1946 பிப்ரவரி 18, கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்டுகளும்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் தொடராக வெளியாகி தமிழில் ‘இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறாண்டுப் பயணம்’ என்ற நூலில் இருந்து

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு எதிரான விசாரணையின்போது உச்சத்தைத் தொட்டு வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு 1945-46 குளிர்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் வன்முறை நிரம்பிய மோதலாக உருவெடுத்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணியாற்றி வந்த இந்திய படைவீரர்களும் இளம் அதிகாரிகளும் இத்தகைய வெகுஜன கிளர்ச்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டனர். இவர்களில் ஒரு பிரிவினர் தனித்திறன் பெற்ற நிபுணர்களாகவும் இருந்தனர். இவ்வகையில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணிபுரிந்து வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்களாக இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் பெரும் போரின்போது நேசநாட்டு ராணுவத்தினருடன், குறிப்பாக சோவியத் யூனியனின் செஞ்சேனையுடன், இணைந்து இவர்கள் போரிட்டனர். இத்தகைய நேரடித் தொடர்பின் விளைவாக பாசிஸ எதிர்ப்பு, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கருத்துகளும் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

கப்பற்படையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் ஒரு பிரிவினர் தேசிய விடுதலை இயக்கம், இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று ஆசாத் ஹிந்த் (இந்திய விடுதலை) என்ற ஒரு ரகசிய அமைப்பைத் தொடங்கினர். கப்பற்படை மாலுமிகளை கலகம் செய்ய கிளர்ந்தெழச் செய்வதில் இந்த அமைப்பு மிக முக்கியமான பங்கினை வகித்தது. பிரிட்டிஷ் இந்திய கப்பற்படை மாலுமிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கியபோது பம்பாயில் மிகப்பெரும் எழுச்சி உருவானது.

பிரிட்டிஷ் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த தல்வார் என்ற கப்பலின் ஊழியர்கள் 1,100 பேர் 1946 பிப்ரவரி 18 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பம்பாயில் இந்திய கப்பற்படையில் வேலைசெய்து வந்த மேலும் 5,000 பேரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கப்பற்படையில் தாங்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து கிளர்ச்சி செய்தனர். தல்வார் கப்பலின் ஊழியர்கள் அந்தக் கப்பலின் கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் கொடியை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். ஆயுதங்களை ஏந்திய அவர்கள் தங்களது மேலதிகாரிகளையும் கைது செய்தனர். அதற்கு அடுத்தநாள் கேசில், ஃபோர்ட் ஆகிய படைமுகாம்களில் இருந்த கப்பற்படை வீரர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு, பம்பாய் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இந்தப் படைவீரர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்களாக இருந்தது மட்டுமின்றி, நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்தவர்களாகவும், அனைத்து மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்தனர்.

அரசின் எந்தவொரு பிரிவிலும் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலருமே இனரீதியாக, பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு வந்தனர். அவர்களது ஊதியமும் மிகவும் குறைவாகவும், வழங்கப்படும் உணவும் கூட சாப்பிடமுடியாததாகவேஇருந்தது. இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டு வந்ததன் விளைவாக இவர்களில் பலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாத பலரும் ராணுவப் படைகளை விட்டு வெளியேறினர். தல்வார் கப்பலில் ‘இந்தியாவைவிட்டு வெளியேறு!’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக!’ போன்ற கோஷங்களை எழுதியதற்காக ஒரு மாலுமியான பி சி தத் கைது செய்யப்பட்டதை பலரும் பெரிதும் வெறுத்தனர். நாகரீகமான உணவு; போதுமான அளவிற்கு ரேஷன் பொருட்கள்; இந்திய ஊழியர்களை அவதூறாகப் பேசி வந்த தல்வார் கப்பலின் தலைமை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை; அதிகாரிகள் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதற்கு முடிவு கட்டுவது; பணியிலிருந்து விலகும் செயல்முறையை விரைவாக முடிப்பது; அவர்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடுகள்; ஓய்வூதியப் பயன்கள்; இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த கைதிகள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது; இந்தோனேஷியாவிலிருந்து அனைத்து இந்தியப் படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெறுவது; இந்தியா முழுவதிலும் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடுகள் பற்றி பாரபட்சமற்ற நீதி விசாரணை ஆகியவையே கப்பற்படை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

பம்பாய் நகரைத் தவிர கராச்சி நகரும் கப்பற்படை வீரர்கள் எழுச்சியின் முக்கிய மையமாக இருந்தது. இது பற்றிய செய்தி பிப்ரவரி 19 அன்று கராச்சியை அடைந்ததும் இந்துஸ்தான் கப்பலும் (இது பின்னர் ஆயுதந்தாங்கிய தாக்குதலிலும் ஈடுபட்டது) மற்றொரு கப்பலும் தரைப்பகுதியில் இருந்த மூன்று படைமுகாம்களும் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கின. இந்த இரு கப்பற்படை மையங்கள் மட்டுமின்றி மதராஸ், கராச்சி, விசாகப்பட்டினம், கல்கத்தா, டெல்லி, கொச்சின், ஜாம்நகர், அந்தமான், பஹ்ரைன், ஏடன் ஆகிய இடங்களில் இருந்த படைவீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். இதைக் கண்ட பிரிட்டிஷ் ராணுவ தலைமைத் தளபதி அட்மிரல் காட்ஃப்ரே இந்திய கப்பற்படையின் அனைத்துக் கப்பல்களையும் குண்டுவீசித் தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்தார். இந்த எழுச்சியில் 78 கப்பல்கள், 28 தரைப்பகுதி படைமுகாம்களில் இருந்த 20,000 வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். பம்பாயின் மரைன் ட்ரைவ், அந்தேரி, சியான், பூனே, கல்கத்தா, ஜெஸ்ஸூர், அம்பாலா ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய விமானப்படை வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜபல்பூரில் இருந்த ராணுவ வீரர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயின் கொலாபா பகுதியில் இருந்த ராணுவ குடியிருப்பு பகுதி ‘அச்சுறுத்தும் வகையிலான சலசலப்புடன்’ இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கப்பற்படைவீரர்கள் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக ஆதரவு தெரிவித்தது. பிப்ரவரி 19 அன்று கட்சி வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு அது மக்களை கேட்டுக் கொண்டது. இந்திய கப்பற்படையை அழிக்கப் போவதாகவும், அவற்றிலிருந்த இந்தியர்களை கொல்லப்போவதாகவும் அச்சுறுத்திய அட்மிரல் காட்ஃப்ரேவுக்கு பதிலடியாக பிப்ரவரி 22 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் திரளாகப் பங்கேற்குமாறு மீண்டும் தனது செய்தித்தாளின் மூலம் அது மக்களைகேட்டுக் கொண்டது. நாடு முழுவதிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை கண்டித்தும் முழு அடைப்புகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பொதுவான விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கப்பற்படை கலகத்தை நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே ஆதரித்தனர்.

அனைத்துக் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. கட்சியின் பொது வேலைநிறுத்தத்திற்கான அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்து குவிந்தனர். சிறுகடைகள், வியாபாரிகள், உணவு விடுதிகள் ஆகியவையும் முழுஅடைப்பு செய்தன. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பம்பாயில் போக்குவரத்தை நிலைகுலையச் செய்தது. இதுவரை கண்டிராத வகையில் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பை பம்பாய் நகரம் கண்டது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரும்புக் கவசமிட்ட கார்களுடன் பிரிட்டிஷ் வீரர்களை தெருக்களில் கொண்டுவந்து குவித்தனர். பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களின் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி இப்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இவ்வகையில் அப்பாவிகளை கொன்று குவித்தனர். பம்பாய் நகரில் உள்ள பரேல் பகுதி மாதர் சங்கத் தலைவியும் கம்யூனிஸ்டும் ஆன கமல் தோண்டே இவ்வாறு பலியானவர்களில் ஒருவர். பிப்ரவரி 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்களில் மொத்தம் 250 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவித்தன. ‘துப்பாக்கிகள், டாங்குகள், குண்டு வீசும் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தி வந்த காலம் போய் விட்டது’ என கட்சி அறிவித்தது. ஏகாதிபத்திய வாதிகளின் இந்த ரத்தவெறி பிடித்த ஆட்டம் ‘பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒற்றுமையையும் உறுதியையும் மேலும் வலுப்படுத்தும்’ என்றும் அது கூறியது.

அரசின் ஒடுக்குமுறைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அனைத்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆலைகளை முழுமையாக அடைக்கவேண்டும் என்றும், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்து வரும் கப்பற்படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்களையும் கேட்டுக் கொண்டது. பம்பாய் நகரின் தொழிலாளர்களும் குடிமக்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பையும் நடத்தி, இந்திய கப்பற்படை வீரர்களின் இந்தத் துணிவான நடவடிக்கைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைதி மற்றும் நிவாரணத்திற்கான குடிமக்கள் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. ‘ஆசாத்இந்த் விடுதலைப் படை’யின் பிரச்சனையைப் போன்று முக்கியமானதாக மாறியுள்ள ஆயிரக்கணக்கான கப்பற்படை வீரர்களின் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர்கள் கையிலெடுக்கவேண்டும் என்றும், ‘எவ்வித பாரபட்சமுமின்றி நியாயத்தின் அடிப்படையில்’ இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கட்சி கூறியது. மத்திய சட்டமன்றத்திற்கும் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை விடுத்தது.

அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்துவரும் கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. வீரர்களின் இந்தக் கலகம் எழாமல் இருந்திருப்பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்காது. அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி, பாரபட்சம், கொடூரங்கள் ஆகியவையும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. கட்சியின் உடனடி நடவடிக்கைகளின் விளைவாக இந்திய கப்பற்படையும் அதிலிருந்த வீரர்களும் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இறுதியில் ஓர் ஒப்பந்தம் உருவாகவும் வழியேற்பட்டது. எவ்வித தண்டனையும் விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழி அளித்தபிறகும் கூட, இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதன் மூலம் அரசு தனது ஒப்பந்தத்தினை மீறியபோது அரசின் செயலை கட்சி கடுமையாகக் கண்டித்தது.

இந்த எழுச்சி தோற்றது ஏன்?

இந்திய தேசிய இயக்கக் களத்தில் குறிப்பான சில பலவீனங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ்-லீக் கட்சிகளின் உயர்வர்க்கத் தலைமை இந்த வெகுஜன எழுச்சியைக் கண்டு அஞ்சியது. அகில இந்திய அளவிலும் ராணுவப்படையின் தரைப்படை மற்றும் விமானப்படை போன்ற இதர பிரிவுகளிலும் இந்தக் கலகம் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை. தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற வேலைநிறுத்தம், முழு அடைப்பு ஆகியவற்றையும் அவர்கள் அதிகாரபூர்வமாகவே எதிர்த்தனர். கப்பற்படை வீரர்களின் இந்தக் கலகத்தை வெறும் ‘அரிசி-பருப்பு’க்கான ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்த்ததோடு, இன ரீதியான பாரபட்சத்திற்கு எதிரான கோரிக்கையை அவர்கள் காணத் தவறியதோடு, விரிவானதொரு தேசிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தப் போராட்டத்தைக் காண மறுத்தனர்.

நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் வன்முறை தாண்டவத்தை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் கண்டனம் செய்யவில்லை. மாறாக, குண்டடிபட்ட, நிராயுதபாணிகளான மக்களையே அவர்கள் விமர்சனம் செய்தனர். கப்பற்படை வீரர்களின் வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்ததன் மூலம் சட்டம்-ஒழுங்கிற்கான பிரதிநிதிகளின் பக்கமே அவர்கள் நின்றனர். ‘கப்பற்படையில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்ற தலைமைத் தளபதியின் அறிக்கையை’ தாம் ஆமோதிப்பதாக சர்தார் பட்டேல் அறிவித்தார். ‘வன்முறை நோக்கம் கொண்ட இந்து-முஸ்லீம் கூட்டணி’ என்று தனது கண்டனத்தை காந்தி தெரிவித்து குறிப்பிடத்தக்கதொரு அறிக்கையை வெளியிட்டார். அவர்கள் முன்வைத்த ஒரே ஆலோசனை கப்பற்படை வீரர்கள் அரசிடம் சரணடைய வேண்டும் என்பதே ஆகும். காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேலின் ஆலோசனை, அதைத் தொடர்ந்து ஜின்னாவிடமிருந்து வந்த செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் “இந்தியாவிடம்தான் நாங்கள் சரணடைகிறோம், பிரிட்டனிடம் அல்ல!” என்ற அறிவிப்புடன் பிப்ரவரி 23 அன்று கப்பற்படை வேலைநிறுத்த மத்திய குழு இறுதியாக சரணடைந்தது.

வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களை காப்பாற்றவும், அவர்களது சரணாகதியையும் தண்டனையையும் தடுக்கவுமான தமது முயற்சிகளில் அன்று வலுவான கட்சிகளாக இருந்த காங்கிரஸையும் முஸ்லீம் லீகையும் தன்னுடன் அணிதிரட்டுவதற்குத் தேவையான வலிமை கட்சியிடம் இருக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்தது. இவ்வாறு இருந்தபோதிலும் ‘கப்பற்படையில் இருந்த நமது சகோதரர்களின் பின்னால் தனது வலிமைஅனைத்தையும் தந்து அவர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதில் இருந்து தடுப்பதில் உதவி’ புரிந்ததாக கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாகவே பெருமைகொண்டது.

மார்க்சிய பார்வையில் காந்தி – இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

மகாத்மா காந்தியைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்திற்கு வர இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே துரதிர்ஷ்டவசமாக, ஒன்று மிக எளிமையாகவும் அவரை ஒருதலைப்பட்சமாகப் பாராட்டுவதாக இருக்கின்றன; அல்லது மிக எளிமைப்படுத்தி, அவரை ஒருதலைப்பட்சமாக விமர்சிப்பதாக இருக்கின்றன. எனினும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கான ஒரு பங்களிப்பாகவே காந்தியின் வாழ்க்கையிலிருந்து இந்த எழுத்தாளருக்குத் தோன்றுகின்ற முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதலில் கவனிக்கப்பட வேண்டியது காந்தி ஒரு கருத்துமுதல்வாதி என்பதுதான். அவரை வழிநடத்திய உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கு எதிரானது என்ற பொருளில் மட்டுமல்ல; தன் முன்னால் அவர் வைத்துக் கொண்டிருந்த சில கொள்கைகளை தனது வாழ்க்கையின் இறுதிவரை உறுதியாகப்  பற்றிக் கொண்டிருந்தார் என்பதாலும்தான். உண்மை, அஹிம்சை, வாழ்க்கையின் இன்பங்களைத் துறத்தல் போன்ற தார்மீக நெறிகள்; சுதந்திரம், ஜனநாயகம், அமைதி போன்ற அரசியல் கருத்துக்கள்; மதங்கள் மற்றும் சமூகங்களின் ஒற்றுமை போன்ற சமுதாயக் குறிக்கோள்கள் ஆகிய இவை அனைத்தும் அவரது வாழ்வு மற்றும் போதனைகளின் பிரிக்கமுடியாத பகுதிகள். இத்தகைய சில சிறப்பான கொள்கைகளை பற்றி நின்றதே அவரை தன் பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக இயக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபடச் செய்தது. இதுவே அவரை தேசத்தின் விடுதலைக்காக ஒத்துழையாமை மற்றும் இதர இயக்கங்களை வகுக்க உதவியது. இதுவே அவரை எண்ணற்ற ஜனநாயக நோக்கங்களுக்காகப் போராடுபவராகவும் ஆக்கியது. இறுதியாக, அவரை தேச ஒற்றுமை எனும் உயரிய லட்சியத்திற்காக உயிர்நீத்த தியாகியாகவும் ஆக்கியது.

இரண்டாவதாக, அதுவரை தூங்கிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான கிராமப்புறத்து ஏழைகளை தட்டி எழுப்புவதில் அவரது கொள்கைகள் மிகப்பெரும் பங்காற்றின. அவர்களோடு பேசும்போது அவர் பயன்படுத்திய அரை மதத்தன்மை கொண்ட மொழி; அவர் வாழ்ந்த எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கை; அவர்களின் கோரிக்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் காட்டிய ஆர்வம். இவையெல்லாம் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகளை அவர் பால் ஈர்த்தன. தங்களை ரட்சிக்க வந்தவராகவும், கடவுளின் அவதாரமாகவும், தாங்கள் இருந்த பரிதாப நிலையிலிருந்து தங்களை மீட்க வந்தவராகவும் அவர்கள் அவரைக் கண்டனர்.

பிற்போக்கான சமூகக் கண்ணோட்டம் கொண்டிருந்த காந்தியே நவீன தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை ஈர்க்கும் ஆழமான புரட்சிகர அற்புதத்தை உருவாக்கிய காரணகர்த்தா என்று எவரேனும் கூறினால் அது சுயமுரண்பாடு போலத் தோன்றக் கூடும். எனினும், இந்த சுயமுரண்பாடு, தேசிய ஜனநாயக இயக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் தொடர்புள்ள முதலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது என்ற உண்மையிலிருந்து எழுகின்ற நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.

