சோவியத் புரட்சியும் தமிழகமும்

– இரா.சிசுபாலன்

உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.

நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.

தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.

ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’  எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.

ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி  எழுதுகிறார்:

‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும்  விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.

1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,

‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.

 ‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக்  கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.

இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காரவேலர்  தொழிலாளர்- விவசாயிகள்  கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக  மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில்  போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின்  தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.

சென்னை  மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931  தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:

 ‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.

சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள்  இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்

ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:

  • நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
  • தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
  • பெண்களுக்கு இரவு வேலை கூடாது
  • குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
  • பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
  • பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.

84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.

பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.

நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

பி. கோவிந்தபிள்ளை, ஏகேஜி ஆராய்ச்சி & கல்வி மையம்

தமிழில்: வீ.பா.கணேசன்

சிங்காரவேலர் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில், மார்க்சிய – லெனினிய இயக்கத்தில், என்றும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரம் என்றே கூறலாம். அவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி, 18-ம் தேதியன்று பிறந்தார். சிங்காரவேலரின் வாழ்விலும், சிந்தனையிலும், அவரது பங்களிப்பிலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், சிந்திப்பதை இறுதியாக நிறுத்திக் கொள்வதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, நாசிசத்தையும் பாசிசத்தையும் சோசலிச – ஜனநாயக சக்திகள் வெற்றி கொள்வதைக் கண்ட பின்பு 1946 பிப்ரவரி 11-ம் நாள் அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அதாவது மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்களிடையே கார்ல் மார்க்ஸ்  (1818 – 1883), பிரடெரிக் எங்கெல்ஸ் (1820 -1895) ஆகியோரின் காலத்தால் என்றும் அழியாத கருத்துக்கள் உருவாகி, வெற்றியை நோக்கி நடைபோட்ட காலத்தில் சிங்காரவேலர் வாழ்ந்தார் என்று கூறுவது பொருத்தமாக அமையும். சிங்காரவேலர் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது 1948ஆம் ஆண்டிற்குள், இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்து, 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதும், சீனாவில் புரட்சி வெற்றி பெற்றதுமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. சிங்காரவேலர் போராடிய லட்சியங்கள், அதற்காக அவர் அடைந்த துயரங்கள் ஆகியவை நிறைவேறியதை சுட்டிக்காட்டுவதாகவும் அவை அமைந்தன. மேலும் அவரது தீர்க்க தரிசனம் என்பது அரசியல் விடுதலைக்கு அப்பால் சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் நோக்கியதாக அமைந்தன. தென் இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இயக்கத்தின் முதல் முன்னோடியாக அவர் விளங்கியதோடு, அதிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களை இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இகக்கம் தோன்றுவதற்கும் அர்ப்பணித்தார். சிங்காரவேலருக்கு முன்பாகக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தோற்றம் குறித்து ஒரு பார்வையை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கம்.

சிங்காரவேலருக்கு முன் இந்திய கம்யூனிசத்தின்  தோற்றம்

கம்யூனிச சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கும் சமத்துவம், மனிதநேயம் என்பவை மனித சமூகத்தின் தோற்றத்தைப் போன்றே மிகப் பழமையானவையே ஆகும். குறிப்பாக வர்க்க பேதமற்ற புராதன கம்யூனிச சமுதாயம்  உடைந்து நொறுங்கிய பிறகு இதுதான் நிலைமை. மார்க்ஸூம் எங்கல்ஸூம் தங்களது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் புராதன சமூக வரலாற்றினைத் தொடர்ந்த காலத்தில் வரலாறு என்பது ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று சுட்டிக் காட்டியதோடு, வர்க்கங்கள் தோன்றியது குறித்த விஞ்ஞான பூர்வமான பார்வையை அவர்கள் முன்வைத்து, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி முறையுடன் கூடவே ஏற்பட்ட மனித குல முன்னேற்றம் என்பதும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலின் மீது மனிதர்களின் ஆதிக்கமும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் குறிப்பிடுவது ஆகும் என்றும் எடுத்துக் கூறினர். இந்த முன்னேற்றமானது சமத்துவமற்ற நிலையையும், சுரண்டலையும், பெரும்பாலோர் துன்புறுவதையும் அதிகரிப்பதாகவே அமைந்தது. எனவே அடித்தட்டு மக்கள் காணாமல் போன புராதன சமூகத்தை நினைத்து ஏங்கி நின்றது என்பது இயற்கையான ஒன்றே ஆகும். கம்யூனிசத்தின் வித்துக்கள் அடங்கிய இந்தச் சமூகம் குறித்த புராதன கதைகளுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் வழிவகுப்பதாகவும் இந்த ஏக்கம் அமைந்திருந்தது. உலகளாவிய இத்தன்மையில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடையே வளர்ந்து மேலோங்கி நின்ற இத்தகைய கருத்துகள் முதலில் வெளிப்படையாகத் தென்படாமல் போனபோதிலும், காலப்போக்கில் படிப்படியாக மேல் தட்டு வர்க்கத்தினரின் புராணங்கள், இலக்கியங்கள், எழுத்துகள், ஆகியவற்றிலும் இடம் பெறத் துவங்கின.

மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமான சமூகத்திலிருந்தே சோசலிசம், கம்யூனிசம் போன்ற நவீன கருத்துக்கள் தோன்றின என்பதை ஒப்புக்கொண்ட பி.சி.ஜோஷி, கே.தாமோதரன் ஆகியோர் நமது புராதனகால கதைகளில் இக்கருத்துக்கள் வடிவமற்ற, புராதன வடிவங்களில் தென்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறுவதாவது:

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூகமானது நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டபோதே இந்தியாவில் மனிதநேயம் என்பது நிலவி வந்தது என்பது ஒன்றும் விசித்திரமான விசயமல்ல. ரிக்வேதத்தின் பின்னாளைய கவிஞர்களில் சிலரும், உபநிடதங்களை உருவாக்கிய தத்துவஞானிகளில் முன்னோடிகள் சிலரும் புராதன காலத்தில் மேய்ச்சலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடி சமூகத்தினரின் ஒற்றுமை சிதைந்து போனது கண்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியதோடு, மக்களிடையே அதிகரித்து வரும் சமத்துவமற்ற தன்மைக்கு எதிராகவும் தங்களது குரலை எழுப்பியுள்ளனர். மனிதகுலத்தின் ஒன்றுபட்ட தன்மை, ஒற்றுமை ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்திய அவர்கள் அன்பையும் கருணையையும், நீதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினர். காலப்போக்கில் இவைதான் மதரீதியான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாக மாறின. தங்களது சொந்த நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மக்களின் மனங்களை ஆட்டிப் படைப்பதற்குச் சுரண்டும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் அநீதி, சமத்துவமற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக மதத்தைப் பயன்படுத்தினர். நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், மனித நேயத்திற்காகவுமான போராட்டங்கள் மத்திய காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடைபெற்றே வந்தன. உதாரணமாக, 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கபீர், சைதன்யர், குரு நானக் போன்ற பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் சாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியதோடு ‘மனிதர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகளே!’ என்ற கோசத்தின் கீழ் மனிதர்கள் அனைவருக்கிடையேயும் சமத்தும் தேவை என்று போராடி வந்தனர்.

                     (மார்க்ஸ் இந்தியாவிற்கு வருகிறார் – முன்னுரை – 1975)

நிலப்பிரபுத்துவ உறவுகளை மாற்றியமைத்து, அதனிடத்தில் வந்தமர்ந்த நவீனத்துவமும் முதலாளித்துவமும் தான் இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் காலம் என்று பின்னாளில் குறிப்பிடப்பட்ட எழுச்சிக்கு வழிவகுத்தன. மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பல்வேறு கருத்துக்களுமே,  மறுமலர்ச்சி காலத்தில் உருவான பல்வேறு கருத்துக்களுமே, கம்யூனிச தத்துவத்திற்கான விதைகளைக் கொண்டதாகவே இருந்தன. மறுமலர்ச்சி காலத் தலைவர்கள் சில பண்டைய இந்தியாவின் புராதன கதைகளிலிருந்து உத்வேகம் பெற்ற அதே நேரத்தில் வேறு சிலர் தங்களது மனித நேய கருத்துக்களை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தீவிர ஜனநாயகவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகளிடமிருந்தும் பெற்றனர்.

இந்திய மறுலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் ராஜா ராம் மோகன் ராய்(1772 – 1833) 1789-ம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியினால் பெரிதும் கவரப்பட்டவராக இருந்தார். எனினும் அவரது கூர்மையான அறிவும் மனித நேயமும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தாண்டி சோசலிச கருத்துக்களின் மீதும் அவரை ஆர்வம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாகத்தான் 1833-இல் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தபோது கற்பனாவாத சோசலிஸ்டான ராபர் ஓவன் -ஐ (1771 – 1858) சந்தித்தார். தூரதிர்ஷ்டவசமாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு உடனேயே அவர் உயிர் நீத்ததன் விளைவாக ஓவன் பற்றியோ அவரது கருத்துக்கள் பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் அவர் விட்டுச் செல்லவில்லை.

சோசலிச கருத்துக்களைப்  பாராட்டிப் பேசிய மற்றொரு புகழ் பெற்ற வங்காளி “வந்தே மாதரம்” கவிதையை எழுதிய நாவலாசிரியர்  பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (1838 – 94) ஆவார்.

இவை அனைத்தையும் விட புகழ்மிக்க வார்த்தைகளாக அமைந்தது சுவாமி விவேகானந்தரின் (1863 – 1902) பட்டவர்த்தமான அறிவிப்பே ஆகும். 1888-ம் ஆண்டில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “அது ஒரு சிறந்த அமைப்பு என்பதனால் மட்டுமே நான் ஒரு சோசலிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட அரை வயிற்றுக் கஞ்சி எவ்வளவோ மேல்”

                                                 (தொகுப்பு நூல்கள் – தொகுதி 6 பக். 381-82)

ஒரு கருத்து என்ற வகையில் சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அதற்கு விளக்கம் கூறுவதற்கும் விவேகானந்தருக்கு அவருக்கேயுரிய காரணங்கள் இருக்கலாம். நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அது ஒரு பொருட்டல்ல. இதில் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில் அந்த நாட்களில் கிடைத்த அறிவை வைத்துக் கொண்டு, வரலாறு குறித்த விவேகானந்தரின் விளக்கங்களையும் வைத்துப் பார்க்கையில் சோசலிசம் குறித்து அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பலவீனங்களை, குறைந்தபட்சம் அதை நாம் அடைவதற்கு முன்பாகவே, புரிந்து கொள்வதில் தனது காலத்தையும் விஞ்சியவராக அவர் விளங்குகிறார். அடுத்து வித்தியாசமான ஒன்றாக விளங்குவது என்னவெனில் அவர் சொல்வது நிச்சயமாக சரியாக இல்லை என்றபோதிலும் கூட, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைத் பொருத்திப் பார்க்க மேற்கொண்ட அவரது முயற்சி ஆகும்.

அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “எனினும் ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்களின் வர்க்கம், அவர்களது சூத்திரத் தன்மை உடனேயே எழுச்சி பெறுவார்கள். இப்போது வைசியர்கள் அல்லது கூசத்திரியர்களின் பிரத்தியேகமான குணங்களைப் பெற்று பெரிய மனிதர்களாக சூத்திரர்கள் தற்போது மாறி வருகிறார்களே அதைப்போன்று அல்ல; மாறாக, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சூத்திரர்கள் அவர்களுக்கே உரிய சூத்திர தன்மையுடனும், பழக்கவழக்கங்களுடன் வைசிரியர்களாகவோ அல்லது சத்திரியர்களாகவோ மாறாமல், சூத்திரர்களாகவே இருந்து – ஒவ்வொரு சமூகத்திலும் மேலாதிக்கத்தைப் பெறுவார்கள். இந்தப் புதிய சக்தி தோன்றுவதற்கான முதல் வெளிச்சம் ஏற்கனவே மேற்கத்திய உலகத்தின் மீது மெதுவாகக் கவியத் தொடங்கிவிட்டது. இந்தப் புத்தம் புதிய அம்சத்தின் இறுதி வடிவம் எப்படி பிரதிபலிக்கக் கூடும் என்று சிந்தனை உடையோர் இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சமூகப் புரட்சிக்கு சோசலிசம், அராஜக வாதம், நிகிலிசம் போன்ற இதரப் பிரிவுகளும் முன்னணிப் படைகளாக விளங்கப் போகின்றன.

                                                     (தொகுப்பு நூல்கள் – தொகுதி 4 – பக் 467 -68)

முதலாவது அகிலமும் இந்தியாவும்

இத்தகைய தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பிரதிபலிப்புகளைவிட மிக முக்கியமானதாக அமைவது 1864-இல் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதக் குழு கார்ல் மார்க்சை தொடர்பு கொண்டு, அவர் தோற்றுவித்த சர்வதேச உழைக்கும் மக்கள் கழகத்தில் (முதலாவது அகிலம்) சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததாகும். துரதிர்ஷ்டவசமாக இக்குழுவின் பெயரோ, அதன் தன்மையோ முற்றிலுமாகத் தெரியவராமலே போய்விட்டது. 1871-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு நடவடிக்கைகள் குறித்த பத்திரிக்கைச் செய்தியில் இருந்துதான் இது குறித்த தகவலை நம்மால் பெற முடிகிறது. இந்தப் பொதுக்குழுதான் பாரீஸ்கம்யூன் வீழ்ச்சி அடைந்தது குறித்து விவாதித்தது; அது குறித்து மார்க்ஸ் உருவாக்கிய புகழ்பெற்ற ஆவணத்தை ஏற்றுக் கொண்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 1871 ஆகஸ்ட் 19-ம் தேதிய ‘ஈஸ்டர்ன் போஸ்ட்’ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இடதுசாரி சார்பு பத்திரிக்கைதான் கல்கத்தா குழுவினரின் கடிதம் குறித்து தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதன் ஒரு பகுதி கீழ் வருமாறு:

“மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமானது முற்றிலுமாக வெறுக்கப்பட்டு வருகிறது. வரி விதிப்பானது அபரிமிதமாக இருப்பதோடு அத்தகைய வருவாயில் பெரும்பகுதி அதிகாரவர்க்கம் என்ற செலவுமிக்க அமைப்பை நிலைநாட்டுவதற்கே உறிஞ்சப்பட்டு விடுகிறது. மற்ற இடங்களில் நடப்பதைப் போலவே, (மிக மோசமான நிலையில் உள்ள) செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களின் நிலைக்கு முற்றிலும் நேர்விரோதமான முறையில் ஆளும் வர்க்கங்களின் ஆடம்பரச் செலவுகள் அச்செல்வத்தை வீணடிக்கின்றன. இதற்கென ஒரு பிரிவு மட்டும் துவக்கப்படுமேயானால், அகிலத்தின் குறிக்கோள்கள் பெரும்பகுதி மக்களை இந்த அமைப்பிற்குள் கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கிறது.”

கல்கத்தா தோழர்களின் கோரிக்கையை அகிலத்தின் பொதுக்குழு மிகுந்த கவனத்துடன், தீவிரமாகப் பரிசீலித்தது என்பதை இக்கூட்ட நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் தொழிலாளர்களை எவ்வாறு அணி திரட்ட வேண்டும் என்பது குறித்தும், தத்துவார்த்த கல்வியின் அவசியம் குறித்துமான வழிகாட்டுதல்களுடன் பொதுக்குழு கல்கத்தா தோழர்களுக்குப் பதிலளித்திருந்தது. இந்தக் குழுவைப் பற்றி மேலும் அதிகமான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கம்யூனிச கருத்துக்கள் மட்டுமின்றி, ஐரோப்பாவில் அக்கருத்தை வெற்றி பெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளும்கூட இந்தியாவில் இருந்த தீவிரவாத குழுவினருக்குத் தெரிய வந்திருந்தது என்பது தெளிவாகிறது.

ஹர் தயாள் – பிள்ளை – பட்டேல்

பல்வேறு இந்தியர்களின் இது போன்ற கருத்துக்களையும் எடுத்துக் கூறி விட முடியும். ஆனால் மார்க்ஸ் பற்றியும் சோசலிசத்தைப் பற்றியும் இந்தியாவில் முழுமையாக எடுத்துக் கூற 1912-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முதலில் அவ்வாறு எழுதியவர் மகத்தான புரட்சிகர தேசியவாதியான லாலா ஹர் தயாள் (1884 – 1939) ஆவார். அந்நாட்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மாத இதழான ‘மாடர்ன் ரிவ்யூ’வின் 1912 மார்ச் இதழில் அவர் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது கருத்துக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். அவரது கட்டுரையின் தலைப்பு “கார்ல் மார்க்ஸ் நவீன யுக ரிஷி”.

ஒரு இந்தியனால், ஒரு இந்திய இதழில் மார்க்ஸ் பற்றி எழுதப்பட்ட கட்டுரை என்பது ஹர் தயாளுடையதுதான் எனில் ஸ்வதேசாபிமானி கே.ராமகிருஷ்ண பிள்ளை (1878 – 1916)யின் மார்க்ஸின் சுயசரிதைதான், இந்திய மொழி ஒன்றில் வெளியான சுயசரிதை ஆகும். இந்த இரண்டையும் மேலோட்டமாகப் படிக்கும்போது ராமகிருஷ்ண பிள்ளை தனது நூலை லாலா ஹர் தயாளின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார் என்பது தெரியவரும். ஏனெனில் ஹர் தாயாளின் கட்டுரை மார்ச் மாதத்தில் வெளிவந்த அதே நேரத்தில், பிள்ளையின் நூல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. ஹர் தயாளின் கட்டுரை தலைப்பான கார்ல் மார்க்ஸ், “நவீன யுக ரிஷி” என்று கூறியது போல அவரது கட்டுரையானது கதாநாயகரான கார்ல் மார்க்ஸின் தனிப்பட்ட மேன்மையையும், அவரது துயரங்களையும் தியாகங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்தது என்றே கூறலாம். மார்க்ஸின் தத்துவம் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஹர் தயாளுக்கு பலவகையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும் பி.சி.ஜோஷி சுட்டிக் காட்டுவது போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மார்க்சியவாதிகள் பலரையும் சந்தித்து, மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்த பல நூல்களையும் படிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்த போதிலும், மார்க்சியம் குறித்த அவரது புரிதல் என்பது குறைபாடு உடையதாகவே இருந்தது. இதற்கு மாறாகக் திருவாங்கூர் மகாராஜாவின் ஊழல் மற்றும் உறவினர்களைச் செழிப்பாக்கும் போக்குகளை எவ்வித அச்சமுமின்றிச் சுட்டிக் காட்டியதன் விளைவாகத் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்தே வெளியேற்றப்பட்ட ஸ்வதேசாபிமான ராமகிருஷ்ண பிள்ளையோ இந்தியாவிற்கு வெளியே எங்கும் சென்றவரல்லர்.

மகாராஜாவையும் அவரது அடிவருடிகளையும் கோப்படுத்திய செய்தித்தாளின் பெயர்தான் ஸ்வதேசாபிமானி. அதே பெயரால்தான் அவரும் அழைக்கப்பட்டார். மார்க்சிய கருத்துக்களின் செறிவான கருத்தையும், மார்க்ஸின் முக்கியமான நூல்களையும் சுட்டிக்காட்டுவதாக ராமகிருஷ்ண பிள்ளையின் நூல் அமைந்திருந்தது. சமஸ்தானத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தனது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளிலும், வேறு சில பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளிலும்கூட சோசலிசத்தை விளக்கும் வகையிலும் அதை நியாயப்படுத்தியுமே எழுதி வந்தார், போதிய தகவல்கள் கிடைக்காததால் இக்கட்டுரைகளில் ஒரு சில குறைகளைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர, ராமகிருஷ்ண பிள்ளை – சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு அதை ஆதரிப்பவராகவே செயல்பட்டார். இவை அனைத்துமே மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தவை என்பதை நினைவில் கொள்ளும்போது இந்த இரு பெரும் மனிதர்களின் நினைவைப் போற்றுவது மிகவும் பொருந்தமானதே ஆகும்.

மார்க்ஸ் குறித்த ஆய்வுகளில் ஹர் தயாள் மற்றும் ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோருக்குப் பிறகு முயற்சி செய்தவர் குஜராத்தைச் சேர்ந்த அம்பாலால் பட்டேல் ஆவார். அவர் 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அதாவது அக்டோபர் புரட்சிக்கு சரியாக ஓர் ஆண்டிற்கு முன்னால் ‘நவஜீவன் மற்றும் சத்யா’ என்ற குஜராத்தி மொழி இதழில் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் ஆகியோரின் புகழ்பெற்ற அறைகூவலான ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்: நீங்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை: ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!’ என்பது பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் முன்னுரையில் அவர் எழுதியிருந்தார்:

“1847-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு ஏழை மக்களை சுரண்டுவதை நியாயப்படுத்துவதற்கான தத்துவஞானிகளின் முயற்சிகள் வீணாகத்தான் போயின”

(குறிப்பு: கம்யூனிஸ்ட் அறிக்கை 1848ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அது எழுதி முடிக்கப்பட்டிருந்தது)

புரட்சிக்குப் பிறகு

1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இத்தகைய சோசலிச, கம்யூனிச கருத்துக்களை மேலும் வலுவாகப் பரவத்துவங்கின. ‘ஆதி பராசக்தி’ போன்ற பாரம்பரியமான கருத்துக்களைப் பயன்படுத்தியபோதிலும், தமிழ்மொழியின் நவீனயுக கவிஞர்களில் மகத்தானவரான சுப்ரமணிய பாரதி இப்புரட்சியை வரவேற்று – போற்றி கவிதை பாடினார். விடுதலைப் போராட்டத்திலும், பகுத்தறிவு இயக்கத்திலும் அப்போது தீவிரமாக ஈடுபட்டு வந்த பெரியார் ஈ.வே.ரா கூட சோசலிசம், புரட்சி ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்பவராக மாறினார். இவர்கள் இருவருமே சிங்காரவேலரின் நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிங்காரவேலர் விடுதலை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சூரத் நகரில் (1907) நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு குழுக்களாகப் பிளவுபட்டது. மிதவாதிகளின் குழுவிற்குக் கோபாலகிருஷ்ண கோகலே, சர் ஃபிரோஸ் ஷா மேத்தா மற்றும் பலர் தலைவர்களாக இருந்தனர். தீவிரவாதிகள் குழுவிற்குப் பால் -லால் – பால் என்றறியப்பட்ட முப்பெரும் தலைவர்கள், அதாவது பாலகங்காதர திலகர். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். இயற்கையாகவே சிங்காரவேலர் இந்தத் தீவிரவாதிகளின் குழுவைச் சார்ந்தவராகவே இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பாலகங்காதர திலகரை அன்றைய பர்மாவில் (இப்போது மியான்மார்) இருந்த மாண்டலே சிறையில் நாடு கடத்தியபோது, மும்பை மற்றும் தூத்துக்குடி நகர்களில் இருந்த தொழிலாளர்கள் திலகர் கைது செய்யப்பட்டதையும் நாடு கடத்தப்பட்டதையும் எதிர்த்து ஓர் அரசியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சிங்காரவேலரை பின்பற்றியவர்கள்தான் இந்த வேலைநிறுத்தத்தை முன்நின்று நடத்தினார்கள். வி.ஐ.லெனின், தொழிலாளர்களின் இத்தகைய அரசியல் நடவடிக்கையானது இந்தியத் தொழிலாளி வர்க்கம் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் புரட்சியினால் உற்சாகம் பெற்று, 1919-ம் ஆண்டில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டதைக் தொடர்ந்து, மற்ற இடங்களைப் போலவே இந்தியாவிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்தத் துவக்க கால முயற்சிகளில் குறிப்பிடத்தக்க இரண்டு முயற்சிகள் என்பது சோவியத் ஒன்றியத்தின் தென் பகுதியில் இருந்த தாஷ்கெண்ட்டிலும் மற்றொன்று கான்பூரிலும் மேற்கொள்ளப்பட்டது. தாஷ்கெண்ட் நகரில் மேற்கொள்ளப்ட்ட முயற்சி வி.ஐ.லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தூண்டுதலுக்கு இணங்க செயல்பட்ட எம்.என்.ராயினால் வழிகாட்டப்பட்டதாகும். இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய இயக்கத்தையும் வளர்த்தெடுப்பது பற்றிய பிரச்சனையில் எம்.என்.ராய் சிங்காரவேலருடன் தொடர்ந்து கடிதங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாஷ்கெண்ட் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபானி முகர்ஜி நேரடியாகச் சென்னைக்கு வந்து சிங்காரவேலரைச் சந்தித்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவில் அதன் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்தக் காலப்பகுதியில் சிங்காரவேலர் தேசிய இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் என்பதும், 1922-இல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உருப்பெற்ற எஸ்.ஏ.டாங்கேயை அவர் இந்தக் கயா மாநாட்டில்தான் சந்தித்தார்.

அவருடனும் மாநாட்டு பிரதிநிதிகளாக வந்திருந்த இதர கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் இணைந்து அந்த கயா காங்கிரஸில் இந்தியத் தேசிய காங்கிரஸை மேலும் தீவிரமானதொரு  அமைப்பாக மாற்றும் முயற்சியாக அணிதிரட்டப்பட்டதொரு முகாமை சிங்காரவேலர் உருவாக்கினார்.  ‘முழுமையான விடுதலை’ என்பதே அதன் இலட்சியம் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதை வற்புறுத்தும் வகையில் இந்த மாநாட்டில் இக்குழுவினர் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் அப்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட நடுக்கத்துடனேயேதான் இருந்தது. மாண்டேகு – செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் பிரிட்டனின் தலைமையின் கீழ் மேலாதிக்கமான இடம் என்ற விசயங்களுக்கு இடையே அன்றைய காங்கிரஸ் இயக்கம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, அதன் நடவடிக்கைகள் முழுவேகத்தில் செயல்படத் துவங்கின, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வேன்கார்ட்’ (முன்னணிப்படை) என்ற இதழ் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது. என்.என்.ராயின் நூலான ‘மாற்றத்தை நோக்கி இந்தியா’ என்ற நூல் முதல்முறையாக இந்தியப் பின்னணியில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளைச் செயல்படுத்த முற்பட்டது. மகத்தான தோழரான முசாபர் அகமது, ஷெளகத் உஸ்மானி, நளினி குப்தா, அபானி முகர்ஜி போன்றவர்கள் தாஷ்கெண்ட் மாநாட்டின் அறைகூவலை ஏற்று, கல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களிலும் சட்டவிரோதமான ஆரம்பக் கட்சிக் கிளைகளை உருவாக்கினர். 1920-ம் ஆண்டில் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பான அகில இந்தியத் தொழிற் சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

சிங்காரவேலரின் இந்துஸ்தான் லோபர் – இசான் கட்சி 1923-ம் ஆண்டில் பேரணி ஒன்றை நடத்தி பொதுக்கூட்டத்தையும் நடத்தி, மே தினத்தைக் கடைப்பிடித்த முதல் இந்தியத் தொழிற்சங்கமாகும்

என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். லேபர் – கிசான் கெஜட் என்று ஆங்கில இருவார இதழையும் தொழிலாளர் என்ற வார இதழையும் அவர் நடத்தத் துவங்கினார். வலுவான சோசலிச உணர்வு கொண்ட தீவிர காங்கிரஸ்காரர் என்று சிங்காரவேலர் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்தார். அநேகமாக 1925-ம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தபோதுதான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ‘ஞான ஸ்நானம்’ பெற்றார் என்றும் கூடக் குறிப்பிடலாம். எஸ்.ஏ.டாங்கேயுடன் இந்தக் கான்பூர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்கு ஒன்றையும் ஜோடித்தது. சிங்காரவேலரும் கைது செய்யப்பட்டதோடு, வன்முறையின் மூலம் பிரிட்டிஷ் அரசை தூக்கி ஏறிய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த விளக்கியதைப் போல கான்பூர் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, அவைகளை ஒன்றுபட்டதொரு கட்சியாக மாற்றுவது என்பதே ஆகும். பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புகழ் பெற்ற சக்லத் வாலா இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மாபெரும் தோழரான முசாபர் அகமது அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று வந்ததால் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த மாநாட்டிற்கு தனது ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக அவர் ரூ.30 அனுப்பியிருந்தார். அந்த நாட்களில் அது மிகப் பெரிய தொகையாகும். வரவேற்புக் குழுவின் தலைவராக ஹசரத் மோகானி இருந்தார். தவிர்க்க இயலாத காரணகங்களால் சக்லத் வாலா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. எனினும் வாழ்த்துச் செய்தியையும் தனது ஆதரவினையும் அவர் அனுப்பியிருந்தார். அவர் பங்கேற்காத நிலையில் மாநாட்டிற்குத் தலைமை ஏற்கச் சிங்காரவேலர் தேந்தெடுக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 28 வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைமை உரையில் சிங்காரவேலர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று துணிவுடன் அறிவித்தார். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்களுடன் மாறுபட்டு நின்ற நிலையில் மாநாட்டை விட்டு மட்டுமின்றி கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்தே வெளியேறினார்.

தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அணி திரட்டும் முயற்சியாகக் கான்பூர் மாநாடு விளங்கியது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்தப் கான்பூர் மாநாட்டினை முன்முயற்சி எடுத்து நடத்தியது சத்ய பக்த் என்ற துணிச்சலான பத்திரிக்கையாளர் ஆவார். நாணயமானவராக இருந்த போதிலும் மார்க்ஸிய – லெனினிய தத்துவம் மற்றும் நடைமுறையில அனுபவம் மிக்கவராக அவர் விளங்கவில்லை. எஸ்.ஏ. டாங்கேயின் முதல் நூலான ‘காந்தியும் லெனினும்’ என்ற நூலைப் பார்க்கும்போது, அவரது தத்துவார்த்த நிலைப்பாடும்கூட தெளிவாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அவர் நடத்தி வந்த ‘சோசலிஸ்ட்’ இதழ் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் அங்கமாக இடம் பெற்ற போதிலும், காந்தியம், சோசலிசம் ஆகியவற்றின் குழப்பமான கலவையாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கான்பூர் மாநாடு தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூறி வருகிறது. தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாட்டைப் போல் இல்லாமல், கான்பூர் மாநாடு இந்திய மண்ணிலேயே நடைபெற்றது என்பதுதான் அவர்களது வாதம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கம்யூனிஸ்ட் அகிலத்தால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டு தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாடுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று வலியுறுத்துகிறது.

