தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)

கார்ல் மார்க்ஸ் – ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்

Download APP: >>>>

செயலி வடிவில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: Click Here

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆன்லைனில் வாங்க: Click Here

(தமிழில்: மு.சிவலிங்கம்)

முதலாளிகளும் பாட்டாளிகளும்[1]

இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் [2] வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.

சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும்[3] (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம், சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.

வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட,  சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள்  அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.

நிலப்பிரபுத்துவ  சமுதாயத்தின்  அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள  நவீன  முதலாளித்துவ சமுதாயம்  வர்க்கப்  பகைமைகளை   ஒழித்துவிடவில்லை.  ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.

எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, [அதாவது] முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக  மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.

ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன.

அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வர்த்தகம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாகச் சரக்குகளிலும் ஏற்பட்ட பெருக்கம் – ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.

நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்முறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டோர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்முறையினால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை முன்புபோல் நிறைவேற்ற இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில்முறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. வெவ்வேறு கூட்டாண்மைக் கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.

இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்தச் சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாய் ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.

நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல்  இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியை அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தன்னுடைய மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ்  அது  ஓர்  ஒடுக்கப்பட்ட   வர்க்கமாக  இருந்தது;    மத்திய   காலக்   கம்யூனிலோ[4] ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது; இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் மூன்றாவது வகையின[5] (third estate) மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. “இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற “பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், அற்பவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைச் சுயநலச் சூழ்ச்சி என்னும் உறைபனி நீரில் மூழ்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, சாசனப்படுத்தப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாக, கட்டற்ற வர்த்தகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், மத, அரசியல் பிரமைகள் திரையிட்டு மறைத்திருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை [முதலாளித்துவ வர்க்கம்] ஏற்படுத்தியுள்ளது.

இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும்  கூலி-உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது.

முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.

பிற்போக்காளர்கள் மிகவும் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடு கால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்வுகளையும், சிலுவைப் போர்களையும்[6] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்தச் சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக  மாற்றி அமைத்திடாமல்  முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. திடமானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தன் வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.

உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி,  ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுசார் உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.

அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல்தொடர்புச் சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சரக்குகளின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது. அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறும்படி கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள்தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள்தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் தனிமைப்பாட்டிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.

மக்கள்தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்திச் சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்திச் சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக, நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்திச் சாதனங்கள், பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயத்திலும் பட்டறைத் தொழிலிலும் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இப்போது இணக்கமின்றிப் போயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால்  விலங்குகளாய் ஆயின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் கட்டற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் –  இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் –  தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளின் தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும் நவீன உற்பத்திச் சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் –  இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி  உற்பத்திச் சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன.  முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத்  தளைகளாகிவிட்டன. உற்பத்திச் சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்திச் சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது, மேலும் விரிவான, மேலும் நாசகரமான, நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன.

ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற வணிகப் பண்டத்தைப் போன்று ஒரு சரக்காகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.

பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்குத் தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாய் ஆகிவிடுகிறார். அவருடைய வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே, ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால், ஒரு சரக்கின் விலையானது,  ஆகவே உழைப்பின் விலையானது[7], அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்குக் கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது.

நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீரர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமின்றி, நாள்தோறும், மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ, அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக,  மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.

உடலுழைப்புக்கான திறமையும் உடல்வலிமையும் எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்விதத் தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.

ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.

நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுவாகப் பகுதிநேரத் தொழில்புரிவோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகிவிடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.

 பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலவந்தமாக மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல்,  முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது. இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால், தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ, அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும், மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே  தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைக் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல்தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன. ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்கள் அனைத்தையும் வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாய் இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும், பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.

மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. முதலில் பிரபுக்குலத்துடன் போராட வேண்டியிருந்தது. அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது. எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.

இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்முறையானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருபகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.

அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், [அதாவது] சிறு உற்பத்தியாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தம்முடைய நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.

பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய “ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.

ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பது போலவே, இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பது போலவே, அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.

மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கைவசப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால், பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கைவசப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கைவசப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.

இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேல்தட்டு அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] எழுச்சிபெற இயலாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் – முதலாளித்துவ வர்க்கத்தைப் பலவந்தமாக வீழ்த்துவதானது, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இட்டுத்தரும் கட்டம்வரையில் – நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.

இதுநாள் வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள்தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றதாய் உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றுவிட்டது. ஏனெனில், அதன் அடிமையானவன், அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய வக்கில்லை. மேலும், அவனிடமிருந்து [அவன் உழைப்பின் மூலம்] தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.

முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின்  மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கைவசப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.


[1]    முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]                   

[2]    அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்* (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் # (Maurer) நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன்@ (Morgan) வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, பகைமை பாராட்டும் வர்க்கங்களாக, முடிவில் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்முறையைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]

      *
[ஹாக்ஸ்தவுசென்  (Haxthausen,  1792-1866): ஆகுஸ்த்  ஹாக்ஸ்தவுசென் என்பது இவரது முழுப்பெயர். பிரஸ்ஸியாவைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர். அரசாங்க அதிகாரியாகச் செயல்பட்டவர். ருஷ்யாவின் நிலவுடைமை உறவுகளில் கிராமச் சமுதாய அமைப்பின் மீத மிச்சங்களை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார்.]

      #  [
மவுரர் (Maurer, 1790-1872): கியோர்க் லுத்விக் மவுரர் என்பது இவரது முழுப்பெயர். பெயர்பெற்ற ஜெர்மன் வரலாற்று அறிஞர். முதலாளித்துவக் கருத்தோட்டம் கொண்டவர். தொன்மைக்கால, இடைக்கால ஜெர்மனியின் சமூக அமைப்பை ஆராய்ந்தவர். ] 

      @
[மார்கன் (Morgan, 1818-1881): லூயிஸ் ஹென்றி மார்கன் என்பது இவரது முழுப்பெயர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். பெயர்பெற்ற இனப்பரப்பு விளக்கவியல் அறிஞர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொடக்க காலச் சமூகம் பற்றிய வரலாற்று ஆசிரியர். இயல்பான பொருள்முதல்வாதி.]

[3]    [கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக்  குழுமத்தின்  முழு  உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட  உறுப்பினர் இல்லத்தின்  எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]         

[4]    “கம்யூன்”  என்பது  ஃபிரான்சில்   புதிதாக   உருவாகி   வந்த  நகரங்களுக்கு   இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற  முறையில்  வட்டார  சுயாட்சியையும்,  அரசியல்  உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன.  பொதுவாகக்  கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும்,  அவ்வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக்  கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]

                        இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]                      

[5]    [மூன்றாவது வகையினம் (The Third Estate): முடியாட்சி மன்னர் காலத்தில் ஃபிரெஞ்சு அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாக்கம். சமூகம் மூன்று வகையினமாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது வகையினம் (The First Estate) மத குருமார்களையும் (Clergy), இரண்டாவது வகையினம் (The Second Estate) பிரபுக்களையும் (Nobility) கொண்டது. மூன்றாவது வகையினம் சாதரணப் பொதுமக்களைக் (Commoners) கொண்டது. முடிமன்னர் எந்த வகையினத்திலும் சேராதவர். மூன்று வகையினத்துக்கும் அப்பாற்பட்டவர். மூன்றாவது வகையினம் முதலாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியது. இவர்கள் அனைவருக்கும் உரிய பொதுவான தன்மை என்னவெனில், இவர்கள் பெருஞ்செல்வம் படைத்தவர்கள் அல்ல. ஆனாலும், மற்ற இரு வகையினத்தவருக்கும் கடுமையான வரிப்பணம் செலுத்த வேண்டும்.]                   

[6]    [சிலுவைப் போர்கள்: 11-13 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நிலப்பிரபுக்களும், உயர்குடி வீரர்களும் கிழக்கு நாடுகள் மீது நடத்திய இராணுவ- காலனி பிடிக்கும் படையெடுப்புகளைக் குறிக்கிறது. ஜெரூசலத்திலும், பிற “புனிதத் தலங்களிலும்” உள்ள கிறிஸ்துவப் புனித சின்னங்களை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டல் என்னும் மதப் பதாகையின்கீழ் இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன.]     

[7]    [உழைப்பின் விலை: மார்க்ஸ், எங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமான “உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.]            

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை

ஜி.ராமகிருஷ்ணன்

“முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவியலாதவை” என மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உறுதிபடக் கூறினார்கள்.

1848-ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பிரதி (ஜெர்மன் மொழியில்) வெளியிடப்பட்டது. தீப்பொறி வேகத்தில் அடுத்தடுத்து பல மொழிகளில், பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியானது. இவ்வாறு வெளியான அறிக்கைக்கு மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து இரண்டு முன்னுரைகளும், மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்ஸ் தனியாக ஐந்து முன்னுரைகளும் எழுதியுள்ளனர். ஒவ்வொரு முன்னுரையிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நிர்ணயிப்புகளை ஒப்பிட்டு, பொருத்திப் பார்த்து சரியாக மதிப்பீடும் செய்துள்ளனர்.

முதலாளித்துவம் வீழ்ச்சியுறும் என்ற நிர்ணயிப்பின்படியே 1871-ம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டில் தொழிலாளி வர்க்கம் அந்நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தை புரட்சியின் மூலம் கைப்பற்றியது. இரண்டு மாதங்களுக்கு மேல் அதனால் தக்க வைக்க முடியவில்லை என்றாலும் மார்க்சும், ஏங்கெல்சும் கூறிய அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான முன்னுதாரணமான முதல் புரட்சிதான் பாரீஸ் கம்யூன்.  

1872-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய ஒரு முன்னுரையில் மேற்கண்ட பாரீஸ் கம்யூன் புரட்சியைப் பற்றி குறிப்பிட்டதோடு, 1882-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய முன்னுரையில் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பீடு செய்து “ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடியாகி … கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப்புள்ளியாக பயன்படக் கூடும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1917-ம் ஆண்டு நவம்பர் 7 அன்று லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 1949-ல் சீனாவிலும், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், 1950களில் வியட்நாம், கொரியா, 1959-ம் ஆண்டு கியூபா என அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது எவ்வாறு சாத்தியமானது?  உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்திற்கு அவரவர் வாழும் நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு பொதுச் செயல்திட்டமாக அமைந்தது.

“பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது” என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தது யூகத்தினால் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மார்க்சும், ஏங்கெல்சும் தனியாகவும், இணைந்தும், அக்காலத்தில் நிலவிய தத்துவ,  பொருளாதார, அரசியல் சூழலை ஆய்வு செய்து அதனடிப்படையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்தனர். வேறுவகையில் சொல்வதானால், கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய ஆண்டுகளில் இருவரும் இணைந்து உருவாக்கிய இயக்க இயல், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினை நடைமுறைப்படுத்திட (Application) உருவாக்கப்பட்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற செயல்திட்டம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் பற்றி லெனின் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்;  இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.”

அக்கால அரசியல், பொருளாதார, தத்துவ வளர்ச்சிப் போக்குகளை இயக்க இயல், வரலாற்று இயல் அணுகுமுறை அடிப்படையில் அறிக்கையின் பல பகுதிகளில் அவர்களுக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.

சுதந்திரமானவனும் – அடிமையும், உயர்குலச் சீமானும் – பாமர குடிமகனும், நிலப்பிரபுவும் – பண்ணை அடிமையும், முதலாளியும் – தொழிலாளியும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் – ஒடுக்கப்படுவோரும் தீரா பகைமைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கத்திற்கும் – ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையறாத போராட்டம் வரலாற்று நெடுகிலும் நடந்து வந்தது என்பதைத்தான் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்” என  கூறுகிறார்கள்.

மனித குல வரலாற்றை மேற்கண்டவாறு இயக்கவியல் முறையில் ஆய்வு செய்த மார்க்சும், ஏங்கெல்சும் டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை தங்களுடைய நிர்ணயிப்புக்கு ஆதாரமாக கருதினார்கள். மார்க்ஸ் தனது உற்றத் தோழன் ஏங்கெல்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில், இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை விளக்கிடும் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் (உயிரின் தோற்றம்), மனித சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் பற்றிய தங்களது ஆய்வை நிரூபிப்பதற்கு துணையாக இருப்பதாக   எழுதினார்.

“டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை இந்த வரையறைப்பு வரலாற்று இயலுக்கு ஆற்றப்போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845க்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறையை நோக்கி படிப்படியாக நெருங்கி வந்து கொண்டிருந்தோம்” என ஏங்கெல்சும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தின் சகல அம்சங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து கொண்டிருந்த இந்த இரண்டு மேதைகளின் சந்திப்பு மார்க்சியத் தத்துவத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

1844 ஆகஸ்ட் கடைசியில் பாரிஸில் மார்க்சை ஏங்கல்ஸ் சந்தித்தார். அவர் இங்கிலாந்திலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்தார். அவர் அப்போது பாரிஸ் நகரத்தில் பத்து தினங்கள் தங்கியிருந்தார். அப்போது இருவரும் அநேகமாக எல்லா நேரத்தையும் ஒன்றாகவே கழித்தனர். அவர்களுடைய நேரடியான நாள்தோறும் நிகழ்ந்த கலந்துரையாடல் அவர்களுடைய கருத்தோட்டங்கள் அநேகமாக அத்தனை பிரச்சனைகள் மீதும் தத்துவம் நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுவதும் ஒன்றுபோல் இருந்தன. முழு கருத்தொற்றுமை நிலவியது.

“1844 கோடைக்காலத்தில் பாரிஸில் நான் மார்க்ஸிடம் சென்று அவரை சந்தித்துப் பேசியபோது எல்லா தத்துவத் துறைகளிலும் எங்கள் இருவருக்கிடையில் இருந்த முழுமையான உடன்பாடு தெளிவாகத் தெரிந்தது. எங்களுடைய கூட்டுப்பணி அன்றிலிருந்தே தொடங்கியது” என ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

1840களின் துவக்கத்திலேயே இருவரும் தனியாகவும், கூட்டாகவும் பொருளாதாரம், தத்துவம், சோசலிசம் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகளில் இறங்கினர். “இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை” என்ற நூலில் இங்கிலாந்தில் தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகளால் ஒட்டச் சுரண்டப்படுவதும், இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவதும்,  தங்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க ஆலை முதலாளிகளுக்கு எதிராக போராடுவதும் ஆகிய பல்வேறு அம்சங்களை ஏங்கெல்ஸ் தனது நூலில் விளக்குகிறார். மேலும், முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம்தான் தலைமை தாங்கும் தகுதியுள்ளது எனவும் ஏங்கெல்ஸ் பதிவு செய்திருக்கிறார். மேலும், ‘அரசியல், பொருளாதாரம் பற்றிய விமர்சனக் குறிப்பு என்ற ஏங்கெல்சினுடைய கட்டுரையையும், இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை என்ற நூலையும் படித்த மார்க்ஸ் தன்னுடைய பல கட்டுரைகளில் அவற்றை எடுத்தாண்டிருக்கிறார்.

1843லிருந்து 1845 வரை மார்க்ஸ் பாரீஸில் இருந்தார். இக்காலத்தில் சில இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியதோடு அக்கால பொருளாதார, தத்துவ பிரச்சனைகள் குறித்து பல குறிப்புகளை தயார் செய்தார். இந்த கையெழுத்து பிரதிகள் பிற்காலத்தில் ‘பாரீஸ் கையெழுத்து பிரதிகள்’ என அழைக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் ஊதியம், முதலாளிகளின் லாபம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் மூலதனமே அவர்களை ஒடுக்குகிறது என்ற முடிவுக்கு வருகிறார். பிற்காலத்தில் மூலதனம் நூலை எழுதுகிற போது பாரிஸ் கையெழுத்து குறிப்பில் உள்ள பல அம்சங்களை விளக்கமாக பதிவு செய்திருக்கிறார். மூலதனத்திற்கும் (முதலாளித்துவம்) உழைப்பிற்குமான முரண்பாடு இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு என்று வர்ணித்ததோடு இந்த மோதல் முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சிக்கும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லும்; இதுவே சோசலிச சமூகம் உருவாவதற்கு வழிவகுக்கும் என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய முடிவு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.

1844-ம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் சந்தித்த பிறகு அப்போது ஜெர்மனியில் இளம் ஹெகலியர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவிய திரிபுவாதப் போக்குகள் குறித்து விமர்சனப் பூர்வமான பார்வையில் இருவரும் இணைந்து எழுதிய முதல் நூல் ‘புனிதக் குடும்பம்’ (Holy Family). வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கான அடிப்படை அம்சங்களை இந்நூலில் அவர்கள் விளக்கினர்.

“வரலாற்றை உருவாக்குவதும், உள்வாங்குவதும் என அனைத்து மனித செயல்பாடுகளுக்கும் அடிப்படை மனிதனே. “வரலாறு தானே எதையும்  செய்யாது. அது அபரிமிதமான வளங்களைக் கொண்டிருக்கவில்லை”. அது “எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை”. அவற்றையெல்லாம் செய்கிறவன் மனிதன். உயிருள்ள மனிதனே; மோதுவதும் கைப்பற்றுவதும் மனிதனே; இவற்றை ‘வரலாறு’ செய்வதில்லை; வரலாறு ஒரு நபர் அல்ல; அது தன் சொந்த இலக்குகளை அடைவதற்காக மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. வரலாறு என்பது மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக கைக்கொள்ளும் வழிமுறைகள் தவிர வேறல்ல.”

புனிதக் குடும்பம் என்ற நூலுக்கு அடுத்ததாக இருவரும் இணைந்து இயக்கவியல், வரலாற்றியல் பார்வையில் அக்கால  தத்துவ, பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினார்கள். எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமல்ல, மூலதனம் உள்ளிட்டு மார்க்ஸ் – எங்கெல்சின் பல படைப்புகளில் ‘ஜெர்மன் தத்துவம்’ நூலின் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் பல கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். சொல்லப் போனால், மார்க்சிய தத்துவத்தினுடைய அடிப்படை கோட்பாடுகள் பலவற்றினுடைய துவக்கம் ‘ஜெர்மன் தத்துவம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

முதல் பகுதி என்பது, அனைத்து சிந்தனைகள் மற்றும் அனைத்து வரலாறுகளின் நிலைமைகளைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது, மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை நேர்மறையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் தனியார் சொத்துடைமையின் வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார கட்டமைப்பும் அதனோடு தொடர்புடைய, அதன் கீழ்ப்பட்ட அரசியல் மற்றும் தத்துவ வடிவங்கள் குறித்த வரையறுப்பை தருவதிலிருந்து தொடங்குகின்றனர். 

முதலாளித்துவ அமைப்பில் சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிகிறது. முதலாளித்துவ வர்க்கம் எந்தளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீன பாட்டாளி வர்க்கமும் எண்ணிக்கையில் வளர்கிறது. அதேநேரத்தில் பாட்டாளிகள் தம்மைத் தாமே கொஞ்சம், கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயத்தில்  சரக்காகவே இருக்கிறார்கள். ஆம். அவர்களின் உழைப்புச் சக்தி சந்தையில் விற்கப்படும் சரக்கைப் போன்று ஆகிறது. முதலாளிகள் உள்ளிட்ட ஆலைகள், இயந்திரங்கள், நிறுவனங்கள் ஆகிய முதலாளித்துவ உற்பத்தி சக்திகளுக்கும் உழைப்பு சக்தியை விற்கும் நிலைக்கு ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலே உற்பத்தி சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான  வர்க்கப் போராட்டமாக உருவாகிறது. இதனைத்தான் “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமே ஆகும்” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல” என முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய நிர்வாகமாகத்தான் அரசு உள்ளது என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மார்க்சும், ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தவறான கருத்து வெளியானால் அதனை எதிர்க்காமல் ஓயமாட்டார்கள். “தவறான கருத்தை மறுக்காமல் விடுவது அறிவுலகில் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பதாகும்” என மார்க்ஸ் கூறினார். குறிப்பாக, வறுமையின் தத்துவம் என்று புரூதோன் எழுதிய நூலில் வெளிப்பட்ட இயக்க இயலுக்கு மாறான கருத்துக்களை மறுத்து தத்துவத்தின் வறுமை என்ற நூலை 1847-ம் ஆண்டில் மார்க்ஸ் எழுதினார். அன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றத் தேவையில்லை,அதில் உள்ள தவறான அம்சங்களை மட்டும் நீக்கிட வேண்டும் என்பதுதான் புரூதோன் முன்வைத்த கருத்து. அது தவறு. அக்கருத்தை மறுத்த போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்டதே சரியான கருத்து (Thesis –Anti-thesis- Synthesis) என்ற இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வறுமையின் தத்துவம் என்ற நூல்.

பொருளாதாரம், தத்துவம், அரசியல் ஆகிய சூழல்களை ஆய்வு செய்து இயக்க இயல், வரலாற்றியல் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறையை உருவாக்கிட முயற்சித்த அதேநேரத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட பாட்டாளிகளைத் திரட்டும் அமைப்பையும் உருவாக்கினார்கள். 1847-ம் ஆண்டு ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற அமைப்பில் அவர்கள் செயல்பட்டனர். பல மேலை நாடுகளில் இதனடிப்படையில் போராட்டங்களும் நடைபெற்றன.

இரண்டு தளங்களில் – கருத்தியல் ரீதியிலும் நேரடி நடவடிக்கைகளிலும் – கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய  புரட்சிகர பணிகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் ஆளும் வர்க்க சித்தாந்தத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்திட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஜெர்மன் தத்துவம் என்ற நூலில் “ஏற்கெனவே நிலவி வரும் பழைய தத்துவ நோக்கங்களுடன் கணக்குத் தீர்க்க வேண்டும்” (To settle accounts with our erstwhile Philosophical conscience) என்கின்றனர். மேலும் “இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது” என அந்த நூலிலேயே குறிப்பிட்டிருந்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். ஆம். சரியான திட்டமும், நடைமுறையும் சேர்ந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இப்போதும் இந்தியாவில் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைளை அமலாக்கி வருகிறது, மேலும் மத்திய பாஜக அரசு தனது இந்துத்துவா சித்தாந்தத்தை இணைத்து முன்னெடுக்கிறது. இவைகளை எதிர்த்த போராட்டம், வர்க்கக் கண்ணோட்டத்தோடு எழ வேண்டும். அப்போதுதான் ஆளும் வர்க்கத்தை முறியடிப்பதுடன் ஒரு சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன் நகர முடியும். இத்தகைய வரலாற்றுக் கடமையைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக கம்யூனிஸ்ட் அறிக்கை திகழும். இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் அது உயிர்ப்போடு கூடிய உற்ற துணையாக இருக்கும் என்பது நிச்சயம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பிரசுரமாக வெளிவந்தது 1848-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் நாள். அறிக்கை வெளிவந்து 172 ஆண்டுகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இக்காலகட்டத்தில் உலகில் பிரம்மாண்டமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அரசியல்-சமூக-பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்றும் அறிக்கையை வாசித்தால் அது பல மையமான அம்சங்களில் சமகால முதலாளித்துவ உலக மயத்தைப் பற்றிய மிகத் துல்லியமான ஆவணம் என்பதை நாம் உணர்வோம். இதற்குக் காரணம் முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பை, அதன் இயக்க விதிகளை மிகச் சரியாக இயக்கவியல்-வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையில் அறிக்கை ஆய்வு செய்துள்ளது என்பதே ஆகும்.

நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவம்

அறிக்கை முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை ஆழமாக ஆய்வு செய்கிறது. எவ்வாறு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் இருந்து முதலாளித்துவம் எழுகிறது என்பதை ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அறிக்கை விளக்குகிறது. மானுட உயிரினத்தின் ஆரம்ப காலத்தில் மானுட சமூகங்களின் குறைவான உற்பத்திசக்திகளின் விளைவாக நிலவிய, நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான, துவக்கநிலை பொதுவுடமை அமைப்பு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் காலாவதியாகிறது. உபரி உற்பத்தி மானுட சமூகத்தின் இலக்கணமாக மாறுகிறது. உபரி உற்பத்தி வர்க்க சமூகத்தை, சுரண்டலை, சாத்தியமாக்குகிறது. இதில் இருந்தே சுரண்டும் வர்க்கத்திற்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான இடையறாத வர்க்கப் போராட்டம் மானுட வரலாற்றின் இலக்கணமாக அமைகிறது என்பதை துவக்கத்திலேயே அறிக்கை விளக்குகிறது. வர்க்கச் சுரண்டலுக்கு நிலம் உள்ளிட்ட உற்பத்திக் கருவிகளில் தனியுடைமை அவசியம் என்பதையும் சுரண்டல் அமைப்பை சுரண்டும் வர்க்கம் சார்பாக பாதுகாக்க அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் அவசியம் என்பதையும் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறது அறிக்கை.

அடுத்து, உற்பத்திசக்திகளின் தொடர் வளர்ச்சி மீண்டும் மீண்டும் சமூக உற்பத்தி உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், இம்மாற்றங்கள் வர்க்கப் போராட்டங்கள் மூலமாக நிகழும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது. இந்தப் பின்புலத்தில் ஒரு சில விறுவிறுப்பான பக்கங்களில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பிற்கு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய உற்பத்தி உறவுகளை அந்த அமைப்பிற்குள்ளேயே வளரச் செய்கின்றன என்பதையும் இதனால் புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன என்பதையும் இயக்கவியல்-வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் பாலபாடமாக அறிக்கை விவரிக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உபரி உற்பத்தியை கணிசமாக உயர்த்துகிறது. இவற்றை வெகுதூரம் கொண்டுசென்று விற்கும் வாய்ப்புகளை இது அவசியப்படுத்துகிறது.

பொருட்களை பதப்படுத்தி பலகாலம் பராமரிக்கும் தொழில்நுட்பங்களையும் தொலைதூர போக்குவரத்து தொழில்நுட்பங்களையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி சாத்தியமாக்குகிறது. இந்த மாற்றங்கள், நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஒவ்வொரு நிலப்பிரபுவின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த குறுகிய நிலப்பரப்பிலும் நிலவிய தொழில் மற்றும் வர்த்தக தடைகளையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இதர அம்சங்களையும் தகர்த்தெறிந்து புதிய உற்பத்தி உறவுகளுக்கு இட்டுச் சென்றது. படிப்படியாக, நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, நகர்ப்புற பட்டறைகள் மூலம் உற்பத்தியையும் உற்பத்தி சக்திகளையும் விரிவுபடுத்தி, தொலைதூர வணிகத்தை வளர்த்துவந்த –  அன்றைய காலத்தில் மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்பட்ட – புதிதாக வளர்ந்துவந்த நவீன முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு சாவுமணி அடிக்கும் வர்க்கமாக வரலாற்றுக்களத்தில் தனது இடத்தை நிலைநாட்டிக் கொண்டது.

முதலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தனது வரலாற்றுப் பயணத்தில் மன்னருக்கும் நிலப்பிரபுக்களும் இடையிலான முரண்பாடுகளில் மன்னருக்கு ஆதரவாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை எப்படி பலவீனப்படுத்தியது? பின்னர் எப்படி மன்னர்களின் அதிகாரங்களை சிதைத்து தனது வர்க்க ஆட்சியை ஏற்படுத்தியது? இப்பயணத்தில் எவ்வாறு தொழிலாளி வர்க்கத்தை பயன்படுத்திக் கொண்டது? என்ற விஷயங்களை அறிக்கை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரம்

அறிக்கை முதலாளித்துவத்தின் அடிப்படைத்தன்மையை மிகவும் துல்லியமாக வர்ணிக்கிறது. அதன் சில முக்கிய அம்சங்களை அறிக்கையின் வாசகங்களிலேயே கீழே காணலாம் :

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாகமிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது. உற்பத்திக் கருவிகளையும்அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும்அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது…..

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக் கொள்ள வேண்டும்எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும். உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது.

மக்கள் தொகையும்உற்பத்திச் சாதனங்களும்சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும்.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள் கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில்இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல்எந்திர சாதனங்கள்தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல்நீராவிக் கப்பல் போக்குவரத்துரயில் பாதைகள்மின்சாரத் தந்திகண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல்கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல்மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும்பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும்விவசாயம்பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும்சுருங்கக் கூறின்நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள்ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்ததுஅவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும்அதனுடன் கூடவே, அதற்கு ஏற்றாற் போன்ற, சமூகஅரசியல் அமைப்புச் சட்டமும்முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரஅரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளின் தவிர்க்கவியலாத வளர்ச்சி நிலவும் உற்பத்தி உறவுகளுடன் முரண்பட்டே ஆகவேண்டும்இந்த முரண்பாடுதான் வளர்ச்சிக்கான அடித்தளம்இந்த முரண்பாடு வர்க்கப் போராட்டம் மூலமாகவே வரலாற்றில் தன் பணியைச் செய்கிறது ஆகிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படைக் கூறுகளில் நின்று, நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் ஆட்சிக்கு வந்த வரலாற்றையும் அதில் முதலாளி வர்க்கத்தின் முதன்மை பாத்திரத்தையும் இவ்வளவு சுருக்கமாகவும், தவறு இன்றியும், எளிமையாகவும் வேறு எந்த ஆவணமும் விளக்கியதில்லை. 

முதலாளித்துவத்திற்கு முடிவு உறுதி

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வரலாற்று பாத்திரத்தை விறுப்பு வெறுப்பின்றி அறிக்கை விவரித்திருப்பதன் பொருள் முதலாளித்துவத்தை அது பாராட்டுகிறது என்பதல்ல. மாறாக, இயக்கவியல் அணுகுமுறையின் அடிப்படையில் நின்று, முதலாளித்துவத்தின் ‘சாதனை’களின் மறுபக்கத்தை அறிக்கை தோலுரித்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டி மானுட விடுதலையை சாதிக்க வல்ல வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கை விவரிக்கிறது. லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உற்பத்தி சக்திகளின் மாபெரும் வளர்ச்சியை ஒவ்வொரு நொடியும் முன்னெடுத்துச் செல்லும் அவசியத்தை சந்திக்க நேர்ந்தாலும், நெருக்கடி நிறைந்த அமைப்பாகவே முதலாளித்துவம் உள்ளது என்பதை அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறைவணிகம் ஆகியவற்றின் வரலாறானதுநவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும்முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும்நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்தகுறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில்ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போதுஇருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றிஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம்தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறதுதொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது

இதன் பொருள் என்ன? அறிக்கையின் வார்த்தைகளில்: “சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள்முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாகஅந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள்உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.“ சமகாலத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மந்தநிலை, மானுட உயிரினத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் பருவநிலை மாற்றம், மிகக் கொடிய அளவிலான வேலையின்மை, அறிவியல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக வளர்ந்தும் பசியும் பிணியும் வறுமையும் உலகில் பல கோடி மக்களை தொடர்ந்து வாட்டி வதைப்பது ஆகியவை சொல்லும் செய்தி இதுதானே?

தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்

நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து வந்ததன் விளைவாக ஒரு கட்டத்தில் அந்த உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறின என்பதையும், அக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளிருந்தே வளர்ந்துவந்த முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டும் வர்க்கமாக அமைந்தது என்பதையும்அறிக்கை விளக்கியதை நாம் குறிப்பிட்டோம். அதேபோல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கு தடையாக மாறும் தருணத்தில் இந்த உற்பத்தி அமைப்பை தூக்கி எறியும் வர்க்க சக்தியாக தொழிலாளி வர்க்கம் அமையும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

அறிக்கை யின் வரிகளில் இதனை பார்ப்போம்:

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோஅதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால்முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லைஅந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும்அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாகஇந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும்அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும்பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும்தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர்.

தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றிபெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறதுஅதன் வலிமை வளர்கிறதுஅந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்துஅனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும்வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடுஅவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள்மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். …அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பானசாரமான விளைபொருளாகும்.

மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானதுஅத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்போக்கை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவேநவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானதுஎந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம்பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோஅந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆகஅனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே முதலாளித்துவ வர்க்கம் உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும்பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை வரலாற்றின் குப்பைமேட்டில் தூக்கி எறியும் வலிமையும் வரலாற்றுக் கடமையும் தொழிலாளி வர்க்கத்துடையது என்பதற்கான சிறப்பான தத்துவார்த்த விளக்கத்தை அறிக்கை இவ்வாறு அளிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொய்த்துப் போய்விட்டதா?

அறிக்கை 1848 தொடக்கத்தில் வெளிவந்தது. அப்பொழுது முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு ஐரோப்பாவில் பல நாடுகளில் வெற்றியடைந்திருந்தது. இதுதான் மானுடத்தின் எதிர்காலம்; இதுதான் நிரந்தரமாக இருக்கும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. அப்பொதுக்கருத்து தவறானது என்பதையும் மானுடத்தின் எதிர்காலம் பாட்டாளி வர்க்க ஆட்சியை நோக்கித்தான் பயணிக்கும் என்பதையும் ஆழமான ஆய்வின் அடிப்படையில் ஆணித்தரமாக, உரக்கச் சொல்லியது.அறிக்கைவெளிவந்தபின் அடுத்த பல பத்தாண்டுகளில் முதலாளித்துவம் மேலும் பாய்ச்சல்வேகத்தில் பரவி, உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தது. அறிக்கை பொதுவிவாதத்தில் சில பத்தாண்டுகள் இடம் பெறவில்லை. 1871 இல் வெடித்த பாரிஸ் கம்யூன் புரட்சி முதலாளித்துவத்தை உறு­­திபட எதிர்த்து புரட்சிகர மாற்றம் கொண்டுவரும் திறன் கொண்டது தொழிலாளி வர்க்கம்தான் என்பதை உலகுக்கு அறிவித்தபோதிலும், அப்புரட்சி நீண்ட நாட்கள் நிலைக்க இயலவில்லை. எனினும் பாரிஸ் கம்யூன் புரட்சி நிகழ்ந்து அடுத்த 50ஆண்டுகள் நிறைவடையும் முன்பே மகத்தான அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் வெடித்தது. 19-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம் உலகை வென்றது என்றால் இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் அதன் எதிர்காலம் கடுமையான கேள்விக்குறியானது. கடந்த நூற்றாண்டில், முதல்உலகப்போர் (1914-1918), பெரும் பொருளாதார வீழ்ச்சி (1929-1939), இரண்டாம் உலகப்போர்(1939 – 1945) என்று தொடர்ந்து முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கியது.

மறுபுறம், பின்தங்கிய ரஷ்யாவில் 1917 அக்டோபரில் போல்ஷ்விக் கட்சியின் முன்னணி பாத்திரம் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்புரட்சியை முளையில் கிள்ளியெறிய 14 முதலாளித்துவ நாடுகள் தங்களது ராணுவங்களை அனுப்பின. இவர்களை மக்கள் ஆதரவுடன் செஞ்சேனை வீழ்த்தியது. ஏகாதிபத்தியம் தந்த தொடர்நெருக்கடிகளை எதிர்கொண்டே, போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச சோவியத் ஒன்றியம் மாபெரும் முன்னேற்றத்தை சாதித்தது. ஏகபோக முதலாளித்துவத்தின் பிரத்யேக அரசு வடிவமான பாசிசத்தை வீழ்த்தி மானுடத்தையும் ஜனநாயகத்தையும் சோசலிசம் காப்பாற்றியது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலத்திலும் அதனை தொடர்ந்தும் உலகில் சோசலிச வெற்றிகள் தடம் பதித்தன. தனியாக நின்று ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு வந்த சோவியத் ஒன்றியத்திற்கு பக்கபலமாக பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் ஜனநாயக அரசுகள் அமைந்தன. மாபெரும் சோசலிச மக்கள் சீனம் 1949இல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து வடவியத்நாம், வடகொரியா, பின்னர் க்யூபா என்று 1950களின் இறுதியில் உலக நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கும் சோசலிச அமைப்பின்கீழ் வந்தன.

கடந்த நூற்றாண்டின் முதல் எண்பது ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வரலாற்றுப் பார்வை மிகச்சரியானது என்பதை நிரூபித்தன. சோசலிச நாடுகளின் சாதனைகளை நாம் மறக்க இயலாது. ஏகாதிபத்திய ராணுவ பலத்திற்கு எதிராக நின்று உலக அமைதியையும் முன்னாள் காலனிநாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு அளப்பரியது. வறுமையையும் வேலையின்மையையும் பெருமளவிற்கு முடிவுக்கு கொண்டு வந்தது; அனைத்து மக்களுக்கும் கல்வியையும், ஆரோக்கிய வசதிகளையும் உறுதிப்படுத்தியது; பாலின சமத்துவத்தில் பெரும் முன்னேற்றம் கண்டது; உழைப்பாளி மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கியது உள்ளிட்ட சாதனைகளை நாம் பதிவுசெய்ய வேண்டும்.

1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டு, முதலாளித்துவம் அங்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் 2008இல் துவங்கி முடிவின்றி தொடரும் உலக முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் மானுடத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றமும் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கும் மானுடத்தின் எதிர்காலத்திற்கும் எதிரியாக முதலாளித்துவம் நிற்கிறது என்பதை நாளும் பளிச்சென்று உணர்த்துகிறது. இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகரமான பல சோசலிஸ்ட் புரட்சிகளின் சாதனைகளும் அனுபவங்களும் வீண்போகாது என்று இன்றைய உலகம் நமக்கு நினைவூட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் கணிப்பு வரலாற்றுப் பார்வையில் மிகச்சரியானது என்று மானுட அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் அறிக்கை மானுட சமூகத்தின் உலகளாவிய விடுதலையைப் பேசுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) ன் திட்டம், இந்திய விடுதலையைப் பேசுகிறது. இந்த இரண்டும் இந்திய நாட்டில் செயல்படுகிற  ஒரு புரட்சிகர போராளிக்கு  வழிகாட்டும்  கையேடுகளாகத் திகழ்கின்றன.

அனைத்து நாட்டு மக்களுக்கும் உண்மையான விடுதலையை முன்னிறுத்தும் விடுதலைப் பிரகடனமாக, கம்யூனிஸ்ட் அறிக்கை திகழ்கிறது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து, முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட பாட்டாளி வர்க்கத்திற்கு அறிக்கை வழிகாட்டுகிறது.

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1883-ம் ஆண்டில் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில்  “(அனைத்து வரலாறும்) சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது …” என்கிறார்.

இந்த நெடிய போராட்டத்தில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்க முன்னேற்றத்தை தடுக்கவும் ஒடுக்கவும் அனைத்து  சாகசங்களையும் செய்துவருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றியை தீர்மானிக்கிற  இடத்தில் பாட்டாளி வர்க்கமே உள்ளது. வரலாற்றில் நிகழவிருக்கும் இந்த விடுதலை சமூகம் முழுமைக்குமான விடுதலையாக அமைந்திடும். 

1848-ல்  மார்க்சும் எங்கெல்சும் எழுதிய இந்தக் கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?. 20-ம் நூற்றாண்டில் பணி நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன; இதன் காரணமாக உழைக்கும் மக்களின் வலிமை பலவீனமடைந்து உள்ளது என்ற வகையில் பல வாதங்களைப் பலரும் முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தாக்கம் பொருத்தமற்றதாகப் போய்விட்டது என்றனர்.

ஆனால், இன்றைய நிலைமைகளும் கூட மார்க்சின்  கருத்தினை   உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்டார்: “பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.” 

21-ம் நூற்றாண்டில் முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது .

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது. இது மிகப்பெரும் பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் 50 கோடிக்கும்  மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட வலிமையான பாட்டாளி வர்க்கம் உள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்கான தடைகள் மார்க்ஸ் காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளன. இன்று வலதுசாரி கருத்தியல் தொழிலாளர்களிடம், இன, சாதி, மத அடையாளங்களை வலுப்படுத்தி, வெறியூட்டி, அரசியல் லாபம் பெற்று வருகிறது. எனினும், மார்க்சின் அறைகூவலான  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற  பாதையில் உழைக்கும் வர்க்கம் தீரமுடன் பயணம் மேற்கொண்டால் சுரண்டலற்ற ஒரு சமூகம் சாத்தியமே.

இந்திய கம்யூனிஸ்ட்கள்

அறிக்கை காட்டும் பாதையில்  இந்திய புரட்சிக்கான திட்டத்தை   வகுக்க இந்திய கம்யூனிஸ்ட்கள் 1920- ம் ஆண்டுகளிலிருந்தே முயற்சித்து வந்தனர்.

கார்ல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையைத்  தானே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து, ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை, முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மார்க்சின் இந்த அறிவுரை அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்கிட இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கத்திலிருந்தே முயற்சித்து வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்தில் கட்சியின்  பங்கு குறிப்பிடப்படுகிறது;

“புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவமான கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்குப் பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும்.

இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.” (7.16)

உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற, சித்தாந்தத் துறை முக்கியமானது. தங்களது மூலதன நலன்களை பாதுகாக்கும் சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கானது என்று சித்தரிப்பதில் முதலாளித்துவ சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும் வல்லவர்கள். எனவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, மதங்கள் முன்னிறுத்தும் நம்பிக்கைகள், பிற்போக்கான வாழ்வியல் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, இந்திய புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் சிந்தித்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின்  ஒவ்வொரு போராட்டமும், முதலாளித்துவ அரசியல்  அதிகாரப்  பிடிப்பிற்கு சவாலாக அமைந்திடும். “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே” என்பது மார்க்சின் கூற்று. இந்தியாவில் 1947-ல் விடுதலை கிடைக்கும்வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும்  மக்களின் உடனடி  கோரிக்கைகளை  முன்வைத்தும்,  இந்திய  கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற  போராட்டங்களை முன்னின்று  நடத்தினார்கள். அவை அனைத்தும் காலனிய எதிர்ப்பு, வர்க்க சுரண்டலுக்கு எதிரானதாக நடந்தன. அவற்றின் அரசியல்  தாக்கம்தான் 1947-க்குப் பிறகு அமைந்த  அரசு அமைப்பு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்டவையாக அமைய வழிவகுத்தன.

அவ்வப்போது சில வெற்றிகளை தொழிலாளி வர்க்கம் பெற்றபோதிலும், முதலாளித்துவத்துடன்  உள்ள முரண்பாடு  நீடிக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கின் இறுதிக் காட்சியை மார்க்ஸ் சித்தரிக்கிறார். “…பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனிச்சொத்துரிமையையும் அழித்திடும்” என்று மார்க்ஸ்  குறிப்பிட்டார். இந்த எதிர்காலப் பார்வைதான் இந்திய சோசலிச  மாற்றத்திற்கான திட்டத்தை  இந்திய மார்க்சியர்கள் உருவாக்குவதற்கான பார்வையாக  அமைந்தது.

முதலாளித்துவம் வீழும் என்பது மார்க்சின் ஆருடம்  அல்ல. முதலாளித்துவ வரலாற்றின் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்கு.  “இது  தவிர்க்க முடியாதது” என்று அழுத்தந்திருத்தமாக மார்க்ஸ் குறிப்பிடுவதற்குக்   காரணம், அவற்றின் போக்குகளை  அவர்  துல்லியமாக அறிந்திருந்ததுதான்.

முதலாளித்துவ  அழிவு  என்பதனை மார்க்ஸ் தனது விருப்பமாக வெளிப்படுத்தவில்லை; அல்லது முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கத்தின்  மீது ஏற்பட்ட பரிதாபத்தின் விளைவாக முதலாளித்துவம்  அழியட்டும் என்று மார்க்ஸ் சாபமிட்டார் என்று கருத முடியாது. அவரும் எங்கல்சும், உருவாக்கிய தத்துவக்  கோட்பாடுகள் முதலாளித்துவ எதிர்காலத்தை கணிக்க உதவின. இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கான சோதனைக் கூடமாக அமைந்தது.

எனவே இந்திய புரட்சிப்பாதையை தெரிவு செய்கிறபோது, இந்திய முதலாளித்துவம்,  அதன் வளர்ச்சிப் போக்குகளை துல்லியமாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துணை கொண்டும் ஆராய்ந்திடும் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முயன்றது.

1864 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளை எழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்” வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது. இந்தக் கருத்து மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து மார்க்சினை வேறுபடுத்திக் காட்டுகிறது; அடிமைப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கிற உழைக்கும் மக்களை விடுதலை செய்வதற்கு தேவதூதன் போன்று ஒரு மகத்தான தலைவர் தோன்றிடுவார் என்பது உள்ளிட்ட, பல  பொய்யான சித்தாந்தங்களை உழைக்கும் மக்களிடையே கால காலமாக விதைத்து வருகின்றனர். ஊடகங்களும் ‘சுதந்திர சந்தை, சுதந்திர போட்டியே’ ‘ஜனநாயகம்’ என்பது போன்ற கருத்துகளைப் பரப்பி, சில தனிநபர்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்த வேலை காலம்காலமாக இடையறாது நடந்து கொண்டிருக்கிறது.

தங்களின் விடுதலையை தாங்களே சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான  தெளிவான திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்க வேண்டும் என்பதும் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல். இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வர்க்க விடுதலைக்கான வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதி மூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித்திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை கைப்பற்றுதல்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை ஒழிப்பதுதான் என்பது அறிக்கை பகிரங்கமாக  எடுத்துரைக்கிறது. இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான கோட்பாடுகளையும் அறிக்கை கொண்டுள்ளது.

இதை மூன்று வகையாக பிரித்து அறிக்கை மேலும் விளக்குகிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக கட்டியமைக்க வேண்டும் என்றும், அது கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் என்றும்  அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன ? பாட்டாளிகள் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அடைய வேண்டும். அவர்களுக்கு அந்த உணர்வினை ஏற்படுத்துகிற பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தங்களது அன்றாட பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கம் முன்கை எடுப்பது போதுமானதல்ல; அந்தப் போராட்டங்கள் அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தாலும், இறுதியாக, ஒரு பெரும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றவேண்டும். அந்தக் கடமையை உணர்ந்த  வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் உயரும்போதுதான் அது தனது வரலாற்றுக் கடமையை  செவ்வனே நிறைவேற்றும்.

அது எப்படிப்பட்ட வரலாற்று கடமை என்பதை இரண்டாவது அம்சமாக அறிக்கை குறிப்பிடுகிறது. முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற கடமையைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது. புரட்சிகர உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற  வல்லமை கொண்டதாக மாறிடும்.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதை அறிக்கை  வலியுறுத்துகிறது. அரசியல் அதிகாரம்தான் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை முடிவுக்குக் கொண்டுவந்து சமூக சமத்துவத்தை நிலைநாட்டும் .

எனவே, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவாறு, அந்த  வர்க்கத்திற்கு உணர்வு ஊட்டுகிற பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல். 

அறிக்கை முதலாளித்துவத்தின் உலகம் தழுவிய செயல்பாட்டை விரிவாக பேசுகிறது; அதேநேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் அழுத்தமாக குறிப்பிடுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், முதலில் தேசிய அளவிலான போராட்டமாக இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில்,.”…. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்கு தீர்க்க வேண்டும்” என்று அறிக்கை தீர்க்கமாக குறிப்பிடுகிறது.

இவ்வாறான தேசிய அளவிலான போராட்டங்கள் வடிவத்தில் உள்நாட்டு எல்லைகளை கொண்டிருந்தாலும் இந்தப் போராட்டங்கள் உலக அளவில் “முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்ப்பதில்” கொண்டு செல்லும்.

சமூக பொருளாதார அமைப்புகள்

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதாயம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக, ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் சமூக வளர்ச்சியாக பார்ப்பது கூடாது. எங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்பினையும் , விசேச தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால், வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வது, கம்யூனிச சமூக அமைப்பு, அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ  உற்பத்தி  முறை  என  இரண்டுமே  இயங்குவதைக்  காண முடியும். பல ஐரோப்பிய  நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில்  முதலாளித்துவம்  வளர்ச்சியடைந்த  வரலாற்றையும் காணமுடியும். “குறிப்பிட்ட நிலைமைகளை,  குறிப்பிட்டவாறு ஆய்வு  செய்திட  வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

கட்சித் திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது. தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்தச் சூழலில்,  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சியை நோக்கி முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது. 

விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித்திட்டம் வரையறை செய்கிறது. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு அமைகிறபோது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. 

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித் திட்டம் விரிவாக விளக்குகிறது.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.(7.6)

“விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

மேலும் மேலும் பாட்டாளி வர்க்க பட்டாளத்தில் நடுத்தரவர்க்கமும் இடையறாது வந்து சேர்கிறது. இதனை அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது (7.7)

கம்யூனிஸ்ட் அறிக்கையில் நடுத்தர வர்க்கம் குறித்து முக்கியமான கருத்து பேசப்படுகிறது. “நடுத்தர பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர். நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது..'” (அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும்)

இந்தியாவில் நடுத்தர வர்க்கங்களின் நிலைமை பற்றி குறிப்பிட்டு அவர்கள் புரட்சிகர இயக்கத்தில் பங்காற்ற இயலும் என்பது கட்சியின் திட்டத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறைநிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.”(7.9).

“தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும்.” என்று திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம். எனவே அந்த முரண்பாடுகள் குறித்த புரிதலை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி, தாங்கள் வாழும் சூழலில் தாங்கள் திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

“எண்ணற்ற உள்ளூர் போராட்டங்கள்” முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்தும் தன்மை கொண்டவை  என்பது அறிக்கையின் பார்வை. அறிக்கை  பயன்படுத்தும் “உள்ளூர் போராட்டங்கள்” எனும்  சொற்றொடர் முக்கியமானது. நவீன தொடர்பு சாதனங்கள் இந்த உள்ளூர் போராட்டங்களை “ஒரே தேசிய போராட்டமாக மையப்படுத்த” உதவுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேபோன்று உழைக்கும் மக்களின் உள்ளூர் போராட்டங்களும் முக்கியமானவை. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்கைகள் கடைக்கோடி கிராமங்கள் மற்றும்  குடியிருப்புகள் வரை தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த நிலையில், சமூகரீதியில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினர், மீனவர்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு உள்ளூர் மக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி சார்ந்த போராட்டக்களத்தில் வருவது முதலாளித்துவ எதிர்ப்பினை கூர்மைப்படுத்தும். இது தேசிய போராட்டத்தையும், உலகப் போராட்டத்தையும் வலுப்படுத்தும்.

வாசிப்பது கடினமானதா?

கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச்  செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. இயக்கத்திலும் தீவிரமான செயல்பாடு இருந்தாலும் வளர்ச்சி என்பது கானல் நீராகவே இருந்திடும்.

வாசிப்பது, மறுபடியும் வாசிப்பது, வரிக்கு வரி பொறுமையுடன் வாசிப்பது, மார்க்சியம் அறிந்தோருடன் விவாதம் செய்து வாசிப்பது, வாசகர் வட்ட கூட்டங்களில் இந்த இரண்டு ஆவணங்களின் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது, மற்றவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், அறிக்கையிலும் திட்டத்திலும் உள்ள விஷயங்களை பேசுவது மற்றும் போதிப்பது- என பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறிக்கையையும், திட்டத்தையும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான ஒரு பணியும் ஆகும்.

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) என்ற 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் மத்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை குறிப்பாக 1991லிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்தும் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அமர்த்தியா சென் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பொதுவாக எதிர்ப்பவரல்ல; ஆனால் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ளவர்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பல நாடுகளை இந்திய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு ஏன் சமூக நல குறியீடுகளில் இந்தியாவில் வளர்ச்சியில்லை என்பதை ஆய்வு செய்திருக்கிறார்கள். பக்கம் 45ல் உள்ள அட்டவணையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா
15 ஏழை நாடுகளின் சராசரி
16 நாடுகளில் இந்தியாவின் இடம்
2011ல் ஜிடிபி தலா உற்பத்தி
3203 டாலர்2112 டாலர்1
சராசரி வாழ்நாள் ஆண்டு (2011)65679
சேய் இறப்பு விகிதம் (உயிருடன் பிறக்கும் 1000 சேய்களில் ஒரு ஆண்டுக்கு இறக்கும் சேய்கள் எண்ணிக்கை)474510
5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகள்61567
குழந்தை பிறப்பு விகிதம் (Total Fertility Rate %)2.62.97
சுகாதார வசதி கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் % (2010)345713
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, பெண்கள்747911
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, ஆண்கள்88859
ஊட்டச்சத்து கிடைக்காத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (2006-10) குறைவான எடையுள்ளோர்433015
வளர்ச்சி குன்றியவர்484113

உலக வங்கி ஆய்வின் படி 2011ல் (சஹாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அல்லாமல்) மொத்த உற்பத்தி – தனிநபர் வருமானத்தில் மேற்கண்ட 15 நாடுகள் மிகக் குறைவாக உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பர்மா, கம்போடியா, ஹெய்த்தி, கிர்கிஸ்தான்,  லாவோஸ், மால்டோவா, நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா – ரியுகினி, கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், வியத்நாம், ஏமன் ஆகிய நாடுகள் எல்லாம் இந்தியாவை விட சராசரி தனிநபர் வருமானத்தில் குறைவாக உள்ள நாடுகள். ஆனால், சராசரியாகப் பார்த்தால் வாழ்க்கைத் தரத்தில் மேலாக உள்ளன. மேற்கண்ட நாடுகளில் ஒரேயொரு அம்சத்தில் தான் – குறிப்பாக ஒட்டு மொத்த வளர்ச்சி, சராசரி தனிநபர் வருமானத்தில் மட்டுமே தான் – இந்தியா முதலிடத்தில் உள்ளது. மற்ற  9 குறியீடுகளில் இந்தியா ஒன்றில் கூட முதலிடத்தில் இல்லை.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சமூகவள மேம்பாட்டு குறியீடுகளில் ஆசிய நாடுகளில் 2வது இடத்தில் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் மொத்த உற்பத்தி வளர்ச்சி ஏணியில் இந்தியா மேலே சென்றிருக்கிறது. ஆனால் சமூகவள மேம்பாட்டு வளர்ச்சியில் கீழே சரிந்துள்ளது.

மேற்கண்ட கல்வி, சுகாதாரம், சேய் இறப்பு விகிதம், சராசரி மனித வாழ்நாள் ஆண்டு உள்ளிட்ட 10 குறியீடுகளில் மற்ற எல்லா குறியீடு களிலும் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.

இதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பலனை பெரும்பான்மையான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பயன்படுத்தும் அளவிற்கு மத்திய அரசு திட்டமிடவில்லை.

இந்த அவலத்திற்கு விடை காண வேண்டுமென்றால் இந்தியா கடைபிடித்து வந்த பாதையை பரிசீலிக்க வேண்டுமென்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். “வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இடையில் உள்ள தொடர்பு ஒன்று மற்றொன்றின் வளர்ச்சிக்கு ஆற்றிடும் பங்களிப்பு ஆகிய அம்சங்களே” என்பதுதான் தங்களுடைய நூலின் முக்கியமான சாராம்சம் என்று நூலாசிரியர்கள் கூறுகிறார் கள்.

தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்தது ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி). கல்வி, சுகாதாரம், வாழ்நாள் ஆண்டு போன்ற சமூகவளக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றம் மேம்பாடு என அழைக்கப்படுகிறது. வளர்ச்சி, மேம்பாடு என்ற இரண்டு அம்சங்கள் குறித்து ஏராளமான அம்சங்களை நூலாசிரியர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக கல்வி உள்ளிட்ட பல அம்சங்களில் ஏற்படும் மனிதவள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு உந்தும் சக்தியாக இருக்கும். எனவேதான் வளர்ச்சியின் பலன் மேம்பாட்டிற்கு பயன்பட்டுள்ளதா என்ற கேள்வியை நூலாசிரியர்கள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திட பயன்பட்டுள்ளதா என்பது தேசவருமானம் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதோடு அரசுக்கு கிடைக்கக் கூடிய வருவாயை மேம்பாட்டிற்காக அரசு பயன்படுத்துகிறதா என்பதையும் பொருத்துள்ளது. உதாரணமாக சீன அரசு அந்நாட்டு ஜிடிபியில் 2.7 சதவிகிதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்யும் சுகாதாரச் செலவு ஜிடிபியில் 1.2. தான். இது போன்று பல துறைகளுக்குமான அரசு ஒதுக்கீடுகளையும் செலவாகும் தொகைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

கல்வி:

“வறுமை என்ற துயரத்தின் கோபுரம் இந்தியாவின் இருதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்லாமை என்றே நான் கருதுகிறேன்” என சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மகாகவி தாகூர் கல்வி பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளதை நூலாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். தாகூரின் வார்த்தைகள் அக்காலத்தில் இந்தியாவில் நிலவிய கல்லாமையைப் பற்றிய கடுமையான கண்டனமாகும். நாடு விடுதலை பெற்ற பிறகு பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு தரமான பள்ளிக் கல்வியும் உயர் கல்வியும் கிடைக்காத அவலம் நீடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் பெருமளவிற்கு கல்வியில் ஏற்படும் வளர்ச் சியைப் பொருத்தே அமையும்.

12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி தேவை என்ற கொள்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு உயர்கல்வியில் நாடு முழுவதும் சுயநிதி கல்வி நிலையங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் சேர இயலாது. நடுத்தர மக்கள் பகுதியில் கூட உயர் நடுத்தர பகுதியினரே லட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்வி நிலையங்களில் சேர்க்க முடியும்.

இந்தியாவில் சாதிய ரீதியிலும், மத ரீதியிலும், பாலின ரீதியிலும் உயர்கல்வி பெறும் வாய்ப்பில் பெரும் ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது. பழங்குடி மக்களும் பின்தங்கியுள்ளனர், இத்தகைய ஏற்றத்தாழ்வை போக்காத வரையில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்புகிற வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்காது. இதன் விளைவாக சமூகவள மேம்பாட்டில் இந்தியா மற்ற ஏழை நாடுகளை விடவும் பின்தங்கியே இருக்கும்.

கல்வி அளிக்கும் பொறுப்பை (பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி) அரசு தனியாருக்கு விடுவது கல்வித்துறையில் மேம்பாடு அடைய உதவாது என்பதை நூலாசிரியர்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.

சுகாதாரம்:

வங்காளதேசம் போன்ற ஏழை நாடுகளை விட இந்தியா இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தாலும் சேய் இறப்பு விகித எண்ணிக்கையிலும் மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொதுச் சுகாதாரத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் மத்திய – மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததே.

2011 இல் இந்தியாவில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம். ஆனால், வங்காளதேசத்தில் இது 10 சதவிகிதமாகவும் சீன நாட்டில் 1 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதியில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

கடந்த 20 ஆண்டு காலமாக அரசுகள் ஜிடிபியில் 1 சதவிகிதமே சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்பொழுது ஒதுக்கீடு 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனத்தில் 2.7 சதவிகிதமும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3.8 சதவிகிதமும் ஐரோப்பிய நாடுகளில் 8 சதவிகிதமும் உலக சராசரி ஒதுக்கீடு 6.5 சதவிகிதமாகவும் உள்ளது.

சுகாதார வசதி இந்தியாவில் பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது என நூலாசிரி யர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்திற்கு ஆகும் செலவில் அரசின் பங்கு 70-85 சதவிகிதம், அமெரிக்காவில் 50 சதவிகிதம், உலக சராசரி 63 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் அரசின் பங்கு 29 சதவிகிதம் மட்டுமே. கீழ்க்கண்ட பட்டியலில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுகள்சுகாதாரத்திற்கு அரசின் மொத்த பங்கு
இந்தியா29
தெற்காசியா30
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள்45
கிழக்காசியா  பசிபிக்53
மத்திய கிழக்கு  வட ஆப்பிரிக்கா50
லத்தீன் அமெரிக்கா  கரீபியன்50
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா65
உலக சராசரி63
ஐரோப்பிய யூனியன்77

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 5-லிருந்து 9 சதவிகிதம் வரையில் உயர்ந்திருந்தாலும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயில் சுகாதாரத்திற்கு போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்யாமல் தனியாருக்கு விட்டுவிட்டது. இதனால், மனிதவள மேம்பாட்டில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

மத்திய அரசு 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டமும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை. மருத்துவ காப்பீட்டு முறையும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது.

வறுமை ஒழிப்பு:

அத்தியாயம் 7 வறுமை ஒழிப்பு பற்றி விளக்குகிறது. இந்தியாவில் அமலாக்கப்பட்டு வரும் பொதுவிநியோகமுறைத் திட்டத்தை மேலும் பலப்படுத்திட வேண்டுமென்று நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர். வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதிலும் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் (நூல் வெளியாகிற போது மசோதா வடிவத்தில் இருந்தது) பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவிநியோக முறையில் நேரடி பணப்பட்டுவாடா முறை கூடாது என்றும் இதற்கு மாறாக, ஏற்கனவே அமலில் உள்ள பொது விநியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிறார்கள்.

ஏற்றத் தாழ்வின் பிடியில் இந்தியா:

நூலில் 8 அவது அத்தியாயத்தில் இந்தியாவில் சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாலின ரீதியிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள சாதிய அமைப்பு முறை ஏற்றத் தாழ்வை நிலைநிறுத்துவதற்கு பல காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. வர்க்க ஏற்றத்தாழ்வுக்கும் பாலின ஏற்றத்தாழ்வுக்கும் சாதிய அமைப்பு முறையும் காரணமாக உள்ளது என நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வு அகற்றப்பட வேண்டுமென்று அம்பேத்கரையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் ஜிடிபியில் முன்னேற்றம் இருப்பினும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயை சமூகவள மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தாதது இந்தியா பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். கடந்த 2012-13 ஆண்டு நிதிநிலை அறிக்கையை சுட்டிக்காட்டி கார்ப்பரேட் கம் பெனிகளுக்கு 5,29,432 கோடி ரூபாய் சலுகை அளிப்பதன் மூலம் அரசிற்கு வரக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. (* இது மதிப்பீடுதான். அநேகமாக இறுதி கணக்கு கூடும். 2010-11 இல் இவ்வாறு அரசால் இழக்கப்பட்ட வரி வருமானம் ரூ. 5, 73, 000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு சமூகவள மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஊடகங்களைப் பற்றி:

கல்வி, சுகாதாரம் போன்ற சமூகவள மேம்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. மேலும், கல்வியும் சுகாதாரமும் போதுமான அளவிற்கு இந்தியாவில் விவாதப் பொருளாக மாறாததும் கவலைக்குரியது என்பதையும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகவள மேம்பாடு ஆகிய இரண்டையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு ஆழமாக ஆய்வு செய்து இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் வளர்ச்சியின் பலன் சமூகவள மேம்பாட்டிற்கு பயன்படவில்லை. காரணம் மத்திய அரசு கடைபிடித்த பெரும்பாலான மாநில அரசுகளும் பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கைகளே.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள பணக்கார மற்றும் உயர் நடுத்தர மக்களின் (மேல்தட்டில் உள்ள ஒரு சிறு பகுதி) வாழ்க்கைத் தரம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. ஆனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வருமானம் அதிகரிக்கவில்லை. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. தேசிய மாதிரி சர்வே (அரசு நிறுவனம்) செய்ததில் 1993லிருந்து 2010 வரையிலான காலத்தில் கிராமப்புறத்தில் தனிநபர் வாங்கும் சக்தி 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நகர்ப் புறங்களில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலத்தில் சீனாவில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட) ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் இந்தியாவில் 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித் துள்ளது.

நூலாசிரியர்கள் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட சமூகவள மேம்பாடு பற்றி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். “சோவியத் யூனியனில் துவங்கி சீனா, வியத்நாம், கியூபா வரையில் அனைவருக்கும் இலவச கல்வியை அமலாக்குவதில் குறியாக இருக்கிறார்கள்”. 1930 இல் நோபல் பரிசு பெற்ற தாகூர் சோவியத் யூனியன் சென்று வந்த போது குறுகிய காலத்தில் சோவியத் நாட்டில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் வசதி படைத்தவர்களுக்குக் கூட அத்தகைய கல்வி கிடைக்கவில்லை என்பது தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” (1848 இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்டது) குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற அம்சத்தை கம்யூனிச நாடுகள் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்தன என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இத்தகைய ஏற்றத்தாழ்வே, ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகிவிடும் என கீழ்க்கண்ட வாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

“நாம் முன்னரே கண்டபடி பல பரிமாணங்களைக் கொண்ட சமத்துவமின்மை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தேவையான கருவிகளை தானே உருவாக்கிக் கொள்கின்றது. குறிப்பாக பொதுத்தளத்தில் நடக்கும் விவாதங்களையும் ஊடகச் செய்தி வெளியீடுகளையும் உருக்குலைத்து இதனைச் செய்கின்றது. பெரும் சமூகப் பிளவுகள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கு  இடையே அதிகாரத்திலும் அவர்கள் தரப்பு கருத்து கேட்கப்படுவதிலும் மிகுந்த ஏற்றத்தாழ்வோடு இருக்கின்றன. மேலும் சமூகத்தின் அடித்தட்டு பகுதிகள் குறித்த ஊடக கவனத்தையும் பொதுத்தளத்தில் அவர்களது பிரச்சனைகள் குறித்த விவாதங்களையும் நடக்க விடாது அவர்களது எல்லாம் இழந்த நிலையை குழப்பி மறைக்கின்றது. ஊடக கவனமும் பொதுத்தள விவாதங்களும் எல்லாம் பெற்ற மக்களின் நலன்களுக்காகவே நடக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் எதிர்ப்பைக் கூறும் வலுத்த குரலுக்கு இடமளிக்காமலிருப்பது உட்பட ஜனநாயகத்தின் வழிமுறைகளை மறுத்து சமத்துவமின்மையை எதிர்கொள்ள விடாமல் செய்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் வசதிகளை அனுபவிப்பவருக்கும் பிறருக்கும் இடையேயுள்ள பெரும் ஏற்றத் தாழ்வை மறைக்கின்றது”.

‘சமூகநல பொருளாதாரம்’ குறித்து நீண்ட காலமாக அமர்த்தியா சென் செய்த ஆய்வுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. வல்லுநர் சென்னுடன் இன்னொரு வல்லுநர் ஜீன் டிரஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள நூல் இது.

இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் நலன்களுக்காக அமலாக்கப்பட்டு வந்த பல பல சமூகநலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதோடு அத்தகைய திட்டங்களையே கைவிடும் அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் இக்காலத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது. சமூகநல மேம்பாட்டிற்காக போராடக் கூடியவர்களுக்கு இந்நூல் பேராயுதமாக அமையும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

மார்க்ஸ்-எங்கல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் – டேவிட் ரியாஜெனோவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

இந்த புத்தகத்தின் தலைப்பு ஈர்ப்பாக இல்லை என்ற எண்ணமும் தலைப்பிற்கும் புத்தகத்தின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை என்ற கருத்தும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் எண்ணற்ற படைப்புகளும் அவர்களை பற்றிய ஏராளமான புத்தகங்களும் வெளிவந்துவிட்ட சூழலில் இந்த சின்ன புத்தகத்தில் அப்படி என்ன இருந்து விடப்போகிறது என்ற குறை மதிப்பீட்டோடு உள்ளே நுழைந்தால்….. வெளியே வரமுடியாத அளவுக்கு மாறுபட்ட கோணத்திலும் ரத்தின சுருக்கமான விளக்கமும், தமிழ் வாசகர்கள் இதுவரை அறிந்திராத புதிய தகவல்களையும் புத்தகத்தின் ஆசிரியர் கொடுத்துள்ளார் சில பக்கங்களில் பல நூற்றாண்டுகளின் வரலாற்றையும் சில வரிகளில் பல நூல்களையும் சில வார்த்தைகளில் பல சம்பவங்களையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார்.

Engels“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான். புதிதாக சாதனை ஒன்றை ஒருவாக்கும் எந்த மேதையும் அதை தனக்கு முன்னால் அடையப்பெற்ற சாதனைகளை அடிப்டையாகக் கொண்டே உருவாக்குகிறான். சூன்யத்திலிருந்து அவன் உதிப்பதில்லை. எனவே, மார்க்சை புரிந்து கொள்ள முதலில் அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றின் பின்புலத்தையும், அது அவர் மீது செலுத்திய தாக்கத்தையும் ஆராய முற்படுவோம்”.

உருவாக்கம்

இருவரும் ஐரோப்பாவின் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்த வேகமான நிகழ்வுகளின் தாக்கத்திற்கு உட்பட்டனர். மார்க்ஸ், எங்கேல்ஸ் இருவரும் சமூக உணர்வு மிக்க இளைஞர்களாக உருவாகும் முன்பே மாபெரும் பிரெஞ்சு புரட்சியும், பிரம்மாண்ட தொழில் புரட்சியும் நடந்து முடிந்திருந்தது. 1830 களில் பிரெஞ்சு நாட்டில் துவங்கிய புரட்சி கிழக்கிலிருந்து மேற்கு வரை தீவிரமாக பரவியதுடன் ரஷ்யா மற்றும் போலந்தையும் எழுச்சி கொள்ளச் செய்தது. இக்காலத்தில்…

 • முதலாளித்துவ நாடாக இங்கிலாந்தின் வளர்ச்சி,
 • உருவாகி பெருகிவந்த தொழிலாளி வர்க்கம்,
 • இயந்திரமயமாகி வந்த கைவினை கூடங்கள்,
 • விசைத்தறி, நீராவி என நாட்களும் மாதங்களும் கண்டுபிடிப்புகளின் கைவசமாகின,
 • பிரெஞ்சு தனியாத அரசியல் தாக்கம்,
 • இயந்திர அழிப்பு இயக்கமான லுத்திட்டுகள் துவங்கி சாசன இயக்கம், தொழிலாளர் கல்விக்குழு என பல அமைப்புகளின் தோற்றம்.

என பொங்கி எழுந்த புரட்சிகரமான புறச் சூழலை உள்வாங்கி எதிர் வினையாற்றியதன் விளைவே மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரு மேதைகள் என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளார்.

இரு சூழல், இரு பாதை, ஒரு முடிவு

இருவரின் எழுத்துக்களில் மதம் சார்ந்த விசயங்களில் எங்கெல்ஸ் கூடுதலாக பங்களித்திருப்பார். அதற்கான புறக்காரணம் எது என்பதை கோடிட்டு காட்டுகிறார் ஆசிரியர். மார்க்சின் குடும்பம் பிரெஞ்சு நாட்டின் பொருள்முதல்வாத தத்துவ ஞானிகளின் செல்வாக்கிற்கு ஆளான குடும்பம். மார்க்சின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ் புத்தகங்களைத்தான் படித்ததுடன் தனது மகனையும் படிக்கத் தூண்டினார். இவர் யூதமத்தில் இருந்தார் என்பதை காட்டிக் கொண்டாலும், அதனுடன் இருந்த தொடர்புகளை அறுத்தெறிந்து 1824-ல் கிறித்துவ மதத்தைத் தழுவினார். காரணம் அன்றைக்கு ஜெர்மனியில் இருந்த யூத எதிர்ப்புதான். ஆனால் எங்கெல்ஸ் குடும்பமோ இதிலிருந்து மாறுபட்டிருந்தது. இவரது தந்தை கிருத்துவ மதப்பிடிப்பு நிறைந்த புனிதத் தன்மை வாய்ந்த சூழலில் எங்கெல்ஸ் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை சொந்த வாழ்வில் தீவிர மதப்பற்று உள்ளவர். அதேநேரத்தில் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டார். புற உலகில் உருவான புதிய கருத்துக்களை எங்கெல்ஸ் உள்வாங்கிய போது தந்தைக்கும் மகனுக்குமான உறவு மோதலாக மாறியது.

இந்த வேறுபாடுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பிற்கால எழுத்துக்களிலும் காணப்பட்டது. மதம் சார்ந்து எழுப்பப்பட்ட பல பிரச்சனைகள் காரல் மார்க்சை பெரியதாக பாதித்ததில்லை. ஆனால் ஏங்கெல்சிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மதத்திற்கு எதிராக இடைவிடாத பகிரங்கப் போர் செய்ய வேண்டுமென்று எங்கெல்ஸ் எழுதி வந்தார். இது இவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் மட்டுமல்ல இதே போன்ற கருத்து மோதல்கள் பரவலாக சமூகத்தில் இருந்தது. பிற்காலத்தில் அனுபவ ஆய்வு மூலமாக இருவருமே மதம் பற்றி ஒரே கருத்துக்கு வந்தனர்.

அமைப்பாளர்கள்

மார்க்சும், எங்கெல்சும் இருவருமே ஆய்வாளர்கள், தத்துவஞானிகள், நூலகங்களுக்குள்ளும், நூல்களுக்குள்ளும் வாழ்ந்தவர்கள் என்ற புனைவுகள் பூர்ஷ்வா வர்க்கத்தால் எழுப்பப்பட்டது. அவர்கள் பொது களப்பணியாளர்கள், புரட்சியாளர்கள் என்பது ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஸ்தாபன அமைப்பாளர்கள் என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக புதிய தகவல்களுடன் நிலை நிறுத்தியுள்ளார் ஆசிரியர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இதற்கு உதாரணமாக முன்வைக்கிறார். நம்மிடம் வேறுபல உண்மை தகவல்களும் உள்ளன. இவைகள் மேற்கூறிய விசயங்களுடன் ஒத்துப்போகாத தகவல்களாக உள்ளன. மார்சும், ஏங்கெல்சும் ஸ்டெக்லோ நிறுவ முயற்சி செய்வது போல் பெறும் கருத்தியல்வாதிகள் மட்டுமல்ல, நடப்பில் உள்ள சமூக ஒழுங்கில் கொண்டுவரப்பட வேண்டிய தேவையான புரட்சிகர மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தையேநம்பி உள்ளது என்ற முடிவுக்கு வந்தவுடன். மார்க்ஸ் தொழிலாளர் மத்தியில் செயல்பட சென்றுவிட்டார். எங்கெல்லாம் தொழிலாளர்கள் மாறுபட்ட தாக்கங்களுக்கு உள்ளாகினரோ அங்கெல்லாம் அப்படிப்பட்ட இடங்களிலும் அமைப்புகளிலும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் ஆழமாக புகுந்துவிட முயற்சி செய்தனர்.

லண்டன், பாரீஸ், ஜெர்மன், பிரெஸ்ஸெல்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் இருவரும் தொழிலாளர் அமைப்புகளை உருவாக்கினர். அவர்களிடையே இருந்த பலவிதமான கருத்தோட்டங்களை வெற்றி கொண்டே இப்பணிகளை செய்தனர். எனவே, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதுவதற்கு காலதாமாதம் ஏற்பட்டதை கம்யூனிஸ்ட் லீக்கின் தலைவர்கள் மார்க்சிடம் எழுத்துப்பூர்வமாக சுட்டிக்காட்டி காலவரையறையும் தீர்மானித்தனர். மேலும் ஒரு உதாரணமாக முதலாவது அகிலம் என்ற அமைப்பை உருவாக்கும் சிந்தனையும், அதற்கான சிந்தாந்தமும், அதைவிட மிக கடினமான பணியாகிய அமைப்புச் சட்டத்தை இவ்விருவர்களும் உருவாக்கியது இவர்கள் சிறந்த அமைப்பாளர் கள் என்பதை நிலைநாட்டுகிறார் ஆசிரியர்.

தத்துவ தர்க்கத்திலிருந்து விஞ்ஞான கம்யூனிசத்திற்கு

புரட்சிகர புறச்சூழலில் போராட்ட களத்திலும், தொழிலாளர் மத்தியிலும் எதிர் வினை யாற்றி அரசியல், ஸ்தாபன விசயங்களை உள்வாங்கினரோ அதேபோல் அக்காலத்தில் நடைபெற்ற தத்துவார்த்த ரீதியிலான தர்க்கங்களில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி மிகப்பெரிய அறிவு கருவூலத்தை பெற்றனர். இம்மானுவேல் கான்ட் தத்துவத்தில் இரட்டை பாதை நடைபோட்டார். அதாவது கடவுள் இல்லை என்று வாதிடுவார். நடைமுறைக்கு கடவுள் தேவை என்றும் வாதிடுவார்.  சொர்க்கத்திற்குள் புயல் போல்நுழைந்து அதன் படைகளை தன் வாள் வீச்சால் வெட்டி சாய்ப்பார். உலகை ஆளும் கடவுள் தனது ரத்தத்திலேயே உணர்ச்சியற்று நீந்தி கொண்டிருந்தார். அழிவற்ற ஆன்மாவின் சாவு அதன் முன்னால் சத்தம் போட்டு கேவிக் கொண்டிருந்தது என்று மற்றவர்களால் வர்ணிக்கும் அளவிற்கு மதத்தை சாடிய காண்ட் நடைமுறை காரணம் கடவுள் இருப்பை உறுதி செய்யட்டும் என்ற கூறினார். இதுதான் அவரின் இரட்டை பாதை. அவரின் இந்த போக்கு இவர்கள் இருவராலும் புறந்தள்ளப்பட்டது.

ஹெகலின் தத்துவம் இவர்கள் இருவரையும் ஈர்த்தது. காரணம் அவரின் இயக்கவியல் ஆய்வு முறை. அண்டத்தை சரியாக புரிந்து கொள்ள அவை எவ்வாறு உள்ளதோ அதை அப்படியே ஆராய வேண்டுமென்பது மட்டுமல்ல. அவை எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதையும் ஆராய வேண்டுமென்றார். அண்ட விரிவாக்கம், இயக்கம், முரண்பாடு, வளர்ச்சி என எண்ணற்ற கோணங்களில் இவரது ஆய்வுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் ஈர்த்தது. தங்களது ஆசானின் படைப்புகளை ஆழமாக ஆய்வு செய்தபோது அதில் உள்ள தீவிரமான பலவீனங்களை கண்டு பிடித்தனர். கருத்தியலை முன்னிறுத்தி முழுமுதல் கருத்து என்பதில் ஹெகல் கொண்டு சென்று விட்டார் என்பதை உணர்ந்தனர். மறுபுறத்தில் லூத்விக் பயர்பாக் ஹெகலின் கருத்தை மறுத்து பொருள் தான் முதலில் இருந்தது என்பதை நிலைநிறுத்தினார். ஆனால் இயக்க மற்ற பொருளாகவே அதை பார்த்தார். கடவுள் மனிதனை படைக்கவில்லை, மனிதன் தான் கடவுளை படைத்தான் என்பதை நிலைநிறுத்தினார். மனிதனை அடிப்படை கொள்கையாக்கினார். மனிதன் இயற்கையின் படைப்பு என்று மட்டும் வரையறுப்பதை மார்க்ஸ் மறுத்தார். மனிதனுக்குள் நிகழும் மாற்றங்களும், மனிதனில் ஏற்படும் மாற்றங்களும் இயற்கை மனிதன் மீது செலுத்தும் ஆதிக்கம் மட்டுமல்ல மனிதன் இயற்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தின் விளைவுகளே மனிதன் என்று கண்டுபிடித்தார்.

மார்க்ஸ் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் வர்க்கம் என்பதை தத்துவார்த்த ரீதியாக சொல்லவில்லை. புறஉலகின் விதிகளிலிருந்தே இதை வரையறுத்தார். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய நிலைமைகளை கண்டறிந்தபோது பாட்டாளி வர்க்கம்தான் அங்கு நம்பிக்கைக்குரிய வர்க்கம் என்ற முடிவிற்கு வந்தார். இந்த வர்க்கம் தத்துவார்த்த அரசியல் விசயங்களை கைவர பெற்றுவிட்டால் ஓட்டுமொத்த விடுதலையும் மாறும் என்பதை தெரிவித்தார். இதையே பின்நாட்களில் மேலும் வளப்படுத்தினார். கற்பனாவாத சோசலிஷ்ட்டுகள் பாட்டாளி வர்க்கம் வறுமையிலும் துன்பத்திலும் வாடும் வர்க்கம், உயர்மட்ட மற்றும் பண்பாட்டில் உயர்ந்த வர்க்கத்தால் பராமரிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பரிதாப உணர்ச்சியோடு பார்த்தனர். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கம் மிகவும் துன்பத்திற்கு உள்ளான வர்க்கமாக இருப்பதுடன், பூர்ஷவா சமூக ஒழுங்கை எதிர்த்து செயலூக்கத்துடன் போராடும் வர்க்கம் அதுதான் என்பதை முதலில் எடுத்துக்கூறியவர்கள் இவர்களே.

புரட்சி எப்போது?

1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பல தீர்க்கமான முடிவுகளை எழுதி இருந்தனர். இதற்கு காரணம் 1845 லிருந்து 47 வரை இருவரும் மேற்கொண்ட விஞ்ஞான பூர்வமான அனைத்து பணிகளின் முடிவுகளும்தான் இதில் இடம்பெற் றுள்ளன. கருத்து முதல்வாதத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்துடன் பொருள்முதல் வாதம் பற்றிய அறிவுக் கருவூலத்தையும் பெற்றனர். சொத்துடைமை சம்பந்தமாக புருதோனுடன்  நடத்திய வாதங்கள், புருதோனின் வறுமையின் தத்துவம் என்ற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை என்ற நூலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதுவதற்கு மிகப்பெரிய அளவிற்கு உதவி செய்தது. இதன் தொடர்ச்சியாக லஸ்ஸேல் உடன் நடத்திய விவாதங்கள், அவரின் கூட்டுறவு பற்றிய தவறான கருத்து, அனைவருக்குமான வாக்குரிமை மீது மாய மதிப்பீடு, தொழிற்சங்கம் பற்றிய அவநம்பிக்கை பார்வை ஆகியவற்றை எதிர்த்து மார்க்சின் தீர்க்கமான முடிவுகள் தொழிலாளி வர்க்கத்திற்கு பேராயுதமாக மாறியதை வலுவான முறையில் ஆசிரியர் பதியவைத்துள்ளார். மேற்கண்ட தத்துவ தர்க்கவியல் மூலமாகவே விஞ்ஞான கம்யூனிசத்திற்கு வந்தடைந்தனர் என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளார்.

1848-ம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தவுடன் மீண்டும் புரட்சியை உருவாக்க வேண்டுமென்று தொழிலாள தலைவர்கள் அனைவரும் விரும்பினர். மார்க்ஸ் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பினார். ஆனால் அவர் முதலாளித்து வத்தை ஆய்வு செய்தபோது நெருக்கடிகள்தான் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் கம்யூனிச குழுக்களில் இருந்த பலர், சில நபர்களும், தலைவர்களும் இணைந்து புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ் முடிவுகள்தான் வரலாற்றில் நடைந்தேறியது.

அதேபோல் தொலாளி வர்க்கத்திற்குள் சந்திக்கக்கூடிய நெருக்கடிகளையும் மார்க்ஸ் எவ்வாறு ஆய்வு செய்தார் என்பதை 1867 – 68 -ல் நடைபெற்ற நெருக்கடிகள் மூலமாக விவரிக்கின்றார். தொழிலாளர் மத்தியில், அமெரிக்க ஆஸ்திரேலிய குடியேற்றம், சாசன இயக்க எழுச்சியினை தொடர முடியாத நிலை கூட்டுறவு சொசைட்டியின் பால் தொழிலாளர்களை ஈர்த்தது, திறனற்ற தொழிலாளர் என்ற பிரிவுகள் போன்றவை எப்படி நெருக்கடிகளை உருவாக்கியது என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர்.

காரல் மார்க்சின் முற்போக்கான பூர்ஷ்வா வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்ததையும் பிற்காலத்தில் மார்க்ஸ் அதை மாற்றிக்கொண் டாலும் புத்தக ஆசிரியர் விமர்சனப் பார்வையுடன் அணுகியுள்ளார். எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சம்பந்தமாக 40 ஆண்டுகள் கழித்து எழுதிய குறிப்புகளில் நினைவலைகள் மாறி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் உருவாக்கத்தை ஆதாரப்பூர்மாக எடுத் துரைக்கிறார்.

255 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அபராஜிதன் அபாரமான முறையில் மொழி பெயர்த்துள்ளார். பல புதிய சொற்பிரயோகங்களை பொருத்தமாக கையாண்டுள்ளார். வாசிப்பதற்கு தடையின்றி சரளமாக சென்று கொண்டிருக்கிறது.

புத்தகத்தின் கடைசி பத்தியுடன் இந்த மதிப்பீடை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

இந்த இரண்டு நண்பர்களும் கல்லினால் எழுப்பப்படும் எந்த நினைவுச்சின்னத்தை காட்டிலும் வலுவான நினைவு சின்னத்தை விட்டுச்சென்றுள்ளனர். எந்த கல்லறை வாசகத்தைக் காட்டிலும் சொல் வன்மைமிக்க எழுத்தை விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் நமக்காக விஞ்ஞான ஆய்வு முறை ஒன்றையும், புரட்சிகர உத்தி மற்றும் நடைமுறை தந்திரங்களுக்கான விதிகளையும் விட்டுச் சென்றுள்ளனர். அவை இன்னும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ள எதார்த்தத்தை ஆய்ந்து முழுவதும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆழம் காண முடியாத இருப்பிடமாக விளங்கி வருகிறது.

ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. சமு தாயம் என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பல கோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாக வுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளை சார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும்.

கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஏழு முகவுரைகள் அறிக்கையை போலவே காலங்கடந்தும் தங்களின் ஒப்புயர்வற்ற தன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு  எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை. இந்த முகவுரைகள் அறிக்கையின் பதிப்புகள் எத்தனை வந்திருக்கிறது எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டன என்பதை பற்றிய விவரங்களை மட்டும் குறிப்பவை அல்ல. மாறாக, அறிக்கை எழுதப்பட்ட பிறகு முகவுரைகள் எழுதப்பட்ட காலம் வரையிலும் உலகெங்கிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து அறிக்கையைச் செழுமைப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை. இவையும் கூட அறிக்கையை போலவே அமரத்துவம் வாய்ந்தவை.

கம்யூனிஸ்ட் அறிக்கையா? சோசலிஸ்ட் அறிக்கையா?  அறிக்கையின் இரண்டாவது பகுதியின் இறுதியில் முன்மொழியப்படும் பத்து நடவடிக்கைகள் ஒரு சோசலிச அரசு அமைந்தபிறகு நிறைவேற்றுவதற்கான கடமைகளாகும். எனவே இந்த அறிக்கை சோசலிஸ்ட் அறிக்கை என்றே பெயரிடப்பட்டிருக்க வேண்டுமென்று மார்க்சும், எங்கெல்சும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று பெயர் சூட்டினார்கள். ஆனால், இதுகுறித்து 1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோசலிஸ்ட் அறிக்கை என்பதாய் பெயர் சூட்ட முடியவில்லை. 1847-இல் சோசலிஸ்ட் எனப்பட்டோர்கள் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருத்தமைப்புகளை சேர்ந்தோராய் இருந்தனர். இங்கிலாந்தில் ஓவனியர்கள், பிரான்சில் ஃபூரியேயர்கள் இருவகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்கு தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய் மூலதனத்திற்கும் லாபத்திற்கும் எந்த தீங்கும் நேராதபடி பலவகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூக கேடுகளையும் களைகிறோமென கூறிக் கொண்டவர்களாகயிருந்தனர். இருவகைப்பட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியேயிருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடி வந்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின் எந்த பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து முழுநிறைவான சமுதாயமாற்றம் ஏற்படுவது இன்றியமையாததென பறைசாற்றியதோ அந்த பகுதி அன்று தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.

ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய் தொழிலாளி வர்க்கத்தின் செயலால் தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால் இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடமிருக்கவில்லை. அதோடு அது முதலாய் இந்த பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. அறிக்கையின் உள்ளடக்கம் சோசலிசத்திற்கான திட்டத்தை விரிவாக வரைந்திருந்தாலும் அன்று சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் வர்க்கப் போராட்டத்தை ஏற்காதவர்களாக இருந்ததாலும் அவர்கள் படித்த வகுப்பாரின் ஆதரவையே நாடி வந்தவர்களாக இருந்ததாலும் அன்று தொழிலாளி வர்க்கம் தன்னை எப்படி அழைத்துக் கொண்டதோ அந்தப் பெயரான கம்யூனிஸ்ட் என்ற பெயரையே தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு அந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் தங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவிலும் கூட சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகவும் வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பவர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது இந்திய அனுபவம்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் இரண்டாம் பிரிவில் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை என்கின்றனர். மேலும் இந்தக்கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல் எங்கும் எக்காலத்திலும் அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளை சார்ந்ததாகவே இருக்கும் என்கின்றனர்.

சோசலிச கட்டுமானம் குறித்த தவறான புரிதல்கள் சோசலிச முகாம் தகர்ந்ததற்கான காரணங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த இன்னும் சொல்லப்போனால் நிலவுடைமையில் புராதன பொதுவுடைமை நிலவி வந்த ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் 1895 ஆம் ஆண்டிலேயே இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஸ்கோடா (Skoda) என்கிற கார் தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ள செக்கோஸ்லாவாக்கியாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் ஒரே மாதிரியான செயல்திட்டம் இருக்க முடியாது என்பதை 1872-ஆம் ஆண்டிலேயே அறிக்கையில் முதல் முகவுரையில் தெரிவித்துள்ளனர்.

1964-ஆம் ஆண்டு தனது 7 வது கட்சி காங்கிரஸில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை தனது கட்சித் திட்டத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், மாறிய சூழ்நிலைகளில் தனது 9 வது கட்சி காங்கிரசில் இந்தப் பிரிவு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.

இதேபோன்று 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சித் திட்டத்தில் நிலப்பிரபுத்தவ ஒழிப்பு எவ்வித இழப்பீடுமின்றி நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இழப்பீடின்றி என்கிற வார்த்தை மாறிய சூழ்நிலையை கணக்கில் கொண்டு கைவிடப்பட்டது. இதன் பொருள் இழப்பீடு கொடுப்பதா? இல்லையா? என்பதை மக்கள் ஜனநாயக அரசு அமைந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே.

அரசுப் பொறியமைவு பற்றிய நிர்ணயிப்பு:

அந்த முதல் முகவுரையிலேயே மேலும் இரண்டு அம்சங்களை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நவீன தொழில்துறை பெருநடைபோட்டு பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும் மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. எனவே, இதைக் கணக்கில் எடுத்தால் இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

1871-ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூன் அனுபவத்தைக் குறிப்பிட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவை தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது சொந்த காரியத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதன் மூலம் அறிக்கை குறிப்பிடாத ஆனால் மிகவும் முக்கியமான முதலாளி வர்க்க அரசுப் பொறியமைவை அப்படியே தொழிலாளி வர்க்கம் தனது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற புரட்சிகளெல்லாம் ஏற்கனவேயிருந்த அரசுப்பொறியமைவை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், புதிய சமூக பொருளாதார அமைப்பிற்கேற்றதாக அதைப் படிப்படியாக மாற்றிக் கொண்டனர். ஆனால், தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அரசுப்பொறியமைவை அப்படியே தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது இரண்டு அம்சங்களை தெளிவாக்குகிறது. முதலாவதாக இதுவரை நடைபெற்ற புரட்சிகள் சுரண்டலை முற்றாக ஒழிப்பவையல்ல. இரண்டாவதாக அரசுப்பொறியமைவு என்பது வர்க்த்தன்மை கொண்டது என்பதை தொழிலாளி வர்க்கம் நேரிடையாக அனுபவத்தில் கண்டறிவதை பாரீஸ் கம்யூன் சாத்தியமாக்கியது.

புரட்சி எங்கு நடக்கும்?

வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளில்தான் சோசலிசப் புரட்சி நடைபெறும் என்று மார்க்சும், எங்கெல்சும் முன்நிர்ணயித்து கூறியதாக பொதுவாக கருத்து உண்டு. ஆனால், இதன் அர்த்தம் வேறு எங்குமே சோசலிச புரட்சி நடக்காது என்று அர்த்தமல்ல. இதை மார்க்சும், எங்கெல்சும் தங்களுடைய 1882 ஆம் ஆண்டு ருஷ்ய பதிப்பின் முகவுரையில் ரஷ்யாவிலும் கூட சோசலிசப் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி  அவர்கள் கூறுவதாவது. நவீன கால முதலாளித்துவ சொத்துடமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதை பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ரஷ்யாவில் நாம் காண்பது என்ன?. அதிவேகமாய் வளர்ந்துவரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையில் உள்ள முதலாளித்துவ நில உடமையின் கூடவே, ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்க காண்கிறோம்.

இப்போது எழும் கேள்வி என்னதான் ருஷ்ய ஓப்ஷீனா வெகுவாய் சீர்குலைக்கப்பட்டிருப்பினும் இன்னும் நிலத்திலான புரதான பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும் இது நேரடியாய் கம்யூனிச பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமையாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர் மாறாய் மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்த சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?  இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான் ருஷ்ய புரட்சியானது மேற்கு நாடுகளின் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெருமாயின் தற்போது ருஷ்யாவில் நிலத்தில் உள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குறிய துவக்க நிலையாய் பயன்படக்கூடும். எனவே புரட்சியானது ஒரு நிலையான சூத்திரத்தின் அடிப்படையில் ஆனதல்ல. பொருளாதார நிலை, புரட்சி நடத்துகிற வர்க்கத்தின் உணர்வுநிலை, அதன் ஸ்தாபன ஒழுங்கமைப்பு, சர்வதேச சூழல் இவை அனைத்திற்கும் ஓரு பங்குண்டு;. இதில் ஒன்று மட்டுமே பிரதானம். மற்றது அதன் துணை நிலைமைதான் என்று புரிந்துகொள்வது சரியல்ல என்பதை அவர்கள் தங்களது இரண்டாவது முகவரையிலேயே தெளிவாக்கி இருக்கின்றார்.

அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி

1890 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பிற்கு  எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில் அப்போது தொழில் துறையில் ஏகபோக நிலையை வகித்து வந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் நிலைக்கு வந்துவிடும் என்பதை அப்போதே முன்நிர்ணயித்து கூறியுள்ளார்.  இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமென கூறும்படி அத்தனை விருவிருப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலா தொழில்துறை செல்வாதாரங்களை பயன்படுத்திக் கொள்வதை சாத்தியமாக்கிற்று. அதேபோன்று பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறை பிரதேசங்களில் வளர்ச்சியுருகின்றன.

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட போது அறிக்கையின் கடைசி பிரிவு பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களின் நிலைமையை கூறும் இந்த பிரிவில் ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் காணப்படவேயில்லை. இந்த இரு நாடுகளும் ஐரோப்பாவிற்கு மூலப்பொருட்களை வழங்கின. அதேபோது ஐரோப்பிய தொழில்துறை உற்பத்தி பொருள்களுக்கு சந்தைகளாகவும் இருந்தன இப்படி இருந்த நாடுகள் இரண்டும் 25 ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை துல்லியமாக கணித்ததில் இந்த முகவுரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றன. இதில், அமெரிக்க பற்றிய கணிப்பு அப்போதைய வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. ஆனால், ரஷ்யா பற்றிய கணிப்பானது ஹாக்ஸ்த்ஹாவு எழுதிய ருஷ்யாவின் நில உறவுகளில் கிராம சமுதாய அமைப்பின் மீதமிச்சங்களை விவரித்து எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. அவை எவ்வளவு துல்லியமானது என்பதை அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் நிருபித்திருக்கின்றன.

இதே போன்று 1882-ஆம் ஆண்டு தொழில்துறையில் இங்கிலாந்தின் ஏகபோகம் தகர்க்கப்பட்டு அந்த இடத்திற்கு அமெரிக்கா வரும் என்பதையும் மிகத்துல்லியமாக கணித்திருக்கிறார். 1947க்குப் பின்னால்தான் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம் என்பது முடிவுக்கு வர துவங்கியது. அதற்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையின் முகவுரையில் மார்க்சும், எங்கெல்சும் இதைமுன் நிர்ணயித்து கூறியுள்ளனர்.

முன்னேற்றம் நேர்கோட்டிலானதா?

1847 இல் அறிக்கை வெளிவந்தபோது எண்ணிக்கையில் அதிகமில்லை என்ற போதும் சோசலிச பதாகையை உயர்த்தி பிடித்தவர்கள் அதை வரவேற்றனர். அறிக்கை வெளிவந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெவ்வேறான 12 பதிப்புகளுக்கு குறையாமல் ஜெர்மன் மொழியில் வெளிவந்திருக்கிறது.

பிரெச்சில் 1848 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு முன்பு முதன் முதலாக பாரிசில் வெளியாயிற்று. போலிஷ் மொழியிலும் உடனடியாக லண்டனிலிருந்து வெளிவந்தது. இப்படி பெருமளவில் வரவேற்கப்பட்டு வாசிக்கப்பட்ட அறிக்கை மிக சீக்கிரமே பின் நிலைக்கு தள்ளப்பட்டது. 1848 இல் பாரிசில் நடந்த பாட்டாளி வர்க்க எழுச்சி தோல்வியடைந்ததும் 1852 நவம்பரில் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் 7 பேருக்கு 3 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒட்டியும் அறிக்கை சட்டத்தின்படி தீண்டத்தகாததாய் விலக்கி வைக்கப்பட்டது. இதன் பிறகு ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம் மீது தாக்குதல் தொடுக்க போதிய பலத்தை பெற்றதும் அகில தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஆயினும் இச்சங்கம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாட்டிலிருந்து தொடங்கப்படவில்லை. பல்வேறு சீர்திருத்தவாதிகளையும் அனைத்து செல்ல வேண்டியிருந்ததால் அந்த சங்கத்திற்கான விதிகளது முகப்புரையாய் அமைந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தாலும் கூட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளை வேலைதிட்டமாக முன்வைக்க முடியவில்லை.

மார்க்ஸ் அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்திலிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் நம்பியிருந்தார்.

மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே இந்த அகிலம் கலைக்கப்பட்டபோது ஆங்கிலேயே தொழிற்சங்கங்களின் தலைவர் 1887 இல் சோசலிசம் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்துவிட்டது என்று அறிவித்தார்.

புரட்சியின் வளர்ச்சிப்போக்கில் ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் பாய்ச்சலும் பின்னடைவும் தவிர்க்க முடியாதவை. ஆயினும் தோல்விகள் விலகல்கள் பின்னடைவுகள் இவற்றை சமாளித்து அனுபவங்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும் என்பதை முகவுரையின் இந்த பகுதி மிகத்தெளிவாகவும் படிப்பினையாகவும் பாட்டாளி வர்க்கத்தின் முன் சமர்ப்பித்திருக்கிறது.

இறுதியாக இந்த முகவுரைகள் அறிக்கையின் அளவிற்கு முக்கியத்துவமுடையவை. அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் எவரும் இந்த முகவுரைகளையும் முழுமையாக வாசிக்க வேண்டியது அவசியமாகும்.

வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும், இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்த்து, படித்து பயன்பெற வேண்டிய நூல் என்றால் மிகையாகாது. ஆங்கிலத்தில் A World to Win என்று லெப்ட் வேர்டு பதிப்பகம் வெளியிட்ட நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது. கடினமான அரசியல், பொருளாதார கருத்துக்களை, எளிமையான, அழகான நடையில் மொழி பெயர்த்துள்ள கி.இலக்குவன் அவர்கள் பாராட்டுக்குரியவர். தமிழில் இதை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள். இதில் மூன்று முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகியோரின் கட்டுரைகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் அறிமுக உரை எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அறிமுக உரை அமைந்துள்ளது. இந்நூலை படித்து விட்டு, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, அதன் பல பதிப்புகள், அவற்றிற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியுள்ள முகவுரையை படிப்பது சிறந்த அனுபவமாக அமையும். (இந்த கட்டுரையாளர் அப்படி வாசித்தது பயனுள்ளது என குறிப்பிட விரும்புகிறார்.) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் நிலவியசூ ழல், பாரீஸ் கம்யூன் புரட்சி, பிரஞ்சு புரட்சி பற்றி தோழர். பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார். 1864 ல் உழைக்கும் மக்கள் சங்கம், மார்க்சீய சிந்தனைகள் வளர்ச்சி பற்றி குறிப்பிடும் அவர், 1948 ல் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது, உலகம் எந்த அளவு மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மக்கள் ஜனநாயக அரசுகள் ஏற்பட்ட காலம் அது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பின் சோசலிசம் செத்துப் போய் விட்டது என்ற புலம்பலும், முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொக்கரிப்பும், சோசலிசத் தின் சாத்தியப்பாடு பற்றி சிந்தனையாளர்களின் கவனத்தை திருப்பியது.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின், உலக நாடுகளுக்கு தலைவனாக, தட்டிக் கேட்க ஆளில்லாதது போன்று ஏகாதிபத்திய அமெரிக்கா செயல்படத் துவங்கிய உடனேயே தொண்ணூறுகளின் பின் பகுதியில், வளர்ந்த நாடுகளில் வெடித்த உழைக்கும் மக்களின் போராட்டம், குறிப்பாக, பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர் போராட்டம் முதலாளித்துவம் நிரந்தரமானது அல்ல என்ற கருத்தை மீண்டும் வலுவாக நிலை நிறுத்தியது.

தனது அறிமுக உரையின் இரண்டாவது பகுதியில் கம்யூனிஸ்டு பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை என்றும் மூலதனம் என்ற நூல் தான் முழுமையாக அப்பணியைச் செய்துள்ளது என்று தோழர்.காரத் குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய சூழலில், நிதி மூலதனத்தின் வளர்ச்சி,  அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார சீர்குலைவுகள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். முதலாளித்துவம் உலகளாவிய அளவில் செயல்பட்டாலும், தேசிய எல்லைக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டு பிரகடனம் வலியுறுத்துவது, இன்றும் பொருத்தமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய சந்தை சார் பொருளா தாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் அதை நிலையானதாக கருத இயலாது என்றும், தங்கள் நிலை பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்குமென்றும் கூறுகிறார்.

மேலும், சுயாதிபத்தியத்தை ஒரு நாடு இழக்கும் போது, அந்நாட்டு மக்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமையை இழக்கின்றனர் என்பதை இன்றைய இந்திய சூழலுடன் பொருத்தி விளக்கியுள்ளார். வர்க்கப் போராட்டத்தை நாம் திறமையாக கையாள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தோழர்.காரத்தின் அறிமுக உரையின் மூன்றாவது பாகத்தில், இன, குழுவாதம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதையும், இவற்றினால் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களுக்குத் தடைகள் ஏற்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார். சாதி, மத, இன அடிப்படையில் எவ்வளவு மோதல்கள்? ஆப்கனில் தாலிபன், பாகிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாதிகள், இந்தியாவில் இந்து மத வெறியர்கள் ஆகியவற்றுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் சேர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சோவியத் யூனியன் மற்றும் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற நிகழ்வுகள், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனைப் பற்றி மார்க்சீய தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை உணர்த்துகின்றன என்று கூறுகிறார்.

நான்காம் பகுதியில், சோசலிசம் சந்தித்த பின்னடைவுகள் காரணமாகத் தோன்றியுள்ள திரிபுவாத போக்குகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் அதே சமயம், தொழிலாளி வர்க்கம் மட்டுமே ஏகாதிபத்திய தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து வருகிறதென்ப தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கம்யூனிஸ்டு பிரகடனத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஆண்களின் உழைப்பு அகற்றப்பட்டு, பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைக் குறிப்பிட்டு, 20 – ம் நூற்றாண்டு இறுதிக் கணக்கின் படி, வளர்ந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் உழைப்பாளர் படையில் 60 சதம் பெண்கள் உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படாவிட்டால், பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இயலாதென எச்சரிக்கிறார். அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்க கட்சிகளுக்குள்ளே கம்யூனிஸ்டுகள் தான், மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்தவர் என பிரகடனத்தில் கூறியுள்ளது மிகவும் சரியான நிலை என்று வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும், அரசு பற்றியும், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவும் நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக உரையின் இறுதிப் பகுதியில் இன்று கட்சியின் செல்வாக்கு, பணிகள், பலம், பலவீனம் பற்றி பொதுச் செயலாளர் சுருக்கமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனம் – அன்றும் இன்றும் என்ற அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரை மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே, பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக விரிவான முறையில்  அறியப்பட்ட நூல் கம்யூனிஸ்ட் பிரகடனம் என்கிறார் ஆசிரியர். போல்ஷ்விக் புரட்சிக்கு முன்பு 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்பதும், அக்காலத்திலேயே 544 பதிப்புகள் வெளிவந்தன என்பதும் அதன் சிறப்பை வெளிப்படுத்து கின்றன. 1917 நவம்பர் புரட்சிக்குப் பின்னர் மேலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, எண்ணற்ற பதிப்புகள் வெளியாகின என்பதும் இந்நூலின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்பதை காட்டுகிறது பைபிள், குரான் போலின்றி, வெளியிட்டு 150 ஆண்டுகளுக்குள் இந்நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம். இது ஒரு இளமை ததும்பும் நூல் என்கிறார் கட்டுரையாளர், மற்ற நூல்களைக் காட்டிலும், இந்நூல் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் அதன் அரசியல் வலிமை என்று குறிப்பிடப் பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். அதேபோல, இந்த நூலின் உரைநடை வீச்சின் கம்பீரம், சமூகங்களை பீடித்துள்ள நோய் பற்றிய நிர்ணயிப்பையும், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய கணிப்பும்….. பிரகடனத்தின் சிறப்புக்குக் காரணம் என்கிறார் அகமது.

மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்தும், மார்க்ஸ் தனியாகவும் ஏராளமான நூல்களை எழுதிய போதிலும், 30 வயது கூட நிரம்பாத இளைஞரான ஒருவரின் அறிவு முதிர்ச்சி மிக்க நூல்தான் பிரகடனம் என்கிறார் கட்டுரையாளர் அகமது. மார்க்சின் மற்றநூல்களை மேற்கோள் காட்டி, அவை அன்று நிலவிய அரசியல் சிந்தனை போக்குகளுக்கெதிராக அவரது தத்துவ மோதல்களின் அடையா ளங்கள் என்று குறிப்பிடுகிறார், அவை குறிப்பிட்ட நூலாசிரியர் களுக்கெதிராக, அச்சிந்தனைகளுக்கு எதிராக எழுதப்பட்டவை என்றும் விளக்குகிறார். ஆனால், பிரகடனத்தின் மறக்க முடியாத முற்பகுதி எந்த ஒரு சிந்தனையாளருக்கோ, சிந்தனைப்போக்கு களுக்கோ எதிரான விமர்சனமாக இது அமையவில்லை. மாறாக, அதுவரை மார்க்ஸ் எழுதிய நூல்களுக்குள்ளேயே முதன் முறையாக தனது கருத்துக்களை அழுத்தந்திருத்தமாக விவரிக்கக்கூடிய ஒரு பகுதியாகவே உள்ளது என்றும், இந்நூல் அரசியல், பொருளா தாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றுக்கிடையே ஒரு புதிய உறவு முறைக்கான இலக்கணத்தை வகுக்கும் நூல் என்றும் நூலின் அம்சங்களைப் பற்றி விளக்குகையில் கூறுகிறார், இந்நூல் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அசைவுகளைச் சுட்டிக்காட்டியது. ஒன்று பொருளியல் உலகில் நடைபெறும் அசைவு அதாவது பல்வேறு உற்பத்தி முறைகளைப் பொதுவான முறையில் விளக்கு வதன் மூலம் தத்துவம் என்ற அறிவியல் ஆய்வை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு வரலாற்றுக் கோட்பாடு……. இரண்டாவது – நீதிநெறி முறைகளுக்கு முரணான, பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு உலகத்தை புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்கும் நெறிமுறை சார்ந்த திட்டம். இரண்டுவிதமான அம்சங்கள் குறித்தும் மார்க்சியம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் நூலின் முக்கியத் துவம் பற்றி நிறைய விளக்கியுள்ளார். முதலாளித்துவத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

முதலாளித்துவத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் அதனை ஆடாமல் அசையாமல் இருக்கும் ஒரு சமூக அமைப்பாக பார்க்கக்கூடாது (பக்கம் 30) என்பதே மார்க்சின் பதில். மேலும், மார்க்சின் அனைத்து படைப்புகளிலும் உள்ள மூன்று முக்கிய அம்சங்களாக கட்டுரையாளர் குறிப்பிடுபவை:

 1. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையிலும், மிகவும் விரிவான முறையிலும் விளக்குவதற்கான முயற்சி……….
 2. அவர் காலத்திலும், அவரைச் சுற்றியும் உருவாகி வந்த வரலாறு மற்றும் அரசியல் பற்றிய விரிவான பரிசீலனை………
 3. தொழிலாளர் இயக்கம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

பிரகடனம் பற்றிய பல்வேறு அணுகுமுறைகளை கட்டுரையாளர் விளக்கியுள்ளார், ஹெகலின் கருத்துக்கு எதிராக மார்க்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார் என்றும், உணர்வு என்பதை கருப்பொருளாகக் கொண்டு பல கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ் என்றும் கூறுகிறார், உணர்வு பற்றிய மார்க்சின் மிகவும் பிரபலமான வாசகமும் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. மனிதனுடைய உணர்வு அவனது வாழ்நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவனது சமூக வாழ்க்கைத்தான் அவனது உணர்வை தீர்மானிக்கிறது (பக்கம் 33).

கட்டுரை ஆசிரியர் பிரகடனத்தை எப்படி பரிசீலிக்கலாம் என்று விளக்கியுள்ளார்.

 1. காலச் சூழலுக்கேற்ப பரிசீலிக்கலாம். (உ.ம் கம்யூனிஸ்ட் லீக், பிளவுபட்டுக் கிடந்த உழைக்கும் வர்க்கம் – வர்க்க ஒற்றுமை……)
 2. சித்தாந்த அடிப்படையில் பரிசீலிக்கலாம். (ஹெகல், ஃபாயர்பாக்….) இப்படி கூறிவிட்டு, பிரகடனத்தை பரிசீலிப்பது என்பது முடிவே இல்லாத ஒன்று என கருதும் அளவுக்கு ஆழமானது சிக்கல் நிறைந்தது, புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற தன் கருத்தை முன்வைக்கிறார் பிரகடனத்திலுள்ள அரசியல், பொருளாதார அம்சங்களை ஆராய்ந்து, ஐரோப்பிய சூழல், முதலாளி-தொழிலாளி வர்க்கத் தன்மைகளை விரிவாக எழுதி யுள்ளார். மேலும், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரமான வர்க்கம் என்ற தன்மையை எப்போது இழக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தனது கருத்துக்களுக்கு வலுவூட்ட கிராம்சியின் கருத்துக்களை மேற்கோள்காட்டி விளக்குகிறார். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தன்மைகளையும் கட்டுரையாளர் பரிசீலனை செய்துள்ளார். முதலாளித்துவத்தின் விதிகளையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

அய்ஜாஸ் அகமது கட்டுரையின் கடைசி பகுதியான உலகமயமாக்கல், பொருளாதாரம் பண்பாடு, தற்போதைய சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதில் ஊடே நூலிழை போன்று ஹெகல் மற்றும் மார்க்சின் கருத்துக்கள் ஆராயப் பட்டுள்ளன. உலகளாவிய வர்க்கம் என்று அதிகாரவர்க்கத்தை ஹெகல் குறிப்பிட்டாலும், மார்க்ஸ் அதற்கெதிரான விளக்கத்தை அளித்துள்ளதை எழுதியுள்ள கட்டுரையாளர் அச்சொல்லிற்கு நீண்ட விளக்கம் தந்துள்ளார். பாட்டாளி வர்க்க நிலைமைகளை விளக்கி கட்டுரையை நிறைவு செய்துள்ளார் அகமது அவர்கள். கட்டுரைக்கு பின் 6 பக்கங்களுக்கு கொடுத்துள்ள குறிப்புகள் சில சொற்களை சரியாக புரிந்து கொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூலில் இரண்டாவது கட்டுரை மிகச்சிறந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் அவர்களால் எழுதப்பட்டதாகும். தலைப்பு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது என்பதாகும் பிரகடனம் பற்றிய எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது என்ற முன்னுரையுடன் கட்டுரை துவங்குகிறது. முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று ஹெகல், ஃபாயர்பாக் பற்றிய மார்க்சின் ஆய்வுரைகள் தொடர்பான மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உணர்வு பற்றிய மார்க்சின் நிலைப்பாட்டை இவரும் குறிப்பிடுகிறார். பொருளியல் வாழ்வு, உற்பத்தி, மனித உழைப்பு பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது, மனிதகுலம் தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகளைத்தான் தனக்கு நிர்ணயித்து கொள்கிறது என்ற மார்க்சின் கூற்று எவ்வளவு பொருத்தமானது என்பதை எடுத்துக் காட்டுகிறார். வரலாற்று சூழல்களின் பின்னணியில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய செயல் முறைகளின் எல்லைப் பற்றி மார்க்சும், ஏங்கெல்சும் அறிந்திருந்தனர். ஆனால், சிந்தனைகள் மூலமும் அவற்றை புரட்சிகரமான செயல்பாடுகள் நிலைக்கு உயர்த்துவதன் மூலம்தான் உலகையே மாற்றி அமைக்க முடியும் என நம்பினார்கள். பிரகடனம் இதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மார்க்சிய ஆய்வு முறை வரலாற்று இயக்கவியல் அடிப் படையில் இருந்தது. முரண்பாடுகளின் தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற பார்வை மிகவும் முக்கியமானது. கொள்கைதான் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற மார்க்ஸ்-ஏங்கெல்சின் நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். சமுதாய வரலாற்றை. மனிதகுல வளர்ச்சியை மார்க்சீய அடிப்படையில் புரிந்து கொள்ள பிரகடனத்தை படிப்பது அவசியமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருள் உற்பத்தி நடைபெற்ற விதம், வர்க்கங்கள் உருவான விதம் ஆகியவற்றை புரிந்து கொண்டால்தான் வர்க்கப் போராட்டம் இடையறாமல் நடப்பதை புரிந்துகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நடப்பதை பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது. மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூல் இதைப்பற்றி விரிவாகவே விளக்கமளிக்கிறது.

இர்பான் ஹபீபின் கட்டுரையில், பிரகடனத்தில் உற்பத்தி முறை என்ற சொல் பயன்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது. ஆனால், பின்னர் எழுதப்பட்ட நூல்களில் அது பயன்படுத்தப் படுகிறது. இது மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்ய மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கரிண்ட்ரிஸ் (1857-58) என்ற நூலில் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றியும், இந்திய சமூகம் பற்றியும் மார்க்ஸ் நிறைய எழுதியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு வரலாறு என்ற ஒன்றே இல்லை என மார்க்ஸ் கூறினார். ஆனால் பின்னர் அந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரகடனத்திலும் அது சேர்க்கப்படவில்லையென கட்டுரையாளர் தெரிவிக்கிறார். பிரகடனம் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தினர் என்ற சொல்லும் மூலதன உடமையாளர்கள் என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலதனம் ? சுரண்டல் பற்றிய தனது கருத்துக்களில் மூலதன திரட்சி உருவான விதம் மார்க்சின் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பு என கட்டுரையாளர் மார்க்சை பாராட்டுகிறார். ஆடம்ஸ்மித், ரிக்கார் டோ போன்ற தொன்மை பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, முக்கியமான பங்கை மார்க்ஸ் பொருளாதாரம் என்ற சமூக அறிவியலுக்கு ஆற்றியுள்ளார் என மார்க்சை பாராட்டுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்ட் பிரகடனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டது என்றும், முக்கியமான கருத்துக்களை மிகச்சரியாக எழுதியுள்ளானர் என்பதும் பிரகடனத்திற்கு கிடைத்த வெற்றி கட்டுரையாளர் பிரகடனத்தை மட்டுமின்றி அதுவெளிவந்த பின் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய வற்றை படிப்பது பிரகடனத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும் என்று எழுதியிருப்பது வரவேற்கத்தக் கதாகும். அது மட்டுமல்ல ஏராளமான நூல்களை மேற்கோள் காட்டி, வாசிக்கும் உணர்வை தூண்டி இருப்பதும் பாராட்டுக்குரியது.

நூலின் கடைசி கட்டுரையான 150 ஆண்டுகளுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதை பிரபல பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையை விஜயராகவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கம்யூனிஸ்ட் அறிக்கை மார்க்சிய உலக கண்ணோட்டத்தை எழுத்துவடிவில் கொணர்ந்த முதல் முயற்சி என கட்டுரையாளர் பாராட்டுகிறார். ஜெர்மன் தத்துவ ஞானம் என்று மார்க்சும், ஏங்கெல்சும் எழுதியது அப்போது அச்சில் வரவில்லையென்ற போதும் பிரகடனத்தின் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகடனம் வரலாற்றை பொருள்முதல்வாத பார்வையில் விளக்கி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் 4 சிறப்பு அம்சங்களை கட்டுரையாளர் கீழ்க் கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்.

 1. வரலாற்றின் உள் இயக்கங்களை இனங்கண்டு, சமூக உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி முறையின் சமூக உறவுகளுக்குமிடையேயான தொடர்பு.
 2. சமூகம் வர்க்க வடிவிலும், வர்க்கப் போராட்ட வடிவிலும் செயல்படுதலை விளக்குதல்.
 3. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றிய சிறப்பான, சுருக்கமான ஆய்வு.
 4. முதலாளித்துவம் ஏன் இருக்கிறது என்றும், முதலாளித்துவ மற்றும் அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் மனித குலத்தை எப்படி பாட்டாளி வர்க்கம் விடுவித்து வரலாறு படைக்கும் என்ற விளக்கம் ஆகியவை பிரகடனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இவை மட்டுமின்றி, வரலாறு என்பது ஏதோ தனிநபர் வாழ்வின் சம்பவத் தொகுப்பு என்ற பார்வையை அகற்றி, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்க பிரகடனம் உதவியுள்ளது. அதேபோல், முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடுகள், சமூக போக்குகளை விளக்குகிறது என்கிறார் பட்நாயக். கம்யூனிஸ்ட் அறிக்கை புரட்சியை நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஐரோப்பிய அரசியல் பொருளாதார நிகழ்வுகளை விளக்கியதுடன் உலகப் புரட்சி பற்றிய போக்குகளையும் பிரகடனம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சீயம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கான காரணங்களை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கும் கட்டுரையாளர் பட்நாயக், மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக படித்துவிட்டால் மட்டும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுவிட்டதாகக் கூற இயலாது என்றும், மார்க்சியத்தை மறு கட்டமைப்பு செய்வதன் மூலம், செய்யப்பட்ட மறு கட்டமைப்பின் வேர்களை மார்க்சினுடைய எழுத்துக்களில் அடையாளம் காணுவது அவசியம் என்றும் கூறுகிறார். ஹார்க் லுக்காசை மேற்கோள் காட்டுகிறார்.

தொண்ணுறுகளில் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளையும், உலகமயமாதல், நிதி மூலதனத்தின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றை விரிவாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இன்றயை உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல சோசலிச திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்குப் புதிய ஒருங்கிணைக்கப் பட்ட கோட்பாடுகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்றும், கம்யூனிஸ்ட் அறிக்கை அடித்தளமாக அமையும் என்றும் கூறியுள்ளதன் மூலம் சோசலிசம் சாத்தியமே என்பதையும், மனித குல விடுதலைக்கு அதுவே தேவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று அருமையான கட்டுரைகளையும், சிறந்த அறிமுக உரையும் கொண்ட இந்நூல் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டியவையாகும். இந்த நூலை படித்துவிட்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் வாசித்தால், மார்க்சிய கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

சிறந்த மொழி பெயர்ப்பைச் செய்துள்ள கி.இலக்குவன், விஜயராகவன் மற்றும் பாரதி புத்தகாலயத்துக்கு மீண்டும் பாராட்டுகள். கட்டுரையாளர்கள் அனைவருமே மார்க்சின் அசாத்திய புத்திக் கூர்மையையும், சமூக, அரசியல், பொருளா தாரத்தை தீர்க்கதரிசனத்துடன் அலசி ஆராய்ந்திருப்பதைப் பாராட்டியுள்ளனர். விடுபட்ட விசயங்களைச் சுட்டிக்காட்டி யுள்ளனர். ஏராளமான எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களையும் வாசிப்பது மேலும் மார்க்சியத்தை நன்கு புரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை.