கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது.
