மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை

பேரா. ஆர். சந்திரா.

(கடந்த இதழில் பால்மிரோ டோக்ளியாட்டி எழுதிய “பாசிசம் குறித்த விரிவுரைகள்” எனும் நூல் அறிமுகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்நூல் குறித்த சமகால பொருத்தப்பாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது.)

சமீபகாலமாக உலகின் பலபகுதிகளிலும், பாசிச சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இவை, 1930களில் ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக , ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. பாசிச அரசு ஏகபோக முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தி, முழுமையாக அதற்கேற்ப செயல்படும் தன்மை கொண்டது. இந்தியாவில் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாசிச அரசா, இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில்,1930களில் இத்தாலிய  கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமான ஒருவரான பல்மிரோ டோக்ளியாட்டி  பாசிசம் பற்றி 1935ஆம் ஆண்டு மாஸ்கோவில் லெனின் பள்ளியில் ஆற்றிய விரிவுரைகள் பாசிசம் பற்றிய புரிதலுக்கு உதவும். அது மட்டுமல்ல. பாசிசம் என்பது முறியடிக்க முடியாத ஒன்று இல்லை.  பாசிச சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்டுகள் எத்தகைய நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்பதை ஜெர்மனி மற்றும்  இத்தாலிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அவர் விளக்கி இருப்பதை புரிந்து கொண்டு, அப்புரிதலின்  வெளிச்சத்தில், நமது கட்சி திட்டத்தின் மீது நின்று, சமகால இந்திய சூழலையும் கணக்கில் கொண்டு, தக்க செயல் திட்டங்களை உருவாக்க இந்த வாசிப்பு உதவும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ஆம்  ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில் தோழர். ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறியதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார். இங்கு மாமேதை  லெனின் அவர்கள் “ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது“ என்று கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால், ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகமூலதனம் ஆதிக்கம் செலுத்தும் கட்டம்.

பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

பாசிசத்தின் முக்கிய அம்சங்களும்  இந்திய சூழலும்

பாசிசத்தின் முக்கிய அம்சங்கள் சமகால இந்திய சூழலுக்கு எப்படி பொருந்துகின்றன என்று பார்க்கலாம்.

பாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்தால் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளை முழுமையாக முன்பின்முரணின்றி அமலாக்கும். பா.ஜ.கவிற்கு முந்தைய  காங்கிரஸ் தலைமையிலான அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை அமுலாக்கியது. இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கிராமப்புற வேலை உறுதி சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வன உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு  அமலுக்கு வந்தன. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட 2004-2008 காலத்தில் வேளாண் மற்றும் ஊரக கட்டமைப்புகளில் ஒன்றிய அரசு முதலீடுகள் நிகழ்ந்தன. 2009லிருந்து இது நீர்த்துப் போனது. பின்னர் 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், நவீன தாராளமயக் கொள்கை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருந்து ஒன்றிய அரசு செயல்பட்டுவருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம், விவசாயத்தை கார்பரேட்மயமாக்கி, விவசாயிகளை நிர்க்கதியாக தவிக்க விடும் சட்டம், லாபம் ஈட்டும்  நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழக்கும்  வகையில்  இயற்கை வளங்களை கார்பரேட்டுகள் கைவசப்படுத்தி லாபம் ஈட்டும் சட்டம்  என பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை எதிர்ப்போர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இச்சட்டங்களை மோடி எப்படி நியாயப்படுத்துகிறார்? பெரு முதலாளிகள்தான் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்கிறார். மோடி அரசின் பொருளாதார  கொள்கைகளால் வேலை இழப்பு, கடும் விலை வாசி உயர்வு, விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவோர்  எண்ணிக்கை அதிகரிப்பு  போன்றவற்றை பற்றி எந்த கவலையும் ஒன்றிய அரசுக்கு கிடையாது என்பதே யதார்த்தம்.

பாசிச கட்சி ஆட்சிக்கு வந்தால்

டோக்ளியாட்டி இந்த அமசத்தை பின்வருமாறு விளக்குகிறார்? “அரசியல் விவாதங்கள் நடைபெறாது. பாசிச கட்சி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் கூட, அக்கட்சியின் உறுப்பினர்கள் இதர குடிமக்களை போல, செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். கட்சி உறுப்பினர்களுக்கு  அதன் கொள்கை உருவாக்கத்தில் பங்கு இருக்காது. உட்கட்சி  ஜனநாயகம் என்பது  இருக்காது. அதிகார வர்க்க பாணியில், கட்சி மேலிருந்து கட்டப்படும்… ஆண்டுக்கொருமுறை கூட்டப்படும் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரைகளை கேட்பதுடன், தலைமை எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜனநாயக அடிப்படையில்  கட்சிக்குள் தேர்தல் என்பது கிடையாது ..”

கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? ஆகப்பெரிய நாசம்  விளைவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிதித்துறையும்  ரிசர்வ் வங்கியும் கலந்து முன்மொழிவு உருவாக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை. திடீரென மோடியால் அறிவிக்கப்பட்டது. இதனால் சிறுகுறு தொழில்களும் விவசாயமும் இதர முறை சாரா தொழில்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின. மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மிஞ்சியது உயிரிழப்பு உட்பட கடும்பாதிப்பு மட்டுமே. சென்ற ஆண்டு  பெரும்தொற்று  பரவிய பொழுது எந்த மாநிலத்தையும் கலந்தாலோசிக்காமல், திடீரென சர்வாதிகார பாணியில் பிரதமர் நாடு தழுவிய முழு ஊரடங்கு  கொண்டு வந்தார். மக்கள் பெரும் துயருக்கு உள்ளாயினர். ஆனால்  இந்திய பெரு முதலாளிகளின் சொத்துக்கள் பெரும் தொற்று காலத்தில் பல்கிப்பெருகியுள்ளன. பெரும் தொற்று கால நிலைமைகளை பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி ஒன்றிய அரசு  நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குகள் மேலோங்கி வருவதை இந்நிகழ்வுகள்  காட்டுகின்றன .  

ஜனநாயக அரசு நிறுவன அமைப்புகள் அழிப்பு

பாசிச கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது, அரசின் நிறுவனங்கள் ஜனநாயக அடிப்படையில் செயல்படுவது படிப்படியாக அழிக்கப்படும்.. “GLEICHSHALTUNG” என்ற ஜெர்மானிய வார்த்தையின் அர்த்தம் ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதாகும். இது அபாயகரமான வார்த்தை அல்ல. ஆனால், நாஜிக்கள் அந்தச் சொல்லை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை டொக்ளியாட்டி விளக்குகிறார். நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், பொது வாழ்வுடன் தொடர்புள்ள அனைத்து அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை தங்களின் – பாசிஸ்டுகளின் –  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாசிஸ்டுகளின் நோக்கமும் நடைமுறையுமாக நாஜி ஆட்சியில் இருந்தது. எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். தற்போதுள்ள இந்திய ஒன்றிய அரசும் பாஜகவும் இதேபாணியில் செல்ல முயல்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் சாசன அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவனங்களின் சட்டப்படியான செயல்பாடுகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நீதிமன்றங்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, அரசின் வரி வசூல் அமைப்புகள், நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவன அரசு அமைப்புகள் அச்சமின்றி நேர்மையாக செயல்பட முடியாத நிலை உருவாகிவருகிறது. பாராளுமன்றத்தில் நெறிமுறைகளை மீறி அரசியல் சாசனத்திற்கு புறம்பான  சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விவாதத்திற்கு இடமே இல்லை

கம்யூனிஸ்டுகளே பிரதான எதிரிகள்

தனது உரைகளில் டொக்ளியாட்டி பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் முற்போக்குவாதிகளையும் தான் தனது முக்கிய எதிரிகளாக பார்க்கும் என்பதை வலியுறுத்துகிறார்.

பாஜகவும் சங்க பரிவாரும் யாரை  தங்கள் எதிரிகளாக கருதுகின்றனர்? அவர்களின் குருவாக கருதப்படும் கோல்வால்கர் கூறுகிறார்: ”நமது மூன்று பிரதான எதிரிகள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் அந்நிய சக்திகளை விட அபாயகரமானவர்கள்.” ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் பாஜக சங்க பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளும் கோல்வால்கர் கருத்துக்களின் அடிப்படையில் இருப்பது தெளிவு.  கடந்த ஏழு ஆண்டுகளில் முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்டுகள் குறி வைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். இடதுசாரிகளின் தலைமையில் செயல்படும் மாநில அரசுகளும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் சங்க பரிவாரத்தின் அன்றாட தாக்குதலை எதிர்கொள்கின்றனர். இடதுசாரிகள் நாட்டின் ஒற்றுமையை குலைக்கின்றனர்; நாட்டை பலவீனப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் கூட  இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பாசிசத்தின் அணுகுமுறை

பாசிசம் அதனுடன்  இணையாதவர்களை/எதிராகப் பேசுபவர்களை தண்டிக்கும் நோக்குடன் செயல்படும். டோக்ளியாட்டி இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார். இத்தாலியின் கூட்டுறவு அமைப்பு போன்ற ஒன்றின் பணியாளர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி தோழரிடம் அழுதுகொண்டே கூறினார்: “நான் பாசிச கட்சியில் சேர நாற்பது லிரா கொடுக்கவேண்டும், ஆனால் என்னிடம் பணம் இல்லை. கட்சியில் சேராவிட்டால் நான் பணியில் இருக்கமுடியாது.” இவ்வாறு மிரட்டி கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்த்தனர் அன்றைய இத்தாலிய பாசிஸ்டுகள்.  சமகால இந்தியாவில் பாஜக மிரட்டியும் ஆள் சேர்க்கிறது. காசு கொடுத்தும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது. ஊழல் செய்ததாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டி கட்சிக்குள் சேர்த்துக்கொள்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மைய புலனாய்வுத்துறை என்று அரசு நிறுவனங்கள் அனைத்தையும் இவ்வாறு ஆள் சேர்க்க பயன்படுத்துகிறது.

இராணுவமய இந்து சமூகமே  இலக்கு

பாசிச கட்சி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று அன்றைய இத்தாலிய நிலைமை பற்றி டோக்ளியாட்டி கூறுகிறார். அங்கும் ஜெர்மனியிலும் பாசிஸ்டுகள் வேலையில்லா இளைஞர்களை திரட்டுவதில், அவர்களை ‘ராணுவமயமாக்குவதில்’ தீவிரமாக செயல்பட்டனர். இந்த இளம் படைகள் தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் திரட்டவும் உதவினர். ஆர் எஸ் எஸ் இளைஞர்களை ஈர்த்து அவர்களை ராணுவபாணியில் பயிற்சி அளிக்க முற்படுகிறது என்பது இன்று நேற்றல்ல. 1920களின் பிற்பகுதியில் ஆர் எஸ் எஸ். முன்னோடித் தலைவர் மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார். மூஞ்சே இத்தாலியின் ராணுவ கல்லூரிக்கும் பயிற்சி கூடங்களுக்கும் சென்று வந்தபின், இது போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு மிகவும் தேவை; இந்து சமூகம் ராணுவமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மராத்திய ஊடகங்கள் 1925 முதல் 1935 வரை பாசிசத்தையும் முசோலினியையும் பெருமைப்படுத்தி முன்னிறுத்தின என்பதை வலதுசாரி ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ராகேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இன்றும் இத்தகைய   பயிற்சிகள் தொடர்கின்றன. இந்திய பிரதமர் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் தலைவர்கள் இப்பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

பன்முகத்தன்மை மறுப்பு

பாசிசம் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை. ஒரு நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை திணிக்கும் தன்மை கொண்டது பாசிசம். இதனை டோக்ளியாட்டி நினைவுபடுத்துகிறார்.

இந்தியா இந்துக்கள் நாடு என்று கூறுகிறது ஆர் எஸ் எஸ். பிற மத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ மட்டுமே அனுமதி என்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசீய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றிற்குப்பின் உள்ள நிகழ்ச்சி நிரல் இதுவே.

அதேசமயம், இந்து மதத்தையும் அதன் ஜாதி அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்பதே ஆர் எஸ் எஸ் நிலை. பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகிய மக்கள் திரள்கள் மீது கட்டவிழ்க்கப்படும் சமூக ஒடுக்குமுறையை ஆர் எஸ் எஸ் எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல; சனாதனம் என்ற பெயரில் சாதி ஒடுக்கு முறைகளையும் படிநிலைகளையும் அது நியாயப்படுத்துகிறது. தேசீய கல்விக்கொள்கையில் கூட இவற்றை மறைமுகமாக கொண்டு வந்துள்ளது. தனியார் மயமாக்கல் என்பதும் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிமறுக்கும் செயலாகும். ஆர் எஸ் எஸ் தனது கனவு இலக்கான இந்து ராஷ்டிரத்தை நோக்கி நாட்டை இழுக்க முயன்றுவருகிறது.

கலாச்சாரம் என்ற பெயரில்

பாசிச கட்சி கலாச்சார தளத்தை குறிவைத்து பயன்படுத்தும். அது வரையறுக்கும் தேசீய கலாச்சாரம் என்பதற்கு மாற்றாக உள்ள எதையும் ஏற்காது. “ஐரோப்பாவில் உள்ள 16 தீவிர வலதுசாரி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை  பொருளாதார கொள்கை பற்றி எதுவுமே குறிப்பிடாமல் ஐரோப்பாவில் தேசீய கலாச்சாரம் எப்படி பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கை மத சிறுபான்மையினரை தாக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அண்மையில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் கலாச்சார தளத்தில் கடுமையான தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளன. மதம், மொழி, உணவு, உடை என பலவற்றிலும் வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியர்களை பாஜக அரசு ஒற்றை (இந்துத்வா) கலாச்சாரத்தை நோக்கி நகர்த்த பெரிதும் முனைந்துள்ளது. சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்கள் மீது பாஜக அரசு திணிக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை சட்டம் மூலம் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித்துகளின் உணவு பழக்கங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் உணவில் மட்டுமின்றி மாட்டுக்கறி வணிகம், மாடுகளின் சந்தை போன்றவற்றில் பொருளாதார ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. லவ் ஜிஹாத் என்ற பெயரில் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள்  திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உபி மாநிலத்தில் ஒரு இந்து முஸ்லிமை திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற இயலாது; தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை உ பி அரசு கொண்டுவந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்ற உள்நோக்கமும் இச்சட்டத்தில் உள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் எண்ணிக்கை இந்துக்களைவிட அதிகமாகிவிடும் என்ற பொய்யான பிரச்சாரத்தை பாஜக கட்சியும் அதன் அரசுகளும் செய்துவருகின்றன.

கல்வித்துறையிலும் கலாச்சார தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.  வரலாறு திரித்து எழுதப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை திரித்து எழுதி பாட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களில் வகுப்புவாத நஞ்சை புகுத்தும் பணியை ஆர் எஸ் எஸ் பாஜக அரசுகள் முனைப்புடன் செய்து வருகின்றன. நோக்கம் முற்போக்கு வர்க்க அமைப்புகளை அழிப்பதே!

தொழிலாளர் நலன் காக்கும் வர்க்க அமைப்புகளுக்கெதிராக பாசிசம் போட்டி அமைப்புகளை அரசு ஆதரவுடன் உருவாக்கி செயல்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பல பகுதி மக்களுக்கான அமைப்புகளை பாசிஸ்டுகள் உருவாக்குவதன் நோக்கம், இவை மூலம் தனக்கென்று ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது பாசிச பிரச்சாரத்தை விரிவாக மக்களிடம் கொண்டுசெல்ல அவற்றை பயன்படுத்தவே. இதனை டொக்ளியாட்டி வலுவாக எடுத்துரைக்கிறார். நமது நாட்டில் இத்தகைய முனவுகளில் ஆர் எஸ் எஸ் பாஜக ஈடுபட்டிருப்பது கண்கூடு.

பாசிசமும் “தேசீயவாதமும்”

பாசிசம் தேசீயவாதம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்கிறார் டோக்ளியாட்டி. பாசிச கட்சி தேசப்பற்று என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை தனக்குப்பின் திரட்ட முயலும். இந்தியாவில் பாஜக பொருளாதார பிரச்சினைகள் தீவிரம் அடையும் பொழுதெல்லாம் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது. பாஜக அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு புறம்பானவை;  அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றவை; அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று கூறுவோரை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

பாசிசம் தனது அடிப்படை இலக்கை கைவிடாமல் தந்திரங்களையும் அணுகுமுறைகளையும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டே இருக்கும் என்பது இத்தாலிய அனுபவம். சொல்லாடல்களையும் சூத்திரங்களையும் அது பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும். பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கும். இதுவே கடந்த ஏழு ஆண்டுகால இந்திய அனுபவம்.

ஜனநாயக அமைப்புகளை பயன்படுத்தியும் தாக்கியும் பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையும். 1930களின் துவக்கத்தில் ஜெர்மனி நாட்டில் அன்றைய ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களை ஈர்த்து பாசிச கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேசப்பற்று, நாட்டின் சுய மரியாதை, மாபெரும் ஜெர்மானிய தேசம் போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் ஆதரவை திரட்டியது. ஆட்சியை கைப்பற்றும் பயணத்தில் எதிர்க்கட்சிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்தியது. தொழிற்சங்கங்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்து தாக்கி, அவர்களுக்கெதிராக பெரும் பொய்பிரச்சாரம் செய்தும் வன்முறையில் ஈடுபட்டும் அவர்களை முற்றிலுமாக அழிக்க முயன்றது. அதில் ஓரளவு வெற்றி பெற்றபின் முதலாளித்துவ கட்சிகளை அழித்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு இந்தியாவில் வளர்ச்சி, தேசப்பற்று, தேசீயம், வல்லரசு போன்ற முழக்கங்களை முன்வைத்து தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. இதனுடன் அரசு இயந்திரத்தையும் பெருமுதலாளிகளின் ஆதரவையும் பயன்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. இடதுசாரிகளை குறிவைத்து தாக்கிவருகிறது. பாசிசம் ஏகபோக மூலதனத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதை மோடி ஆட்சி எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட் ஹிந்துத்வா என்பது அதன் சிறப்பு முத்திரை.

பாசிசத்தை வீழ்த்துவது பற்றி டோக்ளியாட்டி

பாசிச சக்திகள் மேலோங்கி இருக்கும் பொழுது அவற்றை வெல்ல முடியாது என்ற பிம்பம் உருவாகும். ஆனால் இத்தாலிய அனுபவமும் பிற நாடுகளின் அனுபவமும் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நமக்கு கற்றுத்தருகின்றன என்பதை டோக்ளியாட்டி வலியுறுத்துகிறார். “பாசிசத்தால் முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து மீள முடியாது. அவை தொடரும். இந்த முரண்கள் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட, ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் மூலமே பாசிசத்தை வெல்ல முடியும்” என்று டோக்ளியாட்டி தெளிவுபடுத்துகிறார். அவர்: “பாசிச கட்சியில் இருப்பவர்கள், அதன் ஆதரவாளர்கள், தொழிலாளிவர்க்க புரட்சியை நோக்கி வந்து விடுவார்கள் என்று நம்பிவிடக்கூடாது.” என்று எச்சரிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு எடுத்து, பிரச்சனைகளை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப உரிய தீர்வுகளை நோக்கி நமது தந்திரங்கள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். சந்தர்ப்ப வாதங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்கிறார்.

பாசிசம் தனது உள்முரண்பாடுகளால் தானே வீழ்ந்துவிடாது. ஆனால் இந்த உள்முரண்பாடுகளை தக்கவகையில் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் டோக்ளியாட்டி கூறுகிறார்.

சம கால இந்தியாவில்

டோக்ளியாட்டி முன்வைத்துள்ள பல கருத்துக்களும் அவர் அளித்துள்ள வெளிச்சமும் நமக்கு உதவும். எனினும், இன்று இந்தியாவில் பாசிசத்தன்மை கொண்ட ஒன்றிய அரசும் அதன்பின் உள்ள ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பும், இந்தியாவை பாசிசத்தின் பிடியில் கொண்டு செல்ல நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளும் களத்தில் உள்ளன என்பது பாசிச இத்தாலிக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. அரசியல் சாசனத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களையும் பாஜக ஆர் எஸ் எஸ் பலவீனப்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவின் ஆட்சி அமைப்பு பாசிஸ்ட் ஆக மாறிவிட்டது என்ற வரையறையை நாம் ஏற்கவில்லை. ஆட்சி அமைப்பு யதேச்சாதிகாரத்தன்மை நிறைந்துள்ளதாக இருக்கிறது; அத்திசைவழியில் பயணிக்கிறது என்பதை நாம் குறிப்பிடுகிறோம். ”இந்தியப் பெருமுதலாளிகள் தலைமையில் இந்திய அரசு செயல்படுகிறது. இதில் முதலாளி வர்க்கமும் நிலப்பிரபுக்களும் இடம்பெறுகிறார்கள். ஆளும் வர்க்க கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெருமுதலாளிகள் இன்று மேலும் மேலும் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் இணைந்துவருகிறார்கள்” என்ற கட்சி திட்டத்தின் வெளிச்சத்தில் நின்று, சமகால இந்திய அரசியல் களத்தைப்  பரிசீலிக்கும் பொழுது  ஆர் எஸ் எஸ் பாஜகவின் கார்ப்பரேட் ஹிந்துத்வா கொள்கைகளையும் எதேச்சாதிகார முனைவுகளையும் வலுவான வர்க்க வகுஜன போராட்டங்கள் மூலமே பின்னுக்கு தள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். டோக்ளியாட்டி தந்துள்ள வெளிச்சத்தில், கட்சி திட்ட நிலைபாட்டில் நின்று, ஆர் எஸ் எஸ் -பாஜக பாசிச முனைவுகளை நாம் வர்க்க வெகுஜன திரட்டல்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தக்க அரசியல் நடைமுறை தந்திரங்கள் மூலமும் முறியடிப்போம்.

உழைக்கும் வர்க்க இயக்கமும் பெண்களின் பங்களிப்பும்

( குரல் : அருந்தமிழ் யாழினி)

பேரா. ஆர். சந்திராஉழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் எந்த பிரிவினையும் கூடாது. ஆண் பெண் இருவருமே உழைப்பாளிகள் என்று பார்க்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தனித்துவமான பிரச்னைகளை தனியாக எடுத்து விவாதிக்கலாம். எனவேதான், பெண்களுக்கு தனி தொழிற்சங்கம் என் விவாதம் எழ வாய்ப்பு இல்லை.” [லெனின்]

சுதந்திரமான குடியரசு என்பது உள்ளிட்ட எந்த முதலாளித்துவ சமுதாயத்திலும் ஆண்-பெண் சமத்துவம் என்பது சாத்தியமில்லை. தற்போது உள்ள சட்டங்கள் மாற்றப்படவேண்டும். ஏனெனில் பழமைவாத கருத்துக்களும் சட்டங்களும் உழைக்கும் வர்க்கத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. [அலெக்சாண்ட்ரா கொலந்தாய்]

உழைக்கும் வர்க்க இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை பற்றி பார்ப்பதற்கு முன்பு தற்பொழுது உலக உழைப்பாளர் சந்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது, எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கம் தன் கோரிக்கைகளை வடிவமைக்க உதவிடும். “உலக அளவில் தற்பொழுது நிலவும் வேலையின்மை பல மட்டங்களில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன் பொருளாதார ரீதியில் கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். வேலைக்காக காத்திருக்கும் மக்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்கும் சூழலில் அதை ஒரு பொருளாதார பிரச்னையாக மட்டுமே பார்க்க முடியாது. அதன் சமூக விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஐ.எல் ஒ நிறுவன டி.டி.ஜி. டெபோரா கிரீன்பீல்ட் சென்ற ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது கொரோனா பரவல் தொடங்கியிருக்கவில்லை. இருந்தும் பொருளாதார சூழல் சாதகமாக இல்லை. தற்பொழுது உலக பொருளாதாரத்தையே கொரோனா நோய் புரட்டிபோட்டுவிட்டது. எனவே ஐ.எல்.ஒ சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே  சுட்டிகாட்டிய அம்சங்களை திரும்பிப் பார்ப்போம். [World Unemployment and Social Outlook Trends 2019 ILO Report]

* பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து பெரும்பாலான நாடுகள் இன்னும் மீண்டு வரவில்லை. சில துறைகளில் முன்னேற்றம் இருந்தும், வேலை உருவாக்கம் இல்லை என்பது பிரச்னைகளை தீவிரமடைய செய்கிறது என்பதே யதார்த்தம். தரமான வேலைகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதுடன், ஏராளமான முழு நேர பணிகள் பகுதி நேர பணிகளாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* ரோபோ இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் செயற்கை அறிவு நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும், அவை பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இத்தகைய வளர்ச்சி வேலையின்மையுடன் கூடிய வளர்ச்சியாகவே அமைந்துள்ளது.

* உலக அளவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. மொத்த உழைப்பாளர்களில் முக்கால்வாசி பேர் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரிகின்றனர். எந்தவிதமான பாதுகாப்பு சட்டங்களும் அமலாகாத நிலையில், இவர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருகிறது.

கொரோனா நோய் பரவலின் தாக்கம் இவர்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில்  உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி, அமைப்பாக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில், உழைக்கும் வர்க்கம் எவ்வளவோ தியாகங்களை செய்து, பல கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது என்பதை வரலாறு சுட்டிக் காண்பிக்கிறது. மே தினம் உழைக்கும் மக்கள் தினமாக உருவெடுத்ததும் அந்த தினத்தன்று, உழைக்கும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும். உழைக்கும் வர்க்கம் வெறும் கூலி உயர்வுக்காக மட்டும் போராடவில்லை. எட்டு மணி நேர வேலை, பணியிடங்களில் பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, உலக அமைதி என பல முழக்கங்களை உழைக்கும் மக்கள் முன்னெடுத்து வைத்துள்ளனர். இத்தகைய இயக்கங்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கை செலுத்தியுள்ளனர்.

உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சிக்கு சோசலிச நாடுகள் மட்டுமின்றி மேற்கத்திய, கீழை நாடுகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். சோவியத் யூனியனில் பெண் தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களின் தனிச்சிறப்பான பிரச்னைகளில், கவனம் செலுத்தி உழைக்கும் பெண்களுக்காக பல்வேறு நல சட்டங்களை கொண்டு வந்த அலெக்சாண்ட்ரா கொல்லன்தாய்க்கு உலக உழைக்கும் வர்க்க வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு. புரட்சி வந்த உடனேயே மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. தொடர்ச்சியான கருத்துப் போராட்டங்கள், அரசியல் கல்வி மூலம்தான், பெண்களை வென்றெடுக்க முடிந்தது.


அமெரிக்காவில், 1905-ல் “உலக உழைக்கும் மகளிர் அமைப்பு”[International Working Women] என்ற அமைப்பை மதர் ஜோன்ஸ் என்ற பெண்மணி துவக்கி, உழைக்கும் பெண்களை ஒன்று திரட்டினார். அதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே, சர்வதேச ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் “[International Garment Workers 1900] சங்கத்தை நிறுவினார்கள். கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெண்கள் அதில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். 

அப்பெண்கள் அவர்களே தங்கள் பணிக்கு தேவையான நூல், ஊசி போன்றவற்றை வாங்கிக் கொண்டு பணிக்கு செல்ல வேண்டும். முறையாக கூலி கொடுக்காமல் இருக்க முதலாளிகள் ஏகப்பட்ட குறைகளை சொல்வார்கள். ஒடுக்கப்பட்ட அந்த பெண் தொழிலாளிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். 1909-ல் நியூயார்க் ஷர்ட் வெய்ஸ்ட் வேலை நிறுத்தம் ஆயிரக்கணக்கான பெண்களை போராட்டத்தில் உந்தித் தள்ளியது. இருபதாயிரம் பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இறுதியில் அந்த ஆலை  நிர்வாகம் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது.

அதே போல, நாற்பதுகளில், ஆட்டோமொபைல் தொழிலில் கடுமையான பணிகளை [ஹெவி மெஷினரி வேலை] பெண்கள் செய்ய மறுத்தனர். லே ஆஃப் செய்யப்பட்டனர். விடாமல் போராடி அப்பெண்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றனர்.


ரேடியம் பெண்கள் : இன்று உலகம் முழுவதிலும் தொழிலாளர்களுக்கு ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் பொழுது முக கவசம், கையுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக கொண்டு வரக் காரணமாக இருந்தவர்கள் அவர்களே. 

அமெரிக்காவில், 1925-ல் கடிகார உற்பத்தி தொழிற்சாலையில், ரேடியம் பூசும் பணியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் ஈடுபட்டிருந்தார்கள். ரேடியம் புற்றுநோய்க்கு காரணம் என்று அவர்களுக்கு தெரியாது. பற்கள் விழுவது, எலும்பு முறிவது என்று பல இளம் பெண்கள் பணி தொடர்பான நோய்களால் தாக்கப்பட்டனர். எவ்வளவோ புகார் கொடுத்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உடல் ரேடியத்தினால் மின்னியது. “ஷைனிங் கர்ல்ஸ் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். கிரேஸ் பிரியர் என்ற பெண் தொழிலாளியின் விடா முயற்சியால் யு.எஸ்.ரேடியம் கார்பரேசன் மீது வழக்கு தொடரப்பட்டது. அரசியல் செல்வாக்கு மிகுந்த அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு நடத்த வக்கீல்கள் தயங்கினர். பணி தொடர்பான நோய்க்கு பெண்களின் மனநிலையே காரணம் என்று கூறப்பட்டது. ரேடியத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ரேடியத்திற்கு ஆதரவான பிரசுரங்களை வெளியிட்டனர். மன உறுதியுடன் போராடிய அப்பெண்கள் இறுதியில் வெற்றி பெற்றனர். அதன் பின்னர், தொழிலாளர் நல சட்டங்கள் பல இயற்றப்பட்டன. உலக உழைக்கும் வர்க்க இயக்கத்தில் இப்பெண்களுக்கு தனி இடம் உண்டு. “ஒரு இருட்டு அறையில், ரேடியம் பூசிய கடிகாரங்கள் மின்னுவதை போல இப்பெண்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றனர்.”

ஜெயா பென் தேசாய்  ஒரு இந்திய வம்சாவளி பெண். லண்டனில் உள்ள மிக பிரபலமான க்ரான்விக் தொழிற்சாலை வேலை நிறுத்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கி [1977-78] கோரிக்கைகளை வென்றெடுத்த சிறந்த பெண் தொழிற்சங்கவாதி. நிர்வாகம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அடக்கி ஒடுக்க நினைத்தது. மிகுந்த துணிவோடும், நம்பிக்கையுடனும், போராடிய அவர் ஆசிய நாடுகளிலிருந்து இங்கிலாந்தில் பனி புரியும் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடிய பெண்மணி. வேலை நிறுத்தம் நடைபெற்றபொழுது அவர் நிர்வாகத்தை பார்த்து சாடியது அன்று மிகவும் பிரபலமாகியது.

“நீங்கள் தொழிற்சாலை நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை. நீங்கள் மிருகக் காட்சி சாலை நடத்துகிறீர்கள். மிருகக்காட்சி சாலையில் நிறைய மிருகங்கள் இருக்கும். சில குரங்குகள் உண்டு. அவை உங்கள் ராகத்திற்கு ஏற்ப நடனம் ஆடும்… ஆனால்.. நாங்கள் சிங்கங்கள். மானேஜர் அவர்களே, நாங்கள் சிங்கங்கள். உங்கள் தலையை கடித்து குதறி விடுவோம்… ஜாக்கிரதை!” 2016-ல் BBC அவரை சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும் அறியப்படாத திண்டுக்கல் ஆக்னஸ் மேரி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

உழைக்கும் மக்கள் இன்று ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக எண்பது சதத்திற்கும் மேலான பெண்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிவதால் அவர்களை வர்க்க ரீதியில் திரட்டுவதே மிகப் பெரிய சவாலாக உள்ளது. வேலையை இழந்து விடுவோம் என்ற அச்சம் மிக முக்கியமான காரணம். அதனால், எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், பொறுத்துக் கொண்டு வேலை செய்கின்றனர். 

இவர்கள் நிலையை பற்றி ஐ.எல்.ஒ அறிக்கை என்ன சொல்கிறது? “அமைப்பு சாரா துறையில் வேலை செய்யும் பெண்களின் தேவைகளும் பிரச்சனைகளும் பல வகைப்படும். எனவே, அவர்களை திரட்டுவது கடினம். அவர்கள் செய்யும் பணியின் தன்மைக்கேற்ப, தொடர் முயற்ச்சிகளின் மூலம் அவர்களை ஒன்று திரட்ட முயல வேண்டும்.” 1993ல் புனாவில், குப்பை பொறுக்கும் தொழிலாளர்களை திரட்டும் முயற்சி பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி, இன்று, அவர்கள் சுற்றுசூழல், நகர்புற சேவை, திடக் கழிவு மேலாண்மை போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலத்தில், உழைக்கும் வர்க்கம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதி, மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து, விவசாய தொழிலாளர்களும், ஆலைத்  தொழிலாளர்களும். அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. போராட்டங்கள் மட்டுமே நமது நலன்களை காப்பதற்கு உதவும் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். 

பெட்டி செய்தி 

“உழைக்கும் மகளிர் இயக்கம் என்பது ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கும் ஏற்றவாறு வேறுபடுகிறது. 1896-ல் சமூக ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெற்றபொழுது, கிளாரா ஜெட்கின்  பெண் உழைப்பாளிகளை போராளிகளாக மாற்ற சுயேச்சையான இயக்கத்தை கட்ட வேண்டும் என்றார். அதே ஆண்டு லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில், முப்பது சோஷலிஸ்ட்  பிரதிநிதிகள் [இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஹாலந்து, பெல்ஜியம், போலந்து போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்] பெண் சோஷலிஸ்டுகள் இயக்கம் மூலமாக, பெண் தொழிலாளர்களை திரட்டும் முயற்சிகளில் இறங்க வேண்டுமென முடிவெடுத்தனர். வர்க்க போராட்டங்களில், உழைக்கும் பெண்களை கொண்டு வர இது சிறந்த ஏற்பாடு என்று கருதினார்கள். ஜெர்மனியில் பெண் தொழிலாளர்களுக்கென ஒரு தனி பீரோ உருவாக்கப்பட்டது.”

[Women Workers Struggle for their Rights – Alexandra Kollantai.1919]

citu struggle

ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

  (ஏ ஆர் சிந்து,  மத்திய குழு உறுப்பினர்,  சி பி எம்)

தமிழில்: ஜி.பாலச்சந்திரன்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:

“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது. வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின் கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின் சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின் வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில் அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”

அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த, வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.

பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான  “எல்லோ வெஸ்ட் “’இயக்கம்  (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருப்பர்)  இன்னும் தொடர்கிறது  இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும், குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும், திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின் பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின் ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.

“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள். பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும் ‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும், பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள் அணிவகுத்தனர்.

வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும் பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர். ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.

இந்தியாவில்:

எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும் இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள் ‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை ‘  இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது. முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில்   தகர்க்கப்பட்டன,

உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும் 92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில் 46 சதவீதமான  57 சதவீத சுய தொழில் புரிவோர் மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ 5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும் ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின் வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).

கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த, வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர். இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால்  ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும். பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற, 2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர், மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக போராடினர்

வளர்ந்துவரும் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை:  இந்தியாவில் தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு, விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின் நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,( கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர் கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க  சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின் போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான், வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின் கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)  அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின் சில முக்கிய பிரச்சனைகளை நடை  பெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..

முன்னோக்கிய பாதை:

நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.

ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது, பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும் மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத, தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.

அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது. பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க, வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப் போகிறது.

 எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான்   தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..

தமிழாக்கம்: ஜி.பாலசந்திரன்

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா

“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.

அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”

“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன? 

கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட,  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர். 

இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள  இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.

கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி. 

இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும்.

கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய,  வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”. 

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.

1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து  ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.

நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்: 

ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான  கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். 

கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து  தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல்  மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.  “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?”  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.  தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர்.  ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’   மார்த்தவ் கருதினர். 

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ்  முடிவுகளை கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு  நூலாக எழுத தொடங்கினார். அதுதான்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக  எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.

மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்

மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.

” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.

இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.

“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள்  சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.” 

இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.

கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?: 

கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.

விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.

நூலின் ஓட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டியுள்ள  கருத்துக்கள் இன்றைக்கும்  பொருத்தப்பாடு உடையவை. 

“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும். 

மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள  மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்”   எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.

அகநிலை பார்வையற்ற ஆய்வு

லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது  கட்சிக் காங்கிரசில்  உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை  பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.

இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு  இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு  வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற  நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.

உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு  உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.

குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.

கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார். 

நூலின் உள்ளடக்கம்

1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி

2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி

3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.

4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.

5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.

6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில்  தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.

இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.

வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?

வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை  கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய  பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.

முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது 

வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.

அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை

“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய  படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.

கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.

கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்

“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு  லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது. 

கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.

“கட்சியை கட்டுவதில்  தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும்  இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது. 

“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.

அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.

அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.

நிறைவாக,

தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை  மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை  மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.

சோஷலிசமே தீர்வு

தமிழில்: நெய்வேலி மு. சுப்ரமணி

1936 அக்டோபர் 26-ல் ‘மாத்ருபூமி’ வார இதழ் இந்தக் கட்டுரையை வெளியிட்டபோது, இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்டாக ஆகியிருக்கவில்லை. பி.சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே ஆகியோரின் இடைவிடாத தலையீட்டின் பலனாக கே. தாமோதரன், என்.சி. சேகர், பி. கிருஷ்ணப்பிள்ளை, இ.எம்.எஸ். ஆகியோர் சேர்ந்து 1937-ல் தான் கம்யூனிஸ்ட் குழுவை உருவாக்கினர். பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழிகாட்டியாகத் திகழ்ந்த இ.எம்.எஸ்-ன் அறிவுக் கூர்மை எத்தனை எதார்த்தமாகவும், நுட்பமாகவும் இருந்தது என்பதற்கான வெளிப்படைச் சான்றுதான் “சோஷலிசமே உலகின் ஒரே பாதுகாவலன்” என்று முழங்குகின்ற இந்தக் கட்டுரை. 1930களின் முற்பகுதி முதல் அறுபதுகளின் இறுதிக்காலம் வரை கேரளத்தின் கூட்டுவிவாத அரங்குகளை ஒளிவீசச் செய்த ஓர் அறிஞரின் ஆரம்ப கால வெளிச்சங்களை இங்கே காணலாம்.

சோஷலிசத்தின் தோற்றம் எது? அது எங்கே உருவானது? என்கிற விஷயத்தில் பலரும் பலவித கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் தொன்மைக்காலம் முதலாகவே ஒரு போராட்டம் நடப்பதில், சமூகத்தின் பக்கம் நின்று வாதாடுகின்ற, தனிமனித சுதந்திரத்தைப் பேணிக் காத்து பொதுவான நீதியை வலுப்படுத்துகின்ற, எந்தவொரு விஷயத்திலும் சோஷலிசத் தத்துவம்  அடங்கியுள்ளது என்பதால் சோஷலிசம் மனித குலத்தின் இயல்பான நியதிதான் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.

இவர்களது பார்வையில் மனித குலத்தின் வரலாறுதான் சோஷலிசத்தின் வரலாறும் ஆகும். ரஷ்யாவில் சோவியத் கூட்டமைப்பு என்பதைப் போல, மலபாரில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையிலும் இவர்கள் சோஷலிசத்தைப் பார்க்கிறார்கள். புகைவண்டி, தபால்-தந்தி போன்றவற்றில் ஏகபோக உரிமையும் நிர்வாகப் பொறுப்பும் இருப்பதால், இன்றைய (1936) இந்திய அரசிலும் கூட சோஷலிசத் தத்துவம்  அடங்கியுள்ளது என இவர்கள் வாதிடுகின்றனர்.

மற்றொரு குழுவினரின் கருத்துப்படி, கார்ல் மார்க்ஸ்தான் சோஷலிசத்தின் பிதாமகன். அவரது படைப்புகள் வெளியாகும்வரை சோஷலிசமே இந்த உலகில் இருக்கவில்லை. இதைத் தவிர, இன்னும் ஒரு பகுதியினர் ப்ரெஞ்சுப் புரட்சிதான் சோஷலிச சிந்தனையை தோற்றுவித்தது என்று கருதுகின்றனர். இவை அனைத்திலுமே எதார்த்தத்தின் கூறுகள் உண்டு. எனினும் எந்தவொரு கருத்திலும் முழுமையான உண்மையும் இல்லை!

தொழிற்புரட்சி

18-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் உலகம் முழுவதையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு நடந்தது. அதுதான் தொழிற்புரட்சி! நீராவி இயந்திரம் கண்டுபிடித்து பொருளுற்பத்திக்கு அதைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்ததுமே இந்தத் தொழிற்புரட்சி உருவாகத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் துவக்கம் முதலான வரலாற்றை இந்தச் சிறிய கட்டுரையில் அடக்குவது எளிதல்ல. சோஷலிசத்தின் வரலாற்றில் அதற்கான தொடர்பும் குறைவுதான் என்றாலும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சில உளவியல் மாற்றங்கள் இதன் விளைவாக ஏற்பட்டதால் அதனை சுருக்கமாக இங்கே தருகின்றேன்.

முற்றிலும் மாறிய பொருளுற்பத்தி முறை

பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் தத்தமது கிராமங்களிலோ, நகரங்களில் பல்வேறு பகுதிகளிலோ இருந்தபடியே தங்களின் விருப்பப்படி பொருட்களை உற்பத்தி செய்வது அல்லவா வழக்கம்! அதற்குத் தேவையான கருவிகளை அவர்களே தங்கள் பணத்தைக் கொண்டு வாங்குவதோ அல்லது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு அவற்றை உரிமையாக்கிக் கொள்ளவோ செய்வார்கள். சொந்தப் பணமாக இருந்தால் பொருளை விற்றுக் கிடைத்த பணம் முழுவதையும் தமதாக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி மட்டுமே இதிலிருந்து செலுத்த நேரிடும். எந்தவொரு நிலையிலும் உற்பத்திக்கான கருவிகளும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களும் அவர்களின் உடைமையாகும்.

இயந்திரங்களின் வருகையுடன் இத்தகைய முறையெல்லாம் போய்விட்டது. மிகப் பெரிய இயந்திரங்களை எங்காவது ஒரே இடத்தில்  வைத்து மட்டுமே இயக்க முடியும் என்பதால் தொழிலாளர்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும். உற்பத்திக் கருவியாகிய இயந்திரம் அதிக விலையுடையது என்பதால் அதை சொந்தப் பணம் கொண்டோ, கடன் வாங்கியோ நிறுவுவதற்குத் தொழிலாளர்களால் இயலாமல் போனது. அதனால் பொருள் முதலீடு செய்யத் திறனுள்ள ஒருசிலர் மட்டுமே அவ்வாறு நிறுவத் தொடங்கினர்.

உற்பத்தி இயந்திரங்களில் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லாமல் போனபோது, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களும் அவர்களுடையது இல்லை என்றாகிப் போனது!  இயந்திரங்களின் உரிமையாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் உடைமையாளர் ஆயினர். தொழிலாளர்களுக்கு கூலி மட்டும் கிடைக்கத் தொடங்கியது. கைவினைஞரில் ஒரு பெரும்பகுதியினர் இதற்கு முன்னரும் (இன்றைய கைத்தறி நெசவாளர்களைப் போல) கடன் வாங்கி வேலை செய்திருந்ததால், அதிக வட்டி விதித்த கடைக்காரர்களின்  கீழிருந்தபோதிலும் அதைத் தாண்டி அவர்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர். வட்டியைத் தவிர வேறொன்றும் முதலாளிக்குத் தரவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. இயந்திரத் தொழிலோடு சேர்ந்து வெளியிலும் அவர்கள் முதலாளியின் கையில் அகப்பட்டுக் கொண்டனர். ஊதியத்திற்கு மட்டுமே அவர்கள் அருகதை உள்ளவர்கள் என்றானது. இத்தகைய புதிய ‘முதலாளி-தொழிலாளி’ உறவின் கீழ் இருக்கின்ற கட்டமைப்பைத் தான் முதலாளித்துவம் என்று சோசலிச படைப்புகளில் அவர்கள் கூறுகின்றனர்.

முதலாளியின் லாபமும் தொழிலாளியின் துயரமும்

இயந்திரம் வாங்கவும் உழைப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் தேவையான பணம் கைவசம் உள்ளவர்களுக்கு இது நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது. பெருமளவில் மூலப்பொருட்களை வாங்குவதற்கு இயன்றதால், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கவும், அவர்களால் முடிந்தது. பெரும்பான்மையினரான தொழிலாளர்களுக்கு உற்பத்திக் கருவிகளோ, பிறிதொரு வகையில் முதலீட்டுத் தொகையோ இல்லாதிருந்ததால் என்ன ஊதியம் தந்தாலும் தொழிற்சாலை முதலாளியிடமே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. விலைமலிவான மூலப் பொருட்கள், குறைவான ஊதியம் வழங்கல் இவற்றின் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்ததன்  விளைவாக முதலீடு செய்தவர்களுக்கோ லாபம் அதிகரித்தது.

