காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

 

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கார்ல் மார்க்ஸ் பிறந்தது 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி. 2017 ஆம்ஆண்டு மே 5 ஆம் தேதி 200 ஆவது பிறந்த நாள். எனவே மார்க்ஸின் இருநூறாம் பிறந்த நாள் மற்றும் 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் இந்த ஆண்டு மே 5 இல் துவங்கி அடுத்த ஆண்டு மே 5 வரை நிகழும்.

நடப்பு ஆண்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மார்க்சின் மகத்தான படைப்பான மூலதனம் நூல் முதன் முதல் பிரசுரிக்கப்பட்டது 1867 இல். இப்பொழுது மூலதனம் நூல் வெளியிட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

நவீன உலகை ஜனநாயகப்படுத்தியதில் மார்க்சுக்கும் அவரது தத்துவத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ற ஸ்தூலமான ஆய்வுகளையும் யுக்திகளையும் கண்டறிந்து மார்க்சீய தத்துவத்தையும், நடைமுறையையும் இணைத்து செழுமைப்படுத்திய லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோ சி மின், காஸ்ட்ரோ போன்ற ஆளுமைகளுக்கும் பெரும்பங்கு உண்டு.

நவீன சமூக அறிவியலின் சிற்பி

அறுபத்தி ஐந்து ஆண்டுகள் தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பிறந்தது மே 5, 1818. இறந்தது மார்ச் 14, 1883. அவர் பிறந்த பொழுது இங்கிலாந்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு வேகமாக சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டத்து நாடுகள் சற்று பின்தங்கியிருந்தன. இருப்பினும் அங்கும் முதலாளித்துவம் விரைவாகப் பரவும் என்பதை தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்தார் மார்க்ஸ். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் உலகமயத்தைபற்றி 1847 இலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் பேசினார்.

அப்பொழுது அவருக்கு முப்பது வயது கூட நிறையவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் ஆழமான ஆய்வுகளை அயராமல் மேற்கொண்டு, 1867 இல் மூலதனம் என்ற உலகையே புரட்டிப் போட்ட மாபெரும் படைப்பை மார்க்ஸ் உருவாக்கி பிரசுரித்தார். இதில் பெரும்பகுதி லண்டனில் இருந்த பிரதான நூலகமான பிரிட்டிஷ் மியூசியத்தில் தனது நேரத்தை மார்க்ஸ் செலவழித்தார். ஆனாலும் புத்தகப்புழுவாகவோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமூகம் பற்றிப் பேசும் ‘அறிவுஜீவி’யாகவோ மார்க்ஸ் ஆகவில்லை. மாறாக, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பல சமயங்களில் களத்தில் நின்றார். 1844 -1850 இத்தகைய பல மக்கள் எழுச்சிகளில் பங்கேற்று பல ஐரோப்பிய அரசுகளால் பல முறை நாடு கடத்தப்பட்டார். மூலதனம் எழுதும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் கூட தொழிலாளி வர்க்கத்தின் முதல் அகிலத்தை உருவாக்குவதில், 1864இல் அதன் முதல் மாநாட்டை லண்டன் நகரில் நடத்துவதில், அதற்கான முக்கிய ஆவணங்களை தயாரிப்பதில் மார்க்ஸ் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். மாநாட்டின் துவக்க உரையை மார்க்ஸ் தான் எழுதினார்.

மார்க்ஸ் மறைந்து 134 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் மார்க்ஸ் இன்றும் உலகில் மிகக் கணிசமான செல்வாக்கு பெற்ற சிந்தனையாளராக உள்ளார். முதலாளித்துவ சமூக-பொருளாதார அமைப்பு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்களும் ஆய்வுகளும் இன்றும் முக்கிய விவாதங்களுக்கு அடிநாதமாக திகழ்கின்றன. பொருளியல், வரலாற்றியல், தத்துவம், அரசியல் என்று அனைத்து முக்கிய சமூக அறிவியல் சார்ந்த துறைகளிலும் மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலமும் படைப்புகள் மூலமும் மிக முக்கிய சிந்தனையாளராக இன்றுவரை திகழ்கிறார்.

மார்க்ஸ், தனது பேராசிரியராக இருந்த, அன்றைய ஐரோப்பிய அறிவு உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெர்மானிய தத்துவ பேரறிஞர் ஹெகெல் முன்வைத்த கருத்துமுதல்வாத தன்மையிலான இயக்கவியல் அணுகுமுறையை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் கருத்துமுதல்வாத தன்மையை நிராகரித்தார். பொருள்முதல்வாதத்தின் உண்மையை, அவசியத்தை நிலைநாட்டினார். அதே சமயம் ஹெகெல் முன்வைத்த இயக்கவியல் அணுகுமுறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியல் அணுகுமுறையை உருவாக்கினார். மெய்யியலில் மார்க்சின் மிக முக்கிய சாதனை என்று இதைக் கூறலாம். மார்க்ஸ் உருவாக்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற மெய்யியல் அணுகுமுறை மிகச்சரியானது என்று இன்றுவரை நிகழ்ந்துவரும் நவீன அறிவியல் வளர்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை பயன்படுத்தி மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்து, மானுட உயிரினத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய அறிவியல் பூர்வ அணுகுமுறையான வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை நிலைநாட்டினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தன்மையையும் செயல்பாட்டையும் நீண்ட, ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் இயக்க விதிகளை உலகிற்கு எடுத்துரைத்தார். முதலாளித்துவம் மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கு ஆற்றும் என்பதையும், அதே சமயம் தனது உள்முரண்பாடுகள் காரணமாக முதலாளித்துவம் மானுட சமூகத்தின் தொடர் வளர்ச்சிக்கு எதிரியாக அமையும் என்பதையும் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே முன்வைத்தார். முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்து மானுடத்தை பொதுவுடைமை சமூகத்த்தை நோக்கிக் கொண்டு செல்லும் சக்தியாக நவீன தொழிலாளிவர்க்கம் ஆகப்பெரிய வரலாற்றுப்பணி ஆற்றும் என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் தனது மூலதனம் நூலிலும் அறிவுபூர்வமாகவும் கவித்துவமாகவும் மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

மார்க்ஸ்ஸின் மனித நேயம்

தனது பதின்பருவத்திலேயே – 17 வயதிலேயே – மானுடத்தின் மீதான தனது அக்கறையை, மானுடத்தை நேசிப்பவர் என்ற தனது தன்மையை, ஒரு இளைஞன் தனது தொழிலை தேர்வு செய்வது பற்றிய சிந்தனைகள்’ (Reflections of a young man on the choice of a Profession) என்ற அற்புதமான கட்டுரையில் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அக்கட்டுரையின் இறுதியில் மறக்க முடியாத வரிகளில் அவர் கூறுகிறார்:

மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.”

இவ்வரிகள் எழுதப்பட்டது 1835 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம்தேதிவாக்கில். அப்பொழுது மார்க்சின் வயது பதினேழு முடிந்து பதினெட்டு துவங்கிய சமயம்.

பின்னர், கூர்மையான அறிவியல் அணுகுமுறையில் உலகை ஆய்ந்து அவர் எழுதிய மூலதனம் நூலிலும் இந்த மனித நேயம் பிசகின்றித் தொடர்கிறது. தனது இளம் வயதிலேயே இவ்வாறு மனித நேயத்தை வெளிப்படுத்திய மார்க்ஸ் இதையொத்த கருத்தை 1867 இல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு மூலதனம் நூலை எழுதி முடித்து பிரசுரித்த தருவாயில் கூறுகிறார். சிக்ப்ரிட் மேயர் என்ற நண்பருக்கு 1867 ஏப்ரல் 30ஆம்தேதி மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் அவர் கூறுவதைப் பாருங்கள்:

நான் ஏன் உங்களுக்கு முன்பே கடிதம் எழுதவில்லை? ஏனெனில் ஒவ்வொரு தருணத்திலும் நான் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். எனவே என்னால் வேலை செய்ய முடிந்த ஒவ்வொரு நொடியையும் எனது (மூலதனம்) நூலை முடிப்பதற்கு பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது குடும்பம், எனது உடல்நலம், எனது மகிழ்ச்சி அனைத்தையும் மூலதனம் நூலை முடிக்க நான் அர்ப்பணித்தேன். இந்த விளக்கம் தங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.நடைமுறை’ சார் மனிதர்கள், அவர்களின் ‘மேன்மையான அறிவு’ இரண்டையும் கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. நிச்சயமாக, ஒருவர் எருது போல் இருக்க விரும்பினால், அவர் மானுடத்தின் கஷ்டங்களை புறக்கணித்துவிட்டு தனது நலனை மட்டுமே கவனித்துக்கொள்ளலாம். ஆனால், (எனதுபார்வையில்) மூலதனம் நூலை கைப்பிரதி வடிவத்திலாவது முடிக்காமல் வெளியேறி இருந்தால் அதை நான் (செய்யவேண்டிய) நடைமுறைக்கு விரோதமானது என்றே கருதியிருப்பேன்.

மார்க்ஸ் ஏன் இன்றும் பேசப்படுகிறார்?

அறிவுத்தளத்தில், பல்கலைக்கழகங்களில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் பல வழிகளில் மார்க்ஸின் சமூக அறிவியல் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை ஏளனம் செய்யவும் புறக்கணிக்கவும் முயன்று வந்துள்ளனர். அந்த “திருப்பணி” இன்றும் தொடர்கிறது. பல்கலை பொருளாதாரப் பாடத்திட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மார்க்ஸ் இடம் பெறுவதே இல்லை. அப்படி இடம் பெற்றால், பொருளாதார சிந்தனை வரலாறு என்ற பாடத்திட்டத்தில் ஒரு சிறிய குறிப்பிடத்தக்கவர் அல்லாத அறிஞராக சொல்லப்படுகிறார். இந்த நிலை 1991க்கு முன் நிலவியது என்றால், அதன் பின், அப்பொழுது சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் இறுமாப்பை மேலும் கூட்டியது. வரலாறு முடிந்துவிட்டது; சோசலிசத்தின் கதை முடிந்துவிட்டது; மானுட வரலாற்று வளர்ச்சியின் உச்ச கட்டம், இறுதிகட்டம் முதலாளித்துவம் தான் என்று அவர்கள் கொக்கரித்தனர். ஆனால் 2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது! போப்பாண்டவரில் துவங்கி நிதிமூலதன உலகின் உச்சத்தில் உலாவும் பெருந்தகைகளையும் மார்க்சை கவனிக்கவைத்துள்ளது. “முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் நிகழும் மூலதனத் திரட்டலின் பொதுவிதி செல்வங்கள் ஒருபுறம் குவிவதும், பெரும் துயரங்கள் மறுபுறம் குவிவதும்தான்” என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் முன்வைத்த கருத்தை மறுக்க இயலாமல் பிக்கெட்டி உள்ளிட்ட அறிவுஜீவிகள் அதிகரித்துவரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு பற்றி பேசிவருகின்றனர். உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வளர்ந்தநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பாகிய OECD யும் இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்காவிட்டால் பெரும் கலகம் வரும் என்று அறிக்கை விடும் காலம் இது. மார்க்ஸ்சும் மூலதனம் நூலும் சோசலிச தத்துவமும் இன்று முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் பூதமாக உருவாக்கி வருகின்றன! இச்சூழலில் மார்க்ஸின் முக்கிய சாதனைகளை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முதலாவதாக, மானுட சிந்தனை வளர்ச்சியில் தனது அடிப்படை பங்களிப்புகள் மூலம் புதிய தடத்தை மார்க்ஸ் பதித்தார். மனிதகுல வரலாற்று வளர்ச்சி மனித சமூகங்கள் தங்களை உற்பத்தி, மறு உற்பத்தி செய்த வழிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ளப்படலாம் என்பதை உலகுக்கு அவர் காட்டினார். இதன்மூலம் வரலாறு என்பது அரண்மனை சதிகள், ராஜாக்கள், அவர்களின் வம்சங்கள், அவர்களது வீர சாகசங்கள் என்ற புரிதலுக்கு சாவுமணி அடித்து வரலாறு ஒரு இயல் என்று தெளிவுபடுத்தினார். மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ் மனிதர்களையும் அவர்களது உணர்வுபூர்வமான, நோக்கம் சார்ந்த உழைப்பையும் மையப்பொருளாக வைத்தார். மானுட உயிரினத்தின் பிரத்தியேகத்தன்மை தனது சிந்தனைபூர்வமான உற்பத்திசார் நடவடிக்கைகளால் இயற்கையை மாற்றி தனது தேவைகளை உற்பத்தி செய்துகொண்டதுதான் என்று அவர் நிரூபித்தார். இவ்வாறு செயல்பட்டு, மனிதர்கள் புதிய அறிவை தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருந்தனர். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தனர். இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் மேலும் அறிந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி சமூகத்தின் உற்பத்தி சக்தியை வளர்த்தனர். இத்தகைய ஓய்வற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எண்பதுதான் மானுட வரலாற்று வளர்ச்சியின் நிரந்தர அம்சம்.

மானுட வரலாற்று வளர்ச்சி தொடர்பாக மார்க்ஸ் வெளிக்கொணர்ந்த இரண்டாவது முக்கிய விஷயம் இதுதான்: உற்பத்தி எனும் நடவடிக்கையில் மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. மனிதர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பதும் அவசியமாகிறது. சமூகத்தில் உற்பத்தி தொடர்பான ஏற்பாடுகள், பல்வேறு மக்கட்பகுதியினர் அந்த ஏற்பாட்டில் ஆற்றும் பங்கு போன்றவற்றை மார்க்ஸ் உற்பத்தி உறவுகள் என்று குறிக்கிறார். மிக அதிக அளவு, உலகின் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி செயல்படும் முதலாளித்துவ அமைப்பிலும் சரி , முந்தைய அமைப்புகளிலும் சரி, மானுட சமூகங்கள் உற்பத்தியை சமூக நடவடிக்கையாகவே மேற்கொண்டிருக்கின்றன. நவீன முதலாளித்துவ உலகில் ‘தனி நபர்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, உற்பத்தியும் மனித வாழ்வும் எல்லாக் காலங்களிலும் சமூகம் சார்ந்தவையே என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, மனித சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் வளர்ந்துகொண்டே இருப்பதனால், இவை ஒரு கட்டத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் என்ற கூட்டை/சட்டகத்தை உடைத்துக்கொண்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கினார். இவ்வாறு வரலாற்றில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான உறவு குறிப்பிட்ட காலம் ஒற்றுமை மேலோங்கிய தன்மையிலும், பின்னர் முரண்பாடு முன்வரும் தன்மையிலும் அமையும் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி அமைப்புகள் சாசுவதம் அல்ல; மாறாக அவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், உற்பத்தி சக்திகளின் இடையறா வளர்ச்சியின் காரணமாக புதிய உற்பத்தி அமைப்புகள் உருவாகும் என்பதும் ஆகும்.

நான்காவதாக மார்க்ஸ் சுட்டிக்காட்டியது, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடைவதனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மானுட சமூகம் தன் வழக்கமான மறுஉற்பத்தியை உறுதி செய்துகொள்வது மட்டுமல்லாமல் உபரி உற்பத்தியும் சாத்தியம் ஆகும் என்பதாகும். உபரி உற்பத்தி ஏற்படும் நிலைக்கு ஒரு சமூகம் வளர்ந்து விட்டால், அந்த சமூகத்தில் உழைக்கும் தகுதியுள்ள அனைவரும் உழைக்க வேண்டியதில்லை. உற்பத்தி அமைப்பை கைப்பற்ற முடிந்தால், பிறரை உழைக்க வைத்து அவர்களால் உருவாக்கப்படும் உபரி உற்பத்தியில் ஒருசாரார் உழைக்காமல் உயிர் வாழலாம் என்ற வாய்ப்பு ஏற்படுகிறது. வேறுவகையில் சொன்னால், உபரி உருவாகும் நிலையில் ஒரு சமூகம் இரண்டு அடிப்படை வர்க்கங்களாக பிரிந்து நிற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் உழைப்பது; அவர்களால் ஏற்படும் உபரி உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியினர் சௌகர்யமாக வாழ்வது என்பது சாத்தியமாகிறது. இத்தகைய வர்க்க சமூகம் இயல்பாக ஏற்பட்டு விடாது. உற்பத்தியின் மீதான ஆதிக்கம் ஒரு சிலர் கையில் வரும்பொழுது அவர்கள் பிறரை தங்களுக்காக உழைக்க வைக்க முடியும். உற்பத்திக் கருவிகள் ஒருபகுதியினரின் தனி சொத்தாக மாற்றப்பட்டு, பெரும்பகுதி மக்கள் இவற்றை இழந்து நிற்பதால் உடமையாளர்களிடம் அண்டி உழைத்துப் பிழைக்கும் நிலை ஏற்படுவது வர்க்க சமூகத்திற்கு அவசியம். இத்தகைய ஏற்றத்தாழ்வான சமூக ஏற்பாட்டை அமலாக்குவதற்கு வன்முறையும் தேவை. உழைக்க நிர்பந்திக்கப்படும் மக்கள் இந்த சமூக ஏற்பாட்டை நியாயம் என்றோ ஆண்டவன் செயல் என்றோ இன்ன பிற வாதங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவசியம். வன்முறை மட்டுமே போதாது. உடைமையாளர்களையும் அவர்களின் சொத்தையும் நலனையும் பாதுகாக்கும் வன்முறை அமைப்பாக தான் ‘அரசு’ என்ற அமைப்பு வரலாற்றில் உருவகிறது. உழைப்பாளி மக்கள் இந்த ஏற்பாட்டை ஏற்க மதம், பண்பாடு, இலக்கியம் என்று பலதளங்களில் தத்துவ ஆயுதங்களும் நிறுவன ஆயுதங்களும் பயன்படுகின்றன.

வர்க்கப்போராட்டம்

மார்க்ஸ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது; அதன்வழி உபரியும் ஏற்படும் வர்க்க சமூகங்களும் என்று விளக்கியதுடன் நின்றுவிடவில்லை. மானுட வரலாற்றில் உருவாகும் வர்க்க சமூகங்கள் இயற்கையின் படைப்பும் அல்ல; நிரந்தரமும் அல்ல என்பதை மார்க்ஸ் நிரூபித்தது அவருடைய ஆகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு வர்க்க சமூகமும் தன் வளர்ச்சியையும் அழிவையும் தன்னகத்தில் தாங்கியே வருகிறது என்பதை அவர் காட்டினார். இவ்வாறாக மானுடம் படிப்படியாக முன்னேறுவதற்கு வர்க்கப் போராட்டமே கருவியாக உள்ளது என்பதையும் மார்க்ஸ் விளக்கினார். மார்க்ஸின் தனிப்பட்ட பங்களிப்பு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சமூகம் பயணிக்க முக்கிய சக்தியாக எந்த வர்க்கம் செயல்படும் என்பதை விளக்கியதாகும். இவ்வாறு மார்க்ஸ்–எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு மானுடம் பயணிக்கையில் முதலாளிவர்க்கம் வகிக்கும் புரட்சிகரப்பங்கை மறக்க முடியாத வரிகளில் சித்தரிக்கிறது. இன்னும் முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளரத்துவங்கி அடுத்த இருநூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது அதன் நிரந்தரத் தன்மைக்கு சான்று அல்ல என்று மார்க்ஸ் அடித்துக் கூறினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் தொழிலாளிவர்க்கம் அமைப்பு ரீதியான திரண்ட சக்தியாக உருவெடுக்கும் என்றும், இந்த வர்க்கம்தான் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி மானுடத்தை அடுத்த உயர்நிலை வளர்ச்சிக்கு – முதலில் சோசலிச சமூகத்திற்கும், பின்னர் அனைத்து வளங்களையும் அனைவருக்கும் சாத்தியமாக்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இட்டுச்செல்லும் திறன் கொண்ட வர்க்கம் என்பதை மார்க்ஸ் சிறப்பாக விளக்கினார்.

மார்க்ஸின் சமகால பொருத்தப்பாடு

சமகால முதலாளித்துவத்தின் தொடரும் நெருக்கடி மார்க்ஸின் சமகால பொருத்தப்பாட்டை காட்டுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி விதிகள் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை மார்க்ஸ் கூறியுள்ளார். முதலாளித்துவ வளர்ச்சி பெரும் அளவிலான உற்பத்திசாலைகளை உருவாக்கி மூலதனத்தை குவிக்கும். போட்டியில் பல முதலாளிகள் அழிந்து, மூலதனம் சிலர் கைகளில் மையப்படுத்தப்படும். ஏகபோகம் உருவாகும். முதலாளிகளுக்கிடையில் போட்டி, முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக இயந்திர மயமாக்கல் வேகமாக நிகழும். இதனால் எல்லாக் காலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலையில்லா பட்டாளம் ஏற்படும். முதலாளித்துவ மூலதன சேர்க்கை செல்வங்களை ஒருசில ஏகபோக முதலாளிகளிடம் குவிக்கும். மறுமுனையில், உழைப்பாளி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்வார்கள். இந்த முதலாளித்துவ மூலதன சேர்க்கையின் பொதுவிதி மீண்டும் மீண்டும் பொருளாதார மந்த நிலையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரித்தார். கடந்த இருநூறு ஆண்டுகளின் வரலாறு மார்க்ஸ் கூறியதன் உண்மையை நிரூபித்துள்ளது. இன்றைய உலகில் இதை நாம் கடந்த பத்து ஆண்டுகளாக கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.2007 ஆண்டின் இறுதி பகுதியில் துவங்கிய மந்தநிலை ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர்கிறது.