தோழர் முசாபர் அகமது எழுதிய ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோற்றமும்’ என்ற நூல் இது குறித்த நிலைபாட்டைத் தெளிவாக விளக்குவதோடு. தாஷ்கெண்ட் மாநாட்டிற்கான தனது ஆதரவை பலப்படுத்தியது. இன்றைய நோக்கத்திற்கு இந்த சச்சரவிற்குள் இதற்கு மேலும் நாம் போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் கான்பூர் மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்போது நாம் சற்றே பின்னோக்கி போய் சமூக சீர்திருத்தவாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரருமாக இருந்த சிங்காரவேலர் முழுமையானதொரு கம்யூனிஸ்டாக உருப்பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பதைச் சற்றே காணலாம்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

சிங்காரவேலரின் குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்ததாகும். மிகக் கடுமையான தொழிலைச் செய்து வந்து போதிலும் மீனவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. கடற்கரையில் குடிசைகளுக்கிடையே சுகாதாரமில்லாத, மிக மோசமான சூழ்நிலையில், வழக்கமான கல்வியோ, மரியாதைமிக்க குடியுரிமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் வசித்து வந்தனர். இச்சமூகத்தினை சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவிற்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதிய புறக்கணிப்பு மற்றும் ஒடுக்குமுறை என்ற தளையிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை. வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான சிங்காரவேலர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிறுவயதிலேயே உணர்வு தூண்டப்பட்டவராக இருந்தார். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று. வளமான வருமானம் தரும் வக்கீல் தொழிலில் இறங்கிய போதும் நிலைமைகள் அவரைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டேதான் இருந்தன. எனவே சமூக சேவை நடவடிக்கைகளிலும் அவர் இறங்கினார். இத்தகைய அனுபவங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவரை கவர்ந்திழுக்க உதவின என்றும் உறுதியாகக் கூறலாம்.

அங்கும்கூட நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் மிதவாதிகளை விட, தீவிரவாத பிரிவினருடன் தான்அவர் தன்னை இணைத்துக் கொண்டார். மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து 1907-ம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே ஆண்டில்தான் முறையான பயிற்சிக்குப் பிறகு சிங்காரவேலர்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இந்த நீதிமன்றங்களும், அதில் செயல்பட்டு வந்த வழக்கறிஞர்களின் வெற்றி என்பதும் சட்ட வழிமுறைகளின் நுணுக்கமான தன்மைகள் மட்டுமின்றி பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களும் அடங்கியதே ஆகும். எனினும் பணத்தையும் பதவியையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கறிஞர்களின் கண்களில் இதுபோன்ற விசயங்கள் தென்படுவதில்லை. ஆனால் சிங்காரவேலரோ மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். இவை அனைத்துமே அவரது இளம் பருவத்தில் உருப்பெற்ற கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. பொதுவாகவே வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ எந்தவொரு சூழ்நிலையிலும் அடக்கு முறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எப்போதும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.

பல்வேறு வகையிலும் 1902-ம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர்  மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம். அந்தநேரத்தில்தான் மகத்தான சோசலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோசலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கி விட்டுச் சென்ற ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தது. இவையனைத்துமே இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த இளைஞரின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அதுதான் உலக புத்த மதத்தவரின் மாநாடாகும். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்திற்கு அவர் மாறி விட்டார் என்றே கூறிவிடலாம். சாதிய முறைக்கு எதிரான, பிராமணிய பலியிடல், சடங்கு முறைகள் ஆகியவற்றிற்கு எதிரான கௌதமபுத்தரின் கருத்துக்கள் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்த இளம் புரட்சியாளரின் இதயத்திலும், மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்த கருத்துக்களே ஆகும்.

இந்தியாவிற்குத் திரும்பி வந்த அவர், மகா போதி சமூகத்தின் மாநாடு நடைபெற உதவி செய்ததோடு அதில் பங்கேற்கவும் செய்தார். அந்த நேரத்தில்தான் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் நுழைய மட்டுமல்ல; பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தவும் தடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் சாதிய மேலாதிக்கத்திலிருந்து விடுபடும் வகையில் புத்தமதத்திற்கு மாறி விடலாமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்தான் தலித்துகள் பெருமளவில் புத்தமதத்திற்கு மாறுவதற்கு ஏற்பாடு செய்தார். இவ்வாறு மதம் மாறியவர்கள் புதிய புத்த மதத்தவராகக் கருதப்பட்டனர். எனவே சிங்காரவேலரை, அவரது முப்பதாவது வயதிலேயே, புதிய புத்த மதத்தவராக அழைப்பதும் தவறாகாது.

காங்கிரஸ் அரசியலின் கடுமையான பாதை

1919-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமும், இந்தியத் தேசிய காங்கிரஸில் மகாத்மா காந்தியின் நுழைவும், இந்தியத் தேசிய விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாக அமைகின்றன. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் படுகொலை சம்பவமானது படுமோசமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு பழி வாங்கும் படலமாக அமைந்தது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் குரல்வளையை நெறித்து அரசியல் ரீதியாக அவர்கள் கிளர்ந்தெழாத வண்ணம் செய்வதற்காக பயன்படுத்திய வரன்முறை ஏதுமற்ற சட்டம்தான் ரௌலட் சட்டம். ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அணிதிரளும் வகையில் காந்தி மிகவும் புத்திக் கூர்மையுடன், பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பது மது விற்பனையைத் தடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முழுமையாக மறுப்பது போன்றவைதான் அவரது போராட்ட வடிவங்களாக இருந்தன. இவை அனைத்தையும் அஹிம்சை முறையிலான சத்தியாக்கிரக இயக்கம் என்று அவர் அழைத்தார். 1922-ம் ஆண்டில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்ற நேரத்தில், பீஹாரில் சௌரி சௌரா என்ற கிராமத்து மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி வன்முறையில் இறங்கினார்கள் என்று கூறி, சக ஊழியர்கள் எவரையும் கலந்து ஆலோசிக்காமலேயே காந்தி இந்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.

காந்திஜியின் இந்த நடவடிக்கையானது பொதுவாக மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் அவநம்பிக்கை கொள்ள வைத்தது. மோதிலால்நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு குழுவை உருவாக்கி அதற்கு ஸ்வராஜ்ய கட்சி என்று பெயரிட்டு அரசியல்  சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடப்போம் என்றும் அறிவித்தனர். மேல் தட்டில் இருந்த தலைவர்களில் சி.ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிராசாத், வல்லபாய் பட்டேல் போன்ற மற்றொரு பிரிவினர், காந்திய வழிமுறையையே பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். எனினும் இந்த மாற்றத்தை விரும்பாதவர்களிடம் காதி நூல் நூற்பது, ஹரிஜன மேம்பாடு, மதுவிலக்கு போன்ற திட்டங்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட தீவிரமான அரசியல் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்பதாகவே இருந்தது.

காந்திஜியின் எதேச்சாதிகாரமான, முன்யோசனையில்லாத நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பெரும் இடைவெளியில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பகத்சிங் போன்ற தீவிர இளைஞர் குழுக்கள் போன்ற அமைப்புகள் தோன்ற வழி கிடைத்தது. முசாபர் அகமது, சிங்காரவேலர்  எஸ்.ஏடாங்கே போன்றவர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த சோசலிஸ்டுகளையோ, அல்லது பகத்சிங் போன்றவர்கள் தனி நபர் வீரச் செயல் போன்ற வன்முறை நடவடிக்கைகளையோ பின்பற்ற மறுத்தனர். கான்பூர் மாநாட்டிற்குப் பிறகு சிங்காரவேலர்  உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் நாட்டின் பல பகுதிகளிலும் சட்டபூர்வமாகச் செயல்படுவதற்காகத் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியை உருவாக்கினர்.

சிங்காரவேலரின், சாதிக்கு எதிரான உறுதியான நிலைபாடும், இந்துச் சடங்குகள், அவர்களது மனுஸ்மிருதி போன்ற நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் மற்றும் அவரது சுயமரியாதைக் கட்சியுடன் நெருக்கமாக அவரைச் செயல்பட வைத்தது எனலாம். 1925-ம் ஆண்டு வாக்கிலேயே ஈ.வே.ரா., காங்கிரஸின் மீதும் அதன் மேல்சாதி தலைமையின் மீதும், நம்பிக்கை இழந்திருந்தார். சுயமரியாதைக் கட்சியின் முக்கிய நோக்கம் என்பது சாதி அடக்குமுறை அமைப்பை எதிர்த்துப் போராடுவதே ஆகும். இந்து மதச் சடங்குகள், புராண ரீதியான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகவே இருந்தது. ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமனை வழிபடுவதற்குப் பதிலாக ராவணனின் சிறப்பான குண நலன்களையும், அறிவுத் திறனையும், ஈ.வே.ரா. போற்றிப் புகழ்ந்தார். அவரது பகுத்தறிவு வாதம் என்பது மார்க்ஸின் இயக்கவியல் பொருள் முதல்வாதத்திலிருந்து ஒரு சில விசயங்களில் வேறுபட்டதாக இருந்தபோதிலும் சிங்காரவேலர் அதனால் கவரப்பட்டார். அதேநேரத்தில் ஈ.வே.ரா.வின் அதீதமான பேச்சுக்களையும் அவர் விமர்சித்தார். ஈ.வே.ரா.நடத்தி வந்த “குடியரசு” இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.

1925-ம் ஆண்டில் சுயமரியாதைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே, 1916-ம் ஆண்டில் நீதிக்கட்சி தோன்றியது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், 1934-ம் ஆண்டு முதல் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அதுவே பின்னாளில் திராவிடக் கழகமாக உருப்பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் குறித்து சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கினைச் சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார். இந்த இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதோ அல்லது அதற்கு இணையானதோ அல்ல. எனவேதான் அவரறிந்திருந்த மூத்த கம்யூனிஸ்டுகளில் ஒருவரான எஸ்..ஏ.டாங்கேவை 1936-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை சோசலிஸ்டுகளின் மாநாட்டை துவக்கி வைக்க அழைத்தார்.

சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு பெற்ற அடிகளிலிருந்து மெதுவாக விடுதலை பெற்று, உறுதியுடன் புத்தெழுச்சி பெற்றதாக இந்திய அரசியல் சூழ்நிலை நிலவியது. சைமன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் வெள்ளையர்களே ஆன கமிசன் இந்தியாவிற்கு வருகை தர நியமிக்கப்பட்டதை அறிந்து இந்திய மக்கள் மிகுந்த கோபமுற்றனர். இந்தக் கமிசன் இந்தியத் தலைவர்களுடன் பேசி, இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பரிந்துரைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சைமன் கமிசன் இந்தியாவில் சென்ற இடங்களில் எல்லாம் புறக்கணிக்கப்பட்தோடு வலுவான எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது.

1928-ம் ஆண்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பங்கேற்ற முதல் காங்கிரஸ் மாநாடும் இதுவேயாகும். தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பியிருந்த இளைஞரான ஜவகர்லால் நேருவும் இந்தச் சென்னை மாநாட்டில் பங்கேற்றதோடு, முழுமையான விடுதலையே காங்கிரஸ் இலக்கு என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். அவரது இந்த முயற்சியை அவரது தந்தையும் மாகத்மா காந்தியும் கூட எதிர்த்தனர் என்பதோடு அதீதமானதொரு நடவடிக்கை இது என்றும் கருதினர். எனினும் அத்தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து வந்த 1929-ம் ஆண்டானது இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதற்குமே மிகவும் முக்கியமானதொரு ஆண்டாகத் திகழ்ந்தது. இந்த 1929-ம் ஆண்டில்தான் அமெரிக்காவிலும், இதர மேற்கந்திய முதலாளித்துவ நாடுகளிலும் ‘மாபெரும் பொருளாதார வீழ்ச்சி’ வெடித்தெழுந்தது. இது இந்தியா உள்ளிட்டு முதலாளித்துவ உலகம் முழுவதிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்ழுடுத்தின.

1930-ம் ஆண்டில் உப்பு ‘சத்தியாக்கிரம்’ ‘தண்டி   யாத்திரை’ என்ற வடிவங்களில் அடுத்த சுற்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தினை மகாத்மா காந்தி துவங்கினார். இதே நேரத்தில்தான் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பிரிட்டிஷ் ஆட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஜெனரல் டயர் மாபெரும் தேசியத் தலைவரான லாலா லஜபதிராய் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்க, படுகாயமுற்ற அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இந்த ஜெனரல் டயரை சுட்டுக் கொல்ல முயன்ற பகத்சிங் பின்பு தூக்கிலிடப்பட்டார்.

1929-ம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கநிகழ்ச்சி என்பது மீரட் சதி வழக்கு ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் – விவசாய கட்சியின் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டடனர். சட்டபூர்வமானதொரு அரசைத் தூக்கியெறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1934ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி ஒன்றை உருவாக்கித் தங்களைச் சீரமைத்துக் கொண்னட கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத் தலைவர்களின் பெரும்பாலோர் இந்த மீரட் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிலிப் ஸ்பராட், பென் பிராட்லி, ஹட்சின்சன் உள்ளிட்டு பி.சி.ஜோஷி, ஜி.அதிகாரி, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.எஸ்.மிராஜ்கர் மற்றும் பலர் இச்சதிவழக்கில் குற்றவாளிகளாக இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களோ புரட்சிகரக் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும், கம்யூனிஸ்ட்டுகளின் செயல் திட்டத்தை விளக்குவதற்குமான ஒரு மேடையாகவே இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கம்யூனிச தத்துவம் குறித்த நூல்கள் அப்போது தடை செய்யப்பட்டு, கிடைக்காத நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மார்க்சியம் பற்றியும், சோசலிசம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய நாளிதழ்களும் இந்த வாதங்களை விரிவாக வெளியிட்டன. ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்றிற்காகச் சிங்காரவேலர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மீரட் சதி வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் 1930-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 70. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தலைவர்கள் ஏற்கனவே இயக்கத்தை வலுப்படுத்தி, போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். வயதும், முதுமையும், உடல் நலக்குறைவும் இருந்தபோதிலும் அவர் ஓய்வு பெற விரும்பினாரில்லை. தனது நடவடிக்கைகளையும் எழுத்துப் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார்.

1933-ம் ஆண்டில் மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்ற தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை பெற்றனர். அவர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல 1934-ம் ஆண்டில் ஒரு மத்திய தலைமை உருவாக்கப்பட்டது. மீரட் குழுவில் வயதில் மிகவும் இளைஞராக இருந்த தோழர் பி.சி. ஜோஷி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் டாக்டர். கங்காதர் அதிகாரிதான் அந்தப் பொறுப்பிற்கு வருவதாக இருந்தது. எனினும் அந்த நேரத்தில் அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்தததால் தோழர் ஜோஷியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரி  சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட ஜோஷி தொடர்ந்து பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1948-ம் ஆண்டில்தான் அவருக்குப் பதிலாகத் தோழர் பி.டிரணதிவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1934-ம் ஆண்டிலிருந்துதான் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” அந்நிய ஆட்சியாளர்களின் அனைத்து விதமான அடக்குமுறைகள், தாக்குதல்கள் ஆகியவற்றை மீறி முதிர்ச்சி அடைந்தது. எனினும் 1942-ம் ஆண்டு வரை கட்சி சட்டவிரோதமான ஒன்றாகவே இருந்தது.

1934-ம் ஆண்டில் மத்திய தலைமை ஒன்றின் மூலம் மறுசீரமைப்புச் செய்ததன் மூலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு அத்தியாயம் துவங்கியது. இந்தத் துவக்கத்தில் தோழர் சிங்காரவேலரின் பங்களிப்பு தீர்மானகரமானதாகவும், மகத்தானதாகவும் இருந்தது. இதில் அவரது பங்களிப்பு குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டனர்:

“….. அவரது இந்த உண்மைத் தன்மையுடன் வெளிப்படையான பேச்சும் அவருக்கு எந்த வகையிலும் பெரிய அளவில் ஊறு எதையும் விளைத்துவிடவில்லை. ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, சுயமரியானை இயக்கத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே அவர் ஊசலாட்டமில்லாததொரு கம்யூனிஸ்ட் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ள அவர் எப்போதுமே பயந்தவரல்ல; அதுவும் அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களது பிரச்சாரமும் கம்யூனிசம் என்பது ஏதோ பயங்கரமானது போன்று சித்தரிக்கத் தயங்கியதே இல்லை. அப்போதுதான் விழிப்புணர்வு பெற்றிருந்த தேசியவாதிகளின் மனங்களில் கம்யூனிசத்தோடோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ தொடர்பு கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை உண்டாக்கி இருந்தனர். அல்லது அவ்வாறு உண்டாக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து உறுதியாகத் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்ற நிலையெடுத்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்ததானது கம்யூனிசம் என்ற தத்துவத்திற்கு ஆதரவாக எத்தகைய வீரமான, துணிச்சலான, வீரராக சிங்காரவேலு இருந்தார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது”

             (சிங்காரவேலு – தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் –        பி.பி.எச்.   புதுதில்லி 1975)

நன்றி: சிங்காரவேலர் நினைவு அறக்கட்டளை

சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை

என்.குணசேகரன்

மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது,  அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது.

இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர்     இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர் சிங்காரவேலர். இதன் காரணமாக அவர் தமிழக அறிவுத் தளத்தில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவராக உயர்ந்து நிற்கிறார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழகத்திற்கு மார்க்சிய தத்துவத்தின் முழுப்பரிமாணங்களை அறிமுகம் செய்து வைத்தவர், அத்துடன் மார்க்சியத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் இலட்சியப் பணியையும் துவக்கி வைத்தவர்.

தமிழகத்தில் மார்க்சிய எழுச்சி:

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழகத்தில்  அரசியல், சமூக இயக்கங்கள் பல வளர்ச்சி  பெற்றன.ஆங்கிலேய  ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த கருத்தியல் உருவாக்கங்கள் பல்வேறு வகைப்பட்டனவாக இருந்தன.  சமுக,மத  சீர்திருத்தங்கள்,ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றின் தாக்கங்களோடு  காலனிய எதிர்ப்பு பலமடைந்து வந்தது.

பாரதியின் படைப்புகள், பெரியார் தலைமையில் இயங்கிய  திராவிட இயக்கம், அயோத்திதாஸர் போன்றவர்களின் சாதி மறுப்பு இயக்கம் ஆகியவற்றோடு  கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடும் வளர்ச்சி கண்டது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று வலு சேர்த்தன.இந்த சூழலில் மார்க்சிய சிந்தனை வலுப்பெற்றது. சிங்காரவேலர் செயல்பாடு  தமிழகத்தில் மார்க்சியம் உறுதியாக வேரூன்ற  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  அமைந்தது.தமிழ்ச் சமூகத்தின் இன்றைய கருத்தாக்க நிகழ்வுகளிலும் முக்கிய  செல்வாக்கு செலுத்தி வருவதற்கு அன்றைய தலைமுறையின் அயராத கருத்தியல் செயல்பாடு முக்கிய காரணமாக இருந்ததை மறுக்க இயலாது. இதற்கு சிங்கரவேலரே முன்னோடியாகத் திகழ்கின்றார்.

தமிழகத்தில் இன்றளவும் அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு என பல துறைகளில் மார்க்சியத்தின் தாக்கம் இருந்துவருவதோடு மார்க்சியத்திற்கு தனி ஈர்ப்பு நீடித்து வருகிறது. இதற்காக அன்று வலுவான அடித்தளம் அமைத்தவர் சிங்காரவேலர். இறுதி மூச்சு வரை அவர் மேற்கொண்ட மார்க்சிய பரப்புரையும், மார்க்சிய நோக்கிலான  படைப்புக்களும் தமிழ் மண்,  மார்க்சியத்தை சுவாசித்திட வழிவகுத்தது.

மார்க்சியத்தை பரப்புவதற்கு பல தளங்களையும் வாய்ப்புக்களையும் அவர் பயன்படுத்தினார்.மாற்றுக் கொள்கை கொண்டவர்களிடமும் சில பொது நோக்கங்களை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றும் போது தனது கொள்கைகள் மேலாண்மை பெற ஒரு மார்க்சியர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுய மரியாதை இயக்கத்தை துவங்கியதும் அவரோடு சிங்காரவேலர் இணைந்து செயல்பட்டதும் வரலாறு. இந்த இணைந்த செயல்பாட்டையும், சுயமரியாதை இயக்க மேடைகளை,  பொருள் முதல்வாதக் கோட்பாடுகளையும் கம்யூனிசக் கொள்கைகளையும் பரப்புவதற்கு சிங்காரவேலர் பயன்படுத்தினார். “குடிஅரசு”, “புரட்சி” ஆகிய  வார இதழ்களில், சமுதாயச் சீர்திருத்தம் மற்றும் , பகுத்தறிவுக் கருத்துகள், சோசலிச கொள்கைகள், அறிவியல் விளக்கங்கள் என பல்வேறு வகைகளில் மார்க்சிய கருத்துக்களை எழுதி வந்தார். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்களின் தளங்களை மார்க்சிய பரப்புரைக்கு அவன் பயன்படுத்தியதில், அவரது தனிச்சிறப்பு வாய்ந்த மார்க்சிய நடைமுறையின் மகத்துவம் வெளிப்பட்டது.

அன்று உலக அளவில் மார்க்சியம் பல சவால்களை எதிர்கொண்டது. அது,  தத்துவத்துறையில் கடுமையான போராட்டம் நிகழ்ந்து வந்த காலம்.மார்க்சியத்தை திரித்து அதன் புரட்சிகர கூர்மையை மழுங்கச் செய்திடும் போக்கு தீவிரமாக இருந்த காலம்.ஜெர்மனியில் பெர்ன்ஸ்டைன் எனப்படும் சமுக ஜனநாயக கட்சியின் தலைவர் தலைமையில் ‘சோசலிசம் வென்றடையும் இலக்கு அல்ல. மாறாக அது ஒரு நிகழ்வுப் போக்கு’ எனக் கூறி, ‘சோசலிசத்திற்கான இயக்கம் மட்டுமே முக்கியம்; இலக்கு அல்ல’ என்று மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நீடித்து வந்தன. அத்தகைய போக்குகளுக்கு எதிராக லெனின் தலைமையில் உண்மையான மார்க்சியவாதிகள் பெரும் கருத்துப்போரை நிகழ்த்தி வந்தனர்.1917 நவம்பரில் வெற்றி கண்ட ரஷியப் புரட்சி, மார்க்சியத்தின் புரட்சிகர உயிர்ப்பினை மீண்டும் உயர்த்திப் பிடித்தது.

ரஷியப் புரட்சியின் வெற்றி நிகழ்ந்த காலத்தில் சிங்காரவேலர் தொழிலாளர் இயக்கங்களை நடத்துவதில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை, சுரண்டலிலிருந்து விடுதலை, மார்க்சிய இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பல தத்துவார்த்த, மார்க்சிய நடைமுறைகள் பற்றிய பிரச்சாரத்தை அவர் செய்து வந்தார். குறிப்பாக 1920.-ம் ஆண்டுகளிலிருந்து, 1930-ம் ஆண்டு சிறை சென்று விடுதலையான காலங்களில் அவர் தீவிரமாக இப்பணிகளை மேற்கொண்டார். 1946ம் ஆண்டு இறக்கும் வரை அவர் மார்க்சிய லெனினியத்தை எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

தத்துவ செயல்பாடு

மார்க்சியத்தில், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் எனும்  மூன்று முக்கிய அடிப்படைக் கூறுகள் உண்டு என்று லெனின் வரையறுக்கிறார், (லெனின் மார்க்சியத்தின்) இதேபோன்று, சிங்காரவேலரின் செயல்பாட்டுத் தளங்களையும் வகைப்படுத்தி அறிந்திட முடியும்.

மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும்  இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.    மார்க்சிய தத்துவப் பார்வையில் ஆழமான தெளிவான பார்வை கொண்டவராக சிங்காரவேலர் வாழ்ந்திருக்கிறார்.

எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார். “எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையேயான உறவு பற்றியதுதான்’’

தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார். ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன்மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர்கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்தியவர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”

மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படையில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். தத்துவ சிந்தனைப் பரப்பில் நடக்கும் போராட்டங்களை வகைப்படுத்த ஏங்கெல்ஸ் காட்டிய வழிகாட்டுதல் உதவுகிறது, இரண்டு பிரிவுகளுக்கும், ஆளும் வர்க்கம் சார்பு, ஒடுக்கப்படும் வர்க்க சார்பு என்ற பின்னணி உண்டு என்பதையும் மார்க்சியம் வழியாக சிங்காரவேலர் உணர்த்தியுள்ளார்.

“சமூகமும் பொருளாதாரமும்” என்ற கட்டுரையில் சிங்காரவேலர் பொருள்முதல்வாத விளக்கத்தை எழுதுகிறார்:

“உயிர்கள் யாவும், பொருளைப்(things) பற்றியுள்ளன. எல்லா உயிரும் பொருளை ஆதாரமாகக் கொண்டுள்ளன. உயிர்கள் பொருளால் ஆக்கப்பட்டும்,பொருளால் தத்தம் ஜீவனத்தை நடத்தியும்,வாழ்ந்து வருகின்றன.பொருள் இல்லையெனில்,எந்த ஜீவனும் வாழா…”பொருளுக்குப் படைப்புக் கடவுள் என்று எதுவும் இல்லை என்பதும் பொருளே முதன்மையானது அதன் பிரதிபலிப்பே சிந்தனை என்றும் மார்க்சிய நிலைப்பாட்டில் நின்று உலக இயக்கத்தை சிங்காரவேலர் விளக்கியுள்ளார். இக்கருத்தினை அன்றைய அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு அவர் விளக்கியுள்ளது தான் சிறப்பானது. இந்தப் பாங்கு இதர பகுத்தறிவாளர்களிடமிருந்து வேறுபட்டு தனிச்சிறப்பு கொண்டவராக சிங்காரவேலரை முன்னிறுத்துகிறது.

அறிவியலோடு இணைந்த தத்துவம்

அவரது எழுத்துக்களில் முக்கிய இடம் பெறுவதாக, 1932-ல் எழுதிய  ‘கடவுளும் பிரபஞ்சமும்’, ‘கடவுளும், மனிதனும்’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். கடவுள் எனும் கருத்தாக்கம் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கற்பிதம் என்று அறிவியலைக் கொண்டு ஆதாரப்பூர்வமாக பேசுகிற கட்டுரைகள் இவை. தன் காலத்தின் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சிங்காரவேலர்  விரிவாக பொருள்முதல்வாதப் பார்வையை முன்வைக்கிறார். டார்வினின் பரிணாம வளர்ச்சி, -ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவம் போன்றவற்றை வலுவாகப் பற்றிக் கொண்டு அறிவியல் விளக்கங்களை அளித்துள்ளார். இதன் வழியாக, மார்க்சின் வரலாற்று பொருள் முதல் வாதப் பார்வையை விளக்குகிறார். இது அல்லாமல் புரூனோ, கோபர்னிகஸ் உள்ளிட்ட அறிவியலாளர்களையும் தத்துவாசிரியர்களில். ஸ்பைனோஸா, காண்ட், ஸ்பென்சர், ஹெகல் உள்ளிட்டோரது கருத்துக்களையும் விவாதிக்கின்றார். அவர் எழுதிய  ‘விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தொடரிலும் அறிவியல் கருத்துக்களை பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் எழுதினர்.    அவரது காலம் வரை பிரபஞ்சம், விண்மீன்கள், அணு, மின்னணு பற்றிய கண்டுபிடிப்புகளை அவர் ஆழமாக பயின்றிருந்தார்.

அறிவியலோடு இணைந்து மார்க்சியம் தோன்றிய வரலாற்றுச் சூழலை அவர் விளக்கியுள்ளார்:

அறிவியல் வானம், பூமி, பிரபஞ்சம், அணு என ஆராய்ந்து இயற்கை இரகசியங்களை  அறிய முனைப்புடன் அன்று இயங்கி வந்தது. ஆனால் ‘மனித சமுகத்தில் வறுமை வந்த காரணத்தையும், இல்லாமையின் காரணத்தையும் அவைகளை போக்கும் மார்க்கத்தினையும் தெரியாமல் தவித்து வந்ததையும்” விவரிக்கும் சிங்காரவேலர், இந்த கட்டத்தில் மார்க்சியம் பிறப்பெடுத்து அரிய சமுக கண்டுபிடிப்புக்களை கண்டறிந்ததை விளக்குகிறார்.

விஞ்ஞானத்திற்கு இரண்டு கருவிகள் உண்டு என்கின்றார் சிங்காரவேலர். ‘அவையாவை எனில் முதலாவது பார்த்தல், (observation) இரண்டாவது பரீட்சித்தல் (experiment). இவ்விரண்டு கருவிகளைக் கொண்டே இதுவரை தெரிந்திருக்கும் சம்பவ காரணங்களை விளக்கமுற்றன.’

இந்த அறிவியல் கருவிகளை பயன்படுத்தாத காரணத்தினால் மந்திரங்கள், பொய் பித்தலாட்ட மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன என்கிறார் சிங்காரவேலர்.இது முழுக்க பொருள்முதல்வாத அறிவியல் அணுகுமுறை.

அதே போன்று மேற்கண்ட அறிவியல் கருவிகள் மூலமாகவே மனித அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார். மார்க்சிய அறிவுத் தத்துவத்தையும் அவர் குறிப்பிடுகிறார்: ”இனித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மகத்தானதென சொல்லலாம். இதுவரை தெரிந்திருக்கும் விஷயங்கள் தினை அளவு என்று சொல்ல வேண்டும்.” எல்லையற்ற அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக மார்க்சிய அறிவுக் கோட்பாடு விளங்குகிறது என்பதை சிங்காரவேலரின் எழுத்துக்களில் உணர முடியும்.

