1946 பிப்ரவரி 18, கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்டுகளும்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் தொடராக வெளியாகி தமிழில் ‘இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறாண்டுப் பயணம்’ என்ற நூலில் இருந்து

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு எதிரான விசாரணையின்போது உச்சத்தைத் தொட்டு வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு 1945-46 குளிர்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் வன்முறை நிரம்பிய மோதலாக உருவெடுத்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணியாற்றி வந்த இந்திய படைவீரர்களும் இளம் அதிகாரிகளும் இத்தகைய வெகுஜன கிளர்ச்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டனர். இவர்களில் ஒரு பிரிவினர் தனித்திறன் பெற்ற நிபுணர்களாகவும் இருந்தனர். இவ்வகையில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணிபுரிந்து வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்களாக இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் பெரும் போரின்போது நேசநாட்டு ராணுவத்தினருடன், குறிப்பாக சோவியத் யூனியனின் செஞ்சேனையுடன், இணைந்து இவர்கள் போரிட்டனர். இத்தகைய நேரடித் தொடர்பின் விளைவாக பாசிஸ எதிர்ப்பு, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கருத்துகளும் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

கப்பற்படையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் ஒரு பிரிவினர் தேசிய விடுதலை இயக்கம், இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று ஆசாத் ஹிந்த் (இந்திய விடுதலை) என்ற ஒரு ரகசிய அமைப்பைத் தொடங்கினர். கப்பற்படை மாலுமிகளை கலகம் செய்ய கிளர்ந்தெழச் செய்வதில் இந்த அமைப்பு மிக முக்கியமான பங்கினை வகித்தது. பிரிட்டிஷ் இந்திய கப்பற்படை மாலுமிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கியபோது பம்பாயில் மிகப்பெரும் எழுச்சி உருவானது.

பிரிட்டிஷ் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த தல்வார் என்ற கப்பலின் ஊழியர்கள் 1,100 பேர் 1946 பிப்ரவரி 18 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பம்பாயில் இந்திய கப்பற்படையில் வேலைசெய்து வந்த மேலும் 5,000 பேரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கப்பற்படையில் தாங்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து கிளர்ச்சி செய்தனர். தல்வார் கப்பலின் ஊழியர்கள் அந்தக் கப்பலின் கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் கொடியை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். ஆயுதங்களை ஏந்திய அவர்கள் தங்களது மேலதிகாரிகளையும் கைது செய்தனர். அதற்கு அடுத்தநாள் கேசில், ஃபோர்ட் ஆகிய படைமுகாம்களில் இருந்த கப்பற்படை வீரர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு, பம்பாய் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இந்தப் படைவீரர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்களாக இருந்தது மட்டுமின்றி, நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்தவர்களாகவும், அனைத்து மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்தனர்.

அரசின் எந்தவொரு பிரிவிலும் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலருமே இனரீதியாக, பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு வந்தனர். அவர்களது ஊதியமும் மிகவும் குறைவாகவும், வழங்கப்படும் உணவும் கூட சாப்பிடமுடியாததாகவேஇருந்தது. இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டு வந்ததன் விளைவாக இவர்களில் பலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாத பலரும் ராணுவப் படைகளை விட்டு வெளியேறினர். தல்வார் கப்பலில் ‘இந்தியாவைவிட்டு வெளியேறு!’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக!’ போன்ற கோஷங்களை எழுதியதற்காக ஒரு மாலுமியான பி சி தத் கைது செய்யப்பட்டதை பலரும் பெரிதும் வெறுத்தனர். நாகரீகமான உணவு; போதுமான அளவிற்கு ரேஷன் பொருட்கள்; இந்திய ஊழியர்களை அவதூறாகப் பேசி வந்த தல்வார் கப்பலின் தலைமை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை; அதிகாரிகள் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதற்கு முடிவு கட்டுவது; பணியிலிருந்து விலகும் செயல்முறையை விரைவாக முடிப்பது; அவர்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடுகள்; ஓய்வூதியப் பயன்கள்; இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த கைதிகள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது; இந்தோனேஷியாவிலிருந்து அனைத்து இந்தியப் படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெறுவது; இந்தியா முழுவதிலும் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடுகள் பற்றி பாரபட்சமற்ற நீதி விசாரணை ஆகியவையே கப்பற்படை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

பம்பாய் நகரைத் தவிர கராச்சி நகரும் கப்பற்படை வீரர்கள் எழுச்சியின் முக்கிய மையமாக இருந்தது. இது பற்றிய செய்தி பிப்ரவரி 19 அன்று கராச்சியை அடைந்ததும் இந்துஸ்தான் கப்பலும் (இது பின்னர் ஆயுதந்தாங்கிய தாக்குதலிலும் ஈடுபட்டது) மற்றொரு கப்பலும் தரைப்பகுதியில் இருந்த மூன்று படைமுகாம்களும் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கின. இந்த இரு கப்பற்படை மையங்கள் மட்டுமின்றி மதராஸ், கராச்சி, விசாகப்பட்டினம், கல்கத்தா, டெல்லி, கொச்சின், ஜாம்நகர், அந்தமான், பஹ்ரைன், ஏடன் ஆகிய இடங்களில் இருந்த படைவீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். இதைக் கண்ட பிரிட்டிஷ் ராணுவ தலைமைத் தளபதி அட்மிரல் காட்ஃப்ரே இந்திய கப்பற்படையின் அனைத்துக் கப்பல்களையும் குண்டுவீசித் தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்தார். இந்த எழுச்சியில் 78 கப்பல்கள், 28 தரைப்பகுதி படைமுகாம்களில் இருந்த 20,000 வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். பம்பாயின் மரைன் ட்ரைவ், அந்தேரி, சியான், பூனே, கல்கத்தா, ஜெஸ்ஸூர், அம்பாலா ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய விமானப்படை வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜபல்பூரில் இருந்த ராணுவ வீரர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயின் கொலாபா பகுதியில் இருந்த ராணுவ குடியிருப்பு பகுதி ‘அச்சுறுத்தும் வகையிலான சலசலப்புடன்’ இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கப்பற்படைவீரர்கள் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக ஆதரவு தெரிவித்தது. பிப்ரவரி 19 அன்று கட்சி வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு அது மக்களை கேட்டுக் கொண்டது. இந்திய கப்பற்படையை அழிக்கப் போவதாகவும், அவற்றிலிருந்த இந்தியர்களை கொல்லப்போவதாகவும் அச்சுறுத்திய அட்மிரல் காட்ஃப்ரேவுக்கு பதிலடியாக பிப்ரவரி 22 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் திரளாகப் பங்கேற்குமாறு மீண்டும் தனது செய்தித்தாளின் மூலம் அது மக்களைகேட்டுக் கொண்டது. நாடு முழுவதிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை கண்டித்தும் முழு அடைப்புகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பொதுவான விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கப்பற்படை கலகத்தை நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே ஆதரித்தனர்.

அனைத்துக் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. கட்சியின் பொது வேலைநிறுத்தத்திற்கான அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்து குவிந்தனர். சிறுகடைகள், வியாபாரிகள், உணவு விடுதிகள் ஆகியவையும் முழுஅடைப்பு செய்தன. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பம்பாயில் போக்குவரத்தை நிலைகுலையச் செய்தது. இதுவரை கண்டிராத வகையில் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பை பம்பாய் நகரம் கண்டது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரும்புக் கவசமிட்ட கார்களுடன் பிரிட்டிஷ் வீரர்களை தெருக்களில் கொண்டுவந்து குவித்தனர். பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களின் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி இப்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இவ்வகையில் அப்பாவிகளை கொன்று குவித்தனர். பம்பாய் நகரில் உள்ள பரேல் பகுதி மாதர் சங்கத் தலைவியும் கம்யூனிஸ்டும் ஆன கமல் தோண்டே இவ்வாறு பலியானவர்களில் ஒருவர். பிப்ரவரி 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்களில் மொத்தம் 250 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவித்தன. ‘துப்பாக்கிகள், டாங்குகள், குண்டு வீசும் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தி வந்த காலம் போய் விட்டது’ என கட்சி அறிவித்தது. ஏகாதிபத்திய வாதிகளின் இந்த ரத்தவெறி பிடித்த ஆட்டம் ‘பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒற்றுமையையும் உறுதியையும் மேலும் வலுப்படுத்தும்’ என்றும் அது கூறியது.

அரசின் ஒடுக்குமுறைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அனைத்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆலைகளை முழுமையாக அடைக்கவேண்டும் என்றும், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்து வரும் கப்பற்படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்களையும் கேட்டுக் கொண்டது. பம்பாய் நகரின் தொழிலாளர்களும் குடிமக்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பையும் நடத்தி, இந்திய கப்பற்படை வீரர்களின் இந்தத் துணிவான நடவடிக்கைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைதி மற்றும் நிவாரணத்திற்கான குடிமக்கள் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. ‘ஆசாத்இந்த் விடுதலைப் படை’யின் பிரச்சனையைப் போன்று முக்கியமானதாக மாறியுள்ள ஆயிரக்கணக்கான கப்பற்படை வீரர்களின் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர்கள் கையிலெடுக்கவேண்டும் என்றும், ‘எவ்வித பாரபட்சமுமின்றி நியாயத்தின் அடிப்படையில்’ இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கட்சி கூறியது. மத்திய சட்டமன்றத்திற்கும் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை விடுத்தது.

அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்துவரும் கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. வீரர்களின் இந்தக் கலகம் எழாமல் இருந்திருப்பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்காது. அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி, பாரபட்சம், கொடூரங்கள் ஆகியவையும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. கட்சியின் உடனடி நடவடிக்கைகளின் விளைவாக இந்திய கப்பற்படையும் அதிலிருந்த வீரர்களும் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இறுதியில் ஓர் ஒப்பந்தம் உருவாகவும் வழியேற்பட்டது. எவ்வித தண்டனையும் விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழி அளித்தபிறகும் கூட, இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதன் மூலம் அரசு தனது ஒப்பந்தத்தினை மீறியபோது அரசின் செயலை கட்சி கடுமையாகக் கண்டித்தது.

இந்த எழுச்சி தோற்றது ஏன்?

இந்திய தேசிய இயக்கக் களத்தில் குறிப்பான சில பலவீனங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ்-லீக் கட்சிகளின் உயர்வர்க்கத் தலைமை இந்த வெகுஜன எழுச்சியைக் கண்டு அஞ்சியது. அகில இந்திய அளவிலும் ராணுவப்படையின் தரைப்படை மற்றும் விமானப்படை போன்ற இதர பிரிவுகளிலும் இந்தக் கலகம் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை. தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற வேலைநிறுத்தம், முழு அடைப்பு ஆகியவற்றையும் அவர்கள் அதிகாரபூர்வமாகவே எதிர்த்தனர். கப்பற்படை வீரர்களின் இந்தக் கலகத்தை வெறும் ‘அரிசி-பருப்பு’க்கான ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்த்ததோடு, இன ரீதியான பாரபட்சத்திற்கு எதிரான கோரிக்கையை அவர்கள் காணத் தவறியதோடு, விரிவானதொரு தேசிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தப் போராட்டத்தைக் காண மறுத்தனர்.

நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் வன்முறை தாண்டவத்தை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் கண்டனம் செய்யவில்லை. மாறாக, குண்டடிபட்ட, நிராயுதபாணிகளான மக்களையே அவர்கள் விமர்சனம் செய்தனர். கப்பற்படை வீரர்களின் வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்ததன் மூலம் சட்டம்-ஒழுங்கிற்கான பிரதிநிதிகளின் பக்கமே அவர்கள் நின்றனர். ‘கப்பற்படையில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்ற தலைமைத் தளபதியின் அறிக்கையை’ தாம் ஆமோதிப்பதாக சர்தார் பட்டேல் அறிவித்தார். ‘வன்முறை நோக்கம் கொண்ட இந்து-முஸ்லீம் கூட்டணி’ என்று தனது கண்டனத்தை காந்தி தெரிவித்து குறிப்பிடத்தக்கதொரு அறிக்கையை வெளியிட்டார். அவர்கள் முன்வைத்த ஒரே ஆலோசனை கப்பற்படை வீரர்கள் அரசிடம் சரணடைய வேண்டும் என்பதே ஆகும். காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேலின் ஆலோசனை, அதைத் தொடர்ந்து ஜின்னாவிடமிருந்து வந்த செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் “இந்தியாவிடம்தான் நாங்கள் சரணடைகிறோம், பிரிட்டனிடம் அல்ல!” என்ற அறிவிப்புடன் பிப்ரவரி 23 அன்று கப்பற்படை வேலைநிறுத்த மத்திய குழு இறுதியாக சரணடைந்தது.

வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களை காப்பாற்றவும், அவர்களது சரணாகதியையும் தண்டனையையும் தடுக்கவுமான தமது முயற்சிகளில் அன்று வலுவான கட்சிகளாக இருந்த காங்கிரஸையும் முஸ்லீம் லீகையும் தன்னுடன் அணிதிரட்டுவதற்குத் தேவையான வலிமை கட்சியிடம் இருக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்தது. இவ்வாறு இருந்தபோதிலும் ‘கப்பற்படையில் இருந்த நமது சகோதரர்களின் பின்னால் தனது வலிமைஅனைத்தையும் தந்து அவர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதில் இருந்து தடுப்பதில் உதவி’ புரிந்ததாக கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாகவே பெருமைகொண்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

குரல்: தேவிபிரியா

கி.தீபான்ஜன்

வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் (ஜே.என்.யூ)

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும் அதற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியான சுதந்திரப் போராட்டமும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். தற்கால இந்திய சமுதாயத்தில் நிலுவையிலுள்ள பல சிந்தனை ஓட்டங்கள் மேற்கண்ட காலத்தில் உருவானதுதான். இந்திய தேசிய போராட்டத்தின் துவக்கமும் 1885இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியோடு பொதுவாக இணைத்து பார்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய அளவிலான ஒரு இயக்கம் உருவானதற்கு பல அரசியல் சமுதாய கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. பற்பல காரணங்கள் இருப்பினும் இந்த கட்டுரையின் நோக்கம் இந்திய சுதந்திர போராட்டத்தின் வர்க்கத் தன்மையை ஆராய்வதாகும்.

சுதேசி முழக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்வி முறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஆங்கில கல்வி அறிவை பெற்று இருந்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த ராஜதானி தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதற்கான பிரதான காரணம்.

அக்காலம் இந்திய முதலாளித்துவம் வலுபெறாத காலம். இந்திய முதலாளிகள் தன்னைத்தானே ஒரு வர்க்கமாக திரள வேண்டும் என்ற ஒரு யோசனை உருவான காலம். வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறுகையில் ”1860களில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு ஆங்கிலேய முதலாளிகளுக்கு தங்கள் வியாபாரத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்தவர்கள்தான் அப்போது இருந்த இந்திய முதலாளிகள். 1920கள் வரை இந்திய முதலாளி வர்க்கம் பெரும்பாலும் தரகு முதலாளிகளாகதான் இருந்தார்கள். 1905ல்தான் முதன்முதலாக சுதேசி இயக்கம் வங்காளத்தில் நடைபெற்றபோது வெள்ளையர் பொருட்கள் புறக்கணிப்பு, இந்தியப் பொருட்கள், இந்திய கல்வி, இந்திய வியாபாரம் போன்ற முழக்கங்கள் ஒலித்தன. அப்போதுதான் இந்திய முதலாளிகள் முதல்முறையாக சுய உற்பத்தியினால் லாபம் கண்டனர்” என்கிறார்.

போராட்டமும் சமரசமும்

”1914-1947 வரையிலான காலகட்டத்தில் இந்திய முதலாளித்துவம் ஆங்கிலேய வியாபாரத்தோடு போட்டி போட்டு வளர்ந்த காலம்” என்கிறார் பிபின்சந்திரா. “இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் இந்திய நிறுவனங்கள் 72-73% உள்நாட்டு சந்தையை பிடித்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வங்கித்துறையில் 80% மேலான வைப்பு வைத்திருந்தார்கள்” என்றும் அவர் கூறுகிறார். “1920களின் நடுப்பகுதியில் முதலாளிகள் தங்களுடைய நீண்டகால வர்க்க நலனை சரியாக யூகித்து, தைரியமாகவும் வெளிப்படையாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார்கள்” என்றும் கூறுகிறார்.

இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், தங்களின் வர்க்க நலனை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவர்கள் முடிந்த அளவிற்கு அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில்தான் போராட்டம் நடத்த விரும்பினார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்களுக்கு மேல் நீடித்தால், புரட்சிகர சக்திகள் இயக்கத்தை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சமும், நீண்டநாள் இயக்கம் தொடர்ந்தால் அவர்களுடைய தினசரி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அதற்கான காரணமாகும். இவை அவர்களின் வர்க்க நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணினர். ஒரு பக்கம் இத்தகைய தயக்கங்கள் இருந்தாலும், பெருந்திரள் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் பொழுது அவர்கள் தங்களுடைய வர்க்க பலன்களை அடைவதில் குறியாக இருந்தார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்கள் நீடிக்கும் சூழல் வரும்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். அவர்கள் வர்க்கம் சார்ந்த ஸ்தூலமான சலுகைகளை பேச்சுவார்த்தையின்போது பெற முயன்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறினால் போராட்டத்தில் சமரசம் ஏற்படும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று மிரட்டலும் விடுத்தனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கு பக்கபலமாக நின்றது காங்கிரசும் காந்தியும்தான்.

1931இல் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவி போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய முதலாளிகளின் பிரதிநிதியான ஜி.டி. பிர்லா, இன்னொரு முதலாளிகளின் பிரதிநிதியான புருஷோத்தம் தாஸ்க்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “எள்ளளவும் சந்தேகமில்லை நமக்கு இப்பொழுது தரப்படும் சலுகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க காந்திஜியால்தான்…. நாம் விரும்புவதை அடைய வேண்டுமென்றால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கம் சோர்வடைய விடக்கூடாது”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் போராட்ட யுக்தி

உலகமெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாடுகளிலெல்லாம், 1917இல் தோழர் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. இந்தியாவிலும் ரஷ்ய புரட்சியின் கருத்தோட்டங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு ரஷ்யப் புரட்சி உத்வேகம் அளித்தது. தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாயிற்று. நாடெங்கும் கட்சி கிளைகள் உருவாயின. கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு வெகுஜனங்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கண்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கம் பொதுவெளியில் மட்டும் அல்லாமல், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயும் வலுவடைந்தது. இளம் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிய சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். முதல்முறையாக அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பும், தொழிற்சங்கங்களும் உருவாகின. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்படி, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்திற்கு உள்ளேயே இருந்து செயல்பட்டனர். இப்படியான ஒரு அரசியல் சூழல் குறித்து இந்திய முதலாளி வர்க்கம் அச்சம் கொண்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், காலனிய நாடுகள் குறித்த ஆரம்ப ஆய்வு அறிக்கையில் (Preliminary theses on the national colonial question) கீழ்காணும் அம்சங்களை தோழர் லெனின் சுட்டிக்காட்டினார். 

காலனிய நாடுகளில் நடைபெறும் தேசிய போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாக மட்டும்தான் இருக்க முடியும்.  ஏனெனில், பின்தங்கிய நாடுகளில் பெரும்பகுதி மக்கள் பூர்ஷ்வா முதலாளித்துவ உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளே. மேலும்,  பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளி வர்க்கம், தேசியப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதேசமயம், அந்த வர்க்கம் அந்நிய முதலாளிகளுடனும் நல்லிணக்கத்தோடு செயல்படுகின்றன. அதாவது புரட்சிகர இயக்கங்களும், புரட்சிகர வர்க்கங்களும் வலுவடையும்போது  உள்நாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் லெனின் எச்சரித்தார்.

ஆகவே, முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளே புரட்சிகர சக்திகளையும் சீர்திருத்தவாதிகளையும் வேறுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய முதலாளிகளுக்கு அவர்களின் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்கிற வகையில், காலனிய நாடுகளின் முதலாளித்துவ விடுதலைப் போராட்டங்களை புரட்சிகரமானதாக உள்ளவரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின். விவசாயிகளையும் பெரும்பாலான உழைப்பாளி மக்களையும் முதலாளிகள் தலைமையிலான விடுதலை போராட்டங்களில் திரட்டும்போது  முட்டுக்கட்டைகள் உருவாக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளேயிருந்து கட்சி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும், கட்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இரண்டாவது அகிலம் வழிகாட்டியது. இதனடிப்படையில்தான் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளே இருந்து செயல்பட்டனர். 

