வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்
கார்ல் மார்க்ஸ்
தமிழில்: மா.சிவக்குமார்
“எதிர்கால தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி” காரல் மார்க்ஸ் தனது பள்ளி இறுதி வகுப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மதத்துடனும் கடவுளுடனும் இன்னும் முழுமையாக கணக்கு தீர்த்து விட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக வளர்வதற்கு முன்பு, கடவுளின் பெயரையும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. இக்கட்டுரை 17 வயதிலேயே மார்க்சிடம் இருந்த சமூக வாழ்வு பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
தொழிலை தேர்ந்தெடுக்கப் போகும் அல்லது தேர்ந்தெடுத்த தொழிலை செய்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் படித்து ஆழமாக அசை போட வேண்டிய கட்டுரை.
ஒரு விலங்கு இயங்க வேண்டிய செயல்பாட்டு வட்டத்தை இயற்கையே தீர்மானித்திருக்கிறது. அந்த வட்டத்தைத் தாண்டிச் செல்ல முயற்சி செய்யாமல், வேறு விதமான எந்த செயல்பாடுகள் குறித்த உணர்வும் கூட இல்லாமல் அது அந்த வட்டத்துக்குள்ளேயே அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மனிதருக்கும் ஒரு பொதுவான குறிக்கோளை, மனிதகுலத்தையும், தன்னையும் மேம்படுத்திக் கொள்வது என்ற பொதுவான குறிக்கோளை, இறைவன் கொடுத்திருக்கிறான். ஆனால், இந்த குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொறுப்பை மனிதரிடமே அவன் விட்டிருக்கிறான். தன்னையும், சமூகத்தையும் உயர்த்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவதற்கு சமூகத்தில் தனக்கு மிகப் பொருத்தமான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரவரிடமே விட்டிருக்கிறான்.
இந்தத் தேர்வு செய்யும் உரிமை மற்ற உயிரினங்களுக்கு இல்லாமல் தனிச்சிறப்பாக மனிதருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சலுகையாகும். ஆனால், அதே நேரத்தில் அது ஒரு மனிதரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாசப்படுத்தி விடக் கூடிய, அனைத்து எதிர்கால திட்டங்களையும் முடக்கி விடக் கூடிய, அவரை மகிழ்ச்சியற்றவராக ஆக்கி விடக் கூடிய ஒரு முக்கியமான தேர்வு ஆகும். எனவே, இந்தத் தேர்வு பற்றிய கவனமான பரிசீலனை, தனது பணி வாழ்வை தொடங்கவிருக்கும், தனது வாழ்வின் முக்கியமான விவகாரங்களை நிகழ்ச்சிப் போக்கில் விட்டு விட விரும்பாத ஒரு இளைஞரின் முதல் கடமையாகும்.
ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் இருந்து தன் வாழ்வுக்கான இலக்கைக் கண்டு கொள்ள முடிகிறது. அவரளவில் அது மகத்தான ஒன்றாக தோன்றுகிறது. அவரது ஆழமான நம்பிக்கைகள், அவரது மனதின் மிக ஆழமான குரல் அதை உறுதி செய்தால் உண்மையில் அது மகத்தானதே. ஏனென்றால், நிலையற்ற வாழ்வுடைய மனிதருக்கு எந்த ஒரு வழிகாட்டலும் இல்லாமல் இறைவன் கைவிட்டு விடவில்லை; அவனது குரல் மென்மையாக ஆனால் உறுதியாக நம்மிடம் பேசுகிறது.
ஆனால் இந்தக் குரல் பிற எண்ணங்களுக்கு மத்தியில் எளிதில் மூழ்கடிக்கப்பட்டு விடலாம்; உள்மனத் தூண்டுதல் என்று நாம் எடுத்துக் கொண்டது உண்மையில் கண நேர விளைவாக இருந்து இன்னொரு கண நேரத்தில் அழிக்கப்பட்டு விடலாம். நமது கற்பனை தீப்பிடித்து, நமது உணர்ச்சிகள் எழுச்சி பெற்று, தேவதைகள் நமது கண்கள் முன் மிதந்து போகையில், நமது கணநேர உள்ளுணர்வு சொல்வதற்குள் நாம் தலைகால் தெரியாமல் குதித்து விடலாம். அதை இறைவனே நமக்கு சுட்டிக் காட்டியதாக நாம் கற்பனை செய்து கொண்டிருப்போம். ஆனால், நாம் ஆரத் தழுவிக் கொண்டது விரைவில் நம்மை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது; நமது ஒட்டுமொத்த வாழ்வும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறது.
எனவே, நமது தொழிலை தேர்ந்தெடுப்பதில் நாம் உண்மையிலேயே உள்ளுணர்வால் தூண்டப்பட்டிருக்கிறோமா, உள்மனக் குரல் ஒன்று அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா அல்லது இந்தத் தூண்டுதல் ஒரு மாயையா, இறைவனின் அழைப்பு என்று நாம் எடுத்துக் கொண்டது உண்மையில் ஒரு சுயஏமாற்றுதானா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்த உள்ளுணர்வின் தோற்றுவாயை கண்டறிவதைத் தவிர வேறு எந்த வழியில் அதைச் செய்ய முடியும்?
மகத்தானது மின்னுகிறது, அதன் பிரகாசம் நமது லட்சியத்தை தூண்டுகிறது, அந்த லட்சியமே இந்த உள்ளுணர்வை, அல்லது நாம் உள்ளுணர்வு என்று கருதிக் கொண்டதை உருவாக்கியிருக்கலாம். ஆனால், லட்சியம் என்ற பேயால் தூண்டப்பட்ட ஒரு மனிதரை தர்க்க நியாயம் தடுத்து நிறுத்தி விட முடியாது. கணநேர உள்ளுணர்வு சொல்வதில் அவர் தலைகால் தெரியாமல் குதித்து விடுகிறார். அதன் பிறகு வாழ்வில் அவரது நிலை அவர் தேர்ந்தெடுப்பதாக இருப்பதில்லை, சந்தர்ப்ப சூழலாலும், தோற்ற மயக்கத்தாலும் அது தீர்மானிக்கப்படுகிறது.
தலைசிறந்த வாய்ப்புகளை அள்ளித் தரும் பதவியை எடுத்துக் கொள்ளும்படி நாம் தூண்டப்படக் கூடாது. ஏனென்றால், அதை நாம் பின்பற்றவிருக்கும் வரப்போகும் நீண்ட நெடிய ஆண்டுகளில் சலிப்பூட்டாமல், நமது ஆர்வத்தை குறைத்து விடாமல், உற்சாகத்தை குளிர்ந்து போகச் செய்து விடாமல் வைத்திருக்கும் ஒன்றாக அது இருக்காது. மாறாக, அத்தகைய ஒன்றை தேர்ந்தெடுத்தால், விரைவில் நமது விருப்பங்கள் பொய்த்துப் போய் விட, அது குறித்து இறைவனிடம் கசப்பாக முறையிடுவதும் மனித குலத்தையே கரித்துக் கொட்டுவதும் என நாம் ஆகி விடுவோம்.
லட்சியம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழில் மீதான திடீர் ஆர்வத்தை தூண்டி விடுவதில்லை. ஒருவேளை நாமே அதை கற்பனையில் கவர்ச்சிகரமாக அலங்கரித்திருக்கலாம். வாழ்க்கை நமக்கு தரப் போவதில் அதுதான் தலைசிறந்தது என்று தோன்றும் அளவுக்கு அதை அலங்கரித்திருக்கலாம். நாம் அதைப் பற்றி கவனமாக ஆய்வு செய்திருக்கவில்லை, அது நம் மீது சுமத்தவிருக்கும் ஒட்டுமொத்த சுமையையும், மிகப்பெரிய பொறுப்பையும் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை; அதை ஒரு தொலைவில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறோம், தொலை பார்வை நம்மை ஏமாற்றி விடக் கூடியது.
நமது சொந்த தர்க்கம் இங்கு ஆலோசகராக இருக்க முடியாது. அது நீண்ட வாழ்க்கை அனுபவத்தாலோ, ஆழமான அவதானங்களாலோ உறுதி செய்யப்பட்டதில்லை, அது உணர்ச்சியால் ஏமாற்றப்பட்டு விடக் கூடியது, பகல் கனவால் குருடாக்கப்பட்டு விடக் கூடியது. இந்நிலையில் நாம் யாரிடம் ஆலோசனை கேட்க போக வேண்டும்? நமது தர்க்கம் நம்மை கைவிடும் போது யார் நமக்கு வழிகாட்ட வேண்டும்? ஏற்கனவே வாழ்க்கையின் பாதையில் பயணித்து, விதியின் கடுமையை அனுபவித்து விட்ட நமது பெற்றோர்தான் சரியான வழிகாட்டி என்று நமது மனம் நமக்கு சொல்கிறது.
அதன் பிறகும் நமது உற்சாகம் நீடித்தால், ஒரு குறிப்பிட்ட தொழிலை நாம் தொடர்ந்து நேசித்தால், மிக அமைதியான மனநிலையில் அதை பரிசீலித்த பிறகும் அதன் சுமைகளை உணர்ந்து கொண்டு, அதன் சிரமங்களை தெரிந்து கொண்டு விட்ட பிறகும் அதுதான் நமது வாழ்க்கை பணி என்று நாம் கருதினால், அப்போது நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நமது உற்சாகம் நம்மை ஏமாற்றியிருக்காது, அல்லது மிதமிஞ்சிய அவசரம் நம்மை இழுத்துச் சென்று விட்டிருக்காது.
ஆனால், நமது வாழ்க்கைப் பணியாக விதிக்கப்பட்டதாக நாம் நம்பும் பதவியை எல்லா நேரங்களிலும் நம்மால் அடைந்து விட முடிவதில்லை. அத்தகைய தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு நாம் வருவதற்கு முன்பே சமூகத்துடனான நமது உறவுகள் குறிப்பிட்ட அளவுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
நமது உடல்நிலையே பல நேரங்களில் அச்சுறுத்தக்கூடிய தடையாக இருக்கிறது, அது விதிக்கும் வரம்புகளை யாரும் எளிதில் புறக்கணித்து விட முடியாது. உடல்ரீதியான வரம்புகளை தாண்டி நாம் நம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான், ஆனால், அதில் தோல்வியடைந்தால் நமது வீழ்ச்சி அந்த அளவுக்கு வேகமாக இருக்கும், ஏனென்றால் நொறுங்கிக் கொண்டிருக்கும் இடிபாடுகளின் மீது கட்டுமானம் செய்ய துணிந்தால் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மனதுக்கும் உடலுக்கும் இடையேயான வருந்தும் போராட்டமாக மாறி விடுகிறது. தனக்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் காரணிகளை சமன் செய்ய இயலாத ஒருவரால் வாழ்க்கையின் கொந்தளிப்பான மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்ள முடியும், அவற்றுக்கு மத்தியில் அவரால் எப்படி அமைதியாக செயல்பட முடியும்? அமைதியில் இருந்தே மகத்தான, மிகச்சிறந்த செயல்பாடுகள் எழுகின்றன. பழுத்த பழங்கள் வெற்றிகரமாக விளையும் மண் அது மட்டுமே.
நமது தொழிலுக்கு பொருத்தமில்லாத உடல்கட்டுமானத்தை வைத்துக் கொண்டு நாம் நீண்ட காலம் பணியாற்ற முடியாது, அதுவும் மகிழ்ச்சியாக ஒருபோதும் செயல்பட முடியாது. இருப்பினும் நமது உடல்நலனை கடமைக்கு தியாகம் செய்யலாம் என்ற சிந்தனை தொடர்ச்சியாக எழுகிறது. பலவீனமாக இருந்தாலும் தீவிரமாக செயல்படலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், தேவையான திறமை நம்மிடம் இல்லாத தொழிலை தேர்ந்தெடுத்திருந்தால் சிறப்பை ஈட்டும் வகையில் அதை நம்மால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது, விரைவில் நமது திறமையின்மையை நாமே உணர்ந்து கொண்டு அவமானமடைவோம். நமது வாழ்க்கை எதற்கும் பயனற்றது என்றும் சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலை செய்ய இயலாதவர்களில் ஒருவர் என்றும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கும். அதன் மிக இயல்பான பின்விளைவு சுயமரியாதையின்மை ஆகும். அதை விட அதிக வலியளிப்பதும், புற உலகு நமக்கு அளிக்கும் எதனாலும் ஈடு கட்ட முடியாததும் வேறு எதுவும் உள்ளதா? சுய மரியாதையின்மை ஒருவரின் மனதை தொடர்ந்து அரித்துக் கொண்டிருக்கும், ஒருவரது இதயத்திலிருந்து உயிர் அளிக்கும் இரத்தத்தை உறிஞ்சி வெறுப்பும், நம்பிக்கையின்மையும் என்ற விஷத்தை அதில் கலந்து விடும். நாம் தீவிரமாக பரிசீலித்த ஒரு தொழில் தொடர்பான நமது திறமைகள் பற்றிய மயக்கம் நம் மீதே பழி தீர்த்துக் கொள்கிறது. வெளி உலகின் கண்டிப்பை அது எதிர்கொள்ளாவிட்டாலும் அத்தகைய கண்டிப்பு தருவதை விட மிகத் தாங்க முடியாத வலியை நமது மனதில் உருவாக்குகிறது.
இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகும், நமது வாழ்க்கை நிலைமைகள் நாம் விரும்பும் எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்குமானால், நமக்கு மிக அதிக மதிப்பை தரக்கூடிய, உண்மை என்று நாம் முழுமையாக ஏற்றுக் கொண்ட சிந்தனைகளின் அடிப்படையில் மனிதகுலத்துக்கு பணியாற்றுவதற்கு ஆக விரிந்த சாத்தியத்தை தரக்கூடிய, அதை மேற்கொள்கின்ற மனிதரை அப்பழுக்கின்மைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற தகுதி படைத்த தொழிலை நாம் மேற் கொள்ள வேண்டும்.
மதிப்பு என்பது எல்லாவற்றையும் விட ஒரு மனிதரை உயர்த்திச் செல்வது, அவரது நடத்தைகளுக்கும், முயற்சிகளுக்கும் ஒரு உயர் கௌரவத்தை அளிப்பது, அவரை கண்டனத்துக்கு அப்பாற்பட்டவராக்கி, மக்கள் திரளால் போற்றப்படுபவராகவும் மக்கள் திரளிலிருந்து மேம்பட்டு நிற்பவராகவும் மாற்றுவது. ஆனால், நம்மை அடிபணிந்து கருவிகளாக செயல்பட வைக்கும் தொழில் நமது மதிப்பை உறுதி செய்வதாக இருக்க முடியாது. மாறாக, நமது சொந்த வட்டத்தில் தன்னிச்சையாக செயல்படுவதான தொழில்தான் நமது மதிப்பை உறுதி செய்ய முடியும். வெளித் தோற்றத்தில் மட்டுமே இருந்தாலும் கண்டனத்துக்குரிய செயல்பாடுகளை கோராத தொழிலால்தான் மதிப்பை உறுதி செய்ய முடியும். தலைசிறந்த மனிதர்களும் கௌரவமான பெருமையுடன் பின்பற்றக் கூடிய தொழிலாக அது இருக்க வேண்டும். மதிப்பை மிக அதிக அளவில் உறுதி செய்யும் தொழில் எப்போதுமே மிக உயர்ந்ததாக இருப்பதில்லை, ஆனால் அதுதான் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.
மதிப்பை உறுதி செய்யாத தொழில் நம்மை தரம் தாழ்த்தி விடுவதைப் போல, நாம் பிற்பாடு தவறானவை என்று தெரிந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான தொழிலின் சுமைகளின் கீழ் நாம் நசுங்கிப் போவோம். அந்நிலையில் நமக்கு சுய-ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் மிஞ்சியிருக்காது. சுய ஏமாற்றின் மூலம் பெறப்படும் அத்தகைய மனநிறைவு எவ்வளவு பரிதாபகரமானது.
வாழ்க்கையோடு பெரிய அளவு தொடர்பு இல்லாத சூக்கும உண்மைகளை கையாளுகின்ற தொழில்கள், கொள்கைகள் இன்னும் உறுதிப்படாத, நம்பிக்கைகள் இன்னும் வலுவடையாத இளைஞருக்கு மிக அபாயகரமானது. அதே நேரம் இந்தத் தொழில்கள் நமது மனதில் ஆழமாக வேர் கொண்டு விட்டால், நமது வாழ்க்கையையும், நமது முயற்சிகள் அனைத்தையும் இந்தத் தொழில்களை ஆளும் கருத்துகளுக்காக தியாகம் செய்யத் தக்கதாக அவை இருந்தால் அவை மிக உயர்ந்தவையாக தோன்றலாம். அவற்றின் மீது வலுவான பிடிப்பு கொண்ட மனிதருக்கு அவை மகிழ்ச்சியை கொண்டு வரலாம், ஆனால், ஆழ்ந்து சிந்திக்காமல், கண நேரத் தூண்டுதலின் பேரில் அவசரமாக அவற்றை மேற்கொள்பவரை அவை அழித்து விடும்.
இன்னொரு பக்கம், நமது தொழிலின் அடிப்படையாக இருக்கும் கருத்துக்கள் மீது நாம் கொண்டிருக்கும் உயர் மதிப்பீடு சமூகத்தில் நமக்கு ஒரு உயர்நிலையை அளிக்கிறது, நமது சொந்த மதிப்பை உயர்த்துகிறது, நமது செயல்பாடுகளை கேள்விக்கு அப்பாற்பட்டதாக்குகிறது.
தான் பெரிதாக மதிக்கும் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும் ஒருவர் அதற்கு தகுதியற்றவராக இருப்பது என்பதை நினைத்தாலே நடுங்குவார். சமூகத்தில் அவரது நிலை கௌரவமானதாக இருந்தால்தான் அவர் கௌரவமாக நடந்து கொள்ள முடியும்.
ஆனால், தொழிலை தேர்ந்தெடுப்பதில் நமக்கு முதன்மையாக வழிகாட்ட வேண்டியது மனித குலத்தின் நல வாழ்வும், நமது சொந்த முழுமையும்தான். இந்த இரண்டு நலன்களும் ஒன்றோடு ஒன்று முரண்படலாம், ஒன்று மற்றொன்றை இல்லாமல் செய்து விடலாம் என்று நினைக்க வேண்டியதில்லை. தனது சக மனிதர்களின் முழுமைக்காக பணியாற்றும் போதுதான் தனது முழுமையை உறுதி செய்ய முடியும் என்ற வகையில்தான் மனிதரின் இயல்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் தனக்கு மட்டுமே பணியாற்றினால் அவர் மிகச்சிறந்த அறிவாளியாக மாறலாம், மகத்தான ஞானியாகலாம், தலை சிறந்த கவிஞர் ஆகலாம், ஆனால் அவர் ஒரு போதும் முழுமையான, உண்மையில் மகத்தான மனிதர் ஆக முடியாது. பொது நலனுக்காக பணியாற்றி தம்மை கௌரவப்படுத்திக் கொண்டவர்களை வரலாறு மகத்தானவர்கள் என்று அழைக்கிறது; மிக அதிகமான நபர்களை மகிழ்வித்த மனிதர்தான் மகிழ்ச்சியானவர் என்று அனுபவத்தில் தெரிகிறது. மதமே மனித குலத்துக்காக தன்னை தியாகம் செய்து கொண்ட மனிதப் பிறவியைத்தான் நமது ஆதர்சமாக கற்பிக்கிறது. இத்தகைய மதிப்பீடுகளை பொய் என்று யார் சொல்ல முடியும்?
மனிதகுலத்துக்காக பணியாற்றுவது அனைத்தையும் விட முக்கியமானதாக இருக்கும் தொழிலை நாம் தேர்ந்தெடுத்திருந்தால் எந்தச் சுமைகளும் நம்மை அழுத்தி விட முடியாது, ஏனென்றால் அவை அனைவரது நலனுக்குமான தியாகங்கள். அப்போது நாம் அற்பமான, வரம்புக்குட்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டோம், மாறாக நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களுக்கு சொந்தமாக இருக்கும். நமது செயல்பாடுகள் அமைதியாக ஆனால், நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். நமது இறப்புக்குப் பிந்தைய சாம்பலின் மீது நம்மை நேசிக்கும் உயர்ந்த மனிதர்களின் சூடான கண்ணீர் உகுக்கப்படும்.
கார்ல் மார்க்ஸ்
மூலம்: MECW Volume 1 Written: between August 10 and 16, 1835
இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் [2] வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.
சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும்[3] (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம், சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, [அதாவது] முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன.
அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வர்த்தகம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாகச் சரக்குகளிலும் ஏற்பட்ட பெருக்கம் – ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.
நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்முறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டோர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்முறையினால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை முன்புபோல் நிறைவேற்ற இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில்முறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. வெவ்வேறு கூட்டாண்மைக் கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.
இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்தச் சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாய் ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.
நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியை அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தன்னுடைய மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது; மத்திய காலக் கம்யூனிலோ[4] ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது; இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் மூன்றாவது வகையின[5] (third estate) மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. “இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற “பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், அற்பவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைச் சுயநலச் சூழ்ச்சி என்னும் உறைபனி நீரில் மூழ்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, சாசனப்படுத்தப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாக, கட்டற்ற வர்த்தகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், மத, அரசியல் பிரமைகள் திரையிட்டு மறைத்திருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை [முதலாளித்துவ வர்க்கம்] ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் மிகவும் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடு கால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்வுகளையும், சிலுவைப் போர்களையும்[6] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்தச் சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. திடமானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தன் வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுசார் உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல்தொடர்புச் சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சரக்குகளின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது. அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறும்படி கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள்தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள்தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் தனிமைப்பாட்டிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.
மக்கள்தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.
முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்திச் சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்திச் சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?
ஆக, நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்திச் சாதனங்கள், பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயத்திலும் பட்டறைத் தொழிலிலும் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இப்போது இணக்கமின்றிப் போயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாய் ஆயின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் கட்டற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளின் தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும் நவீன உற்பத்திச் சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்திச் சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்திச் சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்திச் சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது, மேலும் விரிவான, மேலும் நாசகரமான, நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.
எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன.
ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.
முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற வணிகப் பண்டத்தைப் போன்று ஒரு சரக்காகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.
பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்குத் தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாய் ஆகிவிடுகிறார். அவருடைய வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே, ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால், ஒரு சரக்கின் விலையானது, ஆகவே உழைப்பின் விலையானது[7], அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்குக் கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது.
நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீரர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமின்றி, நாள்தோறும், மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ, அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.
உடலுழைப்புக்கான திறமையும் உடல்வலிமையும் எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்விதத் தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.
ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுவாகப் பகுதிநேரத் தொழில்புரிவோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகிவிடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலவந்தமாக மீட்டமைக்க முயல்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது. இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.
ஆனால், தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ, அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும், மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைக் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.
அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல்தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன. ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்கள் அனைத்தையும் வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாய் இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.
தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும், பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.
மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. முதலில் பிரபுக்குலத்துடன் போராட வேண்டியிருந்தது. அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது. எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.
மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்முறையானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருபகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.
இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.
அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், [அதாவது] சிறு உற்பத்தியாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தம்முடைய நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.
பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய “ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.
ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பது போலவே, இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பது போலவே, அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.
மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கைவசப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால், பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கைவசப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கைவசப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.
இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேல்தட்டு அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] எழுச்சிபெற இயலாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.
முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.
பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் – முதலாளித்துவ வர்க்கத்தைப் பலவந்தமாக வீழ்த்துவதானது, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இட்டுத்தரும் கட்டம்வரையில் – நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.
இதுநாள் வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள்தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றதாய் உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றுவிட்டது. ஏனெனில், அதன் அடிமையானவன், அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய வக்கில்லை. மேலும், அவனிடமிருந்து [அவன் உழைப்பின் மூலம்] தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கைவசப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.
[1] முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[2] அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்* (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் # (Maurer) நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன்@ (Morgan) வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, பகைமை பாராட்டும் வர்க்கங்களாக, முடிவில் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்முறையைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
* [ஹாக்ஸ்தவுசென் (Haxthausen, 1792-1866): ஆகுஸ்த் ஹாக்ஸ்தவுசென் என்பது இவரது முழுப்பெயர். பிரஸ்ஸியாவைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர். அரசாங்க அதிகாரியாகச் செயல்பட்டவர். ருஷ்யாவின் நிலவுடைமை உறவுகளில் கிராமச் சமுதாய அமைப்பின் மீத மிச்சங்களை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார்.]
# [ மவுரர் (Maurer, 1790-1872): கியோர்க் லுத்விக் மவுரர் என்பது இவரது முழுப்பெயர். பெயர்பெற்ற ஜெர்மன் வரலாற்று அறிஞர். முதலாளித்துவக் கருத்தோட்டம் கொண்டவர். தொன்மைக்கால, இடைக்கால ஜெர்மனியின் சமூக அமைப்பை ஆராய்ந்தவர். ]
@ [மார்கன் (Morgan, 1818-1881): லூயிஸ் ஹென்றி மார்கன் என்பது இவரது முழுப்பெயர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். பெயர்பெற்ற இனப்பரப்பு விளக்கவியல் அறிஞர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொடக்க காலச் சமூகம் பற்றிய வரலாற்று ஆசிரியர். இயல்பான பொருள்முதல்வாதி.]
[3] [கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக் குழுமத்தின் முழு உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட உறுப்பினர் இல்லத்தின் எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[4] “கம்யூன்” என்பது ஃபிரான்சில் புதிதாக உருவாகி வந்த நகரங்களுக்கு இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற முறையில் வட்டார சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன. பொதுவாகக் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அவ்வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[5] [மூன்றாவது வகையினம் (The Third Estate): முடியாட்சி மன்னர் காலத்தில் ஃபிரெஞ்சு அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாக்கம். சமூகம் மூன்று வகையினமாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது வகையினம் (The First Estate) மத குருமார்களையும் (Clergy), இரண்டாவது வகையினம் (The Second Estate) பிரபுக்களையும் (Nobility) கொண்டது. மூன்றாவது வகையினம் சாதரணப் பொதுமக்களைக் (Commoners) கொண்டது. முடிமன்னர் எந்த வகையினத்திலும் சேராதவர். மூன்று வகையினத்துக்கும் அப்பாற்பட்டவர். மூன்றாவது வகையினம் முதலாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியது. இவர்கள் அனைவருக்கும் உரிய பொதுவான தன்மை என்னவெனில், இவர்கள் பெருஞ்செல்வம் படைத்தவர்கள் அல்ல. ஆனாலும், மற்ற இரு வகையினத்தவருக்கும் கடுமையான வரிப்பணம் செலுத்த வேண்டும்.]
[6] [சிலுவைப் போர்கள்: 11-13 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நிலப்பிரபுக்களும், உயர்குடி வீரர்களும் கிழக்கு நாடுகள் மீது நடத்திய இராணுவ- காலனி பிடிக்கும் படையெடுப்புகளைக் குறிக்கிறது. ஜெரூசலத்திலும், பிற “புனிதத் தலங்களிலும்” உள்ள கிறிஸ்துவப் புனித சின்னங்களை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டல் என்னும் மதப் பதாகையின்கீழ் இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன.]
[7] [உழைப்பின் விலை: மார்க்ஸ், எங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமான “உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.]
மார்க்சுக்கு நல்லஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார்.
உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம்
ஏற்பட்ட உடனேயே அவர் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தார். தனது வலிமை அனைத்தையும்
திரட்டிக் கொண்டு, மூலதனத்தின் இரண்டாவது தொகுதியை
பதிப்புக்கு அனுப்ப தயாரிப்புகளைத் தொடர்ந்தார். எனினும் தாங்க முடியாத தலைவலி,
சித்ரவதை செய்த இருமல், நரம்பு அழற்சி,
உடல் பலவீனம் ஆகியவற்றின் தொடர்த்தாக்குதல்கள் அவரது முயற்சிகளை
மீண்டும் மீண்டும் தகர்த்து வந்தன. இவை சத்தமில்லாத, எனினும்
வீரமிக்க போராட்டம் நிறைந்த ஆண்டுகளாகவே இருந்தன. பின்னர் ஒருமுறை எங்கெல்ஸ்
குறிப்பிட்டது போல, அந்தக் காலத்தில் மார்க்சின்
தயாரிப்புக் குறிப்புகள், சோர்வடையச் செய்த உடல் துயரத்துக்கெதிரான
அவரது கடும்போராட்டத்திற்கான சான்றுகளாகவே இருந்தன. தனது இரும்பு உறுதியைத் தாண்டி,
மார்க்ஸால் மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது
புத்தகங்களை பதிப்பிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்ய முடியவில்லை.
ஜென்னியின் கடைசி வருடம்
தனது மனைவி எதிர்நோக்கிய நோயினால்
ஏற்பட்ட துன்பம் அவருடைய துன்பத்தைவிட மார்க்சை மிகவும் சித்ரவதை செய்தது. நீண்ட
காலமாகவே இறுதிப்படுத்த முடியாதிருந்த நோய், பின்னர்
குணப்படுத்த இயலாத குடல் புற்றாக இருக்கலாம் என்று கண்டறியப்படது. ஜென்னி தனது
கடுமையான வலியை ஆச்சரியமூட்டும் பொறுமையுடன் எதிர்கொண்டார், எனினும்
அவர் தனது உற்சாகத்தை மட்டும் விடவேயில்லை. வலியால் அவதியுற்றாலும் கூட, துணிச்சலை விடாத அவர் அச்சமயத்தில் ஒரு மருத்துவருக்கு
எழுதியிருந்தார்: “நான் கையில் கிடைக்கும் ஒவ்வொரு சுள்ளியையும் பற்றிக்
கொள்கிறேன். என் அருமை மருத்துவரே, நான் இன்னும் அதிக காலம் வாழ
விரும்புகிறேன். இது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்: ஒருவரின் கதை முடிவுக்கு வரும்
நேரம் நெருங்கி வர, வர, அவர்
‘கண்ணீரின் பூவுலக மதிப்புக்காக’ மேலும், மேலும்
ஏங்குகிறார்.”
ஜென்னி மார்க்ஸ் தனது வாழ்க்கையின்
இறுதிஆண்டுகளில் பல்வேறுநாடுகளில் செயல்பட்டு வந்த தொழிலாளர் இயக்கங்களின் ஒவ்வொரு
முன்னேற்றத்தையும் ஆர்வத்துடன் கவனித்து வந்தார். 1880இன்
இறுதியில் தமது வீட்டுக்கு வந்த ஆகஸ்ட் பேபலை வரவேற்பதில் அவரும், மார்க்சும் மிகவும் மகிழ்ச்சியுற்றனனர். லண்டனில் இருந்த இரண்டு
“வயதான மனிதர்களிடம்” ஜெர்மன் கட்சியின் உள்நிலைமை, பொதுமக்களின்
எண்ணப்போக்குகள் ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கவே பேபல் அந்தப் பயணத்தை
மேற்கொண்டிருந்தார்.. மார்க்ஸ் தம்பதிகளிடம் அவர் கட்சியின் உத்திகள் பற்றி
விவாதித்ததுடன், சோஷியல்டெமாக்ரட் இதழுக்கு
எழுதுவதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் அவர் அப்போது போட்டார். மார்க்ஸ்,
அவரது மனைவி ஜென்னி, எங்கெல்ஸ் ஆகிய மூவரும் நீண்டகாலமாகக்
கடிதங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்திருந்த மக்களுடன் மிகநெருக்கமாக இருந்த ஜெர்மனி
தொழிலாளர் வர்க்கத்தின் இந்த ஊக்கம் நிரம்பிய, அறிவார்ந்த
தலைவர் மீது மிகுந்த தாக்கம் கொண்டனர்.. மார்க்ஸ் உடனடியாக அவரை மிகவும் சகோதர
பாசத்துடன் “து”(அதிகாரபூர்வமற்றமுறையில் அழைப்பது. ஒருமை என்றும் கொள்ளலாம்)
என்று விளித்தார். மார்க்சின் வீட்டுக்குத் தான் சென்றது குறித்து
முப்பதாண்டுகளுக்குப் பிறகு பேசும்போது கூட பேபல் அதனை மிகுந்த நெகிழ்ச்சியுடன்
இதைக் குறிப்பிட்டார்:
“நாங்கள் லண்டனில் கழித்த அந்த ஒரே
ஞாயிற்றுக்கிழமையன்று, எல்லோரும் மார்க்சின் மேசைக்கு
அழைக்கப்பட்டோம். நான் ஏற்கனவே திருமதி ஜென்னி மார்க்சுடன் அறிமுகமாகி விட்டேன். அவர்
எனது பெருமதிப்பை உடனடி யாகப் பெற்றுவிட்ட, தனித்துவம்
மிக்க ஒரு பெண்மணி. தனது விருந்தினர்களை எப்படி உற்சாகமாகவும், அன்புடனும் உபசரிப்பது என்பதை அவர் நன்கு அறிந்தவர். அந்த
ஞாயிறன்று, தனது குழந்தைகளுடன் அங்கு வந்திருந்த,
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாங்கெட்-ஐ மணம் புரிந்து கொண்டிருந்த
ஜென்னியின் மூத்த மகளையும் சந்தித்தேன். அந்தக் காலத்தில் மனித குலத்தின் எதிரி என
எங்கும் கண்டனம் செய்யப்பட்டு வந்த மார்க்ஸ் தனது பேரக் குழந்தைகளுடன் அவ்வளவு
மென்மையாகவும், அன்புடனும் விளையாடிக்கொண்டிருந்தார்,
அந்தக் குழந்தைகள் தமது தாத்தாவை எவ்வளவு நேசித்தனர் என்பதைக் கண்டு
நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மூத்த மகள் ஜென்னியைத் தவிர அவரது இரண்டு இளைய
பெண்களான டுஸ்ஸி என்று அழைக்கப்பட்ட எலியனார் (இவர் பின்னாளில் ஏவ்லிங்கின் மனைவி
ஆனார்), பால் லஃபார்கின் மனைவியான லாரா ஆகியோரும் அங்கு
இருந்தனர். கருத்த விழிகளைக் கொண்டிருந்த டுஸ்ஸி தனது தந்தையைப் போலவும், கருவிழிகளுடனும், சற்றே பொன்னிறக் கூந்தலுடன் இருந்த லாரா
தனது தாயைப் போல வும் விளங்கினர். இருவருமே அழகாகவும், உற்சாகம்
நிரம்பியவர்களாகவும் இருந்தனர்.”
அடுத்த நாள் பேபல் விடைபெற வந்தபோது,
மார்க்சின் மனைவி மீண்டும் வலியில் துடித்தபடி படுக்கையில் இருந்தார்.
அவை மிகவும் கொடுமையான மாதங்களாகவே அவருக்கு இருந்தன. மார்க்ஸ் தனது
மனைவியை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்தார். அவருக்கு
மகிழ்ச்சியூட்டும் நோக்கத்துடன், மூத்தபெண்ணையும், அவரது குழந்தைகளையும் பார்ப்பதற்காக 1881
ஜூலை, ஆகஸ்டில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்ல ஒரு
பயணத்தையும் ஏற்பாடு செய்தார். மீண்டும் அவர்கள் லண்டனுக்குத் திரும்பியபோது
ஜென்னி மிகவும் களைத்துப் போயிருந்தார்.
மார்க்சுக்கு நிகழ்ந்த மிகக் கசப்பான
அடி
மனைவியின் உடல்நிலை குறித்த
பதற்றத்தாலும், தூக்கமின்மையாலும் முற்றிலும் சோர்ந்து
போன மார்க்ஸ் 1881 இலையுதிர் காலத்தில் கடும்
நிமோனியாவால் தாக்கப்பட்டார். எலியனோர், லெச்சென் டெமுக்
ஆகியோரின் தன்னலமற்ற பணிவிடையின் காரணமாகவே அவர் மீண்டார். ஜென்னியும்,
மார்க்சும் சேர்ந்து வாழ்ந்த கடைசி நாட்களைப் பற்றி எழுதிய எலியனோர்,
“என் அன்னையின் அறைக்குச் செல்லப் போதிய பலத்தை
அவர் பெற்ற காலை நேரத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று
குறிப்பிடுகிறார். “அந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் இளைஞர்களாக ஆனார்கள்.
புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கப் போகும் தம்பதியாக, அவள்
அன்பான ஓர் இளம் பெண்ணாகவும், அவர் காதல்வயப்பட்ட ஓர் இளைஞனாகவும்
அப்போது தோன்றினர். நோயால் தகர்ந்துபோன ஒரு முதியவராகவோ, மரணத்தை
நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதிய பெண்மணியாகவும், நிரந்தரமாக
ஒருவருக்கொருவர் விடைபெறப் போகின்றவர்களாக அவர்கள் இருவரும் அப்போது இல்லை.”
ஜென்னி அனுபவிப்பதற்கு இன்னும் சில
மகிழ்ச்சியான தருணங்கள் மீதமிருந்தன. மூலதனத்தின் மூன்றாவது பதிப்பு தேவைப்படுவதாக
ஜெர்மனியிலிருந்து ஒரு செய்தி வந்தது. இங்கிலாந்திலிருந்து முதன்முறையாக மார்க்சை
குறிப்பிடத்தக்க ஒரு விஞ்ஞானி எனவும், சோசலிச
சிந்தனையாளர் என்றும் பாராட்டி ஒரு முன்னணிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை
வெளிவந்தது. அக்டோபர் இறுதியில் வென்றெடுத்த ஒரு தேர்தல் வெற்றியின் மூலமாக,
நெருக்கடிநிலைச் சட்டங்களைத் தாண்டி தான் போராடுவதையும், மார்க்சின் படிப்பினைகளால் அதிகமான அளவில் தாக்கம் பெற்று வருவதையும்
ஜெர்மானியத் தொழிலாளர் இயக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
எங்கெல்சின் பாராட்டு
1881 டிசம்பர் 2
அன்று ஜென்னி காலமானார். மார்க்ஸ் தாங்க வேண்டியிருந்த மிகவும் கசப்பான தாக்குதல்
அது. தனது அன்பிற்குரிய மனைவியின் இளைப்பாறும் இடத்துக்குக்கூட அவரால் உடனே செல்ல
முடியவில்லை. அவரது பலவீனமான உடல்நிலை காரணமாக, ஹைகேட்
கல்லறைக்குச் செல்லும் ஜென்னியின் இறுதி யாத்திரையில் பங்கேற்க மருத்துவர்கள்
மார்க்ஸை அனுமதிக்கவில்லை. கல்லறையில் ஜென்னியின் இறுதி நிகழ்ச்சியில் அஞ்சலை உரை
நிகழ்த்திய எங்கெல்ஸ், கணவர் மீதும், குடும்பத்தினர், தோழர்கள்
மீதும் ஜென்னி வைத்திருந்த பாசம் குறித்தும், சர்வதேசத்
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மீதான அவரது விசுவாசம் குறித்தும் சுட்டிக்
காட்டினார். பின்வரும் வார்த்தைகளுடன் அவர் தன் உரையை நிறைவு செய்தார்:
“இவ்வளவு கூர்மையான, விமர்சனப் புரிதலுள்ள ஒரு பெண்மணி, இவ்வளவு
பாசமும் ஊக்கமும் உடையவர், இவ்வளவு பெரும் அர்ப்பணிப்புத்திறன்
கொண்ட ஒருவர் – புரட்சிகர இயக்கத்துக்குச் செய்த பங்களிப்புகள் குறித்து ஒருபோதும்
வெளிப்பார்வைக்குத் தென்பட்டதில்லை; எந்தப்
பத்திரிகையும் அதை வெளியிட்டதுமில்லை. அவருடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர்
செய்தது தெரியும்.
அவரது தனிப்பட்ட குணநலன்கள் குறித்து
நான் பேசவேண்டியதில்லை. அவரது நண்பர்களுக்கு அவற்றைக் குறித்து தெரியும், அவர்கள் அதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மற்றவர்களை
மகிழ்ச்சிப்படுத்துவதில் ஒரு பெண் தனது சொந்த மகிழ்ச்சியைக் கண்டிருப்பார் என்றால்,
அது இந்தப் பெண்தான்.”
தனது மனைவியின் மரணத்திலிருந்து கார்ல்
மார்க்சால் விடுபடவே முடியவில்லை. “மூர்-உம் (மார்க்ஸின் நண்பர்கள் அவரை மூர்
என்றே அழைப்பார்கள்) இறந்துவிட்டார்” என்று ஜென்னி இறந்த அந்த நாளில் எங்கெல்ஸ்
உண்மையாகவே குறிப்பிட்டார். எனினும் வாழவேண்டும் என்ற உறுதி அவருக்குள் மீண்டும்
எழுந்தது. அவரை செயலின்மைக்குத் தள்ளிய அந்தத் துன்பமிக்க நோயை வெல்ல அவர்
உறுதியோடு இருந்தார். “நான் மீண்டு எழுவதற்கு சிறிது காலத்தை இழக்க வேண்டியுள்ளது
என்பது துரதிர்ஷ்டம்தான்” என்று அமெரிக்காவிலிருந்த நண்பர் சோர்கேவுக்கு அவர்
கடிதம் எழுதினார்.
அல்ஜீரியப் பயணம்
மருத்துவர்களின் ஆலோசனைப்படி நல்ல
பருவநிலை நிலவிய இடங்களில் அடுத்த சில மாதங்களைக் கழித்து தன்னை மீட்டுக்கொள்ள
அவர் முயன்றார். வைட் தீவின் வெண்ட்னோருக்கு அவர் முதலில் சென்றார். 1882 வசந்த காலத்தில் அவர் அல்ஜியர்சுக்குச் சென்றார். ஆனால் ஜென்னி
இல்லாத மனவலி அவரை எங்கும் பின்தொடர்ந்தது. அத்தருணத்தில் அவர் எங்கெல்சுக்கு
நெகிழ்ச்சியுடன் எழுதினார்,
“நடைமுறையில் சோக உணர்வுக்கு எதிராக
மிகச்சில மனிதர்களே இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும், எனது சிந்தனைகளின் பெரும்பகுதி என் மனைவியின் நினைவுகளாலேயே
நிரம்பியுள்ளது என்பதை நான் ஏற்கவில்லையெனில் அது பொய்யாகவே இருக்கும். அவள்
எனது வாழ்வின் மிகச்சிறந்த ஒரு பகுதி.”
எனினும், மிகவும்
நோயுற்றிருந்த போதும் இந்த வாரங்களில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் எதையாவது
புதிதாகக் கற்றுக்கொள் வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். அல்ஜியர்சில் தனது
மருமகனின் நண்பரான லாங்கெட்டை அவர் சந்தித்தார். லாங்கெட் அரபு மக்கள் அவதிப்பட்ட
காலனிய ஒடுக்குமுறையின் நாகரீகமான, கொடூரமான வடிவங்களைப் பற்றிய பல
முக்கியமான விவரங்களை மார்க்சுக்கு எடுத்துரைத்தார். அதேபோன்ற கவனத்துடன் அவர்
ஐரோப்பியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டு, கடிதங்கள் வாயிலாக எங்கெல்சுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து
கொண்டு வந்தார்.
