பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதே பிரதான கடமை

எடிட்: மதன் ராஜ்

– உ.வாசுகி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய  மாநாடு, ஏப்ரல் 18-22 ஆகிய நாட்களில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்றது. 758 பிரதிநிதிகளும், 71 பார்வையாளர்களும் பங்கேற்ற இந்த மாநாட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அரசியல் நடைமுறை உத்தி வரையறுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வுரிமை மீதும், நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும் ஆர்.எஸ்.எஸ்./பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவுகளைப் பரிசீலிக்கும் முன்னர், உலகளாவிய நிகழ்வுகளின் பின்னணியில் அவற்றைப் பொருத்திப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தீவிரமாகும் பொருளாதார சுரண்டல்:

2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவம் இன்னும் மீளவில்லை. இதனை எதிர்கொள்ள, பிரச்சனையின் சுமையை மக்கள் மீது சுமத்துவது; ஜனநாயக உரிமைகளைப் பறித்து, எதிர்ப்புகளை ஒடுக்குவது என்ற வழிமுறையை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர். இது, மக்கள் மீதான பொருளாதார சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகிறது. உண்மையில் இந்நிலை எப்படி உருவானது என சற்று திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, உற்பத்தியாகும் பொருட்களை விற்க வழியில்லாத சூழல் உருவான போது, தற்காலிக வாங்கும் சக்தியைக் கடனாக அளிக்க, புதிய வடிவிலான  நிதிசார் சாதனங்களை நவீன தாராளமயம் உருவாக்கியது. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை பரவலான போதுதான் 2008-ல் அமெரிக்காவில் நிதிசார் நெருக்கடி உருவாகி, பின்னர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. அதை எதிர்கொள்ள முதலாளித்துவம் எடுக்கும் முயற்சிகள் மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கின்றன. எனவே, நெருக்கடியிலிருந்து மீள, நவீன தாராளமய கொள்கைகளின் அடிப்படையில் முதலாளித்துவம் எடுக்கும் நடவடிக்கைகள் இன்னொரு நெருக்கடியை உருவாக்குகின்றன. மொத்தத்தில் நவீன தாராளமயமே நெருக்கடியில் இருக்கிறது. இந்த நிலை, ஏகாதிபத்திய நாடுகளிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்குகிறது; சமூக பதட்டங்களை ஏற்படுத்துகிறது. வளரும் நாடுகளை மேலும் தீவிரமாக சுரண்டவும் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு முதலாளிகளும் முயல்கிறார்கள்.

இதனால் மக்களின் வாழ்க்கை தரம் சீரழிகிறது. வேலை வாய்ப்புகள் அழிக்கப்படுகின்றன. கிடைக்கும் வேலைகளும் குறைந்த கூலி, தரம் குறைவு, பகுதி நேரம், காசுவல், ஒப்பந்த அடிப்படையில் அமைந்தவையாகவே உள்ளன. புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகள், இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்துகின்றன. இதுவும் வேலை வாய்ப்புகளை இழக்க செய்கிறது. மேல் மட்ட 1 சதவீதம் பேருடன் ஒப்பிடும் போது, அடிமட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரின் வருமான வளர்ச்சி மந்தமாகவோ அல்லது அறவே இல்லாமலொ இருக்கிறது என உலக சமத்துவமின்மை அறிக்கை 2018 எடுத்துக் காட்டுகிறது. இந்நிலை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்குகிறது. போராட்டங்கள் வெடிப்பதும், ஒடுக்கப்படுவதும் இக்கால கட்டத்தின் காட்சிகளாக நீடிக்கின்றன.

வலதுசாரி அரசியல் திருப்பம்:

இந்த அதிருப்தியின் விளைவு எத்தகைய அரசியல் போக்குக்கு சாதகமாக திரும்பும் என்பது முக்கியமான அம்சம். உலக நாடுகளின் நடப்புகள் எதைக் காட்டுகின்றன? எங்கு இடதுசாரி சக்திகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கு அதிருப்தியின் விளைவு அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்குகிறது.  எங்கு அவர்கள்  வலுவாக இல்லையோ, அங்கு வலதுசாரி அரசியல் சக்திகள் இதனை அறுவடை செய்கின்றன. பிரச்சனை என்னவென்றால், எந்த நவீன தாராளமய கொள்கைகள் மக்கள் வாழ்வை சீரழித்து கடும் அதிருப்தியை உருவாக்கினவோ, அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாகப் பின்பற்றுபவர்களாக வலதுசாரி அரசியல் சக்திகள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த 3 ஆண்டு காலத்தில் பொதுவாக அவ்வாறான ஒரு வலதுசாரி அரசியல் திருப்பம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிரம்ப்  அதன் அதிபரானது இத்தகைய போக்கினை வலுப்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலத்தில், மக்களின் அதிருப்தியும், கோபமும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக மாறுகிறதா, வலதுசாரிகளைத் தேர்வு செய்ய வைக்கிறதா என்பதே பல நாடுகளின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். 1929-33 வரையிலான பொருளாதார பெரு மந்தநிலை ஏற்பட்ட காலத்தில் தான், மக்களின் வெடித்துக் கிளம்பிய அதிருப்தியை பாசிச சக்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இப்போதும் இடதுசாரிகள் அதில் வெற்றி பெறா விட்டால், நவீன பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் வெற்றி பெறும் அபாயம் முன்னெழும்.

இக்கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் இக்கட்டுகளை சமாளிக்கவும், உலகளாவிய தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் கடும் தலையீடுகளை செய்து கொண்டிருக்கிறது. இடதுசாரி சக்திகள் அரசாங்கத்தில் உள்ள பல நாடுகளைக்  கொண்ட லத்தீன் அமெரிக்க பிரதேசத்தில் அவற்றைக் கீழே இறக்க பல்வேறு உத்திகளை வலுவாகக் கையாண்டு வருகிறது. ஒரு துருவ உலகமாக, தன் தலைமையின் கீழ் உலகைக்கொண்டு வர அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு மாற்றாக, பிரதேச ஒத்துழைப்பு என்ற பெயரில் பல்வேறு இடங்களில் நாடுகள் எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கல்கள் நிகழ்ந்துள்ளன. ஒத்துழைப்பில் இருக்கும் நாடுகளில் சில அமெரிக்க சார்பு நிலை எடுப்பது இதற்கு ஒரு காரணம். இந்தியாவும் இதற்கு ஓர் உதாரணம்.

அதே சமயம், பல நாடுகளில் இடதுசாரி பார்வையுள்ள அமைப்புகள், மேடைகள் உருவாகியுள்ளன. சமூக ஜனநாயக கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. சோஷலிச நாடுகளில் மக்கள் சீனம் தன் வலுவையும், உலகளாவிய செல்வாக்கையும் அதிகரித்திருக்கிறது. வியத்நாமும், கியூபாவும் ஓரளவு நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றன. லாவோஸ் ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. வட கொரியாவைப் பொறுத்த வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதார தடைகளின் காரணமாக, தனது கனிம வளங்களைக் கொடுத்து உணவு, இதர அத்தியாவசிய பொருட்களைப் அது பெற்றுக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்க – தென்கொரிய ராணுவ கூட்டு அச்சுறுத்தலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளுக்குத் தனது வளங்களை அது செலவழிக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் சமீபத்தில் தென் கொரியாவுடன் ஒத்துழைப்புக்கான சில முன்முயற்சிகளை எடுத்துள்ளது.  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உண் உடன் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் (முரண்களுடன் கூடவே) ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்டை நாடுகளில் நேபாளத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியதோடு, ஒரே கட்சியாவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நேபாளம் ஒரு குடியரசாக பிரகடனம் செய்துள்ள பின்னணியில் இத்தேர்தல் நடந்துள்ளது.

இலங்கையில் உள்ள கூட்டணி அரசு, (இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி) புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அம்சத்தை இது உள்ளடக்கி வரும் எனக் கூறப்படுகிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். புத்த மத வெறியர்களால் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், பல்வேறு சமூகங்களுக்கிடையே பதட்டம் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது.

சர்வதேசக் கடமைகள்:

இச்சூழலில் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வலுப்படுத்துவதும், மோடி அரசு அமெரிக்காவின் கீழ்நிலை கூட்டாளியாக மாறி, அதற்கு சரணாகதி அடைவதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும்  மட்டுமல்ல; உலகெங்கிலும் ஏகாதிபத்திய, நவீன பாசிச சக்திகள், அடிப்படைவாதம், மதவெறி, பழமைவாதம், பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சோஷலிச நாடுகளுடன் தோழமை உணர்வை வலுப்படுத்த வேண்டும்., உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளுடன் உறவைப் பேண வேண்டும். இவற்றை, உலகச் சூழல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் நமது கடமைகளாக அரசியல் தீர்மானம் வரையறுக்கிறது.

தேசிய சூழல்:

சென்ற மாநாட்டில் சுட்டிக்காட்டியபடி, பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பமும், பல்வேறு பெரும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. நான்கு  வடிவங்களில்  இவை வெளிப்படுகின்றன. 1)நவீன தாராளமய கொள்கைகள் தீவிர கடைப்பிடிப்பு; இதன் மூலம் மக்களின் மீது பல்முனை தாக்குதல்கள்; 2)இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக சட்டத்தை அச்சுறுத்தக் கூடிய ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமலாக்க தொடர் முயற்சி; இதன் விளைவாக தலித், இசுலாமியர்கள் மீது கடும் தாக்குதல்கள்; பாசிசத் தன்மை கொண்ட போக்குகள் முன்னெழுவது;  3)அமெரிக்காவுடன் கேந்திர கூட்டை வலுப்படுத்தி அதன் இளைய பங்காளி என்ற பாத்திரத்தை வகிப்பது; 4)நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை சீர்குலைத்து, எதேச்சாதிகாரத்தைக் கட்டமைப்பது.

பாஜகவை எதிர்ப்பது என்பது, மேற்கூறிய சித்தாந்தத்தையும், நவீன தாராளமய கொள்கைகளையும், எதேச்சாதிகார போக்குகளையும், அமெரிக்காவுடனான இளைய பங்காளி நிலைபாட்டையும்  எதிர்ப்பதாகும். மாற்று என்பது, இவற்றிலிருந்து தெளிவாக வேறுபட்ட மாற்று.

அதிகரிக்கும் பொருளாதார பயங்கரவாதம்:

ஜி.எஸ்.டி., உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் முறை சாரா தொழிலாளியின் வாழ்க்கையையும், சிறு குறு தொழில்களையும் சிதைத்துள்ளன. தனியார்மயம் தீவிரமடைந்துள்ளது.  அந்நிய நேரடி மூலதனம் நுழையாத துறையே இல்லை எனலாம். பெருமுதலாளிகளுக்குப் பெருமளவில் வராக் கடன் கொடுப்பதன் மூலம்  பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுகின்றன. மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி வேலை வாய்ப்பு துறையில் தான் எனக் கூறமுடியும். 2017ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் வரையிலான காலத்தில் இருக்கும் பணி இடங்களில் சுமார் 15 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டன. வேளாண் நெருக்கடி கூர்மையாக முன்னுக்கு வந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விளை பொருளுக்கு நியாயமான விலை வழங்கப் படவில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள்ளேயே இது சாத்தியமில்லை என உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் அஃபிடவிட் தாக்கல் செய்து விட்டது அரசு. சர்வ தேச கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் வரிகளைக் குறைக்காமல் மக்களைப் பிழிந்து கொண்டுள்ளது. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, சுற்றுச்சூழல் குறித்துக் கவலையின்றி லாப வேட்டை ஆடுவதை அனுமதிக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை பளிச்சென புலப்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியதன் மூலம் பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. உணவு, ஊதியம் பாதிப்புடன் சேர்த்து, அது குடிமக்கள் மீது அரசு கண்காணிப்பை வலுப்படுத்துகிறது. ஊரக வேலை உறுதி சட்டம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சி போக்குகள் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் ஏழை குடும்பங்கள் மீதான சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்  நல சட்டங்கள் திருத்தப்பட்டு, முதலாளிகளுக்கு வாழ்க்கை சுலபமாகவும், உழைப்பாளிகளின் வாழ்க்கை வாழ்வதற்கே தகுதியற்றதாகவும் மாறிப்போயிருக்கிறது. ஊதிய விகிதங்கள் குறித்தும், தொழில் உறவு குறித்தும் வரையறைகள் பாதகமாக மாற்றப்படும் ஏற்பாடு நடக்கிறது. இதனால் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அடையாளம் இல்லாமல் ஆக்கப்படும். பெண் தொழிலாளார்களின் பெரும் எண்ணிக்கையில் பணி புரியும் ஸ்கீம் என சொல்லப்படும் அரசின் திட்டங்கள் தனியார்மயமாவதன் மூலம், ஏற்கனவே மோசமாக உள்ள அவர்களின் பணி நிலை மேலும் மோசமடையும்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பெண் குறித்த பிற்போக்கு பார்வை, மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. ஏழை, தலித், பழங்குடியின பெண்களின் நிலை கவலைக்கிடம். என்ன படிப்பது, என்ன உடுத்துவது, யாருடன் நட்பாக இருப்பது, யாரை நேசிப்பது என்று அனைத்தும் (பசு குண்டர்கள் போல) அரசு ஊக்குவிக்கும் ரவுடி படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்குதல் நடைபெறுகிறது. 2015-2017 வரையிலான கால கட்டத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது கடும் தாக்குதல்கள் ஏவி விடப்பட்டுள்ளன. அறிவார்ந்த முறையில் எதிர் வாதம் செய்வோர் கொலை செய்யப்பட்டு, கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. பாசிசத் தன்மை கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்டு நடப்பதைக் கடந்த 3 ஆண்டுகளில் பார்த்து வருகிறோம்.

வகுப்புவாத மயமாகும் சூழல்:

கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சி மையங்களில், வரலாற்று கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் பதவி அமர்த்தப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் அறிவியல் கண்ணோட்டம் அகற்றப் படுகிறது. மதச்சார்பின்மை தகர்க்கப்படுகிறது.

கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. மாநில  உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. சட்ட திருத்தங்கள் மூலமும், தேர்தல் பத்திரங்கள் மூலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தரும் நன்கொடையின் உச்சவரம்பு அகற்றப்பட்டு, யார் வாங்குகிறார்கள், யார் கொடுக்கிறார்கள் என்ற விவரங்களும் தேவையற்றதாக்கப்பட்டு விட்டன. இது உயர்மட்ட ஊழலுக்குத் தான் தோதாகும்.

எதிர்ப்பு இயக்கங்கள்:

இவற்றையெல்லாம் இந்திய தொழிற்சங்க இயக்கங்களும், விவசாய இயக்கங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, சகித்துக் கொண்டோ இல்லை. கடுமையாக எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியிருக்கின்றன. கூட்டு போராட்டங்களாகப் பல நடைபெற்றுள்ளன. இவற்றை எல்லாம் அரசியல் தீர்மானம் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. பெருமை தரும் இயக்கங்கள் இவை. தன்னெழுச்சி போராட்டங்களும் பரவலாக நடந்து வருகின்றன. எதிர்ப்பு இயக்கங்கள் மோடி அரசின் மீதான பல பகுதி மக்களின் அதிருப்தியைக் காட்டுகின்றன. ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளர் விவசாய பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நமது தலையீடு பல்வேறு பகுதி மக்களை அணி திரட்டிப்  போராட்ட களத்தில் நிறுத்துவதாக அமைய வேண்டும். அமைப்பு முறைமையானது, பெருமுதலாளி – நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும் சூழலில், பல வடிவங்களில் எதேச்சாதிகாரம் வெளிப்படும். எனவே, போராட்டங்கள் பெருமுதலாளி-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில் என்ன அரசியல் உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது, ஆட்சியிலிருந்து பாஜக அரசை அகற்றுவது என்பதே பிரதான அரசியல் கடமையாக முன்னுக்கு வருகிறது. கட்சி திட்டமும், பாஜகவை சாதாரண பெருமுதலாளித்துவ கட்சியாகப் பார்க்கவில்லை. பாசிச தன்மையுள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வழி நடத்துவதால் அதற்குரிய குணாம்சத்துடன் அது இருப்பதை கவனிக்க வேண்டும். 29 மாநிலங்களில் 21-ல் தனியாகவோ, அல்லது கூட்டணியாகவோ அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை, மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சி. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் இருவருமே முதன் முறையாக ஆர்.எஸ்.எஸ். நபர்கள்.

கட்சிகள் குறித்த நிர்ணயிப்பு:

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியை எப்படி செய்வது என்ற முடிவுக்குப் போவதற்கு முன்னால், இதர கட்சிகள் குறித்த நிர்ணயிப்பை கவனிக்க வேண்டும். காங்கிரசைப் பொறுத்த வரை, பாஜகவின் அதே வர்க்கத் தன்மை கொண்டது. ஆளும் வர்க்கத்தின் பிரதான பிரதிநிதி என்ற தன் இடத்தை பாஜகவிடம் இழந்திருக்கிறது. அதன் அரசியல் செல்வாக்கு தேய்ந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சியாக இருந்தாலும், மத வெறி நடவடிக்கைகளை நீடித்த முறையில் எதிர்த்துப் போராடும் திராணியற்றதாக இருக்கிறது. நவீன தாராளமயத்தின் முன்னோடி. அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சாய்மானமான அயல்துறை கொள்கையை உருவாக்கியது. பிரதான எதிர்க்கட்சி என்ற பாத்திரத்திலும் அக்கொள்கைகளை ஆதரித்தே வருகிறது. இக்கொள்கைகள் கறாராக எதிர்க்கப்பட வேண்டும்.

கட்சி திட்டம், மக்கள் ஜனநாயக புரட்சியை ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாக முன்வைத்து, பெருமுதலாளித்துவத்தையும், அதன் முன்னணி அரசியல் பிரதிநிதிகளையும் தீர்மானகரமாக எதிர்த்துப் போராடாமல் இக்கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று சுட்டிக்காட்டுகிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெருமுதலாளித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகள். எனவே, கறாராக எதிர்த்துப் போராட வேண்டிய காங்கிரசுடன் ஐக்கிய முன்னணி வைக்கும் எவ்வித உத்திக்கும் இடமில்லை. அதே சமயம், வீழ்த்த வேண்டிய முதன்மை சக்தியாக பாஜகவே இருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் சம அபாயங்களாகப் பார்க்க முடியாது.

மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாறுபட்ட பாத்திரத்தை 21வது மாநாட்டு அரசியல் உத்தி பரிசீலனையிலேயே பார்த்தோம். மாநில முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனைப் பிரதிபலிக்கும் இக்கட்சிகளின் நவீன தாராளமயம் குறித்த அணுகுமுறை அவர்களின் வர்க்க நலன் சார்ந்த பார்வையுடனேயே இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக இரண்டில் எதனோடு வேண்டுமானாலும் மத்தியில் கூட்டணியில் அமரும் அரசியல் சந்தர்ப்பவாதம் இவற்றுக்கு உண்டு. சில மாநில முதலாளித்துவ கட்சிகள் பாஜகவுடனும், சில அதனுடன் இல்லாமலும், ஏற்கனவே இருந்து இப்போது இல்லாமலும், ஏற்கனவே கூட்டணியில் இல்லாத, ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் என ரகம் ரகமாய் உண்டு. சாத்தியமாகும் இடங்களில் பாஜகவுடன் இல்லாத கட்சிகளுடன், மக்கள் பிரச்சனைகள், வகுப்புவாத எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற அம்சங்களில் கூட்டு இயக்கங்களுக்குத் திட்டமிடலாம்.

ஒரு மாநிலத்தில் இயங்கும் மாநில முதலாளித்துவ கட்சியின் கொள்கைகள், பாத்திரம் இவற்றைப் பொறுத்து இவற்றுடனான நமது அணுகுமுறை அமைய வேண்டும். கட்சியின் நலன் மற்றும் இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க உதவுவதாக இந்த அணுகுமுறை இருக்க வேண்டும். இது மாநிலங்களுக்கே பொருந்தும். இவற்றுடன் அகில இந்திய அளவிலான கூட்டணிக்கு சாத்தியமில்லை.

இடதுசாரி சக்திகள்:

நமது இடதுசாரி தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. இடதுசாரிகளின் ஆட்சியில் இருக்கும் கேரளா, ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் கொலை வெறித்தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் வன்கொடுமைகள் வேறு. கேரள அரசு, இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் பல மக்கள் நல திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறையாக்கி வருவது பெருமைக்குரியது. இவற்றைப் பாதுகாப்பதுடன், நாடு முழுவதும் நம் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே இடதுசாரி ஒற்றுமையைக் கட்டவும், இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் தாக்குதல்களைக் களத்திலும், சித்தாந்த ரீதியாகவும் எவ்வித சமரசமும் இன்றி எதிர்ப்பவர்கள் நாம் என்பதால் குறி வைத்துத் தாக்கப்படுகிறோம். மக்கள் மத்தியில் நாம் வேரூன்றி நிற்கும் போதுதான், எதிர்ப்புகளைப் பரவலாக்கும் போது தான் தாக்குதலை திறனுடன் எதிர்கொள்ள முடியும்.

இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், இடதுசாரி கட்சிகளின் வர்க்க – வெகுஜன அமைப்புகளை இணைத்த மேடையை உருவாக்கியிருக்கிறோம். இவற்றுடன் மக்கள் அமைப்புகள், அறிவுஜீவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். மாநில அளவிலும் முயற்சிகள் செய்ய வேண்டும். கூட்டு மேடைகளை பலப்படுத்த வேண்டும். போராட்டங்களை பெரும் வீச்சோடு கட்டவிழ்த்து விட வேண்டும். மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் இவற்றை செய்ய வேண்டும் எனக் கூறும் அரசியல் தீர்மானம், அத்திட்டத்தின் சுருக்கத்தையும் அளித்துள்ளது. கடந்த காலத்தில் பிரச்சார முழக்கமாக இருந்த நிலையிலிருந்து நடைமுறை சாத்தியம் மிக்கதாக, நமது அன்றாட நடவடிக்கைகள் இந்த நோக்கத்துடன் அமைவதாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் உத்தி:

இந்தச் சூழலில், அரசியல் திசைவழி 10 அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி, பாஜகவையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதே பிரதான கடமை. ஆனால் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் இதை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது. மத்திய குழுவின் சிறுபான்மை தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்ட பின்னர், விவாதங்களைக் கேட்டு, வழிகாட்டும் குழு (அரசியல் தலைமை குழு)  காங்கிரசுடன் எவ்வித புரிந்துணர்வோ, தேர்தல் கூட்டணியோ இருக்கக் கூடாது என்ற வழிகாட்டுதலை நீக்கி விட்டு, காங்கிரசுடன் அரசியல் கூட்டணி கூடாது என்ற வழிகாட்டுதலை இணைத்திருக்கிறது. காங்கிரசுடன் ஏன் ஐக்கிய முன்னணி உத்திக்கு இடமில்லை என்பது ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது.

