கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்

 • . வாசுகி

 கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஸ்தாபனம் என்பது தனித்துப் பார்க்க இயலாதது. கட்சியின் அரசியல் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்கக் கூடாதது. ஜோசப் ஸ்டாலின் அவர்கள், “சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி, கூரை மேல் நின்று அதை கூவினால் போதும்; அதை தீர்மானமாக இயற்றி ஏகமனதாக நிறைவேற்றினால் போதும்; வெற்றி தானாக வந்து விடும் என சிலர் நினைக்கிறார்கள்…. வெற்றி பொதுவாக தானாக வராது; அதனை அடைய வேண்டும்….. தீர்மானம் போடுவது வெற்றி அடையும் விருப்பத்தை காட்டுகிறதே தவிர, அதுவே வெற்றி அல்ல… சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதனை நடைமுறைப்படுத்த ஸ்தாபன ரீதியாக போராட வேண்டும்…. அதாவது சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதன் தலைவிதியை, வெற்றி தோல்வியை, ஸ்தாபனமே தீர்மானிக்கிறது” என்கிறார்.

 அரசியல் நோக்கமும்  ஸ்தாபனமும் கம்யூனிச இயக்கத்தின் இரு கால்களைப் போல… இரண்டும் ஒரே திசையில் ஒத்திசைந்து  பயணிப்பது முக்கியம்.

 எனவேதான், அகில இந்திய மாநாட்டில், அரசியல் ஸ்தாபன அறிக்கை என்ற பெயரிலேயே ஸ்தாபன அறிக்கை வைக்கப்படுகிறது. சென்ற மாநாட்டு அரசியல் நடைமுறை உத்தி பற்றிய பரிசீலனை, கட்சி அமைப்பு, வர்க்க வெகுஜன அமைப்புகள் என மூன்று பகுதிகள் இதில் இடம்பெறும்.

இடது ஜனநாயக அணி

1978இல் 10வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது. அதுவரை காங்கிரஸ் என்ற  பெரு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதி மட்டுமே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்திய சூழலில்,  காங்கிரஸ் கட்சியை முறியடிப்பது;  அதன் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைப்பது   என்பதே  அரசியல் நடைமுறை உத்தியின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1978 மாநாட்டின்போது  ஜனதா கட்சி உருவாகி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பின்னணியில், காங்கிரஸ், ஜனதா கட்சி இரண்டுமே அடிப்படையில்  முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளைக்  கடைப்பிடிக்கக் கூடிய கட்சிகள். எனவே இவற்றுக்கு மாற்று என்பது இதே கொள்கைகளை ஏற்ற இறக்கத்தில் கடைப்பிடிக்கும் இன்னொரு அணியாக இருக்க முடியாது.  இந்தக் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறாக,  மக்களுக்கான ஒரு திட்டத்தை  உருவாக்குவதும், அந்த திட்டத்தின் அடிப்படையில்  அணி சேர்க்கையைக் கட்டமைப்பதும்  தேவை என்ற புரிதலோடு, இடது ஜனநாயக அணியைக் கட்டமைப்பது என்ற நிலைபாடு எடுக்கப்பட்டது. இதன் வளர்ச்சி மக்கள் ஜனநாயக அணி கட்டமைக்கப்பட உதவும். இதில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களுக்கு என்று ஒரு வர்க்க அமைப்போ, வெகுமக்கள் அமைப்போ உருவாக்கப்பட்டால்தான் அணிதிரட்ட முடியும்.

எனவே 1980களுக்கு பிறகு பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசியல் நோக்கத்திற்கு ஏதுவாக கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்கவே, சால்கியா பிளீனம் நடத்தப்பட்டது. அதே போல், மீண்டும் 20வது மாநாட்டில், நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்துக்குப் பின், கட்சி உருவாக்கிய அரசியல் நடைமுறை உத்திகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இடது ஜனநாயக அணியின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்பட்ட பின், அதற்கேற்ப ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்க, கொல்கத்தா பிளீனம் நடத்தப்பட்டது. இருப்பினும், பொதுவாக இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான துவக்க கட்ட வேலைகள் கூட செய்யப்படவில்லை என்பதை மாநாட்டு அறிக்கைகள் சுய விமர்சனமாக முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் நாடாளுமன்ற வாதமும், சித்தாந்தப் பிடிப்பில் ஏற்பட்டுவரும் சரிவும், இதற்குக் காரணம் என கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியது இப்போதும் தொடர்கிறது. இதில் ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்த பின்னரே  அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதனுடன் இணைத்துப் பார்த்தால், இதனால்  உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விடும்  என்பதை விட, கட்சி உறுப்பினர்களின் தரத்தை கெட்டிப்படுத்தி கட்சி விரிவாக்கத்திற்கு இது  வழி வகுக்கும் என்கிற புரிதல் தெளிவாக முன்னுக்கு வரும்.

வர்க்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரையும் அவரவருக்கான அமைப்பில் திரட்டி அரசியல்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக அணியோடும், வர்க்க சேர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதோடும்  இணைந்தது என்கிற வெளிச்சத்தில், வர்க்க வெகுஜன அமைப்புகளின் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். இந்த அமைப்புகளில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகள், இந்த அரசியல் ஸ்தாபன நோக்கத்தை புரிந்துகொண்டு  அதில் செயலாற்ற வேண்டும். தான் பொறுப்பு வகிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் அப்பொறுப்புகளைத்  திறம்பட நிறைவேற்றுவதோடு, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் கடமை முடிந்து போகலாம். ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, பொறுப்பைத் திறம்பட நிறைவேற்றுவது என்பதோடு சேர்த்து, அதில் வரும் வெகு மக்களை ஸ்தாபனப்படுத்துவதும், அரசியல்படுத்துவதும், இடதுசாரி அரசியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும், தொடர்புகளைப் பயன்படுத்தி கட்சியை விரிவாக்கம் செய்வதும், கட்சியின் முடிவுகளை அந்த அரங்கின் வெகுஜனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பொருந்தக் கூடிய விதத்தில் நிறைவேற்றுவதும் என கடமைகளின் பட்டியல் நீண்டது. வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அல்லது அதில் பணியாற்றக்கூடிய கட்சி ஊழியர்களையும் இரண்டாம் நிலையில் வைப்பது அரசியல் ஸ்தாபன புரிதல் பற்றாக்குறையின் வெளிப்பாடே.

23வது மாநாட்டு முடிவுகள்

இருபத்தி மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான பணிகள், சாதியம், ஆணாதிக்கம், மதவெறி அனைத்தின் கலவையுமான இந்துத்துவா  சித்தாந்தத்தை முறியடிப்பது, அதை முன்வைக்கும் சங் பரிவாரங்களின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வது, தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது, இதற்குத் தேவைப்படும் கூட்டு செயல்பாடுகள், கூட்டு மேடைகள், பரந்த மேடைகள் உள்ளிட்ட ஸ்தாபன பணிகளில் கவனம் செலுத்துவது, இந்தப் புரிதலுடன் ஊழியர்களை வளர்த்தெடுத்து செயல்பட வைப்பது, அதில் இளைஞர்கள் பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, மக்களோடு  உயிர்ப்புடன் கூடிய தொடர்பு போன்றவற்றை ஸ்தாபன கடமைகளாக வரையறுத்துள்ளது. இதை செய்யக்கூடிய திறன்  படைத்தவையாக மாநிலக்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு, கிளை மாற வேண்டும். அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் இதை நோக்கியே தங்களது வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். வேலை முறையில் மாற்றம் என்பது இதுதான்.

உதாரணமாக, ஸ்தல போராட்டங்கள் அல்லது உள்ளூர் மட்ட போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பிளீனம் மற்றும் நடந்துமுடிந்த மாநாடுகளின்  அறிவுறுத்தலாக உள்ளது. அகில இந்திய மாநாடு  ஸ்தல போராட்டங்கள் குறித்து ஏன் பேசுகிறது, எந்த அடிப்படையில் பேசுகிறது என்று பார்த்தால், மாஸ் லைன் என்று சொல்லப்படுகிற மக்களோடு உயிர்ப்பான தொடர்பு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் மட்ட  இயக்கங்களே பெரும் வாய்ப்பு என்பதுதான். எனவே நாம் நடத்தும் ஸ்தல போராட்டங்களின் மூலம் உள்ளூர் மக்களோடு கட்சிக்கு, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளுக்கு, தொடர்பு பலப்பட்டு, அது இடதுசாரி அரசியலாக, கருத்தியலாக, அமைப்புகளாக பரிணமிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தை கணக்கில் எடுக்காமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதோடு நிறுத்திவிட்டால் கம்யூனிஸ்ட் பணி முழுமை பெறாது, அரசியல் நோக்கம் ஈடேறாது. இத்தகைய போராட்டங்கள் ஒரு சில கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நீடித்து   நடத்தப்பட வேண்டும். உள்ளூர் மட்ட போராட்டங்கள் நீடித்து நடக்காமல் போவதற்கு காரணங்களாக, அரசியல், பொருளாதார, சமூக, ஆதிக்க சக்திகளுடன் மோதல்கள் கடுமையாக வரும் சூழல், நாடாளுமன்ற வாதம் போன்றவற்றை அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எதிர்கொண்டு  போராட்டங்களை உத்தரவாதப்படுத்துவது மேல் கமிட்டிகளின் பொறுப்பாகும்.

மற்றோர் உதாரணம் கூட்டு இயக்கங்கள், கூட்டு மேடைகள் குறித்ததாகும். இதன் அரசியல் நோக்கம் என்ன? பல்வேறு கட்சிகளை அமைப்புகளை திரட்டும் போது, கோரிக்கைகளுக்கு வலு கிடைக்கும், இந்த அமைப்புகளுக்கு பின்னாலுள்ள மக்களுக்கு செய்தி போகும் என்பது ஒருபுறம். இதன் மறுபக்கம் அதுவும் முக்கியமான பக்கம் என்பது, அவர்களிடம் நம்முடைய மாற்று அரசியலையும் கருத்துக்களையும் முன் வைப்பதற்கும், ஈர்ப்பதற்குமான வாய்ப்பு என்பதாகும். எனவே, கூட்டு இயக்கங்கள் நடந்த பிறகு, அதன் மீதான பரிசீலனையில், நமக்கு அரசியல், ஸ்தாபன ரீதியாக கிடைத்த பலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ சக்திகளின் சவால்களை சந்திப்பதற்கு பன்முக செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வாழ்வுரிமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களை அணிதிரட்டி ஒன்றுபட்ட போராட்டம் நடத்தினாலே மதவெறி செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட முடியும் எனக் கருதிவிட முடியாது. இந்துத்துவ சக்திகளுடைய தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரம் மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைக்கிறது. வெற்றிகரமாக ஓராண்டுக்கும் மேல் நடந்த விவசாயிகளுடைய மகத்தான போராட்டத்திற்கு பின்பும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக வாக்கு சதவீதத்தோடு ஆட்சியைக் கைப்பற்றியது இதற்கோர் எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் போது மட்டும் மதவெறி சித்தாந்தம் குறித்து பிரச்சாரம் செய்வது போதாது. கருத்தியல் தளத்தில் வர்க்க ஒற்றுமைக்கும் சமூக நீதிக்குமான தொடர் பிரச்சாரம் நிகழ்த்தப்பட வேண்டும்.

கட்சியின் முக்கிய ஸ்தாபன கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு இன்றைக்கு பலராலும் விமர்சிக்கப்படும்  அம்சமாக உள்ளது. கட்சிக் கட்டுப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதும் கட்சியின் அரசியல் நோக்கோடும், இலக்கோடும் இணைந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,  ஏகபோக எதிர்ப்பு  என்ற அம்சங்களை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை  இலக்காக முன்வைக்கும்போது, பல்வேறு சவால்களை, அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தில்  மிக உயர்ந்த ஜனநாயகமும், முடிவெடுத்த பின் அதை அமல்படுத்துவதில் மிக உயர்ந்த கட்டுப்பாடும் தேவைப்படும்.

கட்சித் திட்டம் முன்வைக்கும் இலக்கை நோக்கிய பயணம் முன்னேறக் கூடிய விதத்திலேயே அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்படுகிறது. இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பது அரசியல் நடைமுறை உத்தியின்  ஒரு பகுதி, மையப்பகுதி. அதை விட்டுவிட்டு அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட முடியாது. இந்த ஒட்டுமொத்த புரிதலோடு கட்சி ஸ்தாபனம் முழுமையும் களத்தில் இறங்கினால், முன்னேற்றம் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சியின் திட்டத்தைப்  புரிந்து கொண்டவர்களாக,  அதை ஒட்டிய மாநாட்டு கடமைகள்,  மத்திய, மாநிலக் குழு  முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டு, தம் அன்றாட பணிகளை அமைத்துக் கொள்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். கட்சி உறுப்பினர்கள்  சிறு சிறு குழுக்களாக இருந்தால் தான்,  அன்றாட வேலைகளை பங்கீடு செய்வதும், கண்காணிப்பதும் சாத்தியம் என்கிற அடிப்படையிலேயே கிளைகள் உருவாக்கப்படுகின்றன. கிளைகளே கூடா விட்டால்  இந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. இந்தப் பின்னணியில் மாநாட்டு ஸ்தாபன முடிவுகளை, கட்சியின் அரசியல் நோக்கத்தோடு இணைத்துப் பார்க்கக்கூடிய புரிதலை, கட்சி அணிகள் மத்தியில் உருவாக்குவதே, பிரதான கடமையாக முன்னுக்கு வருகிறது.

லெனினும் புரட்சிகர கட்சியும்

குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

 • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
 • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

 • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
 • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
 • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
 • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
 • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
 • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.

மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

தமிழில்: இரா.சிந்தன்

நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந்தள்ளுதல் ஆகியவை அனைத்தும் மோசமான வேலைப் பாணியை விளைவிக்கின்றன. அதன் பரவல், நம்மில் பல தோழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது.

உண்மையில் நமது அணிகளில் உள்ள பல தோழர்கள் இந்த வேலைப்பாணியால் தவறிழைக்கிறார்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாடு, மாகாணம், கவுண்டி அல்லது மாவட்டங்களிலும் குறிப்பான நிலைமைகளை முறையாகவும், முழுமையாகவும் ஆய்ந்து பயின்று செயல்பட விரும்புவதில்லை, மாறாக தங்கள் குறைபாடான அறிவைக் கொண்டும், ”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

சிலர் தம் சொந்த வரலாற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கும், குறைந்த அளவே தெரிந்திருப்பதற்கும் வெட்கப்படுவதற்கு பதிலாக, இறுமாப்புடன் இருக்கிறார்கள்…

***

… நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேர் எதிராக இருக்கிறது. அதாவது, மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும் அக்கறையுடன் நமக்கு வலியுறுத்திய ”நடைமுறையையும் தத்துவத்தையும் இணைத்தல்” என்ற அடிப்படைக் கொள்கை நெறியையே மீறுகின்றனர். அப்படி மீறுவது மட்டுமல்லாமல், தமக்கேற்ற வகையில் எதிர்நிலையான ஒரு சொந்த நெறியை வளர்த்தெடுத்து, தத்துவத்தையும், நடைமுறையையும் பிரிக்கின்றனர்…

***

… இந்தக் கருத்தினை மேலும் விளக்குவதற்கான, நேரெதிரான இரண்டு உளப்பாங்குகளை வேறுபடுத்திக் காட்டுகிறேன்.

