பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது.

மார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.

தோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.
இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.
இடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்டும். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.
இடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.

மார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.

கடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

  • ஆசிரியர் குழு

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

 

டாக்டர். விஜூ கிருஷ்ணன்
தேசிய இணை செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

இந்திய வேளாண்மை அமைப்பின் திட்டவட்டமானதொரு பகுப்பாய்வின் மையப்புள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால், நம்  கிராமப்புறத்தில் அதிகரித்து வரும் முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிப் போக்கேயாகும். இது பிராந்தியங்களுக்கேற்ப வேறுபடும் தன்மையோடும் சமநிலையற்றதொரு முதலாளித்துவ வளர்ச்சிப்போக்குடனும் காலப்போக்கில் அதிகரித்து  வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சுவடுகள்,  பழமைவாத  சமூக உருவாக்கம் ஆகியவையே சுரண்டலுக்கும் வழிவகுக்கின்றன.  நாட்டின் பெரும்பகுதியில் முழுமை பெறாத நிலச்சீர்திருத்தம் மேற்குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவச் சுவடுகள், நியாயத்திற்கு முரணான நிலவுடைமைச் சமூகம் ஆகியவை தொடர்வதற்கும் அதிமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

நவீன தாராளமய ஆட்சி தாக்கம்:
கால் நூற்றாண்டுகால நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் நாட்டை கடுமையான விவசாய நெருக்கடிக்கு இட்டுச்சென்றதோடு  முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏழை – பணக்காரச் சக்திகளுக்கு இடையிலான இடைவெளி நீண்டுள்ளதோடு சமத்துவமின்மை அதிகரித்தே வருகிறது. இத்தகைய சுரண்டல் அமைப்பின் பலன் என்பது மக்கள் மீதான கடும் பொருளாதாரச் சுமைகளை திணித்து, வருமானத்தை ஒடுக்கி வேலைவாய்ப்புகளை சுருக்கியதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இதுவே மக்களின் பஞ்சம், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் முழுமுதற்காரணமாகும்.

நிலக்குவியலும் விவசாய மற்றும் விவசாயம் சாராத இதர வருமானமும் இதன் மூலம் சொத்துகளும் பெருக்கமடைகிறன. முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சி முடுக்கி விடப்படுவதாலும், விரிவடைவதாலும் விவசாயிகளின் வறுமை அதிகரித்து நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள்  பாட்டாளி வர்க்கமாக உருமாறியுள்ளனர். பரந்துபட்ட புதிய பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயம் சார்ந்தோ அல்லது சாராத அத்துக்கூலி தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களே பெரும்பகுதி கிராமப்புற தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். கந்துவட்டிக்கடன் என்னும் சுருக்கு கயிற்றால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு, வறுமைக்குள்ளாகி இன்று சிறு, குறு நிலத்தை சொந்தமாக வைத்துள்ள விவசாயி, நாளை நிலமற்ற குத்தகை விவசாயியாகவோ விவசாயக்கூலி தொழிலாளியாகவோ மாறி, விரைவில்  பாதுகாப்பற்ற கிராமப்புற முறைசாராத் தொழிலாளியாகவோ அல்லது நகர்ப்புறத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளியாகவோ தள்ளப்படுவார். இக்காரணிதான் நமது வர்க்க வெகுஜன அமைப்புகளின் தேவையான, வெகுவாக ஒருங்கிணைக்கப்பட்ட, போராட்ட நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகளை நமக்கு உணர்த்துகிறது.

பணக்காரச் சக்திகளின் ஆதிக்கம்
ஊரக பணக்கார சக்திகளுக்கிடையேயான  கூட்டு-உறவுநிலை ஒருபுறமும் நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட வெகுஜன ஏழை விவசாயிகள் மறு புறமும் இருப்பது நாட்டின் பெரும்பகுதிகளில் நிலவும் கூர்மையான பிரிவினை வெளிப்படையாகவே தெரிவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளித்துவ விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெருவணிகர்கள் அடங்கிய ஊரக பணக்காரர்களுக்கிடையான நெருக்கமான கூட்டு-உறவுநிலைதான் கிராமப்புறங்களில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. இச்சக்திகளின் அடிப்படை அதிகாரம் என்னவெனில் நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ஆகும்.

இவர்களே கந்துவட்டிக்கு கடன் கொடுப்பது, தானிய அரவை செய்வது, பால்பண்ணை, வணிகம் செய்வது , உணவு தானியங்கள் மற்றும்  விதை, உரம், செயற்கை மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட  வேளாண் இடுபொருள்களில்  ஊகவணிகம் செய்வது, உற்பத்தித்துறை, வீட்டுமனைப் பிரிவு, கட்டுமானம், சினிமா தியேட்டர், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள், போக்குவரத்து, விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்குவிடுவது மற்றும் பெரும் பணம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெரிதும் வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக இவர்களின் செல்வாக்கும் தாக்கமும் கிராமப்புறத்தின் மூலை முடுக்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினரும் பல்வேறு வழிகளில் மேற்குறிப்பிட்ட ஊரக பணக்காரர்களிடம் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். ஒடுக்கும் வர்க்கத்தினருக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்தினருக்கும் இடையே, சுரண்டல்காரர்களுக்கும் சுரண்டலுக்குள்ளாபவர்களுக்குமிடையே பல்வேறு இணைப்புகள் தொடர்ந்து இங்கே நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற அளவிலான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் கிராமப்புற பணக்காரச் சக்திகளுக்கிடையேயான நெருக்கமான கூட்டு –உறவு நிலை ஆகியவற்றின் அளவு பிராந்தியங்களுக்கேற்ப கடுமையாகவோ அல்லது சற்று குறைவாகவோ மாறுபடக்கூடும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வு அறிக்கை

நவீன தாராளமய ஆட்சிக்காலத்தில் விவசாய வர்க்கத்தினர் மத்தியில் வேளாண்சார் உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு  அறிக்கையில் (பத்தி 3.21) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பெரும்பாலான கிராமப்பகுதிகளில்  நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் இடையே அதிகாரம்மிக்க நெருக்கமான கூட்டு-உறவு உயர்ந்துள்ளது. அவர்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஊரக வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் (இடதுசாரிகள் வலுவாகவுள்ள மாநிலங்கள் தவிர்த்து) ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி பூர்ஷ்வா (நிலப்பிரபுத்துவ –முதலாளித்துவ) அரசியல் கட்சிகளின் கிராம அளவிலான அனைத்து தலைமைப்பொறுப்புகளையும் தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இத்தகைய பிரிவினரால் மேற்கண்ட அமைப்புக்களில் இருந்து சுரண்டப்படும் உபரி கொள்ளை லாபமே கிராமப்புறங்களில் கந்து வட்டி, ஊகவணிக செயல்பாடு,  வீட்டுமனைப் பெருக்கம் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகளில் மூலதனமாக விதைக்கப்படுகிறது. கிராமப் பகுதியிலிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தினர் அங்கிருக்கும் ஏழைவர்க்கத்தினருக்கு எதிராக ஆதரவைத்திரட்டி வன்முறை மூலம் அச்சுறுத்துவதற்கு தங்கள் மேலாதிக்க வர்க்க–சாதியச் சேர்க்கை அடையாள உத்தியை கையாண்டு ஏழைவர்க்கத்தினரை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.

பழங்குடி சமூக ஒடுக்குமுறைக்கெதிராக

மேல்குறிப்பிட்ட கூட்டு உறவு நிலை ஏழைப்பகுதியினரை குறைந்த கூலி கொடுப்பது; குறைந்த விலை நிர்ணயம் செய்வது; அதிகமான வாடகை வசூலிப்பது; வட்டி வாங்குவது; குடிநீர் கட்டணம்; டிராக்டர்- பயிர் அறுவடை இயந்திரம் வாடகை; மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள், சேமிப்பு கிட்டங்கிகளுக்கு கட்டணம் போன்று பல்வேறு வகை சுரண்டல்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசு திட்டங்களின் சலுகைகளை பெரிய பணக்காரர்களே அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் வர்க்க போராட்ட, வேளாண் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சி என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சுரண்டல் சக்திகளுடன் இணைந்த ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்த போராட்டமாக அமையவேண்டும்.

இங்கே விவாதிக்கப்படும் கிராமப்புற பணக்காரக் கூட்டுக்காரர்களுக்கும் அப்பகுதி ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அடங்கிய ஏழைகளுக்கும் இடையேயான முரண்பாடு, அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா முதலாளித்துவ நடவடிக்கைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.  அனைத்து வகையான சுரண்டல் பிரச்சினைகளுக்கு எதிராக உறுதியோடு போராடாதவரை வலுவான ஒன்றுபட்ட இயக்கங்கள் சாத்தியமற்றதாக ஆகிவிடும். இத்தகைய ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்துப் போராட கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்து  பரந்துபட்ட ஒற்றுமையை கட்டமைக்க வேண்டியது மிகவும் தேவையான செயல்திட்டமாகும். இத்தகைய ஒற்றுமை, சமூக (சாதிய) ஒடுக்குமுறைக்கெதிராகவும் பழங்குடிகள் மீது தொடுக்கப்படும் சுரண்டலுக்கெதிராகவும் கட்டி எழுப்பியதாக அமைய வேண்டும். இந்த திரட்டல்கள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும் தன்மையோடு இருக்கும். அதேநேரத்தில் வளர்ச்சிப்போக்கின் முக்கிய நோக்கத்தில் மாற்றமிருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து, நுட்பமாக உத்திகளை உருவாக்கி, கோரிக்கை முழக்கங்கள், போராட்ட இயக்கங்களின் பாதைகளை அந்தந்த மாநிலங்கள் மாவட்ட நிலைமைகளின் தன்மைக்களுக்கேற்ப அலசி ஆராய்ந்து, திட்டவட்டமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

வழிகாட்டும் போராட்டங்கள்
கேரளம், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற சட்டக்கூலிக்கான கோரிக்கை இயக்க போராட்டங்கள் கிராமப்புற ஏழை வர்க்கத்தினை இங்கே விவாதித்த கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்து ஒன்றுதிரட்டுவதற்கு  வரலாற்று ரீதியாக உதவியது. கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்த போராட்டத்தில் ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையான சமூக, வர்க்க ஒடுக்குமுறை தாக்குதலுக்கு ஆளாயினர்.

தங்களது இன்னுயிரை செங்கொடி இயக்கத்திற்காகவும், விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் மிகப்பெரிய தியாகம் செய்த தஞ்சை- கீழ்வெண்மணி தியாகிகள் நம் போற்றுதலுக்குரிய  விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் (இவர்களில் பெரும்பான்மை தலித் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது) . குத்தகை வாடகை விவசாயிகள் மீது அளவுகடந்த வாடகை வசூல் சுரண்டலை எதிர்த்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற தெபாகா எழுச்சி (1946-47) , தெலுங்கானா போர் (1946-51) மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் நன்கு அறியப்பட்டவை. மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், இடதுசாரிகளின் புகழ்பெற்ற போராட்ட இயக்கங்களின் உத்வேகத்தின் விளைவாகவும் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த வகையில் போராட்ட இயக்கங்களின் தொடர் திட்டங்களை நாம் திட்டமிடவேண்டும். விவசாய தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மற்றும் நலிவுற்ற வெகுஜன வர்க்கத்தின் நலன்களை மையப்படுத்தி பாட்டாளி விவசாய வர்க்கத்தினை ஒன்றுதிரட்டி கட்டியமைத்து கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளின் சுரண்டலை எதிர்த்து கோரிக்கைகளை உருவாக்கி வலுவான  போராட்ட இயக்க முழக்கங்களை முழங்கிட வேண்டும்.

பிரத்தியேகமான கோரிக்கை முழக்கம்
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்லாமல், அவர்களால் எதிர்க்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் தெளிவான வரையறையுடன் நமது கோரிக்கைகள் வடித்தெடுக்கப்பட வேண்டும். ஏழை சிறு குறு / நடுத்தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி , கடன் வசதிகள், வேளாண் இடுபொருள்களுக்கான மானியங்களின் பயன்களை கிராமப்புற  பணக்காரக் கூட்டு சக்திகள் சுரண்டுவதைத் தடுக்கும் வகையில் கோரிக்கைகள் அமைய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தினருக்கென  போனஸ் வகையிலான கூடுதல் ஊக்கத்தொகை, தானிய சேமிப்பு வசதிகளில்  சலுகை மற்றும் போக்குவரத்து மானியங்கள் போன்ற சிறப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதுபோல் இவர்களுக்கான கடன்களில் மிகக் குறைந்த வட்டிமுறை, வட்டியில்லா அல்லது  பிரத்தியேகமான வட்டி மானியத்தை உறுதிப்படுத்தும் வகையில் போராட்ட கோரிக்கைகள் ஒன்றுபட்டு உயரும்பொழுது பலன்கள் கிடைக்க கிராமப்புறத்தில் சிறப்புகளம் காண்போம்.

தீவிரமடையும் கிராமப்புற பணக்காரக்கூட்டு சக்திகளுக்கும் ஏழை பாட்டாளிக்குமான முரண்பாடுகளின் மதிப்பீட்டில் நமது தலையீடுகளின் கள அனுபவங்கள் என்ன ?

ஆந்திரப்பிரதேசத்தில் குத்தகை விவசாயிகளை ஒன்றுதிரட்டி ‘ஆந்திரப்பிரதேச குத்தகை விவசாய சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் பணக்காரக் கூட்டுச்சக்திகளோடு நேரடியாக முரண்படக்கூடிய பிரச்சினைகளை கோரிக்கைகளாகக் கொண்டு போராடி வருகிறது.

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஏ.டபிள்யூ.யு) மற்றும் இதர இயக்கங்களின்  தலைமையில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தின் பலனாக உழவுத்தொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை குத்தகை விவசாயிகளுக்கு கடன் பெறும் தகுதி அட்டை வழங்குவதற்கு வழிவகுக்கும் விவசாய உற்பத்தியாளர் அங்கீகாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர் செலவினத்துக்கு அது நாள் வரை கந்து வட்டிக்கு கிராமப்புற பணக்கார கூட்டுச் சக்திகளிடம் சிக்கித்தவித்து வந்த நிலையிலிருந்து மேற்கண்ட போராட்டத்தினாலும் அதன் நிர்ப்பந்தத்தினாலும் இயற்றப்பட்ட சட்டத்தின் பயனால் சற்று மீண்டு எழுந்து வருவது பணக்காரக்கூட்டு சக்திகளுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நிலமற்ற மற்றும் ஏழை விவசாய குடும்பத்தினரிடமிருந்து நிலப்பிரபுக்கள் வாடகைக்கு வாடகை விடும் கொடுமை பொதுவான நடைமுறையாக உள்ளது.

வாடகை குறைப்பு கோரிக்கை, மானியங்கள் கிடைக்க வழிவகை செய்வது, போலியான இடுபொருள்கள் விற்பனை செய்வதோடு விவசாயிகளின் விளைபொருளுக்கு மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாய விரோத செயல்களில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்களை எதிர்த்த இயக்கம், கண்மூடித்தனமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் மற்றும் நிலத்தை விட்டு வெளியேறிய நிலப்பிரபுக்கள் தாங்கள் பயிர் செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டு வைப்பார்களேயொழிய காலம் காலமாக உழுதுவரும் நிலமற்ற ஏழை குத்தகை விவசாயிக்கு நிலத்தை குத்தகை வாடகைக்குக்கூட பயிரிட மறுக்கும் சூழலை எதிர்த்த பல்வேறு கோரிக்கை முழக்கங்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம் (அ.இ.வி.ச) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்துடன் (அ.இ.வி.தொ.ச) தலித் மற்றும் ஆதிவாசி சங்கங்கள் இணைந்த ஒன்றுபட்ட கூட்டுப்போராட்டத்தினை முன்னெடுக்கும் பொழுது அப்பகுதியில் பிரதான முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கும் என்பது திண்ணம்.

எழுச்சிகரமான ராஜஸ்தான், மகாராஷ்டிர விவசாயிகளின் கூட்டுப்போராட்டங்கள்…

சமீபத்திய ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டங்களில் கிராமப்புற பணக்கார விவசாயி கூட்டுச்சக்திகளின் வழக்கமான கோரிக்கைகளிலிருந்து நம் கட்டுரையின் முற்பகுதியில் முன்வைத்த ஏழை எளிய பாட்டாளி வர்க்க விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஓர் தெளிவான வரையறை கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற இதர தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் இதர பாட்டாளிகள் கொண்ட விரிவடைந்த ஒற்றுமையை கட்டுவதில் வெற்றியடைந்துள்ளது.

கர்நாடகம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (பரவலாக ரேகா இது என்று அழைக்கப்படுகிறது / 100 நாள் வேலைத்திட்டம் என  அழைக்கப்படுகிறது) தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். நமது அ.இ.வி.ச, அ.இ.வி.தொ.ச மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய மேடை (ஏ.ஏ.ஆர்.எம்) ஆகிய அமைப்புகளின் தலைமையில் ஒன்றிணைந்து, காண்ட்ராக்ட் ஒப்பந்தக்காரர்கள் கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளோடு சேர்ந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் உணவில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு ஒப்பான பெரிய இயந்திரங்களை பயன்படுத்துதல் என்ற போர்வையில் ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை உண்டு கொழுப்பது, தொழிலாளர்களின் கூலிப் பணத்தை கொள்ளையடிப்பது, ஜாப் கார்டு என்று அழைக்கப்படும் ரேகா அட்டையை கைப்பற்றி பிணையம் போன்று வைத்து கொண்டு கூலிப்பணத்தை தராமல் இருப்பது உள்ளிட்ட அநியாயங்களை எதிர்த்த போராட்டத்தின் மூலம் ஒன்று திரண்டுள்ளனர்.

இத்தகைய ஒன்றுபட்ட பரந்த மேடை சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கத்தினரை திரட்டுவதில் நல்ல பலனை ஈட்டியுள்ளது. அவர்கள் பரவலாக நடைபெறும் அரசு திட்டங்களின் ஊழலுக்கெதிராகவும், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டத்தின் பலன்களை கிடைக்க செய்யாமல் , கிராமப்புற பெரிய பணக்காரக்கூட்டுச்சக்திகள் அனுபவிக்கும் ஏற்பாடுகளை செய்யும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் அநீதியான செயல்பாடுகளுக்கு எதிராகவும் கடும் போராட்டக்குரலை எழுப்பினர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்த வர்க்க போராட்டங்கள்…

மற்றுமொரு போராட்டக்களம் என்பது கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை சுரண்டலுக்குள்ளாக்கும் பெரிய காண்டிராக்டர் மற்றும் இடைத்தரகர்களை எதிர்த்த போராட்டமாகும். அத்தகைய கிராமப்புற பாட்டாளி தொழிலாளி வர்க்கத்தினரை குறிப்பாக கட்டுமான தொழிலாளர்களை தொழிற்சங்கத்தின் அங்கத்தினராக மாற்றும் களச்செயல்பாட்டை சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியதன் விளைவாக தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர்.

இதேபோல் பீடி சுற்றும் தொழிலாளர்கள், தலை சுமைப்பணி தொழிலாளர்கள், ஊராட்சி தூய்மைப்பணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்கள் (ஆஷா ஊழியர்கள்) போன்றோர்கள் தான் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பிரமாண்டமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள். இத்தகைய சங்கங்கள் தங்களுடைய போராட்டங்களில் மட்டும் நின்றுவிடாமல் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத.

நவீன தாராளமய மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான பூமி அதிகார அந்தோலன் இயக்கம்

குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீதான ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டும்போது சில சமீபத்திய அனுபவங்கள் கசப்பான ருசிகரம். பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழு கூட்டமைப்புடனான இயக்கத்தில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் வெறும் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைக்கு எதிராக திரள்வது  மட்டுமின்றி நில உரிமைக்கான போராட்டமாக அதனை மாற்றி முன்னெடுக்க வேண்டும் என்று அ.இ.வி.ச மற்றும் அ.இ.வி.தொ.ச முன்வைத்தபோது கிராமப்புற பணக்கார கூட்டுச்சக்திகளுக்கு விசுவாசமான சில அமைப்புகள் வெளியேறிவிட்டன.

கடன் தள்ளுபடி மற்றும் கட்டுப்படியான விலை நிர்ணயம் என்ற இரு பிரதானமான கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2017 ல் துவக்கப்பட்ட அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இந்தியா முழுவதும் உள்ள 187 சங்கங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பரந்துபட்ட விரிவடைந்த மேடையாகும். பணக்கார விவசாயக்கூட்டுச்சக்திகள் மட்டுமே பலன்பெறும் வகையில் வழக்கமான கடன் தள்ளுபடி திட்டம் போல் அமைந்து விடாமல் ஏழை எளிய விவசாயிகள் நேரடியாக பலன்பெறுகின்ற வகையில் நாம் முன்னர் விவாதித்த கடன் தள்ளுபடி திட்டம் குறித்த வரையறைகளுடன் கோரிக்கை வைக்க வேண்டும் எனும் முழக்கத்திற்கு இதில் உள்ள சில அமைப்புகள் உடன்பட மறுக்கும் சிக்கல் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ,தமிழகம் மற்றும் இன்னபிற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் ருசிகரமோ மிகவும் வினோதமானது. நாம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை எதிர்த்து கிராமப்புற பணக்காரக் கூட்டுச்சக்திகளின் நலனை பாதுகாக்க நினைக்கும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாட்டாளி வர்க்க விவசாயிகளின் நலன்களுக்கெதிராக சவால் விடுக்கிறது.

பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழுவானது மக்கள் விரோத நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வண்ணம் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்ட நிலைப்பாட்டில் தெளிவான முடிவெடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய இரண்டு முக்கிய போராட்ட குணாம்சம் 187 சங்கங்கள் அடங்கிய அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் வேலைத்திட்டத்தில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைக்கெதிராக
தீண்டாமைக் கொடுமை, நில உரிமை, கல்வி உரிமை , பொது சுகாதாரம், அடிப்படையாக குடியிருக்கும் வீடு போன்றவை மறுக்கப்படுவது, பலிகடாவாக்கப்பட்ட சமூகக் குழுக்களின் மனிதர்களை அவர்கள் தொழிலாளியாக வேலைசெய்யும் பகுதியில் தொழிலாளர்களுக்குள் சமூகப் பிளவை ஏற்படுத்துவது, அவர்களை ஒதுக்குப்புறத்தில் தனிமைப்படுத்தி தங்கவைப்பது போன்ற சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக இழப்புக்கும் எதிரான போராட்டங்கள் சில மாநிலங்களில் நடந்தாலும் இன்னும் கூர்மையான அதிக அளவிலான இயக்கங்கள் கட்டாய தேவையாகும்.

எங்கெல்லாம் மேற்கண்ட திட்டம் திறம்பட நடந்தேறுமோ அங்கெல்லாம் சமூக ஒடுக்குமுறைக்குள்ளான பகுதியினர் வர்க்கப்போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அனைத்து வர்க்கமும் ஒன்று சேரவும் தயக்கமின்றி அனைவரும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடவும் இயலும்.

பீகார் , கர்நாடகா நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு வெற்றி போராட்டங்களும்
பீகார் மாநிலத்தில் உபரி நிலத்தினை அனுபவித்து வரும் நிலமற்ற ஏழைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்திலும், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கிராமப்புற பெரும்பணக்காரக் கூட்டுச்சக்திகளுக்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையை கட்டியதன்  பலனாக நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு போராட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளோம்.

பெரும்பணக்கார கூட்டுச்சக்திகள் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் நலன்களுக்காகவே அரசு மற்றும் இதர அனைத்து வகையிலான பலன்களை ருசிபார்த்து வரும் மாநிலங்களில் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவது என்பது மிக முக்கியமான பிரச்சினையை சரிசெய்யும் பணியாகும்.

கேரளம், திரிபுராவில் நாம் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்ததன் விளைவாக இன்ன பிற மாநிலங்களும் இதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. கர்நாடகாவின் பெல்தங்காடி கூட்டுறவுச்சங்கத்தின் மூலம் குறைந்த / நியாயமான வாடகை விலையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டதால், பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளிடம் அளவுக்கதிகமான வாடகையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தன்டேவாடா அடுத்த மாவோயிஸ்ட்களின் கோட்டையான நபராங்பூர் மாவட்டத்தில் ஆதிவாசிகளை திரட்டி ஐயாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை உரிமைப்போராட்டத்தில் பெற்று தற்பொழுது ஆதிவாசிகள் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு மக்காச்சோளம் தான் பிரதானமான பயிர்.

மத்திய பாஜக – நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் அளித்த விவசாய விளைபொருள் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம்   வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்படியாகாத குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட தர மறுக்கிறார்கள் வர்த்தகர்கள்.

விளைபொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்  செய்யும் கட்டமைப்பு முறைகள் பெரும்பணக்காரக்கூட்டுச்சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நாம் உழவர் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி மேற்கண்ட பிரச்சினைகளின் சாத்தியக்கூறுகளை கள ஆய்வு செய்து தீர்வு காணும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பரந்த ஒற்றுமையை கட்டியதன் பயனாக மக்கள் தற்பொழுது நெருக்கமாக ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த பள்ளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி,  நன்கு கற்றறிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டமைத்து பொது சுகாதாரம் பேணி காப்பது போன்ற மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இறுதியாக..

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, அவர்கள் அனைவரையும் ஒன்றுத்திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த  தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.

தமிழில்: சமூகநேசன் எழில்ராஜூ

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

இடது ஜனநாயக மாற்றினை நோக்கி முன்னேறுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகுத்துக்கொண்ட நடைமுறை உத்தியாக அமையப்பெற்ற அறைகூவலாகும். இதற்காக நமது கட்சி, அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வலுவான இடது ஜனநாயக அணியினை கட்ட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்கு (bourgeois-landlord order) உண்மையான மாற்றாக இந்த அணி இருக்கும் என்று கட்சி கருதுகிறது.

திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவுகள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த இடது ஜனநாயக மாற்றுக்கு உள்ள பொருத்தப்பாடு என்ன?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குத் திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கியதாகும்.  இதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினால் சுரண்டப்படும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கவேண்டும் என்கிறது கட்சியின் திட்ட ஆவணம். தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயக்கூலிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரே அந்த சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினர் ஆவர்.

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அப்படிப்பட்ட இடைக்கால முழக்கமாகும்.  அது முதலில் 10வது கட்சிக்  காங்கிரஸ் ஜலந்தரில் 1978 ஆம் ஆண்டு நடந்தபோது உருவாக்கப்பட்டது. 10வது கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் கருதுகோளைக் குறித்து பின்வருமாறு விளக்குகிறது;-

”இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் என்பது வர்க்க சக்திகளுக்கிடையேயான சமன்பாட்டில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  அதே போல, இரண்டு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போதுள்ள அமைப்பு முறையின் சட்டகத்திற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கும் நிலையினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் அது.  அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டுவதன் மூலம் இந்த முன்னணியின் முன்னேற்றத்தினை நோக்கி நகர முடியும்.  அவ்வாறு நகரும்போது, கட்சி இந்த சக்திகளை  அணி திரட்டத் தொடங்குவதன் காரணமாக, எதிர்காலத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக அணியினை நாம் கட்ட முனையும்போது இந்த சக்திகள் அந்த அணியில் பங்கேற்க முடியும்.  இடது ஜனநாயக அணியினை வெறும் தேர்தலுக்கான அணியாகவோ அல்லது அமைச்சரவைக்கான முன்னணியாகவோ புரிந்து கொள்ளக்கூடாது.  மாறாக, பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் உடனடி முன்னேற்றத்திற்குமான போர்ப்படையாக இதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

இதன் தொடர்ச்சியாக, மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள்தான் இடது மற்றும் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளோம்.  இருந்தபோதும், இதில் உள்ள ஒரே வேறுபாடு தலைமை குறித்தானது.  மக்கள் ஜனநாயக முன்னணிக்கான தலைமை தொழிலாளி வர்க்கமாக  இருக்க வேண்டும் என்ற அவசிய தேவை இடது ஜனநாயக அணிக்கான அவசியத்தேவையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  10வது கட்சிக் காங்கிரசில் இருந்து இந்தக் காலம் முழுவதும் இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்திக்கான அறைகூவலை விடுத்துவந்த போதிலும், ஒவ்வொரு கட்சி காங்கிரசிலும், இந்த இடைக்கால முழக்கத்தின் நோக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும்  எட்ட முடியவில்லை.

மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மட்டுமே இந்த அரசியல் மற்றும் வர்க்க சக்திகளை கொண்ட முன்னணிகளையும் கூட்டணிகளையும் நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.  உதாரணமாக, மேற்குவங்கத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் பல்வேறு வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாக இடது முன்னணி கட்டப்பட்டுள்ளது.  ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்பது நமது நோக்கத்தின் ஒரு பகுதி வெற்றிதான்.  இது அகில இந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை:

ஏப்ரல் 2015ம் ஆண்டில் நடந்த 21வது கட்சி காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வந்துள்ள அரசியல் நடைமுறை உத்தி குறித்த மிக ஆழமான பரிசீலனையை நடத்தியது.  ஏன் நம்மால் இடது ஜனநாயக மாற்றினை கட்ட முடியவில்லை என்பதை பற்றித் தெரிந்து கொள்ள விமர்சனப் பூர்வமான ஆழ்ந்த பரிசீலனை தேவைப்பட்டது.

இந்த ஆழ்ந்த பரிசீலனையின்போது இக்காலக்கட்டத்தில் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவைத் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில் கட்சியின் சொந்த பலம் குறைந்துள்ளது.  காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே உடனடிநோக்கமாக இருந்ததன் காரணமாக  அதற்குப் பொருத்தமான தந்திரங்களை உருவாக்குவற்கே முதன்மை கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் நோக்கில் கவனம் குவித்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களைக் கட்டமைத்து வளர்ப்பதற்கன முக்கியத்துவம், அவசியமான அளவுக்கு தரப்படவில்லை.

21 வது மாநாட்டின் விவரிப்பு:

எனவே, கட்சிக் காங்கிரஸ் இந்த பலவீனத்தைக் களைவது என்ற முடிவிற்கு வந்தது.  அந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் இடது ஜனநாயகஅணியினை கட்டுவதற்கு மீண்டும் முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  இதற்காக கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.  இதற்கு நவீன தாராளமயத்தின் தாக்கத்தின் காரணமாக சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு தீர்க்கமான ஆய்வினை நடத்த வேண்டுமென்றும், அந்த ஆய்வின் அடிப்படையில் நமது நடைமுறை உத்திக்கேற்ற முழக்கங்களை  உருவாக்க வேண்டும் என்றும், வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

21வது கட்சி காங்கிரசும், 10வது கட்சிக் காங்கிரஸ் விவரித்தது போலவே, இடது ஜனநாயக அணியை ஒரு தேர்தல் கூட்டணியாகப் பார்க்கக்கூடாது என்றும்,  அது வெறுமனே அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல என்றும், மாறாக, பல்வேறு வர்க்க மற்றும் மக்கள் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டணியாகும் என்றும் விவரித்தது.

21வது கட்சி காங்கிரசின் விளக்கம் பின்வருமாறு:-

”இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் இடது அறிவுஜீவிகள், பல்வேறு கட்சிகளில் பரவிக் கிடக்கும்  சமூகவியலாளர்கள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் உள்ள ஜனநாயகப் பிரிவினர், ஆதிவாசி, தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடும் சமூக இயக்கங்கள் போன்றவை இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டும்.  இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையின் கீழ், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான, ஒரு தனித்துவமான, பொதுத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இடது ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கான திட்டவட்டமான வடிவத்தை நாம் பெறமுடியும்”.

மாநிலங்களுக்கான திட்டம்:

இந்தப் புரிதலின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு இடது ஜனநாயகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளடங்கியிருக்கும்.  இந்தத்திட்டத்தின் கீழ் எந்தெந்த மக்கள் சக்திகள் இடது ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமோ அந்தப் பிரிவினர் அனைவரும் அணி திரட்டப்பட வேண்டும்.  இந்த கூட்டுமேடையிலிருந்து பல்வேறு கட்சிகள், வர்க்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் திசைவழியுடன் கூடிய திட்டவட்டமான இடது ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி உருவாக்கப்படும்போது, அந்த முன்னணியினால் பிற முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் முற்றிலும் வேறான அரசியல் – தத்துவப் பார்வையினை கொண்டு செயல்படமுடியும்.

தமிழகத்தில் இடதுஜனநாயக திட்டம்:
தமிழ் நாட்டில், 21வது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகு இடது ஜனநாயக திட்டத்தினை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பல்வேறு இடதுசாரி கட்சிகளின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒரு பொது மேடையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தவும், இயக்கங்களை நடத்தவும் அணிதிரட்டப்பட்டன.  இது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதோடு கூட, முக்கிய திராவிட கட்சிகள் மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பார்வையிலிருந்து தனித்துவமான தத்துவார்த்தப் பார்வையுடன் கூடிய  ஒரு அரசியல் கொள்கை திட்டம் இந்த கூட்டு மேடையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் முன்னேற்றத்திற்கான, மற்றும் இந்த சமூகத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் கடிவாளமிடக்கூடியதுமான ஒரு மாற்றுக்கொள்கைச் சட்டகம் அங்கு உருவாக்கப்படவேண்டும்.

கருத்தியல் போராட்டம்:

இந்தத் திசைவழியில் எடுக்க வேண்டிய மற்றொரு நடவடிக்கை திராவிடக் கருத்தியலுக்கும், இயக்கங்களுக்கும் இசைவான ஒரு இடதுசாரி கருத்தியல் பார்வை உருவாக்கப்பட வேண்டும்.  இந்த இடதுசாரிக் கருத்தியல், திராவிடக் கருத்தியலுடனும் இயக்கங்களுடனும் விமர்சனப்பூர்வ தலையிடல் மேற்கொண்டு அதன் பாரம்பரியத்தில் அமைந்த நேர்மறை அம்சங்களை இணைத்துக் கொள்வதாகவும், எதிர்மறை அம்சங்களைக் கழித்துக்கட்டுவதாகவும் அமைந்து, அதன் போதாமைகளை மிஞ்சுவதாக அமையவேண்டும். மேலும் குறிப்பாக புதிய தாராளவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கேடுவிளைவிக்கும் கருத்தியல் தலையீட்டையும், சீர்குலைவையும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இந்த இடது ஜனநாயகத் திட்டம் என்பது மக்களை பிரித்தாளும் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஒரு தெளிவான திசைவழியினை காட்ட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் இடது ஜனநாயக அணி குறித்தும் அதனுடைய மாற்று குறித்தும் அதன் அடிப்படைக் கரு குறித்தும் தெளிவாக விளக்கி அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  இதனை தேர்தல் கூட்டணிகளுடனோ அல்லது தேர்தல் உடன்பாட்டுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாக அவர்களுக்குப் புரியச் செய்யப்பட வேண்டும்.  இடது ஜனநாயக அணியினை கட்டுவது என்பதனை நமது பிரதானமான நோக்கமாக தக்க வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளலாம். கட்சியின் நலன்களை நோக்கி முன்னேறுவதன் அவசர அவசியத்திற்கும், இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதன் உடனடி அவசர அவசியத்திற்கும் நன்றாகப் பொருந்தும்படி இந்த தேர்தல் உத்திகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

  • தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு

. வாசுகி

கொள்கை குறித்த கேள்வியையே நையாண்டி செய்வோர், எதிரும் புதிருமான அத்தனை தத்துவங்களையும் வரிசைப்படுத்தி, இதுதான் எங்கள் கட்சியின் இசம் என்று சொல்வோர்,

இதுவரை கொள்கை குறித்து எவ்வித முன்மொழிவும் இன்றியே ஆட்சிக்கு வந்து விட்டோர்,

சுரண்டும் வர்க்கத்துக்குத் துணை போகும் கொள்கைகளை, தேன் தடவிய சொல்லாடல்களால் மறைப்போர்

எனப் பலரையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய மக்கள் விடுதலைக்காக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற மும்முனைகள் கொண்ட மக்கள் ஜனநாயக புரட்சி செய்வதை இலக்காக வைத்து, அதற்கான திட்டத்தையும் மக்கள் முன் வைத்திருக்கிறது. புரட்சியின் படையாக மக்கள் ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இதை அடைய, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால நோக்கமாகவும் முன்வைக்கிறது. இந்த இதழின் மற்ற கட்டுரைகளில், இடது ஜனநாயக அணி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இது வர்க்கங்களால் கட்டமைக்கப்படும் அணி என்று கூறும் அதே சமயத்தில்,  ஒடுக்கப்படும் சமூக பிரிவினர் இதில் இடம் பெறும் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக திட்டம் பேசுகிறது.

இந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.

சாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் என்ற மூன்றுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டம், சுரண்டலை எதிர்த்த வர்க்க போராட்டத்தின் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. ஒரு சமூகப் பகுதி என்ற முறையில் தலித், பழங்குடியின மக்கள், மத வழி சிறுபான்மையினர்,  பெண்கள் ஆகியோர் பிரத்தியேக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் பெண்ணாக, தலித்தாக/பழங்குடியினராக, தொழிலாளி/விவசாயியாக இருந்தால் பாலினம், சாதியம், வர்க்கம் என்கிற மூன்று அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிறார். இசுலாமியராக, கிறித்துவராக இருந்தால் இந்துத்துவ அடக்குமுறைக்கு உள்ளாகிறார்.  இத்தகைய சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுக்காமல், வர்க்க ஒற்றுமையையும் கட்ட முடியாது.

சமூக ஒடுக்குமுறையும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளும்:

முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகள், கவனமாக, சமூக ஒடுக்குமுறையை அரசியல் படுத்தி, வாக்கு வங்கியாக மாற்றுகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே பிரச்னைகளில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. உடுமலை சங்கர் படுகொலையில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது குறித்து அதிமுக உள்ளிட்ட பல மாநில முதலாளித்துவ கட்சிகள் கருத்து கூற விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அச்செய்தியை முரசொலியில் வெளியிடவில்லை என்பதும்,  எங்கள் கட்சி உறுப்பினர்களில் 70% இந்துக்கள் என்று ஒரு கட்டத்தில் கூறியதும்  இதற்கு ஒரு சான்று.

அதேபோல், சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த ஓர் இடத்தில் கூட, மோடி  முதல்வராக இருந்தபோது  இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தைப் பேசவில்லை. அதன் பொது செயலாளர் ராகுல் காந்தி, நான் ஒரு பிராமணன், சிவ பக்தன் என்று பேசியதும் தற்செயலானதல்ல. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரால் இசுலாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில், ஒரு கண்டன அறிக்கை கொடுப்பதற்குக் கூட  காங்கிரஸ் முன்வரவில்லை.

ராம நவமி போன்ற விழாக்களை, மேற்கு வங்கத்தில், பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் நடத்தியது. ஒரு சில இடங்களில் விழா மேடையில் இரு கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் இடம் பெற்றனர்.  அதாவது, இங்கு, சமூக பிரச்னைகளில் தன் கொள்கையை சொன்னால் பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகள் வராது என்று மதிப்பீடு செய்து, பாஜக நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பாஜகவோ, சாதிய படிநிலையை நியாயப்படுத்திக் கொண்டே, இந்து என்கிற பெயரில் தலித்துகளை  அணி திரட்ட முயற்சிக்கிறது. சில இடங்களில் இசுலாமியர்களுக்கு எதிர் நிலையில் அவர்களை நிறுத்தியதும் நடந்திருக்கிறது.  கர் வாபசி என்ற அவர்கள் முழக்கத்தின் போது, முற்போக்காளர்கள் கேட்டனர், மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பிறகு, அவர்களை எந்த சாதியில் வைப்பீர்கள்,  அவரவர் ஏற்கனவே இருந்த சாதிய படிநிலையில் தானே? என்று.  வர்ணாசிரம தர்மம் உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளான தலித், பழங்குடியின மக்கள், பெண்களை சமூக ஏணிப்படியின் கீழ் படியில்தான் வைத்திருக்கிறது. எனவே, இந்துத்துவத்தின்  உள்ளடக்கத்தில் சாதி வெறியும், ஆணாதிக்கமும் உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விடக்கூடாது.

இந்திய முதலாளித்துவம் சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதாவது சமூக ஒடுக்குமுறை, குறிப்பாக சாதிய, பாலின ரீதியான ஒடுக்குமுறை, மலிவு உழைப்பை உறுதி செய்கிறது.  முதலாளித்துவத்தின் அடித்தளமான உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் ஏற்பாடே இது. ஏகாதிபத்தியத்தின் தற்கால முகத்தோற்றமான நவீன தாராளமயம் இச்சுரண்டலைத் தீவிரமாக்குகிறது. திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும் கூட அவர்கள் வர்க்க நலனிலிருந்து நவீன தாராளமய ஆதரவாளர்களாக, அவற்றை நிறைவேற்றுபவர்களாக மாறியுள்ளனர். சமூக நீதி என்ற திராவிட கருத்தியலின் முக்கிய கூறு, இக்கட்சிகளின் குணாம்சம் மாறுபட்டுள்ள சூழலில், நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் குரல் ஏட்டளவிலேயே நிற்பதைக் காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு:

மார்க்சிஸ்ட் கட்சி சமூக ஒடுக்குமுறை தொடர்வதற்குக் காரணமாக உள்ள பொருளியல் தளத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேலை, நிலம், கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. தீண்டாமை பிரச்னையை ஜனநாயக பிரச்னையாகப் பார்த்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மட்டுமல்ல; ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது.

அனைத்தையும் சாதி அமைப்புகள் என்று   வகைப்படுத்துவது தவறு  எனவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்று போராடும் தலித், பழங்குடியின அமைப்புகளின் செயல்பாட்டில், நிகழ்ச்சி நிரலில் விடுதலைக்கான வேட்கையும், ஜனநாயக உள்ளடக்கமும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. சில தலித் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய வரம்புக்குள் நிறுத்துகிற அடையாள அரசியலைப் பின்பற்றுகின்றன. இத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து,  மேற்கூறிய ஜனநாயக உள்ளடக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

வர்க்க போராட்டம் வலுப்பெற வேண்டுமானால், கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் தலித் பழங்குடியின பகுதியினர் அதில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீதான பொருளாதார சுரண்டலுடன், அவர்கள் சந்திக்கும் பிரத்தியேக சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படுவதற்கான போராட்டத்தையும் சேர்த்துக் கையில் எடுக்க வேண்டும். அதே போல்தான், பாகுபாடுகளுக்கு எதிரான பெண்கள் இயக்கங்களின் போராட்டம், ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதி. சமத்துவத்துக்கான அவர்களின் குரல் சமூக விடுதலைக்கான குரல். எனவே மேற்கூறிய சமூகப்பகுதியினர், ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க முதல் கட்டமாகத் தேவைப்படும்  இடது ஜனநாயக அணியின் பிரிக்க முடியாத பகுதியினராக இடம் பெறுவர்.

மேலும், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், சாதியிலும், பொருளாதாரத்திலும், வளங்களின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்களாக செயல்படுவதையும், மாநில முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதையும், வாக்குகளுக்காகவும், நிதிக்காகவும் இவர்களை சார்ந்து இருப்பதையும், கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல் வலை இந்தக் கொள்ளை கூட்டணியால் பின்னப்படுவதையும்  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும், ஸ்தாபன சிறப்பு மாநாட்டு ஆவணமும் சுட்டிக்காட்டுகின்றன.  கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய முரண்பாடுகளை முன்னிறுத்திப் போராடாமல் இடதுசாரி இயக்கத்தை வளர்த்துவிட முடியாது. இத்தகைய போராட்டத்திலும், அடிப்படை வர்க்கங்களுடன், தலித், பழங்குடியினத்தவர், பெண்கள் இணைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மத வழி சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் போராட்டமாகும் என உறுதிபடக் கருதுகிறது. ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில் இடது முன்னணி மேடையில் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஊனமுற்றோர், இச்சமூகத்தில் பிரத்தியேக பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களும், இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகளே.

21வது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இடது ஜனநாயக திட்டம்:

தலித்:

சாதி ஒழிப்பு, அனைத்து வித சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு, தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிப்போருக்குக் கடும் தண்டனை,  காலி பணியிடங்களை நிரப்புதல்,  தலித் கிறித்துவர்களையும் தலித் என வகைப்படுத்துவது,  தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

பழங்குடியினத்தவர்:

பழங்குடியின மக்களின் நில உரிமையைப் பாதுகாப்பது; அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது;  வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது; சிறு வன பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பது; பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது.

சிறுபான்மை மக்கள்:

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது; கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் இசுலாமியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.

பெண்கள்:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வித வன்முறைகளையும் தடுக்க, நிறுத்த, குற்றவாளிகளைத் தண்டிக்க கறாரான நடவடிக்கைகள்; சம வேலைக்கு சம ஊதியம்.

ஊனமுற்றோர்:

உரிமை அடிப்படையிலான ஏற்பாடுகள், ஊனத்தை அடிப்படையாக வைத்து பாகுபாடு பார்ப்பதைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்துவது;  சம வாய்ப்புகள், சம தளத்தில் செயல்பட உகந்த ஏற்பாடுகள், அனைத்துப் பொது இடங்களுக்கும் தடையின்றிப் போவதற்கான ஏற்பாடு.

செய்ய வேண்டியது என்ன?

21வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் 2.87 பிரிவு, பழங்குடி, தலித், பெண்கள், சிறுபான்மையினரின் ஜனநாயக தன்மை கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளை எடுத்து செயல்படும் சமூக அமைப்புகள் இடது ஜனநாயக அணியின் ஓர் அம்சம் என்று குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் அடிப்படையில் இவர்களை அணி திரட்டுவது முக்கிய கடமை என்றும் முன் வைக்கிறது.

இந்த அடிப்படையில்தான், கட்சியின் மத்திய குழு, தலித், பழங்குடியின அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு, சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்காக நேர்மையுடன் போராடும் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறது. தத்துவார்த்த ரீதியான தலையீடுகள் செய்வதையும் வற்புறுத்துகிறது.

அரசின் கொள்கைகள் வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர், இதற்குக் கூடுதல் இலக்காகின்றனர். மறுபுறம் நிலம், வேலை, கூலியில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பதால் இவர்களை சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது எளிதாகிறது.  உதாரணமாக, நிலமற்றவர்களுக்காக நில சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட கோரிக்கையாக இருக்கும் போது, நிலங்களிலிருந்து தலித் மற்றும் பழங்குடியினரை மேலும் அந்நியப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிலக்குவியலை உறுதி செய்ய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. நிலத்தின் மீது, வளங்களின் மீது அதிகாரம் மறுக்கப்படுவது பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினரின் நலனுக்கான மாற்று திட்டத்தை முன் வைத்து, வலுவான போராட்டங்களை சுயேச்சையாகவும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதன் மூலம் இடதுசாரி அரசியல் நோக்கி அவர்களை ஈர்க்க முடியும். இப்பகுதியினர் மத்தியில் பணியாற்றும் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்துடன் இயங்க வேண்டும்.

புரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’

ஜி. செல்வா

“லெனின்மட்டும் தான் புரட்சிக்கு வெளியே தனியாக நிற்பார். நாம் எல்லோரும் நம் சொந்த வழியில் செல்வோம்” இது லெனின் முன்மொழிந்து பேசிய ஏப்ரல்ஆய்வுரைகள் குறித்து பிளக்கனோவ் சொன்னது. இன்னும் ஒரு படி மேலே சென்று இவை அனைத்தும் “வெறும் பிதற்றல்” என்றார். இப்படியாய் புரட்சியின் திட்டம்குறித்து, நடைமுறை உத்தி குறித்து பழங்கருத்துக்களைக் கையாண்டவர்களை மார்க்சிய தத்துவ வெளியில் சித்தாந்த ரீதியாக அடித்து நொறுக்கி “புரட்சியினை நடைமுறையில் எதார்த்தமாக்கினார்” லெனின்.

இது எப்படிசாத்தியமாயிற்று?
சூழல் புரட்சிகரமாக மாறிவிட்டது என்பதை எப்படி உணர்வது?
ஒரு மார்க்சியவாதி நெருக்கடியான சூழல்களை எப்படி எதிர்கொள்வது?
கட்சியை, மக்களை புரட்சிகர இயக்கத்தில் எப்படி பங்கேற்கவைப்பது?

இப்படியாய் பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவுபெற உலகப் புரட்சிகர சக்திகளுக்கு இன்றும் தோழர் லெனின்தான் ஆசானாகத் திகழ்கிறார். அவர் எழுதிய எழுத்துக்களை, நூல்களை நிதானமாகப் படித்து புரிந்து கொள்வது காலத்தின் தேவை. அதிலும் உலக அளவில் மார்க்சிய அறிஞர்கள் லெனினது எழுத்துக்களை இன்று பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி பார்க்கும்போது 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இவ்வெழுத்துக்கள் தொகுக்கப்பட்டு பிரகாஷ் காரத் முன்னுரையோடு “லெனின் 1917” என்ற புத்தகத்தை லெப்ட்வேர்டு பதிப்பகம் வெளியிடுகிறது.

இக்காலகட்டத்தை அதாவது புரட்சிகரமான காலகட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லெனினது எழுத்துக்களில் மிக முக்கியமானது ஏப்ரல் ஆய்வுரைகள் (April Thesis). இந்த ஆய்வுரைகளின் சாராம்சத்தை லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தபோதே கடிதங்கள் வாயிலாக கட்சி அணிகளுக்கு தெரிவித்தவண்ணம் இருந்தார். அது “தூரதேசத்திலிருந்து லெனினது கடிதங்கள்” (Letters from Afar) என தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால், லெனின் அனுப்பிய முதல் கடிதம் மட்டும்தான் அப்போது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. மற்ற கடிதங்கள் அக்டோபர் புரட்சிக்குப் பின்புதான் அச்சாகியது. எனவே, ரஷ்யப் புரட்சியை உந்தித் தள்ளும் வினையூக்கியாக செயலாற்றியது ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’தான்.

ஆய்வுரைகள் உருவானதன் பின்னணி

ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு லெனின் அவரது புகழ் பெற்ற நூல் ஒன்றினை எழுதுவதற்கான விவரங்களை சேகரிக்க நூலகம் நோக்கி செல்லத் தயாராகிறார். அப்போது அங்கு வந்த போலந்து நாட்டு இளம் புரட்சியாளர் மிஷிஸ்லா பிரான்ஸ்கி (Mieczyslaw Bronski) “உங்களுக்கு செய்தி தெரியாதா? ரஷ்யாவில் புரட்சி தொடங்கி விட்டது” என்கிறார். அப்போது லெனின் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் தலைநகரத்தில் இருந்தார். இச்செய்தி லெனினை உற்சாகம் கொள்ள வைத்துவிட்டது. உடனே ரஷ்யா செல்லத் தயாராகிறார். சுமார் 1981 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த லெனின் அடுத்த சில தினங்களிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி ரஷ்யா செல்கிறார். இப்பயணம் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க முக்கியமான கட்டுரையை ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு சிறப்பிதழில் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போதுதான் லெனின் தனது ஆய்வுரைகளை வளர்த்தெடுக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அது முன்மொழியப்பட்டதால் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்படுகிறது. அப்போது முதல் உலக யுத்தம் (1914-1918) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுப்பதற்காக 1912-ல் சோசலிஸ்ட் கட்சிகளின் சர்வதேச காங்கிரஸ் விவாதிக்கிறது. அம்மாநாட்டின் முடிவாக முதலாம் உலக யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கிடையே நாடு பிடிப்பதற்கான போட்டிதான். எனவே, சோசலிஸ்டுகள் இந்த யுத்தத்தைஆதரிக்கக் கூடாது. மேலும், உள்நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கெடுத்த சோசலிஸ்ட் சக்திகள் தங்களது நாட்டுக்குத் திரும்பியவுடன், தங்களது நாட்டின் முதலாளித்துவ அரசியலுக்குப் பின்னால் போருக்கு ஆதரவாக அணிதிரண்டு நின்றனர். குறிப்பாக, அக்காலகட்டத்தில் மிகப்பெரும் செல்வாக்கு கொண்ட கட்சியாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி இருந்தது. 1906ஆம் ஆண்டு ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக்கட்சி 1914 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தது. ஆனால், கார்ல் காவுட்ஸ்கி தலைமையிலான இக்கட்சிதான் முதலாம் உலக யுத்தத்தின்போது மிகத் துரோகமான முடிவினை எடுத்தது. ஜெர்மனி நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு யுத்தத்தின் நெருக்கடியை பயன்படுத்தாமல் அந்நாட்டு முதலாளி அரசுக்கு சாதகமாக முதலாம் உலகப் போரை ஆதரித்தது. இது சர்வதேச சோசலிச சக்திகளுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. இத்தகைய கருத்துக்கள்தான் அன்று ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடமும் இருந்தது.

ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தின்படி லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே செயலாற்றத் தொடங்கினர். ரஷ்யாவில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்க பெத்ரோகிராடிற்கு அனுப்பப்பட்ட ராணுவம் தொழிலாளர்களோடு கரம் கோர்த்துக் கொண்டது. புரட்சித் தீ பற்றி எரியத் தொடங்கியது. 300 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜார் ஆட்சியின் அதிகாரம் அகற்றப்பட்டது. போல்ஷ்விக்குகள் தெருவில் இணைந்து மக்களோடு போராடிக் கொண்டிருந்தபோதே 1917 பிப்ரவரி மாதம் ரஷ்ய முதலாளிகளின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க மென்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மிதவாத முதலாளிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். “சமாதானம், உணவு, சுதந்திரத்திற்கான மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி தனக்கு சாதகமாக, அதாவது புரட்சிக்கு எதிரான பாதையில் இடைக்கால அரசு செயல்படத் தொடங்கியது”.

இத்தருணத்தில்தான் 1917 பிப்ரவரி மாதத்தில் வெடித்த புரட்சி செய்திதான் தொலைதூர தேசத்தில் இருந்த லெனினை ரஷ்யா நோக்கி உந்தித் தள்ளியது. 1917 ஏப்ரல் 16 நள்ளிரவில் பெட்ரோகிராட் நகரத்திற்கு வந்து சேர்கிறார். லெனின் வந்ததும் புரட்சியின்முன்னேற்றம் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது. ரயில் பயணத்தின்போதே தயாரித்து வைத்திருந்த “இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”ஆய்வுரைகளை போல்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும், போல்ஷ்விக்குகள் மற்றும் மென்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும் முன்மொழிந்து அவர் பேசுகிறார். இந்த உரைதான் பின்னர் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் எழுதிய “செயல் தந்திரம்” பற்றிய கடிதங்கள் “புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” ஆகியவற்றை இணைத்துத்தான் ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுரைகளைத்தான் பிளக்கனோவ் முதல் டிராட்ஸ்கி வரை எதிர்த்தனர். ஜெர்மன் ராணுவ அதிகார வர்க்கத்துடன் லெனினுக்கு தொடர்பு இருக்கிறது என ரஷ்ய முதலாளித்துவ கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன. லெனினையும் அவரது தோழர்களையும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென மென்ஷ்விக்குகள் கூப்பாடு போட்டனர். ஆனால், நடந்தது என்ன? லெனினது கருத்துக்கள் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறை எதார்த்தமாக்கப்பட்டது.

இந்த ஆய்வுரைகள் புரட்சியின் தற்போதைய கட்டம், இடைக்கால அரசு குறித்த நிர்ணயிப்பு, சோசலிச புரட்சிக்கான வழிகாட்டுதல், அதற்காக மக்களை வென்றெடுக்கவும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்குமான வழிமுறைகள், கட்சி அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என பல்வேறு முக்கிய அம்சங்களை, கருதுகோள்களைக் கொண்டுள்ளது.

உலக யுத்தமும், புரட்சிகரமான தற்காப்புவாதமும்

முதலாம் உலக யுத்தம் குறித்த நிர்ணயிப்பின்படி செயல்படாததால் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பின்னடைவுக்குள்ளானது வரலாறு. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே இந்த யுத்தத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது அவ்வளவு எளிதாக இருந்ததா? “யுத்தம் அவசியமானது”, “நாடு பிடிப்பதற்கான வழிமுறை அல்ல யுத்தம்” என்று பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கருதினர்; கருத வைக்கப்பட்டனர்.

எனவே, இதற்கேற்றாற்போல் யுத்தத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் “புரட்சிகரமான தற்காப்பு” (Revolutionary Defense) என்ற நிலைப்பாட்டை இடைக்கால அரசாங்கம் எடுத்தது. இதை கடுமையாக எதிர்த்தார் லெனின். இந்த யுத்தமானது சந்தேகத்திற்கிடமின்றி கொள்ளைக்கார ஏகாதிபத்திய யுத்தம்தான் எனக் கூறினார். மூலதனத்திற்கும், யுத்தத்திற்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைஎடுத்துரைத்து மூலதனத்தை தூக்கி எறியாமல் யுத்தத்திற்கு முடிவு கட்டாமல், உண்மையில் ஜனநாயக பூர்வமான சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார்.

‘புரட்சிகரமான தற்காப்பில்’ நம்பிக்கை கொண்டுள்ள வெகு மக்களின் நேர்மையை சந்தேகம்கொள்ளாமல் அவர்களை முதலாளிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத் தீர்க்கமாக, விடாப்பிடியாக, பொறுமையாக மக்களிடம் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம்.மேலும், இது போன்ற பிரச்சாரங்களை யுத்தத்தில் பணியாற்றிவரும் ரஷ்ய ராணுவவீரர்கள் மத்தியிலும் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்றார். ஏனெனில், அப்போது ரஷ்ய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போர் வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சீரழிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே. தற்காப்பு வாதத்திற்கு எதிரான இத்தகைய போராட்டம்தான் திட்டவட்டமான வெற்றியை கொடுக்கும் எனக் கூறும் லெனின், “ஒரு வேளை வேகமாக வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வெற்றி எதார்த்தமாகவும், நீடித்ததாகவும் இருக்கும்” என்கிறார்.

புரட்சியின் தற்போதைய கட்டம்
நீண்ட, உதறியெறியப்பட்ட சந்தமாய்
சமகாலக் கவிஞர் கூட்டத்தால்
எள்ளி நகையாடப்படும் நான்
காலமெனும் மலைகளைத் தாண்டி வருகின்ற ஒன்றை
யாரும் காணாததைக் காண்கிறேன்
பட்டினிப் பட்டாளத்தால் மனிதனின் பார்வை
குறுக்கப்படும் அவ்விடத்தில்
புரட்சியின் முட்கிரீடம் தரித்த
1916ஐப் பார்க்கிறேன் நான்

புரட்சியை எதிர்பார்த்து அக்காலத்தின் சூழலை தனது கவிதையில் பிரதிபலிக்கிறார் கவிஞர் மயாகோவ்ஸ்கி. கலைஞனின் எதிர்பார்ப்பை கச்சிதமாக களத்தில் நிறைவேற்றுகிறார் புரட்சியாளர் லெனின்.

எப்படி?

மாறிவரும் சூழலையும், மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு புரட்சிக்கான கட்டத்தை தீர்மானிப்பது மிக முக்கியமானது. அதைத்தான் லெனின் செய்தார். “ரஷ்யாவில் இன்றைய நிலைமையின் சிறப்பம்சம் புரட்சி ஆரம்ப கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாற்றமடைய வேண்டி இருக்கிறது” என்கிறார் லெனின். அதாவது 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியில் அதிகாரத்திற்கு வந்த இடைக்கால அரசு புரட்சியின் முதற்கட்டமாகவும், சோசலிசத்தை நோக்கி மாறுவது இரண்டாவது கட்டம் எனவும் லெனின் வரையறுக்கிறார். “உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்க வேண்டிய வர்க்க விழிப்புணர்வு, ஸ்தாபன வலிமை இல்லாததால் புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை கொடுத்தது. இரண்டாவது கட்டத்திலோ அதிகாரம் உழைக்கும் வர்க்கம்மற்றும் ஏழை விவசாயி கைகளுக்கு வரவேண்டும்” என்கிறார் லெனின். இத்தகைய முடிவுக்கு லெனின் வந்ததற்கான காரணங்களை புரிந்து கொள்வதன் மூலமாக உலகப் புரட்சிகர சக்திகள் தங்களது நாடுகளில் மார்க்சிய தத்துவத்தை சூழலுக்கு ஏற்றாற்போல் எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். “ஒரு மார்க்சியவாதி சாத்தியப்பாடுகளிலிருந்து ஆரம்பிக்காமல் எதார்த்த நிலையிலிருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.

மறுக்க முடியாத உண்மை என்ன வெனில், உண்மை நிகழ்ச்சிகளையும், எதார்த்தத்தின் கறாரான விபரங்களையும் ஒரு மார்க்சியவாதி கணக்கில் எடுக்க வேண்டும். நேற்றைய தத்துவங்களை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இந்தத் தத்துவத்தையும் மற்ற தத்துவங்களைப் போலவே பிரதானமாகவும், பொதுவாகவும்தான் கூற முடியும். வாழ்க்கையின் சிக்கலான அம்சங்களை ஸ்தூலமாக பரிசீ லிப்பது போலன்றி இது ஏறக்குறையத்தான் பரிசீலிக்கும்”. இவ்வாறு சொல்லும் லெனின், கத்தேயின் ஒரு மேற்கோளை சுட்டிக் காட்டுகிறார். “எனது நண்பனே! தத்துவம் நரைத்துப்போனது. ஆனால், வாழ்க்கை எனும் விருட்சம் பசுமையானது. சாகாவரமான வாழ்க்கை மரம்தான் பசுமையானது”. இதன்மூலம் வாழ்க்கை அனுபவத்தை, நடைமுறையை, தத்துவத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என சொல்லித் தருகிறார்.

புரட்சிக்கான பாதை

போல்ஷ்விக்குகளைத் தவிர அன்றிருந்த மற்ற அனைத்து சக்திகளும் இடைக்கால அரசான முதலாளித்துவ அரசின் மீது மாயையை உருவாக்கியவண்ணம் இருந்தன. இதை தகர்க்க வேண்டும் என்கிறார் லெனின். அதே நேரத்தில் இந்த அரசுக்கு மாற்றாக தொழிலாளர்கள்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசு என வரையறைசெய்கிறார். இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகளில் அப்பொழுது பெரும்பான்மையாக இருந்தவர்கள் ‘சோசலிஸ்ட் புரட்சியாளர்கள்’ தான். போல்ஷ்விக்குகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும், லெனின் இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசாங்கத்தின் சாத்தியமான ஒரே ரூபமாகும் என்பதை வெகுஜனங்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என்கிறார். ‘நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை தவறுகளை விமர்சித்து அம்பலப்படுத்துவதை மேற்கொள்ள வேண்டும். அரசாங்க அதிகாரம் அனைத்தும் தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் கற்பிப்போம். அப்போதுதான் அனுபவத்தின்பேரில் மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வர்’. அதாவது முதலாளித்துவ அரசின் செல்வாக்கிலிருந்து மக்கள் விடுபடுவர் என லெனின் கூறுகிறார்.

அதேபோன்று தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களின் பிரதிநிதிகள் கொண்ட சோவியத்துகளை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நாடெங்கிலும் கொண்ட குடியரசு அமைய வேண்டும். தற்போதுள்ள இடைக்கால அரசின் போலீஸ், ராணுவம், அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அப்பதவியிலிருந்து நீக்க உரிமை வேண்டும். அதுமட்டுமல்ல, லெனின் சொல்கிறார் அதிகாரிகளின் சம்பளம் ஒரு திறமையான தொழிலாளியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

உடனடியாக அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணைக்கப்பட்டு அது தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் அதாவது சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் லெனின், அதே நேரத்தில் நமது உடனடி கடமை “சோசலிசத்தை புகுத்துவது அல்ல. சமூக உற்பத்திகளையும், உற்பத்தியாகும் பொருட்களின் விநியோகத்தையும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதுதான்” என மிகப் பொருள்பொதிந்த கடமையை வரையறுக்கிறார்.