மீண்டும் மீண்டும் சமகால முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்குவது மட்டுமே மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களின் – அவரது முதலாளித்துவம் பற்றிய ஆய்வுகளின் – வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் – சமகால பொருத்தப்பாட்டிற்கு சான்றாக அமைகின்றன. ஆனால் இவை தவிர வேறு பல விஷயங்களிலும் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் நமக்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகளில் வெளிச்சம் தருகின்றன. மூலதனம் நூலின் முதல் பாகத்தில் லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவம் வேளாண்மையில் “சாதிக்கும்” முன்னேற்றம் உழைப்பாளியையும் அவரது மனவளத்தையும் சீர்குலைக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார். இன்று நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். ஏகாதிபத்தியம் வளரும் நாடுகளை மீண்டும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கும் நாம் வாழும் உலகிற்கும் பெரும் நாசத்தை – சீர்செய்ய இயலாத அளவிலான நாசத்தை – ஏற்படுத்திவருகிறது. இத்தகைய பின்னணியில், மார்க்சின் ஆய்வுகளும் கூற்றுகளும் நமக்கு வெளிச்சமும் உற்சாகமும் தருகின்றன. பண்பாடு தொடர்பாக, முதலாளித்துவ வாழ்க்கையில் ஏற்படும் அந்நியமாதல் தொடர்பாக, பாலின சமத்துவம் தொடர்பாக, காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகள் பற்றி, அவை இன்றைய மேலை நாடுகளின் வளர்ச்சியில் ஆற்றிய பங்குபற்றி என – இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் – பல பிரச்சினைகளில் மார்க்ஸ் எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் நமக்கு, நமது களப்பணிகளுக்கு உதவும். எனவேதான் மார்க்சியம் கற்போம்; மார்க்சிடம் கற்போம் என்ற முழக்கம் சாலப்பொருத்தமாக உள்ளது.

வரலாறு பற்றிய நீள்பார்வை தேவை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்தது. முதலாளித்துவம் சர்வ வல்லமை படைத்ததாக கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் 1830இல் துவங்கி உழைப்பாளி மக்கள் பங்கேற்ற பல ஜனநாயகப் போராட்டங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கண்டு துவளாமல், 1871 பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஏறத்தாழ 90 நாட்கள் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்க ஆட்சி தாக்குப் பிடித்தது. ஆனால் இறுதியில் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாக்குதலுக்கு அது இரையானது. 1905 இல் வெடித்த முதல் ரஷ்யப் புரட்சி அடக்கப்பட்டது முதல் உலக யுத்தம் துவங்கும் வரை சோசலிசம் ஒரு தத்துவமாகவே இருந்தது. அது எங்கும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகம் வேகமாக மாறியது. 1950 களின் பிற்பகுதியில் உலகமக்களில் மூன்றில் ஒருபங்கு மக்கள் சோசலிசநாடுகளில் வாழும் மகத்தான முன்னேற்றம் நிகழ்ந்தது. அதன்பின் 1990 களின் துவக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் அதன் பின்விளைவுகளையும் நாம் இன்று எதிர்கொள்கிறோம். நமக்கு வரலாறு தொடர்பாக நீள்பார்வை தேவை.

வரலாறும் வரலாற்று சகாப்தங்களும் பத்தாண்டுகளிலும் நூறு ஆண்டுகளிலும் கூட அளவிட முடியாதவை. முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கு, உலகம் முழுவதும் பரவவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இவ்வளவுக்கும் இந்த அமைப்பு – லாப வெறியை அடிப்படையாக கொண்ட அமைப்பு – இயல்பாகவே விரிவாகும், ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. இன்று அது நீண்ட நெருக்கடியில் சிக்கியுள்ளது. வர்க்க சுரண்டலற்ற, தன்னைத்தானே உணர்வு பூர்வமாக நிர்வகித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அமைப்பது என்ற பயணத்தில் சில ஆரம்ப முயற்சிகள் கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில முதலாளித்துவ எதிரிகளால் வீழ்த்தப்பட்டதில் சோர்வு அடைய வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட பயணம். அதிலும், சோசலிச நிர்மாணத்திற்கான ஆரம்ப புரட்சிகள் மிகவும் பின்தங்கிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை உலகம் தழுவிய ஏகாதிபத்தய எதிர்முகாமை சந்திக்கவேண்டியிருந்தது. சோசலிச நாடுகளை, மானுடத்தின் அற்புத பரிசோதனைகளை முளையிலேயே கிள்ளி எறிய எல்லா யுக்திகளையும் ஆயுதங்களையும் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. எனினும் மானுட விடுதலைக்கான, ஒரு அறிவியல்பூர்வமான, சமத்துவ சமூகம் நோக்கிய, சுரண்டலற்ற சமூகத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவரை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் தைரியத்துடனும் சோசலிசத்தை நிர்மாணிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. கடந்த கால அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், இதர மாபெரும் சோசலிச புரட்சியாளர்கள் நமக்கு அளித்துள்ள தத்துவார்த்த வளங்களையும் நடைமுறை அனுபவங்களையும் பயன்படுத்தி பயணத்தை தொடர்வோம்.

நம் முன் உள்ள போராட்டம் நீண்ட நெடிய ஒன்றுதான். குறுக்குவழிகள் இல்லை. ஆனால் இப்பயணத்தின் இறுதிப்பரிசு அனைத்து மானுடத்தின் விடுதலை. இதைவிட பெரிய இலக்கு இருக்க முடியாது. மார்க்சின் மனித நேயத்தையும் அவர் நமக்கு தந்துள்ள அற்புதமான இயக்கவியல் வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தையும் நமது ஆயுதங்களாகக் கொண்டு முன்னேறுவோம். இதுதான் நாம் மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

ஏகாதிபத்திய கொலைவெறி, ஊடகங்களின் பேரிரைச்சல் – எதிர்கொள்ளும் வடகொரியா

சுமார் 2 1/2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பும் 2 1/4 கோடி மக்கள் தொகையும் கொண்ட வடகொரியா, 1950-லிருந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும், சொத்து முடக்கத்தையும், ஐ.நாவின் சமீபத்திய கட்டளைகளையும் மீறாமல்  சாமாளித்து சுதந்திரமாக நிற்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில்  வடகொரியா அணுகுண்டு தயாரித்து, தென் கொரியாவையும், ஜப்பானையும் அழிக்க முயற்சிப்பதாக பரபரப்பு செய்தி, அமைதியை விரும்பும் உலக அரசியல் தலைவர்களை கவலை கொள்ள செய்துள்ளது. வடகொரியா அணுகுண்டை தயாரித்து யுத்தத்தை துவக்கும் என்பதால் இந்த கவலை எழவில்லை. ஒரு சுண்டைக்காய் நாட்டின்  மக்கள் அவர்கள் வழியில் வாழ்வதை தடுத்து மொத்த கொரிய பூமியையும் அமெரிக்க ராணுவ தளமாக இயங்க வைக்க எப்படியெல்லாம் மேலை நாடுகள் கதைகளை ஜோடிக்கிறார்கள் என்பதை அறிந்தே இந்த கவலை.

19-ம் நூற்றாண்டில் காலனி வேட்டையில் ஈடுபட்ட காலத்திலிருந்து மேலை நாடுகளும், ஜப்பானும் பின்பற்றி வரும் வெளியுறவு அரசியல் உபாயங்களின் உள் விவகாரம் அறிந்தவர்களே இந்த ஜோடனைகளையும் அவைகளின் நோக்கத்தையும் கணிக்க முடியும்.

சிறிய நாடுகளின் சுதந்திரத்தை வல்லூறு நாடுகள் மிதிப்பதை இனி உலகம் ஏற்க கூடாது என்பதற்காக முதலில் குரல் கொடுப்பவர் காஸ்ட்ரோ. அவர் அமெரிக்காவின் மறைமுக மிரட்டலை சுட்டிக் காட்டி உலக யுத்தத்தை தூண்டும் வேண்டாம். இந்த கொலை வெறிகூத்து என்று எழுதி உலக நாடுகளின் கவனத்தை யுத்தத்திற்கு எதிராக திருப்ப முயற்சித்துள்ளார். மறுபக்கம் வல்லூறு நாடுகளின் ஆக்கிரமிப்பை தடுக்க கொரியாவின் அருகிலிருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அரசியல் பக்குவத்தோடு அணுக முயற்சிக்கிறார்கள். கொரிய தீபகற்பத்தில் மோதலை உருவாக்குவது எளிது, அமைதியை நிலை நாட்டுவது கடினம். அந்த கடினமான பொறுப்பை சீனாவும், ரஷ்யாவும் ஏற்று இருப்பது பாராட்டுக்குறியது.

வியட்நாம் வெற்றிக்கு வழிவகுத்தது போல்  உலகளவில் மக்களில் கணிசமான பகுதியினர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதில் தெளிவடைகிற வரை அநியாயத்திற்கு பணியாமல் காத்திருப்பது என்பதே வட கொரியாவின் நட்பு நாடுகளின் அரசியல் ராஜதந்திரத்திற்கு அடிப்படையெனத் தெரிகிறது.

பார்வைக்குப் அப்பால்

வட கொரியா-தென் கொரியா- அங்கு அணுகுண்டுகளை ஏந்திய ஏவுகனைகளை கொண்ட ராணுவ தளத்தை வைத்திருக்கும் அமெரிக்கா, இம்மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு, பற்றிய வெளிப்படைதன்மை குறைவாக இருப்பதால்  நம்பத் தகுந்த மாதிரி கதைகள் பின்னுவது எளிதாக உள்ளது. இதன் விளைவாக  பிரான்ஸ், யுனைட்டெட் கிங்டம், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் சுருக்கமாக பி.யு.கே.யு.எஸ் (Fukes) நாடுகளின் ஓநாய் ரக நிறுவனங்கள், நடத்தும்  ஊடகங்களும், நடுநிலை ஏடுகளும் எப்பொழுதெல்லாம் அமெரிக்கா  ஆசியப் பகுதியில்  கன்போட் டிப்பளமசி (ராணுவ பலத்தை காட்டி அசமத்துவ  உறவிற்கு ஒப்பந்தம் போடுவது – Gunboat Diplomacy)-யில் இறங்குகிறதோ அப்பொழுதெல்லாம்  வடகொரியாவை நோக்கி ஊளையிடத் தொடங்கிவிடும். தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய இம்மூன்று நாடுகளும் வட கொரியாவை மூச்சுதிணற அடிக்க எடுக்கிற எந்த நடவடிக்கைகளையும், ஓர வஞ்சகத்தையும் இந்த ஊடகங்கள் விமர்சிப்பதே இல்லை. நல்லுறவை உருவாக்கவும், சந்தேகங்களை போக்கவும் வடகொரியா எடுக்கிற நடவடிக்கைகளை இந்த ஊடகங்கள் விஷம் கலக்காமல் சித்தரிப்பதில்லை.

சமீபத்தில்  அமெரிக்க தென்கொரிய ராணுவப் பயிற்சியும், தென்கொரிய அதிபரின் மிரட்டலையும் எதிர் கொள்ள தயாராகும் படி  தனது நாட்டு மக்களிடம் வடகொரிய அதிபர் ஆவேசமாக கூறியதை வெட்டி ஒட்டிக்காட்டி ஆபத்து! ஆபத்து! வடகொரியா, ஜப்பானுக்கும், தென்கொரியாவிற்க்கும் எதிராக அணு ஆயுத யுத்தம் நடத்தப் போவதாக மிரட்டுகிறது என்று கூச்சலிட தொடங்கிவிட்டன. அவர் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எப்படி புரிந்து கொண்டார் என்பது தெறியவில்லை.

தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் அணு ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்றால் , நாமும் அணுகுண்டுகளை தயார் செய்து (இனி மேல்!) அமெரிக்க ராணுவ தளத்தின் மீது வீசுவோம் என்று அந்த இளைய அதிபர் ஆவேசமாக பேசினார். எதற்காக இப்படி பேசினார் என்பதை நாம் அறியோம். அவர் வீராப்பை கேட்ட கொரியாவின் நட்பு நாடுகளே முகம் சுளித்தன. தென் கொரியாவில் பரவலாக கிடக்கும் அமெரிக்க ராணுவ தளங்களில் நடக்கும் ராணுவ பயிற்சிகளை கண்டு வடகொரிய மக்களின் அச்சத்தை போக்க வீராப்பாக பேசினாரா என்பதையும் அறியோம், அல்லது தென்கொரிய அதிபரின் அணு ஆயுத மிரட்டலுக்கு பதிலடியா என்பதையும் அறியோம், அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலா என்பதும் தெரியவில்லை. ஆத்திர மூட்டலுக்கு இறையாக வேண்டாம். அதே வேளையில் சுதந்திரத்தையும் தேச ஒற்றுமை லட்சியத்தையும்  விட்டுக் கொடுக்க வேண்டாம் என்பதே வட கொரியாவின் நட்பு நாடுகளின் ஆலோசனை. ஆனால் அந்த பேச்சை வைத்து மேலை நாடுகளிலும் மற்றும் ஜப்பானிலும் சுதந்திர சந்தை கொடுக்கும் பீதியில் ஏற்கனவே தவிக்கும் ஒவ்வொரு குடிமகனையும்  ஓநாய் ரக நிறுவனங்களின் ஊடகங்கள் அணுகுண்டு பீதியை கிளப்பி மரண பயத்தில் ஆட வைத்து வருகின்றன.

வட கொரியாவின் அரசியல் வரலாற்றை பார்த்தால் அந்த நாடு எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததாக சொல்ல முடியாது. 19-ம் நூற் றாண்டில் ஜப்பான் கொரிய அரசியை கொலை செய்து அந்த நாட்டை ஆக்கிரமித்ததை வரலாறு குறிப்பிடுகிறது.1945-ல் கொரியாவிற்குள் அமெரிக்க ராணுவம் புகுந்து  கொரியாவை பிளந்ததும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. இன்று வரை அமெரிக்க ராணுவம் அங்கிருந்து போக மறுக்கிறது என்பதையும் உலகமறியும். வட கொரியா எந்த நாட்டின் மீதும் அணுகுண்டு வீசியதாக கூற முடியாது. பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பீலாவிட்டு இன்னொரு நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்றது கிடையாது. சுதந்திர அரசுகளை கவிழ்க்க ராணுவ சர்வாதிகாரிகளுக்கு உதவியதும் கிடையாது. வேற்று நாடுகளில் மக்கள் நேசிக்கும் புரட்சிகர அரசியல் தலைவர்களை உளவுத்துறை மூலம் புற்று நோய்க்கு இரையாக்கிட சதி செய்ததது கிடையாது. அமெரிக்க ஜனாதிபதிகள் போல் உலகை ஆளவேண்டும் என்ற ஆசை அந்த இளம் அதிபருக்கு சுத்தமாக கிடையாது. அமெரிக்க போஸ்டன் நகரில் உண்டி சமைத்து உயிரைக் காக்கும் குக்கரை உயிரைப் பறிக்கும் குண்டுகளாக்கி தொலைதூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர்களை கொன்றவனை கண்காணித்த அமெரிக்கக் காவல்துறை ரஷ்ய நாட்டிற்கு பயங்கரத்தை ஏற்றுமதி செய்பவன் என்று ஏமாந்து போகும் பண்பாடும் அங்கில்லை.

உலக நகரங்களிலே ஆக சுத்தமான மிக குறைவான குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் வடகொரிய தலைநகர் பியாங்நாங் உள்ளது. பொருளாதார தடைகளால் பல சிரமங்களை அம்மக்கள் சந்திக்கின்றனர்.

கடுமையாக உழைக்கும் ஆற்றலும், தொழில்நுட்பத் திறனும் சமத்துவப் பண்பாடும் அம்மக்களை வாழ வைக்கிறது. தங்களது கஷ்டங்களுக்கு காரணங்களை அறிந்ததால் “கொரியா இணையும் அமைதிவரும்”  என்ற கனவுகளுடன் அம்மக்கள் உறுதியுடன் இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சோவியத் காலத்து உதவியும் திட்டமிட்ட பொருளாதாரமும் மக்களின் உழைப்புத் திறனை மேன்மைபடுத்தும் அணுகுமுறையும் அந்த நாட்டின் பொருளாதார அண்டி பலத்தை உறுதியாக வைத்துள்ளது.

அணு உலையை மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும். வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஜப்பானுடனும், தென்கொரியாவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை நம்பி வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது. ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் முதலீடு செய்து உருவாக வேண்டிய மின் நிலையம் கட்டுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டன.

பெயருக்கு கொஞ்சம் தானியம்  கொடுத்துவிட்டு ஏற்றுக் கொண்ட அளவை மறுத்துவிட்டன. மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினி கிடக்கும் வட கொரிய மக்கள் கலவரம் செய்யட்டும் என்று காத்திருந்தனர். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா, வடகொரியா இந்த ஆறு நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட ஏற்பட்ட ஒப்பந்தங்களையும், நடவடிக்கைகளையும் பரிசீலிக்கிற எவரும் வட கொரியா பயங்கரத்தை உற்பத்தி செய்கிறது என்றோ இரும்புத் திரை நாடு என்றோ குற்றம் சுமத்த முடியாது.

பொருளாதாரத் தடைகளாலும், அவதூறுகளாலும் வடகொரியா திணறுகிறது என்றே கூறுவர். சென்ற வருடம் செயற்கைக்கோளை ஏவிய பொழுது வட கொரிய அரசு உலக செய்தி நிறுவனங்களையும் நேரில் பார்க்க அழைப்பு விட்டது. அந்த நிகழ்ச்சியை கண்ட மேலை நாட்டு ஊடகங்கள் செயற்கை கோளை ஏவிய தாக தெரிகிறது என்று எழுதி சந்தேகத்தை விதைத்தது. எச்சரிக்கை! அபாயம்! மூடிக் கிடக்கும் அணு உலைகளை வடகொரிய சர்வாதிகாரி முடுக்கிவிடப் போகிறார். வடகொரிய ஏவுகனைகள் செயற்கை கோளை செலுத்தும் ரகமல்ல அது அணுகுண்டுகளை வீசும் ரகம் இப்படி பயமுறுத்திவிட்டு அடுத்த வரியிலேயே  மக்களை பட்டினியில் கொன்று குவிக்கும் ஹிட்லர் காலத்து முகாமாக வட கொரியா இருப்பதாகவும் எழுதுகின்றனர். மக்கள் எந்த நிமிடமும் எரிமலை ஆவர் என்றும் எழுதுகின்றனர். எகிப்தில் எழுப்பியது போல் வடகொரிய மக்களை உசுப்பிவிட கொலைவெறி  மெட்டில் பாட்டுக்களை  மின் காந்த அலைகளாக  அனுப்புகின்றனர். கம்மிஸ் ஆர் புரோக், வட கொரியா ஜோக், சுருட்டி உருட்டு,  உருட்டி சுருட்டு. பின் சிரி, சிரி. (அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளை கம்மிஸ் என்றே விழிப்பர் கில் ஏ கம்மி பார் யுவர் மம்மி என்பது அங்கு நர்சரி ரைம்மாகும்)  இப்படி தன்னாலேயே அழிவைத் தேடுகிற வடகொரிய அரசியலமைப்பு என்று சித்தரித்துவிட்டு  பின் எதற்கு தென் கொரியாவில்  அமெரிக்க முப்படைத் தளங்கள் வட கொரியா ஒரு சுண்டைக்காய் நாடு என்பதை  ஊடகங்கள் அறியாத ஒன்றா? ஏன் அமெரிக்க, பிரிட்டானிய, பிரெஞ்சு ஊடகங்கள் வடகொரியாவிற்கு எதிராக ஊழையிடுகின்றன? அணுகுண்டை வைத்து உலகை மிரட்டும் பயங்கர நாடாக சித்தரிப்பதேன்? மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் பயந்து வாழ்வதாக சித்தரிப்பதேன்? இரும்புத்திரை நாடு என்று சித்தரிப்பதேன்?.

ஒபாமாவின் மிரட்டல்

மேலை நாட்டு  முதலாளித்துவத்தை பாதுகாத்துக் கொண்டே நல்ல பெயரெடுக்க ஓபாமா விரும்புகிறார். அதற்காக கொரியா முழுவதையும் அமெரிக்க ராணுவத் தளமாக ஆக்க வடகொரியாவை துவைப்பது, அல்லது இவ்வட்டாரத்திலிருந்த பழைய ராணுவ தளங்களை புதுப்பிப்பது. இந்த நோக்கத்தோடு சமீபத்தில் கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ஓபாமா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளோடு ஒரு ராணுவ ஒப்பந்தம் போட முயற்சி எடுத்தார். எப்பொழுதுமே ஏகாதிபத்தியவாதிகள்  கன்போட்டில்லாமல்  பேச்சுவார்த்தைக்குப் போனதே கிடையாது. முன் காலத்தில் இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்துவிட்டே அமெரிக்க ஆட்சியாளர்கள் வருவர்.

தென் கொரியாவிலிருக்கும் ராணுவ தளத்தில்  ஒத்திகை பார்ப்பதாக கூறி எடுத்த நடவடிக்கைகளும், அங்கு தென்கொரிய ஜனாதிபதி பேச்சும் வடகொரியாவையே மட்டுமல்ல இவ்வட்டார நாடுகளை மிரட்டும் நோக்கம் கொண்டது. இதைத்தான் அவர்கள் டிப்பளமசி என்கிறார்கள். நேரடியாக சொல்லாமல் மறைமுக மாக உணர்த்துவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை. சோவியத் யூனியனை பயமுறுத்தவே சரணடைந்த ஜப்பான் மீது அணுகுண்டு வீசி னோம் என்று ட்ரூமன்   சொன்னதாக அன்று பத்திரிகைகள் எழுதின.

இந்த ஊடகங்களும் மேலை நாடுகளின் கன்போட் டிப்பளமசியை நியாயப்படுத்த வடகொரியவை பயங்கர நாடாக சித்தரிக்கும் பக்கவாத்தியமாக செயல்படுகின்றன. மேலை நாடுகளைத் தவிர வேறு எந்த நாடும் அந்நிய நாட்டில் ராணுவதளத்தை வைத்து பராமரிப்பதாக கூறமுடியாது. பிலிப்பைன்சில் தென் வியட்நாமில், இந்தோனேசியாவில் அமெரிக்க ராணுவதளம் இருந்ததும், மக்களின் எதிர்ப்பால் வெளியேறியதும் வரலாறாகும். மேலை நாட்டு முதலாளித்துவம் உலக மக்களுக்கு நன்மை பயக்குமானால் எதற்கு பிற நாடுகளில் ராணுவ தளம்?