முதலில், அகநிலை உளப்பாங்கு.

இந்த உளப்பாங்கோடிருக்கும் ஒரு நபர் சூழல் குறித்த ஆழமான, முறையான பயிலுதல் எதுவும் செய்யாமல் தன் தனிப்பட்ட அகவய உற்சாகத்தின் அடிப்படையில் பணிபுரிகிறார், இன்றுள்ள சீன நிலைமைகளைப் பற்றி மங்கலான புரிதலே கொண்டிருக்கிறார். தனது மனநிலையின் வழியே சீன வரலாற்றை வெட்டிக் குறுக்குகிறார், நேற்றும், நேற்று முன் தினமும் சீனா கடந்துவந்திருக்கும் நிலைமைகளைப் பற்றி தெளிவில்லாத நிலையில் உள்ள அவருக்கு பண்டைய கிரேக்கம் பற்றி மட்டுமே தெரிகிறது. இந்த மனநிலையில் இருக்கும் ஒருவர் மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை அருவமாக, குறிக்கோள் ஏதுமின்றிப் பயில்கிறார்.

அவர் சீனப் புரட்சியின் தத்துவார்த்தப் பிரச்சனைகளுக்கும், உத்தி ரீதியிலான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையையும், கண்ணோட்டத்தையும், நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காக அல்லாமல், தத்துவத்தை வெறும் தத்துவமாக வாசிக்கவே மார்க்ஸ், எங்கல்ஸ் லெனின் மற்றும் ஸ்டாலினை அணுகுகிறார். இலக்கை நோக்கி அம்பெய்தாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக எய்துகிறார். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நாம் புறவய எதார்த்தங்களில் இருந்து நம் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டும் என்கின்றனர். அதிலிருந்து நாம் விதிகளை உய்த்துணர்ந்தால் அவை நம் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கற்பித்துள்ளனர்.

அதற்கு நாம், மார்க்ஸ் கூறியிருப்பதைப் போல, விரிவான தரவுகளைப் பெற்று அவற்றை விளக்கமாகவும், அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியும் செயல்பட வேண்டும். நம்மில் பலர் இப்படி செயல்படாமல், எதிர்திசையில் செயல்படுகின்றனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடத்தில் இன்றைக் குறித்தோ, நேற்றைய சீனா குறித்தோ கற்க விருப்பமிருப்பதில்லை, எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கே பழக்கப்பட்டுள்ளனர். மேலும் பிறர் நடைமுறைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், அவர்கள் கூட புறவய நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல், பெரிதும் தங்கள் சொந்த ஆர்வத்தினைச் சாந்து தங்கள் தனிநபர் உணர்வுகளை கொள்கைகளிடத்தில் முன்வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறவய எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் உரைவீச்சுக்களில் பெரியளவில் வாய்ச்சவடால் அடிப்பார்கள், கட்டுரைகளில்  A, B, C, D, 1, 2, 3, 4 என நீண்ட வரிசையில் மனம் போன போக்கில் எழுதுவார்கள். அவர்கள் நடந்தவைகளிலிருந்து பேருண்மையை தேடும் நோக்கமில்லாமல் இருக்கின்றனர்; மாறாகப் பகட்டாரவாரத்தின் வாயிலாக பிறர் கவனம் ஈர்க்கும் விருப்பத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் உள்ளீடு ஏதுமின்றி வெளிப்புறத்தே ஒளிர்கின்றனர், உடையும் தன்மையோடு உறுதியற்றுள்ளனர். அவர்களே எப்போதும் சரியானவர்கள், சொர்கத்தின் கீழே அவர்கள் மட்டுமே முதன்மை அதிகாரம் கொண்டவர்கள். இந்த “ஏகாதிபத்திய தூதுவர்கள்” எல்லாவிடத்தும் ஓடிக் கொண்டுள்ளனர். நம் அணிகளில் உள்ள சில தோழர்களிடம் இந்த வேலைப்பாணி காணப்படுகிறது. ஒருவரை இந்தப் பாணி ஆட்கொள்ளும்போது அவர் பாதிக்கப்படுகிறார், மற்றவர்களுக்கு கற்றுத் தரும்போது அவர்களும் கெடுகின்றனர், புரட்சியை வழிநடத்தை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதானது புரட்சியையே பாதிக்கிறது.

தொகுத்துச் சொன்னால், இந்த அகநிலைப்பட்ட வழிமுறையானது மார்க்சிய – லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்டதாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது; இது ஒரு கட்சியின் உயிரோட்டத்தில் ஏற்பட்ட பிழையின் விளைவாகும். ஒரு வல்லமை மிக்க எதிரி நம் முன் நிற்கிறான், நாம் அவனை வீழ்த்தியாகவேண்டும். அகநிலைவாதம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்ற பேருண்மை மேலோங்கும்; கட்சியின் உயிரோட்டம் வலுப்படுத்தப்படும், புரட்சி வெற்றிகரமாகும், அறிவியல் மனப்பான்மை இல்லாமல் போவதானது அதாவது தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் மார்க்சிய-லெனினிய அணுகுமுறை இல்லாமல் போவதானது, கட்சியின் உயிரோட்டம் இல்லாமல் போவதை அல்லது பற்றாக்குறையைக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட நபர்களைச் சித்தரிக்கும் ஈரடிப் பாடல் ஒன்றுள்ளது, அது இவ்வாறு பொருள் தரும்,

சுவற்றில் வளரும் நாணலின்  தலை கனத்திருக்கும் தண்டு மெலிந்திருக்கும், வேர்கள் பிடிப்பற்றவை

குன்றிலே விளைந்த மூங்கிலின் முனை கூர்மையாய் இருக்கும், தோல் கணத்திருக்கும், உள்ளீடற்று இருக்கும்

அறிவியல் மனப்பான்மை இன்றி, மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலினின் படைப்புகளில் இருந்து சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமே மனனம் செய்து ஓதியபடி, மெய்யான கற்றறிதல் இல்லாமல் புகழை அனுபவிப்போருக்கு இதுவல்லவா பொருத்தமானதொரு விளக்கப்பா? ஒருவர் தன் பிணியிலிருந்து நலம்பெற விரும்பினால், அவரை இந்த ஈரடிப் பாடலை மனப்பாடம் செய்துகொள்ளவோ அல்லது இன்னும் அதிக வீரத்தோடு தன் அறையின் சுவர்களில் இந்த வரிகளை எழுதிவைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்துவேன். மார்க்சியம்-லெனினியம் ஓர் அறிவியலாகும். மேலும், அறிவியலின் பொருள், நேர்மையான உறுதியான அறிவு ஆகும்; அங்கே தந்திரச் செயல்களுக்கு இடமில்லை. ஆகையால் நாம், நேர்மையாக இருப்போம்.

இரண்டாவதாக, மார்க்சிய லெனினிய அணுகுமுறை உள்ளது.

இந்த அணுகுமுறை கொண்டு, ஒரு நபர் தத்துவத்தையும் மார்க்சிய லெனினிய வழிமுறையையும் படிப்படியாக, ஆழமான ஆய்வுகள் செய்து, சூழலைக் குறித்து நன்கு பயின்று அமலாக்குகிறார். தன் சொந்த ஆர்வத்தால் மட்டும் அவர் செயல்படுவதில்லை, ஸ்டாலின் சொல்வதைப் போல நடைமுறைத் தன்மையை புரட்சிகர வீச்சோடு இணைக்கிறார். இந்த உளப்பாங்குடன் அவர் வரலாற்றை வெட்டிக் குறுக்கமாட்டார்…

***

… இதுபோன்றதொரு உளப் பாங்கை மேற்கொள்வது என்பது மெய்நிகழ்வுகளிலிருந்து (facts) பேருண்மையை தேடுவது ஆகும். “மெய் நிகழ்வுகள்” என்பன புறவயமாக நிலவும் பொருட்களாகும். பேருண்மையின் பொருள் என்பது அவற்றின் உள் உறவுகள் ஆகும். அதாவது, அவற்றை ஆட்சி செய்யும் விதிகள் “தேடுவது” என்றால் பயில்வதாகும். நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் அல்லது கவுண்டியிலும் நிலவும் உண்மையான நிலைமைகளிலிருந்து நம் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும், நமது செயலுக்காக கற்பனையாக இல்லாமல், உள்ளார்ந்திருக்கும்  வழிகாட்டு நெறிகளையும், விதிகளையும் கண்டறிய வேண்டும், அதாவது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும்.

மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல.

இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.  இந்த அணுகுமுறையைக் கைக்கொள்ளும் ஒருவருக்கு “தலை கனத்து, தண்டு மெலிந்து, வேர்ப்பிடிப்பில்லாமல்” இருக்காது. “கூரான நாக்கும், தடித்த தோலும், உள்ளீடற்றும்” கொண்டவராக இருக்க மாட்டார்…

மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

 

(குரல் : யாழினி)

 • ஹர்கிசன் சிங் சுர்ஜித்

(மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது…

முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது உருக்குப் போல் வலுப்பெறவும் பங்களித்தது.  ஒற்றுமைக்கான விவாதங்களில் அனைத்து பகுத்தறிவுள்ள முன்மொழிவுகளையும் நிராகரித்த (அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) டாங்கே தலைமையிலான திரிபுவாதிகளுடன் ஏற்பட்ட கடைசிப் பிரிவை விளக்கும்போது அறிக்கை கூறுகிறது, “இரண்டு நாட்கள் சூழலை மீளாய்வு செய்யும்போது, டாங்கேயைப் பின்பற்றுவோரின்   அணுகுமுறைக்கெதிரான எங்களது போராட்டம் கட்சி விரோத குறுங்குழு முறைக்கும், திரிபுவாத அரசியல் வழிமுறைக்கும் எதிரான போராட்டம் என்ற ஒருமனதான முடிவுக்கு நாங்கள் வந்தோம்”.  சில தத்துவார்த்த விஷயங்களில் எங்களுக்கிடையே எந்த வேறுபாடுகளும் இல்லையென்பதில்லை, ஆனால் தற்காலிகமாக ஏற்கப்பட்டுள்ள நகல் திட்டத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம்.  தத்துவார்த்த, அரசியல் கேள்விகளில் மேற்கொண்டு கருத்துப் பரிமாற்றத்தை ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்களையும் இந்த விவாதத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  நாடு முழுவதிலும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு, ஊக்கமளிப்பதாக இருந்தது.  ஏழாவது மாநாட்டை நடத்த அழைப்பு விடுக்கவும், முந்தைய பத்தாண்டுகளுக்கு நடந்த விவாதங்களின் அடிப்படையில் நகல் கட்சித் திட்டத்தை நிறைவேற்றவும் தெனாலியில் நாங்கள் கூடினோம்.

1964இல் கல்கத்தாவில் நடந்த கட்சியின் ஏழாவது மாநாடு ஒன்றுபட்ட கட்சியிக்குள் திரிபுவாத்துக்கெதிரான நமது போராட்டத்தின் முடிவைக் குறித்தது.  அது திரிபுவாதத்திடமிருந்து ஒரு திட்டம் சார்ந்த, ஸ்தாபன, தத்துவார்த்த உடைப்பைக் குறித்தது.  அதனுடன் நீண்டகால உத்தியில் ஒட்டுமொத்த வரையறையும் சேர்ந்தது.  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறில் கட்சியின் ஏழாவது மாநாடு நிச்சயமாக ஒரு திருப்புமுனை.   அது ஒரு புதிய கட்சித் திட்டத்தையும், கடமைகள் குறித்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.  அதில் இந்தியப் புரட்சியில் நீண்ட கால உத்தியும், உடனடி உத்தியும் தீர்மானிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருந்தன.  இந்திய நிலைமை குறித்த அனைத்து திரிபுவாத உருவாக்கங்களையும் அது நிராகரித்து நாட்டின் வர்க்க குணாம்சத்தை சரியான முறையில் நிர்ணயித்து பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படும் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ வர்க்கம் என வரையறை செய்து விளக்கியது.  இந்திய அரசு தேசிய முதலாளிகளால் தலைமை தாங்கப்படுவது, எனவே அதை ஆதரிக்க வேண்டுமென்ற அன்றைய  சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை அது நிராகரித்தது.  அதே நேரத்தில் கட்சி மாநாடு சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருந்த நிலைபாட்டையும் ஏற்கவில்லை.  ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்படும் அரசு ஒரு பொம்மை அரசு, தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற நிலைபாடு ஏற்கப்படவில்லை.  அணிசேராக் கொள்கையில் முன்னணியில் அது இருந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்துள்ளது என்ற நிலைபாட்டையும் கட்சியானது ஏற்கவில்லை.

ஒரு மார்க்சிய-லெனினியப் பாதைக்கான நமது கட்சியின் போராட்டம் மிகவும் தீவீரமான, கடினமான சூழலில் நடத்தப்பட்டது.  1962 இந்திய-சீனப் போரின்போது ஒன்றுபட்ட கட்சியின் நமது தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டனர்.  இது வர்க்கக் கூட்டணி என்ற பாதையை ஆதரித்தோருக்கு “கடவுளே” அளித்த வாய்ப்பாகி விட்டது.  அவர்கள் புதிய சூழலில் தேசிய கவுன்சிலில் பெரும்பான்மை பெற்று விட்டனர்.  அவர்கள் இந்த வாய்ப்பை காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற திரிபுவாதப் பாதையை எதிர்த்தவர்களுக்கெதிராக அரசியல், ஸ்தாபனத் தாக்குதலைத் தொடுக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

மொத்தத்தில் ஏழாவது மாநாடு 1951இன் நீண்டகால உத்திப் பாதையை ஏற்றதுடன், ஒரு புரட்சிகரக் கட்சிக்குத் தேவையான சில மாற்றங்களையும் அமைப்புச் சட்டத்தில் செய்தது.

ஏழாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சியின் நீண்டகால உத்திக்கான பாதைக்கான தீர்மானம் அந்த சூழலில் இயக்கத்தை வளர்த்தெடுக்க சரியான திசையை அளித்தது.  தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள் இயக்கம் மற்றும் கட்சி ஸ்தாபனங்களில் நிலவிய பலவீனங்களை விரைவில் அகற்றுமாறும், அனைத்து வகையிலும் ஒரு கட்சி உணர்வை ஊட்டுமாறும் அது உத்தரவிட்டது.  ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை வளர்த்தெடுக்க, தீர்மானம் ஒரு எச்சரிக்கையை விடுத்தது: “மார்க்சிய லெனினியத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தை தொடக்கமாக, வளர்ப்பதாக, தலைவராக வெகுஜன இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் மாற்றி கட்சியை வளர்க்காமல் இந்தப் பணிகளை நிறைவேற்ற முடியாது.  நமது செயல்பாடு அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.  அது மட்டுமே ஒட்டுமொத்த கட்சியையும் புத்துயிரூட்டும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.

