மீண்டெழுமா கிரேக்கம்?

 

 • இ.பா.சிந்தன்

 (முறையற்ற கடன் வலையில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கத்தை மீட்க, அந்த நாட்டு மக்களின் போராட்டம் மிகவும் சிக்கலான மாற்றங்களைக் கண்டுவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட பெல்ஜியத்தில் வாழும் இ.பா.சிந்தன் எழுதியுள்ள கட்டுரையை இங்கே வழங்குகிறோம். இவர் ‘அரசியல் பேசும் அயல் சினிமா’ என்ற புத்தகத்தால் பிரபலமாக அறியப்படுபவர். – ஆசிரியர் குழு)

 •  “கிரீஸ் திவாலாகப் போகுதாமே!”
 • “கிரீஸ் நெலமை ரொம்ப மோசமாம். இப்பவோ அப்பவோன்னு இருக்குதாம்”
 • “இனிமே கிரீஸ்ல யூரோவே இல்லாம போயிடும் போலே”

நம்முடைய பாரம்பரிய அரசியல் விவாதத்தளமான டீக்கடைகளிலும், நவீன விவாதத் தளமான இணையத்திலும் கடந்த சில நாட்களாகவே பரபப்பான பேச்சுப் பொருளாக கிரேக்கம் இடம் பெற்று வருகிறது.

கிரேக்கம் உண்மையிலேயே திவாலாகப் போகிறதா?

 

இன்று நேற்றல்ல. இப்படித்தான், கிரேக்கத்தின் நிலை சரியில்லை என்று சொல்லி, மக்களை வாட்டிவதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் அந்நாட்டின் ஆட்சியாளர்கள். அவர்களை ஆட்டுவிப்பது ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய கமிஷன் – ஐரோப்பிய வங்கி என்கிற மூவர் கூட்டணி. “கிரேக்கர்கள் சோம்பேறிகள்” என்று உலக மக்களின் பொதுப்புத்தியில் கருத்துருவாக்கம் செய்கின்றன ஊடகங்கள்.

 

உண்மை என்னவென்றால், உலகிலேயே அதிகமாக உழைக்கும் மக்களில், கிரேக்கர்கள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். மெக்சிகோ மற்றும் கொரியாவுக்குப்பிறகு, கிரேக்க மக்கள் வருடத்திற்கு சராசரியாக 2034 மணி நேரங்கள் வேலை செய்கிறார்களாம். அமெரிக்காவோ முதல் பத்து இடங்களிலும் இல்லை; ஜெர்மனியோ முதல் முப்பது இடங்களிலும் இல்லை.

 

திவால் என்கிற வார்த்தைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான பொருள் இருந்தாலும், மிக எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பைவிட கடன் அதிகமாக இருந்து, அந்த இடைவெளியை சரிசெய்ய மேலும் கடன் வாங்கமுடியாத நிலையும் உருவானால், அந்நாடு திவாலானதாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. கிரேக்கத்தின் நிலை இன்று அதுதான். அந்த நாட்டின் மொத்த உற்பத்தியைவிடவும், ஏறத்தாழ 200% அதிகமாக கடன் இருக்கிறது. இந்தியாவில் சத்யம் நிறுவனத்தின் இராமலிங்க ராஜு ஏமாற்றியதைப்போல, கிரேக்கத்தின் ஆட்சியாளர்களும் கிரேக்கப் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதாக, அந்நாட்டு மக்களை ஏமாற்றியும் வந்திருக்கிறார்கள்.

 

வரலாறு முக்கியம் அமைச்சரே!

 “நமக்கிருக்கிற மலை போன்ற கடனை இந்த தேசம் அழிக்கவேண்டும்; இல்லையேல் அக்கடனே நம் தேசத்தை அழித்துவிடும்” – அந்தரேஸ் (கிரேக்கப் பிரதமர் 1981​​-90; 1993-96)

“ஊதிய உயர்வெல்லாம் எக்காரணம் கொண்டும் கொடுக்க முடியாது.” – கான்ஸ்டாண்டினோல் (கிரேக்கப் பிரதமர் :1990-93)

“எந்தக் கேள்வியும் கேட்காமல் உங்களுடைய பணத்தையும் உரிமையையும் விட்டுக்கொடுப்பதாக உறுதி  கொடுங்கள். அப்போதுதான் நெருக்கடியிலிருந்து விடுபட முடியும்” – கோஸ்டஸ் சிமிடிஸ் (கிரேக்க பிரதமர் :1996-2004)

“நாம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறோம்.”- ஜார்ஜ் (கிரேக்கப் பிரதமர் 2009-2011)

 

கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு அரசியல் கட்சிகளும், மூன்று அரசியல் குடும்பங்களும் சில பெரிய முதலாளிகளும் சேர்ந்து கிரேக்கத்தை திவாலாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கடனை அடைப்பதற்கு மக்களுடைய பணத்தையே எப்போதும் பயனப்படுத்தி வந்திருக்கிறார்கள். நெருக்கடி இருக்கிறது என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கும் தேர்தல்களின்போதும், புதிய கடன்கள் வாங்குகிறபோதும், போலியான நம்பிக்கைகள் வழங்கத் தவறவில்லை.

 

“நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . கிரேக்கத்தின் நிதி நெருக்கடியை தீர்க்கிற முதல் ஆட்சியாளர்கள் நாங்கள்தான்” – யனேவாஸ் பப்பனடோனியோ (நிதி அமைச்சர் 1994-2001)

“நம்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் இரண்டாம் நிலை நாடுகளில் இருந்து, முதலாம் நிலை நாடாக நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்” – கிறிஸ்டோ டௌலகிஸ் (நிதி அமைச்சர் 2001-2004)

ஆண்டாண்டு காலங்களாக கடனிலேயே காலத்தை ஓட்டிய அரசாங்கங்கள், தற்போது நெருக்கடி நிலையின் போது மக்களின் மீது பழிபோடுகிறார்கள்.

“கிரேக்கம் எப்படி இவ்வளவு பெரிய கடனாளியானது என்று மக்கள் கேட்கின்றனர். உங்களுக்கு வேலையும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்தோம் அப்படித்தான் கடன் வந்தது” – தியோடர்ஸ் பங்கலோஸ் (கிரேக்க துணை அதிபர்: 2009-2012)

 முதலிரண்டு உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் கூடுதல் லாபங்களை அடைந்தது. அந்த 25 ஆண்டுகளில் மக்களின் வருமானமும், நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்தே அதிகரித்தது.

 

டேவிட் ஹார்வி குறிப்பிடும்போது, “நெருக்கடி இல்லாமல் முதலாளித்துவமே இல்லை. நெருக்கடி நிலை அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். முதலாளித்துவத்தில் இலாபம்தானே முதல் குறிக்கோள். ஆண்டுக்காண்டு இலாபம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உற்பத்திச் செலவைக் குறைப்பதும், விலையேற்றம் செய்வதும் இன்றியமையாததாகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபோது, அவர்களின் வாங்கும் திறனும் குறைந்தது. அது மீண்டும் முதலாளித்துவத்தை பாதித்தது. மக்களின் வருமானம் குறைந்ததால் பொருட்களின் நுகர்வும் வெகுவாக அதற்கு தீர்வாக (?!?) புதுவகையான முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் கடன் பொருளாதாரம். 1980 களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு போதிய பணம் கையிருப்பு இல்லையெனில், கடன் வாங்கி எதையும் வாங்கலாம் என்பன போன்ற கிரெடிட் திட்டங்கள் பிரபலமாக்கப்பட்டன. 1970 களில் தொடங்கிய நெருக்கடியை 20-30 ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு இத்திட்டங்கள் உதவின. ஆனால் 1990 களின் இறுதியில் கடனும் பெரும் சுமையாக மாறி பல்லிளித்தது.” என்று கூறுகிறார்.

 

அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனைகள் பெரிய அளவில் தலைதூக்கி, நிதியமைப்பே தகர்ந்து போனதும் இவ்வாறுதான்.

பொருளாதார நிபுணர் சமீர் அமின், ஐரோப்பிய நிலையைப் பற்றி குறிப்பிடும்போதுயூரோ நாணயத்தைப் பொருத்த வரையில் அதற்கென ஒரு தேசம் கிடையாது. தேசமில்லாமல் ஒரு நாணயம் இருக்க முடியாது. டாலரில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கென “அமெரிக்கா” என்கிற தேசம் இருக்கிறது. ஆனால், யூரோவிற்கு அதில்லை. ஐரோப்பா என்பது அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பாக உருவாகவில்லை. ஐரோப்பாவிற்கு அதன் உறுப்பினர்களின் மீது முறையான அரசியல் அதிகாரமும் இல்லை.”

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கல்கள்:

 

பெருமுதலாளிகள் தங்களது வியாபாரத்தை தங்குதடையின்றி நடத்துவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியமே உருவாக்கப்பட்டது. எளிய மக்களுக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாம் அந்த ஒன்றியத்திற்கு கவலையில்லை. உதாரணத்திற்கு, ஐரோப்பா முழுவதும் சீரான குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட நிர்ணயிக்கவில்லை

 

நாடுகளுக்கிடையிலான சமநிலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடக்கத்திலிருந்தே இல்லை. அதனால்தான் PIIGS (போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) போன்ற வரிய ஏழை நாடுகள் உருவாயின. பெயரளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா நாடுகளும் சமமென சொல்லப்பட்டாலும், “மைய நாடுகள்” என்றும் “துணை நாடுகள்” என்றும் இரண்டு வகையான நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. துணை நாடுகளில் நெருக்கடி மிகவும் தீவிரமாகவே இருந்து வருகிறது. ஜெர்மனி போன்ற மைய நாடுகள், யூரோ-வினால் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் எல்லா நாடுகளும் பெரிய போட்டியனை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் துணை நாடுகள் எப்போதும் போட்டியில் பின்தங்கியே இருந்து வந்திருக்கின்றன. அதற்கு யூரோ மிகமுக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

மூன்றாமுலக நாடுகளின் கடன் ஒழிப்புக்குழுவின் தலைவர், எரிக் துசன் கூறுகையில் “ஐரோப்பிய நாடுகள் இணைக்கப்பட்ட விதத்தினால்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. தெருவில் சிறிய போட்டிகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்தவரை அழைத்துக் கொண்டுபோய் பெரிய குத்துச் சண்டை வீரரான முகமது அலியுடன் மோத வைத்து, “உங்களில் யார் வெல்கிறார் என்று பார்ப்போம்” என்றால் எப்படி இருக்கும். அப்படியானதொரு போட்டியைத்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் சந்திக்க நேரிட்டது.

 

இடதுசாரிக் கட்சியின் துணைத் தலைவர், சாரா வாகன்னெக்த் இந்த ஏற்றதாழ்வைக் குறிப்பிட்டு “கடந்த சில ஆண்டுகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால், ஜெர்மன் தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 7% உயர்ந்திருக்கிறது. ஆனால், அதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் 27% உயர்ந்திருக்கிறது.” தெரிவித்துள்ளார். இந்த இடைவெளியே நமக்கு பல கேள்விகளுக்கு பதில் சொல்லும். ஜெர்மனியின் வளர்ச்சியை மற்ற நாடுகளால் பின் தொடரவே முடியவில்லை.

 

கிரேக்க நெருக்கடிக்கான காரணங்கள்:

 

கிரேக்கத்தைப் பொறுத்த வரையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு முக்கியமான காரணங்களை கவனிக்க வேண்டும். அந்நாட்டின் வரவை விட செலவு எப்போதும் அதிகமாகவே இருப்பதனால், பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. அதனால் கடன் அதிகமாகி, அதற்கான வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால், அடுத்து வருகிற ஆண்டில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமில்லாமல், கிரேக்கத்திற்கு வரலாற்று ரீதியாகவே கடன்கள் உள்ளன. இவையெல்லாமுமாக சேர்ந்து, கடன்களையும் பற்றாக்குறையையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருப்பதால், கிரேக்கத்தின் கடனும் பற்றாக்குறையும் மேலும் அதிகமாகியிருக்கிறது. அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், முழுக்கடனுக்கும் கிரேக்கமே பொறுப்பாளியாகி, அவர்களே திருப்பி செலுத்த வேண்டிய நிலை வரும். அதனால் உள்ளேயே இருக்க முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கிறது கிரேக்கம். இது கிரேக்கத்திற்கான நிலை மட்டுமல்ல. பிற துணை நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலிக்கும் பொருந்தும்.

