சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்

ஸ்டீஃபன் கோவன்ஸ்

சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்

முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.

பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.

சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.

1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.

முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.

இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது.  அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.

மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.

நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. 

நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.

1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.

தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.

உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).

மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).

சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.

பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக,   தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).

சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது.  இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).

1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984).  மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).

60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.

சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்,  கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).

1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.

உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே.  அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.

சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).

பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).

சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.

சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும்  தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.

தமிழில்: சோபனா

முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!

Modi Government: New Surge of Communalismஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம்.


ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன் அரசியல் குறிக்கோளை சாதுர்யமாக நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. அப்பட்டமாக அதுவொரு வகுப்பு வாதமாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவோர் மீது அந்த சித்தாந்தத்திற்காக வக்காலத்து வாங்குவோர் விஷத்தை உமிழ்கிறார்கள். இருப்பினும் இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக மிகவும் வலுவான பதில்கள் இந்து மதத் தலைவர்கள் பலரிடமிருந்தே வந்திருக்கின்றன.

“மக்களின் மத உணர்வுகள் தங்கள் அரசியல் லட்சியத்தை அடைவதற்கான பிரதான வழியாக அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.   இவ்வாறு மதத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் இந்து மதத்தின் மனிதாபிமான சாராம்சத்தின் எதிரிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

(குன்றக்குடி அடிகளார் நேர்காணல், ப்ரண்ட்லைன், மார்ச் 12, 1993).

களத்தை தயார் செய்தல்:

முதலில் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதற்காக வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிக்கின்றனர். பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிப் பாடத்திட்டங்கள் மிகவும் அற்பமான விதத்திலும், அறிவியல் அடிப்படையற்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

முதலாவதாக அவர்கள் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்துவரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் `இந்துயிசம்’ என்கிற ஒரே பையில் திணிக்க முயல்கின்றனர். இரண்டாவதாக, அயலான எதிரி (external enemy) ஒருவரை உருவாக்குகின்றனர். அதாவது `அயலான’ என்பதன் பொருள் இந்துக்களுக்கு `அயலானவர்’ என்பதாகும். `இந்து’க்களை ஒருமுகப்படுத்திட இத்தகைய `அயலானவர்களுக்கு’ எதிராகத்தான் வெறிச் செயல்கள் விசிறிவிடப்படுகின்றன.

ஏகாதிபத்திய சேவகம்:

இந்த சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் அடையாளப்படுத்தப்படவில்லை. உண்மையில் அந்த சமயத்தில் மக்கள், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததைவிட முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததுதான் அதிகம். அவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புதான் பரப்பப்பட வேண்டும் என்று அது தன் அமைப்புகளைக் கோரியது. ஏனெனில் பிரிட்டி ஷாருக்கு எதிராகப் போராடிய இந்திய மக்கள் அனைவரையும் `இந்து ராஷ்ட்ரம்’ என்ற தங்கள் குறிக்கோளை அடைந்திட ஒன்றுபடுத்திட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்திருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் ஒன்றுபட்ட விடுதலை இயக்கத்தின் வல்லமை அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகும். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே பிரிட்டிஷாரைத் தங்கள் எதிரியாகப் பாவிக்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை பகிஷ்கரித்தது. சில சமயங்களில் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்தது.

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்காக சளையாது பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜார்ஜி டிமிட்ரோவ் கூறியதனை இங்கே குறிப்பிடலாம்: “பாசிசம் அதிதீவிர ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கே சேவகம் செய்கிறது. ஆயினும் மக்கள் மத்தியில் முந்தைய மோசமான ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று நாடகமாடி, எனவே நாட்டுப்பற்று மிக்கோர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.”

(டிமிட்ரோவ், 1972, ப. 11).

பன்மையை வெறுத்தல்:

மதம், அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை தனிப்பட்டவரின் பிரச்சனையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை கோல்வால்கர் தள்ளுபடி செய்கிறார். பல்வேறு தேசங்கள், ஒரே மதத்தை அரசு மதமாகக் கொண்டிருக்கிறது என்பதையோ, அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாது மதச்சார்பற்ற தேசங்களும் இருப்பதையோ மற்றும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசங்களும் இருப்பதையோ, நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திட மதத்திற்கு இடமில்லை என்று அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிற உண்மையையோ, அவர் மறுதலிக்கிறார்.

நம் நாட்டில் புழக்கத்திலிருக்கும் ஏராளமான மொழிகளையும், அவை ஒவ்வொன்றுக்குமே தனி வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பர்யம் இருப்பதையும், பரஸ்பரம் தொடர்ந்து கலந்துறவாடுவதன் மூலமே தேசிய இனங்கள் உருவாகி இருக்கின்றன என்பதும் அவர்களால் ஏளனத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. “கடவுள்களால் பேசப்பட்ட சமஸ்கிருத மொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரையும், கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியுள்ள அனைவருக்கும் பொதுவான மொழி. மற்றும் நவீன அனைத்து சகோதர மொழிகளும் அதிலிருந்துதான் வந்திருக்கின்றன.”

(கோல்வால்கர், 1939, ப.43)

தமிழும் காஷ்மீரியும் மொழிகளில் சமஸ்கிருதக் குழு அல்லாத மூலங்களைக் கொண்டவை என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அல்லது அதற்காகவாவது, சமஸ்கிருத மொழியே இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒரு கிளைதான் என்றும், அது உலகத்தின் இந்தப் பகுதியில் மலர்ந்து வளர்ந்தது என்றும் கூறவேண்டும். இந்தியாவிலேயே முழுமையாகவும் பூரணமாகவும் மலர்ந்த மொழி உருது. அதனைக் காவிப் படையினர் எதிர்க்கிறார்கள் மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.

பாசிசத்துக்கான தத்துவ நியாயம்:

இத்தகைய திரிபு வேலைகளைச் செய்த பிறகு – தன்னுடைய ‘இந்து தேசத்தின்‘ அடிப்படையாக அமையும் சகிப்பின்மைக்கான தத்துவ அடிப்படையை விதைக்கத் தொடங்குகிறது. “அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்  மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்….”

“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச் சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்று போலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.”

(கோல்வால்கர், 1939, ப. 35).

`ஹிட்லர், இவ்வாறு, ‘குருஜியினுடைய குரு’ வாக வெளிப்படுகிறார். உண்மையில், இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தின் கொடூரமான குணத்தை வெளிப்படுத்துகிறது. பாசிசம் என்னும் பரிபூரணமான நவீன மற்றும் மேற்கத்திய சித்தாந்தத்தைக் கடன் வாங்கிக் கொள்வதில் இந்துத்துவாவிற்கு எவ்விதமான மனஉறுத்தலும் இல்லை. ஆனால், வெளித்தோற்றத்தில் இந்து மதத்தினை உயர்த்திப் பிடிப்பதற்கும், அனைத்துமே புராதனமானவை என்று காட்டுவதற்கும் அதனை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் தவிர மற்ற அனைத்து மேற்கத்திய சித்தாந்தங்களும் நாகரிக முன்னேற்றங்களும் `அந்நியமானவை’ என்று கண்டனத்திற்குரியவைகளாகின்றன.

மனுவை மீட்டெடுத்தல்:

கோல்வால்கர் முன்வைக்கும் இந்து ராஷ்ட்ரத்தின் சமூக ஒழுங்கைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவர் மனுவை “உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த’ பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண் டும்,’’ என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

(கோல்வால்கர், 1939, பக். 55-56).

மனுஸ்மிருதி என்ன கூறுகிறது? “சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது”. (123, அத்தியாயம் 10).

“பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் ஆண்களைப் போன்று பலம் உள்ளவர்கள் அல்ல, பொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.’’ (19, அத்தியாயம் 9)

இன்னும் ஆணாதிக்க, சாதி ஆதிக்க அடித்தளங்கள் கொண்ட சமூகத்தை நிறுவனமயமாக்கும் சட்டங்களை வகுத்துள்ளது மனுஷ் மிருதி.

இந்தப் புரிதலின் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ், சுதந்திரத்திற்குப் பின் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவை (Hindu Code Bill) உடனடியாக எதிர்த்தது. இன்று மனுஸ் மிருதியை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளில் காவிப்படையினர் உறுதியாக இறங்கியுள்ளனர். உயர்சாதி மகாராஷ்ட்ர பிராமணர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இதுநாள் வரை இருந்து வருவதன் முக்கியத்துவமும் இங்கே கவனிக்கத்தக்கது.

பொய் முழக்கங்களும், மெய்யான குறிக்கோளும்:

இந்த வழிகளிலெல்லாம் காவிப்படையினர் தங்கள் தாக்குதலை எதற்கு எதிராக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நோக்கினால் – அவர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியலை வரையறுத்த மதச்சார்பின்மையையும் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களையும் தாக்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் மிக மோசமான முறையில் மீறியதால் அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக என்கின்றனர் காவிப்படையினர்.

இத்தகைய இவர்களது உத்திகள் குறித்தும் டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“பாசிசம் மிகவும் லஞ்சம் மற்றும் கைக்கூலி வாங்குகிற பேர்வழிகளின் கருணையில் இருக்கும்படி மக்களை வைக்கிறது. ஆனால் அதேசமயத்தில் மிகவும் விரக்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்களிடம் `ஒரு நேர்மையான மற்றும் லஞ்சத்திற்கு ஆட்படாத அரசாங்கத்தை’ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறது… பாசிசம் மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல் புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுக்களுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும், பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பீடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகிவிடுகிறார்கள்.”

(டிமிட்ரோவ், 1972, ப. 12).

தங்களின் ஒரே நிகழ்ச்சிநிரல் ராம ஜன்ம பூமி கோவில் கட்டுவதுதான் என்று மக்கள் முன்வைத்துள்ள காவிப்படையினர், உண்மையில் ஏழை எளியோரைச் சுரண்டும் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் சுரண்டும் அமைப்புகளையும்தான் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குறிக்கோளுக்காக ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்திட வெளிப்படையாகவே உதவி வரும் இவர்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தும்.

ஒட்டிப் பிறந்த முஸ்லீம் அடிப்படைவாதம்:

இந்துத்துவத்தின் திசைவழியைக் கோடிட்டுக் காட்டிய கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் அமைப்பு உருவானது. 1941 ஆகஸ்ட் 26 அன்று, மௌலானா அபுல் அலா மௌடுடி என்பவர் தலைமையில் பதான் கோட்டில் அந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு கோல்வால்கர் எப்படியோ அதேபோன்று ஜமாத் இயக்கத்திற்கு மௌடுடி. அவர்களுடைய அரசியல் திட்டங்களிலும், வேலைமுறைகளிலும் உள்ள ஒத்தத்தன்மை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. எப்படி `ஹிட்லர் கோல்வால்கருக்கு `ஹீரோவாக இருந்தாரோ, மௌடுடிக்கும் அவர்தான் `ஹீரோ. எப்படி கோல்வால்கர் நவீன மனித சமூக நாகரிகத்தின் அனைத்து அம்சங்களையும் – அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் அனைத்தையும் – `அந்நிய கருத்தாக்கங்கள்’ (`alien concepts’) என நிராகரிக்கிறாரோ அதேபோன்றுதான் மௌடுடியும் முஸ்லீம் அடிப்படைவாதமும் நிராகரிக்கின்றன.

மௌடுடி, 1947 மே மாதத்தில் பதான் கோட்டில் உரையாற்றிய சமயத்தில், நாடு விரைவில் இரண்டாகப் பிரிந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது, தாங்கள் எப்படி பாகிஸ்தானில் `அல்லா’வால் வடித்துத்தரப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதேபோன்று, இந்தியர்கள் தங்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

முறியடிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல்:

வகுப்புவாதத்தின் வளர்ச்சி நிச்சயமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கக்கூடிய விதத்தில் தொடர்ந்து மோதலை உருவாக்குவதற்கான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், கோல்வால்கர் மற்றும் காவிப்படையினர், “இவ்வளவு கேடுகளுக்கும் நாங்கள் காரணம் அல்ல, தேசிய உணர்வு செயலற்று இருப்பதுதான் காரணம்….’’ என்று கூறுவார்கள். (கோல்வால்கர், 1939, ப. 62)

காவிப்படையினர் நாட்டு மக்கள் முன் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலும், அதனை நிறைவேற்ற தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளும், தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக, பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் பின்பற்றும் வடிவம்தான். ஆனால் அதன் வடிவத்தை அவர்கள் இந்தியாவிற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் வடிவமும், அது பின்பற்றும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், பாஜக ஆளும் வர்க்கங்களிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு பிரிவு என்பதை தோலுரித்துக்காட்டி இருக்கிறது.

காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பது போன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும். இது ஒரு வடிவ மாற்றம் மட்டும் அல்ல. மாறாக, மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சாராம்ச மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டுமானால், காவிப்படையினரின் இத்தகைய நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவர்களிடமிருந்து இந்தியா பாதுகாக்கப்படவில்லை என்றால், பின்னர் அது சிறந்ததோர் இந்தியாவாக மாற்றப்பட முடியாது.

21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் காட்டும் திசை வழி என்ன?

கம்யூனிஸ்ட் கட்சி மேலிருந்து கட்டப்படுவதுதான். ஆனால் அதன் கால்கள் நிலத்தில் நன்றாகவே ஊன்றி நிற்கின்றன. கட்சியால் பின்பற்றப்படும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு அவரவர் கிளையில்/கமிட்டியில் மனம் திறந்து விவாதிக்கும் ஏற்பாட்டை உறுதி செய்கிறது என்ற ஒரு பாதியை மறைத்துவிட்டு, முடிவெடுத்த பின் அது அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதை மட்டும் பெரிதுபடுத்தி சர்வாதிகாரப் போக்கு என்று நமக்குப் பட்டம் சூட்டுவோர் உண்டு. தகவல் பரிமாற்றம் என்பது இரு வழிப் பாதை என்று கட்சியின் அமைப்பு விதிகள் தெளிவுபடுத்துகின்றன. மேல் கமிட்டி எடுக்கும் முடிவுகள், செய்யும் பணிகளைக் கீழ் கமிட்டிகளுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். கீழ் கமிட்டிகளின் பணிகளும், கருத்துக்களும் மேல் கமிட்டிக்கு வரவேண்டும். கீழிருந்து வரும் கருத்துக்களை ஊன்றிக் கேட்க வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது.

உயரிய ஜனநாயகம்:

அதுவும் கட்சியின் மாநாடு உருவாக்கும் நிகழ் அரசியல் நடைமுறை உத்தியின் நகல், மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து உறுப்பினர்களுக்கும் வந்து சேருகிறது. அனைவருக்கும் திருத்தங்கள்/ஆலோசனைகள் முன்மொழிய உரிமை உண்டு. ஒவ்வொரு திருத்தமும் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. கொள்கை உருவாக்கத்தில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் பங்கேற்கும் வாய்ப்பை விட உயரிய ஜனநாயகம் வேறு என்ன இருக்க முடியும்?

உதாரணமாகக் கடந்த மாநாட்டைப் பார்ப்போம். 20வது மாநாட்டுக்கு முன்னதாக 3713 திருத்தங்கள் பெறப்பட்டு, அவற்றில் 163 ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாநாட்டின்போது பிரதிநிதிகள் முன்மொழிந்த 349 திருத்தங்களில் 23 ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2014 அக்டோபரில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் கூட அரசியல் நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை நகல் அறிக்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை அரசியல் தலைமைக்குழு மற்றும் வேறு கருத்துக்கள் இருந்த 2 தோழர்கள் என்று 3 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன. முதலாளித்துவ பத்திரிகைகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் சண்டை என்று சுறுசுறுப்பாக தலைப்பு செய்திகளை வெளியிட்டன. பொதுச் செயலாளர் பிரகாஷ் கராத் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகவே சொன்னார் – “மத்தியக் குழுவில் 3 அறிக்கைகள்; ஆனால் அரசியல் தலைமைக்குழுவில் 7 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதுதான் எங்கள் அற்புதமான உட்கட்சி ஜனநாயகம்!” – சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீது பல மத்தியக்குழு உறுப்பினர்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, மீண்டும் திருத்தி எழுதப்பட்டு, 2015 ஜனவரியில் ஹைதராபாத்தில் கூடிய மத்தியக்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு வந்த பிறகும் திருத்தங்கள் எழுத்து மூலமாக அளிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவை அரசியல் தலைமைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்தியக் குழுவில் முன்வைக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையின் அடிப்படையில் நகல் அரசியல் தீர்மானமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் நடைமுறை உத்தியை உருவாக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைக் கட்சி தோழர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற ஆவணத்தை ஊன்றிப் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக சில விவரங்களைத் தருவதுதான் கட்டுரையின் நோக்கம்.

அரசியல் நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை எதற்காக?

புரட்சிக்கான பயணம் நேர்கோட்டுப் பாதையல்ல, பல திருப்பங்களும் வளைவுகளும், தடைகளும் வரும். புதிய நிகழ்ச்சிப் போக்குகள் உருவாகும். புதிய சவால்கள் எழும்பும். இவற்றை எதிர்கொண்டு முன்னேற உதவி செய்வதே அரசியல் நடைமுறை உத்தி. உத்தி சரியாக இருந்தால், சரியாக நடைமுறையானால் புரட்சிகர சக்திகள் வளரும், கம்யூனிஸ்ட் கட்சி வளரும். இறுதி இலக்கை நோக்கிய பயணம் விரைவுபடும். 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின்னர் 7வது மாநாடு துவங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓரளவு வளர்ச்சி இருந்தது, தெரிந்தது. அதற்குப் பிறகு நமக்கு வர வேண்டிய அளவு வளர்ச்சி வரவில்லை. 3 மாநிலங்களைத் தாண்டிய வளர்ச்சியாகவும் இல்லை. சால்கியா பிளீனம் சுட்டிக் காட்டியபடி ஓர் அகில இந்திய வெகுஜன புரட்சிக் கட்சியாக மாற வேண்டுமே? எது தடுக்கிறது? தேர்தலில் கிடைக்கும் வாக்கு சதவீதம், 3 மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் பெரிதாக வரவில்லை. அண்மைக் காலத்தில் அது சரிந்தும் இருக்கிறது. தியாகத்துக்குப் பஞ்சமில்லை, வேலைகளுக்கு ஓய்வில்லை. ஆனாலும் என்ன பிரச்னை? இந்தக் கேள்வி அவ்வப்போது கட்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு விடை தேடுவதற்கான முயற்சிகளும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த பரிசீலனை கீழ்க்கண்ட 4 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தது:

 1. நாம் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்த அரசியல் நடைமுறை உத்தியை மீள் ஆய்வுக்கு உட்படுத்துவது.
 2. கட்சி ஸ்தாபன செயல்பாடு மற்றும் மக்கள் மத்தியில் நாம் ஆற்றும் பணி குறித்த பரிசீலனை.
 3. வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் பரிசீலித்து, அரசியல் பணியும், கட்சி கட்டும் பணியும் நடப்பதை உறுதி செய்வது.
 4. நவீன தாராளமயம் சமூகப் பொருளாதார சூழலில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், அவை வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து, பொருத்தமான முழக்கங்களை உருவாக்குவது.

இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைபாடுகளைக் களைந்து முன்னேற முடியும்.

ஆய்வுக்கான காலகட்டம்:

மத்தியக்குழு தற்போது இதில் முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக நாம் கடைப்பிடித்த அரசியல் நடைமுறை உத்தி குறித்த மீள் ஆய்வு. வழக்கமாக முந்தைய மாநாட்டில் உருவாக்கப்பட்ட உத்தி எவ்வாறு நடைமுறையாகியிருக்கிறது என்பதே அடுத்த மாநாட்டில் பரிசீலிக்கப்படும். ஆனால், முதன் முறையாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட உத்திகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சர்வதேச அளவில் சோஷலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு அதனால் ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கிய சூழல்; நவீன தாராளமய பொருளாதாரத்தின் துவக்கம்; மதவெறி சக்திகள் அரசியல் சக்தியாக வலுவடைந்த நிலை; சாதிய அடையாள அரசியல் முன்னுக்கு வந்த சூழல் என்று இவை எல்லாமே நிகழ்ந்தது 1980களின் இறுதியில். இவற்றை எதிர்கொள்ள நாம் உருவாக்கிய உத்திகள் எந்த அளவு நமக்கு உதவின என்று பார்க்க வேண்டும் என மத்தியக்குழு தீர்மானித்தது. அதாவது 1988ல் நடந்த 13வது மாநாட்டுக்குப் பின்னுள்ள காலகட்டம், ஏறத்தாழ 25 ஆண்டுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வப்போது எழும் குறிப்பான அரசியல் சூழலை எதிர்கொள்ள நிச்சயம் நாம் கடைப்பிடித்த உத்தி உதவியிருக்கிறது. இதற்கான உதாரணங்கள் ஏராளம் உண்டு. பரிசீலனை அறிக்கையில் இவை பட்டியலிடப்பட்டுள்ளன. உடனடி நோக்கமான காங்கிரஸ் அல்லது பிஜேபியைப் பின்தள்ள, மதவாத, பிரிவினைவாத சக்திகளை எதிர்கொள்ள, மக்களுக்கான சில நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க, சமூக ஒடுக்குமுறைகளில் தலையீடு செய்ய, இடதுசாரி ஒற்றுமையைக் கட்டி பலப்படுத்த, கேரளா, திரிபுராவில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் உருவாக, மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை உறுதிப்படுத்த என்று பல அம்சங்களில் முன்னேற அரசியல் நடைமுறை உத்திகள் உதவியுள்ளன. ஆனால் இந்த உத்தி, நமது சொந்த பலத்தை அதிகரிக்க உதவியதா, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றாக இடது ஜனநாயக மாற்றை முன்வைத்து, இடது ஜனநாயக அணியைக் கட்ட உதவியதா என்பதுதான் அடிப்படையாக நாம் பார்க்க வேண்டிய விஷயம். மீள் ஆய்வு அறிக்கை இந்த அம்சங்களில்தான் கவனம் செலுத்தியிருக்கிறது.

இடைக்கால முழக்கமாக இடது ஜனநாயக முன்னணி:

மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின் நடந்த 7வது, 8வது, 9வது மாநாடுகளில் காங்கிரஸ் மட்டுமே மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி செய்த பின்னணியில், காங்கிரசுக்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அறைகூவலாக இருந்தது. எனவே ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் அரசியல் தீர்மானங்களில் மையக் கருத்தாக இடம் பெற்றது. ஆனால் ஜலந்தரில் 10வது மாநாடு நடந்த 1978ல் ஜனதா அரசு உருவான சூழல் நிலவியது. அதாவது காங்கிரசுக்கான மாற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அணி சேர்க்கையாகவே இருந்தது. ஆட்சியும், கட்சியும் மாறினால் போதாது, வர்க்க அணி சேர்க்கையில் மாற்றம் வருவதை உறுதி செய்ய வேண்டு மல்லவா? இருக்கும் இரண்டுமே ஒரே வர்க்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நிலையில், இது அல்லது அது என்று முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளில் ஒன்றையே மக்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை எப்படி உதவும்? அது மாற்றப்பட வேண்டும். அதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் அடிப்படையில் வேறுபட்ட உண்மையான மாற்றாக, மக்களுக்கு முன்னால் இடதுசாரி மாற்று நிறுத்தப்பட வேண்டும். வலுவான பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்துவதன் மூலம் புரட்சிக்கான வர்க்கங்களை ஒன்றுதிரட்டி இடது ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும். இந்நிகழ்முறை வர்க்க சமன்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்து, பிற்பாடு மக்கள் ஜனநாயக முன்னணி வடிவமைக்கப்பட இட்டுச் செல்லும் என 10வது மாநாடு விளக்கியது. இரண்டு முன்னணியிலும் இடம்பெற வேண்டிய வர்க்கங்கள் ஒன்றுதான். ஒரே வித்தியாசம், தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் மக்கள் ஜனநாயக முன்னணியின் போதுதான் உறுதி செய்யப்படும். எனவே, மக்கள் ஜனநாயக முன்னணி என்பது புரட்சியின் இலக்கு என்றாலும், அதற்கு முன்னதாக, ஓர் இடைக்கால முழக்கமாக இடது ஜனநாயக முன்னணி என்பது முன்வைக்கப்பட்டது. இதன் திட்டமும், இதில் இடம் பெற வேண்டிய சக்திகளும் 10வது மாநாட்டு அரசியல் தீர்மானத்தில், அன்றைக்கிருந்த சக்திகளின் தன்மையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டன.

அதாவது, இடது ஜனநாயக முன்னணி உருவாக, மக்கள் பகுதிகளின் பிரம்மாண்டமான போராட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். இது நடக்க வேண்டுமானால் வர்க்க வெகு மக்கள் அமைப்புகள் பெரும் அமைப்புகளாக உருவாகி, பொருத்தமான கோரிக்கைகளை முன்வைத்து, சுயேச்சையான மற்றும் கூட்டு இயக்கங்கள் மூலம் மக்கள் போராட்டங்களைக் கட்ட வேண்டும். இப்படி எழும்பும் இடது ஜனநாயக முன்னணி, அடிப்படையில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கை மேடைக்குத் தெளிவான மாற்றை மக்கள் முன்வைப்பதாக இருக்க வேண் டும் என்று 10வது மாநாடு வலியுறுத்தியது.

அடுத்து நடந்த சால்கியா பிளீனம், தொழிலாளி வர்க்கக் கட்சி வளர்ந்தால்தான், இது சாத்தியம் என்று சுட்டிக் காட்டியது. அதாவது மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும், அதன் சொந்த பலம் அதிகரிப்பதும் முக்கியமானது என்பதுதான். ஆயிரக்கணக்கான ஊழியர்களை உருவாக்கி, லட்சக் கணக்கான மக்களை நமது அரசியலை நோக்கி ஈர்ப்பதாக வளர வேண்டும். அத்துடன் வெகு மக்களை ஈர்க்க விரிந்து பரந்த வெகுமக்கள் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, மிகப்பெரும் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகள், இடது ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது என்ற இந்தக் கடமைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

இந்த அறைகூவல் வரும்போது, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் இடது முன்னணி இருந்தது. பின்னர் கேரளாவிலும் இடது ஜனநாயக முன்னணி உருவானது. நாம் உருவாக்க நினைக்கிற தேசிய அளவிலான இடது ஜனநாயக முன்னணியின் பகுதிகள் இவை. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பின்னும், இந்த 3 மாநிலங்களைத் தாண்டி, எங்குமே இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. தேசிய அளவிலோ இடது ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணியில் எந்த அசைவும் இல்லை. இதற்கான காரணத்தைத் தேடும்போது, அது நம் அரசியல் நடைமுறை உத்திக்குள்ளேயே இருப்பதைக் காண முடியும்.

பின்னுக்குப் போனது ஏன்?

இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது என்பதை ஒவ்வொரு மாநாட்டிலும் அழுத்தமாகக் கூறினாலும், 13வது மாநாட்டிலிருந்தே அத்துடன் சேர்த்து வேறொன்றையும் சொல்ல ஆரம்பித்தோம். காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பது என்பதை முன்னிறுத்தினோம். முதலில் ராஜீவ் காந்தி அரசை அகற்றுவதற்காக, பின்னர் நரசிம்மராவ் அரசை அகற்றுவதற்காக, பின்னர் பிஜேபிக்கு எதிராக என்று தொடர்ச்சியாக இந்த உத்தி முன்வைக்கப்பட்டது. 15வது மாநாட்டில், இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டுவது என்பது உறுதியான முழக்கமாக முன்வைக் கப்பட்டது. எனவே மெதுவாக, இடது ஜனநாயக முன்னணி என்ற இடைக்கால முழக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தில் இடது ஜனநாயக மதச்சார்பற்ற அணி என்பது மற்றொரு புதிய இடைக்கால முழக்கமாக முன்னேறியது.

ஐக்கிய முன்னணி அரசு தடுமாறி விழுந்த பின், 16வது மாநாட்டில் (1998) 3வது மாற்று என்ற மேலும் திட்டவட்டமான முழக்கத்தை உருவாக்கினோம். அதாவது ஐக்கிய முன்னணி, தேர்தலுக்குப் பின் ஒன்றிணைக்கப்பட்ட அணிதான் என்பதைக் கணக்கில் எடுத்து, மக்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட வேண்டுமானால், தேர்தலுக்கு முன்பே ஒரு அணி சேர்க்கை உருவாக்கப்பட வேண்டும். இது காங்கிரஸ் பிஜேபிக்கு மாற்றாக இருக்க வேண்டுமானால், மாற்றுக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 16வது மாநாட்டில், கொள்கை அடிப்படையில் 3வது மாற்று அமையும் என்று தெளிவுபடுத்தினோம். இதில் பெரிதாக முன்னேற்றம் நடக்கவில்லை என்று நடைமுறையில் பார்த்த பின், அதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். மாற்றுக் கொள்கை என்னும் மேடைக்கு வர வேண்டும் என்றால், இக்கட்சிகளின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவற்றுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களை, இயக்கங்களை நடத்தினால், அது மாற்றம் ஏற்பட நிர்ப்பந்திக்கும்; குறிப்பாக இக்கட்சியின் பின்னுள்ள மக்களின் நிர்ப்பந்தம் தலைமைக்கு ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தும் என்று 18, 19வது மாநாடுகளில் விவாதித்தோம். ஆனால் கூட்டு இயக்கங்களுக்கும் இக்கட்சிகள் பெரிதாக வரவில்லை. அப்படியானால், தேர்தல் காலத்தில் ஒரு தேர்தல் மாற்றாகவாவது இவற்றை முன்னிறுத்தலாம் என்று முடிவு செய்தோம். கொள்கை பிரச்னைகளைப் பார்க்காமல், காங்கிரஸ்/பிஜேபியைத் தேர்தலில் பின்தள்ள முன்வரும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் இடத் துக்குப் போனோம்.

உத்தி பிரச்னையா அல்லது நடைமுறை பிரச்னையா?

இதனால் என்ன நடந்தது? முதலில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகள் கொண்ட தேர்தல் மாற்று, அடுத்து கொள்கை அடிப்படையில் கூட்டுப் போராட்டங்களின் மூலம் உருவாகும் 3வது மாற்று, அதற்குப் பிறகு இடது ஜனநாயக முன்னணி என்ற நிலை உருவானது. இது இடது ஜனநாயக முன்னணியைத் தொலை தூர இலக்காக 3வது இடத்துக்குத் தள்ளியது. ஒரே நாளில் இந்த முன்னணியைக் கட்ட முடியாது என்றாலும், இது நிறைவேறும் சாத்தியப்பாடு உள்ள முழக்கம் என்று 11வது மாநாடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால் மேற்கண்ட சூழலால், இதைப் பிரச்சாரத்துக்கு முன்வைக்கப்படும் முழக்கமாக மட்டுமே கருத நேர்ந்தது. எனவே, அரசியல் நடைமுறை உத்தியை அமல்படுத்தியதில் பிரச்சனை என்று மட்டும் பார்க்க முடியாது; அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு பகுதியே பிரச்சனை என்பதுதான் உண்மை. அப்படியானால், கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கவில்லை என்பது பற்றி நாம் விவாதிக்கவே இல்லையா? 2014 தேர்தல்தான் நம்மை விழித்தெழ வைத்ததா? நிச்சயமாக இல்லை. 1996, 1998 தேர்தல் பரிசீலனை அறிக்கைகள், அரசியல் நடைமுறை உத்தியை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டின. இந்த அடிப்படையில் அரசியல் தலைமைக்குழு சில முயற்சிகளை எடுத்தது. அடுத்தடுத்து வந்த பல வேலைகளின் காரணமாக அது முழுமையாக நடக்கவில்லை. 17வது மாநாட்டின்போது, மதச்சார்பற்ற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுடனான தேர்தல் உறவை மட்டும் பரிசீலித்தோம். மதச்சார்பற்ற கட்சிகளைத் திரட்டுவது, 3வது மாற்று போன்ற உடனடி கடமைகள், நமது சொந்த பலத்தை வளர்ப்பது, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது போன்ற அடிப்படை கடமைகளை செய்வதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பியது என்பது அப்பரிசீலனையில் முன்னுக்கு வந்தது. இருப்பினும், 3வது மாற்றை நாம் உடனடியாகக் கைவிடவில்லை. அம்முழக்கத்தை முன்வைத்து 15 ஆண்டுகள் ஆன பின்னும் அது வெற்றி பெறவில்லை, வெற்றி பெறுவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்ற பின்னணியில் 20வது மாநாட்டில்தான் அதைக் கைவிட்டோம். நமது கட்சியின் நலனில் நின்று, தேவைப்பட்டால், மாநிலங்களில் மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் உறவு வைக்கலாம் என்று தீர்மானித்தோம்.

பிரச்னை என்ன? மாறி மாறி காங்கிரசும், பிஜேபியும் ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. இதர கட்சிகளைத் திரட்ட நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, நமது சொந்த பலம் வளரவில்லை. இந்த பலவீனம், இக்கட்சிகளைத் திரட்டவும் உதவவில்லை. தேர்தல் காலத்தில் தொகுதி உடன்பாடுகளை வெற்றிகரமாக்கவும் உதவவில்லை. சொல்லப்போனால் 2014 தேர்தலில், பல மாநிலங்களில் நம்முடன் உடன்பாடு கொள்ளவும் பல கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

மாநில முதலாளித்துவ கட்சிகள்:

இந்நிலைக்கு அடிப்படையான காரணம் என்ன என்றும் மீள் ஆய்வு நகல் அறிக்கை விவாதிக்கிறது. காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் எதுவும் அகில இந்திய கட்சியாக இல்லை. அவை மாநில முதலாளித்துவ கட்சிகளாகத்தான் இருந்தன. 16வது, 17வது மாநாடுகளில் இக்கட்சிகள் குறித்துப் பரிசீலித்து, இவற்றின் குணாம்சம் மாறி வருகிறது என்று நிர்ணயித்தோம். இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில முதலாளித்துவ சக்திகளின் ஒரு பகுதி பெரு முதலாளியாக, நவீன தாராளமயமாக்கலின் காரணமாக மாறிப்போனது. நவீன தாராளமய கொள்கைகளைத் தங்கள் நலனுக்கான வாய்ப்பாகப் பார்த்தார்கள். பெருமுதலாளிகளுக்கும் பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடு மட்டுப்பட்டது. மாநில முதலாளிகளின் வர்க்க அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டபோது, அவர்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அணுகுமுறையில் அந்த மாற்றம் பிரதிபலித்தது. அந்நிய மூலதனம் குறித்த அவர்களின் பார்வை மாறி, மாநிலங்களில் நவீன தாராளமயத்தை நடைமுறைப்படுத்தும் சூழலை உருவாக்கியது. மத்திய அரசில் பங்கு பெறும் சூழல் என்பது, உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது உறுதியான பிஜேபி எதிர்ப்பை மாற்றி, அரசியல் சந்தர்ப்பவாத நிலைக்கு இட்டுச் சென்றது. இவற்றின் நிலைபாட்டை வைத்து, இவர்களை ஒன்றிணைப்பது அல்லது தள்ளி வைப்பது என்ற நிலையை நாம் எடுத்தோம். இதனால் சந்தர்ப்பவாதத்தின் சாயல் அல்லது தோற்றம் நம்மீதும் படிந்தது.

மதச்சார்பற்ற கட்சிகள் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும், பிஜேபியுடன் அணிசேர, ஆட்சியில் பங்கேற்க இவை தயங்கவில்லை. எனவே, கூட்டுப் போராட்டங்களுக்கு வருவதற்கும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கிராமப்புறங்களில் உள்ள பணக்கார ஆதிக்க சக்திகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துவதால், இவற்றுடன் தொடர்ச்சியான தேர்தல் உறவுகள் நமது விவசாய இயக்க வளர்ச்சிக்கு உதவிகரமாக இல்லை. இந்த முரண்பாட்டை உரிய முக்கியத்துவத்துடன் நாம் கவனிக்கவில்லை. இதற்குப் பின்னும், ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் இக்கட்சிகளை ஒன்றிணைக்க நாம் முயற்சித்தோம். அது தவறு.

மொத்தத்தில் இடது ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு திரட்டி, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது என்ற கடமை தேசிய அளவில் பின்னுக்குப் போனதால், இயல்பாகவே மாநிலங்களிலும் அதற்கான அழுத்தம் உருவாகவில்லை. எனவே, மாநிலங்களிலும் இதற்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேசிய அளவில் அணி சேர்வது என்பது இன்றைய நிலையில் பொருத்தமில்லை, சாத்தியமும் இல்லை. எனவே, அகில இந்திய அரசியல் உத்தி காரணமாக, மாநிலங்களில் இவற்றுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகாது. நமது கட்சியின் நலனுக்குத் தேவைப்பட்டால், இடது ஜனநாயக முன்னணியைக் கட்டவும், அத்தகைய சக்திகளைத் திரட்டவும் உதவும் என்றால், இடது அல்லாத இதர கட்சிகளுடன் மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொள்ளலாம். அப்போதும் கூட 17வது மாநாடு சுட்டிக்காட்டியுள்ள எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு:

பொதுவாகக் கட்சி மற்றும் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகள், உறுப்பினர் எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலும், இதில் பெரும் பகுதி 3 மாநிலங்களிலிருந்து வருவதுதான். புள்ளிவிவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தற்போது மேற்கு வங்கத்திலும் பலவீனம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் நமது சொந்த பலத்தை அதிகரிப்பது என்பது முன்னைக் காட்டிலும் தேவையானதாகிறது.

மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் நமது அணிக்கு வர வேண்டிய வர்க்கங்களின் மீது (தொழிலாளி வர்க்கம், விவசாயம் சார்ந்த வர்க்கங்கள், நடுத்தர வர்க்கம்) எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன என்பதைத் திட்டவட்டமாக ஆய்வு செய்து, பொருத்தமான முழக்கங்களையும், போராட்ட வடிவங்களையும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அகில இந்திய அளவில் நாம் ஏற்படுத்திய குழுக்கள் இத்தகைய ஆய்வை முடித்து அறிக்கைகளை அளித்திருக்கின்றன. இவை பரிசீலிக்கப்பட்டு, தேவையான அம்சங்கள் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் இணைக்கப்படும். இது நமது வளர்ச்சிக்கு உதவும்.

பொதுவாக நவீன தாராளமய நிகழ்முறை, இடதுசாரிகளை பலவீனப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் இன்றைய முகமான உலகமயத்தை உறுதியாக எதிர்த்து நிற்கக் கூடிய இடதுசாரி சக்திகள் பலவீனம் அடைந்திருப்பது, ஜனநாயக மற்றும் வர்க்கப் போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதிலும் பிரச்னைகளை உருவாக்குகிறது. இவற்றைப் புரிந்து கொண்டு சந்திப்பதற்கு ஏற்ற வகையிலும், அரசியல் ஸ்தாபன உத்தியைத் திறனுடன் நிறைவேற்றும் வகையிலும் ஸ்தாபனம் மேம்பட வேண்டும். இதற்கானதொரு பிளீனம், மாநாட்டுக்குப் பிறகு நடத்தப்பட்டு, முன்னேற்றம் காண முயற்சிக்கப்படும். நீண்ட காலம் செயல்பட்ட மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம், நவீன தாராளமயத்தை எதிர்கொள்ள முயற்சித்தபோது, தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்திய பிரச்னை, தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. கட்சியின் தோற்றத்தை பாதித்தது. எனவே கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்ட இத்தகைய முயற்சிகளையும் பரிசீலித்து எதிர்காலத்துக்கான படிப்பினைகளைப் பெற வேண்டும்.

இவை தவிர, அரசியல் நடைமுறை உத்தி தவறாக நடைமுறைபடுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. மீள் ஆய்வு அறிக்கையில் இவை விளக்கப்பட்டுள்ளன.

வகுப்புவாத அபாயத்தை சந்திப்பது எப்படி?

இந்த அம்சமும் அறிக்கையில் சுயவிமர்சனத்துடன் பரிசீலிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வகுப்புவாத எதிர்ப்பு என்றால், தேர்தல் நேரத்தில் பிஜேபியை வீழ்த்துவது என்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தப் புரிதலில் மாற்றம் ஏற்பட்டு, அனைத்துத் தளங்களிலும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான உத்தி உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவதுடன் குறிப்பான வழிகாட்டுதலையும் நகல் அரசியல் தீர்மானம் முன்வைக்கிறது . 2005ல் நடந்த நமது 18வது மாநாடு, அது பிஜேபி தோல்வி அடைந்த நேரமாக இருந்தாலும், இந்துத்துவ வகுப்புவாத சக்திகளின் பலத்தைக் குறை மதிப்பீடு செய்துவிடக் கூடாது என்று கவனப்படுத்தியது. அவர்களது நடவடிக்கைகள் பல்முனை நடவடிக்கைகள். அன்றாடம் செய்யப்படுபவை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவை தொடரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், அது முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். தொடர்ச்சியான இந்நடவடிக்கைகளின் விளைவாக, ஒரு பகுதி மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை நியாயம் என்று நினைக்கிறார்கள். இந்து மக்களின் வாழ்க்கை பாதிப்புக்கு சிறுபான்மை மக்கள் காரணம் என்பதும் இணைக்கப்படுகிறது. ஜெர்மனியில் ஹிட்லர் பின்பற்றிய பாதைதான் இது. அதேசமயம், இப்போக்கு சிறுபான்மை வகுப்புவாதத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனையும் எதிர்க்க வேண்டும்.

எனவே, மதவெறிக்கு எதிரான நமது போராட்டம் பல தளங்களில் (அரசியல், சித்தாந்த, சமூக, பண்பாட்டு, கல்வித் துறைகளில்) நடக்க வேண்டும் என்பதுடன், வாழ்வுரிமை மீதான தாக்குதலை எதிர்த்த போராட்டத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட வேண்டும். வாழ்வுரிமை சிக்கல்களுக்குக் காரணம், மோடி அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கைகள் என்பதை சுட்டிக்காட்டி, ஒன்றுபட்டுப் போராடினால்தான் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்க வேண்டும். மதத்தின் பேரால் பிரிந்து நின்றால் போராட்ட ஒற்றுமை சிதையும், போராட்டம் வீரியம் இழக்கும், தாக்குதல்கள் நம் மீது அதிகரிக்கும் என்ற வகையில் கொண்டு போவதுதான், ஒருங்கிணைத்து செய்யப்படுவது என்பதன் பொருளாகும். பேராபத்தாகக் கிளம்பியிருக்கும் மதவெறியை இடதுசாரிகள் மட்டும் எதிர்கொண்டுவிட முடியாது. மதவெறியை எதிர்த்த ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு பரந்த மேடை உருவாக்கப்பட வேண்டும். நகல் அரசியல் தீர்மானம், கட்சிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, சக்திகள் என்றுதான் கூறுகிறது. கட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதல்ல. பல்வேறு அமைப்புகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட மேடையில் கட்சிகளும் இருக்கலாம், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட மதத் தலைவர்கள் கூட இருக்கலாம். கட்சிகள் என்றாலே, தேர்தல் அணியாக இருக்கும் என்ற தோற்றம் எழுகிறது. வகுப்புவாத எதிர்ப்பு மேடையைத் தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

இதர அம்சங்கள்:

இதற்கிடையே நாடாளுமன்றவாதம் போன்ற தவறான போக்குகளும் நமது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. தேர்தல் பணிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல நமது வாதம். வெகுமக்கள் அமைப்புகளை பலப்படுத்தி, மக்கள் இயக்கங்களைப் பெருமளவில் வீச்சாக உருவாக்குவதற்கு பதிலாக, தேர்தல் குறித்த நடைமுறைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது உதவாது. நமது மக்கள் தளத்தை வலுப்படுத்துவதன் மூலம்தான், தேர்தலிலும் வெற்றி பெற முடியும். நமது சுயேச்சையான கொள்கைகளை முன்னிறுத்தினால்தான் அது சாத்தியம். தலையீடுகளில் கிடைக்கும் தொடர்புகளை அரசியல், ஸ்தாபன ரீதியான உறுதிப்படுத்துவது அவசியம். இன்றைய காலத்தில் தேர்தலில் சாதி, மதம், பணம் போன்றவை முன்னணி பங்கு வகிக்கும்போது, கொள்கைகள் பின் இருக்கைக்குத் தள்ளப்படும்போது, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எனவே, நமது உத்தியின் அடிப்படை அம்சம், கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளைப் போராடும் பிரம்மாண்ட சக்திகளாக மாற்றுவது, இடது ஜனநாயக சக்திகளை அணி சேர்ப்பது என்பதுதான். இவற்றை நோக்கியே நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று பரிசீலனை அறிக்கை விளக்குகிறது.

இந்த அடிப்படையில், 21வது மாநாட்டுக்கான நகல் அரசியல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஜேபியை எதிர்ப்பது பிரதான பணி. அத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும். காங்கிரசுடன் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான உறவு இல்லை. நவீன தாராளமய எதிர்ப்பு என்று சொன்னால் மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கையை எதிர்த்தால் மட்டும் போதாது. மாநில அரசாங்கங்கள் மக்களுக்கும், தொழிலாளி வர்க்க நலனுக்கும் முரணாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளும் எதிர்க்கப்பட வேண் டும். அதற்கான போராட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படவேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், அவை கடைப்பிடிக்கும் முதலாளித்துவக் கொள்கைகளிலிருந்து, கொள்கை ரீதியாக நாம் நம்மை வேறுபடுத்திக்காட்ட வேண்டும். பிரச்சாரங்களை நடத்த வேண்டும். அப்போதுதான், மாநிலங்களில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி இடது ஜனநாயக மேடைக்கு அவர்களை ஈர்க்க முடியும். தேர்தல் என்று வரும்போது, இனி அகில இந்திய அளவில் காங்கிரஸ் பிஜேபிக்கு மாற்றாக, மாநில முதலாளித்துவ மதச்சார்பற்ற கட்சிகளை அணி சேர்ப்பது என்பது இருக்காது. மாநிலங்களில் தேவைப்பட்டால், நமது கட்சியின் நலனுக்கு உதவும் என்றால் இடதுசாரி அல்லாத கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு வைக்கலாம். ஆனல் அது இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க உதவ வேண்டும். அதாவது தற்போது இறுதிப்படுத்தப்படும் அரசியல் நடைமுறை உத்தியின் தொடர்ச்சியாகவே தேர்தல் உத்தியும் அமையும்.

கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதுதான் பிரதான நோக்கம் என்னும்போது, இதர முதலாளித்துவ கட்சிகளின் பின்னுள்ள மக்களை ஈர்ப்பதும் இதன் ஒரு பகுதிதான். மக்கள் பிரச்னைகளில், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில், தேசத்தின் இறையாண்மை காப்பதில், ஏகாதிபத்திய எதிர்ப்பில் கூட்டுப் போராட்டங்களுக்கு காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளை அணுகும் முயற்சிகளை எடுக்க வேண்டும். பிரச்சனைகள் அடிப்படையில் தேவைப்படும் கூட்டு மேடைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதேசமயம் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளைப் பொறுத்தவரை கூட்டுப் போராட்டங்களின் மூலம் காங்கிரஸ், பிஜேபிக்குப் பின்னுள்ள மக்களையும் ஈர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அரசியல் தீர்மானம் வழி காட்டுகிறது.

நகல் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணியில் யார் யாரை இணைக்கலாம் என்று குறைந்தபட்ச பட்டியலைப் போடுகிறது. இதன் திட்டம் என்ன என்பதை விளக்குகிறது. கட்சியின் தளங்களாக இருக்கக் கூடிய மேற்கு வங்கம், திரிபுரா, கேரள கட்சியை வலுப்படுத்த வேண்டும். இது இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்தும் ஏற்பாடே. மேலும், இதனை உருவாக்குவது, இந்தியா முழுதும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, 3 மாநிலங்களைத் தாண்டிய இதர மாநிலங்களில் மாநிலத் தன்மைக்கேற்ப இடது ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு ஒன்றிணைக்க வேண்டும். 10வது மாநாட்டின்போது தமிழகத்தில் திமுகவையும் ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட சக்தி என்ற முறையில், இடது ஜனநாயக மேடையில் இணைக்கலாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் பிற்பாடு நிலைமை வேறு. எனவே, தற்போதைய நிலையில் அத்தகைய சக்திகள் எவை என்பதை அடையாளம் காண வேண்டும். ஏற்கனவே உருவாகியிருக்கும் இடதுசாரி ஒற்றுமை மற்றும் கூட்டு இயக்கங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயங்கங்களை முன்னெடுக்க வேண்டும். இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள, ஆர்.எஸ்.எஸ். நெருக்கமாக ஒருங்கிணைந்து வழிகாட்டும் மோடி தலைமையிலான பிஜேபியின் மக்கள் விரோத, மதவெறி நடவடிக்கைகளை முறியடிக்க இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும். உருவாகி வரும் சர்வாதிகாரப் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டும். மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்ள சமூக, கலாச்சார, தத்துவார்த்த, கல்வி துறைகளில் மதவெறி எதிர்ப்பைக் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தலித், ஆதிவாசி, சிறுபான்மை மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முழு வீச்சுடன் நடத்த வேண்டும். பெண்கள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்களுக்கு எதிராகத் தலையீடுகளை வலுவாக மேற்கொள்ள வேண்டும். மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள இம்மக்களைத் திரட்டுவதற்கு மட்டுமல்ல, அடையாள அரசியலை எதிர்கொள்வதிலும் இத்தலையீடுகள் முக்கியப் பங்காற்றும்.

நிறைவாக……

 • அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் தீரம் மிக்க போராட்டங்களை உருவாக்கி நடத்துகிற துடிப்பான, எழுச்சியான கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை முன்னிறுத்துவோம்!
 • கட்சியின் மார்க்சிய லெனினிய சித்தாந்த அஸ்திவாரத்தை பலப்படுத்துவோம்!
 • மேற்கூறிய கடமைகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாகக் கட்சி ஸ்தாபனத்தை மேம்படுத்துவோம்!

என்ற அறைகூவலை, கட்சி அணிகளின் முன் நகல் அரசியல் தீர்மானம் வைக்கிறது.

அரசியல், பொருளாதாரமானாலும், பண்பாட்டுத் தளமாக இருந்தாலும், சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலும், பாகுபாடுகளுக்கு எதிரான முதல் குரல் மார்க்சிஸ்ட் கட்சியுடையதுதான். தியாகிகள் சொரிந்த ரத்தம் புரட்சிகர பயண வழியெங்கும் சிந்திக் கிடக்கிறது. மார்க்சியம் அந்தப் பயணத்திற்கான ஒளியைப் பாய்ச்சுகிறது. எது நடந்தாலும் துணிச்சலாக முன்னேபோவது நமது தோழர்கள்தான். சுரண்டப்படும் எண்ணற்ற மக்களின் விடுதலைக்கான திட்டம் நமது கையில் இருக்கிறது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தடைகளைத் தகர்த்து, குறைகளைக் களைந்து முன்னேறுவோம் என்கிற நம்பிக்கையை அரசியல் தீர்மானம் அளிக்கிறது.

ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!

(சென்ற மாத தொடர்சி) …….

பி.டி.ரணதிவே

தமிழில் : எஸ்.ரமணி

பாசிசம் மற்றும் போருக்கு எதிரான இயக்கம்

நேரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கை கூர்ந்து கவனித்ததோடு காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழி நடத்தினார். பாசிசம் மற்றும் ஆங்கிலோபிரெஞ்சு ஏகாதிபத்தியம் கடைபிடிக்கும் கொள்கைகள் குறித்து மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் நேரு எச்சரிக்கை செய்தார். மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் மீது அக்கறையற்று இருந்தனர். நேருவின் வெளிநாட்டுக் கொள்கை அறிக்கைகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஹரிபுராவில் 1938ல் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டுப் பாதுகாப்பிற்கு ஆதரவளித்தது. மேலும் அது போர் அபாயத்தை நோக்கித் தள்ளும் பாசிச ஆக்கிரமிப்புடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையினைக் கண்டித்தது.

ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனா மீது தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் அதன் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்தும், 1938ல் ஜப்பானிய பொருட்களை நிராகரிக்க வேண்டுமென மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 1938ல் இளவேனிற் காலத்தில் திரிபுராவில் நடைபெற்ற மகாசபைக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசினுடைய மூனிச் கொள்கையிலிருந்து வெளிப்படையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பிரிட்டிஷ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் விளைவாக உருவான மூனிச் ஒப்பந்தம், ஆங்கிலோ இத்தாலி ஒப்பந்தம் மற்றும் ஸ்பெயின் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஏற்கவில்லை என்பதை பதிவு செய்தது. இந்தக் கொள்கைகள் திட்டமிட்டு ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல், வாக்குறுதிகளை தொடர்ந்து மீறிய செயல், கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு முறைக்கு முடிவு கட்டியது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரிகளான அரசுகளுடன் ஒத்துழைக்க முன்வந்தது ஆகும். “பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக அதனிடமிருந்து காங்கிரஸ் தன்னை முழுமையாக விடுவித்து கொள்கிறது. ஏனெனில் அச்செயல் தொடர்ந்து பாசிச சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக நாடுகளை நிர்மூலமாக்கவும் உதவி புரிவதாக உள்ளது.

(ஆர்.பி. தத் குறிப்பு, பக்கம் 551-552)

உலகம் சிக்கலான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்த பொழுது, நேருவின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சி ஒரு கொள்கையை முன்னிறுத்தியது. அந்தக் கொள்கை உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்வைத்த மற்றும் ஆதரித்த ஒன்றாகும். நேருவின் வழிகாட்டுதல்படி காங்கிரஸ் பாசிசத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தது. மேலும் உலகத்தில் இருந்த ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கொண்டது.

பிரிட்டிஷ் அரசு 1939ல் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவித்த ஒரு சில மணித்துளிகளில் வைஸ்ராய் இந்திய மக்களில் எந்தப் பகுதியினரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியா போரை ஆதரிப்பதாக தெரிவித்தவுடன் காங்கிரசிற்கு கடுமையான சோதனை ஏற்பட்டது. காங்கிரசின் முன்னிருந்த கேள்வி இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தையும் எப்படி பார்ப்பது என்பதாகும். செப்டம்பர் 1839ல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி இதனை சரியாக புரிந்து கொண்டது. இந்தப்போர் ஏகாதிபத்தியங்களின் குறிக்கோளை அடைய நடக்கும் போர் என்று புரிந்து கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிலைபாட்டிற்கு முன்னரே வந்ததுடன், மக்களிடம் போருக்கு எதிராக பிரச்சாரமும் செய்தது. காரியக் கமிட்டி தனது தீர்மானத்தில் தெரிவித்தது “கமிட்டி இந்தப் போரில் தன்னை இணைத்துக் கொள்ளாது, ஆதரவு தராது. ஏனெனில் இந்தப் போர் ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபெறுகிறது. இதன் பொருள் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஏகாதிபத்தியத்தை கெட்டிப்படுத்த நடக்கும் போர் ஆகும்”. மேலும் அது கூறுகிறது. “இந்திய மக்களுக்கு சுயநிர்ணயம் செய்யும் உரிமை உண்டு, தங்களுக்கான அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை மூலம் வெளியார் குறுக்கீடின்றி உருவாக்கும். தங்களது சொந்த கொள்கைகள் மூலம் வழி நடத்திச் செல்லும்.”

எனவே காரியக்கமிட்டி பிரிட்டிஷ் அரசை, தெளிவாக இந்தப் போரின் நோக்கத்தை, குறிப்பாக ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியம் இவைகளுடன் சம்பந்தப்படுத்தி அறிவிப்பதுடன், அதற்குப் பின்னர் உருவாகும் புதிய சூழலில் இந்தியாவிற்கு அவற்றை எவ்வாறு பொருத்துவது மற்றும் செயலாக்கம் புரிவது…..”

(அதே புத்தகம் பக்கம் 533)

போர் சம்பந்தமாக காந்தியின் நடவடிக்கை ஜவஹர்லால் நேருவிற்கு மாறானதாக இருந்தது. போர் குறித்து காந்தி பிரிட்டனுக்கு தன்னிச்சையான ஆதரவை தந்தார். அவர் வைஸ்ராயிடம் தெரிவித்தது இந்தப் போரை வெள்ளையர்கள் இதயத்துடன் தாம் பார்ப்பதாகவும், தன்னுடைய சகாக்கள் கருத்தாக இதனை தெரிவிக்காமல், தனது சொந்தக் கருத்தாக தெரிவிப்பது முழுமையாக, எந்தவித மறுப்புமற்ற ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார். (எஸ். கோபால், வால்யூம் 1, பக்கம் 249-50). அவருடைய “வெள்ளையர்கள் இதயம்” அவருடைய போர் காலங்களில் ஏற்படும் வன்முறைக்கு எதிரான உணர்வை தாண்டி வந்துள்ளது. காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்களும் எந்தவித நிப்பதனையுமின்றி பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு நல்கதயாராக இருந்தனர். சர்வ பள்ளி கோபல் இதற்கு ஆதாரமாக “ஹேக்” என்பவர் செப்டம்பர் 17, 1939ல் வைஸ்ராய்க்கு அனுப்பிய தந்தி மற்றும் வேறொருவர் செப்டம்பர் 3, 1939 அன்று அனுப்பிய தந்தியையும் குறிப்பிடுகிறார். “.பி.யில். மந்திரிகள், போர்க் கைதிகள் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருந்தனர். அதே சமயம் மதராசில், மோதல்கள் வெடித்தபோது, ஜெர்மனியர்களை கைது செய்ய, அவர்களுடைய வங்கிக்கணக்கை முடக்க ராஜகோபாலாச்சாரியர் முயன்ற போது, கவர்னர் அதை தடுத்து நிறுத்தினார், அதன்பின்பு பிரிட்டிஷ் அரசு உயர்நீதிமன்ற ஆணைப்படியே போர் தொடுக்க விரும்பியதாக தெரிவித்தார்.” (பக்கம் 250). மந்திரிகள் தேசப்பற்றை, ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலுமாக கைவிட்டதுடன் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரியத்தயாராக இருந்தனர். மந்திரிசபையில் சேர்வது என்பது ஏகாதிபத்தியத் திடம் முற்றிலும் சரணடைவதறகு ஒப்பாகும் என்ற ஜவஹர்லால் நேரு பயப்பட்டது உண்மையென தற்போது நிரூபணமானது.

தெளிவான பாதையை வகுத்த ஜவஹர்லால், உணர்வுபூர்வமான காரணங்களைச் சுட்டி, காந்தி வற்புறுத்தினாலும், அரசியல் சந்தர்ப்பவாத காரணங்களினால் மந்திரிகள் வற்புறுத்தினாலும், பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பை நல்க தயாராக இல்லை. இருப்பினும், ஜவஹர்லால், நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அரசிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதற்காக காத்திருந்தார். ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிரிட்டன் இந்தப் போரில் ஈடுபட்டிருப்பதை நேரு புரிந்து கொண்டிருந்தார். ஆனால் பாசிச எதிர்ப்பு, பாசிச ஆக்கிரமிப்பின் விளைவாக பாதிப்படைந்தவர்கள் மீது ஏற்பட்ட பரிவு இவைகளின் காரணமாக, போருக்கு எதிரான போராட்டங்களில் உடனடியாக அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே, போருக்கான நோக்கத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

காங்கிரஸ் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வைஸ்ராய் காங்கிரசின் கோரிக்கையை நிராகரிக்கப்பதாகவும், அரசு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எதனையும் சொல்லத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். அக்டோபர் 1939ல் கூடிய காரியக்கமிட்டி அரசுடன் ஒத்துழைப்பது இல்லை என்று முடிவெடுத்து அதன் முதல் நடவடிக்கையாக மாகாண மந்திரி சபையில் இருந்தவர்களை பதவி விலகச்சொன்னது. ஆனால் வெகுஜன இயக்கம் குறித்து கமிட்டி முடிவு எதுவும் எடுக்கவில்லை. சத்தியாகிரக போராட்டத்திற்கு அழுத்தம் தந்ததோடு, மக்களின் எதிர்ப்பியக்கத்தை நடை முறைப்படுத்த திட்டம் வகுத்தது. ஒத்துழையாமை இயக்கம் ஒத்திப் போடப்பட்டது. சமரசம் ஏற்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இன்னமும் இருந்தது.

அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி ஆதரவு தந்த போதிலும், போர் குறித்த பிரிட்டிஷ் அரசின் செயல்பாடு குறித்து ஒரு தர்மசங்கடமான நிலைபாட்டை காங்கிரஸ் எடுப்பதை விரும்பவில்லை. பிரட்டிஷ் அரசு நடத்திய ஏகாதிபத்திய யுத்தம் இந்திய மக்களின் பணம் மற்றும் ராணுவத்தை பயன்படுத்த ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது. காங்கிரஸ் தனது மனசாட்சிக்கு ஏற்ப அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது.

இரண்டு வளர்ச்சிப்போக்குகள் கண்ணெதிரே தெரிந்தது. காந்தி மற்றும் ராஜாஜி போன்ற அவரது சீடர்கள் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய இந்தியா கிடைக்கப்பெற பிரிட்டிஷ் அரசுடன் சமரசமாக போகவிரும்பினர். போருக்குப் பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற உத்தரவாதம் தரும் பட்சத்தில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் ஒத்துழைக்க நேரு தயாராக இருந்தார். சில அவசிய தேவைகளுக்காக இந்த இரு போக்குகளும் சிற்சில சமயங்களில் ஒன்று சேர்ந்தன.

உலக வளர்ச்சிப்போக்குகளை உணராத நிலை

சோவியத்தும் ஜெர்மனும் செய்து கொண்ட அனாக்ரமிப்பு ஒப்பந்தம் நேருவிற்கு அதிர்ச்சியளித்தது. பிரிட்டனும், பிரான்சும் இட்லரை சோவியத் யூனியனுக்கு எதிராக போர் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதையும், இந்த ஒப்பந்தம் ஏகாதிபத்தியத்தின் கூட்டுச்சதியை முறியடிக்க எடுத்த செயல் என்பதை நேரு அறிந்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் வர்க்கத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாத நேரு, இந்த ஒப்பந்தம் இரு தேசங்களின் சந்தர்ப்பவாத ஒப்பந்தம் எனக் கருதினார். இருப்பினும் சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றுதான் இது என்பதை முணுமுணுப்புடன் பின்னர் ஏற்றுக் கொண்டார். போலந்தின் தற்காலிக பிரிவினையும் பின்லாந்தில் ஏற்பட்ட மோதலும் நேருவிற்கு அதேமாதிரியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு இவைகள் அவசியம் என்ற உணர்வு இருந்தபோதும் இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அவருக்கு அதிர்ச்சியளித்தன.

ஆறுதல் வேண்டி பின்னர் அமெரிக்காவின் பக்கம் ஜவஹர்லாலின் மனம் எங்கே திரும்பியது. “இந்தச் சூழ்நிலையில் தான் அவர் பார்வை அமெரிக்கா பக்கம் திரும்பியது. செக் குடியரசு பிரச்சனையில் ரூஸ்வெல்டின் நடவடிக்கை அவரை ஈர்த்தது. எது அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது என்றால் எதிர்கால பாரம் அமெரிக்காவின் தலையில் தான் விழும் என்று கருதியதுதான். “அமெரிக்காவை விட்டு விலகி வெகுதொலைவில் இந்தியா இருக்கிறது. உலகம் முழுவதும் ஏகாதிபத்தியமும், பாசிசமும், கோலோச்சுவதும் வன்முறையும், ஆக்கிரமிப்பும் தலைவிரித்து ஆடுவதும், சந்தர்ப்பவாதம் கொடி கட்டிப்பறக்கும் இந்த பூமியில் ஜனநாயக சுதந்திரத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா என்னும் நமது எண்ணங்கள்தான் நம்மை வழிநடத்துகிறது.”

(எஸ்.கோபால், வால்யூம் 1, பக்கம் 260-61)

இப்படிப்பட்ட அமெரிக்க மீதான நம்பிக்கை, நேருவிற்கு சோவியத்ஜெர்மன் ஒப்பந்தம் ஒரு கடுமையான அதிர்ச்சியை அளித்தது; இது சர்வதேச நிலைமைகள் குறித்த அவரது தெளிவான பார்வைக்கு ஊனம் விளைவித்தது.

நேரு மட்டுமே இந்த எண்ணத்தில் இருக்கவில்லை. அவரைப் போல் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், உலக வளர்ச்சிப்போக்குகளை, வர்க்க சக்திகளின் செயல்பாடுகளை வைத்து உணர முடியாத மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டிருந்தனர். ஆனால் நேருபாராட்டத்தக்க விதத்தில் தனது புரிதலின் சமநிலையை வெகுசீக்கிரம் அடைந்தார். இட்லர் சோவியத்யூனியன் மீது தாக்குதல் தொடுத்தவுடன், சோவியத் மீது பரிவும், அனுதாபமும் கொண்டார்.

அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதை கவனிக்கத் தவறியதோடலலாமல், அமெரிக்கா மீது நேருவுக்கு ஏற்பட்ட மாயபிம்பத் தோற்றம் ஆச்சரியப்படத்தக்கதாகும். ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் ஒருவிதமான சோசலிசத்தை உருவாக்க முயற்சித்தாகவும், தனியுடைமைக்கு எதிராக செயல்படுபவர் என்ற எண்ணமுடையவர்கள் சிலரிடம் ரூஸ்வெல்ட் குறித்து சிலாகித்து நேரு பேசினார்.

எதிரெதிர் போக்குகள் ஒன்றிணைதல்

மார்ச் 1940ல் கூடிய காரியக்கமிட்டி ஒத்துழையாமை போராட்டம் தவிர்க்க இயலாதது எனக் கருதியது. “…… ஒரு வரையறைக்குள் அல்லது பெருமளவில் மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்ற நேருவால் முன்மொழியப்பட்ட ஆலோசனையை கமிட்டி நிராகரித்தது; மேலும் காங்கிரஸ் சமரசப்போக்கை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டை போக்கும் வண்ணம் முழுமையான சுதந்திரம் தவிர மற்ற எதுவும், குறிப்பாக டொமினியன் அந்தஸ்து மற்றும் அரசியல் நிர்ணய சபை உட்பட எதுவும் ஏற்பதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்தது. (அதே புத்தகம் பக்கம் 262)

பிரிட்டிஷ் அரசு எந்தவித கோரிக்கையையும் ஏற்க மறுத்த நிலையில், முன்னர் தெரிவித்த சமரசம் செய்து கொள்ளும் அல்லது சமரசமற்ற போக்குகள் கொண்ட இரு அணிகளும் ஒன்று சேர வேண்டிய தருணம் ஏற்பட்டது. காரிய கமிட்டி தீர்மானம், சோவியத் யூனியன் குறித்து நேரு தனது பழைய நிலை பாட்டுக்கு திரும்பி வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது…. “தெளிவற்ற பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்குடன் ஜவஹர்லால் அளித்த வரைவு தீர்மானத்தில் இருந்த பின்லாந்துக்கு எதிரான சோவியத் யூனியன் நடவடிக்கை நீக்கப்பட்டது; நேருவே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அதாவது சோவியத்யூனியன் பின்லாந்தை தாக்கியது தவறு என்று தெரிவிப்பதன் வாயிலாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் திசை திரும்பிவிடக்கூடாது; பின்லாந்து போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை பலவீனப்படுத்தும் அவர்களின் முயற்சியை; மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் வளையத்திற்குள் அந்த நாட்டை சிக்கவைக்கும் முயற்சியை, ஐரோப்பாவில் நடைபெறும் போரை ரஷ்யாவிற்கு எதிராக மெய்யாகவே நடக்கும் போரின் துணை நிகழ்ச்சியாக மாற்றும் நோக்கத்தை புரிந்து கொள்வதுடன், ரஷ்யா மட்டுமே அனைத்து விதமான ஏகாதிபத்தியத்தியங்களுக்கும் சமரசம் செய்து கெள்ளாத எதிரி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.” (அதே புத்தகம்)

காங்கிரஸ் கட்சி எப்பொழுது காலம் கணிந்துள்ளது எனக் கருதுகிறதோ அப்பொழுது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தலாம் என மார்ச் 1940ல் ராம்கரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. ஒத்திப்போடும் எண்ணமும், சமரசம் காண முடியும் என்ற எண்ணமும் இன்னமும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

எக்கால கட்டத்திலும் வன்முறையை தாம் ஆதரிக்க முடியாது என்றும் வன்முறை எதிர்ப்பு என்றும் சாக்கு போக்கு காரணம் சொல்லி எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் தனது விருப்பமின்மையை காந்தி தொடர்ந்து தெரிவித்தார்.

போர் துவங்கிய மூன்று மாதத்திற்குள் ஏற்பட்ட புதிய திருப்பத்தின் விளைவாக தலை வர்களுக்கு பதவியில் அமர எவ்வித நிபந்தனையுமின்றி ஒத்துழைப்பு நல்க காங்கிரசுக்கு வாய்ப்பு கிட்டியது. ஜூன் மாத வாக்கில் பிரான்சு கவிழ்ந்தது. ஹாலந்தும், பெல்ஜியமும் சரணடைந்தது. இட்லரின் ராணுவம் பிரிட்டனில் நுழைய வாயில் முன்காத்து நின்றது. காந்தி, நேரு இரு வரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்த தகுந்த தருணமல்ல இது என்பதை ஒத்துக் கொண்டனர். ஜூன் மாதம் கூடிய காரியக்கமிட்டி இரண்டு நிபந்தனைகள் விதித்தது. ஒன்று இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட வேண்டும். இரண்டு அனைத்து கட்சிகள் அடங்கிய அரசு உடனடி யாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஜூலை மாதத்தில் கூடிய காரியகமிட்டி ஒருபடி மேலே சென்றது. காந்தி மற்றும் ஜவஹர்லாலை புறந்தள்ளி, காரியக்கமிட்டியில் இருந்த பெரும்பான்மையினர் சுதந்திரம் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு தேசிய அரசு அமைக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் போருக்கு தங்கள் ஆதரவை தருவதாக தெரிவித்தனர். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதிலிருந்து இறங்கி பதவியைப் பெறுவது என்பது பிரிட்டிஷ் அரசின் சட்ட விதிகளின் கீழ் செயல்படுவதாகும் என்று ஜவஹர்லால் வாதிட்டார். மேலும் இந்த பதவியைப் பெறுவது என்பது முன்னர் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானதும், அழிவுக்கு இட்டுச் செல்வதும் ஆகும் என்றார். ஆனால், இந்த தீர்மானத்தின் கர்த்தா ராஜ கோபாலாச்சாரி, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத்தை தனது பக்கம் இழுத்தார். பின்னர் நேருவும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவர் இந்த ஆலோசனை இந்தியாவிற்கு ஆதரவான நிலைபாடு அல்ல என்பதை உணர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக இதனை ஏற்றுக் கொண்டார்.