”கட்சிக்குள் திரிபுவாதத்துக்கெதிரான போராட்டம் திட்டமுறையில் நடத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், குறுங்குழுவாத வெளிப்பாடுகளுக்கெதிராகக் கட்சி விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.   இந்த நோக்கத்துக்காக மத்தியக்குழு கட்சிக்குள் இவற்றின் வெளிப்பாடுகள், அவற்றின் அரசியல், தத்துவார்த்த வேர்கள், திரிபுவாதத்துக்கெதிரான போராட்டத்தின் பலவீனங்கள் ஆகியவற்றை விளக்கும் ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும், ஒட்டுமொத்த கட்சிக்கும் கற்பிக்க வேண்டும்.

”கட்சி மூலப்புத்தகங்களைப் படிப்பதை ஏற்பாடு செய்து ஊக்குவிப்பதுடன், நமது நாடு மற்றும் இயக்கத்தின் சரியான பிரச்சனைகளை திட்டமிட்ட முறையில் ஆய்வு செய்து, அவற்றை மாற்றிட மார்க்சியக் கோட்பாட்டைப் பயன்படுத்தக் கற்க வேண்டும்.”

இந்த விஷயத்தில் ஏங்கெல்சின் வலியுறுத்தலை நினைவில் கொள்ளலாம்.  ஜெர்மெனியில் விவசாயிகள் போராட்டம் என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் வர்க்கப் போராட்டம் மூன்று வகைகளில் நடத்தப்படுவதாகச் சுட்டிக் காட்டுகிறார்.   அவை தத்துவார்த்த, அரசியல், நடைமுறைப் பொருளாதார வழிமுறைகள் ஆகும். இவற்றில் அவர் சரியான போராட்டங்களின்  முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறினார்.  அதில்தான் இயக்கத்தின் வலுவும், வெல்லமுடியாத தன்மையும் அடங்கியுள்ளன.

ஏழாவது மாநாடு கட்சியின் உருவாக்கத்திலிருந்து மிகவும் முக்கியமான, தீர்மானகரமான கட்சி மாநாடாக நிலைத்துள்ளது.  மார்க்சிய லெனினியத்தை மிகச்சரியாக புதிய, புதிய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுத்துவது என்பதை நாம் அதிகமாகக் கற்க வேண்டியுள்ளது.  இந்தத் தொகுதியில் ஏழாவது மாநாட்டின் உறுதிப்பாடு இந்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

(இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்கள், முதல் பாகத்திற்கு எழுதிய  முன்னுரை)

 

பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்?

மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எந்த அடிப்படையில் அமைய வேண்டும்?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களுடன் உயிரோட்டமான தொடர்போடு இயங்குவது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும். அதன் அவசியத்தை மார்க்சிய முன்னோடிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். மக்களோடு இருப்பதன் பொருள், பொது நீரோட்டத்தில் கரைந்து போவது அல்ல.திட்டவட்டமான சூழல்களுக்கு ஏற்ப மார்க்சியத் தீர்வுகளுக்கு வந்தடைவது முக்கியம். ஆனால்,  தர்க்க அடிப்படையில் வந்தடையும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தில் கற்க வேண்டும். அனுபவத்தில் கிடைத்த பாடத்தை வைத்து மீண்டும் நம் தத்துவப் புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் ‘உயிரோட்டமான’ தொடர்பு என்கிறோம். இது இதயத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் போன்றது. இது மூளைக்கும், மெல்லிய நரம்புத்தொடருக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. கட்சியின் அனைத்து மட்டத்திற்கும் மேற்சொன்ன புரிதல் மிக அவசியம்.

உள்ளூர் அளவிலான கிளைகளுக்கு பகுதிக் குழுயே வழிகாட்டுகிறது. குழுகளின் செயல்பாடுகளைக் குறித்து பேசும்போது தோழர் மாவோ, ‘படைப் பிரிவு’ என்று குறிப்பிடுகிறார். அதன் தலைவரும் உறுப்பினர்களும் எத்தகைய உறுதியோடும், திறனோடும் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடும் அவர், குழு முடிவுகள் எடுக்கும்போது ஜனநாயகமும், செயல்படும்போது  பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மை கட்டுப்படும் ஒழுங்கும் மிக முக்கியம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

தமிழ்நாட்டில் 480 இடைக்குழுக்களில் 4738 குழு உறுப்பினர்கள் உள்ளனர். இடைக்குழு செயல்பாடுகளை, திருநெல்வேலி ப்ளீனம் ஆய்வு செய்தது. கட்சி இடைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தைக் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. குழு செயலாளர்களும், முழு நேர ஊழியர்களும் புதிய சிந்தனைகளுடன், பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி இடைக்குழு செயல்பாடுகளை முன்னேற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியது. தமிழகத்தில்  உயிரோட்டமான கட்சியை வளர்த்தெடுக்க இவை மிக அவசியமான கடமைகள்.

நவ தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து அமலாக்கப்பட்டுவருவதன் விளைவாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருகின்றன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ – பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியுள்ளது. அவர்களால் சிறு குறு விவசாயிகளும், கிராமப்புற தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் சுரண்டப்படுகின்றனர். உள்ளூர் அளவில் இந்த மாற்றங்களை உணர்வதற்கான முயற்சிகளை நாம் செய்திருக்கிறோமா? உள்ளூரில் இந்த முரண்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன என்ற விவாதங்கள் குழு அளவில் நடத்தப்பட்டுள்ளனவா?

முரண்பாடுகள் பல வடிவங்களில் வெளிப்படலாம். கந்துவட்டிச் சுரண்டலாக இருக்கலாம், கூட்டுறவு அமைப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி மேற்கொள்ளும் முறைகேடுகளாக இருக்கலாம், சிறு குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருக்கலாம். இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடுவது மட்டுமல்ல. நாம் அவற்றின் பின் உள்ள வர்க்க – சமூக அரசியலை விவாதித்தோமா? போராட்ட முழக்கங்கள் நாம் திரட்டும் மக்களிடையே வர்க்க – சமூக (சாதி, பாலினம்) ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தனவா? நம் அரசியலை நோக்கி மக்களை ஈர்க்க அது பயன்பட்டதா? என்ற கேள்விகளையும் ஒரு உள்ளூர் குழுயே கூடுதலாக விவாதிக்க வேண்டும். சரியான புரிதல் கிளைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

மேல் குழு முடிவுகளையும் ‘அறிக்கைகளையும்’ மக்கள் மொழியில், மக்களின் அன்றாட சிக்கல்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டியது இடைக்குழுக்களின் அதிமுக்கியப் பணியாகும்.

நமது பிரச்சாரத்தை நோக்கி ஈர்க்கப்ப்படும் மக்களை பொருத்தமான வெகுஜன அமைப்புகளில் திரட்டுவது, நிதியாதாரத்தை திட்டமிட்டு பலப்படுத்துவதும் குழுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும். குழுகளின் விவாதங்கள், செயலுக்கான உந்துதலைக் கொடுப்பதாக அமையவேண்டும்.

கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன ப்ளீனம், “கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பு, முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உறுதியாக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது” என்ற கடமையை வகுத்துள்ளது. இவ்வகையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை குழுக் கூட்டத்திற்கு அழைக்கும்போதும், பங்கேற்கும்போதும் பணிகளைக் குறித்த பரிசீலனை மனதில் ஓடுகிறதா? அடுத்து என்ன, விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் புதிதாக என்ன சேர்க்க வேண்டும்? புதிதாக எழுந்திருக்கும் வாய்ப்புகள் என்ன? நாம் செயல்படும் பகுதியில் உழைக்கும் வர்க்கத்தைத் திரட்ட பரிசீலிக்க வேண்டிய புதிய சிக்கல்கள் என்ன? இந்தக் கேள்விகளெல்லாம் மனதில் ஓடுகிறதா? எனப் பார்க்க வேண்டும்.

ஒரு குழு உறுப்பினர் கட்சி திட்டத்தை முறையாக உள்வாங்கிக் கொள்வதுடன், அமைப்புச் சட்ட விதிகள், கம்யூனிஸ்ட் நெறிமுறைகளில் உறுதியோடு நின்றுகொண்டு செயலாற்ற வேண்டும்  – மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். தத்துவ விவாதங்களையும், அரசியல் விவாதங்களையும் குழுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். மார்க்சிய வாசகர் வட்டங்களைப் போன்ற ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டும். செயல்பாடுகளுடன் இணைத்து தத்துவச் சர்ச்சைகளுக்கு பதில் தேட வேண்டும். கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.

பெண்களையும், இளைஞர்களையும் கூடுதலாக இணைக்க வேண்டும் என ப்ளீனம் வழிகாட்டியிருக்கிறது. திட்டமிட்டு பயிற்றுவித்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எனவே நாம் மேற்சொன்ன வகையில் குழு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும்.

 

சாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்

சாதி பற்றிய சரியான சித்தாந்தப் புரிதல் குறித்து சென்ற இதழில் பார்த்தோம். நடைமுறையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாதியை எப்படிப் பார்த்தது? எதிர்கொண்டது?

இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத் தையும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்துப் பார்த்தவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளே. 1930 களில் இந்திய கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய முதல் திட்ட ஆவண மான, வரைவு செயல்பாட்டுக்கான மேடை என்ற ஆவணத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது சாதி அமைப்பு முறையையும், சாதிய அசமத்துவத்தையும் அதன் சமூக, பண்பாட்டு வடிவங்கள் அனைத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குப் போராடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தீண்டப்படா தார் எனப்படும் உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப் படும் அனைத்து மக்களின் முழுமையான, பூரண சமத்துவத்திற்காகவும் உழைக்கிறது.” (காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இந்த தீர்மானம் விநியோகிக்கப்பட்டது)

இன்னும் சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டிருந் தாலும், சாதிய அமைப்புமுறையை ஒழிப்பது, அனைத்து பிரிவினருக்குமான சமத்துவத்தை உருவாக்குவது ஆகியவற்றை மிகச் சரியாக சுட்டிக்காட்டும் மேற்கண்ட இரண்டு பத்திகளை குறிப்பிட்டேன்.

இயக்கங்களுக்கிடையே ஏற்பட்ட பிளவுகள்
ஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தை யும் எதிர்த்த போராட்டத்தின் இணைந்த பகுதி யாக சாதி எதிர்ப்புப் போராட்டம் மாறவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பின்னாட் களில் தோழர் பி.டி.ரணதிவே சாதி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார் : ”ஏகாதி பத்திய எதிர்ப்பியக்கமும், சமூக சீர்திருத்தத்திற் கான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று துண்டித்துக்கொண்டன. அவ்வாறு துண்டித்துக் கொண்டதால் இரண்டு நீரோட்டங்களுமே பலவீனமாகின.”

அன்றைய காலகட்டத்தில் இயங்கிவந்த முக்கிய மான சமூக சீர்திருத்தவாதிகள், சாதிக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்ற அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பலரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்தும், விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டனர். அவர்கள் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது; ‘பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், என்ன நடக்கும்? பிராமணீய கோட்பாட்டின் அடிப்படையிலான முறைதானே வரும்?’. ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானது என்று இயங்கியவர்கள், மேற்சொன்ன வாதத்தை சீர்குலைவாகப் பார்த்தார்கள். ஏகாதிபத்திய ஆதரவு நிலையாகப் பார்த்தார்கள்.

அப்போதிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு இந்த இரண்டு போராட்டங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வலிமை இல்லை. கேரளாவைப் போல விடுதலைப்போராட்டத்தின் தலைமையிடத்தை கைக்கொள்ள முடிந்த பகுதிகளில் மட்டுமே அவ்வாறு செய்ய முடிந்தது. அங்கே காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதி கம்யூனிஸ்டுகளின் வழி காட்டுதலை ஏற்றது. அதுவா, இதுவா என்ற ஊச லாட்டம் நிலவிய பகுதிகளில், தேசிய இயக்கத் தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத் தையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட் டோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலை இயக் கம் என்பது, சமூகப் பொருளாதாரப் போராட்ட மும் ஆகும். அதாவது நிலவுடைமைக்கு எதி ரான போராட்டமும் விடுதலை இயக்கத்தின் அங்கம். அதிலிருந்து சமூக சீர்திருத்த இயக்கங் கள் துண்டித்துக் கொண்டதால், அது சாதி எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப்படுத்தியது.

மேற்சொன்ன துண்டிப்பிலிருந்து, கம்யூனிஸ்டு களுக்கும் – அம்பேத்கரியர்களுக்குமான இடை வெளி துவங்கியது. இன்றைக்கும் அந்த இடை வெளி களையப்படவில்லை. அதற்குள் இப்போது விரிவாகச் செல்லவில்லை. சாதி பற்றிய காந்தி யின், காங்கிரஸ் கட்சியின் பார்வையின் மீது கடுமையான விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். 1930 ஆம் ஆண்டில் உருவாக் கப்பட்ட’ செயல்பாட்டுக்கான ஆவணம்’ காந்தி யின் சீர்திருத்தப் பார்வை மீதான கடுமையான விமர்சனமேயாகும். காந்தி தீண்டாமை பாவம் என்றார்; நீக்கப்படவேண்டியது என்றார்

ஆனால் ‘நால்வருண அமைப்பு நல்லது’ என்றார்.
சமபந்தி உணவு என்று சிலவற்றை அவர் செய் தாலும். தீண்டாமை உள்ளிட்ட சில கேடுகளை நீக்கிவிட்டால் வர்ணாசிரமம் நல்லது என்பது அவரின் பார்வை. இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப் பும் கிட்டத்தட்ட அதைத்தான் சொல்கிறது. காந்தியின் இந்த வாதம் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களுக்கு கடும் கோபத்தை உருவாக் கியது. கம்யூனிஸ்டுகள் காந்தியின் பார்வையை ஒருபோதும் ஏற்றதில்லை. ஆனால், அரசியல், சித்தாந்த ரீதியில் அன்றிருந்த மக்களிடம் செயல் பட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மனநிலையை இணைத்த ஜனநாயக மேடையை உருவாக்கும் அளவுக்கு கம்யூனிஸ்டுகளால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.

21 ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்பு
இன்றைய சமூக நிலைமைகளில், இப்பிரச்சனை களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம். 2000 ஆம் ஆண்டில் நமது கட்சித் திட்டத்தை சமகால நிலைமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தினோம். அதில் சாதி குறித்த மூன்று பத்திகள் உள்ளன.

அதில் முதலாவது சாதி என்பது ஒரு ஒடுக்கு முறைக்கான, அதிகாரப்படிநிலை அமைப்பாக இருந்துவருகிறது. இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குக்கு முன்பே அது இருந்தது. எனவே, அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தங்களை நிலைமைகளை மாற்றியமைக்கவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் போராடு கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக தலித், பிற் படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படும் எழுச்சி யில், ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது.

இரண்டாவது, சாதியைப் பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகள் இருக்கின்றன. அவை, சாதியப் பிளவுகளை நீடித்திருக்கச் செய்கின்றன. முதலாளித்துவ அமைப்பும் தனது வளர்ச்சிப் போக்கில், சாதி அமைப்புக்கு இடமளிக்கிறது. எனவே நமது சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துகின்ற முயற்சிகளையும், சாதியத்தை நீடித்திருக்கச் செய்யும் முயற்சிகளையும் எதிர்த் துப் போராட வேண்டும்.

மூன்றாவதாக, சாதிக்கு எதிரான போராட்டம் என்று வரும்போது. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடையதும், சாதி அமைப்பினால் ஒடுக்கப் பட்ட இதர மக்களுடையதுமான பிரச்சனை களைக் கையிலெடுத்துப் போராட வேண்டும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறையையும், அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கிய மான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. நிலம், கூலி, பொருளாதார கோரிக்கை களை – சமூக உரிமைகளுக்கான கோரிக்கை போராட்டங்களோடு இணைக்க வேண்டும். அந்தப் போராட்டங்கள் நமது இடது ஜனநாயக மேடையின் பகுதியாக மாற்ற வேண்டும். இக்கடமை களை நமது கட்சித் திட்டம் வகுத்துள்ளது.

கட்சியின் அனுபவங்கள்
சாதியை ஒழிப்பதற்கு நமது கட்சித் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ள இத்தகைய புரிதலை எப்படி நடைமுறைப்படுத்துவது?.

1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி ஏற் படுத்தப்பட்ட பிறகான அனுபவங்களை மட்டும் வைத்து விவரிக்கிறேன். தொடக்க காலத்தில் சாதி வன்முறைகளுக்கு எதிராகப் போராடியிருக் கிறோம். (கீழ வெண்மணியைப் போல, பீகாரில் நடந்ததைப் போல) கிராமப்புற ஏழைகளான விவசாயத் தொழிலாளர் போராட்டங்களை கையிலெடுக்கும்போது, அவர்களின் கூலி, குத்தகை உரிமைகளுக்காக தலையிட்டபோது, அவற்றிற்கு எதிர்வினையாக சாதித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகையில், ஒரு தாக்குதல் நடக்கும்போது அவற்றில் கூடுதலாக தலையிட்டிருக் கிறோம். ஆனால், இப்படியான தலையீடுகளைத் தாண்டி, சாதிய அடக்குமுறைக்கும், சாதிக்கும் எதிரான போராட்டங்களை, தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு மேடையை அமைத்து, சாதி அமைப்போடு தொடர்புடைய எல்லாவிதமான பிற்போக்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும் ஏற்பாடு இல்லை.
இக்காலகட்டத்தில், முதலாளித்துவ கட்சிகளும், பிற சமூக சக்திகளும் சாதி அடிப்படையிலான திரட்டலைச் செய்தார்கள். முக்கியமாக, அவற்றின் பின் தேர்தல் நோக்கங்கள் இருந்தன. இந்தத் திரட்டல்கள் அடிப்படையான சாதி எதிர்ப்பு இயக்கத்தில் தாக்கம் செலுத்தின. வர்க்கச் சுரண்டல் கள், சமூகப் பொருளாதார நிலைமைகள் ஆகிய வற்றை இணைத்து சாதி எதிர்ப்பினை முன்னெடுப் பதற்கான முயற்சிகளுக்கு, மாறுபட்ட நிலையை ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சாதிகளைச் சார்ந்த மக்களை வெளிப்படை யாக பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், உயர் சாதி ஆதிக்கம் கொண்ட கட்சிகள் என எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் சாதிப் பிளவு களை நீடித்திருக்கச் செய்வது அவசியமென்று கருதுகிறார்கள். அந்தப் பிளவுகள் தேர்தல் தேவை களுக்கான திரட்டலுக்கு பலன் கொடுக்குமென்றும் கருதுகிறார்கள்.

அவர்கள் சாதி ஒழிப்பையும், சாதிய ஒடுக்கு முறையை ஒழித்துக்கட்டுவதையும் பற்றி மேடை களில் பேசலாம். ஆனால் நடைமுறையில் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டும் தீவிர மான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

நாம் சாதிக்கு எதிராக நடைமுறைச் சாத்திய மளிக்கும் இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கான உத்தியை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன காரணிகள் அதில் இடைவெளியை உருவாக்கின. எனவே, முன்னுக்குவந்த மாற்றங் களுக்கு எதிர்வினையாற்றும் சூழல் ஏற்பட்டது. 1990 ஆம் ஆண்டுகளில் மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும்போது, அது வட இந்தியாவில் சாதி அடிப்படையிலான கூர்மையான வேறுபாடு களை உருவாக்கியது. (இந்தியாவின் தென் மாநிலங் களில் உள்ள) நீங்கள் சமூக மேம்பாடு உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படைகளை அறிவீர்கள். ஆனால் (வட இந்திய மாநிலங்களில்) அவை ஒதுக்கப்பட்டன.

சாதிகளுக்கிடையேயான வேறு பாடுகள் கூர்மையாக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட விளைவுகள் பின்நாட்களில் இந்துத்துவ வளர்ச் சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. இதுபோல நிகழ்வுகள் நடக்கும்போது நாம் அவற்றிற்கு எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தோம்.

இரண்டு கால்களில் பயணிப்போம்
மேற்சொன்ன அனுபவங்கள்தான், சாதிச் சிக்கலை எதிர்கொள்வது குறித்த அடிப்படையான மறு சிந்தனையை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சியை உந்தித்தள்ளின. அதன் வழியே வர்க்கப் போராட்டத் திலும், ஜனநாயக மேடைகளிலும் ஒரு பகுதியாக சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை இணைத்து எடுக்கும் உத்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்தோம்.

மார்க்சிய அடிப்படையில் பார்க்கும்போது, முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பு இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதென அனுபவங்கள் காட்டுகின்றன. முதலாவது, ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து உபரியை உறிஞ்சுகின்றனர். இரண்டாவது, அவர்கள் சாதியைப் பயன்படுத்தியும், மதம், கலாச்சாரம் ஆகிய மேல்கட்டுமான அங்கங்களைப் பயன்படுத்தி யும் தங்கள் வர்க்க ஆட்சிக்கான ஒப்புதலைப் பெறுகின்றனர். வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்கு முறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போரா டாமல் நம்மால், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் நமது அணுகுமுறையையும், உத்தியையும் தீர்மானிக்க வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு
பல்வேறு அகில இந்திய மாநாடுகளில் இப்பிரச் சனையை விவாதித்தோம், குறிப்பாக 16 வது மாநாட்டுக்குப் பிறகு, சமூக ஒடுக்குமுறைப் பிரச் சனைகளை கையிலெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய உத்தி, அணுகுமுறை குறித்த நிலைப் பாட்டை வகுத்தெடுத்தோம். சமூக ஒடுக்குமுறை கள் என்று மொத்தமாகச் சொல்லும்போது நம் சமூகத்தில் முதன்மையாக அமைந்தது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாகும். மேலும் இந்தியாவில் பாலின ஒடுக்குமுறைகள் இருக் கின்றன. ஆதிவாசி மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் பெரும்பகுதி சாதி ஒடுக்குமுறை களை ஒத்ததாகவே இருக்கின்றன. அவர்கள் சாதி கட்டமைப்பிற்கு வெளியில் உள்ளவர்களாக நடத்தப்படுகின்றனர்.

சாதி ஒடுக்குமுறையில், பாலின நோக்கிலான அம்சமும் இணைந்தே இருக்கிறது. எனவே நாம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சாதி அமைப்புமுறையே ஒரு ஆணாதிக்க அமைப்பாகும். சாதிக்குள் அகமண முறையைப் பராமரிப்பதன் மூலமே, ஒரு சாதி தனது படிநிலை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, அதற்காக ஒரு பெண்ணின் பாலினத் தேர்வையும், சுயேட்சைத் தன்மையையும்

கட்டுப்படுத்துகின்றனர். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் தன்னை விடவும் ஒடுக்கப்பட்ட சாதியில் திருமணம் செய்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்புவது இதிலிருந்துதான். இதனாலேயே, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வது கட்சி காங்கிரஸ் ஒரு வழிகாட்டுதலைக் கொடுத்தது. சாதி, பாலினம், ஆதிவாசி மீதான ஒடுக்குமுறைகளானாலும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையாக இருந்தாலும் அவை கட்சியின் அரசியல் மேடையின் ஒரு பகுதியாக எடுக்கப்படவேண்டும் என்பது அந்த வழிகாட்டு தல். அதற்கு முன்பிருந்த போக்கு என்ன வென் றால், பெண்கள் பிரச்சனைகளென்றால் அவற்றை பெண்கள் அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண் டும், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களை விவசாயத் தொழிலாளர் சங்கம் பார்க்க வேண்டும் என்று துறைவாரியாகப் (Compartmentalised) பார்க்கும் போக்கு இருந்தது. சமூக ஒடுக்குமுறை களை எதிர்ப்பது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் கட்சி ஒரு அரசியல் அமைப்பாக நேரடியாகத் தலையீடு செய்ய வேண்டும். இவ்வகையில், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான மேடையை அமைத்து செயல்படவேண்டும்.
அடையாள அரசியலும், நமது உத்தியும்
இந்தப் புரிதலை அமலாக்க முயலும்போது நமக்கு வேறு சில அனுபவங்களும் கிடைத்தன.
ஏற்கனவே தலித், ஆதிவாசி, சிறுபான்மையினரிடம் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களின் தாக்கம் அந்த மக்களிடம் இருக்கும் போது, நம்மால் எளிதாக அவர்களைத் திரட்ட முடியவில்லை. தலித் அடையாளத்துடனும், ஆதி வாசி அடையாளத்துடனும் செல்லும்போது மட்டுமே அவர்களிடம் வரவேற்பு இருந்தது. பொதுவான வர்க்க – வெகுஜன அமைப்பின் பேராலோ, கட்சியின் பேராலோ செல்லும் போது தங்கள் சொந்த அடையாளத்தோடு நெருக்கமாக உணர்வதில்லை. நாம் வலுவோடு செயல்படுகின்ற மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள சில சிறப்பான அமைப்புகளும், மேடைகளும் அமைக்கப்பட்டன. அவை குறிப்பிட்ட பிரிவு மக்களின் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தும், அதே சமயம் பொதுவான ஜனநாயக, வர்க்கப் பிரச்சனைகளோடு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்.

சமூகப் பிரச்சனைகளில் போராடும் வகையில் – தலித் – ஆதிவாசி – சிறுபான்மையினர் பிரச் சனைகளில் போராடும் வகையிலான மேடை களை சில மாநிலங்களில் ஏற்படுத்த கட்சி முடிவு செய்தது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் சில அகில இந்திய மேடைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு மேடைகளை உருவாக்குவதன் நோக்கம், முதலில் பாதிக்கப்படும் மக்களைச் சென்றடைய வேண்டும். அடுத்ததாக அவர்களின் நியாயமான பிரச்சனைகளை எடுக்க வேண்டும். அதன் வழியே, அந்த மக்கள் திரளை, ஜனநாயக – வர்க்க இயக்கத்தோடு இணையச் செய்ய வேண்டும். இவ்வகையில் தான் இப்போது செயல்படுகிறோம். எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறோம், என்ன முன்னேற்றம் கிடைத்திருக் கிறது என்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கிறோம்.

வர்க்க- வெகுஜன இயக்கங்களும், சமூகப் பிரச்சனைகளும்
வர்க்க வெகுஜன அமைப்புகளில் செயல்பட்டு அவர்களின் வர்க்க, பொருளாதாரப் பிரச்சனை களைக் கையிலெடுப்பதுடன், சமூகப் பிரச்சனைக ளோடு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். பல மாநிலங்களில், கட்சியின் பல்வேறு மட்டங்களில் இது சாத்தியமாகவில்லை. இதனைக் குறித்தும் பரிசீலித்தோம். உதாரணமாக வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்களில் சமூகப் பிரச்சனை களை கட்சியின் பணிகளில் ஒன்றாக கையிலெடுப் பதில் முன்னேற்றம் இல்லை. கட்சி ப்ளீனத்திற்கு பிறகு, இந்த நிலைமையை சரிப்படுத்த சில பட்டறைகள் நடத்தப்பட்டன. முதலில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒரு மத்திய முகாம் நடத்தப்பட்டது. பிறகு மாநில அளவில் முகாம் களை முன்னெடுத்தோம். சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை எப்படி முன்னெடுப்பது என அவற்றில் பயிற்றுவிக்கப்பட்டன.
வேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தால், அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சாதியைச் சார்ந்தவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற தயக்கம் சில இடங்களில் காரணமாக இருந்துள்ளது. இவ்வாறான தயக்கத் தோடு ஒரு பிரச்சனையை எடுத்துப் போராடும் உறுதி ஏற்படாது.

மற்றொன்று, பச்சையான பாராளுமன்றவாத வெளிப்பாடு. சமூகப் பிரச்சனைகளை எடுத்தால் அதற்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற புரிதல். எனவே, கட்சிக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை அனைத்து மட்டங்களிலும் நடத்த வேண்டியுள்ளது. நாம் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடி யாக வேண்டும் அப்போதுதான் நம்மால் வர்க்கப் போராட்டத்தையும், ஜனநாயக இயக்கங்களை யும் வலுப்படுத்த முடியும்.

சாதி ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்டுவது
நமது கட்சிக்குள், கட்சி உறுப்பினர்களிடையே இந்தப் புரிதலை கற்பிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறோம்.