மூன்றாவதாக, தேசிய இயக்கத்தில் கிராமப்புற ஏழைகளை ஈர்ப்பதில் அவர் மிக முக்கிய பங்காற்றினார் என்ற போதிலும், முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்திய மிகப் பிரம்மாண்டமான விழிப்புணர்விற்கும் அவர்தான் காரணம் என்பதும் தவறாகும். ஏனெனில், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளின் விளைவே அந்த விழிப்புணர்வு. இந்திய தேசிய இயக்கத்திற்குள் வளர்ந்து வந்த தீவிரவாதப் பிரிவு சில பகுதிகளில் விவசாயிகளையும் தொட்டது. துருக்கி, சீனா , எல்லாவற்றிற்கும் மேலாக ருஷ்யப் புரட்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் ஆசிய மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவை இந்திய விவசாயிகளின் மனசாட்சியின்மீது செயல்படத் தொடங்கிய சில அடிப்படையான காரணங்களாகும். காந்தி அந்த சித்திரத்திற்குள் வந்திருந்தாலும் அவை செயல்பட்டிருக்கும். ஒருவேளை அதேமாதிரியாக இருந்திருக்காது.

இதைச் சொல்வது இந்திய விவசாயிகளின் விழிப்புணர்விற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியான குணாம்சத்தைக் கொடுத்ததிலும், புதிய எழுச்சி, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான அரசியல் இயக்கத்தோடு இணைக்கப்பட்டதிலும் தனிநபர் என்ற முறையில் காந்தி ஆற்றிய பங்கை மறுப்பதற்காக இல்லை. கிராமப்புற மக்களை ஈர்த்ததிலும் அதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயக இயக்கத்தை பலப்படுத்தியதிலும் காந்தியின் பங்கை மறுப்பது , மக்களிடம் ஏற்பட்ட அந்த விழிப்புணர்விற்கு முழுக்க முழுக்க காந்தியே காரணம் என்பது போன்றே ஒருதலைப்பட்சமானதே ஆகும்.

நான்காவதாக, இவ்வாறாக தேசிய இயக்கத்தின் பெரும் பலவீனத்தைப் போக்கியதில் பங்காற்றியவர் என்ற பாராட்டுதலுக்கு காந்தி தகுதியுடையவர் ஆகிறார். அதாவது, இதுவரை அணிதிரட்டப்படாமல் இருந்த பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை இயக்கத்திற்குள் கொண்டு வந்தததன் மூலம் இயக்கத்தை உண்மையிலேயே ஒரு தேசிய இயக்கமாக, அனைத்து வர்க்கங்களும் கலந்து கொண்ட இயக்கமாக அவர் ஆக்கினார். அதேவேளையில், கிராமப்புற ஏழைகள் சுயேச்சையான ஒரு சக்தியாக செயல்பட்டு விடுவார்களோ என்று எப்போதும், தன் இறப்பு வரைக்கும், அவர் பயந்து கொண்டே இருந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் அவர்களை அணிதிரட்ட வேண்டும் என்று விரும்பியபோதிலும், அவர்கள் அவருடைய சொந்த வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழேதான் செயல்பட வேண்டும் என்பதிலும் அவர் குறிப்பாக இருந்தார்.

சவுரிசவ்ரா நாட்களிலிருந்து தன் இறுதி வரை, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளி வர்க்கத்திற்குப் பாதுகாப்பானது என்று கருதப்பட்ட வரம்பிற்கு உள்ளேயே கிராமப்புற ஏழைகளை வைத்திருக்க அனைத்துவகையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். இந்த உண்மையைக் காண மறுக்கும் எவரும், முதல் உலகப் பெரும்போர் காலகட்டத்தில் ஏகாதிபத்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் ஒரு தளபதியாகச் செயல்பட்ட அவர், ஏன் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் மக்கள் அகிம்சையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் என்பதை விளக்க முடியாது.

ஐந்தாவதாக, கிராமப்புற ஏழைகள் விஷயத்தில் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் விஷயத்திலும் அவரது அணுகுமுறையும் செயல்பாடும் முதலாளி வர்க்கத்திற்கு உதவுவதாகவே இருந்தது. அவரது ’தர்மகர்த்தா’ முறை பற்றிய கொள்கை, அரசியல் செயல்பாட்டின் வழிகாட்டியாக சில ஒழுக்க நெறிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, தனது தளபதிகளின் பாராளுமன்ற நடவடிக்கைகளோடு ஆக்கபூர்வத் திட்டம், சத்தியாகிரகம் போன்ற பாராளுமன்றத்திற்கு வெளியிலான தனது சொந்த செயல்பாடுகளை சாமர்த்தியமாக இணைத்த விதம், எதிரிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற பிரத்தியேகமான காந்திய வழிமுறை இவை எல்லாமே நடைமுறையில் (அ) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்பாட்டிற்காக மக்களை திரட்டுவதில் (ஆ) அவர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதிலிருந்து தடுப்பதில் முதலாளி வர்க்கத்திற்கு அளவற்ற உதவி புரிந்தன.

மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை தொடங்குவதிலும், அதே நேரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதிலும் அவருக்கு இருந்த தனித்திறன் அவரை முதலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவராக ஆக்கியது. அந்த வர்க்கத்தின் அனைத்து குழுக்களும் கோஷ்டிகளும் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தன. எனவே அவரால் முழு வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி, செயல்பட வைக்க முடிந்தது.

இறுதியாக, வரலாற்றில் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான தலைவர் என்ற பாத்திரத்தை காந்தி வகித்தார் என்பதைக் கொண்டு அவர் எப்போதும், எல்லா  விஷயங்களிலும் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றுபட்டார் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மறுபுறத்தில், நண்பராகவும், தத்துவவாதியாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருந்து தலைமை தாங்கிய முதலாளி வர்க்கத்தினுடைய, அவருடைய சிறப்பியல்பிற்கு ஏற்ற வகையில் பல தருணங்களிலும், பல விஷயங்களிலும் காந்தியின் குரல் தன்னந்தனியான ஒன்றாக இல்லை எனினும், ஒரு சிறுபான்மைக் குரலாக இருந்திருக்கிறது. அத்தகைய தருணங்கள் அனைத்திலும் அவரும் அவர்களும் தற்காலிகமாக வேறு வேறு பாதைகளில் செல்வது என்று தங்களுக்குள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். முதலில் சுயராஜ்யவாதிகளுக்கும் மாற்றத்தை விரும்பாதவர்களுக்கும் இடையிலான வேலைப் பிரிவினையாக, பின்னர் 1932-33 ஆண்டுகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிந்தைய வருடங்களில், இரண்டாம் உலகப் பெரும்போரின்போது பல சந்தர்ப்பங்களில், இறுதியாக சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மாதங்களில்  இந்த அதிசயம் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

அவருடைய இறுதிநாட்களில் அவருக்கும், அவரது சகாக்களுக்கும் இடையில் அதிகரித்துவந்த இந்த இடைவெளியை ஆராயும்போதே அவரைப் பற்றிய, அவரது குறிக்கோள்கள் பற்றிய உண்மையிலேயே பாரபட்சமற்ற பல கோணங்களிலான மதிப்பீட்டிற்கு நாம் வர முடியும். ஏனெனில், சில தார்மீக விழுமியங்களை காந்தி வலியுறுத்தியதானது ஒரு சமயம் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக இருந்து, பின்னர் அவரது இறுதி நாட்களில் அதற்குத் தடையாக ஆனதன் வெளிப்பாடே அதிகரித்து வந்த இந்த இடைவெளி ஆகும்.

முதலாளி வர்க்கம் இரண்டு முனைகளில் போராட வேண்டியிருந்த நாட்களில் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நமது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளை அது திரட்ட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருந்த புரட்சிகரப் போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தபோது, காந்தியால் உருவாக்கப்பட்ட வன்முறையற்ற போராட்ட உத்தியை மேற்கொள்வது அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டது. இருந்தபோதிலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, அரசு அதிகாரத்தைப் பெற்ற பிறகு, அது இரு முனைகளில் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தாலும் அது அரசு மட்டத்திலேயே நடத்தப்பட்டது. அதற்காக மக்களை செயலில் இறக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

மேலும் முதலாளி வர்க்கம் தன் கைக்கு வந்த அரசு அதிகாரத்தை தனது வர்க்க நலன்களை காப்பதற்காகவே பயன்படுத்தும். எனவே அரசு அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தும். அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததன் மற்றொரு விளைவு என்னவெனில், முதலாளி வர்க்கத்தின் தனிநபர் பிரதிநிதிகள் (சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள்) தங்களையும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அடிவருடிகளை அரசு மற்றும் மக்களின் செலவில் செல்வந்தர்களாக ஆக்கிக் கொள்ளத் தொடங்கினர். இதற்காக எந்த வகையான ஊழலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

முதலாளி வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் தான் போதித்து வந்த கருத்துக்களை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த காந்தியோடு அதை முரண்படச் செய்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் அவர் போதித்து வந்த தார்மீக நெறிகள் அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகளுக்குத் தடையாக ஆயின. மறுபக்கமோ காந்தி அவற்றுக்கு உண்மையாக இருந்தார். தனது சகாக்கள், தளபதிகள் ஆகியோரிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தோடு அவரால் ஒத்துப்போக முடியவில்லை. குறிப்பாக, இந்து-முஸ்லீம் ஒற்றுமை மற்றும் காங்கிரசார் மத்தியில் ஊழல் ஆகிய பிரச்சனைகளில் நிலைமை இவ்வாறே இருந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட வருடங்களில் அவர் கடைப்பிடித்து வந்த உயரிய கொள்கைகளுக்காகவே – குறிப்பாக அவை முதலாளி வர்க்கத்தின் கைகளில் பயனுள்ள ஆயுதமாக நடைமுறையில் இருந்ததாலேயே – காந்தி தேசத் தந்தை ஆனார். மேலும், தன்னுடைய பிந்தைய நாட்களில் அவர் முதலாளி வர்க்கத்திலிருந்து கிட்டத்தட்ட தனிமைப்பட்டதற்குக் காரணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் அவருடைய உயரிய கொள்கைகள் முதலாளி வர்க்கத்தின் சுயநலனுக்குத் தடையாக இருந்ததே ஆகும். உண்மை, அகிம்சை, அறம் போன்ற காந்தியின் போதனைகளை அரசியல் அதிகாரத்தை அடைவதற்காகத்தான் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இன்றும் கூட கடுமையான எதார்த்தவாதிகள் என்ற வகையில், சமூக-பொருளாதார மாற்றத்திற்கான எந்த ஒரு இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும் அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதையும், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே அவர்கள் அதிகாரத்தையும் அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் துறக்கத் தயாராக இல்லை.

இவ்வகையில் காந்தியிசத்தை மதிப்பிடுகையில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தின் தத்துவம், நடைமுறை என்ற வகையில் அதன் சாதக-பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் சரி, அல்லது பூதான இயக்கத்தின்போது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பானாலும் சரி, அல்லது 1970களில் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான காலத்திலும் சரி, காந்தியிசம் என்பது முறையே நாட்டு விடுதலை, விவசாய சீர்திருத்தம், ஜனநாயக பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி மற்றும் இருண்மைவாத சமூக-கலாச்சார கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அது இடையூறான ஒன்றாக ஆனது.

இங்கொன்றும் அங்கொன்றுமாக தனிநபர்கள், வினோபா பாவே அல்லது வேறு லட்சியவாதிகளின் போதனையை கேட்டு அதிகாரத்தையோ உடமையையோ துறக்கலாம். ஆனால் நிலப்பிரபுக்களும் முதலாளி வர்க்கத்தினரும், இதர சுரண்டும் வர்க்கங்களும் ஒரு வர்க்கம் என்ற வகையில், தீர்க்கதரிசிகள் கனவு கண்ட, நடைமுறை புரட்சியாளர்கள் எதற்காகப் போராடினார்களோ அத்தகைய சமூக மாற்றங்களுக்கு விருப்பத்துடன் உடன்பட மாட்டார்கள். அவ்வகையில்தான் வினோபா பாவேயையும் அவரது சகாக்களையும் அவர்கள் நிச்சயமாக வாழ்த்துவார்கள். கிராமதான இயக்கத்தை தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்வதற்கு உதவுவார்கள். ஆனால் அரசியல் அதிகாரத்திற்கான தங்களது போராட்டத்தை அவர்கள் எப்போதும் கைவிட மாட்டார்கள்.

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்ற இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் சமூக-பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்தில் அரசியல் அதிகாரம் அவசியமான ஓர் அம்சம் என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்தனர். இரு நூற்றாண்டிற்கு முன்பாகவே, மார்க்சிய மூலவர்கள் பிரகடனம் செய்ததைப் போல,  எந்தவொரு ஆளும் வர்க்கமும் தானாகவே அரசியல் அதிகாரத்தை விட்டுவிடுவதில்லை.

(தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய மகாத்மாவும் அவரது இசமும் என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)

ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!

(சென்ற மாத தொடர்சி) …….

பி.டி.ரணதிவே

தமிழில் : எஸ்.ரமணி

பாசிசம் மற்றும் போருக்கு எதிரான இயக்கம்

நேரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கை கூர்ந்து கவனித்ததோடு காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழி நடத்தினார். பாசிசம் மற்றும் ஆங்கிலோபிரெஞ்சு ஏகாதிபத்தியம் கடைபிடிக்கும் கொள்கைகள் குறித்து மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் நேரு எச்சரிக்கை செய்தார். மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் மீது அக்கறையற்று இருந்தனர். நேருவின் வெளிநாட்டுக் கொள்கை அறிக்கைகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஹரிபுராவில் 1938ல் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டுப் பாதுகாப்பிற்கு ஆதரவளித்தது. மேலும் அது போர் அபாயத்தை நோக்கித் தள்ளும் பாசிச ஆக்கிரமிப்புடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையினைக் கண்டித்தது.

ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனா மீது தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் அதன் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்தும், 1938ல் ஜப்பானிய பொருட்களை நிராகரிக்க வேண்டுமென மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 1938ல் இளவேனிற் காலத்தில் திரிபுராவில் நடைபெற்ற மகாசபைக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசினுடைய மூனிச் கொள்கையிலிருந்து வெளிப்படையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பிரிட்டிஷ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் விளைவாக உருவான மூனிச் ஒப்பந்தம், ஆங்கிலோ இத்தாலி ஒப்பந்தம் மற்றும் ஸ்பெயின் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஏற்கவில்லை என்பதை பதிவு செய்தது. இந்தக் கொள்கைகள் திட்டமிட்டு ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல், வாக்குறுதிகளை தொடர்ந்து மீறிய செயல், கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு முறைக்கு முடிவு கட்டியது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரிகளான அரசுகளுடன் ஒத்துழைக்க முன்வந்தது ஆகும். “பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக அதனிடமிருந்து காங்கிரஸ் தன்னை முழுமையாக விடுவித்து கொள்கிறது. ஏனெனில் அச்செயல் தொடர்ந்து பாசிச சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக நாடுகளை நிர்மூலமாக்கவும் உதவி புரிவதாக உள்ளது.

(ஆர்.பி. தத் குறிப்பு, பக்கம் 551-552)

உலகம் சிக்கலான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்த பொழுது, நேருவின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சி ஒரு கொள்கையை முன்னிறுத்தியது. அந்தக் கொள்கை உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்வைத்த மற்றும் ஆதரித்த ஒன்றாகும். நேருவின் வழிகாட்டுதல்படி காங்கிரஸ் பாசிசத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தது. மேலும் உலகத்தில் இருந்த ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கொண்டது.

பிரிட்டிஷ் அரசு 1939ல் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவித்த ஒரு சில மணித்துளிகளில் வைஸ்ராய் இந்திய மக்களில் எந்தப் பகுதியினரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியா போரை ஆதரிப்பதாக தெரிவித்தவுடன் காங்கிரசிற்கு கடுமையான சோதனை ஏற்பட்டது. காங்கிரசின் முன்னிருந்த கேள்வி இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தையும் எப்படி பார்ப்பது என்பதாகும். செப்டம்பர் 1839ல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி இதனை சரியாக புரிந்து கொண்டது. இந்தப்போர் ஏகாதிபத்தியங்களின் குறிக்கோளை அடைய நடக்கும் போர் என்று புரிந்து கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிலைபாட்டிற்கு முன்னரே வந்ததுடன், மக்களிடம் போருக்கு எதிராக பிரச்சாரமும் செய்தது. காரியக் கமிட்டி தனது தீர்மானத்தில் தெரிவித்தது “கமிட்டி இந்தப் போரில் தன்னை இணைத்துக் கொள்ளாது, ஆதரவு தராது. ஏனெனில் இந்தப் போர் ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபெறுகிறது. இதன் பொருள் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஏகாதிபத்தியத்தை கெட்டிப்படுத்த நடக்கும் போர் ஆகும்”. மேலும் அது கூறுகிறது. “இந்திய மக்களுக்கு சுயநிர்ணயம் செய்யும் உரிமை உண்டு, தங்களுக்கான அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை மூலம் வெளியார் குறுக்கீடின்றி உருவாக்கும். தங்களது சொந்த கொள்கைகள் மூலம் வழி நடத்திச் செல்லும்.”

