மோடி அலை… வீசுமா?

அரசியலில் ஒரு வாரம் என்பது நீண்ட காலம் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஹெரால்ட் வில்சன் ஒருமுறை கூறினார். நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என பா.ஜ.க அறிவித்து (13.09.2013) சில வாரங்களில் இந்திய அரசியல் தொடர்பான விவாதங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஜூன் மாதம் கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை குஜராத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது அவருடைய நிர்வாகத் திறமைக்கு கிடைத்த வெற்றி என பாஜகவினர் கூறினார்கள். அது மட்டுமின்றி குஜராத்தின் வளர்ச்சி மாடலை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டுமெனில் மோடி பிரதமராக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியினர் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். பா.ஜ.க கட்சிக்குள்ளேயே மோடியைப் பற்றி எதிரும் புதிருமான கருத்துக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தவிர, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி போன்றவர்களுக்கும் கட்சியின் நிலைபாட்டில் ஒருமித்த கருத்து இல்லை என்பது ஊடகங்களின் மூலம் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஜனநாயக முறைப்படி(???) பாராளுமன்ற பா.ஜ.க உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி மோடி பிரதமர் பதவிக் கான வேட்பாளர் என ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ் முடிவை எதிர்த்து பா.ஜ.க தலைமை முடிவெடுக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அறிவிப்பைத் தொடர்ந்து, மோடி பிரதமராகவே ஆகிவிட்டதைப் போன்ற காட்சி கள் அரங்கேறின. இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள். அக்கூட்டங்களில்: குஜராத் மாடல் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை பா.ஜ.க தலைவர்களும், மோடியும் பேசி வருகின்றனர்.

மறுபுறம் பா.ஜ.க அவரசப்பட்டு மோடி பெயரை அறிவித்திருக்கக் கூடாது. மோடி என்றவுடனேயே அவர் ஒரு பிளவுபடுத்தும் சக்தியாக கருதப்படுகிறார். மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக பார்க்கப்படவில்லை என பாஜகவை ஆதரிப்போர் மத்தியில் கூட கருத்து எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது. குஜராத் மதக் கலவரங்களும், அவற்றை மோடி அரசு கையாண்ட விதமும் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும், மோடியை பிளவுபடுத்தும் சக்தியாக பார்ப்பதற்கு பிரதான காரணமாகும். இந்திரா காந்தி கொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தவில்லையா என பாஜகவினர் பதிலுக்கு கேள்வி கேட்கலாம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ரத்தக் கறைபடிந்த இந்த இரு கோர சம்பவங்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. நீதி கேட்டு சீக்கியர்கள் இன்னமும் தொடர்ந்து போராடி வருகின்றனர். காங்கிரசைப் பார்த்து சீக்கிய கலவரம் பற்றி கேள்வி கேட்பதால், குஜராத் இனப்படுகொலை சம்பவங்களை மறைக்க, மறுக்க இயலாது. “2 தவறுகள் = 1 சரி” என்பதை ஏற்க இயலாது.

முஸ்லீம் வாக்குகள் மோடிக்கு கிடைக்குமா?

மோடியின் பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே எழுப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று. முஸ்லீம்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும், மோடி வெற்றி பெறுவது எளிதல்ல என்று காங்கிரஸ் கருதுகிறது. மோடியின் கூட்டங்களுக்கு வரும் முஸ்லீம்கள் தங்கள் மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை என்றும், முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்தும், ஆண்கள் குல்லாய் அணிந்து கொண்டும் வரலாம் என்று கூறியதுடன், அப்படி அவர்கள் வந்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின. கோத்ரா சம்பவத்திற்கு பின் எத்தகைய மதக் கலவரமும் நடைபெறவில்லை என்றும், முஸ்லீம்கள் குஜராத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பா.ஜ.க. பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பிருந்தே குஜராத் மாடல் பற்றிய பிரச்சாரமும் வலுவாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாடல் பற்றிய சில விபரங்களை ஆராய்வோமா?

இந்தியாவிலுள்ள பணக்கார மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்று. நகரமயமாகியுள்ள மாநிலம் குஜராத். 42.6 சதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 1993-94, 2011-12 காலகட்டத்தில் குஜராத்தின் பங்கு அதிகரிக்கவில்லை. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் குஜராத்தின் பங்கு 7 – 8 சதம் மட்டுமே.2000 ஆம் ஆண்டு துவக்கத்தில் 7 சதத்திற்கும் சற்று குறைவாக இருந்தது. 1996-97 இல் இருந்த 8 சதம் என்ற அளவை தற்பொழுதுதான் எட்டியுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களை விட வேகமாக மொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரித்துள்ளது என்ற பாஜக பிரச்சாரம் ஏற்கத்தக்கதல்ல.

மாநிலங்களின் தலா வருமான பட்டியலை நோக்கினால், (1993-94, 2011-12) குஜராத் மாநிலம் 8 ஆவது / 9 ஆவது இடத்தில் இருக்கிறதென்பது தெரிய வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் வேளாண் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது என்றும், நிலத்தடி நீரை மிகவும் சிறப்பாக பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், 2001-02, 2011-12 காலகட்டத்தில் மொத்த மாநிலங்களின் உற்பத்தி மதிப்பில் வேளாண் உற்பத்தியை பொறுத்த வரை குஜராத்தின் பங்கு 5 சதத்திலிருந்து 7 சதமாக அதிகரித்துள்ளது என்றபோதிலும், 1993-94 ஆண்டிலிருந்து, ஆண்டு வாரியாக உற்பத்தியை ஒப்பிடுகையில், தொண்ணூறுகளில் ஏற்பட்ட சரிவை மீண்டும் சரிசெய்யும் விதத்தில்தான் இது அமைந்துள்ளது எனத் தெரிய வருகிறது. எனவே, வேளாண் துறையில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி குஜராத்தில் ஏற்பட்டதாக கருத இயலாது. குஜராத்திலுள்ள விவசாயிகள் பி.டி. பருத்தி பயிரிட்டு கடன் வலையில் சிக்கிய சம்பவங்கள் நிறையவே உண்டு.

முதலீட்டை வரவேற்று, தொழிலை சுமூகமாக நடத்தும் சூழலை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால், முதலீட்டாளர்கள் குஜராத்தை நோக்கி படையெடுக்கின்றனர் என்று மோடியின் தொழில் கொள்கைக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது. ஆனால், கவனிக்க வேண்டியது என்ன? குஜராத் எப்பொழுதுமே தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்ந்துள்ளது. (சுரங்கம், மின்சாரம், எரிவாயு, கட்டுமானம், ஜவுளி, வைரம்..) என்று பல தொழில்கள் நடைபெறுகின்ற மாநிலமாக குஜராத் திகழ்ந்துள்ளது. 2011-12 இல் மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் தொழில் துறையை பொறுத்த வரை குஜராத் மாநிலத்தின் பங்கு 37 சதமாக இருந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு முதல் நாட்டின் தொழில் வளர்ச்சியில் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 1993-94 ஆம் ஆண்டோடு, 2011-12 ஆம் ஆண்டு தொழில்துறை வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கையில் இது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆலைத் தொழில் உற்பத்தி (Manufacturing) அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு பிரதான காரணம் பெட்ரோலியத்துறை மட்டுமே என்றும் இது பொதுவான தொழில் வளர்ச்சி அல்ல என்றும் கூறினால் மிகையாகாது. பெட்ரோலியம் சுத்திகரிப்புத் துறையின் வளர்ச்சி, அம்மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடந்த பத்தாண்டுகளில் 25 சதமாக  உயர்ந்துள்ளது (2000-01 இல் 4 சதம்). இந்த அளவு அதிகரிக்க காரணம் இரண்டே தொழிற்சாலைகள் தான் எனலாம். “ரிலையன்ஸ்” மற்றும் ஜாம் நகரில் உள்ள “எஸ்ஸார்” ஆகிய இரண்டு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளை தவிர்த்துவிட்டு அம்மாநில தொழில் வளர்ச்சியைப் பார்த்தால், மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் சரிவையே சந்தித்துள்ளன என்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பெட்ரோலியத்துறை என்பது இறக்குமதி சார்ந்ததாக, அதிக முதலீடு தேவைப்படுகின்ற, கடற்புறத்தை சார்ந்த துறையாக இருப்பதால், அந்த ஒரு துறையின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்தமாக அம்மாநில தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதென்பது ஏற்புடைய வாதம் அல்ல.

சமூக வளர்ச்சி காரணிகளை வைத்து ஆராய்ந்தால் (கல்வி, குழந்தைகள் இறப்பு விகிதம், சுகாதாரம் ஆகியவை வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பவை PQLI (Physical Quality of Life Index) என்ற குறியீடு, குஜராத் எவ்வளவு பின்தங்கியுள்ளது என புரிந்து கொள்ள உதவுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இந்தியாவின் பிரதான 17 மாநிலங்களின் பட்டியலில் 2001-2011 வரை, குஜராத் ஏழாவது இடத்திலேயே இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் இல்லை. கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 2001 இல் 5 ஆவது இடம். தற்போது 3 ஆவது இடம். மகாராஷ்டிரா 3 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒடிசா 16 ஆவது இடத்திலிருந்து 14 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