ஜனநாயகம், ஜனநாயகப் புரட்சி என்றாலே சாதிப் பிளவுகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். அவ்வாறில்லாமல் ஜனநாயகம் பிறக்காது. சோசலிசத்தை எட்டு வதற்கே இதுவொரு முன் நிபந்தனையாகும். இந்தப் புரிதலை நமது கட்சி உறுப்பினர்களுக்கு கற்பிக்கவேண்டியுள்ளது.
புரட்சியை நடத்தி முடித்துவிட்டால், சாதி உட்பட எல்லாம் ஒழிந்துவிடும் என்று பழைய வாதங்களை நம்பிக்கொண்டிருப்பது தவறு. நாம் முன்னெடுப்பது தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப் பையே ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டமா கும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்னொன்றை ஒடுக்குகிறது. தலித் சாதிகளிலும் கூட பல்வேறு துணைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒருவர் இன்னொருவரோடு அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். எனவே, தலித் மீதான ஒடுக்குமுறை மட்டுமல்ல; அனைத்து அநீதியான சாதிய கட்டமைப்பிற்கும், நியாயங்களுக்கும் முடிவுகட்டவேண்டும். இந்தப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் புரிதலுடன் களத்தில் நமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

(தமிழில்: இரா.சிந்தன்)

திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச் சூழலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று அவர்கள் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தார்கள். தமிழக முதலாளிகள் முன்னுக்கு வந்த பிறகு அந்த பிராமண எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்படவில்லை. நீதிக் கட்சியினுடைய பாரம்பரியம்தான் நாங்கள் என்று திமுக தலைவர் இன்றும் கூறிக் கொண்டேயிருக்கிறார். அந்த பாரம்பரியத்தின் வர்க்கப் பின்னணி என்ன? நீதிக் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் பொருளாதார நிலையில் பெரும்பாலும் ஜமீன்தார்கள், மிராசுதார்கள். (பனகல் ஜமீன்தார் பெயரில் அரசு கட்டிடம் சைதாப்பேட்டை – பனகல் – பார்க் – டாக்டர் நடேசன் பார்க்.)
ஜமீன் ஒழிப்புக்காக கம்யூனிஸ்டுகள் போராடினர். காங்கிரஸ்காரர்களும் பெயரளவில் அதனை பேசினர். அந்நிலையில் ஜமீன்தார்களும், மிராசுதார்களும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதுதான் அதனுடைய வர்க்க நிலை. அதேநேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பிராமண எதிர்ப்பாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். கல்வியி லும் தொழிலிலும் பிராமணர்களுக்கு போட்டியிட அந்த எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆகவே அவர்கள் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். தொழில் முதலீட்டாளர்களும் அதற் குள்ளே இருந்தார் கள். இந்தியன் வங்கியை துவகிய இராஜா முத்தையா செட்டியார் மற்றும் இராமசாமி செட்டியார் நீதிக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டனர். நீதிக்கட்சியில் இருந்து கொண்டே அவர்கள் தங்களது தொழில்களை வளர்த் தனர். நீதிக்கட்சியின் ஆரம்பத்தில் (1916-1946) பிராமணர்கள் உறுப்பினர்களாக முடியாது என்று சட்ட விதி இருந்தது. ஆனால் அதன் இறுதி காலத்தில் பிராமணர்களையும் அக்கட்சி, உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு தன்னுடைய பிராமண எதிர்ப்புக் கொள்கையை மாற்றிக் கொண்டது.
சென்னை பிராந்தியம் முழுவதும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த இந்த முதலாளிகள் விரும்பினார் கள். இது, அவர்களின் வர்க்க சார்பு தன்மை. இதற்காக அவர்களுக்கு தனி நாடு தேவைப்பட்டது. ஆகவே திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. சென்னை ராஜதாணி என்பதுதான் திராவிட நாடு. வர்த்தகத்தில், தொழிலில், விவசாயத்தில் இவைகள் எங்களோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிராமண ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்றார்கள்.
கரிமுத்து செட்டியார், ராஜா சர் முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், அண்ணாமலை செட்டியார், பி.டி.ராஜன், எம்.ஏ.முத்தைய செட்டியார், தியாகராய செட்டியார் போன்றோர் முதலீடுகளைச் செய்தனர். கரிமுத்து தியாகராஜ செட்டியார், தென் மாவட்டத்தின் பஞ்சாலை முதலாளி. இவர்கள் அனைவரும் அப்போதே இணைந்து 1907ல் இந்தியன் வங்கியை துவங்கினர். பின்னர் அண்ணமலை செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பிறகு இராஜா சர் முத்தையா செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பர்மா, சிங்கப்பூர், போன்ற நாடுகளில்கிளைகளை துவங்கினர். ஜின்னிங் தொழிற்சாலை, பஞ்சாலை, பென்சில், அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் துவக்கினர்.
1942 மார்ச் 30ல் சுந்தரபாண்டி நாடார், சாமியப்ப முதலியார், ஏசி.முத்தைய செட்டியார் ஆகிய முதலாளிகள் கிரிப்ஸினை சந்தித்து திராவிட நாடு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கிரிப்ஸ் திட்டத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.
1944ல் பெரியார் நீதிக் கட்சியிலிருந்து விலகி திராவிடர் கழகம் உருவாக்கினார். உண்மை வரலாற்றை நேசிப்பவர்கள் சமூக தளத்தில் எந்த காலத்திலும் பெரியாருடைய பங்கை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். அதேநேரத்தில் பெரியார் எந்த காலத்திலும் ராஜா சர் முத்தைய செட்டியார் போன்ற முதலாளிகளையோ, ஜமீன்தார்களையோ எதிர்த்தது கிடையாது. ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் தவறு என்று கூட கூறியிருக்கிறார். சமூக வாழ்க்கையில் முற்போக்கா கவும், பொருளாதார வாழ்க்கையில் முதலாளித்துவப் பார்வையோடும் இருந்தது திராவிடர் கழகம். 1948ல் அறிஞர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமுலர் மந்திரத்தைக் கூறியே திமுகவை உருவாக்கினார். தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டாளர்களை மேலும் ஈர்ப்பதற்காகவே திரவிட முன்னேற்ற கழகம் சாதி மத வித்தியாசமில்லாமல் தென்னகத்திற்கு முதலீடுகள் வேண்டும் அல்லது திராவிட நாடு வேண்டும் என்று கூறியது. அவர்களுடையவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, என்ற கோசம் அனைத்து சாதி முதலாளி களும் வளர வேண்டும் என்பதுதான். இது ஒரு வர்க்க கோசம். தொழில் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கோசம்.
பெரியாரும் அண்ணாவும் முகமது அலி ஜின்னாவை சந்தித்து, திராவிட நாடு கோரிக்கையை நீங்கள் ஆதரியுங்கள், நாங்கள் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கிறோம் என்றார்கள். அதற்கு முகமது அலி ஜின்னா ஆதரவு அளிக்கவில்லை. அம்பேத்கரும் திராவிட நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இவர்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு பின்வாங்கிவிட்டனர். ஜின்னா, பாகிஸ்தான் ஆளுநர், பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவர். அரசியல் ரீதியாக நேச சக்திகள் என்று கருதிய யாரும் திராவிட நாடு கோரிக் கையை ஆதரிக்கவில்லை. மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிக்கப்பட்ட பின், அந்த மாநிலங்களில் யாரும் திராவிட கோரிக் கைக்கு ஆதரவளிக்கவில்லை. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.
அண்ணாவின் பேருரைகளில் கூட, அவர் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எந்த இடத்திலும் எதிர்த்தது கிடையாது. கூடுதலான நிதி தமிழகத்திற்கு வேண்டும், கூடுதலான தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டும் என்கிற உரிமைதான் மாநில சுயாட்சி என்று வந்ததே தவிர வேறொன்றுமில்லை. இந்தியப் பெரு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சி தன்னுடைய தளத்தை விரிவுபடுத்துவதற்கு சிறு, நடுத்தர முதலாளி களை வளர்த்தெடுப்பதற்கு முயற்சித்தது. சந்தைகள் வளர்கிறபோது தமிழக முதலாளிகள் வேகமாக வளர்ந்தார்கள். அதற்கு முதலாளித்துவ வளர்ச்சி சூழல், காங்கிரசினுடைய 5 ஆண்டு திட்டம் அனைத்தும் உதவி செய்தது, இந்த உதவியால் தமிழக முதலாளிகள் பிராந்தியத்தைத் தாண்டி வெளியே செல்ல ஆரம்பித் தார்கள் இயற்கையாகவே அவர்களது சந்தை விரிவடைந்தது. தமிழக முதலாளிகள் தேசப்பொருளா தாரத்தில் பங்கு வகிக்கும் சூழல் உருவானது. அதன்பின் மத்திய அரசில் பங்கேற்பதற்கான தேவை திமுகவிற்கு வருகிறது. தங்களது வர்க்க அடிப்படையாக உள்ள தமிழக முதலாளிகள் தேசிய அளவில் தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கு,மத்திய அரசில் பங்கு பெறுவது அவசியம் என்ற தர்க்கரீதியான நிலைபாட்டுக்கு திமுகவினர் வருகின்றனர். அதிமுகவிற்கும் அதே போன்ற தேவை இருந்தது.
அவசர நிலையை எதிர்த்தது என்பது திமுகவின் வரலாற்றிலேயே முக்கியமானது. ஜனநாயகம் என்பது முக்கியதேவை. பிஜேபிக்கோ, காங்கிரசுக்கோ சர்வாதி காரம் தேவைப்படலாம், ஆனால் ஒரு மாநிலக் கட்சிக்கு சர்வாதிகாரம் தேவைப்படாது. ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் முறை கூட ரத்தானால் அது இறந்துபோய்விடும். வீடு இருந்தால்தான் போர்டு மாட்ட முடியும் என்பதில் திமுக தெளிவாக இருந்தது.
1990க்குப் பிறகு தேசிய முதலாளிகள் சர்வதேச அளவில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். ஹீண்டாய் இங்கு வருகிறது, தமிழக முதலாளிகள் தென்னாப் பிரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். ஒட்டுமொத்த மாக, மாநில முதலாளித்துவ கட்சிகளின் வளர்ச்சியை மூன்று படிநிலைகளாகப் பார்க்க வேண்டும்.
1, பிராந்திய சந்தை தேவைப்பட்டது,
2, பிறகு இந்திய சந்தை தேவைப்பட்டது,
3, இன்று உலகச் சந்தையும் தேவைப்படுகிறது, திமுகவும் அதிமுகவும் வெறும் வார்த்தைகளில் இந்த உலகமயத்தை எதிர்ப்பார்களே தவிர, அதன் பெருமுதலா ளிகளின் இளைய பங்காளியாக இருப்பதுதான் அவர்களுடைய வர்க்க நிலை. அவர்களுடைய மற்ற கொள்கைகளான, சாதி மறுப்பு போன்றவைகளெல்லாம் அவர்களுடைய பழைய கதை. இன்று அது தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆகவே, திராவிடக் கருத்தியல் என்பது அவர்களுடைய அன்றாட நிலையல்ல. ஏனெனில் இன்றைய உலகமயச் சூழலில் தனியார் துறை வேகமாக வளர்கிறபோது, இந்த கோஷங்கள் எடுபடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். திராவிடர் கழகம் பெண் விடுதலை, சாதி மறுப்பு போன்ற பிரச்சனைகளில் கூட கடந்த காலம் போன்று செயல்படுவதில்லை. இவற்றின் காரணமாகத்தான் பாஜகவோடு திமுக, அதிமுக கைகோர்க்க முடிகிறபோது அதனுடைய திராவிடக் கருத்தியல் என்பது அவர்களிடம் முற்றிலுமாக விடை பெற்று விட்டது என்றுதான் சொல்ல முடியும். தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் போன்றவற்றை முன்னுக்கு கொண்டு வந்ததில் திராவிடர் கழகத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த அம்சங்களில் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை இன்றைய இளைய தலைமுறையினருக்கும், அவற்றை வழிநடத்தி மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யுனிஸ்ட்களுக்கும் இடதுசாரிகளுக்கும் உண்டு.

(தொகுப்பு : சுதிர் ராஜா)

