கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?

 • கே.என்.பணிக்கர்

இந்திய சமூகத்தின் உண்மைச் சூழல் வேகமாக மாறிவருகிறது. கண்டிப்பாக நல்லதை நோக்கி அல்ல. தேசிய விடுதலை இயக்கத்தின் ஊடாக எழுந்த சமூக மாற்றத்தை நடத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது.

அந்தோணி எனக்ரி மற்றும் மைக்கேல் ஹார்ட் என்பவர்கள் உலகமயமாக்கல் குறித்து எழுதிய புத்தகம் பரவலாக விவாத்தை கிளப்பி உள்ளது. அவர்கள் கூறுவது என்ன? ஏகாதி பத்தியம் இறந்துவிட்டது. ஆனால், நம் கண்கள் முன்பு மற்றொரு சாம்ராஜ்யம் உருவாகி வரு கிறது. இந்த சாம்ராஜ்யத்தின் பெயர் ‘உலகமய மாக்கல்’. பன்னாட்டு மூலதனத்திற்கு இந்த உல கையே அடிமைப்படுத்துவதுதான் இதன் நோக் கம். இந்த புதிய சாம்ராஜ்யத்தின் ‘நன்னெறி களும்’, ‘வளர்ச்சி’ என்பதற்கு இவர்கள் தயாரித் திருக்கும் கோட்பாடுகளும்தான் இன்று இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கும், பொதுவான சிந்தனைத் தளத்தை உருவாக்கி வருகின்றன.

இந்த புதிய சாம்ராஜ்யம் சொல்ல விழையும் முக்கிய செய்தி என்ன?

சந்தை! எங்கும் சந்தை, எதிலும் சந்தை! என்பதே. இந்தச் செய்தி எப்படி பரப்பப்படுகிறது? இந்த கலாச்சாரத்தின் அடிப் படையாகக் கொண்டு பல வழிமுறைகள் மூல மாக இந்த கலாச்சாரத்தின் உள்நோக்கம் ஒரு நவீன (உண்மையில், முதலாளித்துவம் என்று தான் கூறவேண்டும்.) சுவையையும் (இச்சை என்றும் கொள்ளலாம்) எதையும் விமர்சனம் செய்யாத மனப்பாங்கையும் செல்வச் செழிப்பை யும் கொண்டு வருவேன் என்று சூளுரைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றத்திற்கான தடைகளையும் பண்பாட்டு பிற்போக்குத்தனத் தையும் தான் ஊக்குவிக்கிறது.

வகுப்புவாத சூழல்
இத்தகைய போக்கின் முக்கியமான வெளிப் பாடுதான் வகுப்புவாதம் ஆகும். உலகமயமாக்கல் என்ற புதிய சாம்ராஜ்யம் உருவாக்கிய ‘கலாச்சார’ நெருக்கடியினால் இது மேலும் ஆழ்ந்தூன்றி தழைக்கிறது. ஆக உலகமயமாக்கலும், வகுப்பு வாதமும் ஒரே நோக்கங்களைப் பகிர்ந்து ஒன்று மற்றொன்றை ஊட்டி வளர்க்கும் போக்குகள் என்பது தெரிகிறது. இந்த புதிய சாம்ராஜ்யத்தின் கட்டளைகளை எந்தவித விமர்சனமும் இன்றி இந்திய ஆளும் வர்க்கம் ஏற்கும் என்பதை சமீ பத்திய ஆஃப்கன் போரின் மூலம் எழுந்த விளைவு கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. இந்தப் பின்னணியில் சமூகத்தின் மீதான எந்த செயல்பாடும், குறுக்கீடும் பல முனைகளை கொண்டதாகவே இருக்க வேண்டும். அது அரசியல், பண்பாட்டு மற்றும் கொள்கை ரீதி யான பலமுனைச் செயல்பாடாக இருக்க வேண் டும். இன்று உருவாகி உள்ள பொது சிந்தனைத் தளத்தின் தன்மையை மாற்றுவது நம் செயல் பாட்டின் துவக்ககால நோக்கமாக இருக்க வேண் டும். கலாச்சார நடவடிக்கைகள் இத்தகைய செயல் பாடுகளின் மையமான இடத்தைப் பிடிக்க வேண்டும்.

கலாச்சார நடவடிக்கை என்பது…
பொதுவாகவே ‘கலாச்சாரம்’ என்றாலேயே பல வகையான புரிதல்கள் அளவுக்கு மீறி இருப்ப தால் முதலில் கலாச்சார நடவடிக்கை என்றால் என்ன என்பது குறித்து சில விஷயங்களை தெளிவு படுத்துவது அவசியம். மனிதர் சம்பந்தப்பட்ட அனைத்து ஈடுபாடுகளிலும் உள்ளடங்கி இருக் கும் கலாச்சாரம், சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும் அதிகாரத்தை எதிர்க்கும் தளமாக வும் விளங்குகிறது. அதே சமயத்தில் மேலாதிக் கத்தை செலுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்ப தற்குமான கருவியாகவும் அது உள்ளது. கலா சாரம் என்பது சமூகத்தில் மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் இழைந்தோடுவது, ரேமண்ட் வில்லியம்ஸ் கூறுவது போல், கலா சாரம் என்பது தன்னாலேயே நின்று விளைவு களை உருவாக்க முடியாத ஒரு இரண்டாம் பட்ச வெளிப்பாடு இல்லை. மாறாக, சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பரவிநிற்பது. எனவே, கலாச்சார நடவடிக்கைக்கான வாய்ப்பு களும் எல்லைகளும் ஒட்டுமொத்தமான சமூக அனுபவங்கள் அனைத் தையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக உணர்வு நிலைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் கலாச்சார நடவடிக்கை, கலாச்சார நடவடிக்கை என்பது பல கலை வடிவங்களைக் கொண்டு நடத் தப்படும் கலை விழாக்கள் அல்லது இதனால், கலை விழாக்கள் கருத்துப் பரிமாற்றக் கருவிகளாக பயன்படுத்தலாம் என்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக, அன்றாட வாழ்வில் உள்ள டங்கிய ‘கலாச்சாரத்தை’ தட்டி எழுப்பக்கூடிய தொடர்ந்து செயலாற்றும் சமூக நடவடிக்கை யாகவே நாம் கலாச்சார நடவடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் சமூகத்தில் முற்போக்கு வாதத்தை தீவிரப்படுத்தப் பயன்படும் குறுக்கீடு களின் ஒரு வகைதான் கலாச்சார நடவடிக்கை என்பது.
வாழ்க்கையை மேலாதிக்கத்திலிருந்து விடு தலை பெறச் செய்ய தேவைப்படும் சாத்தியக் கூறு களை உருவாக்க, சமூகத்தில் நிலவும், ஏற்றத்தாழ் வின்றி இருப்பதுபோல் காணுகின்ற, அமைதி யான நடுநிலையை (நளூரடைiசெரைஅ) குலைப்பது அவசியம் என்று அந்தோணியோ கிராம்ஷி கூறு வார். இதை செயலாற்றுவதற்கு மனித முயற்சியை முன்னிறுத்தும் நோக்கம்தான் கலாச்சார நட வடிக்கையின் அடிப்படை நோக்கமும் கூட.

தடையாக உள்ள மூன்று காரணிகள்
இத்தகைய நோக்கம், ஏதோ இந்திய சமூக இயக்கங்களின் அனுபவத்திற்கு அந்நியமான நோக்கம் அல்ல. அப்பாற்பட்டதும் அல்ல. பல சமூக இயக்கங்கள் அவர்கள் விரும்பும் மக்கள் பகுதியினரை சென்றடைய பலவிதமான சலா சார வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்கள் மக்கள் வாழ்க்கையின் வாடிக்கையான செயல்களிலும் வழக்கங்களிலும் குறுக்கிடுவதன் மூலம் அவர்களின் கலாச்சார உணர்வுகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயற் சித்து வருகின்றன. மறுபக்கம், சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட், மானவீயம் (முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலைவிழா முயற்சிகள் போன்ற) இயக்கங்கள் இன்று நிலவும் சமூக உணர்வுகளை எதிர்கொண்டு சவால் விட கலை வடிவங்களின் ஆற்றலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன. தற்போது நிலவும் சமூக நிலையை, சக்தியோடு கேள்வி கேட்க இந்த இயக் கங்களின் சாதகமான பங்களிப்பை கணக்கில் கொள்ளும். அதே சமயத்தில் ‘கலாச்சார நட வடிக்கை’ என்பதன் அர்த்தத்தை வடிவ ரீதியாக வும் சரி, உள்ளடக்க ரீதியாகவும் சரி; புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த புதிய அர்த் தத்தின்படி, தொடர்ந்த, தீவிரமான குறுக்கீடுகளின் மூலம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்ற, சமூக மாற்றத்தை அடைய, கலாச்சாரம் மையமான கருவியாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய சூழலில், சமூக மற்றும் சித்தாந்த நிலைகள் சார்ந்த பல காரணிகள் இத் தகைய கலாச்சார நடவடிக்கை செயலாற்றப்படு வதற்கு தடைகளாக உள்ளன. மூன்று காரணி களை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

 1. தனி நபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக் கொண்டிருக்கும் உறவு
 2. சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலா சாரத்தின் பெருக்கம்
 3. மதம் சார்ந்த உணர்வுகள் வகுப்பு வாதத் தின் வளர்ச்சி
  இவை அனைத்தும் உண்மை சமூகச் சூழலுக்கு புறம்பான ஒரு குறுகிய கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றன.

தனி நபர்கள் அந்நியமாகின்றனர்
சமூதாயப் பிரச்சனைகள் தனிநபரின் அக் கறைக்கு அந்நியமாகிப்போகும் போக்கு வளர்ந்து வருகிறது. முதலாளித்துவம் போற்றும் போட்டி மனப்பான்மையினாலோ என்னவோ, தனிநபரின் மனதில் சமூதாயத்திற்கு இடமில்லை என்றாகி விட்டது. பொது வாழ்க்கை தனி நலனும் தீவிர அக்கறை பெறும் விஷயங்களாக மாறிவிட் டன. தனி நலனுக்கு உண்டாகியுள்ள நெருக்கடிக் கான விடைகள் தேடுவதிலேயே அதிகமான ஈடுபாடு வளர, சமூக நலனின் மேல் தனிநபருக்கு அக்கறை அறவே இல்லாமல் போய் விட்டது. தனிநலன் என்பதையே சமூகப் பொதுநலனிடம் சரணடையச் செய்த மறுமலர்ச்சி மற்றும் தேசிய விடுதலை இயக்க கால வரலாற்றிலிருந்த போக் கிற்கு எதிராக இந்தப் போக்கு அமைகிறது. சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டு, கலாச்சார நட வடிக்கைகளை ஊக்குவித்து செயலாற்றக்கூடிய நபர்களின் எண்ணிக்கை சொற்பமாகி வருகிறது.

நுகர்வியம்
கடந்த சில வருடங்களாக மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் ஏற்படுவரும் மாற்றங்களின் காரணமாக தனிநபர் நெருக்கடி மேலும் தீவிர மாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தன்மை மாறி உள்ளது. உலகமயமாக்கல், இது வரை காணாத அளவில், வர்த்தகப் பொருட்கள் மீதான மோகத்தையும், அவற்றை அடையக் கூடிய சாத்தியத்தை பெருக்கி உள்ளது. பன் னாட்டு மூலதனம் ஒரு புதிய தன்மை கொண்ட சந்தையை உருவாக்கியதோடு அதனுடன் சேர்ந்த ஒரு புதிய கலாச்சாரத்தையும் உருவாக்கி உள்ளது. தனிநபரும் இந்த கலாச்சாரத்தை தன் இஷ்டப் பட்டு உட்கொள்ளவில்லை. மாறாக இந்த கலாச்சாரம் தனிநபர் மேல் வலிமையாகத் திணிக்க ப்படுகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதுபோல், சந்தையின் சக்தி கட்டுக்கடங்காமல் வளர்ந்து, நுகர்வுப் பொருள் மோகம்தான் மக்களின் கலாச்சாரம், மக்களின் சித்தாந்தம் என்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. இது தன்னிலைக்கு மீறிய பொருளாசைகளை உருவாக்கியுள்ளது. உண்மை நிலைமைக்கும் உருவாக்கப்பட்ட ஆசைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில் எழும் மனக் கலக்கத்திலும் ஏக்கத்திலும் தவிப்பிலும்தான் மத உணர்வுகளும் வகுப்பு வாதமும் கொழுந்துவிட்டு எரிகின்றன. பல தனிநலன் குறித்த பிரச்சனை களுக்கு ஆன்மீகத்தில் விடை காண முயலும் போக்கு வளர்ந்திருப்பதும் மேற்குறிப்பிட்ட முரண்பாட்டின் வெளிப்பாடே.

பண்பாட்டில் இயங்குவது…
மென்மேலும் அந்நியப்பட்டுப் போகும் தனி நபரை சமூக வட்டத்திற்குள் கொண்டு வருவதே கலாச்சார நடவடிக்கையின் செயல் நோக்கம். அதை இரண்டு விதமான செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம். ஒன்று, சிந்தனைப் பூர்வமாக, மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்களினு டாக. சமூக அரசியல் இயக்கங்களுக்காக கலை வடிவங்கனை பயன்படுத்தும் பண்பாடு காலனிய எதிர்ப்பு இயக்கம் முதல் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி. இன்றைய இந்தியாவிலும் பல இயக்கங்கள் இதே முயற் சியை பல புதிய பரிமாணங்களுடன் மேற்கொள் ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வகுப்பு வாதத்திற்கு எதிரான இயக்கத்தில் இசை, ஓவியம், வீதி நாடகங்கள் ஆகிய வடிவங் களை தனது கருவிகளாக பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட் (ளுஹழஆஹளுகூ) என்ற இயக்கம் ஒருங்கிணைக் கப்படாமல் இருந்தாலும், பல்வேறு இயக்கங் களின் சிறந்த முயற்சிகளினால் இந்த வடிவங்களைப் பயன்படுத்தி சமூக உணர்வில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்த முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் குறைபாடு என்ன? இவை அங்கொன்றம் இங் கொன்றுமாக அவ்வப்போது நடக்கின்றன. ஆகையால், மக்கள் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் பணியை இவை செய்ய முடியாது.
இதற்கு மாறாக, கலாச்சார நடவடிக்கைகளை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாற்றுவதற் கும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் சாத்தியம். நூல் விற்பது, கதர், ஆசிரம வாழ்க்கை ஆகியவற்றை வெகுஜன மக் களைத் திரட்டும் பணியில் வலுவானக் குறியீடு களாக காந்தியடிகள் வியக்கத்தகுந்த வகையில் பயன்படுத்தி பல முன்னுதாரணங்களைத் தந் துள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் கலாச்சார நடவடிக்கையை மேற்கொள்வதன் முக்கிய அம்சம் கலாச்சார சமூகங்களை உருவாக்குவது. இரு வகையான சமூகங்களை உருவாக்குவது சாத்தியம். 1கற்பனை சமூகங்கள் , 2.உள்ளூர் சமூகங்கள் என்பன.

கற்பனை சமூகங்கள் சில பொதுவான நெறி களையும் ஆர்வத்தையும் உணர்ந்து உள்வாங்கி இருப்பவை. இதன் அங்கத்தினர், அவர்களுக்கு விருப்பமான நெறிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் வித்திட்ட ஒரே தோற்றுவாய் அல்லது மூலக் கருத்தாடலோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பர்.

கற்பனை சமூகங்கள்
மத்திய பிரதேசத்தில் ‘ஏகலைவன்’ என்ற அமைப்பின் கல்வி குறித்த குறுக்கீடுகள், ஈடுபாடுகள் கற்பனை சமூகத்தை  விளக்குவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வியில் இவர்கள் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளின் மூலமாக, சில பொதுவான கருத்துகளை உரு வாக்கி உள்ளனர். ஆனால் இதன் அங்கத்தினர், முறையான கருத்துப் பரிமாற்றத்தினை அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு சோதனையில் ஈடுபடுவதோ, இல்லாமல் இருக்கலாம். ஆனால் ‘ஏகலைவன்’ ஒரு குறிப்பிட்டத் துறையில் தனது ஈடுபாட்டின் மூலமாக, இந்த ஈடுபாடு உரு வாக்கிய தாக்கத்தின் மூலமாக, கண்ணுக்கு புலப் படாமல் இருப்பினும் பலர், இது நமது இயக்கம், நான் ஆமோதிக்கும் கருத்தாடலைக் கொண்டது என்று உணர்ந்து செயல்படக் கூடிய கற்பனை சமூகத்தை உருவாக்கி உள்ளது.

உள்ளூர் போராட்டங்கள்
உள்ளூர் சமூகங்கள் செயல்படும் நிலை முழு வதும் மாறுபட்டது. அவர்கள் உள்ளூர் பிரச் சனைகளை மையமாக வைத்து செயல்படுவதி னால் இவற்றை நாம் ‘உள்ளூர் சமூகங்கள்’ என்று கூறவில்லை. மாறாக, இவை செயல்படும் விதத்தி லும் தன்மையிலும் இருக்கவேண்டிய மாற்றத்தை வைத்தே உள்ளூர் சமூகங்கள் எனக் கொள்கி றோம். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அனைவருக்கும் சம்பந்தமான ஒரு பிரச் சனைக்கு,  இவர்கள் செயலாக்கத்தை (போராட் டங்கள், ஒன்று திரட்டுதல்…) மனதில் கொண்டு, உள்ளூர் வடிவம் கொடுக்கின்றனர். ஒரு பொது வானப் பிரச்சனையை உள்ளூர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாற்றி  செயல்படுகின்றனர் என்றும் கூறலாம். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் எழும் சுற்றுப்புறச் சூழல் குறித்த பிரச்சனைகள் இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம்.

சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்கெனவே மோசமான நிலைகளை ஊட்டிவிட்ட நிலையில், உலகமாயக்கலினால், இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன. சமூக அக்கறையை வளர்ப்பதற்கும், மாற்று வழிமுறைகளைத் தயாரிக்கவும், சுற்றுப் புறச் சூழல் பிரச்சனைகளை மையமாக வைத்து ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கலாம். தமக்கு சம்பந்தப்படாத, ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு  பிரச்சனை என்பதைவிட இது நம் உள்ளூர் பிரச்சனை என்றக் கண்ணோட்டம் மக்களிடம் அதிக ஆர்வத்தை தூண்டக்கூடும். அதேசமயம், சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச் சனைகள், நாட்டில் உள்ள சந்து மூலை முடுக்கு களுக்கும் பொருந்தும் என்பதால் உள்ளூர் பிரச் சனைகளுக்கு ஒரு தேசியத் தன்மையும் உண்டு. ஆனால் ‘உள்ளூர் சமூகம்’ என்பது ஏதோ ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க சொல்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம், ஸ்தாபனம் அல்ல ஆனால் ஒரு கூட்டுத்தன்மை. இந்தக் கூட்டுத் தன்மையால் பங்கேற்கும் தகுதி உறுப் பினர் சந்தா கொடுத்து சேர்வதால் கிடையாது. ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் உள்ளூர் பிரச்சனைகளில் தலையிடுவதால் மட்டுமே ஒருவரால் இந்தக் கூட்டுத்தன்மையின் பங்கேற் பாளராக ஆகமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் பொருத்தமான பலவிதமான, எண்ணிலடங் காதப் பிரச்சனைகளை நம்மால் கண்டறிய முடியயும். ‘உள்ளூர் சமூகங்கள்’ தனிப்பட்டு செயல்படும் கூட்டமைப்புகளும் இல்லை. இவை, இன்றைய கலாச்சார, சமூக, அரசியல் சூழலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியவை.

மக்களை ஈர்க்க வேண்டும்
சமூக உணர்வை உருவாக்குவதற்கு தொடர்ச்சி யான செயல்பாடுகள் கட்டாயம். இதற்கான வாய்ப்பு உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதி னால் பெருகும் என்பதுதான் இச்சமூகங்களின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகளும், அவற்றின் பல அமைப்புகளும் கடைபிடிக்கும் பிரச்சார போராட்ட முறைகள் தன்னிச்சையான முறை யிலோ அல்லது இங்கொன்றும் அங்கொன்று மாக, அவ்வப்போது நடப்பதால் ஒருமுகமானத் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. மேலும், இம்முறைகள் பெரும்பாலும் தங்களது உறுப் பினர்களை மட்டுமே எல்லையாகக் கொண்டு அமைகின்றன. பல சமயங்களில் இவை பொது வான அனுதாபத்தைக்கூட பெறத் தவறிவிடு கின்றன. ஜனநாயகப் போராட்டங்களின் கட் டாயமானப் பங்காக இந்த முறைகள் இருந் தாலும், தற்போதுள்ள சமூக சூழலில் இவை எந்த அளவிற்கு தேவைப்படும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன என்பது குறித்து தீவிரமான மறுபரி சீலனை தேவை. இதற்கு மாறாக, ‘உள்ளூர் சமூ கங்களின்’ செயல்பாடுகளும், ஈடுபாடுகளும் அமைதியான முறையில்  குறிப்பிட்ட  பிரச்சனைகளின் அடிப்படையில், கூட்டுப்பொறுப்பை மையமாகக் கொண்டு ஆழமான உறவுகளை மக்களிடையே உரு வாக்கும் தளமாக மாறும் தன்மை படைத்தவை.

கலாச்சார நெருக்கடி
மக்கள் சமூகத்தில் முற்போக்கு சிந்தனையைத் தீவிரப்படுத்துவதுதான் கலாச்சார நடவடிக்கை யின் மையநோக்கம். இதன் முதற்படி உலகமய மாக்கல் சார்ந்த கருத்தாடல்களின் பிடியிலிருந்து மக்கள் சமூகத்தை மீட்பதும், வகுப்புவாதம் வளரக் காரணமாய் உள்ள காரணிகளை களைந் தெறிவதும்தான். உலகமயமாக்கலுக்கும் சரி, வகுப்புவாதத்திற்கும் சரி. இவை இரண்டு சாதக மான கருத்துகளுக்கு இன்றைய இந்திய சமூகத் தில் பஞ்சமில்லை. இத்தகைய கருத்துகள் சக்தி மிக்கவை. பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடி யவை.

உலகரீதியான சக்திகளின் ஆதரவிலும் ஊக் கத்திலும் உலகமயமாக்கலுக்கு சாதகமான கருத் துகள் உருவாக்கப்படுகின்றன. ‘சங்கப் பரிவாரத் தின்’ சமூக – கலாச்சார அமைப்புகளின் மூலம் வகுப்புவாதத்திற்கு ஆதரவான அரசமைப்பு நேரடியாக உடந்தை, உலகமயமாக்கல் மூலம் இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிப்புக் குள்ளாகிய போதும், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை பிரதிபலிக்காத சந்தை இன்று செல்வம் கொழித்து கிடக்கிறது என்ற செயற்கையான பிரம்மையை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆப்பிள் பழங்களுக்கு ஈடாக மோட்டார் வாகனங்கள் பெருத்துக்கிடப்பது என்ற உதாரணம் சாதாரண மனிதனின் தேவையை இந்த சந்தை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை நிரூபிக்கின்றது. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆதரவினாலும், அமோகமான வரவேற்பினாலும், உலகமய சக்திகள் இன்று, அடிமட்டங்களில் கூட வர்த் தகப் பொருட்கள் மீதான மோகத்தை கிண்டி விடும் புதிய கலாச்சார சுவையை ஏற்படுத்தி உள்ளன.
பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக் கான அடிப்படைத் தேவைகளே பகற்கனவாக உள்ள இந்தியா போன்ற பரந்த நாட்டில் வர்த் தகப் பொருள்மீதான மோகம் சார்ந்த கலாச்சாரம் அடிப்படையில் முரண்பாடான ஒன்று. ஏனெ னில் இது பலரிடையே புதிய எதிர்பார்ப்பு களையும், சலுகைகளையும், சாத்தியங்களையும் தூண்டிவிடுகிறது. இவர்கள், இதுவெல்லாம் நம் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்று உணரும் போது, தங்களை ஏற்கனவே கவ்வியிருக்கும் அலாதியான வாழ்க்கை மீது மேலும் வெறுப் படைகின்றனர்.

இந்தப் பொருள் மோகம் நடுத்தர வர்க்கத்தி னர் இடையே வேறுவிதமானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மோகத்தினால் அவர்கள் தழுவி ஏற்றுக் கொள்ளும் பொருள் சார்ந்த புதிய நவீனத்துவம் அவர்களிடையே ஒரு கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடன் வாங்கி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையில் வட்டத்திற்குள்ளாக அவர்களால் இந்த நெருக் கடிக்கான விடைகளை காண முடியாமல் போகி றது. இதன்மூலம், தனது வேர்களை நோக்கியத் தேடலில் ஈடுபடும் முயற்சி கட்டாயப்படுத்தப் படுகிறது. இவர்கள், தமது வேர்களை, மதரீதியாக வரையறுக்கப்பட்ட கடந்தகால கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் கண்டெடுக்க விரும்புகின்றனர். இந்தக் கலாச்சார நெருக்கடி அரசியல் படுத்தப் படும்போது தான், நடுத்தர வர்க்கம் வகுப்பு வாதத்திற்கு தமது விமர்சனமற்ற ஆதரவை முழுமையாக அளிக்கிறது. இதன் பெயர்தான் கலாச்சார தேசியவாதம் என்று கூறுப்படுகிறது. மேற் கத்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்ட ஒரு கலாச்சார அடையாளத்தை மேன்மைப்படுத்தி முன்னிறுத்துவதுதான் கலாச்சார தேசிய வாதத் தின் நோக்கம். எனவே, உலகமயமாக்கலுக்கும் கலாச்சார தேசியவாதத்துக்கும் இடையே ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த முரண் பாட்டை மறைக்கத்தான் ஆளும் வர்க்கங்கள் அதன் சிந்தனையாளர்களும் ‘சுதேசி’ என்ற முகமூடியை கண்டுபிடித்துள்ளனர். உலகமயமாக் கலுக்கு ஒரு மனிதாபிமான பரிணாமத்தை அளிக்க முற்படுவதுதான் ‘சுதேசி’ என்ற கோஷம். இருப்பினும், சந்தையின் ஆதிக்கம் மேலும் மேலும் ஊடுருவ, இந்த முரண்பாடு தீவிரமாகி றதே ஒழிய மறையவில்லை.
அதேசமயம் எதிர் காலாசார நடவடிக்கை களை முடுக்கிவிடவும் அதற்கு தேவையான தளத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், இந்த முரண் பாடுதான் உள்ளூர் சமூகங்களை தங்களை ஆயத் தப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.

இடதுசாரிகளின் முயற்சி
இதுவரையில் உலகமயமாக்கலிற்கும், வகுப்பு வாதத்திற்குமான எதிர்ப்பு, அரசியல் சார்ந்த எதிர்ப்பை தாண்டி செல்லவில்லை. இடதுசாரி சக்திகளின் முன்முயற்சியினால், வேலை நிறுத்தம், தர்ணா, ஆர்ப்பாட்டம் என பல வழிமுறை களினால் இந்த எதிர்ப்பு நன்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதற்கான சமூக எதிர்ப்பு தகுந்த முறையில் வளரவில்லை. பன்னாட்டுக் கம் பெனிகளின் சந்தையை சார்ந்த சில கடைகளைத் தாக்குவது (கர்நாடகாவில்) போன்ற சில நேரடி யான எதிர்முறைகள் நடற்துள்ளன. ஆனால் அரசின் குறுக்கீட்டின் காரணமாக, இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பல சமயங்களில் இவற்றால் செயல்படுத்த முடிய வில்லை. பல சமயங்களில் இவற்றால் பொதுமக் களின் அனுதாபத்தை சம்பாதிக்க முடியாமல் போய் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளன. பன்னாட்டு கம்பெனிகளின் பொருட் களை புறக்கணிப்பது என்ற ஒரு மாற்றையும் பலர் கூறுகிறார்கள். ஆனால், இக்கம்பெனிகள் நாட்டுச் சந்தையில் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஊடுருவலையும்  இதற்கு அரசின் மறைமுகமாக ஆதரவையும் கணக்கில் கொண்டால் இந்த மாற்று ஒரு பகற்கனவாகவே தெரிகிறது.

புரிந்துகொள்ள வேண்டிய சிக்கல்
வகுப்புவாதத்திற்கான எதிர்ப்பும் இதே சிக்கலில்தான் மாட்டிக் கொண்டுள்ளது. இருப் பினும், பல்வேறு கொள்கை ரீதியான வேலை களின் மூலம் வகுப்புவாத எதிர்ப்புணர்வை கட் டமைக்க குறிப்பிடத்தக்க பல முயற்சிகள் நடந் துள்ளன. இன்று இந்துமத வகுப்புவாதம் ஆட் சியைப் பிடித்துள்ளது. இது ஏதோ அவர்களின் அரசியல் பணியினால் மட்டுமல்ல; சமூக, கலாச்சாரத் தளங்களில் அவர்கள் செய்த தளராத தொடர்ச்சியான செயல்பாட்டினால்தான். இதுவேதான், இன்று நாட்டில் மேலோங்கி இருப்பதுபோல் காணப்படும் மதம் சார்ந்த உணர்வுகள் வளர பங்களித்துள்ளது. அமைப்பு ரீதியாக திரட்டப்படும் மத உணர்வுகளும், ஆன்மீகமும் கொடுக்கும் தளத்தில்தான் வகுப்பு வாதம் மக்கள் சமுதாயத்தில் ஊடுருவிப் பரவு கிறது. மதம் சார்ந்த உணர்வுகளையும், ஆன்மீக உணர்வுகளையும் அமைப்பு ரீதியாகவும் பிரம் மிக்கத்தக்க வகையிலும் பொதுப்படையாக வெளிப்படுத்தும் போக்கு கடந்த சில வருடங் களில் வளர்ந்துள்ளது. ஆகையால் ஆன்மீக உணர்வுகளுக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள வேறுபாடு சமூகத்தின் பார்வையில் வேகமாக மறைந்து வருகிறது.
மக்கள் சமூகத்தின் பொதுப்படையான சிந்தனையோட்டத்தை மாற்றுவதும், அதன்மீது தீவிரமானத் தாக்கத்தை உருவாக்குவதும் தான் கலாச்சார நடவடிக்கையின் பயன். இதை மறுப்பு மற்றும் எதிர்ப்புகள் மூலமாக மட்டும் அடைந்து விட முடியாது. மறுப்பும் எதிர்ப்பும் கட்டாயத் தேவைகள். ஆனால் போதுமானவை அல்ல.

முடிவாக…
உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் உரு வாக்கி உள்ள பொதுச் சிந்தனையை குலைக்க, பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் ஒரு எதிர்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. இது எப்படி சாத்தியம்? நமக்கே உரிய கலாச்சார பாரம்பரிய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்து தொடர்ந்து ஈடுபடும் அதேவேளையில் பிற் போக்குவாதத்திற்கு ஆளாகிப் போகாமல் செயல்படுவதுதான் ஒரே வழி.
அந்நியோன்னியமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில் தொடர்ச்சியான தலை யிடக்கூடிய ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கு வதுதான் எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமானத் துவக்கப்பணி.

இந்த எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும். இவை தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியிலும் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடியது என்பதால், உள்ளூர் சமூகங்கள் போற்றும் கலாச்சாரம் பல்வேறு பண்பாட்டு ரீதியான சமூகங்கள் பல்வேறு வகைகளில், பல பகுதிகளில் வெளிப்படுத்திய கலாச்சாரங்களை ஆதாரமாகக் கொண்டது. இத்தகைய அடிமட்ட, உள்ளூர் சார்ந்த பரிமாணங்களை (இவை உள்ளூர் சம்பந்தப்பட்டவை மட்டுமே என்று கருதாமல்) முடிந்த அளவிற்கு வேறுபாடு களோடு வெளிப்படுத்துவதுதான் இன்று உலக மயமாக்கலும், வகுப்புவாதமும் வேறுவேறு பாணியில் அடைய முயலும் – ஒரேவிதமான பண்பாட்டை – ஒரே தேசியத்தை -முறியடிக்கும். இந்த கண்ணோட்டத்திலான, கலாச்சார நடவடிக்கை என்பது கலாச்சாரத்தையும் தாண்டி சமூகத்தையும் அரசியலையும் தன்னுள் ஒரு அம்சமாகப் புரிந்து செயல்படக்கூடியது. அப்படியெனில், கலாச்சாரமும் அரசியல்தானே!

பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்

 • எம்.பாலாஜி

உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைபாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம்.

பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.

மேலும், இதைப் புரிந்துகொள்வதற்கு பண்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது? என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பண்பாடு என்பது என்ன?:

பண்பாடு என்பது இங்கே கலை, இலக்கியம் மட்டுமே அல்ல. அது மக்கள் சமூகத்தின் வாழ்வு முறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள், உணவுப் பழக்கங்கள், நாம் வாழும் வீடு என எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.

வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றிய நமது கருத்துக்கள் எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள். கலையும், இலக்கியமும் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றிற்கு உருவகம் கொடுக்கின்றன. நல்ல கலையும் இலக்கியமும் இந்த அர்த்தங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும் பண்பாடு நம்முடைய குடும்பங்களிலும், சமூகக் குழுக்களிலும், கல்வி நிலையங்களிலும் தொடர்பு ஊடகங்களின் மூலமாகவும் – விமர்சனமற்ற முறையில், உணர்வுப்பூர்வமில்லாமல் நம்மை வந்தடைகிறது.

பண்பாடும், மேலாதிக்கமும்:

இதனை மேலும் புரிந்துகொள்வதற்கு பண்பாட்டிற்கும், அரசின் கொள்கைக்கும், மேலாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிராம்சி அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகிறார்: “ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விதங்களில் செலுத்துகின்றன. ஒன்று – ஆளும் வர்க்கங்களின் அரசு மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை, ராணுவம், சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் துணையாகின்றன.

இரண்டாவதாக, ஆளும்வர்க்கங்களின் அதிகாரம், ஆளப்படுபவரின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படைக் கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான இடைவினையைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் உணர முடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புக்கள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் வேர்விட்டுள்ளன.

ஒரு வகையான நிறுவனங்கள் அதன் ஏகபோக பலாத்காரத்தின் மூலமாக காவல்துறை, சட்டம், வரி, நிதி, வர்த்தகம், தொழிற்சாலை சம்பந்தமான நிர்வாகத் துறைகளை உள்ளடக்குகின்றன. இவை அனைத்தும் இணைந்து அரசு என்றாகிறது. மற்ற அனைத்தையும் கிராம்சி ‘சிவில் சமூகம்’ என்று அழைக்கிறார். இந்த சிவில் சமூகத்தின் மூலமே மேலாதிக்கம் நிறுவப்படுகிறது.

அரசும் – சிவில் சமூகமும்:

அரசிற்கும் சிவில் சமூகத்திற்குமான உறவை நாம் எப்படி புரிந்துகொள்வது? செவ்வியல் அரசியல் (classical politics) அதிகாரம் அரசிடம் குவிந்துகிடக்கிறது. எனவே, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதே மைய நோக்கம் என்பதாகிறது. அதாவது 1917 ஆம் ஆண்டில் குளிர்கால அரண்மனையைத் தாக்கி கைப்பற்றுவதும், தொழிலாளி வர்க்கம் இந்த அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பே சோசலிசத்தைக் கட்டமுடியும் என்பதாகிறது.