புரிந்துணர்வு என்பது ஏன் அகற்றப்பட்டது அப்படியானால், காங்கிரசுடன் புரிந்துணர்வு இருக்கலாமா என்ற கேள்வியும் எழும். புரிந்துணர்வு இருக்கலாம்; ஆனால் அதன் வரையறை என்ன என்பதை தீர்மானம் விளக்குகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் பிரச்னைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு இருக்கலாம். நாடாளுமன்றத்துக்கு வெளியே, மதவெறிக்கு எதிராக பரந்து பட்ட மக்களை ஒருங்கிணைக்க மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கலாம். காங்கிரஸ், மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் மக்களை ஈர்க்கும்படியாக வர்க்க வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

எல்லாம் சரி. தேர்தலில் என்ன செய்யப் போகிறோம்? எப்படி பாஜகவைத் தோற்கடிக்க போகிறோம்? தேர்தல் உத்தி என்பது அரசியல் நடைமுறை உத்திக்கு உட்பட்டதாகவே இருக்கும். இரண்டும் இரு வேறு திசைகளில் பயணிக்க முடியாது. எனவே தேர்தல் நேரத்தில், மேற்கூறிய நடைமுறை உத்திக்கு உட்பட்டு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்திக் குவிப்பதற்கு ஏற்ற தேர்தல் உத்தி பொருத்தமாக உருவாக்கப்படும். நோக்கம் ஒன்று என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம்  பாஜகவின் நிலை என்ன, அதனுடன் யார் இருக்கிறார்கள், எதிர் பக்கம் எந்தெந்த மாநில முதலாளித்துவ  கட்சி இருக்கிறது, அவர்களின் பங்குபாத்திரம் அம்மாநிலத்தில் அந்த குறிப்பிட்ட காலத்தில் என்னவாக இருந்திருக்கிறது என அனைத்தையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சி, இடதுசாரிகளுடன் உடன்பாடு வைக்க விரும்புகிறதா என்பதும் ஓர் அம்சம். சென்ற மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் முதலாளித்துவ கட்சிகள் அவ்வாறு முன்வரவில்லை என்பதையும் பார்த்தோம். காங்கிரசும் பாஜகவும் மட்டுமே பிரதானமாகக் களத்தில் இருக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில், பாஜகவைத் தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடன் நாம் பணியாற்றியிருக்கிறோம். அது உட்பட தேர்தல் உத்தி உருவாக்கப்படும் போது பரிசீலிக்கப்படும்.

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது. எனவே, இடது ஜனநாயக திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, ஊதியம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அணி திரட்டப்பட வேண்டும். தன்னெழுச்சி போராட்டங்களிலும் நிச்சயம் தலையிட வேண்டும். அதே போல கோட்பாட்டு அளவில் அரசியல், சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் மதவெறியை எதிர்ப்பது மட்டுமல்ல; ஸ்தல அளவில், மக்கள் ஒற்றுமையை உறுதி செய்து, வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும். இதில் அழுத்தம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் பதிவு செய்கிறது. பெண்கள், தலித், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் காவலராகக் கட்சி இருக்க வேண்டும். இதற்காகப் பரந்த ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ஜனநாயகம், படைப்புரிமை, கல்வியாளர்களின் சுதந்திரம் எதேச்சாதிகார முறையிலும், பாசிச தன்மை கொண்ட வடிவங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்பன போன்ற கடமைகளைத் தீர்மானம் வரையறுக்கிறது.

பொதுவானதைக் குறிப்பானதுடன் இணை என்கிறார் மாவோ. இல்லையெனில், தீர்மானம், மாநாட்டு மேசையுடன் நின்று விடும் என்றும் எச்சரிக்கிறார். அரசியல் தீர்மானத்தின் ஒட்டு மொத்த அம்சங்களை உள்வாங்கி, மாவட்டத்தில்/பகுதியில்/அரங்கத்தில் இக்கடமைகளை எவ்வாறு நடைமுறையாக்குவது என்பதிலேயே முழு கவனம் தேவைப்படுகிறது. அதற்கு ஸ்தாபனமே பேராயுதம். அதனையும் கூர்மைப்படுத்தி முன்னேறுவோம்.

ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

மார்க்சிஸ்ட் இதழின் ஏப்ரல் அச்சில் கிடைக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மகாராஷ்டிர விவசாயிகள் மேற்கொண்ட நெடும்பயணம் குறித்த கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது.

லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்த நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான, மிக முக்கியமான எதிர்த்தாக்குதலாக அந்த நெடும்பயணம் அமைந்தது. ஒரே நாளில் நிகழ்ந்துவிட்ட அதிசயமல்ல. போராட்டத் தயாரிப்பும், அதன் வீச்சும் குறித்து நாம் கற்பது அவசியம். அதற்கு ஏதுவான கட்டுரையை, தோழர் அசோக் தவாலே எழுதியுள்ளார், தோழர் ரமணி மொழிபெயர்த்துள்ளார்.

பிரண்ட் லைன் இதழில் வெளியான, ஜான் பெல்லாமி பாஸ்டர் (மன்த்லி ரிவ்யூ ஆசிரியர்) நேர்காணலில் ஒரு பகுதி இந்த இதழில் இடம்பெறுகிறது. இதனை ராமச்சந்திர வைத்தியநாத் மொழியாக்கம் செய்துள்ளார். சூழலியல் குறித்த மார்க்சிய பார்வையைச் செழுமைப்படுத்திக்கொள்ள இந்த நேர்காணல் உதவிடும்.

சீனத்தில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள், குறிப்பாக 19வது தேசிய மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தை புரிந்துகொள்ளும் நோக்கிலான கட்டுரையை தோழர் இரா.சிந்தன் எழுதியிருக்கிறார். புதிய காலகட்டத்திற்குள் நுழையும் சீனத்தின் அறிவிப்பை விளக்கி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதப்பட்டது, இக்கட்டுரை மேலும் சில புதிய கருதுகோள்களை அறிமுகப்படுத்திடும்.

கட்சித்திட்டத்தை விளக்கும் தொடரின் அடுத்த பகுதியை தோழர் என்.குணசேகரன் எழுதியுள்ளார். ‘மக்களே இறையாண்மை கொண்டவர்கள்‘ என்ற கட்டுரை மக்கள் ஜனநாயகத்திட்டத்தின் லட்சியப் பார்வையை புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவியாக அமையும்.

குறிப்பிடத்தக்க விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் காலமானார். அவரது அறிவியல் பங்களிப்பை புரிந்துகொள்ளும் வகையில் ‘கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்‘ என்ற கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றிருக்கிறது. இக்கட்டுரையை தோழர் ப.கு.ராஜன் எழுதியிருக்கிறார்.

கார்ல் மார்க்ஸ் 200, கொண்டாட்டங்கள் நிறைவடையவுள்ள சூழலில், வரும் மே 5 ஆம் தேதி தமிழகமெங்கும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. மே.4 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் மையங்களில், மார்க்ஸ் குறித்த வாசிப்பு கூடுகையை  நடத்த திட்டமிட்டுள்ளனர். கட்சியின் ஒவ்வொரு கிளையும் இந்த நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தோழர் லெனின் எழுதிய கட்டுரையின் சுறுக்கம் இவ்விதழில் தரப்பட்டுள்ளது. தோழர் வீ.பா.கணேசன் தமிழில் கொடுத்துள்ளார்.

இக்கட்டுரையின் முழுமையான வடிவம் இணையத்தில் கிடைக்கும். ஒலி வடிவிலும் கிடைக்கும் என்பதால் கூடுகைகளில் வாசிப்பு ஒலிக்கோப்பை இசைக்கவிடவும் உதவியாக அமைந்திடும். ஒவ்வொரு மார்க்சிஸ்ட் இதழ் குறித்தும் விமர்சனங்கள், கருத்துக்கள், வாசகர் வட்டங்களின் விவாதங்களைத் தொகுத்து அனுப்புவதும் எதிர்பார்க்கிறோம். மார்க்சிஸ் இதழை செலுமைப்படுத்த வாசகர் கருத்துக்கள் மிகவும் பயன்படும்.

 • ஆசிரியர் குழு

இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

(வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரின் பார்வையில்)

– என்.குணசேகரன்

இந்துத்துவா இயக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கு  பாரம்பரியம், கலாச்சாரக் கூறுகளுக்கு  முரணானது. தமிழகத்தில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவாக, மனிதநேயமும் மத நல்லிணக்கமும் காலம் காலமாக நிலைத்திருந்தது. இவற்றை அழித்து  வலுவாக இங்கு  காலூன்றிட சங்கப் பரிவார இயக்கங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த இயக்கங்களும், இவை ஏற்படுத்திடும் வகுப்புவாத உணர்வுகளும் வளர்வது, தமிழகத்தின் தொன்மையான கலாச்சார சிறப்புகளுக்கெல்லாம் விடப்பட்டுள்ள சவால். அது மட்டுமல்ல; நமது பாரம்பரியத்தின் மகத்தான கூறுகள் அனைத்தையும் சுவீகரித்து வளர்ந்து வரும் மதச்சார்பற்ற, இடதுசாரி உணர்வுகளுக்கும் இயக்கங்களுக்கும் இது எதிர்காலத்தில்  பெருந்தடையாக அமைந்திடும்.

சமூகத்தில் மதச்சார்பற்ற உணர்வுகளை மக்கள் நடுவில் வலுவாக வேரூன்றச் செய்திட வேண்டும். இதற்கான கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது மட்டும் செய்தால் போதாது. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். தெரு, ஊர், ஊராட்சி, நகர அளவில் உள்ளூர் வடிவிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இத்தகு நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களை ஈடுபடச் செய்திடும் போது, மதச்சார்பற்ற உணர்வுகள் வலுப்பெற்றுவிடும்; வகுப்புவாத விஷக்காற்று பரவிடாமல் மக்களே தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த நிலையை தமிழகத்தில் எவ்வாறு ஏற்படுத்துவது?மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? வகுப்புவாதம் குறித்து இப்போதுள்ள புரிதல்கள் யாவை? உண்மையில்,வகுப்புவாதம் எத்தகையது?

இந்த கேள்விகளுக்கு பேராசிரியர் கே.என். பணிக்கரின் எழுத்துகள் வழிகாட்டுகின்றன. வகுப்புவாதம் குறித்த அவரது ஆழமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

வகுப்புவாதம் எவ்வாறு வளர்கிறது?

வகுப்புவாதம் வளர்கிறது என்பதற்கு அடையாளமாக மூன்று வகையான நிகழ்வுகளை மையமாக வைத்துத்தான் பலர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகள் தங்களது பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ பரவலான அளவில் செயல்பட்டு வருகின்றன என்றால் அதனை வகுப்புவாத வளர்ச்சியாக பலர் கருதுகின்றனர்.

இந்தப் பார்வை வகுப்புவாத அமைப்புகள் செயல்படாத இடங்களில் வகுப்புவாதம் வளராது என்றும், செயல்படும் சில பகுதிகளில் தான் அந்த உணர்வு இருப்பதாகவும்  கருதிட  இடமளிக்கிறது. இது தவறானது.

இரண்டாவதாக, இரண்டு மதப்பிரிவினருக்கு இடையில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று உயிரிழப்புகள், பொருட்சேதம் போன்றவையெல்லாம் ஏற்பட்டால், அந்தக் கலவரம் நடந்த இடத்தில் வகுப்புவாதம் வளர்ந்துள்ளது என்று பலர் கருதுகின்றனர். ஆக மதக்கலவரம் நடக்கும்போது தான் வகுப்புவாதம் வளர்கிறது என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். இந்தப் பார்வையிலும் குறை உள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் மட்டுமே வகுப்புவாதம் இருப்பதாகவும், இதர இடங்களில்  இல்லை; அந்த இடங்களில் வகுப்புவாதம் வளர வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் இட்டுச் செல்லுகிற குறைபாடு இதில் உள்ளது.

மூன்றாவதாக பா.ஜ.க போன்ற வகுப்புவாதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தால் வகுப்புவாதம் வளர்ந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். இது, வகுப்புவாதத்தை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்கிற பார்வை. இதுவும் பலரின் அணுகுமுறையாக உள்ளது.

இதில் உள்ள தவறு எது?, வகுப்புவாத அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு சங்கப்பரிவாரம் மற்றும் இதர வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தப் பார்வை கவனத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, அண்மையில் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிற்கும் தற்போதைய அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரக் கொள்கை சிக்கல்களில் கடுமையான கருத்துச் சண்டை நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக அருண் ஜெட்லியை சின்ஹா குற்றம் சாட்டினார். இந்த கருத்துச் சண்டைகளை விளக்கி பல வார, தினசரி பத்திரிக்கைகள் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டன. இதையொட்டி பலர் இந்த சண்டை பா.ஜக. வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கருதினர்.

ஆனால் இதுபோன்ற கட்சிக்குள் உள்ள சண்டைகள் என்பன சங்கப்பரிவாரத்தின் ஏராளமான வகுப்புவாத ஸ்தாபனங்களில் ஒன்றான பா.ஜ.க.வில் மட்டும்தான். இதே காலத்தில், பல சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பசுப்பாதுகாப்பு என்ற முறையில் நடைபெறும் வன்முறைகள், பத்மாவதி திரைப்படத்தையொட்டி கிளப்பப்படுகிற இந்து மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வருகிற தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டத்தில்  மதவெறி தூண்டப்படுகிற அவர்களது பிரச்சாரங்கள் பெரிதாக பலரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வகுப்புவாதத்தை அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. வகுப்புவாத அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் வகுப்புவாதம்  தடைபட்டு விட்டது என்ற முடிவுக்கு இந்தப்பார்வை இட்டுச் செல்கிறது. 1984ம் ஆண்டு வெறும் இரண்டு பாராளுமன்ற இடங்களை மட்டும் வென்ற பாரதீய ஜனதா ஆட்சிக்கு அந்தத் தேர்தலோடு அதன் வளர்ச்சி தடைபடவில்லை. அதன் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தது. எனவே வகுப்புவாத வளர்ச்சி என்பது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது சரியல்ல.

தற்போது கூட பிரதமர் மோடி அரசு மக்களிடையே வெறுப்பை வேகமாக ஈட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளை மோடி அரசு மேலும் முனைப்புடன் அமலாக்கி வரும் நிலையில் ஏமாற்றம் அதிகரிக்கிறது. அத்துடன் சங்கப் பரிவாரங்கள் வகுப்புவாத தாக்குதல்களை அதிகரித்து வருவதும் வெறுப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமைகளை கண்டு சிலர் வகுப்புவாத எதிர்ப்பினை மெல்லியதாக,மேலோட்டமாக மேற்கொண்டால் போதும் என கருதுகின்றனர். இது தவறானது.

ஆக, வகுப்புவாதம் குறித்த பார்வைக்கு மூன்று அளவுகோல்களை எடுத்துக்கொள்கின்றனர். 1. வகுப்புவாத சங்பரிவாரங்களின் வளர்ச்சி, 2. மதக்கலவரங்கள் 3. அரசியல் நிகழ்வுகள். இந்த மூன்றுமே வகுப்புவாத வளர்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். ஆனால் இவை மட்டுமே வகுப்புவாதம் என்று கருதுவது தவறு. இவை வகுப்புவாதத்தின் முழுமையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

வகுப்புவாதம் என்பது இதைவிட ஆழமானது; மிக நுண்ணிய அளவில், உடனடி பார்வைக்கு தென்படாதவாறு, அடிமட்டத்தில் மக்களின் உணர்வில் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் தன்மை கொண்டது.

இதன் வளர்ச்சி இரண்டு கட்டங்களில் நிகழ்கிறது.

வகுப்புவாதத்தின் முதற்கட்டம்

சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் உண்டு. தந்தை, தாய், சகோதரி, சகோதரன் என உறவு ரீதியிலும், தொழிலாளி, விவசாயி என தொழில் ரீதியிலும் பல அடையாளங்கள் உண்டு. இந்த பல வகையான அடையாளங்களில் ஒன்றுதான், இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற மத அடிப்படையிலான  அடையாளம். இது ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டுமுறை, சடங்குகள் போன்ற செயல்பாடுகள்  வழியாக வெளிப்படுகிறது. தொன்றுதொட்டு, இந்த வழிபாட்டு முறைகள், சடங்குகள் அனைத்தும் பெரும்பாலும் குடும்பம் அல்லது கோயிலை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் இதில் பெரும் மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டங்கள் போன்ற வடிவங்களில் மதச்சடங்குகள், நடத்தப்படுகின்றன. அவை பொது இடங்களில் மக்களை பங்கேற்கச் செய்து நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாடு என்பது குடும்ப வழிபாடாக இருந்த நிலை மாறி விநாயகர் ஊர்வலம் என்று பிரம்மாண்டமாக மக்களைக் கூட்டி, நடத்திடும் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.இது போன்று எல்லா மாநிலங்களிலும் பொதுத்தளத்தில் வழிபாட்டு முறைகள் நடத்துகிற வழக்கம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பொது நிகழ்ச்சியாக இந்த வழிபாட்டு முறைகள் மாறுகிறபோது மத நம்பிக்கை அல்லது வெறும் மத அடையாளம் மட்டும் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்துவாக இருக்கும் நான் இந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது கட்டாயம் அல்லவா? ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்று ஊர்வலம் நடக்கிறபோது, அதை ஆதரிப்பது இந்துவாகிய எனது கடமை அல்லவா? என்கிற கேள்விகள் இந்துவாகிய  ஒருவரின் மனத்தை நெருக்குகின்றன. அவர் இதையெல்லாம் ஆதரிக்க வேண்டிய மனரீதியான அடக்குமுறைக்கு (Coercion) ஆளாகிறார்.

இதுபோன்ற தருணங்கள் அதிகரிக்கிற போது, ஒவ்வொருமுறையும் அவருக்கு தான் இந்து என்ற உணர்வு வலுப்பெறுகிறது. சிறிது சிறிதாக இந்து என்ற மத அடையாளத்தோடு மட்டும் வாழ்ந்து வந்த ஒருவர், சடங்குகளும்,வழிபாடுகளும், பொது நிகழ்ச்சிகளாக மாறுகிற போது, மிகுந்த மதப்பிடிமானம் (Religiousity) கொண்டவராக மாறுகிறார். இவ்வாறு மத அடையாளம் என்ற நிலை முற்றி, மதப்பிடிமானமாக மாறுவது வகுப்புவாத உணர்வின் முதற்கட்டம்.

வகுப்புவாதமும் சமூகப் பிளவும்

இந்து என்ற மத அடையாள உணர்வு சிறிது சிறிதாக கெட்டிப்படுத்தப்பட்டு மதப்பிடிமானம் என்ற உணர்வு நிலைக்கு ஒருவர் வருகிறபோது அவரிடம் பல்வேறு கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது ‘இந்து மதத்திற்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள்’ என்கிற பிரச்சாரம். இந்த ‘எதிரி’ எனும் பிரச்சாரம் மிக வலுவான அளவில் ஒருவரை வகுப்புவாதியாக மாற்றுகிறது.

ஒவ்வொரு சிக்கலிலும் இந்து என்கிற கோணத்திலேயே அணுகும் நிலை ஏற்படுகிறது.கிரிக்கெட் விளையாட்டு கூட மத அடிப்படையில் சங்கப் பரிவாரத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக வெறி ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. மோடியும் பல தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்,இந்து எதிரிகள் என பிரச்சாரம் செய்வதுண்டு.

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிக்கலும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த சமூகப் பிளவை வேகமாக்குகிறது. இரு மதப்பிரிவினருக்கும் இடையே இதர அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத அடையாளமே மேலோங்கி நிற்கும் நிலை வலுப்பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஒரு விழா எடுத்தது பலருக்கு நினைவிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் மதவெறியர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியவர்கள் என்று ஏறத்தாழ எழுபதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தினர்.அதனை முஸ்லீம்களைத் தூற்றிடவும், அன்றைய பிரிவினையின் போது அனைத்துத் தரப்பிலும் மதவெறியர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து, வெறுப்பு உணர்வுகளை மீண்டும் பெரிதுபடுத்தவும் அப்பிரச்சனையை பயன்படுத்தினர். இவ்வாறு அவர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பல பிரச்சினைகளை எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையை இடைவிடாது செய்து வருகின்றனர்.

வேறு எங்கோ நடந்திடும் மதக் கலவரங்கள், பற்றிய செய்திகள் தொலைக்காட்சி,செய்தித்தாள்களில் வரும் போது,இந்துவாக இருப்பவர் மதக் கண்ணோட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நிலை எடுக்கவும், இஸ்லாமியராக இருப்பவர் இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக நிலை எடுப்பதும் வழக்கமாக மாறிவிடுகிறது. சட்ட ரீதியாக அல்லது  ஜனநாயகக் கோட்பாடுகள் அடிப்படையில் அணுகிடும் பார்வை கைவிடப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து சட்டப்பூர்வமான தீர்ப்பினை மதிக்க வேண்டியதில்லை என்ற கருத்து பலருக்கு ஏற்படுவதற்கு இந்த வகுப்புவாத உணர்வே காரணம்.

கல்வி, வரலாறு, ஆன்மீகம், கோயில், உடற்பயிற்சிக்கூடங்கள், ஷாகாக்கள் என பல வகைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான இந்துத்துவா ஸ்தாபனங்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தி வகுப்புவாத உணர்வை நீண்டகாலமாக மக்கள் நடுவில் வேகமாக பரப்பி வருகின்றனர். பொதுவாக ஏற்படும் மதப்பிடிமானம் வகுப்புவாத ஸ்தாபனங்களால் வகுப்புவாதம் என்ற நிலைக்கு உயர்ந்து, சமூகம் பிளவுபடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பிளவுபட்ட சமூகத்தில் இந்து உணர்வு மேலோங்கி நிற்பதுதான் இந்தியாவை மத அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசை உருவாக்கிட வழிவகுக்கும்.இதுவே அவர்களது தொலைநோக்கு.

1990ம் ஆண்டுகளில் உலகமயம், தாராளமயம் தீவிரமாக பின்பற்றப்பட்ட போது, வகுப்புவாத உணர்வுகளும் வேகமாக வளர்ந்தன. உலகமயம் நுகர்வுக் கலாச்சார உணர்வுகளை வலுப்படுத்தியது.

வாழ்க்கை வசதிக்கான பொருட்களை அடைய வேண்டுமென்ற மோகம், வெறி, குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்தது. விரும்பிய பொருட்களை அடைய இயலாதபோது. தனது வரலாற்று வேர்களை மகத்தானதாக கருதிடும் உணர்வு உருவாக்கப்பட்டது. ‘ இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரியம், வேத காலத்தில் இந்து ராஷ்டிரம் கோலோச்சி ஆண்ட பொற்காலம்’ போன்ற கருத்துகளுக்கு நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டனர். தங்களுக்கு நுகர்ப் பொருட்கள் கிடைக்க இயலாமைக்கு வேற்று மதத்தினர்தான் காரணம் என்று சிந்திக்கின்றனர். பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை வகுப்புவாதமும் இதே காலகட்டத்தில் விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்தது. எனவே உலகமயமும், வகுப்புவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்து முஸ்லீம் வகுப்புவாத ஸ்தாபனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற பாரம்பரியம் வலுவாக இருந்த வந்த போதிலும், 1990ம் ஆண்டுகளில் உலகமயச் சூழலில் சமூகப் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் மண்டைக்காடு கலவரம் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்கள்,கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வேகமாக வளரத் துவங்கின. பிறகு, தேர்தல்களில் தங்களது திராவிட கருத்தோட்டங்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி பா.ஜ.க.விற்கு அளித்து வந்துள்ள ஆதரவு, போன்ற பல காரணங்களால் தமிழக அரசியல், சமூக தளத்தில் முக்கிய இடத்தை சங்கப்பரிவாரம் பிடித்துள்ளது.

எனினும், திராவிட கட்சிகளின் வெகுமக்கள் செல்வாக்கு நீடித்து வருவது அவர்களுக்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது. இதற்காக அவர்கள் பல கபடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தமிழக அரசியலில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று அஇஅதிமுக பிளவுபட்டிருக்கிற நிலையில் எடப்பாடி – பன்னீர்செல்வம் குழுக்களை பயன்படுத்தி தமிழகத்தில் வகுப்புவாதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து எதிர்கொள்ள  வேண்டியது கட்டாயமானது.

திராவிட இயக்கத்தை கடத்திட சூழ்ச்சி

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்மையில் “இந்துத்துவா, திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல” என்று கூறினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தலைவர் கீழ்க்கண்டவாறு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.

“தமிழக அரசியல் மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட இயக்க பாரம்பரியத்தை கிண்டல் செய்திடக் கூடாது. நாத்திகம் தான் திராவிட இயக்க பாரம்பரியம் என்று கருதுவது தவறு”.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பரவலாக மக்கள் வழிபடும் தெய்வங்களான அய்யனார், மாரியம்மா – போன்ற அனைத்தையும் திராவிட இயக்க பாரம்பரியம் இல்லையென்று நாம் புறக்கணிக்கலாமா? தெய்வ பக்தியையும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற வலியுறுத்தும் திராவிட பாரம்பரியத்தின் அந்தப் பகுதி உண்மையில் இந்துத்துவாவை சேர்ந்ததாகும்.”

இதுவே தமிழகத்தில் அவர்களது உத்தியாக இருந்து வருகின்றது. திராவிட இயக்கப் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு இந்துத்துவாவை பரப்பிடும் சூழ்ச்சி இதன் அடிப்படையில் தான் நடைபெற்று வருகின்றது.

திராவிட பாரம்பரியத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாரம்பரியத்தையும் ஒருங்கே சேர்த்து இந்துத்துவாவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் கபடத்தனம் இங்கே வெளிப்படுகிறது. திராவிட இயக்கம் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டியது. அவ்வாறு திரட்டிடும் போது, பிராமணியம், மதப்போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அறியாமைக் கடலிலிருந்து அவர்கள் வெளியே வாராமல் தடுத்திருந்தது. எனவே திராவிட இயக்கம் மதத்திற்கு எதிராகவும், மதச்சாயம் பூண்டு கடைபிடிக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனவே, மத எதிர்ப்பும் நாத்திகமும், மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டிட பயன்பட்ட கருவிகள். இத்தோடு ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் இணைப்பது திருகல் வேலை அல்லவா?

தமிழக ஆன்மீக பாரம்பரியத்திற்கும் விரோதமானது இந்துத்துவா

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உள்ள  சொற்செறிவும்,ஆன்மீகக் கருத்துச் செறிவும் பல பகுதி தமிழ் மக்களை ஈர்த்தவை. அவர்களது பாடல்களின் அடிநாதமாக விளங்கும் ஒரு கருத்தை தமிழறிஞர் டாக்டர் தெபொ.மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அன்பேசிவம் என்பது திருமூலர் துணிபு. இந்தத் துணிபுடன் அகப்பாட்டு என்ற பெயர்ப் பொருத்தத்தை நாம் அணுக வேண்டும். அதனை ஆராய்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் அனுபவித்த கடவுள் இன்பத்தை நமக்கு விளக்க வரும்போது. இத்தகைய அகப்பாடல்களாகவே பாடிக் காட்டுகிறார்கள்.

“ஆண்டவனே காதலனாக, தொண்டர்கள் காதலியாக பாடுகின்ற பாட்டையெல்லாம் வெறும் காதல் கதைகள் என்று கொள்வதற்கில்லை.காதற் கதையையும், தாண்டி விளங்கும் கடவுள் இன்ப அன்பின் காட்சியே அங்கெல்லாம் காண்கிறோம்”

நமது கேள்வியெல்லாம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் விளக்குகிற, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுக்கெல்லாம் உயரியதாக விளங்கிய ‘அன்பின் காட்சிக்கும்’ இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு? அன்பு என்கிற மனித நேய குணத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத – மனிதர்களை, அவர்கள் சிறுபான்மையினர் என்பதற்காகவே கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்திடும் இந்த மதவெறிக் கூட்டத்திற்கும் ஆழ்வார்கள் நாயன்மார் பாரம்பரியத்திற்கும் என்ன உறவு? ஆக, திராவிட இயக்க பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. அதே நேரத்தில் அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. இரண்டையும் ஒன்று சேர்த்து இரண்டு தரப்பினரையும் வென்றெடுக்க முனைகிறது. இந்துத்துவா கூட்டம் இந்த இரண்டு தரப்பாரும் சேர்ந்து தமிழகத்தை இந்தத் தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமையாக தற்போது முன்நிற்கிறது.

அன்றாட வாழ்க்கையில் தலையிடும் சங்கப்பரிவாரம்

மாநில ரீதியாக, திராவிட இயக்க சித்தாந்தத்தை கடத்திட இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மக்களின் சாதி, மத, கலாச்சார நடவடிக்கைகளை அறிந்து அதற்கேற்ற உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை பிரச்சாரம் செய்யும் போதே ஸ்தல அளவில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர் ஒரே கடவுள் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்ற பாசிச கொள்கையை அடைய, தனி தனி கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்படுகிற கலாச்சார ஒடுக்குமுறை. இந்த ஒடுக்குமுறைக்கெதிராக பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது கட்டாயம்.

இத்துடன், சமூகத்தில் உள்ள பல பிரிவினர்களிடம் செயல்பட்டு இந்துத்துவாவிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். குடும்பம் மற்றும் உள்ளூர் பகுதி மட்டங்களில் மக்களோடு பிணைப்புகளை ஏற்படுத்தி, தங்களது அமைப்புகளின் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்கச் செய்து வருகின்றனர். கோயிலை மையமாக வைத்து மக்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்கள், மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை ஆன்மீகம், கல்வி சேவைப்பணிகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக திரட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாதியரீதியில் மக்கள் திரண்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ற முறையில் சாதியத் தலைவர்களை அரவணைப்பது, உள்ளிட்ட பல உத்திகளைக் கையாண்டு மக்களைத் திரட்டுகின்றனர். தலித் மக்களைத் திரட்ட விசேட கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டுகளைப் பெற இயலாது. சங்கப்பரிவாரம் தீண்டாமைக்கெதிரானது என்ற தோற்றம் வரும் வகையில் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலாச்சாரத்தில் தலையீடு

அன்றாட வாழ்க்கையின் அத்தனைச் செயல்பாடுகளும் கலாச்சாரத்தில் அடங்கும். தமிழக மக்களின் வாழ்வில் மாறுபட்ட பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. எனினும் சில பாரம்பரிய நடவடிக்கைகள், மதச் சடங்குகள் போன்றவற்றில் பொதுவான தன்மைகள் அதிகமாக உள்ளன. சங்கப்பரிவாரம் கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது என்ற பார்ப்பதில்லை. கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்ததாகவே அவர்கள் அணுகுகின்றனர். மதம் சார்ந்த சடங்குகள், பாரம்பரிய நடவடிக்கைகளில் மக்களைத் திரட்டி மக்களது உணர்வில் மதப்பிடிமானத்தை ஏற்படுத்துகின்றனர். விளக்குப் பூஜை, விநாயகர் ஊர்வலம், கோயில் திருவிழா போன்ற அவர்களது பல நடவடிக்கைகள் இந்த நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர்கள் கலாச்சார ஸ்தாபனம் தான் என்று சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் மனித வாழ்க்கையின் பல்வேறு வகையான இசை, நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மக்களின் ஆர்வங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டு மதக் கலாச்சார நடவடிக்கைகளில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்திட வற்புறுத்தப்படுகின்றனர்.

மதம் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதையும் பயன்படுத்த சங்கப்பரிவாரத்தினர் தயங்குவதில்லை. உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரை ஈர்க்கவும் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். உடற்பயிற்சிக்கான இளைஞர், மாணவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடவும், அதே நேரத்தில் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இந்துத்துவா கருத்துகளை புகுத்தவும் ஷாகாக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மதம் போன்றே, சாதியும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இன்றைய தேர்தல் ஜனநாயக அமைப்பில் சாதிய ரீதியாக மக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்வது தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், பதவி, அந்தஸ்து உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றிடவும் உதவிகரமாக இருக்கிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சாதிய நடைமுறைகள், ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்துகிற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால்,அதனையும் சங்கப்பரிவாரத்தினர் பயன்படுத்த முனைகின்றனர். சாதிய நடைமுறைகளோடு இணைந்து தங்கள் பக்கம் இழுத்திட அவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆக, சாதி, மதம், பாரம்பரியம் உள்ளிட்ட கலாச்சாரத்தின் அத்துணை அம்சங்களிலும் தலையிட்டு வகுப்புவாத உணர்வை உறுதியாக நிலைபெறச் செய்திட சங்பரிவாரத்தினர் முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் தங்களது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதம்: மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை

மதம் ஒரு சித்தாந்தம்; அது சுரண்டுகிற வர்க்கங்களின் கருவியாக செயல்படுகிறது என்பதே மார்க்சியத்தின் மையமான கருத்து. அதே நேரத்தில் மதம் இரண்டுவித, செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு புறம், மக்களுக்கு தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்ற எதார்த்த நிலையை மறைக்கிறது. உண்மை நிலைமைகளை மக்களிடமிருந்து மறைக்கச் செய்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இதையொட்டியே மார்க்சின் வாசகங்கள் – ‘மதம் ஒரு அபின்’ ‘அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சு’ – பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,இது, மதத்தின் இரண்டு வித செயல்பாடுகளில் ஒன்று.

மற்றொரு வகை செயல்பாடும் மிக முக்கியமானது. சமூகத்தில் உள்ள நிலைமைகளை எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு தேவையான துணிவையும் மதமே வழங்குகிறது. இது பல தருணங்களில் நிகழ்கின்றது. மக்களின் மத நம்பிக்கையே சமூக நிலைமைகளை மாற்றவும், தங்களது துன்ப துயரங்களுக்கு மாற்றினை நாடவும் மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கையும் வழங்குகிறது.

இதற்கு ‘’ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய நாட்டில் வேளாண்மை அமைப்புகள் உருவாவதற்கு முன்பே விவசாயிகளின் எழுச்சிகள், குறிப்பாக ஆதிவாசி மக்களின் போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அவர்களது மத நம்பிக்கை உத்வேகம் அளித்துள்ளது. அதே போன்ற கிறித்துவ மத போதனைகள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் மத்திய காலத் துவக்கத்தில் நடைபெற்ற பல விவசாயிகளின் புரட்சிகளைப் பற்றி ஆய்வு செய்துள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஆர்எஸ் சர்மா, “… இந்தப் புரட்சிகளின் தன்மையை ஒருவர் ஆராயும் போது, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டதற்கு மதம் ஆற்றிய பங்கினையும் சரியாக உணர வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார். மதம் முக்கிய பங்காற்றுவது என்பது விவசாய வர்க்க எழுச்சியின் தனி சிறப்பியல்பாகத் திகழ்கிறது. இது பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண முடியும்.

இந்த வகையான மதத்தின் செயல்பாட்டில் மார்க்சிஸ்ட்கள் தலையீட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத நம்பிக்கை உள்ளவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களது உள்ளத்தில் இதர மதத்தினர் மீதான வெறுப்பை வகுப்புவாதிகள் ஏற்படுத்துகின்றனர். வகுப்புவாதிகளின் இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மையில் குறிப்பிட்ட மதத்தின் கருத்துகளாக இருக்காது. மக்களை திரித்துக் கூறும் வழக்கம் எல்லா மத வகுப்புவாதிகளிடமும் உண்டு. எடுத்துக்காட்டிற்கு இந்து முன்னணி சார்பில் இராம கோபாலன் பிரச்சாரம் செய்திடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மையான மதக் கருத்துகள் இல்லை. அதைப்போல முஸ்லீம் தீவிரவாதிகள் பலர் அவ்வப்போது பரப்பிடும் வன்முறை கருத்துகள் குரானில் இருப்பதில்லை. மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் விரும்புகிற சாதாரண மத நம்பிக்கை கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வகுப்புவாதிகள் திசை திருப்புகிறபோது, ஏன் இவற்றை மார்க்சிஸ்ட்கள் அம்பலப்படுத்தக் கூடாது? உண்மையான மதக் கருத்துகளுக்கு பகைமையானது என்பதை ஏன் நிறுவிடக் கூடாது? இதன் மூலம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மாற்றிட முடியும்.

இதைச் செய்திட வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பெருந்திரள் மக்களோடு தொடர்பும் பிணைப்பும் கட்டாயம் என்பது, மட்டுமல்ல; அவை வலுப்பெற வேண்டும். மத நம்பிக்கை கொண்டோருடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் (Dialogue) தேவை. இதைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட்கள் தங்களது மதம் பற்றிய பார்வையை கைவிட வேண்டும் என்பதில்லை. மதம் ஒரு சித்தாந்தம் எனும் வகையில் அதற்கான சித்தாந்த ரீதியான எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமலே மேற்கண்ட அணுகுமுறையை பின்பற்ற முடியும்.

மக்களிடையே மதச்சார்பின்மையை வளர்த்திட..

மக்களிடையே மதச் சார்பற்ற உணர்வுகளை மேம்படுத்திட ஏராளமான மதச்சார்பற்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழியாக மக்களிடம் வகுப்புவாத, மதப்பிடிமான உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இயலும். மதச்சார்பற்ற உணர்வுகள் நிரந்தரமாக குடிகொள்ளும் நிலையை உருவாக்க மதச்சார்பற்ற நடவடிக்கைகள் தான் மிகவும் அவசியமானது.

ஆனால் பல நேரங்களில் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்போதாவது ஒரு முறை எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது. எங்காவது கலவரம் நடந்தால் அதைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது கருத்தரங்கங்கள், விஸ்வஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை எதிர்த்து ஒரு நாள் தர்ணா எனும் வகையில்தான் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, அவை தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு கிராமத்தில் ஒரு படிப்பகம் திறப்பது என்று முயற்சி துவக்கப்படுகிறது என்றால் இது தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும் படிப்பகத்திற்கான இடம் கண்டுபிடிப்பது, செய்தித்தாள்கள், புத்தகங்கள் அளிப்பற்கான கொடையாளிகளை அணுகுவது, படிப்பகத்தில் வந்த மக்களை படிக்கச் செய்வதற்கு ஆர்வத்தை தூண்டுவது. அவ்வப்போது படிப்பகத்தில் பல கட்டுரைகளை கூட்டாக படித்துக் காட்டுவதற்கும், அதனை கேட்பதற்குமான மக்களை திரட்டுவது – என வகைகளில் இந்த ஒரு சிறிய முயற்சி தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும். எனவே தளராத தொடர்ச்சியான முயற்சிகள் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கைக்குரிய ஒரு முக்கிய சிறப்பியல்பு.

மற்றொரு மிக முக்கியமான குறைபாடு களையப்படல் வேண்டும். பொதுவாக தற்போது நடைபெறும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளராக இருக்கச் செய்கிறது. ஆர்ப்பாட்டம், தர்ணா தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த வடிவங்கள் மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்கிற வழக்கமான வடிவங்கள். இந்த வடிவங்கள் முக்கியமானவையே. அவற்றை கைவிட வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஜனநாயக நடைமுறைகள்.

ஆனால் மக்களின் மதச்சார்பற்ற உணர்வை நிரந்தரமாக அவர்கள் மனதில் நிலை நிறுத்துவதற்கு இந்த வடிவங்கள் போதுமானதல்ல. இதற்கு உள்ளூர் மட்டத்தில், உள்ளூர் மக்களை செயல்பாடுகளில் ஈடுபட வைத்திடும் வடிவங்கள் தேவை. எடுத்துக்காட்டாக, முன்பு குறிப்பிடப்பட்ட படிப்பகம். அதனை நிறுவிட வேண்டுமென்றால் அந்த பணியில் ஏராளமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற உள்ளூர் மக்கள் ஈடுபடும் பல வடிவங்களை கையாள வேண்டும். அவற்றையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அகில இந்திய மாநில, மாவட்ட அளவிலான இயக்கங்கள் அவசியமானவையே. ஆனால் மக்கள் நடுவில் மதச்சார்பற்ற, உணர்வை ஏற்படுத்திட, எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருத்தல் கட்டாயம். மாநில மாவட்ட இயக்கங்களை பாதிக்காமலே அவற்றை நடத்திட இயலும். உள்ளூர் அளவிலான செயல்பாடுகளில்தான் அதிக அளவிலான மக்களை ஈடுபடச் செய்திட இயலும். தொடர்ச்சியாகவும் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள்

பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக வாழ்வதற்கு “மத நல்லிணக்கம் காப்போம்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதுண்டு.பல கட்சிகள், அமைப்புக்கள்  பல்வேறு மதச் சின்னங்களை அணிந்து, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அனைத்து மதம் சார்ந்தவர் களும், பொருளாதார , கலாச்சார உறவுகளால் காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் பல சர்ச்சைகள் , கருத்து மோதல்கள் இருந்தாலும், உள்ளுரில் மத அடிப்படையில் மோதல்கள் குறைவு .ஆனால் 1990-க்குப் பிறகு இந்த நிலை மாறி, மத நல்லிணக்கம் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் காக்க அடையாளப்பூர்வ பிரச்சாரம் நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல.
மதம் சாராத வாழ்வாதாரத் தேவைகளுக்காக, ஒன்றுபடுகிற போதுதான் மத நல்லிணக்க உணர்வை ,  நிலையான மதச்சார்பற்ற கண்ணோட்டம் மக்களிடம் வளரும். எனவே, மக்களிடம்  நெருக்கமாக மேற்கொள்ளப்படும்,தொடர்ச்சியான மதச்சார்பற்ற  நடவடிக்கைகள் அவசியம்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் விரிந்து பரந்துள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமாக இது போன்ற பல நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் திரளாக கூடுகிற விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏராளமாக கிராம, நகர அளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தலையிட்டு மதச்சார்பற்ற உணர்வுகளை வளர்ப்பதற்கு திட்டமிட்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள்; கிராமம், தெரு அளவில் ஏராளமானோர் இயல்பாகவே பாடல் இயற்றும் திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ வர இருக்கின்ற கோயில் திருவிழாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதில் பாட இருக்கும் பாடல்களை அங்கிருப்போரை வைத்து உருவாக்குவது. இதே போன்று விழாவின் போது ஒரு நாடகம் நடத்திட அங்குள்ளவர்களையே தேர்ந்தெடுத்து உருவாக்குவது. விழாவின்போது கண்காட்சி வைப்பதற்கான ஓவியங்களை வரைவதற்கான ஒரு குழுவை உருவாக்குவது – இவ்வாறு விழா என்கிற வாய்ப்பை மட்டும் வைத்து பலரது பங்கேற்புக்கு வழி வகுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கும் ஆற்றுப்படுகைச் சார்ந்த மக்களை மையமாக வைத்து அந்த ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் நீடித்த இயக்கம் ஒன்றை உருவாக்கிடலாம். மக்களின் அடிப்படைப் சிக்கல்களுக்காக நிலைத்து நீடிக்கும் மக்கள் இயக்கங்கள் உள்ளூர்மட்டத்தில் உருவாக்கும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளே. சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலரை ஈடுபடுத்தி செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

குடும்ப விழாக்கள் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் பல பாரம்பரிய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மதச்சார்பற்றவாதிகளுக்கு அந்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அவர்களோடு ஒன்றிணையவும் வாய்ப்பாக அமையும். சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

இவ்வாறு சமூகத்தில் நிலவும் எண்ணற்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துகிறபோது, வகுப்புவாதத்தை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது, மதச்சார்பற்ற இடதுசாரி சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் தளமாக சமூகத்தை மாற்றிட முடியும்.மதச்சார்பற்ற சமுகமே சோசலிசத்தை அமைப்பதற்கான அடித்தளம்.

பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?

அண்மைக்காலங்களில் பாஜகவும் சங்க பரிவாரத்தின் சில அமைப்புகளும் டாக்டர் அம்பேத்கரை பெரிதும் மதிப்பதாக கூறி வரு கின்றனர். அவருக்கு நினைவு சின்னங்கள் எழுப்புவது, அவரது உருவச்சிலைகள் அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அம்பேத்கர் இந்துத்வாவை எதிர்க்கவில்லை என்றும் அவர் முன்வைத்த தத்துவங்களுக்கும் ஆர் எஸ் எஸ் தத்துவங்களுக்கும் முரண்பாடே இல்லை என்றுகூட பேசுகின்றனர். உண்மை யில் அம்பேத்கர் அவர்களை சங்கபரிவாரத்தின் மூலவர்களுடன் ஒப்பிட்டு அவரை தங்கள் இயக்கத்தின் இலக்கண இலட்சிய நபராக சித்தரிப்பதில் ஏதேனும் உண்மை உண்டா?

பா ஜ க / ஆர் எஸ் எஸ் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது நகைப்புக்கு உரியது. சங்க பரிவாரம் அம்பேத்கரை தங்களுக்கு தத்துவார்த்த அடிப்படையில் நெருங்கியவர் என்று சித்தரிக்க முயல்வது தலித் மக்கள் மத்தியிலும் அம்பேத்கர் அவர்களை மதிக்கும், போற்றும் கோடிக்கணக் கான மக்கள் மத்தியிலும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கை புகுத்தும் குறுக்குவழி முயற்சிதான். சில ஆண்டுகளாகவே இது நடக்கிறது. பா ஜ க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முயற்சிகள் அதிகமாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆங்கில வெளியீடான ஆர்கனைசர் பத்திரிக்கையும் இந்தி ஏடான பாஞ்சஜன்யாவும் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களை புகழும் சிறப்பு மலர்களை வெளி யிட்டனர். மோகன் பகவத் பிப்ரவரி 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் அம்பேத்கர் சங்க பரி வாரத்தின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்றே ஒரு போடு போட்டார்! இன்றும் ஆர் எஸ் எஸ் இந்த தன்மையில் தனது பிரச்சாரத்தை தொடர்கிறது. ஆனால் உண்மை முற்றிலும் வேறு.