இந்த லாபத்தில் இருந்து மீண்டும் இயந்திரங்களை வாங்கி, உற்பத்தி அளவை அதிகரிக்கவும், கைவினைஞர்களை நசுக்குவதற்காக பொருட்களின் விலையை கடுமையாகக் குறைத்தும் இந்த முதலாளிகள் தமது சொந்த நலன்களுக்காகப் இந்த அமைப்பைப் பயன்படுத்தியிருந்தனர். கைவினைஞர்கள் நலிவடைதலும், இயந்திர உற்பத்தி காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைதலும் சேர்ந்து கூலி வேலைக்கு என்றே விதிக்கப்பட்ட உழைப்பாளர்கள் அதிகரிக்கலாயினர். அவர்கள் வேலை கிடைப்பதற்காக தங்களுக்கிடையே போட்டியிட்டுக் கொண்டதும் முதலாளிகளுக்கு சாதகமானது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தொழில்துறையில் முன்னேற்றமாகவும், ஊதியக் குறைவின் புதிய சோதனைக் காலகட்டமாகவும் அமைந்திருந்தது. தொழிலாளர்களின் வயிறு ஒட்டிப் போனது. இதுதான் தொழிற்புரட்சி வரலாற்றின் சுருக்கமான வடிவம்.

சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தினமும் 15-16 மணிநேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டனர். எனினும் வயிறு நிறைய உண்பதற்கான ஊதியம் அவர்களுக்குக் கிட்டவில்லை. தொழிற்சாலைகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து ஆங்கிலேய நாடாளுமன்றம் நியமித்த ஒரு குழு நடத்திய விசாரணை நெஞ்சகம் நடுங்கும்படியான பல உண்மைகளை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது. ‘இயந்திர யுகம்’ ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துவதற்குப் பதிலாக கீழேதான் தள்ளியுள்ளது என்பது தெளிவானது.

கற்பனாவாத சோஷலிசம்

நவீன முதலாளித்துவத்தின் மேற்கூறிய குறைபாடுகளைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்த மனிதநேய மிக்கவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்கள் இதை எதிர்க்கத் தொடங்கினர். இதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்களின் நலனை இலட்சியமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு குறித்து அவர்கள் பேசத் தொடங்கினர். ஓவன் என்பவர் இங்கிலாந்திலும், செண்ட்ரூ சைமன், ஃபூரியே ஆகியோர் ஃப்ரான்ஸிலும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முதன்முதலாக வெளியிடத் தொடங்கினார்கள். பின்பு நவீன முதலாளித்துவம் அந்தந்த நாடுகளில் வளர்ந்துவரத் தொடங்கியதோடு இணைந்து இத்தகைய கருத்துடையோர் இதர நாடுகளிலும் உருவாயினர். அநியாயங்களையும் அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு மக்கள் திரட்சி சிறந்த எண்ணங்களை இறுகப் பற்றிக் கொண்டு எல்லாத் திசைகளிலும் இருப்பதனால் முறைகேடுகளின் அடிப்படையிலான முதலாளித்திற்குப் பின் அனைத்து திசைகளிலும் சோஷலிசமும் வளராமல் தீர்வு ஏற்படாது. இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து இங்கே உருவாகியுள்ள காந்தியமும் இதனுடைய ஒருவிதமான பிரிவுதான்

நவீன முதலாளித்துவத்தின் அநீதிகளை எதிர்ப்பதோடு நியாயத்தை நிலைநாட்டும் வகையிலான பொருளாதாரப் பங்கீட்டை இலட்சியமாக்குவதையும் செய்வது என்பதைத் தவிர, கற்பனாவாத சோஷலிசத்திற்கு என்று பொதுவாகக் குறிப்பிடத்தக்க யாதொரு சிறப்பம்சமும் இல்லை. இந்தச் சீர்கேடுகளை அழித்தொழிப்பது எப்படி என்பதில் பலவித கருத்துடையோர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளிடையே உண்டு.

இயந்திரத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பவர்கள்; இயந்திரத்தை சொந்தமாக வைத்திருக்கும் முதலாளி ஒரு நல்ல மனிதராக இருந்தால் நியாயமான பங்கீடு சாத்தியம் என்று எதிர்பார்ப்பவர்கள்; மத தத்துவங்களுடைய பிரச்சாரம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்; உற்பத்தியும் பங்கீடும் பொதுவுடைமையின் கீழ் இருக்க வேண்டும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதை இப்படி உருவாக்க வேண்டும் என்றோ, வந்தபிறகு அதன் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றோ உறுதியான முடிவுக்கு வந்திராதவர்கள் – இப்படி பலதரப்பட்டவர்களும் இவர்களிடையே உண்டு.

உலகம் முழுவதும் நலமாக இருக்கவேண்டும் என்ற விருப்பம்தான் இவர்களது எண்ணங்களுக்கும் செயல்களுக்கு அடிப்படை. எனினும் அதனுடைய பயன்பாட்டு முறைகள் குறித்து, நிகழ்வுகளின் எதார்த்தத்தைப் பொறுத்து அறிவுக் கூர்மையுடன் சிந்திக்கவோ, அதன் அடிப்படையில் தெளிவாக இயக்க திசைவழியை நிர்ணயிக்கவோ இவர்களுக்குத் திறன் இல்லை. அதனால்தான் இவர்கள் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முதலாளித்துவத்தின் தீமைகளை வெளிக்கொண்டு வருவதும், சமுதாயத்தின் கவனத்தை அதில் ஈர்க்கச் செய்வதும்தான் சோஷலிசத்தின் வளர்ச்சியில் இவர்களுக்கான இடம். இவர்களது பிரச்சார நடைமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட தேசியப் பிரச்சனைகளுக்குப் பதிலாக சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் சமூகவியலாளர்கள் என்ற பொருளில்  இவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

விஞ்ஞான சோஷலிசம்

சோஷலிசத்திற்கு அறிவியல் ரீதியாக ஓர் அடிப்படை இடம் பெற்றுத் தந்தவர்கள் கார்ல் மார்க்சும் ஃப்ரெடரிக் எங்கெல்சும் ஆவர். இவர்களுடைய சிந்தனைக்கும் செயலுக்குமான அடிப்படை வெறும் கற்பனையான கனவுகளோ, உணர்ச்சிகரமான மனித நேயமோ அல்ல. முதலாளித்துவ அமைப்பில் உள்ள சமுதாய சக்திகளை மிக விரிவாக ஆய்வு செய்து அதில் மறைந்து கிடக்கும் அநீதிகளையும் அவற்றை இயக்க ரீதியில் எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியதுதான் இவர்கள் இருவரின் தனிச்சிறப்பு!

தங்களின் அனுபவங்களுக்கும் மேலாக, ஏராளமான படைப்புகளைக் கற்றறிந்த பிறகு இந்த இரண்டு சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களை விளக்குவதற்கு இந்தச் சிறிய கட்டுரையில் சாத்தியமில்லை. அவற்றில் முக்கியமான சில சிறப்பு அம்சங்களை மட்டும் இங்கே எடுத்துக் கூறுகிறேன்.

 

  1. சமுதாயத்தை அரசியல், பொருளாதாரம், மதம், கலை என வெவ்வேறு பகுதிகளாகப்பிரிப்பதற்கு இயலாது. சமூக வாழ்க்கை ஒன்றுதான் பிரிக்கமுடியாதது. அதன் அடிப்படை பொருளுற்பத்தியில் உள்ள பரஸ்பர உறவுதான். உற்பத்தி முறை மாறியதோடு கூடவே அரசியல் இயக்கத்திலும், குடும்ப வாழ்க்கையிலும், மதத்திலும், கலைப் பார்வையிலும் மாற்றங்கள் வரத் தொடங்கும். பொருளுற்பத்திச் சாதனங்களை கைவசம் வைத்திருக்கும் மக்கள் பிரிவு – அதாவது வர்க்கத்தின் நிலையை ஒட்டியே இவையும் மாறும்.
  2. முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து தனிப்பட்ட வகையிலான ஒரு சமூக அமைப்பு வளர்ந்து வருவதுண்டு. முதலாளித்துவத்தின் முதன்மை நோக்கமான சொந்த லாபத்திற்கு ஏற்ற, அதற்கு இணக்கமான, அரசியல் அமைப்பு, மதம், இலக்கியம் போன்றவை அதில் இடம்பெற்றிருக்கும். அவற்றை ஒருசேர எதிர்க்காமல், முதலாளித்துவத்தின் பொருளாதார சீர்கேட்டை மட்டும் எதிர்க்கவியலாது. இவற்றிற்கெல்லாம் மையமான முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தில்புதியதோர் அமைப்பை உருவாக்குவதுதான் தொழிலாளர்களின் கடமையாகும்.
  3. இந்தக் கடமை, விரும்பியது போல செயல்படுத்தப்பட வேண்டுமென்றால், தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக ஒன்றுசேர வேண்டும். அரசு நிர்வாக இயந்திரம், நீதி, இலக்கியம், கலை போன்றவற்றின் இயக்கம் அதுவரை முதலாளிகளின் கையில் இருந்ததால், அவற்றைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் அரசியல் அமைப்பை அவர்கள் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். தொழிலாளர்கள் ஒன்றுசேரத் தொடங்கினால், பெரும்பான்மையோர் ஆட்சி, மக்களாட்சி இவையெல்லாம் இடம்பெயரும். சத்தியம், நியாயம், சமத்துவம் எல்லாம் முழுதுமாக அழியும். கலை கலைக்காகவே என்னும் கூக்குரல் அடங்கிவிடும். முதலாளிகளின் வர்க்க நலனை பாதுகாக்க உதவும் என்ற  காலத்திற்கு மட்டும் இவற்றின் புனிதத்தை நிலைநிறுத்தப்படும். அதனால் புரட்சிக்கு முன்னால் முதலாளித்துவத்தை அச்சமின்றி எதிர்க்கவும், புரட்சிக்குப் பிறகு அதன் மிச்சசொச்சங்களை இரக்கமென்பது துளியுமின்றி அடக்கிவைப்பதும், வர்க்க நலன்களை அழித்தொழிப்பதும்வேண்டும். இதன் விளைவாக வர்க்கபேதமற்ற சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், ஊட்டச் சத்துக்களை உட்கொள்ளவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாய்ப்பளிக்கின்ற ஒரு சமூக அமைப்பு உருவாகும். அது நிறைவேறுவதற்கான செயல்களை செய்வதற்குத் தொழிலாளி வர்க்கம் ஓர் அரசியல் கட்சியாகவும் உருவெடுக்க வேண்டியிருக்கிறது.

அறிவியல் ரீதியாகச் செயல்படுகின்ற ஒரு தத்துவக் கருத்தோட்டம், பயன்பாட்டிற்குரிய பொருளாதார அறிவியல், கவர்ச்சிகரமான, தெளிவான ஓர் இலட்சியத்துடன் கிளர்ந்து எழச் செய்கின்ற ஒரு பிரச்சார முறை – இவைதான் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உலகிற்குத் தந்த சோஷலிசத்தின் சுருக்கம். ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்தரமான ஓர் இடம், வழிபடத் தக்க  தலைமைப் பதவி அவர்களுக்குக் கிடைக்க வகை செய்தது, நடைமுறை ஒருங்கிணைப்புப் பணியில் அவர்கள் எடுத்துக்கொண்ட முக்கியமான பங்குதான்! சாதி, மதம், தேசம், வயது போன்ற யாதொரு வேறுபாடுமின்றி உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு சங்கத்தின் கீழ் ஒன்றிணைத்துக் காண வேண்டும் எனும் அவர்களின் விருப்பத்தை 1848-ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்று அறியப்படுகின்ற அதிகாரபூர்வ வெளியீட்டில் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதற்கு ஒரு வருடம் முன்னதாகத்தான் ‘கம்யூனிஸ்ட் கழகம்’ நிறுவப்பட்டிருந்தது. ‘புரட்சி ஆண்டு’ என்று அழைக்கப்படுகின்ற கி.பி. 1848-ல் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அரசியல் புரட்சிகள் கிளர்ந்தெழுந்தபோது, அவற்றில் முழுமையாகப் பங்கேற்று அரசியல் புரட்சிக்கு உதவும் வகையில் அவர்கள் உற்சாகமூட்டினர். ஆனால் அன்றைய புரட்சி பழமைவாதத்தின் வெற்றியில் முடிவுற்றதால் விஞ்ஞான சோஷலிசம் அரசியல் ரீதியாக தற்காலிகமாக தோல்வியை சந்தித்தது. இருந்தபோதிலும் அதன் பின்னரும் அவர்களது முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. அதன் விளைவாக 1864-ல் சர்வதேச தொழிலாளர் சங்கம் தோன்றியது. அதன் நிர்வாக அமைப்பு முறையை வடிவமைக்க முதலில் நியமிக்கப்பட்டவர் மாஜினி என்ற இத்தாலி நாட்டு புரட்சிக்காரர் என்றபோதிலும், அவர் தயாரித்தளித்த முன்வரைவு திருப்திகரமாக இல்லாததால், பின்னர் அதனை மார்க்சே செய்ய நேர்ந்தது. முறையாக ஒவ்வொரு வருடமும் ஆண்டுப் பேரவை, நிரந்தரமான ஒரு நிர்வாக அமைப்பு, நாடுகள் தோறும் ஒவ்வொரு தேசியக் கிளைகள் – இவைதாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் சுருக்கமான நிர்வாக வடிவம்.

அதிகபட்சமாக பத்தாண்டுகள் மட்டுமே நிலைத்த இந்த அமைப்பு தொழிலாளி வர்க்கத்திற்கு இரண்டு முக்கியமான அம்சங்களைத் தந்தது.

1)         விஞ்ஞான சோஷலிசத் தத்துவத்தை கடைப்பிடித்து தொழிலாளர்களை எவ்வாறு ஒன்றிணைக்க வேண்டும் என்று அதனை உருவாக்கியவர்களிடமிருந்தே கிடைத்த விளக்கம். ப்ரவுதான் (Proudhon), பக்கூனின் (Mikhail Bakunin) போன்ற பல்வேறு கருத்துக்களை உடைய பலரும் சங்கத்தின் செயல்பாட்டு முறையை உருவாக்க முயன்றனர் என்றாலும்  மார்க்சின் கருத்துக்களையே சங்கம் எப்போதும் ஏற்றுக் கொண்டு வந்தது.

2)  ஃப்ரெஞ்சுப் புரட்சி. இது சர்வதேச தொழிலாளர் சங்கத்துடைய, மார்க்சுடைய உருவாக்கமாக இல்லையெனினும், இந்த நிகழ்வில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது. புரட்சியின் விளைவாக உருவெடுத்த கம்யூன் தொழிலாளர்களுக்கு ஏற்ற ஓர் ஆட்சியதிகார இயந்திரம்தான் என்று சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பெயரால் மார்க்ஸ் அறிவித்திருந்தார். புரட்சிகரமான சமயங்களில் சோஷலிசவாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் மார்க்சின் கட்டுரைகள் விளக்கியதற்கும் மேலாக தொழிலாளர் ஆட்சியதிகாரத்தின் தன்மையையும், 1871-ஆண்டு நடந்த புரட்சியும் அவர்களுக்கு விளங்கவைத்தது.

பின்னர் உருவான ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளர் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தபோது, 1871 பாரீஸ் கம்யூன் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் லெனின் சோவியத்துகளை உருவாக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.

1873-ம் ஆண்டோடு சர்வதேச தொழிலாளர் சங்கம் மறைந்து போனது என்றாலும் உள்ளார்ந்த அறிவுடைத் தொழிலாளர்கள் உலக அளவில் ஓர் அடிப்படையில் ஒன்றிணைந்து தங்களின் வர்க்க நலன்களுக்காகப் போராட வேண்டியது எப்படி என்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதனுடைய குறுகிய ஆயுள் காலத்திற்குள்ளாகவே அது தெளிவாக்கியது.  சுருக்கமாகக் கூறினால், விஞ்ஞான சோஷலிசத்தின் சரியான தருணத்தையும் பயன்பாட்டையும் இந்த முதலாம் உலகத் தொழிற் சங்கம் தொழிலாளர் உலகத்திற்குக் கற்றுத் தந்தது.

இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம்

மார்க்சின் தலைமையிலான சர்வதேச தொழிலாளர் அமைப்பு மறைந்து போனது என்றாலும் சர்வதேச உணர்வோ, சோஷலிச உணர்வோ மறைந்துவிட்டது என்று அதற்குப் பொருளல்ல. அதன் பின்னரும் அது வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வந்தது. ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்தது. பிஸ்மார்க் என்ற ஜெர்மன் ஆட்சியரின் அடக்குமுறைகளால் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்திலோ ஃபேபியன் குழு, தொழிலாளர் கட்சி போன்ற பெயர்களில் சோஷலிஸ்ட் செயல்பாடு தீவிரமாக வளர்ந்தது. நாகரீகம் அற்றதாக, பழமையானதாகக் கருதப்பட்ட ரஷ்யாவிலும் கூட  தீவிரவாதச் செயல்பாட்டை, வன்முறைப் பாதையை கடைப்பிடித்த ஒரு சமூக ஜனநாயகக் கட்சி தோன்றியது. ஃபிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் மதிக்கத்தக்கதோர் அரசியல் செயல்பாட்டு அமைப்பாக மாறியிருந்தது!

இந்த நிலைமையில் தொழிலாளர்களின் இயக்கம் இப்படி சிந்திச் சிதறிக் கிடந்தால் போதாது என்ற ஒரு கருத்து சோஷலிச செயல்பாட்டாளர்களின் நெஞ்சங்களில் உதித்தது என்றால் வியப்பில்லை அல்லவா? 1889-ல் பாரீஸில் கூடிய ஒரு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மூலம் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது. ஒவ்வொரு நாட்டிலும் சோஷலிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் இதற்குப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவும், அதன் செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கவும் தொடங்கினார்கள்.

ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக நிலைமைகளை தெளிவாக்கும் புள்ளி விவரங்களும் இலக்கியப் படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு முறையான வகையில் வெளியிட சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு நிரந்தரமாகச் செயல்பட இந்த அமைப்பினால் இயன்ற போதிலும் இது பயணப்பட்டது சர்வதேசத் தொழிலாளர்களின் முதலாம் அகிலத்தின் பாதையில் அல்ல!

முதலாம் அகிலம் உலக அளவிலான புரட்சியாளர்களின் ஒரு சங்கமாக இருந்தது என்றால் இது பாராளுமன்ற ஜனநாயகவாதிகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்தது.  முதலாம் சங்கத்தின் செயல்பாட்டாளர்கள் புரட்சியின் அழிக்கவியலாத நிலைத்தன்மையில் உறுதிபெற்றவர்களாக இருந்தனர் என்றால், இரண்டாம் அகிலத்தின் தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்தது சட்டமன்றங்கள் மூலமான போராட்டத்தில்!

சுருக்கமாகக் கூறினால், இரண்டாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் விஞ்ஞானமும் இல்லை; சோஷலிசமும் இல்லை. ஆனால் சோஷலிசம் என்ற பெயர் மட்டும் எப்படியோ அதனோடு ஒட்டிக் கொண்டிருந்தது!

இந்த வேறுபாடு யுத்தம் குறித்து தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய நிலைபாட்டில் வெளிப்பட்டது. 1872-ல் பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான போர் வெடித்துக் கிளம்பியபோது, பிரான்ஸ் தொழிலாளர்கள் தங்களின் ஜெர்மன் தொழிலாளர் சகோதரர்களுக்கு உளமார்ந்த ஆதரவுடன் சோஷலிச வரலாறு குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், பல்வேறு நாடுகளில் முதலாளிகளுக்குள் நடைபெறும் சண்டை எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களையும் பாதிக்கிறது என்பதால் அதனை வலுவாக எதிர்ப்பது என்பதுதான் சோஷலிசத்தின் கடமை என்று அந்த நேரத்தில் (ஜெர்மனிக்கு எதிராக நிற்காது) எதிர்ப்பின்றி இருந்தார்கள். ஆனால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்திற்கு இவ்வளவு தெளிவான பார்வை இருக்கவில்லை.

மார்க்சியத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அவர்கள் யுத்தத்தையும் வெளிப்படையாக எதிர்த்தது சரிதான். ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும் யுத்தத்தின் மீதான வெறுப்பும் வெறும் புறத் தோற்றமாகவே இருந்தது. 1914-ல் வெடித்தெழுந்த உலகப் போரின்பொழுது இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது.  அதுவரையில் சோஷலிஸ்ட் தலைவர்கள் யுத்தத்திற்கு எதிரான தங்கள் நிலையை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் போர் துவங்கியதும் அவர்கள் ஆட்டம் காணத் தொடங்கினார்கள். தேசிய சோஷலிஸ்ட் சங்கங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தத்தமது நாட்டு அரசுகளுக்கு ஆதரவை உறுதிப்படுத்தலாயின. போருக்கான நிதி திரட்டிக் கொடுப்பது; போர்க்கால அமைச்சரவையில் இடம்பிடிப்பது; உலகளாவிய தோழமையையும் சோஷலிசத்தையும் கைவிட்டுவிட்டு தேசியத்தையும் முதலாளித்துவத்தையும் ஆதரித்துப் பிரச்சாரம் நடத்துவது ஆகிய இவற்றைத்தான் சோஷலிஸ்ட் தலைவர்கள் செய்தார்கள். நடைமுறையில் இதுவே இரண்டாம் உலகத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

இத்தகைய நடைமுறைக்கு எதிராக, எந்த நிலையிலும் போரினை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு, சிறுபான்மை எண்ணிக்கையினராக இருந்த போதிலும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு கட்சி உருவெடுத்திருந்தது. உலகப் போரை ஒவ்வொரு நாட்டிலும் இருந்த தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போராக மாற்றுவது என்பதுதான் அவர்களின் எண்ணம். எனினும் போரில் பங்கேற்கின்ற விஷயத்தில் எதிர்க்கருத்து உருவாகியதும், பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்துடையோர் உலகப் பெரும்போரில் இரு அணிகளில் இருந்து சண்டையிடவும் செய்ததால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் வீழ்ச்சியடைந்தது             என்றே கூறலாம்.

கம்யூனிசம்

இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் செயல்பட்ட காலத்திலேயே அதன் கருத்துக்களுக்கும், தலைமைக்கும் எதிராக ஒரு சங்கம் அதன் செயல்பாட்டாளர்கள் மத்தியில் உருவாகியிருந்தது.

தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து ஒரு புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் மார்க்சிய தத்துவத்திற்குப் பதிலாக நாடாளுமன்ற நடைமுறை மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற தவறான நம்பிக்கையை மட்டுமே புதிய சோஷலிஸ்ட் தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்றும் இந்தச் சிறுபான்மைக் குழுவினர் வாதிட்டனர்.

“பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம் அடிப்படையில் முதலாளித்துவரீதியில்தான் இருக்கிறது. முதலாளித்துவரீதியிலான ஒரு நிலவுடைமை வர்க்கமும், முதலாளித்துவ அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தொழிலாளி வர்க்கமும் தொழில் முதலாளித்துவத்தோடு ஒன்றிணைந்து உண்டாக்கத்தக்க ஒரு சூழ்நிலையை உருவாக்கவே இந்த முதலாளித்துவ நாடு விரும்புகிறது. இங்கே இருக்கும் தொழிலாளர்கள் சர்வதேச வணிகம், பிரிட்டிஷ் அடிமை நாடுகளின் வணிக உரிமைகளின் விளைவாக அதிகரித்து வரும் வருமானத்தை முதலாளிகளுடன் சேர்ந்து அனுபவித்து வருகின்றனர்”  என சில வருடங்களுக்கு முன்பு ஏங்கெல்ஸ் எடுத்துச் சொன்னது நடைபெற்று வருகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொண்டார்கள்.

முதலாளித்துவத்துடன் உடன்படிக்கை செய்து கொள்கின்ற தொழிலாளர் தலைவர்கள் மார்க்சின் தத்துவங்களை திருத்தி எழுதுகின்றனர். சோஷலிச சிந்தனை அனைத்து நாடுகளிலும் அதிகரித்து வருவது அவர்களது கவனத்தை ஈர்த்தது. இத்தகைய தலைவர்களின் ஒன்றுசேரலும், இந்த சிந்தனையாளர்களின் படைப்புகளும் தொழிலாளர் உலகத்தில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

யுத்தத்தை எதிர்த்து நிற்பது; தொழிலாளர் இயக்கத்தின் உலகளாவிய பார்வையை வலியுறுத்துவது; புரட்சியின் இன்றியமையாமையை எடுத்துரைத்துப் புரிய வைப்பது, சுருங்கக் கூறின், எந்தவகையிலான முதலாளித்துவத்தையும் தகர்த்தெறிதல் இவையே இவர்களின் நடவடிக்கைகளாக இருந்தன. ‘சோஷலிசம்’ என்ற புரிதலற்ற சொல்லுக்குப் பதிலாக மார்க்ஸ் முதன்முதலாகப் பயன்படுத்தியதும், புரட்சியைக் குறிப்பதுமாகிய ‘கம்யூனிசம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டார்கள்.

இந்த மனநிலை நீண்ட காலமாகவே இருந்தது என்றாலும் உலகப் போரோடு இணைந்து அது ஒரு தெளிவான வடிவமாக உருவானது. அதுவரையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாமகர்களும் தலைவர்களும் இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தனர். மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடித்து அந்தந்தக் காலத்தில் அரசியல் நிலையை ஆய்வு செய்கின்ற சிந்தனையாளர்கள் 1905 ரஷ்யப் புரட்சியைப் போன்ற மக்கள் நலச் செயல்பாடுகளுக்கான தலைவர்களுமாக இருந்தபோதிலும், சர்வதேச தொழிலாளர் நடவடிக்கையில் அவர்களுக்கு முக்கியத்துவம் அற்ற நிலைதான் இருந்து வந்தது. எனினும் உலகப் போரோடு சேர்ந்து இவர்கள் புகழ் வளர்ந்து வந்தது. போருக்கு எதிரான முழக்கம் துவக்க காலங்களில் மிகவும் பலவீனமாக இருந்தபோதிலும், போரின் விளைவாக தொழிலாளர்களின் துயரங்கள் பெருகியபோது கம்யூனிஸ்டுகளின் சமாதான கருத்து அவர்களிடையே வெகுவாகப் பரவத் தொடங்கின.

ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற பல நாடுகளிலும் புரட்சி கிளர்ந்தெழுந்தது. “உலகப் போர்க்காலத்தை உள்நாட்டுப் போராக மாற்றுக!”, “சண்டைக்குக் காரணமான முதலாளித்துவத்தை தோற்கடியுங்கள்!”, “அதிகாரம் யாவும் மக்களுக்கே!” – இப்படிப்பட்ட முழக்கங்கள் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. முதலில் ஜனநாயக ரீதியில் கிளர்ந்தெழுந்த ரஷ்யப் புரட்சி ஒரு சோஷலிசப் புரட்சியாக முழுமை பெற்றது. அதன் தலைவரான லெனின் தொழிலாளி வர்க்கத்தின் மீட்பர் என்ற நிலையில் போற்றுதலுக்கு உரியவரானார். சோஷலிசத்திற்கு இன்று குறிப்பிடத்தக்க ஒரு இடம் உருவாகிவிட்டது. புரட்சிகரமான, அறிவியல் ரீதியிலான சோஷலிசம் பயன்பாட்டிற்கு உரியதுதான் என்பதும் தெளிவானது.

ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்தை ஈர்த்த உடனடியான விஷயம் ரஷ்யாவில் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதுதான். குழப்பமானதொரு நிலையை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எதிரிப்படைகள் சோஷலிச ஆட்சியை வீழ்த்த முதலாளித்துவ அரசுகள் அனுப்பி வைத்த படைகள், ரஷ்யாவின் வாயிலை வந்தடைந்தன. அவற்றைத் துரத்தியடிக்க வேண்டும். எவரொருவரும் கடன் கொடுக்கத் தயாராக இல்லாததால் ரஷ்யா பொருளாதார ரீதியாக வளர்வது சிரமமானதாக இருந்தது. நாட்டின் உயர்வர்க்கத்தினர் கலகம் விளைவித்து தொழிலாளர்களின் ஆட்சியை எதிர்த்து வந்தார்கள்.  கடுமையான பஞ்சம் நிலவியது.

இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் சோஷலிச அரசாங்கத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்று ஒவ்வொரு நிமிடமும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தன. எனினும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ் இருந்த ரஷ்ய மக்கள் இவற்றை மனத் திடத்துடன் எதிர்கொண்டு வந்தனர். நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க தொழிலாளர்களின் ‘செம்படை’ உருவாகியிருந்தது. அது ரஷ்யாவில் இருந்த பழமைவாதிகளை  தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கியது. (இந்தப் பழமைவாதிகள் வெள்ளை ரஷ்யர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) மூச்சுவிட ஆசுவாசம் தேட சற்று கால அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொழிலாளர் அரசு முதலாளித்துவ நாடுகளுடன், அவமானகரமானது என்றாலும், சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது. பொருளாதார வளர்ச்சியில் அதன் கவனம் முழுவதும் குவிந்தது. புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இடைத்தரகர்களின் ஒரு சில விருப்பங்களை நிறைவேற்றும் ஒருவித ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் தியாகம் செய்தாவது இயந்திரங்களையும் தொழில் கருவிகளையும் வாங்கி தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. மிகப்பெரும் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், பாலங்கள் கட்டப்பட்டன. வெளிநாட்டு வணிகம் அரசுடைமை ஆனது. வேளாண் பணியையும் கூட்டாகச் செய்யத் தொடங்கினர். இது ஒரு  பக்கம்.

இன்னொரு பக்கத்தில், பள்ளிகள், நூலகங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், திரைப்படம், நாடகம் போன்றவற்றை ஊக்குவித்து கல்வியறிவை பெருக்கினார்கள். ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பெண்கள் ‘பிள்ளைப் பேற்றுக்கான வெற்று இயந்திரங்கள்’ என்ற நிலை மாறியது.

சுருங்கக் கூறின்,  புதியதொரு சமூகநீதி, புதியதொரு கலாச்சாரம், புதியதொரு கலைஞானம், புதியதொரு பொருளாதார அமைப்பு ஆகியவை புதிய (தொழிலாளர்களது) அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட ரஷ்யாவில் உருவாகின. இந்தப் புதிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்குக் கூட அதன் எதார்த்தத்தையோ, பயன்பாட்டையோ எதிர்த்துக் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்றானது.

புரட்சிக்குப் பின்னர் ரஷ்யா ஒரு பூலோக சொர்க்கமாகிவிட்ட்தோ என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு. அங்கே இருக்கும் ஆட்சிமுறையிலும், சமூக அமைப்பிலும் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களும் உண்டு. அவர்களிடம் ரஷ்யப் புரட்சியின் தலைவர்களில் ஒருவர் இப்படித்தான் கூறினார்: “ பல நூற்றாண்டுகளாக வளர்ந்து மண்டிக் கிடக்கின்ற புதர்க் காடுகளை அழிப்பதற்கு இத்தனை குறுகிய காலத்திற்குள் முடியும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை!” புரட்சிக்கு முன்னரும் இன்றைக்கும் இருக்கின்ற ரஷ்யாவை ஒப்பிட்டுப் பார்த்து நடைமுறையிலும் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மக்கள் அதிக வளர்ச்சியை அடைந்திருக்கிறார்களே என்றும், இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே இத்தனை அதிக வளர்ச்சியுற்ற தேசமோ, வளர்ச்சியை உருவாக்கிய அரசியல் கட்சியோ இருக்கிறதா என்றும்தான் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனையில் நிச்சயமாக ரஷ்யப் புரட்சி, அதனை உருவாக்கி வளர்த்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டைப் பெறும்.