அடிப்படை வசதி குறைவாகவே உள்ளது. சத்துணவின்மையால், எடை குறைவாக உள்ள குழந்தைகள் பற்றி மோடி முன்வைத்த மோசமான கருத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பெண்கள் தங்கள் ஃபிகர் பற்றி கவலைப்படுவதால், குறைவாக உணவு உண்டு எடை குறைவாக உள்ளனர் என்றும் இதற்கு வறுமையோ, சத்துணவின்மையோ காரணம் அல்ல என்றும் கூறி மோடி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தங்கள் கர்ப்பப்பையை வாடகைக்கு விடும் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள, முதலிடத்தில் உள்ள மாநிலம் குஜராத்துதான். படித்த படிக்காத ஏழைப் பெண்கள், வேலைவாய்ப்பு இல்லாததால் வாடகைத் தாய்களாக மாறுகின்றனர். ஏராளமான வெளிநாட்டவர் வாடகைத் தாய்களைத் தேடி குஜராத்திற்கு வருகின்றனர். முறையான சட்ட விதிமுறைகளின்றி, வாடகைத் தாய்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். மோடியின் வளர்ச்சி மாடலில் இதுவும் ஒரு நவீனத் தொழிலாக கருதப்படுகிறது.

சமூக, பொருளாதார வளர்ச்சி எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. மதவாத அரசியல் குஜராத் மாநிலத்தில் புகுந்து விளையாடுவதை ஏராளமான என்கௌண்டர்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். இஷ்ரத் ஜஹான் வழக்கு மோடியின் மதவாத அரசியலில் அசிங்கமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே சொராபுதீன், துளசி பிரஜாபதி வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது. விஷ்வ இந்து பரிஷத் 2015 இல் குஜராத் இந்து மாநிலமாக இருக்கும் என்று அறிவிக்கிறது. இந்த அமைப்பு மோடி பிரதமராக வேண்டுமென விரும்புகிறது. மோடி பிரதமரானால் 100 கோடி இந்துக்களுக்காக (120 கோடி இந்தியர்களுக்காக அல்ல) குரல் கொடுப்பார் என வி.இ.ப கருதுகிறது. இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து முஸ்லீம்களை குறிவைத்து தனிமைப்படுத்தி மோடியை பிரதமராக்க இந்து மதவாத சக்திகள் ஒன்றிணைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல. தொழிலதிபர்களுக்கான மாநிலம் குஜராத். கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். இந்தியா இந்துக்களுக்கே என்பது அமலாகும். முஸ்லீம் நாடான பாகிஸ்தானுடன் நமது உறவு எப்படி இருக்கும் என்ற அச்சமும் தோன்றியுள்ளது. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். முதல் முறையாக ஒரு சாதாரண மனிதன், தேநீர் விற்றவர் (50 ஆண்டுகளுக்கு முன்), பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதி பிரதமராக வேண்டும் என்ற பிரச்சாரம் படித்த, நடுத்தர வர்க்கத்தினரிடையே எடுத்து செல்லப்படுகிறது. ஐ.மு. கூட்டணியின் ஊழலில் திளைத்த ஆட்சி, விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி (குறிப்பாக அமைச்சரவை முடிவை எதிர்த்து மோசமான வார்த்தைகளில் ராகுல் விமர்சித்தது அதன் தொடர் நிகழ்வுகள்) காங்கிரஸ் கட்சியின் மேல் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களில் மோடி பங்கேற்ற கூட்டங்களில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பின. பா.ஜ.க முதன் முறையாக வாக்களிக்கப் போகின்றவர்களை குறிவைத்துள்ளது. நமது அரசியல் அமைப்பு அமெரிக்காவைப் போன்றதல்ல. முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து, கூட்டங்கள், விவாதம் நடத்தி அங்கு முடிவெடுப்பார்கள். பா.ஜ.கவின் அறிவிப்பு ஏதோ இந்தியாவிலும் இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளது போல செயல்படுவதாக உள்ளது. மாநில கட்சிகள் சக்தி வாய்ந்தவை. மோடியால் எந்த அளவுக்கு மற்ற கட்சிகளை / தலைவர்களை அரவணைத்து, இணைந்து செயல்பட இயலும் என்பது பா.ஜ.க.விலேயே எழுப்பப்படுகிற கேள்வி.

மதச்சார்பின்மையை அழித்து, பாசிச, மதவாத ஆட்சி அமைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதேசமயம் ஊழலில் திளைத்து, மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும். எனவே, இடதுசாரி, ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தி, வருகின்ற தேர்தலை எதிர் கொள்வோம்!

புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரம் : EPW