இலங்கைப் பிரச்சனையும் இன்றைய உலக அரசியலும் ..

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம், பாலஸ்தீனமா, இலங்கையா, காங்கோ, சூடான், உகாண்டா போன்ற ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளா? என்று கேட்டால், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பண்பாட்டு பார்வை கொண்டவன் பதில் சொல்லத் திணறுவான்.

ஏகாதிபத்திய அரசியலுக்கு நேரடியாக பலியாகும் பாலஸ் தீனமும், அதற்கு ஆதரவளிக்கும் அண்டை நாடுகள், உள்நாட்டுப் போரால் மக்களின் வாழ்வு சின்னாபின்னமாகும். இலங்கை – வைரத் திருடர்கள், தாதுத் திருடர்கள் தொழில் முனைவோர் என்ற பெயரில் ஏகாதிபத்திய ராணுவ ஆசியுடன் வேட்டையாடி விளையாடும் காடுகளாகிவிட்ட ஆப்பிரிக்கக் கண்ட நாடுகள்; – இப்பகுதியில் வாழும் மக்கள் அவர்களது செல்வங்களான குழந்தைகள் சுமக்கும் துயரச் சுமைகளை, இதயங்களைக் கிழிக்கும் இன்னல்களை அளந்து கூறிட இயலாது, வரிசைப்படுத்தவும் இயலாது.

அதோ அந்த ஆலிவ் மரத்தடியில்
விழுந்து கிடக்கும் குழந்தையைப் பார்!
முத்தங்களுக்காக குறி வைக்க வேண்டிய
நெற்றியில் குண்டுகளல்லவா குறி வைத்துள்ளன….

என்ற ஆங்கில கவிதை வரிகளை மனக் கண்ணால் வாசியுங்கள் அல்லது வைரமுத்துவின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பாடலைக் கேளுங்கள். இழப்பின் வேதனையை ஓரளவு உணர முடியும்.

ஏகாதிபத்திய அரசியல்

ஏகாதிபத்திய ஆதிக்கம் விளைவிக்கும் அரசியலும், ராணுவத் தலையீடுகளும், சுரண்டலும் லாபம் தேடலும், இன்று எந்த நாட்டு மக்களையும் நிம்மதியாக வாழவிடவில்லை. பணக்கார நாடுகளிலே பயங்கரவாத பீதி மக்களை சுகமாக இருக்கவிடவில்லை. ஏழை நாடுகளிலே எதார்த்தமான ராணுவத் தலையீடுகளும், மோதல்களும் கொண்டு வருகிற துயரங்கள் மக்களை வாழவே விடவில்லை.

ஒரு சர்வதேசவாதி என்ற முறையில் பார்த்தால் ஏகாதிபத்திய ஆதிக்க அரசியலும், சுரண்டலும் எந்த நாட்டு மக்களையும் நிம்மதியாக வாழவிடவில்லை என்ற பொதுத் தன்மையோடு ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மத, இன, மொழி முரண் பாடுகள் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதையும் காண முடியும்.

இந்தப் புரிதலோடு, இலங்கை வாழ் மக்களின் துயரங்களுக்கு காரணங்களாக இருக்கும் பொதுவான ஏகாதிபத்தியம் விளைவிக் கும் அரசியல் வினைகள், தனித்துவமான மத, இன, மொழி முரண்பாடுகள் உருவாக்கும் சிக்கல்கள் ஆகியவைகளை விருப்பு வெறுப்பின்றி உண்மைகளை தேடுகிற வகையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

இலங்கையில் இன்றைய நிலவரம்

2001ம் ஆண்டில் ஈழப்புலிகள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டதாக அறிவித்தது. இந்த வளர்ச்சிப் போக்கை பலர் வரவேற்றனர். தமிழ்நாட்டு அரைவேக்காட்டு, அதிதீவிரவாதிகளும், சுயநிர்ணய உரிமை சூத்திரத்தை புரியாமலே முணுமுணுக்கும் சில தனி நபர்களும், சில அரசியல் வியாபாரிகளும், உலக அரசியல் நுணுக்கங்களில் தெளிவு இல்லாத சில அறிவு ஜீவிகளும் இத்தியா தினர் மட்டுமே அதிர்ச்சி அடைந்தனர். (கடந்த ஏப்ரலில் மீண்டும் புலிகளும், ராணுவமும் மோதத் தொடங்கியவுடன் இந்தக் கும்பல் சுறுசுறுப்படைந்தன. ஆனால், உலகமே அதிர்ந்தன.)

2002ம் ஆண்டில் ஈழப்புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. இலங்கை அரசிற்கும், ஈழப்புலிகளுக்கு மிடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், இலங்கை வாழ் மக்களுக்கு குழந்தைச் செல்வங்களைப் பேண வழி பிறந்தது என்ற நம்பிக்கையை பலப்படுத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாக்கத்தை உத்தரவாதம் செய்திட ஐக்கிய நாட்டு சபையின் கண்காணிப்புக் குழுவை புலிகளும், அரசும் ஏற்றுக் கொண்டனர். இருதரப்பாரும் விரும்பிய படியே, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மர்க், ஐஸ்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. மோதல்கள் இருக்கும் ஆறு மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்புக் குழு அலுவலகங்கள் வைத்து செயல்பட இருதரப்பாரும் சம்மதித்தினர். இது தவிர ஆங்காங்கு தொடர்பு கொள்ள, புகார்களைப் பெற, அத்து மீறல்களைக் கண்காணிக்க தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இன்று கண்காணிப்புக்குழுக்கள் கண்டு பிடித்தவைகள் என்ன? இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் இருவருமே போர் நிறுத்த உடன்பாட்டை மீறுகின்றனர். மோதுகின்றனர். இக் கட்டுரையை எழுதுகிறபோது கிடைத்த (2006 ஆகஸ்ட் 26) ஐக்கிய நாட்டு சபையின் செய்திக் குறிப்பு கூறுவதென்ன?

இலங்கையில் சமீபத்திய அதிர்ச்சி தரும் வளர்ச்சிப் போக்கு என்னவெனில் தமிழ்த் தீவிரவாதிகளும், இலங்கை அரசின் ராணுவமும் மோதல்களை மீண்டும் துவக்கிய பொழுது குழந்தைகள் தான் தொடர்ந்து துயரச் சுமைகளை சுமக்கிறார்கள்.

மோதல்கள் நடக்கும் இடங்களில் உள்ள மக்களின் நலன் களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் அக்கறை செலுத்துவதால், உணவு, குடிநீர், மருந்துகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென இருதரப்பாரையும் கேட்டுக் கொள்கிறோம் என்பது தான்.

ஐ.நா.சபையின் இயலாமை

இலங்கை ராணுவம் விமானம் மூலம் குண்டுகளை வீசிக் குழந்தை களைக் கொல்கிறது. ஈழப்புலிகளோ குழந்தைகளை ராணுவத்தில் சேர்த்து உயிர்ச்சேதத்தை விளைவிக்கிறது. போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறுகிறவர்களே! மக்களும், குழந்தைகளும் பாதிக்காமல் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் என்று தான் ஐக்கிய நாட்டு சபையால் இன்று கூற முடிகிறதே தவிர, இருவரையும் பேசித் தீர்க்க உட்கார வைக்க முடியவில்லை!

கடந்த ஏப்ரலில் துவங்கிய மோதல் பழைய மோதல்களைப் போலவே கடுமையானது. இந்த மோதல்கள் ஏராளமான துயர விபரங்களை குவித்து வருகிறது. ஐக்கிய நாட்டுச் செய்தி நிறுவனம் தரும் தகவலின் படி (ஆகஸ்ட் 26, 2006).

தமிழ்த் தீவிரவாதிகளும், இலங்கை ராணுவமும் நடத்திய மோதல்களால் குடிபெயர்ந்து ஓடியவர்கள்: 2,40,620. இதில் புலிகள் கைவசம் இருக்கும் கிளிநொச்சி பகுதிக்கு ஓடியவர்கள் சுமார் 20 ஆயிரம். தமிழகத்தை நோக்கி வந்தவர்கள் 6,673. மீதம் உள்ளோர் இலங்கையின் வேறு பகுதிகளுக்கு அகதிகளாகப் போயுள்ளனர்.

இதில் வேதனைக் குறைவான தகவல்கள் எதுவெனில் கடந்த காலத்தில் நடந்தது போல் பெருமளவில் மக்கள் அகதிகளாக அண்டை நாட்டிற்கு போகவில்லை என்பதே! ஆனால் அதேநேரம் இவ்வாறு குடிபெயர்ந்தவர்கள் வாழ்விடத்திற்கு திரும்புகையில், புலியும், ராணுவமும் மீண்டும் மோதலில் இறங்கினால் துயரத்திற்கு எல்லைபோட முடியாது.
கண்காணிப்புக் குழு தரும் தகவலின்படி புலிகளின் அத்து மீறல்கள் 3100. ராணுவத்தின் அத்துமீறல்கள் 140.

இதில் எண்ணிக்கையை வைத்து ராணுவத்தைவிடப் புலிகள் அதிகம் குற்றம் செய்தவர்கள் என்று குற்றம் சுமத்த இயலாது. ஒவ்வொரு மீறலினால் ஏற்படும் சேதாரங்கள், உயிரிழப்புகள் இவைகளையும் கவனிக்க வேண்டும்.

ஒன்றை நிச்சயமாய் கூறலாம். இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும், இருவருமே பேச்சுவார்த்தை வழியை அடைக்கும் நோக்குடன் நடந்து வருகிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம்.