எனவே காரியக்கமிட்டி பிரிட்டிஷ் அரசை, தெளிவாக இந்தப் போரின் நோக்கத்தை, குறிப்பாக ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியம் இவைகளுடன் சம்பந்தப்படுத்தி அறிவிப்பதுடன், அதற்குப் பின்னர் உருவாகும் புதிய சூழலில் இந்தியாவிற்கு அவற்றை எவ்வாறு பொருத்துவது மற்றும் செயலாக்கம் புரிவது…..”

(அதே புத்தகம் பக்கம் 533)

போர் சம்பந்தமாக காந்தியின் நடவடிக்கை ஜவஹர்லால் நேருவிற்கு மாறானதாக இருந்தது. போர் குறித்து காந்தி பிரிட்டனுக்கு தன்னிச்சையான ஆதரவை தந்தார். அவர் வைஸ்ராயிடம் தெரிவித்தது இந்தப் போரை வெள்ளையர்கள் இதயத்துடன் தாம் பார்ப்பதாகவும், தன்னுடைய சகாக்கள் கருத்தாக இதனை தெரிவிக்காமல், தனது சொந்தக் கருத்தாக தெரிவிப்பது முழுமையாக, எந்தவித மறுப்புமற்ற ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார். (எஸ். கோபால், வால்யூம் 1, பக்கம் 249-50). அவருடைய “வெள்ளையர்கள் இதயம்” அவருடைய போர் காலங்களில் ஏற்படும் வன்முறைக்கு எதிரான உணர்வை தாண்டி வந்துள்ளது. காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்களும் எந்தவித நிப்பதனையுமின்றி பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு நல்கதயாராக இருந்தனர். சர்வ பள்ளி கோபல் இதற்கு ஆதாரமாக “ஹேக்” என்பவர் செப்டம்பர் 17, 1939ல் வைஸ்ராய்க்கு அனுப்பிய தந்தி மற்றும் வேறொருவர் செப்டம்பர் 3, 1939 அன்று அனுப்பிய தந்தியையும் குறிப்பிடுகிறார். “.பி.யில். மந்திரிகள், போர்க் கைதிகள் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருந்தனர். அதே சமயம் மதராசில், மோதல்கள் வெடித்தபோது, ஜெர்மனியர்களை கைது செய்ய, அவர்களுடைய வங்கிக்கணக்கை முடக்க ராஜகோபாலாச்சாரியர் முயன்ற போது, கவர்னர் அதை தடுத்து நிறுத்தினார், அதன்பின்பு பிரிட்டிஷ் அரசு உயர்நீதிமன்ற ஆணைப்படியே போர் தொடுக்க விரும்பியதாக தெரிவித்தார்.” (பக்கம் 250). மந்திரிகள் தேசப்பற்றை, ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலுமாக கைவிட்டதுடன் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரியத்தயாராக இருந்தனர். மந்திரிசபையில் சேர்வது என்பது ஏகாதிபத்தியத் திடம் முற்றிலும் சரணடைவதறகு ஒப்பாகும் என்ற ஜவஹர்லால் நேரு பயப்பட்டது உண்மையென தற்போது நிரூபணமானது.

தெளிவான பாதையை வகுத்த ஜவஹர்லால், உணர்வுபூர்வமான காரணங்களைச் சுட்டி, காந்தி வற்புறுத்தினாலும், அரசியல் சந்தர்ப்பவாத காரணங்களினால் மந்திரிகள் வற்புறுத்தினாலும், பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பை நல்க தயாராக இல்லை. இருப்பினும், ஜவஹர்லால், நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அரசிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதற்காக காத்திருந்தார். ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிரிட்டன் இந்தப் போரில் ஈடுபட்டிருப்பதை நேரு புரிந்து கொண்டிருந்தார். ஆனால் பாசிச எதிர்ப்பு, பாசிச ஆக்கிரமிப்பின் விளைவாக பாதிப்படைந்தவர்கள் மீது ஏற்பட்ட பரிவு இவைகளின் காரணமாக, போருக்கு எதிரான போராட்டங்களில் உடனடியாக அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே, போருக்கான நோக்கத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

காங்கிரஸ் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வைஸ்ராய் காங்கிரசின் கோரிக்கையை நிராகரிக்கப்பதாகவும், அரசு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எதனையும் சொல்லத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். அக்டோபர் 1939ல் கூடிய காரியக்கமிட்டி அரசுடன் ஒத்துழைப்பது இல்லை என்று முடிவெடுத்து அதன் முதல் நடவடிக்கையாக மாகாண மந்திரி சபையில் இருந்தவர்களை பதவி விலகச்சொன்னது. ஆனால் வெகுஜன இயக்கம் குறித்து கமிட்டி முடிவு எதுவும் எடுக்கவில்லை. சத்தியாகிரக போராட்டத்திற்கு அழுத்தம் தந்ததோடு, மக்களின் எதிர்ப்பியக்கத்தை நடை முறைப்படுத்த திட்டம் வகுத்தது. ஒத்துழையாமை இயக்கம் ஒத்திப் போடப்பட்டது. சமரசம் ஏற்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இன்னமும் இருந்தது.

அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி ஆதரவு தந்த போதிலும், போர் குறித்த பிரிட்டிஷ் அரசின் செயல்பாடு குறித்து ஒரு தர்மசங்கடமான நிலைபாட்டை காங்கிரஸ் எடுப்பதை விரும்பவில்லை. பிரட்டிஷ் அரசு நடத்திய ஏகாதிபத்திய யுத்தம் இந்திய மக்களின் பணம் மற்றும் ராணுவத்தை பயன்படுத்த ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது. காங்கிரஸ் தனது மனசாட்சிக்கு ஏற்ப அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது.

இரண்டு வளர்ச்சிப்போக்குகள் கண்ணெதிரே தெரிந்தது. காந்தி மற்றும் ராஜாஜி போன்ற அவரது சீடர்கள் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய இந்தியா கிடைக்கப்பெற பிரிட்டிஷ் அரசுடன் சமரசமாக போகவிரும்பினர். போருக்குப் பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற உத்தரவாதம் தரும் பட்சத்தில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் ஒத்துழைக்க நேரு தயாராக இருந்தார். சில அவசிய தேவைகளுக்காக இந்த இரு போக்குகளும் சிற்சில சமயங்களில் ஒன்று சேர்ந்தன.

உலக வளர்ச்சிப்போக்குகளை உணராத நிலை

சோவியத்தும் ஜெர்மனும் செய்து கொண்ட அனாக்ரமிப்பு ஒப்பந்தம் நேருவிற்கு அதிர்ச்சியளித்தது. பிரிட்டனும், பிரான்சும் இட்லரை சோவியத் யூனியனுக்கு எதிராக போர் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதையும், இந்த ஒப்பந்தம் ஏகாதிபத்தியத்தின் கூட்டுச்சதியை முறியடிக்க எடுத்த செயல் என்பதை நேரு அறிந்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் வர்க்கத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாத நேரு, இந்த ஒப்பந்தம் இரு தேசங்களின் சந்தர்ப்பவாத ஒப்பந்தம் எனக் கருதினார். இருப்பினும் சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றுதான் இது என்பதை முணுமுணுப்புடன் பின்னர் ஏற்றுக் கொண்டார். போலந்தின் தற்காலிக பிரிவினையும் பின்லாந்தில் ஏற்பட்ட மோதலும் நேருவிற்கு அதேமாதிரியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு இவைகள் அவசியம் என்ற உணர்வு இருந்தபோதும் இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அவருக்கு அதிர்ச்சியளித்தன.

ஆறுதல் வேண்டி பின்னர் அமெரிக்காவின் பக்கம் ஜவஹர்லாலின் மனம் எங்கே திரும்பியது. “இந்தச் சூழ்நிலையில் தான் அவர் பார்வை அமெரிக்கா பக்கம் திரும்பியது. செக் குடியரசு பிரச்சனையில் ரூஸ்வெல்டின் நடவடிக்கை அவரை ஈர்த்தது. எது அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது என்றால் எதிர்கால பாரம் அமெரிக்காவின் தலையில் தான் விழும் என்று கருதியதுதான். “அமெரிக்காவை விட்டு விலகி வெகுதொலைவில் இந்தியா இருக்கிறது. உலகம் முழுவதும் ஏகாதிபத்தியமும், பாசிசமும், கோலோச்சுவதும் வன்முறையும், ஆக்கிரமிப்பும் தலைவிரித்து ஆடுவதும், சந்தர்ப்பவாதம் கொடி கட்டிப்பறக்கும் இந்த பூமியில் ஜனநாயக சுதந்திரத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா என்னும் நமது எண்ணங்கள்தான் நம்மை வழிநடத்துகிறது.”

(எஸ்.கோபால், வால்யூம் 1, பக்கம் 260-61)

இப்படிப்பட்ட அமெரிக்க மீதான நம்பிக்கை, நேருவிற்கு சோவியத்ஜெர்மன் ஒப்பந்தம் ஒரு கடுமையான அதிர்ச்சியை அளித்தது; இது சர்வதேச நிலைமைகள் குறித்த அவரது தெளிவான பார்வைக்கு ஊனம் விளைவித்தது.

நேரு மட்டுமே இந்த எண்ணத்தில் இருக்கவில்லை. அவரைப் போல் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், உலக வளர்ச்சிப்போக்குகளை, வர்க்க சக்திகளின் செயல்பாடுகளை வைத்து உணர முடியாத மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டிருந்தனர். ஆனால் நேருபாராட்டத்தக்க விதத்தில் தனது புரிதலின் சமநிலையை வெகுசீக்கிரம் அடைந்தார். இட்லர் சோவியத்யூனியன் மீது தாக்குதல் தொடுத்தவுடன், சோவியத் மீது பரிவும், அனுதாபமும் கொண்டார்.

அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதை கவனிக்கத் தவறியதோடலலாமல், அமெரிக்கா மீது நேருவுக்கு ஏற்பட்ட மாயபிம்பத் தோற்றம் ஆச்சரியப்படத்தக்கதாகும். ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் ஒருவிதமான சோசலிசத்தை உருவாக்க முயற்சித்தாகவும், தனியுடைமைக்கு எதிராக செயல்படுபவர் என்ற எண்ணமுடையவர்கள் சிலரிடம் ரூஸ்வெல்ட் குறித்து சிலாகித்து நேரு பேசினார்.

எதிரெதிர் போக்குகள் ஒன்றிணைதல்

மார்ச் 1940ல் கூடிய காரியக்கமிட்டி ஒத்துழையாமை போராட்டம் தவிர்க்க இயலாதது எனக் கருதியது. “…… ஒரு வரையறைக்குள் அல்லது பெருமளவில் மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்ற நேருவால் முன்மொழியப்பட்ட ஆலோசனையை கமிட்டி நிராகரித்தது; மேலும் காங்கிரஸ் சமரசப்போக்கை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டை போக்கும் வண்ணம் முழுமையான சுதந்திரம் தவிர மற்ற எதுவும், குறிப்பாக டொமினியன் அந்தஸ்து மற்றும் அரசியல் நிர்ணய சபை உட்பட எதுவும் ஏற்பதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்தது. (அதே புத்தகம் பக்கம் 262)

பிரிட்டிஷ் அரசு எந்தவித கோரிக்கையையும் ஏற்க மறுத்த நிலையில், முன்னர் தெரிவித்த சமரசம் செய்து கொள்ளும் அல்லது சமரசமற்ற போக்குகள் கொண்ட இரு அணிகளும் ஒன்று சேர வேண்டிய தருணம் ஏற்பட்டது. காரிய கமிட்டி தீர்மானம், சோவியத் யூனியன் குறித்து நேரு தனது பழைய நிலை பாட்டுக்கு திரும்பி வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது…. “தெளிவற்ற பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்குடன் ஜவஹர்லால் அளித்த வரைவு தீர்மானத்தில் இருந்த பின்லாந்துக்கு எதிரான சோவியத் யூனியன் நடவடிக்கை நீக்கப்பட்டது; நேருவே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அதாவது சோவியத்யூனியன் பின்லாந்தை தாக்கியது தவறு என்று தெரிவிப்பதன் வாயிலாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் திசை திரும்பிவிடக்கூடாது; பின்லாந்து போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை பலவீனப்படுத்தும் அவர்களின் முயற்சியை; மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் வளையத்திற்குள் அந்த நாட்டை சிக்கவைக்கும் முயற்சியை, ஐரோப்பாவில் நடைபெறும் போரை ரஷ்யாவிற்கு எதிராக மெய்யாகவே நடக்கும் போரின் துணை நிகழ்ச்சியாக மாற்றும் நோக்கத்தை புரிந்து கொள்வதுடன், ரஷ்யா மட்டுமே அனைத்து விதமான ஏகாதிபத்தியத்தியங்களுக்கும் சமரசம் செய்து கெள்ளாத எதிரி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.” (அதே புத்தகம்)

காங்கிரஸ் கட்சி எப்பொழுது காலம் கணிந்துள்ளது எனக் கருதுகிறதோ அப்பொழுது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தலாம் என மார்ச் 1940ல் ராம்கரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. ஒத்திப்போடும் எண்ணமும், சமரசம் காண முடியும் என்ற எண்ணமும் இன்னமும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

எக்கால கட்டத்திலும் வன்முறையை தாம் ஆதரிக்க முடியாது என்றும் வன்முறை எதிர்ப்பு என்றும் சாக்கு போக்கு காரணம் சொல்லி எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் தனது விருப்பமின்மையை காந்தி தொடர்ந்து தெரிவித்தார்.

போர் துவங்கிய மூன்று மாதத்திற்குள் ஏற்பட்ட புதிய திருப்பத்தின் விளைவாக தலை வர்களுக்கு பதவியில் அமர எவ்வித நிபந்தனையுமின்றி ஒத்துழைப்பு நல்க காங்கிரசுக்கு வாய்ப்பு கிட்டியது. ஜூன் மாத வாக்கில் பிரான்சு கவிழ்ந்தது. ஹாலந்தும், பெல்ஜியமும் சரணடைந்தது. இட்லரின் ராணுவம் பிரிட்டனில் நுழைய வாயில் முன்காத்து நின்றது. காந்தி, நேரு இரு வரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்த தகுந்த தருணமல்ல இது என்பதை ஒத்துக் கொண்டனர். ஜூன் மாதம் கூடிய காரியக்கமிட்டி இரண்டு நிபந்தனைகள் விதித்தது. ஒன்று இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட வேண்டும். இரண்டு அனைத்து கட்சிகள் அடங்கிய அரசு உடனடி யாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஜூலை மாதத்தில் கூடிய காரியகமிட்டி ஒருபடி மேலே சென்றது. காந்தி மற்றும் ஜவஹர்லாலை புறந்தள்ளி, காரியக்கமிட்டியில் இருந்த பெரும்பான்மையினர் சுதந்திரம் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு தேசிய அரசு அமைக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் போருக்கு தங்கள் ஆதரவை தருவதாக தெரிவித்தனர். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதிலிருந்து இறங்கி பதவியைப் பெறுவது என்பது பிரிட்டிஷ் அரசின் சட்ட விதிகளின் கீழ் செயல்படுவதாகும் என்று ஜவஹர்லால் வாதிட்டார். மேலும் இந்த பதவியைப் பெறுவது என்பது முன்னர் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானதும், அழிவுக்கு இட்டுச் செல்வதும் ஆகும் என்றார். ஆனால், இந்த தீர்மானத்தின் கர்த்தா ராஜ கோபாலாச்சாரி, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத்தை தனது பக்கம் இழுத்தார். பின்னர் நேருவும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவர் இந்த ஆலோசனை இந்தியாவிற்கு ஆதரவான நிலைபாடு அல்ல என்பதை உணர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக இதனை ஏற்றுக் கொண்டார்.