புரட்சிகர சக்தியான விவசாய வர்க்கம்

மார்க்சிய தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை லெனின் வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமானது விவசாய வர்க்கத்தை புரட்சியின் அச்சாணியாக மாற்றியது. விவசாயப் போராட்டங்கள், கலகங்கள் பிரெஞ்சு புரட்சியின்போதும் நடைபெற்றது. ஆனால், போல்ஷ்விக் தலைமையிலான ரஷ்ய புரட்சியில்தான் அது மைய சக்தியாகமாறியது. அது லெனினால்தான் சாத்தியமானது. எப்படி?

ஜார் ஆண்ட ரஷ்ய அரசானது மிகப் பெரிய தேசம். அதன் ஒரு முனையானது ஜெர்மனியை ஒட்டி இருந்தது. தொழில் வளர்ச்சியடைந்த தொழிலாளர்களை மையப்படுத்திய பகுதியாக இருந்தது. மறுபகுதியானது பெரும்பாலும் விவசாயிகளை உள்ளடக்கி இருந்தது. இப்பகுதியானது ஆசிய கண்டத்தின் எல்லையை நோக்கி இருந்தது. இவ்விடத்தில்தான் லெனின் ஒரு பெரிய தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவசக்திகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மக்களை புரட்சியின் அச்சாணியாக மாற்றுவதற்கான கருதுகோளை வளர்த்தெடுக்கிறார். “தொழிலாளர் கட்சி என்பதால் விவசாய (நில)திட்டத்தை முன்வைப்பதோடு மட்டுமின்றி ரஷ்யாவில் விவசாய புரட்சியின் நலன்களுக்கு உகந்த உடனடியாக நிறைவேற்றக்கூடிய நடைமுறைகளையும் முன்வைக்கவேண்டியது நமது கடமை” என கட்சி அணிகளுக்கு, கட்சிக்கு அறிவுறுத்துகிறார். “அசல் அதிகார வர்க்க புத்திமதிகளை முறியடிப்பதற்காக ஸ்தலங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகள் சோவியத்துகளின் முடிவுகள் பேரில் தாங்களாகவே விவசாய சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றும், உடனடியாக நில எஸ்டேட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளை கட்சி வற்புறுத்தவேண்டும்” எனக் கோருகிறார் லெனின். இதை அப்போது லெனின் மட்டும்தான் சொன்னார். மற்றவர்கள் எல்லாம் இப்போது நிலத்தை கைப்பற்ற வேண்டுமா? நிலச் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், களமோ லெனின் சொன்னதை சாத்தியமாக்கியது.

விவசாய வர்க்கத்தை ரஷ்யப் புரட்சியின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வற்றாத பங்களிப்பை செய்துள்ளார். அது மட்டுமல்ல, ஆசிய நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவதற்கான உந்து சக்தியாகவும் மாறினார் தோழர் லெனின்.

சமூக ஜனநாயக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியதன் பின்னணி

தனதுஏப்ரல் ஆய்வுரைகளில் கட்சியின் கடமைகளாக லெனின் சுட்டிக்காட்டியதில் ஓர் அம்சம் கட்சியின் பெயரை மாற்றுவது. அதுவரை சமூக ஜனநாயகவாதிகளாக கம்யூனிஸ்டுகள் தங்களை அழைத்து வந்தனர். எனவே, அன்று சமூக ஜனநாயக கட்சி என்பது கம்யூனிஸ்ட் கட்சியாக கருதப்பட்டது. முதல் உலக யுத்தத்தின்போது சமூக ஜனநாயகத்தின் அதிகாரப்பூர்வமான தலைவர்கள் உலகெங்கிலும் சோசலிசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு அந்தந்த நாட்டு முதலாளிகளின் பின்னால் அணிதிரண்டு விட்டனர். எனவே, சமூக ஜனநாயகம் என்ற வார்த்தை ‘நடுநிலையானவர்கள்’ என்ற பெயரில் அதிகார வர்க்கத்தின் சார்பானவர்களாக மாறியவர்களை குறிப்பிடும் தரம் தாழ்ந்த வார்த்தையாக மாறிவிட்டது. எனவே, “கம்யூனிஸ்ட் என்னும் பெயர் கட்சியின் இறுதி லட்சியத்தை சரியாக குறிப்பிடுவதால் சந்தர்ப்பவாதத்திற்கும், குறுகிய தேச வெறிக்கும் இடமளிக்காத வகையில் கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மேலும் புதிய அகிலத்தை அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நிறுவ வேண்டும்” என்றும் லெனின் வழிகாட்டினார்.

நிறைவாக

இன்று உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை சாத்தியமாக்கி மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக மாறிய புரட்சியை சாத்தியமாக்கியதற்கான கருதுகோள்களை உருவாக்கியது ஏப்ரல் ஆய்வுரைகள் என்றால் அது மிகையல்ல. 1917 ஏப்ரல் 24 முதல் 29 வரை பெட்ரோகிரேடில் நடைபெற்ற ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் லெனின் முன்மொழிந்த ஆய்வுரைகள் ஏற்கப்பட்டது. இதில் 80 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் சார்பாக 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாடு கட்சியின் அரசியல் ஒற்றுமைக்கும், ஒன்றுபட்ட சக்தியாவதற்கும் உதவி செய்தது மட்டுமின்றி ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது எனும் கூற்றையும் உறுதிபடுத்தியது.

லெனினது ஆய்வுரைகளை பிதற்றல் என்று பிளக்கனோவ் கூறியபோது லெனின் கூறினார்: “பாரிஸ் கம்யூன் அனுபவத்தை பற்றியும், தொழிலாளி வர்க்கத்திற்கு எத்தகைய அரசாங்க அமைப்பு தேவை என்பது குறித்தும் மார்க்சும், ஏங்கெல்சும் 1871, 1872, 1875 வருடங்களில் என்ன கூறினார்கள் என்பதை நினைவுபடுத்தி இணைத்து விளக்கிக் கூறுவதைவிட கூச்சலிடுவதும், திட்டுவதும் மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை”.

மேலும், நாம் உலகை மாற்றுவதற்காக நிற்கிறோம். கோடானுகோடி மக்களை இழுத்துள்ள கோடானகோடி மூலதனத்தின் நலன் சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிற்கிறோம். மனித சமுதாயத்தின் சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய பாட்டாளி வர்க்க புரட்சியால்தான் இந்த யுத்தத்திற்கு முடிவு கட்டி உண்மையான ஜனநாயக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

இருந்தாலும், நம்மைக் கண்டு நாமே பயப்படுகிறோம். “அன்பான பழைய” சட்டையை தூக்கி எறிய கஷ்டப்படுகிறோம். கறை படிந்த சட்டையை தூக்கி எறிந்துவிட்டு லினன் சட்டை அணிவோம்” என்கிறார் லெனினது துணைவியும், தோழருமான குரூப்ஸ்கயா தனது நினைவுக் குறிப்புகளில். “நெருக்கடியான காலகட்டங்களில் ஆலோசனை தேவைப்படும் தருணத்தில் எப்போதும் லெனின் மார்க்ஸ், ஏங்கெல்சிடமே செல்வார். தான் எதிர்நோக்கும் சூழலில் மார்க்ஸ் இருந்தால் என்ன செய்வார்? எத்தகைய நிலைபாடு எடுப்பார்? என்ற அடிப்படையிலேயே லெனினும் செயல்படுவார். மார்க்சின் உண்மையான சீடன் லெனின்” என்கிறார்.

இப்படியாய் மார்க்சியத்தை தனது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற் போல் வளர்த்தெடுத்து ரஷ்ய புரட்சியை சாதித்தார் லெனின்.

இந்தியாவில் பெரும்பகட்டோடு உருவாக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் கொடூரங்களும், பலவீனங்களும் பளிச்செனத் தெரிய ஆரம்பித்து விட்டன. இதைப்பார்த்து உருவான இளைய தலைமுறை இக்கொள்கையின் விளைவுகளுக்கெதிராக எழுச்சியுடன் போராடிவருகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தால் திட்டமிட்ட சூறையாடல்களுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டுவதன் மூலம், இந்திய மண்ணில் புரட்சியை சாதிக்க மார்க்சிடம் மார்க்சியம் பயில்வதும், லெனினிடம் லெனினியம் கற்பதும் நம் காலத்தின் அவசிய தேவை.

தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்

வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த  தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.

மாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும்,  மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.

ஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள்  மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.

அரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.

அண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும்  அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாற்று பொருளாதாரக் கொள்கைகள்

விவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..

தொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும்  இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ  நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி  அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று

இடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

தமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும்.  2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள்  மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த  உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.

தமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்திருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.

இருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.

விவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும்  அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும்  அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.

இதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும்.  சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.

எனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.

நில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.

நமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள்  உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய,  தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை  முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள்  நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல்,  ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.

கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது.  தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம்.  இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறுகின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.

தொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

விடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக  இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.

நமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால்  பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

தாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில்  போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினும், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.

கட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

ஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.

மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

போக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை  மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும்  கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.

போக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபகரமாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில்  பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.

வளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை

மக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி  அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற  வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

இடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்

குறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.

இத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

தமிழகத்தில் இடது ஜனநாயக அணி …

ஜி.ராமகிருஷ்ணன்

“கல்லாமை, இல்லாமை, அறியாமை இல்லாத ஏற்றத்தாழ்வற்ற நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட சுதந்திர நாடாக இந்தியா மலர வேண்டும், இதுகாறும் நாம் சந்தித்து வந்த கேடுகளை அகற்றுவது தான் விடுதலை” – நேரு

1947 ஆம் ஆண்டு, செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நேரு ஆற்றிய பிரகடன உரையின் வாசகங்கள் அவை. கடந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது?. சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் விடுதலைப் போராட்டத்தில் முன்நின்று போராடிய கோடானுகோடி மக்களின்  விருப்பங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவில்லை.

கடந்த 70 ஆண்டுகளில் ஏழைகளைப் பரம ஏழைகளாக்கி, பணக்காரர்களை செல்வம் குவிக்க வைக்கும் கொள்கைகளாகத்தான்  மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்தன. தேசத்தின் மேல்தட்டில் உள்ள ஒரு சதவிகித குடும்பங்கள் நாட்டின் மொத்த சொத்தில் 58.4 சதவிகிதத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாக உள்ளது. வேலையின்மை பிரச்சனை தீர்க்கப்படாதது மட்டுமல்ல ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இன்றைய அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சிப் போக்குகளுக்கு நம்மை ஆளும் வர்க்கங்களும், இந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக கடைபிடிக்கப்படும் கொள்கைகளும் தான் அடிப்படை காரணம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்ட ஆவணத்தில், “நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்திற்கு அரசும், அதனுடைய செயல்பாடும் அரசினுடைய வர்க்கத் தன்மையும் தான் காரணம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்க்க சமன்பாட்டை மாற்றுதல்:

“இன்றைய இந்திய அரசு என்பது பெருமுதலாளிகளினால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சி பாதையை பின்பற்றுகிறது, அந்நிய நிதி மூலதனத்தின் ஒத்துழைப்பை அதிகரித்து கொண்டு வருகிறது.”