கிராம்சி, அதிகாரம் சிவில் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது; கூடவே அது அரசின் கையிலும் உள்ளதென்கிறார். அரசைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பலமான கோட்டைகளாக, மதில் சுவர்களாக, சிவில் சமூகம் உள்ளது. இந்தக் கோட்டைகளைத் தகர்க்காமல் குளிர் கால அரண்மனையை அணுக முடியாது.

குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றிய பின்பும் இந்தக் கோட்டைகளின் உள்ளிருப்புப் reserve army விழுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு, இந்த சிவில் சமூகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. அரசின் இந்த அரணைத் துளைத்து உள்ளே சென்றாலும் சிவில் சமூகத்தின் reserves அவற்றை அடைத்து சரிசெய்துவிடும்.

தயாரிக்கப்படும் ஒப்புதல்:

நோம் சாம்ஸ்கி, வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக பத்திரிக்கைகளும் தொலைக்காட்சியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக எவ்வாறு இந்த ஒப்புதலைத் தயாரிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகிறார்.

இந்த தத்துவார்த்த பிரச்சனைகளின் அடிப்படையில் அதிகார உறவுகளைப் புரிந்துகொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இதுகாறும் நாம் உற்பத்தி உறவுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே மையம் கொண்டிருந்தோம்.

உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், அடிப்படையில் அன்னிய மூலதனத்திற்குள்ள சில தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டவை.

தொழில் முதலாளிகளின் மிக உச்ச லாபத்திற்கு உரிமை அளிப்பதே இதன் அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட சுதந்திரமான சந்தையில் அதிக ஆதாரங்களை உடையவர்கள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே பெரும் ஆதாயங்களை அடைவார்கள். ஏழைகள் பாடோ, சொல்ல வேண்டியதில்லை.

காலனியாதிக்கமும், உலகமயமாக்கலும்:

இதுதானே காலனியாதிக்கத்தின் அர்த்தமும், பிரட்டனின் காலனியாக நாம் இருந்தபோது நமது சந்தைகள் அவர்களுக்காக திறந்துவிடப்பட்டது. அவர்களுக்குத் தேவையான எந்த கச்சாப்பொருளையும் அவர்களே எடுத்துச் செல்லலாம். அவர்கள் நிர்ணயித்த விலையில் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்த கம்பெனிகளைத் திறந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய எந்தப் பொருளையும் இங்கே விற்கலாம்.

காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னணு ஊடகங்களின் மூலமாகவும் தொலைக்காட்சிகளின் மூலமாகவும் இது ஊடுபரவுகிறது.

நமது மத்தியதர வர்க்கத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றொரு பொருளை அடைவதற்கான முயற்சியே நுகர்வியம் – consumerism.

நுகர்வியம் என்பது :

ஒரு டெலிவிஷன் அல்லது வாஷிங் மெஷின் வாங்குவதென்பது அடிப்படையில் நுகர்வியம் ஆகிவிடாது. ஆனால் இதனைப் பெற்றிடும் முயற்சியின்போது அதைவிட ஒரு முக்கிய செலவை, தேவையைப் புறக்கணிக்கும்பொழுது (உதாரணத்திற்கு ஒழுகும் வீட்டைச் சரிசெய்ய அல்லது மகளின் கல்விக்கான செலவைத் தள்ளிவிடும்போது) அது நுகர்வியம் ஆகிறது.

தேவையற்ற போலித் தேவைகளை உருவாக்கிக் கொள்வது – தான் வாழும் சமூகக் குழுக்களிடையே ஒரு பொருளை உபயோகிக்கும் திருப்தியில்தான் நுகர்வியம் அடங்கியிருக்கிறது. இதைத்தவிர உலகமயமாக்கல் இங்கே இவர்களின் தேவையையொட்டி நியாயப்படுத்தப்படுகிறது.

உலகமயமாக்கல் சில குறிப்பிட்ட விழுமிய கட்டமைப்புகளைக் கொண்டுவருகிறது. ஒருவன் செல்வந்தனாக இருப்பது மிக உன்னதமாகக் கொள்ளப்படுகிறது.

ஏற்கப்படும் ஊழல்:

எப்படியாயினும், செல்வம் சேர்ப்பது எந்த வகையிலேனும் சேர்ப்பது என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்த விழுமியங்கள் வர்க்கங்களைக் கடந்து ஆட்டிப்படைக்கிறது. அது சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் சென்று தாக்குகிறது. அவர்களை பாழ்படுத்தி துரிதமாகவும், மிக விரைவாகவும் செல்வந்தனாக மாறுவதற்கான போட்டியில் அவர்களைத் தள்ளிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘ஊழல்’ ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகியுள்ளது.

இந்த மேலாதிக்கத்திற்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது?

நம்முடைய உணர்வுகளின், நம்முடைய விழுமியத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள இந்த சக்திகளை எதிர்த்து நாம் எப்படி போராடப்போகிறோம்?

ஆளும் வர்க்கங்கள், விழுமியங்களை எல்லோருக்குமானதாக மாற்றிவிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வெகுஜன எழுச்சியே சாத்தியமாகுமா? என்ற கேள்வி உள்ளது.

இந்தக் கேள்விக்கு கிராம்சி கூறுவது என்ன?

இத்தகைய ஒரு நிலைமையை எதிர்த்து நியாயம் – நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தத்திற்கான ஒரு எழுச்சியை – பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கட்டுப்பாட்டைத் தகர்க்க இயலும். இதற்கு எதிரான ஒரு மாற்று மேலாதிக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும். உழைக்கும் மக்களின் மற்றும் மாற்றத்தை விரும்பும் பிற பிரிவினரின் மேலாதிக்கமாக இது இருக்கும். இதன் மூலம் மேலாதிக்கத் தத்துவத்தினை வலுவிழக்கச் செய்யவும், அதே நேரத்தில் செயல்பாட்டிற்கான தத்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் வழி பிறக்கும்.

பண்பாட்டு இயக்கம்:

கிராம்சியின் இந்த நியாயம், நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தம் என்பதைத்தான் இன்று நாம் ‘பண்பாட்டு இயக்கம்’ என்கிறோம். இவ்வியக்கம், மக்களின் பல்வேறு பிரிவினரிடையிலும் விழிப்பூட்டும் பணிகளில் செயல்படும். அது அவர்களின் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்தும், அதற்கு மாற்றானதைக் காட்டும்.

பண்பாட்டு இயக்கத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், திரைப்பட கர்த்தாக்கள் எல்லோருக்கும் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதில் முக்கியப் பங்கு உண்டு. இன்று இந்த மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டியதொரு அவசரம் உள்ளது.

நமது வாழ்க்கை முறையை, நமது விழுமியங்களை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள மேலாதிக்கம் செய்கிற தத்துவங்களை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பண்பாட்டு இயக்கம் வெறும் கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் மட்டுமல்ல; சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் பங்கேற்கச் செய்யும்; சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும், ஒரு இயக்கமாகும்.

பொதுப் புலனறிவு:

ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் ஒரு தத்துவவாதி – ஒரு அறிவு ஜீவி. அதாவது தனக்கென ஒரு தத்துவத்தை – ஒரு உலகப்பார்வையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். உணர்வுபூர்வமற்ற வகையில் உலகத்தைக் காணும் இந்தப் பார்வையைத்தான் கிராம்சி பொதுப் புலனறிவு என்கிறார்.

இந்த பொதுப் புலனறிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது மேலாதிக்கத் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்களையும் இணைத்து வெகுஜனப் பண்பாட்டில் ஊடுருவுகிறது.

எனவே, மக்களின் பொதுப் புலனறிவு என்ற களத்தில்தான் மேலாதிக்கத் தத்துவத்தின் கருத்துக்களோடு ஒருவரின் தனிப்பட்ட அனுபவப் படிப்பினைகள் மோதுகின்றன எனலாம்.

நியாய உணர்வுகள்:

ஆயினும் மேலாதிக்கத் தத்துவத்தால் என்றைக்கும் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்க முடியாது. இந்த இடத்தில்தான் நமது பண்பாட்டு இயக்கத்தின் பணி தொடங்குகிறது. இந்த பொதுப் புலனறிவை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக அதனை நல்ல புலனறிவாக உருமாற்றலாம்.

மேலாதிக்க விழுமியங்களைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம், பொதுப் புலனறிவுக்குள் பொதிந்து கிடக்கும் எதிரான விழுமியங்களை தோலுரித்துக் காட்ட முடிகிறது. அதன் வழி, அவர்களுக்குள் இருக்கும் சொந்த அனுபவங்களை வெளிக்கொண்டுவர முடிகிறது.

இந்தக் கருவை மையமாகக் கொண்டு ஒரு மாற்றுக் கருத்தைக் கட்டி எழுப்பி, அதனோடு ஒரு விவாதத்தை நடத்தி, புதிய கருத்துக்களை உருவாக்கிவிடலாம்.

இப்படியொரு சூழ்நிலையில், மேலாதிக்கத்திற்கு எதிராக பண்பாட்டு இயக்கத்தின் கடமை என்னவாயிருக்கும்? குறிப்பாக, உலகமயமாக்கல் இன்று பண்பாட்டை ஒரு முக்கியக் காரணியாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திடும் சூழலில், மேலாதிக்கத்திற்கு பண்பாடு ஒரு வாகனமாக பயன்படுத்தப்படுகிறது என்ற இந்தப் புரிதல், பண்பாடு ஊழியனுக்கு புதிய கற்பிதங்களையும், நடைமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைத் தருகிறது.

சிந்தனைகளின் போராட்டம்:

மேலாதிக்க விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்துவது எப்படி? நமது சிவில் சமூகத்தின் எல்லா நிறுவனங்களிலிருந்தும் இவை செயல்படுத்தப்படுகின்றன – நிலைபெறுகின்றன என்பதையும் விளங்குவதன் மூலமே இது சாத்தியமாகிறது.

குடும்பம், சாதி, மத நிறுவனங்கள், அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம், தொழில் உற்பத்தி – இவையெல்லாம் சிவில் சமூகத்தின் நிறுவனங்களில் நிலைபெற்று எப்படி மேலாதிக்க வர்க்கங்களுக்கு – அவர்களின் மேலாதிக்கத்திற்கு உதவி செய்கின்றன; பொதுமைப்படுத்தப்படுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பண்பாட்டு நடவடிக்கையில் ஆதிக்க பிரிவுகள் மற்ற பிரிவினருடன் ஏற்படுத்தக் கூடிய எல்லா உடன்படிக்கைகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பிரிவு மக்களை நமது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நோம் சோம்ஸ்கி கூறுகிறார்: “ஒரு சர்வாதிகாரத்தில் மக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஜனநாயகத்தில் அவர்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.”

மேற்கண்ட விஷயங்கள் இன்று பண்பாட்டுக் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் துணையாவன. கூடவே இது தொடர்பான அறிவியல் விவாதத் தளத்தை விரிவுபடுத்தவும் பயன்படுவன.

இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

மார்க்சிஸ்ட் கட்சியின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் பரிசீலனையில், பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. வலதுசாரி திருப்பம் என்று எதைச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது.

முதலில் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்பிரயோகம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். 1789 பிரெஞ்ச் புரட்சியின் போது, தேசிய நாடாளுமன்றத்தில் புரட்சிக்கு ஆதரவானவர்கள் அவைத் தலைவருக்கு இடதுபுறமும், மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வலதுபுறமும் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர். பொதுவாக முற்போக்குவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் சமத்துவம், ஜனநாயகம், பரந்த பார்வை, சமத்துவ பார்வை, பாகுபாடுகள் எதிர்ப்பு, பொதுநலன் நாடல் போன்றவை இணைந்தது இடதுசாரிக் கண்ணோட்டம். பிற்போக்குவாதம், சமூகப் படிநிலை அப்படியே இருக்க வேண்டும் என்ற கருத்து, பாசிசம், சர்வாதிகாரம், ஆளும் வர்க்க நலன்களை பகிரங்கமாக ஆதரிப்பது, மதவாதம், சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்கள் இணைந்தது வலதுசாரிக் கண்ணோட்டம். பொதுவாக இடதுசாரிக் கருத்தியல் முற்போக்கு என்றும், வலதுசாரி கருத்தியல் பிற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு ஒரு விஷயத்தில் முற்போக்குப் பார்வையும், மற்றொன்றில் பிற்போக்குப் பார்வையும் இருக்கலாம். அதை மட்டும் வைத்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று எடை போட்டுவிட முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தப் பார்வை இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று பார்க்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி கருத்தாக்கங்களிலும் பல நிறங்கள், நீரோட்டங்கள் உள்ளன.

பொதுவாக இந்த அளவுகோலில் உலக அரசியல் அரங்கில் கட்சிகள், கொள்கைகள், தத்துவங்கள் எடை போடப்படுகின்றன. இந்தியா உட்பட எந்த ஒரு சமூகத்திலும் இரு பகுதியாளர்களும் உள்ளனர். இரண்டு கருத்துக்களும் இருக் கின்றன. இருப்பதை மாற்றாமல், அதற்குள்ளேயே சில முன்னேற்றங்களைத் தேடும் மையத்துவவாதிகளும் (Centrists) உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அல்லது ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் எந்த வகை என்று பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் தேசத்தை அவ்வகையில் செலுத்த அந்தக் கட்சி முயற்சிக்கும். அது இடதுசாரிப் பாதையில் செலுத்த முயற்சிக்கிற கட்சியின் ஆட்சியாக இருந்தால், மக்களுக்கு அது நன்மை தரும். வலதுசாரிப் பாதையில் செலுத்துகிற ஆட்சியாக இருந்தால் பொது நலனுக்கு அது ஆபத்தாக முடியும்.

தேசியவாதம் என்பது முற்போக்கா?

உதாரணமாக, ஹிட்லரின் ஆட்சியின் அடிப்படையாக ஆளும் வர்க்க நலன் என்பதுடன் பாசிஸம், இன அழிப்பு உள்ளிட்டவை இருந்ததால் வலதுசாரி என்று சொல்கிறோம். தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளை, மத அடிப்படைவாதம், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம் போன்ற குணாம்சங்களின் அடிப் படையில் வலதுசாரி என்றே வரையறுக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் அடிப்படை பார்வை யூத இனவெறி, எனவே அதை வலதுசாரி அரசு என்று பார்க்கிறோம். அமெரிக்காவில் செயல்பட்ட கூக்ளக்ஸ் கிளான் போன்ற அமைப்புகளைப் போல் தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வந்து உழைக்கும் தொழிலாளிகளை வேட்டையாடும் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசியம் என்ற பெயரில் இவை வன்முறையில் இறங்குகின்றன. இவை வலதுசாரி அமைப்புகளே. மதம், தேசியம், இனம், மொழி என்று பல அடையாளங்களில் எது வேண்டுமானாலும் அல்லது எல்லாமே வலது சாரிக் கருத்தியலின் மையமாகப் பயன்படக் கூடும்.

உலகின் பல நாடுகளில் தேசியம் அல்லது தேசியவாதம் என்பது வலதுசாரிப் பாதையின் முகமூடியாகப் பயன்படுகிறது. தேசியம் என்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழக்கூடும். தேசியம் என்பதில் பல வகை உண்டு. அதிலும் வலதுசாரி இடதுசாரி கண்ணோட்டங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் கூடிய வர்க்க நலன் இணைந்த தேசியம் உண்டு. சில அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரபு தேசியம் என்பது பேசப்படுகிறது. ஹிட்லர் முன்வைத்தது உயர் இனப் பெருமையை மையப்படுத்தும் தேசியம். இதன் மூலம் இதர தேசிய இனங்களை அழித்தொழிப் பது என்பது நியாயப்படுத்தப்பட்டது. இது பாசிஸத்துக்குப் பயன்பட்டது. தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுத்தும் மத அடிப்படைவாத தேசியம் இருக்கிறது. அமெரிக்கா தன் பல்வேறு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உள்நாட்டுக்குள் தேசியத்தை முன்வைத்துப் பேசுகிறது. இந்தியாவில் பிஜேபியின் பிரச்சாரம் கலாச்சார தேசியம் என்பதை மையப்படுத்துகிறது. அதாவது இந்துக் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல என்பது. தேர்தல் காலத்தில், நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத் வம்தான் இந்தியாவின் அடையாளம் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இது இதர மதங்களைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக உருவகப்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைப்பது, காப்பது அல்ல. எனவே, தேசியம் என்பதே முற்போக்கு ஆகி விடாது. அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே நிர்ணயிப்புக்கு வர முடியும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவீன இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மத அடிப்படையில் இந்துராஷ்டிரமாக இந்தியா அமைய வேண்டும் என்று வற்புறுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உட்பட பெரும்பான்மையினர் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, சமத்துவம் என்ற அஸ்திவாரம் தேவை என்று வலியுறுத் தினர். இறுதியில் அரசியல் நிர்ணய சபையால் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, பன்முகத்தன்மை கொண்ட நவீன இந்தியா உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விட்டுவிடவில்லை என்பது தான் உண்மை.