கண்காணிப்புக் குழு தருகிற தகவலின்படி பாதிக்கப்பட்ட மக்களே கண்காணிப்புக் குழுவிற்கு தகவல்கள் தருகிறார்கள். புலிகளும், ராணுவமும் அபூர்வமாக அத்து மீறல்களைப் பதிவு செய்கின்றனர். சண்டைபோட்டு பார்த்துவிடலாம் என்ற உறுதி இருபக்கமும் சம அளவில் இருக்கிறது. இதனால் இருவருக்குமே தோல்வி சேரும், மக்கள் வாழ்வு சிதறும் என்பது தான் உண்மை!

ஈழம் பிறந்த காரணம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவதென்ன?
அடக்கு முறைதான் தமிழ்த் தேசியம் உதிக்க காரணம் என்கிறார். அதாவது அடக்குமுறையும், உரிமைப்பறிப்பும் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே உதித்திருக்காது என்பதை பிரபாகரன் சரியாகவே கணக்கிட்டுள்ளார். இந்த உண்மை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உதிக்கவில்லை என்பது தான் இன்று வரை நீடிக்கும் சோகமாகும்.
தமிழ்த் தேசிய உணர்வை ஜனநாயக உணர்வாக்கி இயக்கமாக பரிணமிக்க வைப்பதற்குப் பதிலாக, பிரபாகரன் ஒரு ஆபத்தான முழக்கத்தை முன்வைத்தது அடுத்த பெரிய சோகமாகும்.

தமிழனில்லா நாடில்லை
தமிழனுக்கு நாடில்லை என்றார்.

இந்த வீர முழக்கம், ஹிட்லரின் அடக்கு முறைக்கு பிறகு தீவிரமடைந்த பணக்கார யூதர்களின் முழக்கத்தினை நினைவூட்டியது. யூதனில்லா நாடில்லை, யூதனுக்கு நாடில்லை என்ற சியோனிச இயக்கத்தின் சாயல் இதிலும் உள்ளது. இந்த முழக்கம் இந்தியா என்ற பெரிய நாட்டின் பகுதியாக இருக்கும் தமிழகத்தில் மெலிந்து கிடக்கும் பிரிவினை வாதங்களுக்கு வலுவூட்டும் டானிக் என்பதை அறிந்த பிரபாகரன் இந்த முழக்கத்தை முன்வைத்தார். இங்கேயும் ஒரு பாலஸ்தீனமும், இஸ்ரேலும் உருவாகிட வழி பிறக்கலாம் என்பது தான் அவரது ஆசையாகும்.

புலப்படாத சோகம்!

இலங்கைத் தீவை நீல நிறக்கடலிலே மிதக்கும் ஒரு மரகதம் எனலாம். இங்கு இதய தாகங்களைத் தணிக்கும் இயற்கை அழகு பொங்கி வழியும். மனவேதனைகளுக்கு மருந்தாக அதன் மலைகளும், பள்ளங்களும் ஆறுதல் தரும் ஜீவகாருண்யம் பரப்பிய பவுத்தம் இங்கு பரவியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை; இலங்கை மண்ணும், நீரும், காற்றும் மனிதர்களை அத்தகையவர்களாக ஆக்கிவிடும் ஆற்றல் படைத்தது.

ஆனால், டாக்டர் அம்பேத்கரால் தீண்டாமைக்கு மருந்தாக கருதப்பட்ட பவுத்தம் எப்படி மனிதக் கொலைகளை நியாயப் படுத்தும் வெறியானது என்பது தான் புலப்படாத மானுட சோகமாகும். புத்திகெட்ட சிங்கள அரசியல் தலைவர்களிடம் புத்தரைக் காட்டி கேட்காமல் புத்தர் சிலையை தகர்த்தது புலிகளின் விவேகமற்ற செயல்களில் ஒன்றாகும்!

பிரிட்டனும் – இலங்கையும்

பிரிட்டிஷ் காலனியாக இலங்கைத் தீவும் இருந்தது. 1931 ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி தனது அதிகாரத்திற்குட்பட்ட நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்கச் சட்டம் கொண்டு வந்தது. இதே காலத்தில் இந்தியாவிற்கும் தகுதி அடிப்படையில் மட்டுமே வாக்குரிமை வழங்கி நிர்வாகக்குழுவை உருவாக்க அனுமதித்தது. இந்த மாறுபட்ட செயலுக்கு அடிப்படை பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும் அரசியல் சூழ்ச்சியே!

இந்தியாவில் சமதர்ம வேட்கையால் ஒன்றுபட்டு நிற்கும் மக்களின் கையில் ஆட்சி போனால் தங்களுக்கு ஆபத்து, பூர்சுவாக்கள் கையில் போனால் தான் தங்களது செல்வாக்கை நீடிக்க வழி கிடைக்கும் என்றே பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் கருதியது. எனவே சொத்தை தகுதியாக்கியது. இலங்கையில் மக்களிடையே மோதலை உருவாக்கிட முடிந்தால் தான் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என்று கருதியது. அதனால் இடத்திற்கேற்ற சூழ்ச்சியை செய்தது.

இலங்கையில் சிங்கள மொழி பேசுவோர் 75 சதம். தமிழ் மொழி பேசுவோரில் ஒரு பகுதி இஸ்லாமியர்கள். இன்னொரு பகுதி வெள்ளையர்களால் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த தோட்டத் தொழிலாளர்கள்.

மொத்த மக்கள் தொகையில் 69 சதம் பவுத்தர்கள். ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு ஆதிக்க அரசியல்வாதிகளுக்கு இந்த மக்கள் தொகை நிலவரத்தால் சிங்கள மொழியும், பவுத்த மதமும் மக்களைக் கூறு போட்டு ஆண்டிடும் கருவியானது. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டப்படி நடந்த தேர்தலில் சிங்களவர்கள் மட்டுமே கொண்ட நிர்வாகக் குழு உருவானது.

அதிகாரப் போதை ஏறிய சிங்கள நிர்வாகக்குழு இன, மத, மோதலை விளைவிக்குமென பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த ஏகாதிபத்தியக் கனவு நிறைவேறவில்லை. ஏகாதிபத்திய ஆதிக்க எதிர்ப்பில் இந்த உள்வேற்றுமை பெரிதாகவில்லை.

சுதந்திரம் கிடைத்த பிறகு இந்த வேற்றுமைகள் முரண்பாடுகளாக உருவாக ஆரம்பித்தது. 1956, 1958, 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் சம உரிமை கேட்டு, கொதித்தெழுந்த தமிழ் மக்களை இலங்கை அரசு அடக்கியதே தவிர உணர்வுகளை மதித்திடவில்லை. பெரும்பான்மை பலத்தால் அடக்கியது. ராணுவத்தை ஏவியது. ஜனநாயக உணர்வோடு நடந்து கொள்ள வில்லை. தமிழ் பேசும் பகுதிகளில் சலுகைகள் வழங்கி சிங்கள விவசாயிகளைக் குடியேற்றியது. ஆனால், அதே உரிமையை தமிழ் மக்களுக்கு மறுத்தது. ஒவ்வொரு அடக்கு முறையும், அதிகார வர்க்கச் செயல்பாடும், சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை பிடுங்கி எறிந்தது. அங்கு தொழில், விவசாயம், சந்தை மூன்றும் இணைந்து உருவாக்கிய நவீனப் பொருளாதாரச் சூழல், உறவுகள் ஆகிய அனைத்தும் மொழி பேதமின்றி மக்கள் ஒத்துழைக்கும் போதுதான் இருதரப்பாருக்கும் பயனளிக்கும் என்று இருந்தாலும் ஆதிக்க அரசியல் அந்த உணர்வை வெட்டி எறிந்தது. இலங்கை அரசியல் கட்சிகளின் வர்க்கக் குணாம்சங்களைப் பரிசீலிப்பவர்கள் இதனைக் காண முடியும். 1972-ல் தமிழ் மக்கள் மனதிலே சிங்கள அரசு கொண்டுவந்த அரசியல் நிர்ணய சட்டத் திருத்தம் ஒரு பேரிடியாக விழுந்தது.

சிங்களமே ஆட்சி மொழி என்றும், பவுத்தமே முதன்மை மதம் என்றும் அச்சட்டம் கூறியது. மொழி, மதம் இரண்டையும் முரண்பாட்டை உருவாக்கும் கருவியாக சட்ட ரீதியாக ஆனது. மதச்சார்பற்ற ஆட்சி முறை மொழிகளுக்கு சம உரிமை என்ற ஜனநாயக நியதியை தகர்க்க சட்ட ரீதியாகவே அரசு உறுதி பூண்டது.

இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகள் தமிழ் மக்களை கிளர்ந்தெழச் செய்தது. மத, மொழி மோதல்களின் கொதிகலனாக இலங்கை ஆனது. தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகளை நிலை நாட்டிட மக்கள் பங்கேற்கும் இயக்கங்களை கட்டிட முனைந்தார்கள். ஒரு கட்டத்தில் கூருடுகு என்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது.