 ஒரு தத்துவ மாநாட்டில் பகுத்தறிவைப் பயன்படுத்துவதால் உலகம் சீர்கெட்டு கிடக்கிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.அந்தக் கருத்தை எதிர்த்து எழுதுகிறபோது “ஆதி மனிதன் நெருப்பை கண்டுபிடித்தது முதல் நேற்று நாம் தீக்குச்சி செய்து வருவது வரை மனிதன் பகுத்தறிவை உபயோகித்து வந்திருக்க அதிகமாக பகுத்தறிவை உபயோகித்தபடியால் நமக்கு வந்தது கேடு என்றால், இதனினும் உன்மத்தப் பேச்சை நாம் கேட்டறியோம்? பகுத்தறிவின் உதவியின்றி எந்த மனித விவகாரம் நடக்கும்” என்று கடும் ஆவேசத்துடன் எழுதியுள்ளார்.

இயக்கவியல் பார்வைக்கு அறிவியல் இன்றியமையாதது என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் போதித்தனர். சோசலிசத்திற்கான போராட்டத்தில் அறிவியல் புரட்சிகர பங்கினை வகிக்கிறது என்பதனை அவர்களது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. இதே பார்வையினை உறுதுணையாகக் தனது மார்க்சிய பரப்புரை செயல்பாடுளை சிங்காரவேலர் மேற்கொண்டார். 

மக்களிடையே நிலவுகிற மூட நம்பிக்கைகளை அறிவியல் துணை கொண்டு விளக்கும்போதும் மார்க்சிய நோக்கிலான பொருள்முதல்வாதம் பளிச்சிடுகிறது. அவர் புது உலகம் இதழில் சூரிய, சந்திர கிரகணங்களில் அறிவியல் உண்மையை எழுதி மக்களின் அறியாமையை போக்கிட முயற்சித்துள்ளார். சுரண்டல் அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டுமெனில் அறிவியல் அடிப்படையிலான மார்க்சியப் பொருள்முதல்வாதம்தான் ஒரே வழி என்பதில் அவர் உறுதிப்பாடு கொண்டவராக இறுதி நாள் வரை செயல்பட்டார்.

சாதி மதம் – பொருள்முதல்வாத பார்வை:

சமூகப் பிரச்னைகளை ஆராய்கிற போது வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையை கெட்டியாகப் பற்றி நின்றார், சிங்காரவேலர். சாதி, மதம் தொடர்பான  பிரச்னைகளை  நிறைய விவாதித்துள்ள சிங்காரவேலர், அதன் பொருள்முதல்வாத அடிப்படையை மிக எளிமையாக விளக்கியுள்ளார்.

“மதங்கள் யாவும், எந்த மதமானாலும், சரி, புத்த மதமானாலும், இந்து மதமானாலும், கிறிஸ்து மதமானாலும், மகமதிய மதமானாலும், எல்லா மதங்களும் பொருளாதாரத்தில் நெருங்கிய சம்பந்தம் பெற்றுள்ளவை; பொருளின் செல்வாக்கை நோக்கியே எந்த மதங்களும் கட்டப்பட்டுள்ளன; இன்றைக்கு மதங்கள் உலகில் செழிப்படைந்து வருவது பொருள் ஆதாயம் மதஸ்தர்களுக்கு இருப்பதால்தான்…’

அப்பட்டமாக அவர் அன்று எழுதிய கருத்து இன்றும் பொருத்தமுடையதாகத் திகழ்கிறது.இன்று மதத்தை அதிகாரத்திற்கு வருவதற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கார்ப்பரேட் முதலாளித்துவ குழுமங்கள் செழிக்க இந்துத்துவ சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

அதே போன்று சாதி இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் பொருளியல் நலன்களையும் அவர் விளக்கியுள்ளார்.

“ஜாதியும், பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில், கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கின்றான். இன்றைக்கும் பிராமணர்கள் பெரும்பான்மை சூத்திரர்களை விட பொருள் பெருத்திருப்பதைக் காணலாம்….பணத்திற்கு முன் ஜாதி என்ன செய்யும்..பணம் படைத்த அரிச்சந்திரன் அரசனான். பணம் இழந்த அரிச்சந்திரன் வெட்டியானான்…”என்று எழுதுகிறார்.

“ஆதலின் ஜாதி ஒழிய வேண்டுமாயின் பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும்”என்று அவர் வந்தடையும் முடிவும் வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் வந்தடையும் முடிவாகவே அமைந்துள்ளது.

பொதுவுடைமை விளக்கம்

உலகெங்கும் அன்று செயல்பட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களை அவர் அறிந்திருந்தார். அவர்களது நிலைபாடுகளை ஆராய்கிற போது மார்க்சிய இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார்.தம் காலத்தின் உலக அரசியல், உலக அறிவியல் முன்னேற்றம், தத்துவ  வளர்ச்சி  உளிட்ட அனைத்திலும் மார்க்சியப் பார்வையுடன் விவாதித்துள்ளார்.

‘பொதுவுடைமை விளக்கம்’ என்ற விரிவான கட்டுரையில் பொதுவுடைமைக் கோட்பாட்டினையும், தத்துவத்தையும்  பல பரிமாணங்களில் விளக்குகிறார் சிங்காரவேலர். பொதுவுடமையும் செல்வமும், பொதுவுடமையும் தனியுடைமையும், பொதுவுடமையும் வேலை இல்லாமையும்’ என பல தலைப்புக்களில் விளக்கிகிறார்.இந்த விளக்கங்களின்  ஊடாக முதலாளித்துவத்தின் தீமைகளை விளக்கி,பொதுவுடைமைக் கொள்கையின் மேன்மையை விளக்குகிறார்.

மத வேறுபாடுகள்,சாதி வேறுபாடுகள் குறித்தும் பொதுவுடைமை இலட்சியத்தை அடைய இவை எவ்வாறு தடையாக உள்ளன என்பதையும் விளக்குகிறார்.

‘பொதுவுடையும் பெண்களும்’ என்ற தலைப்பில் விவாதிக்கும் போது,” குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதார நிலைமையிலும்,கல்வி கேள்வியிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயர்வு தாழ்வு இருத்தல் கூடாது” என்று மார்க்சியத்தின் முக்கிய நெறியான பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறார்.

சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வைதான்  உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றியது.காங்கிரஸ் அன்று வெறும் அரசியல் விடுதலலைக்கான போராட்டத்தை  நடத்தி வந்த நிலையில் பொருளாதார சுரண்டைலையும்  முடிவிற்கு கொண்டு வரும் செயல்திட்டத்தோடு களம் இறங்கியவர் சிங்காரவேலர்.

ரஷியப் புரட்சிக்கு, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சி முன்னேறிட உதவியது.  1920-ம் ஆண்டுகளின் போதே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார். இவ்வாறு பொதுவுடைமைக்கு விளக்கம் கொடுத்து அந்த லட்சியத்தை அடைவதற்கான இயக்கங்களையும் கண்டவர் சிங்காரவேலர்.

சோசலிசப்பார்வை

“உலகப் பொருள்கள் யாவும் உழைப்பவனால் உண்டாக்கப்பட்டபடியால், உழைப்பவனுக்கே உலகம் உரியதென்ற மாபெரும் உண்மையை தனது சிறப்பு வாய்ந்த மூலதனம் என்ற நூலில் (மார்க்ஸ்) எடுத்துரைத்தார். ”இவ்வாறு தொடங்கி தொழிலாளியின் உழைப்பினால் உலகப் பொருள்கள் உருவானது என்றும் உழைப்பு செலவிட்ட பிறகே இயற்கைப் பொருள்களுக்கு விலை மதிப்பு உண்டாவது பற்றியும் அவர் விளக்கி  மார்க்சின் ‘உபரி மதிப்பு’  ‘விஞ்ஞான சோசலிசம் பற்றிய விளக்கவுரைகளை எழுதுகிறார்.

முதலாளித்துவம்  தனக்கு சவக்குழி தோண்டும் தொழிலாளர் வர்க்கத்தை தன்னிலிருந்தே உருவாக்கி வரும் என்ற மார்க்சிய நிர்ணயிப்பையும்,

நிலபிரபுத்துவ வர்க்கங்களை ஒழிக்க  தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்திற்கு கொண்டு வந்த முதலாளிகள், பின்னர் அதே தொழிலாளர் வர்க்கம் முதலாளியத்திற்கு எதிராகத் திரளுகிற நிலையும் சிங்காரவேலர்  எடுத்துரைக்கிறார். இதர  அனைத்து  வர்க்கங்களும் முதலாளி/தொழிலாளி என்ற இரண்டில் ஒன்றாய் மாறுவார்கள் என்ற நிகழ்வு போக்கை பதிவு செய்கிறார்.இவை அனைத்தும்  மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார விளக்கங்களாக அமைந்துள்ளன.

மேல்தட்டு முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்காகவே அரசுகளின் செயல்பாடு இருப்பதையும் சிங்காரவேலர் மார்க்சின் அரசு பற்றிய பார்வையை விளக்குகிறார்.சரக்குகளின் மீதான வரி உள்ளிட்ட பல வகைகளில் மக்களிடம் வருமானத்தை பெற்று,அவர்களின் வீடு உள்ளிட்ட தேவைகளை அரசு புறக்கணிக்கின்றன என்று அரசுகளை அம்பலப்படுத்துகிறார்.

மக்களும் அரசுகளின் நடவடிக்கைகள் பற்றி அறியாமல் இருப்பதையும் வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். ”சர்க்கார்கள் செய்யும் படாடோபங்களை கண்டு மக்கள் மயங்கி வருகின்றார்களே ஒழிய,தங்களுடைய குழந்தைகளுக்கு பால் இருக்கின்றதா என்று சிந்திப்பரில்லை” என்று எழுதிய அவரது எழுத்தைப் படிக்கும்போது, இன்றும் இந்த நிலை நீடிக்கிறதே என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை .

சோசலிசத்தின் கூறுகளை பட்டியலிட்டு விளக்குகிறார். நிலமும் நீரும் பொதுவுடைமையாக்கி, அவற்றில் விளையும் தானியங்களும், செல்வங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்:சிலர் அவற்றை அபகரிப்பதை நிறுத்தி,ஒரு சிலர் அளவுக்கு மீறிய வசதி வாய்ப்புக்களை பெற்றிருப்பதால் மற்ற பெரும்பான்மை மக்களுக்கு அவை இல்லாமல் போகிறது;போட்டியினால் விலைகள் உயர்த்தப் படுவதும் பொருளுற்பத்தி மக்கள் தேவையை புறந்தள்ளிவிட்டு இலாப நோக்கில் மேற்கொள்ளப்படுவதையும் சிங்காரவேலர் எளிமையாக விளக்குகிறார். இதனால்தான் நெருக்கடிகள் தொடர்கின்றன என்ற மர்ர்க்சிய பார்வையும் அளிக்கிறார்.

“உலகம் நெருக்கடியிலிருந்து மீண்டும் சுகப்பட வேண்டுமானால், மனித வாழ்விற்கு வேண்டிய பொருள்கள் யாவும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் “அவர் விளக்குகிறார்.

சோஷலிச உருவாக்கம் குறித்து, அன்றைய காலக்கட்டத்தில் மேற்கத்திய  சோசலிச இயக்கங்களுக்குள் இருந்த சமரசப் போக்கையும் அவர் விமர்சிக்கிறார். அவர்கள் அடிப்படையை மாற்றாமல் அமைக்க விரும்பும் “கூட்டுறவு ஆட்சி” எனப்படுவது “சிறுபான்மை முதலாளிகளை நிலைக்க வைத்து பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு யாதொரு சமத்துவமும் சுதந்திரமும் இல்லாமல் போகும்.” என்ற அவரது எச்சரிக்கை இன்றைய கம்யுனிச இயக்கங்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. சோசலிசம் என்ற முகமூடி அணிந்து அன்று நாஜிக்களும் பாசிஸ்ட்டுகளும் செயல்பட்டு வந்ததையும் அவர் அடையாளம் காட்டுகிறார்.

பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று மார்க்ஸ்  வந்தடைந்த இலட்சிய முடிவினை தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார்,சிங்காரவேலர்.அவரது பல உரைகளில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பல முறை குறிப்பிட்டுள்ளார்.

1933 மே 7ஆம் தேதி அன்று அவர் ஆற்றிய உரையில்,

“உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். ….உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டுச் செல்லும்.” என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சியம் சர்வதேசியத்தை வலியுறுத்தும் தத்துவம். இதற்கு அடிப்படைக் காரணம் உண்டு.உலகளாவிய பிணைப்பு கொண்டது மூலதனம்.மூலதனம் தனது இலாப வேட்டையையும், சுரண்டலையும் உலகளாவிய தன்மையில் நடத்துகிறது. எனவே அது தனி உடைமையிலிலிருந்து சமுகத்திற்கு உடைமையாக வேண்டும். அதனை உலகளாவிய பாட்டாளி வர்க்கப் போராட்டம்தான் சாதிக்கும். எனவே மார்க்சியம் ஒவ்வொரு நாட்டு நிலைகளை உள்வாங்கி தனது சோசலிச மாற்றத்திற்கான வியுகத்தை உருவாக்குகிறது.அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை கட்டும் பணியிலும் ஈடுபட அது வழிகாட்டுகிறது. இந்த அறிவியல் அணுகுமுறை சிங்கரவேலரின் அரசியல், சமூக தொழிற்சங்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் இருந்தது.

1925-கான்பூர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையிலும் இதனைக் காண முடியும். முன்னதாக காங்கிரசின் கயா மாநாட்டில் தன்னை உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதி என்று பிரகடனப் படுத்திக் கொள்ளும்போதும் அவரது சர்வதேசிய உணர்வு வெளிப்பட்டது.

பாசிச அபாயம் – எச்சரிக்கை

“பொதுமக்கள் பெற வேண்டிய  ஞானம் “ என்று அவர் குறிப்பிடும் கருத்து இன்று  இந்துத்துவ பாசிச சக்திகளின் ஆபத்தில் இந்தியா சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

‘பொதுமக்கள் தங்களுக்கு வேண்டுவதைக் கோரி,அதற்கு வேண்டிய உழைப்பை எடுத்துக் கொள்ளாவிட்டால், இத்தாலியிலும்,ஜெர்மனியிலும் சமதர்ம சங்கங்கள் அழிந்ததுபோல், நமது நாட்டிலும் அழிந்துவிடும். எல்லாவிதப் புரட்சியையும் பொதுமக்கள் விரும்பினால்தான் கை கூடி வரும்.”

இதற்கு பொதுமக்களின் மனதை மாற்ற சோசலிச அமைப்புக்கள் பொதுமக்களிடம் நெருங்க வேண்டும் என்றும்,” அதற்கு பிரச்சாரம் தான் தகுதியான கருவி” என்றும் சிங்காரவேலர் அறிவுறுத்துகிறார்.

இந்திய நிலைமைகளில் சோசலிசத்தை கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் அவர் காண தவறவில்லை.’ சமதர்ம அறிக்கை என்ற கட்டுரையில்,

“உலக சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகிறது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலேயே மேல் ஜாதியார்-கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்குச் சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு இங்குச் சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை”.

இன்றும் அடையாள அரசியல் நடத்தும் பல இயக்கங்கள்  இந்திய சமுகத்தில் சாதியைக் காண கம்யூனிஸ்ட்கள் தவறி விட்டனர் என அவதூறு செய்து வருகின்றனர்.ஆனால் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றழைக்கப்படும் சிங்காரவேலர் சாதிய சவால் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்திருக்கிறார் என்பதனை மேற்கண்ட கூற்று எடுத்துக் காட்டுகிறது.

எனவே பாசிசம், சாதியம் ஆகிய சோசலிச எதிர்ப்பு சக்திகளை எதிர்கொண்டு வெற்றிபெற சிங்காரவேலரின் சிந்தனைகள் வழிகாட்டுகின்றன.

சமதர்ம வேலைத் திட்டமே மாற்று!

அன்றைய அரசியலில் செயல்பட்டு வந்த சக்திகளை சோசலிச நோக்குடன் அவர் விமர்சிக்கின்றார்.

“காங்கிரஸ் சுயராஜ்யம் சமூக மாற்றம் எதுவுமற்ற சுயராஜ்யமாக “ இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.அன்று செயல்பட்டு வந்த நீதிக்கட்சியும் அவரது கூரிய விமர்சனப் பார்வைக்கு தப்பிடவில்லை.”பிராமணர்கள் போல் பிராமணரல்லாதார் ஒரு சிலர் பட்டம், பதவி பெற மட்டுமே இவ்வியக்கம் உதவியுள்ளதே தவிர, இக்கட்சியால் பொதுமக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பும் சிங்காரவேலர் நீதிக்கட்சியினால் பயன்பெற்றவர்கள் “பிராமணரல்லாத சில மேட்டிமைச் சாதிகளே” என்பதைஅம்பலப்படுத்துகிறார். ‘பஞ்சமர் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியோருக்கு நீதிக்கட்சியால் எந்த பயனும் விளையவில்லை’ என்ற புறக்கணிக்க முடியாத விமர்சனைத்தையும் முன்வைக்கிறார்.

சமதர்மம் பற்றிய விளக்க கட்டுரைகளில் அவரது மார்க்சியப் பார்வை வெளிப்படுகிறது.. “சமதர்மமென்றால் சொத்துரிமை, மத உரிமை, ஜாதிவுரிமை நீங்கிய வாழ்க்கையாகும்” என்று வரையறுத்துக் காட்டுகிறார். அன்றைய  ஏற்பவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர் இதனை ஏற்க வேண்டுமென்று சோசலிச ஆதரவு சக்திகளை திரட்டுகிறார்.

ஆனால் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியோடு நட்பு பாராட்டும் நிலை இதற்கு தடையாக இருக்கும் என்று சுட்டிக் கட்டுகிறார். சமதர்மத்தை “ஆங்கில அரசின் ஒத்துழைப்போடு இதனைச் சுயமரியாதை இயக்கத்தாரால் செய்யமுடியுமா?” என்று அவர்களை விமர்சிக்கிறார். சமதர்மத்திற்கான பாதைக்கு சுயமரியாதை இயக்கத்தை திரட்ட் முனையும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றார். இதில் சுயமரியாதைச் சமதர்ம வேலைத்திட்டம்  முக்கியமான கருத்தாக்கமாக அமைந்துள்ளது. வரலாற்று நோக்கில் இந்த திட்டம் எதிர்கால சோசலிச மாற்றுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

• • • • • • • • • • • •

மார்க்ஸ் தனது வாழ்க்கையில் தத்துவப் படைப்பாக்கப் பணியை மக்கள் இயக்கம், தொழிலாளர் இயக்கங்களை கட்டுகிற பணியோடு இணைத்துச் செய்தார். அதேபோன்ற வாழ்க்கை நெறியுடன் சிங்காரவேலர் செயலாற்றி வந்துள்ளார். அவரது வாழ்வு இன்றைய சமூக மாற்ற இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றது: அதுமட்டுல்லாது கற்றுப் பயில வேண்டிய ஒரு வாழ்க்கையாகவும் சிங்காரவேலரின் வாழ்க்கை அமைந்துள்ளது.

குறிப்பு :

சிங்காரவேலர் மேற்கோள்கள் அனைத்தும் பா.வீரமணி, முத்து. குணசேகரன் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளியிடப்பட்டட ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

சிங்காரவேலர் வரலாற்றில் அறியாத சில பக்கங்கள் …

– ஆய்வாளர் அ.பகத்சிங்

ம.சிங்காரவேலர் பன்முக ஆளுமையைக் கொண்டவர். தன் அளப்பறிய சுயதேடலின் மூலம் பல்வேறு சிந்தனை மரபுகளைக் கற்றுணர்ந் தவர். பவுத்தராகத் தன் பயணத்தைத் துவங்கி பல தடங்களை கடந்து ஒரு பொருள்முதல்வாதியாக, பொதுவுடைமைப் போராளியாக தன்னை வளர்த் துக் கொண்டு, சிறந்த கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார். தொழிற்சங்கத் தலைவராக, சிந்தனை யாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லா மல், பொதுவுடைமை கருத்தியலை, முற்போக்கு சிந்தனையை மக்கள் மனதில் விதைக்கத் தன் எழுத்தையும், பேச்சையும் ஆயுதமாக வாழ்நாள் முழுக்க பயன்படுத்திய சிறந்த செயற்பாட்டாளர். தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமை வாதியாகவும், இந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடிய பெருமையை கொண்டவர் மட்டு மல்லாமல், மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கி அதனை இந்திய சூழுலுக்கு ஏற்றவாறு செயல்வடிவம் தந்த பெருமையும் அவரையே சாரும்.

மார்க்சிய அடிப்படையிலான அவரது சிந்தனை கள் இன்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இந்துமதம், சாதியம், தீண்டாமை, மத சிறுபான் மையினர் குறித்த அவரது புரிதல் மிகவும் ஆழமானது. காலம் கடந்திருந்தாலும், சிங்கார வேலரின் முக்கியத்துவத்தை இடதுசாரி இயக்கம் இன்று உணரத் துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. சிங்கார வேலர் சிந்தனைகளை, செயல்பாடு களைக் கண்டறிந்து மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு சிங்கார வேலரையும், அவரது சிந்தனைகளையும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழக இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் பின்தங்கிய மந்த நிலையிலேயே உள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தில் ம.சிங்காரவேலரின் பன்முகச் செயல்பாடுகள் என்ன என்பதை முறை யாகப்பதிவு செய்யாமல் போனதால், சுமார் 50 ஆண்டு கால பொதுவுடைமை இயக்கத்தினுடைய வரலாற்று பயணத்தை, பாரம்பரியத்தைப் பொது வுடைமை இயக்கம் இழந்துள்ளது எனலாம். எனவே தமிழக இடதுசாரி இயக்கத்தின் விடுபட்ட வரலாற்றைச் சரியான தரவுகளோடு நேர் செய்ய வேண்டிய கடமையும் இடதுசாரிகளின் முன்னுள்ளது. எனவே சிங்காரவேலரை ஒத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை, பணிகளை முறையாக தொகுக்க வேண்டும்.

இழந்த பதிவுகள்
ம.சிங்காரவேலர் அவர்களின் சுமார் 86 ஆண்டுகால வாழ்வில், அவரது எழுத்துக்களாக, தொண்டுகளாக, அரசியல் செயல்பாடுகளாக நமக்குக் கிடைப்பது அவர் வாழ்நாளில் சுமார் 15 ஆண்டுகள் (1920-1935) தொடர்புடைய விபரங் கள் மட்டுமே. அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்து நாம் அறிய இன்று நம்முன் இருக்கும் ஆவணங்கள் மிகச் சொற்பமே. பெரும்பான்மை ஆவணங்கள் இன்னும் கிடைக்க வில்லை. சிங்கார வேலரின் தீவிர காலனிய எதிர்ப்பு, மார்க்சிய ஆதரவு, தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசிற்கு நெருக்கடிகளைக் கொடுத்தது. இதனால் பல்வேறு காலகட்டங்களில் அவரது பங்களிப்புகள், செயல் பாடுகள் குறித்த ஆவணங்கள் அழிக்கப்பட்டது. சில நேரங்களில் பிரிட்டிஷ் காவல் துறையின் கெடுபிடிகளுக்கு ஆட்பட்டு அவரே ஆவணங்களை அழித்திருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.

சிங்காரவேலர் எழுதிய பத்திரிக்கைகள்
இவற்றை எல்லாம் மீறி நிலைத்திருந்த சொற்ப ஆவணங்களை அழிவதற்கு முன்பாக அவற்றைத் தொகுத்தளித்த முனைவர் முத்துகுணசேகரன், புலவர் பா.வீரமணி ஆகியோரின் பணி மெச்சத்த குந்தது. “சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்” என்ற மூன்று தொகுதிகளை கொண்ட இத்தொகுப் பினில் புதுவுலகு, குடியரசு முதலான இதழ்களின் கட்டுரைகளும், பிற துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள், அறிக்கைகள் ஆகியன தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றைத் தவிர்த்து இன்னும் பல பதிவுகள் தொகுக்கப்படாமலும், கண்டறிய முடியாமலும் உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் ஈ.எல்.அய்யர் நடத்திய சுவதர்மா (Swadharma) ஆங்கிலப் பத்திரிகை யில் சிங்காரவேலர் எழுதிய பதிவுகள் மிகப் பிரபலம். குறிப்பாக “How Communist think”, “Right to Strike” போன்ற தொடர்கள் முக்கியமானவை. பிரிட்டிஷ் அரசின் அதிகாரியும் பொருளாதார அறிஞருமான Gilbert Slator அவர்களுடனான உரையாடலில். “Right to Strike” என்று சிங்கார வேலர் எழுதிய தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும், சிங்காரவேலர், தான் தொடங்கிய கட்சி யின் சார்பாக லேபர் கிஸான் கெஜட் (Labour Kisan gazette) எனும் ஆங்கிலப் பத்திரிகையும் வெளியிட்டு அதில் தொடர்ந்து எழுதவும் செய் தார். இவற்றை தவிர்த்து அவர் வாழ்நாள் முழுக்க எழுதியவை இன்னும் எங்கெல்லாம் உள்ளதோ, அவற்றைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த வேண் டியக் கடமை ஆய்வாளர்களுக்கும், பொது வுடைமை அன்பர்களுக்கும் உள்ளது.

வாழ்க்கை வரலாற்றுக்கான தேடல்
சிங்காரவேலர் எழுத்துக்கள் மட்டுமல்லாது அவரது வாழ்க்கை வரலாறும் முழுமையாகக் தொகுக்கப்படவில்லை. மற்ற தலைவர்களைப் போல் சுயசரிதை எழுதாமல் சிங்காரவேலர் வரலாற்று எல்லைக்கு உட்படாதவராகப் போய் விட்டார். பொதுவுடைமை போராளிகள் சி.எஸ்.சுப்பிர மணியம், நாகை முருகேசன் ஆகியோர் முன் முயற்சி எடுக்காமல் போயிருந்தால், சிங்கார வேலர் என்ற போராளியை பற்றி மக்களும், வரலாறும் மறந்திருக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்கமுடியாது. சிங்காரவேலர் அவர்களின் வரலாற்றை முழுமைபடுத்த அக்கால வரலாற்று ஆவணங்களைத் தேடி எடுப்பது பயன் தரலாம்.

அவரது சமகாலத்தவர்களான ஈ.வெ.ராமசாமி, சர்க்கரை செட்டியார், பாரதியார், அயோத்தி தாசர், ம.பொ.சிவஞானம், திரு.வி.க முதலான வர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதின் மூலம் சிங்காரவேலரின் வரலாற்று பாதைகயில் புதிய வெளிச்சங்கள் ஆய்வாளர்கள் பாய்ச்சி வருக்கின்றனர். குறிப்பாக புலவர் பா. வீரமணி அவர்கள், சிங்காரவேலர் பிற ஆளுமைகளோடு கொண்டிருந்த நட்பை, தொடர்பை, கருத்தியல் விவாதங்களை பல்வேறு ஆவணங்கள், வாழ்க்கை வரலாறுகள் வழி ஆய்வு செய்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். (பார்க்க: சிங்கார வேலரும் பிற சிந்தனையாளர்களும், பாரதி புத்தகாலயம் வெளியீடு). இதுபோன்ற ஆய்வுகளின் வழியே சிங்காரவேலரின் பன்முக ஆளுமையும், பரவலான செயல்பாடுகள் குறித்தும் அறிய முடிகிறது.

அயோத்திதாசர் குறித்த ஆராய்ச்சி
பண்டிதர் அயோத்திதாசரின் பதிவுகள் குறித்த ஆராய்ச்சியின் வழியாய் சிங்காரவேலரின் பௌத்தம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து இதுவரை பதியப்படாத புதிய தரவுகள் வெளி வந்துள்ளது. அயோத்திதாசரின் சிந்தனை மரபு, தலித் இலக்கியம், அரசியல் குறித்து தொடர்ந்து எழுதிவரும் முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் அயோத்திதாசரின் “தமிழன்” இதழில் வெளியான சிங்காரவேலர்-அயோத்திதாசர் இடையே எழுதப்பட்ட கடிதங்களை நூலாகர் பதிப்பித்துள்ளார். (பார்க்க: அயோத்திதாசரும் சிங்காரவேலரும், 2010 கயல்கவின் பதிப்பகம்) இந்தப் பதிவானது சிங்காரவேலர் பௌத்த சங்கத்தில் செயல்பட்ட காலம் குறித்த பதிவினை நமக்கு கொடுக்கிறது. இப்பதிவின் வழியே சிங்கார வேலரும், அயோத்திதாசரும் இணைந்து பௌத்த பணி ஆற்றியதும், அவர்கள் இடையே இருந்த உடன்பாடும், முரண்பாடும் அறிய முடிகிறது. இரண்டு ஆளுமைகளின் கருத்தியல் பலம் மற்றும் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்து பவையாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. இதைப் போன்று வரலாற்றின் இடுக்குகளில் மறைந்திருக்கும் உண் மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இருக் கும் வாய்ப்புகளை மேலும் கண்டடைய வேண் டும். இதற்கு மற்றுமொரு சான்று கோசாம்பி யின் வாழ்க்கை வரலாறு.

தர்மானந்த கோசாம்பியுடன் சந்திப்பு
அயோத்திதாசருடனான பௌத்த சங்க செயல் பாடுகள் போன்று சிங்காரவேலர் பௌத்தராக இருந்த வாழ்க்கையின் இன்னும் சில பக்கங்கள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது வடநாட்டு பௌத்த ஆராய்ச்சியாளரான தர்மானந்த கோசாம்பியின் வாழ்க்கை வரலாறு. சிங்கார வேலர்- கோசாம்பி இடையேயான தொடர்பு இதுவரை கவனம் பெறாத ஒன்றாகும். தர்மானந்த கோசாம்பி சிங்காரவேலரோடு தொடர்பு கொண்டிருந்தார் என்ற வரலாற்று தகவல், அவரது வாழ்க்கை வரலாறை வாசி க்கையில் அறிய முடிகிறது. இந்தத் தகவலை கண்டடைவதற்கு அடிப்படையாய் அமைந்தது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி அவர்களின் ”அயோத்திதாசரை சந்தித்த கோசாம்பி” (காலச்சுவடு ஆகஸ்டு 2011) என்ற கட்டுரை. இக்கட்டுரை வாசிப்பினூடே வியப்பூட்டும் வகையில் சிங்கார வேலர் குறித்த குறிப்பினை காணநேர்ந்தது. கட்டுரையின் தலைப்பு அயோத்திதாசரை குறித்த தாலும், கட்டுரை முழுக்கவும் நிறைந்து இருப்பது சிங்காரவேலர் தான்.