அல்ஜீரியப் பயணம் அவரது உடல்நிலையில்
எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தெற்கு பிரான்சில்
தங்கியதும் எந்தவித முன்னேற்றத்தையும் தரவில்லை. பின்னர் தனது மூத்த மகள் ஜென்னியை
பாரிசின் அருகில் பார்க்கச் சென்றதும், பின் கோடையில்
சுவிட்சர்லாந்துக்குச் சென்றதும்தான் அவருக்கு சற்று மெலிதான ஆறுதலை வழங்கியது. இதற்கிடையில்
பேபலின் மரணம் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. அவர் எங்கெல்சுக்கு
எழுதினார்:
“இது நமது கட்சிக்கு மிகவும்
துரதிர்ஷ்டவசமானது. ஜெர்மானிய (ஐரோப்பிய என்றும் குறிப்பிடலாம்) தொழிலாளி வர்க்கத்
தில் தனித்துவமிக்க தலைவர் அவர்.”
அதிர்ஷ்டவசமாக, விரைவில்
அந்தச் செய்தி பொய் என்று தெரிய வந்தது.
மூத்த மகளின் மரணம்
அக்டோபரில் மார்க்ஸ் சற்று வலுவான
உடல்நிலையுடன் இங்கிலாந்து திரும்பினார். அவர் மூலதனம் நூலின் இதர தொகுதிகளுக்கான
தனது பணியை மீண்டும் துவக்கவும், (ஜெர்மன்) கட்சிப் பத்திரிகையான “தெ சோசியல்
டெமாக்ரட்”டுக்குக்
கட்டுரைகள் எழுதவும் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருந்தார். எனினும் அவரது
உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தற்காலிகமானதாகவே இருந்தது. நவம்பர் மாதத்தில்
லண்டனின் பனியிலிருந்து தப்பிக்க அவர் வெண்ட்னாருக்குச் சென்றார். ஆனால்
அங்கும்கூட பனிக்காலத்தின் குளிரும், ஈரமும், அவரது உடல் நிலைக்கும் மேலும் துன்பத்தை ஏற்படுத்தின. அது இன்னும்
மோசமாகும் வகையில், அவரது மூத்த மகள் ஜென்னியின் மரணச்
செய்தி வந்து சேர்ந்தது; இந்தச் சோகச் செய்தியை அவரிடம் கொண்டு
வந்த எலியனார் எழுதினார்:
“வாழ்வில் எனக்கு பல சோகமான தருணங்கள்
இருந்துள்ளன, ஆனால் அவை எதுவும் இவ்வளவு சோகமயமானதாக
இருந்ததில்லை.” தன் தந்தைக்கு ஜென்னியின் மரணம் எத்தகைய துயரத்தை ஏற்படுத்தும்
என்பதும் அவருக்குத் தெரியும். “என் தந்தைக்கு நான் மரண தண்டனையை விதித்து விட்டதாகவே எனக்குத்
தோன்றியது. மிக நீண்ட, அச்சத்திற்குரிய இந்தப் பயணத்தில்
இந்தச் செய்தியை நான் தந்தையிடம் எப்படிச் சொல்வது என்றுதான் மூளையைக் கசக்கிக்
கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் துயரச் செய்தியை அவரிடம் சொல்ல வேண்டிய தேவையே
இருக்கவில்லை; என் முகமே என்னைக் காட்டிக் கொடுத்து
விட்டது. மூர் உடனடியாகக் கூறினார்: “எனதருமை ஜென்னிசென் இறந்து விட்டாள்!”. அதன் பிறகு உடனடியாக பாரிசுக்குச்
சென்று ஜென்னியின் குழந்தைகளுக்கு உதவுமாறு எனக்கு அவர் உத்தரவிட்டார்.”
தூக்கத்தில் மரணம்
மறுநாள் மார்க்ஸ் லண்டன் திரும்பினார்.
தொண்டைக்குழாயில் ஏற்பட்டிருந்த அழற்சியுடன் சேர்ந்து இன்னொன்றும் அவரை மீண்டும்
படுக்கையில் தள்ளியது. பல வாரங்களுக்கு அவரால் நீராகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள
முடிந்தது. பிப்ரவரியில் அவருக்கு நுரையீரலில் கட்டி உருவானது.
மார்ச்சில் அவர் மீண்டு வருவார் என்ற
நம்பிக்கை அதிகரித்தது. லென் சென்னின் கனிவான கவனிப்பில் அவரது முக்கிய
நோய்கள் கிட்டத்தட்ட சரியாகின. ஆனால் மார்க்சின் தோற்றம் ஏமாற்றமளிப்பதாக
இருந்தது. இந்தக் காலத்தில் தினமும் வீட்டுக்குச் சென்று அவரை பார்க்கும்
எங்கெல்ஸ் மார்ச் 14 அன்று மதியநேரம் அங்கு வந்து
சேர்ந்தார். லென் சென் அவரைப் பார்த்து மார்க்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக்
கூறினார். “நாங்கள் அறைக்குச் சென்றபோது, அவர்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார், ஆனால் ஒரு போதும் இனி எழமாட்டார்
என்றும் தெரிந்தது. அவரது நாடித் துடிப்பும், மூச்சும்
நின்று போயிருந்தன. அந்த இரண்டே நிமிடத்தில் அமைதியாக, வலியின்றி
அவர் உயிரை நீத்திருந்தார்” என்று அவர் மார்க்சின் நண்பர் சோர்கேவுக்கு பின்னர்
எழுதினார்.
எங்கெல்ஸ் மேலும் எழுதினார்: “மனித
இனத்தில் ஒரு தலை குறைந்து விட்டது, இந்தத் தலை நம்
காலத்தில் மிகவும் பெரிய தலை. தொழிலாளர்களின் இயக்கம் தொடர்கிறது. ஆனால்
பிரெஞ்சுக்காரர்களும், ரஷ்யர்களும், அமெரிக்கர்களும்,
ஜெர்மானியர்களும் தீர்மானகரமான தருணங்களில் ஆலோசனை வேண்டித்
திரும்பிய, மறுக்கமுடியாத, தெளிவான
ஆலோசனையைக் கொடுத்து வந்த அந்த மையப்புள்ளி இப்போது மறைந்து விட்டது. முழுநிறைவான
அறிவுபெற்ற ஒரு மேதையால்தான் அத்தகைய அறிவுரைகளைக் கொடுக்க முடியும்.”
எங்கெல்சுடன் சேர்ந்து உலகின் அனைத்து
நாட்டுத் தொழிலாளர்களும் அஞ்சலி செலுத்தினர். 1883
மார்ச் 17 அன்று கார்ல் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் தன்
மனைவியின் உடலுக்கருகே அடக்கம் செய்யப்பட்டார்.
உலகத் தொழிலாளர் இயக்கம் தனது மாபெரும்
தலைவருக்கு விடைகொடுத்தது. வில்லியம் லீப்னெஹ்ட் ஜெர்மனி தொழிலாளி வர்க்கத்தின்
சார்பில் மார்க்சின் கல்லறையில் உறுதியேற்றார்.
“இத்தருணத்தில்
நாம் சோகத்தில் ஆழ்வதற்குப் பதிலாக, மறைந்த தலைவரின் உணர்வின்படி செயல்படுவோம். அவர் நமக்குக் கற்பித்ததையும், ஆசைப்பட்டதையும்
கூடிய விரைவில் நிதர்சனமாக்க, அனைத்து வலுவுடனும் நாம் போராடுவோம். இந்த வழியில்
அவரது நினைவைப் போற்றுவோம்! மிகுந்த
அன்பிற்குரிய நண்பரே! நீங்கள் எங்களுக்குக் காட்டிய பாதையில் இறுதிவரையில்
நடைபோடுவோம். உங்கள் கல்லறையில் அதை உறுதிமொழியாக அளிக்கிறோம்!”
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான
மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க
போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர்
தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்திய
தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:
முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில்
,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:
“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும்
ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது.
வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின்
கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய
சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின்
சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின்
வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில்
அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”
அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான
தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த,
வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை
குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.
பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து
சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான “எல்லோ வெஸ்ட் “’இயக்கம் (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள்
மேலங்கி அணிந்திருப்பர்) இன்னும் தொடர்கிறது
இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும்,
குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும்,
திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது.
ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின்
பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின்
ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.
“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய
தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு
எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது.
ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள்.
பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும்
‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில்
ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு
எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும்,
பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல்,
ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக
போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க
ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக,
அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை
தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள்
உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக
வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள்
அணிவகுத்தனர்.
வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும்
பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும்
அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர்.
ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது
போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.
இந்தியாவில்:
எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும்
இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக
மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி
பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு
சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள்
‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை
‘ இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது.
முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை
சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை
போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர்
காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில் தகர்க்கப்பட்டன,
உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை
ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது.
அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர்
அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும்
92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்..
இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக
அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில்
46 சதவீதமான 57 சதவீத சுய தொழில் புரிவோர்
மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ
5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை
உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக
ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும்
ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின்
வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).
கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள்,
ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த,
வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள்,
மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்)
மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும்
விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை
செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல்
தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர்.
இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக
நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால் ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு
வந்து கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின்
பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும்.
பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண
முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற,
2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை
நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை
பலப்படுத்தப்பட்டது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர்,
மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின்
கொள்கைகளுக்கெதிராக போராடினர்
வளர்ந்துவரும்
தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை: இந்தியாவில்
தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு,
விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க
அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில்
நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின்
நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,(
கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர்
கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக
மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன்
இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின்
போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால்
ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான்,
வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின்
கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)
அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின்
சில முக்கிய பிரச்சனைகளை நடை பெற்று கொண்டிருக்கும்
பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..
முன்னோக்கிய பாதை:
நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன்
முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்
மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர்,
மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட
பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.
ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது
வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது,
பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே
நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில்
ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை
வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும்
மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க
காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத,
தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள
இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.
அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர்
கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது.
பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக்
கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க,
வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு
ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின்
உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப்
போகிறது.
எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..
மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் மார்க்ஸ் 200 வாசிப்பு நிகழ்வை வரும் மே.4 ஆம் தேதி முன்னெடுக்கவுள்ளனர். அதனையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை மற்றும் அதன் ஒலி வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
(இக்குறிப்பு லெனின் எழுதிய “காரல்மார்க்ஸ்” என்ற அறிமுக கட்டுரையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. )
வாழ்க்கை
காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் படிக்கத் தொடங்கிய மார்க்ஸ் வரலாறு, தத்துவம் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கற்றார். தத்துவ மேதை எபிக்யூரஸ் பற்றிய ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
இளம்பருவம்
மாணவப் பருவத்தில் அவர் ஒரு பேராசிரியராக விரும்பினார். எனினும் அன்றிருந்த பிற்போக்கு அரசின் கொள்கை அன்றைய முன்னணி இடதுசாரிகளான லுத்விக் ஃபாயர்பாக், ப்ரூனோ பாயர் போன்ற பேராசிரியர்களை பல்கலைக்கழகங்களில் நுழைவதைத் தடுத்தது. எனவே ஆசிரியர் கனவைத் துறந்து “புதிய ரைனிஷ்” என்ற செய்தித்தாளில் ஆசிரியராகச் சேர்ந்து 1842-ஆம் ஆண்டு அக்டோபரில் அதன் முதன்மை ஆசிரியராக உயர்ந்தார்.
அவரது பொறுப்பில் இந்த இதழ் பெருமளவிற்கு புரட்சிகரமான, ஜனநாயக எண்ணங்களைத் தூண்டுவதாக வளர்ந்து வந்த நிலையில், அரசாங்கம் அதை தினமும் மூன்று முறை தணிக்கை செய்யத் தொடங்கியது. 1843 ஜனவரி -1 அதை முற்றிலுமாக முடக்கிவிட அரசு திட்டமிட்டிருப்பதை அறிந்த மார்க்ஸ் பத்திரிக்கையை காப்பாற்றுவதற்காக அதற்கு முன்பே ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும் அந்தப் பத்திரிக்கை முற்றிலுமாக நின்று போனது.
அரசியல் வாழ்க்கை
கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ சிந்தனை கொண்டவரான ஆர்னால்ட் ரூஜ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மன்-பிரான்ஸ் தொகுப்பு என்ற இதழை பாரீஸ் நகரில் இருந்து கொண்டு வர திட்டமிட்டு அங்கு சென்றார். முதல் இதழோடு அது நின்று போனது. அவ்வாறு வெளியான முதல் இதழ் மார்க்ஸ்-எங்கல்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது. அந்த கட்டுரைகள் பொருள்முதல்வாதம், கம்யூனிசம் போன்ற கொள்கைகளை விளக்குவதாக அமைந்தன. மார்க்சிய தத்துவம் உருவாகத் துவங்கிய காலம் அது. சமூகத்தில் இருந்த அனைத்தையும் இரக்கமேயின்றி விமர்சிப்பதாகவே மார்க்சின் எழுத்துகள் இருந்தன.
1844 செப்டம்பரில் பிரடரிக் எங்கல்ஸ் பாரீஸ் நகரில் தங்கியிருந்த சில நாட்களில் மார்க்ஸ்-எங்கல்ஸ் இருவருக்குமிடையே துளிர்விடத் தொடங்கிய நட்பு, வாழ்நாள் முழுவதும் நீடித்தது. பாரீஸ் நகரில் அப்போதிருந்த பல்வேறு உயர் நடுத்தர வர்க்கத்தினர் பேசி வந்த, போலியான சோசலிச கருத்துகளை எதிர்த்து இருவரும் கடுமையாகப் போராடி வந்தனர். 1845-ல் பயங்கரமான புரட்சியாளர் என அறிவிக்கப்பட்ட மார்க்ஸ் பாரீஸ் நகரிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார். பெல்ஜியம் நாட்டின் தலைநகரான ப்ரசெல்ஸ் நகரில் சென்று தங்கினார்.
1847-ல் மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ்ட் லீக் (கம்யூனிஸ்ட் கழகம்) என்ற ரகசிய பிரச்சாரக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனர். அந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற அதன் இரண்டாவது காங்கிரசில், கம்யூனிச கொள்கைகள் பற்றிய பிரசுரம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மார்க்ஸ்-எங்கல்ஸ் இணைந்து உருவாக்கி, 1848 பிப்ரவரியில் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையானது சமூக வாழ்க்கை பற்றிய புதிய உலகக் கண்ணோட்டம் அந்த அறிக்கையில் இருந்தது. சமுகம் எப்போதும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் வந்துள்ளது என்ற இயங்கியல் பார்வை அதில் இருந்தது. இயற்கையின் பொருள்கள், சமுகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய முழுமையான, ஆழமான தத்துவமான இயங்கியல் பொருளாதாரம் அதில் இருந்தது. சமூகங்களில் உள்ள வர்க்கங்களின் போராட்டமே வரலாற்றை உந்தித் தள்ளுகிறது என்ற கருத்தினை அது கொண்டிருந்ததது. புதியதொரு கம்யூனிச சமூகத்தைப் படைக்கவிருக்கும் வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் வரலாறுரீதியான, புரட்சிகரமான பாத்திரத்தை எடுத்துக் கூறும் இலக்கிய நயமிக்க ஆவணமாக “கம்யூனிஸ்ட் அறிக்கை” திகழ்ந்தது.
1848 பிப்ரவரியில் புரட்சி வெடித்தெழுந்ததைத் தொடர்ந்து பெல்ஜியத்திலிருந்தும் மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற அவர் மார்ச்சில் அங்கு நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு ஜெர்மனியின் கோலோன் நகருக்குச் சென்றார். புரட்சி கருத்துகளுக்காக அவர் எந்த நாட்டிலும் இருக்க விடாமல் பிற்போக்கு அரசுகளால் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்.
1848 ஜூன் 1 முதல் 1849 மே 19 வரையிலான காலத்தில் ‘புதிய ரைனிஷ் செய்தித்தாள்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டார். அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்ப்புரட்சி சக்தி மார்க்சின் மீது சதிவழக்கு ஒன்றை தொடுத்தது. 1849 பிப்ரவரியில் இந்த சதிவழக்கிலிருந்து மார்க்ஸ் விடுதலை செய்யப்பட்டபோதிலும் ஜெர்மனியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற மார்க்ஸ் 1849 ஜூன் 13-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து லண்டன் நகருக்கு குடிபெயர்ந்த மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வசித்து வந்தார்.
கல்லூரிப் பருவத்திலேயே அவரது சிறு பருவத் தோழியும் காதலியுமான ஜென்னியை திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டிருந்தது. மார்க்ஸ் 1843-ல் அவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார். ஜென்னி, அன்றைய பிரஷ்ய நாட்டின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்றைய அரசில் அவரது சகோதரர் உள்துறை அமைச்சராக இருந்தார். மேல்தட்டு குடும்பப் பின்னணி கொண்ட ஜென்னி, மார்க்சின் அனைத்துவகையான சமூக நடவடிக்கைகளிலும் உற்ற துணைவராய் அவருடனே இருந்து நாடு நாடாக அலைந்தார். இறுதியில், ஜென்னி 1881 டிசம்பர் 2-ல் புற்றுநோயால் உயிரிழந்தார்.
நிரந்தர வேலை ஏதுமின்றி வாழ்நாள் முழுவதும் அன்றைய பிற்போக்கு அரசுகளால் விரட்டியடிக்கப்பட்டு வாழ்ந்த மார்க்ஸ்-ஜென்னி தம்பதியருக்கு முதலில் பிறந்த குழந்தைகள் லண்டன் நகரில் சிறுவயதிலேயே உயிர் நீத்தன. வறுமைக்கிடையே வளர்ந்த அவர்களுடைய மூன்று மகள்கள் சமூக சிந்தனையுடன் மார்க்சின் பணிகளில் பங்கேற்றனர். இவர்கள் மூவருமே அன்றைய பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகளை திருமணம் செய்தனர்.
எங்கல்சின் தன்னலமற்ற, தொடர்ச்சியான நிதியுதவி மட்டும் மார்க்சுக்கு கிடைக்காமலிருந்தால், அவர் தனது புகழ்பெற்ற நூல்களை பதிப்பிக்க முடிந்திருக்காது. அது மட்டுமல்ல; வறுமையின் விளைவாக, எண்ணற்ற நோய்களை எதிர் கொண்டு மிகச் சில ஆண்டுகளிலேயே மார்க்ஸ் உயிர் நீத்திருப்பார்.
மார்க்சும் எங்கல்சும் முதலாம் அகிலம் எனப்படும், சர்வதேச தொழிலாளர் சங்கத்தினை உருவாக்கி 1864-ம் ஆண்டிலிருந்தே அதன் உயிரும் உடலுமாய் செயல்பட்டு வந்தனர்.
மார்க்ஸ், தனது தத்துவார்த்த வாசிப்பு, எழுத்துப் பணிகளுக்கு மத்தியில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான கருத்துகளை இரக்கமேதுமின்றி எதிர்த்துப் போராடுவதிலும், பல்வேறு நாடுகளிலும் வளர்ந்து வந்த பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுவதிலும் முன்னணியில் இருந்தார்.
1872-ல் உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் செழிப்புற்று வளர்ந்து வந்த நிலையில், மார்க்ஸ் தனது “மூலதனம்” என்ற மகத்தான நூலினை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அரசியல் பொருளாதாரம் குறித்து பல நூல்களை படைத்தார். மனித சமூகத்தின் மேன்மைக்காகவே தன் வாழ்நாளெல்லாம் சிந்தித்து வந்த மார்க்ஸ் 1883 மார்ச் 14 அன்று நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
மார்க்சியம் என்பது என்ன?
19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவற்றை இவ்வாறு குறிப்பிடலாம்.
ஜெர்மன் தத்துவ ஞானம்,
ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம்,
பிரெஞ்சு சோசலிசம்
இந்த மூன்று துறைகளையும் ஆராய்ந்து இந்த மூன்றிலும் தனது சொந்த சிந்தனை பங்களிப்பினை செய்தார் மார்க்ஸ். அவரது கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்தே நவீனகால விஞ்ஞான சோசலிசம் என்ற புதிய சமுகத்தை உருவாக்குவதற்கான தத்துவம் மலர்ந்தது.
பொருள்முதல்வாதம்
1844-45 ஆண்டுக் காலத்தில் மார்க்சின் கருத்துகள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி;
அண்டம் அனைத்தும் பொருட்களாலேயே ஆனது, பொருளே அனைத்துக்கும் ஆதாரம்; அனைத்து இயற்கை நிகழ்வுகள் பொருட்களுக்கிடையே நடக்கும் வினை, எதிர்வினைகளே என பொருள்முதல் வாதம் எடுத்துரைக்கிறது.
மார்க்ஸ் அன்று லுத்விக் ஃபாயர்பாக் என்பவரின் பொருள்முதல்வாதத்தைப் பின்பற்றினார்.
ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட “பழைய” பொருள்முதல்வாதம்” அனைத்திலும் பல குறைபாடுகள் உள்ளன என்று மார்க்சும் எங்கல்சும் கருதினார்கள். அவை வருமாறு;
(1) இந்தப் பொருள்முதல்வாதம் இயந்திரத் தன்மை கொண்டது. பொருளைப் பற்றி வளர்ந்து வந்த வேதியியல் துறை, உயிரியல் துறை, பிறகு வளர்ந்த மின்சாரத் துறை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கிற மிகமிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகிறது;
(2) பழைய பொருள் முதல்வாதத்தில் வரலாற்று வளர்ச்சி பற்றிய சரியான புரிதல் இல்லை. பொருளின் வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம் அதில் முழுமை பெறவிவில்லை;
(3) “மானுட சாரம்” எனப்படுவது, சகல “சமுதாய உறவுகளின் ஒரு “தொகுதியே” என்று அது கருதவில்லை; உலகத்தை “மாற்றியமைப்பதே முதன்மையான வேலை. ஆனால் , பழைய பொருள் முதல்வாதத்தில் உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து விளக்குவதோடு நின்றுவிட்டது. உலகை மாற்றி அமைப்பதற்கான, “புரட்சிகரமான நடைமுறைச் செயல்பாட்டின்” முக்கியத்துவத்தை அது புரிந்து கொள்ளவில்லை.
இயக்கவியல்
மார்க்சிற்கு முந்தைய தத்துவ மேதை ஹெகல் ஆவார். அவரது, தத்துவஞானத்தின் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை மேலும் வளர்த்தார். ஹெகலுடைய இயக்கவியலானது வளர்ச்சியைக் குறித்த மிகவும் முழுமையான, உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள போதனை. அந்த இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தினைக் உருவாக்கியவர்கள் மார்க்சும், எங்கல்சும்தான்.
எங்கல்ஸ் எழுதுகிறார்: “அப்படி அப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது, இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் பார்வைக்குத் தோன்றுகிற பொருட்களும், அதே போல் அவை பற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனை பிம்பங்களும், கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன – இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும். ”
“இயக்க இயல் வகைத் தத்துவஞானத்துக்கு இறுதியானதோ, உயர்வானதோ, புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்குள்ளேயுமுள்ள தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கிற, கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்றபடியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் நிலைத்து நிற்க முடியாது. “
சமுகம், பொருள் வளர்ச்சியைப் பற்றிய அதிக வளம் பொருந்திய தத்துவமாக இயக்கவியல் திகழ்கிறது. அதன் இயல்புகளில் சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம்:
வரலாற்றில் ஏற்கெனவே கடந்துவிட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், அந்தக் கட்டங்கள் வேறு வகையில், முந்தியதை விட உயர்ந்த நிலையில், திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி நிகழ்கிறது. இது “நிலை மறுப்பின் நிலை மறுப்பு” எனப்படும்.
வளர்ச்சி எனப்படுவது, நேர்கோடாக இல்லாமல் சுழலேணி போன்று சுழன்று சுழன்று மேலேறும்.
திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துகள், புரட்சிகளின் மூலம் வளர்ச்சி ஏற்படும்; அளவு மாற்றம் பண்பு மாற்றமாக உருமாறுதல்;
குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட நிகழ்வு, குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் அனைத்தும் உள்ளுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் கொண்டவை; அவையே வளர்ச்சிக்கான உள்தூண்டுதல்கள்;
எந்தவொரு நிகழ்வும், அதன் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று, ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருக்கின்றன.
வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்
பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாடுள்ள தன்மையையும், முழுமையற்ற தன்மையையும், ஒரு சார்பான தன்மையையும் உணர்ந்து கொண்ட பிறகு மார்க்ஸ் “சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை… பொருள்முதல்வாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து அந்த அடிப்படை மீது அதை மீண்டும் அமர்த்துவது” அவசியம் எனக்கண்டார்.
வரலாறு என்பது எண்ணற்ற வேறுபாடுகளையும் பல்வகை முரண்பாடுகளையும் கொண்டுள்ள ஓர் இயக்கப் போக்காக உள்ளது. அவை திட்டவட்டமான விதிகளால் இயங்குகிற ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையில் பயில்வதற்கு மார்க்ஸ் வழி காட்டினார்.
மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனார். ஆனால் மனிதர்களின், மக்கள் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது எது? மனிதனின் வரலாற்று நடவடிக்கை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது பொருளாயத (Material) வாழ்வின் உற்பத்தி, மற்றும் முதலாளி தொழிலாளி போன்ற உற்பத்தி உறவுகள்தான்.
அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற தனது நூலின் முன்னுரையில் மனித சமுதாயத்தையும் அதன் வரலாற்றையும் பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறித்துப் பின்வரும் சொற்களில் மார்க்ஸ் ஒரு முழுமையான வரையறுப்பைத் தருகிறார்:
“மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய உற்பத்தியில் திட்டமிட்ட உறவுகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதர்களின் விருப்பத்தின்படி அமையாமல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருளாயத உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கு பொருத்தமாக அமைகின்றன. “இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக, உண்மையான அடித் தளமாக அமைகிறது. அதன் மீதுதான் சட்டம், அரசியல் வகைப்பட்ட மேல் கட்டுமானங்கள் எழுகிகின்றன.
“அந்த அடித்தளத்துக்குப் பொருத்தமாகவே சமுதாய உணர்வின் சில குறிப்பிட்ட வடிவங்கள் உருவாகின்றன… மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்நிலையை வரையறுப்பதில்லை; அதற்கு மாறாக, அவர்களுடைய சமுதாய வாழ்நிலைதான் அவர்களின் உணர்வை வரையறுக்கிறது.
“சமுதாயத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினுடைய வடிவங்களாக இருந்த உற்பத்தி உறவுகள், அந்த உற்பத்திச் சக்திகளுக்கே விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகுதான் சமுதாயப் புரட்சியின் சகாப்தம் துவங்குகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன் கூடவே பிரம்மாண்டமான மேல்கட்டுமானம் முழுவதும் ஏறத்தாழ விரைவாக மாற்றமடைகிறது.
“இத்தகைய மாற்றங்களைக் கவனிக்கும் போதெல்லாம், உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பொருளாயத மாற்றத்தையும் – இதை இயற்கை விஞ்ஞானத்தினால் துல்லியமாக வரையறுக்க முடியும் – சட்டம், அரசியல், மதம், அழகியல் அல்லது தத்துவஞானம் போன்றவற்றில் – சுருங்கச் சொன்னால், எந்தச் சித்தாந்த வடிவங்களில் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து போராடித் தீர்க்கிறார்களோ, அந்தச் சித்தாந்த வடிவங்களில் – ஏற்படும் மாற்றத்தையும் வேறுபடுத்திக் காண வேண்டும்.
வர்க்கப் போராட்டம்
திகைப்பூட்டும் புதிர் போல், குழப்பமானதாகத் தோன்றும் மாற்றங்கள் இடையறாது நிகழ்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கும் விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடித்து ஒரு வழிகாட்டுகிறது மார்க்சியம்.
வர்க்கங்களாக சமுகம் பிளவுண்டிருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரு செயல்படுகிற பாத்திரம் உள்ளது. சமுகத்தில் வர்க்கங்கள் வகிக்கும் நிலைமை, வாழ்க்கை முறை, ஆகியவற்றால் வேறுபாடுகள் பல ஏற்படுகின்றன. இதனால் ஒன்றோடொன்று முரண்படும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, முதலாளிக்கு மேலும் மேலும் இலாபம் தேவை; , தொழிலாளிக்கு ஊதியம் உயர்வது முக்கியம்; இது போன்ற மாறுபட்ட வேட்கைகள் உள்ளதால் மோதல்கள் உருவாகின்றன.
“இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார்.
ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டவர்களாக மாறுகின்றனர். சில நேரங்களில் மறைவாகவும் சில நேரங்களில் பகிரங்கமாகவும், இடையறாத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதும் புரட்சிகரமாக மாற்றி புதிய அமைப்பினை உருவாக்குகிறது. ”பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே தவிர வேறில்லை. ”
“இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவென்றால் வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் பெரும்பகை கொண்ட இரு முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் – முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் – பிளவுண்டு வருகிறது. ”
வரலாற்று மாற்றங்கள், வளர்ச்சி பற்றிய மார்க்சின் இந்த கண்டுபிடிப்புகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் உழைக்கும் மக்களுக்கு விடுதலைக்கான பாதையை காட்டுகிறது. அடித்தட்டு பாட்டாளி மக்கள் உன்னதமான வாழ்க்கை வாழ்வதற்கான சோசலிச சமுகத்தை அமைத்திட மார்க்சியம் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.
மார்க்சின் பொருளாதாரப் போதனை
வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வது – இதுதான் மார்க்சின் பொருளாதாரப் போதனையின் உள்ளடக்கம்.
மதிப்பு
பண்டம் என்பது, முதன் முதலாக மனிதத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளத்தக்க பொருளுமாகும். ஒரு பொருளின் பயனுடைமை அதை பயன் மதிப்பு கொண்டதாக ஆக்குகிறது.
பொருட்கள் ஒவ்வொன்றும் வேறு வேறானவையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட முடியாதவைகளாகவும் இருக்கின்றன. அதாவது பயன்மதிப்பு வெவ்வேறு கொண்டவை. பரிமாற்ற மதிப்பு என்பது எல்லா வகையான பயன் மதிப்புகளை, முற்றிலும் வேறுபட்ட பயன் மதிப்புகளைக் கூட ஒன்றுடன் ஒன்று சமப்படுத்துகிறது. இதனை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டுகிறது.
ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பினால் உருவான உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான்.
குறிப்பிட்ட பயன் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
உபரி மதிப்பு
பண்ட உற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பணம் மூலதனமாக மாறுகிறது. பண்டப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் பின்வருமாறு: C (பண்டம்)- M (பணம்)- C (பண்டம்); அதாவது ஒரு பண்டத்தை வாங்குவதற்காக மற்றொரு பண்டத்தை விற்பது என்பதுதான். இதற்கு மாறாக, மூலதனத்தின் பொதுச் சூத்திரம் M – C – M ; அதாவது (இலாபத்துக்கு) விற்பதற்காகவே வாங்குவது என்பதாகும்.
புழக்கத்திற்குக் கொண்டுவரும் பணத்தின் ஆரம்ப மதிப்பில் ஏற்படுகிற அதிகரிப்பை மார்க்ஸ் உபரி மதிப்பு என்று அழைத்தார்.
பண்டப் புழக்கத்திலிருந்து உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில், பண்டப் புழக்கம் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் மதிப்புகளின் பரிமாற்றத்தைத் தான் கண்டிருக்கிறது.
விலையைக் கூட்டிவிடுவதிலிருந்தும் உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனென்றால் வாங்குபவர்கள், விற்பவர்களுடைய பரஸ்பர நஷ்டங்களும் இலாபங்களும் ஒன்றையொன்று சமமாக்கிச் சரி செய்துவிடும்.
“மதிப்பைத் தோற்றுவிக்கும் ஆதாரமாய் அமையும் சிறப்பு இயல்புடைய பயன் மதிப்புள்ள ஒரு பண்டத்தைச் சந்தையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” அப்படிப்பட்ட பண்டம் ஒன்று உண்டு. அது தான் மனிதனின் உழைப்புச் சக்தி. உழைப்பு மதிப்பைப் படைக்கிறது.
பணத்தின் சொந்தக்காரன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புப்படி வாங்கிக் கொள்கிறான், மற்ற ஒவ்வொரு பண்டத்தின் மதிப்புப் போலவே இந்த மதிப்பும் இதன் உற்பத்திக்கு வேண்டிய, சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது (அதாவது, அது அந்தத் தொழிலாளியும் அவனது குடும்பமும் பிழைத்திருப்பதற்கு வேண்டிய செலவு).
உழைப்புச் சக்தியை வாங்கிய பணச் சொந்தக்காரருக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு: அதாவது, அந்த உழைப்புச் சக்தியை நாள் முழுவதும் பன்னிரண்டு மணி நேரம் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். வேலை வாங்க அவருக்கு உரிமையுண்டு. இருந்தாலும், ஆறு மணி நேரத்தில் (“அவசியமான” உழைப்பு நேரம்) தொழிலாளி தனது பிழைப்புச் செலவைச் சரிக்கட்டுமளவுக்கு உற்பத்திப் பொருளைச் செய்கிறார். அடுத்த ஆறு மணி நேரத்தில் (“உபரி” உழைப்பு நேரம்) “உபரி” உற்பத்திப் பொருளை அல்லது உபரி மதிப்பைச் செய்கிறார். இதற்கு முதலாளி அந்தத் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதில்லை, எனவே உற்பத்தியின் இயக்கப் போக்கிலிருந்து பார்க்கையில் மூலதனத்தில் காணக்கூடிய இரண்டு பகுதிகளை வேறுபடுத்துவது அவசியமாகும்;
(இயந்திரங்கள், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் முதலிய) உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவாகிற நிலையான மூலதனம்; இதன் மதிப்பு கொஞ்சமேனும் மாறுபடாமல் (ஒரே மொத்தமாகவோ பகுதியாகவோ) தயாரான உற்பத்திப் பொருளின் பால் மாற்றப்படுகிறது; அடுத்தது, மாறுபடும் மூலதனம்: இது உழைப்புச் சக்திக்காகச் செலவழிக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் மதிப்பு ஒரு நிலையாக இருப்பதில்லை; உழைப்பின் இயக்கப் போக்கில் அது உபரி மதிப்பைப் படைத்த வண்ணம் வளர்கிறது.
மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகள் உள்ளன. முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவிய வேண்டும். அதே சமயம் பண்டங்களின் உற்பத்தி ஒப்பீட்டு அளவில் முன்னேறியிருக்க வேண்டும். (உற்பத்தி முறையில் வளர்ச்சி)
இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் “சுதந்திரமான” உழைப்பாளி இருக்க வேண்டும். அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும், பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும். யாருடனும், எதனோடும் இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாதவராக “பாட்டாளி” இருக்க வேண்டும்.
இரண்டு அடிப்படையான முறைகளின் மூலமாக உபரி மதிப்பை அதிகப்படுத்த முடியும்; வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பது.
மிக மிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத்தின் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; உபரி மதிப்பை முதலாளி சொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது.
உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறு படும் மூலதனத்துக்கு ஒரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) – இதில் மாறுபடும் மூலதனம் அதாவது உழைப்பாளிக்கு கொடுக்கப்படும் பங்கினை விட, நிலையான மூலதனத்தின் பங்கு அதிகமாக்கப்படுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானது. அது சோசலிசத்தை நோக்கிய மாறுதலுக்கான இயக்கப்போக்கிலும் உயர் முக்கியத்துவம் பெறுகிறது.
மூலதனத்தின் திரட்சியானது தொழிலாளர்களுக்குப் பதிலாய் இயந்திரங்களைக் கொண்டு வேலைகளை முடித்துக் கொள்ளும் போக்கை விரைவுபடுத்தி, ஒரு கோடியில் செல்வத்தையும் இன்னொரு கோடியில் வறுமையையும் உண்டாக்கி ” தயார் நிலையில் உள்ள தொழிலாளர்களின் படை” (வேலையில்லாப் பட்டாளம்) என ஒன்றைத் தோற்றுவிக்கிறது.
மேற்கண்ட நிலைமை, உற்பத்திச் சாதனங்களை வளர்த்தெடுக்கும் மூலதனத் திரட்சி மற்றும் கடன் ஆகியவை மூன்றும் – முதலாளித்துவ நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட மிகை உற்பத்தி நெருக்கடிகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
இந்த நெருக்கடிகள் முதலில் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்தன; பின்பு, இதைவிட நீண்ட, குறிப்பாகச் சொல்ல முடியாத கால இடைவெளியில் நிகழ்ந்தன.
முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படுகிற மூலதனத் திரட்சி வேறு; புராதன மூலதனத் திரட்சி என்று சொல்லப்படுவது வேறு என்பதை இங்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். புராதன மூலதனத் திரட்சி என்று சொன்னால் உற்பத்திச் சாதனங்களிலிருந்து உழைப்பாளியைப் பலாத்காரமாகப் பிரித்துவிடுவது; நிலத்திலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடுவது; சமுதாயப் பொது நிலங்களைத் திருடிக் கொள்வது; காலனிகள், தேசியக் கடன்கள், காப்பு வரிகள் முதலான பல ஏற்பாடுகள் புராதன மூலதனத் திரட்சியின் முனைப்புக் கூறுகளாகும். “புராதன மூலதனத் திரட்சி” என்பது ஒரு கோடியில் “சுயேச்சையான ” பாட்டாளியைத் தோற்றுவித்து, மற்றொரு கோடியில் பணத்திற்கான சொந்தக்காரனை, முதலாளியை, தோற்றுவிக்கிறது.
“முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கை” மார்க்ஸ் விவரிக்கிறார்: “நேரடியான உற்பத்தியாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்யும் வேலை, ஈவிரக்கமற்ற படு மூர்க்கத்துடன், மிகமிக வெட்கக்கேடான, மிக மிக ஆபாசமான, மிக அற்பத்தனமான, மிகமிக இழிவான, அருவருக்கத்தக்க வெறியுணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ”
அதாவது சுயேட்சையான உழைப்பாளி, உழைப்பினடிப்படையில் ஒன்றிணைந்து அதுவரை உருவாக்கிவந்த தனிச் சொத்து முறை அகற்றப்படுகிறது. (விவசாயி, கைத் தொழில் செய்வோர் சொந்தமாகக் கொண்டிருந்த தனிச் சொத்து நீக்கப்பட்டு) அந்த இடத்தினை முதலாளித்துவ தனிச்சொத்து கைப்பற்றிக்கொள்கிறது.
இந்த முதலாளித்துவத் தனிச்சொத்து, பிறருடைய, பெயரளவில் சுயேச்சையான, உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்பொழுது யாருடைய சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றால் தனக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியல்ல; பல தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிற முதலாளிதான்.
வறுமையும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் இழிநிலையும் சுரண்டலும் மலைபோல் வளர்ந்திருக்கின்றன. எனினும், இதனோடு கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும்; மேலும் முதலாளித்துவ உற்பத்திப் போக்கு என்ற ஏற்பாட்டாலேயே அந்த வர்க்கம் கட்டுப்பாடும் ஒற்றுமையையும் ஒழுங்கமைப்பையும் பெற்று வளர்கிறது. எந்த உற்பத்தி முறை மூலதனத்தின் ஏகபோகத்துடன் கூடவே முளைத்து, அதனுடனேயே, அதன் அடியிலேயே தழைத்துச் செழித்ததோ, அந்த உற்பத்தி முறைக்கு மூலதனத்தின் ஏகபோகமே விலங்காகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடப்பதும், உழைப்பு சமுதாயமயமாகுவதும் இறுதியில் ஒரு நிலையை எட்டும்போது அவற்றிற்கும் அவற்றின் முதலாளித்துவ மேலோட்டுக்கும் பொருத்தமற்றுப் போய்விடுகிறது. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனிச்சொத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. உடைமை பறித்தோர் உடைமை நீக்கம் செய்யப்படுகிறார்கள்” (மூலதனம், தொகுதி 1)
மூலதனத்தின் இரண்டாம் தொகுதியில் மொத்த சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தியைப் பற்றி மார்க்ஸ் செய்யும் பகுப்பாய்வு மிகமிக உயர்ந்த அளவிலே புதுமையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
இங்கேயும்கூட மார்க்ஸ் பொருளாதாரத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியை ஆராயாமல் அந்தப் பொருளாதாரம் முழுவதையுமே ஆராய்கிறார். சமுதாய உற்பத்தி முழுவதையும்: 1) உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி, 2) நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி என்று இரண்டு பெரும் பகுதிகளாக மார்க்ஸ் பிரிக்கிறார்.
மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு, இலாபத்தின் சராசரி விகிதம் அமையும் பிரச்சினையை மூலதனத்தின் மூன்றாம் தொகுதி தீர்த்து வைக்கிறது.
உபரி மதிப்பின் தோற்றத்தை மார்க்ஸ் முதலில் பகுத்தாராய்கிறார்; பிறகு அது இலாபமாகவும், வட்டியாகவும், நில வாடகையாகவும் பிரிவதைக் கவனிக்கப் புகுகிறார், இலாபம் என்பது உபரி மதிப்புக்கும், ஒரு தொழில் நிலையத்தில் போடப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகிதமேயாகும்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பொருட்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகை பொருட்களுடைய விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கிறது; ஆனால், போட்டியின் காரணமாக, தனித்தனி தொழில் நிலையங்களிலும் தனித்தனி உற்பத்திக் கிளைகளிலும் அவற்றின் மதிப்புகளுக்குச் சமமாகப் பொருட்கள் விற்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அவற்றின் உற்பத்தி விலைகளுக்குச் சமமாகத்தான் விற்கப்படுகின்றன. இந்த உற்பத்தி விலை என்பது செலவழிக்கப்பட்ட மூலதனமும் சராசரி இலாபமும் சேர்ந்த கூட்டுத் தொகைக்குச் சமமானதாகும்.
இவ்வாறு விலைகளுக்கும் மதிப்புகளுக்குமிடையே வேற்றுமையுள்ளது, இலாபங்கள் ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன என்ற மறுக்கமுடியாத, அனைவருக்கும் தெரிந்த, உண்மையை மார்க்ஸ் மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக விளக்கிவிடுகிறார்; சந்தையால் மட்டுமே ஒன்றுக இணைக்கப்பட்டிருக்கிற தனித்தனி பண்ட உற்பத்தியாளர்களைக் கொண்ட சமுதாயத்தில், இந்த விதியானது சராசரியான, சமுதாய அளவிலான, பெரும்பாலும் வழக்கில் உள்ள விதியாகத்தான் வெளிப்பட முடியும் என்பது மிகமிக இயல்பானதொரு விசயமாகும்;
(இவையல்லாமல், மூலதனம் நூலின் மூன்றாம் தொகுதியில் நில வாடகையின் தத்துவமும் விளக்கப்படுகிறது. )
“கிராமப்புற உழைப்பாளிகள் பரவலான பகுதிகளுக்குச் சிதறடிக்கப்படுவது இந்த உழைப்பாளிகளின் எதிர்ப்புச் சக்தியை உடைத்தெறிகிறது; ஆனால் நகரத் தொழிலாளர்களிடையே உள்ள குவியும் தன்மையோ அவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. நகரத் தொழில்களைப் போலவே நவீனகால விவசாயத்திலும் ஈடுபடுத்தப்படுகிற உழைப்பின் அதிகரித்த உற்பத்தித் திறனும் அளவும் உழைப்புச் சக்தியை வீணடித்து, நோய்நொடிகள் மூலமாக நாசப்படுத்தி உருவாக்கப்படுகின்றன. மேலும், முதலாளித்துவ முறையிலான விவசாயத்தில் ஏற்படும் முன்னேற்றமெல்லாம் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்ல; விளைநிலங்களைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படுகிற முன்னேற்றமாகும்.