வைஸ்ராய் காங்கிரசின் ஆலோசனையை நிராகரித்தார். அதற்கு மாற்றாக ஆகஸ்ட் ஆலோசனை என்ற பெயரில் ஒரு ஆலோசனையை முன் வைத்தார். அதனை காங்கிரஸ் நிராகரித்தது. காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டுகோள் விடுத்தது. அப்போராட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நடத்த வற்புறுத்தியது. தனிநபர் சத்தியாக்கிரகம் மட்டும் நடத்தவும், அதில் போரில் கலந்து கொள்ளும் உரிமை பற்றி பேசும் சுதந்திரம் உண்டு என்ற வரையறைக்குள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இது ஒரு கேலிக்கூத்தான சத்தியாக்கிரகம்; ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை பகடி செய்யும் செயலாகும். காந்தியும் மற்றும் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் நடைபெற்ற கால கட்டத்தை எவ்வித எதிர் வினையுமாற்றாமல் வீணடித்தனர். அரசு விரிவாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது; நேரு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கமும் நேருவின் பங்களிப்பும்:

1941 ஜூன் வாக்கில் போர் மற்றொரு திருப்பத்தை சந்தித்தது. இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தது; அதன் விளைவாக போரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. “…… குறிப்பாக சோவியத் யூனியன் மீது நாஜிகளின் தாக்குதல் தொடர்ந்த பின்பு, பிரிட்டிஷ் அரசின் மடத்தனமான செயலின் விளைவாக நடைபெற்று வரும் நிகழ்வுகளில் அவரையும், இந்த தேச மக்களையும் பங்கேற்கவிடாமல் செய்ததை கண்டு ஆத்திரமடைந்தார். அவர் தனிப்பட்ட கடிதங்கள் எதுவும் அனுப்பவில்லை என்றாலும் அவர் அனுப்பிய பிரிட்டிஷ் நண்பர்களுக்கான நீண்ட கட்டுரைகளில் அவர் மனதிற்குள் மறைந்திருந்த வெறுப்பு பீறிட்டு வெளியே வந்ததை காண முடிந்தது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 272)

ஜவஹர்லால் சிறையிலிருந்து டிசம்பர் 4, 1941 அன்று விடுதலையானார்; அப்பொழுது தான் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கு சக்திகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவிற்கு நேரு வெளிப்படையாக தனது ஆதரவினை தெரிவித்தார். ஆனால் அதேசமயத்தில், பிரிட்டிஷ் அரசு எந்தவிதமான உறுதிமொழியையும் தராத போது காங்கிரஸ் தனது கொள்கையிலிருந்து விலகக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆனால் கிறிஸ்துமஸ் கூட்டத்தில் ராஜ கோபாலாச்சாரி தலைமையில் இருந்த மேலாதிக்கம் செலுத்திய காரிய கமிட்டி தலைவர்கள் மீண்டும், தேசத்தை பாதுகாக்க தேசிய அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்.

காந்தி, வழக்கம் போல, உறுதியற்ற நிலைபாட்டை எடுத்தார். வன்முறை மூலம் கிடைக்கப் பெறும் சுதந்திரம் பெற அவர் விரும்பாததினால், ஸ்தாபனத்திலிருந்து விலகினார். ஆனால், காரியக்கமிட்டிக்கு ராஜகோபாலாச்சாரி அளித்த தீர்மானத்தை ஆதரித்தார். அதே சமயத்தில் ஜவஹர்லாலை தாஜா செய்யும் விதத்தில் அவரை தனது வாரிசு என்று அறிவித்தார். “சிலர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களுக்கும் எனக்கும் பேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி அதையும் விட கூடுதலாக ஏதேனும் உருவானால்தான் பேதம் உண்டாகும். நாங்கள் சக ஊழியர்கள் என்ற நிலையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருவதும் தற்போது தெரிவிப்பதும் என்னவென்றால் ராஜாஜி (ராஜகோபாலாச் சாரி) எனது வாரிசல்ல; அதற்கு மாறாக, ஜவஹர்லால்தான் என் வாரிசு. அவர் என்னுடைய சொற்களை புரிந்து கொள்ள முடியாதவர்; அவர் பேசும் சொல் எனக்குப் புரியாத ஒன்றாகும். இது உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் இரு இதயங்கள் சங்கமத்திற்கு அது ஒரு தடையல்ல. இது நான் அறிவித்த ஒன்று. நான் சென்ற பிறகு என்னுடைய சொற்களில் அவர் பேசுவார்.” (அதே புத்தகம் பக்கம் 275)

நேருவின் எதிர்ப்பை மீறி காந்தி மீண்டும் தன்னுடைய படைத்தளபதிகளை, அவருடைய புனிதமான வன்முறைக்கு எதிரான கொள்கையை மீறினாலும் ஆதரித்தார். அதேசமயத்தில் நேருவின் மீது தனது நம்பிக்கையையும் தெரிவித்தார். காந்தி, தன் வர்க்கத்தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கவும், அதேசமயம் நேருவின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் எவ்வித ஒளிவு மறைவு மின்றி தன்னுடைய வர்க்க உள்ளுணர்வை வெளிப்படுத்தத் தவறவில்லை.

கிழக்குப் பகுதியில் ஜப்பான முன்னேறியதும், ரங்கூன் வீழ்ந்ததும், பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் சமரசம் காண விரும்பியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

காங்கிரஸ் வெகுஜன இயக்கத்தை கட்டவிழ்த்துவிட வேண்டி இருந்தது. மீண்டும் காந்தி மற்றும் நேரு இருவருக்கும் கூர்மையான கருத்து வேறுபாடு தென்பட்டது. பாசிச சக்தி குறித்த நேருவின் புரிதலும், ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து வன்முறையற்ற போராட்டம் நடத்த அவர் மக்களை அறைகூவி அழைத்தார். தேவையேற்படின் கொரில்லா யுத்தம் நடத்தவும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதனை காந்தி எதிர்த்ததுடன், தானே உருவாக்கிய தீர்மான அறிக்கையை காரிய கமிட்டிக்கு அனுப்பினார். தன்னுடைய வரைவு அறிக்கை ஏற்கப்படாவிட்டால், தான் விலகுவதாக காந்தி அச்சுறுத்தினார். இந்திய பிரிவினைக்கு கிரிப்ஸ் வழங்கிய ஆலோசனை மீது காந்தி ஆத்திரமடைந்தார். இந்தியாவை பிரிவினை செய்யும் நோக்குடன் இருக்கும் அரசுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ள காந்தி மறுத்தார். அவருடைய வரைவு தீர்மானம் பிரிட்டிஷ் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். பின்னர் இந்தியா ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தும். ஜப்பானின் சண்டை இந்தியாவுடன் அல்ல, மாறாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தான்.

காந்தியின் வரைவு தீர்மானம், போர் துவங்கியதிலிருந்து காங்கிரஸ் கடைபிடித்து வந்த கொள்கையிலிருந்து விலகி இருந்தது என்பது தெளிவாக அறிய முடிந்தது. இது நேருவிற்கு அதீதமாக தெரிந்தது. எனவே, ஜவஹர்லால் காந்தியின் வரைவு தீரமானத்தை முற்றிலுமாக நிராகரித்தார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இதுவரை கடைபிடித்த நாசிசம், பாசிசம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காரியக்கமிட்டி ஜவஹர்லாலின் வரைவு தீர்மானத்தை இறுதியாக ஏற்றுக் கொண்டது. இந்தியாவிற்கு ஆதரவாக ரூஸ்வெல்ட் தலையீடு செய்வார் என்ற பிரமை ஜவஹர்லாலுக்கு இருந்தது. ஆனால் ரூஸ்வெல்ட் தலையிட மறுத்துவிட்டார். எந்தப் பகுதியினரும் தனக்கு ஆதரவாக இலலை என்ற நிலையில் பிரிட்டிஷ் அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க காந்தி முடிவெடுத்தார். நேரு மீண்டும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா இவைகளின் நோக்கங்கள் நிறைவேற தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாதிட்டார். காந்தி தன்னுடைய ஜப்பான் ஆதரவுக்கொள்கையை கைவிட்டார். பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் நேச அணி நாடுகளின் ராணுவம் இந்தியாவில் இருப்பதற்கும் கூட்டணி நாடுகளின் ராணுவ ஒப்பந்த அடிப்படையில் முதல் நடவடிக்கை தேசிய அரசு அமைப்பதுதான் என காந்தி என்ற நிலைபாட்டை ஏற்றுக் கொண்ட பின்னணியில், ஜவஹர்லால் காந்தியின் தீர்மானத்தை எதிர்க்கும் தனது நிலைபாட்டை விலக்கிக் கொண்டார்.

இந்தச்சமயத்தில் விரிவான மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கத்தை நேரு எதிர்த்தார். ஆனால் காந்தி அதனை வலியுறுத்தினார். அதற்கு மாற்றாக எதுவுமில்லை என்பதை தெரிவித்தார். இந்தியாவின் நிலைபாட்டை சீனாவும், அமெரிக்காவும் புரிந்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஜவஹர்லால் எடுத்தார். காந்தி அனுப்பி ஜவஹர்லால் தயாரித்த வரைவு கடிதத்தில் “சீனா, அமெரிக்கா வுடன் முழுமையாக ஒத்துழைப்பை நல்குவதே இந்தியாவின் உண்மையான விருப்பமாகும். ஆசியாவோ அல்லது அதனைப் போன்ற உலகத் தின் பெரிய நிலப்பரப்பில் பாசிசம், நாசிசம் கோலோச்சுவது என்பதை என்னால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அதனை எதிர்த்திட இந்தியா தன்னால் இயன்றதை செய்யும். இதனைப்பார்க்கத்தவறும் பிரிட்டிஷ் அரசின் குருட்டுத்தனமும், பிடிவாதமும் இந்தியாவில் ஒரு கடுமையான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் இதுகுறித்த ஞானம் உடனடியாக அவர்களுக்கு தோன்றும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் காங்கிரசுடனும், தேசிய சக்திகளுடனும் மோதலை உருவாக்கும் திட்டத்துடன் அவர்கள் இருப்பதாக தோன்றுகிறது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 293)

மோதலை தவிர்க்க காரிய கமிட்டி கடைசி நிமிட முயற்சியை எடுத்தது. இறுதி முடிவு எடுக்க மூன்று வாரங்களுக்கு பின்பு ஆகஸ்ட் 7,8 தேதிகளில் கூடியது. பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய ஆலோசனையையும் ஏற்கவில்லை. அதன் பின்னர், நேரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஜவஹர்லால் நேருவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் போர் குறித்த காங்கிரசின் புரிதல், காங்கிரசின் சர்வதேச பார்வை, ஆசியக்கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விடுதலை, சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு இவைகள் அடங்கியிருந்தன. அந்த அறிக்கை ஒரு மாதிரி அரசை உருவாக்கவும், அதன் தலையாய நோக்கம் இந்தியாவை பாதுகாப்பதும், அமைப்புச்சட்டம் இயற்றும் நிர்ணய சபை உருவாக்க ஒரு திட்டம் தீட்டுவது ஆகியவற்றை தெரிவித்தது. போருக்குப் பின்னர் உள்ள நிலைமைகளை அந்த அறிக்கை தெரிவிப்பது “இந்தியாவின் சுதந்திரம் அன்னியர் ஆதிக்கத்தில் இருக்கும் இதர ஆசிய நாடுகளின் விடுதலைக்கு முன்னோட்டமாக அமையும். பர்மா, மலேயா, இந்தோசீனா, டச்சு ஆட்சியின் கீழுள்ள கிழக்கு இந்திய நாடுகள், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் முழுமையான சுதந்திரம் அடைய வேண்டும். எதிர்கால உலக அமைதிக்காக சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் இந்தியாவும் சேரும். கூட்டமைப்பு நாடுகளின் அமைப்புச்சட்ட விதிகளை மதித்து ஏற்றுக் கொள்வது, ஒரு தேசம் மற்ற தேசத்தின் மீது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டாத தன்மை, தேசிய சிறுபான்மையினர் பாதுகாப்பு, பின்தங்கிய தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம், உலக செல்வ ஆதாரங்களை ஒன்று குவித்து சாதாரண மக்களுக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு கூட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும்.”

அந்த கமிட்டி மேலும் தெரிவிப்பது, “சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது; அந்த தேசங்களின் சுதந்திரம் புனிதமானது, பாதுகாக்கப்பட வேண்டியது; ஐக்கிய நாடுகளின் ராணுவத்தினை சீர்குலைக்காது.’ அது மேலும் தெரிவிப்பது “இன்னமும் இந்த தேசங்களின் மீது தடை விதித்திருப்பது நியாயமல்லஎனவே அதை விலக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் சுதந்திரம் பிரிக்கப்பட முடியாத ஒன்று என்பதையும், பொதுஜன போராட்டங்களை வன்முறையற்ற முறையில் நடத்துவதும் சரி என இந்தச் செயல் நிரூபிக்கும்”.

(ஆர்.பி.துபே குறிப்பு, பக்கம் 236-37)

ஜவஹர்லால் நேருவால் வழிநடத்தப்பட்ட காங்கிரசின் சர்வதேசிய பார்வையை இது முழுமையாக வெளிப்படுத்தியது. இதனுடைய தொடர் நிகழ்வாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 1944ம் வருடத்தில் தான் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்தனர். தற்போது அவர்கள் மக்கள் சக்தியை உணர்ந்திருந்தனர். மேலும் நேரு எதிர்ப்பு மனோநிலையில் இருந்தார். பிரிட்டிஷ் அரசு, ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக் மற்றும் சமஸ்தானங்களின் உதவியுடன் துண்டாடப்பட்ட சுதந்திரம் வழங்க முன்வந்தது. இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் அண்டை நாடுகளில் நிரந்தரமான எதிரிகள் இருப்பார்கள். நேருவும் இதர தலைவர்களும் இதனுடைய அபாயத்தை உணர்ந்தனர். அதிலிருந்து மீள ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக்குடன் முதலில் உடன்பாடு காண முற்பட்டனர். ஆனால் ஜின்னாவும், முஸ்லிம் லீகும், இந்துக்களும், முஸ்லிம்களும் இருவேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெகு காலத்திற்கு முன்னரே அவர்கள் அறிவித்திருந்தனர். எனவே, ஜனநாயகத்தன்மை அடிப்படையில் எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரிய பின்னணியில் அவர் வாக்களிக்கும் சம உரிமை அல்லது சிறுபான்மையினருக்கு ரத்து அதிகாரம் தந்தால் இந்திய யூனியனுடன் சேர்ந்து இருக்க ஏற்றுக் கொள்வோம் என்றனர். எனவே, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு சென்ற பின்னர் பிரிவினை என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது. ஆரம்ப காலகட்டத்தில் காந்தி பிரிவினைக்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்தார். மற்றவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முன்வந்த சூழலில், அவர் தன்னுடைய எதிர்ப்பை விலக்கிக் கொண்டார்.

தொடரும்

தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!

1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.

இந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.

வேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது

கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’

அதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது? அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அணிதிரள அறைகூவல்

கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’

அதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.

கட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.

இவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..

கடமைகள் குறித்த ஆவணம்

1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.

பொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’

இந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது.   ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.

ஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட சதிகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.

புதிய ஸ்தாபனம் உதயம்

ஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.

சிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.

சிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), தற்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.

புதிய சவால்கள்

நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக,   நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’

நன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே,   தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.

கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”

இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

மார்க்சிஸ்ட் கட்சியின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் பரிசீலனையில், பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. வலதுசாரி திருப்பம் என்று எதைச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது.

முதலில் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்பிரயோகம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். 1789 பிரெஞ்ச் புரட்சியின் போது, தேசிய நாடாளுமன்றத்தில் புரட்சிக்கு ஆதரவானவர்கள் அவைத் தலைவருக்கு இடதுபுறமும், மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வலதுபுறமும் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர். பொதுவாக முற்போக்குவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் சமத்துவம், ஜனநாயகம், பரந்த பார்வை, சமத்துவ பார்வை, பாகுபாடுகள் எதிர்ப்பு, பொதுநலன் நாடல் போன்றவை இணைந்தது இடதுசாரிக் கண்ணோட்டம். பிற்போக்குவாதம், சமூகப் படிநிலை அப்படியே இருக்க வேண்டும் என்ற கருத்து, பாசிசம், சர்வாதிகாரம், ஆளும் வர்க்க நலன்களை பகிரங்கமாக ஆதரிப்பது, மதவாதம், சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்கள் இணைந்தது வலதுசாரிக் கண்ணோட்டம். பொதுவாக இடதுசாரிக் கருத்தியல் முற்போக்கு என்றும், வலதுசாரி கருத்தியல் பிற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு ஒரு விஷயத்தில் முற்போக்குப் பார்வையும், மற்றொன்றில் பிற்போக்குப் பார்வையும் இருக்கலாம். அதை மட்டும் வைத்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று எடை போட்டுவிட முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தப் பார்வை இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று பார்க்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி கருத்தாக்கங்களிலும் பல நிறங்கள், நீரோட்டங்கள் உள்ளன.

பொதுவாக இந்த அளவுகோலில் உலக அரசியல் அரங்கில் கட்சிகள், கொள்கைகள், தத்துவங்கள் எடை போடப்படுகின்றன. இந்தியா உட்பட எந்த ஒரு சமூகத்திலும் இரு பகுதியாளர்களும் உள்ளனர். இரண்டு கருத்துக்களும் இருக் கின்றன. இருப்பதை மாற்றாமல், அதற்குள்ளேயே சில முன்னேற்றங்களைத் தேடும் மையத்துவவாதிகளும் (Centrists) உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அல்லது ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் எந்த வகை என்று பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் தேசத்தை அவ்வகையில் செலுத்த அந்தக் கட்சி முயற்சிக்கும். அது இடதுசாரிப் பாதையில் செலுத்த முயற்சிக்கிற கட்சியின் ஆட்சியாக இருந்தால், மக்களுக்கு அது நன்மை தரும். வலதுசாரிப் பாதையில் செலுத்துகிற ஆட்சியாக இருந்தால் பொது நலனுக்கு அது ஆபத்தாக முடியும்.

தேசியவாதம் என்பது முற்போக்கா?

உதாரணமாக, ஹிட்லரின் ஆட்சியின் அடிப்படையாக ஆளும் வர்க்க நலன் என்பதுடன் பாசிஸம், இன அழிப்பு உள்ளிட்டவை இருந்ததால் வலதுசாரி என்று சொல்கிறோம். தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளை, மத அடிப்படைவாதம், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம் போன்ற குணாம்சங்களின் அடிப் படையில் வலதுசாரி என்றே வரையறுக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் அடிப்படை பார்வை யூத இனவெறி, எனவே அதை வலதுசாரி அரசு என்று பார்க்கிறோம். அமெரிக்காவில் செயல்பட்ட கூக்ளக்ஸ் கிளான் போன்ற அமைப்புகளைப் போல் தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வந்து உழைக்கும் தொழிலாளிகளை வேட்டையாடும் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசியம் என்ற பெயரில் இவை வன்முறையில் இறங்குகின்றன. இவை வலதுசாரி அமைப்புகளே. மதம், தேசியம், இனம், மொழி என்று பல அடையாளங்களில் எது வேண்டுமானாலும் அல்லது எல்லாமே வலது சாரிக் கருத்தியலின் மையமாகப் பயன்படக் கூடும்.

உலகின் பல நாடுகளில் தேசியம் அல்லது தேசியவாதம் என்பது வலதுசாரிப் பாதையின் முகமூடியாகப் பயன்படுகிறது. தேசியம் என்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழக்கூடும். தேசியம் என்பதில் பல வகை உண்டு. அதிலும் வலதுசாரி இடதுசாரி கண்ணோட்டங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் கூடிய வர்க்க நலன் இணைந்த தேசியம் உண்டு. சில அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரபு தேசியம் என்பது பேசப்படுகிறது. ஹிட்லர் முன்வைத்தது உயர் இனப் பெருமையை மையப்படுத்தும் தேசியம். இதன் மூலம் இதர தேசிய இனங்களை அழித்தொழிப் பது என்பது நியாயப்படுத்தப்பட்டது. இது பாசிஸத்துக்குப் பயன்பட்டது. தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுத்தும் மத அடிப்படைவாத தேசியம் இருக்கிறது. அமெரிக்கா தன் பல்வேறு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உள்நாட்டுக்குள் தேசியத்தை முன்வைத்துப் பேசுகிறது. இந்தியாவில் பிஜேபியின் பிரச்சாரம் கலாச்சார தேசியம் என்பதை மையப்படுத்துகிறது. அதாவது இந்துக் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல என்பது. தேர்தல் காலத்தில், நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத் வம்தான் இந்தியாவின் அடையாளம் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இது இதர மதங்களைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக உருவகப்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைப்பது, காப்பது அல்ல. எனவே, தேசியம் என்பதே முற்போக்கு ஆகி விடாது. அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே நிர்ணயிப்புக்கு வர முடியும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவீன இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மத அடிப்படையில் இந்துராஷ்டிரமாக இந்தியா அமைய வேண்டும் என்று வற்புறுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உட்பட பெரும்பான்மையினர் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, சமத்துவம் என்ற அஸ்திவாரம் தேவை என்று வலியுறுத் தினர். இறுதியில் அரசியல் நிர்ணய சபையால் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, பன்முகத்தன்மை கொண்ட நவீன இந்தியா உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விட்டுவிடவில்லை என்பது தான் உண்மை.

மேல்பூச்சு

காந்தி கொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தடையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகப் பிகடனம் செய்துகொண்டது. ஆனால், அதன் அரசியலை கவனிப்பதற்காக பாரதீய ஜனசங்கம் உருவாகி, அதன் தொடர்ச்சி யாகத் தற்போது பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலாச்சார தேசியம், இந்து தேசியம் என்ற பேரில் சங் அமைப்பின் வலதுசாரி இந்துத்வ அரசியல் கருத்தியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது நடந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் தீவிரமாக நடக்கும் என்பதைத்தான் வாஜ்பாயி ஆட்சியில் பார்த்தோம். ஆனால், அப்போது பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை யில் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், பல விஷ யங்களை நினைத்த அளவு செய்யமுடியவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி என்ற பெயர் இருந் தாலும், இது பிரதானமாக பிஜேபி ஆட்சியாகவே இருக்கிறது. முக்கிய அமைச்சரகங்கள் உள்துறை, பாதுகாப்பு, அயல்துறை, தொழில், வர்த்தகம், மனிதவளம், ஊரக வளர்ச்சி எல் லாமே பிஜேபி கையில்தான். இந்துத்துவக் கருத்தியல்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர இது மிக உதவியாக இருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தர பிரதேசத்தில் மட்டும் 27க்கும் மேற்பட்ட மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றைப் பற்றிய சிறு விமர்சனம் கூட மோடியால் செய்யப்பட வில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் சுதந்திர தின உரையில் வகுப்புவாத, சாதிய மோதல்களுக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த மதவெறிக் கொடுமைகளுக்கு, பிரதமர் வேட் பாளராக இருந்த போது கூட வருத்தம் தெரிவிக்காதவர் திடீரென மாற்றிப் பேசுவதால் யார் நம்பிவிடப் போகிறார்கள்? கடந்த காலத்தில் பிரதான மதவெறித்தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுக் களின் அறிக்கையைப் பார்த்தாலே உண்மை புரியும். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் (மும்பை 1992-93), டி.பி.மதான் கமிஷன் (பிவாண்டி, ஜால்காவ், மஹத் 1970) ஜோசஃப் வித்யாத்தில் கமிஷன் (தலைச்சேரி 1971), ஜக்மோஹன் ரெட்டி கமிஷன் (ஆமதாபாத் 1969), வேணுகோபால் கமிஷன் (கன்னியாகுமரி 1982), ஜிதேந்திர நாராயண் கமிஷன் (ஜாம்ஷெட்பூர் 1979) ஆகிய கமிஷன்கள் எல்லாமே, இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஒன்று, மத மோதல் களைத் தூண்டுவதில், நடத்துவதில் இந்துத்துவ அமைப்புகளின் கிரிமினல் நடவடிக்கைகள், வன் முறைகள்; இரண்டு, காவல்துறையின் சிறு பான்மை விரோத அணுகுமுறை. விசாரணைகளின் போது, இந்துத்துவ ஆசாமிகளின் பங்கேற்பை மறைப்பதற்குக் காவல்துறையும், நிர்வாகமும் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி பார்வை இருப்பவர்கள் பொருத்தப் படுவார்கள் என்பதும் புரிகிறது. இதையெல்லாம் செய்து கொண்டே, மோதல்களை நிறுத்த வேண்டும் என்று ஒரே ஒரு உரையில் மட்டும் பொதுவாகப் பேசுவது மேல் பூச்சு தான்.

திருத்தப்படும் வரலாறு:

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்து தான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப் படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய நிபுணர்களின் சந்தேகத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய அவ சியம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத் திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங் களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிஹார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் எழுதியதை, தோழர் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியிருக்கிறார். பூகோள ஆய்வுகளை இது மீறுகிறது என்பது மட்டுமல்ல, மக்களை விட்டு விட்டு நிலப் பிரதேசம் மட்டும் இடம் மாறுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். திப்பு சுல்தான் போன்றவர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்ததும், சில இந்து மன்னர்கள் கோயில்களை இடித்ததும் வரலாற்றின் பகுதிதான். வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திருத்துவது பேராபத்தில் போய் முடியும்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உரு வாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக் கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக்கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும் என்கிற செய்திகள் அண்மையில் வெளிவந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத் தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார். இது, மார்க்சிஸ்ட் கட்சியால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது, அரசு அதை மறுத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் வரலாற்றைத் திருத்துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது.

அதேபோல் இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இல்லை. இந்தியாவுக்குள் குடியிருப்பது என்பதுதான் அடிப்படை. எனவேதான் குடியுரிமை அடிப்படையில் மதச்சார்பில்லாமல் சம உரிமை கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இரண்டாம் தரத்தினராக நடத்தப் பட வேண்டும் என்ற கோல்வால்கரின் கூற்றும் இதில் அடிபட்டுப் போகிறது. அரசியல் சட்டத் தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த காலத்தில் ஓயாமல் எழுந்ததற்கு இதுவே பிரதான காரணம். தற்போதும் இதை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படும்.

கற்பனைகள் மட்டுமே கல்வியாய்:

அரசியல் அமைப்புச் சட்டக் கோட்பாடுகள், பொதுவாக ஒரு நாட்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை. அப்படிப் பார்த்தால், கல்வித் திட்டம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல், சமத்துவக் கருத்துக்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நவீன தாராளமய காலத்தில் கல்வி வணிகமயமான சூழலில், இந்த மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். இந்த மதிப்பீடுகள் மேற் கத்திய மதிப்பீடுகள் என்று குறை சொல்லி, கல்வியை இந்திய மயமாக்கப் போகிறோம் என்று பிஜேபி புறப்பட்டிருக்கிறது. இந்திய மரபில் முற்போக்குக் கருத்தியல்கள் எப்போதும் இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால், பிஜேபி அமல்படுத்த முனையும் இந்தியமயம், இந்திய மரபின் பிற்போக்கு அம்சங்களைத் திணிப்பது தான். வாஜ்பாயி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தீனா நாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங் கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன் னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத் துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மஹாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன் றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ் டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்தார், ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாத வர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாத்ரா தலைமையில் ஒரு தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டு, கல்வியை இந்தியமயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அது அரசுக்குக் கொடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்வியின் உள்ளடக்கம் கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டதாக மாறினால் அரசியல் சட்டத்தின் முற்போக்கு மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிவைத்து விட்டு, சமத்துவத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியலைக் கற்றுக் கொடுப்பது எத்தகைய ஒரு முரண்பாடு? எதிர்கால சந்ததியைக் கடைந்தெடுத்த மதவாதிகளாக, அறிவியலின் வாசனையேபடாத அறிவிலிகளாக வளர்ப் பதற்காகவா கல்விக்கூடங்கள்? சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தப் பாடத்திட்டத்தைத் திணிப்பது ஒருமைப்பாட் டுக்கு எவ்வாறு உதவும்? தனியார் கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது உட்பட முக்கிய அம்சங்களில் அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது, அரசியல் சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதற்குத் தானே தவிர, அடுத்த தலைமுறையைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்துவதற்காக நிச்சயம் அல்ல. அனைத்து மதங்களைச் சார்ந்த நூல் களையும் அறிமுகப் படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவை நூலகத்தில் இருக்கட்டும். எல்லோரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்காகப் பயன்படட்டும்.

அயல்துறை கொள்கையில்:

பொதுவாக அணிசேரா இயக்கம், சோஷலிச நாடுகளுடன் நட்புறவு போன்ற அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்டது. ஏகாதிபத்திய நாடுகளுடன் நெருக்கம், அதற்கேற்ப உலக நிகழ்வுகளின் மீது ஏகாதிபத்திய சாய்மான நிலைபாடுகளை எடுப்பது என்பது அயல்துறை கொள்கையை வலதுசாரிப் பாதையில் திருப்புவதாகும். இப்பாதை ஏகாதிபத்திய உலகமய கட்டத்தில் காங்கிரசாலும் பின்பற்றப்பட்டதுதான்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியது காங்கிரசாக இருந்தாலும், அன்றைக்கு அதை ஆதரித்து, இன்றும் அதில் தொடர்வது பிஜேபி. பாலஸ்தீனத்தை அநீதியாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு, ராணுவ ஒத்துழைப்பு போன்றவையும் வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒரு கடினமான, வெறியை உருவாக்கும் அணுகுமுறையையே (Jingoism) கடைப்பிடித்தது. மோடி பதவி ஏற்பின் போது சார்க் நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்து ஒரு பொது தோற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தியது அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

பகிரங்கப்படும் ஆணாதிக்கம்

பெண் சமத்துவம் மறுக்கப்படுவதும், ஆணாதிக்கக் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதும் நிச்சயம் வலதுசாரிப் பார்வை தான்.

1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனு ஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. இதில், நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கோல்வால்கர் கேள்வி எழுப்பினார். சாவர்க்கர், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவர்கள் சொல்லுகிற மனு சாஸ்திரம், பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறது. அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உடைமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது என்பதுதான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலை இதிலிருந்து உருவானதுதான். எனவேதான் மனுதர்மத்தில் பெண் அடிமை நிலையில் வைக்கப்படுகிறாள். பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனுதர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை. எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும் என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, சுதந்திர இந்தியாவிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்துவ சக்திகளால் முன்னிறுத்தப்படுகிறது.

இந்து கோட்பாட்டு மசோதாவை 4 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாமல் இழுத்தடித்து, ஒரு கட்டத்தில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்தி, அம்பேத்கர் அவர்களையே நோக வைத்து, சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலக வைத்தது அன்றைய இந்துத்துவவாதிகள்தான். பிஜேபி ஆண்ட பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்பட்டன.

மகள், மருமகள், சகோதரியின் மானத்தைக் காப்போம் என்று மகா பஞ்சாயத்துக்களை நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகள், சிறுபான்மை எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் நின்றே அதைப் பார்க்கின்றனர். காதல் போர் (Love Jihad)என்று பெயர் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கும் இவர்கள், பெண்கள் தேர்வு செய்வது முஸ்லீம் இளைஞனாக இருந்தால், அதைப் பாலியல் தாக்குதல் என்று வர்ணித்துத் தலையிட்டு மத மோதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் 2013-ல் பதிவு செய்யப்பட்ட 34,000 பாலியல் வல்லுறவு வழக்குகளில் எத்தனையில் தலையிட்டி ருப்பார்கள்? எனவே இந்துத்துவ சக்திகளின் தலையீடுகள் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கு விதையாகியிருக்கிறதே தவிர, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் இல்லை.

பெண்கள் அணியும் உடை காரணமாகத்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதை வலுவாகச் சொல்லும் பகுதியினரில் சங் பரிவார ஆட்களுக்கு முதல் மதிப்பெண் கொடுக்கலாம். ஒரு ‘சின்ன ரேப்’ நடந்ததால் சுற்றுலா பாதிக்கப்பட்டுவிட்டது என்று உலகையே அதிரவைத்த டெல்லி நிர்பயா வழக்கு குறித்து மத்திய பிஜேபி அமைச்சரே அண்மையில் பேசியிருக்கிறார். கௌரவக் கொலைகளைத் திட்டமிட்டுக் கொடுக்கும் காப் பஞ்சாயத்துக்களில் இவர்களுக்குப் பங்கு உண்டு. காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதுடன், தம்பதியர் அல்லாத ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலியுடன் ‘கலாச்சார காவலர்களாக’ வலம் வருகிற இந்துத்துவ அமைப்புகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண் சமத்துவம் இவர்களுக்கு ஏற்புடையதல்ல; பெண்ணைத் தாய், மகள், சகோதரி என்ற கோட்டுக்குள் நிறுத்துகிறார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதவாதம், சாதியம் போன்ற கருத்தியலில் பகிரங்கப்படுவது ஆணாதிக்கம்தான்.

சமூக நலம் மெல்ல இனிச் சாகும்:

தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பது, சமூகச் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது, தேச வளர்ச்சியை காவு கொடுத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமான பொதுத்துறை பங்குகளை விற்று தனியார்மய மாக்குவது, உள்நாட்டு வெளிநாட்டு பெருமுத லாளிகளின் நலனுக்காக எல்லா விதிகளையும், சட்டங்களையும் வளைப்பது போன்றவை வலது சாரிப் பொருளாதாரப் பாதையின் முக்கிய மைல் கற்களாகும். காங்கிரசாலும் பின்பற்றப்பட்ட இப்பாதை, மோடி ஆட்சியில் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களிலேயே வெளிப்படு கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே தனித் துறையை உருவாக்கியது பிஜேபியே. பல்வேறு காரணங் களுக்காகக் காங்கிரஸ் செய்யத் தயங்கிய கார்ப்ப ரேட் ஆதரவு காரியங்கள் எல்லாம் மோடி ஆட்சி யில் துரித கதியில் நடக்கின்றன. ரயில்வேயில் அந்நிய நேரடி மூலதனம், காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத் துறையில் இருப்பதை உயர்த்துவது போன்றவை இதற்கு உதாரணம். திட்டக் கமிஷனை ஒழிப்பது என்ற அவர்களது ஆலோ சனை இதன் உச்சகட்டம். கொஞ்சநஞ்சம் இருக்கும் சமூக நலத்திட்டங்களைக் கண்காணிப் பது, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் இனி அவ்வளவுதான். சமூக நலம் மெல்லச் சாகும் என்பது நிதர்சனம். இது கூட்டாட்சி முறைமைக்கும் முரணானது. தொழிலாளர் நலச்சட்டங்களும் தளர்த்தப்படுகின்றன.

சர்வதேச நிதி மூலதனம் கோலோச்சும் உலகமய காலத்தில், மூலதனம் பொது சொத்துக்களை சூறையாடும், அடித்துப் பிடுங்கும், ஆட்சியாளர் களை அதற்கேற்றாற் போல ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் தத்துவார்த்த தீர்மானம் கூறியதை நடப்பவை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரம், பண்பாடு படும்பாடு

புராதன இந்தியாவின் சாதிய அமைப்பு நியாயமானது, மேன்மையானது என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புதிய தலைவரும், கல்வியை இந்தியமயப் படுத்துவதற்குக் குத்தகை எடுத்திருக்கும் பாத்ராவும் அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூக அமைப்பின் அருவருப்பான, அநீதியான அம்சத்தை ஆரத் தழுவுகிறார்கள். அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதற்கு மாறாக, கோல் வால்கர் கூறிய படி, இந்தி நிச்சயம், சமஸ்கிருதம் லட்சியம் என்ற பாதையில் பிரதேச மொழிகளை சில மாற்றுக் குறைந்தவையாக ஆக்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. பண்டி கைகள் ஏற்கனவே பலிகடா ஆகிவிட்டன. ஏகே 47 துப்பாக்கியுடன், டைனோசார் மீது வலம் வரும் பிள்ளையார்தான் இப்போது கதா நாயகன். கலாச்சார தேசியம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பலி கொடுத்து, மதம் சார்ந்த அதுவும் அவர்கள் நினைக்கும் உயர் சாதிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற அவர்களது கடந்த கால முயற்சிகளைத் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சடங்குகள், விழாக்கள் அனைத்துப் பகுதியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாக மாற்றப் படுகின்றன. அதில் வணிக நோக்கமும் உண்டு.

பல்வேறு வகை ராமாயணங்கள் இந்தியாவில் புழங்குகின்றன என்பது குறித்து பத்மஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய நூல், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தி லிருந்து சமீபத்தில் நீக்கப் பட்டிருக்கிறது. விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம் என்று ஒரு பழமொழி இருந்தாலும், சீதை ராமனின் தங்கை என்று ஒரு வகை ராமாயணம் கூறுகிறது. புத்த ஜாதகக் கதைகள் அதற்கு ஒரு சாட்சி. ஒரு குறிப்பிட்ட வகை ராமாயணம் தான் அக்மார்க் முத்திரை பெற்றது என்று எப்படிக் கூறமுடியும்? கதை களும், கற்பனைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுபவை. அவற்றை செழுமையான அனுப வங்களாக, பன்முகத்தன்மையைப் பிரதிபலிப் பவையாகப் பார்க்க வேண்டும். மதச் சார்பற்ற நிறுவனங்கள் வலதுசாரி நிர்ப்பந்தத்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி இரையாவது எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்து கூறும் உரிமையை அடித்து நொறுக்குகின்றனர். சர்வ தேசப் புகழ் பெற்ற வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்தைப் பெங்குவின் நிறுவனம் விலக்கிக் கொள்ள வைத்தது, தலித் செயல்பாட்டாளர் ஷீத்தல் சாத்தே மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வருவதைத் தடுத்தது போன்ற சமீபத்திய உதாரணங்கள் நமக்கு முன் உண்டு. திரைப்படங் களுக்கு, மத்திய தணிக்கைக்குழுவுக்கும் மேலான சூப்பர் தணிக்கையாளராக சங்கப் பரிவாரம் நடப்பதும் நமக்குத் தெரியும். மோடி ஆட்சி மத்தியில் இருப்பது, இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால், முன்னைக் காட்டிலும் வேகமாக வும், வெறியுடனும் இவை நடந்தேறுகின்றன.

மன வயல்களில் ஊன்றப்படும் விஷநாற்று

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்பிற்போக்குக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை சொல்லத் தயங்கிய பிற்போக்குக் கருத்தியல்கள் பெருமிதத்துடன் சொல்லப் படுகின்றன. பத்தி ரிகைகளில் அத்தகைய கருத்தியலைக் கொண்ட கட்டுரைகள் அதிகரித்திருக்கின்றன. சமூக பொது புத்தியின் ஓர் அம்சமாக இவை மாற்றப்படு வதற்கு நீண்ட காலம் ஆகாது. இல்லை இல்லை, இந்திய மக்கள் விட்டுக்கொடுத்து விட மாட்டார் கள், தமிழகப் பாரம்பரியம் அப்படிப் பட்டதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், இதை மட்டுமே கூறுவது நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதாகும். வலதுசாரிக் கருத்தியல் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாகக் கொள்ளை நோய் போல் பரவி வருகின்றது. தொட்டால் பரவும் நோயை ஒட்டுவார் ஒட்டி (Contagious)என்பார்கள். அதைப்போலவே இது பரவும். கிராம்சி சொல்வதைப் போல், இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தின் தாக்கம் என்பது அணுவுக்குள் நடக்கும் மாலிக்யூல்களின் மாற்றம் போல் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு பொருளாக அதாவது வேறுபட்ட உணர்வாக, கண்ணோட்டமாக அது உரு மாறும்.

ஏற்கனவே உள்ள பிரதான ஆளும் வர்க்கக் கட்சி அம்பலப்பட்டுப் போய் நிற்கும் போது, மக்கள் நெருக்கடிகளுக்குள் சிக்கி விழி பிதுங்கும் போது அந்த அதிருப்தியை மதவாத சக்திகள் பயன்படுத்தி முன்னேறுமா அல்லது இடதுசாரிகள் அதைப் பயன்படுத்தி வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஜனநாயகம் நோக்கி முன்னேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. அப்படிப்பட்ட திருப்பு முனையில் இந்தியா இன்று உள்ளது.

சமூகத்தை, அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் வலதுசாரிப் பாதையில் இழுத்துச் செல்லும் பணி கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தூண்கள் தூக்கி நிறுத்தியுள்ள மோடி அரசால் அவசரமாக செய்யப் படுகின்றது. பொருளாதாரத்தில் நவீன தாராளமயம், இதர துறைகளில் மத அடிப்படை வாதம் என்பதே இவர்களின் பாதை. இதர பல அரசியல் கட்சிகள் நவீன தாராளமயத்தை ஆதரிக்கிறார்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிஜேபியுடன் அணி சேர்ந்தவர்களாக அல்லது சேரத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர். எனவே, இரண்டு துhண் களையும் தகர்ப்பதில் இடதுசாரிகள் மட்டுமே இதில் முன்முயற்சி எடுக்க முடியும்.

இடதுசாரிகளும், தொழிலாளி வர்க்க அரசியலும் பின்னுக்குப் போகும் போது, பிற்போக்கு அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கும், வலுப்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக, அறிவியல், மதச்சார்பற்ற, இடதுசாரிப் பார்வையைப் பாதுகாத்து முன்னேற்ற அவசரமாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. அப்படியானால் இடதுசாரிகள் பலப்பட வேண்டும். ஒரு பொது மேடைக்கு வர வேண்டும். வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள மேலும் நண்பர்களை அடையாளம் கண்டு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் கெட்டிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே ஒரு பரந்த மேடையை உருவாக்குவது முன்னெப்போதையும்விட அவசரம். அதற்கான செயலில் இறங்குவது பெரும் அவசியம்.

கூட்டுறவு உணர்வு பரவ ஒரு நீண்ட பயணம்

கூட்டுறவு என்றாலே மக்களின் பங்கேற்பை உத்தரவாதம் செய்து இயங்கும் அமைப்பு என்று பொருள்படும். பிறரோடு எந்த அளவிற்கு ஒருவன் ஒத்துழைக்கிறானோ அந்த அளவிற்கே அவனது நலன் பாதுகாக்கப்படுகிறது என்ற உண்மையை கூட்டுறவு அமைப்புகள் உணர்த்துகின்றன.

“சுயநலத்தைதேடு, பொது நலனை கடவுள் பார்த்துக் கொள்வார்” “தகுதி உள்ளது வாழ, மற்றது அழியும்” என்பன போன்ற வாழ்வியல் போதனைகள், கலாசாரங்கள் மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு தள்ளி கற்பனைக்கெட்டாத சிரமங்களை கொண்டு வந்துவிட்டன. இந்த கசப்பான உலக அனுபவங்களே கூட்டுறவு அமைப்புகள் தோன்ற முதற் காரணமாகும். அது மட்டுமல்ல வரலாற்றிலே கேட்பதற்கு இனிமையாக இருக்கிற சுதந்திர சந்தை, சந்தையில் போட்டி என்பவைகள் மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்தின, இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தன. சந்தை மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்துவது இன்றும் தொடர்கின்றன. இவைகளை தவிர்க்க மக்கள் கண்ட அமைப்பே கூட்டுறவு ஆகும். இனக்குழுவாக வாழ்ந்த காலத்திய  தற்காப்பு மனோபாவங்களிலிருந்து விடுபட்டு,  சோசலிச சமூக உறவே ஆக்க பூர்வமானது என்ற கட்டத்தை நெருங்கும் இவ்வேளையில் முன்னைவிட   கூட்டுறவு அமைப்பு களின் தேவை 4 காரணங்களால் முக்கியமாகிவிட்டன.

 1. உலகமயமாகிவிட்ட நவீன சந்தையில் விலைகளின் நிச்சயமற்ற போக்கால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற மக்களின் சேமிப்பு நிதி மூலதன வடிவில் தறிகெட்டலைவதை தடுத்து  ஆக்கத்திற்கு திருப்ப.
 2. பொருள் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு ஆகிய நான்கிலும் மக்களின் நலனை முதன்மைப்படுத்த.
 3. விவசாயிகளுக்கும், சுயவேலை செய்து பிழைப்போருக்கும் குறைந்த வட்டியில் முதலீட்டு முன்பணம் கிடைக்க, வாழ்விற்கேற்ற வருவாயை உத்தரவாதம் செய்யும் வருமானம் கிடைக்க.
 4. அரசாங்க அமைப்பினுள்  ஜனநாயக முறைகள் பரவ, அதாவது மக்களுக்காக மக்களின் ஆட்சி என்பதை நடை முறையில் அனுபவிக்க, தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் ஆட்டம் போடுவதைத் தடுக்க.

கனவும் நனவும்

ஆனால் இந்த நோக்கங்கள் வெவ்வேறு வார்த்தைகளில் இனிமையாக சொல்லப்பட்டாலும் நமது அனுபவங்கள் வேறு, கூட்டுறவு அமைப்புகளை  தீபிடித்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற பார்வையோடு நடத்தப்படுவதை காண்கிறோம். அந்த அமைப்புகளை சட்டத்தாலும், அரசாங்க உத்திரவாலும் அதிகார மையங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டதால் கூட்டுறவு என்ற சொல் கேலிகூத்தாகி விடுகிறது, அந்த அமைப்பு ஊழலின் ஊற்றுக் கண்ணாகிவிடுகிறது, கூட்டுறவு அமைப்புகளில் திரண்டு கிடக்கும் மக்களின் சேமிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும் கட்சியின் புள்ளிகள் கைகளுக்கு போவதால் ஆட்சியில் ஒட்டிக் கொள்ளும் பசையாக மாறி விடுகிறது. உறுப்பினர்களும் அவர்கள் தயவில் இருக்க தள்ளப்படுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுறவு  ஒரு வேட்டைக் காடாக ஆகிவிடுகிறது. இதனால் உறுப்பினர்களின் நலன் பறி போகிறது. பல ஆயிரம் கோடிகள் பணம் திசை மாறி புரளுவதால் காலப்போக்கில் நாட்டுப் பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை கொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பை சீரழிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகி விடுகிறது. ஏன்? நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? பொருளாதாரத்தின் பொது நலனை கவனியாமல் கூட்டுறவு அமைப்பு தடுமாறிப் போனதேன்? இந்த அவலத்தை மாற்ற முடியுமா? கேள்விகள் எளிது, பதில்கள் அவ்வளவு எளிதல்ல. முதலில் கேள்விகளை தேடுவோம், நிறைவாக பதில்களை ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் முயற்சிப்போம்.

பின் நோக்கி பார்த்தால்

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நாட்டு கூட்டுறவு அமைப்பு எவ்வாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்தாலே ஏராளமான கேள்விகள் மனதில் எழும். எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சியிலிருந்தது இன்று இருக்கிறது என்று பாராமல் எத்தகைய அரசியல் கலாசாரம், கொள்கை அல்லது சட்டம் தமிழக கூட்டுறவு அமைப்புகளை பாழ்படுத்தி வருகிறது என்பதை  பரிசீலிப்பதே நமது நோக்கம். நேற்று-இன்று என்று வரலாற்றுப்படி பார்க்காமல் இன்று இப்படி ஆனதற்கு நேற்று என்ன நடந்தது என்று இங்கே பின் நோக்கி பார்க்கப்படுகிறது.

ஏன் உயர் நீதிமன்றம் அவசரச்சட்டத்தை ஏற்றது?

சென்ற வருடம் (2012) அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் கூட்டுறவு சங்க உறுப் பினர் சேர்க்க அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று அறிவிக்க 50 அமைப்புகள் தொடுத்த மனுக்களை நிராகரித்து விட்டது. கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகம் அதிகாரிகள் கையில் இருந்ததால் புதிய உறுப்பினர் சேர்ப்பை முந்தைய தீர்ப்பு ஒன்று தடை செய்திருந்தது. இந்த தடையை நீக்கவே அரசியல் நிர்ணயசட்ட 97-வது திருத்தப்படி அவசர சட்டம் போட்டதாக அரசு கூறியது., தடையை போட்ட முந்தைய தீர்ப்பில் புதிய உறுப்பினரை சேர்க்கும் உரிமை பொதுக்குழுவிற்கோ அல்லது அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவிற்கோ உண்டே தவிர அதிகாரிகளுக்கில்லை என்ற விளக்கமும் இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பு முறையாக தேர்தல் நடத்துக என்று அன்றைய அரசிற்கு சொல்லவில்லை.

அவசர சட்டத்தை எதிர்த்த மனுக்களில் இந்த அவசரச் சட்டம் தேவையில்லை   ஏற்கனவே இருக்கிற உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்க தேர்தலை அறிவிக்கட்டும். இந்த அவசர சட்டம் ஆளும் கட்சியினர் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றும் நோக்கம் கொண்டது என்று வாதாடின. அரசு தேர்தல் நடத்தப் போவதாக கொடுத்த வாக்குறுதியை ஏற்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நீதிமன்றம் 2008-ம் ஆண்டு ஒரு அவசர சட்டத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்த மறுசீரமைப்பை காட்டி தேர்தலை நடத்துக அந்த குழு புதிய உறுப்பினரை சேர்க்கட்டும் என்று கூறாமல் புதிய உறுப்பினர் சேர்த்த பிறகு தேர்தல் நடத்தினால் போதும் என்று கூறியதேன்? அது என்ன 2008 அவசர சட்டம்? அதன்படி தேர்தல் அன்றே ஏன் நடக்கவில்லை?

பத்திரிகை தந்த தகவல்கள்

உறுப்பினர் சேர்ப்பு அவசரச் சட்டத்தை செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்தியன் கோஆப்பரேட்டிவ் என்ற இணையதளம்  கடைசியாக தேர்தல் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்திச் சுருளில் கூட்டுறவு இயக்கத்திற்கு  மிகவும் மோசமான உதாரணமாக இருக்கும் தமிழகத்தில் உயர்நீதி மன்ற நிர்பந்தத்தால் தேர்தல் வரப்போகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்காத அதிசயமிது என்று எழுதியது. மார்ச் 5,2013 தேதியிட்ட இந்து பத்திரிகை ஏப்ரலில் தேர்தல் நடத்த அரசு அறிவிப்பை வெளியிட்ட செய்தியோடு. கீழ்கண்ட தகவலையும் நினைவூட்டியது.

கடைசியாக 2007-ல் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது சட்டம் ஒழுங்கு சீர் குலைந்ததாக கூறி நிர்வாகக் குழுவை அரசு கலைத்துவிட்டது. அதற்கு முன்னால் 1996-ல் தேர்தல் நடந்தது 2001-ல் அது கலைக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்று பழசை நினைவூட்டியது. கேள்வி என்னவெனில் 30 ஆண்டுகளில் ஒரு முறைதான் தேர்தல் மூலம் உருவான நிர்வாகக் குழு  5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 25 ஆண்டுகள் அதிகாரிகளே நிர்வாகம் செய்யட்டும் என்று அரசு விட்ட தேன்? 2007ல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கலைக்கப்பட்டபிறகு  கூட்டுறவு சங்க தேர்தலை மீண்டும் தகுந்த பாதுகாப்போடு ஏன் அன்றைய அரசு நடத்த முன்வரவில்லை?

இன்றைய தமிழக அரசிற்கும் தேர்தல் நடத்துவதில் அக்கறையில்லை என்பது உண்மையே. 2012-13 கூட்டுறவு அமைச்சர் சட்டமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கை அறிக்கையில் தேர்தலைப் பற்றிய எந்த விவரமும் இல்லை. பல தகவல்களோடு கூட்டுறவு வங்கிகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய். மக்களின் டெபாசிட் மற்றும் அவைகளின் சொத்துக்கள் பற்றிய  தகவல்கள் இருந்தன. கூட்டுறவு இயக்கத்தை புகழ்ந்து கூறிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளரின் மேற்கோள்  இருந்தது. ஆனால் அறிக்கையில் தேர்தல் பற்றி எதுவுமில்லை, கடந்த 30 ஆண்டு நிகழ்வுகளை கணக்கில் கொண்டால் இந்த அக்கறையின்மை இன்றைய ஆட்சியாளர்களின் ஏகபோகமல்ல!  கூட்டுறவு அமைப்புகளை அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கிற பொழுதுதான் ஒட்டு மொத்த கூட்டுறவு சங்கங்களின் பிடி ஆளும் கட்சியிடம் இருக்கும் என்ற கருத்திற்கு ஆளுவோர்கள் யாராக இருந்தாலும் அடிமையாகிவிடுகிறார்கள், ஏன் ஜனநாயகத்தைக் கண்டு ஆளுவோர் பயப்பட வேண்டும்?

நிர்பந்தம் வந்தால்  அரசு தேர்தலைப் பற்றி யோசிக்கிறது என்றும் சொல்ல முடியாது. எந்த திசையிலிருந்து நிர்பந்தம் வருகிறது என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்போ அல்லது 356 அரசியல் சட்ட பிரிவை வைத்திருக்கும் மத்திய அரசோ நிர்பந்தித்தால் மட்டுமே தேர்தல் வருகிறது.  அதன் வழியில் தேர்தலை நடத்தவும் செய்கிறது. மற்றப்படி தொழிற்சங்கமோ, விவசாய சங்கமோ, இடதுசாரி கட்சிகளோ, கூட்டுறவு சங்க உறுப்பினர்களோ குரல் எழுப்பினாலோ, இயக்கம் நடத்தினாலோ அவைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதப்பட்டு காவல்துறை தலையிடுகிறது.

ஏன் இந்த நிலை?

இன்று நடந்த தேல்தல்களில் ஆளும் கட்சி செய்த தில்லு முல்லுகள் எதுவும் மக்களுக்கு புதிதல்ல. கடந்த காலத்திலும் அபூர்வமாக நடந்த இரண்டு தேர்தல்களும் இதே பாணியில்தான் நடந்தன. கேள்வி என்னவெனில்  எதிர்கட்சியாக இருக்கிற பொழுது அரசை கண்டித்தவர்கள் ஆளும் கட்சியானவுடன் அதே தவறை செய்ய வெட்கப்படவில்லையே ? ஏன்?   2008ல் அப்போது இருந்த அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. கூட்டுறவு அமைப்பை சீரமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது என அறிவித்தது. இந்த அவசரச் சட்டம் பிறப்பித்த காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்பட்டு அதிகாரிகளே நிர்வகித்தனர் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த அவசரச் சட்டம் கூட்டுறவு சங்க பொதுக்குழுவிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிற்கும் அதிகார வரம்பை விரிவுபடுத்தியது. எப்பொழுது நிர்வாகம் குழுவை கலைக்கலாம் என்பதற்கு விதிகளை உருவாக்கியது. இந்த அவசரச் சட்டப்படி துவக்க நிலை கூட்டுறவு வங்கியை தொடர்ந்து மூனறு ஆண்டுகள் நஷ்டம் இருந்தால்,  பெருமளவு பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தால், பொதுக்குழு கூட்டம் மூன்று முறை கூட்ட முயற்சித்தும் கோரம் இல்லாமல் போனால் ஒழிய கலைத்து அதிகாரிகளை நிர்வாகிகளாக ஆக்க முடியாது. நிதிநிர்வாகம், ஊழியர் நியமனம், சம்பளம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு உட்பட வேண்டும்.  நிதிகளை ரிசர்வ் வங்கி வகுத்த விதிப்படியே செலவு செய்யும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகாரிகள், அமைச்சர்கள் விதிகளுக்கு விரோதமாக தலையிட முடியாது. உத்திரவு போட முடியாது. வேடிக்கை என்னவெனில் அவசரச் சட்டம் போட்ட  அன்றைய அரசு அதன்படி தேர்தல் நடத்த முன்வரவில்லை ஏன்? தேர்தல் நடந்தால் தங்களது பிடி பறிபோய்விடும் என்று அன்றைய ஆளும் கட்சி பயந்ததா? அல்லது  தேர்தல் மூலம் வரும் நிர்வாகக் குழுவை முன்பு போல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கலைக்க முடி யாது என்ற நிலை அவர்களை பயமுறுத்தியதா?

பின் ஏன் அந்த சட்டத்தை மாநில அரசு அழகு பார்க்கவா கொண்டு வந்தது? இல்லை! இதற்கும் கொஞ்சம் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறாலும்  அரசின் கடன் ரத்து அறிவிப்பாலும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் நிலைமை மோசமானது. 4400  முதல் நிலை வங்கிகளில் 1100 வங்கிகள் செயலிழந்தன.  2006ம் ஆண்டில் ரூ.6800/- கோடி விவசாயிகளின் கடன் ரத்து செய்த அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு ஈடுகட்ட பணம் ஒதுக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுத்த பணம் என்பது அதன் சேமிப்பும், மக்கள் சேமிப்பு கணக்கில் போட்ட  டெபாசிட்டாகும். வங்கிகள் வறண்டு போனதால் டெபாசிட்தாரர்களுக்கு வட்டியும் கொடுக்க இயலவில்லை, அசலையும் கொடுக்க இயலவில்லை. அரசு கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல்  கூட்டுறவு வங்கியை நம்பிய டெபாசிட்தாரர்களின் பணத்தை எடுத்து, விவசாய கடனை ரத்து செய்துவிட்டது. கூச்சல் கிளம்பவே வெறும் 100 கோடி ஒதுக்கிவிட்டு கை கழுவிவிட்டது. (ஆதாரம் ஃபைனான்சியல் எக்ஸ் பிரஸ் ஜூலை 3, 2006)

மேலும் விவசாயக்கடன்  வழங்குவதை விட அமைச்சர்கள், அதிகாரிகள் நிதியை வேறு வகைக்கு பயன்படுத்தியதால், விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் தயவில் வாழத் தள்ளப்பட்டனர். விவசாய சங்கங்கள் ஆங்காங்கு கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்க பலவிதமான கோரிக்கைகள் வைத்து குரல் எழுப்பினர். தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பின. தேர்தல் நடத்தவும், நிதியை விரயம் செய்வதை தடுக்கவும் கோரின.  பத்திரிகைகளுக்கோ டி.விகளுக்கோ இந்த நெருக்கடி பரபரப்பான செய்தியாகப்படாமல் போயிருக்கலாம். ஆனால் கிராமப்புற வாக்கு வங்கி சரிவதை ஆளுவோர் உணராமலா இருந்திருப்பர்! மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் நபார்டு என்ற வங்கியையும் நாடாமலா இருந்திருப்பர். அவைகள் 2004-ல் நியமித்த வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை ஏற்றால் தான், ரிசர்வ் வஙகியும், நபார்டும் நிதி கொடுக்க முடியும் என்ற நிலை எடுத்திருக்கும்.

இந்து பத்திரிகை (அக்டோபர் 24, 2008) செய்தி அன்று என்ன நடந்தது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. கிராமப்புறத்தில் குறுங்கால கடன் வழங்க வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை அமலாக்கும் இலக்குடன் கூட்டுறவு அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய  தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த வருடம் ஜனவரியில்  மாநில அரசு மத்திய அரசோடும், நபார்டு வங்கியோடும் வைத்தியநாதன் குழுவின் சிபாரிசை ஏற்று கூட்டுறவு சங்க சட்டங்களை திருத்த ஒப்பந்தம் போட்டதின் விளைவாக இந்த அவசரச் சட்டம் போடப்பட்டுள்ளது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறினாலும் சிதிலமடைந்து கிடக்கும் கூட்டுறவு வங்கிகளை இயக்கவில்லையானால் அரசிற்கு எதிராக இயக்கம் வலுக்கும் என்ற பயமே 2008ல் அன்றைய அரசு அவசரச் சட்டம் போட்டது. ஆனால் தேர்தல் நடத்தி கூட்டுறவு நிர்வாகத்தை தேர்ந்தெடுத்த குழுவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை ஏன்? ஒரு வேளை மத்திய அரசு மிரட்டியிருந்தால் தேர்தல் நடந்திருக்குமோ? வைத்தியநாதன் குழு சிபாரிசை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று உறுதிகாட்டிய மத்திய அரசு ஏன் தேர்தலை வற்புறுத்தவில்லை?  இந்த அவசரச் சட்டம் கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளை மாநில அரசின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட உதவலாம். ஆனால்  மத்திய அரசின்  ஆலிங்கனத்தால் யார் பயனடைவர்? என்பதை இப்பொழுது சொல்ல முடியாது.

அடுத்த கேள்வி கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் சுயேச்சையாக இயங்க இன்று இயலாவிட்டாலும் நாளை இயங்க சட்டம் உள்ளது. மற்ற கூட்டுறவு அமைப்புகளின் கதி என்ன? சான்றாக தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் இலக்கோடு உருவான கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஒன்று கூட உருப்பட்டதாக கூறமுடியாது. மகாராஷ்ட்ராவில் நிலத்திமிங்கலங்களின் அரசியல் கருவியாக உள்ளன. அங்கு விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவோருக்கு வறுமையும், அரசியல் தர்மவான்களின்  தயவில் நாளையாவது விடியுமா? என்ற ஏக்கத்தையும் கொடுத்து வருகிறது. விடுதலை பெற்ற துவக்க காலத்தில் இவ்வளவு ஊழல் பேர்வழிகள் புகுந்து  பல அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்காத காலத்தில் ஏன்? சில வருடங்களுக்கு முன்புவரை நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த உதவின. சென்னை நகரில் காமதேனு போன்ற கடைகள் வால்மார்ட் கடைகள் வந்தால் கூட விரட்டி அடிக்கும் ஆற்றலோடு இருந்ததை அறிவோம்.  விலைகளை கட்டுப்படுத்த நுகர்வோர்க்கும் அரசு மான்யம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலை இருந்தது. இன்று கூட்டுறவு என்றாலே ஊழல், கொலைவெறி என்றாகி விட்டது.

கூட்டுறவு சட்டம்: ஒரு வரலாறு

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே  இந்தியாவில் நிலவும் பழைய பாணி பொருள் உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு நகர்த்த வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் என்றால் கடன் அமைப்பு முறையில் பொருள் உற்பத்தியை இயக்குவது ஆகும். விவசாயமே அன்று முக்கிய தொழிலாக இருந்ததாலும், விவசாயிகளிடம் பண வடிவில் வரி வசூலை எளிமையாக்கவும், கந்து வட்டியால் விவசாயிகளின் கோபம் அரசின் மீது திரும்பாமலும் இருக்க  அரசு கூட்டுறவு முறையை புகுத்தியது. அதாவது அரசு கூட்டுறவு வங்கிக்கு வடன் கொடுக்கும், கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும். இதன் தொடர்ச்சியாக 1904ல் கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கடன் சங்கங்களை மட்டுமே அனுமதித்து, 1912-ல் கடன் சார்பற்ற சங்கங்களையும் உள்ளடக்கிய சட்டம் இயற்றப்பட்டது. 1919-ல் மாண்டேகு சேம் போர்டு அரசியல் சாசன சீர்திருத்தங்களின் கீழ் மாநில பட்டியலுக்கு கூட்டுறவுகள் மாற்றப்பட்டது.

தமிழகத்தில் 1932-ல் சென்னை கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. நாடு விடுதலைப் பெற்ற பின் 1951-ஆம் ஆண்டு விவசாயத்திற்காக நிதி உதவி அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி எ.டி.கோர்வாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1954-ல் அறிக்கை தாக்கல் செய்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட திரு.சந்தானம் குழு சிபாரிசுகள், கூட்டுறவு சட்டம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல், இதர மாநில சட்டங்களில் அடங்கியுள்ள  அம்சங்களை ஒருங்கிணைத்து  தற்போதுள்ள 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டமும், 1988-ஆம் ஆண்டு கூட்டுறவு சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டு 13.4.1988 முதல் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய ஆட்சியாளர்கள் அவசரச் சட்டம் கொண்டு வருவதும், பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக்குவதும் தொடர் நடைமுறையில் உள்ளது.

கூட்டுறவில் ஜனநாயகம்

ஜனநாயக முறையில் நிர்வாகம் என்பது முக்கிய கூட்டுறவு தத்துவமாகும். அங்கத்தினர்களால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம், உறுப்பினர்களாலேயே ஜனநாயக கோட்பட்டின் படி நிர்வகிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகமும் சட்டம், விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் இருக்கும்.  இந்த குழு சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளின் படி அளிக்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் செயல்படுத்தும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 33-ல் வரையறுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களை கலைத்துவிட்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 89(1)ஐ பயன்படுத்தி தனி அலுவலர்களை நியமிப்பதும் தொடர்ந்து தனி அலுவலர்களது பதவிக் காலத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீட்டிப்புச் செய்வதும் வழக்கமானதால் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பார்வை ஒரு தலை முறைக்கு தெரியாமலே உள்ளதை உணர முடிகிறது.

அரசியல் சாசன சட்டதிருத்தம்

இந்திய அளவில் கூட்டுறவு அமைப்புகள் விரிவடைந்து பல லட்சம் கோடிகள் புரளும் களமாகிவிட்டது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கிக்கு ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த எடுக்கிற முயற்சிகளுக்கு இந்த லட்சக்கணக்கான கோடிகளும் உட்படுத்த வேண்டியிருக்கிறது. ஊழலாலும், நிர்வாகக் கோளாறுகளாலும், கூட்டுறவு வங்கிகளில் திரண்டு கிடக்கும் பணம் விவசாயிகளுக்கு பயன்படாமல், வேறு இடங்களுக்கும், ஊக வாணிபத்திற்கும் போவதால், கிராமப்புற வாழ்வு நரகமாகி விவசாயமே அழியும் நிலை வேகப்பட்டு வருகிறது இதனை உணர்ந்த மத்திய அரசு கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தவும், கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெறவும், அரசியலமைப்பு சட்டத்தில் 97-வது திருத்தம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிட்ட பிறகு கூட்டுறவு தேர்தல் நடத்தாத அனைத்து மாநிலங்களிலும் நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் நோக்கமே மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின் நோக்கமாகும், கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசின் ஊழல் பிடியிலிருந்து விடுதலை என்றாலும் மத்திய அரசின் ஊழல் பிடியில் மாட்டிக் கொள்ளும் அபாயமுண்டு. மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்தை நேசிக்கிற வெனிசுலா சாவேஸ் அல்லது திரிபுரா முதலமைச்சர்கள் பாணியில் உள்ள மக்களை நேசிக்கும் அரசியல் தலைவர்கள் அமராமல் கிராமப்புற ஏழைகளுக்கு விமோசனம் இல்லை.

கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம்

ஏன் நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? கடந்த 30 ஆண்டு அனுபவம் நமக்கென்ன போதிக்கிறது?

தமிழக அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் தேவை என்பதையே அனுபவங்கள் உணர்த்துகின்றன, இதையே நிபுணர்களும், பாமர மக்களும் கருதுகின்றனர். இங்கே பல அரசியல்கட்சிகள் உள்ளன, இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற இயக்ககங்கள் ஜனநாயகம் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இடதுசாரி கட்சிகள் தங்கள் திட்டங்களிலே ஜனநாயகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த கருத்தை ஏற்காதவர்கள் அதனை விமர்சிக்க முடியும். எழுதி வைத்திருப்பதற்கு விரோதமாக நடந்தால் அவர்களை விமர்சிக்க முடியும், அம்பலப்படுத்த முடியும். ஆனால் மற்ற தமிழக அரசியல் கட்சிகள் இதில் தெளிவாக இல்லை.

சில நிபுணர்கள் சித்தாந்த பிடிப்பில்லாத அரசியலே இந்த கட்சிகளை வழி நடத்துவதாக கூறுகின்றனர். வேறு சில நிபுணர்கள் அப்படி சொல்ல முடியாது. மானுடம் இனக் குழுவாக வாழ்ந்த காலத்தில் இருந்த தற்காப்பு உணர்வே பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு தத்துவ அடிப்படையாக இன்று இருக்கிறது. மானுடம் இனக்குழுவாக வாழ்ந்த காலத்தில் ஜனநாயக உணர்வு பிறக்காத காலம். உயிர்வாழ பிற இனக்குழுவோடு போராட வேண்டியிருந்த காலம். எனவே அந்தப் பார்வையோடு இருக்கிற கட்சிகளுக்கு ஜனநாயக உணர்வு அநேகமாக இருக்காது.  இந்த இனக்குழு பார்வைதான் ஆட்சியில் அமர்ந்தவுடன் அதிகாரத்தை இஷ்டம் போல் பிரயோகிக்கும் உரிமை வந்துவிட்டதாக கருத வைக்கிறது. அதன் விளைவாக உள்ளாட்சி அமைப்புகளும், கூட்டுறவு அமைப்புகளும் எந்த அதிகாரமுமின்றி செயல்பட வைக்கின்றனர் தங்கள் தயவில்லாமல் அணைகளின் மடை கூட திறக்காது என்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்கின்றனர். இந்த கட்சிகள் ஒரு வகையில் சர்வாதிகார நிர்வாக முறையே, சிறந்த நிர்வாகம் எனக் கருதுகின்றனர் என்பதை நம்மாலும் ஊகிக்க முடியும். இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? என வினவலாம். எந்த சர்வாதிகாரியும் அடக்குமுறையை மட்டும் நம்பி நிற்பதில்லை. ஆங்கிலத்தில் காரட்  அன்ட் ஸ்டிக் பாலிசி என்பர்.  அடக்கு முறையும், சலுகைகளும் வைத்தே ஆட்சி செய்வர்.

