எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. இதற்காக 1 லட்சம் புத்தக பிரதிகள் அச்சிடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ஒலி வடிவில் இந்த புத்தகத்தை மார்க்சிஸ்ட் செயலி வழியே கேட்கலாம்.

கீழ்க்காணும் உரைகள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மாலை 7 மணிக்கு நேரலையாக கேட்கலாம். (Youtube I Facebook )

28.09.2020 – கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – சீத்தாராம் யெச்சூரி (தொடக்க நிகழ்வு)

5.10.2020 – 21 ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் – என்.குணசேகரன்

12.10.2020 – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஜி.ராமகிருஷ்ணன்

19.10.2020 – குடியிருப்புப் பிரச்சினை – அ.பாக்கியம்

26.10.2020 – டூரிங்குக்கு மறுப்பு – மு.சிவலிங்கம்

2.11.2020 – இயற்கையின் இயக்கவியல் – டாக்டர் த வி.வெங்கடேஸ்வரன்

9.11.2020 ஜெர்மன் சித்தாந்தம் – பேரா.முத்துமோகன்

15.11.2020 – மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் – சகஸ்ரநாமம்

16.11.2020 – இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் – அ.சவுந்தரராசன்

17.11.2020 – குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – பேரா.வீ.அரசு

18.11.2020 – எங்கெல்ஸ் முன்னுரைகள் – இரா.சிந்தன்

19.11.2020 – அரசு பற்றிய எங்கெல்ஸின் எழுத்துக்கள் – ச.லெனின்

20.11.2020 – எங்கெல்ஸின் எழுத்துக்களில் தொழிலாளி வர்க்கம் – எஸ்.கண்ணன்

21.11.2020 – ஜெர்மனியில் விவசாயப் புரட்சி – வி.மீனாட்சி சுந்தரம்

22.11.2020 – எங்கெல்சும் மார்க்சின் மூலதனமும் – டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா

23.11.2020 – புனிதக் குடும்பம் – வீ.பா.கணேசன்

24.11.2020 – எங்கெல்சும் அறிவியலும் – டாக்டர் டி.ஜெயராமன்

25.11.2020 – எங்கெல்ஸ் கடிதங்கள் – உ.வாசுகி

26.11.2020 – ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – ஆர்.பத்ரி

27.11.2020 – வரலாற்றில் பலப்பிரயோகம் வகிக்கும் பாத்திரம் – ச.தமிழ்ச்செல்வன்

28.11.2020 – லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் – டி.கே.ரங்கராஜன்

லெனின் 150: லெனினும் தொழிலாளி வர்க்கமும்

என். குணசேகரன்

தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைந்த வாழ்க்கை மாமேதை லெனின் வாழ்க்கை. இதனால், லெனின் தனக்கான தனிப்பட்ட வாழ்க்கை எதையும் அமைத்துக் கொள்ளவில்லை. சுரண்டலில் இருந்து வர்க்க விடுதலை, புரட்சி லட்சியமே அவரது வாழ்க்கை.

அவர் பிறந்து  150- ஆம் ஆண்டுகள் ஆன பிறகும் அவரது பெயர் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்ன? நூற்றுக்கணக்கான காரணங்களை இதற்கு சொல்ல முடியும் .ஆனால், மிக முக்கியமான காரணம் இதுதான்: உழைக்கும் மக்களுக்கென்றே உன்னதமான ஒரு உலகத்தைப் படைக்க முடியும் என்று மனித சமூக வரலாற்றில் நிரூபித்துக் காட்டியவர் லெனின். தனி மனிதராக லெனின் அந்த மாற்றத்தை சாதித்தாரா ?

துவக்கத்திலிருந்தே பலர் “ரஷ்யப் புரட்சி ஒரு தனிநபரின் சாகசம்” (one man performance) என்ற வகையில்  எழுதினர். தொடர்ந்து முதலாளித்துவ எழுத்தாளர்கள்  புரட்சி வெறி பிடித்த ஒரு தனிநபரால் ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தது என எழுதி வருகின்றனர். லெனினை ஒரு சதிக் கூட்டத் தலைவர், கொடூர மனம் படைத்த சர்வாதிகாரி என்றெல்லாம்   எழுதுகின்றனர்.

 தனி மனிதராக லெனினது பங்கு புரட்சியில் எவ்வாறு இருந்தது?

  1. ரஷ்ய பாட்டாளி வர்க்க இயக்கம் வளர்ந்த சூழலும், இதர எதார்த்த  காரணங்களும் புரட்சிக்கு சாதகமாக இருந்தன.
  2.  ஆனால், புரட்சியை நோக்கி முன்னேற லெனினது தத்துவ வழிகாட்டுதல்கள் புரட்சி வியூகங்கள், உத்திகள் முக்கிய காரணங்களாக அமைந்தன. புரட்சி உத்திகளை அன்றைய போல்ஷ்விக் கட்சியில் நீண்ட  விவாதங்கள் நடத்தி ,கட்சியின் முடிவாக அவற்றை முன்னெடுக்கச் செய்ததில் லெனினுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி  வெற்றிக்கு அடித்தளமிட்டது.

இந்த இரண்டையும் இணைத்துப் பார்ப்பதே சரியான பார்வை.

ஒரே இலட்சியம்

1870-ஏப்ரல் 22 அன்று பிறந்த லெனின் வாழ்ந்தது, 54 ஆண்டுகள்தான். அந்த 54  ஆண்டுக் கால வாழ்க்கை முழுவதும்  அவர் தனக்கென்று சொந்த நோக்கங்கள் எதையும் வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு இலட்சியத்தை நோக்கித்தான் அவரது வாழ்க்கை இயங்கியது. வரலாற்றில் இதுவரை  அடிமைத்தனத்திற்கும்,சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளான மக்களிடம் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதுதான் அந்த  இலட்சியம்.

அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட் ரஷ்யாவில் புரட்சி நடந்ததை நேரில் கண்ட எழுத்தாளர். பிரசித்தி பெற்ற அவரது “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்னும் நூலில் எழுதுகிறார்:

“வரலாற்றில் மிகச் சொற்ப தலைவர்களே அவரைப் போல மக்களது பேரன்புக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகி இருப்பார்கள். விசித்திரமான மக்கள் தலைவர் – முற்றிலும் அறிவாற்றல் என்னும் தகுதியின் காரணமாகத் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை; தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை. படாடோபமான தனிப் பாணிகள் ஏதுமில்லை – ஆனால் ஆழ்ந்த கருத்துகளை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமைகளைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலைநோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.””

திறந்த புத்தகம்

அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது வாழ்க்கையை முப்பெரும் பிரிவுகளாகக் காணலாம். அவரது வாழ்க்கையின் முதல் பகுதி, புரட்சி இலட்சியத்தை வடிவமைத்த காலம். அதாவது சோஷலிஸம் எனும் புதிய சமூகத்தை அமைப்பதற்கு மார்க்சிய தத்துவம் வழிகாட்டிய அடிப்படையில், திட்டம் உருவாக்கிய காலம்.

இதற்கு அடுத்த அவரது வாழ்நாள் கட்டம், புரட்சிகர இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பெருவாழ்வாக அமைந்தது. அவரது இறுதிக் காலம், பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைத்து, ஒரு சோசலிச முன்மாதிரி அரசைக் கட்டமைத்த காலமாக அமைந்தது. கடலில் இடைவிடாது நீந்திக் கொண்டிக்கும் மீன் போன்று, புரட்சி இலட்சியக்கடலில்  இடைவிடாது நீந்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையாக அவரது வாழ்க்கை இருந்தது.

1917ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. ஜார் மன்னராட்சி கொடுங்கோன்மையிலிருந்து ரஷ்யா விடுதலை பெற்ற, பிப்ரவரி புரட்சி. அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக்  கட்சி மற்றும் இதர பல குழுக்களின் ஆதரவோடு, கெரன்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கம் அதிகாரத்திற்கு வருகின்றது. தொழிலாளி வர்க்க கட்சியான போல்ஷ்விக் கட்சி ஜார் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கெரன்ஸ்கி ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது.

அந்த முதலாளித்துவ அரசு ஏற்றுக்கொண்ட எதையும் அமலாக்கவில்லை. ரஷ்ய மக்கள் போரின் கொடுமையால், வாடிக் கொண்டிருக்கிற நிலையில், போரைக் கைவிட வாக்குறுதி அளித்த அரசு, போரை நீட்டிக்க முயற்சித்தது. அந்த அரசு நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள் போன்றோரின் அரசாக இருப்பதால், தொழிலாளர்களுக்கும்  விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றாது என லெனின் உறுதியாகக் கூறினார்.

எனவே, பாட்டாளி மற்றும் ஏழை விவசாயிகள் உள்ளடக்கிய சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை உடனடியாக கைப்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

நாடு கடத்தப்பட்டு, சூரிச் நகரில் இருந்த லெனின், ரஷ்யாவின் பெட்ரோகிராடு நகரை வந்தடைந்தார்.அவர் கையோடு கொண்டு வந்த ஒரு சிறு குறிப்பில் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’ என்று அழைக்கப்பட்ட புரட்சிக்கான திட்டம் இருந்தது. அதில் பல கடமைகளை முன்வைத்தார்.

  • உடனடியாக முதல் உலகப் போரில் பங்கேற்ற  ரஷியா போரிலிருந்து விலக  வேண்டும்.

¨ பெரும் நிலங்களை உள்ளடக்கிய எஸ்டேட்டுகளைக் கையகப்படுத்த வேண்டும்.

¨ தொழிற்சாலைகளை தொழிலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

¨ வங்கிகளை தேசிய உடைமையாக்க வேண்டும்.

¨ தற்போதுள்ள காவல்துறை, இராணுவத்தை அகற்றி விட்டு தொழிலாளர்களைக் கொண்ட படைகளை உருவாக்க வேண்டும்.

¨ ¨பழைய அரசாங்க அதிகார வர்க்கத்தை அகற்றி, தொழிலாளர்களைக் கொண்ட அரசு நிர்வாகத்தை அமைக்க வேண்டும்.

என இவை அனைத்தும் ஏப்ரல் ஆய்வுரைகளில் இருந்தன.

அப்போது நடந்த சோவியத்துகளின் அனைத்து ரஷ்ய மாநாட்டில் ‘எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற புகழ் பெற்ற முழக்கத்தை எழுப்பினார்.

தொழிலாளர்கள் உள்ளடங்கிய உள்ளூர் மட்டத்திலான அமைப்புக்கள் புரட்சி வெற்றிக்கு  முக்கிய பங்கினை வகித்தன. “தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்” என்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் நிர்வாக அமைப்புக்களில் தொழிலாளர்கள் அணி திரண்டனர். வேலைநிறுத்தம் நடத்துவதற்கான போராட்டக் குழுவாக துவங்கிய இந்த அமைப்புகள், உள்ளூர் நிர்வாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாக மாறின..பல இடங்களில் ராணுவ வீரர்கள், மாலுமிகள் தொழிலாளர்களோடு இணைந்து   பிரதிநிதிகளாக செயல்பட்டனர். பல பகுதிகளில் தொழிலாளர்கள்-விவசாயிகள் பிரதிநிதிகள் கொண்டதாகவும் அமைந்தன. தொழிலாளர்கள் தங்களுடைய தேவைகள், வாழ்வாதார கோரிக்கைகளுக்காக அமைப்பு ரீதியாக ஒன்றுபடும் களங்களாக  சோவியத்துக்கள் அமைந்தன.

விவசாயிகளை புரட்சியில் இணைப்பதிலும் லெனின் வெற்றி கண்டார். அன்று கிராமப்புறங்களில் வறுமை தாண்டவமாடியது. 300 ஆண்டு கால மன்னராட்சி விவசாயிகள் மத்தியில் ஒரு கொடூரமான அடிமைத்தனத்தை உருவாக்கியிருந்தது. நிலப்பிரபுக்களின் கையில் நிலப்பிரபுத்துவ தனியுடைமை வலுவாக இருந்தது. முதலாவது உலகப்போர் வந்தபோது அரசாங்கம் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களை போருக்கு அனுப்பியது.

விவசாயிகள் மத்தியில் அரசியல் கேள்விகள் கொந்தளிப்புடன் எழுந்தன. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற முழக்கங்கள் எதிரொலித்தன. எனவே நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் எழுந்த எழுச்சி இயல்பாகவே தொழிலாளர்களையும் விவசாயிகளையும் புரட்சிக்கு அணி திரட்டியது. தொழிலாளி-விவசாயி கூட்டணி உருவாகி புரட்சியை  முன்னெடுக்க வேண்டுமென்ற லெனின் வகுத்துக் கொடுத்த உத்தி வெற்றியை ஈட்டிட துணை நின்றது.

வரலாற்றில் தொழிலாளி வர்க்கம்

தொழிலாளிகளை புரட்சிக்கு  தயார் செய்வதிலும் லெனின் பல கோட்பாடுகளை  வகுத்தளித்தார். புரட்சிக்காக அணிவகுக்கும் பெரும்படையில் தொழிலாளி வர்க்கம் முன்னணி படையாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். இது வரலாற்றுரீதியாக தொழிலாளி வர்க்கத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள கடமை என்றார்.

தொழிலாளி வர்க்கம் தனது இயக்கங்களின் மூலமாக தொழிற்சங்க உணர்வை, அதாவது தங்களது கோரிக்கைகளை  எழுப்ப வேண்டும் என்கிற உணர்வை பெறுகிறது. அதற்கான ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்ற உணர்வையும் அது அடைகிறது. சங்க வேலைகளில் ஈடுபடுவது, நிர்வாகத்தின் போக்கினை எதிர்த்து போராடுவது, தொழிலாளர் நல சட்டங்களை இயற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகளால் தொழிற்சங்க உணர்வும் கோரிக்கைக்கான போராட்ட உணர்வும் வளரும். ஆனால் இதையும் தாண்டி வர்க்க உணர்வு தொழிலாளர்களுக்கு ஏற்பட வேண்டும் என்று லெனின் போதித்தார்.

தொழிலாளி தனது வேதனைகள், துயரங்கள், உழைப்புச்  சுரண்டல் கொடுமைகள் அனைத்திற்கும் கண்ணுக்குப் புலப்படாத கடவுள் மீது பாரத்தை சுமத்தி அற்ப நிம்மதி அடைவது, தலைவிதியை மாற்ற முடியாது என்கிற அறிவியலற்ற எண்ணத்தில் மூழ்கி கிடப்பது இவை அனைத்தையும் கருத்து முதல்வாத பார்வை என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக தன்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகள், அவற்றின் உண்மைகளை அறிந்து கொள்ளும் பார்வை -அதாவது பொருள்முதல்வாத பார்வை – மாற்றத்திற்கு தொழிலாளியை தயார்படுத்தும் என மார்க்சியத் தத்துவம் போதிக்கிறது.

மார்க்சிய தத்துவத்தால் வழிகாட்டப்படும் தொழிலாளி வர்க்கம் இதர விவசாயப்  பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வர்க்கங்களின்   நிலைமையை சரியாக புரிந்து கொள்கிறது; அவர்களையும் அணிதிரட்டி, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறது; இதற்கேற்றவாறு, வர்க்க அரசியல் உணர்வு படைத்ததாக தொழிலாளி வர்க்கம் உணர்வு ரீதியில் வளர்ச்சி பெறுகிறது. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் என்ற நூல் இக்கருத்துக்களை கொண்டதாக விளங்குகிறது.

இந்த அரசியல் உணர்வு தானாக வந்து விடாது; கம்யூனிஸ்ட் கட்சி இந்த வர்க்க உணர்வை உழைக்கும் வர்க்கங்களிடம் வளர்த்திட வேண்டும்.கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று லெனின் எழுதினர்.

புரட்சியின் போதும், சோஷலிசக் கட்டமைப்பின் போதும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. 1903 ஆம் ஆண்டிலிருந்து 1917 வரை ரஷ்யாவில் வரலாறு காணாத அளவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 1905ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் கலந்துகொண்ட தொழிலாளர் எண்ணிக்கை 18 லட்சத்து 43 ஆயிரம் இது படிப்படியாக ஆண்டுதோறும் அதிகரித்தது.

இந்தப் போராட்டங்களில் ஒரு முக்கிய மாற்றம் படிப்படியாக ஏற்பட்டது. தொழிலாளர்களுடைய எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளோடு அரசியல் கோரிக்கைகளையும் எழுப்பினர். மன்னராட்சிக்கு மாற்றாக ஒரு ஜனநாயக குடியரசு அமையவேண்டும் என்ற முழக்கங்கள் இந்த போராட்டங்களில் எதிரொலித்தன. இந்த போராட்டங்களை வலிமையாக நடத்திட சோவியத்துகள் பெரும் பங்கு வகித்தன. 

உண்மையான தேசப்பற்று

முதல் உலகப் போர் மூண்ட நிலையில் தாய் நாட்டை பாதுகாக்க ஆளும்  வர்க்கங்கள் பிரச்சாரம் செய்தன. உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும், உலகைச் சுரண்ட வேண்டும் என்ற வெறியுடன் ஏகாதிபத்தியம் இயங்கி வருகிற நிலையில் பாட்டாளி வர்க்கமே ஏகாதிபத்திய முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வர்க்கமாக லெனின் கண்டார்.

எப்போதுமே தேசபக்தி என்ற முழக்கத்தை ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக பயன்படுத்தும். ரஷ்ய ஆளும் வர்க்கம் முதலாம் உலகப்போரில் ரஷ்ய ராணுவத்தை ஈடுபடுத்தினர். உண்மையில் ரஷ்ய ராணுவத்தில் இருந்தவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் பிரிவிலிருந்து வந்தவர்கள்தான். முதல் உலகப் போரில் பங்கேற்ற நாடுகளிலேயே அதிக இழப்பை சந்தித்தது ரஷ்யாதான். கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் போரில் கொல்லப்பட்டனர். அதிலும் விவசாயிகளை உள்ளடக்கிய தரைப்படைதான் அதிக இழப்பை சந்தித்தது.

அதே நேரத்தில் போரினால் முதலாளிகள் பெரிய லாபத்தை அடைந்தார்கள். பல பெரிய கம்பெனிகள் 100% மேலாக லாபம் ஈட்டினர். இந்த விவரங்கள் டூமா எனப்படும் ரஷ்ய பாராளுமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டது. தேசப்பற்று எனும் பெயரால் உழைக்கும் மக்களை போரில் ஈடுபடச் செய்தது முதலாளிகளின்  லாப வேட்டைக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள தொடங்கினர்.

முதலாளித்துவத்துக்கு உண்மையான தேசப்பற்று இருப்பதில்லை. உண்மையான தேசப்பற்று கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடுதலையோடு இணைந்தது. உண்மையான தேசப்பற்று பாட்டாளி வர்க்கத்திற்கு பிரிக்க முடியாத அளவில் அவர்களின் உணர்வோடு கலந்ததாக இருக்கும். தாய்நாட்டிற்காக போர் என்கிற முதலாளிகளின் கபட நாடகத்தை தொழிலாளி வர்க்கம் நன்கு புரிந்து கொண்டது.

புரட்சிக்கு அறைகூவல் விடுகிறபோது லெனின் மூன்று முழக்கங்களை முன்வைத்தார். சமாதானம்; உணவு; நிலம்; இந்த முழக்கம் போரின் கொடுமையாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தை களத்தில் இறக்கியது. .அதேபோன்று கிராமங்களில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளால் வேதனை வாழ்க்கை நடத்திவந்த விவசாயிகளுக்கு, நிலம் என்கிற முழக்கம் ஒரு புரட்சிகர ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தொழிலாளி – விவசாயி வர்க்க கூட்டணி உருவானது .இந்த கூட்டணி கட்சிகளின் கூட்டணி அல்ல. வர்க்கங்களின் கூட்டணி. இதற்கு பிரம்மாண்டமான ஆற்றல் இருந்தது; இந்த ஆற்றலின் விளைவாகத்தான் ரஷ்யாவில் புரட்சிகர மாற்றம் நடைபெற்றது; சோசலிசம் உருவானது.

மார்க்சிய லெனினிய உருவாக்கம்

கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தை முழுமையாக ஆராய்ந்தார். இந்த சமூகத்தில் நிலவுகிற சமத்துவமின்மை, ஏழை பணக்காரர் என்கிற ஏற்றத்தாழ்வு எதனால் ஏற்படுகிறது என்பதையும் அவர் ஆராய்ந்தார். அதேபோன்று பாடுபடும் பாட்டாளிகள் உழைப்பைச் செலுத்தி இந்த உலக செல்வத்தை உருவாக்கினாலும் அவர்கள் வாழ்க்கை பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்து வரும் நிலையில், அவர்களது உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை ஆராய்ந்து விளக்கினார்.

அதேபோன்று முதலாளித்துவ அமைப்பு சீராக நீடிப்பதில்லை. நெருக்கடிகள் தொடர்ந்து வருகின்றன. இதனாலும் வேலை இழப்பு, வேலை நிச்சயமின்மை போன்ற பிரச்சனைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த நெருக்கடிகளுக்கு காரணம் என்ன என்பதையும் மார்க்ஸ் ஆராய்ந்து விளக்கினார். ஆக, சமத்துவமின்மை,சுரண்டல்,நெருக்கடிகள் ஆகிய மூன்று பரிமாணங்களையும் முதலாளித்துவ சமூகத்தின் கூறுகளாக விளக்கி அந்த மூன்று பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான வழிவகைகளை மார்க்ஸ்  விளக்கினார்.

ஏற்றத்தாழ்வை அகற்றி ,சமத்துவம்; உழைப்புச் சுரண்டலை அகற்றி உழைப்புக்கு உரிய பலன்; நெருக்கடிகள் நீங்கிய திட்டமிட்ட பொருளாதாரம்; இவை அனைத்தும் கொண்ட ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க முடியும் என்பதை மார்க்ஸ்  விளக்கினார். கருத்துத் தளத்தில் மார்க்சியம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதுவரை ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நெருக்கடிகளும்  தீர்க்க முடியாத ஆண்டவன் விதித்த கட்டளை என்ற உணர்வில் இருந்து வந்த மனித சமூகம் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டது.

பல இடங்களில் புரட்சிகர போராட்டங்கள் நடைபெற்றன. 1871ஆம் ஆண்டு முதன்முறையாக பாரிஸ் நகரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றி 71 நாட்கள் சமத்துவ சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. முதலாளித்துவ எதிரிகள் பாரிஸ் கம்யூன் எனப்படும் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கி ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர். மார்க்ஸ் இந்தப் புரட்சி அனுபவங்களை ஆய்வு செய்தார். அவரின் வழித்தடத்தில் லெனின் உலகப் புரட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி  மார்க்சுக்கு பிந்தைய உலகம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதனையும் ஆய்வு செய்து  புதிய புரட்சி வியூகம் உருவாக்கினார்.

மாறியுள்ள உலக நிலைமைகள், ரஷ்ய நிலைமைகள், ரஷ்யாவில் முதலாளித்துவ எதிரிகளின் பலவீனம், பாட்டாளி வர்க்க சக்திகளின் பலம் ஆகியற்றை துல்லியமாக மதிப்பீடு செய்தார் லெனின். உலகை ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவில் பலவீனமான நிலையில் இருந்ததையும் லெனின் கவனிக்க தவறவில்லை. இந்த மிகத் துல்லியமான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் ரஷ்ய தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் உள்ளிட்ட பாட்டாளி வர்க்க சக்திகளுடன் இணைந்து முதலாளித்துவத்தை வெற்றிகரமாக வீழ்த்த முடியும் என்ற முடிவிற்கு லெனின் வந்தடைந்தார்.

ரஷ்யாவில் புரட்சியை முன்கொண்டு சென்று, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ஒரு பாட்டாளி வர்க்க அரசை அமைத்தார். மார்க்சியம், லெனினது உருவில் மிகுந்த ஏற்றம் பெற்றது. கருத்தளவில் இருந்த மார்க்சிய தத்துவம் ரஷ்யாவில் நடைமுறைக்கு வந்தது; சோஷலிசக் கனவு நனவானது.

தொழிலாளி வர்க்க ஆற்றல்

லெனின் காலத்தில் இருந்த தொழிலாளி வர்க்கம் தற்போது இல்லை; .இன்றைய தொழிலாளர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; தொழிலாளி வர்க்கத்திடையே எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன. இதுபோன்ற பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதையொட்டி பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு இந்த எழுத்தாளர்கள் எழுதுவதோடு மட்டுமல்லாது மார்க்சியம் லெனினியம் தவறாகிப் போய்விட்டது,! தொழிலாளி வர்க்க ஆட்சி என்கிற கருத்து லெனினோடு  அஸ்தமனமாகி விட்டது என்பது போன்ற கருத்துக்களை அவர்கள் எழுதுகின்றனர்.

உண்மையில் தனது அன்றாட வேலை, பிரச்சினைகள் வருகிற போது சில போராட்டங்கள் என்ற அளவில் தொழிலாளர்கள் இருக்கும் வரை அதன் ஆற்றல் வெளியில் தெரிவதில்லை. ஆனால் முதலாளித்துவ நெருக்கடி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரத்தின் மீது தொடர் தாக்குதல்கள் அதிகரிக்கிறது. தனது வாழ்நிலையின்  அடிப்படை தளர்கிற நிலையில் தொழிலாளிக்கு விழிப்புணர்வு அதிகரிக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் மீதான அதிருப்திகள் குவிந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறு பொறி இருந்தால் போதும். அது பெரு நெருப்பாய் மாறி சமூக அடிப்படையை மாற்றிடும். ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிடும். இதனால்தான் லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை சரியாகப்  பயன்படுத்தி ரஷ்ய புரட்சி தலைமை தாங்கி நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அன்றைய ரஷ்ய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் பிரமாண்டமான வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டங்கள் அன்றைய ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தியது. தங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பல்வேறு போராட்டங்களால் அவர்களுக்கு உறுதிப்படுகிறது என்று லெனின் எழுதினார்.

ஒவ்வொரு வேலைநிறுத்தப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு தங்கள் மீதான அவநம்பிக்கையை போக்குகிறது. சுரண்டலில் இருந்து விடுதலையும், எதிர்காலமும் தங்கள் கையில் உள்ளது என்று நம்பிக்கை அவர்களுக்கு வலுப்படுகிறது. தாங்கள் தனி நபர்கள் அல்ல என்ற உண்மையும், தாங்கள் ஒரு வர்க்கம் என்ற உண்மையும் அவர்களுக்கு புலப்படுகிறது.

அன்றைய ரஷ்யாவில் இந்த நம்பிக்கை வளர்வதை துல்லியமாக கணித்த லெனின் அவர்களது ஆற்றலை சரியான திசைக்கு கொண்டு செல்லும்  உத்திகளையும் உருவாக்கினார். பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க, தொழிலாளி விவசாயி கூட்டணி அச்சாணியாகத் திகழ, அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டு நடத்திய ஒரு மாபெரும் மக்கள் திருவிழாதான் ரஷ்ய புரட்சி. எனவே லெனின் காலத்திற்கு பிந்தைய மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கமும், அதன் வர்க்க ஒற்றுமையும் சோஷலிசத்தை சாதித்திடும் என்ற கோட்பாடு இன்றும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

முற்போக்கான அனைத்துக்கும் திறவுகோல்

லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி முற்றிலும் வேறுபட்டது. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்கான  புரட்சியாக இருந்தது. இதனால் உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் நலன், தொழிலாளர் உரிமைகள், பெண்ணுரிமை, பெண் சமத்துவம், முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என மனித சமூக முன்னேற்றத்திற்கு லெனின் சாதித்த புரட்சி திறவுகோலாக அமைந்தது.

புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இல்லை என்றார் லெனின்.

அவரது காலம் வரை இருந்த அனைத்து தத்துவங்களையும் அவர் கற்றறிந்தார். அரிஸ்டாட்டில் முதல் ஹெகல் வரை  வளர்ந்து வந்த தத்துவங்கள் அனைத்தையும் அவர் கற்றறிந்து, அவற்றுக்கெல்லாம் மணிமகுடமாகத் திகழும் மார்க்சியத்தை  சமூக மாற்றத்தை சாதிக்க வல்ல தத்துவமாகக் கண்டறிந்தார். இதுவரை வந்த தத்துவ ஞானிகள் எல்லாம் உலகத்தை பல கோணங்களில் விளக்கினார்கள்; ஆனால் உலகத்தை மாற்றுவதுதான் முக்கிய கடமை என்ற மார்க்சிய நெறியில் லெனின் செயல்பட்டார். எனவேதான் மார்க்சிய லெனினிய தத்துவம் புரட்சிக்கான விடுதலை தத்துவமாக திகழ்கிறது.

லெனினியத்தின் துணைகொண்டு, சமகால சவால்களை எதிர்கொண்டு உலகப்  பாட்டாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவோம்! சோசலிசம் படைப்போம்!

இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

(வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரின் பார்வையில்)

– என்.குணசேகரன்

இந்துத்துவா இயக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கு  பாரம்பரியம், கலாச்சாரக் கூறுகளுக்கு  முரணானது. தமிழகத்தில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவாக, மனிதநேயமும் மத நல்லிணக்கமும் காலம் காலமாக நிலைத்திருந்தது. இவற்றை அழித்து  வலுவாக இங்கு  காலூன்றிட சங்கப் பரிவார இயக்கங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த இயக்கங்களும், இவை ஏற்படுத்திடும் வகுப்புவாத உணர்வுகளும் வளர்வது, தமிழகத்தின் தொன்மையான கலாச்சார சிறப்புகளுக்கெல்லாம் விடப்பட்டுள்ள சவால். அது மட்டுமல்ல; நமது பாரம்பரியத்தின் மகத்தான கூறுகள் அனைத்தையும் சுவீகரித்து வளர்ந்து வரும் மதச்சார்பற்ற, இடதுசாரி உணர்வுகளுக்கும் இயக்கங்களுக்கும் இது எதிர்காலத்தில்  பெருந்தடையாக அமைந்திடும்.

சமூகத்தில் மதச்சார்பற்ற உணர்வுகளை மக்கள் நடுவில் வலுவாக வேரூன்றச் செய்திட வேண்டும். இதற்கான கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது மட்டும் செய்தால் போதாது. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். தெரு, ஊர், ஊராட்சி, நகர அளவில் உள்ளூர் வடிவிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இத்தகு நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களை ஈடுபடச் செய்திடும் போது, மதச்சார்பற்ற உணர்வுகள் வலுப்பெற்றுவிடும்; வகுப்புவாத விஷக்காற்று பரவிடாமல் மக்களே தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த நிலையை தமிழகத்தில் எவ்வாறு ஏற்படுத்துவது?மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? வகுப்புவாதம் குறித்து இப்போதுள்ள புரிதல்கள் யாவை? உண்மையில்,வகுப்புவாதம் எத்தகையது?

இந்த கேள்விகளுக்கு பேராசிரியர் கே.என். பணிக்கரின் எழுத்துகள் வழிகாட்டுகின்றன. வகுப்புவாதம் குறித்த அவரது ஆழமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

வகுப்புவாதம் எவ்வாறு வளர்கிறது?

வகுப்புவாதம் வளர்கிறது என்பதற்கு அடையாளமாக மூன்று வகையான நிகழ்வுகளை மையமாக வைத்துத்தான் பலர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகள் தங்களது பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ பரவலான அளவில் செயல்பட்டு வருகின்றன என்றால் அதனை வகுப்புவாத வளர்ச்சியாக பலர் கருதுகின்றனர்.

இந்தப் பார்வை வகுப்புவாத அமைப்புகள் செயல்படாத இடங்களில் வகுப்புவாதம் வளராது என்றும், செயல்படும் சில பகுதிகளில் தான் அந்த உணர்வு இருப்பதாகவும்  கருதிட  இடமளிக்கிறது. இது தவறானது.

இரண்டாவதாக, இரண்டு மதப்பிரிவினருக்கு இடையில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று உயிரிழப்புகள், பொருட்சேதம் போன்றவையெல்லாம் ஏற்பட்டால், அந்தக் கலவரம் நடந்த இடத்தில் வகுப்புவாதம் வளர்ந்துள்ளது என்று பலர் கருதுகின்றனர். ஆக மதக்கலவரம் நடக்கும்போது தான் வகுப்புவாதம் வளர்கிறது என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். இந்தப் பார்வையிலும் குறை உள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் மட்டுமே வகுப்புவாதம் இருப்பதாகவும், இதர இடங்களில்  இல்லை; அந்த இடங்களில் வகுப்புவாதம் வளர வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் இட்டுச் செல்லுகிற குறைபாடு இதில் உள்ளது.

மூன்றாவதாக பா.ஜ.க போன்ற வகுப்புவாதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தால் வகுப்புவாதம் வளர்ந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். இது, வகுப்புவாதத்தை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்கிற பார்வை. இதுவும் பலரின் அணுகுமுறையாக உள்ளது.

இதில் உள்ள தவறு எது?, வகுப்புவாத அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு சங்கப்பரிவாரம் மற்றும் இதர வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தப் பார்வை கவனத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, அண்மையில் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிற்கும் தற்போதைய அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரக் கொள்கை சிக்கல்களில் கடுமையான கருத்துச் சண்டை நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக அருண் ஜெட்லியை சின்ஹா குற்றம் சாட்டினார். இந்த கருத்துச் சண்டைகளை விளக்கி பல வார, தினசரி பத்திரிக்கைகள் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டன. இதையொட்டி பலர் இந்த சண்டை பா.ஜக. வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கருதினர்.

ஆனால் இதுபோன்ற கட்சிக்குள் உள்ள சண்டைகள் என்பன சங்கப்பரிவாரத்தின் ஏராளமான வகுப்புவாத ஸ்தாபனங்களில் ஒன்றான பா.ஜ.க.வில் மட்டும்தான். இதே காலத்தில், பல சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பசுப்பாதுகாப்பு என்ற முறையில் நடைபெறும் வன்முறைகள், பத்மாவதி திரைப்படத்தையொட்டி கிளப்பப்படுகிற இந்து மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வருகிற தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டத்தில்  மதவெறி தூண்டப்படுகிற அவர்களது பிரச்சாரங்கள் பெரிதாக பலரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வகுப்புவாதத்தை அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. வகுப்புவாத அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் வகுப்புவாதம்  தடைபட்டு விட்டது என்ற முடிவுக்கு இந்தப்பார்வை இட்டுச் செல்கிறது. 1984ம் ஆண்டு வெறும் இரண்டு பாராளுமன்ற இடங்களை மட்டும் வென்ற பாரதீய ஜனதா ஆட்சிக்கு அந்தத் தேர்தலோடு அதன் வளர்ச்சி தடைபடவில்லை. அதன் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தது. எனவே வகுப்புவாத வளர்ச்சி என்பது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது சரியல்ல.

தற்போது கூட பிரதமர் மோடி அரசு மக்களிடையே வெறுப்பை வேகமாக ஈட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளை மோடி அரசு மேலும் முனைப்புடன் அமலாக்கி வரும் நிலையில் ஏமாற்றம் அதிகரிக்கிறது. அத்துடன் சங்கப் பரிவாரங்கள் வகுப்புவாத தாக்குதல்களை அதிகரித்து வருவதும் வெறுப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமைகளை கண்டு சிலர் வகுப்புவாத எதிர்ப்பினை மெல்லியதாக,மேலோட்டமாக மேற்கொண்டால் போதும் என கருதுகின்றனர். இது தவறானது.

ஆக, வகுப்புவாதம் குறித்த பார்வைக்கு மூன்று அளவுகோல்களை எடுத்துக்கொள்கின்றனர். 1. வகுப்புவாத சங்பரிவாரங்களின் வளர்ச்சி, 2. மதக்கலவரங்கள் 3. அரசியல் நிகழ்வுகள். இந்த மூன்றுமே வகுப்புவாத வளர்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். ஆனால் இவை மட்டுமே வகுப்புவாதம் என்று கருதுவது தவறு. இவை வகுப்புவாதத்தின் முழுமையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

வகுப்புவாதம் என்பது இதைவிட ஆழமானது; மிக நுண்ணிய அளவில், உடனடி பார்வைக்கு தென்படாதவாறு, அடிமட்டத்தில் மக்களின் உணர்வில் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் தன்மை கொண்டது.

இதன் வளர்ச்சி இரண்டு கட்டங்களில் நிகழ்கிறது.

வகுப்புவாதத்தின் முதற்கட்டம்

சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் உண்டு. தந்தை, தாய், சகோதரி, சகோதரன் என உறவு ரீதியிலும், தொழிலாளி, விவசாயி என தொழில் ரீதியிலும் பல அடையாளங்கள் உண்டு. இந்த பல வகையான அடையாளங்களில் ஒன்றுதான், இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற மத அடிப்படையிலான  அடையாளம். இது ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டுமுறை, சடங்குகள் போன்ற செயல்பாடுகள்  வழியாக வெளிப்படுகிறது. தொன்றுதொட்டு, இந்த வழிபாட்டு முறைகள், சடங்குகள் அனைத்தும் பெரும்பாலும் குடும்பம் அல்லது கோயிலை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் இதில் பெரும் மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டங்கள் போன்ற வடிவங்களில் மதச்சடங்குகள், நடத்தப்படுகின்றன. அவை பொது இடங்களில் மக்களை பங்கேற்கச் செய்து நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாடு என்பது குடும்ப வழிபாடாக இருந்த நிலை மாறி விநாயகர் ஊர்வலம் என்று பிரம்மாண்டமாக மக்களைக் கூட்டி, நடத்திடும் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.இது போன்று எல்லா மாநிலங்களிலும் பொதுத்தளத்தில் வழிபாட்டு முறைகள் நடத்துகிற வழக்கம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பொது நிகழ்ச்சியாக இந்த வழிபாட்டு முறைகள் மாறுகிறபோது மத நம்பிக்கை அல்லது வெறும் மத அடையாளம் மட்டும் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்துவாக இருக்கும் நான் இந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது கட்டாயம் அல்லவா? ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்று ஊர்வலம் நடக்கிறபோது, அதை ஆதரிப்பது இந்துவாகிய எனது கடமை அல்லவா? என்கிற கேள்விகள் இந்துவாகிய  ஒருவரின் மனத்தை நெருக்குகின்றன. அவர் இதையெல்லாம் ஆதரிக்க வேண்டிய மனரீதியான அடக்குமுறைக்கு (Coercion) ஆளாகிறார்.

இதுபோன்ற தருணங்கள் அதிகரிக்கிற போது, ஒவ்வொருமுறையும் அவருக்கு தான் இந்து என்ற உணர்வு வலுப்பெறுகிறது. சிறிது சிறிதாக இந்து என்ற மத அடையாளத்தோடு மட்டும் வாழ்ந்து வந்த ஒருவர், சடங்குகளும்,வழிபாடுகளும், பொது நிகழ்ச்சிகளாக மாறுகிற போது, மிகுந்த மதப்பிடிமானம் (Religiousity) கொண்டவராக மாறுகிறார். இவ்வாறு மத அடையாளம் என்ற நிலை முற்றி, மதப்பிடிமானமாக மாறுவது வகுப்புவாத உணர்வின் முதற்கட்டம்.

வகுப்புவாதமும் சமூகப் பிளவும்

இந்து என்ற மத அடையாள உணர்வு சிறிது சிறிதாக கெட்டிப்படுத்தப்பட்டு மதப்பிடிமானம் என்ற உணர்வு நிலைக்கு ஒருவர் வருகிறபோது அவரிடம் பல்வேறு கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது ‘இந்து மதத்திற்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள்’ என்கிற பிரச்சாரம். இந்த ‘எதிரி’ எனும் பிரச்சாரம் மிக வலுவான அளவில் ஒருவரை வகுப்புவாதியாக மாற்றுகிறது.

ஒவ்வொரு சிக்கலிலும் இந்து என்கிற கோணத்திலேயே அணுகும் நிலை ஏற்படுகிறது.கிரிக்கெட் விளையாட்டு கூட மத அடிப்படையில் சங்கப் பரிவாரத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக வெறி ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. மோடியும் பல தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்,இந்து எதிரிகள் என பிரச்சாரம் செய்வதுண்டு.

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிக்கலும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த சமூகப் பிளவை வேகமாக்குகிறது. இரு மதப்பிரிவினருக்கும் இடையே இதர அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத அடையாளமே மேலோங்கி நிற்கும் நிலை வலுப்பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஒரு விழா எடுத்தது பலருக்கு நினைவிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் மதவெறியர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியவர்கள் என்று ஏறத்தாழ எழுபதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தினர்.அதனை முஸ்லீம்களைத் தூற்றிடவும், அன்றைய பிரிவினையின் போது அனைத்துத் தரப்பிலும் மதவெறியர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து, வெறுப்பு உணர்வுகளை மீண்டும் பெரிதுபடுத்தவும் அப்பிரச்சனையை பயன்படுத்தினர். இவ்வாறு அவர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பல பிரச்சினைகளை எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையை இடைவிடாது செய்து வருகின்றனர்.

வேறு எங்கோ நடந்திடும் மதக் கலவரங்கள், பற்றிய செய்திகள் தொலைக்காட்சி,செய்தித்தாள்களில் வரும் போது,இந்துவாக இருப்பவர் மதக் கண்ணோட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நிலை எடுக்கவும், இஸ்லாமியராக இருப்பவர் இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக நிலை எடுப்பதும் வழக்கமாக மாறிவிடுகிறது. சட்ட ரீதியாக அல்லது  ஜனநாயகக் கோட்பாடுகள் அடிப்படையில் அணுகிடும் பார்வை கைவிடப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து சட்டப்பூர்வமான தீர்ப்பினை மதிக்க வேண்டியதில்லை என்ற கருத்து பலருக்கு ஏற்படுவதற்கு இந்த வகுப்புவாத உணர்வே காரணம்.

கல்வி, வரலாறு, ஆன்மீகம், கோயில், உடற்பயிற்சிக்கூடங்கள், ஷாகாக்கள் என பல வகைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான இந்துத்துவா ஸ்தாபனங்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தி வகுப்புவாத உணர்வை நீண்டகாலமாக மக்கள் நடுவில் வேகமாக பரப்பி வருகின்றனர். பொதுவாக ஏற்படும் மதப்பிடிமானம் வகுப்புவாத ஸ்தாபனங்களால் வகுப்புவாதம் என்ற நிலைக்கு உயர்ந்து, சமூகம் பிளவுபடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பிளவுபட்ட சமூகத்தில் இந்து உணர்வு மேலோங்கி நிற்பதுதான் இந்தியாவை மத அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசை உருவாக்கிட வழிவகுக்கும்.இதுவே அவர்களது தொலைநோக்கு.

1990ம் ஆண்டுகளில் உலகமயம், தாராளமயம் தீவிரமாக பின்பற்றப்பட்ட போது, வகுப்புவாத உணர்வுகளும் வேகமாக வளர்ந்தன. உலகமயம் நுகர்வுக் கலாச்சார உணர்வுகளை வலுப்படுத்தியது.

வாழ்க்கை வசதிக்கான பொருட்களை அடைய வேண்டுமென்ற மோகம், வெறி, குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்தது. விரும்பிய பொருட்களை அடைய இயலாதபோது. தனது வரலாற்று வேர்களை மகத்தானதாக கருதிடும் உணர்வு உருவாக்கப்பட்டது. ‘ இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரியம், வேத காலத்தில் இந்து ராஷ்டிரம் கோலோச்சி ஆண்ட பொற்காலம்’ போன்ற கருத்துகளுக்கு நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டனர். தங்களுக்கு நுகர்ப் பொருட்கள் கிடைக்க இயலாமைக்கு வேற்று மதத்தினர்தான் காரணம் என்று சிந்திக்கின்றனர். பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை வகுப்புவாதமும் இதே காலகட்டத்தில் விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்தது. எனவே உலகமயமும், வகுப்புவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்து முஸ்லீம் வகுப்புவாத ஸ்தாபனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற பாரம்பரியம் வலுவாக இருந்த வந்த போதிலும், 1990ம் ஆண்டுகளில் உலகமயச் சூழலில் சமூகப் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் மண்டைக்காடு கலவரம் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்கள்,கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வேகமாக வளரத் துவங்கின. பிறகு, தேர்தல்களில் தங்களது திராவிட கருத்தோட்டங்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி பா.ஜ.க.விற்கு அளித்து வந்துள்ள ஆதரவு, போன்ற பல காரணங்களால் தமிழக அரசியல், சமூக தளத்தில் முக்கிய இடத்தை சங்கப்பரிவாரம் பிடித்துள்ளது.

எனினும், திராவிட கட்சிகளின் வெகுமக்கள் செல்வாக்கு நீடித்து வருவது அவர்களுக்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது. இதற்காக அவர்கள் பல கபடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தமிழக அரசியலில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று அஇஅதிமுக பிளவுபட்டிருக்கிற நிலையில் எடப்பாடி – பன்னீர்செல்வம் குழுக்களை பயன்படுத்தி தமிழகத்தில் வகுப்புவாதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து எதிர்கொள்ள  வேண்டியது கட்டாயமானது.

திராவிட இயக்கத்தை கடத்திட சூழ்ச்சி

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்மையில் “இந்துத்துவா, திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல” என்று கூறினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தலைவர் கீழ்க்கண்டவாறு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.

“தமிழக அரசியல் மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட இயக்க பாரம்பரியத்தை கிண்டல் செய்திடக் கூடாது. நாத்திகம் தான் திராவிட இயக்க பாரம்பரியம் என்று கருதுவது தவறு”.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பரவலாக மக்கள் வழிபடும் தெய்வங்களான அய்யனார், மாரியம்மா – போன்ற அனைத்தையும் திராவிட இயக்க பாரம்பரியம் இல்லையென்று நாம் புறக்கணிக்கலாமா? தெய்வ பக்தியையும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற வலியுறுத்தும் திராவிட பாரம்பரியத்தின் அந்தப் பகுதி உண்மையில் இந்துத்துவாவை சேர்ந்ததாகும்.”

இதுவே தமிழகத்தில் அவர்களது உத்தியாக இருந்து வருகின்றது. திராவிட இயக்கப் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு இந்துத்துவாவை பரப்பிடும் சூழ்ச்சி இதன் அடிப்படையில் தான் நடைபெற்று வருகின்றது.

திராவிட பாரம்பரியத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாரம்பரியத்தையும் ஒருங்கே சேர்த்து இந்துத்துவாவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் கபடத்தனம் இங்கே வெளிப்படுகிறது. திராவிட இயக்கம் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டியது. அவ்வாறு திரட்டிடும் போது, பிராமணியம், மதப்போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அறியாமைக் கடலிலிருந்து அவர்கள் வெளியே வாராமல் தடுத்திருந்தது. எனவே திராவிட இயக்கம் மதத்திற்கு எதிராகவும், மதச்சாயம் பூண்டு கடைபிடிக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனவே, மத எதிர்ப்பும் நாத்திகமும், மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டிட பயன்பட்ட கருவிகள். இத்தோடு ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் இணைப்பது திருகல் வேலை அல்லவா?

தமிழக ஆன்மீக பாரம்பரியத்திற்கும் விரோதமானது இந்துத்துவா

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உள்ள  சொற்செறிவும்,ஆன்மீகக் கருத்துச் செறிவும் பல பகுதி தமிழ் மக்களை ஈர்த்தவை. அவர்களது பாடல்களின் அடிநாதமாக விளங்கும் ஒரு கருத்தை தமிழறிஞர் டாக்டர் தெபொ.மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அன்பேசிவம் என்பது திருமூலர் துணிபு. இந்தத் துணிபுடன் அகப்பாட்டு என்ற பெயர்ப் பொருத்தத்தை நாம் அணுக வேண்டும். அதனை ஆராய்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் அனுபவித்த கடவுள் இன்பத்தை நமக்கு விளக்க வரும்போது. இத்தகைய அகப்பாடல்களாகவே பாடிக் காட்டுகிறார்கள்.

“ஆண்டவனே காதலனாக, தொண்டர்கள் காதலியாக பாடுகின்ற பாட்டையெல்லாம் வெறும் காதல் கதைகள் என்று கொள்வதற்கில்லை.காதற் கதையையும், தாண்டி விளங்கும் கடவுள் இன்ப அன்பின் காட்சியே அங்கெல்லாம் காண்கிறோம்”

நமது கேள்வியெல்லாம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் விளக்குகிற, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுக்கெல்லாம் உயரியதாக விளங்கிய ‘அன்பின் காட்சிக்கும்’ இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு? அன்பு என்கிற மனித நேய குணத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத – மனிதர்களை, அவர்கள் சிறுபான்மையினர் என்பதற்காகவே கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்திடும் இந்த மதவெறிக் கூட்டத்திற்கும் ஆழ்வார்கள் நாயன்மார் பாரம்பரியத்திற்கும் என்ன உறவு? ஆக, திராவிட இயக்க பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. அதே நேரத்தில் அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. இரண்டையும் ஒன்று சேர்த்து இரண்டு தரப்பினரையும் வென்றெடுக்க முனைகிறது. இந்துத்துவா கூட்டம் இந்த இரண்டு தரப்பாரும் சேர்ந்து தமிழகத்தை இந்தத் தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமையாக தற்போது முன்நிற்கிறது.

அன்றாட வாழ்க்கையில் தலையிடும் சங்கப்பரிவாரம்

மாநில ரீதியாக, திராவிட இயக்க சித்தாந்தத்தை கடத்திட இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மக்களின் சாதி, மத, கலாச்சார நடவடிக்கைகளை அறிந்து அதற்கேற்ற உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை பிரச்சாரம் செய்யும் போதே ஸ்தல அளவில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர் ஒரே கடவுள் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்ற பாசிச கொள்கையை அடைய, தனி தனி கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்படுகிற கலாச்சார ஒடுக்குமுறை. இந்த ஒடுக்குமுறைக்கெதிராக பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது கட்டாயம்.

இத்துடன், சமூகத்தில் உள்ள பல பிரிவினர்களிடம் செயல்பட்டு இந்துத்துவாவிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். குடும்பம் மற்றும் உள்ளூர் பகுதி மட்டங்களில் மக்களோடு பிணைப்புகளை ஏற்படுத்தி, தங்களது அமைப்புகளின் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்கச் செய்து வருகின்றனர். கோயிலை மையமாக வைத்து மக்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்கள், மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை ஆன்மீகம், கல்வி சேவைப்பணிகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக திரட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாதியரீதியில் மக்கள் திரண்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ற முறையில் சாதியத் தலைவர்களை அரவணைப்பது, உள்ளிட்ட பல உத்திகளைக் கையாண்டு மக்களைத் திரட்டுகின்றனர். தலித் மக்களைத் திரட்ட விசேட கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டுகளைப் பெற இயலாது. சங்கப்பரிவாரம் தீண்டாமைக்கெதிரானது என்ற தோற்றம் வரும் வகையில் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலாச்சாரத்தில் தலையீடு

அன்றாட வாழ்க்கையின் அத்தனைச் செயல்பாடுகளும் கலாச்சாரத்தில் அடங்கும். தமிழக மக்களின் வாழ்வில் மாறுபட்ட பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. எனினும் சில பாரம்பரிய நடவடிக்கைகள், மதச் சடங்குகள் போன்றவற்றில் பொதுவான தன்மைகள் அதிகமாக உள்ளன. சங்கப்பரிவாரம் கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது என்ற பார்ப்பதில்லை. கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்ததாகவே அவர்கள் அணுகுகின்றனர். மதம் சார்ந்த சடங்குகள், பாரம்பரிய நடவடிக்கைகளில் மக்களைத் திரட்டி மக்களது உணர்வில் மதப்பிடிமானத்தை ஏற்படுத்துகின்றனர். விளக்குப் பூஜை, விநாயகர் ஊர்வலம், கோயில் திருவிழா போன்ற அவர்களது பல நடவடிக்கைகள் இந்த நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர்கள் கலாச்சார ஸ்தாபனம் தான் என்று சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் மனித வாழ்க்கையின் பல்வேறு வகையான இசை, நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மக்களின் ஆர்வங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டு மதக் கலாச்சார நடவடிக்கைகளில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்திட வற்புறுத்தப்படுகின்றனர்.

மதம் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதையும் பயன்படுத்த சங்கப்பரிவாரத்தினர் தயங்குவதில்லை. உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரை ஈர்க்கவும் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். உடற்பயிற்சிக்கான இளைஞர், மாணவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடவும், அதே நேரத்தில் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இந்துத்துவா கருத்துகளை புகுத்தவும் ஷாகாக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மதம் போன்றே, சாதியும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இன்றைய தேர்தல் ஜனநாயக அமைப்பில் சாதிய ரீதியாக மக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்வது தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், பதவி, அந்தஸ்து உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றிடவும் உதவிகரமாக இருக்கிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சாதிய நடைமுறைகள், ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்துகிற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால்,அதனையும் சங்கப்பரிவாரத்தினர் பயன்படுத்த முனைகின்றனர். சாதிய நடைமுறைகளோடு இணைந்து தங்கள் பக்கம் இழுத்திட அவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆக, சாதி, மதம், பாரம்பரியம் உள்ளிட்ட கலாச்சாரத்தின் அத்துணை அம்சங்களிலும் தலையிட்டு வகுப்புவாத உணர்வை உறுதியாக நிலைபெறச் செய்திட சங்பரிவாரத்தினர் முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் தங்களது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதம்: மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை

மதம் ஒரு சித்தாந்தம்; அது சுரண்டுகிற வர்க்கங்களின் கருவியாக செயல்படுகிறது என்பதே மார்க்சியத்தின் மையமான கருத்து. அதே நேரத்தில் மதம் இரண்டுவித, செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு புறம், மக்களுக்கு தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்ற எதார்த்த நிலையை மறைக்கிறது. உண்மை நிலைமைகளை மக்களிடமிருந்து மறைக்கச் செய்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இதையொட்டியே மார்க்சின் வாசகங்கள் – ‘மதம் ஒரு அபின்’ ‘அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சு’ – பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,இது, மதத்தின் இரண்டு வித செயல்பாடுகளில் ஒன்று.

மற்றொரு வகை செயல்பாடும் மிக முக்கியமானது. சமூகத்தில் உள்ள நிலைமைகளை எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு தேவையான துணிவையும் மதமே வழங்குகிறது. இது பல தருணங்களில் நிகழ்கின்றது. மக்களின் மத நம்பிக்கையே சமூக நிலைமைகளை மாற்றவும், தங்களது துன்ப துயரங்களுக்கு மாற்றினை நாடவும் மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கையும் வழங்குகிறது.

இதற்கு ‘’ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய நாட்டில் வேளாண்மை அமைப்புகள் உருவாவதற்கு முன்பே விவசாயிகளின் எழுச்சிகள், குறிப்பாக ஆதிவாசி மக்களின் போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அவர்களது மத நம்பிக்கை உத்வேகம் அளித்துள்ளது. அதே போன்ற கிறித்துவ மத போதனைகள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் மத்திய காலத் துவக்கத்தில் நடைபெற்ற பல விவசாயிகளின் புரட்சிகளைப் பற்றி ஆய்வு செய்துள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஆர்எஸ் சர்மா, “… இந்தப் புரட்சிகளின் தன்மையை ஒருவர் ஆராயும் போது, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டதற்கு மதம் ஆற்றிய பங்கினையும் சரியாக உணர வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார். மதம் முக்கிய பங்காற்றுவது என்பது விவசாய வர்க்க எழுச்சியின் தனி சிறப்பியல்பாகத் திகழ்கிறது. இது பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண முடியும்.

இந்த வகையான மதத்தின் செயல்பாட்டில் மார்க்சிஸ்ட்கள் தலையீட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத நம்பிக்கை உள்ளவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களது உள்ளத்தில் இதர மதத்தினர் மீதான வெறுப்பை வகுப்புவாதிகள் ஏற்படுத்துகின்றனர். வகுப்புவாதிகளின் இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மையில் குறிப்பிட்ட மதத்தின் கருத்துகளாக இருக்காது. மக்களை திரித்துக் கூறும் வழக்கம் எல்லா மத வகுப்புவாதிகளிடமும் உண்டு. எடுத்துக்காட்டிற்கு இந்து முன்னணி சார்பில் இராம கோபாலன் பிரச்சாரம் செய்திடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மையான மதக் கருத்துகள் இல்லை. அதைப்போல முஸ்லீம் தீவிரவாதிகள் பலர் அவ்வப்போது பரப்பிடும் வன்முறை கருத்துகள் குரானில் இருப்பதில்லை. மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் விரும்புகிற சாதாரண மத நம்பிக்கை கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வகுப்புவாதிகள் திசை திருப்புகிறபோது, ஏன் இவற்றை மார்க்சிஸ்ட்கள் அம்பலப்படுத்தக் கூடாது? உண்மையான மதக் கருத்துகளுக்கு பகைமையானது என்பதை ஏன் நிறுவிடக் கூடாது? இதன் மூலம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மாற்றிட முடியும்.

இதைச் செய்திட வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பெருந்திரள் மக்களோடு தொடர்பும் பிணைப்பும் கட்டாயம் என்பது, மட்டுமல்ல; அவை வலுப்பெற வேண்டும். மத நம்பிக்கை கொண்டோருடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் (Dialogue) தேவை. இதைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட்கள் தங்களது மதம் பற்றிய பார்வையை கைவிட வேண்டும் என்பதில்லை. மதம் ஒரு சித்தாந்தம் எனும் வகையில் அதற்கான சித்தாந்த ரீதியான எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமலே மேற்கண்ட அணுகுமுறையை பின்பற்ற முடியும்.

மக்களிடையே மதச்சார்பின்மையை வளர்த்திட..

மக்களிடையே மதச் சார்பற்ற உணர்வுகளை மேம்படுத்திட ஏராளமான மதச்சார்பற்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழியாக மக்களிடம் வகுப்புவாத, மதப்பிடிமான உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இயலும். மதச்சார்பற்ற உணர்வுகள் நிரந்தரமாக குடிகொள்ளும் நிலையை உருவாக்க மதச்சார்பற்ற நடவடிக்கைகள் தான் மிகவும் அவசியமானது.

ஆனால் பல நேரங்களில் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்போதாவது ஒரு முறை எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது. எங்காவது கலவரம் நடந்தால் அதைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது கருத்தரங்கங்கள், விஸ்வஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை எதிர்த்து ஒரு நாள் தர்ணா எனும் வகையில்தான் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, அவை தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு கிராமத்தில் ஒரு படிப்பகம் திறப்பது என்று முயற்சி துவக்கப்படுகிறது என்றால் இது தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும் படிப்பகத்திற்கான இடம் கண்டுபிடிப்பது, செய்தித்தாள்கள், புத்தகங்கள் அளிப்பற்கான கொடையாளிகளை அணுகுவது, படிப்பகத்தில் வந்த மக்களை படிக்கச் செய்வதற்கு ஆர்வத்தை தூண்டுவது. அவ்வப்போது படிப்பகத்தில் பல கட்டுரைகளை கூட்டாக படித்துக் காட்டுவதற்கும், அதனை கேட்பதற்குமான மக்களை திரட்டுவது – என வகைகளில் இந்த ஒரு சிறிய முயற்சி தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும். எனவே தளராத தொடர்ச்சியான முயற்சிகள் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கைக்குரிய ஒரு முக்கிய சிறப்பியல்பு.

மற்றொரு மிக முக்கியமான குறைபாடு களையப்படல் வேண்டும். பொதுவாக தற்போது நடைபெறும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளராக இருக்கச் செய்கிறது. ஆர்ப்பாட்டம், தர்ணா தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த வடிவங்கள் மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்கிற வழக்கமான வடிவங்கள். இந்த வடிவங்கள் முக்கியமானவையே. அவற்றை கைவிட வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஜனநாயக நடைமுறைகள்.

ஆனால் மக்களின் மதச்சார்பற்ற உணர்வை நிரந்தரமாக அவர்கள் மனதில் நிலை நிறுத்துவதற்கு இந்த வடிவங்கள் போதுமானதல்ல. இதற்கு உள்ளூர் மட்டத்தில், உள்ளூர் மக்களை செயல்பாடுகளில் ஈடுபட வைத்திடும் வடிவங்கள் தேவை. எடுத்துக்காட்டாக, முன்பு குறிப்பிடப்பட்ட படிப்பகம். அதனை நிறுவிட வேண்டுமென்றால் அந்த பணியில் ஏராளமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற உள்ளூர் மக்கள் ஈடுபடும் பல வடிவங்களை கையாள வேண்டும். அவற்றையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அகில இந்திய மாநில, மாவட்ட அளவிலான இயக்கங்கள் அவசியமானவையே. ஆனால் மக்கள் நடுவில் மதச்சார்பற்ற, உணர்வை ஏற்படுத்திட, எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருத்தல் கட்டாயம். மாநில மாவட்ட இயக்கங்களை பாதிக்காமலே அவற்றை நடத்திட இயலும். உள்ளூர் அளவிலான செயல்பாடுகளில்தான் அதிக அளவிலான மக்களை ஈடுபடச் செய்திட இயலும். தொடர்ச்சியாகவும் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள்

பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக வாழ்வதற்கு “மத நல்லிணக்கம் காப்போம்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதுண்டு.பல கட்சிகள், அமைப்புக்கள்  பல்வேறு மதச் சின்னங்களை அணிந்து, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அனைத்து மதம் சார்ந்தவர் களும், பொருளாதார , கலாச்சார உறவுகளால் காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் பல சர்ச்சைகள் , கருத்து மோதல்கள் இருந்தாலும், உள்ளுரில் மத அடிப்படையில் மோதல்கள் குறைவு .ஆனால் 1990-க்குப் பிறகு இந்த நிலை மாறி, மத நல்லிணக்கம் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் காக்க அடையாளப்பூர்வ பிரச்சாரம் நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல.
மதம் சாராத வாழ்வாதாரத் தேவைகளுக்காக, ஒன்றுபடுகிற போதுதான் மத நல்லிணக்க உணர்வை ,  நிலையான மதச்சார்பற்ற கண்ணோட்டம் மக்களிடம் வளரும். எனவே, மக்களிடம்  நெருக்கமாக மேற்கொள்ளப்படும்,தொடர்ச்சியான மதச்சார்பற்ற  நடவடிக்கைகள் அவசியம்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் விரிந்து பரந்துள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமாக இது போன்ற பல நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் திரளாக கூடுகிற விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏராளமாக கிராம, நகர அளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தலையிட்டு மதச்சார்பற்ற உணர்வுகளை வளர்ப்பதற்கு திட்டமிட்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள்; கிராமம், தெரு அளவில் ஏராளமானோர் இயல்பாகவே பாடல் இயற்றும் திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ வர இருக்கின்ற கோயில் திருவிழாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதில் பாட இருக்கும் பாடல்களை அங்கிருப்போரை வைத்து உருவாக்குவது. இதே போன்று விழாவின் போது ஒரு நாடகம் நடத்திட அங்குள்ளவர்களையே தேர்ந்தெடுத்து உருவாக்குவது. விழாவின்போது கண்காட்சி வைப்பதற்கான ஓவியங்களை வரைவதற்கான ஒரு குழுவை உருவாக்குவது – இவ்வாறு விழா என்கிற வாய்ப்பை மட்டும் வைத்து பலரது பங்கேற்புக்கு வழி வகுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கும் ஆற்றுப்படுகைச் சார்ந்த மக்களை மையமாக வைத்து அந்த ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் நீடித்த இயக்கம் ஒன்றை உருவாக்கிடலாம். மக்களின் அடிப்படைப் சிக்கல்களுக்காக நிலைத்து நீடிக்கும் மக்கள் இயக்கங்கள் உள்ளூர்மட்டத்தில் உருவாக்கும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளே. சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலரை ஈடுபடுத்தி செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

குடும்ப விழாக்கள் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் பல பாரம்பரிய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மதச்சார்பற்றவாதிகளுக்கு அந்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அவர்களோடு ஒன்றிணையவும் வாய்ப்பாக அமையும். சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

இவ்வாறு சமூகத்தில் நிலவும் எண்ணற்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துகிறபோது, வகுப்புவாதத்தை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது, மதச்சார்பற்ற இடதுசாரி சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் தளமாக சமூகத்தை மாற்றிட முடியும்.மதச்சார்பற்ற சமுகமே சோசலிசத்தை அமைப்பதற்கான அடித்தளம்.

கார்ல் மார்க்ஸ் 200: தத்துவ வாசிப்பு

என்.குணசேகரன்

மனித சமூக வரலாற்றின் உயிர்நாடியான ஒரு உண்மையை கம்யூனிஸ்ட் அறிக்கை கொண்டுள்ளது.

“இது வரை இருந்து வரும் சமூகத்தின் வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” இந்த பொன்னான வரிகள் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சமூகத்தை வர்க்கங்களின் தொகுதி என்று அணுகும் முறையை இது வழங்குகிறது. அடுத்து, வர்க்கங் களுக்கிடையே எழும் முரண்பாடுகளினால் நடக்கும் போராட்டங்கள்தான், வரலாற்றின் உந்து சக்தி என்ற புதிய வரலாற்று வெளிச்சத்தை நமக்கு வழங்குகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, மார்க்சியத்தின் மகத்து வமாகும். வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டம் உற்பத்தி மற்றும் பொருளியல் தளத்தில் மட்டும் நடப்பதல்ல. அரசியல், சட்டம், பண்பாடு என பல தளங்களில் நடைபெறுகிறது.அதில் முக்கியமான தளம் தத்துவம். பல சந்தர்ப்பங்களில் நேரடிக் காட்சியாக இது தெரிவதில்லை. ஆனால் சமூகத் தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் வலுவான தாக்கத்தை தத்துவத்தில் ஏற்படுத்துகின்றன.

தத்துவம் – அறிமுகம்
தத்துவச் சிந்தனை மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கத்திலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தத்துவ விவாதங்கள் நடந்து வந்து உள்ளன. ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதற்கான தேடலை ஒருவர் மேற்கொண் டால், அவரை தத்துவவாதி என்று அழைப்ப துண்டு.

philosophy  என்ற ஆங்கில சொல் இரண்டு கிரேக்க சொற்களைக் கொண்டது. philo என்பதற்கு நேசித்தல் என்றும் sophia என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். அறிவை நேசித்தல் என்ற பொருள் கொண்டதாக தத்துவம் என்ற துறை புரிந்துகொள்ளப்பட்டது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்ட ஒரு உயிரினம். பகுத்து அறியும் ஆற்றல் உள்ளதால், அவர்கள் எப்போதும் அறிவுத் தேடல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மனித இனத்தின் இந்த அறிவுத் தேடல் தேவையை நிறைவேற்றுவதற்கு தத்துவத் துறை பயன்பட்டு வந்துள்ளது.
தனது வாழ்க்கையையும் தனது இருப்பையும் பற்றி, அறிந்து கொள்ளவும், தான் வாழும் உலகமும் அதைச் சுற்றியுள்ள இயற்கையையும் பற்றி அறிந்து கொள்ளவும் மனிதர்கள் இடையறாது ஆர்வம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உருவாகும் அறிவே தத்துவம்.
இயற்கை, சமூகம், மனிதர்கள் என்ற பரிமாணங் களில் தத்துவ செயல்பாடு அமைந்துள்ளது. தத்துவா சிரியர்கள் இயற்கை, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் மனிதர்கள் உள்ளடங்கிய சமூகத்தின் இருப்பு பற்றியும் சிந்தித்து வந்துள்ளனர்.

மார்க்சியத்தின் வரையறை
தத்துவம் அனைத்து அறிவியல் துறைகளுக் கும் தாய் போன்று விளங்கியது. இயற்கை அறிவியல், பௌதிகம் போன்ற துறைகளில் புதிதாக சேர்ந்திடும் அறிவுப் பங்களிப்பு அனைத்தும் தத்துவமாகவே பார்க்கப்பட்டது. 1729-ம் ஆண்டில் நியூட்டன் எழுதிய நூலின் தலைப்பு,” இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்”. அன்று பௌதிகம், கணிதம், வானவி யல் போன்ற அனைத்தும் தத்துவ அறிவின் பிரிவு களாகவே கருதப்பட்டன.
தத்துவம் பற்றி பல பார்வைகளும், வரையறை களும் நிலவி வந்த சூழலில் மார்க்சியத்தின் வருகை ஒரு புதிய தடத்தினை உருவாக்கியது.
எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார்.

“எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையே யான உறவு பற்றியதுதான்’’
அதாவது, புற உலகு சார்ந்த பொருட்களுக் கும், அதனையொட்டி எழுகிற மனித சிந்தனைக் கும் உள்ள உறவு குறித்து தத்துவங்களும் தத்து வவியலாளர்களும் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளனர்.
இது எப்போது துவங்கியது? இதற்கும் எங்கெல்ஸ் ஒரு சுவாரசியமான விளக்கத்தை தருகிறார்:

“தங்களது உடல் அமைப்பு பற்றி, எந்த அறிவும் இல்லாத ஆதிகால மனிதர்கள், தாங்கள் கண்ட கனவுகளில் வந்த ஆவி கற்பனை உருவங்களின் தாக்கத்தால், தங்கள் எண்ணங்களும் உணர்வு களும் உடலின் செயல்பாடுகள் அல்ல; உடலில் இருக்கும் ஆன்மாதான் அவற்றுக்குக் காரணம்; அது மரணத்தின்போது, உடலை விட்டு வெளியேறி விடுகிறது என்று கருதினர். அன்றிலிருந்து மனிதர் கள் தங்கள் ஆன்மாவிற்கும் புற உலகத்திற்குமான உறவு பற்றி ஆராயத் துவங்கினர்.” இந்த அற்புத சித்தரிப்பு, தத்துவத் துறையின் துவக்கத்தை எளிமை யாக எடுத்துரைக்கிறது.
இந்தக் காலங்களுக்குப் பிறகுதான் தத்துவ சண்டைகள் துவங்கின. தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன் மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர் கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்திய வர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”
மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படை யில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு, தத்துவத்தில் அதுவரை நீடித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் மார்க்சிய தத்துவம் தீர்வு கண்டது. இந்த புதிய பார்வை, தத்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கருத்து முதல் வாதம்
பல்கலைக்கழக தத்துவப் பாடங்களில் கருத்து முதல்வாதம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தத்துவ முறைக்கு பல சொற் கள் பயன்படுத்தப்படுகின்றன. மீமெய்யியல் (அநவயயீhலளiஉள) என்பது உள்ளிட்டு பலவாறு சொற் கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அப்பாலைத் தத்துவம் என்ற சொற்றொடர் பயன்பட்டு வந்துள்ளது.
புலன்கள் உணரும் பொருட்களுக்கு அப்பால், புலன்களால் உணர முடியாதவற்றை விவாதிக் கும் தத்துவமுறை என்பதால் இது அப்பாலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு தூண் இருக்கிறது என்றால் சாதாரணமாக அது எந்த மூலப்பொருட் களால் ஆனது என்று விளக்கம் கூறலாம். ஆனால் அப்பாலைத் தத்துவம் அந்த தூணுக்குள் உள்ள ‘மறைபொருளைப்’ பற்றி பேசுகிறது. இறுதியாக, “தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்று அது முடிவு கூறும். அதாவது கடவுள்தான் எல்லாம் என்று இறுதியாக வந்தடையும் தத்துவ முறை அது.

இந்த அப்பாலைத் தத்துவம் அரிஸ்டாட்டில் காலத்திலும், அதற்கு இணையாக அதே காலங் களில் இந்தியாவிலும் பெரும் செல்வாக்குடன் தத்துவத் துறையில் செயல்பட்டது.

மேற்கண்ட எடுத்துக்காட்டில், தூண் கட்டப் படுகிற மூலப்பொருட்களும், தூணின் வடிவமும் மாறலாம்; ஆனால், ’மறைபொருளாக’ உள்ள ஒன்று எப்போதும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை, அது நிரந்தரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த அநவயயீhலளiஉள என்ற சொல்லுக்கு பிந்தைய காலங்களில் மாறாநிலை தத்துவம் என்று அழைக்கிற வழக்கம் ஏற்பட்டது.

சமூகத்தில் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், சாகாவரம் பெற்ற, மாறாத, மாற்ற முடியாத சமூகம் முதலாளித்துவ சமுகமே என்கிற பார்வையைக் குறிப்பிடலாம்.

பொருட்கள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாறாதவை என்ற பார்வை கொண்டது மாறா நிலைத் தத்துவமாகும். இதற்கு நேர் எதிரான தத்துவ முறை, இயக்கவியல் எனப்படும். மார்க் சிற்கு முந்தைய இயக்கவியலானது, கருத்து முதல்வாத குழப்பங்களுடன் இருந்தது. அதனைப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ முறையினை மார்க்சும், எங்கெல்சும் படைத்தனர்.

கிழக்கு,மேற்கு தத்துவங்கள்
தத்துவங்களை மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என வகைப்படுத்தி பயில்கின்றனர். ஆனால் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னைகளில் பிர தேசம், நாடு வித்தியாசங்கள் இருப்பதில்லை. மனித சிந்தனைக்கும் இயற்கைக்குமான தொடர்பு குறித்து, எல்லாத் தத்துவங்களும் ஒரு நிலைபாடு எடுத்து விளக்குகின்றன. எங்கெல்ஸ் குறிப் பிட்டது போன்று இயற்கையா? சிந்தனையா? என்ற கேள்விக்கு விடை கண்டதில், எது மூல முதலானது என்பதனையொட்டி, இரு பிரிவு களாக கிழக்கு, மேற்கத்திய தத்துவங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.

தத்துவங்களின் கால வரிசையை ஆராய்கிற போது மனித நாகரிகங்களின் வளர்ச்சியோடு இணைந்ததாக தத்துவங்கள் தழைத்திருக்கின்றன. இது மேற்கு, கிழக்கு உள்ளிட்டு உலகத் தத்துவங் கள் அனைத்துக்கும் பொருந்தும். இந்திய தத்து வத்தில் வேதங்கள் தோன்றியதாக கணிக்கப்படும் காலத்திலிருந்தே பொருள் உருவாவது பொருளி லிருந்துதான் போன்ற துவக்க கால பொருள் முதல்வாத தத்துவக் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற தத்துவ முறையாக சார்வாகம் அல்லது உலகாயதம் எனப்படும் இந்திய பொருள் முதல்வாத தத்துவம் வளர்ந்தது. இந்த உலகு, மனிதர்கள் எல்லாம் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இந்தியப் பொருள்முதல்வாதம் கருதியது.

இதே காலங்களில் கிரேக்கத்தில் தேல்ஸ் என்ற தத்துவவாதி வாழ்ந்திருக்கிறார். அவர் தண்ணீர் தான் மூலாதாரப் பொருள் என்றும் அதிலிருந்து, உலகமும், பிரபஞ்சத்தின் தோற்றமும் நேர்ந்ததாக பொருள்முதல்வாத நிலையினைக் கொண்ட தத்துவத்தை உருவாக்கியவர். அவருக்குப் பிறகு காற்றுதான் முதன்மையானது என்ற தத்துவ நிலைபாட்டைக் கொண்ட அநேக்சிமினஸ் வாழ்ந் திருக்கிறார். இவ்வாறு கிழக்கிலும், மேற்கிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வளர்ந்து வந்துள்ளன.

இந்திய சமூகத்தில் நிலவுடைமை சமூகம் நிலைபெற்று, ஆளுகின்ற வர்க்கங்கள் நிலப் பிரபுத்துவ சக்திகளாக வலுப்பெற்ற நிலை, நால் வருண சாதிய அமைப்பு இறுக்கமாக வேரூன்றிய சூழல் ஆகியவற்றால், பொருள்முதல்வாதம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மனித சமூக வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் ஆன்மீக தத்துவங்களும் கருத்துமுதல் வாத தத்துவங்களும் மேலாதிக்கம் செலுத்தத் துவங்கின. சமூகம் வர்க்கங்களாக பிரிந்து, தொடர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தில் நிலவுடைமை சமூகம் பரிணமித் தது. இந்த சூழலில்தான் கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆக, மேலாதிக்கம் செலுத்தும் சொத்துடைமை வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக் கும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் தத்துவத் துறையில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமான போராட்டமாக நடை பெற்று வந்துள்ளது. இதனை தத்துவ வரலாறு முழுவதும் காண முடியும்.

மதமும் தத்துவமும்
மதங்களின் தோற்றம், வளர்ச்சிக்கும் தத்துவ வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையின் இயக்கங்களின் மீது ஏற்பட்ட மனித உணர்வுகள், சிந்தனைகள், மத வழிபாட்டு முறைகளாகவும் தத்துவ விளக்கங்களாகவும் பரிணமித்து வந்துள்ளன. பல தத்துவங்களில் மத நம்பிக்கை எது, தத்துவக் கருத்து எது என்று பிரித்து தெரிந்துகொள்ள இயலாத அளவிற்கு இணைந்துள்ளன.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் மதத்தை யும் தத்துவத்தையும் பிரித்து பார்ப்பது மட்டு மல்லாது, மதம் உருவானதற்கான சமூகச் சூழல், பொருளாதாரக் காரணிகளை ஆராயவும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தியத் தத்துவம் மதம் சார்ந்தது என்றும் ஆன்மீகத் தன்மை கொண்டது என்றதுமான கருத்துக்கள் இன்றளவும் ஆழமாக வேரூன்றி வந்துள்ளன. இந்தியாவின் குடியரசுத் தலைவ ராக இருந்த தத்துவ ஆசிரியரான டாக்டர் ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவம் என்பது சாரம் சத்தில் ஆன்மீக தத்துவம்” என்று எழுதியுள்ளார். அதாவது இந்திய தத்துவத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்று அடிப் படையற்ற கருத்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதனை உடைத்தெறிந்த பெருமை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களையே சாரும். இந்தியத் தத்துவத்தில் தொன்மைக்காலமாக நிலைத்திருந்த நாத்திக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து, இந்திய தத்துவம் ஆன்மீக தத்துவமே என்ற வாதத்தின் பொய்மையை தோலுரித்துக் காட்டினார் அவர்.

தத்துவ இயக்கத்தின் அடிப்படை
பல்வேறுபட்ட தத்துவ சிந்தனைகள் உருவா வதற்கு எது அடிப்படை? இந்தக் கேள்விக்கான விடையினை மார்க்சியத்தில்தான் பெற முடியும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் சமூக உற்பத்தி நிலைமைகள்தான் குறிப்பிட்ட தத்துவப் போக்கு தோன்றிட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் பௌத்த தத்துவம் தோன்றிய வரலாற்றைக் குறிப்பிடலாம். மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதனை கீழ்கண்டவாறு விவரிகின்றார்:

“வட இந்தியாவில் பேரரசுகள் காலத்தில், வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து, சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலை தூர வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. தொலைதூர வர்த்தகம் வளர சமணப் பள்ளி களும் மடங்களும் பேருதவி புரிந்தன… பல்வேறு சமூகக் குழுக்களை ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கை கொண்ட பௌத்தமும் சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.”

சமூகத்தில் நிலவுடைமையோடு சேர்ந்து வணி கப் பொருளாதாரம் வளரத் துவங்கிய காலத்தில் பௌத்தம் வளரத் துவங்கியது. ஏற்கனவே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் ஆன்மிக தத்துவப் பிரிவுகள் மற்றும் வேதங்களின் பெயரால் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர். அவ்வாறு வாழ்ந்த நிலையில் வணிக வளர்ச்சித் தேவைகளின் விளை வாக உருவான பௌத்தம் அடக்கப்பட்ட மக்க ளின் குரலாக உருவெடுத்தது.

மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட தத்துவ வெளிப்பாடுகளை காணலாம். ஐரோப்பிய சமூ கத்தில் 15-ம் நூற்றாண்டுகளில் நகரங்களும் வணி கமும் தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் துவங்கின. நிலப்பிரபுத்துவ சமூக அமைப் பிலிருந்து முதலாளித்துவ சமுகமாக மாறும் கட்டமாக அது இருந்தது. அறிவியல் வளர்ச்சி யும் இந்த நிகழ்வுப்போக்கிற்கு உறுதுணையாக அமைந்தது.

இந்த சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக ஆளும் வர்க்கமாக உருவெடுத்த முதலாளித்துவ வர்க்கங்களின் தேவைகளை பிரதிபலிப்பதாக அன்றைய தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. திதராட் உள்ளிட்ட பிரெஞ்சு தத்துவவாதிகள், மார்க் சுக்கு முந்தைய காண்ட், ஹெகெல் போன்ற தத்துவவாதிகளை குறிப்பிடலாம். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் இவர்களில் பலர் பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.

எனவே தத்துவ வரலாறு படிப்பவர்கள் மார்க்சின் கீழ்க்கண்ட கூற்றினை ஆழமாக உணர வேண்டும்: “…பொருளாதார வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க் கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது… ”

சமூக வாழ்க்கை நிலையில் பொருளாதார உற்பத்தி முறை முக்கியமானது. அதுவே அறிவுலக வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறபோது, தத்துவமும் அதில் அடக்கம். தத்துவமும் உற்பத்தி முறை இயக்கத்திற்கு ஏற்ற தாக இயங்குகிறது. உற்பத்தியில் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் தத்துவம் பயன்படுகிறது.

ஆனால் இதனை இயந்திரகதியில் பார்ப் பதை மார்க்சியம் ஏற்கவில்லை. தத்துவ நிலை பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும் என்பதுடன் அதன் பின்னணியாக உள்ள உற்பத்தி முறை மற்றும் சமூக சூழலை கருத்தில் கொள்ள வேண்டுமென மார்க்சியம் வழிகாட்டுகிறது.

தத்துவத்தின் இலக்கு
பொருளியல் துறையில் நிகழும் மாற்றங்கள் – தத்துவத் துறை இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதனை மறந்திடக் கூடாது. பாட்டாளி வர்க் கத்திற்கு சுரண்டலிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி யாக முற்போக்கான தத்துவ வளர்ச்சி திகழ்கிறது.

சமூக உருவாக்கத்துடன் இணைத்து தத்துவ வரலாற்றை அறிதல் அவசியம். தொன்மைக் காலம் சமூக ஏற்றத் தாழ்வுகளின் துவக்க காலம். அதிலிருந்து தொடங்கி, இன்று வரை, உற்பத்தி உபரியைக் கையகப்படுத்தும் அதிகாரமும் வலிமையும் கொண்டோர் அறிவுத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். எனவே தத்துவமும் ஒடுக்குவோரின் குரல் ஒரு புறமும், ஒடுக்கப்பட் டோரின் குரல் மறுபுறமும் என இரு வகைப் போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது.

இந்நிலையில் தத்துவத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
“தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்; ஆனால் மையமான பிரச்னை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்.” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத் துடன் செயலாற்றுகிறது.

நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகிய, அந்நியப்பட்ட ஒரு துறையாக இருந்த தத்துவத்தை நிஜ உலகில் மனிதர்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைத்தவர் காரல் மார்க்ஸ். மனிதம் மேம்படு வதற்கு தத்துவம் கருவியாக பயன்பட, வழி காட்டும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. இதனால், மார்க்சியம் இதர தத்துவங்களிலிருந்து மேம்பட்டு நிற்கிறது.

சமகால சவால்கள்

சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத் தும் தேவையில் நின்று, கடந்த காலத் தத்துவங் களை கற்று உணர்ந்தால், எதிர்காலத் தத்துவப் புரிதல் புதிய திசையில் பயணிக்கும். சுரண்டப் படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். மானுடத்தின் பல பிரச்னைகளை பல பரிமாணங்களில் கற்றிட தத்துவம் துணை நிற்கிறது. தெளிவாக அணுகிடவும், மோதிக் கொள்ளும் பல கருத்துக்களை ஆராய்வதற்கான வழிமுறைகளையும் அது நமக்கு கற்றுத் தருவதால் தத்துவம் பயில்வது அவசியமானது.

இந்தியாவில், இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ளவும், தத்துவம் தேவை. இன்று, முக்கியமான கேள்வி இது: இன்றைய ஆர்.எஸ். எஸ் சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைதத்து வப் பார்வையில் எப்படி புரிந்து கொள்வது?

முதலாவதாக நம்பிக்கை என்பதனை இந்துத்துவம் முன்னிறுத்துகிறது. நம்பிக்கை என்று சொல்கிறபோது மனிதர்களுக்கு அப்பாற் பட்ட சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது என்கிற உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த சக்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகுத்தறிவிற்கு அதில் இடமில்லை; அறிவியலுக்கு முற்றாக இடமில்லை என்ற கூறுகளும் இந்த நம்பிக்கை பரிமாணத்தில் அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக நம்பிக்கை என்பதில் இந்துத் துவம் இந்து மத நம்பிக்கையை முன்னிறுத்து கிறது. இந்து மத நம்பிக்கை என்றால் அனைத்து இந்து மதப் பிரிவுகளையும் இந்துத்துவம் பிரதி பலிக்கவில்லை. இந்து மதத்திலேயே மிகவும் பிற்போக்கான மதக்கூறுகளை அடையாளப் படுத்தி சுவீகரித்துக் கொண்டது இந்துத்துவம். ஆனால், தங்களது பார்வையே உண்மையான இந்து மதம் என சித்தரித்து சாதாரண மத நம்பிக்கையாளர்களை அவர்கள் திரட்டுகின்றனர். அந்த திரட்டலுக்கு இதர மதங்கள்? மீது வெறுப்பை வளர்ப்பது, அவர்களது முக்கிய தந்திரம். இது, அரசியல் அதிகாரத்திற்கான திரட்டல். இது, ஜனநாயக விரோதமானது.

இந்திய தத்துவத்தில் பரிணமித்த பல கருத்தாக் கங்களில் மறைக்கப்பட்ட பல கூறுகள் உண்டு. இதற்கு,தொடக்க கால சிந்தனைகளான உபநிட தங்களின் சில பிரிவுகளில்,உலகினை ஆராய பொருள்முதல்வாத சாயலில் பகுத்தறிவைப் பயன்படுத்திய விதம், பிந்தைய போக்குகளான துவைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற பல சிந்தனை களில் அடங்கியிருந்த மனிதநேயம், பன்முக சிந்தனை களை மதிக்கும் போக்கு, போன்றவைகளைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த கூறுகள் அனைத் தையும் நிராகரிக்கும் சித்தாந்தப் பார்வை கொண்டது இந்துத்துவம். ஆக, இந்திய தத்துவம், இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டிலும் மிக பிற்போக்கான போக்கினையே இந்துத்துவம் கொண்டுள்ளது.

எனவே இந்துத்துவத்தை தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அது பொருளின் இருப்பையே முற்றாக மறுக்கும் தன்மை கொண்டது என்பதை அறிய முடியும். இதனால், இந்துத்துவத்தை அகநிலை கருத்துமுதல்வாதம் எனும் பிரிவில் தான் சேர்க்க வேண்டும். அதாவது, பொருளை மறுத்து, பொருளாயத உலகு மாயையானது என்ற கருத்தை அது விதைக்கிறது. ஒரு சக்தி அல்லது கடவுள் என்ற பிம்பமே உண்மையானது என்ற நிலைபாட்டை அது கொண்டுள்ளது. உண்மையில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை அனைத்து சக்தியும் படைத்த தனிநபர் அல்லது தனிநபர் கூட்டமே மக்கள் மேலாண்மைக்கு உகந்தது என்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தான் நரேந்திர மோடியின் பிம்பம் சாதாரண மனிதர்களிலிருந்து மேம்பட்ட தெய் வீக சக்தி கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது.

எனவே தத்துவத் தளத்திலிருந்தும் இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை என்று அவர்கள் முன்னிறுத்துவதை பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த பொருள்முதல்வாத கருத்து களை கொண்டு கருத்துரீதியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தத்துவத்தில் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம். ஆனால் இந்திய தத்துவம் உருப்பெற்ற வரலாறு முழுவதும் வர்க்க சமுதாயம் வளர்ந்து வந்த வரலாற்றோடு இணைந்தது. இந்த நிலையில் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கப் போராட்ட வீரியத்தின் விளைவாக எழுந்த சிந்தனை கீற்றுக்களாக அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைமையை உயர்த்திப் பிடிப்பதில் எச்சரிக்கை தேவை. பல சந்தர்ப்பங்களில் இது இந்துத்துவத்திற்கு பயன் பட்டுவிடும் நிலை ஏற்படலாம். ஏனென்றால், பழைமையும், பிற்போக்குத்தனங்களும் இந்துத்து வாவின் செயல்பாட்டு தளங்களாக உள்ளது.

அறிவியலோடு தத்துவம்
உலக, பிரபஞ்ச இரகசியங்களை இறைக்கருத்தில் தேடும் போக்கு முடிவில்லாமல் தொடர்கிறது. இந்தியாவில் பொருளின் இருப்பையே மறுத்து, அனைத்தும் மாயை, பொருளே இல்லை அனைத் தும் பிரம்மம் என்று வாதிட்ட அத்வைதம் இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது.
இதற்கு காரணம்? முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தான். சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு வழிதெரியாமல் பாட்டாளி வர்க்கம் உள்ள நிலையில், இறை கருத்தே மூல முதலானது என்ற தத்துவப் போக்கு தொடரும்.
பொருள்தான் முதலானது, பொருளின் பிரதிபலிப்பே சிந்தனை என்ற அடிப்படையி லிருந்து உலக, பிரபஞ்ச, இயற்கை இயக்கங்களை மார்க்சியம் விளக்குகிறது. அறிவியலோடு இணைந்த இந்த மார்க்சியம் சுரண்டல் முறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற உத்வேகத்தை அளிக்கிறது.

அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும். எனவே, அறிவியல் பார்வையுடன் இணைந்து தத்துவப் பிரச்னைகள் ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.