இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !

– கே.பாலகிருஷ்ணன்

இலங்கையில், வரலாறு காணாத மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.  அதிபர், ஆட்சியாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கம் வலுத்துள்ளது. ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முழக்கம் இலங்கையின் அனைத்து தரப்பினரிடமும், அனைத்து மொழிகளிலும் எதிரொலிக்கிறது. சில முதலாளித்துவ கட்சிகள், மக்கள் உணர்வோடு மாறுபட்டு பேசிவந்தாலும், மக்களின் போராட்டக் குரல், ஒவ்வொரு நாளும் வலிமையடைகிறது.

இதன் விளைவாக பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் குடும்பத்தோடு வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மக்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவும், திசை திருப்பவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போயுள்ளன

போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள். ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வீடுகள் உட்பட அரச பதவிகளில் உள்ள பலரின் வீடுகளும் எரிக்கப்படுவதும், தாக்கப்படுவதுமாக சூழல்  கடுமையாகியுள்ளது.

உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக  பொலிவியா, நிகரகுவா, சிலி, பெரு, வெனிசுவேலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டதை கடந்த காலங்களில் காண முடிந்தது.

தற்போது, இலங்கையில், அந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்த உலகமய தாராளமய கொள்கையின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராகவும், 2020 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த நாட்டின் அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் 7 முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 40 க்கும் மேற்பட்ட ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு ஒட்டுமொத்த இலங்கை அரசும் ராஜபக்சேவின் குடும்ப அரசாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களின் கோபம் குவிந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினையும், உக்ரைன் – ரஷ்யா போரையும் நெருக்கடிக்கான காரணமாக காட்டிட ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

போராட்டத்தின் தொடக்கம்:

கோத்தபய ராஜபக்சே அதிபரானதும், கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் பலனடையும் விதத்தில் சில வரிச் சலுகைகளை அறிவித்தார். அந்த சலுகையால் இழந்த வரி வருவாயை நேரடி வரியின் மூலம் ஈடுகட்டவும் இல்லை.

2019 – பேரி020 ஆண்டுகளில், கொரோனா பெருந்தொற்றினால் சர்வதேச போக்குவரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ஏற்றுமதிச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகளும் இலங்கை பொருளாதாரத்தை நேரடியாகவே தாக்கின. தேயிலை, ரப்பர், மசாலா பொருட்கள் மற்றும் ஆயத்தை ஆடை ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் வரி வருவாய் மேலும் குறைந்தது, ஆனால் செலவினங்கள் அதிகரித்தன. ஏற்கனவே கடன் வெள்ளத்தில் மிதந்து வந்த இலங்கை, நெருக்கடியில் மூழ்க தொடங்கியது.

அன்றாட செலவுகளையும் கூட கடன் வாங்கி மேற்கொண்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், பொதுக் கடனுக்கும் இடையிலான விகிதம் 119 ஆக உயர்ந்தது. பட்ஜெட் பற்றாக்குறை 10 சதவீதத்திற்கும் கூடுதலாக ஆகியது.

அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் உழைப்பாளர்கள் தங்களுடைய வருவாயை மாற்று வழிகளில் குடும்பங்களுக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இவையெல்லாம் மற்றொரு பக்கத்தில் அன்னியச் செலவாணி கையிருப்பில் சரிவை ஏற்படுத்தின. டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

இப்படிப்பட்ட சூழலில், ராஜபக்சே அரசாங்கம் ‘எதேச்சதிகார முட்டாள்தனங்களை’ முன்னெடுத்தது. ரசாயன உரங்களின் இறக்குமதியை தடாலடியாக குறைத்தார்கள். உள்நாட்டு விவசாயிகள் மீது ‘இயற்கை உர’ பயன்பாட்டை திணித்தார்கள். ‘வேளாண் உற்பத்தியில் ரசாயன உரத்தின்  பயன்பாட்டை தடை செய்ததன் விளைவுகள் எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருந்தன’ என்று சர்வதேச நிதியம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

ஆம், நெல் உற்பத்தி இந்த ஆண்டில் 40-45 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கால்நடைத் தீவன உற்பத்தியும் சரிந்தது. இதனால் இறைச்சி விலை அதிகரித்தது. தேயிலை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ந்தது. பாதிக்கப்பட்ட  விவசாயிகள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பரவியது. விவசாயிகளுக்கு ‘நிவாரணம்’ கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நிவாரணமாக தரப்பட்ட தொகை, ரசாயன உர இறக்குமதிக்கு செய்திருக்க வேண்டிய செலவை விடவும் அதிகமாக இருந்தது. அத்தோடு, உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதால், அதையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

இதனால், இலங்கையில் கடுமையான விலையேற்றம் உருவானது. மின்சார உற்பத்தி வீழ்ந்தது. மின்வெட்டு உருவானது. எரிபொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளால் அவைகளும் விலை உயர்ந்தன. டீசலும், பெட்ரோலும், சமயல் எரிவாயு தட்டுப்பாடும் ஒவ்வொரு வீட்டையுமே பாதித்தது.  அனைத்து அத்தியாவிசய பொருட்களும் விலை உயர்ந்தன. மின்சார தட்டுப்பாடு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. மீன், பழம், காய்கறி சேமித்து வைத்து விநியோகிக்கும் குளிர்பதன ஏற்பாடுகளில் நெருக்கடியை உருவாக்கியது.

உணவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் வரிசையில் நிற்கும் மக்கள், அங்கேயே மரணமடைகிற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய ரூபாய் வேறு, இலங்கை ரூபாய் வேறு என்றாலும், அரிசி கிலோ ரூ.300, பால்பவுடர் ரூ.2 ஆயிரம் என  சாமானிய மனிதர்களுக்கு எட்டாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காத, பதுக்கல், தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த நிலைமைகளை கண்டித்தே மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள். இலங்கையின் நாடாளுமன்றத்தை சுற்றிலும் 3 கிராமங்களை அமைத்து, தங்கி போராட்டங்களை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பு போராடுகிறது. இந்த போராட்டங்களை போலீசாரைக் கொண்டும், தனியார் குண்டர்களைக் கொண்டும் அதட்டி அடக்கிவிடலாம் என்ற முயற்சிகள் பலிக்கவில்லை.

களத்தில் தொழிலாளி வர்க்கம்:

69 ஆண்டுகள் கழித்து, இலங்கை முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முழு அடைப்பு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு நிலவியது. பாடசாலைகள், விமான நிலையங்கள் உட்பட மூடப்பட்டன. தனியார் போக்குவரத்து நிறுவனங்களும், தொடர் வண்டிச் சேவைகளும் இதில் பங்கேற்றனர்.

நெருக்கடியின் அடித்தளம்

இன்றைய நெருக்கடியை சரியாக புரிந்துகொள்ள, வரலாற்று பின்னணியை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

1815 ஆம் ஆண்டு முதல், இலங்கை தீவு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இலங்கையின் மலைப்பாங்கான நில வளத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடித்து பிடுங்கவும் செய்தார்கள். பின் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கு ஏற்ற விதத்தில், பயன்பாட்டை மாற்றி அமைத்தார்கள். அதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்துச் சென்று, மிகக் கடுமையாக வேலை வாங்கினார்கள். இலங்கையின் மலைப் பகுதிகளில்  தேயிலை, காப்பி கொட்டை மற்றும் ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலையடைந்தபோது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு, மலையக தோட்டங்களில் நடந்தது. விடுதலைக்கு பின், உள்நாட்டில் வளர்ந்து வந்த முதலாளிகளும் – நிலவுடமை வர்க்கமும் ஆட்சியாளர்களாக மாறினார்கள். அவர்கள் அந்த சமூகத்தில் அடிப்படையான மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால், விடுதலைக்கு பிறகும், இலங்கையின் தோட்டத்தொழிலில் அன்னிய/தனியார்  மூலதனத்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதனால், தொழிலாளர்களின் கடும் உழைப்பில் விளைந்த உபரி அனைத்தும், வெளிநாடுகளுக்குச் சென்றது. அதே சமயத்தில், உள்நாட்டு தேவைக்கான உணவுப்பொருட்கள் உற்பத்திக்கு, சாகுபடி நிலப்பரப்பு  விரிவடையவில்லை. இதனால், தங்கள் உணவுத்தேவைக்காகவும் கூட இறக்குமதி செய்யும் நிலைமை தொடர்ந்தது.

இலங்கையின் சொந்த தேவைக்கான உணவு உட்பட இறக்குமதியை நம்பி இருப்பதும், உள்நாட்டு வளங்களை ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதுமான முரண்பட்ட சூழ்நிலைமை தொடர்ந்தது. இதுதான் இலங்கை தொடர்ந்து சந்தித்துவரும் நெருக்கடிக்கு அடிப்படையாகும். இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் இந்த அடிப்படையை மாற்றியமைக்கவில்லை.

கடனே தீர்வா?

இலங்கையின் விடுதலைக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு, ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சி உருவானது, ஆட்சியையும் பிடித்தது.  அவர்கள் சில முற்போக்கான திட்டங்களை அரைமனதுடன் அறிமுகப்படுத்தினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகிய நல்ல திட்டங்கள் மக்களுக்கு பலன் கொடுத்தன. வங்கித்துறை தேசியமயமாக்கப்பட்டது, சில ஆலைகள் தேசியமயமாகின.  ஆனால், பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியதும், நலத்திட்ட நடவடிக்கைகளே காவு வாங்கப்பட்டன.

இலங்கையின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்க தயாரில்லாத இலங்கையின் ஆட்சியாளர்கள், சர்வதேச நிதியத்தின் கடனுக்காக விண்ணப்பித்தார்கள். சர்வதேச நிதியமோ தனது கடன்களை ‘நிபந்தனைகளுடன்’ சேர்த்தே கொடுத்தது. இலங்கை தனது பட்ஜெட் செலவினங்களில், பற்றாக்குறையை குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு தரப்படும் மானியங்களை வெட்ட வேண்டும், தனியார் மற்றும் அன்னிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும், இலங்கை ரூபாயின் மதிப்பை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்கள்.

1970களில், உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரத்தழுவி வரவேற்றது. அதன் நோக்கத்திற்கு உடன்பட்டு ‘திறந்த பொருளாதாரத்தை’  உருவாக்குவதாக, 1977-78, 1979-82 மற்றும் 1983-84 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றார்கள். எப்போதும் போல, நிபந்தனைகளோடே அந்த கடன்கள் தரப்பட்டன. விலை கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன, உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டது, தொழிலாளர்களுக்கு கூலி குறைந்தது, நிதிச் செலவினங்கள் குறைக்கப்பட்டன, தனியார் – அன்னிய மூலதனங்களுக்கான ஊக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சீனாவா? அமெரிக்காவா?

இலங்கை அரசாங்கம் பெற்றிருக்கும் வெளிக் கடன்கள் அதிகரித்ததுதான் நெருக்கடிக்கான உடனடிக் காரணம் என்பதை மேலே பார்த்தோம். அமெரிக்க ஊடகங்களும், முதலாளித்துவ ஊடகங்களும் தற்போது இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு, சீனாதான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையா என்பதை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

 அந்த நாட்டின் கடன்களில் டாலர் அடிப்படையில் பெற்றவை 2012 ஆம் ஆண்டில் 36 சதவீதமாக இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 65 சதவீதமாக ஆகின. அதாவது இரட்டிப்பு ஆகின. சீனா நாட்டின் பணத்தில் பெறப்பட்ட கடன்கள் மொத்த கடனில் 2 சதவீதம் மட்டுமே ஆகும்.

இலங்கை வெளிச் சந்தையில் பெற்றிருக்கும் கடன்கள் 2004 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்தது ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் 56.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுவும் இலங்கை பெற்றிருக்கும் கடன்களில் 60 சதவீதம் பத்து ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டியவை ஆகும். சீனாவில் பெறப்பட்ட வெளிக்கடன்கள் 17.2 சதவீதம் மட்டுமே.

இப்படி, கடனும் அதற்கான வட்டியும் உயர்ந்துகொண்டே செல்ல, வருவாயோ வீழ்ச்சியை சந்தித்ததால் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் வருவாயில் 95.4 சதவீதத்தை, கடனுக்காகவே  செலவிட வேண்டிய நிலைமைக்கு இலங்கை வந்துவிட்டது.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கான காரணம், இலங்கை அரசாங்கத்தால் அச்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கப்பட்ட உலகமய-தாராளயம கொள்கைகளும், அதனை உலக நாடுகள் மீது திணித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்தானே அன்றி வேறல்ல.

ஆனால், இலங்கை ஆட்சியாளர்கள், 17 வது முறையாக சர்வதேச நிதியத்திடம் ‘நிபந்தனைக் கடன்கள்’ பெறுவதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளார்கள். புதிதாக வரவுள்ள நிபந்தனைகள், ‘பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்துவது, தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகளை அகற்றுவது, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் கட்டணத்தை உயர்த்துவது, ஓய்கூதிய விதிகளில் மாற்றம் செய்வது என மிக மோசமானவைகளாக இருக்கப்போகின்றன என்று தெரிகிறது. இந்த கண்மூடித்தனமான பாதையிலேயே இலங்கையின் ஆளும் வர்க்கம் பயணிக்கிறது.

பிரிவினை தந்திரங்கள்:

மக்கள் விரோத நடவடிக்கைகளால் இலங்கை மக்களிடையே எதிர்ப்புக் குரல் எழாமல் இல்லை. ஆனால் பிரிவினை விதைக்கும் அரசியல் சூழ்ச்சியைக் கொண்டே அதனை இதுவரையிலும் எதிர்கொண்டு வந்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இலங்கையின் குடிமக்களில், சிங்கள மொழி பேசுவோர் 75 சதவீதம் உள்ளனர். பவுத்த மதத்தை பின்பற்றுவோர் 69 சதவீதம். 24 சதவீதம் தமிழ் மொழி பேசும் மக்களில் இஸ்லாமியர்களும், மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடக்கம்.

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டக் களத்தில் தேசிய உணர்வு உருவெடுத்தது. ஆனால் இலங்கையில் அப்படியான தேசிய எழுச்சி உருவாகிடவில்லை. இதனால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அப்போதே வலுவாக முன்னெடுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாத்தியமானது.

விடுதலைக்கு பின், 1956 சிங்களம் மட்டுமே ஆட்சி மற்றும் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இலங்கை, புதிய அரசமைப்பு சட்டத்தை ஏற்றது. இந்த அரசமைப்பு சிங்களமே ஆட்சிமொழி என்றும், பவுத்தமே முதன்மை மதம் என்றும் கூறியது. மதச்சார்பின்மை மற்றும் மொழி உரிமை மீதான தாக்குதலாக இது அமைந்தது.

அடுத்து வந்த தேர்தலில் ‘சிங்களர்கள் மட்டும்’ என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றியை பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மேலும் மோசமாக மாற்றியமைக்கப்பட்டது. அதிபர் ஆட்சி முறை வந்தது. அதிகாரக் குவிப்பு ஏற்பட்டது. நீதித்துறையும் நிர்வாகமும் தங்கள் சுயேட்சைத்தன்மையை  இழந்து, ஆளும் கட்சிகளின் தலையாட்டி பொம்மைகளாக ஆகின.

இப்போது போராட்டக் களத்தில் முன்நிற்கும் மக்கள், இந்த ஒற்றை ஆட்சி முறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். சுயேட்சையான நீதித்துறையும், நிர்வாகமும் வேண்டும் என கோருகிறார்கள்.

உள்நாட்டு மோதல்கள்:

சொந்த மக்கள் மீது ஜனநாயக உரிமை பறிப்பு, அடக்குமுறைகளை ஏவிவிடுவது, அவசர நிலைகளை பிரகடனப்படுத்தி கொடூரமான தாக்குதல்களை தொடுப்பது போன்றவை இலங்கை ஆட்சியாளர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

இலங்கையின் ஆளும் வர்க்கம் சிங்கள இனவெறியை முன்னெடுத்த போதிலும், , அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடிய போது அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கொஞ்சமும் தயங்கியதில்லை.

அரசின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் நடத்திய பிரம்மாண்டமான போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. பொது வேலை நிறுத்த போராட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டுமென வற்புறுத்தி ஜனதா விமுக்தி பெரனா (ஜேவிபி) நடத்திய போராட்டங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுக்கப்பட்டன. இதன் விளைவாக 1971 ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் மீது ராணுவ தாக்குதல் ஏவிவிடப்பட்டு மொத்தத்தில் 14,000 இளைஞர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் 20,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு வாழ்விழந்தார்கள். அரசியலின் எல்லாத் தரப்பிலும் முதலாளித்துவ சக்திகளே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தமிழர் இயக்கங்கள்:

தமிழ் மக்களுக்கு, சம உரிமை கோரிய எழுச்சிகள் 1956, 1958, 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. ஆனால், நியாயமான உணர்வுகளை புறந்தள்ளிய ஆளும் வர்க்கங்கள், இனவாத அடக்குமுறைகளை முன்னெடுத்தார்கள்.1981 யாழ்ப்பான பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. 1983 அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டது, தமிழ் மக்கள் கூடுதல் துயரங்களுக்கு ஆளாகினர்.

1972 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பது செல்வநாயகம் அவர்களால் துவங்கப்பட்டது. 1980களில் எல்டிடிஈ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோ, இபிடிபி,டெலொ உள்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தன. ஆனால் ஒருகட்டத்திற்கு பின் இவற்றில் எல்டிடிஈ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும், தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தன. அவர்களை துரோகிகள் என்று கூறி தாக்கும் நிலைப்பாட்டை எல்.டி.டி.ஈ மேற்கொண்டது.

அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஒற்றுமையை கட்டமைக்கும் பாதையை புறந்தள்ளினார்கள். பொதுவாகவே இலங்கையில் தமிழர் மத்தியில் உருவான பெரும்பாலான அமைப்புகள் அங்குவாழும் மேட்டுக்குடியினர் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம் ஆகும். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவிய உணர்வுகளைக் கூட அவர்களால் ஒன்றிணைக்க முடியவில்லை. இவையெல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாகின.

தமிழ் நாட்டில் செயல்படும் பல பெரிய கட்சிகளும் கூட இங்குள்ள அரசியல் தேவைகளுக்காக ‘தனி ஈழம்’ என்ற முழக்கத்தை ஆதரித்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரம் என்ற சரியான நிலைப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

2099 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, உள்நாட்டு யுத்தத்தை ரத்த வெள்ளத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது. இறுதிக்கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதிகேட்கும் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் எப்போதும் போல கண்டுகொள்ளாமலே விடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில்’ 250 பேர் பலியானார்கள். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுவும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த சூழ்நிலைமைகளில் இருந்து மாறுபட்டதொரு ஒற்றுமை இப்போது இலங்கையில் உருவாகும் சாத்தியம் தென்படுகிறது. மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் சிங்களவர், தமிழர் என்ற இன வேறுபடுகளும், பவுத்தர், இந்து, முஸ்லிம், கிறுத்துவர் ஆகிய மத வேறுபாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன.  அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து உதவிகள் அனுப்புவதற்கான முயற்சிகளை எடுத்தபோது, இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நிலைமை மேலும் சாதகமாகிட, சிங்கள இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் மறு சிந்தனை மேலும் வலுப்பட வேண்டும். தமிழ் இயக்கங்களின் அணுகுமுறையிலும் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அனைத்தும் சரியாக நடந்தால், போராட்டங்களில் ஒரு பண்பு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒன்றுபடும் புள்ளி:

அதற்கு, இலங்கையின் போராட்ட முழக்கம், நவதாராளமய கொள்கைகளுக்கு எதிரானதாக கூர்மையடைய வேண்டும். அரசின் செலவினங்களை அதிகரிக்காமல் நெருக்கடியில் இருந்து மீள முடியாது, ஆனால் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளும், நவதாராளமய கொள்கைகளும் அதை அனுமதிக்காது. மக்கள் நல நடவடிக்கைகளை கைவிடச் சொல்லி அரசை நிர்ப்பந்திக்கும். இது துயரங்களை மென்மேலும் அதிகரிக்கும்.

தமிழ் மக்களும், சிங்கள உழைக்கும் மக்களும் கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு, ஒற்றுமையை வலுப்படுத்தி  செயல்பட வேண்டும். போராட்டக் களத்தில் பிரிவினையை தூவுவதற்கு ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய சக்திகளும் தொடர்ந்து முயற்சிப்பார்கள். அதற்கு எதிரான வலுவான ஒற்றுமையை போராட்டக் களமே உருவாக்கிடும்.

இலங்கையில் தொடர்ந்துவரும் முதலாளித்துவ – நிலவுடமை அமைப்புக்கு முடிவு கட்டும் பாதையில், போராட்டங்கள் கெட்டிப்பட வேண்டும். நவதாராளமய போக்கிற்கு முடிவுரை எழுத வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கான பாதை. இது நடக்குமானால், இலங்கை மக்களின் துயரங்களை நீக்கிடும் ஒரு இடதுசாரி மாற்றத்தை சாதிப்பது சாத்தியமாகும்.

வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்

கே. பாலகிருஷ்ணன்

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முத்திரை பதித்தவர் வ.உ.சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிராக விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியவர். மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு கப்பலோட்டிய தமிழன்.  தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், கொத்தடிமைகள் என்ற நிலையை மாற்றி பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராட வைத்தவர். பிரிட்டிஷ் புகுத்திய ஆங்கில மோகத்திற்கு எதிராக விடுதலை இயக்கத்தில் மக்களை தமிழ் வழி நின்று திரட்டியவர். சாதி அபிமானம், மத அபிமானம் ஆகியவை மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளே என புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவ்வாறு பிரிட்டிஷ் பேயாட்சியை எதிர்த்து தனித்த அடையாளங்களோடு விடுதலை போராட்டப் பயணத்தை மேற்கொண்ட பெருமை கொண்டவர் வ.உ.சி.

..சி யின் எலும்பும் ராஜ துவேசத்தை ஊட்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்த அளவு இவர் மீது கோபம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவருக்கு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்புரையை படித்தாலே புரியும்.

“சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே (ஆங்கிலேயர்,  இந்தியர்) பகைமையையும், வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பின் ராஜ துவேசத்தை ஊட்டும்”.

அவருக்கு வழங்கிய தண்டனையும் அளவுக்கு அதிகமானதாகும். ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு  20  ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக மேலும்  20  ஆண்டுகள்,  மொத்தத்தில் இரட்டை ஆயுள் தண்டனைகள். இத்தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமென அந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்.  

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது தண்டனை  6  ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வ.உ.சி ஒரு ராஜதுரோகி என்ற நீதிபதி பின்ஹேவின் கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டனர்.

சிறைக் கொடுமை

வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் அந்தமான் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் அந்தமான் சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவரை முதலில் கோவை சிறையிலும், பிறகு கண்ணனூர் சிறையிலும் அடைத்தனர். கோவை சிறையில் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை வேறு எந்த அரசியல் கைதிக்கும் இழைக்கப்பட்டதாக கூற முடியாது. எருதுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை, சுட்டெரிக்கும் வெயிலில்  இவரது தோளிலே கட்டி இழுக்க வைத்ததும், அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்த போதும், அவரை சவுக்கால் அடித்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். வ.உ.சி.யின் மீதான கொடுமை தாங்காமல் சிறை அதிகாரிகளுக்கே தெரியாமல் சக கைதிகள் செக்கை இழுத்துச் செல்ல உதவுவார்களாம். இன்றைக்கும் கோவை சிறைச்சாலையில் வ.உ.சி. கட்டி இழுத்த அந்த செக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய செக்கை இழுக்குமாறு வ.உ.சி.யை சித்தரவதை செய்த கொடுமையை எண்ணி அதிர்ச்சியடைவர்.

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இளமை பருவத்தில் நீதிக்கான குரல்

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தென்னகத்தில் பெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷாரைப் எதிர்த்த போராட்டத்தில் பாஞ்சாலக் குறிச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.  ஊமத்துரையும்,  சிவகங்கையில் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர்,  கோயம்புத்தூரில் கான்கிசா கான்,  மலபாரில் கேரள வர்மன் இப்படி பலரும் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இத்திட்டத்தை அறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அதை முறியடித்து கலகப் படை வீரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மருதுபாண்டியர்,  வெள்ள மருது ஆகியோரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். அதே தேதியில் மருதுபாண்டியரின் மகன்கள் சிவத்தம்பி,  சிவஞானம், வெள்ளமருதுவின் மகன்கள் கருத்தம்பி,  குட்டித்தம்பி, முத்துச்சாமி,  ராமநாதபுரம் மன்னர் முத்துக்கருப்ப தேவர் ஆகிய அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என வித்தியாசமில்லாமல் கைது செய்த அனைவரையும் பிரிட்டிஷார் கூட்டம் கூட்டமாக தூக்கிலேற்றினார்கள். மருதுபாண்டியரின் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த இத்தகைய போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான பேர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் இவர்களின் தியாகம் வீரகாவியங்களாக பேசப்பட்டு வந்தன. இவர்களைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கிராமங்கள் தோறும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய பாடல்களை கூட பாடக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

இந்த தியாக வடுக்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில்தான்  1872ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வ.உ.சி ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இளம் பருவம் முதலேயே இந்த வீர காவியங்கள் அவரது சிந்தனையில் ஆழமாக பதிந்தன. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்த வ.உ.சி க்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிவதில் ஆர்வமில்லை. பிறகு வழக்கறிஞர் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக பணியாற்றும்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடினார். தவறு செய்யும் அரசு அதிகாரிகள், நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட யாரானாலும் அவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். அதேபோல ஜமீன்தார்கள், பண்ணையார்கள், போலீசார் ஆகியோர் சாதாரண ஏழை விவசாயிகள் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை எதிர்த்து, தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். பொதுமக்களிடம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட துணை நீதிபதிகள் மீது வழக்காடி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது போன்ற காரணங்களால் வ.உ.சி.யினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்தது. ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயக் கூலிகள், பணக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வ.உ.சி.யை நாடிவந்து தங்களுக்கு நியாயம் கேட்கும் நிலை உருவானது. அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்.

ஏழை மக்களுக்காக குரலெழுப்பிய வ.உ.சி. படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தார். அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து தேசிய இயக்கத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.

மூன்று கோட்பாடுகள்

வ.உ.சி மூன்று முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தி வந்தார். அதாவது கூட்டுறவு இயக்கம்,  சுதேசி இயக்கம்,  தொழிலாளர் இயக்கம் என்ற இந்த மூன்றையும் முன்னிறுத்தினார். தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலை ஒன்றை அமைத்து சுதேசிப் பொருட்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி வைத்தார். சுதேசி நூற்பாலை ஒன்றை கட்டி அதை செயல்படுத்தினார். சென்னை விவசாய சங்கம் என்ற அமைப்பை துவக்கினார். இவருடைய மொத்த நோக்கமும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாற்றாக சுதேசிப் பொருளாதாரத்தை பலப்படுத்திட வேண்டுமென்பதே. தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வு மேம்படுவது,  மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது,  தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயிகளையும்,  தொழிலாளர்களையம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்து முழுவதும் பிரிட்டிஷ் கைவசமே இருந்தது. சில சுதேசி கம்பெனிகள் கப்பல்களை இயக்கினாலும் பிரிட்டிஷ் கம்பெனிகளோடு போட்டி போட முடியாமல் அது தள்ளாடிக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் கம்பெனிகள்தான் இந்தியா, இலங்கை, ரங்கூன்,  மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, கொண்டு வருவது என்ற வியாபாரத்தை நடத்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு போட்டியாக,  சுதேசி நேவிகேசன் கம்பெனி என்ற கம்பெனியை வ.உ.சி துவக்கினார். வாடகைக்கு கப்பல் எடுத்து ஓட்டி நடத்த முடியாது என்கிற அடிப்படையில் கப்பல்களை விலைக்கு வாங்கி சொந்தமாக இயக்க முடிவு செய்தார். இந்த கம்பெனிக்கான பங்குதாரர்களை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் பயணம் செய்து பங்குகளை சேர்த்தார். இவ்வாறு இந்த பங்குகளை சேர்க்க பம்பாய் நகரத்தில் அவர் தங்கியிருந்த போது அவரது மூத்த மகன் உலகநாதன் உடல் நலமின்றி மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரமுடியாமல் சுதேசி நேவிகேசன் கம்பெனிக்கு பங்குகளை திரட்டும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்த கம்பெனியில் இயக்குநர்களாக 15பேர் இருந்தார்கள்.

சுதேசி கப்பல் இயக்குவது பொதுமக்கள் மற்றும் பயணிகள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணத்தை விட அதிக கட்டணம் கொடுத்து சுதேசி கப்பலில் பயணிப்பதை அனைவரும் பெருமையாக கருதினார்கள். சுதேசி கப்பல் வெற்றிகரமாக இயங்குவது நாடு முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து திலகர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் இயக்குவது, சுதேசி இயக்கத்திற்கு அவர் செய்துள்ள பெரும் பணி என பாராட்டினார். எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் முதலாளிகளை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கியது எண்ணிப் பார்க்க முடியாத இமாலய சாதனையாகும். சுதேசி கம்பெனி இயங்குவது பிரிட்டிஷ் கம்பெனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் ஒவ்வொரு மாதமும் இக்கம்பெனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்கிற நிலை உருவானது. எனவே பிரிட்டிஷ் கம்பெனி கப்பல் உரிமையாளர்கள் சுதேசி கப்பலை முடக்கி விட வேண்டும்;  இதற்கு பொறுப்பாக இருக்கிற வ.உ.சி. யை மிரட்டி பணியவைப்பது; பணியாவிட்டால் சிறைக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து முயற்சிகளிலும் வரிந்து கட்டி செயல்பட்டனர். தங்கள் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதி விட்டது என பொய்ப்புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இத்தகைய சதிகளை எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களின் ஆதரவோடு வ.உ.சி முறியடித்தார். பிரிட்டிஷாரின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆதரவு வ.உ.சி.க்கு இருந்தபோதும் சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இவர்களைப் பொறுத்தவரை லாபமே குறி. சுதேசி உணர்வை பயன்படுத்தி லாபமடைய வேண்டுமென்பதே இவர்களுடைய அடிப்படையான எண்ணம்.

எனவே, பிரிட்டிஷாரின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வ.உ.சி.யை கம்பெனி நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வ.உ.சி.யோ சுதேசி கப்பல் கம்பெனி நடத்துவதை ஏகாதிபத்திய எதிர்ப்பின் பகுதியாகவே மேற்கொண்டிருந்தார். எனவே, இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆரம்பத்தில் அடிபணிய மறுத்த வ.உ.சி. வேறு வழியின்றி நாடு முழுவதும் இரவு – பகலாக அலைந்து கண்ணின் இமை போல காத்து உருவாக்கிய சுதேசி கம்பெனியிலிருந்து கடைசியாக வெளியேறினார்.

பாரதி – வ..சி. இரட்டையர்கள்

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரும், வ.உ.சி. யின் தந்தை உலகநாதப் பிள்ளையும் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரே காலத்தில் பணியாற்றியுள்ளனர். குடும்ப ரீதியாக இவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் பாரதியும் – வ.உ.சியும் சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ளவில்லை.  1906ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்ற வ.உ.சி  “இந்தியா” என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரோடு மண்டையம் திருமாலாச்சாரி, சீனிவாச ராகவாச்சாரியார் ஆகியோர் நெருங்கி பழகியதன் விளைவாக நாளடைவில் வ.உ.சி. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். இவர்களது முயற்சியில் சென்னை ஜன சங்கம் என்ற தேசாபிமானச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி திரும்பிய வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

1907ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநாடு சூரத் நகரில் நடைபெறவிருந்தது. இதற்கு முன்னர் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது மோதலாக உருவாகியிருந்தது. தீவிரவாதிகள் எனவும், மிதவாதிகள் எனவும் காங்கிரஸ் தலைவருக்குள் இரண்டு பிரிவு உருவாகியிருந்தது. லால் – பால் – லால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர்,  பிபன் சந்திரபால் ஆகியோர் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது,  இவர்கள் சுதேசி, சுயராஜ்ஜிய சுதந்திரத்திற்கு இந்தியா போராட வேண்டுமென்றனர். இன்னொரு பிரிவுக்கு தலைவராக இருந்த திரசா மேத்தா, கோபால கிருஷ்ண கோகுலே, ராஷ் பிகாரி போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் மிதவாதக் கருத்துக்களை கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் முக்கியமான காரணமாகும். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது ‘மேன்மை தங்கிய’ பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாகவே துவக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொண்டு இந்திய மக்களை சுரண்டிய போதிலும் உள்நாட்டில் ஒரு வலுவான முதலாளித்துவம் வளராமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு உள்நாட்டு முதலாளித்துவம் வளருமானால் அது தங்களை எதிர்த்து குரல் கொடுக்க முனையும் என்பதை சரியாகவே கணித்து எச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் குடையின் நிழலிலேயே உள்நாட்டு முதலாளித்துவம் படிப்படியாக வளர்ந்ததும், உலக அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியாவில் புதியதொரு சூழ்நிலையை உருவாக்கின. அதாவது, உள்நாட்டு முதலாளிகள் மனு கொடுத்து மன்றாடினால் மட்டும் தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தனர். இத்தகைய புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக சுயராஜ்ஜியம், சுதேசி பொருட்கள் விற்பனை, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற கோஷங்கள் எழுந்தன. இத்தகைய கோஷங்களை திலகர் தலைமையிலான தீவிரவாதக்குழு எழுப்பிய நிலையில் மக்களது பேராதரவு இவருக்கு பின்னால் திரண்டது. எனவே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது தீவிரவாதக்குழுவின் தலைவராக இருந்த திலகரை தலைவராக்க வேண்டுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிதவாதக்குழுவினர் சமரச ஏற்பாட்டின் மூலம் இதை முறியடித்தனர். இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் வலுவடைந்திருந்தது. சென்னையிலிருந்த பாரதிக்கும் இந்த கருத்து ஆழமாக இருந்தது.

சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டம்

பாரதி – வஉசி தலைமையில் சூரத் மாநாட்டிற்கு ஏராளமானோர் சென்றார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் மாநாட்டு அரங்கில் கூடியபோது, மாநாடு துவங்கிய உடனேயே தலைவர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டது. மிதவாத குழுவினர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தாக்குதலால் கூட்டம் தொடர முடியாமல் மாநாடு கலைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் அரவிந்தர் தலைமையில் நடந்த தேசியவாதிகள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வங்கத்துக்கு – அரவிந்தர்,  மராட்டியத்திற்கு திலகர், சென்னை மாகாணத்திற்கு வ.உ.சி பொறுப்பாளர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ஆரம்ப முதலே சுதேசி, சுயராஜ்ஜிய கோட்பாடுகளோடு திலகரின் ஆதரவாளராக இருந்த வ.உ.சி சுயராஜ்ஜியத்தில் தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளராக தீர்மானிக்கப்பட்டது இயற்கையானதே.

சென்னை திரும்பிய வ.உ.சி.யும்,  பாரதியும் சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டத்தினை நிறைவேற்றினார்கள். சென்னையை தொடர்ந்து வ.உ.சி தூத்துக்குடி சென்று தனது பணிகளை துவக்கினார். சுயராஜ்ஜிய ஆட்சிக்கு முதல் வழி கடல் வாணிபத்தை கைப்பற்ற வேண்டும். வெள்ளையர்களின் கம்பெனிகளை திவாலாக்க வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதே சுதேசி நேவிகேசன் கம்பெனி.

வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்ட பிபின் சந்திரபால் விடுதலையானதைக்  கொண்டாட வேண்டுமென திலகர் அறைகூவல் விடுத்தார். பல நகரங்களில் சிறப்பாக கொண்டாட வ.உ.சி ஏற்பாடு செய்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கலந்து கொண்டு உரையாற்றினர். மக்கள் எழுச்சியுடன் திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெள்ளையர்களையும் அவர்களது எடுபிடிகளையும் மக்கள் புறக்கணித்தார்கள். மக்களின் உணர்ச்சி கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் வ.உ.சி.யையும் – சிவாவையும் மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்கள். மார்ச் 9ஆம் தேதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாஜிஸ்திரேட் எழுதி கொடுக்க வற்புறுத்தினார். இருவரும் மறுத்து விட்டனர். இருவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் விஞ்ச் மிரட்டிய விபரங்களை பாரதியார் பாடல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்பாடல்களில் கலெக்டர் எவ்வாறு மிரட்டினார்; அதற்கு வ.உ.சி. எவ்வாறு எதிர்குரல் கொடுத்தார் என்பதையும் வடித்துள்ளார். 

தனது மிரட்டலுக்கு பணிய மறுக்கும் இருவரையும் ஓராண்டு பாளை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். செய்தியறிந்து நெல்லை நகரமே போர்க்களமாகிறது. மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள், பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆஷ் என்ற உதவி கலெக்டரை துப்பாக்கியால் சுட்டு ஒரு இளைஞன் உள்பட 4 பேர் மரணமடைந்து விடுகிறார்கள். போலீசார் மீது மக்கள் நடத்திய எதிர்தாக்குதலில் கலெக்டர் விஞ்சுக்கு மண்டை உடைந்தது.

இந்த கலகத்துக்கு தலைமை தாங்கியதாக காரணம் கூறியே வ.உ.சி – சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில்தான் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை என்பது இந்த சம்பவத்தை கணக்கில் கெண்டு கொடுக்கப்பட்டவையல்ல. வெள்ளயர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியது; மக்கள் திரள் போராட்டங்களை உருவாக்கியது போன்ற பழைய காழ்ப்புணர்ச்சிகளின் தொகுப்பாகவே இத்தண்டனை அமைந்திருந்தது.

சிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி சென்னைக்கு வந்தார். குடும்பத்தை நடத்துவதற்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் உரிய பலன் ஏற்படவில்லை. சிறை தண்டனை பெற்றதால் வழக்கறிஞராக பணியாற்றும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிறந்த தேச பக்தராகவும், இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகத்தை செய்த வ.உ.சி. தனது கடைசி நாட்களில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார் என்பது வேதனை மிக்கதாகும்.

வ.உ.சி. சிறந்த இலக்கியவாதியுமாவார். தனது சுய சரித்திரத்தை செய்யுள் வடிவில் எழுதியதில் வ.உ.சி.யே முதலும் கடைசியுமாவார். சிறைத் தண்டனையின்போதும் அதற்கு பின்னரும் இலக்கிய பணியில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ்நாட்டில் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எளிய தமிழை பயன்படுத்தினார். மேடைப் பேச்சு என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு ஆங்கில கல்வி மூலம் ஆங்கில மோகத்தை புகுத்தியது. ஆங்கில மோகமும் சமஸ்கிருத மோகமும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தாய்மொழி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் வ.உ.சி. எழுதுவன எல்லாம் எளிய நடையில் இருத்தல் வேண்டும். மக்களுக்கு அர்த்தமாகும் இலக்கியத்திலேதான் உயிர் உண்டு என வலியுறுத்தினார். திருக்குறளின் அறத்துப் பாலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். முழு திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமென்ற  அவரது ஆசை நிறைவேறவில்லை.

தொழிலாளர் இயக்கத்தில் வ..சி

திருநெல்வேலி பாபநாசத்தில் ஹார்வி என்ற பிரிட்டிஷ் கம்பெனி நூற்பாலை இயக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கோரல் மில் (பவள ஆலை) என்ற நூற்பாலையை உருவாக்கியிருந்தார்கள். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்தனர். 10 வயது, 12 வயது சிறுவர்கள் கூட ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட்டனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இடையில் ஓய்வெடுக்கவோ, விடுமுறை எடுக்கவோ கூடாது என்கிற காட்டுத் தர்பார். இந்தக் கொடுமையான தொழிலாளர் சுரண்டலை கண்ட வ.உ.சி கோரல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினார். வ.உ.சி.யின் அறைகூவலுக்கேற்ப தொழிலாளர்களும், 1908ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் 144 தடையுத்தரவு போட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. குண்டர்களை ஏவி தொழிலாளர்களை தாக்கியது. மில் நிர்வாகமும், காவல்துறையும் தொடுத்த அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும்,  பவானந்த ஐயங்காரும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். தொழிலாளர்களின் உறுதியை கண்ட நிர்வாகம் 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது உரிமைக்கு போராடும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை பெற்றது. இது தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி.யை தொழிலாளர்களும், மக்களும் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டாடினார்கள். பிரிட்டிஷ் எஜமானர்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது புதிய வரலாறாகும். தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்க ,இயக்கம் என்று எதுவும் கேள்விப்படாத நேரத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும என்பதே பிரிட்டிஷாரின் விதி. அந்த விதியை மாற்றி எழுதியவர் வ.உ.சி.

தேசிய நோக்கும் சமூக சமத்துவப் பார்வையும்

ஆரம்பத்திலிருந்தே தேச விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார். சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வாக்குமூலத்தின்படியே திலகர்,  லாலா லஜபதிராய்,  அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து பூரண சுயராஜ்யத்திற்கு உறுதியாக குரல் கொடுத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதி மத சனாதான கருத்துக்கள் கோலோச்சி இருந்த நிலையில் சாதியும் மதமும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சுதேசி சிந்தனையை பாழ்படுத்தி விடுமென முழக்கமிட்டவர்.

தேசிய தலைவர்கள் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சினையை பேச மறுத்த காலத்தில், தேசிய சிந்தனையில் வ.உ.சி தீவிரமாக இருந்தபோதும் இப்பிரச்சனை சமூகத்தில் நிலவிவருவதை சுட்டிக் காட்டி அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.   தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்தினார்கள். நீதிக்கட்சியோடு எந்த தொடர்பையும் கொண்டிராத வ.உ.சி. தமிழகத்தில் நிலவும் பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்திட வேண்டுமென வற்புறுத்தினார்.

தேசிய சிந்தனையோடு பல்வேறு போராட்டங்களை வ.உ.சி. முன்னெடுத்தார். அதேநேரம் சாதி மத சிக்கல்கள் குறித்தும், சமூக சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவர் வாழ்ந்தபோதும்  இவர் மறைந்த பிறகும் இவரது அளப்பரிய தியாகத்தை காங்கரஸ் கட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்கள் என்றென்றும் அவரை நினைவில் வைத்து போற்றுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் வ.உ.சி திகழ்கிறார்.

வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், தமிழ்மாநிலக் குழு, சிபிஐ(எம்).

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் 407 பேர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்தஒட்டுமொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தனனிகரில்லா தியாகங்களும் கொண்டதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு குறித்தும், அதன் தலைமையில் நடைபெற்ற எண்ணற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்களும்,ஆய்வு ஆவணங்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த இயக்கத்தின் நூறாண்டு நிறைவு நிகழ்வினை ஒட்டி கட்சியின் அதிகாரபூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி அவற்றின் சாரத்தை வரலாற்று வரிசைக் கிரமமாக 2019 அக்டோபர் முதல் வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. ‘குறுகத் தறித்த குறளாக’ வெளிவந்த இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கம்யூனிச கருத்துக்கள் பரவத் தொடங்குகையில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்தப் பணியை முதன்முதலில் முன்கையெடுத்துச் செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் ஆவார். 1925ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் (கான்பூரில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பேறு பெற்ற தோழர் சிங்காரவேலர், அன்றைய மதராஸ் மாகாணத்தில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், அறிவியல் இயக்கம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் என்ற பெருமையும் மிக்கவர்.

சிங்காரவேலரின் வழிகாட்டுதலில் 1923ஆம் ஆண்டில் மே தினம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி, அதே நாளில் தொழிலாளர்- விவசாயிகள் கட்சியும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர்கள் சிங்காரவேலர், பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் தமிழ் மண்ணில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை. பின்னாளில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தளபதியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964இல் உருவான போது அதன் முதல் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்த தோழர் பி. சுந்தரய்யாவின் அரசியல் பயணமும் அன்றைய மதராஸ் நகரில் இருந்தே தொடங்கியது.

1920 அக்டோபர் 17ஆம் தேதி, முன்பிருந்த சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் (இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகர்) இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ‘முதல் கிளை’ உருவானபோது அதில் சென்னையைச் சேர்ந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியா எனும் எம்.பி.பி. ட்டி ஆச்சாரியா அவர்களும் ஓர் உறுப்பினர். அப்படி உருவான கிளை இந்தியாவில் சிறு அளவுகளில் இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து, இந்திய நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க முயற்சி எடுத்தது. அவ்வாறு அது தொடர்பு கொண்டு இணைக்க முயற்சித்த குழுக்களில் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த குழுவும் ஒன்று. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அறியப்படும் சிங்காரவேலர் தலைமையிலான குழுதான் அது.

சிங்காரவேலர் தலைமையிலான சென்னை குழு, எஸ். ஏ. டாங்கே தலைமையிலான பம்பாய் குழு, முசாபர் அகமது தலைமையிலான கல்கத்தா குழு ஆகியவற்றோடு பெஷாவர்,லாகூர், ஜலந்தர், கான்பூர், காசி, அலகாபாத் ஆகிய மையங்களில் இயங்கிய சிறு குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க எம்.என். ராயும் அவரது தோழர்களும் முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சியைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் இந்திய காலனி அரசு சகலவிதமான எதிர்நடவடிக்கைகளையும் எடுத்தது. அடுத்தடுத்து சதிவழக்குகளை தொடுத்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய காலனியாதிக்க அரசு எடுத்த முயற்சிகளை முறியடித்து வெடித்து வெளிவந்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

செம்பூவாய் மலர்ந்த இயக்கத்தை காலனிய அரசு தனது ராணுவ, போலீஸ் பூட்சுக் கால்களால் மிதித்து நசுக்கி அழிக்க முயற்சித்தது. தாஷ்கண்டில் மார்க்சிய பாலபாடம் கற்றுத் திரும்பியவர்களை வளைத்துப் பிடித்து பெஷாவர் சதி வழக்கில் சிக்கவைத்து பல ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. பின் மீண்டும் கான்பூர் சதி வழக்கில் எம்.என்.ராய், சிங்காரவேலர், எஸ்.ஏ. டாங்கே, முசாபர் அகமது, செளகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்டோரை தண்டிக்க முயற்சித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் கடும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். இதனையெல்லாம் மீறி 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

கட்சியின் முடிவுப்படி நாட்டின் தென்பகுதிக்கு வந்து செயல்பட்ட தோழர் எஸ்.வி. காட்டே, அமீர் ஹைதர் கான் ஆகியோர் தோழர் சுந்தரய்யாவை கட்சிக்கு கொண்டுவந்தனர். பின்னர் எஸ்.வி.காட்டேயும் சுந்தரய்யாவும் தமிழகத்தின் முதல் கிளையாக தோழர்கள் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, ஏ.எஸ். கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ், சி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொண்ட கிளை உருவாக உதவினர். இவ்வாறு இந்த 100 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தின் பொதுவுடமை இயக்க வரலாறும் ஊடுபாவாக பின்னிப் பிணைந்து விளங்குவது பெருமைக்குரியது. தொடக்கத்தில் இருந்தே சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதி, நாடு தழுவிய கட்சியின் ஒரு அங்கம் என்ற உணர்வோடு, இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர்கள் இயங்கி வந்துள்ளனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு என்பதோடு சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே இருந்தும், வெளியிலும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்திய கம்யூனிச இயக்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டம் என்பதோடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் அமைந்தது. இதனை கூரிமைப்படுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களை அணிதிரட்ட அகில இந்திய அளவிலான தொழிற்சங்கம், எழுத்தாளர்கள், பண்பாட்டு போராளிகளை அணிதிரட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய நாடக மன்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர், மாதர், வாலிபர் அமைப்புகள் உருவாக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், பதிப்பகங்களும் உருவாகின. இவ்வாறு ஆங்கில காலனிய அரசை எதிர்த்தும், பின்பு இங்கு அமைந்த பெரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டு அரசை எதிர்த்தும் வலுவான வலைபின்னல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் செயல்பட்டு வந்த நூற்பாலைகள், சணல் ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், இரும்பு உருக்காலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கி ரயில்வே, தபால்-தந்தி, போக்குவரத்து ஊழியர்கள் வரை கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய எண்ணற்ற போராட்டங்களும், அதில் அவர்கள் செய்த தியாகங்களுமே தொழில் தகராறு சட்டம், 8 மணி நேர வேலை, போனஸ் போன்ற பல்வேறு உரிமைகள் சலுகைகளுக்கான சட்டங்களை இயற்ற வழிவகுத்தன.

அதைப் போன்றே கிராமப்புறங்களில் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, பண்ணை அடிமைகளை, பழங்குடிகளை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நாடெங்கும் அணிதிரட்டிப் போராடியதன் விளைவாகவே நில உச்சவரம்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம், கட்டாய இலவச உழைப்பு முறை ஒழிப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை விவசாய சங்க இயக்கத்தால் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்தது.

கடையரிலும் கடையராய், தீண்டத்தகாதவராய் சமூகத்தால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, சாணிப்பால், சவுக்கடியை ஒழித்துக் கட்டிய பெருமையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரியது. அதன் வீச்சை கீழத் தஞ்சை மாவட்டத்திலும், கேரளாவில் தொடங்கி வடகிழக்கே அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, திரிபுரா வரை நம்மால் இன்றைக்கும் காண முடியும்.

சாதிய பிளவுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கிராமப்புறங்களில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, களத்தில் இறங்கி வெற்றி கண்ட ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. தேச விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது இந்திய பொதுவுடைமை இயக்கம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்பு மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே மாநிலங்கள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் சிபாரிசின் அடிப்படையில் சென்னை, கேரளம், கர்நாடகம் என்ற மாநிலங்கள் 1956 நவம்பர் 11இல் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர்மாற்ற வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை அன்றைய நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். ஒன்றுபட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் தமிழ், மலையாளம், தெலுங்கு என அவரவர் தாய்மொழியில் பேசினர். அதுவரை ஆங்கிலமே சட்டமன்ற அலுவல் மொழியாக இருந்த நிலையில் தாய்மொழிக்காக குரல் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதும் வரலாறாகும்.

1947இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்றபிறகும் சில பகுதிகளில் காலனி ஆதிக்கம் நீடித்தது. பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய ஆட்சிப் பகுதிகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தி இன்றைய புதுச்சேரி, கோவா பகுதிகளை காலனிஆதிக்கத்திலிருந்து விடுவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். நெல்லை சதிவழக்கு தொடங்கி 16க்கும் மேற்பட்ட சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சேலம் சிறையில் துப்பாக்கிச் சூடு, கடலூர் சிறையில் துப்பாக்கிச் சூடு, சின்னியம்பாளையம் தியாகிகள், வீர வெண்மணி தியாகிகள் என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தாலும் இவர்களின் தலைமையின் நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாகவும், 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சிக் கட்டிலில் அமர மக்கள் அளித்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியாபாரம் தட்டிப் பறித்து விட்டது.

அவசரநிலை பிரகடனத்தால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காங்கிரஸ் அரசு தட்டிப் பறித்தபோதும், சாதி மோதல்களால் பட்டியலின மக்கள் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளான போதும், மதவெறி அரசியலால் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்ட போதும் தயக்கமின்றி இம்மக்களுக்குக் கேடயமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை தமிழகத்தின் நெடிய அரசியல் வரலாறு எடுத்துக் கூறும்.

இன்றைய தாராளமயப் பொருளாதார யுகத்தில் உழைக்கும் வர்க்கம் கடந்த நூறாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மதத்தின் பேரால் மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை, பிளவுபடுத்தி, வகுப்புவாத விஷத்தை ஊட்டி வருகின்ற, சுதந்திரப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை அடியொற்றிச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் விடுதலைப் போராட்ட நாட்களில் முன்னெடுக்கப்பட்ட விழுமியங்கள், நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மக்களின் இடைவிடா உழைப்பினால் பேணி வளர்க்கப்பட்ட பொதுத்துறை அமைப்புகள் ஆகியவற்றை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் அகோரப் பசிக்கு இரையாகப் பலி கொடுப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, கையளவு பணக்காரர்களின் நலனுக்காக நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்துவரும் பாஜகவின் மோடி அரசை எதிர்த்துப் போராட வேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கு உரியது. அந்த வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் நேச சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மக்கள்விரோத அரசை தூக்கியெறிய தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை வலதுசாரி சக்திகள் தங்களுக்கு சாதகமாக திரட்டும் போக்கு வலுவடைந்துள்ளது. மதவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் பிரிவினை கோஷங்களை முன்னிறுத்தி ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி திருப்பத்தை உருவாக்கி பல நாடுகளில் தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ள காலமாக இது உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வலதுசாரி சக்திகள் சாதி, மத மற்றும் பழமைவாத கருத்துக்களை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இச்சவால்களை சந்திப்பதில் இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

எனினும், இந்தியப் பொதுவுடமை இயக்கம் அதன் 100 ஆண்டு வரலாற்றில் வளர்ச்சியையும், வீழ்ச்சிகளையும் சந்தித்தே வந்துள்ளது. அத்தகைய அனுபவங்களின் வெளிச்சத்தில் இன்றைய நிலைமைகளை மதிப்பிட்டு, நாம் மேற்கொள்ள வேண்டிய பாதையை, நடைமுறை உத்திகளை சீரமைத்து முன்னேற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகின்றது.

இந்நூலை தோழர் வீ. பா. கணேசன் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 1978ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்த்து வந்தவர் என்பது மட்டுமின்றி, இடதுசாரி சிந்தனையை பரப்ப உதவும் வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்தும், வங்க மொழியிலிருந்தும் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழில் ஆற்றொழுக்கான எழுத்துத் திறனும் கொண்டவர். அவ்வகையில் “இந்திய கம்யூனிச இயக்கத்தின் ஒரு நூறாண்டுப் பயணம்” என்ற இந்த நூலையும் தெள்ளிய தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார். அவருக்கு நமது இனிய தோழமை வாழ்த்துக்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.

இந்தப் போராட்ட வரலாற்றை, கட்சியின் இளம் தலைமுறைக்கு உத்வேகம் தரும் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரித்துரைக்கிறத. ”ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி!” என்று நவம்பர் புரட்சி பற்றி இங்கு முரசறைந்த மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டும், இந்தியர்களின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டும், தமிழக கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ள இந்தத் தருணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, வர்க்கச் சுரண்டலால் புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க நினைக்கின்ற, அதற்கு முன் வருகின்ற தோழர்களும், நண்பர்களும் இதனைப் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என துணிந்து சொல்ல முடியும். அவ்வகையில் கட்சியின் இளந்தலைமுறையினரிடையே இந்த மதிப்பிற்குரிய ஆவணத்தைக் கொண்டு செல்வது நம் அனைவரது கடமையாகும்.

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் ( பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் வெளிவந்த தொடர்க்கட்டுரைகளின் தமிழாக்கம்) தமிழில்: வீ. பா. கணேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

பக்கங்கள்: 448 விலை: ரூ. 420

கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்

கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதே ஜனநாயக அரசுகளின் அடிப்படைக் கூறாகும். இதை கவனத்தில் கொண்டே, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும்போது இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என வரையறை செய்யப்பட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கான அதிகாரங்களை கொண்ட மத்திய அரசு பட்டியல் எனவும், மாநிலங்களின் அதிகாரங்களைக் கொண்ட மாநில பட்டியல் எனவும் இரண்டு அரசுகளின் இணைந்து கவனிக்கிற ஒத்திசைவு பட்டியல் என்ற பொதுப்பட்டியல் கொண்டதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட காலத்தில் விவாதிக்கப்பட்ட கிராம ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74வது திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வழி செய்யப்பட்டது. இது மூன்றாவது ஆட்சி முறை என வரையறை செய்யப்பட்டது.

மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என அழைக்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.  அரசியல் அமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச மாநிலங்களுக்கான அதிகாரங்களைக்கூட இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் வழங்கியதாக வரலாறு இல்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் பல மாநில கட்சிகள்கூட தங்களது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க மறுத்துவிட்டன.  நடைமுறையில் மூன்றாவது ஆட்சிமுறை என்பது சொல்லாட்சியாகவே உள்ளது.   அதிலும், மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள பாஜக மாநில உரிமைகளை பறித்து ஒரு ஒற்றை ஆட்சி முறையை உருவாக்கும் நோக்கோடு அனுதினமும் செயல்பட்டு வருகிறது.

தற்போது உலகம் சந்தித்து வரும் கொரோனா கொடுமையை எதிர்த்த போராட்டத்திலும் மத்திய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமாக, கூட்டாட்சி தத்துவத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருவதை கண்கூடாக காண முடியும்.

கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமி தாக்குதலால் உலகமே முடங்கிக் கிடக்கிறது.  இதன் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த இந்திய நாடும் கடந்த 50 நாட்களாக பொது முடக்கத்தால் செயலற்று இருக்கிறது.  நாட்டில் அடிப்படையான தொழில், தொழில் உற்பத்தி, விவசாய உற்பத்தி, வணிகம், அனைத்து வகையான போக்குவரத்து, கட்டுமானம், விளையாட்டு, சினிமா, கலை இலக்கியம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இயங்கவில்லை. 140கோடி மக்களும் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்னெப்போதும் இல்லாத இத்தகைய கொடூர நிலைமையில் பொருளாதார பாதிப்புகளில் மூழ்கியுள்ள மக்களைப் பாதுகாப்பது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, பசி பட்டினியில் இருந்து மக்களைப் பாதுகாப்பது, ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுசெய்வது போன்ற கேந்திரமான பணிகளின் மூலம் மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.  நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்று குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட கூடுதலான பணிகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய கடமைகளை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுடையது என்றபோதும், நேரடியாக மக்களோடு நெருக்கமான தொடர்பில் உள்ள மாநில அரசுகளின் மேல் விழுந்துள்ளது. மாநில அரசுகள் மேற்கண்ட இமாலய பணிகளை நிறைவேற்ற வேண்டுமெனில் வழக்கமான நிதி ஆதாரம் மட்டுமின்றி கூடுதலான நிதி அளித்தால் மட்டுமே இப்பணிகளை நிறைவேற்ற முடியும்.  நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, நிதி, உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் தாராளமாக வழங்குவதின் மூலமே கொரோனாவை எதிர்த்தப் போராட்டத்தில் இந்திய நாடு வெற்றிபெற முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு இக்கடமைகளை நிறைவேற்றுவதில் நியாயமாக நடந்துகொண்டுள்ளதா? அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டுள்ளதா? என்பதே இப்போதைய கேள்வி  ஆகும்.  மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.

ஊரடங்கு உத்தரவுகள்

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தனித்திருப்பது, தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்.  எனவே, இதுவரை அறிவிக்கப்பட்ட 4 ஊரடங்கு உத்தரவுகளையும் இந்திய நாட்டு மக்கள் முழுமனதோடு ஏற்று அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளார்கள்.  அனைத்து அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து கருத்து தெரிவிக்காமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.   ஆனால், இந்த பரவல் தொற்று நோய் தொடர்பாக ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கு மத்திய அரசுக்கு இந்திய அரசியல் சட்டத்தின்படி அதிகாரங்களே இல்லை என்பது வெள்ளிடைமலை.

ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்போதும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன்படி பல விதிமுறைகளை உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டுமென மாநில அரசுகளின் மீது மத்திய அரசு அழுத்தம் தருகிறது.  இந்த விதிமுறைகளை மாற்றவோ, திருத்தவோ கூடாது எனவும் கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த விதிகளை உருவாக்கி நாடு முழுவதும் அமலாக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு என்ற பெயரில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அணுகுமுறையினை உருவாக்கி மாநில அரசுகளை, அவைகளை நிறைவேற்றுகிற ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றிவிட்டது மோடி அரசு.  மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரித்து பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.  இவ்வாறு செய்யும்போது மாநில அரசுகளை குறைந்தபட்சம்கூட கலந்து பேசவில்லை.

சில மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சிவப்பு மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டதை எதிர்த்து குரல் எழுப்பின.  சில மாநிலங்களில் பெரிய பரப்பளவை கொண்ட சில மாவட்டங்களை சிவப்பு மாவட்டங்களாக அறிவித்ததை ஏற்க முடியாது என மறுத்தன.  இத்தகைய பெரிய மாவட்டங்களில் கொரோனா பாதித்த குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் சிவப்பு பகுதியாக அறிவிக்காமல் ஒட்டுமொத்த மாவட்டத்தையே முடக்கி வைப்பது அவசியமற்றது என்பது மட்டுமின்றி அவ்வாறு செய்வது பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும் என கருத்து தெரிவித்தன.  ஆனால், மத்திய அரசு, மாநில அரசுகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைக்கூட பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தாங்கள் மேற்கொண்ட விதிகளில் சிறிய மாற்றத்தைக்கூட செய்வதற்கு மத்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. இதுமட்டுமின்றி கேரள அரசு வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் சில ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என அறிவித்தபோது உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதை அனுமதிக்கவில்லை.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி நான்கு முறை ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  இவ்வாறு பிரதமர் ஊரடங்கினை அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல, மக்களுக்கும் பெருந்தொல்லைகள் அளித்துள்ளது.  மாநிலங்களுடன் கலந்து பேசாமல், எந்த முன்தயாரிப்பும் இல்லாமல், அதிரடியாக ஊரடங்கை அறிவிப்பதால், இந்திய நாட்டு மக்கள் எண்ணில் அடங்காத கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.  உதாரணமாக பிரதமர் மார்ச்-24 ஆம் தேதி, காணொலி காட்சியில் தோன்றி, அதிரடியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார்.  அதன் பின்னரும் தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.  அதிரடியாக ஊரடங்கு அறிவித்த காரணத்தால் பலகோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்வி, தொழில், வியாபாரம், சுற்றுலா போன்றவைகளுக்காக பல மாநிலங்களுக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாநிலத்துக்கு உள்ளேயே பல காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டார்கள்.  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்துகொள்ள முடியாமல் மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.

பிரதமர் அறிவிப்பதற்கு முன்னரே ஊரடங்கினை மாநிலங்களின் சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர்கள் அறிவித்த இடங்களில் இந்த நெருக்கடிகள் ஏற்படவில்லை. இதைப்போல முழு ஊரடங்கினை மாநில முதலமைச்சர்கள் மூலம் அறிவிக்கிற ஏற்பாட்டினை பிரதமர் செய்திருந்தால் ஊரடங்க காலத்தில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், நெருக்கடிகள் பெரும்பகுதி தவிற்திருக்க முடியும்.

ஒருவேளை, கொரோனாவை எதிர்த்த போராட்டத்தை வீரியத்துடன் நடத்த வேண்டுமென்ற அக்கறையில் பாரதப்பிரதமர் இத்தகைய ஊரடங்கினை அறிவித்தார் என வாதிடக்கூடும். ஆனால், இது உண்மைக்கு மாறானது. பிப்ரவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அந்நாட்டு அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். பிப்ரவரி மாத கடைசியில் கொரோனா வேகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மோடி குஜராத்தில் உருளைக்கிழக்கு விவசாயிகள் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார். கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்களுக்கு பல நாடுகள் அல்லாடிக்கொண்டிருந்தபோது, சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தேன் என பெருமை பேசிக்கொண்டிருந்தார். மார்ச் மாதம் கேரளாவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான ரசவாத பணிகளில் ஈடுபட்டிருந்தார். உண்மையில், பிரதமர் மோடிக்கு கொரோனா குறித்த அக்கறை இருந்திருக்குமேயானால், பிப்ரவரி மாதத்திலேயே மாநிலங்களை உஷார்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்க முடியும். இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றை தொடக்கத்திலேயே தடுத்திருக்க முடியும் என்பதோடு, நீடித்த ஊரடங்குகள்கூட அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. “பேரிடர் மேலாண்மை சட்டம்-2005” என்பது பலவிதமான பேரிடர்கள் குறித்த வரையறுப்புகளைக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தில் பெருந்தொற்று (epidemic) நோய்கள் இடம்பெறவில்லை. ஆனால், மத்திய அரசு, இந்த சட்டத்தின்கீழ் கோவிட்-19க்கான விதிகளை உருவாக்கி, அதை மாநில அரசுகளின் தலைகளில் திணித்து அமலாக்கக் கோருவது அரசியல் சட்டத்துக்கே விரோதமானதாகும். இது மட்டுமின்றி, பொது சுகாதாரம், நோய், மருத்துவம் ஆகிய இத்துறைகள் அனைத்தும் மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் உள்ளதாக அரசியல் சட்டம் வகுத்து அளித்துள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளில், மாநில அரசுகள் மட்டுமே விதிகள், உத்தரவுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இத்துறைகளில் எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கக் கூடாது.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளில் இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி கோட்பாட்டில் மத்திய அரசு கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும், மாநிலங்கள் சுயாதிபத்திய உரிமை கொண்டதென அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. இதன் அர்த்தமென்னவெனில், மாநிலங்களுக்கு வகுத்தளிக்கப்பட்டுள்ள உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அரசியல் சட்ட அடிப்படைக்கு விரோதமானது என்பதே. ஆனால், கோவிட்-19 என்ற பெருந்தொற்று பரவல் நோய் குறித்த அனைத்து நடவடிக்கைகளும்.. அதாவது நோய் தடுப்பு, மருத்துவ சிகிச்சை, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவைகளில் உத்தரவுகளை பிறப்பிக்கவும், அரசாணைகளை பிறப்பித்து செயல்படுத்தவும், மாநில அரசுகளே அதிகாரம் கொண்டவைகளாகும். இந்த சட்ட வரம்புகளை மீறிய மத்திய மோடி அரசு, கோவிட்-19 தொடர்பான விதிகளை உத்தரவுகளாக பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது.

பெருந்தொற்று நோய்கள் சட்டம்

பெருந்தொற்று பரவல் நோய் மீதான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான ஒரு சட்டம் பிரட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டு, இன்றும் அது அமலில் உள்ளது. இச்சட்டத்திற்கு “பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897 (Epidemic diseases Act-1897) “என அழைக்கப்படுகிறது. சுமார் 120 ஆண்டுகளை கடந்துவிட்டதால் இச்சட்டம் அமலில் இருக்க வாய்ப்பில்லை என சிலர் கருதக்கூடும். ஆனால், உண்மை என்னவெனில் இப்போதும் இச்சட்டம் அமலில் இருப்பதும், இச்சட்டத்தை பயன்படுத்தி சில மாநில அரசுகள் கோவிட்-19 காலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. மோடி அரசு ஊரடங்கினை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஐ பயன்படுத்தி கோவிட்-19 காலத்தில் முதன்முறையாக மார்ச்-22ல் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னாலேயே கேரள அரசு பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897ஐ பயன்படுத்தி கேரளாவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதேபோல, இதர சில மாநிலங்களும் இச்சட்டத்தை பயன்படுத்தி தங்கள் மாநிலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளன.

இச்சட்டம் பெருந்தொற்று நோய், பரவல் நோய் உள்ளிட்ட நோய்கள் மீதான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சட்டமாகும். கடந்த பல்லாண்டுகளில் இச்சட்டத்தின்படியே நோய் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதும், அந்நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கமளிப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது- இச்சட்டத்தில், மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெருந்தொற்று பரவல் நோய் ஏற்பட்ட காலங்களில் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரையும், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு வருவதையும், மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பவர்களையும் கண்காணித்து முறைப்படுத்துவதற்கான பணிகளை மட்டுமே மத்திய அரசு செய்ய முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கண்ட சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகளின் இறையாண்மையை தவிடுபொடியாக்கி, மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாத கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் உருவாக்கி மாநில அரசுகளின் மீது திணித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், பகிரங்கமாக அரசியல் சட்டத்தை மீறுவது என்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்கு சமாதி கட்டுவதுமாகும்.

பிஎம்-கேர்

கோவிட்-19ஐ பயன்படுத்தி, பிரதமர் மோடி தலைமையில் பிஎம்-கேர் என்ற புது நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைந்தது முதல் இத்தகைய இடர்ப்பாடு காலங்களில் உதவி செய்வதற்கென பிரதம மந்திரி நிவாரண நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக, இந்த புதிய திட்டத்தினை மோடி அரசு உருவாக்கி உள்ளது. இந்நிதியினை பராமரிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும், தணிக்கை செய்வதற்குமான ஏற்பாடுகள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

70 ஆண்டுகளுக்கு மேலாக பிரதம மந்திரி நிவாரண நிதி அமலில் இருக்கும்போது, இத்தகைய புதிய திட்டம் ஏன் என்ற கேள்விக்கு நியாயமான பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த நிதி திரட்டல் ஏற்பாட்டிலும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2%ஐ சமூக சேவை திட்டங்களுக்கு(சிஎஸ்ஆர்) செலவழிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த சிஎஸ்ஆர் நிதியை கம்பெனி நிர்வாகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ள பிஎம்-கேர் நிதிக்கு தாராளமாக அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம், மாநில முதலமைச்சர்கள் தலைமையில் உள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கம்பெனி நிர்வாகங்கள் இந்த சிஎஸ்ஆர் நிதியை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியை பிஎம்-கேர் நிதிக்கு மட்டுமே அளிக்க முடியும். நிதி பற்றாக்கறையில் தடுமாறும் மாநில அரசுகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கான சோதனைகள், மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, நோய் தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, மாநிலம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற போன்ற அடுக்கடுக்கான பணிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அனைத்துப் பகுதி மக்களுக்கும் உணவு, அடிப்படைத் தேவைகள் மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டிய பெரும் பணிகளை சமாளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகப்படியான நிதி மற்றும் மருத்துவ உபகரணங்கள், அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் தேவை ஏற்பட்டன. நாட்டில் உள்ள மாநில அரசுகளும் இந்தத் தேவைகளை ஈடுகொடுக்க முடியாமல், மூச்சுத்திணறும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தன. மருத்துவத் தேவைகளை ஈடுகொடுப்பதற்கும், மக்களின் வாழ்வாதார தேவைகளை ஈடுகொடுப்பதற்கும் தங்களது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து மாநில அரசுகள் ஓரளவுக்கே ஈடுகொடுக்க முடிந்துள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கிற மருத்துவ மற்றும் நிவாரண ஏற்பாடுகள், யானை பசிக்கு சோளப்பொறி இட்டது போலவே உள்ளன.

கொரோனா நோய் தொடர்பான மருத்துவப் பணிகளுக்கும் பொருளாதார இழப்பீடுகளை ஈடுசெய்வதற்கும் மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து அதிக நிதி அளிப்பதன் மூலமே கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் மத்திய மோடி அரசு மாநில அரசுகள் வற்புறுத்தி பல முறை கோரிக்கை எழுப்பிய போதிலும் போதிய நிதி அளிக்க மறுத்துவிட்டது.

உதாரணமாக, தமிழக முதல்வர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித்தேவை குறித்து ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் எனவும், அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 9,000 கோடி அளிக்க வேண்டும் எனவும், அதே போல 20-21ஆம் ஆண்டிற்கு மாநில அரசுக்கு 33% கூடுதல் கடன் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 3000 கோடியும், நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ. 1321 கோடியும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து முன்பணமாக ரூ. 1000 கோடியும் கோரியிருந்தார். இது மட்டுமின்றி, ஏற்கனவே தமிழகத்திற்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை மானியமாக 15வது நிதிக்குழுவின் சிபாரிசுப்படி ரூ. 4023 கோடியும் ஜிஎஸ்டி வரிப் பகிர்வில் மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்குத் தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை போன்ற பல தலைப்புகளில் ரூ.16,400 கோடி அளித்திட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு இதுவரையில் மாநில அரசுக்கு வழங்கியுள்ள மொத்தத் தொகை ரூ. 6,420 கோடி மட்டுமே. அதாவது வரிவருவாயில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 1,928 கோடியும் வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 402 கோடியும் 2019-2020 டிசம்பர் ஜிஎஸ்டி பங்களிப்பாக ரூ. 1,369 கோடியும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 510 கோடியும் கிராமப்புற சுகாதார திட்டங்களுக்காக ரூ. 312 கோடியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அளிக்க வேண்டிய பாக்கித் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை மட்டுமே அளித்துள்ளது. இதில் வேதனை என்னவெனில், கொடூரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட சிறப்பு நிதியாக வழங்கவில்லை என்பதுதான். மேலும் மாநில அரசு கடன் பெறுவதற்கான அனுமதியைக் கூட மத்திய அரசு வழங்க மறுத்துவிட்டது.

மாநில அரசுகள் ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. நிதி வரவு-செலவில் பற்றாக்குறை ஏற்பட்டு கடனில் மூழ்கி வருகின்றன. தமிழக அரசின் கடன் சுமை நடப்பு ஆண்டோடு சேர்த்து ரூ. 4,56,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்காக மட்டும் ரூ. 30,000 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டில் கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சொந்த வருவாய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சொந்த வரிவருவாய் உற்பத்தி இழப்புகளாலும் வியாபார மந்தத்தினாலும் பெரும் சரிவு ஏற்படும். பத்திரப் பதிவு, டாஸ்மாக் விற்பனை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வருவாய் எதிர்பார்த்ததை விட சரிபாதியாகக் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளால் மாநில அரசின் செலவினங்கள் உயர்ந்து கொண்டே வருகின்றன. உதாரணமாக, கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ 3218 கோடி ஒதுக்கியதுடன் மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்கு கூடுதலான செலவுகளை மேற்கொண்டுள்ளது. ஒருபக்கம் நிதி நெருக்கடி இன்னொரு பக்கம் கூடுதல் நிதி செலவினங்கள் என்ற இருமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி்யுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியினால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற இயலும். ஆனால் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மாற்றாந்தாய்ப் போக்கு மாநில அரசுகளை முடக்கிப் போட்டுவிடும் ஆபத்தானதாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்றரை மாதங்கள் முடிந்துவிட்டன. ஐம்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்குகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதிலும், மருத்துவ சோதனைகள் நடத்துவதிலும், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இன்னொரு பக்கம் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, தொழில் உற்பத்தி பாதிப்பு, ஏழை-நடுத்தர மக்களின் வாழ்வாதார இழப்புகளை மீட்டெடுப்பதிலும் மத்திய மாநில அரசுகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

இத்தகைய தோல்விக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிய வேண்டும். உலகம் இதற்கு முன் கண்டிராத நோய்த் தொற்றால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் கூடுதலான நிதியினை ஒதுக்கி மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக, ஜப்பான் 71.1%, அமெரிக்கா 13%, ஸ்வீடன் 10%, பிரான்ஸ் 9.3%, ஸ்பெயின் 7.3% என தங்களது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த விகிதங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் 132 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் பாஜக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிய நிதி ரூ 1.7 லட்சம் கோடி மட்டுமே. அதாவது இந்திய நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 1% கூட இல்லை. மேலும் ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வரும் சில திட்டங்களுக்கான நிதியும் இந்தத் தொகையில் அடங்கும். அவைகளை நீக்கிவிட்டு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 0.6% என நிபுணர்கள் தெரிவித்துள்ளதில் இருந்து கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் மோடி அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கான அறிவிப்புகளில் மத்திய அரசே நேரடியான நிவாரண உதவிகளை பெயரளவிற்கு அறிவித்ததே தவிர, இத்தொகையில் மாநில அரசுகளுக்கான பங்கீட்டுத் தொகையாக ஏதும் வழங்கவில்லை.

கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ள நிலையில் தற்போது ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளதாக மோடி அறிவித்துள்ளார். இதற்கான நிவாரணத் திட்டங்கள் தவணை முறையில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளை எல்லாம் உற்று நோக்கினால் நேரடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாறாக வங்கிகளில் கடன் வழங்குவது; கடன் தவணை காலக்கெடுவை நீட்டிப்பது போன்ற வெற்று அறிவிப்புகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. நேரடியான நிவாரண நிதி எதையும் ஒதுக்காமல், ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி விட்டதாக இமாலய கட்டுக்கதைகளை பிரதமர் மோடியால் மட்டுமே எழுத முடியும்.

இந்த நிலைமைக்கு மாறாக உண்மையிலேயே கையில் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக ஒரு மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது கேரளா மட்டும்தான். அங்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது? கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடியினை ஒதுக்கியது மட்டுமின்றி அதில் சரிபாதி நிதியையும் அதிகாரங்களையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அளித்தது என்பதுதான் கொரோனாவை வெற்றிகரமாக அந்த மாநிலம் எதிர்கொண்டதில் இருக்கும் சூட்சுமம் ஆகும். மாநில அரசின் அழைப்பை ஏற்று உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் நேரடியாக மக்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் கேரளத்தில் 1400க்கும் மேற்பட்ட சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உணவு உறுதி செய்யப்பட்டது. இவற்றை நடத்துவது ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி மன்றங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பணிகள் முழுவதையும் உள்ளாட்சி அமைப்புகளே செய்கின்றன. பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பு மையங்களை உள்ளாட்சி மன்றங்களே ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் மாநில அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து தந்தது. கேரளத்தில் உள்ளாட்சி அமைப்பின் ஒரு பகுதியாகவே பெண்களின் மேம்பாட்டுக்கான குடும்பஸ்ரீ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக இன்னும் களத்தில் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளால் செயல்பட முடிந்திருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலும் பாதிப்பும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகாரப்பரவல் மூலமாகத்தான் கேரளா அரசு அதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

எனவே கொரோனா பாதிப்பு, அதைக்கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் மருத்துவம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் நிதியையும் தன்வசம் குவித்துக்கொள்ளாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக உள்ள கூட்டாட்சி தத்துவம் என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றி மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம், கூடுதல் நிதி; உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், சரிபாதி நிதி ஒதுக்கீடு என முழுமையான அதிகாரப்பரவல் மட்டுமே கொரோனா உள்ளிட்ட எத்தகைய நெருக்கடியையும் திறம்பட எதிர்கொள்வதற்கான வழியாகும். மத்திய அரசுக்கு அதை உணர்த்த வேண்டியதும், செயல்படுத்த வைக்க வேண்டியதும் நமது கடமையாகும்.

இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை

கே. பாலகிருஷ்ணன்

குரல்: யாழினி

தமிழகத்தில் மாநில கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் உள்ளது. கிட்டத்தட்ட 95 சதவீத மக்கள் இடஒதுக்கீடு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால் இதர மாநிலங்களில் இத்தகைய நிலைமை இல்லை. சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை பெறும் வரம்புக்கு வெளியில் உள்ளனர். எனவே, இம்மாநிலங்களில் தங்களுக் கும் இட ஒதுக்கீடு சலுகை வேண்டுமென அவர் கள் கோருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

தமிழகத்தில் மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 252 சாதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான பிற்படுத்தப் பட்டோர் சாதியில் 181 சாதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதில் விடுபட்டுள்ள 71 சாதி களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெறும் வாய்ப்பு தற்போது இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய இதர பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம் இவர்களுக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகை பெற இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் மயம்

அதுமட்டுமின்றி, அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் நாளுக்குநாள் மூடப் பட்டோ, தனியார் மயமாக்கப்பட்டோ வரு கின்றன. இருக்கும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டு டிசம்பர் கணக்கெடுப்பின்படி மோடி ஆட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 1 கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) தெரிவித்தது. மத்திய-மாநில அரசுகளால் அமலாக் கப்படும் தனியார் மயம், தாராளமயக் கொள்கை களால் இடஒதுக்கீடு நீர்த்துப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வேலைவாய்ப்பு களில் தோராயமான கணக்குப்படி 85 சதவீதம் தனியார் நிறுவனங்களிலும், 15 சதவீதம் மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளன. நிரந்தரப் பணிகளை வெளிநிறுவனங் களைக் கொண்டு செய்விப்பதன் விளைவாக (அவுட்சோர்சிங்) அவையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்நிலையில் தனியார் துறைக்கும் இட ஒதுக் கீட்டு கோட்பாட்டை விரிவுபடுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் இம்ம சோதா விவாதத்திற்கு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு உண்மையான ஆபத்து தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் தான் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இடஒதுக் கீட்டு கோட்பாட்டை பாதுகாக்க வேண்டுமெனில், தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று வது அவசர, அவசியமானதாகும். இதற்கு அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் இணைந்து குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

நிலக்குவியல்

இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது சாதிகள் குறித்தும் அதற்கு அடிப்படை யாக உள்ள நிலவுடைமை குறித்தும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் நிலைப்பாடாகும். நீடித்து வரும் வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி போன்ற அனைத்து சமூகச் சீர்கேடுகளுக் கும் அடிப்படையான காரணம் விடுதலைக்குப் பிறகும் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலக்குவியலே ஆகும். இந்த நிலக் குவியலை உடைத்து நிலமற்றோர் அனைவருக்கும் நிலவிநி யோகம் செய்வதன் மூலம் மட்டுமே வேலையின் மைக்கு முடிவு கட்ட முடியும். அதாவது நிலமற்ற அனைவருக்கும் நிலவிநியோகம் செய்து அவர் களது வருவாய்க்கு வழி செய்வதன் மூலம் இம்மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முடி யும். மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது பொருட்கள் உற்பத்தி, விற்பனை, அதனால் ஏற்படும் தொழில்வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படும்.

இதையே மண்டல் கமிஷன் ”தீவிரமான நிலச் சீர்திருத்தம், கிராமப்புற பொருளாதார மறுசீர மைப்பு, பூதான இயக்கம், கால்நடை மற்றும் பால் பண்ணை வளர்ச்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும்”என்று சொன்னதோடு“நிலச்சீர்திருத் தத்தின் மூலம் இன்றைய நிலவுடைமைகளை மாற்றாமல் உண்மையான சமூகநீதி கிடைக்காது” எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மையமான பிரச்சனையை கையில் எடுக்க அன்றும் இன்றும் உள்ள ஆட்சியாளர் கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

இடதுசாரி அரசுகள்

இந்த நிலச்சீர்திருத்தத்தை அடிநாதமாகக் கொண்டே 1957-ம் ஆண்டில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான இடதுசாரி அரசில் தொடங்கி இன்று வரை கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசுகள் நிலச்சீர்திருத்த நடவடிக் கைகளை மேற்கொண்டன. இதன் மூலம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட உபரி நிலங்களில் கேரளாவில் 70,834 ஏக்கர் 1,68,912 பயனாளிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10,52,269 ஏக்கர் 31,37,662 பயனாளிகளுக்கும், திரிபுராவில் 1,599 ஏக்கர் 1,424 பயனாளிகளுக்கும் விநியோகிக் கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலங்களில் 21 சதவீத நிலம் மேற்குவங்கத்தில்தான் அறிவிக்கப்பட்டது.  இந்தியா முழுவதும் இவ்வாறு நிலம் பெற்ற பயனாளி களில் 54.2 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தில்தான் உள்ளனர் என்பதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசின் முனைப்பையும் செயல்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.  (இது 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்)

தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் நிறை வேற்றப்பட்டபோது 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் விநியோகம் செய்யப்பட்ட மொத்த உபரி நிலம் 1.90 லட்சம் ஏக்கர் மட்டுமே. மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டிய உண்மையான சமூக நீதிக்கான நில விநியோகம் செய்யப்பட்ட லட்சணம் இதுவே.

உண்மையான சமூகநீதி

இடஒதுக்கீடு பிரச்சனையில் தீவிரம் காட்டும் கட்சிகளும் இம்மக்களுக்கு நிலவிநியோகம் செய்ய வேண்டும் என்பதை மறந்தும்கூட வற்புறுத்து வதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற நிலவுடைமையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் உண்மையான சமூகநீதி கிடைக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் தொழிலதிபர் களிடம் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்றோருக்கு விநியோகம் செய்வது விவசாயப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளோடு தொடர்புடையதாகும். இதை சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் மூலம் மட்டுமே நடத்துவது சாத்தியமில்லை. இத்தகைய விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் மட்டுமே நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், கந்து வட்டிக் கும்பல்கள் ஆகியோரின் கோரப்பிடியி லிருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப் பட்ட உழைப்பாளி மக்களை விடுவிக்க முடியும். இவர்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட முடியும். இதைத் தவிர இதற்கு மாற்று வழி கிடையாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திட்டவட்டமான முடிவாகும்.

மக்கள் ஒற்றுமை

விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டுமெனில் தாழ்த்தப்பட்ட, பழங் குடி, பிற்படுத்தப்பட்ட மக்களது ஒற்றுமை மட்டுமல்லாது இதர சாதிகளைச் சேர்ந்த உழைப் பாளி மக்களின் ஒற்றுமையும் அவசியமானதாகும். சமூகத்தில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களின் போர்க்குணமிக்க வர்க்க ஒற்றுமையை உருவாக்குவது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள நீண்ட பயணத்தின் குறிக்கோளாகும்.

ஆனால் உழைப்பாளி மக்களை முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்துவது இம்மக்களின் நலன்களுக்கு விரோதமானதாகும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்துள்ளது. ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டு கொள்கை யினை கண்டிப்பாக அமலாக்க வேண்டும் என வற்புறுத்தும் அதே நேரத்தில், இதர சாதிகளில் உள்ள உழைப்பாளிகள் மற்றும் ஏழை மக்களுக் கும் ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென நீண்டகாலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருவது மேற்கண்ட விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமெனில் அனைத்து உழைப்பாளி மக்களின் வர்க்க ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் அணுகு முறையே ஆகும்.