உலகத்திலேயே மோசமான சர்வாதிகாரி ஹிட்லர், அவனது சித்தாந்தம் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அவனது அரசாங்க நிர்வாகம் கேரட்டும், ஸ்டிக்கும் கொண்டதாகும். இரண்டாம் உலக யுத்த முடிவில்  யுத்தத்தை தூண்டிய குற்றத்திற்காக நாசி கட்சியின் 22 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜெர்மன் நாட்டு நுரேம்பர்க் நகரில் சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 4 நாட்டு நீதிபதிகள் அமர்ந்து விசாரனை நடத்தப்பட்டது. அந்த விசாரனைக்கு பிறகுதான் யூதர்களையும், ஆட்சியை எதிர்ப்பவர்களையும் பெரும் திரளாக  முகாம்களில் கொல்ல விஷவாயு அறைகள் இருந்தன என்பதும், ஜெர்மன் மக்களுக்கே தெரிய வந்தது. அதுவரை ஜெர்மன் மக்கள் ஹிட்லரை ஈவிரக்கம் கொண்ட சர்வாதிகாரியாகவே கருதினர்.  ஹிட்லரை மக்கள் நேசித்தனர், ஆனால் ஹிட்லரோ மக்களை நேசிக்கவில்லை  என்பதை வெகுநாள் கழித்தே மக்கள் உணர்ந்தனர். சுருக்கமாகச் சொன்னால் இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தப் பார்வை ஜனநாயகத்தை ஏற்காது. மக்களை நேசிக்கவும் செய்யாது. மதிக்கவும் செய்யாது. மக்களை நம்பவும் செய்யாது. அடக்குமுறை, சலுகைகள் மூலம் ஆளவே முயற்சிக்கும். எதிர்ப்போரை துவம்சம் செய்யும். இன்னொரு சர்வாதிகாரியை கண்டு பயப்படும், சண்டை போடும் அல்லது முசோலினி, ஹிட்லர் காலில் விழுந்தது போல் பணிந்து போகும்.

தென்அமெரிக்காவில் மக்கள் பல நாடுகளில் சர்வாதிகாரிகளின் கேரட் அன்ட் ஸ்டிக் பாலிசியை வெகு காலம் நம்பி மோசம் போயினர். சாவேஸ் என்ற ராணுவ அதிகாரி அதை மாற்றி அமைத்தார். மக்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைக் கூட திரும்ப அழைக்கலாம் என்று ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் வெனிசுலா நாட்டு சட்டத்தை திருத்தினார். மக்களால் உருவாக்கப்படும் அரசே நிலைக்கும். மக்களின் நம்பிக்கையை இழந்தவர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிடுகிறார்  என்பது சாவேஸ் அரசியலாக இருந்தது. அந்த திருத்த அடிப்படையில் திருப்பி அழைக்க வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின, அமெரிக்க அரசு உதவியுடன் சாவேசிற்கு எதிராக அவதூறுகளை விதைத்தனர். வாக்கெடுப்பை சந்தித்த சாவேஸ் முன்னைவிட அதிக வாக்குகள் பெற்றார்.

லெனின், சேகுவேரா, காஸ்ட்ரோ முதலியோர் மக்களை நம்பியது போல் போல்   நானும் மக்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன் அவர்கள் வீட்டிற்கு போ என்றால் அதனை ஏற்பேன். இதுதான் ஜனநாயக உணர்வு.

தமிழ்நாட்டு அரசியலில் ஜனநாயக கலாசாரம் புகாமல், மாற்றங்கள் சாத்தியமில்லைஅதைப் புகுத்துவது எளிதல்ல. ஜனநாயக உணர்வை  அரசியலில் மேலோங்க வைப்பது ஒவ்வொரு மார்க்சிஸ்ட்டின் கடமையாகும். பதவிகளைப் பற்றிய பார்வையில் மார்க்சிச சித்தாந்தப் பார்வை மிளிர வேண்டும் .அதாவது பதவிக்காகவோ, புகழுக்காகவோ, பட்டயங்களுக்காகவோ நாங்கள் போராடவில்லை. நாங்கள் சரி என்று கருதுகிற கருத்திற்காக போராடுகிறோம் என்ற உணர்வே மேலோங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சி திட்டத்தில் உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். பதவிகள் முக்கியமல்ல, கூட்டுறவு அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசு அலுவலகங்களும் மக்களுக்கு சாதகமாக செயல்பட வைப்பது அன்றாட வேலைகளில் ஒன்றாக வேண்டும். மக்களை வேடிக்கை பார்ப்பவர்களாக ஆக்காமல் அவர்களும் பங்கெடுக்க வைக்கும் கிளர்ச்சி பிரச்சார வடிவங்களை காண வேண்டும்.

– ஏ.கிருஷ்ணமூர்த்தி, வே.மீனாட்சி சுந்தரம்

ஜனநாயகப் போரில் பர்மா … (Nov 2007)

– கே. செல்வப்பெருமாள்

தெற்காசிய பகுதியின் முக்கிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), மற்றும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன. நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிட மிருந்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், நவீன உலகில் இத்தகைய முதலாளித்துவ இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் தற்போது சரிவாதிகரிகளிடம் சிறைப்பட்டு கிடக்கின்றன. எனவே, அந்த வியாதி இந்தியாவில் பரவாமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது பர்மாவில் நிலவும் சூழல்கள் குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.
உலக மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பர்மா-மியான்மர். (இராணுவ ஆட்சியாளர்கள் பர்மாவை இனவாத போக்குடன் மியான்மர் என பெயர் மாற்றி விட்டனர்.) ஜனநாயகத்தை மீட்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டு களாக அடக்குமுறை இராணுவ ஆட்சியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பர்மா ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லற வாழ்வை துறந்த லட்சக்கணக்கான புத்த துறவிகள் தற்போது உழைக்கும் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏன் இந்த திடீர் போராட்டம்
அரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா. அரிசி மட்டுமா? ‘பர்மா தேக்கு’ என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா. அத்தோடு இயற்கை எரிவாயுவில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா!
இராணுவ ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் இராணுவத்திற்கான செலவு அதிகரிப்பு, போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நவீன ஆயுதங்களை வாங்குவது போன்ற நாசகர – சர்வாதிகார கொள்கையின் விளைவாக ஜெனரல் தான் ஷா தலைமையிலான இராணுவ அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை 500 சதம் உயர்த்தியுள்ளது. இதுதான் தற்போதைய போராட்டத்திற்கான வித்தாக மாறி ஜனநாயக எழுச்சி கொண்டுள்ளது.
அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் பர்மிய மக்கள், இந்த திடீர் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்ததாலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததாலும் நிலைகுலைந்து போயுள்ளன. வாழ்க்கையின் எல்லைக்கே துரத்தப்பட்ட பர்மிய மக்கள், இராணுவ ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனைகளை துச்சமாக நினைத்து தெருக்களில் இறங்கி சவால் விடுகின்றனர்.
போராட்ட பாரம்பரியம் மிக்க பர்மிய மக்கள்
குறிப்பாக ‘88 ஜெனரேஷன்’ என்று அழைக்கக்கூடிய போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள் இராணுவ ஆட்சியாளர் களின் விலை உயர்வுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி கண்டனம் முழங்கினர். சும்மா இருக்குமா அரசு? போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவியதோடு, அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 அன்று நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் புத்த துறவிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்து விலை உயர்வுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆங் சான் சூ குயி-யின் படங்களை ஏந்திக் கொண்டு பர்மா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியான முறையில் போராடியவர்களுக்கு எதிராக ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது இராணுவ அரசு. பல்வேறு இடங்களில் தடியடி நடத்தி போராடியவர்களை சிறையிலும் தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மா தலைநகர் ரங்கூன் மற்றும் மாண்டலேவில் செப்டம்பர் 24 அன்று லட்சக்கணக்கான புத்த துறவிகளும் – உழைக்கும் மக்களும் – மாணவர்களும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடைபெற்றது. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த பேரணியில் முன்னணியில் நின்றவர்கள் லட்சக்கணக்கான புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பத்திரிகைகள் இதனை ‘ஜனநாயகத் திற்கான காவி புரட்சி’ என்றே வர்ணித்தது!

ஜெனரல் தான் ஷா தலைமையிலான அடக்குமுறை இராணுவ அரசு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளதோடு, 1000த்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகளையும், 5000த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர் களையும் சிறையில் தள்ளியுள்ளது. பல்வேறு புத்த மடாலயங் களுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கே ஆயுதங்கள் பதுக்கி வைப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்க பாணியில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தனது அடக்குமுறை தர்பாரை நடத்தி வருகிறது. 1988 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது 3000 பேரை கொன்று குவித்து பர்மாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது போல், இம்முறையும் அதே பாணியை பின்பற்றி ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. துப்பாக்கி ஏந்திய இராணுவ ஒடுக்குமுறையாளர் களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை சுட்டுத் தள்ளுமாறு நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்றனர்.

உலகின் கவனத்தை திருப்பிய இன்டர்நெட்
நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உயர்ந்த அம்சமான இணையதளம் – இமெயில் – வலைபதிவு – செல்போன், கையடக்க மொபைல் கேமிரா போன்றவற்றின் வளர்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது உழைக்கும் வர்க்கம். பர்மாவில் நடைபெறுவது என்ன? என்பதை உலகம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. லட்சக்கணக்கான மக்களின் எழுச்சியும் – இராணுவ ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையும் உலக மக்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. இதனை உணர்ந்து கொண்ட இராணுவ அரசு அதற்கே உரிய குணத்தோடு பர்மாவிலிருந்து இயங்கும் அனைத்து இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளை ரத்து செய்துள்ளதோடு, தன்னுடைய ஒடுக்குமுறை களையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஜப்பானிய பத்திரிகை நிருபர் கென்ஜி நாகாய் துப்பாக்கி சூட்டில் பலியானதும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பர்மாவுக்கு எதிராக தங்களது கண்டனக் கணைகளை தொடுத்தன.
இந்த சம்பவங்களை உற்று நோக்கிய சர்வதேச சமூகம் பர்மாவில் நடைபெறும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில் நிர்பந்தித்து வருகிறது.

அமெரிக்காவின் ஜனநாயக வேடம்
இதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் பர்மாவில் நுழைய தங்களை ஜனநாய கத்தின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக் என பல்வேறு நாடுகளில் அமெரிக்கா வழங்கி வரும் ஜனநாயக சேவை எத்தகையது என்பதை உலகம் நன்கு உணர்ந்துள்ளது. மேலும், தற்போது பாகிஸ்தானில் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய முஷாரப்பின் பின் அமெரிக்காவின் கையிருப்பதையும் உலகமறியும்.

பர்மாவின் இயற்கை வளங்கள் மீது கண் வைத்து காய்நகர்த்தும் நாடுகள் ஒரு புறமும், பர்மிய மக்களுக்கு ஜனநாயக ஒளி பிறக்க வேண்டும் என்று விரும்புகிற நாடுகள் மறுபுறமும் என இருமுனைகளில் செயலாற்றுகின்றன.
தற்போது பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை இப்ராஹிம் கம்பாரியை தூதுவராக அனுப்பி வைத்து அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களிடமும், ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி-யிடமும் பேச்சுவார்த்தை களை நடத்தி வருகிறது. மறுபுறத்தில் அமெரிக்கா பர்மா மீது அழுத்தமான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டி வருகிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மிய உழைக்கும் மக்களை மேலும் பட்டினி போட்டு பணிய வைப்பது என்பதுதான். அல்லது சர்வாதிகாரி தான் ஷா இராணுவ அரசு அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதுவே அதன் உள்நோக்கம். அல்லது பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு பதிலாக தங்களது கைப் பாவையை கொண்டு வரவேண்டும் என்ற ஜார்புஷ் மற்றும் கண்டலிசா ரைசின் விருப்பம்.

மேலும், தென் கிழக்கு ஆசிய நாடான பர்மா புவி அரசியல் ரீதியாக மிகவும் கேந்திரமான பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக, சீனாவின் 2210 கிலோ மீட்டர் எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா, தாய்லாந்து உள்ளதால் அமெரிக்காவின் இராணுவப் பார்வை அங்கு விரியாமல் இருக்குமா? இந்திய – அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக சீனாவிற்கு எதிரான நிலையெடுத்து வருவதை இடதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி தன்னுடை எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது! பெட்ரோலிய வளத்திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா? ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய் வழி இயற்கை வாயுத் திட்டத்தை புதைகுழிக்கும் அனுப்பத் துடிக்கும் அமெரிக்காவின் சூட்சமம் இங்குதான் உள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் உதட்டளவிலான ஜனநாயக சேவை என்பது நிலைகுலைந்து வரும் தன்னுடைய டாலர் பொருளாதாரத் தோடு தொடர்புடையதே என்று அறுதியிட்டுக் கூறலாம்.

ஏகாதிபத்திய எடுபிடி எழுத்தாளர்கள் அமெரிக்காவை ஜனநாயக காவலராக சித்தரிப்பதோடு, சீனாவை ஜனநாயக எதிரியாகவும் காட்டி வருகின்றனர். சீன மற்றும் பர்மாவின் வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரியும். இந்த இரு நாடுகளுக்கும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நல்லுறவு இருந்து வருவதை காண முடியும். மேலும், பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948 ஜனவரியில் விடுதலைப் பெற்ற பர்மாதான் உலகிலேயே முதன் முதலில் சோசலிச சீனாவை ஆதரித்த கம்யூனிஸ்ட் அல்லாத முதல் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துக் கொண்டுள்ள சீனாவிற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முதலாளித்துவ எடுபிடிகள் தொடர்ந்து செய்து வருவது அமெரிக்க வழியிலான ஜனநாயகத்தை காப்பதற்கே தவிர பர்மாவின் நலனுக்காக அல்ல!

விடுதலைப் போரிலிருந்து இராணுவ ஆட்சியை நோக்கி…
பர்மாவை தனது காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திடமிருந்தும், ஜப்பானிய பாசிஸ்ட்டுகளிட மிருந்தும் அந்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளும், தேச பக்தர்களும் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 1948 இல் பர்மா சுதந்திர நாடாக மாறியது.
அந்நாட்டின் விடுதலைக்காக பாசிஸ்ட்டு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பல்வேறு தேச பக்த சக்திகளை ஒன்றிணைத்து களம் கண்டு போரிட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் ஆங் சான் மற்றும் அவரது சகாக்கள் 1947 இல் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஆங் சானோடு இணைந்து பணியாற்றிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.
விடுதலைப் பெற்ற பர்மாவின் முதல் பிரதமராக வரவேண்டிய ஆங் சானை ஒழித்துக் கட்டிய ஆளும் வர்க்கம் அந்நாட்டில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் போராளிகளையும், ஜனநாயக உரிமைகளுக்காக களம் கண்டவர்களையும் கருவறுப்பதற்கான தொடர் சதி வேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக யூ நூ தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொண்ட பர்மா இராணுவத் தளபதி நீ வின் 1962 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
ஜெனரல் நீ வின் தலைமையிலான இராணுவ சர்வாதிகார அரசு ‘பர்மா சோசலிஸ்ட் திட்ட கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஏற்படுத்தியதோடு ‘பர்மிய வழியிலான சோசலிசம்’ என அலங்காரமான பெயரில் பல கட்சி செயல்பாடுகளையும், சட்டமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை முடக்கியதோடு, சர்வதேச சமூகத்திடமிருந்தும் பர்மாவை துண்டித்துக் கொண்டு, அனைத்து தொழில்களையும் தேசவுடைமையாக்கிக் கொண்டு (இராணுவ உடைமையாக்கிக் கொண்டு) முன்னேறப்போவதாக கூறி, பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.பி.) சட்ட விரோதம் என தடை செய்து, அவர்களை வேட்டையாடவும் செய்ததோடு, பல கட்சி ஜனநாயக நடைமுறையை சவப்பெட்டிக்குள் தள்ளியது. மொத்தத்தில் ஆட்சிமன்றம், நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தது.

தொடர்ந்து இராணுவ வீரர்களின் படை பலத்தை அதிகரித்ததும், அவர்களுக்கு சலுகைகள் மேல் சலுகைகளை வாரி வழங்கியும் அடக்குமுறை – சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்து வந்தது. இதன் மூலம் அனைத்து வழியிலும் பர்மா சுதந்திர காற்றை சுவாசிப்பதிலிருந்து நிறுத்திக் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அம்மக்களை படுகுழியில் தள்ளியது. இராணுவ அதிகாரிகளின் கைகளில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்கள் முறையாகவும், திறமையாகவும் நிர்வகிக்காமல், ஊழலுக்கு இரையாகி முடங்கிப் போனது.

இந்நிலையில், மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது நீ வின் அரசு. அதாவது, பர்மா ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்த சேமிப்பு தொகை அனைத்தும் மொத்தமாக பறிபோனது. குறிப்பாக 1960 இல் 670 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 1989 இல் 200 டாலராக குறைந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் திகழ்ந்த பர்மா மோசமான ஆட்சியின் காரணமாக அந்நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. இதன் விளைவாக ஏற்பட்டதே 1988 எழுச்சி.

இந்த எழுச்சியை ஒடுக்குவதற்கு சக்தியற்ற நீ வின் பதவி விலகி அந்த இடத்தில் தனது கைப்பாவைகள் பலரை பதவியில் அமர்த்தினார். இருப்பினும் மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக 1989 இல் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆட்சியை கைப்பற்றியது. இந்தக் குழு பர்மாவில் அமைதியையும் – வளர்ச்சியையும் நிலை நாட்டப் போவதாக கூறிக் கொண்டு ‘அரசு அமைதி – மற்றும் வளர்ச்சிக் கவுன்சில்’ என்ற பெயரில் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் (ஜூன்டா) ஆட்சியாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய வடிவம் எடுத்தது. அதன் தற்போதைய சர்வாதிகாரிதான் ‘ஜெனரல் தான் ஷா’.

1988- 89களில் பர்மாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் வீறு கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஆங் சாங் சூ குயி-இன் தாயாரின் உடல் நிலை பாதிப்படைந்ததைக் கேள்வியுற்று சூ குயி தன்னுடைய கனவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பர்மாவிற்கு திரும்பினார். ஆங் சான் சூ குயி-யின் தந்தை ஆங் சான் பர்மிய மக்களின் அடையாளம். அந்த பாரம்பரியத்தில் வந்த ஆங் சான் சூ குயி-யை சந்திக்க மக்கள் சாரை சாரையாக வந்தனர். அத்தோடு நாட்டில் நிலவும் அடக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் தங்களது துன்ப துயரங்களை விளக்கியதோடு, அவருக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

பர்மாவின் அப்போதைய குழப்பமான அரசியல் நிலையும், போராட்ட சூழலும்தான் ஆங் சான் சூ குயி-யை களத்திற்கு இழுத்து வந்தது. உழைக்கும் மக்களோடும், போராடும் மாணவர்களோடும் கரம் கோர்த்த ஆங் சான் சூ குயி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனநாயகப் பாதையில் பர்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. அத்தோடு தனது ஆதரவாளர்களைக் கொண்டு என்.எல்.டி. – நேஷனல் லீக் பார் டெமாக்ரசி (ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். பல்வேறு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இரத்தக் கறை படிந்த 88
இதைத் தொடர்ந்து வீறு கொண்டு எழுந்த போராட்ட பேரலையை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட இராணுவ அரசு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி 1988 அன்று (8.8.1988) 3000க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கியது. ஜனநாயக ரீதியான அமைதி வழியிலான போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது இராணுவ சர்வாதிகார அரசு. இதில் 500க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும், தேச பக்தர்களும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆங் சான் சூகுயி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கூட அவரோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இரத்த வெறி பிடித்த இராணுவ ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர்.

இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டடியில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆங் சான் சூகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த முதல் பெண் ஆங் சான் சூ குயி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இன்னொரு நெல்சன் மண்டேலா என்று அழைக்கின்றனர். மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மின் கியோ நியாங் 1989 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிறைவாசம் இருந்தார். இளைஞராக சிறைக்குச் சென்றவர் முதுமையோடு வெளியே வந்த காட்சி இராணுவ ஆட்சியின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத்தான் ‘88 ஜெனரேஷன்’ என்றும் அழைக்கின்றனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாய் போனது. அவர்களுக்கு உதவுவதற்காக தாய்லாந்திலிருந்து பல உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது.

தற்போது நடைபெறும் ஜனநாயகத்திற்கான போராட்டத் திலும் மின் கியோ நியாங் ஈடுபட்டதால் மீண்டும் அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது இராணுவ அரசு.
கேலிக் கூத்தான ஜனநாயகம்!

1988ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான எழுச்சியைத் தொடர்ந்து 1990 மே மாதம் 27 ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது இராணுவ அரசு. இத்தேர்தலில் 93 கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஆங் சான் சூ குயி-இன் ‘என்.எல்.டி. – ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி’ மகத்தான வெற்றி பெற்றது. 485 இடங்களில் 392 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. மொத்த இடத்தில் இது 80 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்பாராத அளவில் இந்த வெற்றி அமைந்ததால், ஆங் சான் சூகுயி தலைமையில் ஜனநாயக அரசை அமைப்பதற்கு அனுமதிக்காமல், மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஆட்சியாளர்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்திற்கு எப்போதும் நேர் விரோதமானது.

சலகவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜெனரல் தான் ஷா தலைமையிலான ஆட்சியாளர்கள் பர்மாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டனர். இதனால் பர்மாவின் எண்ணை வளம், அரிசி உற்பத்தி, தேக்கு மர ஏற்றுமதி, வைரச் சுரங்கங்கள் என அனைத்து துறைகளிலும் தாராளமாக அந்நியர்கள் நுழைந்து கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டது.

கொள்ளை போகும் பர்மிய வளம்
அமெரிக்காவின் ‘ச்செர்வான்’ ஆயில் நிறுவனமும், பிரான்சின் ‘டோட்டல்’ நிறுவனமும், தாய்லாந்தின் ‘ஃபேம்’ நிறுவனமும் எண்ணை வளத்தை பங்கு போட்டு கொண்டன. மேலும் தாய்லாந்து வழியாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டு அந்நாட்டை மொத்தமாக சுரண்டி வருகின்றனர். பர்மாவிலிருந்து 25 சதவீதம் துணியை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் டாலர்களை கொண்டு இராணுவ அரசு தனது படை பலத்தை பெருக்கிக் கொள்வதையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது. தற்போது மியான்மர் – பர்மா இராணுவத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு நவீன ரக அயுதங்களையும் வாங்கி குவித்து வருகிறது.

இராணுவ ஆட்சியாளர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் அரசின் பட்ஜெட் – வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் மொத்த வருவாயில் 40 – 60 சதம் வரை இராணுவத்திற்கே செலவழிக்கப் படுகிறது. கல்விக்கும் – சுகாதாரத்திற்கும் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் இராணுவத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் வாரியிறைத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை துப்பாக்கி முனையில் தக்க வைத்துக் கொள்கிறது பர்மிய அரசு.
அந்நாட்டின் வேலையிண்மை தற்போது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், 10 சதவீதம் செல்வந்தர்களிடம் அந்நாட்டின் மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 32.4 சதம் செல்வம் குவிந்துள்ளது. அதேசமயம் 10 சதவீதம் உழைக்கும் மக்களிடம் வெறும் 2.8 சதவீதமே சென்றடைகிறது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகித்த பர்மா இன்றைக்கு ஓபியத்தை (போதைப் பொருள்) ஏற்றுமதி செய்து வருவதில் இருந்தே இராணுவ ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிலையை உணர முடியும். ஓபியம் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்க வழியிலான ஜனநாயகம் நடைபெறும் ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திரு. வால்கவ் ஹெவல் மற்றும் திரு. டெஸ்மண்ட் எம். டிட்டு என்ற இரு நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பர்மா குறித்து ஆய்ந்து ஐ.நா.விற்கு சமர்ப்பித்த அறிக்கையில் பல அதிர்ச்சிசூட்டும் தகவல்கள் வெளியா கியுள்ளது. குறிப்பாக, அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக தெரி வித்துள்ளனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 36 சதவீத பர்மிய குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரைகூட பள்ளி கல்வியை முடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பர்மா அகதிகளில் 5 இலட்சம் பேர் தாய்லாந்திலும், 15,000 பேர் பங்களாதேஷிலும், 60,000 பேர் இந்தியாவிலும், 25,000 பேர் மலேசியாவிலும் மேலும் 2,50,000 பேர் இசுலாமிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர சின்ஸ், கச்சின்ஸ், ஷான், கரன்ஸ் போன்ற சிறுபான்மை இன மக்களை அவர்களது வாழிடங்களி லிருந்து இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிறுபான்மை தேசிய இனத்தவரிடையே பகைமையை உருவாக்கி, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி வருவதோடு, பர்மியர்கள் என்ற தேசிய அடையாளத்தையும் அழித்து வருகின்றனர். மேலும், 2500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இராணுவ ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் ஊதாரித் தனத்தாலும், அந்நிய நிறுவனங்கள் பர்மாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்வதாலும் ஏற்பட்ட நெருக்கடியின் ஒரு பகுதியாகத்தான் தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும், அதையொட்டிய போராட்டமும் விண்ணை கீறிக் கொண்டு வந்துள்ளது.

