’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்

தோழர் ஏ.கே. கோபாலனின் தியாக வாழ்வை நினைவு கூரும் வகையில் ’நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற அவரது சுயசரிதை நூலில் இருந்து சில பகுதிகள்.

தோழர் ஏ கே கோபாலன் இவ்வாறு நினைவு கூர்ந்தார்: “சுதந்திரம் கிடைத்த இரவான, ஆகஸ்ட் 14, 1947 அன்று கண்ணனூரின் பெரிய சிறைச்சாலையில், நான் தனிமைச் சிறையில் இருந்தேன். தடுப்புக் காவல் கைதிகள் வேறு யாரும் இல்லை.  இரவில் என்னால் தூங்க முடியவில்லை. சிறையின் நான்கு மூலைகளிலிருந்தும் ‘ஜே’ என்ற முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. ‘மகாத்மா காந்தி கி ஜே’, ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கங்களின் எதிரொலி சிறை முழுவதும் எதிரொலித்தது.  சூரிய உதயத்திற்குப் பிறகு வரும் கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் காத்துக் கொண்டிருந்தது. அவர்களில் எத்தனை பேர் இத்தருணத்திற்காக பல வருடங்களாக காத்திருந்து போராடினார்கள். அத்தகைய போராட்டத்தில் தங்களுக்கான அனைத்தையும் அவர்கள்  தியாகம் செய்திருக்கிறார்கள்.  நான் ஒருசேர மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் உணர்வு வயப்பட்டிருந்தேன். எனது இளமைக்காலம் முழுவதையும் தியாகம் செய்து, இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கான இலக்கு நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஆனால் நான் இப்போதும் கூட கைதியாக சிறையில் இருந்தேன்.  நான் இந்தியர்களால் – காங்கிரஸ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டேன், ஆங்கிலேயர்களால் அல்ல. 1927ல் இருந்து காங்கிரஸ் குறித்த நினைவுகள் என் மனதில் ஓடின.  கேரளாவின் காங்கிரஸ் இயக்கத்தில் நான் ஆற்றிய பங்கை நினைத்து பெருமைப்பட்டேன். சில காலம் கேரள காங்கிரஸின் செயலாளராகவும், அதன் தலைவராகவும், நீண்ட காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த ஒருவர், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை சிறையில் கொண்டாடினார்!”

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தின், தலைமை சிற்பிகளில் ஒருவரான தோழர் ஏ.கே. கோபாலன், ஒரு பன்முக ஆளுமையாக விளங்கினார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்; சமூக சீர்திருத்தவாதி; தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர்; ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்; வலிமைமிக்க சொற்பொழிவாளர்; தொலைநோக்கு பார்வையுடையவர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிறந்த மனிதப் பண்புகளின் உருவகமாகவும்,  வெகுமக்களுக்கான மனிதராகவும் அவர் திகழ்ந்தார்.

கோபாலன் ஆசிரியராக பணிபுரிந்த ஆரம்ப காலத்தில், மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய அரசியல் சூழல் சூடுபிடிக்கத் துவங்கியது.  உண்மையில், கோபாலன் மாணவராக இருந்தபோதே, பல்வேறு பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1920களின் பிற்பகுதியில், அவர் காதி குறித்த செய்திகளைப் பரப்புவதிலும், வெளிநாட்டு ஆடைகள் மற்றும் பொருட்களைப் புறக்கணிக்க மக்களை தூண்டுவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  விடுமுறை நாட்களில், காதி மற்றும் சுதேசிப் பொருட்களை ஊக்குவிக்க கிராமங்களுக்குச் சென்றார். கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

அவரது வார்த்தைகளில் கூறுவதானால்: “1928 ம் ஆண்டு முதல் காதி குறித்த பிரச்சாரம் மற்றும் அன்னிய துணிகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டுவதிலும் ஆர்வம் காட்டினேன். விடுமுறை நாட்களில் காதி மற்றும் ‘சுதேசி’ பொருட்களை பரப்புவதற்காக கிராமங்களுக்குச் செல்வேன்.  நடுத்தரக் குடும்பங்களில் இராட்டையை அறிமுகம் செய்து, நூல் நூற்பு செய்து தலைமையகத்துக்கு அனுப்பி வந்தேன்.  போராட்டம் இல்லாமல் சுதந்திரம் சாத்தியமற்றது என்பதும், போராட்டம் எப்போது வந்தாலும்  தயாராக இருக்க வேண்டும் என்பதும் எனக்கு தெளிவாகத் தெரிந்தது.  இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல என்றும் எனக்குத் தெரியும். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல் அது சாத்தியமில்லை என்றும் உணர்ந்தேன்.”

ஏ கே ஜியால் பரிந்துரைக்கப்பட்ட அன்னியத் துணி புறக்கணிப்பு மற்றும் சுதேசி பிரச்சாரம் என்ற இரட்டைக் யோசனைகள், மனு கொடுப்பதை விட அமைதியான எதிர்ப்பின் பெரு மதிப்புக் கொண்ட  பயனுள்ள ஆயுதங்களாக முக்கியத்துவம் பெற்றது.  இது மக்களின் அரசியல் உணர்வை பெருமளவில் தட்டி எழுப்பியதோடு, தேசியவாத உணர்வுக்கு ஒரு புதிய உறுதியான வடிவத்தை அளித்தது. சுதேசி பிரச்சாரம் மற்றும் அன்னிய பொருட்கள் புறக்கணிப்பு ஆகியவை தந்த உணர்ச்சிகள், மக்களிடையே தேசபக்தியை பெரிய அளவில் தூண்டியது. 1930 ஆம் ஆண்டில் தேசம் கொதி நிலையில் இருந்தது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் எழுதியுள்ளபடி: “இந்தியா முழுவதும் வீசிய ஒரு வலிமையான புரட்சிக் காற்றின் நடுவே நான் இருந்தேன்.  இளைஞர் கழகங்கள், தொழிலாளர் சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்பாடுகள், வேலைநிறுத்தங்கள் போன்றவை அனைத்தும் என் இதயத்தில் அனுதாப அதிர்வலைகளை எழுப்பின.  எப்பொழுதாவது மட்டும் பொதுச் சேவையில் ஈடுபடுவது என்பதை  விட்டுவிட்டு … எனது முழு நேரத்தையும் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும் என்ற வலுவான உந்துதல் என்னுள் இருந்தது.  எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், என்னைச் சுற்றி நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தீவிரமான போராட்டம் தொடங்கியது. 1930 க்கு முன்பு, என்னைத் தொந்தரவு செய்த முரண்பட்ட சிந்தனைகளின் மோதல் இதுவாகும்.”

1930 ஆம் ஆண்டு, கோழிக்கோடில் இருந்து பைய்யனூர் வரை, திரு கே. கேளப்பன் தலைமையில் நடந்த ஒரு நீண்ட பிரச்சாரப் பயணத்தை வரவேற்க ஏற்பாடு செய்வதில் கோபாலன் முன்னணியில் இருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்க, கோழிக்கோடு சென்ற  கோபாலன் கைது செய்யப்பட்டு கண்ணூர் மத்திய சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏ.கே.ஜி.யும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் வயநாடு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை அமைப்பதில் பணியாற்றினார்.

 தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.  உண்மையில் ஆங்கிலேயர்கள் தீண்டாமை எனும் ஜனநாயகமற்ற, சமூகப் படிநிலையை மேலும் வலுப்படுத்தியதாக அவர் எண்ணினார். ஏகாதிபத்திய சக்திகள், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைநிறுத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று முயன்றன.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்த அஸ்திவாரங்களும், அந்நிய ஆட்சியாளர்கள் தீவிரமாக ஊக்குவித்து வந்தவைகளுமான மக்களிடையே ஒற்றுமையின்மை, பரஸ்பர அவநம்பிக்கை,  சமூகங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான பகை, இவைகளை நன்கு உணர்ந்த ஏ.கே.ஜி, தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார்.

அவரது முயற்சியின் பேரில், கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி 1931-ல், குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாகிரகம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. குருவாயூர் கோயிலுக்குள் நுழையும் பொதுப் பாதையிலும், பிரதான  தெய்வம் இருக்கும் பிரகாரத்திலும், பட்டியல் சாதியை சேர்ந்த மக்கள் நடக்க அனுமதிக்கப்படவில்லை.  கோபாலனும், பட்டியல் சாதி இளைஞர்களும்  ஒரு பேரணி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் பேரணிப் போராட்டத்திற்கு தானே முன்வந்து தலைமைதாங்கிச் சென்றார். குருவாயூர் சத்தியாகிரகம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்ததோடு, விரைவில் இவ்வியக்கத்தின் எதிரொலிகள் நாடெங்கும் கேட்கத் துவங்கின. மக்கள் இந்த இயக்கத்தில் தனி ஆர்வம் காட்டத் தொடங்கினர்.  இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக, ஜனவரி 1932 இல் கோபாலன் கைது செய்யப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் இயக்கம் தடையின்றித் தொடர்ந்தது.

ஏ,கே.ஜியின் சொந்த வார்த்தைகளில் கூறுவதானால்: ”பேரணியில் கலந்து கொண்ட பட்டியலின இளைஞர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இனியும் அவர்கள், ‘நெல் நாற்றுகளுக்கு அடியில் வளரும் புல்’ இல்லை என்று பெருமிதம் கொண்டனர்.  பல நூற்றாண்டுகளாக காலடியில் நசுக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவின் பிரதிநிதிகளாக, தீய, துர்நாற்றம் வீசும் சமூகத்தை மாற்றி, அதன் இடத்தில் ஒரு அழகான புதிய சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான புனிதப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.  பட்டியலின மக்கள் காடுகளைச் சேர்ந்த மிருகங்கள் அல்ல என்பதை மற்றவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.”

இந்த இரண்டாவது சிறைவாசம் மிகவும் வித்தியாசமானது. அதிகாரிகள் மிகவும் மிருகத்தனமாக இருந்ததோடு, கைதிகளை அடித்து உதைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.  ஆனால் ஏ.கே.ஜி பல புரட்சியாளர்களைச் சந்தித்து ரஷ்யப் புரட்சியின் தாக்கங்கள் உட்பட பல அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததும் இதே சிறைத் தண்டனைக் காலத்தில்தான்.  கண்ணனூர் சிறையில் “எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்” அவர்தான் என கருதப்பட்ட ஏ.கே.ஜி, விரைவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் முதலில் சித்த சுவாதீனமில்லாத கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டார்.  அது குறித்து அவர் நினைவு கூரும்போது: “நான் அந்த இடத்தைப் பார்த்த தருணத்தில் கண்களில் நீர் வர அதிர்ச்சியில் மூழ்கிப் போனேன். ஆம். அதிகார வர்க்கத்தின் கண்களுக்கு நான் ஒரு பைத்தியக்காரனாக இருந்தேன்.  தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடுவது ஏகாதிபத்தியவாதிகளின் பார்வையில் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். பைத்தியக்காரத்தனத்தில் பல வகைகள் உள்ளன. நான் ஒரு ‘அரசியல் பைத்தியம்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.  உலகில் அடக்குமுறைகள் இருக்கும் வரை இந்தப் பைத்தியக்காரத்தனம் மறையாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.”  ஆறு நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு,  இறுதியாக அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் இருந்த ஆறுமாதங்களில், சொல்ல முடியாத கொடுமைகள் அவரை உடல் ரீதியாக சிதைத்ததேயன்றி, உணர்வுரீதியாக இல்லை. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அறிவுரையை பொறுமையின்றி ஒதுக்கித் தள்ளினார்.  அவர் பின்னர் எழுதியது போல், “ஓய்வு! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் போராடியவன் என்ற முறையில், நாடு முழுவதும் தடியடி சத்தம் எதிரொலிக்கும் போது, ஆயிரக்கணக்கான மக்கள் போர்க்களத்தில் நுழையும் போது, உறுதியான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நான் எப்படி ஓய்வை நினைத்துப் பார்க்க முடியும்?”

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் குருவாயூர் திரும்பினார். பின்னர், திருவிதாங்கூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கண்ணூர் மற்றும் பெல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டார்.  விடுதலையானதும், சமூக சமத்துவத்திற்காக அயராத பாடுபட்டவரான, ஏ.கே.ஜி அனைத்து விதமான அநீதிக்கும் எதிராக இடைவிடாமல் போராடும் போராளியாக இருந்தார்.  சமூக சமத்துவத்திற்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு அவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான துன்பங்களை சமாளிக்க, முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

1934-ல் கேரளாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானபோது, அந்தக் கட்சியின் தீவிர உறுப்பினரானார் கோபாலன். அதே ஆண்டில், கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் ஆனார்.  ஏ.கே.ஜி அக்காலத்தின் முக்கிய பிரச்சனைகளாக வறுமை, பசி மற்றும் வேலையின்மை இருப்பதை உணர்ந்தார். மக்கள் மத்தியில் ஒரு பொதுவான விரக்தி இருந்தது. புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஆர்வம் இளைஞர்களிடையே இருந்தது.  1936 ஆம் ஆண்டில், கோபாலன் தனது சகாக்களுடன் சேர்ந்து, உண்ணாவிரத ஊர்வலம் மற்றும் வேலையின்மைக்கு எதிரான நெடும் பயணத்தை நடத்த முடிவு செய்தார். அந்த நெடும்பயணம் 966 கிலோமீட்டர்கள் நடந்து கடந்து, இறுதியாக மெட்ராஸை அடைந்தது.  வேலையற்றோர் மற்றும் பசியால் வாடும் இளைஞர்களின் இந்த நெடும் பயணத்தை கண்ணூரில் இருந்து மெட்ராஸ் வரை நடத்தியதற்காக, ஏ.கே.ஜிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

ஏ.கே.ஜி கூறுகிறார், “1938 வரை, நான் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினேன். அவர்களின் போராட்டங்களில் பங்கேற்றேன்.  அவர்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் கூடுதலாக அறிய முடிந்தது. நாட்டின் உட்பகுதி விவசாயிகளின் பரிதாபகரமான நிலைமைகளைக் கவனித்தேன்.  தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துச் சம்பாதித்த அனைத்தையும், நில உரிமையாளருக்கு வழங்கும் ஏழை விவசாயிகளிடம் வர்க்க உணர்வைத் தூண்டுவது மிகவும் எளிதானது என்பதை நான் கண்டு கொண்டேன்.  அவர்கள் பல நூற்றாண்டுகளாக துன்புறுத்தலுக்கு ஆளானதால், சுதந்திரத்தின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. ஒற்றுமையான நடவடிக்கைகளின் மூலம் தங்களின் துயரம் விலகக் கண்டபோது, அவர்கள் புதிய சுயமரியாதை பெற்றதோடு, தங்களின் அடக்குமுறையாளர்களுக்கு இனியும் பயப்பட மாட்டார்கள்.”

முந்தைய திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் வரலாற்றில் 1938 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு, ஏ.கே.ஜி அரசின் அடக்குமுறைக்குப் பொறுப்பேற்கக் கோரி புகழ்பெற்ற திருவிதாங்கூர் பிரச்சாரப் பயணத்தை வழிநடத்தி, ஜூலை 1938 இல் அலுவாவில் கைது செய்யப்பட்டார்.  1939 ஆம் ஆண்டு பினராயில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், ஏ.கே.ஜி, தோழர்கள் பி.கிருஷ்ணபிள்ளை மற்றும் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாக சோசலிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதனால் தலைமறைவாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு சத்தியாகிரகியாக இருந்து, பின்னர் சோசலிஸ்ட் மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் ஊழியராக மாறியபின், சிறைவாசத்திற்கு எப்போதும் தயாராக இருந்த நான், தலைமறைவு வாழ்க்கைக்கு மாற வேண்டியிருந்தது. நான் ரகசியமாக வேலையில் ஈடுபடுபவன் அல்ல.  அதுவரை நான் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலேயே பணியாற்றி வந்தேன்.” ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில், தலைமறைவாக இருந்து வேலைகள் செய்வதைக் கற்றுக்கொண்டார்.  “பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன்.”

மார்ச் 24, 1941 இல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்படும் வரை ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார்.  இங்கிருந்து தான் ஏ.கே.ஜி தனது புகழ்பெற்ற  தப்பியோட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். பல சிறைத் தண்டனைகளில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்த ஏ.கே.ஜி, கடைசியில் முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்பட்ட ஆடம்பரமான வசதிகளிலிருந்து வெளிவர சிறை உடைப்பை நாடியது நகைமுரணானது.

சுதந்திரப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏ.கே.ஜி சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தார். 1941 செப்டம்பர் 25, அன்று இரவு, ஏ.கே.ஜி மற்றும் இருவர் தங்கள் சிறை அறையின்  சுவரில் துளையிட்டு தப்பித்தனர்.  வெளியில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அவர் இறுதியாக கேரளாவை அடைந்தார். இ.எம்.எஸ் உட்பட பல தலைவர்கள் சிறையிலிருந்து விரைவில் விடுவிக்கப்பட்டாலும், ஏ.கே.ஜி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற காவல்துறை மறுத்து விட்டது.  கேரளாவில் இருப்பது பாதுகாப்பற்றதாக இருந்ததால், அவர் வட இந்தியாவில் கான்பூருக்குச் சென்றார். அங்கு பல்வேறு வேலைகளைச் செய்தபடி தலைமறைவு கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளையும் தொடர்ந்தார்.

அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மும்முரமாக இருந்தபோது, போருக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா முழுவதும் வெகுமக்கள் போராட்டங்கள் வெடித்தன.  ஏ.கே.ஜி, புன்னப்புரா-வயலார் போராட்டம், பீடித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சிராக்கல்லில் நடந்த விவசாயிகள் கிளர்ச்சி என அனைத்துப் போராட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்றார்.  மலபாரில் நடந்த போராட்டத்தை ஒடுக்கவும், தலைவர்களைக் கைது செய்யவும் மெட்ராஸிலிருந்த பிரகாசம் தலைமையிலான அரசு தன்னால் இயன்றதனைத்தையும் செய்தது.

சுதந்திர தினத்தன்று, மெட்ராஸ் அரசு ஏ.கே.ஜி. தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தது. ஆனால் ஏ.கே.ஜி. தைரியமான போராட்டத்தால் பெற்ற சுதந்திரத்தை கொண்டாட முடியாமல் சிறைக்குள் தனிமையில் இருந்தார்.

இருப்பினும் அவர் சிறைக்குள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். மறுநாள் காலை, தன்னுடன் வைத்திருந்த தேசியக் கொடியை ஏந்தியவாறு சிறை வளாகம் முழுவதும் நடந்தார்.  அனைத்து கைதிகளும் கூடியிருக்க, சிறைக் கூடத்தின் கூரையில் கொடி ஏற்றப்பட்டது. ஏ.கே.ஜி கூடியிருந்த கைதிகளிடம் சுதந்திரத்தின் மேன்மை குறித்துப் பேசினார்.  மேலும் தனது வாழ்நாள் முழுவதும், ஏ.கே.கோபாலன் தனது இளமைப் பருவத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்தார், மக்கள் நலனுக்காக எங்கும் எப்போதும் போராடினார்.

இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!

வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?

– ஏ.கே.கோபாலன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும், குறைந்த பட்ச திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி என்ற பகுதியில் பழங்குடி மக்களையும், வனம் சார்ந்து வாழும் சமூகங்களையும், வனங்களிலிருந்து வெளியேற்றுவது நிறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 2006 ஜூலை மாதம் 22 ம் தேதி ஐ.மு., இடதுசாரி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் சி.பி.எம். பழங்குடி மக்கள் மசோதா தொடர்பான தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. பழங்குடி அல்லாத வனம்சார் மக்களையும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டு வருவது, கட் ஆஃப் ஆண்டை 1980 லிருந்து 2005 என விஸ்தரிப்பது, 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பை நீக்குவது மற்றும் பயனாளிகளை கிராம சபைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்வது என 4 முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் கூட எழுதப்பட்டுள்ளது. (Peoples Democracy, September 3, 2006. பக்கம் 7) வனங்களையும், இயற்கை வளங்களையும் தனியார் வசமாக்குவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படும் என்பதும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் வனங்கள், சுற்றுச்சூழல் அமைச்சரகத்திற்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது (Peoples Democracy, Sep. 24, 2006, பக்கம் 5)

நாடு முழுவதும் பழங்குடி மக்களும், வனம் சார்ந்த சமூகங்களும் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் நிலைபாடு என்ன? பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க சி.பி.எம். போன்ற இடதுசாரிக் கட்சிகள் / அரசுகளின் நிலைபாடு என்ன? என்னென்ன திட்டங்களை இடதுசாரி அரசுகள் குறிப்பாக திரிபுரா, மேற்குவங்க அரசுகள் மேற்கொண்டுள்ளன? இப்படி பல கேள்விகளுக்கு விடைகாண படிக்க வேண்டியதொரு நூல் சுற்றுச் சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் : சமகால விவாதமும் எதிர் காலத் திட்டமும் ஆகும். அர்ச்சனா பிரசாத் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Environmentalism and the Left Contemporary Debates and Future Agendas in Tribal Areas”  என்ற நூலை லெஃப்ட் வேர்டு புக்ஸ் வெளியிட்டது. தமிழில் சஹஸ், முரளி, சாமி ஆகிய மூவரால் மொழி பெயர்க்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வெளியிட் டுள்ளது. இன்று பழங்குடி மக்கள் இனச் சான்றிதழ் பெறுவதி லிருந்து, பட்டா இன்றி, வாழ வழியின்றி வெளியேற்றப்படுவது என்று அன்றாடம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் மறைந்து விட்டன. வருவாய் காடுகள் ரிசர்வ் காடுகளாக இஷ்டம் போல் மாற்றப்படுகின்றன. இந்த நூலில் வட இந்திய பகுதிகளில், குறிப்பாக இயற்கை வளங்கள் கொழிக்கும் ஜார்கண்ட், உத்தராஞ்சல், சத்தீஸ்கர் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ள ஒரிசா, மத்தியப்பிரதேச நிலைமைகள் விளக்கப்பட் டுள்ளன. தவிர, சுற்றுச்சூழல் தொடர்பாக இடதுசாரிகள் பார்வை எப்படி உள்ளது என்பதும் நூலில் விவாதத்திற்குட்படுத்தப் பட்டுள்ளது.

பொதுவாக, சுற்றுச் சூழல் என்று பேசுகையில் காற்று, நீர், ஒலி மாசு, அதிகரிக்கும் வெப்பம் பற்றித்தான் பேசப்படுகிறது. ஆனால், காலங்காலமாக இயற்கையை குறிப்பாக, வனம் சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்களின் வாழ்வு அரசு கொள்கை களால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதைப் பற்றி இடதுசாரிகளைத் தவிர, வெறும் சிலரே அக்கறை கொண்டுள்ளனர். 1973 ல் நடந்த சிப்கோ இயக்கம் வரலாற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுச்சூழல் இயக்கமென்பது வளர்ச்சி பற்றிய விவாதத்தில் வாழ்வு ரிமை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடைபெறும் தொடர் போராட்டங்கள் மற்றும் மோதல்களைக் குறிக்கும் ஒரு பொதுவான பதமாகும் என ஆசிரியர் முன்னுரையிலே குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடியினரும், நிலப்பிரச்சனையும் என்ற அத்தியாயத்தில், நிலச்சீர்திருத்தம், நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இடதுசாரி களின் நிலை விளக்கப்படுகிறது. காந்திய சுற்றுச்சூழல் வாதிகளும், இடதுசாரிகளும், நவீன வளர்ச்சித் திட்டங்களும், வணிகமயமாகும் விவசாயமும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின் றன என்பதை ஏற்கின்றனர். தங்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படு கின்றனர் அம்மக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறும் நூலாசிரியர், பிரிட்டிஷார் ஆட்சியில் நிலவருவாய் சட்டங் களின் விளைவுகளை விளக்குகிறார். இடதுசாரிகளைப் பொருத்த வரை, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில், நிலச்சீர்திருத்தம் நன்கு அமலாக்கப்பட்டுள்ளது. 1940 களிலேயே திரிபுராவிலும், ஆந்திராவிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட் டத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். உழுபவனுக்கே நிலம் என்ற கோஷத்தை வைத்து இடதுசாரிகள் போராடினர். திரிபுராவில் ஜீமியா மக்கள் நில உரிமைகளுக்காகப் போராடியது குறிப்பிடத் தக்கது. 1990 களில் அகில இந்திய விவசாய சங்கம் பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துகையில், பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் பழங்குடி மக்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. நூலாசிரியர் மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2001 ம் ஆண்டு வரை கையகப்படுத்திய 1.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 56 சதம் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்பட் டுள்ளது. பயனாளிகளில் 18 சதம் பழங்குடியினர் என்றும், 37 சதம் தலித்துகள் என்ற புள்ளி விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம், பயனாளிகள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரில் 10 சதம் மட்டுமே என்றும், பழங்குடியின மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய விவசாயம் அல்லாத மற்ற வாய்ப்புகளைப் பரிசீலிப்பது அவசியம் என்றும் குறிப்பிடுகிறார். கூடவே, நிலச் சீர்திருத்தம் மூலமாக பழங்குடிகள் நீடித்த, வளமான விவசாயச் சமூகமாக நிலைபெற இடதுசாரி இயக்கத்தின் பார்வையில் மேலே கூறப்பட்டது தொடர்பாக மாற்றம் தேவையென சுட்டிக் காட்டுகிறார்.

பழங்குடியினர் ஆக்கிரமிப்பாளர்களாக எவ்வாறு சித்த ரிக்கப்படுகின்றனர் என்பதை விவரித்துள்ள ஆசிரியர், மாநில வாரியாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு என்ற பட்டியலையும் தந்துள்ளார். 1980 ல் இயற்றப்பட்ட வன (பாதுகாப்பு) சட்டத்தின் முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை வனம் சார்ந்ததாக இருப்பதால், அவர்களை ஆக்கிரமிப்பாளர் எனச் சித்தரிப்பது தவறு என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். 2002 ல் சி.பி.ஐ(எம்) ராஞ்சியில் நடத்திய மாநாடு, வன வளங்கள் மீதும், நிலங்கள் மீதும் பழங்குடிகளுக்கு உள்ள உரிமைகளை யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.  இடதுசாரிகள் முன் வைத்த மற்ற சில முக்கிய கோரிக்கைகளும் பழங்குடி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நூலாசிரியர் காந்தியவாத சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைபாட்டையும் விளக்கியுள்ளார். இதனால் இருவேறு புரிதல்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் நீடித்த விவசாய உற்பத்தி, விவசாயம் சாரா வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தீர்வு காண முயல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பழங்குடியினரின் வாழ்க்கை முறையும், வேளாண்மை நெருக்கடியும் என்ற அத்தியாயத்தில் தற்போதைய சூழல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை, இடு பொருள் விலை உயர்வு, தாராளமயம் ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை நன்றாக விளக்கியுள்ளார். நிலப்பயன்பாடு பற்றி விளக்கும் போது, சுழற்சி முறை பயன்பாட்டை இடதுசாரிகள் ஏற்கவில்லை என்கிறார். பழங்குடியினர் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும, திரிபுரா அனுபவம் எடுத்துக்காட்டாக உள்ள தென்று எழுதியுள்ளார். வந்தனா சிவா போன்றவர்களின் வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் பசுமைப் புரட்சியைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. உணவு உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த பசுமைப் புரட்சி, ஏற்றத்தாழ்வு களை அதிகரிக்கச் செய்தது என்பது தான் உண்மை. வந்தனா சிவா போன்றோர், பசுமைப் புரட்சியை கடுமையாகச் சாடுகின்றனர். இடதுசாரிகளின் நிலைபாட்டிற்கும் மற்ற சுற்றுச் சூழல் இயக்கத்தி னரின் நிலைபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அத்தியாயத்தில் புனல் காடு விவசாயம் மற்றும் ரப்பர் விவசாயம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. திரிபுரா, கேரளா மாநில அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. புனல்காடு விவசாயம் தாக்குப்பிடிக்கக் கூடிய முறை என்பதை இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். (புனல் காடு விவசாயம் என்பது சுழற்சி முறையில் மாறி மாறிப் பயிரிடும் முறை) சுழற்சி முறை விவசாயம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியில் உதவும் என்பது அவர் கருத்து.

