1946 பிப்ரவரி 18, கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்டுகளும்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் தொடராக வெளியாகி தமிழில் ‘இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறாண்டுப் பயணம்’ என்ற நூலில் இருந்து

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு எதிரான விசாரணையின்போது உச்சத்தைத் தொட்டு வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு 1945-46 குளிர்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் வன்முறை நிரம்பிய மோதலாக உருவெடுத்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணியாற்றி வந்த இந்திய படைவீரர்களும் இளம் அதிகாரிகளும் இத்தகைய வெகுஜன கிளர்ச்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டனர். இவர்களில் ஒரு பிரிவினர் தனித்திறன் பெற்ற நிபுணர்களாகவும் இருந்தனர். இவ்வகையில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணிபுரிந்து வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்களாக இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் பெரும் போரின்போது நேசநாட்டு ராணுவத்தினருடன், குறிப்பாக சோவியத் யூனியனின் செஞ்சேனையுடன், இணைந்து இவர்கள் போரிட்டனர். இத்தகைய நேரடித் தொடர்பின் விளைவாக பாசிஸ எதிர்ப்பு, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கருத்துகளும் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

கப்பற்படையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் ஒரு பிரிவினர் தேசிய விடுதலை இயக்கம், இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று ஆசாத் ஹிந்த் (இந்திய விடுதலை) என்ற ஒரு ரகசிய அமைப்பைத் தொடங்கினர். கப்பற்படை மாலுமிகளை கலகம் செய்ய கிளர்ந்தெழச் செய்வதில் இந்த அமைப்பு மிக முக்கியமான பங்கினை வகித்தது. பிரிட்டிஷ் இந்திய கப்பற்படை மாலுமிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கியபோது பம்பாயில் மிகப்பெரும் எழுச்சி உருவானது.

பிரிட்டிஷ் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த தல்வார் என்ற கப்பலின் ஊழியர்கள் 1,100 பேர் 1946 பிப்ரவரி 18 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பம்பாயில் இந்திய கப்பற்படையில் வேலைசெய்து வந்த மேலும் 5,000 பேரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கப்பற்படையில் தாங்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து கிளர்ச்சி செய்தனர். தல்வார் கப்பலின் ஊழியர்கள் அந்தக் கப்பலின் கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் கொடியை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். ஆயுதங்களை ஏந்திய அவர்கள் தங்களது மேலதிகாரிகளையும் கைது செய்தனர். அதற்கு அடுத்தநாள் கேசில், ஃபோர்ட் ஆகிய படைமுகாம்களில் இருந்த கப்பற்படை வீரர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு, பம்பாய் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இந்தப் படைவீரர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்களாக இருந்தது மட்டுமின்றி, நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்தவர்களாகவும், அனைத்து மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்தனர்.

அரசின் எந்தவொரு பிரிவிலும் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலருமே இனரீதியாக, பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு வந்தனர். அவர்களது ஊதியமும் மிகவும் குறைவாகவும், வழங்கப்படும் உணவும் கூட சாப்பிடமுடியாததாகவேஇருந்தது. இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டு வந்ததன் விளைவாக இவர்களில் பலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாத பலரும் ராணுவப் படைகளை விட்டு வெளியேறினர். தல்வார் கப்பலில் ‘இந்தியாவைவிட்டு வெளியேறு!’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக!’ போன்ற கோஷங்களை எழுதியதற்காக ஒரு மாலுமியான பி சி தத் கைது செய்யப்பட்டதை பலரும் பெரிதும் வெறுத்தனர். நாகரீகமான உணவு; போதுமான அளவிற்கு ரேஷன் பொருட்கள்; இந்திய ஊழியர்களை அவதூறாகப் பேசி வந்த தல்வார் கப்பலின் தலைமை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை; அதிகாரிகள் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதற்கு முடிவு கட்டுவது; பணியிலிருந்து விலகும் செயல்முறையை விரைவாக முடிப்பது; அவர்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடுகள்; ஓய்வூதியப் பயன்கள்; இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த கைதிகள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது; இந்தோனேஷியாவிலிருந்து அனைத்து இந்தியப் படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெறுவது; இந்தியா முழுவதிலும் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடுகள் பற்றி பாரபட்சமற்ற நீதி விசாரணை ஆகியவையே கப்பற்படை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

