சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!

1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். அது நடைமுறையால் வளர்கிற விஞ்ஞானமாகும்.

இந்த சமூக விஞ்ஞானத்திற்கு அடிப்படை போட்டவர்களை பாராட்டவே மார்க்சிசம்-லெனின்னிசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆசான்கள் எழுத்துக்கள் அனைத்துமே அவர்கள் காலம் வரை திரண்ட அறிவுச் செல்வத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எங்கு பொருந்துகிறது. எங்கு பொருந்தாமல் போகிறது என்பதில் தொடங்கி அடுத்தகட்ட மாற்றம் எதுவாக இருக்க வேண்டுமெனத் தேடுவதில் முடிவன.

எனவே, மார்க்சிசம்-லெனினிசம் என்பது அவர்கள் சொல்லியது, செய்தது மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் மார்க்சிசம்-லெனினிச அணுகுமுறையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்களும் மார்க்சிசம்-லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானத்தின் பகுதியாகும். தவறுகளிலிருந்து பாடம் பெறுவதின் மூலமே மார்க்சிசம்-லெனினிசம் வளர்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. மார்க்சிசம்-லெனினிசத்தைத் தாக்குகிற எதிரிகள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி கத்துவார்களே தவிர அதன் சாரத்தில் கை வைப்பதில்லை. அதனுடைய 167 ஆண்டு வரலாறு ஒன்றைக் காட்டுகிறது. மார்க்சிசம் – லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானம் போல் வேகமாக வளர்ந்த விஞ்ஞானம் வேறு எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அந்த வரலாறு கம்யூனிச இயக்கத்தின் தவறுகளால் விழுந்து அதனை திருத்தி எழும் ஆற்றலை பறைசாற்றுகிறது.

அதன் வரலாறும் உழைப்பாளி மக்களின் போராட்ட வரலாறும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இருவருமே அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருவருமே தவறுகளை திருத்தியே முன்னேற வேண்டியிருக்கிறது. தவறுகளை சரியாக கணிக்கவில்லையானால் அதுவே இயக்கத்தை முடக்கி விடுகிறது. உழைப்பாளி மக்களின் அணுகுமுறையில் குறைகள் இருந்தாலும் மார்க்சிச இயக்கம் தளர்வுறும், மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறு செய்தாலும் உழைப்பாளி மக்களின் போராட்டம் வலுவிழக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது தவறுகளால் வீழ்ந்தாலும் அதனை திருத்தி எவ்வாறு எழுகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடக்குமுறைக்கும் அவதூறுக்கும் ஆட்படுவதால் ஏற்படும் பின்னடைவோடு அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பல ரகமான தவறுகளால் வலு இழக்க நேரிடுகிறது.

அத்தகைய தருணங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் சரியான கோட்பாட்டை உருவாக்குகிற முயற்சியிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதை மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்வதை காணலாம். 1942ல் மாசேதுங் கட்சி உறுப்பினர்களிடையே பேசுகிற பொழுது குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “இன்றும் நம்மில் சில பேர் மார்க்சிசம்-லெனினிசம் ஒரு ரெடிமேடு மருந்து. அதுமட்டும் கிடைத்துவிட்டால் சிரமப்படாமல் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வேதம்போல் கருதுகின்றவர்களின் இத்தகைய குழந்தைத்தனமான குருட்டு நம்பிக்கையுள்ளவர்களிடம் உனது வேதத்தால் எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கண்ணியமற்ற மொழியிலே சொல்லவதென்றால் உனது வேதம் மனித மலத்தைவிட கேவலமானது. அதுவாவது நாயிக்கு உணவாகும். நாயின் விட்டையோ வயலுக்கு உரமாகும். உனது வேதம் நாயிக்கும் உணவாகாது. வயலுக்கும் உரமாகாது, எதுக்கும் பயன்படாது” என்றார் (Mao Tse-tung, Feb., 1, 1942 in Stuart Schram, The Political Thought of Mao Tse-tung)