ஆனால், சிங்கள அரசு தமிழ் மக்களின் சம அந்தஸ்த்தை ஏற்க மறுத்து அடக்கு முறையிலும், அரசியல் சூழ்ச்சியிலும் ஈடுபட்டது. அதோடு நிற்காமல் சிங்கள மக்கள் மனதிலே ஒரு பயத்தை விதைத்தது. இந்தப் பயத்தை விதைப்பதில் சிங்கள அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஈடுபடாத கம்யூனிஸ்ட் கட்சி வேறுபல காரணங்களால் மெலிந்து இருந்தது. தமிழர்களை விரட்டினால் புகலிடம் உண்டு. பெரிய இந்தியாவே அரவணைத்துக்கொள்ளும். ஆனால், சிங்களவனுக்கு இருப்பது ஒரே தீவு. இந்த மண்ணை இழந்தால் கடலில் விழ வேண்டுமே தவிர புகலிடம் கிடையாது என்ற பயத்தை சிங்கள அரசியல் கட்சிகள் போட்டி போட்டு விதைத்தனர்.

நவீனப் பொருளாதார முறையால் ஒத்துழைக்க வேண்டிய மக்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் எதிரும் புதிருமாக நிறுத்தப்பட்டனர். வர்க்க அடிப்படையில் திரண்டு, வர்க்கப் போராட்டங்களின் மூலம் ஜனநாயக வேர்களை பரவலாக்குவதற்கு திரள வேண்டிய மக்கள் அரசியல் களத்திலே எதிரும் புதிருமாக நின்றனர். அரசியலிலே பூர்சுவாக்களின் ஆதிக்கம், மக்களை பிளவுபடுத்தியது, அரசாங்கம் அடக்குமுறை நிர்வாகமானது.

ஏகாதிபத்திய ஆதிக்கம் கைமாறுகிறது

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அரசியலில் பெரிய மாற்றங்கள் வந்தன.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சின்ன பெரியவராகி அமெரிக்கா ஏகாதிபத்தியம் பெரியவர் இடத்தைப் பிடித்தது. இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், ஹிட்லரின் ராணுவத் திட்டங் களைத் தங்களது ராணுவத் திட்டங்களாக சுவிகரித்துக் கொண்டது.

உலகை ஆளவேண்டுமானால், வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும், அதற்குக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். அதற்கு இந்து மா சமுத்திரத்தையே ஆள வேண்டும். அதற்குப் படைத் தளம், வேவு தளம், பிரச்சாரக் கருவி கள், விசுவாசிகளுக்கு உதவிட அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கிட வேண்டும்.

குறிப்பாக, நடுநிலைவகிக்கும் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு, இலங்கையைப் பயன் படுத்த அமெரிக்கா துணிந்தது. இந்தச் சமயத்தில் தான் பங்களாதேஷ் உருவாகிட இந்தியா உதவியது. இந்தத் துணிச்சலுக்கு அடிப்படை உலக அரசியலில் செல்வாக்குள்ள சோவியத் யூனியன் ஆகும். அமெரிக்காவின் படையெடுப்பு மிரட்டலையும் மீறி இந்தியா துணிந்தது. ஏமாற்றமடைந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு பாடம் கற்பிக்கத் திட்டம் தீட்டியது. அதன்படி, இலங்கை அரசியலில் தீவிரமாகத் தலையிட்டது. இந்திய அரசு, இலங்கையை அமெரிக்கா பக்கம் சாயாமல் தடுக்க முற்பட்டது. இந்த முயற்சிகள் எல்லாம் விவேகமற்ற அரசியல் நடவடிக்கை களாகவே இருந்தன. இலங்கை மக்கள் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பினை உருவாக்கிட முயலாமல், இலங்கை ஆட்சியார்களை பணியவைக்கும் முறையில் வியூகங்கள், அரசியல் உத்திகள் உருவாக்கப்பட்டன. உலக அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும் உள்ள நுணுக்கங்கள் தெரியாத அன்றையப் பிரதமர் இந்திரா காந்தியின் முடிவுகள் பல சோக விளைவுகளைக் கொணர்ந்தது. பிந்தரன் வாலாவை முறுக்கிவிட்டது போல், இலங்கையில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்க உறுதி பூண்டது. தமிழர்கள் மத்தியில் இருக்கும் தீவிர அமைப்புகளின் புகலிடமாக தமிழ்நாடு ஆனது. அவர்களுக்கு பயிற்சி, பணம் எல்லாம் கொடுத்து இந்திய அரசு உதவியது. இந்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக இலங்கை ஆட்சியாளர்கள் கருதினர். அதேபோல் இலங்கை ஆட்சியாளர்களும் இரட்டை வேடம் போடுவதாக இந்திய அரசும் கருதியது. இதனால் இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் ஏட்டளவில் நின்றன.

புலிகளின் தோற்றம்

1975 ல் யாழ்ப்பாண மேயரைத் தீர்த்துக்கட்டி, சில வங்கிகளைக் கொள்ளை அடித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் சேகரித்து ஈழப்புலிகள் அமைப்பு பிறந்தது. 1980 ல் விடுதலைப் புலிகளுக்கு இந்தியா பயிற்சியும், பணமும் கொடுத்தது. 1983 ல் இலங்கை ராணுவமும், புலிகளும் மோதினர். ராணுவம் தமிழ் மக்களை வேட்டையாடிய விதம் உலகமே கண்டிக்கத்தக்க வகையில் அமைந்தது.

1987 ல் இலங்கை அரசு ஜனதா விமுக்தி பெருமுனா என்ற அமைப்பின் எதிர்ப்பினை சந்திக்க நேர்ந்தது. ஒரு பக்கம் ஈழ விடுதலை இயக்கம், மறுபக்கம் ஜே.வி.பி. கிடுக்கிப் பிடியில்  ஜெயவர்த்தனா அரசு திணறியது. ஈழவிடுதலை இயக்கத்தை  அடக்க அனுப்பப்பட்ட ராணுவத்தை ஜே.வி.பி.யை அடக்கத் திருப்பி விட்டால் ஈழவிடுதலை இயக்கத்தின் கை ஓங்கும். எனவே, இலங்கை அரசு இந்தியாவின் உதவியை நாடியது. இங்கே தமிழகத்தில், ராணுவத்தை அனுப்பி ஈழத்தை விடுவிக்க வேண்டுமென முழக்கங்கள் எழுந்தன.

1987 ல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. முதலில் விமானம் மூலம் உணவுப் பொட்டலம் வழங்க இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமைதி காக்கும் படையாக இலங்கைக்கு சென்றது. ஜெயவர்த்தனா தனது ராணுவத்தை வாபஸ் பெற்று ஜே.வி.பி. யை அடக்க அனுப்பினார். இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி தமிழ் மக்களுக்கு சுயாட்சிப் பிரதேசம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு, தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். இதைப்புலிகள் மட்டும் நிராகரித்தன. புலிகள் மட்டும் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது. இந்திய ராணுவம் பலப்பிரயோகம் செய்து ஆயுதங்களைக் கைப்பற்ற முனைந்தது. சில இடங்களில் குருவும், சிஷ்யர்களும் மோதினர். அதாவது இந்திய ராணுவமும், புலிகளும் மோதினர். மக்கள் துன்புறுத்தப்பட்டனர். இந்திய ராணுவத்தின் மீது இலங்கை வாழ் தமிழ் மக்களின் வெறுப்பு மேலோங்கியது. அரசு ஜே.வி.பி. யை கடுமையாக அடக்கி, கொன்று தீர்த்தபின் இலங்கை ராணுவத்தை தமிழ் பகுதிக்குத் திருப்பியது. இலங்கை அரசு இந்திய ராணுவத்தைத் திரும்பிப் போகுமாறு கேட்டுக் கொண்டது. சில ராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகளை 1991ல் இலங்கை ராணுவம் தோற்கடித்தது. புலிகள் பதுங்கி 2001 ல் மீண்டும் தாக்குதல் தொடுத்தது. புலிகள் வசம் வந்த பகுதியை ராணுவத்தால் மீட்க முடியவில்லை. 2006ல் மீண்டும் புலிகள் தாக்குதலைத் துவங்கியுள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல்,  ராணுவத்தை நம்பி செயல்படுவதாலேயே புலிகள் பலம் மீள்கிறது.

புலிகளின் சயனைட் கலாச்சாரம்

1984ல் புலிகள், இதர ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புக்கள் இணைந்து ஈழ விடுதலை அணியைக் கட்டுவதில் வெற்றி பெற்றது. சிறிது நாளில் விடுதலைப் புலிகள் இதர அமைப்புகளின் தலைவர்களைக் கொன்று தீர்த்தது; ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டது. இதற்கு புலிகள் கூறிய காரணம் இந்த அமைப்புக ளெல்லாம் இந்தியாவின் கைக்கூலிகள் என்பது தான். கொலைகள் மூலம் தமிழ் மக்களின் ஒரே அமைப்பாக புலிகள் மாறியது. பயங்கரவாத நடவடிக்கையை மட்டுமே நம்பி நின்ற பிரபாகரன் பெரும் திரள் மக்கள் பங்கேற்கும் அரசியலை உதறினார். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள புலிகள் ராணுவ யுக்திகளை நம்பி நிற்கத் தள்ளப்பட்டது. சயனைட் கலாச்சாரம், அல்கொய்தா பாணி தற்கொலைப் படை, குழந்தைகளை ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்ப்பது, இத்தியாதி நடவடிக்கைகளால் புலிகளின் விடுதலை இயக்கம் வெறும் கொலைப் படையாகச் சுருங்கியது. புலிகள் தரும் புள்ளி விவரப்படி, கரும் புலிகள் என்ற தற்கொலைப் படைதான் அதன் சிறப்பு அம்சமாகும். இதுவரை 270 தற்கொலைப் படையினர் உயிர்களை பறித்து உயிரிழந்துள்ளனர். அவர்களது படங்களைக் கொண்ட அரும் காட்சியகம் புலிகளின் கைவசம் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட பல பிரபல இலங்கைத் தமிழ்த் தலைவர் களும், சிங்கள அரசியல் தலைவர்களும் இந்த கரும் புலிகளுக்கு தீனியாக்கப்பட்டுள்ளனர். கரும்புலிகள் ஒரு தாக்குதலுக்கு அனுப்பப்படும் முன்னர் பிரபாகரனோடு கடைசி விருந்துண்டு ஆசிர்வதிக்கப்பட்டு அனுப்பப்படுவார். பெற்றோர்கள் கேட்கிற வரத்தை வழங்க பிள்ளைக் கறி கேட்கும் பெருமானாக பிரபாகரன் காட்சி அளிக்கிறார் எனலாம்.