68 ஆண்டுகளாக தொடரும் துயரம்

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் 1943-ல் கெய்ரோவில் கூடிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் தலைவர்கள் ஜப்பானின் காலனியாக இருந்த கொரியாவை விடுவித்து சுதந்திர நாடாக அங்கிகரிப்பது என்ற முடிவிற்கு வந்து அறிக்கையும் விட்டனர். அமெரிக்க நிர்வாகிகளும் இதற்கு மாற்று கருத்து கூறவில்லை. 1945-ல் ஜப்பான் சரணடைந்த சில வாரத்தில் அமெரிக்கப் படைகள் கொரியாவிற்குள் புகுந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ஜப்பான் சரணடைந்தாலும் கொரியாவிலிருக்கும் ஜப்பானிய ராணுவத்திடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக புகுந்தோம் என்றனர்.

உள்ளே புகுந்தவுடன் நடந்தது வேறு. ஜப்பானிய அதிகாரிகளும் அவர்கள் தயவில் செல்வ கொழுப்பில் திளைத்த கொரிய பிரபுக்களும், பெரும் வர்த்தகர்களும் அமெரிக்கத் தளபதி ஜான்ஹாட்ஜின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். அமெரிக்கப் படை புகு முன்னரே, கொரிய உழைப்பாளர் கட்சியின் வீரம் செறிந்த போராட்டம் காரணமாக ஆங்காங்கு மக்கள் சபை உருவாகியிருந்தது.  சோவியத் ராணுவத்தின் தாக்குதலால் ஜப்பான் அங்கு சரணடைந்ததேடு அரசும் செயலிழந்து கிடந்தது. தியாகத்தாலும், நேர்மையாலும், தத்துவத் தெளிவாலும் கிம்.இல்.சுங் கொரிய மக்களின் இதயங்களில்  குடியிருப்பவரானார். கொரியா முழுவதும் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு பரவியது. அமெரிக்க ராணுவம் புகுந்தவுடன் செய்த முதல் வேலை கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. விடுதலை இயக்கத்தினரிடம் இருந்த ஆயுதங்களை பறித்தது, மக்கள் சபையை கலைத்தது. ஜப்பானிய அதிகாரிகள் தயாரித்த பட்டியலடிப்படையில் தேசப்பற்றுடன் போராடியவர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்று குவித்தது கொரியாவை இரு கூறாக ஆக்கியது. தேச ஒற்றுமைக்கு பாடுபடுபவர்களை வடகொரிய ஏஜென்ட் அல்லது தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் என்று கொன்று விடுவது அன்றாட நடவடிக்கையானது. ஏன் கொரியாவை இப்படி சிதைக்க வேண்டும்.

மக்கள் கையில் அதிகாரத்தை தக்க வைக்கும் சோவியத் ஆட்சி முறை செல்வாக்கு பெறுவது மேலை நாட்டு முதலாளித்துவ ஆட்சி முறைக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் கொரிய தீபகற்பத்தை தங்களது ஆளுகைக்குள் வைக்க தீடீரென முடிவு செய்தனர். அந்த பொறுப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். அந்த அடிப்படையில் அமெரிக்கா புகுந்தது. அமெரிக்க ராணுவம் புகுந்தவுடன் ஒரு பொம்மை அரசை உருவாக்கியது. சிங்மென்ரீ என்பவனை ரகசியமாக தளபதி மாக் ஆர்தர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அவன் தலைமையில் ஒரு பொம்மை அரசை அமைத்தது.

ஆனால் அதிகாரம் மாக் ஆர்தர் நியமித்த தளபதி ஜான் ஹாட்ஜ் என்பவரிடம் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட சிங்மென்ரீ ஜப்பானை எதிர்த்த விடுதலைப் போரில் எந்த பங்கும் செலுத்தியவரல்ல. இளமைக் காலத்தில் ஜப்பான் எதிர்ப்பு குழுவில் இருந்து சிறை சென்றதைத் தவிர வேறு எதுவும் சாதித்தவரல்ல. விடுதலைப் போர் காலத்தில் இவர் அமெரிக்காவில் கிருத்துவப் பிரச்சாரம் செய்து வந்தார். இவர் செய்த துரோகத்தால் கொரியாவில் வாழ முடியாத நிலை வந்ததால் அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்கத் தளபதி மாக் ஆர்தர் அத்தகைய நபரை இறக்குமதி செய்ததோடு கலைக்கப்பட்ட மக்கள் குழு மேற்கொண்ட  நிலச் சீர்திருத்தத்தை அமுலாக்க பொம்மை அரசிற்கு உத்தரவிட்டார். அதன் மூலம் விவசாயிகளை தன்பக்கம்  அரசு வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதே வேளையில் தேச ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடிய மக்களை அமெரிக்க ராணுவ உதவியுடன் கொன்று குவிக்கவும் சிங்மென்ரீ தயங்கவில்லை. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கே  இவனது கொடுமை பிடிக்காமல் போகவே, பதவியை ராஜினாமா செய்ய வைத்து  ரகசியமாக அமெரிக்காவிற்கே மீண்டும் கொண்டு போய்விட்டனர். பின்னர் அவன் பிணம் தான் கொரியாவிற்கு வந்தது. சிங்மென் ரீயை குப்பை கூடையில் வீசிய பிறகு ஏற்பட்ட நெருக்கடியை சாமாளிக்க அமெரிக்கா பார்க் சுங்-கி  ராணுவ தளபதியை  சர்வாதிகாரியாக  அமெரிக்கா நியமித்தது.

1961-லிருந்து 18 ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரி பார்க் சுங்கி தென்கொரிய மக்களை அடக்கி ஆண்டான். மக்கள் போராட்டம் வெடித்தது, குவாங்ஜியு எழுச்சியை  அவன் அடக்கிய விதம், பலரை தூக்கிலே போட்ட விதம்  மேலை நாட்டு ஓநாய் ரக ஊடகங்களே கண்டித்தன. இந்த கொடியவனுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதை கண்டு கொள்ளாமலே அவனை மட்டும் தாக்கி எழுதின. 1979-ல் மேலிடத்து உத்தரவுப் படி தென்கொரிய ஜனாதிபதி  சாப்பிடும் பொழுது அவனது பாதுகாவலனால்  சுட்டுக் கொல்லப்பட்டான். மொத்தம் 30 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியால் சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி பெருமுதுலாளிகளாக உருவெடுத்தது. இன்று அந்த வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது.

கேரட் அன்ட் ஸ்டிக் கொள்கை மூலம் இன்றைய ஜனாதிபதிகள் ஆட்சி நடத்துகின்றனர். இவர்களில் யாராவது அமெரிக்க நலனை பாதிக்கிற முறையில் நடந்தால் அவதூறுக்கு ஆளாகி உயிரையே பறிகொடுக்க நேரிடும் என்பதை அறிந்தே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. இன்று ஜனாதிபதியாக இருப்பவர் பழைய சர்வாதிகாரியின் மகள் ஆவார். தென்கொரியாவில் பக்குவமான ஜனநாயகம் இருப்பதாக சி.ஐ.ஏ தவிர வேறு யாரும் சான்றிதழ் வழங்கியதாக தெறியவில்லை. அங்கு இன்று அமெரிக்க உதவியுடன் பெரு முதலாளிகளின்  அடக்கு முறை ஆட்சியே நடக்கிறது.  வன்முறையில் கம்யூனிசம் பரவுவதை தடுக்கவே தென் கொரியாவில் ராணுவ தளம் என்று அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால் நடந்த தென்ன? இப்பொழுதும் நடப்ப தென்ன? தென் கொரியாவில் மேலை நாட்டு முதலாளித்துவம் அமெரிக்க ராணுவத்தின் மூலம் திணிக்கப்பட்டது. இன்றும் அதனை காப்பாற்ற உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு அந்த ராணுவமே பக்க பலமாக உள்ளது.

கம்யூனிசம் என்பது மேலை நாட்டு முதலாளித்துவம் போல் துப்பாக்கி முனையால் திணிக்க கூடியதல்ல, ஜனநாயகமும், சமத்துவமும், அசமத்துவ முதலாளித்துவ ஏற்பாடுகளை தகற்கும் மக்களின் எழுச்சியாலும் மக்களின் விருப்பத்தாலும் அமைவதாகும். கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆயுதம் தறிப்பது தற்காப்பிற்காகவும், அடக்குமுறை கருவிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களை காக்கவும் தவிர வேறு நோக்கம் கிடையாது. இந்த விவரத்தை மேலை நாட்டு  அரசியல் நிபுணர்கள் நன்கு அறிவர்.

இன்று அவர்களின் கணக்குப் படி கம்யூனிசம் பரவும் அபாயம் இல்லை! மார்க்சிசம் காலாவதியான சரக்கு என்று தூக்கத்திலும் புலம்புகிறவர்களை பார்க்கலாம்! பின் ஏன் கொரியாவில் ராணுவ தளம்? உலகளவில் மேலை நாட்டு முதலாளித்துவத்திற்கு வேறு வகையில் ஆபத்து இருப்பதாக கருதுவதால் முதலாளித்துவத்தின் எல்லை பாதுகாப்பு படையாக அங்கே ராணுவம் தளம் உள்ளது. மத்திய ஆசியாவிலும், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் நாட்டோ படைகளின் நடமாட்டமும் இதே நோக்கத்துடன் இருப்பதை காணலாம். இன்று புதிய சமத்துவ சந்தை உறவிற்கான போராட்டம் உலகளவில் நடப்பதையும் காணலாம். அதற்கான வாய்ப்புக்களும்  பெருகி வருகின்றன. அதனை தடுத்து மேலை நாட்டு சந்தை முறையை பாதுகாப்பதே இன்றைய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஆட்சியாளர்களின் ஆசை, வெறி உயிர் மூச்சு எல்லாமாகும்!

தென் கொரியாவின் வேதனைகள்

தென் கொரியாவில் பரவலாக அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இங்குள்ள அமெரிக்கப் படை தென்கொரிய அரசின் காட்டுப் பாட்டில் இல்லை. கொரியாவின் ஜனநாயகத்தை காக்க அந்த ராணுவம் கொரிய மக்களில் சந்தேகப்படுகிறவர்களை சுட்டுக் கொல்லலாம் பெண்களை துன்புறுத்தலாம். 1967- 1998 வரை 50 ஆயிரம் குற்றங்களை ராணுவம் செய்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்த குற்றங்களில் கொலைகள், வன்புணர்ச்சி ஆகியவைகளே. கொரிய அரசு அந்த நபர்களை தண்டிக்க முடியாது.

