சுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை!

ஏ.கே.பத்மநாபன் நேர்காணல் …

14324230_296972730682567_2748406671079088980_oசெப் 2 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் வெற்றியாக எதைக் கருதுகிறீர்கள்?

வெற்றி என்பதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. இது தனிப்பட்ட ஒரு வேலை நிறுத்தம் அல்ல. கடந்த 25 ஆண்டுகளில் நவதாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு எதிராக இந்திய தொழிலாளர்கள் நடத்தும் 17 வது, நாடுதழுவிய வேலை நிறுத்தம் ஆகும்.

1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், புதிய தாராளமயக் கொள்கைகளை அமலாக்கத் தொடங்கியது. (எனினும், 1980களிலேயே இந்திகாந்தி அரசாங்கம் ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தம் போட்டு ரகசியமாக வைக்கப்பட்டதை பத்திரிக்கைகள் வெளிக்கொண்டுவந்தன) குறிப்பாக, ‘புரட்சியின் 25 ஆண்டுகள்’ என முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டுள்ள சூழலில், அந்தக் கொள்கைகளுக்கு வலுவான எதிர்ப்பை இந்திய தொழிலாளி வர்க்கம் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.

2013 பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி, இந்திய வரலாற்றில் காணாதவகையில் 48 மணி நேர வேலை நிறுத்தம் நடந்தது. 15 கோடிப்பேர் கலந்துகொண்ட அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் எந்தத் தொழிற்சங்கத்திலும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது, தொழிலாளர் சட்டத் திருத்தங்களால் நேரடியாக பாதிக்கப்படும் ஆலைத் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். உதாரணமாக ஹரியானா குர்கானில் இருந்து ராஜஸ்தான் எல்லை வரையில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள். ஹைதராபாத் ரெங்காரெட்டி மாவட்டத்திலும், புனே தொழிற்பேட்டையிலும், நாசிக்கிலும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்பைச் சொல்லலாம்.

தங்களை தொழிலாளர்களாக நடத்தவே மறுக்கும் நிலைக்கு எதிராக திட்டப்பணியாளர்கள் (ஸ்கீம் வொர்க்கர்ஸ்) வேலை நிறுத்தங்களில் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தக் கோரிக்கைகள் தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்லப்படும்போது, அவர்கள் உணர்ந்து பங்கேற்பது இங்கே முக்கியமாகச் சொல்லவேண்டியதாகும். இந்தியாவில் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதிகம், அதே சமயம் சங்கங்கள் ஏதிலும் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம். இந்த சூழலில், செப்.2 ஆம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் (கடந்த இரண்டு வேலை நிறுத்தங்களில் கடைசி நேரத்தில் பிஎம்எஸ் விலகிக்கொண்டபோதிலும்) 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது முதல் அம்சம்.

2009 ஆம் ஆண்டு வரையிலான 12 வேலைநிறுத்தங்களை இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் ஒருங்கிணைத்தன. அந்தப் போராட்டக் கோரிக்கைளை ஏற்ற பிற சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் (சங்கங்கள் போராட்டத்தில் இணையாதப்போதிலும் கூட) இப்போராட்டங்களில் பங்கேற்றனர். இந்த நிர்ப்பந்தமும், அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தீவிரமான மாற்றங்களும், ‘வேறு மாற்று இல்லை’ என்று பேசிவந்த சங்கங்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, 2010 ஆம் ஆண்டிலிருந்து ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்களும் அதைத் தொடர்ந்து பிஎம்எஸ் சங்கங்கள் இணைந்தனர். (இரண்டு வேலை நிறுத்தங்களில்தான் பிஎம்எஸ் பங்கேற்றது என்றபோதிலும்) இது இரண்டாவது அம்சம் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உண்மை ஊதியம் என்பவை என்ன?

இந்தியாவில் பல கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசுக்கென்று ஒரு ஊதியக் கொள்கை மட்டும் இல்லை. அப்படியொரு கொள்கை வேண்டுமென 1957 ஆம் ஆண்டில், 15வது இந்திய தொழிலாளர் மாநாடு விவாதித்து, (குடும்பத்தில் 3 பேர் இருப்பதாக மட்டும் ஒரு அடிப்படையை எடுத்துக் கொண்டு) உடலுக்குத் தேவையான கலோரி உள்பட கணக்கிட்டு அறிவியல் பூர்வமானதொரு கொள்கையை முன்மொழிந்தது. அந்தக் கொள்கையை ஏற்பதாக இன்றுவரையில் எந்த அரசும் சொல்லவில்லை.

1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்றில், தொழிலாளர்களின் மாறியுள்ள தேவைகளைக் கணக்கில்கொண்டு 25 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கவேண்டுமென கூறியது. அப்படிக் கணக்கிட்டால், இன்றைய விலைவாசி நிலைமையில் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வருகிறது. இருப்பினும் நடப்பில் உள்ள மிகக் குறைந்த ஊதியத்திற்கும், கோரிக்கைக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ள சூழலில், மத்திய அரசின் 7 வது ஊதியக் குழு நிர்ணயித்த ரூ.18 ஆயிரமாவது, குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்க என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு இடைக்கால இலக்குதான்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். ஊதியம் உயராமலே இருந்து விலைவாசி மட்டும் உயரும்போது, உண்மை மதிப்பில் குறைவு ஏற்படுகிறது. ஆண்டுகள் நகர நகர இந்த இடைவெளி கடுமையாக அதிகரிக்கிறது. திரட்டப்பட்ட தொழில்களில் பஞ்சப்படி கணக்கிடப்படும்போதும் அனைத்து தொழிலாளருக்கும் பஞ்சப்படி கிடைப்பதில்லை. எனவேதான், ஊதியம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஒவ்வொரு சங்கமும் தன் நலனை மையப்படுத்தித்தானே செயல்படும். சிஐடியு ஏன் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்க விரும்புகிறது?

இப்போது சிஐடியு மட்டும்தான் இதைச் செய்கிறதென்று சொல்லவில்லை. அதே சமயம், தொழிலாளர்களின்  பலம் என்பது அவர்களுடைய ஒற்றுமையில்தான் இருக்கிறது. நாடு முழுமையிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, ஒரு சமூக ரீதியிலான மாற்ற வேண்டும் என்று போராடுவதே சிஐடியுவின் நோக்கம். ஆரம்பத்தில் தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தனிப்பட்ட பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகத்தான் வருவார்கள். ஆனால், அதோடு முடிந்துவிடக் கூடாது.

உதாரணமாக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற ஊதியத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு முதலாளியால் ஊதியத்தைக் கொடுக்க முடியுமே தவிர, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அரசின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதுமே உண்மை ஊதியம் குறைந்துகொண்டே வருகிறது. கொள்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் வளர்வதற்கு பரந்துபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது.

பல்வேறு சங்கங்களில் செயல்பட்டுவந்த நாங்கள் 1970 ஆம் ஆண்டில் சிஐடியு அமைப்பை உருவாக்கினோம். அப்போதே மிகத் தெளிவான முறையில் ‘ஒன்றுபடுவோம், போராடுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தோம். ஒற்றுமை என்பது போராடுவதற்காக, அதற்கு பயன்படாத ஒற்றுமையை ஏற்க முடியாதென்பது சிஐடியு நிலைப்பாடு. இதற்காகத்தான் சிஐடியு இந்த கோஷத்தை எழுப்பியது.

அப்போதே 1970 ஆம் ஆண்டுகளில் யுனைட்டட் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ் (யூசிடியு) என்ற பொது மேடையை உருவாக்கினோம். அதில், சிஐடியு, இன்சூரன்ஸ் ஊழியர்கள், தபால் ஊழியர்கள், ஹெச் எம் எஸ் அமைப்பில் ஒரு பகுதி என ஒரு சிறு பகுதி தொழிற்சங்கங்கள் இணைந்து நின்றன. அப்போதே என்.சி.டியு என்று மற்றொரு மேடை உருவாக்கப்பட்டு இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்றது. அதன் பின் பல்வேறு கட்ட அரசியல் மாற்றங்களைக் கடந்து, 1980 ஆம் ஆண்டில் நேஷனல் கேம்பைன் கமிட்டீ என ஒரு கூட்டு மேடை உருவானது. அதில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச் எம்எஸ்-இல் ஒரு பகுதி இணைந்தன. அது ஸ்பான்சரிங் கமிட்டி ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் என்று மேலும் விரிவானது.

அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வெகுஜன இயக்கங்களில் தேசிய மேடை ‘என்பிஎம்ஓ’ என்ற பொது மேடையில் விவசாயிகள், மாணவர் என பல சங்கங்களும் இணைந்தன. இந்த அமைப்பு 1982 ஆம் ஆண்டு நடத்திய போராட்டக் கோரிக்கைகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம் உருவாக்கும் தேவை எழுந்தது, இருப்பினும் அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத்தவறியது. இப்படி, ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான தொடர் முயற்சி இன்றைக்கு மத்திய தொழிற்சங்களின் ஒற்றுமையாக மலர்ந்திருக்கிறது.

அதே சமயம், எதிர்த் தரப்பு வலுவாக இருக்கிறது. தொழிலாளர்கள் மீது வலுவான தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. தற்காப்பு நிலையில் இருத்தப்பட்டிருக்கிற தொழிலாளிவர்க்கத்தின் முன்னேற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. தொழிலாளிகளின் ஒற்றுமை விரிவுபடுத்தப்பட்டு அனைத்து உழைப்பாளி மக்களின் ஒற்றுமையாக கொண்டுவரப்படவேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள கூட்டுப் போராட்டங்களால் நாம் ஒரு படி முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பார்க்க வேண்டும். அதே சமயம், இலக்கை நோக்கிய பயணம் நீண்டதென்று உணர்ந்திருக்கிறோம். அதற்கான உணர்வு மட்டம் உயர வேண்டும். போகவேண்டிய திசையில் சரியாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

உலகமயமாக்கலின் தாக்கமும் – தொழிலாளர் இடம்பெயர்தலும் அதிகரித்துள்ள சூழலில் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களைத் திரட்ட முடிகிறதா?

இரண்டு வெவ்வேறு விசயங்களை இணைத்து ஒரு கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். தொழிலாளர்கள் வேலையைத் தேடி ஓடுவது ஒன்றும் நவீன காலப் பிரச்சனை அல்ல. கடந்தகாலத்தில், மலேசியாவிற்கும், இலங்கைக்கும், பிஜி தீவுகளுக்கும் கடத்திச் செல்லப்பட்டு வேலைவாங்கப்பட்டிருக்கலாம். அல்லது கங்கானிகள் அழைத்துச் சென்றிருக்கலாம். உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட குடியேற்றங்கள் நடந்துள்ளன.

இடம்பெயர்தல் என்பது பல வடிவங்களில் நடக்கிறது. கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்தல். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்தல். சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டை நோக்கி இடம்பெயர்வது. அதிலும், மூளை உழைப்பாளர்களும், உடல் உழைப்பாளர்களும் உள்ளனர்.