பல வட மாநிலங்களில் விவசாயிகளின் பட்டினிச்சாவுகள், காரணங்கள், தீர்வுகளை விளக்கி, பெரிய கம்பெனிகள் விவசாயத் துறையில் நுழைவது எந்த அளவு பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பணப் பயிர்களுக்கு மாறியதால், வெளியிலுள்ள பெரு விவசாயிகள் பழங்குடியினரின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிய சம்பவம் நிறைய இடங்களில் நடந்துள்ளது. குடிபெயர்தல் பிரச்சனையை ஆழமாக விவாதித்துள்ளார். (பக்கம் 57) இதில் வடமாநிலங்களின் அனுபவம் விளக்கப்பட்ட போதிலும், அதை தமிழகச் சூழலுக்கு அப்படியே பொருத்திப்பார்க்க இயலும். பருவகால குடிபெயர்தல் என்பது காலம் காலமாக உள்ளது தான். ஆனால், நெருக்கடி காரணமாகக் குடிபெயர்வது என்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதென்பது நாம் இந்தியா முழுமையிலும் காண முடியும். நூலாசிரியரும் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.

பழங்குடியினர், காடுகள், உலகமயம் என்ற அத்தியாயம் பழங்குடியினரின் உரிமைகள், அத்து மீறல்கள், போராட்டங்களை விளக்குகிறது. காடுகளைப்பற்றி அரசின் பார்வை எப்படியுள்ளது? பழங்குடி மக்களின் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்தில் காடுகள் மீதான அரசின் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டுமென இடதுசாரிகள் கருதுகின்றனர். இதையொட்டி இரண்டு கருத்தோட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை ஆசிரியர் விளக்குகிறார். 1). மேற்கத்திய நவீன கருத்தோட்டம் 2). பழங்குடிகளின் பழமையான கருத்தோட்டம் என விளக்கும் போது, வனவிளைபொருட்கள் எப்படி சிறியவை, பெரியவை எனப் பிரிக்கப்பட்டு, அரசாங்கம் சிறியவை மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது பயனுள்ளதாகும். மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் வனப் பொருட்களைச் சுரண்டவே உதவியது என்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. காடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? என்ற கேள்விக்குப் பதிலாக, மேற்கு வங்க அரபாரி பரிசோதனை விளக்கப்பட்டுள்ளது. கூட்டு வன மேலாண்மைத் திட்டம் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் 15 ஆண்டுகள் வனத்துறைக்கும், மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்த்து, முறைப்படி பலன்களை இருதரப்பினரும் பங்கிட்டுக்கொள்ள உதவியது. இந்தப் பரிசோதனை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், அதன் பிரச்சனைகளையும் கோடிட்டு காண்பித்துள்ளார்.

வளர்ச்சியும், புலம் பெயர்க்கும் அரசியலும் என்ற அத்தியாயத்தில் நவீன வளர்ச்சியின் பலன்கள், பிரச்சனைகள், அதன் பின்விளைவுகள், அதில் அடங்கியுள்ள அரசியல் போக்குகளை விளக்குகிறது. நர்மதை அணைப்பிரச்சனையிலிருந்து துவங்கி, தொழிற்சாலைகள் போன்றவை  பழங்குடி மக்களை எப்படிப் பாதிக்கிறது என்றும், இதை இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின் றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, புலப் பெயர்ச்சி – மறுவாழ்வுப் பிரச்சனையில் இடதுசாரிகளும், சுற்றுச் சூழல் வாதிகளும் ஒரே நிலையை எடுக்கின்றனர். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு  விஷயத்தில், கே.எஸ்.எஸ்.பி. யின் போராட்ட நடவடிக்கை இடதுசாரிகள் மத்தியில் நவீன வளர்ச்சித் தன்மை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். ஆனால், நர்மதா திட்டத்திற்கெதிரான போராட்டங்களுக்கு இடதுசாரிகள் அளிக்கும் ஆதரவு, பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது. நர்மதை அணைப் பிரச்சனையை விளக்கி, இதில் இடதுசாரிகளின் நிலைபாட்டையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சி.பி.ஐ.(எம்) கட்சி 1992 ல் எடுத்த நிலை என்ன என்பதுடன், 2002 ல் கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பின் முன்வைத்த கோரிக்கைகள் (பக்கம் 87) விரிவாகத் தரப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் பழங்குடியினர் என்ற அத்தியாயம் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. குறிப்பாக, நேருவின் பார்வை பற்றி எழுதப்பட்டுள்ளது. தவிர, ஆதிவாசிகளுக்கு திட்டங்களில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டில் பெரும் பகுதி கல்விக்கும், சமூகப் பணிகளுக்குமான மானியங்களாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

பழங்குடி மக்களுக்கான முதல் அமைப்பை 1948 ல் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் துவக்கியது. அவர்களுக்கான கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சுயாட்சி கவுன்சில்களினால், பழங்குடி மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், அவர்கள் முன்னேற வழி வகுக்கும் என்றும் இடதுசாரிகள் கருதினர். அதை வலியுறுத்திப், போராடி 1982ல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின் கீழ் மாவட்ட சுயாட்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலர் கள் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பதற்கு திரிபுரா சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பின்னுரையில் நூலாசிரியர் மூன்று முக்கிய சவால்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

  1. புதிய பொருளாதாரக் கொள்கை – உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் விளைவாக, அசமத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர்.
  2. பிளவுவாதம், வகுப்புவாதம் – இதற்கெதிரான போராட்டங் களை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் சிலர் இணைந்த போதிலும், பகுகுணா போன்றோர் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதரவைத் தேட மத அடிப்படைவாத சக்திகளுடனான உறவைப் பயன்படுத்துகின்றனர். சந்தர்ப்பவாதப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
  3. நீர், நிலம், வனங்கள் சீர்கெட்டு வருவது மிகப்பெரிய சவால். உண்மையான சவாலாக ஆசிரியர் எதைக் கருதுகிறார்? நிலம், நீர், வனம் என்ற இந்த வளங்களின் மீது பிற பகுதியினருக்கும் இருக்கக் கூடிய உரிமைகளுக்கு முரணின்றி இப்பழங்குடி மக்களுக்குள்ள அத்தகைய உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது.

இந்த நூல்  இரண்டு அம்சங்களில் மிகவும் முக்கியமானது. ஒன்று, கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே, சுற்றுச் சூழல் பிரச்சனைகளில் நம்  கட்சியின் நிலைபாடு பற்றிய தெளிவான புரிதல் குறைவாகவே உள்ளது. மற்ற பிரச்சனைகள் மீது கொடுக்கும் அளவு அழுத்தம் – நமது கூட்டங்கள் எழுத்துகளில் – சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இல்லை எனலாம். பெரிய அணைகள், வன வளங்கள் மீதான கட்டுப்பாடு, பழங்குடி மக்கள் உரிமைகளுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் மோதல் போன்றவற்றில் கட்சியின் நிலைபாட்டை புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இரண்டாவதாக, தமிழகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஆய்வுகளை மேற்கொள்ளவும் தூண்டும் வண்ணம் உள்ளது. இந்நூல் பெரும்பாலும் வட இந்திய மாநிலப் பிரச்சனைகளை மையமான எடுத்துக்காட்டுகளாக ஓரிரு இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்கள் பிரச்சனைகள் மீது இயக்கங்கள் நடத்தியுள்ளது. பளியர் என்ற பழங்குடி மக்கள் திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வசிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் அணில் களைப் பாதுகாக்கிறோம் என பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுபோல், குறும்பர், இருளர் என பழங்குடியினர் வாழ்வாதாரங்களை இழந்து அல்லலுறுகின்றனர். பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, அவர்களைத் திரட்டும் பணியை மேற்கொள்ளும் தோழர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி!

ஏ.கே.ஜி எனும் மூன்று எழுத்துக்களால் நாடெங்கிலும் அறியப்பட்டவர் – ஆயில்லியத்து குற்றியேரி கோபாலன் எனும் ஏ.கே.கோபாலன்.

அன்றைய சென்னை மாகாணத்தின், மலபார் மாவட்டத்தின் வடபகுதியில், இன்றைய கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் 1904 அக்டோபர் முதல் நாளன்று பிறந்தவர். சமூக சீர்திருத்தங்களில் அக்கறை கொண்ட தந்தையிடமிருந்து பெற்ற சமூகப்பார்வையுடன், மாணவப் பருவத்திலேயே, தேசவிடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்ட செயல்படத் துவங்கினார். பள்ளிப்படிப்பு முடித்து 7 ஆண்டு காலம் பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1928ம் ஆண்டு முதல் கதர் ஆடைப் பிரச்சாரத்திலும், வெளிநாட்டுப் பொருள் மறுப்பு இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்கத்துவங்கிய பின், 1930ல் வேலையை இராஜினாமா செய்து, சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு முதலில் கண்ணூர் மத்திய சிறையிலும், தொடர்ந்து வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்திய அரசியல் வானில் ஐம்பது ஆண்டுகாலம் அவர் ஆற்றிய பணிகளைத் தொகுத்தளிப்பது இயலாத விஷயம்.

முதலில், காங்கிர கட்சி, 1934 காங்கிரசுக்குள்ளேயும், வெளியேயுமாக, காங்கிர சோசலிஸ்ட் கட்சி, 1939 முதல் கம்யூனிஸ்ட் கட்சி, 1964 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என அவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்து நிற்கிறது.

காங்கிர கட்சியில் அடிமட்ட பொறுப்புகளில் துவங்கி, கேரள மாநில காங்கிர கட்சியின் தலைவர், செயலாளர், பல்லாண்டு காலம் அகில இந்திய காங்கிர கமிட்டி உறுப்பினர், காங்கிர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசியக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகள். 1964ல், சி.பி.ஐ தேசிய கவுன்சிலிருந்து தனது 31 தோழர்களுடன் வெளியேறி மார்க்சிட் கட்சியை உருவாக்கி, வலுப்படுத்துவதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பெரும் பங்காற்றினார். சிறிது காலம் கேரள மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டார்.

ஆனால், ஏ.கே.ஜி.யின் வாழ்க்கை பெறப்பட்ட குறிப்புகளோடு, யாரும் நிறைவு செய்ய முடியாது! சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதனுக்கு, சமூக மாற்றத்திற்காகப் போராடத் துணிந்த, ஒரு புரட்சியாளனுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் ஏ.கே.ஜி. என்றால், அது கூட அவரது வாழ்க்கையை முழுமையாக மதிப்பிடுவதாக அமையாது.

சமூகக் கொடுமைகளை எதிர்த்து

தாழ்த்தப்பட்டவர்களும், இதர அடித்தட்டு மக்களும் சந்தித்து வரும் சமூகக்கொடுமைகளை எதிர்த்த போராட்டங்களுடன் அவரது போராட்டங்கள் துவங்கிற்று. சாலைகளில் நடப்பதற்குக்கூட அனுமதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி, அந்த சாலைகளில் அவர்களுடன் நடந்து, ஆதிக்க வெறியர்களால், மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். குருவாயூர் கோவில் நுழைவுப் போராட்டத்தில், தொண்டர்படைத்தலைவராக சென்ற பொழுதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்.

1930களில் துவங்கி, 1975ல் அவரதுகாலம் வரையிலும், ஆதிக்க சக்திகளால், குண்டர்களால், காவல்துறையினரால், சிறை அதிகாரி களால், அவர் சந்தித்த தாக்குதல்கள், சித்திரவதைகள் பட்டியலிட முடியாதவை!

பயணங்கள்! பயணங்கள்:

1936ல் கண்ணூரிலிருந்து சென்னை வரையிலும் 800 கிலோ மீட்டர், பட்டினிப் பேரணிக்கு அவர் தலைமையேற்றார். திருவாங்கூரில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ஆதரவாக, திருவாங்கூரை நோக்கி நடைபெற்ற பேரணி எனத்துவங்கி, கேரளாவில் அவர் அணிவகுத்துச் செல்லாத கிராமமோ, நகரமோ இல்லை என்றே சொல்லலாம். கேரளாவின் வட கோடியிலிருந்து தென்கோடிவரை நடைபானங்களை மேற்கொண்டார். 1960ல், 56வது வயதில் ஒரு பயணம்! 1972ல், 68வது வயதில் மற்றுமொறு பயணம்!

கேரளாவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டக்களம் கண்ட தலைவராக, ஏ.கே.ஜி. யைப் போன்று வேறு ஒருவர் இருந்ததில்லை என்று சொல்லலாம். அந்தப் போராட்டங்களும் தடியடி, சிறை வாழ்க்கை, சித்திரவதைகளோடு இணைந்ததாக இருந்தன!

நிலச்சீர்திருத்தம், நிலவெளியேற்ற எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டங்கள், உணவுப்பஞ்சம், மொழிவழி மாநில அமைப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு என கேரளாவுக்கு வெளியே அவர் தலைமையேற்ற போராட்டங்களும், அதையொட்டிய சிறை வாழ்க்கையும், சுதந்திரத்திற்குப் பிந்தைய நிகழ்வுகளாகும்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜதான் என அவர் பல மாநிலப் போராட்டங்களுக்குத் தலைமையேற்றார். அங்கெல்லாம் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.

தோழர் ஜோதிபாசு கூறுகிறார் – “பிரச்சனைகளிலும், போராட் டங்களிலும் அவர் காட்டும் அக்கறையும், அவரது பங்கேற்பும் கேரளாவுடன் நின்றுவிடவில்லை. நாட்டின் எந்த மூலைக்கும் அவர் விரைந்தார். பஞ்சாப் விவசாயிகளின் பிரமாண்டமான போராட் டத்தில் ஏ.கே.ஜி.யின் பங்கை நான் நினைவு கூற விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் நாங்களெல்லாம் தடுப்புக்காவல் சட்டப்படி விசாரணை யின்றி சிறைவைக்கப்பட்ட போது, பிரமாண்டமான மக்கள் பேரணியை ஏற்பாடு செய்தவர் அவர்”.

