தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?

பேரா. வெங்கடேஷ்  ஆத்ரேயா

அறிமுகம்

இந்த கட்டுரையில் ஆய்வறிக்கை தமிழக வேளாண் குடும்பங்களின்  நிலைமை குறித்து தரும் சில தரவுகள் பற்றி சுருக்கமாக பரிசீலிப்போம்.

வரையறை

ஒன்றிய அரசின் ஆய்வில் சம்பந்தப்பட்ட ஆண்டில் (2018 ஜூலை முதல்  2019 ஜூன் வரையிலான ஒரு ஆண்டு) விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம்  நான்காயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான மதிப்பு பெறுகின்ற அளவிற்கு உற்பத்தி செய்யும் குடும்பங்கள் மட்டுமே வேளாண் குடும்பங்கள் என  வரையறுக்கப்பட்டுள்ளது. விவசாயம் என்பது பயிர் சாகுபடி, தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி, கால்நடை பராமரிப்பு (ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டு) தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு  ஆகிய அனைத்தையும் குறிக்கும்.  குடும்பத்தில் ஒரு நபராவது தனது பிரதான பணியாகவோ இரண்டாம் நிலை பணியாகவோ மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆய்வு கிராமப்புறங்களில் மட்டும் நடத்தப்பட்டது. ஆய்வில் இடம்பெற்ற குடும்பங்கள் (ஆய்வு வரையறுத்துள்ள) ‘வேளாண் குடும்பங்கள்’, ‘வேளாண் அல்லாத குடும்பங்கள்’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான ஆய்வு வேளாண் குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு தரும் சில விவரங்களை நாம் காண்போம்.

தமிழகம் -இந்தியா ­­

பல முக்கியமான தன்மைகளில் தமிழகம் இந்திய சராசரியிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது.

  • அகில இந்திய அளவில் மொத்த கிராமப்புற குடும்பங்களில் 54% குடும்பங்கள் வேளாண் குடும்பங்கள் என்றும், மீதம்   46% வேளாண் அல்லாத குடும்பங்கள் என்றும் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில்  26% மட்டுமே வேளாண் குடும்பங்கள் என தனது வரையறையின் அடிப்படையில்  ஆய்வு தெரிவிக்கிறது.
  • சமூக கட்டமைப்பை பொருத்தவரையில் அகில இந்திய அளவில் வேளாண் குடும்பங்களில்  கிட்டத்தட்ட 16% பட்டியல் சாதியினர், 46% இதர பிற்படுத்தப்பட்டோர், 14% பழங்குடியினர், மீதம்  24% இதர சமூகங்களை சேர்ந்தவர்கள். தமிழக நிலைமை இதிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. தமிழகத்தில், வேளாண் குடும்பங்களில் பழங்குடி மக்கள்  1.2 %, பட்டியல் சாதியினர்  20.2%, இதர பிற்படுத்தப்பட்டோர்  78.3%, இதர சாதியினர்    0.3% மட்டுமே .
  • கல்வி சார்ந்த சில குறியீடுகளை எடுத்துக்கொண்டால், தமிழக ஊரக வேளாண் குடும்பங்களின் எழுத்தறிவு விகிதம் 7 வயதுக்கு மேற்பட்டவர்களில்   80.5% (ஆண்கள் 87.5%, பெண்கள் 73.6%)   ஆக உள்ளது. அகில இந்திய சராசரி 73.6% (ஆண்கள் 81.9%, பெண்கள் 65.0 %)ஆக உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தாம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் சதவிகிதம் தமிழகத்தில்  41.7% (ஆண்கள் 48.7%, பெண்கள் 34.6%).இந்திய சராசரி 33.8% ( ஆண்கள் 40.4%, பெண்கள் 27.0). இவ்விவரங்கள் பொதுவாக பல பிற மாநிலங்களைவிட கல்வி புலத்தில் தமிழகம் சற்று முன்னணியில் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது.
  • பொதுவாக இந்திய நாட்டில் பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் சிறு குறு விவசாயிகள் என்பது உண்மை.  நிலம் உள்ள ஒரு வேளாண் குடும்பம் சராசரியாக தன்வசம் வைத்துள்ள வேளாண் நிலம் தமிழகத்தில் 0.265 ஹெக்டேர்தான் (சுமார் 65 சென்ட்). அகில இந்திய சராசரி 0.558 ஹெக்டேர்(138 சென்ட்). இவை சராசரிகள் என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் பெரும் நில உடமையாளர்களும் உள்ளனர். உண்மையில், நில உடமையில் உள்ள பெருத்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக  பெரும்பகுதி வேளாண் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் (5 ஏக்கருக்கு ஆறு சென்ட் குறைவு) குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். ஒரு சிறிய பகுதியினரிடம் பெரிய பண்ணைகள் உள்ளன.

தமிழக வேளாண் குடும்பங்களின் வருமானம்

  • ஒன்றிய அரசின் ஆய்வின்படி தமிழக கிராமப்புற விவசாய குடும்பங்களின்  சராசரி மாத வருமானம் ரூ 11,924. அகில இந்திய அளவில் ரூ 10,218. இத்தொகை விவசாயிகள் கையை விட்டு பணமாக செலவழிக்கும் செலவுகளை மட்டுமே கணக்கில்  கொண்டு நிகர வருமானத்தை கணக்கிடுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (CACP–Commission on Agricultural Costs and Prices) முன்வைக்கும் C2 என்ற செலவு வரையறைப்படி பார்த்தால் செலவு கணிசமாக கூடுதலாக இருக்கும். C2 செலவு தொகை என்பதில் கையைவிட்டு பணமாக சாகுபடிக்கு செலவழிக்கப்படும் தொகை மட்டுமின்றி கீழ்வரும் செலவுகளும் சேரும்: சாகுபடிப் பணிகளில் செலவிடப்படும் குடும்ப உழைப்பு சக்தியின் பணமதிப்பு, நிலத்திற்கான குத்தகை மதிப்பு (சொந்த சாகுபடி செய்யும் விவசாயி அவ்வாறு செய்யாமல் குத்தகைக்கு விட்டிருந்தால் குத்தகைத்தொகை கிடைத்திருக்கும் அல்லவா, அது சொந்த சாகுபடியில் கிடைக்காது என்ற வகையில் வெளிப்படாத செலவு என்று பொருளியலில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு உள்ளது), சாகுபடிக்காக செய்யப்பட்டுள்ள முதலீட்டு தொகைக்கான வட்டி.. இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டால் வரும் தொகை C2. இந்த அடிப்படையில் கண்டால் தமிழக ஊரகப்பகுதி விவசாய குடும்பத்தின் சராசரி மாத  வருமானம் ரூ 10,448 ஆகும். அகில இந்திய அளவில் இத்தொகை ரூ 8,337 ஆகும்.
  • ஒரு வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானம் பல நடவடிக்கைகள் மூலம் பெறப்படுகிறது. குறிப்பாக, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, குத்தகை மற்றும் கூலி/சம்பள உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் முக்கியமானவை. இவ்வாறு வருமான மூலம் என்ற அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் சராசரியாக ஒரு ஊரக வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானத்தில் கூலி உழைப்பின் மூலம் கிடைக்கும் பங்கு 55% . பயிர் சாகுபடி மூலம் கிடைப்பது 22%. கால்நடை வளர்ப்பு மூலம் கிடைப்பது 17% , குத்தகை மூலம் கிடைப்பது 6% என்று ஆய்வு தெரிவிக்கிறது. அகில இந்திய அளவில் இந்த விகிதங்கள் முறையே 39.8%,  37.2%, 15.5%, 13.1% என்று உள்ளன. எனவே வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாக பங்களிக்கிறது.  தமிழகத்தில் மொத்த குடும்ப வருமானத்தில் கூலி-சம்பள வருமானம் இந்திய சராசரியை விட கூடுதலான பங்கு வகிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு உட்பட்டு நிலம் உள்ள வேளாண் குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்குக்கும் அதிகமானவை  பிரதானமாக கூலி  உழைப்பை சார்ந்தே உள்ளன.

கடன் பற்றி

கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.  ஆய்வு ஆண்டில் தமிழக கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ 1,06,553 கடன் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. மொத்த வேளாண் குடும்பங்களில் 65% குடும்பங்கள் கடன் பட்டிருந்தன. அகில இந்திய அளவில் சராசரி கடன்  ரூ 74,121 ஆகவும் கடன் நிலுவை இருந்த குடும்பங்களின் சதவிகிதம் 50% ஆகவும் இருந்தது. இதன் ஒரு பொருள் சந்தை சார்ந்த இடுபொருட்களை அதிகமாக பயன்படுத்தும்  நவீன வேளாண்மையில் அகில இந்திய சராசரியை விட தமிழகம் கூடுதலாக ஈடுபட்டுள்ளது என்பதாகும்.

கவனம் தேவை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் இருந்து முடிவுகளுக்கு பயணிக்கும் பொழுது கவனம் தேவை. “ கிராமப்புற மொத்த குடும்பங்களில் வேளாண் குடும்பங்கள் 26% தான். எனவே விவசாயம்  தமிழக பொருளாதாரத்திற்கு முக்கியமல்ல.” என்று முடிவு செய்வது மிகவும் தவறாகும். இந்த ஆய்வு முன்வைத்துள்ள ‘வேளாண் குடும்பம்’ என்பதற்கான  வரையறைக்குள் வராத ஏராளமான ஊரக குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை விவசாயக்கூலி வேலை மூலம் பெறுகின்றனர். ஆகவே தமிழக கிராமப்புற மக்களில் விவசாயத்தை ஏதோ ஒரு வகையில் ஓரளவாவது சார்ந்து நிற்கும் குடும்பங்களின்  சதவிகிதம் 26% ஐ விட நிச்சயம்  அதிகம்.

அகில இந்திய ஒப்பீடுகள் ஒரு புறமிருக்க, தமிழக விவசாயிகள் குறித்து கிடைக்கும் தரவுகளை பார்ப்போம்.

தமிழக ஊரக வேளாண் குடும்பங்கள்

  • ஒன்றிய அரசின் ஆய்வின் வரையறை படி தமிழக ஊரகப்பகுதியில் மொத்த குடும்பங்களில் 26%  வேளாண் குடும்பங்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமூக ரீதியாக இது வேறுபடுகிறது. பட்டியல் சாதியினர் மத்தியில் இந்த சதவிகிதம் சற்றுக் குறைவாக  18% ஆகவும் பிற பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் 31% ஆகவும் உள்ளது.
  • பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த அளவிலான நிலம் கொண்டுள்ளனர். 95 சதவீத பட்டியல் சாதி வேளாண் குடும்பங்கள் மற்றும் 91 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் வேளாண் குடும்பங்கள்  சராசரியாக 1 ஹெக்டேருக்கு குறைவாகவே நிலம் கொண்டுள்ளனர்.
  • பட்டியல் சாதி வேளாண் குடும்பங்களிடம் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக  வீட்டுமனையையும் சேர்த்து 1.25 ஏக்கருக்குக் குறைவாகவே நிலம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சராசரியாக 2 ஏக்கர் நிலம் உள்ளது.
  • பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
  • பாசனத்தை பொருத்தவரையில் மொத்த சாகுபடி பரப்பளவில்  43% தான் பாசனம் பெறுகிறது. பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது நிலத்தடி நீர். அடுத்து உள்ளது வாய்க்கால் பாசனம்.
  • ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் பயிர் சாகுபடி வருமானம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.  இதன் பொருள் இந்த நிலங்கள் நடப்பு தரிசாக இருந்திருக்கலாம்; அல்லது சாகுபடி பொய்த்துப்போய் விட்டது என்பதாகும்.
  • தமிழக ஊரக வேளாண் குடும்பங்களில் 64%  பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் சந்தைகளின் முக்கிய பங்கு

தமிழகத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், வேர்க்கடலை மற்றும் தேங்காய் ஆகும். முக்கியமான செய்தி என்னவெனில், இடுபொருட்கள் வாங்குவதும் விளை பொருட்கள் விற்பதும் கணிசமான அளவிற்கு உள்ளூர் அல்லது அருகாமை சந்தைகளில்தான் நிகழ்கிறது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்ற நெறிமுறைகளை புறக்கணித்து நிறைவேற்றிய விவசாயி விரோத வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த அரசு பயன்படுத்திய, பயன்படுத்திவரும் கதையாடல் எவ்வளவு தவறானது என்பதை இத்தகவல் நமக்கு தெரிவிக்கிறது. APMC ஏற்பாடுகளும் செயல்பாடுகளும் எந்த வகையிலும் கிடைக்கும் விலைக்கு விளைபொருட்களை விற்பதற்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதை இத்தரவுகள் தெரிவிக்கின்றன.(மாபெரும் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய நேர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.)

கொள்முதல்

ஒன்றிய அரசின் ஆய்வு விவசாய குடும்பங்கள் மத்தியில் கொள்முதல் விலை மற்றும் ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திலும் கூட குறைவாகவே உள்ளது என்று கூறுகிறது. நெல் சாகுபடியாளர்களை பொருத்தவரையில், 2019இல் 64% விவசாயிகள்  உள்ளூர் சந்தைகளில் நெல்லை விற்றனர். 28% அரசு முகமைகளுக்கு விற்றனர். மொத்த விற்பனையில் அரசு முகமைகளுக்கு 32% விற்கப்பட்டது, 62% உள்ளூர் சந்தைகளில் விற்கப்பட்டது.

இத்தரவுகள் ஒரு முக்கிய செய்தியை சொல்கின்றன. நெல் கொள்முதல் ஏற்பாடுகளை அரசு வலுவாக செய்தால் பெரும்பகுதி நெல்லை விவசாயிகள் உரிய கொள்முதல் விலை பெற்று அரசுக்கு விற்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. அத்தகைய ஏற்பாடு இல்லை என்பது தொடரும் துயரம். நெல்லின் கதை இதுவென்றால் பிற பயிர்கள் விற்பனையில் விவசாயிகள் படும் பாடு என்ன என்பதை உணர்வது கடினமல்ல.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் நடந்துவரும், தற்பொழுது முடிவுக்கு வந்துள்ள மகத்தான விவசாயிகள் போராட்டத்தின்  முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று  நியாயமான கொள்முதல் விலை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.  அரசின் ஆய்வு சொல்லும் செய்தி  வேளாண் குடும்பங்களின் வருமானம் உயர இக்கோரிக்கை மிக அவசியம் என்பதாகும். நெல்லுக்கும் கோதுமைக்கும் மட்டுமல்ல; அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இத்தகைய நியாயமான கொள்முதல் விலையும் அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் என்பதும்  உறுதிப்படுத்தப்படவேண்டும்.

நிறைவாக

ஒன்றிய அரசின் ஊரக வேளாண் குடும்பங்கள் நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு நமக்கு பல செய்திகளை சொல்கிறது. ஆய்விலும் அறிக்கையிலும் சில பல குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக  இயக்கம் அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தை கவனமாக பரிசீலித்து தக்க கோரிக்கைகளை உருவாக்கிட வேண்டும். கொள்முதல் ஒரு எடுத்துக்காட்டுதான். விவசாய குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்ட குடும்பங்களில் கூட கூலி வருமானம் பிரதான பங்கு வகிப்பதை நாம் பார்த்தோம். ஏழை மற்றும் சிறு குறு விவசாயிகளையும் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளையும் ஒன்றிணைத்து நியாயமான கூலிக்கும் கூடுதலான வேலை நாட்களுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது. ரேகா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் முனைவுகள் தேவை. சிறு நகரப் பகுதிகளுக்கும் அதனை விரிவு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பலப்பல பிரச்சினைகள் -வீழ்ந்து கிடக்கும் வேளாண் விரிவாக்க அமைப்பு, நிதி மறுக்கப்பட்டு  பலவீனம் அடைந்துள்ள  வேளாண்  ஆராய்ச்சி அமைப்பு, நிறுவனக்கடன் அளவு விகிதாச்சார அடிப்படையில் குறைந்து விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளப்படுவது, பாசன வசதிகளின் போதாமை, இது போல் இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. முழுமையான ஜனநாயக நிலச்சீர்திருத்தத்தின் இலக்கணமான நிலமறுவிநியோகம் மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டிய செய்தி. 

ஒன்றிய அரசின் ஆய்வு தமிழக கிராமங்களில் உள்ள வேளாண் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. சொந்த காட்டிலும் பிற நிலங்களிலும் பாடுபட்ட பிறகும், அனைத்துவகை கூலி வேலைகளுக்கு சென்று பாடுபட்ட பிறகும், கால்நடை வளர்ப்பில் உழைப்பை செலுத்திய பின்பும், ஒரு வேளாண் குடும்பத்தின் மாத வருமானம் ரூ 10,000ஐ ஒட்டியே உள்ளது என்பது தமிழக வளர்ச்சிப் பாதை ஒரு முன்மாதிரி என்ற  பிம்பத்தை ஒட்டி அமையவில்லை. ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்தின் சராசரி வருமானம் மாதம் பத்தாயிரம் என்றால் நபருக்கு நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் கூட இல்லை என்கிறது கணக்கு. இதுவும் சராசரி தான். இதற்கும் கீழ் கணிசமான வேளாண் குடும்பங்கள் உள்ளன. அனைவருக்குமான ஊரக வளர்ச்சியின் அவசியத்தை இவ்விவரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. விரிவான கிராமப்புற வறுமை நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறது.

ஒரு முக்கிய அம்சத்தை கவனப்படுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாகப் பங்களிக்கிறது என்பதை பார்த்தோம். இதன் பொருள் உற்பத்திக்கருவி உடைமைகள் மூலம் அல்லாது மிகக்கடுமையான உழைப்பின் மூலம் தான் இக்குடும்பங்களின் பெரும் பகுதி வருமானம் பெறப்படுகிறது என்பதாகும். வேறு வகையில் சொல்வதானால், கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகியே தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் கிராமப்புற குடும்பங்களின் மொத்த வருமானத்தில்  வேளாண்சாரா மூலங்களின் பங்கு கடந்த பல பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற உண்மையை சிலாகித்து மட்டுமே பார்ப்பது முழுமையான பார்வை அல்ல என்பதை நாம் அடிக்கோடிட்டுக் கூற வேண்டியுள்ளது.  உற்பத்தி உறவுகளில், நில உடமை உறவுகளில் மாற்றம் காணாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வில் நிலைத்தகு முன்னேற்றம் காண இயலாது என்பதை இவ்விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.  பொது விநியோக அமைப்பும் சேமநல திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பு அம்சங்கள் என்றாலும் இவை மட்டுமே நீண்ட கால வாழ்வாதார உத்தரவாதமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.  நடப்பில் உள்ள இந்த அம்சங்களும் யாருடைய கொடையும் அல்ல; வர்க்கப்பார்வையுடன் நடத்தப்பட்ட வர்க்க  வெகுஜன அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்கள் இத்தகைய ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். கிராமப்புற பொருளாதாரமும் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் மக்கள் நலன் சார்ந்து மேம்பட விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது அவசியம் என்பதையும், அதன் பயன் அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டுமென்றால் உற்பத்தி உறவுகளும் மாற வேண்டும்  என்பதையும் நாம் உணர முடிகிறது. இதோடு, வேளாண் ஆதரவு பொதுகட்டமைப்புகள்–மின்சாரம், பாசனம், விரிவாக்கப்பணி அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விளைபொருள் சேமிப்பு கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் – போன்றவை வலுப்படுத்தப்பட்டு சிறுகுறு விவசாயிகளை எளிதில் சென்றடைவதும் அவசியம். ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்த தொடர்ந்த போராட்டமும் மாநில அரசின் முனைவுகளும் முக்கியம்.

நமது விவசாய அமைப்புகள்  ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையை ஆழமாக பரிசீலித்து பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்கி  தீவிரமாக களம் புக வேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்

  • அ. இராசகோபால்

இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018).

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினை ஏதோ மழை பொழிவு குறைவு, அதனால் தண்ணீர் அளவு குறைவு, எனவே தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்ற அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது. மாறாக அரசு கடைப்பிடிக்கும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்வது அவசியம்.

அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கை உலக அளவில் 1990 களிலிருந்து தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் முன்பிருந்த பொதுத்துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகத்திலும் பொதுத் துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு தனியார் பங்கீடு அதிகமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பிருந்த ‘கீனீஷியன்”(Keynesian) பொருளாதார அடிப்படையின் ‘மக்கள் நல அரசு’ (Welfare State) என்ற கோட்பாடு கைவிடப்பட்டு, எல்லாத் துறைகளிலும் சந்தை பொருளாதாரம் புகுத்தப்பட்டது. எனவே குடிநீர் தனியார் மயமாக்கலை உலகப் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் ஒரு சந்தை பொருளாகவே மாறியுள்ளது எனலாம்.

இதனால் உலக அளவில் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளைப் பார்ப்போம். தண்ணீர் தனியார்மயம் – உலக அனுபவங்கள் குடிநீர் 1990களில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தனியார் மயமாக்கப்பட்டது. பொதுவாக தனியார் மயமாக்கப்படும்போது குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்படுவது பல நாடுகளின் அனுபவம். சூயஸ் மற்றும் வெலோலியா போன்ற தனியார் நிறுவனங்கள் நிர்வாக ஒப்பந்தம் மேற்கொண்ட பல நாடுகளில் குடிநீர் வரி அதிகரித்து மக்களின் செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் முக்கியமாக தென் ஆப்பிரிக்கா, தென்
அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகளில் குடிநீர் தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

குடிநீர் தனியார்மயம் பொலிவியா நாட்டில் மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘கொச்சம்பா நீர்ப்போர்’என அழைக்கப்படுகிறது. பொலிவியாவின் முக்கிய நகர் கொச்சம்பாவில் டிசம்பர் 1999லிருந்து ஏப்ரல் 2000 வரை குடிநீர் வரி உயர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று தனியார்மயம் முறியடிக்கப்பட்டது. உலக அளவில் கடந்த 15 ஆண்டுகளில் 35 நாடுகளில் உள்ள 180 நகரங்களில் தனியார் துறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று குடிநீர் சேவை பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்தில் தனியார்மயத்திற்கு ஆதரவாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டன: தனியார்மயம் முதலீடுகளை அதிகப்படுத்தி நீர் விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தும்.

எனவே நிர்வாகத் திறமை அதிகரித்து குடிநீர் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். ஆனால் உண்மையில் நடந்தது இதற்கு மாறானது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் குடிநீர் துறையில் தங்களின் சொந்த முதலீடுகளை மேற்கொள்ளாமல் அரசின் பொதுத்துறை முதலீடுகளையே பயன்படுத்தி உள்ளன. மேலும் தனியார் கம்பெனிகள் உலகில் நன்கு இலாபம் உறுதியளிக்கும் நடுத்தர வளர்ச்சி நாடுகளிலேயே அதிகம் முதலீடு செய்துள்ளன. உலக அளவில் நீர் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் தனியார் துறையின் முதலீடு 37 சதவிகிதம் ஆகும்.

இதில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகள் நடைபெறவில்லை. குறிப்பாக ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியார் துறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏற்கனவே போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் குறிப்பிட்டபடி தனியார் துறை முதலீடுகள் கிடைக்காமல் முறிவடைந்துள்ளன. உலக வங்கியின் புள்ளி விபரங்களின்படி குடிநீர் துறையில் ஏற்பட்ட கட்டுமானங்கள் 80 சதவிகிதம் சரிவர பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி பொது நிறுவனங்கள் வழங்கும் குடிநீரின் செலவு தனியார் நிறுவனங்களை விட சராசரியாக 20 சதவிகிதம் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தனியார்மயம் நிர்வாகத்திறமையை அதிகரித்து குடிநீர் திட்டங்களின் பலனை அதிகரிக்கும் என்பது ஒரு மாயையே.

இந்தியாவில் தண்ணீர் தனியார்மய அனுபவங்கள் தண்ணீர் தனியார்மயம் இந்தியாவிற்கு புதியதல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய சட்டிஸ்கர் மாநிலத்தில்
23.5 கி.மீ நீளம் உள்ள சிவநாத் என்ற ஆற்றையே “ரேடியஷ் வாட்டர் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு ‘தொழில்துறை வளர்ச்சிக்காக’ விற்று விட்டது அரசு.

இதைத்தவிர வெலோலியா, ஜீஸ்கோ, ஆரஞ்சு பாட்டில் வாட்டர் போன்ற தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் குடிநீர் வரி உயர்வு, அரசு சேவை குறைவு ஆகியவற்றால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிவநாத் ஆறு விற்பனை மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டது என அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றை நம்பி இருந்த பொதுமக்களின் வாழ்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் தண்ணீர் தனியார்மயம் 2000க்கு பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு அடிப்படை உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளே ஆகும். மேலும் 2002-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட மத்திய அரசின் நீர் கொள்கையும் தனியார்மயத்தை ஊக்குவித்தது. அதற்குபிறகு 10 ஆண்டுகளில் நீர்வள திட்டங்களில் தனியார் பங்கேற்பு 300 % க்கும் மேல் அதிகரித்துள்ளன.

“மகத்தான் அதியான்” என்ற என்.ஜி.ஓ.அறிக்கையின்படி தனியார்மய குடிநீர் திட்டங்கள் மிக அதிகமாக மகாராஷ்டிராவிலும்(48) கர்நாடகாவிலும்(26) அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 25 திட்டங்களில் தனியார் முதலீடுகள் உள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. நாக்பூர் நகராட்சி அமைப்பு 2007-ல் குடிநீர் விநியோகத்தை வெலோவியா என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. முதலில் குறைந்த அளவில் சில வார்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தனியார்மயத் திட்டம் 2011-ல் நகரம் முழுவதும் விரிவாக்கப்பட்டது. அரசு முதலீடும் இரட்டிப்பாக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.

குடிநீர் வரி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு வரிச்சுமையை ஏற்றின தனியார் நிறுவனங்கள். இதற்கு எதிராக நாக்பூர் மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சங்கம் 2016-ல் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தின. நாக்பூர் மட்டுமல்லாது, கொல்கத்தா, மைசூர் மற்றும் இதர நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் மக்கள் சேவையில் தோல்வி கண்டுள்ளன. 2013-ல் மைசூர் மாநகர நிர்வாகம், 24X7 என்ற குடிநீர் சேவையில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக ஜுஸ்கோ என்ற நிறுவனத்தின் மேல் ரூ.7 கோடி அபராதம் விதித்தது. மேலும் அரசு தனியார் கூட்டு Public Private Partnership (PPP) என்ற போர்வையில் பல நீர்வள திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்கு இரையாகியுள்ளன என்றால் மிகையாகாது.

திருப்பூர்:

தமிழ்நாட்டில் திருப்பூரில் 1995-ல் ‘புது திருப்பூர் வளர்ச்சி திட்டம்’ திருப்பூர் நகர பின்னலாடை தொழில் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1023 கோடி ரூபாய் செலவில் மிகவும் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1995-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டப்பணிகள் 2005-ல் தான் முடிவடைந்தது. இருப்பினும் ஆரம்பம் முதல் 2011 வரை இந்த திட்டம் சரிவர செயல்படவில்லை. தனியார் கம்பெனிகள் ஒப்பந்தப்படி முதலீடு செய்யாதது மற்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட பொருளாதார மோதல்கள் திட்டத்தின் செயல் இன்மைக்கு முக்கிய காரணங்கள்.

எனவே 2011-ல் அரசு முதலீடு மூலம் இத்திட்டம் மீண்டும் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக எழுந்த சட்டப்பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் கருத்து குறிப்பிடத்தக்கது. பொலிவியாவில் இருந்து விரட்டப்பட்ட ‘பெக்டல்’ கம்பெனி பங்குபெறும் திட்ட கூட்டமைப் பிற்கு (Consortium) எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே குடிநீர் போன்ற அடிப்படை பணிகளில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்துவது மிகவும் தவறு என்று எச்சரித்துள்ளார்.

தனியார் மயமாகும் கோவை குடிநீர் விநியோகம்:

கோவை நகர குடிநீர் விநியோகம் மற்றும் மராமத்து பணிகள் சூயஸ் எனும் பிரெஞ்சு கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு இந்நிறுவனம் கோவை மாநகரின் குடிநீர் நிர்வாகத்தை கவனிக்கும். முதல் 5 ஆண்டுகள் குடிநீர் விநியோக கட்ட மைப்பை சீர் செய்ய வேண்டும். அதன்பிறகு 21 ஆண்டுகள் குடிநீர் விநியோகத்தை நிர்வாகம் செய்வது இதனுடைய பணியாகும். இதற்காக ரூ 2,300 கோடி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். குடிநீர் வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூயஸ் கம்பெனி தமிழ்நாட்டில் செம்பரம்பாக்கம் ஏரியை சரிவர பாரமரிப்பு செய்யாமல் இருந்ததால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சூயஸ் நிறுவனம் காரணம் என மத்திய தணிக்கையாளர் அறிக்கை (CAG) தெரிவித்ததுள்ளது . இப்படியிருக்க இந்த கம்பனிக்கு தற்போது எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ?

தமிழகத்தின் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பொதுவாக, சென்னை போன்ற நகரங்களில் குடிநீருக்கு மக்கள் தங்கள் வருமானத்தில் பத்து முதல் இருபது சதவிகிதம் செலவிடுகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பெருமளவு நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்கு மட்டுமே உதவும். எனவே ஏழைகள் தண்ணீர் விநியோகத்திலிருந்து பெருமளவு விடுபட்டு உள்ளார்கள். தற்போது குடிநீர் விநியோகத்தில் அரசு பங்கு குறைந்து தனியார் பங்கு மிக அதிகரித்துள்ளது என பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரச்சினையின் தன்மையை உணர்ந்து நீண்ட
கால நோக்கோடு அரசு செயல்படவில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கடிந்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி குடிநீர் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அரசின் பொருளாதார கொள்கைகளே. மேலும் ‘நிதி பற்றாக்குறை குறைப்பை’ அடிப்படையாக கொண்டுள்ள அரசு பட்ஜெட்டில் நீர்வளம் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தொலைநோக்கு திட்டங்கள்
தீட்டப்படவில்லை.

ஆரம்ப கட்ட தண்ணீர் முதலாளித்துவ வளர்ச்சி

மேலே விவரிக்கப்பட்ட அனுபவங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நீர் போன்ற அடிப்படை உற்பத்தி காரணிகளில் ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட முதலாளித்துவ (primitive capitalism) வளர்ச்சியை குறிக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி கீனீஷியன் (Keynesian) பொருளாதார காலகட்டத்தில் ‘மக்கள்நல அரசின் பலன்கள்’ தண்ணீர் விநியோகத்தில் பொதுத்துறை மூலம் கிடைத்து வந்தன. ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது கடைப்பிடிக்கப்படும் புதிய தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்
அரசின் நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

நீர் மேலாண்மையில் முன்பிருந்த “சமூக சம பங்களிப்பு” (Social Equity) என்ற கோட்பாடு மாறி “பொருளாதார சம பங்களிப்பு” (Economic Equity) என்ற கோட்பாடு நடைமுறையில் உள்ளது. அதாவது நீர் விநியோகத்தில் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு அதன் விலை இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக, ‘ தண்ணீரின் விலை’ அதன் உற்பத்தி மற்றும் விநியோக செலவை முழுவதும் திருப்பி பெறுவதாக (full cost recovery) இருக்க வேண்டும் என மாறியுள்ளது .

ஆனால் குடிநீர் என்பது மற்ற விற்பனை பொருட்கள் போல் அல்ல. குடிநீர் மக்களின் வாழ்வுரிமை. இதை பூர்த்தி செய்வது மக்கள்நல அரசின் அடிப்படை கடமை. எனவே குடிநீர் நிர்வாகத்தில் பொது மக்களின், முக்கியமாக ஏழைகளின், பங்கு உறுதி செய்யப்பட வேண்டும் . இதன் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பல குறைகளுக்கு தீர்வு காண ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த இயலும். உலகின் பல பகுதிகளில் நடப்பது போல் மீண்டும் குடிநீர் நிர்வாகத்தை மாநகர அமைப்புகளுக்கு திருப்பித்தர வேண்டும். தண்ணீர் தனியார்மயத்தின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்போம்.

இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மோடியின் காலத்தில் இந்துத்துவ வலதுசாரிகளின் தாக்குதல்கள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கூட்டமாகச் சேர்ந்து அடித்துக்கொலை செய்வது; வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்வது; கொலை செய்வதற்கான சதித்திட்டங்களை தீட்டுவது; மாற்றுக்கருத்துக்களை சொல்ல முயற்சிப்பவர்களை பயமுறுத்திப் பேசவிடாமல் தடுப்பது என வலதுசாரிக் குழுக்களின் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இவை இப்போது மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. இவற்றை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் இத்தகைய விஷயங்களை அதற்குரிய கண்ணோட்டத்தில்தான் அணுக வேண்டும். வகுப்புவாதப் படுகொலைகள், பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் என மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மத அடிப்படையில் நிகழ்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையேதான் நமது குடியரசு பிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கும் முன்பிருந்தே இந்த வகுப்புவாத வன்முறை இருந்து வருகிறது. தங்கள் சமூக வாழ்க்கையில் மற்றவர்களை சிறந்த வகையில் அனுசரித்துப் போகிற, தங்கள் அரசியல் நடத்தையில் மதசார்பற்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றுகின்ற கோடானுகோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாதியை அடிப்படையாகக் கொண்ட, கடவுள் மீது அதீதமான பற்று கொண்ட ஒரு சமூகத்தில் எந்த அளவிற்கு மற்றவர்களை அனுசரித்துப் போகிற, மதசார்பற்ற அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்பதற்கும் வரம்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\

வகுப்புவாத வன்முறையின் லாபங்கள்

1980களின் நடுப்பகுதியில் இருந்தே வகுப்புவாத வன்முறையானது கலாச்சார ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் மிக நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம் என்பது இதில் இரண்டாவது விஷயமாகும். நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இந்து தேசத்தை ஒன்றுபடுத்த பயன்பட்டது மட்டுமின்றி, இதுவரையில் பெற்றதிலேயே மிக அதிகமான மக்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.

பெரும்பான்மையான இந்துக்களை காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்து சங் பரிவாரம் அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமஜன்ம பூமி இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபடி நடைபெற்ற ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவினால் 85 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரதயாத்திரைகளையும், ரத்த ஆறுகளையும் ஓடவிட்ட பிறகு அதனிடம் 120 இடங்கள் வசமாயின. பாப்ரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் 161 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது மட்டுமின்றி, மிகக் குறுகிய மட்டுமேயானாலும் மத்தியில் அதனால் ஆட்சியையும் அமைக்க முடிந்தது.

இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ள நிலையில் அதற்கு மிகவும் இயற்கையாகவே கைவரப்பெற்ற வகுப்புவாத வன்முறையை சங் பரிவாரம் கைவிடுவதென்பது அரசியல் ரீதியாக முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளுக்கு முன்னால் பாஜகவின் அரசியல் வானில் மோடி மிகச் சாதாரணமான ஒரு நபராகத்தான் இருந்தார். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகோ, முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் அகில இந்திய அளவிலும் அவரையும் அமித் ஷாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ரீதியான கணக்குகளால் ஒரு சில நேரங்களில் தற்காலிகமான பின்னடைவுகளை அது சந்தித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1980களின் நடுப்பகுதியில் இருந்தே சங் பரிவாரம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி தனது பெருமையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களில் ஆர் எஸ் எஸ், பாஜக தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வந்துள்ளன என்பது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நாட்டின் உறுதித் தன்மையையே மாற்றுவதிலும் கூட அவை வெற்றி பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய இந்தியா அதிகமான அளவிற்கு இந்துமயமாகி உள்ளது. இன்றைய நாகரீகமாக காவியை ஏற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடித்தட்டு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

உதாரணமாக, வாஜ்பேயி அரசு அதன் தொடக்க நாட்களில் மாட்டுக் கறிக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சித்தது. எனினும் நாடாளுமன்றத்தில் எழுந்த பெருங்கூச்சலைத் தொடர்ந்து அது பின்வாங்கியது. ஆனால் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யும் சட்டத்தை மோடி-ஷா இரட்டையரின் அரசினால் அமலாக்க முடிந்துள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல விஷயங்களை அமலாக்க முடிந்துள்ளது. அவர்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு சிறு கட்சியின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு தங்கள் வாழ்க்கையைக் கழித்த வாஜ்பேயி, எல். கே. அத்வானி ஆகியோரை விட கொடூரமானவர்களாக, ரத்தவெறி பிடித்தவர்களாக மோடியில் இருந்து தொடங்கி (யோகி) ஆதித்யநாத் வரையிலான புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதெனில், அதன் வாக்குவலிமையில் உச்சகட்டத்தை பாஜக எட்டிப் பிடித்திருக்கும் சரியானதொரு தருணத்தில்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக மோசமான நபர்கள் அதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்த நடைமுறை உத்தியை அவர்கள் ஏன் கைவிட வேண்டும்?

பாப்ரி மசூதி தரை மட்டமாக்கப்பட்ட பின்னணியில் நாட்டில் பாசிசம் வலுப்பெற்றுவருகிறது என்று எச்சரித்த அறிவாளர்களில் நீங்கள்தான் முதலாமவர். இதுகுறித்த உங்களது உரை பின்னர் “பாசிசமும் தேசிய கலாச்சாரமும்: இந்துத்துவ நாட்களில் க்ராம்சியை பயில்வது” என்ற தலைப்பில் கட்டுரையாகவும் வெளியானது. இந்தியாவில்இந்துத்துவ பாசிசம் எழுச்சிபெற்றுவருவது குறித்த மிகச்சிறந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையில் “ ஒவ்வொரு நாடும் அதற்குத் தகுதியான பாசிசத்தை பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறெனில், இப்போது இந்தியா அதற்கேயுரிய பாசிசத்தை பெற்றிருக்கிறதா?

ஆம். இந்த சம்பவம் நடந்து முடிந்த நாட்களில் முதலில் அதுதான் எனது பிரதிபலிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் பாசிசம் என்ற வார்த்தையை நான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி இருந்தேன். எனினும் அந்த தொடக்க நாட்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பல முன் எச்சரிக்கைகளையும் அறிமுகம் செய்யத்  தொடங்கினேன். பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

மிக எளிதாக இந்தக் கட்சியின் மீது ஒரு முத்திரையை குத்துவதற்கு முன்பாக அதன் புதுமையான கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகத் துல்லியமான இயங்கியல் செயல்முறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் சுட்டிக்காட்டிய எனது உரை/கட்டுரையும் கூட அயோத்தியா இடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனேயே எழுதப்பட்டதுதான். ஆனால் அந்தக் கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதுபோல “இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சி” குறித்ததல்ல. மாறாக, க்ராம்சி தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்வியைப் போலவே இந்தியாவிற்கு உள்ளிருந்தபடி, நெருக்கடியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில், குறிப்பிட்டதொரு பிரச்சனையை பற்றி சிந்தித்ததே ஆகும்.

1920-ம் ஆண்டில் மிகச் சிறிய, ஒழுங்கமைப்பில்லாத பாசிச அணியை விட இத்தாலிய இடதுசாரிகள் ஒப்பில்லாத வகையில் வலுவானவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (பெனிட்டோ) முசோலினி ஆட்சியில் இருந்தார். 1926-ம் ஆண்டிலோ அவரது அதிகாரம் முழுமையானதாக இருந்தது; அதே நேரத்தில் ஓர் அரசியல் சக்தியாக இடதுசாரிகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருந்தனர். இவை அனைத்துமே ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்துவிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் க்ராம்சி தனக்குள் கேட்டுக் கொண்டார்: பாசிசம் மிக எளிதாக வெற்றி அடைய, இடதுசாரிகள் மிக எளிதாகத் தோல்வி அடைய நமது நாட்டு வரலாற்றிலும், சமூகத்திலும், நமது நாட்டு முதலாளித்துவ தேசிய வாதத்திலும் என்ன இருந்தது? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவரது சிறைக் குறிப்புகள் நூலின் பெரும்பகுதி இத்தாலிய வரலாறு குறித்த, அந்த வரலாற்றில் வாடிகனுக்கு இருந்த சிறப்பான இடம் குறித்த, ரிசோர்ஜிமெண்டோவின் தனித்துவமான தன்மைகள் மற்றும் இத்தாலியை ஒன்றுபடுத்தும் முயற்சி, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின், அதன் தொழில்நகரங்களின் சிதைந்த தன்மை, வெகுஜன ஆதரவைப் பெற்ற புதினங்கள், என்பது போன்ற வெகுஜன உணர்வின் வடிவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு சிந்தனை ஓட்டமாகவே அந்தக் குறிப்புகள் இருந்தன.

இதேபோன்று இந்தியாவைப் பற்றிய கேள்விகளை எழுப்பவே நான் முயன்றேன். அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இருந்த பிரச்சனை என்னவெனில் அதில் பெரும்பகுதி ஒப்பீட்டு முறையிலான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய சிந்தனை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். அதன் பிறகு மிக விரைவிலேயே இத்தாலிய பாசிசம் குறித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கட்டுரை எனக்கு மிகுந்த விருப்பமுள்ளதாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாடுமே அது பெறுவதற்குத் தகுதியுள்ள பாசிசத்தையே பெறுகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே, இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் அல்லது ஸ்பெயினுக்கும் இடையே என்பது போல் இருந்த பெரும் வேறுபாடுகளைத்தான் நான் அப்போது மனதில் கொண்டிருந்தேன். இந்தியாவிற்குப் பாசிசம் வருவதாக இருந்தால் அது நமது சொந்த வரலாறு, சமூகம் ஆகியவற்றிலிருந்து உருவானதாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்டீர்கள். இதற்கான பதில் இல்லை என்பதுதான். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையேயான ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் மிக வலுவாக இருந்த, ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நாடுகளில் பாசிசத்தின் பல்வேறு வகைகள் வெளிவந்தன. இத்தகையதொரு நிலைமை இப்போது இந்தியாவில் இல்லை. அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. அப்படியானால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் இருக்கிறதா? ஆம். அவற்றுள் பாசிச குணாம்சங்கள் இருக்கின்றன. என்றாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித்தன்மை கொண்ட பல இயக்கங்கள்,கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது. என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத்தான், அதன் உண்மையான பொருளில்,  பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும்.

