மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !

குரல்: பூங்கொடி மதியரசு

(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து)

மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும்.

  • கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துவது என்பது தத்துவார்த்தப் பணியின் மற்றொரு அம்சமாகும். அதற்குக் கட்சிக்குள்ளும், கட்சி பிராக்சன் மூலம் வெகுஜனஅமைப்புக்குள்ளும் தத்துவார்த்த கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • கட்சியும் வெகுஜன அமைப்புகளும் நடத்தும் இயக்கங்கள், போராட்டங்களுக்குள் ஈர்க்கப்படும் மக்களிடமும் நமது தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும். அவ்வாறே அவர்களை நம் கட்சியின் உணர்வுப்பூர்வமான ஆதரவாளர்களாக மாற்ற முடியும்.
  • நவீன தாராளமயம் என்பது பொருளாதாரக் கொள்கை தளத்தில் மட்டும் நிலவுவது அல்ல; அது அனைத்து சமூக, பண்பாட்டுத் தளங்களிலும் விரவி நிற்கும் முதலாளித்துவ வர்க்கக் கண்ணோட்டம் ஆகும். ஆகவே, நவீன தாராளமய கொள்கைகளின் மூலம் வெளிப்படும் முதலாளித்துவ தத்துவங்களை எதிர்த்து தொடர்ந்த போராட்டங்களை நடத்த வேண்டும்.
  • சமூகத்தில் தற்போது ஆழமாகப் பதிந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவா’ மற்றும் இதர பல வகுப்புவாத வடிவங்களை எதிர்த்தும் தத்துவார்த்த போராட்டம் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. சாதி வேற்றுமை, பிரதேச வெறி, பிரிவினைவாதப் போக்குகளை வளர்த்தெடுக்கும் குறுகிய அடையாள, குறுங்குழுவாதத் தத்துவங்களை எதிர்த்தும் தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
  • கட்சியின் அணிகள், தத்துவார்த்த பிரச்சனைகளை முழுமையாக உள்வாங்கி அந்தப் போராட்டத்தை மக்களிடையே முன்னெடுத்துச் செல்லும் தகுதியினை அளிப்பதாக கட்சிக் கல்வி இருக்க வேண்டும்.
  • கிளர்ச்சி – பிரச்சாரக் குழு, கட்சி கல்விக் குழு, கட்சி இதழ் மற்றும் பிரசுரங்களுக்கான குழு ஆகியவை தங்கள் பணிகளை ஒருங்கிணைத்து தத்துவார்த்த போராட்டத்திற்குப் பங்காற்ற வேண்டும்.
  • கட்சி அணிகள், ஒரு பக்கம் கிளர்ச்சிக்கும் பிரச்சாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் மறுபக்கத்தில் தத்துவார்த்த போராட்டத்திற்கும், பிரச்சார இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் புரிந்து கொள்ளுமாறு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இளைய தலைமுறையினை ஈர்த்தெடுக்கும் வகையில் சோசலிச கண்ணோட்டம் குறித்த பிரச்சாரம் இருக்க வேண்டும். துணைக்குழுக்களும், பிராக்சன் கமிட்டிகளும் தத்துவார்த்த கல்வி குறித்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

  • இந்திய சூழலில் எப்படி சோசலிச சமூகம் உருவாக முடியும் என்பதை படைப்பாற்றலுடன் விளக்கிட வேண்டும். இளைய தலைமுறையினைக் கவர்ந்திட சோசலிச அமைப்பு பற்றிய பார்வையினை இன்றைய இந்திய சூழலில் விளக்கிச் சொல்வது மிக முக்கியமான பணியாகும்.

நிரந்தர பள்ளி. கட்சிக் கல்வி குறித்து ஆண்டு திட்டம் மாநிலங்களில் உருவாக்க வேண்டும். அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் குறைந்த பட்சம் 4 தலைப்புகளில் வகுப்பு. வகுப்பெடுக்கும் முறை, பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்துவது ஆகியன வேண்டும்.

  • ஒரு மத்திய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். அது இந்திய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து, கட்சிப்பணிகளுக்கு தத்துவார்த்த ரீதியான ஆதரவு பலத்தை அளிக்கும்.
  • கட்சி பல்வேறு மட்டங்களில் அறிவியலாளர்கள், பண்பாட்டுத் தளங்களில் செயலாற்றுவோர் மற்றும் முற்போக்கான கண்ணோட்டத்துடன் செயல்படுவோர் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற வகை செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • அனைத்து மட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களுக்குக் கட்சி கல்வி அளிப்பது ஸ்தாபன பணியுடன் ஒன்றிணைந்த கடமையாகும். உறுப்பினர்களின் தத்துவார்த்த-அரசியல் மட்டத்தை உயர்த்துவது என்பது எந்த அளவிற்கு அவர்கள் ஸ்தாபன நடவடிக்கைகள் மற்றும் வெகுமக்கள் போராட்டங்கள் ஆகியவற்றின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர் என்பதை சார்ந்துள்ளது. இதில், கட்சி கல்வியின் தரம் முக்கியமான காரணம்.
  • கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஊழியர்களுக்குக் கட்சி கல்வி முறையாகவும் திட்டமிட்டதாகவும் இருக்கவேண்டும்.
  • அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கட்சி கல்வி சென்றடையும் வகையில் குறைந்தபட்சம் நான்கு தலைப்புகளில்

1) கட்சி திட்டம்

2) மார்க்சீய தத்துவம்

3) அரசியல் பொருளாதாரம்

4) கட்சி அமைப்புச்சட்டம் மற்றும் ஸ்தாபனம்

கட்சி அரசியல் கல்வி தரப்பட வேண்டும்.

  • பல இடங்களில் கட்சி கல்வி அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிலையில், படிப்பு வட்டங்களை முறைசார் கட்சிக் கல்விக்கு வலுசேர்க்கும் விதத்தில் பயன்படுத்தலாம்.
  • பயிற்றுவிப்பு முறைகளை மேம்படுத்துவது ஒரு பொது தேவையாக உள்ளது. குழு விவாதங்கள், பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், காணொளி – கேட்பொலி முறைகள், பவர்பாய்ன்ட் பயன்படுத்தும் உரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
  • பாடத்திட்டத்தை வடிவமைக்கும்பொழுது வர்க்கம், சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகள், ஆணாதிக்க முறைமை, பாலின ஒடுக்குமுறை ஆகியவை தொடர்பான பாடங்கள் இருப்பது அவசியம்.

வகுப்புவாத, பிற்போக்கு, பழமைவாத சக்திகளை எதிர்கொள்ள பண்பாட்டு அமைப்புகள், மேடைகளை உருவாக்கி பல்வேறு நீரோட்டததில் உள்ள கலைஞர்களையும், பண்பாட்டுத்துறை பிரமுகர்களையும் அந்த மேடைகளில் ஒருங்கிணைக்க வேண்டும்; புதிய தாராளமய, கார்ப்பரேட் முன்வைக்கும் பண்பாட்டு விழுமியங்களுக்கு மாற்று ஒன்றினை முன்வைக்க வேண்டும்.

  • எழுத்தாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டு தளத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு அமைப்புகளை, மேடைகளை வளர்த்தெடுக்க வேண்டும். வகுப்புவாத, பிற்போக்குத்தனமான, பழமைவாத சக்திகளைப் பண்பாட்டுரீதியில் எதிர்கொள்ளும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதேசமயம் புதிய தாராளமயம், கார்ப்பரேட் முன்வைக்கும் பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு எதிரான மாற்று ஒன்றினையும் நமது பண்பாட்டு அரங்கம் முன்வைக்க வேண்டும்.

‘இந்துத்துவா’ மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்த, பண்பாட்டு, சமூக தளங்களில் நமது போராட்டத்தை நடத்த வேண்டும். வகுப்புவாதத்துக்கு எதிராகக் கூட்டு மேடைகளை அமைக்க வேண்டும். கட்சியின் அறிவு வளங்களை பயன்படுத்தி வகுப்புவாதத்திற்கு எதிரான இயக்கத்திற்கான அரசியல் – தத்துவார்த்த கருத்துதாள்களை வெளியிட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு மாற்றாக, மதச்சார்பற்ற மழலையர் பள்ளி, இதர பள்ளிகளை அமைக்க வேண்டும்.

  • (1) இந்துத்வா மற்றும் ஏனைய வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு, பிரிவினை கொள்கைகளைத் தோலுரிக்கும் சித்தாந்த, அரசியல் பிரச்சார கருத்து தாள்கள் பொது மக்களை ஈர்க்கும் நடையில் தயாரிக்கப்பட வேண்டும். அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், கலாச்சார நிபுணர்கள் ஆகியோரை வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த கட்சியின் அறிவு வளங்கள், ஆராய்ச்சி மையங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • (2) கல்வித்துறையில் பள்ளி பருவத்துக்கு முந்தைய கல்வி நிலையான மழலையர்பள்ளிகளிலும், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • (3) கட்சியும், தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்திடையேயும், அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக மதச்சார்பற்ற, அறிவியல் அணுகுமுறைகளை வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • (4) வகுப்புவாத சக்திகள் ஆபத்தான, சாதிய ரீதியான, பிற்போக்குத் தனமான மதிப்பீடுகளை சமூகத்தில் புகட்டுவதற்கு எதிராக கலாச்சார மற்றும் அறிவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் அறிவியல் இயக்கத்தின் பணிகள் இந்த நோக்கத்திற்காகமுடுக்கி விடப்பட வேண்டும்.
  • (5) ஆதிவாசி, தலித் பிரிவினரிடம் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் பன்முகப்பட்ட செயல்களை முறியடிக்க, அப்பகுதியினரிடம் கட்சியின் ஸ்தாபன பணிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

பண்பாட்டு அரங்கின் பகுதியாக கட்சியும், வெகுஜன அரங்கங்களும் பண்பாட்டு மேடைகளை அமைக்க வேண்டும். தொழிலாளர் வாழ்விடங்களில் தொழிற்சங்கங்கள் பண்பாட்டு, சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம், உடல்நலம் பேணும் மையங்கள், பயிற்சி மையங்கள், சுகாதாரப்  பணிகள், முதியோர் இல்லம் அமைத்தல் போன்றவற்றைக் கையிலெடுத்து செயலாற்ற வேண்டும்.

சமூக பிரச்சனைகளுக்காக விரிந்த அளவிலான பிரச்சாரம் மற்றும் இயக்கங்களை கட்சி கையிலெடுப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

  • கட்சி முற்போக்கான மதச்சார்பற்ற விழுமியங்களையும், பண்பாட்டு படைப்புகளையும் பாதுகாப்பதற்காக விரிவான அடிப்படையில் பண்பாட்டு மேடைகளை உருவாக்க வேண்டும். தொழிலாளி வர்க்கக் குடியிருப்புப் பகுதிகளில் பண்பாட்டு, சமூக நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். சமூக அமைப்புகளும், பகுதி சார்ந்த அமைப்புகளும் பண்பாட்டு நடவடிக்கைகளுக்காகத் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
  • கட்சியும், வெகுஜனஅமைப்புகளும் உடல்நலம் பேணும் மையங்கள், கல்வி பயிற்சி மையங்கள், படிப்பகங்கள், நிவாரண நடவடிக்கைகள் போன்ற சமூக சேவைக்கான நடவடிக்கைகளைக் கையிலெடுக்க வேண்டும்.
  • பாலியல் ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, தலித்-ஆதிவாசிகளின் உரிமைகள், சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் ஆகியவற்றைக் கட்சி நேரடியாகக் கையிலெடுக்க வேண்டும்.
  • சமூக, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது கட்சியின் அரசியல் மேடை மற்றும் ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக இருத்தல் வேண்டும்.
  • கேரளாவில் மாநிலம் முழுமையும் எடுத்த நோயாளிகளின் இறுதிக் கால பராமரிப்பு வலி நிவாரண நடவடிக்கைகள், கழிவுப் பொருட்களை கையாளும் திட்டங்கள், இயற்கை முறை காய்கறி பயிர் செய்தல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தெலுங்கானா மாநிலம் மூன்று மருத்துவமனைகள், பழங்குடி மக்கள் பகுதியில் மருத்துவமுகாம்கள், பொது மருத்துவ பெயர் கொண்ட மருந்து விற்பனை நிலையம் ஆகியவற்றை நடத்தி வருகின்றன.
  • மக்களை பாதிக்கும் பல சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன; அவைகளை நாம் கையிலெடுக்க வேண்டும். சமூக நல நடவடிக்கைகள் அல்லது செயல்பாடுகள் கட்சி, வெகுஜனஅரங்குகளின் வேலை திட்டங்களின் பகுதியாக இருக்க வேண்டும்;

கட்சியின் வாரப் பத்திரிகைகள், புத்தகங்களின் (தினசரிகள் மட்டுமின்றி) வடிவமைப்பையும், உள்ளடக்கத்தையும் உயர்த்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சியின் அனைத்துப் பத்திரிகைகளும்இணையதளத்தில் ஏற்றப்பட வேண்டும். பிரதான வணிக ஊடக செய்திகளை எதிர்கொள்ள வல்ல ஊடகக் குழுவை மாநிலக் குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.

  • நம் இதழ்கள் அரசிதழ்கள் போல் தகவல்களை மட்டும் உள்ளடக்கி வந்தால் போதும் எனக் கருதப்படுகிறது. தொழில் நுணுக்க வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்திருக்கும் சூழலில் நாம் வெளியிடும் இதழ்கள் படிப்போருக்குத் தோற்றப் பொலிவுடன் ஆவலைத் தூண்டும் வகையில் கொண்டு வர இயலும். மேலும், நமது பத்திரிகைகள் அனைத்தும் ஆன்-லைன்வடிவத்திலும் (இணைய தளம் மூலம் படிப்பது) போக வேண்டும்.
  • தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில்கார்ப்பரேட் ஊடகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அது சக்தி வாய்ந்த செல்வாக்கை செலுத்துவதுடன் பரந்த அளவில் மக்கள் பகுதியினை சென்றடைகிறது.அந்த பிரதான ஊடகங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தத்துவார்த்த இதழான‘மார்க்சிஸ்ட்’ (ஆங்கிலம்) தொடர்ந்து முறையாக வெளி வந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களிலும் தத்துவ இதழ்கள் வெளியாகின்றன. தத்துவார்த்த போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி இவ்விதழ்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களை உபயோகிப்போரின் வலுவான இணைப்பை உருவாக்க வேண்டும்.

  • சமூக ஊடகம் நாம் மக்களிடம் ஆற்றும் பணிக்கு மாற்றாக இருக்க முடியாது; ஆனால் நாம் மக்களுக்கு கொண்டு செல்லும் அரசியல், தத்துவார்த்த கருத்துக்களுக்கு வலு கூட்டி பரவலாக எடுத்துச்செல்ல உதவுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் அறிக்கை மானுட சமூகத்தின் உலகளாவிய விடுதலையைப் பேசுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) ன் திட்டம், இந்திய விடுதலையைப் பேசுகிறது. இந்த இரண்டும் இந்திய நாட்டில் செயல்படுகிற  ஒரு புரட்சிகர போராளிக்கு  வழிகாட்டும்  கையேடுகளாகத் திகழ்கின்றன.

அனைத்து நாட்டு மக்களுக்கும் உண்மையான விடுதலையை முன்னிறுத்தும் விடுதலைப் பிரகடனமாக, கம்யூனிஸ்ட் அறிக்கை திகழ்கிறது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து, முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட பாட்டாளி வர்க்கத்திற்கு அறிக்கை வழிகாட்டுகிறது.

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1883-ம் ஆண்டில் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில்  “(அனைத்து வரலாறும்) சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது …” என்கிறார்.

இந்த நெடிய போராட்டத்தில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்க முன்னேற்றத்தை தடுக்கவும் ஒடுக்கவும் அனைத்து  சாகசங்களையும் செய்துவருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றியை தீர்மானிக்கிற  இடத்தில் பாட்டாளி வர்க்கமே உள்ளது. வரலாற்றில் நிகழவிருக்கும் இந்த விடுதலை சமூகம் முழுமைக்குமான விடுதலையாக அமைந்திடும். 

1848-ல்  மார்க்சும் எங்கெல்சும் எழுதிய இந்தக் கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?. 20-ம் நூற்றாண்டில் பணி நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன; இதன் காரணமாக உழைக்கும் மக்களின் வலிமை பலவீனமடைந்து உள்ளது என்ற வகையில் பல வாதங்களைப் பலரும் முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தாக்கம் பொருத்தமற்றதாகப் போய்விட்டது என்றனர்.

ஆனால், இன்றைய நிலைமைகளும் கூட மார்க்சின்  கருத்தினை   உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்டார்: “பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.” 

21-ம் நூற்றாண்டில் முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது .

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது. இது மிகப்பெரும் பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் 50 கோடிக்கும்  மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட வலிமையான பாட்டாளி வர்க்கம் உள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்கான தடைகள் மார்க்ஸ் காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளன. இன்று வலதுசாரி கருத்தியல் தொழிலாளர்களிடம், இன, சாதி, மத அடையாளங்களை வலுப்படுத்தி, வெறியூட்டி, அரசியல் லாபம் பெற்று வருகிறது. எனினும், மார்க்சின் அறைகூவலான  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற  பாதையில் உழைக்கும் வர்க்கம் தீரமுடன் பயணம் மேற்கொண்டால் சுரண்டலற்ற ஒரு சமூகம் சாத்தியமே.

இந்திய கம்யூனிஸ்ட்கள்

அறிக்கை காட்டும் பாதையில்  இந்திய புரட்சிக்கான திட்டத்தை   வகுக்க இந்திய கம்யூனிஸ்ட்கள் 1920- ம் ஆண்டுகளிலிருந்தே முயற்சித்து வந்தனர்.

கார்ல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையைத்  தானே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து, ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை, முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மார்க்சின் இந்த அறிவுரை அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்கிட இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கத்திலிருந்தே முயற்சித்து வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்தில் கட்சியின்  பங்கு குறிப்பிடப்படுகிறது;

“புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவமான கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்குப் பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும்.

இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.” (7.16)

உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற, சித்தாந்தத் துறை முக்கியமானது. தங்களது மூலதன நலன்களை பாதுகாக்கும் சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கானது என்று சித்தரிப்பதில் முதலாளித்துவ சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும் வல்லவர்கள். எனவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, மதங்கள் முன்னிறுத்தும் நம்பிக்கைகள், பிற்போக்கான வாழ்வியல் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, இந்திய புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் சிந்தித்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின்  ஒவ்வொரு போராட்டமும், முதலாளித்துவ அரசியல்  அதிகாரப்  பிடிப்பிற்கு சவாலாக அமைந்திடும். “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே” என்பது மார்க்சின் கூற்று. இந்தியாவில் 1947-ல் விடுதலை கிடைக்கும்வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும்  மக்களின் உடனடி  கோரிக்கைகளை  முன்வைத்தும்,  இந்திய  கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற  போராட்டங்களை முன்னின்று  நடத்தினார்கள். அவை அனைத்தும் காலனிய எதிர்ப்பு, வர்க்க சுரண்டலுக்கு எதிரானதாக நடந்தன. அவற்றின் அரசியல்  தாக்கம்தான் 1947-க்குப் பிறகு அமைந்த  அரசு அமைப்பு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்டவையாக அமைய வழிவகுத்தன.

அவ்வப்போது சில வெற்றிகளை தொழிலாளி வர்க்கம் பெற்றபோதிலும், முதலாளித்துவத்துடன்  உள்ள முரண்பாடு  நீடிக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கின் இறுதிக் காட்சியை மார்க்ஸ் சித்தரிக்கிறார். “…பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனிச்சொத்துரிமையையும் அழித்திடும்” என்று மார்க்ஸ்  குறிப்பிட்டார். இந்த எதிர்காலப் பார்வைதான் இந்திய சோசலிச  மாற்றத்திற்கான திட்டத்தை  இந்திய மார்க்சியர்கள் உருவாக்குவதற்கான பார்வையாக  அமைந்தது.

முதலாளித்துவம் வீழும் என்பது மார்க்சின் ஆருடம்  அல்ல. முதலாளித்துவ வரலாற்றின் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்கு.  “இது  தவிர்க்க முடியாதது” என்று அழுத்தந்திருத்தமாக மார்க்ஸ் குறிப்பிடுவதற்குக்   காரணம், அவற்றின் போக்குகளை  அவர்  துல்லியமாக அறிந்திருந்ததுதான்.

முதலாளித்துவ  அழிவு  என்பதனை மார்க்ஸ் தனது விருப்பமாக வெளிப்படுத்தவில்லை; அல்லது முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கத்தின்  மீது ஏற்பட்ட பரிதாபத்தின் விளைவாக முதலாளித்துவம்  அழியட்டும் என்று மார்க்ஸ் சாபமிட்டார் என்று கருத முடியாது. அவரும் எங்கல்சும், உருவாக்கிய தத்துவக்  கோட்பாடுகள் முதலாளித்துவ எதிர்காலத்தை கணிக்க உதவின. இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கான சோதனைக் கூடமாக அமைந்தது.

எனவே இந்திய புரட்சிப்பாதையை தெரிவு செய்கிறபோது, இந்திய முதலாளித்துவம்,  அதன் வளர்ச்சிப் போக்குகளை துல்லியமாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துணை கொண்டும் ஆராய்ந்திடும் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முயன்றது.

1864 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளை எழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்” வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது. இந்தக் கருத்து மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து மார்க்சினை வேறுபடுத்திக் காட்டுகிறது; அடிமைப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கிற உழைக்கும் மக்களை விடுதலை செய்வதற்கு தேவதூதன் போன்று ஒரு மகத்தான தலைவர் தோன்றிடுவார் என்பது உள்ளிட்ட, பல  பொய்யான சித்தாந்தங்களை உழைக்கும் மக்களிடையே கால காலமாக விதைத்து வருகின்றனர். ஊடகங்களும் ‘சுதந்திர சந்தை, சுதந்திர போட்டியே’ ‘ஜனநாயகம்’ என்பது போன்ற கருத்துகளைப் பரப்பி, சில தனிநபர்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்த வேலை காலம்காலமாக இடையறாது நடந்து கொண்டிருக்கிறது.

தங்களின் விடுதலையை தாங்களே சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான  தெளிவான திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்க வேண்டும் என்பதும் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல். இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வர்க்க விடுதலைக்கான வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதி மூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித்திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை கைப்பற்றுதல்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை ஒழிப்பதுதான் என்பது அறிக்கை பகிரங்கமாக  எடுத்துரைக்கிறது. இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான கோட்பாடுகளையும் அறிக்கை கொண்டுள்ளது.

இதை மூன்று வகையாக பிரித்து அறிக்கை மேலும் விளக்குகிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக கட்டியமைக்க வேண்டும் என்றும், அது கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் என்றும்  அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன ? பாட்டாளிகள் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அடைய வேண்டும். அவர்களுக்கு அந்த உணர்வினை ஏற்படுத்துகிற பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தங்களது அன்றாட பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கம் முன்கை எடுப்பது போதுமானதல்ல; அந்தப் போராட்டங்கள் அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தாலும், இறுதியாக, ஒரு பெரும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றவேண்டும். அந்தக் கடமையை உணர்ந்த  வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் உயரும்போதுதான் அது தனது வரலாற்றுக் கடமையை  செவ்வனே நிறைவேற்றும்.

அது எப்படிப்பட்ட வரலாற்று கடமை என்பதை இரண்டாவது அம்சமாக அறிக்கை குறிப்பிடுகிறது. முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற கடமையைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது. புரட்சிகர உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற  வல்லமை கொண்டதாக மாறிடும்.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதை அறிக்கை  வலியுறுத்துகிறது. அரசியல் அதிகாரம்தான் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை முடிவுக்குக் கொண்டுவந்து சமூக சமத்துவத்தை நிலைநாட்டும் .

எனவே, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவாறு, அந்த  வர்க்கத்திற்கு உணர்வு ஊட்டுகிற பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல். 

அறிக்கை முதலாளித்துவத்தின் உலகம் தழுவிய செயல்பாட்டை விரிவாக பேசுகிறது; அதேநேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் அழுத்தமாக குறிப்பிடுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், முதலில் தேசிய அளவிலான போராட்டமாக இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில்,.”…. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்கு தீர்க்க வேண்டும்” என்று அறிக்கை தீர்க்கமாக குறிப்பிடுகிறது.

இவ்வாறான தேசிய அளவிலான போராட்டங்கள் வடிவத்தில் உள்நாட்டு எல்லைகளை கொண்டிருந்தாலும் இந்தப் போராட்டங்கள் உலக அளவில் “முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்ப்பதில்” கொண்டு செல்லும்.

சமூக பொருளாதார அமைப்புகள்

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதாயம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக, ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் சமூக வளர்ச்சியாக பார்ப்பது கூடாது. எங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்பினையும் , விசேச தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால், வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வது, கம்யூனிச சமூக அமைப்பு, அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ  உற்பத்தி  முறை  என  இரண்டுமே  இயங்குவதைக்  காண முடியும். பல ஐரோப்பிய  நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில்  முதலாளித்துவம்  வளர்ச்சியடைந்த  வரலாற்றையும் காணமுடியும். “குறிப்பிட்ட நிலைமைகளை,  குறிப்பிட்டவாறு ஆய்வு  செய்திட  வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

கட்சித் திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது. தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்தச் சூழலில்,  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சியை நோக்கி முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது. 

விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித்திட்டம் வரையறை செய்கிறது. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு அமைகிறபோது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. 

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித் திட்டம் விரிவாக விளக்குகிறது.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.(7.6)

“விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

மேலும் மேலும் பாட்டாளி வர்க்க பட்டாளத்தில் நடுத்தரவர்க்கமும் இடையறாது வந்து சேர்கிறது. இதனை அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது (7.7)

கம்யூனிஸ்ட் அறிக்கையில் நடுத்தர வர்க்கம் குறித்து முக்கியமான கருத்து பேசப்படுகிறது. “நடுத்தர பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர். நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது..'” (அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும்)

இந்தியாவில் நடுத்தர வர்க்கங்களின் நிலைமை பற்றி குறிப்பிட்டு அவர்கள் புரட்சிகர இயக்கத்தில் பங்காற்ற இயலும் என்பது கட்சியின் திட்டத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறைநிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.”(7.9).

“தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும்.” என்று திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம். எனவே அந்த முரண்பாடுகள் குறித்த புரிதலை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி, தாங்கள் வாழும் சூழலில் தாங்கள் திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

“எண்ணற்ற உள்ளூர் போராட்டங்கள்” முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்தும் தன்மை கொண்டவை  என்பது அறிக்கையின் பார்வை. அறிக்கை  பயன்படுத்தும் “உள்ளூர் போராட்டங்கள்” எனும்  சொற்றொடர் முக்கியமானது. நவீன தொடர்பு சாதனங்கள் இந்த உள்ளூர் போராட்டங்களை “ஒரே தேசிய போராட்டமாக மையப்படுத்த” உதவுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேபோன்று உழைக்கும் மக்களின் உள்ளூர் போராட்டங்களும் முக்கியமானவை. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்கைகள் கடைக்கோடி கிராமங்கள் மற்றும்  குடியிருப்புகள் வரை தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த நிலையில், சமூகரீதியில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினர், மீனவர்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு உள்ளூர் மக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி சார்ந்த போராட்டக்களத்தில் வருவது முதலாளித்துவ எதிர்ப்பினை கூர்மைப்படுத்தும். இது தேசிய போராட்டத்தையும், உலகப் போராட்டத்தையும் வலுப்படுத்தும்.

வாசிப்பது கடினமானதா?

கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச்  செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. இயக்கத்திலும் தீவிரமான செயல்பாடு இருந்தாலும் வளர்ச்சி என்பது கானல் நீராகவே இருந்திடும்.

வாசிப்பது, மறுபடியும் வாசிப்பது, வரிக்கு வரி பொறுமையுடன் வாசிப்பது, மார்க்சியம் அறிந்தோருடன் விவாதம் செய்து வாசிப்பது, வாசகர் வட்ட கூட்டங்களில் இந்த இரண்டு ஆவணங்களின் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது, மற்றவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், அறிக்கையிலும் திட்டத்திலும் உள்ள விஷயங்களை பேசுவது மற்றும் போதிப்பது- என பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறிக்கையையும், திட்டத்தையும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான ஒரு பணியும் ஆகும்.

உத்தி அறிந்த தலைமை

காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் முன்னோடித் தலைவரும், மார்க்சிய கல்வியாளரும், எழுத்தாளருமான தோழர். இ.எம்.ஜோசப் ஜூன் 30 அன்று காலை நம்மிடமிருந்து மறைந்தார். மார்க்சிஸ்ட் இதழின் தொடக்க நாட்களிலிருந்தே பங்களித்து வந்த, அவரது மொழிபெயர்ப்பில் ஒரு பகுதியை இத்தருணத்தில் வெளியிட்டு நினைவு கூர்கிறோம்.

– ஆசிரியர்குழு

நமக்குப் பாடங்களை வழங்கும் லெனினுடைய மேதமை நோக்கியே மீண்டும் நகர்வோம். 1905-1907, அது தவிர 1917 இவை அனைத்தும் சிக்கல்கள் நிறைந்த காலங்கள். அந்தக் காலத்தில் லெனினுடைய செயல்பாடுகளில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்க்கலாம். அடுத்தடுத்து வெகுவேகமாக சூழ்நிலைகள் மாறி வந்த இந்த இரண்டு குறுகிய காலங்களில் அதற்கு இணையாக, எவ்வாறு கோஷங்கள், போராட்ட வடிவங்கள், ஸ்தாபனம் ஆகியவற்றில் விரைவான பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

புரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். அதே வேளையில் தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார். அத்தகைய தனிநபர் பயங்கரவாதத்தினை அறிவுஜீவிகளின் பயங்கரவாதம் என அழைத்த லெனின், அது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் கூறினார். புரட்சி முதிர்நிலை அடைந்த 1905-ம் ஆண்டு வரை, ஆயுதம் தாங்கிய சிறு சிறு களப்போர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் 1905-ல் அதற்கான நேரம் வந்தவுடன், சற்றும் தாமதிக்காமல், அதே வேளையில் மிகுந்த எச்சரிக்கையுடன், ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு லெனின் அழைப்பு விடுத்தார். இந்த விஷயத்தை லெனின் எப்படி விளக்குகிறார் என்று பாருங்கள்: அறிவுஜீவிகளின் பயங்கரவாதமும், தொழிலாளர்களின் பெருந்திரள் இயக்கமும் வெவ்வேறானவை. இவ்வாறு அவை இரண்டும் வெவ்வேறாக இருத்தல் காரணமாகவே, அவற்றின் முழுச் சக்தியையும் இரண்டுமே பயன்படுத்த முடியவில்லை. இதைத்தான் புரட்சிகரமான சமூக ஜனநாயக வாதிகள் இதுவரை வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பயங்கரவாதத்தினை எதிர்த்து வருகின்றனர். நமது கட்சிக்குள் இருக்கும் அறிவாளர் பிரிவு உறுப்பினர்களின் பயங்கரவாதம் குறித்த ஊசலாட்டத்தை அவர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே பழைய இஸ்க்ரா ஏடு தனது 48வது இதழில் பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதியது:

“புரட்சிகரப் போராட்ட வடிவங்களிலேயே, பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் மிகவும் அபாயகரமானது. அதில் ஈடுபடுபவர்கள் உறுதியாகவும், தங்கள் உயிரை பலி கொடுப்பதற்கும் தயாரான தியாகிகள் ஆகவும் இருப்பார்கள். ஆனால் அரசுக்கு எதிரான பகிரங்கமான எதிர்ப்பு மேலொங்கி வரும் வேளையில், பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் தேவையற்ற ஒன்று.” (தொகுதி 8, பக். 160)

ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர, வேறு எந்தப் போராட்ட வடிவம் குறித்தும் அறியாத, எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கண்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டமே பொருந்தும் என்று கூறுகின்ற அதிதீவிரவாதிகள் நமது காலத்திலும் உள்ளனர்.

இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்யும் மார்க்சீய அறிவியல்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.

எந்த ஒரு மானுட சமூகமும் தொடர்ந்து தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு தன்னை மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்.

பிற உயிரினங்களுக்கும் மானுட உயிரினத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு மானுட இனம் உற்பத்தியில் ஈடுபட்டு தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொள்கிறது என்பதாகும்.

இதற்கு இன்றியமையாதது மனித உழைப்பு.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை

விஜூ கிருஷ்ணன்

இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம்.

புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. விடுதலை ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து இந்தியாவை முழுமையாக விடு விக்கவில்லை. நிலப்பிரபுத்துவத் தில் இருந்து முதலாளித்துவத்திற்கான பயணத்தையும் நிறைவு செய்யவில்லை.

விடுதலைக்குப்பின் இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்கி உற்பத்தி சக்தி களை கட்டவிழ்த்து விடுவதற்கு பதில் அவர்கள் ஒருபுறம் அரை நிலப்பிரபுத்துவ நில உடைமையாளர்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதற்கான கொள்கைகளை பின்பற்றினர். மறுபுறம், ஒரு பணக்கார விவசாயப் பகுதியையும் வளர்த்தனர். நிலப்பிரபுக்களுக்கு அதிகமான நட்ட ஈடு வழங்கப் பட்டது. அதேசமயம், ஜமீன்தாரி மற்றும் முந்தையகால சட்டபூர்வமான நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திட எடுக்கப்பட்ட சட்டபூர்வநடவடிக்கைகள் அரைமனதுடன் அமலாக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் தொடர்ந்து தம் கைகளில் பினாமி நிலம் உள்ளிட்டு பிரம்மாண்ட மான நிலக்குவியலை வைத்துக்கொண்டனர். குத்தகை தொடர்பான சட்டங்களை முடக்கி, சொந்த சாகுபடி என்றபெயரில் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி பல லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். பலலட்சக் கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மறு விநியோகம் நடக்கவில்லை. ஆளும் வர்க்கக்கொள் கைகள், பொதுமுதலீடுகள், கடன் வசதி, மானியங் கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாசனம் மற்றும் இதர அரசு திட்டங்களால் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் பயன்பெற்றனர். இது ஏற்றத்தாழ்வை அதிகரித்தன.

பெரும்பகுதி மக்களுக்கு வறுமையும் வேலையின்மையும் ஊட்டச்சத்தின் மையும் தான் கிடைத்தது. முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ ஆட்சி ஜனநாயக தன்மையில் வேளாண் பிரச்சினையை தீர்க்க தவறியது.

இந்திய புரட்சி ஜனநாயக கட்டத்தில் உள்ளது. புரட்சியின் தன்மை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிப்ரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு என்பதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி வேளாண் புரட்சியாகும். இதன் மையப்புள்ளியும் இயக்குசக்தியும் தொழிலாளி – விவசாயி கூட்டணி யாகும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறுதியான கூட்டணியின் அடிப் படையில் தான் நாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி செல்ல முடியும். மக்கள் முன்னுள்ள உடனடி இலக்கு இக்கூட்டணியின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் இணைத்து மக்கள் ஜனநாயக அமைப்பை நிறுவுவதாகும். திட்ட வட்டமான மாற்றின் அடிப்படையில் கிராமப்புற மக்களை மக்கள் ஜனநாயக முன்னணி திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை யான நேச சக்திகள் முற்றிலும் கருணையற்று சுரண்டப்படுகின்ற விவசாயத்தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ஆகும். சுரண்டலுக்கு உள்ளா கும் நடுத்தர விவசாயிகளும் நம்பகமான நேச சக்திகள். பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நமது வர்க்க கூட்டணியை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்பிரிவு உறுதியற்ற தன்மைகொண்டது. மைய மற்றும் நம்பகமான நேச சக்திகள் வலுவடைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் என்ற கருத்து உருவாகும் நிலையில் தான் ஒருபகுதி பணக்கார விவசாயிகள் மக்கள் ஜனநாயக முன்னணியின் பக்கம் வரக்கூடும்.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வேளாண் திட்டம் என்ன? மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான கடமை வேளாண் துறையில் உற்பத்தி சக்திகளை கட்டிப்போட்டுள்ள நிலப்பிரபுத்துவ, அரை நிலப் பிரபுத்துவ மிச்சங்களை எல்லாம் தவிர வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் முற்றிலும் அகற்றுவதாகும். நில ஏகபோகத்தை தகர்க்காமல், ஏழை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் லேவாதேவிக் காரர்களிடம் சிக்கியுள்ள கடன்சுமையில் இருந்து விடுவிக்காமல் நாட்டின் பொருளாதார, சமூக மாற்றம் சாத்தியமல்ல.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கடமை சாதி அமைப் பில் வேரூன்றியுள்ள ஒடுக்கும் சமூக அமைப்பை முற்றிலும் அழிப்பதாகும். பாலின அசமத்துவமும் ஆணாதிக்கமும் அழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம் மற்றும் கடன் ஒழிப்பை தொடர்ந்து, அரசு தலைமையில், பெரு வியாபாரிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பனிகளிடம் இருந்தும், கடுமையான விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தும், விவசாயி களை பாதுகாக்கின்ற சந்தை அமைப்பு உருவாக்கப் படும். வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவை வருமாறு: நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள்; எரிசக்தி மற்றும் பாசன வசதிகளை அதிகப்படுத்துவதும், அவற்றின் முறையான மற்றும் நியாயமான பயன்பாடும்; வேளாண் துறையில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவது; விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் இருப்பிட வசதிகள்; வேளாண்மைக்கும் இதர சேவைகளுக்கும் விவசாயி கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டுறவு அமைப்பு களை ஊக்குவித்தல்; உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை மலிவாக மக்களுக்கு அளிக்கும் வகையிலான முழுமையான பொது விநியோக அமைப்பு.

இத்தகைய மாற்று வேளாண் திட்டத்தின் அடிப் படையில் கிராமப்புற மக்களில் பெரும்பான்மை யோரை மக்கள் ஜனநாயக முன்னணியில் திரட்ட முடியும். அதன் மூலம் ஆளும் வர்க்கங்களை தூக்கி யெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெல்ல முடியும். இது சோசலிசம் நோக்கிய நமது பயணத் தில் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

(கட்டுரையாளர் நிரந்தர அழைப்பாளர், மத்தியக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட். தமிழில் : வெங்கடேஷ் ஆத்ரேயா)

தோழர் பி. சுந்தரய்யாவின் போதனை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு“

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியதிலும், அவற்றைக் கட்டியெழுப்பியதிலும், சுதந்திரத்திற்குப் பின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்புகள் எண்ணிலடங்காதவை மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவைகளுமாகும். இவற்றில் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவரது பங்களிப்புகள் கணக்கில் அடங்காதவைகளாகும். அவை அனைத்தையும் இச்சிறு கட்டுரையில் கொண்டுவருவதென்பது இயலாத ஒன்று. எனவே, இன்றைய தினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நவீன இந்தியாவை உருவாக்கியதில் மட்டுமல்ல எதிர்காலத்தில் சோசலிஸ்ட் இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை அமைத்துக் கொடுத்ததிலும் அவரது வாழ்விலும் பணியிலும் அவர் மேற்கொண்ட நான்கு மிக முக்கியமான அம்சங்கள் குறித்து மட்டும் விளக்கிடலாம் எனக் கருதுகிறேன்.

தேசிய இனப்பிரச்சனை

இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை குறித்தும் அதன் மூலமாக நவீன இந்தியாவின் அரசியல் கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது முதலாவதாகும்.

நமது நாடு சுதந்திரம் மற்றும் பிரிவினை அடைந்த சமயத்தில், இந்தியா, பிரிட்டிஷாரின் காலனிய நிர்வாக எல்லைகளையும், 666-க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களையும் பெற்றிருந்தது. மன்னர் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பிரச்சனையை சமாளிக்க வேண்டியிருந்தது. அநேகமாக இப்பிரச்சனை மிகவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்ட போதிலும், காஷ்மீர் பிரச்சனை போன்று இன்றளவும் நாட்டைப் பீடித்திருக்கக்கூடிய சில பிரச்சனைகளும் உண்டு. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மன்னர் சமஸ்தானங்களும் இணைக்கப்பட்டபின் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் நிறைவேற்றப்பட்ட சமயத்தில், அதன் முதலாவது பிரிவே நமது நாட்டை, இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் என்று வரையறுத்தது. இவ்வாறு வரையறுத்த பின், இந்த மாநிலங்களை எப்படி உருவாக்குவது அல்லது வரையறுப்பது என்று இயற்கையாகவே ஒரு கேள்வி எழுந்தது.

1928 இல் மோதிலால் நேரு ஆணையம் காங்கிரஸ் கட்சி அமைப்பானது மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த போதிலும், பிரதமரான ஜவஹர்லால் நேரு ஆரம்பத்தில் அத்தகைய அடிப்படையை ஆதரித்த போதிலும், பின்னர் தன் நிலையை மாற்றிக்கொண்டு, மாநிலங்களை மறுசீரமைப்புக்கு திறமைமிகு நிர்வாகப் பிரிவுகளையே ஏற்படுத்திட வேண்டும் என்றார். எனவே அதற்காக, ஏ,பி,சி,டி என்று மாநிலங்களை முன்மொழிந்தார்.

இந்தப் பின்னணியில் தான் தோழர் பி.சுந்தரய்யாவின் சிறுபிரசுரமான ஒன்றுபட்ட ஆந்திராவில் மக்கள் ஆட்சி (Vishalandhralo Prajarajyam – Peoples’ Rule in Unified Andhra) என்னும் நூல் நாட்டின் நிகழ்ச்சி நிரலில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு மிகவும் தெளிவான முறையில் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துத் தந்தது.

ஒரு தேசிய இனத்தை உருவாக்கிடும் முக்கியமான மூலக்கூறு மொழி மட்டுமே அல்ல. மாறாக மொழியும் ஒன்று என்கிற மார்க்சியப் புரிந்துணர்வை முன்னெடுத்துச் சென்று, தோழர் பி.சுந்தரய்யாவும் கட்சியும் இந்தியாவை பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்கான போராட்டத்தில் பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடு என்று வருணித்ததுடன், நவீன இந்தியக் குடியரசை அமைத்திட இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்கள்.

இத்தகைய நிலைப்பாடானது அன்றைய தினம் மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்த தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்திலும் தெலுங்கு பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட ஒரே பகுதி உருவாக வேண்டும் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதற்காக வெகுநாட்கள் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பொட்டி ஸ்ரீராமுலு வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து இவ்வியக்கம் உச்சத்தை அடைந்தது.

இக்கிளர்ச்சியின் விளைவுகள் நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது. ஐக்கிய கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகியவற்றிற்கான இயக்கங்களை மற்றவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினார்கள்.

இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள்தான் இந்திய ஆளும் வர்க்கத்தினரை இந்திய மாநிலங்களை மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கச் செய்வதற்கு நிர்ப்பந்தத்தை அளித்தன. இவ்வாறுதான் 1956 இல் – சுதந்திரம் பெற்று முழுமையாக ஒன்பது ஆண்டுகள் முடிந்த பின்னர் – நவீன இந்தியாவின் அரசியல் வரைபடம் உருவானது.

நம் நாடு தழைத்தோங்க வழிவகுத்த இத்தகைய பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஒற்றுமையானது, தோழர் பி.சுந்தரய்யாவின் தொலைநோக்குப் பார்வையின் படி, பிரஜா ராஜ்யம் அல்லது மக்கள் ஆட்சி என்பதுடன் இணைய வேண்டியது அவசியம் என்பதாகும். அவ்வாறு இல்லையெனில், மொழிவாரி மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் கூட மோதல்களும் முரண்பாடுகளும் முட்டிமோதுவது சாத்தியமே என்று அவர் கூறினார்.

மக்கள் ஆட்சி இல்லையேல், வர்க்கச் சுரண்டலை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு ஏதுவாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசமைப்பு முறையையே ஆளும் வர்க்கங்கள் விரும்பும். எனவே அவை மாநிலங்களுக்கு உண்மையான சுயாட்சி அந்தஸ்தை அளிக்க மறுப்பதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளே பிற்பட்ட பகுதிகளாக விளங்கும் தெலங்கானா, விதர்பா போன்ற பகுதிகளுக்கிடையிலும் மக்களுக்கிடையே தோன்றும் இத்தகைய மோதல்களை, மக்கள் ஒற்றுமையைப் பிரித்திடவும், வர்க்க ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒற்றுமையுடன் வலுப்படுவதை சீர்குலைத்திடவும் பயன்படுத்திக் கொள்ளும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுனைப்படுத்திக் கெட்டியாக்கிக் கொள்வதற்காக, எப்போதுமே இத்தகைய மோதல்களையும் முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ளும். மக்களுக்குத் தேவையான அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்திடும், தேவையான சுயாட்சியையும் மாநிலங்களுக்கு வழங்க மறுத்திடும்.

1968 இல் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தோழர் பி.சுந்தரய்யா மத்திய, மாநில உறவுகளுக்கு இடையிலான இப்பிரச்சனையை மிகவும் சரியாக உயர்த்திப் பிடித்தார்.

மேலும், தோழர் பி.சுந்தரய்யா, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது கட்சித் திட்டத்தில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக இருந்த ஷரத்தை நீக்குவதற்கான திருத்தத்தைக் கொண்டு வந்தார். பின்னர் இது 1972 இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9 ஆவது அகில இந்திய மாநாட்டில் இறுதிப்படுத்தப்பட்டது.

மீண்டும் ஒருமுறை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல்” என்ற விதியைச் சரியாக பிரயோகிப்பதன் மூலம், அனைத்துத் தேசிய இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமை தொடர்பாக மார்க்சிச-லெனினிசக் கருத்தாக்கம் இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்குப் பொருந்தாது என்ற முடிவுக்குக் கட்சி வந்தது.

கொடுமைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கும் அதன் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக அது பிரயோகிக்கப்படுவதால், அது இந்நாட்டிற்குப் பொருந்தாது என்று கட்சி நிலை எடுத்தது.

இன்றைய நிலையில் உள்ள இந்திய ஒன்றியத்திலும் கூட இந்த முழக்கம் அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னிருந்ததைப் போல ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று அல்ல என்றும், அதன் பின்னர் கொடுமைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு எதிரான (oppressornation) ஒன்றுமல்ல என்றும், (ஏனெனில் அப்படி ஒரு தேசம் எந்த வடிவத்திலும் இங்கே இல்லை என்றும்) அப்போது கட்சி முடிவெடுத்தது. இதனை விளக்கும் விதத்தில் கட்சி ஆவணத்தில், பல்வேறு மொழிவாரி இனங்களின் தற்போதைய நிலைமைகளும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அவை மேற்கொள்ளும் போராட்டங்களும் இந்திய ஒன்றியத்தில் உள்ள கொடுமைப்படுத்தும் குறிப்பிட்ட ஒரு தேசத்திற்கு எதிரான ஒன்று அல்ல என்றும், மாறாக அது பொருளாதாரப் பின்தங்கிய நிலைமைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் நடத்திடும் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியே யாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆவணத்தில், இவ்வாறு அனைவராலும் நடத்தப்படும் பொதுவான போராட்டம் இந்திய ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து வைப்பதன் மூலமே எளிதாய்ச் செய்து முடிக்க முடியும். அதற்கு மாறாக, பிளவுபடுத்தும் சக்திகளின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு, போராடும் மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் உதவிடும். என்றும் குறிப்பிட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் இந்த ஒற்றுமைதான், மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்கான வல்லமையாகும். மாறாக ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தங்களிடமே குவித்து வைத்துக் கொண்டுள்ள போக்குகள் பல்வேறு மாநிலங்களில் மாநிலங்களுக்குள்ளேயே பிற்பட்ட பல பகுதிகள் நிலையாக இருப்பதற்கும், இதன் காரணமாக மக்கள் மத்தியில் எழுந்த மோதல்களையும் முரண்பாடுகளையும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்வதற்கும் வழிவகுத்துத் தந்துள்ளதை உழைக்கும் மக்கள் ஒற்றுமை மூலமாகத்தான் முறியடித்திட முடியும். இத்தகைய மக்களாட்சி இந்தியாவில் மலரக்கூடிய விதத்தில் தோழர் பி.சுந்தரய்யாவின் வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் உத்வேகம் ஊட்டும்.

நிலப் பிரச்சனை

தோழர் பி.எஸ். எடுத்துக் கொண்ட இரண்டாவது பிரச்சனை மக்களாட்சி என்னும் மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதுடன் அதனுடன் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாகும்.

அதாவது தோழர் பி.எஸ் எடுத்துக் கொண்ட இரண்டாவது நிகழ்ச்சி நிரல் நிலப் பிரச்சனையாகும். வீரம்செறிந்த தெலங்கானா ஆயுதப் போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஹைதராபாத் நிஜாம் என்னும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலனின் ஆட்சியை அடித்து நொறுக்கி, ஜமீன்தாரி அமைப்பு முறையை முற்றிலுமாக அழித்து, மக்களாட்சியை நிறுவி, மூன்று ஆண்டுகளில் நான்காயிரம் கிராமங்களை விடுவித்து, உழுபவர்களுக்கே நிலங்களைச் சொந்தமாக்கி, மக்களாட்சியை நிறுவினார்.

இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமானவகையில் நிலப் போராட்டங்கள் வெடித்தன. கேரளாவில் புன்னப்புரா வயலார், மகாராஷ்ட்ராவில் வார்லி ஆதிவாசிக் கலகம், பஞ்சாப்பில் சிறந்த வாரத்திற்கான இயக்கம் (anti-betterment levy), வங்கத்தில் நாலில் மூன்று பங்கு வாரம் கோரி நடைபெற்ற தேபகா (Tebhaga) இயக்கம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டங்கள் என நிலம் சம்பந்தமாக வீரம் செறிந்த எண்ணற்ற போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றன. நிலத்திற்கான இப்போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்டன.

இப்போராட்டங்கள் தான் இந்திய ஆளும் வர்க்கத்தினரை ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர நிர்ப்பந்தித்தன. ஆயினும் (ஆளும் வர்க்கக் கூட்டணியில் நிலப்பிரபுக்களும் ஓர் அங்கமாக இருந்ததால்) நடைமுறையில் இந்தச் சட்டம், இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர வேறெங்கே யுமே அமல்படுத்தப்படவில்லை.

நிலப்பிரச்சனைக்குத் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்களிப்பு என்பது நிலப் பிரபுத்துவத்தை ஒழித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் தெலங்கானாவில் உழுபவனுக்கு நிலத்தைக் கொடுத்து, மக்களாட்சியை நடத்திக் காட்டிய சமயத்தில், நிலம் மற்றும் உழைப்பாளிகளின் உற்பத்தித்திறன் கணிசமான அளவிற்கு அதிகரித்தது. இவ்வாறு அவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலம் பொருளாதார ஆதாயத்தையும் அதிகரித்துக் காட்டினார். இதன் மூலம் அவர் சமத்துவ சமுதாயத்தின் கொள்கைகள் எந்த அளவிற்குப் போற்றத்தக்கது மற்றும் அவசியமானது என்பதையும் மக்களுக்கும் சமூகத்திற்கும் எடுத்துக் காட்டினார்.