வைஸ்ராய் காங்கிரசின் ஆலோசனையை நிராகரித்தார். அதற்கு மாற்றாக ஆகஸ்ட் ஆலோசனை என்ற பெயரில் ஒரு ஆலோசனையை முன் வைத்தார். அதனை காங்கிரஸ் நிராகரித்தது. காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டுகோள் விடுத்தது. அப்போராட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நடத்த வற்புறுத்தியது. தனிநபர் சத்தியாக்கிரகம் மட்டும் நடத்தவும், அதில் போரில் கலந்து கொள்ளும் உரிமை பற்றி பேசும் சுதந்திரம் உண்டு என்ற வரையறைக்குள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இது ஒரு கேலிக்கூத்தான சத்தியாக்கிரகம்; ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை பகடி செய்யும் செயலாகும். காந்தியும் மற்றும் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் நடைபெற்ற கால கட்டத்தை எவ்வித எதிர் வினையுமாற்றாமல் வீணடித்தனர். அரசு விரிவாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது; நேரு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கமும் நேருவின் பங்களிப்பும்:

1941 ஜூன் வாக்கில் போர் மற்றொரு திருப்பத்தை சந்தித்தது. இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தது; அதன் விளைவாக போரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. “…… குறிப்பாக சோவியத் யூனியன் மீது நாஜிகளின் தாக்குதல் தொடர்ந்த பின்பு, பிரிட்டிஷ் அரசின் மடத்தனமான செயலின் விளைவாக நடைபெற்று வரும் நிகழ்வுகளில் அவரையும், இந்த தேச மக்களையும் பங்கேற்கவிடாமல் செய்ததை கண்டு ஆத்திரமடைந்தார். அவர் தனிப்பட்ட கடிதங்கள் எதுவும் அனுப்பவில்லை என்றாலும் அவர் அனுப்பிய பிரிட்டிஷ் நண்பர்களுக்கான நீண்ட கட்டுரைகளில் அவர் மனதிற்குள் மறைந்திருந்த வெறுப்பு பீறிட்டு வெளியே வந்ததை காண முடிந்தது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 272)

ஜவஹர்லால் சிறையிலிருந்து டிசம்பர் 4, 1941 அன்று விடுதலையானார்; அப்பொழுது தான் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கு சக்திகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவிற்கு நேரு வெளிப்படையாக தனது ஆதரவினை தெரிவித்தார். ஆனால் அதேசமயத்தில், பிரிட்டிஷ் அரசு எந்தவிதமான உறுதிமொழியையும் தராத போது காங்கிரஸ் தனது கொள்கையிலிருந்து விலகக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆனால் கிறிஸ்துமஸ் கூட்டத்தில் ராஜ கோபாலாச்சாரி தலைமையில் இருந்த மேலாதிக்கம் செலுத்திய காரிய கமிட்டி தலைவர்கள் மீண்டும், தேசத்தை பாதுகாக்க தேசிய அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்.

காந்தி, வழக்கம் போல, உறுதியற்ற நிலைபாட்டை எடுத்தார். வன்முறை மூலம் கிடைக்கப் பெறும் சுதந்திரம் பெற அவர் விரும்பாததினால், ஸ்தாபனத்திலிருந்து விலகினார். ஆனால், காரியக்கமிட்டிக்கு ராஜகோபாலாச்சாரி அளித்த தீர்மானத்தை ஆதரித்தார். அதே சமயத்தில் ஜவஹர்லாலை தாஜா செய்யும் விதத்தில் அவரை தனது வாரிசு என்று அறிவித்தார். “சிலர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களுக்கும் எனக்கும் பேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி அதையும் விட கூடுதலாக ஏதேனும் உருவானால்தான் பேதம் உண்டாகும். நாங்கள் சக ஊழியர்கள் என்ற நிலையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருவதும் தற்போது தெரிவிப்பதும் என்னவென்றால் ராஜாஜி (ராஜகோபாலாச் சாரி) எனது வாரிசல்ல; அதற்கு மாறாக, ஜவஹர்லால்தான் என் வாரிசு. அவர் என்னுடைய சொற்களை புரிந்து கொள்ள முடியாதவர்; அவர் பேசும் சொல் எனக்குப் புரியாத ஒன்றாகும். இது உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் இரு இதயங்கள் சங்கமத்திற்கு அது ஒரு தடையல்ல. இது நான் அறிவித்த ஒன்று. நான் சென்ற பிறகு என்னுடைய சொற்களில் அவர் பேசுவார்.” (அதே புத்தகம் பக்கம் 275)

நேருவின் எதிர்ப்பை மீறி காந்தி மீண்டும் தன்னுடைய படைத்தளபதிகளை, அவருடைய புனிதமான வன்முறைக்கு எதிரான கொள்கையை மீறினாலும் ஆதரித்தார். அதேசமயத்தில் நேருவின் மீது தனது நம்பிக்கையையும் தெரிவித்தார். காந்தி, தன் வர்க்கத்தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கவும், அதேசமயம் நேருவின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் எவ்வித ஒளிவு மறைவு மின்றி தன்னுடைய வர்க்க உள்ளுணர்வை வெளிப்படுத்தத் தவறவில்லை.

கிழக்குப் பகுதியில் ஜப்பான முன்னேறியதும், ரங்கூன் வீழ்ந்ததும், பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் சமரசம் காண விரும்பியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

காங்கிரஸ் வெகுஜன இயக்கத்தை கட்டவிழ்த்துவிட வேண்டி இருந்தது. மீண்டும் காந்தி மற்றும் நேரு இருவருக்கும் கூர்மையான கருத்து வேறுபாடு தென்பட்டது. பாசிச சக்தி குறித்த நேருவின் புரிதலும், ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து வன்முறையற்ற போராட்டம் நடத்த அவர் மக்களை அறைகூவி அழைத்தார். தேவையேற்படின் கொரில்லா யுத்தம் நடத்தவும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதனை காந்தி எதிர்த்ததுடன், தானே உருவாக்கிய தீர்மான அறிக்கையை காரிய கமிட்டிக்கு அனுப்பினார். தன்னுடைய வரைவு அறிக்கை ஏற்கப்படாவிட்டால், தான் விலகுவதாக காந்தி அச்சுறுத்தினார். இந்திய பிரிவினைக்கு கிரிப்ஸ் வழங்கிய ஆலோசனை மீது காந்தி ஆத்திரமடைந்தார். இந்தியாவை பிரிவினை செய்யும் நோக்குடன் இருக்கும் அரசுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ள காந்தி மறுத்தார். அவருடைய வரைவு தீர்மானம் பிரிட்டிஷ் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். பின்னர் இந்தியா ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தும். ஜப்பானின் சண்டை இந்தியாவுடன் அல்ல, மாறாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தான்.

காந்தியின் வரைவு தீர்மானம், போர் துவங்கியதிலிருந்து காங்கிரஸ் கடைபிடித்து வந்த கொள்கையிலிருந்து விலகி இருந்தது என்பது தெளிவாக அறிய முடிந்தது. இது நேருவிற்கு அதீதமாக தெரிந்தது. எனவே, ஜவஹர்லால் காந்தியின் வரைவு தீரமானத்தை முற்றிலுமாக நிராகரித்தார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இதுவரை கடைபிடித்த நாசிசம், பாசிசம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காரியக்கமிட்டி ஜவஹர்லாலின் வரைவு தீர்மானத்தை இறுதியாக ஏற்றுக் கொண்டது. இந்தியாவிற்கு ஆதரவாக ரூஸ்வெல்ட் தலையீடு செய்வார் என்ற பிரமை ஜவஹர்லாலுக்கு இருந்தது. ஆனால் ரூஸ்வெல்ட் தலையிட மறுத்துவிட்டார். எந்தப் பகுதியினரும் தனக்கு ஆதரவாக இலலை என்ற நிலையில் பிரிட்டிஷ் அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க காந்தி முடிவெடுத்தார். நேரு மீண்டும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா இவைகளின் நோக்கங்கள் நிறைவேற தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாதிட்டார். காந்தி தன்னுடைய ஜப்பான் ஆதரவுக்கொள்கையை கைவிட்டார். பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் நேச அணி நாடுகளின் ராணுவம் இந்தியாவில் இருப்பதற்கும் கூட்டணி நாடுகளின் ராணுவ ஒப்பந்த அடிப்படையில் முதல் நடவடிக்கை தேசிய அரசு அமைப்பதுதான் என காந்தி என்ற நிலைபாட்டை ஏற்றுக் கொண்ட பின்னணியில், ஜவஹர்லால் காந்தியின் தீர்மானத்தை எதிர்க்கும் தனது நிலைபாட்டை விலக்கிக் கொண்டார்.

இந்தச்சமயத்தில் விரிவான மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கத்தை நேரு எதிர்த்தார். ஆனால் காந்தி அதனை வலியுறுத்தினார். அதற்கு மாற்றாக எதுவுமில்லை என்பதை தெரிவித்தார். இந்தியாவின் நிலைபாட்டை சீனாவும், அமெரிக்காவும் புரிந்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஜவஹர்லால் எடுத்தார். காந்தி அனுப்பி ஜவஹர்லால் தயாரித்த வரைவு கடிதத்தில் “சீனா, அமெரிக்கா வுடன் முழுமையாக ஒத்துழைப்பை நல்குவதே இந்தியாவின் உண்மையான விருப்பமாகும். ஆசியாவோ அல்லது அதனைப் போன்ற உலகத் தின் பெரிய நிலப்பரப்பில் பாசிசம், நாசிசம் கோலோச்சுவது என்பதை என்னால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அதனை எதிர்த்திட இந்தியா தன்னால் இயன்றதை செய்யும். இதனைப்பார்க்கத்தவறும் பிரிட்டிஷ் அரசின் குருட்டுத்தனமும், பிடிவாதமும் இந்தியாவில் ஒரு கடுமையான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் இதுகுறித்த ஞானம் உடனடியாக அவர்களுக்கு தோன்றும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் காங்கிரசுடனும், தேசிய சக்திகளுடனும் மோதலை உருவாக்கும் திட்டத்துடன் அவர்கள் இருப்பதாக தோன்றுகிறது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 293)

மோதலை தவிர்க்க காரிய கமிட்டி கடைசி நிமிட முயற்சியை எடுத்தது. இறுதி முடிவு எடுக்க மூன்று வாரங்களுக்கு பின்பு ஆகஸ்ட் 7,8 தேதிகளில் கூடியது. பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய ஆலோசனையையும் ஏற்கவில்லை. அதன் பின்னர், நேரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஜவஹர்லால் நேருவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் போர் குறித்த காங்கிரசின் புரிதல், காங்கிரசின் சர்வதேச பார்வை, ஆசியக்கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விடுதலை, சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு இவைகள் அடங்கியிருந்தன. அந்த அறிக்கை ஒரு மாதிரி அரசை உருவாக்கவும், அதன் தலையாய நோக்கம் இந்தியாவை பாதுகாப்பதும், அமைப்புச்சட்டம் இயற்றும் நிர்ணய சபை உருவாக்க ஒரு திட்டம் தீட்டுவது ஆகியவற்றை தெரிவித்தது. போருக்குப் பின்னர் உள்ள நிலைமைகளை அந்த அறிக்கை தெரிவிப்பது “இந்தியாவின் சுதந்திரம் அன்னியர் ஆதிக்கத்தில் இருக்கும் இதர ஆசிய நாடுகளின் விடுதலைக்கு முன்னோட்டமாக அமையும். பர்மா, மலேயா, இந்தோசீனா, டச்சு ஆட்சியின் கீழுள்ள கிழக்கு இந்திய நாடுகள், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் முழுமையான சுதந்திரம் அடைய வேண்டும். எதிர்கால உலக அமைதிக்காக சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் இந்தியாவும் சேரும். கூட்டமைப்பு நாடுகளின் அமைப்புச்சட்ட விதிகளை மதித்து ஏற்றுக் கொள்வது, ஒரு தேசம் மற்ற தேசத்தின் மீது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டாத தன்மை, தேசிய சிறுபான்மையினர் பாதுகாப்பு, பின்தங்கிய தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம், உலக செல்வ ஆதாரங்களை ஒன்று குவித்து சாதாரண மக்களுக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு கூட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும்.”

அந்த கமிட்டி மேலும் தெரிவிப்பது, “சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது; அந்த தேசங்களின் சுதந்திரம் புனிதமானது, பாதுகாக்கப்பட வேண்டியது; ஐக்கிய நாடுகளின் ராணுவத்தினை சீர்குலைக்காது.’ அது மேலும் தெரிவிப்பது “இன்னமும் இந்த தேசங்களின் மீது தடை விதித்திருப்பது நியாயமல்லஎனவே அதை விலக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் சுதந்திரம் பிரிக்கப்பட முடியாத ஒன்று என்பதையும், பொதுஜன போராட்டங்களை வன்முறையற்ற முறையில் நடத்துவதும் சரி என இந்தச் செயல் நிரூபிக்கும்”.

(ஆர்.பி.துபே குறிப்பு, பக்கம் 236-37)

ஜவஹர்லால் நேருவால் வழிநடத்தப்பட்ட காங்கிரசின் சர்வதேசிய பார்வையை இது முழுமையாக வெளிப்படுத்தியது. இதனுடைய தொடர் நிகழ்வாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 1944ம் வருடத்தில் தான் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்தனர். தற்போது அவர்கள் மக்கள் சக்தியை உணர்ந்திருந்தனர். மேலும் நேரு எதிர்ப்பு மனோநிலையில் இருந்தார். பிரிட்டிஷ் அரசு, ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக் மற்றும் சமஸ்தானங்களின் உதவியுடன் துண்டாடப்பட்ட சுதந்திரம் வழங்க முன்வந்தது. இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் அண்டை நாடுகளில் நிரந்தரமான எதிரிகள் இருப்பார்கள். நேருவும் இதர தலைவர்களும் இதனுடைய அபாயத்தை உணர்ந்தனர். அதிலிருந்து மீள ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக்குடன் முதலில் உடன்பாடு காண முற்பட்டனர். ஆனால் ஜின்னாவும், முஸ்லிம் லீகும், இந்துக்களும், முஸ்லிம்களும் இருவேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெகு காலத்திற்கு முன்னரே அவர்கள் அறிவித்திருந்தனர். எனவே, ஜனநாயகத்தன்மை அடிப்படையில் எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரிய பின்னணியில் அவர் வாக்களிக்கும் சம உரிமை அல்லது சிறுபான்மையினருக்கு ரத்து அதிகாரம் தந்தால் இந்திய யூனியனுடன் சேர்ந்து இருக்க ஏற்றுக் கொள்வோம் என்றனர். எனவே, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு சென்ற பின்னர் பிரிவினை என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது. ஆரம்ப காலகட்டத்தில் காந்தி பிரிவினைக்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்தார். மற்றவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முன்வந்த சூழலில், அவர் தன்னுடைய எதிர்ப்பை விலக்கிக் கொண்டார்.

தொடரும்

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை -3

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-3

முந்தைய இரு இதழ்களில் கதூர்பா காந்தியின் சிறை அனுபவங்களை பார்த்தோம். ஆகாகான் சிறையில் அவர் காந்தியின் மீது சாயந்து கொண்டே இறந்ததோடு சென்ற இதழ் முடிவுற்றது. இந்த இறுதி பகுதியில் காந்தி குடும்ப விவகாரங்களில் தம்பதிகளின் நிலைபாட்டை பார்ப்போம். அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்தில் (1930) கதூர்பா காந்தி பங்கு பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

நாடெங்கும் திட்டமிட்டபடி மக்களால் வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் உப்பு சட்டத்தை மீறுவதற்கான போராட்டத்தில் காந்தி தலைமையில் 79 சத்தியாகிரஹிகள் சபர்மதி ஆரமத் திலிருந்து கிளம்பி 240 மைல்கள் தெற்குப்புறமாக நடந்து கடலை ஒட்டிய தண்டி கிராமத்தை நோக்கி புறப்பட்டனர். 240 மைல்கள் நடக்கவில்லை என்றாலும் வழி அனுப்பி வைத்தவர் கதூர்பா காந்தி. பங்கு கொண்டவர்களில் காந்தி குடும்பத்தில் அவரைத்தவிர மகன் மோதிலால், பேரன் (ஹரிலால் மகன்) இருந்தனர். நடைபயணம் நகர்ந்தபது காந்தியின் இடிமுழக்கம், நீங்கள் சாவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது. தென் ஆப்யீபரிக்காவிலிருந்து வந்திருந்த மோதிலால் மனைவி சுசிலா உட்பட பல பெண்கள் அழத் துவங்கியதை பார்த்த கதூர்பா காந்தி அணிவகுப்பின் முன்வைந்து நமது ஆண்கள் எல்லோரும் போர் வீரர்கள். நாம் இந்த வீரர்களின் மனைவிகள். நாம் ஆண்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். நாம் நெஞ்சுரத்தோடு இருந்தால் தான் அவர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்று தனது சுருக்கமான ஆணித்தரமான வாழ்த்துரையை வழங்கினார். ஒவ்வொரு சத்தியாகிரகியின் நெற்றியில் வெற்றிச்சின்னமாக பொட்டு இட்டபின் பேரணி நகர்ந்தது. அப்போது கதூர்பா காந்திமறுமகள் சுசீலாவை பார்த்து, அழுது கொண்டிருக்கும் ஒரு தைரியமற்ற பெண்ணாகவே உன் கணவர் உன்னை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறாயா? என்றாராம்.