முதலாளிகளுக்கு சாதகமான செயல்திட்டம்

”1920களின் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடு, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் ஈர்க்கப்படும் காங்கிரசின் இளம் ஊழியர்கள், இவைகளை கண்டு முதலாளிகள் கவலை அடைந்தனர். எனவே, காங்கிரஸ் இயக்கத்திற்குள் தங்களையும் பெருமளவில் உறுப்பினர்களாக இணைக்துக் கொள்வதென அவர்கள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பல முதலாளிகள் காங்கிரசில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்” என்கிறார் பிபன் சந்திரா.

”காந்தி எந்த ஒரு போராட்டம் அறிவித்தாலும், இயக்கத்தின் தலைமை மற்றும் போக்கு குறித்து மிக கவனமாக இருப்பார். 1920இல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார். தொழிலாளர்களும் பெருமளவில் பங்கெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் ஆங்கிலேய தொழிற்சாலைகளுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக இருக்கும் வரை கவலை கொள்ளமாட்டார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் இந்திய முதலாளிகளுக்கு எதிராக நடக்கும்போது, உடனடியாக ஏதாவது காரணத்தை காட்டி போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார். இதுதான் 1921இல் பம்பாய் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தின்போதும் நடந்தது. எனவே, காந்தியினுடைய போராட்ட வடிவமும், நிலைபாடும் இந்திய முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால்தான் தேசிய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் காங்கிரஸ் இயக்கத்தோடு காந்தியோடு எந்தவிதமான தத்துவார்த்த ரீதியான, செயல்பாட்டு ரீதியான பிரச்சினையையும் இருந்ததில்லை. அப்படியே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ளேயே விவாதித்து தனக்கு சாதகமான முடிவை எடுக்கும் அளவிற்கு முதலாளிகள் வலுவாக இருந்தனர். காந்தியின் வருகைக்குப் பிறகு தேசியப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவானது. ஆனால், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம், அதை வழிநடத்திய நுண்ணறிவு உள்ளவர்களின் சிந்தனையோட்டமும் குணாம்சமும் முதலாளித்துவத்திற்கு சாதகமாகவே இருந்தது” என்கிறார் பேராசிரியர் இர்பான் அபிப்.

முற்போக்கு பாதையை தடுத்த சமரசம்

தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல, இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும். இ.எம்.எஸ். கூறுகிறார், “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை பூர்சுவா தேசியவாதிகளாக இருந்தமையால் அவர்களால் அவர்களின் வர்க்க நலனை மீறி பார்க்க இயலவில்லை. இத்தகைய நிலைப்பாடு அவர்களின் சமுதாய பொருளாதார தத்துவங்களை வழி நடத்தியது. சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணுவதில் திறன் அற்றவர்களாக இருந்ததுதான் இந்தியாவின் தேசிய பிரச்சினைகளுக்கு காரணம்.” 

இ.எம்.எஸ். சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களின் சமுதாய சிந்தனையை மேலும் விளக்குகிறார். “சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.

மேலும்  மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிரவாத தேசியவாதிகளுக்குமான வேறுபாட்டையும் சமூக கலாச்சார சிந்தனைப் போக்கையும் அவர் விளக்குகிறார். மிதவாதிகளை நவீனத்துவவாதிகள் என்றும், அவர்கள் இந்தியாவையும் பிரிட்டன் நாட்டைப்போல ஒரு முதலாளித்துவ நவீனத்துவப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஆங்கிலேயர்கள் அதை செய்ய தவறுவதன் மீதே  அவர்களது கோபமிருந்தது. தீவிரவாத தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் மிதவாதிகள் சமுதாய கலாச்சார அம்சத்தில் முற்போக்கானவர்களே. தீவிரவாத தேசியவாதிகள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை அன்னிய முதலாளித்துவத்திற்கு எதிராக பாதுகாத்தனர். தேசியப் போராட்டம் இந்த தீவிரவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்டதால், பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் “தங்களது காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திய முதலாளிகளோ முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வரவில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும். இன்றைய இந்திய சமூகமானது, ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஒரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித்துவதிற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்பு கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி, அந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது.” என்கிறது.

சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா

என்.சங்கரய்யா

பேட்டி: வீ.பா.கணேசன்

கேள்வி : இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் சிறை யில் இருந்து விடுதலை பெற்றீர்கள். அன்று இந்தியாவின் எதிர்காலம் பற்றி உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது?

என்.எஸ்.: மதுரை சதிவழக்கு போட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தோம். 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். அந்த வழக்கில் பி. ராமமூர்த் திக்கு அடுத்து நான் இரண்டாவது குற்றவாளி. கே.டி.கே. தங்கமணி உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மாலை 6 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்து, இந்த வழக்கு காவல்துறையினரால் இட்டுக் கட்டப்பட்ட வழக்கு என்று தீர்ப்பளிக்கிறார். நாங்கள் விடு தலையாகி வெளியே வருகிறோம்.

மதுரை சிறைச்சாலையில் இருந்து பொதுக் கூட்டம் நடந்த திலகர் சதுக்கம் வரையில் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

நீங்கள் கேட்ட கேள்வி குறித்து சிறையிலேயே விவாதித்திருக்கிறோம். இந்தியாவின் சுதந்திரம் முழுமையடைய வேண்டுமென்றால் தொழிலாளி கள்- விவசாயிகள், – சாதாரண பொதுமக்கள் ஆகியோரு டைய ஜனநாயக சுதந்திரத்திற்கு முழுப் பாது காப்பு இருக்க வேண்டும். அதுதான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்பதுதான் எங்களுடைய ஆழமான கருத்தாக இருந்தது. அதற்காகத்தான் போராடினோம். இனி மேற்கொண்டு போராடி அதை ஒரு ஜனநாயக இந்தியாவாக மாற்றலாம் என்று நினைத்தோம். அதையே அந்தக் கூட்டத்திலும் எங்கள் எண்ணமாக வெளியிட்டோம். இந்தியா வின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்; இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற் கான நிலைமையை உருவாக்க வேண்டும்; அதற் காகப் போராடுவதற்குத் தயாராக இருக்க வேண் டும் என்று அப்போது நாங்கள் தொழிலாளி களிடம் கூறினோம்.

கேள்வி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விடு தலைப் போராட்ட வீரர்களுக்கு இடையே எத்தகைய ஒற்றுமை – வேற்றுமைகள் இருந்தன?

என்.எஸ்.: வேலூர் ஜெயிலில் காங்கிரஸ் தலைவர் களும் (காமராஜர், பட்டாபி சீத்தாரமய்யா, அப்துல் ரகுமான், அன்னபூர்ணையா) நாங்களும் இருந்தோம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் மீது `ஹிட்லரின் ராணுவம் படையெடுத்தது. அது தங்களுக்குச் சாதகமான நிலைமையாக இந்தியா விற்கு இருந்தது என அவர்கள் நினைத்தார்கள். இரண்டாவது உலக யுத்தத்தைப் பற்றி பெரிய தொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. நாங் கள் அவர்களோடு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லி, நமக்கெதிராக ஜெயிலிலேயே ஆர்ப் பாட்டம் செய்தார்கள். அதிலுள்ள சிலரால் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற் கான முயற்சியும் செய்யப்பட்டது.
ஆகவே, காங்கிரஸா? கம்யூனிஸ்டா? என்பது தான் முன்னே வந்தது. காங்கிரஸ் பாதையா? கம்யூனிஸ்ட் பாதையா? நாம் வலுவான அரசியல் எதிரியாக வருவோம் என்று அவர்கள் நினைத் தார்கள்.

சிறுகடைக்காரர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் நம்மோடு நல்ல நட்புறவோடுதான் பழகினார்கள். அது பிற்காலத்தில் பெரிய அளவிற்கு உதவி செய்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நமது தோழர்கள் 10-12 பேர் இருந்தனர். 1945 வரைக்கும் இருந்தனர். அப்போது ஒவ்வொரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத் திலேயும் நமது தோழர்கள் மாற்றுப் பாதையை முன்வைத்தனர். அதாவது மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகத்தை முன்வைத்தால்நாம் வெகுஜன போராட்டத்தை முன்வைத்தோம்.

கேரளா போன்ற இடத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியே நம்மிடம் இருந்தது. மதுரையிலும் காங்கிரஸ் கமிட்டி நம்மிடம் இருந்தது. நாமும் காங்கிரஸிற்குள் இருந்தோம். கட்சிக்குள் தேர்தல் நடந்தபோது வைத்தியநாத அய்யரைத் தோற் கடித்து ஜானகியம்மா வெற்றி பெற்றார். மதுரை டவுன் கமிட்டி எங்களிடம்தான் இருந்தது. இதே போல ஆந்திராவிலும், கேரளாவில் முழுமையா கவும் இருந்தது. வங்காளத்திலும் இருந்தது. நண்பர்களாகவும் இருந்தோம். அதே நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளிடையே சித்தாந்த ரீதியான போட்டியும் இருந்தது.

கேள்வி: இன்றைய வலதுசாரி, இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த மக்களிடையே எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கருது கிறீர்கள்?

என்.எஸ்.: இன்றைக்கு மதவாத, வகுப்புவாதம் தான் ஆட்சியில் உள்ளது. பொருளாதாரரீதியாக அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் நிறைய சலுகைகள் கொடுக்கும் ஆட்சி இது. பொருளாதாரத்தில் பிற் போக்கான கொள்கைகளையும், சமூக ரீதியாக சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெரும்பான்மையான மக்களுடைய மனோபாவத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மதத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயலும் ஆட்சி. அதாவது இந்துத்துவா என்று சொல்லக்கூடியது தான் இன்று இங்கே ஆட்சியில் உள்ளது. எனவே இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான தேவை என்னவெனில் மிகப் பரந்த அளவில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வேண்டியிருக்கிறது.