தற்கொலைப் படை, சயனைட் விழுங்கி மரித்தல், குழந்தை களை ராணுவத்தில் ஈடுபடுத்தல் போன்ற அருவருக்கத்தக்க ராணுவ யுக்திகளை உலகமே கண்டிக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன்  போன்றவை புலிகளின் நடமாட்டத்தைத் தடை செய்துள்ளன. புலிகளின் அமைப்பை பயங்கரவாத இயக்க மென அறிவித்துள்ளன.

ராஜிவ்காந்தி கொலையில் பிரபாகரனும், பொட்டு அம்மனும் குற்றவாளிகளாக இந்தியஅரசு அறிவித்துள்ளது. அமைப்பையும் தடைசெய்துள்ளது. பிரபாகரனின் ராணுவ யுக்திகளை சில நிபுணர்கள் பாராட்டுவதாக புலிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். பெரும் திரள் மக்கள் பங்கேற்பில்லா எந்த ராணுவ இயக்கமும் நீடிக்க இயலாது. இந்த ஞானம் பிரபாகரனுக்கு இல்லாமல் போனது தான் இலங்கை வாழ் தமிழர்களின் மிகப் பெரிய சோகம். தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசுவோரில் உள்ள ஜனநாயக வாதிகளை இணைக்காமல் தமிழர் விடுதலை முயல் கொம்பே.

புலிகளின் ராணுவ யுக்திகள் சில தற்காலிக வெற்றிகளைத் தரலாம். ஆனால், அதனால் நீடித்து ஆளமுடியாது. இலங்கை ராணுவமும், சில தற்காலிக வெற்றி பெறலாம். ஆனால், புலிகளை அழித்திட இயலாது. ஒருவரின் தோல்வி அடுத்த மோதலுக்கு அச்சாரமாகி விடுகிறது. இலங்கை அரசு ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு, மக்களை பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளை கைவிட்டு, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறாமல் புலிகளை ஓரம் கட்ட முடியாது. அதேபோல் புலிகளும் பெரும் திரள் அரசியல் இயக்க மாக மாற வேண்டும். அதுவரை மாறி மாறி நடக்கும் சண்டையில் மக்களின் வாழ்வு நாசமாகிவிடும்.

சமதர்மமா?

இப்பொழுது புலிகள் வசமிருக்கும் பகுதிகளில் சமதர்ம ஆட்சியை பிரபாகரன் நடத்துவதாக இங்கே சிலர் மெய்சிலிர்க்க பிரச்சாரம் செய்கிறார்கள். சண்டை நடக்கும் பகுதிகளில் தற்காப்பு உணர்வு மேலிட மக்கள் நெருக்கமாகிவிடுவர். ஒருவருக்கொருவர் உதவிடும் முறையில் எந்தச் சட்டமுமில்லாமலேயே நடந்து கொள்வார்கள். இது மானுட இயல்பு. இதை ஆங்கிலத்தில் வார் கம்யூனிசம் (யுத்தகால சமதர்மம்) என்று அழைப்பர்.

புலிகள் சமதர்ம ராஜ்யம் நடத்துவதாக கூறுவது, மிகைப் படுத்தி கூறுவது மட்டுமல்ல. சமதர்மக் கோட்பாடுகளையே கேலி செய்வதாகும். (ஹிட்லர் கூட சோசலிசம் பேசித்தான் உண்மையான சோசலிசத்தை எதிர்த்தான்)

ஈழப்பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக அமைப்பு கிடையாது. புலிகளின் ராணுவத்தில் ஜனநாயகம் கிடையாது. அது ஒரு தனி நபரின் தலைமையில் இருக்கும் அராஜகப் படையே. அங்கே பிரபாகரனோடு மாறுபட்டால் உயிரிழப்பு நிச்சயம்.

அங்கே சட்டங்கள் கிடையாது; பிரபாகரன் கட்டளைகளே சட்டமாக உள்ளது. கட்டாய ராணுவ சேவையை குழந்தைகள் தலையில் சுமத்துகிற ஒரு பயங்கரவாத கும்பல் சமதர்ம ஆட்சியை நினைத்துக் கூடப் பார்க்க இயலாது.