ஜனநாயகத்தின் மூலவேர்கள் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தை விட இந்தியாவில் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கும் இவைதான் முக்கிய காரணங்களாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் போது இந்தியத் துணைக் கண்டத்தில் இந்நாடுகள் அனைத்தும் அவர்களின் ஒரே குடையின் கீழ் இருந்தவை என்ற போதிலும், சுதந்திரத்திற்குப் பின் அவை வழி விலகிச் சென்றதற்கு இந்தியாவில் நடைபெற்றதைப் போன்ற இயக்கங்கள் அங்கே நடை பெறாததே முக்கிய காரணமாகும்.

பெயரளவில் என்றாலும் கூட ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டிருப்பதானது, உழைக்கும் மக்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில், ஜனநாயக உரிமைகளின் அனுகூலங்களையும் மதிப்பையும் நன்கு அறிந்து கொண்டு முன்னேறுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்துள்ளது.

1975 இல் இந்திரா காந்தியால் அவசரநிலைப் பிரகடனம் திணிக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக முறியடிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இது அமைந்தது. பாகிஸ்தானோ, வங்கதேசமோ தங்கள் நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திடக் குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன என்று நாம் கம்பீரமாகக் கூறும் அதே சமயத்தில், நிலப்பிரபுக்களால் சட்டவிரோதமாகவும் உச்ச வரம்புச் சட்டத்திற்கு மேலேயும் வைத்திருந்த நிலங்களைத்தான் கையகப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித் திருக்கிறோம் என்பதையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிலங்கள் மட்டுமே நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலப்பிரபுக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படைப் பணி இன்னமும் முழுமையாக நிறைவேறாமலேயே இருக்கின்றன. ஜனநாயக விவசாயப் புரட்சியை முழுமையாக்கு வதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தை அளித்திட தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் நமக்கு என்றென்றும் துணைநிற்கும்.

சமூக நீதிக்கான போராட்டம்

மூன்றாவதாக, சமூக நீதி மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தோழர் பி.எஸ் செலுத்திய பங்களிப்பு என்பது மிகவும் ஆழமானதும் விரிவானதுமாகும். தனிப்பட்ட முறையில் அவர் தன்னுடைய பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த ரெட்டி என்ற சாதிப் பெயரை வெட்டி எடுத்து, சாதி வெறிக்கு எதிரான தன் உறுதியான நிலையை சமூகத்தின் மத்தியில் நிலைநிறுத்தினார். இது, என்னைப் போன்றே பல தலைமுறையினருக்கு சாதி அடையாளத்தைக் கைவிட உத்வேகம் அளித்தது.

மக்களாட்சிக்கான போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் அவர் கருதிய தோடு, நடைமுறையிலும் உழைக்கும் மக்களே ஒன்றுபடுங்கள் (‘unity of the toilers’) என்ற முழக்கத்தினை முன்வைத்து, அனைவரையும் சாதி வித்தியாசமின்றி மிகவும் வலுவான முறையில் ஒன்று திரட்டினார். தெலங்கானா போராட்டக் காலத்தின் போது, இத்தகைய உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெற்றியையும் புகழையும் தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், சாதி மற்றும் சமூக அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளவும் வழிவகுத்தது.

இன்றைய நிலையில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் மற்றும் தலித்துகள் மத்தியில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இது ஓர் ஆக்கபூர்வமான அம்சம்தான். ஆனால், அதே சமயத்தில், சாதி உணர்வுகளையும் சாதி அடிப்படையில் ஒரு சமூக அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய சக்திகள் மக்களை பொதுவான ஜனநாயக இயக்கத்திலிருந்து கத்தரித்துத் தனியே கொண்டு செல்ல முயல்கின்றன. மேலும் இத்தகைய போக்கானது, சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு குழுவினரை அவ்வாறே சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மற்றொரு குழுவினருடன் மோதச் செய்யக்கூடிய ஆபத்தையும் கொண்டு வருகிறது. எனவே, இத்தகைய எதிர்மறைப் போக்குகள் ஆளும் வர்க்கத்தினர் தங்கள் வர்க்க ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கே வலிமையை அளித்திடும்.

தோழர் பி.எஸ். அவர்களின் வாழ்விலிருந்தும், பணியிலிருந்தும் கற்றுக் கொண்டு, இத்தகைய மக்கள் பிரிவினர் அனைவரையும் பொது ஜனநாயக இயக்கத்தில் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளில் கடுமையாக ஈடுபட வேண்டும். பொது ஜனநாயக இயக்கமும் கட்சியும் சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை, பொருளாதாரச் சுரண்டலுக்கான போராட்டத்தோடு சரியாக இணைக்கும் போது தான் இதனை வெற்றிகரமான முறையில் நடத்திட முடியும். புரட்சிக்கான அச்சாக விளங்கும் தொழிலாளர் – விவசாயிக் கூட்டணியைக் கட்ட இது ஒன்றே வழியாகும்.

கட்சி ஸ்தாபனம் குறித்து

நிறைவாக, தோழர் பி.எஸ். ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு அவசியம் என்றும், அதில்லாமல் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் எப்போதுமே நமக்கு நினைவுபடுத்தி வந்தார். வலுவானதோர் ஸ்தாபனமில்லையேல், கட்சியால் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாமல் போகுமாதலால், சரியானதொரு அரசியல் நிலைப்பாடும் கூட அர்த்தமற்றதாகிவிடும். புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி முன்வைக்கும் முழக்கங்களை மக்கள் தாங்களே எழுப்பக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் மக்களைத் தயார்படுத்திட வேண்டும். இதனை எய்திட வேண்டுமெனில், துல்லியமான நிலைமைகளை அடிக்கடி ஆய்வு செய்வது அவசியமாகும். உதாரணமாக, நிலத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து, பணக்கார விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாட்டை தோழர் பி.எஸ். அடையாளம் கண்டார். பணக்கார விவசாயிகளைப் பொறுத்தவரை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க விரும்பினார்கள். விவசாயத் தொழிலாளர்களோ கூலி உயர்வுக்கான போராட்டத்தை நடத்த விரும்பினார்கள். இவர்கள் இருவருமே ஒரே ஸ்தாபனத்திற்குள் இருந்ததால் ஸ்தாபனம் விரும்பிய விளைவினை உண்டு பண்ணுவதற்கு இயலாததாக இருந்தது. இவ்வாறு துல்லியமான நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், தோழர் பி.எஸ். விவசாய சங்கத்திலிருந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தனியே பிரித்து அமைத்திட வேண்டும் என்று வாதிட்டார்.

அதேபோன்று, இந்திய இளைஞர்கள் மத்தியிலும் படித்த இளைஞர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் படிக்காத இளைஞர்களும் இருப்பதையும் அவர் அடையாளம் கண்டார். படித்தவர்களுக்கு மாணவர் சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், படிக்காத இளைஞர்களைப் பொறுத்தவரை எவ்விதமான அமைப்பும் இல்லாமலிருந்தது. எனவேதான் அவர் இளைஞர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்வந்தார். இவ்வாறு, உழைப்பாளிகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்துவதற்குத் தேவையான ஸ்தாபனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு துல்லியமானப் பங்களிப்புகளை அவர் புரிந்துள்ளார்.

அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஸ்தாபன நடைமுறைக்கும் இடையிலான இயக்கவியல் தொடர்புக்கு  (dialectical linkage), சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையே, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் குணாம்சங்களைப் புரிந்து கொள்ள துல்லியமான ஆய்வுகளை நடத்திட அவர் கொடுத்து வந்த அழுத்தம் அவரது பங்களிப்பின் மற்றோர் அம்சமாகும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ரஷ்யாவில் விவசாயிகள் இடையேயிருந்த வித்தியாசங்களையும் துல்லியமாக ஆய்வு செய்ததன் மூலமாகத்தான் ரஷ்யப் புரட்சி வெற்றி சாத்திய மானது என்கிற லெனினது செயல்பாட்டிலிருந்து நன்கு பாடம் கற்றுக் கொண்ட தோழர் பி.எஸ். இங்கும் கிராமங்களில் ஏற்பட்டு வரும் வேறுபாடுகளையும் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன நடைமுறையில் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் நன்கு புரிந்துகொள்வதற்காக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தத் தேவையான அளவிற்கு இதனைத் தொடர முடியவில்லை. இது அவசரரீதியில் சரி செய்யப்பட்டாக வேண்டும்.

குறிப்பாக, நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இக்காலகட்டத்தில் இது மிகவும் அவசியமாகும். ஓர் உதாரணம் மூலமாக இதனை விளக்கலாம் என்று கருதுகிறேன். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், கட்சியை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் அமைப்பும் இயக்கமும் முக்கியமான பங்கினை ஆற்றின. முப்பதாண்டுகளுக்கு முன்னால் அவர்கள் வாங்கிய ஊதியம் என்ன? இன்று அவர்கள் வாங்கும் ஊதியம் என்ன? ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றையதினம் அது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இத்தகைய வருமானத்துடன் உள்ள அவர்களின் விருப்பங்கள் பங்குச்சந்தை (Sensex) பக்கம் திரும்புவது இயற்கையேயாகும். நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தாங்கள் வாங்கியுள்ள பங்குகளுக்கு கூடுதலான தொகைகளைக் கொண்டுவந்து கொட்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய மனோபாவங்கள் இன்றையதினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒரு வர்க்க வேறுபாடு (class differentiation) வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக்கோபமும் கிடையாது. மாறிவரும் சூழ்நிலைகளில் அவர்கள் முக்கியமானதோர் பங்கினை ஆற்றி இருக்கிறார்கள். இன்றைய ஆசிரியர்கள் அவர்களுடைய வாழ்வாதாரங் களையும், போராட்டங்களையும் பாதிக்கக்கூடிய விதத்தில் புதுவிதமான பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இத்தகைய நிலைமைகளின் கீழ்தான், நம்முடைய கோரிக்கைகளுக்கான உடனடி முழக்கங்களையும், கிளர்ச்சிக்கான வடிவங்களை யும் நடைமுறைகளையும் மிகவும் சரியான விதத்தில் உருவாக்குவதற்கு, துல்லியமான நிலைமைகளின் கீழ் துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் இந்திரஜித் குப்தா ஒருமுறை கூறினார். தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு ஒருவர் பயணம் செய்கிறபோது ரயில்வே லைனின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் அநேகமாக அவர்கள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்களாகவும் எம்பி-க்களாகவும்தான் இருப்பார்கள் என்றார். ஆனால் இன்றைய நிலை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகள் தோன்றிவிட்டன என்று மேலெழுந்தவாரியான விளக்கங்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாகவோ (comprehensively) அல்லது அறிவியல் பூர்வமாகவோ (scientifically) விளக்கிடாது. நமது வர்க்கங்களுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்க வேறுபாடுகள் குறித்து மிகவும் துல்லியமான முறையில் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஒருகாலத்தில் செங்கொடியின் கீழ் அணி திரண்டவர்கள் இப்போது மற்ற முதலாளித்துவ கட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. உதாரணமாக, சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வளர்ந்து கொண்டிருப்பது போன்று மேலும் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.

எகிப்தில் தாஹ்ரீர் சதுக்கத்திலும், வங்கதேசத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஷாபாக் இயக்கத்திலும் மிகவும் வித்தியாசமான விதத்தில் மக்கள் எப்படி அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். இவை குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவை எவ்வாறு நடை பெற்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமல்ல, நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற் காகவும் இவற்றை நாம் ஆய்வு செய்திட வேண்டும்.

“துல்லியமான நிலைமைகள் குறித்துத் துல்லியமான ஆய்வு மேற்கொள்வது என்பது இயக்கவியலின் ஜீவனுள்ள சாரம்” (“concrete analysis of concrete conditions, is the living essence of dialectics”) என்று லெனின் ஒருமுறை கூறினார். லெனின் கூறிய இவ்வழிகாட்டுதலின் படி தான் தோழர் பி.எஸ். வாழ்வும் பணியும் இருந்தது என்பது நான் மேலே விவரித்த அவரது நான்கு அம்சங்களிலிருந்தும் நன்கு தெளிவாகும். இன்றையதினம், அவரது பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், இத்தகைய புனிதமான லெனினது கொள்கையை ஆறத்தழுவிக் கொள்ளவும், நம் நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் நாம் எடுத்துக் கொண்டுள்ள உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.

தோழர் பி.சுந்தரய்யாவுக்கு செவ்வணக்கம் !

சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்: ச.வீரமணி)

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்

ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்-இன்றும் நாளையும் என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90 ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-CPRF-Communist Party of Russia Federation) ஆகும்.

ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகா னோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது, சோவியத் யூனியன் உதயமான 90 ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70 ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன் பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.

ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவது,  அனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிட,  வரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசிய பின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டு வரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள்.

இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப் போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப் பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987 இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70 ஆம் ஆண்டு தினத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.

தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்து வரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். அவர் கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சியடைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பல,  தங்களுக்குள் பகுப்பாய் வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.

1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14 ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும் வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது. கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை – மிக முக்கியமான இந்த இடைவெளியை – நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும். மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில் தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத் திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப்போது  கடந்த காலமாகிப்போனது. கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற் கொள்ளவேண்டும் (‘concrete analysis of concrete conditions’) என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது.

இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்த விதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திடவில்லை.

மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப் போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற, ஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது.

நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளான போதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின் போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்க சக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.

தற்போதைய அரசியல் நிலைமை

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒரு துருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.

இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (profit maximization) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்த விதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில் துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (nexus between industrial and banking capital leading to financial oligarchies) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்க முடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச் செல்கின்றன. லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக் கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக – அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூல தனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக் கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டு வரப்படும் என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றைய தினம் லெனின் சொல்லி வைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்,  அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதேயொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.

மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாக,  கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதையேக் குறியாகக் கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதிலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008 ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (global financial meltdown) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (urge bail-out packages) வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால் நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால் நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும்.

அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், 2014 ஆம் ஆண்டும் இந்த ஆண்டை விட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால் நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலிசத்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.

ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக் கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.

பிரதான கடமை

இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதி பத்தியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (climate change) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.

இதனை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச்சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக் கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்ற போதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலு,  பலவீனமாகவே  இருப்பது தொடர் கிறது.  தற்போதுள்ள அகக்காரணி,  புறச்சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளி லும் இருந்து வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.

இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும் விதத்தில், இடது சாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டுகளாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பின் 600-க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்து வரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகைய பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம். இதே போன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.

இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர் காலத்தின்போது தான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக் கூடிய மூலக் கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.  இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(தமிழில்: ச.வீரமணி)

ஜனநாயக மத்தியத்துவம்!

பிரகாஷ் காரத்

தமிழில்: ஜி.ஆனந்தன், தூத்துக்குடி

சமீப காலங்களில் சி.பி.ஐ.(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த பிறகு,  எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக ஜனநாயக மத்தியத்துவம் இருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை எழுப்புபவர்கள் இடதுசாரி மற்றும் சி.பி.ஐ.(எம்) உடன் தங்களை இணைத்துக் கொண்ட அறிவுஜீவிகள். இத்தகையப் பார்வை தோழர்களிடமிருந்து வருகிறது. இடதுசாரிகள் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடமிருந்து வருகிறது, கட்சிக்கு எதிராக இல்லாதவர்களிடமிருந்தும் வருகிறது. எனவே, நாம் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் வேண்டியவர் களாகிறோம்.  இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஏனெனில், சி.பி.ஐ.(எம்) ஜனநாயக மத்தியத்துவத்துவத்தை பாட்டாளி வர்க்கக் கட்சியின் அடிப்படையாகவும், உயிர்நாடியாகவும் பார்க்கிறது.

எழுப்பப்படும் விமர்சனம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக கையாள்வதற்கு பதிலாக, பல்வேறு ஆட்சேபணைகளையும் விமர்சனங்களையும் நாம் ஒட்டு மொத்தமாக வகைப்படுத்தி கீழே கொடுத்துள்ளோம்.  நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் விமர்சனங்களை எழுப்புகிற ஒவ்வொருவரும் கீழே வகைப்படுத்தியுள்ள அனைத்து கேள்விகளையும் கேட்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  ஆனால், அவர்கள் அனைவரின் பொதுவான கருத்தொற்றுமை எதில் என்றால் ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக இனியும் நீடிக்கக் கூடாது அல்லது அதில் மாற்றம் தேவை என்பதாகும்.  இந்த விமர்சனங்களில் எழுப்பப்படும் முக்கியமான அம்சங்களை கீழ்க்கண்டவாறு தொகுத்து வகைப்படுத்தலாம்.

  1. ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கோட்பாடு, ரஷ்யா ஜார் கொடுங்கோன்மையின் கீழ் அதிகார வர்க்க மற்றும் அடக்குமுறை நாடாக இருந்த தனிச்சிறப்பான சூழலுக்காக தோழர் லெனினால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அன்றையதினம் மையப்படுத்துதல், தொழில்முறை புரட்சிக் குழுவை உருவாக்குதல் மற்றும் இரகசியம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆகவே, ஜனநாயக மத்தியத் துவம் இதர சமூகங்களுக்கும், சூழலுக்கும் குறிப்பாக முதலா ளித்துவ ஜனநாயகம் ஆட்சி செலுத்தும் இடங்களில் பொருத்த மற்றதாக இருக்கிறது.
  2. ஜனநாயக மத்தியத்துவம் கட்சியில் அதிகார பீடங்களையும், மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பையும் உருவாக்குவதால், (கட்சிக்குள்) ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாடுகளின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் கமிட்டியின் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. கட்சி உறுப்பினர்களும், ஊழியர்களும் மத்தியக் கமிட்டியின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டியுள்ளது.  எதிர் கருத்து மற்றும் மாற்றுக் கருத்து போன்றவை கேட்கப்படுவதில்லை அல்லது பரிசீலிக்கப் படுவதில்லை.
  3. ஜனநாயக மத்தியத்துவம் புதுமையான சிந்தனைகள் வருவதற்கும் மார்க்சிய தத்துவத்தின் வளர்ச்சி தடைபடுவதற்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. கட்சியின் உயர்மட்ட அமைப்பு சித்தாந்தங்கள் குறித்து முடிவு செய்து விடுகிறது.  அதன் பிறகு அதில் எந்த திறந்த விவாதத்திற்கும் வழியில்லை. இதனால் புதிய சிந்தனைகளுக்கும் புதிய வளர்ச்சி போக்குகளை உள்வாங்கிக் கொள்வதற்கும் வாய்ப்பின்றி போய்விடுகிறது. சித்தாந்தங்கள் குறித்து மேல்மட்டத்தில்; முடிவு எடுத்து அணிகள் அவற்றை பிசகாமல் அமல்படுத்தும் அமைப்பிற்குத்தான் ஜனநாயக மத்தியத்துவம் சாலப் பொருந்தும். அனுமதிக்கப்பட்ட அரங்கங்களுக்கு வெளியே சித்தாந்த விவாதங்கள் தடை செய்யப்படுகின்றன அல்லது அதைவிட மோசமாக அது ஒழுங்கீனமாகப் பார்க்கப் படுகின்றது.
  4. ஜனநாயக மத்தியத்துவத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியில் கட்சியின் தலைமைக் குழு ஒட்டு மொத்த கட்சியின் கருத்தை புறந்தள்ள வாய்ப்பிருக்கிறது.  இதனால் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே பெரும் தடை எழுகிறது. இத்தகைய தடையரண்கள் எழுந்துள்ளதால் மக்கள் நினைப்பதை கட்சி அறிந்து கொண்டு தன்னை தேவைக்கேற்ப உரிய நேரத்தில் திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை.
  5. சி.பி.ஐ.(எம்) ஐ பொருத்தவரை, ஜனநாயக மத்தியத்துவம் நடைமுறையில் உருமாறி மத்தியத்துவமாகவும், மே.வங்கத்தில் ஆணையிடும் போக்காகவும் மாறி கீழிலிருந்து வரும் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை  வெகுஜன புரட்சிகர கட்சியை லெனினிய ஸ்தாபன வடிவத்தில்  கட்ட முடியாது என்று பொதுவான தளத்தில் வலியுறுத்தப்படுகிறது. .  தவறான நடைமுறைத் தந்திரம் உருவாக்கப்படுவதற்கு கூட தவறான ஸ்தாபன நடைமுறை காரணமாக அமையக்கூடும்.

I

ஜனநாயக மத்தியத்துவத்துவத்தை போல்ஷிவிக் கட்சி ஸ்தாபனக் கோட்பாடாக அமல்படுத்திய காலம் தொடங்கி பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தால் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது காங்கிரசில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கோட்பாடாக விரிவாக்கப்பட்ட போதும் எல்லாக் காலத்திலும் சமூக ஜனநாயக வாதிகளாலும், மார்க்சிஸ்ட் அல்லாத இடதுசாரி களாலும், இக்கோட்பாடு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.

மார்க்சும், ஏங்கல்சும் உருவாக்கிய மார்க்சியத் தத்துவத்தை லெனின் தான் வாழ்ந்த காலத்திற்கு பொருத்தி செழுமைப்படுத்தினார். இந்த வகையில் ஏகாதிபத்தியம் பற்றிய கருத்து உலகப் புரட்சிகர இயக்கத்தில் காலனிய மற்றும் அரைக்காலனிய நாட்டு; மக்களின் பாத்திரம் மற்றும் புரட்சிகர ஸ்தாபனங்கள் பற்றியக் கோட்பாடு ஆகியவை அவரது பங்களிப்பாகும்.

இப்பிரச்னையின் அடிநாதமாக இருப்பது கட்சி ஸ்தாபனம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல.  மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான பாத்திரம் குறித்ததாகும்.  சமூக ஜனநாயக கட்சிகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவ சமூக அமைப்பினை மாற்றாமல் அதனுள் பணியாற்றுவது கொள்கை யாகும்.  அந்த கட்சிகளுக்குப் புரட்சிகர அமைப்பிற்கான தேவையே எழவில்லை.

ஆகவே ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடே அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது. முதலாளித்துவத்தை தூக்கி எறிய கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது. இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தூக்கியெறிந்து அதற்கு பதிலாக சோசலிச சமூக அமைப்பை நிர்மாணிக்க போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பலம் பொருந்திய அரசமைப்பு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற கட்சி ஸ்தாபனமானது அரசியலாகவும் தத்துவார்த்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் போராடுவதற்கு ஏற்ற முறையில் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது.  அத்தகைய கட்சி ஸ்தாபனம் நாடாளுமன்ற அமைப்பில் வெறும் தேர்தல்களை மட்டும் எதிர்கொள்ளத்தக்க வகையில் கட்டமைக்கப்பட முடியாது, அந்த அமைப்பு எவ்வளவு நிலையானதாக இருந்தாலும், எவ்வளவு நீண்ட காலத்திற்கு நீடித்தாலும்.  ஜனநாயக அமைப்பின் உரிமைகளையும், முதலாளித்துவ  ஜனநாயக அரசு அமைப்புக்கு உட்பட்ட அதன் ஸ்தாபனங்களைப் பயன்படுத்துவது போன்றவற் றோடு நின்றுவிடக் கூடிய அளவில் ஸ்தாபனத்தை கட்டமைக்க திட்டமிட முடியாது.

அடிப்படையானக் கேள்வியே கட்சியானது பாட்டாளி வர்க்கத்தையும் புரட்சிகர வெகுஜனங்களையும்; திரட்டி தலைமை தாங்குவதற்கு ஏற்ற முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதுதான்.; புரட்சிகர வெகுஜன இயக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுக்கும் முறையிலான அமைப்பை உருவாக்குவதுதான் கட்சி குறித்து லெனினிய கோட்பாடாகும்.  இதனால் அவர் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதியை கட்சிக்குள் கொண்டுவந்து அவர்களை அரசியல் உணர்வு உள்ளவர்களாக வளர்த்து புரட்சியின் முன்னணிப் படையாக மாற்ற வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். அத்தகைய ஒரு அமைப்பு வர்க்கப் போராட்டம் மூலமாகவும், வெகுஜன இயக்கம் மூலமாகவும் உறுதியேற்றப்பட்டு எஃகு போன்று உறுதி பெறுமானால் அது அனைத்து சூழல்களிலும் செயல்படத்தகுந்தததாக இருக்கும்.  சட்டப்பூர்வ, அரைசட்டப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமற்ற ஆகிய அனைத்து வகையிலும் செயல்படத் தகுந்தாக இருக்கும்.  வர்க்க அரசியலால் எழும் அவசர நிலைமைகளை எதிர்கொள்ள ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அது அவ்வப்போது நிலவும் சூழலுக்கேற்ப போராட்ட வடிவங்களை மாற்றியமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.  இதற்கு ஒரு மையப்படுத்தப்பட்ட கட்சி அமைப்பு தேவைப்படுகிறது.  மார்க்சியம் மற்றும் வர்க்க போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கட்சி அமைப்பிற்கு ஜனநாயக மத்தியத்துவம் மிகப் பொருத்தமான ஸ்தாபனக் கோட்பாடாக இருக்கும்.  வர்க்க போராட்டம் ஒரு கூட்டு செயல்பாடு.  ஜனநாயக மத்தியத்துவம் கூட்டு முடிவெடுப்பதையும் கூட்டு செயல்பாட்டையும் வளர்க்கிறது சிந்தனை சுதந்திரத்தையும், செயல்பாட்டில் ஒற்றுமையையும் இது அனுமதிக்கிறது.

