சோவியத் புரட்சியும் தமிழகமும்

– இரா.சிசுபாலன்

உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.

நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.

தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.

ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’  எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.

ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி  எழுதுகிறார்:

‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும்  விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.

1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,

‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.

 ‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக்  கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.

இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காரவேலர்  தொழிலாளர்- விவசாயிகள்  கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக  மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில்  போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின்  தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.

சென்னை  மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931  தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:

 ‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.

சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள்  இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்

ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:

  • நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
  • தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
  • பெண்களுக்கு இரவு வேலை கூடாது
  • குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
  • பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
  • பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.

84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.

பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.

நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

நவம்பர் புரட்சி நூற்றாண்டு கட்டுரை

இரா.சிந்தன்

பொதுவாக ஒருநாடு தன்னை ‘ஜனநாயக’ நாடென அழைத்துக் கொண்டாலும் அந்த நாட்டின் அரசு எந்த வர்க்கத்தின் கருவியாகவுள்ளது என்பதை வைத்தே, அதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வரமுடியும். முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. குடிமக்களுக்கு சிலஉரிமைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அந்த சமூகத்தில் நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டல் தொடர்கிறது. எனவே பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் தவிர்க்க இயலாததாகின்றன.

மிகச் சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஆட்சிக்குத் தலைமையேற்கும்போது – எப்போது அது தன்னுடைய நலன்களை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறது. நெருக்கடிகள் எழுந்தால், அதன் பாதகமான விளைவுகளை பெரும்பகுதி மக்களின் மீது சுமத்த ஆளும்வர்க்கம் தயங்குவதில்லை. அத்தகைய சுரண்டலுக்கான கருவியாகவே அரசும் பிறநிறுவனங்களும் தொடர்கின்றன.

சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ்:

சோவியத் ஒன்றிய அரசானது – பாட்டாளிகள், விவசாயிகளின் அரசுதான் என்பதை அவர்களின் அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியது.

1917, நவம்பர் 7 ஆம் தேதியில் குளிர்கால அரண்மனை கைப்பற்றப்பட்டது. நவம்பர் 8ஆம் தேதி சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் உலக சமாதானத்திற்கான அழுத்தமான குரல் எழுந்தது. மேலும், அப்போது நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் மூலம் 40 கோடி ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் விவசாயி வர்க்கத்தின் ஆளுகையின்கீழ் வந்தது. குத்தகைச் சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.

’மனிதனை மனிதன் சுரண்டும் முறை இனி இங்கில்லை, சோசலிசப் பொருளாதார அமைப்பில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் பொருளில்லை’ என்று பெருமையோடு அறிவித்தது சோவியத் யூனியன். அதைநோக்கிய பயணத்திற்கு லெனின் தலைமையேற்று பாதை வகுத்தார். ரஷ்யாவின் காலனிநாடுகள் விடுவிக்கப்பட்டன.

1918ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாலினம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு முடிவுகட்டியது. பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக்கியது சோவியத் அரசேயாகும். ஆண் – பெண்திருமணம், விவாகரத்து, வேலை, குழந்தைப்பேறு போன்ற தேர்வுகளை அது சாத்தியமாக்கியது.

1930களில் உலகமும் சோவியத்தும்:

1930களில் உலகம் முழுவதுமே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. அமெரிக்காவில் 25% வேலையின்மை நிலவியது. பல நாடுகளில் 33% வரை வேலையின்மை அதிகரித்தது. விவசாய விளைபொருட்களுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உலகப் போர்களின் வழியாகவும், போருக்குப் பிறகும் அந்த நெருக்கடியின் சுமைகள் முழுமையாக குடிமக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன. ஆனால் சோவியத் பொருளாதாரம் நெருக்கடிகளையோ, விலையேற்றங்களையோ காணாத பேரதிசயமாக இயங்கியது.

1920களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலில் இருந்தன. அதாவது அங்கே முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் நிலவின. முதலாளிகள் இருந்தார்கள். கூட்டுப்பண்ணைகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. குலாக்குகள் இருந்தார்கள்.

1936 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, விவசாயத்தில் குலாக்குகள் என்ற பிரிவின் தேவை ஒழிக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் வெற்றிகரமாக, பிரம்மாண்டமாக இயங்கின.

1936 ஆம் ஆண்டு திருத்தங்கள்:

சோவியத் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 7 வது காங்கிரசில் முடிவு செய்தவுடன், ஸ்டாலின் தலைமையில் 31 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையம் எழுதிய வரைவு அரசமைப்புச் சட்டம், நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. மக்கள் அந்த திருத்தங்களை விவாதித்தார்கள். சுமார் 160 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன; திருத்தங்கள் பெறப்பட்டன. பிறகு எட்டாவது மாநாட்டில் இறுதி வடிவத்தை நிறைவேற்றினார்கள். உலக முதலாளித்துவ நாடுகளின் விமர்சனங்களும், அவை எத்தனை கொச்சையாக இருப்பினும், மாநாட்டின் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான இந்த விவாதமே மிகப்பெரிய ஜநாயக நடவடிக்கை என்பதை கவனிக்கவேண்டும்.

புதியதோர் சமூகச் சூழல்:

புதிய அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து, ஸ்டாலின் உரையாற்றியபோது மிகுந்த உற்சாகம் நிலவியது. அவர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களைக் குறிப்பிட்டார். கூட்டுப்பண்ணை உற்பத்தியும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பிரம்மாண்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ‘3,16,000 டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் குதிரைத் திறன் 57,00,000. அரசின் பண்ணைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 4,00,000 டிரேக்டர்கள் 75,80,000 குதிரைத் திறனோடு செயல்பட்டுவருகின்றன’ என்றார்.