பா ஜ க இந்துத்வா கோட்பாட்டை ஏற்று கடைப்பிடிக்கிறது. தனது பொருளாதாரக் கொள்கைகளை பொருத்தவரையில் நவீன தாராளமய கொள்கைகளை மிகத்தீவிரமாக அமலாக்குகிறது. இந்த இரண்டையுமே டாக்டர் அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தவர்.

அம்பேத்கரும் இந்துத்வாவும்
இந்துத்வா தத்துவம் பிராமணீய இந்து மத கோட்பாடுகளை முன் நிறுத்துகிறது. சாதி அமைப்பையும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறையையும் ஒரு போதும் பா ஜ க எதிர்த்ததில்லை. மதசார்பற்ற இந்தியா என்ற கோட்பாட்டை நிராகரித்து இந்து ராஷ்டிரம் என்ற முற்றிலும் தவறான கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்திய மக்களை நேசித்த, தலித் மக்களுக்காக மட்டுமின்றி அனைத்து இந்திய உழைப்பாளி மக்களின் மேம்பாட்டிற்காக அரும் பாடுபட்ட அம்பேத்கர் எந்த மதத்தினரையும் வெறுக்கவில்லை. ஆனால் மிகத்தெளிவாக ஒன்று சொன்னார்: “பிராமணீய இந்துமதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதன் அடிப் படையில், இந்த மதம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது.”

சாதி அமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முன்பின் முரணற்று முழங்கியது மட்டுமின்றி அதற்காக தனது வாழ்நாளில் கணிசமான பகுதியை செலவழித்தவர் அம்பேத்கர். அற எஸ் எஸ் இயக் கத்தின் மூலவர்களில் முக்கியமான நபரான சவர்க்கார் பற்றி அம்பேத்கர் கூறுகிறார்: “சவர்க் கார் இந்தியாவில் முஸ்லிம், இந்து என்று இரு பிரிவினர் உள்ளனர். இருந்தபோதிலும், இந்தியா இருதேசங்களாக பிளவுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறார். இருவரும் ஒரு நாட்டில் வாழ வேண்டும். அந்த நாட்டின் அரசியல் சாசனம் இந்துக்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். அவர்கள்கீழ் இஸ்லாமியர்கள் இருக்கவேண்டும் என்பது சவர்க்கரின் நிலைப் பாடு.” இவ்வாறு ஆர் எஸ் எஸ் சின் இந்துராஷ்டிரா தத்துவத்தை அம்பலப்படுத்தி, இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், புத்திஸ்ட் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இணைந்து சமமாக வாழும் நாடாக இந்திய இருக்கவேண்டும் என்று வாதாடுகிறார், அம்பேத்கர். “இந்து ராச்சியம் ஒன்று உருவானால், அதைவிட மிகக்கொடிய துயரம் இந்த நாட்டுக்கு வர முடியாது” என்று கூறினார்.

அம்பேத்கர் தலைமையில், அவரது மிகச் சிறந்த பங்கின் அடிப்படையில் உருவான இந்திய அரசியல் சாசனத்தை ஆர் எஸ் எஸ் கடுமையாக சாடியது. நவம்பர் 26, 1949 அன்று அரசியல் சாசனம் இறுதி செய்யப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து நவம்பர் 30 அன்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மனுஸ்மிருதி தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக இருந்திருக்க வேண்டும் என்று பொருள் பட தனது ஏட்டில் தலையங்கம் தீட்டியது.

ஆர் எஸ் எஸ் தத்துவத்திற்கு நேர் மாறாக, ‘சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கான திட்டத்தின் அடிப்படையில், பல பிரிவினரும் கலந்த அரசியல் கட்சிகள் உருவாவது அவசியம். இதன் மூலம் இந்து ராச்சியம், முஸ்லிம் ராச்சியம் என்ற இரு அபாயங்களையும் தவிர்க்க முடியும்.’ என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.

தத்துவ அடிப்படையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை அம்பேத்கர் நிராகரித்தார் என்பது தெளிவாக உள்ளது. நடைமுறையில் நமது அனுப வம் என்னழூ அம்பேத்கர் பெயரை பயன்படுத்த முயன்றுவரும் பா ஜ க வின் கடந்த மூன்றாண்டு ஆட்சியிலும் சாதி ஒடுக்குமுறைக்கு பக்கபலமாக மத்திய அரசும் பா ஜ க தலைமையிலான மாநில அரசுகளும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்களின் தலித் விரோத, முஸ்லிம் விரோத போக்குகள் அம்பலமாகி வருகின்றன. சமூக நீதிக்கு எதிர்ப்பு, இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அவ்வப்பொழுது அதன் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள், நிலச்சீர்திருத்தத்தை கிடப்பில் போடுவது மட்டுமின்றி நில ஏகபோகத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட பா ஜ க கொள்கைகளும் நடைமுறைகளும் அம்பேத்கர் அவர்களுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இடையே நிலவுவது முழு முரண்பாடு தான் என்பதை காட்டுகிறது.

அம்பேத்கரும் தாராளமயமும்
பா ஜ க ஆர் எஸ் எஸ் அரசாங்கத்தின் தீவிர தாராளமய கொள்கைகளை அம்பேத்கர் பல பத்தாண்டுகளுக்குமுன்பே தத்துவ அடிப்படையில் நிராகரித்தார். பொருளாதார வளர்ச்சியில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முழு மையான நிலசீர்திருத்தம் வேண்டு மென்றார். முதலாளித்தவ பொருளா தார அமைப்பில் அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவற்றை சாடினார்.

“நிலம் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அரசு கூட்டு உறவு அடிப் படையில் பாடுபடும் விவசாயிகளின் குழுக்களுக்கு நிலத்தை குத்தகைக்கு தர வேண் டும். வேளாண் வளர்ச்சிக்கு அனைத்து உதவி களையும் அரசு செய்ய வேண்டும்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய அரசியல் சாசன வரைவு கட்டத்தில் சில முன்மொழிவுகளை அம்பேத்கர் வைத்தார்:
பொருளாதார சுரண்டலை அரசு எதிர்க்க வேண்டும்
முக்கியமான தொழில்கள் அரசுடமையாகவும், அரசால் நடத்தப்படுபவையாகவும் இருக்க வேண்டும்.

இதர அடிப்படையான தொழில்கள் அரசால் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும்.
வேளாண் தொழில், அரசு நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளின் கூட்டமைப்பு களுக்கு குத்தகை கொடுத்து, நடந்த்தப்பட வேண்டும்.

அம்பேத்கர் தெளிவாக சொன்னார்: “அரசு சோசலிசம் இந்தியாவின் வேகமான தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியம். தனியார் துறை இதனை செய்ய இயலாது.”
தாராளமய தத்துவத்தை அம்பேத்கர் கடுமையாக தாக்கினார். “அரசு தலையிடாவிட்டால் சுதந்திரம் (வெல்லும்) என்ற கூற்றை பற்றி அவர் சொல் கிறார்: யாருக்கு இந்த சுதந்திரம்? நிலபிரபுக் களுக்கு குத்தகையை கூட்டவும், முதலாளி களுக்கு வேலை நேரத்தை கூட்டவும் கூலியை குறைக்கவும் தான் இந்த சுதந்திரம்!”

எனவே சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.

மே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …

கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சூழலில், மே மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளிவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல மக்கள் இயக்கங்களும் ஆண்டு முழுவதும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை பல வடிவங்களில் மேற்கொள்ள உள்ளனர்.

மார்க்சிஸ்ட் இதழிலும்,தொடர்ந்து அவரது வாழ்க்கை குறித்தும், சிந்தனைகள் குறித்தும், விசேட படைப்புக்களை வெளியிட எண்ணியுள்ளோம்.

மார்க்சிய லெனினியம் காட்டும் பாதையில்தான் மார்க்சிஸ்ட் இதழின் அனைத்து படைப்பாக்கங்களும் அமைய வேண்டுமென்ற உறுதிப்பாடு கொண்டது, மார்க்ஸிஸ்ட் இதழ்.

முதலாளித்துவ பொருளாதார முறை மட்டுமின்றி, அதற்கு பக்கபலமாக உள்ள கருத்தியல் அனைத்தையும் அறிவதற்கு மார்க்ஸ் எழுத்துக்களும், மார்க்சியம் உருவாக்கிய இயக்கவியல, வரலாற்றியல்  பொருள் முதல் வாதமும் உதவுகிறது.

முதலாளித்துவ அமைப்பை அறிவதற்கு மட்டுமல்லாமல், அதனை தூக்கியெறிந்து சோசலிசம் படைக்கவும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கு    வழிகாட்டுவது,  மார்க்சின் எழுத்துக்கள்.

முதலாளித்துவ அறிவுலகம் மார்க்சின் சிந்தனையை மறைக்கவும், திரிக்கவும், திசைதிருப்பவும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்கள கருத்துப் போராட்டக்களத்தில் தீவிரமாக செயலாற்றிட வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் இதழ் தனது பங்கினை ஆற்றிடும்.

இந்த இதழில் தோழர் ஆத்ரேயா மார்க்சின் 200-வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அவரது மகத்தான பங்களிப்பினை விளக்கி கட்டுரை எழுதியுள்ளார்.

வலதுசாரி போக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளி வர்க்க இயக்கத்தினை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கோடு, தோழர்கள் ஏ.கே.பத்பனாபன், ஹேமலதா ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில்,மார்க்சிஸ்ட் கட்சி,கட்சி அணிகளுக்கு அரசியல் தத்துவார்த்த கல்வியை அளிக்கும் வகையில் எடுத்த முயற்சியை தோழர் சிரிதிப் பட்டாச்சாரியா விளக்கியுள்ளார்.

அன்றைய சோசலிச சோவியத் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மை பற்றி சிந்தன் விளக்கியுள்ளார்.
வகுப்புவாத புரட்டல் முயற்சி ஒன்றினை அம்பலப்படுத்திய ஜியா உஸ் சலாம் கட்டுரையை தமிழில் கொடுத்துள்ளார் கி.ரா.சு. கட்சி திட்டம் 5- வது பகுதியை சந்திரா எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் இதழ் சந்தா சேர்ப்பும், கருத்தரங்க நிகழ்வுகளும் நன்கு நிறைவுற்றுள்ளன. அனைவருக்கும் ஆசிரியர் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
– ஆசிரியர் குழு

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் சக்திகளிடையே யும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையேயும், நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஊடகங் கள் வெளியிட்டுள்ள தரவுகளை மட்டும் வைத் துக் கொண்டு, இதனை மதிப்பீடு செய்வது பலன் தராது. இந்தத் தரவுகளுக்கு காரணமான சூழல், அந்தச் சூழல் உருவாக்கப்பட்ட அடிப்படை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள் அல்லது கூட்டணி ஆகிய வற்றுக்கு எதிராக அமைந்துள்ளன என்பது பொதுவான செய்தி. கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தாலும், அதில் ஆளுநர் மற்றும் பாஜகவின் குதிரை பேரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. மற்றொரு பொதுவான செய்தி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மீதான அதிருப்தி இந்த மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. காரணம் மாநில முதலாளித்துவ கட்சிகள் அல்லது காங்கிரஸ், பாஜகவின் மத்திய ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய இயலவில்லை; அதற்கேற்ற உத்தியும் அவர்களிடம் இல்லை. இடதுசாரிகள், அமைப்பும் வலுவுடன் இல்லை.

பஞ்சாபில் பாஜக படுதோல்வி அடைந்தது. என்றாலும் அது மத்திய ஆட்சி மீதான அதிருப்தி யின் விளைவு என்ற முடிவுக்கு முழுதாக வரக் கூடியதாக இல்லை. காரணம், பாஜக பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணியில் இருந்தது. மாநில ஆட்சி, பாதல் குடும்ப ஆதிக்கத்தின் மீதான வெறுப்பு இருந்தது. பாஜக கூட்டணியில் பங்கு வகித்ததன் காரணமாக சீக்கியர்களிடம், இந்துத்துவா மேலாதிக்கம் சிறு பாதிப்பை ஏற் படுத்தியிருக்கக் கூடும்.

அதேநேரம் சில குறிப்பான செய்திகளையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்று, பாஜக உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு செய்த பணிகள். தனக்கு வலு இல்லாத, மணிப்பூரிலும் குதிரை பேரத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது. அதே போல், நிர்வாக அமைப்புகளில் திணிக்கப்படும் இந்துத்துவக் கொள்கை. (உதாரணமாக ஆளுநர் களின் செயல்பாடு) மேலும் இந்த தேர்தலில் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலும் வகுப்பு வாத கலவரங்களும், ஊடக மேலாதிக்கமும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் திட்டமிடல்:
ஐந்து மாநிலத் தேர்தலிலுமே வெற்றி பெற்றாக வேண்டுமென்ற முனைப்பில் பாஜக இருந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம். அங்கே வெல்வதன் மூலம், தானொரு வெல்லற்கரிய சக்தி எனக் காட்டிக் கொள்வதும். அதை இந்தியா முழுமைக்கும் பொதுமைப் படுத்துவதும் பாஜகவின் விருப்ப மாக இருந்தது. அதற்கேற்றவகையில் திட்ட மிட்டது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்துத்துவா சக்திகள் தீவிர கவனத்தை மேற்கொண்டு வந்தன.

முதலில், அணிகளைத் தயார் செய்வது. உ.பி யில் மட்டும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் 1.80 கோடி. அதில் செயல்படும் கட்சி உறுப்பினர் களாக 67,605 நபர்களை மாற்றியுள்ளது பாஜக. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு. வாக்கு சாவடி மட்டத்தில் 1.47 லட்சம் பொறுப்பாளர் களை உருவாக்கி, அவர்களுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் குறைந்தது 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, 13.50 லட்சம் ஊழியர்களை உருவாக்கியுள்ளது. 100 – 125 வாக்குச் சாவடி களைக் கொண்ட மண்டலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மண்டல ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கும், மாவட்ட அளவில் 15 ஆயிரம் பேருக் கும் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது, பிரச்சாரம். அமித் ஷாவின் நேரடிப் பார்வையில் விளம்பர நிறுவனங்கள் உதவியுடன் செயல்பட்டனர். 34 தாமரை மேளாக் கள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றி லும் 60 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 8574 நாடகங் கள் நடத்தப்பட்டுள்ளன. வீடியோ வேன்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளன. இவற்றின் மூலம் 47 லட்சம் பேரைச் சந்தித் துள்ளனர். மனதோடு பேசுவோம் என்ற வீடியோ ரத நிகழ்வு மூலம், நிறைய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ கான்ஃ பரன்ஸ் மூலம் அமித் ஷா நேரடியாக 74,200 இளைஞர்களுடன் உரையாடியுள்ளார்.

மூன்றாவது, சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தியது. பாஜக சமூகவலைத் தளங்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறது. பாஜக4உபி (க்ஷதுஞழருஞ) என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப் பட்டன. குறிப்பாக வாட்ஸாப் குழுக்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளன. 10,344 வாட்ஸாப் குழுக்கள் மூலம் 15 லட்சம் மக்களை இணைத் துள்ளனர். பாஜக தனக்கு உள்ள பொருள் செல்வாக்கு காரணமாக, முழுநேர ஊழியர் களாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், மாநிலத்தில் 5,031 நபர்களை நியமித்து செயல் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் சொந்த செல்வாக்கில் உருவாக்கப்பட்டவை. இதர ஊடகங்களும் பாஜகவிற்கு சாதகமாக, ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டன என்பதும் முக்கியமானது.

பாஜகவின் ஊடக மேலாதிக்கம்:
அச்சு, மின்னணு ஊடகங்கள் என அனைத்துமே எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டன. குறிப்பாக கருத்து உருவாக்கத்தில் பாஜகவிற்கு சாதகமான வாக் காளரின் மனநிலையை உருவாக்க, இத்தகைய பாரபட்சமான செயல்பாடு பயன்பட்டது. உதாரணத்திற்கு டெய்னிக் ஜாக்ரன் டெய்லி என்ற இதழ், தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி, கருத்துக் கணிப்புக்கு அப்பாற்பட்டு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தி, அதை 6 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ள நிலை யில் வெளியிடவும் செய்தது. இது அப்பட்ட மான சட்டமீறலாகும்.
டெய்னிக் ஜாக்ரன் டெய்லி உ.பியின் முதல் கட்டத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கு 60- ல் பாஜக வெற்றி பெறுமென செய்தி வெளி யிட்டது. அது பின்னர் நடந்த 6 கட்ட வாக்குப் பதிவில் பிரதிபலித்துள்ளதை பல்வேறு ஆய் வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நடுநிலை வாக்காளர்கள் எனக் கருதப்படுவோர் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக, தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

திட்டமிட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்:
மேலே குறிப்பிட்ட பாஜகவின் ஊடகம், பிரச் சாரத் திட்டமிடல், அதன் நிகழ்ச்சி நிரலான, வகுப்புவாத அணிதிரட்டலுக்கு ஏற்ப தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஒரு பொய்யைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அதை உண்மையாக்க முடியும் என்ற திசையிலேயே பாஜக செயல்பட்டது. உதாரணமாக இஸ்லாமி யர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. முத்தலாக் மூலம் அதிக திருமணம் செய்து கொள்கின்றனர் போன்ற வற்றைச் சொல்லலாம். முத்தலாக் போன்றவை கைவிடப்பட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் உள்பட, விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அதிகமாக முத்தலாக் மூலம் கூடுதல் திருமணங் கள் நடைபெறுவதாக கூறுவது பொய் பிரச் சாரம் என்பதை அறிய வேண்டியுள்ளது.
உ.பி. யில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கணிசமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட னர். மேற்கு உ.பியில், “குஜராத் முஸ்லிம்கள் மனி தனின் மண்டை ஓட்டை வைத்து பேருந்துகளில் இடம் பிடிப்பர். இதன் காரணமாக இந்துக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக ஆட்சி வந்த பின்தான் முஸ்லிம்களின் இத்தகைய செயல் ஒழிந்தது. உ.பியில் 2012 ஆண்டைப் போல் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றால், காவலர்களைக் கொண்டு, இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்வர்” எனப் பிரச்சாரம் செய்துள்ளனர். உண்மைக்கு புறம் பான இந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியருக்கான இடுகாடுகள் ( கபர்ஸ் தான் ) மிக அதிகம் என்றும், இந்துக்களுக்கான மயானங்கள் குறைவு என்றும் பிரதமர் மோடியே பிரச்சாரம் செய்தார். இது அப்பட்டமான பொய் பிரச்சாரம் மட்டுமல்ல. திட்டமிட்ட வெறுப்பு அரசியல் ஆகும். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு ஊடகங்களும் துணை செய்தன. இது `ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக, யூதர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக செய்த பொய்ப் பிரச்சாரத் தைப் போன்றது. மோடி, யோகி ஆதித்யநாத் அல்லது மகேஷ் சர்மா என நபர்கள் மட்டும் பொறுப்பல்ல. இந்த பிரச்சாரம் திட்டமிடப் பட்ட ஒன்று. இந்து ராஷ்ட்ரா என்ற முழக்கத்தை, சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர் முன் வைக்கும்போதே பிறந்ததாகும். உதாரணத்திற்கு பாஜக இத்தேர்தலில், பசு பாதுகாப்பு என்ற முழக்கத்தை தீவிரமாக்கியது.
முகம்மது இக்லக் என்பவர் கொல்லப்பட்டார். மீரட் சுற்றுவட்டாரப்பகுதி தொழில் வளர்ச்சி பெற்ற பகுதி. இருந்தாலும் மக்கள் சிந்தனையில், தொழில் வளர்ச்சிக்கேற்ற, வளர்ச்சி ஏற்பட வில்லை. இடதுசாரிகளோ, பாஜகவுக்கு எதிரான கருத்துவலிமை கொண்ட அமைப்புகளோ செயல்படவில்லை. எனவேதான் பாஜக தலைவர் கள் ஒருபுறம் பசு பாதுகாப்பு என முழங்கவும், மறுபுறம் மாட்டிறைச்சித் தொழிற்சாலையையும் நடத்த முடிந்தது. இந்த முழக்கம் தேர்தலுக்குப் பயன்பட்டது.

புதிய முதல்வர் ஆதித்யநாத், சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் தடை செய்யப்படும் என அறிவித்து செயல்படுகிறார். இதுபோன்ற காரணத்தால், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பாஜக அரசுகள் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தண்டனை, மரண தண்டனை என கூவு கின்றன. பாஜகவின் இந்த உணவு வெறுப்பு அரசியலை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வலுவான எதிர் பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்ளவில்லை.
உணவு, உற்பத்தியின் தன்மைக்கேற்றது. உ.பி., உள்ளிட்ட வட இந்தியாவின் மையப் பகுதி முழுவதும், மேய்ச்சல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்தது. எனவே உணவுப் பொருள் பட்டியலில் மேய்ச்சலுக்கு உள்ளான கால்நடைகள் இருப்பது இயல்பு. குறிப்பாக உழைப்பாளி மக்களின் உணவாகவும் கால்நடைகள், அமைகின்றன. இந்த பண்பாட்டு அம்சம் அல்லது உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, முதலாளித்துவ கட்சிகளுக்கு இல்லை. அதன் விளைவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியவில்லை.

சாதித் திரட்டலுக்கு உதவிய லவ் ஜிகாத்:
இந்துத்துவா வகுப்புவாதம், மத அடிப் படையில் மட்டும் மக்களைப் பிளவுபடுத்த வில்லை. சாதி ரீதியில் அரசியல் செய்து வந்த கட்சிகளிலும் சரிவை ஏற்படுத்திய முழக்கமாக லவ் ஜிகாத் அமைந்தது. பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியவுடன் முன்வைத்த முழக்கம் லவ் ஜிகாத். அதாவது, இஸ்லாமிய இளைஞர்கள் ஆடம்பர உடை அணிந்து இந்துப் பெண்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் வீசும் காதல் வலையில் இந்துப் பெண்கள் மயங்கும் நிலை உள்ளது போன்ற கருத்துக்களை விதைத் தனர்.
சமாஜ்வாதி யாதவ் சாதியினரின் வாக்கு களைக் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி, பாஜகவின் மேற்குறிப்பிட்ட வகையிலான பிரச் சாரம், உ.பியின் இதர சாதிய இந்துக்கள் என்ற பிரிவினரிடம் ஏற்புடையதாக அமைந்தது. அதன் விளைவு அத்தகைய குணம் கொண்ட சிறு அரசி யல் கட்சிகள் பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டன. அது பாஜகவின் வாக்கு சதத்தைத் தக்கவைக்கவும், இந்த அளவிற்கான வெற்றிக்கும் வழிவகுத்தது. மீரட் போன்ற மேற்கு உ.பி.யில் ஜாட் பிரிவினர் வசிக்கும் பகுதியில் கணிசமான மனமாற்றத்தை, இது போன்ற பிரச் சாரங்கள் உருவாக்கின. காதல் மீதும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக இது அமைந்துள்ளது. ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்றபின் ரோமியோக்களை ஒழிக்கும் காவலர் படையை அமைத்துள்ளது இந்தப் பின்னணியில்தான். இது மனித குல வளர்ச்சிக்கு எதிரானது.

