கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த
வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி
ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம்
விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க
இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள்
அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும்
முயற்சிகளும் இருந்தன.
வாய்மொழி
வரலாறு:
பொய்ச் செய்திகள்,
இருட்டடிப்புக்கான பரப்புரைகளைத் தாண்டி, வாய்மொழி வரலாறாக, நாட்டுப்புற
பாடல்களாக,
ஒப்பாரிப்பாடலாக உண்மைச் செய்திகள் மக்களை அடைந்தன. “தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலில் வாய்மொழி வரலாற்றை
தொகுத்தார்.
ஆட்சியாளர்கள், மேட்டுக்குடிகள், அரசர்கள் வெட்டிய கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆட்சியாளர்களின்
வரலாறுகளைக் கூறும் இலக்கியப்பாக்கள் ஆகியவையே வரலாறாகத் தொகுக்கப்படுகின்றன. இதில்
மக்கள் அந்த
ஆட்சியை எப்படி பார்த்தார்கள், அவர்கள்
பாடு என்ன என்பது பதிவுசெய்யப்படுவதில்லை. அந்த மக்கள் பேசும்போதே அது மக்கள்
வரலாற்றுக்கான தரவுகளாகிறது. எனவேதான் இம்முயற்சியில் ஈடுபட்டேன் என்கிறார் அப்பணசாமி.
நாவல்
பதிவுகள்:
கோழிகள், ஆடுகள்
வெந்து எரியும் மாமிச நெடிதான் இது என்பது காவல்துறையின் நினைப்பு. அவர்கள்
ஒன்றும் மதராஸ் போலீஸ் அல்ல, அடக்குமுறையை தம் பரிபூரண உடல் மொழியாக
கொண்ட மலபார் போலீஸ் “அம்புட்டும்
மனுசங்கய்யா” என்று நான்தான் கத்தினேன் என்கிறார் ராமையாவின் குடிசையில்
சின்னச்சுவர் வழியே வெளியே குதித்த பழனிவேல்.
அந்த மனிதர்களிடம் தம் உடலை மறைக்க
போதிய ஆடைகள் இல்லை; பொங்கி சாப்பிட ஆங்கமாய் ஒரு அடுப்பு
இல்லை. வெயிலோ மழையோ கூரை வழியே ஒழுகும் பொத்தல் குடிசைகள் அவர்களின் வீடுகள்.
நிலச்சுவான்தார்கள் துப்பாக்கி வைத்திருந்தபோது ஆயுதம் என்று வைத்துக்கொள்ள
கூலிகளிடம் ஒரு பிளேடு கூட கிடையாது.
ஆயினும் பூட்ஸ் கால்களோடு ஆயுத அணிவகுப்பு
நடத்திய காவல் துறையின் குண்டாந்தடிகளை அவர்கள் சந்தித்தனர். முன்பே கூறியபடி
இவர்கள் சாதாரண ரக போலீஸ் அல்ல. சன்னரக நாத்து என்பது போல் தமிழ் தெரியாத மலபார்
போலீஸ் மற்றும் கிசான் போலீஸ் ஆகிய சிறப்புப் பிரிவினர் ஆவர்.
பின், காவல்துறையின்
வன்முறையை விவசாய தொழிலாளர்கள் எந்த ஆயுதத்தால் எதிர் கொண்டார்கள்? கொள்கை உறுதியால், அமைப்பு வலிமையால்.
செங்கொடியின்
பங்கு :
சோலைசுந்தரபெருமாள் தன் செந்நெல்
நவீனத்தில் கண்ணுச்சாமி என்ற பாத்திரம் மூலம் இதனை உணர்த்துகிறார். வெண்மணியில்
டீக்கடைக்காரர் வடிவேலு, கண்ணுச்சாமி ஆகிய செங்கொடி இயக்கத்
தோழர்கள் பாத்திர படைப்பாக வருகின்றனர். மாமூல் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரால்
இவர்கள் அச்சுறுத்துவதற்காக பிடிக்கப்படுகின்றனர். எனினும் காவல் நிலையத்திற்கு
அவர்களை அழைத்துச் செல்லாமல் ஒரு பண்ணையாரிடம் விடப்படுகின்றனர். எனினும் மக்கள்
கூட்டம் பெரும் திரளாகச் சென்று அவர்களை மீட்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை
கூறும் கண்ணுச்சாமி, அவரை கண்டு கதறும் அவருடைய அப்பா
பெரியானிடம் பின்வருமாறு கூறுகிறார்.
“… யப்பா… நம்ம செங்கொடிக்கும் அவனுங்க
மஞ்சக்கொடிக்கும் நடக்கிற போராட்டம்ப்பா இது. நம்ம கொடிக்காக எது நடந்தாலும் அதை
மனசார நாம ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அதுக்காவ என்னை ஒப்படைச்சுக்கிட்டேன்.
உனக்கு(அண்ணன்) ஒரே புள்ளதான்னு நினைச்சுக்கப்பா.”
கொடிகாத்த குமரனை வரலாற்றில்
படிக்கிறோம். அதேபோல் செங்கொடி காக்க உயிரோடு நடமாடிய கண்ணுச்சாமிகள் மீது
சரித்திரத்தின் டார்ச் ஒளி பட வேண்டும். பிள்ளைக்கு சட்டை துணி இல்லாவிட்டாலும்
தம் கட்சியின் கொடித்துணிக்காக இவர்கள் போராடினார்கள்.
டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் உயிரோடு 44 பேர்
கொளுத்தப்பட்ட நிகழ்வு எல்லா தளங்களிலும் தாக்கத்தையும் பெரும் பாதிப்பையும்
உருவாக்கியது.
காவியமான
வெண்மணி:
சாட்டையடிகளால் ஒருவரை அழ வைக்கலாம்;
அடி வாங்கியவர் விரும்பாவிட்டால் அவரை ஆட வைக்க முடியாது. அவருக்கு
ரத்தம் வரவைக்கலாம்; பாட வைக்கவோ பணிய வைக்கவோ; முடியாது அவரின் எதிர்வினை கலகமாக, கிளர்ச்சியாக
வெளிப்படும். நிலபிரபுத்துத்திற்கும் சாதியத்துக்கும் எதிரான வெண்மணி நிகழ்வு
கோஷங்களை, பாடல்களை, நாடகங்களை,
சிறுகதைகளை, நாட்டியங்களை, சங்கீதத்தை,
ஓவியங்களை, நவீனத்தை கவிதைகளை யாத்து தந்தது.
“வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு
வருகிறோம்;
வெங்கொடுமை தீயை நெஞ்சில் ஏந்தி
வருகிறோம்;
காத்திருந்த புலிகள் என காட்ட
வருகிறோம்- அந்த கயவருக்கும் மரண ஓலை தீட்ட வருகிறோம்”
என்ற கவிதா கோஷத்தை வார்த்தது.
1968க்குப்பின் வெண்மணி என்ற பெயர்
பிள்ளைகளுக்கு சூட்டப்பட்டது; வளர்ந்த பெரியவர்கள் கூட தங்களின்
புனைப்பெயராக வெண்மணியை பொறித்தனர். வெண்மணி நினைவாக மண்டபங்கள், வெளியீடுகள் ஏராளம் வந்தன.
மனித இதயங்களில் நிலநடுக்கத்தை
உருவாக்கிய வெண்மணி நிகழ்வு படைப்புகளை, படைப்பாளிகளை
தந்தது மட்டுமல்ல இடது சாரி அமைப்புகளிடம் காந்தப்புயலாக மனித நேயர்களை ஈர்த்தது.
புதினங்களில் முதல் வரவு இந்திரா பாத்த
சாரதியின் குருதிப்புனல்தான். வெண்மணி பற்றிய அவர் புரிதல் பின்வருமாறு இருந்தது.
“தலித் மக்களை உயிருடன் கொளுத்திய
பண்ணையார், 56 வயதாகியும் விவாகம் ஆகாதவர்.
சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்களில், பல பெண்களுடன்
தொடர்பு இருந்ததாகக் காட்டிக்கொண்டார் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள்.
கொளுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள்.
இயற்கை வஞ்சித்துவிட்ட காரணத்தால், தன் கோபத்தைப் பெண்களிடத்தும்
குழந்தைகளிடத்தும் காட்டியிருக்கலாமோ என எனக்குத் தோன்றியது.” இந்த புரிதல்
தவறானது என்பதை வெண்மணி நிகழ்வை ஒட்டிய தியாகிகள் பட்டியல் பார்த்தால்
புரிந்துகொள்ளலாம்.
சோலை சுந்தரபெருமாளின் செந்நெல்
வெளிவரும் வரை குருதிப்புனல்தான் வெண்மணி குறித்த ஒரே நாவலாக இருந்தது. உழைப்பாளி
வர்க்க மொழியின் குருதியில் செந்நெல் பேசியது. வெண்மணி குறித்த இதர நவீனங்கள்
பாட்டாளியின் கீழைத்தீ, மீனா கந்தசாமியின் குறத்தியம்மாள்
ஆகியவை ஆகும். “கீழைத்தீ” சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் அரசியலை பேசியது.
குறத்தியம்மாள் அரசியல் தளமும் வேறுபட்டது. தற்குறிப்பேற்று அணியாக இவர்களின்
நூல் அவர்களின் தனிப்பட்ட வாஞ்சைகளின் வெளிப்பாடாக
இருந்தது.
திரைப்பட
வார்ப்பில்:
வெண்மணி குறித்த முக்கிய திரைப்படமாக
அறியப்படுவது 1983ல் வெளிவந்த கண்சிவந்தால் மண்
சிவக்கும் திரைப்படமாகும். ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் இப்படம் வந்தது. மனிதா மனிதா
இனி உன் விழிகள் சிவந்தால்…. என்று தொடங்கும் ஒரு பாடல் நெஞ்சில் ஆவேச பேரலைகளை
உசுப்பியது.
இடது சாரி வெகுசன அமைப்புகள் இப்படத்தை
சிறப்பு காட்சிகளாக திரையிட்டன. சிவப்புமல்லி, சிவந்த
கண்கள், அலை ஓசை ஆகிய படங்களும் வெண்மணியை
வெள்ளிதிரையில் நினைவுப்படுத்தின. ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படத்தை பாரதி
கிருஷ்ணகுமார் இயக்கினார். இதில் தொழிலாளி வர்க்க போராட்டத்தின் ஆவணப்பதிவுகள்
தொகுக்கப்பட்டன.
1968-69களில் தமிழ் சினிமா உச்ச
நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர்
படங்களில் வெண்மணியில் சாயல் படியாமல் திரைக்கதை அமைக்கப்பட்டது.
“சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயில்
வேகுதே. ஒங்க சர்க்கரும் கோர்ட்டும் அதில் எண்ணெயை ஊத்துதே” என்ற இன்குலாப் வரிகள்
நீதி தேவதையின் மயக்கத்தை சுட்டின.
வெண்மணித் தீ ஏராளமான நாட்டுப்புற
பாடல்களிலும் கனன்றது.
“அரை லிட்டர் நெல் கூலி அதிகம்
கேட்டதாலோ
ஆணும் பெண்ணும் சேர்ந்து செங்கொடி
பிடித்ததாலோ
கோபம் கொண்ட இதயமில்லா பண்ணை
மிருகங்கள்
அவர் குடிசையிலே தீயை மூட்டி உயிருடன்
எரித்தார்”
என்று ஒரு பாடல் மொழிந்தது.
“வெண்மணி தோழர்கள்தாம் தம் வீடு
தீயில் வெந்ததை மறந்திடுமோ நாடு”
என்பது மற்றொரு பாடலின் ஆதங்கம்.
“நந்தனார் காலம் முதலே
இந்த நாகரிக காலம் வரையிலே
வெந்து சாவது நாங்களே -இதை
வேடிக்கை பார்ப்பது நீங்களே…”
என்று ஒரு பாடல் குற்றம் சுமத்தியது.
“ஐம்பூதங்களில் நிலமங்கை மட்டுமே
சுரண்டும் வர்க்கத்துக்குச் சோரம்
போயிருந்தாள்.
அந்த இரவிலோ –
அக்கினித் தேவன் கூடத் தஞ்சைப்
பிரபுக்களின்
கைக்கூலியானான்”
என இயற்கையும் கூட சுரண்டல்
வர்க்கத்தின் அடிமையா என மற்றொரு பாடல் கேள்வியெழுப்பியது.
வெண்மணி படுகொலைகள், மார்க்சியத் தெளிவோடு இயங்கிய வர்க்க இயக்கத்தை நோக்கிய தாக்குதலாகும். அந்த நெருப்பினால் வர்க்க இயக்கத்தை அச்சுருத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல, இருட்டடிக்கச் செய்த முயற்சிகளை மீறி, அந்த வீர வரலாறு இப்போதும் நமக்கு வழிகாட்டி நிற்கின்றது.
(இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள படைப்புகள் ஒரு பகுதியே ஆகும். இன்னமும் ஏராளமான புத்தகங்கள், கதைகள் படைப்புகள் தொகுக்கப்படவேண்டியுள்ளது)
தமிழகத்தில் விவசாயத்தில் இருந்த நிலப்பரப்பில் சுமார் 60 லட்சம் ஏக்கர்கள் ஜமீன்தார்களின் கையில் இருந்தது. 1,500 ஜமீன்தார்களிடம் சுமார் 59,87,107 ஏக்கர் நிலம் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நம் நாட்டில் வேரூன்றுவதற்கு உதவி செய்த இந்த பேர்வழிகளுக்குத்தான் ஜமீன்தார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்விதம் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தாரி முறைக்குத்தான் சாசுவத நிலவரித் திட்டம் என்று பெயர். இந்தத்திட்டம் 1739இல் முதன் முதலில் வங்காளத்தில் அமுல்நடத்தப்பட்டு பிறகு சென்னைக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜமீன்தார்
முறை – சாசுவத நிலவரி முறை
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1802இல் அமல் நடத்தப்பட்டது.
அப்போது வரி வசூலில் இருபங்கை அரசு கருவூலத்தில் கட்டவேண்டும் என்று
அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில்உள்ள ஜமீன்தார்கள் தம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் 74 லட்சம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்படி வசூலிப்பதில் 49 லட்சம் ரூபாய் ஜமீன்தார்கள் அரசு கருவூலத்தில் கட்டிவிட வேண்டும். இப்படி ஜமீன்தார்கள் அரசுக்குக் கட்டும் வரிக்கு ‘பேஷ்குஷ்’ என்று பெயர். 74 லட்சத்தை வசூலித்து 49 லட்சத்தை அரசுக்குக் கட்டிவிட்டு, மீதி 25 லட்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள், 1938ஆம் ஆண்டு விவரப்படி, விவசாயிகளிடம் வசூலித்தது 254 லட்சம் ரூபாயாகும். 25 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள் எடுத்துக் கொண்டதோ 205 லட்சம் ரூபாய். எட்டு மடங்கிற்கு மேல் அவர்கள் எடுத்துக் கொண்டு, விவசாயிகளைச் சுரண்டினார்கள்.
இவை போதாதென்று மேலும் கீழ்க்கண்டவாறெல்லாம் வரி வசூலித்தார்கள்.
சமுதாய நிலத்தில் வளரும் மரத்திற்கு வரி
நத்தம் ஜாரியில் வீடுகட்டிக் கொள்வதற்கு வரி
புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்லுக்கு வரி
கரம்பு நில உபயோக வரி
ஆடுமாடு மேய வரி
காட்டு மரத்தில் தழை வெட்டவும், விறகு வெட்டவும் வரி
இந்த வரி வசூலுக்கு அரசின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது.
அரசுக்கு குறிப்பிட்ட சேவை செய்வதற்காக சிலருக்கு இனாமாகவோ பரிசாகவோ வழங்கப்பட்ட
இனாம் ஒரு வகை. கோவில்
மடங்களுக்கு வழங்கப்பட்ட
இனாம் ஒரு வகை. இது தவிர தனிநபர்களுக்கு மான்யமாக வழங்கப்பட்ட
இனாம்.
இப்படி தமிழகத்தில் 4500
இனாம்தார்கள் இருந்தனர். இதில் கடைசி பகுதி
அவரவர்களே அனுபவித்து
வந்தது. முதல் பகுதி இனாம் அநேகமாக இவர்களும் ஒரு குட்டி ஜமீன்தார்கள்
போல்தான். விவசாய வேலைகளில் ஈடுபடாத இனாம்தார்கள் விவசாயிகளிடமிருந்து
வசூலித்து விவசாயிகளை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்.
மடாதிபதிகளும், கோவில்களும்
தங்கள் இனாம் நிலத்தை, பல
கிராமங்களை, ஓராண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு
என்று குத்தகைக்கு விட்டுவிடுவது
வழக்கம். அந்த மொத்த குத்தகைதாரர் பல ஆயிரம் ஏக்கர்களை மொத்த குத்தகைக்கு
எடுத்து, ஒரு பகுதியைச்
சொந்த பண்ணையாக வைத்துக் கொள்வார். பெரும் பகுதியை விவசாயிகளிடம் கொடுத்து
சாகுபடி செய்யச் சொல்வார். இவர் பண்ணை சாகுபடிக்கு பலரை
பண்ணை ஆட்களாக அமர்த்திக் கொண்டிருப்பார்.
அவர்களுக்கு ஐம்பது, நூறு
என்று கடன் கொடுத்து
வேலை வாங்குவார். அவர்களுக்குப் பெயர் பண்ணையாள் (சுகந்தை) என்பதாகும்.
அப்படி பணம் வாங்கும் குடும்பம் முழுவதும் அந்த மொத்த குத்தகைதாரரிடம்
பண்ணை அடிமையாக உழைக்க வேண்டும்.
தினசரி ஆணுக்கு கூலி மூன்று சின்னபடி
நெல், ஒரு
அணா காசு.
பெண்கள் வயல் வேலை செய்யும்போது
மட்டும், தினசரி
இரண்டு சின்னபடி நெல் மட்டுமே கொடுப்பர். ஆண்டு முழுவதும் மாட்டுத் தொழுவத்தில்
வேலை செய்தால் மாதம் மூன்று மரக்கால் அல்லது நான்கு மரக்கால் நெல்
கிடைக்கும். பண்ணையாளின் பிள்ளைகள் மாடுமேய்க்க வேண்டும். மொத்தக் குத்தகைதாரரிடம்
நிலம் பெற்று சாகுபடி செய்பவர்களும் மொத்த குத்தகைதாரர் பண்ணை சாகுபடி
நிலத்தை நடவு வேலை முடித்து விட்டுத்தான்
அவர் தனது சொந்த சாகுபடியைச் செய்ய வேண்டும். அப்படி பண்ணை
சாகுபடி வேலை செய்வதில் பெரும்பகுதி இனாம் வேலைதான்.
சாகுபடிதாரர் தான் சாகுபடி செய்யும் நிலத்தை
அறுவடை செய்யும்போது, இனாம்தார்
–
மொத்த குத்தகை
சாகுபடிதாரர்களின் ஏஜண்ட், குண்டர்கள் சகிதம் களத்திற்கு வந்துவிடுவார்.
கண்டுமுதல் ஆகும் தானியத்தில் நூற்றுக்கு18 முதல் 20 சதவீதம்
வரை அவர்களுக்கு வாரம் கொடுக்கப்படும். அதைத்தான் சாகுபடிதாரர் பெற்றுப்
போக வேண்டும். 80 சதவீதம்
வரை மொத்தக் குத்தகைதாரர் எடுத்துச்சென்று விடுவார்.
ரயத்துவாரி நிலப்பிரப்புக்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்கள்.
பல கிராமங்கள்இவர்களுக்குச் சொந்தம். இவர்களும் கிராமத்திற்கு
ஒரு பண்ணை, அதற்கு
ஒரு பங்களா – நிர்வகிக்க தலையாரி, ஏஜண்ட், கணக்கர் என்று ஆட்கள்,
8, 10 பண்ணையாட்கள் வைத்து பண்ணை வைத்துக் கொள்வார்கள்.
ஒரு பகுதியை சாகுபடிக்கும்
கொடுப்பார்கள். சில கிராமங்களில்இரு பண்ணைகள் இருப்பதும்
உண்டு. இவர்களிடம் பண்ணையாட்களாக
இருப்பவர்கள் பரம்பரை
பரம்பரையாக அடிமைகளாகவே
இருப்பவர்கள்.
ஒரு பண்ணையில் இருப்பவர்கள், அடுத்த பண்ணைக்கு வேலைக்குப் போய்விடக்
கூடாது. இந்தப்
பண்ணையார் குடும்பமும் மொத்த குத்தகைதாரர் பண்ணையாட்களை நடத்துவதைவிட
கடுமையாக நடத்துவார்கள்.
சாகுபடிதாரர்கள், பண்ணை
நடவு, அறுவடையை
முடித்து விட்டுத்தான் தங்கள் சாகுபடி நிலத்தில் நடவோஅறுவடையோ
செய்ய வேண்டும். அப்போதுதான் பண்ணை ஏஜண்ட், தலையாரிகள், சாகுபடிதாரரின் அறுவடையைக்
கண்காணிக்க வர முடியும். முன்னாலே இவர்கள் அறுவடை செய்தால் அடுத்த ஆண்டு
அந்த நிலம் சாகுபடிக்கு இவரிடம் இருக்காது. இவரும் அந்த ஊரில் இருக்க
முடியாது.
இப்படி பண்ணையார் ஆட்கள் காவல் காக்க
சாகுபடிதாரர் அறுவடை செய்து கண்டுமுதல் ஆகும் நெல் முழுவதும் பண்ணையாரின்
பெரும் பட்டறைக்கு போய்விடும்.
கண்டுமுதல் எவ்வளவு கண்டது என்ற கணக்குகூட இவரிடம்தான் இருக்கும்.
பிறகுபண்ணையார் பட்டறையில் இருக்கும் அனைத்து சாகுபடிதார்களின் நெல்லும்எடுக்கப்பட்டு
பண்ணைக்கு பாதுகாப்பான
இடத்தில் கொண்டுபோய் சேர் கட்டியபிறகு, சாகுபடிதாரர்களின் கணக்கு
பார்க்கப்பட்டு 18 வாரம் அல்லது 20 வாரம் கணக்கிட்டு, விவசாய வேலை ஆரம்பம் முதல் விதை, தசுக்கூலி, இடையில் குடும்பச்செலவுக்கான சாகுபடிதாரர் வாங்கியிருக்கும் கணக்குப் படிக்கப்பட்டு, மீதி இவ்வளவுதான் வாரத்தில் பாக்கி
கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அதுவும் கொடுக்க
மாட்டார்கள். வைக்கோல் போரில் நெல் இருக்கிறது, இன்னும்
கூடுதலாகவே கூட
இருக்கும். எனவே வைக்கோல் போர் அடித்து, வாரத்தில்
பாக்கி எடுத்துக்கொண்டு, அதில்
மீதமுள்ள நெல்லை பண்ணையில் கொடுத்துவிட வேண்டும் என்றும்,
மேலும் வைக்கோல் போரில் பாதியை கொண்டுவந்து பண்ணைக் கொல்லையில்
போர்போட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தனது
ஏஜண்ட் மூலம் பண்ணையார் சாகுபடிதாரருக்கு அறிவிப்பார். இதுதான் ரயத்துவாரி நிலப்பிரபுக்களிடம் இருந்த
கிராம நிலை.
சொந்தநிலம் இல்லாத கூலி உழைப்பு மூலம்தான் உயிர்வாழ
முடியும் என்றிருந்த ஏழைகள் ஆண்டாண்டுகாலமாக குடும்பம்
முழுவதுமாக உழைத்தார்கள், உழைத்தும் வருகிறார்கள்.
இவர்கள் பண்ணையாட்களாக, ஆண்களும் பெண்களும் அவர்கள் பிள்ளைகளும்
– இவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு புரோநோட் எழுதிக் கொடுத்துவிட்டு
‘சுகந்தை’ என்ற பெயருடன் வேலை செய்து வந்தார்கள். ஒரு மிராசுதாரிடம்
வேலை செய்யும் பண்ணையாள் அந்த மிராசுதாரின் இடத்தில்தான் குடிசை
போட்டு குடியிருக்க வேண்டும். வேறொரு இடத்திற்குப் போகக் கூடாது.அப்படிப்
போய்விட்டால் அந்த குடியிருக்கும் குடிசை இடித்துத் தரைமட்டமாக்கப்படும்.
உடம்பு சரியில்லை என்று தவறி ஒருநாள்
அவன் வேலைக்கு வராமல் இருந்து விட்டால், அவன்
உடனே அழைத்து வரப்பட்டு சாட்டையால் அடிக்கப்படுவான்.
அதோடு அவன் செய்தஇந்த ‘மா பாதக’ செயலுக்காக, உடல்நிலை
சரியில்லை என்று வேலைக்கு வராமல்இருந்ததற்காக, மாட்டுச்
சாணத்தை தண்ணீரில் கரைத்து அவனுக்கு கொடுக்கப்படும். அதை அவன் குடிக்க
வேண்டும். இத்தகைய கொடுந்தண்டனைகளைத் தாங்கிக் கொண்டு, அவன் வேலை செய்ய வேண்டும்.
கோழிகூப்பிடும் நேரத்திற்கு ஆண்டை வீட்டுக்கு வந்து, இரவு கொசுக்கடி ஆரம்பித்தபிறகுதான் அவன் வீடு
திரும்ப வேண்டும். இந்த வேலைக்கு அவனுக்கு தினக்கூலி 3
சின்னபடி நெல், ஒருஅணா
காசு. மதியம் சோறு போட்டால் அதற்காகக் கூலியில் ஒரு சின்னபடி
நெல் பிடிக்கப்படும். அவன் சோறு சாப்பிட்டால், அதை
அவன் இலைபோட்டு
சாப்பிடக்கூடாது. பித்தளைப் பாத்திரத்தில் சாப்பிடக்கூடாது. பழையகால சிறைக்
கைதிகளுக்கு தருவதுபோல், மண்ணாலான மல்லைசட்டியில்தான்
சாப்பிடவேண்டும். அதுதான் பண்ணையாள் சாப்பிடும் பாத்திரம். அது இல்லாவிட்டால், இரும்பு மரக்காலில்அவனுக்குச் சோறு போடப்படும். அவன்
மனைவியும், பிள்ளைகளும்
மிராசுதார் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். மாடு மேய்க்கவேண்டும்.
பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது, படிக்க வைக்கக் கூடாது.
பண்ணையாள் வீட்டில் எரிக்கும்
அடுப்புச்சாம்பலும் உரமாக சேர்த்து வைக்கப்பட்டு மிராசுதார்
நிலத்திற்கு எந்த விலையும் இல்லாமல் கொடுக்க வேண்டும். பண்ணையாளின்வீட்டுக்கூரையை மூடிவைக்க கொல்லையில்பரங்கி, பூசணி செடிபோட்டு கூரை மேல் விட்டு ஆறு மாதம் அந்த
நிழலில் அவன் வாழ்வான். அதுதான் அவனுக்குச் சொந்தம். அதில்
காய்க்கும் காய்கள் முழுவதையும் மிராசுதார் வீட்டுக்குக் கொடுத்துவிட
வேண்டும். வயலில் மேயும் நண்டும் நத்தையும்தான் அவன்
காய்கறிகள். தனது பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ
திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிராசுதார்
அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. இந்த ஆண்டு திருமணம் வேண்டாம்
என்று மிராசுதார் கூறிவிட்டால்அதைத் தாண்டி திருமணம் செய்யமுடியாது, செய்யக் கூடாது.
பண்ணை அடிமைகளாக இருந்தவர்களில்
பெரும் பகுதியினர் ஜாதியில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்ததால், ஜாதியக் கொடுமை கொடூரமாக இருந்தது.
மேல்ஜாதிக்காரர்கள் தெருவில் மிராசுதார்கள் வீட்டிற்கேயானாலும் வண்டி
ஓட்டிச்சென்றால், தெருவில்
வரும்போது, கீழே
இறங்கி வண்டிக்கு முன்னால் நடந்தேதான் வண்டியை
இழுத்துச் செல்ல வேண்டும். அக்ரகாரத்தின் பக்கம் அடிகூட வைக்கமுடியாது. இடுப்பில்
வேட்டி கட்டக் கூடாது. கோவணத்துடன்தான் இருக்கவேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை
தீபாவளியன்று ஆண்டை
எடுத்துக் கொடுக்கும் ஒரு வேட்டியுடன்தான் அடுத்த ஆண்டு வரை
இருக்க வேண்டும். அதையும் தலையில்தான் கட்டிக் கொள்ள வேண்டும். மேலே
சட்டை போட்டுக் கொள்ளக்கூடாது.
அதேபோல் பண்ணையான்
மனைவியும் இரவிக்கை போடக் கூடாது. சேலையை முழங்கால்அளவிற்குத்தான் கட்ட வேண்டும்.
முழங்காலுக்கும் கீழே வரும்படி சேலை கட்டக்கூடாது. அந்தப் பெண் நல்ல உடற்கட்டுடன்
இருந்துவிட்டால் போதும்.
மிராசுதார்களின் இச்சைக்கும் இணங்கியாக
வேண்டும். தனது கணவனை கட்டி வைத்து அடித்தாலும் மனைவியோ, பிள்ளைகளோ எதிரில் நின்றாலும், ‘அடிக்கிறார்களே’
என்று வாய்விட்டு அழக்கூடாது.
வாயிருந்தும் ஊமைகளாய்
இருக்க வேண்டும். அதேபோல் பண்ணையாள் மனைவியையோ, பிள்ளைகளையோ அடித்தாலும் அவன் கண் இருந்தும்
குருடனாகவே இருக்கவேண்டும். ஆண்டையோ அவர் உத்தரவின் பேரில் அவர் ஏஜண்டோ அடிக்கும்போதுகூட வலி தாங்காது
ஐயோ என்ற கத்தக் கூடாது. ஐயா என்றுதான் கத்த வேண்டும். இவைகள் கதைகளல்ல.
அன்று சமூக நியதியாக இருந்தவை இவைதான்.
இந்தக் கொடுமைகள் தாளாது
தங்களின் குடும்பங்களையும் விட்டுவிட்டு பர்மாவிற்கும், மலேயாவிற்கும், இலங்கைக்கும்
ஓடிய பண்ணை அடிமைகளும் குத்தகை அடிமைகளும் ஏராளம். இலங்கையின் தேயிலைத்
தோட்டத்தில் கொசுக்களின் கொடுமையும், மலேயாவின் ரப்பர்
தோட்டத்தில் அட்டைகளின் கடியும், தமிழகத்து நிலப்பிரபுக்களின் கொடுமையைவிட
எவ்வளவோ மேல் என்று ஓடியவர்கள் ஏராளம்உண்டு.
இப்படித்தான் ஜமீன்தார்கள் –
இனாம்தார்கள்-மொத்த குத்தகைதாரர்கள் – நிலப்பிரபுக்களின் ஆதிக்கம்
ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், பாதுகாப்புடன் கோலோச்சிய உறவுமுறைகளை
பிரிட்டிஷ் அரசு சென்னை மாகாணத்தில், தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது.
இது 200 ஆண்டுகால வெள்ளையர்களின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட
சமூக அஸ்திவாரமாகும்.
உலகின் மிகப் பெரும் வல்லரசுகள், தங்களிடையே உள்ள வியாபாரப் போட்டியால் ஏற்பட்ட பொருளாதார
மந்தத்தைப் போக்கிக்கொள்ளவும், சுருங்கிவரும் தங்களின் சந்தைகளை விஸ்தரித்துக் கொள்ளவுமான போட்டியின்
காரணமாக 1939-இல்
இரண்டாவது உலக யுத்தம்
துவங்கியது. யுத்தத்தை துவக்கிய ஜெர்மன்தேசத்து சர்வாதிகாரி ஹிட்லர், உலகில் உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக இருந்த
சோசலிச நாடான சோவியத்
யூனியனை அடிபணியவைக்கவும், உலகை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரவும்
உலகம் முழுவதிலும் ஒரு பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும், இத்தாலியையும் ஜப்பானையும் தனக்குத் துணையாகக்
கொண்டு உலகப் போரை உச்சகட்டத்தில் நடத்திக் கொண்டிருந்தான். உலகம் முழுவதும்
இருக்கும் உழைப்பாளி மக்கள் பாசிசத்தையும்,
ஹிட்லரையும் தோற்கடிக்க அணிதிரண்டு நின்றார்கள்.
அந்த உலக யுத்தத்தில், நமது நாட்டை ஆண்டபிரிட்டிஷார் ஒரு பங்காளியாக இருந்தார்கள்.
நாட்டின் சகல உற்பத்தி ஏற்பாடுகளும் யுத்த தேவைக்கு திருப்பிவிடப்பட்டன.
பெட்ரோலும், டீசலும், துணியும், உணவும்
யுத்த முகாமுக்கு என்று
திருப்பி விடப்பட்ட நேரம். கட்டத்துணியும், சாப்பிட
உணவும், விளக்கு எரிக்க
எண்ணெயும் இன்றி கிராமத்து மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகி நின்றார்கள்.
ராணுவத்திற்கு ஆள் என்றும், யுத்தத்திற்கு
வரி என்றும், ஆளும்அரசு
கிராம மக்களை கிட்டி போட்டு நெரித்துக் கொண்டிருந்தது. ஜமீன்தார்களும், இனாம்தார்களும், மிராசுதார்களும் கிராமத்து
மக்களை யுத்தநேரத்தில் நெருக்கி அவர்களின் தானியம் முழுவதையும் அள்ளிச்
சென்று யுத்தகால விலை
உயர்வால் பெரும் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்திய சுதந்திர இயக்கத்திலும், முற்போக்கு இயக்கங்களிலும் முன்னணியில்
நின்ற வங்க
மாநிலத்தில் விவசாயிகள் இயக்கம், விவசாயிகள்
உற்பத்தி செய்யும் தானியத்தில் மூன்றில்
இரண்டு பங்கு வேண்டும் (தேபாகா) என்று போராடி, வெற்றி கண்ட
வங்கத்து கிராம மக்களை உணவுப் பஞ்சம் கவ்வியதால் உண்ண உணவு இன்றி பல லட்சம்
மக்கள் செத்து மடிந்தார்கள்.
தமிழ்நாட்டிலும் உணவுப்
பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட
கடலைப் பிண்ணாக்கை
பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு
பலியாகி மாண்டனர்.
இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர
முற்பட்டது.
(தோழர்
கோ.வீரய்யன் எழுதிய “விவசாயிகள்
இயக்கத்தின் வீர வரலாறு” நூலில் உள்ள சிறு பகுதி)
கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள்,
தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின்
வெளிப்பாடே.
பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும்.
பிரிட்டிஷ் ஆதிக்க காலம் :
அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில்
சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது.
வளமான இப்பகுதியில் விவசாயிகளும்
தொழிலாளர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டப்பட்டார்கள். அரசனுக்கும்,கோயிலுக்கும் விளைச்சலில் பங்கு, இலவச
உழைப்பு, காவல் வரி, தொழில் வரி (இறை) ஆகியவை நிலவின. வட்டி
திரும்ப செலுத்த முடியாதவர்கள், உரிய வரி செலுத்த முடியாதவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. மேலும்,பிரம்மதேயம்
உள்ளிட்டு கட்டாயமாக நிலம் தானம் பெறப்பட்டது. இவையெல்லாம் நிலவுடமை ஏகபோகங்களை வளர்த்தன.
1799 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆளுகையில்
வந்தது தஞ்சை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு லாபவெறியே
அடிப்படையாக இருந்தது. அவர்கள் பழைய நில உறவுகளின் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் துல்லியமாக்கினார்கள்.
நிலத்தில் நேரடியாக உழைப்பவர்களுக்கும்,
காலனி அரசுக்கும் இடையில் ஜமீன்தார்கள்,
பண்ணையார்கள்,
மடங்கள் என்ற இடைத்தட்டினை காலனி அரசு பயன்படுத்திக்கொண்டது. காலனி அரசு இந்த இடைத்தட்டு பகுதியிடம் வரி வசூல் செய்துகொள்ளும். நேரடியாக நிலத்தில் உழைப்பவர்களிடம், இடைத்தட்டு பகுதியினர் வரி வசூல் செய்து கொள்வார்கள் என்ற ஏற்பாடு உருவாக்கப்பட்டது. “விவசாயிகளிடம் அவர்கள் எப்படியும்
வசூலிக்கலாம், வேலை வாங்கலாம். அதற்கு
அரசு நிர்வாக அமைப்பு பூரண உதவி செய்யும்.”
என விவரிக்கிறார் கோ.வீரய்யன்.
(ஆதாரம்: விவசாய இயக்கத்தின் வீர வரலாறு)
‘(தனது)
மூலதனத்திற்கு சராசரி லாபத்தைக் கூட (விவசாயி)
அடைய முடியாத நிலையில் நிலப்பிரபு
(நில)வாரத்தை (அதாவது குத்தகைத் தொகையை) நிர்ணயிக்கிறார். அதன் மூலம் கொள்ளையடிக்கிறார்” என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
தனது ‘மார்க்சியமும் நிலவாரமும் என்ற கட்டுரையில்
குறிப்பிடுவதைப் போலவே, தஞ்சையிலும் சுரண்டல் நிலவியது. பிரிட்டிஷ்
முதலாளிகள், பழைய நிலைமைகளை மாற்றினார்கள்,
அதே சமயம் தங்கள் சுரண்டலுக்கு ஏதுவாக, முதலாளித்துவத்திற்கு
முந்தைய சுரண்டல் அமைப்பையும் தக்க வைத்துக் கொண்டார்கள்.
அதிகமான வரி வசூல் மட்டுமல்ல; இலவச உழைப்பு,
நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு கொடூரமான தண்டனைகளும் தஞ்சை முழுவதும் நிலவி வந்தன. ரயத்துவாரி நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக பண்ணைகள்
இருந்தன. அங்கேயே குடி வைக்கப்பட்டிருந்த பண்ணைகளில் அடிமைகள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள்.
மிக மோசமான தீண்டாமை வடிவங்கள் நிலவின. சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவது (சாணிப்பால்), சவுக்கடி வழங்குவது ஆகிய மனிதத் தன்மையற்ற தண்டனைகளும்,
பொதுக்கிணறுகள், ஆற்று
நீர், சாலை, கோயில் வழிபாடு மற்றும் கல்வி மறுப்பு நிலவியது. இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓட
முயன்றவர்கள் பிடித்து வரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
லாபவெறியும்,எதிர்ப்பு
இயக்கமும்:
உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தஞ்சை விவசாயிகளுடைய வாழ்க்கையிலும், விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையிலும் நேரடி தாக்கங்களை
ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரின் காலத்தில், தஞ்சையிலும் சுரண்டலும்,
அடக்குமுறைகளும் கடுமையானது. போர்க்காலத்தில், தானியங்களை
அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வெறியுடன் உற்பத்தியை அள்ளிச்
சென்றார்கள் காலனியாதிக்கவாதிகள்.
மக்களின் உணவுக்குக் கூட கையிருப்பு இல்லாத
விதத்தில், தஞ்சைப்பகுதி நிலப்பிரபுக்களும், மடங்களும் விளைபொருட்களை எடுத்துக் கொண்டார்கள்.
உணவுப் பஞ்சத்தினாலும், கொள்ளை நோய்களாலும் மக்கள் செத்து மடிந்தார்கள்.
5,000 – 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில்
இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். (`தென்பரை
முதல் வெண்மணி வரை’ மு.அப்பணசாமி) 1937
டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் நடந்த
தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் சாப்பிட்ட தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை
நிலவுடைமையாளர்கள் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்களே காங்கிரஸ் கட்சியில் கோலோச்சினார்கள்.
அடக்குமுறைகளை மக்கள் அமைதியாக ஏற்கவில்லை. சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகின. 1936-39ஆண்டுகளில் மணலூர் மணியம்மை என்ற கைம்பெண், வைதீக ஆச்சாரங்களையும், பண்ணையார்களையும், பிரிட்டிஷ்
காலனியாதிக்கத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டினார்.
விவசாயிகள் சங்கம் சேர்வதை ஊக்குவித்தார்.
முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட அவர்,
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்கினார். (1954 ஆம்
ஆண்டில் அவர் கொல்லப்பட்டார்.).
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்ட கம்யூனிஸ்ட் கட்சி
முடிவு செய்தது. தஞ்சையில் நிலவி வந்த தீவிர
ஒடுக்குமுறைகளை அறிந்த கட்சி, பி.
சீனிவாச ராவை இப்பகுதிக்கு
அனுப்பி வைத்தது. மதராஸ் மாகாணத்தின் தென் கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். தமிழ் பேசுவார்; ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாது. தஞ்சைக்கு
வந்த அவரது வழிகாட்டுதலில் சாதி
ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டினார்கள்
கம்யூனிஸ்டுகள்.
‘ஆரம்பத்தில் சாதி இந்துக்களான வார தாரர்களும் குத்தகைதாரர்களும் சிறு விவசாயிகளும் விவசாயிகள்
சங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர். விவசாயிகள்
சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதி
சங்கம் என்று நினைத்தார்கள். சாதி வெறுப்பு அதிகமாய் இருந்தபடியால் விவசாயிகள் சங்கத்தின் கொள்கைகளையும், திட்டத்தையும்
பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு
காலதாமதமாயிற்று’ என விவரிக்கிறார் சீனிவாசராவ். தென்பரை கிராமத்தில் 1943 ஆம்
ஆண்டு விவசாயிகள் சங்கத்தின் (கிசான் சபை) முதல் கிளை உருவாக்கப்பட்டது.
சாதி இந்துக்களின் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி,
உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்க பண்ணையார்கள் முயற்சித்தனர். விவசாயிகள்
சங்கம் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டது. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான களத்தில்
நின்று, உழைக்கும் மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்தது. தோளில் துண்டு அணியக் கூடாது,
வேட்டி அணியக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, தேநீர் வழங்குவதில் பாகுபாடு
(இரட்டைக் குவளை, சந்து வழியாக வழங்குவது), தண்ணீர் வழங்குவதில் பாகுபாடு என அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை
கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்தினர்.
அதே சமயம்,
பண்ணையாட்களையும், விவசாயிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்த பண்ணையார்கள், மடாதிபதிகள், மிராசுதார்களுக்கு
எதிரான போராட்டங்களும் வலுப்பட்டன.
தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்திற்கு சொந்தமான நிலத்தில் உழைத்து வந்த குத்தகை விவசாயிகள், குத்தகையாக 82 சதவீத விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி 33
சதவீதம்தான் தர முடியும் என சங்கம் முடிவு
செய்தது .உடனே சங்க
செயலாளராக இருந்த வீராசாமியை, 3 ஏக்கர் குத்தகை நிலத்திலிருந்து விரட்டியது உத்திராபதி மடம்.
சங்கத்தை அனுமதிப்பதை விட பயிர்கள் வயலிலேயே கருகட்டும் என முடிவு செய்தனர் மடத்தினர். விளைந்த நெல்லை அறுவடை செய்ய தடை போட்டார்கள். ஆனால்
குத்தகை விவசாயிகள் உத்தரவை மீறினார்கள். போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.
பெரும்பகுதி தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த விவசாயத்
தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை மறுத்த வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள்
வழிநடத்தினர். போராட்டத்தை ஒடுக்க அடியாட்களை ஏவினார்கள் பண்ணையார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகளின் உறுதியான போராட்டம்,
அரசு நிர்வாகத்தை தலையிடச் செய்தது. அடுத்தடுத்த வெற்றிகள் கம்யூனிஸ்டுகள் மீது நம்பிக்கையை
அதிகரித்தது. இந்தச் சூழலில் இந்தியா விடுதலையடைந்தது.
இந்திய விடுதலையும், அடக்குமுறையும்:
காலனியாதிக்கம் முடிவுக்கு வந்ததென்றாலும், அது
நிலஉறவுகளில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக
கம்யூனிச இயக்கத்தை அடக்கும்
முயற்சிகள் தொடங்கின. 1948 முதல்
1951 வரை நான்கு ஆண்டுகளுக்கு தஞ்சையில்144 தடை
உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் இயக்கத்தை
பலவீனப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.
தலைவர்கள் தலைமறைவாக இயங்கினார்கள். சுதந்திர இந்தியாவில் போராட்டக் களத்தில்
கைது செய்யப்பட்ட களப்பால் குப்பு, திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். பொய் வழக்குகள் புனையப்பட்டன. நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்துகொண்ட
இந்திய அரசின் வர்க்கத்தன்மை மிகத்
தெளிவாக வெளிப்பட்டது.
இக்காலகட்டத்தில்,
முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மக்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. அடக்குமுறைகள் பலிக்கவில்லை என உணர்ந்து கொண்ட ஆளும் வர்க்கம் இறங்கி வர நேர்ந்தது. ஜமீன் ஒழிப்பு,
இனாம் ஒழிப்பு சட்டங்கள், விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு
வாரம், பண்ணையாட்களுக்கு கூலி ஒப்பந்தங்கள் என சில
மாற்றங்கள் இந்தப் பின்னணியில்தான்
ஏற்பட்டன.
இக்காலத்தில்,
நிலச் சீர்திருத்தசட்டம் வந்தபோதும் பெரும்பகுதி நிலம் ஏகபோகத்திலேயே தொடர்ந்தது. பெற்ற சட்டங்களை அமலாக்குவதற்காகவும் போராட வேண்டியிருந்தது.
உதாரணமாக ‘தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர்
பாதுகாப்புச் சட்டத்தை’ தமிழகம் முழுமைக்கும் அமலாக்க கம்யூனிஸ்ட்டுகள்
வலியுறுத்தினார்கள். இதற்காக
சிதம்பரத்தில் விவசாயிகள் பெருந்திரளாக போராடினார்கள். சிதம்பரம்
வட்டத்திற்கு மட்டும் அச்சட்டம் விரிவாக்கப்பட்டது. இப்படி படிப்படியாகவே மாற்றங்கள்
சாத்தியமாகின. இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி நிலம் எடுக்கும் பட்டியலில் 198 கிராமங்களை இணைக்க 17 ஆண்டுகள்
போராட வேண்டியிருந்தது. இந்திய விடுதலையும், மெல்ல
மெல்ல ஏற்பட்ட மாற்றங்களும், நில உறவுகளை மாற்றியமைத்தன. பண்ணை
அடிமைச் சுரண்டல் வீழ்த்தப்பட்டு, கூலி உழைப்பு முறை வந்தது.
1959 ஆம் ஆண்டில் விவசாயத் தொழிலாளர் சங்கம்
உருவாக்கப்பட்டது. கூலி உயர்வு, கூலி ஒப்பந்தங்களுக்கான கோரிக்கைகள் எழுந்தன. எனவே தங்கள் ஏகபோகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மிராசுதார்கள்
நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்கள்
கூலிஉயர்வை மறுத்தது மட்டுமல்ல;
கூலியை
உயர்த்திக் கொடுக்கக்கூடாதென்று சிறு
நிலவுடமையாளர்களுக்கும் தடை போட்டார்கள்.
கூலி உயர்வுப் போராட்டங்களை திராவிட இயக்கம்
விமர்சித்தது. வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில்,
திராவிட இயக்கத்தின் இந்த நிலைப்பாடு விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்களிடையே கேள்விகளை உருவாக்கின. இப்பகுதியில்
குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டுவந்த திராவிட விவசாயிகள் சங்கத்திற்குள்
அதிர்வுகள் ஏற்பட்டன.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட திராவிட விவசாயிகள்
சங்கத்தினர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்கள். 1963, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த மோதல் வலுவாக நடந்து வந்த காலம். 1964 ஆம்
ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது.
கீழத்தஞ்சையில் வர்க்க இயக்கத்தை
மார்க்சிஸ்ட் கட்சி வழிநடத்தியது.
மாநிலத்தில் ஆட்சி
மாற்றம்:
சில ஆண்டுகளில், (1967) தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலை
சந்தித்தது திமுக. தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை
இழந்து, திமுக ஆட்சியமைத்தது. அரசு இயந்திரம் எப்போதும் போல் தன்
வர்க்கத்திற்கு சேவையாற்றியது.
1957 ஆம் ஆண்டிலேயே கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவை,
தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடாது என கொள்கையை மேற்கொண்டது. பிராந்திய முதலாளித்துவ கட்சியான திமுக, நிலவுடைமையாளர்களோடு
சமரசம் செய்துகொண்டது. திமுக ஆட்சியில் ‘கிசான் போலீஸ்’ என்று அழைக்கப்பட்ட காவலர்கள் உள்ளூர் அளவில் மிராசுதார்களின் அடக்குமுறைகளுக்கு சாதகமாக செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒடுக்குவதற்கான ஏற்பாடாகவே
அது இருந்தது. கூலி உயர்வுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தையை விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தியபோது, திமுக
அரசாங்கம் அதை
ஏற்கவில்லை.
1966 அக்டோபர் 6
ஆம் தேதி பூந்தாழங்குடி கிராமத்தில்
நடைபெற்ற போலீஸ்
துப்பாக்கிச்சூட்டில் பக்கிரி
என்ற விவசாயத் தொழிலாளர் கொல்லப்பட்டார்.
மிகப்பெரும் எழுச்சி வெடிக்கும் என்ற நிலையில்தான்
முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமானது.
வெண்மணி என்ற கொதிகலன்:
நாகப்பட்டினம் வட்டத்தில் நெல்
உற்பத்தியாளர் சங்கத்தின் ஒரு கிளை இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு என்ற காங்கிரஸ்காரரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிச இயக்கத்தின் முன்னே தங்கள் சுரண்டல்
சாம்ராஜ்யம் நொறுங்குவதை மிராசுதாரர்களால் ஏற்க முடியவில்லை. எத்தகைய அடக்குமுறைக்கும் தயாரானார்கள்.
சிக்கல் பக்கிரி கொல்லப்பட்டார். நிலக்கிழாராக
இருந்தும் விவசாய தொழிலாளர்கள் பக்கம் நின்ற கீழக்கரை ஏ.ஜி.ராமச்சந்திரன் போலீசார் முன், வயலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைகளை
கண்டித்து பொதுக்கூட்டம் நடந்த நாளிலேயே சின்னப்பிள்ளை கடத்தி கொல்லப்பட்டார்.
மேலும், நெல் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ‘வெண்மணி சேரியை தீ வைத்து கொளுத்துவோம்’
என்று எச்சரித்து பேசினார்கள்.
எதிர் வரவுள்ள சூழல் கடுமையாக இருக்கும் என்பதை
கம்யூனிஸ்டுகள் உணர்ந்தார்கள்;
எச்சரித்தார்கள். ஆனால்,
அரசு இயந்திரம் திட்டமிட்ட மெத்தனத்துடன் இயங்கியது. காங்கிரஸ்
தலைவர் காமராஜர், விவசாயத் தொழிலாளர்கள் மீதே குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்.
19.09.1968 அன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளம்
கேட்டு நடத்தியபோராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
செய்தார்கள். அதில் கீழ்வெண்மணி தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து
அப்பகுதியில் நிலவிய அரசியல்
உணர்வையும்,
உறுதிப்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பண்ணையார்கள்
இந்த அரசியல் உறுதிப்பாட்டை ஒடுக்க நினைத்தார்கள். இப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகவும் சேர்த்து ரூ.250 அபராதம் விதித்தார்கள்.
டிசம்பர் 25 ஆம்
தேதி இரவில் காவல் துறையும்,கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் சென்ற ரெளடிகளும்
கீழ் வெண்மணி கிராமத்தை சூழ்ந்து கொண்டு தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராமய்யாவின் குடிசைக்குள் 48 பேர் மறைந்து கொண்டார்கள். குடிசையின் கதவைப் பூட்டினார்கள் ஏவலாட்கள். குடிசைக்கு நெருப்பு
வைக்கப்பட்டது. தீயின் வெப்பம் தாளாமல் தப்பி ஓடியவர்கள் 6 பேர். அவர்களில் இருவரைப் பிடித்து மீண்டும் நெருப்புக்குள் வீசினார்கள் அடியாட்கள். ஒரு
தாய் தன்னுடைய ஒரு வயது குழந்தையை நெருப்பில்
இருந்த காப்பாற்றுவதற்காக வெளியே
வீசினாள். பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அதை மீண்டும் நெருப்பில் தூக்கியெறிந்தார்கள். வெளியிலிருந்து
இச்சம்பவங்களை பார்த்து அலறிய குழந்தைகளையும் தாக்கினார்கள்.
சம்பவம் நடைப்பெற்ற அன்று
இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொண்டிருந்த குடிசையின் உள்ளே மனித உயிர்கள் சாம்பல்களாகி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப்
படை வந்தது. காவல் அதிகாரிகள் அடுத்த நாளில்தான்
வந்தார்கள்.
1969 ஜனவரி 12
ஆம் தேதி,
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பி.டி.ரணதிவே பின்வருமாறு எழுதினார்:
“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்ற காங்கிரஸ்
பிரச்சாரத்திற்கு அஞ்சியும், தன் கட்சிக்குள் இருக்கும் நிலவுடைமையாளர்கள் அழுத்தத்திற்கு பணிந்தும்,
தாமதத்திற்கு (திமுக) அமைச்சரவை வழிவகுத்தது, அது
பின்னவர்கள் தொழிலாளர்கள் மீது தாக்குதல்
நிலையெடுக்க ஊக்கமளித்தது” .
யார் யார்,
எந்தப்பக்கம் என தெளிவானது:
வெண்மணியின் தியாகமும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும்,
வர்க்கப் போராட்டக் களத்தில் யார்,
எந்தப் பக்கம் நிற்கிறார்கள்
என்பதை உணர்த்துகின்றன.
கோபாலகிருஷ்ண நாயுடு உட்பட இப்படுகொலையை முன்நின்று நடத்தியவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். காவல்துறையை கையாண்ட திமுக அரசாங்கம், மிராசுதார்களுக்கு
சாதகமாக நடந்து கொண்டது. மேலும்,
பெரியார் தலைமையில் செயல்பட்ட திராவிடர்
கழகமும், கூலி உயர்வுப் போராட்டங்களையே வன்முறைக்கு காரணமாக
கற்பிக்க முயன்றது.
மேலும்,
வெண்மணி படுகொலைகள் குறித்து செய்தி வெளியிட்ட
பத்திரிக்கைகள் “விவசாயிகள் இருபிரிவினர் இடையே நடைபெற்ற
மோதலைத் தொடர்ந்து” படுகொலைகள் நடந்ததாகக் கூறின. “விவசாய பணிகளுக்கு அமர்த்தப்பட்ட வெளியாட்களை 200
பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, கொலை
செய்ய முயன்றதால் மோதல்
மூண்டதாகவும், அந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்” என்றும் தெரிவித்தன.
இதுகுறித்து எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ‘கீழவெண்மணி
கொலை பாதகம் பற்றிய செய்திகளை தீக்கதிரில் தேடித் தேடிப்
படித்தேன். எல்லா இதழ்களும் மௌனம் சாதிக்கிற தருணத்தில்
இந்த தீக்கதிர் இதழ் மட்டும் இந்தச் செய்தி பற்றிய பேருண்மைகளை சத்தம் போட்டுச் சொன்னது’
என்கிறார்
இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்னமும் அப்பட்டமாய் மிராசுதார்களை ஆதரித்தது “இந்த
வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க
வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள
பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக்
கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய
மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்(?)” என
வியாக்கியானம் கொடுத்தது நீதிமன்றம்.
போராட்டக்கனல்அணையவில்லை:
நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராகவும், அதன் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்களைத் திரட்டி, தெளிவான
தாக்குதலைத் தொடுத்து வந்த
கம்யூனிஸ்ட் இயக்கம், தொடர்ந்து முன்னேறியது. படுகொலைகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. உண்மைகளை இருட்டடிக்க முயற்சி நடந்தது.
விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்கள் பல உயிர்த் தியாகங்களைச் செய்து போராடினார்கள், நிலவுடைமை ஏகபோகத்தை தாக்கினார்கள். உடைப்பை
ஏற்படுத்தினார்கள். அரசியல், சமூகத் தளங்களில் வெற்றிகள் கிடைத்தன.
கீழ்வெண்மணி படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை
ஆணையம், கீழத்தஞ்சையில் நிலவிய கடுமையான உழைப்புச் சுரண்டலை வெளிக்கொண்டு வந்தது. அதன்
அடிப்படையில் அவசரச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டம் முதலில் தஞ்சையிலும், அதைத்
தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமலாகின.
1970களில் நில விநியோகத்திற்கான இயக்கங்கள்
வேகம் பிடித்தன. நிலச்சீர்திருத்தத்திற்கான முந்தைய சட்டம் திருத்தப்பட்டது. 1970 முதல் 1991 வரையிலான
காலகட்டத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடிக்கு தகுதியான சுமார் 6 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கச்
செய்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பழைய நில
உறவுகள் இயல்பாக மாறிவிடவில்லை.
சாதீய ஒடுக்குமுறைகளை வீழ்த்தவும்,
நிலவுடைமை ஏகபோகத்தை தகர்க்கவும் ஒன்றுபட்ட போராட்டங்களும்,
அளப்பரிய தியாகமும் தேவைப்பட்டன. வர்க்கப் போராட்டமே மேம்பட்ட சமுதாயத்தை
உருவாக்கும் என்ற பாடத்தை கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் இயக்கம் நமக்கு கற்பிக்கிறது.
கீழவெண்மணி எனும் வீரவெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வீறுகொண்டெழுந்தனர். செங்கொடி இயக்கம் விதைத்த வித்துக்கள் முளைத்துப் பயிராயின. ஆண்டைகள் எனும் நிலப் பண்ணையார்கள் முன் ‘கையது கொண்டு மெய்யது போர்த்தி’ கூனிக் குறுகி நிற்க வேண்டும்; தோளில் கிடக்கும் துண்டு இடுப்புக்குவர வேண்டும்; காலுக்குச் செருப்புமின்றி கால்வயிற்றுச் சோறுமின்றி வீணுக்கு உழைக்க வேண்டும். கேள்விக்குறிபோல் வளைந்த முதுகு கொஞ்சம் நிமிர்வதுபோல் தெரிந்தால் சவுக்கடி வாங்க வேண்டும்; சாணிப்பால் குடிக்க வேண்டும்.
இது என்னாங்கடா நியாயம் என்ற கேள்வியோடு கூலித் தொழிலாளர்களாக, பண்ணை அடிமைகளாகவும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டியது, செங்கொடி இயக்கம்.
காற்றும் மேலே பட்டுவிடாத படிக்கு தூரத்தில் நின்றே பேசிய பண்ணையார்த் தனத்திலிருந்து முழுவதும் மாறுபட்டு தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடியது மார்க்சிய இயக்கம். அந்தப் புல்லரிப்பில் – நெஞ்ச நெகிழ்ச்சியில் – துணிச்சல் துளிர்விட்டது.
நாம மனுசங்கடா. பண்ணையார்களைப்போல கண்ணும் காதும் மூக்கும் வாயும் காலும் கையும் கொண்டமனு சங்கடா. அதிலும் உட்கார்ந்து தின்னாமல் உழைத்து வாழ்கிற மனுசங்கடா என்ற உண்மை, ஒளியை ஏற்றியது. அதன் வெளிப்பாடாய் தஞ்சைத் தரணியின் கிராமங்களில் தென்பரை முதல் வெண்மணி வரை செங்கொடிகள் உயர்ந்தன. அடிமைவாழ்வுக்கென்றே பெற்றுப் போடப்பட்டவர்கள் அல்ல; நமக்கென உரிமைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பெறவும் கிடைக்காவிட்டால் போராடிப்பெறவும் தயாராக வேண்டும் என்ற வர்க்கப்பாடத்தின் அரிச்சுவடி பயிற்றுவித்தது செங்கொடி.
பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களுக்கும் பாடம் நடத்தியது செங்கொடி இயக்கம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்று வர்க்கப்போராட்டமே வாழ்க்கையைக் கடைத்தேற்றும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதனைக் கீழவெண்மணியின் வரலாறு துல்லிய மாக சொல்கிறது.
வெண்மணியும் செங்கொடி இயக்கமும்
தாங்கள் பண்ணையார்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, விவசாயக் கூலித் தொழிலாளர்களும் கூட என்ற தெளிவான உணர்வு பெற வைத்தது செங்கொடி இயக்கம். அதனால்தான் வஞ்சனைக்கும் அஞ்சிடோம்; மிரட்டலுக்கும் பணிந்திடோம். உயிரையே பறிப்பதென்றாலும் செங்கொடியை இறக்கமாட்டோம் என்று சூளுரைத்து நின்றார்கள்.
இத்தகைய செங்கொடி இயக்க வளர்ச்சி கண்டு மிரண்ட பண்ணையார்கள், 1966-ல் மஞ்சள் கொடியின் கீழ் நெல்உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். செங்கொடியை இறக்கிவிட்டு மஞ்சள் கொடியோடு இணைந்து விட்டால் கூலி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தருவதாக பசப்பு வார்த்தைகள் பேசினார்கள். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை பேசுகிறார்கள் இவர்கள் என்பதைக் கண்டுணர அந்தத் தொழிலாளர் களுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை.
வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சேரியில் வசிக்கும் பெண்கள் சிவப்பு ஜாக்கெட் அணிந்தால் கிழித்திருக்கிறார்கள். ஆண்கள் சிவப்பு துண்டுபோட்டால் எரித்திருக்கிறார்கள். இந்த விவரங்கள் வெண்மணி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளன.
ஆதிக்கத்தில் திளைத்த பண்ணையார்கள்
சேரியில் ஒருவன் செத்துப்போனால் தூக்கிப் போட்டுவிட்டு வேலைகெடாமல் பணிக்கு ஓடி வந்தவர்கள் இந்த அடிமைகள். இப்போது பக்கிரிசாமி மரணத்திற்காக ஒருநாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்; இது தகுமா? என்பதுதான் பண்ணையார் களின் முதல் கேள்வி.
மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அது அவர்களின்பாடு; அரசாங்கத்தின்பாடு; நிலத்தில் கூலி வேலை செய்து கும்பி கழுவும் இவர்களுக்கு என்ன வந்தது? அந்த மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துவிட்டு வேலை பார்க்கவில்லை; ஒருநாள் வேலை நிறுத்தமும் செய்கிறார்கள். இந்த ஒற்றுமை உணர்வு எங்கே கொண்டுபோய்விடும் என்பது அவர்களின் இரண்டாவது கேள்வியோடு கலந்த அச்சம்.
இவர்கள் வேலைக்குவராமல் ஒழியட்டும். வெளியூரிலிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டுவந்து வேலை செய்யவும்விடமாட்டேன் என்கிறார்கள். திமிரை அடக்க அபராதம் போட்டால் அதையும் தரமாட்டோம் என ஒன்று கூடித் தீர்மானம் போடுகிறார்கள். கல்லெறிந்தால் பறந்துவிடும் காக்கைகளாக இருந்தவர்கள் இன்று சிலிர்த்தெழும் சிங்கக் கூட்டமாக மாறி யிருக்கிறார்கள். மாறவிடலாமா என்பது அவர் களின் அடுத்த கேள்வி. மாறாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்ற சதித்திட்டமும் இதோடு உருவாகிறது.
வர்க்க நீதியின் வெளிப்பாடு
15.12.68 அன்று “இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அராஜகப் போக்கு குறித்து” சொற்பெருக்காற்ற நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு தலைமையில் கீழ வெண்மணியில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது.
பண்ணையார்களின் பலத்தைக்காட்டி அச்சுறுத்த மணலூரில் தொடங்கி கிள்ளுக்குடி அய்யடிமங்கலம் வழியாகவும் இரிஞ்சூரில் தொடங்கி அணக் குடி, அய்யடிமங்கலம் வழியாகவும் கீழவெண் மணிக்கு இரண்டு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்குமுன்னதாக 05.12.68 தேதியிட்டு சிபிஐ (எம்) நாகை தாலுகா செயலாளர் வீ.மீனாட்சி சுந்தரம், பண்ணையார்கள் மற்றும் நெல்உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களை அழிக்கத்திட்டமிடுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆக கீழவெண்மணியில் மட்டுமல்ல தஞ்சை மாவட்டத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை நீதிபதிகள் கூட அறிந்தே இருந்தனர்.
“கடந்த பல ஆண்டுகளாக தஞ்சாவூரின் வசதியற்ற கிசான் (விவசாயி)களுக்கும் வசதி படைத்த பரம்பரை நிலப்பண்ணையார்களுக்கும் இடையே கடுமையான வர்க்கப் போராட்டம் நடந்து வருகிறது” என்று வெண்மணி வழக்குத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிபிட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல “தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மனிதாபிமானம் அற்றதாகவும், பழிபாவங்களுக்கு அஞ்சாததாகவும் தெரி கின்றன” என்றும் கூறியிருக்கிறார்கள்.
நீதிபதிகளின் ஆரம்பகட்ட வார்த்தைகள் ஓரளவு உண்மையின் பக்கம் இருப்பதுபோல் தோன்றினாலும் கடைசியில் அவர்களின் மனங் களை வர்க்க நீதியே ஆட்கொண்டிருக்கிறது.
44 பேர் எரிப்பு கொலை அல்லவா?
கீழவெண்மணியில் ராமய்யாவின் குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போதும் கொலை என்பதற்கான இ.பி.கோ 302 பிரிவு முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் சேர்க்கப்படவில்லை என்பது முதல் சறுக்கல் என்று தோழர் கோ.வீரையன் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். இதுவே முழுமையான சறுக்கலைக் கொண்டுவந்தது என்பதை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புப்பகுதி எடுத்துரைக்கிறது.
“அரசுசாட்சி (ராமய்யாவின்) வீட்டில் தஞ்சம்புகுந்த 42 அப்பாவி விவசாயிகள் அந்த வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதால் உயிர் இழந்திருக் கிறார்கள் என்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது. வீட்டுக்குத் தீவைத்தவர்களுக்கு அந்த வீட்டுக்குள் 42 பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்பதையும் அவர்களை எரித்துக் கொல்லவேண்டும் என்றநோக்கம் இல்லை என்பதையும் அறிவது கொஞ்சம் ஆறுதல் அளிப் பதாக இருக்கிறது. இந்த அப்பாவி விவசாயி களைக் கொல்வது அந்தக் கலவரக் கும்பலின் பொதுநோக்கத்தின் பகுதியாக இருக்கவில்லை என்று மதிப்புக்குரிய அமர்வு நீதிபதி (நாகை விசாரணை நீதிமன்றம்) கண்டறிந்துள்ளார். நாங்களும் இதனை ஏற்கிறோம்……
ஆனால் குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குத் தேவையான சாட்சியம் எங்களுக்குக் கிடைக்காததற்காக வருந்துகிறோம்” தீர்ப்பின் இறுதிப்பகுதியில் இவ்வளவு வருத்தப் பட்டாலும் நடுப்பகுதியில் நீதிபதிகள் கொண் டிருந்த கருத்து வர்க்க நீதியை அடையாளம் காட்டுகிறது.
“பதிவான சாட்சியங்களைக் கொண்டு பார்க்கும்போது இருக்கை பக்கிரிசாமிப்பிள்ளை தலை மையிலான வெளியூர் கூலியாட்கனைத் தாக்கி இறுதியாக அவரைக் கொன்றதன் மூலம் விவசாயி கள் தான் வலுச்சண்டைக்கு சென்றிருப்பதுதெரிகிறது”
நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆரம்பித்தது, விவசாயக் கூலித்தொழிலாளர்களை மிரட்டியது, வீடுகளை சூறையாடியது, சிவப்பு துணிகூட ஆடையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் கிழித்தது, எரித்தது, வேலை நிறுத்தம் செய்ததற்காக அபராதம் விதித்தது, செலுத்தா விட்டால் பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று மிரட்டியது போன்றவற்றுக்கான சான்றா வணங்கள் எல்லாம் பண்ணையார்களின் வலுச் சண்டைக்கு ஆதாரங்களாக நீதிபதிகளின் கண் களுக்குப்பட வில்லை என்பதுதான் ஆளும், அதிகார வர்க்கப்பார்வை
குற்றத்திற்கு ஆதரவாய் வியாக்கியானங்கள்:
இதற்கும் மேலதிகமாக ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.
“இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர் களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக் காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப் பார்கள்(?) இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது, தங்களுக் கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள் முர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களைவிட அதிகம் பாது காப்புடனே இருப்பார்கள் – மிராசுதாரர்கள் பின்னால் இருந்துகொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப் பார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எவ்வளவு வியாக்கியானம்! வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற நகைச்சுவை காட்சிபோல, அதிக நிலம் வைத்திருப்பவர்கள், சொந்தாமாகக் கார் வைத்திருப்பவர்கள் நடந்து வந்து குற்றம் செய்வார்களா என்பதொரு சந்தேகம். அடுத்தது வசதிபடைத்தவர்கள் தவறுசெய்தாலும் பாதுகாப்புடனேயே இருப்பார்கள்; யாரையாவது ஏவிவிட்டுப்பின்னாலிருந்துதான் இயக்குவார் கள். அடடா! எப்படிப்பட்ட ஆளும் வர்க்கப் பார்வை இதில் பளிச்சிடுகிறது.
இந்தப் பார்வையால் தான் முதலாவது எதிரி ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு உட்பட 8 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் கூட உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்சநீதிமன்ற மும் இதனை உறுதிசெய்துவிட்டது.
ஆளும் வர்க்கக்கண்ணோட்டத்தோடு தீர்ப்பு கள் வழங்கப்பட்டாலும் தொழிலாளி வர்க்கப் பார்வையையும் பாடத்தையும் செயல்பாடுகளை யும் தான் வெண்மணி நிகழ்வுகள் தொடர்ச்சி யாகக் காட்டுகின்றன.
தாழ்த்தப்பட்டோர் என்று சாதிக் குறிப்பிடப் பட்டாலும் அவர்கள் தங்களை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என வர்க்க உணர்வோடும்அறிந்துகொண்டிருந்தார்கள். உணரவைக்கப்பட்டார்கள். அதனால்தான் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் தீவிரமாகவும் உறுதியாகவும் எதிர்த்து நின்றார்கள். தொழிலாளி வர்க்க உணர்வோடு இருந்ததால்தான் தங்களின் கூலி உயர்வுக்காக மட்டுமின்றி ஒப்பீட்டளவில் மாத ஊதியத்தோடு வாழ்க்கைப் பாதுகாப்புள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
42 பேர் (நீதிமன்ற ஆவணப்படி) தீயில் கருகி மாண்ட கீழவெண்மணியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கி யிருக்கிறது. இந்தச் சம்பவம் பற்றிய செய்தி இங்கிலாந்தில் உள்ள செய்தி ஏடுகளில் கூட 1968 டிசம்பர் 27 அன்று வெளியாகியிருக்கிறது.
இருசாதிகளுக்கு இடையேயான மோதலாக வெண்மணியைச் சுருக்க முயற்சி செய்ததெல்லாம் பொய்யாய் பழங் கதையாய்ப் போயேவிட்டது. அது வர்க்கப் போராட்டத்தால் ஏற்பட்ட துயர சம்பவம் என்றாலும் 50 ஆண்டுகளாக அந்த வர்க்கத் தீ உழைப்போர் மனங்களில் அணையாத் தீயாகப் பற்றிப் பரவிக்கொண்டே இருக்கிறது. அது ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத் தையும் சுட்டெரித்து தொழிலாளி வர்க்க தலைமை யிலான அரசை சமைக்க உதவும் என்பது நிச்சயம்.
நவம்பர் 20 அன்று 86 வயதை எட்டிய தோழர் கோ.வீரய்யன் தமிழக விவசாய சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1968 டிசம்பர் 25 அன்று இரவில் கீழத்தஞ்சையில் கீழ்வெண்மணி கிராமத்தில் ராமய்யாவின் குடிசையில் ஒளிந்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் மிக்க அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கி, உருக்கிய கோர சம்பவம் ஆகும். தமிழகத்தின் மீது ஆறாக் கறையை படிய வைத்த இந்தச் சம்பவம் குறித்த தன் அனுபவத்தை தோழர் கோ.வீரய்யன் நம்முடம் பகிர்ந்து கொள்கிறார்:
கோ. வீரய்யன்: வெண்மணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகப்பெரிய தொரு கோர நிகழ்ச்சி. மனிதன் என்ற பெயரில் இருந்த மனித மிருகங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது மனிதர்களால் செய்யக் கூடிய ஒரு செயலல்ல. மிராசுதார்கள் கூலித் தொழிலாளிகளிடம் வெச்ச கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான். நீங்க கேக்கற கூலியைத் தர்றோம். அதுக்குப் பதிலா நீங்க செவப்புக் கொடியை எறக்கிட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏத்துங்க என்பதுதான். அதுக்கு அந்த ஜனங்க இதைத்தான் பதிலாச் சொன்னாங்க: “ பண்ணை அடிமைகளா இருந்த எங்களை விடுவிச்சி, சுதந்திர மனிதர்களா நடமாட வெச்ச, வாய் பேச முடியாம இருந்த எங்களை உரிமைகளுக்காக பேச வெச்ச, நடக்க முடியாம இருந்த எங்களை நடக்க வெச்ச, துண்டை இடுப்பிலும், வேட்டியை தலையிலும் கட்டிட்டு இருந்த எங்களை வேட்டியை இடுப்பிலும், துண்டை தோளிலும் போட வெச்சி எங்களை வாழவெச்சது இந்தச் செங்கொடிதான். அதை எக்காரணம் கொண்டும் நாங்க கீழே இறக்க மாட்டோம். அவங்களுக்கு நல்லாவே தெரியும். இவங்க ஏமாத்துறாங்கன்னு. கொடியை கீழே எறக்கினாலும் சொன்ன மாதிரி கூலி ஒண்ணும் தரமாட்டார்கள் என்பதை அனுபவத்திலிருந்தே அந்த மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.
அதுக்கு முன்னால (தஞ்சை) மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து கூலிக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 1967 நவம்பரில் மன்னார்குடியில் ஒரு முத்தரப்பு மாநாடு நடந்தது. அதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மிராசுதாருக்கும் கூலித்தொழிலாளிக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அரசு நிர்வாகம் தலையிட்டு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கிசான் தாசில்தார் என்ற பதவி. இது அதற்கு முன்னால் இருந்ததில்லை. அதே மாதிரி உருவானதுதான் கிசான் போலீஸ். இந்த அமைப்புகள் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கிசான் என்ற பெயரில் அமைந்திருந்தாலும் கூட அவை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. மிராசுதார்களுக்கு ஆதரவாகவே இருந்தன.
அதே போலத்தான் வெண்மணியிலும் பிரச்சனை இருந்தது. ஒரு கலம் நெல் என்பது 48 படி. இப்படி ஒரு கலம் அறுவடை செய்வதற்கு கூலியாக 6 படி வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதே மாவட்டத்தில் மன்னார்குடி தாலுக்கா பூந்தாழங்குடிக்குப் பக்கத்தில் கருப்பூர் என்று ஒரு கிராமத்தில் இருந்த மிராசுதார்கள் அனைவரும் முஸ்லீம்கள். அந்த கிராமமே முஸ்லீம்களின் கிராமமாக இருந்தது. இவர்களுக்கு கூத்தாநல்லூரில் இருந்தவர்கள் உறவினர்கள். பலர் அங்கிருந்து வந்தவர்களும் கூட. இவர்களின் பண்ணைகளுக்கு பெயர் எதுவும் கிடையாது. நெம்பர்தான். ஒண்ணாம் நெம்பர் பண்ணை; ரெண்டாம் நெம்பர் பண்ணை இப்படி. இதில் கருப்பூர் ஆறாம் நெம்பர் பண்ணையில் அறுவடை. அந்த மிராசுதார் கூலித் தொழிலாளிகள் கேட்ட 6 படி நெல்லை கூலியா கொடுத்திட்டாரு. மறுநாள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பு அடித்தபடி வர, அடியாட்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண், பெண்கள் எல்லோரையும் அடித்து கரையேற்றினார்கள். கண்ணில் பட்ட செங்கொடிகளை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படி செய்து கொண்டிருக்கும்போதே, பூந்தாழங்குடி கிராமத்துல இருந்த செங்கொடியை வெட்டி வீழ்த்த வந்தபோது, அங்கிருந்த மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து அதைத் தடுத்தாங்க. அப்போ அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி என்பவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முதல் களப்பலியானவர் பூந்தாழங்குடி பக்கிரி. இதில் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய போராட்டத்தில் களப்பலியானவர் ஆதனூர் நடேசன். அவரும் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். அவங்க மோசமானவங்கன்னு சொல்லி 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே போன்ற தாக்குதலில் தோழர் பக்கிரி களப்பலி ஆனார். பின்னர் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக ஆட்சியிலும் களப்பலியானவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான். அதுவும் கூட பூந்தாழங்குடியில்தான். இது ஒரு வரலாற்று நிகழ்வு.
1967 நவம்பரில் நடந்த பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாங்கூர் பழனிச்சாமி தலைமையில் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம். அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய சிக்கல் பக்கிரிசாமி இரவு 10-11 மணிக்கு சிக்கல் கடைத்தெருவில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்துதான் வெண்மணி வருகிறது. அங்கும்கூட கூலித் தொழிலாளர்கள் ஆறுபடி கூலிதான் கேட்டார்கள். வேறு எதுவும் கேட்கவில்லை. நிலம் வேண்டுமென்றோ, வீடு வேண்டுமென்றோ அவர்கள் கேட்கவில்லை. இப்போ ஐந்தே கால் படி, ஐந்தரை படின்னு கூலி இருக்கு. அதை ப்ளாட் ரேட்-ஆ ஆறு படியா குடுங்க. உள்ளூர்காரங்களுக்கு வேலை குடுங்க. இதுதான் அவங்க கேட்டது. கூலிப் பிரச்சனை எழுந்த உடனேயே மிராசுதார்ங்க ஜாதிப் பிரச்சனையை கொண்டு வந்தாங்க. மத்த ஜாதி குடியானவங்க கிட்ட தலித்துங்க தான் இந்த மாதிரி கூலியை உசத்தி கேக்கறாங்க. அவங்கள அடக்கி வைக்கணும்னு தூண்டி விடப் பாத்தாங்க. அதே மாதிரி வெளியூர்ல இருந்து ஆளுங்கள கொண்டு வந்தும் இதை உடைக்கப் பார்த்தாங்க. உள்ளூர் ஆளுங்கள பட்டினி போட்டாங்க. இவங்கள பட்டினி போட்டே பணிய வெச்சிட முடியும்ங்கிறதுதான் மிராசுதார்களோட நெனப்பு. இதையெல்லாம் மீறித்தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருந்தாங்க… இதுல என்ன விசேஷம்னா… ஏன் வெண்மணியை குறிவெச்சாங்கன்னா… நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு…. அவருடைய சொந்த ஊர் இரிஞ்சூர். அங்கு போகணும்னா வெண்மணியைத் தாண்டித்தான் போகணும். அதனால இந்த ஊரை (வெண்மணியை) நம்ம கையில் வெச்சிருந்தாதான் நமக்கு பாதுகாப்பு என்கிறது அவர் எண்ணம். அதுக்கு முன்னால் டிராக்டர்ல அடியாட்கள் வருவாங்க… தலித் மக்கள் இருக்கும் குடிசைகளை எரித்து நாசமாக்குவாங்க… இப்படி பல ஊர்ல நடந்தது.
கடைசியா வெண்மணில கட்சிக் கிளைச் செயலாளர் அந்த கிராமத்துல ஒரு டீக்கடை வெச்சு நடத்திட்டு இருந்தார். அவர்கிட்ட கோபால கிருஷ்ண நாயுடுவோட அடியாளுங்க போயி, “அய்யாவிடம் 250 ரூபா கடன் வாங்கியிருக்க இல்ல. அதைத் திருப்பிக் குடு” ன்னு கேட்டிருக்காங்க. அவர் பதிலுக்கு “ நான் கடன் எதுவும் வாங்கலியே. நீங்க எங்கிட்ட தப்பா வந்து கேக்கறீங்க” என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு அந்த அடியாளுங்க : நல்லா யோசிச்சு வை. சாயந்திரம் வர்றோம். அப்போ அய்யா கிட்ட வாங்கின கடனை வட்டியோட குடுக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேற”ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அவங்க மீண்டும் சாயந்திரம் வந்தாங்க.. கடைக்காரர் “நான் கடன் எதுவும் வாங்கவில்லையே. அப்புறம் எப்படி கொடுப்பது?” என்றபோது , அவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்று பக்கத்து குடியானவத் தெருவுல ஒரு வீட்டில கொண்டு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்று விட்டாங்க.
இதைக் கேள்விப்பட்டவுடனே ஊர்ஜன்ங்க எல்லாம் திரண்டெழுந்து அந்த வீட்டுக்கு முன்னால திரண்டுட்டாங்க. ஜனங்க மொத்தமா திரண்டு வந்ததைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் அவரை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே அழைத்து கொல்லைப் புறமாக வீட்டுக்குப் போய் விடும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்பு வாசலுக்கு வந்து தங்கள் வீட்டில் யாரையும் அடைத்து வைத்திருக்கவில்லை என்றும் வேண்டுமானால் நீங்களே உள்ளே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கதவைத் திறந்து விட ஊர் மக்கள் வீட்டில் யாரையும் காணாமல் திரும்பி விட்டனர்.
இந்தச் செய்தி கோபால கிருஷ்ண நாயுடுவுக்குப் போகிறது. நாம அடைச்சி வெச்சிருந்த ஆளை இவங்க மீட்டுக் கொண்டுட்டு போறதா? என்று அவருக்குக் கோபம். உடனே டிராக்டர்ல அடியாளுங்க ஏறினாங்க. கூடவே கத்தி, வேல்கம்பு, பெட்ரோல், தீப்பெட்டி எல்லாம் எடுத்துட்டு வெண்மணியை நோக்கி வரும்போதே வழியெல்லாம் வீடுகளுக்கு தீவைத்துக் கொண்டே வந்தாங்க. தெருவில வரச்சே 26 வீடுங்க தீப்பத்தி எரியுது. இதைப் பார்த்த உடனே 19பெண்கள், 19 குழந்தைகள், 6 முதியவர்கள் எல்லாம் ராமய்யாவோட வீட்ல போய் ஒளிஞ்சிகிட்டாங்க. வந்த அடியாளுங்க கண்மண் தெரியாம சுட்டுகிட்டே வந்தாங்க. மொத்தம் 17 பேருக்கு குண்டுக் காயம். ஒவ்வொரு உடம்பிலேயும் 12 குண்டு, 17 குண்டு, 23 குண்டுன்னு இருந்தது. இப்படி குண்டுக்காயம் பட்டவங்க ஓடி ஒளிஞ்சிக்க முயற்சித்தபோது நல்லா வெளஞ்சிருந்த வயல்ல நினைவில்லாம உழுந்து கிடந்தாங்க. மறுநாள் காலைல விடிஞ்ச பெறகுதான் அவங்களைத் தேடிக் கண்டெடுத்து நாகப்பட்டினம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம்.
இங்க ராமய்யா குடிசையில ஒளிஞ்சிக்க போனவங்க தங்களை காப்பாத்திக்கிறதா நெனச்சி உள்ளே தாழ்ப்பா போட்டுகிட்டாங்க. நமக்கு பாதிப்பு ஏதும் வராதுன்னு அவங்க நம்பிக்கை. வீடுங்களை வரிசையா கொளுத்திட்டு வந்தவனுகளுக்கு இது வசதியா போச்சு. அந்த வீட்டு வெளி தாழ்ப்பாளை போட்டுட்டு அந்த வீட்டு மேல பெட்ரோலை ஊத்தி கொளுத்தி உட்டுட்டானுங்க… உள்ளே இருந்த 44 பேரும் கதறி கூச்சல் போடறாங்க. ஊரே நிசப்தமா இருக்கு. அதுல ஒரு தாய் தன்னோட்ட குழந்தைய மார்போட அணைச்சுகிட்டே கருகி செத்திருந்தா. மற்றொரு தாய் தன் குழந்தையாவது பிழைக்கட்டும்னு குழந்தையை வெளியே வீசி எரிஞ்சிருக்கா… வெளியே இருந்த அடியாளுங்க அந்தக் குழந்தைய ரெண்டா வெட்டி திரும்பவும் எரியற தீயில போட்டிருக்கானுங்க… ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலை 3 மணிக்கு இதுவெல்லாம் அடங்கி முடிஞ்சுது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற போலீஸ் காலைல 5 மணிக்கு மேலதான் ஊருக்குள்ள வந்தது. அப்போ கீழ்வேளூர்ல இருந்த இன்ஸ்பெக்டர் பரமசாமி தான் இந்த கேஸ்-ஐ எழுதினவர். 26 வீடுங்க தீப்பிடிச்சு எரிஞ்சதுன்னு எழுதியவர் …. வீடு தீப்பற்றி எரிந்தது…. வீடு தீப்பற்றி எரிந்தது…அப்படீன்னு தான் எழுதினாரே தவிர தீவைக்கப்பட்டதுன்னு எழுதல. இப்படித்தான் அப்போ போலீஸ் நடந்துகிட்டது.
அப்போ போலீஸ் லாரில்லாம் நீல கலர்ல இருக்கும். அதேபோல இந்த அடியாட்கள் வந்ததும் நீல கலர் லாரியிலதான். ஜனங்க போலீஸ் லாரிதான் நம்ம பாதுகாப்புக்கு வருதுன்னு நெனச்சிட்டு இருந்தாங்க… போலீஸ் லாரி மாதிரி வேஷத்துல அடியாளுங்க வர்றாங்கன்னு அவங்களுக்குத் தெரியல… காலைல 5 மணிக்கு போலீஸ் வந்த போது ஊர்ல இருக்கற வீடு பூரா தீப்பிடிச்சி எரிஞ்சி சாம்பலா கெடக்கு. பின்னால வழக்கு தொடுத்தாங்க… கீழ்க்கோர்ட்ல 10 பேருக்கு தண்டனை கொடுத்தாங்க. அவங்க மேல உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணாங்க. உயர்நீதிமன்றமோ இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்க எல்லாம் பெரிய மிராசுதார்கள். அவங்க இவ்ளோ தூரம் எறங்கி வந்து அடிக்கிறது, கொளுத்தறது மாதிரியான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க… வேணும்னா ஆளுங்கள வெச்சு ஏதாவது செய்யலாமே தவிர நேரடியா இந்த மாதிரி செய்திருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லி அவங்க எல்லோரையுமே விடுதலை செஞ்சிட்டாங்க… இப்படி முடிஞ்சது அந்த வழக்கு…
அப்புறம் இதை கொலைவழக்கா போடறதா? நீதிவிசாரணை வைப்பதா? என்ற சர்ச்சை எழும்பியது. அப்போ கல்யாணசுந்தரம் கூட நீதிவிசாரணை வேணும்னுதான் கேட்டார். ஆனால் பி.ஆர்.தான் ( தோழர் பி. ராமமூர்த்தி) தெளிவா சொல்லிட்டார். நடந்தது பூராவும் கொலை. எனவே கொலை வழக்காத்தான் பதிவு பண்ணனும்னு. பின்னால் கணபதியாப் பிள்ளை என்பவரை வைத்து ஒரு கமிஷனை வைத்து ஊர்ல சாட்சி விசாரணை செஞ்சாங்க.. அதுல இரண்டு பிரதான வரிகள் ரொம்ப முக்கியமானது. உள்ளூர் ஆளுங்களுக்கு வேலை; ஒரேமாதிரியான கூலி என்பதைக் கேட்டது முழுக்க முழுக்க நியாயமானது. ஒண்ணு ஒரே ஊர்ல பலவிதமான கூலி; ரெண்டு வெளியூர்ல இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இறக்குவது இந்த இரண்டும்தான் பிரச்சனைக்கு அடிப்படையான காரணம்னு அவர் சொல்லியிருந்தாரு… அவங்களோட கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று கணபதியாப் பிள்ளை கமிஷன் கூறியிருந்தது.
26ஆம் தேதி காலைல காணாமல் போன ஆட்களை தேடி வயல்ல இருந்து அவர்களின் குண்டுகள் பாய்ந்த உடம்புகளை எடுத்து வந்தோம். அப்போது கொச்சியில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டு இருந்த நேரம். என்றாலும் தகவல் கிடைத்ததும் பி.ஆர்., மாவட்ட செயலாளர் ஞான சம்பந்தம், தாலுக்கா செயலாளர் மீனாட்சி சுந்தரம் எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அந்தப் பகுதியில் அப்போது 144 தடையுத்தரவு போடப்பட்டு இருந்ததால டிசம்பர் 30 ஆம் தேதியன்று திருவாரூரில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று பி. ஆர். அறிக்கை விட்டார். 30ஆம் தேதியன்று காலையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 44 உயிர்கள் கொடூரமாக எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த மனையிடத்தை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் தியாகிகள் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புவது; 2. முடிந்தால் அந்த கிராமத்தையே விலைக்கு வாங்கி அதில் வீடுகளை கட்டி மீண்டும் அவர்களை குடியமர்த்துவது; 3. மிராசுதார்களுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் தொடர்வது: 4. ஜனவரி 16ஆம் தேதிக்குள் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டி சம்பா அறுவடைக்கான கூலியை தீர்மானிக்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 17லிருந்து வயல் கரைகளில் இருந்து போராட்டம் தொடரும். 1967 டிசம்பர் 30ஆம் தேதி மாலை திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த நான்கு தீர்மானங்களை விளக்கி நான் பேசினேன்.
இந்த சம்பவத்தில் கிடைத்த விளைவு என்பது தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.