கூட்டு செயல்பாடுகள் திறம்பட இருக்க வேண்டுமானால், பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒட்டுமொத்தக் குழுவும் அமலாக்க வேண்டுமானால், ஜனநாயக முறையையும்விட மேலான ஒரு முறை தேவைப்படுகிறது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற முறையில்தான் பெரும்பான்மையின் முடிவுகளுக்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும் என்பதும், கூட்டு முடிவுகளுக்கு தனிநபர்கள் உட்பட்டு நடக்க வேண்டும் என்பதும்  நடைபெறு கிறது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் லெனினுக்கும், போல்ஷிவிக்குகளுக்கும், மென்ஷிவிக்குகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் புட்சிகர கட்சி மற்றும் அதன் அமைப்பு குறித்த சில அத்தியாவசியமான அம்சங்களில் தெளிவு பெற உதவுகின்றன. ரஷ்யாவிற்கு வெளியே மிகப் பிரபல்யமான மார்க்சிஸ்ட்டுகளான கார்ல் காவுட்ஸ்கியும், ரோசா லக்சம்பர்க்கும் லெனினின் கட்சி ஸ்தாபனம் குறித்த இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்தனர்.  காவுட்ஸ்கியைப் பொறுத்தவரை ஸ்தாபனம் என்பது  புரட்சி, செயலுக்கான ஒரு முன்நிபந்தனையாகும். ரோசா லக்சம்பர்க்கைப் பொறுத்தவரை ஸ்தாபனம,; புரட்சிகர வெகுஜன நடவடிக்கையின் படைப்பாகும்;.  லெனினைப் பொறுத்தவரை கட்சியும் அதன் ஸ்தாபனமும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தின் முன் நிபந்தனையும் அதன் படைப்புமாகும். லெனினிய சிந்தனைகளை அருமையாகத் தொகுத்த லூகாஸ்; கட்சி என்பது புரட்சிகர வெகுஜன நடவடிக்கையின் படைப்பாளியும் படைப்பும் ஆகும் என்றார். லெனினைப் பொறுத்தவரை கட்சி என்பது புரட்சிக்கான தயாரிப்பில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும் அத்தகைய ஒரு அமைப்பு அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியான தளங்களில் வர்க்க எதிரிகள் நடத்தும் தாக்குதல் உட்பட அனைத்துவகையான தாக்குதலையும் எதிர் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.  அத்தகைய ஒரு கட்சி அமைப்பு உயர்ந்தபட்ச கட்டுப்பாடுகளை கொண்டதாக இருக்க வேண்டும்.  அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளே அந்த கட்சியை மாறி வரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவும், போராட்டங்களின் வடிவங்களை மாற்றிக் கொள்ளத்தக்க நெகிழ்வும் கொண்டதாக அமையும்.

மார்க்சியம் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியிலிருந்து ஜனநாயக மத்தியத்து வத்தை பிரித்துப்பார்ப்பது என்பது கட்சி ஸ்தாபன அமைப்பின் முக்கியக் கோட்பாடுகள் குறித்த தவறான பார்வைக்கு இட்டுச்செல்லும்.

II

ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரான வாதங்கள் என்ன?

  1. ஜனநாயக மத்தியத்துவத்தை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கியமான வாதமே, இந்த அமைப்பு ரீதியான நடவடிக்கை அன்றைய தினம் ரஷ்யாவில் நிலவிய பிரத்தியேகமான சூழலில் வெகுஜன புரட்சி இயக்க நடைமுறைக்கு ஏற்றதாக வடிவமைக்கப் பட்டது எனபதுதான்.  இது நடைமுறைக்கு வந்த காலம் ஜாராட்சியை எதிர்த்துப் புரட்சிகரப் போராட்டம் நடத்திய காலம்.  போல்ஷிவிக் கட்சி அடக்குமுறைகளையும், நாடுகடத்தல் களையும் சந்தித்துக் கொண்டிருந்த சட்டப்பூர்வமற்ற நிலையில் செயல்பட்ட காலம்.  அதற்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவைப் பட்டது.  புரட்சிக்குப்பின் எதிர்ப்புரட்சி சக்திகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் புரட்சியை வீழ்த்திட முயற்சித்ததால் இந்த நடைமுறை போல்ஷிவிக் கட்சியில் வலுப்பெற்றது.  அதனை இதர கம்யூனிஸ்ட் கட்சிகளும் சுவீகரித்துக் கொண்டன.  இத்தகைய சூழலில் ரஷ்யாவில் அமல்படுத்தப்பட்ட ஸ்தாபனக் கோட்பாடு மாறுபட்ட சூழலிலும் நிலைகளிலும் செயல்படுகிற இதர கட்சிகளுக்கு பொருந்துமா? அதற்கு சற்றும் பொருந்தாத இதர சூழல்களில் அமல்படுத்துவது எப்படி சரியானதாகும்?

ஆனால், இதனை ரஷ்யாவிற்கு மட்டும் பொருந்தக் கூடியது என்றும் இதர நாடுகளிலும், இதர சூழல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பயன்படுத்த முடியாதது என்று சொல்ல முடியுமா?

பிரபீர் புர்க்கயஸ்தா கூறுகிறார்:

இந்த குறிப்பிட்ட கட்சி வடிவம் (அமைப்பு) போல்ஷிவிக் புரட்சிக்குப்பின்  (கட்சியின்) பல பிரிவுகள் தடைசெய்யப்பட்ட காலத்திலேயே வந்தது. அப்போதுதான் அரும்பிக்கொண்டிருந்த சோசலிச அரசை எல்லா பெரும் சக்திகளும் முற்றுகையிட்டிருந்த காலத்தில் புரட்சிகர அரசுக்கு தேவைப்பட்ட குறிப்பிட்ட வடிவம் இது என்று சொல்லலாம்.  இது பொது விதியல்ல அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் உருவாக்கிக் கொண்டிருந்த சூழ்நிலையின் விளைவாகவே ஜனநாயக மத்தியத்துவம் உருவானது. இத்தகைய ஒரு ஸ்தாபன அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் இடத்திற்கும் உரித்தான ஒன்றை எல்லா நிலைமைகளுக்கும் சூழலுக்கும் பொருத்துவது இன்றைய இடதுசாரி இயக்கத்தை பாதிக்கும்.

இவ்வாறு தெளிவான பின், இடதுசாரிகள் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து மறு ஆய்வு செய்வது அவசியமாகும். சி.பி.ஐ (எம்) ல் உள்ள தலைமையும், கட்டுப்பாடான அமைப்பும் உலகின் பல பகுதிகளில் பல பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உடைந்து உருக்குலைந்த போதுகூட அதைக் கொஞ்சமும் சேதமின்றி பாதுகாக்க உதவியது என்றாலும், இதனால் எழுந்துள்ள பிரச்னைகள் என்பது கற்பனையானதல்ல, நிஜம். அதிலும் முக்கியமானது எதுவெனில், கட்சி அணிகள் அனைவரது கருத்தையும் கட்சி தலைமை புறந்தள்ளிவிட முடியும்.  தலைவர் களுக்கும் அணிகளுக்குமிடையே ஒத்திசைவற்றத் தன்மையை உருவாக்கும். மேலும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே தடையை ஏற்படுத்தும் இத்தகைய நிலையானது தகவல் தொடர்பில் தடையை ஏற்படுத்தி தவறான நிலைபாடுகள் சரிசெய்ய வேண்டிய காலத்தை தாண்டியும் தொடர்வதற்கு ஜனநாயக மத்தியத்துவம் வழிவகுக்கிறது.

ஜனநாயக மத்தியத்துவம் ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் உருவாகியது என்பதும், லெனின் இந்த கோட்பாட்டை வளர்த்தெடுப்பதில் முன்னின்றார் என்பதும் உண்மை. கட்சி; அமைப்பின் வடிவங்களும், நடைமுறைகளும், கட்சியின் புரட்சிகரத் தன்மையுடன் ஊடுபாவி அதனின்று பிரிக்க முடியாத பகுதியாகும். அன்னிய தலையீடுகளின் மூலம் தாக்குதல் களை எதிர்கொண்டது ரஷ்யப் புரட்சி மட்டுமே அல்ல. 20-வது நூற்றாண்டில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியும் இதைப் போன்ற கடுமையான தாக்குதல்களை, எதிர்புரட்சிகளை, உள்நாட்டுப் போரை மற்றும் அன்னிய தலையீட்டை சந்திக்க வேண்டியிருந்தது.  ரஷ்யாவைப் பொறுத்தவரை அது ஜார் கொடுங்கோன்மையாக இருந்தது என்றால், சீன கம்யூனிஸ்ட்கள் கோமிங்டானின் கொடூரமான அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது, ரஷ்யா உள்நாட்டுப் போரை சந்தித்தது போன்றே சீனாவும், கியூபாவும் இதர சோசலிச நாடுகளும் சந்திக்க நேர்ந்தது. அன்னிய சக்திகளின் தலையீடு சீனா, வியட்நாம், கொரியா மற்றம் கியூபா போன்ற நாடுகளில் இருந்தது. ஏன் அமைதியான வழியிலும் ஜனநாயக முறைப்படியும் தேர்தல் மூலம் சிலியில் அரசு அதிகாரத்தை எடுத்த போது கொடூரமான இராணுவ நடவடிக்கை மூலம் அந்த அரசு அகற்றப்பட்டது.

சீனா, வியட்நாம், மற்றும் கொரிய புரட்சிகளைத் தவிர, மற்றொரு உதாரணம் கியூபா.  இங்கு புரட்சியின் தலைமைப் பாத்திரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.  ஆனால் பழைய சுரண்டல் அமைப்பை தூக்கி எறிந்த புரட்சிக்குப்பின் புரட்சி படைகள் தங்களை கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட போது அந்த கட்சி தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை பயன்படுத்திக் கொண்டது.

இன்று வரை உலகின் எந்த மூலையிலும் புரட்சியோ அல்லது சோசலிசத்தை நோக்கி முன்னேற்றமோ நடைபெறுகிற தென்றால், அதை தலைமை தாங்கும் கட்சியோ அல்லது அமைப்போ ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் அது நடைபெறவில்லை.

வெனிசுலாவில் புரட்சிகர நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சாவேஸ் தன்னுடைய இயக்கத்தை ஒரு கட்சியாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அந்த கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை, மாறாக, மத்தியத்துவம் என்ற அடிப்படையில் சாவேஸை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.  மத்தியப் படுத்தப்பட்ட கட்சி என்ற அமைப்பு இல்லாது இந்த நடவடிக்கைகள் எவ்வுளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏன் புரட்சிகரப் பாதையில் நடைபோடும் அனைத்து கட்சிகளும் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை தழுவிக் கொண்டன?  ஏன் எனில், எந்தப் புரட்சியும் ஜனநாயகப் பூர்வமாகவோ அல்லது அமைதியாகவோ முன்னேற அனுமதிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு புரட்சியும் ஏகாதிபத்தியம் மற்றும் வர்க்க எதிரிகளின் மூர்க்கமான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜனநாயக மத்தியத்துவம் இன்றி கட்சி நிராயுதபாணியாக இருக்கும், அது புரட்சிகர அமைப்பாகவே இருக்க முடியாது.  ஒரு நவீன மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்திற்கு எதிராக கட்சி ஒரு மத்தியப்படுத்தப்பட்ட சக்தியாக செயல்பட வேண்டுமென்று லெனின் குறிப்பிட்ட முக்கியமான இந்த அம்சம் இன்றைக்கும் பொருந்தும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.  உண்மையைச் சொல்லப் போனால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு மின்னல் வேகத்தில் தனது இராணுவங்களைக் கொண்டு செல்லும் மிகவும் முன்னேறிய ஏகாதிபத்தியம் உள்ள தற்கால சூழலில் அதற்கான தேவை முன்னெப்போதும் விட அதிகமாக உள்ளது.

நாம் எதிர் கொள்ள வேண்டியது நேரடி இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல, ஆதிக்கம் மிகுந்த ஏகாதிபத்திய அமைப்பு முறையில் உலகின் எந்த மூலையில் நடைபெறும் புரட்சியாக இருந்தாலும் அது முற்றுகையிடப் பட்டதாகவே இருக்கும். நாம் அனுமானிக்கக் கூடிய எதிர்காலத்தில் அமைதியான மற்றும் பெருந்தன்மையான ஜனநாயக சூழலில் சோசலிசம் மலர வாய்ப்பில்லை. பிடல் காஸ்ட்ரோ ஒரு முறை லெனினை மேற்கோள் காட்டி தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத எந்தப்புரட்சியும் புரட்சி என்று சொல்ல முடியாது என்றார். இத்தகைய பாதுகாப்பால் ஜனநாயக மத்தியத்துவம் தவிர்க்கவியலாத படைக்கலனாகும்.

இதற்கு இணையான மற்றொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால், புரட்சிகர சூழநிலையில் உள்ள கட்சிகளுக்கு ஜனநாயக மத்தியத்துவம்தான் பொருத்தமானதாகும்..  லெனின் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை கட்சி அமைப்போடு பிணைத்தது புரட்சி நடைபெற்ற காலத்தில்தான்.  அந்தக் கோட்பாடு எவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் முதலாளித்துவம் சட்டப்படி அளித்துள்ள ஜனநாயக உரிமைகள் ஆகியவை நடைமுறையில் உள்ள நாடுகளுக்கு பொருந்தும்?

எதிர்கொள்ள வேண்டியது எதிர்புரட்சி வன்முறைகளை மட்டுமல்ல.  கட்சியானது அரசியல் ரீதியாக ஒற்றை நோக்கத்துடன முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.  அது தனது தத்துவார்த்த அடித்தளத்தை பேணி பாதுகாக்க வேண்டியுள்ளது.  முதலாளித்துவ அரசும் ஆளும் வர்க்கங்களும் கட்சியின் அரசியல்-தத்துவார்த்த  பிணைப்பை சிதைக்கவும், அந்த அமைப்பை திருத்தல்வாத வர்க்க சமரசப் பாதைக்கு திருப்பிவிடவும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும்.  கருத்துப் போர்களையும், தத்துவார்த்த போராட்டங்களையும், ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்ட கட்சியினால் திறம்பட நடத்த முடியாது.  ஜனநாயக மத்தியத்துவம் இன்றி கட்சியானது ஒரு விவாத மேடையாகவோ அல்லது பட்டிமன்றம் நடத்தும் மேடைபோன்றோ மாறிவிடும்.

பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புரட்சிகரமற்ற சூழலில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இந்த நிலைமை மேலும் அதிகரித்தது. இந்த நிலைமையில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்கு பிடித்திருப்பதே ஜனநாயக மத்தியத்துவத்தால்தான்.  அவர்களின் தத்துவார்த்த அரசியல் பலவீனம் மற்றும் தவறுகள் எதுவாயிருந்தாலும், ஜனநாயக மத்தியத்துவத்துமே அந்த அமைப்பை புரட்சிகர கட்சிகள் என்ற தகுதியுடன் பாதுகாத்துள்ளன.  ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்ட கட்சிகள் ஒன்று புரட்சிகர கட்சிகள் என்ற தகுதியை இழந்துவிட்டன அல்லது சிதைந்து காணாமல் போய்விட்டன.  அதற்கு சிறந்த உதாரணம் இத்தாலியன் கம்யூனிஸ்ட் கட்சி, 80கள் வரை சோசலிச நாடுகளுக்கு வெளியே மிகப்பெரும் கட்சியாக விளங்கிய கட்சி.  ஆனால், சோவியத் வீழ்ச்சிக்கு முன்பாகவே, அது திவால் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அது ஜனநாயக மத்தியத்துவத்தை முதலில் கைவிட்டது  பின்னர் அது மார்க்சியத்தையும் ( விஞ்ஞான சோசலிசம்) கைவிட்டது.

பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குள் செயல்படுகின்ற ஓரளவு வெகுஜன செல்வாக்கு தளமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி கூட கொஞ்சமும் இடைவிடாத தாக்குதலுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இத்தாக்குதல்கள் கட்சியை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் தத்தவார்த்த மற்றும் அரசியல் வடிவங்களில் வரும். அமைதியான காலங்களில்கூட வர்க்க போராட்டங்கள் (கட்சியின் மீது) தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இட்டு செல்லும், ஏனெனில் கட்சி, ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை எதிர்த்து போராடுவதால்.  இதுவே நமது கட்சியின் அனுபவமும் கூட. அரசியல் மற்றும் தத்துவார்த்த முனைகளில் நடைபெறும் போராட்டங்களே மிகவும் முக்கியமானது என்பதால், அதனை கட்சி மிகுந்த திறனுடன் அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமெனில், அந்த கட்சியை துண்டாட செய்யப்படும் பல முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல் சமூக ஜனநாயக கட்சிதான் இருக்க முடியும், புரட்சிகர கட்சி இருக்க முடியாது.

ஜனநாயக மத்தியத்துவம், அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு அமைப்புக்கு இணையாக வைக்கப்படுகிறது.  இதனை மேலும் விரிவாக்கி கட்சி முழுமையின் கருத்தையும் கட்சி தலைமை நிராகரித்துவிடுகிறது என்ற முடிவுக்கு வருகின்றனர்.  ஜனநாயக மத்தியத்துவம் என்பது அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு அமைப்பா? மத்தியத்துவத்தை அது கட்டளையிடும் அமைப்பாகவும், கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் மாறிவிட்டது என்ற அடிப்படையில் நிராகரிப்பது முறையாகுமா?  ஒரு அரசியல் உணர்வுள்ள கட்சி உறுப்பினரைப் பொறுத்தவரை, மத்தியத்துவத்தை கூட்டு முடிவு மற்றும் கூட்டு நோக்கமாக பார்ப்பாரேயொழிய கட்டளையிடும் அமைப்பாக பார்க்க மாட்டார். மத்தியத்துவம் மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் செயல்பாட்டின் வடிவம்தான் ஜனநாயக மத்தியத்துவம்.  சி.பி.ஐ.(எம்) அமைப்பு விதிகளில் பிரிவு 13 முழுமையாக ஜனநாயக மத்தியத்துவத்தின் கொள்கைகள் என்ன? அது எவ்வாறு கட்சியில் பயன்படுத்தப்படும் என்பதை விளக்குகிறது.  அதில் நமது விவாதத்திற்கு மிகவும் பொருத்தமான உபபிரிவுகளான C மற்றும் D கீழே தரப்படுகிறது:

C. கட்சியின் எல்லா கமிட்டிகளும் முறையாக அதனதன் வேலைகளைப் பற்றி உடனுக்குடன் தனக்கு கீழுள்ள ஸ்தாபனத்திற்கு ரிப்போர்ட்(அறிக்கை) செய்ய வேண்டும்.  அதே போன்று எல்லா கீழ் கமிட்டிகளும் அடுத்துள்ள மேல் கமிட்டிக்கும் அறிக்கைகள் அனுப்ப வேண்டும்.

D. எல்லா கட்சி கமிட்டிகளும் குறிப்பாக தலைமை வகிக்கும் கட்சி கமிட்டிகள் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி ஸ்தாபனங்களுடைய சாதாரண கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தொடர்ச்சியாக உரிய கவனம் செலுத்த வேண்டும்.  

சி.பி.ஐ (எம்) கட்சியின் அமைப்பு விதிகள் கட்சியை பாதிக்கும் அனைத்து கேள்விகள் கொள்கைகள், வேலைகள் குறித்தும் கட்சி கிளையில் தங்குதடையற்ற ஒளிவு மறைவற்ற விவாதத்தை நடத்த வகைசெய்கிறது.  ஆனால், கோஷ்டிகளையோ, கோஷ்டிவாதத் தையோ தடை செய்கிறது. புர்க்கயஸ்தா இந்த குறிப்பிட்ட கோட்பாடு ரஷ்யாவில் புரட்சிக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறார்.  உண்மையில், கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டியாக இருந்து செயல்படுவது கட்சி அமைப்பின் ஒருமைப்பாட்டை சீரழித்து கூட்டு செயல்பாட்டை முடக்கிவிடும். நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கோர்ப்பசேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி காலத்தில் கட்சிக்குள் பல குழுக்கள் அனுமதிக்கப்பட்டது, இந்த நடவடிக்கை சோவியத் கட்சி சிதையும் போக்கை விரைவுபடுத்தியது.

ஒரு கட்சியின் தலைமைக்கு அதன் அணிகள் அனைவரின் கருத்தையும் புறக்கணிப்பது சாத்தியம்தானா? இதற்குமாறாக ஜனநாயக மத்தியத்துவம் இல்லாத இடத்திலோ அல்லது ஜனநாயக மத்தியத்துவத்தை கடுமையாக மீறும் இடங்களில்தான் இது சாத்தியமாகும். கட்சி கமிட்டிகள் அனைத்து மட்டங்களிலும் தங்களது கருத்தை வெளியிடாவிட்டால் கட்சியின் கருத்தை எப்படி அறிந்து கொள்வது? நமது கட்சியில் பெரும்பான்மை மாநிலக் குழுக்கள் மாற்றுக் கருத்தை தெரிவித்தால் கட்சியின் மத்தியக் கமிட்டி அந்த கருத்தை புறந்தள்ளிவிட முடியுமா? அதே போல கட்சியின் அரசியல் தலைமைக் குழு மத்திய கமிட்டியின் பெரும்பான்மை கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியுமா?

உட்கட்சி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?

இரண்டாவது வாதம்: ஜனநாயக மத்தியத்துவம், ஒரு அமைப்பின் கோட்பாடாக இருப்பதால், அதன் உள்ளார்ந்த தன்மை காரணமாக அது மையப்படுத்துதலுக்கு இட்டுச் சென்று இறுதியில் ஜனநாயகத்தையே கட்டுப்படுத்துவதில் முடிவடை கிறது கீழ் கமிட்டிகள் மேல் கமிட்டியின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி ஒருதலைபட்சமாகவும் அனைத்தையும் மையமே முடிவு செய்யும் என்ற நிலைக்கும் இட்டு செல்கிறது.  இது ஜனநாயக முறையில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதை தடுத்தும், மாற்றுக் கருத்திற்கு இடமின்றியும் செய்து விடுகிறது.  இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விமர்சனமாகும்.  குறிப்பாக பல நாடுகளில் ஆட்சியில் உள்ள அல்லது இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவத்திலிருந்து இதனை பார்க்க வேண்டும்.  கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள அரசியல் தலைமைக்குழு, மத்தியக்கமிட்டி, மற்றும் மாநிலக் கமிட்டிகள் ஆகியவை தங்குதடையற்ற அதிகாரத்தை இந்த விதிகளை தங்கள் தேவைக்கேற்ப விளக்கம் அளித்து பயன்படுத்தி எல்லா பிரச்னைகளிலும் தாங்களே இறுதி முடிவெடுப்பவர்களாக மாறிவிட முடியும். உட்கட்சி ஜனநாயகம் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள் மீறப்படும் போது அதிகாரவர்க்க மத்தியத்துவம் அதிகப்படியான மையப்படுத்துதல் ஆகியன தலைதூக்கும் எனபதற்கு பல உதாரணங்ள் உள்ளன.   ஜனநாயக மத்தியத்துவம் என்பதை ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்க வேண்டுமேயொழிய அதை மையப்படுத்துதலை உள்ளடக்கிய கோட்பாடாக பார்க்கக் கூடாது.

ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகளை ஒட்டுமொத்த மாகப் பார்த்தால் இதுவே நடைமுறையில் அதிகபட்ச ஜனநாயகமாக இருக்கிறது என்பதையும், வெறும் ஜனநாயகத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் பல்வேறு அமைப்புகளை விட இதுவே சிறந்ததாக உள்ளது என்பதையும் பார்க்கிறோம்.  இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது கட்சிகள் எந்த வடிவத்தில் ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது என்பதை விட அவற்றின் நடைமுறையில் ஜனநாயக உள்ளடக்கம் எவ்வாறு உள்ளது என்பதேயாகும்.

கட்சி ஸ்தாபனம் குறித்த லெனினிய கோட்பாட்டில் தத்துவம் மற்றும் நடைமுறை குறித்து விவாதிப்பதற்கும் கருத்து கூறுவதற்கும் ஒரு குறிபிட்ட பகுதியினருக்கான உரிமை என்பதோ அல்லது உட்கட்சி விவாதங்களை புறக்கணிப்பது என்பதற்கோ இடமில்லை. லெனின் வார்த்தைகளில் கூறுவதானால்:

சண்டை உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பாட்டாளி வர்க்கத்தின் போர்ப்படை தனது ஒவ்வொரு நாடி நரம்பையும் போரில் வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எந்த விமர்சனத்தையும் அது எத்தகையதாக இருந்தாலும் அதனை எந்த மட்டத்திலும் அனுமதிக்க முடியாது.  அதே சமயம், நடவடிக்கைக்கு முன்பு, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பரந்துபட்ட மற்றும் எவ்வித தங்குதடையு மற்ற விவாதமும் தீர்மானங்கள் குறித்த சரியான கணிப்புகளும், அதற்கு சாதக பாதக வாதங்களும் பல்வேறு கோணங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது நெகிழ்வுத் தன்மையற்ற ஏட்டு சுரைக்காய் அல்ல.  ஜனநாயக மத்தியத்துவத்திற்கான விதிகளும். அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும், ஒரே நாட்டின் ஒரே கட்சியில் கூட அது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும்.  நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஜனநாயக மத்தியத்துவத்தில் ஜனநாயகமும் மத்தியத்துவமும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான விகிதாச்சாரத்தில் இருக்க முடியாது.   அது திட்ட வட்டமான சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு நாடு, அரசியல் சூழல், கட்சியின் பலம், அந்த கட்சியின் உறுப்பினர்களின் அரசியல் உணர்வு, கட்சி ஊழியர்களிடையே மேல்மட்டத் தலைமையின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை பொறுத்து அமையும்.  லெனினோடு பல விஷயங்களில் மாறுபட்ட டிராட்ஸ்கி, ஜனநாயக மத்தியத்துவத்தை ஆதரித்து கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்:

ஒரு அரசியல் நடவடிக்கையின் போது மத்தியத்துவம் ஜனநாயகத்தை தனக்கு கீழ்ப்பணிய வைக்கிறது.  நடைபெற்ற தனது நடவடிக்கைகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யும் போது ஜனநாயகம் மீண்டும் தனது உரிமைகளை நிலைநாட்டும்.  ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் ஆகிய இவை இரண்டிற்குமான சமன்பாடு; போராட்டம் நடைபெறும்போது நிலைநிறுத்தப்பெறும் சில சமயங்களில் இந்த விதி மீறல் நடைபெறும், உடனடி யாக சரியான விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அதைப்போலவே அரசியல் நிலைபாடு இறுதிப் படுத்துவதற்கு முன்பு ஜனநாயகம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.  அரசியல் நிலைபாடு அதிக பட்ச ஜனநாயகத்தோடு இறுதிபடுத்திய பின்பு அதை அமல்படுத்தும்போது மத்தியத்துவம் அமலுக்கு வருகிறது.