வர்க்கங்களின் புதிய நிலைமைகள்:

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால் சுரண்டும் வர்க்கங்கள் இல்லை. உற்பத்திக் கருவிகளும், நிலம் உள்ளிட்ட வளங்களும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் செயல்படும் சோசலிச அரசுடையதாக இருந்தன. இவ்வாறு பாட்டாளிவர்க்கம் ஒரு புதிய நிலையை எட்டியது. முதலாளித்துவ நாடுகளில் இருப்பதுபோன்ற நிலையில் அது இல்லை. இனியும் அது சுரண்டப்படும் வர்க்கமில்லை. விவசாயிகளும் கூட, கூட்டுப்பண்ணை முறையால் புதிய வளர்ச்சியை எட்டியிருந்தார்கள். விவசாயத்தில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டிருந்தன. அறிவுஜீவிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டத்திற்கு பாதை வகுப்போராக இருந்தார்கள். இதையெல்லாம் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல், வாக்களித்தல், திரும்பப் பெறுதல்:

பொதுப்புத்தியில் ஜனநாயகம் என்பது ஒரு தேர்தல் நடைமுறையாக மட்டுமே கருதப்படுகிறது. தேர்தல், நாடாளுமன்றங்களில் ஜனநாயகம் நிலவுவது மிக முக்கியமே என்ற போதிலும், அவற்றையும் தாண்டிய ஜனநாயக உரிமைகளை சோவியத் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

சோவியத் அரசாங்க அமைப்பில் உச்ச அதிகாரம் பெற்றது ‘சுப்ரீம் சோவியத்’ ஆகும். அதில் இரண்டு அவைகள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றிய அவை; மற்றொன்று, தேசிய இனங்களின் சோவியத் அவை. இந்த அவைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது. 18 வயது வந்த அனைவருக்கும் சம மதிப்பிலான வாக்கும், மறைமுகமான தேர்தல் முறையும் உறுதி செய்யப்பட்டன. (இக்காலகட்டத்தில் பல முதலாளித்துவ நாடுகளில் வாக்குரிமை அனைவருக்குமானதாக இல்லை. வசதி, பாலினம், கல்வியறிவு, இனம், மொழி, வாழிடம் சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன) சோவியத் ஒன்றிய அவை உறுப்பினரை தேர்வு செய்ய – ஒவ்வொரு 3 லட்சம் பேருக்கும், ஒரு பிரதிநிதி என்ற வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

தேசிய இனங்களின் சோவியத் அவைக்கான பிரதிநிதிகள் -ஒவ்வொரு ஒன்றியக் குடியரசிலிருந்தும் தலா 25 , தன்னாட்சிக் குடியரசிலிருந்து 11, தன்னாட்சிப் பிரதேசங்களில் இருந்தும், தேசியப் பகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு அவைகளும் சமஅதிகாரம் கொண்டவையாக இருந்தன. அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்த அமைப்புச் சட்டம், போட்டியிடும் உரிமையையும் உறுதி செய்தது. அதே சமயம், சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து கம்யூனிசத்திற்கு பாதையமைக்கும் லட்சியத்தை வென்றெடுக்கும் நோக்கில், பாட்டாளிவர்க்க அமைப்புகளே வேட்பாளர்களை நிறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. தனியுடைமையை ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகளுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டது – இதைத்தான் முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக விரோத நடவடிக்கையாக வர்ணித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்ப அழைப்பதற்கான உரிமையும் அத்தியாயம் 11இல் பிரிவு 142 உறுதி செய்தது. குடியரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கான தேர்தல்:

மேலும்,சுவாரசியம் தரும் வகையில் சோவியத் ஒன்றியத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் அனைவருக்கும் நேரடியான, சம வாக்கு உறுதிசெய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தில், குடிமக்கள் அரசாங்க நிர்வாகப் பணிகளில் பங்கேற்கவும், அரசு நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளை அனுப்புதல், அரசுப்பணிகளில் நிலவும் தொய்வுகளைக் கேள்வி கேட்பதற்கான உரிமைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டன. ஊழல் முறைகேடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளாக இவை அமைந்தன.

குடிமக்கள் உரிமைகள்:

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பாட்டாளிக்கு உழைப்பு என்பது அவளின்/அவனின் இயல்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. அவள்/அவன் உற்பத்தி நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாக அமைவதில்லை. வேலைசெய்யாத போதுதான் ஒரு பாட்டாளி மகிழ்ச்சியடைவதாகக் கருதும் நிலை உள்ளது. இதனை மார்க்ஸ் அன்னியமாதல் (alienation) என்று குறிப்பிடுகிறார். உற்பத்திப் பொருளில் இருந்து உழைப்பு நடவடிக்கையை அன்னியப்படுத்துவதானது ஒரு மனிதனை அவரது வாழ்க்கை நடவடிக்கைகளில் இருந்தும், சமூக இயல்பிலிருந்தும் தனிமைப்படுத்தி, துண்டிக்கிறது.

சோசலிச சமூகத்தில் உழைப்பு வயிற்றுத்தேவைக்கான ஒரு உயிரற்ற நடவடிக்கையாக இல்லை. மாறாக அது, சொந்த வாழ்க்கைக்கும், சமூகத்தின் நலனுக்குமான சேவையாகிறது. எனவே, ஒரு உழைப்பாளி தன் உழைப்பை மதிப்புமிக்கதொரு பணியாக மேற்கொள்கிறார். இந்தப் பின்னணியில்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏட்டளவில்கூட வழங்கப்படாத உரிமைகளை, சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு உறுதி செய்தது.

உழைப்பும், ஓய்வும் உரிமைகள்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

ஓய்வுக் காலத்தில், உடல் நலம் குன்றிய சூழலில் சோவியத் குடிமக்களைப் பாதுகாப்பதும் உரிமைகளாக்கப்பட்டன. கல்வி உரிமையும், பெண்களுக்கான சம உரிமையும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டன. இனம், மொழி, பண்பாடு, சமூகம் சார்ந்த எந்த வகையிலான வெறுப்பும் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல; தண்டமைக்குரியதாகவும் ஆக்கப்பட்டன.

மத வழிபாடுகளும், பிரச்சாரமும், நாத்திகப் பிரச்சாரமும் அனைத்து மனிதர்களுக்கும் உறுதி செய்யப்பட்டன. பேச்சுரிமை, கூட்டம் கூடுவது, போராடும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

1977ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தன் வேலையைத் தேர்வு செய்வதற்கான உரிமையும், சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. தனிநபர்களின் விருப்பத் தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் தலையீடு செய்வது குற்றமாக்கப்பட்டது.

தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் ஒன்றியம். பிறநாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடியவர்கள், தேசிய விடுதலைக்காக போராடியவர்கள், அறிவியல்ஆய்வுகளைத் தொடர முடியாமல் அபயம் கேட்டு வருவோருக்கு, தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் யூனியன்.

சோவியத் ஒன்றிய கூட்டாட்சி:

சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த குடியரசுகள் 14 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் அவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதுடன், அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் அரசமைப்புச் சட்டம் விவரிக்கிறது. அந்தந்தப் பிராந்திய நீதிமன்ற நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளுக்கான மொழியில் நடப்பது உறுதி செய்யப்பட்டன. 1944 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் செம்படைக் கிளைகள் ஏற்படுத்தவும், வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகம் ஏற்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் வழங்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டாட்சி குறித்த பகுதிகளும், அனுபவமும் வேறொரு முழுநீளக் கட்டுரைக்கானவை.

இதுபற்றி பெருமிதம் பொங்க குறிப்பிடும் தோழர் ஸ்டாலின், ’தேசியங்களும், இனங்களும் சமஉரிமையோடு வாழமுடியாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு கீழே பல காலனி நாடுகளை வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகள், ஆளும் ‘தேசியங்களின்’ சாசனமாகவே அரசமைப்புச் சட்டத்தை வடிக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டது சோவியத் ஒன்றியம்.’ என்கிறார்.

மேலும், ‘சர்வதேசத் தன்மையோடும், அனைத்து தேசியங்களுக்கும் இனங்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்வதாகவும், நிறம், மொழி, கலாச்சாரம், அரசியல் முன்னேற்றம் என ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் எந்தப் பிரிவும் அமையப் பெறாத ஒன்றாக சோவியத் அரசமைப்புச் சட்டம் உள்ளது.’ என்கிறார். அரசியல் வலிமையோ, கடந்த கால நிலைமைகளோ ஒரு குடியரசின் சம அந்தஸ்தை மறுக்கும் காரணியாக அமைய முடியாது என்கிறார் அவர்.

மறக்கவியலாச் சுவை:

சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருக்கையிலே அனைவரும் சமம் என்று இறுமாப்புக் கொள்வதன் பொருள்தான் என்ன? என்ற கேள்விக்கு முதலாளித்துவ நாடுகளில் பதில் இல்லை. சோவியத் ஒன்றியம் அந்த நிலைமையிலிருந்தே மாற்றத்தை தொடங்கியது. அங்கு நிலவிய உற்பத்தி முறையும், உற்பத்தி சக்திகளின் உடைமையும் தனியொரு வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இதன் விளைவாகவே முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத பல உரிமைகளை சோவியத் உறுதி செய்தது. இது குறித்து உலகத் தொழிலாளி வர்க்கமே பிரமிப்போடு நோக்கியது. சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வராமல், இத்தகைய வாழ்க்கைச்சூழல் சாத்தியமில்லை என்ற நிலையில்தான் விமர்சனங்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அவர்கள் இதனை ஒரு விளம்பர நடவடிக்கையாக மட்டுமே சுருக்க விரும்பினார்கள்.

ஆனால், சோவியத் தனது லட்சியப்பாதையில் நடைபோட்டது. அதன் அரசமைப்புச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. அது தனக்குத்தானே வரித்துக் கொண்ட உயர்ந்த லட்சியங்களை அமலாக்கும் போராட்டத்தில் ‘உலகப் பாட்டாளிகளுக்கு இன்றுவரை கனவாக அமைந்திருக்கும் உரிமைகளை, அது சாத்தியமாக்கிக் காட்டியதென்பதை’ யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறை திருத்தத்தின் போதும் சோவியத் ஜனநாயகம் மெருகூட்டப்பட்டது. “நாங்கள் பெற்ற வெற்றிகளின் கனிகளைத் தருகிறோம்” என்ற மகிழ்ச்சியோடு ஸ்டாலின் அதனை வர்ணித்தார். உலகமே அந்தக் கனிகளைச் சுவைத்தது. பின்னடைவுக்குப் பிறகும் தன் கனிகளின் சுவையை சோவியத் வரலாறு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.

லெனின் வாழ்வும் – சிந்தனையும்!

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன.  இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!

இந்த நூலை படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் இந்த நூலை எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்பிரதாய பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது.

லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர்! – அவரின் வாழ்க்கை பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது, அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைத்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளராக அருணன் தன் எழுத்துப் பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்து விளக்கியிருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது.

ஓர் உதாரணம் ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் மூன்றாவது மாநாடு 1920 அக்டோபர் 2ல் துவங்கியது. அந்த மாநாட்டில் தோழர். லெனின் இளைஞர்களிடம் பேசுகிறார். மனித குலம் சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தை எல்லாம் ஜீரணிக்காமல் ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என நினைப்பது மிகப் பெரும் தவறாகும். கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் பற்றி மட்டும் அறிவது போதுமானது. கம்யூனிசத்தை தந்த அறிவு மூலத் தொகுப்பை அறிய வேண்டிதில்லை என நினைப்பது தவறாகும். மனித குல அறிவுத் தொகுப்பிலிருந்தே கம்யூனிசம் பிறக்கிறது என்பதற்கு மார்க்சியமே நல்ல உதாரணம் ஆகும்.

மார்க்சின் போதனைகள் ஏன் கோடிக்கணக்கான வாலிபர்களின் இதயங்களையும், மனங்களையும் வென்றிருக்கிறது என்று கேட்டால் உங்களுக்கான விடை இதுதான்:-

முதலாளித்துவத்தின் கீழ் மனித குலம்  அடைந்த ஞானத்தை மார்க்ஸ் அஸ்திவாரமாகக் கொண்டதுதான்.

