தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம்; சீர்திருத்தமும் எதார்த்தமும்

ச.லெனின்

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதியுள்ள “தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை” எனும் நூல் குறித்த சில விமர்சனங்களை முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜெயரஞ்சன் அவர்களே குறிப்பிடுவதுபோல், கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் பொருளாதார சமூக மாற்றங்களின் பல கூறுகளை அவர் ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கான ஆக்கம், இரண்டாண்டு கால ஆய்வில் திரட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவிரிப் படுகையின் மேற்கு டெல்டா பகுதியான பேட்டை என்கிற கிராமமும், கிழக்கு டெல்டா பகுதியில் குறிச்சி என்கிற கிராமமும் ஆய்வுக்கான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூல் உள்ளடக்கியுள்ள ஆய்வின் நோக்கத்தை ஜெயரஞ்சன் தனது நூலின் முன்னுரையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “காவேரிப் படுகையில் நிலச்சீர்திருத்தம் தோல்வியைத் தழுவியதைப் பலரும் பலவாறாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளனர். அப்படியானால் முன்பு நிலவிய நிலப்பிரபுத்துவம் அப்படியே தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டும். …… களத்திற்கும் ஆய்விற்குமான பெருத்த இடைவெளி எனக்கு அவமானமாக இருந்தது. இதனை ஓரளவேனும் நிரப்ப முயற்சி செய்தேன்” என்கிறார். அந்த முயற்சியின் விளைபயனே இந்த நூல்.

அதேபோல் “இது மிகச் சிறிய முயற்சி. எழுதப்படாத வரலாறுகள் ஏராளம் உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன்’‘ என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய முயற்சிகளில் உள்ள போதாமைகளையும், தவறான அவதானிப்புகளையும், அடுத்தடுத்த ஆய்வுகள் சீர்செய்யும் என்பதுதான் அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளின் அடிப்படையாகும். அந்த வகையில் மேலும் பல ஆய்வுகள் இந்த கருத்தோட்டத்தில் நடந்திட இம்முயற்சி அடித்தளம் அமைக்கட்டும்.

இந்நூல் பல்வேறு சிறப்பான தகவல்களையும் நிர்ணயிப்புகளையும் ஆய்வு புலத்திற்கு வழங்கியுள்ளது. நேர்மறையாக எடுத்துக்கொள்ள நிறைய தகவல்களும் நிர்ணயிப்புகளும் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. தஞ்சையில், இடதுசாரி இயக்கங்கள் செய்த பங்களிப்பை பல இடங்களில் சிறப்பாகவே குறிப்பிட்டுள்ளார். தோழர் கோ.வீரய்யன் எழுதிய “செங்கொடியுடன் ஒரு நீண்ட பயணம்” என்னும் நூலில் உள்ள தகவல்களும், கேத்தலின் கஃப் எழுதிய தகவல்களும், இடதுசாரிகளின் பங்களிப்பை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஆய்வின் முடிவில் ஜெயரஞ்சன் முன்வைக்கும் முடிவுகளை மறுக்கும் வகையிலான தகவல்கள் இந்த நூலிலேயே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதையில், சாதிக் கொடுமைகள் இன்னும் ஒழியவில்லை என்பதும் குறிப்பாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொள்கையும் கோட்பாடுகளும்

திமுக அரசிற்கு, குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திற்கு, சார்பு தன்மையுடன் எழுதப்பட்ட இடங்களிலும், அதன்பொருட்டு பொதுவுடைமை கட்சியினர் – குறிப்பாக சிபிஐ(எம்) கட்சியை குற்றம் சாட்ட முனையும் இடத்திலும், நிர்ணயிப்புக்களில் தடுமாற்றம் தெரிகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் கே.நாகராஜ் அவர்கள் வழிகாட்டுதலில், 2007 ஆம் ஆண்டு “ஸ்லேட்டர் கிராமங்கள்” (திருநெல்வேலி – கங்கைகொண்டான் கிராமம் மற்றும் விழுப்புரம் – இருவேல்பட்டு கிராமம்) குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஜெயரஞ்சன் முக்கியமான பங்காற்றினார். நான் கள ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வு உதவியாளராக பணியாற்றினேன். “ஆய்வு மேற்கொள்ளும்போது உனது கொள்கை கோட்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, கிடைக்கும் கள எதார்த்ததிலிறுந்து உனது கொள்கைகளை உரசிப் பார்க்க வேண்டும்.” என்று அவர் அப்போது என்னிடம் கூறினார். இன்றும் அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஆனால், கருணாநிதிக்கு சார்பாக எழுதும் சில இடங்களில் எனக்கு கூறிய வரிகளை ஜெயரஞ்சன் மறந்துவிட்டாரோ? என்று எண்ணத் தோன்றியது.

சமூக சீர்திருத்தம் என்பதே இறுதி என்கிற நிலையில் இருந்துதான் திராவிட சிந்தனை முன்னெழும். அது இயல்பாகவே சமூக மாற்றம் என்று முழங்கும். கம்யூனிஸ்டுகளை முழுமையாக ஏற்க மறுக்கும். தஞ்சையில் சர்வோதயா தொண்டு நிறுவனமான லாஃப்டி (உழுபவருக்கே நிலம் சொந்தம்) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பங்களிப்பு குறித்த பகுதிகளிலும் இதைக் காண முடியும்.

“நிலப்பிரபுக்களிடம் நம்பிக்கையான முறையில் பேசி அவர்களிடம் மிகுதியாக இருக்கும் நிலங்களை குத்தகைதாரர்களக்கு மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கவைப்பதற்கு ஒரு இயக்கத்தை (கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன்) முன்னெடுத்தார்கள்.” நிலம் உழுபவர்களுக்குதான் உடைமையாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால், அது எப்படி நடைபெற வேண்டும் என்பதுதான் இங்கு மாறுபடுகிறது. சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் வர்க்கபேதத்தை ஒழிக்காது. நிலவுடைமையாளர்களும் குணமாக பேசினால் நல்லவர்களாக மாறப்போவதில்லை.

அடித்தால் திருப்பி அடி

ஏழை கூலி விவசாயியின் வாயில் சாணியை கரைத்து ஊற்றுவதும், தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு சவுக்கால் அடிப்பதும், பாலூட்டும் மார்பகம் கனத்து வலித்தாலும், பால் வேண்டி குழந்தை களத்து மேட்டில் அழுதாலும், வேலை முடியும்வரை வரப்பே பால் கொடுக்க அனுமதிக்காத, ஆதிக்க சாதி நிலப்பிரபுவிடம் எப்படி குணமாக பேசுமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்? கணுக்கால் தெரிய வேட்டி கட்டக்கூடாது; கக்கத்தில்தான் துண்டு; செருப்பு போடக்கூடாது; மணப்பெண்ணின் முதலிரவு பண்ணையோடுதான்; வீட்டு வாசலுக்கு கூட அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுடன் எப்படி நம்பிக்கையோடு பேசுவது?

செங்கொடியின் போராட்டம்தான் பண்ணைகளின் அடாவடித்தனத்தை நிறுத்தியது. “அடித்தால் திருப்பி அடி” என்று தோழர். பி. சீனிவாசராவ் செங்கொடி ஏந்தி முழங்கியதுதானே ஆண்டைகளை கதிகலங்க வைத்தது? செங்கொடியின் போராட்டம்தான், குழந்தை அழுதால் எந்தநேரமும் பால் கொடுக்கும் உரிமையை பெற்றுத் தந்தது. தோளில் துண்டு போடக்கூடாது என்பதை எதிர்த்த போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாகத்தானே இன்றும் தஞ்சை விவசாய தோழர்களின் தோள்களில் சிவப்பு துண்டாக ஜொலிக்கிறது. இவை எதுவும் குணமாக பேசி வாங்கியதல்ல; அடிபணிந்து நின்றவரை இவை எதுவும் கிடைக்கவில்லை.

”1968 இல் நடைபெற்ற கீழ்வெண்மணி படுகொலைக்கு பிறகு கிழக்கு தஞ்சாவூரில் சர்வோதயா மிகவும் துடிப்பாக செய்ல்பட்டது” என்று புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணம்மாள் – ஜெகன்நாதன் இருவரும் காந்தியவாதிகள். எப்போதெல்லாம் இந்திய விடுதலை போராட்டம் எழுச்சி பெற்று, ஆளும் வர்க்கத்தை அச்சமூட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சாத்வீகம் மக்களை இடைமறித்து போராட்ட கனலை வெட்டிச் சுருக்கும். அப்படியான பார்வையோடுதான் சர்வோதயா அமைப்பின் செயல்பாடுகள் அமைந்தன. அதுவே, கீழ்வெண்மணி எனும் போராட்டக் கனல், மற்ற இடங்களில் பரவிவிடும் என்ற அச்சமே கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் இணையரை இந்த தளத்தில் தள்ளியது. பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மக்களின் போராட்ட அலையை முடக்குவதுதான். சட்டம் சொல்வதுபோல் செய்வோம் என்பது பொதுவான வாய்மொழியாக இருக்கும். இங்கு பிரச்சனை சட்டம் யாருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதானே?

அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்பும்

“அவர்கள் கிழக்கு தஞ்சாவூரின் மிகப்பெரிய நிலவுடைமையாளரான வலிவலம் தேசிகருக்கு சொந்தமான நிலங்களை பினாமிகளாக வைத்திருந்தவர்களை சுட்டிக்காட்டினார்கள். தேசிகர் 16 அறக்கட்டளைகளை உருவாக்கி, அதன் மூலம் 350 ஏக்கர் நிலங்களை அவரின் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்டார். 1971 இல் ஜெகன்னாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தலைமையில் இயங்கும் சர்வோதயா ஒரு சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இந்த இயக்கத்திற்கு சிபிஐ மற்றும் திமுக ஆதரவு அளித்தன. ஆனால், சிபிஎம் ஆதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியான திமுக இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்ததனால், சர்வோதயா பினாமி நிலங்களை கைப்பற்றி அதனை கிராமத்தில் இருந்த 300 நிலமற்ற குடும்பங்களுக்கு வழங்கியது. அதே போல, சர்வோதயா கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி அதனை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தது.”

நூலில் உள்ள மேற்கண்ட பகுதி பல கேள்விகளை எழுப்புகிறது. சர்வோதய இயக்கம் தேசிகரை எதிர்த்த போராட்டத்தை சிபிஎம் எதிர்த்தது என்று ஒற்றை வரியில் முடிப்பது, ஏதோ தேசிகருக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்து, சர்வோதயா இயக்கத்தை எதிர்த்தது போன்ற பொருள்படும்படியே அது எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமையை முற்றாக உடைத்து, தேசிகர் மட்டுமல்லாது, வாண்டையார், மூப்பனார் என அனைவரது நிலத்தையும் அரசு கைப்பற்றி, ஏழை உழைக்கும் மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்பதே சிபிஎம் நிலை என்பதை அறியாதவர் அல்ல ஜெயரஞ்சன். ஆனால் இங்கு விஷயம் வேறொன்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சர்வோதயா இயக்கம் மிதவாதத்தை பேசும் ஆளும்வர்க்க சார்புடைய அமைப்பு என்பது நாம் அறிந்ததே. திமுக உள்ளிட்ட அரசுகள் அனைத்தும் நிலவுடைமை வர்க்கத்திற்கு ஆதரவானவைதான். இயல்பிலேயே நிலவுடைமை வர்க்கத்தை எவ்வித சமரசமும் இன்றி எதிர்த்து போராடும் மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்கும் அதே நேரத்தில், திரளான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் நோக்கோடு சர்வோதய இயக்கத்தை திமுக ஆதரித்ததில் வியப்பேதும் இல்லை. சிபிஐ உடைந்து சிபிஎம் உருவான துவக்க காலத்தில் சிபிஐ, எதிர் அணியோடு இருந்ததற்கு கூடுதல் விளக்கம் நமக்கு இங்கு தேவையில்லை. மேலும் சர்வோதயா இயக்கம் பினாமி நிலத்தை மீட்டு, நிலமற்ற மக்களுக்கு கொடுத்ததை ஆதரித்த திமுக, ஏன் அதே ஆதரவை மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்திற்கு வழங்கவில்லை? அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்புமே அதற்கான அடிப்படை காரணமாகும்.

இதையும் நூலின் வேறு ஒரு பகுதியில் ஜெயரஞ்சன் குறிப்பிடுவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். “வேளாண் கொந்தளிப்பு அலைகள் 1968 க்கும் 1972 க்கும் (இரண்டாம் அலை) இடையில் அமைந்தது. 1967 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி திமுக, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கீழ் தஞ்சாவூரின் வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மத்தியில் கட்சியை வலுவாக்க் கட்ட முயன்றது. கருணாநிதி கிழக்கு தஞ்சாவூரின் மையப் பகுதியான திருவாரூரிலிருந்து வந்தவர். அவர் பின்னாளில் திமுக வின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் 1969 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பிடியை உடைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தார். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தாலும், அவர்களால் கம்யூனிஸ்ட்களின் இடங்களை அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியவில்லை. கருணாநிதி இதை ஒரு முக்கியமான சவாலாகவே எடுத்துக்கொண்டார்.”

யாருக்கும் வலிக்காத அணுகுமுறை

சர்வோதயா இயக்கம், கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி நிலமற்றவர்களுக்கு அதை கொடுத்தது. நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலத்தை இழப்பீடு இன்றி மீட்பதுதானே நில உச்சரம்பு சட்டம். இங்கு நிலத்தை மீட்டு விநியோகிப்பது என்பதற்கு மாறாக நிலத்தை வாங்கி விநியோகிப்பது நிலவுடைமையாளருக்கு ஏதுவான, யாருக்கும் வலிக்காத அணுகுமுறைதான். வங்கியில் கடன் பெற்று, பல நிலங்கள் அவர்களது தொண்டு நிறுவனம் சார்பில் வாங்கி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவை நின்றும் போயுள்ளது. இது கைகூடவில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டி அதை தவணை தொகை பெற்று விற்றுள்ளது. “நிலத்தின் விலை உயர்ந்துவிட்டது. எனவே லாஃப்டி அமைப்பு அதன் பழைய நடவடிக்கைகளை நடைமுறை செய்வதிலிருக்கும் பிரச்சினையை உணர்ந்துகொண்டது. மேலும், அது தன்னுடைய கவனத்தை, நிலம் வாங்கி நிலமற்றவர்களுக்கு கொடுப்பதிலிருந்து, வீடற்றவர்களக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பதை நோக்கி மாற்றிவிட்டது. அந்த வீடுகளுக்கான தொகையில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 50 சதத்தை மாநில திமுக அரசு மானியமாக வழங்கியுள்ளது. இவை எல்லாம் இருக்கும் அமைப்பு முறைக்குளாகவே எதையாவது மாற்றி வைப்பதுதான். வங்கி கடன் அதன்பேரில் நிலம் என்று துவங்கி, அது சாத்தியமாகவில்லை. எனவே வங்கி கடன், அதற்கு வீடு என்று மாறிவிட்டது. இதில் நிலவுடைமை ஒழிப்பு, உழுபவனுக்கு நிலம் என்பதெல்லாம் எங்கே போனது? இதற்கு திமுக மற்றும் சிபிஐ ஆதரவு என்று நிறைவு செய்யலாமா?.

”கபிஸ்தலத்தை சேர்ந்த மூப்பனார்கள், பூண்டியைச் சேர்ந்த வாண்டையார்கள் தற்போது தங்களுடைய நிலங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.” மூப்பனார் தனது அரசியல் செல்வாக்கினால் தனது நிலங்களை பாதுகாத்துக் கொண்டதாகவும், செல்வாக்கு மற்றும் பண பலம் வாண்டையார்களின் நிலவுடைமையை தக்கவைக்க உதவியதா என தெரியவில்லை என்கிறார் ஜெயரஞ்சன். நிலப்பிரபுத்துவமும் நிலவுடைமையும் ஒழியவில்லை என்பதை இதுவும் எடுத்துக்காட்டுகிறது. நிச்சயம் பல இடங்களில் நிலவுடைமை முறை, பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனபோதும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவில்லை. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. திமுக எடுத்த நடவடிக்கைகள் அனேகமாக தேர்தல் ஆதாயம் மற்றும் தனது செல்வாக்கை உயர்த்த எடுக்கப்பட்டதே அன்றி, நிலவுடைமையை ஒழிப்பதற்கான உள்ளீடு எதுவும் அதில் கிடையாது.

புதிய மரபுத்தொடர்

”முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்திருந்த்து. அதனால் அவை பள்ளர், பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது. கருணாநிதி கிழக்கு காவேரி படுகைப் பகுதியில் திமுக செயலாளராக எப்போதும் ஒரு தலித்தையே வைத்திருந்தார்” என்று மிக எதார்த்தமாக அன்றைய நிலையை ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். ஆனால், திமுக ஆட்சியின் பலன்கள், தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும், அவரே பின்னர் ஓரிரு இடங்களில் குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததாகவும், குத்த்கைதாரர்களுக்கு ஆதாயம் கிடைத்ததாகவும் நூல் விவரித்தாலும், அதனால் பலனடைந்தவர்களில் தலித் மக்கள் மிகமிக குறைவுதான். திக மற்றும் திமுக வின் செயல்பாடுகள் ”பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்திய அளவுக்கு வெற்றியடைந்ததே ஒழிய ஒட்டுமொத்தமாக சாதி எனும் கருத்தியலை ஒழிக்க முடியவில்லை.” என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பார்ப்பனிய ஒழுங்கினால் வடிவமைக்கப்பட்ட வேளாண் உறவுகள், இப்போது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனும் புதிய மரபுத்தொடரில் இயங்க வேண்டிய நிலை வந்தது” என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் தலித் மக்களுக்கு குத்தகைக்கு கூட நிலங்கள் வழங்கப்படவில்லை. “தலித் அல்லாத சாதிகள் பெற்ற நன்மைகயை காட்டிலும் தலித்கள் குறைவாகவே நன்மை அடைந்தார்கள். … மாநில அரசாங்கம் தலித்துகளின் பக்கம் அதிகமாக சாய்வு கொண்டு இருந்தால், அவர்கள் இன்னும் நன்மையடைந்திருக்கலாம்.’‘ ஆனால் திமுக மற்றும் அதிமுக அரசின் தன்மையும், அதன் உள்ளடக்கமும், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை தரவில்லை. குறிச்சி கிராமத்தில் சுர்ஜித் என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி “குத்தகை நிலங்களில் 80 சதமான நிலங்களை தலித் அல்லாத சாதிகளுக்கே குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. … தலித் அல்லாத குத்தகைதாரர்களை காட்டிலும் தலித் குத்தகைதார்கள் செலுத்தும் வாரத்தின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது” என்பதையும அவர் நிறுவியுள்ளதை ஜெயரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் மண்ணில் தொடரும் தீண்டாமை

பெரியார் மண் என்று கூறினாலும், சாதி ஆணவப் படுகொலைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றும் இங்கு தொடர்கிறது. இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. சாதியும் சொத்துடைமையும் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை குத்தகைகு நிலம் பகிரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவுபடுத்துகிறது.

“கீழ்த்தஞ்சையில் நடந்த பெரும் போராட்டங்கறது பொருளாதார உரிமைக்காகவும் அதைவிட மனித உரிமைக்காக நடந்த போராட்டம். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இணைஞ்சு நடத்தப்பட்ட இயக்கம்.”

“கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நிலச்சீர்திருத்தம் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. பொதுவாக, ஆதிக்க சாதியினர்தான் நிலப்பிரபுக்களாகவும், குத்தகை விடுபவர்களாகவும் இருப்பார்கள். நில சீர்திருத்தத்தின் காரணமாக இந்த நிலவுடைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இது சாதிய பாகுபாடுகளையும், தீண்டாமை கொடுமைகளையும், பொதுவெளியில் இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூக ரீதியாக மேல்நோக்கி வர, நில சீர்திருத்தம் வழி அமைத்துள்ளது” என்று முன்னாள் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது “கேரளா- மற்றொரு உலகம் சாத்தியம்’‘ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது ஏன் தமிழ்நாட்டில் சாத்தியப்படவில்லை? என்பதற்கான பதில் யாதெனில், இங்கு நில சீர்திருத்தம் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதுதான்.

“ஒரு அரசியல் அமைப்பினர் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்னொரு கட்சி தன் அதிகாரத்தை கொண்டு, குத்தகைதாரர்களின் நலன்களைக் காக்க சட்டம் இயற்றியது” என்று முடிவுரையில் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட்கள் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்றளவும் போராடுகிறார்கள். சட்டங்களை இயற்றிய திமுக மற்றும் அதிமுகவால், சில பலன்கள் சிலருக்கு கிடைத்தாலும், முந்தைய அரசுகளை போலவே நிலப்பிரபுத்துவத்தை முற்றாக ஒழிக்க, அது போதுமானதாக இல்லை. குத்தகை விவசாயிகள், அதுசார்ந்த சில நடவடிக்கைகளே பிரதானமானதாக இருந்துள்ளது. மாறாக, நிலசீர்திருத்தம் என்பதற்கான ஏற்பாட்டிற்குள்ளாகவே தமிழ்நாடு அரசு செல்லவில்லை. அப்படியான சட்டங்களை இயற்றுவதோ, அதை அமலாக்குவதோ அவர்களின் நோக்கமும் அல்ல. வெண்மணி வரதராஜ நாயுடு துவங்கி தற்போது வாண்டையார், மூப்பனார் வரை நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவமும் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களுடன் அரசின் ஆதரவுடன் நிலைபெற்று நிற்கிறது.

திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த வெண்மணி சம்பவத்திற்கு பிறகு அந்த அரசு கணபதியாபிள்ளை கமிஷன் அமைத்தது. 1969 ல் செயல்படத் துவங்கிய இந்த கமிஷன் கூலி விவசாயிகளின் கோரிக்கைகளை பிரிசீலித்தது. கோரிக்கையின் மீதிருந்த நியாயத்தை கருத்தில் கொண்டு “மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலிய ஏத்தணும்னு பரிந்துரை செஞ்சாங்க. அதுவும் தஞ்சை மாவட்டம் முழுவதுக்கும் கூட பொருந்துறமாதிரி இல்லாமல், கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் நியாய கூலிச்சட்டம்னு போட்டங்க” என்று தோழர் ஜி.வீரையன் குறிப்பிடுகிறார். போராட்டங்களுக்கு பயந்துதான் அரசு சில சமரச நடவடிக்கைகளுக்கு வந்ததே அன்றி மற்றபடி அது எப்போதும் வர்க்க சார்புடன்தான் இயங்குகிறது. போராட்டம் தீவிரமாக நடைபெற்ற கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் நியாய கூலி என்பதே அதை எடுத்துக்காட்டும் சிறு உதாரனமாகும்.

தலித் மற்றும் பழங்குடி மக்கள் நலன் சார்ந்து இறுதிவரை பனியாற்றிய பி.எஸ் கிருஷ்ணன் அவர்கள் மேற்கு வங்கத்தில் அரசு பொறுப்பில் பணியாற்றியபோது அவருக்கு கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். நிலவுடைமையை குத்தகைதாரர்கள் முறையாக வைத்திருப்பதால் பயனில்லை என்பதோடு நில விநியோகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றுசேர்வது அவசியம் என்பதை பதிவு செய்கிறார்.

உண்மையான நிலச்சீர்திருத்தம்

“குத்தகை விவசாயிகளுக்கு பர்கா சீர்திருத்தம் நிரந்தரமான அனுபோகத்தை அந்த நிலத்தின் மீது அளித்தது. ஆனால், நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை அது வழங்கவில்லை.

1987இல் இருந்து 1989 வரை, நான், பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராகவும், அதில் சில காலம் பழங்குடியினருக்கான ஆணையராகவும், பணியில் இருந்தேன். அந்தப் பதவியின் காரணமாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளுக்காக, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வேன். அப்போது மேற்கு வங்க சமூகநலத் துறை அமைச்சராக இருந்த திரு. தாகுவாவிடம், குத்தகை விவசாயிகளுக்கு அனுபோக உரிமையை மட்டும் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு கேள்வி கேட்டேன்.

அனுபோக உரிமையையும் தாண்டி, நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக்கிக்கொள்வதாக அதை நீட்டிக்க முடியுமா? என்று அவர் வினவினார்.

உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)”

இந்த நடவடிக்கையை சாத்தியப்படுத்த 1955 இல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இயற்றப்பட்ட மேற்கு வங்க நில சீர்திருத்த சட்டத்தில் மூன்று முறை சில முக்கியமான திருத்தங்களை மேற்கு வங்க இடது ஜனநாயக அரசு செய்தது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருந்ததோ, அதையெல்லாம் களை எடுத்தது. பினாமி நிலங்கள் குறித்த விசாரணையை வருவாய் அதிகாரியே மேற்கொள்ள அதிகாரம் கொடுத்தது. விவசாயத்தோடு சம்மந்தமில்லாதவர்களிடம் இருந்த குத்தகை நிலங்கள் கையப்படுத்தப்பட்டது. தானே ஒரு டிரஸ்டை உருவாக்கி நிலத்தை அதன் பெயருக்கு மாற்றிவிட்டு, அதை அனுபவிப்பதை தடுக்கும் வகையில், அதன் டரஸ்டியின் நிலமாகவே அந்த நிலங்கள் கருதப்பட்டு நில உச்சவரம்பின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதைத்தான் வலிவலம் தேசிகர் விஷயத்தில் திமுக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனுக்கு ஆதரவு கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.

மார்க்சிஸ்ட கட்சி என்ன செய்தது என்பதை “தென்பரை முதல் வெண்மணி வரை” எனும் நூலில் வலிவலம் எஸ்.தியாகராஜன் பதிவு செய்துள்ளார். “1970 ல் பொடிகாளத்தூர்ல வலிவலம் பண்ணைட்ட கணக்கப்பிள்ளையா இருந்தேன். வலிவலம் பண்ணை மனத்துணை நாத தேசிகர். அங்க அவருக்கு 30 வேலி நிலம் இருந்துச்சு. இந்த சமயத்துல ஜீ.வி (ஜி.வீரய்யன்) கிட்டவும் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அந்த சமயத்துலதான் நமச்சியவாயபுரத்துல 110 ஏக்கர் எடுத்தாங்க. இதை 90 ஏழை விவசாய தொழிலாளிகளுக்குப் பிரிச்சுக் கொடுத்தோம்.

அப்புறம் வலிவலம் பண்ணைக்கு நிறைய டிரெஸ்டுல நிலம் இருந்துச்சு அதுல 400 ஏக்கர் வரைக்கும் நிலத்த பிரிச்சுக் கொடுத்தோம். இது சுந்தரபாண்டியம், கீழ்வேலி, வலிவலம், நெய்வில் நாலு கிராமத்தில் இருந்து எடுத்த நிலம். … வலிவலம் தேசிகர்கிட்ட வேல பாத்த பண்ணையாள்தான் எம்.எஸ் (எம்.செல்லமுத்து). அப்புறம் அவர் எம்.எல்.ஏ ஆனார்.” இதுதான் செங்கொடியின் தடம்.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறைக்குள் ஒரு மாநில அரசு செயல்படுவதற்கான வரம்புகளும் உரிமைகளும் மிகக்குறைவே. நவதாரளமயம் இதை மேலும் வெட்டி சுருக்கியுள்ளது. இதற்குள்ளாக, மக்கள் நலன் சார்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு சேமநல அரசாக தன்னை தகவமைத்துக்கொண்டு செயலாற்ற அது தொடர்ந்து போராடுகிறது. முதலாளித்துவ நவதாரளமய கொள்கைகளின் விசை அதை பல நேரங்களில் உலுக்கி எடுக்கிறது. சேமநல அரசு – சமூக சீர்திருத்தம் என்பதாக மட்டும் அது நின்றுபோகும்போது, அதன் வர்க்க சார்பு இந்த நெருக்கடியின் காரணமாக அதை சுவீகரித்துக்கொள்கிறது. எனவேதான், நில சீர்திருத்தம் போன்ற அவசியமான நடவடிக்கைகளை அரசியல் ஆயுதம்போல் ஆகாயத்தில் வேகமாக வீசிவிட்டு போர் முடிந்துவிட்டதாக அதுவே கூறிக்கொள்கிறது. சுரண்டல் நிறைந்த இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே சில சீர்திருத்தங்களில் திருப்தி அடைந்துகொள்ளாமல் ஒரு முழுமையான சமூக மாற்றத்தை படைப்பது என்ற லட்சியத்தையே இடது ஜனநாயக அரசுகள் மேற்கொள்கின்றன. சீர்திருத்தங்கள், சமூக மாற்றத்திற்கான பயணத்திற்கு படிக்கட்டுக்கள் என்கிற வகையில் அவசியமே. சீர்திருத்தங்களோடு திருப்தியடைவதும் அதுவே புரட்சிகர மாற்றம் என்பதாக புளகாங்கிதம் அடைவதும் அற்தமற்றதாகும்.

நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)

குரல்: தோழர் பீமன்

என்.ராகுல்

தமிழில்: அபிநவ் சூர்யா

இந்த புத்தகத்தின் ஆய்வு, இன்று ஆய்வு வட்டங்களில் தமிழகத்தின் மக்கள் நல மற்றும் ஜனரஞ்சக அரசியலின் நிர்ணய காரணிகள் குறித்து நிலவும் பரவலான விளக்கங்களை எதிர்க்கும்படியான வாதங்களை முன்வைக்கிறது. இந்த விளக்கங்கள் இரு வகையான ஜனரஞ்சகவாதத்தை சுற்றியே உள்ளன – பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, சற்றே மேல் தட்டுகளில் உள்ள, குறிப்பாக இடைநிலை சாதியினரை முன் நிறுத்தும் “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதம், மற்றும் இந்த “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதத்தால் பயன் அடையாத சாதி-வர்க்கங்களை உள்ளடக்கிய “இரட்சிப்பாளர்” ஜனரஞ்சகவாதம்.

திராவிட அரசியல் நோக்கிய மற்றொரு விமர்சனம் அதை “மேல்தட்டுக்கு குவியல்; ஆனால் ஏழைகளுக்கு நலத்திட்டம்” என வரையறுக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள், பெரும்பாலான ஆய்வுகள் தமிழகத்தின் நலத்திட்டம் மற்றும் மூலதன குவியல் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளவில்லை என வாதிடுகின்றனர். பொருளாதார மற்றும் சமூக, இரு தளங்களிலும் ஜனநாயகத்துவம் நடந்திருப்பதாகவும், இந்த இரண்டிற்குமான தொடர்பு திராவிட கோட்பாட்டிலிருந்து எழுவதாகவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

“அவர்களின் (திராவிட இயக்கங்களின்) அணிதிரட்டல் சாதி-அடிப்படையிலான சமூக அநீதியின் வடிவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை வெல்வது, தொழில்துறை திறன் பெருக்கல் பண்பின் மீதான நம்பிக்கை, வலுவான மாநில சுயாட்சியின் அவசியம்,  அனைவரையும் உள்ளடக்கிய நவீனத்துவத்தை கட்டமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதே “திராவிட பொது புத்தி”” என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நரேந்திர சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்களின் திராவிட அரசியலுக்கான “இரு வகை ஜனரஞ்சகவாதம்” என்ற  விளக்கத்திற்கு மாற்றை இவர்கள் முன் வைக்கும் பொழுதும், நிலவும் பிரபல ஆய்வுகள் திராவிட கட்சிகள் மற்றும் இயக்கத்தை “இடதுசாரி ஜனரஞ்சகவாதம்” என வரையறுப்பதோடு இவர்களும் ஒத்து போகின்றனர்.

“பலதரப்பட்ட கோரிக்கைகள் இடையே சமத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசியல் ஒருங்கிணைப்பை கட்டமைப்பது, ஓரளவு நுணுக்கமான கோரிக்கைகளை கைவிட்டு, நுணுக்கங்களுக்கு இடையேயான பொதுத்தன்மை மற்றும்  சமத்தன்மையை முன் நிறுத்துவது, புதிதாய் எழும் கோரிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வது” என்பதே இடதுசாரி ஜனரஞ்சகவாதம் என்கின்றனர்.

திராவிட தமிழியம் என்ற அடையாளத்தின் கீழான பிரபல ஒருங்கிணைப்பானது உள்-வகுப்புக்களான ஆதி-திராவிடர்கள், சூத்திரர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், விவசாய மற்றும் ஆலை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், பெண்கள் போன்றோரின் நுணுக்கமான கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றையெல்லாம் மேல் சாதியினருக்கும், தேசிய அளவில் அரசியல்-பொருளாதார சக்தி படைத்தோருக்கும் எதிரான ஒரு தமிழ்/திராவிட அரசியல் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர்.

நீதிக்கட்சி காலத்திலிருந்து இந்த இயக்கத்தின் தாக்கத்தை விவரிக்கின்றனர். காமராஜர் காலத்தில் கூட ஏற்பட்ட முன்னேற்றங்கள் திராவிட அரசியலின் அழுத்தத்தின் விளைவே என வாதிடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பின்னடைவுகளை இவர்கள் உணராமல் இல்லை. இப்படிப்பட்ட அரசியலால் ஒரு சிலரை விட வேறு சிலர் மட்டுமே பயன் பெற வாய்ப்புண்டு. மேலும் இது நிரந்தரமாக மக்களை “நாங்கள்” “நீங்கள்” என பிரித்து, வலதுசாரி அரசியல் பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கலாம்.

இப்புத்தக ஆசிரியர்கள் தமிழக  ஜனரஞ்சகவாதத்தின் இரு அம்சங்களை கண்டறிகின்றனர் – சமூக ஜனரஞ்சகவாதம் மற்றும் பொருளாதார ஜனரஞ்சகவாதம். நீண்ட காலத்தில் நவீன வளர்ச்சிகள் மற்றும் பொது சொத்துக்கள் அனைவரும் பெறுவதை உறுதி செய்வது சமூக ஜனரஞ்சகவாதம். இக்காலத்தில் “அளித்தல்” வகையிலான, குறிப்பாக சில முக்கிய சமூக குழுக்களை நோக்கிய பொருளாதார முன்னெடுப்புகள் பொருளாதார ஜனரஞ்சகவாதம்.

இந்த இரு ஜனரஞ்சகவாதத்தையும் மாநிலத்தில் நிறுவனத்துவம் ஆக்கியதன் காரணமாக மூன்று தளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர் – 1) சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்ததன் விளைவாக அடித்தளம் உருவாக்கியது 2) அரசாங்கத்துறை, நவீன பொருளாதாரம் போன்ற மாநில கட்டமைப்புகளை ஜனநாயகத்துவமாக்கியது 3) கனவு கண்டு, அதை அடையக்கூடிய நம்பிக்கையுள்ள மக்களை உருவாக்கியது.

அரசியல் ரீதியில் திமுக சமூக ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும், அதிமுக பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும் இருந்தாலும், இதில் கலவைகளும் உள்ளன என கூறுகின்றனர். மேலும் தேசிய, சர்வதேச தளத்தில் சமூக ஜனரஞ்சக அரசியலின் வறட்சியின் காரணமாகவே, பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் மேல் மேலும் அழுத்தம் அதிகரிப்பதாக வாதிடுகின்றனர்.

இந்த நூல் குறிப்பாக சமூக பொருளாதார நலத்திட்டங்களால் உந்தப்படும் தமிழகத்தின் திராவிட வளர்ச்சி முன்மாதிரியை குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பின்பற்றப்படும் வளர்ச்சிப் பாதைக்கு எதிராக முன் நிறுத்துகிறது. வரும் பகுதிகளில் இந்த நூலின் விமர்சனப் பார்வையை முன் வைக்கிறேன்.

கல்வி:

துவக்கநிலை, இடைநிலை, மேல்நிலை கல்வியில் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவிலான சாதனைகளை ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்ட/தாழத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தை அழுத்தமாக விவரிக்கின்றனர்.  இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய கடைநிலை சாதியினரின் ஒருங்கிணைப்பே இந்த வளர்ச்சியின் ஆணிவேராக கண்டறிகின்றனர். மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு போன்ற பல தளங்களில் சிறந்து விளங்கும்போதும், கல்வியின் தரத்தில் கவலைகள் இருப்பதை ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

தமிழக கல்வியில் அதீத தனியார்மயத்தை பற்றி பேசும் பொழுது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால்தான் மாநில அரசு தனியார்மயப் படுத்தியது போல குறிப்பிடுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதிலும் இரண்டு திராவிட கட்சிகளும் மத்திய அரசில் கூட்டணி பங்கு வகித்ததை இது மறைக்கிறது. மேலும் இரண்டு திராவிட கட்சிகளும் தனியார் கல்வி “பிரபு”-க்களோடு கை கோர்த்துக் கொண்டதையும், நிலங்களை மலிவு விலையில் விற்றதையும், அதன் மூலமான நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதையும் மறந்துவிட்டனர்.

மேலும் கட்டுமான தளத்தில், பெரும்பாலும் 1970களில் துவங்கப்பட்டு அரசால் நடத்தப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான பல விடுதிகள் பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த விடுதிகளின் வாழ்விட தரத்தைப் பற்றியோ, பல சமயங்களில் கவனிப்பின்மை மற்றும் பராமரிப்பின்மை காரணத்தால் நலிந்து, போராட்டங்களுக்கு காரணமாகி உள்ள நிலை பற்றியோ பேசவில்லை. இதே போன்ற விமர்சனம் துவக்க நிலை பள்ளிகள் கட்டமைப்பு குறித்தும் கூட வைக்கலாம். ஏனெனில் ஆசிரியர்கள் அளித்துள்ள தரவுகளை வைத்தே பார்த்தால் கூட, பொதுக் கல்விக்கு கட்டமைப்பு வழங்குவதில் தமிழகத்தை விட குஜராத் சற்றே நன்றாகக் கூட செயல்படுகிறது.

ஜனநாயகத்துவமாக்கப்பட்ட சுகாதாரம்:

சுகாதாரத் துறையிலும், பொது கட்டமைப்பு மற்றும் பிரதிநிதித்துவம் மூலம் தமிழகம் முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பநிலை மற்றும் நோய் தடுப்பு சுகாதாரம் குறித்த தரவுகள் ஒரு புறம் கேரளாவை விட தமிழகம் பின் தங்கி இருப்பதை காட்டினாலும், மறு புறம் இதர மாநிலங்கள் தமிழகத்தை விட பல மடங்கு பின் தங்கி இருப்பதை காட்டுகிறது. ஆனால் இந்த சாதனைகளுக்கு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதை விட, இருக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்தியதே  காரணம் என நூல் ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ துறையின் முதுகலை படிப்பில் உள்ள இட ஒதுக்கீடு மூலம் சுகாதாரத் துறை, அரசுப்பணி கட்டமைப்பு ஆகியவை ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பொது சுகாதார கட்டமைப்பில் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக பணி புரிய வேண்டும். 

சுகாதாரத் துறை அரசுப்பணி கட்டமைப்பு ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதன் விளைவாக விளிம்பு நிலை மக்களிடையே நம்பிக்கை பெருகி, மருத்துவ சேவையை நாடுவது அதிகரித்திருப்பதை குறிப்பிடுகின்றனர். கிராமப்புற செவிலியர் ஊக்கத் திட்டமும் குறிப்பிடப்படுகிறது. நிரந்தர பொது சுகாதார துறை உருவாக்கப்பட்டது பற்றியும், முற்போக்கான மருந்து கொள்கை பற்றியும் குறிப்பிடப்படுகிறது.

கல்வி தரவுகள் போலவே, சுகாதார துறை தரவுகளையும் ஆராயும் தேவை உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள தரவுகள். பிரசவ அறை உள்ள மையங்கள் (95.4), இரண்டு மருத்துவர்கள் உள்ள மையங்கள் (73.5%), 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் (89.3%) விகிதம் எல்லாம் தேசிய அளவை (69%, 26.9%, 39.2%)  விட மிக அதிகமாக உள்ளது என்றாலும், இந்த தரவுகளை சந்தேகத்துடனே தான் பார்க்க வேண்டி உள்ளது.

மேலும் இந்த மையங்களின் சேவை அளிக்கும் திறனையும் கேள்விக்குள்ளாக்க வேண்டி உள்ளது. கோவிட்-19 தொற்று காலத்தில் உண்மை எண்ணிக்கையை விட மிகக் குறைந்த தொற்று எண்ணிக்கை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது என்ற உண்மை, இந்த வாதங்கள் மேல் சந்தேகத்தை எழுப்புகின்றன. வெறும் சுகாதார மையங்களை துவங்காமல், அதற்கு கட்டமைப்பு மற்றும் பணியாட்களை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சி வரலாறு முழுமையிலும், “ஜனநாயகத்துவப் படுத்துதல்” என்பது இடைநிலை அரசியல் செயல்பாட்டாளர்கள் மூலமும், நலிவான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசுப் பணி கட்டமைப்பு மூலமும், கள அளவில் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகள் மிக நலிவாக உள்ள சூழலிலும் தான் செயல்பட்டு வந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட கட்டமைப்பானது தினசரி தேவைகளுக்கு எந்த அளவிற்கு திறம்பட செயல்படுகிறது என்பதை மேலும் ஆய்வு செய்து தான் கண்டறிய வேண்டும்.

ஊரக உற்பத்தி உறவுகளில் மாற்றம்:

இதர பகுதிகள் போல் இல்லாமல், ஊரக பகுதி வளர்ச்சிக்கு நீதிக் கட்சியையோ, பெரியார் இயக்கத்தையோ கூட காரணியாக குறிப்பிடவில்லை. திமுக ஆட்சிக்கு முன்பு 1952ல் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முனைவர் ஜெயரஞ்சன் அவர்களின் ஆய்வை தழுவி, திராவிட ஆட்சியின் கீழ் நில உறவுகள் கடைநிலை சாதியினர், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சாதகமாக மாறியுள்ளதாக வாதிடுகின்றனர். குறிப்பாக, 1969இல் இயற்றப்பட்ட விவசாய குத்தகைதாரர்  உரிமை சட்டம் மூலம் அருகாமையில் வசிப்போரின் வாய்வழி சாட்சியம் மூலம் குத்தகைதாரர் உரிமை சட்டமானதையும், மற்றும் 1971இல் இயற்றப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் சட்டம் குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஜெயரஞ்சன்-நாராயணன் ஆய்வை தழுவி, தமிழகத்தில் பாரம்பரிய கிராம அரசு அதிகாரிகளை ஒழித்து, சாதி-வாரி இட ஒதுக்கீடு மூலம் தேர்வாகும் அதிகாரிகளை நியமித்ததனால் குத்தகைதாரர்கள் உரிமை கோரி அரசு அலுவலகங்களை நாடுவது ஜனநாயகத்துவப் படுத்தப்பட்டதாகவும், மேலும் அரசியல் அதிகாரம் மூலம் நிலத்தின் மீதான அதிகாரம் உறுதி அடைந்ததாகவும் வாதிடப்படுகிறது.

ஊரக தொழிலாளர்கள் வேளாண் பணி தவிர இதர பணிகளில் ஈடுபடும் விதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பது முன்னேற்றத்தின் சின்னமாக முன் நிறுத்தப்படுகிறது. மேலும் பொது விநியோக (நியாய விலை) கட்டமைப்பு மூலம் மக்களின் அன்றாட தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்பட்டதை அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். இவை பட்டியல் சமூகத்தினருக்கும் சம நீதி பெற்று தந்திருப்பதை குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சியில் தலித் மக்களுக்கு எவ்வளவு நிலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடாமல், இதற்கும் திராவிட நவீனத்துவத்திற்கும் தொடர்பு இல்லை என கோரப்படுகிறது. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களை விட, பெரும்பாலும் குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே நில முன்னெடுப்புகள் மூலம் பெரிதும் பயன் பெற்றதை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

ஜெயரஞ்சன் ஆய்வில் கூட, காவிரி டெல்டா பகுதியில் அரசு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட குத்தகைதாரர் சீர்திருத்தத்தால் தலித் மக்கள் பெரிதும் பயன் பெறவில்லை என குறிப்பிடுகிறார். தமிழகத்தின் இதர பகுதிகளில் நில உறவுகள், மேல்மட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தலித்களின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தால் திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” ஆட்சியா என ஆசிரியர்கள் சோதிக்கலாம்.

உண்மையில் திராவிட இயக்கம் புரட்சிகர கோரிக்கைகளுக்கு செவிசாயக்கும் இடதுசாரி ஜனரஞ்சக இயக்கம் எனில் கீழவெண்மணி தலித் விவசாய தொழிலாளர் கோரிக்கைக்கு திறம்பட செயல்பட்டிருக்கும். ஆனால் அதன் “சீர்திருத்த” திட்டத்தில் தலித் மக்களுக்கு கடைசி இடமே.

ஆனால் பேரா. விஜயபாஸ்கரே 2018இல் எழுதிய கட்டுரையில், தமிழக அரசானது தொழில் மூலதனம் மற்றும் சூதாடும் நில வியாபார மூலதனத்திற்கு தன் ஆதரவை மடை மாற்றி, முனைப்புடன் வேளாண் பொருளாதாரத்தை அழிக்கும் அரசு என குறிப்பிட்டார். தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் விளைச்சல்தாரர்கள் ஆகியுள்ளது “ஜனநாயகத்துவம் “என கோருவது தமிழகத்தில் சிறு-குறு விவசாயம் என்பது லாபமாற்ற, கடனில் மூழ்கடிக்கும் தொழிலாக மாறியதை கணக்கில் கொள்ளாத வெற்று வாதமாகும்.

தமிழகத்தின் நிலமின்மை சூழலை விவாதிக்காமல் இருப்பதன் மூலம், ஆசிரியர்கள், ஊரக தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஏதுமின்றி தவிக்கும் நகர்ப்புற இடம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையையும் மறைக்கின்றனர்.

மூலதன திரட்சி

2019இல் ஹாரிஸ்-வயட் ஆய்வில் திராவிட அரசியல் நலத்திட்டத்தில் கவனம் செலுத்தி மூலதன திரட்சியை மேல்தட்டு மக்களிடம் விட்டுவிட்டதாக குறிப்பிடுவதற்கு எதிராக ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். அரசு தலையீடும், அரசியல் ஒருங்கிணைப்பும் மூலதன திரட்சியை ஜனநாயகத்துவப்படுத்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.

இதில் அவர்கள் மூன்று வழிமுறைகளை கண்டறிகின்றனர் – 1) தொழில்துறை திறன் பெருக்கல் பண்பு பரவலாதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியே சமூக கட்டமைப்புகளை உடைக்கும் வழி என்ற நம்பிக்கை 2) சமூக மற்றும் கள கட்டமைப்புகளில் முதலீடு 3) தொழில்/சேவை துறை  வளர்ச்சி நோக்கிய முனைப்பான கொள்கைகள்.

தமிழக தொழில் நிறுவனங்கள் குஜராத்/ மகாராஷ்ட்ரா ஒப்பிடுகையில் பல்வேறு இடங்களிலும், பலதரப்பட்ட துறைகளிலும் பரந்து விரிந்து இருப்பதை குறிப்பிடுகின்றனர். இது தமிழக தொழில் வளர்ச்சியானது எந்திர சார்பை விட மனித உழைப்பு சார்ந்ததாக இருப்பதை காட்டுகிறது. கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக சாலைகள், பொது போக்குவரத்து, மின் ஆற்றல் (குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல்) போன்றவற்றில் தமிழகம் அடைந்த முன்னேற்றங்களை விவரிக்கின்றனர்.

சாதிவாரி நிறுவன உடமை தமிழகத்தில், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பரந்துபட்டு இருப்பது குறிப்பிடப்படுகிறது. 100 தொழிலாளர் மேல் உள்ள ஆலைகளின் உடமையாளர்களில் தமிழகத்தில் 68% பிற்படுத்தப்பட்டோர். இது குஜராத் (11%), மகாராஷ்ட்ரா(8%)-வை விட பன்மடங்கு அதிகம். ஆனால் தலித் வகுப்பினர் மத்தியில் உடமை தமிழகம் (5.8%) குஜராத் (6%) இரண்டிலும் மிகக் குறைவாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் சற்றே அதிகம் (12.1%).

DICCI தொழிலதிபர் கூட்டமைப்பின்படி தமிழகத்தில் தான் தலித் தொழில் முனைவோர் விகிதம் மிக அதிகம் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தாராளமயமாக்கல் காலத்தின் பின் நிகழ்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடும். தரவுகள் அளிக்காமல், ஓரு சில ஆதாரங்கள் மூலம், பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடாத இடைநிலை சாதியினர் பலர் தொழில் துறையில் தடம் பதிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஆனால் இந்த பகுதியில் ஆசிரியர்களின் ஆய்வு முறையில் ஒரு பெரும் சிக்கல் காணப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் காந்திய வழி கிராமப்புற தொழில்களுக்காக குரல் கொடுத்ததாகவும், நீதிக் கட்சி மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கமே தொழில் பயிற்சி மற்றும் தொழில்மயமாக்கலுக்கு வாதிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய மேலும் ஆதாரங்கள் வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளது. மேலும் மேல்தட்டு சாதி தொழிலதிபர்கள் மட்டுமன்றி, நாடார் தொழிலதிபர்கள் கூட காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் காந்தியிசம் மேலோங்கி இருந்த குஜராத்-மகாராஷ்ட்ராவில் தொழில் துறை வளர்ச்சி காங்கிரஸ் செயல்பாட்டை தெளிவாக காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் மூலதன குவியலை வெகுவாக ஆதரித்த ராஜாஜி தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்சியை வழி நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நகர்ப்புற உழைப்பு

நகர்ப்புற உழைப்பு பற்றிய பகுதி நகர்ப்புற உழைப்புச் சந்தையில் நேர்ந்த அமைப்புசார் மாற்றங்கள் மற்றும் உடன் நிகழ்ந்த வறுமை ஒழிப்பு பற்றி தெளிவாக விவரிக்கின்றது. பெண்கள் உழைப்புச் சந்தையில் பங்கேற்கும் விகிதம், வேலைவாய்ப்பின் திறன் ஆகியவை குஜராத்/மகாராஷ்ட்ரா மாநிலங்களை விட அதிகமாக இருப்பதை குறிப்பிடும் அதே வேளையில், முறைசாரா நிலைத்தன்மையற்ற, வேலைவாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக்கொள்கிறது.1990 களுக்கு பிறகு சேவைத் துறை தனியார்மயம் விரிவடைந்து, தனியார் வேலைவாய்ப்பு அதிகரித்த போதும், உயர்கல்வியில் கடைப்பிடிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் தனியார் வேலைவாய்ப்பில் பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. எனினும் மேல்தட்டு சாதியினர் ஆதிக்கம் தொடரவதையும் உரைக்கிறது.

தகவல் தொழிற்நுட்ப துறையின் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு, இந்த துறையில் கடைநிலை சாதியினர் பங்கேற்பு அதிகரிப்பதை விவரிக்கின்றது. இந்த துறையில் தலித் மக்கள் நிலை குறித்து பெரிதும் பேசாத போதும், இந்நிலை மிக மோசமாக இருக்க வாய்ப்பில்லை என வாதிடப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் பங்கெடுப்பு, மற்றும் அவர்களுக்கு செவி கொடுக்கும் அரசின் தன்மையையும் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். தொழிற்சங்க தலைவர்களுடனான நேர்காணல் மூலம், தொழிலாளர்கள் நிர்வாகத்தை ஆலையில் எதிர்கொள்வதை விட, அரசிடம் கோரிக்கை வைப்பதையும், மூலதனத்தை நீதிமன்றத்தில் எதிர்ப்பதையுமே விரும்புவது தெரிகிறது. தொழில் தகராறு சட்டத்தில் உட்பிரிவு 10B-ஐ தமிழக அரசு சேர்த்துள்ளதன் மூலம் தொழில் தகராறுகளில் அரசு தற்காலிக நிவாரணம் அளிக்கவும், குறிப்பாக சூழ்நிலை நிவர்த்தி அடையும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரண ஆதரவு வழங்கவும் அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

மேலும் ஆலைகளில் கூலியில்லா பயிற்சியாளர்களை நியமிப்பதை கட்டுப்படுத்தும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. தொழில் தகராறுகளில் நிஜத்தில் அரசு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை மேலும் ஆய்வு செய்தால் தான் தொழிலாளர்-முதலாளி உறவில் தமிழக அரசின் பங்கு முழுமையாக புரியும். 

எனினும் இங்கு ஆசிரியர்கள் தமிழகத்தில் LPF தொழிற்சங்கத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் சேர்த்து அதன் பங்கை கள்ளத்தனமாக மிகைப்படுத்தி காட்டுகின்றனர். இடதுசாரி தொழிற்சங்ககள் திராவிட ஆட்சி காலத்தில் சமரசமின்றி பல போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்தும், அதனால் திராவிட கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டும் போராடியதை போதுமான அளவு குறிப்பிடவில்லை. தேர்தல் வெற்றியை பொறுத்தே திமுக-அதிமுக தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மாறும் என்பதையும் விட்டு விட்டனர்.

அரசு இந்த துறையில் தலையிடுவது சிரமமாக கருதுவதால், வேலையிடத்தின் வெளியே மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதாக வாதிடுகின்றனர். 1975இல் திமுக ஆட்சியில் முறைசாரா தொழிலாளர் குறித்த ஒரு குழு அமைத்த பின் முறைசாரா தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு ஆணையம் துவங்கப்பட்டது குறித்தும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்தும் விவரிக்கின்றனர்.

ஆனால் இந்த நலத்திட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் குறிப்பட்ட பாணி ஒருங்கிணைப்பால் தான் சாத்தியமானது என வாதிடுகின்றனர். பாரம்பரிய இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்களின் “அரசியல்” இடதுசாரி அணிதிரட்டலுக்கு மாறாக, அனைத்து ஏழை மக்கள் இடையே ஒற்றுமை பாராட்டும் திராவிட இயக்கத்தின் “சமூக” இடதுசாரி அணிதிரட்டல் தான் இதைச் சாத்தியமாக்கியதாக வாதிடுகின்றனர்.

ஆனால் பணியிட நடைமுறைகள் பற்றி அசிரியர்கள் பேசவில்லை. “சுமங்கலி” தொழிலாளர் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் பெண்கள் பின்னலாடை ஆலைகளில் பணியமர்த்தப்படுவது குறித்து பேசவில்லை. புறநகர், ஊரக பகுதிகளில் பணியமர்த்தப்படும் இளம் பெண்கள் இந்த வேலை முறை மூலம் கடுமையாக சுரண்டப்படுவதோடு, கொத்தடிமை போன்ற நிலையில் வாழ்கின்றனர்.

இந்த முறை குறித்த தரவுகள் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வெளி கொண்டுவரப்பட்டாலும், இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அளவிடும் வழிகள் ஏதும் இல்லை. இத்துறையில் இது போன்ற விமர்சனங்கள் எழும்போது நிறுவனங்கள் சில ஆலைகளில் மாற்றங்கள் செய்து, NGO-க்கள் பார்வையிட அனுமதித்தாலும், உண்மை நிலையை விமர்சிக்க பொதுமக்களுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ வழிகள் இல்லை.

மேற்கு மாவட்டங்கள் மற்றும் இருளர் சமூகம் மத்தியில் பல பன்னாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு, பல அடிமை நிலை போன்ற, கொடுமையான கொத்தடிமை நிலை போன்று கூட, தமிழக பணியிடங்களில் நிலவும் அவல நிலை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திராவிட ஆட்சி காலத்தில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையில் தமிழகமே பெரும்பாலும் மோசமான நிலையில் இருப்பதை ஆசிரியர்கள் மறக்கின்றனர்.

மேலும் “குடிசை மாற்று” குறித்த வாதங்களும் சிக்கலானவையே. பெரும்பாலும் இந்த மக்கள் சுகாதாரமற்ற, கால்வாய்க்கு அருகாமை இடங்களுக்கோ, பொது கட்டுமான வசதியின்றி நகரின் விளிம்பு பகுதிகளுக்கோ மற்றப்படுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த புத்தகத்தில் ஆசிரியர்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் சாதனைகளை குறிப்பிடும் அதே வேளையில், இந்த அரசியல்-பொருளாதார பாதையின் குறைபாடுகளை முன்வைக்கவும் தவறவில்லை. புத்தகத்தின் கடைசி பகுதியில் திராவிட முன்மாதிரியின் பிழைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் விவாதிக்கப்படுகிறது.

கல்வியின் தரம் தாழ்ந்து இருப்பதன் காரணத்தால் குறைந்த ஊதியம் ஈட்டும் வேலைவாய்ப்புகளே கிடைத்து, இதனால் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகரித்து, வருமான ஏற்றத்தாழ்வை கூர்மை படுத்துவதை அங்கீகரிக்கின்றனர். மேலும் தனியார் கல்வி, மருத்துவ சேவைகள் மக்களின் கைக்காசை கரைப்பதையும், கடனில் ஆழ்த்துவதையும் குறிப்பிடுகின்றனர்.சுகாதார துறையில், NEET முறை புகுத்தல் அரசு பள்ளி மாணவர்களை விளிம்பு நிலைக்கு தள்ளும் ஆபத்தை குறிப்பிடுகின்றனர்.

உழைப்பு உறவுகளை பொறுத்த வரையில், வேளாண்மைக்கு வெளியே உள்ள கணிசமான அளவு வேலைவாய்ப்பு மோசமான தரத்தில் இருப்பதையும், பணியிடத்தில் பாலின  பாகுபாடு திகழ்வதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

தமிழக ஊரக பகுதிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தாலும், நகர்ப்புற பகுதிகள் சாதிய பாகுபாடுகளை மறு புதுப்பிப்பு செய்வதை பற்றி கூறுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்களை கண்டறிகின்றனர் – சேவைத்துறையில் கல்வியின் தரம் குறைவாக இருப்பது மற்றும் மேல் தட்டு சாதியினர் வாய்ப்புகளை “பதுக்கி” வைத்துக்கொள்வது. மேலும் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஊழல், மணல் சுரண்டும் மற்றும் நில-கட்டட தொழில்களில் ஈடுபடும் ரவுடி கும்பல்களின் அரசியல் நிதி போன்றவற்றின் தாக்கத்தையும் ஆசிரியர்கள் உணர்கின்றனர். ஆனால் முக்கியமாக, பொருளாதாரத்தில் “உபரி தொழிலாளர்கள்” காலப்போக்கில் வளரும் தொழில் துறையில் உள் வாங்கிக்கொள்ளப்படுவார்கள் என்ற அனுமானத்துடன் தமிழகம் முன்னெடுக்கும் வளர்ச்சிப் பாதை நிறைவேறாமலே போக வாய்ப்புள்ளதையும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

இறுதியாக

நரேந்திரா சுப்பிரமணியம் அவர்களின் திராவிட ஆட்சி கால ஜனநாயகம் குறித்த புத்தகத்திற்கு பிறகு, இப்புத்தகம் திராவிட நலத்திட்டம், அரசியல் குறித்த ஒரு முக்கியமான முன்னெடுப்பு. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்படையாகக் கொண்ட அணிதிரட்டல், சமூக-பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,  குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவை முதலாளித்துவ திரட்சி முறைக்குள்ளும் சாத்தியம் என வாதிடுகிறது.

வளர்ச்சி குறித்த ஆய்வில் இந்த புத்தகம் பல விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் ஆய்வில் பல குறைபாடுகள் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நில சீர்திருத்தம் வெறும் இடதுசாரி புரட்சிகர செயல்பாடு அல்ல. பல கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது செயல் படுத்தப்பட்டுள்ளது. சொத்து அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை சாதிய பாகுபாட்டின் முக்கிய அம்சமாக திராவிட இயக்கம் கருதவில்லை என வாதிட முடியாது. அவர்கள் கருதாததால் சொத்துடமை தமிழகத்தில் சமூக அதிகாரத்தை நிர்ணயிப்பது பொய்யாகி விடாது.

இந்த புத்தகத்தின் தரவுகளின்படி கூட, 1990களுக்கு முன்பிருந்தே பல குறியீடுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் 1990களுக்கு பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி வேறு பரிமாணத்தை அடைந்தது. இங்கு தான் அந்த கால கட்டத்தின் அரசியல் நிதர்சனத்தை ஆராய வேண்டும். 1990-கள் துவக்கம் முதல் மத்திய பகுதி வரை இந்த இரு கட்சிகளின் தலைவர்களின் நாணயம் கேள்விக்கு ஆளானது. ராஜீவ் காந்தி மரணத்தின் பின் திமுக நம்பகத்தன்மையை இழக்க, ஊழல் மற்றும் சுயநலத்தின் சின்னமானார் ஜெயலலிதா.

1996 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் பெரும் ஊழல் வழக்கில் சிக்கிய போதும், கலைஞர் அவர்கள் மக்களின் ஆதரவை வென்றெடுக்க ரஜினிகாந்த் துணை தேவையாக இருந்தது. 2000களில் திமுக மீது ஊழல் வழக்குகளும், வளர்ச்சி திட்டங்களில் உள்ளூர் திமுக பிரமுகர்கள் கொள்ளை அடித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன. “பொருளாதார” ஜனரஞ்சக அதிமுக தான் 20ஆம் நூற்றாண்டின் திராவிட காலத்தின் பெரும் பகுதியை ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலதன திரட்சியில் இதர இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் முன்னேறி உள்ளதாக சொல்லும் வாதமும் ஆராய வேண்டி உள்ளது. “மராத்தா” மற்றும் “படேல்” வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் குளறுபடி உள்ளதால், அவர்களை புறந்தள்ளி இந்த தரவை பார்க்க முடியாது.

இதே போல் “கவுண்டர்” போல சில சாதிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் குளறுபடி உண்டாக்குகிறது. ஆனால் இதுவும் கூட முழு உண்மையை கூறாது. எண்ணிக்கை அளவில் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவு முன்னேறி உள்ளனர் என ஆய்வு செய்தால் தான் மனிதத்தன்மையாற்ற சாதிய உறவுகளை மாற்ற எடுக்கப்பட்ட முனைப்பான முன்னெடுப்புகள் தெரிய வரும்.

அப்படிப்பட்ட ஆய்வு தான் ஒடுக்கப்பட்ட சாதியினர் நோக்கிய திராவிட அரசுகளின் நடவடிக்கைகள் கடைநிலையில் இருந்து வந்த அழுத்தத்தால் நேர்ந்ததா இல்லை “இடைநிலை”, மேல்மட்ட சாதியினர் மேலே செல்லும் விருப்பத்தால் நேர்ந்ததா என தெரியவரும். இல்லையென்றால் திராவிட இயக்கமானது பிரிவினைவாத கோஷங்களுடன் வந்த சிறு முதலாளிகளின் இயக்கமாக வந்து, பின் நவீன தாராளமய ஆட்சியாக மாறி, அதன் அதிகாரத்தை தக்க வைக்க நலத்திட்டங்களையும், 90 கள்-2000-களில் கிடைத்த கூட்டணி தேர்தல் அரசியலின் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்ட இயக்கம் எனவே வரையறுக்க முடியும்.

முக்கியமாக, நவீன தாராளமய காலத்தில் ஏற்பட்ட பல நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிகளின் மொத்த திராவிட அரசியலை சுட்டிக் காட்டியதே இந்த புத்தகத்தின் மீதான மிகப்பெரும் விமர்சனம்.இரு கட்சிகளுமே மாநிலத்தின் முதலாளி-அரசியல்வாதிகளின் நலனை முன்னெடுத்து செல்லும் வாகனங்கள் என்பதை மக்கள் உணர்வது அவசியம்.

குறிப்பாக இட ஒதுக்கீடு 69%-ற்கு நீட்டிக்கப்பட்ட பின் இட ஒதுக்கீடு அரசியல் வறட்சி அடைந்த காலத்தில் இது முற்றிலும் உண்மை. மேலும் தலித் மக்கள் வாழ்நிலை முன்னேற்றங்களுக்கு மாநில அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் காரணம். இந்த காலம் “கனவு காணக் கூடிய” காலமாக மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளுடன் “பேரம் பேசக் கூடிய” காலமாகவும் இருந்தது.

திராவிட அரசியல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமமாக தலித் மக்களை பாவித்தது என ஆசிரியர்கள் விடாப்பிடியாக கூறுகின்றனர். ஆக, தலித் மக்கள் மீதான அநீதியை விவரிக்கையில், தலித் மக்களால் இவை அநீதியாக பாவிக்கப்பட்டதாக விவரிக்கின்றனர். இது குறித்த விமர்சனத்தை நாம் கூறியுள்ளளோம்.

பெரும்பாலும் தலித் மக்கள் இரண்டில் ஒரு கட்சியுடன் (பெரும்பாலும் குறைந்தபட்ச திராவிடமாக இருக்கும் அதிமுக) தங்களை இணைத்துக் கொண்டதால், திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” தன்மையை அடைந்ததாக ஆசிரியர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர். தமிழக அரசு நிச்சயம் ஜனரஞ்சகவாத அரசு தான். ஆனால் “இடதுசாரி” என வரையறுக்க கோஷங்கள் மட்டுமின்றி செயலிலும் நிறுவ வேண்டும். 1980-90 களில் ஆய்வாளர்கள் திராவிடம் தலித் மக்களுக்கு எதிரானது என வாதிட்டதை எதிர்க்க இங்கு ஆசிரியர்கள் வெறும் தலித் விடுதலைக்கு ஆதரவாக பெரியார் சொன்ன கூற்றுக்களை மேற்கோள் காட்டுகின்றனர். தலித் மக்கள் தேவையை பூர்த்தி செய்வதில் குறைகள் இருந்தால் அதற்கு மத்திய-மாநில உறவுகளும், நவீன தாராளமயமும் தான் காரணம் என்கின்றனர். ஆனால் திராவிட அரசியல் தலித் மக்களை சமமாக பாவித்தது என காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மை.

மேலும் உண்மையிலேயே திமுக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “இடது ஜனரஞ்சக” அரசியல் தான் கட்டி அமைத்ததென்றால், எம். ஜி. ஆர் அதீத அநியாயம் இழைத்த பின்னும் “ஜனம்” திமுக-வை ஏன் ஆட்சி பொறுப்பிலிருந்து பெரும்பாலும் வெளியே வைத்தது என்ற கேள்வியும் எழுகிறது. எம். ஜி. ஆர் காலத்தில் எதிர்க்கட்சியான திமுக தன் “இடதுசாரி” பண்பை எவ்வாறு வெளிப்படுத்தியது?

திராவிட பொதுபுத்தி என்பது அரசியலின் பொதுவான அம்சங்கள் தான், தனி கட்சிகளின் பண்புகள் அல்ல என்று சொல்லி ஆசிரியர்கள் தப்பித்து கொள்ள முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் பெரும்பாலும் திமுக-வை “சமூக இடது ஜனரஞ்சக” கட்சியாக காட்டவே ஆசிரியர்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் இதே பாணியில் அணுகி அவர்களோ, நாமோ நிச்சயம் அதிமுக-வை  “பொருளாதார இடது ஜனரஞ்சக” கட்சியாக பாவிக்கவே மாட்டோம்.

நூலின் பெயர்: திராவிட   முன்மாதிரி (2021)

எழுதியோர்: கலையரசன், விஜயபாஸ்கர்

(கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடு)