனவே தான், காரல் மார்க்ஸ் முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்”  (Capital Personified) என்று அழைக்கும் நிலைக்குச் சென்றார்.

பன்னாட்டு நிறுவனங்கள்!

பன்னாட்டு கார்ப்பரேஷன்களையும், தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து இந்த விஷயத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கில்லை. அவர்களை முலதனத்துடன் சமப்படுத்தி அழைக்க முடியாவிட்டாலும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளுக்கு உட்பட்ட இவர்களது செயல்பாடுகள், மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளைத் தீர்மானிக்கும் முகவர்களாக இவர்களை நிலை நிறுத்துகின்றன.   இவர்களை  “முலதன”த்துடன் சமப்படுத்திப் பார்ப்பது, மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகள், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகள், அந்த அமைப்பின் “தன்னெழுச்சித் தன்மை” (Spontaneity) குறித்த மூலதனத்தின் ஒட்டு மொத்த கோட்பாடுகள் என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, வேறு ஒரு மாறுபட்ட கருத்தியல் தளத்திற்கு இட்டுச் சென்று விடும்.

ஆழமான அரசியல் விளைவுகள்!

இங்கு, கோட்பாட்டுப் பிரச்சினை (Conceptual subject), ஸ்தூலமான பிரச்சினை (Tangible Subject) என்ற இரண்டு அம்சங்கள் விளக்கப்பட வேண்டும். மூலதனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத பிரச்சினை. இது கோட்பாட்டுப் பிரச்சினை. ஆனால் அந்த மூலதனத்தின் பிரதிநிதிகளாக கண்ணுக்கு புலப்படுபவர்கள் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை. எனவே அவை எல்லாம் ஸ்தூலமான பிரச்சினைகள்.

கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது. மாறாக, அது ஆழமான அரசியல் விளைவுகளை உள்ளடக்கியதாகும். மூலதனத்தை குவிமையப்படுத்தல், சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் தொடர்ந்து சரக்குமயமாக்கல், சிறு உற்பத்தியினை அழித்தொழித்தல், ஒரு முனையில் செல்வத்தையும், மறு முனையில் வறுமையினையும் உருவாக்குதல் என  முதலாளித்துவத்திற்கு என்று சில உள்ளார்ந்த குணப்போக்குகள் உள்ளன. இந்தப் போக்குகளை   எல்லாம், ஒரு சமூக அம்சம் என்ற வகையில் கடந்து போக வேண்டும் எனில், முதலாளித்துவத்தை முதலில் தூக்கி எறிந்தாக வேண்டும்.  மூலதனத்தை சமூக இயக்கவியலின் கோட்பாட்டு அடிப்படையிலான  அம்சமாக அங்கீகரிக்கும் பட்சத்தில், மனிதகுல விடுதலைக்கு வழி வகுக்கும் சமூகப் புரட்சி தேவைப்படுகிறது. அத்தகைய புரட்சிக்கான ஒரு செயல் திட்டமும் தேவைப்படுகிறது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் தான் முதலாளித்துவத்தின் ‘இயக்கிகள்” (Drivers) அல்லது சமூக இயக்கவியலின் “மையப் பிரச்சினை” எனக் குறுக்கிப் புரிந்து கொண்டோம் என்றால்,  பன்னாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது, தாஜா செய்வது, சில நற்காரியங்களை செய்ய வைப்பது (“கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு”) போன்றவற்றின் மூலம் இந்த இயக்கவியலின் விளைவுகள் மற்றும் இயங்கு திசைகளை மேம்படுத்தி விட முடியும் என்ற தவறான உணர்வு ஏற்பட்டு விடும். அத்தகைய புரிந்துணர்வு  சமூகப் புரட்சிக்கான செயல் திட்டத்தினைப் பின்னுக்குத் தள்ளி, சீர்திருத்தத்திற்கான செயல் திட்டத்தினை  முன்னுக்குக் கொண்டு வந்து விடும். அத்தகைய திட்டம் ஒரு முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டமாக  (Progressive liberal agenda) மாறி விடும். எனவே, ‘கோட்பாட்டு அம்சம்”, “உருவம் கொண்டதொரு அம்சமாக” மாறுவது என்பது வெறும் கருத்தியல் தளமாற்றம் அல்ல. அது செயல் திட்டத்தின் மாற்றம். சோஷலிச செயல் திட்டத்திலிருந்து, முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டத்திற்கு மாறிச் செல்லும்  நடவடிக்கை அது  என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.

அன்றாடப் பேச்சு வழக்கில்…

நாம் அன்றாடப் பேச்சு வழக்கில், ‘மூலதனம்’ என்ற பதத்தினை பயன்படுத்துவதில்லை. மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகள், பன்னாட்டு வங்கிகள் என்றும், தனியார் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது  டாட்டாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள்  என்றும் தான் பேசி வருகிறோம். ஏனெனில், இவர்களுக்கு எதிராகத் தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படும் கம்பெனிகள் போன்ற ஸ்தூலமான பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கோட்பாட்டுப் பிரச்சினைகளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

நடைமுறையிலும் கூட, தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட அன்றாடப் போராட்டங்களில் கண்ணுக்குப் புலப்படும் நிறுவனங்களுக்கு எதிராகத்  தான் பேசுகிறோமே தவிர, கோட்பாட்டு அடிப்படையில், அதாவது,  முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்” என்று மார்க்ஸ் வர்ணித்ததன் அடிப்படையில், மூலதனத்திற்கு எதிராகப் பேசுவதில்லை. (வர்க்கப் போராட்டம் ஒரு புரட்சிகர நிலையினைத் தொடும் பொழுது தான், அந்த தெளிவான புரிதல் கிட்டும்.)  நாம் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், கோட்பாடு அடிப்படையிலும், (அம்பானிக்கெதிரான போராட்டங்கள் போன்ற) நடைமுறை வழக்கிலும், நாம் பேசுவதில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனினும், சித்தாந்த தளத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமான அடிப்படையினை,  கோட்பாட்டு அடிப்படைக்கு மாற்றாக அமைய அனுமதித்து விடக் கூடாது. 

சித்தாந்த தளத்தில் …  

சில வேளைகளில் சித்தாந்த தளத்தில் அத்தகைய மாற்று என்ற தவறு நிகழ்ந்து விடக் கூடும். அல்லது “கோட்பாட்டு அடிப்படையினை” முறையாக  அங்கீகரித்துக் கொண்டே, ஏறக்குறைய ஸ்தூலமான பிரச்சினைகளிலேயே கால் பதித்து  நிற்பதும் (ஊள்ளடக்கத்தில், இதுவும் சித்தாந்த தளத்தில் உருவாக்கப்படும் மாற்று தான்), அத்தகைய தவறேயாகும். இது இயல்பாகவே, சோஷலிசச் செயல் திட்டத்தை,  முற்போக்கு பெருந்தன்மைத் திட்டமாக உருமாற்றி விடும்.  சோஷலிஸ்ட் அல்லாத முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் (Progressive liberals) உள்ளனர். தங்களது அரசியல் சிந்தனைகளின் படி, அவர்கள் கோட்பாடு ரீதியான பிரச்சினைகளை அங்கீகரிப்பதில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, “மூலதனத்தின் ஆக்கிரமிப்பு சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.” என்று சொன்னால் அவர்கள் அதை புறந்தள்ளி விடுவார்கள்.  ‘மூலதனம்’ என்ற புதிருக்கு, ‘பிரச்சினை’ (Subject) என்று உருவமும் அந்தஸ்தும் கொடுக்கும் வேலை அது என்று கூறிவிடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிஸ்டைப் பொறுத்த அளவில், சித்தாந்த தளத்தில்,  ‘கோட்பாட்டுப் பிரச்சினைக்கு’ மாற்றாக ‘ஸ்தூலமான பிரச்சினை’யினை முன்வைப்பது என்பது, அவரது சோஷலிச நம்பிக்கையின் ஆணி வேரையே அசைப்பதாகும்.

கூட்டுப் போராட்டங்களில்…

இன்றைய சூழலில், அத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்லெண்ணம் கொண்ட, போர்க்குணம் மிக்க பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் களத்தில் நிற்கும் காலம் இது.  ஆனால், அவர்கள் சோஷலிஸ்டுகள் அல்லர். அவர்களுடைய எதிர் இலக்கெல்லாம் ‘ஸ்தூலமான பிரச்சினைகளே’.   மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடும் இவர்களோடு ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இடதுசாரிகளுக்கு இன்று உண்டு. அவர்களோடு அத்தகைய போராட்டங்களில் இணைந்து போராடும் போது, சித்தாந்தமும், அத்துடன் அனைத்து ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளும்’ பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உண்டு. சோசலிச லட்சியங்களில் உறுதியாக இருக்க வேண்டும் எனில், இடதுசாரிகள் இதில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் என்ற கோட்பாடு!

கோட்பாடு அடிப்படையில் சீர்குலைவு அச்சத்தில் ஆட்படும் மற்றொரு சொல்லாடல் ‘ஏகாதிபத்தியம்’. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பட்ட உறவுகளின் வலைப்பின்னல் குறித்ததெ ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடல். இந்த உறவுகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்திக்கின்றன. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் மட்டுமல்லாது, மக்களுடைய போராட்டங்கள் காரணமாகவும் அத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. ரீகன் நிர்வாகம், புஷ் நிர்வாகம், அல்லது ஒபாமா நிர்வாகம் என்பவை எல்லாம் நாம் ஏகாதிபத்தியம் என்று அழைக்கும் ‘கோட்பாட்டுப் பிரச்சினையின்’  ‘ஸ்தூலமான’ செயல் வடிவங்களே ஆகும்.

ஏகாதிபத்தியம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நடைமுறையில் செயல்படும் இந்த ஸ்தூலமான வடிவங்கள் தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. ‘மூலதனம்’ என்பதற்கு  மாற்றாக எப்படி ‘பன்னாட்டு நிறுவனங்கள்’, ‘பன்னாட்டு வங்கிகள்’  போன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றனவோ, அதே போன்று, ‘ஏகாதிபத்தியம்’ என்பதற்கு மாற்றாக இது போன்ற அரசு நிர்வாகங்களை பார்க்கும் போக்கும்  நிலவுகிறது.

“அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), அல்லது “தீய சாம்ராஜ்யம்” (Evil empire), அல்லது “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony)  அல்லது ஹார்ட் மற்றும் நெக்ரி (Hardt and Negri) தாங்கள் எழுதிய புகழ் பெற்ற நூலுக்கு தலைப்பிட்டதைப் போன்று, “சாம்ராஜ்யம்” (Empire). இவை எல்லாம்  சில சமயங்களில், “ஏகாதிபத்தியம்”  என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அரசாட்சி ஏற்பாடுகளைக் குறிப்பிடும் “ஒபாமா நிர்வாகம்” போன்ற பொதுவான சொல்லாடல்கள் போலன்றி, இந்தச் சொல்லாடல்கள் சில குறிப்பிட்ட உறவுநிலைகளைக் குறிப்பவை  எனபது சரியே. எனினும், மூலதனத்தின் உள்ளார்ந்த குணப் போக்குகளுடனான இணைப்பினை இத்தகைய சொல்லாடல்கள் உணர்த்துவதில்லை.  இந்தச் சொல்லாடல்களைப்  பயன்படுத்துவதில் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் குறித்த புரிதலையும், அந்தப் புரிதலின் பின்னணியில், மனிதகுல விடுதலைக்கு, முதலாளித்துவத்தைக் கடந்து செல்வது ஒரு முன் நிபந்தனை  என்ற சித்தாந்தப் புரிதலையும் இவ்வகையிலான சொல்லாடல்கள் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, குறிப்பாக உலகின் பல பாகங்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் போராட்டங்களில், நாம் பல ஆர்வமிக்க போராட்டக் குழுக்களுடன் இணைந்து வினையாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அக்குழுவினர் அனைவரும் சோஷலிஸ்டுகள் அல்லர். மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் என்ற இடத்தில் தொடங்கி நாம் சித்தாந்த ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கும்  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லுக்கு அவர்களைப் பொறுத்த மட்டில், பொருள் எதுவுமில்லை. இந்தக் கூட்டுப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில், சோஷலிசம் குறித்த நமது சித்தாந்த நிலையிலிருந்து வழுவி, முற்போக்குப் பெருந்தன்மையாளர்களின்  அறிவுத்தளத்திற்குள் சென்று விழுந்து விடும் அபாயம் உண்டு.

அத்தகைய போராட்டங்கள் தேவைப்படுகின்றன.  இடதுசாரிகள் மட்டும் அல்லாது, முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல வேண்டும் என விரும்பும் அனைவரும் அந்தப் போராட்டங்களில் இணைய வேண்டும் என்பதும் தேவையாகிறது. அத்தகைய தேவைகளை ஒன்றுமில்லை என ஒதுக்கித் தள்ளி விட முடியாது. சில போராட்டங்களில் முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் இடதுசாரிகளை விட கூடுதல் தீவிரம் காட்டுவதுமுண்டு. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அத்தகைய நேரங்களில், இடதுசாரிகள் “கோட்பாட்டுப் பிரச்சினைகள்” அடிப்படையிலான தங்களது சித்தாந்தப் புரிதலை கைவிட்டு விடக் கூடாது என்பதே. .

சரியான புரிதல்!

இந்தப் புரிதலிலிருந்து வழுவுதல் கூடாது என்று சொல்வது, நாம் மார்க்ஸ் மற்றும் லெனின் சிந்தனைகள் குறித்த நமது விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக, அது தான் சரியான புரிதல் என்பதால் தான். “ஸ்தூலமான பிரச்சினைகள்” மீதான போராட்டங்கள் வெற்றி பெற்றாலும் கூட, அவை தற்காலிக வெற்றிகளே என்பதையும், அடுத்த கட்டத்தில் மூலதனத்தின் குணப்போக்குகள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பார்க்க முடிவதிலிருந்தே   இந்த உண்மையினைப் பரிசோதித்து உணர்ந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் பின்னணியில், வேலைவாய்ப்புக்களையும், மக்கள் கைகளில் வாங்கும் சக்தியினையும் அதிகரிக்கும் தேவையும் நிர்ப்பந்தமும்,  முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது.  அவ்வகையில், “கிராக்கி நிர்வாகம்’ (Demand management)  என்ற சமூகப் பொறியமைவு ( Social engineering) உத்திகளைக் கையாளுவதற்கு முதலாளித்துவம் நிர்ப்பந்திக்கப் பட்டது. ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளியல் அறிஞர் முன்வைத்த இந்தக் கொள்கை உத்திகள் “முதலாளித்துவத்தின் பொற்கால’த்திற்கு இட்டுச் சென்றன. ஆனால் அதைத் தொடர்ந்து, மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் எழுந்து வந்த நிதி மூலதனம் ( அது மற்றொரு “கோட்பாட்டுப் பிரச்சினை’)  கீன்ஸ் பொருளாதாரத் திட்டங்களை சுருட்டிப் பின்னுக்குத்  தள்ளி விட்டது. அனுபவங்களின் தொடர் பின்னணியில் எழும் அடுத்தடுத்த புரட்சிகரமான போராட்டங்களின் மூலமே, ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு’ எதிரான  சவால்களை   வெற்றி கொள்ள முடியும். குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடந்து முன்னேற முடியும். அது வரை, “கோட்பாட்டுப் பிரச்சினை”களின் அடிப்படையிலான சித்தாந்தப் புரிதலில் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, சோஷலிஸ்டுகள், கோட்பாடுகளின் சிதைவிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருத்தல்  மிகவும் அவசியம்.