சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்

ஸ்டீஃபன் கோவன்ஸ்

சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்

முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.

பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.

சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.

1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.

முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.

இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது.  அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.

மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.

நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. 

நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.

1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.

தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.

உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).

மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).

சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.

பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக,   தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).

சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது.  இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).

1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984).  மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).

60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.

சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்,  கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).

1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.

உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே.  அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.

சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).

பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).

சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.

சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும்  தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.

தமிழில்: சோபனா

சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !

 • இரா. சிந்தன்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை விரட்டத் தொடங்குகிறது.

ஓட்டுனர் இல்லாமலே இயங்கும் ஒரு பேருந்து நிறுவனத்தின் அறிமுக பின்னணியில்தான் இந்த பிரச்சனை நடக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் பேருந்து நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?. அந்த பெண்ணுக்கு பிரச்சனை கொடுக்கும் உலக நிறுவனம் எது?. உலகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து எப்படிப்பட்டது? என்று படம் வேகமாக நகர்கிறது.

நெதர்லாந்து நாட்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதையில், சீனாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சில உயர் தொழில்நுட்பங்களை, ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தும்போது, அதனால் அந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆபத்து வரும் என்பதாக சித்தரித்திருந்தார்கள்.

அமெரிக்க ஊடகங்களில், இது போன்ற கதைகள் வெளியாவது நமக்கு புதிதில்லை. கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யாவினை எதிரியாக சித்தரித்து, ஏராளமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்க உளவு, ராணுவ அதிகாரிகள் அந்த அபாயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுவார்கள். இப்போது அந்த பிரச்சாரம் சீனாவை மையப்படுத்துகிறது.

பண்பாட்டு மேலாதிக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, உலக ஊடகங்களின் மீது உள்ள பிடி சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட உலகின் 75% தொலைக்காட்சிகளை அமெரிக்க பெருமுதலாளிகளே சொந்தமாக வைத்துள்ளனர். உலகம் தழுவிய செய்தி ஏஜென்சி நிறுவனங்களில் அறுதிப் பெரும்பான்மை அமெரிக்காசார்பானவை. இணைய ஊடகங்களான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப்) ,கூகிள் (ஜி மெயில், கூகிள் தேடுபொறி மற்றும் ஆன்ட்ராய்ட்) டுவிட்டர், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பெரும்பான்மை அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள். உலகின் பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. இவை தவிர, உலகம் முழுவதுமே கல்வி நிறுவனங்களிலும், பிற அரசு சாரா நிறுவனங்கள், கலை இலக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தாக்கம் கூடுதலாகவே உள்ளது. இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்க உதவுகின்றன.

முதலில் குறிப்பிட்ட திரைப்படத்தின் கதையில், சீனாவில் தயாரிக்கப்படும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்துகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் இயந்திரங்களின் நுட்பங்களும், அதிவேக இணைய வசதிகளையும் ஆபத்தானதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு தொழில்நுட்பத்திலும், போதுமான கட்டுப்பாடுகள், சட்டப்பாதுகாப்புகள் இல்லாது, லாபவெறியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வழிநடத்தப்பட்டால், அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கு கவலை உண்டா? அமெரிக்காவின் கவலை அதுவல்ல.

தொழில்நுட்ப மேலாதிக்கம்

சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் காப்புரிமை பதிவுகளில் 80 சதவீதமானவை அமெரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இப்போதும் அறிவுசார் காப்புரிமங்களை ஏற்றுமதி செய்து அதற்கான கட்டணத்தொகை (ராயல்ட்டி) மூலம்  பொருளீட்டும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. (ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்கள்).

உலகம் முழுவதும் நடக்கும் இந்த வர்த்தகத்தில் அமெரிக்காவின் வசம் 45% உள்ளது. 24% வர்த்தகத்துடன் ஐரோப்பா இரண்டாவது இடத்திலும், 14% ஏற்றுமதி மேற்கொள்ளும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும்  உள்ளது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்கு கண்டறியப்பட்ட தடுப்பூசிகளிலேயே அதி நவீனமானவை, அமெரிக்க கண்டுபிடிப்புகளே. ஆனால் அந்த தொழில்நுட்பங்களை உலக நன்மைக்காக பயன்படுத்தவோ, குறிப்பிட்ட காலத்திற்கு அதன் உரிமக் கட்டணங்களை விட்டுக் கொடுக்கவோ அமெரிக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. அமெரிக்க அரசாங்கமும் தனியார் பண முதலைகளின் நலன் காத்து நின்றது. ஏகாதிபத்தியம், தொழில்நுட்பத்தின் மீது செலுத்தக்கூடிய மேலாதிக்கத்தினால் ஏற்படும் கெடு விளைவுக்கு கொரோனா தடுப்பூசிகள் மிகச் சிறந்த உதாரணமாக ஆகிப்போயின. இன்றுவரை உலக நாடுகளால் கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து மீள முடியவில்லை.

வரலாற்றில், அமெரிக்கா கொண்டிருக்கும் தொழில்நுட்ப மேலாதிக்கம், வளரும் நாடுகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நம் இந்தியாவும் அதில் விதி விலக்கல்ல. கடந்த காலங்களில், அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பெற முடியாத நிலையில் இந்தியாவினை தடுத்தது அமெரிக்கா. இப்போதும் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவால் பெற முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் இருந்தே நிலக்கரி மின் உற்பத்தி, அணு உலைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மறுக்கப்பட்டுள்ளன. அல்லது அதீத விலையில் தலையில் கட்டப்பட்டுள்ளன.

சீனாவின் எதிர்வினை

உலகத்தின் தொழிற்சாலையாக பரிணமித்திருக்கும் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் அதற்கான செலவாக ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு சீனா மேற்கொள்கிறது. எனவே, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு, சொந்த நாட்டு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து முன்னுக்கு வந்தது. தனது ஐந்தாண்டு திட்டங்களில் இதற்காக சிறப்பு கவனத்தை குவிக்கத் தொடங்கியது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தனர். இப்போது உலகத்திலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் செலவிடும் நாடாக சீனா உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.44 சதவீதம் தொகையை (ரூ.28 லட்சம் கோடிகள் வரை) இதற்காகச் செலவு செய்கின்றனர்.

இதற்கான ஒரு உதாரணமாக, சீனா தனது ஆராய்ச்சியில் உருவாக்கிய பெய்டோ என்ற வழிகாட்டி/வரைபட தொழில்நுட்பத்தை சொல்லலாம். 1994 ஆம் ஆண்டில்தான் சீனா இதற்கான தனது செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. பல ஆண்டுகள் தொடர்முயற்சியில் இப்போது பெய்டோ தொழில்நுட்பம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ் உட்பட அனைத்து வசதிகளிலும் மேம்பட்டதாக, அதி நவீன வசதிகளை உள்ளடக்கியதாக, குறைந்த செலவு பிடிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் உலகச்சந்தையில் 25 சதவீதத்தை விரைவில் பிடிக்கும் என்றும். 3 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்றும் சீன வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய தொழில்நுட்ப மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக, சீனாவின் கால்களை பிடித்து இழுக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. எனவேதான் தொழில்நுட்ப துறையில் பல தடைகளும், தடுப்புகளும் அமெரிக்காவால் சீனாவிற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் ஊடகங்களில் பலவாறாகவும் இடம்பிடிக்கின்றன. அதன் விபரங்களை இந்தக் கட்டுரையில் இறுதியில் பார்ப்போம்.

ஒரு துருவ உலகம்

முதலில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வராத ஆத்திரம், சீனாவின் மீது வருவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் இப்போதைய கட்டத்தை நவ தாராள உலகமயம் என்கிறோம். இந்த காலகட்டத்தில் நிதி மூலதனம் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. அதாவது, நிதியாக சேகரமான மூலதனம் எந்தவித உற்பத்தி நடவடிக்கைகளிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், உலகத்தின் எந்த நாடுகளுக்குள்ளும், எந்த உற்பத்தியிலும், வணிகத்திலும் தங்கு தடையில்லாமல் நுழையவும், வெளியேறவும் முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இறையாண்மையை தாக்கவும், பலவீனப்படுத்தவும் அதனால் முடிகிறது. யூக அடிப்படையில் லாபம் ஈட்டும் அதன் தன்மையின் காரணமாக பொருளாதார குமிழிகள் உருவாகின்றன. அவை, புதிய புதிய பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. தங்குதடையில்லாத நிதி மூலதனத்திற்கு ஏற்ற அரசியலை வடிவமைப்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணியாகும்.

“காலனி ஆதிக்கத்திற்கு பின் நாம் கண்டுவரும் இந்த நியாயமில்லாத உலக நடைமுறையை நிலைநிறுத்திட சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்றவை கருவிகளாக பயன்படுகின்றன. ஊக நிதிமூலதனத்தின் இந்த ஆதிக்கம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியை மந்தப்படுத்தியுள்ளது”, இதன் காரணமாக “வளர்ச்சியடைந்த, பணக்கார முதலாளித்துவ நாடுகள் ஒருபுறம், பெரும்பகுதி மக்கள் வாழும் மூன்றாம் உலக நாடுகள் மறுபுறம் என்று, ஏகாதிபத்திய நடைமுறை உலகையே இரு கூறாகப் பிரித்துள்ளது.” என நம் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

மேலும், இந்த காலகட்டத்தின் மையமான சமூக முரண்பாட்டினை, “சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்கிறோம். இந்த முரண்பாடு குறித்து 23வது கட்சி காங்கிரஸ்  விவாதித்தது. சீனா – அமெரிக்கா இடையிலான மோதல் வளர்வதையும், கியூபா, வடகொரியா மீதான நெருக்கடிகள் அதிகரித்திருப்பதையும் சுட்டியுள்ளது. ஆம். இதுதான் சீனாவின் மீது அமெரிக்காவின் பாய்ச்சலுக்கான காரணம் ஆகும்.

சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன.

சீன அறிஞர்கள் சென்என்பு மற்றும் லுபாலின் ஆகியோர் இதனை ஒரு ஆய்வின் விபரங்களைக் கொண்டு கீழ்க்காணும் விதத்தில் தெளிவுபடுத்துகின்றனர்.

“நாம் சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை எடுத்துக்கொள்வோம். சீனாவின் நிலத்தையும், சூழலியல் வளங்களையும், மலிவான உழைப்பையும் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்காக, அதற்கு ஈடான உற்பத்தி எதையும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. டாலர்  நோட்டுக்களை அச்சடித்தால் மட்டுமே போதுமானது”

அந்த நோட்டுக்களை வைத்தும் கூட சீனாவால் உண்மையான சொத்துக்களை வாங்க முடியாது. அமெரிக்க கருவூலத்தின் பத்திரங்களையோ அல்லது வேறு சில நிதிசார் நடவடிக்கைகளையோதான் சீனா மேற்கொள்ள முடியும். அவர்கள் குறிப்பிடும் ஆய்வு ஒன்று, அமெரிக்கா தனது மேலாதிக்கதினால் பெறக்கூடிய லாபத்தை கணக்கிட்டு நமக்கு தருகிறது. அதன்படி அமெரிக்கா தனது மேலாதிக்கத்தின் வழியாக அடையக் கூடிய லாபம் (hegemonic dividends), 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் சற்று கூடுதலாகும். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக அமெரிக்கா ரூ.16 லட்சம் கோடிகளை பெறுகிறது. இப்போது இந்த தொகை இன்னும் கூடுதலாக இருக்கலாம். ‘சீனாவின் உழைப்பாளர்களின் உழைப்பில் 60 சதவீதம், சர்வதேச ஏகபோக முதலாளிகளுக்கு இலவசமாக தரப்பட்டுள்ளது’. ஆய்வின் விபரங்கள் அதிர்ச்சியாகத்தான் உள்ளன.

இந்தப் ‘பலன்களை ’இழப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. சோவியத் ஒன்றியத்தின் தகர்விற்குப் பின், இனி ஒரு புதிய போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி காட்டியது.

சீன – அமெரிக்க உறவு

      “சீனாவுடனான உறவினை புதுப்பிக்கிற அதே சமயத்தில், சோசலிசத்தை கைவிடும்படி நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். சீனத்தின் கொள்கைகளை மென்மையாக்குவதற்கு இந்த உறவினை பயன்படுத்த வேண்டும். இந்த முக்கியமான விசயத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். (1990, மே)

      அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மக்கள் சீனத்தின் தலைவரான ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர். அமெரிக்காவிற்கும் – சீனாவுக்கும் இடையிலான உறவு, பெரிய நாடுகள் தங்களுக்கு இடையில் கொள்ளும் உறவுக்கான ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெறும் மேல் பூச்சுதான்.  2010 ஆம் ஆண்டிலேயே சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவினை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மேற்கொண்டு விட்டது.

2015ஆம் ஆண்டில், ஜி ஜின்பிங் அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரத்திற்கு சென்றார். அங்கே பேசும்போது, அமெரிக்காவின் அணுகுமுறைக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றினார்.

“அமைதியான போக்கில் வளர்ச்சியை சாதிப்பதுதான் சரியான வழியாகும் என்பது  உலக வரலாறு நமக்கு கற்பிக்கும் முக்கியமான பாடம்… வரலாற்றின் ஓட்டத்திற்கு மாறாக, வலிமையைக் கொண்டு  மேலாதிக்கத்தை சாதிக்க நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியடையும். “நாடு இப்போது வலிமையாக இருக்கலாம், சண்டை அதன் அழிவுக்கு வழிவகுக்கும்” என்று சீனர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

      மேலும், வளரும் நாடுகளின் பிரதிநிதியாக நின்று, நாடுகளுக்கிடையிலான உறவில் சமத்துவத்தை மேம்படுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக் காட்டினார். அனைத்து நாடுகளுக்கும் நன்மை தருவதாகவும், மனித குலத்தின் நன்மையை மனதில் கொண்டதாகவும் உலக நாடுகளுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

      அமெரிக்கா – சீனா இடையிலான உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். அப்போதே சீனா தனது பட்டுப்பாதை நிதியை உருவாக்கி, பெல்ட் & ரோட் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருந்தது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உருவாக்கம், ஆசிய- பசிபிக் பிரதேசத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தியது. 2008ஆம் ஆண்டு வெளிப்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, பல துருவ உலகத்தை நோக்கிய போக்குகள் வலுப்பட்டும் வருகின்றன. சர்வதேச தொடர்புகள் விசயத்தில் சீனாவின் அணுகுமுறை பல துருவ உலகத்தை நோக்கியதாகவே உள்ளன.

      தற்போது நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டின் தொடக்க உரையில், வெளியில் இருந்து நடக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ‘சர்வதேச தளத்தில் ஏற்பட்டு வரும் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம், குறிப்பாக மிரட்டவும், கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் சீனாவின் மீது கூடுதலான அழுத்தங்களை சுமத்தவும்’ முயற்சிகள் நடக்கின்றன என சுட்டிக்காட்டுகிறார்கள். இனி வரும் நாட்கள், எதிர்பாராத சவால்களை உள்ளடக்கி இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.     

நவதாராள உலகமயம் மேலாதிக்கம்

      ஏகாதிபத்தியத்தின் நோக்கம் நிதி மூலதனத்திற்கு சாதகமான உலக சூழலை பராமரிப்பதே என்பதை மேலே கண்டோம். அதற்காக அரசியல், ராணுவ, பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்கிறது. பொருளாதார உறவுகளை தனக்கு சாதகமாக வடிவமைக்கிறது.

அமெரிக்க டாலர்தான் உலக நாடுகளால் ஏற்கப்பட்ட செலாவணியாக உள்ளது. உலக நாடுகளின் வசம் இருக்கும் அன்னியச் செலவாணி கையிருப்பில் 70 சதவீதம் அமெரிக்க டாலரே ஆகும். 68 சதவீதமான சர்வதேச ஒப்பந்தங்களில் டாலர் பயன்படுத்தப்படுகிறது. அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் 80 சதவீதமும்,சர்வதேச வங்கி பரிவர்த்தனையில் 90 சதவீதம் டாலரில் நடக்கிறது. அமெரிக்க டாலரின் இந்த மேலாதிக்கத்தின் காரணமாக, ஏழை நாடுகளின் கடன் சுமையும், வட்டிச்சுமையும் அதிகரிக்கின்றன. டாலர் மதிப்பு உயரும்போதும், சரியும்போதும் இந்த சமனற்ற நிலைமையின் சிக்கலை நாம் வெளிப்படையாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட துறைகளில் ஏகபோக ஆதிக்கம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. உதாரணமாக உலகில் ஒட்டுமொத்த சோயாபீன்ஸ் உற்பத்தியையும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன. அதில் மான்சாண்டோ என்ற நிறுவனம் விதை உற்பத்திக்கான கச்சா பொருட்களை கட்டுப்படுத்துகிறது, மற்ற 4 நிறுவனங்கள் பயிர் செய்தல், வர்த்தகம் மற்றும் பிராசசிங் துறைகளை கட்டுப்படுத்துகின்றன. இந்த ஏகபோக நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, லாபத்தைக் குவிக்கிறார்கள்.

இதுபோல சமூகத்தின் சொத்துக்கள் மிகச் சில முதலாளித்துவ முதலைகளின் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமும், லாபக்குவிப்பும் உலகம் தழுவியதாக நடக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரும் விபரங்களின்படி உலகத் தொழிலாளர்களில் 73 சதவீதம் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மிகக் குறைந்த கூலியே பெறுகின்றனர். அதில் 40 சதவீதம்பேர் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் வாழ்கிறார்கள். அதே சமயத்தில் 500 தனியார் பெருநிறுவனங்களுடைய வருவாய், ஒட்டுமொத்த உலக வருவாயில் 30 சதவீதமாக உள்ளது.

நேரடியான ராணுவ மேலாதிக்கத்தையும் அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது. தனது  பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்கிற போதிலும் ராணுவச் செலவினத்தை அதிகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 193 நாடுகளில் சரிபாதியானவைகளில் அமெரிக்க படைகள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன. இந்த தாக்குதல்கள் சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கு பின் அதிகரித்துள்ளன. உலகப்போர் காலத்திற்கு பின் உலகின் 36 அரசாங்கங்களை அமெரிக்கா நேரடி தலையீட்டின் மூலம் கவிழ்த்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடந்த 85 தேர்தல்களில் தலையிட்டுள்ளது. 30 நாடுகளில் அப்பாவி மக்கள் குழுமியிருந்த இடங்களில் குண்டு வீசியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 50 தலைவர்களை கொலை செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் பின்னணியில் இதுபற்றி நாம் கூடுதலாக பேசியிருக்கிறோம்.

அமெரிக்காவின் ஆசியா – பசுபிக் உத்தி, சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்திலானதாகும். தனது நோக்கத்தில் இந்தியாவையும் துணைக்கு இழுக்கிறது. எதிரி வலிமையாவதாக உணர்ந்தால் அதனை வம்புச் சண்டைக்கு இழுக்க வேண்டும் என்ற உத்தியைத்தான் அமெரிக்கா பின்பற்றுகிறது என்கின்றனர் மேற்கத்திய வல்லுனர்கள்.

மேற்சொன்ன ஏகாதிபத்தியத்தின் 5 வெளிப்பாடுகளை, 5 தன்மைகளை கீழ்க்காணும் விதத்தில் வகைப்படுத்தலாம்.

1) உலகத்தின் சந்தையை கட்டுப்படுத்தும் நிதி மூலதனம்,

2) பூமியின் இயற்கை வளங்களை கட்டுப்படுத்தும் ஏகபோக பெருநிறுவனங்கள்.

3) ஊடகங்கள், தகவல் தொடர்பை கட்டுப்படுத்துவதன் வழியாக மக்களின் பண்பாட்டில், சிந்தனையில் ஆதிக்கம்

4) பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் ஏகபோக உடைமை

5) தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு

சீனாவுடன் மோதல் போக்கு

      முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்பதை லெனின் வரையறுத்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது  “ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம் ஆகும்; அது ஒட்டுண்ணி வகைப்பட்ட, அழுகல் நிலையில் உள்ள முதலாளித்துவம்; மரணக் கட்டிலில் உள்ள முதலாளித்துவம்” என்றார். அந்த வார்த்தைகள் இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கச்சிதமாக சுட்டுகிறது.

      நிலைமையை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தை பின்னுக்கு இழுக்கவும், தாமதப்படுத்தவும் அது தொடர்ந்து முயலும். தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தும். சீனாவின் விசயத்தை பொருத்தமட்டில் அதை தன்னுடைய கேந்திர போட்டியாளராக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. தான் மற்றும் தனது நண்பர்கள், கூட்டாளிகளின் நலனை பாதுகாக்கும் விதத்தில் சீனாவின் புறச் சூழலை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் உத்தியாக வகுத்துள்ளது. சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்கிறது.

சீனா ஒரு சோசலிச நாடாக தொடர்வதும், வலிமையடைவதும் ஒரு துருவ ஏற்பாட்டிற்கும் சவாலாக அவர்கள் பார்க்கிறார்கள்.

அண்மைய நிகழ்வுகள்

2022 ஆகஸ்ட் 2022 அன்று அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனை சீனா கடுமையாக எதிர்த்தது.

தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சீன புரட்சி சமயத்தில் தைவானில் தஞ்சம் புகுந்த எதிர்ப் புரட்சி சக்திகள், அங்கே ஏற்படுத்திய முதலாளித்துவ அரசாங்கத்தை சீனா முற்றாக அழித்து ஒழிக்கவில்லை. அமைதியான முறையில் நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்கள். இருப்பினும் அதற்கு சாதகமான சூழல் இப்போதுவரை உருவாகவில்லை.

இந்த நிலையில், தைவான் ஆட்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமான பயணத்தை பெலோசி மேற்கொண்டார். இந்த பயணம் அவருடைய தனிப்பட்ட முடிவு என்பது போல அமெரிக்கா காட்டிக் கொண்டது. ஆனால் அங்கே அவர் ‘தைவான் செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனத்தினரோடு’ சந்திப்பு மேற்கொண்டார்.

      ராணுவ நடவடிக்கைகளை தூண்டுவது போல தொடங்கிய இந்த நிகழ்வுப்போக்கு, சீனாவின் மீது மட்டுமல்லாமல், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தாக்கம் செலுத்தியது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாடுகள் பலவும் தங்கள் தற்காப்புக்காக ராணுவ செலவினங்களை அதிகப்படுத்தினார்கள். சீனாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் இந்த நகர்வு உயர் தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாட்டை நோக்கியதாகவும் இருந்தது.

பலமும், பலவீனமும்

      இப்போதும் சீனாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடு அமெரிக்காவே ஆகும். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு செல்லும் நேரடி முதலீடும் அதிகரித்தே வருகிறது. உலகமய காலத்தில், உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதார நலன்களும் பிரிக்க முடியாத விதத்தில் பிணைந்திருக்கின்றன.

அதே சமயத்தில், ஒபாமா காலத்தில்  இருந்தே சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், சீனாவின் மீதான இனவாத வெறுப்பும், பொருளாதார தடைகளும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டன.

5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஹுவாவை நிறுவனம் உட்பட சில நிறுவனங்களை முடக்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் ‘சிப்புகள் மற்றும் அறிவியல் சட்டம்’ என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர சந்தை, உலகமயம் ஆகிய தாரக மந்திரங்களுக்கு நேர்மாறான இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க ஏகபோக பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தை தொடரும் நோக்குடனே எடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், தொழில் இணையம், அதிவேக இணைய உபகரணங்கள் தயாரிப்பிலும், அறிவியல் தொழில்நுட்ப துறையிலும் சீனாவை பின்னுக்கு தள்ளும் என்று அமெரிக்கா கருதுகிறது.

சீனா, உலகின் இரண்டாவது பொருளாதாரம் என்ற நிலைமையை எட்டியுள்ள போதிலும், இப்போதும் அது வளரும் நாடுதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனங்கள் மற்றும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்திக்காக அது இறக்குமதிகளையும், பிறநாட்டு அறிவுசார் கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப கருவிகளையும் அதிகம் சார்ந்திருக்கிறது.

அண்மை ஆண்டுகளில் ஆராய்ச்சிகளில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது எனினும் அமெரிக்கா மேற்கொள்வதில் அது பாதியளவுதான் என்பதும், மேலும், அமெரிக்கா பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அறிவுசார் வளங்களை எடுத்துக் கொண்டால், சீனா செய்துவரும் பங்களிப்பை போல 6 மடங்கு இறக்குமதி செய்கிறது. எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

அதுவும், அமெரிக்காவின் சமீபத்திய கட்டுப்பாடுகள் உற்பத்தி இயந்திரங்களை மறுப்பதாகவும், முக்கிய கச்சாப்பொருட்களை மறுப்பதாகவும் உள்ளதுடன் தொழில்நுட்பம் படித்த, அமெரிக்க குடியுரிமை கொண்ட நிபுணர்கள், சீனாவில் வேலை பார்ப்பதை மட்டுமல்ல, சீனாவுக்காக உற்பத்தி நடந்தால் அதில் பங்கெடுப்பதையும் கூட தடை செய்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்களையும் கூட சீனாவில் மேற்கொள்ளும் உற்பத்தியில் பயன்படுத்த முடியாது என்று இந்த விதிகள் நெருக்குகின்றன.

உலகச் சந்தையில் 40 லட்சம் கோடி புழங்கும் சிப்/செமிகண்டெக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 8 ஆண்டுகளில் அதன் சந்தை இருமடங்காக உயரும் என்றும் கணிக்கிறார்கள்.

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் 16 நானோமீட்டர், 14 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த அளவிலான லாஜிக் சிப்கள், 18 நானோமீட்டர் கொண்ட டைனமிக் ராம் சிப்கள், 128 லேயர் கொண்ட மெமரி சிப்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு கொண்ட சிப்கள் குறைவான மின் பயன்பாடு கொண்டவையாகும், அதிவேக செயல்திறன் கொண்டவை எனவே இவற்றை நுகர்வோர் பயன்பாட்டுக்கானவை. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 18.4 சதவீதம் சீனாவில் நடக்கும் நிலைமையில் சீனாவை இதில் இருந்து அகற்றுவது எளிதல்ல.

இதன் உற்பத்திச் சங்கிலி உலகம் தழுவியதாக உள்ளது. எனவே இந்த துறையில் இருந்து சீனாவை மட்டும் தனிமைப்படுத்துவது எளிதல்ல. உதாரணமாக, சிப்/ செமிகண்டக்டர் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவமைப்பு பிரதானமாக அமெரிக்காவில் செய்யப்படுகிறது. அதற்கான சிலிகான் தகடுகள் ஜப்பானில் உற்பத்தியாகின்றன. அந்த தகடுகளில் இழை சேர்ப்பது, சாயப் பூச்சு ஆகியவை அமெரிக்கா, தைவான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடக்கிறது. சரியாக அடுக்கி பரிசோதிப்பது மலேசியாவில் நடக்கிறது. சிங்கப்பூரில் இருந்து அது கப்பலில் ஏற்றப்படுகிறது. சீனாவில் அது பல்வேறு உபகரணங்களில் இணைக்கப்பட்டு சந்தைக்கான பொருளாக வடிவம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கும்போதும், தன்னுடைய வருமானத்தில் 18 சதவீதத்தை ஆய்வுக்காக செலவிடும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு, இனி வரும் காலத்தில் அவற்றின் மேம்பட்ட நிலையையே சரியச் செய்யக் கூடும். சீனா தனது ஆராய்ச்சியில் முன்னேறினால் அது சீனாவிற்கு சாதகங்களை அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது.

முடிவாக…

      உலகம் தழுவிய நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்கள் இருப்பதும், விநியோகம் உலகளாவியதாக இருப்பதன் காரணமாக, ஏகபோக நிறுவனங்கள், தமக்குள்ளாக ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு, குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள். உலகச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமக்கு சாதகமான உலக ஒழுங்கினை பராமரிக்கிறார்கள்.

அமெரிக்காவின் ராணுவ பலமும், ராணுவ தலையீடுகளும், அமெரிக்க டாலரின் ஆதிக்கமும், உயர்ந்த தொழில்நுட்பங்களின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் கட்டுப்பாடும் ஏழை/வளரும் நாடுகளுக்கு பாதகமாக இருக்கின்றன.

சோசலிச சீனா வலுப்படுமானால் அது இந்த ஆதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் என்பதாலேயே, சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறது அமெரிக்கா. ஆனால், உலக முதலாளித்துவம் நெருக்கடியிலேயே இருக்கிறது. தனது நெருக்கடிகளை உலக நாடுகளின் மீது தள்ளிவிடுவதும் தொடர்கிறது. இந்த நிலைமைகளை உணர்ந்திருக்கும் சீனா, சவால்களை எதிர்கொண்டு சோசலிச கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம் என்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் வெல்வது சோசலிசமா, லாபவெறி மேலாதிக்கமா என்பதைப் பொருத்தே மனித குலத்தின் எதிர்காலம் அமையும். 

கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

இரா.சிந்தன்

உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.

கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,  குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும்  கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும்.  மேலும் இது சோசலிசத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்:

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் பரவியது. முதல் உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத் குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் ”உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற  அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

உலகில் முதன் முறையாக  மையப்படுத்தப்பட்ட, பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தில் அமைந்த சோசலிச அரசாங்கமே ஆகும். ஊரக பகுதிகளுக்கும் அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிகப்பெரும் சாதனை என ஸ்பானிஷ் ஃப்ளூ பரவல் பற்றிய ‘பேல் ரைடர்’ என்ற புத்தகத்தில் லாரா ஸ்பிண்டி என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அனைத்திலும் முதன்மையானது மனிதர்களின் நலவாழ்வுதான் என்ற  அணுகுமுறைதான் முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்து சோசலிசத்தை வேறுபடுத்துகிறது. கியூபா மருத்துவத்துறையில் ஆற்றியிருக்கும் மகத்தான சாதனைகளை நாம் அறிவோம். சீனாவின் கள சூழல் வேறுபட்ட ஒன்று. கொரோனா நோய் எதிர்ப்பில் அவர்களுடைய போராட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

சீனாவில் பொது சுகாதாரம்:

1949 இல் மாவோவின் தலைமையில் மக்கள்சீன புரட்சி அரசாங்கம் அமைந்தது. 1950 நடைபெற்ற தேசிய சுகாதார மாநாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இப்போதும் கவனிக்கத் தக்கவை. 

1) விவசாயிகள், தொழிலாளர்களாகிய வெகுமக்கள் நலனுக்கு பணியாற்றுவதே சுகாதாரப் பணியாளர்களின் முதன்மையான கடமை. 
2) நோய்களை முன் தடுப்பதுதான் முதன்மை இலக்கு.
3) நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
4) மருத்துவ பணியாளர்களுடைய செயலூக்கம் மிக்க பங்களிப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

இப்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் சீனா ஒரு வளரும் நாடுதான். எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊரகங்கள் மற்றும் நகரங்களுக்கான இடைவெளியும் அதிகமாக உள்ளன. சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் உள்ளார்கள். 2.7 செவிலியர்கள் உள்ளனர். 4.34 படுக்கைகள் உள்ளன. இதிலிருந்தே சீனாவின் கட்டமைப்பு இன்னும் மேம்பட வேண்டியிருப்பதை அறிய முடியும்.

சமீபத்தில் புதிய சகாப்தத்தில் சீன சமூகத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. முக்கிய முரண்பாட்டை அடையாளமும் கண்டது. சீன மக்களிடையே பொருளாயத தேவைகள் அதிகரித்துள்ளன, உணவு, உறைவிடம் என்பதோடு கூடுதலான புதிய தேவைகள் உருவாகியுள்ளன, நலவாழ்வுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பண்பாட்டு வாழ்க்கையில் புதிய தேவைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம் சமனற்ற, போதாக்குறையான வளர்ச்சியோடு முரண்படுகின்றன என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கணிப்பாகும். இதனை மனதில் கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

கொரோனா எதிர்ப்பு மக்கள் யுத்தம்:

சீனாவின் ஊகான் நகரத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவியிருந்தது. அந்த நகரத்தில் மருத்துவமனை, மருத்துவர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதே வேகத்தில் நோய் பரவினால் பொது சுகாதார கட்டமைப்பே பெரும் சுமைக்கு ஆளாகி, சமூக நெருக்கடியாகிவிடும்.

ஜனவரி 7 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை நிலைக்குழு கூடியது. நோய்த்தொற்று நிலைமைகளை அது ஆய்வு செய்தது. உடனடியாகவும், அதிவிரைவாகவும் செயல்படுவதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.  அப்போதிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஒரு மக்கள் யுத்தமாக வழிநடத்தியது. 

“புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் நடத்துகின்ற ஒன்றாகும். மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே நாம் அந்த போரினை நடத்த முடியும், மக்களை சார்ந்திருப்பதன் மூலமே அந்த போரை முன்னெடுக்க முடியும்” என்கிறார் தோழர் மாவோ. இந்த போராட்டம் நீண்ட ஒன்று, உத்திகளை மாற்றியமைத்து, உள்ளூர் நிலைமைகளை சரியாக கணக்கிட்டு மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சீனாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி அந்த கருத்தாக்கத்தின் நல்ல உதாரணமாகும். 

மக்கள் யுத்த கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் ஜி ஜின்பிங் வலியுறுத்திவந்த கருத்து. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அந்த கருத்தாக்கம் பயன்பட்டது. மக்கள் நலவாழ்வே முதன்மையானது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வளங்களும் இந்த போராட்டத்திற்காக திருப்பிவிடப்பட்டன. சீன குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங், ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டத்தை வழிநடத்தினார். சீன பிரதமர் லி கெகியாங் கொரோனா எதிர்ப்பு குழுவிற்கு தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.

இந்த ’யுத்தம்’ இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது மருத்துவமனைகள். அங்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது முக்கியம். இரண்டாவது நோய் பரவல் தடுப்பு  நோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்துதல். அதற்கு தேவையான வழிமுறைகளை வகுத்து விரைவாக செயல்படுவது.

ஜனவரி 23 ஆம் தேதி ஊகான் நகரமும் ஹுபே மாகாணமும் உலகம் கண்டிராத மிகப்பெரும் ஊரடங்கினை தொடங்கியிருந்தன. நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் இதர வளங்களை திரட்டி அங்கே அனுப்பினார்கள். 330 மருத்துவக் குழுக்களும் 41600 மருத்துவ பணியாளர்களும் ஊகானில் குவிக்கப்பட்டார்கள். 

தொற்றுநோய் தடுப்பு சிறப்புக் குழுவினர் 1800 பேர்  ஊகானிற்கு அனுப்பப்பட்டார்கள்.  ஐந்தைந்து பேர் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  

முதலில் ஊகானிலும் அதை தொடர்ந்து சீனா முழுவதும் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே குறிப்பிடத்தக்கன. தொற்றாளர்களின் தொடர்புகளை தடமறிய பழைய முறைகளுடன் சேர்த்து டிஜிட்டல் முறைகளும் பின்பற்றப்பட்டன. தொற்றாளர்கள் பயணித்த இடங்களுக்கு மற்றவர்கள் செல்லாமல் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பகிரப்பட்டது. 3 வார காலத்தில் 14 கோடி முறை இதற்காக இணையதள வசதி பயன்படுத்தப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த நாட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜியாங் போல சில பகுதிகளில் சாலையில் சிக்னல் வைப்பது போல உடல்நிலையை பரிசீலித்து அடையாளம் காட்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சீனாதான் உலகிலேயே மிக அதிகமான இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடு. அதன் காரணமாக அரசின் சுகாதார கண்காணிப்பு வசதிகளை இணையம் வழியாக சுமார் 90 கோடிப்பேர் பயன்படுத்த முடிந்துள்ளது. 

மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்காக 13 மாகாணங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் வந்தனர்.  ஒரு நாளைக்கு 1220 டன்கள் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் தகுதி படிப்படியாக உயர்த்தப்பட்டது.

ஷாங்காய் நகரத்திலிருந்து ஊகானுக்கு சென்று செவிலியர் பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்ட செவிலியர் ஹு நானா தனது கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “எல்லோரும் நலமாக இருந்தால் மட்டுமே எங்களின் சிறு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லும் முடிவை எடுத்தேன். என்னுடைய தேசம் நடத்துகிற போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு அவசியம். முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே எனக்கு ஏதும் அச்சமில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் என் திறமைகளையும் கொண்டு இந்த போராட்டத்திற்கு உதவி செய்வதென முடிவு செய்தேன்.

முதல் கட்ட போராட்டம் அடுத்தடுத்த நிலைகளை எட்டியது. ஜி ஜின்பிங் இவ்வாறு விவரிக்கிறார் “தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவுதலை  கட்டுப்படுத்த ஒருமாதம் எடுத்தது, தினசரி கண்டறியப்படும் உள்நாட்டு தொற்று எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில்தான் ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஊகான் நகரம் அமைந்துள்ள ஹுபெ மாகாணத்தில் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்க மூன்றாவது மாதம் ஆகியது”.

ஏப்ரல் 26 ஆம் தேதி ஊகானில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகியது. ஹுபே மாகாணத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள் என்பதையும், இதில் 3 ஆயிரத்து 600 பேர் 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் ஆவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் வேதனை தரும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் 46 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்கள். முதல் முனையில் போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இரண்டாவது முனை எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை சீனா அறிந்தே வைத்திருக்கிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

நோயுடன் ஒரு சதுரங்கம்:

தொற்றுநோய் தடுப்பு போராட்டத்தை விவரிக்கும்போது அதனை ஒரு சதுரங்க விளையாட்டாக ஒப்பிட்டார் ஜி ஜின்பிங். சீன தேசமே அந்த சதுரங்கத்தை ஆடியது.  மருத்துவப் பணியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் ஒரு அணியாக நின்றார்கள் எனில், அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிச அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் பின்பலமாக நின்றார்கள். 90களுக்கு பிறகு பிறந்த இளைஞர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

அனைவருக்கும் இலவச சிகிச்சை:

ஊகான் நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே, பணம் இல்லாத காரணத்தால் குடிமக்களின் ஒருவருக்கும் கூட கொரோனா பரிசோதனையோ அல்லது சிகிச்சையோ மறுக்கப்படக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது.

சீன மருத்துவ காப்பீட்டு ஆணையத்தின் கணக்கீட்டின் படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உள்நோயாளிகளுக்கான செலவு தலா 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கான செலவு 15 லட்சத்தை தாண்டியது.  70 வயதாகிய கொரோனா நோயாளி ஒருவருக்கு 3 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து தரப்பட்டது, அவருக்கு எக்மோ கருவி இரு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை குணப்படுத்துவதற்கான செலவு சுமார் 1 கோடியே 40 லட்சமாக ஆகியது. 

இந்த செலவுகளில் ஒரு பகுதி இன்சூரன்ஸ் மூலமாகவும், பெரும்பகுதி அரசு நிதியாகவும் ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் செயல்பட்ட அத்தியாவசிய நிறுவனங்களில் பணியாளர்களுடைய பாதுகாப்பை அரசே உறுதி செய்தது. தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நிதி உதவியை அரசு மேற்கொண்டது. 

அதிவிரைவான அறிவியல் ஆய்வுகள்:

தொற்று நோய் தடுப்புக்காக அமைக்கப்பட்ட்ட குழுக்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது பல துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவாகும். உலகம் பல தொற்றுநோய்களை எதிர்கொண்டிருக்கிறது காலரா, பிளேக், சின்னம்மை மற்றும் தொழுநோய் ஆகியவை பரவுவதை அறிந்து கொள்ளவும், தடுப்பதற்கும் நீண்டகால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட பெருந்தொற்றாகிய ஹெச் 1 என் 1  வைரசை அறிவதற்கு ஒருமாத கால ஆய்வு தேவைப்பட்டது. கொரோனா வைரசின் ஜீன் சீக்குவன்ஸ் ஒரு வார காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதும், அது உலக நாடுகளோடு பகிரப்பட்டதும் மருத்துவத் துறைக்கு பெரும் உதவியாக அமைந்தது. 

வைரசின் பாதிப்புகள் அது பரவும் விதம் குறித்து அறிந்து தொற்றுநோய் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டன. சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது. பலன் கொடுக்கும் மருந்துகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பெறப்பட்டன. 16 நாட்களில் டெஸ்டிங் கிட்டுகள் உருவாக்கப்பட்டது, அவைகளை போதுமான எண்ணிக்கையில் தயாரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

அறிவியல் நிபுணர்களுக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அவர்கள் சீன மக்களிடையே தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்கள். தொலைபேசி வழி கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். இவ்வாறு வதந்திகளுக்கு எதிரான அறிவியல் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்தது.

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு:

சீனாவின் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் செய்த பங்களிப்பு அப்போதே பல செய்திகளில் வெளிவந்தது. அலிபாபா, டென்செண்ட், பைடூ, சென்ஸ் டைம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கின. இணையதள நேரலை சேவைகளின் மூலம் பள்ளி வகுப்புகள் தொடரப்பட்டன. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொற்றாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்திற்காக  ரோபோட்டுகளை பயன்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களுடைய மாபெரும் பங்களிப்பு இல்லாமல் கொரோனா போராட்டத்தை அவர்கள் நடத்தியிருக்க முடியாது.

சீன அரசு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூடுதலாக குறிப்பிட வேண்டும்.   சாளரம் அமைப்பதற்கு 10 நொடிகள்,  சுவர் எழுப்ப 2நிமிடங்கள் என அதிவேகமாக,   இரவும் பகலும் உழைத்து மருத்துவமனைகளை கட்டியது சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களே ஆகும்.  4000 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.  இந்த கட்டுமான பணிகளுக்கு தேவையான மின்சாரம், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பினை அரசு நிறுவனங்களே வழங்கின.

மருத்துவ உபகரண உற்பத்தியை அரசு நிறுவனங்களின் விரைவான உதவியின் காரணமாகவே உடனடியாக அதிகரிக்க முடிந்தது.தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களான கவச உடைகள் முதல் அனைத்து உபகரணங்களின் உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தானிய உற்பத்தி, எண்ணெய், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்தன. சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. விலையை உயர்த்தி விற்ற வணிகர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது, செயற்கை விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

சீன அரசின் எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் கழகம், சீன தானிய சேமிப்புக் குழுமம், சீன உப்பு தொழிற்சாலை அனைத்தும் தங்கள் வழங்கலை அதிகப்படுத்தின. சீனாவின் வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள் முயற்சியெடுத்து விவசாய கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு காய் கனிகள் மற்றும் தேவையான பொருட்கள் சரியான விலையில் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அதிலும் குறிப்பாக மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி அன்று சீனாவின் ஒரு நாளில் 10 ஆயிரம் சோடி கருவிகளை தயாரிக்க முடிந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி அவர்களின் தயாரிப்பு வேகம் ஒரு நாளைக்கு 2 லட்சத்தை தாண்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி என்ற அளவில்  7 லட்சத்து 73 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை சீன அரசு தயாரித்தது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு நாளில் 17 லட்சம் என்ற அளவில் அதன் எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 42 லட்சமாகியது. தொழிற்சாலை நிர்வாகங்களை மருத்துவ உபகரண தயாரிப்பை நோக்கி உந்தித் தள்ளியது அரசு நிர்வாகம். ஆம்புலன்சு வாகனங்கள், வெண்டிலேட்டர்கள், இ.சி.ஜி இயந்திரங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்டு தேவையான அனைத்து கருவிகளும் உள்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முன்னணிப் படையாக கம்யூனிஸ்டுகள்:

மார்க்சியவாதிகள் என்போர் ஆரூடம் சொல்பவர்கள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் மனதில் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கலையே அவர்களால் உருவாக்க முடியும், இயந்திர கதியாக ஒரு காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றார் மாவோ. சீனாவின் 46 லட்சம் கட்சி கிளைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இயக்கவியல் பார்வையோடு வழிநடத்தினார்கள்.

மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ்லைனை நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் அனுபவம் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி.  கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள கமிட்டிகள் உடனடியாக ஒரு அவசர நிலையை எதிர்கொள்ள தயாரானார்கள். தங்களிடமுள்ள அனைத்து வளங்களையும் திரட்டினார்கள்.  மக்களுக்கு தலைமையேற்க வேண்டும், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்பாடுகளை பட்டை தீட்ட வேண்டும். 

யாரும் செய்வதற்கு தயங்கும் ஒரு பணியாக இருந்தால் அதில் கம்யூனிஸ்டுகளே முதல் ஆளாக ஈடுபட வேண்டும். தயக்கம் என்பது ஒருபோதும் கூடாது என்றது  கட்சி.

1) முன் கை எடு,
2) அறிவியல் அடிப்படையில் நோயின் தன்மையை அறிந்து கொண்டு செயல்படு
3)  திட்டமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்க, ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதியாகவும், உள்ளூர் நிலைமைகளை மனதில் கொண்டும் திட்டம் இருக்க வேண்டும்,
4) திட்டமிட்ட பணிகளை அமைப்பின் வலிமையைக் கொண்டு செயலாக்குக. நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி செயல்பாட்டினை கூர்மைப்படுத்துக என வழிகாட்டியது.

ஜி ஜின்பிங், “பொத்தாம் பொதுவான உத்தரவுகளைக் கொண்டோ, அதிகாரத்துவத்தைக் கொண்டோ அல்லது பெயருக்கு வேலை செய்வதாலோஇந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.” என தெளிவாகவே குறிப்பிட்டார். உத்தரவுகளை கேட்டு வேலை செய்யும் பணியாளராக அல்ல, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படும் தளபதியாக செயல்பட்டார்கள் முரண்பாடுகளை ஆய்வு செய்து முறையாக கையாண்டார்கள்.

மருத்துவர், செவிலியர் என மருத்துவ சிகிச்சை முனையில் பணியாற்றிய குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன் நின்றார்கள். உதாரணமாக ஹுபே மாகாணத்திற்கு வந்த சீன ராணுவ மருத்துவக் குழுவினர் 450 பேரிலும் 60 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

பீக்கிங் பல்கலைகழகத்திலிருந்து மட்டும் ஊகானுக்கு 405 மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.  அதில் 171 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். “ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் 5 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தது. ” வாங் பென் என்ற மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ஊகானில் ஒவ்வொரு நாளும் மக்கள் எங்களை அன்பில் நனைத்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததற்கான பொருளை இந்த போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது”.

ஹெய்லாங்ஜியாங் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தளர்வோடு நடந்து கொண்டார்கள். உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டை கூடுதலாக்கினார்கள். மேலும் களத்தில் ஒவ்வொரு வீடாக சென்று உதவி செய்த கட்சி தோழர்களின் பணியை ஒழுக்க ஆய்வு மற்றும் மேற்பார்வை குழு கண்காணித்தது. இந்தக் குழுவுக்கென தனியாக ஒரு பத்திரிக்கை இயங்குகிறது நோய் தடுப்புக் குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய குழுக்களின் பங்களிப்பு:

மாகாண அரசுகளும், உள்ளாட்சிகளும் அவரவர் சூழல் குறித்து ஆய்வு செய்து படைப்பாக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பை உறுதி செய்யும்  6 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய குழுக்கள் சீனா முழுவதும் உள்ளன. இவையே சீன அதிகாரப்பரவல் கட்டமைப்பின் கடைசி கண்ணிகள். நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்தக் குழுக்களின் 40 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு சமுதாய குழு உறுப்பினரும் 350 பேரை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தீவிரமாக அமலாக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உணவுப்பொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் பணியாற்றினார்கள்.  அதாவது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான பணியில் இவர்களின் உழைப்பு மிகப்பெரும் பங்கு வகித்தது.

கரடுமுரடான சாலைகளில், பாதுகாப்பில்லாத பகுதிகளில் பயணித்து ஒவ்வொரு குடிமகனையும் அவர்கள் சந்தித்தார்கள். குடிமக்கள் நல அமைச்சகத்தின் தகவலின்படி இந்த பணியாளர்களில் 53 பேர் பணியின்போது மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 92.5 சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் போய் என்ற மாவட்டத்தில் நடந்தவைகளை சென் சென் என்பவர் பீப்பிள்ஸ் டெய்லி இதழில் எழுதியுள்ளார்.

மாகாணத்தின் திறன் வாய்ந்த தோழர்களை தேர்வு செய்து முன்னணிக்கு அனுப்பினார்கள்.  மொத்தம் 523 பேர். அவர்களின் பணி ஆளுக்கு ஒரு குழுவை வழி நடத்துவதாகும்.

இந்த குழுக்களின் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றார்கள். தொய்வாக இருந்தால் நீல பட்டியலில் இடம்பெற்றார்கள். போய் மாவட்டத்தில் 76 பேர் சிவப்பு பட்டியலிலும், 2 பேர் நீல பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.  முன்னணியில் பணியாற்றும் குழுக்களுக்கு சரியான நேரத்தில் உணவு, குடிநீர் கொடுப்பது. ஆட்களை மாற்றிவிடுவது. முக கவசம், கை உறைகள் கிடைக்கச் செய்வது தனியாக ஒரு குழுவால் கவனிக்கப்பட்டது. இந்த பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி உளவியல் ஆலோசனைகளும் உறுதி செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் வழியே ஏராளமான புதிய உறுப்பினர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இளைஞர்களின் பெரும் பங்கேற்பு:

கொரோனா நோய் தடுப்பு பணிகளின் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடத் தூண்டியது சீன அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  1990 களுக்கு பின் பிறந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆண் செவிலியரான ஜியான் யாங், “நாங்கள் இளைஞர்கள், நாங்களே முன் வரிசையில் நிற்போம்” என உற்சாகமாக குறிப்பிடுகிறார்.  இளைஞர்களின் பங்கு தனித்து குறிப்பிட வேண்டிய அளவில் தனிச்சிறப்பானதாக இருந்தது.

இப்போது சீன ஊடகங்களில் 90களுக்கு பின் பிறந்தோர் என்பதே அவர்களை குறிப்பிட பொதுவான பெயராகிப்போனது. ஊகானில் குவிக்கப்பட்ட மருத்துவப் படையணியில் 12 ஆயிரம் பேர் 90களுக்கு பின் பிறந்தவர்கள் ஆவர். 

ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் மரணிக்க நேர்ந்தால் வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக என்னுடைய உடல் பயன்படும் என லி ஹு என்ற பெண் செவிலியர் தெரிவித்தார்.  அவர் 1995க்கு பின் பிறந்தவர்.

95 க்கு பின் பிறந்த காவல் அதிகாரியான யாங் குயுச்செங். தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.  பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரச் செல்லும்போது நாய்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. சில காவலர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தை போக்குவதுடன் அவர்களுடன் நிதானமாக உரையாடியே மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வேண்டும் என்கிறார் அவர். இந்தப் போராட்டத்தின் போக்கில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

வாகனங்களை பரிசோதிக்கும் பணியில் ஈட்டுபட்ட்டவர் சோவ் போஜியான். “தியாஞ்சின் பகுதியை கடந்த ஒவ்வொரு ஓட்டுனரையும் பரிசோதித்தேன். அவருடைய உடல்நலனை விசாரித்து பதிவு செய்தேன். கைகள் குளிரில் உறைந்தன. எனினும் ஒருவரைக் கூட விசாரிக்காமல் விடவில்லை.” என்கிறார் அவர். 

கூட்டுறவு மற்றும் பகிர்மான அலுவலகத்தின் பணியாளரான லியூ போ, 40 நாட்கள் முன்னணி பணிகளை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்குவது அவருடைய பணி. 10 விதமான பொருட்களை தினமும் 550 செட்டுகள் வாங்கி அவற்றை தனிமைப்படுத்தல் அறைகளில் வைக்க வேண்டும். 40 நாட்கள் இடைவெளியில்லாமல் செய்து முடித்துள்ளார் அந்த இளைஞர். 

இவ்வாறு கொரோனா நோய் தடுப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை சீனா சாதித்திருக்கிறது. ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடுகளே அவர்களை காத்துள்ளன.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

சில படிப்பினைகள்:

அவசரகாலத்தில் முடிவுகளை உள்ளூர் அளவிலேயே மேற்கொள்வதற்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டுவருகிறது.  உயர்மட்ட நிர்வாகங்களின் முடிவுகளுக்காக காத்திருந்து அதனால் கால விரையமாதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதன் சிரமங்களை பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும்பொது சுகாதாரம் மற்றும் காப்பீட்டுக்கான சட்டங்களின் செய்ய வேண்டிய திருத்தங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள், உயிரி பாதுகாப்பு என்பதை தேச பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள். வன உயிரிகளை பாதுகாப்பது மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை சீர்திருத்துவது மற்றும் நவீனப்படுத்துவது என்பதாக அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறையை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பரவல் எங்கிருந்து வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமே இந்த போராட்டத்தில் முடிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். 

பொருளாதார தாக்கம் குறித்து:

பொது சுகாதாரத்திற்கும், உற்பத்திக்கும் இடையிலான இயக்கவியல் உறவினை புரிந்து கொண்டவர்கள் மார்க்சியவாதிகள். உற்பத்தியில் தற்காலிக முடக்கம் இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். உலக முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும் முன்பே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அது நோய் பரவலில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. சீனாவை பொருத்தமட்டில் தற்காலிக முடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சோசலிச கட்டமைப்பால் கிடைத்த பெரும் நன்மை ஆகும்.

இருவகையான பொருளாதார திட்டங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிர் காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் செய்யவேண்டிய உதவிகள். இரண்டாவது ஊரடங்கு முடிந்த பிறகாக தேவைப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள்.

ஊரடங்கு காலத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கோரி விண்ணப்பிப்போருக்கு 6 மாதங்களுக்கு ஊதிய காப்பீடு மற்றும் கூடுதலாக விலைவாசி மானியம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் நிறுவனங்கள் இக்காலத்தில் வேலையில்லாக்கால இன்சூரன்ஸ் தொகை பெற்றுள்ளன. அவற்றில் பணியாற்றும் 4கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் உதவிபெற்றுள்ளார்கள். 

தற்காலிக உதவிக்காக விண்ணப்பிப்போருக்கு தற்காலிக உதவி அறிவிக்கப்பட்டது அவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி அழைப்பு அறிவித்து அதன் மூலம் உதவியை கொண்டு சேர்த்தார்கள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தாருக்கு பண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு நிதியமைச்சகத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 15 ஆயிரத்து 600 கோடி யுவான்கள் (ரூபாயில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடிகள்) ஒதுக்கப்பட்டதாக அந்த துறையின் துணை இயக்குனர் வாங் ஜிக்ஜியாங் தெரிவிக்கிறார்.  இது சீனாவின் மத்திய அரசு ஒதுக்கிய தொகையாகும். மாகாணங்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அவர்கள் பங்கும் சேர்த்து உதவிகள் தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மக்களுக்கு நேரடி நிதி உதவி செய்கிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் குவாங்க்டாங் மாகாணத்தில் பைஷலோங் என்ற கிராம கமிட்டி தனது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் யுவான்கள் (குழந்தைகள், சிறுவர்கள் உட்பட)  வழங்குவதாக அறிவித்தது. விவசாய வேலைகள் முடங்கியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கடைவீதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு கூப்பன்களை உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனர். 

நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு தவிர உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியும், மானியக் கடனும் தரப்பட்டது. சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டங்கள்:

2008 ஆம் ஆண்டு எதிர்கொண்ட உலக பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய பாதிப்பை இப்போது எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் (2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி) சீனாவின் தொழில்துறை உற்பத்தியானது  13.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் சில்லறை வணிகம் 20.5 சதவீதம் குறைந்திருந்தது. இவையெல்லாம் கடுமையாக விளைவுகளே ஆகும்.

ஏப்ரல் மாத கடைசியில் சீனாவின் வேலையின்மை விகிதம் 20.5% ஆக இருக்கலாம் என ஜோங்டான் செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பின்படி 7 கோடிப்பேர் வேலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். 

வேலையின்மையை எதிர்கொள்வதை தனது அவசர அவசியமுள்ள நடவடிக்கையாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைகளில் 10 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிறுவனங்களில் 4 லட்சம் தொழிலாளர் பணியிடங்களுக்கான தேவை கண்டறியப்பட்டு தொழிலாளர்களை அமர்த்த முன்கை எடுத்திருக்கிறார்கள். 

முதலாளித்துவ நாடுகளின் திறனுள்ள தொழிலாளர்கள் பசியிலும் வேதனையிலும் அச்சத்திலும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இது உற்பத்தியை மீட்டமைப்பதில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்து.

சீன அரசானது இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவது முக்கியம். அதற்காக 1 லட்சத்து 92 ஆயிரம் சிறப்பு வாகனங்கள், 367 சிறப்பு ரயில்கள், 1462 கார்கள் மற்றும் 551 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் 5.03 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கவிருக்கிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை பொருத்தமட்டில் சீனாவின் எதிர்காலம் உலக சூழலை பொருத்தே அமையும். 

மே மாத இறுதியில் சீனாவின் ’இரண்டு பேரவைகள்’ கூடி விவாதிக்கவுள்ளன. கொரோனா நோய் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த நிகழ்வு எதிர்வரவுள்ள பொருளாதார சவால்களைக் குறித்து விவாதிக்கவிருக்கிறது. பொருளாதார முனையில் சீனாவின் போராட்டம் அதன் பிறகு தெளிவாகலாம். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என சீனாவின் ஏடுகள் தெரிவிக்கின்றன.

 • மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையிலான ஊக்கத்திட்டம் அறிவிக்கப்படும். (வேலையில்லாக்கால நிவாரணத்தை உயர்த்துதல் உள்ளிட்டு) 
 • கட்டமைப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தை கவனத்தில் கொண்ட நிதிச் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.
 • சிறு குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்படும், அவர்களின் வரிகள் தள்ளுபடி செய்யப்படும்.
 • ஒவ்வொரு உள்ளூர் அரசு நிர்வாகமும் தங்கள் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. (இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேர்மாறானதாகும்)
 • உற்பத்தி பழைய நிலைமைக்கு திரும்பியவுடன் வழங்கல் தொடர்பும் சீராக்கப்படும்.
 • தனது சந்தையை உலகிற்கு திறப்பது மற்றும் உள்நாட்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.
 • பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தின் முதன்மை நோக்கம் வேலைவாய்ப்பை மீட்டமைப்பதாகவும், ஏழை மக்களை பாதுகாப்பதாகவும் இருக்கும்.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வெட்டுமாறு ஆலோசனைகள் வைக்காமல் இல்லை. முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் அல்லாது 30 சதவீத தொகையை நலத்திட்டங்களுக்கு செலுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லாக் கால காப்பீடு, பணிக்கால விபத்துக் காப்பீடு மற்றும் பேறுகால காப்பீட்டு தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது முதலாளித்துவ அறிஞர்களின் எதிர்பார்ப்பாகும். பொருளாதார தளத்தில் எழக்கூடிய சவால்களை அந்த நாடு எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்த நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே வறுமை ஒழிப்பு இலக்கை நோக்கியும் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது. உலகம் நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டு அளவுகோலுக்கு கீழே ஒருவரும் வாழாத நாடாக சீனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த கட்சி வகுத்துக்கொண்ட மிக முக்கியமான இலக்கு. வைரசை எதிர்கொள்வதில் கிடைத்த வெற்றியைப் போலவே இதிலும் வெல்வோம் என்கிறார்கள்.

வறுமையும், நோயும் மனித குலத்தின் பொது எதிரி. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் சோசலிசமே உற்ற துணையாகும் என்பதை சீனா எடுத்துக் காட்டட்டும்.

citu struggle

ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

  (ஏ ஆர் சிந்து,  மத்திய குழு உறுப்பினர்,  சி பி எம்)

தமிழில்: ஜி.பாலச்சந்திரன்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:

“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது. வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின் கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின் சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின் வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில் அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”

அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த, வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.

பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான  “எல்லோ வெஸ்ட் “’இயக்கம்  (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருப்பர்)  இன்னும் தொடர்கிறது  இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும், குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும், திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின் பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின் ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.

“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள். பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும் ‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும், பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள் அணிவகுத்தனர்.

வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும் பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர். ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.

இந்தியாவில்:

எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும் இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள் ‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை ‘  இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது. முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில்   தகர்க்கப்பட்டன,

உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும் 92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில் 46 சதவீதமான  57 சதவீத சுய தொழில் புரிவோர் மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ 5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும் ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின் வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).

கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த, வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர். இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால்  ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும். பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற, 2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர், மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக போராடினர்

வளர்ந்துவரும் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை:  இந்தியாவில் தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு, விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின் நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,( கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர் கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க  சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின் போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான், வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின் கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)  அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின் சில முக்கிய பிரச்சனைகளை நடை  பெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..

முன்னோக்கிய பாதை:

நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.

ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது, பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும் மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத, தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.

அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது. பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க, வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப் போகிறது.

 எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான்   தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..

தமிழாக்கம்: ஜி.பாலசந்திரன்

சோஷலிசமே தீர்வு

தமிழில்: நெய்வேலி மு. சுப்ரமணி

1936 அக்டோபர் 26-ல் ‘மாத்ருபூமி’ வார இதழ் இந்தக் கட்டுரையை வெளியிட்டபோது, இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்டாக ஆகியிருக்கவில்லை. பி.சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே ஆகியோரின் இடைவிடாத தலையீட்டின் பலனாக கே. தாமோதரன், என்.சி. சேகர், பி. கிருஷ்ணப்பிள்ளை, இ.எம்.எஸ். ஆகியோர் சேர்ந்து 1937-ல் தான் கம்யூனிஸ்ட் குழுவை உருவாக்கினர். பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழிகாட்டியாகத் திகழ்ந்த இ.எம்.எஸ்-ன் அறிவுக் கூர்மை எத்தனை எதார்த்தமாகவும், நுட்பமாகவும் இருந்தது என்பதற்கான வெளிப்படைச் சான்றுதான் “சோஷலிசமே உலகின் ஒரே பாதுகாவலன்” என்று முழங்குகின்ற இந்தக் கட்டுரை. 1930களின் முற்பகுதி முதல் அறுபதுகளின் இறுதிக்காலம் வரை கேரளத்தின் கூட்டுவிவாத அரங்குகளை ஒளிவீசச் செய்த ஓர் அறிஞரின் ஆரம்ப கால வெளிச்சங்களை இங்கே காணலாம்.

சோஷலிசத்தின் தோற்றம் எது? அது எங்கே உருவானது? என்கிற விஷயத்தில் பலரும் பலவித கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் தொன்மைக்காலம் முதலாகவே ஒரு போராட்டம் நடப்பதில், சமூகத்தின் பக்கம் நின்று வாதாடுகின்ற, தனிமனித சுதந்திரத்தைப் பேணிக் காத்து பொதுவான நீதியை வலுப்படுத்துகின்ற, எந்தவொரு விஷயத்திலும் சோஷலிசத் தத்துவம்  அடங்கியுள்ளது என்பதால் சோஷலிசம் மனித குலத்தின் இயல்பான நியதிதான் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.

இவர்களது பார்வையில் மனித குலத்தின் வரலாறுதான் சோஷலிசத்தின் வரலாறும் ஆகும். ரஷ்யாவில் சோவியத் கூட்டமைப்பு என்பதைப் போல, மலபாரில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையிலும் இவர்கள் சோஷலிசத்தைப் பார்க்கிறார்கள். புகைவண்டி, தபால்-தந்தி போன்றவற்றில் ஏகபோக உரிமையும் நிர்வாகப் பொறுப்பும் இருப்பதால், இன்றைய (1936) இந்திய அரசிலும் கூட சோஷலிசத் தத்துவம்  அடங்கியுள்ளது என இவர்கள் வாதிடுகின்றனர்.

மற்றொரு குழுவினரின் கருத்துப்படி, கார்ல் மார்க்ஸ்தான் சோஷலிசத்தின் பிதாமகன். அவரது படைப்புகள் வெளியாகும்வரை சோஷலிசமே இந்த உலகில் இருக்கவில்லை. இதைத் தவிர, இன்னும் ஒரு பகுதியினர் ப்ரெஞ்சுப் புரட்சிதான் சோஷலிச சிந்தனையை தோற்றுவித்தது என்று கருதுகின்றனர். இவை அனைத்திலுமே எதார்த்தத்தின் கூறுகள் உண்டு. எனினும் எந்தவொரு கருத்திலும் முழுமையான உண்மையும் இல்லை!

தொழிற்புரட்சி

18-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் உலகம் முழுவதையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு நடந்தது. அதுதான் தொழிற்புரட்சி! நீராவி இயந்திரம் கண்டுபிடித்து பொருளுற்பத்திக்கு அதைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்ததுமே இந்தத் தொழிற்புரட்சி உருவாகத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் துவக்கம் முதலான வரலாற்றை இந்தச் சிறிய கட்டுரையில் அடக்குவது எளிதல்ல. சோஷலிசத்தின் வரலாற்றில் அதற்கான தொடர்பும் குறைவுதான் என்றாலும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சில உளவியல் மாற்றங்கள் இதன் விளைவாக ஏற்பட்டதால் அதனை சுருக்கமாக இங்கே தருகின்றேன்.

முற்றிலும் மாறிய பொருளுற்பத்தி முறை

பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் தத்தமது கிராமங்களிலோ, நகரங்களில் பல்வேறு பகுதிகளிலோ இருந்தபடியே தங்களின் விருப்பப்படி பொருட்களை உற்பத்தி செய்வது அல்லவா வழக்கம்! அதற்குத் தேவையான கருவிகளை அவர்களே தங்கள் பணத்தைக் கொண்டு வாங்குவதோ அல்லது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு அவற்றை உரிமையாக்கிக் கொள்ளவோ செய்வார்கள். சொந்தப் பணமாக இருந்தால் பொருளை விற்றுக் கிடைத்த பணம் முழுவதையும் தமதாக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி மட்டுமே இதிலிருந்து செலுத்த நேரிடும். எந்தவொரு நிலையிலும் உற்பத்திக்கான கருவிகளும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களும் அவர்களின் உடைமையாகும்.

இயந்திரங்களின் வருகையுடன் இத்தகைய முறையெல்லாம் போய்விட்டது. மிகப் பெரிய இயந்திரங்களை எங்காவது ஒரே இடத்தில்  வைத்து மட்டுமே இயக்க முடியும் என்பதால் தொழிலாளர்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும். உற்பத்திக் கருவியாகிய இயந்திரம் அதிக விலையுடையது என்பதால் அதை சொந்தப் பணம் கொண்டோ, கடன் வாங்கியோ நிறுவுவதற்குத் தொழிலாளர்களால் இயலாமல் போனது. அதனால் பொருள் முதலீடு செய்யத் திறனுள்ள ஒருசிலர் மட்டுமே அவ்வாறு நிறுவத் தொடங்கினர்.

உற்பத்தி இயந்திரங்களில் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லாமல் போனபோது, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களும் அவர்களுடையது இல்லை என்றாகிப் போனது!  இயந்திரங்களின் உரிமையாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் உடைமையாளர் ஆயினர். தொழிலாளர்களுக்கு கூலி மட்டும் கிடைக்கத் தொடங்கியது. கைவினைஞரில் ஒரு பெரும்பகுதியினர் இதற்கு முன்னரும் (இன்றைய கைத்தறி நெசவாளர்களைப் போல) கடன் வாங்கி வேலை செய்திருந்ததால், அதிக வட்டி விதித்த கடைக்காரர்களின்  கீழிருந்தபோதிலும் அதைத் தாண்டி அவர்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர். வட்டியைத் தவிர வேறொன்றும் முதலாளிக்குத் தரவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. இயந்திரத் தொழிலோடு சேர்ந்து வெளியிலும் அவர்கள் முதலாளியின் கையில் அகப்பட்டுக் கொண்டனர். ஊதியத்திற்கு மட்டுமே அவர்கள் அருகதை உள்ளவர்கள் என்றானது. இத்தகைய புதிய ‘முதலாளி-தொழிலாளி’ உறவின் கீழ் இருக்கின்ற கட்டமைப்பைத் தான் முதலாளித்துவம் என்று சோசலிச படைப்புகளில் அவர்கள் கூறுகின்றனர்.

முதலாளியின் லாபமும் தொழிலாளியின் துயரமும்

இயந்திரம் வாங்கவும் உழைப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் தேவையான பணம் கைவசம் உள்ளவர்களுக்கு இது நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது. பெருமளவில் மூலப்பொருட்களை வாங்குவதற்கு இயன்றதால், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கவும், அவர்களால் முடிந்தது. பெரும்பான்மையினரான தொழிலாளர்களுக்கு உற்பத்திக் கருவிகளோ, பிறிதொரு வகையில் முதலீட்டுத் தொகையோ இல்லாதிருந்ததால் என்ன ஊதியம் தந்தாலும் தொழிற்சாலை முதலாளியிடமே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. விலைமலிவான மூலப் பொருட்கள், குறைவான ஊதியம் வழங்கல் இவற்றின் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்ததன்  விளைவாக முதலீடு செய்தவர்களுக்கோ லாபம் அதிகரித்தது.

இந்த லாபத்தில் இருந்து மீண்டும் இயந்திரங்களை வாங்கி, உற்பத்தி அளவை அதிகரிக்கவும், கைவினைஞர்களை நசுக்குவதற்காக பொருட்களின் விலையை கடுமையாகக் குறைத்தும் இந்த முதலாளிகள் தமது சொந்த நலன்களுக்காகப் இந்த அமைப்பைப் பயன்படுத்தியிருந்தனர். கைவினைஞர்கள் நலிவடைதலும், இயந்திர உற்பத்தி காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைதலும் சேர்ந்து கூலி வேலைக்கு என்றே விதிக்கப்பட்ட உழைப்பாளர்கள் அதிகரிக்கலாயினர். அவர்கள் வேலை கிடைப்பதற்காக தங்களுக்கிடையே போட்டியிட்டுக் கொண்டதும் முதலாளிகளுக்கு சாதகமானது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தொழில்துறையில் முன்னேற்றமாகவும், ஊதியக் குறைவின் புதிய சோதனைக் காலகட்டமாகவும் அமைந்திருந்தது. தொழிலாளர்களின் வயிறு ஒட்டிப் போனது. இதுதான் தொழிற்புரட்சி வரலாற்றின் சுருக்கமான வடிவம்.

சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தினமும் 15-16 மணிநேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டனர். எனினும் வயிறு நிறைய உண்பதற்கான ஊதியம் அவர்களுக்குக் கிட்டவில்லை. தொழிற்சாலைகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து ஆங்கிலேய நாடாளுமன்றம் நியமித்த ஒரு குழு நடத்திய விசாரணை நெஞ்சகம் நடுங்கும்படியான பல உண்மைகளை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது. ‘இயந்திர யுகம்’ ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துவதற்குப் பதிலாக கீழேதான் தள்ளியுள்ளது என்பது தெளிவானது.

கற்பனாவாத சோஷலிசம்

நவீன முதலாளித்துவத்தின் மேற்கூறிய குறைபாடுகளைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்த மனிதநேய மிக்கவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்கள் இதை எதிர்க்கத் தொடங்கினர். இதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்களின் நலனை இலட்சியமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு குறித்து அவர்கள் பேசத் தொடங்கினர். ஓவன் என்பவர் இங்கிலாந்திலும், செண்ட்ரூ சைமன், ஃபூரியே ஆகியோர் ஃப்ரான்ஸிலும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முதன்முதலாக வெளியிடத் தொடங்கினார்கள். பின்பு நவீன முதலாளித்துவம் அந்தந்த நாடுகளில் வளர்ந்துவரத் தொடங்கியதோடு இணைந்து இத்தகைய கருத்துடையோர் இதர நாடுகளிலும் உருவாயினர். அநியாயங்களையும் அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு மக்கள் திரட்சி சிறந்த எண்ணங்களை இறுகப் பற்றிக் கொண்டு எல்லாத் திசைகளிலும் இருப்பதனால் முறைகேடுகளின் அடிப்படையிலான முதலாளித்திற்குப் பின் அனைத்து திசைகளிலும் சோஷலிசமும் வளராமல் தீர்வு ஏற்படாது. இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து இங்கே உருவாகியுள்ள காந்தியமும் இதனுடைய ஒருவிதமான பிரிவுதான்

நவீன முதலாளித்துவத்தின் அநீதிகளை எதிர்ப்பதோடு நியாயத்தை நிலைநாட்டும் வகையிலான பொருளாதாரப் பங்கீட்டை இலட்சியமாக்குவதையும் செய்வது என்பதைத் தவிர, கற்பனாவாத சோஷலிசத்திற்கு என்று பொதுவாகக் குறிப்பிடத்தக்க யாதொரு சிறப்பம்சமும் இல்லை. இந்தச் சீர்கேடுகளை அழித்தொழிப்பது எப்படி என்பதில் பலவித கருத்துடையோர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளிடையே உண்டு.

இயந்திரத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பவர்கள்; இயந்திரத்தை சொந்தமாக வைத்திருக்கும் முதலாளி ஒரு நல்ல மனிதராக இருந்தால் நியாயமான பங்கீடு சாத்தியம் என்று எதிர்பார்ப்பவர்கள்; மத தத்துவங்களுடைய பிரச்சாரம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்; உற்பத்தியும் பங்கீடும் பொதுவுடைமையின் கீழ் இருக்க வேண்டும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதை இப்படி உருவாக்க வேண்டும் என்றோ, வந்தபிறகு அதன் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றோ உறுதியான முடிவுக்கு வந்திராதவர்கள் – இப்படி பலதரப்பட்டவர்களும் இவர்களிடையே உண்டு.

உலகம் முழுவதும் நலமாக இருக்கவேண்டும் என்ற விருப்பம்தான் இவர்களது எண்ணங்களுக்கும் செயல்களுக்கு அடிப்படை. எனினும் அதனுடைய பயன்பாட்டு முறைகள் குறித்து, நிகழ்வுகளின் எதார்த்தத்தைப் பொறுத்து அறிவுக் கூர்மையுடன் சிந்திக்கவோ, அதன் அடிப்படையில் தெளிவாக இயக்க திசைவழியை நிர்ணயிக்கவோ இவர்களுக்குத் திறன் இல்லை. அதனால்தான் இவர்கள் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முதலாளித்துவத்தின் தீமைகளை வெளிக்கொண்டு வருவதும், சமுதாயத்தின் கவனத்தை அதில் ஈர்க்கச் செய்வதும்தான் சோஷலிசத்தின் வளர்ச்சியில் இவர்களுக்கான இடம். இவர்களது பிரச்சார நடைமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட தேசியப் பிரச்சனைகளுக்குப் பதிலாக சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் சமூகவியலாளர்கள் என்ற பொருளில்  இவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

விஞ்ஞான சோஷலிசம்

சோஷலிசத்திற்கு அறிவியல் ரீதியாக ஓர் அடிப்படை இடம் பெற்றுத் தந்தவர்கள் கார்ல் மார்க்சும் ஃப்ரெடரிக் எங்கெல்சும் ஆவர். இவர்களுடைய சிந்தனைக்கும் செயலுக்குமான அடிப்படை வெறும் கற்பனையான கனவுகளோ, உணர்ச்சிகரமான மனித நேயமோ அல்ல. முதலாளித்துவ அமைப்பில் உள்ள சமுதாய சக்திகளை மிக விரிவாக ஆய்வு செய்து அதில் மறைந்து கிடக்கும் அநீதிகளையும் அவற்றை இயக்க ரீதியில் எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியதுதான் இவர்கள் இருவரின் தனிச்சிறப்பு!

தங்களின் அனுபவங்களுக்கும் மேலாக, ஏராளமான படைப்புகளைக் கற்றறிந்த பிறகு இந்த இரண்டு சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களை விளக்குவதற்கு இந்தச் சிறிய கட்டுரையில் சாத்தியமில்லை. அவற்றில் முக்கியமான சில சிறப்பு அம்சங்களை மட்டும் இங்கே எடுத்துக் கூறுகிறேன்.

 

 1. சமுதாயத்தை அரசியல், பொருளாதாரம், மதம், கலை என வெவ்வேறு பகுதிகளாகப்பிரிப்பதற்கு இயலாது. சமூக வாழ்க்கை ஒன்றுதான் பிரிக்கமுடியாதது. அதன் அடிப்படை பொருளுற்பத்தியில் உள்ள பரஸ்பர உறவுதான். உற்பத்தி முறை மாறியதோடு கூடவே அரசியல் இயக்கத்திலும், குடும்ப வாழ்க்கையிலும், மதத்திலும், கலைப் பார்வையிலும் மாற்றங்கள் வரத் தொடங்கும். பொருளுற்பத்திச் சாதனங்களை கைவசம் வைத்திருக்கும் மக்கள் பிரிவு – அதாவது வர்க்கத்தின் நிலையை ஒட்டியே இவையும் மாறும்.
 2. முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து தனிப்பட்ட வகையிலான ஒரு சமூக அமைப்பு வளர்ந்து வருவதுண்டு. முதலாளித்துவத்தின் முதன்மை நோக்கமான சொந்த லாபத்திற்கு ஏற்ற, அதற்கு இணக்கமான, அரசியல் அமைப்பு, மதம், இலக்கியம் போன்றவை அதில் இடம்பெற்றிருக்கும். அவற்றை ஒருசேர எதிர்க்காமல், முதலாளித்துவத்தின் பொருளாதார சீர்கேட்டை மட்டும் எதிர்க்கவியலாது. இவற்றிற்கெல்லாம் மையமான முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தில்புதியதோர் அமைப்பை உருவாக்குவதுதான் தொழிலாளர்களின் கடமையாகும்.
 3. இந்தக் கடமை, விரும்பியது போல செயல்படுத்தப்பட வேண்டுமென்றால், தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக ஒன்றுசேர வேண்டும். அரசு நிர்வாக இயந்திரம், நீதி, இலக்கியம், கலை போன்றவற்றின் இயக்கம் அதுவரை முதலாளிகளின் கையில் இருந்ததால், அவற்றைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் அரசியல் அமைப்பை அவர்கள் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். தொழிலாளர்கள் ஒன்றுசேரத் தொடங்கினால், பெரும்பான்மையோர் ஆட்சி, மக்களாட்சி இவையெல்லாம் இடம்பெயரும். சத்தியம், நியாயம், சமத்துவம் எல்லாம் முழுதுமாக அழியும். கலை கலைக்காகவே என்னும் கூக்குரல் அடங்கிவிடும். முதலாளிகளின் வர்க்க நலனை பாதுகாக்க உதவும் என்ற  காலத்திற்கு மட்டும் இவற்றின் புனிதத்தை நிலைநிறுத்தப்படும். அதனால் புரட்சிக்கு முன்னால் முதலாளித்துவத்தை அச்சமின்றி எதிர்க்கவும், புரட்சிக்குப் பிறகு அதன் மிச்சசொச்சங்களை இரக்கமென்பது துளியுமின்றி அடக்கிவைப்பதும், வர்க்க நலன்களை அழித்தொழிப்பதும்வேண்டும். இதன் விளைவாக வர்க்கபேதமற்ற சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், ஊட்டச் சத்துக்களை உட்கொள்ளவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாய்ப்பளிக்கின்ற ஒரு சமூக அமைப்பு உருவாகும். அது நிறைவேறுவதற்கான செயல்களை செய்வதற்குத் தொழிலாளி வர்க்கம் ஓர் அரசியல் கட்சியாகவும் உருவெடுக்க வேண்டியிருக்கிறது.

அறிவியல் ரீதியாகச் செயல்படுகின்ற ஒரு தத்துவக் கருத்தோட்டம், பயன்பாட்டிற்குரிய பொருளாதார அறிவியல், கவர்ச்சிகரமான, தெளிவான ஓர் இலட்சியத்துடன் கிளர்ந்து எழச் செய்கின்ற ஒரு பிரச்சார முறை – இவைதான் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உலகிற்குத் தந்த சோஷலிசத்தின் சுருக்கம். ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்தரமான ஓர் இடம், வழிபடத் தக்க  தலைமைப் பதவி அவர்களுக்குக் கிடைக்க வகை செய்தது, நடைமுறை ஒருங்கிணைப்புப் பணியில் அவர்கள் எடுத்துக்கொண்ட முக்கியமான பங்குதான்! சாதி, மதம், தேசம், வயது போன்ற யாதொரு வேறுபாடுமின்றி உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு சங்கத்தின் கீழ் ஒன்றிணைத்துக் காண வேண்டும் எனும் அவர்களின் விருப்பத்தை 1848-ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்று அறியப்படுகின்ற அதிகாரபூர்வ வெளியீட்டில் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதற்கு ஒரு வருடம் முன்னதாகத்தான் ‘கம்யூனிஸ்ட் கழகம்’ நிறுவப்பட்டிருந்தது. ‘புரட்சி ஆண்டு’ என்று அழைக்கப்படுகின்ற கி.பி. 1848-ல் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அரசியல் புரட்சிகள் கிளர்ந்தெழுந்தபோது, அவற்றில் முழுமையாகப் பங்கேற்று அரசியல் புரட்சிக்கு உதவும் வகையில் அவர்கள் உற்சாகமூட்டினர். ஆனால் அன்றைய புரட்சி பழமைவாதத்தின் வெற்றியில் முடிவுற்றதால் விஞ்ஞான சோஷலிசம் அரசியல் ரீதியாக தற்காலிகமாக தோல்வியை சந்தித்தது. இருந்தபோதிலும் அதன் பின்னரும் அவர்களது முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. அதன் விளைவாக 1864-ல் சர்வதேச தொழிலாளர் சங்கம் தோன்றியது. அதன் நிர்வாக அமைப்பு முறையை வடிவமைக்க முதலில் நியமிக்கப்பட்டவர் மாஜினி என்ற இத்தாலி நாட்டு புரட்சிக்காரர் என்றபோதிலும், அவர் தயாரித்தளித்த முன்வரைவு திருப்திகரமாக இல்லாததால், பின்னர் அதனை மார்க்சே செய்ய நேர்ந்தது. முறையாக ஒவ்வொரு வருடமும் ஆண்டுப் பேரவை, நிரந்தரமான ஒரு நிர்வாக அமைப்பு, நாடுகள் தோறும் ஒவ்வொரு தேசியக் கிளைகள் – இவைதாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் சுருக்கமான நிர்வாக வடிவம்.