இப்பொழுது புலிகளின் வசமுள்ள பகுதியை பாதுகாக்க பிரபாகரன் எதை நம்பி இருக்கிறார். ஆயுதங்களுக்கும், ராணுவத் தளவாடங்களுக்கும் உலகெங்கிலுமுள்ள இலங்கைத் தமிழர்கள் வழங்கும் நிதி, வழிப்பறி, மிரட்டல் பணம் என்று தான் இருக்க வேண்டியிருக்கிறது.

சயனைட் குப்பி, மனித வெடிகுண்டு போன்ற ராணுவத் தளவாட உற்பத்தி செய்யும் தொழில்கள் தவிர வேறு தொழில்கள் ஏற்கனவே இருந்ததைத் தவிர புதிதாக வரவில்லை. மனித ஆற்றல் முழுவதும் தற்கொலைப் படையாகவும், படைப் பிரிவாகவும் மாற்றப்படுகிற இடத்தில் விவசாயம், தொழில், விஞ்ஞான ஆய்வு போன்றவைகள் சிரமப்பட்டே வளரும்.

சுருக்கமாகச் சொன்னால், புலிகளின் வசமிருக்கும் பகுதிகளில், பிள்ளைக் கறி கேட்கும் பயங்கரவாதக் கும்பலின் கொடுங்கோல் ஆட்சி தான் நிலவுமே தவிர, மக்களால், மக்களுக்காக மக்களின் ராஜ்யம் தோன்றாது.

ஈழமா? ஒன்றுபட்ட இலங்கையா?

ஈழமா? ஒன்றுபட்ட இலங்கையா? என்பதை இலங்கை மக்களின் அரசியல் இயக்கங்கள் தான் தீர்மானிக்க முடியும். வெளியார் தலையீட்டின் மூலமோ; ராணுவ நடவடிக்கை மூலமோ, ஈழம், சிங்களம் என்று பிரிக்க முடியாது.

தற்கொலைப் படை மூலம் சேதாரம் விளைவிக்க முடியுமே தவிர, ஈழத்தைப் பெற முடியாது. ராணுவத்தின் மூலம் அடக்க, அடக்க தமிழ் மக்கள் உரிமை கிடைக்கிறவரை ஓயமாட்டார்கள். 1947ல் ஐக்கிய நாட்டு சபை பாலஸ்தீன பகுதியை இரண்டு நாடாகப் பிரித்தது. அதற்கு அமெரிக்க ராணுவமே துணை நின்றது. இன்று வரை சண்டை ஓயவில்லை; இஸ்ரேல் – அமெரிக்க ராணுவத்தின் உதவியினைப் பெற்றாலும் நிம்மதியான வாழ்வு இல்லை. இங்குள்ள சில பைத்தியக்கார அரசியல் வாதிகள் பழைய நினைப்போடு பிரிவினை உணர்வை நெஞ்சிலே வளர்க்கிறார்கள். இவர்களை நம்பி அரசியல் ஞானமற்ற பிரபாகரனும் ஈழம் என்ற நாட்டின் எல்லையை வடவேங்கடம் வரை நீட்டிட தற்கொலைப் படைகள் மூலம் சாத்தியமாகும் என கனவு காண்கிறார்.

இந்தியாவில் இந்தப் பிரிவினை வாதங்களைத் திராவிட இயக்கங்களே கைவிட்டு வெகு நாளாயிற்று. இந்திய ஒற்றுமை தான் தமிழ் மக்களின் சுகம் மட்டுமல்ல, தங்களின் சுகமும் அதுதான் என்பதைத் திராவிட இயக்கங்கள் நன்றாகவே தெரிந்து கொண்டனர். வை.கோ. போன்றோரின் பேச்சுக்கள் அவர்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளை கணக்கிடப் போதுமானது.

செய்ய வேண்டியதென்ன?

போர் நடக்கும் இடங்களில் உடனடியாக நிவாரணப் பணிக்கு  புலிகளும், அரசும் அனுமதிக்க வேண்டும். போரை நிறுத்தி பேச வேண்டும். சேவை செய்ய வந்த தன்னார்வக் குழுக்களை கொல்லக் கூடாது, பத்திரிக்கையாளர்களை கொல்லக் கூடாது. இதுவரை 4 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, இலங்கை அரசு உயிரிழப்புகள் மற்றும் இழப்புகளுக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய உலக உறவிற்காக மானுடம் போராடுகிற பொழுது பழைய நினைப்பில் நடத்தும் இனச் சண்டையை நிறுத்துங்கள் என்று உலகமே இலங்கையின் அரசியல் வாதிகளிடம் கூறவேண்டும். ஏன் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்  சுயாட்சி என்பதற்கான காரணங்களை கி.வரதராஜன் கட்டுரை தெளிவாக்கும்.