தமிழகத்தில் தலைமறைவு வாழ்க்கையின் போதும், பகிரங்க பங்கேற்போடும் கோவை, மதுரை, தஞ்சை, நீலகிரி மற்றும் சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளில், விவசாயிகள், தொழிலாளிகள் போராட்டங்களை ஒட்டியும், கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்காகவும், அவர் ஆற்றிய பங்கு பற்றி தமிழகத் தலைவர்கள் பலர் நினைவு கூறியுள்ளனர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், தொழிலாளர்கள் என போராட்டக்களத்தில் நின்ற உழைப்பாளி மக்களுக்கெல்லாம் ஓடோடி வந்து துணை  புரிபவராக அவர் இருந்தார்.

சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலும், அவர்களுக்கு உணர்வூட்டி உறுதிப்டுத்துவதிலும் அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை.

தோழர் கொரட்டரலா சத்திய நாராயணா கூறுகிறார் – 1952 தேர்தல் நேரம். தெலுங்கானா எழுச்சிக்குப் பிறகு போலீ, இராணுவ அடக்குமுறைக்கொடுமைகளால் ஆந்திர மாநிலத்தில் அச்சமும், பயமும் மேலாங்கியிருந்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சாதாரணமான பணிகளிலும் கூட ஈடுபட முடியாததில்லை. ஏ.கே.ஜி. அங்கு வந்தார். எல்லா இடங்களிலும் பேரணிகளை ஏற்பாடு செய்யும்படி கூறினார். இரண்டு வார காலம் இலட்சக்கணக்கான மக்களிடம் பேசினார். ஆந்திரா எழுச்சி பெற்றது. அவர் உருவாக்கிய தன்னம்பிக்கை, தேர்தலில் முழுமையாகப் பிரதிபலித்தது.

இதே போன்ற கருத்துக்களை, அக்காலத்தின் தலைவர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டங்கள்

எழுச்சியூட்டும் நடைபயணங்கள் போன்றே, உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, அசைக்க முடியாத மன வலிமையுடன், மக்கள் போராட்டங்களுக்கு அவர் துணை நின்றார். 30, 35 நாட்கள் என பல முறை சிறையிலும், வெளியிலுமாக அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள், மக்களை எழுச்சி பெறச் செய்தது; ஆட்சியாளர்களைப் பணிய வைத்தது.

நீதி மன்றங்களில்

ஏ.கே.ஜி.க்கு எதிராகப் போடப்பட்ட எத்தனையோ பொய் வழக்குகளை நீதிமன்றங்களில், அவர், உடைத்தெறிந்த நிகழ்வுகள் குறித்து, அந்தக்கால வழக்கறிஞர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். காவல் துறையினர் அவமானப்படுமளவிற்கு, அந்த வழக்குகளை மிகத் திறமையாக அவர் கையாண்டுள்ளார்.

ஆனால், சுதந்திர இந்தியாவில், இயற்றப்பட்ட தடுப்புச்சட்டத்தை எதிர்த்து சிறையிலிருந்து கொண்டே நடத்திய வழக்கு (ஏ.கே.கோபாலன் எதிர் டேட் ஆப் மதரா) வழக்கறிஞர் களுக்கான பாடப் புத்தகங்களில் இன்றும் இடம் பெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், பாதக தீர்ப்பு வழங்கிய போதும், அந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் அவரே வாதாடி, விடுதலை பெற்றார் என்பது வரலாற்று நிகழ்ச்சியாகும்.

சிறை வாழ்க்கை பற்றி

சிறைக்கூடம் என்றுமே ஏ.கே.ஜி.க்கு போர்க்களமாகவே இருந்துள்ளது. தனக்கோ, தன்னுடன் சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கோ மட்டுமல்லாமல், கைதிகள் அனைவருக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அவர் போராடினார். நாங்கள் ஏ.கே.ஜி.யிடம் புகார் கூறிவிடுவோம் என அவரது சிறையிலுள்ள இதர கைதிகள் அதிகாரிகளை மிரட்டுமளவிற்கு ஏ.கே.ஜி.யின் சிறைப் போராட்டங்கள் வலிமை பெற்றிருந்தன.

சென்னை மத்திய சிறையில் அரசியல் கைதியாக இருந்த திராவிடக்கழகத்தினரை இதர கைதிகள் போல் மொட்டையடிப்பை எதிர்த்து, நேரடியாகத் தடுக்கச் சென்ற ஏ.கே.ஜி., வார்டன்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது பற்றி, அவரே எழுதியுள்ளார்.

சிறைகளில் போராடுவதுமட்டுமல்ல, வெளியில் இருப்பதே அவசியம் என்ற நிலை ஏற்பட்டபோது, வேலூர் சிறைச்சுவர்களை உடைத்து, வேறு மூன்று தோழர்களுடன் அவர் தப்பித்த விதமும் அவரது மன உறுதியையும், போராட்ட வேட்கையையும் வெளிப்படுத்துவதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினராய்

1952ம் ஆண்டில் முதல்  பொதுத்தேர்தலிலிருந்து, 1977ல் மறைவு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றிய பாங்கும், நாடாளுமன்றப்பணி பற்றிய அவரது கருத்துக்களும், கம்யூனிஸ்டுகளின் நாடாளுமன்றப் பணிக்கான இலக்கணமாகத் திகழ்பவை.

மத்திய காங்கிர அரசின், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அவர் பெரும் புயலாய் மாறினார். 1952ல், பட்ஜெட் பற்றிய உரையின் முதல் வாசகமாக நீங்கள் மக்கள் மீது போர்தொடுத்துள்ளீர்கள் என கூறியது முதல், 1975ல் அவசர காலத்தின் போது,  மக்கள் நலனை விட்டுக்கொடுக்க இயலாது. நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையை இல்லாமல் செய்யும் முயற்சி யையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இந்திய ஜனநாயக மாண்புகளை, தனிநபர் சுதந்திரத்தை, சங்கம் சேரும் உரிமையை, நீதிமன்றத்தை அணுகும் உரிமையை, பத்திரிக்கை சுதந்திரத்தை, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் மற்றுமொரு மக்கள் அரசை உருவாக்குவதற்காக செயல்படும் உரிமையையும், ஒரு போதும் விட்டு கொடுக்க இயலாது என கர்ஜனை செய்தது வரையிலும், அவரது நாடாளுமன்ற உரைகள் இந்திய மக்களின் பிரச்சனைகளின், போராட்டங்களின் எதிரொலிகளாகவே இருந்தன.

நாடாளுமன்றமும், அவருக்கு பேராட்டக்களமாக இருந்தன. நடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபைக்குள்ளும், வெளியிலும் மறியல், உண்ணாவிரதங்கள் என அவர் நடத்திய கிளர்ச்சிகளும், பீடித் தொழிலாளர் சட்டம் உட்பட பல சட்டங்களை இயற்றச் செய்ய அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், இந்திய நாடாளு மன்ற வரலாற்று ஏடுகளில் அழியா இடம் பெற்றவை.

அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை அந்தத்தாக பார்த்தால், ஏற்படக்கூடிய அபாயங்கள், பாதக விளைவுகள் குறித்தும் அவரது எச்சரிக்கை தான், அங்கு அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக தொழிலாளி வர்க்க ஊழியர்களுக்கு முதல் பாடமாக அமைய வேண்டும்.

எங்கெல்லாம் ஆளும் வர்க்கங்களும், அவர்களது கையாட்களும் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஓடோடிச் செல்வார். ஒவ்வொரு இடத்திலும் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பவராகவும் மக்கள் விரோதிகளுக்கு அச்சம் ஏற்படுத்துபவராகவும் இருந்த இந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரது வாழ்வும், பணியும் இதர எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என கூறினார் தோழர் இ.எம்.எஸ்!

கடிதங்கள் எழுதி எழுதி கை ஓய்ந்துவிட்டது. மன்னிக்கவும். நான் உங்களையும், உங்கள் பிரச்சனைகளையும் மறந்துவிடவில்லை என அவர் கைப்பட பதில் கடிதம் எழுதினார்!

காபிபோர்டு ஊழியர்கள் முதல் இந்திய விண்வெளிக்கழக ஊழியர்கள் வரையில் பல்வேறு தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்தார். 1951 முதல் கடைசி நாள்வரையிலும், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்தார்.

இத்தனை பணிகளுக்கு இடையிலும், அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த ஒவ்வொருவரும் என்றென்றும் மறக்க முடியாதவராக வாழ்ந்தவர் அவர்! அவர் முன்கோபக்காரர் எனக் கூறியவர்கள் எல்லோருமே, அந்தக் கோபம், சூரியனைக்கண்ட பனி போல், சட்டென மறைந்து விடுவது பற்றியும் எழுதிட மறந்திடவில்லை!

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கையிலும், அவர் முன்னுதாரணமானவரே! விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத்துணை தோழர் சுசீலா, அரசியல் அரங்கிலும் இணைந்து செயல்பட்டதை நாமறிவோம்! இணைந்து வாழ்க்கையிலும் பணியாற்றுகையிலும், தோழர் சுசீலா அவர்களது தனித்துவத்தை நிலைநாட்டும் முறையில் அவரது பங்களிப்பு பற்றி தோழர் சுசீலா நிறையவே எழுதியும், பேசியும் உள்ளார்.

ஏ.கே.ஜி. – இ.எம்.எஸ்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியில் ஏ.கே.ஜி. – இ.எம்.எஸ் ஆற்றிய பணிகள், ஒன்றையொன்று நிறைவு செய்யவதாக இருந்ததை அவரும் நினைவு கூறுகின்றார். கட்சியின் தத்துவ ஆசிரியனாகவும், தத்துவார்த்த வழிகாட்டியாகவும் இ.எம்.எஸ்மக்களைத் திரட்டி, போராட்டத் தயாரிப்புகளைச் செய்பவராய் ஏ.கே.ஜி. என இருவரும் ஆற்றிய பணிகளின் முதன்மைத் தன்மையைப் பல தோழர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

நான் அவரிடமிருந்து ஏராளமான விபரங்களைக் கற்றுக் கொண்டேன். எனது பலத்தையும், பலவீனங்களையும் மிக நல்ல முறையில் அவர் புரிந்து கொண்டார் என்பதில் தான் எங்களது இணைப்பின் வலிமை இருக்கிறது. ஒரு சிறந்த தலைவருக்கு, தனது ஊழியர்களை புரிந்து கொள்ள இயலவேண்டும். எனது திறமைகளுக் கேற்ற பணிகளை என்னிடம் ஒப்படைத்து, அதன் மூலம் எனக்கு மார்க்சீயம் கற்றுக் கொடுத்தார் என ஏ.கே.ஜி.குறிப்பிடுகிறார். ஒரு கிளர்ச்சியாளன் என்கிற முறையில், ஏ.கே.ஜி. எண்ணற்ற கொடுமைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளானார். தொடர்ச்சி யான சிறைவாழ்க்கை, சிறைக்குள்ளேயும், வெளியேயும் சந்தித்த தடியடிகள், சிறையிலிருந்து தப்பித்ததும், தலைமறைவு வாழ்க்கையும் – இவை அனைத்தும் அவரை உடல் ரீதியாக பாதிக்கச் செய்தது என்றாலும், மனதளவில் வலுப்பெறச் செய்தது. சொந்த வசதி வாய்ப்புக்களையோ, இன்ப துன்பங்களையோ பற்றி கவலைப் படாமல், மக்கள் சேவையில் மட்டும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அந்த மாபெரும் தியாகி மக்களிடமிருந்தே உற்சாகத்தை மட்டுமல்லாமல், உயிர் மூச்சையும் உட்கொண்டார் என இ.எம்.எஸ், ஏ.கே.ஜி. பற்றி குறிப்பிடுகிறார்.

இவ்வாறு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த, அந்த மாபெரும் தலைவர் பற்றி, தோழர் ஹர்கிஷன்சிங்சுர்ஜித் கீழ்வருமாறு கூறுகிறார்.

மக்களின் பிரச்சனைகளும், கிளர்ச்கிளும் நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், கேள்விப்பட்டவுடன் அங்கு ஓடோடிச் செல்பவராக ஏ.கே.ஜி. இருந்தார். பல நேரங்களில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பதற்குக் கூட அவருக்குப் பொறுமை இருக்காது. எப்போதும் அவர் மக்களுடன் நின்றார். அவர்களுடன் போராட்டங்களுடன் இணைந்தார்.  அவர்களது குரலை நாடாளு மன்றத்தில் ஒலித்தார். இவை அனைத்தும் நாட்டின் எண்ணற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபட்ட வராக்குகிறது. தேசப்பற்றுடையோருக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் ஒளிவிளக்காகத் திகழ்பவர், அவர். அவரது வாழ்க்கையும், சொல்களும் வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக உள்ளது. எளிமை, ஏழை களுடான நெருக்கம், தியாகம், கருத்துக்களை செயல்களுடன் இணைத்தல்… இவை அனைத்தும் ஏ.கே.ஜி.யின் வாழ்க்கையிலிருந்தான படிப்பினைகளாகும்.

நாட்டின் விடுதலைக்காகப் போராடி, விடுதலை நாளிலும் சிறையிலேயே இருந்து, அன்றைய தினம் அங்கு தேசீயக் கொடியை ஏற்ற முயற்சி செய்தார் என்ற குற்றத்திற்கு உள்ளான தோழர் ஏ.கே.ஜி., விடுதலைக்குப் பிறகும், காங்கிர கட்சியின் கொள்கைகளை எதிர்த்து போராடிக் கொண்டே இருந்தார்.

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எதேச்சதிகாரப் பாதையில் பயணித்த அவசர கால ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், 1977 மார்ச் 22 அன்று ஏ.கே.ஜி. மறைந்தார்! மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!