இந்த அரிய கருத்தை, அற்புத கொள்கையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் வரட்டு வாதம், புனிதத்துவம் பயன்படாது. இதற்கு நுலாசிரியர் அருணன் தன் மொழியில் எப்படி விளக்கம் தருகிறார். வாசகர்கள் புரியும் படி எப்படி வியாக்கியானம் செய்கிறார் என்று பார்ப்போம். மார்க்சியம் என்கிற ஞானக் கொழுந்து பழைய வேரிலிருந்து முகிழ்ந்த்ததுதான். ஆனால், புத்தம் புதியது. அப்படியே கம்யூனிசமும் பழைய சமுதாயத்தின் வயிற்றைக் கிழித்தே வெளிக்கிளம்பும். ஆனால் புத்தம் புதியது. பழையதை காலுக்கடியில் போட்டு அதன் மீது நின்று நர்த்தனம் புரிவது. இது வரை மனித குலம் கண்ட சமுதாய ஞானம், இயற்கை ஞானம் சகலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி கம்யூனிசத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  – என்கிறார்.

இப்படி லெனினின் ஏராளமான கருத்துக்களுக்கு நுலாசிரியர் அருணன் எளிய முறையில் விளக்கங்கள் தந்து வாசகர்களின் வாசிப்பு வேகத்தை துரிதப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார்.

அவரின் எளிய நடை – ஆனால், இலக்கிய நடை சலிப்பின்றி இந்தப் புத்தத்தை படிக்கத் துண்டுகிறது. ஒரு நல்ல நாவலை உற்சாகத்தோடு படிப்பது போல, ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை – தத்துவங்களாய், கொள்கைகளாய் நிரம்பி வழிந்தோடும் ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையை இவ்வளவு  உற்சாகத்தோடு இடைவிடாது படிக்க முடிகிறது என்றால், தோழர் அருணனின் கை வண்ணம்தான் இதைச் சாதித்தது என்று சொல்லலாம்.

ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். ரஷ்யாவில் எந்த விதமான புரட்சி நடத்த வேண்டும், மார்க்சிய தத்துவத்தை இங்கு எப்படி அமுல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு நடத்தி அதில் முழுமையாகத் தேறினார். மார்க்சிய தத்துவத்தை அப்படியே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமுல்படுத்திட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.

ரஷ்யாவில் ஆரம்ப நிலையில் சமூக – ஜனநாயகக்கட்சியின் நிலைபாட்டில் உள்ள சில குறைபாடுகளை அவர் குறிப்பிட்டு சொல்லுவதைப் பார்ப்போம். ரஷ்யாவில் நிலவும் சிறப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக (தங்களின் கொள்கை ஒரு வேதமல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி என்றே மார்க்சும், ஏங்கல்சும் சொல்லித் தந்திருகிறார்கள்) வேறொரு சகாப்தத்தில் வெளிநாட்டுச் சூழல்களில் அமுல்படுத்தப்பட்ட அனுபவத்திலிருந்து கிடைத்த முடிவுகளை விமர்சன பூர்வமற்ற முறையில் அப்படியே இங்கே எதிரொலித்தார்கள்.

ரஷ்யாவில் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படை விவசாயப் புரட்சியே, அதுவே இந்தப் புரட்சியின் குறிப்பான தேசியத் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்தப் பிரச்சனையின் சாரம் நிலப்பிரபுத்துவத்தையும், ரஷ்ய விவசாய முறையிலும் அதன் விளைவாக சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் நிலவும் பண்ணை அடிமைத்தனத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழிக்க விவசாயிகள் நடத்தும் போராட்டமே.

இந்தியாவிலேயும் மார்க்சிய தத்துவத்தை அமுல்படுத்துகிற போது, உலகமயம், தாரளமய, தனியார்மயம் என புதிய சூழல் இந்தியாவை கவ்வியுள்ளபோது, ஏகாதிபத்திய நாடுகளின் இந்த புதுவித தாக்குதல்களையும் எதிர்த்துக்கொண்டு, உள்நாட்டு முதலாளிகளும் பன்பமடங்கு தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு இந்திய மக்களை சாடுகின்ற சூழலில், கிராமங்களிலும் முதலாளித்துவ நிலச்சுவான்தார்கள் உருவாகிவிட்ட சூழலில், கிராம மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற போது, அன்னிய மூலதனமும், விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுக்கிற சூழ்நிலையில், இதற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிற பாடத்தையும் நாம் புரிய வேண்டும்.

மார்க்சியத்தை நன்கு கற்றுத் தேர்ந்த லெனின், தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று என்றும் இருந்ததே இல்லை. மிக அடக்கத்தோடு சாதாரண, ஏழை எளிய மக்களிடம் கூட அவர் கேட்டு தெரிந்து கொண்டு அவர் தன் ஞானத்தை கூர்மைப்படுத்திக் கொண்டார். ஞானத்திமிர் அவருக்கு இருந்ததே இல்லை. இதற்கும் ஓர் உதாரணம் :-

ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் – ஆல்பெர்ட் ரைஸ் வில்லியம்ஸ் என்பவர் லெனினை பேட்டி காணச் சென்றார். 1 1/2 மணி நேரம் ஆகியும் லெனின் இவரைக் கூப்பிட வில்லை. நேரம் அதிகமாகிவிட்டது. அமெரிக்க பத்திரிக்கையாளர் நினைத்தது:-

லெனின் நேரத்தைக் கடை பிடிப்பவர். ஆனால், ஏன் என்னைக் குறித்த நேரத்தில் அழைக்கவில்லை. ஒருவேளை வெளிநாட்டு துதுவர் பேசிக் கொண்டிருக்கிறார் போலும் என நினைத்துக் கொண்டார். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு கிராம விவசாயி பரட்டைத்தலை அரைகோட்டு அணிந்தவர் லெனின் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அடுத்து அமெரிக்க பத்திரிக்கையாளர் உள்ளே சென்றார். அவரிடம் லெனின் சொன்னது :

மன்னித்துக் கொள்ளுங்கள். இவர் தம்போவ் விவசாயி. மின்மயமாக்கல், கூட்டுப் பண்ணைகள் அமைத்தல், பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு பேசுவது சுவாரசியமாக இருந்ததால் நேரத்தை கவனிக்க மறந்து விட்டேன் என்றார். அவருக்கிருந்த மேதாவிலாசம், ஏழை விவசாயியோடும் பொருளாதாரம் பேச அதிலும், அக்கறையோடு பேச பணித்தது.

பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் கமிட்டி கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார்கள். காலத்தை வீணடிப்பார்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம், நமக்குள்ளாகவே பேசுவதும் வழக்கம்.