பொதுவாகக் கலவரங்கள் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு தனது ஆதரவு தளத்தை விரிவாக்கம் செய்துகொண்டுள்ளன என்பதை இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக எண்ணம் கொண்ட ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 2012 ல் 668 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளது. அதில் உ.பி. யில் நடந்தது 118. 2013 ல் மொத்தம் 823 கலவரங் கள் நடந்துள்ளன. அதில் உ.பி.யில் மட்டும் 247. 2014 ல் மொத்தம் 644, உ.பி.யில் மட்டும் 133. இந்த கலவரங்கள் உ.பி.யை மையப்படுத்தி கவனம் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில் மொத்த வகுப்பு கலவரங் களும் உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள குஜராத், ம.பி., காங் கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகா, காங்கிரஸ் வசம் இருந்து பாஜக கைப்பற்றிய ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா. இது வெளிப்படுத்தும் உண்மை நீண்டகாலமாக பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், காங்கிரஸ் அல்லது பிராந்திய முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றவும், பாஜகவிற்கு பிரதான ஆயுதமாக கலவரங்கள் பயன்படுகின்றன.
உ.பி.யில் நடந்துள்ள கலவரங்கள் பாஜகவிற் கான வாக்கு வங்கியைப் பலப்படுத்தியுள்ளன. குறிப்பாக முசாஃபர் நகர் பகுதியில் நடந்த கலவரங்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், பாஜகவின் செல்வாக்கு வாக்கு சதத் தில் பிரதிபலிக்கக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஆதித்யநாத், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர்; இந்து யுவ வாகினி என்ற குண்டர் படையைக் கொண்டவர். அது நடத்திய தாக்குதல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.

இரட்டையர்களாக செயல்படும் தாராளமயம் மற்றும் வகுப்பு வாதம்:
வகுப்புவாதம் எல்லா இடங்களிலும் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளுக்கு உதவி செய்து வருகிறது. தாராளமயம், வகுப்புவாதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தன் வளர்ச் சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரண்டும் இரட்டையர்களாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் பிரிட்டிஷ் காலனி யாதிக்க ஆட்சி, இந்தியாவில் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலை கையாண்டது. சுரண்டலை தொடர்ந்து செயல்படுத்தவும், காலனியாதிக்கத் திற்கு எதிராகப் போராடிய மக்களைப் பிளவு படுத்தவும் இந்த கொள்கை பயன்பட்டது.
இன்றைய பாஜக இதே போன்றதொரு பிளவு வாதக் கொள்கையைத்தான் கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வு, வறுமை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் மக்களின் எதிர்ப் புணர்வை திசைதிருப்பி, இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், வடிவமைக்கப்பட் டுள்ளது. இன்று காலனியாதிக்கத்திற்கு பதிலாக நவகாலனியாதிக்கம் பின்பற்றப்படுவதால், பாஜக ஆட்சியாளர்களே செயல்படுத்துகிறார்கள். அந்த வகையில் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பணியை, பாஜகவின் மத்திய ஆட்சி சிறப்பாக செய்கிறது.
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தப்பட்ட போது, வளர்ச்சி என்ற முழக்கம் பேரிரைச்சலாக இருந்தது. இந்த மூன்று ஆண்டு களில், எந்த ஒரு துறையிலும் சிறப்பான வளர்ச் சியைப் பெற்றதாகக் குறிப்பிட்டு சொல்ல முடி யாது. அதேநேரம் மேலே குறிப்பிட்ட எண்ணிக் கையில் வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. ஆதித்யநாத் மற்றும் அவர் போல் உள்ள பரி வாரங்கள் கொடூர வார்த்தைப் பிரயோகங்களை சிறுபான்மையினரை நோக்கிப் பேசியபோது, மோடி கண்டுகொள்ளவில்லை. அதுவே மோடி தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட் காமல் திசை திருப்புகிறது. அத்தகைய விஷத் தன்மை கொண்ட பிரச்சாரகர் ஆதித்யநாத்தை, ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வராக ஆர்.எஸ். எஸ். தேர்வு செய்துள்ளது.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல், இந்துத்துவாவின் கொள்கை அமலாக்கத்திற்கு, மோடியும், ஆதித்யநாத்தும் செயல்படுவார்கள் என ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் சலுகைகளைப் பாது காக்க இந்த அணுகுமுறை பயன்படும் என்றே கருதுகின்றனர். அதனால்தான் எந்த ஒரு ஊடக மும் ஆதித்யநாத் தேர்வை விமர்சிக்கவில்லை. தாராளவாதத்தை ஆதரிக்கிற மாநில முதலாளித்துவ கட்சிகளும், இந்த அபாயத்தை உணர்ந்து, கருத் துப் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. கம்யூ னிஸ்டுகள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

மோடி அரசின் ‘செல்லாநோட்டு’ அறிவிப் பின் போது, அதற்குக் கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி – களப் போராட்டம் மூலமான நிர்ப்பந்தத்தைத் தர வில்லை. பாஜக மத்திய அரசும் தேர்தலை காரண மாக வைத்து, முதலில் வெளிவந்த 500 ரூபாய் நோட்டுக்களை, உ.பி போன்ற இடங்களில் விநி யோகம் செய்தது. இது உ.பியில் விரைவில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க பயன்பட்டது. அந்த வகையிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக சக்திகள், கொள்கை அடிப்படையிலான மாற்றை அவை முன்நிறுத்தவில்லை.
“பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் வகுப்பு வாதத்தை எதிர்த்தாலும், தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு உதவுகிற போது, வகுப் புவாதத்துடன் சமரசம் செய்து கொள்கிறது. மக்களை துன்பத்தில் இருந்து மீட்கவில்லை,” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது. வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்காக தேர்தல்அணி மட்டும் ஏற்படுத்துவது பலன் கொடுக்காது. எனவே, உத்தரப்பிரதேசத்தில் மாற்றுக் கொள் கைகளுடன் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி யிட்டன. அமைப்பு வலிமை குறைவானதன் காரணமாக, இந்தச் செய்தியை மக்களிடம் சென்று சேர்க்கமுடியவில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் பாஜக:
ஆளுநர் நியமனம் மத்தியில் ஆளும் கட்சியின் விருப்பத் திற்கு உரியவராக இருக்கிறார். வரம்புகள் மீறப் பட்டுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்தபின் 26 ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட துறையின் பிரமுகர் என அந்தஸ்தில் யாரும் நிய மிக்கப் படவில்லை. கேரள ஆளுனர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் நியமனம் முன் எப் போதும் இல்லாத ஒன்று என்பதனால் சர்ச் சைக்கு உரியதாக இருந்தது.
மோடி பிரதமர் பொறுப்பு ஏற்றபின், அருணா சலப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறலைப் பார்த்தோம். தொடர்ந்து டில்லி, புதுச்சேரி பிரதேசங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. திரிபுரா ஆளுநர், சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவு செய்திகளை வெளியிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் அரசியல் சட்டபடி அங்கீ கரிக்கப்பட்டவரா என்பதில் நீண்ட சர்ச்சை நடந்து, இறுதியாக அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அப்படி ஒரு அங்கீகாரம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு, கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுக் குப் பின் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அமைந் துள்ளன.
தனிக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை, சர்க்காரியா, அவரைத் தொடர்ந்து வெங்கடாச்சலய்யா ஆகியோர் அளித்த பரிந்துரைகள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட கட்சி களின் எண்ணிக்கையைப் பொறுத்து அழைப்பு விடுக்க வேண்டும். அடுத்து தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, பின் பெரும் பான்மையை நிருபிக்க செய்ய வேண்டும். மூன்றா வதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண் டும். நான்காவதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட, ஆட்சியில் இடம் பெறும் சுயேட்சைகள் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
கோவாவில் மிருதுளா சின்ஹா, மணிப்பூரில் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் செய்தது அரசி யல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எதேச் சதிகார அரசு அமைகிற போது, இருக்கிற உரிமை களும் பறிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். அதாவது, உ.பி.யில் பாஜக 39 சதமும், கோவாவில் 30 சத வாக்குகளையும், மணிப்பூரில் 35 சத வாக்குகளையும், பெற்றுள்ள நிலையில் இந்த எதேச்சாதிகாரம் தலைதூக்குகிறது. மத்தி யில் பாஜக 31 சத வாக்குகளைப் பெற்றுள்ள சூழலில் எதேச்சாதிகாரத்தைப் பின் பற்றுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் அவசியம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிக அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
நிறைவாக:
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக் கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தன் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலை தீவிரமாக முன்னெடுக்கிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள களத்தில் முன்நிற்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச்சார்பின்மைக்கான சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மக்கள்விரோதப் பொருளா தாரக் கொள்கைகளையும் தொடர்ச்சியாக அம் பலப்படுத்த வேண்டும். கதம்பக் கூட்டணிகள் அல்லாமல், பொதுக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில், பாஜகவுக்கு எதி ரான கட்சிகள் இணைந்து போராட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மக்களை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை களுக்கான அணிசேர்க்கைதான் வகுப்புவாத-தேசியத்தை எதிர்கொள்வதற்கான மாற்று வழியாகும். சமூகத்தில் வலுப்பெற்றுவரும் வகுப் புவாத உணர்வுகளை அழித்து மதச்சார்பின்மை எண்ணங்களை வலுப்படுத்திட சமூகத்தளத்தி லும் பணியாற்றவேண்டும்.
இந்த இலட்சியங்களைக் கொண்ட இடது ஜனநாயக அணி அமைப்பதென்றே மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப்பார்வை அமைந்துள்ளது. அந்த லட்சியத்தை அடைவதில்தான் இந்தியா வின் எதிர்காலமும் அமைந்துள்ளது.

தன்னெழுச்சி போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளுக்குத் தந்திடும் பாடங்கள்

 • உ.வாசுகி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது என்ற கோரிக்கைக்கான மக்கள் எழுச்சி தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து விவசாயத்தையும், நீராதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் எழுச்சி…. அதே பிரச்னைக்காகத் தொடர்ந்த வடகாடு, நல்லாண்டார்கொல்லை…. முன்னதாக உலக அளவில், இன்னும் பரந்த விஷயங்களுக்கான வால் ஸ்டிரீட் இயக்கம், அரபு வசந்தம் போன்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் பங்கேற்றோரில் பெரும்பாலோர், போராட்ட உணர்விலிருந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியிருப்பார்கள். உற்சாகமும் வடிந்திருக்கும். அவர்களைத் திரும்பவும் போராட்ட பாதைக்கு, மாற்று அரசியல் நோக்கி இழுக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தன்னெழுச்சி இயக்கங்கள் குறித்த மதிப்பீடும், புரிந்துணர்வும் இதற்கு உதவும்.

தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். மார்க்சிஸ்டுகளைப் பொருத்தமட்டில் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராக, சாதி, மத வெறிக்கு ஆதரவாக நடக்கும், பிற்போக்கு உள்ளடக்கம் கொண்ட, தன்னெழுச்சி போராட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். வர்க்க,  சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.

தன்னெழுச்சி நிகழ்வுகள் புதியதல்ல. உலகம் முழுதும் வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது.  முரண்பாடுகள் நிறைந்த புறச் சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, எங்காவது ஓர் இடத்தில், வெவ்வேறு அளவில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்துக்கு வந்து கொண்டுதான் உள்ளனர். அது திடீரென வெடிக்கும் தொழிலாளிகளின் ஒரு வேலைநிறுத்தமாக இருக்கலாம், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பாக இருக்கலாம், மாணவர் பிரச்னைக்காக வீதிக்கு வருவதாக இருக்கலாம், குடிநீருக்கான சாலை மறியலாக இருக்கலாம், பல்வேறு தன்னெழுச்சி நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.  ஊடக விளம்பரத்தாலும், ஒரே இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதாலும், நீடித்து நடந்ததாலும் ஒரு சில போராட்டங்கள், தன்னெழுச்சி இயக்கங்கள் என்ற அந்தஸ்து பெற்று, கூடுதலாக கவனத்தை ஈர்த்துள்ளன; அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

இவற்றை எவ்வாறு அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, புரட்சிகர மாற்றத்துக்குப் பயன்படுத்துவது என்று பார்ப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். தன்னெழுச்சி இயக்கங்களே போதும்; மக்கள் தாமாகவே பிரச்னைகளைக் கையில் எடுப்பதுதான் தீர்வுக்கு வழி; குறிப்பாக, அணிதிரட்டப்பட்ட அமைப்புகளோ, அரசியல் அறைகூவலோ தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும், அரசியலும் பொருத்தப்பாடற்றதாகி விட்டன என்று கூறி பரவசப்படும் பாணியும் முன்னுக்கு வருகிறது. இத்தகைய போக்குகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.

தன்னெழுச்சி போராட்டம்உணர்வு நிலையின் துவக்க கட்டம்:

தன்னெழுச்சி அம்சத்தை, விழிப்புணர்வின் அல்லது உணர்வு நிலையின் துவக்க கட்டம் (consciousness in an embryonic form) என்று “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் லெனின்  குறிப்பிடுகிறார். அன்றைய காலகட்டத்தில் ரஷ்யாவில் தொழிலாளிகளால் நடத்தப்பட்ட பல்வேறு தன்னெழுச்சியான வேலை நிறுத்த போராட்டங்களின் பின்னணியில், ரபோச்சியே டைலோ என்ற பத்திரிகை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாக பதில் அளிக்கிறார். ”தங்களை சுரண்டும் தற்போதைய சமூக அமைப்பு நிரந்தரமானது; கேள்வி கேட்க முடியாதது என்ற பல்லாண்டு கால நம்பிக்கையை, தொழிலாளிகள் கைவிடத் துவங்கியிருக்கிறார்கள். ஒரு கூட்டான எதிர்ப்பு தேவை என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என்று கூட சொல்ல மாட்டேன்; உணர துவங்கியுள்ளனர்” என்பது லெனினின் வார்த்தைகள்.

அதே சமயம், தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் ”விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில்  எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாத போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தொழிலாளிகள் மத்தியில் உருவாகும் தன்னெழுச்சியான இயக்கங்கள், சமூக ஜனநாயக சக்திகளின் அரசியல் தலையீடுகளை  இன்னும் அவசியப்படுத்துகிறது என்பதுதான் தோழர் லெனின் அவரது வாதங்களின் மூலம் உணர்த்துகிற கருத்து.

தோழர் ரோசா லக்சம்பர்க்,  லெனின் முன்வைத்த சில அடிப்படையான ஸ்தாபன கோட்பாடுகளுடன் கருத்து வேறுபாடு  கொண்டிருந்தாலும், வெகுமக்கள் பங்கேற்கும் தன்னெழுச்சி போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்றைய ஜெர்மனியில் தொழிற்சங்கங்களிலும், ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியிலும் சீர்திருத்தவாதப் போக்குகளும், அதிகாரவர்க்க அணுகுமுறையும் நிலவின. மக்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஐக்கிய முன்னணி உத்தியின் தேவையைப் புரிந்து கொள்ளாமல், வெகுஜன திரட்டல் குறித்தும், அரசியல் உணர்வூட்டல் குறித்தும் கவலை கொள்ளாமல்,  ‘இயக்கம் நடத்துவது மட்டுமே குறிக்கோள்’ என்று கட்சித் தலைமையின் ஒரு பகுதி செயல்பட்டதை அவர் சாடினார். புயலென வரும் மக்களின் எழுச்சியில் இத்தகைய தலைவர்கள் காணாமல் போவார்கள் என்றுகூட எச்சரித்தார். புரட்சிகர சக்திகள், மக்களின் தன்னெழுச்சியின்பால் செயலற்று இருந்துவிடக் கூடாது என்பது அவரது வாதங்களின் முக்கிய சாராம்சம்.

தன்னெழுச்சி இயக்கங்களை அங்கீகரித்து, தலையீடு செய்து, புரட்சிகர இலக்கு நோக்கி அவற்றைப் பயணிக்கச் செய்வது கம்யூனிஸ்டுகளின் பணி என்பதைத்தான் மேற்கூறிய சர்ச்சைகள் வலியுறுத்துகின்றன.

தானாக நடப்பதல்ல:

தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும். தற்போதைய நிலையிலிருந்து முன்னோக்கி செல்லும் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் சக்திகளும், இதே நிலை நீடிக்கட்டும் என்று விரும்பும் சக்திகளும் அனைத்து தளங்களிலும் மோதிக் கொண்டேதான் இருக்கின்றன. அகச் சூழல், புறச் சூழலின் முதிர்ச்சியைப் பொறுத்து, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் முன்னுக்கு வருகிறது. அதாவது எழுச்சி நடக்கும்; அல்லது மட்டுப்படுத்தப்படுவது தொடரும்.

தன்னெழுச்சி போராட்டங்களால் சில உடனடியான கோரிக்கைகள் வெற்றி பெறக் கூடும். உதாரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சிறப்பு சட்டம், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட எழுச்சி, எகிப்தில் நடந்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் தஹ்ரீர் சதுக்கத்தை நிறைத்து 18 நாட்கள் போராடியதன் விளைவாக, 30 ஆண்டுகளாக இருந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த முடிந்தது.  “நாங்கள் 99%” என்று முழங்கிய வால் ஸ்ட்ரீட் போராட்டம், அமெரிக்காவில் ஓர் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. இவை வரவேற்கத் தகுந்தவை; நம்பிக்கை ஊட்டக் கூடியவை. ஆள்வோர் எது செய்தாலும், மக்கள் மௌனமாய் தாங்கிக் கொள்வார்கள் என்ற நிலையிலிருந்து, மக்கள் ரத்தமும் சதையுமான போராட்ட வீரர்களாக ஆவது என்பது, உத்வேகத்தை அளிக்கக் கூடிய அம்சமாகும். என்றபோதிலும், இது நிச்சயம் முதல் படிதான்.

ஆனால், முதல் படியிலேயே நின்று விட்டால் இலக்கை நோக்கி செல்ல முடியாது. தன்னெழுச்சி இயக்கங்களின் பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் உடனடிப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வே இருக்கும். பிரச்சினைகள் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறையால் ஏற்படுகின்றன என்ற புரிந்துணர்வு இயல்பாக ஏற்பட்டு விடாது. குறிப்பிட்ட ஒன்றிரண்டு கோரிக்கைகளுக்கான அந்தப் போராட்டம், சமூக மாற்றத்துக்கான ஒட்டு மொத்த போராட்டத்தின் ஒரு பகுதி (partial struggle) மட்டுமே என்பதும், தீர்வுக்கு என்ன பாதை என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அது ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விடுகிறது. பின்னர் நீர்த்துப் போய் விடுகிறது. அவர்களின் உணர்வு மட்டம், போராட்டத்தின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்ததோ, அதுவே ஏறத்தாழ போராட்டத்துக்குப் பின்னும் தொடரும். இது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லாது. சுரண்டப்படுவோரின் நலனுக்கும், இன்றுள்ள அரசியல் பொருளாதார முறைமைக்கும் இடையில் சமரசம் செய்ய இயலாத பகைமை நிலவுவது குறித்த புரிதலுடன் கூடிய, உணர்வு மட்டமாக இது மாற்றப்பட வேண்டும். இது தன்னெழுச்சி போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, தானாக வந்து விடாது.

கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கும்போது:

தன்னெழுச்சியான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை பொறுப்புக்கு வரும் போது, போராட்டத்தின் தன்மை மாறுகிறது; கோரிக்கைகள் கூர்மையடைகின்றன. அரசியல் உள்ளடக்கம் உருவாகிறது. உதாரணமாக, தெலுங்கானா போராட்டம் துவக்கத்தில் வெட்டி என்ற கட்டாய இலவச உழைப்பு முறைக்கு எதிரான உணர்வாகத்தான் உருவானது. கம்யூனிஸ்டுகளின் தலைமை மற்றும் பங்கேற்புக்குப் பின்தான், அதற்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நிஜாம் ஆட்சி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பரிமாணங்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதிகாரிகளின், நிலஉடமையாளர்களின் பாலியல் பொருளாக, மிதியடியாக அவர்கள் இருந்த நிலை மாறியது. நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை பெருமளவு குறைந்தது. அடிமை நிலையிலிருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.

கீழ தஞ்சை போராட்டம், வார்லி ஆதிவாசி மக்களின் கிளர்ச்சி போன்றவை, மிராசுதார்கள், நில உடமையாளர்கள், ஆளுவோர்களின் நடவடிக்கைகளால் சுரண்டப்பட்டு, உரிமைகளும், மனித கவுரவமும் நொறுக்கப்பட்ட உழைப்பாளிகள்/சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டோரின் மனதில் செங்கொடி விவசாய இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர அரசியல் என்ற தீ கங்குகளை விதைத்ததால் அறுவடையான இயக்கங்கள். இவற்றிலும் தன்னெழுச்சி நிகழ்வுகள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று அரசியல் இலக்கோடு திட்டமிட்டு செயல்பட்டதால், அவற்றின் பரிமாணங்கள் மாறிப்போயின. பண்ணை அடிமை சுரண்டல் முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்ச கூலி என்பதற்கான முகாந்திரம் உருவாக்கப் பட்டது.

கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்பது என்பதை இயந்திரகதியாகப் பார்த்துவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் சிலர் தலைமையில் இருப்பது மட்டுமே தானியங்கியாக மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய விதியை முறையாக அமல்படுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் போராட்டங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதுதான் அதன் பொருள். மார்க்சிய தத்துவம் என்ற ஆயுதத்துடன் தன்னெழுச்சி போராட்டங்களுக்குள் இணைவது; பல்வேறு வர்க்கங்களை, சமூகப் பிரிவினரை ஒன்றுபடுத்த ஐக்கிய முன்னணி உத்தியைப் பயன்படுத்தி போராட்ட ஒற்றுமையைக் கட்டுவது; பிரச்னைகளை அடையாளம் கண்டு பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்குவது; மக்களின் ஏற்புத்தன்மையைப் பெறுவது; போராட்ட உத்திகளை வகுப்பது; அவர்களை ஸ்தாபனப்படுத்துவது; அவர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக சுரண்டல் சமூக அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதை மாற்ற முடியும். இவை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணிகள். கீழத்தஞ்சை விவசாய தொழிலாளிகள், வார்லி ஆதிவாசி மக்களின் உணர்வு மட்டம் பிற்பட்ட நிலையில்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் பணிகளின் மூலம்தான், அவர்களின் உணர்வு மட்டம் உயர்த்தப்பட்டது; போராட்ட ஒற்றுமை கட்டப்பட்டது; கவ்விப் பிடிக்கும் கோரிக்கைகளை உருவாக்க முடிந்தது. வர்க்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இவற்றை ஒன்றிணைத்த போராட்ட உத்தியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் முடிந்தது.

