தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும்

(குரல்: யாழினி)

என்.குணசேகரன்

தமிழக சமூக இயக்கத்தில் சீர்திருத்த முயற்சிகள் பல வடிவங்களில் நடந்துள்ளன. பல்வகை கருத்தோட்டங்களாகவும், தனிநபர் செயல்பாடுகளாகவும், மக்கள் இயக்கங்களாகவும் அவை பரிணமித்துள்ளன. பண்டைய காலத்திலிருந்தே சமூக அசமத்துவம், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதிய, மத நடைமுறைகள் மீதான கண்டனக் குரல்கள் ஒலித்து வந்துள்ளன.

கடந்த கால சீர்திருத்த முயற்சிகள்  சமூக சமத்துவ   இலக்குகளை எட்டுவதில் எத்தகு முன்னேற்றத்தை சாதித்துள்ளது? அந்த முயற்சிகள் முழுமையான சமூக சமத்துவத்தை ஏன் எட்டவில்லை? என்கிற கேள்விகள் எழுகின்றன. சீர்திருத்த மனப்பாங்கு கொண்ட மக்களிடமும்  இக்கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இடதுசாரிகள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக சீர்திருத்த வரலாற்றை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தில்   புரிந்து கொள்வது அவசியம். இதில் பாட்டாளி வர்க்க இயக்கம் இடையறாது  செயலாற்றுவதும் அவசியமான கடமையாகும்.

(தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றின் முக்கியத் தடங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன; தமிழக சமூக சீர்திருத்தம்: மதுக்கூர் ராமலிங்கம்; ஜூலை, மார்க்சிஸ்ட் 2018)

தமிழக வரலாற்றில் சமூக சீர்திருத்தம்  

சாதி, மதம், குடும்பம், திருமணம், மொழி போன்ற பல தளங்களில் மனிதர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறைகளையும், பரம்பரியமான பிற்போக்குக்  கருத்துக்களையும் எதிர்கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள்  செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பினை நிராகரிக்க முடியாது. இன்றைய சமூகம் உருப்பெற அவை முக்கிய பங்கினை ஆற்றின.

கி.மு. நாலாம்  நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வேதங்கள் சார்ந்த பழைய வைதிக மரபு ஆதிக்க நிலையில் இருந்தது. இது  வர்க்கப் பிளவுகளும், வர்ண  பேதங்களும் வளர்ந்த காலமாகவும் இருந்தது. இனக்குழு அமைப்புக்கள் மாறி வேளாண் உற்பத்தி பரவியிருந்த நிலை ஏற்பட்டது. இது, நிலவுடைமையாளர்கள், பண்ணையடிமைகள் எனும் வர்க்கப் பிரிவுகள் கொண்ட நிலவுடைமை சமுதாயம்  வளர்ந்த காலம். இதனை கி.மு 7 முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்த நிலையில் வணிக எழுச்சிக் கட்டம் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இதனை அறநெறிக்காலம் என்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளப்பட்ட பௌத்த, சமண, ஆசீவக மரபுகள் மேலோங்கின.

இந்நிலையில், வர்க்கப் பிளவுகள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் பெற்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளின் போதும்,  தமிழ் சமூகத்தில்  வர்க்க வேறுபாடுகள் கூர்மையாக இருந்தன.

வர்க்கப்  பாகுபாடுகளால் பிளவுபட்டு  இருந்த நிலை, சமூக ஒடுக்குமுறை சூழல் ஆகியவற்றால், சமமற்ற, அநீதியான சமூக உறவுகள் இருந்தன. இந்த சமமற்ற எதார்த்தத்தை நியாயப்படுத்தும்  வகையில்,  கருத்தியல் தளத்தில் வர்ண முறை, மதக்கோட்பாடுகள், சாத்திரங்கள்   நிலைபெற்றன. வர்ண முறை ஏற்படுத்திய அநீதியான ஏற்றத்தாழ்வை சகித்திடாமல் அதன்   மேலாதிக்கத்தை எதிர்க்கும் போக்கும் உருவானது. சமூகத்தில் கனன்று கொண்டிருந்த ஆளும் வர்க்க ஆதிக்க எதிர்ப்புக் குமுறல், வர்ண, மத, பிற்போக்குத்தன எதிர்ப்பாகவும் எதிரொலித்தது. புத்தம் மற்றும்  சமணத்தின் எதிர்ப்புக் குரல்கள்   இந்த வகையைச் சார்ந்ததே .

இந்த விரிவான வரலாற்றுக் காலப்பரப்பில் ஒரு முக்கிய போக்கினை கண்டுணர்வது அவசியம். சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது. 

கோயில் எனும் நிறுவனம்

தமிழகத்தில் சமண, பௌத்த மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வைதீக மதம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இறுக்கமாகி வந்த நிலவுடைமை உறவுகளின் விளைவாக சைவ-வைணவ மதங்கள் வலுவாக காலூன்றின. இந்தக் கட்டத்தில் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்டன. உண்மையில் அவை உயர் அடுக்கில் இருந்த சாதிகளின் அதிகார மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக, பிராமணிய ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உட்பட்டு சமூகம் இயங்குவதை கோயில் என்ற நிறுவனம் உறுதி செய்தது.

அது மட்டுமல்லாது, சமூக உழைப்பில், குறிப்பாக வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் உபரியை அபகரிக்கும் நிலப்பிரபுத்துவ தன்மையும் கோயில் செயல்பாட்டில் இருந்தது.

மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதைக் குறிப்பிடும் போது  “மார்க்ஸ் குறிப்பிடும் ‘நில வாடகை ‘இங்கே நிறுவன ஏற்பாட்டின் முலமாக உயர்குடிகளுக்கு போய் சேர்ந்தது” என்கிறார். (“தமிழர் வரலாறு: சில கேள்விகளும், தேடல்களும்” -தேவ பேரின்பன்) இங்கு  அவர் குறிப்பிடும் நிறுவன ஏற்பாடு என்பது கோயில் நிர்வாகத்தைக் குறிப்பதாகும்.

ஆக, சமூகத்தின் வளங்கள், உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டை மன்னர்கள் வைத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணீய கருத்தியலின் துணையோடு பிராமணர்கள்  செல்வாக்கு செலுத்தினர். கோயில் என்ற நிறுவனம் மூலமாக இந்தக் கட்டுப்பாடும், உபரி அபகரிப்பும் நிகழ்ந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலம், நீர், பொருள் என எதிலும் உரிமை இல்லாத நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், பஞ்சமர்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிரானதாகத்தான் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அடிமைத்தனமும் உழைப்பு சுரண்டலும் நீடித்த நிலையில் அவற்றில் மாற்றம் ஏற்படாத சூழலில் சமூக சீர்திருத்தக் குரல்கள் மெல்லியதான தாக்கமே செலுத்த முடிந்தது.

எல்லைக்குட்பட்ட வெற்றி

வர்க்க, சாதிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்து நீடிப்பதுதான்  அடிப்படைப் பிரச்னை. இது தற்போதைய காலம் வரை நீடிக்கிறது. 19,20-ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான சீர்திருத்தக்  கருத்துக்களும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் எழுந்தாலும் சுரண்டல் முறை நீடித்த நிலையில், சமூக வளங்கள், உற்பத்தி சக்திகள் மீது ஆங்கிலேய ஆட்சியும் விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  சமூக ஆதிக்க உறவுகளும் உறுதியாக இருந்த நிலையில் மன  மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரலில்தான் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிற்க முடிந்தது.

ஆனால் இதற்கும் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் இருந்தது. சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்து சில சட்டரீதியான பாதுகாப்புக்களையும் சமூக தளத்தில் சமத்துவ நடைமுறைகளையும் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இது ஒரு எல்லைக்குட்டபட்ட வெற்றியாகவே இருந்து வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான கெயில் ஓம்வடட் ஒரு மூத்த ஆய்வாளர். ஜோதிபா புலே மற்றும் அம்பேத்கர்  குறித்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

அவர் தனது “தலித்-எதிர்கால பார்வைகள்” எனும் நூலில்

“விடுதலைக்கான வழி என்பது பொருளியல், சித்தாந்த தளத்தில்  போராட்டம்தான்” என்று வரையறுக்கிறார். மேலும் அவர், அம்பத்கார் பொருளியல் தளத்தில் தனது  போராட்டத்தை கைவிடவில்லை என்கிறார். “ஆனால், அம்பேத்காரின் அழுத்தம், சித்தாந்த கலாச்சார போராட்டங்களில் இருந்தது. அவர் பொருளாதார மாற்றுத் திட்டத்தை அவற்றோடு இணைப்பதில் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அதனை அவர் கூர்மைப்படுத்தினார்” என்று கெயில் ஒம்வடட் எழுதியுள்ளார். இது தமிழக சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றுக்கும், பெரியார் தலைமை தாங்கிய திராவிட இயக்க கட்டத்திற்கும் பொருந்தும்.

1930-காலக்கட்டத்திய சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையுடன், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற  கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளடங்கிய இயக்கமாக செயல்பட்டது. உண்மையில்,  அந்த இயக்கம் .சமூக சீர்திருத்த செயல்பாட்டுடன் சேர்ந்து, சோசலிசம், கம்யூனிசம் என்ற பொருளாதார மாற்றுத்  தடத்திற்கு வந்தது. பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் அழுத்தத்தினால், மீண்டும் சமூக சீர்திருத்தம் என்ற எல்லைக்கோட்டுக்குள் திரும்பியது.

இந்த சறுக்கல்கள்  இருந்த போதும், தமிழக சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு சில சிறப்புக்கள் உண்டு. வட மாநிலங்களில் சமூக சீர்திருத்தம் ராஜாராம் மோகன் ராய் போன்ற முற்பட்ட பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இப்பணியை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து உருவான சிந்தனையாளர்களும் முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் பிரிவு சார்ந்த மக்கள் திரட்டலும் நிகழ்ந்தது. வடக்கில், அம்பேத்கார் 5 இலட்சம் மக்களைத் திரட்டி புத்த மதத்தில் சேருகிற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையை தமிழக சீர்திருத்த இயக்கம் தேர்ந்தெடுக்காதது முக்கியமானது.

எனவே தமிழகத்தில் பொருளாதார மாற்று தடத்தில் பயணிக்கும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. இவ்வாய்ப்பினை இடதுசாரி சித்தாந்த நிகழ்ச்சி நிரல் தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் வலுமிக்கதாக வளர வேண்டும்.

கொடூரமான ஏற்றத்தாழ்வான, ஒடுக்குமுறை, சுரண்டல் அடித்தளம் கொண்ட சமூக உறவுகளை மாற்றி உழைக்கும் மக்களின் கட்டுப்பாடும் அதிகாரமும் மேலாதிக்கம் பெறும் நிலையே சாதி, மதம், பாலின, சமூக ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான வழி. கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களால் இதனை எட்ட இயலவில்லை. சமூக உறவுகளை அடியோடு புரட்டிப் போடுகிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததாக சமூக சீர்திருத்தம் பயணிப்பதுதான் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையாக இருக்க முடியும். இதுவே தமிழக சீர்திருத்த வரலாறு நமக்கு அளிக்கும் படிப்பினை.

சாதிய ஒழிப்பு இலட்சியம்   

இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் சாதிய முறைக்கு எதிராக     எவ்வாறு பயணித்தது என்பதைக் காணலாம்.

தமிழகத்தில்சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் சாதிய முறையை ஒழிப்பது என்பது முக்கிய இலக்காக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் எனத் துவங்கி  இடைக்கால பக்தி இயக்கம், பிறகு சித்தர்கள்  மற்றும் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த வள்ளலார்  உள்ளிட்ட சாதி எதிர்ப்புக்   குரல்கள், இயக்கங்கள் என விரிந்த வரலாற்றுப் பரப்பு இதில் உண்டு.

இதன் தற்போதைய நிலை என்ன?

இதனைப் பற்றி   பேராசிரியர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார்.  “சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட, எல்லா இடங்களிலும், சாதி ஐக்கியம் காணும் இயக்கங்களாக மாறிப் போயுள்ளன. இது வேடிக்கையாக இருந்தாலும், தர்க்க ரீதியாகவே இது நிகழ்ந்துள்ளது”.

இதற்கு எடுத்துக்காட்டுக்களாக  தமிழகத்தின் திராவிட இயக்கம் உள்ளிட்டு, பஞ்சாபின் சரின் சபா அமைப்பு, கேரளத்தின் எஸ்.என்.டி.பி. (SNDP) மற்றும் நாயர் சேவை சேவை அமைப்பு(NSS) போன்றவற்றை  அவர் குறிப்பிடுகிறார்.

இவை தங்களது சாதி சமூகத்தின் தேவையை கருதி சாதிய எதிர்ப்பு முழக்கங்களை  எழுப்பின. எனினும் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவை, முக்கியமாக, அந்த சமூகத்தின் நடுத்தர வர்க்கங்கள். எனவே தங்களது  தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததே தவிர முற்றான சாதிய முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி அந்த இயக்கங்கள் செல்லாமல் சாதிய திரட்டலை முன்னெடுக்கும் இயக்கங்களாக நின்று போயின.

எனவே இதில் ஒரு வரலாற்று மறு பரிசீலனை தேவைப்படுகிறது. சாதிய முறையில் உள்ள ஒடுக்கும் மனித உறவுகளை மாற்றி சமத்துவ நிலையை அடைவதற்கான போராட்டம் தேவை. ஆனால்  வர்க்க உறவுகளில் உள்ள ஆதிக்கத் தன்மை நீடித்தால் சமத்துவ நிலையை எட்ட முடியாது. அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்துடன் சாதிய ஒழிப்பு இலட்சியம் பயணிக்க வேண்டும். தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றினை விமர்சனரீதியில் ஆராய்ந்தால், இந்த முடிவிற்குத்தான் வர இயலும்.

சாதிய ஒடுக்குமுறையில் போட்டி

பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் சாதிய அடுக்கில் மேல் மட்ட சாதி  பிரிவினரிடையே போட்டா போட்டி இருந்து வந்துள்ளது. இதுவும் கூட சாதிய முறையை அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாக்கியது. எப்போதுமே சாதிய அடுக்கு என்று சொல்லப்படும் சாதிய முறைமை வர்க்க சுரண்டல் நோக்கத்திற்காகவும், தங்களது வாய்ப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சாதிகளுக்குள் இருந்த மேல்பிரிவினரிடையே மோதல்கள் இருந்தன.

இந்த நிகழ்வினை பேராசிரியர் நா.வானமாமலை மிக நுட்பமாக விவரிக்கின்றார் .

“நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும், திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலை நாட்ட முயன்றனர். தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள்  தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும், தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும்  கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.”

இதற்கு சான்றாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சாதி மேன்மை போற்றும் நூல்களைக் குறிப்பிடுகின்றார். வேளாளர், கிராமணி, நாடார், பரதவர் போன்ற சாதிகளை உயர்நிலை இடத்தில நிறுத்தும் முயற்சியாக பல நூல்கள் வெளிவந்ததை அவர் குறிப்பிடுகிறார்.

ஒடுக்கப்பட்ட தளத்தில் இருந்த தலித் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இந்தப் போட்டியில் இயல்பாகவே இருந்ததில்லை. மிகவும் பிந்தைய கட்டத்தில், சமீபத்திய காலங்களில்தான் அவர்கள் மத்தியில் இந்த தனமைகள் வெளிப்பட துவங்கின.

ஆக சாதிய சிக்கல்களில் அழுத்தமான பிரச்னையாக வர்க்க முரண்பாடுகளே மேலோங்கி இருந்ததை வரலாறு நெடுக்கிலும் காண இயலும். 

கடந்த காலத்தின் நுண்ணிய படிப்பினை

ஆங்கிலேய ஆட்சி நடந்த சூழலில் காலனியக் கொள்கைகள் மக்களை வாட்டி வதைத்தது. 19-ம் நூற்றாண்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனைக் கண்ட வள்ளலார் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக “ என்று முழங்கினார். இது, உண்மையில் அன்றைய காலனிய பொருளாதார கொள்கைக்கான எதிர்ப்பாக அமைந்துள்ளது.

தமிழக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வள்ளலார் மத, சாதிய சடங்குகள், மரபுகள் ஒழிய வேண்டுமென முயற்சித்தார். புராணங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பல மூட நம்பிக்கைகளை விதைக்கிற கருத்துக்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் எதிர்த்தார்.  “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற அவரது குரல் வலிமையான சமூக சீர்திருத்தக் குரலாக அமைந்துள்ளது.

அவரது “கருணையிலா ஆட்சி” என்ற எதிர்ப்புக் கருத்து ஆளும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரானது. அத்துடன்   அவரது “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற சீற்றம் பொங்கும் குரல் சாதி, மதம் அடிப்படையிலான ஒடுக்குமுறை உறவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரண்டும் இணைந்தவாறு ஒலிக்கும் இந்தப் பாங்கு தற்கால சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கற்க வேண்டிய நுண்ணிய படிப்பினையாக திகழ்கிறது.

பொருளாதார அசமத்துவத்தையும், சமூக முறையில் இருந்த சாதி, மத, பாலின அசமத்துவத்தையும் இணைத்து எழுந்த எதிர்ப்பு சிந்தனைகள் தமிழக வரலாற்றில் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. பூதவாதிகள் என்று மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பொருள்முதல்வாதிகள் துவங்கி, சித்தர்கள், பிந்தைய காலத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம், அதன் சம காலத்தில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்க இயக்கமான கம்யூனிச இயக்கம் என நீண்ட வரலாறு உள்ளது.

உண்மையில் வள்ளலாரின் இரட்டை அணுகுமுறையான பொருளாதார அசமத்துவ எதிர்ப்பு, சமூக அசமத்துவ எதிர்ப்பு என்ற நிலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிந்தைய காலங்களில் காண முடியும்.1930- களில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கருத்துக்களோடு இணைந்து,  சிங்காரவேலரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதைக் குறிப்பிடலாம்.

இந்த வரலாற்றுப் போக்கு இன்றைய சமூக சீர்திருத்தக் கடமைகளை வகுத்துக்கொள்ள உதவுகிறது. நில உடைமை, பண்ணையடிமை போன்ற வர்க்க உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி, அதன் மீதான எதிர்ப்பியக்கம் உருவாக்கும் பணியுடன் இணைந்த கடமையாக சமூக சீர்திருத்தம் செல்ல வேண்டும். அப்பொதுதான் அதன் இலக்கை அது எட்ட முடியும்.

கடந்த கால பொருள்முதல்வாத தத்துவக் காலத்திலும், சித்தர்கள் மற்றும் வள்ளலார் காலத்திலும் வரையறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட கடமையை வகுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால்,வர்க்க அசமத்துவ உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை கொண்ட வர்க்கமான தொழிலாளி வர்க்கம் அப்போது உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த 21-வது நூற்றாண்டின் சம காலச் சூழலில்  அது சாத்தியம். ஆனால் கடந்த காலத்தில் நடந்தது போன்று சமூகத்தளத்தில் நிலவும் அசமத்துவத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்வதும், வர்க்க உறவு  சார்ந்த சுரண்டல் ஒடுக்குமுறையை புறக்கணிப்பதும் இலக்கை அடையும் பயணமாக இருந்திடாது.

வெகு மக்கள் உணர்வில் தாக்கம்

கடந்தகால சமூக சீர்திருத்தங்களில் இருந்த முரணான போக்குகளை புரிந்து கொள்வது இன்றைய கடமைகளை வகுத்திட உதவும். சமூக சீர்கேடுகளை களைவதற்கு சாதி மறுப்பு, மத மறுப்பு, கடவுள் மறுப்பு கருத்துக்களை பரப்புரை செய்தவர்களும் இருக்கிறார்கள். பழைய நாத்திகம், சாங்கியம், பௌத்தம், சமணம், சார்வாகம் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 20-ம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பினை முன்னெடுத்தது. கம்யூனிச இயக்கம் அறிவியல் கண்ணோட்டத்துடன் மதக் கண்ணோட்டங்களை அணுகியது.

இந்தக் கருத்தோட்டங்களில் பொருளியல் தள ஒடுக்குமுறைகளை எதிர்த்த பழைய சார்வாகம், இடைப்பட்ட காலத்தில் நிலவிய  சித்தர் மரபு, சமகால கம்யூனிசம் ஆகியவற்றை வரலாற்றில் தனித்த இடம் கொண்டவையாக கருத வேண்டும். ஏனெனில் இன்றைய தேவைக்கு படிப்பினைகள் பெற இவை முக்கியமானவை.

ஆனால் மதத்திற்குள் நின்று சீர்திருத்தம் காண விழைந்தவர்களும் தமிழக வரலாற்றில் நெடுக இருந்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கு வந்திருந்த கிறித்துவ போதகர்கள், கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுப் பணிகள், அவற்றின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட  சீர்திருத்தப் பிரச்சாரம், இதன் எதிர் விளைவாக சமய வரம்புக்குள் நின்று எழுந்த வைகுண்ட சுவாமிகள் இயக்கம், பிரம்ம சமாஜம், சன்மார்க்க சங்கம், மனுநீதி சட்டங்களை எதிர்த்து எழுத்துத் துறையில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா,  ஜி. சுப்பிரமணிய ஐயர், தியோசாபிகல் சொசைட்டி, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் துவக்க கால காங்கிரஸ் கட்சியில் எழுந்த சீர்திருத்த போக்குகள் என இந்த வரிசை நீள்கிறது. (இதற்கு காண்க: அருணன் எழுதிய ‘இருநூறு ஆண்டுக்கால சமூக சீர்திருத்த வரலாறு)

இத்தகைய கடந்த கால சமூக சீர்திருத்த செயல்பாடுகள் நிச்சயமாக வெகு மக்கள் உணர்வில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இவற்றை விமர்சனப் பார்வையுடன் உள்வாங்கி, அவற்றின்  தொடர் கடமைகளை வரையறுக்க வேண்டும். வர்க்க சுரண்டல் தொடர்ந்த நிலையில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின்  கலாச்சாரப் பிடியிலிருந்து வெகுமக்கள்  விடுபடுவது சோஷலிஸப் புரட்சிக்கு முக்கிய தேவை. எனவே கடந்த கால முயற்சிகளை முற்றாக நிராகரிப்பது தவறானது. அதேசமயத்தில் அவற்றை விமர்சனமின்றி ஏற்பதும் தவறானது.

மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்ஷி “நீண்ட காலமாக, சிக்கலான தன்மையுடன் மிக நுண்ணிய அளவில் வெகு மக்கள் உணர்வு மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றத்தின் விளைபொருளாக சோஷலிஸப் புரட்சி நிகழ்கிறது” என்கிறார். இந்த நுண்ணிய மாற்றம் சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சோஷலிஸப் புரட்சி எனும் மகத்தான மானுட விடுதலை நிகழ்வதற்கு சமூகத்தை இது இட்டுச் செல்கிறது. சமூக சீர்திருத்த தளத்திலும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு முயற்சிகளும் கூட  வெகுமக்கள் உணர்வில் தாக்கத்தை  ஏற்படுத்தும்.

எனவே, சமூக சீர்திருத்தப் பாதையில்  கடந்த காலம் சென்றடைந்த முன்னேற்றத்தை உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்னேறுவது அவசியம். கடந்த கால முயற்சிகள் இறுதி வெற்றியை எட்டாததற்கு முக்கிய காரணம் வர்க்க சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போனதுதான். அந்த நிகழ்ச்சி நிரலினை  உறுதியாகப் பற்றிக் கொண்டு சமூக சீர்திருத்த இலட்சியத்தை தொடர வேண்டும்.

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்

(குரல் : ஆனந்த் ராஜ்)
கட்சித் திட்டம் கூறுவது:

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது.

சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.
சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும்.

சமூக சீர்திருத்தம் என்றால் என்ன?

சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூகமும், வர்க்கமும்

சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன.

“பருவ வாணத்து படுமலை கடுப்ப
கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்”

என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது.

ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்.

ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது.

வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது.

பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது.

சமண, புத்த மதங்கள்

வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது.

வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது.

பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது.

வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும்.

பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி.

பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது.
மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன.

பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு.

சித்தர்களின் கலகக்குரல்

சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார்.
சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது.

ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே”
என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார்.
என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர்.

“பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ
மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே”
என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார்.

புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது.
உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார்.
பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார்.

சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர்.
“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே”
என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்”

என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது.
குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார்.

சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன.

சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல.

சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது.

ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜரும் சீர்திருத்தமும்

ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு.

கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது.

புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது.

“சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”.

1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.”

பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது.
19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின.

விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர்.

நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன.

உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார்.

நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது.
பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.
வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர்.

மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன.
அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை.
தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…

  • அன்வர் உசேன்

(பிரண்ட்லைன் இதழில் கே.என்.பணிக்கர் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது)

நவீன இந்தியாவின் வரலாற்றில் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தொடக்கம் எது? காலனியாதிக்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில், சமூக மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்தது என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள்  பொதுவாக மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பிற்காலத்தில் மிகவும் தீவிரமான அரசியல் போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன எனவும் கருதப்படுகிறது. இதிலிருந்துதான் இந்திய தேசியம் உருவானது என்பதும் மதிப்பீடு ஆகும். எனவே இந்திய தேசியம் என்பது இந்த மறுமலர்ச்சி இயக்கங்களின் நேரடி விளைவு என உருவகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றை பழங்காலம், மத்திய காலம், நவீன காலம் மற்றும் சமகாலம் என வகைப்படுத்துவது ஒரு மதிப்பீடு. காலனியாதிக்க காலம், சீர்திருத்த காலம், தேசிய இயக்க காலம் என வகைப்படுத்துவது இன்னொரு மதிப்பீடு. இத்தகைய மதிப்பீடுகள்தான் சமீப காலம்வரை இருந்தன. எனினும் இந்த மதிப்பீடுகள் கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டன. முதலில் மார்க்சிய ஆய்வாளர்கள் இதனை கேள்வி கேட்டனர். இவர்கள் தேசிய இயக்கத்தின் சமூக தோற்றுவாய் என்ன என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் தலித் ஆய்வாளர்களிடமிருந்து வலுவான கேள்விகள் எழுந்தன. இவர்கள் சாதி அடக்குமுறை அடிப்படையிலான மாற்று வரலாற்றை உருவாக்கினர். விளிம்பு நிலை மக்களின் வரலாறை உருவாக்கியவர்களும் இந்த மதிப்பீடுக்கு எதிராக சவால் எழுப்பினர். அடக்குமுறை மற்றும் அதன் விளைகள் குறித்து இவர்கள் அழுத்தமாக ஆய்வு செய்தனர். இத்தகைய மாற்று மதிப்பீடுகள் இந்திய வரலாற்றின் ஆய்வு குறித்த புதிய கருத்தாதக்கத்தை உருவாக்கின.

மறுமலர்ச்சியும் நவீனமயமும்

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இக்கேள்வி வேறு பல கேள்விகளை எழுப்புகிறது..

  • மறுமலர்ச்சி இயக்கம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டதா?
  • மறுமலர்ச்சி இயக்கம் ஏன் மதம் அல்லது சாதி கட்டமைப்பு சார்ந்து இருந்தது? ஏன் அது இத்தகைய எல்லைகள் கடந்து பயணிக்கவில்லை?
  • மறுமலர்ச்சி இயக்கம் என்பது வெறும் மேல் சாதியினரின் சமூக மற்றும் மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பிரதிபலித்ததா?
  • பிராமணிய கோட்பாடுகள் வகுத்த எல்லைகளை மறுமலர்ச்சி இயக்கம் மீறவில்லை எனும் மதிப்பீடு சரியானதாக இருக்குமா?
  • தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் வரலாறு பல்கலை கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை என்பது தற்செயல்தானா?
  • நவீன இந்தியாவின் பரிணாமம் குறித்த ஆவணங்கள் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் உருவான மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு எல்லைகளற்ற முக்கியத்துவம் தருவது ஏன்? இந்த ஆவணங்கள் தலித் மற்றும் விளிம்பு நிலை மக்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்தால் இக்கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.

நவீனம் பற்றிய விவாதம்:

மறுமலர்ச்சி இயக்கத்திலிருந்துதான் இந்தியாவில் நவீனத்துவதுவம் தோன்றியது என கூறப்படுகிறது. எனினும் உலக அளவில் மறுமலர்ச்சி என்பது என்ன. மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என  அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின. இவ்வாறு உருவான புதிய அழகியல் என்பது சமூக அமைப்புடனும் உற்பத்தி உறவுடனும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்தது. முதலாளித்துவ உதயத்தின் அறிவுசார் அங்கமாக இது இருந்தது. நிகழ் காலத்தை கடந்த காலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டியது. புதியதை பழையதிலிருந்து பிரித்து காட்டியது.

எனினும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில் “நவீனம்” என்பதற்கு பல அர்த்தங்கள் முன்னுக்கு வந்தன. “நவீனம்” என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியது. ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் உருவாக்கிய நவீனம் போலவே ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவானதா? இது ஒரு முக்கிய கேள்வி. ஏனெனில் காலனியாதிக்க காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளால் நவீனத்துவத்தின் பல அம்சங்களும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன எனும் ஒரு கருத்து உள்ளது. காலனியாதிக்க ஆட்சியாளர்கள் இத்தகைய கருத்தாக்கத்தை உருவாக்கினர். இந்தியாவை நவீன தேசமாக மாற்றுவதற்காகவே தாங்கள் ஆட்சி செய்வதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

காலனி ஆதிக்கம் நவீனமயத்தை அறிமுகப்படுத்தியதா?

காலனி ஆதிக்கத்தின் பொழுது உருவான நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், விவசாயத்தில் வணிகமயம் ஆகியவை நவீனமயத்திற்கான உதாரணங்களாக கூறப்படுகின்றன. இவை அடிப்படையில் “காலனிய நவீனமயம்” என்று வகைப்படுத்துவதுதான் பொருத்தமானது. அதாவது காலனி ஆதிக்கத்தின் நலன்களுக்காகவே இந்த நவீனமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை காலனி ஆதிக்க திட்டங்கள்தான். இந்தியாவின் நவீனமயத்திற்கான திட்டங்கள் அல்ல. எனினும் அதிகாரபூர்வ ஆவணங்கள் “காலனியம்” என்பதை தவிர்த்துவிட்டு “நவீனமயம்” என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் உருவான மாற்றங்கள் நவீனமயத்தின் ஒரு பகுதியே என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஆங்கிலேய கல்வியால் உருவாக்கப்பட்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினர் காலனி ஆதிக்கத்தின் நவீனமயம் எனும் பிரமையை கட்டமைத்தனர். தமது சொந்த மேற்கத்திய நவீன வாழ்க்கை நடைமுறை மூலம் இந்த பிரமைக்கு நம்பகத்தன்மை அளித்தனர். இக்கால கட்டத்தில் நவீனமயம் என்பதன் பொருள் என்ன? மேற்கத்திய உலகில் எது முன்னேற்றமோ அதுவே நவீனமயம் என வரையறைக்கப்பட்டது. காலனிய நவீனமயம் என்பது அதன் பிரதிபலிப்பாக இருந்தது.

“காலனிய நவீனமயத்தின்” நன்மைகள் குறித்த சாதகமான கருத்து மத்தியதர வர்க்கத்துக்கு மட்டுமல்ல; சமூகத்தின் பல பிரிவினருக்கு இருந்தது. தலித் மக்களின் தலைமையின் ஒரு பகுதிக்கு கூட அத்தகைய கருத்து இருந்தது. கடுமையான ஒடுக்குமுறையை கொண்ட சாதிய அமைப்பிலிருந்து விடுதலை பெற “காலனிய நவீனமயம்” ஒரு நம்பிக்கை கீற்றாக இருக்கும் என அவர்கள் நம்பினர். இதில் காரணம் இல்லாமல் இல்லை. காலனி ஆதிக்கத்தின் சில தலையீடுகள் சில சிறிய மாற்றங்களை விளைவிதத்து. இதன் மூலம் தலித் மக்களின் ஒரு சிறு பகுதி விடுதலை காற்றை சுவாசிக்க வழிவகை ஏற்பட்டது. எனினும் சாதிய அடக்குமுறையின் அடிப்படை கட்டமைப்பில் எவ்வித பெரிய மாறுதலையும் “காலனிய நவீனமயம்” கொண்டுவரவில்லை.

காலனி ஆதிக்கம் உருவாக்கிய நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், இரயில்வே ஆகியவை காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவில் நவீனமயத்தை அறிமுகப்படுத்தினர் எனும் கருத்துக்கு நம்பகத்தன்மை அளித்தது. எனினும் காலனி ஆதிக்கம் என்பது சுரண்டலின் கருவியாகவே இருந்தது: காலனிய ஆதிக்கம் நவீனமயத்தை உருவாக்கிய கருவி அல்ல. அது இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்தது. உள்நாட்டு தொழில்களை அழித்தது. கலாச்சார வாழ்வை சீர்குலைத்தது. காலனியம் விளைவித்த அழிவுகளை ஒப்பிடும் பொழுது “காலனிய நவீனமயம்” உருவாக்கிய நன்மைகள் மிகச்சொற்பமே!

நவீனத்துவத்தின் மெய்யான தொடக்கம்:

இந்தியாவில் நவீனத்துவத்தின் தொடக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகையால் உருவானது அல்ல. மாறாக சமூக மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள்தான் நவீனத்துவத்தை தொடங்கிவைத்தன. இதுவே மேற்கத்திய வரையறை அடிப்படையில் “மறுமலர்ச்சி” என அழைக்கப்பட்டது. எனினும் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் ஒன்றல்ல. சீர்திருத்தம் என்பது மிகவும் ஆழமான சமூக மற்றும் அறிவுசார் விழிப்புணர்வை உள்ளடக்கியது ஆகும். வங்கத்தில் இராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய இயக்கம்தான் இதன் தொடக்கம் ஆகும். அன்றைய சூழலில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துன்பங்களையும் அகற்றிடவும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும் இராஜாராம் மோகன்ராய் முனைந்தார். வட இந்தியாவில் தயான்ந்த சரஸ்வதி, மராட்டியத்தில் ரானடே உருவாக்கிய “பிரார்த்தனா சமாஜ்”, ஆந்திராவில் விரேசலிங்கம் தொடங்கிய இயக்கம் ஆகியவையும் இத்தகைய சீர்திருத்தங்களின் தொடக்கம் ஆகும்.

எனினும் இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு வலுவான பொது அம்சம் இருந்தது. அது என்ன? இந்த இயக்கங்கள் எல்லாம் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் தொடங்கப்பட்டவை ஆகும். புதியதாக உருவாகிக்கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தின் சமூக மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதே இவற்றின் நோக்கமாக இருந்தது.

தென்னகத்தின் சீர்திருத்த இயக்கங்கள்:

அதே சமயத்தில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. இங்கு மறுமலர்ச்சி தாமதமாகவே தொடங்கியது. ஏனெனில் இப்பகுதிகள் 19ம் நூற்றாண்டில் பின் தங்கியவையாக இருந்தன. எனவே மத்தியதர வர்க்கம் தாமதமாகவே தோன்றியது. இதனைவிட மிகமுக்கியமான வேறுபாடு உண்டு. இந்தியாவின் வடபகுதியில் உருவான சீர்திருத்த இயக்கங்கள் உயர்சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் தென் பகுதியில் இத்தகைய சீர்திருத்த இயக்கங்கள் அடிமட்ட சாதியினரால் தொடங்கப்பட்டது. கேரளாவில் நாராயணகுருவும் அய்யன்காளியும் தொடங்கினர். தமிழகத்தில் பெரியாரும் அயோத்திதாசரும் சீர்திருத்த இயக்கங்களை தொடங்கினர். மராட்டியத்தில் ஜோதிபா புலே அவர்களின் சீர்திருத்த இயக்கமும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது.

இந்த தலைவர்கள் தொடங்கிய இயக்கம் வெறும் சீர்திருத்த இயக்கம் மட்டுமே என்று கூறிவிடமுடியாது. இவர்களின் செயல்கள் சீர்திருத்தங்கள் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்தாக்கங்கள் மிகவும் தீவிரமாக இருந்தன. சாதிய கட்டமைப்பில் மாற்றங்களை இவர்கள் கோரவில்லை. மாறாக சாதிய அமைப்பு முழுவதுமே அகற்றப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். இவர்களின் வலுவான கருத்து பிரச்சாரம் புதிய சிந்தனைகள் கொண்ட ஒரு நவீன சமூகம் உருவாகிட உதவியது. இவர்கள் கல்வி, தொழில்மயம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தனர். இவர்கள் சமூக மாற்றத்தின் சித்தாந்த முன்னோடிகளாக திகழ்ந்தனர். சாதிகளற்ற வர்க்கமற்ற சமூகமே அவர்களின் இலட்சிய வேட்கையாக இருந்தது.

சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த நவீன கருத்துகள்

இந்தியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதியில் உருவான அனைத்து சீர்திருத்த இயக்கங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் இருந்தன. தம் சமகாலத்தில் நிலவிய சமூக கலாச்சார சூழலில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர இந்த இயக்கங்கள் முயன்றன. பகுத்தறிவுக்கு பொருந்தாத மதம் சார்ந்த சடங்குகள் தொடங்கி பெண்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள் வரை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டுவர விரும்பினர். மக்களுக்கு சிலை வழிபாடின் மீது இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரம் என இவர்கள் கருதினர். எனவே சிலை வழிபாடின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை அகற்றுவது என்பது முன்னுரிமை பணியாக இருந்தது.

பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்தனா சமாஜம் ஆகிய அனைத்துமே சிலை வழிபாடினை எதிர்த்தன. தமது பிரார்த்தனைகளில் சிலை வணக்கத்தை அகற்றினர். பெரியார் சிலை வழிபாடினை எவ்வளவு கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாராயண குரு இப்பிரச்சனையில் இதே நிலை கொண்டிருந்தார். எனினும் இதனை நடைமுறை படுத்துவதில் நிதானம் கடைபிடித்தார். இப்பிரச்சனையில் “துல்லிய தாக்குதல்” எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதால் புதிய அணுகுமுறையை செயல்படுத்தினார். ஒரு கல்லை சிவன் சிலையாக உருவகப்படுத்திவிட்டால் அதற்கு எப்படி ஆன்மீக சக்தி வந்துவிடும் என கேள்வி எழுப்பினார். பின்னர் சிலைக்கு பதிலாக கண்ணாடியை பயன்படுத்தினார். பின்னர் சிலை வழிபாடை முழுவதுமாக அகற்றினார். சிலர் நாராயணகுரு சிலை வழிபாடினை ஆதரித்தார் என கூறுகின்றனர். அது உண்மை அல்ல. சிலை வழிபாடினை எதிர்ப்பதில் அவரின் கருத்து  பெரியார், ராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் கருத்துகளுக்கு உடன்பட்டே இருந்தது. சிலை வழிபாடினை எதிர்த்த நாராயணகுருவை இன்று சிலர் வழிபடும் சிலையாக மாற்றியிருக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது?

பெண்களின் சுயமரியாதை:

இந்த சீர்திருத்த தலைவர்கள் அனைவருமே கவனம் செலுத்திய இன்னொரு பிரச்சனை பெண்களின் நிலை குறித்தது ஆகும். அவர்களின் சமகாலத்தில் பெண்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். சொல்ல முடியாத துன்பங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. செல்லரித்து போன கொடுமையான சடங்குகளின் அடிமைச் சங்கிலியிருந்து பெண்களை விடுவிப்பது அவசியமாக இருந்தது. சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய நடைமுறையை எதிர்த்து இயக்கம் உருவாக்கிய ராஜாராம் மோகன் ராயின் செயல்கள் தொடங்கி அனைத்து சீர்திருத்த தலைவர்களும் பெண்கள் விடுதலைக்கு வலுவாக குரல் தந்தனர். இது வெறும் பெண்கள் மீதான பச்சதாபம் அல்ல. மாறாக பெண்களின் விடுதலை மற்றும் சுயமரியாதையை மீட்பது எனும் நோக்கம் இதில் இருந்தது. பெண்விடுதலையின் நீண்ட வரலாற்றில் இந்த நோக்கம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் முக்கியத்துவம் சிறிதளவும் குறைந்தது அல்ல.

சமூகம் மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த முயற்சிகள்தான் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் ஆகும். சமூகத்தின் புத்தாககத்திற்கு இந்த சீர்திருத்தங்கள் மிக அவசியம் என இந்த கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் இந்த சமூக சீர்திருத்தங்களில்தான் அடங்கியுள்ளது என கருதப்பட்டது. எந்த அளவிற்கு துரிதமாக சமூகம் செல்லரித்து போன நடைமுறைகளிலிருந்தும் மூடநம்பிக்ககளிருந்தும் விடுபடுகிறதோ அந்த அளவிற்கு வேகமாக இந்திய சமூகம் முன்னேறும் என இந்த சீர்திருத்த இயக்கங்கள் கருதின.

அதே நேரத்தில் இந்த சீர்திருத்த இயக்கங்கள் அரசியல் போராட்டத்திலிருந்து விலகி நின்றன. அன்னிய ஆட்சி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் அவை வலுவாக முன்வைக்கப்படவில்லை. சமூக பலவீனங்களை அகற்றிவிட்டால் அரசியல் பிரச்சனைகளக்கு எளிதாக தீர்வு காணலாம் என மதிப்பீடு செய்தனர்.. அக்காலகட்ட அறிவுஜீவிகளுக்கு “காலனிய நவீனம்” குறித்த ஒரு சாதகமான மதிப்பீடு இருந்தது. காலனியாளர்கள் புகுத்திய நவீன அம்சங்கள் இந்திய சமூகத்தின் பிற்போக்கு தன்மையை பின்னுக்கு தள்ள உதவும் என கருதினர். சமூக விடுதலைக்கும் காலனியாதிக்கத்திற்கும் இருந்த தொடர்பு சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.

சமூக மாற்றத்தை பின்னுக்கு தள்ளிய இந்திய தேசியம்

இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு இணையான காலகட்டத்திலும் அதற்கு பின்பும் உருவான இந்திய அறிவுஜீவிகள் காலனி ஆதிக்கம் குறித்து சரியான மதிப்பீடு உருவாக்கினர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் சமூக பிரச்சனைகளுக்கான போராட்டமும் இணைந்து நடத்தப்பட வேண்டும் என எண்ணினர். இது மறுமலர்ச்சி காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும். இந்திய தேசிய இயக்கம் மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்தது. அதாவது அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்துடன் சமூக மாற்றத்திற்கான போராட்டம் இணைக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டது. இது மிகவும் சாதகமான வளர்ச்சிப்போக்கு ஆகும். ஆனால் இது தொடரவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று!

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போரட்டம் வலுவடைந்த பொழுது அரசியல் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தரப்படவில்லை. “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பின் தோற்றமும் அதன் மறைவும் இதனை தெளிவாக்குகிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பில் அரசியல் மட்டுமே பேசவேண்டும் எனவும் சமூக முரண்பாடுகள் குறித்து பேசக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரானடே போன்றவர்கள் “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பை உருவாக்கினர். இது காங்கிரசின் அங்கம் போலவே செயல்பட்டது. காங்கிரஸ் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் அதே இடத்தில் இந்த அமைப்பும் கூடியது; சமூக சீர்திருத்தம் குறித்த பல விவாதங்கள் நடத்தப்பட்டன; தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் குறுகிய காலத்திலேயே இது செயலற்று போனது. தேசிய இயக்கம் எதற்கு முன்னுரிமை அளித்தது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்தியது.

