லெனினும் புரட்சிகர கட்சியும்

குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

 • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
 • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

 • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
 • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
 • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
 • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
 • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
 • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.

ஜனநாயக மத்தியத்துவம்!

பிரகாஷ் காரத்

தமிழில்: ஜி.ஆனந்தன், தூத்துக்குடி

சமீப காலங்களில் சி.பி.ஐ.(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த பிறகு,  எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக ஜனநாயக மத்தியத்துவம் இருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை எழுப்புபவர்கள் இடதுசாரி மற்றும் சி.பி.ஐ.(எம்) உடன் தங்களை இணைத்துக் கொண்ட அறிவுஜீவிகள். இத்தகையப் பார்வை தோழர்களிடமிருந்து வருகிறது. இடதுசாரிகள் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடமிருந்து வருகிறது, கட்சிக்கு எதிராக இல்லாதவர்களிடமிருந்தும் வருகிறது. எனவே, நாம் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் வேண்டியவர் களாகிறோம்.  இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஏனெனில், சி.பி.ஐ.(எம்) ஜனநாயக மத்தியத்துவத்துவத்தை பாட்டாளி வர்க்கக் கட்சியின் அடிப்படையாகவும், உயிர்நாடியாகவும் பார்க்கிறது.

எழுப்பப்படும் விமர்சனம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக கையாள்வதற்கு பதிலாக, பல்வேறு ஆட்சேபணைகளையும் விமர்சனங்களையும் நாம் ஒட்டு மொத்தமாக வகைப்படுத்தி கீழே கொடுத்துள்ளோம்.  நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் விமர்சனங்களை எழுப்புகிற ஒவ்வொருவரும் கீழே வகைப்படுத்தியுள்ள அனைத்து கேள்விகளையும் கேட்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  ஆனால், அவர்கள் அனைவரின் பொதுவான கருத்தொற்றுமை எதில் என்றால் ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக இனியும் நீடிக்கக் கூடாது அல்லது அதில் மாற்றம் தேவை என்பதாகும்.  இந்த விமர்சனங்களில் எழுப்பப்படும் முக்கியமான அம்சங்களை கீழ்க்கண்டவாறு தொகுத்து வகைப்படுத்தலாம்.

 1. ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கோட்பாடு, ரஷ்யா ஜார் கொடுங்கோன்மையின் கீழ் அதிகார வர்க்க மற்றும் அடக்குமுறை நாடாக இருந்த தனிச்சிறப்பான சூழலுக்காக தோழர் லெனினால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அன்றையதினம் மையப்படுத்துதல், தொழில்முறை புரட்சிக் குழுவை உருவாக்குதல் மற்றும் இரகசியம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆகவே, ஜனநாயக மத்தியத் துவம் இதர சமூகங்களுக்கும், சூழலுக்கும் குறிப்பாக முதலா ளித்துவ ஜனநாயகம் ஆட்சி செலுத்தும் இடங்களில் பொருத்த மற்றதாக இருக்கிறது.
 2. ஜனநாயக மத்தியத்துவம் கட்சியில் அதிகார பீடங்களையும், மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பையும் உருவாக்குவதால், (கட்சிக்குள்) ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாடுகளின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் கமிட்டியின் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. கட்சி உறுப்பினர்களும், ஊழியர்களும் மத்தியக் கமிட்டியின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டியுள்ளது.  எதிர் கருத்து மற்றும் மாற்றுக் கருத்து போன்றவை கேட்கப்படுவதில்லை அல்லது பரிசீலிக்கப் படுவதில்லை.
 3. ஜனநாயக மத்தியத்துவம் புதுமையான சிந்தனைகள் வருவதற்கும் மார்க்சிய தத்துவத்தின் வளர்ச்சி தடைபடுவதற்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. கட்சியின் உயர்மட்ட அமைப்பு சித்தாந்தங்கள் குறித்து முடிவு செய்து விடுகிறது.  அதன் பிறகு அதில் எந்த திறந்த விவாதத்திற்கும் வழியில்லை. இதனால் புதிய சிந்தனைகளுக்கும் புதிய வளர்ச்சி போக்குகளை உள்வாங்கிக் கொள்வதற்கும் வாய்ப்பின்றி போய்விடுகிறது. சித்தாந்தங்கள் குறித்து மேல்மட்டத்தில்; முடிவு எடுத்து அணிகள் அவற்றை பிசகாமல் அமல்படுத்தும் அமைப்பிற்குத்தான் ஜனநாயக மத்தியத்துவம் சாலப் பொருந்தும். அனுமதிக்கப்பட்ட அரங்கங்களுக்கு வெளியே சித்தாந்த விவாதங்கள் தடை செய்யப்படுகின்றன அல்லது அதைவிட மோசமாக அது ஒழுங்கீனமாகப் பார்க்கப் படுகின்றது.
 4. ஜனநாயக மத்தியத்துவத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியில் கட்சியின் தலைமைக் குழு ஒட்டு மொத்த கட்சியின் கருத்தை புறந்தள்ள வாய்ப்பிருக்கிறது.  இதனால் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே பெரும் தடை எழுகிறது. இத்தகைய தடையரண்கள் எழுந்துள்ளதால் மக்கள் நினைப்பதை கட்சி அறிந்து கொண்டு தன்னை தேவைக்கேற்ப உரிய நேரத்தில் திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை.
 5. சி.பி.ஐ.(எம்) ஐ பொருத்தவரை, ஜனநாயக மத்தியத்துவம் நடைமுறையில் உருமாறி மத்தியத்துவமாகவும், மே.வங்கத்தில் ஆணையிடும் போக்காகவும் மாறி கீழிலிருந்து வரும் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை  வெகுஜன புரட்சிகர கட்சியை லெனினிய ஸ்தாபன வடிவத்தில்  கட்ட முடியாது என்று பொதுவான தளத்தில் வலியுறுத்தப்படுகிறது. .  தவறான நடைமுறைத் தந்திரம் உருவாக்கப்படுவதற்கு கூட தவறான ஸ்தாபன நடைமுறை காரணமாக அமையக்கூடும்.

I

ஜனநாயக மத்தியத்துவத்துவத்தை போல்ஷிவிக் கட்சி ஸ்தாபனக் கோட்பாடாக அமல்படுத்திய காலம் தொடங்கி பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தால் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது காங்கிரசில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கோட்பாடாக விரிவாக்கப்பட்ட போதும் எல்லாக் காலத்திலும் சமூக ஜனநாயக வாதிகளாலும், மார்க்சிஸ்ட் அல்லாத இடதுசாரி களாலும், இக்கோட்பாடு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.

மார்க்சும், ஏங்கல்சும் உருவாக்கிய மார்க்சியத் தத்துவத்தை லெனின் தான் வாழ்ந்த காலத்திற்கு பொருத்தி செழுமைப்படுத்தினார். இந்த வகையில் ஏகாதிபத்தியம் பற்றிய கருத்து உலகப் புரட்சிகர இயக்கத்தில் காலனிய மற்றும் அரைக்காலனிய நாட்டு; மக்களின் பாத்திரம் மற்றும் புரட்சிகர ஸ்தாபனங்கள் பற்றியக் கோட்பாடு ஆகியவை அவரது பங்களிப்பாகும்.

இப்பிரச்னையின் அடிநாதமாக இருப்பது கட்சி ஸ்தாபனம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல.  மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான பாத்திரம் குறித்ததாகும்.  சமூக ஜனநாயக கட்சிகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவ சமூக அமைப்பினை மாற்றாமல் அதனுள் பணியாற்றுவது கொள்கை யாகும்.  அந்த கட்சிகளுக்குப் புரட்சிகர அமைப்பிற்கான தேவையே எழவில்லை.

ஆகவே ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடே அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது. முதலாளித்துவத்தை தூக்கி எறிய கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது. இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தூக்கியெறிந்து அதற்கு பதிலாக சோசலிச சமூக அமைப்பை நிர்மாணிக்க போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பலம் பொருந்திய அரசமைப்பு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற கட்சி ஸ்தாபனமானது அரசியலாகவும் தத்துவார்த்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் போராடுவதற்கு ஏற்ற முறையில் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது.  அத்தகைய கட்சி ஸ்தாபனம் நாடாளுமன்ற அமைப்பில் வெறும் தேர்தல்களை மட்டும் எதிர்கொள்ளத்தக்க வகையில் கட்டமைக்கப்பட முடியாது, அந்த அமைப்பு எவ்வளவு நிலையானதாக இருந்தாலும், எவ்வளவு நீண்ட காலத்திற்கு நீடித்தாலும்.  ஜனநாயக அமைப்பின் உரிமைகளையும், முதலாளித்துவ  ஜனநாயக அரசு அமைப்புக்கு உட்பட்ட அதன் ஸ்தாபனங்களைப் பயன்படுத்துவது போன்றவற் றோடு நின்றுவிடக் கூடிய அளவில் ஸ்தாபனத்தை கட்டமைக்க திட்டமிட முடியாது.

அடிப்படையானக் கேள்வியே கட்சியானது பாட்டாளி வர்க்கத்தையும் புரட்சிகர வெகுஜனங்களையும்; திரட்டி தலைமை தாங்குவதற்கு ஏற்ற முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதுதான்.; புரட்சிகர வெகுஜன இயக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுக்கும் முறையிலான அமைப்பை உருவாக்குவதுதான் கட்சி குறித்து லெனினிய கோட்பாடாகும்.  இதனால் அவர் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதியை கட்சிக்குள் கொண்டுவந்து அவர்களை அரசியல் உணர்வு உள்ளவர்களாக வளர்த்து புரட்சியின் முன்னணிப் படையாக மாற்ற வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். அத்தகைய ஒரு அமைப்பு வர்க்கப் போராட்டம் மூலமாகவும், வெகுஜன இயக்கம் மூலமாகவும் உறுதியேற்றப்பட்டு எஃகு போன்று உறுதி பெறுமானால் அது அனைத்து சூழல்களிலும் செயல்படத்தகுந்தததாக இருக்கும்.  சட்டப்பூர்வ, அரைசட்டப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமற்ற ஆகிய அனைத்து வகையிலும் செயல்படத் தகுந்தாக இருக்கும்.  வர்க்க அரசியலால் எழும் அவசர நிலைமைகளை எதிர்கொள்ள ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அது அவ்வப்போது நிலவும் சூழலுக்கேற்ப போராட்ட வடிவங்களை மாற்றியமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.  இதற்கு ஒரு மையப்படுத்தப்பட்ட கட்சி அமைப்பு தேவைப்படுகிறது.  மார்க்சியம் மற்றும் வர்க்க போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கட்சி அமைப்பிற்கு ஜனநாயக மத்தியத்துவம் மிகப் பொருத்தமான ஸ்தாபனக் கோட்பாடாக இருக்கும்.  வர்க்க போராட்டம் ஒரு கூட்டு செயல்பாடு.  ஜனநாயக மத்தியத்துவம் கூட்டு முடிவெடுப்பதையும் கூட்டு செயல்பாட்டையும் வளர்க்கிறது சிந்தனை சுதந்திரத்தையும், செயல்பாட்டில் ஒற்றுமையையும் இது அனுமதிக்கிறது.

கூட்டு செயல்பாடுகள் திறம்பட இருக்க வேண்டுமானால், பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒட்டுமொத்தக் குழுவும் அமலாக்க வேண்டுமானால், ஜனநாயக முறையையும்விட மேலான ஒரு முறை தேவைப்படுகிறது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற முறையில்தான் பெரும்பான்மையின் முடிவுகளுக்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும் என்பதும், கூட்டு முடிவுகளுக்கு தனிநபர்கள் உட்பட்டு நடக்க வேண்டும் என்பதும்  நடைபெறு கிறது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் லெனினுக்கும், போல்ஷிவிக்குகளுக்கும், மென்ஷிவிக்குகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் புட்சிகர கட்சி மற்றும் அதன் அமைப்பு குறித்த சில அத்தியாவசியமான அம்சங்களில் தெளிவு பெற உதவுகின்றன. ரஷ்யாவிற்கு வெளியே மிகப் பிரபல்யமான மார்க்சிஸ்ட்டுகளான கார்ல் காவுட்ஸ்கியும், ரோசா லக்சம்பர்க்கும் லெனினின் கட்சி ஸ்தாபனம் குறித்த இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்தனர்.  காவுட்ஸ்கியைப் பொறுத்தவரை ஸ்தாபனம் என்பது  புரட்சி, செயலுக்கான ஒரு முன்நிபந்தனையாகும். ரோசா லக்சம்பர்க்கைப் பொறுத்தவரை ஸ்தாபனம,; புரட்சிகர வெகுஜன நடவடிக்கையின் படைப்பாகும்;.  லெனினைப் பொறுத்தவரை கட்சியும் அதன் ஸ்தாபனமும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தின் முன் நிபந்தனையும் அதன் படைப்புமாகும். லெனினிய சிந்தனைகளை அருமையாகத் தொகுத்த லூகாஸ்; கட்சி என்பது புரட்சிகர வெகுஜன நடவடிக்கையின் படைப்பாளியும் படைப்பும் ஆகும் என்றார். லெனினைப் பொறுத்தவரை கட்சி என்பது புரட்சிக்கான தயாரிப்பில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும் அத்தகைய ஒரு அமைப்பு அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியான தளங்களில் வர்க்க எதிரிகள் நடத்தும் தாக்குதல் உட்பட அனைத்துவகையான தாக்குதலையும் எதிர் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.  அத்தகைய ஒரு கட்சி அமைப்பு உயர்ந்தபட்ச கட்டுப்பாடுகளை கொண்டதாக இருக்க வேண்டும்.  அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளே அந்த கட்சியை மாறி வரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவும், போராட்டங்களின் வடிவங்களை மாற்றிக் கொள்ளத்தக்க நெகிழ்வும் கொண்டதாக அமையும்.

மார்க்சியம் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியிலிருந்து ஜனநாயக மத்தியத்து வத்தை பிரித்துப்பார்ப்பது என்பது கட்சி ஸ்தாபன அமைப்பின் முக்கியக் கோட்பாடுகள் குறித்த தவறான பார்வைக்கு இட்டுச்செல்லும்.

II

ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரான வாதங்கள் என்ன?

 1. ஜனநாயக மத்தியத்துவத்தை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கியமான வாதமே, இந்த அமைப்பு ரீதியான நடவடிக்கை அன்றைய தினம் ரஷ்யாவில் நிலவிய பிரத்தியேகமான சூழலில் வெகுஜன புரட்சி இயக்க நடைமுறைக்கு ஏற்றதாக வடிவமைக்கப் பட்டது எனபதுதான்.  இது நடைமுறைக்கு வந்த காலம் ஜாராட்சியை எதிர்த்துப் புரட்சிகரப் போராட்டம் நடத்திய காலம்.  போல்ஷிவிக் கட்சி அடக்குமுறைகளையும், நாடுகடத்தல் களையும் சந்தித்துக் கொண்டிருந்த சட்டப்பூர்வமற்ற நிலையில் செயல்பட்ட காலம்.  அதற்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவைப் பட்டது.  புரட்சிக்குப்பின் எதிர்ப்புரட்சி சக்திகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் புரட்சியை வீழ்த்திட முயற்சித்ததால் இந்த நடைமுறை போல்ஷிவிக் கட்சியில் வலுப்பெற்றது.  அதனை இதர கம்யூனிஸ்ட் கட்சிகளும் சுவீகரித்துக் கொண்டன.  இத்தகைய சூழலில் ரஷ்யாவில் அமல்படுத்தப்பட்ட ஸ்தாபனக் கோட்பாடு மாறுபட்ட சூழலிலும் நிலைகளிலும் செயல்படுகிற இதர கட்சிகளுக்கு பொருந்துமா? அதற்கு சற்றும் பொருந்தாத இதர சூழல்களில் அமல்படுத்துவது எப்படி சரியானதாகும்?

ஆனால், இதனை ரஷ்யாவிற்கு மட்டும் பொருந்தக் கூடியது என்றும் இதர நாடுகளிலும், இதர சூழல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பயன்படுத்த முடியாதது என்று சொல்ல முடியுமா?

பிரபீர் புர்க்கயஸ்தா கூறுகிறார்:

இந்த குறிப்பிட்ட கட்சி வடிவம் (அமைப்பு) போல்ஷிவிக் புரட்சிக்குப்பின்  (கட்சியின்) பல பிரிவுகள் தடைசெய்யப்பட்ட காலத்திலேயே வந்தது. அப்போதுதான் அரும்பிக்கொண்டிருந்த சோசலிச அரசை எல்லா பெரும் சக்திகளும் முற்றுகையிட்டிருந்த காலத்தில் புரட்சிகர அரசுக்கு தேவைப்பட்ட குறிப்பிட்ட வடிவம் இது என்று சொல்லலாம்.  இது பொது விதியல்ல அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் உருவாக்கிக் கொண்டிருந்த சூழ்நிலையின் விளைவாகவே ஜனநாயக மத்தியத்துவம் உருவானது. இத்தகைய ஒரு ஸ்தாபன அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் இடத்திற்கும் உரித்தான ஒன்றை எல்லா நிலைமைகளுக்கும் சூழலுக்கும் பொருத்துவது இன்றைய இடதுசாரி இயக்கத்தை பாதிக்கும்.

இவ்வாறு தெளிவான பின், இடதுசாரிகள் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து மறு ஆய்வு செய்வது அவசியமாகும். சி.பி.ஐ (எம்) ல் உள்ள தலைமையும், கட்டுப்பாடான அமைப்பும் உலகின் பல பகுதிகளில் பல பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உடைந்து உருக்குலைந்த போதுகூட அதைக் கொஞ்சமும் சேதமின்றி பாதுகாக்க உதவியது என்றாலும், இதனால் எழுந்துள்ள பிரச்னைகள் என்பது கற்பனையானதல்ல, நிஜம். அதிலும் முக்கியமானது எதுவெனில், கட்சி அணிகள் அனைவரது கருத்தையும் கட்சி தலைமை புறந்தள்ளிவிட முடியும்.  தலைவர் களுக்கும் அணிகளுக்குமிடையே ஒத்திசைவற்றத் தன்மையை உருவாக்கும். மேலும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே தடையை ஏற்படுத்தும் இத்தகைய நிலையானது தகவல் தொடர்பில் தடையை ஏற்படுத்தி தவறான நிலைபாடுகள் சரிசெய்ய வேண்டிய காலத்தை தாண்டியும் தொடர்வதற்கு ஜனநாயக மத்தியத்துவம் வழிவகுக்கிறது.

ஜனநாயக மத்தியத்துவம் ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் உருவாகியது என்பதும், லெனின் இந்த கோட்பாட்டை வளர்த்தெடுப்பதில் முன்னின்றார் என்பதும் உண்மை. கட்சி; அமைப்பின் வடிவங்களும், நடைமுறைகளும், கட்சியின் புரட்சிகரத் தன்மையுடன் ஊடுபாவி அதனின்று பிரிக்க முடியாத பகுதியாகும். அன்னிய தலையீடுகளின் மூலம் தாக்குதல் களை எதிர்கொண்டது ரஷ்யப் புரட்சி மட்டுமே அல்ல. 20-வது நூற்றாண்டில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியும் இதைப் போன்ற கடுமையான தாக்குதல்களை, எதிர்புரட்சிகளை, உள்நாட்டுப் போரை மற்றும் அன்னிய தலையீட்டை சந்திக்க வேண்டியிருந்தது.  ரஷ்யாவைப் பொறுத்தவரை அது ஜார் கொடுங்கோன்மையாக இருந்தது என்றால், சீன கம்யூனிஸ்ட்கள் கோமிங்டானின் கொடூரமான அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது, ரஷ்யா உள்நாட்டுப் போரை சந்தித்தது போன்றே சீனாவும், கியூபாவும் இதர சோசலிச நாடுகளும் சந்திக்க நேர்ந்தது. அன்னிய சக்திகளின் தலையீடு சீனா, வியட்நாம், கொரியா மற்றம் கியூபா போன்ற நாடுகளில் இருந்தது. ஏன் அமைதியான வழியிலும் ஜனநாயக முறைப்படியும் தேர்தல் மூலம் சிலியில் அரசு அதிகாரத்தை எடுத்த போது கொடூரமான இராணுவ நடவடிக்கை மூலம் அந்த அரசு அகற்றப்பட்டது.

சீனா, வியட்நாம், மற்றும் கொரிய புரட்சிகளைத் தவிர, மற்றொரு உதாரணம் கியூபா.  இங்கு புரட்சியின் தலைமைப் பாத்திரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.  ஆனால் பழைய சுரண்டல் அமைப்பை தூக்கி எறிந்த புரட்சிக்குப்பின் புரட்சி படைகள் தங்களை கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட போது அந்த கட்சி தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை பயன்படுத்திக் கொண்டது.

இன்று வரை உலகின் எந்த மூலையிலும் புரட்சியோ அல்லது சோசலிசத்தை நோக்கி முன்னேற்றமோ நடைபெறுகிற தென்றால், அதை தலைமை தாங்கும் கட்சியோ அல்லது அமைப்போ ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் அது நடைபெறவில்லை.

வெனிசுலாவில் புரட்சிகர நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சாவேஸ் தன்னுடைய இயக்கத்தை ஒரு கட்சியாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அந்த கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை, மாறாக, மத்தியத்துவம் என்ற அடிப்படையில் சாவேஸை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.  மத்தியப் படுத்தப்பட்ட கட்சி என்ற அமைப்பு இல்லாது இந்த நடவடிக்கைகள் எவ்வுளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏன் புரட்சிகரப் பாதையில் நடைபோடும் அனைத்து கட்சிகளும் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை தழுவிக் கொண்டன?  ஏன் எனில், எந்தப் புரட்சியும் ஜனநாயகப் பூர்வமாகவோ அல்லது அமைதியாகவோ முன்னேற அனுமதிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு புரட்சியும் ஏகாதிபத்தியம் மற்றும் வர்க்க எதிரிகளின் மூர்க்கமான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜனநாயக மத்தியத்துவம் இன்றி கட்சி நிராயுதபாணியாக இருக்கும், அது புரட்சிகர அமைப்பாகவே இருக்க முடியாது.  ஒரு நவீன மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்திற்கு எதிராக கட்சி ஒரு மத்தியப்படுத்தப்பட்ட சக்தியாக செயல்பட வேண்டுமென்று லெனின் குறிப்பிட்ட முக்கியமான இந்த அம்சம் இன்றைக்கும் பொருந்தும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.  உண்மையைச் சொல்லப் போனால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு மின்னல் வேகத்தில் தனது இராணுவங்களைக் கொண்டு செல்லும் மிகவும் முன்னேறிய ஏகாதிபத்தியம் உள்ள தற்கால சூழலில் அதற்கான தேவை முன்னெப்போதும் விட அதிகமாக உள்ளது.

நாம் எதிர் கொள்ள வேண்டியது நேரடி இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல, ஆதிக்கம் மிகுந்த ஏகாதிபத்திய அமைப்பு முறையில் உலகின் எந்த மூலையில் நடைபெறும் புரட்சியாக இருந்தாலும் அது முற்றுகையிடப் பட்டதாகவே இருக்கும். நாம் அனுமானிக்கக் கூடிய எதிர்காலத்தில் அமைதியான மற்றும் பெருந்தன்மையான ஜனநாயக சூழலில் சோசலிசம் மலர வாய்ப்பில்லை. பிடல் காஸ்ட்ரோ ஒரு முறை லெனினை மேற்கோள் காட்டி தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத எந்தப்புரட்சியும் புரட்சி என்று சொல்ல முடியாது என்றார். இத்தகைய பாதுகாப்பால் ஜனநாயக மத்தியத்துவம் தவிர்க்கவியலாத படைக்கலனாகும்.

இதற்கு இணையான மற்றொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால், புரட்சிகர சூழநிலையில் உள்ள கட்சிகளுக்கு ஜனநாயக மத்தியத்துவம்தான் பொருத்தமானதாகும்..  லெனின் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை கட்சி அமைப்போடு பிணைத்தது புரட்சி நடைபெற்ற காலத்தில்தான்.  அந்தக் கோட்பாடு எவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் முதலாளித்துவம் சட்டப்படி அளித்துள்ள ஜனநாயக உரிமைகள் ஆகியவை நடைமுறையில் உள்ள நாடுகளுக்கு பொருந்தும்?

எதிர்கொள்ள வேண்டியது எதிர்புரட்சி வன்முறைகளை மட்டுமல்ல.  கட்சியானது அரசியல் ரீதியாக ஒற்றை நோக்கத்துடன முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.  அது தனது தத்துவார்த்த அடித்தளத்தை பேணி பாதுகாக்க வேண்டியுள்ளது.  முதலாளித்துவ அரசும் ஆளும் வர்க்கங்களும் கட்சியின் அரசியல்-தத்துவார்த்த  பிணைப்பை சிதைக்கவும், அந்த அமைப்பை திருத்தல்வாத வர்க்க சமரசப் பாதைக்கு திருப்பிவிடவும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும்.  கருத்துப் போர்களையும், தத்துவார்த்த போராட்டங்களையும், ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்ட கட்சியினால் திறம்பட நடத்த முடியாது.  ஜனநாயக மத்தியத்துவம் இன்றி கட்சியானது ஒரு விவாத மேடையாகவோ அல்லது பட்டிமன்றம் நடத்தும் மேடைபோன்றோ மாறிவிடும்.

பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புரட்சிகரமற்ற சூழலில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இந்த நிலைமை மேலும் அதிகரித்தது. இந்த நிலைமையில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்கு பிடித்திருப்பதே ஜனநாயக மத்தியத்துவத்தால்தான்.  அவர்களின் தத்துவார்த்த அரசியல் பலவீனம் மற்றும் தவறுகள் எதுவாயிருந்தாலும், ஜனநாயக மத்தியத்துவத்துமே அந்த அமைப்பை புரட்சிகர கட்சிகள் என்ற தகுதியுடன் பாதுகாத்துள்ளன.  ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்ட கட்சிகள் ஒன்று புரட்சிகர கட்சிகள் என்ற தகுதியை இழந்துவிட்டன அல்லது சிதைந்து காணாமல் போய்விட்டன.  அதற்கு சிறந்த உதாரணம் இத்தாலியன் கம்யூனிஸ்ட் கட்சி, 80கள் வரை சோசலிச நாடுகளுக்கு வெளியே மிகப்பெரும் கட்சியாக விளங்கிய கட்சி.  ஆனால், சோவியத் வீழ்ச்சிக்கு முன்பாகவே, அது திவால் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அது ஜனநாயக மத்தியத்துவத்தை முதலில் கைவிட்டது  பின்னர் அது மார்க்சியத்தையும் ( விஞ்ஞான சோசலிசம்) கைவிட்டது.

பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குள் செயல்படுகின்ற ஓரளவு வெகுஜன செல்வாக்கு தளமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி கூட கொஞ்சமும் இடைவிடாத தாக்குதலுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இத்தாக்குதல்கள் கட்சியை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் தத்தவார்த்த மற்றும் அரசியல் வடிவங்களில் வரும். அமைதியான காலங்களில்கூட வர்க்க போராட்டங்கள் (கட்சியின் மீது) தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இட்டு செல்லும், ஏனெனில் கட்சி, ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை எதிர்த்து போராடுவதால்.  இதுவே நமது கட்சியின் அனுபவமும் கூட. அரசியல் மற்றும் தத்துவார்த்த முனைகளில் நடைபெறும் போராட்டங்களே மிகவும் முக்கியமானது என்பதால், அதனை கட்சி மிகுந்த திறனுடன் அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமெனில், அந்த கட்சியை துண்டாட செய்யப்படும் பல முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல் சமூக ஜனநாயக கட்சிதான் இருக்க முடியும், புரட்சிகர கட்சி இருக்க முடியாது.

ஜனநாயக மத்தியத்துவம், அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு அமைப்புக்கு இணையாக வைக்கப்படுகிறது.  இதனை மேலும் விரிவாக்கி கட்சி முழுமையின் கருத்தையும் கட்சி தலைமை நிராகரித்துவிடுகிறது என்ற முடிவுக்கு வருகின்றனர்.  ஜனநாயக மத்தியத்துவம் என்பது அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு அமைப்பா? மத்தியத்துவத்தை அது கட்டளையிடும் அமைப்பாகவும், கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் மாறிவிட்டது என்ற அடிப்படையில் நிராகரிப்பது முறையாகுமா?  ஒரு அரசியல் உணர்வுள்ள கட்சி உறுப்பினரைப் பொறுத்தவரை, மத்தியத்துவத்தை கூட்டு முடிவு மற்றும் கூட்டு நோக்கமாக பார்ப்பாரேயொழிய கட்டளையிடும் அமைப்பாக பார்க்க மாட்டார். மத்தியத்துவம் மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் செயல்பாட்டின் வடிவம்தான் ஜனநாயக மத்தியத்துவம்.  சி.பி.ஐ.(எம்) அமைப்பு விதிகளில் பிரிவு 13 முழுமையாக ஜனநாயக மத்தியத்துவத்தின் கொள்கைகள் என்ன? அது எவ்வாறு கட்சியில் பயன்படுத்தப்படும் என்பதை விளக்குகிறது.  அதில் நமது விவாதத்திற்கு மிகவும் பொருத்தமான உபபிரிவுகளான C மற்றும் D கீழே தரப்படுகிறது:

C. கட்சியின் எல்லா கமிட்டிகளும் முறையாக அதனதன் வேலைகளைப் பற்றி உடனுக்குடன் தனக்கு கீழுள்ள ஸ்தாபனத்திற்கு ரிப்போர்ட்(அறிக்கை) செய்ய வேண்டும்.  அதே போன்று எல்லா கீழ் கமிட்டிகளும் அடுத்துள்ள மேல் கமிட்டிக்கும் அறிக்கைகள் அனுப்ப வேண்டும்.

D. எல்லா கட்சி கமிட்டிகளும் குறிப்பாக தலைமை வகிக்கும் கட்சி கமிட்டிகள் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி ஸ்தாபனங்களுடைய சாதாரண கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தொடர்ச்சியாக உரிய கவனம் செலுத்த வேண்டும்.  

சி.பி.ஐ (எம்) கட்சியின் அமைப்பு விதிகள் கட்சியை பாதிக்கும் அனைத்து கேள்விகள் கொள்கைகள், வேலைகள் குறித்தும் கட்சி கிளையில் தங்குதடையற்ற ஒளிவு மறைவற்ற விவாதத்தை நடத்த வகைசெய்கிறது.  ஆனால், கோஷ்டிகளையோ, கோஷ்டிவாதத் தையோ தடை செய்கிறது. புர்க்கயஸ்தா இந்த குறிப்பிட்ட கோட்பாடு ரஷ்யாவில் புரட்சிக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறார்.  உண்மையில், கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டியாக இருந்து செயல்படுவது கட்சி அமைப்பின் ஒருமைப்பாட்டை சீரழித்து கூட்டு செயல்பாட்டை முடக்கிவிடும். நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கோர்ப்பசேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி காலத்தில் கட்சிக்குள் பல குழுக்கள் அனுமதிக்கப்பட்டது, இந்த நடவடிக்கை சோவியத் கட்சி சிதையும் போக்கை விரைவுபடுத்தியது.

ஒரு கட்சியின் தலைமைக்கு அதன் அணிகள் அனைவரின் கருத்தையும் புறக்கணிப்பது சாத்தியம்தானா? இதற்குமாறாக ஜனநாயக மத்தியத்துவம் இல்லாத இடத்திலோ அல்லது ஜனநாயக மத்தியத்துவத்தை கடுமையாக மீறும் இடங்களில்தான் இது சாத்தியமாகும். கட்சி கமிட்டிகள் அனைத்து மட்டங்களிலும் தங்களது கருத்தை வெளியிடாவிட்டால் கட்சியின் கருத்தை எப்படி அறிந்து கொள்வது? நமது கட்சியில் பெரும்பான்மை மாநிலக் குழுக்கள் மாற்றுக் கருத்தை தெரிவித்தால் கட்சியின் மத்தியக் கமிட்டி அந்த கருத்தை புறந்தள்ளிவிட முடியுமா? அதே போல கட்சியின் அரசியல் தலைமைக் குழு மத்திய கமிட்டியின் பெரும்பான்மை கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியுமா?

உட்கட்சி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?

இரண்டாவது வாதம்: ஜனநாயக மத்தியத்துவம், ஒரு அமைப்பின் கோட்பாடாக இருப்பதால், அதன் உள்ளார்ந்த தன்மை காரணமாக அது மையப்படுத்துதலுக்கு இட்டுச் சென்று இறுதியில் ஜனநாயகத்தையே கட்டுப்படுத்துவதில் முடிவடை கிறது கீழ் கமிட்டிகள் மேல் கமிட்டியின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி ஒருதலைபட்சமாகவும் அனைத்தையும் மையமே முடிவு செய்யும் என்ற நிலைக்கும் இட்டு செல்கிறது.  இது ஜனநாயக முறையில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதை தடுத்தும், மாற்றுக் கருத்திற்கு இடமின்றியும் செய்து விடுகிறது.  இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விமர்சனமாகும்.  குறிப்பாக பல நாடுகளில் ஆட்சியில் உள்ள அல்லது இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவத்திலிருந்து இதனை பார்க்க வேண்டும்.  கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள அரசியல் தலைமைக்குழு, மத்தியக்கமிட்டி, மற்றும் மாநிலக் கமிட்டிகள் ஆகியவை தங்குதடையற்ற அதிகாரத்தை இந்த விதிகளை தங்கள் தேவைக்கேற்ப விளக்கம் அளித்து பயன்படுத்தி எல்லா பிரச்னைகளிலும் தாங்களே இறுதி முடிவெடுப்பவர்களாக மாறிவிட முடியும். உட்கட்சி ஜனநாயகம் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள் மீறப்படும் போது அதிகாரவர்க்க மத்தியத்துவம் அதிகப்படியான மையப்படுத்துதல் ஆகியன தலைதூக்கும் எனபதற்கு பல உதாரணங்ள் உள்ளன.   ஜனநாயக மத்தியத்துவம் என்பதை ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்க வேண்டுமேயொழிய அதை மையப்படுத்துதலை உள்ளடக்கிய கோட்பாடாக பார்க்கக் கூடாது.

ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகளை ஒட்டுமொத்த மாகப் பார்த்தால் இதுவே நடைமுறையில் அதிகபட்ச ஜனநாயகமாக இருக்கிறது என்பதையும், வெறும் ஜனநாயகத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் பல்வேறு அமைப்புகளை விட இதுவே சிறந்ததாக உள்ளது என்பதையும் பார்க்கிறோம்.  இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது கட்சிகள் எந்த வடிவத்தில் ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது என்பதை விட அவற்றின் நடைமுறையில் ஜனநாயக உள்ளடக்கம் எவ்வாறு உள்ளது என்பதேயாகும்.

கட்சி ஸ்தாபனம் குறித்த லெனினிய கோட்பாட்டில் தத்துவம் மற்றும் நடைமுறை குறித்து விவாதிப்பதற்கும் கருத்து கூறுவதற்கும் ஒரு குறிபிட்ட பகுதியினருக்கான உரிமை என்பதோ அல்லது உட்கட்சி விவாதங்களை புறக்கணிப்பது என்பதற்கோ இடமில்லை. லெனின் வார்த்தைகளில் கூறுவதானால்:

சண்டை உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பாட்டாளி வர்க்கத்தின் போர்ப்படை தனது ஒவ்வொரு நாடி நரம்பையும் போரில் வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எந்த விமர்சனத்தையும் அது எத்தகையதாக இருந்தாலும் அதனை எந்த மட்டத்திலும் அனுமதிக்க முடியாது.  அதே சமயம், நடவடிக்கைக்கு முன்பு, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பரந்துபட்ட மற்றும் எவ்வித தங்குதடையு மற்ற விவாதமும் தீர்மானங்கள் குறித்த சரியான கணிப்புகளும், அதற்கு சாதக பாதக வாதங்களும் பல்வேறு கோணங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது நெகிழ்வுத் தன்மையற்ற ஏட்டு சுரைக்காய் அல்ல.  ஜனநாயக மத்தியத்துவத்திற்கான விதிகளும். அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும், ஒரே நாட்டின் ஒரே கட்சியில் கூட அது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும்.  நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஜனநாயக மத்தியத்துவத்தில் ஜனநாயகமும் மத்தியத்துவமும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான விகிதாச்சாரத்தில் இருக்க முடியாது.   அது திட்ட வட்டமான சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு நாடு, அரசியல் சூழல், கட்சியின் பலம், அந்த கட்சியின் உறுப்பினர்களின் அரசியல் உணர்வு, கட்சி ஊழியர்களிடையே மேல்மட்டத் தலைமையின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை பொறுத்து அமையும்.  லெனினோடு பல விஷயங்களில் மாறுபட்ட டிராட்ஸ்கி, ஜனநாயக மத்தியத்துவத்தை ஆதரித்து கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்:

ஒரு அரசியல் நடவடிக்கையின் போது மத்தியத்துவம் ஜனநாயகத்தை தனக்கு கீழ்ப்பணிய வைக்கிறது.  நடைபெற்ற தனது நடவடிக்கைகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யும் போது ஜனநாயகம் மீண்டும் தனது உரிமைகளை நிலைநாட்டும்.  ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் ஆகிய இவை இரண்டிற்குமான சமன்பாடு; போராட்டம் நடைபெறும்போது நிலைநிறுத்தப்பெறும் சில சமயங்களில் இந்த விதி மீறல் நடைபெறும், உடனடி யாக சரியான விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அதைப்போலவே அரசியல் நிலைபாடு இறுதிப் படுத்துவதற்கு முன்பு ஜனநாயகம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.  அரசியல் நிலைபாடு அதிக பட்ச ஜனநாயகத்தோடு இறுதிபடுத்திய பின்பு அதை அமல்படுத்தும்போது மத்தியத்துவம் அமலுக்கு வருகிறது.

சி.பி.ஐ.(எம்) இதர கம்யூனிஸ்ட் கட்சி அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு முனைகிறது, அதிலும் குறிப்பாக வெற்றிகரமாக புரட்சி நடத்திய கட்சிகளிலிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறது.  சில கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவ நடைமுறை களை மீறியதன் விளைவாக அதற்கு இரையாகியுள்ளன.  ஒரு தலைவரை அளவுக்கதிகமாக முன்னிறுத்துவது கட்சியில் உட்கட்சி ஜனநாயகத்தை கைவிடுவதற்கு கொண்டு செல்கிறது.   சி.பி.ஐ.(எம்) வரலாற்றில் எந்த காலத்திலும் இத்தகைய திரிபால் பாதிக்கப்பட்ட தில்லை.  தலைமையின் கூட்டு செயல்பாடு, கட்சி அமைப்புகளின் கூட்டு செயல்பாடு ஆகியவை இத்தகைய திரிபிலிருந்து கட்சியை பாதுகாத்துள்ளது.

ஜனநாயக மத்தியத்துவத்தை பட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறையாகக் கொள்வது குறித்து முடிவு செய்வது நமது கட்சிதான்.  இது பரந்துபட்ட இடதுசாரி அணி அமைப்பதை தடை செய்யாது.  நாம் எப்படி இதர இடது சாரி கட்சிகளை ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாதோ அதே போன்று இதர கட்சிகளும் நம்மை ஜனநாயக மத்தியத்துத்தை நமது அமைப்பு கோட்பாடாக வைத்திருப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்த முடியாது.

நாம் சோசலிசத்திற்காக மாறிச் செல்லும் காலத்திலும்கூட அப்போது பல கட்சி முறை அமலில் இருக்கும்போதும், கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிப்பது அவசியமாகிறது.  உண்மையில் இதுவே நமது கட்சி இதர போக்குகள் மற்றும் சக்திகளிடமிருந்து மேன்மேலும் அதிகமான உழைக்கும் வர்க்கத்தை வென்றெடுத்து நமது அணிக்கு கொண்டுவரும் திறவுகோலாகும்.

அசோக் மித்ராவைப் பொறுத்தவரை அடிப்படையில் அவர் ஜனநாயக மத்தியத்துவத்தை நிராகரிக்கவில்லை.  அவருடைய விமர்சனமே மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ.(எம்) கட்சியில் உள்ள நடைமுறையைப் பற்றியது தான். அவர், மேற்கு வங்கத்தில் அளவுக்கதிகமான மத்தியத்துவமும் சிறு துண்டு துக்காணி ஜனநாயகமும் இன்றி செயல்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக கட்சி மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய சமயங்களில் அசோக் மித்ரா சி.பி.ஐ.(எம்) மற்றும் இடது முன்னணி அரசின் தொழிற் கொள்கையையும், நில ஆர்ஜிதக் கொள்கையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்  அவரைப் பொறுத்தவரை, நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தியதுதான் கட்சி மக்களிடமிருந்து அன்னியப்பட்ட தற்கான காரணம் என்கிறார்.

அவருடைய இந்த தனிப்பட்ட கருத்தை உண்மையென்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், ஜனநாயக மத்தியத்துவத்தை திரித்து நடைமுறைப்படுத்தியதோ அல்லது அதிகப்படியான மத்தியத்துவமோ பிரச்னைகளுக்கான காரணம் இல்லை என்று தெரிகிறது.  உண்மையில் அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், கடமையுணர்வும் கட்டுப்பாடும் மிக்க சி.பி.ஐ.(எம்)ன் ஊழியர்களே இந்த இயக்கத்தின் முதுகெலும்பாக மேற்கு வங்கத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.   தற்போது மேற்கு வங்கத்தில் சந்தித்துள்ள பின்னடைவிற்கான வித்துக்கள் அரசியல், ஸ்தாபன அமைப்பு மற்றும் அரசு ஆகிய மூன்று தளங்களிலும் உள்ளது.  கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரிசீலனை இந்த விஷயங்கள் மற்றும் நமது குறைபாடுகளை துல்லியமாக சுட்டிக் காட்டியுள்ளது.  ஆனால், அதிகப்படியான மத்தியத்துவம் இதற்கான காரணமில்லை.

III

ஜனநாயக மத்தியத்துவத்தின் கீழ் சித்தாந்தமும் நடைமுறையும்

பிரபாத் பட்நாயக் ஜனநாயக மத்தியத்துவத்தை கீழ்க்கண்ட வகையில் விமர்சனம் செய்கிறார்.   சித்தாந்தம் ஒரு இறுக மூடிய அமைப்பாக இருக்கிறது.  பொதுவான பார்வை என்னவென்றால் மார்க்சியம் என்ற சித்தாந்தம் மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டதை நாம் சுவீகரித்து அதனை நமது தேவைக்கேற்ப விளக்கம் அளித்து அமல்படுத்த வேண்டும்.

மார்க்சீய சித்தாந்தம் மேலும் மேலும் செழுமை பெற வேண்டுமானால் அது திறந்ததாகவும்,  மார்க்சியமல்லாத சித்தாந்தப் போக்குகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். சித்தாந்தம் என்பது தலைமையின் சொத்தாக இருக்கும் அதே பட்சத்தில் அதன் நடைமுறைப்படுத்தும் கடமை அணிகளை சேர்ந்ததாகும். இதுவே ஜனநாயக மத்தியத்துவத்திற்கு மிகப் பொருத்தமான அல்லது போற்றத்தக்க வடிவம் போன்றதாகும்.

தடையற்ற விஞ்ஞான பூர்வ விவாதங்கள் ஒரு புரட்சிகர கட்சிக்கு பிராண வாயு போன்றது.  இதன் அர்த்தம் இத்தகைய விவாதமின்றி அந்த புரட்சிகர அமைப்பு உயிர் வாழ முடியாது.  ஆனால், அத்தகைய வெளிப்படையான விவாதம் நடைபெற தேவைப்படுவது அறிவுப்பூர்வமான சுதந்திரம் மட்டுமல்ல, அதைத்தவிர பல்வேறுவகைப்பட்ட கருத்துகள்(அந்தக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலதரப்பட்ட அரசியல் இயக்கங்கள்) மற்றும் ஒரு புரட்சிகர கட்சியின் அமைப்பு சட்டத்தில் நடைமுறையாக கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை பற்றிய மறு வரையறை ஆகியவையுமாகும். 

பட்நாயக் சரியாக சுட்டிக் காட்டியுள்ளபடி சித்தாந்தம் ஒரு மூடப்பட்ட அமைப்பு அல்ல, தேவைப்படுவதெல்லாம் அதற்கான விளக்கமும், அதன் சரியான பிரயோகமும்தான்.  மார்க்சிய சிந்தனை தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மற்றும் தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அதற்காக அந்த சித்தாந்தம் திறந்ததாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், எதிர் கருத்துக்களையும், புதிய சூழ்நிலைமை களையும்,  இதர சிந்தனைகளையும்  எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அவர் சரியாக குறிப்பிட்ட மற்றொரு அம்சம் கடந்த காலங்களில் சித்தாந்தம் பற்றிய வறட்டுத் தனமான புரிதல் இருந்தது என்பதாகும்.

ஆனால், சித்தாந்தத்தைப் பற்றிய தவறான புரிதலோடு ஜனநாயக மத்தியத்துவத்தை இணைப்பது சரியல்ல.  சித்தாந்த விஷயங்கள் குறித்த விவாதங்கள் இல்லாமை மற்றும் சித்தாந்தத்தை வளர்த்தெடுக்காமல் விடுத்தது போன்றவை பட்நாயக் தெரிவித்தது போன்று வறட்டுதனமாக சித்தாந்தத்தை மூடியதாக புரிந்து கொண்டதால்தானேயொழிய ஜனநாயக மத்தியத்துவம் அமல்படுத்தியதால் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஜனநாயக மத்தியத்துவத்திற்குள் சித்தாந்தம், மற்றும் சிந்தாந்த விரிவாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

லூகாஸ் தெரிவித்தது போன்று அமைப்பு என்பது சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்குமான சமரசமாகும்.  ஏனெனில், ஒரு சித்தாந்தம் குறித்து பல்வேறு வகையான விளக்கங்களும், வியாக்கியானங்களும் அளித்தாலும், வாதிட்டாலும், நடைமுறை என்று வரும்போது, அது ஸ்தாபனம் என்ற வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.  இந்த இடத்தில்தான் சித்தாந்தத்தின் விளைவுகள் தெளிவு பெறுகிறது, சோதனைக்குட்படுகிறது.  பலதரப்பட்ட எதிரெதிரான பல்வேறு சித்தாந்தங்களும் அவற்றின் விளக்கங்களும் இருந்தாலும், அவற்றை ஒரு அமைப்பில் நடைமுறைப்படுத்தி பார்க்கும் போதுதான் சரியான முடிவிற்கும், திசைவழிக்கும் செல்லமுடியும்.  ஒரு சித்தாந்தம் சரியானதா என்றும், ஒரு அரசியல் நடைமுறைத் தந்திரம் சரியா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க எந்த சூழ்நிலைமைகளில் அந்த நடவடிக்கை முடிவு செய்யப்பட்டது அதன் அனுபவம் என்ன என்பதிலிருந்து முடிவு செய்யலாம்.  ஜனநாயக மத்தியத்துவம் அத்தகைய பரிசீலனை மற்றும் ஒருவரது அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதை தடைசெய்யவும் இல்லை, அதனை நிராகரிக்கவும் இல்லை.  உண்மையைச் சொல்லப்போனால், அது ஒரு பரந்துபட்ட வரைமுறைகளை அளித்துள்ளதால் அதன் வழியாக கட்சி முரணற்ற அரசியல் முடிவுகளையும், தத்துவார்த்த விஷயங்களில் தொடர்ச்சியும்,  நடைமுறை தந்திரத்தில் நெளிவு சுளிவும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

அனைத்து விதமான சித்தாந்த விஷயங்களும் தங்குதடையற்ற விவாதத்திற்கு உட்படுத்தவும், மற்றும் தொடர்ச்சியான மறு பரிசீலனைக்கு உட்படுத்தவும் வேண்டுமென்பது அவசியம். அதே சமயம், விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்ட அரசியல் முடிவுகளை அமுல்படுத்தும்போது  இதனை பிரயோகிக்க முடியாது.  கட்சி விவாதங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தும்போதா அல்லது அரசியல் முடிவுகளை அமல்படுத்தும்போதோ பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாது.  கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை என்பது எப்பொழுது எழுகின்றது என்றால் கட்சியின் முடிவுகளை தீர்மானிக்கும் விவாதங்களில் அல்ல, ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகளை ஒருமனதாக அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்த தவறும் போதுதான்.

IV

சமூக ஜனநாயகப் போக்குகள், ஜனநாயக மத்தியத்துவத்திற்கு சவால் விடுகிறது.

சீர்திருத்தவாத அரசியலான சமூக ஜனநாயக இயக்கப் போக்கிற்கும், ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிடும் போக்கிற்கும் உள்ள தொடர்பு நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவே ஜாவித் ஆலம் ஜனநாயக மத்தியத்துவத்தை தாக்கியுள்ளதில் வெளிப்படுகிறது. தாராள ஜனநாயகத்தை ஆதரிப்பது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் உழைப்பாளி வர்க்கம் பெற்றுள்ள உரிமைகள் குறித்த அவரது நடுநிலை சாராத பார்வை, முதலாளித்துவ ஜனநாயகம் குறித்து லெனின் தெரிவித்த கருத்துக்களை அவர் தவறாக விளக்கம் கொடுப்பது போன்றவைகள் அவர் மார்க்சிய நிலையிலிருந்து விலகிச்செல்வதற்கான அறிகுறிகளாகும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நுற்றாண்டின் முதல் பாதியிலும், அணிதிரட்டப்பட்ட உழைப்பாளி  வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை தவறான நிலையிலிருந்து பார்ப்பதில் ஆரம்பித்து, ஆலம், பல புதிய உரிமைப் பட்டியல் (உழைக்கும் வர்க்கத்திற்கு) வந்துவிட்டது மற்றும் அவை நிலைபெற்றும் விட்டது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உழைக்கும் வர்க்கம் உரிமைகள் பெற்றது என்பது; முதலாளித்துவ வர்க்கத்தின் வாய்ப்புரிமைகளை சுருங்கிவிட்டது இந்த நிகழ்வின் இயல்பென தெரிவிக்கிறார்.  உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டுகொள்ள ஆலம் மறுக்கிறார். 1980களில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும், தாராள மயக் கொள்கைகள் அமல்படுத்தத் தொடங்கிய பிறகு தொழிலாளர்களின் பிரிக்க முடியாத உரிமைகள் பலவற்றை இழந்து விட்டதையும் பிறகு இந்த நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதிலும் விஸ்தரிக்கப்பட்டது குறித்தும் புறக்கணித்துவிடுகிறார். ஏன் வேலை நிறுத்த உரிமையும் கூட்டுபேர உரிமையும் கூட பறிக்கப்பட்டுவிட்டது,  தாராள ஜனநாயகத்தில் தற்போது இருக்கும் ஒரே உரிமை வயது வந்தோருக்கான வாக்குரிமை மட்டுமே.

ஆலம், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள ஜனநாயகத்தில் அனைவரையும் தழுவும் உள்ளடக்கம் குறித்து அளவுக்கதிமாக மதிப்பிடுகிறார் அதே சமயம் அதன் வர்க்க குணாம்சம் குறித்து குறைத்து மதிப்பிடுகிறார். ஜனநாயகம் மற்றும் சமஉரிமை ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு வழங்கும் அதே நேரம் தாராள ஜனநாயகம் அந்த உரிமையை பறிக்கும் வகையில் அந்த உரிமையிலிருந்து பொருளாதார நடடிவக்கையை பிரித்து விடுகிறது.  ஜனநாயகம் என்பது சந்தைக்கும், மூலதனத்திற்கும் சேவகம் செய்வதால், அது பெயரளவிலேயே இருக்கிறது.

ஜாவித் ஆலம் சி.பி.ஐ.(எம்)ன் அரசியல் நிலைபாடுகளில் மாறுபட்டு நிற்கிறார்.  அவர் சி.பி.ஐ.(எம்) தலைமைக்கு முதலாளித்து வத்தால் தலைமை தாங்கி நடத்தப்படுகிற மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது என்ற நியாயமான சிந்தனை கூட இல்லாதது குறித்து வருத்தப்பட்டு இதற்கான காரணம் தவறான அரசியல் புரிதல் மற்றும் இரும்புக் கரத்தால் ஆன நடைமுறை தந்திரம், மற்றும் குருட்டுத்தனமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் மீது திணித்ததால்தான் என்று வாதிடுகிறார்.

இத்தகைய தவறான விமர்சனம் வேறு சிலராலும் செய்யப் பட்டுள்ளது.  ஒரு நடைமுறை யுக்தி தவறானதென கணித்தால் அதற்கான பழி ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது போடப்படுகிறது அல்லது அதன் தவறான செயல்பாட்டின் மீது சுமத்தப்படுகிறது.  உதாரணமாக ஜூலை 2008இல் எடுக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவு விலக்கிக் கொள்ள பட்ட முடிவு தவறென கணித்தால், உடனே இந்த தவறுக்கு காரணம் ஜனநாயகப் பூர்வமற்ற அதிகார மையம் நடைமுறையில் இருப்பதால்தான் நிகழ்கிறது என்று தெரிவிக்கின்றனர்.  அதேபோன்று மே.வங்க தேர்தலில் அடைந்த பின்னடைவை, அதிகாரவர்க்க தலைமை அணிகளி லிருந்து விலகி நின்றதால் நிகழ்ந்தது என்கின்றனர்.

சி.பி.ஐ (எம்) ஜனநாயக மத்தியத்துவம் என்ற சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தீவிரமாக உட்கட்சி விவாதங்கள் மூலம் நடைமுறை தந்திரம் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்கிறது.  உதாரணமாக, 1996ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை ஆகியோரது கருத்துக்கள் மத்தியக் குழுவில் முழுமையாக அலசி ஆராயப்பட்டது.  அதே முடிவு பின்னர் கட்சியின் 16வது காங்கிரசில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டது.  இதுவே கம்யூனிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் வழியாகும்.  கட்சி எடுக்கும் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகளை ஏற்காதவர்கள், அதற்காக அந்த முடிவுகளுக்கு காரணம் ஜனநாயக மத்தியத்துவம் என்று கோரமுடியாது.  அவர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை முடிவுகளுக்கு சிறுபான்மை  கட்டுப்பட வேண்டும் என்பதையும், அதனை அமல்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்க வெட்கப் படுகிறார்கள்.  இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஜனநாயக மத்தியத்துவம் விமர்சனங்களையும், மாறுபட்ட பார்வை ஆகியவற்றின் குரல்வளையையும் நெறிப்பதாக தேவையில்லாமல் குறிப்பிடுகின்றனர்.

நிறைவாக

ஒரு அமைப்பில் நடைமுறையில் உள்ள ஜனநாயக மத்தியத்துவத்தை  வறட்டுத் தத்துவமாக பார்க்கக் கூடாது.  ஜனநாயக மத்தியத்துவம் குறித்த கீழ்க்கண்ட விவரங்களை மனதில் கொள்ள வேண்டும்:

 1. ஒரு கட்சி புரட்சி என்ற யுத்த தந்திரத்தை அடிப்படை திட்டமாக ஏற்றுக் கொண்டிருக்கும் போது அதனுடைய நடைமுறைகளை புரட்சிகர யுத்த தந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், ஜனநாயக மத்தியத்துவம் அதன் (கட்சி) பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.
 2. தவறான தத்துவார்த்த புரிதல் மற்றும் தவறான யுத்த தந்திரம் மற்றும் நடைமுறைத் தந்திரம் ஒரு அமைப்பை கடுமையாக பாதிக்கும்.  அதன் விளைவாக அரசியல்-தத்துவார்த்த விலகல்கள் மற்றும் தவறான போக்குகள் ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறையையே அரித்து விடும்.
 3. ஜனநாயக மத்தியத்துவம் என்பது மார்க்சிய தத்துவ உலகப் பார்வையில் உள்ள கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக இருக்கும்.  ஆனால், அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து காலத்திற்கும் ஒரே சூத்திரம் என்பது இருக்க முடியாது.  அது ஒவ்வொரு கட்சியும் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தும் மாறும். ஓரே கட்சியில் பல்வேறு காலகட்டங்களிலும் மாறும்.
 4. ஜனநாயக மத்தியத்துவத்தில் ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் ஆகியவற்றின் கலப்பிற்கு எந்த ஒரு திட்டவட்ட மான விகிதாச்சாரமும் இருக்க முடியாது.  ஒரு கட்சி தனது கொள்கைகளை கட்சி மாநாடு போன்றவற்றில் முடிவு செய்யும் போது அங்கு ஜனநாயகம் முழுமையாக செயலில் இருக்கும்.  கட்சிக்குள் இருக்கும் அமைப்புகளில் தாராளமாக விவாதங்களில் ஈடுபடலாம்.  முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கை க்கான அழைப்பு விடுக்கப்பட்டபின் அங்கு மத்தியத்துவம் மேலோங்கி நிற்கும்.  செயல் முடிந்த பிறகு கட்சி தனது செயல் பாட்டை பரிசீலனைக்கு உட்படுத்தும்போது ஜனநாயகம் மீண்டும் தனது உரிமையை நிலைநாட்டும்.
 5. ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறை வழக்கமான கொள்கைகள் மற்றும் விதிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.  இது கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தரத்தின் அடிப்படையிலும், ஸ்தூலமான நிலைமைகள், மற்றும் நாட்டில் நிலவும் அரசியல் சூழல், தலைமையின் செல்வாக்கு, போராட்டங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் அமைப்பை கட்டுவது மற்றும் உட்கட்சி முரண்பாடுகளை சமாளிப்பது போன்றவற்றை சார்ந்து அமையும்.

இந்திய அனுபவம்:

ஜனநாயக மத்தியத்துவம்; கட்சி பல்வேறு கட்டங்களை கடந்துள்ளது.  ஆரம்ப காலங்களில், அரும்பிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தன்னை கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக பார்த்தது.  அன்றைய தினம் இருந்த அணுகுமுறை  தத்துவம் மற்றும் அரசியல் நடைமுறை போன்றவற்றில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முடிவே இறுதியானது என்பதாகும்.  இந்த அணுகுமுறை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொடர்ந்ததால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்  பார்வைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  இந்த அணுகுமுறையே தத்துவத்தை வளர்த்தெடுப்பதை தடைசெய்து, சரியான யுத்த தந்திரம் மற்றும் நடைமுறை தந்திரம் ஆகியவற்றை வகுக்க முடியாத நிலை ஏற்படுத்தியது.  சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாம் கட்டத்தில், திருத்தல்வாதம் மற்றும் அதிதீவிரவாதம் ஆகிய பிரச்னைகள் கட்சியின் ஸ்தாபன தளத்தில் தனது தாக்கத்தை ஏற்படுத்தின.  ஆனால், மொத்தத்தில் ஏறத்தாழ உட்கட்சி ஜனநாயகம் என்பது மறுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமாகும்.

சி.பி.ஐ.(எம்) உருவான பிறகு, ஒன்றுபட்ட கம்யு. கட்சியில் இருந்த ஸ்தாபன நடைமுறைகள் குறித்து விமர்சன ரீதியாக பரிசீலனை செய்யப்பட்டது.  கட்சி ஸ்தாபனத்தில் நமது கடமைகள் என்ற கட்சி ஆவணம் இத்தகைய விவாதம், மற்றும் பரிசீலனைகளின் விளைவே.  இந்த ஆவணம் கட்சியின் ஸ்தாபனத்தை கட்டுவது அதனை புரட்சிகரமாக நடத்துவது  போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது. இத்துடன் தொடர்புடைய ஒரு விஷயம் இந்த ஆவணத்தில் பல இடங்களில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் திருத்தல்வாதம், ஜனநாயக மத்தியத்துவம் என்ற கொள்கையை கடுமையாக சாடுகிறது என்பதாகும்: உயர்ந்த கொள்கையும், மார்க்சிய-லெனினிய கட்சியின் உயிர்நாடியுமான ஜனநாயக மத்தியத்துவம் ஆத்திரத்துடன் தாக்குதல்களுக்கு உள்ளானது மற்றும் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டது என்று அந்த ஆவணம் கூறுகிறது.

நமது கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற நடைமுறை எவ்வாறு வடிவம் பெற்றது? ரஷ்ய கட்சி அல்லது இதர கம்யு. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் எப்படி கடைபிடிக்கப்பட்டதோ அப்படியே காப்பியடிக்கப்பட்டதா?

சால்கியா பிளீனத்தில் சி.பி.ஐ.(எம்) ஒரு வெகுஜன புரட்சி கட்சியை உருவாக்க அழைப்பு விடுத்தது.  இந்த கட்சி அமைப்பானது ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளின் அடிப்படையில் கட்டப் பட வேண்டும்.  ஜனநாயக மத்தியத்துவம் இன்றி ஒரு வெகுஜன கட்சியை மட்டுமே கட்டலாம்.  ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்துவதில் குறைபாடுகள் மற்றும் வரைமுறைகள் இருந்த போதிலும், கட்சியின் அமைப்பு விதிகளில் உள்ளடங்கியுள்ள இந்தக் கொள்கைகளே, கட்சிக் கமிட்டிகள் கட்சியின் வெகுஜன செல்வாக்கை உருவாக்குவதற்கும் கட்சியின் ஓழுங்குமுறைக்கு உட்பட்டு பணிபுரிவதற்கு பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை தேர்வு செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.  இந்தியாவில் சி.பி.ஐ.(எம்) தவிர வேறு எந்தக் கட்சியிலும் இந்தளவிற்கு விரிவான அளவில் விவாதங்களும், உட்கட்சி ஜனநாயகமும் இல்லை.  ஜனநாயக மத்தியத்துவம் இருந்தும் கூட இது சாத்தியமானது என்று கூறுவது சரியல்ல. மாறாக, ஜனநாயக மத்தியத்துவம் இருந்ததால் தான் இந்த சிறப்பான உட்கட்சி ஜனநாயகம் சாத்தியமானது என்பதே சரியாகும்.

சி.பி.ஐ.(எம்) கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கெடுத்து வருகிறது.  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பங்கேற்பது மட்டுமல்லாது, மாநில அரசுகளையும் நடத்தி வருகிறது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மிக பரவலான அளவில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது.  ஜனநாயக மத்தியத்துவம் என்ற ஸ்தாபன நடைமுறை இந்த அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.  இந்த அமைப்புகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படும் ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்களுக்கு வழிகாட்டு வதற்கான பொதுவான வரையறை ஜனநாயக மத்தியத்துவத்திற்குள் உள்ளடங்கியுள்ளது.

கட்சியானது மிகவும் மாறுபட்ட பலவேறு சூழல்களில் பல மாநிலங்களில் பணியாற்றுகிறது.  மத்தியப்படுத்தப்பட்ட அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலகமிட்டிகளுக்கு தங்கள் மாநில நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்துக்கொள்ள போதுமான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மத்தியத்துவம் என்பதன் அர்த்தம் வெகுஜன இயக்கங்கள் கட்டுவது மற்றும் வெகுஜன அரங்கங்கள் கட்டுவது போன்றவற்றில் நடைமுறை உத்திகள் வகுப்பதில் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பதல்ல.  கட்சி மக்களுடனான தொடர்பை வெகுஜன ஸ்தாபனங்கள் மூலம் மட்டும் பராமரிப்பதில்லை தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள அதன் ஊழியர்கள் மூலம் பொறுப்பேற்கிறது. இந்த அமைப்புகளில் செயல்படுவது என்பது மையப்படுத்தப்பட்ட முறையால் மட்டும் சாத்தியமில்லை. வெகுஜன அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளில் செயல்படுவது என்கிற கட்சி ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜனநாயக ஈடுபாட்டின் மூலமும் நடைபெறுகிறது.

சி.பி.எம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அனுபவத்தை சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு பரிசீலனை செய்தது.  1992ஆம் ஆண்டு கட்சியின் 14வது காங்கிரசில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சறுக்கல்கள் பதிவு செய்யப்பட்டது. அதிகப்படியான மத்தியத்துவம், அதிகாரவர்க்க போக்கு, மற்றும் உட்கட்சி ஜனநாயகமின்மை ஆகியவை இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.

சித்தாந்த அளவிலும் நடைமுறையிலும் கண்டறியப்பட்ட தவறுகளில் ஒன்றாக குறிப்பிடுவது எதுவென்றால் ஜனநாயக மத்தியத்துவம் என்பதை கட்சியின் அமைப்பிற்கு நடைமுறையாக பயன்படுத்துவதற்கு பதிலாக சோவியத் யூனியன் அரசு அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.  ஜனநாயக மத்தியத்துவம் கம்யூனிஸ்ட கட்சிக்கு மட்டுமல்லாது சோவியத் அரசின் வழிகாட்டும் நடைமுறையாக ஆக்கப்பட்டது.  இதுவும் சோசலிச ஜனநாயகம் உருக்குலைவதற்கான பல காரணங்களில் ஒன்றாகும்.

சி.பி.ஐ.எம் சில தவறுகளை திருத்த நடவடிக்கை எடுத்தது. அவற்றில் சில:

 1. ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஸ்தாபனக் கோட்பா டாகும். இதனை அரசு அமைப்பிற்கு பொருத்த முடியாது.  1964ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்சிதிட்டத்தில் மக்கள் ஜனநாயக அரசு ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளின் அடிப்படையில் அமையும் என்றிருந்தது 2000 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் இது கைவிடப்பட்டது.
 2. உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.  மேல் கமிட்டிகள் கீழ் கமிட்டியின் செயலாளரை தேர்தெடுப்பதில் யார் பெயரையும் முன்மொழியக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.  புதிய கமிட்டியில் யார் யார் இடம் பெறுவது என்பதற்கான முன்மொழிவை பழைய கமிட்டியே முன் வைக்க வேண்டும்.
 3. போட்டியிருந்தால் தேர்தலில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 4. மத்திய கட்டுப்பாட்டுக் குழு கட்சி காங்கிரசால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  அது மத்தியக் கமிட்டியின் கமிஷனாக செயல்படக் கூடாது.  இதற்கான அமைப்பு விதிகள் திருத்தப்பட்டது.
 5. அனைத்து வெகுஜன ஸ்தாபனங்களின் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்த அனைத்து   பதவிகள் மற்றும் கமிட்டிகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட கட்சி கமிட்டிகள் முடிவு செய்யக் கூடாது.

இது சம்பந்தமாக சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் ஜாவித்; ஆலம் கட்சி கமிட்டிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார்.  அவர், உயர் கமிட்டி கீழ் கமிட்டிக்கான பொறுப்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியலை முன்மொழியும் என்று தெரிவித்துள்ளார்.  இது உண்மையல்ல.  புதிய பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை மாநாடுகளில் பழைய கமிட்டி முன்மொழியுமே தவிர மேல் கமிட்டி அல்ல.  மேலும் அவர் தேர்தல்கள் கையை உயர்த்துவதன் மூலமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  இதுவும் தவறான தகவல்.  முன்மொழியப்பட்ட பட்டியலுக்கு வெளியே யாராவது போட்டியிட விருப்பம் தெரிவித்தால் நடைபெறும் தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத்தான்.  பட்டியலுக்கு வெளியே யாருமே போட்டியிட விரும்பவில்லை என்கிற பட்சத்தில்தான் கையை உயர்த்தி வாக்கெடுப்பு நடைபெறும்.  இதிலும் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிக்கலாம், வாக்களிக்காமலும் இருக்கலாம்.

ஜனநாயக மத்தியத்துவம்; முறையாக அமலாவது என்பது கட்சி உறுப்பினர்களின் அரசியல்-தத்துவார்த்த தரத்தை சார்ந்தே அமைந்துள்ளது. இத்தரத்தில் குறைபாடு இருப்பின் அது ஜனநாயக பூர்வமான விவாதங்களிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் பங்கெடுப்பதிலும் ஊழியர்களின் பங்கேற்பை குறைக்கும். ஜனநாயக மத்தியத்துவத்தில் ஏற்படும் இதர மீறல்களுக்கு கட்சியில் ஸ்தாபன பிரச்னையான கோஷ்டி போக்கு, கூட்டு செயல்பாடின்மை, கட்சியில் பல்வேறு நிலைகளில் உள்ள தலைமையின் தவறான வழிமுறைகள், போன்றவை காரணங்களாக உள்ளன. இந்த தவறுகளை திருத்துவதும், களைவதும்தான் கட்சியை சரியான ஸ்தாபனக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்ட செய்யப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  கட்சியில் உள்ள இத்தகைய பிரச்னைகளை களைந்து ஜனநாயக மத்தியத்துவம் பலப்படவும் அந்த நடைமுறையில் உள்ள மீறல்களை சரி செய்யவும் தற்போது நெறிப்படுத்தும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் செயல்படும்  சிபிஐ(எம்); ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஏனெனில் புரட்சிகரமான நோக்கமான மக்கள் ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தை விட உயர்ந்த வடிவத்தை கொண்டது என்ற அடிப்படையில் அதற்காகப் போராடுகிறது. இதை சாத்தியமாக்குவதற்கான ஒரே வழி முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான்.

சிபிஐ (எம்) கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் மீறப்பட்டால், மற்றும் முறையாக நடைமுறைப்படுத்தாவிட்டால், அதன் விளைவு இந்த கட்சியானது உழைக்கும் வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களை தலைமை ஏற்று சமூக மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கட்சியாக வளர்வது நிறைவேறாது. கூடுதல் கவனத்துடன் அனைத்து விதமான தவறான புரிதல்; மற்றும் ஜனநாயக மத்தியத்துவம் தவறாக செயல்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை கட்சியின் தவிர்க்கக்கூடாத கடமைகளாகும்.

லெனின் அரசியலை கட்சி ஸ்தாபனத்திலிருந்து இயந்திரத் தனமாக பிரிக்க முடியாது என்றார்.   ஜனநாயக மத்தியத்துவத்தின் விமர்சகர்கள் மற்றும் சிபிஐ (எம்) இந்த நடைமுறையினை கைவிட வேண்டும் என்று கோருபவர்கள் அறிந்தோ அறியாமலோ கட்சியின் அடிப்படை குணாம்சத்தையும் போர்த்தந்திரத்தையும கைவிட வேண்டும் என்று கேட்கின்றனர்.  சி.பி.ஐ. (எம்)-ஐ பொறுத்தவரை தேர்வு தெளிவாக உள்ளது.  வெகுஜன புரட்சிகர கட்சிகள் எதுவும் ஜனநாயக மத்தியத்துவம் இன்றி இருக்க முடியாது என்பதே அது.  ஜனநாயக மத்தியத்துவத்தின் உண்மையான சாரத்தையும், உணர்வையும் ஓட்டுமொத்தக் கட்சி அணிகளின் உணர்வாக மாற்றுவதற்கானப் போராட்டத்தில் கட்சி தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை. நமது கட்சி உட்பட, உலகம் முழுவதும் உள்ள மார்க்சிய – லெனினிய கட்சியின் உயிர் வாழ்க்கைக்கும், அதன் அடிப்படையான செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்குவது உட்கட்சி ஜனநாயகமே! இத்தகைய ஜனநாயக அடித்தளத்திற்கு உயிராதாரமாக விளங்குவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு. கட்சியின் ஸ்தாபன ரீதியான செயல் பாட்டிற்கு மைய சிந்தனையாக விளங்குவதே ஜனநாயக மத்தியத் துவம். இக்கோட்பாட்டைப் பற்றி கூறும்போது, ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அம்சமாக வர்ணிக்கப்படுகிறது; கூட்டுத் தலைமை, கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாடு என இதன் பரிமாணம் விரிந்து – பரந்துச் செல்கிறது. சுருக்கமாக, செயலில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் என்பது இதன் முக்கியக் கருவாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அமைப்புச் சட்டத்தில் 13 வது பிரிவு, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு குறித்து விரிவாக விளக்குகிறது. இந்தப் பிரிவில் அமைந்துள்ள வழிகாட் டலின் அடிப்படையில்தான், நமது கட்சியின் கிளை முதல் மத்தியக்குழு வரை உள்ள ஸ்தாபன செயல்பாடுகள் அமைந்துள்ளது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்சியின் 17 வது மற்றும் 18 வது அகில இந்திய மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு, வழிகாட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் உருவாக்கம்

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் வழிகாட்டியாக திகழும் லெனின், இக்கோட்பாட்டை உருவாக்கு வதில் முன்னணியில் நின்றார். இக்கோட்பாட்டையும், புரட்சிகர கட்சி அமைப்பு விதிகளையும் உருவாக்குவதற்காக, ரஷ்ய சமூக ஜனநாயக கட்சிக்குள் பொருளாதாரவாதிகள், பண்டிஸ்டுகள் மற்றும் கட்சிக்குள் ஒளிந்து கொண்டிருந்த பல்வேறு சந்தர்ப்பவா திகளுடன் பல்லாண்டுகாலம் பெரும் விவாதங்கள் நடைபெற்றது. இவைகள் குறித்து லெனின் அக்காலத்தில் நடைபெற்ற விவாதங் களைத் தொகுத்து, ஓரடி முன்னால் ஈரடி பின்னால், என்ன செய்ய வேண்டும் போன்ற புத்தகங்களில் விரிவாக விளக்கியுள்ளார். இக்கோட்பாடு குறித்து லெனின் கூறும் போது,

கட்சிக்குள் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் உறுதிப் படுத்தவல்ல ஜனநாயக மத்தியத்துவக்கோட்பாடுகளே கட்சி அமைப்பிலும் செயல்பாட்டிலும் ஏற்கத்தக்க கொள்கை என்று உறுதியாக வாதிட்டார். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சிக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதுபோன்றே கட்சி தமது ஒவ்வொரு உறுப்பினருக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டது (லெனின் போராட்ட வாழ்க்கையில் சில ஏடுகள், யூரி அக்சுயுதின் – பக்கம் 28)

இதேபோல், சீனப் புரட்சியின் போது மாவோ ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டிற்கு பெரும் அழுத்தம் கொடுத்தார். கட்சி மாநாடுகளில் இதன் முக்கியத்துவத்தை விளக்கி நீண்ட உரையாற்றியி ருக்கிறார். குறிப்பாக, ஜனநாயக மத்தியத்துவத்தில் முதன்மையா னதும், அடிப்படையானதும் ஜனநாயகம் என்றும், அதைத் தொடர்ந்தே மத்தியத்துவம் என்று விளக்கியுள்ளார். கட்சிக்குள் உண்மையான ஜனநாயகம் நிலவவில்லையென்றால் மத்தியத்துவம் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று கூறுவதோடு, கட்சிக்குள் விமர்சனம் – சுயவிமர்சனத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக மத்தியத்துவம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஜனநாயகத்தின் உயிர் நாடி

ஜனநாயகம் என்று சொல்லும் போது அதனை வெறும் எண்ணிக்கை விளையாட்டு என்று கூறுவார்கள். இதில் எண்ணிக் கையை வைத்தே வெற்றி, தோல்விகள் அளவிடப்படுகிறது. ஆனால், புரட்சிகர தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியில், ஜனநாயகம் என்பதற்கு, எண்ணிக்கை என்பதற்கும் மேலான அந்தஸ்து வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட கொள்கை விஷயத்தில் (தத்துவார்த்த, அரசியல் மற்றும் ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட) கட்சிக்குள் கமிட்டிகள் அல்லது மாநாடுகளில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களும் தீவிரமான விவாதத்தை நடத்துவதற்கு முழுமையான சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பலவித கருத்துக்களை பகிரங்கமாக எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதே சமயம், அந்த குறிப்பிட்ட கொள்கை விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு, பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு, அதுவே கட்சியின் கொள்கையாக அறிவிக்கப்படுகிறது. அத்தகைய கொள்கையை சிறுபான்மை கருத்துடைய உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அமலாக்கிட வேண்டும். இங்கே ஒரு கொள்கை உருவாக்கத்தில் பலவிதமான கருத்துக்கள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு பின்னர் எடுக்கப்படும் முடிவு கட்சியின் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவாகிறது. இத்தகைய முடிவுகள் மாநாட்டிலோ அல்லது மேல் கமிட்டியிலோ எடுக்கப்பட்டால் கீழ் கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர் களும் அதற்கு கட்டுப்பட்டவர்கள். அதனை முழுமையாக அமலாக்க கடமைப்பட்டவர்கள். இங்குதான் மத்தியத்துவம் வருகிறது. மத்தியத்துவம் என்று சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போல், கட்சி முழுவதும் கருத்து வித்தியாசமின்றி கொள்கையை கடைபிடிப்ப தோடு, அதனை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். இதனைத்தான் லெனின், செயலில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் என வர்ணிக்கிறார்.

குறிப்பாக நமது கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும் அரசியல் – ஸ்தாபனத் தீர்மானங்கள் அனைத்தும், மாநாட்டிற்கு முன் அதற்கான நகல் தயாரிக்கப்பட்டு அனைத்து கிளைகளுக்கும் சுற்றுக்கு விடப்படுகிறது. இத்தகைய விவாதத்தில் கட்சியின் அனைத்து மட்ட உறுப்பினர்களும் சுதந்திரமாக விவாதிப்பதற்கும், அதன் மீது கருத்து சொல்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வரக்கூடிய கருத்துக்களையும், மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பரிசீலித்து பின்னர் மாநாட்டில் அரசியல் – ஸ்தாபன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு நிறைவேற்றப்படும் அரசியல் – ஸ்தாபனத் தீர்மானங்கள் அடுத்து வரக்கூடிய மாநாடுகள் வரை  கட்சியின் வழிகாட்டும் நெறியாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய கூட்டு முடிவுகளை, கட்சியின் மேல் கமிட்டி ஒருங்கே அமலாக்கிட வேண்டும். இதில் கறாரான மத்தியத்துவத்தை கட்சி கமிட்டிகள் கடைபிடிக்க வேண்டும். அதாவது, மாநாட்டு முடிவுகளில் இருந்து மாறுபட்டு நிற்பதையோ, அல்லது செயல்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. இதுதான் மத்தியத்துவத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.

அதேபோல், கட்சியின் அனைத்து மட்டத்திற்குமான கமிட்டிகள் மாநாடுகளிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறது. கட்சி கமிட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பட்டியல் பகிரங்க மாக மாநாடுகளில் முன்வைக்கப்பட்டு, அதில் போட்டியிருந்தால் அதனை அனுமதித்து, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டிகள் அடுத்த மாநாடு வரை கட்சியின் கொள்கைகளை அமலாக்குவதற்கு தலைமை தாங்கும். கட்சி கமிட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களை கூட்டுச் செயல்பாட்டிற்கு உட்படுத்திக் கொண்டு, கட்சியை ஜனநாயக ரீதியாக வழிநடத்திச் செல்ல வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைகளை அமலாக்குவதற்கும், ஜனநாயக ரீதியாக கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் கடமைப்பட்டவர்கள்.

மத்தியத்துவம்

மத்தியத்துவம் என்று சொல்லும் போது, புரட்சிகர அரசியல் கட்சியின் திட்டம், தத்துவார்த்தம் மற்றும் கொள்கைகளில் மேலிருந்து கீழ் வரை ஒரே நூலில் கட்டப்பட்டது போல், கட்சி முழுமைக்கும் சிந்தனையில் மத்தியத்துவம் நிலவ வேண்டும். நம்முடைய தத்துவார்த்த அடித்தளமே கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பேராயுதமாகும். புரட்சிகர அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் தோழர்களை ஜனநாயக ரீதியாக கீழிருந்து தேர்ந்தெடுக்கிறோம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைமை கூட்டுத் தலைமை – கூட்டுச் செயல்பாடு –  தனிநபர் பொறுப்பு என்ற உன்னதமான கடமைகளை உள்ளடக்கியது. எனவே, கட்சித் தலைமை ஜனநாயக ரீதியாக விவாதித்து எடுக்கும் முடிவுகளுக்கு நம்மை நாம் உட்படுத்திக்கொள்வதோடு, அவற்றை செயலாக்கி டவும் வேண்டும். இத்தயை அமலாக்கத்தில் மத்தியத்துவம் நிலவ வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் ஜனநாயகத்தின் அடிப்படையில் மத்தியத்துவப்படுத்தப் பட்டதும், மத்தியத் துவப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலில் உள்ள ஜனநாயகமும்  இணைந்து இயங்க வேண்டும் என மாவோ விளக்குகிறார். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் இத்தகைய உயிரோட்டமான அம்சங்களை தொழிலாளி வர்க்க கட்சி பற்றிக் கொள்ள வேண்டும்.

விமர்சனம் – சுய விமர்சனம்

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் மற்றொரு முக்கியமான அம்சம் விமர்சனம் – சுயவிமர்சனம். இது குறித்து நமது கட்சியின் 13 வது பிரிவு 2 – ஈ கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறது.

மேலிருந்து கீழ் வரை எல்லா மட்டங்களிலும் விமர்சனத்தையும், சுய விமர்சனத்தையும் குறிப்பாக கீழிருந்து வரும் விமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும் இது குறித்து லெனின், விவாதிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை என்பதை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை என வலியுறுத்துகிறார்.

(லெ.தொ.நூ. 11.320)

கட்சி கமிட்டிகள் மற்றும் கிளைகளின் செயல்பாட்டிற்கும் உயிரோட்டமான ஒற்றுமைக்கும் அடிப்படையாக அமைவது விமர்சனம் – சுயவிமர்சனம். உறுப்பினர்களின் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை உத்திரவாதப்படுத்துவதற்கும், நம்பிக்கைபூர்வமான – இணக்கமான செயல்பாட்டை உருவாக்குவதற்கும் கமிட்டிகளில் மனம் திறந்த விமர்சனத்திற்கும், சுய விமர்சனத்திற்கும் இடமளிக்க வேண்டும். அதே சமயம், விமர்சிப்பது என்ற பெயரில் சக தோழர்களின் மனதை அல்லது செயல்பாட்டை ஊனப்படுத்துவதாக அமையக்கூடாது. மேலும் தலைமை தாங்கும் தோழர்கள், வரக்கூடிய விமர்சனங்களுக்கு பக்குவமாக காதுகொடுத்து கேட்பதோடு, பதிலுக்கு, பதில் என்ற பாணியில் எதிரும், புதிருமாக விமர்சிக்கக்கூடாது. மாறாக அவர்களது சந்தேகங்களுக்கும், கருத்துக்களுக்கும், கட்சி நிலையில் நின்று விளக்கமளிக்க வேண்டும். கமிட்டிகளில் முழுமையான விமர்சனத்தை சுதந்திரமாக அனுமதிப்பதும், சுயவிமர்சனத்தை ஊக்குவிப்பதுமே கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் களையப்பட்டு செயல்பாட்டில் ஒருமித்த செயல் ஒற்றுமை ஏற்படும். மேலும். கட்சி கமிட்டிக்குள் சுதந்திரமான விமர்சனத்தை மேற்கொள்ளத் தவறுவது, கட்சிக்கு தலைமை தாங்குபவர்களை அதிகாரவர்க்க நிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும். கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே விவாதிக்காமல், வெளியில் விவாதிப்பது, விமர்சிப்பது போன்ற செயல்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதில் போய் முடியும். மேலும், கட்சி கமிட்டிகள் கீழிருந்து வரும் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, தங்களது தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு தயங்கக்கூடாது. இது குறித்து லெனின் இவ்வாறு விளக்குகிறார்.

ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைத் தீர ஆராய்வது – இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும் (லெ. தொ. நூ. 31.57)

விமர்சனம் – சுயவிமர்சனத்தை எதிர்கொள்ளும் போது கம்யூனிஸ்ட் டுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து மாவோ கூறியதை பார்ப்போம். எது சரியானதோ அதனை உடனடியாக பற்றிக் கொள்ளவும், எந்த நேரத்திலும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், எது சரி, எது தவறு – நாம் மக்களுக்குள்ளே இருக்கும் முரண் பாடுகளுக்கிடையேதான் வேலை செய்கிறோம். இந்த முரண்பாடுகளை தீர்க்க திட்டுவது, தாக்குவது அல்லது கத்தி, துப்பாக்கியை எடுப்பதன் மூலம் அல்ல; இதற்கு இருக்கும் ஒரே வழி விவாதித்தல், விமர்சிப்பது, சுயவிமர்சனம் செய்வது, காரணத்தை அறிவது. அதன் மூலம் மட்டுமே முரண்பாடுகளை தீர்க்க முடியும். சுருக்கமாக, ஜனநாயக வழியில் தீர்க்க முயல வேண்டும் அத்துடன், கட்சிக்கு உள்ளும், வெளியிலும் முழுமையான ஜனநாயக நெறியை கைக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் நேர்மையான ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், விமர்சனம் – சுயவிமர்சனம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் முக்கிய பாத்திரத்தை வகித்த லீயூ சோஷி அதன் முக்கியத்துவத்தை மிக விரிவாக விளக்குகிறார்.

மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு பிரச்சினைகளை எப்படி விளக்குவது என்று தெரியாது. அதே சமயம் அவர்களின் அனுபவத்தில் கற்றதை வைத்து பல்வேறு கருத்துக் களை வெளிப்படுத்துவார்கள். இத்தகைய சூழலில், ஜனநாயகம் நிலவவில்லையென்றால், அவர்கள் தங்களுக்கு இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன்வர மாட்டார்கள். ஆகவே நாம் ஜனநாயகம் என்ற உயிர்நாதத்தை எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.

கட்சி கமிட்டிகளில் விமர்சனம் – சுயவிமர்சனத்தின் மூலம் மட்டுமே சிறந்த கருத்துக்களை கண்டெடுக்க முடியும். இதுதான் கூட்டுத் தலைமைக்கும், கூட்டுச் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமையும். எனவே ஜனநாயக மத்தியத்துவத்தின் இத்தகைய உயிரம் சத்தை கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.

ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் முக்கிய அம்சமான விமர்சனம் – சுயவிமர்சனம் என்ற கலையை கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் நன்கு பயில்வதோடு, கமிட்டிகளில் அதனை சிறப்பாக அமலாக்கிடவேண்டும். குறிப்பாக இதன் மூலமே ஒரு ஆரோக்கியமான – ஜனநாயக ரீதியான அமைப்பினை வளர்த்தெடுக்க முடியும்.

நெறிப்படுத்தும் இயக்கம்

கட்சிக்குள் எழும் பல்வேறு விதமான தவறான போக்குகள் மற்றும் சிந்தனைகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். குறிப்பாக அதிகாரவர்க்கப்போக்கு, தன்னிச்சைப்போக்கு, கோஷ்டிமனப்பான்மை மற்றும் கம்யூனிச விரோத சிந்தனைகளுக்கு எதிராக இத்தகைய இயக்கத்தை நாம் நடத்திச் செல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை சரியாகக் கையாளாததால் ஏற்படும் கோளாறுகளே மேற்கண்ட சீரழிவு அம்சங்கள். எனவே, கட்சி உறுப்பினர்களுக்கு ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு குறித்தும், கம்யூனிச நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் தொடர்ச்சியாக பயிற்றுவிக்க வேண்டும். இத்தகைய போராட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி 1942 – 45 காலகட்டங்களில் தீவிரமாக நடத்தியது. இது குறித்து மாவோ கூறும் போது, இது ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு, தீவிரமான தேடுதலைக் கொண்டது. தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அதிலிருந்து கற்றுக் கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ளவும், சரியான திசைவழியை நோக்கிச் செல்லவும், ஒவ்வொருவரும் தங்கள் தவறுகளை சரி செய்துக்கொள்ளவும் உதவின.

மேலும், ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து இது நடத்தப்பட்டது. இத்தகைய நெறிப்படுத்தும் இயக்கம் கட்சி முழுமைக்கும் உள்ள தோழர்களுக்கு பேருதவியாக இருந்ததோடு, ஜனநாயக புரட்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, கட்சியின் நிலைபாடு களையும், கொள்கைகளையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு நெறிப்படுத்தும் இயக்கம் பயன்பட்டது.

நம்முடைய கட்சியின் 17 வது அகில இந்திய மாநாடு, நமது கட்சிக்குள்ளும் ஒரு நெறிப்படுத்தும் இயக்கத்தை தீவிரமாக நடத்திட வேண்டும் என்று பணித்தது. அதன் விளைவாக 1996 இல் மத்தியக்குழு நெறிப்படுத்தும் இயக்கத்திற்கான ஒரு ஆவணத்தை தயாரித்து நிறைவேற்றியது. அதன் முக்கியத்துவத்தை மத்தியக்குழு இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.

கட்சியின் புரட்சிகரத் தன்மையைப் பலப்படுத்தவும், புதுத் தெம்பூட்டவும் நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை மத்தியக்குழு கோடிட்டுக்காட்டியது. இந்த உணர்வோடுதான் இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றல்மிகு படைக்கலனாகக் கட்சியை வடிவமைப்பதற்கும், கட்சி ஒற்றுமையை பலப்படுத்துவதற்குமான பரந்த நோக்கத்திற்காக, பலவீனங் களையும், தவறுகளையும் கண்டறிந்து களைய வேண்டும். இந்த இயக்கத்தின் இலக்கு இதுதான் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்; கட்சிக்குள் பழி தீர்த்துக் கொள்வதற்கோ, புழுதிவாரி இறைப்பதற்கோ இதைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

மேலும், இந்த நெறிப்படுத்தும் ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டினை நிலை நிறுத்தவும், கட்சிக்குள் ஊடுருவியுள்ள தறவான போக்குகளுக்கு எதிராகப் போராடுவதோடு, அவற்றை நெறிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

பல்வேறு மட்டங்களில் கூட்டுச் செயல்பாடு இருப்பதில்லை. மாறாக, கோஷ்டிப் போக்கு, பதவிமோகப் போக்கு, தன்னிச்சைப் போக்கு ஆகிய ஆரோக்கியமற்ற போக்குகள் கவலையளிக்கும் விதத்தில் வளர்ந்துள்ளன.

மேலும், நெறிப்படுத்தும் இயக்கத்தை மேலேயிருந்து, தலைமை தாங்கும் குழுக்களிலிருந்து தொடங்கப்படவேண்டும் என நெறிப்படுத்தும் ஆவணம் நமக்கு வழிகாட்டுகிறது.
நம்முடைய கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு, ஜனநாயக மத்தியத்துவ செயல்பாடு என்பது தொடர்ச்சியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதால் அது குறித்து அவ்வப்போது பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு, கம்யூனிச நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கும், கட்சிக் கிளைகள் மற்றும் கமிட்டிச் செயல்பாடுகளில் ஜனநாயக மத்தியத்துவத்தில் ஏற்படும் ஊனங்களை சரிப்படுத்துவதற்குமான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் டுகளாகிய நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும்.

கட்சிக் கல்வியும் ஜனநாயக மத்தியத்துவமும்

கட்சிக்குள் உயிரோட்டமான ஜனநாயகத்தை நிலைநாட்டிட வேண்டும் என்றால், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்தா பனம் சம்பந்தப்பட்ட கட்சிக் கல்வியை தொடர்ந்து அளிக்க வேண்டும். புதிதாக வரக்கூடிய உறுப்பினர்களுக்கு கட்சியின் விதிமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை அளிப்பதன் மூலம்தான் அவர்கள் செயல்படும் கமிட்டிகளில் ஆரோக்கியமான, ஜனநாயகப்பூர்வமான பங் களிப்பை ஆற்ற முடியும். இது குறித்து நம்முடைய கட்சியின் 18 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் – ஸ்தாபன அறிக்கை கீழ்க்கண்ட வாறு சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடுகளை செயல்படுத்த புதிய கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. புதிய கட்சி உறுப்பினர்களை பயிற்றுவிப்பதில் தொடர்ந்து காணப் படும் பலவீனமே தவறான ஸ்தாபன நடைமுறைகளுக்கும், ஜனநாயக மத்தியத்துவம் மீறப்படுவதற்குமான முக்கிய காரண மாகும். அதேபோல் மாவோ, ஜனநாயக மத்தியத்துவம் குறித்த கட்சிக் கல்வியின் அவசியம் குறித்து இவ்வாறு விளக்குகிறார்.

ஜனநாயகம் பற்றிய கல்வி கட்சிக்குள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், ஜனநாயக வாழ்வு என்பதன் பொருளை, ஜனநாயகத்துக்கும், மத்தியத்துவத்துக்கும் இடையே உள்ள உறவுக்குரிய பொருளை, எந்த முறையில் ஜனநாயக மத்தியத்துவம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வழியில்தான் நம்மால் உண்மையிலேயே கட்சிக்குள் ஜனநாய கத்தை விரிவுபடுத்த முடியும். அதே சமயம் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் அதிதீவிர ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தவிர்க்கவும் முடியும் (மா.தொ.நூ. 2.205)

கிளைச் செயல்பாடும் – அதிகார வர்க்கப் போக்கும்

கட்சிக் கிளைகளே கட்சியின் ஆதாரத் தூண்களாகும். கட்சியின் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது கட்சிக் கிளைகளின் ஆரோக்கியமான செயல்பாடுகளே. வெகுஜனங்க ளோடு உயிரோட்டமான தொடர்புடைய கட்சி கிளைகளுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும். மேலும், கிளைக் கூட்டங்களில் தோழமைப்பூர்வமான, மனம் திறந்த முறையிலான கலந்துரையாடலை உருவாக்கிட வேண்டும். கீழ்மட்ட அளவில் ஜனநாயக ரீதியான செயல்பாட்டுக்கும், விமர்சன சுதந்திரத்திற்கும் உத்தரவாதப்படுத்தவேண்டும். மேலும், உயிரோட் டமான கிளைச் செயல்பாடுகளே அதிகாரவர்க்கம் மற்றும் தன்னிச்சைப் போக்குகளுக்கு எதிரான அச்சாணியாகும். இதுமட்டுமின்றி கிளைக் கூட்டங்களில் மேல் கமிட்டி முடிவுகள் மீது சுதந்திரமாக கருத்துச் சொல்வதற்கும், விவாதிப்பதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கிளையிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு மதிப்பளிப்பதோடு, இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் கட்சிக் கமிட்டிகள், கிளை கூடுதவதற்கும், விவாதிப்பதற்கும், சுயேச்சையான செயல்பாடுகளுக்கும் முக்கியத் துவம் அளித்து வழிகாட்ட வேண்டும். இத்தகைய ஆரோக்கியமான செயல்பாடுகளே நம்முடைய கட்சியை அதிகாரவர்க்கப் போக்கிற்கு இட்டுச் செல்லும் ஆபத்திலிருந்து காப்பாற்றும். இது குறித்து நமது கட்சியின் 17 வது அகில இந்திய மாநாடு கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறது.

கட்சிக் கிளைகள் முறையாக செயல்படாத நிலையிலும், பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் தங்களது குறைந்தபட்ச பொறுப்புகளை நிறைவேற்றாத நிலையிலும், ஜனநாயக மத்தியத் துவம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. இத்தகைய சூழல், தனிநபர் வாதம், அதிகார வர்க்க மனோபாவம், கோஷ்டி மனோபாவம் ஆகியவை வளர்வதற்கு வாய்ப்பாக உள்ளது.

கட்சிக் கமிட்டிகளுக்கு தலைமை தாங்கும் தோழர்களை உயர் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும் போது, கட்சியில் அவர்களது அனுபவம், பயிற்சி போன்றவற்றை கணக்கில் கொண்டே மேல் கமிட்டிகளுக்கு உயர்த்த வேண்டும். பயிற்சி பெறாத ஊழியர்களை உயர் பொறுப்புகளுக்கு உயர்த்தும் போது, ஜனநாயக நடைமுறைக்கு மரணக்குழி தோண்டப்படுகிறது. அதாவது, கீழிருந்து வரும் விமர்சனங்களை சரியாக கையாளுவதற்கும், அவர்களது சந்தேகங் கள் மற்றும் நடைமுறை வேலைகளில் வழிகாட்டுவதற்கும் சரியான பயிற்சி  பெறவில்லையென்றால், கூட்டுச் செயல்பாடு, கூட்டு விவாதம், விமர்சனம் – சுயவிமர்சனம் போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டு அத்தகைய தோழர்கள் தன்னிச்சைப்போக்கு மற்றும் அதிகார வர்க்க மனோபாவத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இது குறித்தும் நம்முடைய 17 வது அகில இந்திய மாநாடு பின்வருமாறு எச்சரிக்கிறது.
சில இடங்களில் தகுதியற்ற நபர்களை கட்சியில் சேர்த்து, தங்களது கோஷ்டியினர் பலத்தை அதிகப்படுத்தும் போக்கு உள்ளது. கோஷ்டிப் பூசலில் ஒரு சில இடங்களில் ஆதரவினைப் பெறும் பொருட்டு, ஒரு சில தோழர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதே கிடையாது. ஒரு சில இடங்களில் கட்சி கமிட்டிகளே கோஷ்டியாக பிளவுபட்டு இருக்கிறது.

கட்சியின் உயிரோட்டமான செயல்பாட்டிற்கும் – ஜனநாயகப் பூர்வமான நீரோட்டத்திற்கும், ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாட்டை முழுமையாக அமலாக்குவதற்கு கிளைச் செயல்பாடுகளை முழுமையாக்குவதற்கும் உத்திரவாதப்படுத்திட வேண்டும். கட்சிக் கிளைகளில் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாதிப்பது, கட்சிக் கிளைச் செயல்பாட்டில் திறனை வளர்த்துக் கொள்ளவும், அடுத்தடுத்து வேலைகளில் உயிரோட்டமாக ஈடுபடுவதற்கும் இட்டுச் செல்லும். அதேபோல், கட்சிப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும்போது உரிய பயிற்சி பெற்ற, தகுதியான தோழர்களை தயங்காமல் பொறுப்புகளுக்குக் கொண்டு வரவேண்டும்.

இதுமட்டுமின்றி, நமது கட்சிக்குள் இளம் தோழர்களை பொறுப்புகளுக்கு கொண்டு வருவது குறித்து செப்டம்பர் 2006இல் நடைபெற்ற நம்முடைய மத்தியக்குழுத் தீர்மானம் மிகத் தெளிவான வழிகாட்டலை அளித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து மட்டங்களிலும் அதிக அளவில் இளம் ஊழியர்களை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பிட்ட பணிகளை அவர்களுக்கு ஒதுக்கி, அவர்களின் பணிகளை முறைப்படுத்த வேண்டும். அவர்களின் திறமையினை அளவுகோளாகக் கொண்டு, அவர்களை மேல்மட்டத்துக்கு உயர்த்த வேண்டும். அடிப்படை வர்க்கங்கள், மாதர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினர் மத்தியிலிருந்து ஊழியர்களை கொண்டு வர போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இறுதியாக, மார்க்சிய – லெனினிய அடிப்படையில், ஒரு புரட்சிகர வெகுஜன கட்சியை கட்டுவதன் மூலம், நாம் நிச்சயித்துள்ள மக்கள் ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவதற்கு, ஆரோக்கியமான – உயிரோட்டமான கட்சி செயல்பாட்டிற்கு உத்திரவாதப்படுத்த வேண்டும். இத்தகைய கட்சி செயல்பாட்டை உத்திரவாதப்படுத்து வதற்கு உட்கட்சி ஜனநாயகமான, ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாட்டை அதன் சரியான அளவில் புரிந்து கொண்டு, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அதனை அமலாக்கிடவும், செயல்படுத்தவும் விடாப்பிடியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை அனைத்து மட்டத்திலும் துவக்கிட வேண்டும். கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாட்டை உத்திரவாதப்படுத்தும், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை வளர்த்தெடுப்பதும், வளப்படுத்துவதும் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளிலேயே உள்ளது.

உதவிய நூல்கள்

 1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்புச் சட்டம்
 2. லெனின் போராட்ட வாழ்க்கையில் சில ஏடுகள், யூரி அக்சுயுதின்
 3. மாசேதுங் தொகுப்பு நூல், பிரிவு 8, பீகிங் ரிவியூ – 1978.
 4. கட்சி குறித்து, லீயூ சோஷி
 5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), நெறிப்படுத்தும் ஆவணம் – 1996.
 6. மார்க்ஸ் முதல் மாசேதுங்வரை, ஜார்ஜ் தாம்ஸன், விடியல் பதிப்பகம்.
 7. கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்தாபனமும், அனில் பிஸ்வாஸ், பாரதி புத்தகாலயம்.
 8. அரசியல் நிகழ்வுகளும், ஸ்தாபன கடமைகளும், சி.பி.ஐ.(எம்), மத்தியக்குழுத் தீர்மானம், செப்டம்பர் 2006.
 9. Wikipedia