இதையேல்லாம், பார்த்துக் கொண்டிருந்த சுசீலா பின்னால் தன் குழந்தைகளிடம் கூறியதை மகன் அருண் காந்தி பதிவு செய்திருக்கிறார். அப்போது நான் பார்த்த பா மிக வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் காண நேர்ந்த துன்ப துயரங்கள் அவர் முகத்தில் வருத்தம் தோய்ந்த ஆழ்ந்த சுருக்கங்களை விட்டுச் சென்றிருந்தன. ஆனால், இத்தனைக்கும் பிறகு அவருடைய வயதான, இனிய முகத்தில் அப்போது ஒரு பயமற்ற மன உறுதியும் பிரகாசமும் தெரிந்தது. பாசமே உரித்தான அந்தத்தாய் இப்போது ஒரு போரில் ஈடுபட்டு சத்தியாகிரக பேராளியாக காட்சி அளித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் மிக மோசமாக அடிபட்டு தலையில் எலும்பு முறிந்து நீண்டநாள் சிகிச்சைக்கும் சிறை வாழ்வுக்கும் ஆளானவர்களில் ஒருவர் மோதிலால். சிறையில் இருந்த இவரையும், இவர் தம்பி ராமதாசையும் பார்க்க கதூர்பா காந்தி, சுசீலாவும் போன போது, சுசீலாவின் முகம் வெளிறிப் போய்விட்டது. அதேசமயம் ஒரு சலனமும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் ஒன்றும் நடக்காதது போல் தன் மகன்களோடு உறையாடிக் கொண்டிருந்த தனது மாமியரை பார்த்து வியக்கிறார்.

மேலும், மற்ற சிறைக்கைதிகளின் நிலை, அவர்கள் குடும்பங்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஆகியவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டார் கதூர்பா காந்தி. மேலும்,மேலும் ஆண்கள் கைது செய்யப்பட்டபோது,  அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பெண்களையே முழுமையாக நம்பி இருக்கிறது என்ற என் கருத்து வலுவானது. நான் பெண்களையே நம்பியிருக்கிறேன் என்ற காந்தியின் குரல் சிறையிலிருந்து உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது. இவ்வேண்டுகோளுக்கு முதன்மை அளித்து, கதூர்பா காந்தி ஆரம பணிகளை மற்றவர்களுக்கு அளித்து விட்டு, ஊர் ஊராகச் சென்று சாராயக்கடைகளை மூடும் பணியில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கு சிறைக் கைதிகளையும் அவர்கள் குடும்பங்களையும் சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருந்த மகன் தேவதா ஐ பார்க்கச் சென்ற போது, வண்டி ரயில் நிலையத்தில் நின்றதும், ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளுடன் குவிந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த கதூர்பா காந்தி தொண்டர் ஒருவரிடம் யாருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது என கேட்டவுடன் அவர்,  அம்மா, உங்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சி அடைந்தாராம். வேறு வழியின்றி ஊர்வலத்தின் முன்னணியில் மிக்க கூச்சத்துடன் நடந்தாராம். இதற்கு முன்பு காந்திக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட மான வரவேற்புகளில் அவருடன் முழுமையாக கலந்துவிட்ட துணைவியராக மரியாதை செய்யப்பட்ட போது, இக்கூச்சம் அவருக்கில்லாமல் இருந்திருக்கலாம். புழாரங்கள் மகாத்மாவிற்கே என்ற நம்பிக்கையில். இப்போது நிலமை மாறிவிட்டது.

கதூர்பா காந்தி பூற்றி அருண் காந்தி

அருண்காந்தி தன் பாட்டியின் வரலாற்றை எழுத தனக்கு உந்து கோலாக இருந்தது என்ன என்று வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.  ஒரு ஆலமரத்தின் கீழ் எதுவுமே வளர இயலாது  என்று ஒரு கிழக்கு தேசத்தை சார்ந்த தத்துவஞானி ஒருவர் கூறினாராம். இது மனிதர்களுக்கும் பொருந்தும். காந்தியின் மதிப்பு, அந்தது ஆகியவை ஆலமரத்தினுடையதைவிட உயர்வானது. மற்றவர்களையெல்லாம் குள்ளமாகக் காட்டியது. எனது பாட்டி, தகப்பனார் மணிலால் ஆகிய இருவரும் காந்தியின் தத்துவம் மற்றும் அடையாளங்களை தங்களுடையதாக ஆக்கி கொண்டு அவரோடு ஒன்றிப்போய் விட்டனர். தந்தையின் விருப்பப்படி மணிலால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து ஏழ்மையான வாழ்க்கை பாணியை ஏற்று, தனது தகப்பனார் 1893 ல் துவங்கிய அகிம்சை மூலம் சமூக, அரசியல் மாற்றத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டார்… என் பாட்டியை பற்றி மோசமான ஒரு தோற்றம் வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பது இன்னூலின் நோக்கம். இந்திய சுதந்திர போராட்டத்திலும் காந்தி மஹாத்மா பட்டம் பெற்றதிலும் அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. அவர் தனது வாழ்வில் செய்த தியாகங்கள் தன் கணவர் கூறியதற்காக அல்ல. இவை மிக நியாயமானவை என்று அவர் நம்பியதால் எதையும் ஒரு அடிமையை போல் பின்பற்றவில்லை. நம்பிக்கையோடுதான் பின்பற்றினார்.

சத்தியத்தோடு எனது பரிசோதனைகள் என்ற நூலில் காந்தி அஹிம்சையை பற்றி தான் தனது மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுகிறார். கதூர்பா காந்தி எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்கு போகிறவரோ இல்லை. அதே சமயம் தான் எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாரோ அதை நிலை நிறுத்த தயாராக இருப்பவர். என் தாத்தாவின் நிலைபாடு தவறானது என்று நினைத்தால் அவர் உண்மையை அறிந்து கொள்ளச் செய்வார். இதுதான் அஹிம்சை தத்துவத்தின் உண்மையான சாறு (நளளநஉந) என்று காந்தி கருதினார் என்கிறார் அருண் காந்தி.

கதூர்பா காந்தி பற்றி டாக்டர் சுசீலா நயார்

டாக்டர் சுசீலா நயார் மாணவ நாட்களிலிருந்து விடுமுறைகளை காந்தி ஆரமததில் கழித்தவர். காந்தி குடும்பத்தினரை நன்கு அறிந்தவர். அவர் கருத்து: கதூர்பா காந்திக்கு தனக்கென்று ஒரு மனத்திட்பம், துணிவு, உரம் ஆகியவை உண்டு. தன்னுடைய ஆலோசனை அல்லது செயல்பாட்டை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவரை முதலில் நம்பும் படி செய்யவேண்டும் என்று காந்தி எண்ணினார். இதன் மூலம் தான் சத்தியாகிரகத்தின் ரகசியத்தை தான் தனது மனவியிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகக் கூறுவர். ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த சத்தியாகிரகிகள்; காரணம் உலகெங்கும் பெண்கள் ஆண்களால் கஷ்டப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பார். ஆணின் பொறுமையின் மையை தங்களது பொறுமையால் எதிர்திருக்கிறார்கள். பெண்கள் ஆயுதம் எடுத்து சண்டை போடாததால் ஆண்களின் கொடுமைகளை எதிர்க்கத் தனது துன்ப துயரங்களிலிருந்து ஆயுதத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. தியாகம் என்பது பெண்ணிற்கு இயல்பானது. தானாகவே வரக்கூடியது. இதன் மூலமாகத்தான் சத்தியாகிரகம் என்னும் ஆயுதத்தை அவள் உருவாக்கியுள்ளாள்.  மேற்கண்ட கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தியாகம் என்பது பெண்களுக்கு எப்படி இயல்பானது? அவள் உடல் வலிமை ஆணைவிடக் குறைந்தது. இதனால் அவள் ஆணிடமிருந்து உடல், மனோ ரீதியான துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தியாகம் என்று கருதுவது சரியல்ல. மாற்று வழியில்லாமல், மேலும்,  கொடுமைகளைத் தவிர்க்க ஒரு பெண் விட்டுக்கொடுப்பது தியாகமாகுமா? இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இப்படி பல கருத்துக்கள் உள்ளன. சத்தியாகிரகம் என்னும் பெயர் காந்தியால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டை காந்தியின் சத்திய சோதனை எனும் நூலில் குடும்ப/வீட்டு சத்தியாகிரகம் என்ற உபதலைப்பில் கீழ் காணலாம். தான் பல மருத்துவ நூல்களில் படித்ததை மற்றவர்கள் மீது பரிசோதனை செய்வதில் அவருக்கு அலாதி இன்பமாம். தென் ஆப்பிரிக்காவில் கதூர்பா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்ட பின் காந்தியின் பரிகாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் காந்தி தனது சிகிச்சையை நிறுத்த வில்லை. உப்பு பருப்பு வகைகளை ஓராண்டு சாப்பிடக் கூடாதென்றார். கதூர்பா காந்திக்கு கணவரின் மருத்துவத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆகவே, இந்த கட்டுப்பாட்டை நீங்கள் முதலில் கடை பிடியுங்கள் என்று சவால் விட்டாராம். உடனே மிக்க மகிழ்ச்சியுடன் காந்தி ஓராண்டுக்கு இவற்றை விடுக்கொடுத்து விடுவதாக சத்தியம் செய்தாராம். கதூர்பா காந்தி பயந்து போய்  நீங்கள் சொன்னது போல் நான் விட்டு விடுகிறேன். நீங்கள் இந்த உறுதி மொழியை திரும்பிப் பெற வேண்டும் என்று அழுதாராம். ஆனால் விடாப்பிடியாக காந்தி விரதத்தை மேற்கொண்டாராம். இந்த சிகிச்சை இதற்கு முன் அவர் எடுத்துக்கொண்டதல்ல. காந்திக்கு வேடிக்கையாக தோன்றிய இச்சம்பவத்தை தனது சத்திய சோதனை நூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? இந்நிகழ்ச்சியை ஒரு சத்தியாகிரகமாக பார்த்த காந்தி இது என் வாழ்க்கையில் நினைவுகளில் மிக இனியது என்கிறார்.

சுசீலா மருத்துவ மாணவியாக இருந்த போது விடுமுறைகளை காந்தி ஆரமத்தில் கழிப்பாராம். அவர் நினைவுகள்: கதூர்பா காந்தி எல்லா ஆரமங்களிலும் ஒரு தாயாகவே இருந்தார். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்தான் செய்வேன் என்று பிடிவாதமாக செய்வார். இருப்பிடம் குடிசையாக இருந்தாலும் அதை மிக சுத்தமாக வைத்திருப்பார். சமையல் அறையில் தனக்கு உதவுபவர்களை செமையாக வேலை வாங்குவார். ஆரமத்திற்கு வரும் விருந்தாளிகளை பராமரிப்பதில் அவருக்கு ஈடு இணை இல்லை. இந்திய பண்பாட்டில் சீதாராம், ராதா கிருஷ்ணா என்று மனைவிகளின் பெயர்கள்தான் முதலில் வருகிறது. ஆகவே நாம் பாபுவிற்கு முன் பா வை நினைப்பது தான் இயல்பு. தங்கள் கணவன் மார்களை தெய்வப் பிறவிகளாக ஆக்குவதில் ராமர், கிருஷ்ணன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், மோஹன்தாசை மஹாத்மா ஆக்குவதில் கதூர்பா காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதூர்பா காந்தி மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். வசதியாக வாழ்ந்தவர். ஆனால், ஆப்பிரிக்காவில் காந்தி ஏழ்மையாக வாழ்வது என்று உறுதி எடுத்துக்கொண்ட போது கதூர்பா காந்தி அதை ஏற்றுக்கொண்டார்.  ஏற்றுக்கொள்ளாமல் என்ன செய்வது? அவருடைய சூழலில் கணவரை விட்டுப்போக முடியுமா? இந்தியாவில் அவர் பெற்றோர்களும் இறந்துவிட்டார் களே? என்பதும் நியாயமான கேள்வியே. ஒரு ஆணுக்கு தன்னுடைய சூழலை மாற்றிக்கொள்ள சுதந்திரம் உண்டு. அதற்கு மனைவியை கேட்க வேண்டியதில்லை. ஆனால் பெண்ணுக்கோ…? இந்த பழம் கோட்பாட்டி;ன படியே வளர்க்கப்பட்ட கதூர்பா காந்திதென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சில ஆண்டுகளில் ஆரம வாழ்க்கையை ஏற்று சாதி பாகுபாடு பார்க்காமல் பலரோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் பங்கிட்டுக்கொண்டு வாழ வேண்டி இருந்தது.

காந்தியும் மகன் ஹரிலாலின் படிப்பும்

கதூர்பா காந்தியின் வாழ்க்கையில் அவர் மிகவும் கவலைப்பட்டது அவர் மூத்த மகன் ஹரிலால் பற்றிதான். தனது தாய் இறந்த அன்றுகூட (1944) ஹரிலால் ஆகாகான் சிறைக்கு வரவில்லை. தந்தையின் சாம்பலை அலகாபாத்தில் கங்கயை;ல கரைக்கும் போதும் அவர் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை சுசீலா நய்யார் விவரிக்கிறார். காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் வரலாறு உருக்கமானது. மஹாத்மாக்கள் சிறந்த தந்தைகளாக இருக்க இயலாது என்ற கருத்தைக் கூட இது உருவாக்கலாம். தனது தந்தை தனக்கு அநீதி இழைத்து விட்டார் என்ற உணர்வு ஹரிலாலிற்கு இளமையில் ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய தகப்பனாரைப்போல் தானும் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார்.மோதிலாலிற்கும் இதே ஆசை. ஆனால், இதற்கு இரு வித தடைகள் இருந்தன. காந்தி இதை விரும்பவில்லை. காந்தியக் கோட்பாடு மிக வித்தியாசமானது. சிறந்த  குணாம்சங்களை வளர்த்துக்கொள்வது தான் கல்வியின் நோக்கம். ஒருவர் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளை புத்திசாலித்தனம், கவனம், ஈடுபாடு, உழைப்பு போன்றவைகளோடு செய்ய வேண்டும். தன்னை முதலிடத்தில் நிறுத்திக் கொள்ளாமல் பணிகள் எதையும் கீழ்த்தரமாக நினைக்காமல் அவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் கீழ்ததரமாக நினைக்காமல் அவற்றிகே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனது தேவைகள், ஆசைகள் ஆகியவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் தனது கண்ணியம், கவுரவம் ஆகியவற்றிற்கு கீழாகப் பார்க்கக்கூடாது. இரண்டாவது தடை வெளிநாடு சென்று படிப்பது அவசியமல்ல. பி.ஏ., பி.எல் போன்ற பட்டங்களில் தங்களுடைய தந்தைக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடன் வாங்கி இங்கிலாந்து சென்று ஏன் படித்தார்? என்ற கேள்வி அவர் மகன்களுக்கு நிச்சயம் எழுந்திருக்கும். தன் தந்தை வழக்கறிஞரானது போல் தானும் ஆவதற்கு உரிமையுண்டு என்று ஹரிலால் நம்பியதில் ஆச்சரியம் இல்லை.