வேதனை என்னவெனில் இதில் ஒரு புகாரைக் கூட அமெரிக்க அரசு ஏற்கவில்லை. உண்மையில் அமெரிக்க ராணுவம் புகுந்த அன்றே கொரியாவின் தென்பகுதி மக்கள் ராணுவத்தை எதிர்த்த போராட்டத்தை துவக்கிவிட்டனர். ஜப்பானிடமிருந்து அமெரிகாவிற்கு அதிகாரம் கைமாறியதை அனுபவத்தால் கண்டனர். துவக்கத்தில் மக்கள் எதிர்ப்பினை அமெரிக்க ராணுவம் வடகொரியாவிற்கும், சுதந்திர தென்கொரியாவிற்கும் இடையே போர் என்று சித்தரித்தது. வடகொரிய ஊடுறுவலை முறியடிக்க தென்கொரிய மக்களுக்கு  அமெரிக்க ராணுவம் உதவுவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சித்தரித்தன.

2005-லிருந்து கொரிய விடுதலை தினம், கொரியப் போர் முடிந்த தினம், சர்வாதிகாரி சுங்கி பார்க்கை எதிர்த்த குவான்ங்ஜு மக்கள் எழுச்சி தினம் இம்மூன்று நாளையும்  அமெரிக்க ராணுவ தளங்களை அகற்ற கோறும் தினங்களாக தென்கொரிய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தேதிகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டு அமெரிக்க ராணுவத்தின் அட்டுழியத்தை எதிர்த்து முழக்கமிடுவார்கள். காவல் துறையோடு சில இடங்களில் மோதவும் செய்வார்கள். பல ஆயிரம் மக்கள் காவல்துறை யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஊணமடைவர். முண்டானி உண்மையை வைத்து  பொய் மலைகளை உருவாக்கும் மேலை நாட்டு ஊடகங்கள் இந்த இயக்கம் பற்றி எதுவும் எழுதுவதில்லை.

வடகொரியாவும் அணுசக்தியும் 1985-ம் ஆண்டு தென் கொரியாவிலிருக்கும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்றறினால் வடகொரியா அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்தது. அமெரிக்கா சம்மதிக்காததால் 1991-ம் ஆண்டு வரை இழுபறி நிலை நீடித்தது. 1991-ம் அமெரிக்க சுமார் 100 அணு ஆயுதங்களை தென் கொரியாவிலிருந்து அகற்றியது. அதே ஆண்டில் தென் கொரிய ஜனாதிபதியும் அணு ஆயுத தயாரிப்பில் இறங்க மாட்டோம் என்று அறிவித்தார்.

அதே ஆண்டு இறுதியில் வடகொரியாவும், தென் கொரியாவும் கூட்டாக கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்கிட ஒப்பந்தம் செய்தனர். அணுகுண்டின் மூலப்பொருளையும் தயாரிப்பதில்லை என்றும் சம்மதித்தனர். ஒருவரை ஒருவர் கண்காணிக்கவும் சம்மதித்தனர். 1992-ல் வட கொரியா அணுகுண்டு செய்ய பயன்படும் புளுட்டோனியம் பற்றி தகவல்களை சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் ஒப்படைத்தது அவர்கள் அணுசக்தி வளாகத்தை மேற்பார்வையிடவும் அனுமதித்தது. 1992-ம் ஆண்டு வட கொரியா ஏவுகணை ஆய்வில் இறங்குகிறது என்று குற்றம் சாட்டி 1950 ஆண்டு அறிவித்த பொருளாதார தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. பதிலுக்கு வடகொரியா அணு பரவல் தடுப்பு கட்டுப்பாட்டிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது.

1993-ல் வடகொரியா அமெரிக்கா இரண்டு நாட்டின் பிரதிநிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் அமெரிக்கா வடகொரியா உள்விவகாரத்தில் தலையிடாது, ராணுவ பலத்தை காட்டி மிரட்டாது என்ற வாக்குறுதியை கொடுத்தததை ஏற்று கட்டுப் பாட்டிலிருந்து விலகும் முடிவை தள்ளிப்போட்டது. பொருளாதாரத் தடையை நீக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. முடக்கிய சொத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டது.

1994 அமெரிக்க உளவு அமைப்பு வடகொரியா அணுகுண்டு செய்ய 12 கிலோ புளுட்டோனியத்தை ரகசியமாக தயாரித்து வைத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தியது. சர்வதேச அணுசக்தி குழுமம் பார்வையிட்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று பின்னர் அறிவித்தது.

1996-ல் வட கொரியாவை ஏவுகனை கட்டுப்பாட்டு திட்டத்தை ஏற்க அமெ ரிக்கா வற்புறுத்தியது. சகஜ உறவை உருவாக்க வடகொரியா நிபந்தனை போட்டது. அமெரிக்கா மறுக்கவே பேச்சுவார்த்தை முறிந்தது. அதே ஆண்டில் வடகொரியா ஈரானுக்கு ஏவுகணை உதிரி பாகங்கள் கொடுத்ததாக குற்றம் சுமத்தி அமெரிக்கா   இரண்டு நாட்டிற்கும் தடைகளை விரிவுபடுத்தியது. 1998-ல் பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில் நுட்பத்தை பகிர்ந்ததாக கூறி வடகொரியா பாகிஸ்தான் மீது மேலும் தடைகளை இறுக்கியது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அமெரிக்க கொடுக்கலாம், ஆனால் வடகொரியா செயற்கை கோள் ஏவ தேவையானவைகளை பாகிஸ்தானிலிருக்கும் கான் ஆராய்ச்சிமையத்திற்கு கொடுப்பது ஆபத்தாம்.

1998-ல் வடகொரியா எடை குறைவான செயற்கைகோளை ஏவியது. அது ஏவுகணை சோதனை என்று அமெரிக்காவும் ஜப்பானும் குற்றம் சுமத்தின, ஒப்பந்தப்படி கட்ட வேண்டிய அணுமின் நிலையத்தை கட்ட மறுத்துவிட்டன. மேலும் தடைகளை விதித்தன. 2012-ல் வடகொரியா செயற்கை கோளை வெற்றிகரமாக வானத்திலே செலுத்தியது. ஏவுகனை ஆய்வில் ஐ.நாவின் முடிவை மீறாமல் ஒரு செயற்கை கோளை வடகொரியா ஏவி இருக்க முடியாது  என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. வட கொரியா  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர் மானம் ஆயுத உற்பத்தியைத்தான் தடுத்திருக்கிறது. நாங்கள் அதில் ஈடுபடவில்லை. ஆக்கபூர்வமான ஆய்வில் ஈடுபடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளது.

வடகொரியா, மூன்று நாடுகளின் (அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா) பொருளாதார முற்றுகையால் கஷ்டங்ளை தாங்கி நிமிர்ந்து நிற்கக் காரணம் இதர உலக நாடுகளின் ஆதரவும், அம்மக்களின் உறுதியுமே என்பதை விளக்க வேண்டியதில்லை. இல்லையெனில் என்றோ வடகொரியா மீது நியூட்ரான் குண்டை ஏவி அமெரிக்கா கொலை வெறி கூத்தை அரங்கேற்றியிருக்கும்.

ஜப்பான் வட கொரிய உறவு

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும். 20-ம் நூற் றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பியர்களும், அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்களும் அடிமைகளை  சந்தையில் விற்பதை விட நாடுகளை அடிமைப்படுத்துவது அதிக லாபம் தரும் என்ற முடிவிற்கு வந்தனர். நாடுகளை அடிமைப்படுத்த அவர்கள் கையாண்ட யுக்தியை கன்போட்டிப்பளமசி என்பர். இது அசமத்துவ வர்த்தக உறவை துப்பாக்கி முனையில் உரு வாக்குவதாகும். ஜப்பானும் அதனை காப்பி அடித்தது 1876-ல் கொரியாவில் ஜப்பான் புகுந்தது.1895-ல் கொரியாவை ஆண்டு கொண் டிருந்த ராணியை கொன்று ஒரு பொம்மை அரசை உருவாக்கியது. 1910-ல்  கொரிய அரசனை மிரட்டி  கொரியாவை ஜப்பானின் காலனியாக ஆக்கியது. அடிமைப்பட்ட நாடுகளில் மக்கள் அடைந்த துயரங்கள், அதை எதிர்த்த போராட்டங்கள் எல்லாம் கொரிய மக்களுக்கும் பொறுந்தும்.

கொரிய பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் போகப் பொருளாக ஆக்கியதும், மக்களை சோதனைப் பொருளாக சித்ரவதை செய்து கொன்றதும் வரலாற்றிலிருந்து அளிக்க முடியாது. வேதனை என்னவெனில் அமெரிக்க ராணுவம் தென்பகுதியில் புகுந்தவுடன்  ஜப்பானிய அதிகாரிகளை ஆலோசகர்களாக ஆக்கியது தான். ஜப்பான் மீது அணுகுண்டு வீசுகிற அளவிற்கு பகைமை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் எந்த வகையில் ஜப்பானியர்களை நண்பர்களாக கருதினர் என்பது பலருக்கு புதிராக இருக்கும்.

ஏகாதிபத்திவாதிகள் 19-ம் நூற்றாண்டில் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். காலனிகளை பிடிப்பதற்கு சண்டை போட்டுக் கொள்ளலாம். போரில் வெற்றி பெற்ற வருடைய  காலனியாக அது ஆகிவிடும். எந்த ஏகாதிபத்திய  நாடும், சுதந்திர வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் தடைகள்  விதிக்க கூடாது. இது எனது காலனி முதலீடு செய்ய உள்ளே வராதே என்று இன்னொரு ஏகாதிபத்திய நாட்டை தடுக்க கூடாது. அது போல் எந்த ஏகாதிபத்திய நாடும் இன்னொரு நாட்டின் காலனி அரசியலில் அவர்களது சம்மதமில்லாமல் தலையிடக் கூடாது. இந்த ஏற்பாட்டை ஹிட்லர் உடைக்க முயன்றதும் இரண்டாம் உலகப் போர் நிகழ காரணங்களில் ஒன்றாகும்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இன்றும் கொரியா ஜப்பானின் காலனிதான். இந்தியா பிரிட்டனின் காலனிதான். கொரிய விவகாரத்தில் ஜப்பானை இணைக்காமல் அமெரிக்க ஒரு துரும்பைக் கூட அசைக்காது. அது போல் பிரிட்டனை கலக் காமல் இந்திய அரசியலில் அமெரிக்கா தலையிடாது.

தனி நபர் துதி

வடகொரியாவின் அரசியலில் தனி நபரை பூசனை செய்யும் போக்கு இருப்பது அந்த நாட்டு மக்களின் சோசலிச லட்சியத்தை அடைவதற்கு சிரமங்கள் ஏற்படுத்தும்  என்ற கவலை மார்க்சிஸ்ட்களுக்கு உண்டு. தனி நபர் எல்லாம் சாதிப்பார் என்ற நம்பிக்கையை உருவாக விடுவதோ, அல்லது உருவாக்குவதோ சோசலிச நிர்மானத்திற்கு இன்றி அமையாத மக்களின் அரசியல் பங்கேற்பை  சுருக்கி விடுகிறது.