கேள்வி : இன்றைய சூழ்நிலையில் சோஷலிசத்திற்கான போராட்டத்தை வரும் தலைமுறையினர் எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

என்.எஸ்.: மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு மத்திய ஆட்சி அவசியம். இரண்டாவது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தேர்தலில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஜனநாயகம் அப்போதுதான் பல மடையும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும்.. மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக செயல்படக் கூடிய கவர்னர்களின் ஆட்சி போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். மொழிகளின் சமத்துவம். இந்தியா விலுள்ள அனைத்து தேசிய மொழிகளும் ஒரே உரிமை கொண்ட மொழிகள் என்பது ஏற்கப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப் பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் அயல்நாட்டுப் பெருமுதலாளி களின் சுரண்டல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பாது காக்கப்பட வேண்டும். அவை மேலும் வலுவடைய வேண்டும். அது ஒன்றுதான் இந்தியாவில் சாதாரண மக்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய மான விலை, அவர்களின் கடன் சுமைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றைக்கு தொழிலாளிகள் – உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளது. இவர்களது அரசியல், பொருளாதார, சமூக, தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவை வேண்டும். குறிப்பாக இப்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ள ஜி.எஸ்.டி மூலமாக மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

சமூக ரீதியில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் வயதுவந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்போதுதான் இதை நிறைவேற்ற முடியும். இட ஒதுக்கீடு இன்னும் கணிசமான காலத்திற்கு நீடிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் விடுதலை என்பது இந்தியாவி லுள்ள எல்லா மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதில்தான் அடங்கியுள்ளது. இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின், ஏகபோக முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராட அகில இந்திய அளவிலான முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் ஒற்றுமை அவசியம். கூட்டுப் போராட்டத்திற்கு முயற்சிக்க வேண்டும். அது தேவைப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தை எதிர்த்து மக்கள் போராடினார்களோ, அதே போல இந்த வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு அகில இந்திய இயக்கம் தேவைப்படுகிறது.

கேள்வி: வருங்காலத் தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை…?

என்.எஸ்.: மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகி யோரின் நூல்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு வேறு வழியேதும் கிடையாது. உலக ஏகாதிபத்தியத் தையும், உலக முதலாளித்துவத்தையும் அப்புறப் படுத் திவிட்டு, உலக சோஷலிச அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் உலகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் உண்மையான, உறுதி யான விடுதலை கிடைக்கும். சரித்திரம், கலாச் சாரம் ஆகியவற்றில் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆக, இந்தியாவிலும் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப, இந்திய அம்சங் களைக் கொண்ட சோஷலிசம் என்பதற்கான ஒரு பெரிய இயக்கம் நடைபெற வேண்டும்.

சோஷலிசத்தின் அரசியலை போதியுங்கள். சோஷலிசத்தின் பொருளாதார அம்சங்களை போதியுங்கள். சோஷலிசத்தின் கலாச்சார அம் சங்களை போதியுங்கள். உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடது சாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி.

ஆகவே தொடர்ச்சியாக மக்களோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். நான் சொல்ல விரும்புவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் குறைந்தது 300 குடும்பங்களையாவது சந்தித்து அவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டும். இதைச் செய்யும்போது நம்முடைய பிரச்சனைகளுக்கு வழிகாட்ட ஒரு தோழர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர்களிடையே ஏற்படும். அந்தத் தோழரைச் சுற்றி ஏற்படக்கூடிய ஒற்றுமைதான் எந்த நெருக்கடியையும் சமாளிக்க உதவி செய்யும். இந்தக் கட்சி எந்த நிலைமையிலும் மக்களைக் காப்பாற்றும்; முன்னெடுத்துச் செல்லும்.

கடைசியாக அரசியல், பொருளாதார,சமூக, கலாச்சார துறைகள் அனைத்திலும் இந்திய மக்களை, தமிழ் மக்களை முன்னேற்றக் கூடிய இயக்கமாக, மாணவர்கள் செயல்பட வேண்டு மென்று நான் நினைக்கிறேன்.

இதைக் கொண்டுவர வேண்டியது கம்யூனிஸ்டுகளின், சோஷலிஸ்டுகளின் கடமை. வகுப்பு வாதத்திற்கு எதிராக ஒரு தத்துவப் போராட்டத்தை, அரசியல் போராட்டத்தை, கருத்துப் போராட்டத்தை நடத்த வேண்டும். எவ்வாறு சுதந்திரப் போராட்டத் தில் இந்தியா வெற்றி பெற்றதோ, அதேபோல சோஷலிசத்திற்கான போராட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும். அதில் இடதுசாரி சக்திகள், ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் தங் களது கடமையை ஆற்ற வேண்டும்.

மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!

மேற்குவங்க இடது முன்னணியின் மீது திருணாமுல் காங்கிரஸ் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கின்றன. 2009 துவங்கி இப்போது வரை 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பர்துவான் மாவட்டத்தில் மட்டும் 8000 பேர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை நமது தோழர்களும், ஆதரவாளர்களும் தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். இன்று நடக்கும் தேர்தல் மோசடிகளும், தாக்குதல்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதியதல்ல. இதைவிட மோசமான அரை பாசிஸ தாக்குதல்களை சந்தித்துத்தான் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். மேலும் இடது முன்னணி என்ற அணி சேர்க்கை, ஓரிரு நாட்களில் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக ஜனநாயகத்துக்காக, மக்கள் முன்னேற்றத்துக்காக, வர்க்க நலனுக்காக இடையறாது நடந்த சமரசமற்ற போராட்டங்களின் விளைபொருளே இடது முன்னணி. அது தேர்தல்களிலும் வெற்றியை ஈட்டியது.

ஒற்றுமையும் போராட்டமும்

1947ல் அரசியல் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து காங்கிரசுக்கு மாறினாலும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் காங்கிரசிடமிருந்தும் தொடர்ந்தது. ஏழை எளிய மக்கள் மீதான சுமைகளும் தொடர்ந்தன.

1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, மேற்கு வங்கமும் அந்நிலையைச் சந்தித்தது. 1950ல் கல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை விலக்கப்பட்டது. அந்த நேரம் தொட்டு, ஜனநாயக உரிமைகளுக்கான தொடர் போராட்டத்தில் மேற்கு வங்கக் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த கவனம் செலுத்தியது.

பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1952ல் நடந்த முதல் பொது தேர்தலின் போது, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 4 கட்சிகளைக் கொண்ட ஐக்கிய சோஷலிச அமைப்புக்கும் (United Socialist Organisation) உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இதில் இடம் பெற வேண்டிய சில இடதுசாரி கட்சிகள் வெளியே நின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் 9ல் போட்டியிட்டு 5ல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்ட முடிந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம், வீரம் செறிந்த ஆசிரியர் போராட்டம், உணவுக்கான இயக்கம், கல்கத்தா டிராம்வே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற போராட்டம், பெங்கால் பீகார் இணைப்பை எதிர்த்த இயக்கம், கோவா விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு (போர்ச்சுகீசிய ஆதிக்கத்திலிருந்து) என்று ஒரு பட்டியலே போட முடியும்.

திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி

இப்பின்னணியில் 1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அனைத்து சோஷலிச, ஜனநாயக, தேச பக்த, முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவல் விட்டது. மேற்குவங்கக் கமிட்டி, இடதுசாரிகளின் ஒற்றுமையைக் கட்டுவதிலும், ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தியது. அடுத்து 1957ல் சட்டமன்றத் தேர்தல் வந்த போது, கம்யூனிஸ்ட் கட்சி, 37 அம்ச திட்டத்தை (ஜனநாயக ஒற்றுமைக்கான திட்டம்) உருவாக்கி, அதன் அடிப்படையில் 4 இடதுசாரி கட்சிகளுடன் தேர்தலுக்கான அணியை உருவாக்கியது. 253 தொகுதிகளில் இந்த அணிக்கு 81 கிட்டியது.

கம்யூனிஸ்ட் கட்சி 46 பெற்று, இந்த அணியின் வலுமிக்க பங்குதாரராக உயர்ந்தது. கூட்டு போராட்டங்களும், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களும் தொடர்ந்தன. இடைப்பட்ட காலத்தில், அணியிலிருந்து சிலர் விலகி, சிலர் சேர்ந்தனர். 1962-67 காலகட்டம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் ஒரு சோதனை காலமாக இருந்தது.

காங்கிரசின் பொதுவான அடக்குமுறையும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த சூழலில் இந்திய சீன எல்லை பிரச்னையைப் பயன்படுத்தி கம்யூனிஸ்டுகளை ஓரம் கட்டுதலும் நடந்தேறின. ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கட்சிக்குள் இருந்த திருத்தல்வாத கோஷ்டிகளும் தம் பங்குக்குப் பிரச்சனைகளை உருவாக்கியதோடு, ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தன. சில இடதுசாரி கட்சிகளும் 2 கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையை எடுத்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

1964ல் திருத்தல்வாதத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பிறகு, மேற்குவங்கத்தில் ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்துவதிலும், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை நடத்துவதிலும் வேகம் பிறந்தது. ஆனால் 1967 தேர்தல் வந்தபோது, காங்கிரஸ் எதிர்ப்பு நிலை எடுக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டுவர முடியவில்லை. சிபிஐயின் அணுகுமுறை தொடர்ந்து உதவிகரமாக இருக்கவில்லை என்பதே உண்மை. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் கொண்ட ஐக்கிய இடது முன்னணியும், சிபிஐ, பார்வர்டு பிளாக், பங்களா காங்கிரஸ் சேர்ந்த முற்போக்கு ஐக்கிய இடது முன்னணியும் என்று இரண்டு அணிகள் உருவாயின. தேர்தலுக்கு சற்று முன்னதாகக் காங்கிரசிலிருந்து விலகி உருவான பங்களா காங்கிரசை, சிபிஐ சேர்த்துக் கொண்டது. 1967 தேர்தல்தான், 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கியது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் சிறுபான்மையானது. சிபிஎம் இருந்த அணிக்கு 68 தொகுதிகளும், சிபிஐ இருந்த அணிக்கு 65 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் அணிகளில் இருந்த கட்சிகள் என்று பார்க்கும் போது, சிபிஎம்-முக்குத்தான் அதிக தொகுதிகள் கிடைத்தன. மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் இடதுசாரிகளை வழி நடத்தும் சக்தியாகப் பார்த்தனர்.

கிடைக்கும் அதிகாரம் மக்கள் நலனுக்கே:

காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டின என்பதால், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் இரு அணிகளும் இணைந்து, முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தன. 32 அம்ச திட்டத்தின் அடிப்படையில் அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவானது.