மெரினா எழுச்சி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோருவதை ஒட்டி எழுந்த எழுச்சியை ஒற்றைக் கோரிக்கைக்கான போராட்டமாக மட்டும் கருத முடியாது. மற்ற பிரச்னைகள் இந்த அளவு கவனிப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சொல்லிவிட முடியாது. வறுமை தீவிரமாகிறது; நிலங்கள் பறி போகின்றன; விவசாயம் கட்டுப்படியாகவில்லை; தற்கொலைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன; தகுதிக்கேற்ற வேலை இல்லை; சம்பளம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை; கல்வி, ஆரோக்கியத்தில் தனியார்மயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; கடுமையான குடிநீர் பற்றாக்குறை பயமுறுத்துகிறது; ஊரக வேலை உறுதி சட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன; ரேஷன் முறை சீரழிய துவங்கி விட்டது; பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கிறது; சாதிய ஒடுக்குமுறை பல விதங்களிலும் வெளிப்படுகிறது. இவற்றால் சொல்ல தெரியாத வேதனையும், ஏனென்று புரியாத கோபமும் கவ்விப் பிடிக்கிறது. போராட்டமாக வெளிப்படாமல் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்த இத்தகைய உணர்வுகள்,   கொதிநிலை அடைந்து தமிழ் இன அடையாளம் என்ற பேரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரிய போராட்டமாக வெடித்தன. தமிழகத்தில் பிரதான முதலாளித்துவ கட்சியான அதிமுகவின் தலைவர், மக்களை ஈர்க்கும் பிம்பமாக இருந்தவர், இறந்த பின்னணியில், வலுவான அடுத்த கட்ட தலைமை உருவாகவில்லை. அதே அளவிலான பிம்பம் உடனடியாகக் கட்டமைக்கப்பட முடியவில்லை என்கிற புறச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியை விட, இரண்டாம் குற்றவாளி மீது கூடுதல் வெறுப்பும், அதிருப்தியும் வெளிப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். எதிர்காலம் இன்னும் இது போல நிறைய தன்னெழுச்சி போராட்டங்களைப் பார்க்கும்.

இந்த எழுச்சி, அரசியல் கட்சிகளோ, வர்க்க அமைப்புகளோ அறைகூவல் விடுக்காமல் குவிந்த மக்கள் திரள் என்பதும், அரசியல் கட்சிகளை நிராகரித்து விட்டு நடக்கும் விஷயம் என்பதும், சில பகுதியினரால் பெருமைக்குரியதாகப் பேசப்பட்டது. அமைப்பு, கொடி, பேனர் எல்லாமே சந்தேகத்துக்கு உரியவையாகப் பார்க்கப்படும் உளவியல் உருவாக்கப்பட்டது. திரட்டப்படாமல் தாமாகவே  பொது இடத்தில் கூடுவதும், முன்கூட்டியே திட்டமிடாமல், அடுத்து என்ன செய்வது என்பதை அவ்வப்போது பேசி உருவாக்கிக் கொள்வதும்தான் சிறந்த ஜனநாயக மாதிரி என்று முன்வைக்கப் பட்டது. இத்தகைய அணுகுமுறை, அதாவது அரசியல் மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் அற்ற, திட்டமிடப்படாத அணுகுமுறை உண்மையில் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே அமையும். இது கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகளுக்கு எதிரான பார்வை. மக்கள் நலனுக்கான மாற்றத்துக்குப் போராடுவது முற்போக்கு புரட்சிகர சக்திகள் தாம். இவற்றை மறுப்பது, மாற்றத்தை மறுப்பதாகும்; ஒரு தெளிவான அரசியல் திசை வழியை மறுப்பதாகும். தற்போதைய சுரண்டல் சமூக அமைப்பு நீடிப்பதை இந்த அணுகுமுறை எவ்விதத்திலும் அசைக்காது.,

மெரினா எழுச்சி, ஆட்சியாளர்களால் துவக்கத்திலேயே ஒடுக்கப்படவில்லை. அதன் நீடிக்கும் தன்மையை அரசு யூகிக்கவில்லை. தமிழகத்தில் நிலவிய தீவிரமான விவசாய நெருக்கடி மற்றும் அதன் விளைவுகளைத் திசை திருப்ப இந்த எழுச்சி பயன்படும் என்று மாநில அரசு கணக்கு போட்டிருக்கலாம். மாநில அரசின் பலவீனமான தலைமை மத்திய அரசுடன் நெருக்கத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, மத்திய மோடி அரசுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரப்பட்டதும், மாநில அரசின் வாக்குறுதிகளுக்குப் பிறகும்  எழுச்சி முடிவுக்கு வரவில்லை என்பதும், ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. இறுதி நாள் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு வன்முறை, அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப் பட வேண்டும்.

இந்த எழுச்சியை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது. பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்று,. அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தை விசிறி விட்டன. கார்ப்பரேட் ஊடகங்களுக்கு, ஒரு மக்கள் எழுச்சியைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்து உருவாக்கும் கோரிக்கை அல்ல அது.  கோரிக்கைகள் வர்க்க தன்மை உடையவையாக இருந்திருந்தால் இந்த அளவு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. தன்னெழுச்சி இயக்கம், தற்போதைய அமைப்பு முறைக்கு சவால் அல்ல என்பதும் ஒரு யதார்த்தம். இடதுசாரிகளின் திட்டமிட்ட, முக்கியமான பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் ஒப்புக்காகக் கூட ஒளிபரப்பப் படுவதில்லை என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, மாற்று அரசியலை முன்வைத்து மார்ச் 2-6 மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட மாநில அளவிலான இயக்கத்தை ஊடகங்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசியலுக்கு உண்மையான மாற்று இடதுசாரி அரசியல்தான் என்பது ஒரு முக்கிய அரசியல் செய்தி. அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவது, வர்க்க   அரசியலுக்கு சாதகமாகி விடும். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும்; சென்னையில் ஏப்ரல் 4-ல் நடந்த சிஐடியுவின் முற்றுகை போராட்டமாக இருக்கட்டும்; அவை ஊடகங்களை அசைத்து விடவில்லை. ஏனெனில் ஊடகங்களின் வர்க்கத் தன்மை அவற்றை அவ்வாறு செயல்படுத்துகிறது.

இயக்கத்தைப் பரவலாக்கியதில் சமூக வலைத்தளமும் முக்கிய பங்காற்றியது. அதில் உள்ள வாய்ப்பு முற்போக்கு சக்திகளால் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

100% தன்னெழுச்சி சாத்தியமா?

100% தன்னெழுச்சி என்று ஏதாவது இருக்க முடியுமா? நிச்சயம் ஏதோ ஒரு குழு, ஏதோ ஒரு தலைமை இதற்கான முன்முயற்சியை எடுத்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதைப் பார்த்தோம். தமிழகம் முழுதும் ஒரே தலைமை இல்லை. ஆனால், தலைமையே இல்லை என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு மையத்திலும், ஓர் அமைப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமை பொறுப்பை வைத்திருந்தன. போராட்டக் குழு என்று பல மையங்களில் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் வந்து கொண்டிருந்தது. பீட்டா எதிர்ப்பு முழக்கங்கள், அரசியல் முழக்கங்களாக மாறியது தற்செயலானதாக இருக்க முடியாது.  சில காரணங்களால், தலைமையில் இருந்தோர், தம் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும். இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, “ஒவ்வொரு இயக்கத்திலும் உணர்வுபூர்வமான தலைமை மற்றும் ஒழுங்குமுறை கூறுகள் உள்ளடங்கி இருக்கும்” என்றார். தன்னெழுச்சி இயக்கங்களில் இருக்கும் இந்த ஒழுங்குமுறை கூறுகளை வலுப்படுத்த வேண்டும். அதே போல் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தில் தன்னெழுச்சியும் இருக்கும்; அதனை அரசியலாக மாற்றிட வேண்டும்.

”கூடி நிற்பவர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் எங்கள் கருத்தை விரட்டி அடிக்க முடியாது” என்பது வால் ஸ்ட்ரீட் முழக்கத்தில் ஒன்று. ஆனால், சிறந்த முழக்கத்தைக் கூட நடைமுறையாக்க வேண்டும் என்றால், அதற்குத் தத்துவமும், அமைப்பும், வெகுஜன பங்கேற்பும் தேவை. மக்கள் பங்கேற்பில்லாமல் எதுவும் வெற்றி பெறாது. அவர்களின் ஈடுபாடு மிக முக்கியம். அதைத் தன்னகத்தே கொண்ட தன்னெழுச்சி இயக்கம் கம்யூனிஸ்டுகளால் புரட்சிகர திசைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

சிறு விரிசல்பெரு வெடிப்பு:

தன்னெழுச்சி இயக்கங்கள் வெற்றிடத்தில் உருவாவதில்லை. போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான வாசல்கள் திறந்து கொண்டே இருக்கின்றன. சில சமயம், சில இடங்களில், சில பிரச்சினைகள் பற்றிக் கொள்கின்றன.  சமூக உளவியல் மிக சிக்கலானது. எது அதனைக் கவ்விப் பிடிக்கும் என்று யூகிப்பது கடினம். நிர்பயா மீதான பாலியல் வல்லுறவு சம்பவம், டெல்லியில் 2012ல் நடந்த 634வது சம்பவம். 633க்கு ஏற்படாத எதிர்வினை இதில் ஏற்பட்டது. பல பிரச்னைகளின் மீது எழுந்த அதிருப்தி, மாற்றம் வேண்டும் என்ற உணர்வு, நிர்பயா பிரச்னையில் வெடித்தது. பெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய தன்னெழுச்சி போராட்டங்கள் பரவலாகும்போது, அவற்றை ஆய்வு செய்து, ஒரு ‘முறை’ (pattern) இருக்கிறதா எனப் பார்க்க முடியும். ஒன்றிரண்டு மட்டுமே நடக்கும்போது, இத்தகைய ஆய்வும் எளிதல்ல.

அதிருப்திகளும், எதிர்ப்பும் ஒடுக்குமுறையால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. ஆளும் வர்க்கக் கருத்துக்களைத் தம் கருத்தாக மக்களை வரித்துக் கொள்ள வைப்பது; அதுதான் இயல்பானது என்ற உணர்வை உருவாக்குவது என்பது இதில் அடிப்படையான ஒன்று. ஆளும் வர்க்கத் தலைவர்கள் மக்களை ஈர்ப்பவர்களாகத் தோற்றமளிப்பது; அந்த மாயத் தோற்றத்துக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் பிரம்மாண்டமாக முட்டுக் கொடுப்பது; அரசு நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிப்பது; பிரச்சினைக்குக் காரணம் பிற மதங்கள் அல்லது சாதிகள் என்று மடை மாற்றி விடுவது; ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக, உடனடிக் கஷ்டங்கள் இருந்தாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது; அதற்குரிய முழக்கங்களைக் கவர்ச்சிகரமாக முன் வைப்பது (வறுமையே வெளியேறு/அனைவரின் வளர்ச்சிக்காகவும் அனைவருடனும் இணைந்த செயல்பாடு/ மோடி வந்தால் நல்ல காலம் வந்து விடும் / பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவும் /தூய்மை பாரதம்/டிஜிட்டல் இந்தியா) இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். எனவேதான், இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

”வர்க்க உணர்வு என்பது பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு மின் அதிர்ச்சியைப் போல் உணரப்படும். முதலாளித்துவ சங்கிலி பிணைத்து வைத்திருந்த இந்த சமூக, பொருளாதார நிலைமை சகித்துக் கொள்ள முடியாதது என்ற புரிதல் ஏற்படும். சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடக்கும்” என ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார்.   பரந்த அளவில் இந்த உணர்வு நிலை உருவாக தேதி குறிக்க முடியாது. ஓர் அமைப்பு அறைகூவல் கொடுத்து, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் சீரான ஒழுங்குடன் இதை எட்டி விட முடியாது. அதற்கான பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். மக்களின் உணர்வு மட்டம் கொதி நிலையை எட்டாத வரை,  புரட்சிகர தத்துவத்துடன் கூடிய அமைப்புகளாலோ, திறமையான  தலைமையினாலோ கூட வெடிப்பை ஏற்படுத்த முடியாது. அல்லது கொதி நிலையை எட்டும்போது, அவற்றைத் தலைமை தாங்கி வழி நடத்தும் திறன் ஸ்தாபனத்துக்கு இல்லை என்றாலும் அதனை வழி நடத்த முடியாது.

வெடிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் மட்ட போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் உருவாக்கிட மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்ததும் இந்தப் புரிந்துணர்வுடன்தான். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பதும் பிளீனத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கான தயார் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும்.

சலனங்களை அலைகளாக்குவோம்; அலைகளை ஆயுதமாக்குவோம்!

கொதிநிலை எட்டப்படுவதற்கான தயாரிப்புகளை கம்யூனிஸ்ட் அமைப்புகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சின்னச் சின்ன திட்டமிட்ட போராட்டங்கள்; சின்னச் சின்ன வெற்றிகள்; தன்னெழுச்சி பாய்ச்சலில் தலையீடு; பொருத்தமான முழக்கங்களை முன்வைத்தல்; உணர்வுகளைக் கடைந்து கொண்டே இருத்தல்; ஜனநாயக உணர்வூட்டுதல்; வர்க்க உணர்வு மட்டமாகவும், சோஷலிச உணர்வு மட்டமாகவும் அதை உயர்த்துதல் போன்றவற்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறு சலனங்கள் பெரும் அலைகளாக மாறும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிக்கான வாய்ப்புகளை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. மின்னல் வேகத்தில் கிரகித்து எதிர்வினை ஆற்றுகிற திறன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்துக்குத் தேவை. ஜனநாயக மத்தியத்துவம் உள்ளிட்ட மார்க்சிய – லெனினிய ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிற  கட்சி அமைப்பு இதற்கு அவசியம்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, இடதுசாரிகள் செய்யும் போராட்டங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்துக்கும் பலனே இல்லை என்று கூறிவிட முடியாது. சில சமயம் பலன்களை அளவீடு செய்ய முடியாது. ஊடகங்கள் இடதுசாரிகளை உதாசீனப்படுத்தினாலும், போராட்டங்களுக்கும், அரசியல், சித்தாந்த பிரச்சாரத்துக்கும்  தாக்கம் நிச்சயம் உண்டு. அது, மக்களைப் போராட்டத்தில் ஈடுபட உந்தித் தள்ளும். தன்னெழுச்சி இயக்கம், ஏற்கனவே சமைக்கப்பட்டு, உண்ண தயாராக வானத்திலிருந்து விழுகிற பொருள் அல்ல. பல்வேறு தள இயங்குதலின் சாரம். இந்த நிகழ்முறையில் புதிய இயக்கங்கள் உருவாகலாம்; புதிய சிந்தனைப் போக்குகள் மலரலாம்; புதிய செயல்பாட்டாளர்களும், போராட்ட வடிவங்களும் முன்னுக்கு வரலாம். கடந்த காலத்துடன் தொடர்பற்றதாக அல்ல;  ஏற்கனவே கடையப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு மட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இவை துளிர்க்கும்.

எகிப்தில் ஜனநாயகத்துக்காக நடந்த எழுச்சி, எங்கிருந்தோ துவங்கவில்லை. அதற்கு முன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பல்வேறு இயக்கங்கள், வேலை நிறுத்தங்கள், அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தில் உருவானதுதான். வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2008-லிருந்து சமூக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதை எதிர்த்து இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் நடத்திக் கொண்டே இருந்த போராட்டங்களில் முகிழ்த்ததுதான். ஒவ்வொன்றுக்கும் இப்படி நம்மால் போராட்டப் பின்னணியைக் கூற முடியும். இவற்றில் பெரும் திரளாகப் பங்கேற்றவர்களும் சுரண்டப்படும் வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களே.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, மத்திய – மாநில அரசுகள் மீதான விமர்சனம், விவசாய பிரச்சினை, வறட்சி போன்றவை முன்வைக்கப்பட்டன என்றால், கடந்த காலத்தில் இடதுசாரிகள் நடத்திய பிரச்சாரங்கள், போராட்டங்கள், முழக்கங்களின் பாதிப்பே இவற்றின் மீது இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, எல்லாம் நன்றாக நடக்கிறது என்று மனநிறைவு அடைந்து விடுவதற்காக அல்ல; இன்னும் திறனுடன் செய்ய வேண்டும் என்பதற்காக. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்; ஜனநாயகம் மறுக்கப்படுதலுக்கும் சரி, வாழ்வுரிமை மீதான தாக்குதலுக்கும் சரி, அதற்கான காரணங்கள் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே இருக்கின்றன என்பது புரியாமல் இருக்கலாம். இப்படியான பிரச்சினைகளுக்காக போராடும் இதர பகுதி உழைப்பாளிகளுடன் இணைந்த போராட்டத்தை நடத்துவது வீச்சை அதிகரிக்கும் என்ற புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் வீதிக்கு வர சூழல் நிர்ப்பந்திக்கிறது. அதனைப் பயன்படுத்தி, வர்க்க அரசியல் புரிதலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களும், வரலாறும் வெறும் கூட்டல் கழித்தல் அல்ல. மக்களின் மனநிலையை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானதாக மாற்ற வேண்டும் எனில், கம்யூனிஸ்ட் கட்சி தேவை; அதன் அரசியல் தேவை; திட்டமிடல் தேவை; அதனை நடைமுறைப்படுத்துகிற மார்க்சிய லெனினிய ஸ்தாபன அமைப்பு தேவை.

எனவே, கம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் அரசியலின்   தேவையை, தலையீட்டைத்தான் தன்னெழுச்சி இயக்கங்கள் அவசியப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பெரும் திரள் எழுச்சியாக நடக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இத்தலையீடும், இணைந்த பணிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.  இதை கம்யூனிஸ்டுகள் செய்ய தவறினால், ஒதுங்கி நின்றால் அல்லது எழுச்சியைப் பயன்படுத்தும் திறனும், வலுவும் போதுமான அளவு இல்லாதிருந்தால், இந்த அதிருப்தியும், எதிர்ப்பு உணர்வும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் அறுவடை செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்; அவை சாதிய, மதவாத மோதலாகவும் மடைமாற்றம் செய்யப்படும் அபாயமும் உள்ளது. உலக அளவில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் சரி, இந்திய அளவில் சாதிய அமைப்புகளும், சங் பரிவாரங்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் சரி, இதற்கான உதாரணங்களாகும்.

எனவே, ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் உருவான எழுச்சிகளிலிருந்து படிப்பினைகள் கற்று, சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நடக்கும் இத்தகைய எழுச்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன பணிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களே புரட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களைப் புரட்சிக்கான அரசியல் திசைவழியில் கொண்டு செல்லும் தயாரிப்பு பணியைக் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும்.

 

 

 

 

 

தமிழகத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம்

– இரா.சிசுபாலன்

மகத்தான நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற் றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சோசலிசப் புரட்சி இயக்கத்தில் புதிய கட்டம் துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், மகத்தான சீனப்புரட்சி, வியட்நாம், கியூபப்புரட்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப்புரட்சிகள் மகத்தான வெற்றி பெற நவம்பர் புரட்சியே ஆதர்ச மாய் விளங்கியது.

இந்திய விடுதலை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் நவம்பர் புரட்சி இந்தியப் புரட்சியாளர்கள் மீது புதிய வெளிச் சத்தைப் பாய்ச்சியது. அவர்கள் இந்திய விடுதலையை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமல்லா மல், அது சமூகப் பொருளாதார விடுதலையாக மட்டுமல்லாமல், அது சமூகப் பொருளாதார விடுதலையாகவும் அமையவேண்டும் என்ற புதிய கண்ணோட்டத்தைப் பெற்றனர். தமிழகத்தில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யப்புரட்சியை யுகப்புரட்சி என வரவேற்ற மகாகவி பாரதி, முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகிற்கொரு புதுமை எனப் பாடி னார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய கருத்து களைத் தமிழகத்தில் முதன்முதலில் விதைத்தவர் மகாகவியே ஆவார். மேலும், குடிமக்கள் சொன்ன படி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி என சோசலிசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா விலும் அத்தகைய இலட்சியம் ஈடேற வேண்டும் என்றார். சோசலிசம் என மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்குத் தெளி வாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனினும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி கவுரவமான வாழ்க்கை நடத்து வதற்கு ஒரே மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொது வுடைமையாக்கி, அதில் சகத் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்க மாகும் என 1925ம் ஆண்டு The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி குறிப் பிட்டார். நவம்பர் புரட்சியைப் பற்றி இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் பாரதியார் முதலில் பாடினார்.

சமரச சன்மார்க்கமே தேச விடுதலையின் சாராம்சம் எனக் குறிப்பிட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது பாரதீய மதத்தின் இலட்சியமாக எல்லோருக்கும் பொதுவான சமரச சன்மார்க்க விடுதலையையே பிரகடனப்படுத்தினார். ஆன்மீக விடுதலை என்பதே தேச விடுதலைதான் என அவர் விளக்கினார். தன் மீதான வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் அளித்த வாக்கு மூலங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. எப்பொழுது, எங்கே சுதந்தரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சி செய்யப் படுகிறதோ அப்பொழுது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன், எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும், சிரமப்பட்டு சுதந்தரம் ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலே அடிமைப்பட்டுக்கிடக்கும் சகல மக்களுக்கும் நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும் எனக் குறிப்பிட்டார்.

1919ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வ.உ.சி, ஆங்கி லேயரின் கொடுங்கோன்மை, பலாத்காரம், நீதி யின்மை ஆகியவையே அவர்களுக்கு எதிரான சதி வேலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்றார். 1920 ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசின் இருபத்தி ஆறாவது மாநில மாநாட்டில் வ.உ.சி இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் ஒன்று தொழிலா ளர் சங்கங்களைப் பற்றியது. காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தொழிற் சங்கங்களைத் துவக்க வேண்டுமெனவும், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமிக்க குடியிருப்பு வசதி, முழுமையான தடையற்ற சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் எனவும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. மேலும் சென்னை மாநில மேலவைக்குத் தொழிலாளர் களிடமிருந்து போதுமான பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டு மெனவும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.