மேல்பூச்சு

காந்தி கொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தடையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகப் பிகடனம் செய்துகொண்டது. ஆனால், அதன் அரசியலை கவனிப்பதற்காக பாரதீய ஜனசங்கம் உருவாகி, அதன் தொடர்ச்சி யாகத் தற்போது பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலாச்சார தேசியம், இந்து தேசியம் என்ற பேரில் சங் அமைப்பின் வலதுசாரி இந்துத்வ அரசியல் கருத்தியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது நடந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் தீவிரமாக நடக்கும் என்பதைத்தான் வாஜ்பாயி ஆட்சியில் பார்த்தோம். ஆனால், அப்போது பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை யில் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், பல விஷ யங்களை நினைத்த அளவு செய்யமுடியவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி என்ற பெயர் இருந் தாலும், இது பிரதானமாக பிஜேபி ஆட்சியாகவே இருக்கிறது. முக்கிய அமைச்சரகங்கள் உள்துறை, பாதுகாப்பு, அயல்துறை, தொழில், வர்த்தகம், மனிதவளம், ஊரக வளர்ச்சி எல் லாமே பிஜேபி கையில்தான். இந்துத்துவக் கருத்தியல்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர இது மிக உதவியாக இருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தர பிரதேசத்தில் மட்டும் 27க்கும் மேற்பட்ட மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றைப் பற்றிய சிறு விமர்சனம் கூட மோடியால் செய்யப்பட வில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் சுதந்திர தின உரையில் வகுப்புவாத, சாதிய மோதல்களுக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த மதவெறிக் கொடுமைகளுக்கு, பிரதமர் வேட் பாளராக இருந்த போது கூட வருத்தம் தெரிவிக்காதவர் திடீரென மாற்றிப் பேசுவதால் யார் நம்பிவிடப் போகிறார்கள்? கடந்த காலத்தில் பிரதான மதவெறித்தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுக் களின் அறிக்கையைப் பார்த்தாலே உண்மை புரியும். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் (மும்பை 1992-93), டி.பி.மதான் கமிஷன் (பிவாண்டி, ஜால்காவ், மஹத் 1970) ஜோசஃப் வித்யாத்தில் கமிஷன் (தலைச்சேரி 1971), ஜக்மோஹன் ரெட்டி கமிஷன் (ஆமதாபாத் 1969), வேணுகோபால் கமிஷன் (கன்னியாகுமரி 1982), ஜிதேந்திர நாராயண் கமிஷன் (ஜாம்ஷெட்பூர் 1979) ஆகிய கமிஷன்கள் எல்லாமே, இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஒன்று, மத மோதல் களைத் தூண்டுவதில், நடத்துவதில் இந்துத்துவ அமைப்புகளின் கிரிமினல் நடவடிக்கைகள், வன் முறைகள்; இரண்டு, காவல்துறையின் சிறு பான்மை விரோத அணுகுமுறை. விசாரணைகளின் போது, இந்துத்துவ ஆசாமிகளின் பங்கேற்பை மறைப்பதற்குக் காவல்துறையும், நிர்வாகமும் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி பார்வை இருப்பவர்கள் பொருத்தப் படுவார்கள் என்பதும் புரிகிறது. இதையெல்லாம் செய்து கொண்டே, மோதல்களை நிறுத்த வேண்டும் என்று ஒரே ஒரு உரையில் மட்டும் பொதுவாகப் பேசுவது மேல் பூச்சு தான்.

திருத்தப்படும் வரலாறு:

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்து தான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப் படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய நிபுணர்களின் சந்தேகத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய அவ சியம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத் திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங் களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிஹார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் எழுதியதை, தோழர் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியிருக்கிறார். பூகோள ஆய்வுகளை இது மீறுகிறது என்பது மட்டுமல்ல, மக்களை விட்டு விட்டு நிலப் பிரதேசம் மட்டும் இடம் மாறுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். திப்பு சுல்தான் போன்றவர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்ததும், சில இந்து மன்னர்கள் கோயில்களை இடித்ததும் வரலாற்றின் பகுதிதான். வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திருத்துவது பேராபத்தில் போய் முடியும்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உரு வாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக் கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக்கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும் என்கிற செய்திகள் அண்மையில் வெளிவந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத் தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார். இது, மார்க்சிஸ்ட் கட்சியால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது, அரசு அதை மறுத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் வரலாற்றைத் திருத்துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது.

அதேபோல் இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இல்லை. இந்தியாவுக்குள் குடியிருப்பது என்பதுதான் அடிப்படை. எனவேதான் குடியுரிமை அடிப்படையில் மதச்சார்பில்லாமல் சம உரிமை கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இரண்டாம் தரத்தினராக நடத்தப் பட வேண்டும் என்ற கோல்வால்கரின் கூற்றும் இதில் அடிபட்டுப் போகிறது. அரசியல் சட்டத் தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த காலத்தில் ஓயாமல் எழுந்ததற்கு இதுவே பிரதான காரணம். தற்போதும் இதை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படும்.

கற்பனைகள் மட்டுமே கல்வியாய்:

அரசியல் அமைப்புச் சட்டக் கோட்பாடுகள், பொதுவாக ஒரு நாட்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை. அப்படிப் பார்த்தால், கல்வித் திட்டம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல், சமத்துவக் கருத்துக்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நவீன தாராளமய காலத்தில் கல்வி வணிகமயமான சூழலில், இந்த மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். இந்த மதிப்பீடுகள் மேற் கத்திய மதிப்பீடுகள் என்று குறை சொல்லி, கல்வியை இந்திய மயமாக்கப் போகிறோம் என்று பிஜேபி புறப்பட்டிருக்கிறது. இந்திய மரபில் முற்போக்குக் கருத்தியல்கள் எப்போதும் இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால், பிஜேபி அமல்படுத்த முனையும் இந்தியமயம், இந்திய மரபின் பிற்போக்கு அம்சங்களைத் திணிப்பது தான். வாஜ்பாயி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தீனா நாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங் கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன் னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத் துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மஹாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன் றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ் டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்தார், ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாத வர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாத்ரா தலைமையில் ஒரு தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டு, கல்வியை இந்தியமயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அது அரசுக்குக் கொடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்வியின் உள்ளடக்கம் கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டதாக மாறினால் அரசியல் சட்டத்தின் முற்போக்கு மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிவைத்து விட்டு, சமத்துவத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியலைக் கற்றுக் கொடுப்பது எத்தகைய ஒரு முரண்பாடு? எதிர்கால சந்ததியைக் கடைந்தெடுத்த மதவாதிகளாக, அறிவியலின் வாசனையேபடாத அறிவிலிகளாக வளர்ப் பதற்காகவா கல்விக்கூடங்கள்? சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தப் பாடத்திட்டத்தைத் திணிப்பது ஒருமைப்பாட் டுக்கு எவ்வாறு உதவும்? தனியார் கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது உட்பட முக்கிய அம்சங்களில் அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது, அரசியல் சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதற்குத் தானே தவிர, அடுத்த தலைமுறையைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்துவதற்காக நிச்சயம் அல்ல. அனைத்து மதங்களைச் சார்ந்த நூல் களையும் அறிமுகப் படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவை நூலகத்தில் இருக்கட்டும். எல்லோரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்காகப் பயன்படட்டும்.

அயல்துறை கொள்கையில்:

பொதுவாக அணிசேரா இயக்கம், சோஷலிச நாடுகளுடன் நட்புறவு போன்ற அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்டது. ஏகாதிபத்திய நாடுகளுடன் நெருக்கம், அதற்கேற்ப உலக நிகழ்வுகளின் மீது ஏகாதிபத்திய சாய்மான நிலைபாடுகளை எடுப்பது என்பது அயல்துறை கொள்கையை வலதுசாரிப் பாதையில் திருப்புவதாகும். இப்பாதை ஏகாதிபத்திய உலகமய கட்டத்தில் காங்கிரசாலும் பின்பற்றப்பட்டதுதான்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியது காங்கிரசாக இருந்தாலும், அன்றைக்கு அதை ஆதரித்து, இன்றும் அதில் தொடர்வது பிஜேபி. பாலஸ்தீனத்தை அநீதியாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு, ராணுவ ஒத்துழைப்பு போன்றவையும் வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒரு கடினமான, வெறியை உருவாக்கும் அணுகுமுறையையே (Jingoism) கடைப்பிடித்தது. மோடி பதவி ஏற்பின் போது சார்க் நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்து ஒரு பொது தோற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தியது அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

பகிரங்கப்படும் ஆணாதிக்கம்

பெண் சமத்துவம் மறுக்கப்படுவதும், ஆணாதிக்கக் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதும் நிச்சயம் வலதுசாரிப் பார்வை தான்.

1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனு ஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. இதில், நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கோல்வால்கர் கேள்வி எழுப்பினார். சாவர்க்கர், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவர்கள் சொல்லுகிற மனு சாஸ்திரம், பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறது. அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உடைமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது என்பதுதான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலை இதிலிருந்து உருவானதுதான். எனவேதான் மனுதர்மத்தில் பெண் அடிமை நிலையில் வைக்கப்படுகிறாள். பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனுதர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை. எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும் என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, சுதந்திர இந்தியாவிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்துவ சக்திகளால் முன்னிறுத்தப்படுகிறது.

இந்து கோட்பாட்டு மசோதாவை 4 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாமல் இழுத்தடித்து, ஒரு கட்டத்தில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்தி, அம்பேத்கர் அவர்களையே நோக வைத்து, சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலக வைத்தது அன்றைய இந்துத்துவவாதிகள்தான். பிஜேபி ஆண்ட பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்பட்டன.

மகள், மருமகள், சகோதரியின் மானத்தைக் காப்போம் என்று மகா பஞ்சாயத்துக்களை நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகள், சிறுபான்மை எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் நின்றே அதைப் பார்க்கின்றனர். காதல் போர் (Love Jihad)என்று பெயர் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கும் இவர்கள், பெண்கள் தேர்வு செய்வது முஸ்லீம் இளைஞனாக இருந்தால், அதைப் பாலியல் தாக்குதல் என்று வர்ணித்துத் தலையிட்டு மத மோதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் 2013-ல் பதிவு செய்யப்பட்ட 34,000 பாலியல் வல்லுறவு வழக்குகளில் எத்தனையில் தலையிட்டி ருப்பார்கள்? எனவே இந்துத்துவ சக்திகளின் தலையீடுகள் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கு விதையாகியிருக்கிறதே தவிர, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் இல்லை.

பெண்கள் அணியும் உடை காரணமாகத்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதை வலுவாகச் சொல்லும் பகுதியினரில் சங் பரிவார ஆட்களுக்கு முதல் மதிப்பெண் கொடுக்கலாம். ஒரு ‘சின்ன ரேப்’ நடந்ததால் சுற்றுலா பாதிக்கப்பட்டுவிட்டது என்று உலகையே அதிரவைத்த டெல்லி நிர்பயா வழக்கு குறித்து மத்திய பிஜேபி அமைச்சரே அண்மையில் பேசியிருக்கிறார். கௌரவக் கொலைகளைத் திட்டமிட்டுக் கொடுக்கும் காப் பஞ்சாயத்துக்களில் இவர்களுக்குப் பங்கு உண்டு. காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதுடன், தம்பதியர் அல்லாத ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலியுடன் ‘கலாச்சார காவலர்களாக’ வலம் வருகிற இந்துத்துவ அமைப்புகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண் சமத்துவம் இவர்களுக்கு ஏற்புடையதல்ல; பெண்ணைத் தாய், மகள், சகோதரி என்ற கோட்டுக்குள் நிறுத்துகிறார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதவாதம், சாதியம் போன்ற கருத்தியலில் பகிரங்கப்படுவது ஆணாதிக்கம்தான்.

சமூக நலம் மெல்ல இனிச் சாகும்:

தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பது, சமூகச் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது, தேச வளர்ச்சியை காவு கொடுத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமான பொதுத்துறை பங்குகளை விற்று தனியார்மய மாக்குவது, உள்நாட்டு வெளிநாட்டு பெருமுத லாளிகளின் நலனுக்காக எல்லா விதிகளையும், சட்டங்களையும் வளைப்பது போன்றவை வலது சாரிப் பொருளாதாரப் பாதையின் முக்கிய மைல் கற்களாகும். காங்கிரசாலும் பின்பற்றப்பட்ட இப்பாதை, மோடி ஆட்சியில் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களிலேயே வெளிப்படு கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே தனித் துறையை உருவாக்கியது பிஜேபியே. பல்வேறு காரணங் களுக்காகக் காங்கிரஸ் செய்யத் தயங்கிய கார்ப்ப ரேட் ஆதரவு காரியங்கள் எல்லாம் மோடி ஆட்சி யில் துரித கதியில் நடக்கின்றன. ரயில்வேயில் அந்நிய நேரடி மூலதனம், காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத் துறையில் இருப்பதை உயர்த்துவது போன்றவை இதற்கு உதாரணம். திட்டக் கமிஷனை ஒழிப்பது என்ற அவர்களது ஆலோ சனை இதன் உச்சகட்டம். கொஞ்சநஞ்சம் இருக்கும் சமூக நலத்திட்டங்களைக் கண்காணிப் பது, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் இனி அவ்வளவுதான். சமூக நலம் மெல்லச் சாகும் என்பது நிதர்சனம். இது கூட்டாட்சி முறைமைக்கும் முரணானது. தொழிலாளர் நலச்சட்டங்களும் தளர்த்தப்படுகின்றன.

சர்வதேச நிதி மூலதனம் கோலோச்சும் உலகமய காலத்தில், மூலதனம் பொது சொத்துக்களை சூறையாடும், அடித்துப் பிடுங்கும், ஆட்சியாளர் களை அதற்கேற்றாற் போல ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் தத்துவார்த்த தீர்மானம் கூறியதை நடப்பவை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரம், பண்பாடு படும்பாடு

புராதன இந்தியாவின் சாதிய அமைப்பு நியாயமானது, மேன்மையானது என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புதிய தலைவரும், கல்வியை இந்தியமயப் படுத்துவதற்குக் குத்தகை எடுத்திருக்கும் பாத்ராவும் அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூக அமைப்பின் அருவருப்பான, அநீதியான அம்சத்தை ஆரத் தழுவுகிறார்கள். அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதற்கு மாறாக, கோல் வால்கர் கூறிய படி, இந்தி நிச்சயம், சமஸ்கிருதம் லட்சியம் என்ற பாதையில் பிரதேச மொழிகளை சில மாற்றுக் குறைந்தவையாக ஆக்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. பண்டி கைகள் ஏற்கனவே பலிகடா ஆகிவிட்டன. ஏகே 47 துப்பாக்கியுடன், டைனோசார் மீது வலம் வரும் பிள்ளையார்தான் இப்போது கதா நாயகன். கலாச்சார தேசியம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பலி கொடுத்து, மதம் சார்ந்த அதுவும் அவர்கள் நினைக்கும் உயர் சாதிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற அவர்களது கடந்த கால முயற்சிகளைத் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சடங்குகள், விழாக்கள் அனைத்துப் பகுதியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாக மாற்றப் படுகின்றன. அதில் வணிக நோக்கமும் உண்டு.

பல்வேறு வகை ராமாயணங்கள் இந்தியாவில் புழங்குகின்றன என்பது குறித்து பத்மஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய நூல், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தி லிருந்து சமீபத்தில் நீக்கப் பட்டிருக்கிறது. விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம் என்று ஒரு பழமொழி இருந்தாலும், சீதை ராமனின் தங்கை என்று ஒரு வகை ராமாயணம் கூறுகிறது. புத்த ஜாதகக் கதைகள் அதற்கு ஒரு சாட்சி. ஒரு குறிப்பிட்ட வகை ராமாயணம் தான் அக்மார்க் முத்திரை பெற்றது என்று எப்படிக் கூறமுடியும்? கதை களும், கற்பனைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுபவை. அவற்றை செழுமையான அனுப வங்களாக, பன்முகத்தன்மையைப் பிரதிபலிப் பவையாகப் பார்க்க வேண்டும். மதச் சார்பற்ற நிறுவனங்கள் வலதுசாரி நிர்ப்பந்தத்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி இரையாவது எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்து கூறும் உரிமையை அடித்து நொறுக்குகின்றனர். சர்வ தேசப் புகழ் பெற்ற வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்தைப் பெங்குவின் நிறுவனம் விலக்கிக் கொள்ள வைத்தது, தலித் செயல்பாட்டாளர் ஷீத்தல் சாத்தே மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வருவதைத் தடுத்தது போன்ற சமீபத்திய உதாரணங்கள் நமக்கு முன் உண்டு. திரைப்படங் களுக்கு, மத்திய தணிக்கைக்குழுவுக்கும் மேலான சூப்பர் தணிக்கையாளராக சங்கப் பரிவாரம் நடப்பதும் நமக்குத் தெரியும். மோடி ஆட்சி மத்தியில் இருப்பது, இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால், முன்னைக் காட்டிலும் வேகமாக வும், வெறியுடனும் இவை நடந்தேறுகின்றன.

மன வயல்களில் ஊன்றப்படும் விஷநாற்று

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்பிற்போக்குக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை சொல்லத் தயங்கிய பிற்போக்குக் கருத்தியல்கள் பெருமிதத்துடன் சொல்லப் படுகின்றன. பத்தி ரிகைகளில் அத்தகைய கருத்தியலைக் கொண்ட கட்டுரைகள் அதிகரித்திருக்கின்றன. சமூக பொது புத்தியின் ஓர் அம்சமாக இவை மாற்றப்படு வதற்கு நீண்ட காலம் ஆகாது. இல்லை இல்லை, இந்திய மக்கள் விட்டுக்கொடுத்து விட மாட்டார் கள், தமிழகப் பாரம்பரியம் அப்படிப் பட்டதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், இதை மட்டுமே கூறுவது நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதாகும். வலதுசாரிக் கருத்தியல் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாகக் கொள்ளை நோய் போல் பரவி வருகின்றது. தொட்டால் பரவும் நோயை ஒட்டுவார் ஒட்டி (Contagious)என்பார்கள். அதைப்போலவே இது பரவும். கிராம்சி சொல்வதைப் போல், இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தின் தாக்கம் என்பது அணுவுக்குள் நடக்கும் மாலிக்யூல்களின் மாற்றம் போல் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு பொருளாக அதாவது வேறுபட்ட உணர்வாக, கண்ணோட்டமாக அது உரு மாறும்.

ஏற்கனவே உள்ள பிரதான ஆளும் வர்க்கக் கட்சி அம்பலப்பட்டுப் போய் நிற்கும் போது, மக்கள் நெருக்கடிகளுக்குள் சிக்கி விழி பிதுங்கும் போது அந்த அதிருப்தியை மதவாத சக்திகள் பயன்படுத்தி முன்னேறுமா அல்லது இடதுசாரிகள் அதைப் பயன்படுத்தி வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஜனநாயகம் நோக்கி முன்னேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. அப்படிப்பட்ட திருப்பு முனையில் இந்தியா இன்று உள்ளது.

சமூகத்தை, அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் வலதுசாரிப் பாதையில் இழுத்துச் செல்லும் பணி கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தூண்கள் தூக்கி நிறுத்தியுள்ள மோடி அரசால் அவசரமாக செய்யப் படுகின்றது. பொருளாதாரத்தில் நவீன தாராளமயம், இதர துறைகளில் மத அடிப்படை வாதம் என்பதே இவர்களின் பாதை. இதர பல அரசியல் கட்சிகள் நவீன தாராளமயத்தை ஆதரிக்கிறார்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிஜேபியுடன் அணி சேர்ந்தவர்களாக அல்லது சேரத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர். எனவே, இரண்டு துhண் களையும் தகர்ப்பதில் இடதுசாரிகள் மட்டுமே இதில் முன்முயற்சி எடுக்க முடியும்.

இடதுசாரிகளும், தொழிலாளி வர்க்க அரசியலும் பின்னுக்குப் போகும் போது, பிற்போக்கு அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கும், வலுப்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக, அறிவியல், மதச்சார்பற்ற, இடதுசாரிப் பார்வையைப் பாதுகாத்து முன்னேற்ற அவசரமாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. அப்படியானால் இடதுசாரிகள் பலப்பட வேண்டும். ஒரு பொது மேடைக்கு வர வேண்டும். வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள மேலும் நண்பர்களை அடையாளம் கண்டு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் கெட்டிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே ஒரு பரந்த மேடையை உருவாக்குவது முன்னெப்போதையும்விட அவசரம். அதற்கான செயலில் இறங்குவது பெரும் அவசியம்.

கற்பு-கருத்து சுதந்திரம்-கலாச்சாரம்

“சுதந்திரம் என்றால் நான் எதைக் கூறுகிறேன்? தேக சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால் பிறர் சந்தோஷத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி நான் எதை செய்யவும் எனக்கு உரிமை வேண்டும். அறிவு சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால், சரியாக நினைக்கும் சுதந்திரமும், தவறாக நினைக்கும் சுதந்திரமும் எனக்கு வேண்டும். சத்தியத்தை அடைவதற்கு சாதனமாயிருப்பது சிந்தனை. நமக்கு சத்தியம் இன்னதென்று தெரிந்திருந்தால், நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை”.

– இங்கர்ஸால்

சமீபத்தில், திரைப்படக் கலைஞர் குஷ்பு, பெண்களது பாலியல் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் சுகாசினி தெரிவித்த கருத்து மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. எனினும், தற்போது, குஷ்புவும், சுகாசினியும் என்ன சொன்னார்கள்? அது சரியா? தப்பா? என்ற தளத்திலிருந்து, அப்படி செய்ய அவர்களுக்கு உரிமை உண்டா? என்கிற கருத்துரிமை தளத்திற்கு விவாதம், தமிழகத்தில் வந்திருக்கிறது.

நடந்தது என்ன?

இந்தியா டுடே பத்திரிக்கை, பாலியல் வாழ்க்கை குறித்த ஆய்வை, பெருநகரங்களில் உள்ள ஆண்களிடமும், பெண்களிடமும் செய்து, அறிக்கையாய் பிரசுரித்து, அந்தந்த நகரங்களில் உள்ள , பல துறைகளைச் சார்ந்த 10 பேரிடம் கருத்து கேட்டு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் 10 பேர் கருத்து சொல்லியிருந்தார்கள். அதில் 7 பேர் பெண்கள். அதில் குஷ்புவும் ஒருவர். 10 பேருமே இளைஞர்களின், இளம் பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்தும், சிலர் அந்த ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளுதல் குறித்தும் பேசியிருந்தார்கள். ஆய்வின்படி, அனைத்துப் பெருநகரங்களிலும் பெண்களிடயே இவ்வழக்கம் இருக்கிறது என்பதும், மற்ற பல நகரங்களை ஒப்பீடு செய்யும் போது சென்னையில் குறைவு என்பதும் தெரிய வந்தது. ஒரு பக்கம் நிறைய குஷ்பு பேசியிருந்தார். அதைப்படித்துப் பார்க்கும் போது, வரைமுறை யற்ற பாலுறவை அல்லது பாலியல் அராஜகத்தை அவர் ஆதரித்தாகத் தெரியவில்லை என்பதையும், திருமணத்தைப் பற்றி நிச்சயமாக இருந்தால், சேர்ந்து வாழலாம் அல்லது உறவு கொள்ளலாம்; அதிலும் கூட, எய்ட்ஸ் வராமலும், கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்ளும் படியும் கூறியிருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழகத்தில் யார் தான் இப்படி செய்யவில்லை என்று குஷ்பு பொதுமைபடுத்திருக்க வேண்டியதில்லை என்பதும் பரவலான கருத்தாக முன் வந்தது. பொதுவாக, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களின் தொனியும் இப்படியாகவே இருப்பதைக் காண முடியும். அதாவது, பாதுகாப்பான உறவு (Safe Sex) என்பதே, அவ்விளம்பரங்களில் பிரதானமாக முன் வைக்கப்படுகிறது. எப்படியுமே நடந்து கொண்டுள்ள இவ்விஷயத்தை, கூடாது என்பதால் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது; எனவே கவனமாக இரு என்று சொல்வது ஒன்றுதான் வழி என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

சரி இந்த வாதத்தை ஏற்றக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மாற்றுக்கருத்து சொல்லலாம்; எதிர்க்கலாம்; கண்டனமும் தெரிவிக்கலாம். இக்கருத்தை மாபாதகம் என ஒருவர் கருதினால் மக்களின் கருத்தை திரட்டுவதற்கு இயக்கமும் நடத்தலாம்.

கலாச்சார அடிப்படைவாதம்

ஒரு சிவில் சமூகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு எழுதப்பட்ட நாகரீக எல்லை இருக்கிறது. ஆனால், குஷ்புவின் கருத்துக்களுக்கான எதிர்ப்பு எல்லை தாண்டியதாக இருந்தது. நடத்திய விதத்திலும், முன் வைத்த கோஷங்களிலும், அடிப்படைவாதிகளின் குரலின் சாயம் தெரிந்தது.

உதாரணமாக, இந்துத்துவ வகுப்பு வாதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களது நடவடிக்கைகளைப் படிப்படியாகக் கவனித்தால், கீழ்க்கண்டவாறு இருப்பதைக்காண முடியும்.

 1. கருத்துருவாக்கம்
 2. அனைவராலும் அங்கீகரிக்கும் ஒரு விஷயத்தோடு இணைத்தல்
 3. அராஜகமாக நடத்தல்
 4. அதற்கு அப்பாற்பட்டுப் பார்க்கவிடாமல், ஒட்டு மொத்த சமூகத்தை, அந்த வட்டத்துக்குள் நிறுத்தி, ஆம் – இல்லை என்று சொல்ல நிர்பந்தப்படுத்தி, இல்லை என்று சொல்பவர்களை எதிரிகளாக்குதல்.

ராமஜென்ம பூமி விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அதுதான் ராமர் பிறந்த இடம் என்ற கருத்து முதலில் உருவாக்கப்பட்டது. அது உண்மையல்ல என்றாலும், அந்தக் கருத்து ஆழமாக உருவாக்கப் பட்டது. மத நம்பிக்கை என்கிற அங்கீகரிக்கப்பட்ட விஷயத்துடன் அது இணைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு, கரசேவை போன்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. மத நம்பிக்கை உளளவராகவும், அதே சமயம் மசூதி இடிப்பதை ஏற்காதவராகவும், ஒருவர் இருப்பது சாத்தியம். ஆனால், அடிப்படை வாதம் அதற்கு இடம் கொடுக்காது. மசூதி இடிப்பை ஆதரிப்பவர்கள் தான் மதநம்பிக்கை உடையவர்கள், இந்துக்கள், தேச பக்தர்கள் என்று குறிப்பான அடையாளங்களை அது உருவாக்கியது.

அதுபோல, இங்கு, குஷ்பு சொல்லாத ஒரு விஷயம் – அதாவது தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்பது – சொல்லப்பட்டதான கருத்து உருவாக்கப்பட்டது. அது, தமிழ் கலாச்சாரம், பண் பாட்டோடு இணைக்கப்பட்டது. எதிர்ப்பு என்கிற பெயரில், குஷ்பு மும்பைக்குப் போ என்கிற கோஷம் உள்ளிட்ட அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஒரு சகிப்புத் தன்மையற்ற சமூக சூழலுக்கு அடி கோலப்பட்டது. குஷ்பு சொன்னதை எதிர்ப்பவர்கள் தான், தமிழ் கலாச்சார காவலர்கள் என்ற நிலை நம் மீது திணிக்கப்பட்டது.

எது தமிழ் கலாச்சாரம்?

இந்தியக் கலாச்சாரம் மட்டும் பன்முகத் தன்மை கொண்டதல்ல. ஒரே மாநிலத்தில் கூட பன்முகக் கலாச்சாரத்தைப் பார்க்க முடியும். கலாச்சாரம் என்பது மனிதர்கள் வாழும் முறை தானே? உடை, உணவு, பழக்க வழக்கம், திருமண முறை பேச்சு எல்லாமே கலாச்சார அடையாளங்கள் தான். மாவட்டத்துக்கு மாவட்டம், மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி வேறுபடும். வர்க்க வேறுபாடும் கலாச்சாரத்திற்கு உண்டு. இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுக்காமல், ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? பெரியப்பா, சித்தப்பாவை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. மாமா, அத்தையை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. இதில் எது சரி என்று எப்படி வாதிட முடியும்? (பார்க்கப் போனால், அறிவியல் ரீதியில், இரண்டுமே தவறு) நின்று, கை கூப்பி தொழுவது சரியா? மண்டியிட்டு குனிந்து தொழுவது சரியா என்றால் என்ன சொல்வது? (இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர், எப்படி தொழுதால் என்ன என்றும் சொல்லலாம்) சைவம் நல்லதா? அசைவம் நல்லதா? இதற்கெல்லாம் பதில்கள் இல்லை. இவை அவரவர் வாழ்க்கை முறை, அவரவர் கலாச்சாரம் – அவ்வளவுதான்.

இதிலும் கருத்து வித்தியாசம் எழலாம். ஏன்? எதில் வேண்டுமானாலும் மாற்று கருத்து சொல்லலாம். வால்டேர் அழகாக சொல்லியிருக்கிறார் –

நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்.

இங்கர்ஸால் இதே கருத்தை எதிர்மறையாக சற்று காட்டமாகக் கூறுகிறார் – … எவனொருவன் தனக்கென்று சில அறிவு சம்பந்தப்பட்ட உரிமைகள் – அதாவது எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன – வேண்டுமென்று பாத்தியங் கொண்டாடிக் கொண்டு அதே சமயத்தில் அதே உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; சுயநலக்காரன்; மிருகத் தன்மை வாய்ந்தவன். அவன், காட்டு மிராண்டியின் நிலைக்கு சமீபத்திலே வசிப்பவனாகிறான்.

ஆக, மாற்றுக் கருத்து சொல்லலாம் என்பது மட்டுமல்ல; சொல்வதற்கு உரிமை வேண்டும் என்பது தான் முக்கியம். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள The Argumentative Indian (வாதிடும் இந்தியன்) என்ற நூல், தர்க்கம் செய்யும் இந்திய பாரம்பரியத்தை சுட்டிக் காட்டுகிறது. மன்னர்களின் கொலு மண்டபவங்களில் பட்டி மண்டபமும் இருக்கும். அங்கே வல்லுநர்களின் வாத பிரதிவாதங்களும் நடக்கும் என்பதையும் படித்திருக்கிறோம். இன்று வரை பட்டி மன்றங்கள் தொடர்கின்றன.

சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சொன்ன

“நூறு பூக்கள் மலரட்டும்
நூறு சிந்தனைகள் வளரட்டும்”

என்பதும், பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் தான். பொதுக் கூட்ட மேடைகள் கூட அவரவர் நிலைபாட்டை விளக்கவும், மற்ற கட்சிகளின் / இயக்கங்களின் கருத்துக்களை ஆதரிக்கவும், நிராகரிக்கவும் பயன்படுகின்றன. பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதங்களும் இந்த வழி இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் நேருக்கு நேர், விவாத மேடைகளும் இப்படித் தான். எனவே கருத்து சொல்லவும் உரிமை உண்டு; எதிர்க்கவும் உரிமை உண்டு.

அதற்காக, தீண்டாமை நியாயம் என்று மேடை போட்டு பேச முடியாது. பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதில் தவறேதும் இல்லை என்று வாதிட முடியாது. ஒருவனைக் கொல்ல உரிமை உண்டு என்பது என் கருத்து என்று பகிரங்கமாகக் கூற முடியுமா?  இப்படிப்பட்ட விஷயங்களில் வாதிக்கும் எல்லை முடிந்து, சட்டங்களும் வந்து விட்டன. அதற்குப் பிறகு பேசினால், அது சட்டப்படி குற்றமாகிவிடும்.

இவ்வாறாக, பல கருத்துக்கள் மோதும் போது தான் பல பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும், ஒரு நிலைபாட்டுக்கும் போக முடியும். ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டவரை மாற்ற வேண்டும் என்றால், துன்புறுத்தி மாற்ற முடியாது. வாதம் செய்து புரிய வைத்துத் தான் மாற்ற முடியும்.

ஸ்ரீராம் கே ஜெய் என்று இந்து அல்லாதவர்களை கோஷம் போட வைப்பதும், அல்லா ஹோ அக்பர் என்று முலீம் அல்லாதவர்களை சொல்ல வைப்பதும், மிரட்டினாலும் அடித்து உதைத்தாலும் சாத்தியம் தான். ஆனால், மனதில் உள்ளது மாறிவிடுமா? அவரவர் சாகும் வரை, ஆழமாய் அரியணை போட்டு அமர்ந்திருக்காதா? இதைத்தான், என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன் என்று ஒரு மனிதனை சொல்லுமாறு நீங்கள் செய்துவிடலாம். ஆனால், அவன் மட்டும் எப்பொழுதும் போல் ஒரே அபிப்பிராயம் உடையவனாகத்தான் இருக்கிறான். அவனை நெருப்பிலிட்டு கொளுத்துங்கள், ஆனால் அவனுடைய சாம்பல், முன்போல் ஒரே அபிப்பிராயத்தை கொண்டிருக்கும் என்கிறார் இங்கர்ஸால்.

கற்பு என்கிற ஆயுதம்

குஷ்பு கூறிய விஷயம் குறித்த விவாதத்தில் கற்பு அதிகம் அடிபட்டது. குஷ்பு சொன்னது, கற்புக்கு எதிரானது என்ற வாதமும், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்கான ஆயுதம், எனவே அது தேவையில்லை என்று ஓரிரு அமைப்புகள் கூறிய வாதமும் எதிரும் புதிருமாக முன் வைக்கப்பட்டன. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், தனியுடமையைப் பாதுகாக்க, வாரிசு தேடி, தனக்கு மட்டுமே ஒரு பெண் மனைவியாக இருக்க வேண்டும் என்று உடமையாளனாக இருந்த ஆண் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலியல் சுதந்திரம் இருபாலருக்கும் இருந்த நிலை மாறி, ஒரு சாரார் மீது திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை நிறைவேறுவது கடினம். எனவே, தெய்வாம்சம், பத்தினித் தன்மை, கற்பு போன்ற கோட்பாடுகள் உருவாயின. அந்த அர்த்தத்தில் பார்த்தால், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்காக முன் வைக்கப்பட்ட ஆணாதிக்க ஒழுக்கவியல் சித்தாந்தம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், காலம் மாறி, நாகரீக சமூகத்தில், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் தேவைப்படும் போது கற்பு என்பது ஒழுக்க நெறி என்ற அடிப்படையில் நீடிப்பது தேவையாக உள்ளது. அது இருபாலருக்கும் பொருந்த வேண்டும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.

கற்பு பெண்களைப் பொறுத்த வரை புனிதமான எல்லைக் கோடாகவும், ஆண்களைப் பொறுத்த வரை அலட்டிக் கொள்ளத் தேவையற்ற விஷயமாகவும் பார்க்கப்படுவதுதான் பாரபட்சமானது. இந்த இரட்டை அளவுகோல் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். குஷ்புவின் கருத்தை எதிர்த்த இயக்கத்திற்குப் பின்புலமாக இருந்த இயக்குநர் தங்கர் பச்சான், எனது படங்களில் கற்புள்ள தமிழ் பெண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லுகிறாரே தவிர, கற்புள்ள தமிழ் ஆண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லவில்லை. அவரால் சொல்லவும் முடியாது. அவரது தென்றல், படக் கதாநாயகன், தினசரி ஒரு பெண்ணோடு உறவு வைப்பவன். அவனைக் காதலிக்கும் கதாநாயகியையும் அனுப்பப்பட்ட பெண்ணாக நினைத்து விட, அவள் கர்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விடுகிறாள். ஆனால் கடைசி வரை, வேறு எவரையும் திருமணம் செய்யாமல் கற்போடு வாழ்கிறாள் என்பது தான் கதை. இப்படியாக இப்படத்தில் தமிழ் பண்பாடு காப்பாற்றப்படுகிறது. பாலியல் அராஜகவாதியான கதாநாயகனால் தமிழ் பண்பாடு எதுவும் ஆகவில்லை!! பரத்தையர் வீதி என்ற தனி வீதியை அனுமதித்த தமிழ் சமூகத்தின் மிச்ச சொச்சம் இன்னும் இருக்கலாம் என்றால் பெண்ணுக்கு மட்டும் தான் எல்லைக்கோடா? பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டும் தானா? குஷ்புவுக்கு முன்னால் எத்தனையோ ஆண்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறியதே இல்லையா? இன்றைக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு ஆண்கள் போகிறார்களே, அவர்களெல்லாம் திருமணத் துக்குப் பின் தான் போகிறார்களா? முன்னால் போகவில்லையா? அப்போது கலாச்சாரம் என்ன ஆனது? சரி, திருமணத்திற்குப் பின்னால் போனால், கலாச்சாரத்துக்கும் கற்புக்கும் பங்கம் ஏற்படாதா? எடுத்தால் கற்பு குறித்த ஒரே நிலைபாடு எடுக்க வேண்டியது தானே? ஆண் செய்தால் தப்பில்லை பெண் பேசினாலே தவறு என்றால் அது அறிவியல் பூர்வ நிலைபாடாக இருக்க முடியாது. பெண்கள் பாலியல் குறித்து பேசவே கூடாது என்பது அடிப்படை வாதமல்லவா?

குஷ்பு ஒன்றும் பெண்ணுரிமைப் போராளி அல்ல! அவர் கூறிய கருத்துக்கள் முற்போக்கும் அல்ல. அதே சமயம் பிற்போக்கும் அல்லவே? எந்த விஷயமும் கறுப்பாகவோ, வெள்ளையாக மட்டுமே இருப்பதல்ல. இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறமாகவும் இருக்கலாம். சில விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ழுசநல ஹசநய என்று கூட சொல்லுவார்கள்.

மெகாத் தொடர்களில், வரிசையாக அத்தனை கதாநாயகர் களுக்கும் இரண்டு மனைவிகள், ஒரு உறவு இருக்கும் போது,  அதற்கு துரோகம் செய்து, மற்றொரு உறவை ஏற்படுத்துபவர் கற்பிழந்தவராக ஏன் ஆவதில்லை? ஆணாதிக்க கலாச்சாரம் தான் இதற்குக் காரணம். தனி உடமை பின்னணியில், உடமையாளர்கள் மத்தியில் தோன்றிய இந்தக் கலாச்சாரம் ஏன் உடமையற்றவர்களையும் கட்டுப்படுத்துகிறது?

மார்க்சியப் பார்வையில், பொருளாதார அதிவாரத்தின் மீது கட்டப்படுவதில் ஒன்று தான் கலாச்சாரம். அதிவாரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் தான், மேல் கட்டுமானத்தையும் கட்டுப்படுத் துகிறார்கள். ஆளும் வர்க்கம், பெண்ணடிமை தனத்தை, தனது வர்க்கச் சுரண்டலுக்குப் பயன்படுத்துவதால், ஆணாதிக்கக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது. அது தான் மேலாதிக்கம் செலுத்துகிற கலாச்சார மாகிறது. உழைப்பாளி மக்கள் அதைத் தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள்.

சுகாஸினி, குஷ்பு வை ஆதரித்து பேசியவுடன், அவரது சாதி அலசப்பட்டது. அவர், கைபர் கணவாய்க்குப் போக வேண்டும் என்று பேசப்பட்டது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனையாக இது மாறக் கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. உண்மையிலேயே, சாதியத்தை தாங்கிப் பிடிக்கிற அதிவாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவும் கற்பு கோட்பாடு உள்ளது. சாதித் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கற்பு வலியுறுத்தப்பட்டது. எனவே, பார்ப்பனியத்திற்கும், கற்பு கருத்தியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் அந்தக் கற்பை கேள்வி கேட்டதாக சொல்லப்பட்ட குஷ்புவை சுகாஸினி ஆதரித்திருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறும் திருமாவளவனோ, அதைப் பெண்ணுக்கு மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார். தந்தை வழி உரிமை சார்ந்த ஆண் மேலாதிக்க தலைமைப் பண்பால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் தான் கற்பு.

கற்பின் உள்ளடக்கம்

கற்பு என்பதன் உள்ளடக்கம் கூட, ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறித் தான் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் தலை கற்பு, இடை கற்பு, கடை கற்பு என்கிற கருத்தியல்களைப் பார்க்க முடியும். கணவன் இறந்தவுடனேயே ஆதங்கத்தினால் இயல்பாய் உயிரை விடுதல் தலை கற்பாகவும், உடன்கட்டை ஏறி உயிர் போக்குதல் இடை கற்பாகவும், கைம்மை நோன்பு நோற்பது கடை கற்பாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. அதே சமயம், கைம்மை நோன்பு என்கிற கொடுமையை அனுபவிப்பதை விட, ஈமத் தீயில் இறப்பது நல்லது என்று பெண்கள் பாடிய வரிகளும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பெண்ணிடம் வாழ்ந்து திரும்பிய கோவலனை வெறுக்காது, அவன் மூலதனத்துக்காக சிலம்பையே எடுத்துக் கொடுத்த கண்ணகியும், தொழுநோயால் பீடிக்கப்பட்ட கணவனை தாசியிடம் கூடையில் சுமந்து சென்ற நளாயினியையும் கற்பரசிகள் என்று தமிழ் சமூகம் புகழ்ந்ததை மறந்து விட முடியாது. கற்புடைய மகளிர் கணவன் உடனுறையும் போது மட்டுமே தலைவாரி பூச்சூடினர். அவனைப் பிரிந்திருந்த பொழுது புனையாத ஓவியமாக இருந்துள்ளனர் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணம் கூட, பெண்ணின் கற்பு நிலையை பாதுகாக்க என்றே கூறப்பட்டது.  அவளுக்கு பாலியல் சுதந்திரம் இருக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள். ஆணாதிக்க சமூகம், பெண்ணின் பாலியலை கட்டுப்படுத்த எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறது என்பது இக்கோட்பாடுகளைப் பார்த்தால் புரியும். கற்பு என்பதைப் பெண்களின் பெருமையாகவே தொல்காப்பியர் சித்தரிக்கிறார் என்றாலும், பழந்தமிழரின் வாழ்க்கையை களவு, கற்பு என்று இரு நிலைகளாகப் பிரிகிக்கிறார். திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதைக் களவு வாழ்க்கை என்றும், கற்பு என்கிற வாழ்வியல் நெறி திருமணம் என்று சடங்கின் மூலம் தொடங்குகிறது என்றும் கூறுகிறார். அதாவது கற்பு நெறி என்பது திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்ட ஒன்றாக தொல்காப்பியர் காலத்திலிருந்து, பின்னர் அது மாறி மாறி, மணிமேகலை பிற நெஞ்சு புகாதவர் தான் கற்புடையவர் என்று கூறுகிறது.

பாரதி, பாரதிதாசன், புதுமை பித்தன், ராஜம் கிருஷ்ணன், வாசந்தி என்று பலரும் கற்பு கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், பொருளாதாரத்தில் கற்பு அடிபட்டு போகிறது என்பதையும், அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையும் பொன்னகரம் கதையில் கூறுகிறார். மு.வரதராசனார் இதையே “எப்பொழுது எவனுடன் வாழ்கிறாளோ, அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தால் போதும் அதுதான் கற்பு” என்கிறார்.

“கற்புநிலை யென்று சொல்ல வந்தார்
இருகட்சிக்கும் அஃது பொதுவில்
வைப்போம்”

(பெண்கள் விடுதலை விரும்பு – பாரதி)

... கற்பென்று பூச்சி காட்டும்
கழுதைகளை நிந்தனை செய்

– ஜீவா

…கற்பு நலந் தருமாயின் அதையிரு
பாலரும் கைக் கொள்வோம் – அது
காளையர்க்கில்லை கன்னியர்க் கென்றிடில்
கட்டுப்படுவோமா

– சாமி சிதம்பரனார்

கற்பு என்ற வார்த்தையும், அதைப்பயன்படுத்தும் முறையும் புரட்டானது. பெண்ணடிமை கொள்ள ஏற்படுத்திய வார்த்தை அது.

– பெரியார்

கற்பு என்பதை உடல் தூய்மையோடு பொருத்திப்பார்ப்பது சரியல்ல, மனத்தூய்மை தான் கற்பு என்கிற விளக்கமே ஏற்புடையதாக உள்ளது. மனதளவில் துரோகம் செய்ய விரும்பாத ஒரு பெண், உடல் அளவில் பலவந்தப்படுத்தப்பட்டால், அதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அது அவளுடைய கற்பு நெறியை எப்படி பாதிக்கும்? நடந்தது விபத்து, தாக்குதல், பலாத்காரம், வன்முறை! அவள் விரும்பி நடந்ததல்லவே அது?

ஆயினும் பொதுவாகக் கற்பழிப்பு என்கிற வார்த்தை பிடிவாதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கற்பு உள்ள பெண்களை, கற்பிழந்தவர்களாக சித்தரிக்கிறோம். இது எப்பேர்ப் பட்ட அநியாயம்? இந்த நடவடிக்கையில் மனதறிந்து ஈடுபட்டதன் மூலம் அந்த ஆணின் கற்பு தானே அழிகிறது? எனவே அவன் தான் கற்பழிந்தவன் ஆகிறான். இதை மாற்றிக் கூறுவதன் மூலம் ஆணாதிக்க சித்தாந்தத்தின் பிரச்சாரகர்களாக நாம் மாறிப்போகிறோம்.

இப்போது குழந்தை திருமணம் சட்டத்தால் தடுக்கப்பட்டு, விதவை மறுமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்தும் மறுமணமும் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக மாறிவிட்ட சூழலில், கற்பு என்பதன் பல உள்ளடக்கங்கள் அடிபட்டு போகின்றன. குஷ்பு சொன்னது தவறு என்றால், உச்ச நீதி மன்றம் சொல்வதும் தவறுதான். திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வதை உச்ச நீதி மன்றம் அங்கீகரிக்கிறது. உச்ச நீதி மன்றம் முன் செருப்பும், துடைப்பமும் காட்டப்படுமா?

திருமாவளவன் ஒரு பேட்டியில் பெண்ணியவாதிகள் தம் வீட்டில் குழந்தைகள் வெளியே போகும் போது ஆணுறையைக் கையில் கொடுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு வா என்று அனுப்புவார்களா? எனக் கூறியிருக்கிறார். இதைவிட பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்த முடியாது. பெரியார் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். திருமாவளவனின் கேள்வி அவருக்கும் சேர்த்து தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் யாரும் யார் மீதும் திணிக்க முடியாது. அவற்றைக் காக்கிற போலீ வேலையை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை. அப்படி எடுத்துக் கொள்பவர்கள் கூட, நமது பண்பாட்டின் நல்ல அம்சங்கள் நீர்த்துப் போகும் போது கவலைப்படுவதில்லை. பரிசம் தான் பழக்கமாக இருந்தது. இன்று, அந்த பண்பாடு சிதைந்து, உலகமய நுகர்வு கலாச்சாரத்தின் ஒத்துழைப்போடு வரதட்சணை எங்கும் பரவி நிற்கிறது. ஆனால் இவர்களது சொல்லாடல்களில் கணவன் வழிபாட்டு கருத்தியலுக்கு இடம் இருந்ததில்லை. இன்று அதுவும் சமகிருத மயமாக்கலில் சரிந்து கொண்டு வருகிறது. பழந்தமிழ் சமூகத்தில் பாலியல் வல்லுறவுக்கு குழந்தைகள் ஆளானதில்லை. இன்று ஆகிறார்கள். இவையெல்லாம் கலாச்சார சீரழிவு இல்லையா? வேலைக்கு செல்லும் பெண்களில் 10 சதம் தான் ஒழுக்கமானவர்கள் என்று சொல்லி, 90 சதம் உழைக்கும் பெண்களின் கற்பை விமர்சித்த சங்கராச்சாரியை எதிர்த்து எத்தனை செருப்புகள், துடைப்பங்கள் உயர்ந்தன?எத்தனையோ  வாழ்வியல் பிரச்சனைகள் அழுத்திக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவ ஊடகங்கள் பாலியல் பிரச்சனைகளை ஏலம் போட்டுக் கொண்டிருப்பதன் நோக்கம், வணிக நோக்கமேயன்றி வேறென்ன? உலகமயம் உருவாக்கும் கலாச்சாரம், நம்மை நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது. சமூகப் பொறுப்புணர்வு அதற்கு இல்லை. இந்த அம்சமே முக்கிய முன்னிறுத்தப்பட்டு  எதிர்க்கப்பட வேண்டும்.

எனவே, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் அகவாழ்விலும், புற வாழ்விலும் இருபாலருக்கும் சில கட்டுப்பாடுகள் தேவை என்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், புறவாழ்வின் விதிமுறைகளை அடிப்படையே அக வாழ்க்கைக்கு பொருத்தி விட முடியாது. குறிப்பாக அகவாழ்வின் ஒரு பகுதியான பாலியல் நடவடிக்கைகளை அரசு எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கவும் முடியாது. அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளல்ல. உதாரணமாக ஒருவரின் சம்மதம் அதில் ஈடுபடுத்துவது போன்றவை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் சமூகப் பரிணாம வளர்ச்சியில் வந்த ஒழுங்குமுறைகள். அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதையும் பாலியல் வல்லுறவு குற்றமாக்க வேண்டும் என்கிற வாதம், கடந்த 10 ஆண்டுகளாக முன் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இப்படியாக, தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவாதத்தின் மூலம் தான் நிர்ணயிக்க முடியுமே தவிர கலாச்சார காவலர்களாகிய கும்பல் (ஆடி) சேர்ந்து தடுத்து விட முடியாது. அதுவும் செலக்டீவ் அம்னீஸியா போல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தான விதிமுறையாக்கவும் கூடாது.

வாழ்வியல் சூழல் ஆரோக்கியமாக, சமத்துவக் கோட்பாடு அடிப்படையில், சகிப்புத் தன்மையோடு இருக்கும் போது மனித வாழ்வின் அகம், புறம் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கும். அவற்றை நோக்கிப் போகலாமே?

ஆதாரம்:

கற்பெனும் சிறையினிலே – கவிஞர் குடந்தையான்
பெண்ணியம் – அணுகு முறைகள் – இரா.பிரேமா
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் – அரங்க மல்லிகா
மனித ஜாதியின் சுதந்திரம் – இங்கர்ஸால்
வால்டேர் பொன் மொழிகள்
ஆணாதிக்கமும் பெண்ணியமும்

– பி.இரயாகரன்

பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி

அ.குமரேசன்

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

`பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான ஆய்வுக்கு உரியது. இதைத் தனிமனித உளவியல், சமூக உளவியல் ஆகிய இரண்டு கோணங்களிலும் காணலாம். கார்ல் மார்க்ஸ், “உணர்வு சமுதாயத்தை உருவாக்கும் காரணியாக இருப்பதில்லை. சமுதாயம்தான் உணர்வை உருவாக்குகிறது,” என்றார். பண்பாட்டு உளவியல் என்பதும் சமுதாயத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதுதான். சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப பண்பாட்டு நியதிகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

பண்பாடு என்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, வாழ்க்கை விதியாகவும் வலியுறுத்தப்படுகிறது. இப்படியிப்படித்தான் வாழ வேண்டும், இன்னின்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், தனித்துவங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் வரம்புகள் வரையப்படுகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட பகுதி மக்களின் அடையாளத்தோடும் சம்பந்தப்பட்டதாகிறது பண்பாடு. குழந்தை பிறப்பு, திருமண உறவு, பெண் வயதுக்கு வருதல், மரணம், வீடு கட்டுதல், விவசாய நிகழ்வுகள்….என வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அந்த அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. அந்தப் பண்பாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது தனி மனிதரின் பெருமைக்குரிய பாங்காக அந்தந்த சமூகங்களால் கற்பிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் மனித மனம் இயற்கையான சுதந்திரத்தை, வேலிகளற்ற உறவை, பாகுபாடுகளற்ற நேயத்தை விரும்புகிறது. அதற்குத் தடையாக இருக்கிற பழைய பண்பாட்டுக் கட்டுகளை அறுத்து முன்னேறத் துடிக்கிறது. சமத்துவப் பண்பாடு என்கிற புதிய பண்பாட்டை நிறுவ முயல்கிறது. சமூகப் போராட்டங்களின் சாராம்சம் இது.

கட்சியின் பங்கு

இதில் கட்சி என்பதன் பங்கு என்ன?

“தத்துவம் இல்லாத அமைப்பு மலட்டுத்தனமானது; அமைப்பு இல்லாத தத்துவம் குருட்டுத்தனமானது,” என்கிறது மார்க்சியம். பழைய பண்பாட்டு அமைப்புகளைப் பாதுகாப்பது, புதிய பண்பாட்டினை மலரச் செய்வதற்காக பழைய அமைப்புகளில் உடைப்பு ஏற்படுத்துவது ஆகிய இந்த இரண்டு செயல்களிலுமே கட்சி அமைப்புகள் பங்கு வகிக்கின்றன.

கட்சி என்கிற அரசியல் வடிவம் எப்போது உருவெடுத்திருக்கும்? மன்னராட்சிக் காலங்களில் அரண்மனை சார்ந்த போட்டிக் குழுக்கள் இருந்திருக்கக்கூடும். அரண்மனைக்கு வெளியேயும்கூட அடிமைத்தன எதிர்ப்புடன், விடுதலை உணர்வுடன் பல்வேறு குழுக்கள் செயல்பட்டிருக்கக் கூடும். இன்று நாம் பார்க்கிற கட்சி அமைப்புகளுக்கான திட்டவட்டமான வடிவம் நாடாளுமன்றம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவை நிலைபெற்றதன் பின்னரே உருவாகின. மக்கள் முன் தமது கொள்கை களையும் திட்டங்களையும் எடுத்துரைப்பது, அவர்களது ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்வது, எதிர்க்கட்சியாக அமர்ந்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதெல்லாம் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத் துடன் இணைந்தே  நடைமுறைக்கு வந்தன.

முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு அணுகு முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும்கூட அடிப்படையில் முதலாளித் துவத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. முதலாளித் துவம் நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானது – புரட்சிகரமானது என்பதால் முதலாளித்துவக் கட்சிகளிடமும் அந்த அம்சங்கள் பொதுவாக இருக்கும். ஆயினும், அவர்களைப் பொறுத்தவரையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்” என்ற கோணத்திலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக இருக்கி றார்கள்.

இதற்கு மிகச் சரியான சமீபத்திய எடுத்துக்காட்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல். ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜான் கெர்ரி இருவருக்கும் – அதாவது அவர்களது குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுக்கும் – பெரிய கொள்கை மாறுபாடுகள் கிடையாது.  “என்னிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள்” என்ற முறையிலேயே அவர்களுடைய பிரச்சாரங் களும் விவாதங்களும் இருந்தன. இராக், இஸ்ரேல் விவகாரங்கள் முதல் உலகளாவிய பொருளாதார ஆதிக்கம் வரையில் அவர்களிடையே முக்கிய மாறுபாடு எதுவும் கிடையாது.

பண்பாட்டு ஆதிக்கம்

இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே கட்சிகள் உருவாகின என்றாலும் காங்கிரஸ் கட்சிதான் பெரிய இயக்கமாக இருந்தது. நீதிக்கட்சி போன்ற வட்டாரக் கட்சிகள் உருவாகி, பின்னர் இன்றைய மாநிலக் கட்சிகள் பலவும் களத்திற்கு வந்தன. முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒத்த கருத்துடையவர்கள் என்றாலும் மாநில மக்களின் உரிமைகள், தனித்துவ அடையாளங்கள், மொழிப்பாதுகாப்பு, மாநில வளர்ச்சிகள் போன்ற அக்கறைகளோடு புறப்பட்ட கட்சிகள் இவை. காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், சமரசங்கள் மாநிலங்களின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாத பலவீனங்கள் போன்ற காரணங்களால் இந்த மாநிலக் கட்சிகள் மக்கள் ஆதரவைப் பெற்றன. அதே காரணங்களால் மக்களின் அதிருப்தியையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் பயன்படுத்திக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியும் தலைதூக்கியது.

இன்று,  மாநிலக் கட்சிகளை கூட்டுச் சேர்த்துக்கொள்ளாமல் எந்தவொரு அகில இந்தியக் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது – இது ஒரு முக்கிமான வளர்ச்சிப்போக்கு. பாஜக-வைப் பொறுத்தவரையில்  அது ஆன்மீகத்தை அல்லது மத உணர்வை தனது அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்கிற கட்சி மட்டுமல்ல, அடிப்படை யிலேயே நாட்டின் ஒரு ஒற்றை மத ஆதிக்கத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்ட, அதன் மூலம் ஒரு ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முயல்கிற கட்சியாகும். முதலாளித்துவ வளர்ச்சியின் நவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டே இப்படியொரு பிற்போக்குத்தனமான கட்சி வளர்ந்தது எப்படி? இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உள்ளடக்கத் தோடு தொடர்புகொண்ட இந்தக் கேள்வியும் விரிவாக ஆராயப்பட வேண்டியது.

முதலாளித்துவ நாடாளுமன்றம் பற்றிய மாயைகள் இன்றி, அதே நேரத்தில் இன்றைய எதார்த்தம் அதுதான் என்ற புரிதலோடு அதைப் பயன்படுத்துகிற கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகியவையும் இதர சில இடதுசாரிக் கட்சிகளுமாகும்.

மூன்று சக்திகள்
பண்பாட்டுக் களத்தில் மூன்றுவித சக்திகள் போராடுகின்றன. ஒன்று, மதத்தின் பெயரால் ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தைத் திணிக்க முயல்கிற கூட்டம். இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, `இந்து’ என்ற உணர்வுதான் இந்திய தேசிய உணர்வு என்று மூளைச்சலவை செய்கிற கூட்டம் இது. ஒருபக்கம் பல்வேறு சாதிகளாகவும், இனங்களாகவும் இருக்கிற எல்லோருமே இந்துக்கள்தான் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நியதிகளே ஒட்டுமொத்த சமுதாயத்தின் நியதிகளாக நிறுவ முயல்கிறது இக்கூட்டம். மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவைதான் என்றும், “அவரவர் அவரவருக்கு இடப்பட்ட பணிகளை செய்துகொண்டிருந்தால் சமூகத்தில் பிரச்சனையே வராது,” என்னும் நவீன வர்ணாஸ்ரமத்தை – நவீன பார்ப்பனீயத்தை – நிறுவ முயலும் பண்பாட்டுச் சர்வாதிகார ஆதிக்கவாதிகள் இவர்கள். இந்த ஆர்எஸ்எஸ் – சங்பரிவாரக் கூட்டத்தின் அரசியல் முகம் பாரதீய ஜனதா கட்சி. சிவசேனா போன்ற கொசுறுகளும் உண்டு.

இன்றைய அரசியல் நிலைமைகளுக்கான பல்வேறு சாகசங்களையும் சமரச சாமர்த்தியங்களையும் செய்துகொண்டாலும்கூட, அடிப்படையில் “நாத்திகம் என்பது கடவுளை மறுப்பதுகூட அல்ல, நியதிகளை மறுப் பதுதான்,” என்ற பார்வையோடு வலை விரிக்கிற நவீன மனு தர்மவாதிகள் இவர்கள். பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், புதுவை துணை நிலை ஆளுநராக இருந்தவருமான மல்கானி ஒரு பேட்டியில், “இந்த நாட்டின் விவசாயிகள் எதற்காக கல்வி கற்க வேண்டும்? அவர்கள் படித்து யாருடன் தொடர்பு கொள்ளப்போகிறார்கள்,” என்று கேட்டது ஒன்றும் வாய்தவறி அல்ல. அதேபோல் பாஜகவின் மகளிர் பிரிவு, “மேற்கத்திய பாணி பெண் விடுதலையில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்திய பண்பாடு சார்ந்த பெண் கல்வி, பெண்ணின் உயர்வு, சமத்துவம், பெருமை என்பவற்றை நிலை நாட்டுவோம்,” என்று பிரகடனம் செய்திருக்கிது. இதன் அர்த்தம் மனுதர்மம் போதிக்கிற “அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு” ஆகியவையே இந்தியப் பெண்ணின் பெருமை என்பதுதான் என விளக்கவேண்டியதில்லை.

பொருளாதார உளவியல்
இந்த பாரதீய ஜனதா கட்சி இவ்வாறு இந்துத்துவம் பேசுவதோடு மட்டுமல்லமல் அடிப்படையான பொருளாதார களத்தில் காங்கிரசைவிட பலமடங்கு வேகத்தில் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலக மயத்திற்கு விசுவாசமாக இருந்தது, இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளும், அந்நியப் பன்னாட்டுச் சந்தை தாதாக்களும் பாஜக-வை ஆதரிப்பது தற்செயலாக அல்ல. இந்திய மக்களின் – உழைப்பாளிகளின் எதிர்ப்பு உணர்வுகள் பண்பாட்டுப் பெருமையின் பெயரால் முனை மழுங்கச் செய்யப்படுவது இந்த ஆளும் வர்க்கத் தலைமைக்கு வாய்ப்பான ஒன்று. கோக் – பெப்சி குடியல் முதல், ஷாம்பு குளியல் வரை நாகரீகங்களாகத் திணிக்கப்பட்டதில் இந்த உலகச் சந்தை ஆக்கிரமிப்பாளர்களின் லாப நலன்களும், அதற்கு உடந்தையாக இருந்த முந்தைய பாஜக ஆட்சியின் நலன்களும் கலந்திருந்தன.

சுதந்திர இந்தியாவில் நீண்டகாலம் தனிக்கட்சியாகவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பண்பாட்டுப் பிரச்சனைகளில் உள்ள தெளிவின்மை, உறுதியின்மை, சமரசக் கொள்கை ஆகியவையும் பாஜக-வின் வளர்ச்சிக்கு சாதகமாக  அமைந்தன. எடுத்துக்காட்டாக – தொலைக்காட்சியிலும் வானொலியிலும் இந்தியப் பண்பாடு என்பதாக பரதநாட்டியத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் பார்ப்பனீய கோயில் சார்ந்த செயல்பாடுகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்துவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது. அரசு விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுதல், நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் ஒலிபெருக்கிகளில் நாதசுரம், கிளாரினெட், வீணை போன்ற கருவிகளின் இசையில் கர்நாடக சங்கீதம் மட்டுமே ஒலித்தல்…இவை முந்தைய தனி காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தன. இன்றைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் நடக்கின்றன. இங்கு வாழும் இதர பிரிவு மக்களின் வழிபாடுகள், கலைகள் முதலியவற்றைப் புறந்தள்ளுகிற அல்லது இரண்டாம் நிலைக்குத்தள்ளுகிற இந்தப் போக்கும் மனுதர்மவாதிகளுக்கு வாய்ப்பாகி விட்டது. பாஜக ஆட்சியின்போது இவை இன்னும் அதிகார பலத்தோடு வலிந்து திணிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின் ஏகபோக முதலாளித்துவ ஆதரவு – நிலப் பிரபுத்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் சாமான்ய மக்களை வஞ்சித்து, இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை பாஜக தனக்கு சாதகமாக அறுவடை செய்துகொண்டதும் நடந்தது.

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு ரயில்வேத்துறை விழாவில்,  அமைச்சர் வந்து சேரும் வரையில் ஒலிபெருக்கியில் கிளாரினெட் இசையில் இந்து மத பக்திப்பாடல்கள், சாஸ்திரீய இசையாக ஒலித்துக்கொண்டிருந்தன. சென்னை சாஸ்திரிபவன் வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கால் கடுக்க காத்துக்கொண்டிருப்பவர்களின் சோர்வு நீக்குவதற்காக கருவியிசை ஒலிபரப்பப்படுகிறது – அத்தனையும் கர்நாடக  இசை மட்டுமே. இதன் பின்னணியில் மற்ற மதங்களின் பண்பாடுகள் மட்டுமல்ல, இந்துக்களிலேயே பிராமணர் அல்லாத மற்ற பிரிவினரின் பண்பாட்டு அடையாளங்களும் மூர்க்கத்தனமாக புறக்கணிக்கப்படுகின்றன. இந்தப் பண்பாட்டுத் தாக்கு தலை, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை காங்கிரஸ் கட்சி புரிந்துகொண்டிருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மாநிலக் கட்சிகள்
அடுத்து, பண்பாட்டுக் களத்தில் போராடுகிற இன்னொரு சக்தி, ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிராக மற்ற சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க நிற்பதாகும். தமிழகத்தில் திராவிட இயக்கத்திலிருந்து உருவான திராவிடக் கட்சிகள் மொழிப்பாதுகாப்பு, தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு போன்ற முழக்கங்களோடுதான் முன்னுக்கு வந்தன. ஆனால், பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் அல்லது தமிழர் பெருமை என்ற பெயரில் இந்தக் கட்சிகளும் கூட  பழமைவாதம் பேசியது ஒரு சோகம். கடந்தகால மன்னராட்சி அடை யாளங்களை மீட்க இக்கட்சிகள் முயன்றயான. ஒரு பக்கம் பார்ப்பனீயத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குரல், இன்னொரு பக்கம் அதை ஆரோக்கியமான முற்போக்குத் திசையில் கொண்டு செல்வதற்கு மாறாக குறுக்கிவிடுகிற போக்கு. மலர்க்கிரீடம் சூடுதல், `”முடிசூடா மன்னன்”, “தளபதி” என்றெல்லாம் பட்டங்களை வழங்குதல் போன்றவற்றில்கூட அந்த மன்னராட்சிக்கால மயக்கங்கள் உண்டு.

மாநில முதலாளித்துவக் கட்சிகளின் இப்படிப்பட்ட மயக்கங்களும்கூட, தெளிவான இந்துத்துவம் பேசுகிற கும்பலுக்கு வசதியாகிப்போனது. எந்த பிராமணீயத்திற்கு எதிரான போர்க்குரலாக திராவிடக் கட்சிகள் தலை யெடுத்தனவோ, அந்த பிராமணீயத்திற்காகவே நிற்கிற பாஜக்ர-வோடு இவர்கள் அரசியல் உறவுகொள்ள தயங்கவில்லை. பெரியாரின் தாடியில் தீ வைக்கிற இந்தச் செயலின் பின்னணியில் இவர்களது ஆட்சி அதிகார தாகம், பதவி மோகம் ஆகிய அரசியல் கணக்குகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடை யாளங்களுக்கான போராட்டப் பாதையிலிருந்து விலகிய குழப்பங்களும் உண்டு. பொருளாதார கொள்கை சார்ந்த மயக்கங்களும் உண்டு. இன்றைக்கு அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது – இந்தத் திருத்தம் நீடிக்குமா என்பது வெறும் ஆய்வாளர்களுடைய சந்தேக புத்திக் கேள்வி. நீடிக்க வேண்டும் என்பது சமுதாய அக்கறையுடன் செயல்படுகிறவர்களின் விருப்பம்.
தலித் மக்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவென்று புறப்பட்ட கட்சிகள், வாக்கு வங்கிகளை ஏற்படுத்திக்கொண்டு பெரிய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்கிற விபத்தும் நடந்தது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகளாக உருவான கட்சிகளும் பேரம் பேசுகின்றன. சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி பேரம் நடத்தத் துவங்கின.

இப்படிப்பட்ட சமரசங்கள், பின்னடைவுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும் – ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலும்,  மற்றைய சமூகங்களின் பண்பாட்டு அடையாளக் குரல்களை இந்த அளவிற்கேனும் ஒலிக்கச் செய்ததிலும் இவர்களது பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடுவதற் கில்லை. களத்தில் இக்கட்சிகள் இறங்காமல் விட்டிருந்தால், மனுதர்ம வாதிகளின் ஆதிக்கத் திட்டம் எளிதில்  நிறைவேறியிருக்கும் என்பதை மறைப்பதற்கில்லை.
பண்பாட்டு அடையாளப் போராட்டம் என்ற பெயரில், அவரவர் அடையாளங்களோடு நிற்க வேண்டும், கலப்பு என்பதே கூடாது என்று வாதிடுகிறவர்களும் இருக்கிறார்கள். எதுவும் மாறாமலே இருந்திருந்தால், கலப்பு என்பது நடக்காமலே போயிருந்தால் இன்றைய வளர்ச்சிகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். பரிணாம வளர்ச்சியே தேய்ந்துபோயிருக்கும். ஆனால் அந்தக் கலப்பு சந்தை வேட்டைக்காகவும், சிலரது ஆதிக்க வேட்கைக்காகவும் சமுதாயத்தின் தலையில் வலிந்து கட்டப்படுவதாக இருக்கக்கூடாது. இயற்கையான, தன்னியல்பான, மாற்றத்தின் நன்மை களையும் தீமைகளையும் ஆராய்ந்து மனமுவந்து ஏற்றுக்கொண்டதாக அந்தக் கலப்பு நடைபெற வேண்டும்-பேண்ட், சட்டை, சுடிதார் முதலிய உடைகள் இயல்பாக ஏற்கப்பட்டதுபோல. ஆனால், இத்தகைய அறிவியல் பார்வையோடு இந்தப் பிரச்சனகளை எத்தனை கட்சிகள் அணுகுகின்றன? கூட்டு விவாதத்தின் அடிப்படையில் கொள்கை நிலைபாடுகளோ கருத்துக்களோ மேற்கொள்ளப்படாமல், கட்சியின் ஆகப்பெருந் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுவே கட்சியின் கருத்து என்ற `பண்பாடு’, அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தொண்டர்களும் கேள்வியின்றி அதை ஏற்றுக்கொள்கிற `உளவியல்’ ஆகியவை தனி விவகாரங்கள்!

கம்யூனிஸ்ட் பண்பாடு
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டுத் தலைமை, கூட்டு விவாதம், கூட்டு முடிவு  என்ற ஜனநாயகத்துடன் இயங்குகின்றன. தலைவர் சொல்வதே வேதவாக்கு என்ற பண்பாடு, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற உளவியல் இரண்டுமே மார்க்சிய கட்சிகளிடம் கிடையாது. சொல்லப்போனால் உள்ளூர்க் கிளைகள் முதல் தலைமைக் குழுக்கள் வரை மாநாடுகளின் மூலம் கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் பங்கேற்கிற உயர்ந்த பண்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது 18வது அகில இந்திய மாநாட்டை டில்லியில் 2005ம் ஆண்டு ஏப்ரலில் நடத்தவுள்ளது.  அதன் அரசியல் தீர்மானத்தை இறுதிப்படுத்துவதில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் பங்கேற்கிறார்-அதற்கான அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இவ்வாறு, கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலேயே பங்களிப்புச் செய்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் தனிமனித உளவியல் எத்தகையதாக இருக்கும் என்று விளக்கவேண்டுமா என்ன?

பண்பாட்டுக் களத்தில் நடக்கிற ஆதிக்கங்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுகின்றன. அதே நேரத்தில் அந்தப் போராட்டம் மக்களின் எந்தப் பிரிவினரையும் தனிமைப்படுத்துவதாகிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இயங்குகின்றன. பண்பாட்டுப் போராட்டத்தின் அடித்தளம் வர்க்கப் போராட்டம்தான் என்ற புரிதலோடு – வேறு சொற்களில் சொல்வ தானால், வர்க்கப் போராட்டத்திலிருந்து வர்ணப் போராட்டத்தை அல்லது பண்பாட்டுப் போராட்டத்தை தனி அஜெண்டாவாகப் பிரிப்பதற்கில்லை என்ற புரிதலோடு – இயங்குகின்றன. இதன் அர்த்தம், வர்க்கப் போராட்டம் என்றால் வெறும் பொருளாதாரப் போராட்டமே என்பதல்ல; அதற்கு மட்டுமே முன்னுரிமை என்பதல்ல; பொருளாதார சமத்துவம் வந்துவிட்டால் “ஆட்டமேட்டிக்காக” மற்ற மாற்றங்களும் வந்துவிடும் என்று பண்பாட்டுப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதல்ல. அப்படி கம்யூ னிஸ்ட்டுகள் அல்லாதவர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே கூட புரிந்துகொண்டால் அது தவறு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், இதில் தெளிவான நிலைபாடுகளைக், கடந்தகால  அனுபவங்களின் பாடங்களி லிருந்து கற்றுக்கொண்டு உருவாக்கிக்கொள்கிறது. விமர்சனம் – சுய விமர்சனம் என்ற அடிப்படையில் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருக்கிறது. 1992 டிசம்பர் 6ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடெங்கும் கலவரங்கள் பரவியதைத் தொடர்ந்து, தில்லியில் நடந்த ஒரு நல்லிணக்கக் கருத்தரங்கில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், “இப்படிப்பட்ட நிலைமை உருவானதில் இடதுசாரிகளாகிய எங்களுக்கும் பங்கு உண்டு. பொருளாதாரப் பிரச்சனை களில் கவனம் செலுத்திய அளவுக்கு நாங்கள் சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்,” என்று வெளிப்படையாகக் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி கற்றுக்கொள்வதற்கும், சரியான நிலைபாடுகளை உருவாக்கிக்கொள்வ தற்கும் தனது கதவுகளை ஒருபோதும் மூடிக்கொண்டதில்லை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

இறை நம்பிக்கை, மதப்பற்று, போலியான தேசியவாதம் – ஆகியவற்றின் அடிப்படையில் சங் பரிவாரத்தினர் துவங்கிய பண்பாட்டு மேலாதிக்கத்தை ஓரளவு தடுக்க முடிந்திருக்கிறது என்றால் அதில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. சங் பரிவாரம் தனது முதல் எதிரியாக கம்யூனிஸ்ட்டுகளையே கருதுகின்றது என்பது அதன் வெளிப்பாடுதான். அதே நேரத்தில், பண்பாட்டுத் தளத்தில் கம்யூனிஸ்ட்டு களின் தலையீடும் ஈடுபாடும் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

இன்றைக்கு, காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய மதவெறித் திட்டத்தைத் தொடங்கவும், கலவர விதைகளை விதைக்கவும் சங்பரிவாரம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. உளவியல் ரீதியாக மக்களின் நம்பிக்கைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் அடைய முயல்கிறது பாஜக. ஆயினும், பொதுவாக அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடவில்லை. இப்படிப்பட்ட மன நிலை வளர்ந்திருப்பதில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு தலையாயது.

அடித்தளம்
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இங்கே மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள், சாதியப்பாகுபாடுகள், பெண்ணடிமைத்தனம், மரபு என்ற பெயரில் குடும்பங்களில் நிலவும் ஜனநாயகமின்மை முதலியவை நீடிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் இங்கே முதலாளித்துவம் கட்டப்பட்டது, நிலப்பிரபுத்துவத்தை தகர்த்த இடிபாட்டின் மீது அல்ல. முதலாளித்துவம் தனது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை தகர்க்கிற கடமையை நிறைவேற்றவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கூடிக்குலவுகிறது. அந்தக் கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் விழுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்தைப்பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில் இவ்வாறு கூறுகிறது: “… (சுதந்திர இந்தியாவில்) புதிய அரசுக்கு தலைமையேற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமையைப் பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான் இந்திய சமூகத்திற்கு புத்துயிர்  அளிக்கும்  பாதை அமைகிறது.

புல்லுருவித்தனமான நிலப் பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்நிய ஆதிக்கப்பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால் முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழி ஏற்பட்டிருக்கும். ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் தொடர் விளைவுகளை எண்ணி அச்சமுற்ற பெரு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக்கொண்டதோடு, ஏகாதிபத்தியத்தோடும் சமரசம் செய்துகொண்டது……முதலாளித்துவப் பாதையின் தன்மை ஆளும் வர்க்கங்களின் இந்தத் தன்மையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் பட்டது.”

கட்சித் திட்டம் இதுபற்றி மேலும் கூறுவதாவது: “…நாடு முழுவதும் சாதியப் பாகுபடும், சாதிய ஒடுக்குமுறையும், மிக மோசமான பாலியல் ஒடுக்குமுறைகளும், ஏழைகள், கந்துவட்டிக்காரர்கள் மற்றும் வர்த்தக மூலதனக்காரர்களாக சுரண்டப்படுவதும் தடையின்றி நடக்கின்றன. இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது பழைய வடிவங்களை உறுதியான முறையில் ஒழித்து உருவாக்கப்படவில்லை. முதலாளித்துவத் திற்கு முந்தைய உற்பத்திமுறை மற்றும் சமூக அமைப்பு எனும் சீரழிந்த வடிவத்தின் மீது பொருத்தப்பட்டது. `நவீனத்தின்’ வளர்ச்சி, காலத்திற்கு ஒவ்வாதவற்றைத் தவிர்த்துவிடவில்லை……”
“……பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சக்திவாய்ந்த சர்வதேச தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி நமது நாட்டின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையில் நேரடியாகத் தலையிட ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கிறது….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.
“…மதச்சார்பின்மைக் கோட்பாடும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ளது என்று அரசின் பெருமுதலாளி வர்க்கத் தலைமை பறைசாற்றிக்கொள்கிறது. எனினும் நடைமுறையில் மதச்சார் பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே முற்றாகத் திரித்துக் கூறமுயல்கிறது. அரசியலையும் மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும்  அரசியல் வாழ்க்கையில் அனைத்து மத நம்பிக்கைகளும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்பவைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது…,” என்றும்  கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. காலையில் அகில இந்திய வானொலியைத் திருப்பினால், ஒரு இந்துமத பக்திப்பாட்டு, ஒரு முஸ்லிம் பாட்டு, ஒரு கிறிஸ்துவப்பாட்டு என்பதாக ஒலிபரப்பப்படுகிற ஏற்பாட்டில் இதன் விளக்கத்தைக் காணலாம்.

“…..சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதிலும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பு தோல்விகண்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்கள் தீண்டாமை எனும் பாரபட்சத்தின் இதர வடிவங்களுக்கு உள்ளாக்கப்படு கின்றனர். இதற்கு எதிராக தலித் மக்களிடம் வளர்ந்துவரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் வன்செயல் மூலம் எதிர் கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. சாதிகளாகப் பிரிக்கப்பட்ட சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள்…………. அதே நேரத்தில் வாக்கு வங்கிகளைத் திரட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே சாதிய உணர்வுகள் தூண்டப்பட்டு சாதியப் பகைமைகள் ஏற்படுத்தப் படுவதன் மூலம் பொதுவான ஜனநாயக இயக்கங்களிலிருந்து அடித்தட்டு மக்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிற….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

“…சுதந்திரப் போராட்டத்தில் சமமாக பங்கேற்ற பெண்கள், இந்தியா விடுதலை பெற்றவுடன் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த நிலப்பிரவுத்துவ தளைகளிலிருந்தும் பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை கிடைக்கு மென்று நம்பினார்கள். அவர்கள் முன்னேறுவது என்பது ஒருபுறமிருக்க,  ஐம்பதாண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆணாதிக்கம் என்பதையே அனைத்துத் துறைகளிலும் நிரந்தரமாக்கிவிட்டது…,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

இன்றும் தொடர்கிற இரட்டை கிளாஸ் அக்கிரமங்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வர்த்தக விளம்பர வக்கிரங்கள் முதலியவற்றிற்கு அடித்தளமாக உள்ள இந்திய சமூகத்தின் – அரசின் – வர்க்கத்தன்மையை மார்க்சிஸ்ட் கட்சி கோடிட்டுக் காட்டுகிறது. ஆம், மண்டிக்கிடக்கும் புதரை அகற்றாமலே வீட்டைக்கட்டினால் வீட்டிற்குள் பூச்சிகளும் தேள்களும் பாம்புகளும் வரத்தான் செய்யும். நிலப்பிரபுத்துவத்தை தகர்க்காமல் கட்டப்பட்டிருக்கிற முதலாளித்துவ வீட்டிற்குள் சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் முதலிய நச்சு ஜந்துக்கள் நெளிந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதை மாற்றுவதற்கான போராட்ட வியூகத்தையும், அதிலே அணி சேர்க்கப்பட வேண்டிய மக்கள் சக்திகளையும் பற்றி கட்சித் திட்டம் மேலும் எடுத்துரைக்கிறது. அந்த இலக்குடன்தான் கட்சி தனது தொலைநோக்குத் திட்டங்களையும் உடனடி அணுகுமுறைகளையும் மக்கள் முன் வெளிப் படையாக வைத்து இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.  சமூக-வர்க்க-பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பண்பாட்டு உளவியல் தளத்திலும் முற்போக்கான ஆரோக்கியமான மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது. அந்த மாற்றத்திற் கான புரட்சிக்கு “மக்கள் ஜனநாயகம்” எனப் பெயரிட்டு அதை நனவாக்குதற் கான இயக்க முயற்சிகளிலும் இடையறாமல் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

தனி மனித உளவியல் என்ற நோக்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி அதன் உறுப்பினர்களை புரட்சியாளர்களாக, மனித நேயர்களாக, அரசியல் அறிஞர்களாக, தத்துவ ஞானிகளாக வார்க்கிறது. கூட்டு விவாதம், பெரும்பான்மையினரின் கருத்து முடிவாக்கப்படுதல், அதனுடன் முரண்பட்ட சிறுபான்மையினரும் அந்த முடிவை முழு விசுவாசத்துடன் நிறைவேற்றுவது என்ற கட்சிக் கட்டுப்பாட்டு ஒவ்வொரு உறுப்பினரையும் வளர்த்தெடுக்கிறது. ஊழலற்றவர்களாக, சுயநலமற்றவர்களாக, மக்கள் சேவைக்காகத்தான் அரசியல் என்ற உணர்வுபெற்றவர்களாக அவர்கள் செயல்படுவதை கட்சி வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது. தலைவர் துதி, தனிமனித வழிபாடு, அடிமைத்தனம் போன்றவற்றிற்கு மார்க்சிய இயக்கத்தில் இடமில்லை. மனிதரை மனிதர் நேசிக்கிற, மதிக்கிற, பண்பாட்டு வேர்களையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்கிற, இயல்பான பண்பாட்டுக் கலப்பை வரவேற்கிற உயர்ந்த பண்பாட்டு உளவியல் இத்தகைய இயக்கத்தின் மூலமே தழைத்திருக்கும்.

ஒரு வெளிப்பாடு
மக்கள் சாதி, மத  பிடிப்பு உள்ளவர்களாக இருந்தாலும்கூட, அரசியல் ரீதி யாகவே – கட்சி அடிப்படையிலேயே – அவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இது பளிச்செனத் தெரியவருகிறது. மக்கள் இவ்வாறு கட்சி கட்சியாகத் திரண்டிருப்பதுதான் தேர்தல் கால கூட்டணிகளில் பலனளிக்கிறது. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு கடந்த 14வது மக்களவைத் தேர்தல். குறிப்பாகத் தமிழகத்தில் என்ன நடந்தது? போட்டி பாஜக போல மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்குகளைக் குவித்து விடத் திட்டமிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிட தடை, கோவில்களில் அன்னதானம், வேத உபந்நியாசம்,கோவில்களுக்கு திருவிளக்கு பூசை ஏற்பாடு, கோவில் யானைகளுக்கு இன்பச் சுற்றுலா… என்று அவர் அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்ததில் பெரும்பான்மை இந்து மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற அரசியல் கணக்கீடுகளும் இருந்தன. ஆனால் தேர்தலில் மக்கள் அவர்கள் ஆதரிக்கிற அரசியல் கட்சிகளஇன் அணிச் சேர்க்கை அடிப்படையிலேயே மின்னணு வாக்குப் பெட்டியின் பொத்தான்களை அழுத்தினார்கள். லயோலா கல்லூரி, பண்பாடு-மக்கள் தொடர்பகம் அந்தத் தேர்தலுக்கு முன் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தையும், ஆடு-கோழி தடை ஆணையையும் விளக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று காஞ்சி சங்கராச்சாரி மீது கை வைக்கிற அளவுக்கு தமிழக அரசுக்குத் துணிவு வந்திருக்கிறது. திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தமிழக மண்ணில் வேரூன்றச் செய்துள்ள மதச்சார்பின்மை, சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றால் உருவான மக்களின் மனநிலையிலிருந்தே அந்தத் துணிவு பிறந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அகில இந்திய அளவிலும் கூட பாஜக-வின் மதவாதத் திட்டங்களுக்கு இரையாகாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டு அடிப்படை யிலேயே அவரவர் சார்ந்துள்ள கட்சிகளின் வேண்டுகோள்படியே, வாக்குச் செலுத்தினார்கள். இது ஒரு முக்கியமான பண்பாட்டு உளவியல் வெளிப்பாடு. இதைச் சொல்வதால், மக்கள் முற்றிலுமாக மத, சாதி உணர்வுகளிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றாகிவிடாது. கணிசமான மக்கள் அந்த உணர்வு களின் அடிப்படையில்தான்  பாஜக வகையறாக்களை ஆதரிக்கிறார்கள். இதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிற செயல்திட்டத்துடன்தான் பாஜக தனது காய்களை நகர்த்துகிறது.

செங்கொடிச் செயல்பாடு
தமிழகத்தின் தஞ்சை மண்ணில் அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலைமை என்ன? அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகளான தலித் மக்கள் தோளில் துண்டு அணிய முடியாது, காலில் செருப்பணிந்து மேட்டுத் தெருக்களில் நடக்க முடியாது, ஆண்டைகளை சாமி சாமியென்றே விளிக்க வேண்டும், எதிர்ப்புக் குரல் எழுப்புவோருக்கு சாணிப்பால்-சாட்டையடி. இன்று இந்த நிலைமை பெரிதும் மாறிவிட்டிருக்கிறது. மேட்டுத் தெருக்களில் ஒரு தலித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்ததில் செங்கொடி இயக்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. இது வெறும் பிரச்சாரத்தால் மட்டும் வந்ததல்ல, இயக்கத்தின் நீண்ட நெடும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் விளைந்த விளைச்சல் இது.

இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறுகிற மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் முக்கிய அரசியல் சக்தியாக உள்ள கேரளத்திலும் சாதியம், மதவாதம் முதலிய பிற்போக்குத்தனங்கள் பெருமளவுக்குப் பின்தங்கிவிட்டிருக்கின்றன என்பதும் காணத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த (நில விநியோக) நடவடிக்கைகள். இந்திய அரசமைப்பு சாசன சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டிய சூழலில் அந்த மாநிலங்களின் இடதுசாரி அரசுகள் இதைச் செய்ய முடிந்திருப்பது சாதாரணமானதல்ல.
பெண் விடுதலை, குடும்ப ஜனநாயகம், அனைவருக்கும் கல்வி, அனைத்து மொழிகளின் சமத்துவம், வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு எனப் பல்வேறு அம்சங்களில் செங்கொடி இயக்கம் உணர்வுப்பூர்வ மான அக்கறையோடு முழக்கங்களை எழுப்பி முயற்சிகளை மேற்கொள்கிறது. பண்பாட்டு உளவியல் நோக்கில் இவை முக்கியமான செயல்பாடுகளாகும். மார்க்சிஸ்ட் கட்சி நெறிப்படுத்தும் இயக்கம் என்ற ஒன்றை மேற்கொண்டு, முன்னணி ஊழியர்கள் தமது இல்லங்களில் காதணி விழா, பூப்புனிதவிழா போன்றவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அழுத்தமான வேண்டுகோளை விடுத்தது. கம்யூனிஸ்ட் குடும்பங்களின் சாதி, மத வேலிகளைத் தாண்டிய காதல் திருமணங்கள் மனமுவந்து வரவேற்கப்படுகிற இயல்பான ஒரு நிகழ்வு.

மொத்தத்தில்
பண்பாட்டு உளவியல் வளர்ச்சியில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் நிகழ்வுகள் பங்காற்றுகின்றன. ஆயினும், அரசியல் களத்தில் இயங்குகிற கட்சிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானதாகும். இதில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம், பின்னடைவு இரண்டிலுமே அரசியல் கட்சிகளுக்குப் பங்குண்டு. பிரச்சனைகளின்போது மக்கள் புலம்பிக் கொண்டிராமல் வீதிக்கு வந்து போராடுவது, அதிகாரிகளைத்  தட்டிக்கேட்பது, தங்களது சொந்த நம்பிக்கைகளையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பது முதலிய ஆரோக்கிய மான வளர்ச்சிப் போக்குகள் கட்சிகள் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. அதேபோல் முழுமையான ஜனநாயகம் மலர்வதில், அரசியல் உணர்வு வளர்வதில், பல்வேறு பிற்போக்குத்தனங்கள் மறைவதில் நீடிக்கிற தேக்க நிலைமையிலும் கட்சிகளுக்குப் பொறுப்பு உண்டு. எந்தக் கட்சிகள் எந்த அம்சத்தில் கூடுதல் பங்களிப்பைச்  செய்கின்றன என்பதையும் எந்தக் கட்சிகள் பண்பாட்டு உளவியலின் முற்போக்கான வளர்ச்சிக்காக நிற்கின்றன என்பதையும் உங்கள் சொந்த ஆய்வுக்கும் முடிவுக்கும் விடுகிறேன்.

-(சென்னை லயோலா கல்லூரி
– பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய
சாதி-மதம்-சினிமா-அரசியல்” கருத்தரங்கில்
நிகழ்த்திய உரை)