குறைந்த அழுத்தம் கொண்ட ஜனநாயகம்

இந்தியாவில் உள்ள தாராளவாத அரசியல் கட்டமைப்பினை முழுமையாக உடைத்து நொறுக்கி, அதை அகற்றவேண்டிய அவசியம் சங்பரிவாரத்தைப்போன்ற வலதுசாரிசக்திகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினீர்கள்.  அதற்குப்பதிலாக,  அதற்குள்ளேயே இருந்து செயல்பட்டு,  அதைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றால்முடியும் என்றும் குறிப்பிட்டீர்கள்.  வலதுசாரி எதேச்சாதிகார போக்கின் கீழ் நொறுங்கிப் போய்விடாமல் ஒரு தாராளவாத ஜனநாயக பாராளுமன்ற அமைப்பாக நீடிக்கவைக்கும் அளவிற்கு நமது ஜனநாயகப்பாரம்பரியமும் தாராளவாத அரசியல் அமைப்பும் வலுவாக உள்ளனவா?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு சில அம்சங்களை மாற்றுவதும் தாராளவாத அமைப்பை உடைத்து நொறுக்குவதும் ஒரே விஷயமல்ல. அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலும் கூட பல திருத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தில்  புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்களை நீங்களோ அல்லது நானோ விரும்பாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எவ்வளவு தூரம் இந்த நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு தாராளவாத அமைப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை நான் பெரிதும் ஆதரிப்பவன் தான். எனினும் தாராளவாதத்தை நான் வெறுக்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தை தாராளமயமாக்குவதை கண்டித்து நான் ஒரு கட்டுரையையும் கூடப் பதிப்பித்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருந்த வளர்ச்சிப் போக்கு என்பது நீதித்துறை, தேர்தல் ஆணையம், இன்னும் சொல்லப்போனால் பெருமளவிலான மின்னணு ஊடகம், மேலாதிக்கம் வகிக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற தாராளவாத அமைப்பின் மிக முக்கிய பிரிவுகளிடமிருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ற நடத்தையை பாஜகவினால் பெற முடிந்துள்ளது ஆகும். எப்போதுமே நமது ஜனநாயகம் மிகவும் குறைந்த அழுத்தமுடைய ஒன்றாகும். ஆனால் இப்போது அதற்கு இதுவரை இருந்து வந்த அழுத்தமும் கூட அரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு விஷயம்.  “எதேச்சாதிகாரம்” என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளை அவமதிப்பதற்காகவே இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கம்யூனிசம் பாசிசம் ஆகிய இரண்டுமே சம அளவில் எதேச்சாதிகார தன்மை கொண்டவை என்பதை நிறுவவும் முயற்சிக்கப்பட்டது.

21-ம்நூற்றாண்டின்காலனியப்பின்னணியில்ஆர்எஸ்எஸ்இந்துத்துவஅரசியல்தோன்றியதைநீங்கள்எப்படிப்பார்க்கிறீர்கள்இரண்டுஉலகப்போர்களுக்குஇடையேயானஇதேபோன்றஎதிர்ப்புரட்சிசக்திகள்உதாரணமாகமுஸ்லீம்சகோதரத்துவஅமைப்புபோன்றவைஉலகின்பல்வேறுபகுதிகளிலும்தோன்றினஎன்றுமுன்புநீங்கள்எழுதியிருந்தீர்கள்இத்தகையஅமைப்புகள்தோன்றுவதற்குஎதுகாரணமாகஇருந்ததுகுணத்தில்அவைஎவ்வாறுஒரேபோன்றவையாகஇருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கு மிக நீண்ட நேரமும் இடமும் தேவைப்படும். என்றாலும் மூன்று விஷயங்களைக் கொண்டு அதற்கு சுருக்கமாக பதிலளிக்கலாம். புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும், பகுத்தறிவிற்கும் பகுத்தறிவற்ற நிலைக்கும், தேசியவாதம் குறித்த மதசார்பற்ற விளக்கங்களுக்கும் தேசியவாதம் குறித்த இன ரீதியான அல்லது மதரீதியான விளக்கங்களுக்கும், பல்வேறு வகைப்பட்ட தாராளவாத நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான எதேச்சாதிகார நிறுவனங்களுக்கும் என்பது போன்று இருவேறு வகையான கருத்தோட்டங்களுக்கு இடையேயான போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே ஐரோப்பா கண்டம் அமைந்திருக்கிறது. காலனியாதிக்கமானது இந்த நோய்கள் அனைத்தையும் தனது ஆளுகைக்குக் கீழுள்ள காலனி நாடுகளுக்கும் கொண்டு சென்றது. இதன் வழியாக இத்தகைய போட்டிகள் நமது சமூகத்திலும் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டிருந்தன. எனவே இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் ஆகியவற்றில்  குறிப்பாக இந்தியத் தன்மை என்ற எதுவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அவை அரசாட்சியையும் கத்தோலிக்க தேவாலயங்களின் தனியுரிமைகளையும் இல்லாமல் ஆக்கிய ப்ரெஞ்சு புரட்சியை பெரிதும் வெறுத்தொதுக்கிய அதே ப்ரெஞ்சு நாட்டின் எதிர்ப்புரட்சியின் பாரம்பரியத்தின் வேறு வகையான கண்ணோட்டம் காலனி நாடுகளில் வந்து சேர்ந்தவையே ஆகும். மதரீதியான சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறை என்பதும் கூட ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிராக நிலவி வந்த கசப்புணர்வின் பிரதியைத் தவிர வேறல்ல.

இரண்டாவதாக, இந்து மகாசபா, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற நநன்கு அறிந்தே இருந்தன என்பதோடு, ஓரளவிற்கு அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளவும் செய்தன. உதாரணமாக, ஜெர்மனியின் யூதப் பிரச்சனைக்கு நாஜிகள் தீர்வு கண்டதைப் போலவே, அதாவது இன அழிப்பின் மூலம், இந்துக்களும் முஸ்லீம்கள் குறித்த தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வி.டி. சவார்க்கர் கூறினார்.

மூன்றாவதாக, இதுபோன்ற இயக்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது வேறொரு காலத்திலோ, தோன்றுவதற்கும், அவை வெற்றியோ அல்லது தோல்வியோ அடைவதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய தனித்தன்மையான அம்சங்களே காரணமாக அமைகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பொதுவான போக்கில் அணுகுவது என்பது நம்மை தவறான வழிக்கு திசைதிருப்பி விடும்.

மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது?

எல்லா நேரங்களிலுமே மதச்சார்பின்மை என்பது நல்லதொரு கருத்தோட்டமே ஆகும். எவரொருவரும் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் பெரும்பான்மை இந்துத்துவ கருத்தோட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்துவகைப்பட்ட, வேறு விதமான கருத்தோட்டங்களும் தேவைப்படுகிறது. மிகக் கொடூரமான வடிவங்களிலான ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குள் காங்கிரஸ் வகைப்பட்ட மதச் சார்பின்மையும், பாஜக வகைப்பட்ட பெரும்பான்மைவாதமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தத்துவங்களே ஆகும். இந்தியாவின் தேர்தல் அடிப்படையிலான அரசியல் பெருமளவிற்கு சாதி, மதம், பல்வேறு வகைப்பட்ட சொத்துரிமை ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டமானது “சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்” என்ற விழிப்புணர்வுக் கோட்பாட்டிலிருந்தே  உருவெடுத்தது. “சகோதரத்துவம்” என்ற விரிவான வகைப்படுத்தலுக்குள்தான் மதச்சார்பின்மை அடங்குகிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் “சகோதரத்துவம்” நிரம்பியதாக இருக்க முடியுமா? அப்படியில்லையென்றால், அதன் முழுமையான அர்த்தத்தில் மதச்சார்பற்றதாக அது இருக்க முடியுமா? சமத்துவம் இல்லாமல் சகோதரத்துவம் என்பது இருக்க முடியுமா? அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோஷலிசம் என்பது இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியுமா? போல்ஷ்விக் புரட்சி கூட அல்ல; ப்ரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பாகவே ரூசோ இதற்கு பதிலளித்திருந்தார்: ”உலகத்தில் உள்ள பொருட்களை அணுகுவதில் சம உரிமை இல்லாதவர்கள் எந்த காலத்திலும் சட்டத்தின் முன்பாக  சமமானவர்களாக இருக்க முடியாது!” நாம் அறிந்துள்ள கம்யூனிசம் என்பது ப்ரெஞ்சுப் புரட்சியின் போதுதான் முதன்முதலாகத் தென்பட்டது. அதே ப்ரெஞ்சுப் புரட்சிதான் மதத்தின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மதச்சார்பின்மையை, ஃப்ராங்காய் நோயெல் பாவூஃப்-இன்  “சமமானவர்களின் சதித்திட்டம்” என்பதை – இதைக் கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அமைப்பு என்றே சொல்லலாம் – நமக்குத் தந்தது. அந்தக் கம்யூனிச போக்கு தோற்கடிக்கப்பட்டது. நமக்கு மிச்சமிருந்ததெல்லாம் மதச்சார்பின்மையும், தாராளவாதமும்தான். எனவே கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே ஒரு கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது: “தாராளவாதத்தால் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாத்துவிட முடியுமா? சோஷலிசம் என்பதில்லாமல் மதச்சார்பின்மை என்பது சாத்தியமா?” 

இல்லை என்பதே இதற்கு எனது பதில். தாராளவாத ப்ரான்ஸ், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற தாராளவாத நாடுகள் ஆகியவற்றின் யூதர்களுக்கு எதிரான, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வரலாற்றையே பாருங்கள். எனவே உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில், ஆம். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் மிக முக்கியமானது. எனினும் நடைமுறையில் இந்த கருத்தோட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, உங்களிடம் உண்மையானதொரு சோஷலிச சமூகம் இருக்க வேண்டும். இன்றைய இந்தியாவில், இந்தக் கருத்தோட்டத்தையை உண்மையாக நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றே ஆகும். பெரும்பான்மைவாதம் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நமக்குத் தெரியும். என்றாலும் தாராளவாதம் எப்போதுமே மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்துதான் வந்துள்ளது; எதிர்காலத்திலும் எப்போதும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்ற உண்மையை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழ்

தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும்

(குரல்: யாழினி)

என்.குணசேகரன்

தமிழக சமூக இயக்கத்தில் சீர்திருத்த முயற்சிகள் பல வடிவங்களில் நடந்துள்ளன. பல்வகை கருத்தோட்டங்களாகவும், தனிநபர் செயல்பாடுகளாகவும், மக்கள் இயக்கங்களாகவும் அவை பரிணமித்துள்ளன. பண்டைய காலத்திலிருந்தே சமூக அசமத்துவம், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதிய, மத நடைமுறைகள் மீதான கண்டனக் குரல்கள் ஒலித்து வந்துள்ளன.

கடந்த கால சீர்திருத்த முயற்சிகள்  சமூக சமத்துவ   இலக்குகளை எட்டுவதில் எத்தகு முன்னேற்றத்தை சாதித்துள்ளது? அந்த முயற்சிகள் முழுமையான சமூக சமத்துவத்தை ஏன் எட்டவில்லை? என்கிற கேள்விகள் எழுகின்றன. சீர்திருத்த மனப்பாங்கு கொண்ட மக்களிடமும்  இக்கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இடதுசாரிகள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக சீர்திருத்த வரலாற்றை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தில்   புரிந்து கொள்வது அவசியம். இதில் பாட்டாளி வர்க்க இயக்கம் இடையறாது  செயலாற்றுவதும் அவசியமான கடமையாகும்.

(தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றின் முக்கியத் தடங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன; தமிழக சமூக சீர்திருத்தம்: மதுக்கூர் ராமலிங்கம்; ஜூலை, மார்க்சிஸ்ட் 2018)

தமிழக வரலாற்றில் சமூக சீர்திருத்தம்  

சாதி, மதம், குடும்பம், திருமணம், மொழி போன்ற பல தளங்களில் மனிதர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறைகளையும், பரம்பரியமான பிற்போக்குக்  கருத்துக்களையும் எதிர்கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள்  செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பினை நிராகரிக்க முடியாது. இன்றைய சமூகம் உருப்பெற அவை முக்கிய பங்கினை ஆற்றின.

கி.மு. நாலாம்  நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வேதங்கள் சார்ந்த பழைய வைதிக மரபு ஆதிக்க நிலையில் இருந்தது. இது  வர்க்கப் பிளவுகளும், வர்ண  பேதங்களும் வளர்ந்த காலமாகவும் இருந்தது. இனக்குழு அமைப்புக்கள் மாறி வேளாண் உற்பத்தி பரவியிருந்த நிலை ஏற்பட்டது. இது, நிலவுடைமையாளர்கள், பண்ணையடிமைகள் எனும் வர்க்கப் பிரிவுகள் கொண்ட நிலவுடைமை சமுதாயம்  வளர்ந்த காலம். இதனை கி.மு 7 முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்த நிலையில் வணிக எழுச்சிக் கட்டம் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இதனை அறநெறிக்காலம் என்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளப்பட்ட பௌத்த, சமண, ஆசீவக மரபுகள் மேலோங்கின.

இந்நிலையில், வர்க்கப் பிளவுகள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் பெற்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளின் போதும்,  தமிழ் சமூகத்தில்  வர்க்க வேறுபாடுகள் கூர்மையாக இருந்தன.

வர்க்கப்  பாகுபாடுகளால் பிளவுபட்டு  இருந்த நிலை, சமூக ஒடுக்குமுறை சூழல் ஆகியவற்றால், சமமற்ற, அநீதியான சமூக உறவுகள் இருந்தன. இந்த சமமற்ற எதார்த்தத்தை நியாயப்படுத்தும்  வகையில்,  கருத்தியல் தளத்தில் வர்ண முறை, மதக்கோட்பாடுகள், சாத்திரங்கள்   நிலைபெற்றன. வர்ண முறை ஏற்படுத்திய அநீதியான ஏற்றத்தாழ்வை சகித்திடாமல் அதன்   மேலாதிக்கத்தை எதிர்க்கும் போக்கும் உருவானது. சமூகத்தில் கனன்று கொண்டிருந்த ஆளும் வர்க்க ஆதிக்க எதிர்ப்புக் குமுறல், வர்ண, மத, பிற்போக்குத்தன எதிர்ப்பாகவும் எதிரொலித்தது. புத்தம் மற்றும்  சமணத்தின் எதிர்ப்புக் குரல்கள்   இந்த வகையைச் சார்ந்ததே .