ஆயினும், ரஷ்யாவில் ஒரு சோஷலிச சமுதாயம் நிறுவப்பட்டதனால் மட்டுமே பயனில்லை. இதர நாடுகளிலும் அது நடைமுறைப்படுத்தப்படாதபோது, ரஷ்ய சோவியத் அரசும் கூட ஆபத்திற்கு உள்ளாகும். அதனால் இதர நாடுகளிலும் புரட்சி நடத்தி, சோஷலிசம் நிறுவப்படுவதில் ரஷ்யத் தலைவர்கள் கவனம் செலுத்துபவர்களாக இருந்தனர். இந்த நோக்கத்துடனேயே, யுத்தத்திற்கு எதிராக இருந்த சோஷலிஸ்டுகளின் இயக்கத்தை மூன்றாம் உலகத் தொழிலாளர் சங்கம் அல்லது  சர்வதேச கம்யூனிஸ்ட் ஸ்தாபனமாக மாற்றினர். சோஷலிசத்தின் பிறப்பிடமாகிய ரஷ்யாதான் அதன் தலைமையிடம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை! இதர நாடுகளில் புரட்சி நடத்துவதற்குரிய நடைமுறைத் திட்டங்களை இந்தக் கூட்டமைப்பு ஆலோசிக்கத் தொடங்கியது என்றும் இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. ஆனால் முதலாவது நடவடிக்கை (ரஷ்யப் புரட்சி)யைப் போல இது வெற்றிகரமாக இல்லை என்பது இனிவரும் பத்திகளில் இருந்து தெளிவாகும்.

புரட்சியின் தோல்வியும் பாசிஸத்தின் எழுச்சியும்

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த நேரத்தில் ஐரோப்பாவில் மிகப் பெரும்பாலான நாடுகளும் புரட்சிக்கு உகந்த நிலையில்தான் இருந்தன. யுத்தம் காரணமாக ஏழைகளின் துயரம் இரண்டு மடங்காகப் பெருகியிருந்தது. ஏழைகளுக்கிடையில் அதிருப்தி வளர்ந்தது.

இதன் விளைவாக ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் புரட்சி துவங்கியது. ஜெர்மனியில் நடந்தது ஏறக்குறைய ரஷ்யப் புரட்சியைப் போலவே வெற்றி பெற்றதுதான். ஹங்கேரியில் சில நாட்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியே நடந்தது. ஆஸ்திரியாவும் ஒரு புரட்சி நாடாக இருந்தது. எனினும் இந்தப் புரட்சிகளுக்கெல்லாம் ரஷ்யப் புரட்சியுடன் மிக மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருந்தது. லெனினுடைய தலைமையின் கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரஷ்யாவில் உருவாகியிருந்தது போல வேறு எந்தவொரு நாட்டிலும் சுயமான வலிமை இல்லாதிருந்தது. மற்ற எல்லா இடங்களிலும் தொழிலாளர் இயக்கங்கள் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் கருத்துக்களை ஏற்றிருந்த மிதவாத சோஷலிஸ்டுகளின் கைகளில் இருந்தது. முதலாளிகளை தயவு தாட்சண்யமின்றி அடக்கி ஒடுக்கிவிட்டுத் தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் என்ற வழிமுறை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை. நாடாளுமன்றம் முதலான மக்களாட்சி அமைப்புகள் வழியாக தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தலாம் என்றும், தனிமனித சுதந்திரம் சோஷலிசத்தின் பாதையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான் என்றும் அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு ஒவ்வொரு புரட்சியின் விளைவாகவும் அந்தந்த நாடுகளில் தோன்றியவை ஜனநாயகரீதியான ஓர் ஆட்சி அமைப்பாக இருந்தன. அதில் தொழிலாளர்களுக்கு யாதொரு முக்கியத்துவமும் இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் நில உடமையாளர்களுக்கும் புரட்சிக்கு முந்தைய காலத்தைப் போலவே சுதந்திரம் இருந்தது. மிகவும் மிதமான பல தொழிற்சட்டங்களை தவிர தொழிற்சாலையை பொதுச்சொத்தாக ஆக்குவதோ, நிலப்பிரபுக்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவதோ நடைபெறவில்லை.

தொழிலாளி வர்க்கத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு ஒரு ‘செஞ்சேனை’யும் புதிய ஆட்சியமைப்பைப் பாதுகாக்க இருக்கவில்லை. பழைய அதிகாரிகளும் படைத்தளபதிகளும் தங்களின் சுகமான பதவிகளில் தொடர்ந்தனர். சுருங்கச் சொன்னால், ‘மிகக் குறைந்த அளவிலானதொரு சோஷலிசம் இணைந்து உருவான நாடாளுமன்ற ஆட்சிதான் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளுக்குப் பின்னர் உருவாகியிருந்தது.

உண்மையில், இதைக்கூட முதலாளிகள் விரும்பவில்லை. எனினும் புரட்சிக்குச் சாதகமான சூழ்நிலை நாட்டில் உருவாகியிருந்ததால் அவர்கள் இதனை எதிர்க்கவில்லை. சோஷலிஸ்டு தலைவர்களையும் அவர்கள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தனர். அவர்களுடன் உடன்படிக்கை செய்தபடியே காலம் கடத்தினார்கள். பின்னர் புரட்சிகர மனோநிலை சற்று குறைந்தபோது ( அவ்வாறு அது குறைவதற்கும் சோஷலிஸ்டுத் தலைவர்களையே அவர்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று தனியாக குறிப்பிட்டுச் சொல்வதும் பொருத்தமானதே) தங்களின் உண்மையான நிறத்தை (இயல்பை) வெளிப்படுத்தவும் முதலாளிகள் தயக்கம் காட்டியவில்லை.

பழைய தொழிலாளர் தலைவர்களையும் வேலையற்ற இளைஞர்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போக்கிரிகளின் சங்கங்களையும் இவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். சோஷலிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கத்தவரையும் தொழிற்சங்கங்களையும் ஒழித்துக் கட்டுவதற்கும் அமைப்பு ரீதியாக இவர்கள் ஏற்பாடு செய்தனர்.  ‘கருப்புச் சட்டை’க்காரர்களும், ‘பச்சை சட்டை’க்காரர்களும் தொழிலாளர் இயக்கங்களில் புகுந்து கலகம் விளைவிப்பது  சாதாரண நடைமுறையானது. வேலைநிறுத்தங்களையும், கிளர்ச்சிப் போராட்டங்களையும் சட்டரீதியாக நடத்தும்போது அங்கே சென்று ரகளை செய்கின்ற ரவுடிகளுக்கு குறைவான தண்டனையும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு கடுமையான தண்டனையும் தருவதென்பது அரசுகளுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.  பாசிஸம் உலகில் உருவெடுக்கத் துவங்கிவிட்டது. இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதற்குப் பரவலான இடம் கிடைத்தது. பாசிஸத்தைப் பற்றி என்னவெல்லாம் கருத்து கூறினாலும் கீழ்க்காணும் எதார்த்தமான சில உண்மைகள் அனைவராலும் ஏற்கத்தக்கதாகவே இருக்கின்றன.

  1. அது கம்யூனிஸத்திற்கு, விஞ்ஞான சோஷலிசத்திற்கு எதிரான இயக்கம் ஆகும். தொழிலாளர் வர்க்க நலன்களை ‘தேசத்தின் பொது நலன்’ என்ற பெயரில் அது எதிர்க்கிறது.
  2. அதன் தலைவர்கள் வெளியே யாராக இருந்தாலும், உண்மையில் அதன் கடிவாளத்தைப் பிடித்திருந்தது அதன் தலைவர்களான முதலாளிகள்தாம்! அதிகாரத்தை அடைவதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர்கள்பாசிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். பின்னர் முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
  3. வளர்ந்து வருகின்ற முதலாளித்துவத்திற்கு சாம்ராஜ்ய சக்தி தேவை என்பதால் ஏகாதிபத்திய மோகம் பாசிஸத்தின் ஓர் இயல்பான தன்மையாகும்! அதனால் இயல்பாகவே அது யுத்தத்தை ஆதரிப்பதுடன் யுத்தத்திற்கு ஆதரவான மனப்பாங்கினை மக்களிடையே வளர்த்தெடுக்கவும் செய்கிறது.

வேறுவகையில் கூறவேண்டுமென்றால், வளர்ந்துவரும் சோஷலிச சக்திகளை எதிர்த்து முதலாளித்துவ ரீதியிலான சமூக அமைப்பைப் பாதுகாப்பதற்காக, முதலாளித்துவம் மேற்கொள்கின்ற தந்திரம்தான் பாசிஸம்! முன்னே கூறிய முதலாளித்துவத்தின் அனைத்து குணங்களும் பாசிஸத்தில் உண்டு. அதனுடைய ஜனநாயக நிறம் மட்டுமல்ல; முடிந்துபோன நிலவுடமைப் பிரபுத்துவத்தை சிதைக்கின்ற ஒரு சமூக சக்தி என்ற நிலைக்கு உதித்தெழுந்த முதலாளித்துவ வர்க்கம், நிலவுடமைப் பிரபுத்துவத்தின்  கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொதுமக்களின் மதிப்பிற்குரிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்ததால், ஜனநாயகத்தின் கடிவாளம் அதன் வசம் இருந்தது. அல்லது தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகத்தின் மூலம் வெள்ளையடிக்க (மூடி மறைக்க) அவர்களால் முடிந்தது.  எனினும் நிலப் பிரபுத்துவத்தின் ஆதிக்கம் தகர்த்தெறியப்பட்டதோடு சமூக மாற்றம் முழுமையானதுடன் சேர்ந்து முதலாளித்துவத்தின் அந்த இயல்பு காணாமல் போய்விட்டது. அது நிலவுடமைப் பிரபுத்துவம் போலவே மாறியது.

அதனையும் எதிர்ப்பதற்கும் புதியதொரு வர்க்கம் உதித்தெழுந்த பிறகு, முதலாளிகளால் தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகம் என்ற பெயரில் மறைத்து வைப்பதற்கு இயலாமல் போனது. அப்போது அந்தத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு முதலாளித்துவம் தன்னுடைய விஸ்வரூபத்தை எடுத்தது. அதுதான் பாசிஸம்!

ஒன்றுபட்டு எதிர்கொள்க!

உலகில் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள உள் முரண்பாடுகளும், கட்சிப் பிரச்சனைகளும் முடிவுற்று, பொது எதிரியாகிய பாசிஸத்திடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணைந்த போராட்டம் இன்றியமையாதது என்று சோஷலிஸ்டுகளுக்குப் படிப்படியாகப் புரியத் தொடங்கியது. இரண்டாம், மூன்றாம் சர்வதேச சங்கங்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் உலகப்போரின் போதும், அது முடிந்த பின்னரும் எல்லா இடங்களிலும் உண்டாயிற்று. தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருந்த வெற்றி கைநழுவிப் போனதில் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்திய மனோபாவம் மன்னிக்கத்தக்க ஒன்றாக கம்யூனிஸ்டுகளுக்குத் தோன்றவில்லை. கம்யூனிஸ்டுகளின் தயவு தாட்சண்யமற்ற அழித்தொழிக்கும் முறை சோஷலிசத்தின் லட்சியத்தின் முழுமைக்கு இடையூறாகும் என்று எதிர்த்தரப்பும் நம்பியது.

எங்கெல்லாம் சோஷலிச செயல்பாடும் தொழிலாளர் சங்கங்களும் இருந்தனவோ அங்கெல்லாம் சோஷலிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ‘இழுபறிப் போட்டி’ நடந்தது. அவ்வளவு ஏன்? பாசிஸம் உயரே எழத் துவங்கிய வேளையிலும் கூட இந்த மோதல் தொடர்ந்து நிகழ்ந்தது. கம்யூனிசத்தைக் காட்டிலும் அதிகம் ஏற்கத்தக்கது பாசிஸம் அல்ல என சோஷலிஸ்டுகள் சிலர் சந்தேகம் கொண்டார்கள். பாசிஸத்தை எதிர்கொள்வதற்காகவாவது பாராளுமன்ற போக்கு கொண்டவர்களோடு உடன்பாடு செய்து கொள்வது அறிவுபூர்வமானதாக இருக்கும் என்று கம்யூனிஸ்டுகளும் நம்பவில்லை!

ஆயினும் பரஸ்பர நம்பிக்கையும் இணக்கமும் இன்றியமையாததாக ஆகிவிட்ட சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் இத்தாலியில் மட்டும் பிரபலமாகி வந்த பாசிஸம் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. மற்றொரு யுத்தம் வெடித்துக் கிளம்புவதற்கான அறிகுறிகள் வெகுவாகத் தென்படத் தொடங்கின. பரஸ்பரம் முழுமையான நம்பிக்கையுடன் இல்லையென்றாலும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள்.  பாசிஸத்தின் பேயாட்டங்களை எதிர்கொள்ளவும், யுத்த மனோபாவத்தை எதிர்க்கவும் எல்லாவிதமான சோஷலிஸ்டுகளும் தோளோடு தோள் நின்று போராடலாயினர். யுத்தத்திற்குக் காரணகர்த்தாக்களான முதலாளிகளின் அமைப்புதான் பாசிஸம் என்ற போதிலும் பன்னாட்டு மன்றத்துடன் இணைந்து, போரை எதிர்ப்பதற்கு சோவியத் ரஷ்யா தயாரானது. “யுத்தத்தையும்  பாசிஸத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!” எனும் முழக்கம் எங்கணும் உரக்க ஒலித்தது.

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தோமெனில், இது வெற்றிகரமாகவே முடிவடைந்துள்ளது. ஒன்றிணைந்த போராட்டம் எல்லா நாடுகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஃபிரான்ஸிலும் ஸ்பெயினிலும் ஒன்று சேர்ந்துள்ள புரட்சிகர கட்சிகள் அரசாட்சியை கைப்பற்றியுள்ளன. இதற்கு எதிராக ஸ்பெயினில் பழமைவாத கட்சிகள்கலவரத்தைத் துவக்கியுள்ளன. அதனை அடக்குவதற்கு புரட்சிகர அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தற்போது சொல்வதற்கில்லை.

முடிவுரை:

சோஷலிசம் இன்று உலகத்தின் முதன்மையான ஓர் அரசியல் சக்தியாக உருமாறியிருக்கிறது. ரஷ்யாவில் ஆட்சியதிகாரம் செய்வது சோஷலிஸ்டுகள்தான்! சீனாவில் கணிசமான ஒரு பகுதி  சோஷலிஸ்ட் ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது. ஸ்பெயினிலும் ஃபிரான்ஸிலும் புரட்சிகர அரசுகளில் சோஷலிசத்தின் செல்வாக்கு வெகுவாக உள்ளது. இந்தியா போன்ற (பிரிட்டிஷ்) சாம்ராஜ்ய சக்திகளின் பாதங்களில் உள்ள நாடுகளில் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளும் சோஷலிசத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளன. தகர்ந்துபோன முதலாளித்துவத்தின் எதிர்காலத்தில் விருப்பமற்ற நடுத்தர வர்க்கத்தினர், ஏகாதிபத்தியத்தில் இருக்கும் பாசிஸத்தின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, “சோஷலிசம் தான் உலகின் பாதுகாப்பிற்கான ஒரே வழி” என்று புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். “சோஷலிசத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது முழுமையான பேரழிவை எதிர்கொள்ளவோ உலகம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது” என்றுதான் ஜி.டி.எச். கோள் என்ற அறிஞர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சோஷலிசத்திற்கான எதிர்காலத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பில்லை!

(1936 அக்டோபர் 26 ‘மாத்ருபூமி’ வார இதழில் வெளியான தோழர் இ.எம்.எஸ். அவர்களின் இந்தக் கட்டுரை 2017 ஜூன் 11 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டது.)

கேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா?

– காஞ்சிபுரம் வாசகர் வட்டம்
ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.” என்கிறார்.
வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தவுடன் முதலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படுகிறது. ஆனால் முந்தைய சமூகத்தில் நிலவிய நிலைமைகளை மாற்றாமல், முன்னேறிய சமூகத்தை ஏற்படுத்த முடியாது. முதலாளித்துவச் சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட தனி மனித சிந்தனை, கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், நிர்வாக முறை என அனைத்தும் தொடர்கின்றன. “இந்த நிலைமைகளைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்குப் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுதல் அவசியம்” எனக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இவ்வாறு அரசு அமைக்கப்பட்டவுடன் அந்தச் சமூகம் சோசலிசக் கட்டத்தை எட்டுகிறது. முழுமையான சோசலிச அமைப்பை எட்டுவது நேர் பாதை அல்ல. ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பல நிலைப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
சோசலிச சமூகம் மனித வரலாற்றின் முக்கிய நவீன உற்பத்தியமைப்பாகும். உற்பத்திக் கருவிகள் சமூகத்தின் சொத்தாக்கப்படுவதுடன், பெரும்பான்மைப் பாட்டாளிகளுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்கிறது. லாப வெறிக்கு மாறாக மனித சமூகத் தேவை அடிப்படையில் செயல்பட்டு இயற்கையை, சூழலைப் பாதுகாக்கிறது.
தன்னுடைய அரசும் புரட்சியும் நூலில் இதுபற்றிய விவாதத்தை விளக்குகிறார் வி.இ.லெனின், அரசியல் மாறுதலுக்கான ‘முதல் நிலை கம்யூனிச’ (அல்லது) சோசலிசக் காலகட்டத்தில் உற்பத்தி ஆற்றல்கள் சமூக உடைமையாக இருக்கும், உற்பத்தியில் விளைவதும் சமூகத்திற்கே சொந்தமாக அமைந்திடும். முதலாளி வர்க்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து அகற்றி, உற்பத்திச் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் இந்தக் காலகட்டம் சோசலிச சமூகம் எனப்படுகிறது. ‘சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற லட்சியத்தை எட்டுவதில், ஒவ்வொரு நாடும், தன் சொந்த தேசிய நிலைமைகள், உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சி, உலக நிலைமைகளைக் கணக்கிட்டு பாதை வகுத்து நகர்கிறது.
உலகம் பல நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில், பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிசப் புரட்சிகள் வெற்றியடைந்துள்ளன. பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன. அந்த அனுபவங்களை உள்வாங்கியே தற்கால உத்திகள் வகுக்கப்படுகின்றன.
மக்கள் சீனம் சோசலிச கட்டத்தின் ஆரம்ப நிலையில் உள்ளதாகவே குறிப்பிடுகிறது. சோசலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்குமான முரண்பாடு முக்கியமாக அமைந்துள்ள நிலையில் – முதலாளித்துவ நெருக்கடிகளை, சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்பாக மாற்றியமைப்பதே இன்றைய அவசியக் கடமையாகும். முதலாளித்துவ அரசாட்சியை வீழ்த்திய பிறகுதான் சோசலிசத்தைக் கட்டமைப்பது பற்றிய சோதனைக்கான அவசியம் எழுகிறது.

இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

மார்க்சிஸ்ட் கட்சியின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் பரிசீலனையில், பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. வலதுசாரி திருப்பம் என்று எதைச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது.

முதலில் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்பிரயோகம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். 1789 பிரெஞ்ச் புரட்சியின் போது, தேசிய நாடாளுமன்றத்தில் புரட்சிக்கு ஆதரவானவர்கள் அவைத் தலைவருக்கு இடதுபுறமும், மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வலதுபுறமும் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர். பொதுவாக முற்போக்குவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் சமத்துவம், ஜனநாயகம், பரந்த பார்வை, சமத்துவ பார்வை, பாகுபாடுகள் எதிர்ப்பு, பொதுநலன் நாடல் போன்றவை இணைந்தது இடதுசாரிக் கண்ணோட்டம். பிற்போக்குவாதம், சமூகப் படிநிலை அப்படியே இருக்க வேண்டும் என்ற கருத்து, பாசிசம், சர்வாதிகாரம், ஆளும் வர்க்க நலன்களை பகிரங்கமாக ஆதரிப்பது, மதவாதம், சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்கள் இணைந்தது வலதுசாரிக் கண்ணோட்டம். பொதுவாக இடதுசாரிக் கருத்தியல் முற்போக்கு என்றும், வலதுசாரி கருத்தியல் பிற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு ஒரு விஷயத்தில் முற்போக்குப் பார்வையும், மற்றொன்றில் பிற்போக்குப் பார்வையும் இருக்கலாம். அதை மட்டும் வைத்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று எடை போட்டுவிட முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தப் பார்வை இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று பார்க்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி கருத்தாக்கங்களிலும் பல நிறங்கள், நீரோட்டங்கள் உள்ளன.

பொதுவாக இந்த அளவுகோலில் உலக அரசியல் அரங்கில் கட்சிகள், கொள்கைகள், தத்துவங்கள் எடை போடப்படுகின்றன. இந்தியா உட்பட எந்த ஒரு சமூகத்திலும் இரு பகுதியாளர்களும் உள்ளனர். இரண்டு கருத்துக்களும் இருக் கின்றன. இருப்பதை மாற்றாமல், அதற்குள்ளேயே சில முன்னேற்றங்களைத் தேடும் மையத்துவவாதிகளும் (Centrists) உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அல்லது ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் எந்த வகை என்று பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் தேசத்தை அவ்வகையில் செலுத்த அந்தக் கட்சி முயற்சிக்கும். அது இடதுசாரிப் பாதையில் செலுத்த முயற்சிக்கிற கட்சியின் ஆட்சியாக இருந்தால், மக்களுக்கு அது நன்மை தரும். வலதுசாரிப் பாதையில் செலுத்துகிற ஆட்சியாக இருந்தால் பொது நலனுக்கு அது ஆபத்தாக முடியும்.

தேசியவாதம் என்பது முற்போக்கா?

உதாரணமாக, ஹிட்லரின் ஆட்சியின் அடிப்படையாக ஆளும் வர்க்க நலன் என்பதுடன் பாசிஸம், இன அழிப்பு உள்ளிட்டவை இருந்ததால் வலதுசாரி என்று சொல்கிறோம். தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளை, மத அடிப்படைவாதம், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம் போன்ற குணாம்சங்களின் அடிப் படையில் வலதுசாரி என்றே வரையறுக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் அடிப்படை பார்வை யூத இனவெறி, எனவே அதை வலதுசாரி அரசு என்று பார்க்கிறோம். அமெரிக்காவில் செயல்பட்ட கூக்ளக்ஸ் கிளான் போன்ற அமைப்புகளைப் போல் தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வந்து உழைக்கும் தொழிலாளிகளை வேட்டையாடும் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசியம் என்ற பெயரில் இவை வன்முறையில் இறங்குகின்றன. இவை வலதுசாரி அமைப்புகளே. மதம், தேசியம், இனம், மொழி என்று பல அடையாளங்களில் எது வேண்டுமானாலும் அல்லது எல்லாமே வலது சாரிக் கருத்தியலின் மையமாகப் பயன்படக் கூடும்.

உலகின் பல நாடுகளில் தேசியம் அல்லது தேசியவாதம் என்பது வலதுசாரிப் பாதையின் முகமூடியாகப் பயன்படுகிறது. தேசியம் என்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழக்கூடும். தேசியம் என்பதில் பல வகை உண்டு. அதிலும் வலதுசாரி இடதுசாரி கண்ணோட்டங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் கூடிய வர்க்க நலன் இணைந்த தேசியம் உண்டு. சில அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரபு தேசியம் என்பது பேசப்படுகிறது. ஹிட்லர் முன்வைத்தது உயர் இனப் பெருமையை மையப்படுத்தும் தேசியம். இதன் மூலம் இதர தேசிய இனங்களை அழித்தொழிப் பது என்பது நியாயப்படுத்தப்பட்டது. இது பாசிஸத்துக்குப் பயன்பட்டது. தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுத்தும் மத அடிப்படைவாத தேசியம் இருக்கிறது. அமெரிக்கா தன் பல்வேறு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உள்நாட்டுக்குள் தேசியத்தை முன்வைத்துப் பேசுகிறது. இந்தியாவில் பிஜேபியின் பிரச்சாரம் கலாச்சார தேசியம் என்பதை மையப்படுத்துகிறது. அதாவது இந்துக் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல என்பது. தேர்தல் காலத்தில், நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத் வம்தான் இந்தியாவின் அடையாளம் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இது இதர மதங்களைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக உருவகப்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைப்பது, காப்பது அல்ல. எனவே, தேசியம் என்பதே முற்போக்கு ஆகி விடாது. அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே நிர்ணயிப்புக்கு வர முடியும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவீன இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மத அடிப்படையில் இந்துராஷ்டிரமாக இந்தியா அமைய வேண்டும் என்று வற்புறுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உட்பட பெரும்பான்மையினர் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, சமத்துவம் என்ற அஸ்திவாரம் தேவை என்று வலியுறுத் தினர். இறுதியில் அரசியல் நிர்ணய சபையால் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, பன்முகத்தன்மை கொண்ட நவீன இந்தியா உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விட்டுவிடவில்லை என்பது தான் உண்மை.

மேல்பூச்சு

காந்தி கொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தடையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகப் பிகடனம் செய்துகொண்டது. ஆனால், அதன் அரசியலை கவனிப்பதற்காக பாரதீய ஜனசங்கம் உருவாகி, அதன் தொடர்ச்சி யாகத் தற்போது பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலாச்சார தேசியம், இந்து தேசியம் என்ற பேரில் சங் அமைப்பின் வலதுசாரி இந்துத்வ அரசியல் கருத்தியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது நடந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் தீவிரமாக நடக்கும் என்பதைத்தான் வாஜ்பாயி ஆட்சியில் பார்த்தோம். ஆனால், அப்போது பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை யில் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், பல விஷ யங்களை நினைத்த அளவு செய்யமுடியவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி என்ற பெயர் இருந் தாலும், இது பிரதானமாக பிஜேபி ஆட்சியாகவே இருக்கிறது. முக்கிய அமைச்சரகங்கள் உள்துறை, பாதுகாப்பு, அயல்துறை, தொழில், வர்த்தகம், மனிதவளம், ஊரக வளர்ச்சி எல் லாமே பிஜேபி கையில்தான். இந்துத்துவக் கருத்தியல்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர இது மிக உதவியாக இருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தர பிரதேசத்தில் மட்டும் 27க்கும் மேற்பட்ட மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றைப் பற்றிய சிறு விமர்சனம் கூட மோடியால் செய்யப்பட வில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் சுதந்திர தின உரையில் வகுப்புவாத, சாதிய மோதல்களுக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த மதவெறிக் கொடுமைகளுக்கு, பிரதமர் வேட் பாளராக இருந்த போது கூட வருத்தம் தெரிவிக்காதவர் திடீரென மாற்றிப் பேசுவதால் யார் நம்பிவிடப் போகிறார்கள்? கடந்த காலத்தில் பிரதான மதவெறித்தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுக் களின் அறிக்கையைப் பார்த்தாலே உண்மை புரியும். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் (மும்பை 1992-93), டி.பி.மதான் கமிஷன் (பிவாண்டி, ஜால்காவ், மஹத் 1970) ஜோசஃப் வித்யாத்தில் கமிஷன் (தலைச்சேரி 1971), ஜக்மோஹன் ரெட்டி கமிஷன் (ஆமதாபாத் 1969), வேணுகோபால் கமிஷன் (கன்னியாகுமரி 1982), ஜிதேந்திர நாராயண் கமிஷன் (ஜாம்ஷெட்பூர் 1979) ஆகிய கமிஷன்கள் எல்லாமே, இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஒன்று, மத மோதல் களைத் தூண்டுவதில், நடத்துவதில் இந்துத்துவ அமைப்புகளின் கிரிமினல் நடவடிக்கைகள், வன் முறைகள்; இரண்டு, காவல்துறையின் சிறு பான்மை விரோத அணுகுமுறை. விசாரணைகளின் போது, இந்துத்துவ ஆசாமிகளின் பங்கேற்பை மறைப்பதற்குக் காவல்துறையும், நிர்வாகமும் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி பார்வை இருப்பவர்கள் பொருத்தப் படுவார்கள் என்பதும் புரிகிறது. இதையெல்லாம் செய்து கொண்டே, மோதல்களை நிறுத்த வேண்டும் என்று ஒரே ஒரு உரையில் மட்டும் பொதுவாகப் பேசுவது மேல் பூச்சு தான்.

திருத்தப்படும் வரலாறு:

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்து தான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப் படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய நிபுணர்களின் சந்தேகத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய அவ சியம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத் திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங் களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிஹார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் எழுதியதை, தோழர் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியிருக்கிறார். பூகோள ஆய்வுகளை இது மீறுகிறது என்பது மட்டுமல்ல, மக்களை விட்டு விட்டு நிலப் பிரதேசம் மட்டும் இடம் மாறுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். திப்பு சுல்தான் போன்றவர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்ததும், சில இந்து மன்னர்கள் கோயில்களை இடித்ததும் வரலாற்றின் பகுதிதான். வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திருத்துவது பேராபத்தில் போய் முடியும்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உரு வாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக் கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக்கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும் என்கிற செய்திகள் அண்மையில் வெளிவந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத் தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார். இது, மார்க்சிஸ்ட் கட்சியால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது, அரசு அதை மறுத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் வரலாற்றைத் திருத்துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது.

அதேபோல் இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இல்லை. இந்தியாவுக்குள் குடியிருப்பது என்பதுதான் அடிப்படை. எனவேதான் குடியுரிமை அடிப்படையில் மதச்சார்பில்லாமல் சம உரிமை கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இரண்டாம் தரத்தினராக நடத்தப் பட வேண்டும் என்ற கோல்வால்கரின் கூற்றும் இதில் அடிபட்டுப் போகிறது. அரசியல் சட்டத் தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த காலத்தில் ஓயாமல் எழுந்ததற்கு இதுவே பிரதான காரணம். தற்போதும் இதை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படும்.