அஸ்ஸாமிலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களைத் திரட்டவேண்டுமென்றால் அவர்களின் மொழி தெரியாமல் இங்கு தொழிற்சங்க ஊழியர்கள் படும் பாடு ஒரு சவால்தான், அதற்கான தீர்வுகளை விவாதிக்கிறோம். மொழி உள்ளிட்ட தடைகளை நீக்க வேண்டியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களை திரட்டும் பணிக்கு உதவியாக சிஐடியு தொழிலாளர்கள் அங்கு சென்றுவந்தோம். கிரேக்கம் சென்றபோது, நானே அவ்வாறு தொழிலாளர்களிடம் பேசியுள்ளேன்.

இவ்வாறான தொழிலாளர்களில், தொழிற்சங்க உரிமையே இல்லாத பகுதிகளின் நிலைமை வேறு. ஐரோப்பிய, ஆப்ரிக்க நிலைமைகள் வேறு. தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்கள் செல்வோர், அங்கிருந்து இங்கே வருவோரின் நிலைமைகள் வேறு. இந்த அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் மீதும் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்தே வருகிறது. சுரண்டல் நடப்பதை ஏற்றுக்கொள்ளாத பகுதியினர் மீதும் சுரண்டல் நடந்தே வருகிறது.

உலகமயம் – நவீன கால சூழலின் வெளிப்பாடு. உலகமயத்தின் பிரச்சனை என்னவென்றால், மூலதனம் உலகின் எந்த மூலைக்கும் பாயலாம், ஆனால் தொழிலாளிக்கு அத்தகைய சுதந்திரம் இல்லை என்பதுதான். இந்தியாவில் மூலதனம் தங்குதடையற்றுப் பாய்ந்து இந்திய வளங்களை சுரண்ட அனுமதிக்கப்படுகின்றது. மராட்டியத்திலும், குஜராத்திலும் முதலாளிகளுக்கு சலுகைகளும், வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. அதேசமயம் தொழிலாளி, தன் விருப்பம்போல் வேலை இருக்கும் இடத்திற்குச் சென்று வேலை செய்ய முடியாது. அரசிடமிருந்து சலுகைகளும், வசதிகளும் கோர முடியாது. உலகமயத்தால் கிடைக்கும் வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுகள், நிதிக் கொள்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் தொழிலாளர் நலத்திட்டங்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு ரீதியாக திறப்பட்ட, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோராக இல்லை. மேலும், இந்திய முதலாளித்துவம் வரலாற்று ரீதியாகவே, ஒரு வரையரைக்கு உட்பட்டுத்தான் வளர்ந்திருக்கிறது என்பதை இங்குள்ள உழைக்கும் மக்களின் நிலையும், குணாம்சங்களும் பிரதிபலிக்கின்றன. அதோடு உலகமயமாக்கலின் தாக்கத்தையும் அது காட்டுகிறது. விவசாய நெருக்கடியால் வேலை தேடி வருவோருக்கு வேலை கொடுக்கும் அளவு உற்பத்தித் துறை வளர்ச்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. ‘வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி’ என்ற முரண்பட்டதொரு நிலையையே எட்டியிருக்கிறோம். இத்தகைய சுரண்டலைத் தீவிரப்படுத்துவதில் அரசுகளும் உதவிபுரிகிறது.

தொழில் நிறுவனங்களின் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சங்கம் ஏற்படுத்துவதை பாதிக்கிறதா?

முதலாளித்துவ வளர்ச்சிமுறையின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. காண்டிராக்ட், அவுட்சோர்சிங் என்பதெல்லாம் அதன் பகுதியாக உருவாகின. நான் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அந்தத் தொழிற்சாலையிலேயே  அனைத்துப் பாகங்களும் உருவாக்கப்பட்டு ’தரத்துக்கு நாங்கள் பொறுப்பு’ என்று மார்தட்டிய காலம் அது. இப்போது வெறும் ஸ்க்ரூ டிரைவர் தொழில்நுட்பமாகியிருக்கிறது. அதாவது தனித்தனி பாகங்களை வாங்கி, இணைப்பது மட்டுமே ஒரு தொழிற்சாலையின் பணியாகிறது.

இவை முதலாளித்துவ லாப வேட்கையில் அவர்களுடைய தேவையை ஒட்டி ஏற்படுகிற மாற்றங்கள். நிரந்தரத் தொழிலாளி நியாயம் கேட்கும்போது அவனைத் தோற்கடிக்க பலவீனப்படுத்த என்ன வழி? என யோசிக்கின்றனர். அன்று தொழிலாளர் நல அதிகாரியாக செயல்பட்டவரின் இடத்தில் ‘மனித வளத் துறை’ செயல்படுகிறது. ஆனால், அந்த ‘மனித வள’ நிர்வாகிக்கு ஒரு மனிதனோடு எப்படிப் பழகுவதென்று தெரியவில்லை. முன்பைவிடவும் சுரண்டல் மோசமாகியுள்ளது. அதே சமயம், உளவியலாக ஒரு தொழிலாளியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, திருமண நாள் வாழ்த்து என சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

லாபத்தை எப்படியாவது அதிகப்படுத்த நடக்கும் முயற்சிகள் ஒரு பக்கமும், அதனால் ஏற்படும் விளைவுகளை நிர்வகிப்பது மறுபக்கமும் நடக்கின்றன. தொழிற்சங்கங்களும் தன்னை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தியே வந்துள்ளோம். செங்குத்தாக அமைப்புக் கட்டுவது மட்டுமல்ல, பக்கவாட்டிலும் சங்கங்கள் வளர்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் அதுசார்ந்த கோரிக்கைகளில் சங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. புதிய புதிய சவால்களைக் குறித்து விவாதித்து முடிவுகளை அடைகிறோம்.

இந்தியாவுக்கென பிரத்யேக நிலைமைகள் உள்ளனவே, அதனை சங்கம் கவனிக்கிறதா?

ஒரு வலு வாய்ந்த எதிரியை அதன் எல்லா முனையிலிருந்தும் சந்திக்க வேண்டிய சவால் தொழிற்சங்களுக்கு உள்ளது. சுரண்டலைத் தக்கவைக்கும் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டே ஒரு சங்கம் செயல்படுகிறது. பன்முகத் தன்மை கொண்டதாக ஒரு சங்கம் இருக்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து கொள்கைகளையும், அதிலிருந்து அரசியலையும் வந்தடையும் தெளிவு வேண்டும். இதுதான் இன்றைய தொழிற்சங்கம் செய்ய வேண்டிய பணியாகும். சிஐடியு தனது நோக்கமாக இதைத்தான் கொண்டிருக்கிறது. சுரண்டலற்ற சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒரு சங்கம் அப்படித்தான் செயல்பட முடியும்.

காற்று பலமாக அடிக்கிறது, புயலடிக்கிறதென்றாலும் அவைகளுக்கு நடுவில்தான் நாம் பணியாற்ற வேண்டும். விழுந்தும், எழுந்தும் எழுந்தும் விழுந்துமாக முன்செல்கின்றன  தொழிற்சங்கங்கள், நேரடியாக சங்கம் வேண்டாம் என்று மறுப்பது ஒரு பக்கம். சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, தரம் சொல்லி என்று பல்வேறு வகைகளில் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கின்றன.

இந்தியாவில் சாதி ஒரு யதார்த்தமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து சாதியும், வர்க்கமும் இரண்டும் இணைந்து செயல்படுவதை புரிந்துகொண்டே சங்கம் செயல்பட வேண்டும்.  சாதியின் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுடைய, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் உடன் நின்று, வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான ஒன்றுபட்ட அணியை உருவாக்குவது அவசியம். இத்தகைய இணைப்பில் முன்னைக்காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

 

இப்போது, தொழிலாளர்களே தனித்தனி தீவாக மாறியிருக்கிறார்களா? ஐடி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை வேறுதானே?

ஐடி துறையில் பணியாற்றுவோரை ஒரே வகையான தொழிலாளர்களாகப் பார்க்கவில்லை. குறைந்த சம்பளத்தில் 4000, 5000 சம்பளத்திலும் வேலை வாங்கப்படுகிறது. 1 லட்சம், 2 லட்சம் என உயர்ந்த சம்பளமும் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே சங்கமாகத் திரளும் அனுபவத்திலிருந்து விலக்கிவைக்கப்படுகின்றனர். உடலுழைப்பு குறித்த துவேசம் கூட அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. அந்தத் தொழில்களில் ‘கூட்டு உற்பத்தி சூழல்’ இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல், சொந்த நண்பர்களுடனே போட்டிபோட ஆயத்தமாக்கப்படும் நிலைமையும் உள்ளது.

சில நிறுவனங்களில் ‘பிங்க் ஸ்லிப்’ வழங்கப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான கோப உணர்வு உருவானதை சமீபத்தில் பார்த்தோம். எனவே, அனைத்து தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும், சங்கமாகத் திரண்டு போராடும் சூழல் எழுந்துதான் தீரும்.

இல்லை. இது எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அரசுத்துறை ஊழியர்கள், சங்கம் சேர்வதும் போராடுவதும் தங்களுக்கு அவமானம் என்று கருதியது உண்டு. ஆனால் அதிலேயே உடைப்பு ஏற்பட்டது.

காலனி ஆதிக்க காலத்திலேயே, ஆங்காங்கு தொழிலாளர் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்துவந்துள்ளன. 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. 1918 ஆம் ஆண்டிலேயே முதல் முறையான சங்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே 1908 ஆம் ஆண்டில் வ.உ.சி தூத்துக்குடியில் போராடியுள்ளார். இந்திய அளவில் 1920 ஆம் ஆண்டு ஏஐடியுசி உருவாக்கப்பட்டு, அது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் இந்திய தொழிலாளார்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசின்நேரடி கட்டுப்பாட்டில் இருந்து பலிவாங்குதலுக்கு உள்ளான தபால் மற்றும் தந்தி ஊழியர்களும்  சங்கமாகத் திரண்டனர். சுரண்டலுக்கு எதிராக ஒன்றுபட்டனர். எனவே, தனித்தனித் தீவுகளாக இருக்கும் தொழிலாளர்களை, சங்கமே ஒன்றுபடுத்துகிறது.

கூலியுழைப்பும் மூலதனமும் …

ஓவியம்: இராமமூர்த்தி

கேலிச் சித்திரத்துடன் இணைத்து புரிந்துகொள்வதற்காக …

தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதற்கு வகைசெய்யும் மூலப்பொருள்கள், எந்திரங்கள், கருவிகள், நிதி ஆகியவற்றின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆக, தொழிலாளி வர்க்கம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் ஒட்டுமொத்தத் திரளில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. மறுபகுதியை முதலாளித்துவ வர்க்கம் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. அதிகப்பட்சம் நிலவுடைமை வர்க்கத்துடன் மட்டும் அதனைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் சற்றுமுன் பார்த்தவாறு, முதலாளித்துவ வர்க்கம் வைத்துக்கொள்ளும் இந்தப் பங்கு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் புத்தாக்கத்தையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் பங்கானது (ஒரு நபருக்குக் கிடைப்பது) மிகக் குறைவாகவும் மிக மெதுவாகவும் அதிகரிக்கிறது. அல்லது அதிகரிக்காமலே உள்ளது. சில நிலைமைகளில் குறையவும் செய்கிறது.
ஆனால், மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் ஒன்றை இன்னொன்று மிஞ்சுகின்ற இந்தக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் தொடர்ந்து, இதற்குமுன் கண்டு கேட்டிராத அளவுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற்பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும்.

 

ஒருபுறம், அளவிட முடியாத செல்வமும், வாங்குவோரால் சமாளிக்க முடியாத அளவுக்குத் தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களும் [குவிந்து கிடக்க], மறுபுறம், சமுதாயத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் பாட்டாளிகளாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக, அவ்வாறு தேவைக்கு அதிகமாகக் குவியும் உற்பத்திப் பொருள்களைத் தங்களுக்கென உடைமையாக்கிக் கொள்ள இயலாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளனர். அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து சொற்ப அளவுக்கே பாதுகாக்கப் படுகின்றனர் அல்லது ஒருசிறிதும் பாதுகாப்பே இல்லாமல் இருக்கின்றனர்.
இத்தகு நிலை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அபத்தமாகி வருகிறது. மென்மேலும் தேவையற்றதாகவும் ஆகிவருகிறது. இந்நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

– கூலியுழைப்பும் மூலதனமும் – எங்கல்ஸ் முன்னுரை (1891)

சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!

இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.

இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:

ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல. “திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.

இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுரண்டல் முறையின் அங்கமாக வருணாசிரமம்:

இந்திய வரலாறு நெடுகிலும் சாதியத்திற்கு ஆதரவான, எதிர்ப்பான பல்வேறு போக்குகள் இருந்துள்ளன. இவை அனைத்தையும் சந்தித்து இன்றளவும் சாதியம் வீரியத்துடன் நீடித்து வருவது பல சமூக ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது. இது குறித்து பிரபல சமூக ஆய்வாளர்களில் ஒருவரான சியாமா சரண்தூபே கூறியதாவது “இந்தியாவில் நிலவும் சாதியமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது”. ஆனாலும் வருணாசிரம அமைப்பும், சாதிய முறையும் வியக்கத்தக்க விதத்தில் தொடர்ந்து உறுதியாக நிலைத்து நிற்கின்றன. எதிர்ப்புகளை சமாளித்து வந்துள்ளன. எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு எவ்விதத்திலாவது தப்பித்து நீடித்து வந்திருக்கின்றன”. எனவே, இந்தியச் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் மிக நுட்பமானதும், கடினமானதுமான ஒன்று என்பதை கடந்த கால அனுபவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தியச் சாதியமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுவாகவும், திறமையாகவும் நடத்திட அது உருவானதற்கான பின்னணி மற்றும் அடிப்படைகளை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சாதியமைப்பை வேறு எவரையும்விட மார்க்சிய ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையில் சரிவர ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் யதார்த்த நிலைமைகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளன. இந்தியச் சமுதாயத்தில் வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் ஒரு பகுதியாகவே சாதியமைப்பு உருவானது என்பதே இவர்கள் வெளிப்படுத்தும் உண்மை. இது குறித்து தலைசிறந்த மார்க்சிய சமூக ஆய்வாளர் டி.டி.கோசாம்பி கூறுவதாவது: “சாதி அமைப்பு என்பது இந்திய உற்பத்தி முறையின் துவக்ககட்டத்தில் வர்க்க அமைப்பாகவே இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

டி.டி.கோசாம்பியின் ஆய்வை பலப்படுத்தும் வகையில் மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் இதுகுறித்து கூறும்போது, “கிரீசில் அடிமை முறை உருவானது போல இந்தியாவில் வேறு ஒரு வடிவத்தில் வர்க்க சமுதாயம் உருவாகியது. அடிமைகள், எஜமானர்கள் என்ற கிரேக்க வர்க்க வேற்றுமைக்குப் பதிலாக இங்கு உருவானது தாசர்கள் (ஆந்திரர்கள்), ஆரியர்கள் என்ற வடிவிலான வருண வேற்றுமைதான். இதுதான் பிற்காலத்தில் நான்கு வருணத்தின் மூலமாக அநேக சாதிகளும், உபசாதிகளும் உள்ள அமைப்பாக மாறியது. பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசிகர்கள் என்ற மூன்று பிரிவுகளைச் சார்ந்த ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டலுக்கு இரையாகி அடக்கப்பட்டவர்களாக சூத்திரர்கள் (தாசர்கள்) மாறினர். இதில் மூன்று பிரிவினர் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க, வருண வேற்றுமையின் முதல் படிவம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் மிகவும் கடினமானதும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தக் கூடியதும், இழிவானது எனக் கருதப்பட்டதுமான பணிகளுக்கு ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டனர். ஆக இந்தியாவில் சுரண்டல் அமைப்பு முறையின் கவசமாகவே அதனுடன் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டதே வருணாசிரம அமைப்பு என்பதில் ஐயமில்லை.

வருணாசிரமத்திலிருந்து பல்லாயிரம் சாதிகளாக:

வருணாசிரம முறைதான் இந்தியாவில் சாதி அமைப்பு உருவானதன் ஆரம்ப அடிப்படையாகும். துவக்க காலத்தில் இந்திய உற்பத்தி முறையில் நான்குவித உழைப்புப் பிரிவினைகள் இருந்தன. நான்கு வருணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்குவித உழைப்பு பிரிவினையை மேற்கொண்டவர்களாக இருந்தனர். பிராமணர்கள் (வேதம் ஓதுதல்), ஷத்திரியர்கள் (யுத்தம் செய்தல்), வைசியர்கள் (வாணிபம் செய்தல்), சூத்திரர்கள் (உடல் உழைப்பு செய்தல்) என்ற முறையில் வருணாசிரம முறை இருந்தது. பிற்காலத்தில் புதிய உற்பத்திக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் உருவாயின. அதன் அடிப்படையில் வருணாசிரம முறையின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு எண்ணற்ற சாதிகளும், உப சாதிகளும் உருவாயின. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளும், உப சாதிகளும் உள்ளன என்றாலும் இதன் ஆரம்பகால அடிப்படை என்பது வேதகால வருணாசிரம முறையேயாகும். இது குறித்தும் தோழர் ஈ.எம்.எஸ். விவரிக்கிறார் “படிப்படியாக தொழில்நுணுக்கத்திலும் பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து சூத்திரர்களிலும் அதே போல மேல்சாதி வருணங்களான பிராமணர், ஷத்திரியர், வைசியர், வருணங்களிலும் பல்வேறு கிளைகள் தோன்றி வளர்ந்தன. அடிமை வேலை, போர் முறை, கடவுள் வழிபாடு-சடங்குகள், வாணிபம் முதலிய ஒவ்வொரு படியிலும் ஏராளமான பிரிவுகள் – உப பிரிவுகள் இவ்விதமான தொழில் வேறுபாடுகள் பரவலாகத் தொடங்கியதுடன் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த நான்கு வருணத்தவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகவும், உபசாதிகளாகவும் மாறினர். இந்திய சமுதாய வளர்ச்சியின் ஒரு பிரத்யேகத்தன்மை இது”.

இங்கு தோழர் இ.எம்.எஸ். தொழில்நுட்பம் குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் சாதியமைப்பின் விரிவாக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். இதை நாம் வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அடிமை சமுதாய காலத்தில் உருவான வர்ணாசிரம அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாய காலத்தில் பலப்படுத்தப்பட்டு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் பிரிவுகளுடனும் நீடிக்கிறது என்பதாகும். பண்டைய வர்ணாசிரம அமைப்புதான் அதன் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் சாதிகளைக் கொண்ட இன்றைய சாதி அமைப்பாக மாறியுள்ளது.

சாதியம் அமல்படுத்தப்பட்ட முறை:

கொடூரமான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்பை இந்தியச் சமூகத்தில் நிலைநாட்டவும் அமல்படுத்தவும் ஆளும் வர்க்கத்தினர் பன்முக முயற்சிகளை மேற்கொண்டனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இழிநிலைக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகி வந்த எதிர்ப்பையும், வெறுப்பையும் வெறும் ஒடுக்குமுறைகள் மூலம் மட்டும் முறியடிக்க முடியாது என்பதால் தத்துவார்த்த ரீதியாகவும் மக்களை இதற்கு தயார்படுத்தினர். வருணாசிரம – சாதியமைப்பு கடவுளின் படைப்பு எனவும் அதனை மாற்றமுனைவது கடவுளை நிந்திப்பதாகும் என பரப்பினர். இந்நோக்கத்தோடுதான் வேதங்கள், உபநிஷத்துகள், மனுஷ்மிருதிகள் உருவாக்கப்பட்டன. சாதியமைப்பை நியாயப்படுத்தும் வகையில் புராணங்களும், இதிகாசங்களும் உருவாக்கப்பட்டன. புராணங்களில் வரும் கதைகளும் – பாத்திரங்களும் வர்ணாசிரம வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. ஆயினும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் கடுமையான போது இத்தகைய தத்து வார்த்த கண்ணோட்டங்களையும் மீறி வருணாசிரம சாதிய முறைக்கு எதிர்ப்பு வரவே செய்தன. அவ்வாறு உருவான எதிர்ப்பையும் கலகங்களையும் அடக்க அவர்கள் மீது கையை வெட்டுவது, காலை வெட்டுவது, மரண தண்டனை, சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட கடும் தண்டனைகளும் அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. வர்ணாசிரம ஒடுக்குமுறைக்கு அடங்க மறுத்தவர்கள் மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் வேதங்கள், மனுஷ்மிருதி, புராணங்களையும் மறுத்த விமர்சித்த அக்காலத்திய அறிவுஜீவிகளும் கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மனுஷ்மிருதியில் வர்ணாசிரமத்தை மீறுபவர்களுக்கும் அத்தத்துவங்களை எதிர்ப்பவர்களுக்கும் மேற்கண்ட கடும் தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுஷ்மிருதிதான் அக்காலத்தில் அரசர்களுக்கான அரசியல் சட்டமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆளும் வர்க்கம் – அரசு – அரசியல் கட்சிகள் நிலைபாடு :

இந்தியாவில் சுரண்டல் முறையோடு இணைந்து அதன் ஒரு பகுதியாக உருவான (வருணாசிரம) சாதியமைப்பு பல உருவங்களைக் கடந்து பல்லாயிரம் சாதிகளாக மாறி இன்று உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் அபாயகரமான பாத்திரத்தை வகிக்கிறது. வரலாறு நெடுகிலும் சுரண்டல் அமைப்பின் கேடயமாகவே சாதியமைப்பு இருந்து வருகிறது. எனவேதான் இதுவரை உள்ள அனைத்து சுரண்டும் வர்க்கங்ககளும் (அடிமை எஜமானர்கள், நிலப்பிரபுக்கள் இன்று முதலாளிகள்) இதனை பாதுகாத்து வந்துள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துணைநிற்கவே செய்துள்ளனர். இன்று அரசியல் சட்டபூர்வமாக ஜனநாயகம், சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் இதனை சரிவர அமல்படுத்தாததால் சாதிய ஒடுக்குமுறைகள் கடந்த கால நிகழ்வுகளாக அல்லாமல் இன்றளவும் தொடர்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதியமைப்பிற்கு எதிராக பசப்பு வார்த்தைகளை பேசி வருகிற போதிலும் அடிப்படையில் அவற்றின் செயல்பாடுகள் சாதிய உணர்வை பாதுகாக்கும் விதத்திலும் பல சந்தர்ப்பங்களில் சாதியமைப்புகளை பயன்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும்

இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு உருவான பின்னணி, அதன் வளர்ச்சி, அதை அமல்படுத்த ஆளும் வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் கையாண்ட முறை போன்ற அம்சங்களை வர்க்கப் பின்னணியோடு பரிசீலித்தோம். இத்தகைய அமைப்பை எதிர்த்ததவர்கள் சந்தித்த கொடூரமான ஒடுக்குமுறைகளையும் வரலாற்று ரீதியாக பார்த்தோம்.

ஆக இந்தியச் சமூகத்தில் மிகவும் கடுமையான உடலுழைப்புச் செய்பவர்களும் இழிவான சுகாதாரக்கேடு விளையும் தொழிலைச் செய்பவர்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் வைக்கப்பட்டுள்ள சமூக வரலாற்றையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளையும், இழிவுகளையும் இப்பின்னணியில் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகக் கணிசமான பகுதியினர் எவ்வித உடைமையுமின்றி நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது இத் தகைய வளர்ச்சிப் போக்கின் பரிணாம வளர்ச்சியேயன்றி தற்செயலாக ஏற்பட்ட நிகழ்ச்சி போக்கல்ல. இம்மக்கள் தங்கள் மீதான சாதியக் கட்டுமானங்களை மீறும்போது அதற்கு சாதிய சக்திகள் கடும் தண்டனை வழங்குவதைக் கண் கூடாக காண்கிறோம்.

இன்று தமிழகம் உள்ளிட்டு இந்தியா முழு வதும் நாம் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை எதுவென்றால் சாதிய வேறுபாடுகளைக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளில் சாதிய சக்திகள் இறங்கியிருப்பதும் அதை ஆளும் வர்க்கத்தினரும் அரசும் உரிய முறையில் தடுக்க தவறுவதும்தான். பிற்படுத்தப்பட்ட மக்களில் 70 சதம் பேர் உழைப்பாளிகள். இதேபோல கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களில் 88 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள். நகர்ப்புறங்களிலும் இவர்களில் கணிசமானவர்கள் உழைப்பாளிகளே. தமிழக, இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கணிசமான பகுதியினராக பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து உள்ளனர். இவர்களுக்கிடையே மோதல்கள், பிணக்குகளை உருவாக்குவது என்பது உழைக்கும் வர்க்கத்தின ஒற்றுமையை பாதிக்கும் ஆபத்தான அம்சங்களாகும். இந்த ஆபத்தை முறியடிப்பதோடு இதர சாதிப் பிரிவுகளில் உள்ள உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் வர்க்கத்தின் சவாலை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தின் பரவலான ஒற்றுமையை உருவாக்க வேண்டிய பிரதான கடமை நம்முன் உள்ளது.

கம்யூனிஸ்ட் அணுகுமுறையும் வரலாறும் :

இந்தியாவில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உருவாக்கி சமுதாய மாற்றத்திற்கான புரட்சி நடத்துவதில் உறுதிபூண்டுள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம். இதற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பரவலான மக்கள் திரளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய பரவலான மக்களை அணிதிரட்ட வேண்டுமெனில் அதற்கு பிரதான தடைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாதியமைப்பையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதும் முறியடிப்பதும் பிரதான கடமையாகும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதே அதில் பிரதான பங்கு வகித்த கம்யூனிஸ்ட் இயக்கம் “இந்தியாவுக்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும் விடுதலையாக இருக்க வேண்டும்” என 1928லேயே முழங்கியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் மிகச்சரியாக அக்காலத்திலேயே இணைத்தது. மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டே, தலைவர்கள் பலரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இத்தகைய முழக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் எழுப்பியது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற அக்காலத்திய பல போராட்டங்கள் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் இருந்தன. ஆந்திராவில் நடைபெற்ற தெலிங்கானா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா வயலார் போராட்டம், வங்கத்தில் நடைபெற்ற தெபேகா போராட்டம், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் என இத்தகைய பல போராட்டங்களை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த தோழர் சிங்காரவேலர் பெரியாரோடு இணைந்தும் தனித்தும் சாதியமைப்புக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்திலும் போராட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும்:

இந்திய விடுதலையில் பிரதான பங்கு வகித்த மற்றொரு இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய பார்வையும், அணுகுமுறையும் இருக்கவில்லை. எனவே கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்த மிகக் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் இணைக்க முடியவில்லை. பிற்காலத்தில் இதனை உணர்ந்த காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை கவருவதற்காக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தினார். ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை அவரால் திரட்டவும் முடிந்தது. எனினும் அது காந்தியின் தனிப்பட்ட முயற்சியாகவும் ஒரு பகுதி காங்கிரஸ் ஊழியர்களை மட்டுமே இணைத்தாகவும் இருந்ததேயொழிய ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பணியாக அமையவில்லை. உண்மை யில் பல காங்கிரஸ் தலைவர்கள் சாதிய அணுகு முறையுடன் செயல்பட்டார்கள் என்பதும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இக்காலத்தில் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கடுமையாக போராடிய வரும் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை தன் தலைமையில் அணிதிரட்டியவருமான டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியை பரவலாக அம்பலப்படுத்தியும் அக்கட்சி முழுவதையும் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுத்த முடியாமல் இருந்த காந்தியை விமர்சித்தும் பரவலான பிரச் சாரம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

சமூக சீர்திருத்த இயக்கத்தின் பாத்திரம்:

இந்தியாவில் சாதியமைப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சமூக சீர்திருத்த இயக்கங்கள் வகித்த பாத்திரத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கிறது. ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார், ஸ்ரீநாராயண குரு மற்றும் பலருடைய மகத்தான பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே சாதியமைப்பினை அம்பலப்படுத்துவதிலும், கொடூரங்களை தணிப்பதிலும் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான மக்களுக்கு பல நிவாரணங்கள் பெற்றுத் தருவதிலும் சமூக சிர்திருத்த இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்த வரை இன்றைய சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுகட்ட முடியும் எனக் கருதுகிறது. அதேசமயம் சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களை தயார்படுத்தவும், ஒன்று படுத்தவும் சாதிய ஒடுக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என உறுதியாகக் கருதுகிறது. எனவே, கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து உரிய படிப்பினைகள் பெற்று அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வது அவசியம் என முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைக்குப் பிறகும்:

இந்திய விடுதலைக்குப் பிறகும் வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வர்க்கப் போராட்ட தலைவர்களாக மட்டுமின்றி தீண்டாமை மற்றும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிரான போராட்ட தலைவர்களாகவும் விளங்கினார்கள் என்பது வரலாறு. மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் முன்னெடுத்துச் சென்ற சமூக சீர்திருத்த இயக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுததுச் சென்றது. கேரளாவில் ஏ.கே.ஜி., ஈ.எம்.எஸ் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலய பிரவேசம் உள்ளிட்ட தலித் மக்களின் ஏராளமான உரிமைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். திரிபுராவில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார உரிமைகளுக்காக மகத்தான தியாகங்களைச் செய்த பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. தமிழகத்தின் கீழத்தஞ்சையில் சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குத்தகை உரிமை மற்றும் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டத்துடன் சவுக்கடி, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்டுகள் இணைத்தே நடத்தினர் என்பதும் இதில் தோழர் சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் மகத்தான பாத்திரமும் வீரகாவியமாகும்.

சிபிஐ(எம்) திட்டமும் செயல்பாடும்:

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர்க்கப் போராட்ட மற்றும் சமூகச் சீர்திருத்த பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுதான் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இப்பாரம்பரியத்தையும் பாதையையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில்தான் கட்சித் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவில் சோசலிச சமுதாயம் நிர்மாணிப்பதை லட்சியமாகக் கொண்டு அதன் முதல் கட்டப்பணியாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்திட பரந்துபட்ட உழைப்பாளி மக்களை அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கு தடையாக உள்ள அனைத்து அம்சங்களையும் தகர்த்தெறிய விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சாதியமைப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சித் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பகுதியில் இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு எவ்வாறு வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் பின்னிப்பிணைந்த பகுதியாக உருவானது என்பதை வரலாற்று ரீதியாக பரிசீலித்தோம். இத்தகைய மார்க்சியப் புரிதல் அடிப்படையில் கட்சித் திட்டத்தின் கீழ்க்கண்ட பகுதிகள் அமைந்துள்ளன என்பதைப் பார்க்க முடியும்.

“ஒரு சாதி மற்ற சாதியினரை ஒடுக்குவதும் தீண்டாமை அகற்றப்படுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டு தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் பிரத்யகேச் சலுகைகள் வழங்கப்படும். (1964 கட்சித் திட்டம், பாரா 15)

“சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமூக முறையிலேயே ஆழமாக வேரோடி விட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்து கொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறு பாடுகளை வளர்த்து வருகிறது. தலித் மக்களின் மிகப்பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில் சாதிய முறைக்கும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதியமுறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.” (2000-இல் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம், பாரா 5.12)

மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவில் சாதியமுறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் இதனை அமல்படுத்துவதில் சில தொய்வுகள் பலவீனங்கள் ஏற்பட்டபோதிலும் கட்சித் திட் டத்தின் அடிப்படையில் இதனைப் பரிசீலனை செய்து அத்தகைய போராட்டங்களை கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடுகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்பதும் அவர்களின் நலன்கள், உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவதுமான பணிக்கு தொடர்ச்சி யான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

விரிந்து பரந்த ஜனநாயக மேடை:

இப்பின்னணியில்தான் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் ஏராளமான போராட்டங்கள் சமீப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் அதன் செயல்பாடுகள் தலித் மக்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நன்கு அறிவோம். இதேபோல தலித் மக்களின் பரச்சினைகளுக்காக போராடு வதற்கென்றே மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 நவம்பர் 27ல் மேற்கண்ட மாநில அமைப்புகள் அனைத்தும் இணைந்து “தலித் மக்கள் ஒடுக்கமுறை விடுதலை முன்னணி” என்ற அகில இந்திய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலித்துகள்தான் போராட வேண்டும் என்ற கருத்தை சில அமைப்புகளும் நபர்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தலித்துகளின் பிரச்சனை தேசத்தின் பிரச்சனை, உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனை என்ற அணுகுமுறையோடு ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இப்போராட்டத்தில் இணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான முயற்சிகளை செய்து வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலித் மக்கள் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏராளமான தலித் அல்லாத மக்களும் பங்குபெற்றார்கள் என்பதும், அத்தகைய பல போராட்டங்கள் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்த போராட்டங்களாகவும், பல்வேறு நிவாரணங்களைப் பெற்றுத்தந்த போராட்டங்களாகவும் வெற்றிகரமாக அமைந்தன என்பதும் சிறந்த அனுபவங்களாகும்.