கார்ல் மார்க்சும், எங்கெல்சும் இதில் தெளிவாக இருந்தனர். தங்களது செல்வாக்கு மேலாண்மை பெறுவதை அவர்கள் விரும்பியதே இல்லை. 1877-ல் வில்ஹெம் பிலாஸ் என்ற ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஒருவனை அதிசய மானுடனாக கருதவைக்கும் பக்தி உணர்வை அதாவது பெர்சனாலிட்டி கல்டை தானும், எங்கெல்சும் விரும்பியதில்லை அதை எப்படி தவிர்த்தனர் என்பதை குறிப்பிடுகிறார்.

19-ம் நூற்றாண்டில் உருவான சர்வதேச தொழிலாளர் சங்க உணர்வோடு உருவான சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் ஹிரோ ஒர்சிப்பின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பொழுது, பாடப் புத்தகங்களிலே தனி நபரை பூசிக்கிற மாதிரி பாடங்கள் எழுதப்படக் கூடாது என்பதை அமுலாக்கினர். குழந்தைப் பருவத்தில் உருவாகும் எண்ணங்களே பிற்காலத்தில் நம்பிக்கைகளை அளக்கும் அளவு கோலாக மாறிவிடுகிறது என்பதை உணர்ந்தே இதைச் செய்தனர். பின் நாளில் மாசேதுங்கை பற்றி மிகையாக கூறியதை ஏற்காமல் அவரது நிறைகுறைகளை கணிக்கிற பக்குவம் மக்களுக்கு இருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி நீடித்து நிற்கிறது.

நல்லுறவிற்கு வட கொரியாவின் முயற்சிகள்

1953-லிருந்து நடுநிலை நாடுகளின் கண்காணிப் பில்தான் வடகொரியா, தென்கொரியா இடையே எல்லை இருந்து வருகிறது. இரண்டு நாட்டையும் இணைக்கிற ரயில், சாலைப் போக்கு வரத்தை உத்தரவாதப்படுத்த அது தயாராக இருந்தாலும் சந்தேகங்களை தென் கொரியா கிளப்பிவிடும். அதனை போக்க நடுநிலை நாடுகளின் உதவியோடு போக்க வடகொரியா தயங்கியதே இல்லை. அமெரிக்காவோடு பல சமரச ஒப்பந்தங்கள் வடகொரியா போட்டுள்ளது. ஆனால் எந்த கட்டத்திலும் 1953-ல் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்க அமெரிக்கா சம்மதித்தது கிடையாது.

1988-லிருந்து வடகொரியா – தென் கொரியா இடையே வர்த்தக உறவு உள்ளது. கிசாங் தொழில் வளாகத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் கமிஷன் அடிப்படையில் பொருட்களை உற்பத்தி செய்து எடுத்துச் செல்கின்றனர். பல ஆயிரம் தென் கொரியத் தொழிலாளர்கள் தினசரி வேலைக்கு வந்து போகின்றனர். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி உள்ளது. ஆனால் ஏற்றுமதிக்கு அமெரிக்கா பல தடைகளை போட்டுள்ளது. தாதுக்களிலிருந்து உலோகத்தை பிரிப்பதிலிருந்து, நவீன ஏவுகணை உதிரி பாகங்கள் எந்திர பாகங்கள் வரை செய்யும் தொழில்கள் இங்கு உள்ளன. அந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கொரிய இணைப்பையே மூச்சாக கொண்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய உலக அரசியல் இணைப்பைத் தடுக்கவும், வடகொரிய தேர்ந்தெடுத்த பொருளாதாரப் பாதையை சிதைக்கவும் முயற்சிக்கிறது. அதன் விளைவாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தை சுற்றி ஏவுகணைகள் விமானம் தாங்கிய கப்பல்கள் பயிற்சி என்ற பெயரில் கொலை வெறிக் கூத்தாடுகிறது. அதற்கு பக்க வாத்தியமாக  மேலை நாட்டு ஊடகங்கள் ஊளையிடுகின்றன, வட கொரியா திணறுகிறது.

மீட்சியுற்ற அணி சேரா இயக்கம்!

உலக அரசியலில் ராணுவக் கூட்டுக்களை வைத்து தலையீடு செய்யும் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக கூட்டுச் சேரா இயக்கம் பிறந்தது. பல காரணங்களால் அணி சேரா நாடுகளின் இயக்கம் படுத்த படுக்கையானது. இப்பொழுது நாம் (NAM) என்று அழைக்கப்படும் இயக்கம் முன்னைவிட பலத்தோடும், எழுச்சியோடும் மீட்சியுற்று ஏழை நாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நிற்கிறது.

இன்று உலகம் முழுவதும், அமெரிக்காவின் போர்வெறியை எதிர்த்து மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு மூலதனம் மேலும் வளருவதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிற WTO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உலகச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் வலிமையான கூட்டு தேவைப்படுகிறது.

கியூபா தலைநகர் ஹவானாவில் 116 நாடுகள் பங்கேற்ற அணிசேரா இயக்கத்தின் 14வது மாநாடு இந்தக் கடமையை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மாநாடு கியூபாவில் நடைபெற்றதும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அணிசேரா இயக்கத்திற்கு கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ தலைமைப் பொறுப்பை பெற்றதும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.

இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட 92 பக்க அரசியல் பிரகடனம், ஏராளமான உலகப் பிரச்சனைகளில் தெளிவாக நிலைபாடுகளை கொண்டதாக உள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், ஐக்கிய நாட்டுச் சபையை ஜனநாயகப்படுத்துவது, ஜனநாயகத்தை பரப்புவது எனும் பெயரில் அமெரிக்கா பல நாடுகளின் சுயாதிபத் தியத்தை பறிக்க முயல்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்தப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.

இஸ்ரேலின் ஆதிக்கப் போக்கையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் பெயர் சொல்லாமல் கண்டிக்கிறது இந்தப் பிரகடனம். வெளிநாட்டு சக்திகள் ஒரு நாட்டை ஆக்கிரமித்து மக்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் மிக மோசமான பயங்கர வாதம் என்று பிரகடனம் குறிப்பிடுகிறது.

குறிப்பிட்ட ஒரு மதம், இனத்தை சார்ந்தவர்களை பயங்கர வாதிகள் என்று கூறுவது கூடாது என்று பிரகடனம் கூறுகிறது. அதே போன்று ஒரு அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு இருக்கும் போது, விடுதலைக்காக மக்கள் நடத்தும் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஈரானிடம் அமெரிக்கா கடைபிடிக்கும் அணுகு முறையையும் பிரகடனம் கண்டிக்கிறது. ஈரான் நாட்டை உலக சமாதானத்திற்கு எதிரியாக சித்தரிக்கும் அமெரிக்காவின் போக்கையும் பிரகடனம் கண்டிக்கிறது. அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்தும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்பதை பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.

ஈரானுக்கு ஆதரவுக்குரல்கள் மாநாட்டில் ஒலித்தன. ஈரான் தாக்கப்பட்டால் எந்த நாட்டிற்கும் இனி எண்ணை கிடையாது என்று அறிவிப்போம் என்றார் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென மாநாடு கோரி யுள்ளது. 5 நாடுகளின் வீடோ (Veto) அதிகாரத்தை அகற்றுவது அல்லது கட்டுப்படுத்த வேண்டுமென மாநாட்டுப் பிரகடனம் கோரியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கினர் சேர்ந்து வாக்களித்தால் வீடோ ரத்து செய்யப்படும் என்ற வகையில் திருத்தம் செய்ய பிரகடனம் வலியுறுத்துகிறது.

இந்த மாநாட்டை துவக்கி வைப்பதற்கு பிடல் காஸ்ட்ரோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பூரண உடல் நலம் பெறும் வரை ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத் தியதால், அவர் மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. எனினும், இந்த மாநாட்டின் ஆதார சுருதியாக அந்த மாமனிதர் திகழ்ந்தார். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் உள்ள அவரது அறையிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை அவர் கவனித்து வந்தார். ஒரு சில உலகத் தலைவர்களை மட்டும் சந்தித்து உரையாடினார். அவர் சந்தித்து உரையாடிய தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் மன்மோகன் சிங். எப்போதும் இந்தியாவின் உற்ற தோழனாய், இந்திய நிலைமைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பிடல் காஸ்ட்ரோ இருந்து வந்துள்ளார்.

விடுதலைக்குப் பிறகு, முப்பதாண்டு காலம் (1989 வரை) இந்தியா பின்பற்றிய பரந்த வெளியுறவுக் கொள்கையாக இருந்து வந்துள்ளது அணிசேராக் கொள்கை. இந்தக் கொள்கை அமெரிக்க அனுதாபிகளுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது. பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் இந்த ஆண்டுகள் அனைத்தும் வீணாக்கப்பட்ட காலங்கள் என்று வர்ணித்தார். பா.ஜ.க ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதாவது, எந்த வல்லரசு அணியிலும் சேராமல், தனித்தன்மையோடு சுதந்திரமாக செயல்பட்டது வீண் என்பது அவரது கருத்து. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் அணி சேர்ந்து அமெரிக்காவிற்கு தாளம் போட்டிருந்தால் எத்தனையோ பலன் களை ஈட்டியிருக்கலாம் என்பது பா.ஜ.க. வில் உள்ள அமெரிக்க ஆதரவாளர்கள் பலரின் கருத்து. அணிசேராக் கொள்கை என்றா லே பல அறிவுஜீவிகள் எரிந்து விழுகிற காட்சியை தொலைக் காட்சி விவாதங்களில் பல நேரங்களில் நாம் கண்டிருக்கிறோம். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் அணிசேரா பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த நிலை 1990 ம் ஆண்டுகளில் மாறியது. அணிசேரா இயக்கம், இந்த காலக்கட்டத்தில் சரிவை சந்திக்கத் துவங்கியது. அப்போது அமெரிக்க ஆதரவு முகாம் சந்தோசக் களிப்பில் மூழ்கியது.

எனினும், அணிசேரா இயக்கத்தின் இந்த சரிவுக் காலத்தில் உலக நிலைமைகளில் நல்ல மாறுதல்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? உலகின் பல நாடுகளில் பல்வேறுபட்ட நிலைமைகள் இருந்தாலும், ஒரு உண்மை மறுக்க முடியாதது.

இன்றைய உலகில் ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் மீது தாக்குதல் நடத்தி, அந்த நாடுகளை அமெரிக்கா கைப்பற்றியது ஒரு கொடூரமான நிகழ்வு. இது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் தான் பாதுகாப்பற்ற தன்மை உலகில் அதிகரிக்க முக்கிய காரணம்.

இதுவே பல தீமைகளுக்கு ஊற்றுக்கண். பல நாடுகள் அவர்களுக்கு உகந்த பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. தங்களது நாட்டு மக்களின் நலன்களுக்காக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவு தான் பயங்கரவாதம் எனப்படும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. அதிக அளவில் பயங்கரவாதக் குழுக்கள் மதத்தின் பெயரால் செயல்படுவதும், பயங்கரவாத செயல்கள் அதிகரிப்பதும் நிகழ்கின்றன.