காந்தியின் நிலைபாட்டிற்கு மாறாக, தனது மகன்கள் முறைசார் கல்வியை பெற வேண்டும் என்பது தாய் கதூர்பா காந்தியின் ஆவல். தான் மட்டும் இந்தியாவில் இருந்து படிக்கப் போவதாக ஹரிலால் கூறியது கதூர்பா காந்தி மகிழ்வித்தது. ஒரு மகன் தனது கல்விக்கான உரிமையை நிலை நாட்டிக் கொள்வது மிகச் சரியானது என்றே நினைத்தார். குடும்பத்தினரும் நண்பர்களும ஹரிலாலை அறிவுஜீவி என பாராட்டினார். அப்போது தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு பாதுகாப்பாக சட்ட நிபுணர்கள் தேவையாக இருந்தது. காந்தி இந்தியாவிற்கு வந்து தேசீய விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வந்ததால் அவரைத் தவிர வேறு இந்திய வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டியிருந்தது. இது பற்றிய விவரங்களை சுசீலா நய்யார் தனது நூலில் தருகிறார். லண்டனில் வசித்து வந்த பிரன்ஜீவன் மேதா என்பவர் காந்தியின் மகன்களில் ஒருவரை தான் லண்டனில் படிக்க வைப்பதாக கூறினார். அதை ஏற்றுக் கொண்ட காந்தி இந்த படிப்பிற்கு யார் மிகவும் தகுதி உள்ளவர்களோ அவரை தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறினார்.  இதற்கு மணிலால் மிகவும் தகுதியுள்ளவன் என்று நான் நினைத்தால் அவனை அனுப்புவேன் என்றார். அப்பேபாது கூட அவர் ஹரிலால் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறுதியில் தனது சகோதரியின் மகன் சகன்லாலை அனுப்பி வைத்தார். சகன்லால் உடல்நிலை மோசமாகி 6 மாதங்களில் திரும்பிவிட்டார். அடுத்து சொராப்ஜி என்பவர் அனுப்பப்பட்டார். இதற்கு காந்தி ஹரிலாலுக்கு அளித்த விளக்கம்:  சொராப்ஜி பார்சிக்காரர். ஒரு இந்து, பார்சிக்காரரை வக்கீலாக்க ஊக்குவிக்க வேண்டும். ஆனால் உன்னுடைய நடவடிக்கையை பாராட்ட முடியவில்லை. இதற்கான நிதியும் திரட்டப்பட்டது. சொராப்ஜி அங்கேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். ஆனால் இத்தேர்வு பரிட்சை எழுதியவர்களில் முதலிடம் பெற்றவர் மோதிலால். இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டவரோ இரண்டாவது இடம் பெற்றவர். காரணம் தன் மகனுக்கு சலுகை காட்டியதாக யாரும் நினைக்கக் கூடாதென்ற காந்தியின் கவலையே. இருமுறைகளும் தனது தகுதியை தன் தந்தை மதிக்கவில்லை; மாறாக, அவர் தனது மகனையே அனுப்பிவிட்டார் என்று யாரும் பேசி தனக்கு இழுக்கு வரக்கூடாதென்ற கவலைதான் இதற்கு காரணம் என்று ஹரிலால் நினைத்தார். இது சரியான கணிப்புதான் என்கிறார் நூலாசிரியர் அருண்காந்தி. இதற்குப்பிறகு ஹரிலால் இந்தியா திரும்பினார். போகும்போது ஹரிலால் தனது தகப்பனார் பற்றி தன்னிடம் கூறியதுகதூர்பா காந்தி மனதிற்குள் மீண்டும் மீண்டும ஒலித்துக்கொண்டிருந்தது. அவருக்கு நாம் யார் பற்றியும் கவலை கிடையாது. கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இத்தகைய விஷயங்களில் கதூர்பா காந்தி தலையிட்டு தன் மகனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க வாய்ப்பிருந்த போது அதை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. காந்தி தனது மகனை ரயிலில் ஏற்றிவிடும் போது கூறியது :  உன் தகப்பனார் உனக்கு தவறு செய்துவிட்டார் என்று நீ நினைத்தால் தயவு செய்து அவரை மன்னித்துவிடு. ஆனால் தனக்கு கல்வி வாய்ப்பை அளிக்க மறுத்த தந்தையை மகன் என்றும் மன்னிக்கவில்லை.

ஹரிலாலின் மதமாற்றம்

ஹரிலால் வேலையை இழந்து குடும்பத்தையும் பராமரிக்காத சூழலில் கெட்ட பெயரே வாங்கிக் கொண்டிருந்தார். 1936 ல் காந்தி தம்பதிகள் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நாக்பூர் டேஷனில் ரயில் நின்றது. வழக்கம் போல் மக்கள் கூடி மஹாத்மா காந்திக்கு ஜெய் என்று கோஷமிட்டனர். அப்போது ஒரு குரல் உரக்க ஒலித்தது. அன்னை கதூர்பா காந்திக்கு ஜெய் என்று. மிக்க வியப்போடு கதூர்பா காந்தி ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹரிலால் கிழிந்த துணிகளோடு வயதிகர் போல் காணப்பட்டார். ஜன்னல் அருகே வந்து அவரிடம் ஒரு ஆரஞ்சுப்பழத்தை நீட்டி, அம்மா, இதோ உங்களுக்கு என்னுடைய அன்பின் சின்னம் என்றார். பின் காந்தியை பார்த்து நீங்கள் மிகப் பெரிய மனுஷன் என்றால் அதற்கான முழு காரணமும் என் அம்மா தான் என்றார். ரயில் கிளம்பிய போதும் ஹரிலால் மீண்டும் எழுப்பிய கோஷம் கேட்டது. கதூர்பா காந்தியின் மனம் குழம்பிற்று. ஹரிலாலின் நடத்தையை எப்படி நியாயப்படுத்த முடியும்? மகனின் குடிப்பழக்கம், தன்னுடைய குழந்தைகளிடமிருந்தே பணம் வாங்குவது; தன் தகப்பனாரை தாக்கி பத்திரிக்கைகளில் எழுதுவது; சிறையில் அடைபடுவது. இத்தனைக்கும் பொட்டு வைத்தாற்போல் 1936ல் பம்பாய் முலீமாக மாறியது. இந்த மதமாற்றம் பணத்திற்காகவே என்றும் பரவலாக பேசப்பட்டது.

மகனின் மதமாற்றம் பற்றிய வேதனையை பத்திரிக்கையில் தன் மகனுக்கு  கதூர்பா காந்தி ஒரு கடிதமாக  எழுதினார்…. நீ ஏன் உன்னுடைய மூதாதையர்களின் மதத்தை மாற்றிக்கொண்டாய்? எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இது உன்னுடைய விவகாரம். ஆனால்நீ வெளியிட்டிருந்த அறிக்கையில் உன்னை நீ மேலும் மேம்படுத்திக்கொண்டு ஒரு ஒழுங்கான வாழ்க்கையை துவங்குவாய் என்று பார்த்ததும் எனக்குள் ரகசியமாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த நம்பிக்கையும் இப்போது தூள் தூளாகிவிட்டது. உனக்கு மதம் பற்றி என்ன தெரியும்? நீ இந்த வழியிலேயே போனால் உன்னை யாரும் தீண்டமாட்டார்கள். தன் மகன் முலீம் அனாலும் பரவாயில்லை; அது அவனுடைய விவகாரம். இனிமேலாவது நல்ல பழக்க வழக்கங்கள் வந்தால் போதும் என்றகதூர்பா காந்தியின் பரந்த மனோபாவத்தை இது காட்டுகிறது. முலீம் ஆன பிறகும் ஹரிலாலின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிந்தபோதுதான் அவர் விரக்தி அடைகிறார். இதே சமயம் ஹரிலாலின் மத மாற்றத்திற்கு காரணமானவர்களுககு கடிதம் இந்திய பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அதன் சில பகுதிகள்:

…. ஹரிலாலிற்கு உள்ள மோசமான பழக்கங்களிலிருந்து அவனை வெளிக்கொண்டு வராமல் அவனுக்கு மௌல்வி பட்டம் எப்படி அளிக்கப்போகிறீர்கள்?… என் மகனை உங்கள் சகோதரனாக நினைத்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள். என் மகனை ஏளன்ம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் விருப்பமானால் உங்களிடம் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. ….ஆண்டவனின் பார்வையில் நீங்கள் செய்வது சரியில்லை.

டாக்டர் சுசிலா நயாரின்  நூலிலிருந்து: ஹரிலாலின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக  அமையும் என்று எல்லோரும் எண்ணியபோது அது ஒரு சோக முடிவை தழுவியது. ஹரிலால் உருவான உருக்கமான நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு? முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கனவுகளும் ஆசைகளும் நொறுங்கிவிட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையில் உருவான நிர்பந்தங்கள் என்னவாக இருந்தாலும் அவர் தன்னுடைய மனைவி மகன்களுக்கு ஒருதலைசார்பற்ற நியாயம் சொல்லவில்லை.  தன் மனைவி சீதையின் உணர்வுகளை மதிக்காமல் அவளைப்பற்றி ஒரு வண்ணான் என்ன சென்னார் என்பதற்கு அதிகமுக்கியத்துவம் அளித்த ராமனைப்போல் காந்தி தனது மனைவி, மகன்களின் உணர்வுபூர்வமான தேவைகளையும் மற்றதையும்விட தனக்கு உண்மை எனத் தோன்றிய கோட்பாடுகளுக்கே அதிக மதிப்பளித்தார். தனது தந்தை முன்வைத்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஹரிலால் தனது வாழ்க்கையை தான் விரும்பிய ஒரு வரையறையில் கொண்டு வர முடியாமல் சேர்ந்துவிட்டார். காந்தியின் நான்கு மகன்களிலும் நன்கு திறமையானவர் ஹரிலால் என்று கூறலாம். தன்னுடைய திறமையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் அவருடைய தகப்பனாரின் சாதனைகளைக்கூட அவர் எட்டியிருக்கலாம். அவருடைய வாழ்க்கையின் முடிவு ஒரு பெரும் சோக நிகழ்வுமட்டுமல்ல. மிகப்பெரிய தேசிய இழப்புமாகும். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களுக்குப்பின் ஹரிலால் இறந்துவிட்டார்.

மகன் மோதிலால் கலப்பு திருமணத்திற்கு காந்தியின் மறுப்பு

தென்ஆப்பிரிக்காவில் காந்தி துவங்கிய இந்தியன் ஒப்பீனியன் எனும் பத்திரிக்கையை அவர் இந்தியாவிற்கு திரும்பிய பின் அவருடைய மகன் மோதிலால் நடத்தி வந்தார். தான் ஒரு இலாமியப்பெண்ணை மணக்க விரும்பியதாக மோதிலால் தகப்பனாருக்கு எழுதிய போது, அதை சற்று காட்டமாகவோ நிராகரித்து விட்டார்  காந்தி. இதற்காக அவர் அளித்த சில காரணங்கள்: இத்திருமணத்தை நீ விரும்புவது உன் மதத்திற்கு எதிரானது. இது இரு வாள்களை ஒரே உறையில் போடுவதற்கு சமமாகும். உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுவார்கள்? அவர்கள் மீது யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். உன்னை மணப்பதற்காகவே பாத்திமா தனது மதத்தை விட்டு கொடுத்து விட்டால் தனது மதத்திற்கு  எதிரக ஒரு பெரும் குற்றத்தை செய்தவராவார். அல்லது நீங்கள் இருவரும் மதநம்பிக்கைகளை கைவிட்டுவிடுவீர்களா? இந்து முலீம் நல்உறவிற்கு உங்கள் செயல் பேரதிர்ச்சியாக இருக்கும். இந்து -முலிம் பிரச்சனையை கலப்பு திருமணங்களால் தீர்க்க முடியாது. நீ எனது மகன் என்பதை மறக்கக்கூடாது. சமூகமும் இதை மறக்காது. இத்திருமணத்தின் மூலம் நீ உன் மக்களுக்கு சேவை புரிய முடியாது. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை நடத்துவதற்கான தகுதியை நீ இழந்துவிடுவாய் என நான் கருதுகிறேன். உன் தாயின் சம்மதம் பற்றி நான் கேட்க முடியாது. அவள் கொடுக்க மாட்டாள். அவள் மனது வாழ்நாள் முழுவதும் புண்பட்டுவிடும். அவளிடம் இதுபற்றி பேச தைரியம் இல்லை. இறைவன் உனக்கு சரியான பாதையை காட்டட்டும். மோதிலாலின் செய்தி கதூர்பா காந்தியை எப்போதாவது சென்றடைந்ததா என்பது தெரியாது.

ஆனால் அருண்காந்தி தனது பாட்டிக்கு தெரிந்திருந்தால் அவர் காந்தி எழுதியதைப்போல் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என்கிறார். பிரச்சனையை காந்தி மிகைப்படுத்தியதாகவே தெரிகிறது. ஆனால் காந்தி தனது மகனின் திருமணம் அவனது விவகாரம் என்று மட்டுமே பார்க்கவில்லை. இதை அன்றைய அரசியலோடும் அதில் தனது பங்கோடும் இணைத்துப் பார்க்கிறார். சுதந்திரப்போராட்டத்திற்கு அடிப்படையான இந்து – முலீம் ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சியை இத்திருமணம் பலவீனப்படுத்தும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதில் உண்மையும் உண்டு. ஆனால் இத்திருமணம் உன் மதத்திற்கு எதிரானது என்று காந்தி கூறியதை ஏற்கமுடியாது. இது இந்து மதத்தை பிராமணியத்திற்கு சமமாக்கி அதற்குள் அடக்குகிறது. மேற்கண்டதை படிக்கும்போது, பலருக்கும் காந்தியின் பிராத்தனை கூட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒரு பாட்டு நினைவுக்கு வரும். ஈவர அல்லா தேரே நாம்: சப்கோ சன்மதி தே பகவான் இதன் பொருள்: ஆண்டவனின் பெயர் ஈவரன், அல்லா என்ற இரண்டுமே தான். கதூர்பா காந்தியின் இறுதி காலத்தில் அவருக்கு என்று ஒரு வீடு இல்லை என்பதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவிலேயே தனிவீடு என்ற கருத்தை அவர் விடவேண்டி வந்தது. பிறகு ஆரமங்கள்தான் வீடு. பலரோடு கூடிவாழும் ஆரமும் இல்லை. காந்தி வார்த்தாவிற்கு அருகே ஒரு மண்குடிசையில் இருந்தார். அவரோடு இருக்கலாம் என்று எண்ணி அங்கு போனபோது காந்திக்கு தனிமையும் தியானமும் எவ்வளவு தேவையானது என்று புரிந்து கொண்டார். கதூர்பா காந்திக்கு தனிமை தேவையில்லை. தொடர்ந்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உழைப்பதையே விரும்பினார் என்கிறார் அருண் காந்தி.

காந்தி தம்பதிகளிடையே பல முரண்பாடுகள் கோபதாபங்கள் இருந்ததற்கான சில ஆதாரங்கள் (துவக்கத்தில் குறிப்பிட்ட அவருடைய கொள்ளு பேத்தி உமா துபேலியாவின் 2005ம் ஆண்டு வெளிவந்த நூலில் உள்ளன. இவை நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் அவர்களுடைய பிரச்சனைகள் மல்கிய வாழ்க்கையில் இவற்றை சகஜமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

III

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் படருமா?

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். பகுத்தறிவும் பிராமணியத்திற்கு எதிர்க்கலாச்சாரமும் ஊறிய இந்த பூமியில், பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் மூச்சுவிடாது நாற்பது ஆண்டுகளாய் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் இந்துத்துவ பாரதீய ஜனதா கால் நுனியைக்கூட ஊன்ற முடியாது என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்கள். பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளை தமிழகம் கொண்டாடி முடித்திருக்கும் இவ்வேளையில், அவருடைய கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்த போதிலும், பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தச் சக்திகளையெல்லாம் எதிர்ப்பதற்காகப் பாடுபட்டாரோ அந்தச் சக்திகளை முழுமையாக உருவகப்படுத்தி நிற்கும் பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் தயக்கமின்றி அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன திராவிடக் கட்சிகள்.

தமிழகத்தின் சமூக, கலாச்சார தளங்களிலும் இந்துத்துவ சக்திகளின் சில நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சிகள் நடக்கின்றன. பசுவதைத் தடுப்பு, மரக்கறி (சைவ) உணவுக்கு ஆதரவான இயக்கம், கோவில்களில் உயிர்ப்பலி தடுப்பு, கோவில் குளங்களை சுத்தம் செய்வதில் முனைப்பு, கோவில்களில் அன்னதானம், தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு, விநாயகர் ஊர்வலங்கள் என்று ஏராளமான வடிவங்களில் தமிழகம் மறந்துபோன பல விஷயங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைப் படரவிட்டுள்ள திராவிடக் கட்சியினர் சங்பரிவாரத்தின் முயற்சிகளை ஒரு கலாச்சாரப் பிரச்சினையாக பார்க்காதது மட்டுமின்றி பல நேரங்களில் உள்ளூர் மட்டத்தில் அவற்றில் பங்கேற்கவும் செய்கின்றனர்.

மேடைகளின் பின்புலத்திலும், கட்சிப் பாடல் வரிகளிலும், மாநாட்டு உரைகளின் முதல் சில வரிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலுள்ள பழைய பிரதிகளிலும் தவறாமல் இருக்கும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சறுக்கலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? சந்தர்ப்பவாத மென்றால் பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பிருக்கும்போது இவர்களும் மாற வாய்ப்பிருக்கிறது. சறுக்கல் என்றால் மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடப்பது விலகல்.

இந்த விலகலின் வரலாறு பெரியாரின் வாழ்நாட்களிலேயே துவங்கிவிட்டது. இந்த விலகலின் வேர் திராவிட இயக்க வரலாற்றின் துவக்க காலத்திலிருந்தே தீர்க்கப்படாத சில முரண்பாடுகளிலும், முழுமையடையாத, முதிர்ச்சியடையாத ஒரு தத்துவார்த்த அரசியல் போக்கிலும் ஊன்றியிருக்கிறது. இந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியின்மையையும் புரிந்துகொள்வதற்கு பெரியார் என்ற புயல், எழுந்து வளர்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றின் மீதும் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியத்தினால் முதலில் ஈர்க்கப்பட்டு, பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் சமூகப் பிற்போக்குத்தனங்களையும் விட்டுத்தள்ள  மனமில்லாத தேசிய வாதிகளை வெறுத்து விலகிச் சென்று, ஜாதீய, மதப் பிடியில் சிக்கியுள்ள சமூகத்தை சவுக் காலடித்துச் சீர்திருத்தும் பாதையில் சென்று, பின் சோஷலிஸத்தின் சிறப்புணர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு சிறிது தூரம் சென்று திரும்பி மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, இந்திய சுதந்திரத்தை நிராகரித்து… பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.

பிரிட்டிஷ் அரசுக்கு மகஜர் அளிதுக்கொண்டிருந்த காங்கிர மக்கள் இயக்கமாக மாற்றம் பெற்றது காந்தியின் தலைமையில்! அந்நிய ஆட்சியைத் துரத்த மட்டுமின்றி, வறுமை, தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் விடுதலை பெறவேண்டுமெனப் போராடும் தேசிய இயக்கத்தில் தன் நண்பர் இராஜகோபாலாச் சாரியாரின் வழிகாட்டுதல்படி 1919-இல் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்த அவர் (கதர்) காதித் துணி மூட்டைகளைச் சுமந்து கிராமம் கிராமமாகச் சென்று விற்றார். எண்பது வயது நிரம்பிய தன் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர் அனைவரையும் காதி அணியச் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி மது விலக்குப் போராட்டத்தை அறிவித்தபோது தானே முன்னின்று கள்ளுக்கடை மறியல்களை நடத்தினார். இயக்கத்தை நிறுத்த வேண்டிக் கோரிக்கை எழுந்தபோது, அந்த முடிவு தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்றார் காந்தி. அவர் கூறிய பெண்கள் பெரியாரின் மனைவியும், சகோதரியும். அத்தனை தீவிரமாக கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்தனர் இருவரும்! போராட் டத்தின் ஒரு பகுதியாக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களையும் வெட்டினார் பெரியார். பழுத்த தேசியவாதிகள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் மரங்களை வெட்டினர். இவ்வளவு தீவிரமாகத் தேசியவாதப் பாதையில் எட்டாண்டுகள் நடைபோட்ட பெரியார், காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தின் தேசிய இயக்கத் தலைவர்களில் பலரின் சமூகப் பார்வை குறுகியே இருந்தது. தேச விடுதலை என்பது இந்திய எல்லைக்குள் வாழும் எல்லோருக்குமான விடுதலை. அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது, விடுதலை என்ற கருத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மனிதனைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் எல்லா சமூக, கலாச்சார, ஆதிக்க சாதிகளிடமிருந்தும் விடுவித்து ஒரு புதிய வாழ்க்கை மற்றும் சிந்தனைத் தளத்திற்கு இட்டுச் செல்வதுதான் உண்மையான விடுதலை. தேசியம் பற்றிய பெரியாரின் இந்தப் புரிதல் காங்கிர இயக்கத் தலைமையின் புரிதலோடு முரண்பட்டது. இந்த முரண்பாடு முதலில் வெளிப்பட்டது சேரன்மாதேவியில் தேசிய இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தான். தேசிய சமூக சேவைக்காக வகுப்பு வேறுபாடின்றி இளைஞர் களைப் பயிற்றுவிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தக் குருகுலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உணவருந்த தனி இடமும், தரத்தில் சற்றே உயர்ந்த உணவும் அளிக்கப்பட்ட நடைமுறை பெரும் பிரச்சினையாக வெடித்தது.

பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் காந்தியைச் சந்தித்தனர். இதில் பிராமணரல்லாதோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி பிரச்சினை சமூக நீதி என்ற பெரும் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடேயாகும். சமூக அநீதி இருக்கும் வரை இந்திய தேசியம் என்ற லட்சியம் நிறைவேறாது என்ற முடிவுக்கு காங்கிரசில் இருந்த பிராமணரல்லாதோர் வந்தனர். பெரியாரிடமிருந்து கொள்கை விஷயங்களில் வேறுபட்ட திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) கூறிய தீர்வுகளையும் கூட குருகுலப் பிரச்சினைகளில் வ.வே.சு.ஐயர் ஏற்க மறுத்தார்.

குருகுலத்திற்கு காங்கிர கமிட்டி தரவேண்டிய பாக்கி ரூ.5,000 ஐ அங்கு பொது உணவிடம் ஏற்படுத்தும் வரை தர இயலாது என்று செயலாளர் என்ற முறையில் பெரியார் முடிவெடுத்திருந்தார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே பிராமணராயிருந்த ஒரு உதவி செயலாளர் மூலம் அப்பணத்தை காசோலையாகப் பெற்றார் வ.வே.சு.ஐயர். இதனால் ஆத்திரமுற்ற பெரியார் குருகுலத்தின் மீது முழுப்போர் பிரகடனம் செய்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மெற்கொண்டார்.

ஏற்கெனவே கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் பிராமணர் வசிக்கும் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஈழவர்கள் நடப்பதைத் தடுத்ததையொட்டி எழுந்த பிரச்சினையில் தலையிட்டு நடத்திய போராட்டத்தில் பிராமணப் பழமைவாதிகளின் நிலைப்பாடுகளால் ஆத்திரமுற்றிருந்த பெரியாருக்கு, தேசிய இயக்கத்துக்குள்ளிருந்த ஜாதீய உணர்வுகள் அவ்வியக்கத்திலிருந்து அவரை அன்னியப் படுத்தின.

தேசியம் பற்றிய பெரியாரின் புரிதல் என்னவாக இருந்தது? பாலக்காட்டில் பெரியார் நிகழ்த்திய உரையில் இதற்கு விடை இருக்கிறது.

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மன சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்க வேண்டும். ஈதன்றி, அதற்கு  மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமான தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உயர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்  கூடாது, அடிமைகள் இருக்க கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய விளக்கமளித்த பெரியாருக்கு அன்றைய தேசியவாதிகள் மீது வெறுப்பு வரக் காரணமென்ன?

மேற்குறிப்பிட்ட வகையில் தேசியம் வளர்வதற்கான சட்டம் எதையும் அவர்கள் செய்யவில்லையென்பது மட்டுமின்றி, வந்த சட்டங்களுக்கு முட்டுக் கட்டையும் போட்டவர்கள் தேசியவாதிகள் என்று சாடுகிறார்.

மக்கள் சாதி பேதத்தையும், மதபேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலை நிறுத்தவும், வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதுமில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண் மக்கள் விபச்சாரத்தை தடை புரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப்பிரதிநிதித்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்ற கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யார்?

பால்ய விவாகத்தை தடை செய்யும் சாரதா சட்டம் மத்திய சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட போது, பழுத்த தேசாபிமானிகளும், பிரபல தேசியத் தலைவர்களும் என்ன நிலையெடுத்தனர் என்பதை பெரியார் அம்பலப்படுத்தினார். மதன் மோகன் மாளவியா: 14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லதுதான். ஆனாலும் வைதீகர்களோடு மோதலை தவிர்ப்பதை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்.

மோதிலால் நேரு 20 வயதுக்கு முன்னால் எங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை. அவசியமிருக்கிறவர்கள் 14 வயதுக் குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தார். கேஸ்கர் என்ற தேசியத் தலைவர் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய்ச் சட்டம் செய்யக் கூடாது என்றார்.

இத்தகைய தேசியவாதிகளின் கையில் தேசம் சென்றால் என்னவாகும் என்ற கவலை அவருக்கு இருந்தது.

வினா அறியாக் குழந்தைகளைக் கடவுளின் கடவுள் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரிகளாக்குவதையும், மக்களை விபச்சாரத் தொழிலால் ஜீவனம் செய்யக் கூடாதென்றும், ஜாதிக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும், சாமிகள் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால் அதுவும் பூரண சுயேச்சையை விரும்பும் சங்கக் காரியதரிசியும், கற்ற பண்டிதராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர் களும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுய ராஜ்ஜியத்தில் இராமராஜ்ஜியத்தில் எதிர்பார்க்க கூடுமென்பது விளங்கவில்லை

இத்தகைய தேசிய தலைவர்களையெல்லாம் வழி நடத்திய காந்தியாரின் கருத்துக்கள் சில பெரியாரை மேலும் தேசிய இயக்கத்திலிருந்து அன்னியப்படுத்தியது.

செப்டம்பர் 1927-இல் கடலூருக்கு விஜயம் செய்த காந்தி, பிராமணர்கள் அறிவின் கலன்கள், தியாகத்தின் உருவம் என்று புகழ்ந்தார். பிராமணர்கள் தங்கள் பாரம்பரிய எளிமையைப் பேணி பிராமணரல்லாதோர் கொடுப்பதைப் பெற்று வாழ வேண்டு மென்றும், பிராமணரல்லாதோர் பிராமணரை வெறுப்பதன் மூலம் ஒரு புதிய தீண்டத்தகாதப் பிரிவை உருவாக்கிவிடக் கூடாதென்றும், பிராமணர்கள் இந்து மதத்தின் காவலர்களென்றும் கூறினார். பிராமணர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்து மதத்தின் அதிவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்ம அமைப்பினை பிராமணரல்லாதோர் தகர்த்துவிடக் கூடாதென்றும் வேண்டுகோள் விடுத்தார். வர்ணாசிரமம் என்பது ஒரு பிரபஞ்ச விதி, மனித ஆற்றலை உயரிய நோக்கங்களுக்குத் திசை திருப்பும் ஆன்மீகப் பொருளாதார விதி என்று விளக்கங்களைக் கொடுத்தார்.

இவ்விளக்கங்கள் ஏற்கெனவே காங்கிரஸிற்குள் நடக்கும் பிராமணிய ஆதிக்க செயல்பாடுகளினால் வெறுப்புற்றிருந்த பிராமணரல்லாதோரிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. வர்ணாசிரம தர்மம் பற்றிய காந்தியின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியாக பெரியாரும், எ.ராமநாதனும் அவரைச் சந்தித்தனர். அவருடைய கருத்துக்கள் தீண்டாமை, பால்ய விவாகம் ஆகிய பிரச்சினைகளில் பிராமணிய பழமைவாத சக்திகள் மேற்கொண்டுள்ள நிலைப்பாடுகளை வலுப்பெறச் செய்யுமென்றும் இச்சமூகத் தீமைகளுக்கு எதிராக காந்தி எடுத்துள்ள நிலைப்பாடு களையே மறுதலிக்குமென்றும் எடுத்துக்கூறினர். காந்தியின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட பெரியார் இந்திய தேசிய காங்கிர, இந்துமதம், பிராமணியம் ஒழியும்போது மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று காந்தியிடம் கூறினார்.

காங்கிர  மூலம் சமூக நீதி கிடைக்காது என்று முடிவெடுத்த பெரியார் 1927-இல் அவ்வமைப்பிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்ற சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கினார். கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உணர்வுகளையும் உள்வாங்கி தேசவிடுதலை என்ற இலக்கினை நோக்கிச் செல்லும் இயக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பினை காங்கிர இழந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருக்கு பிராமணரல்லா தோர் இயக்கமான நீதிக்கட்சியில் நேரடியாக இணையும் வாய்ப்பு இருந்தது. அக்கட்சியின் பல மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார் கலந்து கொண்டபோதிலும் அவ்வியக்கத்தின் குறிக்கோள் ஆட்சியிலும், அரசாங்கப் பதவிகளிலும், கல்வி, வேலை வாய்ப்பு களிலும் பிராமணரல்லாதோருக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்றிருந்தது. பிராமணரல்லாதோரின் நலன்களைப் பாதுகாக்கப் பிறந்த இயக்கம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நீதிக்கட்சி 1916-இல் வெளியிட்ட பிராமணரல்லாதோரின் அரசியல் அறிக்கையில் இப்பிரிவில் பெரும்பான்மையோராயிருந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏனெனில் பிராமணரல்லாதோரின் சமூக, வர்க்க அடித்தளம் வேறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விவசாயம் வியாபாரமாக்கப்பட்டு, பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டதால் பிராமணரல்லாத சாதியினரிடையே பணக்கார விவசாயி, தரகு வணிகர், வட்டி முதலாளி போன்ற வர்க்கங்களும் படித்த, நடுத்தர வர்க்கமும் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் பிரிட்டிஷ் அரசு அதிகார இயந்திரத்தை மத்தியத்துவப் படுத்தியது; இந்திய மயமாக்கியது. ஏற்கெனவே கல்வியில் குறிப்பாக, ஆங்கிலக் கல்வியில், வியாபித்திருந்த பிராமணர்களே பெரும்பாலான அரசுப் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். கல்வியின் விரிவாக்கம் மற்றும் பிராமணரல்லாதோரிடையே புதிய வர்க்கங்களின் தோற்றத்தால் அரசாங்கப் பதவிகளில் இப்பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேற்கத்திய கல்வியினால் முன்னேற்றம் பெற்றிருந்த பிராமணர்களே தேசிய இயக்கத்தில் முன்னணி வகித்து வந்ததால் அவர்களுக்கு எதிராக இந்திய சமூகத்திலிருந்தே ஒரு பிரிவினர் எழுந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வசதியாக இருந்தது. பிராமணரல்லாத பிரிவினரின் மேல்தட்டிலிருந்து வந்த வர்க்க சக்திகளின் அரசியல் வடிவமாகவந்த நீதிக்கட்சியின் முதல் அறிக்கை இதனால்தான் கல்வி, அரசாங்கப்பதவி என்ற குறுகிய கோரிக்கை வட்டத்திற்குள் நின்றது. பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமே வர்க்கங்களுக்கும் இனங்களுக்கும் இடையே தராசை நியாயமாகப் பிடிக்கும் வல்லமை படைத்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் செல்வாக்கினையும் அதிகாரத்தையும் அழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அந்த ஆட்சிக்கு ஆழ்ந்த விசுவாசத்துடன் நடப்போம் என்றும் பிராமணரல்லாதோர் அறிக்கை கூறியது. அமெரிக்க செவ்விந்தியர்களின் உடல்களின் மீதும், ஆப்பிரிக்க அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சியும் பூதாகரமாய் வளர்ந்து நின்ற ஏகாதிபத்திய சக்தி, தாதாபாய் நெளரோஜி போன்ற அறிஞர்களினால் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்று புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த வர்க்கம் பிராமணரல்லா தோரின் நலன் என்று எதைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவு.

பிராமணரல்லாதோர் அறிக்கை புகழராம் சூட்டிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணரல்லாதோர் சமூகத்தின் பெரும்பாலோரின் அவல வாழ்க்கையை எடுத்துக் காட்டும் சில உண்மைகள் இங்கே:

பரந்து விரிந்து வரும் தன் உலக சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய இரக்கமற்ற நிலவரிக் கொள்கையினால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல வருடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1823இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். மக்கள் தலையில் துணியிட்டபடி உணவைத் தேடியலைந்து கொண்டிருந் தனர். பொதுச் சாலைகளில் தினமும் மக்கள் மடிகின்றனர்.

1876-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, சென்னை மாகாணத்தில் மூன்றரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏழரை லட்சம் பேருக்கு 22 மாதங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டியிருந்தது.

இந்தப் பெரும் பஞ்சத்தினால், லட்சக்கணக்கான மக்கள் (பிராமணரல்லாதோர்) புலம் பெயர்ந்து இலங்கை, பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிச் சென்றனர்.

1878ஆம் ஆண்டில் மட்டும் 1,50,000 பேர் இலங்கைக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

பெரும் பஞ்சங்களுக்கு காரணமாயிருந்த பிரிட்டிஷ் கொள்கைகள், பண்ணையாள் எனப்படும் விவசாயத் தொழிலாளி அடிமைகளை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை. பறையர், பள்ளர், பள்ளி (வன்னியர்) போன்ற சமூகப் பிரிவுகளைச் சார்ந்த பண்ணையாட்கள் உணவு தானியங்களை அளப்பது. விவசாய நில எல்லைகளை ஏற்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, இறந்தவர்களைப் புதைப்பது போன்ற பணிகளில் பிராமணர் மற்றும் பிராமணரல்லாத நிலப்பிரபுக்களால் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட்ட கடனுக்காக பரம்பரை பரம்பரையாக பண்ணைச் சேவகம் புரிந்தனர் இம்மக்கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இந்த அடிமை முறைக்கு ஆங்கிலேயே ஆட்சியின் ஆசிர்வாதம் இருந்ததாக பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென்னிந்தி யாவில் நிலமும், சாதியும் என்ற புத்தகத்தில் தர்மா குமார் என்ற ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 1800இல் பண்ணைச் சேவகம் புரிந்த பள்ளர்களும், பறையர்களும் தலைமறைவாகி விட்டனர் என்று கேள்விப்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் அனைவரையும் அவரவரின் எஜமானார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், அடிமைகள் அரசாங்கத்திற்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் புரியுமாறு காவல்துறையைக் கொண்டு நிர்ப்பந்திக்க வேண்டு மென்றும் யோசனை கூறினார்.

அடிமை முறைக்கு எதிராக பிரிட்டிஷ் சமூகத்திற்குள் எழுந்த இயக்கங்கள் வலுப்பெற்ற போதுதான் 1841இல் பிரிட்டிஷ் ஆட்சி அடிமையொழிப்புச் சட்டம் இயற்றியது. அதுவரை அடிமைகளை விடுவிப்பதனால் நிலவுடைமை அமைப்பு சிதைந்து நிலவரி வருமானம் குறையாமல் பிரிட்டிஷ் ஆட்சி பார்த்துக் கொண்டது.

