இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

  • தாமஸ் ஐசக்

(மார்க்சிஸ்ட் இதழ் நடத்திய விடுதலை 75 தொடர் கருத்தரங்கத்தில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும் பேராசிரியருமான தாமஸ் ஐசக் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இங்கே தரப்படுகிறது)

நாடு விடுதலை பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தருணத்திலேயே, இது ‘முழுமைபெறாத கூட்டாட்சியாக இருக்கிறது’ என்று பலரும் விமர்சித்தார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால் இரண்டு போக்குகளை நம்மால் காணமுடிகிறது. ஒன்று, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது; மற்றொன்று. அதிகாரத்தை பரவலாக்கம் செய்வது.

அரசமைப்பும், அதிகார குவிப்பும்:

அதிகார பரவலாக்கம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதற்கு வடிவம் கொடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1990களின் தொடக்கத்தில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதிப்படுத்தும் விதமான திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு பிறகும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை உண்மையான தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய நிர்வாக அதிகாரமாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை. இந்தப் போக்கினை இந்தியாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சியுடன் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே ஒன்றிய அரசின் அதிகாரம் மாநில அரசுகளைவிட கூடுதலாக இருப்பது அனைவருக்கும் புரிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதும் அதனை பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு அத்துமீறும் போக்கும் கண்கூடாகவே தெரிந்தது.

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும்.

அரசு நிர்வாக அதிகாரத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான வரைமுறைகள் தெளிவாக வகுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நீதித்துறையை நிர்வகிக்க மாநிலங்களுக்கு துளிக்கூட அதிகாரமில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக எந்த மாநிலத்தையும் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும். இதனால்தான் இந்தியாவை முழுமையற்ற கூட்டாட்சி என்கிறோம்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில், மொழிவாரியான கமிட்டிக்களே இடம்பெற்றிருந்தன. விடுதலைப் போராட்டத்தின்போது உயர்த்தி பிடிக்கப்பட்ட கோட்பாடாகவும் அது  இருந்தது. அப்படிஇருந்த நிலையில், அதிகாரக் குவிப்பிற்கான சாத்தியம் எப்படி ஏற்பட்டது?

இதற்கு தோழர் இ.எம்.எஸ். ஒரு முக்கியமான காரணத்தை முன்வைக்கிறார். அதாவது, நாடு விடுதலை பெறுகிற சமயத்தில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதனால் மக்கள் அனுபவித்த கடும் துயரங்களையும் கணக்கில் கொண்டு இதுபோல் ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதாக தோழர் இ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார். அரசியலமைப்பு இவ்வாறு இருக்க தொடக்கம் முதலே அதிகார குவிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முரண்பட்ட போக்குகள்:

1956-இல் கேரளாவில் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைத்தவுடன், நிலச்சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், அதிகார பரவலாக்கம், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மற்றும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது.

1959-இல் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் விருப்பத்திற்கு ஏற்றபடி கேரளாவில் சில குழப்பங்களை ஏற்படுத்தி, பின் சட்டஒழுங்கை காரணம் காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கிறது. இது ஏதோ இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் நடந்துவிட்டதாக நாம் கருதிவிடக் கூடாது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இடதுசாரி அரசுகள் (இவை கம்யூனிச அரசுகள் கூட இல்லை) ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் ஆட்சிக்கு வந்தன. காங்கோ, இரான், பிரேசில் இன்னும் பல நாடுகளைச் சொல்லலாம். இங்கெல்லாம் மிக மோசமான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் இடதுசாரி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இவைகுறித்து இன்று ஏராளமான ஆய்வுகள் நமக்கு கிடைக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் கேரளத்திலும் நமது ஆட்சி பறிக்கப்பட்டது.

அடுத்து ஒன்றிய அரசு மூலம் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை பார்த்தால் அவர்களும் ஒன்றிய அரசின் முகவர்களாக மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். பொருளாதார தளத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசு நேரடியாக சில பொருளாதார திட்டங்களை கொண்டுவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு இடமேயில்லை. மாநில அரசுகள் சில வரிகளை வசூலிக்கலாம். ஒன்றிய அரசு சில வரிகளை வசூலிக்கலாம். வசூலிக்கப்படும் வரிகளை எவ்வாறு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக பகிர்ந்தளிப்பது என்று முடிவெடுக்க இந்திய நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வளவுதான் பொருளாதார தளத்தை பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. (அதிலும் ஒன்றிய அரசின் வரிவசூலிக்கும் அதிகாரம் மாநிலங்களைவிட மிகக் கூடுதலாகவே இருக்கிறது)

ஆனால் ஒன்றிய அரசுகள் மாநிலங்களின் உரிமைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற தளங்களில் தமது திட்டங்களை மாநில அரசுகளை மீறி திணிப்பதிலிருந்து அதிகாரக் குவிப்பு தெளிவாகிறது.

நல்வாய்ப்பாக இதற்கு எதிரான போக்கும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த போக்கு பன்முகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.

1967 பொதுத்தேர்தலில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத இடதுசாரி மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி பெற்ற வெற்றி ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிற்பகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் (இ.எம்.எஸ், ஜோதிபாசு, ஷேக் அப்துல்லா மற்றும் பலர்) ஸ்ரீநகரில் கூட்டிய மாநாடு, மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடும் அதிகார குவிப்பை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. இதன் விளைவாகத்தான் 2007-இல் பூஞ்சி கமிஷன் உருவாக்கப்பட்டது. இக்குழு ஆழமாக விவாதித்து ஒன்றிய அரசின் அதிகார குவிப்பிற்கு கடிவாளம் போடும் விதமான வலுவான பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த இரண்டு போக்குகளும் 1991 வரை முரண்பாட்டுடன் தொடர்ந்தன.

1990களுக்கு பின்:

1990 களுக்கு பிறகு இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளின் இயக்கத்தில் ஒரு தடை ஏற்பட்டு அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் போக்கு வேகமெடுத்து இன்று அதன் விளைவாக இந்திய கூட்டாட்சி அமைப்புமுறையே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்கிறது. ஆனால் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை உருவாக்கிடவும் கலைத்திடவும் முடியும் என்ற அளவிற்கு அதிகார குவிப்பு வளர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும்ஏற்படலாம்.

அடுத்து ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களைப் பார்ப்போம். 3 வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கல்விக்கொள்கை, மின்சாரச் சட்டம் என அனைத்தும் மாநில அதிகாரத்தில் செய்யப்பட்ட வரம்புமீறிய தலையீடுகளே.

விவாதத்தில் இருக்கும் மின்சாரச் சட்டத் திருத்தத்தின்படி ஒரு மாநிலத்தின் மின்சாரவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்களை ஒன்றிய அரசுதான் நியமிக்கும். இந்த வாரியத்தை எப்போது வேண்டுமானாலும் கலைத்து வேறு மாநிலத்தின் வாரியத்தின்கீழ் கொண்டுவரவும் இச்சட்டதிருத்தத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதில் தலையீடு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற சில நீதிபதிகளுக்கு சலுகைகள் வழங்குவது என நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த வரிசையில் தற்போது சமீபமாக மாநிலங்களில் அமர்த்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரிகளை மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்று வேறு அதிகாரியை பணியில் அமர்த்தும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கிக் கொள்கிறது ஒன்றிய அரசு.

நீதித்துறையைப் போலவே திட்ட ஆணையமும் ஒரு தன்னிச்சையான அமைப்பு. இதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பற்றி எடுத்துரைக்கும் உரிமை இருந்தது. ஆனால் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு, அதனிடத்தில் ‘நிதிஆயோக்’ என்ற ஒரு குழுவை அமர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனை கலைத்ததால் ஏற்பட்ட விளைவு என்ன? மாநிலங்களின் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை கேட்டுப்பெற இயலாது. ஒன்றிய நிதிஅமைச்சரின் நிதிஒதுக்கீடு முடிவுகளை சார்ந்தேஇருக்க வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்மீது மாநில அரசுகளுக்கு நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை. அதற்கும் ஒன்றிய அரசையே நாட வேண்டியுள்ளது. நிதிசார் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை  (FRBM-Fiscal Responsibility & Budget Management) என்கிற சட்டத்தை 2000ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து எவ்வளவு கடன் வாங்கமுடியும் என்பதை ஒன்றியஅரசு இதன்மூலம் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியிலிருந்து 3% வரை மட்டுமே கடன்வாங்க முடியும் என்றும், அப்படி வாங்கும் கடன்தொகையை மாநிலங்கள் மூலதன செலவீனங்களுக்காக மட்டுமே செலவுசெய்ய வேண்டும்எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிபந்தனைகள் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. உதாரணத்திற்கு, இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க நேர்ந்தது. இதனால் வேலை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு உணவு தேவைப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனையால், அரசுக் கருவூலத்தில் பணம் இருந்தும் மாநில அரசுகளால் மக்களின் உடனடி தேவைகளுககு செலவுசெய்ய முடியவில்லை.

நவம்பர் 31, 2021 அன்று மாநிலங்களின் கருவூலத்தில் வைத்திருந்த ஒட்டுமொத்த இருப்பு 3லட்சம் கோடி ரூபாய்கள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளானார்கள் என்று அரசுக்கு தெரியாதா? அந்த பணத்தை செலவுசெய்ய முடியாத நிலை ஏன்?

ஒற்றை ஆட்சி விருப்பங்கள்:

இந்தியா வேகமாக அதன் கூட்டாட்சி குணங்களை இழந்துவருகிறது. இப்போது மத்திய ஆட்சியில், கூட்டாட்சி முறையை விரும்பாத, பன்முகத் தன்மையை ஏற்காத, இந்தியா பல்வேறு தேசியஇனங்களின் கூட்டு என்பதை ஏற்காத ஒரு கட்சி அமர்ந்துள்ளது.

இன்று ஒருவர் தன்னை எந்த அளவிற்கு இந்தியன் என்று உணர்கிறாரோ, அதேஅளவுக்கு தான் ஒரு தமிழன், மலையாளி, கன்னடிகா, … என தங்கள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் உணர்கிறார்கள் என்பதே உண்மை. முன்பு இருந்த ஒன்றிய அரசுகளுக்கும் தற்போது இருக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே வரி என அனைத்தையுமே ஒற்றைத்தன்மையை நோக்கி செலுத்துவதே. இப்படி ஒரு சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சி எப்படி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும்?

வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், 1990களுக்கு முன் வலுவாக இருந்த எதிர்ப்புகள் இப்போது அப்படி இல்லை.

1990 இல் ஏற்பட்ட நெருக்கடி

விடுதலைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் தன்னிறவை எட்டிட முடிவு செய்தோம். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட பொதுத்துறை நிறுவனங்கள் பிரதான பங்காற்றின. மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை குறைக்க திட்டக் குழு அவசியப்பட்டது.

ஆனால் இதில் சில சிக்கல்களை நாம் சந்திக்க நேர்ந்தது. வெளிநாடுகளிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமாட்டோம் என்றால், உள்நாட்டு வளர்ச்சி உள்நாட்டு சந்தையை சார்ந்து இருக்கிறது என்று பொருள். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் செலவுசெய்ய போதுமான அளவு வருமானம் ஈட்டினால்தான் உள்நாட்டு சந்தை விரிவடையும். ஆனால் அது நிகழவில்லை. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் விவசாயத் தொழிலை சார்ந்துதான் வாழ வேண்டியிருந்தது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலைமைகள் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு நிலச்சீர்திருத்தம் அடிப்படையான முன்நிபந்தனை. அதை செய்யாத காரணத்தால் சீர்குலைவு ஏற்பட்டது.

எனவே 1980களில் வேறு முடிவுகளை அரசு எடுக்கிறது. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று. ஆனால் உற்பத்திக்குத் தேவைப்படும் இடுபொருட்களையும், நவீன இயந்திரங்களையும், இன்னபிறவற்றையும் இறக்குமதி செய்யும் முடிவிற்கு மீண்டும் அரசு வருகிறது. ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவில் நிகழவில்லை.

இந்த தொடர் நிகழ்வுகளால் உள்நாட்டில் நமது கடன்சுமை அதிகரித்து ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சென்றது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர ஐ.எம்.எஃப் மற்றும் உலகவங்கியிடம் கடன்வாங்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் கையாட்களே. நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவதற்குதான் இவர்கள் கடன்கொடுக்கிறார்கள்.

இந்திய முதலாளிகளுக்கும் அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவைப்பட்டது. அரசின் கொள்கைகள் அவர்களுக்கு லாபகரமாக இல்லைஎன்பதை அவர்கள் புரிந்துகொண்டு உலகசந்தையில் அவர்கள் வலைவீச விருப்பப்பட்டனர். விடுதலைக்குப்பின் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்திருந்தன.எனவே இந்திய முதலாளிகள் நவீன தாராளமயக் கொள்கையின் தனியார் மயத்தை ஆதரித்து அந்நிய மூலதனத்தின்பக்கம் நின்றனர்.

இது எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பதற்குள் நான் ஆழமாக போகவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் முன்வைக்கிறேன். அனைத்து துறைகளிலும் இருந்த ஒழுங்குமுறைகள் யாவும் உலகசந்தையோடு ஒத்துப்போகும்படி அந்நிய மூலதனத்துக்கு ஆதரவாக மாற்றிஅமைக்கப்பட்டது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் அந்நிய மூலதனத்தின் தடையற்ற போக்குவரத்திற்காக விதிகள் தளர்த்தப்பட்டன.

இதன்விளைவாக என்னநடந்தது?

“என்ன விளைவுகள் இருந்தால் என்ன, இது பொருளாதார வளர்ச்சியைஅதிகரித்துள்ளது” என ஒருசிலர் வாதிடுகின்றனர். இப்படி வாதம் செய்பவர்கள் எதையும், எதையும் ஒப்பிடுகிறார்கள்? கொரோனாவுக்கு முன், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7% ஆக இருந்தது. 1951 முதல் 1980 வரையான காலக்கட்டத்தில் 3.5% ஆகயிருந்த வளர்ச்சி விகிதம் நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்குப்பிறகு இருமடங்காக அதிகரித்து 7% ஆகியிருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இவர்கள் 1980 ஆம் ஆண்டிலேயே பொருளாதார வளர்ச்சி 3.5% என்பதில் இருந்து 5% ஆகிவிட்டிருந்ததை கூறமாட்டார்கள். தனியார் மயத்திற்கு முன்பே ஒரு சீரான வளர்ச்சிப்போக்கில்தான் பொருளாதாரம் வளர்ந்தது.

விடுதலைக்கு முன் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். அப்போது 1% என்ற அளவிற்கும் குறைவாக இருந்த வளர்ச்சி, விடுதலைக்கு பின் 5% ஆனது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 1990களுக்கு பின்  ஏற்பட்டது அல்ல.

வரலாறு காணாத ஏற்றத்தாழ்வு:

உண்மையில், நவீன தாராளமயக் கொள்கையின் நடைமுறையால் கிடைத்த வளர்ச்சிக்கு இந்திய மக்கள் பெருந்தொகையை இழக்க வேண்டியிருந்தது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் ஆழமாக வளரத் துவங்கியது. இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல் சமத்துவமின்மை எக்காலத்திலும் இருந்ததில்லை. அவ்வளவு இடைவெளி கொண்ட ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

உதாரணத்திற்கு சில புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் அதிக பணம்படைத்த 1% மேல்தட்டு மக்களின் வருமானத்தைப் பார்ப்போம். 1961-இல் அவர்களின் வருமானம் 13% இருந்தது. 1981 வரைஇது ஏறத்தாழ இப்படியே நீடித்தது. 1991-இல் இது 10.4% ஆக குறைகிறது. ஆனால் தனியார்மயமும் நவீன தாராளமய கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தபிறகு 2020-இல் அவர்களுடைய வருமானம் 21% ஆக அதிகரித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் அடித்தட்டில் இருக்கும் 50% மக்களின் வருமானம் எப்படி இருந்தது?

1961-இல் 21% ஆகவும், 1981-இல் 23% ஆகவும் உயர்ந்திருந்தது. பின் தனியார்மயம் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு பிறகு 2020-இல் 14.7% ஆக குறைந்திருக்கிறது. நினைவில் கொள்க. இதில் வெறும் 1% செல்வந்தர்களையும் 50% அடித்தட்டு உழைக்கும் மக்களையும் மட்டுமே நாம் ஒப்பிடுகிறோம்.

சொத்துக்குவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அடித்தட்டு மக்களின் சொத்துக்கள் 1961-இல் 10% லிருந்து 1981 வரை 12% ஆக உயர்ந்தது. இன்று 2020-இல் வெறும் 2.8% ஆக சுருங்கியுள்ளது! 1% மேல்தட்டு மக்களிடம் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991 வரை 11% ஆக சீராக இருந்த சொத்துசேர்ப்பு, இன்று 43% ஆக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூக கொந்தளிப்பாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.க போன்றொதொரு கட்சியின் ஆட்சி முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. இதன் அரசியல், மக்களை மதம், சாதிசார்ந்த இந்துத்துவ வெறுப்பு அடிப்படையில் எப்போதும் பிரித்து வைக்கிறது. அதோடு ஒரு எதேச்சதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்ளக்கூடிய, பன்முகத்தன்மையை புறம்தள்ளி அனைத்தையும் ஒற்றைஅதிகாரத்தின்கீழ் கொண்டுவரக்கூடிய ஒற்றைஆட்சியை நோக்கிய ஒரு கட்சியாக அது செயல்படுகிறது. அதிகாரகுவிப்பு என்பது நவீன தாராளமயக் கொள்கையின் உள்ளார்ந்த பண்பும்கூட என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகார பரவலின் நிலை:

இப்போது மாநிலகட்சிகளின் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் போலவே இவர்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதன் விளைவாகவே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கஜானாவில் பணம்கொட்டிக்கிடந்தும் வாழ்வாதாரத்தை இழந்த, வேலையிழந்த மக்களுக்கு அதனை பயன்படுத்தாத நிலையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.

ஆனால் கேரளா இதனை கொரோனா காலம் முழுவதும் செலவு செய்தது. 2021-இல் ஒருநாள்கூட கேரள அரசு கஜானாவில் பணம் விட்டுவைத்ததில்லை. இதுதான் எங்கள்கொள்கை. இடதுசாரி கொள்கை. இக்காலத்தில் கடனாக பெற்ற பணத்தை உணவு, மருத்துவ தொகுப்புகளை வழங்கவும், ஓய்வூதியத்தை உயர்த்தவும், சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்யவும் செலவிட்டது. 2021-இல் கேரளாவின் சமூகநல செலவினங்கள் 162% உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் 30% மட்டுமே உயர்ந்துள்ளது.

அதிகார பரவலாக்கம் என்று சொல்லும்பொழுது,

1. மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

2. மாநிலங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பகிரப்படவேண்டும்.

ஆனால்,பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொருத்தமட்டில் அதிகார பரவலாக்கம் என்பது மாநிலங்களின் உரிமைகளை மீறி, நேரடியாக தங்கள் அதிகார எல்லைக்குள்உள்ளாட்சிகளை கொண்டுவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ராஜிவ்காந்தி ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு செய்யவிருந்த 64 மற்றும் 65வதுதிருத்தங்கள். அவை பின் முறியடிக்கப்பட்டன.

பா.ஜ.க உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல்காரியம் உள்ளாட்சி துறைக்கு இருந்த அதிகாரத்தை குறைத்ததுதான்.

அதீத வறுமை ஒழிப்பு:

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரள மாடலுக்கு இப்படி பல தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி “Peoples Planning” (மக்களின் திட்டமிடல்) என ஒரு தனி புத்தகமே வெளிவந்துள்ளது. புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கேரளா உள்ளாட்சி அமைப்புகள் மூலமே மீண்டெழுகிறது.

தோழர் இ.எம்.எஸ். தொடங்கி வைத்த “மக்களின் திட்டமிடல்” என்ற பாதையில் கேரளா பயணிக்கத் தொடங்கி தற்போது 25வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கேரளாவில் அதீத வறுமைஒழிப்பு என்ற பிரச்சாரத்தை நாங்கள் கையிலெடுத்திருக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறுகிறேன். அதீத வறுமையில்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறோம்.

இதனால் கேரளாவில் அனைத்துமே சரியாக நடக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். நல்ல உள்ளாட்சிகளும் உள்ளன; மோசமாக செயல்படும் உள்ளாட்சிகளும் உள்ளன. ஆனால் அதிகார பரவலாக்கம் திட்டமிடலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதுதான் கேரள அனுபவம் உணர்த்தும் உண்மை.

தனியார் மயத்திற்கு மாற்று மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமிடல்தான். அவரவர் வசிக்கும் பகுதிகளில் என்ன வரவேண்டும் என்று மக்கள் திட்டமிட அதிகாரம் வேண்டும். இருக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், கூட்டாக எப்படி, என்ன பயிர் செய்யவேண்டும் என அனைவரின் பங்களிப்பு மட்டுமே தனியார் மயத்திற்கு மாற்றாகும். (Participation is the answer to Privatization)

முடிவாக:

“ஜனநாயக மத்தியத்துவம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஜனநாயக பரவலாக்கம்” குறித்து பேசமுடியும் என தோழர் இ.எம்.எஸ்இடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில், “ஜனநாயக மத்தியத்துவம் என்பது எங்கள் கட்சிக்குள் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. அதில் ஒருவருக்கு உடன்பாடில்லை என்றால் அவர் தாராளமாக விலகலாம். ஆனால் ஜனநாயக பரவலாக்கம் என்பது அரசுகளின் கொள்கையாக இருக்கவேண்டும்.” ஜனநாயக அதிகார பரவலாக்கம் அதிகாரத்தை மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாநிலத்திடமிருந்து உள்ளாட்சிக்கும் கடத்திடும்.

கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவை மிகவும் வலுவற்றதாக இருக்கின்றன. எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், எவ்வளவு வலுவற்றதாக இருந்தாலும் அதிகார பரவலாக்கத்திற்கு நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகளை இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, விரிவுபடுத்த நாம் பயன்படுத்தவேண்டும் என்பதையே முடிவாக நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழில்: பிரசன்னா வெங்கடேஷ்

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!

ஹரிகிஷன் சிங் சுர்ஜித்

தமிழில். சி.சுப்பாராவ்

பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும்  போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு  நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது. உதாரணமாக,  ஒரு இர்விங்கை விரட்டி விட்டு அங்கு ஒரு புருஷோத்தம்தாஸ் தாக்குர்தாஸ்ஸை உட்கார வைப்பதில் சாதாரண இந்தியக் குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்று சிறையின் மரணத் கொட்டடியிலிருந்து பகத்சிங் எழுதி, அது அவரை தூக்கிலிட்ட பிறகு, இளம் அரசியல் ஊழியருக்கு என்ற தலைப்பில் வெளிவந்தது ஒரு சிறந்த உதாரணம்.

இதே ஜனவரி 26 தான் பின்னாளில் குடியரசு தினமாக்கப்பட்டது. காரணம் நாமனைவரும் அறிந்ததே..

காங்கிரஸ் வட்டாரங்களிலும் இதே உணர்வுகள் பிரதிபலித்ததில் வியப்பேதுமில்லை. பூரண சுதந்திரம் குறித்த தீர்மானம் நிறைவேறி யதன் பின், ஒன்றே காலாண்டு கழித்து 1931 மார்ச் 29-31 ல் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தான்  1947 சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமைந்தது.  அதே ஆண்டு 1931 ஆகஸ்ட் 6-8 ல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் சில மாற்றங்களுடன் இந்த தீர்மானம் அங்கீகாரம் பெற்றது.

இந்த தீர்மானத்தின் முக்கியமான குறிப்புகளில் ஒன்று மக்களை சுரண்டும் முறைக்கு முடிவு கட்ட அரசியல் சுதந்திரத்தோடு உண்மையான பொருளாதார சுதந்திரமும், பசியில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியம் என்பதாகும். மேலும் இத்தீர்மானம் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தந்தது..

பின்னால் சேர்க்கப்பட இருந்த முக்கியமான கடமைகள் பல துவக்கத்தில் இந்தப் பட்டியலில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக தாழ்த்தப் பட்டவர், பழங்குடியினர், (SC/ST)) என பின்னாளில் அழைக்கப் பட்ட மக்களுக்கு பிரத்யோகமாக எவ்வித வாக்குறுதியும் இதில் இல்லை. அதேபோல் விவசாயிகளின் சிரமத்தைக் குறைப்பதாக அது கூறினாலும், நிலச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அது சுற்றி வளைத்து ஏதோ சொல்லியது. குத்தகை முறை, வருவாய், குத்தகை இவைகள் சமத்துவ அடிப்படையில் சரி செய்யப்படும் என்று சொல்லியது. நிலப்பிரபுத்துவ உடைமையோ, நிலப்பிரபுத்துவ நில உறவையோ ஒழிப்பது காங்கிரசின் செயல் திட்டத்தில் இன்றும் இடம் பெற வில்லை. விவசாயிகளின் சுமையைக் சமத்துவ அடிப்படையல் சரிசெய்யப்படும் என்பதற்கு நூற்றுக் கணக்கான முறையில் அர்த்தப்படுத்த முடியும். இருந்தாலும்,  1931 ல் நிலவிய அரசியல், தத்துவார்த்த சூழலில் இந்த அளவு கூறியுள்ளதே மிகப் பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. 1922 ல் நிலப்பிரப்புகளின் நிலங்களைத் தொடக் கூட காந்தியடிகள் மறுத்த தையும், நில உரிமையாளருக்கு உண்டான குத்தகையை விவசாயிகள் தராமல் நிறுத்தக் கூடாது என்றுகூறியதையும், ஒப்பிட்டால், உண்மையிலேயே இது பெரிய முன்னேற்றம்தான்.

மொத்தத்தில் கராச்சி ஆவணத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், இந்திய உழைப்பாளி மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் குறிப்பிடத் தகுந்தவை. தங்கள் பங்கிற்கு மக்களும் காங்கிரஸை ஏமாற்ற வில்லை. தங்கள் முழு ஆதரவை நல்கினார்கள். 1937 தேர்தல் முடிவுகளில் இது  பிரதி பலித்தது. காங்கிரஸிற்கு மக்கள் ஆதரவு தந்ததற்கான காரணங்களை வேறு ஒருகோணத்திலும் காணமுடியும். 1937 ல் பெரும்பான்மை மாநிலங்களில் முஸ்லீம் லீக் தோற்றது. காங்கிரஸிடம் இருந்ததைப் போல் அதனிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். 55 சதம் முஸ்லீம்களாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான யூனியனிஸ்ட் கட்சியே வென்றதைச் சுட்டிக் காட்டலாம்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின் வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், 1947 க்கு முன் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை கைவிட்டு துரோகமிழைத்தது என்ற உண்மையை மறுக்க இயலாது.

நாம் மேலே விவாதித்த நிலச் சீர்திருத்த விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். 1931 ல் காங்கிரஸ் நிலச் சீர்திருத்தம் பற்றி சுற்றி வளைத்துப் பேசி, நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேச மறுத்தாலும், விரைவிலேயே சூழ்நிலைகள் அதைத் தீவிரமாகப்  பேச வைத்தன. 1936 ல் தோன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேசியதும், வரவிருந்த மாகாண சட்டசபைத் தேர்தல்களும் சேர்ந்து, காங்கிரஸ் இவ் விஷயத்தில் ஒரு நிலைபாடு எடுக்க வேண்டியதாயிற்று. ஐக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நேரு இது குறித்து தெளிவான வாக்குறுதிகள் அளித்தார். இத்தகைய வாக்குறுதிகள் இன்றி விவசாயப் பெருங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற இயலாது என்று காங்கிரஸ் சரியாகவே கணித்திருந்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அது எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று ஜமீன்தாரி முறையை ஒழித்தது ஆகும். நிலவுடமைக்கு சில உச்சவரம்புகள் கொண்டு வரப்பட்டன. இதுவும் தெலுங்கானா போன்ற விவசாயிகளின் எழுச்சியின் காரணமாகத்தான். இதுபோன்ற சில ஆரம்ப நடவடிக்கைகளைத் தாண்டி, விவசாயிகளை அவர்களது துன்பத்திலிருந்து விடுவிக்க, காங்கிரஸ் வேறெதுவும் அபூர்வமாகக் கூடச் செய்யவில்லை. ஜமீன்தாரி முறை மேலோட்டமாக அழிக்கப் பட்டதால், மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் நாட்டில் இருக்கவே செய்தார்கள். வேண்டுமென்றே பல ஓட்டைகளுடன் ஏற்படுத்தப் பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கேலிக் கூத்தாக்கப் பட்டது. காரணம் 1947 க்குப் பிறகு அரசு அதிகாரத்தில் நிலப்பிரபுக்களுக்கும் பங்கிருந்தது..

உண்மையில் நிலச் சீர்திருத்தமே இல்லாது போனதால், ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும், குறிப்பாக சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. வசதியான வாழ்க்கைத்தரம் பெற வைப்போம் எனக் கராச்சி காங்கிரஸ் அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிலச்சீர்திருத்தம் முழுமையடையும் வரைஅது நிறைவேறாமலேயே இருக்கும். சுமார் 65 சத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் கிராமப் புறங்களில் மிக முக்கியமான நிலம் இல்லாவிடில், அவர்களால் வாழ இயலாது. கராச்சித் தீர்மானம் உறுதி யளித்ததுபோல  விவசாயக் கூலிகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க முடியவில்லை என்றால் அதற்கும் நிலச் சீர்திருத்தம் அமலாகாததுதான். சிந்தித்துப் பார்த்தால் சமூகத்தைப் பிடித்துள்ள முப்பெரும் வியாதிகளான, குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுத்தல், விபச்சாரம் இவை யனைத்தும் நிலச்சீர்திருத்தம் நடக்காததால் ஏற்பட்டவைதான்.

விவசாயிகள் சங்கமும், இடதுசாரிகளும் நிலச்சீர்திருத்தம் சிறிய அளவிலாவது நடக்க மிக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீதித்துறை செல்லாததாக ஆக்கிவிடாது தடுக்கவும் போராட வேண்டியிருந்தது.

ஆனால் இன்று பல மாநிலங்களில் பெயரளவிற்கு நடந்த நிலச்சீர்திருத்தங்களையும் மாற்றிவிட இன்று அரசுகள் முயற்சித்து வருவதுதான் மிகக் கொடுமை. இம்முறை நிலப்பிரபுக்கள் தனியாக இல்லை மிகப்பெரிய தொழிலகங்களும், அன்னிய மூலதனங்களும் இவ்விஷயத்தில் அவர்களுக்கு துணை சேர்ந்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் நிலை

மறு விநியோகம் என்ற அம்சம் நிலச்சீர்திருத்தத்தில் இல்லாததால் மற்றொரு எதிர் வினையும் ஏற்பட்டுள்ளது. ஜாதியின் பெயரால் சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் தீங்கு நேராது என்று கராச்சித் தீர்மானம் கூறுகிறது. கிணறுகள், குளங்கள், பொது இடங்களிலும், எல்லாக் குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் கூறுகிறது. இருப்பினும் இன்று நாம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (SC/ST)) என்று குறிப்பிடும் மக்களைப் பற்றி தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக காந்தி, அம்பேத்கர் ஒப்பந்தப்படி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நாட்டில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் சம உரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் காங்கிரஸ் அளித்தது.

தலித் மக்களின் சமூக ஒடுக்கு முறையின் பொருளாதாரப் பரிணாமத்தை காங்கிரசோ அல்லது டாக்டர் அம்பேத்கரோ கவனிக்கத் தவறியது என்பது வேறு விஷயம். அக்காலத்தில் இப்பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் தான் எழுப்பி வந்தனர். 1930 ல் செயலுக்கான மேடையில் (Platform Of  Action) இவ்விஷயம் முக்கியமான பிரச்சனையாக இடம் பெற்றது. எனினும் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு விரைவில் கையெழுத்திட்ட பின் நடந்த தலித் மக்களின் பேரணியில் அம்பேத்கர் இது பற்றிப் பேசினார். இன்று தலித்துகள் சிவில், அரசியல் சமத்துவமுள்ள ஒரு யுகத்தில் நுழைகிறார்கள் – எனினும் அங்கு சமூகப், பொருளாதார சமத்துவம் இருக்காது என்றார் அவர். இது ஒரு முக்கியமான கூற்று. தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுகள் தொடர்ந்தாலும், அவை பெரும்பாலான இம்மக்களுக்கு குறிப்பிட்ட அளவு உதவவில்லை என்பது யதார்த்தம். ஜாதி – வர்க்க ஒருங்கிணைப்பு (Cast – Class Comondance) காரணமாக, பொருளாதார ஏணியின் அடித்தளத்தில் இருப்பவர்கள் சமூகப் படிகளிலும், அடித்தளத்தில் இருப்பதே இதன் காரணம். இன்னும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் தலித்துக்கள் என்பதால் நிலச் சீர்திருத்தம் இவர்களுக்கு சொத்தைத் தருவதோடு, சமூக அந்தஸ்த்தையும் தரும். மேற்கு வங்கம் இதைத்தான் பளிச்சென்று காட்டுகிறது. ஆனால், இதுதான் நாடு முழுவதும் கவனமாகத் தவிர்க்கப்பட்டது.

இன்னும் சில உதாரணங்கள்

வாழ்நிலைக் கேற்ற கூலி, நல்ல பணிச் சூழல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தத் தடை, கிராமப்புற கடன்கள் ஒழிப்பு, கந்து வட்டி ஒழிப்பு (இதனால் நம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்) போன்ற பல்வேறு விஷயங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி இங்கு பேசாமல் இருப்பதே நல்லது. ஆளும் வர்க்கம் சாமர்த்தியமாக இவற்றில் பலவற்றை அரசின் கொள்கைகளை நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைத்தது. இதனால், இவை செயல்படுத்தப்பட வேண்டிய வரையறைக்குள் வராமல், உன்னதமான விருப்பமாகவே நின்றுவிட்டன.

இவை எவ்வாறெல்லாம் கேலிக் கூத்தாகின என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசு அனைவருக்கும் கட்டாய அடிப்படைக் கல்வி வழங்கும் என்று கராச்சி தீர்மானம் கூறியது. சுதந்திரத்திற்குப் பின் அடிப்படைக் கல்வி (Primary) என்பது ஆரம்பக்கல்வி (Elementary) என்று மாறியது. புதிய அரசியலமைப்புச் சட்டமோ 10 ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி அளிக்க அரசு முயற்சி செய்யும் (trike to Provide) என்றது. கராச்சித் தீர்மானத்தில் இது அடிப்படை உரிமைகளும், கடமைகளும் என்ற தலைப்பில் 1 (XI) பகுதியாக இடம் பெற்றதும், சுதந்திரத்திற்குப் பின் இது நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைக்கப்பட்டதும் கவனிக்கத் தக்கது.

56 ஆண்டுகளாகியும், நடைமுறைப்படுத்தாத இவ்விஷயத்தை 10 ஆண்டுகளில் செய்வதாகக் கூறிய விந்தையை என்ன வென்று சொல்வது?

பொது சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூக நலத் திட்டங் களுக்கான செலவுகளை இந்நாட்டின் எதிர்கால வளத்திற்கான முதலீடு எனக்கருதாமல், வீண் செலவு என்றே இந்திய ஆளும் வர்க்கங்கள் நினைத்து வந்துள்ளன. கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகள் வந்த பின், இரண்டாண்டுகள் கழித்து, 1968 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதத்தை செலவிட மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அதன் பின் 36 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாய் வந்த பல அரசாங்கங்கள் இந்தப் பரிந்துரையை அமலாக்கவில்லை. இடதுசாரிகளில் கடும் நிர்பந்தம் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்கு இத்தொகை ஒதுக்குவதாக ஒத்துக் கொண்டுள்ளது.

மதச்சார்பின்மை, கூட்டாட்சி

கராச்சித் தீர்மானம் அதிக முக்கியத்துவம் தந்த மற்றொரு விஷயம் மதச்சார்பற்ற அரசியல். அரசு எந்த மதத்தையும் சாராமல் நடுநிலை வகிக்கும் என அது கூறியது. ஆனால், இன்று ஆளும் அரசியல் வாதிகள் மதவாதப் பிரச்சனைகள் எழுந்தால் நடுங்குகிறார்கள். மதவாத சக்திகளோடு சமாதானமாகப் போகிறார்கள். இல்லை யெனில் சரணாகதியடைகிறார்கள். அவர்களில் பலரும் மதச்சார்பின் மையை எந்த மதத்தையும் சாராது நடுநிலை வகித்தல் என்ற பொருளில் பார்க்காது, எல்லா மதவாத சக்திகளுடனும் ரகசியத் தொடர்பு வைத்திருத்தல் என்ற பொருளில் பார்க்கின்றனர். எனினும், சாதாரண மக்கள் மதச்சார்பின்மையை சரியான வழியில் புரிந்து கொண்டுள்ளனர். இன்றும் நமது மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றால், அது இந்நாடு எதிர் நோக்கும் சவால்களை உணர்ந்து, தேச ஒற்றுமையைக் காப்பதன் அவசியத்தை உணர்த்த, உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாத, படிப்பறிவில்லாத நமது பாமர மக்களால் தான்.

நமது நாட்டின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமான மற்றொரு அம்சமான கூட்டாட்சி பற்றி கராச்சி ஆவணம் எதுவும் கூறவில்லை. இரு காரணங்களால் இது நமக்கு வியப்பளிக்கிறது. முதலாவதாக, இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான், மோதிலால் நேரு கமிட்டி எதிர்கால இந்தியாவில் கூட்டாட்சி முறைதான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது. கராச்சி மாநாடு காங்கிரசை இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டின் விவாதப் பொருள்களில் இந்தியாவில் கூட்டாட்சி முறையின் அவசியம், அதற்குத் தேவையான அம்சங்கள் ஆகியன இடம் பெற்றது இரண்டாவது காரணம். 1930 ல் காங்கிரஸ் முதல் வட்ட மேஜை மாநாட்டைப் புறக்கணித்தது. ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. பிறகு காந்தி – இர்வின் ஒப்பந்தம் அடுத்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியது. அதை கராச்சி மாநாடும் அனுமதித்தது எல்லாம் நாம் அறிந்தவையே. ஆனாலும், இந்திய அரசுச்சட்டம் 1935ன் கூட்டாட்சி பற்றிய பகுதியை, சரியில்லை எனக் கூறி காங்கிரஸ் நிராகரித்தது. இச்சட்டப்படி 1937 ல் நடந்த மாகாணத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது.

இது இவ்வாறு இருப்பினும், கூட்டாட்சித் தத்துவத்தை 1921 வாக்கிலேயே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்போதே அது நிர்வாகக் காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த மாகாணங்கள், ராஜதானிகளை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இதற்கு மாறாக, காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் தனது கிளைகளை மொழிவாரியாகப் பிரித்தது. 1928 ல் நேரு தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சிந்தனைகள் தெளிவாக இடம் பெற்றன. சுதந்திரத்திற்குப் பின், மொழிவழி மாநிலங்கள் அமைய மக்கள் கடுமையாகப் போராடி, பல தியாகங்கள் செய்ததும், பெரும்பாலும் இப்போராட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடந்ததும் வேறு விஷயம்.

இன்று இந்திய அரசியலின் இரு அடிப்படைத் தன்மைகளான மதச்சார்பின்மையும், கூட்டாட்சித் தத்துவமும், மதவாத சக்தி களாலும், அவர்களது கூட்டாளிகளாலும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இன்று இவற்றைக் காப்பது மட்டுமின்றி, இவற்றை வலுப்படுத்துவதும் தேவையாக உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் உணர்வுகளைப் பிரதி பலிக்கும் வண்ணம், சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளது. அவை இன்றைய சூழலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, தங்கள் நலன்களைக் காக்க விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு எதிராக இன்று அவ்வுரிமையைப் போராடிப் பெற்றவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மாற்ற பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று வரை ராணுவச் செலவுகள், இதர செலவினங்களைக் குறைத்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியைத் திருப்பிவிட அரசுக்கு இயலவில்லை. கனிம வளம், ரயில், கப்பல், தரைப்போக்குவரத்து, கேந்திரமான தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுடைமையாக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது வாக்குறுதி.

ஆனால், இன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற் சாலைகள், சேவைத்துறைகளை தங்கத்தாம்பளத்தில் வைத்து தனியார் பூர்ஷ்வா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதைப் பார்க்கிறோம். ஜவுளி மற்றும் உள்நாட்டுத் தொழில்களை வெளி நாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாப்போம் என்பது பழைய உறுதி மொழி. இன்று யதார்த்தத்தில் நம் உள்நாட்டுத் தொழில் களெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இரையாகின்றன. சம ஆடுதளம் கூட நம் தொழில்களுக்கு இல்லை. பணம் மற்றும் அந்நியச் செலவாணி பற்றிக் குறிப்பிடும் போது, நாட்டின் நலன் கருதி அவை கட்டுப் படுத்தப்படும் என்றார்கள். நடைமுறையில் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளை ஏற்று ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ பணத்தின் மதிப்பு இறக்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது, போராடிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் அக்கறை காட்ட வில்லை. நம் மக்களின் மகத்தான போராட்டங்களின் விளைவாக இங்கு ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டுள்ளது. எனினும், ஏகாதிபத்திய பூர்ஷ்வா சக்திகள் நமது குடியரசின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, மக்களை என்றும் அடிமைத்தளையில் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றன. அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் பதிலளிக்க ஒரே மொழிதான் உள்ளது – போராட்ட மொழி. மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் காகித மலர்களாக இல்லாது உண்மையாக மாற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்ததைப்போல, மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை விரிவு படுத்தி, வலுப்படுத்தி, நம் குடியரசைக் காக்க வேண்டும். இந்தக் குடியரசு நன்னாளில், நமது இத்தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொண்டு, அதன் வெற்றி நோக்கி முன்னேறுவோம்!

இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும் …

தமிழில் : ராமச்சந்திர வைத்தியநாத்

இந்திய நாடு கூட்டாட்சி கோட்பாட்டின் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனத்தையும், அரசியல் அமைப்பு முறையையும் கொண்டுள்ளது.  அரசியல்  சட்டம் மத்திய அரசுக்கு உயர் அதிகாரங்களை வழங்கியுள்ளது.  இது நிர்வாக அதிகாரத் தையும், நிதி அதிகாரத்தையும் குவித்துள்ளது.  அதே நேரத்தில் வரையறுக்கப்பட்ட விதத்தில் மத்திய மாநில அரசுகளுக்குகிடையில் அதிகாரங்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்தலும் இருந்து வருகிறது.  விடுதலை பெறும் தறுவாயில் நிகழ்ந்த தேசப் பிரிவினையின் அனுபவங்கள், அரசியல்  சட்டத்தை         உருவாக் கியவர்களை பாதிக்கச் செய்தது.  இதுவே கூட்டாட்சி கோட் பாட்டிற்கு எதிராக இருந்து வரும் அரசியல் சட்டத்தில் பல்வேறு அம்சங்களை இடம் பெறச் செய்தது.
பாராளுமன்றத்தின் மூலம் மாநிலங்களை முறைப்படுத்திடும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.  மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால், மாநில சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். மாநிலங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை தேசிய நலன் கருதி பாராளுமன்றத்தால் நிராகரிக்க முடியும்.   மாநில அரசுகளை உருவாக்குவதில் ஆளுநர்கள் பங்காற்ற முடியும். தவிர அரசியல் சட்டப் பிரிவு 356ன் படி மாநில அரசை பதவி  நீக்கம் செய்யக்கூடிய அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. வரையறை செய்யப்படாத இதர அதிகாரங்களையும் மத்திய அரசு தன்னகத்தே கொண்டுள்ளது. பெரும்பாலான வரி விதிப்பு அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.  மத்திய அரசையே சார்ந்திருக்கக்கூடிய இத்தகைய அம்சங்களோடு, மத்திய அரசு மாநில அரசுகள் ஆகியவற்றுக் கிடையில் பல்வேறு அம்சங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ள தோடு, பொதுப்பட்டியலொன்றும் இருந்து வருகிறது.  மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவு பற்றிய நீதி மன்ற பரிசீலனை என்பது கூட்டாட்சி அமைப்பு முறையில் உள்ளதைப் போன்று இருந்து வருகிறது. சீர்தூக்கிப் பார்த்தால் இந்திய அரசியல் அமைப்பு கூட்டாட்சி குணாம்சங்களை ஒரு முகப்படுத்தும் கூறுகளை சுற்றி வளைத்து கட்டப்பட்டுள்ளன.
கூட்டாட்சி கோட்பாடு மற்றும் மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் ஆகியவற்றின் வரலாற்றில் மேலும், மேலும் கூட்டாட்சி கோட்பாட்டினை கொண்ட மத்திய – மாநில உறவுகளாக அமைத்திடும், அரசியல் இயக்கமும், அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் நிறைந்து உள்ளது. இத்தகைய செயல்பாடுகளும் கூட்டாட்சியை நோக்கிய மேலும் கூடுதலான   நடவடிக்கைகளும்  அரசியல் சட்டத்தில் பெரும் மாறுதலை      ஏற்படுத்தவில்லை யென்றாலும், இவை முழுக்க முழுக்க பயனற்றது என்று கூறிவிட முடியாது.  கூட்டாட்சி அமைப்பு முறைக்கான நீண்ட நெடிய இயக்கத்தினை அறிய பயனுள்ளதாகவே இருக்கும். அறுபதுகளின் இறுதி வரையிலான முதல் கட்டத்தில் தேசத்தை நிர்மாணிப்பதும் வளர்ச்சியும்தான் ஆட்சியாளர்களின் பிரதான பணியாக இருந்தது.   ஜம்மு காஷ்மீர், வடகிழக்கில் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்னைகள் இருந்து வந்தது.  தேசிய ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிரான சவால்களாகவே இப்பிரச்னைகள் கருதப்பட்டது.  இதே காலத்தில்தான் மத்தியில் அதிகார குவிப்பை நோக்கிய முயற்சிகள் துவங்கியது.  இதே கால கட்டத்தில் மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது என்பதும் இதன் ஒத்திசைவாய் இருந்தது.
ஆயின் இந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க மத்தியத்துவப் போக்கு மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை.  மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான இயக்கமானது, சுதந்திரத்திற்குப் பிந்திய ஜனநாயக இயக்கங்களில் முக்கியமானதொன்றாகும். ஐம்பதுகளில் இவ்வியக்கம் வீறு கொண்டது.  இது 1956ல் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிட வழி வகுத்தது.  ஆளும்   காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.  பின்னர் வெகு ஜன இயக்கங்களின் எதிர்ப்பினால் இக்கோரிக்கையை ஏற்றது. பின்னாளில் மேலும் கூடுதல் அதிகாரங்களுக்காக மாநிலங்கள் கோரிக்கை விடுப்பதற்கு இது அடித்தளமாய் அமைந்தது.  1967ம் ஆண்டு பொதுத் தேர்தலுடன்  இரண்டாவது கட்டம் துவங்கியது. காங்கிரஸ் கட்சி முதன் முறையாக ஒன்பது மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் உருவாயின.  மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சார்புடைய ஐக்கிய முன்னணி   அரசுகள் பதவியேற்றதும் இதில் உள்ளடங்கும்.  மத்திய மாநில உறவுகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது. இக்கோரிக்கைகளுக்கு அரசியல் ரீதியில் பதிலளிக்கும் முகமாய் திருமதி இந்திரா காந்தி தலைமையிலான மத்தியில் உள்ள ஆளும் கட்சி, இழந்த தனது அரசியல் தளத்தை மீட்கும் வகையில் சூதான செயல்முறைகளை மேற்கொண்டது. தவிர மத்தியில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேலும் கூடுதல் அதிகாரங்களை குவித்திடும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றி வந்தது.
எனவே எழுபதுகளிலும் எண்பதுகளிலும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக் கோரி நடைபெற்ற மோதல்களை காண முடிந்தது. ஒரு புறம் காங்கிரஸ் கட்சியும், மற்றொரு புறம் இதர பிராந்திய கட்சிகளும் இடது சாரி கட்சிகளும் இந்த போராட்டத்தில் நின்றது.  1969ல் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழுவிலிருந்து இது தொடங்கியது.  இதன் தொடர்ச்சியாக 1977ல் மேற்கு வங்கத்தின் ஆளும் இடதுசாரி அரசு மத்திய  மாநில உறவுகள் குறித்த அறிக்கையொன்றை தயாரித்தது. 1983ல் ஸ்ரீநகரில் மத்திய மாநில உறவுகளை பரிசீலனை செய்திட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இது மத்திய மாநில உறவுகளை வரையறை செய்திட அடிப்படையாக அமைந்தது. மேலும் கூடுதலான அதிகாரங்களை கொண்ட கூட்டாட்சி அமைப்பு முறை பற்றி வரையறைகளும் தயாரிக்கப்பட்டன.  இவற்றை ஏற்கும் வகையில் மத்திய அரசு 1983ல் மத்திய மாநில உறவுகளுக்காக சர்க்காரியா தலைமையிலான குழுவொன்றை அமைத்தது.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது ஜனநாயக அதிகாரப் பரவலுக்கு வகை செய்தது.  மத்தியில் அதிகாரத்தை குவித்திடும் செயல்முறைகள் இவற்றை பின்னுக்கு  தள்ள  முயற்சித்தது, அதிகாரப் பரவலையும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகார கோரிக்கையையும் எதிர்ப்பது என்பது வர்க்கத் தன்மை பொருந்தியதாகும். அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டு மையத்தில் இருந்து வரும் அரசின் அதிகாரத்தை குறைத்திடும் முயற்சியை இந்திய பெரும் முதலாளிகள் எதிர்த்து வந்தனர்.  ஒரே தன்மை வாய்ந்த சந்தையை உருவாக்கிடும் அவர்களது பேராசை மொழி வாரி மாநிலங்களுக்கான கோரிக்கையை   நிராகரித்திட வழி வகுத்தது. இதனால் இந்திய துண்டாடப்படும் என்று அவர்கள் கண்டனம் செய்தனர்.
மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்திட மத்திய அரசு தொடர்ச்சியாக அரசியல் சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தியது  என்பது கூட்டாட்சி கோட்பாட்டின் மீதான அரசியல் தாக்குதலை வெளிப்படுத்தியது.  இப்படி பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுகளில் பெரும்பாலானவை எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்கள் ஆகும். அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற பதவி என்ற பெயரால் மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவே மாறினர். மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முற்போக்கான சட்டங்களுக்கு பல ஆண்டுகள் வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மேற்கு வங்க சட்ட மன்றத்தில் நிலச் சீர்திருத்தம் பற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததை குறிப்பிட்டு சொல்ல முடியும். நிதியாதாரங்களை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்வது என்பது அரசியல் சட்ட உரிமையாகும்.  இதற்கு மாறாக மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்திருக்கச் செய்வதற்கும், கீழ் நிலையில் வைப்பதற்குமான செயல் முறையாக இது இருந்தது. எங்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்பொழுதெல்லாம் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள இனங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித் துள்ளது.  உள்நாட்டு அவசர நிலை இருந்து வந்த கட்டத்தில், அரசியல் சட்டத்தில் 42வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது இத்தகைய செயல்பாடுகள் உச்சநிலையை அடைந்தது.
மத்திய அரசு பேராதிக்கம் பெற்றதாய் ஏகபோக அதிகாரம் கொண்டதாய் இருந்து வந்தது.  இத்தகைய  அரசியல் அமைப்பு  முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை எதிர்ப்புகளை எதிர்கொண்டது. திமுக, அகாலிதளம் போன்ற பிராந்திய கட்சிகள் எழுச்சி பெற்றது இதன் துவக்கமாகும்.  இதன் தொடர்ச்சியாக பிராந்திய கட்சிகள் பல்கிப் பெருகின. இக்கட்சிகளின் பொருளாதாரம் வர்க்கத் தன்மை கொண்டிருந்ததோடு, இவை பிராந்திய பண்பாட்டியலை பிரதிபலிப்பதாயும் இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான மொழிவாரி தேசிய இனங்களில் இந்தி அல்லாத மொழிகளின் தேசிய இனங்களே பிராந்தியக் கட்சிகளை முதலில் உருவாக்கியது. அந்தந்த மொழியினரின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் வளர்ந்து வரும் வர்க்க நலன்களை   இந்த பிராந்திய கட்சிகள் வெளிப்படுத்தின.  தவிர இந்த கட்சிகள் மக்களின் மொழி பண்பாட்டு அபிலாஷைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டன. எண்பதுகளில் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி எழுச்சி பெற்றது இத்தகைய வளர்ச்சியின் குறியீடாகும்.
மத்தியில் அதிகார குவிப்பிற்கு ஆதரவான சக்திகளுக்கும் கூட்டாட்சிக்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையிலான போட்டியில் எத்தரப்பிற்கும் வெற்றி கிட்டவில்லை. அரசியல் சட்டம், நிதி அமைப்பு முறை, மத்தியத்துவம் ஆகிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லையென்றாலும், அரசியல் கட்சிகளின் முறை என்பது கூட்டாட்சி கோட்பாட்டில் உருவானது. எண்பதுகளின் இறுதியில் காங்கிரசின் ஒரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இது தீவிரத்தன்மை வாய்ந்த மத்தியத்துவத்தை நிறுத்தி வைக்கும் சூழலை உருவாக்கியது.
1989ல் முதன் முறையாக வி.பி.சிங் தலைமையிலான ஒரு தேசிய முன்னணி கூட்டு அரசு மத்தியில் இடம் பெற்றது. தெலுங்கு தேசம், திமுக, அசாம் கண பரிஷத் போன்ற முக்கியமான பிராந்திய கட்சிகள் இந்த முன்னணியில் அங்கம் வகித்தன.  குறுகிய காலமே பதவியில் இருந்தாலும் இந்த அரசு கூட்டாட்சி கோட்பாட்டினை வலுப்படுத்தும் வகையில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.  1990ல் மாநில அரசுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  இத்தகைய குழுவொன்றினை அமைத்திட அரசியல் சட்டத்தில் இருந்த ஷரத்துகள் மத்திய அரசால் முன்னர் பயன்படுத்தப் படவில்லை.  1996ல் ஐக்கிய முன்னணி அரசு உருவானதற்குப் பின் இதன் தொடர்ச்சியாக 1998, 1999ல் பாஜக தலைமையிலான அரசிலும், தற்போது காங்கிரஸ் கூட்டணி  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணி அரசிலும், பிராந்திய கட்சிகள் பங்கேற்றன.   மத்தியில் உள்ள கூட்டணி அரசுகளில்        பிராந்திய கட்சிகள் பங்கேற்பது என்பது இன்றைய தினம் வழக்கமா-   னதொன்றாக மாற்றம் கண்டது,  1989ல் உருவான தேசிய முன்னணி அரசையும், 1996 1998ல் இருந்து வந்த ஐக்கிய முன்னணி அரசையும், கூட்டாட்சி கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள இடது சாரிகள் ஆதரித்தனர்.
மத்தியில் கூட்டணி அரசுகளில் பிராந்திய கட்சிகள் பங்கேற்பது மத்திய அரசின் மத்தியத்துவ முயற்சிகளை தடை செய்வதற்கு வகை செய்தது.  கூட்டணி அரசுகளின் அரசியல் ரீதியிலான விட்டுக் கொடுக்கும் அணுகு முறை, மாநிலங்களுக்கு எதிரான மோதல் சாத்தியப்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது.  கூட்டாட்சி கோட்பாடுகள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாத பாஜக கூட மாநில கட்சிகளின் கவலை கூறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தியது.
மத்தியில் உள்ள ஆளும் கட்சி அரசியல் சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்துவது என்பது கூட்டாட்சிக்கு எதிரான மிகவும் வெறுக்கத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.  இச்சட்டப் பிரிவினை நீக்க கோருவது அல்லது திருத்தங்களை மேற்கோள்வதன்  மூலம் இச்சட்டப் பிரிவினை தன்னிச்சையாக பயன்படுத்துவதை தடுப்பது என்பது மத்திய மாநில உறவுகளில் மேலும் கூடுதலான சமத்துவத்திற்காக வாதிடக்கூடிய   சக்திகளின் முதன்மையான பணியாகும்.  1994ல் கர்நாடக மாநிலத்தில் திரு பொம்மை தலைமையிலான அரசு நீக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், மத்திய அரசு இத்தகைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்காற்றியது.  பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது தன்னிச்சையானது என்றும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.  மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மாநில அரசினை பதவி நீக்கம் செய்யும் குடியரசுத் தலைவரின் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வரை, மாநில சட்ட மன்றத்தை கலைத்திடும் முடிவை அமல்படுத்தலாகாது என்று உச்ச நீதி மன்றம் நிர்ணயம் செய்தது. இது மாநில அரசுகளுக்கு பாதுகாப்பளிப்பதாக அமைந்தது,  அது வரை பதவி நீக்கம் செய்வது என்பது அமல்படுத்தப்படாமல் அங்கீகாரமற்ற நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும் இது தவிர எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பதை குடியரசுத் தலைவர் திட்டவட்டமாக விளக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.  மேலும் இதை சட்ட ரீதியிலான பரிசீலனைக்கும் உட்படுத்தியது.  கூட்டாட்சியும் ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைந்தது என்றும்,  மற்றொன்றுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஒன்றை மீறலாகாது என்றும் அரசியல் சட்டத்தின் பின்னணியில் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
ஒரு கட்சி ஆதிக்கத்தின் முடிவுடன் சம்பந்தப்பட்ட அரசியல் மாற்றங்களும், பிராந்திய கட்சிகளின் வளர்ச்சியும், மேலும் கூடுதலான அதிகாரங்களை கொண்ட கூட்டாட்சி முறைக்காக இடதுசாரி சக்திகளின் உறுதிப்பாடும் கூட்டாட்சி அமைப்பு  முறையின் சாதகமான அம்சங்களாகும்.  இவை இருப்பினும் இது  நிகழவில்லை என்றே கூற முடியும்.  இரு எதிரெதிரான அம்சங்களே இதன் பிரதான காரணிகளாகும்.
முதல் காரணம் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளின் கண்ணோட்டம்.  பெரும் முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றிணைந்த இந்திய ஆளும் வர்க்கம், வலுவான மத்திய அரசு என்பதற்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.  இத்தகைய பார்வையையே இவ்விரு கட்சிகளும் கொண்டுள்ளன. காங்கிரசைப் பொறுத்த மட்டில், மத்தியத்துவமற்ற ஜனநாயகப் பகிர்வு என்பது பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என்ற மட்டில்தான் உள்ளது. மாநிலங்களின் உரிமைகளை அது புறக்கணிக்கிறது.  ஒன்றுபட்ட தேசத்தை நிர்மாணம் செய்யும் திட்டத்திலிருந்து இது மாறுபட்டதாகும் என்று அக்கட்சி கருதுகிறது.  தத்துவார்த்த ரீதியில் “அகண்ட பாரதம்” என்ற கோட்பாட்டை பாஜக பின்பற்றி வருகிறது.  “பேரதிகாரம்  கொண்ட தேசீயம்” என்ற கருத்தை ஏற்காத வலுவான மாநிலங்களுக்கும் அல்லது பிராந்திய சக்திகளுக்கும் அது எதிரானது.  இதனால்தான் மொழிவாரி மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு பாஜக எதிராக உள்ளது. இதற்கு பதிலாக நிர்வாக அடிப்படையில் சிறு மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அக்கட்சி வாதிடுகிறது. இத்தகைய சின்னஞ்சிறு மாநிலங்கள் பலவீனமானதாக மத்திய அரசை சார்ந்ததாகவே இருக்கும்.
இடதுசாரிகள்,  ஜனநாயக சக்திகள், பிராந்திய கட்சிகள் ஆகியவை முன் வைக்கக்கூடிய மூன்றாவது மாற்றுக் கருத்து இன்னமும் ஒரு திட்ட வட்டமானதாக உருப்பெறவில்லை.  அவர்கள் மத்திய மாநில உறவுகளை சீர் செய்திட வேண்டும் என்பதோடு கூட்டாட்சி அமைப்புக்காகவும் உறுதியாக வாதிட்டு வருபவர்களாகும். மத்தியில் இச்சக்திகளின் கை ஓங்குகையில் இத்திசை வழியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் இரண்டாவது எதிரான அம்சமாகும். தாராளவாதிகளும், அவர்களை முடுக்கி விடக்கூடிய பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருக்கக்கூடியவர்களும் ஒரு விதமான சந்தை கூட்டாட்சிக்கு முயற்சித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் கட்டு திட்டங்கள் நீக்கப்பட்ட நிலையில், ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார செயல்பாடுகளிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிக்கொள்கிறது. மாநிலங்கள் அந்நிய நேரடி மூலதனத்தை ஈர்க்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக வரம்புகளுக்கிடையிலான இத்தகைய போட்டி, கூட்டாட்சி உணர்வுக்கு பாதகமானதாகும். மாநிலங்களின் நிதியாதாரங்களை பலவீனப்படுத்தக்கூடிய வரிச் சலுகைகள், வரி த் தள்ளுபடி போன்றவற்றை வழங்குவதில் இது போட்டிக்கு வழி வகுக்கும். மத்திய அரசும் தன் பங்குக்கு நவீன தாராளமயக் கொள்கைகளை மத்திய மாநில உறவுகளில் திணிக்க முயலும். மத்திய அரசின் நிதிப் பிரச்னைகளை மாநிலத்திற்கு மாற்றிடவும், மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய கடன்களின் வட்டி விகிதத்தை உயர்த்திடவும் இக்கொள்கைகள் வகை செய்யும். மேலும் மாநிலங்கள் சிக்கியுள்ள கடன் வலையை காரணம் காட்டி, மத்திய அரசு அவற்றின் மீது நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக திணிக்க முயற்சிக்கும்.
மாநிலங்களில் உள்ள வலுவான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியாளர்களாக  மாறிய நிலையில், மாநில அரசுகளின் பேரம் பேசும் திறனை பலவீனப்படுத்தி, அவற்றின் நிதி நிலைமையை தாராளமயக் கொள்கைகள் மோசமடையச் செய்வது என்பது முரண்பட்டதாகும். தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது, மத்திய மாநில நிர்வாகத்திலும், மாநிலங்களுக்கிடையேயும் செயல்பட்டு வரக்கூடிய தேசிய வளர்ச்சி சபை, மாநிலங்களுக்கான குழு, திட்டக்குழு போன்ற அனைத்து அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளது. நிதிக்குழு என்பது நவீன தாராளமயக் கொள்கைகளை திணிக்கக்கூடிய ஒரு கருவியாகவே மாறிவிட்டது. முதலீடுகளையும், மூலதன நிதியாதாரங்களையும் பெறுவது மாநிலங்களின் உரிமை என்பதற்கு பதிலாக இவற்றுகாக மற்ற மாநிலங்களோடு போட்டியிடும்   நிலைக்கு மாறிவிட்டது.
1990களில் மாநிலங்களுக்குள்யேயும் மாநிலங்களுக்கிடையேயும் பிராந்திய வேறுபாடுகள் விரிவடைந்து வருவதை காண முடிந்தது. தாராளமயக் கொள்கைகளினால் மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்கள் பலமடைந்தது.  இம்மாநிலங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பங்கினையும், வங்கிக் கடன்களையும் பெற்றது.
1991 ஆகஸ்ட் முதல் 1998 டிசம்பர் வரையிலான காலத்தில் ஐந்து மாநிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கோரிக்கைகளில் 51 விழுக்காட்டை பெற்றன.  இந்தி பேசக்கூடிய அனைத்து மாநிலங்களின் அந்நிய நேரடி முதலீட்டுக் கோரிக்கைகளின் மொத்த தொகை என்பது, தமிழ் நாடு மட்டும் பெற்றிட்ட முதலீட்டுக்கு ஈடாக இருந்தது, 2002ம் ஆண்டில் வங்கிகளின் வைப்பு த் தொகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்கு ஐந்தில் ஒன்றாகும். ஆயின் அம்மாநிலம் பெற்றிட்ட ஒட்டு மொத்த கடன் மூன்றில் ஒரு பங்காகும்.  மிகப் பெரும் மாநிலங்களான உத்தர பிரதேசமும், பீகாரும் சமூக பொருளாதார அளவீடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.
இன்றைய தினம் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி மட்டும் விரிவடைந்து வரவில்லை. மாநிலங்களுக்குள் பிராந்திய ஏற்றத் தாழ்வும் வளர்ந்து வருகிறது. பின்தங்கிய பகுதிகளை இணைத்து, தனி மாநிலங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இது உசுப்பி விடுகிறது.  ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங் கானாவும், மகாராஷ்டிரத்திலிருந்து விதர்பாவும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பின் தங்கிய நிலை என்ற வாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. கூட்டாட்சி அமைப்பிற்கு, அறுபதுகளில் உருவான மொழிவாரி மாநிலங்களை துண்டாடுவது பலம் சேர்க்காது. மொழி வழி மாநிலங்களோ மத்திய அரசுடன் பேரம் பேசி முடித்திட அனுகூலமாக இருக்கும்.
மத்தியத்துவத்தை நோக்கிய தீவிர செயல்பாடுகள் இருந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகமும் வெகு ஜன இயக்கங்களும் அரசியல் சமூகம் பண்பாட்டியல் ஆகியவற்றின் பன்முக கூறுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று மத்திய அரசையும் அரசியல் அமைப்பு முறையையும் நிர்ப்பந்தித்து வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தின் தேசிய இனத்தவர்,  பல்வேறு மொழிகளை பேசுவோர் ஆகியோரின் விருப்புகளுக்கு மத்திய அரசு எழுபதுகளில் செவி சாய்த்தது.  அதன் பேரில் மத்திய அரசு ஏழு மாநிலங்களை உருவாக்கியது. பிராந்திய கட்சிகள், இடது சாரி கட்சிகள் ஆகியவற்றின் நிர்ப்பந்தமும் இதற்கு ஒரு காரணமாகும்.  5வது 6வது அட்டவணை மூலம் ஒரு சில மலையின மக்களுக்கு அரசியல் சட்டம் பிராந்திய சுயாட்சி வழங்கியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்தினை வழங்கியுள்ளது. நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களின் வழக்கமான சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஒரு சில மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் மேம்பாட்டு வாரியங்களை   உருவாக்கிடவும், விசேஷ பிரிவுகளை அரசியல் சட்டப் பிரிவு 371 கொண்டுள்ளது.
பன்மொழிகள் பேசி வரக்கூடிய ஒரு நாட்டில் மொழிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, அந்தஸ்தினை வழங்குவது என்பது கூட்டாட்சி கோட்பாட்டின் முக்கியமானதொரு அம்சமாகும். அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணை 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது.  சமீபத்தில் போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகளும் இப்பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
மக்களின் அரசியல் ஜனநாயக உறுதிப்பாடுதான் அரசியல் சட்டத்திற்கு வடிவம் கொடுத்தது.  அல்லது அரசியல் சட்டத்தில் வெளிப்பட்டது. இருப்பினும் இச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஒரு எல்லைக்குள் இருந்து வருகிறது.  இவை விரிவடைந்திட வேண்டும். அரசு கட்டமைப்பில் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி கோட்பாட்டின் கூறுகள், மாநிலங்களை பகுப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. தனி மாநிலங்களை உருவாக்கியதன் மூலம் நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்களை எதிர் கொள்ள முடிந்தது.  சமூக அடக்குமுறை, பண்பாட்டியல் தாக்குதல், பொருளாதார ஒடுக்கு முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுவரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தனி அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கான கோரிக்கையாக மாற்றம் பெறுகிறது. அசாமில் போடோ மக்களைப் பொறுத்த மட்டில், சுயாட்சி அதிகாரம் கொண்ட போடோ ஆட்சி மன்ற குழுவை நிறுவுவது என்ற உடன் பாட்டின் மூலம் தீர்வு காணப்பட்டது.  மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலை வாழ் மக்களைப் பொறுத்தமட்டில், கோர்க்கர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாவட்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.
வரம்புகளைக் கொண்டதாக இருப்பினும், நீக்குப் போக்கான கூட்டாட்சி கோட்பாட்டினை அதிருப்தியுடன் ஏற்றுக் கொண்டதன் மூலம் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. தன்னாட்சி நிர்வாக சபைகள் நிறுவப்பட்டது.  வேறு சில பகுதிகளுக்கு விசேஷ அந்தஸ்து வழங்கப்பட்டது.  இதனால் தேசிய இனப் பிரச்னை, பிராந்தியப் பிரச்னை, மொழிப் பிரச்னை போன்றவற்றை தீர்க்க இந்திய அரசியல் அமைப்பு முனைப்பு காட்டியது.
தேசிய இறையாண்மையின் மீது தொடர்ச்சியான தாக்குதல் இருந்து வரக்கூடிய இடங்களில் எல்லாம், தாராளமயமாக்கல் தீவிரமடைந்து வருகிறது. முதலாளித்துவ உலகமயம், ஏகாதிபத்தியத்தின் பேரதிகாரம் ஆகிய இரு செயல்முறைகளும் புதிய கோட்பாட்டிற்கு வழி வகுக்கிறது. சந்தைக்குள் நுழைவது, தேசிய சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை பாதுகாப்பது என்ற கோரிக்கைளின் பேரில் இது தேசிய இறையாண்மையை புறந்தள்ளுகிறது.  இக்கோரிக்கைகளை ஏற்காத பல்வேறு இனங்களைக் கொண்ட மிகப் பெரும் மாநிலங்கள், அம்மாநிலங் களையே சிதைக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  மூலதனத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் வகையில், தேசிய இனங்களையும் மத உணர்வுகளையும் பயன்படுத்த ஏகாதிபத்தியம் முனைப்பு கொள்கிறது.  சமீப காலங்களில் மிகப் பெரும் கூட்டாட்சி அமைப்பாக விளங்கிய யூகோஸ்லாவியா தேசிய இனப் பிரச்னையால் உடைந்து நொறுங்கியது. ஏகாதிபத்தியம், நிதி மூலதனம் ஆகியவற்றின் முழுமையான ஆதரவின்பேரில் இது நிகழ்ந்தது.  இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுபட்ட பிரிவினருடன் செயல்பாடுகளை மேற்கொள்வது என்பது சுலபமாகவே இருக்கும் என்பதை சர்வதேச நிதி மூலதனம் அறிந்து வைத்துள்ளது.  இன, மொழி சிறுபான்மையோரை உள்ளடக்கிய பல்வேறு இனங்களைக் கொண்ட மிகப் பெரும் மாநிலங்கள் மட்டுமின்றி, சிறிய மாநிலங்களும் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
மத்தியத்துவமற்ற ஜனநாயக பரவல் அடிப்படையில் கூட்டாட்சி அமைப்பு முறை செயல்படுவது, ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் வழிமுறைகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது ஒரு புறம் இருப்பினும், மறு புறம் அதற்காக இந்த அமைப்பு முறையே பொருத்தமற்றது என்று வாதிடுவதும் இருந்து வருகிறது. இது தவறானதாகும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் பல்வேறு மொழிகளை பேசக் கூடிய தேசிய இனங்களின் உணர்வோட்டம் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய மாநிலங்களிலும், உள்ளூர் அளவிலான ஜனநாயக கட்டமைப்பு மேம்பட்டு இருக்கக்கூடிய மாநிலங்களிலும் தாராளமயத் தாக்குதல்களையும் ஏகாதிபத்திய உலக மயமாக்கலையும் தடுத்து நிறுத்துவதற்கான கிளர்ச்சிகள் உருப் பெற்று வருகிறது.  உலக வங்கி தீர்மானிக்கக்கூடிய நிதிக் கட்டமைப்பில் சீரமைப்பினை மேற்கொள்ளக்கூடிய கொள்கைகளை ஆந்திரம் பின்பற்றியது.  அங்கே கடுமையான எதிர்ப்பியக்கம் வலுப்பெற்றது.  தாராளமயமாக்கலின் அடையாளமாக திகழ்ந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு தேர்தல் அரசியல் ரீதியிலான தண்டணை கிடைத்திட வழி வகுத்தது. இக்கொள்கைகளுக்கு மாற்றானவைகளின் வாய்ப்புகள் குறிப்பிட்ட எல்லைகளை கொண்டுள்ளது.  இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் கருத் தோட்டத்தை ஏற்காத கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய மாநிலங்களில், மாற்றுக் கொள்கைகளை முயற்சிக்கலாம்.
இடதுசாரிகளின் கண்ணோட்டத்தில் மொழிவாரி மாநிலங்களுக் கான கிளர்ச்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சக்தியாக திகழ்ந்தது.  இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய ச் சூழலுக்கு பொருத்தமான கூட்டாட்சி அமைப்பு முறைக்கான முழுமையான திட்டத்தை இடது சாரிகள் வரையறை செய்துள்ளனர். விரிவான வித்தியாசமான பல்வேறுபட்ட தன்மைகளை கொண்டதாக திகழக்கூடியதன் அடிப்படையில், இந்த தேசத்திற்கு வலுவாக செயல்படக்கூடிய ஒரு மைய அரசு தேவையாகும். இந்நாட்டில் 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும்     அடங்கியுள்ளன. பாதுகாப்பு, வெளிவிவகாரம், பொதுவான நாணயம் ஆகிய பொறுப்புகளுடன் மிகக் குறைந்த அளவிலான செயல்பாடுகளை உடைய ஒரு மத்திய அரசினை கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. பொருளாதார ஒருங்கிணைப்பு, ஆதாரங்களை சரியான முறையில் பகிர்வதை உறுதி செய்வது, சிறு பான்மையினரின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வது எல்லை பகுதிகளின் விசேஷ தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றிலும் மத்திய அரசு முக்கியமான பங்கினை கொண்டுள்ளது. தேசிய இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும், அதன் அதிகாரத்தின் கீழ் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி அமைப்புகளையும் அது பாதுகாக்க வேண்டும்.  இந்த அமைப்புகள்தான் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்  பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு காண முயற்சிக்கின்றன.
எனவே கூட்டாட்டசி அமைப்பு முறை மத்திய அரசுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட அம்சங்களில், போதுமான அதிகாரத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிட வேண்டும்.
மாநிலங்களின் அதிகார எல்லைக்குள் மத்திய அரசு தலையிடுவதையும், மாநில அரசின் செயல்பாடுகளிலும் சட்ட மன்றத்திலும் குறுக்கிட்டு ஜனநாயகத்தை புறந்தள்ளுவதையும் அனுமதிக்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவுகளில் திருத்தம் தேவைப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைப்பதிலும், அவற்றை செயல்படுத்தி வருவதிலும் மாநிலங்களின் உரிமை மத்திய அரசின் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந் திடும் வகையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசும் மாநிலங்களும், வரி வருவாயையும் ஆதாரங்களையும் தங்களுக் கிடையில் பகிர்ந்திட மேலும் சமத்துவம் இருக்க வேண்டும்.
அதிகாரங்கள் மத்தியிலிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றி வழங்ப்பட வேண்டும்.  இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகத்தை பரவலாக்குவதோடு, மாவட்டங்கள் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு ஆதாரங்களை அளித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இடதுசாரிகள் இவற்றை மாநில அரசினை கலைக்கக் கூடிய நடவடிக்கையாகவோ அல்லது தனது பொறுப்பிலிருந்து நழுவிடும் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாநில அரசை மாற்றுவதாகவே இது அமையும்.
மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநில அரசுகளை நிர்வகித்துவரக்கூடிய இடதுசாரிகள்தான் பஞ்சாயத்துக்களுக்கு ஜனநாயக ரீதியில் கூடுதல் அதிகாரத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வேகமாகவும் மேம்பட்ட வழியிலும் இது இருந்து வருகிறது. மக்களின் விருப்புகளை நிறைவேற்றுவதோடு அவர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக பஞ்சாயத்துக்களை மாற்றுவதில் இடதுசாரிகள் தலைமையிலான அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கேரளத்தில் 1996 முதல் 2001 வரையில் இடது முன்னணி அரசு திட்ட செயல்பாடுகளை பரவலாக்கி கிராம மட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாய், மக்களின் திட்டம் குறித்து விரிவான அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
கூட்டாட்சி அமைப்பானது பழங்குடியினர் மற்றும் குறிப்பிட்ட சில தேசிய சிறுபான்மையினர் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கக்கூடிய முறையை கொண்டிருக்க வேண்டும்.  தன்னாட்சி நிர்வாக சபைகளுக்காக 6வது அட்டவணையில் தற்போது பல்வேறு சட்ட விதிகள் இருந்து வருகிறது.  இச்சபைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரங்களையும், நிதி அதிகாரங்களையும் கூடுதலாக வழங்குவதன் மூலம் இவற்றை வலுப்படுத்த வேண்டும்.
ஒரு கூட்டாட்சியில், ஜனநாயகப் பரவலில் ஜனநாயகத்தின் தேவைகளை மேலும் சிறப்பான வழியில் நிறைவே ற்ற முடியும். பாராளுமன்றத்திலிருந்து மாநில சட்ட மன்றங்களுக்கும், மாவட்ட சபைகளுக்கும், கிராம சபைகளுக்கும் இதை விரிவுபடுத்திட முடியும். சர்வதேச நிதி மூலதனத்தின் நெருக்குதல்களினால் ஜனநாயகத்தை விரிவுபடுத்தாமல் குறுக்கக்கூடிய மனோபாவமும், முடிவெடுப்பதில் வெகு ஜன பங்கேற்புக்கு வகை செய்வதை பொருத்தமற்றதாக்குவதும் இருந்து வருகிறது.  இவற்றை முறியடிக்கும் வகையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதோடு, சங்கிலித் தொடராய் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி அமைப்புகளில் வெகு ஜன பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும்.
தெற்காசியாவில் வெவ்வேறு வடிவங்கள்
தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு பண்பாட்டியலையும் பல்வேறு தேசிய இனங்களையும் உள்ளடக்கிய சமூகங்களாக இருந்து வருகிறது.  தேசிய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு, தேசிய இனங்கள் மதங்கள் ஆகியவற்றுக்கிடையில் இணைப்பு, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை செழுமைப்படுத்தக்கூடிய ஜனநாயக அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய அரசு கட்டமைப்பை கட்டுவது அல்லது மாற்றங்களை மேற்கொள்வது என்பது ஒரு சவாலாகும். கூட்டாட்சி அமைப்பு என்பது எண்ணற்ற வித்தியாசமான வடிவங்களை கொண்டதாகும்.  எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமும்  அனைத்து நாடுகளுக்கும் பொருந்துவதாக இருக்க முடியாது. பதினெட்டு தேசிய மொழிகளையும், இருபத்தெட்டு மாநிலங்களையும், எண்ணற்ற மத சாதிக் குழுக்களையும் கொண்ட மிகப் பெரும் நாடாக திகழும் நாம், நாட்டை        இணைத்து, ஒன்றுபடுத்தி, சமூக பொருளாதார மேம் பாட்டிற்கான தளத்தை அளித்திடக்கூடிய ஒரு ஜனநாயக மதச் சார்பற்ற கூட்டாட்சி அமைப்புக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது    சிறுபான்மையோரின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்புடன் கூடிய பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். பெரும்பான்மை சிறுபான்மை ஆகிய இரண்டு இனத்தவர் பற்றிய வெறுப்பு, இந்தியாவையும் இதர தெற்காசிய நாடுகளையும் பீடித்துள்ளது. அவை நிராகரிக்கப்பட வேண்டிய தாகும்.
ஸ்ரீலங்காவில் மத்தியத்துவ அமைப்புக்கு எதிராக கூட்டாட்சி என்ற சர்ச்சைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.  1990களில் ஸ்ரீலங்காவில் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கக்கூடிய அரசு கட்டமைப்பில் ஒரு கூட்டாட்சி வடிவத்தை உருவாக்கக்கூடிய முயற்சிகள் மேம்பட்டது. அதிகாரத்தை கீழே மாற்றுவதற்கும், சிறுபான்மையோரின்  நலன்களை பாதுகாப்பதற்கும் இது வகை செய்தது.  1997ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் நகல் அறிக்கையும், 2000 ஆகஸ்டில் உருவான நகலும் அரசியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான கோரிக்கையாகும்.  இன மோதல்களுக்கு ஒரு சுமுகமான தீர்வை கண்டிடும் நன்முயற்சியின் துவக்கமாக இது இருந்திருக்கக்கூடும். பிராந்தியம், மொழி-பண்பாட்டியல் அடிப்படையில் தேசங்களை கபளீகரம் செய்யக்கூடிய சர்வதேச சூழலில் சவால்களை எதிர் கொள்ளும் விதத்தில் ஒரு அரசின் கட்டமைப்பிற்குள் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கக்கூடிய கூட்டாட்சி வடிவத்தை காண முடிந்தது.  கூட்டாட்சி கோட்பாடு என்பது சிறிய மாநிலங்களிலும் சரி, பெரிய மாநிலங்களிலும் சரி பொருத்தமானதாக செயல்படக்கூடியதாகவே இருக்கும். தெற்காசிய நாடுகள் கூட்டாட்சி, ஜனநாயக அதிகாரப் பரவல் ஆகியவற்றின் கூறுகளை கொண்ட சுதந்திரமான இறையாண்மை பொருந்திய நாடுகள் என்ற அடிப்படையில்,  உலகில் ஏழ்மையில் ஏதுமற்ற நிலையில் இருக்கக்கூடிய வறியோரில் ஒரு பகுதியாக இருக்கும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் விருப்பங்களை எதிர் கொள்ளும் வகையில், பிராந்திய வரையறைக்குள் ஒன்றுபட்ட செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.