2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்

இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று.
இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’ பிரதிபலித்ததாக கருதப்பட்டது என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாநாட்டின் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்பட்ட அறிக்கை, ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றிய வலதுசாரி திரிபுகள்’ திருத்தல்வாத திரிபுகள் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது’. இந்த அறிக்கையானது, பிற்கால கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரபல மாகிய இடதுசாரி – வலதுசாரி திரிபுகளில் ஒரு முக்கியமான திரிபினை விளக்கக் கூடியதாகவே அமைந்தது. சிந்தனைக்குரிய பல கருத்துக்கள் இதில் முன்வைக்கப்பட்டன. – சர்ச்சைகளுக்கும் பெரும் உட்கட்சி விவாதங்களுக்கும் இந்த அறிக்கையானது பெருமளவில் வழி வகுத்தது.
மூன்றாவதாக, விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடை முறை அனுபவத்தின் அடிப்படையில் எவ்வாறு இத்திரிபுகள் காரணமாக கட்சி முழுவதும் பாதிக்கப்பட்டது என்பதை பற்றிய புரிதல் கூர்மைப்படுத்தப்பட்டது.
மொத்தத்தில், அதுநாள் வரை கட்சி பல விஷயங்களில் தவறான பாதையை பின்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆழமான பரிசீலனைகள் நடைபெற்றன. இயல்பாகவே இந்த விவாதங்கள் எல்லாம் சேர்ந்து கட்சியை ஒரு புதிய திசை வழியில் அழைத்துச் செல்ல காரணமாக இரண்டாவது காங்கிரசின் முடிவுகள் அமைந்தன.
மிதவாத போக்கினை உடைத்தெறிந்து தீவிரமான புரட்சிகரமான போராட்டங்களுக்கான அழைப்பை 2வது காங்கிரஸ் விடுத்ததாகவே கட்சி அணிகள் கருதின. இதன் எதிரொலியாக கட்சி காங்கிரஸ் முடிந்தபின் நாடு முழுவதும் ஏராளமான, தீவிர தன்மை கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. மாநாட்டின் இறுதி நாள் பேரணியில் அரசியல் தலைமைக்குழு சார்பாக பேசிய தோழர் பவானி சென் – ‘தெலுங்கான பாதை தான் நமது பாதை’ என்று உரக்க பறைசாற்றியதானது, மிகப்பெரிய உணர்ச்சிப் பெருக்கை கட்சி முழுவதும் ஏற்படுத்தியது. தெலுங்கான பாதை என்று கூறும்போது, மக்களின் தீவிரப் போராட்டம் – அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற முறையில்தான் நாடு முழுவதும் கருதப்பட்டது. இதேபோல், அதுநாள் அடக்கி வைக்கப் பட்டிருந்த உணர்ச்சிகளெல்லாம் பீறிட்டு வெடித் தெழுந்தது. இந்த போராட்டங்களை முறியடிக்க ஆளும் வர்க்கம் மிகக் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவி விட்டது என்பதும் இரண்டவது காங்கிரசுக்குப் பின் வெளிப்பட்ட முக்கிய அம்சமாகும்.
அடக்குமுறைகளும் சித்தரவதைகளும்
ஆயிரக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டதும், மூர்க்கத்தனமான – நேரடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் பறிக்கப்பட்டதும், சொல்லொண்ணொ சித்திரவதைகளை நமது அணிகள் சந்திக்க வேண்டிய சூழல் உருவானதும் மறக்கவே முடியாது. தெலுங்கானாவில் மட்டுமின்றி, போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டாக இருப்பது கூட ஒரு குற்றமாக கருதப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தோழர்களின் பயங்கரமான அனுபவங்களை நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடூமைகளை வரலாறு இந்திய நாடு முழுவதும் பரவி நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தன.
ஆக, இரண்டாவது காங்கிரசுக்கு பிறகு பல்லாயிரக் கணக்கான தோழர்களும், அனுதாபிகளும் எதிர் கொண்ட அடக்குமுறைகளை பார்க்கும் போதே, அத்தகைய சூழ்நிலையில் கூட உறுதியுடன் நெஞ்சு நிமிர்ந்து இயக்கத்தையும், இலட்சியத் தையும் காப்பாற்றி செங்கொடியை உயரப் பிடித்த வரலாற்றின் ஏராளமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய தோழர்கள் இத்தகைய தியாக வரலாற்றின் காரணமாக 1951 – 52 நடைபெற்ற அகில இந்திய பொதுத் தேர்தல்களில் அடக்குமுறை தாண்டவமாடிய பல்வேறு பகுதி களிலும் (தொகுதிகளிலும்) கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர்கள் வெற்றி கொடியை எடுத்துச் சென்ற சம்பவங்களும் படிப் பினைகள் நிறைந்தவையாக இருக்கத்தான் செய்கின்றன.
ஆக, இரண்டாவது காங்கிரசுக்குப் பின் அதி தீவிரவாத செயல்கள் பல நடைபெற்றபோதும், அடக்குமுறைகளை எதிர் கொண்டு அத்தகைய சூழ்நிலைமைகளிலும் உறுதி காட்டிய நிகழ்வுகளையும் பார்க்கக்கூடிய நேரத்தில், கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்தையும், உறுதிப்பாட்டினையும் மனதார வாழ்த்திய மக்கள் பிற்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட்டு களை ஆதரித்ததை கண்கூடாக காண முடிந்தது.
தேர்தலில் மகத்தான வெற்றிகள் சில விபரங்கள்
இந்தக் காலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததை காண முடிகிறது. குறிப்பாக மதராஸ், திருவாங்கூர் – கொச்சியில் மாகாணங்களில் இது வெளிப்படை யாகவே தெரிந்தது. ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 41 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தெலுங்கான பகுதியில் கட்சி மகத்தான வெற்றியை ஈட்டியது.
குறிப்பாக ஹைதராபாத்தில் 45 இடங்களும், திருவாங்கூர் – கொச்சியில் 37 இடங்களும், மதராசில் 62 இடங்களும், பெங்காலில் 30 இடங்களும், திரிபுராவில் 19 இடங்களும் கிடைத்தது. சென்னை மாகாணத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தது. ஹைதராபத்தில் காங்கிரஸ் 93 இடங்களை பெற்றது. அங்கும் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது.
கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியில் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கியதன் வெளிப்பாடாக அமைந்தது.
மொத்தத்தில், ஆழமான அரசியல் படிப்பினைகளை பெருமளவில் அள்ளித் தந்திருக்கக்கூடிய இரண்டாவது கட்சி காங்கிரசிஸ் நேர்மறை – எதிர்மறை தன்மைகள் கொண்ட ஒன்றாக இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.
பல்லாயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும், ஆதரவாளர் களும் கட்சியை நேசித்து, பாதுகாத்து வந்த பெருமைமிக்க காலம் அது. அதே சமயம் கட்சிக்குள் ஆழமான கருத்து வேற்றுமை களும், கட்சி செல்ல வேண்டிய திசை வழி குறித்தும் ஆழ்ந்த விவாதங்களும் நடைபெற்றன. போராட்டங்களை நடத்தும் துணிவும் – மன உறுதியும் போதுமானதல்ல; கொள்கை ரீதியான தெளிவும் முன்னேறுவதற்கு இன்றியமையாத அம்சங்களாகும் என்ற படிப்பினையும் நாம் பெற்றோம். போராட்டங்களில் இறங்கும் போதும், அவற்றை நடத்திச் செல்லும் நேரத்திலும் அவற்றில் பங்கேற்க வேண்டிய மக்களின் மனோ நிலைமைகள், தயார் நிலைகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வது அவசியம் என்ற கோட்பாடும் பல சந்திர்ப்பத்தில் புறக்கணிக்கப்படடதும் ஒரு பெரிய தவறாக அமைந்தது. நடைமுறை தந்திரங்களைப் பற்றி தெளிவில்லாத சூழ்நிலைகள் கட்சியை பாதித்தது என்பது உண்மை. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் விரும்புகின்ற புரட்சிகரமான மாற்றத்திற்கு எத்தகைய தந்திரங்களையும் – நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி கட்சிக்குள் மிக ஆழமான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இதுவும் கட்சியை பாதித்தது என்பதுதான் உண்மை.
ஆயுதம் தாங்கிய வெகுஜனப் போராட்டம் மூலமாகத் தான் புரட்சி முன்னேற முடியும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆயினும், ரஷ்யாவில் புரட்சி நடந்த அதே சூழ்நிலைகளில், அதே பாதையைப் பின்பற்றிதான் நாம் முன்னேற முடியும் என்ற கருத்து. கட்சியில் வலுவாக இருந்தது. கிராமப்புறங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி, சீனாவில் நடந்தது போல ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தும் கட்சியில் ஆழமாக முன்வைக்கப்பட்டது. சீனாவில் புரட்சியின் மாபெரும் முன்னேற்றங்களின் பின்னணியில் இந்த எண்ணங்கள் வலுப்பெற்றன. ஆக, இந்தியாவில் புரட்சியின் பாதையானது ரஷ்யாப் பாதையைப் பின்பற்றியா? அல்லது சீனப் பாதையைப் பின்பற்றியா? என்ற விவாதம் கூர்மையாக நடைபெற்றது. இத்தகைய விவாதங்களின் காரணமாக எதார்த்தத்தில் கட்சி தலைமையிலும் அணிகளிலும் ஒற்றுமை பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இதுபோன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளும் நடைமுறைப் பிரச்சனைகளும் தீர்வு காண்பதற்காக கட்சிக்குள் கடுமையான விவாதங்களும் நடைபெற்றது. நமது கட்சிக்குள் நடைபெற்ற விவாதங்களின் விளைவாகவும், நம்முடன் நேச உறவு வைத்திருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற கட்சிகள் ஆகியவற்றின் உதவியுடனும் தத்துவார்ர்தப் – நடைமுறைப் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கட்சி 1950 இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த முடிவுகளை பற்றி விவாதிப்பதற்காகவும், முறைப்படுத்துவதற்காகவும் 1950 டிசம்பரில் கல்கத்தாவில் கட்சியின் விசேஷ மாநாட்டினை ரகசியமாக நடத்தப்பட்டது. விசேஷ மத்தியக்கமிட்டி கூட்டமாக இக்கூட்டம் அமைந்த போதிலும், இக்கூட்டமானது ஒரு மாநாடாகவே கருதப்பட வேண்டும் என்று அங்கு ஏகமனதாக முடிவு செய்தது. இந்த விசேஷ மாநாட்டில் முடிவுகளை 1953 டிசம்பரில் மதுரையில் நடைபெற்ற 3வது கட்சி மாநாடு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது கட்சி வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
– தொடரும்

பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி

அ.குமரேசன்

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

`பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான ஆய்வுக்கு உரியது. இதைத் தனிமனித உளவியல், சமூக உளவியல் ஆகிய இரண்டு கோணங்களிலும் காணலாம். கார்ல் மார்க்ஸ், “உணர்வு சமுதாயத்தை உருவாக்கும் காரணியாக இருப்பதில்லை. சமுதாயம்தான் உணர்வை உருவாக்குகிறது,” என்றார். பண்பாட்டு உளவியல் என்பதும் சமுதாயத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதுதான். சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப பண்பாட்டு நியதிகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

பண்பாடு என்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, வாழ்க்கை விதியாகவும் வலியுறுத்தப்படுகிறது. இப்படியிப்படித்தான் வாழ வேண்டும், இன்னின்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், தனித்துவங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் வரம்புகள் வரையப்படுகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட பகுதி மக்களின் அடையாளத்தோடும் சம்பந்தப்பட்டதாகிறது பண்பாடு. குழந்தை பிறப்பு, திருமண உறவு, பெண் வயதுக்கு வருதல், மரணம், வீடு கட்டுதல், விவசாய நிகழ்வுகள்….என வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அந்த அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. அந்தப் பண்பாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது தனி மனிதரின் பெருமைக்குரிய பாங்காக அந்தந்த சமூகங்களால் கற்பிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் மனித மனம் இயற்கையான சுதந்திரத்தை, வேலிகளற்ற உறவை, பாகுபாடுகளற்ற நேயத்தை விரும்புகிறது. அதற்குத் தடையாக இருக்கிற பழைய பண்பாட்டுக் கட்டுகளை அறுத்து முன்னேறத் துடிக்கிறது. சமத்துவப் பண்பாடு என்கிற புதிய பண்பாட்டை நிறுவ முயல்கிறது. சமூகப் போராட்டங்களின் சாராம்சம் இது.

கட்சியின் பங்கு

இதில் கட்சி என்பதன் பங்கு என்ன?

“தத்துவம் இல்லாத அமைப்பு மலட்டுத்தனமானது; அமைப்பு இல்லாத தத்துவம் குருட்டுத்தனமானது,” என்கிறது மார்க்சியம். பழைய பண்பாட்டு அமைப்புகளைப் பாதுகாப்பது, புதிய பண்பாட்டினை மலரச் செய்வதற்காக பழைய அமைப்புகளில் உடைப்பு ஏற்படுத்துவது ஆகிய இந்த இரண்டு செயல்களிலுமே கட்சி அமைப்புகள் பங்கு வகிக்கின்றன.

கட்சி என்கிற அரசியல் வடிவம் எப்போது உருவெடுத்திருக்கும்? மன்னராட்சிக் காலங்களில் அரண்மனை சார்ந்த போட்டிக் குழுக்கள் இருந்திருக்கக்கூடும். அரண்மனைக்கு வெளியேயும்கூட அடிமைத்தன எதிர்ப்புடன், விடுதலை உணர்வுடன் பல்வேறு குழுக்கள் செயல்பட்டிருக்கக் கூடும். இன்று நாம் பார்க்கிற கட்சி அமைப்புகளுக்கான திட்டவட்டமான வடிவம் நாடாளுமன்றம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவை நிலைபெற்றதன் பின்னரே உருவாகின. மக்கள் முன் தமது கொள்கை களையும் திட்டங்களையும் எடுத்துரைப்பது, அவர்களது ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்வது, எதிர்க்கட்சியாக அமர்ந்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதெல்லாம் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத் துடன் இணைந்தே  நடைமுறைக்கு வந்தன.

முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு அணுகு முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும்கூட அடிப்படையில் முதலாளித் துவத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. முதலாளித் துவம் நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானது – புரட்சிகரமானது என்பதால் முதலாளித்துவக் கட்சிகளிடமும் அந்த அம்சங்கள் பொதுவாக இருக்கும். ஆயினும், அவர்களைப் பொறுத்தவரையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்” என்ற கோணத்திலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக இருக்கி றார்கள்.

இதற்கு மிகச் சரியான சமீபத்திய எடுத்துக்காட்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல். ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜான் கெர்ரி இருவருக்கும் – அதாவது அவர்களது குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுக்கும் – பெரிய கொள்கை மாறுபாடுகள் கிடையாது.  “என்னிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள்” என்ற முறையிலேயே அவர்களுடைய பிரச்சாரங் களும் விவாதங்களும் இருந்தன. இராக், இஸ்ரேல் விவகாரங்கள் முதல் உலகளாவிய பொருளாதார ஆதிக்கம் வரையில் அவர்களிடையே முக்கிய மாறுபாடு எதுவும் கிடையாது.

பண்பாட்டு ஆதிக்கம்

இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே கட்சிகள் உருவாகின என்றாலும் காங்கிரஸ் கட்சிதான் பெரிய இயக்கமாக இருந்தது. நீதிக்கட்சி போன்ற வட்டாரக் கட்சிகள் உருவாகி, பின்னர் இன்றைய மாநிலக் கட்சிகள் பலவும் களத்திற்கு வந்தன. முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒத்த கருத்துடையவர்கள் என்றாலும் மாநில மக்களின் உரிமைகள், தனித்துவ அடையாளங்கள், மொழிப்பாதுகாப்பு, மாநில வளர்ச்சிகள் போன்ற அக்கறைகளோடு புறப்பட்ட கட்சிகள் இவை. காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், சமரசங்கள் மாநிலங்களின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாத பலவீனங்கள் போன்ற காரணங்களால் இந்த மாநிலக் கட்சிகள் மக்கள் ஆதரவைப் பெற்றன. அதே காரணங்களால் மக்களின் அதிருப்தியையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் பயன்படுத்திக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியும் தலைதூக்கியது.

இன்று,  மாநிலக் கட்சிகளை கூட்டுச் சேர்த்துக்கொள்ளாமல் எந்தவொரு அகில இந்தியக் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது – இது ஒரு முக்கிமான வளர்ச்சிப்போக்கு. பாஜக-வைப் பொறுத்தவரையில்  அது ஆன்மீகத்தை அல்லது மத உணர்வை தனது அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்கிற கட்சி மட்டுமல்ல, அடிப்படை யிலேயே நாட்டின் ஒரு ஒற்றை மத ஆதிக்கத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்ட, அதன் மூலம் ஒரு ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முயல்கிற கட்சியாகும். முதலாளித்துவ வளர்ச்சியின் நவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டே இப்படியொரு பிற்போக்குத்தனமான கட்சி வளர்ந்தது எப்படி? இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உள்ளடக்கத் தோடு தொடர்புகொண்ட இந்தக் கேள்வியும் விரிவாக ஆராயப்பட வேண்டியது.

முதலாளித்துவ நாடாளுமன்றம் பற்றிய மாயைகள் இன்றி, அதே நேரத்தில் இன்றைய எதார்த்தம் அதுதான் என்ற புரிதலோடு அதைப் பயன்படுத்துகிற கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகியவையும் இதர சில இடதுசாரிக் கட்சிகளுமாகும்.

மூன்று சக்திகள்
பண்பாட்டுக் களத்தில் மூன்றுவித சக்திகள் போராடுகின்றன. ஒன்று, மதத்தின் பெயரால் ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தைத் திணிக்க முயல்கிற கூட்டம். இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, `இந்து’ என்ற உணர்வுதான் இந்திய தேசிய உணர்வு என்று மூளைச்சலவை செய்கிற கூட்டம் இது. ஒருபக்கம் பல்வேறு சாதிகளாகவும், இனங்களாகவும் இருக்கிற எல்லோருமே இந்துக்கள்தான் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நியதிகளே ஒட்டுமொத்த சமுதாயத்தின் நியதிகளாக நிறுவ முயல்கிறது இக்கூட்டம். மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவைதான் என்றும், “அவரவர் அவரவருக்கு இடப்பட்ட பணிகளை செய்துகொண்டிருந்தால் சமூகத்தில் பிரச்சனையே வராது,” என்னும் நவீன வர்ணாஸ்ரமத்தை – நவீன பார்ப்பனீயத்தை – நிறுவ முயலும் பண்பாட்டுச் சர்வாதிகார ஆதிக்கவாதிகள் இவர்கள். இந்த ஆர்எஸ்எஸ் – சங்பரிவாரக் கூட்டத்தின் அரசியல் முகம் பாரதீய ஜனதா கட்சி. சிவசேனா போன்ற கொசுறுகளும் உண்டு.