மக்கள் நலனுக்காக சிபிஎம் விட்டுக் கொடுத்த அடிப்படையில், பங்களா காங்கிரசின் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வரானார். தோழர் ஜோதிபாசு துணை பிரதமர் பொறுப்புடன் நிதி, போக்குவரத்து துறைகள் பொறுப்பை ஏற்றார். மேலும் இரு சிபிஎம் தோழர்கள் நில சீர்திருத்தத் துறையையும், அகதிகள் மறுவாழ்வு துறையையும் பெற்றனர்.

மத்திய அரசின் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாத பின்னணி உருவானது. நிதி ஒதுக்கீட்டில் பிரச்னை, பஞ்ச நிவாரணத்தில் தடை, வறட்சி மாவட்டங்களுக்கு உணவு தானிய ஒதுக்கீடு மறுப்பு என்று பழிவாங்கல் தொடந்தது. இதற்கிடையே, குறுகிய அதிகாரங்கள் மட்டுமே இருந்த போதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த அரசு சில சிறப்பான முடிவுகளை எடுத்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணியில் இருந்ததும், வலுவான சக்தியாக இருந்து பங்களிப்பு செய்ததும்தான் காரணம். உதாரணத்திற்கு ஒன்றாக முதலாளி தொழிலாளி பிரச்சனையில் முதலாளிக்கு ஆதரவாகக் காவல்துறை தலையிடாது என்ற முடிவைக் குறிப்பிடலாம். அதேபோல் முன்னெச்சரிக்கை கைது (Preventive Arrest) தடை செய்யப்பட்டது, பழிவாங்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டனர், ஒரு லட்சம் தற்காலிக அரசு ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். உபரி நிலம், ஆக்கிரமிப்பு நிலம் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடு என்று அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தச் சூழல், உரிமைகளுக்கான ஏராளமான போராட்டங்களை உருவாக்கியது. நிலத்துக்கான போராட்டம் வலுவாக நடந்தது. ஒரு சில மாதங்களில் 2.34 லட்சம் ஏக்கர் நிலம் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இது மேலாதிக்க சக்திகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலை நீண்ட காலம் நீடிக்காது என்பதைக் கட்சி புரிந்து வைத்திருந்தது. ஒரு புறம் மத்திய காங்கிரஸ் அரசின் ஒத்துழையாமையும், மறுபுறம் இடதுசாரி எதிர்ப்பு சக்திகள் மற்றும் வர்க்க எதிரிகளின் குறுக்கீடுகளும், சதிகளும் ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமையை உருவாக்கின. காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த பிரித்தாளும் சூழ்ச்சியும் நடந்தது. இச்சூழலில் ஆளுநர் தலையிட்டு சட்ட விரோதமாக 9 மாதங்களில் அரசைக் கலைத்தார்.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரசின் ஆட்சிக் கனவு நொறுங்கி, இடைக்கால தேர்தல் (1969) 3 அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஐக்கிய முன்னணியில் மிச்சமிருந்த கட்சிகள் தம் வலுவை உறுதிப்படுத்தி, திருப்திகரமாக தொகுதிப் பங்கீடும் நடத்தி, தேர்தலை சந்தித்தன. 214 தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு போட்டியிட்ட 101 தொகுதிகளில் 83 கிடைத்தன. இருப்பினும், மீண்டும் முதல்வர் பொறுப்பை விட்டுக்கொடுத்து, இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு பிப்ரவரி 1969ல் அமைக்கப்பட்டது. அஜாய் முகர்ஜி முதல்வர், தோழர் ஜோதிபாசு, உள்துறை இலாகாவையும் சேர்த்து துணை முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டது. உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களுக்கு அரசு உறுதுணையாக இருந்தது. முதல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட நிலத்துக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆக்கிரமிப்பிலும், பினாமி பெயரிலும் இருந்த சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் கைப்பற்றினர். விவசாயிகளை வெளியேற்றும் நிலை தடுக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டரை லட்சம் மில் தொழிலாளிகள், 2 லட்சத்துக்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளிகள், 50000 சணல் ஆலை தொழிலாளிகள் கணிசமாக சம்பள உயர்வு பெற்றனர். 8ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அறிவிக்கப்பட்டது. 6000 ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட்டன. குடிசைப் பகுதிகளில் வீட்டு வாடகை குறைக்கப்பட்டது. ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த சில ஜனநாயகக் கட்சிகளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள், முன்னணியை உடைத்தனர். ஒரு போலீஸ்காரரை யாரோ கொலை செய்ய, அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக திட்டமிட்டு மாற்றப்பட்டது. சட்டமன்றத்துக்குள்ளேயே ஒரு கூட்டம் புகுந்து, ஜோதிபாசுவைத் தூக்கில் போடு, அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய் என்று கலவரம் செய்தது.

முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாக உண்ணாவிரதம் அமர்ந்து, இந்த அரசு (தனது தலைமையிலான அரசையே!) காட்டுமிராண்டித்தனமானது என்று அறிவித்தார். சிபிஎம் இல்லாமல் அரசு அமைக்க பங்களா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் முயற்சி எடுத்து, அதன் ஒரு பகுதியாக அஜாய் கோஷ் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தன் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று தோழர் ஜோதிபாசு, ஆளுநரை சந்தித்துப் பேசினார். ஆனால் பங்களா காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மார்க்சிஸ்டுகளுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற நிலை எடுத்தனர். இச்சூழலில் 13 மாதங்களில் இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு கலைக்கப்பட்டு, மார்ச் 1970ல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. உண்மையில் அது கடுமையான போலீஸ் ராஜ்யமாக செயல்பட்டது.

காங்கிரசின் காட்டு தர்பார்:

குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது தினம், ஜோதிபாசுவைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. குண்டு தவறி, அருகிலிருந்த ஒரு தோழர் மீது பாய்ந்து அவர் இறந்து போனார். அன்று மாலையே, அதைக் கண்டித்து 20,000 பேர் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி நிலயங்களைப் புறக்கணித்துத் தெருவுக்கு வந்தனர். ஆலைகள் மூடப்பட்டன. பொது வேலை நிறுத்தம் நடந்தது.

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய காங்கிரஸ் ஆட்சியால் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ராணுவமும், சிஆர்பிஎஃப்-ம் பயன்படுத்தப்பட்டன. கண்மூடித்தனமான தாக்குதல், வரைமுறையற்ற கைது, ஒழித்துக்கட்டுவது, உரிமைகளை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக சக்திகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது ஏவப்பட்டன. சமூகவிரோதிகள், நக்சலைட்டுகள், சில இடங்களில் சிபிஐயும் சேர்ந்து இக்கொடுஞ்செயல்களில் ஈடுபட்டன. இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. 20,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். ஒரு லட்சம் பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 250 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பார்வர்டு பிளாக் தலைவர் ஹேமந்த பாசு பட்டப்பகலில் படுகொலையானார். அந்தக் கொலை பழி சிபிஎம் மீது சுமத்தப்பட்டு, அந்த அவதூறையும் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு நடுவே 5வது பொதுத் தேர்தலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலும் 1971ல் நடந்தன.

சிபிஎம் தலைமையில் 6 கட்சிகள் சேர்ந்து இடதுசாரி ஐக்கிய முன்னணியை உருவாக்கித் தேர்தலை சந்தித்தன. பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த கெடுபிடி, மீண்டும் ஜோதிபாசுவைக் கொல்ல முயற்சி, அவரது தொகுதியான பாராநகருக்குள் அவர் செல்ல தடை என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இருப்பினும். சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கு 123 தொகுதிகள், இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் 111 கிடைத்தன. ஆனால், ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்து, மத்திய காங்கிரஸ் ஆட்சியின் தூண்டுதலில், ஆளுநர், தனிப் பெரும் கட்சியான சிபிஎம்-ஐ ஆட்சி அமைக்க அழைக்காமல், காங்கிரஸ், பங்களா காங்கிரஸ், முஸ்லீம் லீக், கோர்க்கா லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற உதிரிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வழி கோலினார். சிபிஐ மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சிகள், இந்த அவியலுக்கு ஆதரவு கொடுத்தன. மார்க்சிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

இந்த உதிரிகளின் ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் கொலை வெறித் தாக்குதல் துவங்கியது. ராணுவம், சிஆர்பிஎஃப், உள்ளூர் போலீஸ் இவர்களுடன் சமூக விரோதிகள், முதலாளிகள், நில உடமையாளர்கள் இணைந்து தாக்குதல் தொடுத்தனர். நிலங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இடது ஜனநாயக சக்திகளின் சார்பில் இருந்த அரசு சாத்தியமாக்கிய அனைத்தும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. தொடர்ச்சியான 144 தடை உத்தரவு அமலாக்கத்தில் கூட்டங்கள் கூடப் போட முடியவில்லை. 3 மாதங்களில் அரசு பெரும்பான்மையை இழந்தது. அப்போதும் ஆளுநர் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஜனநாயக மாண்புகள் தூக்கி வீசப்பட்டன. மத்திய காங்கிரஸ் அரசு அடாவடியாக, அரசைக் கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது.

ஆளுநருக்கும் மேலாக, மத்திய அமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே என்பவரைப் பொறுப்பாக்கியது. சுதந்திர இந்தியாவில் இந்நிலை வேறு எந்த மாநிலத்துக்கும் ஏற்படவில்லை. மேற்கு வங்கத்தை இப்படியே விட்டால், இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவின் இதர பகுதிகளையும் உசுப்பேற்றும், இது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு வேட்டு வைக்கும் என்ற ஆளும் வர்க்கத்தின் பீதி, இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வைத்தது. 1969-71 காலகட்டத்தில் 543 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1967-71 காலத்தில் 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

பாராளுமன்ற ஜனநாயகத்துக்குக் கம்யூனிஸ்டுகளால் பாதிப்பு வராது. இருப்பதைப் பாதுகாத்து, மேம்படுத்தி மக்கள் ஜனநாயக மாண்புகளை உருவாக்குவதுதான் அவர்கள் நோக்கம். ஆபத்து, ஆளும் வர்க்கத்தால்தான் வரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டுவது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

மோசடி தேர்தல்:

தேர்தல் நடத்த சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மறுத்து வந்தார். இறுதியில் 1972ல் நடந்த வேண்டி வந்தது. அந்த சட்டமன்றத் தேர்தலை, சிபிஐ தவிர மற்ற அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஓரணியில் நின்று சந்திக்க முடிவெடுத்தன. இந்த விரிவான ஒற்றுமை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளின் பலன், மக்களின் நிர்ப்பந்தம் என்று பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கடுமையான, அப்பட்டமான மோசடிகளை நடத்தியது. காவல்துறை, சமூக விரோதிகள், நக்சலைட்டுகளின் உதவியுடன் வாக்குச்சாவடிகளைக் கத்தி முனையில் கைப்பற்றுதல், வன்முறை, மார்க்சிஸ்ட் ஊழியர்களைக் கொலை செய்வது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை நாம் நினைக்க முடியாத அளவு நடந்தது. 20000 தோழர்களும், ஆதரவாளர்களும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். தோழர் ஜோதிபாசு கூட, தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவிக்க நேர்ந்தது. அவரால் தொகுதிக்குள் நுழையவே முடியவில்லை. மோசடி செய்ய முடியாத இடங்களில் இடது முன்னணி வேட்பாளர்கள் அபார வாக்குகளை அள்ளினர். அந்த வாக்கு சீட்டுகள் காங்கிரசுக்கு விழுந்த வாக்குகளுடன்

இணைக்கப்பட்டு, காங்கிஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று பல இடங்களில் அறிவிக்கப்பட்டது. 51 தொகுதிகளில் தேர்தலே நடக்கவில்லை. சுமார் 200ல் மேற்கூறிய ரவுடித்தனம் நடந்தது. இப்படியாக காங்கிரஸ் ஆட்சியை அமைத்து, சித்தார்த்த சங்கர் ரே முதல்வரானார்.

‘சட்ட ரீதியாகவே’ அரை பாசிஸ அடக்குமுறையைக் காங்கிரஸ் அரசு தொடர்ந்தது. படுகொலைகள் தொடர்ந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே, நமது தோழர்கள் கடும் தாக்குதலை சந்தித்தனர். நமது தோழர்களும், அவர்களின் குடும்பங்களும் சேர்ந்து சுமார் 50,000 பேர் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்து அடைக்கலம் கேட்டனர். மாநில மையம் விரைந்து செயல்பட்டு, சத்திரங்கள் பிடித்து அவர்களைத் தங்க வைத்து, உணவுக்கான ஏற்பாட்டை செய்தது. பாதுகாப்புக்காக இரவு பகலாக செந்தொண்டர்கள் அங்கே நிறுத்தப்பட்டனர். இந்த ஏற்பாடு பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. சுமார் 5,000 தோழர்கள் பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது போலத் தெரிந்தால், உடனே அவர்கள் மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிஐடியு அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நிதி களவாடப்பட்டது. கல்லூரி தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேட்பாளர்களை நிறுத்துவது தடுக்கப்பட்டது. கட்சியும், இடதுசாரிகளும் வலுவாக இருந்த இடங்களில் கூட அரசியல் பணி செய்ய முடியவில்லை. திரிணாமுல், அடாவடித்தனத்தையும், அக்கிரமங்களையும் எங்கிருந்து கற்றுக் கொண்டது என்பது புரிகிறதா? அன்றைக்கும் நாம்தான் குறி, இன்றைக்கும் நம்மைத்தான் ரவுண்டு கட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 1970ல் தான் மம்தா பானர்ஜி காங்கிரசில் சேர்ந்து அவரது அரசியல் பிரவேசம் துவங்குகிறது. 1976ல் மாநில மகிளா காங்கிரசின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1970களில் நடந்த இந்த அடக்குமுறையில் அவர் வகித்த பங்கும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு தொழிற்சாலையில் 20% உறுப்பினர் இருந்தால்தான் தொழிற்சங்க அங்கீகாரம் என்பது அவசர சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. 5 ஆண்டுகளுக்குக் கீழ் பணி செய்த தொழிலாளிகளை எந்த அனுமதியும் இல்லாம வெளியேற்றலாம் என்பதும் அவசரச் சட்டத்தின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலை நிறுத்தமே கூடாது என்று தடுக்கும் யோசனை மத்திய அரசுக்கு தோன்றிக் கொண்டிருந்த காலம் இது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் இதையெல்லாம் கடுமையாக எதிர்த்தன. செய்தித்தாள்கள் இந்த அராஜகங்களை மூடி மறைத்தன. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உண்மைகளே தெரியவில்லை. ருசி கண்ட பூனையைப் போல, ஒரு மாநிலத்தில் ருசி கண்டுவிட்டால், சர்வாதிகாரப் போக்கை, காங்கிரஸ் இதர இடங்களுக்கும் விஸ்தரிக்கும் என்று கட்சி எச்சரிக்கை செய்ததோடு, இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்று அறைகூவல் விட்டது. 1972ன் மத்தியில் கட்சி கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில் நடந்தேவிட்டது. ஆம், இந்திரா காந்தியால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

அவசர கால நிலை பிரச்னைகளை இங்குக் குறிப்பிடவில்லை. சிபிஐ காங்கிரசுக்கான தன் ஆதரவைத் தொடர்ந்தது. திரும்பத் திரும்ப மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சிபிஐக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இடதுசாரிகள் ஒற்றுமை வேண்டும், ஆனால் அது சர்வாதிகார எதிர்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

1976ல் பொது தேர்தல் நடைபெற வேண்டும் என்றாலும், இந்திரா காந்தி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார். 1977 தேர்தலில் மக்கள், தீர்மானகரமாக வாக்களித்தனர். 30 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரசும், சிபிஐயும் சேர்ந்து தேர்தலில் நின்றனர். 42 தொகுதிகளில் 3ல் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. சிபிஐக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சி, தான் போட்டியிட்ட 20ல் 17ஐக் கைப்பற்றியது.

அந்த நேரத்தில் தோழர் ஜோதிபாசுவும், பிரமோத் தாஸ் குப்தாவும் வெளியிட்ட செய்தியில், அமைதி காக்க வேண்டும், நமது தோழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்கள் நடத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கை வைக்கக் கூடாது என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. 1972 துவங்கி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தோழர்களும், ஆதரவாளர்களும் வீடு திரும்பினர். 1972-76 காலகட்டத்தில் சுமார் 1200 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே முக்கியம்:

மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, ஜனநாயக உரிமைகள் பலவற்றை மீட்டது. மேற்கு வங்கம் உட்பட 9 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாவுடன் ஏற்பட்ட உடன்பாடு, தேச நலனின் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கீழ் தேர்தலை சந்திக்கலாம், தொகுதி பங்கீட்டை செய்யலாம் என்ற ஆலோசனையை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 52 தொகுதிகளை அதாவது 153 தொகுதிகளை ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்தது. இத்தனைக்கும் இடதுசாரிகள் வலுவாக இருந்த சூழல் அது; ஜனதாவுக்குப் பெரிதாக தளம் எதுவும் இல்லை. ஆனால், மாநில ஜனதா கட்சி, கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இல்லை, நேர்மையான தொகுதிப் பங்கீட்டுக்கும் தயாராக இல்லை. 204 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுப் பிரச்னை செய்தது. தேர்தல் தேதியும் நெருங்கவே வேறு வழியில்லாமல், இடது முன்னணி சார்பில் 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் வன்முறை, மோசடிகளை முயற்சித்தது. அவை எதிர்கொள்ளப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்று 230 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை! காங்கிரசுக்கு 20 இடங்களும், ஜனதாவுக்கு 29 இடங்களும் கிடைத்தன. முன்னணியில் இடம் பெற மறுத்த சிபிஐ 2 இடங்களிலும், எஸ்.யு.சி. 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 2 முறை ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தாலும், அணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைத்ததால் என்ன நடந்தது என்று மக்கள் பார்த்தார்கள்.

எனவே, இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் தனிப்பெரும்பான்மையை, 190 தொகுதிகளை மக்கள் அளித்தார்கள். தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தாலும், இடதுசாரி ஒற்றுமையைக் காக்க, கட்சி, கூட்டணி ஆட்சியையே அமைத்தது. அமைச்சரவையிலும் தாராளமாக இதர கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு, ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார் இடது முன்னணி ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து ஆட்சி நடத்தாது. மக்களுடன் நின்று அவர்களது ஒத்துழைப்புடன் ஆட்சி நடத்தும்!

ஆட்சிக்கு வந்தவுடன் எடுக்கப்பட்ட முதல் முடிவு….

விசாரணையின்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை, நக்சலைட்டுகள் உட்பட, விடுதலை செய்வது என்பதுதான். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. நிலச்சீர்திருத்தம் முன்னுரிமை பெற்றது. காங்கிரஸ் காலத்தில் சீரழிக்கப்பட்ட கல்வித்துறை சீரமைக்கப்பட்டது. வேலைக்கு உணவுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மத்திய மாநில அரசு உறவுகளை சீரமைக்க தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னணியில் மேற்கு வங்கம் நின்றது.

செங்கொடி குடும்பங்கள்

34 ஆண்டு ஆட்சியில் மகத்தான முன்னேற்றங்கள், சாதனைகள். நிலச்சீர்திருத்தம் உட்பட இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக பல நடவடிக்கைகள். இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2014 தேர்தலில் மிரட்டலுக்கு அஞ்சாமல் இடது முன்னணிக்கு வாக்களித்ததற்காக திருணாமுல் குண்டர்களால் வெட்டப்பட்ட சந்தனா மண்டல், கட்சி உறுப்பினர் கூடக் கிடையாது. நிலச்சீர்திருத்தம் காரணமாக நிலம் கிடைத்து தலைநிமிர்ந்த தலித் குடும்பங்களில் சந்தனாவின் குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பங்கள் தம்மை செங்கொடி குடும்பம் என்று அழைத்துக் கொள்கின்றன. அந்த விசுவாசத்தில் உயிரைப் பணயம் வைத்து செங்கொடி தாழாமல் காக்க வேண்டும் என்று செயல்பட்டிருக்கிறார்கள். தேர்தலின் போது கொல்லப்பட்ட 10 பேரும் அடிப்படை வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். பலர் கட்சி உறுப்பினர் கிடையாது. ஆனாலும், செங்கொடி காக்க, வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.

காலச் சக்கரம் ஒரு முறை முழுதாகச் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 34 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்ததற்கான அரசியல், ஸ்தாபன, நிர்வாகக் காரணங்களைக் கட்சி பரிசீலித்து, சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. நிலைமை சரியாகி, கட்சியிடமிருந்து அந்நியப் பட்ட மக்கள் பகுதியினர் மீண்டும் திரும்ப வர சற்று காலம் பிடிக்கலாம். 2014 தேர்தலில் இவ்வளவு வன்முறைக்கு மத்தியில் 30 வாக்குகள் கிடைத்திருக்கிறது. கணிசமான பகுதி மக்கள் இப்போதும் இடது முன்னணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்! தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது உண்மை, ஆனாலும் எல்லாம் போய் விட்டது என்று எண்ணத் தேவையில்லை.

1947 முதல் 1977 வரை 30 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் சந்திக்காத பிரச்னைகளோ அடக்குமுறைகளோ இல்லை. அதற்கு இடையில்தான் கட்சிக்கு வெகுஜன தளம் உருவானது. தற்போது 2008 தேர்தல் துவங்கி 6 வருடங்களாக கட்சி தன் வாக்கு பலத்தில், வெகுஜன தளத்தில் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கணிசமான தோழர்கள், கட்சி ஆட்சி நடத்திய 34 ஆண்டுகளில் வந்தவர்கள். அவர்களை வைத்துத்தான் நிலைமை எதிர்கொள்ளப்படுகிறது. அவர்களது அரசியல், தத்துவார்த்த தரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள கட்சியின் செயல்வீரர்கள் செய்யக் கூடியதெல்லாம், இந்தப் பின்னணியை மக்களுக்கு சென்று சேர்ப்பதுதான். இது விவாதப் பொருளாக மாற்றப்பட வேண்டும்.

இது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி பதவி இழந்த பிரச்னை அல்ல. இடதுசாரிகளின் வலு குறைந்தால் சமூக விரோத போக்குகள் தலைதூக்கும். 34 ஆண்டு ஆட்சியில், சாதிக் கலவரமும், மத மோதல்களும் நடக்கவில்லை என்பது இயல்பாக நடந்தேறியது அல்ல. இடதுசாரி கண்ணோட்டமும், அரசியலும் பலமாக இருக்கும் போது இத்தகைய போக்குகள் ஒதுக்கப்படும், ஓரங்கட்டப்படும். வலு குறைந்த இன்றைய பின்னணியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது, மதச்சார்பின்மை பின்னுக்குப் போய் மதவாதக் கண்ணோட்டம் வலுவாகிறது. சாதி பஞ்சாயத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாட்டாமை செய்ய ஆரம்பித்துள்ளன. ஜனநாயக உரிமைகள் அனைத்து மட்டங்களிலும் பறிக்கப்படுகின்றன. எனவே, இடதுசாரி இயக்கம் வலுவடைவது இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவேதான் தேர்தலில் தற்காலிகமாகப் பின்னடைவை சந்தித்திருந்தாலும், இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. அத்தகைய இடதுசாரி இயக்கத்துக்குப் பெருமை சேர்த்த, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் இருப்பை உறுதி செய்த, இடது ஜனநாயக மேடையின் அஸ்திவாரமாக விளங்கிய மேற்குவங்கக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தருணம் இது. அதை உறுதியாய் செய்வோம்!

ஆதாரம்:

 1. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள்
 2. மேற்கு வங்க சிபிஎம் இணைய தளக் கட்டுரைகள்
 3. The Founders of the CPI(M) – என்.ராமகிருஷ்ணன்

மூன்றாவது அணி பேச்சுக்களும் – சரியான பாதையும்

மூன்றாவது அணியை மீண்டும் உருவாக்க முலாயம் சிங் தீவிரம் – தினமலர் செய்தி.

மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது அணி என்பது கடந்துபோன வரலாறு அல்ல. அது நாளைய இந்தியாவின் எதிர்காலம். -முன்னாள் பிரதமர் தேவ கௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி.

மூன்றாவது அணி என்பது, இந்திய அரசியலின் நீடித்திருக்கும் கானல் நீர் – மத்திய மந்திரி மணிஷ் திவாரி.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை மூன்றாவது அணி அமைய  வாய்ப்பில்லை. அப்படி அமைந்தாலும் அது வெற்றி பெறாது. -விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

ஆக, வட இந்தியத் தலைவர்கள் முதல் தென்னிந்திய தலைவர்கள் வரை தற்போது மூன் றாவது அணி பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தப் பேச்சு அடிபடத் துவங்கிய உடனே காங்கிரசும், பாஜகவும் அப்படிப்பட்ட அணி சாத்தியமில்லை என்று அதிரடியாக மறுத்து வருகின்றனர். இந்த இரு கட்சிகள் மூன்றாவது அணிபற்றி கொண்டிருக்கிற பயம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இப்படி ஒரு அணி உருவாவது என்றால் அது இந்த இரண்டு கட்சி கூட்டணிகளுக்கும் எதிராகத்தான் உருவாகிடும். தனிக்கட்சி பெரும்பான்மை வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றினால் கடந்த காலங்கள் போன்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்படும் நிலை உருவாகும். இதனால்தான் இரு கட்சிகளும் அதனை கானல் நீர் எனக் கூறி ஒதுக்கிட முயற்சிக்கின்றனர்.

அவர்களது மூன்றாவது அணிக் காய்ச்சலுக்கு மற்றொரு முக்கிய காரணம் இரண்டு கட்சிகளும் மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை இழந்து வருகின்றனர். மன்மோகன்சிங் அரசின் நவீன தாராளமய கொள்கைகள் ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்து வரும் நிலையில் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். ஊழல் செய்வதிலும், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நவீன தாராளமயத்தை அமலாக்குவதிலும் காங்கிரசிற்கு எந்த விதத்திலும் சளைக்காமல் இயங்கும் கட்சியாக பாஜக விளங்குகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார், நாடு முழுவதும் வகுப்புவாதப் பிரச்சாரத்தையும் கலவரங்களையும் செய்து வருகிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.  இந்நிலையில் இரண்டுக்குமான மாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டுக்குமான மாற்று என்பது கானல் நீராக இருக்க முடியாது. அத்தகைய மாற்று எப்படிப்பட்டது? கட்சிகளை ஒன்று சேர்த்த மூன்றாவது அணி என்ற வடிவில் அதனை அமைப்பதா? அல்லது வேறு வடிவம் இருக்கிறதா? என்பதெல்லாம்தான் விடை காண வேண்டிய கேள்விகள்.

மூன்றாவது அணி பேச்சுகளுக்குப் பின்னால்,,,,,,,,,

முலாயம் சிங் யாதவ் சமீபத்திய கூட்டம் ஒன்றில் பேசுகிற போது  மத்தியில், ஒரே கட்சியின் ஆட்சி, இனி நடக்காது. மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சியே அமையும். ஒரே கருத்துள்ள, மாநில கட்சிகள், இதற்காக ஓர் அணியில் திரள வேண்டும். காங்., – பா.ஜ.க, அல்லாத, மூன்றாவது கூட்டணியை அமைத்து, ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரப்போகிறது; கட்சித் தொண்டர்கள், இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார். இதில் ஒரே கருத்துள்ள, மாநிலக் கட்சிகள், இதற்காக ஓர் அணியில் திரள வேண்டும் என்று பேசிய அவர் ஒரே கருத்து என்பது என்ன கருத்து என்று விளக்கவில்லை. இங்குதான் இவர்கள் சொல்லும் மூன்றாவது அணியின் அடிப்படையான குறைபாடு வெளிப்படுகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவர் சொல்லும் ஒரே கருத்து என்றால் முலாயம் சிங்கின் காங்கிரஸ் எதிர்ப்பு இலட்சணம் அனைவருக்கும் தெரியும். காங்கிரசிற்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் காங்கிரஸ் கூட்டணி அரசைப் பாதுகாத்தவர் அவர்; இன்று வரை பாதுகாத்து வருபவர் அவர்.

முலாயம் மட்டுமல்ல; காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத பல கட்சிகள் காங்கிரஸ் – பாஜக எதிர்ப்பில் உறுதி காட்டவில்லை. அவ்வபோது இந்த இரு கட்சிகளோடு சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்துக் கொள்ள அவர்கள் தயங்கியதில்லை. இதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சி இந்த ஊசலாட்டங்களும், சந்தர்ப்பவாத அரசியல் கண்ணோட்டமும் உள்ளவர்களை இணைத்து ஒரு அணி – மூன்றாவது அணி சாத்தியமில்லை என்று கருதுகிறது.

ஆனால் தற்காலிகமாக இந்த கட்சிகள் மக்கள் பிரச்னைகளுக்காக காங்கிரஸ் அல்லது பாஜக மீது எதிர்ப்புடன் செயல்பட்டால் அவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிகளின் பின்னால் மதச்சார்பற்ற மக்கள் திரண்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கத் தவறவில்லை. ஆனால் நிரந்தர கொள்கை சார்ந்த அணி என்ற இடத்திற்கு இவர்களைக் கொண்டு செல்வது சாத்தியமில்லை.

எனினும், நீண்டகால நோக்கில் மார்க்சிஸ்ட் கட்சி இந்த இரண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டணிக்கு மாற்று தேவை என்று கருதுகிறது. இந்த மாற்றினை இடது ஜனநாயக அணி என்று பெயரிட்டு அதன் பல்வேறு பரிமானங்களை கட்சி 20-வது அகில இந்திய மாநாட்டுத் தீர்மானத்தில் விளக்கியுள்ளது.

இடது ஜனநாயக முன்னணி ஏன்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணி என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்று விரிவாக விளக்குகிறது. முதலில், மக்கள் முன் ஒரு மாற்று அரசியல் வழியை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது ஜனநாயக மாற்றை முன் வைக்கிறது.

இடது ஜனநாயக மேடையே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஒரே மாற்றாக இருக்க முடியும்.  (அரசியல் தீர்மானம்: பாரா 2.138)

அதாவது காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும், பொருளாதாரத்தில் புதிய தாராளமயம் என்ற வலதுசாரி பிற்போக்குக் கொள்கையை பின்பற்றி வந்துள்ளன. இந்த வலது பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகள், நாட்டின் பெருமுதலாளித்துவக் கூட்டத்தையும், அந்நிய மூலதன சக்திகளையும், கிராமப்புற பணக்கார நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும் தான் வளர்த்துள்ளன. அவர்களின் சொத்துக்களும், மூலதனக்குவியலும் அதிகரிப்பதற்கு இக்கொள்கைகள் உதவியுள்ளன. அதன் எதிர்விளைவாக உழைப்பாளி மக்களின் வருமான வீழ்ச்சிக்கும் இந்த வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

எனவே, சமுக ஏற்றத் தாழ்வினை உருவாக்கும் கொள்கைகளுக்கு மாற்றாகத் தேவைப்படுவது, இடதுசாரி முற்போக்குக் கொள்கைகள். பொதுத்துறை, பொதுச் சொத்துக்கள், இயற்கை வளங்கள், கனிம வளங்கள், தொழில், விவசாய, சேவை உற்பத்தி வளர்ச்சிகள் அனைத்தும் பெருவாரியான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இந்த இடதுசாரிக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்திப் போராடி வந்துள்ளன.

இந்திய ஜனநாயகம் உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், மேலும் வலுப்படுத்திட வேண்டும். உழைக்கும் மக்கள் தங்களது அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமைகள் படைத்தவர்களாக மாறும் வகையில் இந்திய ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக்கப்பட வேண்டும். தங்கள் உரிமைகள், வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராட்டங்கள். ஏதேனும் ஒரு பகுதியில் பட்டா கோரிக்கையை வைத்து சில நூறு பேர் போராடினாலும் அது பெரும்பான்மை மக்களின் நிலத்துக்கான உரிமையை பிரதிபலிப்பதால் அத்தகு போராட்டங்கள் ஜனநாயகப் போராட்டங்கள். அந்த போராடும் மக்களின் துவக்க கட்ட ஜனநாயக உணர்வை வலுப்படுத்த வேண்டும். படிப்படியாக ஒரு மாற்றம் வேண்டும் என்கிற இடதுசாரி உணர்வாக அது உயர்த்தப்பட வேண்டும். எனவே, இடது ஜனநாயக மாற்று உழைக்கும் மக்கள் போராட்டங்களால் உருவாகும் உன்னத மாற்றாகத் திகழ்கிறது. இதையொட்டி, மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சி இந்த ஜனநாயக அமைப்புகளோடு, இணைந்து நீடித்த ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களை நடத்தி, முதன்மை இடத்திற்கு வந்த வரலாறு சிறந்த படிப்பினையாகத் திகழ்கிறது. (மறைந்த மேற்கு வங்க மாநில செயலாளர் அனில் பிஸ்வாஸ் குறிப்பிட்டார்)

இடது ஜனநாயக மேடை

கட்சியின் அரசியல் தீர்மானத்தில் இடது ஜனநாயக மேடை குறித்துப் பேசப்படுகிறது. இது ஒன்றுபட்ட செயல்பாட்டுக்கான தளம், இடதுசாரி முற்போக்கு கொள்கைகளை ஆதரிப்போரும், இன்றைய ஜனநாயக அரசியல் நெறியை பாதுகாத்து, விரிவுபடுத்த விரும்புவோரும் ஒன்றுபட்டு, கைகோர்த்து சங்கமிக்கவும்,செயல்படவும், வாய்ப்பை உருவாக்குவது இந்த மேடை. மார்க்சிஸ்ட் கட்சி, இடது ஜனநாயக மேடையின் கீழ் பல்வேறு சக்திகளை இணைத்து ஒன்றுபட்ட செயல்பாட்டை உருவாக்க விரும்புகிறது.

இந்த மேடையில் செயலாற்றுவது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் கூறுகிறது.

இடதுசாரிக் கட்சிகளுக்கு வெளியே இடதுசாரி மனோபாவம் கொண்ட குழுக்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளனர். இடதுசாரிகள் முன்னிறுத்தும் கொள்கை அடிப்படையிலான மேடையில் இவர்களை யும் கொண்டு வர முடியும். இதற்கான முயற்சிகளை கட்சி மேற்கொள்ளும். (பாரா:2.149).

இடது ஜனநாயக மாற்று என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப் பார்வை. இன்றைய இந்திய அரசியல், சமூகப் பொருளாதார நிலைமைகளில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களிலிருந்து விடுபட மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான ஆய்வுக்குப் பிறகு உருவாக்கிய ஒரு தத்துவார்த்தப் பங்களிப்பு, இடது ஜனநாயக மாற்று. இந்த மாற்று தற்போது கருத்து தளத்தில் இருந்தாலும், இது வலுவான கூட்டணியாக, இடது ஜனநாயக முன்னணியாக அமைந்திடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி இது தேர்தல் காலத்தில் அமையும் கூட்டணி போன்றதல்ல என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தோழமை வர்க்கங்கள்

நாளை உருவாக உள்ள இந்த முன்னணிக்கு இப்போது யார் யாரை அணுக வேண்டும்? யார் யாரைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டும்? இதையும் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.

ஆலைத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு கடை வியாபாரிகள் மற்றும் அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன்களை இடது ஜனநாயகத் திட்டமே பிரதிநிதித்துவப்படுத்தும். (பாரா:2.150)

இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான் இடது ஜனநாயக அணி எனப்படுவது. இந்தப் பிரிவினரின் நலன்களை இடது ஜனநாயகப் பாதையில் சென்றால் மட்டுமே பாதுகாத்திட முடியும். எனவே, அவர்கள் இருக்க வேண்டிய இடம் இடது ஜனநாயக மேடைதான். இந்த தோழமை வர்க்கங்களை இங்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி அயராது பாடுபடும்.

அதுமட்டுமல்லாது, மேலும் பல்வேறு பிரிவினரையும் இந்த மேடை உள்ளடக்கியதாக இருக்கும்.

தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பொதுவான ஜனநாயக மேடையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். (பாரா: 2.143)

….இளைஞர்கள் மற்றும் வேலை கிடைக்காது அவதிப்படுவோர். நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைப்பகுதி ஏழைகள். (பாரா: 2.145) ஆதிவாசிகள்…. (பாரா: 2.155)

சமூக, பண்பாட்டுத் தளத்திலும் இந்த மேடை தேவைப்படுகிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, பன்முக கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது என்ற நிகழ்ச்சி நிரலின் பின்னால் அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். இந்த முயற்சிக்கு கடசி முழுமையாக துணை நிற்கும். (பாரா: 2.115) என அரசியல் தீர்மானம் கூறுகிறது.

ஆக இடது ஜனநாயக முன்னணி என்பது உழைக்கும் மக்களின் வர்க்கக் கூட்டணியாக விளங்குகிறது. இதுதான் நாட்டை சீரழித்து வரும் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கூட்டணிகளை அப்புறப்படுத்தும் சக்தியாக மலரும்.

இதற்கு, தோழமை வர்க்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

 • ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய தாராளமயக் கொள்கைகள் மீதான ஒன்றுபட்ட  உறுதியான  எதிர்ப்பை  வளர்த்தெடுக்க வேண்டும். மறுபுறம் பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய தாராளமயக் கொள்கைகளையும் சேர்த்து எதிர்க்க வேண்டும். இந்த இரண்டு கூட்டணிகளில் ஏதேனும் ஒன்றை ஆதரிப்பது தற்கொலைப் பாதை என்பதை அனைத்து தொழிலாளி வர்க்கமும் உணரச் செய்தல் வேண்டும்.
 • பெரும்பான்மை, சிறுபான்மை வகுப்பு வாதத்தையும், இந்துத்துவா கொள்கைகளையும், எதிர்ப்பதோடு மதச்சார்பின்மை கொள்கை காப்பதில் உறுதியாக நிற்க வேண்டும்.
 • கட்சியின் அகில இந்திய மாநாடு வரையறுத்துள்ள 12 – அம்ச பொதுத் திட்டம் அடிப்படையில் அனைத்து தரப்பினரையும் திரட்டிட உழைக்கும் வர்க்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

12 அம்ச திட்டம் வருமாறு:

இடது மற்றும் ஜனநாயகத் திட்டம்

 1. முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்துதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகபூர்வ மாற்றம்.
 2. வளர்ச்சிக்கு சுயசார்பு பாதை, சர்வதேச நிதிமூலதனப் பாய்ச்சலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங்களை தேசிய மயமாக்குவது, திட்டமிட்ட மற்றும் சமச்சீரான வளர்ச்சி.
 3. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, ஏகபோகத்தைத் தடுப்பது, பொதுத் துறையை மேம்படுத்துவது, செல்வத்தை மறு விநியோகம் செய்ய நிதி மற்றும் வரிசார்ந்த நடவடிக்கைகள்.
 4.  ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசியல் முறை; மத்திய – மாநில உறவுகளைச் சீரமைத்தல் மற்றும் வலிமையான ஜனநாயகபூர்வ அதிகாரப் பரவல்; ஜனநாயகத்தை ஆழமாக வேர்பிடிக்கச் செய்ய அரசியல் சட்ட மாற்றங்கள், சர்வதேச உடன்பாடுகளை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற் கான நடவடிக்கை;
 5. உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த உறுதி யான நடவடிக்கை; தேர்தல் சீர்திருத்தம், பகுதிப் பட்டியல் முறையோடு விகிதாச்சார பிரதிநிதித் துவ முறையை அறிமுகப்படுத்துவது.
 6. அரசியல் சாசனத்தின் அடிநாதமாக அமை யும் வகையில் மதச்சார்பின்மை நெறிமுறையின் அடிப்படையில் மதத்தையும் அரசியலையும் பிரிப்பது; வகுப்பு வாத சக்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
 7. நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப் பிற்கான உறுதி, நிர்வாகத்தில் தொழிலாளர் களுக்குப் பங்கு, உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
 8. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் களுக்கு ஒருங்கிணைந்த பொது விநியோக முறைத் திட்டம்.
 9. பொது மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் திற்கான உரிமையை உறுதிப்படுத்த பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதார முறையை வளர்த் தெடுப்பது.
 10. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டு வதன் மூலம் சமூக நீதியை உறுதிப்படுத்துவது, பெண்களுக்கு சம உரிமை, தலித்துகள் சிறு பான்மையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
 11. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி, தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பெறுவதில் சமவாய்ப்பு.
 12. ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையிலான சுயேச்சையான வெளி யுறவுக் கொள்கை.

கோடானு கோடி இந்திய மக்கள் இத்திட் டத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்கிற போது இந்தியாவின் அரசியல் சரியான வழித்தடத்தில் செல்லத் துவங்கிடும். அப்போது உழைக்கும் வர்க்கங்கள் தலைமை தாங்கும் மக்கள் ஜனநாயக அரசு என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தொலை நோக்குத் திட்டம் நிறைவேறுகிற புரட்சிகர சூழல் உருவாகிடும்.