1921ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். ஊமையராய் உள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கானவர்களின் நல்வாழ்வுக்கு தாங் கள் பாடுபடுவதால் நான் தங்களை ஆதரிக்கிறேன். துர்பாக்கிய நிலையிலுள்ள நமது மக்கள் தற்போ தைய அந்நிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நமது சொந்த மக்களின் எதிர்கால அதிகாரவர்க்கத்தை எதிர்த்தும் போராடி முறியடித்தால்தான் சுதந்தர மும், மகிழ்ச்சியும் கிட்டும். நிலமும், ஆலைகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு நாட்டில் தொழிலாளர் அனைவரின் நன்மைக்காகவும் பயன்படும் கம்யூனிசம் மட்டுமே நமது மக்களுக்கு விடுதலை கிட்டியதற்கான உண்மையான அளவு கோலாக இருக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1922ம் ஆண்டு கயாவில் நடை பெற்ற இந்திய தேசியக்காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர், உலகக் கம்யூனிஸ்டு களின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத் தினார். 1923ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நாட்டிலேயே முதன்முறையாக மே தினக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர் சுயராஜ்ஜியம் அமைய வேண்டும் என முழங் கினார். இக்கூட்டத்துக்கு வேலாயுதம் தலைமை தாங்கினார். தியாகி சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது; இந்திய தேசியக் காங்கிரஸ், நாடு என்பதை உடமை வார்க்கத்தின் உரிமையாகவே வரையறுக்கிறது. அவர்களது சுயராஜ்ய திட்டத்தில் தொழிலாளிகளும், ஏழை விவசாயிகளும் செல்வர்களின் நலனுக்குத் தன் னையே தியாகம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய ஐரோப்பிய எஜமானர்களுக்கு பதிலாக இந்திய அதிகார வர்க்கத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. முதலாளி களும், ஜமீன்தார்களும் காங்கிரசின் முதுகெலும் பாக உள்ளதால் தொழிலாளர்களுக்குக் காங் கிரஸ் ஒரு நன்மையும் செய்யாது. எனவே தொழி லாளர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய, வர்க்க உணர்வு கொண்ட அரசியல் கட்சி தேவைப்படுகிறது எனக் கட்சியின் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தியது. நாட்டின் அர சாட்சி முறை இந்துஸ்தான் பஞ்சாயத்து என்னும் கூட்டாட்சியாக இருக்கும். கிராம மட்டத்தி லிருந்து மத்திய அரசு மட்டம் வரை பஞ்சாயத் துக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய அரசின் மைய உறுப்பாக அனைத்துப் பஞ்சாயத்துகளின் காங்கிரஸ் அமைந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை மக்கள் திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை உண்டு என அப்பிரகடனம் மேலும் குறிப்பிட்டது.

இக்கட்சியின் பத்திரிகைகளாக லேபர் -கிசான் கெசட் என்ற ஆங்கில இதழும், தொழிலாளி என்ற தமிழ் இதழும் வெளிவந்தன. இவற்றின் மூலம் கொள்கைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாமேதை லெனின் மறைந்தபொழுது லேபர் – கிசான் கெசட் தனது அஞ்சலியில் பின்வரு மாறு குறிப்பிட்டது: அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் லெனின் அவர்கள் தமது சொந்த நாட்டின் செய்த மகத்தான புரட்சி ஒரு வேளை அழிக்கப்படலாம் அல்லது சில சுயநல மனிதர் களால் துடைத்தெறியப்படலாம். ஆனால் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு உலகை வெல்லும், உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

தமிழ்த்தென்றல் திரு.வி.க தேசபக்தன் (1917), நவசக்தி (1920) ஆகிய இதழ்களில் பொதுவு டைமைக் கருத்துகளை எழுதிவந்தார். முற்போக் காளராகத் திகழ்ந்த அவர், சன்மார்க்கமும், சமதர்மமும் கலக்க வேண்டும் என வலியுறுத் தினார். நவசக்தி-யின் இலட்சியங்களாகப் பின் வருவனவற்றைப் பட்டியலிட்டுள்ளார் (22.10.1920)

 1. மக்கள் சுதந்தரத்துக்கு அடிப்படையானது ஜனநாயக முறையாதலால் அதை நாடி உழைத்தல்.
 2. ஜனநாயக முறைக்கு அடிகோல வேண்டு வது தொழிலாளர் இயக்கமாதலால் அவ்வியக் கத்தை வளர்க்க முயலல்.
 3. தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த வும், அவர்களது குறைகளை நிவர்த்திக்கவும், அவர்கள் வழி ஆட்சி முறையைத் திருப்பவும், அவர்கட்கெனத் தனியாக உழைக்கவும் தொழிற் கட்சியை ஓம்பவும், விவசாயிகளின் கஷ்டங்களைப் போக்க முயலவும் தொழிற்சாலைகளைப் பெருக்குதல்
 4. பெண்கள் நலனுக்குப் பாடுபடுதல்.
 5. தமிழ் மொழியையும், தமிழ்நாட்டுப்பழைய பழக்க வழக்கங்களையும் செப்பஞ்செய்தல்.
 6. தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சாதியப்பகை, வகுப்பு துவேசம் முதலியவற்றை ஒழித்துச் சகோதர நேயத்தை வளர்த்தல்.
 7. தேசத்துக்குத் தீங்கிழைக்கும் கட்சிகளைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர்களை நேசித்துத் தேச வளர்ச்சியை நாடும் கட்சியில் அவர்களைத் திருப்பமுயலல்.
 8. இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்திய ராகக் கருதி, அவரை ஒரினமாக்கி, அவர் நலத்துக் காகத் தியாகம் செய்தல்.

சென்னை நகரில் ஆங்கிலேய முதலாளிக்குச் சொந்தமான பக்கிங்காம் கர்னாடிக் பஞ்சாலை யில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட அனுபவத்தைத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:

1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஜங்கார மாயம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர் தவர்ஷினி சபை சார்பில் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்து கூட்டத்தைச் சிறப்பித் தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர், மரங்களையும் நிரப்பினர்… யான் மேல் நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத் தையும் விளக்கிப்பேசினேன். தொழிலாளர்களிடையே புத்துணர்ச்சி தோன்றித்ததும்பி வழிந்தது.. அன்று போலீஸ் நடவடிக்கை வெறுக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு.வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும், யானும், வேறு சிலரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1943ம் ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தன்று சோவியத் யூனியனுக்கு திரு.வி.க வாழ்த்துச் செய்தி அனுப்பினார்:
கவிஞர்களும், தத்துவஞானிகளும் நீண்டகாலமாகச் சுதந்தரச் சூரியன் என்று பாடியும், பேசியும் வந்தனர். அச்சூரியன் தோன்றி ஏறக்குறைய கால் நூற்றாண்டாகிறது. அச்சூரியன் எது? அதுவே சோவியத் யூனியன். அந்த யூனியனிடத்தில் எனது உள்ளம் தவழ்ந்து ஏறக்குறைய இருபது ஆண்டு களாகின்றன. 1921ம் ஆண்டு சென்னைத் தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன்முதல் சோவியத் கதிராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கை களை என்னால் இயன்றவரை பரப்பி வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டு மென்று கனவு காண்பவருள் யானும் ஒருவன். அக்கனவு நினைவாய்ச் செயலாய் முகிழ்க்கும் காலம் அணித்தே நிற்றல் கண்டு மகிழ்வெய்து கிறேன். சோவியத் யூனியனை மூடப்பாசிச மேகங் கள் தவழ்கின்றன. அம்மேகங்கள் ஒழிந்ததும், உல கம் முழுவதும் சதந்தரச் சூரியனால் ஒளி காணும். அப்பொழுது உலகின் பீடைகள் போகும், கவன நீங்கும், எங்கும் பொதுமை தாணடவம் புரியும், அமைதி நிலவும். செஞ்சேனை வெற்றி உண்டாவ தாகுக என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

1932ம் ஆண்டு தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் பயணம் மேற்கொண்டார், அதன் விளைவாக சோசலிசக் கருத்துகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்து தமிழகத் தில் சோசலிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வாண்டு டிசம்பரில் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் சுயமரியாதை சமதர்மக்கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் திட்டம் ஈரோடு திட்டம் என்ற அழைக்கப்பட்டது.அத்திட்டத்தின்முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தி யாவைப் பூரண விடுதலை அடையச்செய்வது.
 2. எல்லா தேசக் கடன்களும் ரத்து.
  தொழிற்சாலை, ரயில்வே, வங்கிகள் தேசியமயம்.
  விவசாய நிலம், காடுகள்- மக்களின் உரிமை.
  விவசாயக் கடன் ரத்து.
 3. சுதேச சமஸ்தானங்களை ஒழித்து இந்தியா வைத் தொழிலாளர் விவசாயிகள் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
 4. ஏழு மணி நேர வேலை நாள் இத்திட்டத்தை விளக்கி தந்தைபெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் தமிழகம் முழுவ தும் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் மேற் கொண்டு வந்தனர்.

1935ம் ஆண்டு மாவீரன் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நுலை ஜீவா மொழிபெயர்க்க, அதனைக்குடியரசு இதழில் வெளியிட்டதால் ஜீவாவும், தந்தை பெரியாரின் சகோதரரும், விடுதலை இதழ் வெளியீட்டாளரு மான ஈ.வெ.கிருஷ்ணசாமியும், தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டனர். குடியரசு (1925), சம தர்மம் (1934), பகுத்தறிவு (1935), புரட்சி (1934) சுநஎடிடவ (1928), விடுதலை (1934), உண்மை (1970) ஆகிய இதழ்களை ஈ.வெ.ரா நடத்தி வந்தார். மக்களிடம் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்து வமும் ஓங்கிவளரவேண்டும் என்ற கருத்தை இவ்விதழ்களில் வெளியிட்டு வந்தார். லெனினும் மதமும், பொதுவுடைமைத் தத்துவங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

அறிமுகம்
1917 அக்டோபர் மாதத்தில் (அன்றைய ரஷ்ய காலண்டர்படி அக்டோபர் 24-25, நவீன கணக்குப்படி நவம்பர் 6-7 ) மகத்தான ரஷ்ய புரட்சி வெற்றிபெற்று போல்ஷ்விக்கட்சியின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இது மானுட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் மார்க்சும் எங்கல்சும் உருவாக் கிய சோசலிச இயக்கம், தொடர்ந்து தத்துவமாக வும் மக்கள் இயக்கமாகவும் பெரும் தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகு முழுவதும் ஏற்படுத்தியது. எனினும், மிகக் குறைந்த காலம் 1871 இல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பாரிஸ் கம்யூன் ஆட்சி நடத்தியது என்றாலும், ஒருநாட் டில், அதுவும் பெரிய நாட்டில் சோசலிச ஆட்சி அமைந்தது முதல் முறையாக நிகழ்ந்தது.

1917 ரஷ்யப் புரட்சியில் தான். தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சாதாரண விசயமல்ல. அதுவும், பின்தங்கிய ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தில் கடும் அடக்குமுறை களை நீண்ட நெடிய மக்கள் போராட்டங்கள் மூலம் தகர்த்து, இடையில் ஆட்சியை கைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தை வெளியேற்ற முனைந்த முதலாளித்துவ கட்சிகளின் சதிகளை முறியடித்து போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றது என்பது ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதை ஏகாதிபத்தியநாடுகளின் முதலாளித்துவ அரசு களும் ஆளும் முதலாளி வர்க்கமும் நன்கு உணர்ந் திருந்தன. அவர்களுக்கு கதிகலங்கியது.

முதலாளிகளே இல்லாமல் ஒருநாட்டை ஆள முடியுமா? உற்பத்தி எப்படி நடக்கும்? வளர்ச்சி என்னாவது? யார் முதலீடு செய்வார்கள்? என் றெல்லாம் கூறி காலம்காலமாக தங்கள் சுரண்டலை நியாயப்படுத்தி ஆண்டுவந்தனர் முதலாளி வர்க் கத்தினர். எனவே, இனி அந்த வர்க்கம் தேவை யில்லை, எல்லா உற்பத்தியையும் செய்துவரும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியையும் பொறுப் பெடுத்துச் செய்யும், முதலாளிகள் தேவையில்லை என்ற பிரகடனமாக அமைந்த அக்டோபர் புரட்சி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்ததில் வியப்பில்லை.

தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தவுடன் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஏகாதிபத் திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. 1918 ஜூன் மாதத்திலேயே பதினான்கு நாடுகள் தங்கள் துருப்புகளை ரஷ்யாவிற்குள் அனுப்பி, உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச ஆட்சிக்கு எதிரான போரைத் துவக் கின. ஆனால், பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மக்களின் பேராதரவுடன் தொழி லாளி வர்க்க செம்படை அவர்களை விரட்டி அடித்தது. புரட்சிகர ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டது. எனினும், ஏகாதிபத்தியம் தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை பலவடிவங்களில் தொடர்ந் தது. ரஷ்யா மீதும் 1923 இல் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவான பின்பு அதன் மீதும் மேலை நாடுகள் பொருளாதார பகிஷ்கரிப்பை நடை முறையாக்கினர். (இதையும் மீறி சில மேலை நாட்டுக் கம்பனிகள் சோவியத் ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் நடந்தது).

முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு, பின்னர் பல குடியரசுகள் இணைந்த சோசலிச சோவியத் ஒன்றியம், வாழ முடியும், வளர முடியும் என்று பல ஆண்டுகளின் அனு பவம் காட்டிய பின்பும் பல முதலாளித்துவ அறிவு ஜீவிகள், குறிப்பாக பொருளியல் அறிஞர்கள், முதலாளிகளும் சந்தை யும், லாபநோக்கும் இல்லா மல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்றும் ஒட்டுமொத்த பொருளா தார திட்டமிடுதல் என்பது இயலாத காரியம் என்றும் சொல்லி வந்தனர். ஆனால், 70 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த சோவியத் சோசலிசம் பொருளாதார நிர்மாணத்தில் படைத்த பெரும் சாதனைகளை மேலைநாட்டு அறிஞர்களே மறுப்பதற்கில்லை. இவை பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

புரட்சியின் நுழைவாயிலில் பின்தங்கியிருந்த ரஷ்யா
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யா, இதர வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்தது. எழுத்தறிவு விகிதம் 30 கூட இல்லை. அச்சமயம் அமெரிக்காவின் எழுத்தறிவு விகிதம் 95 , ஜப்பானது 9 . அமெரிக்காவில் சரா சரி ஆயுட்காலம் 1900 இல் 47.3 ஆண்டுகளாக இருந்தது. ரஷ்யாவில் 1896 இல் 32 ஆண்டு கள் தான். இது போலவே, தொழில்துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புரட்சி நிகழ்ந்த பொழுது ரஷ்யா மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பு நிலைமை இவ்வளவு மோசம் என்றால், அதனை தொடர்ந்து வந்தது முதல் உலக யுத்தம். பின்னர் வந்தது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் (1918-1921) எதிர்ப் புரட்சியாளர்களையும் ஏகாதி பத்திய துருப்புகளையும் எதிர்த்து புரட்சிகர அரசை காப்பாற்ற நடந்த உள்நாட்டுப்போர். இதன் பின்னர் யுத்தங்களின் விளைவுகளில் இருந்து நாட்டைமீட்க புதிய பொருளாதார கொள்கை கள் பின்பற்றப்பட்டன,
1924 ஜனவரியில் லெனின் மறைந்த பிறகு உட்கட்சி போராட்டங்கள் நிகழ்ந் தன. இவற்றின் இறுதியில் 1927 ஆம் ஆண்டு முடிவில் தான் ஸ்டா லின் தலைமையில் உறுதி யான கொள்கை நிலைப் பாடு அமைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1928ஆம் ஆண்டில் தான் அது ஏற்கெனவே 1913 ஆம் ஆண்டில் கொண்டிருந்த உற்பத்தி நிலையை எட்டியது. வேறு வகையில் சொல்வ தென்றால் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோவியத் ஒன்றிய அரசு ஐந்தாண்டு திட்டம் என்ற மாபெரும் – அது வரை வரலாற்றில் மேற் கொள்ளப் படாத புது முயற்சியை, பிரம்மாண்ட மான முயற்சியை துவக்கிய 1928 ஆம் ஆண்டில் மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் ஒன்றியம் மிகவும் பின் தங்கி இருந்தது.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் 1940 இல் தனது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் நிறை வடையும் முன்பே, அமெரிக்காவிற்கு அடுத்தபடி தொழில் வளர்ச்சி பெற்ற நாடு என உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எட்டியது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் இல்லையென்றால் சர்வநாசம் என்று கூறிவந்த பொருளியல் அறிஞர்களின், மேலைநாட்டு ஆளும் வர்க்கங்களின் கூற்றுகளை, சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சோஷலிச பொருளாதார வளர்ச்சி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.

திட்டமிட்ட சோஷலிச வளர்ச்சி
1917 முதல் 1927 வரை ஏராளமான சவால்களை அக்டோபர் புரட்சி எதிர்கொண்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதனால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை முறியடித்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தி நவீன நிர்மாணத்தை 1928 இல் துவக்கிய பொழுது எத்தகைய உலகை அது எதிர்கொண்டது? அதன் புரட்சிகர அணிகள் உள்நாட்டுப்போரில் ஏராளமான தோழர்களை இழந்திருந்தன. ரஷ்ய புரட்சியை தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருந்த ஐரோப் பிய நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெடிக்கும் என்ற போல்ஷ்விக் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் புரட்சி கள் வெடித்தன. ஆனால் அவற்றை ஆளும் வர்க் கங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முறியடித் தன. இனி நீண்ட காலம் தனித்து நின்று சோஷலிச நிர்மாணத்தை மேற்கொண்டாக வேண்டும் எனற நிலைமையை அது சந்தித்தது. ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல ராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. அண்டை ஜெர்மனியில், அதே போல் இத்தாலியில், எதிர்ப் புரட்சி சக்திகளின் வெற்றி பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஜனநாயக சக்திகளுக்கு சிக்கலான கால கட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ட்ராட்ஸ்கி போன்றவர்கள் தனி ஒரு நாட்டில் சோசலிசம் அமைப்பது சாத்தியமல்ல என்ற கருத்தை முன்வைத்த பொழுது தனித்து நின்றும் சோஷலிச நிர்மாணத்தை வெற்றிகர மாக சாதிப்போம் என்று ஸ்டாலின் தலைமை யிலான போல்ஷ்விக்கட்சி முடிவெடுத்தது. இதற் கான முக்கிய ஆயுதமாக, அன்று வரை மானுட வரலாற்றில் கண்டிராத, ஒட்டு மொத்த பொருளா தார திட்டமிடுதல் என்ற அற்புதமான யுக்தியை கடைப்பிடித்தது. திட்டமிடுதல் பற்றியும் ஒவ்வொரு சோவியத் ஐந்தாண்டு திட்டம் பற்றியும் இக்கட்டு ரையில் விளக்குவதும் விவாதிப்பதும் சாத்திய மல்ல. எனினும் அதுபற்றிய சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.

சோவியத் ஒன்றியத்தில் திட்டமிடுதல்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடு வது என்பது நிகழவில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த முடிவுகளை முதலாளிகள் எடுக்கின்றனர். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் பெரும் கம்பனிகள் தங்கள் முதலீடுகள் எந்தெந்த துறை களில் செய்யப்படவேண்டும் என்பது போன்ற முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள். ஆனால் இவை குறிப்பிட்ட கம்பனி சார்ந்த திட்டமிடுதல் தான். ஒட்டு மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது முதலாளித்துவ அமைப் பில் சாத்தியமல்ல. ஒட்டுமொத்த திட்டமிடு தலுக்கும் அதனை அமலாக்கவும் ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு வேண்டும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசுகூட அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இதற்கு மிக அடிப்படையான காரணம், உற்பத்திக்கருவிகள் முதலாளிகளிடம் உள்ளன என்பதும் அவற்றை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்த அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுமாகும். இந்தியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகளில் பொருளா தார திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாமே அரசு முன்வைக்கும் பரிந்துரைகள் தான். ஏனெனில், முதலாளித்வ நாடுகளில் வளங்களை திரட்டி அரசுத்துறை முதலீடுகளை மேற்கொள்ள அரசு முயற்சிக்கலாம். ஆனால் தனியார் துறை முதலாளி களின் முதலீட்டு முடிவுகளை அரசு நிர்ணயிக் கவோ ஆணையிடவோ முடியாது. அக்டோபர் புரட்சி தொழில் துறைகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது. எல்லா தொழில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர் களது முதலீடுகளின் அளவு, தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக முடிவு செய்யா மல் ஒட்டுமொத்த நாட்டு நலன் அடிப்படையில் துறைவாரியாக உற்பத்தி இலக்குகள் நிர்ணயித்து அவற்றை அடைய வழிமுறைகளையும் திட்ட மிட்டு அமலாக்குவது என்பது சாத்தியமாயிற்று. துவக்கத்தில், புரட்சி வெற்றி பெற்றவுடன் உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளும் ஏகாதிபத்திய நாடுகளும் புரட்சிக்கெதிராக போர் தொடுத்த நிலையில், நீண்ட தொலைநோக்குடன் திட்டமிட சாத்தியப்பாடு இல்லாமல் போனது. அரசின் அனைத்து பொருளாதார திட்டங்களும் கொள்கை களும் நடவடிக்கைகளும் எதிர்ப்புரட்சியாளர்கள் தொடுத்த போரில் அவர்களை தோற்கடிப்பதையே மையமாக கொண்டிருந்தன. இவ்வாறு 1918 முதல் 1921 வரையில் திட்டமிடுதல் என்பது போர் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது. போர் கால பொது உடைமை கட்டம் என்று இந்த மூன்று ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. துருப்புக ளுக்கு தேவையான உணவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து உறுதிப்படுத்துவது என்பது முக்கிய திட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல் போருக்கான தளவாடங் களை உற்பத்திசெய்வது போன்றவை முக்கியமாக இருந்தன. பின்னர் 1921 இல் போரின் பெரும் சேதங்களின் பின்புலத்தில் நாட்டின் மிகவும் பின்தங்கிய வளர்ச்சி நிலையை கணக்கில் கொண்டும், வேளாண் மற்றும் தொழில் மீட்சியை சாதிக்க வேண்டி இருந்தது. இதற்காக, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையிலான சோசலிச அரசு, தொழி லாளி – விவசாயி வர்க்கக் கூட்டணி யை வலுப் படுத்தும் தன்மையில் சில ஆண்டுகள் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரம்பிற்கு உட்பட்டு தனியார் துறையையும் சந்தைசார் உறவுகளையும் அனுமதித்தது.

லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அதன் பின்பும் இக் கொள்கை சிறிதுகாலம் தொடர்ந்தது. ஆனால், இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதனால் கிராமப்புறங்களில் முதலாளித்துவ சக்திகள் வலுப்பெற்று வந்தது சோஷலிச அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுக்கும் அபாயம் உணரப்பட்டது. இவை 1927 வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. ஓரளவு புரட்சி தன்னை நிலை நாட்டிக் கொண்டுவிட்டதால், நீண்ட கால நோக்குடன் மையப்பட்ட திட்டமிடுதலை நோக்கி செல்ல போல்ஷ்விக் கட்சியும் அரசும் முடி வெடுத்தன. சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டிய அடிப்படையிலும் நிலவிய பன்னாட்டு சூழலில் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை கணக்கில் கொண்டும் சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டு திட்டம் 1928 -1932 காலத்திற்கான துறைவாரி யான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது. அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் சோவியத் அரசு தீர்மானித்தது. 1928 முதல் 1985 தொடர்ந்து ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. இவை பல வெற்றிகளை சாதித்தன. காலப்போக்கில் பல காரணங்களால் திட்டங்களின் தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதில் நிறைகளும் குறைகளும் இருந்தன. இவை பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். சோஷலிச உடைமை உறவுகளின் கீழ் தான் முழு மையான ஒட்டுமொத்த திட்டமிடுதல் சாத்தியம். அத்தகைய திட்டமிடுதல் லாப நோக்கில் அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் உயர வேண்டும் என்பதே அதன் நீண்டகால இலக்காக இருக்க முடியும். சோசலி சம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விஷயம் அல்ல. அதற்கென. முழுமையான ஜனநாயகம், விரிவான மக்கள் பங்கேற்பு போன் றவை உள்ளிட்ட பல மாண்புகளும் விழுமியங்களும் உண்டு.