துப்பாக்கி முனைகளை எதிர் கொள்ள அந்நாட்டின் புத்த துறவிகள் அமைதியான வழியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 88 ஆம் ஆண்டு அவர்கள் போராட்டக் காலத்தின் போது இராணுவ ஆட்சியாளர்களின் குடும்ப விழாக்களில் எதிலும் பங்கேற்கப்போவதில்லை என்றும், மேலும் பாரம்பரிய மத ரீதியான சடங்குகளைக் கூட நடத்த மாட்டோம் என்றும், அவர்கள் வழங்கும் எந்த கொடையையும் ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். அத்தகைய போராட்ட வழி முறைகளையும் தற்போது கையாண்டு வருகின்றனர்.

பர்மா கலாச்சார முறைப்படி அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் புத்த துறவியாக செயலாற்று வதற்கு ஒருவரை அனுப்பி வைப்பது வழக்கம். பர்மா இராணுவத் திற்கு நிகராக அமைப்பு ரீதியாக திரண்டுள்ளவர்கள் புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 லட்சம் புத்த துறவிகள் அந்நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர். பர்மாவில் நடைபெறும் ஜனநாயக போராட்டத் திற்கு உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பர்மாவிற் கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஏகாதிபத்திய சக்திகள் அந்நாட்டின் மீது கொண்டு வரும் எந்தவிதமான பொருளாதார தடைகளையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பர்மாவில் கைது செய்து பல வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள், புத்த துறவிகள் மற்றும் போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அந்நாட்டில் ஜனநாயக அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அத்தோடு, பர்மாவின் ஜனநாயகத்தை புதைகுழிக்கும் அனுப்பும் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பர்மாவின் அரசியல் சாசன சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று அங்குள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.

20ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டு பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா என பல்வேறு நாடுகளில் நிலவும் இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சி கூறியது போல், ‘சோசலிசத்திற்கான போராட்டத்தில் நொடிப் பொழுது கண்ணயர்ந்தால் கூட பாசிசம் எனும் கொடுந் தண்டனை நம்மை வந்து சேரும்’ என்ற உன்னதமான கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பர்மா விஷயத்தில் உணர முடிகிறது.
இறுதியா, இந்தியாவிலும் கூட பிற்போக்கு ஜனநாயக சக்திகள் சமீப ஆண்டுகாலமாக தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ‘இரு கட்சி ஆட்சி முறை’, ‘ஜனாதிபதி ஆட்சி முறை’, ‘நிலையான அரசு – ஐந்தாண்டுகளுக்கு நீடித்த ஆட்சி முறை’ போன்ற கோஷங்களை முன் வைப்பதை பார்க்கிறோம். இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் நலன்களை காப்பதற்காக அல்ல; மாறாக, ஏகாதிபத்திய – பெருமுதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தங்கு தடையற்ற சுரண்டலை பாதுகாப்பதற்கே. எனவே, இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உறுதியோடு செயலாற்ற வேண்டியுள்ளது.

இந்திய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறுவதுபோல், ‘ஜனநாயகம் வர்க்கப் போராட்டத்தின் களம்.’ எனவே அதனை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் முன்னிற்க வேண்டும். பர்மாவில் நடைபெறும் ஜனநாயகத்திற் கான போராட்டத்திற்கு நேசக்கரம் நீட்டுவோம்! வெற்றிபெற வாழ்த்துவோம்!!

ஆதாரம் :

1 பர்மாவின் ஜனநாயகப் போராளி, ஆங் சான் சுய் குய்,
என். ராமகிருஷ்ணன், சவுத் ஏசியன் புக்ஸ், 1992.
2 டெக்கான் க்ரானிக்கல்
3 பிரண்ட் லைன்
4 பீப்பிள்ஸ் டெமாக்ரசி
5 http://www.cpa.org.au
6 http://www.zmag.org
7 http://www.CrisisGroup.org

ஏகாதிபத்தியமா? பேரரசா?

பல நாடுகளில் மார்க்சீயவாதிகளிடையே இன்றைய ஏகாதிபத் தியத்தின் பன்முகத் தன்மைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

உலக உழைப்பாளி மக்களின் நலன்களுக்கு எதிரி, ஏகாதிபத்தியம். இதனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சோசலிச லட்சியம் கொண்டோர் அனைவருக்கும் பிரதான எதிரியாக ஏகாதிபத்தியம் விளங்குகிறது. அதன் உலகளாவிய ஆதிக்கத்தையும், பொருளாதார அதிகாரத்தையும் ஒழிப்பது தான் கம்யூனிஸ்ட் டுகளின் லட்சியம். சோசலிசத்தின் உதயமும், எகாதிபத்தியத்தின் அழிவும் ஒன்றாகவே நிகழக் கூடியது.

இந்த எதிரியின் பலம், பலகீனம், மாறி வரும் தன்மைகள், அதன் குணாதிசயங்கள் பற்றியெல்லாம் சிறந்த புரிதல் ஒவ்வொரு புரட்சியாளனுக்கும் தேவை. எனவே, இது பற்றி மார்க்சிய அறிவாளர்களிடையே நடைபெற்று வரும் விவாதங்களை கிரகித்து கொள்வது அவசியத் தேவை. இது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் உரமூட்டும்.

மீண்டும் பேரரசா?

இடதுசாரி எழுத்தாளர்கள் ஏகாதிபத்தியத்தை குறிப்பிடும் போது பேரரசு (Empire) என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.பேரரசு என்ற சொல் பழைய அரசர்களின் ஆட்சிகளை குறிப்பிடுவதாகத் தான் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். சோழர் பேரரசு, பாண்டிய பேரரசு, மௌரிய பேரரசு, ரோமானிய பேரரசு என்ற சொற்றொடர்கள் வரலாற்றில் மிகவும் பரிச்சயமானது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பற்றி எழுகிற பல மார்க்சீய இடதுசாரி எழுத்தாளர்கள் அமெரிக்காவையும் பேரரசு என்றே  குறிப்பிடுகின்றனர்.  மேற்கத்திய உலகில் வெறுப்பை உமிழும் சொல்லாக, இது பயன்படுத்தப்படுகிறது. பேரரசு எனும்போது – இழிவான செயல்களை செய்திடுகிற, ஜனநாயகத்திற்கு விரோதமான அரசு என்று எளிதாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். (ஆனால், தமிழகத்தில் பேரரசு என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அவ்வாறு அர்த்தம் வருவதில்லை. அரசாங்கத்தின் மேன்மையை செல்வாக் கைப் பற்றி பாராட்டுவதாக க் கூட பலர் நினைத்துக் கொள்ளக் கூடும். அரசு, ஜனநாயகம் போன்ற கருத்துகள் குறித்து ஆழமான விவாதம் தமிழகத்தில் நடைபெறாததால் இந்த பிரச்சனையை இங்கு நாம் எதிர் கொள்கிறோம்.)

பழங்கால அரசுகள் நாடுகளைப் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு போர் நடத்துவதுண்டு. அந்தக் காலம், ஜனநாயகம், நாகரீகம் பற்றிய அறிவோ, மனித மாண்புகளைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளோ, அறிவியலோ வளராத ஒரு காலம். அதனால் இப்படி போரில் ஈடுபடும் அரசர்களை மக்கள் கண்டிக்கவோ, எதிர்ப்பைக் காட்டவோ வாய்ப்பில்லாமல் இருந்தனர்.

ஆனால், சிந்தனையும், அறிவியலும், ஜனநாயகத்தின் மேன்மை பற்றிய புரிதலும் வளர்ந்துள்ள இந்த சூழலில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றுவது காட்டு மிராண்டித் தனம் அல்லவா? அதாவது பேரரசினை நிறுவி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த, நாகரிக அறிவு வளர்ச்சி பெறாதவர்களின் செயலுக்கு நிகரானது அல்லவா?

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா படையெடுத்து கைப்பற்றிய பிறகு தான், அமெரிக்காவை பேரரசு என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினர். நவீன ஜனநாயக காலத்துக்கு முந்தைய அறிவு படைத்தவர்கள் அமெரிக்க ஆட்சி யாளர்கள் என்ற புரிதலை ஏற்படுத்த இந்த ஒரு சொல் உதவுகிறது.

பழைய பேரரசுகள் – வேறுபாடுகள்

நேரடி படையெடுப்பு நடத்தும் காட்டுமிராண்டி காரியத்தை செய்வதில் அமெரிக்கா பழைய பேரரசுகளை ஒத்திருக்கிறது என்பது உண்மையே என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், பழைய நிலப்பிரப்புத்துவ பேரரசுகளுக்கும், இன்றைய எகாதிபத்திய, முதலாளித்துவ பேரரசுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. முதலாளித்துவத்தின் முக்கிய கட்டமாக காலனியாதிக்கம் இருந்தது. உதாரணமாக பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவை காலனி நாடாக வைத்திருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்கள், அதிகாரிகள், படைத் தளபதிகள் கொண்ட பிரிட்டிஷ் அரசு நம்மை நேரடியாக ஆட்சி செய்தது.

இது போன்று இன்றைய ஏகாதிபத்தியம் ஆட்சி செய்வதாக சொல்ல முடியாது. (ஈராக், ஆப்கானிஸ்தான் தவிர) மற்ற நாடுகளில், தனது படைகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தவில்லை.

காலனி ஆதிக்க நாட்களில் கடல் வாணிகம் செய்ய பல கடற்பாதைகளை முதலாளித்துவ அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதற்கென்று வலுவான படைகளையும் வைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கடற்பாதைகளை கைப்பற்ற ஏராளமான சண்டைகள் நடந்ததை வரலாற்றில் படிக்கின்றோம்.

ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. அமெரிக்காவே இதர ஏகாதிபத்திய நாடுகளோ அப்படி கடற் பாதைகளை ராணுவ வல்லமை கொண்ட தங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளதாக சொல்ல இயலாது.

எனினும், அமெரிக்காவிற்கு ராணுவ தளங்கள் உண்டு. ஏறத்தாழ 140 நாடுகளில் தற்போதும் ராணுவ தளங்களை அது வைத்துள்ளது. ஆனால் இந்த இடங்களில் வெளிப்படையாக உத்தரவுகள் போட்டு அந்தப்பகுதி நாடுகளை தனக்கு கீழ்ப்படிந்து செயல்படுமாறு அமெரிக்கா ஆணையிடுவதாக சொல்ல முடியாது.

உதாரணமாக, இந்தியப் பெருங்கடலில் டியகோ கார்சியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம் உள்ளது. அதை வைத்துக் கொண்டு, இந்திய ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்று உத்திரவுகளை அமெரிக்கா அறிவிப்பதில்லை. அதாவது வெளிப்படையான ஆதிக்கம் இல்லை.

காலனிய ஆட்சி காலங்களில் அதிகாரம் செலுத்துவதும், பொருளாதார சுரண்டலும், கொள்ளையும் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரிந்து நடந்தது. வரி, கப்பம் மூலமாகவும், இன்னும் பல வழிகளில் செல்வம், அடிமை நாடுகளிலிருந்து, காலனியாதிக்க எஜமானர்களுக்கு செல்வதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

இதற்கு முந்தைய சமுதாயமான நிலப்பிரபுத்துவத்தில் நிலப்பிரபு எப்படி விவசாயிகளின் உழைப்பையும், அவர்களது வருவாயையும் கொள்ளையடிக்கிறான் என்பது நன்றாக, வெளிப் படையாகத் தெரிந்தது. மாறாக, முதலாளித்துவத்தில் தொழிலா ளர்கள், வார வாடகையோ, கப்பமோ, வரிகளோ முதலாளிக்கு செலுத்துவதில்லை.

அதேபோல, காலனி ஆதிக்கக் காலத்திலும், ராணுவ வல்லமை மூலமாகவும், எண்ணற்ற படுகொலைகள் நிகழ்த்தியும் கூட உள்நாட்டு செல்வங்களை காலனி ஆதிக்க வாதிகள் அபகரித்தனர். இதுவும்  வெளிப்படையாகத் தெரிந்தது.

இது போன்று, ஏன் இன்றைய ஏகாதிபத்திய சுரண்டலும் ஆதிக்கமும் வெளிப்படையாக தெரிவதில்லை? இங்கு தான், மார்க்சின் உபரி மதிப்பு தத்துவம் புரிதலுக்கு உதவுகிறது. காரல் மார்க்ஸ், மூலதனம் எவ்வாறு உழைப்பைச் சுரண்டுகிறது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளார். தொழிலாளர் செலுத்தும் உழைப்பின் ஒரு பகுதி உழைப்பு கூலிக்காகவும், ஒரு பகுதி உபரி உழைப்பாக மூலதனப் பெருக்கத்திற்கு உதவுதையும் மார்க்ஸ் விளக்கியுள்ளார். பொருளாதார அடக்குமுறை கருவியாக சந்தை பயன்படுகிறது.

இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை விற்று கூலியைப் பெற்றால் மட்டுமே, தான் உயிர் வாழத் தேவையான பொருட்களை சந்தையில் அவரால் வாங்க முடியும். வாங்கிய பொருட்களை நுகர்ந்தால் தான், அவர் இழந்த உழைப்புச் சக்தியை மீண்டும் அவர் பெறுர். மீண்டும் அவர் உழைத்திட இயலும்.  ஆக, சந்தை தான் தொழிலாளியை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிட கட்டாயப்படுத்துகின்றது. இதனால், முதலாளியின் சுரண்டல் வெளியில் தெரிவதில்லை.

ஆனால், வெளியில் பார்ப்பதற்கு முதலாளிகள் – தொழிலாளி கள் உறவு சுதந்திரமாக செயல்படும் மனிதர்களுக்கு இடையேயான உறவு போன்று தோன்றிடும். மாறாக, நிலப்பிரப் புத்துவ காலத்தில் நிலப்பிரப்புக்கும் விவசாய அடிமைக்கும் உள்ள உறவு அடக்குமுறை உறவாக வெளிப்படையாகத் தெரியும்.

இன்றைய உலகமயச் சந்தை

இதே போன்ற நிலைதான், இன்றைய முதலாளித்துவ ஏகாதிபத்திய சூழலிலும் நிலவுகிறது. முன்பு, காலனித்துவ காலங்களில் பலவீனமான நாடுகளிலிருந்து சொத்துக்கள் பலமான நாடுகளுக்கு சென்றடைவது நன்கு வெளிப்படையாக தெரிந்தது. இன்று அவ்வாறு வெளிப்படையாக தெரிவதில்லை.

ஆனால், தற்போதும் ஏழை நாடுகளிலிருந்து செல்வங்கள் பணக்கார நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முந்தைய காலங்களை விட மிக அதிக அளவில் இது நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டை மிரட்டி பணிய வைத்து அடக்குமுறை செய்து இது நடப்பதில்லை. பிறகு எப்படி நடக்கிறது?

இங்கு தான் சந்தை சக்திகளின் பங்கு உள்ளது. எளிதில் புலப்படாத வகையில், சந்தையே இங்கு அடக்குமுறை கருவியாக செயல்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரியும். அதாவது, நாடுகள் சட்டப்படி செயல்படுகிற, பொருட்களை விற்பவர், வாங்குபர் களாக, கடன் கொடுப்பவர் பெறுபவர்களாக, சுதந்திர சுயாதிபத்திய நாடுகளாக இயங்குவது போன்று வெளியில் தெரியும். வரையறுக்கப் பட்ட சட்டங்களும் இருக்கும். ஆனால், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கரங்கள் உலகச் சந்தை, வணிகம் மூலமாக பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும். இதன் மூலம் ஏழை நாடுகளின் வளங்கள் செல்வங்கள் பணக்கார நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் கொண்ட அமைப்பு. இது போன்ற அமைப்புக் கள் மற்றும் வர்த்தகம் மூலமாக இந்தச் சுரண்டல் நடைபெறுகிறது.

பொருளாதாரம் அல்லாத அதிகார மையங்கள்

ஆக இது போன்ற பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் தற்போதைய சகாப்தத்தில் செயல்படுகின்றது. அதே நேரத்தில் பொருளாதார ளம் அல்லாத அதிகாரங்களும் இதில் முக்கிய பங்கு வசிக்கின்றன. அரசியல், ராணுவம், சட்டம் ஆகிய தளங்களிலும் இந்த சுரண்டல் அடக்குமுறை நிகழ்கிறது.

பொருளாதாரம் சார்ந்த அதிகாரம், முதலாளித்துவ ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு தூணாக விளங்குகிறது. ஆனால், முதலாளித்துவம் எப்போதுமே வன்முறை, படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் கைவிடுவதில்லை. இரண்டும் இணைந்து தான் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முதலாளித்துவம் தோன்றிய காலத்திலிருந்து அதன் முகத் தோற்றம் தொடர்ந்து மாறிவருகிறது. முகத் தோற்றங்கள் மாறினாலும், உழைப்பாளிகளின்  உழைப்பைச் சுரண்டுவதும், ஏழை நாடுகளைச் சுரண்டுவதும் அதன் உயிர் வாழ்தலுக்கு அடிப்படை யாக இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து மூலதன விரிவாக்கமும், விரிந்து பரந்த பொருளாதாரச் சுரண்டலும் கொண்ட அதன் முகத் தோற்றத்தை பல நிகழ்வுகளில் நாம் அறிய முடியும். ஆங்கில முதலாளித்துவம் அயர்லாந்தை ஆதிக்கம் செலுத்தியது. பிறகு அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. பிறகு வற்றாத சுரண்டலுக்கு தளமாக இந்தியாவை ஆதிக்கம் செலுத்தியது, – இவையெல்லாம் முதலாளித் துவம் பிரமாண்ட வளர்ச்சி காண உதவின.

முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து ஏகாதிபத்தியம் எனும் முகத் தோற்றத்தை 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது பெற்றது. (இந்த தோற்றத்தின் கூறுகளை புரிந்து கொள்ள லெனினது ஏகாதிபத்தியம் உதவுகிறது).

இதன் தொடர்ச்சி தான் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகமயம் என்ற இன்றைய முகத்தோற்றம். மேற்கண்ட நீண்ட வரலாற்றின் தொடர்ச்சி தான் இது.

இன்றைய நிலை – ஒரு வரையறை

முதலாளித்துவத்தின் இன்றைய நிலையைப் பற்றி எல்லன் மெய்க்கின்ஸ் வுட் அவர்களின் வரையறைதான் பொருத்தமாக இருக்கிறது. பலகேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், செயல் பாட்டுக்கு வழிகாட்டுவதாகவும் உள்ளது. எல்லன் இவ்வாறு வரையறுக்கிறார்.

 1. இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவம் என்பது நன்கு உலகமயமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரம்.
 2. இன்றைய உலக ஏகாதிபத்தியதை ஒரு சங்கிலித் தொடர் என்று வர்ணித்தால், அதன் பல கண்ணிகள் பிணைக்கப்பட்ட நிலையில் இருப்பது போன்று உள்நாட்டு அரசுகள்  விளங்குகின்றன. பல அரசுகள் சேர்ந்து (Multiple States) இந்த ஏகாதிபத்திய சங்கிலியை வலுவாக்கிடவும், பாதுகாத்து வளர்க்கவும் உதவுகின்றன.
 3. ஏகாதிபத்திய மூலதனம் தழைக்க பொருளாதாரம் அல்லாத தளங்களும், அதற்கு தேவைப்படுகிறது. குறிப்பாக ராணுவபலம் என்பது முக்கியத் தேவை. இந்த ராணுவ வல்லமை மிகவும் புதிய வழிகளில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. புதிய வடிவங்களில் போர்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு, இன்றைய முதலாளித்துவ முகத்தோற்றம் பற்றி புரிந்து கொள்ள முற்படும்போது பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதுபற்றிய விவாதங்களும், அதிகரிக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று.

உலகப் போராட்டமா? உள்ளூர் போராட்டமா?

இன்று பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்டுள்ளது. மூலதனம், குறிப்பாக நிதி மூலதனம், ஒரு நாட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை மாறி, உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வலம் வருகிறது. எங்கெல்லாம் அதிவேக லாபம் கிடைக்கிறது, அதிகமான சுரண்டல் கொள்ளைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் பல நேரங்களில் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் நிலை இருக்கிறது. அதாவது உள்நாட்டு அரசுகளின் (Nation State) சுயாதிபத்தியம் கேள்விக் குறியாக உள்ளது.

இதனால், தேசிய அரசுகளே இல்லை, அவையெல்லாம் பொம்மைகள்தான்; அவற்றை எதிர்த்துப் போராடி பயனில்லை. என்ற கருத்துக்களுக்கு சிலர் வந்து விடுகின்றனர். அவர்கள் மேலும் கூறுவது,  உலக மூலதனத்தையும், அதன் தலைமையாக உள்ள அமெரிக்காவையும் எதிர்த்த உலகந்தழுவிய போராட்டம் தான் சரியானதாக இருக்கும் என்கின்றனர். இதற்கு உலகந் தழுவிய அமைப்புகள் தான் தேவை – என்ற விவாதங்கள் எல்லாம் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், உண்மை நிலை என்ன, உலக மூலதன வருகைக்கும், அதன் சுரண்டலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் (Facilitator) அளிக்கும் வேலையை அந்தந்த தேச முதலாளித்துவ அரசுகள் செய்கின்றன. மூலதன ஆட்சியை நிலை நிறுத்த உள்நாட்டு ஆட்சியாளர்கள் பக்கபலமாக இருக்கின்றனர். எனவே உள்நாட்டு அரசுகளை எதிர்த்த போராட்டம் இல்லாமல், உலகந்தழுவிய போராட்ட அறை கூவல்கள் உழைப்பாளி வர்க்கத்திற்கு பலன் தராது. இரண்டும் இணைந்து நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலைபாட்டுக்கு வருவதற்கு எல்லன் அவர்களின் மேற்கண்ட வரையறை இன்றைய ஏகாதிபத்தியம் பற்றிய சரியான புரிதலைத் தருகிறது. எனவே, இன்றைய முதலாளித்துவத்தை உலக ஏகாதிபத்தியம் என்றும் அழைக்கலாம்; பேரரசு என்றும் அழைக்கலாம் – எப்படி பெயரிட்டாலும் அதன் இன்றைய தன்மைகள் குறித்த புரிதலில் தவறு ஏற்படக் கூடாது. மார்க்சீய வாதி எல்லன் அவர்கள் அளித்துள்ள வரையரை சரியான புரிதலுக்கு உதவுகிறது.

ஆதாரம்

எல்லன் மெய்க்சின்ஸ் எழுதிய The Empire of Capital (Left Word – பதிப்பகம்)