 

1821 இல் கிரேக்கம் விடுதலை பெற்றதிலிருந்தே கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1980களில் கடன் அளவு மிகப்பெரிய அளவிற்கு உயரத் துவங்கியது. கடந்த 30-40 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் பின்பற்றிய தவறான வரிக் கொள்கையும் அதற்கு முக்கிய காரணம். அதிக அளவிற்கு கடன் வாங்கியதற்கு, கிரேக்கத்தின் ஆட்சியாளர்கள் யாருடைய நலன் சார்ந்து இயங்கினார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1980-90களில் பிரதமராக இருந்த அன்ட்ரியாஸ் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், பெரிய முதலாளிகளிடமும் நிறுவனங்களிடமும் நியாயமான வரியினைக் கூட வசூலிக்காததால், அரசுக்கு வருமானம் இல்லாமல் போனது, செலவு மட்டுமே அதிகரித்தது. அதோடு மட்டுமின்றி, நட்டத்தில் இயங்கி வந்த பல தனியார் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட்டார். அதனால், அந்நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வேலை பறிபோகாமால் தடுக்க முடிந்தது. ஆனால், உண்மையிலேயே மறைமுகமாக அவர் அதவியது அந்நிறுவனங்களின் முதலாளிகளுக்குதான். அவர்களின் நட்டத்தையும் அரசே ஏற்றதால், அரசின் கடன்களும் நிதிப் பற்றாக்குறையும் கிடுகிடுவென உயர்ந்தன.

 

அன்ட்ரியாசுக்குப் பிறகு வந்த பிரதமர் மிட்சோடகிசும் கடன் வாங்குவதைத் தொடர்ந்தார். அப்போதுதான், ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமான மாஸ்திரிக்த் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, நிதிப் பற்றாக்குறையை போக்க, தாராளமயமாக்கலை எல்லா நாடுகளிலும் அமல்படுத்த வேண்டுமென்றும், சந்தைப் பொருளாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அடுத்து வந்த பிரதமர் கோஸ்டாசின் காலத்தில், கடன் கொஞ்சம் குறைந்திருந்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்பகால மாய வளர்ச்சிகளும் காரணமாக இருந்தன. ஆனால் கோஸ்டாசோ, பெருமுதலாளிகளின் வரியை 10% குறைத்தார். அதன் மூலம் கிரேக்கத்தின் வருமானம் மீண்டும் குறைந்து, கடன் சுமை அதிகரித்தது.

அதிகரித்தன முறையற்ற கடன்கள்:

1927 இல் அலெக்சாண்டர் சாக் என்பவர் முறையற்ற/நியாயமற்ற கடன் என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அதன்படி, சில கடன்களை முறையற்றதாகவும் நியாயமற்றதாகவும் வரையறுத்து விடலாம். அவ்வாறு வரையறுக்கப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றார்.

“முறையற்ற கடனாக” அறிவிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கவேண்டும்:

 1. மக்களின் அனுமதி பெறப்படாமல் அரசாங்கமே தன்னிச்சையாக கடன் வாங்குதல்,
 2. வாங்கிய கடனை மக்களின் நலன்களுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல்,
 3. கடன் கொடுத்தவருக்கும் இவ்வுண்மைகள் தெரிந்திருத்தல்

ஆகிய மூன்றும் ஒரு கடனில் தொடர்புடையவையாக இருந்தால், அக்கடனை “முறையற்ற கடன்” என அறிவித்து, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்பதுதான் அக்கோட்பாட்டின் விதி.

சாக் முன்மொழிந்த இத்தத்துவம் முற்போக்கானதாகவும், அன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுவதாகவும் இருந்தது.

 • முதன்முறையாக அதனைப் பயன்படுத்தியது வேறுயாருமல்ல. அமெரிக்காதான். 1898இல் ஸ்பெயினிடம் போரில் வெற்றி பெற்று, கியூபாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது அமெரிக்கா. கியூபாவின் பெயரில், ஸ்பெயின் வாங்கிய கடன்கள் அனைத்தையும் அமெரிக்காதான் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், “முன்னாள் ஆட்சியாளர்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் முறையற்ற கடன்கள். அதனால் அதனை திருப்பிச் செலுத்தமுடியாது” என்று அமெரிக்கா மறுத்துவிட்டது.
 • மெக்சிகோவின் மன்னராக இருந்த மேக்ஸ்மிலியனின் ஆட்சி கவிழ்ந்து, குடியரசு ஆட்சி அமைந்தது. மேக்ஸ்மிலியன் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள், மெக்சிகோவின் புதிய ஆட்சிக்கு பெரிய பாரமாக இருந்தது. மேக்ஸ்மிலியனின் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாது என்று அரசு அறிவித்தது. அவருக்கு மரணதண்டனையும் வழங்கியது.
 • 2002-ல் ஈராக்கை ஆக்கிரமிக்க திட்டமிட்டது அமெரிக்கா. ஈராக் அமெரிக்காவின் வசம் வந்துவிட்டால், அதன் கடன்களுக்கும் அமெரிக்காவே பொறுப்பாகிவிடும் என்று அஞ்சியது. அதனால், போருக்கு முன்னரே ஈராக்கின் அனைத்து கடன்களும் சதாம் உசேன் வாங்கிய “முறையற்ற கடன்கள்” என்று அறிவிக்க போதுமான ஆவணங்களை தயார்செய்துவிட்டுத்தான், போருக்கே புறப்பட்டது அமெரிக்கா. 2003இல் ஈராக்கைப் பறித்துக்கொண்டபின், ஜி8 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், அதனை அறிவித்தனர். ‘ஈராக்கின் புதிய அரசு கடனின்றி இருக்கலாம்’ என்றனர். அவர்கள் செய்தது நியாயமானதுதான் என்று உலக மக்களை நம்பவைக்க, மிகப்பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது. ‘சதாம் உசேன் காலத்தில் வாங்கப்பட்ட கடன்கள் அனைத்தும், அவரது சொந்த செலவுக்கே பயன்பட்டது’ என்றும், ‘ஆடம்பர மாடமாளிகைகள் கட்டப்பட்டன’ என்றும் ஊடகங்களை வைத்து செய்தி பரப்பப்பட்டன. உலக மக்கள் நம்பினர். ஆனால், கடன்கொடுத்த பல நாடுகளும் அமெரிக்காவிடம் முறையிட்டன. “ஈராக்கின் கடன்களை தள்ளுபடி செய்தால், வேறு பலரும் இதேபோன்று தள்ளுபடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அது பெரிய பிரச்சனையாகிவிடும். காங்கோவில் மொபுட்டுவின் கடனையும், பிலிப்பைன்சில் சர்வாதிகாரி மார்கோசின் கடனையும், தென்னாப்பிரிக்காவில் முன்னாள் இனவெறி அரசின் கடனையும், தள்ளுபடி செய்யச் சொல்வார்கள்” என்று கடன்கொடுத்தவர்கள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். “முறையற்ற கடன்” என்கிற வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈராக்கின் கடன் விவகாரத்தை ஒளிவுமறைவாக அமெரிக்காவும் கடன் கொடுத்தவர்களும் பேசிமுடித்துக்கொண்டனர்.

மற்றொரு நாடு தனது சொந்த முயற்சியால், தன்னுடைய கடன்களை “முறையற்ற கடனாக” அறிவித்து நிரூபித்தும் காட்டியது. தென்னமெரிக்காவின் ஈக்வடார் தான் அந்நாடு.

கிரேக்கத்தின்முறையற்ற/நியாயமற்ற கடன்”:

 

கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா? அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார்? என்று கடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்க மறுத்திருக்கிறார்கள். தற்போது புதிதாக பதவியேற்றிருக்கிற கிரேக்க அரசுதான், இதில் புதிய முயற்சிகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது.

 • 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 1 பில்லியன் யூரோ வரையிலும் இலஞ்சம் கொடுத்து பல அரசு குத்தகைகளை பெற்றிருக்கிறது. ஒரு இலட்சம் யூரோ இலஞ்சம் வாங்கியதாக ஒரு முன்னாள் போக்குவரத்து அமைச்சரே ஒப்புக்கொண்டார். மற்றோர் அரசியல் கட்சியோ, ஒரு இலட்சம் யூரோவுக்கு மேல், கட்சி நிதியாக வாங்கினோம் என்றும் ஒப்புக்கொண்டது. பிரச்சனை பெருசாகிக்கொண்டிருந்ததால், சிறிய தொகையினை தண்டனையாகப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக் கொண்டது.
 • இது போன்று எண்ணற்ற வழக்குகள், பல பெரிய நிறுவனங்கள் மீது இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நகர்கின்றன. இப்படி கொடுக்கப்பட்ட லஞ்சப்பணமும் சேர்ந்ததுதானே  கிரேக்கத்தின் கடன்கள். அவையும் மக்கள் மீதே விழுகிறது.
 • 2001-ல், கிரேக்கத்தின் கடனை குறைத்துக் காட்டினால், மேலும் கடன் வாங்கலாம் என்பதால், சர்வதேச திருடர்களான கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை அணுகியது அப்போதைய கிரேக்க அரசு. ஜப்பான் நாணயமான யென்னிலும், டாலரிலும் இருந்த கிரேக்கத்தின் பல கடன்களை, மிகப்பழைய நாணய மாற்று விகிதத்தைக் கொண்டு மாற்றி, குறைவான கடன்கள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்கியது. இதன் மூலம், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் யூரோ வரை கட்டணம் செலுத்தியிருக்கிறது கிரேக்க அரசு. அதோடு மட்டுமில்லாமல், 2001-லிருந்தே வருடந்தோறும், கிட்டத்தட்ட 400 மில்லியன் யூரோ வரை அந்நிறுவனத்திற்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை கிரேக்கத்தின் கடன் மேலாண்மை நிறுவனமாக நியமித்தது 2010 முந்தைய கிரேக்க அரசு. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதைதான் அது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, யென்னிலிருந்து யூரோவிற்கு மாற்றப்பட்ட கடன்களிலும் நிறைய தவறு நிகழ்ந்திருப்பதால், 5 பில்லியன் யூரோவிற்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம். இவையாவும் கிரேக்க மக்களின் தலையில் கடன்களாக திணிக்கப்படுகிறது.
 • ஒரு பக்கம் கிரேக்கத்திற்கு கடன் வழங்கிக் கொண்டிருந்த ஜெர்மனி, மறுபக்கம் அப்பணத்தை எல்லாம் ஆயுதங்கள் விற்று திரும்ப எடுத்துக்கொண்டது. கிரேக்க  ஊழல் அரசியல்வாதிகளுக்கு பங்கு வழங்கப்பட்டமையால், இது எளிதாக நடந்திருக்கிறது. கடனையும் கொடுத்து, அதே பணத்தில் தன்னுடைய ஆயுத வியாபாரத்தையும் நடத்தியது ஜெர்மனி. யாருடன் போருக்கு செல்வதற்கு இப்படி ஆயுதங்கள் வாங்கி குவித்தது?

 

ஜெர்மன் இடதுசாரிக் கட்சியின் துணைத் தலைவர் சாரா வாகன்னெக்த் , “2010 இல் கிரேக்க நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, ஜெர்மனி பல நிபந்தனைகள் விதித்தது, ‘கிரேக்கத்தில் ஓய்வூதியம் குறைக்கப்படவேண்டும்; மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட வேண்டும்;’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ஜெர்மனியிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதை மட்டும் நிறுத்தவே கூடாது என்கிற நிபந்தனையும் சேர்த்தே விதிக்கப்பட்டது.”

 

எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும், தங்களது ஆயுத வியாபாரம் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடக்கவேண்டும் என்கிற அவர்களின் எண்ணத்தை என்னவென்று சொல்வது.

 

2010 இல் கிரேக்கத்தின் நிதி நிலை சரியில்லை என்று அறிவித்த பின்னரும், 2.5 பில்லியன் யூரோவிற்கு போர்க்கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது பிரான்சு. 400 மில்லியன் யூரோவிற்கு ஹெலிகாப்டர்களும், 100 மில்லியன் யூரோவிற்கு ரபல் போர்விமானமும் வாங்கியிருக்கிறது முந்தைய கிரேக்க அரசு. இன்னும் பல போர் விமானங்களை வாடகைக்கு கொடுத்திருக்கிறது. 3 பில்லியன் யூரோவிற்கு நீர்முழுகிக் கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது ஜெர்மனி. இவையெல்லாம் நடந்தது 2010-க்குப் பின்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் இருக்கவேண்டுமென்றால், பிரான்சிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் தொடர்ந்து ஆயுதங்கள் வாங்கியே தீரவேண்டும் என்பது மறைமுக கட்டளை. இல்லையென்றால் கடன் பேச்சுவார்த்தைகள் சுமூகமாகச் செல்லாது.

 • உலகிலேயே அதிகமாக ஆயுத இருக்குமதி செய்கிற நாடுகளில் கிரேக்கம் 5-வது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுத இறக்குமதி சதவிகிதத்தைக் கணக்கில் எடுத்தால், சீனா மற்றும் இந்தியாவையும் பின்னுக்குத்தள்ளி உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது கிரேக்கம். ஆக, கிரேக்கத்தை திட்டமிட்டே ஒரு ஆயுத விற்பனை நிலமாகவே நடத்தியிருக்கின்றன ஐரோப்பிய மைய நாடுகள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியே வருவதற்கு, கிரேக்கத்திற்கு 370 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அது பெரிய தொகையாகத் தோன்றினாலும், மற்றுமொரு புள்ளிவிவரம் நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும்.

உலகின் பல நாடுகளில் உள்ள வங்கிகள், 2007-லிருந்து கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக திவாலானதாக அறிவித்தன. அதில் பெரும்பாலான வங்கிகள், அரசிடமிருந்து ஏராளமான பணத்தினை பெற்று, தங்களது நெருக்கடியைப் போக்கிக்கொண்டன. அவையனைத்தும் மக்களின் வரிப்பணம். உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மக்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டன.

 

நிறுவனம் டாலரில் பெற்ற தொகை கிரேக்கத்தின் தேவையில்எவ்வளவு %?
சிட்டி குழுமம் 2,513,000,000,000 680
மோர்கன் ஸ்டான்லி 2,041,000,000,000 552
மெரில் லின்ச் 1,949,000,000,000 527
பேங்க் ஆஃப் அமெரிக்கா 1,344,000,000,000 364
பார்க்லே பிஎல்சி 868,000,000,000 235
பேர் ஸ்டேர்ன்ஸ் 853,000,000,000 231
கோல்ட்மேன் சாக்ஸ் 814,000,000,000 220
ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து 541,000,000,000 147
ஜேபி மார்கன் 391,000,000,000 106
தாஷ் பேங்க் 354,000,000,000 96
யு பி எஸ் 287,000,000,000 78
கிரெடிட் சூசே 262,000,000,000 71
லேமன் பிரதர்ஸ் 183,000,000,000 50
பேங்க் ஒப் ஸ்காட்லாந்து 181,000,000,000 49
பிஎன்பி பரிபாஸ் 175,000,000,000 48
வெல்ஸ் ஃபார்கோ 159,000,000,000 43
டெக்சியா 159,000,000,000 43
வாகோவியா 142,000,000,000 39
ட்ரெஸ்ட்னெர் பேங்க் 135,000,000,000 37
மொத்தம் 13,351,000,000,000 3609

 

மேலும் சில சிறிய வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், 16 ட்ரில்லியன் டாலர்களையும் தாண்டுகிறதாம். பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், மக்களின் வரிப்பணம் வாரிவாரி இறைக்கப்படுகிறது. அதே ஒரு தேசத்திற்கே பிரச்சனை என்றால், அப்போதும் மக்களே சுரண்டப்படுகின்றனர். கிரேக்கத்தின் 370 பில்லியன் டாலரை தள்ளுபடி செய்தால், அந்நாட்டின் ஒரு கோடி மக்களும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடர முடியும்.

மீண்டெழுந்த அர்ஜெண்டினா:

அர்ஜெண்டினா என்கிற தென்னமெரிக்க நாடு 1824ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் கடனில் சிக்கியது. அப்போதிலிருந்து தொடர்ந்து கடன் தான். அதிலும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடன் கழுத்தை நெரித்தது. புதிய தாராளமயக் கொள்கைகளை சோதிக்கிற பரிசோதனை நிலமாகவே அர்ஜெண்டினாவை நடத்தியது சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.)

 

அந்நாட்டில் எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளிடம் கொடுக்க வைத்தது ஐ.எம்.எஃப். அரசின் நிதிவருவாய் குறைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லாமல் போயிற்று. 2001-ல் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராட துவங்கியதும், வேறுவழியின்றி ஐ.எம்.எஃப்-க்கு உறுதுணையாக இருந்த அர்ஜெண்டினா அதிபர் கார்லஸ் மேனம் ஓடி ஒளிந்துகொண்டார்.  வாராவாரம் அதிபர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தனர். நெருக்கடியின்போது  2003 இல் நடந்த தேர்தலில், நீதிக்கட்சி வெற்றிபெற்றது. கிர்சனர் அதிபராக பொறுப்பேற்றார். மக்கள் போராட்டங்களிலிருந்து வெற்றி பெற்ற அதிபர் என்பதால், ஐ.எம்.எஃப்-க்கு அடிபணியவில்லை.

 

ஒரு நாடு திவாலாகிறபோது இரண்டு முக்கியமான பிரச்சனைகள் அந்நாட்டின் முன் இருக்கும்:

 1. நாட்டின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி தொய்வடைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, அடுத்தவேளை சோற்றுக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியிருக்கும்.
 2. நாட்டின் உள்நாட்டு/வெளிநாட்டு கடன்களும் வட்டிகளும் திருப்பி செலுத்தமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கும்.

இவ்விரண்டில், புதிய அர்ஜெண்டினா அரசு முதல் பிரச்சனையை தீர்ப்பதிலேயே ஆர்வம் காட்டியது.

 

 1. அர்ஜெண்டினா திவாலானதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 2. கடன்களை மறு ஆய்வு செய்து, கடன் வழங்கியவர்களோடு விவாதித்து, கால அவகாசத்தை 2002-2008 வரையில் திருப்பித் தருவதற்கான திட்டத்தை முன்மொழிந்தது அர்ஜெண்டைனா அரசு.
 3. முதலாளிகளால் கைவிடப்பட்டு பூட்டுபோடப்பட்ட தொழிற்சாலைகளை, தொழிலாளர்களே ஆக்கிரமித்து நடத்தத் துவங்கினர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாக முடிவெடுத்தனர். எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும், விருப்பப்பட்டால் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம் என்று அர்ஜெண்டினா அரசு சட்டமே இயற்றியது. அதன்மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணியிழப்பு தடுக்கப்பட்டது.

 

வெனிசுலாவும் அர்ஜெண்டினாவிற்கு தன்னாலான உதவிகளை செய்தது. அர்ஜெண்டினாவின் கடன்களுக்கான பத்திரங்களை வெனிசுலா வாங்கியது. அதன்மூலம், அர்ஜெண்டினாவிற்கு கடன்களை தீர்க்க சிறிது காலஅவகாசமும் கிடைத்தது.

டங்கமறுத்த ஈக்வடார்:

தென்னமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய நாடு ஈக்வடார். ஆனால் ஈக்வடாரின் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டு மக்கள் பார்த்ததெல்லாம் சர்வாதிகாரமும், ஏழ்மையும், கடன்களும், பொருளாதார அடியாட்களையும் தான்.

 

1982இல் ஐ.எம்.எப்-ன் நிர்வாகிகள் சிலர் ஈக்வடாருக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்களோடு கடன்கொடுக்கத் தயாராக இருந்த சிலரும் உடன் சென்றனர். ஈக்வடாரின் தேவைகளையும், கடந்தகால கடனை திருப்பிச் செலுத்த பணம் தேவை என்கிற நிலைமையையும் குறிப்பிட்டு மேலும் கடன் வழங்கினர். கடன்தொகையின் முதல் ஏறிக்கொண்டே இருந்தது. வட்டியை செலுத்துவதற்கு, மீண்டும் கடன் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டது ஈக்வடார்.

 

இத்தகைய பொருளாதார தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடும் ஜான் பெர்கின்ஸ் என்ற முன்னாள் பொருளாதார அடியாள், “என்னுடைய முக்கியமான பணி, ஈக்வடார் இந்தோனேசியா போன்ற மூன்றாமுலக நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுவதுதான். அவர்களால் திருப்பித் தரவே முடியாத அளவிற்கு பில்லியன் கணக்கில் கடன்களைத் தருவது தான் என் வேலை. ஆனால் அந்நாடுகளுக்கு  ஒரு நிபந்தனை விதிப்போம், அவர்களுக்கு அளிக்கும் கடன்தொகையில் 90%த்திற்கும் மேலான பணத்தை அமெரிக்க முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் குத்தகைகள் கொடுப்பதிலேயே செலவு செய்யப்படவேண்டும் என்பது தான் அது. அந்நிறுவனங்களும் கடன் வாங்கிய நாட்டிற்கு சென்று பாலங்கள் கட்டுவது, போக்குவரத்து வசதிகளை நிறுவுவது போன்றவற்றை செய்வார்கள். அவையாவும் அந்நாட்டின் பணம் படைதவர்களுக்கே பயன்படுமேயன்றி, ஏழைகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த கடனில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கும். அந்நாடுகள் நிரந்தர கடனாளிகள் ஆகிவிடுவார்கள். ஆகா, நாங்கள் போட்ட பணத்தை எங்கள் நிறுவனங்களுக்கே வந்துசேர்ந்துவிடும். அந்த நாடும் தொடர்ந்து எங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டே இருக்கும்.”

 

1985 இல் துவங்கி 2005 வரை ஈகுவேடாரின் 50% வருவாய், கடன்களை திருப்பி செலுத்தவும், அதற்கான வட்டியை அடைக்கவுமே செலவிடப்பட்டது. இதனால் வருடத்திற்கு 3-4 பில்லியன் டாலர்களை ஈக்வடார் இழந்தது. ஆனால் நாட்டின் அடிப்படை தேவையான மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 4% கூட செலவிட முடியவில்லை. வறுமை தலைவிரித்தாடியது. நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது.

 

மாற்றத்திற்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய லூசியோ அதிபராகிற நேரத்தில் போராட்டங்கள் அடங்கின. ஆனால் அவர் மேலும் பல ஒப்பந்தங்கள் போட்டு, மக்களின் வரிச்சுமையை அதிகரித்தார்.

பல போராட்டங்களுக்குப் பின்னர் அந்த நாட்டின் அதிபராக பொருப்பேற்ற இடதுசாரியான ரஃபேல் கொரேயா, “சர்வதேசக் கடமைகளைவிடவும் நமக்கு முக்கியமான தேசக்கடமைகள் இருக்கின்றன. சர்வதேச கடன்களை அடைக்கும் நிலைக்கு முதலில் நாம் வருவோம். அதன்பிறகு, அவர்களுக்கு பதில் சொல்வோம். நாம் உயிரோடு வாழ்வதுதான் இப்போதைக்கான முன்னுரிமை. கடன்களை திருப்பி செலுத்துவது இரண்டாம் பட்சம்தான்” என்று அறிவித்தார்.

 

முதலில் ஈக்வடாரின் மத்திய வங்கியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த .எம்.எப். மற்றும் அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றினார்.

 

வெறும் பேச்சோடு நிற்காமல், பதவியேற்று 6 மாதகாலத்திற்குள் ஈக்வடாரின் கடன்களை மறுஆய்வு செய்வதற்கு தணிக்கைக்குழு ஒன்றை நியமித்தார். 22 பேர் கொண்ட அக்குழு, 14 மாதங்கள் ஆய்வு நடத்தி 1956 முதல் 2006 வரையில், ஐ எம் எப், உலக வங்கி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொடுத்த கடன்களும், எல்லா பரிவர்த்தனைகளும் அலசி ஆராயப்பட்டது. அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எந்த நாடும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரான்சின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி ஈக்வடாருக்கு கண்டனம் தெரிவித்தது நிதியமைச்சகம். எல்லா தடைகளையும் தாண்டி ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. மக்களின் முன்னிலையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 70% கடன் முறையற்ற கடன் என்று ஈக்வடார் அரசு அறிவித்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஈக்வடாரின் கடன்பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டவர்கள், மிகக் குறைவான விலைக்கு (20% அளவிற்கு) அதனை விற்றனர். இவற்றை மறைமுகமாக ஈகுவடார் அரசே வாங்கியது, இதனால் 3 பில்லியன் டாலர் அளவிலான பத்திரங்களை வெறும் 800 மில்லியன் டாலருக்கு ஈக்வடார் அரசு வாங்கியது.   இப்படி 7 பில்லியன் டாலர்கள் வரை சேமித்தது ஈக்வடார் அரசு.

 

பணக்காரர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்களா? வரிசெலுத்தியே பழக்கமில்லாத பெரும் பணக்காரர்கள் மீது ஈக்வடார் அரசு வரி விதித்துள்ளாதால், அந்த நாட்டில் குழப்பத்தை உருவாக்க பணக்காரர்கள் போராடத் துவங்கியிருக்கிறார்கள். ரஃபேல் கொரேயாவின் அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

கிரேக்கம் – இன்றும் நாளையும்:

அர்ஜெண்டினா மற்றும் ஈக்வடாரைப் போலவே மக்கள் போராட்டத்தின் வழியாக, சிரிசா என்ற கட்சியின் தலைமையில் ஒரு முற்போக்கான அரசு இவ்வாண்டு துவக்கத்தில் பதவியேற்றது. இழப்பதற்கு எதுவுமில்லாத ஏழைகள் தான் போராட வருவார்கள் என்று மார்க்ஸ் சொன்னதைப்போல, கிரேக்கம் மிகமிக மோசமான நிலையில் இருக்கும்போது தான் புதிய ஆட்சியே பொறுப்பேற்றது. அதனால், நெருக்கடியிலிருந்து மீண்டுவருவது கிரேக்கத்திற்கு அத்தனை எளிதானதல்ல என்பதை புதிய அரசு உணர்ந்தே இருந்தது. ஈக்வடாரின் பாதையைப் பின்பற்றி, கிரேக்கமும் “கடன் மறுஆய்வுக்குழு” அமைத்தது. ஈக்வடார் கடன்களை ஆய்வு செய்த குழுவில் பங்கெடுத்த பெல்ஜியத்தைச் சேர்ந்த எரிக் துசன் தான் இக்குழுவை தலைமையேற்று நடத்துகிறார். அவர் மூன்றாம் உலக நாடுகளின் கடன் ஒழிப்புக் குழுவின் சர்வதேசத் தலைவராகவும் இருக்கிறார். அக்குழு ஜூன் மாதம் வெளியிட்ட முதல் அறிக்கையின்படி ஏராளமான கடன்கள் “முறையற்ற கடன்கள்” தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில், மக்கள் மீது அதிக வரிகளை திணிக்கச் சொல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளை ஏற்கமாட்டோம் என்று புதிய அரசு அறிவித்தது. கிரேக்க அரசின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த யானிஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியமாட்டோம் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை பொருளாதார் தீவிரவாதிகள் என்று சாடினார்.

கிரேக்கத்தில் ஒரு இடதுசாரி அரசு அமைந்ததை ஐரோப்பிய கமிஷனாலும், ஒன்றியத்தாலும், ஜெர்மனியாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்னெப்போதையும்விட பேச்சுவார்த்தைகளில் கடுமையாகவே நடந்துகொண்டனர். ஆனால், அவர்கள் விதிக்கிற கட்டளைகள் எதற்கும் விட்டுக்கொடுக்காமலேயே இருந்தார் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ். ஐரோப்பிய முதலாளிகள் எல்லோரும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வர, யானிஸ் மட்டும் எளிமையாக எப்போதும் போல சாதாரண டீ சர்ட்டிலேயே மிகப்பெரிய பேச்சுவாத்தைகளில் பங்கெடுத்துவந்தார். சிக்கன நடவடிக்கைகள் என்கிற பேரில் எவ்வித நிதிநெருக்கடிகளையும் மக்கள்மீது திணிப்பதை யானிசும், சிரிசா கட்சியும் எதிர்த்தே வந்தன.

கிரேக்க அரசு முன்வைத்த எந்தத்திட்டத்தையும் ஏற்க ஐரோப்பிய ஒன்றியமும் தயாராக இல்லை. “முந்தைய அரசு ஒப்புக்கொண்டவற்றை எல்லாம் மாற்ற உங்களுக்கு உரிமையில்லை” என்று நேரடியாகவே கிரேக்கத்தின் புதிய அரசு அதிகாரமற்றது என்றனர்.