இந்த விரிவான வரலாற்றுக் காலப்பரப்பில் ஒரு முக்கிய போக்கினை கண்டுணர்வது அவசியம். சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது. 

கோயில் எனும் நிறுவனம்

தமிழகத்தில் சமண, பௌத்த மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வைதீக மதம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இறுக்கமாகி வந்த நிலவுடைமை உறவுகளின் விளைவாக சைவ-வைணவ மதங்கள் வலுவாக காலூன்றின. இந்தக் கட்டத்தில் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்டன. உண்மையில் அவை உயர் அடுக்கில் இருந்த சாதிகளின் அதிகார மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக, பிராமணிய ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உட்பட்டு சமூகம் இயங்குவதை கோயில் என்ற நிறுவனம் உறுதி செய்தது.

அது மட்டுமல்லாது, சமூக உழைப்பில், குறிப்பாக வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் உபரியை அபகரிக்கும் நிலப்பிரபுத்துவ தன்மையும் கோயில் செயல்பாட்டில் இருந்தது.

மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதைக் குறிப்பிடும் போது  “மார்க்ஸ் குறிப்பிடும் ‘நில வாடகை ‘இங்கே நிறுவன ஏற்பாட்டின் முலமாக உயர்குடிகளுக்கு போய் சேர்ந்தது” என்கிறார். (“தமிழர் வரலாறு: சில கேள்விகளும், தேடல்களும்” -தேவ பேரின்பன்) இங்கு  அவர் குறிப்பிடும் நிறுவன ஏற்பாடு என்பது கோயில் நிர்வாகத்தைக் குறிப்பதாகும்.

ஆக, சமூகத்தின் வளங்கள், உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டை மன்னர்கள் வைத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணீய கருத்தியலின் துணையோடு பிராமணர்கள்  செல்வாக்கு செலுத்தினர். கோயில் என்ற நிறுவனம் மூலமாக இந்தக் கட்டுப்பாடும், உபரி அபகரிப்பும் நிகழ்ந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலம், நீர், பொருள் என எதிலும் உரிமை இல்லாத நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், பஞ்சமர்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிரானதாகத்தான் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அடிமைத்தனமும் உழைப்பு சுரண்டலும் நீடித்த நிலையில் அவற்றில் மாற்றம் ஏற்படாத சூழலில் சமூக சீர்திருத்தக் குரல்கள் மெல்லியதான தாக்கமே செலுத்த முடிந்தது.

எல்லைக்குட்பட்ட வெற்றி

வர்க்க, சாதிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்து நீடிப்பதுதான்  அடிப்படைப் பிரச்னை. இது தற்போதைய காலம் வரை நீடிக்கிறது. 19,20-ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான சீர்திருத்தக்  கருத்துக்களும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் எழுந்தாலும் சுரண்டல் முறை நீடித்த நிலையில், சமூக வளங்கள், உற்பத்தி சக்திகள் மீது ஆங்கிலேய ஆட்சியும் விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  சமூக ஆதிக்க உறவுகளும் உறுதியாக இருந்த நிலையில் மன  மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரலில்தான் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிற்க முடிந்தது.

ஆனால் இதற்கும் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் இருந்தது. சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்து சில சட்டரீதியான பாதுகாப்புக்களையும் சமூக தளத்தில் சமத்துவ நடைமுறைகளையும் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இது ஒரு எல்லைக்குட்டபட்ட வெற்றியாகவே இருந்து வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான கெயில் ஓம்வடட் ஒரு மூத்த ஆய்வாளர். ஜோதிபா புலே மற்றும் அம்பேத்கர்  குறித்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

அவர் தனது “தலித்-எதிர்கால பார்வைகள்” எனும் நூலில்

“விடுதலைக்கான வழி என்பது பொருளியல், சித்தாந்த தளத்தில்  போராட்டம்தான்” என்று வரையறுக்கிறார். மேலும் அவர், அம்பத்கார் பொருளியல் தளத்தில் தனது  போராட்டத்தை கைவிடவில்லை என்கிறார். “ஆனால், அம்பேத்காரின் அழுத்தம், சித்தாந்த கலாச்சார போராட்டங்களில் இருந்தது. அவர் பொருளாதார மாற்றுத் திட்டத்தை அவற்றோடு இணைப்பதில் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அதனை அவர் கூர்மைப்படுத்தினார்” என்று கெயில் ஒம்வடட் எழுதியுள்ளார். இது தமிழக சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றுக்கும், பெரியார் தலைமை தாங்கிய திராவிட இயக்க கட்டத்திற்கும் பொருந்தும்.

1930-காலக்கட்டத்திய சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையுடன், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற  கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளடங்கிய இயக்கமாக செயல்பட்டது. உண்மையில்,  அந்த இயக்கம் .சமூக சீர்திருத்த செயல்பாட்டுடன் சேர்ந்து, சோசலிசம், கம்யூனிசம் என்ற பொருளாதார மாற்றுத்  தடத்திற்கு வந்தது. பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் அழுத்தத்தினால், மீண்டும் சமூக சீர்திருத்தம் என்ற எல்லைக்கோட்டுக்குள் திரும்பியது.

இந்த சறுக்கல்கள்  இருந்த போதும், தமிழக சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு சில சிறப்புக்கள் உண்டு. வட மாநிலங்களில் சமூக சீர்திருத்தம் ராஜாராம் மோகன் ராய் போன்ற முற்பட்ட பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இப்பணியை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து உருவான சிந்தனையாளர்களும் முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் பிரிவு சார்ந்த மக்கள் திரட்டலும் நிகழ்ந்தது. வடக்கில், அம்பேத்கார் 5 இலட்சம் மக்களைத் திரட்டி புத்த மதத்தில் சேருகிற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையை தமிழக சீர்திருத்த இயக்கம் தேர்ந்தெடுக்காதது முக்கியமானது.

எனவே தமிழகத்தில் பொருளாதார மாற்று தடத்தில் பயணிக்கும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. இவ்வாய்ப்பினை இடதுசாரி சித்தாந்த நிகழ்ச்சி நிரல் தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் வலுமிக்கதாக வளர வேண்டும்.

கொடூரமான ஏற்றத்தாழ்வான, ஒடுக்குமுறை, சுரண்டல் அடித்தளம் கொண்ட சமூக உறவுகளை மாற்றி உழைக்கும் மக்களின் கட்டுப்பாடும் அதிகாரமும் மேலாதிக்கம் பெறும் நிலையே சாதி, மதம், பாலின, சமூக ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான வழி. கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களால் இதனை எட்ட இயலவில்லை. சமூக உறவுகளை அடியோடு புரட்டிப் போடுகிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததாக சமூக சீர்திருத்தம் பயணிப்பதுதான் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையாக இருக்க முடியும். இதுவே தமிழக சீர்திருத்த வரலாறு நமக்கு அளிக்கும் படிப்பினை.

சாதிய ஒழிப்பு இலட்சியம்   

இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் சாதிய முறைக்கு எதிராக     எவ்வாறு பயணித்தது என்பதைக் காணலாம்.

தமிழகத்தில்சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் சாதிய முறையை ஒழிப்பது என்பது முக்கிய இலக்காக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் எனத் துவங்கி  இடைக்கால பக்தி இயக்கம், பிறகு சித்தர்கள்  மற்றும் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த வள்ளலார்  உள்ளிட்ட சாதி எதிர்ப்புக்   குரல்கள், இயக்கங்கள் என விரிந்த வரலாற்றுப் பரப்பு இதில் உண்டு.

இதன் தற்போதைய நிலை என்ன?

இதனைப் பற்றி   பேராசிரியர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார்.  “சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட, எல்லா இடங்களிலும், சாதி ஐக்கியம் காணும் இயக்கங்களாக மாறிப் போயுள்ளன. இது வேடிக்கையாக இருந்தாலும், தர்க்க ரீதியாகவே இது நிகழ்ந்துள்ளது”.

இதற்கு எடுத்துக்காட்டுக்களாக  தமிழகத்தின் திராவிட இயக்கம் உள்ளிட்டு, பஞ்சாபின் சரின் சபா அமைப்பு, கேரளத்தின் எஸ்.என்.டி.பி. (SNDP) மற்றும் நாயர் சேவை சேவை அமைப்பு(NSS) போன்றவற்றை  அவர் குறிப்பிடுகிறார்.

இவை தங்களது சாதி சமூகத்தின் தேவையை கருதி சாதிய எதிர்ப்பு முழக்கங்களை  எழுப்பின. எனினும் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவை, முக்கியமாக, அந்த சமூகத்தின் நடுத்தர வர்க்கங்கள். எனவே தங்களது  தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததே தவிர முற்றான சாதிய முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி அந்த இயக்கங்கள் செல்லாமல் சாதிய திரட்டலை முன்னெடுக்கும் இயக்கங்களாக நின்று போயின.

எனவே இதில் ஒரு வரலாற்று மறு பரிசீலனை தேவைப்படுகிறது. சாதிய முறையில் உள்ள ஒடுக்கும் மனித உறவுகளை மாற்றி சமத்துவ நிலையை அடைவதற்கான போராட்டம் தேவை. ஆனால்  வர்க்க உறவுகளில் உள்ள ஆதிக்கத் தன்மை நீடித்தால் சமத்துவ நிலையை எட்ட முடியாது. அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்துடன் சாதிய ஒழிப்பு இலட்சியம் பயணிக்க வேண்டும். தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றினை விமர்சனரீதியில் ஆராய்ந்தால், இந்த முடிவிற்குத்தான் வர இயலும்.

சாதிய ஒடுக்குமுறையில் போட்டி

பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் சாதிய அடுக்கில் மேல் மட்ட சாதி  பிரிவினரிடையே போட்டா போட்டி இருந்து வந்துள்ளது. இதுவும் கூட சாதிய முறையை அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாக்கியது. எப்போதுமே சாதிய அடுக்கு என்று சொல்லப்படும் சாதிய முறைமை வர்க்க சுரண்டல் நோக்கத்திற்காகவும், தங்களது வாய்ப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சாதிகளுக்குள் இருந்த மேல்பிரிவினரிடையே மோதல்கள் இருந்தன.

இந்த நிகழ்வினை பேராசிரியர் நா.வானமாமலை மிக நுட்பமாக விவரிக்கின்றார் .

“நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும், திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலை நாட்ட முயன்றனர். தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள்  தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும், தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும்  கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.”

இதற்கு சான்றாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சாதி மேன்மை போற்றும் நூல்களைக் குறிப்பிடுகின்றார். வேளாளர், கிராமணி, நாடார், பரதவர் போன்ற சாதிகளை உயர்நிலை இடத்தில நிறுத்தும் முயற்சியாக பல நூல்கள் வெளிவந்ததை அவர் குறிப்பிடுகிறார்.

ஒடுக்கப்பட்ட தளத்தில் இருந்த தலித் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இந்தப் போட்டியில் இயல்பாகவே இருந்ததில்லை. மிகவும் பிந்தைய கட்டத்தில், சமீபத்திய காலங்களில்தான் அவர்கள் மத்தியில் இந்த தனமைகள் வெளிப்பட துவங்கின.

ஆக சாதிய சிக்கல்களில் அழுத்தமான பிரச்னையாக வர்க்க முரண்பாடுகளே மேலோங்கி இருந்ததை வரலாறு நெடுக்கிலும் காண இயலும். 

கடந்த காலத்தின் நுண்ணிய படிப்பினை

ஆங்கிலேய ஆட்சி நடந்த சூழலில் காலனியக் கொள்கைகள் மக்களை வாட்டி வதைத்தது. 19-ம் நூற்றாண்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனைக் கண்ட வள்ளலார் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக “ என்று முழங்கினார். இது, உண்மையில் அன்றைய காலனிய பொருளாதார கொள்கைக்கான எதிர்ப்பாக அமைந்துள்ளது.

தமிழக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வள்ளலார் மத, சாதிய சடங்குகள், மரபுகள் ஒழிய வேண்டுமென முயற்சித்தார். புராணங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பல மூட நம்பிக்கைகளை விதைக்கிற கருத்துக்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் எதிர்த்தார்.  “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற அவரது குரல் வலிமையான சமூக சீர்திருத்தக் குரலாக அமைந்துள்ளது.

அவரது “கருணையிலா ஆட்சி” என்ற எதிர்ப்புக் கருத்து ஆளும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரானது. அத்துடன்   அவரது “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற சீற்றம் பொங்கும் குரல் சாதி, மதம் அடிப்படையிலான ஒடுக்குமுறை உறவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரண்டும் இணைந்தவாறு ஒலிக்கும் இந்தப் பாங்கு தற்கால சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கற்க வேண்டிய நுண்ணிய படிப்பினையாக திகழ்கிறது.

பொருளாதார அசமத்துவத்தையும், சமூக முறையில் இருந்த சாதி, மத, பாலின அசமத்துவத்தையும் இணைத்து எழுந்த எதிர்ப்பு சிந்தனைகள் தமிழக வரலாற்றில் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. பூதவாதிகள் என்று மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பொருள்முதல்வாதிகள் துவங்கி, சித்தர்கள், பிந்தைய காலத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம், அதன் சம காலத்தில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்க இயக்கமான கம்யூனிச இயக்கம் என நீண்ட வரலாறு உள்ளது.

உண்மையில் வள்ளலாரின் இரட்டை அணுகுமுறையான பொருளாதார அசமத்துவ எதிர்ப்பு, சமூக அசமத்துவ எதிர்ப்பு என்ற நிலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிந்தைய காலங்களில் காண முடியும்.1930- களில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கருத்துக்களோடு இணைந்து,  சிங்காரவேலரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதைக் குறிப்பிடலாம்.

இந்த வரலாற்றுப் போக்கு இன்றைய சமூக சீர்திருத்தக் கடமைகளை வகுத்துக்கொள்ள உதவுகிறது. நில உடைமை, பண்ணையடிமை போன்ற வர்க்க உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி, அதன் மீதான எதிர்ப்பியக்கம் உருவாக்கும் பணியுடன் இணைந்த கடமையாக சமூக சீர்திருத்தம் செல்ல வேண்டும். அப்பொதுதான் அதன் இலக்கை அது எட்ட முடியும்.