மேலே சுட்டிக்காட்டப்பட்ட பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றி விட்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவிட வேண்டும் என்பது தான் இந்திய புரட்சியின் அடிப்படையான கடமையாகும். இதைத்தான் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று கட்சி திட்டம் கூறுகிறது.

இதற்கு எவ்வளவு நாளாகும் என்பது இந்த புரட்சியில் பங்கேற்க வேண்டிய உழைக்கும் மக்களை திரட்டுவதைப் பொருத்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால் வர்க்க சமன்பாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் திரட்டுவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக மாற்றத்தை இந்தியாவில்  உருவாக்கிட வேண்டுமென்பது தான். இதனால் தான் நாம்  மக்கள் ஜனநாயக அணி என்பதையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பதையும்  தொலைநோக்குத் திட்டம் என்று கூறுகிறோம். இந்த தொலைநோக்குத் இலக்கை அடைய நமது கட்சி வகுத்த அரசியல் நடைமுறைக் கொள்கை தான் ‘இடது ஜனநாயக அணி’.

இடது ஜனநாயக அணியின் நோக்கம்

மக்கள் ஜனநாயக அணிக்காக, மக்கள் ஜனநாயகப் புரட்சியில் கலந்து கொள்ளக் கூடிய வர்க்கங்களை திரட்டுவது தான் இடது ஜனநாயக அணியின் நோக்கம். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு-குறு முனைவோர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன்ற பிரிவினர் தான் மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டியவர்கள்.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெருமுதலாளிகளும், நிலப்பிரபுத்துவ சக்திகளும் தலைமையேற்றுள்ளனர். தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளின் தலைமையில் இயங்குகின்றன. இவற்றிற்கு  உண்மையான மாற்று இடது ஜனநாயக அணி தான். எனவே, இடது ஜனநாயக அணி என்று வரும்போது அதில்  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு இடமில்லை. தற்போது இடது ஜனநாயக அணியில் திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவினர் பெரும்பான்மையாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் பின்னால் உள்ளனர். அதாவது ஆளும் வர்க்கங்களின் தத்துவப் பிடியில் உள்ளனர். இவர்களை நம் பக்கம் கொண்டு வருவது, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் திரட்டுவது என்பதே நாம் முன்னெடுக்கவேண்டிய அம்சம்.

தேர்தல் போராட்டம் மட்டுமல்ல:

இடது ஜனநாயக அணி என்பது தேர்தலை சந்திப்பதற்கான ஒரு அணியல்ல. இத்தகைய அணியை ஏற்படுத்த பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகத் தளங்கள் என பல்வேரு தளங்களில், நீடித்த தீவிரமான போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டும். ( தத்துவார்த்த தளம் என்பது பண்பாட்டு தளத்தையும் உள்ளடக்கியது. )

மேற்கண்ட அனைத்து தளங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க  அகில இந்திய அளவிலும், மாநில  அளவிலும் கோரிக்கைகளை கட்சி உருவாக்கியுள்ளது. 21வது கட்சி காங்கிரஸ் முடிந்த பிறகு 2015ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு “தமிழகத்தில் இடது ஜனநாயக அணி” என்று திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறுபட்டது. இடது ஜனநாயக அணியை கட்டமைப்பது  கட்சியின் அன்றாட கடமைகளில் ஒன்றாக அமைந்திட வேண்டும்.

இடது ஜனநாயக அணி என்பது தொலைநோக்குத் திட்டம் அல்ல. மாறாக இது உடனடிக் கடமை. கடந்த காலத்தில் இடது ஜனநாயக அணி அமைப்பது ஒரு நீண்ட காலப் பணியாகக் கருதிய தவறான பார்வை கட்சிக்கு இருந்தது என்பதையும் 21வது கட்சி காங்கிரஸ் சுயவிமர்சனமாக சுட்டிக்காட்டியுள்ளது.

அந்நிய மூலதனம், பெருமுதலாளிகள், நிலச்சுவான்தார்கள் ஆகிய வர்க்கங்களின் நலன்களுக்கு ஆதரவான கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் போது அந்த அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி வலுவான இயக்கங்களை நடத்திட வேண்டும். இந்த வர்க்கங்களின் நேரடி சுரண்டலை எதிர்த்தும் ஆலைகளில், வயல்வெளிகளில் வர்க்கப் போராட்டத்தை நடத்திட வேண்டும். தற்போது மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வரும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் போராட்டம் நடத்திட வேண்டும். உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக தலைமையிலான அரசையும், சங்பரிவார நடவடிக்கைகளையும் எதிர்த்து இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

வர்க்கச் சுரண்டலை எதிர்ப்போம்:

கிராமப்புறங்களில், கிராமப்புற பணக்காரர்களாக உள்ளவர்கள் கடந்த காலங்களைப் போல அல்ல. பெரும் நில உடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், பெரும் ஒப்பந்தக்காரர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்ற பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியிருப்பதை நமது கட்சித் திட்டம் விளக்குகிறது. இவர்கள் அந்த பகுதி மக்களை பெரிதும் சுரண்டுபவர்களாகவும், ஒடுக்குபவர்களாகவும் பல சந்தர்ப்பங்களில் சாதி வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் பிரதானமான பிராந்திய கட்சிகளின் நிர்வாகிகளாகவும் உள்ளனர். இவ்வர்க்கங்களால் சுரண்டப்படும் கிராமப்புற உழைப்பாளிகளை அணிதிரட்டி நடத்த வேண்டிய போராட்டத்தின் மூலமாகத்தான் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை திரட்ட முடியும்.

இடது ஜனநாயக அணியில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு இடமில்லை என்றால் பிராந்திய கட்சிகளோடு அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டியக்கம் எதற்காக என்ற கேள்வி இயல்பாக எழும். இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களைத் திரட்டுவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு அமைந்திடும். தமிழகத்தில் இடதுசாரிகள் வலு குறைவாக உள்ள சூழலில் சில முதலாளித்துவக் கட்சிகளோடு போராட்ட அணி அமைப்பதும், பொது மேடைகளை அமைப்பதும் அவசியமாகும். இடது ஜனநாயக அணி என்ற நோக்கத்தை அடைய அவ்வப்போது இத்தகைய உத்திகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டியக்கமே  இடது ஜனநாயக அணி அல்ல. மாற்று சாத்தியம் என்பதை முன்வைத்து உழைக்கும் மக்களின் திரட்டுவதற்கான முயற்சிகளில் ஒன்று.

தேர்தல் உத்திக்கான முக்கிய அம்சங்கள்:

இடது ஜனநாயக அணி தேர்தலுக்கான அணி இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் முக்கிய அம்சங்கள் என்ன? இடது ஜனநாயக அணிக்காக போராடுகிற அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகள் மீது பிராந்திய கட்சிகளோடு இணைந்து கூட்டியக்கம் நடத்திட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலில் பிராந்திய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டிற்கும் செல்லலாம். இத்தகைய உடன்பாடு கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

  1. கட்சி நலனைப் பாதுகாத்திட,
  2. இடது ஜனநாயக அணியைத் திரட்டிட பயன்படும் என்றால் பிராந்திய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டிற்கு செல்லலாம்.

இத்தகைய உடன்பாடு 17வது கட்சிக் காங்கிரஸ் சுட்டிக்காட்டிய ஐக்கிய முன்னணி உத்தியின் அனுபவத்தை கணக்கில் கொண்டே செய்திட வேண்டும்.

கூட்டு இயக்கங்கள்:

போராட்டத்தின் மூலமாக இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான போராட்டத்தில் எத்தகைய சக்திகளை பங்கேற்கச் செய்திட வேண்டும். சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்-லிபரேசன்), எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகளும், இக்கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் இணைந்து கூட்டுப்போராட்டத்தை நடத்திட வேண்டும்.

மேற்கண்ட சக்திகள் மட்டுமல்ல இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள் பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோசலிச கருத்தில் ஆர்வமுள்ளவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான பிரிவினர், மலைவாழ் மக்கள், தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகப் பூர்வமான அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளுக்காக போராடக் கூடிய சமூக இயக்கங்கள் மற்றும் மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடிய தொண்டு நிறுவனங்கள் ஆகிய சக்திகளை எல்லாம் ஒன்றிணைத்து இடது ஜனநாயக அணி அமைப்பதற்கான போராட்டத்தை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் மேற்கண்ட இடதுசாரி கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியினால் இணைத்து சில இயக்கங்களை நடத்தியுள்ளோம். இக்கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கி “தமிழக மக்கள் மேடை” என்ற மேடையை உருவாக்கினோம். அந்த மேடை போராட்டத்தை நடத்துவதற்கான கோரிக்கை பட்டியலையும் உருவாக்கியது. தாமதமாக உருவான இந்த மேடையின் சார்பில் நேரடி இயக்கத்திற்கு இதுவரை செல்ல இயலவில்லை.

கூட்டு இயக்கத்திற்கு அப்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்தும் தனியான இயக்கங்களும் இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வெகுமக்களை திரட்டுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதி தான்.

இடதுசாரி கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ஒற்றுமைப்படுத்தி தமிழக மக்கள் மேடையின் சார்பாக இயக்கம் நடத்துவதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளை இணைத்து கூட்டு இயக்கத்திற்கும் செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வேலையின்மைக்கு எதிராக ஒரு கூட்டு இயக்கத்தை நடத்தினோம். அது நல்ல தாக்கத்தையும் உருவாக்கியது. அவ்வாறு இடது ஜனநாயக அணி முன்வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் கூட்டு இயக்கங்களை நடத்திட வேண்டும்.

இடது ஜனநாயக அணி முன்வைக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்க களப்போராட்டத்தை நடத்துவதோடு இப்போராட்டங்களில் பங்கேற்கின்ற, பலன்பெறுகின்ற மக்கள் மத்தியிலும் கருத்தியல் போராட்டத்தையும் நடத்திட வேண்டும்.

கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் கருத்தியல் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திட வேண்டும். இடது ஜனநாயக அணி முன்வைத்திடும் அரசியல், பொருளாதார, கருத்தியல், சமூக பிரச்சனைகள் மீது மக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் போராட்டத்தை நடத்தி இடது ஜனநாயக அணியினுடைய திட்டத்தினால் தான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் உள்ள மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் தான் அவர்களை நம் பக்கம் திரட்ட முடியும். அதன் மூலமே வர்க்க சமன்பாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும்.