இன்றைய அரசியல் நிலைமைகளுக்கான பல்வேறு சாகசங்களையும் சமரச சாமர்த்தியங்களையும் செய்துகொண்டாலும்கூட, அடிப்படையில் “நாத்திகம் என்பது கடவுளை மறுப்பதுகூட அல்ல, நியதிகளை மறுப் பதுதான்,” என்ற பார்வையோடு வலை விரிக்கிற நவீன மனு தர்மவாதிகள் இவர்கள். பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், புதுவை துணை நிலை ஆளுநராக இருந்தவருமான மல்கானி ஒரு பேட்டியில், “இந்த நாட்டின் விவசாயிகள் எதற்காக கல்வி கற்க வேண்டும்? அவர்கள் படித்து யாருடன் தொடர்பு கொள்ளப்போகிறார்கள்,” என்று கேட்டது ஒன்றும் வாய்தவறி அல்ல. அதேபோல் பாஜகவின் மகளிர் பிரிவு, “மேற்கத்திய பாணி பெண் விடுதலையில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்திய பண்பாடு சார்ந்த பெண் கல்வி, பெண்ணின் உயர்வு, சமத்துவம், பெருமை என்பவற்றை நிலை நாட்டுவோம்,” என்று பிரகடனம் செய்திருக்கிது. இதன் அர்த்தம் மனுதர்மம் போதிக்கிற “அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு” ஆகியவையே இந்தியப் பெண்ணின் பெருமை என்பதுதான் என விளக்கவேண்டியதில்லை.

பொருளாதார உளவியல்
இந்த பாரதீய ஜனதா கட்சி இவ்வாறு இந்துத்துவம் பேசுவதோடு மட்டுமல்லமல் அடிப்படையான பொருளாதார களத்தில் காங்கிரசைவிட பலமடங்கு வேகத்தில் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலக மயத்திற்கு விசுவாசமாக இருந்தது, இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளும், அந்நியப் பன்னாட்டுச் சந்தை தாதாக்களும் பாஜக-வை ஆதரிப்பது தற்செயலாக அல்ல. இந்திய மக்களின் – உழைப்பாளிகளின் எதிர்ப்பு உணர்வுகள் பண்பாட்டுப் பெருமையின் பெயரால் முனை மழுங்கச் செய்யப்படுவது இந்த ஆளும் வர்க்கத் தலைமைக்கு வாய்ப்பான ஒன்று. கோக் – பெப்சி குடியல் முதல், ஷாம்பு குளியல் வரை நாகரீகங்களாகத் திணிக்கப்பட்டதில் இந்த உலகச் சந்தை ஆக்கிரமிப்பாளர்களின் லாப நலன்களும், அதற்கு உடந்தையாக இருந்த முந்தைய பாஜக ஆட்சியின் நலன்களும் கலந்திருந்தன.

சுதந்திர இந்தியாவில் நீண்டகாலம் தனிக்கட்சியாகவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பண்பாட்டுப் பிரச்சனைகளில் உள்ள தெளிவின்மை, உறுதியின்மை, சமரசக் கொள்கை ஆகியவையும் பாஜக-வின் வளர்ச்சிக்கு சாதகமாக  அமைந்தன. எடுத்துக்காட்டாக – தொலைக்காட்சியிலும் வானொலியிலும் இந்தியப் பண்பாடு என்பதாக பரதநாட்டியத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் பார்ப்பனீய கோயில் சார்ந்த செயல்பாடுகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்துவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது. அரசு விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுதல், நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் ஒலிபெருக்கிகளில் நாதசுரம், கிளாரினெட், வீணை போன்ற கருவிகளின் இசையில் கர்நாடக சங்கீதம் மட்டுமே ஒலித்தல்…இவை முந்தைய தனி காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தன. இன்றைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் நடக்கின்றன. இங்கு வாழும் இதர பிரிவு மக்களின் வழிபாடுகள், கலைகள் முதலியவற்றைப் புறந்தள்ளுகிற அல்லது இரண்டாம் நிலைக்குத்தள்ளுகிற இந்தப் போக்கும் மனுதர்மவாதிகளுக்கு வாய்ப்பாகி விட்டது. பாஜக ஆட்சியின்போது இவை இன்னும் அதிகார பலத்தோடு வலிந்து திணிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின் ஏகபோக முதலாளித்துவ ஆதரவு – நிலப் பிரபுத்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் சாமான்ய மக்களை வஞ்சித்து, இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை பாஜக தனக்கு சாதகமாக அறுவடை செய்துகொண்டதும் நடந்தது.

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு ரயில்வேத்துறை விழாவில்,  அமைச்சர் வந்து சேரும் வரையில் ஒலிபெருக்கியில் கிளாரினெட் இசையில் இந்து மத பக்திப்பாடல்கள், சாஸ்திரீய இசையாக ஒலித்துக்கொண்டிருந்தன. சென்னை சாஸ்திரிபவன் வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கால் கடுக்க காத்துக்கொண்டிருப்பவர்களின் சோர்வு நீக்குவதற்காக கருவியிசை ஒலிபரப்பப்படுகிறது – அத்தனையும் கர்நாடக  இசை மட்டுமே. இதன் பின்னணியில் மற்ற மதங்களின் பண்பாடுகள் மட்டுமல்ல, இந்துக்களிலேயே பிராமணர் அல்லாத மற்ற பிரிவினரின் பண்பாட்டு அடையாளங்களும் மூர்க்கத்தனமாக புறக்கணிக்கப்படுகின்றன. இந்தப் பண்பாட்டுத் தாக்கு தலை, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை காங்கிரஸ் கட்சி புரிந்துகொண்டிருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மாநிலக் கட்சிகள்
அடுத்து, பண்பாட்டுக் களத்தில் போராடுகிற இன்னொரு சக்தி, ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிராக மற்ற சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க நிற்பதாகும். தமிழகத்தில் திராவிட இயக்கத்திலிருந்து உருவான திராவிடக் கட்சிகள் மொழிப்பாதுகாப்பு, தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு போன்ற முழக்கங்களோடுதான் முன்னுக்கு வந்தன. ஆனால், பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் அல்லது தமிழர் பெருமை என்ற பெயரில் இந்தக் கட்சிகளும் கூட  பழமைவாதம் பேசியது ஒரு சோகம். கடந்தகால மன்னராட்சி அடை யாளங்களை மீட்க இக்கட்சிகள் முயன்றயான. ஒரு பக்கம் பார்ப்பனீயத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குரல், இன்னொரு பக்கம் அதை ஆரோக்கியமான முற்போக்குத் திசையில் கொண்டு செல்வதற்கு மாறாக குறுக்கிவிடுகிற போக்கு. மலர்க்கிரீடம் சூடுதல், `”முடிசூடா மன்னன்”, “தளபதி” என்றெல்லாம் பட்டங்களை வழங்குதல் போன்றவற்றில்கூட அந்த மன்னராட்சிக்கால மயக்கங்கள் உண்டு.

மாநில முதலாளித்துவக் கட்சிகளின் இப்படிப்பட்ட மயக்கங்களும்கூட, தெளிவான இந்துத்துவம் பேசுகிற கும்பலுக்கு வசதியாகிப்போனது. எந்த பிராமணீயத்திற்கு எதிரான போர்க்குரலாக திராவிடக் கட்சிகள் தலை யெடுத்தனவோ, அந்த பிராமணீயத்திற்காகவே நிற்கிற பாஜக்ர-வோடு இவர்கள் அரசியல் உறவுகொள்ள தயங்கவில்லை. பெரியாரின் தாடியில் தீ வைக்கிற இந்தச் செயலின் பின்னணியில் இவர்களது ஆட்சி அதிகார தாகம், பதவி மோகம் ஆகிய அரசியல் கணக்குகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடை யாளங்களுக்கான போராட்டப் பாதையிலிருந்து விலகிய குழப்பங்களும் உண்டு. பொருளாதார கொள்கை சார்ந்த மயக்கங்களும் உண்டு. இன்றைக்கு அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது – இந்தத் திருத்தம் நீடிக்குமா என்பது வெறும் ஆய்வாளர்களுடைய சந்தேக புத்திக் கேள்வி. நீடிக்க வேண்டும் என்பது சமுதாய அக்கறையுடன் செயல்படுகிறவர்களின் விருப்பம்.
தலித் மக்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவென்று புறப்பட்ட கட்சிகள், வாக்கு வங்கிகளை ஏற்படுத்திக்கொண்டு பெரிய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்கிற விபத்தும் நடந்தது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகளாக உருவான கட்சிகளும் பேரம் பேசுகின்றன. சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி பேரம் நடத்தத் துவங்கின.

இப்படிப்பட்ட சமரசங்கள், பின்னடைவுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும் – ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலும்,  மற்றைய சமூகங்களின் பண்பாட்டு அடையாளக் குரல்களை இந்த அளவிற்கேனும் ஒலிக்கச் செய்ததிலும் இவர்களது பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடுவதற் கில்லை. களத்தில் இக்கட்சிகள் இறங்காமல் விட்டிருந்தால், மனுதர்ம வாதிகளின் ஆதிக்கத் திட்டம் எளிதில்  நிறைவேறியிருக்கும் என்பதை மறைப்பதற்கில்லை.
பண்பாட்டு அடையாளப் போராட்டம் என்ற பெயரில், அவரவர் அடையாளங்களோடு நிற்க வேண்டும், கலப்பு என்பதே கூடாது என்று வாதிடுகிறவர்களும் இருக்கிறார்கள். எதுவும் மாறாமலே இருந்திருந்தால், கலப்பு என்பது நடக்காமலே போயிருந்தால் இன்றைய வளர்ச்சிகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். பரிணாம வளர்ச்சியே தேய்ந்துபோயிருக்கும். ஆனால் அந்தக் கலப்பு சந்தை வேட்டைக்காகவும், சிலரது ஆதிக்க வேட்கைக்காகவும் சமுதாயத்தின் தலையில் வலிந்து கட்டப்படுவதாக இருக்கக்கூடாது. இயற்கையான, தன்னியல்பான, மாற்றத்தின் நன்மை களையும் தீமைகளையும் ஆராய்ந்து மனமுவந்து ஏற்றுக்கொண்டதாக அந்தக் கலப்பு நடைபெற வேண்டும்-பேண்ட், சட்டை, சுடிதார் முதலிய உடைகள் இயல்பாக ஏற்கப்பட்டதுபோல. ஆனால், இத்தகைய அறிவியல் பார்வையோடு இந்தப் பிரச்சனகளை எத்தனை கட்சிகள் அணுகுகின்றன? கூட்டு விவாதத்தின் அடிப்படையில் கொள்கை நிலைபாடுகளோ கருத்துக்களோ மேற்கொள்ளப்படாமல், கட்சியின் ஆகப்பெருந் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுவே கட்சியின் கருத்து என்ற `பண்பாடு’, அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தொண்டர்களும் கேள்வியின்றி அதை ஏற்றுக்கொள்கிற `உளவியல்’ ஆகியவை தனி விவகாரங்கள்!

கம்யூனிஸ்ட் பண்பாடு
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டுத் தலைமை, கூட்டு விவாதம், கூட்டு முடிவு  என்ற ஜனநாயகத்துடன் இயங்குகின்றன. தலைவர் சொல்வதே வேதவாக்கு என்ற பண்பாடு, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற உளவியல் இரண்டுமே மார்க்சிய கட்சிகளிடம் கிடையாது. சொல்லப்போனால் உள்ளூர்க் கிளைகள் முதல் தலைமைக் குழுக்கள் வரை மாநாடுகளின் மூலம் கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் பங்கேற்கிற உயர்ந்த பண்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது 18வது அகில இந்திய மாநாட்டை டில்லியில் 2005ம் ஆண்டு ஏப்ரலில் நடத்தவுள்ளது.  அதன் அரசியல் தீர்மானத்தை இறுதிப்படுத்துவதில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் பங்கேற்கிறார்-அதற்கான அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இவ்வாறு, கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலேயே பங்களிப்புச் செய்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் தனிமனித உளவியல் எத்தகையதாக இருக்கும் என்று விளக்கவேண்டுமா என்ன?

பண்பாட்டுக் களத்தில் நடக்கிற ஆதிக்கங்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுகின்றன. அதே நேரத்தில் அந்தப் போராட்டம் மக்களின் எந்தப் பிரிவினரையும் தனிமைப்படுத்துவதாகிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இயங்குகின்றன. பண்பாட்டுப் போராட்டத்தின் அடித்தளம் வர்க்கப் போராட்டம்தான் என்ற புரிதலோடு – வேறு சொற்களில் சொல்வ தானால், வர்க்கப் போராட்டத்திலிருந்து வர்ணப் போராட்டத்தை அல்லது பண்பாட்டுப் போராட்டத்தை தனி அஜெண்டாவாகப் பிரிப்பதற்கில்லை என்ற புரிதலோடு – இயங்குகின்றன. இதன் அர்த்தம், வர்க்கப் போராட்டம் என்றால் வெறும் பொருளாதாரப் போராட்டமே என்பதல்ல; அதற்கு மட்டுமே முன்னுரிமை என்பதல்ல; பொருளாதார சமத்துவம் வந்துவிட்டால் “ஆட்டமேட்டிக்காக” மற்ற மாற்றங்களும் வந்துவிடும் என்று பண்பாட்டுப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதல்ல. அப்படி கம்யூ னிஸ்ட்டுகள் அல்லாதவர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே கூட புரிந்துகொண்டால் அது தவறு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், இதில் தெளிவான நிலைபாடுகளைக், கடந்தகால  அனுபவங்களின் பாடங்களி லிருந்து கற்றுக்கொண்டு உருவாக்கிக்கொள்கிறது. விமர்சனம் – சுய விமர்சனம் என்ற அடிப்படையில் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருக்கிறது. 1992 டிசம்பர் 6ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடெங்கும் கலவரங்கள் பரவியதைத் தொடர்ந்து, தில்லியில் நடந்த ஒரு நல்லிணக்கக் கருத்தரங்கில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், “இப்படிப்பட்ட நிலைமை உருவானதில் இடதுசாரிகளாகிய எங்களுக்கும் பங்கு உண்டு. பொருளாதாரப் பிரச்சனை களில் கவனம் செலுத்திய அளவுக்கு நாங்கள் சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்,” என்று வெளிப்படையாகக் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி கற்றுக்கொள்வதற்கும், சரியான நிலைபாடுகளை உருவாக்கிக்கொள்வ தற்கும் தனது கதவுகளை ஒருபோதும் மூடிக்கொண்டதில்லை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

இறை நம்பிக்கை, மதப்பற்று, போலியான தேசியவாதம் – ஆகியவற்றின் அடிப்படையில் சங் பரிவாரத்தினர் துவங்கிய பண்பாட்டு மேலாதிக்கத்தை ஓரளவு தடுக்க முடிந்திருக்கிறது என்றால் அதில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. சங் பரிவாரம் தனது முதல் எதிரியாக கம்யூனிஸ்ட்டுகளையே கருதுகின்றது என்பது அதன் வெளிப்பாடுதான். அதே நேரத்தில், பண்பாட்டுத் தளத்தில் கம்யூனிஸ்ட்டு களின் தலையீடும் ஈடுபாடும் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

இன்றைக்கு, காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய மதவெறித் திட்டத்தைத் தொடங்கவும், கலவர விதைகளை விதைக்கவும் சங்பரிவாரம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. உளவியல் ரீதியாக மக்களின் நம்பிக்கைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் அடைய முயல்கிறது பாஜக. ஆயினும், பொதுவாக அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடவில்லை. இப்படிப்பட்ட மன நிலை வளர்ந்திருப்பதில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு தலையாயது.