தமிழகத்தின் தலையீடுகள் – வெற்றிகள்:

தமிழகத்திலும் அவ்வாறு நடைபெற்ற சமீபத்திய பல போராட்டங்களையும் தலையீடுகளையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். நாலுமூலைக்கிணறு (தூத்துக்குடி) மக்களுக்கு ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு தண் டனை, கொடியன்குளம் காவல்துறை தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை, தென்மாவட் டங்களிலும் பல வட மாவட்டங்களிலும் நடைபெற்ற சாதிய மோதல்களில் மிகவும் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தலையீடுகள் – இதையொட்டி நாம் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, ஒவ்வொரு ஆண்டும் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ல் நடத்திய பல தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் – அதன் வெற்றிகள், பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியது, பல கிராமங்களில் தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத்தந்தது. 20 ஆயிரம் அருந்ததியர் மக்களை திரட்டி சென்னையில் நடத்திய பேரணி இதையொட்டி அருந்ததியர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் கிடைத்த 3 சதவிகித உள்ஒதுக்கீடு, கடந்த சில ஆண்டுகளில் 2 முறை சென்னை கோட்டை நோக்கி பல்லாயிரம் பேரைத் திரட்டி நாம் நடத்திய கோட்டை நோக்கிய பேரணி – அதன் தாக்கம், வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் மற்றும் மக்கள் மீதான வனக்காவலர்களின் வன்கொடுமைத் தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள், வழக்கினால் கிடைத்த நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, பரமக்குடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ விசாரணை, தர்மபுரி மாவட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்களின் பாதிப்புக்கு அரசு நஷ்ட ஈடு மற்றும் நமது இயக்கங்களில் சார்பாக பல லட்ச ரூபாய் நிவாரணம் – இப்பிரச்சனையில் நாம் தொடுத்த வழக்கு, சாதி மறுப்பு திருமணங்களையொட்டி நடைபெற்ற பல கௌரவக் கொலைகளில் நமது தலையீடுகள் – வழக்கு – நிவாரணம், தலித் – பழங்குடியினர் உபதிட்ட நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஒதுக்குவதிலும் பயன்படுத்தவதிலும் கிடைத்த முன்னேற்றம், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையம், இப்பயிற்சியின் காரணமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலைநியமனம் பெற்றது, சில வங்கிகள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட போது அதனை தடுத்து நிறுத்தி முறியடித்தது என எண்ணற்ற நமது தலையீடுகள் மற்றும் போராட்டங்கள் தலித், பழங்குடியின மக்களுக்கு பெரும் பயன் அளிப்பதாக அமைந்தன.

தமிழகத்தில் நமது செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றிகள் காரணமாக தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடி வரும் பல தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தனி நபர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து அதன் அங்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற போது அதன் மாவட்டக்குழுக்களிலிருந்தும் மேற்கண்ட அமைப்புகளிலிருந்தும் தலைவர்களும் ஊழியர்களுமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டதோடு அதன் இறுதிப் பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடு மென்மேலும் பலமடைந்துள்ளது. ஏராள மான தலையீடுகள் மற்றும் இயக்கங்கள் நடந்த தின் பின்னணியில் 2வது மாநில மாநாடு விருதுநகரில் 2014 மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடும் பெரும் தாக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

முன்னெடுத்துச் செல்வோம்:

ஆக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித் – பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங்களில் வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்திராத பங்களிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. பல முதலாளித்துவ கட்சிகள் வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக தங்கள் அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக தலித்-பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும் அப்போராட்டங்களில் அனைத்து சாதிகளையும் சார்ந்த உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் வகையிலும் தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதேபோல அகில இந்திய அளவில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி போன்ற விரிந்து பரந்த ஜனநாயக மேடைகளை உருவாக்கியுள்ளது. இப்போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் பின்னிப்பிணைந்த பகுதியாக முன்னெடுத்துச் செல்கிறது. தனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை நிறைவேற்றுவதில் மென்மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் என உறுதி ஏற்கிறது.

லாபம் லாபம் லாபம்..

முதலாளியின் மூலதனமும், தொழிலாளியின் உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான போராட்டங்களே தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று, வறுமையையும் ஏழ்மையையும் பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.

இந்த உண்மை தொழிலாளர்களையும், மக்களையும் சென்றடைய வேண்டும். உழைப்பதற்கான கூலி மட்டும் கொடுக்கபட்டு, உழைப்பின் பயனாக உருவாகும் லாபத்தில் பங்கு மறுப்பது என்பது உழைப்பு சுரண்டல். உழைப்பினால் உருவான உபரியே லாபம். மூலதனமே அந்த லாபத்தை முழுமையாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்? இது தான் முதலாளித்துவத்தின், உடமைவர்கத்தின், திட்டமிட்ட அடிப்படை. ஏமாற்று வேலை. லாபம் என்பது பொருளை வாங்கு பவனிடமிருந்து பெறப்படுவது அல்லது எடுக்கப்படுவது.

லாபத்தின் எல்லை

லாபத்தின் எல்லைதான் என்ன? மூலதனம் போட்ட முதலாளியின் ஆசையின் எல்லை தான் லாபத்தின் எல்லை. எந்தவிதக் கட்டு பாடும் இல்லை. போட்டிக்கு ஏற்ப சற்றே குறையலாம். ஆனால் கணிசமாக லாபம் இல்லாமல், எவ்வளவு போட்டிருந்தாலும், உற்பத்தியாளர்கள் விலையே குறைக்கமாட் டார்கள். ஏனென்றால் அவர்கள், தாங்கள் வாழ்வதற்கான தேவைக்காக மட்டும் லாபம் தேடவில்லை. மேலும் மூலதனத்தை உரு வாக்கிட, வெவ்வேறு முதலீடுகள் செய்து, அவையும் பலவாக பெருகிட, குறைந்த காலத்தில், அவர்களுக்குத் தேவை எல்லை யற்ற லாபம். நோக்கம் உறுதியானால், அதற்கான வழிபற்றி கவலையில்லை.

பொருள் உற்பத்தியின்றியே, ஊக வாணிபம் என்ற சூதாட்ட வழிகளை உருவாக்கி விரைவு லாபங்களை, உலகெங்கும் தேடும் குணம் கொண்டது மூலதனம். புதிய தாராளமயக் கொள்கை என்ற பெயரில் அவற்றின் மீது இருந்த கட்டுப்பாடுகள் முழுதும் நீக்கப்பட்டுள்ளன. இருக்கும் தொழிலில் அதிகலாபம் இல்லை என்றால் அதை மூடிவிட்டு, அதிக லாபம் கொடுக்கும் முதலீட்டுக்கு மூலதனம் சென்றுவிடும். மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசிய தேவை களைப் பற்றி அது கவலை கொள்ளாது. இதைத்தான் உலக முதலாளித்துவம், உலக நாடுகள் மீது திணித்து செயல்படுத்தி வரு கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் அனைத்தும் சந்தை மயம். லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதுதான் மையக்கோட்பாடு. அரசுகளும் இதில் அடக்கம்.

லாபம் எப்படி உயர்கிறது ?

ஒவ்வொரு காலாண்டு முடிந்த பின்னும், ஆண்டு முடிந்த பின்னும் நிறுவனங்கள் தங்கள் லாப-நட்ட கணக்கை பத்திரிக்கைகளில் வெளியிடுவதை படிக்கிறோம். சென்ற ஆண்டு அதே காலத்தில் இருந்த லாபத்தை ஒப்பிட்டு இந்த ஆண்டு லாபம் எவ்வளவு உயர்வு அல்லது குறைவு என்பது கூறப்பட்டிருக்கும். பெரும்பாலான நிறுவனகளின் லாபம் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம். சில நிறுவனங்களின் லாபம் சிறிது குறைந்திருப்பதாகக் காட்டப்படுகின்றன. மிக அரிதாகவே நட்டம் என்று எப்போதாவது காட்டப்படும். பல மூலதன முதலீடு மாற்றங் கள் திட்டமிடப்பட்டு அத்தகைய நாட்டம் உருவாக்கப்படுவதுண்டு.

எந்த நிறுவனமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால்தான், காட்டப் படும் இந்த கணக்குகள் அந்த நிறுவனத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்கும். இது அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை மற்றும் நிர்வாகிகளின் நேர்மையைப் பொருத்தே அமையும். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாய் கணக்கில் செய்யப்பட்ட மோசடி அம்பலமாக, அதன் பொறுப்பாளர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் இருந்து வருவது இதற்கு உதாரணம். அமெ ரிக்க நிறுவனம் என்ரான் திவாலா அறிவித்தது இதற்கு மற்றுமொரு உதாரணம்.

ஒரு நிறுவ னத்தின் லாபம் உயரக் காரணிகளானவை:

1.   அதிக விற்பனை
2.   விலையை உயர்த்துதல்
3.   செலவீனங்களை குறைத்தல்

லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல்

பல நிறுவனங்களின் கணக்குகளைப் பார்த்தால், விற்பனை வருவாய் உயர்வதைவிட, லாபம் பல மடங்கு உயர்ந்திருப்பதைக் காண லாம். இது எப்படி சாத்தியம்? ஒன்று விற் பனை விலையை உயர்த்திக் கொண்டே போவது. இரண்டாவது உற்பத்தி செலவீனங் களை குறைத்தல். வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவு, விளம்பரச் செலவு, விற்பனைக் கமிஷன் என இவற்றை குறைக்கவே முடியாது. ஏனென்றால் இவை விற்பனையைப் பெருக்கும் செயலோடு நேரடியாக தொடர்புள்ளவை. இவற்றை குறைத்தால் விற்பனை பாதிக்கும். இன்று பொருட்களின் விலை என்பதும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

ஆகவே லாபத்தை அதிகரிக்க நிறுவனங் கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முதலான பயன்களின் ஒட்டுமொத்த அளவை குறைப்பது ஒன்றே வழியாக உள்ளது. அதாவது, வேலையின் தேவைக்கு ஏற்ப புதிய ஊழியர்களை நியமனம் செய்யாமலிருப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது, குறைந்த சம்பளத்தில் தற்காலிக காண்ட்ராக்ட் ஊழியர் களை நியமித்தல், இருக்கும் நிரந்தர ஊழியர்களை விருப்பு ஓய்வு போன்ற திட்டங்கள் மூலம் குறைத்தல், பல படிகளை நிறுத்துதல் அல்லது குறைத்தல், ஓய்வுப் பாதுகாப்பு செலவீனங்களை தவிர்த்து, புதிய திட்டங்களை செயல் படுத்துதல் போன்ற வழிகளை கடைபிடிக்கின்றன.