அதிகபட்சமாக பத்தாண்டுகள் மட்டுமே நிலைத்த இந்த அமைப்பு தொழிலாளி வர்க்கத்திற்கு இரண்டு முக்கியமான அம்சங்களைத் தந்தது.

1)         விஞ்ஞான சோஷலிசத் தத்துவத்தை கடைப்பிடித்து தொழிலாளர்களை எவ்வாறு ஒன்றிணைக்க வேண்டும் என்று அதனை உருவாக்கியவர்களிடமிருந்தே கிடைத்த விளக்கம். ப்ரவுதான் (Proudhon), பக்கூனின் (Mikhail Bakunin) போன்ற பல்வேறு கருத்துக்களை உடைய பலரும் சங்கத்தின் செயல்பாட்டு முறையை உருவாக்க முயன்றனர் என்றாலும்  மார்க்சின் கருத்துக்களையே சங்கம் எப்போதும் ஏற்றுக் கொண்டு வந்தது.

2)  ஃப்ரெஞ்சுப் புரட்சி. இது சர்வதேச தொழிலாளர் சங்கத்துடைய, மார்க்சுடைய உருவாக்கமாக இல்லையெனினும், இந்த நிகழ்வில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது. புரட்சியின் விளைவாக உருவெடுத்த கம்யூன் தொழிலாளர்களுக்கு ஏற்ற ஓர் ஆட்சியதிகார இயந்திரம்தான் என்று சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பெயரால் மார்க்ஸ் அறிவித்திருந்தார். புரட்சிகரமான சமயங்களில் சோஷலிசவாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் மார்க்சின் கட்டுரைகள் விளக்கியதற்கும் மேலாக தொழிலாளர் ஆட்சியதிகாரத்தின் தன்மையையும், 1871-ஆண்டு நடந்த புரட்சியும் அவர்களுக்கு விளங்கவைத்தது.

பின்னர் உருவான ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளர் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தபோது, 1871 பாரீஸ் கம்யூன் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் லெனின் சோவியத்துகளை உருவாக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.

1873-ம் ஆண்டோடு சர்வதேச தொழிலாளர் சங்கம் மறைந்து போனது என்றாலும் உள்ளார்ந்த அறிவுடைத் தொழிலாளர்கள் உலக அளவில் ஓர் அடிப்படையில் ஒன்றிணைந்து தங்களின் வர்க்க நலன்களுக்காகப் போராட வேண்டியது எப்படி என்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதனுடைய குறுகிய ஆயுள் காலத்திற்குள்ளாகவே அது தெளிவாக்கியது.  சுருக்கமாகக் கூறினால், விஞ்ஞான சோஷலிசத்தின் சரியான தருணத்தையும் பயன்பாட்டையும் இந்த முதலாம் உலகத் தொழிற் சங்கம் தொழிலாளர் உலகத்திற்குக் கற்றுத் தந்தது.

இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம்

மார்க்சின் தலைமையிலான சர்வதேச தொழிலாளர் அமைப்பு மறைந்து போனது என்றாலும் சர்வதேச உணர்வோ, சோஷலிச உணர்வோ மறைந்துவிட்டது என்று அதற்குப் பொருளல்ல. அதன் பின்னரும் அது வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வந்தது. ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்தது. பிஸ்மார்க் என்ற ஜெர்மன் ஆட்சியரின் அடக்குமுறைகளால் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்திலோ ஃபேபியன் குழு, தொழிலாளர் கட்சி போன்ற பெயர்களில் சோஷலிஸ்ட் செயல்பாடு தீவிரமாக வளர்ந்தது. நாகரீகம் அற்றதாக, பழமையானதாகக் கருதப்பட்ட ரஷ்யாவிலும் கூட  தீவிரவாதச் செயல்பாட்டை, வன்முறைப் பாதையை கடைப்பிடித்த ஒரு சமூக ஜனநாயகக் கட்சி தோன்றியது. ஃபிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் மதிக்கத்தக்கதோர் அரசியல் செயல்பாட்டு அமைப்பாக மாறியிருந்தது!

இந்த நிலைமையில் தொழிலாளர்களின் இயக்கம் இப்படி சிந்திச் சிதறிக் கிடந்தால் போதாது என்ற ஒரு கருத்து சோஷலிச செயல்பாட்டாளர்களின் நெஞ்சங்களில் உதித்தது என்றால் வியப்பில்லை அல்லவா? 1889-ல் பாரீஸில் கூடிய ஒரு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மூலம் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது. ஒவ்வொரு நாட்டிலும் சோஷலிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் இதற்குப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவும், அதன் செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கவும் தொடங்கினார்கள்.

ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக நிலைமைகளை தெளிவாக்கும் புள்ளி விவரங்களும் இலக்கியப் படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு முறையான வகையில் வெளியிட சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு நிரந்தரமாகச் செயல்பட இந்த அமைப்பினால் இயன்ற போதிலும் இது பயணப்பட்டது சர்வதேசத் தொழிலாளர்களின் முதலாம் அகிலத்தின் பாதையில் அல்ல!

முதலாம் அகிலம் உலக அளவிலான புரட்சியாளர்களின் ஒரு சங்கமாக இருந்தது என்றால் இது பாராளுமன்ற ஜனநாயகவாதிகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்தது.  முதலாம் சங்கத்தின் செயல்பாட்டாளர்கள் புரட்சியின் அழிக்கவியலாத நிலைத்தன்மையில் உறுதிபெற்றவர்களாக இருந்தனர் என்றால், இரண்டாம் அகிலத்தின் தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்தது சட்டமன்றங்கள் மூலமான போராட்டத்தில்!

சுருக்கமாகக் கூறினால், இரண்டாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் விஞ்ஞானமும் இல்லை; சோஷலிசமும் இல்லை. ஆனால் சோஷலிசம் என்ற பெயர் மட்டும் எப்படியோ அதனோடு ஒட்டிக் கொண்டிருந்தது!

இந்த வேறுபாடு யுத்தம் குறித்து தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய நிலைபாட்டில் வெளிப்பட்டது. 1872-ல் பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான போர் வெடித்துக் கிளம்பியபோது, பிரான்ஸ் தொழிலாளர்கள் தங்களின் ஜெர்மன் தொழிலாளர் சகோதரர்களுக்கு உளமார்ந்த ஆதரவுடன் சோஷலிச வரலாறு குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், பல்வேறு நாடுகளில் முதலாளிகளுக்குள் நடைபெறும் சண்டை எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களையும் பாதிக்கிறது என்பதால் அதனை வலுவாக எதிர்ப்பது என்பதுதான் சோஷலிசத்தின் கடமை என்று அந்த நேரத்தில் (ஜெர்மனிக்கு எதிராக நிற்காது) எதிர்ப்பின்றி இருந்தார்கள். ஆனால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்திற்கு இவ்வளவு தெளிவான பார்வை இருக்கவில்லை.

மார்க்சியத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அவர்கள் யுத்தத்தையும் வெளிப்படையாக எதிர்த்தது சரிதான். ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும் யுத்தத்தின் மீதான வெறுப்பும் வெறும் புறத் தோற்றமாகவே இருந்தது. 1914-ல் வெடித்தெழுந்த உலகப் போரின்பொழுது இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது.  அதுவரையில் சோஷலிஸ்ட் தலைவர்கள் யுத்தத்திற்கு எதிரான தங்கள் நிலையை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் போர் துவங்கியதும் அவர்கள் ஆட்டம் காணத் தொடங்கினார்கள். தேசிய சோஷலிஸ்ட் சங்கங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தத்தமது நாட்டு அரசுகளுக்கு ஆதரவை உறுதிப்படுத்தலாயின. போருக்கான நிதி திரட்டிக் கொடுப்பது; போர்க்கால அமைச்சரவையில் இடம்பிடிப்பது; உலகளாவிய தோழமையையும் சோஷலிசத்தையும் கைவிட்டுவிட்டு தேசியத்தையும் முதலாளித்துவத்தையும் ஆதரித்துப் பிரச்சாரம் நடத்துவது ஆகிய இவற்றைத்தான் சோஷலிஸ்ட் தலைவர்கள் செய்தார்கள். நடைமுறையில் இதுவே இரண்டாம் உலகத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

இத்தகைய நடைமுறைக்கு எதிராக, எந்த நிலையிலும் போரினை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு, சிறுபான்மை எண்ணிக்கையினராக இருந்த போதிலும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு கட்சி உருவெடுத்திருந்தது. உலகப் போரை ஒவ்வொரு நாட்டிலும் இருந்த தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போராக மாற்றுவது என்பதுதான் அவர்களின் எண்ணம். எனினும் போரில் பங்கேற்கின்ற விஷயத்தில் எதிர்க்கருத்து உருவாகியதும், பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்துடையோர் உலகப் பெரும்போரில் இரு அணிகளில் இருந்து சண்டையிடவும் செய்ததால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் வீழ்ச்சியடைந்தது             என்றே கூறலாம்.

கம்யூனிசம்

இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் செயல்பட்ட காலத்திலேயே அதன் கருத்துக்களுக்கும், தலைமைக்கும் எதிராக ஒரு சங்கம் அதன் செயல்பாட்டாளர்கள் மத்தியில் உருவாகியிருந்தது.

தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து ஒரு புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் மார்க்சிய தத்துவத்திற்குப் பதிலாக நாடாளுமன்ற நடைமுறை மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற தவறான நம்பிக்கையை மட்டுமே புதிய சோஷலிஸ்ட் தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்றும் இந்தச் சிறுபான்மைக் குழுவினர் வாதிட்டனர்.

“பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம் அடிப்படையில் முதலாளித்துவரீதியில்தான் இருக்கிறது. முதலாளித்துவரீதியிலான ஒரு நிலவுடைமை வர்க்கமும், முதலாளித்துவ அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தொழிலாளி வர்க்கமும் தொழில் முதலாளித்துவத்தோடு ஒன்றிணைந்து உண்டாக்கத்தக்க ஒரு சூழ்நிலையை உருவாக்கவே இந்த முதலாளித்துவ நாடு விரும்புகிறது. இங்கே இருக்கும் தொழிலாளர்கள் சர்வதேச வணிகம், பிரிட்டிஷ் அடிமை நாடுகளின் வணிக உரிமைகளின் விளைவாக அதிகரித்து வரும் வருமானத்தை முதலாளிகளுடன் சேர்ந்து அனுபவித்து வருகின்றனர்”  என சில வருடங்களுக்கு முன்பு ஏங்கெல்ஸ் எடுத்துச் சொன்னது நடைபெற்று வருகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொண்டார்கள்.

முதலாளித்துவத்துடன் உடன்படிக்கை செய்து கொள்கின்ற தொழிலாளர் தலைவர்கள் மார்க்சின் தத்துவங்களை திருத்தி எழுதுகின்றனர். சோஷலிச சிந்தனை அனைத்து நாடுகளிலும் அதிகரித்து வருவது அவர்களது கவனத்தை ஈர்த்தது. இத்தகைய தலைவர்களின் ஒன்றுசேரலும், இந்த சிந்தனையாளர்களின் படைப்புகளும் தொழிலாளர் உலகத்தில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

யுத்தத்தை எதிர்த்து நிற்பது; தொழிலாளர் இயக்கத்தின் உலகளாவிய பார்வையை வலியுறுத்துவது; புரட்சியின் இன்றியமையாமையை எடுத்துரைத்துப் புரிய வைப்பது, சுருங்கக் கூறின், எந்தவகையிலான முதலாளித்துவத்தையும் தகர்த்தெறிதல் இவையே இவர்களின் நடவடிக்கைகளாக இருந்தன. ‘சோஷலிசம்’ என்ற புரிதலற்ற சொல்லுக்குப் பதிலாக மார்க்ஸ் முதன்முதலாகப் பயன்படுத்தியதும், புரட்சியைக் குறிப்பதுமாகிய ‘கம்யூனிசம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டார்கள்.

இந்த மனநிலை நீண்ட காலமாகவே இருந்தது என்றாலும் உலகப் போரோடு இணைந்து அது ஒரு தெளிவான வடிவமாக உருவானது. அதுவரையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாமகர்களும் தலைவர்களும் இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தனர். மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடித்து அந்தந்தக் காலத்தில் அரசியல் நிலையை ஆய்வு செய்கின்ற சிந்தனையாளர்கள் 1905 ரஷ்யப் புரட்சியைப் போன்ற மக்கள் நலச் செயல்பாடுகளுக்கான தலைவர்களுமாக இருந்தபோதிலும், சர்வதேச தொழிலாளர் நடவடிக்கையில் அவர்களுக்கு முக்கியத்துவம் அற்ற நிலைதான் இருந்து வந்தது. எனினும் உலகப் போரோடு சேர்ந்து இவர்கள் புகழ் வளர்ந்து வந்தது. போருக்கு எதிரான முழக்கம் துவக்க காலங்களில் மிகவும் பலவீனமாக இருந்தபோதிலும், போரின் விளைவாக தொழிலாளர்களின் துயரங்கள் பெருகியபோது கம்யூனிஸ்டுகளின் சமாதான கருத்து அவர்களிடையே வெகுவாகப் பரவத் தொடங்கின.

ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற பல நாடுகளிலும் புரட்சி கிளர்ந்தெழுந்தது. “உலகப் போர்க்காலத்தை உள்நாட்டுப் போராக மாற்றுக!”, “சண்டைக்குக் காரணமான முதலாளித்துவத்தை தோற்கடியுங்கள்!”, “அதிகாரம் யாவும் மக்களுக்கே!” – இப்படிப்பட்ட முழக்கங்கள் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. முதலில் ஜனநாயக ரீதியில் கிளர்ந்தெழுந்த ரஷ்யப் புரட்சி ஒரு சோஷலிசப் புரட்சியாக முழுமை பெற்றது. அதன் தலைவரான லெனின் தொழிலாளி வர்க்கத்தின் மீட்பர் என்ற நிலையில் போற்றுதலுக்கு உரியவரானார். சோஷலிசத்திற்கு இன்று குறிப்பிடத்தக்க ஒரு இடம் உருவாகிவிட்டது. புரட்சிகரமான, அறிவியல் ரீதியிலான சோஷலிசம் பயன்பாட்டிற்கு உரியதுதான் என்பதும் தெளிவானது.

ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்தை ஈர்த்த உடனடியான விஷயம் ரஷ்யாவில் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதுதான். குழப்பமானதொரு நிலையை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எதிரிப்படைகள் சோஷலிச ஆட்சியை வீழ்த்த முதலாளித்துவ அரசுகள் அனுப்பி வைத்த படைகள், ரஷ்யாவின் வாயிலை வந்தடைந்தன. அவற்றைத் துரத்தியடிக்க வேண்டும். எவரொருவரும் கடன் கொடுக்கத் தயாராக இல்லாததால் ரஷ்யா பொருளாதார ரீதியாக வளர்வது சிரமமானதாக இருந்தது. நாட்டின் உயர்வர்க்கத்தினர் கலகம் விளைவித்து தொழிலாளர்களின் ஆட்சியை எதிர்த்து வந்தார்கள்.  கடுமையான பஞ்சம் நிலவியது.

இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் சோஷலிச அரசாங்கத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்று ஒவ்வொரு நிமிடமும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தன. எனினும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ் இருந்த ரஷ்ய மக்கள் இவற்றை மனத் திடத்துடன் எதிர்கொண்டு வந்தனர். நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க தொழிலாளர்களின் ‘செம்படை’ உருவாகியிருந்தது. அது ரஷ்யாவில் இருந்த பழமைவாதிகளை  தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கியது. (இந்தப் பழமைவாதிகள் வெள்ளை ரஷ்யர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) மூச்சுவிட ஆசுவாசம் தேட சற்று கால அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொழிலாளர் அரசு முதலாளித்துவ நாடுகளுடன், அவமானகரமானது என்றாலும், சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது. பொருளாதார வளர்ச்சியில் அதன் கவனம் முழுவதும் குவிந்தது. புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இடைத்தரகர்களின் ஒரு சில விருப்பங்களை நிறைவேற்றும் ஒருவித ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் தியாகம் செய்தாவது இயந்திரங்களையும் தொழில் கருவிகளையும் வாங்கி தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. மிகப்பெரும் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், பாலங்கள் கட்டப்பட்டன. வெளிநாட்டு வணிகம் அரசுடைமை ஆனது. வேளாண் பணியையும் கூட்டாகச் செய்யத் தொடங்கினர். இது ஒரு  பக்கம்.

இன்னொரு பக்கத்தில், பள்ளிகள், நூலகங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், திரைப்படம், நாடகம் போன்றவற்றை ஊக்குவித்து கல்வியறிவை பெருக்கினார்கள். ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பெண்கள் ‘பிள்ளைப் பேற்றுக்கான வெற்று இயந்திரங்கள்’ என்ற நிலை மாறியது.

சுருங்கக் கூறின்,  புதியதொரு சமூகநீதி, புதியதொரு கலாச்சாரம், புதியதொரு கலைஞானம், புதியதொரு பொருளாதார அமைப்பு ஆகியவை புதிய (தொழிலாளர்களது) அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட ரஷ்யாவில் உருவாகின. இந்தப் புதிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்குக் கூட அதன் எதார்த்தத்தையோ, பயன்பாட்டையோ எதிர்த்துக் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்றானது.

புரட்சிக்குப் பின்னர் ரஷ்யா ஒரு பூலோக சொர்க்கமாகிவிட்ட்தோ என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு. அங்கே இருக்கும் ஆட்சிமுறையிலும், சமூக அமைப்பிலும் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களும் உண்டு. அவர்களிடம் ரஷ்யப் புரட்சியின் தலைவர்களில் ஒருவர் இப்படித்தான் கூறினார்: “ பல நூற்றாண்டுகளாக வளர்ந்து மண்டிக் கிடக்கின்ற புதர்க் காடுகளை அழிப்பதற்கு இத்தனை குறுகிய காலத்திற்குள் முடியும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை!” புரட்சிக்கு முன்னரும் இன்றைக்கும் இருக்கின்ற ரஷ்யாவை ஒப்பிட்டுப் பார்த்து நடைமுறையிலும் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மக்கள் அதிக வளர்ச்சியை அடைந்திருக்கிறார்களே என்றும், இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே இத்தனை அதிக வளர்ச்சியுற்ற தேசமோ, வளர்ச்சியை உருவாக்கிய அரசியல் கட்சியோ இருக்கிறதா என்றும்தான் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனையில் நிச்சயமாக ரஷ்யப் புரட்சி, அதனை உருவாக்கி வளர்த்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டைப் பெறும்.

ஆயினும், ரஷ்யாவில் ஒரு சோஷலிச சமுதாயம் நிறுவப்பட்டதனால் மட்டுமே பயனில்லை. இதர நாடுகளிலும் அது நடைமுறைப்படுத்தப்படாதபோது, ரஷ்ய சோவியத் அரசும் கூட ஆபத்திற்கு உள்ளாகும். அதனால் இதர நாடுகளிலும் புரட்சி நடத்தி, சோஷலிசம் நிறுவப்படுவதில் ரஷ்யத் தலைவர்கள் கவனம் செலுத்துபவர்களாக இருந்தனர். இந்த நோக்கத்துடனேயே, யுத்தத்திற்கு எதிராக இருந்த சோஷலிஸ்டுகளின் இயக்கத்தை மூன்றாம் உலகத் தொழிலாளர் சங்கம் அல்லது  சர்வதேச கம்யூனிஸ்ட் ஸ்தாபனமாக மாற்றினர். சோஷலிசத்தின் பிறப்பிடமாகிய ரஷ்யாதான் அதன் தலைமையிடம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை! இதர நாடுகளில் புரட்சி நடத்துவதற்குரிய நடைமுறைத் திட்டங்களை இந்தக் கூட்டமைப்பு ஆலோசிக்கத் தொடங்கியது என்றும் இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. ஆனால் முதலாவது நடவடிக்கை (ரஷ்யப் புரட்சி)யைப் போல இது வெற்றிகரமாக இல்லை என்பது இனிவரும் பத்திகளில் இருந்து தெளிவாகும்.

புரட்சியின் தோல்வியும் பாசிஸத்தின் எழுச்சியும்

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த நேரத்தில் ஐரோப்பாவில் மிகப் பெரும்பாலான நாடுகளும் புரட்சிக்கு உகந்த நிலையில்தான் இருந்தன. யுத்தம் காரணமாக ஏழைகளின் துயரம் இரண்டு மடங்காகப் பெருகியிருந்தது. ஏழைகளுக்கிடையில் அதிருப்தி வளர்ந்தது.

இதன் விளைவாக ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் புரட்சி துவங்கியது. ஜெர்மனியில் நடந்தது ஏறக்குறைய ரஷ்யப் புரட்சியைப் போலவே வெற்றி பெற்றதுதான். ஹங்கேரியில் சில நாட்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியே நடந்தது. ஆஸ்திரியாவும் ஒரு புரட்சி நாடாக இருந்தது. எனினும் இந்தப் புரட்சிகளுக்கெல்லாம் ரஷ்யப் புரட்சியுடன் மிக மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருந்தது. லெனினுடைய தலைமையின் கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரஷ்யாவில் உருவாகியிருந்தது போல வேறு எந்தவொரு நாட்டிலும் சுயமான வலிமை இல்லாதிருந்தது. மற்ற எல்லா இடங்களிலும் தொழிலாளர் இயக்கங்கள் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் கருத்துக்களை ஏற்றிருந்த மிதவாத சோஷலிஸ்டுகளின் கைகளில் இருந்தது. முதலாளிகளை தயவு தாட்சண்யமின்றி அடக்கி ஒடுக்கிவிட்டுத் தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் என்ற வழிமுறை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை. நாடாளுமன்றம் முதலான மக்களாட்சி அமைப்புகள் வழியாக தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தலாம் என்றும், தனிமனித சுதந்திரம் சோஷலிசத்தின் பாதையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான் என்றும் அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு ஒவ்வொரு புரட்சியின் விளைவாகவும் அந்தந்த நாடுகளில் தோன்றியவை ஜனநாயகரீதியான ஓர் ஆட்சி அமைப்பாக இருந்தன. அதில் தொழிலாளர்களுக்கு யாதொரு முக்கியத்துவமும் இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் நில உடமையாளர்களுக்கும் புரட்சிக்கு முந்தைய காலத்தைப் போலவே சுதந்திரம் இருந்தது. மிகவும் மிதமான பல தொழிற்சட்டங்களை தவிர தொழிற்சாலையை பொதுச்சொத்தாக ஆக்குவதோ, நிலப்பிரபுக்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவதோ நடைபெறவில்லை.

தொழிலாளி வர்க்கத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு ஒரு ‘செஞ்சேனை’யும் புதிய ஆட்சியமைப்பைப் பாதுகாக்க இருக்கவில்லை. பழைய அதிகாரிகளும் படைத்தளபதிகளும் தங்களின் சுகமான பதவிகளில் தொடர்ந்தனர். சுருங்கச் சொன்னால், ‘மிகக் குறைந்த அளவிலானதொரு சோஷலிசம் இணைந்து உருவான நாடாளுமன்ற ஆட்சிதான் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளுக்குப் பின்னர் உருவாகியிருந்தது.

உண்மையில், இதைக்கூட முதலாளிகள் விரும்பவில்லை. எனினும் புரட்சிக்குச் சாதகமான சூழ்நிலை நாட்டில் உருவாகியிருந்ததால் அவர்கள் இதனை எதிர்க்கவில்லை. சோஷலிஸ்டு தலைவர்களையும் அவர்கள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தனர். அவர்களுடன் உடன்படிக்கை செய்தபடியே காலம் கடத்தினார்கள். பின்னர் புரட்சிகர மனோநிலை சற்று குறைந்தபோது ( அவ்வாறு அது குறைவதற்கும் சோஷலிஸ்டுத் தலைவர்களையே அவர்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று தனியாக குறிப்பிட்டுச் சொல்வதும் பொருத்தமானதே) தங்களின் உண்மையான நிறத்தை (இயல்பை) வெளிப்படுத்தவும் முதலாளிகள் தயக்கம் காட்டியவில்லை.

பழைய தொழிலாளர் தலைவர்களையும் வேலையற்ற இளைஞர்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போக்கிரிகளின் சங்கங்களையும் இவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். சோஷலிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கத்தவரையும் தொழிற்சங்கங்களையும் ஒழித்துக் கட்டுவதற்கும் அமைப்பு ரீதியாக இவர்கள் ஏற்பாடு செய்தனர்.  ‘கருப்புச் சட்டை’க்காரர்களும், ‘பச்சை சட்டை’க்காரர்களும் தொழிலாளர் இயக்கங்களில் புகுந்து கலகம் விளைவிப்பது  சாதாரண நடைமுறையானது. வேலைநிறுத்தங்களையும், கிளர்ச்சிப் போராட்டங்களையும் சட்டரீதியாக நடத்தும்போது அங்கே சென்று ரகளை செய்கின்ற ரவுடிகளுக்கு குறைவான தண்டனையும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு கடுமையான தண்டனையும் தருவதென்பது அரசுகளுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.  பாசிஸம் உலகில் உருவெடுக்கத் துவங்கிவிட்டது. இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதற்குப் பரவலான இடம் கிடைத்தது. பாசிஸத்தைப் பற்றி என்னவெல்லாம் கருத்து கூறினாலும் கீழ்க்காணும் எதார்த்தமான சில உண்மைகள் அனைவராலும் ஏற்கத்தக்கதாகவே இருக்கின்றன.

 1. அது கம்யூனிஸத்திற்கு, விஞ்ஞான சோஷலிசத்திற்கு எதிரான இயக்கம் ஆகும். தொழிலாளர் வர்க்க நலன்களை ‘தேசத்தின் பொது நலன்’ என்ற பெயரில் அது எதிர்க்கிறது.
 2. அதன் தலைவர்கள் வெளியே யாராக இருந்தாலும், உண்மையில் அதன் கடிவாளத்தைப் பிடித்திருந்தது அதன் தலைவர்களான முதலாளிகள்தாம்! அதிகாரத்தை அடைவதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர்கள்பாசிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். பின்னர் முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
 3. வளர்ந்து வருகின்ற முதலாளித்துவத்திற்கு சாம்ராஜ்ய சக்தி தேவை என்பதால் ஏகாதிபத்திய மோகம் பாசிஸத்தின் ஓர் இயல்பான தன்மையாகும்! அதனால் இயல்பாகவே அது யுத்தத்தை ஆதரிப்பதுடன் யுத்தத்திற்கு ஆதரவான மனப்பாங்கினை மக்களிடையே வளர்த்தெடுக்கவும் செய்கிறது.

வேறுவகையில் கூறவேண்டுமென்றால், வளர்ந்துவரும் சோஷலிச சக்திகளை எதிர்த்து முதலாளித்துவ ரீதியிலான சமூக அமைப்பைப் பாதுகாப்பதற்காக, முதலாளித்துவம் மேற்கொள்கின்ற தந்திரம்தான் பாசிஸம்! முன்னே கூறிய முதலாளித்துவத்தின் அனைத்து குணங்களும் பாசிஸத்தில் உண்டு. அதனுடைய ஜனநாயக நிறம் மட்டுமல்ல; முடிந்துபோன நிலவுடமைப் பிரபுத்துவத்தை சிதைக்கின்ற ஒரு சமூக சக்தி என்ற நிலைக்கு உதித்தெழுந்த முதலாளித்துவ வர்க்கம், நிலவுடமைப் பிரபுத்துவத்தின்  கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொதுமக்களின் மதிப்பிற்குரிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்ததால், ஜனநாயகத்தின் கடிவாளம் அதன் வசம் இருந்தது. அல்லது தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகத்தின் மூலம் வெள்ளையடிக்க (மூடி மறைக்க) அவர்களால் முடிந்தது.  எனினும் நிலப் பிரபுத்துவத்தின் ஆதிக்கம் தகர்த்தெறியப்பட்டதோடு சமூக மாற்றம் முழுமையானதுடன் சேர்ந்து முதலாளித்துவத்தின் அந்த இயல்பு காணாமல் போய்விட்டது. அது நிலவுடமைப் பிரபுத்துவம் போலவே மாறியது.

அதனையும் எதிர்ப்பதற்கும் புதியதொரு வர்க்கம் உதித்தெழுந்த பிறகு, முதலாளிகளால் தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகம் என்ற பெயரில் மறைத்து வைப்பதற்கு இயலாமல் போனது. அப்போது அந்தத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு முதலாளித்துவம் தன்னுடைய விஸ்வரூபத்தை எடுத்தது. அதுதான் பாசிஸம்!

ஒன்றுபட்டு எதிர்கொள்க!

உலகில் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள உள் முரண்பாடுகளும், கட்சிப் பிரச்சனைகளும் முடிவுற்று, பொது எதிரியாகிய பாசிஸத்திடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணைந்த போராட்டம் இன்றியமையாதது என்று சோஷலிஸ்டுகளுக்குப் படிப்படியாகப் புரியத் தொடங்கியது. இரண்டாம், மூன்றாம் சர்வதேச சங்கங்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் உலகப்போரின் போதும், அது முடிந்த பின்னரும் எல்லா இடங்களிலும் உண்டாயிற்று. தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருந்த வெற்றி கைநழுவிப் போனதில் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்திய மனோபாவம் மன்னிக்கத்தக்க ஒன்றாக கம்யூனிஸ்டுகளுக்குத் தோன்றவில்லை. கம்யூனிஸ்டுகளின் தயவு தாட்சண்யமற்ற அழித்தொழிக்கும் முறை சோஷலிசத்தின் லட்சியத்தின் முழுமைக்கு இடையூறாகும் என்று எதிர்த்தரப்பும் நம்பியது.

எங்கெல்லாம் சோஷலிச செயல்பாடும் தொழிலாளர் சங்கங்களும் இருந்தனவோ அங்கெல்லாம் சோஷலிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ‘இழுபறிப் போட்டி’ நடந்தது. அவ்வளவு ஏன்? பாசிஸம் உயரே எழத் துவங்கிய வேளையிலும் கூட இந்த மோதல் தொடர்ந்து நிகழ்ந்தது. கம்யூனிசத்தைக் காட்டிலும் அதிகம் ஏற்கத்தக்கது பாசிஸம் அல்ல என சோஷலிஸ்டுகள் சிலர் சந்தேகம் கொண்டார்கள். பாசிஸத்தை எதிர்கொள்வதற்காகவாவது பாராளுமன்ற போக்கு கொண்டவர்களோடு உடன்பாடு செய்து கொள்வது அறிவுபூர்வமானதாக இருக்கும் என்று கம்யூனிஸ்டுகளும் நம்பவில்லை!

ஆயினும் பரஸ்பர நம்பிக்கையும் இணக்கமும் இன்றியமையாததாக ஆகிவிட்ட சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் இத்தாலியில் மட்டும் பிரபலமாகி வந்த பாசிஸம் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. மற்றொரு யுத்தம் வெடித்துக் கிளம்புவதற்கான அறிகுறிகள் வெகுவாகத் தென்படத் தொடங்கின. பரஸ்பரம் முழுமையான நம்பிக்கையுடன் இல்லையென்றாலும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள்.  பாசிஸத்தின் பேயாட்டங்களை எதிர்கொள்ளவும், யுத்த மனோபாவத்தை எதிர்க்கவும் எல்லாவிதமான சோஷலிஸ்டுகளும் தோளோடு தோள் நின்று போராடலாயினர். யுத்தத்திற்குக் காரணகர்த்தாக்களான முதலாளிகளின் அமைப்புதான் பாசிஸம் என்ற போதிலும் பன்னாட்டு மன்றத்துடன் இணைந்து, போரை எதிர்ப்பதற்கு சோவியத் ரஷ்யா தயாரானது. “யுத்தத்தையும்  பாசிஸத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!” எனும் முழக்கம் எங்கணும் உரக்க ஒலித்தது.

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தோமெனில், இது வெற்றிகரமாகவே முடிவடைந்துள்ளது. ஒன்றிணைந்த போராட்டம் எல்லா நாடுகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஃபிரான்ஸிலும் ஸ்பெயினிலும் ஒன்று சேர்ந்துள்ள புரட்சிகர கட்சிகள் அரசாட்சியை கைப்பற்றியுள்ளன. இதற்கு எதிராக ஸ்பெயினில் பழமைவாத கட்சிகள்கலவரத்தைத் துவக்கியுள்ளன. அதனை அடக்குவதற்கு புரட்சிகர அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தற்போது சொல்வதற்கில்லை.

முடிவுரை:

சோஷலிசம் இன்று உலகத்தின் முதன்மையான ஓர் அரசியல் சக்தியாக உருமாறியிருக்கிறது. ரஷ்யாவில் ஆட்சியதிகாரம் செய்வது சோஷலிஸ்டுகள்தான்! சீனாவில் கணிசமான ஒரு பகுதி  சோஷலிஸ்ட் ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது. ஸ்பெயினிலும் ஃபிரான்ஸிலும் புரட்சிகர அரசுகளில் சோஷலிசத்தின் செல்வாக்கு வெகுவாக உள்ளது. இந்தியா போன்ற (பிரிட்டிஷ்) சாம்ராஜ்ய சக்திகளின் பாதங்களில் உள்ள நாடுகளில் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளும் சோஷலிசத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளன. தகர்ந்துபோன முதலாளித்துவத்தின் எதிர்காலத்தில் விருப்பமற்ற நடுத்தர வர்க்கத்தினர், ஏகாதிபத்தியத்தில் இருக்கும் பாசிஸத்தின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, “சோஷலிசம் தான் உலகின் பாதுகாப்பிற்கான ஒரே வழி” என்று புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். “சோஷலிசத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது முழுமையான பேரழிவை எதிர்கொள்ளவோ உலகம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது” என்றுதான் ஜி.டி.எச். கோள் என்ற அறிஞர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சோஷலிசத்திற்கான எதிர்காலத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பில்லை!

(1936 அக்டோபர் 26 ‘மாத்ருபூமி’ வார இதழில் வெளியான தோழர் இ.எம்.எஸ். அவர்களின் இந்தக் கட்டுரை 2017 ஜூன் 11 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டது.)

திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1

வெங்கடேஷ் ஆத்ரேயா

1917 அக்டோபரில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியைத்தொடர்ந்து, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி சோவியத் ஒன்றியம் பயணித்த பொழுது முதலாளித்வ பொருளாதார அறிஞர்கள் ஒரு நாடு தனது பொருளாதாரத்தையோ வளர்ச்சியையோ திட்டமிடுவது சாத்தியமே இல்லை என்று கூறினர். சந்தை தான் பொருளாதார வளங்களை பல்வேறு பயன்பாடுகளுக்கு தக்க முறையில் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வாதிட்டனர். சோவியத் ஒன்றியத்தின் திட்டமிடும் முயற்சிகளை கிண்டல் செய்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் கருத்துகள் முற்றிலும் தவறு என்று வரலாறு நிரூபித்தது.

முதலாளித்வ சந்தைப்பொருளாதாரத்தின் புகழை இவர்கள் பாடிக்கொண்டிருந்தபொழுதே 1929 இல் துவங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலக முதலாளித்துவம் கடும் சரிவை சந்தித்தது. கிராக்கி முடங்கி சந்தைகள் செயலற்று நின்றன. விவசாயிகள், ஏனைய சுய  உற்பத்தியாளர்கள், பல கோடி தொழிலாளிகள் என்று முதலாளித்வ உலகின் பெரும் பகுதி உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு உலக முதலாளித்துவம் அம்பலமாகி நின்றது. மறுபுறம், இதற்கு நேர்மாறாக, சோசலிச சோவியத் ஒன்றியம் உற்பத்திக்கருவிகளை சமூகமயமாக்கி, நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றம் காணவும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் துறைவாரியாகவும் விரிவான, திட்டவட்டமான திட்டங்களை தீட்டியது. மேலை நாடுகள் விதித்த பொருளாதார, தொழில்நுட்ப தடைகள், அவர்களது ராணுவ முஸ்தீபுகள், அச்சுறுத்தல்கள், மற்றும் பன்னாட்டு உறவுகளில் சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றையும் எதிர்கொண்டு வளர்ச்சியை சாதிக்கவும் மக்கள் வாழ்வை வளப்படுத்தவும் திட்டமிட்ட பொருளாதாரம் பெரும் உதவியாக இருந்தது.

1917 அக்டோபரில் சோசலிச புரட்சி ரஷ்யாவில் நிகழ்ந்தது. ஆனால், 1928 இல் தான் சோவியத் ஒன்றியத்தின் ரஷ்ய பகுதியின் பொருளாதாரம் 1913 இல் இருந்த நிலையை எட்டமுடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சோசலிச புரட்சியை வேரோடு அழிக்க மேலை நாடுகள் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிற்குள் நுழைந்து உள்நாட்டுப் போரை மக்கள் மீது திணித்தன. இதில் பெரும் இழப்புகளை சந்தித்தாலும் இறுதியில் செஞ்சேனை வெற்றிபெற்று எதிர்புரட்சிசக்திகளை முறியடித்து விரட்டியது. இதனைத்தொடர்ந்து மூன்று ஆண்டுகாலம் அமலாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் மீட்சி, பின்னர்   தோழர் லெனின் அவர்களின் மறைவு, அதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பம்,  உட்கட்சி போராட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் சந்தித்து வென்ற சோவியத் ஒன்றியம் 1928 இல் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையை துவக்கியது.

காலனி ஆதிக்கச் சுரண்டலின்றி, உழைப்பாளி மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து. ஏகாதிபத்தியத்தின் பன்முக பொருளாதார, அரசியல், தத்துவ, மற்றும் ராணுவ தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, பன்னிரண்டே ஆண்டுகளில் – 1940இல் – உலகின் இரண்டாம் பெரும் தொழில்நாடாக உயர்ந்து சாதனை புரிந்தது, மையத்திட்டமிடலின் வழியில் பயணித்த சோவியத் ஒன்றியம். இது திட்டமிட்ட பொருளாதாரம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் பெரும் பங்கு ஆற்ற முடியும் என்பதற்கு மிகச் சிறந்த வரலாற்று அனுபவம் ஆகும். இதன்பின் பல சோசலிச நாடுகளின் அனுபவங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் மக்கள் சீனம் திட்டமிடுதலை அமலாக்கி வருகிறது. தனது வளர்ச்சி நிலைக்கு ஏற்றவகையிலும் பன்னாட்டு பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொண்டும் அவப்பொழுது  திட்டமிடல் முறைகளில் உரிய மாற்றங்களையும் மக்கள் சீன சோசலிச அரசு மேற்கொள்கிறது.

முதலாளித்துவத்தின் மீதான தாக்கம்

முதலாளித்வ உலகம் கடும் நெருக்கடியில் சிக்கி பெரும் வேலையின்மையைப் பிரச்சினையை 1930களில் எதிர்கொண்ட அதேகாலத்தில் வேலையின்மை என்ற கொடுமையை திட்டமிட்ட சோவியத் பொருளாதாரம் முற்றிலுமாக அழித்தொழித்தது. இது மேலை நாட்டு உழைப்பாளி மக்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திட்டமிட்ட பொருளாதாரம் சாத்தியமே இல்லை என்று கொக்கரித்து வந்த பொருளியல் அறிஞர்களின் கருத்துகள் தவறு என்பது பரவலாக உணரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் மேலை நாடுகளை கதிகலங்க வைத்த பாசிச படைகளை செஞ்சேனை வீழ்த்தியதில் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் மையத்திட்டமிடல் சிறந்த பங்கு ஆற்றியது என்பதும் பரவலாக அறியப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில் மேலை நாடுகள் அனைத்திலும் அரசுகள் திட்டமிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், இவை முதலாளித்வ அமைப்பின் லாப வெறிக்கு உட்பட்டே செய்யப்பட்டது. எனினும் பொருளாதாரத்தில் திட்டமிடுதல்  சாத்தியம் என்பதும் அவசியம் என்பதும் அங்கீகாரம் பெற்ற கருத்துகளாக ஆகின.  இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல முன்னணி முதலாளித்வ நாடுகளில் ஆற்றல் துறை, தொலைதொடர்பு துறை, பொதுப்போக்குவரத்து துறை ஆகியவை உள்ளிட்ட பல துறைகளில் நாட்டுடைமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியிலும் ஆரோக்கியத்திலும் அரசின் மையப் பங்கும் திட்டமிட்ட அணுகுமுறையின் அவசியமும் அங்கீகாரம் பெற்றன. இதன் அடிப்படையில் மையத்திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தேச விடுதலை இயக்கங்கள் மீதான தாக்கம்

திட்டமிட்ட அடிப்படையில் சோவியத் ஒன்றியம் சாதித்த சில முக்கிய விஷயங்கள்:

எழுத்தறிவின்மையை முற்றாக ஒழித்தது;

அனைத்து நிலைகளிலும் கல்விபெருதலை அனைவருக்கும் சாத்தியமாக்கியது;

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திப் பாதுகாத்தது;

அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப் படுத்தியது.

இந்த சாதனைகள் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலைக்காக போராடி வந்த பல காலனி நாடுகளின் போராளிகளையும் தலைவர்களையும் பெரிதும் கவர்ந்தது. உலகம் தழுவி ஆதிக்கம் செலுத்திவந்த ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள முடியும் என்பதோடு, மையப்படுத்தப்பட்ட, திட்டமிட்ட பொருளாதார செயல்பாட்டின் மூலம் ஒரு நாடு வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என்பதையும் சோவியத் அனுபவம் மூலம் அவர்கள் உணர்ந்தனர். இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் சாதித்த மகத்தான வெற்றிக்கு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரம் ஒரு முக்கிய காரணம் என்பதையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தேச விடுதலை இயக்கத் தலைவர்கள் உள்வாங்கிக்கொண்டனர்.

இந்தியாவில் திட்டமிடல்

மேற்கூறிய வரலாற்று உண்மைகள் இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த தருணத்தில் இந்தியா போன்ற நாடுகள் விடுதலை அடைந்த பொழுது  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கருவியாக திட்டமிடுதலை அமல்படுத்த முனைந்ததில் மிகுந்த செல்வாக்கு வகித்தன. இந்தியாவைப் பொருத்த வரையில், சிறந்த பொறியியல் வல்லுனராக திகழ்ந்த மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா 1930களின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார். 1935 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடந்த அன்றைய மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல்களில் பலமாகாணங்களில் இந்திய தேசீய காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.  அக்கட்சி, ஜவஹர்லால் நேரு தலைமையில் 1938 இல் ஒரு தேசீய திட்டக் குழுவை அமைத்தது. இந்தக் குழு அதன் காலத்தில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளில் 76 முறை கூடியது என்ற செய்தியும் இவற்றில் ஒரு அமர்வு தவிர மற்ற அனைத்து அமர்வுகளிலும் நேரு பங்கேற்றார் என்ற செய்தியும் தேச விடுதலை இயக்கம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்தியா விடுதலை அடைந்த பொழுது, தேசீய வாதிகளும் முற்போக்கு சக்திகளும் மட்டுமல்ல, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுதல் அவசியம் என்று கருதினர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்பணிக்கென பெருமுதலாளிகளால் பணிக்கப்பட்ட ஆலோசகர் குழு 1946 இல் முன்வைத்த பம்பாய் திட்டம்  பின்னர் இந்திய அரசு 1950-51முதல்  1955-56 வரை  அமலாக்கிய முதலாம் ஐந்தாண்டு திட்டத்தை விட பெரிய அளவில் இருந்தது என்பதாகும். நமது நாடு விடுதலை பெற்ற காலத்தில் அரசியல் வேறுபாடுகளைத்தாண்டி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது கருத்து இருந்தது. அதன்படி, ஐந்தாண்டு திட்டங்கள் போடுவதும் அமலாக்குவதும்  இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு  அவசியம். மேலும், தொழில்துறை, நிதித்துறை, மற்றும் மனிதவளத்துறை ஆகியவற்றில் கணிசமாக முதலீடுகளை மேற்கொள்ளும் பொதுத்துறை அவசியம் என்றும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனவே தான், 1950 இல் உருவாக்கப்பட்ட திட்டக்குழு மிக முக்கியம் என்று கருதப்பட்டது.

திட்டமிடுதல் மட்டுமே சோசலிசம் அல்ல

ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பற்றிப் பேசுகையில், இந்திய நாட்டின் பொதுத்துறை சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. அதேபோல், இந்தியாவின் திட்டமிடுதலும் சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. மாறாக, இந்தியாவில் தனியார் துறை கம்பனிகளின் லாபத்தை உறுதிப்படுத்துவதே அரசின் திட்டமிடல் மற்றும் பொதுத்துறை கொள்கையாக இருந்தது. இதற்கென, ஆற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, கல்வி, ஆரோக்கியம், கனரக இயந்திரங்கள் போன்ற அனைத்து முதலாளிகளுக்கும் தேவையான கட்டமைப்பு வசதிகளை குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைக்கச்செய்வதே அரசின் கொள்கையாக இருந்தது. முதலாளிகளின் லாபத்திற்கு அவசியமான பிரம்மாண்டமான கட்டமைப்பு முதலீடுகளை தனியார் துறை மேற்கொள்ள இயலாத/விரும்பாத நிலையில் அரசு இம்முதலீடுகளை மேற்கொண்டது. இதற்கென திட்டமிட்டு பிரதானமாக  மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களை சுரண்டியும் கடன்கள் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்பியும் அரசு  வளங்களை திரட்டியது. இதனால் ஏற்பட்ட வளர்ச்சி பெரும் பகுதி உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தவில்லை.

எனினும், சுதந்திர இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுய சார்பை வலுப்படுத்துவதில் பொதுத்துறையும் மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலும் முக்கியமான பங்கு ஆற்றின. இந்த வலுவூட்டலில் சோவியத் ஒன்றியம் மற்றும் இதர சோசலிச நாடுகள் அளித்த உதவிகள் சிறப்பான பங்கை ஆற்றின. 1950களிலும் 1960களிலும்  மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பகை மூட்டி வந்த மேலை நாடுகளின் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு பெரும் யுத்தத்தில் உலகை ஆழ்த்தவில்லை என்றாலும், ஒரு நிரந்தர “பனிப் போர்” நிலைமையை ஏற்படுத்தின. பனிப்போர் அரசியலில் வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள விரும்பிய ஏகாதிபத்தியம், சோசலிச நாடுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு செய்துவந்த பொருளாதார மற்றும் அறிவியல் தொழில்நுட்ப உதவிகளால் சோசலிசத்தின் செல்வாக்கு இந்த நாடுகளில் உயரும் என்று அஞ்சியது. இதனை எதிர்கொள்ள மேலை நாடுகளும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி முயற்சிகளுக்கு உதவிகள் அளிக்க வேண்டியதாயிற்று. எனினும், நமது நாட்டின் தற்சார்பு திறன்களை அழிப்பதிலும், அதன் பகுதியாக பொதுத்துறையை அழிக்கவும் அவர்கள் ஆர்வமாகவே இருந்தனர்.

இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்கள்

இந்தியப் பெருமுதலாளிகளும் அரசும் திட்டமிடுதலை ஏற்றுக்கொண்டாலும், இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை பாதுகாக்கும் வர்க்கத்தன்மை கொண்டிருந்ததால் சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிச மக்கள் சீனம் போன்ற நாடுகளில் திட்டமிடுதல் எத்தகைய பங்கு ஆற்றியதோ அது இந்தியாவில் நிகழவில்லை. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சி விகிதம் (காலனி ஆதிக்க காலத்துடன் ஒப்பிடுகையில்) அதிகரித்த போதிலும், 1966 இல் இந்திய பொருளாதாரம் உணவு நெருக்கடி, அன்னியச்செலாவணி நெருக்கடி மற்றும் அரசின் நிதி நெருக்கடி  ஆகிய மும்முனை நெருக்கடியை சந்தித்தது. இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஐந்தாண்டு திட்டங்களை 1966 இல் இருந்து 1969 வரை நிறுத்தி வைத்தது. [1]

இந்தியாவில் திட்டமிடுதல் எதிர்கொண்ட அடிப்படை முரண்பாடு என்ன? ஒரு புறம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு பொதுத்துறை முதலீடுகளை கணிசமான அளவிலும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதனை சாத்தியமாக்க முதலாளிகளிடம் இருந்தும் நிலப்பிரபுக்களிடம் இருந்தும் இதற்குத்தேவையான வளங்களை அவர்களின் வருமானம் மற்றும் சொத்துகளின் மீது வரிவிதித்து திரட்ட அதனால் இயலவில்லை. காரணம் இந்த அரசானது,  முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் அரசு. பெருமுதலாளிகள் தலைமையில் இயங்கும் அரசு. அவர்களுக்கு எதிராக செயல் படாது. மறுபுறம், மக்கள் மீது பலவகையான சரக்குவரிகளை – மறைமுக வரிகளை – சுமத்தி வளங்களை திரட்டிட அரசு முயன்றபோதிலும், இதனை ஒரு வரம்பிற்குமீறி செய்யவும் முடியாது. ஏனெனில், பொருளாதாரம் கிராக்கியின்றி ஸ்தம்பித்துவிடும், மேலும் வலுவான அரசியல் எதிர்ப்பும் கிளர்ச்சியும் கிளம்பும். இந்திய திட்டமிடுதலின் இத்தகைய அடிப்படை வர்க்க முரண்பாட்டின் காரணமாக திட்டமிடல் என்ற கட்டிடமே 1966 இல் சரிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நெருக்கடி சற்று சமாளிக்கப்பட்டபின், மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 1969-70 இல் துவங்கி 1973-74 வரைக்குமான ஐந்தாண்டுகளுக்கான நான்காம் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.  பின்னர் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என்று மூன்று அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்கள் – இடையில் 1977-1979 ஜனதா கட்சி ஆட்சியில் ஒரு சிறுபின்னடைவுக்குப்பின் –  போடப்பட்டாலும், முதல் மூன்று ஐந்தாண்டு திட்டகாலத்தில் இருந்த முனைப்புடன் இவை செயல்படுத்தப்படவில்லை. 1972இல் நடத்தப்பட்ட நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் இடைக்காலப் பரிசீலனையில், திட்டத்தின் துவக்கத்தில் முன்வைக்கப்பட்ட இலக்குகள் பாதியாக குறைக்கப்பட்டன. பின்னர், திட்டத்தின் இறுதியில் இவற்றைக்கூட எட்ட முடியாமல் போனது.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்1974-75 இல் துவங்கி 1978-79 இல் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 1975இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் “உள்நாட்டுக்காரணங்களுக்காக” நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை செயலிழக்கச்செய்தது. திட்டம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு, நெருக்கடி நிலை காலத்தில் பிரதமரின் இருபது அம்ச திட்டமும் பின்னர் சஞ்சய் காந்தி முன்வைத்த ஐந்து அம்ச திட்டமும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, திட்டமிடுதல் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டது.

எனினும் 1950 முதல் 1980 வரையிலான முப்பது ஆண்டுகளில், காலனி ஆதிக்க காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாகவே வளர்ந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது திட்டமிடுதல். திட்டமிடுதல், அரசின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் முக்கியத்துவம் பெற்றது. இதன் அடிப்படையில் தான் ஏற்றுமதி – இறக்குமதி கொள்கைகள் நிர்ணயிக்கப்பட்டு, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி செய்வது என்ற கொள்கை அமலாக்கப்பட்டது. பெரும் அளவில் பொதுத்துறை முதலீடுகள் கேந்திரமான துறைகளில் மேற்கொள்ளப்பட்டன. பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்ற, அனைத்து உற்பத்தித்துறைகளுக்கும் அவசியமான தொழில்துறை கட்டமைப்பு வசதிகள் தகவல் தொடர்பு, எரிசக்தி, போக்குவரத்து போன்ற துறைகளில் உருவாக்கப்பட்டன. நவீன நிதி துறை கட்டமைப்பும், கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. திட்டமிட்ட பெரும் பொதுத்துறை  முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி, ஒரு வரம்பிற்கு உட்பட்ட நில உறவு மாற்றங்கள் ஆகியவற்றால் தான் 1950 முதல் 1980 வரையிலான காலத்தில் இந்தியப்பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு – ஜிடிபி – ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கு சதமானம் என்ற  வேகத்தில் அதிகரித்தது. எரிசக்தி, உருக்கு போன்ற துறைகளில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பெட்ரோலியம், பெட்ரோ-கெமிகல் மற்றும் வேதியல் துறைகள் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு  பெருமளவிற்கு விரிவடைந்தன. பசுமை புரட்சியின் சாதனைகள் அரசின் மையப்பங்கையும் திட்டமிடுதலையும் அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டவை. இதில் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை உற்பத்தியின் வேகமான வளர்ச்சியும் பன்மைத்தன்மையும்  திட்டமிடுதலால் சாத்தியமானது.  இவை அனைத்திலும் திட்டக்குழு மூலமாக மையத்திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமான பங்கு ஆற்றியது. பொதுத்துறைக்கான மொத்த முதலீட்டு தொகை எவ்வாறு பல்வேறு துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், எந்தத்துறைகளுக்கு எத்தகைய முன்னுரிமை, இறக்குமதிக்கு மாற்று உற்பத்தியை சாதிப்பதற்கான யுக்திகள் நில உறவுகளில் வர வேண்டிய மாற்றங்கள் என அனைத்து முக்கிய பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் திட்டக்குழு முக்கிய பங்கு ஆற்றியது.

தாராளமயத்தின் தாக்குதல்

1980களில் பன்னாட்டு நிதிமூலதனத்தின் கை உலக முதலாளித்வ பொருளாதாரத்தில் ஓங்கியது. இந்திய முதலாளித்வ வளர்ச்சியின் தன்மையும் இதன் தாக்கத்திற்கு உள்ளாகியது. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மாறின. தாராளமய கொள்கைகள்   களத்திற்கு வந்தன. எனினும், 1980களில் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. திட்டமிடுதலும், பழைய மிடுக்குடன் இல்லாவிட்டாலும், வலுவிழந்து கொண்டிருந்தாலும், தொடர்ந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கம் தீவிர தாராளமய கொள்கைகளை அமலாக்கியது. பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் சந்தித்த பின்னடைவும் வீழ்ச்சியும் பொருளாதாரத்தில் திட்டமிடுதலின் பங்கையும் அரசின் பங்கையும் விவாதப் பொருளாக்கின. தாராளமய கொள்கைகள் ஆதிக்கத்திற்கு வந்ததன் விளைவாக ஒட்டு மொத்த வளர்ச்சி திசைவழியை நிர்ணயிப்பதிலும் முதலீடுகளின் துறைவாரி, மற்றும் நாட்டின் பகுதிவாரி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பதிலும் திட்டமிடுதலின் பங்கு பலவீனப்படுத்தப்பட்டது. 1990 – 1992 காலத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் கைவிடப்பட்டு, மீண்டும் 1992 – 93 இல் தான் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் திட்டமிடுதல் நிகழ்ந்தாலும் நடைமுறையில் ஒட்டு மொத்த கொள்கைகள் தாராளமய, தனியார்மய, உலகமய பாதையில் பயணித்ததால் ஒட்டுமொத்த வளர்ச்சியின் தன்மையையும் திசைவழியையும் நிர்ணயிக்கும் நடவடிக்கையாக அது அமையவில்லை.

தாராளமய காலத்திலும் கூட மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீடுகளை இறுதிப்படுத்துவது, நலத்திட்டங்களை கண்காணிப்பது, பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் பற்றிய விவரங்களை கண்டறிந்து உரிய புள்ளிவிவரங்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பணிகளை திட்டக்குழு செய்து வந்தது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவால் முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில் திட்டக்குழுவின் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்திற்கான பல உப மற்றும் பணிக்குழுக்களில் முற்போக்காளர்களும் பங்கேற்று சில பயனுள்ள ஆலோசனைகளை பரிசீலனைக்குக் கொண்டுவர முடிந்தது.     ஆனால், தாராளமய கொள்கைகளுக்கு முழுமையான, தீவிரமான தத்துவார்த்த ஆதரவு, அறிவுத்தளத்தில் அதனை ஆதரிக்கும் வாதங்களை வலுவாக முன்வைப்பது, நடைமுறையில் தீவிர தாராளமயகொள்கைகளை ஆதரிப்பது என்று திட்டக்குழுவின் தன்மை முற்றிலும் மாறியது. இதனால் முன்பிருந்த சுய சார்பிற்கான தன்மையிலிருந்து திட்டக்குழுவின் தன்மை  முழுமையாக மாறிவிட்டது.

தாராளமய சூழலில் முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்க ஆட்சிக்காலத்தில் குறைந்த பட்ச பொது திட்டத்தில் இருந்த அனைத்து முற்போக்கு நடவடிக்கைகளையும் திட்டக்குழு எதிர்த்தது. உண்மையில், தேசீய ஆலோசனைக் குழு தான் சில சேமநல திட்டங்களை பரிந்துரைக்கும் அமைப்பாக திகழ்ந்தது.  திட்டக்குழுவும் நிதி அமைச்சகமும் இணைந்து  இவற்றை எதிர்த்தன. ஊரகவேலை உறுதி சட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  அதேபோல் இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட தேசீய உணவு பாதுகாப்பு சட்டத்தையும் திட்டக்குழு நிதி அமைச்சகத்துடன் இணைந்து எதிர்த்தது. நாம் அதன் சட்ட வரைவை விமர்சித்தோம், ஆனால் அது வலுப்படுத்தப்படவேண்டும் என்ற கோணத்தில் இருந்து!

இதில் எழுகின்ற கேள்வி என்னவென்றால் திட்டக்குழு ஏன் இவ்வாறு ஆனது என்பதாகும். இதனை கீழ்க்கண்ட வாறு பார்க்கலாம். நரசிம்ம ராவ் அவர்களின் தலைமையிலான அரசாங்கம் 1991இல் துவங்கிய தாராளமயப் பாதையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பயணித்தது. அடுத்து  இரு தேசீய ஜனநாயக  அரசாங்கங்கள் 1998-2004 காலத்தில் இதன் அமலாக்கத்தை தீவிரப்படுத்தின. இந்தப்பயணத்தின் விளைவாக எந்த நோக்கங்களுக்காக திட்டக் குழு  துவக்கப்பட்டதோ அவை புறக்கணிக்கப்பட்டு படிப்படியாக திட்டக்குழு தாராளமய பேரிரைச்சலில் கலக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.  இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை.

தொடரும் …

அடுத்த பகுதி

21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

ஆர்.கோவிந்தராஜன்

சோவியத் யூனியன் மற்றும் சோஷலிச உலகம் சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, உலகம் முழுவதுமே பரவலான விவாதங்கள் தொடங்கின.

மார்க்சிய – லெனினிய கோட்பாடு பற்றியும், 21-ம் நூற்றாண்டில் சோஷலிச கட்டுமானம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், உலக  முழுவதுமே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த சூழலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 14-வது காங்கிரஸ் (1992) நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தியது: சோஷலிச உலகின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் சோஷலிச லட்சியத்தையோ, மார்க்சிய-லெனினிய வழிகாட்டுதலையோ நிராகரிக்கவில்லை. மனிதகுல நாகரீகத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வதில் சோஷலிசம் ஆற்றிய பங்கினை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. சோவியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோஷலிச நடைமுறைகளிலிருந்து, பெற்ற அனுபவங்களிலிருந்து நிறைய பாடங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். கட்சியின் 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானம் குறிப்பிடுவதைப் போல், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அதே அனுபவங்களை அப்படியே மீண்டும் பெறுகிற வகையில் இருக்காது. அப்படியென்றால் எந்த பாதையில் பயணம் செய்வது? இக்கேள்விக்கு விடைகாண முயலும் போது சோசலிச நாடுகள் உட்பட பல நாடுகளின் அனுபவங்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.

மாற்றுப் பாதைக்கான 20-ம் நூற்றாண்டு முயற்சிகள்

சோவியத் புரட்சிக்குப் பிறகு ஒரு புதிய உலகம் பற்றிய பார்வை உலக மக்களுக்குக் கிடைத்தது. 14-வது காங்கிரஸ் தீர்மானம் அன்றைய சோஷலிச உலகின் மாறுபட்ட தோற்றத்தை விவரிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்ட காட்டுமிராண்டித்தனமான இரண்டு உலகப் போர்களிலும் , அணு ஆயுதப் போட்டியிலும், மனிதகுலத்தை தள்ளி விட்ட முதலாளித்துவம், சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு எப்படி அரசுகளை கைப்பற்றும் சதி வேலைகளில் ஈடுபட்டது? பாசிச சர்வாதிகார ஆட்சிகளுக்கு எப்படி ஆதரவு கொடுத்தது? என்பதை விளக்கி விட்டு, “இன்னொரு பக்கத்தில் சோஷலிச புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு ஒரு வளமான உள்ளடக்கத்தை சேர்த்தன. பல நாடுகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தேசிய அடக்குமுறை இல்லாமலும், சுரண்டலிலிருந்து விடுபட்டும் தமது வாழ்க்கையை நடத்துவதை சாத்தியமாக்கின. இதன் தாக்கம் தேச விடுதலையையும், சமுதாய விடுதலையையும் நோக்கிச் செல்லும் மனிதகுல வளர்ச்சியின் எதிர்காலப் பாதையை தொடர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது” என்று அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது. அதோடு கூடவே ஒரு எச்சரிக்கையை விடுக்கவும் அது தவறவில்லை. இந்த நடைமுறை நீண்ட காலம் பிடிக்கக் கூடியதாக, சிக்கலானதாக, மாறுதல்களும், திருப்பங்களும் கொண்டதாகத்தான் இருக்கும் என்று எச்சரித்து விட்டு,  “முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறிச் செல்வதே இந்த சகாப்தத்தின் அடிப்படை திசை வழியாகும்” என்றும் பதிவு செய்திருக்கிறது.