இதற்கிடையே “சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறீர்களா? இல்லையா?” என்று மக்களிடம் ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகளின் வற்புறுத்தலின் காரணமாக, வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது அரசு. “இல்லை” என்று சொன்னால், கிரேக்கத்தை யூரோவை விட்டே துரத்திவிடுவோம் என்றெல்லாம் மறைமுகமாக மிரட்டினர். கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகளும், முன்னாள் ஆட்சியாளர்களும் கூட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக “ஆம்” என்று வாக்களிக்கவே பரிந்துரைத்தன. ஆனால், மக்கள் எதற்கும் அஞ்சாமல், கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் “இல்லை” என்று தெளிவாக பதிலளித்திருந்தனர். (61 சதவீதம் பேர்)

இதனால் மேலும் கோபத்திற்குள்ளான ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்போது கிரேக்கத்தின் நிதியமைச்சரான யானிஸ் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். இங்கிருந்துதான் சிரிசா கட்சியின் தலைமையிலான புதிய அரசு மெல்ல தடுமாறத் துவங்கியது. வேறுவழியின்றி தன்னுடைய நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் யானிஸ். ஈக்வடாரின் ரஃபேல் கொரேயாவைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக விமர்சித்துவந்த கிரேக்கத்தின் நிதியமைச்சரை கடும் நெருக்கடி கொடுத்து பதவி விலக வைத்திருக்கிறார்கள்.

புதிய பேச்சுவார்த்தை… புதிய நெருக்கடிகள்…

கிரேக்க அரசு ஒரு இடதுசாரி அரசாக இருப்பதனாலேயே, ஐரோப்பிய ஒன்றியம் மிகக்கறாராக இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்பதுபோல, கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகள் ஒதுங்கியிருக்கின்றன. யானிசின் பதவிவிலகலைத் தொடர்ந்து மீண்டும் புதிய பேச்சுவார்த்தைகள் துவங்கின. தங்களால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று கிரேக்க பிரதமர் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்கு மாற்றாக, அவர்களே சில சீர்திருத்தங்களை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தொடர்ந்து பேசலாம் என்று கடுமையாக நடந்துகொண்டனர். 17 மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ஜெர்மனியும், கிரேக்கமும் அறிவித்தன. இறுதியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கிரேக்க பிரதமர் கையெழுத்திட்டார். கிரேக்க பாராளுமன்றத்தில் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்புதல் பெற்றுவிட்டு வருமாறு கிரேக்க பிரதமருக்கு காலக்கெடுவும் கொடுத்திருந்தனர்.

திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தம், மிகக்கொடூரமான பொருளாதாரப் போர் ஒப்பந்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

 • மதிப்புக் கூட்டு வரியினை உயர்த்த வேண்டும்.
 • ஓய்வூதியத் திட்டத்தை குறைக்கிற வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
 • அரசின் அதிகாரத்தை பல துறைகளில் குறைத்திட வேண்டும். அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கிற குழுக்களுக்கு அதிகாரம் அளித்திட வேண்டும்.
 • எல்லாவற்றையும் பார்வையிட ஐ.எம்.எஃப்.க்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களிடம் கேட்டுதான் எதையும் செய்யும் வேண்டும்.
 • நெருக்கடி மேலாண்மை அதிகாரத்தை ஐரோப்பிய கமிஷனுக்கு வழங்கிட வேண்டும்.
 • அரசின் வசம் இருக்கும் மின்சார துறையை, தனியார்மயமாக்க வேண்டும்.
 • முதலாளிகளுக்கு அதிகளவில் அதிகாரம் இருக்கும் வகையில், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த வேண்டும்.
 • நிதித் துறையில் அரசின் தலையீடு இருக்கவே கூடாது.
 • 50 பில்லியன் யூரோ வரையிலான அரசின் சொத்துக்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.
 • அரசு நிர்வாகத்தில் அரசின் அதிகாரத்தைக் குறைத்து, ஐரோப்பிய கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
 • கடந்த 6 மாத காலமாக புதிய அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை கிடப்பில் போட வேண்டும்.
 • எவற்றையெல்லாம் தனியார்மயமாக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும் ஆராய்ந்து அறிக்கை வழங்கும். அதனை கிரேக்க அரசு நிறைவேற்ற வேண்டும்.

என்ற நிபந்தனைகளை அந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

மக்கள் மீது நிதிச்சுமைகளை ஏற்றுவதை எதிர்த்தே, புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்களையும் கட்டாயப்படுத்தி, எல்லாவகையான நெருக்கடிகளையும் கொடுத்து, அதே கொள்கைகளை தொடர வைத்திருக்கின்றன ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும். கிரேக்கம் பயணிக்கவேண்டிய சரியான பாதை இதுவல்ல. சிரிசா என்பது மக்களின் போராட்டத்திலிருந்து உருவான இயக்கம்தான். மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்காவிட்டால், நாளை வேறொரு இயக்கமே உருவாகக்கூடும். நாடுதழுவிய வேலை நிறுத்தத்தை கிரேக்க தொழிற்சங்கங்கள் அறிவித்துவிட்டன. மக்கள் மீண்டும் வீதிகளில் போராடத் துவங்கிவிட்டார்கள். உலகெங்கிலும் சமூக வலைத்தளங்களில் கிரேக்கத்திற்கு ஆதரவு குவியத்துவங்கியிருக்கின்றன. “#ThisIsACoup” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கிரேக்க நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரும்போது, அவ்வொப்பந்தத்தையே நிராகரிக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். சிரிசா கட்சியில் உள்ள 109 மத்தியக்குழு உறுப்பினர்கள் (மொத்தம் 201 பேர்) இணைந்து, “பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களியுங்கள்” என்று தங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் வலதுசாரிகளின் ஆதரவையும் இணைத்துக்கொண்டு நிறைவேற்றிவிட்டனர்.

கடுமையான நெருக்கடியிலும் மிகச்சிறிய நாடான கிரேக்கத்தின் மக்கள் வலுவாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதும், நம்முடைய நாடுகளிலும் நுழைய முற்படும் பொருளாதார பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதும் இடதுசாரிகள் முன் உள்ள வரலாற்றுக் கடமைகள்.