ஆகவே, எல்லாச் செல்வங்களுக்கும் அசல் ஊற்றுக் கண்ணாயுள்ள விளைநிலத்தையும் உழைப்பாளியையும் உறிஞ்சிவிடுவதின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியானது தொழில் நுட்பத்தை வளர்க்கவும், பல்வேறு இயக்கப் போக்குகளை ஒரு சமுதாய முழுமையில் இணைத்து வைக்கவும் செய்கிறது. ” (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி. )
சோசலிசம்
மேலே சொன்னதிலிருந்து வெளிப்படையாகத் தெரிவது இதுதான். முற்றிலும் தனிச்சிறப்பான இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோசலிச சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த மாற்றத்திற்கு, அறிவுத் துறையிலும் அறநெறித் துறையிலும் உந்து சக்தியாக விளங்குவதும், நேரடியாக இருந்து இம்மாற்றத்தை நிறைவேற்றும் செயல்பாட்டாளர்களாக விளங்குவதும், பாட்டாளி வர்க்கமே. இந்த வர்க்கத்துக்கு முதலாளித்துவமே பயிற்சியளிக்கிறது. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளிகள் நடத்துகிற போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது; அந்த வடிவங்களின் உட்பொருள் வளமும் மேலும் மேலும் அதிகரிக்கிறது; தவிர்க்க முடியாத முறையிலே இந்தப் போராட்டம் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாக உருவெடுக்கிறது.
உற்பத்தி சமுதாய மயமாக்கப்படுவதன் விளைவாக உற்பத்திச் சாதனங்கள் சமுதாயச் சொத்தாக மாற்றப்படுவது, “இதுவரை பறித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்வது” நிகழ்ந்தே தீரும். உழைப்பின் உற்பத்தித் திறனில் மகத்தான அதிகரிப்பு, வேலை நேரத்தைக் குறைப்பது, தொடக்ககால, சிதறிய நிலையிலுள்ள, சிறு அளவிலான உற்பத்தி அழிந்ததில் எஞ்சிக்கிடக்கும் மிச்ச சொச்சங்களை நீக்கிவிட்டு, கூட்டு முறையில் அமைந்த, மேம்படுத்தப்பட்ட உழைப்பை நிலைநாட்டுவது -இவையெல்லாம் இந்த மாற்றத்தினால் ஏற்படும் நேரடி விளைவுகளாகும். விவசாயத்திற்கும் தொழிலுக்கும் இடையேயுள்ள ஒட்டுறவை முதலாளித்துவம் இறுதியில் வெட்டிவிடுகிறது.
தன்னியல்பாய் வளர்ந்த, கொடிய முதலாளித்துவ வடிவத்தில் – உற்பத்தி வேலை முறைக்குத் தொழிலாளி இருக்கிறானே தவிர, தொழிலாளிக்காக உற்பத்தி வேலை முறையில்லை என்ற முதலாளித்துவ வடிவத்தில் – அது ஊழலுக்கும் அடிமைத்தனத்துக்கும், கேடு விளைவிக்கும் அபாயகரமான தோற்றுவாயாகிவிடுகிறது.
தொழிலாளி வர்க்கம், “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்”, தானும் “தேசியத் தன்மை” பெறாமல் அது பலம் பெற முடிவதில்லை; பக்குவம் பெற முடியவில்லை; உருவாக முடியவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசிய ரீதியான தடைகளை உடைத்தெறிகிறது; தேசியத் தனி வாழ்வை அழிக்கிறது; தேசியப் பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை உருவாக்குகிறது. எனவே, வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில், “தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது” என்பது முழுக்க முழுக்க உண்மையாகும்; மேலும், குறைந்தபட்சம் நாகரிகமடைந்துள்ள நாடுகளிலாவது இருக்கும் தொழிலாளிகளின் “ஒன்றுபட்ட போராட்டம்”. . . “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தேவையான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்” என்பதும் முழுக்க முழுக்க உண்மை.
அரசு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட அடக்குமுறைக் கருவியாகும். சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமரசப்படுத்த முடியாத வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுண்டபோது, வெளிப் பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலே நின்று கொண்டு, ஓரளவுக்குச் சமுதாயத்திலிருந்து விலகியும் இருக்கிற “அதிகாரம்” இல்லாமல் சமுதாயம் வாழ முடியாத போது, அரசு தவிர்க்க முடியாதபடி தோன்றியது.
அரசு என்பது, வர்க்க முரண்பாடுகளுக்கு உள்ளிருந்தே உதித்து, “மிகவும் வலிமை வாய்ந்த, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற வர்க்கத்தின் அரசாக ஆகிறது; அந்த வர்க்கம், அரசின் மூலமாக, அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாக ஆகிறது; இவ்வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி வைத்து, சுரண்டிக் கொண்டேயிருக்க அது புதிய சாதனங்களைப் பெறுகிறது. இவ்வாறுதான் பண்டைக் கால அரசு, அனைத்திற்கும் மேலாக, அடிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த அடிமை உடைமையாளர்களின் அரசாக இருந்தது; அதே போலத்தான் நிலப்பிரபுத்துவ அரசு என்பதும் பண்ணையடிமைகளாகிய விவசாயிகளையும் கொத்தடிமைகளையும் ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த பிரபு வம்சத்தினரின் அரசாக இருந்தது; அதே போலத்தான், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசும் கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கென அமைந்த கருவியாகும்.
முதலாளித்துவ அரசின் மிகமிகச் சுதந்திரமான, மிகமிக முற்போக்கான வடிவம் என்றுள்ள ஜனநாயகக் குடியரசும் கூட இந்த உண்மையை எந்த விதத்திலும் அழித்துவிடவில்லை, ஆனால் வெறுமனே அதன் வடிவத்தை மாற்றுகின்ற வர்க்கங்களை ஒழிப்பதில் கொண்டு போய்விடுவதன் மூலம் சோசலிசமானது அரசை ஒழிப்பதிலும் கொண்டுபோய் விடும்.
சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்ட மார்க்சின் கருத்துகளை மேலும் ஆழமாக பயில வேண்டும். மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துகளை வாசித்து உள்வாங்கிட வேண்டும். அப்போதுதான் மார்க்சிய லெனினிய தத்துவத்தை பயன்படுத்தி இந்தியாவில் சுரண்டல் இல்லாத சோசலிச சமுதாயத்தை படைக்க இயலும்.
இந்திய சமூகச் சூழல், பொருளாதார உறவுகள், காலனியம் இவை பற்றியெல்லாம் மார்க்ஸ் ஏராளமாக எழுதியுள்ளார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியின் கொடூரமான சுரண்டல் பற்றியும் ஏராளமான விபரங்களைச் சேகரித்து அவர் பதிவு செய்துள்ளார். இந்திய மக்கள் காலனி ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் அதுவே இந்தியச் சிக்கல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்று, இந்திய விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தவர் காரல் மார்க்ஸ்.
மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிச் செல்ல பாட்டாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மார்க்சின் 2௦௦-வது பிறந்த தினத்தில் உறுதியேற்போம்.
மனித சமூக வரலாற்றின் உயிர்நாடியான ஒரு உண்மையை கம்யூனிஸ்ட் அறிக்கை கொண்டுள்ளது.
“இது வரை இருந்து வரும் சமூகத்தின் வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” இந்த பொன்னான வரிகள் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சமூகத்தை வர்க்கங்களின் தொகுதி என்று அணுகும் முறையை இது வழங்குகிறது. அடுத்து, வர்க்கங் களுக்கிடையே எழும் முரண்பாடுகளினால் நடக்கும் போராட்டங்கள்தான், வரலாற்றின் உந்து சக்தி என்ற புதிய வரலாற்று வெளிச்சத்தை நமக்கு வழங்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, மார்க்சியத்தின் மகத்து வமாகும். வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டம் உற்பத்தி மற்றும் பொருளியல் தளத்தில் மட்டும் நடப்பதல்ல. அரசியல், சட்டம், பண்பாடு என பல தளங்களில் நடைபெறுகிறது.அதில் முக்கியமான தளம் தத்துவம். பல சந்தர்ப்பங்களில் நேரடிக் காட்சியாக இது தெரிவதில்லை. ஆனால் சமூகத் தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் வலுவான தாக்கத்தை தத்துவத்தில் ஏற்படுத்துகின்றன.
தத்துவம் – அறிமுகம்
தத்துவச் சிந்தனை மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கத்திலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தத்துவ விவாதங்கள் நடந்து வந்து உள்ளன. ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதற்கான தேடலை ஒருவர் மேற்கொண் டால், அவரை தத்துவவாதி என்று அழைப்ப துண்டு.
philosophy என்ற ஆங்கில சொல் இரண்டு கிரேக்க சொற்களைக் கொண்டது. philo என்பதற்கு நேசித்தல் என்றும் sophia என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். அறிவை நேசித்தல் என்ற பொருள் கொண்டதாக தத்துவம் என்ற துறை புரிந்துகொள்ளப்பட்டது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்ட ஒரு உயிரினம். பகுத்து அறியும் ஆற்றல் உள்ளதால், அவர்கள் எப்போதும் அறிவுத் தேடல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மனித இனத்தின் இந்த அறிவுத் தேடல் தேவையை நிறைவேற்றுவதற்கு தத்துவத் துறை பயன்பட்டு வந்துள்ளது.
தனது வாழ்க்கையையும் தனது இருப்பையும் பற்றி, அறிந்து கொள்ளவும், தான் வாழும் உலகமும் அதைச் சுற்றியுள்ள இயற்கையையும் பற்றி அறிந்து கொள்ளவும் மனிதர்கள் இடையறாது ஆர்வம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உருவாகும் அறிவே தத்துவம்.
இயற்கை, சமூகம், மனிதர்கள் என்ற பரிமாணங் களில் தத்துவ செயல்பாடு அமைந்துள்ளது. தத்துவா சிரியர்கள் இயற்கை, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் மனிதர்கள் உள்ளடங்கிய சமூகத்தின் இருப்பு பற்றியும் சிந்தித்து வந்துள்ளனர்.
மார்க்சியத்தின் வரையறை
தத்துவம் அனைத்து அறிவியல் துறைகளுக் கும் தாய் போன்று விளங்கியது. இயற்கை அறிவியல், பௌதிகம் போன்ற துறைகளில் புதிதாக சேர்ந்திடும் அறிவுப் பங்களிப்பு அனைத்தும் தத்துவமாகவே பார்க்கப்பட்டது. 1729-ம் ஆண்டில் நியூட்டன் எழுதிய நூலின் தலைப்பு,” இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்”. அன்று பௌதிகம், கணிதம், வானவி யல் போன்ற அனைத்தும் தத்துவ அறிவின் பிரிவு களாகவே கருதப்பட்டன.
தத்துவம் பற்றி பல பார்வைகளும், வரையறை களும் நிலவி வந்த சூழலில் மார்க்சியத்தின் வருகை ஒரு புதிய தடத்தினை உருவாக்கியது.
எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார்.
“எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையே யான உறவு பற்றியதுதான்’’
அதாவது, புற உலகு சார்ந்த பொருட்களுக் கும், அதனையொட்டி எழுகிற மனித சிந்தனைக் கும் உள்ள உறவு குறித்து தத்துவங்களும் தத்து வவியலாளர்களும் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளனர்.
இது எப்போது துவங்கியது? இதற்கும் எங்கெல்ஸ் ஒரு சுவாரசியமான விளக்கத்தை தருகிறார்:
“தங்களது உடல் அமைப்பு பற்றி, எந்த அறிவும் இல்லாத ஆதிகால மனிதர்கள், தாங்கள் கண்ட கனவுகளில் வந்த ஆவி கற்பனை உருவங்களின் தாக்கத்தால், தங்கள் எண்ணங்களும் உணர்வு களும் உடலின் செயல்பாடுகள் அல்ல; உடலில் இருக்கும் ஆன்மாதான் அவற்றுக்குக் காரணம்; அது மரணத்தின்போது, உடலை விட்டு வெளியேறி விடுகிறது என்று கருதினர். அன்றிலிருந்து மனிதர் கள் தங்கள் ஆன்மாவிற்கும் புற உலகத்திற்குமான உறவு பற்றி ஆராயத் துவங்கினர்.” இந்த அற்புத சித்தரிப்பு, தத்துவத் துறையின் துவக்கத்தை எளிமை யாக எடுத்துரைக்கிறது.
இந்தக் காலங்களுக்குப் பிறகுதான் தத்துவ சண்டைகள் துவங்கின. தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன் மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர் கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்திய வர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”
மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படை யில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு, தத்துவத்தில் அதுவரை நீடித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் மார்க்சிய தத்துவம் தீர்வு கண்டது. இந்த புதிய பார்வை, தத்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
கருத்து முதல் வாதம்
பல்கலைக்கழக தத்துவப் பாடங்களில் கருத்து முதல்வாதம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தத்துவ முறைக்கு பல சொற் கள் பயன்படுத்தப்படுகின்றன. மீமெய்யியல் (அநவயயீhலளiஉள) என்பது உள்ளிட்டு பலவாறு சொற் கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அப்பாலைத் தத்துவம் என்ற சொற்றொடர் பயன்பட்டு வந்துள்ளது.
புலன்கள் உணரும் பொருட்களுக்கு அப்பால், புலன்களால் உணர முடியாதவற்றை விவாதிக் கும் தத்துவமுறை என்பதால் இது அப்பாலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு தூண் இருக்கிறது என்றால் சாதாரணமாக அது எந்த மூலப்பொருட் களால் ஆனது என்று விளக்கம் கூறலாம். ஆனால் அப்பாலைத் தத்துவம் அந்த தூணுக்குள் உள்ள ‘மறைபொருளைப்’ பற்றி பேசுகிறது. இறுதியாக, “தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்று அது முடிவு கூறும். அதாவது கடவுள்தான் எல்லாம் என்று இறுதியாக வந்தடையும் தத்துவ முறை அது.
இந்த அப்பாலைத் தத்துவம் அரிஸ்டாட்டில் காலத்திலும், அதற்கு இணையாக அதே காலங் களில் இந்தியாவிலும் பெரும் செல்வாக்குடன் தத்துவத் துறையில் செயல்பட்டது.
மேற்கண்ட எடுத்துக்காட்டில், தூண் கட்டப் படுகிற மூலப்பொருட்களும், தூணின் வடிவமும் மாறலாம்; ஆனால், ’மறைபொருளாக’ உள்ள ஒன்று எப்போதும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை, அது நிரந்தரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த அநவயயீhலளiஉள என்ற சொல்லுக்கு பிந்தைய காலங்களில் மாறாநிலை தத்துவம் என்று அழைக்கிற வழக்கம் ஏற்பட்டது.
சமூகத்தில் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், சாகாவரம் பெற்ற, மாறாத, மாற்ற முடியாத சமூகம் முதலாளித்துவ சமுகமே என்கிற பார்வையைக் குறிப்பிடலாம்.
பொருட்கள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாறாதவை என்ற பார்வை கொண்டது மாறா நிலைத் தத்துவமாகும். இதற்கு நேர் எதிரான தத்துவ முறை, இயக்கவியல் எனப்படும். மார்க் சிற்கு முந்தைய இயக்கவியலானது, கருத்து முதல்வாத குழப்பங்களுடன் இருந்தது. அதனைப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ முறையினை மார்க்சும், எங்கெல்சும் படைத்தனர்.
கிழக்கு,மேற்கு தத்துவங்கள்
தத்துவங்களை மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என வகைப்படுத்தி பயில்கின்றனர். ஆனால் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னைகளில் பிர தேசம், நாடு வித்தியாசங்கள் இருப்பதில்லை. மனித சிந்தனைக்கும் இயற்கைக்குமான தொடர்பு குறித்து, எல்லாத் தத்துவங்களும் ஒரு நிலைபாடு எடுத்து விளக்குகின்றன. எங்கெல்ஸ் குறிப் பிட்டது போன்று இயற்கையா? சிந்தனையா? என்ற கேள்விக்கு விடை கண்டதில், எது மூல முதலானது என்பதனையொட்டி, இரு பிரிவு களாக கிழக்கு, மேற்கத்திய தத்துவங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.
தத்துவங்களின் கால வரிசையை ஆராய்கிற போது மனித நாகரிகங்களின் வளர்ச்சியோடு இணைந்ததாக தத்துவங்கள் தழைத்திருக்கின்றன. இது மேற்கு, கிழக்கு உள்ளிட்டு உலகத் தத்துவங் கள் அனைத்துக்கும் பொருந்தும். இந்திய தத்து வத்தில் வேதங்கள் தோன்றியதாக கணிக்கப்படும் காலத்திலிருந்தே பொருள் உருவாவது பொருளி லிருந்துதான் போன்ற துவக்க கால பொருள் முதல்வாத தத்துவக் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற தத்துவ முறையாக சார்வாகம் அல்லது உலகாயதம் எனப்படும் இந்திய பொருள் முதல்வாத தத்துவம் வளர்ந்தது. இந்த உலகு, மனிதர்கள் எல்லாம் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இந்தியப் பொருள்முதல்வாதம் கருதியது.
இதே காலங்களில் கிரேக்கத்தில் தேல்ஸ் என்ற தத்துவவாதி வாழ்ந்திருக்கிறார். அவர் தண்ணீர் தான் மூலாதாரப் பொருள் என்றும் அதிலிருந்து, உலகமும், பிரபஞ்சத்தின் தோற்றமும் நேர்ந்ததாக பொருள்முதல்வாத நிலையினைக் கொண்ட தத்துவத்தை உருவாக்கியவர். அவருக்குப் பிறகு காற்றுதான் முதன்மையானது என்ற தத்துவ நிலைபாட்டைக் கொண்ட அநேக்சிமினஸ் வாழ்ந் திருக்கிறார். இவ்வாறு கிழக்கிலும், மேற்கிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வளர்ந்து வந்துள்ளன.
இந்திய சமூகத்தில் நிலவுடைமை சமூகம் நிலைபெற்று, ஆளுகின்ற வர்க்கங்கள் நிலப் பிரபுத்துவ சக்திகளாக வலுப்பெற்ற நிலை, நால் வருண சாதிய அமைப்பு இறுக்கமாக வேரூன்றிய சூழல் ஆகியவற்றால், பொருள்முதல்வாதம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மனித சமூக வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் ஆன்மீக தத்துவங்களும் கருத்துமுதல் வாத தத்துவங்களும் மேலாதிக்கம் செலுத்தத் துவங்கின. சமூகம் வர்க்கங்களாக பிரிந்து, தொடர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தில் நிலவுடைமை சமூகம் பரிணமித் தது. இந்த சூழலில்தான் கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது.
ஆக, மேலாதிக்கம் செலுத்தும் சொத்துடைமை வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக் கும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் தத்துவத் துறையில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமான போராட்டமாக நடை பெற்று வந்துள்ளது. இதனை தத்துவ வரலாறு முழுவதும் காண முடியும்.
மதமும் தத்துவமும்
மதங்களின் தோற்றம், வளர்ச்சிக்கும் தத்துவ வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையின் இயக்கங்களின் மீது ஏற்பட்ட மனித உணர்வுகள், சிந்தனைகள், மத வழிபாட்டு முறைகளாகவும் தத்துவ விளக்கங்களாகவும் பரிணமித்து வந்துள்ளன. பல தத்துவங்களில் மத நம்பிக்கை எது, தத்துவக் கருத்து எது என்று பிரித்து தெரிந்துகொள்ள இயலாத அளவிற்கு இணைந்துள்ளன.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மதத்தை யும் தத்துவத்தையும் பிரித்து பார்ப்பது மட்டு மல்லாது, மதம் உருவானதற்கான சமூகச் சூழல், பொருளாதாரக் காரணிகளை ஆராயவும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தியத் தத்துவம் மதம் சார்ந்தது என்றும் ஆன்மீகத் தன்மை கொண்டது என்றதுமான கருத்துக்கள் இன்றளவும் ஆழமாக வேரூன்றி வந்துள்ளன. இந்தியாவின் குடியரசுத் தலைவ ராக இருந்த தத்துவ ஆசிரியரான டாக்டர் ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவம் என்பது சாரம் சத்தில் ஆன்மீக தத்துவம்” என்று எழுதியுள்ளார். அதாவது இந்திய தத்துவத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்று அடிப் படையற்ற கருத்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதனை உடைத்தெறிந்த பெருமை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களையே சாரும். இந்தியத் தத்துவத்தில் தொன்மைக்காலமாக நிலைத்திருந்த நாத்திக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து, இந்திய தத்துவம் ஆன்மீக தத்துவமே என்ற வாதத்தின் பொய்மையை தோலுரித்துக் காட்டினார் அவர்.
தத்துவ இயக்கத்தின் அடிப்படை
பல்வேறுபட்ட தத்துவ சிந்தனைகள் உருவா வதற்கு எது அடிப்படை? இந்தக் கேள்விக்கான விடையினை மார்க்சியத்தில்தான் பெற முடியும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் சமூக உற்பத்தி நிலைமைகள்தான் குறிப்பிட்ட தத்துவப் போக்கு தோன்றிட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக இந்தியாவில் பௌத்த தத்துவம் தோன்றிய வரலாற்றைக் குறிப்பிடலாம். மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதனை கீழ்கண்டவாறு விவரிகின்றார்:
“வட இந்தியாவில் பேரரசுகள் காலத்தில், வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து, சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலை தூர வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. தொலைதூர வர்த்தகம் வளர சமணப் பள்ளி களும் மடங்களும் பேருதவி புரிந்தன… பல்வேறு சமூகக் குழுக்களை ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கை கொண்ட பௌத்தமும் சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.”
சமூகத்தில் நிலவுடைமையோடு சேர்ந்து வணி கப் பொருளாதாரம் வளரத் துவங்கிய காலத்தில் பௌத்தம் வளரத் துவங்கியது. ஏற்கனவே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் ஆன்மிக தத்துவப் பிரிவுகள் மற்றும் வேதங்களின் பெயரால் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர். அவ்வாறு வாழ்ந்த நிலையில் வணிக வளர்ச்சித் தேவைகளின் விளை வாக உருவான பௌத்தம் அடக்கப்பட்ட மக்க ளின் குரலாக உருவெடுத்தது.
மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட தத்துவ வெளிப்பாடுகளை காணலாம். ஐரோப்பிய சமூ கத்தில் 15-ம் நூற்றாண்டுகளில் நகரங்களும் வணி கமும் தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் துவங்கின. நிலப்பிரபுத்துவ சமூக அமைப் பிலிருந்து முதலாளித்துவ சமுகமாக மாறும் கட்டமாக அது இருந்தது. அறிவியல் வளர்ச்சி யும் இந்த நிகழ்வுப்போக்கிற்கு உறுதுணையாக அமைந்தது.
இந்த சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக ஆளும் வர்க்கமாக உருவெடுத்த முதலாளித்துவ வர்க்கங்களின் தேவைகளை பிரதிபலிப்பதாக அன்றைய தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. திதராட் உள்ளிட்ட பிரெஞ்சு தத்துவவாதிகள், மார்க் சுக்கு முந்தைய காண்ட், ஹெகெல் போன்ற தத்துவவாதிகளை குறிப்பிடலாம். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் இவர்களில் பலர் பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.
எனவே தத்துவ வரலாறு படிப்பவர்கள் மார்க்சின் கீழ்க்கண்ட கூற்றினை ஆழமாக உணர வேண்டும்: “…பொருளாதார வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க் கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது… ”
சமூக வாழ்க்கை நிலையில் பொருளாதார உற்பத்தி முறை முக்கியமானது. அதுவே அறிவுலக வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறபோது, தத்துவமும் அதில் அடக்கம். தத்துவமும் உற்பத்தி முறை இயக்கத்திற்கு ஏற்ற தாக இயங்குகிறது. உற்பத்தியில் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் தத்துவம் பயன்படுகிறது.
ஆனால் இதனை இயந்திரகதியில் பார்ப் பதை மார்க்சியம் ஏற்கவில்லை. தத்துவ நிலை பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும் என்பதுடன் அதன் பின்னணியாக உள்ள உற்பத்தி முறை மற்றும் சமூக சூழலை கருத்தில் கொள்ள வேண்டுமென மார்க்சியம் வழிகாட்டுகிறது.
தத்துவத்தின் இலக்கு
பொருளியல் துறையில் நிகழும் மாற்றங்கள் – தத்துவத் துறை இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதனை மறந்திடக் கூடாது. பாட்டாளி வர்க் கத்திற்கு சுரண்டலிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி யாக முற்போக்கான தத்துவ வளர்ச்சி திகழ்கிறது.
சமூக உருவாக்கத்துடன் இணைத்து தத்துவ வரலாற்றை அறிதல் அவசியம். தொன்மைக் காலம் சமூக ஏற்றத் தாழ்வுகளின் துவக்க காலம். அதிலிருந்து தொடங்கி, இன்று வரை, உற்பத்தி உபரியைக் கையகப்படுத்தும் அதிகாரமும் வலிமையும் கொண்டோர் அறிவுத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். எனவே தத்துவமும் ஒடுக்குவோரின் குரல் ஒரு புறமும், ஒடுக்கப்பட் டோரின் குரல் மறுபுறமும் என இரு வகைப் போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது.
இந்நிலையில் தத்துவத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
“தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்; ஆனால் மையமான பிரச்னை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்.” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத் துடன் செயலாற்றுகிறது.
நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகிய, அந்நியப்பட்ட ஒரு துறையாக இருந்த தத்துவத்தை நிஜ உலகில் மனிதர்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைத்தவர் காரல் மார்க்ஸ். மனிதம் மேம்படு வதற்கு தத்துவம் கருவியாக பயன்பட, வழி காட்டும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. இதனால், மார்க்சியம் இதர தத்துவங்களிலிருந்து மேம்பட்டு நிற்கிறது.
சமகால சவால்கள்
சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத் தும் தேவையில் நின்று, கடந்த காலத் தத்துவங் களை கற்று உணர்ந்தால், எதிர்காலத் தத்துவப் புரிதல் புதிய திசையில் பயணிக்கும். சுரண்டப் படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். மானுடத்தின் பல பிரச்னைகளை பல பரிமாணங்களில் கற்றிட தத்துவம் துணை நிற்கிறது. தெளிவாக அணுகிடவும், மோதிக் கொள்ளும் பல கருத்துக்களை ஆராய்வதற்கான வழிமுறைகளையும் அது நமக்கு கற்றுத் தருவதால் தத்துவம் பயில்வது அவசியமானது.
இந்தியாவில், இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ளவும், தத்துவம் தேவை. இன்று, முக்கியமான கேள்வி இது: இன்றைய ஆர்.எஸ். எஸ் சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைதத்து வப் பார்வையில் எப்படி புரிந்து கொள்வது?
முதலாவதாக நம்பிக்கை என்பதனை இந்துத்துவம் முன்னிறுத்துகிறது. நம்பிக்கை என்று சொல்கிறபோது மனிதர்களுக்கு அப்பாற் பட்ட சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது என்கிற உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த சக்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகுத்தறிவிற்கு அதில் இடமில்லை; அறிவியலுக்கு முற்றாக இடமில்லை என்ற கூறுகளும் இந்த நம்பிக்கை பரிமாணத்தில் அடங்கியிருக்கிறது.
இரண்டாவதாக நம்பிக்கை என்பதில் இந்துத் துவம் இந்து மத நம்பிக்கையை முன்னிறுத்து கிறது. இந்து மத நம்பிக்கை என்றால் அனைத்து இந்து மதப் பிரிவுகளையும் இந்துத்துவம் பிரதி பலிக்கவில்லை. இந்து மதத்திலேயே மிகவும் பிற்போக்கான மதக்கூறுகளை அடையாளப் படுத்தி சுவீகரித்துக் கொண்டது இந்துத்துவம். ஆனால், தங்களது பார்வையே உண்மையான இந்து மதம் என சித்தரித்து சாதாரண மத நம்பிக்கையாளர்களை அவர்கள் திரட்டுகின்றனர். அந்த திரட்டலுக்கு இதர மதங்கள்? மீது வெறுப்பை வளர்ப்பது, அவர்களது முக்கிய தந்திரம். இது, அரசியல் அதிகாரத்திற்கான திரட்டல். இது, ஜனநாயக விரோதமானது.
இந்திய தத்துவத்தில் பரிணமித்த பல கருத்தாக் கங்களில் மறைக்கப்பட்ட பல கூறுகள் உண்டு. இதற்கு,தொடக்க கால சிந்தனைகளான உபநிட தங்களின் சில பிரிவுகளில்,உலகினை ஆராய பொருள்முதல்வாத சாயலில் பகுத்தறிவைப் பயன்படுத்திய விதம், பிந்தைய போக்குகளான துவைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற பல சிந்தனை களில் அடங்கியிருந்த மனிதநேயம், பன்முக சிந்தனை களை மதிக்கும் போக்கு, போன்றவைகளைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த கூறுகள் அனைத் தையும் நிராகரிக்கும் சித்தாந்தப் பார்வை கொண்டது இந்துத்துவம். ஆக, இந்திய தத்துவம், இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டிலும் மிக பிற்போக்கான போக்கினையே இந்துத்துவம் கொண்டுள்ளது.
எனவே இந்துத்துவத்தை தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அது பொருளின் இருப்பையே முற்றாக மறுக்கும் தன்மை கொண்டது என்பதை அறிய முடியும். இதனால், இந்துத்துவத்தை அகநிலை கருத்துமுதல்வாதம் எனும் பிரிவில் தான் சேர்க்க வேண்டும். அதாவது, பொருளை மறுத்து, பொருளாயத உலகு மாயையானது என்ற கருத்தை அது விதைக்கிறது. ஒரு சக்தி அல்லது கடவுள் என்ற பிம்பமே உண்மையானது என்ற நிலைபாட்டை அது கொண்டுள்ளது. உண்மையில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை அனைத்து சக்தியும் படைத்த தனிநபர் அல்லது தனிநபர் கூட்டமே மக்கள் மேலாண்மைக்கு உகந்தது என்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தான் நரேந்திர மோடியின் பிம்பம் சாதாரண மனிதர்களிலிருந்து மேம்பட்ட தெய் வீக சக்தி கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது.
எனவே தத்துவத் தளத்திலிருந்தும் இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை என்று அவர்கள் முன்னிறுத்துவதை பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த பொருள்முதல்வாத கருத்து களை கொண்டு கருத்துரீதியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தத்துவத்தில் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம். ஆனால் இந்திய தத்துவம் உருப்பெற்ற வரலாறு முழுவதும் வர்க்க சமுதாயம் வளர்ந்து வந்த வரலாற்றோடு இணைந்தது. இந்த நிலையில் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கப் போராட்ட வீரியத்தின் விளைவாக எழுந்த சிந்தனை கீற்றுக்களாக அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைமையை உயர்த்திப் பிடிப்பதில் எச்சரிக்கை தேவை. பல சந்தர்ப்பங்களில் இது இந்துத்துவத்திற்கு பயன் பட்டுவிடும் நிலை ஏற்படலாம். ஏனென்றால், பழைமையும், பிற்போக்குத்தனங்களும் இந்துத்து வாவின் செயல்பாட்டு தளங்களாக உள்ளது.
அறிவியலோடு தத்துவம்
உலக, பிரபஞ்ச இரகசியங்களை இறைக்கருத்தில் தேடும் போக்கு முடிவில்லாமல் தொடர்கிறது. இந்தியாவில் பொருளின் இருப்பையே மறுத்து, அனைத்தும் மாயை, பொருளே இல்லை அனைத் தும் பிரம்மம் என்று வாதிட்ட அத்வைதம் இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது.
இதற்கு காரணம்? முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தான். சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு வழிதெரியாமல் பாட்டாளி வர்க்கம் உள்ள நிலையில், இறை கருத்தே மூல முதலானது என்ற தத்துவப் போக்கு தொடரும்.
பொருள்தான் முதலானது, பொருளின் பிரதிபலிப்பே சிந்தனை என்ற அடிப்படையி லிருந்து உலக, பிரபஞ்ச, இயற்கை இயக்கங்களை மார்க்சியம் விளக்குகிறது. அறிவியலோடு இணைந்த இந்த மார்க்சியம் சுரண்டல் முறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற உத்வேகத்தை அளிக்கிறது.
அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும். எனவே, அறிவியல் பார்வையுடன் இணைந்து தத்துவப் பிரச்னைகள் ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.
மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும். அது ரத்தக்காட்டேரியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக வாழ்கிறது.
தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்.
– மூலதனம் தொகுதி 1, அத்தியாயம் 10 பிரிவு 1
உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாதாய வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.
– அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற நூலில் முதல் பதிப்புக்கு எழுதிய கருத்துரையிலிருந்து
(வர்க்கங்கள் பற்றிய தனது கண்டுபிடிப்பை விளக்கும் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும்போது)
நான் புதிதாக என்ன செய்தேன் என்றால் அது கீழ்க்கண்டவற்றை விளக்கியதுதான்: 1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது 2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாகத் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் 3) இந்தச் சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும் வர்க்க பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.
– யோசிஃப் வெடமையருக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 5, 1852)
இப்போதைக்கு நாம் சாதித்தாக வேண்டியது மிகத் தெளிவானது. அதாவது நிலவுகின்றவை அனைத்தையும் பற்றிய ஈவிரக்கமற்ற விமர்சனத்தை நாம் செய்ய வேண்டும். அதிகார சக்திகளுடன் மோதும்போது எவ்வாறு சிறிதும் அஞ்சுவதில்லையோ அதே போலத் தான் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் அஞ்சாத விமர்சனமாக இருக்கவேண்டும் எனும் பொருளில் அது ஈவிரக்கமற்றதாக இருக்கவேண்டும். எனவே நான் எந்தவொரு வறட்டுக் கோட்பாட்டுப் பதாகையையும் உயர்த்த விரும்பவில்லை மாறாக வறட்டுக் கோட்பாட்டாளர்கள் தங்கள் முன்மொழிவுகளை தங்களுக்குத் தாங்களே தெளிபடுத்திக்கொள்ள உதவ நாம் முயல வேண்டும்.
– கார்ல் மார்க்ஸ், அர்னால்ட் ருஜ்ஜுக்கு எழுதிய கடிதம் 1843
மூலதனத் திரட்சி உபரி மதிப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது; உபரி மதிப்பு முதலாளித்துவ உற்பத்தியை முன் தேவையாகக் கொண்டுள்ளது; முதலாளித்துவ உற்பத்திச் சரக்கு உற்பத்தியாளர்களின் கரங்களில் மூலதனமும்உழைப்புச் சக்தியின் கணிசமான திரள்களும் முன்கூட்டியே இருப்பதை முந்தேவையாகக் கொண்டுள்ளது. எனவே இயக்கம் முழுவதும் ஒரு நச்சுவட்டத்தில் சுழல்வதாகத் தோன்றுகிறது. முதலாளித்துவ திரட்சிக்கு முன்னர் நிகழ்கிற ஒரு ஆதித் திரட்சியை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக அல்லாமல் அதன் துவக்கப்புள்ளியாக உள்ள ஒரு திரட்சியாக அனுமானம் செய்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் இந்த நச்சு வட்டத்திலிருந்து விடுபட முடியும்…
ஆதித் திரட்சி என்று அழைக்கப்படுவதாவது, உற்பத்தியாளனை உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிணையறுக்கும் ஒரு வரலாற்றுச் செய்முறையேயன்றி வேறொன்றுமில்லை. அது ஆதிகாலத்தியதாகத் தோன்றுவது ஏனென்றால், மூலதனத்தினுடையவும் அதனோடு இணையான உற்பத்தி முறையினிடமும் வரலாற்று முற்காலகட்டமாக அது அமைகிறது.
– மூலதனம் நூலின் முதல் பாகம் பகுதி 8 …
வர்க்கப் பகைமையின் மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது அத்தியாவிசய நிபந்தனையாகும். எனவே, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையானது, ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கும் உட்கிடக்கையை அவசியமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே முயன்று பெற்ற உற்பத்தி சக்திகளும், தொடர்ந்துவருகின்ற சமுதாய உறவுகளும் பிணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலைமை ஏற்படுவது, ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியமானதாகும். உற்பத்திக் கருவிகள் அனைத்தைக் காட்டிலும் ஆகப்பெரிய உற்பத்தி சக்தியானது புரட்சிகர வர்க்கமே ஆகும். பழைய சமுதாயத்தின் மார்புக்கூட்டுக்கள் உருவாக முடிந்த உற்பத்தி சக்திகள் அனைத்தும் புரட்சிகரக் கூறுகளின் அமைப்பான ஒரு வர்க்கமாக அனுமானிக்கிறது.
– மெய்யறிவின் வறுமை, அத்தியாயம் இரண்டு, பிரிவு 4.
இதற்கு முந்தைய இயக்கங்கள் எல்லாம் சிறு எண்ணிக்கையிலானவரின் நலன்களுக்காக சிறு எண்ணிக்கையிலானவரால் நடத்தப்பட்ட இயக்கங்கள். பாட்டாளிவர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேட்சையான இயக்கம். தற்கால சமுதாயத்தின் மிக அடிமட்ட அடுக்கான பாட்டாளிவர்க்கம், அதிகாரப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் அடுக்குகளின் மேல்கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறியாமல் தன்னை எழுந்து நிற்கச் செய்யவோ, நிமிர்ந்து நிற்கச் செய்யவோ முடியாது.
– கம்யூனிஸ்ட் அறிக்கை, பக்கம் 219 (எஸ்.வி.ராஜதுறை மொழியாக்கம்)
கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சூழலில், மே மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளிவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல மக்கள் இயக்கங்களும் ஆண்டு முழுவதும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை பல வடிவங்களில் மேற்கொள்ள உள்ளனர்.
மார்க்சிஸ்ட் இதழிலும்,தொடர்ந்து அவரது வாழ்க்கை குறித்தும், சிந்தனைகள் குறித்தும், விசேட படைப்புக்களை வெளியிட எண்ணியுள்ளோம்.
மார்க்சிய லெனினியம் காட்டும் பாதையில்தான் மார்க்சிஸ்ட் இதழின் அனைத்து படைப்பாக்கங்களும் அமைய வேண்டுமென்ற உறுதிப்பாடு கொண்டது, மார்க்ஸிஸ்ட் இதழ்.
முதலாளித்துவ பொருளாதார முறை மட்டுமின்றி, அதற்கு பக்கபலமாக உள்ள கருத்தியல் அனைத்தையும் அறிவதற்கு மார்க்ஸ் எழுத்துக்களும், மார்க்சியம் உருவாக்கிய இயக்கவியல, வரலாற்றியல் பொருள் முதல் வாதமும் உதவுகிறது.
முதலாளித்துவ அமைப்பை அறிவதற்கு மட்டுமல்லாமல், அதனை தூக்கியெறிந்து சோசலிசம் படைக்கவும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டுவது, மார்க்சின் எழுத்துக்கள்.
முதலாளித்துவ அறிவுலகம் மார்க்சின் சிந்தனையை மறைக்கவும், திரிக்கவும், திசைதிருப்பவும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்கள கருத்துப் போராட்டக்களத்தில் தீவிரமாக செயலாற்றிட வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் இதழ் தனது பங்கினை ஆற்றிடும்.
வலதுசாரி போக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளி வர்க்க இயக்கத்தினை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கோடு, தோழர்கள் ஏ.கே.பத்பனாபன், ஹேமலதா ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில்,மார்க்சிஸ்ட் கட்சி,கட்சி அணிகளுக்கு அரசியல் தத்துவார்த்த கல்வியை அளிக்கும் வகையில் எடுத்த முயற்சியை தோழர் சிரிதிப் பட்டாச்சாரியா விளக்கியுள்ளார்.
அன்றைய சோசலிச சோவியத் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மை பற்றி சிந்தன் விளக்கியுள்ளார்.
மார்க்சிய இலக்கியம் எனும் சொல்லாட்சியில் இரு அம்சங்கள் உள்ளன: ஒன்று: வாழ்வு பற்றிய கண்ணோட்டம்: இரண்டு: இலக்கியம் பற்றிய கண்ணோட்டம்.
மனித வாழ்வின் சகல கூறுகளையும் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்பது தான். அது பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்பதாக அது உருவான காலத்திலேயே பேச ஆரம்பித்தார்கள். இதை அப்போதே சட்டென்று மறுத்துக் கூறினார் மார்க்சின் மனசாட்சியாகத் திகழ்ந்த ஏங்கெல்ஸ். ஜோசப் பிளாக்கிற்கு அவர் எழுதிய (21-9-1890) கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.
இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி என்பதற்கும் ஒரே காரணி என்பதற்கும் மலையளவு உயரத்திற்கும் கடலளவு அகலத்திற்கும் வேறுபாடு உண்டு. அதே கடிதத்தில் மனித வாழ்வைத் தீர்மானிக்கிற இதர காரணிகள் பற்றி – தனி மனிதர்கள் மற்றும் அவர்களது சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளிட்ட இதரவை பற்றி – பட்டியலிட்டுச் சொல்லி இறுதியாக அதிலே பொருளாதார இயக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றார் அந்த இரட்டை மாமேதைகளில் ஒருவர்.
வாழ்வு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தின் சாரம் இதுதான். உவமைகள் எல்லாம் குறையுடையவையே என்பார்கள். இந்தக் கண்ணோட்டத்தை விளக்கப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் உதாரணத்தை – அஸ்திவாரம், மேற்கட்டுக்கோப்பு எனும் விவரணத்தை – சிலர் இயந்திரகதியில் புரிந்து கொண்டார்கள். அதிகாரத்தின் மீது செல்வாக்கு செலுத்தாத மேற்கட்டுக்கோப்பாக – பொருளியல் வாழ்வு மீது இதர காரணிகளுக்கு பங்களிப்பே இல்லை என்பதாக –புரிந்து கொண்டார்கள். இதைத்தான் ஏங்கெல்ஸ் தனது காலத்திலேயே சரி செய்தார். பல காரணிகளுக்கிடையே பரபர செல்வாக்கு நடக்கிறது. முடிவில் அங்கே பொருளியல் காரணி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்ன?
ஒரு சிந்தனைத்துறை என்ற முறையில் ஒரு காலகட்டத்திய இலக்கியத்தில் அந்தக் காலகட்டத்திய ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே ஆளுகை செலுத்துகிறது. வாழ்வைப் பிரதிபலிப்பதே, அதைப் போலி செய்து மறுஉருவாக்கம் செய்வதே. அப்படிச் செய்யும் போது படைப்பாளி தனது கைச்சரக்கையும் – கற்பிதத்தையும் – சேர்ப்பதே இலக்கியம் என்பதால் வர்க்க சமுதாயம் எனும் வாழ்வின் அடிப்படை உண்மை அதிலும் தனது இயங்கு நிலையைத் தக்கவைத்துக் கொள்கிறது.
அதேநேரத்தில், மற்றொரு உண்மையும் உள்ளது. மனிதனின் கலை-இலக்கியப் படைப்பாற்றல் வளர்ந்ததற்கு உழைப்பின் மகத்தான பங்கு உண்டு என்பதை 1844-லேயே உணர்ந்து கூறினார் மார்க்ஸ். அவ்வமயம், “அழகின் விதிகளுக்கு” (Laws of Beauty) ஏற்பவே அந்தப் படைப்பு வேலை நடக்கிறது என்பதையும் சேர்த்தே கூறினார். “சமுதாய விதிகள்” (Laws of Society) எனும் பரந்த யதார்த்தத்தின் ஊடே இந்த அழகின் விதிகளையும் இயல்பாகக் கைவரப் பெற்று அல்லது முயற்சி செய்து, கற்று ஒரு படைப்பாளி தனது சிருஷ்டியை வார்த்தெடுக்கிறான். அப்போதுதான் இலக்கியமானது இதர அறிவுத் துறையிலிருந்து தனித்து வெளிப்படுகிறது. வெறும் பேச்சிலிருந்து – சைகையிலிருந்து கலையும், வெறும் எழுத்திலிருந்து – உரை நடையிலிருந்து இலக்கியமும் வேறுபடும் இடம் அதுதான். இதர அறிவுத்துறைகள் தராத கலை இன்பம் – இலக்கிய இன்பம் என்பதை அது தரவேண்டும். அதை வரவழைப்பதற்கான வித்தையின் தொகுப்பே அழகின் விதிகள், அதாவது அழகியல் எனப்படுவது.
மார்க்சிய இலக்கியமானது தனது உள்ளடக்கமாக உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது என்றால், தனது உருவமாக முழு மனிதகுலமும் காலப்போக்கில் உருவாக்கிய அழகியல் விதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் முயங்கி எழுந்த யதார்த்தவாதம் எனும் இலக்கியக் கோட்பாட்டை வரித்து அதே மனிதகுலத்திற்கு – குறிப்பாக உழைப்பாளி வர்க்கத்திற்கு – அது அருமையான கலை-இலக்கியப் படைப்புகளை அள்ளித் தருகிறது.
யதார்த்தவாதம் என்பது வாழ்வின் மெய்ம்மைகளை சார்பு இன்றி விண்டு காட்டுவதாகவும் இருக்கலாம், உழைப்பாளி வர்க்க சார்பு நிலை எடுத்து அவற்றை விமர்சனப்பூர்வமாகச் சித்தரிப்பதாகவும் இருக்கலாம். பின்னதை விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் என்கிறோம். இவற்றின் அடுத்த நிலையாக, வாழ்வின் அவலமான மெய்ம்மைகள் அவற்றின் உள் முரண்களால் மோதி உடைந்து இன்னும் சிறந்த சமுதாயம் நோக்கி நகர்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்வது அமைகிறது. அதையே சோசலிச யதார்த்தவாதம் என்கிறோம்.
மின்னாகாட்கி என்பாருக்கு அவரது நாவல் பற்றி எழுதியபோது இந்த அர்த்தத்திலேயே சோசலிச பிரச்சனை நாவல் எனும் சொல்லாடலை ஏங்கெல்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். தான் சித்தரிக்கிற சமூக முரண்பாடுகளின் எதிர்கால வரலாற்றுத் தீர்வை சொல்லுகிற படைப்பையே அவர் அப்படி அழைத்தார். அதை வெளிப்படையாகப் படைப்பாளி சொல்லாமல் – ஒரு தாம்பாளத்தில் வைத்து வாசகன் முன் நீட்டாமல் கதைச் சூழலிலிருந்தும் பாத்திரங்களின் செயல்பாடுகளிலிருந்தும் – வெளிப்பட வேண்டும் என்று அவர் அதற்கான அழகியல் விதியைக் அருமையாக வகுத்துக் கொடுத்தார்.
ரஷ்யாவில் புரட்சி வெற்றிபெற்று, கம்யூஸ்னிட் கட்சி அங்கே சோசலிச நிர்மாணத்தில் இறங்கிய போது, புதிய சமுதாயத்திற்கான எதிர்கால நம்பிக்கை துவக்கமாக வெளிப்பட்டபோது இத்தகைய யதார்த்தவாதத்தின் கூடுதல் தேவை முன்னுக்கு வந்தது. அந்த 1936 இல் சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டில் – மாக்சிம் கார்க்கி சோசலிச யதார்த்தவாதம் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்.
உலக வாழ்வின் மகத்தான மகிழ்ச்சிக்கான தனிமனித ஆற்றல்களின் தடையற்ற வளர்ச்சியே இதன் நோக்கமாகும் என்று அதற்கு இலக்கணம் தந்தார்.
ரஷ்ய எழுத்தாளர்களின் இரண்டாவது மாநாட்டில் (1965) பேசிய மகத்தான இலக்கிய வாதியாகிய ஷோலக்கோவ் புதியதோர் உலகைப் படைப்பதில் சிறப்பாக மனிதனுக்கு உதவி செய்கிற எந்தக் கலையும் சோசலிச யதார்த்தவாதக் கலையே என்று அதற்கு இன்னும் அகலமான அதிவாரம் போட்டார்.
ஆக, மார்க்சிய இலக்கியம் என்பது யதார்த்தவாதம் – விமர்சனப்பூர்வ யதார்த்தவாதம் – சோசலிச யதார்த்தவாதம் என்று அதன் சகல கூறுகளையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தகைய இலக்கிய ஆக்கமானது வெகுகாலமாகவே நடந்து வந்தது என்றாலும் 1975-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்தது அதற்கு ஓர் புதிய உத்வேகத்தைத் தந்தது. அந்த அமைப்பின் கொள்கை அறிக்கையானது மார்க்சிய இலக்கியம் பற்றிய கொள்கைச் சாரத்தை எல்லாம் உள்வாங்கியும், தற்போதைய இந்திய – தமிழக நிலைமைக்கு ஏற்ப அதைப் பிரயோகிக்கும் வகையிலும் அன்று இப்படிக் கூறியது: வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதைச் சித்தரிப்பதோடல்லாமல் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தங்களது படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளர் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்ய முடியும். இதையே இலக்கியத்தில் சோசலிச யதார்த்த அணுகுமுறை என்று கூறுகிறோம். எனினும், இன்றுள்ள நிலைமையில் முற்போக்கு எழுத்தாளர்களாகிய நம்மிடையே யதார்த்த சித்தரிப்பு என்ற அணுகுமுறையினைப் பொதுவாக நிலவ வேண்டிய வழிமுறையாகக் கொள்கிறோம்.
யதார்த்தவாதத்தைப் பொது நோக்காகவும், சோசலிச யதார்த்தவாதத்தை லட்சிய இலக்காகவும் கொண்டு படைப்புத் தொழிலில் இறங்கச் சொன்ன அமைப்பு தமுஎச என்பதால் அதில் இணைந்த மார்க்சிய இலக்கியவாதிகள் தமது சிருஷ்டி ஆக்கத்தில் தீவிரமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டார்கள். சிறுகதை, கவிதை, நாவல் எனும் இலக்கியத்தின் அந்த மூன்று துறைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.
1990 இல் தமுஎச படைப்பாளிகளின் முதல் சிறுகதைத் தொகுப்பாகிய புதிய காற்று வந்தது. பின்னர் விரியும் சிறகுகள், தொடரும் வெளிச்சம், ஆடிப்பெருக்கு என்று மொத்தம் நான்கு தொகுப்புகள் வந்தன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் கூட சில உண்மைகள் சட்டென்று புலப்பட்டன. கந்தர்வன், மேலாண்மை, டி.செல்வராஜ், காயபன், தமிழ்ச் செல்வன், வேல.ராமமூர்த்தி, முத்துநிலவன், மாதவராஜ், பிரேமா, பவா.செல்லதுரை, தேனி சீருடையான், ஷாஜஹான், காமுத்துரை, உதய சங்கர், அல்லி உதயன், ரோஜாகுமார், கிருஷி, கமலாலயன் போன்றோரைக் கொண்ட ஒரு பட்டாளம் விடாதோ அல்லது விட்டுவிட்டோ சிறுகதை உலகில் சஞ்சரித்து வந்தது.
சஞ்சாரம் என்றால் ஏதோ என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்கிற மாதிரியாக அல்ல. படைப்புத் தொழிலில் புதுப்புது சிகரங்களைத் தொட்டார்கள். விதவிதமான விஷயங்கள், வகைவகையான மனிதர்கள் இந்தக் குயவர்கள் கையில் கச்சாப் பொருளாகி, சிருஷ்டி எனும் வண்டிச் சக்கரத்தில் சுழன்று அழகழகான பூஜாடிகளும், பயனுள்ள பாண்டங்களும் வந்தன.
தொடக்க காலத்திலிருந்தே சிறுகதை எழுத்தாளர்களைப் போலக் கவிஞர்களும் தமுஎச-வில் அதிகம் இருந்தனர். தமிழில் புதுக்கவிதைக்கு வழிவிட்டு மரபுக் கவிதை ஒடுங்கிக் கொண்ட போது தமுஎசவிலும் அதுவே நடந்தது. எவரும் கையாளத்தக்க எளியதாய்க் கவிதை ஆகிப்போனது. அதற்காக, எவரும் வெற்றி பெறத்தக்க துறையாக அது மாறிவிடவில்லை. அப்போதும் சில கவிஞர்களே அல்லது பல கவிதைகளே இந்தக் கலையின் அரசியைக் கட்டியாண்டார்கள். கட்டியாண்டன. கந்தர்வன், வெண்மணி, ஜீவி, சு.வெங்கடேசன், நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம், வல்லம் தாஜுபால், சூரியதா, முருகேஷ் கம்பம் மாயவன், வெண்ணிலா, ஸ்ரீரசா, இரா.தெ.முத்து போன்றோர் புதுக்கவிதையில் தடம் பதித்தார்கள் என்றால் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி போன்றோர் அப்போதும் மரபுக்கவிதையை விட்டுவிடாது அதில் வெற்றிக்கொடி நாட்டினார்கள். குழந்தை இலக்கியமானது மரபுக் கவிதையின் ஒரு கிளையாகவே இருக்கமுடியும். குழந்தைகள் மனதில் கவிதை ஏறி உட்கார சந்தநயம் கூட்ட வேண்டியது அவசியம். அதை உணர்ந்து பாப்பா பாட்டு பாடினார்கள் நன்மாறன், எரியீட்டி, கு.பாரதிமோகன், புதுச்சேரி ஆ.கோவிந்தராஜுலு போன்றோர்.
நாவல்துறையில் துவக்கம் முதலே நமக்கு நல்ல வழிகாட்டிகள் உண்டு. கு.சின்னப்ப பாரதியின் தாகம், சங்கம், டி.செல்வராஜின் மலரும் சருகும், தேநீர், கே.முத்தையாவின் உலைக் களம் ஆகியவை தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. மேலாண்மையின் முற்றுகை, இனி பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை. தமுஎச நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற மணிவண்ணனின் ஓரடி முன்னால, இரண்டாம் பரிசு பெற்ற முகிலின் ஞானம் புதுசு மூன்றாம் பரிசு பெற்ற சீருடையானின் கடை ஆகிய மூன்றுமே மிகத் தகுதிவாய்ந்த படைப்புகளாக இருந்தன. சோலைசுந்தர பெருமாளின் செந்நெல் நம்மிடையே இருந்த வெகுநாளைய ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது. வெண்மணிக் கொடூரம் பற்றி தமுஎசவினர் யாரும் நாவல் படைக்கவில்லையே எனும் ஆதங்கத்தைப் போக்கியது.
இப்படிக் காரியமே கண்ணாக மார்க்சிய எழுத்தாளர்கள் சிருஷ்டி உலகில் பயணப்பட்டு வந்தபோது சில கொள்கைப் பிரச்சனைகள் கிளம்பின. தமிழ் இலக்கிய உலகில் எழுந்த அவற்றை தமுஎச எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துணிவோடு எதிர்கொண்டது. 1996 இல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதன் ஏழாவது மாநில மாநாடு தலித்தியம், பெண்ணியம் எனும் இரு இலக்கியச் சிந்தனைகளை உற்சாகத்தோடு உள்வாங்கியது. அவற்றை யதார்த்தவாதம் எனும் அடிப்படை இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிரானவையாகப் பார்க்காமல், அதன் இயல்பான உட்கூறுகளாக அவதானித்தது.
மனித சமுதாயம் அடிப்படையில் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளது என்றாலும், அதற்குள்ளேயே சாதி, பால் போன்ற உப பிரிவுகள் இருக்கின்றன. வாழ்க்கை இப்படிக் கிடக்கும் போது அதைப் பிரதிபலிக்கிற இலக்கியத்தில் மட்டும் உபபிரிவுகள் எப்படி இல்லாமல் போகும்? விரிந்தும், நுணுகியும் வாழ்வை அலசுகிற படைப்புலகின் தனித்தன்மையின் விளைவுகளே யதார்த்தவாதமும் அதன் உட்கூறுகளும் என்பதை மாநாடு சுட்டிக்காட்டியது.
அதே நேரத்தில், வர்க்கப் போராட்டத்தையும் சாதி – ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று முரணாகப் பார்த்து ஒடுக்கப்பட்ட மாந்தரைத் தனித்து ஒதுக்குகிற வேலையை மாநாடு ஏற்கவில்லை. அந்தப் போக்கு தலித்துகள் எழுதுவதே தலித் இலக்கியம் என்றும், பெண்ணின் மனோநிலையை ஆனால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது என்றும் ஒருவித இலக்கிய உத்தரவுகளாகவே தமிழகத்தில் உலாவந்தது. இதை தமுஎச மாநாடு ஏற்கவில்லை.
தலித்துகள் பற்றி தலித்துகளே, பெண்கள் பற்றி பெண்களே எழுதினால் சொந்த அனுபவம் பேசும் என்பது உண்மையே. ஆனால் படைப்புத் தொழில் எனும் வினோத வித்தைக்கு அது மட்டுமே போதுமானதல்ல, அதற்கு அழகியல் விதிகளைப் பிரயோகிக்கும் ஆற்றலும் வேண்டும். அந்த இரண்டும் சேர்ந்து படைக்கப்படுமேயானால் நிச்சயம் அது தனிச்சிறப்போடு திகழும், அத்தகைய படைப்புகளை தமுஎச உற்சாகத்தோடு வரவேற்கும்.
அதற்காக மற்றவர்கள் அந்த விஷயங்களுக்குள் நுழையவே கூடாது என்று தடை விதிப்பது நியாயமல்ல. ஒரு பகுதி மாந்தர்களின் வாழ்வைக் கருப்பொருளாகக் கொள்ள முயலுகிற படைப்பாளி கள ஆய்வின் மூலமும், கூர்ந்த கவனிப்பின் மூலமும், மனோரீதியாக அதே மாந்தர்களாகக் கூடுவிட்டுக் கூடு பாய்வதன் மூலமும் தமக்குச் சொந்த அனுபவம் இல்லாததை ஈடுகட்ட முடியும். அற்புதமான பெண் பாத்திரங்களைப் படைத்த உலகப் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களும், அருமையான கறுப்பினப் பாத்திரங்களைப் படைத்த அமெரிக்க – ஐரோப்பிய வெள்ளை இன எழுத்தாளர்களும், துடிப்பான தலித் பாத்திரங்களைப் படைத்த தலித் அல்லாத இந்திய எழுத்தாளர்களும் அந்தப்படியாகவே தங்களின் சிருஷ்டித் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை இப்படிப்பட்ட சட்டாம்பிள்ளைத் தனமான ஆணைகளைச் சொல்லிக் கெடுத்துவிட வேண்டாம் என்று மாநாடு கேட்டுக் கொண்டது.
அடுத்த மாநாடு 1999 இல் கோவையில் நடை பெற்றபோது பின்-நவீனத்துவம் எனும் கோட்பாடு தமிழகத்தில் தீவிரமாக அடிபட்டது. இது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தது தமுஎச. யதார்த்தவாதத்திற்கு மாற்றாகவே இந்தக் கோட்பாடு முன்வைக்கப்படுவதை அது புரிந்துகொண்டது. கலை கலைக்காகவே என்று பழைய பாணியில் பச்சையாகச் சொன்னால் எடுபடாது என்பதால் தங்களுடையது நவீனத்திலும் நவீனம் என்றார்கள். உள்ளே புகுந்து பார்த்தாலோ பழசிலும் அரதப் பழசாக இருந்தது; கலை – இலக்கியத்தின் சமூக நோக்கைக் கழித்துவிட்டு மற்ற கூறுகளை – குறிப்பாக வடிவப் பிரச்சனைகளை – மட்டும் உயர்த்திப் பிடிக்கிற வேலையாக இருந்தது. இதைக் கறாராக மறுதலித்த மாநாடு, அதே வேளையில் பின்-நவீனத்துவம் முன்மொழிகிற சில உத்திகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்றது. விஷயம் என்னவென்றால் கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் மார்க்சிய நோக்கிலிருந்து எழுந்த யதார்த்தவாதக் கோட்பாட்டை சிதைத்துவிடக் கூடாது என்பதுதான்.
இந்த மாநாட்டில்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு, பின்-நவீனத்துவம் குறித்து அருமையானதொரு கருத்துரை வழங்கினார். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள கற்பனை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் படைப்பாக்கம் உள்ளதே தவிர, அதைச் சிதைப்பதில் இல்லை, அதை வெறும் மாயாஜாலமாக மாற்றுவதில் இல்லை, அதை சர்ரியலிசமாக – குழப்பமான கனவு நிலையாக-ஆக்குவதில் இல்லை என்று நறுக் கென்று சொன்னார் அந்த மேதை.
பிறகு என்னாயிற்று? சமையலின் சிறப்பு அது பற்றிய கையேடு தயாரிப்பதில் இல்லை. அதன் ருசியில் உள்ளது. அதுபோல, இலக்கியத்தின் சிறப்பு அது பற்றிய இசங்களில் இல்லை, அதன் படைப்பாக்க வெற்றியில் உள்ளது. பின்- நவீனத்துவத்தின் பிரிவுகளாக சர்-ரியலிசம், டிரக்சுரலிசம், எசிடென்சியலிசம்- இத்யாதி இத்யாதிகள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று சில நாவல்களுக்கு முத்திரை குத்தி வெளியிடப்பட்டன. வேடிக்கை என்னவென்றால் ஒரு பின்-நவீனவாதி எழுதியதை இதர பின்-நவீனவாதிகள் ஏற்கவில்லை. மொத்தத்தில் எதையும் எவரும் ஏற்கவில்லை. கூடுதல் வாசக அனுபவம் உள்ள வாசகருக்குக் கூட அவை புரிபடவில்லை. இந்த இசங்களின் பொதுமை இருண்மைவாதம் என்பது மட்டுமே புரிபட்டது. முடிவில் அவை படுதோல்வி கண்டன.
தமிழ் இலக்கிய உலகம் தனது யதார்த்தவாதப் படைப்புப் பாரம்பரியத்தை நல்லவேளையாக விட்டுவிடாதிருந்ததால் அதிலேயே தொடர்ந்து நடைபோட்டு சில சாதனைகளைச் செய்தது. மார்க்சிய வட்டாரத்திற்கு உள்ளும் வெளியிலும் யதார்த்தவாதப் படைப்புகளே பரவலாகப் பேசப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் சரி 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சரி.
மார்க்சிய இலக்கியம் இந்தக் காலத்தில் சில புதிய உச்சங்களைத் தொட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட தோழர்கள் பலரும் இந்தக் காலத்திலும் படைப்பிலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்தார்கள். கு.சி.பா. புதிய நாவல்களைத் தந்தார் என்பது மட்டுமல்லாது, அவரது படைப்புகள் உலக மொழிகள் பலவற்றிலும் பெயர்க்கப்பட்டு நானாதிசைகளிலும் பேசப்பட்டது. டி.செல்வராஜும் தொடர்ந்து எழுதியது மட்டுமல்லாது அவரின் தோல் நாவல் சாகித்ய அகாதமி பரிசைப் பெற்று சிரசு உயர்த்தி நின்றது. அதுவும், அதற்கும் முன்னதாக மின்சாரப் பூ சிறுகதைத் தொகுப்புக்கு மேலாண்மைக்கு அந்தப் பரிசு கிடைத்திருந்ததும் யதார்த்தவாத இலக்கியத்திற்கு சூட்டப்பட்ட கிரீடங்களாகத் தகதகத்தன. யதார்த்தவாதத்தில் காலூன்றி படைப்புவானில் கர்ணங்கள் அடிக்க பின்-நவீனத்துவ உத்திகள் சிலவற்றைப் பயன்படுத்தலாம் என்றோம். அதற்கோர் உதாரணமாய் வந்தது காவல் கோட்டம் வரலாற்றுப் புதினம். அதற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. இளமைக்கும், நமது கோட்பாட்டிற்கும் ஒருங்கே கிடைத்த வெற்றி.
இந்தக் காலத்தின் மிகப்பெரிய சோகம் கந்தர்வனின் மறைவு. அது கவிதைக்கும் சிறுகதைக்கும் நேர்ந்த அகால விபத்து. சொல்லப் போனால் நாவலுக்கும் கூட அந்த கதியே. அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாவல் உலகில் அடியெடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார். முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக் காகிலும் அதை ஈடுகட்டும் வகையில் புதிய படைப்பாளிகள் வந்தார்கள். புதிய படைப்புகளும் வந்தன. ம.காமுத்துரை நாவலாசிரியராய் பரிணாமம் பெற்றது, சீருடையான் இத்துறையில் புதிய சாதனைகள் செய்தது என்பவை நமது படைப்புக் கண்ணி அறுபடவில்லை; மாறாக வலுப்பெற்றது என்பதற்கு உதாரணங்கள். வரலாற்று நாவல்கள், இதிகாச மறுவாசிப்புகள் என்று அருணன் படைப்புலகில் புகுந்து வந்தது. இந்தத் துறைகளிலும் மார்க்சியவாதிகளால் காலூன்ற முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்தில் செந்தில் நாதனும் நாவல்துறையில் இறங்கியிருக்கிறார். விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறும் ரசவாதம் தொடர்கிறது. நமது படைப்பாளிகள் மூவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது மட்டுமல்லாது இன்னும் சில எழுத்தாளர்களுக்கும் வேறு சில முக்கிய இலக்கியப் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் மார்க்சிய இலக்கியங்கள் அவற்றின் சொந்த வட்டாரத்தில் மட்டுமல்லாது வெளி வட்டாரத்திலும் அங்கீகரிக்கப்படுவதின் சத்தான ஆதாரங்கள்.