கடந்த கால பொருள்முதல்வாத தத்துவக் காலத்திலும், சித்தர்கள் மற்றும் வள்ளலார் காலத்திலும் வரையறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட கடமையை வகுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால்,வர்க்க அசமத்துவ உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை கொண்ட வர்க்கமான தொழிலாளி வர்க்கம் அப்போது உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த 21-வது நூற்றாண்டின் சம காலச் சூழலில்  அது சாத்தியம். ஆனால் கடந்த காலத்தில் நடந்தது போன்று சமூகத்தளத்தில் நிலவும் அசமத்துவத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்வதும், வர்க்க உறவு  சார்ந்த சுரண்டல் ஒடுக்குமுறையை புறக்கணிப்பதும் இலக்கை அடையும் பயணமாக இருந்திடாது.

வெகு மக்கள் உணர்வில் தாக்கம்

கடந்தகால சமூக சீர்திருத்தங்களில் இருந்த முரணான போக்குகளை புரிந்து கொள்வது இன்றைய கடமைகளை வகுத்திட உதவும். சமூக சீர்கேடுகளை களைவதற்கு சாதி மறுப்பு, மத மறுப்பு, கடவுள் மறுப்பு கருத்துக்களை பரப்புரை செய்தவர்களும் இருக்கிறார்கள். பழைய நாத்திகம், சாங்கியம், பௌத்தம், சமணம், சார்வாகம் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 20-ம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பினை முன்னெடுத்தது. கம்யூனிச இயக்கம் அறிவியல் கண்ணோட்டத்துடன் மதக் கண்ணோட்டங்களை அணுகியது.

இந்தக் கருத்தோட்டங்களில் பொருளியல் தள ஒடுக்குமுறைகளை எதிர்த்த பழைய சார்வாகம், இடைப்பட்ட காலத்தில் நிலவிய  சித்தர் மரபு, சமகால கம்யூனிசம் ஆகியவற்றை வரலாற்றில் தனித்த இடம் கொண்டவையாக கருத வேண்டும். ஏனெனில் இன்றைய தேவைக்கு படிப்பினைகள் பெற இவை முக்கியமானவை.

ஆனால் மதத்திற்குள் நின்று சீர்திருத்தம் காண விழைந்தவர்களும் தமிழக வரலாற்றில் நெடுக இருந்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கு வந்திருந்த கிறித்துவ போதகர்கள், கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுப் பணிகள், அவற்றின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட  சீர்திருத்தப் பிரச்சாரம், இதன் எதிர் விளைவாக சமய வரம்புக்குள் நின்று எழுந்த வைகுண்ட சுவாமிகள் இயக்கம், பிரம்ம சமாஜம், சன்மார்க்க சங்கம், மனுநீதி சட்டங்களை எதிர்த்து எழுத்துத் துறையில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா,  ஜி. சுப்பிரமணிய ஐயர், தியோசாபிகல் சொசைட்டி, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் துவக்க கால காங்கிரஸ் கட்சியில் எழுந்த சீர்திருத்த போக்குகள் என இந்த வரிசை நீள்கிறது. (இதற்கு காண்க: அருணன் எழுதிய ‘இருநூறு ஆண்டுக்கால சமூக சீர்திருத்த வரலாறு)

இத்தகைய கடந்த கால சமூக சீர்திருத்த செயல்பாடுகள் நிச்சயமாக வெகு மக்கள் உணர்வில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இவற்றை விமர்சனப் பார்வையுடன் உள்வாங்கி, அவற்றின்  தொடர் கடமைகளை வரையறுக்க வேண்டும். வர்க்க சுரண்டல் தொடர்ந்த நிலையில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின்  கலாச்சாரப் பிடியிலிருந்து வெகுமக்கள்  விடுபடுவது சோஷலிஸப் புரட்சிக்கு முக்கிய தேவை. எனவே கடந்த கால முயற்சிகளை முற்றாக நிராகரிப்பது தவறானது. அதேசமயத்தில் அவற்றை விமர்சனமின்றி ஏற்பதும் தவறானது.

மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்ஷி “நீண்ட காலமாக, சிக்கலான தன்மையுடன் மிக நுண்ணிய அளவில் வெகு மக்கள் உணர்வு மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றத்தின் விளைபொருளாக சோஷலிஸப் புரட்சி நிகழ்கிறது” என்கிறார். இந்த நுண்ணிய மாற்றம் சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சோஷலிஸப் புரட்சி எனும் மகத்தான மானுட விடுதலை நிகழ்வதற்கு சமூகத்தை இது இட்டுச் செல்கிறது. சமூக சீர்திருத்த தளத்திலும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு முயற்சிகளும் கூட  வெகுமக்கள் உணர்வில் தாக்கத்தை  ஏற்படுத்தும்.

எனவே, சமூக சீர்திருத்தப் பாதையில்  கடந்த காலம் சென்றடைந்த முன்னேற்றத்தை உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்னேறுவது அவசியம். கடந்த கால முயற்சிகள் இறுதி வெற்றியை எட்டாததற்கு முக்கிய காரணம் வர்க்க சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போனதுதான். அந்த நிகழ்ச்சி நிரலினை  உறுதியாகப் பற்றிக் கொண்டு சமூக சீர்திருத்த இலட்சியத்தை தொடர வேண்டும்.

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்

(குரல் : ஆனந்த் ராஜ்)
கட்சித் திட்டம் கூறுவது:

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது.

சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.
சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும்.

சமூக சீர்திருத்தம் என்றால் என்ன?

சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூகமும், வர்க்கமும்

சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன.

“பருவ வாணத்து படுமலை கடுப்ப
கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்”

என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது.

ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்.

ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது.

வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது.

பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது.

சமண, புத்த மதங்கள்

வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது.

வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது.

பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது.

வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும்.

பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி.

பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது.
மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன.

பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு.

சித்தர்களின் கலகக்குரல்

சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார்.
சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது.

ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே”
என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார்.
என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர்.

“பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ
மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே”
என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார்.

புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது.
உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார்.
பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார்.

சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர்.
“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே”
என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்”

என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது.
குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார்.

சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன.

சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல.

சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது.

ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜரும் சீர்திருத்தமும்

ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு.

கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது.

புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது.

“சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”.

1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.”

பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது.
19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின.

விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர்.

நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன.

உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார்.

நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது.
பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.
வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர்.

மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன.
அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை.
தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

தன்னெழுச்சி போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளுக்குத் தந்திடும் பாடங்கள்

  • உ.வாசுகி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது என்ற கோரிக்கைக்கான மக்கள் எழுச்சி தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து விவசாயத்தையும், நீராதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் எழுச்சி…. அதே பிரச்னைக்காகத் தொடர்ந்த வடகாடு, நல்லாண்டார்கொல்லை…. முன்னதாக உலக அளவில், இன்னும் பரந்த விஷயங்களுக்கான வால் ஸ்டிரீட் இயக்கம், அரபு வசந்தம் போன்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் பங்கேற்றோரில் பெரும்பாலோர், போராட்ட உணர்விலிருந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியிருப்பார்கள். உற்சாகமும் வடிந்திருக்கும். அவர்களைத் திரும்பவும் போராட்ட பாதைக்கு, மாற்று அரசியல் நோக்கி இழுக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தன்னெழுச்சி இயக்கங்கள் குறித்த மதிப்பீடும், புரிந்துணர்வும் இதற்கு உதவும்.

தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். மார்க்சிஸ்டுகளைப் பொருத்தமட்டில் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராக, சாதி, மத வெறிக்கு ஆதரவாக நடக்கும், பிற்போக்கு உள்ளடக்கம் கொண்ட, தன்னெழுச்சி போராட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். வர்க்க,  சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.

தன்னெழுச்சி நிகழ்வுகள் புதியதல்ல. உலகம் முழுதும் வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது.  முரண்பாடுகள் நிறைந்த புறச் சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, எங்காவது ஓர் இடத்தில், வெவ்வேறு அளவில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்துக்கு வந்து கொண்டுதான் உள்ளனர். அது திடீரென வெடிக்கும் தொழிலாளிகளின் ஒரு வேலைநிறுத்தமாக இருக்கலாம், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பாக இருக்கலாம், மாணவர் பிரச்னைக்காக வீதிக்கு வருவதாக இருக்கலாம், குடிநீருக்கான சாலை மறியலாக இருக்கலாம், பல்வேறு தன்னெழுச்சி நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.  ஊடக விளம்பரத்தாலும், ஒரே இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதாலும், நீடித்து நடந்ததாலும் ஒரு சில போராட்டங்கள், தன்னெழுச்சி இயக்கங்கள் என்ற அந்தஸ்து பெற்று, கூடுதலாக கவனத்தை ஈர்த்துள்ளன; அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

இவற்றை எவ்வாறு அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, புரட்சிகர மாற்றத்துக்குப் பயன்படுத்துவது என்று பார்ப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். தன்னெழுச்சி இயக்கங்களே போதும்; மக்கள் தாமாகவே பிரச்னைகளைக் கையில் எடுப்பதுதான் தீர்வுக்கு வழி; குறிப்பாக, அணிதிரட்டப்பட்ட அமைப்புகளோ, அரசியல் அறைகூவலோ தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும், அரசியலும் பொருத்தப்பாடற்றதாகி விட்டன என்று கூறி பரவசப்படும் பாணியும் முன்னுக்கு வருகிறது. இத்தகைய போக்குகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.

தன்னெழுச்சி போராட்டம்உணர்வு நிலையின் துவக்க கட்டம்:

தன்னெழுச்சி அம்சத்தை, விழிப்புணர்வின் அல்லது உணர்வு நிலையின் துவக்க கட்டம் (consciousness in an embryonic form) என்று “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் லெனின்  குறிப்பிடுகிறார். அன்றைய காலகட்டத்தில் ரஷ்யாவில் தொழிலாளிகளால் நடத்தப்பட்ட பல்வேறு தன்னெழுச்சியான வேலை நிறுத்த போராட்டங்களின் பின்னணியில், ரபோச்சியே டைலோ என்ற பத்திரிகை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாக பதில் அளிக்கிறார். ”தங்களை சுரண்டும் தற்போதைய சமூக அமைப்பு நிரந்தரமானது; கேள்வி கேட்க முடியாதது என்ற பல்லாண்டு கால நம்பிக்கையை, தொழிலாளிகள் கைவிடத் துவங்கியிருக்கிறார்கள். ஒரு கூட்டான எதிர்ப்பு தேவை என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என்று கூட சொல்ல மாட்டேன்; உணர துவங்கியுள்ளனர்” என்பது லெனினின் வார்த்தைகள்.

அதே சமயம், தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் ”விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில்  எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாத போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தொழிலாளிகள் மத்தியில் உருவாகும் தன்னெழுச்சியான இயக்கங்கள், சமூக ஜனநாயக சக்திகளின் அரசியல் தலையீடுகளை  இன்னும் அவசியப்படுத்துகிறது என்பதுதான் தோழர் லெனின் அவரது வாதங்களின் மூலம் உணர்த்துகிற கருத்து.

தோழர் ரோசா லக்சம்பர்க்,  லெனின் முன்வைத்த சில அடிப்படையான ஸ்தாபன கோட்பாடுகளுடன் கருத்து வேறுபாடு  கொண்டிருந்தாலும், வெகுமக்கள் பங்கேற்கும் தன்னெழுச்சி போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்றைய ஜெர்மனியில் தொழிற்சங்கங்களிலும், ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியிலும் சீர்திருத்தவாதப் போக்குகளும், அதிகாரவர்க்க அணுகுமுறையும் நிலவின. மக்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஐக்கிய முன்னணி உத்தியின் தேவையைப் புரிந்து கொள்ளாமல், வெகுஜன திரட்டல் குறித்தும், அரசியல் உணர்வூட்டல் குறித்தும் கவலை கொள்ளாமல்,  ‘இயக்கம் நடத்துவது மட்டுமே குறிக்கோள்’ என்று கட்சித் தலைமையின் ஒரு பகுதி செயல்பட்டதை அவர் சாடினார். புயலென வரும் மக்களின் எழுச்சியில் இத்தகைய தலைவர்கள் காணாமல் போவார்கள் என்றுகூட எச்சரித்தார். புரட்சிகர சக்திகள், மக்களின் தன்னெழுச்சியின்பால் செயலற்று இருந்துவிடக் கூடாது என்பது அவரது வாதங்களின் முக்கிய சாராம்சம்.

தன்னெழுச்சி இயக்கங்களை அங்கீகரித்து, தலையீடு செய்து, புரட்சிகர இலக்கு நோக்கி அவற்றைப் பயணிக்கச் செய்வது கம்யூனிஸ்டுகளின் பணி என்பதைத்தான் மேற்கூறிய சர்ச்சைகள் வலியுறுத்துகின்றன.

தானாக நடப்பதல்ல:

தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும். தற்போதைய நிலையிலிருந்து முன்னோக்கி செல்லும் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் சக்திகளும், இதே நிலை நீடிக்கட்டும் என்று விரும்பும் சக்திகளும் அனைத்து தளங்களிலும் மோதிக் கொண்டேதான் இருக்கின்றன. அகச் சூழல், புறச் சூழலின் முதிர்ச்சியைப் பொறுத்து, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் முன்னுக்கு வருகிறது. அதாவது எழுச்சி நடக்கும்; அல்லது மட்டுப்படுத்தப்படுவது தொடரும்.

தன்னெழுச்சி போராட்டங்களால் சில உடனடியான கோரிக்கைகள் வெற்றி பெறக் கூடும். உதாரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சிறப்பு சட்டம், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட எழுச்சி, எகிப்தில் நடந்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் தஹ்ரீர் சதுக்கத்தை நிறைத்து 18 நாட்கள் போராடியதன் விளைவாக, 30 ஆண்டுகளாக இருந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த முடிந்தது.  “நாங்கள் 99%” என்று முழங்கிய வால் ஸ்ட்ரீட் போராட்டம், அமெரிக்காவில் ஓர் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. இவை வரவேற்கத் தகுந்தவை; நம்பிக்கை ஊட்டக் கூடியவை. ஆள்வோர் எது செய்தாலும், மக்கள் மௌனமாய் தாங்கிக் கொள்வார்கள் என்ற நிலையிலிருந்து, மக்கள் ரத்தமும் சதையுமான போராட்ட வீரர்களாக ஆவது என்பது, உத்வேகத்தை அளிக்கக் கூடிய அம்சமாகும். என்றபோதிலும், இது நிச்சயம் முதல் படிதான்.