மார்க்சிசத்தை ஒரு மதமார்க்கமாக ஆக்குவதை தவறான போக்கு என்பதை மாவோ மட்டுமல்ல. இதேபோல் லெனினும் மார்க்சிசத்தை வேதாந்தமாக ஆக்குவோரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். லெனின் தான் தவறுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படைகளையும் அதை எதிர்த்த போரை எப்படி நடத்துவது என்பதை முன்மொழிந்தார். சரியான கருத்திற்கான போராட்டம் தத்துவார்த்தப் போராட்டத்தோடு நின்றுவிடுவதில்லை. தப்பைக் கண்டுபிடிக்க அது முதன்மையாகவுமில்லை. தெளிவினைப் பெறவும் நடைமுறையோடு பொறுத்தவும் அது அவசியமாகிறது. நடைமுறையில் ஒரு கருத்தை அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க ஈடுபடுத்தும் பொழுதுதான் அது சரியா தவறா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதின் மூலமே மார்க்சிசம்-லெனிசம் கற்கப்படுகிறது. எனவே, தவறாகிவிடுமோ என்று தயங்காதீர். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யாதீர் என்பதுதான் மார்க்சிசம்-லெனினிசம் கற்க ஒரே வழி.

மார்க்சிசம்-லெனினிசம் எவ்வாறு உருவாகிறது? சரியான கருத்து எப்படி உருவாகிறது? மாவோ மேலும் சொல்கிறார்.

“எங்கிருந்து சரியான கருத்து வருகிறது. வானத்திலிருந்து விழுமா? தீடீரென மனதிலே உதிக்குமா?

இல்லை. அது சமூக நடைமுறையால் பெறப்படுகிறது. பொருளுற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞான சோதனை, இவைகளினால் பெறப்படுகிறது.

முன்னேறிய வர்க்கத்தின் இந்த சரியான கருத்து ஒரு முறை மக்களை ஈர்க்குமானால் இந்தக் கருத்து பௌதீக சக்தியாகி சமூகத்தை மாற்றும் உலகையே மாற்றிவிடும்” என்கிறார்.

மாவோ, மேலும் கூறுகிறார்;

“கட்சி உறுப்பினர்களுக்கு ஞானத்தைப் பெறுதல் பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது அவசியம். அந்தக் கோட்பாடு அவர்களது சிந்தனை முறையை சரியானதாக ஆக்க உதவிடும்.

தேடுதல் திறமையை வளர்க்கும். அனுபவங்களைத் தொகுக்கும் ஆற்றல் மேன்மைப்படும். கஷ்டங்களை வெல்ல கற்றுக் கொடுக்கும். பணிகளை திறமையாக செய்ய பயிற்சியளிக்கும்” என்கிறார்.

ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு

அது என்ன? ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு 1330 குறளையும் ஒப்புவிப்பதோ பொருள் கூறுவதோ ஞானமாகிவிடாது. வள்ளுவர் காலத்திய சமூக வாழ்வு, குடும்ப உறவு, அரசியல், பொருள் உற்பத்திகள் அவைகளை உருவாக்கும் சமூக உறவு சொற்களின் உள்ளடக்கம். சொல் நயம் (வள்ளுவர் காலத்தில் காமம் என்ற சொல்லின் பொருள் வேறு. இன்று அதன் பொருள் வேறு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது) தத்துவ ஞானம். அவைகளில் நீடித்து எவைகள் உள்ளன. அவைகளில் பேணவேண்டியது எவைகள். களைய வேண்டியவைகள் எவைகள். இவைகளைத் தேடினால் அது மார்க்சிய-லெனினிய ஞான கோட்பாட்டை குறளுக்கு பொறுத்துவதாகும். அதாவது ஒரு தகவலை அதற்கும் மற்றதிற்கும் உள்ள தொடர்பு அதன் வரலாறு இவைகளை தேடுவதே மார்க்சிசம்-லெனினிய ஞான கோட்படாகும்.

தவறுகளும் பாடங்களும்

இந்த ஞானம் இருந்தாலும் நடைமுறையில் தவறுகள் நேராமல் சரியான கோட்பாடு உருவாவதில்லை. அதைப் பெறுவதே ஒரு போராட்டமாகிவிடுகிறது. அவ்வாறு கோட்பாட்டுத் தவறுகளை சரிசெய்யும் போராட்டக் காலங்களில் என்ன நடக்கிறது?

பல ரகமான தவறான கருத்துக்களுக்கெதிராக போராட்டம் உருவாகிறது. அந்த தவறான கருத்திற்கும் மார்க்சிசத்திற்கும் உள்ள உறவினையும் வரையறை செய்ய நேரிடுகிறது. இந்தப் போராட்டம் வனாந்திரத்திலோ, நடுக்கடலிலோ நடைபெறவில்லை. எதார்த்த அரசியல் சமூக நிலவரங்களை பரிசீலிப்பதிலும், வளர்ச்சிப் போக்கை எப்படி மாற்றுவது என்பதிலும் கருத்து மோதல் உருவாகி போராட்டமாகிவிடுகிறது. மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்பவர்களே பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களது கருத்துதான் சரி என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். சித்தாந்தப் போர் மூள்கிறது. இதனால் தெளிவு பெறலாமே தங்களது கருத்து சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் பொழுதும் பிரச்சனைகளுக்கு அதனடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிற பொழுதும் தவறு எது? சரி எது? என்பது துலங்குகிறது. இவ்வாறு தவறான கருத்துக்களை நீக்கி முழுமையை நோக்கி மார்க்சிசம்-லெனினிசம் நடைபோடுகிறது.

உதாரணமாக 1960களில் சோவியத் படை செக்கோஸ்லோவிக்கியாவில் புகுந்தவுடன் கம்யூனிஸ்டுகள் கருத்து வேறுபட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் அவரவர் கருத்துக்களை முன்நிறுத்தினர். மூன்று விதமான கருத்துக்கள் மோதின. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று வறட்டு தத்துவக் கோட்பாட்டுத் தவறுகள் அறவே ஒழியாவிட்டாலும் குறைந்துபோனது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய தவறு எது? என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சோவியத் கட்சியின் தலைமை முன்மொழிந்த முதலாளித்துவமற்ற பாதை என்ற கோட்பாடுதான் வலது திரிபுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக நிலைமைகளின் வளர்ச்சிப்போக்கு காட்டிவிட்டது.

லெனின் காலத்தில் இரண்டு விதமான தவறுகளும் நேர்ந்து இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தன. வறட்டு தத்துவ அடிப்படை கொண்டவைகள் மற்றது வர்க்க சமரசப்போக்கு. இப்பொழுது மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டு தத்துவ தவறுகள் செய்வது குறைந்துவிட்டது. வர்க்க சமரசக் கோட்பாட்டால் எழும் தவறுகள் அதிகமாகிவிட்டன. பின்தங்கிய நாடுகளில் இந்த இரண்டு வகையான தவறுகளும் நேருகிற சூழ்நிலை உள்ளது.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்

20 நூற்றாண்டின் மத்தியில் வர்க்க சமரசக் கோட்பாடால் தவறு செய்வதை எதிர்த்து கொள்கைப் போரை துவக்கியது. இந்த கொள்கைப் போரை எதிரிகள் மார்க்சிசத்தின் அழிவை உறுதி செய்யும் போராட்டமாக சித்தரித்தனர். இந்த கருத்து மோதலினால் சில தவறான கருத்துக்கள் எடுபட்டனவே தவிர மார்க்சிசம்-லெனினிசம் அழியவில்லை. வர்க்க சமரசக் கோட்பாட்டை முன்நிறுத்திய யூரோ கம்யூனிசம் காணாமல் போய்விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்பது போல மார்க்சிசம்-லெனினிசம் அதன் சக்தியை இழக்கவில்லை. எதை வைத்து இது கூறப்படுகிறது என கேட்கலாம்.

முதலாளித்துவப் பிரச்சாரக் கருவிகள் இன்றும் மார்க்சிசத்தை தாக்கிக் கொண்டே இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி அதுதான் மார்க்சிசம் என்றும் ஊளையிடுவதும் எதைக் காட்டுகிறது. அதன் உயிர்த்தெழும் ஆற்றலைக் காட்டவில்லையா. உழைப்பு கோட்பாட்டையும், வர்க்கப் பிரிவினைகளையும் முன் மொழிந்த ஆடம்ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டோவையும் மறந்துபோனது போல் ஏன் இவர்களால் மார்க்சை மறக்க முடியவில்லை?

முதலாளி வர்க்க அரசியல்வாதிகளால் வர்க்கப் போராட்டங்களை முடிவிற்கு ஏன் கொண்டுவர முடியவில்லை?

பாட்டாளி வர்க்கத்தை அரசியலிலிருந்து ஒதுக்குகிற முயற்சி தற்காலிகமானது என்பதை உணரப்போய்த்தானே பாட்டாளி மக்களை மார்க்சிசமும் பக்கம் போகாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளைப் பொழிகின்றனர். வரலாற்றையே புளுகுமூட்டைகளாக ஆக்குகின்றனர்.

சீனாவில் மார்க்சிசம் வழிகாட்டவில்லை முதலாளித்துவமே வழிகாட்டுவதாக கூறுகிறவர்கள் அந்த முதலாளித்துவம் ஏன் இந்தியாவில் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை? ஏன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதென்ன. எங்களுக்கு வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். அதனால் எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்கும் ஆற்றலை நாங்கள் இழக்கவில்லை என்று கூறுவதைப் பார்க்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் திரிபுகளும்

இன்று இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு கம்யூனிஸ்ட் அல்லாத நல்லெண்ணம் கொண்டோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சொத்துடைமை கோட்பாட்டில் மாறுபட்டு கருதுவோரும்கூட அரசியலை சொத்துகுவிக்கப் பயன்படுத்துவதை ஏற்பதில்லை. அவர்களும் இந்த பின்னடைவு அரசியலதிகாரத்தைச் சொத்துகுவிக்கப் பயன்படுத்தும் திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அஞ்சுகின்றனர். சொத்துகுவிக்கும் ஆசையில் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவருவதை விரும்பாதவர்களும் அரசியலில் நேர்மையை விரும்புவோர்களும் இந்த பின்னடைவு ஆபத்து என்றே கருதுகின்றனர். அதையும்விட உலக கம்யூனிஸ்ட் இயக்கமே கவலை கொள்கிறது. இந்த கவலைக்கு அடிப்படை உண்டு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைதூக்கிய வலதுசாரி திருத்தல்வாதத்தையும், மக்கள் ஈடுபடாத ஆயுதக்குழு மனப்பான்மை கோட்பாடான இடது திருத்தல்வாதத்தையும் எதிர்த்து திறமையாக போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முத்திரை பதித்தது. பூர்சுவா கைக்கூலிகள் இந்த இரண்டு தவறுகளையும் காட்டி மார்க்சிசத்தை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செயல்களால் முறியடித்தது. வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின் மூலமே அரசியலில் சமூக வாழ்வில் சோசலிச லட்சியத்தை அடைய முடியும். சுரண்டலற்ற பொருளாதார உறவை உருவாக்க முடியும் என்ற மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது. இப்பொழுதும் இனியும் வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தையே உயிர்நாடியாக கருதுகிறது.

வலது திரிபு நாடு விடுதலையான பிறகு நேரு தலைமையில் உருவான அரசு முழங்கிய ஆவடி சோசலிசம் மக்களை மயக்கிய காலம். அரசு பொதுத்துறையை வளர்த்தது. அதேவேளையில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்க பல சலுகைகள், மான்யங்கள் வழங்கியது. தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் உதவியுடன் விவசாய சங்கம் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்த விதம் நாடு முழுவதும் உழுபவனுக்கு நிலம் என்ற போராட்டம் வெடிக்க வைத்தது. குத்தகை விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதனை அடக்குமுறையால் நேரு அரசு ஒடுக்கியது. நிலப்பிரபுக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையில் நிலஉடைமை சட்டத்தை கொண்டு வந்தது.

அன்று நேரு அரசிற்கு ஆதரவாக இருப்பது சோசலிசத்திற்கு அடிப்படை போட தேவையான தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற கருத்து தலைதூக்கியது. நேரு அரசிற்கு ஆதரவு என்ற பெயரில் வர்க்க சமரசம் கூடாது, மக்களின் இயக்கத்தின் மூலம் மொழிவழி மாநிலம் அமைந்ததுபோல் வர்க்கப் போராட்டத்தின் (அதாவது வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின்) மூலம் இந்த அரசை பணிய வைக்க முடியும் என்ற கருத்து வர்க்க சமரசக் கருத்தோடு மோதியது. அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலது திரிபு அணுகுமுறையை ஆபத்து என்று ஏற்றுக் கொண்ட சோவியத் கட்சியே நடைமுறையில் அந்த திரிபிற்கு வக்காலத்து வாங்கி புதிதாக விடுதலை அடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை நிலைகுலையச் செய்தது.

அன்று அரபு நாடுகளிலும். ஆசியாவிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடம் கற்க இயலாமல் போனதற்கு சோவியத் கட்சியின் நடைமுறை பெரிதும் காரணமாக இருந்தது. ஆசியாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவில் மார்க்சிஸ்ட் இயக்கமும் வலது திருத்தல்வாதத்திற்கு பலியாகாமல் சொந்த அனுபவங்களால் பாடம் கற்கும் ஆற்றலோடு மிஞ்சின. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுருங்கின. இன்று நிலைமை வேறு.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகள் இன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை மார்க்சிச-லெனினிச வழியில் சரியான கோட்பாட்டை தேட வைத்துள்ளது. இந்தியாவிலும் இதே நெருக்கடி இருப்பதைக் காண்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு இடிமுழக்கம் செய்யும் அந்நிய முதலீட்டின் போலித்தனத்தை ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகம் காட்டிக் கொண்டே இருக்கிறது. பால் விலை உயர்வு விவசாயியின் வாழ்க்கை தரத்தை ஒரு மில்லி மீட்டர் கூட உயர்த்தப் போவதில்லை என்பது தெரிவிக்கிறது. மாட்டுத் தீவன விலையாகவும், மாடு வாங்க வாங்கிய கடனுக்கு வட்டியாகவும் அந்த உயர்வு போய்விடும்.

முன்நாட்களில் அன்ஸ்கில்டு லேபர்தான் காசுவலாக இருந்தது. இன்று நிர்வாகிகளைத் தவிர பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எல்லாமே காண்ட்ராக்ட் காசுவுல் லேபர் ஆக்கப்படுகின்றனர். உழைக்கும் விவசாயிகளின் வறுமையும், அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் சார்ந்து நிற்கும் பெரும் திரள் மக்களின் உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களும், இவைகளெல்லாம் சமூக கொந்தளிப்பின் காரணிகளாக ஆகிவருகின்றன. இத்தகைய சூழலில் பூர்சுவா கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்தியிருப்பதை காண்கிறோம். வர்க்கப் பார்வையற்ற அரசியலின் ஆபத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. மார்க்சிசம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிச-லெனினிச அணுகுமுறையை பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தோடு அனுபவப் படிப்பிணையாக இணைக்க வேண்டியிருக்கிறது.

வலது, இடது திரிபுகளை கடந்து வந்த மார்க்சிஸ்ட் இயக்கம் இந்தப் பணியை செய்ய உறுதி பூண்டுள்ளது. ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யும். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம்.

எங்களது வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். எங்களுக்கு தவறுகளை திருத்தி முன்னேறும் ஆற்றலுண்டு. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு விவசாயி, பாட்டாளி ஒற்றுமையைக் கட்டி அரசியலில் நேர்மையையும் ஆட்சியில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தில் மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் படையாக திகழ்வோம்.

கம்யூனிசக் கொடியின் கீழ்…

ஜூலியஸ் பூசிக்

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புகள்: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர்நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. தோழர் லெனினினால் அமைக்கப் பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில், இயக்கிய கட்சியில் உறுப்பினர் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை. இப்படித் தொடங்குகிறது. லெனின் மறைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் தோழர் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட சபதம். ஆம்! நாங்கள் தனி வார்ப்புகள், ஏனென்றால் நாங்கள் மக்கள்.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வாழ்க்கையை நேசிக்கிறோம். எனவே தான் மகிழ்ச்சியும், நிறைவும், சுதந்திரமும்  கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது குறுக்கிடும் தடைகளைத் தகர்த்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்த நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை. அடிமைத்தனம், சுரண்டல் என்னும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு முழந்தாளிட்டு வாழ்தல், வாழ்க்கையே அல்ல. அது மனிதன் என்ற பெயருக்கே அவமானம் தருவதாகும். இந்த அவல வாழ்வில் ஒரு கம்யூனிஸ்டு, ஒரு உண்மையான மனிதன் என்ற வகையில் திருப்தியடைய ஒன்றும் இல்லை. ஒருபோதும் இல்லை. எனவே தான், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உண்மையான வாழ்வுக்காக நடைபெறும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய பின்வாங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பை நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமை யிலிருந்து – அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து – விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியும், நிறைவும், ஆரோக்கியமும், சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக எங்கள் சுக போகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை.

இன்பம், அதிக லாபம் மீண்டும் இன்னும் அதிக இலாபம் இதையே குறிக் கோளாகக் கொண்ட ஓர் அமைப்பு மக்களுக்கிடை யே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படை யாகக் கொண்ட ஒரு அமைப்பை நிலை நிறுத்தப்பார்க்கிறது. அது, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற மனிதத் தன்மை அற்ற அமைப்பாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு, ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்களின் மனிதத் தன்மை பறிக்கப் படுகிற பொழுது, சும்மா இருக்க முடியுமா? முடியாது. எனவேதான் நிறைவும், சுதந்திரமும், பண்பும், பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின்வாங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம். எனவே தான், உண்மையான சுதந்திரத்தை விரிவான சுதந்திரத்தை சுதந்திரம் என்ற வார்த்தைக்கு உரிய இலட்சணங்களோடு கூடிய சுதந்திரத்தை மனித குலம் முழுமையும் பெறுவதற்கான எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு தோழர் லெனின் படையின் கட்டுப் பாட்டுக்கு இஷ்டபூர்வமாகப் பணிவதற்கு நாங்கள் ஒரு வினாடியும் தயங்குவதில்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே சுதந்திரம் – கொள்ளையடிக்க ஒரு தரப்பினருக்குச் சுதந்திரம். மற்றவர்களுக்குப் பட்டினியால் மடிய சுதந்திரம். இவை சுதந்திரம் அல்ல. அடிமைத்தனம். இந்த நிலைமைகளைக் கண்ட பிறகும் வாளா இருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு முடியுமா? சில தனி நபர்களுக்கு இதய கீதமாக விளங்கும் அத்தகைய சுதந்திரத்தால் திருப்தி அடைய முடியுமா? முடியாது. ஒரு போதும் முடியாது. எனவே தான் உண்மையான சுதந்திரத்திற்காக, விரிவான சுதந்திரத்திற்காகப் போராடுவதில் தங்களுடைய முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஆக்க வேலையை நேசிக்கி றோம். எனவேதான் மனிதனின் மகத்தான சிருஷ்டி சக்திகளுக்குக் குறுக்கே நிற்பவற்றைத் தகர்த்தெறிய ஒரு விநாடியும் தயங்குவதில்லை.

ஆயிரம், பல்லாயிரக் கணக்கான திறமையுடைய மனிதர்கள் மனித கலாச்சாரத்தைப் பல மடங்கு பெருக்கியிருக்க முடியும். மனித ஸ்தாபனத்தைச் சீர்திருத்தியிருக்க முடியும். மனிதன் தொழில் நுட்ப சதானங்களைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்தியிருக்க முடியும். அத்தகைய திறமைகள் இன்று பாழ்பட்டுக் கிடக்கின்றன. மனித குலத்திற்குத் தேவையுள்ள அனைத்தையும் ஏராளமாக அளிக்கும் திறமையும், வலிமையும் படைத்த ஆயிரம் ஆயிரம் கரங்கள் இன்று வேலையின்றி, சோம்பிக்கிடக்கின்றன. அடிக்கடி நிகழ்கின்ற நெருக்கடியான காலங்களில், அத்தகைய கரங்கள் சோம்பிக் கிடக்கும் படி நிர்பந்ததிக்கப்படுகின்றன. இதனால், மனித சமுதாயத்திற்கு நேரிடுகிற நஷ்டத்தைத் தடுக்காமல் உட்கார்ந்திருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு எப்படி முடியும்? முடியாது. எனவேதான், மனித குல சிருஷ்டி சக்திகள் அனைத்தையும் முழுமையையும் பயன்படுத்தி முழு வளர்ச்சி அடையும்படி செய்யும் ஒரு அமைப்பைப் பெறுவதற்கான போராட்டத்தில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூளுவதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம். சில தனி நபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப் போரில் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு மடிவற்கும் மனித வாழ்வுக்கு அவசியமான செல்வங்களை அழிப்பதற்கும் காரணமாகும் ஒரு குற்றவாளி கூட இல்லாத உலக அமைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். ஒருவாய்ச் சோற்றுக்காக மனிதனை எதிர்த்து மனிதன் சண்டை போட வேண்டிய நிலைமை எங்கே இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்காது. இருக்கவும் முடியாது. எனவே தான் உண்மையான சமாதானத்திற்காக, மனித சமுதாயத்தின் புதிய ஸ்தாபனத்தால் உத்தரவாதம் செய்யப்படும் சமாதானத்திற் காகப் போராடுவதில் தங்கள் முழு உரிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எங்கள் நாட்டைநேசிக்கிறோம். ஏனென்றால், எந்வொரு நாடு அடக்கி ஒடுக்கப்பட்டாலும் மனிதனின் ஆக்க சக்திகள் சுயேட்சையாக வளர்ச்சி அடைய முடியாது; இறுதியான சமாதானத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஒரு நாடு மற்றொரு நாட்டை அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரம் இருக்க முடியாது. நமது மாபெரும் இலட்சியங்களை நாட்டின் ஜீவித அமைப்புக்குள்ளேயே அடைய விரும்புகிறோமே தவிர, அதற்கு அப்பாற்பட்டல்ல. இல்லாவிட்டால் அவை எதார்த்த மாக முடியாது.
உண்மையான புதல்வர்களின் நேசத்தோடு நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். எனவே தான் மனித குல மேன்மைக் காகவும் வளர்ச்சிக்காவும் எங்கள் நாடு வழங்கிய, இன்னும் வழங்குகிற எல்லா காரியங்களுக்காகவும், அதன் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக உள்ள அனைத்திற்காகவும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் நாட்டை இழிவுபடுத்துகிற கொள்ளையிட விரும்புகிற, அதன் இரத்தத்தை உறிஞ்சுகிற, அதை பலவினப்படுத்துகிற அனைத்தையும் நாங்கள் அழித்து விட விரும்புகிறோம். எனவே தான், உலகில் சுதந்திரம் பெற்ற சமத்துவ நாடுகளின் மத்தியில் சம அந்தஸ்த்தோடு சுயேட்சையாக வாழும் பொருட்டு எங்கள் நாட்டின் பரிபூரண விடுதலைக்கான போராட்டத்தில் எங்கள் முழு வலிமையை ஈடுபடுத்தவோ சர்வ பரிதியாகம் செய்யவோ நாங்கள் தயங்குவதில்லை. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வேலைகள் மகத்தானவை.

மகிமை வாய்ந்த உலகப் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திர நிபுணரின் பட்டாளத்தைச் சார்ந்த – தோழர் லெனின் பட்டாளத்தைச் சார்ந்த – நாங்கள் இப்பொறுப்புக்களை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக் கிறோம். அகவே, இந்தப் பட்டாளத்தின் ஒற்றுமையையும், தூய்மை யையும் கம்யூனிஸ்டு கட்சியின் ஒற்றுமையையும், புனிதத் தன்மை யையும் கண்ணின் கருமணி போன்று பாதுகாப்பது, மனித குலத்தில் சிறந்தவர்களையும், நாட்டின் சிறந்த சக்திகளையும் மேலும், மேலும், திரட்டுவது, எங்கள் கூட்டாளிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிப்பது, வரலாற்றின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்கிறது. தங்களின் ஜீவாதார நலன்களுக்காக அது மக்களிடம் வேண்டி நிற்பது என்ன என்பவற்றை இடைவிடாது உணர்த்தி மக்களுடன் ஒன்று கலந்து சலிப்பின்றி பொறுமையோடு அவர்க ளுக்கு வழிகாட்டுவது, உண்மையான உணர்வு, தைரியம், கருத்தில் உறுதி, தியாகம், சஞ்சலம் இன்மை ஆகிய சிறந்த மனிதப் பண்புக்கு இருப்பிடமாக விளங்குவது போன்றவையே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும்.

கம்யூனிஸ்டு தோழர்களே! இது உங்களுக்கும் பொருந்தும்! ஏனென்றால், நீங்கள் லெனின் படையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் எந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருப்பினும், மனித குலத்தின் விடுதலைக்காகப் புரட்சியின் எந்த அரணில் நின்று போராடிக் கொண்டிருப்பினும், தன்னந்தனியாக கடமையைச் செய்து கொண்டிருப்பினும், கொடிய வர்க்கங்களால் இருண்ட சிறைகளில் பூட்டப்பட்டிருப்பினும் ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களையும், எண்ணங்களையும் விமர்சனம் செய்யுங்கள். மாபெரும் லெனின் பட்டாளத்தில் ஒரு போர் வீரனாக இருக்க நான் தகுதி உள்ளவனா? தோழர் ஸ்டாலின் பெயரால் எடுத்துக்கொண்ட சபதத்தை விசுவாசத்துடன் மரியாதை செய்யத் திறமை உள்ளவனா? வரலாறு நம் மீது சுமத்துகிற எதிர்காலக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேனா? இவையே நாம் விமர்சனம் செய்ய வேண்டிய எண்ணமும் செயலும் ஆகும்.

எங்களிடம் அனுதாபம் உள்ள நண்பர்களே! அது உங்களுக்கும் பொருந்தும். போராடுகிற மக்கள் அணியில் நீங்கள் எங்கு நின்றாலும் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் அனுதாபத் தைச் செயலில் காட்டுவது எப்படி, கட்சியோடு நெருங்கிய தொடர்பு கொள்வது எப்படி? என்பனவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திப்பதனால் கட்சியின் அணிவகுப்பு முன்னேறிச் செல்லும் பொழுதும், அதனுடன் சேர்ந்து நீங்களும் முன்னேற முடியும். அதனால், உங்களுக்கு வாகாட்டியாக இருந்து கொடிய போரில் உயிர் நீத்த தியாகிகளுக்குப் பதிலாக நீங்களே கட்சி அணியில் இடம் பெறுவீர்கள்.

சமீப காலம் வரை எங்களைப்பற்றி அறிந்து கொள்ளாதவர் களுக்கும், எங்களுக்கும், கட்சியை சந்தேகத்துடன் பார்த்து வந்தவர் களுக்கும், ஹிட்லரின் நாசகார கும்பலை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நின்றவர்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் மிக உன்னிப்பாக எங்களைக் கவனித்து வருகிறீர்கள். எங்கள் செயல் களைக் கூர்ந்து கவனிக்கிறீர்கள். ஆம், வெகு நுட்பமாக கவனியுங்கள். எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாருங்கள். எங்களு டைய ஒவ்வொரு செயலையும் அலசி அலசி ஆராயுங்கள், விமர்சியுங்கள்.

உங்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டியது ஒன்று மில்லை. மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்க வேண்டியது யாதொன்றும் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு முன்னால் நாட்டு மக்களுக்கு முன்னால் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகக் கடுமையான அக்கினிப் பரிட்சையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

நாங்கள் போரில் புறமுதுகு காட்டினோம் என்றோ, ஏதோ ஒன்றில் தவறினோம் என்றோ, எங்களின் நேர்மையற்ற விரோதி கூட சொல்லத் துணியமாட்டான். கூர்ந்து கவனியுங்கள். இதற்கான காரணத்தை அறிவீர்கள். உலகின் பெரும் பகுதி இன்றைக்கு எங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

மனித குலம் சுதந்திரமாகவும், சமாதானமாகவும், ஆனந்த மாகவும் வாழ்வதற்கு நாங்கள் கடைபிடிக்கும் வழியைத் தவிர, வேறு வழியே இல்லை. எங்களுடன் வராத ஒருவன் தனக்கே விரோதமாகப் போகிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

(எங்கள் நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். என்ற நூலிலிருந்து)

ஜூலியஸ் பூசிக் ஹிட்லரின் ரகசிய போலீசால் 1942 ல் கைது செய்யப்பட்டு, 1943 செப்டம்பர் 8 ல் பெர்லினில் தூக்கிலிடப்பட்டார். உத்தம மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஜூலியஸ் பூசிக். அடக்குமுறையை எதிர்த்து உலக சமாதானத்திற்காகச் சலியாது  பாடுபட்ட வீரர்.

மக்கள் மதிப்பு விலையில் சவுத் விஷன் சில நூல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. அதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) மக்கள் பதிப்பு விலையில் (ரூ. 160/-) நவம்பர் புரட்சி தினத்தன்று வெளியிட உள்ளனர். அதற்காக வெளியிட்ட ஒரு சிறு பிரசுரத்தில் ஜூலியஸ் பூசிக் எழுதிய கம்யூனிச கொடியின் கீழ் என்ற கட்டுரை வெளிவந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சவுத் விஷன்,
132, புதிய எண் 251,
அவ்வை சண்முகம் சாலை, கோபால புரம், சென்னை – 600 086.