இப்படி தோழர் லெனினுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது:

ரஷ்ய கவிஞர் மாயகோவ்ஸ்கி விடாமல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்போர் என்ற தலைப்பில் அன்றைய ரஷ்ய புரட்சியாளர்களிடமும், குறிப்பாக போல்ஸ்விக் கட்சியினரிடமும் மலிந்திருந்த ஒரு பழக்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதியிருந்தார்.  இந்தக் கவிதையை லெனின் படித்திருக்கிறார். சினம் கொள்ள வில்லை. மாறாக மகிழ்ந்தார். அவர் ஒரு   ஞசயஉவஉயட ஞநசளடியேடவைல. ஆக இதில் அவர் அணுகுமுறையைப் பார்ப்போம்.

மாயகோவஸ்கியின் கவித்துவ ஆற்றலின் ரசிகனல்ல நான் – அது பற்றி தீர்ப்பு சொல்ல நான் தகுதி படைத்தவன் அல்ல. என்றபோதிலும், இந்த கவிதையைப் படித்து நான் ரசித்தது போல அண்மைக்காலத்தில் வேறு எந்த அரசியல் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்டதைப் ரசித்ததில்லை. தனது கவிதையில் அவர் இந்தக் கூட்டம் நடத்தும் பழக்கத்தை விமர்சித்திருக்கிறார். கூட்டங்களில் விடாமல் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை அவர் ஒரு பிடி பிடித்திருக்கிறார் – கவிதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அத அரசியலைப் பொறுத்த வரையில் முற்றிலும் சரிதான் என்பேன். கூட்டங்களில் மனிதர்கள் முடிவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். குழுக்களைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். முடிவற்ற திட்டங்களைத் தீட்டிய வண்ணம் இருக்கிறார்கள் – என்றார்.

கமிட்டி கூட்டங்கள் பிரசங்க மேடையாகிவிடுவதை, செயல்பட வேண்டிய நேரத்தைக் குறைத்துவிட்டு, கமிட்டி கூட்டங்களை மணிக்கணக்கில் நடத்துவதை லெனின் குறை கூறுகிறார். மாயகோவ்ஸ்கியின் அந்த கிண்டல் கவிதை வரிகளை ஏற்கிறார். கவிஞர் சொன்னதை மறுக்கவில்லை. மறைக்கவில்லை. மாறாக, அதை வெகுவாக ரசித்தேன் என்கிறார். இதுதான் லெனின் சிறப்பு.

இன்னும் அவரின் குணமேன்மையை அறிய ஓர் உதாரணம்: நான் ஒரு நுலில் படித்த ஒரு அரிய செய்தி.

லெனின் பாரிசில் குடியேறி வாழ்ந்த காலத்தில், அவர் வீட்டில் ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாது பணியாளராக இருந்தார். அவர் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தப்பாட்டைக் கேட்ட லெனின் மிக ஆர்வத்தோடு, மீண்டும் ஒருமுறை அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி கேட்டு அவர் மனப்பாடம் செய்து கொண்டார். தலை சிறந்த அறிவாளி – எனவே ஒரு வீட்டு வேலைக்காரி பாடிய பாட்டை மீண்டும் பாடக் கேட்டு, அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, இவர் பாட ஆரம்பித்து விட்டார். இவர் பாடுவதா? இங்கே தான் அவரின் மகத்தான பெருமை பளிச்சிடுகிறது. யார் பாடினால் என்ன? அந்தப்பாடலில் பொருள் இருந்தால் சரி, அது நமக்கும் பயன்படும் என்பதை ஏற்றுக் கொண்டார். உழைப்பாளி மக்களின் தலைவருக்கு நான் என்னும் முனைப்பு (நுபடி) தலை துக்கக்கூடாது அல்லவா? அதுதான்இது. சரி, அந்தப் பாடலில் அப்படி என்னதான் பொருள் இருந்தது?

அந்தப் பணியாளர் பாடியது தாய்நாட்டைப் பற்றிய பாடல், ஜெர்மன் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த உழைப்பாளிப் பெண் வீரத்தோடு பாடிய பாடல்.

ஓ ஜெர்மானியர்களே, நீங்கள் எங்களின் ஆஸ்சேஸ், லோரன் பகுதிகளைப் பிடித்துக் கொண்டுட்டீர்கள். எனினும், உங்களையும், மீறி சுயமான பிரஞ்சுக்காரர்களாகவே வாழ்வோம். எங்களுடைய வயல்களை எல்லாம் உங்கள் வசம் ஆக்கிக் கொண்டீர்கள். ஆனாலும், எங்களுடைய இதயங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்காது- என்ற தாய் நாட்டுப் பற்றிக் கூறும் வீரமான பாடல். இதைக் கேட்டுத்தான் லெனின் பரவசமானார். மனப்பாடம் செய்து அவரும் பாடினார்.

தேசிய இனப்பிரச்சனையில் லெனின் மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பூரணமாக சமநிலை கொண்டு செயல்பட்டார்.

சோவியத் குடியரசுகளின் ஒருங்கிணைப்பில் சிறிய நாடோ, பெரிய நாடோ யாவற்றிற்கும் சம உரிமை பரிபாலிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இங்கே இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த உணர்வு இருக்க முடியாது. முதலாளித்துவ ஆளுமைக் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது.

இது சம்பந்தமாக பரிசீலனை செய்ய ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் ஒரு தவறு இருந்தது. அதை லெனின் ஏற்கவில்லை.

ரஷ்யா உள்ளிட்ட அனைத்து குடியரசுகளும் சமநிலையில் இணைந்து ஒன்றியம் உருவாக்கப்படுதல் என்பதற்கு பதிலாக ரஷ்யாவின் தலைமையை இதர குடியரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்ற பொருள்பட அந்தப்பரிந்துரை இருந்தது.

இதைக்கண்ட லெனின் ஸ்டாலினை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

நுலாசிரியர் அருணன் இந்த நுண்ணிய பிரச்சனையில், லெனின் எந்த உணர்வோடு எழுதினாரோ, அதே அர்த்தத்தில் பொருள் கெடாமல் மொழி பெயர்த்துள்ளார். லெனின் கூறுவது:-

உரோனிய குடியரசு மற்றும் இதரர்களோடு நம்மையும் நாம் சமமாகப் பாவிக்கிறோம். பிறருடன், பிறருக்கு சமமாக நாமும் (ரஷ்யாவும்) புதிய ஒன்றியத்தில், புதிய சம்மேளனத்தில் சேருகிறோம்.

ரஷ்யர்களிடம் பெரிய அண்ணன் போக்கு வந்து விடக் கூடாது என்பதில் லெனின் கறாராக இருந்தார். மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்:

ஆதிக்க தேச இனவாதத்திற்கு எதிராகச் சாகும் வரை போராடுவேன் என்று அறிவிக்கிறேன். இந்த சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு எனது நல்ல பற்களை வைத்தே உண்பேன். ரஷ்யர், உக்ரேனியர், ஜார்ஜியா இப்படி முன்வைத்தே ஒன்றியத்தின் மத்தியக்குழுவிற்கு தலைவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டியது முற்றிலும் அவசியமாகும். முற்றிலும் – என்கிறார்.

எத்தகைய மகத்தான ஜனநாயகவாதியாக, பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காத சமத்துவாதியாக லெனின் திகழ்ந்தார் என்பதற்கு இது அழியா சாட்சியமாகும். ஒன்றியத்தின் தலைவராக ஒரு இனத்தைச் சேர்ந்தவரே வந்து விடக் கூடாது. மக்கள் தொகையில் மிக அதிகமானவர்கள்தான் வருவார்கள். எனவே, சுழற்சி முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார் – என நுலாசிரியர் அருணன் கூடுதல் விளக்கம் கொடுத்து வாசகர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார்.

இப்படியெல்லாம் லெனின் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் அந்த மகத்தான அமைப்பு – சோவியத் சோசியலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கம்பீரமாக உருவானது.

தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது மிக நுணுக்கமான ஏற்பாடு. இதை லெனின் மிகத் திறமையாக வகுத்தார். ஒரு தனி புத்தகமும் எழுதினார்.

தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது – இந்த பிரிந்து போகும் உரிமை என்பது ஆமாம், இல்லை என்று சொல்லுவது நடைமுறையில் மிக எளிதாக இருக்கலாம். ஆனால், பாட்டாளிகளைப் பொறுத்த வரையில் இந்தக் கோரிக்கை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டவை. அதாவது தேசங்களது உரிமைகளுக்குமிடையே முழு சமத்துவம் வேண்டும், அனைத்து தேசங்களது தொழிலாளர்களின் ஒற்றுமையும் வேண்டும். இதுவே மார்க்சியத்தின் தேசியத்திட்டம். அனைத்துலக அனுபவமும், ரஷ்ய அனுபவமும்  இதையே தொழிலாளர்களுக்குப் போதிக்கிறது என்றார்.

இந்த மூன்று கூறுகளில் எந்த ஒன்யும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார்.

சுயநிர்ணய உரிமை என்பது கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டு, திட்டவட்டமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றார். இதில் லெனின் அதிக பட்ச எச்சரிக்கையோடு இருந்தார்.

லெனின் மொழிப்பிரச்சனைக் கொள்கை இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும். இந்தியாவில் மத்திய அரசு – ஆளும் வர்க்கம் மொழிக் கொள்கையில் பெரிய தவறு செய்து வருகிறது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை – இந்தியக் கட்டாயப்படுத்தி, பிற மாநில மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது.

லெனின் சோவியத் குடியரசில், அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாக, போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். எந்த ரூபத்திலும் இது கட்டாயமாக்கப்படக்கூடாது என்றார். அவர் ஒரு ரஷ்யர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விசயத்தில் மிகத் தெளிவான கொள்கை கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். லெனின் தன் இளமைப் பருவத்திலிருந்தே புரட்சி என்றால் அது தனிநபர் கொலை என்கிற சித்தாந்தத்தை அறவே வெறுத்தார். எதிர்த்தார். தன் மூத்த சகோதரர் அந்த நிலைபாட்டை எடுத்தவர், தண்டனையாக துக்கு மேடைக்குப் போனவர். இந்த அனுபவம் லெனினுக்கு உண்டு. கம்யூனிஸ்ட இயக்கத்தில் அதிதீவிரவாதம் என்பது ஒரு நோயாக தொடர்ந்து வந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளில் அதிதீவிரவாதம் தலை துக்கியது. அந்த நாடுகளில் உள்ள அதிதீவிரவாதிகள் ரஷ்யாவில் நடந்த புரட்சியை  அவர்களுக்கு சாதகமாகத் திரித்துத் தங்கள் சொந்த நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் உள்ள அதிதீவிரவாதிகள் சீனப் புரட்சியை இந்தியாவில் தவறாக ஒத்திடுவது போல.

இந்த அதிதீவிரப் போக்கை  எதிர்த்து இடதுசாரி கம்யூனிஸ்ட்டும் –  ஓர் இளம் பருவக் கோளாறும் என்ற நுல் எழுதி இடதுசாரி தீவிரவாதிகளின் தவறான போக்குகளைத் தோல் உரித்துக்காட்டினார்.

லெனின் அவ்வப்போது வரும் நாவல்களை, தத்துவார்த்த நுல்களை, அரசியல் சார்ந்த ஏடுகளை, கவிதைகளை விடாப்பிடியாக படிக்கும் திறமையுள்ளவர்: அவர் வேகமாக படிக்கும் இயல்புள்ளவர் என்றும் கூறுவார்கள். 400 பக்கங்கள் கொண்ட புத்தகமானாலும் ஒரே இரவில் படித்து முடித்து விட்டாராம். வெளியாகும் புத்தகங்களை உடனுக்குடன் படிக்கும் ஆர்வமுள்ளவர் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்வை நுலாசிரியர் அருணன் குறிப்பிடுகிறார்.

இந்தியப் புரட்சியாளர்களில் சிலர் குழுவாகச் சென்று லெனினைச் சந்தித்திருக்கிறார்கள்.