ஆனால், முதல் படியிலேயே நின்று விட்டால் இலக்கை நோக்கி செல்ல முடியாது. தன்னெழுச்சி இயக்கங்களின் பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் உடனடிப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வே இருக்கும். பிரச்சினைகள் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறையால் ஏற்படுகின்றன என்ற புரிந்துணர்வு இயல்பாக ஏற்பட்டு விடாது. குறிப்பிட்ட ஒன்றிரண்டு கோரிக்கைகளுக்கான அந்தப் போராட்டம், சமூக மாற்றத்துக்கான ஒட்டு மொத்த போராட்டத்தின் ஒரு பகுதி (partial struggle) மட்டுமே என்பதும், தீர்வுக்கு என்ன பாதை என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அது ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விடுகிறது. பின்னர் நீர்த்துப் போய் விடுகிறது. அவர்களின் உணர்வு மட்டம், போராட்டத்தின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்ததோ, அதுவே ஏறத்தாழ போராட்டத்துக்குப் பின்னும் தொடரும். இது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லாது. சுரண்டப்படுவோரின் நலனுக்கும், இன்றுள்ள அரசியல் பொருளாதார முறைமைக்கும் இடையில் சமரசம் செய்ய இயலாத பகைமை நிலவுவது குறித்த புரிதலுடன் கூடிய, உணர்வு மட்டமாக இது மாற்றப்பட வேண்டும். இது தன்னெழுச்சி போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, தானாக வந்து விடாது.

கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கும்போது:

தன்னெழுச்சியான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை பொறுப்புக்கு வரும் போது, போராட்டத்தின் தன்மை மாறுகிறது; கோரிக்கைகள் கூர்மையடைகின்றன. அரசியல் உள்ளடக்கம் உருவாகிறது. உதாரணமாக, தெலுங்கானா போராட்டம் துவக்கத்தில் வெட்டி என்ற கட்டாய இலவச உழைப்பு முறைக்கு எதிரான உணர்வாகத்தான் உருவானது. கம்யூனிஸ்டுகளின் தலைமை மற்றும் பங்கேற்புக்குப் பின்தான், அதற்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நிஜாம் ஆட்சி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பரிமாணங்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதிகாரிகளின், நிலஉடமையாளர்களின் பாலியல் பொருளாக, மிதியடியாக அவர்கள் இருந்த நிலை மாறியது. நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை பெருமளவு குறைந்தது. அடிமை நிலையிலிருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.

கீழ தஞ்சை போராட்டம், வார்லி ஆதிவாசி மக்களின் கிளர்ச்சி போன்றவை, மிராசுதார்கள், நில உடமையாளர்கள், ஆளுவோர்களின் நடவடிக்கைகளால் சுரண்டப்பட்டு, உரிமைகளும், மனித கவுரவமும் நொறுக்கப்பட்ட உழைப்பாளிகள்/சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டோரின் மனதில் செங்கொடி விவசாய இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர அரசியல் என்ற தீ கங்குகளை விதைத்ததால் அறுவடையான இயக்கங்கள். இவற்றிலும் தன்னெழுச்சி நிகழ்வுகள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று அரசியல் இலக்கோடு திட்டமிட்டு செயல்பட்டதால், அவற்றின் பரிமாணங்கள் மாறிப்போயின. பண்ணை அடிமை சுரண்டல் முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்ச கூலி என்பதற்கான முகாந்திரம் உருவாக்கப் பட்டது.

கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்பது என்பதை இயந்திரகதியாகப் பார்த்துவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் சிலர் தலைமையில் இருப்பது மட்டுமே தானியங்கியாக மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய விதியை முறையாக அமல்படுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் போராட்டங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதுதான் அதன் பொருள். மார்க்சிய தத்துவம் என்ற ஆயுதத்துடன் தன்னெழுச்சி போராட்டங்களுக்குள் இணைவது; பல்வேறு வர்க்கங்களை, சமூகப் பிரிவினரை ஒன்றுபடுத்த ஐக்கிய முன்னணி உத்தியைப் பயன்படுத்தி போராட்ட ஒற்றுமையைக் கட்டுவது; பிரச்னைகளை அடையாளம் கண்டு பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்குவது; மக்களின் ஏற்புத்தன்மையைப் பெறுவது; போராட்ட உத்திகளை வகுப்பது; அவர்களை ஸ்தாபனப்படுத்துவது; அவர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக சுரண்டல் சமூக அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதை மாற்ற முடியும். இவை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணிகள். கீழத்தஞ்சை விவசாய தொழிலாளிகள், வார்லி ஆதிவாசி மக்களின் உணர்வு மட்டம் பிற்பட்ட நிலையில்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் பணிகளின் மூலம்தான், அவர்களின் உணர்வு மட்டம் உயர்த்தப்பட்டது; போராட்ட ஒற்றுமை கட்டப்பட்டது; கவ்விப் பிடிக்கும் கோரிக்கைகளை உருவாக்க முடிந்தது. வர்க்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இவற்றை ஒன்றிணைத்த போராட்ட உத்தியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் முடிந்தது.

மெரினா எழுச்சி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோருவதை ஒட்டி எழுந்த எழுச்சியை ஒற்றைக் கோரிக்கைக்கான போராட்டமாக மட்டும் கருத முடியாது. மற்ற பிரச்னைகள் இந்த அளவு கவனிப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சொல்லிவிட முடியாது. வறுமை தீவிரமாகிறது; நிலங்கள் பறி போகின்றன; விவசாயம் கட்டுப்படியாகவில்லை; தற்கொலைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன; தகுதிக்கேற்ற வேலை இல்லை; சம்பளம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை; கல்வி, ஆரோக்கியத்தில் தனியார்மயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; கடுமையான குடிநீர் பற்றாக்குறை பயமுறுத்துகிறது; ஊரக வேலை உறுதி சட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன; ரேஷன் முறை சீரழிய துவங்கி விட்டது; பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கிறது; சாதிய ஒடுக்குமுறை பல விதங்களிலும் வெளிப்படுகிறது. இவற்றால் சொல்ல தெரியாத வேதனையும், ஏனென்று புரியாத கோபமும் கவ்விப் பிடிக்கிறது. போராட்டமாக வெளிப்படாமல் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்த இத்தகைய உணர்வுகள்,   கொதிநிலை அடைந்து தமிழ் இன அடையாளம் என்ற பேரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரிய போராட்டமாக வெடித்தன. தமிழகத்தில் பிரதான முதலாளித்துவ கட்சியான அதிமுகவின் தலைவர், மக்களை ஈர்க்கும் பிம்பமாக இருந்தவர், இறந்த பின்னணியில், வலுவான அடுத்த கட்ட தலைமை உருவாகவில்லை. அதே அளவிலான பிம்பம் உடனடியாகக் கட்டமைக்கப்பட முடியவில்லை என்கிற புறச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியை விட, இரண்டாம் குற்றவாளி மீது கூடுதல் வெறுப்பும், அதிருப்தியும் வெளிப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். எதிர்காலம் இன்னும் இது போல நிறைய தன்னெழுச்சி போராட்டங்களைப் பார்க்கும்.

இந்த எழுச்சி, அரசியல் கட்சிகளோ, வர்க்க அமைப்புகளோ அறைகூவல் விடுக்காமல் குவிந்த மக்கள் திரள் என்பதும், அரசியல் கட்சிகளை நிராகரித்து விட்டு நடக்கும் விஷயம் என்பதும், சில பகுதியினரால் பெருமைக்குரியதாகப் பேசப்பட்டது. அமைப்பு, கொடி, பேனர் எல்லாமே சந்தேகத்துக்கு உரியவையாகப் பார்க்கப்படும் உளவியல் உருவாக்கப்பட்டது. திரட்டப்படாமல் தாமாகவே  பொது இடத்தில் கூடுவதும், முன்கூட்டியே திட்டமிடாமல், அடுத்து என்ன செய்வது என்பதை அவ்வப்போது பேசி உருவாக்கிக் கொள்வதும்தான் சிறந்த ஜனநாயக மாதிரி என்று முன்வைக்கப் பட்டது. இத்தகைய அணுகுமுறை, அதாவது அரசியல் மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் அற்ற, திட்டமிடப்படாத அணுகுமுறை உண்மையில் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே அமையும். இது கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகளுக்கு எதிரான பார்வை. மக்கள் நலனுக்கான மாற்றத்துக்குப் போராடுவது முற்போக்கு புரட்சிகர சக்திகள் தாம். இவற்றை மறுப்பது, மாற்றத்தை மறுப்பதாகும்; ஒரு தெளிவான அரசியல் திசை வழியை மறுப்பதாகும். தற்போதைய சுரண்டல் சமூக அமைப்பு நீடிப்பதை இந்த அணுகுமுறை எவ்விதத்திலும் அசைக்காது.,

மெரினா எழுச்சி, ஆட்சியாளர்களால் துவக்கத்திலேயே ஒடுக்கப்படவில்லை. அதன் நீடிக்கும் தன்மையை அரசு யூகிக்கவில்லை. தமிழகத்தில் நிலவிய தீவிரமான விவசாய நெருக்கடி மற்றும் அதன் விளைவுகளைத் திசை திருப்ப இந்த எழுச்சி பயன்படும் என்று மாநில அரசு கணக்கு போட்டிருக்கலாம். மாநில அரசின் பலவீனமான தலைமை மத்திய அரசுடன் நெருக்கத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, மத்திய மோடி அரசுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரப்பட்டதும், மாநில அரசின் வாக்குறுதிகளுக்குப் பிறகும்  எழுச்சி முடிவுக்கு வரவில்லை என்பதும், ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. இறுதி நாள் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு வன்முறை, அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப் பட வேண்டும்.

இந்த எழுச்சியை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது. பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்று,. அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தை விசிறி விட்டன. கார்ப்பரேட் ஊடகங்களுக்கு, ஒரு மக்கள் எழுச்சியைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்து உருவாக்கும் கோரிக்கை அல்ல அது.  கோரிக்கைகள் வர்க்க தன்மை உடையவையாக இருந்திருந்தால் இந்த அளவு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. தன்னெழுச்சி இயக்கம், தற்போதைய அமைப்பு முறைக்கு சவால் அல்ல என்பதும் ஒரு யதார்த்தம். இடதுசாரிகளின் திட்டமிட்ட, முக்கியமான பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் ஒப்புக்காகக் கூட ஒளிபரப்பப் படுவதில்லை என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, மாற்று அரசியலை முன்வைத்து மார்ச் 2-6 மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட மாநில அளவிலான இயக்கத்தை ஊடகங்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசியலுக்கு உண்மையான மாற்று இடதுசாரி அரசியல்தான் என்பது ஒரு முக்கிய அரசியல் செய்தி. அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவது, வர்க்க   அரசியலுக்கு சாதகமாகி விடும். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும்; சென்னையில் ஏப்ரல் 4-ல் நடந்த சிஐடியுவின் முற்றுகை போராட்டமாக இருக்கட்டும்; அவை ஊடகங்களை அசைத்து விடவில்லை. ஏனெனில் ஊடகங்களின் வர்க்கத் தன்மை அவற்றை அவ்வாறு செயல்படுத்துகிறது.

இயக்கத்தைப் பரவலாக்கியதில் சமூக வலைத்தளமும் முக்கிய பங்காற்றியது. அதில் உள்ள வாய்ப்பு முற்போக்கு சக்திகளால் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

100% தன்னெழுச்சி சாத்தியமா?

100% தன்னெழுச்சி என்று ஏதாவது இருக்க முடியுமா? நிச்சயம் ஏதோ ஒரு குழு, ஏதோ ஒரு தலைமை இதற்கான முன்முயற்சியை எடுத்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதைப் பார்த்தோம். தமிழகம் முழுதும் ஒரே தலைமை இல்லை. ஆனால், தலைமையே இல்லை என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு மையத்திலும், ஓர் அமைப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமை பொறுப்பை வைத்திருந்தன. போராட்டக் குழு என்று பல மையங்களில் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் வந்து கொண்டிருந்தது. பீட்டா எதிர்ப்பு முழக்கங்கள், அரசியல் முழக்கங்களாக மாறியது தற்செயலானதாக இருக்க முடியாது.  சில காரணங்களால், தலைமையில் இருந்தோர், தம் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும். இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, “ஒவ்வொரு இயக்கத்திலும் உணர்வுபூர்வமான தலைமை மற்றும் ஒழுங்குமுறை கூறுகள் உள்ளடங்கி இருக்கும்” என்றார். தன்னெழுச்சி இயக்கங்களில் இருக்கும் இந்த ஒழுங்குமுறை கூறுகளை வலுப்படுத்த வேண்டும். அதே போல் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தில் தன்னெழுச்சியும் இருக்கும்; அதனை அரசியலாக மாற்றிட வேண்டும்.

”கூடி நிற்பவர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் எங்கள் கருத்தை விரட்டி அடிக்க முடியாது” என்பது வால் ஸ்ட்ரீட் முழக்கத்தில் ஒன்று. ஆனால், சிறந்த முழக்கத்தைக் கூட நடைமுறையாக்க வேண்டும் என்றால், அதற்குத் தத்துவமும், அமைப்பும், வெகுஜன பங்கேற்பும் தேவை. மக்கள் பங்கேற்பில்லாமல் எதுவும் வெற்றி பெறாது. அவர்களின் ஈடுபாடு மிக முக்கியம். அதைத் தன்னகத்தே கொண்ட தன்னெழுச்சி இயக்கம் கம்யூனிஸ்டுகளால் புரட்சிகர திசைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

சிறு விரிசல்பெரு வெடிப்பு:

தன்னெழுச்சி இயக்கங்கள் வெற்றிடத்தில் உருவாவதில்லை. போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான வாசல்கள் திறந்து கொண்டே இருக்கின்றன. சில சமயம், சில இடங்களில், சில பிரச்சினைகள் பற்றிக் கொள்கின்றன.  சமூக உளவியல் மிக சிக்கலானது. எது அதனைக் கவ்விப் பிடிக்கும் என்று யூகிப்பது கடினம். நிர்பயா மீதான பாலியல் வல்லுறவு சம்பவம், டெல்லியில் 2012ல் நடந்த 634வது சம்பவம். 633க்கு ஏற்படாத எதிர்வினை இதில் ஏற்பட்டது. பல பிரச்னைகளின் மீது எழுந்த அதிருப்தி, மாற்றம் வேண்டும் என்ற உணர்வு, நிர்பயா பிரச்னையில் வெடித்தது. பெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய தன்னெழுச்சி போராட்டங்கள் பரவலாகும்போது, அவற்றை ஆய்வு செய்து, ஒரு ‘முறை’ (pattern) இருக்கிறதா எனப் பார்க்க முடியும். ஒன்றிரண்டு மட்டுமே நடக்கும்போது, இத்தகைய ஆய்வும் எளிதல்ல.