பிராமணரல்லாதோர் அறிக்கை இந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி நியாய உணர்வைப் பாராட்டுவதோடு, மட்டுமல்லாமல் பெரும்பாலான பிராமணரல்லாதோர் அவ்வாட்சியில் எப்படி வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடாதது அதன் வர்க்க சமூக நிலைப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது.

பிராமணர்களோடு நடத்தும் அதிகார வர்க்கப் போட்டியைவிட சமூக, கலாச்சார தளங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுத்த பெரியார், எ.ராமனாதன் துவங்கிய சுயமரியாதைக் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்த சமூக, கலாச்சாரப் போராட்டத்தின் சமூக அடித்தளம் பிராமணரல்லாதோரில் பெரும் பகுதியினரைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் விவசாயத் தொழிலாளர், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், அகமுடையார், இசை வேளாளர், செங்குந்தர், வன்னியகுல சத்திரியர் போன்ற பிரிவினரிடையே இயக்கத்தை எடுத்துச் சென்றார். சௌந்தரபாண்டிய நாடார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் தன் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

பிராமணர்கள் (ஆரியர்கள்) கலாச்சார ரீதியாக திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனரென்றும், புராணங்களும், சாதிரங்களும், மனுநீதியும் கொளுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

சுயமரியாதை இயக்க வீரர்கள் தங்கள் பெயரிலும், உடலிலும் இருந்த ஜாதிய அடையாளங்களைத் துறந்தனர். 1932-ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 பேர் தங்கள் ஜாதிப் பெயர்களைத் துறந்ததாகக் கணக்கு உள்ளது. கலப்புத் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைத் திருமணம், வரதட்சிணைமுறை கண்டனம் செய்யப்பட்டன. விதவை மறுமணத்துக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையும், விவாகரத்து உரிமையும் கோரப்பட்டது. மனித சிந்தனையின் மீது சாதியமும், மதமூட நம்பிக்கைகளும், கட்டியிருந்த சங்கிலிகளை அறுத்து, வாய்ப்பளித்தால் எப்பிறப்பைச் சேர்ந்தவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் உருவாக்குவதில் சுயமரியாதை இயக்கம் பெரும் பங்காற்றியது.

மத நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து, பகுத்தறிவுப் பாதையில் திருப்பிவிடும் வகையில் புரட்சிகரமான தீர்மானங்களை சுயமரியாதை இயக்கம் நிறைவேற்றியது. வழிபாட்டுக்கென்று ஒரு பைசா கூட தமிழர்கள் செலவழிக்கக்கூடாது, புதிதாகக் கோவில்கள் கட்டக்கூடாது, கோவில் வருமானத்தைக் கொண்டு தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி, கல்வி தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோவில் திருவிழாக்கள் நடத்துவதை விட்டு பொது சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைப்பற்றிய கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய தீர்மானங்களை பிராமணர்கள் மட்டும் கண்டிக்க வில்லை. நீதிக்கட்சி நடத்திய பிராமணரல்லாதோரும் நிராகரித்தனர். அதிகாரப் பங்கீட்டில் பிராமணர்களை விரோதியாகப் பார்த்த நீதிக்கட்சி தலைவர்கள் பலரும், சமூக கலாச்சாரத்துறைகளில் பிராமணியம் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பிரபுத்துவக் கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. பிராமணரல்லா தோர் இயக்கத்தின் இந்த முரண்பாடு தீர்க்கப்படாத ஒன்று. சமூக சீர்திருத்தம் என்ற கட்டத்திலிருந்து சோஷலிஸம் என்ற அடுத்த கட்டத்துக்கு பெரியார் முன்னேறிச் சென்றபோது இந்த முரண்பாடு மேலும் முற்றியது.

ரஷ்யப் புரட்சியில் தொழிலாளி வர்க்க ஆட்சி ஏற்பட்டதன் வீச்சும், முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட பெரும் முதலாளித்துவ நெருக்கடியின் மோசமான தாக்கமும் புதிதாய்த் தோன்றி எழுந்துவரும் தொழிலாளி வர்க்கத்தினிடையே சோஷலிஸ மாற்றத்துக்கான ஒரு வேட்கையைத் தோற்றுவித்தது. 1920-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்திலிருந்து தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 511-லிருந்து 1330 ஆக உயர்ந்தது. ஏறக்குறைய ஒரு லட்சமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 1,90,500 ஆக உயர்ந்தது. இடதுசாரித் தலைவர்களான சிங்காரவேலு செட்டியார், ப.ஜீவானந்தம் போன்றோர் இடதுசாரி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சென்றனர்.

இடதுசாரித் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பெரியாரின் உலகப்பார்வையில் ஒரு புரட்சிகர மாற்றமும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவருடைய கருத்துக்கள் எவ்வளவு ஆழம் பெற்றன என்பதற்கு ஒரு சான்று:

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்துக்கு அடிப்படையாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். ஜாதி வித்தியாசம் என்பது ஏதோ ஒரு முட்டாள்தனத்தினால் ஏற்பட்டது என்று சொல்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன் ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத்தனத்தால் எற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற் காக சாதிர ஆதாரங்களும் மதக்கோட்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்படவேண்டு மானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத்துறையில் மக்கள் எல்லோரும் சமத்துவத்துடன் இருக்கும்படியான காரியங்கள் எற்பட்டால் ஒழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்படக்கூடியது அல்ல என்றே சொல்லுவோம்.

அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கான ஒரு அருமையான அரசியல் திட்டத்திற்கான கருவினை இந்த உரையில் பார்க்கலாம்.

சோவியத் யூனியன் பயணமும் பிரிட்டிஷ் இடதுசாரி தொழிற் சங்கத் தலைவரான சக்லத் வாலாவின் சந்திப்பும் ஒரு பெரும் சோஷலிச தாக்கத்தை பெரியாருக்குள் ஏற்படுத்தின. சுயமரியாதை இயக்கத்துடன் இணையாக சமதர்மக் கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சோஷலிசக் கருத்துக்களை பெரியாரும் சுயமரியாதை இயக்க வீரர்களும் எடுத்துச்சென்றனர். சுயமரியாதைக் கூட்டங்களின் முடிவில் முதலாளித்துவம் ஒழிக, சோஷலிசம் வாழ்க என்று மக்கள் எழுந்து நின்று குரல்கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கு கலாச்சார உணர்வுகளிலிருந்து ஜனநாயக, சோஷலிச உணர்வை நோக்கி மக்களின் கணிசமான  ஒரு பகுதியினரை திருப்பியதில் பெரியாரின் பங்கு மகத்தானது.

சுயமரியாதை, சீர்திருத்தம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்ற பாதையில் போய்க்கொண்டிருந்த பெரியார், புரட்சிப் பாதையில் நடமாடத் தொடங்கியதும் இரண்டு பகுதியினர் கலவரமடைந்தனர். நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்த நிலவுடமை யாளர்களும் சிறுமுதலாளிகளும் ஒருபுறம். ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சி மறுபுறம். பெரியார் மீது இரு பக்கங்களில் இருந்தும் தாக்குதல். வர்க்க நலன்களுக்கு ஊறு வந்ததால் சிங்காரவேலருடன் சேர்ந்து பெரியார் இயற்றிய ஈரோட்டுத் திட்டத்தைக் கைவிட்டு சீர்திருத்தப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கூற 1934-இல் கம்யூனிச இயக்கத்தை தடை செய்த பிரிட்டிஷ் அரசு, சுயமரியாதை, சமதர்ம இயக்கத்தின் மீதும் நேரடித் தாக்குதல் தொடுத்தது.

பெரியார் எந்தப்பக்கம் போனார் என்பது வரலாறு! தமிழகத்தில் முற்போக்கு அரசியல் தடத்தையே மாற்றிப்போட்ட முடிவு அது.

இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பிருந்த காலத்திலேயே பணக்காரர்களும் நமக்கு வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் பிராமணர் அல்லாதோர் மற்றும் சுயமரியாதை இயக்கத்திற் குள்ளிருந்த அடிப்படையான மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளை தீர்த்து முன்னேறவில்லை.

1936-இல் ராஜாஜி தலைமையில் காங்கிர ஆட்சிக்கு வந்ததும் அதுவரை பிராமணர் அல்லாதோர் இயக்கம் அடைந்த சமூக, அரசியல் பலன்கள் (வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தேவதாசிமுறை ஒழிப்பு, பால்ய விவாக தடுப்பு, அறநிலையத்துறை மசோதா) காங்கிரஸ்-பிராமண ஆட்சியில் அடிபட்டுவிடும் என அவர் அஞ்சினார். அவரை சோஷலிசப் பாதையில் வைத்திருப்பதற்கான இடதுசாரி அமைப்போ அரசியல் திட்டமோ நிலைபெற்றிருக்க வில்லை.

இந்நிலையில் நீதிக்கட்சியின் பக்கம் பெரியார் சென்றார். ராஜாஜி அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது. விடுதலை இயக்க வீச்சிற்கு முன்னால் நிலைகுலைந்து போயிருந்த பிராமணர் அல்லாதோர் இயக்கத்துக்கு புத்துயிர் அளித்தது. இந்தி எதிர்ப்புப்போரில் தமிழ் தேசியம் முனைப்புப்பெற்றது. சீர்திருத்தம், சுயமரியாதை என்ற பரிணாமங்களுடன் தமிழ் உணர்வு என்ற புதிய பரிணாமமும் சேர்ந்து பிராமணர் அல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கம் என்ற புதிய வடிவம் பெறுவதற்கான வரைபுள்ளிகள் வைக்கப்பட்டன.

ஆனால் இந்த வரைபடத்தை முழுமையாக்க நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுப்போக்கு உதவாது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட சி.என்.அண்ணாதுரை போன்ற பேச்சாற்றல் மிக்கத் தலைவர்கள் பெரியாரை நேரடியாக எதிர்க்காமல் அவரது உலகப்பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்துக்கு இயக்கத்தைக் கொண்டு சென்றனர்.

விடுதலைப்போரின் வேகத்தில் நீதிக்கட்சி உதிர்ந்துபோக திராவிடர் கழகம் பிறந்தது.

அரசியல் விடுதலைபெற்று பிராமண-காங்கிர ஆதிக்கத்தில் இருப்பதைவிட திராவிட நாடு ஒன்றை தனியாகப்பெற்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இயங்க வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் இந்திய சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை. ஆகட் 15 துக்க நாள் என்று அறிவித்தார். இந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அண்ணாதுரை போன்றோர் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக சாத்தியக்கூறுகளின் தன்மையை உணர்ந்து திராவிடர் கழகத்தை ஒரு முழு முதல் அரசியல் சக்தியாக மாற்றும் வண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்தினை ஏற்படுத்தினர்.

ஜமீன்தார் மற்றும் பெருநில உடமையாளர்களுக்கும் புதிதாக மேல் எழுந்து வந்த மத்தியதர வர்க்கத்திற்கும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தினுள் நிகழ்ந்த முரண்பாடே புதிய அரசியல் கட்சியாக முடிந்தது.

பெரியார் சோஷலிசப் பாதைக்குச் சென்று மீண்டும் சீர்திருத்தத்திற்குத் திரும்பியது ஒரு குண ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே சீர்திருத்தம் என்ற தளத்தில் இருந்து முழுயைமான அரசியல் தளத்திற்கு அண்ணாதுரை சென்றதும் திராவிட இயக்கக்கொள்கையில் ஒரு குணமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை மூன்று கூறுகளாக இலங்கைத் தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கூறுவார்.

  1. தேர்தல் அரசியலில் பங்குகொள்வது என்ற தீர்மானம் (1956).
  2. நாத்திக நிலையில் இருந்து விடுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாடு.
  3. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படல்.

சமூக சீர்திருத்தத் தளத்திலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த திமுகவின் வளர்ச்சிக்கு நாத்திகம் ஒரு தடையாக இருக்கும் என்பதால் அக்கொள்கை நிலையிலிருந்து மாறியது. வளர்ந்து வரும் பிரதேச முதலாளித்துவத்திற்கு, இந்தியா என்பது ஒரு பெரும் வணிகச் சந்தையாகவும் மேலெழுந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கு வேலைவாய்ப்புச் சந்தையாகவும் இருந்ததால் தனி நாடு கோரிக்கையையும் கைவிட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிர வலுவிழக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு பிரதேச சக்தியாக தன்னை அடையாளம் காட்டி, மத்திய அரசு எதிர்ப்பு நிலை எடுத்து நின்றது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற கோஷங்களை விட்டு வடக்குடனான பேர ஆற்றலை வளர்த்துக் கொண்டது. 1972-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பின் திராவிட இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதி பிரதேச அரசியலில் இருந்து அகில இந்திய அரசியலுடன் ஐக்கியமாகி மத்திய அதிகாரத்தில் பங்காளியாகும் போக்கு ஏற்பட்டது. காங்கிர முற்றிலுமாக வலுவிழந்து அதற்கு மாற்றாக அகில இந்திய வீச்சுள்ள ஒரு சக்தி எழாத நிலையில் மத்திய ஆட்சியில் வலுவான பங்கு வகிக்கும் நிலைக்கு திராவிட இயக்கம் சென்றது.

சீர்திருத்தம் பகுத்தறிவு என்ற அடிப்படைகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்ட நிலையில் தமிழர் என்ற உணர்வினாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கம் இது என்ற நம்பிக்கையினாலும் பின்திரண்டு நிற்கும் மக்களின் வாழ்வில்  உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் பொருளாதாரத் திட்டம் இல்லாத நிலையில் கொள்கைகளைப் பின்னுக்குத்தள்ளி தனிநபர் அரசியல் முன்னுக்கு வந்துள்ளது. அரசியல் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று ஆகிவிட்டபிறகு ராமனும் ராவணனும் ஒன்றுதான்-பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்.

முற்போக்கான அரசியல் பொருளாதாரத் திட்டம் திராவிடக் கட்சிகளுக்கு இல்லாதது, பெரியார் காலத்தில் இருந்தே வர்க்க நிலைப்பாட்டினை மேற்கொள்ளாத ஒரு வரலாற்றுப் பலவீனம். பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டினை நடத்தினார்; நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவா தேவிக்காரர் அல்லாதார் மாநாடு நடத்தினார்; உயர்சாதி இந்துக்களை தலைவராகக் கொண்டு தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தினார்; தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத்தீர்மானம் இயற்றப்பட்டது என்று கோ.கேசவன் பெரியாரை விமர்சித்தது போலவே நிலவுடமை யாளர்களின் ஆதரவை வைத்துக்கொண்டே நிலச்சீர்திருத்த சட்டத்தை இயற்றியது சமூக பொருளாதார நீதிக்கு எப்படி வழி செய்ய முடியும்?

அரசு அதிகார எந்திரத்திலும் சமூக அளவிலும் பிராமண மேலாண்மையை நீக்கி எல்லா சமூகத்தவருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஜனநாயக மயமாக்கும் போக்கிற்கு திராவிடஇயக்கம் தலைமை வகித்தபோதிலும் ஏறக்குறைய 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தலித்துகளுக்கு கல்வியிலும் அரசுப்பதவிகளிலும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் சமூக அளவிலும் பல இடங்களில் தீண்டாமையின் வடிவங்கள் நிலவுகின்றன. வன்முறையும் நடக்கிறது. அரசியல் அதிகாரம் இருந்தபோதிலும் திராவிட இயக்கத்தால் ஜனநாயக மயமாக்கும் போக்கினை நிறைவு செய்ய இயலவில்லை என்பது தெளிவு. மேலவளவும் தாமிரபரணியும் இதற்குச் சான்றுகள்.

இடஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பவை திராவிட இயக்கச் சாதனைகள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அரசாங்க வேலைகளில்தான். தனியார்மயம், உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வேலைவாய்ப்புகளே குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு குந்தகம் விளைந்துகொண்டிருக்கும் வேளையில் தெளிவான பொருளாதாரக் கண்ணோட்டமும் வர்க்கப்பார்வையும் இல்லாத திராவிட இயக்கம் எப்படி சமூக நீதியைக் காக்கப்போகிறது. உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் தாண்டவம் வேலை வாய்ப்புகளையும், நீர், நிலம், காற்று போன்ற மனிதகுலத்தின் பொதுச்சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தைவிட வேகமாக மூன்றாம் உலகநாட்டு மக்களை வறுமையிலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டிருக்கிற பாசிச சக்திகள் பன்முக கலாச்சார தன்மைகளை ஒருமுகப்படுத்த முனைந்துகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் இராக்கிலும், ஆப்கானிதானத்திலும் தன் உண்மையான முகத்தைக்காட்டி வருகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. பல நாடுகளில் பொருளாதார சுதந்திரமும் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பலைகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எதிர்ப்புக்கு இன்றும் கூட ஆயுதமாகப் பயன்படும் ஆற்றலைக் கொண்டவைதான் 1930-களில் பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் சமதர்மமும்.