கற்பனைகள் மட்டுமே கல்வியாய்:

அரசியல் அமைப்புச் சட்டக் கோட்பாடுகள், பொதுவாக ஒரு நாட்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை. அப்படிப் பார்த்தால், கல்வித் திட்டம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல், சமத்துவக் கருத்துக்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நவீன தாராளமய காலத்தில் கல்வி வணிகமயமான சூழலில், இந்த மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். இந்த மதிப்பீடுகள் மேற் கத்திய மதிப்பீடுகள் என்று குறை சொல்லி, கல்வியை இந்திய மயமாக்கப் போகிறோம் என்று பிஜேபி புறப்பட்டிருக்கிறது. இந்திய மரபில் முற்போக்குக் கருத்தியல்கள் எப்போதும் இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால், பிஜேபி அமல்படுத்த முனையும் இந்தியமயம், இந்திய மரபின் பிற்போக்கு அம்சங்களைத் திணிப்பது தான். வாஜ்பாயி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தீனா நாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங் கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன் னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத் துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மஹாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன் றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ் டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்தார், ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாத வர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாத்ரா தலைமையில் ஒரு தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டு, கல்வியை இந்தியமயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அது அரசுக்குக் கொடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்வியின் உள்ளடக்கம் கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டதாக மாறினால் அரசியல் சட்டத்தின் முற்போக்கு மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிவைத்து விட்டு, சமத்துவத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியலைக் கற்றுக் கொடுப்பது எத்தகைய ஒரு முரண்பாடு? எதிர்கால சந்ததியைக் கடைந்தெடுத்த மதவாதிகளாக, அறிவியலின் வாசனையேபடாத அறிவிலிகளாக வளர்ப் பதற்காகவா கல்விக்கூடங்கள்? சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தப் பாடத்திட்டத்தைத் திணிப்பது ஒருமைப்பாட் டுக்கு எவ்வாறு உதவும்? தனியார் கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது உட்பட முக்கிய அம்சங்களில் அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது, அரசியல் சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதற்குத் தானே தவிர, அடுத்த தலைமுறையைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்துவதற்காக நிச்சயம் அல்ல. அனைத்து மதங்களைச் சார்ந்த நூல் களையும் அறிமுகப் படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவை நூலகத்தில் இருக்கட்டும். எல்லோரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்காகப் பயன்படட்டும்.

அயல்துறை கொள்கையில்:

பொதுவாக அணிசேரா இயக்கம், சோஷலிச நாடுகளுடன் நட்புறவு போன்ற அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்டது. ஏகாதிபத்திய நாடுகளுடன் நெருக்கம், அதற்கேற்ப உலக நிகழ்வுகளின் மீது ஏகாதிபத்திய சாய்மான நிலைபாடுகளை எடுப்பது என்பது அயல்துறை கொள்கையை வலதுசாரிப் பாதையில் திருப்புவதாகும். இப்பாதை ஏகாதிபத்திய உலகமய கட்டத்தில் காங்கிரசாலும் பின்பற்றப்பட்டதுதான்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியது காங்கிரசாக இருந்தாலும், அன்றைக்கு அதை ஆதரித்து, இன்றும் அதில் தொடர்வது பிஜேபி. பாலஸ்தீனத்தை அநீதியாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு, ராணுவ ஒத்துழைப்பு போன்றவையும் வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒரு கடினமான, வெறியை உருவாக்கும் அணுகுமுறையையே (Jingoism) கடைப்பிடித்தது. மோடி பதவி ஏற்பின் போது சார்க் நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்து ஒரு பொது தோற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தியது அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

பகிரங்கப்படும் ஆணாதிக்கம்

பெண் சமத்துவம் மறுக்கப்படுவதும், ஆணாதிக்கக் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதும் நிச்சயம் வலதுசாரிப் பார்வை தான்.

1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனு ஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. இதில், நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கோல்வால்கர் கேள்வி எழுப்பினார். சாவர்க்கர், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவர்கள் சொல்லுகிற மனு சாஸ்திரம், பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறது. அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உடைமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது என்பதுதான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலை இதிலிருந்து உருவானதுதான். எனவேதான் மனுதர்மத்தில் பெண் அடிமை நிலையில் வைக்கப்படுகிறாள். பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனுதர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை. எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும் என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, சுதந்திர இந்தியாவிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்துவ சக்திகளால் முன்னிறுத்தப்படுகிறது.

இந்து கோட்பாட்டு மசோதாவை 4 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாமல் இழுத்தடித்து, ஒரு கட்டத்தில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்தி, அம்பேத்கர் அவர்களையே நோக வைத்து, சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலக வைத்தது அன்றைய இந்துத்துவவாதிகள்தான். பிஜேபி ஆண்ட பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்பட்டன.

மகள், மருமகள், சகோதரியின் மானத்தைக் காப்போம் என்று மகா பஞ்சாயத்துக்களை நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகள், சிறுபான்மை எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் நின்றே அதைப் பார்க்கின்றனர். காதல் போர் (Love Jihad)என்று பெயர் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கும் இவர்கள், பெண்கள் தேர்வு செய்வது முஸ்லீம் இளைஞனாக இருந்தால், அதைப் பாலியல் தாக்குதல் என்று வர்ணித்துத் தலையிட்டு மத மோதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் 2013-ல் பதிவு செய்யப்பட்ட 34,000 பாலியல் வல்லுறவு வழக்குகளில் எத்தனையில் தலையிட்டி ருப்பார்கள்? எனவே இந்துத்துவ சக்திகளின் தலையீடுகள் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கு விதையாகியிருக்கிறதே தவிர, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் இல்லை.

பெண்கள் அணியும் உடை காரணமாகத்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதை வலுவாகச் சொல்லும் பகுதியினரில் சங் பரிவார ஆட்களுக்கு முதல் மதிப்பெண் கொடுக்கலாம். ஒரு ‘சின்ன ரேப்’ நடந்ததால் சுற்றுலா பாதிக்கப்பட்டுவிட்டது என்று உலகையே அதிரவைத்த டெல்லி நிர்பயா வழக்கு குறித்து மத்திய பிஜேபி அமைச்சரே அண்மையில் பேசியிருக்கிறார். கௌரவக் கொலைகளைத் திட்டமிட்டுக் கொடுக்கும் காப் பஞ்சாயத்துக்களில் இவர்களுக்குப் பங்கு உண்டு. காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதுடன், தம்பதியர் அல்லாத ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலியுடன் ‘கலாச்சார காவலர்களாக’ வலம் வருகிற இந்துத்துவ அமைப்புகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண் சமத்துவம் இவர்களுக்கு ஏற்புடையதல்ல; பெண்ணைத் தாய், மகள், சகோதரி என்ற கோட்டுக்குள் நிறுத்துகிறார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதவாதம், சாதியம் போன்ற கருத்தியலில் பகிரங்கப்படுவது ஆணாதிக்கம்தான்.

சமூக நலம் மெல்ல இனிச் சாகும்:

தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பது, சமூகச் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது, தேச வளர்ச்சியை காவு கொடுத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமான பொதுத்துறை பங்குகளை விற்று தனியார்மய மாக்குவது, உள்நாட்டு வெளிநாட்டு பெருமுத லாளிகளின் நலனுக்காக எல்லா விதிகளையும், சட்டங்களையும் வளைப்பது போன்றவை வலது சாரிப் பொருளாதாரப் பாதையின் முக்கிய மைல் கற்களாகும். காங்கிரசாலும் பின்பற்றப்பட்ட இப்பாதை, மோடி ஆட்சியில் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களிலேயே வெளிப்படு கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே தனித் துறையை உருவாக்கியது பிஜேபியே. பல்வேறு காரணங் களுக்காகக் காங்கிரஸ் செய்யத் தயங்கிய கார்ப்ப ரேட் ஆதரவு காரியங்கள் எல்லாம் மோடி ஆட்சி யில் துரித கதியில் நடக்கின்றன. ரயில்வேயில் அந்நிய நேரடி மூலதனம், காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத் துறையில் இருப்பதை உயர்த்துவது போன்றவை இதற்கு உதாரணம். திட்டக் கமிஷனை ஒழிப்பது என்ற அவர்களது ஆலோ சனை இதன் உச்சகட்டம். கொஞ்சநஞ்சம் இருக்கும் சமூக நலத்திட்டங்களைக் கண்காணிப் பது, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் இனி அவ்வளவுதான். சமூக நலம் மெல்லச் சாகும் என்பது நிதர்சனம். இது கூட்டாட்சி முறைமைக்கும் முரணானது. தொழிலாளர் நலச்சட்டங்களும் தளர்த்தப்படுகின்றன.

சர்வதேச நிதி மூலதனம் கோலோச்சும் உலகமய காலத்தில், மூலதனம் பொது சொத்துக்களை சூறையாடும், அடித்துப் பிடுங்கும், ஆட்சியாளர் களை அதற்கேற்றாற் போல ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் தத்துவார்த்த தீர்மானம் கூறியதை நடப்பவை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரம், பண்பாடு படும்பாடு

புராதன இந்தியாவின் சாதிய அமைப்பு நியாயமானது, மேன்மையானது என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புதிய தலைவரும், கல்வியை இந்தியமயப் படுத்துவதற்குக் குத்தகை எடுத்திருக்கும் பாத்ராவும் அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூக அமைப்பின் அருவருப்பான, அநீதியான அம்சத்தை ஆரத் தழுவுகிறார்கள். அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதற்கு மாறாக, கோல் வால்கர் கூறிய படி, இந்தி நிச்சயம், சமஸ்கிருதம் லட்சியம் என்ற பாதையில் பிரதேச மொழிகளை சில மாற்றுக் குறைந்தவையாக ஆக்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. பண்டி கைகள் ஏற்கனவே பலிகடா ஆகிவிட்டன. ஏகே 47 துப்பாக்கியுடன், டைனோசார் மீது வலம் வரும் பிள்ளையார்தான் இப்போது கதா நாயகன். கலாச்சார தேசியம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பலி கொடுத்து, மதம் சார்ந்த அதுவும் அவர்கள் நினைக்கும் உயர் சாதிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற அவர்களது கடந்த கால முயற்சிகளைத் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சடங்குகள், விழாக்கள் அனைத்துப் பகுதியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாக மாற்றப் படுகின்றன. அதில் வணிக நோக்கமும் உண்டு.

பல்வேறு வகை ராமாயணங்கள் இந்தியாவில் புழங்குகின்றன என்பது குறித்து பத்மஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய நூல், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தி லிருந்து சமீபத்தில் நீக்கப் பட்டிருக்கிறது. விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம் என்று ஒரு பழமொழி இருந்தாலும், சீதை ராமனின் தங்கை என்று ஒரு வகை ராமாயணம் கூறுகிறது. புத்த ஜாதகக் கதைகள் அதற்கு ஒரு சாட்சி. ஒரு குறிப்பிட்ட வகை ராமாயணம் தான் அக்மார்க் முத்திரை பெற்றது என்று எப்படிக் கூறமுடியும்? கதை களும், கற்பனைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுபவை. அவற்றை செழுமையான அனுப வங்களாக, பன்முகத்தன்மையைப் பிரதிபலிப் பவையாகப் பார்க்க வேண்டும். மதச் சார்பற்ற நிறுவனங்கள் வலதுசாரி நிர்ப்பந்தத்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி இரையாவது எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்து கூறும் உரிமையை அடித்து நொறுக்குகின்றனர். சர்வ தேசப் புகழ் பெற்ற வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்தைப் பெங்குவின் நிறுவனம் விலக்கிக் கொள்ள வைத்தது, தலித் செயல்பாட்டாளர் ஷீத்தல் சாத்தே மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வருவதைத் தடுத்தது போன்ற சமீபத்திய உதாரணங்கள் நமக்கு முன் உண்டு. திரைப்படங் களுக்கு, மத்திய தணிக்கைக்குழுவுக்கும் மேலான சூப்பர் தணிக்கையாளராக சங்கப் பரிவாரம் நடப்பதும் நமக்குத் தெரியும். மோடி ஆட்சி மத்தியில் இருப்பது, இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால், முன்னைக் காட்டிலும் வேகமாக வும், வெறியுடனும் இவை நடந்தேறுகின்றன.

மன வயல்களில் ஊன்றப்படும் விஷநாற்று

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்பிற்போக்குக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை சொல்லத் தயங்கிய பிற்போக்குக் கருத்தியல்கள் பெருமிதத்துடன் சொல்லப் படுகின்றன. பத்தி ரிகைகளில் அத்தகைய கருத்தியலைக் கொண்ட கட்டுரைகள் அதிகரித்திருக்கின்றன. சமூக பொது புத்தியின் ஓர் அம்சமாக இவை மாற்றப்படு வதற்கு நீண்ட காலம் ஆகாது. இல்லை இல்லை, இந்திய மக்கள் விட்டுக்கொடுத்து விட மாட்டார் கள், தமிழகப் பாரம்பரியம் அப்படிப் பட்டதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், இதை மட்டுமே கூறுவது நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதாகும். வலதுசாரிக் கருத்தியல் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாகக் கொள்ளை நோய் போல் பரவி வருகின்றது. தொட்டால் பரவும் நோயை ஒட்டுவார் ஒட்டி (Contagious)என்பார்கள். அதைப்போலவே இது பரவும். கிராம்சி சொல்வதைப் போல், இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தின் தாக்கம் என்பது அணுவுக்குள் நடக்கும் மாலிக்யூல்களின் மாற்றம் போல் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு பொருளாக அதாவது வேறுபட்ட உணர்வாக, கண்ணோட்டமாக அது உரு மாறும்.

ஏற்கனவே உள்ள பிரதான ஆளும் வர்க்கக் கட்சி அம்பலப்பட்டுப் போய் நிற்கும் போது, மக்கள் நெருக்கடிகளுக்குள் சிக்கி விழி பிதுங்கும் போது அந்த அதிருப்தியை மதவாத சக்திகள் பயன்படுத்தி முன்னேறுமா அல்லது இடதுசாரிகள் அதைப் பயன்படுத்தி வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஜனநாயகம் நோக்கி முன்னேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. அப்படிப்பட்ட திருப்பு முனையில் இந்தியா இன்று உள்ளது.

சமூகத்தை, அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் வலதுசாரிப் பாதையில் இழுத்துச் செல்லும் பணி கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தூண்கள் தூக்கி நிறுத்தியுள்ள மோடி அரசால் அவசரமாக செய்யப் படுகின்றது. பொருளாதாரத்தில் நவீன தாராளமயம், இதர துறைகளில் மத அடிப்படை வாதம் என்பதே இவர்களின் பாதை. இதர பல அரசியல் கட்சிகள் நவீன தாராளமயத்தை ஆதரிக்கிறார்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிஜேபியுடன் அணி சேர்ந்தவர்களாக அல்லது சேரத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர். எனவே, இரண்டு துhண் களையும் தகர்ப்பதில் இடதுசாரிகள் மட்டுமே இதில் முன்முயற்சி எடுக்க முடியும்.

இடதுசாரிகளும், தொழிலாளி வர்க்க அரசியலும் பின்னுக்குப் போகும் போது, பிற்போக்கு அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கும், வலுப்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக, அறிவியல், மதச்சார்பற்ற, இடதுசாரிப் பார்வையைப் பாதுகாத்து முன்னேற்ற அவசரமாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. அப்படியானால் இடதுசாரிகள் பலப்பட வேண்டும். ஒரு பொது மேடைக்கு வர வேண்டும். வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள மேலும் நண்பர்களை அடையாளம் கண்டு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் கெட்டிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே ஒரு பரந்த மேடையை உருவாக்குவது முன்னெப்போதையும்விட அவசரம். அதற்கான செயலில் இறங்குவது பெரும் அவசியம்.