அடித்தளம்
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இங்கே மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள், சாதியப்பாகுபாடுகள், பெண்ணடிமைத்தனம், மரபு என்ற பெயரில் குடும்பங்களில் நிலவும் ஜனநாயகமின்மை முதலியவை நீடிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் இங்கே முதலாளித்துவம் கட்டப்பட்டது, நிலப்பிரபுத்துவத்தை தகர்த்த இடிபாட்டின் மீது அல்ல. முதலாளித்துவம் தனது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை தகர்க்கிற கடமையை நிறைவேற்றவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கூடிக்குலவுகிறது. அந்தக் கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் விழுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்தைப்பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில் இவ்வாறு கூறுகிறது: “… (சுதந்திர இந்தியாவில்) புதிய அரசுக்கு தலைமையேற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமையைப் பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான் இந்திய சமூகத்திற்கு புத்துயிர்  அளிக்கும்  பாதை அமைகிறது.

புல்லுருவித்தனமான நிலப் பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்நிய ஆதிக்கப்பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால் முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழி ஏற்பட்டிருக்கும். ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் தொடர் விளைவுகளை எண்ணி அச்சமுற்ற பெரு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக்கொண்டதோடு, ஏகாதிபத்தியத்தோடும் சமரசம் செய்துகொண்டது……முதலாளித்துவப் பாதையின் தன்மை ஆளும் வர்க்கங்களின் இந்தத் தன்மையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் பட்டது.”

கட்சித் திட்டம் இதுபற்றி மேலும் கூறுவதாவது: “…நாடு முழுவதும் சாதியப் பாகுபடும், சாதிய ஒடுக்குமுறையும், மிக மோசமான பாலியல் ஒடுக்குமுறைகளும், ஏழைகள், கந்துவட்டிக்காரர்கள் மற்றும் வர்த்தக மூலதனக்காரர்களாக சுரண்டப்படுவதும் தடையின்றி நடக்கின்றன. இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது பழைய வடிவங்களை உறுதியான முறையில் ஒழித்து உருவாக்கப்படவில்லை. முதலாளித்துவத் திற்கு முந்தைய உற்பத்திமுறை மற்றும் சமூக அமைப்பு எனும் சீரழிந்த வடிவத்தின் மீது பொருத்தப்பட்டது. `நவீனத்தின்’ வளர்ச்சி, காலத்திற்கு ஒவ்வாதவற்றைத் தவிர்த்துவிடவில்லை……”
“……பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சக்திவாய்ந்த சர்வதேச தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி நமது நாட்டின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையில் நேரடியாகத் தலையிட ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கிறது….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.
“…மதச்சார்பின்மைக் கோட்பாடும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ளது என்று அரசின் பெருமுதலாளி வர்க்கத் தலைமை பறைசாற்றிக்கொள்கிறது. எனினும் நடைமுறையில் மதச்சார் பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே முற்றாகத் திரித்துக் கூறமுயல்கிறது. அரசியலையும் மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும்  அரசியல் வாழ்க்கையில் அனைத்து மத நம்பிக்கைகளும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்பவைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது…,” என்றும்  கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. காலையில் அகில இந்திய வானொலியைத் திருப்பினால், ஒரு இந்துமத பக்திப்பாட்டு, ஒரு முஸ்லிம் பாட்டு, ஒரு கிறிஸ்துவப்பாட்டு என்பதாக ஒலிபரப்பப்படுகிற ஏற்பாட்டில் இதன் விளக்கத்தைக் காணலாம்.

“…..சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதிலும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பு தோல்விகண்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்கள் தீண்டாமை எனும் பாரபட்சத்தின் இதர வடிவங்களுக்கு உள்ளாக்கப்படு கின்றனர். இதற்கு எதிராக தலித் மக்களிடம் வளர்ந்துவரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் வன்செயல் மூலம் எதிர் கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. சாதிகளாகப் பிரிக்கப்பட்ட சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள்…………. அதே நேரத்தில் வாக்கு வங்கிகளைத் திரட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே சாதிய உணர்வுகள் தூண்டப்பட்டு சாதியப் பகைமைகள் ஏற்படுத்தப் படுவதன் மூலம் பொதுவான ஜனநாயக இயக்கங்களிலிருந்து அடித்தட்டு மக்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிற….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

“…சுதந்திரப் போராட்டத்தில் சமமாக பங்கேற்ற பெண்கள், இந்தியா விடுதலை பெற்றவுடன் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த நிலப்பிரவுத்துவ தளைகளிலிருந்தும் பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை கிடைக்கு மென்று நம்பினார்கள். அவர்கள் முன்னேறுவது என்பது ஒருபுறமிருக்க,  ஐம்பதாண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆணாதிக்கம் என்பதையே அனைத்துத் துறைகளிலும் நிரந்தரமாக்கிவிட்டது…,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

இன்றும் தொடர்கிற இரட்டை கிளாஸ் அக்கிரமங்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வர்த்தக விளம்பர வக்கிரங்கள் முதலியவற்றிற்கு அடித்தளமாக உள்ள இந்திய சமூகத்தின் – அரசின் – வர்க்கத்தன்மையை மார்க்சிஸ்ட் கட்சி கோடிட்டுக் காட்டுகிறது. ஆம், மண்டிக்கிடக்கும் புதரை அகற்றாமலே வீட்டைக்கட்டினால் வீட்டிற்குள் பூச்சிகளும் தேள்களும் பாம்புகளும் வரத்தான் செய்யும். நிலப்பிரபுத்துவத்தை தகர்க்காமல் கட்டப்பட்டிருக்கிற முதலாளித்துவ வீட்டிற்குள் சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் முதலிய நச்சு ஜந்துக்கள் நெளிந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதை மாற்றுவதற்கான போராட்ட வியூகத்தையும், அதிலே அணி சேர்க்கப்பட வேண்டிய மக்கள் சக்திகளையும் பற்றி கட்சித் திட்டம் மேலும் எடுத்துரைக்கிறது. அந்த இலக்குடன்தான் கட்சி தனது தொலைநோக்குத் திட்டங்களையும் உடனடி அணுகுமுறைகளையும் மக்கள் முன் வெளிப் படையாக வைத்து இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.  சமூக-வர்க்க-பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பண்பாட்டு உளவியல் தளத்திலும் முற்போக்கான ஆரோக்கியமான மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது. அந்த மாற்றத்திற் கான புரட்சிக்கு “மக்கள் ஜனநாயகம்” எனப் பெயரிட்டு அதை நனவாக்குதற் கான இயக்க முயற்சிகளிலும் இடையறாமல் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

தனி மனித உளவியல் என்ற நோக்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி அதன் உறுப்பினர்களை புரட்சியாளர்களாக, மனித நேயர்களாக, அரசியல் அறிஞர்களாக, தத்துவ ஞானிகளாக வார்க்கிறது. கூட்டு விவாதம், பெரும்பான்மையினரின் கருத்து முடிவாக்கப்படுதல், அதனுடன் முரண்பட்ட சிறுபான்மையினரும் அந்த முடிவை முழு விசுவாசத்துடன் நிறைவேற்றுவது என்ற கட்சிக் கட்டுப்பாட்டு ஒவ்வொரு உறுப்பினரையும் வளர்த்தெடுக்கிறது. ஊழலற்றவர்களாக, சுயநலமற்றவர்களாக, மக்கள் சேவைக்காகத்தான் அரசியல் என்ற உணர்வுபெற்றவர்களாக அவர்கள் செயல்படுவதை கட்சி வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது. தலைவர் துதி, தனிமனித வழிபாடு, அடிமைத்தனம் போன்றவற்றிற்கு மார்க்சிய இயக்கத்தில் இடமில்லை. மனிதரை மனிதர் நேசிக்கிற, மதிக்கிற, பண்பாட்டு வேர்களையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்கிற, இயல்பான பண்பாட்டுக் கலப்பை வரவேற்கிற உயர்ந்த பண்பாட்டு உளவியல் இத்தகைய இயக்கத்தின் மூலமே தழைத்திருக்கும்.

ஒரு வெளிப்பாடு
மக்கள் சாதி, மத  பிடிப்பு உள்ளவர்களாக இருந்தாலும்கூட, அரசியல் ரீதி யாகவே – கட்சி அடிப்படையிலேயே – அவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இது பளிச்செனத் தெரியவருகிறது. மக்கள் இவ்வாறு கட்சி கட்சியாகத் திரண்டிருப்பதுதான் தேர்தல் கால கூட்டணிகளில் பலனளிக்கிறது. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு கடந்த 14வது மக்களவைத் தேர்தல். குறிப்பாகத் தமிழகத்தில் என்ன நடந்தது? போட்டி பாஜக போல மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்குகளைக் குவித்து விடத் திட்டமிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிட தடை, கோவில்களில் அன்னதானம், வேத உபந்நியாசம்,கோவில்களுக்கு திருவிளக்கு பூசை ஏற்பாடு, கோவில் யானைகளுக்கு இன்பச் சுற்றுலா… என்று அவர் அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்ததில் பெரும்பான்மை இந்து மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற அரசியல் கணக்கீடுகளும் இருந்தன. ஆனால் தேர்தலில் மக்கள் அவர்கள் ஆதரிக்கிற அரசியல் கட்சிகளஇன் அணிச் சேர்க்கை அடிப்படையிலேயே மின்னணு வாக்குப் பெட்டியின் பொத்தான்களை அழுத்தினார்கள். லயோலா கல்லூரி, பண்பாடு-மக்கள் தொடர்பகம் அந்தத் தேர்தலுக்கு முன் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தையும், ஆடு-கோழி தடை ஆணையையும் விளக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று காஞ்சி சங்கராச்சாரி மீது கை வைக்கிற அளவுக்கு தமிழக அரசுக்குத் துணிவு வந்திருக்கிறது. திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தமிழக மண்ணில் வேரூன்றச் செய்துள்ள மதச்சார்பின்மை, சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றால் உருவான மக்களின் மனநிலையிலிருந்தே அந்தத் துணிவு பிறந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அகில இந்திய அளவிலும் கூட பாஜக-வின் மதவாதத் திட்டங்களுக்கு இரையாகாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டு அடிப்படை யிலேயே அவரவர் சார்ந்துள்ள கட்சிகளின் வேண்டுகோள்படியே, வாக்குச் செலுத்தினார்கள். இது ஒரு முக்கியமான பண்பாட்டு உளவியல் வெளிப்பாடு. இதைச் சொல்வதால், மக்கள் முற்றிலுமாக மத, சாதி உணர்வுகளிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றாகிவிடாது. கணிசமான மக்கள் அந்த உணர்வு களின் அடிப்படையில்தான்  பாஜக வகையறாக்களை ஆதரிக்கிறார்கள். இதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிற செயல்திட்டத்துடன்தான் பாஜக தனது காய்களை நகர்த்துகிறது.

செங்கொடிச் செயல்பாடு
தமிழகத்தின் தஞ்சை மண்ணில் அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலைமை என்ன? அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகளான தலித் மக்கள் தோளில் துண்டு அணிய முடியாது, காலில் செருப்பணிந்து மேட்டுத் தெருக்களில் நடக்க முடியாது, ஆண்டைகளை சாமி சாமியென்றே விளிக்க வேண்டும், எதிர்ப்புக் குரல் எழுப்புவோருக்கு சாணிப்பால்-சாட்டையடி. இன்று இந்த நிலைமை பெரிதும் மாறிவிட்டிருக்கிறது. மேட்டுத் தெருக்களில் ஒரு தலித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்ததில் செங்கொடி இயக்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. இது வெறும் பிரச்சாரத்தால் மட்டும் வந்ததல்ல, இயக்கத்தின் நீண்ட நெடும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் விளைந்த விளைச்சல் இது.

இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறுகிற மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் முக்கிய அரசியல் சக்தியாக உள்ள கேரளத்திலும் சாதியம், மதவாதம் முதலிய பிற்போக்குத்தனங்கள் பெருமளவுக்குப் பின்தங்கிவிட்டிருக்கின்றன என்பதும் காணத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த (நில விநியோக) நடவடிக்கைகள். இந்திய அரசமைப்பு சாசன சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டிய சூழலில் அந்த மாநிலங்களின் இடதுசாரி அரசுகள் இதைச் செய்ய முடிந்திருப்பது சாதாரணமானதல்ல.
பெண் விடுதலை, குடும்ப ஜனநாயகம், அனைவருக்கும் கல்வி, அனைத்து மொழிகளின் சமத்துவம், வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு எனப் பல்வேறு அம்சங்களில் செங்கொடி இயக்கம் உணர்வுப்பூர்வ மான அக்கறையோடு முழக்கங்களை எழுப்பி முயற்சிகளை மேற்கொள்கிறது. பண்பாட்டு உளவியல் நோக்கில் இவை முக்கியமான செயல்பாடுகளாகும். மார்க்சிஸ்ட் கட்சி நெறிப்படுத்தும் இயக்கம் என்ற ஒன்றை மேற்கொண்டு, முன்னணி ஊழியர்கள் தமது இல்லங்களில் காதணி விழா, பூப்புனிதவிழா போன்றவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அழுத்தமான வேண்டுகோளை விடுத்தது. கம்யூனிஸ்ட் குடும்பங்களின் சாதி, மத வேலிகளைத் தாண்டிய காதல் திருமணங்கள் மனமுவந்து வரவேற்கப்படுகிற இயல்பான ஒரு நிகழ்வு.

மொத்தத்தில்
பண்பாட்டு உளவியல் வளர்ச்சியில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் நிகழ்வுகள் பங்காற்றுகின்றன. ஆயினும், அரசியல் களத்தில் இயங்குகிற கட்சிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானதாகும். இதில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம், பின்னடைவு இரண்டிலுமே அரசியல் கட்சிகளுக்குப் பங்குண்டு. பிரச்சனைகளின்போது மக்கள் புலம்பிக் கொண்டிராமல் வீதிக்கு வந்து போராடுவது, அதிகாரிகளைத்  தட்டிக்கேட்பது, தங்களது சொந்த நம்பிக்கைகளையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பது முதலிய ஆரோக்கிய மான வளர்ச்சிப் போக்குகள் கட்சிகள் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. அதேபோல் முழுமையான ஜனநாயகம் மலர்வதில், அரசியல் உணர்வு வளர்வதில், பல்வேறு பிற்போக்குத்தனங்கள் மறைவதில் நீடிக்கிற தேக்க நிலைமையிலும் கட்சிகளுக்குப் பொறுப்பு உண்டு. எந்தக் கட்சிகள் எந்த அம்சத்தில் கூடுதல் பங்களிப்பைச்  செய்கின்றன என்பதையும் எந்தக் கட்சிகள் பண்பாட்டு உளவியலின் முற்போக்கான வளர்ச்சிக்காக நிற்கின்றன என்பதையும் உங்கள் சொந்த ஆய்வுக்கும் முடிவுக்கும் விடுகிறேன்.

-(சென்னை லயோலா கல்லூரி
– பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய
சாதி-மதம்-சினிமா-அரசியல்” கருத்தரங்கில்
நிகழ்த்திய உரை)