சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !

  • இரா. சிந்தன்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை விரட்டத் தொடங்குகிறது.

ஓட்டுனர் இல்லாமலே இயங்கும் ஒரு பேருந்து நிறுவனத்தின் அறிமுக பின்னணியில்தான் இந்த பிரச்சனை நடக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் பேருந்து நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?. அந்த பெண்ணுக்கு பிரச்சனை கொடுக்கும் உலக நிறுவனம் எது?. உலகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து எப்படிப்பட்டது? என்று படம் வேகமாக நகர்கிறது.

நெதர்லாந்து நாட்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதையில், சீனாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சில உயர் தொழில்நுட்பங்களை, ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தும்போது, அதனால் அந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆபத்து வரும் என்பதாக சித்தரித்திருந்தார்கள்.

அமெரிக்க ஊடகங்களில், இது போன்ற கதைகள் வெளியாவது நமக்கு புதிதில்லை. கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யாவினை எதிரியாக சித்தரித்து, ஏராளமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்க உளவு, ராணுவ அதிகாரிகள் அந்த அபாயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுவார்கள். இப்போது அந்த பிரச்சாரம் சீனாவை மையப்படுத்துகிறது.

பண்பாட்டு மேலாதிக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, உலக ஊடகங்களின் மீது உள்ள பிடி சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட உலகின் 75% தொலைக்காட்சிகளை அமெரிக்க பெருமுதலாளிகளே சொந்தமாக வைத்துள்ளனர். உலகம் தழுவிய செய்தி ஏஜென்சி நிறுவனங்களில் அறுதிப் பெரும்பான்மை அமெரிக்காசார்பானவை. இணைய ஊடகங்களான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப்) ,கூகிள் (ஜி மெயில், கூகிள் தேடுபொறி மற்றும் ஆன்ட்ராய்ட்) டுவிட்டர், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பெரும்பான்மை அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள். உலகின் பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. இவை தவிர, உலகம் முழுவதுமே கல்வி நிறுவனங்களிலும், பிற அரசு சாரா நிறுவனங்கள், கலை இலக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தாக்கம் கூடுதலாகவே உள்ளது. இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்க உதவுகின்றன.

முதலில் குறிப்பிட்ட திரைப்படத்தின் கதையில், சீனாவில் தயாரிக்கப்படும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்துகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் இயந்திரங்களின் நுட்பங்களும், அதிவேக இணைய வசதிகளையும் ஆபத்தானதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு தொழில்நுட்பத்திலும், போதுமான கட்டுப்பாடுகள், சட்டப்பாதுகாப்புகள் இல்லாது, லாபவெறியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வழிநடத்தப்பட்டால், அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கு கவலை உண்டா? அமெரிக்காவின் கவலை அதுவல்ல.

தொழில்நுட்ப மேலாதிக்கம்

சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் காப்புரிமை பதிவுகளில் 80 சதவீதமானவை அமெரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இப்போதும் அறிவுசார் காப்புரிமங்களை ஏற்றுமதி செய்து அதற்கான கட்டணத்தொகை (ராயல்ட்டி) மூலம்  பொருளீட்டும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. (ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்கள்).

உலகம் முழுவதும் நடக்கும் இந்த வர்த்தகத்தில் அமெரிக்காவின் வசம் 45% உள்ளது. 24% வர்த்தகத்துடன் ஐரோப்பா இரண்டாவது இடத்திலும், 14% ஏற்றுமதி மேற்கொள்ளும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும்  உள்ளது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்கு கண்டறியப்பட்ட தடுப்பூசிகளிலேயே அதி நவீனமானவை, அமெரிக்க கண்டுபிடிப்புகளே. ஆனால் அந்த தொழில்நுட்பங்களை உலக நன்மைக்காக பயன்படுத்தவோ, குறிப்பிட்ட காலத்திற்கு அதன் உரிமக் கட்டணங்களை விட்டுக் கொடுக்கவோ அமெரிக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. அமெரிக்க அரசாங்கமும் தனியார் பண முதலைகளின் நலன் காத்து நின்றது. ஏகாதிபத்தியம், தொழில்நுட்பத்தின் மீது செலுத்தக்கூடிய மேலாதிக்கத்தினால் ஏற்படும் கெடு விளைவுக்கு கொரோனா தடுப்பூசிகள் மிகச் சிறந்த உதாரணமாக ஆகிப்போயின. இன்றுவரை உலக நாடுகளால் கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து மீள முடியவில்லை.

வரலாற்றில், அமெரிக்கா கொண்டிருக்கும் தொழில்நுட்ப மேலாதிக்கம், வளரும் நாடுகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நம் இந்தியாவும் அதில் விதி விலக்கல்ல. கடந்த காலங்களில், அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பெற முடியாத நிலையில் இந்தியாவினை தடுத்தது அமெரிக்கா. இப்போதும் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவால் பெற முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் இருந்தே நிலக்கரி மின் உற்பத்தி, அணு உலைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மறுக்கப்பட்டுள்ளன. அல்லது அதீத விலையில் தலையில் கட்டப்பட்டுள்ளன.

சீனாவின் எதிர்வினை

உலகத்தின் தொழிற்சாலையாக பரிணமித்திருக்கும் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் அதற்கான செலவாக ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு சீனா மேற்கொள்கிறது. எனவே, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு, சொந்த நாட்டு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து முன்னுக்கு வந்தது. தனது ஐந்தாண்டு திட்டங்களில் இதற்காக சிறப்பு கவனத்தை குவிக்கத் தொடங்கியது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தனர். இப்போது உலகத்திலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் செலவிடும் நாடாக சீனா உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.44 சதவீதம் தொகையை (ரூ.28 லட்சம் கோடிகள் வரை) இதற்காகச் செலவு செய்கின்றனர்.

இதற்கான ஒரு உதாரணமாக, சீனா தனது ஆராய்ச்சியில் உருவாக்கிய பெய்டோ என்ற வழிகாட்டி/வரைபட தொழில்நுட்பத்தை சொல்லலாம். 1994 ஆம் ஆண்டில்தான் சீனா இதற்கான தனது செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. பல ஆண்டுகள் தொடர்முயற்சியில் இப்போது பெய்டோ தொழில்நுட்பம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ் உட்பட அனைத்து வசதிகளிலும் மேம்பட்டதாக, அதி நவீன வசதிகளை உள்ளடக்கியதாக, குறைந்த செலவு பிடிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் உலகச்சந்தையில் 25 சதவீதத்தை விரைவில் பிடிக்கும் என்றும். 3 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்றும் சீன வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய தொழில்நுட்ப மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக, சீனாவின் கால்களை பிடித்து இழுக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. எனவேதான் தொழில்நுட்ப துறையில் பல தடைகளும், தடுப்புகளும் அமெரிக்காவால் சீனாவிற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் ஊடகங்களில் பலவாறாகவும் இடம்பிடிக்கின்றன. அதன் விபரங்களை இந்தக் கட்டுரையில் இறுதியில் பார்ப்போம்.

ஒரு துருவ உலகம்

முதலில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வராத ஆத்திரம், சீனாவின் மீது வருவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் இப்போதைய கட்டத்தை நவ தாராள உலகமயம் என்கிறோம். இந்த காலகட்டத்தில் நிதி மூலதனம் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. அதாவது, நிதியாக சேகரமான மூலதனம் எந்தவித உற்பத்தி நடவடிக்கைகளிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், உலகத்தின் எந்த நாடுகளுக்குள்ளும், எந்த உற்பத்தியிலும், வணிகத்திலும் தங்கு தடையில்லாமல் நுழையவும், வெளியேறவும் முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இறையாண்மையை தாக்கவும், பலவீனப்படுத்தவும் அதனால் முடிகிறது. யூக அடிப்படையில் லாபம் ஈட்டும் அதன் தன்மையின் காரணமாக பொருளாதார குமிழிகள் உருவாகின்றன. அவை, புதிய புதிய பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. தங்குதடையில்லாத நிதி மூலதனத்திற்கு ஏற்ற அரசியலை வடிவமைப்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணியாகும்.

“காலனி ஆதிக்கத்திற்கு பின் நாம் கண்டுவரும் இந்த நியாயமில்லாத உலக நடைமுறையை நிலைநிறுத்திட சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்றவை கருவிகளாக பயன்படுகின்றன. ஊக நிதிமூலதனத்தின் இந்த ஆதிக்கம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியை மந்தப்படுத்தியுள்ளது”, இதன் காரணமாக “வளர்ச்சியடைந்த, பணக்கார முதலாளித்துவ நாடுகள் ஒருபுறம், பெரும்பகுதி மக்கள் வாழும் மூன்றாம் உலக நாடுகள் மறுபுறம் என்று, ஏகாதிபத்திய நடைமுறை உலகையே இரு கூறாகப் பிரித்துள்ளது.” என நம் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

மேலும், இந்த காலகட்டத்தின் மையமான சமூக முரண்பாட்டினை, “சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்கிறோம். இந்த முரண்பாடு குறித்து 23வது கட்சி காங்கிரஸ்  விவாதித்தது. சீனா – அமெரிக்கா இடையிலான மோதல் வளர்வதையும், கியூபா, வடகொரியா மீதான நெருக்கடிகள் அதிகரித்திருப்பதையும் சுட்டியுள்ளது. ஆம். இதுதான் சீனாவின் மீது அமெரிக்காவின் பாய்ச்சலுக்கான காரணம் ஆகும்.

சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன.

சீன அறிஞர்கள் சென்என்பு மற்றும் லுபாலின் ஆகியோர் இதனை ஒரு ஆய்வின் விபரங்களைக் கொண்டு கீழ்க்காணும் விதத்தில் தெளிவுபடுத்துகின்றனர்.

“நாம் சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை எடுத்துக்கொள்வோம். சீனாவின் நிலத்தையும், சூழலியல் வளங்களையும், மலிவான உழைப்பையும் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்காக, அதற்கு ஈடான உற்பத்தி எதையும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. டாலர்  நோட்டுக்களை அச்சடித்தால் மட்டுமே போதுமானது”

அந்த நோட்டுக்களை வைத்தும் கூட சீனாவால் உண்மையான சொத்துக்களை வாங்க முடியாது. அமெரிக்க கருவூலத்தின் பத்திரங்களையோ அல்லது வேறு சில நிதிசார் நடவடிக்கைகளையோதான் சீனா மேற்கொள்ள முடியும். அவர்கள் குறிப்பிடும் ஆய்வு ஒன்று, அமெரிக்கா தனது மேலாதிக்கதினால் பெறக்கூடிய லாபத்தை கணக்கிட்டு நமக்கு தருகிறது. அதன்படி அமெரிக்கா தனது மேலாதிக்கத்தின் வழியாக அடையக் கூடிய லாபம் (hegemonic dividends), 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் சற்று கூடுதலாகும். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக அமெரிக்கா ரூ.16 லட்சம் கோடிகளை பெறுகிறது. இப்போது இந்த தொகை இன்னும் கூடுதலாக இருக்கலாம். ‘சீனாவின் உழைப்பாளர்களின் உழைப்பில் 60 சதவீதம், சர்வதேச ஏகபோக முதலாளிகளுக்கு இலவசமாக தரப்பட்டுள்ளது’. ஆய்வின் விபரங்கள் அதிர்ச்சியாகத்தான் உள்ளன.

இந்தப் ‘பலன்களை ’இழப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. சோவியத் ஒன்றியத்தின் தகர்விற்குப் பின், இனி ஒரு புதிய போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி காட்டியது.

சீன – அமெரிக்க உறவு

      “சீனாவுடனான உறவினை புதுப்பிக்கிற அதே சமயத்தில், சோசலிசத்தை கைவிடும்படி நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். சீனத்தின் கொள்கைகளை மென்மையாக்குவதற்கு இந்த உறவினை பயன்படுத்த வேண்டும். இந்த முக்கியமான விசயத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். (1990, மே)

      அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மக்கள் சீனத்தின் தலைவரான ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர். அமெரிக்காவிற்கும் – சீனாவுக்கும் இடையிலான உறவு, பெரிய நாடுகள் தங்களுக்கு இடையில் கொள்ளும் உறவுக்கான ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெறும் மேல் பூச்சுதான்.  2010 ஆம் ஆண்டிலேயே சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவினை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மேற்கொண்டு விட்டது.

2015ஆம் ஆண்டில், ஜி ஜின்பிங் அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரத்திற்கு சென்றார். அங்கே பேசும்போது, அமெரிக்காவின் அணுகுமுறைக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றினார்.

“அமைதியான போக்கில் வளர்ச்சியை சாதிப்பதுதான் சரியான வழியாகும் என்பது  உலக வரலாறு நமக்கு கற்பிக்கும் முக்கியமான பாடம்… வரலாற்றின் ஓட்டத்திற்கு மாறாக, வலிமையைக் கொண்டு  மேலாதிக்கத்தை சாதிக்க நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியடையும். “நாடு இப்போது வலிமையாக இருக்கலாம், சண்டை அதன் அழிவுக்கு வழிவகுக்கும்” என்று சீனர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

      மேலும், வளரும் நாடுகளின் பிரதிநிதியாக நின்று, நாடுகளுக்கிடையிலான உறவில் சமத்துவத்தை மேம்படுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக் காட்டினார். அனைத்து நாடுகளுக்கும் நன்மை தருவதாகவும், மனித குலத்தின் நன்மையை மனதில் கொண்டதாகவும் உலக நாடுகளுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

      அமெரிக்கா – சீனா இடையிலான உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். அப்போதே சீனா தனது பட்டுப்பாதை நிதியை உருவாக்கி, பெல்ட் & ரோட் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருந்தது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உருவாக்கம், ஆசிய- பசிபிக் பிரதேசத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தியது. 2008ஆம் ஆண்டு வெளிப்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, பல துருவ உலகத்தை நோக்கிய போக்குகள் வலுப்பட்டும் வருகின்றன. சர்வதேச தொடர்புகள் விசயத்தில் சீனாவின் அணுகுமுறை பல துருவ உலகத்தை நோக்கியதாகவே உள்ளன.

      தற்போது நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டின் தொடக்க உரையில், வெளியில் இருந்து நடக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ‘சர்வதேச தளத்தில் ஏற்பட்டு வரும் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம், குறிப்பாக மிரட்டவும், கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் சீனாவின் மீது கூடுதலான அழுத்தங்களை சுமத்தவும்’ முயற்சிகள் நடக்கின்றன என சுட்டிக்காட்டுகிறார்கள். இனி வரும் நாட்கள், எதிர்பாராத சவால்களை உள்ளடக்கி இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.     

நவதாராள உலகமயம் மேலாதிக்கம்

      ஏகாதிபத்தியத்தின் நோக்கம் நிதி மூலதனத்திற்கு சாதகமான உலக சூழலை பராமரிப்பதே என்பதை மேலே கண்டோம். அதற்காக அரசியல், ராணுவ, பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்கிறது. பொருளாதார உறவுகளை தனக்கு சாதகமாக வடிவமைக்கிறது.

அமெரிக்க டாலர்தான் உலக நாடுகளால் ஏற்கப்பட்ட செலாவணியாக உள்ளது. உலக நாடுகளின் வசம் இருக்கும் அன்னியச் செலவாணி கையிருப்பில் 70 சதவீதம் அமெரிக்க டாலரே ஆகும். 68 சதவீதமான சர்வதேச ஒப்பந்தங்களில் டாலர் பயன்படுத்தப்படுகிறது. அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் 80 சதவீதமும்,சர்வதேச வங்கி பரிவர்த்தனையில் 90 சதவீதம் டாலரில் நடக்கிறது. அமெரிக்க டாலரின் இந்த மேலாதிக்கத்தின் காரணமாக, ஏழை நாடுகளின் கடன் சுமையும், வட்டிச்சுமையும் அதிகரிக்கின்றன. டாலர் மதிப்பு உயரும்போதும், சரியும்போதும் இந்த சமனற்ற நிலைமையின் சிக்கலை நாம் வெளிப்படையாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட துறைகளில் ஏகபோக ஆதிக்கம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. உதாரணமாக உலகில் ஒட்டுமொத்த சோயாபீன்ஸ் உற்பத்தியையும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன. அதில் மான்சாண்டோ என்ற நிறுவனம் விதை உற்பத்திக்கான கச்சா பொருட்களை கட்டுப்படுத்துகிறது, மற்ற 4 நிறுவனங்கள் பயிர் செய்தல், வர்த்தகம் மற்றும் பிராசசிங் துறைகளை கட்டுப்படுத்துகின்றன. இந்த ஏகபோக நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, லாபத்தைக் குவிக்கிறார்கள்.

இதுபோல சமூகத்தின் சொத்துக்கள் மிகச் சில முதலாளித்துவ முதலைகளின் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமும், லாபக்குவிப்பும் உலகம் தழுவியதாக நடக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரும் விபரங்களின்படி உலகத் தொழிலாளர்களில் 73 சதவீதம் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மிகக் குறைந்த கூலியே பெறுகின்றனர். அதில் 40 சதவீதம்பேர் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் வாழ்கிறார்கள். அதே சமயத்தில் 500 தனியார் பெருநிறுவனங்களுடைய வருவாய், ஒட்டுமொத்த உலக வருவாயில் 30 சதவீதமாக உள்ளது.

நேரடியான ராணுவ மேலாதிக்கத்தையும் அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது. தனது  பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்கிற போதிலும் ராணுவச் செலவினத்தை அதிகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 193 நாடுகளில் சரிபாதியானவைகளில் அமெரிக்க படைகள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன. இந்த தாக்குதல்கள் சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கு பின் அதிகரித்துள்ளன. உலகப்போர் காலத்திற்கு பின் உலகின் 36 அரசாங்கங்களை அமெரிக்கா நேரடி தலையீட்டின் மூலம் கவிழ்த்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடந்த 85 தேர்தல்களில் தலையிட்டுள்ளது. 30 நாடுகளில் அப்பாவி மக்கள் குழுமியிருந்த இடங்களில் குண்டு வீசியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 50 தலைவர்களை கொலை செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் பின்னணியில் இதுபற்றி நாம் கூடுதலாக பேசியிருக்கிறோம்.

அமெரிக்காவின் ஆசியா – பசுபிக் உத்தி, சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்திலானதாகும். தனது நோக்கத்தில் இந்தியாவையும் துணைக்கு இழுக்கிறது. எதிரி வலிமையாவதாக உணர்ந்தால் அதனை வம்புச் சண்டைக்கு இழுக்க வேண்டும் என்ற உத்தியைத்தான் அமெரிக்கா பின்பற்றுகிறது என்கின்றனர் மேற்கத்திய வல்லுனர்கள்.

மேற்சொன்ன ஏகாதிபத்தியத்தின் 5 வெளிப்பாடுகளை, 5 தன்மைகளை கீழ்க்காணும் விதத்தில் வகைப்படுத்தலாம்.

1) உலகத்தின் சந்தையை கட்டுப்படுத்தும் நிதி மூலதனம்,

2) பூமியின் இயற்கை வளங்களை கட்டுப்படுத்தும் ஏகபோக பெருநிறுவனங்கள்.

3) ஊடகங்கள், தகவல் தொடர்பை கட்டுப்படுத்துவதன் வழியாக மக்களின் பண்பாட்டில், சிந்தனையில் ஆதிக்கம்

4) பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் ஏகபோக உடைமை

5) தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு

சீனாவுடன் மோதல் போக்கு

      முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்பதை லெனின் வரையறுத்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது  “ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம் ஆகும்; அது ஒட்டுண்ணி வகைப்பட்ட, அழுகல் நிலையில் உள்ள முதலாளித்துவம்; மரணக் கட்டிலில் உள்ள முதலாளித்துவம்” என்றார். அந்த வார்த்தைகள் இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கச்சிதமாக சுட்டுகிறது.

      நிலைமையை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தை பின்னுக்கு இழுக்கவும், தாமதப்படுத்தவும் அது தொடர்ந்து முயலும். தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தும். சீனாவின் விசயத்தை பொருத்தமட்டில் அதை தன்னுடைய கேந்திர போட்டியாளராக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. தான் மற்றும் தனது நண்பர்கள், கூட்டாளிகளின் நலனை பாதுகாக்கும் விதத்தில் சீனாவின் புறச் சூழலை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் உத்தியாக வகுத்துள்ளது. சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்கிறது.

சீனா ஒரு சோசலிச நாடாக தொடர்வதும், வலிமையடைவதும் ஒரு துருவ ஏற்பாட்டிற்கும் சவாலாக அவர்கள் பார்க்கிறார்கள்.

அண்மைய நிகழ்வுகள்

2022 ஆகஸ்ட் 2022 அன்று அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனை சீனா கடுமையாக எதிர்த்தது.

தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சீன புரட்சி சமயத்தில் தைவானில் தஞ்சம் புகுந்த எதிர்ப் புரட்சி சக்திகள், அங்கே ஏற்படுத்திய முதலாளித்துவ அரசாங்கத்தை சீனா முற்றாக அழித்து ஒழிக்கவில்லை. அமைதியான முறையில் நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்கள். இருப்பினும் அதற்கு சாதகமான சூழல் இப்போதுவரை உருவாகவில்லை.

இந்த நிலையில், தைவான் ஆட்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமான பயணத்தை பெலோசி மேற்கொண்டார். இந்த பயணம் அவருடைய தனிப்பட்ட முடிவு என்பது போல அமெரிக்கா காட்டிக் கொண்டது. ஆனால் அங்கே அவர் ‘தைவான் செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனத்தினரோடு’ சந்திப்பு மேற்கொண்டார்.

      ராணுவ நடவடிக்கைகளை தூண்டுவது போல தொடங்கிய இந்த நிகழ்வுப்போக்கு, சீனாவின் மீது மட்டுமல்லாமல், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தாக்கம் செலுத்தியது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாடுகள் பலவும் தங்கள் தற்காப்புக்காக ராணுவ செலவினங்களை அதிகப்படுத்தினார்கள். சீனாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் இந்த நகர்வு உயர் தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாட்டை நோக்கியதாகவும் இருந்தது.

பலமும், பலவீனமும்

      இப்போதும் சீனாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடு அமெரிக்காவே ஆகும். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு செல்லும் நேரடி முதலீடும் அதிகரித்தே வருகிறது. உலகமய காலத்தில், உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதார நலன்களும் பிரிக்க முடியாத விதத்தில் பிணைந்திருக்கின்றன.

அதே சமயத்தில், ஒபாமா காலத்தில்  இருந்தே சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், சீனாவின் மீதான இனவாத வெறுப்பும், பொருளாதார தடைகளும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டன.

5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஹுவாவை நிறுவனம் உட்பட சில நிறுவனங்களை முடக்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் ‘சிப்புகள் மற்றும் அறிவியல் சட்டம்’ என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர சந்தை, உலகமயம் ஆகிய தாரக மந்திரங்களுக்கு நேர்மாறான இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க ஏகபோக பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தை தொடரும் நோக்குடனே எடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், தொழில் இணையம், அதிவேக இணைய உபகரணங்கள் தயாரிப்பிலும், அறிவியல் தொழில்நுட்ப துறையிலும் சீனாவை பின்னுக்கு தள்ளும் என்று அமெரிக்கா கருதுகிறது.

சீனா, உலகின் இரண்டாவது பொருளாதாரம் என்ற நிலைமையை எட்டியுள்ள போதிலும், இப்போதும் அது வளரும் நாடுதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனங்கள் மற்றும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்திக்காக அது இறக்குமதிகளையும், பிறநாட்டு அறிவுசார் கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப கருவிகளையும் அதிகம் சார்ந்திருக்கிறது.

அண்மை ஆண்டுகளில் ஆராய்ச்சிகளில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது எனினும் அமெரிக்கா மேற்கொள்வதில் அது பாதியளவுதான் என்பதும், மேலும், அமெரிக்கா பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அறிவுசார் வளங்களை எடுத்துக் கொண்டால், சீனா செய்துவரும் பங்களிப்பை போல 6 மடங்கு இறக்குமதி செய்கிறது. எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

அதுவும், அமெரிக்காவின் சமீபத்திய கட்டுப்பாடுகள் உற்பத்தி இயந்திரங்களை மறுப்பதாகவும், முக்கிய கச்சாப்பொருட்களை மறுப்பதாகவும் உள்ளதுடன் தொழில்நுட்பம் படித்த, அமெரிக்க குடியுரிமை கொண்ட நிபுணர்கள், சீனாவில் வேலை பார்ப்பதை மட்டுமல்ல, சீனாவுக்காக உற்பத்தி நடந்தால் அதில் பங்கெடுப்பதையும் கூட தடை செய்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்களையும் கூட சீனாவில் மேற்கொள்ளும் உற்பத்தியில் பயன்படுத்த முடியாது என்று இந்த விதிகள் நெருக்குகின்றன.

உலகச் சந்தையில் 40 லட்சம் கோடி புழங்கும் சிப்/செமிகண்டெக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 8 ஆண்டுகளில் அதன் சந்தை இருமடங்காக உயரும் என்றும் கணிக்கிறார்கள்.

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் 16 நானோமீட்டர், 14 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த அளவிலான லாஜிக் சிப்கள், 18 நானோமீட்டர் கொண்ட டைனமிக் ராம் சிப்கள், 128 லேயர் கொண்ட மெமரி சிப்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு கொண்ட சிப்கள் குறைவான மின் பயன்பாடு கொண்டவையாகும், அதிவேக செயல்திறன் கொண்டவை எனவே இவற்றை நுகர்வோர் பயன்பாட்டுக்கானவை. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 18.4 சதவீதம் சீனாவில் நடக்கும் நிலைமையில் சீனாவை இதில் இருந்து அகற்றுவது எளிதல்ல.

இதன் உற்பத்திச் சங்கிலி உலகம் தழுவியதாக உள்ளது. எனவே இந்த துறையில் இருந்து சீனாவை மட்டும் தனிமைப்படுத்துவது எளிதல்ல. உதாரணமாக, சிப்/ செமிகண்டக்டர் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவமைப்பு பிரதானமாக அமெரிக்காவில் செய்யப்படுகிறது. அதற்கான சிலிகான் தகடுகள் ஜப்பானில் உற்பத்தியாகின்றன. அந்த தகடுகளில் இழை சேர்ப்பது, சாயப் பூச்சு ஆகியவை அமெரிக்கா, தைவான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடக்கிறது. சரியாக அடுக்கி பரிசோதிப்பது மலேசியாவில் நடக்கிறது. சிங்கப்பூரில் இருந்து அது கப்பலில் ஏற்றப்படுகிறது. சீனாவில் அது பல்வேறு உபகரணங்களில் இணைக்கப்பட்டு சந்தைக்கான பொருளாக வடிவம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கும்போதும், தன்னுடைய வருமானத்தில் 18 சதவீதத்தை ஆய்வுக்காக செலவிடும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு, இனி வரும் காலத்தில் அவற்றின் மேம்பட்ட நிலையையே சரியச் செய்யக் கூடும். சீனா தனது ஆராய்ச்சியில் முன்னேறினால் அது சீனாவிற்கு சாதகங்களை அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது.

முடிவாக…

      உலகம் தழுவிய நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்கள் இருப்பதும், விநியோகம் உலகளாவியதாக இருப்பதன் காரணமாக, ஏகபோக நிறுவனங்கள், தமக்குள்ளாக ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு, குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள். உலகச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமக்கு சாதகமான உலக ஒழுங்கினை பராமரிக்கிறார்கள்.

அமெரிக்காவின் ராணுவ பலமும், ராணுவ தலையீடுகளும், அமெரிக்க டாலரின் ஆதிக்கமும், உயர்ந்த தொழில்நுட்பங்களின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் கட்டுப்பாடும் ஏழை/வளரும் நாடுகளுக்கு பாதகமாக இருக்கின்றன.

சோசலிச சீனா வலுப்படுமானால் அது இந்த ஆதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் என்பதாலேயே, சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறது அமெரிக்கா. ஆனால், உலக முதலாளித்துவம் நெருக்கடியிலேயே இருக்கிறது. தனது நெருக்கடிகளை உலக நாடுகளின் மீது தள்ளிவிடுவதும் தொடர்கிறது. இந்த நிலைமைகளை உணர்ந்திருக்கும் சீனா, சவால்களை எதிர்கொண்டு சோசலிச கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம் என்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் வெல்வது சோசலிசமா, லாபவெறி மேலாதிக்கமா என்பதைப் பொருத்தே மனித குலத்தின் எதிர்காலம் அமையும். 

சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !

  • அருண் குமார்

2022 அக்டோபர் 22 அன்று,  சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC)-யின் 20வது மாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது. உலக பொருளாதாரத்தில், சீனா முக்கிய பங்கை வகிப்பதால் இந்த மாநாடு கூர்ந்து கவனிக்கப்பட்டது.

2021இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 17.7 லட்சம் கோடி டாலர்களை எட்டியது. இது உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 18.5 சதவீதம் ஆகும். 2013 முதல் 2021 வரை சீன பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளர்ந்தது. இது உலக பொருளாதார வளர்ச்சி விகிதமான 2.6 விட அதிகம். 2013-2021 காலத்தில் உலக உற்பத்தி மதிப்பில் சீனாவின் பங்கு சராசரியாக 38.6 சதவீதமாக இருந்தது. ஜி-7 நாடுகள் செய்த மொத்த பங்களிப்பை விட இது அதிகம் ஆகும். அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக ஈடுபடும் நாடாக 2020ஆம் ஆண்டில் உயர்ந்தது சீனா. 2021ஆம் ஆண்டிலும் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு 6.9 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டது.

தனிநபர் சராசரி தலா வருமானத்தை 2012ஆம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து இரட்டிப்பாக்கி 11,890 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது சோசலிச சீனா. வருமான அளவு உயர்வு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் காரணமாக சீன மக்களின் சராசரி ஆயுள் 77.9 ஆண்டுகளாக உயர்ந்தது. இது உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகம் ஆகும். இது சோசலிச முறையின் மேம்பாட்டை உணர்த்தி,  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவையெல்லாம் மாநாட்டின் மீதான முக்கியத்துவத்திற்கு காரணமாக அமைந்தன.

49 லட்சம் கட்சி அமைப்புகளில் செயல்படும் 9.6 கோடி கட்சி உறுப்பினர்களில் இருந்து 2,296 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மாநாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு மாபெரும் ஜனநாயக செயல்முறைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் இயங்கும் 54 கல்வி மையங்கள் 26 முக்கிய தலைப்புகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 80 அறிக்கைகளை தயாரித்தன. அவை மாநாட்டு வரைவு அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தன. வரைவு அறிக்கை குறித்து 85.4 லட்சம் கருத்துகள் இணையத்தின் மூலம் பெறப்பட்டன. 20வது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட வரைவு அறிக்கையின் மேல் 4,700 கருத்துக்கள் வந்தன.

இந்த மாநாட்டின் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளை ‘நிகழ்வுகள்மிக்க காலம்’ என குறிப்பிட்ட அறிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார,  அரசியல், கலாச்சார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னெடுக்கும் ஐந்து-தள ஒருங்கிணைந்த திட்டப் பணியில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ‘முழுமையான மக்கள் ஜனநாயக செயல்முறைகளை ஊக்குவிப்பது, முன்னேறிய சோசலிச கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் பொது மக்கள் நலனை மேம்படுத்துவது’ ஆகியவற்றிலும் கட்சி வெற்றி கண்டிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த காலகட்டத்தில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இலக்குகளில் ஒன்றான ‘கடும்வறுமையை ஒழித்து’, மதிப்பு மிக்க செழிப்பான சமுதாயத்தை உருவாக்குதல் எட்டப்பட்டது. இப்போது, நூற்றாண்டின் இரண்டாவது இலக்கினை நோக்கி நாட்டை வழிநடத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சீன பிரதமருமான லீ கச் சியாங் அவர்கள் மக்களின் அடிப்படை நலனை பாதுகாப்பதே கட்சியின் முதன்மையான கடமை என குறிப்பிட்டார். அனைத்து மக்களின் பொதுநலன் பாதுகாக்கப்பட்டு, அனைவரும் உயர்வடைந்தால்தான் வளர்ச்சியை நோக்கிய, நவீன மயமாக்கலின் பலன்களை முழுமையாகவும், நியாயமாகவும் பகிர்ந்து கொள்வதாக அமையும் என்றார்.

கடும் வறுமையை ஒழிக்கும் பணியிலும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையான போரினை முன்னெடுத்து மக்களின் உயிர்களையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பணியிலும் கட்சியை வழிநடத்தியது இந்த கோட்பாடுகள்தான். முதலாளித்துவ நாடுகளைப் போல, பொருளாதார நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் உயிர்களை முதன்மைப்படுத்தி செயல்பட்டது சீனா.

மாநாட்டின் முன்பாக அறிக்கை சமர்ப்பித்து பேசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மறவாது இருக்க வேண்டும்; மார்க்சியத்தின்மீதும், சோசலிசத்தின்மீதும் மாறாத பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். கட்சி தனது தன்மையையும், தான் வகிக்க வேண்டிய பாத்திரத்தையும், உறுதிப்பாட்டினையும் மாறாமல் கடைப்பிடிக்கும் என்றார்.

“மார்க்சியம் வேலை செய்கிறது. குறிப்பாக, சீன நிலைமைகளுக்கும், நம் காலத்தின் தேவைகளுக்கும் பொருத்தி அமலாக்கினால்” என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன தன்மையிலான சோசலிசத்திற்கும் காரணம் என்று ஜின் பிங்  கூறினார். “சீனா தன் தன்மையை மாற்றிக்கொண்டு, சோசலிச முறையை கைவிட்டு, ஒரு நாளும் ‘மடை மாறிப் போகாது'” என உறுதியுடன் அவர் கூறினார்.

சீனா ஒரு நாளும் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும், எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் என்று உறுதியுடன் பேசினார். ‘காலத்தின் தேவைகளுக்கும்’, ‘மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும்’  விடை அளிப்பதற்கான மாறாஉறுதியுடனும் முனைப்புடனும் முன் நகர்ந்தால் மட்டுமே கட்சி முன்னேறிச் செல்லும் என குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே சுயவிமர்சனங்களுக்கு தயாராக இருந்து, சோசலிச கட்டமைப்பின் பாதையில் வரும் அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த திசைவழியில் ஊழலுக்காக ஊற்றுக்கண்கள் நீடிக்கும்வரை அதற்கு எதிராக உறுதியுடன் கட்சி போராடும் எனவும் அவர் வாக்களித்தார்.

ஒழுங்காய்வுக்கான மத்தியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கட்சி ஊழலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருவதாகவும்,  அது நல்ல பலன்களை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் ஊழல் சார்ந்த வழக்குகளில் 74,000 பேர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48 சதவீதம் பேர் 18வது மாநாட்டிற்கு முன் தவறு செய்தவர்கள் என்றும், 11.1 சதவீதம் பேர் மட்டுமே 19வது மாநாட்டிற்கு பின் குற்றம் செய்தவர்கள் என்றும், இது ஊழல் குற்றங்கள் குறைந்து வருவதை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, பொதுமக்களிடம் 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட மாதிரி ஆய்வில் கட்சியின் கடுமையான சுய-ஆளுகை ‘மிகத் திறம்பட’ செயல்படுவதாக 97.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது 2012 இல் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை விட 22.4 சதவீதம் அதிகம். கட்சி நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. 2015லிருந்து 4,700 நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கவனம் ‘முக்கிய துறைகள் மற்றும் முக்கிய இடங்கள்’ என்றும், அங்கே ‘புலிகளை வெளியேற்றி,  பூச்சிகளை நசுக்கி,  நரிகளை வேட்டையாடி ‘ ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

1982க்குப் பின் கட்சியின் அமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது  தொடர்நடவடிக்கையாக இருந்து வருகிறது. ‘புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டின் பரிணாம வளர்ச்சி’ ஆகியவற்றின் தேவைகளில் இருந்து இது மேற்கொள்ளப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ‘திட்டமிட்ட சிந்தனை’யை பிரதிபலிப்பதாகவும், ‘தற்கால சூழல் மற்றும் சீன நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திப் பார்ப்பதில் கிடைத்துள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள்’ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் உள்ளன. சீன தேசம் புத்துயிர் பெறுவதை சீனாவின் நவீனமயமாக்கலுக்கான பாதை மூலம் முன்னேற்றிக் கொண்டு செல்வதே கட்சியின் பிரதான கடமையாக நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.

கட்சியின் தொடக்க கால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அதன் முக்கிய சாதனைகள், கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றுப் படிப்பினைகள் ஆகியவற்றையும் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது. போர்க்குணத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் போராடும் திறனை வளர்த்துக் கொள்வது பற்றிய குறிப்பையும் மாநாடு அமைப்புச் சட்டத்தில் சேர்த்தது.

மேலும் ஒரு முக்கிய திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. ‘பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை,  உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள்’ என்ற கோட்பாட்டை அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதுதான் அந்த திருத்தம்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் சிறப்பு-நடத்தையை எதிர்பார்க்கும் எண்ணம் மற்றும் செயல்களை எதிர்ப்பது, ஊழல் நடவடிக்களை எதிர்ப்பது போன்ற கண்ணோட்டத்துடன் கட்சி ஒழுக்கம் குறித்த அத்தியாயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்கால சவால்களை சந்திக்க தேவையான புதிய கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கட்சி உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விரிவான, முழுமையான, கூடுதல் வலுவான வழிமுறை கொண்ட மக்கள் ஜனநாயகத்தை வளர்ப்பது, ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்கள், கருத்துக் கேட்பு, முடிவெடுப்பு, நிர்வாகம், மற்றும் மேற்பார்வை போன்றவற்றிற்கான சிறந்த அமைப்பு மற்றும் வழிமுறைகளை நிறுவுதல் ஆகியவற்றையும் கட்சி அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது.

205 உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய குழுவையும், 133 உறுப்பினர்கள் கொண்ட மத்திய ஒழுங்காய்வு ஆணையத்தையும் மாநாடு தேர்வு செய்தது. 23 அக்டோபர் அன்று கூடிய புதிய மத்தியக் குழு, கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின் பிங் அவர்களை தேர்வு செய்தது. தோழர் ஜின் பிங் அவர்களை உள்ளடக்கிய 7-உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவினையும்,அரசியல் தலைமைக்குழுவையும் மத்தியக்குழு தேர்வு செய்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆயுதப்படை ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார்.

நிறைவுரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராடும் துணிவும், வெற்றி பெறும் திறனும் உள்ளதாக ஜி அவர்கள் குறிப்பிட்டார். “இந்த புதிய காலத்தின் புதிய பயணத்தில், புதிய,  மேலும் பெரிய, உலகையே வியக்கச் செய்யும் அற்புதங்களை படைக்கும் முழு தைரியமும், திறனும் எங்களுக்கு உண்டு”. 23 அக்டோபர் அன்று ஊடகங்களை சந்தித்த ஜி ஜின் பிங் அவர்கள், இந்த மாநாடானது ‘பதாகையை உயர்த்திப் பிடித்து, சக்திகளை ஒன்று திரட்டி,  ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டும்’ மாநாடு எனக் கூறினார்.

சீனாவில் சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாம் அனைவரும் வாழ்த்து தெரிவிப்போமாக.

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர்)

தமிழில்: அபிநவ் சூர்யா

சீனாவின் பயணம் எப்படிப்பட்டது?

[சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தோழர் ஷி ஜின் பிங் ஆற்றிய உரை (ஜூலை 1, 2021). ]

தோழர்களே! நண்பர்களே!

இன்று ஜூலை முதல் நாள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் சீன தேசத்தின் வரலாற்றிலும் இது மிகச் சிறப்பான, முக்கியமான நாள். கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவை அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் நாடு முழுவதும் உள்ள  அனைத்து இன மக்களுடனும் இணைந்து கொண்டாட  நாம் கூடியிருக்கிறோம். கட்சியின்  கடந்த நூறு ஆண்டு போராட்டப் பயணத்தின் சிறப்புகளை பின் நோக்கி பார்க்கிறோம். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒளிமிக்க  வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்.

தொடக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் கட்சியின் சார்பாகவும் மக்கள் சார்பாகவும்  ஒரு பிரகடனம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தேசம் முழுமையும், ஒட்டுமொத்த கட்சியும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக நமது முதல் நூறாண்டு இலக்கான ‘எல்லா வகைகளிலும் மித அளவிலான வசதிபடைத்த சமூகத்தை கட்டுவது’ (Build a moderately prosperous society) என்பதை நிறைவு செய்துள்ளோம். இதன் பொருள் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் வறுமை பிரச்சினை சீனாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாகும். இப்பொழுது நாம் அனைத்து வகைகளிலும் சிறப்பான, நவீன, சோசலிச நாடாக சீனாவை ஆக்குவது என்ற இரண்டாம் நூறாண்டு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பீடுநடை போடுகிறோம். இது சீன தேசம், சீன மக்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான சாதனையாகும்!

தோழர்களே! நண்பர்களே!

சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப் பிறகு சீனா படிப்படியாக அரை-காலனி, அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக சிறுமைப்பட்டது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்புகளுக்கு ஆளானது. நாடு கடும் அவமானத்திற்கு உள்ளாகியது. மக்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். சீன நாகரீகம் இருளில் மூழ்கியது. அப்பொழுதில் இருந்து தேசீய மறுமலர்ச்சி என்பது சீன தேசத்தின், சீன மக்களின் ஆகப்பெரிய கனவாக இருந்து வந்தது.

தேசத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற சீன மக்கள் தைரியத்துடன் போராடினார்கள். உயர்சிந்தனை கொண்ட தேசபக்தர்கள் தேசத்தை ஒன்றுபடுத்த முயற்சித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக தைபிங் சுவர்க்க அரசு இயக்கம், சீர்திருத்தத்திற்கான 1898 இயக்கம், யிஹெதுவான் இயக்கம், 1911 ஆம் ஆண்டு புரட்சி என்று எழுச்சிகள் நிகழ்ந்தன. நாட்டைக் காப்பதற்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நாட்டை பாதுகாப்பதற்கான இயக்கத்திற்கு புதிய சிந்தனைகளும், புரட்சிகர சக்திகளை திரட்ட புதிய அமைப்பும்  அவசர தேவையாக இருந்தன.

1917 இல்  ரஷ்ய அக்டோபர் புரட்சி வெடித்தபின் மார்க்சிசம்-லெனினிச தத்துவம் சீனாவை வந்தடைந்தது.  பின்னர், 1921இல் சீன மக்களும் தேசமும் பெரும் விழிப்புணர்வு பெற்ற நிலையில், சீன தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் மார்க்சிசம் லெனினிசம் நெருக்கமாக இணைந்து கொண்டிருந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சீனாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவது என்பது ஒரு சகாப்த நிகழ்வாகும். இந்நிகழ்வு நவீன கால சீன வரலாற்றை ஆழமான வகையில் மாற்றியது. உலக வளர்ச்சியின் வரைபடத்தையே மாற்றியது.

துவக்கப்பட்ட நாளில் இருந்து கட்சி சீன மக்களின் மகிழ்ச்சியை, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை தனது இலக்காகவும் ஆகர்ஷ சக்தியாகவும் கொண்டிருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கி நடத்தியுள்ள போராட்டங்கள், செய்துள்ள தியாகங்கள், ஆக்கப் பணிகள் அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தால் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. அதுதான் சீன தேசத்தின் மாபெரும்  மறுமலர்ச்சி என்பதாகும்.

தேசீய மறுமலர்ச்சியை சாதிக்க அசைக்கமுடியாத உறுதியுடன், மக்களை ஒற்றுமைப்படுத்தி, சீன மக்களின்  ரத்தம் சிந்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. புதிய-ஜனநாயகப் புரட்சியின் மூலம்  மகத்தான வெற்றியும் பெற்றது.

வட பகுதி போர் ,விவசாய புரட்சிப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர், விடுதலைக்கான போர் ஆகிய பெரும் யுத்தங்கள் வாயிலாக, ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி சக்திகளை ஆயுதமேந்திய புரட்சி மூலம் முறியடித்தோம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அதிகாரவர்க்க-முதலாளித்துவம் ஆகிய முப்பெரும் மலைகளை தகர்த்தோம். மக்கள் சீன குடியரசை நிறுவினோம். இதன் மூலம் மக்களே நாட்டின் எஜமானர்களாயினர். இவ்வாறு நமது நாட்டின் விடுதலையை சாதித்தோம். மக்களை விடுவித்தோம்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் அனுபவித்த சலுகைகள், நமது நாட்டின் மீது அந்நிய அரசுகள் திணித்த ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள், பழைய சீனத்தில் நிலவிய ஒற்றுமையற்ற நிலைமை, அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற சீன நாட்டின் நிலைமை  – இவை அனைத்திற்கும் புதிய ஜனநாயக புரட்சியின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது. தேசீய மறுமலர்ச்சியை சாதிப்பதற்கான அடிப்படை சமூக நிலைமைகளை ஏற்படுத்தியது.

விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் கட்சியும் சீன மக்களும் சீன மக்கள் எழுந்துவிட்டார்கள் என்று உலகிற்குக் காட்டினர். இனி என்றுமே பிறரால் சீன தேசத்தை அவமதிப்பதோ, மிரட்டுவதோ  சாத்தியமில்லை என்று காட்டினர்.

தேச மறுமலர்ச்சியை அடைய, வலுவான சீனத்தை தற்சார்பு உணர்வுடன் கட்டிட, கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தலைமை தாங்கியது. சோசலிச புரட்சி மற்றும் நிர்மாணத்தில் பெரும் வெற்றி பெற்றது.

சோசலிச புரட்சியை நிகழ்த்தியதன் மூலம்  பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் நிலைத்திருந்த, சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை அழித்தொழித்தோம். சோசலிசத்தை நமது அடிப்படை அமைப்பாக ஆக்கினோம். சோசலிச கட்டுமான செயலாக்கத்தில் ஏகாதிபத்திய,  மேலாதிக்க சக்திகளின் அழிப்பு முயற்சிகள், சதிச் செயல்கள், ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் முறியடித்து சீன தேசத்தின் வரலாற்றில் மிகவும் விரிவானதும் ஆழமானதுமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தினோம். உலகின் கிழக்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட, ஏழ்மையான, பின்தங்கிய நாடாக இருந்த சீனாவை சோசலிச நாடாக மாற்றியது. தேசீய மறுமலர்ச்சியை அடைவதற்கு அவசியமான அடிப்படை அரசியல் தளத்தையும் நிறுவன அஸ்திவாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் அவர்கள் பழைய உலகை தகர்ப்பவர்கள் என்பது மட்டுமின்றி, புதிய உலகை நிர்மாணிப்பவர்கள் என்பதையும், சோசலிசம் மட்டுமே சீனத்தை காப்பாற்றும் என்பதையும், அதுதான் சீன வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்பதையும் உலகிற்கு காட்டினர். 

தேசீய மறுமலர்ச்சியை அடைய,  கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி, சிந்தனைகளை மனச்சிறைகளில் இருந்து விடுவித்தது. இதனால் வேகமாக முன்னேறியது. சீர்திருத்தங்கள், சீன தேசத்தின் கதவுகளை விரிவாக திறப்பதில், சோசலிச நவீன மயமாக்கலில் வெற்றி பெற்றது.

சோசலிசத்தின் துவக்க கட்டத்திற்கான கட்சியின் நிலைப்பாட்டை நாம் உருவாக்கினோம். சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து விடுதல் என்பதை உறுதியுடன் செய்தோம். நாலா பக்கங்களிலும் இருந்து வந்த அபாயங்களையும் சவால்களையும் முறியடித்தோம். சீன குணாம்சங்களைக்கொண்ட சோசலிசத்தை நிறுவி, அதை உயர்த்திப் பிடித்து, பாதுகாத்து, வளர்த்தோம். இதன் மூலம், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்பான காலத்தில் கட்சி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் கொண்ட பெரியதொரு திருப்பத்தை சாதித்தோம். அதிக அளவில் மையப்படுத்தப்பட்ட, திட்டமிடுதல் கொண்ட, பொருளாதாரம் என்ற தன்மையில் இருந்து  உயிர்ப்பு மிக்க சோசலிச சந்தை பொருளாதாரம் என்ற தன்மைக்கு சீனப் பொருளாதாரம் மாறியது. மேலும் பெரும்பாலும் தனித்தே இருந்த நாடு என்ற நிலையில் இருந்து, வெளி உலகம் முழுமைக்கும் திறந்துவிடப்பட்ட நாடாக சீனா மாறியது. இத்திருப்பம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய உற்பத்தி சக்திகளைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு சீனாவால் தாவ முடிந்தது. மேலும் சீனா தனது மக்களின் வாழ்க்கை தரத்தை குறைந்த மட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த அளவில் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும், அதன்பின் அனைத்து அம்சங்களிலும் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளது. வேகமான வளர்ச்சிக்கான பொருளாதார அடித்தளத்தையும் ஆற்றல் தரும் நிறுவன உத்தரவாதங்களையும் உருவாக்கி, தேசீய மறுமலர்ச்சியை நோக்கி செல்லும்  வாய்ப்புகளையும் இச்சாதனைகள் ஏற்படுத்தியுள்ளன.

விடாப்பிடியான  போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் சீர்திருத்தங்கள் மூலமும் சீனாவின் கதவுகளை விரிவாக திறந்ததன் மூலமும் (இவை இன்றைய சீனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளன) சமகாலத்திற்கு சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று காட்டியுள்ளனர்.

தேசீய மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி,மாபெரும் போராட்டத்தை, மாபெரும் திட்டத்தை, மாபெரும் கனவை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. இதனை தன்னம்பிக்கை, தற்சார்பு,புதுமை காணல் ஆகியவற்றின் மூலம் செய்துள்ளது. புதிய சகாப்தத்தில் சீன குணாம்சங்களுடனான சோசலிசத்தை அடைவதில் பெரும் வெற்றி கண்டுள்ளது.

கட்சியின் பதினெட்டாவது தேசீய மாநாட்டை தொடர்ந்து, சீன குணாம்சங்களுடனான சோசலிசம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த கட்டத்தில் நாம் கட்சியின் ஒட்டு மொத்த தலைமையை வலுப்படுத்தியுள்ளோம்.ஐந்து கள ஒன்றிணைக்கப்பட்ட திட்டம்  மற்றும் நான்கு முனை முழுமையான உத்தி ஆகியவை ஒருங்கிணைந்து அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம். சீன குணாம்சங்களுடனான சோசலிச அமைப்பை மேம்படுத்தியுள்ளோம். சீனாவின் ஆட்சி சார் அமைப்புகளை நவீனப்படுத்தி அவற்றின் ஆளும் திறனை மேம்படுத்தியுள்ளோம். கட்சி  விதிகளின் அடிப்படையில் கட்சி ஆளப்படுவதை உறுதி செய்துள்ளோம்.  சரியான உட்கட்சி நெறிமுறைகளை உருவாக்கியுள்ளோம். பல அபாயங்களையும் சவால்களையும் வென்று, முதல் நூறு ஆண்டுகளின் இலக்கை நிறைவு செய்து, இரண்டாம் நூறு ஆண்டுகளின் இலக்கை அடைவதற்கான உத்திகளை முன்வைத்துள்ளோம். கட்சி மற்றும் நாட்டிற்கான நமது சாதனைகளும் மாற்றங்களும் தேசீய மறுமலர்ச்சியை அடைய வலுவான நிறுவன அமைப்புகளை நமக்கு அளித்துள்ளன. வலுமிக்க அடித்தளத்தை தந்துள்ளன. கூடுதலாக முன்முயற்சிகளை எடுக்க நமக்கு உந்து சக்தியாகவும் அவை அமைந்துள்ளன.

விடாப்பிடியான போராட்டத்தின்மூலம் கட்சியும் சீன மக்களும் சீனா நிமிர்ந்து நின்று மகத்தான மாற்றங்களை சாதித்துள்ளது, வசதிபடைத்த நாடாக மட்டுமின்றி வலுவான நாடாகவும் மாறியுள்ளது, சீனாவின் தேசீய மறுமலர்ச்சி வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதியாகிவிட்டது என்பதையும் உலகுக்கு காட்டியுள்ளனர்.

மாவோ கூறினார்: “தியாகிகளின் தியாகங்கள் நமது மனங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. நாம் உருவாக்கும் புதிய வானத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒளி வீசச் செய்ய முனையும் தைரியம் நம்மிடம் உள்ளது.” இந்த அச்சமற்ற உணர்வைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட சீன தேச வரலாற்றின் மிக அற்புதமான அத்தியாயத்தை கடந்த நூறு ஆண்டுகளில் சாதிக்கும் பணியில் கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றுள்ளது. சீன தேசத்தின், மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றில் நாம் பதித்துள்ள புதிய பாதை, நாம் மேற்கொண்டுள்ள இலக்கு, கடந்த நூறு ஆண்டுகளில் நாம் படைத்துள்ள சாதனைகள் நிச்சயம் இடம் பெறும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின்  கம்யூனிஸ்ட் முன்னோடிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். அதன் மாபெரும் துவக்க உணர்வை வளர்த்தெடுத்தனர். அதன் அடிப்படை கோட்பாடுகள் வருமாறு: லட்சியங்களையும் உண்மையையும் உயர்த்திப்பிடித்தல்; நமது துவக்க வேட்கைக்கும் இலக்கிற்கும் உண்மையாக இருத்தல்; இழப்பு பற்றி கவலையின்றி தைரியமாக போராடுதல்; கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருத்தல். இந்த உணர்வு கட்சியின் வலிமைக்கான ஊற்றுக்கண்.

கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி இந்த துவக்க உணர்வை முன்னெடுத்து சென்றுள்ளது. அதன் நெடிய போராட்டங்கள் மூலம் சீன கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும் பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. தனித்தன்மை வாய்ந்த அரசியல் குணத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு முன்னேறுகையில் கட்சியின் உணர்வு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. கட்சியின் மகத்தான துவக்க உணர்வு எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், முன்னெடுத்து செல்லப்படும் வகையில் நமது மகத்தான புரட்சிகர பாரம்பர்யத்தை உயர்த்தி பிடிப்போம். 

தோழர்களே! நண்பர்களே!

நமது கடந்த நூறு ஆண்டு சாதனைகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டுகளின், சீன மக்களின், சீன தேசத்தின் தீவிர முயற்சிகளால் நிகழ்ந்துள்ளன. இதன் பிரதான பிரதிநிதிகள் தோழர்கள் மாவோ, டெங், ஜியாங் ஜெமின் மற்றும் ஹூ ஜின் டாவ் ஆவர். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு நமது மிக உயர்ந்த மரியாதையை செலுத்துகிறோம்.

இத்தருணத்தில் சீன புரட்சிக்கும், நிர்மாணத்திற்கும் சீர்திருத்தத்திற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி, வலுப்படுத்தி வளர்த்ததற்கும் தோழர்கள் மாவோ, ஜூ என் லாய், லியு ஷா சி, சு டே, டெங் சியாவ் பிங், சென் யுன் மற்றும் இதர முதுபெரும் புரட்சியாளர்களை நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். மக்கள் குடியரசை நிறுவி, பாதுகாத்து வளர்க்கும் பணிகளில் மனஉறுதியுடன் தங்கள் உயிரையும் ஈந்த புரட்சியாளர்களை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். சீர்திருத்தம், சீனாவின் கதவுகளை விரிவாக திறந்துவிடல், சோசலிச நவீனமாக்கல் ஆகிய பணிகளுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தோழர்களுக்கு இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நவீன காலங்களில் தேசங்களின் சுதந்திரத்திற்கும் மக்கள் விடுதலைக்கும் உறுதிபடப்போராடிய அனைத்து பெண்களையும் ஆண்களையும் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நமது தாய் நாட்டிற்கும் தேசத்திற்குமான அவர்களின் சிறப்பான பங்களிப்பு வரலாற்றில் நிரந்தர இடம் பெறும். சீன மக்களின் இதயங்களில் அவர்களது உன்னதமான உணர்வுகள் என்றும் இருக்கும்.

மக்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். ஏனெனில் அவர்கள் தான் வரலாற்றை படைக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பாக நாடுமுழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையை செலுத்துகிறேன். இதர அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற பொது வாழ்வு பிரமுகர்கள், மக்கள் அமைப்புகள், சமூகத்தின் அனைத்து துறைகளை சார்ந்த தேச பக்தர்கள்; மக்கள் விடுதலைப்படை, மக்களின் ஆயுத போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்சி சேவைத்துறை ஆகிய அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும்; அனைத்து சோசலிச உழைக்கும் மக்களுக்கும்; ஐக்கிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஹாங்காங், மக்காவ் சிறப்பு நிர்வாக பகுதி சீன மக்களுக்கும் தைவான் மற்றும் உலகின் இதர பகுதிகளில் வாழும் சீன மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சீன மக்களுடன் நட்பும் புரிதலும் கொண்ட, புரட்சி, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் சீனா எடுத்துவரும் முயற்சிகளை ஆதரிக்கும் உலகெங்கும் உள்ள மக்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தோழர்களே! நண்பர்களே!

நமது கட்சியின் துவக்க இலக்கை வரையறை செய்வது எளிது என்றாலும், அந்த இலக்கிற்கு நாம் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்வது அதைவிட  கடினமான பணி. வரலாற்றைக் கற்பதன் மூலம் வல்லரசுகள் எழுவதும் வீழ்வதும் ஏன் என்று புரிந்துகொள்ளலாம். வரலாறு எனும் கண்ணாடி மூலம் நாம் தற்பொழுது எங்கு உள்ளோம் என்பதை அறியலாம். எதிர்காலம் பற்றிய வெளிச்சம் பெறலாம். கட்சியின் கடந்த நூறு ஆண்டு வரலாற்றை உற்றுநோக்கி கடந்த காலத்தில் நம்மால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்று அறியலாம். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி என்றும் அறியலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் உறுதியுடன் நமது துவக்க இலக்கிற்கு உண்மையாக இருந்து மேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம் முன்னே உள்ள புதிய பயணத்தினை தொடரலாம்.

ஓய்வின்றி ஒரு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கிட நாம் சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.

இந்த நாடு என்பது இந்த நாட்டின் மக்களே. மக்கள் தான் நாடு. நாட்டின் மீதான நமது தலைமை பாத்திரத்தை நிலைநாட்டி உறுதிப்படுத்த நாம் போராடி வந்துள்ளோம். அதன் பகுதியாக மக்களின் ஆதரவை வென்றெடுத்து தக்க வைக்கவும் நாம் போராடி வருகிறோம். கட்சியின் வேர்கள் மக்கள் தான். அவர்கள் தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின்  வலிமைக்கான ஆதார வளம். எல்லாக் காலங்களிலும் கட்சி அனைத்து சீன மக்களின் அடிப்படை நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்துள்ளது. எப்பொழுதும் கட்சி மக்களுடன் நிற்கிறது. தனக்கென்று கட்சிக்கு பிரத்யேக நலன் எதுவும் இல்லை. எந்த தனி நபர் நலனையோ, அதிகார குழுக்களின் நலனையோ, உயர் நிலை குழுக்களையோ  கட்சி ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. சீன மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கவோ, மக்களை கட்சிக்கு எதிராக திருப்பவோ செய்யப்படும் முயற்சிகள் கட்டாயம் தோல்வியுறும். இத்தகைய நிலை ஏற்பட 9 கோடியே ஐம்பது லட்சம் கட்சி உறுப்பினர்களோ 140 கோடிக்கும் அதிகமான சீன மக்களோ இடம் அளிக்க மாட்டார்கள்.

நம் முன் உள்ள பயணத்தில் மக்களை நெருக்கமாக சார்ந்து நின்று  வரலாறு படைக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்ற கட்சியின் அடிப்படை நோக்கத்தை உயர்த்தி பிடிப்போம். மக்களுடன் உறுதியாக நிற்போம். கட்சியின் வெகு மக்கள் நிலைபாட்டை (mass line) அமலாக்குவோம். மக்களின் ஆக்க திறனை மதிப்போம். மக்களை மையப்படுத்தும் வளர்ச்சி என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவோம். முழுமையான மக்கள் ஜனநாயகத்தை அமலாக்குவோம். சமூக நீதி மற்றும் நியாயத்தை பாதுகாப்போம். வளர்ச்சியில் உள்ள சமநிலையை பாதிக்கும் அம்சங்களை, குறைபாடுகளை  களைவோம். மக்களுக்கு மிகுந்த கவலை தரும் அவசர நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். இதன்மூலம் முழுமையான மானுட வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பொது வளம்ஆகிய இலக்குகளை அடைவதில் கூடுதலான, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்போம்..

சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்

நமது கட்சியும் நாடும், மார்க்சியத்தை வழிகாட்டும் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு கட்டப்பட்டவை; அது நமது கட்சியின், நாம் தூக்கிப்பிடிக்கும் பதாகையின் ஆன்மாவாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளிலிருந்து நிதர்சனத்தைத் தேடிக் கண்டடையும் கொள்கையையும் உயர்த்திப் பிடித்து இயங்குகிறது.

சீன நிலைமையின் யதார்த்தத்தில் இன்றைய போக்குகளைக் கூர்ந்து நோக்கி, வரலாற்றில் ஒரு முக்கிய முன்முயற்சி எடுத்து அதனைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அதன்மூலம், தொடர்ந்து மார்க்சியத்தை இன்றைய காலகட்டத்தில் சீனாவின் தேவைகளுக்கேற்பப் பொருத்தி, சமூகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் சீன மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க நம்மால் முடிந்துள்ளது. அடிப்படையில், சீன சூழலுக்கு பொருத்துவதற்கான சோசலிசத்தின் வலிமையும், அதை செயல்படுத்துவதற்கான கட்சியின் திறமையும், மார்க்சியம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியது என்ற உண்மையினால்  சாத்தியமாகியுள்ளன.

தொடரும் நமது பயணத்தில் மார்க்சிய-லெனினிய தத்துவம், மாவோவின் சிந்தனைகள், டெங் ஜியோபிங்கின் கோட்பாடுகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட மேம்பட்ட உற்பத்தித்திறன், மேம்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றிற்கான ‘மூன்று கொள்கைகள்’, வளர்ச்சிக்கான அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும். புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுக்கு ஏற்ப சோசலிசம் பற்றிய சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவின் திட்டவட்டமான நிலைமைகள் மற்றும் அதன் பாரம்பர்ய  பண்பாட்டின் சிறப்பு அம்சங்களுக்கு  ஏற்ப, மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கையாளவேண்டும். சமகாலப் போக்குகளை கவனித்து, புரிந்துகொண்டு, காலத்திற்கேற்ப வழிநடத்தவும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி, சமகால சீனாவிற்கும்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்குமான மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுப்போம்.

பல சமகாலப் பண்புகளுடனான பெரிய போராட்டத்தை நடத்திட வேண்டும்.

போராடும் மனவுறுதியும், வெற்றிக்கான துணிவும், நம் கட்சியை வெல்லற்கரியதாக ஆக்கியுள்ளது. நம் உயரிய கனவை நனவாக்க, கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. தேசிய மறுமலர்ச்சி என்ற நமது இலக்கை சாத்தியமாக்கிட, இன்று நாம் முன்னெப்போதையும் விட ஒற்றுமையுடனும், திறமையுடனும், நம்பிக்கையுடனும் உள்ளோம். ஆனால், அதை அடைய மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன்னேற்றப் பாதையில், அமைதியான காலங்களில் கூட, மறைந்திருக்கக்  கூடிய  ஆபத்தினையும்  எதிர்நோக்கும் கூரிய விழிப்புணர்வு தேவை. தேசப் பாதுகாப்புக்கு, அமைதி மற்றும் பாதுகாப்புக்கான  வழிமுறைகளை  சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நூறாண்டுக்கு ஒரு முறை நிகழும் மாற்றங்கள் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் சூழலில், நம் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இம்மாற்றத்தினால் எழும் புதிய அம்சங்கள் மற்றும் தேவைகள், சீன சமுதாயத்தில் ஏற்படும் முக்கியமான முரண்பாடுகள், சிக்கலான உலகச் சூழலிலிருந்து எழும் புதிய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, புதிய பாதைகளை உருவாக்குவதிலும், சவால்களையும், இடர்பாடுகளையும் தாண்டிச் செல்லத் தேவையான பாலங்களை அமைப்பதிலும் நாம் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும்.

சீன மக்களின் மகத்தான ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்

கடந்த ஒரு நூற்றாண்டு கால போராட்ட வரலாற்றில், ஐக்கிய முன்னணியை முன்னிலைப்படுத்தி வந்துள்ளோம். எல்லாக் காலங்களிலும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளோம். திரட்டவாய்ப்புள்ள அனைத்து சாதகமான காரணிகளையும் திரட்டியுள்ளோம். மிகவும் விரிவான ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். கூட்டு முயற்சிக்கான அனைத்து வலுவையும் இணைத்துள்ளோம். தேச மறுமலர்ச்சி எனும் நோக்கத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒவ்வொரு சீனரையும் அணிதிரட்ட இந்த தேச பக்த ஐக்கிய முன்னணி ஒரு முக்கியமான கருவியாக  உள்ளது. 

நாம் பயணிக்கும் இந்தப் பாதையில், நம்மிடையே உள்ள பொதுவான தன்மைகள் மற்றும் பன்முகத் தன்மைகளுக்கிடையே சமநிலையைப் பேணிக் காத்து, ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். நம் கோட்பாடு மற்றும் அரசியல் வழிகாட்டுதலை வலுப்படுத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்தை உருவாக்கி, அறிவுத்திறன்  மிகுந்தவர்களை ஒன்றிணைத்து, ஒருமித்த செயல்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்தி, அனைவரின் நலன்களும் ஒன்றிணைவதை நோக்கி பயணிக்க  வேண்டும். இதன் மூலமே நாம் அனைத்து சீன மக்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒரே இலக்கை நோக்கி செலுத்த இயலும். தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு மாபெரும் சக்தியாக இணைய முடியும்.

கட்சி கட்டும் புதிய பெரிய திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு என்னவெனில், தன்னை தானே  சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும்  அதன் துணிவே ஆகும். பல சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான போதிலும் கட்சி துடிப்புடன் செயலாற்றக் காரணம் இந்த கடுமையான சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்குமே ஆகும். வரலாற்றில் பல்வேறு ஆழமான மாற்றங்களையும் அபாயங்களையும் சந்தித்தபோதும், உலகளாவிய ஆழமான மாற்றங்கள் நிகழும் பொழுதும், நாட்டிலும் பன்னாட்டு களத்திலும் பல சவால்களை எதிர்கொண்டு  தேசத்தின் முதுகெலும்பாக எப்போதும் முன்னணியில் நிற்க முடிந்தது.

நம் முன்னேற்றப் பாதையில் ‘நல்ல எஃகு செய்ய நல்ல கொல்லன் தேவை’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்கும் முடிவற்றுத் தொடர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வு நமக்குத் தேவை. கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதை நம் முக்கியக் கொள்கையாக செயல்படுத்த வேண்டும். கட்சியின் அமைப்பு முறையை மேலும் கறார்த்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும். நேர்மையான, திறமை வாய்ந்த கட்சி அலுவலர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டு ஒழுக்க நெறிகளை மேம்படுத்தவும், நாணயத்துடன் செயலாற்றவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், கட்சியின் தரத்தைக் குலைக்கும் எந்தத் தீங்கினையும் களையவும் உறுதியுடன் செயல்பட வேண்டும். புதிய யுகத்தில், சீனப் பண்புகளுடனான சோசலிசத்தை நிலை நாட்ட, கட்சி தனது உயர் பண்பையும், தன்மையையும் சாராம்சத்தையும் பாதுகாத்து நாட்டின் அரசியல் மையத்தில், முக்கிய தலைமை இடத்தில் இருந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தோழர்களே, நண்பர்களே,

சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவற்றைப் பொறுத்தவரை, ஒரு நாடு- இரு நிர்வாக அமைப்புகள் என்ற கொள்கையின் உள்ளடக்கத்திற்கு உண்மையாக செயல்படுவோம். அம்மக்கள் பெருமளவு  தன்னாட்சி அதிகாரம் பெற்று தங்களது பகுதிகளைத் தாங்களே நிர்வகிப்பர். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் அமலாக்க அமைப்புகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வரம்பிற்குள் இருக்கும். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இவ்விரண்டு சிறப்புப் பகுதிகளிலும் நீடித்த வளர்ச்சியையும் சமூக நிலைத்தன்மையையும் உறுதி செய்வோம்.

தைவான் பிரச்சனையைத் தீர்த்து ஒருங்கிணந்த சீனாவை மீட்டுருவாக்கம் செய்வது என்ற வரலாற்றுப் பணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் உள்ளது. இது ஒவ்வொரு சீனக் குடிமக்களின் கனவாகவும் உள்ளது. ஒரே சீனம் என்ற 1992இல் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை உயர்த்திப் பிடித்து அமைதியான வழியில் தேசிய ஒருங்கிணைப்பை முன்னெடுப்போம். தைவான் ஜலசந்தியின் இருபுறமும் வாழும் தோழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் இணைந்து ஒற்றுமையாக முன்னேற வேண்டும். “சுதந்திரத் தைவான்” முயற்சியை உறுதியாகத் தோற்கடித்து, ஒரே சீனத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான  சீனமக்களின் மனஉறுதியையும் திறனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தோழர்களே! நண்பர்களே!