எம்.பி.ப.தி. ஆச்சாரியா, நாளு மகேந்திர பிரதாப், எம்.பர்கத் துல்லா, அப்துல்ராய், திலிப் சிங்கில், இப்ராகிம் ஆகியோர் சந்தித்துள்ளார்கள். இந்தச் சந்திப்பு கிரெம்ளினில் நடந்துள்ளது. எம்.பி.ப.தி. ஆச்சாரியா அதாவது மண்டையம் பிரதிவாதி பயங்கர திருமலை ஆச்சாரியா தமிழகத்தைச் சார்ந்தவர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். தமிழர். இவரின் குடும்பத்தார்தான் இந்தியா பத்திரிக்கைக்கு பாரதியாரை ஆசிரியர் ஆக ஆக்கியவர்கள்.

இந்தக்குழுவின் தலைவராகச் சென்ற மகேந்திர பிரதாப் லெனின் அறைக்குள் சென்றவுடன், லெனினே எழுந்து மூலையில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்து அவருக்குப் போட்டது பெரிய ஆச்சரியமாகிப் போனது.

மகேந்திர பிரதாப்புக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. இவர் எழுதிய அன்புமதம் என்ற புத்தகத்தை லெனினிடம் வழங்கினார். உடனே லெனின் நான் அதை ஏற்கனவே படித்து முடித்துவிட்டேன் என்றார்.

அதோடு அந்தப் புத்தகம் பற்றிய தன் அபிப்பிராயத்தையும் அவரிடம் சொன்னார்.

எங்கள் நாட்டில் கூட டால்ஸ்டாய் போன்றவர்கள் மதத்தைப் பரப்புவதின் மூலம் மக்களது விடுதலைக்கு வழி காணலாம் என நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்கவில்லை. இந்தியா திரும்பிய பிறகு நீங்கள் வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்யுங்கள். அதுதான் விடுதலைக்காண வழி – என்று சொல்லியனுப்பினார்.

டால்ஸ்டாய் மதப்பிரச்சாரத்தின் மூலம் விடுதலை பெற முடியும்- என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன லெனின் டால்ஸ்டாய் பற்றி பொதுவாக என்ன கணிப்பு கொண்டிருந்தார் என்பது மிகத் தலைசிறந்த மதிப்பீடு.

எப்பேர்பட்ட மலை (டால்ஸ்டாய்). ஊம். எத்தகைய மாண்பு மிக்க மனிதர். கலைஞர் என்றால் நண்பரே, இவர்தான் கலைஞர். இன்னும் ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்தப் பிரபு எழுதத் தொடங்கும் முன் உண்மையான ரஷ்யக் குடியானவன் இலக்கியத்தில் இடம் பெறவில்லை…

ஐரோப்பாவில் இவருக்கு இணையக யாரைச் சொல்ல முடியும். ஒருவரையும் சொல்ல முடியாது – இப்படி கார்க்கியிடம்தான் டால்ஸ்டாய் பற்றி லெனின் பேசினார்.

அதே நேரத்தில் அவருடைய திறமைகள் அனைத்தையும் பாராட்டிய லெனின் அவரிடம் உள்ள குறைபாடுகளையும் கறாராகவே சுட்டிக்காட்டினார்.

டால்டாய் ஆவேசமான கண்டனக்காரர். உணர்ச்சிமிகு குற்றச்சாட்டாளர். மாபெரும் விமர்சகர். அதேபொழுதில் தமது நுல்களில் சுரண்டலுக்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியோடு, லெனின் மிக நெருக்கமாக இருந்தவர். அவருடைய படைப்புகளை விரும்பி படிக்கிறவர். ஆனால், அவரின் படைப்பில் அரசியல் தவறுகள் ஏற்பட்டு விட்டால் அவைகளையும் கட்டாயம் விமர்சனம் செய்யாமல் விடமாட்டார்; நட்பையும் விடமாட்டார்.

அவர் எழுதிய நுலைப் படித்துவிட்டு உடனே அவருக்குக் கடிதம் எழுதிவிடுவார்; நல்லவைகளைப் போற்றுவார். அல்லவைகளைச் சாடுவார். இருவரும் நேரில் சந்திக்கிறபோது நிறைய விவாதிப்பார்கள்.

எவ்வளவு அரசியல் பணிகளில் இருந்தாலும், படைப்பாளிகளோடு தொடர்பு கொள்ளுவதை விடாது கடைபிடித்தார்.

லெனின் ஓர் இலக்கிய ரசிகர். இலக்கிய விமர்சகர். இலக்கியம் பற்றிய கலையைப்பற்றிய  லெனின் கொள்கை மிகத் தெளிவானது.

கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப்பதிந்திருக்க  வேண்டும். அது அவர்களுக்கு புரியக் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த நேரமும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளி விவசாயிக்கு சாதாரண கறுப்பு ரொட்டி அவசர தேவையாய் இருக்கிற போது, சொற்ப சிறுபான்மை யோருக்கு அருஞ்சுவை விருந்து தயாரிக்க முடியுமா? இது கலை பண்பாட்டுத்துறைக்கும் பொருந்தும்- என்றார்.

உண்மைதான். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதன் மெய்யான அர்த்தத்தில் லெனின் பேசினார். டால்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்பதை அதே டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை என்றார்.

எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒரு கம்யூனிட் எப்படிப்பார்க்க வேண்டும்; கட்சிக்கு அப்பாற்பட்ட கலைஞர்களை, அதே நேரத்தில் கட்சிக் கலைஞர்களை எடைபோடும் அளவுகோல் எது என்பது பற்றியெல்லாம் புரிந்து கொள்ள லெனினுடைய நேர்த்தியான அணுகுமுறையை படைப்பாளி அருணன் நிறைய இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

மாதர் விடுதலை பற்றி ஜெர்மன் கம்யூனிட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, புரட்சிப் பெண்மணி கிளாரா செத்கின் என்பவருடன் லெனின் நடத்திய விவாதம் அற்புதமான ஒன்று! அந்தப் பகுதியை நுலாசிரியர் அருணன் சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் கருத்து பெண் விடுதலை வேட்கைக் கொண்டோருக்கு வெளிச்சம் காட்டுகிறது.

கிளாராவிடம் லெனின் ஒரு கட்டத்தில் கீழ்க்கண்ட கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிறார்.