இன்னொருபுறம், இரண்டு வகை கணக்கு களை கடைபிடித்து அரசின் வரியை ஏய்த்து கருப்புப்பண குவியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்குகிறாகள். நாட்டின் அரசு திட்டமிட்டதை தோல்வி அடையச் செய்வதுடன், பொருளாதாரத் தையும் சீர் குழைக்கிறது. வளர்ச்சி, விலைவாசி, பணவீக்கம் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை. பெரும்பகுதி மக்களின் அன்றாட துன்பங்கள் தனி ஆட்சி நடத்து கிறது. உற்பத்தி நிறுவனங்கள், ஒத்துக் கொண்ட சுற்று சூழல் மாசுகட்டுபாடுகளை செயல்படுத்தாமல், தங்கள் லாபத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றன. குறுக்கே வரும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள். காவல் மற்றும் நீதி நிர்வாகங்கள், கருப்புப் பணத் தாலேயே அடித்து வீழ்த்தப்படுகின்றன. லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல், கொழுத்தல்.

எங்கே செல்கிறோம்?

எதையும் செய்யும் திறமையுள்ளவன் வாழ்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் முடியு மட்டும் வாழ்ந்து போகலாம். சமுதாய நோக்கம் என்றெல்லாம் பேசுவது தேவையற்றது என்கிற நிலை. இந்திய அரசியல் சாசனம், பல்வேறு சட்டங்கள் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும்.  அரசுகளும், பணம் படைத்தோரையும் இவை எதுவும் ஒன்றும் செய்யாது என்ற நிலை. காரணம், பணம் படைத்தோர் கையில் இவற்றை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள்.

இப்போது மக்கள் முன் உள்ள கேள்வி, இதை எவ்வளவு தூரம், எவ்வளவு நாள் அனுமதிக்கப் போகிறோம் என்பதுதான்.

நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். ஆசியாவில் செயல்படத் துவங்கியிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, லத்தின் அமெரிக்காவில் எழுந்து வரும் அமெரிக்காவிற் கான பொலிவிய மாற்று போன்ற அமைப்புகள் ஏகாதிபத்திய வீச்சினை (அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட வில்லை யென்றாலும்) தடுத்து நிறுத்தும் உள்ளடக்கம் கொண்டதாக உள்ளன. மத்திய ஆசியப் பகுதியில் நடப்பு நிகழ்வுகள் ஏகாதி பத்தியத்தின் கோரமான முகத்தை தெளிவாக உலகுக்கு வெளிக் காட்டுகின்றன. ஆகவே, நிலைமைகளை சந்திக்க ஏகாதிபத்தியத்திற்கு புதிய முகம் தேவைப்படுகிறது. தன்னொளி பொங்கும் முகம் அதற்கு உண்டு என்று சொல்லும் முயற்சி தான் தற்பொழுது துவக்கப் பட்டிருக்கும் வரலாற்றுப் புரட்டல். பேராசிரியர்கள் சிலர் ஊடகங்களின்  துணை கொண்டு ஏகாதிபத்தியம் ஆற்றிய நல்ல பணிகள் குறித்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி எழுதத் துவங்கியிருக்கிறார்கள்.

காலனி ஆதிக்கத்தின் உண்மை முகம்

பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த தத்துவார்த்த விளையாட்டினை துவக்கியிருக்கின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமதி. பிரியம் வதா கோபால் தி கார்டியன் பத்திரிக்கைக்கு சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், கடந்த கால காலனி ஆதிக்கத்திற்கு புனிதமான தோற்றம் கொடுக்கும் இந்த ஊடக முயற்சிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வரலாற்றைத் திருப்பி எழுத அல்ல, திருத்தி எழுதி பிரிட்டிஷ் பேரரசின் கொடுங்கோல் ஆட்சியினை மூடி மறைக்கும் வேலை பி.பி.சி.யின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் செய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அமைப்புக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டிருக்கும்  நியாலி பெர்கூசன் என்பவர் அந்த பி.பி.சி நிகழ்ச்சிக்கான வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் கூறும் வரலாறு ஒரு சுகமான கற்பனைக் கதை என்கிறார் பிரியம் வதா. அமெரிக்க வலது சாரி சிந்தனைப் போக்கால் உந்தப்பட்டு வலிந்து புகுத்தப்படும் வரலாற்றுப் புரட்டல் அங்கே அரங்கேறு கிறது. காலனி ஆதிக்கம் என்றால் எது நம் நினைவுக்கு வருகிறது? அடிமைத்தனம், சூறையாடல், யுத்தம், ஊழல், ஏழ்மை, நில அபகரிப்பு, பஞ்சம், சுரண்டல், கொத்தடிமை இப்படிப் பல இருட்டுப் பகுதிகளைக் கொண்டது தான் காலனி ஆதிக்கம். ஆனால், இந்த நிகழ்வுக ளெல்லாம் நல்ல நோக்கத்துடன் செயல் பட்ட காலனி ஆதிக்கத்தின் குறுக்கே விழுந்த தவிர்க்க முடியாத சம்பவங்கள், தவறுகள் மற்றும் அத்து மீறல்கள் என்ற குறிப்போடு அவைகள் மூடப்படுகின்றன. பாதி உண்மைகளும், பாதி கற்பனை கலந்த ஊகங்களும் எந்த வகையான நிரூபணமும், அடிக்குறிப்பு களும் இல்லாமல் அதிகாரப் பூர்வமான வரலாறு இதுதான் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வெளியிட்ட உலகின் யுத்தம் என்று பெர்கூசன் எழுதிய புத்தகம் கடந்த காலத்தில் கடைபிடித்த இனவெறிக் கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கின்றது. பொதுவாக மக்கள் தங்கள் இனத்தைச் சார்ந்த மக்களை நம்புவார்கள் என்றும், காலனி மக்களை நவீனப்படுத்த வெள்ளை மனிதர்கள் மேற்கொண்ட சுமை பற்றியும், அவர்கள் புரிந்த வீர சாகசங்கள் குறித்தும் பெர்கூசனின் வரலாறு நிறையவே சொல்லுகிறது.

வரலாற்றை மறைக்கும் முயற்சிகள்

இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும், பேச்சுக்களும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. நவீன பிற்போக்குவாதிகளின் முற்போக்கு  சொல்லாடல்கள் இவை. பெர்கூசன் புதிதாக எதையும் சொல்லவில்லை. மெக்காலே, மில் போன்ற ஏகாதிபத்திய  ஆதர வாளர்களும், தற்போது புஷ் நிர்வாகம் கொஞ்சம் சுத்தப்படுத்தி வெளியிடும் உளுத்துப்போன சுய விளம்பரக் கனவுகளையும், பரப்பப்பட்ட பொய்களையும்தான் பெர்கூசன் பட்டை தீட்டி நம்முன் வைக்க விரும்புகிறார். அவர் போன்றவர்களை அதிகாரப் பூர்வமான வரலாற்றாசிரியர்கள் என பிரிட்டிஷ் ஊடகங்கள் அங்கீகரிப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேன்மை யைப் பரப்பும் பிரச்சார பீரங்கிகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

பிரிட்டனில் குடியுரிமை வேண்டுவோர் பிரிட்டனின் வரலாறு படித்து தேர்வு பெற வேண்டும் என பிரிட்டிஷ் குடியுரிமை விதிகள் கூறுகின்றன. அதற்காக ஒரு வரலாற்றினை எழுதியிருப்பவர் பேராசிரியர் பெர்னார்ட் க்ரிக் – இவரை நியாலி பெர்கூசனின் மறுபதிப்பு எனலாம். 9000 வார்த்தைகளைக் கொண்ட இந்தப் புத்தகம். பிரிட்டனின் மேன்மைக் குடியைப் பற்றி பலவாறு குறிப்பிடுகிறது. பிரிட்டனின் உயர்தனிக் குடும்பங்களைப் பற்றி 210 வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால், பிரிட்டன் நாட்டு பாமர மக்களின் சாசன இயக்கம் (Charter Movement) பற்றியோ, தொழிற்சங்க இயக்கத்தின் துவக்கம் பற்றியோ, 1927 ல் நடந்த மிகப் பெரிய வேலை நிறுத்தம் பற்றியோ ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. தாட்சர் ஆட்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது; ஆனால், அர்ஜென்டினாவுக்கு எதிராக அந்த அரசு நடத்திய  தார்மீக நெறியற்ற ஃபாக்லண்ட் யுத்தம் பற்றி ஏதுமில்லை. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி நடத்தப்பட்ட அடிமை வியாபாரம் தீதானது என்று குறிப்பிடும் போது, பிரிட்டிஷ் பேரரசின் கொடிய செயல்களை வெண்பட்டு முக்காடு கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. பெர்னார்டு கிரிக் காலனி ஆதிக்கத்தை சித்தரிக்கும் விதமே அலாதியானது. “ஆப்பிரிக்காவின் பூர்வ குடி மக்களுக்கும், இந்திய உபகண்டத்தில் உள்ள மக்களுக்கும் நடுநிலையான சட்ட ஒழுங்கு அமைப்பை கொடுத்தும், ஆங்கிலக் கல்வி கொடுத்தும், சிதறிக்கிடந்த மக்களை ஒற்றுமைப் படுத்தி, மக்கள் நலன், கல்வி முதலியவற்றில் கவனம் செலுத்தி அமைதி காத்து, யார் தங்களை ஆளுகிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்கச் செய்தது” என்கிறார். இதைப் படித்துவிட்டுத்தான் நம் நாட்டின் பிரதமர் அண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு “நல்லாட்சி” (Good governance) விருது வழங்கியிருப்பாரோ?

காலனி அரசின் அலங்கோலம்

அமர்த்தியா சென், நிக்கோலஸ் டிர்க்ஸ், மைக் டேவிஸ் மகமூத் மம்தானி, கரோலின் எல்கின்ஸ், வால்டர் ரோட்னி போன்றவர் களெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் பற்றி ஆய்வு செய்து எழுதியவற்றில் காலனி நல்லாட்சி என்பது வறுமையும், ரத்தக்களறியும், அடக்கு முறையும், துன்ப துயரங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்பதை விளக்கியிருக்கிறார்கள். மைக் டேவிஸ் எழுதிய கடந்த விக்டோரியா காலப் படுகொலைகள் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைப்பற்றி எழுதியிருக்கிறார். 1896-1900 காலத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 12 லிருந்து 29 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் இறந்து போனார்கள்.  அதற்கு முந்தைய  2000 ஆண்டுகளில் அப்படி இறந்தவர்களைக் காட்டிலும் இது அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியால் அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்கிறார் டேவிஸ். எல்நினோ என்றழைக்கப்பட்ட வறட்சி நிலை 1876ல் இந்தியாவின் தக்காணப் பகுதியினைத் தாக்கியது. அரசிடம் போதுமான அரிசியும், கோதுமையும் இருப்பில் இருந்தது. அன்றைக்கு இந்திய வைஸ்ராய் பொறுப்பில் இருந்த லிட்டன் எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியினைத் தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். பஞ்சம் நிலவிய உச்ச கட்டத்தில் 320,000 டன் உணவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பட்டினியால் வாடிய விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரண உதவிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் குறுக்கீடு இருக்கிறது என்று சொல்லி அறவழி நன்கொடைக்கு எதிராக 1827-ம் ஆண்டு சட்டத்தினைப் பயன்படுத்தி தனியார் நிவாரண உதவிகளும் தடைசெய்யப்பட்டன; மீறினால் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. கடும் உழைப்புக்கு மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். நாஜி ஜெர்மனியின் புக்கன் வால்ட் கைதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட உணவைக் காட்டிலும் மிகக் குறைவான உணவே அந்த உழைப்புக்கு வழங்கப் பட்டது. அந்த உழைப்பிற்கான முகாம்களில் மாதாந்திர இறப்பு விகிதம் 94 சதம். இதுவே ஓர் ஆண்டு இறப்பு விகிதமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் போது, வரி வசூலை முடுக்கிவிட்டது காலனி அரசு. அந்தப் பணம் லிட்டன் நடத்திய ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் (இன்றைய) உத்திரப்பிரதேசப் பகுதிகளில் அபரிமிதமான அறுவடை இருந்தது; ஆனால் காலனி அரசின் ஏற்றுமதிக் கொள்கையால், இந்தப் பகுதியில் மட்டும் 12.5 லட்சம் பேர் இறந்தார்கள். இதுதான் அந்த நல்லாட்சியின் அளவீடு.

நல்லாட்சியின் அம்சங்கள்

ஜனநாயகம், விடுதலை, சகிப்புத்தன்மை போன்ற மனித குலம் போற்றும் பண்புகளை நாங்கள் தான் காலனி மக்களுக்குக் கொடுத் தோம் என்று காலனி ஆதிக்கவாதிகள் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். கென்யாவில் பிரிட்டன் நடத்திய வெறியாட்டம் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து நடத்திய கொடுஞ்செயலாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் ராணுவத்தின் துணைகொண்டு 12000 சதுர மைல் நிலங்களை அபகரித்து, 2000 சதுர மைல் பரப்பளவுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிராமங்களில் 12.5 லட்சம் கிகியூ இனத்தவரை அடைத்துப்போட்டது என்ன விடுதலை உணர்வோ! எதிர்த்துப் போரிட்ட மாவ்மாவ் இயக்கத்தினரை கொலை, சித்தர வதை போன்ற அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி ஆட்சி செய்தது என்ன சகிப்புத்தன்மையோ! 3.20 லட்சம் பேர் அந்த சித்தரவதை முகாம்களில் இருந்தனர். செவி மடல்களை வெட்டியும், உடலில் மெழுகை ஊற்றி பின்பு எரித்தும், எரியும் சிகரெட் துண்டுகளை செவிகளில் நுழைத்தும் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள் என கரோலின் எல்கின்ஸ் பிரிட்டனின் குலாக் என்ற புத்தகத்தில் எழுதுகிறார். 1 லட்சம் பேர் கொல்லப்பட்டும், நோயினாலும், பட்டினியாலும் மடிந்து போனார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை காலனி ஆதிக்கத்தின் வெறித்தனத்தை வெளிக்காட்டிய செயல். டாஸ்மானி யாவில் நடந்த இனப்படுகொலை, 1948 – 60 ல் மலேயாவிலும், சைப்ரஸிலும் (1955-59) நடத்திய ராணுவ நடவடிக்கைகள், ஓமன் கிராமங்களின் மீது நடத்திய குண்டு வீச்சு, வடக்கு ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யுத்தம், டியோகா கார்சியா தீவிலிருந்து மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள், 1953-62 ல் கயானாவில் மக்களின் ஜனநாயக முடிவினை எதிர்த்து நடத்திய ராணுவ நடவடிக்கை, 1956 ல் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து சூயஸ் கால்வாயினை மீண்டும் பிடிக்க எடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் இவைகள் தான் பிரிட்டிஷ் அரசின் நல்லாட்சிக்கான வரலாற்றுப் பூர்வ நிரூபணங்கள். நமது நாட்டில் மத அடிப்படையிலான பிரிவினையை நடத்தி வைத்த பெருமை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு; 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து பரிதவித்த சோக வரலாற்றினை நாம் கண்டோம்.

பேராசை, வன்முறை

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படுவதற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்தது? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில் நாம் தோல்வியடைந்திருக்கிறோம் என்கிறார் பிரியம் வதா. பேராசையும், வன்முறையும் ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது கலாச்சாரத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால், காலனி ஆதிக்கத்தின் இந்த நடைமுறைகள் முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை அழித்துவிட்டது. முகலாய மன்னர் அக்பரின் அட்சி முறை சுல்-எ-குல் அல்லது அனைவருக்கும் நன்மை என்ற பிரதான கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டது; ஆனால், இதையெல்லாம் மாற்றி பிரிட்டன் இங்கே அதன் பேராசையின் வரலாற்றிற்கு புதிய அத்தியாயம் எழுதியது. பருத்தி, கரும்பு, தேக்கு, ரப்பர் மற்றும் பல்வேறு கனிமங்கள் போன்ற இந்த நாட்டின் இயற்கைச் செல்வம் பெரிய அளவில் சூறையாடப்பட்டது. பிரிட்டிஷ் வருவதற்கு முன் இந்தியாவின் துணி உற்பத்தி மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு அரைநூற்றாண்டு காலத்தில் அதை அழிவுக்குக் கொண்டு வந்தது. மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தில் குறிப்பிடுவது போல், பருத்தி துணி நெய்யும் நெசவாளிகளின் எலும்புகள் இந்திய சமவெளியினை வெளிறச் செய்துவிட்டது. ஜார்ஜ் மான்பியாட் என்ற கட்டுரை யாளர் தி கார்டியன் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையில் 18ம் நூற்றாண்டில் தென் இந்தியத் தொழிலாளர்கள் அதே காலக் கட்டத்தில் இருந்த பிரிட்டன் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்தார்கள். நல்ல பொருளாதாரப் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என (பி.பார்த்த சாரதி என்பவர் ஆய்வினை மேற்கோள் காட்டி) குறிப்பிடுகிறார். 1757 லிருந்து 1947 வரை இந்தியாவில் தனிநபர் வருமானம் எள்ளவும் உயரவில்லை என்று மைக் டேவிஸின் கருத்தினையும் முன் வைக்கிறார். 2 கோடி ஆப்பிரிக்க மக்களும், 15 லட்சம் இந்தியர்களும் கொத்தடிமைகளாக கடல் கடத்தப்பட்டு தேயிலை, கரும்புத் தோட்டங்களில், சுரங்கங்களில் பணி புரிய நிர்பந்திக்கப்பட்டனர். ஃபிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமையாய் வெந்து மடியும் இந்தியர்களைப் பற்றி பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.

நாட்டை நினைப்பாரோ எந்த
நாளினைப் போவதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! – துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர்
விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்…

நாடுகளை அடிமைப்படுத்தி, செல்வங்களைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி திரட்டிய செல்வத்தில் உருவாகி, வளர்ந்த முதலாளித்துவ உலகம்; ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது.

பிரிட்டன் வழியில் அமெரிக்கா

ஏகாதிபத்திய உலகில் பிரிட்டனின் வாரிசாக பிரிட்டனையே பின்தள்ளிவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னே வந்து நிற்கிறது. இவர்களுக்கும் உண்மையான வரலாறு படிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஈராக் யுத்தம் முடிவுற்ற போது, (இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேறு விஷயம்) புஷ் பேசினார்: வரலாறு? எங்களுக்குத் தெரியாது. முடிவில் நாம் எல்லோரும் இறந்து போவோம். இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் வரலாற்றை ஒதுக்க நினைத்தாலும், அது ஒதுங்குவதாக இல்லை. சென்ற ஆண்டு (நவம்பர் 11) போரில் சிறப்பாக பணி புரிந்தோர் தினத்தில் பேசும்போது புஷ்  எப்படி போர் துவங்கியது என்று வரலாற்றைத் திருப்பி எழுத முயற்சிப்பது எல்லையற்ற பொறுப்பின்மை என்று குற்றம் சாட்டினார். ஈராக் யுத்தம் எப்படி பொய்களையும், உளவுத்துறை செய்திகளின் திருத்தங்களையும், ஏகாதிபத்திய உள்நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப் பட்டது என்று ஆராயத் துவங்கியதன் விளைவுதான் இந்தக் கோபம். ஜனநாயகம், விடுதலை நாகரீகம் என்பதையெல்லாம் உலகுக்கு கற்றுக் கொடுக்க எடுத்த அவதாரம் தான் தங்கள் அமெரிக்கா என்று பறைசாற்றுகிறார்கள். 5 லட்சம் ஈராக் குழந்தைகளைப் பலி வாங்கி, தொன்மையான யூப்ரிடிஸ் – டைக்ரிஸ் நதிக்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்துவிட்டு, அவர்கள் சுட்டு விரலுக்கு அசையும் பொம்மை அரசினை நிறுவிவிட்ட பின் னணியில், அந்த அழிப்பு வேலை வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறுவதை புஷ் கும்பல் விரும்பவில்லை. கடந்த கால வரலாறு எழுதுவது நிறுத்தப்பட்டால் மனிதாபிமானம் என்பது நிறுத்தப் படுகிறது என்று பொருள். கடந்த காலம் என்ன சொல்கிறது?

உங்களுடைய தளர்வுற்ற, ஏழ்மையுற்ற, தாழக் குனிந்து விடுதலை வேண்டும் என்று கெஞ்சுகிற மக்களை – உங்கள் கடலலைகள் உமிழ்ந்து கொட்டி துயருற்று பயனற்றதென கழிவு செய்த மக்களை – உறைவிடம் ஏதுமற்று, சூறாவளியினால் அலைக்க ழிக்கப்படுகிற அந்த மக்களை என்னிடம் அனுப்புங்கள் என நியூயார்க் துறைமுக வாயிலில் தீபத்தைக் கையில் ஏந்திய சுதந்திர தேவியின் சிலைக்கு அடியில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. அந்த மக்கள் வந்தார்கள். அமெரிக்க வரலாறு சொல்கிறது வந்தவர்கள் அப்படியே வாழ்ந்தார்கள் என்று ஃபெலிக்ஸ் க்ரின் தன்னுடைய எதிரி என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல், அமெரிக்காவின் புதிய உலகக் கனவில் துவக்கத்திலிருந்தே கேடு விளைவிக்கும் ஊனம் இருந்தது – மனிதர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் மீது கட்டப்படும் எந்தச் சமூகமும் ஒரு அடிமைச் சமூகமாக இருக்க முடியாது;

ஆனால், அமெரிக்கா அப்படித்தான் ஆனது; அந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக குடிகளான இந்திய மக்களை (செவ்விந்தியர்கள் என்று ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன) ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததை மன்னித்துவிட முடியுமா? உற்பத்திச் சாதனங் களை தனியார் கையில் கொடுத்துவிட்டு மனித சமத்துவம் உருவாக்க முடியுமா? பகட்டான வார்த்தைகளில் வெளியிடப்படும் உன்னத லட்சியத்திற்கும், செயலில் வெளிப்படும் யதார்த்த நிலைக்கும் உள்ள இந்த முரண்பாடுகள் சொல்லொணா விளைவுகளைக் கொண்டு வரும் என்று எச்சரிக்கிறார். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பு நிற அடிமைகள், அங்கேயே உள்ள இந்திய இன மக்கள், சுதந்திர தேவி அழைத்த முறையில் வந்து குடியேறிய மக்கள் – இவர்களின் உழைப்பு கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டது. நிலம் வேண்டி, தங்கம் தேடி அமெரிக்காவில் மேற்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பி யர்கள் 10 லட்சம் இந்தியர்களில், கிட்டத்தட்ட 7 1/2 லட்சம் பேரைக் கொன்று குவித்துவிட்டுத்தான் நிலத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். டிசம்பர் 28, 1870 ல் வூண்டட் நீ (Wonded Knee) என்னுமிடத்தில் அரசுப் படைகளுக்கும், இந்தியர்களுக்கும் நடந்த மோதலின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பற்றி டீ ப்ரௌன் (Dee Brown) என்பவர்  My Heart at Wounded Knee என்ற புத்தகத்தில் எழுதியதை குறிப்பிடுவது மறந்து போன அமெரிக்க வரலாற்றினை நினைவுக்குக் கொண்டு வரும். அந்த வெறித்தனம் முடிந்த பொழுது பிக்ஃபூட்  (இந்தியர்களின் ஒரு குழுத் தலைவர்) மற்றும் அவர் குழுவில் பாதிக்கும் மேல் இறந்து போனார்கள். பலர் படுகாயமுற்றனர்; தெரிந்த அளவில் 153 பேர் இறந்து போனார்கள். காயமுற்ற பலரும் ஊர்ந்து போனார்கள், கடைசியில் அவர்களும் மாண்டனர்.

ஒரு கணிப்பு கொடுத்த தகவலின் படி, மொத்தம் 350 பேரில் ஆண், பெண், குழந்தைகள் உட்பட, 300 பேர் கொல்லப் பட்டனர். ராணுவத்தினர் 25 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காய முற்றனர்; அதுவும் அவர்களின் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடித்த உலோகத் துண்டுகள் மூலமாகத்தான் இந்த நிகழ்வுக ளெல்லாம் அனை வரையும் சமமாகப் பாவிக்கும் அமெரிக்க அரசியல் சட்டம் நிறை வேற்றிய பிறகு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றாசிரியன் ஆராய்கின்ற கடந்த காலம் அழிந்து போன கடந்த காலம் அல்ல. ஆனால், ஒரு அர்த்தத்தில் நிகழ்காலத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலம் அது என இ.எச்.கார் தன்னுடைய வரலாறு என்றால் என்ன? புத்தகத்தில் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்வோம். அந்த அடித்தளத்தில் கட்டப்பட்டது தான் இன்றைய அமெரிக்கா.

ஆக்கிரமிப்பு  எல்லை விரிவடைகிறது

பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்ந்தது. 1898 ல் ஸ்பெயின் பிடியில் இருந்த பிலிப்பைன்ஸ், ப்யூர்டோ-ரிகோவினை அமெரிக்கா கைப்பற்றியது. ஃபெலிக்ஸ் க்ரீன் கேட்கிறார்: ஹவாய் மற்றும் ப்யூர்டோரி கோவினைக் கைப்பற்ற அமெரிக்காவிற்கு கடவுள் கொடுத்த அதிகாரம் ஏதேனும் உண்டா என்று அமெரிக்க மக்கள் கேட்ட துண்டா? அந்த மக்களிடம் இது பற்றி விவாதித்ததுண்டா? இரண் டாம் உலகப் போருக்கு முன்பே பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, கியூபா, நிகரகுவா, பனாமா, ஹைதி, கொலம்பியா, பெரு, டொமினிகன் குடியரசு, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ் மற்றும் கரீபியன் பகுதியில் உள்ள நாடுகளில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அமெரிக்க மக்களின் மனச்சாட்சி ஏற்றுக் கொள்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் ஏதும் கிடைக்க வில்லை. 1954 ல் 72 சதம் வாக்குகளைப் பெற்று ஜாக்கோபா அரபென்ஸ் கவுதமாலாவின் குடியரசுத் தலைவரானார்;

நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்தார், அன்றைக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த டல்லசின் குடும்பம் பங்கு கொண்ட ஒரு நிறுவனம் பறிக்கப்பட்டது. நஷ்ட ஈடு போதாது என்று சொல்லி அதற்காக ராணுவ தளபதி காஸ்டில்லோ அராமாஸ் என்பவனைத் தூண்டி அண்டை நாடான ஹோண்டுராஸிலிருந்து படையெடுத்து, அரபென்ஸ் அரசைக் கவிழ்த்த வரலாறு அதிகமாகப் பேசப்படாத ஒன்று. ராணுவ ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் டல்லஸ் சொன்னது; அமெரிக்க நாடுகளின் சிறப்பான பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. சிலியில் இதே முறையில் அலெண்டே அரசும் கவிழ்க்கப்பட்டதும் ஒரு வரலாறு. அமெரிக்கா நடத்திய வியட்நாம் யுத்தம் எளிதில் மறந்து விடக் கூடிய வரலாற்று நிகழ்வா? இப்போது ஈராக். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அண்மையில், ஈராக்கில் மீண்டும் ஒரு வியட் நாமை சந்திக்க நேரும் என்று அமெரிக்க அரசை எச்சரித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு வரலாற்றை எழுதினால் புத்தகத்தின் பக்கங்கள் முடிவு பெறாமல் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், புஷ் மற்றும் ஏகாதிபத்தியத்திய வாதிகள் அந்த வரலாறு நினைவு படுத்தப்படுவதை விரும்பவில்லை.

நாணயமான வரலாறு மதிப்பீடு

வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கக் கூடும். அதை மறந்தால் சமூகம் முன்னேறுவதற்கான திறனை முற்றிலும் இழந்துவிடும். திருத்தும் பேராசிரியர்கள் கடந்த காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி ஏன் விமர்சிப்பதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு கொடுங்கோன்மை அமைப்பிலிருந்து மீண்டும் மற்றொன்றின் கீழ் வாழ மக்கள் விரும்புவதில்லை. ஜனநாயகம், பாராளுமன்ற அமைப்பு முறை, நிர்வாக அமைப்பு முறை இவைகளையெல்லாம் நாங்கள் தானே கொடுத்தோம் (நம் நாட்டின் பிரதமர் உட்பட சிலர் நம்புவது போல்) என்று பறைசாற்றும் மேலை நாட்டு காலனி ஆதிக்க ஆதரவாளர்கள் அந்த நாடுகளின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் முழுமையாகப் புரிந்து கொள்ளா தவர்களாகத்தான் உள்ளனர். அமர்த்தியா சென் போன்றவர்க ளெல்லாம் இந்த மண்ணுக்கு சுதந்திரமான சிந்தனையும், விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொண்ட பாரம்பரியம் உண்டு என்று பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டி யுள்ளனர். மக்கள் பங்கு கொள்ளும் முறைகளைக் கொண்ட கிராமப்புற அமைப்புகள் இங்கே இருந்ததுண்டு.

ஜனநாயகப் பண்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அசைவுகள் என்று குறுக்கிவிடும் பேதமை யினை நாம் சந்திக்கிறோம். அமிதாவ் கோஷ் போன்ற வரலாற்றா சிரியர்கள் சுதந்திரச் சந்தை என்று இன்று அதிகமாகப் பேசப்படும் வணிக முறை கூட இந்தியாவிற்குப் புதிதல்ல என்றும், பிரிட்டிஷ் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் கடல் கடந்த வணிகம் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கும் நம்நாட்டில் செயல்பட்ட பல்வேறு பேரரசுகளுக்கிடையே இருந்திருக்கிறது என்றும் விவரிக்கிறார்கள். ஆனால், காலனி ஆதிக்கவாதிகளும், ஏகாதிபத்தியமும் புதிய வரலாறு எழுத முயற்சிக்கும் போது ஒரு விஷயத்தை நமக்குச் சொல்ல விரும்புகிறார்கள். அதாவது அவர்களது உயர்ந்த நாகரிகம் மற்ற நாகரிகங்களோடு மோதுவதைத் தவிர்க்க முடியாது. ரட்யார்ட் கிப்ளிங்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதுபோல்,  கிழக்கு கிழக்கு தான், மேற்கு மேற்கு தான்; இரண்டும் என்றும் சந்திக்க முடியாது என்ற நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பல வகையான பண்பாட்டு நுழைவினைத் தடுத்து, அந்தந்தப் பண்பாட்டினைக் கெட்டிப்படுத்தி நிறுத்துவது (இரண்டும் சந்திக்க முடியாது) ஏகாதிபத்திற்கு தேவைப்படுகிறது. அப்படிச் சந்திக்க முடியாது என்று சொல்வது காலனி ஆதிக்கத்தின் அவலச் சுவை கொண்ட பொய் என்கிறார். பிரான்ஜ் பெனான் (Franz Fanon) இக்கருத்தின் செயல்வடிவம் தான் இஸ்லாமுக்கு எதிராக புஷ் தொடங்கியிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு; யுத்தம், அதற்குப் பதிலடி கொடுப்பதாக எழுந்திருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அக்கருத்தின் மோசமான விளைவுகள்தான். இந்த ஏகாதிபத்திய அணுகுமுறை உடைத்தெறியப்பட வேண்டும். அது உண்மையான வரலாற்றுக்குப் பொய்யான முகம் கொடுத்து வண்ண வண்ண கற்பனைக் கதைகள் உலா வருவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

கடந்த காலத்தைப் பற்றி நாணயமான மதிப்பீடு செய்ய வேண்டும். அமெரிக்க மக்களின் வரலாறு எழுதிய ஹோவர்ட் ஜின் (Howard Zinn) குறிப்பிடுகிறார் வரலாறு சாதாரண மக்களால் உருவாக்கப்படுகிறது. அவர்களில் பலரின் முகங்கள் யாருக்கும் தெரியாது; பலர் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள்; பலர் பழிதூற்றலுக்கு உள்ளானவர்கள். ஆனால், உண்மையினைப் பேச உரம் பெற்றவர்கள். நமது நாட்டு வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியினை தேசிய ஜனநாயக முன்னணி அரசு (பா.ஜ.க.வின் வழிகாட்டுதலால்) மேற்கொண்டது நமக்குத் தெரியும். உலக வரலாற்றை மாற்ற ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகத்தான் அது இருந்தது. கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மக்களின் நன்மைக்கே என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்தியம் துவக்கியிருக்கும் போது, உண்மை யினைப் பேச உரம் பெற்றவர்களை பேச வைக்க வேண்டும்.

ஆதாரங்கள்

  1. Dr. Priyam vada Gopal – The Guardian 28.6.20006
  2. George Monbiot – The Hindu 28.12.2005
  3. Mike Morqusee – The Hindu 6.8.2006
  4. Felix Greene – “The Enemy”
  5. Howard Zinn – “Voices of the Peoples’s history of United States”
  6. Dee Brown – “Bury my Heart at Wounded Knee”