எதிர்காலம் இளைஞர்களின் கைளில் உள்ளது. நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன் சீனா இருளில் மூழ்கியிருந்த ஆண்டுகளில் முன்னேற்ற சிந்தனையுடைய இளைஞர்கள் குழு ஒன்று  மார்க்சியம் எனும் ஒளிவிளக்கை உயர்த்திப் பிடித்து, அந்த ஒளியில்  சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான வழியைத் தேடியது. அன்றிலிருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகையின் கீழ், தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இளமை பருவத்தை அர்ப்பணித்து வருகின்றனர். நாட்டின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

இப்புதிய யுகத்தில் நம் இளைஞர்கள், அவர்கள் சீன மக்கள் என்பதில் மேலும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டு நாட்டின் மறுமலர்ச்சிக்கு  பங்களிப்பதை  தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், இளைஞர்கள் மீதான நம் காலத்தின், கட்சியின், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறாண்டுகளுக்கு முன், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது, வெறும் 50 பேர்களுக்கு சிறிது அதிக அளவிலேயே உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இன்று 140 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் சீனத்தில், 9.5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியாகவும் சர்வதேச அளவில் மிகுந்த செல்வாக்குடையதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி  விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன், சீனா உலகின் கண்களில் வீழ்ச்சியடைந்து உதிர்ந்து கொண்டிருந்த ஒரு நாடாக இருந்தது. இன்று, அது தடுக்கமுடியாத வேகத்தில் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாக காட்சியளிக்கிறது. கடந்த நூற்றாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, நம் மக்களின் சார்பாக பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்று அது அடுத்த நூற்றாண்டுக்கான இலக்கை அடையும் புதிய பயணத்தில், மக்களை அணிதிரட்டி தலைமையேற்று வழிநடத்துகிறது.

கட்சி உறுப்பினர்களே,

நம் கட்சியின் ஸ்தாபன இலக்கிற்கு உண்மையாக இருந்து, உங்கள் லட்சியங்கள்  மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்கவும் உங்கள் ஒவ்வொருவரையும் மத்தியக் கமிட்டி கேட்டுக் கொள்கிறது.  இன்பத்திலும் துன்பத்திலும்  மக்களை விட்டு விலகாது, அவர்கள் மீதான பரிவுடன், தொடர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களுடன் இணைந்து நின்று அயராது பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியின் நோக்கத்திற்காக செயல்படுவதன் மூலம் நீங்கள் கட்சிக்கும் மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு நூறாண்டுகளான நிலையில், இன்றும் கட்சி அதே துடிப்புடன் செயல்படுகிறது. சீன தேசத்திற்கு நீடித்த பெருமை சேர்க்க, அதே உறுதியுடன் திகழ்கிறது. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, முன்னால் நாம் செல்லவேண்டிய பயணத்தைக் கண்ணுறும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ், அனைத்து  இனக்குழு மக்களின் ஒற்றுமை காத்து, நாம் மேலும் பல உயரங்களைத் தொடுவது உறுதி. நாம் அனைத்து வகையிலும் உன்னதமான நவீன சோசலிச தேசத்தைக் கட்டியெழுப்பி, சீன மக்களின் பெரும் கனவான தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவோம்.

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, சரியான கட்சி!

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, வீரமிக்க மக்கள்!

தமிழில்: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

இரா.சிந்தன்

உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.

கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,  குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும்  கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும்.  மேலும் இது சோசலிசத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்:

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் பரவியது. முதல் உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத் குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் ”உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற  அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

உலகில் முதன் முறையாக  மையப்படுத்தப்பட்ட, பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தில் அமைந்த சோசலிச அரசாங்கமே ஆகும். ஊரக பகுதிகளுக்கும் அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிகப்பெரும் சாதனை என ஸ்பானிஷ் ஃப்ளூ பரவல் பற்றிய ‘பேல் ரைடர்’ என்ற புத்தகத்தில் லாரா ஸ்பிண்டி என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அனைத்திலும் முதன்மையானது மனிதர்களின் நலவாழ்வுதான் என்ற  அணுகுமுறைதான் முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்து சோசலிசத்தை வேறுபடுத்துகிறது. கியூபா மருத்துவத்துறையில் ஆற்றியிருக்கும் மகத்தான சாதனைகளை நாம் அறிவோம். சீனாவின் கள சூழல் வேறுபட்ட ஒன்று. கொரோனா நோய் எதிர்ப்பில் அவர்களுடைய போராட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

சீனாவில் பொது சுகாதாரம்:

1949 இல் மாவோவின் தலைமையில் மக்கள்சீன புரட்சி அரசாங்கம் அமைந்தது. 1950 நடைபெற்ற தேசிய சுகாதார மாநாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இப்போதும் கவனிக்கத் தக்கவை. 

1) விவசாயிகள், தொழிலாளர்களாகிய வெகுமக்கள் நலனுக்கு பணியாற்றுவதே சுகாதாரப் பணியாளர்களின் முதன்மையான கடமை. 
2) நோய்களை முன் தடுப்பதுதான் முதன்மை இலக்கு.
3) நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
4) மருத்துவ பணியாளர்களுடைய செயலூக்கம் மிக்க பங்களிப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

இப்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் சீனா ஒரு வளரும் நாடுதான். எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊரகங்கள் மற்றும் நகரங்களுக்கான இடைவெளியும் அதிகமாக உள்ளன. சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் உள்ளார்கள். 2.7 செவிலியர்கள் உள்ளனர். 4.34 படுக்கைகள் உள்ளன. இதிலிருந்தே சீனாவின் கட்டமைப்பு இன்னும் மேம்பட வேண்டியிருப்பதை அறிய முடியும்.

சமீபத்தில் புதிய சகாப்தத்தில் சீன சமூகத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. முக்கிய முரண்பாட்டை அடையாளமும் கண்டது. சீன மக்களிடையே பொருளாயத தேவைகள் அதிகரித்துள்ளன, உணவு, உறைவிடம் என்பதோடு கூடுதலான புதிய தேவைகள் உருவாகியுள்ளன, நலவாழ்வுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பண்பாட்டு வாழ்க்கையில் புதிய தேவைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம் சமனற்ற, போதாக்குறையான வளர்ச்சியோடு முரண்படுகின்றன என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கணிப்பாகும். இதனை மனதில் கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

கொரோனா எதிர்ப்பு மக்கள் யுத்தம்:

சீனாவின் ஊகான் நகரத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவியிருந்தது. அந்த நகரத்தில் மருத்துவமனை, மருத்துவர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதே வேகத்தில் நோய் பரவினால் பொது சுகாதார கட்டமைப்பே பெரும் சுமைக்கு ஆளாகி, சமூக நெருக்கடியாகிவிடும்.

ஜனவரி 7 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை நிலைக்குழு கூடியது. நோய்த்தொற்று நிலைமைகளை அது ஆய்வு செய்தது. உடனடியாகவும், அதிவிரைவாகவும் செயல்படுவதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.  அப்போதிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஒரு மக்கள் யுத்தமாக வழிநடத்தியது. 

“புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் நடத்துகின்ற ஒன்றாகும். மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே நாம் அந்த போரினை நடத்த முடியும், மக்களை சார்ந்திருப்பதன் மூலமே அந்த போரை முன்னெடுக்க முடியும்” என்கிறார் தோழர் மாவோ. இந்த போராட்டம் நீண்ட ஒன்று, உத்திகளை மாற்றியமைத்து, உள்ளூர் நிலைமைகளை சரியாக கணக்கிட்டு மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சீனாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி அந்த கருத்தாக்கத்தின் நல்ல உதாரணமாகும். 

மக்கள் யுத்த கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் ஜி ஜின்பிங் வலியுறுத்திவந்த கருத்து. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அந்த கருத்தாக்கம் பயன்பட்டது. மக்கள் நலவாழ்வே முதன்மையானது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வளங்களும் இந்த போராட்டத்திற்காக திருப்பிவிடப்பட்டன. சீன குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங், ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டத்தை வழிநடத்தினார். சீன பிரதமர் லி கெகியாங் கொரோனா எதிர்ப்பு குழுவிற்கு தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.

இந்த ’யுத்தம்’ இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது மருத்துவமனைகள். அங்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது முக்கியம். இரண்டாவது நோய் பரவல் தடுப்பு  நோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்துதல். அதற்கு தேவையான வழிமுறைகளை வகுத்து விரைவாக செயல்படுவது.

ஜனவரி 23 ஆம் தேதி ஊகான் நகரமும் ஹுபே மாகாணமும் உலகம் கண்டிராத மிகப்பெரும் ஊரடங்கினை தொடங்கியிருந்தன. நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் இதர வளங்களை திரட்டி அங்கே அனுப்பினார்கள். 330 மருத்துவக் குழுக்களும் 41600 மருத்துவ பணியாளர்களும் ஊகானில் குவிக்கப்பட்டார்கள். 

தொற்றுநோய் தடுப்பு சிறப்புக் குழுவினர் 1800 பேர்  ஊகானிற்கு அனுப்பப்பட்டார்கள்.  ஐந்தைந்து பேர் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  

முதலில் ஊகானிலும் அதை தொடர்ந்து சீனா முழுவதும் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே குறிப்பிடத்தக்கன. தொற்றாளர்களின் தொடர்புகளை தடமறிய பழைய முறைகளுடன் சேர்த்து டிஜிட்டல் முறைகளும் பின்பற்றப்பட்டன. தொற்றாளர்கள் பயணித்த இடங்களுக்கு மற்றவர்கள் செல்லாமல் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பகிரப்பட்டது. 3 வார காலத்தில் 14 கோடி முறை இதற்காக இணையதள வசதி பயன்படுத்தப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த நாட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜியாங் போல சில பகுதிகளில் சாலையில் சிக்னல் வைப்பது போல உடல்நிலையை பரிசீலித்து அடையாளம் காட்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சீனாதான் உலகிலேயே மிக அதிகமான இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடு. அதன் காரணமாக அரசின் சுகாதார கண்காணிப்பு வசதிகளை இணையம் வழியாக சுமார் 90 கோடிப்பேர் பயன்படுத்த முடிந்துள்ளது. 

மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்காக 13 மாகாணங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் வந்தனர்.  ஒரு நாளைக்கு 1220 டன்கள் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் தகுதி படிப்படியாக உயர்த்தப்பட்டது.

ஷாங்காய் நகரத்திலிருந்து ஊகானுக்கு சென்று செவிலியர் பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்ட செவிலியர் ஹு நானா தனது கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “எல்லோரும் நலமாக இருந்தால் மட்டுமே எங்களின் சிறு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லும் முடிவை எடுத்தேன். என்னுடைய தேசம் நடத்துகிற போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு அவசியம். முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே எனக்கு ஏதும் அச்சமில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் என் திறமைகளையும் கொண்டு இந்த போராட்டத்திற்கு உதவி செய்வதென முடிவு செய்தேன்.

முதல் கட்ட போராட்டம் அடுத்தடுத்த நிலைகளை எட்டியது. ஜி ஜின்பிங் இவ்வாறு விவரிக்கிறார் “தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவுதலை  கட்டுப்படுத்த ஒருமாதம் எடுத்தது, தினசரி கண்டறியப்படும் உள்நாட்டு தொற்று எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில்தான் ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஊகான் நகரம் அமைந்துள்ள ஹுபெ மாகாணத்தில் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்க மூன்றாவது மாதம் ஆகியது”.

ஏப்ரல் 26 ஆம் தேதி ஊகானில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகியது. ஹுபே மாகாணத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள் என்பதையும், இதில் 3 ஆயிரத்து 600 பேர் 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் ஆவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் வேதனை தரும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் 46 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்கள். முதல் முனையில் போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இரண்டாவது முனை எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை சீனா அறிந்தே வைத்திருக்கிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

நோயுடன் ஒரு சதுரங்கம்:

தொற்றுநோய் தடுப்பு போராட்டத்தை விவரிக்கும்போது அதனை ஒரு சதுரங்க விளையாட்டாக ஒப்பிட்டார் ஜி ஜின்பிங். சீன தேசமே அந்த சதுரங்கத்தை ஆடியது.  மருத்துவப் பணியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் ஒரு அணியாக நின்றார்கள் எனில், அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிச அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் பின்பலமாக நின்றார்கள். 90களுக்கு பிறகு பிறந்த இளைஞர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

அனைவருக்கும் இலவச சிகிச்சை:

ஊகான் நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே, பணம் இல்லாத காரணத்தால் குடிமக்களின் ஒருவருக்கும் கூட கொரோனா பரிசோதனையோ அல்லது சிகிச்சையோ மறுக்கப்படக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது.

சீன மருத்துவ காப்பீட்டு ஆணையத்தின் கணக்கீட்டின் படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உள்நோயாளிகளுக்கான செலவு தலா 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கான செலவு 15 லட்சத்தை தாண்டியது.  70 வயதாகிய கொரோனா நோயாளி ஒருவருக்கு 3 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து தரப்பட்டது, அவருக்கு எக்மோ கருவி இரு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை குணப்படுத்துவதற்கான செலவு சுமார் 1 கோடியே 40 லட்சமாக ஆகியது. 

இந்த செலவுகளில் ஒரு பகுதி இன்சூரன்ஸ் மூலமாகவும், பெரும்பகுதி அரசு நிதியாகவும் ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் செயல்பட்ட அத்தியாவசிய நிறுவனங்களில் பணியாளர்களுடைய பாதுகாப்பை அரசே உறுதி செய்தது. தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நிதி உதவியை அரசு மேற்கொண்டது. 

அதிவிரைவான அறிவியல் ஆய்வுகள்:

தொற்று நோய் தடுப்புக்காக அமைக்கப்பட்ட்ட குழுக்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது பல துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவாகும். உலகம் பல தொற்றுநோய்களை எதிர்கொண்டிருக்கிறது காலரா, பிளேக், சின்னம்மை மற்றும் தொழுநோய் ஆகியவை பரவுவதை அறிந்து கொள்ளவும், தடுப்பதற்கும் நீண்டகால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட பெருந்தொற்றாகிய ஹெச் 1 என் 1  வைரசை அறிவதற்கு ஒருமாத கால ஆய்வு தேவைப்பட்டது. கொரோனா வைரசின் ஜீன் சீக்குவன்ஸ் ஒரு வார காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதும், அது உலக நாடுகளோடு பகிரப்பட்டதும் மருத்துவத் துறைக்கு பெரும் உதவியாக அமைந்தது. 

வைரசின் பாதிப்புகள் அது பரவும் விதம் குறித்து அறிந்து தொற்றுநோய் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டன. சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது. பலன் கொடுக்கும் மருந்துகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பெறப்பட்டன. 16 நாட்களில் டெஸ்டிங் கிட்டுகள் உருவாக்கப்பட்டது, அவைகளை போதுமான எண்ணிக்கையில் தயாரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

அறிவியல் நிபுணர்களுக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அவர்கள் சீன மக்களிடையே தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்கள். தொலைபேசி வழி கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். இவ்வாறு வதந்திகளுக்கு எதிரான அறிவியல் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்தது.

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு:

சீனாவின் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் செய்த பங்களிப்பு அப்போதே பல செய்திகளில் வெளிவந்தது. அலிபாபா, டென்செண்ட், பைடூ, சென்ஸ் டைம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கின. இணையதள நேரலை சேவைகளின் மூலம் பள்ளி வகுப்புகள் தொடரப்பட்டன. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொற்றாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்திற்காக  ரோபோட்டுகளை பயன்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களுடைய மாபெரும் பங்களிப்பு இல்லாமல் கொரோனா போராட்டத்தை அவர்கள் நடத்தியிருக்க முடியாது.

சீன அரசு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூடுதலாக குறிப்பிட வேண்டும்.   சாளரம் அமைப்பதற்கு 10 நொடிகள்,  சுவர் எழுப்ப 2நிமிடங்கள் என அதிவேகமாக,   இரவும் பகலும் உழைத்து மருத்துவமனைகளை கட்டியது சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களே ஆகும்.  4000 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.  இந்த கட்டுமான பணிகளுக்கு தேவையான மின்சாரம், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பினை அரசு நிறுவனங்களே வழங்கின.

மருத்துவ உபகரண உற்பத்தியை அரசு நிறுவனங்களின் விரைவான உதவியின் காரணமாகவே உடனடியாக அதிகரிக்க முடிந்தது.தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களான கவச உடைகள் முதல் அனைத்து உபகரணங்களின் உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தானிய உற்பத்தி, எண்ணெய், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்தன. சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. விலையை உயர்த்தி விற்ற வணிகர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது, செயற்கை விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

சீன அரசின் எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் கழகம், சீன தானிய சேமிப்புக் குழுமம், சீன உப்பு தொழிற்சாலை அனைத்தும் தங்கள் வழங்கலை அதிகப்படுத்தின. சீனாவின் வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள் முயற்சியெடுத்து விவசாய கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு காய் கனிகள் மற்றும் தேவையான பொருட்கள் சரியான விலையில் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அதிலும் குறிப்பாக மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி அன்று சீனாவின் ஒரு நாளில் 10 ஆயிரம் சோடி கருவிகளை தயாரிக்க முடிந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி அவர்களின் தயாரிப்பு வேகம் ஒரு நாளைக்கு 2 லட்சத்தை தாண்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி என்ற அளவில்  7 லட்சத்து 73 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை சீன அரசு தயாரித்தது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு நாளில் 17 லட்சம் என்ற அளவில் அதன் எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 42 லட்சமாகியது. தொழிற்சாலை நிர்வாகங்களை மருத்துவ உபகரண தயாரிப்பை நோக்கி உந்தித் தள்ளியது அரசு நிர்வாகம். ஆம்புலன்சு வாகனங்கள், வெண்டிலேட்டர்கள், இ.சி.ஜி இயந்திரங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்டு தேவையான அனைத்து கருவிகளும் உள்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முன்னணிப் படையாக கம்யூனிஸ்டுகள்:

மார்க்சியவாதிகள் என்போர் ஆரூடம் சொல்பவர்கள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் மனதில் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கலையே அவர்களால் உருவாக்க முடியும், இயந்திர கதியாக ஒரு காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றார் மாவோ. சீனாவின் 46 லட்சம் கட்சி கிளைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இயக்கவியல் பார்வையோடு வழிநடத்தினார்கள்.

மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ்லைனை நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் அனுபவம் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி.  கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள கமிட்டிகள் உடனடியாக ஒரு அவசர நிலையை எதிர்கொள்ள தயாரானார்கள். தங்களிடமுள்ள அனைத்து வளங்களையும் திரட்டினார்கள்.  மக்களுக்கு தலைமையேற்க வேண்டும், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்பாடுகளை பட்டை தீட்ட வேண்டும். 

யாரும் செய்வதற்கு தயங்கும் ஒரு பணியாக இருந்தால் அதில் கம்யூனிஸ்டுகளே முதல் ஆளாக ஈடுபட வேண்டும். தயக்கம் என்பது ஒருபோதும் கூடாது என்றது  கட்சி.

1) முன் கை எடு,
2) அறிவியல் அடிப்படையில் நோயின் தன்மையை அறிந்து கொண்டு செயல்படு
3)  திட்டமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்க, ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதியாகவும், உள்ளூர் நிலைமைகளை மனதில் கொண்டும் திட்டம் இருக்க வேண்டும்,
4) திட்டமிட்ட பணிகளை அமைப்பின் வலிமையைக் கொண்டு செயலாக்குக. நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி செயல்பாட்டினை கூர்மைப்படுத்துக என வழிகாட்டியது.

ஜி ஜின்பிங், “பொத்தாம் பொதுவான உத்தரவுகளைக் கொண்டோ, அதிகாரத்துவத்தைக் கொண்டோ அல்லது பெயருக்கு வேலை செய்வதாலோஇந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.” என தெளிவாகவே குறிப்பிட்டார். உத்தரவுகளை கேட்டு வேலை செய்யும் பணியாளராக அல்ல, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படும் தளபதியாக செயல்பட்டார்கள் முரண்பாடுகளை ஆய்வு செய்து முறையாக கையாண்டார்கள்.

மருத்துவர், செவிலியர் என மருத்துவ சிகிச்சை முனையில் பணியாற்றிய குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன் நின்றார்கள். உதாரணமாக ஹுபே மாகாணத்திற்கு வந்த சீன ராணுவ மருத்துவக் குழுவினர் 450 பேரிலும் 60 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

பீக்கிங் பல்கலைகழகத்திலிருந்து மட்டும் ஊகானுக்கு 405 மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.  அதில் 171 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். “ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் 5 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தது. ” வாங் பென் என்ற மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ஊகானில் ஒவ்வொரு நாளும் மக்கள் எங்களை அன்பில் நனைத்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததற்கான பொருளை இந்த போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது”.

ஹெய்லாங்ஜியாங் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தளர்வோடு நடந்து கொண்டார்கள். உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டை கூடுதலாக்கினார்கள். மேலும் களத்தில் ஒவ்வொரு வீடாக சென்று உதவி செய்த கட்சி தோழர்களின் பணியை ஒழுக்க ஆய்வு மற்றும் மேற்பார்வை குழு கண்காணித்தது. இந்தக் குழுவுக்கென தனியாக ஒரு பத்திரிக்கை இயங்குகிறது நோய் தடுப்புக் குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய குழுக்களின் பங்களிப்பு:

மாகாண அரசுகளும், உள்ளாட்சிகளும் அவரவர் சூழல் குறித்து ஆய்வு செய்து படைப்பாக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பை உறுதி செய்யும்  6 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய குழுக்கள் சீனா முழுவதும் உள்ளன. இவையே சீன அதிகாரப்பரவல் கட்டமைப்பின் கடைசி கண்ணிகள். நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்தக் குழுக்களின் 40 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு சமுதாய குழு உறுப்பினரும் 350 பேரை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தீவிரமாக அமலாக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உணவுப்பொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் பணியாற்றினார்கள்.  அதாவது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான பணியில் இவர்களின் உழைப்பு மிகப்பெரும் பங்கு வகித்தது.

கரடுமுரடான சாலைகளில், பாதுகாப்பில்லாத பகுதிகளில் பயணித்து ஒவ்வொரு குடிமகனையும் அவர்கள் சந்தித்தார்கள். குடிமக்கள் நல அமைச்சகத்தின் தகவலின்படி இந்த பணியாளர்களில் 53 பேர் பணியின்போது மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 92.5 சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் போய் என்ற மாவட்டத்தில் நடந்தவைகளை சென் சென் என்பவர் பீப்பிள்ஸ் டெய்லி இதழில் எழுதியுள்ளார்.

மாகாணத்தின் திறன் வாய்ந்த தோழர்களை தேர்வு செய்து முன்னணிக்கு அனுப்பினார்கள்.  மொத்தம் 523 பேர். அவர்களின் பணி ஆளுக்கு ஒரு குழுவை வழி நடத்துவதாகும்.

இந்த குழுக்களின் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றார்கள். தொய்வாக இருந்தால் நீல பட்டியலில் இடம்பெற்றார்கள். போய் மாவட்டத்தில் 76 பேர் சிவப்பு பட்டியலிலும், 2 பேர் நீல பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.  முன்னணியில் பணியாற்றும் குழுக்களுக்கு சரியான நேரத்தில் உணவு, குடிநீர் கொடுப்பது. ஆட்களை மாற்றிவிடுவது. முக கவசம், கை உறைகள் கிடைக்கச் செய்வது தனியாக ஒரு குழுவால் கவனிக்கப்பட்டது. இந்த பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி உளவியல் ஆலோசனைகளும் உறுதி செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் வழியே ஏராளமான புதிய உறுப்பினர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இளைஞர்களின் பெரும் பங்கேற்பு:

கொரோனா நோய் தடுப்பு பணிகளின் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடத் தூண்டியது சீன அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  1990 களுக்கு பின் பிறந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆண் செவிலியரான ஜியான் யாங், “நாங்கள் இளைஞர்கள், நாங்களே முன் வரிசையில் நிற்போம்” என உற்சாகமாக குறிப்பிடுகிறார்.  இளைஞர்களின் பங்கு தனித்து குறிப்பிட வேண்டிய அளவில் தனிச்சிறப்பானதாக இருந்தது.

இப்போது சீன ஊடகங்களில் 90களுக்கு பின் பிறந்தோர் என்பதே அவர்களை குறிப்பிட பொதுவான பெயராகிப்போனது. ஊகானில் குவிக்கப்பட்ட மருத்துவப் படையணியில் 12 ஆயிரம் பேர் 90களுக்கு பின் பிறந்தவர்கள் ஆவர். 

ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் மரணிக்க நேர்ந்தால் வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக என்னுடைய உடல் பயன்படும் என லி ஹு என்ற பெண் செவிலியர் தெரிவித்தார்.  அவர் 1995க்கு பின் பிறந்தவர்.

95 க்கு பின் பிறந்த காவல் அதிகாரியான யாங் குயுச்செங். தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.  பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரச் செல்லும்போது நாய்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. சில காவலர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தை போக்குவதுடன் அவர்களுடன் நிதானமாக உரையாடியே மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வேண்டும் என்கிறார் அவர். இந்தப் போராட்டத்தின் போக்கில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

வாகனங்களை பரிசோதிக்கும் பணியில் ஈட்டுபட்ட்டவர் சோவ் போஜியான். “தியாஞ்சின் பகுதியை கடந்த ஒவ்வொரு ஓட்டுனரையும் பரிசோதித்தேன். அவருடைய உடல்நலனை விசாரித்து பதிவு செய்தேன். கைகள் குளிரில் உறைந்தன. எனினும் ஒருவரைக் கூட விசாரிக்காமல் விடவில்லை.” என்கிறார் அவர். 

கூட்டுறவு மற்றும் பகிர்மான அலுவலகத்தின் பணியாளரான லியூ போ, 40 நாட்கள் முன்னணி பணிகளை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்குவது அவருடைய பணி. 10 விதமான பொருட்களை தினமும் 550 செட்டுகள் வாங்கி அவற்றை தனிமைப்படுத்தல் அறைகளில் வைக்க வேண்டும். 40 நாட்கள் இடைவெளியில்லாமல் செய்து முடித்துள்ளார் அந்த இளைஞர். 

இவ்வாறு கொரோனா நோய் தடுப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை சீனா சாதித்திருக்கிறது. ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடுகளே அவர்களை காத்துள்ளன.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

சில படிப்பினைகள்:

அவசரகாலத்தில் முடிவுகளை உள்ளூர் அளவிலேயே மேற்கொள்வதற்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டுவருகிறது.  உயர்மட்ட நிர்வாகங்களின் முடிவுகளுக்காக காத்திருந்து அதனால் கால விரையமாதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதன் சிரமங்களை பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும்பொது சுகாதாரம் மற்றும் காப்பீட்டுக்கான சட்டங்களின் செய்ய வேண்டிய திருத்தங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள், உயிரி பாதுகாப்பு என்பதை தேச பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள். வன உயிரிகளை பாதுகாப்பது மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை சீர்திருத்துவது மற்றும் நவீனப்படுத்துவது என்பதாக அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறையை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பரவல் எங்கிருந்து வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமே இந்த போராட்டத்தில் முடிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். 

பொருளாதார தாக்கம் குறித்து:

பொது சுகாதாரத்திற்கும், உற்பத்திக்கும் இடையிலான இயக்கவியல் உறவினை புரிந்து கொண்டவர்கள் மார்க்சியவாதிகள். உற்பத்தியில் தற்காலிக முடக்கம் இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். உலக முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும் முன்பே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அது நோய் பரவலில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. சீனாவை பொருத்தமட்டில் தற்காலிக முடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சோசலிச கட்டமைப்பால் கிடைத்த பெரும் நன்மை ஆகும்.

இருவகையான பொருளாதார திட்டங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிர் காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் செய்யவேண்டிய உதவிகள். இரண்டாவது ஊரடங்கு முடிந்த பிறகாக தேவைப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள்.

ஊரடங்கு காலத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கோரி விண்ணப்பிப்போருக்கு 6 மாதங்களுக்கு ஊதிய காப்பீடு மற்றும் கூடுதலாக விலைவாசி மானியம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் நிறுவனங்கள் இக்காலத்தில் வேலையில்லாக்கால இன்சூரன்ஸ் தொகை பெற்றுள்ளன. அவற்றில் பணியாற்றும் 4கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் உதவிபெற்றுள்ளார்கள். 

தற்காலிக உதவிக்காக விண்ணப்பிப்போருக்கு தற்காலிக உதவி அறிவிக்கப்பட்டது அவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி அழைப்பு அறிவித்து அதன் மூலம் உதவியை கொண்டு சேர்த்தார்கள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தாருக்கு பண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு நிதியமைச்சகத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 15 ஆயிரத்து 600 கோடி யுவான்கள் (ரூபாயில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடிகள்) ஒதுக்கப்பட்டதாக அந்த துறையின் துணை இயக்குனர் வாங் ஜிக்ஜியாங் தெரிவிக்கிறார்.  இது சீனாவின் மத்திய அரசு ஒதுக்கிய தொகையாகும். மாகாணங்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அவர்கள் பங்கும் சேர்த்து உதவிகள் தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மக்களுக்கு நேரடி நிதி உதவி செய்கிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் குவாங்க்டாங் மாகாணத்தில் பைஷலோங் என்ற கிராம கமிட்டி தனது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் யுவான்கள் (குழந்தைகள், சிறுவர்கள் உட்பட)  வழங்குவதாக அறிவித்தது. விவசாய வேலைகள் முடங்கியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கடைவீதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு கூப்பன்களை உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனர். 

நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு தவிர உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியும், மானியக் கடனும் தரப்பட்டது. சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டங்கள்:

2008 ஆம் ஆண்டு எதிர்கொண்ட உலக பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய பாதிப்பை இப்போது எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் (2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி) சீனாவின் தொழில்துறை உற்பத்தியானது  13.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் சில்லறை வணிகம் 20.5 சதவீதம் குறைந்திருந்தது. இவையெல்லாம் கடுமையாக விளைவுகளே ஆகும்.

ஏப்ரல் மாத கடைசியில் சீனாவின் வேலையின்மை விகிதம் 20.5% ஆக இருக்கலாம் என ஜோங்டான் செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பின்படி 7 கோடிப்பேர் வேலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். 

வேலையின்மையை எதிர்கொள்வதை தனது அவசர அவசியமுள்ள நடவடிக்கையாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைகளில் 10 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிறுவனங்களில் 4 லட்சம் தொழிலாளர் பணியிடங்களுக்கான தேவை கண்டறியப்பட்டு தொழிலாளர்களை அமர்த்த முன்கை எடுத்திருக்கிறார்கள். 

முதலாளித்துவ நாடுகளின் திறனுள்ள தொழிலாளர்கள் பசியிலும் வேதனையிலும் அச்சத்திலும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இது உற்பத்தியை மீட்டமைப்பதில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்து.

சீன அரசானது இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவது முக்கியம். அதற்காக 1 லட்சத்து 92 ஆயிரம் சிறப்பு வாகனங்கள், 367 சிறப்பு ரயில்கள், 1462 கார்கள் மற்றும் 551 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் 5.03 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கவிருக்கிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை பொருத்தமட்டில் சீனாவின் எதிர்காலம் உலக சூழலை பொருத்தே அமையும். 

மே மாத இறுதியில் சீனாவின் ’இரண்டு பேரவைகள்’ கூடி விவாதிக்கவுள்ளன. கொரோனா நோய் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த நிகழ்வு எதிர்வரவுள்ள பொருளாதார சவால்களைக் குறித்து விவாதிக்கவிருக்கிறது. பொருளாதார முனையில் சீனாவின் போராட்டம் அதன் பிறகு தெளிவாகலாம். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என சீனாவின் ஏடுகள் தெரிவிக்கின்றன.

  • மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையிலான ஊக்கத்திட்டம் அறிவிக்கப்படும். (வேலையில்லாக்கால நிவாரணத்தை உயர்த்துதல் உள்ளிட்டு) 
  • கட்டமைப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தை கவனத்தில் கொண்ட நிதிச் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சிறு குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்படும், அவர்களின் வரிகள் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒவ்வொரு உள்ளூர் அரசு நிர்வாகமும் தங்கள் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. (இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேர்மாறானதாகும்)
  • உற்பத்தி பழைய நிலைமைக்கு திரும்பியவுடன் வழங்கல் தொடர்பும் சீராக்கப்படும்.
  • தனது சந்தையை உலகிற்கு திறப்பது மற்றும் உள்நாட்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தின் முதன்மை நோக்கம் வேலைவாய்ப்பை மீட்டமைப்பதாகவும், ஏழை மக்களை பாதுகாப்பதாகவும் இருக்கும்.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வெட்டுமாறு ஆலோசனைகள் வைக்காமல் இல்லை. முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் அல்லாது 30 சதவீத தொகையை நலத்திட்டங்களுக்கு செலுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லாக் கால காப்பீடு, பணிக்கால விபத்துக் காப்பீடு மற்றும் பேறுகால காப்பீட்டு தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது முதலாளித்துவ அறிஞர்களின் எதிர்பார்ப்பாகும். பொருளாதார தளத்தில் எழக்கூடிய சவால்களை அந்த நாடு எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்த நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே வறுமை ஒழிப்பு இலக்கை நோக்கியும் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது. உலகம் நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டு அளவுகோலுக்கு கீழே ஒருவரும் வாழாத நாடாக சீனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த கட்சி வகுத்துக்கொண்ட மிக முக்கியமான இலக்கு. வைரசை எதிர்கொள்வதில் கிடைத்த வெற்றியைப் போலவே இதிலும் வெல்வோம் என்கிறார்கள்.

வறுமையும், நோயும் மனித குலத்தின் பொது எதிரி. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் சோசலிசமே உற்ற துணையாகும் என்பதை சீனா எடுத்துக் காட்டட்டும்.

கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்

அபிநவ் சூர்யா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் பெரும் தோல்வியை அடைந்திருக்கின்றன. உடனே ஏகாதிபத்திய நாடுகளும், முதலாளித்துவ சிந்தனையாளர்களும் தங்கள் தோல்வியிலிருந்து திசை திருப்ப சீனாவின் மேல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இயல்பாகவே வலதுசாரி சக்திகள் அறிவியல் ஆக்கத்திற்கு எதிரானவர்கள். எனவே, சீனாவிடமிருந்து பாடம் கற்க கோரும் அறிவியல் சமூகத்தின் கருத்துக்களை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

உலக நாடுகளின் “தலைவர்கள்” என்று கூறிக்கொள்ளும் நாடுகள், சொந்த மக்கள் எத்தனை பேர் பலியானாலும் தங்களின் அரசியல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள். இது போன்ற உத்திகளுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும், தாங்கள் முன்னெடுத்த ஏகாதிபத்திய போர்கள், காலனியாதிக்கங்கள், பொருளாதார கொள்கைகள் மூலம் உலகையே சூறையாடிய வரலாற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். சரியாக செயல்பட்டுவரும் சீனாவிடமிருந்து நட்ட ஈடு கோரும் சிறுமையை செய்யவும் தயங்கவில்லை.

இது போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அவதூறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்காக இல்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் அரசு நடத்தி வரும் சீனா, இந்த நெருக்கடியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வது முற்போக்காளர்களுக்கு மிகவும் அவசியம்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தாராளமயக் கொள்கைகளை உலக நாடுகள் மீது புகுத்தி, மக்களின் நல்வாழ்வு மீதான அரசுகளின் பொறுப்பை முற்றிலுமாக ஒழித்து விட்ட ஏகாதிபத்திய தாக்குதலின் மத்தியிலே, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மக்கள் நலனில் அரசு முக்கிய பங்காற்றுவதன் மூலம் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியும் என்று நிறுவியது சீனாவாகும்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தொடக்கத்திலிருந்து சீனா என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று அறிவது நமக்கு அறிவியல் ஞானம் மட்டுமன்றி, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய பாடங்களையும் வழங்குகிறது.

டிசம்பர் மாத பிற்பகுதியில் தான் ஊகான் நகர சுகாதார அமைப்பு நூதனமான, நிமோனியா போன்ற தொற்றுநோய் பரவி வருவதை கண்டறிந்தது. இந்த நேரத்திலிருந்து, சீனா இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

டிசம்பர் 27 அன்று, டாக்டர் ஜாங் ஜிக்சியாங் என்பவர் தான் இந்த நிமோனியா போன்ற நோய் தொற்று ஒரு ஆபத்தான வைரஸ் மூலம் பரவி வருவதாக முதலில் சீன மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடம் தெரிவித்தார். அன்றிலிருந்து சீனாவின் மொத்த சுகாதார கட்டமைப்பும் துரிதமாக செயல்பட துவங்கிவிட்டன.

டிசம்பர் 30ம் தேதி அன்று, ஊகான் நகர சுகாதார ஆணையம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த நூதன நிமோனியா நோய்க்கு சிறப்பு கவனம் அளிக்குமாறு கூறிய பின், டிசம்பர் 31 அன்று இந்த நோய் பற்றிய தகவலை பொது மக்களுக்கு அறிவித்ததோடு, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முகக் கவசங்கள் அணியுமாறும் அறிவுறுத்தியது.

டிசம்பர் பிற்பகுதியில் நோயை பற்றி கண்டறிந்த சீனா, (இந்த நோயை பற்றி ஏதுமே அறியாத நிலையில்), டிசம்பர் 31ற்குள் இந்த அறிவிப்பை செய்தது. இதை ஒப்பிடுகையில், சீனா இந்நோயை பற்றி பல தகவல்கள் அளித்த பின்பும், ஜனவரி இறுதியில் முதல் நோயாளியை கண்டறிந்த பல நாடுகள் மார்ச் வரை இப்படிப்பட்ட அறிவிப்பை மேற்கொள்ளவில்லை என்பதை இணைத்து பார்க்க வேண்டும்.

இந்த நேரம் குறித்து பின்னாளில் துவங்கிய பொய் பிரச்சாரங்களில் ஒன்று, லீ வென்லியாங் என்ற டாக்டர் இந்நோயை பற்றி வெளியே கூற விடாமல் அவரை கைது செய்து சீனா முடக்கியது என்பதாகும். இந்த மருத்துவர் தன் சமூக வலைதளத்தில் சார்ஸ் போன்ற நோய் பரவி வருவதாக டிசம்பர் 30 அன்று பதிவிட்டது உண்மை தான். ஆனால் ஏற்கனவே கூறியது போல், டிசம்பர் 27 அன்றே இந்த வைரஸ் பரவி வருவது பற்றி அனைத்து சீன டாக்டர்களும் அறிந்திருந்தனர். மேலும் ஊகான் மருத்துவமனைகளும் இதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆகையால், சீனா அதன் அறிவியலாளர்களிடமிருந்து மறைக்க ஏதுமில்லை.

மேலும், இந்த நோயை பற்றி சீனாவின் தலைசிறந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்த நேரத்தில், முழு உண்மையை அறியாமல், இந்த டாக்டர் உரிய சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறாமல், நேராக சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறென்று காவல்துறை அவருக்கு எச்சரிக்கை செய்தது. அதே சமயம் அவர் கைது செய்யப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது பொய்யாகும்.

மேலும் பின்நாளில் இவ்வாறு காவல்துறை எச்சரித்தது தவறு என சீன உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க, ஊகான் மாநகராட்சி அந்த டாக்டரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, மறைப்பதற்கு எவரும் அறியாத ஒன்றை இந்த டாக்டர் கூறவும் இல்லை; அவர் துன்புறுத்தப்படவும் இல்லை.

மேலும், இந்த நோயை பற்றிய ஆய்வை துரிதப்படுத்திய சீனா, ஜனவரி 3 அன்றே உலக சுகாதார அமைப்பையும், அனைத்து முக்கிய நாடுகளையும் தொடர்பு கொண்டு, இந்நோயை குறித்து எச்சரித்தது. இதில் அமெரிக்காவும் அடக்கம். இந்நோயை பற்றிய எச்சரிக்கையை அமெரிக்காவின் நோய் தடுப்பு ஆணையம் ஜனவரி 3 அன்று பெற்றது என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதன் பின்பும், ட்ரம்ப் இன்றும் சீனா இந்நோயை பற்றி உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லை என பொய் கூறி வருகிறார்.

இதற்கு பின், ஒவ்வொரு நாளும் ஊகான் சுகாதார ஆணைய அதிகாரிகள் ஊடங்கங்களை சந்தித்து பதிலளித்ததோடு, ஒவ்வொரு நாளும் இந்த நூதன நிமோனியா நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ள்ளனர் என்பதை தன் வலைத்தளத்தில் பதிப்பித்துக்கொண்டே வந்தது.

இக்காலத்தில் முக்கிய சாதனை, ஜனவரி 12 அன்று சீன ஆய்வாளர்கள் இந்த வைரஸின் முழு மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது இருந்தால் மட்டுமே இந்நோயை கண்டறியும் சோதனை  கிட்டுகளையும், இந்நோய்க்கான தடுப்பூசியையும் உருவாக்க முடியும். நோயை பற்றி அறிந்த சில நாட்களிக், இந்த மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது மிகப்பெரும் சாதனை. ஒப்பீடாக, 2002ல் சார்ஸ் நோய்த்தொற்றின் பொழுதும், பின்னர் எபோலா வைரஸ் தொற்றின் பொழுதும், மரபணு அமைப்பை கண்டறிய ஆய்வாளர்களுக்கு 2-3 மாதங்கள் தேவைப்பட்டது.

மரபணு கட்டமைப்பை கண்டறிந்த சீன ஆய்வாளர்கள், உடனடியாக, வெளிப்படையாக, இந்த மரபணு அமைப்பைப் பற்றி உலக சுகாதார அமைப்பிடம் பகிர்ந்து கொண்டனர்.இதனால், லாபம் பாராமல், உலக ஆய்வாளர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க வழி வகுத்தது சீனா.

மேலும் இந்த காலகட்டத்தில், இந்த தொற்றை பற்றி மேலும் அறியவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் ஊகான் மற்றும் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் ஜனவரி 16ம் தேதிக்குள் “பி.சி.ஆர்” எனப்படும் சோதனைக் கருவிகளை உருவாக்கி, அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் (இன்று நாம் இந்த கருவியையே சோதனைக்கு பயன் படுத்தி வருகிறோம்).

இந்தக் கால கட்டத்தில், இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைப் பற்றிய சந்தேகங்கங்கள் ஆய்வாளர்களுக்கு இருந்தாலும், உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்தது.

ஜனவரி 19 அன்று தான், சீன அரசால் ஊகான் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனாவின் தலை சிறந்த வைரஸ் ஆய்வாளர் ஷாங் நன்ஷங் இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைக் கண்டறிந்து கூறினார். இதன் ஆபத்தை உடனே உணர்ந்தது சீன அரசு. ஜனவரி 20 அன்றே அதிபர் தோழர் ஜி ஜின்பிங் இந்த தொற்றின் ஆபத்தை குறித்து தேசத்திற்கு அறிவித்தார். இதன் பின் ஜனவரி 28 அன்று சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ், சீனாவின் வெளிப்படைத்தன்மையைக் குறித்து பாராட்டினார்.

ஜனவரி 4ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையிலான காலம் பற்றியே சீனா பற்றிய ஏகாதிபத்திய நாடுகளின் பொய் ஜோடிப்பு இன்று பரவலாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் முக்கிய ஊடகம் ஒன்று ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில், சீனா ஜனவரி 4ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு நோயுற்றோர் பற்றிய தகவலை சேகரிக்கவில்லை எனவும், ஜனவரி 14 முதல் 20 வரை நோய் தொற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறியது. இந்த கட்டுக்கதையை வைத்து தான் ட்ரம்ப் உட்பட பல உலக ஏகாதிபதியவாதிகளும் இன்று சீனா மீது பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்க்கு எதிரான ஆதாரங்கள் நிரம்ப உள்ளன.

மேலும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு நிகழ்ந்தவை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகள். உடனடியாக, ஜனவரி 23 அன்றே சீன அரசு ஊகான் நகரை “லாக் டவுன்” எனும் ஊரடங்கிற்குள் கொண்டு வந்தது. இந்த தொற்றின் ஆபத்து பற்றி உலக சுகாதார அமைப்பு உணர்ந்த போதும், இது அதுவரை சந்தித்திராத புதுமையான நிலைமை என்பதால், தீர்மானமான அறிவுரையை சீனாவிற்கு வழங்க முடியவில்லை. ஆனால் சீன அரசு தைரியமாக ஊரடங்கை அமலாக்கியது.

சீன அரசு அவ்வாறு செய்வதற்கு முன், மனித வரலாற்றிலேயே எந்தநேரத்திலும், ஒரு கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் எந்த பகுதியிலும் “லாக் டவுன்” கொண்டுவரப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த புதுமையான மற்றும் தைரியமான நடவடிக்கை, இன்று உலகமே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டியாய் உள்ளது.

இந்த “லாக் டவுன்” அமலாக்கிய பொழுது, சீனாவை சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக சாடிய ஏகாதிபத்திய நாடுகள், இன்று சீனா ஏன் ஊரடங்கை இன்னும் விரைவாக அமலாக்கவில்லை என கேள்வி எழுப்புவது நகை முரண். இந்த தொற்றின் ஆபத்தை பற்றி சீனா அனைத்து தகவல்களையும் அளித்திருந்தபோதும், எந்த ஏகாதிபத்திய நாடுகளும் ஒரு மதத்திற்கு மேல் “லாக் டவுன்” அறிவிக்காமல் இருந்தன. ஆனால் தொற்றை பற்றி ஏதுமே தெரியாமல் இருந்த சீனா, ஒரே வாரத்திற்குள் “லாக் டவுன்” அறிவித்திருக்க வேண்டும் என இப்பொழுது எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை!

சீனா கடைபிடித்த “லாக் டவுன்”, இன்று இந்தியா கடை பிடிப்பது போல் உழைக்கும் மக்களை உணவின்றி தவிக்க விடும் கொடிய “லாக் டவுன்” அல்ல. ஹூபே மாகாணத்தின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு அதிகாரியை நியமித்து, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவும் மருந்தும் வீட்டிற்கே கிடைப்பதை உறுதி செய்தார்கள். எவரும் வீட்டை விட்டு வெளியே வர சிறிதும் அவசியமற்ற ஏற்பாடுகள் செய்தது அரசு. பச்சை வழிப் பாதைகள் அமைத்து, சீனாவின் இதர பகுதிகளிலிருந்து ஹூபே மாகாணத்திற்க்கு உணவு, மருந்து மற்றும் இதர தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி வர வழி செய்தது. வீட்டிற்குள்ளேயே இருப்போர் மனநலத்தை உறுதி செய்ய இணைய வழி ஆலோசனை மையங்களை உருவாக்கியது. இவ்வாறு மக்கள் நலனை மனதில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது.

ஒவ்வொரு படியிலும், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், தாங்கள் செய்யும் தவறுகள் குறித்தும் உலக நாடுகளுக்கு அறிவித்துக்கொண்டே வந்தது சீனா. ஆனால் இந்த அனைத்து தகவல்களும் எச்சரிக்கைகளும் அறிந்திருந்த போதும், எந்த ஏகாதிபத்திய நாடும், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வரை எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்தன.

தன் மக்களின் நலனில் சிறிதும் கவலை இல்லாத ஏகாதிபத்திய நாடுகள், அதன் முதலாளித்துவ கொள்கைகளால் இன்று தொற்று கட்டுக்கடங்காத நிலைக்கு செல்ல விட்டுள்ளன. பின் சீனா பொய்யான தகவல்களை அளித்ததாகவும், சீனாவில் அரசு அறிவித்ததை விட அங்கு பன்மடங்கு மக்கள் இறந்ததாகவும் பொய் பரப்பி வருகின்றனர். ஆனால் இதையும் பொய்யென நிறுவியது சீனா.

பிப்ரவரி இரண்டாம் வாரம், டாக்டர் பிரூஸ் அயல்வார்ட் ஒரு மருத்துவர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு ஊகான் மற்றும் இதர பகுதிகளுக்கு அனுப்பியது. அவர்கள் சீனாவின் நடவடிக்கைகளை கண்டு பெருமளவில் வியந்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் தரவுகளை சேகரித்த அவர்கள், சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் உண்மை தான் என்பதை உறுதி செய்தனர். இவ்வளவு சிறப்பாக, குறைந்த இறப்பு விகிதத்தோடு நோயை கட்டுக்குள் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த உண்மையை ஏற்க முடியாத ஏகாதிபத்திய நாடுகள், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக குறை கூறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற மருத்துவர்களில் பாதிப்பேர் உலக சுகாதார அமைப்புடன் சார்பு இல்லாத தன்னிச்சையான மருத்துவர்கள் ஆவார்கள். அவர்களும் இதே உண்ம்மையைத் தான் கூறுகின்றனர். ஆக, சீனா இந்நோயை திறம்பட கட்டுக்குள் கொண்டு வந்தது ஜோடிப்புகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப் பட்டது.

சீனாவின் இந்த சிறப்பான நடவடிக்கைகள் குறித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாராட்ட சொற்கள் இல்லை. மருத்துவர் பிரூஸ் அயல்வார்ட் சீனா சென்று கண்ட பின் கூறுகையில், “எவருமே அறியாத நோயொன்றை எதிர்கொண்ட சீனா, அதை கட்டுப்படுத்த பாரம்பரிய முறைகளோடு நவீன அறிவியலையும் கலந்து, கற்பனைக்கெட்டாத முறையில் சாதனை செய்துள்ளது” என்றும், “இந்த போராட்டத்தில் சீன மக்கள் செய்துள்ள தியாகத்திற்கு உலகமே அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது” என்றும், “சீனாவின் சிறந்த நடவடிக்கைகளால், இந்த நோயை கட்டுப்படுத்தியதோடு, இந்த தொற்றை சமாளிக்க அவசியமான விலைமதிப்பில்லாத நேரத்தை சீனா உலகிற்கு பெற்றுத் தந்துள்ளது” என்றும் போற்றினார்.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் கவுடன் கலியா, “ஒரு தொற்று நோயின் பொழுது, அது பெருமளவிலான மக்களை தாக்கி, பின் அடங்குவது தான் அதன் இயற்கையான போக்கு. ஆனால் சீனா இந்த போக்கையே மாற்றி, தொற்று நோயை முளையிலேயே வெட்டிவிட முடியும் என்று உலகிற்கே நிறுவியுள்ளது” என்று பெருமையாக கூறினார். மேலும் மக்களுக்கு பொது சுகாதாரம் வழங்குவதன் அவசியத்தை சீனா காட்டியுள்ளதாக அவர் புகழ்ந்தார்.

இது எதையுமே ஏற்க மறுக்கும் ஏகாதிபத்தியவாதிகள், முதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் சீனாவின் கைக்கூலி என்று கூறினார்கள். பின் அனைத்து மருத்துவர்களும் சீனாவை பாராட்டியதால், மொத்த அமைப்பே சீனவின் கைக்கூலி எனக் கூறியதோடு, அந்த அமைப்பிற்கான நிதியை முடக்கியது அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் இருப்பவர்களிக் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே சீன மருத்துவர் ஆவார். இதர அனைவருமே பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக சுகாதார அமைப்பின் நிதியில் பெரும்பான்மை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமிருந்தே வருகின்றது. வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நிதி மட்டுமே சீனாவிடம் இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு சீனாவிற்கு எதிராக பேசி, அமெரிக்கா-பிரிட்டனை ஆதரிக்க அனைத்து உந்துதலும் உள்ளது. ஆனால் சீனாவை ஆதரிக்க அறிவியல் நேர்மையைத் தவிர வேற எந்த உந்துதலும் இல்லை.

இதனால் சீனா தவறுகளே செய்யவில்லை என்று கிடையாது. ஆனால் தாங்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டதோடு, அதை உலக நாடுகள் செய்யாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர். உதாரணமாக, சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தொற்று பரவுவதை சற்றே தாமதமாகவே கண்டறிந்த சீனா, உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு அளித்ததோடு, இந்த தவறை மற்ற நாடுகள் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்றும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சரியான ஏற்பாடுகள் செய்யாமல், அவர்களின் இறப்புக்கு காரணமாகி வருகின்றன.

மேலும், இந்த நோயை சிறப்பாக கட்டுப்படுத்திய சீனாவே, தங்களின் பாதையில் பல தவறுகள் இழைத்ததாகவும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்ட முதல் உலக அதிபர் தோழர் ஜி ஜின்பிங் தான். ஆனால் தொற்றை கட்டுப்படுத்த தவறிய ஏகாதிபத்திய அரசுகள், இன்றும் தங்களின் கொடிய தவறுகளுக்கு பிறரை குற்றம் கூறி வருகின்றன.

சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப். மேலும் தன்னை தேர்தலில் தோல்வியுறச் செய்ய சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என குற்றம் சாட்டி வருகிறார். நாள் ஒன்றிற்கு 2500க்கும் மேற்பட்டோர் மரணிக்கும் பொழுதும், ட்ரம்ப் அரசின் கவனம் மக்களை காப்பாற்றுவதில் இல்லை; தேர்தல் பிரச்சாரம் செய்வதிலேயே உள்ளது.

மக்களின் சுகாதார மற்றும் பொது நலனை சந்தைகள் உறுதி செய்ய முடியாது, அரசின் பங்கு மிக முக்கியம் என்பதை இந்த கொரொனா வைரஸ் நோய் தொற்றின் சமயத்தில் சீனாவும் இதர சோசலிச நாடுகளும் நிறுவியுள்ளன.

உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…

பிரபாத் பட்நாயக்

தமிழில்: க.சுவாமிநாதன்

அமைப்பு சார் நெருக்கடியின் தனித்தன்மை என்ன தெரியுமா? அது மீண்டும் மீண்டும் நிகழ்கி்ற சுழல் நெருக்கடியில் (Cyclical crisis) இருந்தும், இடையிடையே ஏற்படும் நெருக்கடியில் (Sporadic crisis)  இருந்தும் முற்றிலும் வேறுபட்டது. முதலாளித்துவத்தின் அமைப்பு சார் நெருக்கடி என்பது அந்த அமைப்பின் பொதுவான வரையறையை மீறாமல் எடுக்கப்படுகிற ஒவ்வொரு முயற்சியும், அதாவது அதில் நிலவுகி்ற வர்க்க உள்ளடக்கத்தை பொருத்தே அமைவதுமான நடவடிக்கைகளும், நெருக்கடியை மேலும் ஆழமாக்கவே செய்யும் என்பதே ஆகும்.

இப்பொருளில் தற்போது நவீன தாராளமய முதலாளித்துவம் ஓர் அமைப்பு சார் நெருக்கடிக்குள் பிரவேசித்துள்ளது.

மேற்பூச்சுக்கள் மூலம் அதை சரி செய்ய முடியாது. மேற்பூச்சை கடந்து அமைகிற நடவடிக்கைகள் கூட நவீன தாராளமய எல்லைகளை கடக்காததாக இருக்கிற பட்சத்தில் அவையும் நெருக்கடியை சரி செய்யாது. உதாரணமாக, இறக்குமதி சுவர்களை எழுப்பி சந்தையை பாதுகாப்பது, அதாவது உலகமயத்தின் வினை ஊக்கியாய் இருக்கிற சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தை கேள்விக்கு ஆளாக்காமல் தீர்வினை தேடுவது போன்றவை.  இதையே டிரம்ப் அமெரிக்காவில் செய்கிறார். இது நெருக்கடியை இன்னும் தீவீரமாக்கவே செய்யும்.

உலகம் ஒரே சித்திரம்

நெருக்கடியின் அறிகுறிகள் நன்கு தெரிந்தவையே. 2008 நெருக்கடியின் பின்புலத்தில் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் ” மலிவுப் பணக் கொள்கை” (Cheap Money Policy) இருந்தது. அதனால் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு ஜீரோ வரை கூட நெருங்கின. இதன் வாயிலாக உலக முதலாளித்துவம் தற்காலிகமாக சுவாசிப்பதற்கான மிகக் குறைவான வழிகளை மட்டுமே திறந்து விட முடிந்தது. இதனால் மீண்டும் மீண்டும் அதிகரிக்கிற மந்தத்தையே அது சந்திக்க நேரிட்டது. அமெரிக்காவில் வணிக முதலீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தொழில் உற்பத்தி ஜுலையில் அதற்கு முந்தைய மாதத்தை விட 0.2 சதவீதம் சரிந்துள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் ஜெர்மனி போலவே சுருங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இதே சித்திரம்தான். இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, இந்தியாவிலும் இதே நிலைதான். சீனா கூட உலக மந்தத்தின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்து வருகிறது.

எல்லா இடங்களிலுமே கொள்கை உருவாக்குனர்களின் எதிர் வினை என்ன தெரியுமா? வட்டி விகிதங்களை குறைப்பதே. ஏற்கனவே ஐரோப்பிய மைய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை (Key interest rate) எதிர்மறை மண்டலத்திற்குள் (Negative region) தள்ளியுள்ளதோடு மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வட்டி விகிதங்கள் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ளன. இந் நடவடிக்கையின் பின்னுள்ள எதிர்பார்ப்பு என்ன? குறைவான வட்டி விகிதங்கள் அதிக முதலீடுகளைக் கொண்டு வரும் என்பது கூட பெரிதாக எதிர்பார்க்கப்படவில் லை. மாறாக குறைவான வட்டி விகிதங்கள் சொத்து விலை ‘குமிழிகளை’ (Asset price bubbles) உருவாக்கும் என்பதே. இக் குமிழிகளால் பயன் பெறுவோர் பெரும் செலவினங்களை செய்வார்கள். அதன் மூலம் கிராக்கி பெருக வாய்ப்பு ஏற்படும் என்பதுதான்  மதிப்பீடு.

“குமிழிகளின்” பின்புலம்

எதனால் இந்த ஒரே மாதிரியான வினையை எல்லா இடங்களிலும் உள்ள கொள்கை உருவாக்குனர்கள் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய உடனடி காலத்தில், அதாவது நவீன தாராளமய உலக மயம் அமலாவதற்கு முந்திய காலத்தில், அரசு செலவினம் அதிகரிக்கப்படுவதன் மூலம் கிராக்கியை உயர்த்துகிற நடவடிக்கை பின்பற்றப்பட்டது. எப்போதெல்லாம் மந்தத்திற்கான அபாயம் எழுந்ததோ அப்போதெல்லாம் இப்படி சரி செய்ய முடிந்தது. அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறையை தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ள முடிந்தது. மூலதனக் கட்டுப்பாடுகள் இருந்ததால், நிதிப் பற்றாக்குறைகள் காரணமாக மூலதனம் பறந்து போய்விடுமென்ற அபாயம் கிடையாது.

இதுவே பிரபல பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் கற்பனையில் உருவான உலகம். அவர் போருக்கு பிந்தைய காலத்திய முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர்.

அவர் நிதி மூலதனத்தின் சர்வதேச மயத்தை எதிர்த்தார். (“நிதி எல்லாவற்றுக்கும் மேலாக தேசியத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்றார்). அவர் அதற்கு கூறிய காரணம், நிதி சர்வதேசமயமாதல் தேசிய அரசின் வேலை உருவாக்க சக்தியை சிதைத்து விடும் என்பதே. இந் நோக்கத்திற்காக, அரசின் செலவினம் பெருகுவதை நிதி சர்வதேசமயமாதல் எதிர்க்கும்; அது தேசிய அரசை சிறை வைத்து விடும் என்பதே அவரின் எண்ணம். முதலாளித்துவ முறைமையின் காவலர் என்ற வகையில் கீன்ஸ் அச்சப்பட்டார். தேசிய அரசு வேலை உருவாக்கத்தை செய்ய முடியாவிட்டால் சோசலிச அபாயத்தை தாக்குப் பிடித்து முதலாளித்துவம் பிழைத்திருக்க இயலாது என்று நினைத்தார்.

நிதி மூலதனத்தின் விஸ்வரூபம்

என்றாலும் மேலை தேசத்து வங்கிகளில் பெருமளவு நிதிக் குவியல் நிகழ்ந்தது. வெளி வர்த்தக இடைவெளியால் அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து இக் காலத்தில் அதிகரித்தது; “ஒபெக்” (பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) நாடுகள் 1970 களில் எண்ணெய் விலை உயர்வால்  வருவாய் சேமிப்புகளைக் குவித்தது; மூலதனக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சர்வதேச நிதி மூலதனத்திடம் இருந்து எழுவதற்கு இவை காரணங்களாக அமைந்தன. நிதி மூலதனம் தனது விருப்பப்படி வலம் வருவதற்காக உலகம் முழுவதுமே தனக்கு திறந்து விடப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தது. இறுதியில்  வெற்றியும் பெற்றது.

இதன் மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது. இதன் பொருள், தேசிய அரசு, நிதி தலையீட்டின் மூலம் வேலை உருவாக்கத்தை நிலை நிறுத்துகிற பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதுமாகும். ஆகவே நிலை பெற்றுள்ள நவீன தாராள மய முதலாளித்துவ ராஜ்யத்தில், கிராக்கியை சந்தையில் உருவாக்குவதற்கான ஓரே வழி, சொத்து விலை “குமிழிகளை” தூண்டி விடுவதே ஆகும்; அதற்கு வட்டி விகித கொள்கையை பயன்படுத்துவதும் ஆகும்.

ஆனால் அரசு செலவினத்தை விருப்பப்படி நெறிப்படுத்த முடிவது போல் “குமிழிகளை” விருப்பத்திற்கு ஏற்பவெல்லாம் நெறிப்படுத்தி விட இயலாது. கொஞ்ச காலத்திற்கு 90 களில் ( டாட் காம் குமிழிகள் அமெரிக்காவில் உருவானது) மற்றும் இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் (அமெரிக்காவில் “வீட்டு வசதி குமிழி”) இது பயன்பட்டதான தோற்றம் கிடைத்தது. ஆனால் வீட்டு வசதி “குமிழி” வெடித்து சிதறிய பிறகு மக்கள் மனதில் தயக்கங்கள் ஏற்பட்டன. வட்டி விகிதங்கள் ஜீரோ அளவிற்கு கொண்டு வரப்பட்டும் புதிய “குமிழிகள்” ஏதும் அதே அளவிற்கு எழுவது இல்லாமல் போனது.

உபரியின் அபகரிப்பு

இதற்கிடையில் எல்லா நாடுகளிலும், மொத்த உலகிலும் சராசரி கிராக்கி வீழ்ச்சி அடைவதற்கு இன்னொரு அம்சம் சக்தி மிக்க காரணியாய் அமைந்தது; அது மொத்த உற்பத்தியில் உபரியின் (Surplus) பங்கு அதிகரித்ததாகும்.  எல்லாவற்றுக்கும் மேலான உலகமயத்தின் பொருள்,  எல்லைகள் கடந்த மூலதனத்தின் சுதந்திரமான நகர்வே ஆகும். அதில் நிதி நகர்வும் அடங்கும். இது நிறைய தொழில் நடவடிக்கைகளை, அதிகக் கூலி உள்ள மேலை நாடுகளில் இருந்து குறைவான கூலி உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயரச் செய்தது.

வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை, மூன்றாம் உலக தொழிலாளர்களுடனான போட்டிக்கு உட்படுத்தியதால் முந்தையவர்களின் கூலி அளவுகளை குறைக்க முடிந்தது. அதே நேரத்தில் பிந்தையவர்களின் கூலி அளவுகளும் அவர்கள் பிழைப்பதற்குரிய மிகக் குறைவான மட்டத்திலேயே நீடிக்கின்றன. காரணம், இந்த இடப் பெயர்வுக்கு பின்னரும் மூன்றாம் உலக நாடுகளின் காத்திருக்கும் தொழிலாளர் படை தீர்ந்து போய் விடவில்லை என்பதே ஆகும். எனவே உலகளாவிய தொழிலாளர் உற்பத்தி திறனின் கூட்டு மதிப்பு அதிகரித்தும், கூலி அளவுகளின் உலகளாவிய கூட்டுத்தொகை அதிகரிக்கவில்லை.

அதீத உற்பத்திக்கான உந்துதல்

இத்தகைய உபரியின் பங்கு அதிகரிப்பு, அதீத உற்பத்திக்கான உந்துதலை உருவாக்குகிறது. வருவாயின் ஓர் அலகுக்குரிய நுகர்வு, உபரி ஈட்டுவோர் மத்தியில் இருப்பதை விட கூலி பெறுவோர் மத்தியில் மிக அதிகமாக இருப்பதே ஆகும். இந்த உந்துதலை அரசு செலவின அதிகரிப்பின் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் ஈடு கட்டியிருக்க முடியும். ஆனால் இது சாத்தியமற்றதாக ஆகி விட்டதால், ஒரே ஒரு எதிர் வினை மட்டுமே இந்த அதீத உற்பத்தி உந்துதலை எதிர்கொள்வதற்கு உள்ளது. அதுவே சொத்து விலை “குமிழிகள்” ஆகும். இந்த குமிழிகளும் சாத்தியமில்லாததால் அதீத உற்பத்திக்கான உந்துதல் கட்டு இன்றி முழு வேகத்தில் வெளிப்படுகிறது. இதையே இன்று நாம் காண்கிறோம்.

வட்டி விகிதங்களை குறைத்து நிலைமையை சமாளிக்கிற பாரம்பரிய கருவி இப்போது வேலை செய்யவில்லை. சராசரி கிராக்கியில் ஏற்படுகிற குறைபாட்டை சரி செய்வதற்கு அரசு செலவினத்தை உயர்த்துவதும் இப்போது செய்யப்படுவதில்லை. ஆகவே டொனால்ட் டரம்ப் தங்களது சொந்த நெருக்கடியை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்து சமாளிக்க முனைகிறார். இதற்காக சந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டிருக்கிறார். பதிலுக்கு பதில் எதிர்வினை என்ற முறையில் சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் துவக்கப்பட்ட  இந்த வர்த்தகப் போர், தற்போது உலக பொருளாதாரத்தின் நெருக்கடியை உக்கிரமாக்குகிறது.

ஏனெனில் இது உலக முதலாளிகளின் முதலீட்டிற்கு இருந்த கொஞ்ச நஞ்சம் ஊக்குவிப்பையும் அரித்து விட்டது. வட்டி விகிதங்களின் குறைப்பு அதன் முதல் நோக்கமான சொத்து விலை ” குமிழிகளை” உருவாக்கவில்லை என்பதோடு உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளில் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. உதாரணம் வால் ஸ்ட்ரீட். இது ஆகஸ்ட் 14 அன்று இதுவரை இல்லாத பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர் விளைவாக உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை பதிவு செய்தன.

பத்மாசூரன் கையும்- உழைப்பாளர் கரங்களும்

அரசு செலவினங்கள் உயர்த்தப்படுமேயானால் “மற்ற நாடுகள் மீது கை வைப்பது” ( beggar-thy-neighbour) என்கிற கொள்கைகள் தேவைப்படாது. அப்படியே அரசு செலவினத்தால் உயர்கிற கிராக்கி வெளி நாடுகளுக்கு கசிந்து விடக் கூடாது என்று சிறிது “சந்தை பாதுகாப்பு” நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்ற நாட்டு இறக்குமதிகளை பெரிதும் பாதிக்காது. காரணம் சந்தையே விரிவடைகிறது. ஆனால் அரசு செலவின அதிகரிப்பை செய்யக்கூடாது என சர்வதேச நிதி மூலதனம் கட்டளையிடுவதால் (இதனாலேயே பல நாடுகள் நிதிப் பற்றாக்குறை அளவுகளை கட்டுப்படுத்துகிற சட்டங்களை பெரும்பாலான நாடுகள் இயற்றியுள்ளன) ” மற்ற நாடுகள் மீது கைவைப்பது” (Beggar-thy-neighbour) என்ற கொள்கைகள் ஒரு நாடு பின் தொடர்வதற்குள்ள மிகக் குறைவான தெரிவுகளில் ஒன்றாக மாறிப் போயுள்ளது. இது எல்லோருக்குமான நெருக்கடியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதுவே அமைப்பு சார் நெருக்கடியின் தனித்த அடையாளம் ஆகும். சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடருகிற காலம் வரை, மேலும் உலக மூலதன பரவலின் வலையில் நாடுகள் சிக்கியுள்ள வரையில், நெருக்கடி தொடரும் என்பது மட்டுமின்றி அதை சமாளிக்க அமைப்பின் வரையறைக்குள் நின்று எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நெருக்கடியை தீவீரப்படுத்தவே செய்யும். சர்வதேச நிதி மூலதன மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முன்னேற என்ன தேவைப்படுகிறது? ஒவ்வொரு நாட்டிலும் உழைப்பாளி மக்கள் “மாற்று நிகழ்ச்சி நிரலோடு” ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பதே ஆகும்.

நன்றி: பீப்பி்ள்ஸ் டெமாக்ரசி ஆகஸ்ட் 25, 2019

சீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …

இரா.சிந்தன்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே எழுதியிருந்தோம். அந்த மாநாட்டில், ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் ஒரு புதிய வரலாற்றுக் கட்டத் தை எட்டியிருப்பதாக’ அக்கட்சி அறிவித்தது. மாநாட்டைத் தொடர்ந்து மார்ச் 3 முதல் 20 தேதி வரையில் நடைபெற்ற ‘இரண்டு அமர்வுகள்’ (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் மாநாடு) பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. இந்த முடிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தியாவுக்கு அண்டைநாடு: மிகப்பெரிய வளரும் நாடு; நம்மையொத்த மக்கள்தொகை கொண்ட நாடு என்ற காரணங்கள் மட்டுமல்லாமல், உலகின் புதிய மாற்றங்களை உள்வாங்கி முன் செல்லும் சோசலிச நாடு என்பதன் காரணமாகவும் சீனா நமது கவனத்தை ஈர்க்கிறது. சோசலிச நோக்கிலான திட்டமிடுதலும், திட்டத்தின் அடிப்படையில் உறுதியான செயல்பாடும்தான் சீனாவின் வளர்ச்சிக்கான அடிப்படைகளாகும். அந்த வளர்ச்சியின் காரணமாக சீன சமூகத்தில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களையும், பன்னாட்டு அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்:

கார்ல் மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘பாட்டாளி வர்க்கம் தன் அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்த தொகையை முழு வேகத்தில் அதிகமாக்கும்.’ சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரிதலை உள்வாங்கியே செயல்படுகிறது.

1980களில் டெங் சியோ பிங் பேசும்போது “சோசலிசத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கு, பொருளாதார மேம்பாட்டில் நாம் மேற்கொள்ளும் சாதனைகளாலேயே முடியும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒப்பீட்டளவில் செழிப்பான நிலையை நம்மால் எட்ட முடிந்தால் அவர்கள்  ஓரளவு நம்பிக்கை கொள்வார்கள். அடுத்த நூற்றாண்டின் மத்திம காலத்திற்குள் சீனத்தை மிதமாக வளர்ச்சியுற்ற சோசலிச நாடாக மாற்றியமைத்துவிட்டோமானால் அவர்கள் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள்” என்று கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தமக்கென வகுத்துக் கொண்ட இலக்குகளை சுருக்கமாக, ‘நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மாநாட்டிலும் திட்டம் நோக்கிய தனது பயணத்தை ஆய்வுசெய்து சரிப்படுத்திக் கொண்டே கட்சி முன்னேறியிருக்கிறது. சீனத்தை மிதமான செழிப்புடன் கூடிய சமூகமாக (moderately prosperous society) வளர்த்தெடுப்பதுதான் அவர்களின் முதல் இலக்கு. 2020 ஆம் ஆண்டில் சீனா இந்த இலக்கை எட்டிவிடும். முதல் இலக்கின் சாதனைகளை அடித்தளமாகக் கொண்டு அடுத்த இலக்கை, அதாவது ‘சிறப்பான நவீன சோசலிச சமூகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்” என்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி.

19வது மாநாட்டின் முடிவில், இரண்டாவது இலக்கினை, இருவேறு நிலைகளாகப் பகுத்திருக்கிறார்கள். அதன்படி 2020 முதலான 15 ஆண்டுகளில் அடிப்படையான சோசலிச நவீனமயத்தை நிறுவ வேண்டும் என்றும் அடுத்த  15 ஆண்டுகளில் செழிப்பான, வலிமையான, ஜனநாயகப் பண்புகள்கொண்ட, முன்னேறிய பண்பாட்டுச் சூழலை உடைய, நல்லிணக்கம் கொண்ட (harmonious),  அழகிய நாடாக நவீன சீனத்தை கட்டமைக்க வேண்டும். அதாவது அவர்கள் ஏற்கனவே வரித்துக்கொண்ட கால அளவிலிருந்து 15 ஆண்டுகள் முன்கூட்டியே இதனைச் சாதிக்கமுடியும் என்கிறார்கள்.

சோசலிசத்தின் தொடக்க நிலை:

ஜி ஜின்பிங் பேசும்போது, ‘சீனா இன்னும் சோசலிசத்தின் தொடக்க நிலையிலேயே (primary stage of socialism) உள்ளது. உலகின் மிகப்பெரிய வளரும்நாடு என்ற அதன் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை’ எனக் குறிப்பிடுகிறார். எனவே முதலில் சோசலிசத்தின் தொடக்கநிலை என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் இடைநிலைக் கட்டமே சோசலிசம் என மார்க்சும் எங்கல்சும் கூறுகின்றனர். அதாவது சோசலிசத்தின் வழியாகவே, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம் உருவாகிறது. இந்தப் புரிதலில் இருந்துதான் ‘சோசலிசத்தின் தொடக்கநிலை’ என்ற கருத்துரு உருவானது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக் காலகட்டத்தில் நிலவுகின்ற உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சிநிலையைப் பொறுத்து பல இடைக்கால நிலைகளை உருவாக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் இருந்து இது படிப்படியாக தெளிவுபடுத்தப்பட்டது. சீனப் புரட்சியின்போது, சீனா அரை நிலவுடமை-அரைக்காலனிய நாடாக இருந்தது. எனவே அதன் காரணமாக சீனத்தின் பொருளாதாரத்தை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்லுதல் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட முடியும். 1952 ஆம் ஆண்டில் சீனத்தின் தனிநபர் உற்பத்தி (per capita GNP) இந்தியாவை விடவும் குறைவாக இருந்தது. சோவியத் ஒன்றியம் 1928 ஆம் ஆண்டில் கொண்டிருந்த தனிநபர் உற்பத்தியில் ஐந்தில் ஒருபங்குக்கு அது சற்றே அதிகமாகும். எனவே, ஒரு நவீன சோசலிச சமூகமாக சீனாவை வளர்த்தெடுக்க குறைந்தது நூறு ஆண்டுகள் பிடிக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. இவ்வாறு மாறிச் செல்வதற்கான நடைமுறையையே ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தைக் கட்டமைத்தல்’ என அவர்கள் அழைத்தனர்.

பரிணமித்து எழுந்துள்ள முதன்மை முரண்பாடு:

சீனத்தில் நிலவும் முரண்பாடுகளைப் சீர்தூக்கிப்பார்த்தே கம்யூனிஸ்ட் கட்சி தனது உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. 1949 ஆம் ஆண்டுகளில் “மக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும், நிலவுடைமைக்கும், கோமிண்டாங் சக்திகளின் மிச்சசொச்சங்களுக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையானதாக மதிப்பிடப்பட்டது. 1981 ஆம் ஆண்டுகளில் “மக்களின் பொருளியல், பண்பாட்டு தேவைகளுக்கும் பின்தங்கிய சமூக உற்பத்திக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையாக எழுந்தது.

தற்போது சீன சமூகத்தில் பரிணமித்திருக்கும் முதன்மை முரண்பாடு குறித்து கட்சி சீர்தூக்கிப்பார்த்துள்ளது. சீன மக்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்துவரும் போதிலும், அந்த நாட்டின் மக்களிடையே புதிய தேவைகள் உருவாகி வருகின்றன.  மக்களின் பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகள் மட்டுமல்லாமல்,  ‘மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல்’ என தேவைகள் வளர்ந்து வருகின்றன. எனவே அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும்.

கடந்த ஆண்டுகளின் திட்டமிட்ட வளர்ச்சியின் காரணமாக சீனத்தின் உற்பத்தி சக்திகள் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் சீனத்தின் பல பகுதிகள் உற்பத்தியில்  உலகிற்கே முன்னோடியாக உள்ளன. எனினும், வட்டாரங்களுக்கு இடையிலும், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலும் வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளும், போதாமையும் நிலவுகின்றன.

எடுத்துக்காட்டாக குசோவ் பகுதியில் ஆண்டு சராசரி வருமானம் 15,121 யுவான். இந்தத் தொகை ஷாங்காயில் நிலவும் சராசரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகும். மக்கள் சமூகக் குழுக்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். நகரங்களுக்கும், ஊர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், போக்குவரத்து வசதிகளில் முன்னேற்றம் என தேவைகள் ஒருபக்கம் எழும்போது – மற்றொரு பக்கம் தேவைகள் நிறைவடைந்த மக்களிடையே ஏற்கனவே குறிப்பிட்ட புதிய வேட்கைகள் உருவாகியுள்ளன. இவ்வாறு சீன சமூகத்தில் எழுந்துள்ள முதன்மை முரண்பாடு, சீனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும்.

சீனாவை கட்டுப்படுத்த விரும்பும் சக்திகள்:

அதேபோல பன்னாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய நாடான சீனா தற்போது பல அளவுகோல்களில் வலிமையடைந்து வருகிறது. சீனா வலிமையடைவதனால் எழுகின்ற சவால்கள் முக்கியமானவை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினரான லீ ஷன்சூ இதுபற்றிக் குறிப்பிடும்போது, “பன்னாட்டுச் சக்திகள் பலவும் சீனாவைக் கண்டு கிலியடைகிறார்கள், (சீனாவை) கட்டுப்படுத்தி (contain) அல்லது கட்டாயப்படுத்தி நிறுத்த வேண்டும் என்கிற முடிவை அவர்கள் மேற்கொள்கின்றனர்” எனக் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் பயன்படுத்திய சொற்களைத்தான்.

சீனப் பொருட்கள்மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த சில கட்டுப்பாடுகளும், அதற்கு பதிலடியாக சீனா விதித்த கட்டுப்பாடுகளையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் பங்குச்சந்தையில் கடும் விளைவுகளை இந்த முடிவு ஏற்படுத்தியது. இதுவொரு வணிக யுத்தமாக மாறிவிடக் கூடாது என்ற கருத்து சர்வதேச தளத்தில் எழுகிறது. 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகான உலகமய சூழலில், சீனா மெல்ல மைய அரங்கை நோக்கி நகர்வது புலப்படுகிறது.

எனவே சீனத்தின் உள்நாட்டு சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பன்னாட்டுச் சூழலை எதிர்கொண்டு நிற்கவேண்டிய தேவை, நூற்றாண்டின் அடுத்த இலக்கினை நோக்கி மாறிச்செல்ல வேண்டிய தேவையும் – கட்சியின் இலக்குகளில் பகுப்பாய்வு மேற்கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன.

நவீன மயமான சீன சமூகத்தை நோக்கி:

2020 ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த இலக்குக்கான பயணம் தொடங்குகிறது.  சோசலிச நவீனமயத்தை நோக்கி சீனா முன்னேற வேண்டியுள்ளது. அதன் வழியே மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் புதிய வேட்கைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை எதிர்கொள்ளவும் வேண்டும். இதுபற்றி அக்கட்சியின் தலைவர்கள் குறிப்பிடும்போது, “இன்றுள்ள வளர்ந்த முதலாளித்துவ நாடுகள், நவீனமயத்தை எட்டுவதற்கு தொழிற்புரட்சிக்குப் பின்னர் 300 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதோடு ஒப்பிடுகையில் சீனா அளவிலும் வே கத்திலும் அளப்பரிய மாற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. பொருளாதாரம், அரசியல் விசயங்கள், பண்பாடு, சமூகம் மற்றும் சூழலியல் துறைகளின் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இவை சமூகத்தை முன்னோக்கி செலுத்தும். மேலும் உத்தி அடிப்படையிலான முக்கியத்துவம் வாய்ந்தவை – இந்த வெற்றியை சாதிக்க தத்துவ, அரசியல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை” என்கின்றனர்.

உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதும், அடிமைத் தளைகளில் இருந்து மக்களை விடுவிப்பதும், சுரண்டலை, பிரிவினைகளை ஒழிப்பதும் சோசலிசத்தின் அடிப்படைகளாகும். அதன் மூலமே வளர்ச்சியை அனைவருக்குமானதாக்க முடியும். இவ்விசயத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அடையும் முன்னேற்றம் ஒரு நாட்டின் சாதனையாக மட்டும் முடிந்து விடாது. மார்க்சிய – லெனினிய அடிப்படையில் அடைகிற வெற்றி என்ற வகையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அது முக்கியமானது. உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அது அமைகிறது. விஞ்ஞான சோசலிசத்தின் உயிர்த்துடிப்பான முன்னுதாரணமாகவே சோசலிச நாடுகளின் வெற்றிகளைக் கருத வேண்டும்.

வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை:

அரசும் புரட்சியும் என்ற நூலில் தோழர் லெனின் குறிப்பிடும்போது, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மேலாண்மை ‘முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி விட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல; முதலாளித்துவத்தை வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் காலகட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது’ என்கிறார். மேலும் அவர் அந்த இடைக்காலத்தில் உருவாகும் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களின் சாராம்சம் ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே’ அதாவது மெய்யான ஜனநாயகமாகவே இருக்கும் என்கிறார்.

வலிமையானதும், மார்க்சியத்தில் பற்றுறுதி கொண்டதும், ஜனநாயக மத்தியத்துவ நெறிகளின் அடிப்படையில் இயங்குவதுமான கட்சி இல்லாமல் இது சாத்தியமில்லை. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப கட்சியைத் தகவமைத்து, சோசலிச காலகட்டம் முழுமைக்கும் இடைவெளியில்லாத போராட்டங்களை நடத்த வேண்டும். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.

‘கட்சி நிறுவப்பட்ட தொடக்ககால இலக்குகளுக்கு உண்மையாக இருப்பது’ குறித்த பிரச்சாரத்தை, கட்சிக்குள் முன்னெடுக்க உத்தி வகுத்துள்ளனர். அதாவது அவர்கள் சோசலிச லட்சியங்களைக் குறித்த பிரச்சாரத்தினை உட்கட்சி முழுவதும் நடத்தவுள்ளனர். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அசமத்துவ வளர்ச்சி என்ற சிக்கலை எதிர்கொள்வதில் குவிக்கப்படவுள்ளது. புதிய சவால்களை எதிர்கொள்ள புதிய சிந்தனைகளையும், புதிய அளவுகோல்களையும் கைக்கொள்ள வேண்டும் என உணர்ந்துள்ளனர்.

கட்சிக்குள் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள்:

சீன மக்களிடையே அதிகரித்து வரும் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு உயிர்த்துடிப்பான கட்சி இல்லாதபோது சாத்தியமில்லை. மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல் ஆகிய வேட்கைகளை கட்சி நிறைவேற்றியாக வேண்டும். அதற்கேற்ற வகையில், மார்க்சிய நோக்கில்,காலத்தில் முந்திச் செயல்படும் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. மக்கள் ஆதரவுடன், தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ளும் தகுதியுடன், சோதனைகளை எதிர்கொண்டு அக்கட்சி முன்செல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவத்தை உயர்த்திப் பிடித்து, கட்சிக்குள் நேர்மறையான, ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், ஒருங்கிணைப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் சீன கட்சி மேற்கொண்டுள்ள சில மாற்றங்கள் உலக அரங்கில் விவாதத்தை கிளப்புவதாகவும் அமைந்திருக்கின்றன.

சீன கட்சியின் அமைப்புச் சட்டத்தில் ‘புதிய காலகட்டத்திற்கான சீன பண்புகளுடன் கூடிய சோசலிசம் குறித்த ஜி ஜின்பிங் சிந்தனைகள்’ என்ற வரிகளை இணைத்துள்ளனர். அது பற்றி லி ஷான்சு குறிப்பிடும்போது, “18வது தேசிய மாநாட்டிக்குப் பின்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய கருத்துகள், புதிய சிந்தனை மற்றும் தேசிய ஆளுகைக்கான புதிய உத்திகளையே அவ்வாறு குறிப்பிடுவதாக கூறுகிறார். மேலும் ஏற்கனவே அந்த நாட்டு கட்சியின் தலைமை ஜி ஜின்பிங் தலைமைக்கு ‘கோர்’ எனப்படும் முக்கிய தலைவர்களுக்கான இடத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பாக தோழர்கள் மாவோ, டெங் சியோபிங் ஆகியோர் கோர் என்ற இடத்தைப் பெற்றுள்ளனர்.

நூற்றாண்டுக்கான இரண்டு இலக்குகளில் இது மாறிச்செல்லும் காலகட்டம் என்பதால், ஒருவர் நாட்டின் தலைவராக நீடிக்கும் பதவிக்காலத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றியிருக்கின்றனர். இது தனிநபரிடம் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்குமா? என்ற கேள்விகளும் எழும்புகின்றன.

“இத்திருத்தங்கள், அரசமைப்பிலும் கட்சியிலும் செயல்படும் தலைவர்களுக்கு ஓய்வுகொடுக்கும் முறைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆயுள் காலத்திற்கும் பதவியில் நீடிக்கலாம் என்ற பொருளையும் தராது” என சீன பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி தெரிவிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு முன் உள்ள நான்கு பரிசோதனைகள் மற்றும் நான்கு பேராபத்துகளைப் பட்டியலிட்டிருக்கிறது. ஆளுகை, பொருளாதார சீர்திருத்தம், சந்தைப் பொருளாதாரம் மற்றும் வெளியில் உள்ள சூழல் ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னுள்ள நான்கு பரிசோதனைகள். தூண்டுகோல் இல்லாதது, திறமைக் குறைவு, மக்களின் ஈடுபாடின்மை, செயலின்மை/ஊழல் ஆகிவை நான்கும் பேராபத்துகளாகும்.

சீனத்தில் சோசலிசத்தை தக்கவைக்கும் சக்திககளின் போராட்டமாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுவதைப் போல, “சோசலிசத்தை வலிமைப்படுத்தி உறுதிப்படுத்த முன்நிற்கும் சக்திகளுக்கு உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளின் ஆதரவு என்றென்றைக்கும் இருக்கும். சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசத்தை வலிமைப்படுத்துவதில் எட்டும் ஒவ்வொரு சாதனையும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னேற்றுவதற்கான பங்களிப்புகளாகும்.”

 

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) என்ற 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் மத்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை குறிப்பாக 1991லிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்தும் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அமர்த்தியா சென் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பொதுவாக எதிர்ப்பவரல்ல; ஆனால் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ளவர்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பல நாடுகளை இந்திய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு ஏன் சமூக நல குறியீடுகளில் இந்தியாவில் வளர்ச்சியில்லை என்பதை ஆய்வு செய்திருக்கிறார்கள். பக்கம் 45ல் உள்ள அட்டவணையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா 15 ஏழை நாடுகளின் சராசரி 16 நாடுகளில் இந்தியாவின் இடம்
2011ல் ஜிடிபி தலா உற்பத்தி 3203 டாலர் 2112 டாலர் 1
சராசரி வாழ்நாள் ஆண்டு (2011) 65 67 9
சேய் இறப்பு விகிதம் (உயிருடன் பிறக்கும் 1000 சேய்களில் ஒரு ஆண்டுக்கு இறக்கும் சேய்கள் எண்ணிக்கை) 47 45 10
5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகள் 61 56 7
குழந்தை பிறப்பு விகிதம் (Total Fertility Rate %) 2.6 2.9 7
சுகாதார வசதி கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் % (2010) 34 57 13
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, பெண்கள் 74 79 11
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, ஆண்கள் 88 85 9
ஊட்டச்சத்து கிடைக்காத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (2006-10) குறைவான எடையுள்ளோர் 43 30 15
வளர்ச்சி குன்றியவர் 48 41 13

உலக வங்கி ஆய்வின் படி 2011ல் (சஹாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அல்லாமல்) மொத்த உற்பத்தி – தனிநபர் வருமானத்தில் மேற்கண்ட 15 நாடுகள் மிகக் குறைவாக உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பர்மா, கம்போடியா, ஹெய்த்தி, கிர்கிஸ்தான்,  லாவோஸ், மால்டோவா, நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா – ரியுகினி, கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், வியத்நாம், ஏமன் ஆகிய நாடுகள் எல்லாம் இந்தியாவை விட சராசரி தனிநபர் வருமானத்தில் குறைவாக உள்ள நாடுகள். ஆனால், சராசரியாகப் பார்த்தால் வாழ்க்கைத் தரத்தில் மேலாக உள்ளன. மேற்கண்ட நாடுகளில் ஒரேயொரு அம்சத்தில் தான் – குறிப்பாக ஒட்டு மொத்த வளர்ச்சி, சராசரி தனிநபர் வருமானத்தில் மட்டுமே தான் – இந்தியா முதலிடத்தில் உள்ளது. மற்ற  9 குறியீடுகளில் இந்தியா ஒன்றில் கூட முதலிடத்தில் இல்லை.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சமூகவள மேம்பாட்டு குறியீடுகளில் ஆசிய நாடுகளில் 2வது இடத்தில் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் மொத்த உற்பத்தி வளர்ச்சி ஏணியில் இந்தியா மேலே சென்றிருக்கிறது. ஆனால் சமூகவள மேம்பாட்டு வளர்ச்சியில் கீழே சரிந்துள்ளது.

மேற்கண்ட கல்வி, சுகாதாரம், சேய் இறப்பு விகிதம், சராசரி மனித வாழ்நாள் ஆண்டு உள்ளிட்ட 10 குறியீடுகளில் மற்ற எல்லா குறியீடு களிலும் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.

இதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பலனை பெரும்பான்மையான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பயன்படுத்தும் அளவிற்கு மத்திய அரசு திட்டமிடவில்லை.

இந்த அவலத்திற்கு விடை காண வேண்டுமென்றால் இந்தியா கடைபிடித்து வந்த பாதையை பரிசீலிக்க வேண்டுமென்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். “வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இடையில் உள்ள தொடர்பு ஒன்று மற்றொன்றின் வளர்ச்சிக்கு ஆற்றிடும் பங்களிப்பு ஆகிய அம்சங்களே” என்பதுதான் தங்களுடைய நூலின் முக்கியமான சாராம்சம் என்று நூலாசிரியர்கள் கூறுகிறார் கள்.

தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்தது ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி). கல்வி, சுகாதாரம், வாழ்நாள் ஆண்டு போன்ற சமூகவளக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றம் மேம்பாடு என அழைக்கப்படுகிறது. வளர்ச்சி, மேம்பாடு என்ற இரண்டு அம்சங்கள் குறித்து ஏராளமான அம்சங்களை நூலாசிரியர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக கல்வி உள்ளிட்ட பல அம்சங்களில் ஏற்படும் மனிதவள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு உந்தும் சக்தியாக இருக்கும். எனவேதான் வளர்ச்சியின் பலன் மேம்பாட்டிற்கு பயன்பட்டுள்ளதா என்ற கேள்வியை நூலாசிரியர்கள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திட பயன்பட்டுள்ளதா என்பது தேசவருமானம் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதோடு அரசுக்கு கிடைக்கக் கூடிய வருவாயை மேம்பாட்டிற்காக அரசு பயன்படுத்துகிறதா என்பதையும் பொருத்துள்ளது. உதாரணமாக சீன அரசு அந்நாட்டு ஜிடிபியில் 2.7 சதவிகிதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்யும் சுகாதாரச் செலவு ஜிடிபியில் 1.2. தான். இது போன்று பல துறைகளுக்குமான அரசு ஒதுக்கீடுகளையும் செலவாகும் தொகைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

கல்வி:

“வறுமை என்ற துயரத்தின் கோபுரம் இந்தியாவின் இருதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்லாமை என்றே நான் கருதுகிறேன்” என சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மகாகவி தாகூர் கல்வி பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளதை நூலாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். தாகூரின் வார்த்தைகள் அக்காலத்தில் இந்தியாவில் நிலவிய கல்லாமையைப் பற்றிய கடுமையான கண்டனமாகும். நாடு விடுதலை பெற்ற பிறகு பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு தரமான பள்ளிக் கல்வியும் உயர் கல்வியும் கிடைக்காத அவலம் நீடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் பெருமளவிற்கு கல்வியில் ஏற்படும் வளர்ச் சியைப் பொருத்தே அமையும்.

12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி தேவை என்ற கொள்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு உயர்கல்வியில் நாடு முழுவதும் சுயநிதி கல்வி நிலையங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் சேர இயலாது. நடுத்தர மக்கள் பகுதியில் கூட உயர் நடுத்தர பகுதியினரே லட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்வி நிலையங்களில் சேர்க்க முடியும்.

இந்தியாவில் சாதிய ரீதியிலும், மத ரீதியிலும், பாலின ரீதியிலும் உயர்கல்வி பெறும் வாய்ப்பில் பெரும் ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது. பழங்குடி மக்களும் பின்தங்கியுள்ளனர், இத்தகைய ஏற்றத்தாழ்வை போக்காத வரையில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்புகிற வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்காது. இதன் விளைவாக சமூகவள மேம்பாட்டில் இந்தியா மற்ற ஏழை நாடுகளை விடவும் பின்தங்கியே இருக்கும்.

கல்வி அளிக்கும் பொறுப்பை (பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி) அரசு தனியாருக்கு விடுவது கல்வித்துறையில் மேம்பாடு அடைய உதவாது என்பதை நூலாசிரியர்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.

சுகாதாரம்:

வங்காளதேசம் போன்ற ஏழை நாடுகளை விட இந்தியா இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தாலும் சேய் இறப்பு விகித எண்ணிக்கையிலும் மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொதுச் சுகாதாரத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் மத்திய – மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததே.

2011 இல் இந்தியாவில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம். ஆனால், வங்காளதேசத்தில் இது 10 சதவிகிதமாகவும் சீன நாட்டில் 1 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதியில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

கடந்த 20 ஆண்டு காலமாக அரசுகள் ஜிடிபியில் 1 சதவிகிதமே சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்பொழுது ஒதுக்கீடு 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனத்தில் 2.7 சதவிகிதமும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3.8 சதவிகிதமும் ஐரோப்பிய நாடுகளில் 8 சதவிகிதமும் உலக சராசரி ஒதுக்கீடு 6.5 சதவிகிதமாகவும் உள்ளது.

சுகாதார வசதி இந்தியாவில் பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது என நூலாசிரி யர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்திற்கு ஆகும் செலவில் அரசின் பங்கு 70-85 சதவிகிதம், அமெரிக்காவில் 50 சதவிகிதம், உலக சராசரி 63 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் அரசின் பங்கு 29 சதவிகிதம் மட்டுமே. கீழ்க்கண்ட பட்டியலில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுகள் சுகாதாரத்திற்கு அரசின் மொத்த பங்கு
இந்தியா 29
தெற்காசியா 30
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள் 45
கிழக்காசியா  பசிபிக் 53
மத்திய கிழக்கு  வட ஆப்பிரிக்கா 50
லத்தீன் அமெரிக்கா  கரீபியன் 50
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா 65
உலக சராசரி 63
ஐரோப்பிய யூனியன் 77

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 5-லிருந்து 9 சதவிகிதம் வரையில் உயர்ந்திருந்தாலும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயில் சுகாதாரத்திற்கு போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்யாமல் தனியாருக்கு விட்டுவிட்டது. இதனால், மனிதவள மேம்பாட்டில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

மத்திய அரசு 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டமும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை. மருத்துவ காப்பீட்டு முறையும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது.

வறுமை ஒழிப்பு:

அத்தியாயம் 7 வறுமை ஒழிப்பு பற்றி விளக்குகிறது. இந்தியாவில் அமலாக்கப்பட்டு வரும் பொதுவிநியோகமுறைத் திட்டத்தை மேலும் பலப்படுத்திட வேண்டுமென்று நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர். வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதிலும் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் (நூல் வெளியாகிற போது மசோதா வடிவத்தில் இருந்தது) பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவிநியோக முறையில் நேரடி பணப்பட்டுவாடா முறை கூடாது என்றும் இதற்கு மாறாக, ஏற்கனவே அமலில் உள்ள பொது விநியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிறார்கள்.

ஏற்றத் தாழ்வின் பிடியில் இந்தியா:

நூலில் 8 அவது அத்தியாயத்தில் இந்தியாவில் சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாலின ரீதியிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள சாதிய அமைப்பு முறை ஏற்றத் தாழ்வை நிலைநிறுத்துவதற்கு பல காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. வர்க்க ஏற்றத்தாழ்வுக்கும் பாலின ஏற்றத்தாழ்வுக்கும் சாதிய அமைப்பு முறையும் காரணமாக உள்ளது என நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வு அகற்றப்பட வேண்டுமென்று அம்பேத்கரையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் ஜிடிபியில் முன்னேற்றம் இருப்பினும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயை சமூகவள மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தாதது இந்தியா பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். கடந்த 2012-13 ஆண்டு நிதிநிலை அறிக்கையை சுட்டிக்காட்டி கார்ப்பரேட் கம் பெனிகளுக்கு 5,29,432 கோடி ரூபாய் சலுகை அளிப்பதன் மூலம் அரசிற்கு வரக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. (* இது மதிப்பீடுதான். அநேகமாக இறுதி கணக்கு கூடும். 2010-11 இல் இவ்வாறு அரசால் இழக்கப்பட்ட வரி வருமானம் ரூ. 5, 73, 000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு சமூகவள மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஊடகங்களைப் பற்றி:

கல்வி, சுகாதாரம் போன்ற சமூகவள மேம்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. மேலும், கல்வியும் சுகாதாரமும் போதுமான அளவிற்கு இந்தியாவில் விவாதப் பொருளாக மாறாததும் கவலைக்குரியது என்பதையும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகவள மேம்பாடு ஆகிய இரண்டையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு ஆழமாக ஆய்வு செய்து இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் வளர்ச்சியின் பலன் சமூகவள மேம்பாட்டிற்கு பயன்படவில்லை. காரணம் மத்திய அரசு கடைபிடித்த பெரும்பாலான மாநில அரசுகளும் பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கைகளே.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள பணக்கார மற்றும் உயர் நடுத்தர மக்களின் (மேல்தட்டில் உள்ள ஒரு சிறு பகுதி) வாழ்க்கைத் தரம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. ஆனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வருமானம் அதிகரிக்கவில்லை. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. தேசிய மாதிரி சர்வே (அரசு நிறுவனம்) செய்ததில் 1993லிருந்து 2010 வரையிலான காலத்தில் கிராமப்புறத்தில் தனிநபர் வாங்கும் சக்தி 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நகர்ப் புறங்களில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலத்தில் சீனாவில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட) ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் இந்தியாவில் 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித் துள்ளது.

நூலாசிரியர்கள் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட சமூகவள மேம்பாடு பற்றி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். “சோவியத் யூனியனில் துவங்கி சீனா, வியத்நாம், கியூபா வரையில் அனைவருக்கும் இலவச கல்வியை அமலாக்குவதில் குறியாக இருக்கிறார்கள்”. 1930 இல் நோபல் பரிசு பெற்ற தாகூர் சோவியத் யூனியன் சென்று வந்த போது குறுகிய காலத்தில் சோவியத் நாட்டில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் வசதி படைத்தவர்களுக்குக் கூட அத்தகைய கல்வி கிடைக்கவில்லை என்பது தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” (1848 இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்டது) குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற அம்சத்தை கம்யூனிச நாடுகள் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்தன என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இத்தகைய ஏற்றத்தாழ்வே, ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகிவிடும் என கீழ்க்கண்ட வாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

“நாம் முன்னரே கண்டபடி பல பரிமாணங்களைக் கொண்ட சமத்துவமின்மை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தேவையான கருவிகளை தானே உருவாக்கிக் கொள்கின்றது. குறிப்பாக பொதுத்தளத்தில் நடக்கும் விவாதங்களையும் ஊடகச் செய்தி வெளியீடுகளையும் உருக்குலைத்து இதனைச் செய்கின்றது. பெரும் சமூகப் பிளவுகள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கு  இடையே அதிகாரத்திலும் அவர்கள் தரப்பு கருத்து கேட்கப்படுவதிலும் மிகுந்த ஏற்றத்தாழ்வோடு இருக்கின்றன. மேலும் சமூகத்தின் அடித்தட்டு பகுதிகள் குறித்த ஊடக கவனத்தையும் பொதுத்தளத்தில் அவர்களது பிரச்சனைகள் குறித்த விவாதங்களையும் நடக்க விடாது அவர்களது எல்லாம் இழந்த நிலையை குழப்பி மறைக்கின்றது. ஊடக கவனமும் பொதுத்தள விவாதங்களும் எல்லாம் பெற்ற மக்களின் நலன்களுக்காகவே நடக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் எதிர்ப்பைக் கூறும் வலுத்த குரலுக்கு இடமளிக்காமலிருப்பது உட்பட ஜனநாயகத்தின் வழிமுறைகளை மறுத்து சமத்துவமின்மையை எதிர்கொள்ள விடாமல் செய்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் வசதிகளை அனுபவிப்பவருக்கும் பிறருக்கும் இடையேயுள்ள பெரும் ஏற்றத் தாழ்வை மறைக்கின்றது”.

‘சமூகநல பொருளாதாரம்’ குறித்து நீண்ட காலமாக அமர்த்தியா சென் செய்த ஆய்வுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. வல்லுநர் சென்னுடன் இன்னொரு வல்லுநர் ஜீன் டிரஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள நூல் இது.

இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் நலன்களுக்காக அமலாக்கப்பட்டு வந்த பல பல சமூகநலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதோடு அத்தகைய திட்டங்களையே கைவிடும் அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் இக்காலத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது. சமூகநல மேம்பாட்டிற்காக போராடக் கூடியவர்களுக்கு இந்நூல் பேராயுதமாக அமையும்.

இந்திய – சீன எல்லைப் பிரச்சனை !

கடந்த சில பல வாரங்களாகவே இந்திய ஊடகங்கள் இந்தியா மீது சீனா படையெடுப்பு, எல்லையில் அத்துமீறல், இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு என பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தன. தேசிய மாநில கட்சிகளின் அரசியல் தலைவர்களும் சீனாவுக்கு பதிலடி தர வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டனர். ஆளுங் காங்கிரஸ் கட்சி, ஒரு பக்கம் எதிர்கட்சிகளை சமாளிக்க சீனாவுக்கு சவால் விடுவது போல் பேசிக்கொண்டே மறு பக்கத்தில் இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவே முயற்சித்தது.

பிரச்சனைதான் என்ன?

2013 ஏப்ரல் 15 அன்று இரவு சீன ராணுவத்தைச் சார்ந்த 50 வீரர்களைக் கொண்ட காலாட்படை பிரிவு கிழக்கு லடாக் பகுதியில் தௌலத் பெக் ஒல்டி என்ற இடத்தில் ஒரு தற்காலிக முகாமை அமைத்தது. இந்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில்தான் இந்திய ராணுவ முகாம் ஒன்று உள்ளது. ராணுவம் அமைத்த தற்காலிக முகாம் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டதல்ல என்பது சீனாவின் வாதம். இல்லை இல்லை இந்திய பகுதிக்கு உட்பட்டது என்பது இந்தியாவின் வாதம். இதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இதைத் தொடர்ந்துதான் கிழக்கு வடாக் பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்ததாக ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் அறிக்கை விட்டார்.  தேச நலனை பாதுகாக்க இந்தியா எல்லா நடவடிக்கையையும் எடுக்கும் என கூறினார்.

மன்மோகன் சிங் மட்டும் சற்று அடக்கமாக, இது உள்ளூர் பிரச்சனைதான் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற வகையில்  கருத்து தெரி வித்தார். ஏற்கெனவே திட்டமிட்டபடி மே மாதம் இரண்டாவது வாரத்தில் சீனா செல்வதாக இருந்த வெளி விவகார துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பிஜேபி சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் உரத்த எதிர்ப்பிற்கு பயந்து தனது சீன பயணத்தை ரத்து செய்தார். இந்திய அயல்துறை செயலர் ரஞ்சன் மத்தாய், சீன தூதரக அதிகாரியை அழைத்து எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பழைய நிலைக்கு சீன துருப்புகள் திரும்ப வேண்டும் என்று எச்சரித்தார். சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் சீன அதிகாரிகளுடன் விரைந்து பேசி ஒரு சுமுகமான தீர்ப்பு ஏற்பட கடும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இறுதியில் மே 6 அன்று இந்திய அயல்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் இந்தியாவும் சீனாவும் இந்த எல்லை பிரச்சனையை பேசி தீர்த்துக்கொண்டதாகவும், ஏப்ரல் 15ந்தேதிக்கு அவரவர் எல்லைக்குள் துருப்புகளை நிறுத்திக் கொள்வதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் சீன அயல்துறை அமைச்சகமும் இந்த பிரச்சனை பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாடுகளின் பரந்த நலன் களை முன்னிட்டு சுமுகமாக தீர்வு காணப்பட்ட தாக அறிக்கை வெளியிட்டது.

இந்திய சீன எல்லைப் பிரச்சனை நீண்ட நெடுங்கதை

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வரையறுக் கப்பட்ட எல்லைக்கோடு இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட வகையில் இதுவரையில் வரை யறுக்கப்படவில்லை. இந்த பிரச்சனை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து வரக்கூடிய பிரச் சனையாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்குமான இந்த எல்லை தாவா ஏன் தீர்வுகாண முடியாமல் உள்ளது என்பதற்குள் பல அரசியல் உள்ளது. சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவுடன் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மேற் கொண்டு இந்த எல்லைப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவோ அவ் வாறு ஒரு நீடித்த முயற்சியை மேற்கொண்டு இதுவரை இந்த எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

1914ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் வடக்கு கிழக்கு பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரந்த பகுதியை சீனா விட்டுத்தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

மீண்டும் 1930ல் அதே போன்று ஒரு முயற்சி யில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இறங்கியது. இம்முறை வலுவிழந்து இருந்த அன்றைய சீன அரசை நிர்பந்தித்து தாங்கள் விரும்பிய பகுதியை இந்திய பிரிட்டிஷ் அரசு இந்தியாவுடன் இணைத்துக்கொண்டது. வருங் காலத்தில் இதுவே நிரந்தரமாக்கப்பட்டு விடும் என பிரிட்டிஷ் அரசு நம்பியிருந்தது. துவக்கத்தில் மக்கள் சீன குடியரசும் அவ்வாறே கிட்டத்தட்ட அந்த எல்லையை அங்கீகரிக்க விரும்பியது. இந்த எல்லைக்கோடு இருதரப்பிலும் ஒப்பந்தப்படி ஏற்றுக்கொண்டதல்ல என்பதையும் இந்த எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி தாவாவிற்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச்சென்ற இந்த எல்லைப் பிரச்சனைதான் இன்றும் தொடர்கிறது.

மக்கள் சீனக் குடியரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு பதிலாக, அன்றைய பிரதமர் நேரு, தாவாவுக்கு உட்பட்ட இந்த பிரச்சனையில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசு இணைத்துக் கொண்ட பகுதி இந்தியாவிற்கு உட்பட்டது என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்தார். அத்துடன் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அக்சாய் சின் பகுதியும் இந்தியாவிற்கு உட்பட்டது என்று வாதம் புரிந்தார். பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே இந்த பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும். அதுமட்டுமல்ல இந்தியாவின் வடக்கு பிராந்திய எல்லை பிரச்சனை தீர்வுகாணப்பட்ட பிரச்சனை என்றும், சர்வதேச அங்கீகாரம் உள்ளது எனவும் கூறி புதிய அதிகாரபூர்வ வரை படத்தையும் அப்போது நேரு வெளியிட்டார்.

நேருவிற்கு பின் வந்த அரசாங்கமும் நேரு கூறிய வாதத்தையே பின்பற்றி வருகின்றன. இந்திய எல்லை பிரச்சனையில் பேச்சுவார்த் தைக்கு இடமில்லை என்று கூறுவருகின்றன.

இருப்பினும் 1993ல் இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டிட ஒரு ஒப்பந்தம்போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு இரு நாடுகளிலும் பொது வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இரு நாடுகளுடன் இந்த எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நிரந்தர முகாம் களை அமைக்காமல் இருந்து வருகின்றன. இதற் கிடையே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடை யில் எல்லை பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பிலும் உள்ள படைகள் தங்களுக்கு இடையில்  தகவல் தொடர்பினை மேம்படுத்திக் கொள்ள இயலும். அதன் மூலம் அசம்பாவிதங் கள் நடக்காமல் தவிர்க்கலாம் என்பதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இதற்கிடையில் சில வருடங்களாகவே இரு நாடுகளுமே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி யில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் இந்திய அரசு எல்லை கட்டுபாடு பகுதிக்கு மிக அருகாமையில் ராணு விமான தளம் ஒன்றை நிறுவி வருவதை சீனா சாதாரண மாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல் இந்திய துருப்புகள் அதிகமாக இப்பகுதியில் நடமாடுவதையும் சீனா விரும்பவில்லை என்று தெரிகிறது. வெகு சமீபத்தில் லடாக் பிராந்தி யத்தில் உள்ள சுமர் மற்றும் பக்சே பகுதியில் இந்திய ராணுவம் பதுங்கு குழிகளையும்  வேறு சில நிர்மாணப் பணிகளையும் மேற்கொண்டது தான் சீனாவிற்கு ஆத்திரமூட்டியுள்ளதாக தெரி கிறது.

1996ல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட அளவு துருப்புகளை மட்டுமே இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நிறுத்த வேண்டும். 2005ல் மேற்கொண்ட மற்றொரு ஒப்பந்தப்படி பிரச்சனைக்கு உட்பட்ட பகுதியில் நிரந்தரமான முகாம்களை அமைக்கக்கூடாது என்றும் கூறப் பட்டிருந்தது.

சமீபத்தில் அருணாசலபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில்  இந்திய அரசு புதிய படை பிரிவுகளை உருவாக்கியதும், மூன்று விமானப் படை தளங்களை ஏற்படுத்தியதும் சீனாவிற்கு எரிச்சலை தந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள துருப்பு களை குறைத்துக்கொள்ள ஒப்பந்தம் போடலாம் என சீன அரசு ஆலோசனை முன் வைத்தது. ஆனால் இந்திய அரசு தனது படைகளை அப் பகுதிகளுக்கு விமானம் மூலமே கொண்டு செல்ல முடியும் என்பதாலும், சீன ராணுவம் தரை மார்க்கமாகவே துருப்புகளைக் கொண்டுவர முடியும் என்பதாலும் கூடுதலாக துருப்புகளை நிறுத்தியுள்ளதைக் காரணம் கூறி தவிர்த்ததாகத் தெரிகிறது.

இருப்பினும் இவையெல்லாம் சீனாவின் தற்போதைய நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கருத முடியாது.

சமீபத்தில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் கேந்திரமான,  ராணுவ ரீதியான உறவுகளை மேற்கொண்டுள்ளன. பாரக்  ஒபாமா சீனாவை மட்டம் தட்டி வைக்க வேண் டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் சீனாவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.

ஒரு பக்கம் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சனையை தீர்க்க சுமுகமான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் 4வது தடவையாக முக்கூட்டு பேச்சுவார்த்தை சமீபத்தில் வாஷிங்டனில் நடத்தின என்ற பின்னணியிலும் சீனா மிகவும் உஷார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவும், ஜப்பானும் சீனாவின் பிரம் மாண்டமான வளர்ச்சிக்கு மத்தியில் சீனாவை பல வழிகளிலும் கட்டுப்படுத்த அமெரிக்க உதவி அவசியம் என கருதலாம். அதேபோல் மேற் கத்திய நாடுகளில் சில ராணுவ தந்திர குருமார் களும் இந்தியாவும், ஜப்பானும் ராணுவ ரீதியாக மெத்தனமாக இருக்காமல் தங்களது ராணு வத்தை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மந்திரம் ஓதுகின்றனர்.

இந்தியாவுடனான எல்லை பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே சீனாவின் கிழக்கு கடற்கரையோர பிராந்தியத்தில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையிலான தியாவூ தீவு பிரச் சனையில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் மோதல் உருவாகியது.

இந்த பிரச்சனையின் துவக்கமும் இதுதான். டோக்கியோவில் உள்ள யாசுகுனி கோயிலுக்கு ஜப்பானில் உள்ள எந்த மேல்மட்ட தலைவர் களும் செல்லக்கூடாது என்பது சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான ஒப்பந்தம். இந்த இடம் ஜப்பானின் போர்க்கால அட்டூழியங்களை நினைவுபடுத்துவதாக சீனாவும், தென் கொரியாவும் கருதுகின்றன. இந்த இடத்தில்தான் மிக மோசமான ஜப்பானின் போர் குற்றவாளி கள் புதைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை மீறி ஏப்ரல் 21 அன்று ஜப்பான் துணை பிரதமர் (நிதியமைச்சர்) அந்த இடத்தை சென்று பார்வை யிட்டார். இந்த இடத்தில் ஜப்பான் போர் குற்ற வாளிகள் ஆவிகள் தங்கியுள்ளதாக நம்பிக்கை. இந்த நிலையில் ஜப்பான் துணை பிரதமர் யாசுகுனி கோவிலைச் சென்று பார்த்தது சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான் தியாவு தீவு பிரச்சனை கிளம்பியதாக தெரிகிறது.

அத்துடன் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தில் ஏப்ரல் 24 அன்று 21 முஸ்லிம்கள் கொல்லப் பட்ட சம்பவமும் சீனாவிற்கு கவலயை ஏற் படுத்தியிருக்கலாம்.

இவ்வாறு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தனது நாட்டிற்கு எதிரான திட்டமிட்ட நடவடிக் கையாக சீனா கருதலாம். இதற்கு பதிலடி கொடுக்க சீனா தனது ராணுவ பலத்தை காட்டும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ளுகிறது என்று கருதுவதற்கும் இடமுண்டு.

ஆனால் இந்தியா அமெரிக்காவின் வலையில் விழுந்துள்ளது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இந்திய ராணுவத்தின் சொற்படி இந்திய அரசாங்கம் தனது அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை மேற்கொண்டால் நமக்குத்தான் சிரமம். தற்போதுள்ள நிலைமை யில் இந்தியா பெரிய வல்லரசாக வேண்டும் என்ற நோக்கத்தை கைவிட்டு, ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை பலப் படுத்தவும், அண்டை நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை பெறுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். குறிப்பாக சீனாவுடன் பரஸ்பர வர்த்தக பொருளாதார மேம்பாட்டிற்கான ஒப்பந்தங்களை மேற் கொண்டு ஆசிய நாடுகளின் பரஸ்பர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பது அவசிய மாகும். அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது ஆசிய நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும, தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் தொடர்ந்து முயற்சிக்கும் நிலையில் இந்த சூழ்ச்சி வலையில் சிக்காமல் இந்தியாவும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடு களும் பரஸ்பர ஒத்துழைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்திட வேண்டும்.