1928-1940: வியத்தகு வளர்ச்சி
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறை வடையும் முன்பே உலகில் இரண்டாம் தொழில் நாடானது சோவியத் ஒன்றியம் என்பதை குறிப் பிட்டோம். அதுவும், எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, பிற நாடுகளை சுரண்டாமல், தனது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் காத்து இந்த வளர்ச்சி சாதிக்கப் பட்டது. 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதில், குறிப்பாக, 1932 முதல் 1937 வரையிலான ஐந்தாண்டு காலத் தில் இரட்டிப்பானது. (1937 முதல் 1955 வரை யிலான காலத்தில் தொழில் உற்பத்தி மீண்டும் இரண்டரை மடங்கு அதிகரித்தது என்ற செய் தியை இங்கு பதிவு செய்யவேண்டும். ஏனென் றால், 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில் வளர்ச்சி பின்னர் இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளின் தாக்குதலில் பெருமளவு அழிந்துபோனது. அதி லிருந்து மீண்டு, இரண்டாம் உலகப் போர் முடிந்து பத்து ஆண்டுகளில், தீவிரமடைந்த ஏகா திபத்திய எதிர்ப்பையும் சந்தித்து இவ்வளர்ச்சி நிகழ்ந்தது என்பது திட்டமிட்ட சோஷலிச பொருளாதார அமைப்பின் மறுக்க முடியாத விளைவும் சாதனையும் ஆகும். )
நிகழ்ந்தது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல. புரட்சிக்கு முன் விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளிகளும் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலுக்கு இரையாக இருந்தனர். புரட்சி நிலப்பிரபுக்களின்ஆதிக்கத்தை அழித்தொழித் தது. எனினும் 1921 முதல் 1927 வரையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் காலத்தில் கிராமப் புற செல்வந்தர்களும் பணக்கார விவசாயிகளும் தங்களை ஓரளவு வலுப்படுத்திக் கொள்ள முடிந் தது. பின்னர் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சோஷலிச அமைப்பின் இலக்குகளுக்கு தடை யாக இப்பகுதியினர் மாறும் அபாயம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்கு வேளாண் துறையில் ஏற்பட வேண்டிய உற்பத்தி உறவு மாற்றங்கள் பற்றியும் போல்ஷ்விக் கட்சியில் நடந்த நீண்ட உட்கட்சி விவாதத்திற்குப்பின் கூட்டுப் பண்ணை கள் அமைக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அமலாக்கப்பட்ட முறை யில் சில தவறுகள் நிகழ்ந்த போதிலும், கூட்டுப் பண்ணைகளை அமைத்தது வேளாண் வளர்ச் சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறனை உயர்த்த உதவின என்றும் தான் ஆராய்ச் சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. கடுமையான இயற்கை பாதிப்புகளை தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1930 களில் சந்தித்த போதிலும் அவற்றை சமாளிக்க முடிந்தது. வேளாண் உற்பத்தியில் நவீன முறை களும் இயந்திரங்களும் திட்டமிட்டு அரசு உதவி யுடனும் மான்யங்களுடனும் 1930 களில் (அதன் பின்பும்) விரிவாக கொண்டு செல்லப்பட்டன. வேளாண் உற்பத்தி திறன் சோவியத் ஒன்றியத் தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடை யிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் சோஷலிச அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடப் படவேண்டும்.

கல்வியில், ஆரோக்கியத்தில், மக்களின் வாழ்க் கைத் தரத்தில், நுகர்வு அளவில், பொதுவான கணிசமான முன்னேற்றம் இக்காலத்தில் நிகழ்ந் தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் கல்வி பற்றிய ஓரிரு புள்ளி விவரங்களை மட்டும் இங்கு பார்ப்போம். 1917 இல் ரஷ்யாவில் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த மாணவர் எண்ணிக்கை 80 லட்சம். இது 1934 இல் 2 கோடியே 5 லட்சமாக அதிகரித் திருந்தது. 1926 இல் சோவியத் ஒன்றியத்தில் 9 முதல் 49 வயது என்ற வயது வரம்பில் இருந் தோரின் எழுத்தறிவு விகிதம் 56.6 . 1939 இல் இது 87.4 ஆக உயர்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத் தின் மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெகிஸ் தான் மற்றும் கஸக்ஸ்தான் நாடுகளில் எழுத்த றிவு விகிதங்கள் 1926 இல் முறையே 11.6 மற்றும் 25.2 என்று இருந்தன. 1939 இல் இவை 78.7 மற்றும் 83.6 என்று அதிகரித்திருந்தன. (1959 இல் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தறிவு விகிதம்: 98.5) முதலா ளித்துவம் செய்ய முடியாத காரியம் அனைவருக் கும் வேலை உத்தரவாதம் அரசியல் சாசனத்தில் (1936) பிரகடனமாயிற்று. வேலை யின்மை என்ற பெருங்கொடுமை – முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளின் பேராயுதம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. 1936 சோவியத் அரசியல் சாசனம் மறுபுறம், உழைப்பு சாரா வருமானங்களை வர்க்க சுரண்டலை – தடைசெய்தது. பெண்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவ தும் தாய் சேய் நல இல்லங்கள், நர்சரிகள், சிறார் பள்ளிகள் அமைக் கப்பட்டன.

இக்காலத்தில் (1928-1940) பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தயாராகும் பணி களை அரசு கவனிக்க வேண்டியிருந்த சூழலில் மக்களின் சராசரி நுகர்வு நான்கில் ஒரு பங்கு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே காலத்தில் உலக முதலாளித்துவ பொருளா தாரம் பெரும் மந்தத்தில் சிக்கியிருந்தது. சோவியத் சோசலிசத்தில் அனைவருக்கும் வேலை, தொடர்ந்து அதிகரித்து வந்த வாழ்க்கை தரம் என்ற நிலைமை சோசலிசத்தின் மேன்மையை பிரகடனப் படுத்தியது. கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. தவறுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் எதிரிகளின் தாக்கு தலால் ஒரு முற்றுகை மனப்பான்மையுடன் செயல்படும் பலவீனம் இருந்தது. இதனால் பாட்டாளி வர்க்க ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டன. எனினும், ஓரளவிற்கு, திட்டமிட்ட முறையில் , ஒட்டு மொத்த சமூக பங்கேற்புடன் சவால்கள் வெற்றிகரமாக எதிர் கொள்ளப்பட்டன. இலக்கு மறவாமல் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை சாதித்ததனால் தான் நாஜி படை களின் தாக்குதலையும் சோவியத் ஒன்றியத்தால் முறியடிக்க முடிந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பனிப் போர் காலம் 1940களின் பத்து ஆண்டுகள் இரண் டாம் உலகப்போர் மற்றும் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகளில் கழிந்தது. இப்போரில் நாஜி படைகளை முறியடித்து உலகில் ஜனநாயகத்தை காப்பதில் பெரும் பங்காற்றிய சோவியத் சோசலி சம் கடும் இழப்புகளையும் சந்தித்தது. 250 லட்சம் மக்களின் இன்னுயிர்களை ஈந்தது மட்டுமின்றி, நாஜி தாக்குதலில் தனது தொழில் கூடங்களில் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டதையும், நகரங்களில் பெரும்பாலானவை தரை மட்டமாக் கப் பட்டதையும் சோஷலிச சோவியத் ஒன்றியம் எதிர் கொண்டது.

பாசிசத்தை வீழ்த்தி களைப்பாறும் முன்பே மிகப் பெரிய புதிய தலைவலி பனிப்போர் வடிவில் வந்தது. இரண்டாம் உலகப் போர்காலத்தில் வேறு வழியின்றி மேலை ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடன் ஒத்துழைக்க நேர்ந்தது. பல ஆண்டு கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி அரசை வளர்த்து விட்ட மேலைநாடுகள் இரண்டாம் உலகப்போரில் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் போர் முடிந்தபின் சோவியத் ஒன்றியம் தான் முதல் பெரும் எதிரி என்ற நிலைபாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவு படுத்தியது. அணுகுண்டை உருவாக்கி அதை ஜப்பான் மீது இருமுறை அமெரிக்கா ஏவியது என்பது சோவியத் செம்படைகள் பசிபிக் பகுதியில் நுழைவதை தடுக்கவும் முதலாளித்துவ உலகின் காவல்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளவும் அமெரிக் காவிற்குப் பயன்பட்டது. ஆகவே மீண்டும் ஒரு கடும் சவாலை சோவியத் சோசலிசம் எதிர்கொண்டது. 1928 -1940 காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத தொழில் வளர்ச்சியில் பெரும்பகுதி இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் ஒரு நெடிய வளர்ச்சிப் பயணத்தை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்பயணத்தை ஏகாதிபத்தியத்தின் கூர்மையான, இடைவிடாத தாக்குதல்கள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சவாலை யும் சோஷலிச சோவியத் ஒன்றியம் வெற்றி கரமாக சந்தித்தது. இதனை அடுத்தும் 1970களின் இறுதிவரையும் அதன்பின் சில ஆண்டுகளும் சோவியத் வளர்ச்சி தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன்பு 1937 இல் இருந்த நிலையை 100 என்று வைத்துக் கொண்டால், தலா தனி நபர் நுகர்வின் அளவு 1944 இல் 66 என சரிந்திருந்தது. ஆனால் 1950 இலேயே இது 135 ஆக உயர்ந்தது. 1955 இல் 159 என அதிகரித்தது. இது மிக வேகமான மீட்சி யாகும். 1950 இல் துவங்கி ஒரு மாபெரும் வீடு கட்டும் திட்டம் அமலுக்கு வந்தது. 1946-50 காலத் தில் மக்களின் வாழ்விடப் பரப்பளவு 12.71 கோடி சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. இது 1961-66 இல் 39.44 கோடியாக உயர்ந்தது. சோவியத் மக் களின் உணவு பாரம்பர்ய ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மையப்பட்டிருந்த நிலைமாறி , இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் என்றாகியது. 1965 இல் ஆண்டுக்கு 38 கிலோ என்றிருந்த தலா இறைச்சி நுகர்வு 1985 இல் 61.7 ஆக அதிகரித்தது. இதே கால இடை வெளியில் நூறு குடும்பங்களில் ரெப்ரிஜி ரேட்டர் வைத்திருந்தவை பதினொன்று மட்டுமே என்ற நிலையில் இருந்து தொன்னூற்று ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்தது. 1965 இல் 100 குடும் பங்களில் 24 மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருந்தன.1985 இல் இது 97 ஆகியது. தொலை பேசிகளின் எண்ணிக்கை இதே காலத் தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒட்டுமொத்த தேச வருமான வளர்ச்சி வேகம் எழுபதுகளின் பிற்பகுதியில் குறையத் துவங்கியது என்றாலும் பல துறைகளில் முன்னேற்றம் தொடர்ந் தது. மின்உற்பத்தி ஐம்பது சதம் அதிகரித்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்தது.

பொதுவாக கூறுவதானால், ஆயிரத்து தொள்ளா யிரத்து இருபதுகளின் பிற்பகுதியில் தான் சோஷ லிச நிர்மாணப்பணிகளை வேகப் படுத்த முடிந் தது. அதன் பின்பு ஏகாதிபத்தியமும் பாசிசமும் தொடுத்த தொடர் தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொண்டே மறுபுறம் மகத்தான பொருளா தார வளர்ச்சியையும் சோவியத் சோசலிசம் சாதித்தது என்றால், இதன் மையப்புள்ளி சோஷ லிச உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைய திட்ட அணுகுமுறை யும் என்பதை பதிவு செய்ய வேண்டும். பனிப் போர் காலத்திலும் சோஷலிச அமைப்பின் சாதனைகள் தொடர்ந்தன. சோஷலிச அரசியல் நிலைபாடு இதில் முக்கியத்வம் வாய்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் முக்கியமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்ன? ஒரு திட்டமிட்ட, உற்பத்திக்கருவிகளின் பொது உடைமை அடிப்படையிலான பொருளாதார அமைப்பு இன்று அனைத்து உழைக்கும் மக்களும் விரும்பும் விஷயங்களை தர இயலும் என்பதை காட்டுகிறது. எல்லோருக்கும் வேலை, உத்தரவாதப்படுத்தப் பட்ட ஒய்வு ஊதியம், வரம்புக்கு உட்பட்ட பணி நேரம், போதுமான காலத்திற்கு ஊதியத்துட னான மகப்பேறு விடுப்பு , குறைந்த செலவில் மகிழ்வான சுற்றுலா விடுமுறைகள், உயர்கல்வி உட்பட இலவசமானதும் தரமானதுமான கல்வி, இலவச உடல், மன நல வசதிகள் மற்றும் சிகிச்சைகள், மிகக்குறைந்த செலவில் வீட்டு வசதி, மிகக் குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து வசதிகள் , தரமான தாய்-சேய்நல ஏற்பாடுகள் என்றுஅவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சோவியத் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களும் குறைவு என்பதும் குறிப்பிடப்பட வேண் டும். சுருங்கச்சொன்னால், இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சீரழிவில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்த் தால், சோவியத் சோசலிசத்தின் சாதனைகளின் பிரம்மாண்டம் ஓரளவு புலப்படும்.

சோஷலிச பொருளாதார வளர்ச்சி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல உதவியது. அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை சாத்தியமாக்கியது. விண்வெளி, ஆற்றல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் சோசலிச சோவியத் ஒன்றியம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டி யுள்ளது. இது பற்றி தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பிரச்னைகள்
எனினும் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து குன்றியது. இது நிகழ்ந்ததற்கு சோவியத் அமைப்பில் திட்டமிடலில் ஏற்பட்ட பலவீனங் கள் ஒருபங்கு வகித்தன. இதன் பின்புலத்தில் திருத்தல்வாதம் உள்ளிட்ட அரசியல் திரிபு களுக்கு பொறுப்பு உண்டு. மறுபுறம், ஏகாதிபத் தியம் எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து ஏற் பட்ட தனது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள சோஷலிச நாடுகளின் மீதான குறிப் பாக சோவியத் ஒன்றியத்தின் மீதான – தாக்கு தலை தீவிரப் படுத்தியது. 1980 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு கடுமையான ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்தது. ஆயிரத்து தொள்ளா யிரத்து எழுபதுகளில் சில பதட்டக்குறைப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்தன. இதில் கேந்திர ஆயுதங்கள் கட்டுப்பாடு ஒப்பந்தம் 1 மற்றும் 2 என இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக் காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1980 இல் நுழையும் தருணத்தில் ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் பதட்டக் குறைப்பு பாதையை நிராகரித்தது. மிக சக்தி வாய்ந்த பெர்ஷிங், க்ரூயிஸ் ஏவுகணைகளை அமெரிக்கா உற்பத்தி செய்து களத்தில் இறக் கியது. அடுத்து, கேந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற பொய் யான பெயரில், விண்வெளிக்கும் யுத்த முஸ்தீபு களை விரிவாக்கியது. இந்த நடவடிக்கைக்கு சரியான நட்சத்திர யுத்தம் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. இந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தில் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் மக்களின் உழைப்பால் உருவான வளங்களில் ஒரு கணிசமான பகுதி ஏகாதிபத்தி யம் திணித்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சென்றது.இதனால், மக்கள் தேவைகளை குறிப் பாக நுகர்வு தேவைகளை நிறைவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் தகர்க்கப்படும் வரை கூட சோஷலிச திட்டமிட லால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ நிர்ப்பந்தங்கள் சோவியத் பொருளா தாரத்தை கடுமையாக பாதித்தன. இது மட்டு மல்ல. மேலை நாடுகள் வசம் இருந்த நவீன தொழில் நுட்பங்களை சோவியத் ஒன்றியம் பெறு வதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. இரட்டைப்பயன்பாடு தொழில்நுட் பங்கள் அதாவது, ராணுவம் சாரா பயன்பாடு ராணுவ பயன்பாடு இரண்டையும் ஒருங்கே கொண்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டன. இதற்கான வணிகத்தடை ஏற்பாடுகள் கறாராக அமலாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில் நுட்ப வளர்ச் சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. மேலும், இத்தகைய பதட்டமான பன்னாட்டுச் சூழலில் தனது கேந்திரமான மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவசிய பொருட்களுக்கு இறக்கும தியை சார்ந்திருப்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதக மாகிவிடும், தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு இவற்றை அதிக செலவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டது.

மேலும், 1970 களில் பல ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை போராட்டங்களுக்குஆதரவு அளிப்பது, பல வளரும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் இதர உதவிகள் அளிப்பது, எழுபதுகளின் இறுதி யிலும் எண்பதுகளின் பல ஆண்டுகளிலும் ஆப் கன் புரட்சிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை களை எடுக்கவேண்டிய கட்டாயம் என்று பல சர்வதேச கடமைகளை சோவியத் ஒன்றியம் நிறைவேற்ற முனைந்தது. ஆப்கானிஸ்தானிலும், ஆப்பிரிக்காவிலும் இதர வளரும் நாடுகளிலும் சோவியத் சோசலிஸ ஒன்றியம் ஆற்றிய மகத் தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி அதன் சர்வ தேசக் கடமையின் பகுதி என்றாலும், அதுவும் பொருளாதார ரீதியாக கூடுதல் சுமைகளை சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியது.

இப்படி ஏகாதிபத்திய தாக்குதல்கள், நெருக் கடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் பெரும் பலவீனம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மறைவிற்குப்பின்பே, 1956 இல் நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாட்டில் வெளிப்பட்ட திருத் தல்வாத அணுகுமுறை சோவியத் கட்சிக்குள் படிப்படியாக வலுப்பெற்று வந்தது. ஏகாதிபத் தியம் பற்றியும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணிக்கும் சகாப்தத்தின் தன்மை பற்றியும், இக்காலத்தில் பாட்டாளி வர்க்க தலைமையின், ஆட்சியின் அவசியம் பற்றியும் ஒரு சரியான நிலைபாட்டை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கத் தவறியது. சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதானப் பாதையில் சோசலிசத்தை நோக்கிப் பயணம் என்ற திருத்தல்வாத மும்மூர்த்திகளை சோவியத்கட்சி அங்கீகரித்தது. சமாதான சக வாழ்வின் அவசியத்தை நாம் மறுதலிக்க முடியாது என்றாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இருந்து தான், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் தான் அப் பிரச்சினை யைப் பார்க்க வேண்டியுள்ளது. சமாதான பொருளாதார போட்டியின் அடிப்படையில் சோசலிசம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்ற புரிதலும் பொருத்தமல்ல. ராணுவ தாக்கு தல்கள், நெருக்கடிகள், போர், வர்த்தக மற்றும் தொழில் நுட்ப தடைகள் உள்ளிட்டு எல்லா ஆயுதங்களையும் அது பயன்படுத்தும் என்பதே அக்டோபர் புரட்சியின் துவக்கத்தில் இருந்து நமது அனுபவம். அக்டோபர் புரட்சிக்குப் பின் உள்நாட்டில் எதிரி வர்க்கங்கள் பெருமளவு பலவீனப் படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண் பதுகளின் துவக்கத்தில் முதலாளித்துவ உலகில் உருவான பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கப் பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்திற்குள் நிதி மூலதனம் ஊடுருவ பல வாய்ப்புகள் உருவாகின. வரலாற்று ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பெரும் முன்னேற்றத்தை சாதிப்பதற்கு திட்டமிட்ட சோஷலிச உறவுகள் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதை உதவியது. ஆனாலும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பன்னாட்டு சந்தைகள், பன்னாட்டு நிதித்துறை, பன்னாட்டு ஊடகதுறை ஆகிய அனைத்திலும் ஏகாதிபத் தியத்தின் ஆதிக்கம் நிலவி வந்த சூழலில், மேலை நாடுகளுடன் வர்த்தக, தொழில்நுட்ப, மற்றும் நிதிசார் உறவுகளை தவிர்க்கும் நிலையில் எண்ப துகளில் கூட சோவியத் ஒன்றியம் இல்லை. இத்தகைய வர்த்தக மற்றும் நிதி மூலதன போக்குவரத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு களை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திக் கொடுத் தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய திருத்தல்வாதப் பார்வை இந்த அபாயத்தை முழு மையாக உணர்ந்து எதிர்கொள்ள உதவவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதி யில் சோஷலிச கொள்கைகள கோர்பச்சாவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக கைவிட்டது என்பது சோசலிசப் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிறைவாக…
மானுட வரலாற்றில் ஒரு சமூகம் உணர்வு பூர்வமாக அறிவியல் அணுகுமுறையை ஏற்று பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு சாதிக்க முனைந்தது சோவியத் புரட்சியில் தான் முதல் முதலாக நிகழ்ந்துள்ளது. வரலாற்றியல் பொருள் முதல் பார்வையில் இருந்து நோக்கினால், இந்த மகத்தான முயற்சி சாதகமான, பொருத்தமான சூழலில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியில் பெரிதும் பின்தங் கியிருந்த ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்கூட அப்புரட்சி என்றும் அழியாத சாதனைகளை செய்துள்ளது. சோவியத்புரட்சி யும் அதன் சோஷலிச நிர்மாணத்தில் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் உன்னதமான பொது உடைமை சமூகம் என்ற மானுடத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்ப அடிகள். மார்க்சும் எங்கல்சும் எதிர்பார்த்தபடி ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் அனுபவமிக்க, முன்னேறிய தொழிலாளிவர்க்க தலைமையில் புரட்சி நடந்திருந்தால் அது எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களை விட பல நூறு மடங்கு கூடுதல் சவால்களை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான அக்டோபர் புரட்சி எதிர் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பன மாக, தேச விடுதலை இயக்கங்களின் உற்ற நண் பனாக, உலக அமைதியின் பாதுகாவலனாக, உழைப்பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய சோவியத் சோஷலிச அனுபவத்தின் ஆகப்பெரிய பங்கு, ஒரு நவீன பொருளாதார அமைப்பை உருவாக்கவும் வளர்க்கவும் ஒரு முதலாளி வர்க்கம் தேவையில்லை என்பதும், உழைப்பாளி மக்களே கூட்டுத் தலைமையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்பதுமாகும். வேலையின்மை, வறுமை, கல்லாமை, ஆரோக் கியமின்மை உள்ளிட்ட பல முதலாளித்துவக் கேடுகளை அழித்தொழித்த, சுரண்டல் அற்ற உலகத்தை நோக்கி பயணிக்க முனைந்த சோஷலிச அமைப்பின் முதல் அனுபவமான அகோட்பர் புரட்சியை என்றென்றும் நினைவில் நிறுத்து வோம். அதன் மிக முக்கிய படிப்பினை மானுடத் தின் எதிர்காலம் சோசலிசத்தை நோக்கிப் பயணிப் பதில் தான் மேம்படும் என்பதே. சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.