20-ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த சோசலிசத்தின் தாக்கம் பல்வேறு அரசியல், பொருளாதார சமூக நிகழ்வுகளில் வெளிப்பட்டன. காலனி நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் (இந்தியா உட்பட) விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம்  அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா மக்கள் சோசலிச அமைப்பை தேர்ந்தெடுத்து ஏகாதிபத்தியத்திற்கு பலத்த அடியினை கொடுத்தது. பெண்களின் வாக்குரிமை உட்பட பல ஜனநாயக, குடியுரிமைகளை பெற பல்வேறு நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் மீது அதன் தாக்கம் இருந்தது. உலக முழுமையும் தொழிலாளி வர்க்க அமைப்புகள் உருவாகி விரிவடையும் சூழலையும் அது உருவாக்கியது; தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் பல்வேறு சலுகைகளையும், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களையும் விருப்பமில்லா விட்டாலும் கூட கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது என்பது வரலாற்று உண்மையாகும் (இன்றைய உலகமய செயல்பாடுகளால் அவற்றைப் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன என்பது இன்று நிலவும் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான சூழலின் வெளிப்பாடு). இவை யாவும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகளாகத்தான் இருந்தன.

அப்படியென்றால் இந்த பின்னடைவை எப்படி புரிந்து கொள்வது? கல்வி, சுகாதாரம், அறிவியல் வளர்ச்சி, சமூக நலம், வேலை வாய்ப்பு, ஏகாதிபத்திய சவால்களை எதிர்த்து நின்ற ராணுவ வலிமை- இப்படி அனைத்திலும் உயர்ந்து நின்று ஒரு புதிய சமூகத்திற்கான தோற்றத்தைக் கொடுத்த சோஷலிச அமைப்பு பின்னடைவை சந்தித்ததற்கான அடிப்படையான சில அம்சங்களை இந்த (20வது காங்கிரஸ்) தீர்மானம் ஆய்வு செய்கிறது.

தடையற்ற, முதலாளித்துவ சந்தை விரிவாக்கம்:

20-ம் நூற்றாண்டில் நடந்த சோஷலிஸ்ட் புரட்சிகளெல்லாம் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளிலேயே (செக்கோஸ்லோவேகியா போன்ற ஓரிரு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர) நடந்து முடிந்திருந்தன. அதுவே உலகச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை முதலாளித்துவத்திடமிருந்து பறித்தது; ஆனால் சோஷலிஸ்ட் புரட்சி வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெறவில்லை; இது முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்த உற்பத்தி  சக்திகளின் அளவுகளையோ, மேலும் வளர்ச்சி பெறுவதற்கான திறனையோ பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆகவே, முதலாளித்துவ சந்தை விரிவடைய, தடை ஏதுமில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவம் முன்முயற்சி எடுத்து கொண்டு வந்திருக்கும் தொழில்நுட்பப் புரட்சி அதை வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கத்தின் சரிவுக்குப் பிறகு, மாறியுள்ள சூழலில், புதிய காலனித்துவ முறைகளில் அதன் சந்தையினை விரிவாக்கிக் கொள்ள முடிந்தது. “ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் முதலாளித்துவ வர்க்கத்தால் வாழ முடியாது” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியிருந்தது சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய சாதனைகளை சோஷலிச உலகம் சாதித்துக் காட்டியிருந்தது; அதுவும் சோஷலிசத்தை வீழ்த்த சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு உருவாக்கிய சூழலில் அவை நிகழ்ந்தன (அறிவியல் துறையில், செயற்கைக்கோளை விண்வெளியில் அனுப்பியது, மனிதனை முதன் முதலாக விண்வெளியில் அனுப்பியது உட்பட பல்வேறு சாதனைகளை குறிப்பிடலாம்). ஏகாதிபத்திய ராணுவ பலத்தை வலுவாக எதிர்கொள்ளும் ராணுவ வலிமையினை சோஷலிச உலகம் பெற்றிருந்தது. ஆனால், உற்பத்தி நடைமுறையில் பெற்ற முன்னேற்றங்களை மாறுபட்ட காலத்தை ஒட்டி, மக்களின் உணர்வுகள், தேவைகளை கணக்கில் கொண்டு பொருட்களின் தரத்தை உயர்த்தி பொருளாதார அடிப்படையினை வலுப்படுத்துவதில் அந்த முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை; சோஷலிச கட்டுமானத்திற்கான மிக முக்கிய தேவையான காலத்திற்கேற்ற மாற்றங்களையும் மக்களின் தேவைகளையும் பரிசீலிக்கும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்தப்படவில்லை. மேலும் விரைவாக கொண்டு வந்த சாதனைகள், வெற்றிகள், அடைந்த முன்னேற்றங்கள் யாவும் அந்த சமூக அமைப்பை பின்னோக்கித் தள்ள முடியாது என்ற நம்பிக்கையினையும் கொடுத்திருந்தது. விழுந்த முதலாளித்துவ வர்க்கம் தான் இழந்ததைப் பெற நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மதிப்பீட்டில் நேர்ந்த பிழைகள்!

இதில் இரண்டு அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவத்தைப் பற்றி குறைவான மதிப்பீடு; இரண்டாவது சோசலிசத்தின் ஆற்றல் திறன் பற்றி மிகையான மதிப்பீடு. இது 1960-ம் ஆண்டு கூடிய 81 கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்ட முடிவு.

“உலக முதலாளித்துவம் சிதைவினையும், சீரழிவினையும் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. சமூக முன்னேற்றத்திற்காக நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு முதலாளித்துவம் மேலும் மேலும் முட்டுக்கட்டை போடும்… உலக உற்பத்தியில் சோசலிசத்தின் பங்கு முதலாளித்துவத்தின் பங்கினை விஞ்சி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை… முதலாளித்துவம் சந்திக்கும் பொது நெருக்கடியின் வளர்ச்சியில் புதிய கட்டம் உருவாகியிருக்கிறது… முதலாளித்துவத்தின் உலக பொருளாதார அமைப்பின் நிலையற்ற தன்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.”

அந்த கருத்தின் அடிப்படையில் “சோவியத் யூனியனில் மட்டுமல்ல; மற்ற சோசலிச நாடுகளிலும் கூட முதலாளித்துவம் இன்று மீட்டுருவம் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமல்ல” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  சுயவிமர்சனமாக பரிசீலனை செய்து (அந்த மதிப்பீட்டை நமது கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது) கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்தக் காலகட்டத்தின் மெய்யான நிலைமையினை ஆய்வு செய்வதில் அத்தகைய மதிப்பீடு மிக மோசமான தவறு என்ற முடிவுக்கு வந்தது என்றும் சோசலிசத்தின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளியது என்றும் குறிப்பிட்டது.

சோசலிசம் என்பது நேர்கோட்டுப் பயணமா?

சோசலிசம் என்பது சிக்கலும் இல்லாமல், நேர்கோட்டு பயணத்தில் வந்து விடும் என்ற கருத்தும் நிலவியது. சோசலிச அமைப்பு கம்யூனிச சமுதாயத்தை எட்டுவதற்கு முந்தைய ஒரு மாறும் இடைக்கால நிலை என்பது புரிந்து கொள்ளப்படவில்லை;  மார்க்ஸ் அதை கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்று குறிப்பிடுகிறார்.

கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்த மாறும் இடைக்காலத்தில் முதலாளித்துவம் தகர்ந்து போய் உலக அளவில் சோசலிசம் வெற்றி பெறும் என மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டு, “வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்க பேதமற்ற சமுதாயமாக மாறும் சோசலிச காலகட்டத்தில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்” என்பதை குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது. அதன் பொருள் வர்க்க மோதல்கள் – புரட்சி சக்திகளுக்கும், முதலாளித்துவத்தை பாதுகாக்க முனையும் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும் இடையே – தொடரும் என்பதுதான். இந்த மோதல் உலக அளவிலும் சோசலிச நாடுகளுக்குள்ளேயும் நடக்கும் என்றும் குறிப்பிடுகிறது. (முன்பே குறிப்பிட்டது போல) முதலாளித்துவ ரீதியில் பின்தங்கியிருந்த நாடுகளில் சோசலிச புரட்சி நடந்திருந்ததால் அங்கே இந்த நிலை இருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

வெற்றிகளும், தோல்விகளும்:

சோசலிசத்திற்கு மாறும் இந்த இடைநிலை காலத்தில் சோசலிச சக்திகளின் வெற்றி, தோல்வியினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சோசலிசத்தை கட்டும் பொழுது, அந்த நாடுகளில் பெற்ற வெற்றிகள்/தோல்விகள் என்பதைப் பற்றிய மதிப்பீடும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் பற்றிய மதிப்பீடும்தான் அதற்கு அடிப்படையாக அமையும். சாதனைகள், வெற்றிகள் எல்லாம் ஒருபுறமிருக்க, சோசலிசத்தின் கீழ் அரசு வர்க்க குணாம்சத்துடன் செயல்படத் தவறியது என 14-வது காங்கிரஸ் தீர்மானம் குறிப்பிடுகிறது. சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்தவும், ஆழமாக்கவும் தவறியது. வர்க்க சக்திகளின் அணி சேர்க்கை சாதகமாக மாறியிருந்த நிலையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மாறிய நிலையிலும் எதிர்புரட்சியினையும் சுரண்டல் சக்திகளையும் ஒழிப்பதற்கு தேவைப்பட்ட அரசு அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு செயலாற்றியது மக்களை சோசலிச ஜனநாயகத்தில் பங்கு பெறச் செய்வதற்கு தடையாக இருந்தது; அதிகார வர்க்கப் போக்கு வளர்ந்தது; சோசலிச சட்ட விதிகள் மீறப்பட்டன; தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஒடுக்கப்பட்டன; பொருளாதார நிர்வாக முறையில் காலத்தே செய்ய வேண்டிய மாற்றங்களும் செய்யப்படவில்லை; தத்துவார்த்த துறையிலும் திரிபுகள் வெளிப்பட்டன. இவை யாவும் மக்கள் அன்னியப்படுவதற்கான தளத்தை உருவாக்கியது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் இணைந்து சோசலிசத்தை ஒழிப்பதற்கான தளம் உருவாக்கப்பட்டது. அதோடு கூட உலக முதலாளித்துவம் அடைந்த முன்னேற்றங்கள், அவை எப்படி உறுதிப்படுத்தப்பட்டன என்பதை கவனிக்க மறுத்த நிலையில்தான் சோசலிச உலகம் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

கூர்மையடையும் முரண்பாடுகள்

மாறும் இடைக்கால கட்டத்தில் உலகில் நாம் சந்திக்கும் அனைத்து சமூக முரண்பாடுகளும், வெவ்வேறு அளவில் கூர்மையடைகின்றன. பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழலில் உழைப்புக்கும், மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு தீவிரமடைகிறது. வளர்முக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொருளாதார, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகாதிபத்தியம் தயங்குவதில்லை. சர்வதேச நிதிநிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு , வேறு பல பன்னாட்டு நிறுவனங்களை பயன்படுத்துவதோடல்லாமல், ராணுவத்தை பயன்படுத்தி (ஈராக், லிபியா- தற்போது ஈரான், சிரியா) தன் மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ஏகாதிபத்தியம் முனைகிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. ஏகாதிபத்திய நாடுகளிடையேயும், அவைகளின் வளர்ச்சியில், வணிகத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு ; டாலர் பெரியதா? யூரோ பெரியதா? என்ற மோதலில் ஈடுபட்டதும் உண்டு. ஆனால் லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் மூன்றாம் உலக, வளரும் நாடுகளை சுரண்டும் திட்டங்களோடு தங்களிடையே நிலவும்  முரண்பாடுகளின் தீவிரத் தன்மையினை சற்றே மட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்குமான முரண்பாடே இந்த மாறும் இடைக்காலத்தில் மைய முரண்பாடாக நீடித்து வருகிறது. இந்த நான்கு முரண்பாடுகளில், வரலாற்று நிகழ்வுப்போக்கில் ஏதேனுமொன்று முன்னுக்கு வரும்; ஆனால் அது இந்த மைய முரண்பாட்டை நீக்கி விடுவதில்லை.

இந்த நான்கு முரண்பாடுகளைத்தான் மாறும் இடைக்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் முரண்பாடுகளாக சர்வதேச கம்யூனிச இயக்கம் அங்கீகரித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அதன் பலனை தனியார் பறித்துக் கொள்ளும் தன்மைக்கும் முரண்பாடு உள்ளது; இது லாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுவதன் விளைவு உலகச் சுற்றுப்புற சூழல் சீரழிந்து போவதில் முடிகிறது. தட்ப வெப்ப நிலைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன; மனிதகுல வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலகம் வெப்பமயமாவதை தடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குக் காரணமான பசுங்கூட வாயு வெளியேற்றத்தை தடுக்கும் பொருளாதார, தொழில்நுணுக்க சுமைகளை ஏகாதிபத்தியம் வளர்முக நாடுகளின் மேல் திணிக்க முயற்சிக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையே நிலவும் முரண்பாட்டில் இது ஒரு புதிய அம்சமாக உருவெடுத்திருக்கிறது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுற்றுப்புற சூழல் அழிப்பை தீவிரப்படுத்துகின்றன. பேச்சுவார்த்தைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை செயல்படுத்த மறுக்கின்றன; இதில் எழும் பிரச்சனைகளில் அனைவரும் சமநிலையில் நின்று அணுகும் முறையினை ஏற்க மறுக்கின்றன. வளரும் நாடுகளின் மீது சுமையினை ஏற்றி இந்த வகையான வர்க்கச் சுரண்டலை ஆழப்படுத்துகின்றன. ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சிகளுக்கு எதிராக வளரும் நாடுகள் நடத்தும் போராட்டம் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய கூறாகும்.

ஒவ்வொரு நாடும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சியின் போது, இத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களின் வெற்றிதான் மாறிச் செல்லும் காலத்தின் வேகத்தை தீர்மானிக்கும்.

21-ம் நூற்றாண்டில் சோஷலிசம்

வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் சோசலிச வெற்றி தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான பாதை, கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் பார்க்கும்போது, நெடிய சிக்கல் நிறைந்ததாக பல்வேறு திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டதாக இருக்கும்;  அது நீண்ட காலப் போராட்டமாகவும் இருக்கும். முதலாளித்துவத்திலிருநது சோசலிசத்திற்காக மாறும் அந்த இடைக்காலத்தில், கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கமும் அந்த மாற்றத்தை விரைவுபடுத்த பணியாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் அந்த முயற்சிகளை முறியடித்து பின்னோக்கித் தள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின்  குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும். ‘சக்திக்கேற்ப உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற இடைக்கால கோட்பாடு “சக்திக்கேற்ப உழைப்பு, தேவைக்கேற்ப ஊதியம்” என்ற கம்யூனிச கோட்பாட்டினை நோக்கி செல்ல வேண்டும். அனைத்து துறைகளிலும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் அதன் மேன்மை நிலை நாட்டப்படும். சோசலிச கட்டுமானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயகம், சொத்து வடிவங்கள், திட்டமிடுதல், அதற்கும் சந்தை பொருளாதாரத்திற்குமான தொடர்பு பற்றி கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் நமது கட்சித் திட்டத்தில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கட்சித் திட்டம் பாரா 6.5-ல் “மக்கள், ஜனநாயக அரசு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடைமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளை கட்டுப்படுத்துகின்ற, வழிகாட்டுகின்ற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது. பொதுத்துறைக்கு மேலாதிக்கம் தரக்கூடிய, பல்வேறு வடிவ சொத்துடமை கொண்ட பன்முக கட்டமைப்பு கொண்டதாக, மக்கள் ஜனநாயக பொருளாதாரம் அமையும்” என்று குறிப்பிடப்படுகிறது. 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானமும், “அரசுத்துறை என்பது சோசலிசத்தின் கீழ் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமையின உறுதியான அடித்தளமாக அமைந்திருக்கும் என்ற போதிலும், அரசுக்கு சொந்தமான துறையை சோசலிசத்திற்கு சமமானதாக இயந்திர கதியில் சித்தரிக்கக் கூடாது. பல்வேறு வடிவங்களிலான சொத்துடமைகள் மூலம் சோசலிச அரசு அதன் பொருளாதார உயிர்நாடி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று விளக்கி விட்டு “முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரமே (அதாவது லாப அதிகரிப்பே) அதன் அரசியலை” நிர்ணயிக்கும். இதற்கு மாறாக, அரசியலே அதன் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டினை 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் நிலை நாட்டும் என்று தெளிவாக வரையறுக்கிறது.

(சோசலிச நாடுகள் பற்றிய தனித்தனியான ஆய்வு இங்கே தரப்படவில்லை)

மரண தண்டனை மீதான ஆட்சேபனை …

மரணதண்டனையின் மீது சோசலிசம் முன்வைக்கும் ஆட்சேபனை என்பது
‘சமூகப் பொறுப்பு’ (அதாவது ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது – குற்றத்திற்கான தனிப் பொறுப்பை ஏற்கிறார் எனவே அவரின் உயிரை மட்டும் எடுப்பது சரியல்ல) என்ற வரையறைக்குள் நிற்பதல்ல
அல்லது அது
‘மனித நேயத்தை’ (ஆயுதமற்ற எந்த உதவியுமற்ற ஒரு தனிமனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட படுகொலை செய்வது, அதுவும் ஒரு அரசே அதனை மேற்கொள்வது ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல என்கிற) அடிப்படைகளுக்குள் அடங்குவது மட்டுமல்ல.
அத்தோடு மற்றொரு கூடுதல் விமர்சனமும் இணைந்தது, ஒரு “குற்றவாளி”யின் மீது சுமத்தப்படும் குற்றத்தில் – அவரின் உடந்தை எப்போதும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது – எனவே, அநீதி இழைக்கப்படாமலிருக்கவும் ஒருவரை கொல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

– பேராசிரியர் பிரபாத் பட்நாயக், ஜூன் 2, 2013 (பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

வாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)

வாட்ஸாப் கதை:

கதை: ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்குத் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும். ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாக்கியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது. சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான். நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது? அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான். ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.

ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய். ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய். எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.

மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர். இதைக் கண்ட இன்னொருவனுக்குத் தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது. அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று. இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் சுரங்கம் வெட்ட முனையவே… முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்குத் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஏரியின் நீரை கிராமத்திற்குக் கொண்டுவர முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்கத் தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது எனக் கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்குக் கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.

மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். அது மடுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது. இதுதாங்க முதலாளித்துவம்.

இந்தக் கதையில் வந்துள்ள விளக்கம் சரியான ஒன்றா?

– ராமன் குட்டி, திருப்பூர்.

விளக்கம்: மேற்சொன்ன கதை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எளிமைப்படுத்தியதில் பல உண்மைகள் விடுபட்டுள்ளன. பொதுச் சொத்தாக உள்ள தண்ணீர் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுவதை நாம் நடைமுறையில் கண்டுள்ளோம். பல பொதுக் குடிநீர் திட்டங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களால் மக்களின் அலைச்சல் குறைந்து பலன் கிடைப்பதைப் பார்க்கிறோம். மனிதனின் இயல்பே தான் சந்திக்கும் சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகளை நாடுவதுதான்.

மலைக்கு மேல் உள்ள ஏரியில் இருந்து நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் பலருக்கும் சுரங்கம் வெட்டும் எண்ணம் தோன்றும். செயலாக்குவற்கான மூலதனத்தை யார் செலுத்துகிறாரோ அவர்தான் முதலாளியாகிறார். ஒருவரால் சுரங்கம் வெட்ட முடியாது, அதற்கான தொழிலாளர்களை அமைதி வேலை வாங்குகிறார். சுரங்கம் வெட்டவும், பராமக்கவும் செலுத்தப்படும் உழைப்பும், அதற்கு நியாயமான கூலி என்ன வழங்கப்பட்டது என்பதும் கதையில் இல்லை.

தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் முதலாளித்துவத்தின் பங்கை யாரும் மறுப்பதில்லை. ஆனால், உற்பத்திப் பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவது மேற்சொன்ன அடிப்படையில்தானா?

தண்ணீர் என்ற பொதுவான வளத்தை விற்பனைச் சரக்காக ஆக்கினால் என்ன நடக்கும் என்பதை ஒரு நடைமுறை உதாரணத்தோடும் பார்க்கலாம். 2006-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனியார் முதலீட்டோடு அமலுக்கு வந்தது திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம். கிராமப்புற மக்களுக்கு 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.3; நகர்ப்புற மக்களுக்கு ரூ.4.50 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. பத்தாண்டுகளில் இந்தக் குடிநீர் கட்டணம் ரூ.21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ரூ.7.50 மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசு ரூ.13.50 கொடுக்கின்றன. அரசு செயல்படுத்தும் குடிநீர் திட்டங்களில் கட்டணம் உயரவில்லை என்பதையும் இணைத்து நோக்கினால் மேற்சொன்ன கதை தவறவிட்டுள்ள உண்மைகள் புரிபடும்.