ஹவானா மாநாட்டில் உரையாற்றிய நமது நாட்டு பிரதமர், பயங்கரவாதம் பற்றி கடுமையாக கண்டித்துப் பேசினார். இதனை கண்டிப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் பிரதமர், தனது உரையில் பயங்கரவாதத்திற்கு மூலகாரணம் யார் காரணம் என்பதை குறிப்பிடவில்லை.

ஒரு பயங்கரவாத குழு வெடிகுண்டு வீசி மக்களை அழிப்பது மட்டும்தான் பயங்கரவாதமா? ஒரு நாடே மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசி தகர்ப்பது பயங்கரவாதம் இல்லையா? இந்த அரசு பயங்கரவாதம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் மூச்சுவிடவில்லை. இதைப்பற்றி பேசத் துவங்கினால், அவர் அமெரிக்காவைத்தான் குற்றம் சாட்டிப் பேச வேண்டியிருக்கும் என்பதால், அவர் அந்த எல்லைக்குச் செல்லவில்லை.

அவர் அமெரிக்காவை குறிப்பிடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய உடனடி காரணம் ஒன்று இருந்தது. ஹவானா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான், அமெரிக்க செனட் சபையில், இந்திய அமெரிக்க அணுசக்தி மசோதா விவாதத்தில் இருந்தது. அதற்கு பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது. இந்த மசோதா சட்டமாக செனட்டில் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற கவலை பிரதமர் பேச்சில் இருந்தது.

ஏற்கனவே இந்திய அரசோடு அமெரிக்கா கையெழுத் திட்டிருந்த இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு மாறாக, இந்திய நலன்களுக்கு விரோதமான ஏராளமான அம்சங்கள் இந்த மசோதாவில் இருந்தது.

இவ்வாறு அமெரிக்கா பல வகைகளில் இந்திய நலனுக்கு துரோகம் இழைத்திருந்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் உறுதியாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்து, அணி சேரா நாடுகளோடு இணைந்து நிற்க தயாராக இல்லை.

இதற்கு அடிப்படைக்காரணம், இந்திய ஆட்சியாளர்களின் வர்க்கத் தன்மைதான். இந்தியப் பெரு முதலாளித்துவம், எப்போதும் ஏகாதிபத்திய மூலதனத்தோடு முரண்படுவதை விரும்புவதில்லை. அப்படியே முரண்படும் நிலை வந்தாலும், முற்றான எதிர்ப்பு நிலை எடுப்பதில்லை. ஏனெனில், இந்திய பெரு முதலாளித்துவ, ஏகபோகங் களின் வளர்ச்சிக்கு, உலக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கூட்டு அவசியமானது.

அணிசேரா நாடுகளின் இயக்க வரலாறே இதற்கு சான்றாக உள்ளது. இரு துருவ உலகம் என்று அழைக்கப்பட்டு வந்த காலத்தில், அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒரு முக்கிய உலக இயக்கமாகத் திகழ்ந்தது.

சோவியத் யூனியன் ஒரு புறம், அமெரிக்கா மறுபுறம் என்று உலகம் இரு கூறாகப் பிரிந்து, இரு முகாம்கள் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், எந்த வல்லரசோடும் சேர மாட்டோம் என்று உறுதியான குரலோடு 1955 ம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகள் சேர்ந்து உருவாக்கிய இந்த அணிசேரா இயக்கம் மலர்ந்தது.

எந்த வல்லரசோடும் சேர்ந்து ராணுவக் கூட்டணி கிடையாது என்று இந்த நாடுகள் அறிவித்தாலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்றாற்போல வல்லரசுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டன. இந்திய ஆளும் வர்க்கம், தொழில் நுட்பம் வளராத நிலையில், கனரக தொழில்கள் உருவாக்க அமெரிக்க உதவியை நாடியது. ஆனால் அமெரிக்கா, இந்தியா சொந்தக்காலில் நிமிர்ந்து நின்றிட விரும்ப வில்லை, தனது வர்த்தக வாடிக்கையாளராக மட்டும் இந்தியா இருந்தால் போதும் என்று கருதியது.

இதனால் வெறுப்புற்ற இந்திய முதலாளித்துவம், பிறகு தான் சோவியத் யூனியன் உதவியை நாடியது. சோவியத் உதவியோடு தான் இந்தியாவின் சுயமான தொழில் வளர்ச்சி சாத்தியமாகியது.

இந்தக் காலக்கட்டத்தில்தான், இந்தியா அணிசேரா நாடுகளோடு நின்று, இந்த இயக்கத்தின் முன்னணி பாத்திரத்தை ஆற்றியது. காலனியாதிக்கம், நொறுங்கி, பல நாடுகள் விடுதலை பெற இந்த இயக்கத்தின் வலுவான குரல் காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்கு வர அணிசேரா இயக்கம் செயலாற்றி வெற்றி கண்டது. 1955ம் ஆண்டு பாண்டுங்கில் நடைபெற்ற மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கைகள் என்று அழைக்கப்படும் 5 கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு துவங்கிய இந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியா தனது வர்க்கத் தேவைகளையொட்டி, ஏகாதிபத்தியங்களோடு முரண்படுதலும், கூட்டு சேருவதும் என இரண்டு எதிர் எதிரான கொள்கையை கடைபிடித்து வந்துள்ளது.

1955 முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களோடு எதிர்நிலை எடுத்தது போன்ற தோற்றம் இருந்தது. எனினும், ஏகாதிபத்தியத்தோடு இருந்த பிணைப்பை இந்தியா முற்றாக கைவிடவில்லை.

1980 ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1990 ம் ஆண்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா, ஏகாதிபத்தியங்க ளோடு, குறிப்பாக, அமெரிக்காவோடு அதிக நெருக்கம் காண முயன்றது.

இதற்கு முக்கியக்காரணம், உள்நாட்டு பொருளாதாரத்தில் துவக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள். புதிய தாராளமயக் கொள்கைகள் என்ற ஒரு புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்தது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் கோலோச்சத் துவங்கின. இது இயல்பாகவே, அந்நிய நிதி மூலதனம், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோடு உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தியது. வளர்ச்சியடைந்த இந்திய முதலாளித்துவம், தனது துரித வளர்ச்சிக்கான சுரண்டல் கொள்கையை நிகழ்த்த அந்நிய நிதி மூலதனத்திற்கும் துணை தேவைப்பட்டது. அந்நிய மூலதனத்திற்கும், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களின் துணை தேவைப்பட்டது.

ஆக, இந்த நிகழ்வுப் போக்கு இயல்பாகவே இந்திய அரசுக்கு அணி சேரா இயக்கத்தின் மீது இருந்த நாட்டத்தைக் குறைத்தது. இதே போன்ற போக்குகள் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்பட்டது. உலகமயம் எனும் பெயரால் உலகவங்கி, சர்வதேவ நிதி நிறுவனத்தின் பிடி இறுகியது.

இந்த நிகழ்வின் இணையான போக்காக, சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமைந்தது. இரு துருவ உலகம் என்று சொல்லப்பட்ட நிலை மாறியது. சோவியத் யூனியன், அமெரிக்கா என்ற இரு துருவங்களில் ஒன்று தகர்ந்த பிறகு இயல்பாக என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? பல துருவங்கள் நிரம்பியதாக இந்த உலகம் மாறியிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது? ஒரு துருவ உலகமாக, அமெரிக்கா ஏகமாக ஆதிக்கம் செலுத்தும் உலகமாக இந்த பூவுலகம் மாற்றப்பட்டது.

சோவியத் யூனியன் சிதைவு, அணிசேரா இயக்கம் நீர்த்துப் போனது ஆகிய இரண்டும் ஒரு சேர நிகழ்ந்தது. இது எதைக் காட்டுகிறது? சோவியத் யூனியன் எனும் மகத்தான சக்தி இருந்தபோது தான், அணிசேரா இயக்கம் எழுச்சியோடு செயல்படுவதற்கான உலகச் சூழலும், வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. சோவியத் யூனியனின் வல்லமை தான் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இந்த உலக நிலை காரணமாகத்தான், மூன்றாம் உலக நாடுகள் தங்களது வளர்ச்சிக்காக அணிசேரா இயக்கம் அமைத்து ஓரளவு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது.

அணிசேரா இயக்கத்தில் இருந்த தலைவர்கள் பல நேரங்களில் எந்த வல்லரசோடும் கூட்டு இல்லை என்று பிரகடனப்படுத்துகிற போது, சோவியத்தையும், அமெரிக்காவையும் சமமாக பார்ப்ப துண்டு. உண்மை என்னவெனில், சோவியத் யூனியன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற நிலை காரணமாகத்தான், அமெரிக்காவிடம் சரணடையாமல், ஓரளவு எதிர்ப்பு காட்டும் தைரியத்தை அணி சேரா இயக்க நாடுகள் பெற முடிந்தது. இதை உணர்ந்தே, பிடல் காஸ்ட்ரோ அன்று சோவியத் யூனியனை அணி சேரா இயக்கத்தின் இயல்பான கூட்டணி நாடு என்று வர்ணித்தார்.

இதனால் தான் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அணி சேரா நாடுகளின் இயக்கமும் பலவீனப்பட்டது. பல நாடுகள் அமெரிக்கா விடம் ஒட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகம் ஒரு துருவ உலகம் ஆனது.

இத்தகு பின்னணியில், இனி வரும் காலங்களில் அணி சேரா இயக்கத்தின் திசைவழி எதுவாக இருக்க வேண்டும்? மாநாட்டு துவக்க உரையில், கியூப பொறுப்பு அதிபர் ரால் காஸ்ட்ரோ இதைப் பற்றி குறிப்பிட்டார். அணிசேரா இயக்கம், சர்வதேச சட்டங்களை காப்பதிலும், 1955-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்சசீலக் கோட்பாடுகளை பாதுகாப்பதிலும் உறுதியாகப் போராட வேண்டும்.

தற்போதுள்ள, சுரண்டல், கொள்ளை அடிப்படையிலான உலகப் பொருளாதார அமைப்பினை மாற்றிட அணிசேரா இயக்கம் உறுதியுடன் போராட வேண்டும். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், இன்றைய உலகமய பொருளாதாரம் இயங்கி வருவதால், சுதந்திர வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று என குறிப்பிட்டார் ரால் காஸ்ட்ரோ. ஒரு சில பணக்கார நாடுகளைக் கொண்டே ஒரு குழுவிற்கும், 80 சதம் மக்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பது அணிசேரா இயக்கத்தின் முக்கிய கடமை. இவையே பிரதான அணி சேரா இயக்கத்தின் முக்கிய பணிகளாக உள்ளன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தின் மூலம் ரஷ்யா இன்று பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனால், ரஷ்யா மத்திய ஆசியாவில் செல்வாக்கு பெற்ற நாடாக மீண்டும் உருவாகியுள்ளது.

சீனா உலகில் மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினை வலுவான அமைப்பாக மாற்றியுள்ளன. இதில் ஈரானும் சேர்க்கப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்காவில் இடதுசாரிகள் மீண்டும் பலம் பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவும், சாவேசும் லத்தின் அமெரிக்க ஒற்றுமையை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் அணிசேரா இயக்கமும் வலுப்பெற்றால், ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் மகத்தான எழுச்சி மலரும்.