ஒத்துழையாமை இயக்கம் வரிகொடா இயக்கம் என தொடர்ச்சியான போரட்டங்கள் மூலம் தேசிய இயக்கம் வலுவடைந்து முன்னேறியது. ஆனால் சமூக மறுமலர்ச்சி இயக்கம் பின்தங்கியது. ஒரு புறம் தேசிய இயக்கம் பீடுநடை போட்டு முன்னேற்றம் காண மறுபுறம் சமூக இயக்கம் பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடந்தது. சாதிய உணர்வும் மத உணர்வும் மேலோங்கிட இந்நிலை வழிவகுத்தது. காந்திஜியின் சில நடவடிக்கைகள் அரசியல் போராட்டத்துடன் சமூக மறுமலர்ச்சி போராட்டத்தை இணைத்திட வாய்ப்பு உருவாக்கியது.  கிராம சுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு மதஒற்றுமை ஆகியவை குறித்தும் காந்திஜி சில இயக்கங்களை உருவாக்கினார். இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது கால கட்டத்தில் இது முக்கியமான தருணமாக இருந்தது. ஆனால் இது முழுவீச்சை அடையவில்லை. காங்கிரஸ் இயக்கம் முழுவதையும் இதனை நோக்கி செயல்படுத்துவதில் காந்திஜி வெற்றிபெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் போராட்டத்திற்கும் சமூக மறுமலர்ச்சி போராட்டத்திற்கும் இடையே உருவான இந்த இடைவெளி இந்திய சமூகத்தில் பல பாதகமான பின்விளைவுகளை உருவாக்கியது. சமூக அரங்கில் பின்தங்கிய உணர்வை தேசிய உணர்வு விளைவித்தது. காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர்களின் ஒரு பகுதியினருக்கு முற்போக்கு கருத்துகள் இருந்தாலும் அது நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் சமூக பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து அரசியல் போராட்டத்தினை பின்னுக்கு தள்ளியது. மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்டம் அரசியல் போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்து சமூக பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளியது.

மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்கமித்த மூன்றாவது கட்டம்

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டம் காலனியாதிக்கத்தின் முடிவில் தொடங்குகிறது.  இந்த மூன்றாவது கட்டம்  மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்ககமித்த காலம் ஆகும். உண்மையில் மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் மார்க்சியத்தினுள் பொதிந்துள்ளன. மறுமலர்ச்சியின் அம்சங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரல் ஆகும். சாதிய கட்டமைப்பை அகற்றுவது அல்லது பாலின சமத்துவம் என்பது தொடர்ந்து கம்யூனிஸ்டு இயக்கத்தின் பிரிக்கமுடியாத கோட்பாடுகளாக உள்ளன. மூன்றாவது கட்டம் என்பது முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை முதல் இரண்டு கட்டங்களிலும் இடம் பெற்றிருந்தன.

இடதுசாரி இயக்கத்தின் இலக்கு என்பது சமகால கலாச்சார சமூக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது அல்ல; மாறாக இவற்றை முற்றிலும் மாற்றுவது என்பதே இலக்கு ஆகும். அவ்வாறு அடிப்படை தீவீர மாற்றத்திற்கு முயலும்பொழுது இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சி என்பதற்கு புதிய பொருள் தர முனைகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தை இடதுசாரி இயக்கம் வெற்றிகரமாக உருவாக்கிட இயலவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. இது ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

தேவை மறுமலர்ச்சியின் நான்காவது கட்டம்

மறுமலர்ச்சி என்பது முற்று பெற்ற நிகழ்வு அல்ல. அது தொடர் நிகழ்வு. சமூகம் அல்லது பொருளாதாரத்தில் முக்கிய பெரிய மாற்றங்கள் நிகழும்பொழுது மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்களிலும் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகளை இரண்டாவது முறையாக மறு ஆக்கம் செய்ய இயலாது. அது போல மறுமலர்ச்சியின் முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மதிப்புகளை மாறுபட்ட இன்றைய சூழல்களில் அரங்கேற்க இயலாது. ஏனெனில் முதலாளித்துவமும் நவீன தாராளமயமும் முற்றிலும் வேறுபட்ட புறச்சூழலை உருவாக்கியுள்ளன. முதல் கட்டத்தின் மதிப்புகள் செல்லாதவையாக ஆகிவிட்டன என இதன் பொருள் அல்ல! ஆனால் சமூக சூழலும் காலமும் மாறிவிட்டன. எனவே அந்த மதிப்புகளை புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

மறுமலர்ச்சியின் முதல் காலகட்டம் என்பது காலனிய நிலபிரபுத்துவ சூழல் ஆகும். அந்த சூழலில் உருவான மறுமலர்ச்சியின் மதிப்புகளை அப்படியே பொருத்துவதற்கு பதிலாக இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சியை புதியதாக மீண்டும் படைக்க வேண்டும். இந்த மறுமலர்ச்சி என்பது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் மக்களின் கோணத்திலிருந்து படைக்கப்பட வேண்டும். சோசலிச மனித நேயம் என்பது

அரசியல் சமூக சமத்துவத்தை தனது குறிக்கோளாக கொள்வது மட்டுமல்ல; கலாச்சார மற்றும் அறிவுசார் விடுதலையையும் தனது இலட்சியமாக கொண்டுள்ளது.

சமூகத்தில் தற்சமயம் நிலவும் வன்முறையும் சகிப்பற்ற தன்மையும் மறுமலர்ச்சியின் முதல் காலகட்டத்தில் உருவான மதிப்புகளின் தோல்வியால் விளைந்தவை அல்ல! மாறாக அந்த மதிப்புகளை இன்றைய சூழலுக்கு பொருத்துவதில் நமக்கு உருவான பின்னடைவுதான் முக்கிய காரணம் ஆகும். தொழில்நுட்பமும் அறிவியலும் உருவாக்கும் புதிய வசதிகள் மூலம் எதார்த்த புறஉலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் கலாச்சார கருத்துகளின் சூழலோ சீரழியவில்லை என வைத்துக்கொண்டாலும் தேக்கம் அடைந்துள்ளது.

சமூகத்தில் பல்வேறு மதிப்புகள் மேலும் மேலும் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளதை தடுக்க நம் முன் உள்ள வழி அரசியலுக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதுதான்! அரசியல் என்பது கலாச்சாரத்தை தூண்ட வேண்டும்; கலாச்சாரம் அரசியலை செழுமைப்படுத்த வேண்டும்.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் நான்காவது கட்டம் குறித்து சிந்திக்க இது சரியான தருணம் எனில் மிகை அல்ல!

(பிரண்ட்லைன் இதழில் கே.என். பணிக்கர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

 

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் படருமா?

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். பகுத்தறிவும் பிராமணியத்திற்கு எதிர்க்கலாச்சாரமும் ஊறிய இந்த பூமியில், பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் மூச்சுவிடாது நாற்பது ஆண்டுகளாய் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் இந்துத்துவ பாரதீய ஜனதா கால் நுனியைக்கூட ஊன்ற முடியாது என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்கள். பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளை தமிழகம் கொண்டாடி முடித்திருக்கும் இவ்வேளையில், அவருடைய கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்த போதிலும், பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தச் சக்திகளையெல்லாம் எதிர்ப்பதற்காகப் பாடுபட்டாரோ அந்தச் சக்திகளை முழுமையாக உருவகப்படுத்தி நிற்கும் பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் தயக்கமின்றி அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன திராவிடக் கட்சிகள்.

தமிழகத்தின் சமூக, கலாச்சார தளங்களிலும் இந்துத்துவ சக்திகளின் சில நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சிகள் நடக்கின்றன. பசுவதைத் தடுப்பு, மரக்கறி (சைவ) உணவுக்கு ஆதரவான இயக்கம், கோவில்களில் உயிர்ப்பலி தடுப்பு, கோவில் குளங்களை சுத்தம் செய்வதில் முனைப்பு, கோவில்களில் அன்னதானம், தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு, விநாயகர் ஊர்வலங்கள் என்று ஏராளமான வடிவங்களில் தமிழகம் மறந்துபோன பல விஷயங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைப் படரவிட்டுள்ள திராவிடக் கட்சியினர் சங்பரிவாரத்தின் முயற்சிகளை ஒரு கலாச்சாரப் பிரச்சினையாக பார்க்காதது மட்டுமின்றி பல நேரங்களில் உள்ளூர் மட்டத்தில் அவற்றில் பங்கேற்கவும் செய்கின்றனர்.

மேடைகளின் பின்புலத்திலும், கட்சிப் பாடல் வரிகளிலும், மாநாட்டு உரைகளின் முதல் சில வரிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலுள்ள பழைய பிரதிகளிலும் தவறாமல் இருக்கும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சறுக்கலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? சந்தர்ப்பவாத மென்றால் பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பிருக்கும்போது இவர்களும் மாற வாய்ப்பிருக்கிறது. சறுக்கல் என்றால் மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடப்பது விலகல்.

இந்த விலகலின் வரலாறு பெரியாரின் வாழ்நாட்களிலேயே துவங்கிவிட்டது. இந்த விலகலின் வேர் திராவிட இயக்க வரலாற்றின் துவக்க காலத்திலிருந்தே தீர்க்கப்படாத சில முரண்பாடுகளிலும், முழுமையடையாத, முதிர்ச்சியடையாத ஒரு தத்துவார்த்த அரசியல் போக்கிலும் ஊன்றியிருக்கிறது. இந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியின்மையையும் புரிந்துகொள்வதற்கு பெரியார் என்ற புயல், எழுந்து வளர்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றின் மீதும் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியத்தினால் முதலில் ஈர்க்கப்பட்டு, பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் சமூகப் பிற்போக்குத்தனங்களையும் விட்டுத்தள்ள  மனமில்லாத தேசிய வாதிகளை வெறுத்து விலகிச் சென்று, ஜாதீய, மதப் பிடியில் சிக்கியுள்ள சமூகத்தை சவுக் காலடித்துச் சீர்திருத்தும் பாதையில் சென்று, பின் சோஷலிஸத்தின் சிறப்புணர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு சிறிது தூரம் சென்று திரும்பி மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, இந்திய சுதந்திரத்தை நிராகரித்து… பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.

பிரிட்டிஷ் அரசுக்கு மகஜர் அளிதுக்கொண்டிருந்த காங்கிர மக்கள் இயக்கமாக மாற்றம் பெற்றது காந்தியின் தலைமையில்! அந்நிய ஆட்சியைத் துரத்த மட்டுமின்றி, வறுமை, தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் விடுதலை பெறவேண்டுமெனப் போராடும் தேசிய இயக்கத்தில் தன் நண்பர் இராஜகோபாலாச் சாரியாரின் வழிகாட்டுதல்படி 1919-இல் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்த அவர் (கதர்) காதித் துணி மூட்டைகளைச் சுமந்து கிராமம் கிராமமாகச் சென்று விற்றார். எண்பது வயது நிரம்பிய தன் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர் அனைவரையும் காதி அணியச் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி மது விலக்குப் போராட்டத்தை அறிவித்தபோது தானே முன்னின்று கள்ளுக்கடை மறியல்களை நடத்தினார். இயக்கத்தை நிறுத்த வேண்டிக் கோரிக்கை எழுந்தபோது, அந்த முடிவு தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்றார் காந்தி. அவர் கூறிய பெண்கள் பெரியாரின் மனைவியும், சகோதரியும். அத்தனை தீவிரமாக கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்தனர் இருவரும்! போராட் டத்தின் ஒரு பகுதியாக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களையும் வெட்டினார் பெரியார். பழுத்த தேசியவாதிகள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் மரங்களை வெட்டினர். இவ்வளவு தீவிரமாகத் தேசியவாதப் பாதையில் எட்டாண்டுகள் நடைபோட்ட பெரியார், காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தின் தேசிய இயக்கத் தலைவர்களில் பலரின் சமூகப் பார்வை குறுகியே இருந்தது. தேச விடுதலை என்பது இந்திய எல்லைக்குள் வாழும் எல்லோருக்குமான விடுதலை. அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது, விடுதலை என்ற கருத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மனிதனைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் எல்லா சமூக, கலாச்சார, ஆதிக்க சாதிகளிடமிருந்தும் விடுவித்து ஒரு புதிய வாழ்க்கை மற்றும் சிந்தனைத் தளத்திற்கு இட்டுச் செல்வதுதான் உண்மையான விடுதலை. தேசியம் பற்றிய பெரியாரின் இந்தப் புரிதல் காங்கிர இயக்கத் தலைமையின் புரிதலோடு முரண்பட்டது. இந்த முரண்பாடு முதலில் வெளிப்பட்டது சேரன்மாதேவியில் தேசிய இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தான். தேசிய சமூக சேவைக்காக வகுப்பு வேறுபாடின்றி இளைஞர் களைப் பயிற்றுவிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தக் குருகுலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உணவருந்த தனி இடமும், தரத்தில் சற்றே உயர்ந்த உணவும் அளிக்கப்பட்ட நடைமுறை பெரும் பிரச்சினையாக வெடித்தது.

பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் காந்தியைச் சந்தித்தனர். இதில் பிராமணரல்லாதோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி பிரச்சினை சமூக நீதி என்ற பெரும் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடேயாகும். சமூக அநீதி இருக்கும் வரை இந்திய தேசியம் என்ற லட்சியம் நிறைவேறாது என்ற முடிவுக்கு காங்கிரசில் இருந்த பிராமணரல்லாதோர் வந்தனர். பெரியாரிடமிருந்து கொள்கை விஷயங்களில் வேறுபட்ட திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) கூறிய தீர்வுகளையும் கூட குருகுலப் பிரச்சினைகளில் வ.வே.சு.ஐயர் ஏற்க மறுத்தார்.

குருகுலத்திற்கு காங்கிர கமிட்டி தரவேண்டிய பாக்கி ரூ.5,000 ஐ அங்கு பொது உணவிடம் ஏற்படுத்தும் வரை தர இயலாது என்று செயலாளர் என்ற முறையில் பெரியார் முடிவெடுத்திருந்தார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே பிராமணராயிருந்த ஒரு உதவி செயலாளர் மூலம் அப்பணத்தை காசோலையாகப் பெற்றார் வ.வே.சு.ஐயர். இதனால் ஆத்திரமுற்ற பெரியார் குருகுலத்தின் மீது முழுப்போர் பிரகடனம் செய்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மெற்கொண்டார்.

ஏற்கெனவே கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் பிராமணர் வசிக்கும் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஈழவர்கள் நடப்பதைத் தடுத்ததையொட்டி எழுந்த பிரச்சினையில் தலையிட்டு நடத்திய போராட்டத்தில் பிராமணப் பழமைவாதிகளின் நிலைப்பாடுகளால் ஆத்திரமுற்றிருந்த பெரியாருக்கு, தேசிய இயக்கத்துக்குள்ளிருந்த ஜாதீய உணர்வுகள் அவ்வியக்கத்திலிருந்து அவரை அன்னியப் படுத்தின.

தேசியம் பற்றிய பெரியாரின் புரிதல் என்னவாக இருந்தது? பாலக்காட்டில் பெரியார் நிகழ்த்திய உரையில் இதற்கு விடை இருக்கிறது.

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மன சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்க வேண்டும். ஈதன்றி, அதற்கு  மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமான தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உயர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்  கூடாது, அடிமைகள் இருக்க கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய விளக்கமளித்த பெரியாருக்கு அன்றைய தேசியவாதிகள் மீது வெறுப்பு வரக் காரணமென்ன?

மேற்குறிப்பிட்ட வகையில் தேசியம் வளர்வதற்கான சட்டம் எதையும் அவர்கள் செய்யவில்லையென்பது மட்டுமின்றி, வந்த சட்டங்களுக்கு முட்டுக் கட்டையும் போட்டவர்கள் தேசியவாதிகள் என்று சாடுகிறார்.

மக்கள் சாதி பேதத்தையும், மதபேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலை நிறுத்தவும், வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதுமில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண் மக்கள் விபச்சாரத்தை தடை புரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப்பிரதிநிதித்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்ற கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யார்?

பால்ய விவாகத்தை தடை செய்யும் சாரதா சட்டம் மத்திய சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட போது, பழுத்த தேசாபிமானிகளும், பிரபல தேசியத் தலைவர்களும் என்ன நிலையெடுத்தனர் என்பதை பெரியார் அம்பலப்படுத்தினார். மதன் மோகன் மாளவியா: 14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லதுதான். ஆனாலும் வைதீகர்களோடு மோதலை தவிர்ப்பதை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்.

மோதிலால் நேரு 20 வயதுக்கு முன்னால் எங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை. அவசியமிருக்கிறவர்கள் 14 வயதுக் குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தார். கேஸ்கர் என்ற தேசியத் தலைவர் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய்ச் சட்டம் செய்யக் கூடாது என்றார்.

இத்தகைய தேசியவாதிகளின் கையில் தேசம் சென்றால் என்னவாகும் என்ற கவலை அவருக்கு இருந்தது.

வினா அறியாக் குழந்தைகளைக் கடவுளின் கடவுள் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரிகளாக்குவதையும், மக்களை விபச்சாரத் தொழிலால் ஜீவனம் செய்யக் கூடாதென்றும், ஜாதிக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும், சாமிகள் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால் அதுவும் பூரண சுயேச்சையை விரும்பும் சங்கக் காரியதரிசியும், கற்ற பண்டிதராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர் களும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுய ராஜ்ஜியத்தில் இராமராஜ்ஜியத்தில் எதிர்பார்க்க கூடுமென்பது விளங்கவில்லை

இத்தகைய தேசிய தலைவர்களையெல்லாம் வழி நடத்திய காந்தியாரின் கருத்துக்கள் சில பெரியாரை மேலும் தேசிய இயக்கத்திலிருந்து அன்னியப்படுத்தியது.

செப்டம்பர் 1927-இல் கடலூருக்கு விஜயம் செய்த காந்தி, பிராமணர்கள் அறிவின் கலன்கள், தியாகத்தின் உருவம் என்று புகழ்ந்தார். பிராமணர்கள் தங்கள் பாரம்பரிய எளிமையைப் பேணி பிராமணரல்லாதோர் கொடுப்பதைப் பெற்று வாழ வேண்டு மென்றும், பிராமணரல்லாதோர் பிராமணரை வெறுப்பதன் மூலம் ஒரு புதிய தீண்டத்தகாதப் பிரிவை உருவாக்கிவிடக் கூடாதென்றும், பிராமணர்கள் இந்து மதத்தின் காவலர்களென்றும் கூறினார். பிராமணர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்து மதத்தின் அதிவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்ம அமைப்பினை பிராமணரல்லாதோர் தகர்த்துவிடக் கூடாதென்றும் வேண்டுகோள் விடுத்தார். வர்ணாசிரமம் என்பது ஒரு பிரபஞ்ச விதி, மனித ஆற்றலை உயரிய நோக்கங்களுக்குத் திசை திருப்பும் ஆன்மீகப் பொருளாதார விதி என்று விளக்கங்களைக் கொடுத்தார்.

இவ்விளக்கங்கள் ஏற்கெனவே காங்கிரஸிற்குள் நடக்கும் பிராமணிய ஆதிக்க செயல்பாடுகளினால் வெறுப்புற்றிருந்த பிராமணரல்லாதோரிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. வர்ணாசிரம தர்மம் பற்றிய காந்தியின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியாக பெரியாரும், எ.ராமநாதனும் அவரைச் சந்தித்தனர். அவருடைய கருத்துக்கள் தீண்டாமை, பால்ய விவாகம் ஆகிய பிரச்சினைகளில் பிராமணிய பழமைவாத சக்திகள் மேற்கொண்டுள்ள நிலைப்பாடுகளை வலுப்பெறச் செய்யுமென்றும் இச்சமூகத் தீமைகளுக்கு எதிராக காந்தி எடுத்துள்ள நிலைப்பாடு களையே மறுதலிக்குமென்றும் எடுத்துக்கூறினர். காந்தியின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட பெரியார் இந்திய தேசிய காங்கிர, இந்துமதம், பிராமணியம் ஒழியும்போது மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று காந்தியிடம் கூறினார்.

காங்கிர  மூலம் சமூக நீதி கிடைக்காது என்று முடிவெடுத்த பெரியார் 1927-இல் அவ்வமைப்பிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்ற சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கினார். கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உணர்வுகளையும் உள்வாங்கி தேசவிடுதலை என்ற இலக்கினை நோக்கிச் செல்லும் இயக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பினை காங்கிர இழந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருக்கு பிராமணரல்லா தோர் இயக்கமான நீதிக்கட்சியில் நேரடியாக இணையும் வாய்ப்பு இருந்தது. அக்கட்சியின் பல மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார் கலந்து கொண்டபோதிலும் அவ்வியக்கத்தின் குறிக்கோள் ஆட்சியிலும், அரசாங்கப் பதவிகளிலும், கல்வி, வேலை வாய்ப்பு களிலும் பிராமணரல்லாதோருக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்றிருந்தது. பிராமணரல்லாதோரின் நலன்களைப் பாதுகாக்கப் பிறந்த இயக்கம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நீதிக்கட்சி 1916-இல் வெளியிட்ட பிராமணரல்லாதோரின் அரசியல் அறிக்கையில் இப்பிரிவில் பெரும்பான்மையோராயிருந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏனெனில் பிராமணரல்லாதோரின் சமூக, வர்க்க அடித்தளம் வேறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விவசாயம் வியாபாரமாக்கப்பட்டு, பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டதால் பிராமணரல்லாத சாதியினரிடையே பணக்கார விவசாயி, தரகு வணிகர், வட்டி முதலாளி போன்ற வர்க்கங்களும் படித்த, நடுத்தர வர்க்கமும் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் பிரிட்டிஷ் அரசு அதிகார இயந்திரத்தை மத்தியத்துவப் படுத்தியது; இந்திய மயமாக்கியது. ஏற்கெனவே கல்வியில் குறிப்பாக, ஆங்கிலக் கல்வியில், வியாபித்திருந்த பிராமணர்களே பெரும்பாலான அரசுப் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். கல்வியின் விரிவாக்கம் மற்றும் பிராமணரல்லாதோரிடையே புதிய வர்க்கங்களின் தோற்றத்தால் அரசாங்கப் பதவிகளில் இப்பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேற்கத்திய கல்வியினால் முன்னேற்றம் பெற்றிருந்த பிராமணர்களே தேசிய இயக்கத்தில் முன்னணி வகித்து வந்ததால் அவர்களுக்கு எதிராக இந்திய சமூகத்திலிருந்தே ஒரு பிரிவினர் எழுந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வசதியாக இருந்தது. பிராமணரல்லாத பிரிவினரின் மேல்தட்டிலிருந்து வந்த வர்க்க சக்திகளின் அரசியல் வடிவமாகவந்த நீதிக்கட்சியின் முதல் அறிக்கை இதனால்தான் கல்வி, அரசாங்கப்பதவி என்ற குறுகிய கோரிக்கை வட்டத்திற்குள் நின்றது. பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமே வர்க்கங்களுக்கும் இனங்களுக்கும் இடையே தராசை நியாயமாகப் பிடிக்கும் வல்லமை படைத்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் செல்வாக்கினையும் அதிகாரத்தையும் அழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அந்த ஆட்சிக்கு ஆழ்ந்த விசுவாசத்துடன் நடப்போம் என்றும் பிராமணரல்லாதோர் அறிக்கை கூறியது. அமெரிக்க செவ்விந்தியர்களின் உடல்களின் மீதும், ஆப்பிரிக்க அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சியும் பூதாகரமாய் வளர்ந்து நின்ற ஏகாதிபத்திய சக்தி, தாதாபாய் நெளரோஜி போன்ற அறிஞர்களினால் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்று புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த வர்க்கம் பிராமணரல்லா தோரின் நலன் என்று எதைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவு.

பிராமணரல்லாதோர் அறிக்கை புகழராம் சூட்டிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணரல்லாதோர் சமூகத்தின் பெரும்பாலோரின் அவல வாழ்க்கையை எடுத்துக் காட்டும் சில உண்மைகள் இங்கே:

பரந்து விரிந்து வரும் தன் உலக சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய இரக்கமற்ற நிலவரிக் கொள்கையினால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல வருடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1823இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். மக்கள் தலையில் துணியிட்டபடி உணவைத் தேடியலைந்து கொண்டிருந் தனர். பொதுச் சாலைகளில் தினமும் மக்கள் மடிகின்றனர்.

1876-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, சென்னை மாகாணத்தில் மூன்றரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏழரை லட்சம் பேருக்கு 22 மாதங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டியிருந்தது.

இந்தப் பெரும் பஞ்சத்தினால், லட்சக்கணக்கான மக்கள் (பிராமணரல்லாதோர்) புலம் பெயர்ந்து இலங்கை, பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிச் சென்றனர்.

1878ஆம் ஆண்டில் மட்டும் 1,50,000 பேர் இலங்கைக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

பெரும் பஞ்சங்களுக்கு காரணமாயிருந்த பிரிட்டிஷ் கொள்கைகள், பண்ணையாள் எனப்படும் விவசாயத் தொழிலாளி அடிமைகளை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை. பறையர், பள்ளர், பள்ளி (வன்னியர்) போன்ற சமூகப் பிரிவுகளைச் சார்ந்த பண்ணையாட்கள் உணவு தானியங்களை அளப்பது. விவசாய நில எல்லைகளை ஏற்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, இறந்தவர்களைப் புதைப்பது போன்ற பணிகளில் பிராமணர் மற்றும் பிராமணரல்லாத நிலப்பிரபுக்களால் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட்ட கடனுக்காக பரம்பரை பரம்பரையாக பண்ணைச் சேவகம் புரிந்தனர் இம்மக்கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இந்த அடிமை முறைக்கு ஆங்கிலேயே ஆட்சியின் ஆசிர்வாதம் இருந்ததாக பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென்னிந்தி யாவில் நிலமும், சாதியும் என்ற புத்தகத்தில் தர்மா குமார் என்ற ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 1800இல் பண்ணைச் சேவகம் புரிந்த பள்ளர்களும், பறையர்களும் தலைமறைவாகி விட்டனர் என்று கேள்விப்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் அனைவரையும் அவரவரின் எஜமானார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், அடிமைகள் அரசாங்கத்திற்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் புரியுமாறு காவல்துறையைக் கொண்டு நிர்ப்பந்திக்க வேண்டு மென்றும் யோசனை கூறினார்.

அடிமை முறைக்கு எதிராக பிரிட்டிஷ் சமூகத்திற்குள் எழுந்த இயக்கங்கள் வலுப்பெற்ற போதுதான் 1841இல் பிரிட்டிஷ் ஆட்சி அடிமையொழிப்புச் சட்டம் இயற்றியது. அதுவரை அடிமைகளை விடுவிப்பதனால் நிலவுடைமை அமைப்பு சிதைந்து நிலவரி வருமானம் குறையாமல் பிரிட்டிஷ் ஆட்சி பார்த்துக் கொண்டது.

பிராமணரல்லாதோர் அறிக்கை இந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி நியாய உணர்வைப் பாராட்டுவதோடு, மட்டுமல்லாமல் பெரும்பாலான பிராமணரல்லாதோர் அவ்வாட்சியில் எப்படி வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடாதது அதன் வர்க்க சமூக நிலைப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது.

பிராமணர்களோடு நடத்தும் அதிகார வர்க்கப் போட்டியைவிட சமூக, கலாச்சார தளங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுத்த பெரியார், எ.ராமனாதன் துவங்கிய சுயமரியாதைக் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்த சமூக, கலாச்சாரப் போராட்டத்தின் சமூக அடித்தளம் பிராமணரல்லாதோரில் பெரும் பகுதியினரைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் விவசாயத் தொழிலாளர், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், அகமுடையார், இசை வேளாளர், செங்குந்தர், வன்னியகுல சத்திரியர் போன்ற பிரிவினரிடையே இயக்கத்தை எடுத்துச் சென்றார். சௌந்தரபாண்டிய நாடார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் தன் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

பிராமணர்கள் (ஆரியர்கள்) கலாச்சார ரீதியாக திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனரென்றும், புராணங்களும், சாதிரங்களும், மனுநீதியும் கொளுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

சுயமரியாதை இயக்க வீரர்கள் தங்கள் பெயரிலும், உடலிலும் இருந்த ஜாதிய அடையாளங்களைத் துறந்தனர். 1932-ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 பேர் தங்கள் ஜாதிப் பெயர்களைத் துறந்ததாகக் கணக்கு உள்ளது. கலப்புத் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைத் திருமணம், வரதட்சிணைமுறை கண்டனம் செய்யப்பட்டன. விதவை மறுமணத்துக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையும், விவாகரத்து உரிமையும் கோரப்பட்டது. மனித சிந்தனையின் மீது சாதியமும், மதமூட நம்பிக்கைகளும், கட்டியிருந்த சங்கிலிகளை அறுத்து, வாய்ப்பளித்தால் எப்பிறப்பைச் சேர்ந்தவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் உருவாக்குவதில் சுயமரியாதை இயக்கம் பெரும் பங்காற்றியது.

மத நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து, பகுத்தறிவுப் பாதையில் திருப்பிவிடும் வகையில் புரட்சிகரமான தீர்மானங்களை சுயமரியாதை இயக்கம் நிறைவேற்றியது. வழிபாட்டுக்கென்று ஒரு பைசா கூட தமிழர்கள் செலவழிக்கக்கூடாது, புதிதாகக் கோவில்கள் கட்டக்கூடாது, கோவில் வருமானத்தைக் கொண்டு தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி, கல்வி தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோவில் திருவிழாக்கள் நடத்துவதை விட்டு பொது சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைப்பற்றிய கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய தீர்மானங்களை பிராமணர்கள் மட்டும் கண்டிக்க வில்லை. நீதிக்கட்சி நடத்திய பிராமணரல்லாதோரும் நிராகரித்தனர். அதிகாரப் பங்கீட்டில் பிராமணர்களை விரோதியாகப் பார்த்த நீதிக்கட்சி தலைவர்கள் பலரும், சமூக கலாச்சாரத்துறைகளில் பிராமணியம் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பிரபுத்துவக் கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. பிராமணரல்லா தோர் இயக்கத்தின் இந்த முரண்பாடு தீர்க்கப்படாத ஒன்று. சமூக சீர்திருத்தம் என்ற கட்டத்திலிருந்து சோஷலிஸம் என்ற அடுத்த கட்டத்துக்கு பெரியார் முன்னேறிச் சென்றபோது இந்த முரண்பாடு மேலும் முற்றியது.

ரஷ்யப் புரட்சியில் தொழிலாளி வர்க்க ஆட்சி ஏற்பட்டதன் வீச்சும், முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட பெரும் முதலாளித்துவ நெருக்கடியின் மோசமான தாக்கமும் புதிதாய்த் தோன்றி எழுந்துவரும் தொழிலாளி வர்க்கத்தினிடையே சோஷலிஸ மாற்றத்துக்கான ஒரு வேட்கையைத் தோற்றுவித்தது. 1920-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்திலிருந்து தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 511-லிருந்து 1330 ஆக உயர்ந்தது. ஏறக்குறைய ஒரு லட்சமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 1,90,500 ஆக உயர்ந்தது. இடதுசாரித் தலைவர்களான சிங்காரவேலு செட்டியார், ப.ஜீவானந்தம் போன்றோர் இடதுசாரி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சென்றனர்.

இடதுசாரித் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பெரியாரின் உலகப்பார்வையில் ஒரு புரட்சிகர மாற்றமும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவருடைய கருத்துக்கள் எவ்வளவு ஆழம் பெற்றன என்பதற்கு ஒரு சான்று:

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்துக்கு அடிப்படையாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். ஜாதி வித்தியாசம் என்பது ஏதோ ஒரு முட்டாள்தனத்தினால் ஏற்பட்டது என்று சொல்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன் ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத்தனத்தால் எற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற் காக சாதிர ஆதாரங்களும் மதக்கோட்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்படவேண்டு மானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத்துறையில் மக்கள் எல்லோரும் சமத்துவத்துடன் இருக்கும்படியான காரியங்கள் எற்பட்டால் ஒழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்படக்கூடியது அல்ல என்றே சொல்லுவோம்.

அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கான ஒரு அருமையான அரசியல் திட்டத்திற்கான கருவினை இந்த உரையில் பார்க்கலாம்.

சோவியத் யூனியன் பயணமும் பிரிட்டிஷ் இடதுசாரி தொழிற் சங்கத் தலைவரான சக்லத் வாலாவின் சந்திப்பும் ஒரு பெரும் சோஷலிச தாக்கத்தை பெரியாருக்குள் ஏற்படுத்தின. சுயமரியாதை இயக்கத்துடன் இணையாக சமதர்மக் கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சோஷலிசக் கருத்துக்களை பெரியாரும் சுயமரியாதை இயக்க வீரர்களும் எடுத்துச்சென்றனர். சுயமரியாதைக் கூட்டங்களின் முடிவில் முதலாளித்துவம் ஒழிக, சோஷலிசம் வாழ்க என்று மக்கள் எழுந்து நின்று குரல்கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கு கலாச்சார உணர்வுகளிலிருந்து ஜனநாயக, சோஷலிச உணர்வை நோக்கி மக்களின் கணிசமான  ஒரு பகுதியினரை திருப்பியதில் பெரியாரின் பங்கு மகத்தானது.

சுயமரியாதை, சீர்திருத்தம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்ற பாதையில் போய்க்கொண்டிருந்த பெரியார், புரட்சிப் பாதையில் நடமாடத் தொடங்கியதும் இரண்டு பகுதியினர் கலவரமடைந்தனர். நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்த நிலவுடமை யாளர்களும் சிறுமுதலாளிகளும் ஒருபுறம். ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சி மறுபுறம். பெரியார் மீது இரு பக்கங்களில் இருந்தும் தாக்குதல். வர்க்க நலன்களுக்கு ஊறு வந்ததால் சிங்காரவேலருடன் சேர்ந்து பெரியார் இயற்றிய ஈரோட்டுத் திட்டத்தைக் கைவிட்டு சீர்திருத்தப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கூற 1934-இல் கம்யூனிச இயக்கத்தை தடை செய்த பிரிட்டிஷ் அரசு, சுயமரியாதை, சமதர்ம இயக்கத்தின் மீதும் நேரடித் தாக்குதல் தொடுத்தது.

பெரியார் எந்தப்பக்கம் போனார் என்பது வரலாறு! தமிழகத்தில் முற்போக்கு அரசியல் தடத்தையே மாற்றிப்போட்ட முடிவு அது.

இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பிருந்த காலத்திலேயே பணக்காரர்களும் நமக்கு வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் பிராமணர் அல்லாதோர் மற்றும் சுயமரியாதை இயக்கத்திற் குள்ளிருந்த அடிப்படையான மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளை தீர்த்து முன்னேறவில்லை.

1936-இல் ராஜாஜி தலைமையில் காங்கிர ஆட்சிக்கு வந்ததும் அதுவரை பிராமணர் அல்லாதோர் இயக்கம் அடைந்த சமூக, அரசியல் பலன்கள் (வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தேவதாசிமுறை ஒழிப்பு, பால்ய விவாக தடுப்பு, அறநிலையத்துறை மசோதா) காங்கிரஸ்-பிராமண ஆட்சியில் அடிபட்டுவிடும் என அவர் அஞ்சினார். அவரை சோஷலிசப் பாதையில் வைத்திருப்பதற்கான இடதுசாரி அமைப்போ அரசியல் திட்டமோ நிலைபெற்றிருக்க வில்லை.

இந்நிலையில் நீதிக்கட்சியின் பக்கம் பெரியார் சென்றார். ராஜாஜி அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது. விடுதலை இயக்க வீச்சிற்கு முன்னால் நிலைகுலைந்து போயிருந்த பிராமணர் அல்லாதோர் இயக்கத்துக்கு புத்துயிர் அளித்தது. இந்தி எதிர்ப்புப்போரில் தமிழ் தேசியம் முனைப்புப்பெற்றது. சீர்திருத்தம், சுயமரியாதை என்ற பரிணாமங்களுடன் தமிழ் உணர்வு என்ற புதிய பரிணாமமும் சேர்ந்து பிராமணர் அல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கம் என்ற புதிய வடிவம் பெறுவதற்கான வரைபுள்ளிகள் வைக்கப்பட்டன.

ஆனால் இந்த வரைபடத்தை முழுமையாக்க நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுப்போக்கு உதவாது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட சி.என்.அண்ணாதுரை போன்ற பேச்சாற்றல் மிக்கத் தலைவர்கள் பெரியாரை நேரடியாக எதிர்க்காமல் அவரது உலகப்பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்துக்கு இயக்கத்தைக் கொண்டு சென்றனர்.

விடுதலைப்போரின் வேகத்தில் நீதிக்கட்சி உதிர்ந்துபோக திராவிடர் கழகம் பிறந்தது.

அரசியல் விடுதலைபெற்று பிராமண-காங்கிர ஆதிக்கத்தில் இருப்பதைவிட திராவிட நாடு ஒன்றை தனியாகப்பெற்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இயங்க வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் இந்திய சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை. ஆகட் 15 துக்க நாள் என்று அறிவித்தார். இந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அண்ணாதுரை போன்றோர் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக சாத்தியக்கூறுகளின் தன்மையை உணர்ந்து திராவிடர் கழகத்தை ஒரு முழு முதல் அரசியல் சக்தியாக மாற்றும் வண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்தினை ஏற்படுத்தினர்.

ஜமீன்தார் மற்றும் பெருநில உடமையாளர்களுக்கும் புதிதாக மேல் எழுந்து வந்த மத்தியதர வர்க்கத்திற்கும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தினுள் நிகழ்ந்த முரண்பாடே புதிய அரசியல் கட்சியாக முடிந்தது.

பெரியார் சோஷலிசப் பாதைக்குச் சென்று மீண்டும் சீர்திருத்தத்திற்குத் திரும்பியது ஒரு குண ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே சீர்திருத்தம் என்ற தளத்தில் இருந்து முழுயைமான அரசியல் தளத்திற்கு அண்ணாதுரை சென்றதும் திராவிட இயக்கக்கொள்கையில் ஒரு குணமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை மூன்று கூறுகளாக இலங்கைத் தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கூறுவார்.

  1. தேர்தல் அரசியலில் பங்குகொள்வது என்ற தீர்மானம் (1956).
  2. நாத்திக நிலையில் இருந்து விடுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாடு.
  3. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படல்.

சமூக சீர்திருத்தத் தளத்திலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த திமுகவின் வளர்ச்சிக்கு நாத்திகம் ஒரு தடையாக இருக்கும் என்பதால் அக்கொள்கை நிலையிலிருந்து மாறியது. வளர்ந்து வரும் பிரதேச முதலாளித்துவத்திற்கு, இந்தியா என்பது ஒரு பெரும் வணிகச் சந்தையாகவும் மேலெழுந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கு வேலைவாய்ப்புச் சந்தையாகவும் இருந்ததால் தனி நாடு கோரிக்கையையும் கைவிட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிர வலுவிழக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு பிரதேச சக்தியாக தன்னை அடையாளம் காட்டி, மத்திய அரசு எதிர்ப்பு நிலை எடுத்து நின்றது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற கோஷங்களை விட்டு வடக்குடனான பேர ஆற்றலை வளர்த்துக் கொண்டது. 1972-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பின் திராவிட இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதி பிரதேச அரசியலில் இருந்து அகில இந்திய அரசியலுடன் ஐக்கியமாகி மத்திய அதிகாரத்தில் பங்காளியாகும் போக்கு ஏற்பட்டது. காங்கிர முற்றிலுமாக வலுவிழந்து அதற்கு மாற்றாக அகில இந்திய வீச்சுள்ள ஒரு சக்தி எழாத நிலையில் மத்திய ஆட்சியில் வலுவான பங்கு வகிக்கும் நிலைக்கு திராவிட இயக்கம் சென்றது.

சீர்திருத்தம் பகுத்தறிவு என்ற அடிப்படைகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்ட நிலையில் தமிழர் என்ற உணர்வினாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கம் இது என்ற நம்பிக்கையினாலும் பின்திரண்டு நிற்கும் மக்களின் வாழ்வில்  உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் பொருளாதாரத் திட்டம் இல்லாத நிலையில் கொள்கைகளைப் பின்னுக்குத்தள்ளி தனிநபர் அரசியல் முன்னுக்கு வந்துள்ளது. அரசியல் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று ஆகிவிட்டபிறகு ராமனும் ராவணனும் ஒன்றுதான்-பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்.

முற்போக்கான அரசியல் பொருளாதாரத் திட்டம் திராவிடக் கட்சிகளுக்கு இல்லாதது, பெரியார் காலத்தில் இருந்தே வர்க்க நிலைப்பாட்டினை மேற்கொள்ளாத ஒரு வரலாற்றுப் பலவீனம். பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டினை நடத்தினார்; நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவா தேவிக்காரர் அல்லாதார் மாநாடு நடத்தினார்; உயர்சாதி இந்துக்களை தலைவராகக் கொண்டு தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தினார்; தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத்தீர்மானம் இயற்றப்பட்டது என்று கோ.கேசவன் பெரியாரை விமர்சித்தது போலவே நிலவுடமை யாளர்களின் ஆதரவை வைத்துக்கொண்டே நிலச்சீர்திருத்த சட்டத்தை இயற்றியது சமூக பொருளாதார நீதிக்கு எப்படி வழி செய்ய முடியும்?

அரசு அதிகார எந்திரத்திலும் சமூக அளவிலும் பிராமண மேலாண்மையை நீக்கி எல்லா சமூகத்தவருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஜனநாயக மயமாக்கும் போக்கிற்கு திராவிடஇயக்கம் தலைமை வகித்தபோதிலும் ஏறக்குறைய 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தலித்துகளுக்கு கல்வியிலும் அரசுப்பதவிகளிலும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் சமூக அளவிலும் பல இடங்களில் தீண்டாமையின் வடிவங்கள் நிலவுகின்றன. வன்முறையும் நடக்கிறது. அரசியல் அதிகாரம் இருந்தபோதிலும் திராவிட இயக்கத்தால் ஜனநாயக மயமாக்கும் போக்கினை நிறைவு செய்ய இயலவில்லை என்பது தெளிவு. மேலவளவும் தாமிரபரணியும் இதற்குச் சான்றுகள்.

இடஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பவை திராவிட இயக்கச் சாதனைகள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அரசாங்க வேலைகளில்தான். தனியார்மயம், உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வேலைவாய்ப்புகளே குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு குந்தகம் விளைந்துகொண்டிருக்கும் வேளையில் தெளிவான பொருளாதாரக் கண்ணோட்டமும் வர்க்கப்பார்வையும் இல்லாத திராவிட இயக்கம் எப்படி சமூக நீதியைக் காக்கப்போகிறது. உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் தாண்டவம் வேலை வாய்ப்புகளையும், நீர், நிலம், காற்று போன்ற மனிதகுலத்தின் பொதுச்சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தைவிட வேகமாக மூன்றாம் உலகநாட்டு மக்களை வறுமையிலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டிருக்கிற பாசிச சக்திகள் பன்முக கலாச்சார தன்மைகளை ஒருமுகப்படுத்த முனைந்துகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் இராக்கிலும், ஆப்கானிதானத்திலும் தன் உண்மையான முகத்தைக்காட்டி வருகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. பல நாடுகளில் பொருளாதார சுதந்திரமும் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பலைகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எதிர்ப்புக்கு இன்றும் கூட ஆயுதமாகப் பயன்படும் ஆற்றலைக் கொண்டவைதான் 1930-களில் பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் சமதர்மமும்.