மார்க்சியத்துக்குப் புறம்பான முறையில் விவாதிப்பதால் முடிவில் ஏற்படக் கூடிய நிலை என்ன? பாலுறுவு – திருமணப் பிரச்சனைகள் யாவும் பிரதான சமுதாயப் பிரச்சனைகளைச் சேர்ந்த கூறுகளே என்பதை மாற்றக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மாபெரும் சமுதாயப் பிரச்சனையே பாலுறவுப் பிரச்சனையின் ஒரு கூறாக, அதன் வாலாகக் கருதப்படும் – என்கிறார்.

இப்படிப் பெண்கள் உரிமைப்பற்றி பல முக்கியமான கூறுகளை பல கோணங்களில் விளக்கிப் பேசுகிறார்.

கம்யூனிடுகள் கனவு காண்பார்கள் என்பதே உண்மை. அது யதார்த்தத்திலிருந்து உதயமாகிற கனவு.

ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி. வெல் – விஞ்ஞான கற்பனைக்கதைகளை எழுதியவர். இவர் 1920 ஆம் ஆண்டு லெனினைச் சந்தித்தார். அப்போது லெனின் ரஷ்யா முழுவதும் மின்சாரமயமாகும் திட்டத்தை அவரிடம் சொன்னார்.

எச்.ஜி.வெல் அன்று ரஷ்யா இருந்த பின்தங்கிய நிலையைக்கண்டு, லெனின் முடியாத விசயத்தை கனவு காண்கிறார் என்று சொன்னார், எழுதினார். இதை ஆசிரியர் அருணன் சுட்டிக்காட்டி ரஷ்யக் கிராம மக்கள் லெனின் விளக்குகள் என்று கொண்டாடியதைக் கேள்விப்பட்டிருந்தால் கனவு-மின்சாரக்கனவு-காண வேண்டியதன் அவசியத்தை எச்.இ.வெனி உணர்ந்திருப்பார் என்று எழுதுகிறார். ஆனால் வரலாறு அப்படித்தான் நடந்து விட்டது. ஒருபத்தாண்டுகள் கழித்து அதே எழுத்தாளர் எச்.இ.வெல் ரஷ்யா வந்தார். ரஷ்யாவை சுற்றிப்பார்க்க பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அதன் பிரமாண்டமான வளர்ச்சியைக்கண்டு ஆச்சரியப்படார். லெனின் கனவு மெய்பட்டுவிட்டது – என்று தன் நினைவுக்குறிப்பில் எழுத வேண்டியதாயிற்று, ஆனால் அதுபோது லெனின் இல்லை. மரித்துப்போனார்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொள்ளுகிற மற்ற சக தோழர்களிடம் எப்படி தோழமை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் லெனின் வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

டிராட்ஸ்கி, புகாரின், மார்ட்டோவ், காமனோவ், ஹினோஜீவ் போன்றோர் லெனினோடு கருத்து மோதல் நடத்தினார்கள். முடிவுக்கு மாறாக செயல்பட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள். அப்படி இருந்தும் அவரவருக்கு இருந்த சில திறமைகளைக் கணக்கில் கொண்டு, அதோடு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களை வழங்கினார். முக்கிய பொறுப்புக்களையும் கொடுத்தார். இப்படிப் பட்டவர்களில் சிலர் கடைசி வரை திருந்தாமல் போனவர்களும் உண்டு.

லெனின் கட்சித் தலைவர்கள் பற்றி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்த பிறகு தான் அதை கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த உயில் சில தலைவர்களின் குணாம்சம் பற்றி எழுதி இருந்தாலும், ஸ்டாலின் பற்றி எழுதியது தான் பெரும் பிரச்சனையாகிவிட்டது. தனிநபர் துதி எங்கு கொண்டு போய்விடும் என்பதை உணர வைத்த இந்த குறிப்புகள் இன்று வரலாற்று ஆவணமாக நம்மை எச்சரிக்கிறது.

லெனின் மறைவு பற்றி எழுதும் கடைசி அத்தியாயத்திற்கு அருணன் அவர் காலம் ஆனார் என தலைப்புக் கொடுத்துள்ளார். அவர் காலமாகிவிட்டார் என்பது வேறு. அவர் காலம் ஆனார் என்று பிரித்து எழுதுவதில் ஒரு பொருள் அடங்கி உள்ளது. அவர் ஒரு சகாப்தம் (EPOCH) ஆனார் என்பது போல் அவர் ஒரு காலம் ஆனார் என்ற பொருளில் எழுதுகிறார்.

கடைசி அத்தியாயம், கடைசி பத்தி

அவர் காலமாகவில்லை; காலம் ஆனார். வால்கா எனும் ஜீவ நதியின் ஓட்டத்தில் அவர் கலந்து நிற்கிறார். உலகத்தின் ஜீவநதிகளோ கம்யூனிசம் எனும் மகா சமுத்திரத்தில் கலக்க ஓடிய வண்ணம் உள்ளன – என்று முடிக்கிறார்.

லெனின் என்கிற அந்தச்சொல், அந்த ஒலி – ஒரு காந்த சக்தி கொண்டது. ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டது. ரஷ்ய மக்கள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றயத்தில் இணைந்த அத்தனை குடியரசுகளைச் சேர்ந்த மக்களும் லெனின் என்ற ஒலியைக் கேட்கிற வினாடியிலேயே ஒருவித ஆக்ரஷ்ன சக்தியால் உசிப்பிவிடப்பட்டு நிமிர்ந்து எழுவார்கள். லெனின் என்ற சொல் கோடானு கோடி மக்கள் தினமும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போனது. அது சோவியத் யூனியன் எல்லையைக்கடந்து உலகம் பூராவும் உள்ள உழைப்பாளி மக்களின் உள்ளத்தை ஆட்சி கொண்டது.

அவரின் இயற்பெயர் விளாதிமிர் இலியாவிச் உல்யனவ் என்பது. விளாதிமிர் என்பதற்குப் பொருள் உலகு ஆள்பவர் என்பதாம். உலக மக்களின் உள்ளத்தை – அதிலும் உழைப்பாளி மக்களின் உள்ளத்தை லெனின் என்ற பெயரில் இன்னும் ஆளுகிறார். இனியும் ஆளுவார்.

லெனின் வாழ்வும் – சிந்தனையும்
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை
விலை-200/-