மேற்கண்ட கட்டுரையை சலபதி அவர்களின் கோசாம்பியின் சுயசரிதை நூலான Nivedan: An Autobiography of Dharmanand Kosambi என்ற நூலில் இருந்தே எடுத்தாண்டுள்ளார். மராத்தியில் எழுத் தப்பட்ட இந்நூல் சுமார் 100 ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவே இத்தக வலை நாம் அறிய முடிகிறது. கோசாம்பியின் பெயர்த்தியான பேராசிரியர் மீரா கோசாம்பி இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அறி முகவுரையும் எழுதியுள்ளார். இந்நூலில் இருந்தே கோசாம்பியின் தென்னகம் வருகை, அயோத்தி தாசர் -சிங்காரவேலருடனான தொடர்பு குறித்த தகவல்களை அறிய முடிகிறது.

கோசாம்பியின் பதிவுகள்
தர்மானந்த கோசாம்பி (1876-1947) அவர்கள் சிறந்த பௌத்த ஆராய்ச்சியாளர் ஆவார். புகழ் பெற்ற மார்க்சிய வரலாற்றியலாளர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி (டி.டி.கோசாம்பி) அவர் களின் தந்தை ஆவார். தர்மானந்த கோசாம்பி பௌத்தத்தை மறுமலர்ச்சி செய்வதிலும், அதன் வரலாற்று மீட்டுருவாக்கம் செய்வதிலும் முக் கியப் பங்காற்றியவர். அவரது ”கௌதம புத்தர்“ மிகவும் முக்கிய நூல். பௌத்தத்தின் வரலாற்றை அறிவதற்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கும், நேபாளம், இலங்கை, பர்மா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணித்துப் பௌத்தம் பற்றி அறிந்துகொண்டார். பௌத்தத்தை அறிவதற் காக பாலி மொழியைக் கற்றுத்தேர்ந்து, பௌத்த மூல நூல்களைப் பயின்றுள்ளார். மராட்டியில் இவர் எழுதிய பௌத்தம் தொடர்பான நூல்கள் அவருக்குப் புகழைத் தேடித் தந்தன. பௌத்த ஆய்வு தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்குப் பலமுறை சென்றுவந்ததோடு, அகமதாபாத்தின் வித்யா பீடத்திலும், சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராட் பல்கலைக்கழகத் தில் பாலி மொழிப் பேராசிரியராகச் செயல் பட்டார். இந்தியாவில் சோசலிசத்தை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவர் எனப் பல பெருமைகளைக் கொண்டவர்.

தர்மானந்த கோசாம்பி சிங்காரவேலரை போல் அல்லாமல் தன் வரலாறை எழுதியுள்ளார். அது 1912-1916இல் தொடராக வெளிவந்து 1924ல் “ஆத்ம நிவேதன்” என்ற பெயரில் நூலாக்கம் பெற்று மராட்டிய இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது. கோசாம்பி தன் வாழ்நாளில் பௌத்தம் குறித்துக் கற்றறிய தெற்காசியா முழுக் கப் பயணித்தார். அதன் ஒரு பகுதியாக 1902 ஆம் ஆண்டு இலங்கை நோக்கிய பயணத்தின் போது தென்னிந்தியாவில் சென்னையில் தங்கி சென்ற பயணத்தின் அனுபவங்களைத் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார். அப்பயணத்தின் போதே சென்னையில் சிங்காரவேலர், அயோத்தி தாசர், லட்சுமிநரசு ஆகியோரை சந்திக்கிறார். சுமார் ஏழு மாதங்கள் சென்னையில் தங்கி பௌத்த பணியாற்றி உள்ளார். இக்காலகட்டத் தில் சென்னையில் கோசாம்பியின் அனுபவங் கள், இப்பகுதியின் அரசியல் சூழலையும், சிங்கார வேலர், அயோத்திதாசர், லட்சுமி நரசு போன்ற ஆளுமைகளின் வெளிப்படாத பக்கங்களை இந்நூல் திறந்துவைக்கிறது.

உதவி தேடி வந்த கோசாம்பி
பௌத்த ஆய்விற்காக இலங்கை பயணம் மேற்கொண்ட கோசாம்பி உதவி வேண்டி, தான் சார்ந்துள்ள கல்கத்தாவின் மகாபோதி சங்கத்தைச் சேர்ந்த சாருசந்திரபோஸ் அவர்களிடம் இருந்து அச்சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலா ளர் சிங்காரவேலருக்கு ஒரு கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை வருகிறார். தூத்துக்குடி வழியாக கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்தார் கோசாம்பி. ஆனால் நோய் தடுப்புச் சோதனை காரணமாகப் பத்து நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் எற்படுகிறது. கையில் வெறும் பத்தரை ரூபாய் மட்டுமே வைத்திருந்த கோசாம்பி இப்பிரச்சனையில் இருந்து மீளவே உதவிக்காக சிங்காரவேலரை நாடுகிறார்.

சென்னையில் மிகவும் சிரமத்திற்கு இடையே சிங்காரவேலரின் வீட்டை அடைந்த வரை புன்முறுவலுடன் வரவேற்று விருந்தோம்பி யுள்ளார் சிங்காரவேலர். சிங்காரவேலருக்கு இந்தி தெரியாததாலும், கோசாம்பிக்கு ஆங்கிலம் பரிச்சியமில்லை என்பதாலும் செய்கை மொழி யிலேயே இருவரும் பேசிக் கொண்டனர். சிங்கார வேலரின் தம்பி இந்தி அறிந்தவர் என்பதால் அவர் மூலமாகத் தனது தேவையை கோசாம்பி வெளிபடுத்தியுள்ளார். தூத்துக்குடியில் மருத்துவ அதிகாரியாக இருந்த தன் நண்பருக்கு சிங்கார வேலர் கடிதம் கொடுத்து அனுப்பியதோடு, தேவை ஏற்பட்டால் பணம் அனுப்புவதாகவும் தெரிவித்து கோசாம்பியை வழி அனுப்பியுள் ளார். சி.எஸ்.சுப்பிரமணியம், நாகை முருகேசன் எழுதிய சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் புலமைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இரண்டு ஆவணங்களின் கருத் தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிங்கார வேலர் தன் ஐம்பது வயதிற்கு பிறகுதான் இந்தி மொழி கற்றிருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது.

பணி நிமித்தமாக இங்கிலாந்து சென்ற சிங்கார வேலர், இலங்கையில் வித்தோதயா ஆசிரமத் திற்குச் சென்றார். உதவி ஆசாரியர் தேவமித்ரா அவர்களைச் சிங்காரவேலர் சந்தித்துள்ளார்.

பிராமணர் எதிர்ப்பு நிலை
கொழும்பு வித்யோதயா ஆசிரமத்தில் ஆய்வு பணிகளை முழு ஒத்துழைப்புடன் செய்து வந்த கோசாம்பியை பற்றி ஆசாரியர் பெருமைப்பட பேசியதாகவும், அதற்குப் பதிலாக “இந்திய பார்ப் பனர்கள் தந்திரமானவர்கள், அவர்களை நம்பக் கூடாது. இவர் எளியவராகவும் அப்பாவியாக வும் தோன்றலாம். ஆனால் நம்பிவிடாதீர்கள். பார்ப்பனர் என்பதை மனதில் கொள்ளுங் கள்” என்று தேவமித்ரா அவர்களிடம் சிங்காரவேலர் கூறியுள்ளார். இதனை ஆசாரியார் கோசாம்பி யிடம் கூறியதாகவும், இதனால் சில அசௌ கரியங்களைச் சந்திக்க நேர்ந்ததாகவும், கோசாம்பி தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கற்றவராகிய சிங்காரவேலுவைப் போன்ற ஒருவரின் சுய அழிவுச் செயல்பாட்டை எண்ணி வருந்தியதாகவும். மரியாதையுடன் உணவளித் தும், தூத்துக்குடி மருத்துவருக்குக் கடிதம் வழங்கியும் எனக்கு உதவிய அதே மனிதர், இப் பொழுது சிங்கள மக்களிடையே நான் பிரா மணன் என்பதற்காக மட்டுமே என்னைப் பற்றிய பாதகமான முன்னெண்ணத்தை ஏற்படுத்தத் தயாராக இருந்தார்” என்று தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்ப வத்திற்குப் பிறகு ஆசிரமத்தில் வழங்கப்பட்ட உணவை தவிர்த்து இரந்துண்ணும் சூழலுக்கு ஆளானதாகக் கோசாம்பி குறிப்பிட்டுள்ளார். இது பௌத்த துறவிகளின் கடமையாதலால் அதனை ஏற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலர், கோசாம்பியுடனான தொடர் பில் இருந்த காலகட்டத்திற்குப்பிறகே காங்கிரஸ் இயக்கத்திலும், பொதுவுடைமை இயக்கத்திலும் பின் பெரியாரோடும் இணைந்து செயல்பட்டார். பிராமணர் எதிர்ப்பு என்பது முன்பாகவே சிங்காரவேலருக்கு இருந்துள்ளதை கோசாம்பி யின் சுயசரிதை வெளிப்படுத்துகிறது. பத்தொன்ப தாம் நூற்றாண்டில் பிரமணரல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை கட்சி துவக்கம், அதன் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க் கும் போது பிராமணருக்கு எதிரான மனநிலை பார்ப்பன ரல்லாதோர் மத்தியில் இயல்பாக இருந்துள்ளதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும் சிங்கார வேலர், பாரதியார், ஈ.எல்.அய்யர், கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்ற பார்ப்பன சமூகத்தவர்களுடன் இணைந்தும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்படும் முரண்கள்
ஒரு வருடகாலம் கழித்து மார்ச்-26, 1903ஆம் ஆண்டு மீண்டும் சென்னை திரும்பியவர் மீண் டும் சிங்காரவேலரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். கொழும்புவில் இருந்த காலத்தில் ஓரளவு ஆங்கிலம் பயின்றதால் சிங்காரவேலருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். சிங்காரவேலர் அவரை உணவளித்து உபசரித் தாலும் கல்கத்தா செல்ல பயணச்சீட்டு வாங்கித் தர மறுத்து விட்டதாகக் குறிப்பிடுகிறார். சிங்காரவேலர் நடத்திய பௌத்த சங்கம் பொருளாதார ரீதியாக வறியது என்பதால் உதவ முடியவில்லை என்று மறுத்துள்ளார். அதே வேளையில் இலங்கையில் இருந்து பணம் கிடைக்கும்வரை தங்கவைத்துப் பராமரித்துள்ளார். பிறகு பௌத்த சங்கம் ஒன்றை நிறுவி அதில் கோசாம்பி அவர்களை அமர்த்தவும் சிங்காரவேலர் திட்டமிட்டுள்ளார். இலங்கையில் இருந்து எவ்வித உதவியும் கிடைக் காததால் சிங்காரவேலரின் திட்டத்தை வேறு வழியின்றி ஏற்றுள்ளார் கோசாம்பி. இராயப் பேட்டையில் ஒரு சிறிய குடிசையில் “பௌத்த ஆசிரமம்” ஒன்றை புதிதாக நிறுவி ஒவ்வொரு ஞாயிறு மாலையும் பௌத்தம் பற்றிய உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாலி மொழியில் உள்ள வற்றைக் கோசாம்பி படித்து விளக்கிட, சிங்கார வேலர் அதனைத் தமிழில் விளக்கவுரையாற்றி யுள்ளார். பல்வேறு சமூக, மதப் பிரிவினரும் இந்த சொற்பொழிவினை கேட்க வந்துள்ளனர். இந்தச் சபையின் செயல்பாடுகள் எந்தவொரு பௌத்த பிரசாரகருக்கும் உவப்பளித்திருக்கும் என்கிறார் கோசாம்பி.

சிங்காரவேலர் செயலாளராகவும், லட்சுமிநரசு தலைவராகவும் இருந்த “சென்னை மகாபோதி சபை” மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் கோசாம்பி பெரிய அபிப்பிராயம் கொண்டிருக்க வில்லை என்பதையே அவரது வாழ்க்கை வரலாறு விளக்குகிறது. சிங்காரவேலரின் மகாபோதி சபைக் கும் அயோத்திதாசரின் பௌத்த சங்கத்திற்கும் முரண்பாடு இருந்ததாகவும், இவரது வருகைக் குப் பிறகே ஒற்றுமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட் டுள்ளார். ஆனால், சிங்காரவேலரும் அயோத்திதாசரும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையில்தான் இணைந்து செயல்பட்டுள்ளனர். சிங்காரவேலரின் பௌத்த சங்கத்தில் அயோத்திதாசர் பங்கேற்றதோடு, தனியாக பௌத்த சங்கத்தை நிறுவியும் நடத்தி யுள்ளார். அதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட் டோர் திரளாக பங்கேற்றுள்ளனர்.
சிங்காரவேலர், கோசாம்பி இடையேயான உறவு மிக முரண்பாடாக இருந்துள்ளது என்பதையே கோசாம்பியின் சுயசரிதை வெளிப்படுத்துகிறது. சிங்காரவேலர் பற்றிக் கோசாம்பி கூறும் செய்தி களும், அவர் தன்னை நடத்திய விதம் குறித்தும் குறிப்பிடும் செய்திகளே அவர்கள் இருவருக்கும் இருந்த உறவின் தன்மையை புரிந்து கொள் தவற்கான அடையாளம். “சிங்காரவேலு விந்தை யான மனிதர்” என்றும், “கோபத்தில் சில வேளைகளில் கடுமையாகப் பேசிவிடுவார்” என்றும் கோசாம்பி மதிப்பிட்டுள்ளார். “என்னைச் சிறைக் கைதி போல் வைத்திருந்தார்” என்று சிங்காரவேலரை காட்டமாக விமர்சித்துள்ளார். மறுபுறம் சிங்கார வேலரும் “துறவிகளெல்லாம் எகிப்திய சவங்களைப் போல் பயனற்றவர்கள்” என்று காட்டமான விமர் சனங்களை முன்வைத்துள்ளார். இப்படியான காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும் இருவருக்கும் இடையேயான நட்பு முறிந்துவிட வில்லை என்பதை கோசாம்பி சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

சிக்கன வாழ்க்கைமுறை
சிங்காரவேலர் செழிப்பான குடும்பம் பின்னணி யில் இருந்து வந்திருந்தாலும், மிகச் சிக்கனமான வராக இருந்துள்ளார். பொதுவான சங்க கணக்கு வழக்குகளைப் பராமரிப்பதிலும், செலவிடுவ திலும் கறாராக இருந்துள்ளார். அறிவுத் தேடலுக்கு எவ்வித சிக்கனமும் இல்லாமல் புதிய நூல்களை அயல் நாடுகளில் இருந்து வரவழைத்து படித்தவர் சிங்காரவேலர். அதே வேளையில் பொதுப் பணத்தை மிகப் பொறுப்போடு சிக்கனமாகக் கையாண்டுள்ளார். பௌத்த சங்க செயல்பாட்டி லும் சிக்கனமாக இருந்தார் என்பதை “தமிழன்” இதழில் வெளியான கடிதங்கள் வழியே அறிய முடிகிறது. பௌத்தராக உள்ள கோசாம்பி விருந் தினராக இருந்தாலும், உழைப்பில் ஈடுபட வேண்டும் என்பதில் சிங்காரவேலர் தெளிவாக இருந்துள்ளார். இதற்கு பௌத்த ஒழுக்க நெறி களும் காரணமாக இருந்துள்ளது. பௌத்த பிட்சுகள் எகிப்து மம்மிகளை போல் உள்ளனர் என்ற பார்வையை சிங்காரவேலர் கொண்டிருந் தாலும், கோசாம்பியோடு முரண்பட்ட உறவை கொண்டிருந்தாலும் அவரது பௌத்த அறிவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதி லும், அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் சிங்காரவேலர் தெளிவாக இருந்ததை அறியமுடிகிறது.