பம்பாய் நகரைத் தவிர கராச்சி நகரும் கப்பற்படை வீரர்கள் எழுச்சியின் முக்கிய மையமாக இருந்தது. இது பற்றிய செய்தி பிப்ரவரி 19 அன்று கராச்சியை அடைந்ததும் இந்துஸ்தான் கப்பலும் (இது பின்னர் ஆயுதந்தாங்கிய தாக்குதலிலும் ஈடுபட்டது) மற்றொரு கப்பலும் தரைப்பகுதியில் இருந்த மூன்று படைமுகாம்களும் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கின. இந்த இரு கப்பற்படை மையங்கள் மட்டுமின்றி மதராஸ், கராச்சி, விசாகப்பட்டினம், கல்கத்தா, டெல்லி, கொச்சின், ஜாம்நகர், அந்தமான், பஹ்ரைன், ஏடன் ஆகிய இடங்களில் இருந்த படைவீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். இதைக் கண்ட பிரிட்டிஷ் ராணுவ தலைமைத் தளபதி அட்மிரல் காட்ஃப்ரே இந்திய கப்பற்படையின் அனைத்துக் கப்பல்களையும் குண்டுவீசித் தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்தார். இந்த எழுச்சியில் 78 கப்பல்கள், 28 தரைப்பகுதி படைமுகாம்களில் இருந்த 20,000 வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். பம்பாயின் மரைன் ட்ரைவ், அந்தேரி, சியான், பூனே, கல்கத்தா, ஜெஸ்ஸூர், அம்பாலா ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய விமானப்படை வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜபல்பூரில் இருந்த ராணுவ வீரர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயின் கொலாபா பகுதியில் இருந்த ராணுவ குடியிருப்பு பகுதி ‘அச்சுறுத்தும் வகையிலான சலசலப்புடன்’ இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கப்பற்படைவீரர்கள் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக ஆதரவு தெரிவித்தது. பிப்ரவரி 19 அன்று கட்சி வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு அது மக்களை கேட்டுக் கொண்டது. இந்திய கப்பற்படையை அழிக்கப் போவதாகவும், அவற்றிலிருந்த இந்தியர்களை கொல்லப்போவதாகவும் அச்சுறுத்திய அட்மிரல் காட்ஃப்ரேவுக்கு பதிலடியாக பிப்ரவரி 22 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் திரளாகப் பங்கேற்குமாறு மீண்டும் தனது செய்தித்தாளின் மூலம் அது மக்களைகேட்டுக் கொண்டது. நாடு முழுவதிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை கண்டித்தும் முழு அடைப்புகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பொதுவான விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கப்பற்படை கலகத்தை நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே ஆதரித்தனர்.

அனைத்துக் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. கட்சியின் பொது வேலைநிறுத்தத்திற்கான அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்து குவிந்தனர். சிறுகடைகள், வியாபாரிகள், உணவு விடுதிகள் ஆகியவையும் முழுஅடைப்பு செய்தன. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பம்பாயில் போக்குவரத்தை நிலைகுலையச் செய்தது. இதுவரை கண்டிராத வகையில் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பை பம்பாய் நகரம் கண்டது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரும்புக் கவசமிட்ட கார்களுடன் பிரிட்டிஷ் வீரர்களை தெருக்களில் கொண்டுவந்து குவித்தனர். பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களின் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி இப்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இவ்வகையில் அப்பாவிகளை கொன்று குவித்தனர். பம்பாய் நகரில் உள்ள பரேல் பகுதி மாதர் சங்கத் தலைவியும் கம்யூனிஸ்டும் ஆன கமல் தோண்டே இவ்வாறு பலியானவர்களில் ஒருவர். பிப்ரவரி 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்களில் மொத்தம் 250 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவித்தன. ‘துப்பாக்கிகள், டாங்குகள், குண்டு வீசும் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தி வந்த காலம் போய் விட்டது’ என கட்சி அறிவித்தது. ஏகாதிபத்திய வாதிகளின் இந்த ரத்தவெறி பிடித்த ஆட்டம் ‘பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒற்றுமையையும் உறுதியையும் மேலும் வலுப்படுத்தும்’ என்றும் அது கூறியது.

அரசின் ஒடுக்குமுறைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அனைத்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆலைகளை முழுமையாக அடைக்கவேண்டும் என்றும், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்து வரும் கப்பற்படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்களையும் கேட்டுக் கொண்டது. பம்பாய் நகரின் தொழிலாளர்களும் குடிமக்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பையும் நடத்தி, இந்திய கப்பற்படை வீரர்களின் இந்தத் துணிவான நடவடிக்கைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைதி மற்றும் நிவாரணத்திற்கான குடிமக்கள் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. ‘ஆசாத்இந்த் விடுதலைப் படை’யின் பிரச்சனையைப் போன்று முக்கியமானதாக மாறியுள்ள ஆயிரக்கணக்கான கப்பற்படை வீரர்களின் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர்கள் கையிலெடுக்கவேண்டும் என்றும், ‘எவ்வித பாரபட்சமுமின்றி நியாயத்தின் அடிப்படையில்’ இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கட்சி கூறியது. மத்திய சட்டமன்றத்திற்கும் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை விடுத்தது.

அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்துவரும் கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. வீரர்களின் இந்தக் கலகம் எழாமல் இருந்திருப்பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்காது. அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி, பாரபட்சம், கொடூரங்கள் ஆகியவையும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. கட்சியின் உடனடி நடவடிக்கைகளின் விளைவாக இந்திய கப்பற்படையும் அதிலிருந்த வீரர்களும் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இறுதியில் ஓர் ஒப்பந்தம் உருவாகவும் வழியேற்பட்டது. எவ்வித தண்டனையும் விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழி அளித்தபிறகும் கூட, இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதன் மூலம் அரசு தனது ஒப்பந்தத்தினை மீறியபோது அரசின் செயலை கட்சி கடுமையாகக் கண்டித்தது.

இந்த எழுச்சி தோற்றது ஏன்?

இந்திய தேசிய இயக்கக் களத்தில் குறிப்பான சில பலவீனங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ்-லீக் கட்சிகளின் உயர்வர்க்கத் தலைமை இந்த வெகுஜன எழுச்சியைக் கண்டு அஞ்சியது. அகில இந்திய அளவிலும் ராணுவப்படையின் தரைப்படை மற்றும் விமானப்படை போன்ற இதர பிரிவுகளிலும் இந்தக் கலகம் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை. தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற வேலைநிறுத்தம், முழு அடைப்பு ஆகியவற்றையும் அவர்கள் அதிகாரபூர்வமாகவே எதிர்த்தனர். கப்பற்படை வீரர்களின் இந்தக் கலகத்தை வெறும் ‘அரிசி-பருப்பு’க்கான ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்த்ததோடு, இன ரீதியான பாரபட்சத்திற்கு எதிரான கோரிக்கையை அவர்கள் காணத் தவறியதோடு, விரிவானதொரு தேசிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தப் போராட்டத்தைக் காண மறுத்தனர்.

நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் வன்முறை தாண்டவத்தை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் கண்டனம் செய்யவில்லை. மாறாக, குண்டடிபட்ட, நிராயுதபாணிகளான மக்களையே அவர்கள் விமர்சனம் செய்தனர். கப்பற்படை வீரர்களின் வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்ததன் மூலம் சட்டம்-ஒழுங்கிற்கான பிரதிநிதிகளின் பக்கமே அவர்கள் நின்றனர். ‘கப்பற்படையில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்ற தலைமைத் தளபதியின் அறிக்கையை’ தாம் ஆமோதிப்பதாக சர்தார் பட்டேல் அறிவித்தார். ‘வன்முறை நோக்கம் கொண்ட இந்து-முஸ்லீம் கூட்டணி’ என்று தனது கண்டனத்தை காந்தி தெரிவித்து குறிப்பிடத்தக்கதொரு அறிக்கையை வெளியிட்டார். அவர்கள் முன்வைத்த ஒரே ஆலோசனை கப்பற்படை வீரர்கள் அரசிடம் சரணடைய வேண்டும் என்பதே ஆகும். காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேலின் ஆலோசனை, அதைத் தொடர்ந்து ஜின்னாவிடமிருந்து வந்த செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் “இந்தியாவிடம்தான் நாங்கள் சரணடைகிறோம், பிரிட்டனிடம் அல்ல!” என்ற அறிவிப்புடன் பிப்ரவரி 23 அன்று கப்பற்படை வேலைநிறுத்த மத்திய குழு இறுதியாக சரணடைந்தது.

வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களை காப்பாற்றவும், அவர்களது சரணாகதியையும் தண்டனையையும் தடுக்கவுமான தமது முயற்சிகளில் அன்று வலுவான கட்சிகளாக இருந்த காங்கிரஸையும் முஸ்லீம் லீகையும் தன்னுடன் அணிதிரட்டுவதற்குத் தேவையான வலிமை கட்சியிடம் இருக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்தது. இவ்வாறு இருந்தபோதிலும் ‘கப்பற்படையில் இருந்த நமது சகோதரர்களின் பின்னால் தனது வலிமைஅனைத்தையும் தந்து அவர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதில் இருந்து தடுப்பதில் உதவி’ புரிந்ததாக கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாகவே பெருமைகொண்டது.