சி.பி.ஐ.(எம்) இதர கம்யூனிஸ்ட் கட்சி அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு முனைகிறது, அதிலும் குறிப்பாக வெற்றிகரமாக புரட்சி நடத்திய கட்சிகளிலிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறது.  சில கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவ நடைமுறை களை மீறியதன் விளைவாக அதற்கு இரையாகியுள்ளன.  ஒரு தலைவரை அளவுக்கதிகமாக முன்னிறுத்துவது கட்சியில் உட்கட்சி ஜனநாயகத்தை கைவிடுவதற்கு கொண்டு செல்கிறது.   சி.பி.ஐ.(எம்) வரலாற்றில் எந்த காலத்திலும் இத்தகைய திரிபால் பாதிக்கப்பட்ட தில்லை.  தலைமையின் கூட்டு செயல்பாடு, கட்சி அமைப்புகளின் கூட்டு செயல்பாடு ஆகியவை இத்தகைய திரிபிலிருந்து கட்சியை பாதுகாத்துள்ளது.

ஜனநாயக மத்தியத்துவத்தை பட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறையாகக் கொள்வது குறித்து முடிவு செய்வது நமது கட்சிதான்.  இது பரந்துபட்ட இடதுசாரி அணி அமைப்பதை தடை செய்யாது.  நாம் எப்படி இதர இடது சாரி கட்சிகளை ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாதோ அதே போன்று இதர கட்சிகளும் நம்மை ஜனநாயக மத்தியத்துத்தை நமது அமைப்பு கோட்பாடாக வைத்திருப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்த முடியாது.

நாம் சோசலிசத்திற்காக மாறிச் செல்லும் காலத்திலும்கூட அப்போது பல கட்சி முறை அமலில் இருக்கும்போதும், கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிப்பது அவசியமாகிறது.  உண்மையில் இதுவே நமது கட்சி இதர போக்குகள் மற்றும் சக்திகளிடமிருந்து மேன்மேலும் அதிகமான உழைக்கும் வர்க்கத்தை வென்றெடுத்து நமது அணிக்கு கொண்டுவரும் திறவுகோலாகும்.

அசோக் மித்ராவைப் பொறுத்தவரை அடிப்படையில் அவர் ஜனநாயக மத்தியத்துவத்தை நிராகரிக்கவில்லை.  அவருடைய விமர்சனமே மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ.(எம்) கட்சியில் உள்ள நடைமுறையைப் பற்றியது தான். அவர், மேற்கு வங்கத்தில் அளவுக்கதிகமான மத்தியத்துவமும் சிறு துண்டு துக்காணி ஜனநாயகமும் இன்றி செயல்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக கட்சி மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய சமயங்களில் அசோக் மித்ரா சி.பி.ஐ.(எம்) மற்றும் இடது முன்னணி அரசின் தொழிற் கொள்கையையும், நில ஆர்ஜிதக் கொள்கையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்  அவரைப் பொறுத்தவரை, நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தியதுதான் கட்சி மக்களிடமிருந்து அன்னியப்பட்ட தற்கான காரணம் என்கிறார்.

அவருடைய இந்த தனிப்பட்ட கருத்தை உண்மையென்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், ஜனநாயக மத்தியத்துவத்தை திரித்து நடைமுறைப்படுத்தியதோ அல்லது அதிகப்படியான மத்தியத்துவமோ பிரச்னைகளுக்கான காரணம் இல்லை என்று தெரிகிறது.  உண்மையில் அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், கடமையுணர்வும் கட்டுப்பாடும் மிக்க சி.பி.ஐ.(எம்)ன் ஊழியர்களே இந்த இயக்கத்தின் முதுகெலும்பாக மேற்கு வங்கத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.   தற்போது மேற்கு வங்கத்தில் சந்தித்துள்ள பின்னடைவிற்கான வித்துக்கள் அரசியல், ஸ்தாபன அமைப்பு மற்றும் அரசு ஆகிய மூன்று தளங்களிலும் உள்ளது.  கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரிசீலனை இந்த விஷயங்கள் மற்றும் நமது குறைபாடுகளை துல்லியமாக சுட்டிக் காட்டியுள்ளது.  ஆனால், அதிகப்படியான மத்தியத்துவம் இதற்கான காரணமில்லை.

III

ஜனநாயக மத்தியத்துவத்தின் கீழ் சித்தாந்தமும் நடைமுறையும்

பிரபாத் பட்நாயக் ஜனநாயக மத்தியத்துவத்தை கீழ்க்கண்ட வகையில் விமர்சனம் செய்கிறார்.   சித்தாந்தம் ஒரு இறுக மூடிய அமைப்பாக இருக்கிறது.  பொதுவான பார்வை என்னவென்றால் மார்க்சியம் என்ற சித்தாந்தம் மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டதை நாம் சுவீகரித்து அதனை நமது தேவைக்கேற்ப விளக்கம் அளித்து அமல்படுத்த வேண்டும்.

மார்க்சீய சித்தாந்தம் மேலும் மேலும் செழுமை பெற வேண்டுமானால் அது திறந்ததாகவும்,  மார்க்சியமல்லாத சித்தாந்தப் போக்குகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். சித்தாந்தம் என்பது தலைமையின் சொத்தாக இருக்கும் அதே பட்சத்தில் அதன் நடைமுறைப்படுத்தும் கடமை அணிகளை சேர்ந்ததாகும். இதுவே ஜனநாயக மத்தியத்துவத்திற்கு மிகப் பொருத்தமான அல்லது போற்றத்தக்க வடிவம் போன்றதாகும்.

தடையற்ற விஞ்ஞான பூர்வ விவாதங்கள் ஒரு புரட்சிகர கட்சிக்கு பிராண வாயு போன்றது.  இதன் அர்த்தம் இத்தகைய விவாதமின்றி அந்த புரட்சிகர அமைப்பு உயிர் வாழ முடியாது.  ஆனால், அத்தகைய வெளிப்படையான விவாதம் நடைபெற தேவைப்படுவது அறிவுப்பூர்வமான சுதந்திரம் மட்டுமல்ல, அதைத்தவிர பல்வேறுவகைப்பட்ட கருத்துகள்(அந்தக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலதரப்பட்ட அரசியல் இயக்கங்கள்) மற்றும் ஒரு புரட்சிகர கட்சியின் அமைப்பு சட்டத்தில் நடைமுறையாக கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை பற்றிய மறு வரையறை ஆகியவையுமாகும். 

பட்நாயக் சரியாக சுட்டிக் காட்டியுள்ளபடி சித்தாந்தம் ஒரு மூடப்பட்ட அமைப்பு அல்ல, தேவைப்படுவதெல்லாம் அதற்கான விளக்கமும், அதன் சரியான பிரயோகமும்தான்.  மார்க்சிய சிந்தனை தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மற்றும் தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அதற்காக அந்த சித்தாந்தம் திறந்ததாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், எதிர் கருத்துக்களையும், புதிய சூழ்நிலைமை களையும்,  இதர சிந்தனைகளையும்  எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அவர் சரியாக குறிப்பிட்ட மற்றொரு அம்சம் கடந்த காலங்களில் சித்தாந்தம் பற்றிய வறட்டுத் தனமான புரிதல் இருந்தது என்பதாகும்.

ஆனால், சித்தாந்தத்தைப் பற்றிய தவறான புரிதலோடு ஜனநாயக மத்தியத்துவத்தை இணைப்பது சரியல்ல.  சித்தாந்த விஷயங்கள் குறித்த விவாதங்கள் இல்லாமை மற்றும் சித்தாந்தத்தை வளர்த்தெடுக்காமல் விடுத்தது போன்றவை பட்நாயக் தெரிவித்தது போன்று வறட்டுதனமாக சித்தாந்தத்தை மூடியதாக புரிந்து கொண்டதால்தானேயொழிய ஜனநாயக மத்தியத்துவம் அமல்படுத்தியதால் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஜனநாயக மத்தியத்துவத்திற்குள் சித்தாந்தம், மற்றும் சிந்தாந்த விரிவாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

லூகாஸ் தெரிவித்தது போன்று அமைப்பு என்பது சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்குமான சமரசமாகும்.  ஏனெனில், ஒரு சித்தாந்தம் குறித்து பல்வேறு வகையான விளக்கங்களும், வியாக்கியானங்களும் அளித்தாலும், வாதிட்டாலும், நடைமுறை என்று வரும்போது, அது ஸ்தாபனம் என்ற வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.  இந்த இடத்தில்தான் சித்தாந்தத்தின் விளைவுகள் தெளிவு பெறுகிறது, சோதனைக்குட்படுகிறது.  பலதரப்பட்ட எதிரெதிரான பல்வேறு சித்தாந்தங்களும் அவற்றின் விளக்கங்களும் இருந்தாலும், அவற்றை ஒரு அமைப்பில் நடைமுறைப்படுத்தி பார்க்கும் போதுதான் சரியான முடிவிற்கும், திசைவழிக்கும் செல்லமுடியும்.  ஒரு சித்தாந்தம் சரியானதா என்றும், ஒரு அரசியல் நடைமுறைத் தந்திரம் சரியா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க எந்த சூழ்நிலைமைகளில் அந்த நடவடிக்கை முடிவு செய்யப்பட்டது அதன் அனுபவம் என்ன என்பதிலிருந்து முடிவு செய்யலாம்.  ஜனநாயக மத்தியத்துவம் அத்தகைய பரிசீலனை மற்றும் ஒருவரது அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதை தடைசெய்யவும் இல்லை, அதனை நிராகரிக்கவும் இல்லை.  உண்மையைச் சொல்லப்போனால், அது ஒரு பரந்துபட்ட வரைமுறைகளை அளித்துள்ளதால் அதன் வழியாக கட்சி முரணற்ற அரசியல் முடிவுகளையும், தத்துவார்த்த விஷயங்களில் தொடர்ச்சியும்,  நடைமுறை தந்திரத்தில் நெளிவு சுளிவும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

அனைத்து விதமான சித்தாந்த விஷயங்களும் தங்குதடையற்ற விவாதத்திற்கு உட்படுத்தவும், மற்றும் தொடர்ச்சியான மறு பரிசீலனைக்கு உட்படுத்தவும் வேண்டுமென்பது அவசியம். அதே சமயம், விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்ட அரசியல் முடிவுகளை அமுல்படுத்தும்போது  இதனை பிரயோகிக்க முடியாது.  கட்சி விவாதங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தும்போதா அல்லது அரசியல் முடிவுகளை அமல்படுத்தும்போதோ பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாது.  கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை என்பது எப்பொழுது எழுகின்றது என்றால் கட்சியின் முடிவுகளை தீர்மானிக்கும் விவாதங்களில் அல்ல, ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகளை ஒருமனதாக அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்த தவறும் போதுதான்.

IV

சமூக ஜனநாயகப் போக்குகள், ஜனநாயக மத்தியத்துவத்திற்கு சவால் விடுகிறது.

சீர்திருத்தவாத அரசியலான சமூக ஜனநாயக இயக்கப் போக்கிற்கும், ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிடும் போக்கிற்கும் உள்ள தொடர்பு நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவே ஜாவித் ஆலம் ஜனநாயக மத்தியத்துவத்தை தாக்கியுள்ளதில் வெளிப்படுகிறது. தாராள ஜனநாயகத்தை ஆதரிப்பது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் உழைப்பாளி வர்க்கம் பெற்றுள்ள உரிமைகள் குறித்த அவரது நடுநிலை சாராத பார்வை, முதலாளித்துவ ஜனநாயகம் குறித்து லெனின் தெரிவித்த கருத்துக்களை அவர் தவறாக விளக்கம் கொடுப்பது போன்றவைகள் அவர் மார்க்சிய நிலையிலிருந்து விலகிச்செல்வதற்கான அறிகுறிகளாகும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நுற்றாண்டின் முதல் பாதியிலும், அணிதிரட்டப்பட்ட உழைப்பாளி  வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை தவறான நிலையிலிருந்து பார்ப்பதில் ஆரம்பித்து, ஆலம், பல புதிய உரிமைப் பட்டியல் (உழைக்கும் வர்க்கத்திற்கு) வந்துவிட்டது மற்றும் அவை நிலைபெற்றும் விட்டது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உழைக்கும் வர்க்கம் உரிமைகள் பெற்றது என்பது; முதலாளித்துவ வர்க்கத்தின் வாய்ப்புரிமைகளை சுருங்கிவிட்டது இந்த நிகழ்வின் இயல்பென தெரிவிக்கிறார்.  உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டுகொள்ள ஆலம் மறுக்கிறார். 1980களில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும், தாராள மயக் கொள்கைகள் அமல்படுத்தத் தொடங்கிய பிறகு தொழிலாளர்களின் பிரிக்க முடியாத உரிமைகள் பலவற்றை இழந்து விட்டதையும் பிறகு இந்த நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதிலும் விஸ்தரிக்கப்பட்டது குறித்தும் புறக்கணித்துவிடுகிறார். ஏன் வேலை நிறுத்த உரிமையும் கூட்டுபேர உரிமையும் கூட பறிக்கப்பட்டுவிட்டது,  தாராள ஜனநாயகத்தில் தற்போது இருக்கும் ஒரே உரிமை வயது வந்தோருக்கான வாக்குரிமை மட்டுமே.

ஆலம், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள ஜனநாயகத்தில் அனைவரையும் தழுவும் உள்ளடக்கம் குறித்து அளவுக்கதிமாக மதிப்பிடுகிறார் அதே சமயம் அதன் வர்க்க குணாம்சம் குறித்து குறைத்து மதிப்பிடுகிறார். ஜனநாயகம் மற்றும் சமஉரிமை ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு வழங்கும் அதே நேரம் தாராள ஜனநாயகம் அந்த உரிமையை பறிக்கும் வகையில் அந்த உரிமையிலிருந்து பொருளாதார நடடிவக்கையை பிரித்து விடுகிறது.  ஜனநாயகம் என்பது சந்தைக்கும், மூலதனத்திற்கும் சேவகம் செய்வதால், அது பெயரளவிலேயே இருக்கிறது.

ஜாவித் ஆலம் சி.பி.ஐ.(எம்)ன் அரசியல் நிலைபாடுகளில் மாறுபட்டு நிற்கிறார்.  அவர் சி.பி.ஐ.(எம்) தலைமைக்கு முதலாளித்து வத்தால் தலைமை தாங்கி நடத்தப்படுகிற மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது என்ற நியாயமான சிந்தனை கூட இல்லாதது குறித்து வருத்தப்பட்டு இதற்கான காரணம் தவறான அரசியல் புரிதல் மற்றும் இரும்புக் கரத்தால் ஆன நடைமுறை தந்திரம், மற்றும் குருட்டுத்தனமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் மீது திணித்ததால்தான் என்று வாதிடுகிறார்.

இத்தகைய தவறான விமர்சனம் வேறு சிலராலும் செய்யப் பட்டுள்ளது.  ஒரு நடைமுறை யுக்தி தவறானதென கணித்தால் அதற்கான பழி ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது போடப்படுகிறது அல்லது அதன் தவறான செயல்பாட்டின் மீது சுமத்தப்படுகிறது.  உதாரணமாக ஜூலை 2008இல் எடுக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவு விலக்கிக் கொள்ள பட்ட முடிவு தவறென கணித்தால், உடனே இந்த தவறுக்கு காரணம் ஜனநாயகப் பூர்வமற்ற அதிகார மையம் நடைமுறையில் இருப்பதால்தான் நிகழ்கிறது என்று தெரிவிக்கின்றனர்.  அதேபோன்று மே.வங்க தேர்தலில் அடைந்த பின்னடைவை, அதிகாரவர்க்க தலைமை அணிகளி லிருந்து விலகி நின்றதால் நிகழ்ந்தது என்கின்றனர்.

சி.பி.ஐ (எம்) ஜனநாயக மத்தியத்துவம் என்ற சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தீவிரமாக உட்கட்சி விவாதங்கள் மூலம் நடைமுறை தந்திரம் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்கிறது.  உதாரணமாக, 1996ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை ஆகியோரது கருத்துக்கள் மத்தியக் குழுவில் முழுமையாக அலசி ஆராயப்பட்டது.  அதே முடிவு பின்னர் கட்சியின் 16வது காங்கிரசில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டது.  இதுவே கம்யூனிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் வழியாகும்.  கட்சி எடுக்கும் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகளை ஏற்காதவர்கள், அதற்காக அந்த முடிவுகளுக்கு காரணம் ஜனநாயக மத்தியத்துவம் என்று கோரமுடியாது.  அவர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை முடிவுகளுக்கு சிறுபான்மை  கட்டுப்பட வேண்டும் என்பதையும், அதனை அமல்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்க வெட்கப் படுகிறார்கள்.  இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஜனநாயக மத்தியத்துவம் விமர்சனங்களையும், மாறுபட்ட பார்வை ஆகியவற்றின் குரல்வளையையும் நெறிப்பதாக தேவையில்லாமல் குறிப்பிடுகின்றனர்.

நிறைவாக

ஒரு அமைப்பில் நடைமுறையில் உள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை  வறட்டுத் தத்துவமாக பார்க்கக் கூடாது.  ஜனநாயக மத்தியத்துவம் குறித்த கீழ்க்கண்ட விவரங்களை மனதில் கொள்ள வேண்டும்:

  1. ஒரு கட்சி புரட்சி என்ற யுத்த தந்திரத்தை அடிப்படை திட்டமாக ஏற்றுக் கொண்டிருக்கும் போது அதனுடைய நடைமுறைகளை புரட்சிகர யுத்த தந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், ஜனநாயக மத்தியத்துவம் அதன் (கட்சி) பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.
  2. தவறான தத்துவார்த்த புரிதல் மற்றும் தவறான யுத்த தந்திரம் மற்றும் நடைமுறைத் தந்திரம் ஒரு அமைப்பை கடுமையாக பாதிக்கும்.  அதன் விளைவாக அரசியல்-தத்துவார்த்த விலகல்கள் மற்றும் தவறான போக்குகள் ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறையையே அரித்து விடும்.
  3. ஜனநாயக மத்தியத்துவம் என்பது மார்க்சிய தத்துவ உலகப் பார்வையில் உள்ள கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக இருக்கும்.  ஆனால், அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து காலத்திற்கும் ஒரே சூத்திரம் என்பது இருக்க முடியாது.  அது ஒவ்வொரு கட்சியும் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தும் மாறும். ஓரே கட்சியில் பல்வேறு காலகட்டங்களிலும் மாறும்.
  4. ஜனநாயக மத்தியத்துவத்தில் ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் ஆகியவற்றின் கலப்பிற்கு எந்த ஒரு திட்டவட்ட மான விகிதாச்சாரமும் இருக்க முடியாது.  ஒரு கட்சி தனது கொள்கைகளை கட்சி மாநாடு போன்றவற்றில் முடிவு செய்யும் போது அங்கு ஜனநாயகம் முழுமையாக செயலில் இருக்கும்.  கட்சிக்குள் இருக்கும் அமைப்புகளில் தாராளமாக விவாதங்களில் ஈடுபடலாம்.  முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கை க்கான அழைப்பு விடுக்கப்பட்டபின் அங்கு மத்தியத்துவம் மேலோங்கி நிற்கும்.  செயல் முடிந்த பிறகு கட்சி தனது செயல் பாட்டை பரிசீலனைக்கு உட்படுத்தும்போது ஜனநாயகம் மீண்டும் தனது உரிமையை நிலைநாட்டும்.
  5. ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறை வழக்கமான கொள்கைகள் மற்றும் விதிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.  இது கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தரத்தின் அடிப்படையிலும், ஸ்தூலமான நிலைமைகள், மற்றும் நாட்டில் நிலவும் அரசியல் சூழல், தலைமையின் செல்வாக்கு, போராட்டங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் அமைப்பை கட்டுவது மற்றும் உட்கட்சி முரண்பாடுகளை சமாளிப்பது போன்றவற்றை சார்ந்து அமையும்.

இந்திய அனுபவம்:

ஜனநாயக மத்தியத்துவம்; கட்சி பல்வேறு கட்டங்களை கடந்துள்ளது.  ஆரம்ப காலங்களில், அரும்பிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தன்னை கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக பார்த்தது.  அன்றைய தினம் இருந்த அணுகுமுறை  தத்துவம் மற்றும் அரசியல் நடைமுறை போன்றவற்றில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முடிவே இறுதியானது என்பதாகும்.  இந்த அணுகுமுறை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொடர்ந்ததால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்  பார்வைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  இந்த அணுகுமுறையே தத்துவத்தை வளர்த்தெடுப்பதை தடைசெய்து, சரியான யுத்த தந்திரம் மற்றும் நடைமுறை தந்திரம் ஆகியவற்றை வகுக்க முடியாத நிலை ஏற்படுத்தியது.  சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாம் கட்டத்தில், திருத்தல்வாதம் மற்றும் அதிதீவிரவாதம் ஆகிய பிரச்னைகள் கட்சியின் ஸ்தாபன தளத்தில் தனது தாக்கத்தை ஏற்படுத்தின.  ஆனால், மொத்தத்தில் ஏறத்தாழ உட்கட்சி ஜனநாயகம் என்பது மறுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமாகும்.

சி.பி.ஐ.(எம்) உருவான பிறகு, ஒன்றுபட்ட கம்யு. கட்சியில் இருந்த ஸ்தாபன நடைமுறைகள் குறித்து விமர்சன ரீதியாக பரிசீலனை செய்யப்பட்டது.  கட்சி ஸ்தாபனத்தில் நமது கடமைகள் என்ற கட்சி ஆவணம் இத்தகைய விவாதம், மற்றும் பரிசீலனைகளின் விளைவே.  இந்த ஆவணம் கட்சியின் ஸ்தாபனத்தை கட்டுவது அதனை புரட்சிகரமாக நடத்துவது  போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது. இத்துடன் தொடர்புடைய ஒரு விஷயம் இந்த ஆவணத்தில் பல இடங்களில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் திருத்தல்வாதம், ஜனநாயக மத்தியத்துவம் என்ற கொள்கையை கடுமையாக சாடுகிறது என்பதாகும்: உயர்ந்த கொள்கையும், மார்க்சிய-லெனினிய கட்சியின் உயிர்நாடியுமான ஜனநாயக மத்தியத்துவம் ஆத்திரத்துடன் தாக்குதல்களுக்கு உள்ளானது மற்றும் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டது என்று அந்த ஆவணம் கூறுகிறது.

நமது கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறை எவ்வாறு வடிவம் பெற்றது? ரஷ்ய கட்சி அல்லது இதர கம்யு. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் எப்படி கடைபிடிக்கப்பட்டதோ அப்படியே காப்பியடிக்கப்பட்டதா?

சால்கியா பிளீனத்தில் சி.பி.ஐ.(எம்) ஒரு வெகுஜன புரட்சி கட்சியை உருவாக்க அழைப்பு விடுத்தது.  இந்த கட்சி அமைப்பானது ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளின் அடிப்படையில் கட்டப் பட வேண்டும்.  ஜனநாயக மத்தியத்துவம் இன்றி ஒரு வெகுஜன கட்சியை மட்டுமே கட்டலாம்.  ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்துவதில் குறைபாடுகள் மற்றும் வரைமுறைகள் இருந்த போதிலும், கட்சியின் அமைப்பு விதிகளில் உள்ளடங்கியுள்ள இந்தக் கொள்கைகளே, கட்சிக் கமிட்டிகள் கட்சியின் வெகுஜன செல்வாக்கை உருவாக்குவதற்கும் கட்சியின் ஓழுங்குமுறைக்கு உட்பட்டு பணிபுரிவதற்கு பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை தேர்வு செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.  இந்தியாவில் சி.பி.ஐ.(எம்) தவிர வேறு எந்தக் கட்சியிலும் இந்தளவிற்கு விரிவான அளவில் விவாதங்களும், உட்கட்சி ஜனநாயகமும் இல்லை.  ஜனநாயக மத்தியத்துவம் இருந்தும் கூட இது சாத்தியமானது என்று கூறுவது சரியல்ல. மாறாக, ஜனநாயக மத்தியத்துவம் இருந்ததால் தான் இந்த சிறப்பான உட்கட்சி ஜனநாயகம் சாத்தியமானது என்பதே சரியாகும்.

சி.பி.ஐ.(எம்) கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கெடுத்து வருகிறது.  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பங்கேற்பது மட்டுமல்லாது, மாநில அரசுகளையும் நடத்தி வருகிறது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மிக பரவலான அளவில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது.  ஜனநாயக மத்தியத்துவம் என்ற ஸ்தாபன நடைமுறை இந்த அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.  இந்த அமைப்புகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படும் ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்களுக்கு வழிகாட்டு வதற்கான பொதுவான வரையறை ஜனநாயக மத்தியத்துவத்திற்குள் உள்ளடங்கியுள்ளது.

கட்சியானது மிகவும் மாறுபட்ட பலவேறு சூழல்களில் பல மாநிலங்களில் பணியாற்றுகிறது.  மத்தியப்படுத்தப்பட்ட அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலகமிட்டிகளுக்கு தங்கள் மாநில நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்துக்கொள்ள போதுமான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மத்தியத்துவம் என்பதன் அர்த்தம் வெகுஜன இயக்கங்கள் கட்டுவது மற்றும் வெகுஜன அரங்கங்கள் கட்டுவது போன்றவற்றில் நடைமுறை உத்திகள் வகுப்பதில் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பதல்ல.  கட்சி மக்களுடனான தொடர்பை வெகுஜன ஸ்தாபனங்கள் மூலம் மட்டும் பராமரிப்பதில்லை தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள அதன் ஊழியர்கள் மூலம் பொறுப்பேற்கிறது. இந்த அமைப்புகளில் செயல்படுவது என்பது மையப்படுத்தப்பட்ட முறையால் மட்டும் சாத்தியமில்லை. வெகுஜன அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளில் செயல்படுவது என்கிற கட்சி ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜனநாயக ஈடுபாட்டின் மூலமும் நடைபெறுகிறது.

சி.பி.எம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அனுபவத்தை சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு பரிசீலனை செய்தது.  1992ஆம் ஆண்டு கட்சியின் 14வது காங்கிரசில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சறுக்கல்கள் பதிவு செய்யப்பட்டது. அதிகப்படியான மத்தியத்துவம், அதிகாரவர்க்க போக்கு, மற்றும் உட்கட்சி ஜனநாயகமின்மை ஆகியவை இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.

சித்தாந்த அளவிலும் நடைமுறையிலும் கண்டறியப்பட்ட தவறுகளில் ஒன்றாக குறிப்பிடுவது எதுவென்றால் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை கட்சியின் அமைப்பிற்கு நடைமுறையாக பயன்படுத்துவதற்கு பதிலாக சோவியத் யூனியன் அரசு அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.  ஜனநாயக மத்தியத்துவம் கம்யூனிஸ்ட கட்சிக்கு மட்டுமல்லாது சோவியத் அரசின் வழிகாட்டும் நடைமுறையாக ஆக்கப்பட்டது.  இதுவும் சோசலிச ஜனநாயகம் உருக்குலைவதற்கான பல காரணங்களில் ஒன்றாகும்.

சி.பி.ஐ.எம் சில தவறுகளை திருத்த நடவடிக்கை எடுத்தது. அவற்றில் சில:

  1. ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஸ்தாபனக் கோட்பா டாகும். இதனை அரசு அமைப்பிற்கு பொருத்த முடியாது.  1964ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்சிதிட்டத்தில் மக்கள் ஜனநாயக அரசு ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளின் அடிப்படையில் அமையும் என்றிருந்தது 2000 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் இது கைவிடப்பட்டது.
  2. உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.  மேல் கமிட்டிகள் கீழ் கமிட்டியின் செயலாளரை தேர்தெடுப்பதில் யார் பெயரையும் முன்மொழியக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.  புதிய கமிட்டியில் யார் யார் இடம் பெறுவது என்பதற்கான முன்மொழிவை பழைய கமிட்டியே முன் வைக்க வேண்டும்.
  3. போட்டியிருந்தால் தேர்தலில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. மத்திய கட்டுப்பாட்டுக் குழு கட்சி காங்கிரசால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  அது மத்தியக் கமிட்டியின் கமிஷனாக செயல்படக் கூடாது.  இதற்கான அமைப்பு விதிகள் திருத்தப்பட்டது.
  5. அனைத்து வெகுஜன ஸ்தாபனங்களின் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்த அனைத்து   பதவிகள் மற்றும் கமிட்டிகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட கட்சி கமிட்டிகள் முடிவு செய்யக் கூடாது.

இது சம்பந்தமாக சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் ஜாவித்; ஆலம் கட்சி கமிட்டிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார்.  அவர், உயர் கமிட்டி கீழ் கமிட்டிக்கான பொறுப்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியலை முன்மொழியும் என்று தெரிவித்துள்ளார்.  இது உண்மையல்ல.  புதிய பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை மாநாடுகளில் பழைய கமிட்டி முன்மொழியுமே தவிர மேல் கமிட்டி அல்ல.  மேலும் அவர் தேர்தல்கள் கையை உயர்த்துவதன் மூலமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  இதுவும் தவறான தகவல்.  முன்மொழியப்பட்ட பட்டியலுக்கு வெளியே யாராவது போட்டியிட விருப்பம் தெரிவித்தால் நடைபெறும் தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத்தான்.  பட்டியலுக்கு வெளியே யாருமே போட்டியிட விரும்பவில்லை என்கிற பட்சத்தில்தான் கையை உயர்த்தி வாக்கெடுப்பு நடைபெறும்.  இதிலும் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிக்கலாம், வாக்களிக்காமலும் இருக்கலாம்.

ஜனநாயக மத்தியத்துவம்; முறையாக அமலாவது என்பது கட்சி உறுப்பினர்களின் அரசியல்-தத்துவார்த்த தரத்தை சார்ந்தே அமைந்துள்ளது. இத்தரத்தில் குறைபாடு இருப்பின் அது ஜனநாயக பூர்வமான விவாதங்களிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் பங்கெடுப்பதிலும் ஊழியர்களின் பங்கேற்பை குறைக்கும். ஜனநாயக மத்தியத்துவத்தில் ஏற்படும் இதர மீறல்களுக்கு கட்சியில் ஸ்தாபன பிரச்னையான கோஷ்டி போக்கு, கூட்டு செயல்பாடின்மை, கட்சியில் பல்வேறு நிலைகளில் உள்ள தலைமையின் தவறான வழிமுறைகள், போன்றவை காரணங்களாக உள்ளன. இந்த தவறுகளை திருத்துவதும், களைவதும்தான் கட்சியை சரியான ஸ்தாபனக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்ட செய்யப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  கட்சியில் உள்ள இத்தகைய பிரச்னைகளை களைந்து ஜனநாயக மத்தியத்துவம் பலப்படவும் அந்த நடைமுறையில் உள்ள மீறல்களை சரி செய்யவும் தற்போது நெறிப்படுத்தும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் செயல்படும்  சிபிஐ(எம்); ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஏனெனில் புரட்சிகரமான நோக்கமான மக்கள் ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தை விட உயர்ந்த வடிவத்தை கொண்டது என்ற அடிப்படையில் அதற்காகப் போராடுகிறது. இதை சாத்தியமாக்குவதற்கான ஒரே வழி முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான்.

சிபிஐ (எம்) கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் மீறப்பட்டால், மற்றும் முறையாக நடைமுறைப்படுத்தாவிட்டால், அதன் விளைவு இந்த கட்சியானது உழைக்கும் வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களை தலைமை ஏற்று சமூக மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கட்சியாக வளர்வது நிறைவேறாது. கூடுதல் கவனத்துடன் அனைத்து விதமான தவறான புரிதல்; மற்றும் ஜனநாயக மத்தியத்துவம் தவறாக செயல்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை கட்சியின் தவிர்க்கக்கூடாத கடமைகளாகும்.

லெனின் அரசியலை கட்சி ஸ்தாபனத்திலிருந்து இயந்திரத் தனமாக பிரிக்க முடியாது என்றார்.   ஜனநாயக மத்தியத்துவத்தின் விமர்சகர்கள் மற்றும் சிபிஐ (எம்) இந்த நடைமுறையினை கைவிட வேண்டும் என்று கோருபவர்கள் அறிந்தோ அறியாமலோ கட்சியின் அடிப்படை குணாம்சத்தையும் போர்த்தந்திரத்தையும கைவிட வேண்டும் என்று கேட்கின்றனர்.  சி.பி.ஐ. (எம்)-ஐ பொறுத்தவரை தேர்வு தெளிவாக உள்ளது.  வெகுஜன புரட்சிகர கட்சிகள் எதுவும் ஜனநாயக மத்தியத்துவம் இன்றி இருக்க முடியாது என்பதே அது.  ஜனநாயக மத்தியத்துவத்தின் உண்மையான சாரத்தையும், உணர்வையும் ஓட்டுமொத்தக் கட்சி அணிகளின் உணர்வாக மாற்றுவதற்கானப் போராட்டத்தில் கட்சி தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகப் புரட்சியில் மாணவர்கள் (Nov 2007)

– ஜி. செல்வா

தமிழகத்தின் கட்சி வளர்ச்சி பற்றி பேசும் அனைத்து தருணங் களிலும் மாணவர், விவசாய சங்கங்களின் வளர்ச்சியின் முக்கியத் துவம் குறித்து சால்கியா பிளீனம் சுட்டிக்காட்டிய கருத்துக்கள் அக்கறையோடு பேசும் பொருளாக இருக்கிறது.
இக்கட்டுரையில் மாணவர் அரங்கம் குறித்து கட்சியின் மத்தியக் குழு சுட்டிக்காட்டியுள்ள “மாணவர் அரங்கம்: கொள்கை மற்றும் இலக்குகள்” என்ற ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் மாணவர் அரங்க வளர்ச்சி மற்றும் அதன் அரசியல் தேவைகள் முன்வைக்கப்படுகிறது.

மாணவர் சமூகத்தின் குணாம்சங்கள்
பல தரப்பட்ட வர்க்கங்களைக் கொண்ட, கல்விஅறிவு மிக்க திரளினராக, சமூகத்தின் மிக முக்கியப் பிரிவினராக மாணவர்கள் உள்ளனர். தங்களது கல்வி மூலமாகவும், கல்வி கற்கச் செல்வதின் மூலமாகவும் சமூகத்தின் பலதரப்பட்ட விஷயங்களை, அரசியல், சமூக – பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் சமூக மாற்றத்திற்கான வினையூக்கிகளாக செயல்படுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணம் கூறுவது போல் “பல வர்க்கங்களை கொண்ட பெரும்பான்மையாக உள்ள மாணவர்கள், சமூகத்தின் அனைத்து வர்க்கங்களோடும் தொடர்புகளை பெற்று இருக் கிறார்கள். எனவே அனைத்து வர்க்கங்களின் சிந்தனைகளையும் ஒருசேர பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் ஏற்படும் சித்தாந்த ரீதியான பேராட்டங்களை பிரதிபலிக்கும் நாடகமேடையாக மாணவர் சமூகம் செயல்பட்டு வருகிறது.”

ரஷ்ய புரட்சி, சீனாவில் 1919 மே நாள் இயக்கம், வியட்நாம் மற்றும் கியூபப்புரட்சிகளிலும் புரட்சியை வளர்த்தெடுப்பதிலும் மாணவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர்.

காலனியாதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலைப் போரிலும் குறிப்பிடத்தகுந்த பங்கை வகித்துள்ளனர். வியட்நாம் மீதான அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவிலும் பிரான்ஸ் நாட்டிலும் மாணவர்களின் கிளர்ச்சி உலகத்தையே வியக்க வைத்தது.

இத்தகைய சிறப்பு பண்புகளை மாணவர் இயக்கம் கொண்டிருந்தாலும் “பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையுடன் நேரடித் தொடர்பு இல்லாத மாணவர்கள் தாங்களாவே பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான வர்க்கப்படையை கட்டியமைக்க முடியாது. எனினும் சமூக மாற்றத்திற்கான ஓர் இயக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்லவோ அல்லது சுணக்கம் அடையச் செய்யவோ மிக முக்கிய பங்கினை ஆற்றமுடியும்.”

இந்தியாவில் மாணவர் இயக்கம்
இந்தியாவில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது 1936இல். ஆனால் அதற்கு முன்பே மாணவர்கள் விடுதலை வேள்வியிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்தியாவில் மாணவர்கள் “வாசகர் வட்டம்” என்கிற முறையில் கருத்துக்களை விவாதித்து வந்தனர். 1905 வங்க பிரிவினை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த முதல் நிகழ்வாகும்.

1919-22 காலக்கட்டத்தில் காந்திஜியின் அறைகூவலை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெருவாரியான மாணவர்கள் பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணித்து விடுதலை வேள்ளியில் தங்களை இணைத்து கொண்டனர். 1927-28 இல் சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இயக்கங்களில் மாணவர்களின் பங்கேற்பு தேசவிடுதலைப் போரில் மாணவர் இயக்கத்தின் பங்கை உணர்த்தியது. இதன் காரணமாகவே 1927 மற்றும் 28ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் மாணவர் களுக்கு என சிறப்பு மாநாடு தனியாக நடைபெற்றது.
சட்ட மறுப்பு இயக்கத்தில் காங்கிரசின் அணுகுமுறையும், மாவீரன் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவங்கள் மாணவர் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்தின் மீதான நம்பிக்கையில் தொய்வை ஏற்படுத்தின. இக்காலக்கட்டத்தில் சோவியத் யூனியனில் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் பிரம்மிக்கத் தகுந்த வளச்சி உலகின் பல பகுதிகளில் இருப்போரை வியப்படைய செய்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மீது போடப்பட்ட ‘மீரட் சதி வழக்கின்’ விசாரணையை மாணவர்கள் பத்திரிகைகள் வாயிலாக படித்து வந்தனர். சோசலிச சிந்தனைகள் மாணவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1935இல் காங்கிரஸ் சோசலிச கட்சி தொடங்கப்பட்டது. சோசலிச கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்க தொடங்கினர். இந்த காலத்தில் பாசிச எதிர்ப்பு இயக்கம் உலகம் முழுவதும் நடைபெற்று வந்ததையும், இதற்குப் பின்னால் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இருப்பதை மாணவர்கள் உணர்ந்தனர்.

இப்பின்னணியில்தான் 1939 ஆகஸ்ட் 12ஆம் நாள் இந்தியாவில் முதல் மாணவர் அமைப்பான “அகில இந்திய மாணவர் பெரு மன்றம்” தொடங்கப்பட்டது. இம்மாநாட்டினை பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார். நேரு தனது பேச்சில் சோசலிசத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டம் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து பிரிக்க முடியாது என குறிப்பபிட்டார். மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் , பாசிசத்தை எதிர்த்து ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் போராட்டங்களையும் குறிப்பிட்டுப் பேசினார். மாநாட்டில் நேருவின் பேச்சும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களும் அன்றைய மாணவர் சமூகத்தின் பரந்துபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்துமாறு அமைந்திருந்தன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல தரப்பு மாணவர்களும் இணைந்து செயல்படும் அமைப்பாக ஏ.ஐ.எஸ்.எப். இருந்தது. எனவே, கருத்து ரீதியான விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றது. முரண்பாடுகளும் ஏற்பட்டன. சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஏ.ஐ.எஸ்.எப். மாநாட்டில் சோவியத் யூனியனை பாராட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மினோ மஜானி தலைமையில் காங்கிரஸ் மாணவர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். இருந்தபோதிலும் மாணவர் இயக்கத்தில் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் முகமது அலி ஜின்னா முஸ்லிம் மாணவர் சங்கத்தை உருவாக்கினார். மாணவர் இயக்கத்தின் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தபோதும், விடுதலைப் போராட்டத்தில் பெருமைப்படத்தக்க பங்கை செலுத்தினார்.

நாடு விடுதலை பெற்றதும் மாணவர் இயக்கத்தின் பங்கு முடிந்து விட்டது. எனவே, அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்கள் செயல்பட வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எந்த தலைவர்கள் பள்ளி / கல்லூரிகளை புறக்கணித்து போராட அழைத்தார்களோ அவர்கள் தற்போது அரசியலில் இருந்து மாணவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றனர்.

மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் தலைவர்களின் சுயநல கோரிக்கையை நிராகரித்தனர். விடுதலை இந்தியாவில் சமூக / பொருளாதார வளர்ச்சியில் மாணவர் இயக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு என சுட்டிக்காட்டினர். இதைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்கள் மாணவர்கள் இயக்கத்தை உடைத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பாக என்.எஸ்.யூ.ஐ. தோற்றுவித்தனர்.
இந்திய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும் மாணவர் இயக்கம் என்ன செய்வது? என்று ஏ.எஸ்.ஐ.எப். இல் கேள்வி எழுந்தது.

“மாணவர் இயக்கத் தலைமையின் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கொள்கைகளை ஆதரித்தனர். இதன் மூலம் மாணவர் இயக்கத்தை அரசு கொள்கை களின் வாலாக ஆக்க முயற்சித்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர் சமூகத்தை அணி திரட்டவேண்டுமென வலியுறுத்தினர். எனினும் அரசாங் கத்தின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என கூறியவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஏ.ஐ.எஸ்.எப். 1960ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மற்றும் மாணவர் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடும் வலுவை இழந்தது. இதன் விளைவாக மாணவர் இயக்கம் பல்வேறு மாநிலங்களில் தனித்தனி அமைப்புகளாக இயங்க அரம்பித்தது. இதனால் ஏ.ஐ.எஸ்.எப்.இன் முந்தைய பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் புதிய போர்க்குணமிக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே 1970ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அகில இந்திய மாநாடு நடத்தி “இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) உருவாக வித்திட்டது.”

இந்திய மாணவர் இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது “ மாணவர் இயக்கமானது ஓரு தத்துவார்த்த அடிப்படையின் கீழ்தான் மேலும் வலுப்படுத்த இயலும் என்பதை தெளிவாகக் காணமுடியும்.”
மாணவர் இயக்கத்தின் தற்போதைய சவால்கள்
மாணவர் இயக்கத்தின் எழுச்சியை, வளர்ச்சியைப் பற்றி திட்டமிடும்போது இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் சூழ்நிலைகளையும் அவர்களது கல்வியையும், கல்வி நிலைய சூழல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதும் மிக இன்றியமை யாததாகும். விடுதலைக்குப் பின் முதல் பத்தாண்டுகளில் கல்வி குறித்து மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. பல்வேறு குழுக்கள் போடப் பட்டன. திட்டங்கள் வகுக்கப்பட்டன . ஒரு கட்டத்தில் அவை யனைத்தும் காங்கிரஸ் அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டன.

1950இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டமானது முதல் பத்தாண்டுகளில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை.

தற்போதைய ஏகாதியபத்திய உலகமயக் கொள்கைக்கு இணக்கமாக கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை மத்திய அரசு உருவாக்கி அமல்படுத்தி வருகிறது. கல்விக்கு நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டு கல்வித் தரும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் மூலதனத்தை பெருக்குவதற்கு இசைவாகக் கல்வியை லாபம் கொழிக்கும் நடவடிக்கையாகப் பார்ப்பது அதிகரித்து வருகிறது. அந்நிய நேரடி முதலீட்டை கல்வித்துறையில் அனுமதிக் கவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறப்ப தற்கும் ஏற்றாற்போல் சட்டதிருத்தங்களை ஏற்படுத்த முயற்சிக் கின்றனர். அரசின் இத்தகைய கொள்கைக்கு ஆதரவாக நீதிமன்றங்களும் பட்டவர்த்தனமாகச் செயல்படத் தொடங்கி விட்டன.

பல்வேறு ஏற்ற இறக்கமான சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இந்தியாவில் இடஒதுக்கீடு இன்றும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் சில சக்திகள் இடஒதுக்கீட்டை எதிர்த்து கலகத்திற்கு வித்திடுகின்றன. கல்வியில் குறிப்பாக உயர்கல்வியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிக சிறிய அளவினராக இருப்பதால் சமூக நீதிக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் கல்விக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், வாய்ப்புகளையும் பெருமளவில் விரிவு படுத்துவதற்கான போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கல்வி பெறுவதற்கான உரிமை மீதான தாக்குதலில் துவங்கி கல்வியில் தனியார்மயமும், வணிகமயமும் அதிகரிப்பது மற்றும் கல்வியில் மதவெறி, கல்வியில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது, கல்விக் கூடங்களில் சாதி மற்றும் மதவெறி சக்திகளின் சவால்கள் என அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகக் கல்வி
இந்திய அரசின் கல்விக் கொள்கையிலிருந்து தமிழகக் கல்வியைப் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று சமூக சீர்திருத்த இயக்கத்தின் மூலம் கிடைத்த பலன்களை வளர்த்தெடுக்காமல் அதன் மூலம் கிடைத்த பலன்களை ஒருசில கூட்டம் மட்டுமே முழுமையாக அனுபவித்து வருகிறது. 1980க்குப் பிறகு ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த தி.மு.க,. அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே அமுல்படுத்தி கல்வி வியாபாரத்தை ஊக்குவித்துள்ளன. விளைவு, 60 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளோ 197 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளோ 12 தனியார் கல்லூரிகளோ 250 இது மட்டுமா? தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 600, தனியார் ஐ.ஐ.டி.க்கள் 500. இப்படி அரசு கல்வி நிறுவனங்கள் சில நூறுகளுக்குள் இருக்க தனியார் கல்வி நிறுவனங்களோ ஆயிரக்கணக்கில்.

இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்கை ஊரறிந்த விஷயம். இக்கல்வி நிலையங்களின் பாடத்திட்டம், மாணவர்களின் சுயசிந்தனை, ஆளுமை வளர்ச்சிக்கு பயன்படுவ தில்லை. மேலும், நாட்டின் சமூகப் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக அல்லாமல் அவ்வப்போது பன்னாட்டு மற்றும் இந்திய பெருமுதலாளிகளின் தேவைக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளது.

தாய்மொழிக் கல்வி, மாநில சுயாட்சி, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருதல் போன்றவை குறித்து எதிர்வரிசையில் இருக்கும்பொழுது வாய்கிழியப் பேசினாலும் மத்திய அரசின் “மாணவர் விரோத மறைமுகமான கல்வித் திட்டங்களை” ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமுல்படுத்துவதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கடசிகளுமே முன்னணியில் உள்ளன. உதாரணத்திற்கு, தற்போது தேசிய அறிவுசார் ஆணையம், உயர்கல்வி குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை அறிக்கை கொடுத்துள்ளது. இந்த அறிக்கை சமூக அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வறிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் பகிரங்கமாக எடுக்கவில்லை. புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்காமல், இருக்கக்கூடிய கல்லூரிகளையே பல்கலைக்கழகம் என மாற்றி மாணவர்களிட மிருந்து பணம் வசூலிக்க அறிவுசார் ஆணையம் அடுத்த சில ஆண்டுகளில் 1,500 பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அறிவுசார் ஆணையம் திட்டமிட்டதை இத்திட்டத்தை தற்போது தமிழக அரசு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தவோ, பல்கலைக் கழகங்களில் செனட், சிண்டிகேட்டில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவோ திமுக அரசு விடாப்பிடியாக மறுத்துவருகிறது.
இத்தகைய மத்திய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கையை எதிர்த்தும், மாணவர்களின் பிரச்சினைகளுக்காக, உரிமைகளுக்காக முன்னின்று போராடக்கூடிய மாணவர் அமைப்பாக தமிழகத்தில் நம்முடைய மாணவர் அமைப்பு மட்டுமே இருந்து வருகிறது. மற்ற அனைத்து மாணவர் அமைப்புகளும் பெயரளவுக்கே செயல்படுபவையாக உள்ளன.

சவால்களை எதிர் கொள்வோம்
மாணவர் இயக்கத்தின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு கொள்கை ரீதியான அணுகுமுறையை உருவாக்க வேண்டியது உடனடி கடமையாகும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர் அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை வெறும் 3.6 சதம்தான். நமது மாணவர் அமைப்பு மட்டுமல்ல பிற அரசியல் கட்சிகளின் நேரடி மாணவர் அமைப்புகளாக செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும் வீச்சை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. ஆக இந்தியாவில் அணிதிரட்டப்பட்ட மாணவர் இயக்கத்தின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது ஜனநாயக இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாகும். காரணம் அணி திரட்டப்படாத மாணவர்கள் இன ரீதியான, மதரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு சமூக சீர்குலைவு சக்திகளின் பின்னால் செல்ல நேரிடும். அப்படியெனில் இதை மாற்றுவதற்கு நமது செயல்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும்? நமது கொள்கை அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?.

முதலில் கல்வியின் தற்போதைய குணாம்சம் மாறிக் கொண்டேயிருப்பதை அங்கீகரிக்க வேண்டியுள்ளது. 1990க்குப் பின் கல்வித்துறையில் எண்ணிக்கையில் மிகப் பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்விரிவாக்கம் அனைத்தும் தனியார் துறையில்தான் நடைபெற்றுள்ளது. இதனால் உயர்கல்வி பெறுபவரின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தா விட்டாலும் தனியார் கல்வி நிலையங்களின் வளர்ச்சியானது புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. பல புதிய வகை வேலை வாய்ப்பைச் சார்ந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதும் அதில் சேருவதற்கு அதிகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இக்கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் படிப்பை முடிந்தவுடன் வேலை உத்தரவாதத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இயல்பாகவே ஜனநாயகப் பூர்வமான மாணவர் இயக்கத்தில் இவர்கள் பங்கேற்பு இல்லாமல் போய்விடுகிறது.
மறுபுறம் அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களின் தேவைகளுக்காக மாணவர் சங்கத்தை அணுகுகின்றனர். அவர்களை பொது இயக்கங்களில் திரட்டுவதில் சிரமங்கள் உள்ளன.

தனியார் கல்வி நிலைய மாணவர்கள் : அரசு கல்வி நிலையங்க ளோடு ஒப்பிடும்போது தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; மேலும், அதிகரித்தும் வருகிறது. இச்சூழலில் தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கேட்டு போராட வேண்டியுள்ளது. மேலும், தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு மூலம் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் சமூக நீதிக்கான போராட்டத்தின் வெற்றி முழுமை பெறும்.
இத்தகைய மாணவர்களை நேரடியாக மாணவர் சங்க வேலைகளில் பங்கெடுக்க வைப்பதில் சிரமமுள்ளது. எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடம் நமது கருத்துகளை கொண்டு செல்லும் வகையில் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. மாவட்டம் மற்றும் பகுதி அளவில் வாசகர் வட்டங்கள், அறிவியல் கிளப் போன்றவற்றை உருவாக்கி செயல்படுத்த கட்சி கமிட்டிகள் உதவிபுரிய வேண்டும்.

மேலும், மாணவர் சங்கத்தின் சார்பில் கட்டற்ற மென் பொருள்களுக்கான இயக்கத்தை நடத்துவதன்மூலம் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களை சென்றடைய முடியும்.

ஒரு தனியார் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக, தரமான கல்விக்காக நடத்தும் போராட்டம், அதில் கிடைக்கும் அனுபவம் மற்ற கல்லூரி மாணவர்களுக்குச் சென்றடைவதில்லை. உதாரணத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய மாணவர் அமைப்பு பல தனியார் கல்லூரி பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால், இந்த வெற்றியை, போராட்ட அனுபவத்தை மற்ற மாணவர்களுக்குக் கொண்டு செல்ல இயலவில்லை. இதற்கு உதவியாக மாணவர் சங்கத்தின் சார்பில் பத்திரிகை தொடர்ந்து வெளியிட வேண்டும். மேலும், இணையதளம் உள்ளிட்ட நவீன வசதிகளை பயன்படுத்தி கருத்துகளை கொண்டு செல்வதற்கு மாணவர் சங்க ஊழியர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது.

இந்த அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்சி ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது போல “மாணவர் இயக்கமானது கல்வியையும், வேலை வாய்ப்பையும் பாதிக்கும் பிரச்சனைகளை ஒட்டுமொத்தக் கொள்கை அடிப்படையுடன் இணைக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் இணைப்பதால் மட்டுமே மாணவர் அமைப்பின் செயல்பாடு களிலும் செல்வாக்கிலும் ஒரு பொருள் பொதிந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.”

மாணவர் அமைப்பை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்
கல்வித்துறையில் கல்வி வளாகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாணவர் சங்கத்தை கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை கட்சி ஆவணம் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

அ. கல்வி நிலைய அளவிலான செயல்பாடுகள் : மாணவர் சங்கமானது அதன் செயல்பாடுகளில் கல்வி வளாகங்களை மையமாக வைத்தே செயல்பட வேண்டும். எங்கெல்லாம் கல்வி வளாகம் அடிப்படையில் மாணவர் சங்கம் செயல்பட்டுள்ளதோ அங்கிருந்து தொடர்ச்சியாக ஊழியர்கள் உருவாவதும் அவ்வாறு வரும் ஊழியர்களின் செயல்பாடுகள் குணாம்ச ரீதியாக சிறப்பாக இருப்பதையும் காண முடிகிறது. எனவே, “கல்வி நிலைய அளவில் மாணவர் இயக்கத்தை கட்டுவது மற்றும் கல்வி நிலைய அளவிலான கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் அடிப்படையில் அமைப்புக் குழுக்கள் அமைப்பது மிக முக்கியமான இலக்காகும்.” மாணவர் அமைப்பின் உறுப்பினர் பதிவு கல்வி நிலையத்தின் மாணவர் கோரிக்கைகளை முன்வைத்தும் இக்கோரிக்கைகளை அரசின் கொள்கையோடு இணைத்தும் பிரச்சாரம் செய்து அதற்கு கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் அமைய வேண்டியுள்ளது.

இத்தகைய செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல் மாணவர் சங்க ஊழியர்களின் சிந்தனைகளை, செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்த கட்சி ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆ. முன்னுரிமை கோட்பாடு : கல்வி நிறுவனங்கள் என்பவை மாணவர் அமைப்பின் செயல்பாடுகளுக்கானவை என்ற அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாடு மிகவும் அவசியமானதாகவும் பொருத்தமானதாகவும் ஆகிறது. இவ்வாறு முன்னுரிமைத் திட்டத்தை உருவாக்கும்போது அகல கால் வைக்கும் போக்கு உருவாகிறது. அப்படியெனில் மாணவர் அரங்கில் முன்னுரிமைத் திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்?
முன்னுரிமையாக தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டம் – கல்வி நிலையம் அருகாமையில் இருக்கும் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் ஸ்தாபனத்தை விரிவுபடுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்
கிளர்ச்சிப் பிரச்சாரம், போராட்டம் மற்றும் அரசியல் படுத்தும் வேலைகளில் பெரும்பாலான மாணவர்கள் பங்கெடுக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

திட்டமிடும் வேலைகளை செய்வதற்கு உகந்த ஸ்தாபன அமைப்பு உடையதாக இருக்க வேண்டும். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் நேரடி விளைவுகளால் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு நல விடுதிகளில் படிக்கின்றனர். எனவே நமது முன்னுரிமைக் கடமையாக அரசு கல்வி நிலையங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இ. அரசியல்படுத்துதல் : ஏகாதிபத்தியத்தின் புதிய தாக்குதல்கள் மற்றும் சாதிய, மதவெறி சக்திகளின் தீவிர நடவடிக் கைகள் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது தற்போது மிக, மிக முக்கிமானதாகும். அறிவு சார்ந்த சுய சார்பை வலுப்படுத்து வதற்கும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கும், சம வாய்ப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நமது மாணவ – ஊழியர் களிடையே அரசியல் கல்வியை போதிக்கும் பொருட்டு தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
கட்சி கமிட்டிகள் மாணவர் சங்க ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை புத்தகங்கள் முதற் கொண்டு அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதற்கு உதவியாக, “புத்தக வங்கிகளை” கட்சி கமிட்டிகள் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஈ. கல்வி நிலைய ஜனநாயகம் : மாணவர் இயக்கம் பலவீனமாக இருப்பதால், சமீப காலங்களில் ஒரு சில கல்வி நிலையங்களில் மாணவர்கள் சிலர் அற்ப காரணங்களை முன்வைத்து அராஜகங்களில், வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை குறுகிய அரசியல் இலாபம் தேடும் சில அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்கின்றன. “இது கல்விச் சூழலை பாதிப்பதோடு, ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கும் வழிவகுக்கிறது.” எனவே, கல்வி நிலைய ஜனநாயகம் என்று சொல்லும்போது வெறும் மாணவர் பேரவைத் தேர்தல் என்பதோடு நின்று விடக் கூடாது. மாணவர்கள் கல்வி நிலையத்தில் அமைதியான சூழலில் கல்வி பெறுவதற்கான போராட்டத்தோடு இணைத்து ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

உ. கூட்டு இயக்கங்கள் : மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி பொதுவான கோரிக்கை சாசனத்தின் அடிப்படையில் மற்ற மாணவர் அமைப்புகளுடன் கூட்டு இயக்கத்திற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் அமைப்புகளுடன் இணைந்து கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக கூட்டு இயக்கங்கள் நடத்திட முன்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு மற்ற மாணவர் அமைப்புகளுடனோ, ஆசிரியர் அமைப்புகளுடனோ கூட்டு இயக்கத்திற்குச் செல்லும்போது அதற்கான காரணங்களை மாணவர் சங்க அமைப்பு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

ஊ. மாணவர் சங்க ஊழியர்கள் : மாணவர் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வயது வரம்பு மாணவர் சங்க அமைப்புச் சட்டத்தில் இல்லை. படிப்பு முடிந்த பிறகு கூடுதலாக இரண்டாண்டு காலம் தொடர்ந்து உறுப்பினராக இருக்கலாம். இந்த காலத்திற்கு பின்னும் தேவைக் கருதி நிருவாகக் குழுவிற்கோ அல்லது நிருவாகியாகவோ தேர்ந்தெடுக்கலாம் என மாணவர் சங்க அமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போதைய கட்சி ஆவணம், மாணவர் அரங்கத்தில் பணியாற்றும் கட்சி உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை மீறி பணியாற்றக் கூடாது என குறிப் பிட்டுள்ளது. பொதுவான மாணவர்களின் படிப்புக் காலம் மற்றும் மாணவர்களின் உணர்வு மட்டத்தை தாண்டியவர்கள் மாணவர் சங்கத்தில் பணியாற்றுவது கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கூறுகிறது.

மேலும், மாணவர் சங்க கமிட்டிகளில் மாணவிகளுக்கும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிட்ட அளவில் பிரதிநிதித்துவம் இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும். படிப்போம்! போராடுவோம்” என்ற முழக்கத்தை தீவிரமாக பரப்ப நடவடிக்கை எடுப்பதோடு, அது மாணவர் அரங்கத் தலைவர்களால் அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என ஆவணம் வலியுறுத்துகிறது.

மாணவர் சங்கத்தை கட்டுவது; மாணவர்களிடையே
கட்சியை கட்டுவது :
கட்சி ஆவணம் குறிப்பிட்டுள்ள வழிக்காட்டுதல்களைப் பார்க்கும் போது இதில் கட்சி செய்ய வேண்டியது என்ன? ஆவணம் குறிப்பிடுவது போல “இத்தகைய இலக்குகளை நோக்கி மாணவர் அரங்கில் பணியாற்றுகின்ற கட்சித் தோழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வழிக்காட்டுவதே கட்சியின் பணியாகும்.”
மாணவர் சங்கத்தில் தோழர்கள் செயல்படும் கால அளவைப் பொறுத்து “மாணவர் சங்கமே நிலையான அமைப்பல்ல (Floating Organisation)” என சிலர் கருதுகின்றனர். இது மாணவர் சங்கம் குறித்த தவறான மதிப்பீட்டிற்கு வர வழிவகுக்கும்.

இரண்டாவதாக, மாநிலத்திலோ மாவட்ட அளவிலோ பொருத்தமான திறமையான ஊழியர்கள் இருக்கும்போதுதான் சங்க செயல்பாடு சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாதபோது பெயரளவில்தான் மாணவர் சங்கத்தின் செயல்பாடு இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.
மேற்கண்ட இரண்டு கருத்துக்களுமே மிகத் தவறானதாகும். மாணவர் அரங்கம் குறித்து கட்சி ஆவணம் சொல்வது போல கட்சியின் வழிகாட்டுதல்களை சரியான முறையில் புரிந்து கிறகித்துக்கொண்டு அந்த அரங்கில் பணியாற்றும் மாணவர் கட்சித் தோழர்களுக்கு ஏற்றாற்போல் வழிகாட்ட வேண்டியுள்ளது.
மாணவர்களிடையே கட்சியைக் கட்டுதல்

அ. மாணவர் அரங்க பிராக்ஷன் : எங்கெல்லாம் மாணவர் அமைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்சி மாணவர் பிராக்ஷன் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள மிக முக்கியமான கல்வி மையங்களாக திகழும் இடங்களில் மாணவ அமைப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், கட்சி கமிட்டிகள் ஒரு கட்சி குழுவை உருவாக்கி, அங்கு, மாணவ அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மாணவ பிராக்ஷன் கமிட்டிகள் மாணவர்களிடையே கட்சியை கட்டுவது குறித்தும், வெகுஜன அமைப்பை விரிவாக்குவது மற்றும் வளர்ப்பதற்கான கட்சியின் திட்டம் குறித்தும் அவசியம் விவாதிக்க வேண்டும்.

ஆ. கட்சி கல்வி : மாணவர் அமைப்பில் பல்வேறு மட்டங்களில் அரசியல் கல்வி அளிப்பதற்கான பொருத்தமான நிகழ்ச்சிகளையும், பாடத்திட்டத்தையும் வரையறை செய்வதில் கட்சி அவசியம் வழிகாட்ட வேண்டும். மாணவ அமைப்பு என்ற மட்டத்தில், அப்போதைய பிரச்சினைகள் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவுகள் மாணவர்களின் நலனையும் அவர்களது சிந்தனை மட்டத்தையும் கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இ. கட்சி ஆதரவாளர் சேர்ப்பது : அடிப்படை கிளைகள் முதல் உயர்மட்டக் கமிட்டி வரை உள்ள மாணவர் சங்க கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் – கட்சி ஆதரவாளர்களின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரும் இடைவெளியுள்ளது. எனவே, நாம் மாணவர் அரங்கில் முன்னணியில் செயல்பாடும் கமிட்டி உறுப்பினர்களை கட்சியின் ஆதரவாளர்களாக இணைப்பதில் – அவர்களை கட்சிக்குக் கொண்டு வருவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ஈ. முழு நேர ஊழியர்கள் : 18வது கட்சி காங்கிரசின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில், “பெரும்பாலான மாநிலங்களில் ஒரு சரியான ஊழியர் கொள்கை இருப்பதில்லை. எதிர் கால தலைமைக்கு தேவையான புதிய தோழர்களை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் எடுப்பதில்லை. பாரம்பரியமாக வளமையாக திகழும் மாநிலங்களும் இந்த அம்சத்தில் விதிவிலக்காக இருப்பதில்லை. ஒரு விரிவான பயனுள்ள ஊழியர் கொள்கை வகுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது” என குறிப்பிட்டுள்ளது. மாணவர் சங்கத்தை வளர்ப்பதற்கும் மாணவர்களிடையே கட்சியைக் கொண்டு செல்வதற்கும் முழு நேர ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆந்திர மாநிலத்தின் மிக வேகமான மாணவர் சங்க வளர்ச்சிக்கு அங்கு பணியாற்றும் 120 முழுநேர ஊழியர்கள்மிக முக்கியமானவர்களாக இருக்கின்றனர். 22 மாவட்டங்களுடைய ஆந்திராவில் 14 தோழர்கள் மாநில மையத்தில் பணியாற்றுகின்றனர்.
கட்சியின் 18ஆவது தமிழ் மாநில மாநாடு, மாணவர் அரங்க வளர்ச்சிக்கு முழுநேர ஊழியர்களின் முக்கியத்துவத்தை சரியான முறையில் சுட்டிக்காட்டிய போதும் அதை நடைமுறைப் படுத்துவதில் பெறும் பலகீனம் உள்ளது.

“மாணவர் அமைப்பில் தலைமைப்பாத்திரம் வகிக்கும் கட்சித் தோழர்கள் ஏற்கனவே மாணவர் அமைப்பின் முழுநேர ஊழியர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் கட்சி கமிட்டிகள் அவர்களை முழுமைப் பெற்ற கட்சி முழுநேர ஊழியர்களாக எடுக்க வேண்டியத் தேவையை மறுதளிக்கின்றனர் இந்த நிலைமை அவசியம் உடன் களையப்பட வேண்டும்.”

சோசலிசத்திற்கான பாதை
இன்றைய இந்திய சமூகமானது ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஓரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித் துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்புக் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி இந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது (கட்சி திட்டம் 6. 1)
…..இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் மக்கள் ஜனநாயக முன்னணியில் ஒன்றுபட்டு உண்மையாக ஜனநாயகப்பூர்வ வளர்ச்சியில் செழிப்பான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள உழைக்கும் மக்கள், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரை நமது கட்சி அறைகூவல் விடுக்கிறது. (கட்சி திட்டம் 8. 6)
சமூகப் புரட்சிகளில் உலகெங்கும் உந்துசக்தியாக செயல்பட்ட மாணவர்களை இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சியில் பங்கேற்க வைக்க வேண்டியுள்ளது மிக முக்கியமானது. காரணம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனுபவமானது, குறிப்பாக நமது கட்சியின் வரலாறானது, கட்சியை கட்டுவதில் மாணவ அமைப்பும் மாணவர் இயக்கமும் மிகமிக முக்கியமான பங்கினை வகித்துள்ளன என்றே கூறுகிறது. இன்றைக்கும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தோழர்களில் பெரும் எண்ணிக்கையிலான தோழர்கள் மாணவர் இயக்கம் உற்பத்தி செய்த தோழர்களே.
இன்றைய சூழலில் கட்சியை விரிவுபடுத்துவது என்ற கேள்வியை தவிர்க்கவே முடியாது. மேலும் இதைச் செய்வதற்கு நமக்கு துடிப்புமிக்க, திறன்மிக்க இளைய தலைமுறை தேவைப்படுகிறது. மாணவர்களிடையே மிகச் சீரிய முறையில் கட்சியை கட்டாமல் இந்த இலக்கை எட்ட முடியாது.

18வது கட்சி காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது போல, “மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் தீவிரமான விரக்தி மனப்பான்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை பாசிச பாதையிலும், காட்டுமிராண்டித்தனமான வழியிலும், பிற்போக்கு சக்திகள் தவறாக வழி நடத்திச் செல்வதற்கு முன்னரும், இடது அதி தீவிர சக்திகள் தங்களின் அராஜக பாதைக்கு பலி கடாக்களாக அவர்களை ஆக்குவதற்கு முன்னரும் நாம் செயல் பட்டாக வேண்டும். மாணவர் சமூகத்தின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை சமூக மாற்றம் என்ற புரட்சிப் பாதையை நோக்கி திருப்புவதற்காக நாம் செயல்படுவதே நம் முன்னுள்ள சவாலாகும்”.
ஆதாரம்:
1. Student Front Policy and Tasks. CPIM – CC Document.
2. Student Struggle.
3. E.M.S. – Student Movement Yesterday, Today and Tomorrow.
4. Tapas – Probing into the history of Indian Student Movement.
5. கட்சித் திட்டம்.
6. இ.எம்.எஸ் – சோசலிசத்திற்கான இந்திய பாதை.
7. 18வது அகில இந்திய மாநாடு அரசியல் ஸ்தாபன அறிக்கை.
8. 18வது தமிழ்நாடு மாநில மாநாடு அரசியல் ஸ்தாபன அறிக்கை.

பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

ஆனால், மனிதன் தன்னுடைய சகமனிதர்களின் பரிபூரணத்திற்காக, நன்மைக்காக பாடுபடுவதன் மூலமாகவே தன்னுடைய சுயபரிபூர்ணத்துவத்தை அடைய முடியும்.

நாம் தேர்ந்தெடுக்கும் தொழில், மனித குலத்தின் நன்மை, நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும். மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியுடையவராகிறார் என்று அனுபவம் தெரிவிக்கிறது.”

– காரல் மார்க்ஸ்

பி.சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டு 2007 ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அவரது வாழ்வும், அவர் ஆற்றிய பணியும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். சுமார் 19 ஆண்டுகள் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். ஆம்! 1907 ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பர் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் இறந்தார். குறுகிய காலத்தில் அனைவராலும் போற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார் என்றால் அது எவ்வாறு?

1943 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு பி.எஸ்.ஆர். செல்கிறபோது, அவருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாக படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது, மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளை மீறி பி.எஸ்.ஆர். விவசாயிகள் இயக்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் தலைவராக, சிறந்த போராளியாக எவ்வாறு ஜொலிக்க முடிந்தது? “பி.சீனிவாசராவ் செய்த சேவையின் மதிப்பு எல்லோராலும் உணரப்படக்கூடிய காலம் வரும்” அவரோடு கட்சிப் பணியாற்றிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜீவா இவ்வாறு கூறியிருக்கிறார்.

பி.எஸ்.ஆர். கர்நாடகத்தில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் உள்ள கிருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, “மாணவர்களே அந்நியக் கல்வி முறையை எதிர்த்து வெளியேறுங்கள்” பெற்றோர்களே! பிள்ளைகளை அந்நியர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்” என 1920 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. காங்கிரஸ் கமிட்டியின் அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி.எஸ்.ஆரும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஆர். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

சென்னையில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத் துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளானார். காங்கிரஸ் கட்சியிலும், பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அமீர் ஹைதர்கானை (தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றியவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமீர் ஹைதர்கான் தான் பி.எஸ்.ஆர் ஐ கம்யூனிஸ்ட்டாக்கினார்.

சென்னையில் பி.எஸ்.ஆர்., பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு கூடி தஞ்சையில் விவசாயிகளை திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்கிறார்.

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்ல வேண்டுமென்று கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்து அவர் சென்றபோது அவருக்கு மண்ணைத் தாலுக்கா களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. காக்கி அரைக்கால் சட்டையிலும், வெள்ளை அரைக்கை சட்டையிலும் செக்கச் செவேலென்று நெடிய உருவமுடைய பி.எஸ்.ஆர். வர வேற்பை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்.

“நீங்களெல்லாம் தாய் வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும் கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே? அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான்! உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே? வேறென்ன வித்தியாசம்? அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! அடியாட்கள் ஆயுதங் களுடன் தாக்க வந்தால், பிடித்து கட்டிப்போடுங்கள். ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.

எல்லா ஊர்களிலும், நமது கொண்டான் கொடுத்தான் களிருப்பதால், அங்கெல்லாம் போய்க் கொடி ஏற்றுங்கள். எல்லா இடங்களிலும் சங்கம் வந்து விட்டால், அடிக்குப் பதிலடி கொடுப் போம் என்று தெரிந்தால், நம்மை வாட்டி வதைக்கும், “எஜமானர்கள்” பயப்படுவார்கள். பழைய காலம் போல், போலீசும் காட்டு ராஜா தர்பார் நடத்தப் பயப்படும். அவர்கள் சட்டப்படி நடக்கச் செய்வதில் சங்கத்தின் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். நாங்களிருக்கும் தைரியத்தில் நீங்கள் துணிந்து செயல்படுங்கள்”

பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை படிப்போர் அன்று கீழத் தஞ்சையில் இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச் சுவான்தார்கள், மடாதிபதிகள், மடங்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்கு சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம். மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் தலித் பண்ணையாட்கள், தலித் மக்களின் பெரும்பான்மையோர் நிலமற்றவர்களாகவும், பண்ணை யாட்களாகவும் வேலை செய்து வந்தார்கள். சாதி இந்து மக்களில் பெரும்பாலோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் சாதி இந்துக்கள்தான். இதில் ஒரு பகுதியினர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். தலித் பண்ணையாட்கள் தீண்டாமை கொடுமைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளாகியிருந்தார்கள். குத்தகைய விவசாயிகள் சாகுபடிதாரர்களாக இருந்தாலும், நிலவுடைமையாளர்களின் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். அன்றைய ஆங்கிலேயே காலனியாதிக்க அரசு நிலச்சுவான்தார் களுக்கு அரணாகவும், பண்ணையாட்களுக்கும் குத்தகை விவசாயி களுக்கும் எதிராகவும் இருந்தது. இதனால்தான், 1940களில் விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் தீண்டாமை கொடுமையையும் எதிர்ப்பதோடு, காலனியாதிக்கத்தையும் எதிர்த்து பேராட வேண்டியிருந்தது. சாதியும், நிலவுடைமையும் தீண்டாமை கொடுமையும் பின்னிணிப் பிணைந்து இருந்த சூழல்தான் ஒன்றுபட்ட தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையில்.

பி.எஸ்.ஆர். தனக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கூடியிருந்தவர்களின் சிந்தனையில் மின்சாரத்தை பாய்ச்சியது போல் ஆயிற்று. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணை யாட்கள் மற்றும் சாதி இந்து குத்தகைதாரர்கள் மத்தியில் புதிய தெம்பு ஏற்பட்டது.

தென்பரை

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்வதற்கு முன்பே தென்பரை (கோட்டூர் ஒன்றியம்) கிராமத்தில் குத்தகை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பரையில் உள்ள பெரும்பகுதி நிலத்திற்கு சொந்தக்காரரான உத்திராபதி மடத்தை எதிர்த்து, குத்தகை விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தென்பரை கிராமத்திற்கு மாவட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களோடு சென்ற பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க முதல் கிளையை துவக்கி வைத்து கொடியேற்றுகிறார். குத்தகை விவசாயிகள் போராட்டம் சில கோரிக்கைகளை வென்றெடுத்தது.

தென்பரையில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி காட்டுத் தீயைப் போல் கீழத்தஞ்சை முழுவதும் பரவியது. குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மாவட்டத்தில் உள்ள பண்ணை யாட்களையும் உற்சாகப்படுத்தியது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை பாதுகாக்கும். தங்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தருமென தலித் மக்கள் உண்மையாகவே நம்பினார்கள்.

தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆர்.ரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயச் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்கள். விவசாயிகள் சங்க கிளைகளும், கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் பரவலாக துவங்கப் பட்டது. விவசாய சங்கத்தினுடைய உதயமும், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய துவக்கமும் கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர்.அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி.கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர்.உடன் கிராமம், கிராமமாக சென்று விவசாயச் சங்கக் கிளைகளையும், கட்சிக் கிளைகளையும் உருவாக்கினார்கள்.

சாணிப்பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பண்ணையாளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், குத்தகைய விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமானக் குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத் தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1944 இல் ஒப்பந்தம் உருவானது.

சாணிப்பால் சாட்டையடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. பண்ணையாளுக்கு அளிக்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது. குத்தகைய விவசாயிகளின் கோரிக்கையின் ஒரு பகுதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிலப்பிரபுக்களும் – தலித் பிரதிநிதிகளும் சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்கள் கையில் இருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயச் சங்கமும் பறித்து மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை அக்காலத்தில் பல வடிவங்களில் இருந்தது. சாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு சமமான இடமில்லை. தலித் மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாது. இதுபோன்ற மோசமான வடிவத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவு கட்டியது. சாதிய வேறுபாடும், தீண்டாமை கொடுமையின் மிச்ச சொச்சமும் கீழத் தஞ்சையில் இன்றும் நீடித்தாலும் அதன் குரூரத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தகைய போராட்டத்தில் பி.எஸ்.ஆர். பிரதான பங்காற்றினார்.

1944 ஆம் ஆண்டின் பண்ணையாட்களுக்கு கூலி உயர்வும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகப் பங்கும் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் மன்னார்குடியில் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் நிலச்சுவான் தார்கள் கையெழுத்திட்டாலும், அமலாக்குவதற்கு மறுத்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் ஒரு முத்தரப்பு மாநாடு நடை பெற்றது. இதில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் அய்யங்காரும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகள் சிலரும் விவசாயச் சங்கத்தின் சார்பில், பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷன் வழங்கிய “கூலி உயர்வை” ரத்து செய்ய வேண்டும் என்பதே. சாமியப்ப முதலியார் என்ற நிலப்பிரபு குடும்பத்திற்கு வழக்கறிஞராக பணியாற்றுபவர் தான் மாநில அமைச்சர் பாஷ்யம். இந்தப் பின்னணியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரின் பேச்சு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பி.எஸ்.ஆர்., “ஏஜண்டுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அமைச்சரைப் பார்த்து கேட்க”, அமைச் சரோ! “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க? அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார்? பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே! நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை! ஆனால், நான் “புரட்சி ஓங்குக!” என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்று கோபத்தோடு கூறினார். நிலப்பிரபுவின் வாலாக செயல்பட்ட பாஷ்யம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு ஓடிப்போய் விட்டார்.

இதற்குப் பின் பி.எஸ்.ஆர். கூலி உயர்வு பெறும் வரையில் யாரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று விவசாயி களுக்கு கூற, போராட்டத்தின் வீச்சைக் கண்டு கலங்கிப்போன நிலப்பிரபுக்கள் “நெல் கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டனர்” பி.எஸ்.ஆரின் பெருங் கோபம் நிலப்பிரபுக்களுக்கு கிலிப்பிடிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

நாடு விடுதலையடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணையாட்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சி மாறினாலும், நிலச்சுவான்தார்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

1948 – 51 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர். பி.எஸ்.ஆர். மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டார்.

1952 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டியில் பி.எஸ்.ஆர். முன் முயற்சியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குத்தகை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு சாகுபடிதாரர் மற்றும் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பண்ணையாள் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய மற்றும் குத்தகை விவசாயி களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய இச்சட்டம் விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தலைவர்களை உருவாக்கிய தலைவர்

கீழத் தஞ்சையில் நடைபெற்ற மகத்தான இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் தலைமை தாங்கியது. தமிழகத்திலேயே தீண்டாமை கொடுமை ஒப்பீட்டளவில் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே. இத்தகைய சாதனையை ஓரிரு தலைவர்கள் சாதித்ததல்ல மக்கள் இயக்கம்தான் மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமை வலுவான இயக்கத்திற்கு வழிகாட்டியது. இருப்பினும் இம்மகத்தான இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தவர் பி.எஸ்.ஆர். 1940 களில் துவங்கிய இவ்வியக் கத்தால் பண்ணையாட்களும், சாதாரண விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் தலைவர்களானார்கள். பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தார்கள். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் பி.எஸ்.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறுவார்கள்.

ஒருமுறை மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் ஒரு இயக்கம் வெற்றிபெற இரண்டு முக்கிய அம்சங்கள் தேவை என்றார். முதலாவது, சரியான கொள்கை இருக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைக்காக தியாகம் செய்யும் செயல்வீரர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்திருந்தால் அந்த இயக்கம் வெற்றி பெறும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் நிலக்குவியல் அதிகமாக இருந்ததும், தீண்டாமை கொடுமை மோசமான வடிவத்தில் இருந்ததும் ஒன்றுபட்ட தஞ்சையில் குறிப்பாக கீழத்தஞ்சையில்தான். (கீழத்தஞ்சை என்பது இன்றைய திருவாரூர், நாகை மாவட்டங்கள்) தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் குரல் கொடுத்தன. தந்தை பெரியார் சாதி வேறுபாட்டை, சாதிக் கொடுமையை கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் காந்திஜி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் போராட்டத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணல் காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தீண்டாமைக் கொடுமை யையும், சாதிக் கொடுமையையும் எதிர்ப்பதில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருக்கிறதோ அங்குதான் தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கேரளா, திரிபுரா, தமிழகத் தில் கீழத்தஞ்சை. காரணம் இங்கெல்லாம் சாதிக் கொடுமையை எதிர்ப்பதோடு கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தது. நில விநியோகத்திற்காகப் போராடியது.

கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாணிப்பால், சாட்டையடி என்ற அப்பட்டமான தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததோடு நிலப்பிரபுத்துவ கொடுமைகளையும் சேர்த்து எதிர்த் தது. பி.எஸ்.ஆர். 1947 இல் எழுதி வெளியிட்ட “தஞ்சையில் நடப்ப தென்ன” என்ற பிரசுரத்தில் கீழத்தஞ்சையில் தலித் பண்ணை யாட்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நிலச்சுவான் தார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். சாதிக் கொடுமையும் நிலப்பிரபுத்துவ, சுரண்டலும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்.

“பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதிதிராவிட மக்களே. இவர்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும்அரை மரக்கால் நெல்தான். …. அவர்களது மனைவி மார்களும் குழந்தை குட்டிகளும் மிராசுதார் பண்ணையில் பாடுபட வேண்டும் என்பதை யும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந் தைகள் மிராசுதாரின் மாடுகளை மேய்க்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்…. பண்ணையாட்களின் பரிதாபம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவு இரக்கம் இல்லாமல் மிராசுதார் அடிப்பார் அல்லது அவரது ஏஜண்டுகள் அடிப்பார்கள்”.

கீழத்தஞ்சையில் அக்கால நிலப்பிரபுக்கள் பலர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும், திராவிட இயக்கத்தை சார்ந்தவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் தலித் பண்ணையாட்களை இரண்டு விதமானக் கொடுமைகளுக்கு உட்படுத்துவதில் நிலப் பிரபுக்க ளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய அணுகுமுறையை கீழத்தஞ்சை யில் நிலைமைக்கேற்ப அமலாக்குவதில் பி.எஸ்.ஆர். பிரதானப் பங்காற்றினார்.

1952 ஆம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு அடுத்த சில ஆண்டுகளில் நிலப்பிரபுக்கள், பண்ணையாள் என்ற தன்மை மாறி நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளி என்ற நிலைமை உருவானது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு, குத்தகை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு புதிய நிலைமை உருவானது. புதிய நிலைமைக்கேற்றவாறு கோரிக்கை உருவானது. கூலி உயர்வு, குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான பங்குக்காக மற்றும் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பி.எஸ்.ஆர். கீழத்தஞ்சையில் விவசாயிகளின் இயக்கத் தலைவராக மட்டுமல்ல மாநில விவசாயிகளின் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

நில உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலவிநியோகம் செய்திட வேண்டுமென்று 1961 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர். பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு வழிகாட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அ7ரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்ட மசோதாவை திருத்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நில விநியோகம் செய்ய வேண்டி வற்புறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. மறியல் தயாரிப்பிற்காக எழுதிய கட்டுரையில் பி.எஸ்.ஆர். கீழ்வருமாறு கூறுகிறார்.

“1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள சர்க்கார் நிலவுறவு மசோதாவை வெளியிட்டது. உச்சவரம்பை 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு இருபோக நிலம் 15 ஏக்கர் என இந்த மசோதா நிர்ணயித்தது.

இந்தியா பூராவிலும் இது ஒரு பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் காங்கிரஸ் மகாசபை கூட, தன்பெயர் போன நாகபுரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எல்லா ராஜ்யங்களும் 1959 இறுதிக்குள் நிலவுடைமை உச்ச வரம்புச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தத் தீர்மானம் பணித்தது.

சென்னை ராஜ்ய சர்க்காரும் 1960 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நிலவுடைமைக்கு உச்சவரம்புக் கட்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா பரிசுரிக்கப்படுவதற்குள்ளாகவே, நிலவுடை மைக்கு உச்சவரம்புக் கட்டும் நோக்கத்தையே சிதறடிக்கும் முறையில் நிலச்சுவான்தார்கள் நிலங்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றுவதையெல்லாம் முடித்துவிட்டார்கள். இந்த நில மாற்றங்களை ரத்து செய்வதற்கு சர்க்கார் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்களுக்கெல்லாம் சர்க்கார் உடந்தையே.

சென்னை உச்சவரம்பு நிர்ணய மசோதா, 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று உயர்வான உச்ச வரம்பை நிர்ணயித்தது மட்டுமின்றி, இதர ராஜ்யங்களின் மசோதாக்களில் உள்ள எல்லாப் பாதகமான அம்சங்களும் இம்மசோதாவிலும் உள்ளன.

மேற்கண்ட மாநிலந் தழுவிய விவசாயிகள் மறியல் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எதிர்காலத்தில் கீழத்தஞ்சையில் ஒரளவுக்கு நடைபெற்ற நிலவிநி யோகத்திற்கு இப்போராட்டம் நிர்பந்தமாக அமைந்தது.

இத்தகைய மறியல் போராட்டம் நடைபெறுகிறபோது தோழர் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் சென்றார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் குன்றி இருந்தார். 1961 செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தஞ்சையில் இரவு பின்நேரத்தில் அவர் இறந்தார்.

தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அமரர் பி.எஸ்.ஆர் ரின் இறுதி நிகழ்ச்சி தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் பி. ராமமூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், எம்.காத்தமுத்து, கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன், கே.டி. ராஜூ மற்றும் பலர் பேசினார்கள். இரங்கல் கூட்டம் இரவு 1.10 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன் போன்ற பல தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

பி.எஸ்.ஆர். மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.எஸ்.ஆரின் குணநலன்களைப் பற்றி எழுதியிருக்கிறார். “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவென்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அல்லது அநீதி என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டிக்கத் தவறமாட்டார். அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, இத்தகைய அவரது பிரதிபலிப்புகள், பல சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன.

பி.எஸ்.ஆர். பற்றி பி.ராமமூர்த்தி கூறியது. “மாவீரர் தோழர் .பி. சீனிவாசராவ் அவர்களை 1930 ஆம் வருடத்திலிருந்து எனக்குத் தெரியும். 1930 ஆம் வருடம் தேசிய மறியல் போராட்டத்தில் அவர் செய்த வீரத் தியாகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்நிய துணி பகிஷ்கார மறியலில் தன்னந்தனியாக நின்று மறியல் செய்வார். கொடூரமான தடியடிப் பிரயோகத்தில் அவர் மண்டை உடைந்து ரத்தம் ஓடும். ஜனங்கள் இதைப்பார்த்து ஆத்திரமுற்று கதர் துணியை அதிகமாக வாங்கிக் கட்டுவார்கள். அன்று கதர் கடைகளில் அதிக வியாபாரம் நடந்தால், “இன்று சென்னையில் சீனிவாசராவ் மறியலா?” என்று கேட்பார்கள். என்னைப் போன்ற தோழர்களைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.”

பி.எஸ்.ஆர். பற்றி ஏராளம் கூற முடியும். அர்ப்பணிப்பு, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவு, வாழ்க்கையில் எளிமை, நேர்மை என விளக்கிக் கொண்டே போகலாம். அண்ணல் காந்திஜியை அவருடைய இறுதிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது, என் வாழ்வுதான்தான் விடுக்கும் செய்தி எனக் கூறினார். அதைப்போலவே பி.எஸ்.ஆர் இன் வாழ்வும், பணியும் தான் இன்றைய தலைமுறைக்கு அவர் விடுத்த செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

பி.எஸ்.ஆர். இன் நூற்றாண்டு ஏப்ரல் 10, 2007 இல் நிறைவுறுகிறது. ஆனால், அவர் துவக்கிய பணி நிறைவு பெறவில்லை. மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.

கம்யூனிசக் கொடியின் கீழ்…

ஜூலியஸ் பூசிக்

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புகள்: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர்நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. தோழர் லெனினினால் அமைக்கப் பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில், இயக்கிய கட்சியில் உறுப்பினர் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை. இப்படித் தொடங்குகிறது. லெனின் மறைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் தோழர் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட சபதம். ஆம்! நாங்கள் தனி வார்ப்புகள், ஏனென்றால் நாங்கள் மக்கள்.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வாழ்க்கையை நேசிக்கிறோம். எனவே தான் மகிழ்ச்சியும், நிறைவும், சுதந்திரமும்  கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது குறுக்கிடும் தடைகளைத் தகர்த்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்த நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை. அடிமைத்தனம், சுரண்டல் என்னும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு முழந்தாளிட்டு வாழ்தல், வாழ்க்கையே அல்ல. அது மனிதன் என்ற பெயருக்கே அவமானம் தருவதாகும். இந்த அவல வாழ்வில் ஒரு கம்யூனிஸ்டு, ஒரு உண்மையான மனிதன் என்ற வகையில் திருப்தியடைய ஒன்றும் இல்லை. ஒருபோதும் இல்லை. எனவே தான், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உண்மையான வாழ்வுக்காக நடைபெறும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய பின்வாங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பை நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமை யிலிருந்து – அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து – விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியும், நிறைவும், ஆரோக்கியமும், சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக எங்கள் சுக போகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை.

இன்பம், அதிக லாபம் மீண்டும் இன்னும் அதிக இலாபம் இதையே குறிக் கோளாகக் கொண்ட ஓர் அமைப்பு மக்களுக்கிடை யே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படை யாகக் கொண்ட ஒரு அமைப்பை நிலை நிறுத்தப்பார்க்கிறது. அது, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற மனிதத் தன்மை அற்ற அமைப்பாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு, ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்களின் மனிதத் தன்மை பறிக்கப் படுகிற பொழுது, சும்மா இருக்க முடியுமா? முடியாது. எனவேதான் நிறைவும், சுதந்திரமும், பண்பும், பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின்வாங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம். எனவே தான், உண்மையான சுதந்திரத்தை விரிவான சுதந்திரத்தை சுதந்திரம் என்ற வார்த்தைக்கு உரிய இலட்சணங்களோடு கூடிய சுதந்திரத்தை மனித குலம் முழுமையும் பெறுவதற்கான எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு தோழர் லெனின் படையின் கட்டுப் பாட்டுக்கு இஷ்டபூர்வமாகப் பணிவதற்கு நாங்கள் ஒரு வினாடியும் தயங்குவதில்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே சுதந்திரம் – கொள்ளையடிக்க ஒரு தரப்பினருக்குச் சுதந்திரம். மற்றவர்களுக்குப் பட்டினியால் மடிய சுதந்திரம். இவை சுதந்திரம் அல்ல. அடிமைத்தனம். இந்த நிலைமைகளைக் கண்ட பிறகும் வாளா இருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு முடியுமா? சில தனி நபர்களுக்கு இதய கீதமாக விளங்கும் அத்தகைய சுதந்திரத்தால் திருப்தி அடைய முடியுமா? முடியாது. ஒரு போதும் முடியாது. எனவே தான் உண்மையான சுதந்திரத்திற்காக, விரிவான சுதந்திரத்திற்காகப் போராடுவதில் தங்களுடைய முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஆக்க வேலையை நேசிக்கி றோம். எனவேதான் மனிதனின் மகத்தான சிருஷ்டி சக்திகளுக்குக் குறுக்கே நிற்பவற்றைத் தகர்த்தெறிய ஒரு விநாடியும் தயங்குவதில்லை.

ஆயிரம், பல்லாயிரக் கணக்கான திறமையுடைய மனிதர்கள் மனித கலாச்சாரத்தைப் பல மடங்கு பெருக்கியிருக்க முடியும். மனித ஸ்தாபனத்தைச் சீர்திருத்தியிருக்க முடியும். மனிதன் தொழில் நுட்ப சதானங்களைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்தியிருக்க முடியும். அத்தகைய திறமைகள் இன்று பாழ்பட்டுக் கிடக்கின்றன. மனித குலத்திற்குத் தேவையுள்ள அனைத்தையும் ஏராளமாக அளிக்கும் திறமையும், வலிமையும் படைத்த ஆயிரம் ஆயிரம் கரங்கள் இன்று வேலையின்றி, சோம்பிக்கிடக்கின்றன. அடிக்கடி நிகழ்கின்ற நெருக்கடியான காலங்களில், அத்தகைய கரங்கள் சோம்பிக் கிடக்கும் படி நிர்பந்ததிக்கப்படுகின்றன. இதனால், மனித சமுதாயத்திற்கு நேரிடுகிற நஷ்டத்தைத் தடுக்காமல் உட்கார்ந்திருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு எப்படி முடியும்? முடியாது. எனவேதான், மனித குல சிருஷ்டி சக்திகள் அனைத்தையும் முழுமையையும் பயன்படுத்தி முழு வளர்ச்சி அடையும்படி செய்யும் ஒரு அமைப்பைப் பெறுவதற்கான போராட்டத்தில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூளுவதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம். சில தனி நபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப் போரில் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு மடிவற்கும் மனித வாழ்வுக்கு அவசியமான செல்வங்களை அழிப்பதற்கும் காரணமாகும் ஒரு குற்றவாளி கூட இல்லாத உலக அமைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். ஒருவாய்ச் சோற்றுக்காக மனிதனை எதிர்த்து மனிதன் சண்டை போட வேண்டிய நிலைமை எங்கே இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்காது. இருக்கவும் முடியாது. எனவே தான் உண்மையான சமாதானத்திற்காக, மனித சமுதாயத்தின் புதிய ஸ்தாபனத்தால் உத்தரவாதம் செய்யப்படும் சமாதானத்திற் காகப் போராடுவதில் தங்கள் முழு உரிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எங்கள் நாட்டைநேசிக்கிறோம். ஏனென்றால், எந்வொரு நாடு அடக்கி ஒடுக்கப்பட்டாலும் மனிதனின் ஆக்க சக்திகள் சுயேட்சையாக வளர்ச்சி அடைய முடியாது; இறுதியான சமாதானத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஒரு நாடு மற்றொரு நாட்டை அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரம் இருக்க முடியாது. நமது மாபெரும் இலட்சியங்களை நாட்டின் ஜீவித அமைப்புக்குள்ளேயே அடைய விரும்புகிறோமே தவிர, அதற்கு அப்பாற்பட்டல்ல. இல்லாவிட்டால் அவை எதார்த்த மாக முடியாது.
உண்மையான புதல்வர்களின் நேசத்தோடு நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். எனவே தான் மனித குல மேன்மைக் காகவும் வளர்ச்சிக்காவும் எங்கள் நாடு வழங்கிய, இன்னும் வழங்குகிற எல்லா காரியங்களுக்காகவும், அதன் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக உள்ள அனைத்திற்காகவும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் நாட்டை இழிவுபடுத்துகிற கொள்ளையிட விரும்புகிற, அதன் இரத்தத்தை உறிஞ்சுகிற, அதை பலவினப்படுத்துகிற அனைத்தையும் நாங்கள் அழித்து விட விரும்புகிறோம். எனவே தான், உலகில் சுதந்திரம் பெற்ற சமத்துவ நாடுகளின் மத்தியில் சம அந்தஸ்த்தோடு சுயேட்சையாக வாழும் பொருட்டு எங்கள் நாட்டின் பரிபூரண விடுதலைக்கான போராட்டத்தில் எங்கள் முழு வலிமையை ஈடுபடுத்தவோ சர்வ பரிதியாகம் செய்யவோ நாங்கள் தயங்குவதில்லை. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வேலைகள் மகத்தானவை.

மகிமை வாய்ந்த உலகப் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திர நிபுணரின் பட்டாளத்தைச் சார்ந்த – தோழர் லெனின் பட்டாளத்தைச் சார்ந்த – நாங்கள் இப்பொறுப்புக்களை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக் கிறோம். அகவே, இந்தப் பட்டாளத்தின் ஒற்றுமையையும், தூய்மை யையும் கம்யூனிஸ்டு கட்சியின் ஒற்றுமையையும், புனிதத் தன்மை யையும் கண்ணின் கருமணி போன்று பாதுகாப்பது, மனித குலத்தில் சிறந்தவர்களையும், நாட்டின் சிறந்த சக்திகளையும் மேலும், மேலும், திரட்டுவது, எங்கள் கூட்டாளிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிப்பது, வரலாற்றின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்கிறது. தங்களின் ஜீவாதார நலன்களுக்காக அது மக்களிடம் வேண்டி நிற்பது என்ன என்பவற்றை இடைவிடாது உணர்த்தி மக்களுடன் ஒன்று கலந்து சலிப்பின்றி பொறுமையோடு அவர்க ளுக்கு வழிகாட்டுவது, உண்மையான உணர்வு, தைரியம், கருத்தில் உறுதி, தியாகம், சஞ்சலம் இன்மை ஆகிய சிறந்த மனிதப் பண்புக்கு இருப்பிடமாக விளங்குவது போன்றவையே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும்.

கம்யூனிஸ்டு தோழர்களே! இது உங்களுக்கும் பொருந்தும்! ஏனென்றால், நீங்கள் லெனின் படையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் எந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருப்பினும், மனித குலத்தின் விடுதலைக்காகப் புரட்சியின் எந்த அரணில் நின்று போராடிக் கொண்டிருப்பினும், தன்னந்தனியாக கடமையைச் செய்து கொண்டிருப்பினும், கொடிய வர்க்கங்களால் இருண்ட சிறைகளில் பூட்டப்பட்டிருப்பினும் ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களையும், எண்ணங்களையும் விமர்சனம் செய்யுங்கள். மாபெரும் லெனின் பட்டாளத்தில் ஒரு போர் வீரனாக இருக்க நான் தகுதி உள்ளவனா? தோழர் ஸ்டாலின் பெயரால் எடுத்துக்கொண்ட சபதத்தை விசுவாசத்துடன் மரியாதை செய்யத் திறமை உள்ளவனா? வரலாறு நம் மீது சுமத்துகிற எதிர்காலக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேனா? இவையே நாம் விமர்சனம் செய்ய வேண்டிய எண்ணமும் செயலும் ஆகும்.

எங்களிடம் அனுதாபம் உள்ள நண்பர்களே! அது உங்களுக்கும் பொருந்தும். போராடுகிற மக்கள் அணியில் நீங்கள் எங்கு நின்றாலும் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் அனுதாபத் தைச் செயலில் காட்டுவது எப்படி, கட்சியோடு நெருங்கிய தொடர்பு கொள்வது எப்படி? என்பனவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திப்பதனால் கட்சியின் அணிவகுப்பு முன்னேறிச் செல்லும் பொழுதும், அதனுடன் சேர்ந்து நீங்களும் முன்னேற முடியும். அதனால், உங்களுக்கு வாகாட்டியாக இருந்து கொடிய போரில் உயிர் நீத்த தியாகிகளுக்குப் பதிலாக நீங்களே கட்சி அணியில் இடம் பெறுவீர்கள்.

சமீப காலம் வரை எங்களைப்பற்றி அறிந்து கொள்ளாதவர் களுக்கும், எங்களுக்கும், கட்சியை சந்தேகத்துடன் பார்த்து வந்தவர் களுக்கும், ஹிட்லரின் நாசகார கும்பலை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நின்றவர்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் மிக உன்னிப்பாக எங்களைக் கவனித்து வருகிறீர்கள். எங்கள் செயல் களைக் கூர்ந்து கவனிக்கிறீர்கள். ஆம், வெகு நுட்பமாக கவனியுங்கள். எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாருங்கள். எங்களு டைய ஒவ்வொரு செயலையும் அலசி அலசி ஆராயுங்கள், விமர்சியுங்கள்.

உங்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டியது ஒன்று மில்லை. மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்க வேண்டியது யாதொன்றும் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு முன்னால் நாட்டு மக்களுக்கு முன்னால் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகக் கடுமையான அக்கினிப் பரிட்சையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

நாங்கள் போரில் புறமுதுகு காட்டினோம் என்றோ, ஏதோ ஒன்றில் தவறினோம் என்றோ, எங்களின் நேர்மையற்ற விரோதி கூட சொல்லத் துணியமாட்டான். கூர்ந்து கவனியுங்கள். இதற்கான காரணத்தை அறிவீர்கள். உலகின் பெரும் பகுதி இன்றைக்கு எங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

மனித குலம் சுதந்திரமாகவும், சமாதானமாகவும், ஆனந்த மாகவும் வாழ்வதற்கு நாங்கள் கடைபிடிக்கும் வழியைத் தவிர, வேறு வழியே இல்லை. எங்களுடன் வராத ஒருவன் தனக்கே விரோதமாகப் போகிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

(எங்கள் நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். என்ற நூலிலிருந்து)

ஜூலியஸ் பூசிக் ஹிட்லரின் ரகசிய போலீசால் 1942 ல் கைது செய்யப்பட்டு, 1943 செப்டம்பர் 8 ல் பெர்லினில் தூக்கிலிடப்பட்டார். உத்தம மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஜூலியஸ் பூசிக். அடக்குமுறையை எதிர்த்து உலக சமாதானத்திற்காகச் சலியாது  பாடுபட்ட வீரர்.

மக்கள் மதிப்பு விலையில் சவுத் விஷன் சில நூல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. அதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) மக்கள் பதிப்பு விலையில் (ரூ. 160/-) நவம்பர் புரட்சி தினத்தன்று வெளியிட உள்ளனர். அதற்காக வெளியிட்ட ஒரு சிறு பிரசுரத்தில் ஜூலியஸ் பூசிக் எழுதிய கம்யூனிச கொடியின் கீழ் என்ற கட்டுரை வெளிவந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சவுத் விஷன்,
132, புதிய எண் 251,
அவ்வை சண்முகம் சாலை, கோபால புரம், சென்னை – 600 086.