சென்னையில் தங்கியிருந்த நாட்களை வனவா சமாகவே கடத்தியுள்ளார் கோசாம்பி. சிங்கார வேலருடன் முரண்பாடு கொண்டிருந்தாலும், பேராசிரியர் லட்சமிநரசுவுடன் நல்ல நட்பும், அவர் தொடர்ப்பு குறித்து மிகவும் உயர்வாகப் பதிவுசெய்துள்ளார். லட்சுமிநரசு அவர்கள் ரிக்வேதம் உள்ளிட்ட நூல்களைத் தனது கல்லூரி நூலகத்தில் இருந்த எடுத்துவந்து கொடுத் துள்ளார். ஒப்பியல் ஆய்வை பற்றி அவரிடமே கற்றதாகவும், மேலும் அவரை ஒழுக்கசீலர், தீய பழக்கமும் இல்லாதவர், வெளிப்படையானவர், போலித்தனத்தை வெறுத்தவர் என்றும், சென்னை மாகாணத்தின் தலையாய சீர்திருத்தவாதியாக அவர் மதிக்கப்பட்டார் என்றும் லட்சுமி நரசு குறித்து பெருமைப்பட பதிவு செய்துள்ளார். சிங்காரவேலர், லட்சுமி நரசு இருவரையும் பற்றிய மதிப்பீடு கோசாம்பியின் சார்பு நிலையை வெளிபடுத்துகிறது.

1903 ஆம் ஆண்டு வரை சென்னையில் தங்கியிருந்த கோசாம்பி, பின் தனது பௌத்த ஆய்வை தொடர பர்மா சென்றுள்ளார். முன்பே குறிப்பிட்ட தைப் போல் சிங்கார வேலர் பௌத்தராக இருந்த காலகட்டம், அயோத்தி தாசருடனான முரண்பாடும், உடன் பாடும் ஓரளவு “தமிழன்” இதழ் வழியே கிடைத் துள்ளது.

கோசாம்பி சுயசரிதை, அவர் சென்னையில் தங்கியிருந்து காலக்கட்ட பதிவுகள் வழியே சிங்காரவேலரின் பௌத்தம் தொடர்புடைய வாழ்க்கையின் இன்னும் சில பக்கங்களை நமக்கு கிடைகிறது. கோசாம்பியின் சுயசரியதையில் குறிப்பிடப்படும் தகவலின் மூலம் அன்றைய காலக்கட்டத்தையும், சிங்காரவேலரின் ஆளுமை குறித்து அறியமுடிகிறது. இதுவே முழுமையானது இல்லை என்றாலும், கிடைத்துள்ள தரவுகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

கோசாம்பியின் சுயசரிதை வழியே அறியப் படும் சிங்காரவேலர், எதிர்மறையான அடை யாளத்தோடு வெளிப்படுகிறார். சிங்காரவேலர் குறித்து கோசாம்பியின் அனுபவங்கள் பெரும்ப லும் கசப்பான மனப்போக்குடனேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவுகள் யாவும் கோசாம்பி யின் வாழ்க்கை சூழல், மனநிலை சார்ந்தது. தன் வாழ்நாளின் கடைசி தருணங்களில் எழுதப்பட்ட இந்த பதிவில் சிங்காரவேலரை எதிர்மறையாக பதிவு செய்துள்ள கோசாம்பி, தன் சென்னை வாழ்வின் பெரும் பகுதியை சிங்காரவேலரை நம்பியே கழித்துள்ளார். இலங்கையில் சிங்கார வேலரின் சில செயல்களினால் பாதிக்கப்பட்ட தாக தெரிவித்தாலும் மீண்டும் சென்னைக்கு அவரை நம்பியே அடைக்கலம் தேடி வந்துள்ளார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோசாம்பி குறித்து சிங்காரவேலரின் பார்வையை அறியும் போது மட்டுமே, இவர்கள் இருவரையும் குறித்து முழு மதிப்பீட்டை காண முடியும். மேலும் இந்த வாழ்க்கை வரலாற்றின் வழியே பொதுப்படையாக யார் நல்லவர், கெட்டவர் என்ற விவாதம் இங்கு தேவையற்றது என்றே கருதுகிறேன். இரு ஆளுமைகளுமே தங்கள் துறை சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து சிறப்பாகவே பங்களிப்பு செலுத்தியுள்ளனர்.

பொதுவாக, சிங்காரவேலரை இடதுசாரிகள் மறந்துவிட்டார்கள், மறுத்துவிட்டார்கள் என்று தமிழ் ஆர்வலர்களும், திராவிட இயக்கத்தினரும் குற்றம்சாட்டுவார்கள். சிங்காரவேலரின் முக்கியத் துவம் அறிந்து அவரது பங்களிப்பை மீட்டவர்கள் பொதுவுடமைவாதிகளும், இடதுசாரி சிந்தனை யாளர்களும் மட்டுமே.

இடதுசாரிகளுக்கு மிக நெருக்கமான, கோசாம் பியின் சுயசரிதையின் மராத்தி மூலம் 1924ஆம் ஆண்டே வெளிவந்தது. அதன் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியோடே, நாம் தற்போது புதிய தகவல்களை அறிந்துகொண்டுள்ளோம்.

சிங்காரவேலரின் அரசியல் உத்தி!

தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு.

20ம் நூற்றாண்டில் உழைப்பின் மேன்மை பேசுகிற இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியாக புரட்சிகர சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வல்லமையை உணருகிற கட்டம் உருவானது. 1908ல் வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு வரத்துவங்கினர். இந்த கருத்தாக்கம் மேலும் வலுப்பெற 1917 ரஷியப் புரட்சியின் தாக்கம் முக்கிய பங்கு வகித்தது. எனினும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வல்லமை எனும் கருத்தாக்கம் வெளியிலிருந்து இறக்குமதியான கருத்தாக்கமே என்கிற புரிதல் சரியானது அல்ல. தமிழக சிந்தனை மரபில் இருந்து வந்துள்ள உழைப்பின் மேன்மை போற்றும் கருத்தியலின் தொடர்ச்சியே தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமானது என்ற கருத்திற்கு இட்டுச்சென்றது. மார்க்சியம் இதற்கு அறிவியல் அடிப்படையை வழங்கியது.

இந்த வளர்ச்சிப் போக்கில், சிங்காரவேலரின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றிய பெருமை சிங்காரவேலரையே சாரும். இதையொட்டிய அவரது படைப்பாற்றல் மிகுந்த முன்முயற்சிகளில் ஒன்றுதான் அவர் நிறுவிய தொழிலாளி – விவசாயிகள் கட்சி.

தொழிலாளர் சுயராஜ்ஜியம்

1920ம் ஆண்டுகளிலேயே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார்.

இக்கட்சிக்கென்று, ஹிந்துஸ்தான் லேபர் கிஸான் கெஜட் என்ற பத்திரிகையை அவர் துவக்கினார். 1923ம் ஆண்டு மே தினமன்று கட்சி யின் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

தொழிலாளர், விவசாயிகள் கட்சியின் நோக்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க அரசு அமைப்பது என்பதை சிங்காரவேலர் அந்த மேதினக் கூட்டத்தில் அறி வித்தார். இந்தியத் தொழிலாளரின் குறிக்கோள், தொழிலாளர் சுயராஜ்யமாக இருக்க வேண்டு மென்று அவர் முழங்கினார்.

சுயராஜ்ஜியத்தில் நிறைவான வாழ்க்கை நடத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும், விவ சாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தலைமை கொண்ட அரசே உண்மையான சுயராஜ்ஜியம் என்று பொருள்பட, சுயராஜ்ஜியம் இன்றேல் வாழ்வில்லை; தொழிலாளி இன்றேல் சுயராஜ்ஜியமில்லை என்றும் அழுத்தமாகக் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சி அகன்று முதலாளித்துவ உடைமை வர்க்கங்களின் அரசு அமைவதற்கு பதிலாக, உழைப் பாளி வர்க்க அரசு அமைய வேண்டுமென்பது அன்றைய கம்யூனிஸ்டுகளின் இலட்சியப் பிரகடனம். இதன் செயல்வடிவமே சிங்காரவேலர் அமைத்த தொழிலாளர் – விவசாயிகள் கட்சி.

காங்கிரசோடு நட்புறவு ஒப்பந்தம்

பெரும்பான்மையான தொழிலாளர் விவ சாயிகள் தங்களது உரிமைகளை உணராது, முதலாளித்துவ வர்க்கங்களின் பின்னால் அணி திரள்கின்றனர். அவர்கள் ஒடுக்கும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரளுகிற நிலை நீடித்து வருகின்றது,

இப்பிரச்சனையைப் பற்றி 1920ம் ஆண்டு களிலேயே தீவிரமாக சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். தனது உழைப்பைச் சுரண்டுப வனுக்கு அடிபணியும் உழைப்பாளி வர்க்கங்களை எவ்வாறு சரியான வழிக்குக் கொண்டு வருவது? உழைப்பாளி வர்க்கங்கள் தங்கள் நலனையும், உரிமைகளையும் பாதுகாத்து முன்னேறுவதற்கு எத்தகு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? இவை அனைத்துக்கும் சிங்காரவேலர் தீர்வுகளை நாடினார்.

பெரியாரோடு இணைந்திருந்த சமயத்திலும், சிங்காரவேலர் சாதி ஒழிப்பு, சமய மூடநம்பிக்கை கள் எதிர்ப்பு உள்ளிட்ட சுயமரியாதைக் கருத்துக் களை இடைவிடாது எழுதி வந்தார். அதுமட்டு மல்லாது, ஐக்கிய முன்னணி உத்தியையும் அவர் கைவிடவில்லை.

சுயமரியாதைக்காரர்களிடம் சமதர்ம பிரச்சாரம்

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்கள் மூலமாக மக்களுக்கும் சிங்காரவேலர் பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கருத்துக்களை பரவச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தவர்கள்,  ஜனநாயகம் எனும் பெயரில் முதலாளித்துவம் பேசுகிற பசப்பு வார்த்தைகளை நம்பிடக்கூடாது என்றார் சிங்காரவேலர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாம், டிமாக்கிரஸி என்ற மோசத்தை இனியும் கையாளுவதா? என்று கேட்டுவிட்டு, … அல்லது சோவியத் முறையென்ற உண்மையான திட்டத் தைக் கையாளுவதா? என்று கேட்டு, சிந்திக்கத் தூண்டினார். சோவியத் முறை என்பது என்ன வென்ற விளக்கத்தையும் அளித்தார்.

… எந்தத் தொழிலை எவன் புரிகின்றானோ, எந்தெந்த நிலத்தை எவன் உழுது பயிரிடுகின்றா னோ அவன்தான் அவனுடைய ஆட்சியை நடத்த வேண்டும். அந்த அரசியலுக்கு அவனே உரிய வன்; மற்றவர்கள் யாருக்கும் எவ்வித ஆதிக்கமும் கொடுக்கலாகாது…

எந்த இயக்கங்களோடு ஒரு கம்யூனிஸ்டு உறவு கொண்டாலும், சமதர்ம சமுதாயம் எனும் இலட்சியத்திற்காக மக்களைத் திரட்டுவதில் உறுதியாக உழைக்க வேண்டுமென்பது சிங்கார வேலர் கற்றுத்தரும் பாடம்.

சிங்காரவேலர் படைத்த இரண்டு திட்டங்களும், தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றுத் தேவைகள். தமிழர்களின் பண்பாட்டு நிலைகள், கருத்தியல் உணர்வுகளின் வெளிப்பாடே இந்தத் திட்டங் கள். இந்தத் திட்டங்கள் சிங்காரவேலர் எனும் தனிப்பட்ட மனிதரின் மேதைமையால் எழுத்துக்களாக வடிவம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்களின் தேவை தமிழ்ச்சமூகத்தில் இயல் பாக கருக்கொண்டிருந்தது.

சுயமரியாதையும், சமதர்மமும் செயல்பட்டது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தேவை. அது இடையில் தடைபட்டது. ஒரு சூழ்ச்சியின் விளைவே. ஆங்கிலேய ஏகாதிபத்தியமே இதில் முதல் குற்றவாளி.

ஒரு சமூகப் போராளி, ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான சூழல் நிலவாத போது, நம் பிக்கையிழந்து சோர்ந்து போய்விடக் கூடாது. இந்த புரட்சிகரமற்ற சூழல், அவருக்கு புதிய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரத் தைத் தருகிறது.

புதிய முயற்சிகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஜெர்மானிய கம்யூனிஸ்ட் போராளி ரோசா லக்சம்பர்க், புரட்சிக்கான சரியான நேரத்திற்காக பொறுமையாகக் காத்திருப்பதில் பயனில்லை; ஒருவர் இவ்வாறு காத்திருந்தால், அந்த தருணம் வரவே வராது; பக்குவம் பெறாத முயற்சிகளாக இருப்பினும், அவற்றைத் துவக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த பக்குவமற்ற முயற்சிகளின் தோல்வி களில்தான் புரட்சிக்கான அகநிலை வாய்ப்புக்கள் உருவாகின்றன. இதனால்தான், மாவோ, தோல்விகளிலிருந்து (மீண்டும்) தோல்விக்கு, பிறகு இறுதி வெற்றிக்கு என்றார். இதையே இலக்கியவாதி சாமுவேல் பெக்கெட் கூறினார்: மீண்டும் முயற்சி செய்; மீண்டும் தோல்வியை பெற்றிடு; மேலான தோல்வியை மீண்டும் பெற்றிடு. .இந்த உறுதியை சிங்காரவேலர் வாழ் வில் காணலாம்.

சோவியத் புரட்சி போன்ற மாற்றம் நிகழ்கிற சூழல் நிலவிடாதபோது, சிங்காரவேலர் கம்யூனிச இலட்சியங்களுக்காக பாடுபட்டார். படைப் பாற்றல்மிக்க  பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் தோல்வி பல கண்டாலும், மீண்டும் முயற்சிகளைத் தொடர்ந்தார். கம்யூனிஸ்டுகளின்  ஐக்கிய முன்னணி உத்திகளை இன் றைக்கும் தமிழகத்தில் பலர் பழித்தும், இழித்தும் எழுதி வருகின்றனர். இந்த எழுத்துக்களுக்கு அஞ்சியும், சங்கடப்பட்டும், சிங்காரவேலர்  காட் டிய பாதையில் தீரமுடன் நடைபோட முற் போக்காளர்கள் சிலரும் கூட தயங்குகின்றனர். ஆனால், மேலான தோல்வி கிட்டினும், சிங்கார வேலர் காட்டிய வழியே இறுதி வெற்றி பெறும்.

– சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் – அறக்கட்டளை – சிங்காரவேலர் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் பிரசுரமானது