நம்மவர்களின் படைப்புகள் சில பாடப்புத்தகங்களாக அல்லது அவற்றின் அங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மார்க்சிய இலக்கியங்களின் பங்களிப்பைக் கழித்துவிட்டு இனி எவராலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது. அப்படி ஒருவர் எழுதினால் அவரது நாணயம் கேள்விக்குறியாகிவிடும்.
இப்படியெல்லாம் எழுதி வருவது திருப்தி மனோபாவத்திலிருந்து அல்ல. மார்க்சிய இலக்கியத்தின் நியாயமான பெருமைகளைப் பதிவு செய்யத்தான். அதே நேரத்தில், இவையெல்லாம் காலத்தின் தேவைக்குப் போதுமானவையல்ல என்பதும் உண்மையே. இருப்பதை முதலில் அங்கீகரித்துவிட்டு அடுத்த இலக்கைச் சுட்ட வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சாதியச் சிந்தனைகளும், பழமைவாதச் சிந்தனைகளும், முதலாளித்துவ கட்டமைப்பே இயல்பானது – சாதகமானது எனும் ஆளும் வர்க்கச் சிந்தனைகளும் மண்டி வருகின்றன. அறிவுஜீவிகள் மத்தியிலேயே இவைதான் கோலோச்சுகின்றன என்றால் வெகுமக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
1920-களில் இங்கே காந்தியம் – பெரியாரியம் – மார்க்சியம் என்பவை வேர்விடத் தொடங்கின, 1950-கள் வரை காந்தியம் தழைத்தோங்கி பிறகு பட்டுப்போக, பிறகு பெரியாரியம் பற்றிப் படர்ந்தது. 1980-களிலோ அதனுடைய சத்தும் வடிந்துபோனது. சோகம் என்னவென்றால் அந்த இடத்தை மார்க்சியம் இன்னும் கைப்பற்றவில்லை என்பதுதான். காந்தியம் – பெரியாரியத்தின் போதாமையை அல்லது தோல்வியை சாதிய – பழமைவாத – முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றி வருகின்றன. இந்த ஆபத்தைச் சமாளிக்க மார்க்சியம் புத்தெழுச்சியோடு புறப்பட வேண்டிய காலமிது.
காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ளி பெரியாரியம் முன்னுக்கு வந்ததற்கு அது பண்பாட்டுத் தளத்தை – குறிப்பாக கலை, இலக்கியப் பரப்பை – வசமாகப் பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாகும். இன்று அந்தத் துறையில் அனேகமாக நிலவும் அதன் வெறுமை அதனுடைய போதாமை அல்லது தோல்வியின் தெளிவான அடையாளமாகும். அப்படியெனில், விழுந்திருக்கிற வெற்றிடம் பழமைவாதிகள் கையில் போகாமல் மார்க்சியவாதிகளின் கையில் வரவேண்டுமென்றால் பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
இதை மார்க்சிய இலக்கியவாதிகள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சந்தேகமில்லை முன்பைக் காட்டிலும் த.மு.எ.ச.வில் அவர்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். கலைஞர்களை அங்கே அதிகம் சேர்த்து அதன் வெளிப்பாடாய் அதை த.மு.எ.க.ச.வாக மாற்றியிருக்கிறார்கள். காலத்திற் கேற்றவாறு அதன் கொள்கை அறிக்கையை நவீனப்படுத்தி அந்த வெளிச்சத்தில் வேக நடைபோடுகிறார்கள். எல்லாம் சரி, ஆனால் ஆறரைக் கோடித் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் வளரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பண்பாட்டின் சகல கூறுகளில் இல்லாவிட்டாலும் ஏற்கெனவே நல்ல பாரம்பரியத்தளம் உள்ள படைப்பிலக்கியத்திலும் கூட பெருவாரியான வாசகர்களை நாம் எட்டவில்லை.
கலை – இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் முழக்கம் காரியார்த்த வடிவம் எடுக்க அந்த மக்கள் திரளின் பலவித அடுக்குகள் மற்றும் பலவித ரசனைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். சகல அடுக்குகளுக்கும், சகல ரசனைகளுக்கும் கலை-இலக்கியம் படைப்பதில் தவறில்லைதான். ஆனால் உயர் அடுக்கு மற்றும் உயர் ரசனைக்கு மட்டுமே படைத்து, அவர்களது பாராட்டைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டால் அந்த மைய முழக்கம் தனது புரட்சிகர அர்த்தத்தை இழந்து போகும். உழைப்பாளி வர்க்கம் மற்றும் சாதாரண மத்தியதர வர்க்கத்தின் சராசரி வாசகர்களே – ரசிகர்களே ஆகப் பெரும்பாலோர். அவர்களையும், அவர்களது ரசனையையும் எட்டுவது, எட்டி அவர் களது கைப்பிடித்து மேலே உயர்த்துவது என்பதே அந்த முழக்கத்தின் மையக் கருத்தாகும். அந்த இலக்கை நோக்கி பயணப்படுவதில் இன்னும் சிரமப்படுகிறார்கள் மார்க்சிய இலக்கியவாதிகள். வேறு வார்த்தைகளில் சொன்னால் தரத்தையும் ஜனரஞ்சகத்தையும் கச்சிதமாகக் கலந்து கொடுப்பதில் இன்னும் பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும் தேவைப்படுகிறது.உதாரணமாக, உழைப்பாளி மக்களை எளிதில் அடையக்கூடிய, வாசிக்க சுகமான சந்தம் தழுவிய கவிதை, அதன் இயல்பான நீட்சியாகிய இசைப் பாடல் ஆகியவற்றை எழுதுவதில் சுணக்கம் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
படைப்பாளிகள் பக்கம் இப்படிச் சில ஊனங்கள் உண்டு, அவற்றைக் களைய அவர்கள் தன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றால், உழைப்பாளி வர்க்கமானது இவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், மக்களுக்கு ஏற்ற படைப்புகள் வரும்போது அவற்றை வரவேற்றுக் கொண்டாடி மகிழ வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பணியை மேற்கொள்ள வேண்டும். பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டியிருக்கும் காலமிது. குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல இலக்கியவாதியும் கூட கொண்டாடும் இடத்தில்தான்.
இப்படி படைப்பாளியும் உழைப்பாளியும் சரியான புள்ளியில் சந்தித்தால் அதுதான் மார்க்சிய இலக்கியத்திற்கு யோகம் பிறக்கும் வேளை. அது நடந்துதான் தீரும்.
ரவி நுழைய முடியாத இடத்திலும் கவி நுழைவான். அந்தக் கவியை ராஜாக்கள் நிராகரித்தாலும் குடிமக்கள் வரவேற்பார்கள்.
மழையாய் மாறிவிட்ட மேகம் மண்ணை அடைந்தே தீரும். மார்க்சியப் பயிர் செழிக்க தமிழ் இலக்கியம் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கும் நாள் வெகுதொலைவில் இருக்க முடியாது.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.
– பிரபாத் பட்நாயக்
செப். 11 – 17 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதார வல்லுநரான பிரபாத் பட்நாயக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் எழுப்பிய வினாக்களும், அதற்கு நான் அளித்த பதில்களும் ஒரு சுவையான விவாதமாக இருந்தது. இதனை மார்க்சிஸ்ட் இதழின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அந்த விவாதத்தை எழுத்தில் வடிக்க முயற்சித்தேன். அதன் விளைவாக வந்தது இக்கட்டுரை.
உலக வரலாற்றிலேயே மிகவும் நாகரிகமான சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பு முறைதான் என்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் கூறிக் கொள்கிறார்கள். கருப்பு மனிதர்களை நாகரிகப்படுத்த வேண்டிய பெரிய பணி வெள்ளை மனிதர்களின் தோள்களில் ஏற்றப்பட்ட பெரும் சுமையாக உள்ளது என்று கூறினான் பிரட்டன் நாட்டு நோபல் பரிசு பெற்ற கவிஞான ருட்யார்டு கிப்ளிங். அப்படி இருக்க முதலாளித்து பொருளா தாரமே அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தது எந்த அடிப்படையில்? என்பது எனது நண்பர் எழுப்பிய முதல் கேள்வி.
பொருளாதார வாழ்க்கை முறையில் சமூக உறவுகள் அடிப்படையானவை. அந்த சமூக உறவுகளை முதலாளித்துவ பொருளாதார முறை கண்டு கொள்வதில்லை. அவற்றை அது புறக் கணிக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த சூத்திரம் சரியானதா அல்லது வேறொரு விதிமுறை சரியானதா? என்பதைவிட இது முதலாளித்துவத்துக்கு பயன் அளிப்பதாக இருக்கிறதா? அல்லது தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதா? அரசியல் ரீதியாக அபாயகரமானதாக இருக்கிறதா? அல்லது வசதியானதாக இருக்கிறதா? நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கிறதா? இல்லை யா? என்பதையே முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கவனத்தில் கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பாதை முறையற்றதா கவும் நெறியற்றதாகவும் இருந்தாலும் கூட அதைப்பற்றிஅது கவலைப் படுவதில்லை எனவே தான் அதனை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தார்.
சமூக உறவுகள் என்றால் என்ன? – இது நண்பரின் கேள்வி.
பொருள் உற்பத்தியில் ஈடுபடும் போது மக்கள் தங்களுக்குள்ளே ஒருவொருக்கொருவர் சில திட்டவட்டமான உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனைச் சற்று புரியும் படி உதாரணத்துடன் விளக்குங்கள்.
ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதே உயிர் வாழ முக்கியமான வழியாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறு சிறு குழுக்களாக வேட்டைக்கு சென்று இருப்பர். கிடைத்ததை தங்களுக்குள் பகிர்ந்திருப்பர். பின்னர் விவசாயம், தொழில் என்று வந்தவுடன் சமூகத்தில் வேலை பிரிவினை ஏற்பட்டு இவர்களுக் கிடையே பரிவத்தன உறவு உருவாகிறது. இதை உற்பத்தி உறவுகளின் என்கிறோம்.
இரண்டு விதத் தன்மை என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறாரே – அது இது தொடர்பானது தானே?
ஆம் – அதனைப்பற்றி அவர் தனது கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே விளக்கியுள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் உள்ள பொருளாதார வகைகளின் இரட்டைத் தன்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு
பொருள் என்ற வகையில் பயன் மதிப்பு;
சரக்கு என்ற வகையில் பரிவர்த்தனை மதிப்பு;
என்ற இரட்டைத் தன்மை கொண்டதைத்தான் சரக்கு என்கிறோம்.
உழைப்பு என்பது
ஒன்று – உழைப்பு சக்தி என்ற பொதுமையானது –
மற்றொன்று – ஒரு பொருளில் அடங்கியிருக்கும் ஸ்தூலமான
உழைப்பு –
உற்பத்தி சாதனம் என்பது
உற்பத்திக் கருவிகளும், உழைப்பும் சேர்ந்தது.
ஆக அனைத்துப் பொருளாதாரக் கூறுகளுக்கும் இரட்டைத் தன்மை உண்டு. ஒன்று பொருள்களைப் பற்றிய புலனறிவு. மற்றது அவற்றின் அடிப்படையாக அமைந்த சமூக உறவு.
காணக் கூடிய அல்லது புலன்களால் உணரக் கூடிய பொருட் களின் தன்மையை மட்டும் தனியாகப் பார்த்து விட்டு அவற்றின் பின்னணியில் உள்ள சமூக உறவுகளை முதலாளித்துவ அமைப்பு முறை புறக்கணிக்கிறது. எனவே தான் இதனை அசிங்கமான – மட்டரகமான – அநாகரிகப் பொருளாதாரம் என்று கார்ல் மார்க்ஸ் வருணித்தார்.
உற்பத்தி சாதனங்கள் என்பது பற்றிய விளக்கம், நிலம், கனிமப் பொருட்கள், காடுகள், நீர்நிலைகள், கச்சாப் பொருட்கள், தொழிற்சாலைகள், உழைப்பதற்கான கருவிகள், உபகரணங்கள் போன்றவை உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பு ஆகும்.
அநாகரிகப் பொருளாதாரத்தால் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டுள்ளாரே? ஆம்! பொருட்களை அவற்றின் பிரத்தியேகத் தன்மையின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது – சமூக உறவுகளை புறக் கணிப்பது தான் முதலாளித்துவ அநாகரிகப் பொருளாதாரத்தின் தன்மை என்று குறிப்பிட்டார் மார்க்ஸ்.
உலகமயமாக்கல் தான் முதலாளித்துவத்தின் இன்றைய வடிவம் என்று மார்க்சிஸ்ட்டுகள் கணித்துள்ளனர். அது இன்றைய தினம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்படும் திட்டங்கள் விஞ்ஞான ரீதியாக சரியானவையா?என்பதைப் பற்றி நமது ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. சர்வதேச நிதி மூலதனத் துக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கு அது பயனளிக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ள உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர்கள் முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றனர். சமூக உறவுகளுக்கு அவற்றால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிக் கவலைப்பட்டால் உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், அவற்றை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். சர்வதேச அளவில் மூலதனம் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உருவாக்கக் கூடிய தடைகளின் குரல் வளையை நெறித்துக் கொல்வதற்கு அவர்கள் துடிக்கின்றனர். அநாகரிகப் பொருளாதாரம் இந்தியாவைத் தாக்கி வருகிறது என்பதற்கு மூன்று உதாரணங்களை பிரபாத் பட்நாயக் கவனப்படுத்தியுள்ளார்.
முதல் உதாரணம்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக ரீதியாக மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை இது. முதலாளித்துவ ஊடகங்கள், அறிவுஜீவிகள், திட்டக்கமிஷன் போன்ற சிந்தனையாளர்கள் குழுக்கள் போன்றவை இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றன? விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று இதனைக் குறிப்பிடும் இவர்கள் இதனை சரி செய்வதற்குக் கூறும் ஆலோசனைகள் என்ன?
தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை. போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் தான் விவசாயத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்துறையில் இந்திய நாட்டு தொழில்நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங் களையும் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது தான் விவசாயத் துறை நெருக்கடிக்கான தீர்வாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலைகளின் பின்னணியாக அமைந்த சமூக உறவுகளை மூடி மறைக்கின்றன. சர்வதேச மூலதனத்தின் தாக்குதலால் விவசாயிகளின் வேளாண்மையும், சிறு விவசாய உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. எனவே, மூலதனத்தின் தாக்கு தலிலிருந்து அவைகளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக மூலதனத்தின் வருகைக்கு தடை ஏற்பட்டதால் தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறி, உள்ளூர் முதலாளி களுக்கும், அன்னிய முதலாளிகளுக்கும் விவசாயத் துறையை திறந்து விட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.
உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாய விளை பொருட்களின் இறக்குமதிக்கான தடை கள் விலக்கப்பட்டன. சுங்கவரிகள் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விவசாய விளைபொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அளித்து வருகின்றன. அந்த நாடுகளின் விவசாய விளை பொருட்களை அடக்க விலையை விடக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் இந்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலை அளிப்பதையோ அல்லது அரசே கொள்முதல் செய்வதையோ நிறுத்தி விட்டது அல்லது குறைத்து விட்டது. கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகள் நட்டமடைகின்றனர். அவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தரப்படாததால் அநியாய வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக் காரர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச்செலுத்த இயலாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உதவி செய்வதற்கு உலகமயமாக்கல் கொள்கைகள் தடை விதிக்கின்றன. இச்சூழலில் நோய்க்கும் காரணமான உலகமயக் கொள்கையையே மேலும் தீவிரமாக அமல் படுத்த வேண்டுமென்று முதலாளித்துவ அறிவு ஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய முதலாளித்துவ பாதையை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ வருணித்ததை தவறு என்று கூற முடியுமா?
இரண்டாவது உதாரணம்
மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளி 7 முதல் 8 சதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாம். பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் அரசாங்கத்தைப் பாராட்டி மகிழ்கின்றன. 11 வது திட்ட அணுகுமுறையில் 8.5 சதத்துக்கு இதனை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது அவ்வாறு உயர்த்தப்பட்டால் வறுமை தானாக ஒழிந்துவிடுமாம். வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால், வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்! அதற்குச் செய்ய வேண்டியது என்ன? அன்னிய மூலதனம் உள்ளிட்ட மூலதன வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அதற்கு உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.
அன்னிய மூலதன வருகையால் இந்திய நாட்டின் சமூக உறவு நிலைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பதில்லை. மூலதனத்தின் அமைப்பியல் சார்ந்த சேர்மானத் தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், வேலையற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை, உபரி மதிப்பின் அளவு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, வேலை நாள், நேரம், வேலையின் கடுமை போன்ற வற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பரிசீலிக்கப் படுவதில்லை. சிறு உற்பத்தியாளர்களை விழுங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய புராதன மூலதன சேர்க்கை, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தால் போதும். வறுமை ஒழிந்து விடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதா? என்பதே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்கட்டும்.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் – என்பது போல ரொட்டியின் அளவு பெரிதாக மாற மாற அனைவருக்கும் நல்லது தானே என்ற முறையில் வாதிடப்படுகிறது. ஆனால், ரொட்டியை பகிர்ந்து கொள்ளும் முறையை சமூக உறவுகள் தானே தீர்மானிக் கின்றன. சட்டியில் இருந்தாலும் தானாக அகப்பையில் வந்து விடுமா?
ஒரு முனையில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் போது மறுமுனையில் துன்பதுயரங்கள், கடும் உழைப்பினால் ஏற்படும் வலி, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனோ ரீதியாக கீழ் நிலைப்படுத்துதல் போன்றவைதான் வளரும் என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கத்துக்கு இவைகள் தான் பரிசாகக் கிடைக்கும் என்று மார்க்ஸ் குறிப்பிட் டுள்ளார். இன்றைய தினம் செயல்படுத்தப்படும் அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையினால் சமூக உறவுகளை மீறி வறுமையை ஒழிப்பது சாத்தியமல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கலாம். ஆனால், அதனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு வேண்டிய தேவைகளைத் தானாக பூர்த்தி செய்யப்படாது என்பதே உண்மை.
மூன்றாவது உதாரணம்
நெகிழ்வான தொழிலாளர் சந்தை பற்றி இன்றைய தினம் அதிகமாகப் பேசப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அழகான சொற்றொடர் தான் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பது, விளக்கு மாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் என்பார்களே அது போன்றது தான் இது. மூலதனத்திற்கு ஆதரவாக சமூக உறவுகளை மாற்றியமைப்பதற்கான நேரடி முயற்சி இது. இதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றனர்? நெகிழ்வான தொழிலாளர் சந்தை உருவாக்கப்பட்டால் அன்னிய முதலீட்டை ஈர்க்கக் கூடிய சுற்றுச் சூழல் உருவாகுமாம்! அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிந்து விடுமாம்! ஒர முதலாளித்துவ நாட்டில் மூலதனத்தின் தாக்குதலி லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியவை அவர்களுக்கு சட்ட ரீதியாக அளிக்கப்படும் உரிமைகளே. அந்த உரிமைகளைக் குறைத்து விட்டால், மூலதனம் தடையின்றி நுழையுமாம். வறுமை ஒழிந்து விடுமாம். தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டால் சர்வதேச மூலதனம் கொடுக்கக் கூடிய தாக்குதல்களை அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியுமாம்! மலை உச்சியிலிருந்து கீழே குதித்தால் நூறுஆண்டுகள் வாழ முடியும் என்று சொல்வது போல இருக்கிறது இவர்களது ஆலோசனைகள். முதலாளித்துவ சமூக அமைப்பில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இந்த அநாகரிகப் பொருளாதார முறை என்பது மூலதனத்தின் கையில் உள்ள ஒரு கருவி. இது இந்தமுறையிலான ஆலோசனைகளைத் தான் வழங்கும். எனவே, இதை நாம் பொருட்படுத்தக் கூடாது.
ஆனால், இன்றைய சூழலில் கவலை அளிக்கக் கூடிய ஒர அம்சம் உருவாகியுள்ளது. அநாகரிகப் பொருளாதாரத்தின் இன்றைய தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பது உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற ஏபாதிபத்திய நிதி அமைப்புகள். அவை இந்த முயற்சிக்காக ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. அந்த அமைப்புகள் அது தொடுத்துள்ள பிரச்சாரத்துக்கு இடதுசாரி களிடம் அனுதாபம் காட்டக்கூடிய அறிவு ஜீவிகளும், முற்போக் கான அறிவாளிகளும் கூட பலியாகி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். வளர்ச்சி என்ற ஒரு சொல்லை பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களைக் காலில் போட்டு மிதிக்கும் உரிமையை அளித்து விட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து விடுமாம். உரிமை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் நிலைமை முன்னேற்றமடையுமாம். இடதுசாரி சாய்மானம் உள்வர்கள் முதல் நரேந்திர மோடி போன்ற வலதுசாரிகள் அனைவரும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூக்குரலிடுகின்றனர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றுமுத்திரை குத்தி விடுகின்றனர்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் தனது மகத்தான படைப்பாகிய மூலதனம் நூலில் விளக்கியுள்ள அநாகரிகப் பொருளாதாரம் என்ற கோட்பாடு இன்றும் அமல்படுத்தப் படுகிறது. எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்று வருகிறது. இந்த அநாகரிகப் பொருளாதாரத்தின் அருவருப் பூட்டும் தன்மையை, அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டியது கார்ல் மார்க்ஸ்க்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். இப்படிப்பட்ட அநாகரிகப் பொருளாதாரத்தை ஆதரித்து குரல் கொடுப்பவர் நாம் ஆதரிக்கக் கூடிய பிரதமர் என்றாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.