அதிருப்திகளும், எதிர்ப்பும் ஒடுக்குமுறையால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. ஆளும் வர்க்கக் கருத்துக்களைத் தம் கருத்தாக மக்களை வரித்துக் கொள்ள வைப்பது; அதுதான் இயல்பானது என்ற உணர்வை உருவாக்குவது என்பது இதில் அடிப்படையான ஒன்று. ஆளும் வர்க்கத் தலைவர்கள் மக்களை ஈர்ப்பவர்களாகத் தோற்றமளிப்பது; அந்த மாயத் தோற்றத்துக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் பிரம்மாண்டமாக முட்டுக் கொடுப்பது; அரசு நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிப்பது; பிரச்சினைக்குக் காரணம் பிற மதங்கள் அல்லது சாதிகள் என்று மடை மாற்றி விடுவது; ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக, உடனடிக் கஷ்டங்கள் இருந்தாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது; அதற்குரிய முழக்கங்களைக் கவர்ச்சிகரமாக முன் வைப்பது (வறுமையே வெளியேறு/அனைவரின் வளர்ச்சிக்காகவும் அனைவருடனும் இணைந்த செயல்பாடு/ மோடி வந்தால் நல்ல காலம் வந்து விடும் / பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவும் /தூய்மை பாரதம்/டிஜிட்டல் இந்தியா) இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். எனவேதான், இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

”வர்க்க உணர்வு என்பது பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு மின் அதிர்ச்சியைப் போல் உணரப்படும். முதலாளித்துவ சங்கிலி பிணைத்து வைத்திருந்த இந்த சமூக, பொருளாதார நிலைமை சகித்துக் கொள்ள முடியாதது என்ற புரிதல் ஏற்படும். சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடக்கும்” என ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார்.   பரந்த அளவில் இந்த உணர்வு நிலை உருவாக தேதி குறிக்க முடியாது. ஓர் அமைப்பு அறைகூவல் கொடுத்து, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் சீரான ஒழுங்குடன் இதை எட்டி விட முடியாது. அதற்கான பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். மக்களின் உணர்வு மட்டம் கொதி நிலையை எட்டாத வரை,  புரட்சிகர தத்துவத்துடன் கூடிய அமைப்புகளாலோ, திறமையான  தலைமையினாலோ கூட வெடிப்பை ஏற்படுத்த முடியாது. அல்லது கொதி நிலையை எட்டும்போது, அவற்றைத் தலைமை தாங்கி வழி நடத்தும் திறன் ஸ்தாபனத்துக்கு இல்லை என்றாலும் அதனை வழி நடத்த முடியாது.

வெடிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் மட்ட போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் உருவாக்கிட மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்ததும் இந்தப் புரிந்துணர்வுடன்தான். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பதும் பிளீனத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கான தயார் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும்.

சலனங்களை அலைகளாக்குவோம்; அலைகளை ஆயுதமாக்குவோம்!

கொதிநிலை எட்டப்படுவதற்கான தயாரிப்புகளை கம்யூனிஸ்ட் அமைப்புகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சின்னச் சின்ன திட்டமிட்ட போராட்டங்கள்; சின்னச் சின்ன வெற்றிகள்; தன்னெழுச்சி பாய்ச்சலில் தலையீடு; பொருத்தமான முழக்கங்களை முன்வைத்தல்; உணர்வுகளைக் கடைந்து கொண்டே இருத்தல்; ஜனநாயக உணர்வூட்டுதல்; வர்க்க உணர்வு மட்டமாகவும், சோஷலிச உணர்வு மட்டமாகவும் அதை உயர்த்துதல் போன்றவற்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறு சலனங்கள் பெரும் அலைகளாக மாறும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிக்கான வாய்ப்புகளை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. மின்னல் வேகத்தில் கிரகித்து எதிர்வினை ஆற்றுகிற திறன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்துக்குத் தேவை. ஜனநாயக மத்தியத்துவம் உள்ளிட்ட மார்க்சிய – லெனினிய ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிற  கட்சி அமைப்பு இதற்கு அவசியம்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, இடதுசாரிகள் செய்யும் போராட்டங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்துக்கும் பலனே இல்லை என்று கூறிவிட முடியாது. சில சமயம் பலன்களை அளவீடு செய்ய முடியாது. ஊடகங்கள் இடதுசாரிகளை உதாசீனப்படுத்தினாலும், போராட்டங்களுக்கும், அரசியல், சித்தாந்த பிரச்சாரத்துக்கும்  தாக்கம் நிச்சயம் உண்டு. அது, மக்களைப் போராட்டத்தில் ஈடுபட உந்தித் தள்ளும். தன்னெழுச்சி இயக்கம், ஏற்கனவே சமைக்கப்பட்டு, உண்ண தயாராக வானத்திலிருந்து விழுகிற பொருள் அல்ல. பல்வேறு தள இயங்குதலின் சாரம். இந்த நிகழ்முறையில் புதிய இயக்கங்கள் உருவாகலாம்; புதிய சிந்தனைப் போக்குகள் மலரலாம்; புதிய செயல்பாட்டாளர்களும், போராட்ட வடிவங்களும் முன்னுக்கு வரலாம். கடந்த காலத்துடன் தொடர்பற்றதாக அல்ல;  ஏற்கனவே கடையப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு மட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இவை துளிர்க்கும்.

எகிப்தில் ஜனநாயகத்துக்காக நடந்த எழுச்சி, எங்கிருந்தோ துவங்கவில்லை. அதற்கு முன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பல்வேறு இயக்கங்கள், வேலை நிறுத்தங்கள், அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தில் உருவானதுதான். வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2008-லிருந்து சமூக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதை எதிர்த்து இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் நடத்திக் கொண்டே இருந்த போராட்டங்களில் முகிழ்த்ததுதான். ஒவ்வொன்றுக்கும் இப்படி நம்மால் போராட்டப் பின்னணியைக் கூற முடியும். இவற்றில் பெரும் திரளாகப் பங்கேற்றவர்களும் சுரண்டப்படும் வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களே.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, மத்திய – மாநில அரசுகள் மீதான விமர்சனம், விவசாய பிரச்சினை, வறட்சி போன்றவை முன்வைக்கப்பட்டன என்றால், கடந்த காலத்தில் இடதுசாரிகள் நடத்திய பிரச்சாரங்கள், போராட்டங்கள், முழக்கங்களின் பாதிப்பே இவற்றின் மீது இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, எல்லாம் நன்றாக நடக்கிறது என்று மனநிறைவு அடைந்து விடுவதற்காக அல்ல; இன்னும் திறனுடன் செய்ய வேண்டும் என்பதற்காக. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்; ஜனநாயகம் மறுக்கப்படுதலுக்கும் சரி, வாழ்வுரிமை மீதான தாக்குதலுக்கும் சரி, அதற்கான காரணங்கள் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே இருக்கின்றன என்பது புரியாமல் இருக்கலாம். இப்படியான பிரச்சினைகளுக்காக போராடும் இதர பகுதி உழைப்பாளிகளுடன் இணைந்த போராட்டத்தை நடத்துவது வீச்சை அதிகரிக்கும் என்ற புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் வீதிக்கு வர சூழல் நிர்ப்பந்திக்கிறது. அதனைப் பயன்படுத்தி, வர்க்க அரசியல் புரிதலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களும், வரலாறும் வெறும் கூட்டல் கழித்தல் அல்ல. மக்களின் மனநிலையை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானதாக மாற்ற வேண்டும் எனில், கம்யூனிஸ்ட் கட்சி தேவை; அதன் அரசியல் தேவை; திட்டமிடல் தேவை; அதனை நடைமுறைப்படுத்துகிற மார்க்சிய லெனினிய ஸ்தாபன அமைப்பு தேவை.

எனவே, கம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் அரசியலின்   தேவையை, தலையீட்டைத்தான் தன்னெழுச்சி இயக்கங்கள் அவசியப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பெரும் திரள் எழுச்சியாக நடக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இத்தலையீடும், இணைந்த பணிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.  இதை கம்யூனிஸ்டுகள் செய்ய தவறினால், ஒதுங்கி நின்றால் அல்லது எழுச்சியைப் பயன்படுத்தும் திறனும், வலுவும் போதுமான அளவு இல்லாதிருந்தால், இந்த அதிருப்தியும், எதிர்ப்பு உணர்வும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் அறுவடை செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்; அவை சாதிய, மதவாத மோதலாகவும் மடைமாற்றம் செய்யப்படும் அபாயமும் உள்ளது. உலக அளவில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் சரி, இந்திய அளவில் சாதிய அமைப்புகளும், சங் பரிவாரங்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் சரி, இதற்கான உதாரணங்களாகும்.

எனவே, ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் உருவான எழுச்சிகளிலிருந்து படிப்பினைகள் கற்று, சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நடக்கும் இத்தகைய எழுச்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன பணிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களே புரட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களைப் புரட்சிக்கான அரசியல் திசைவழியில் கொண்டு செல்லும் தயாரிப்பு பணியைக் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும்.

 

 

 

 

 

தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2

அறிமுகம்

இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி ஜூலை மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது. அதில் நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும், தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வரும் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக வேளாண் வளர்ச்சி பற்றியும், மிக முக்கியமாக இந்த வளர்ச்சிப்போக்குகளின் வர்க்கத்தன்மை கிராமப்புறங்களில் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றியும் சுருக்கமாக எழுதியிருந்தோம். கட்டுரையின் இந்த மாதப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக தொழில் துறை வளர்ச்சி பற்றியும் அதன் வர்க்கத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

தொழில்துறை வளர்ச்சி 1950-1990

விடுதலைக்குப்பின், அகில இந்திய அளவில் (1) அரசு முதலீடுகள் மூலமும், (2) இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்த கொள்கைகளாலும், (3) விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு எல்லைக்கு உட்பட்ட அளவிலான நிலச் சீர்திருத்தங்களாலும், தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. காலனி ஆதிக்க கால தேக்கம் தகர்க்கப்பட்டு ஆண்டுக்கு எட்டு சதமானம் என்ற வேகத்தில் தொழில் உற்பத்தி பெருகியது. இதில் பொதுத்துறை முதலீடுகளும் சோசலிச நாடுகளின் உதவியும் முக்கிய பங்கு ஆற்றின. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது.

1960 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில நிகர உற்பத்தி மதிப்பில் (Net State Domestic Product or NSDP) ஆலைத்துறையின் பங்கு மிக வேகமாக ஆண்டுக்கு 7.41% என்ற அளவில் அதிகரித்தது. எனினும் 1971 இல் தமிழக உழைப்பாளிகளில் 9 % தான் குடும்பத்தொழில் அல்லாத ஆலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

1952-53 ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் மொத்த எண்ணிக்கை 400 க்கும் குறைவு. இந்த எண்ணிக்கை 1960 இல் 5900 ஐ நெருங்கியது. 1982 இல் 9750 ஐத் தாண்டியது. 1960 இல் தமிழகத்தில் ஆலைகளில் பணிசெய்த உழைப்பாளிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் தான். 1982 இல் இது ஏழு லட்சத்து முப்பத்து எட்டாயிரமாக உயர்ந்தது.

மத்திய பொதுத்துறை ஆலைகள் தமிழக தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றின.

  • 1955 இல் ஐ. சி. எப். ஒருங்கிணைந்த ரயில் பெட்டி உற்பத்திசாலை பெரம்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்.
  • 1960 இல் ஹிந்துஸ்தான் டெலிப்ரிண்டர்ஸ், அதே ஆண்டில் திருச்சியில் பாரத மிகுமின் ஆலை (BHEL) மற்றும் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், அதற்கு அடுத்த ஆண்டில் ஆவடியில் கன வாகனங்கள் ஆலை (Heavy Vehicles Factory)
  • 1963இல் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஐ.டி.பி.எல்.
  • 1965 இல் சென்னை அருகே மணலியில் மதறாஸ் (பெட்ரோலியம்) எண்ணய் சுத்திகரிப்பு ஆலை, அதே ஆண்டில் குமரியில் அபூர்வ தாது மணல் ஆலை (Indian Rare Earths), அடுத்த ஆண்டில் மதராஸ் உர உற்பத்தி ஆலை, அதன்பின் இரண்டு ஆண்டு கழித்து
  • 1968 இல் திருச்சியில் சிறு ஆயுதங்களுக்கான ஆலை மற்றும் சென்னையில் மொடர்ன் ப்ரேட்ஸ்
  • 1977 இல் சேலம் ஸ்டீல்
  • 1980 இல் ராணிப்பேட்டையில் பி.ஹெச்.இ..எல்.என்று பல ஆலைகள் பொதுத்துறையில் தமிழக எல்லைக்குள் அமைக்கப்பட்டன.

இவை தவிர மாநில அரசும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருடனான கூட்டு நிறுவனங்களையும் உருவாக்கியது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் துவக்கத்தில் தமிழக மாநில நிகர உற்பத்தியில் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறையின் உற்பத்தியின் பங்கு பதினெட்டு சதமாக இருந்தது.[1] மொத்த உழைப்பாளிகளில் ஏறத்தாழ 9 சதம் வீடுசாரா ஆலைகளில் பணிபுரிந்தனர்.

தொழில்துறை உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்ல. அதன் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1950 இல் இருந்து அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் பாரம்பர்ய துறைகளின் (கைத்தறி, பஞ்சு மற்றும் நவீன ஜவுளி, சிமன்ட், தோல் பொருட்கள்,சர்க்கரை) உற்பத்தி அதிகரித்த போதிலும் மொத்த தொழில் உற்பத்தியில் அவற்றின் பங்கு குறைந்தது. பஞ்சு மற்றும் ஜவுளித்துறை ஆலைகள், சர்க்கரை ஆலைகள், சிமண்ட் ஆலைகள், தோல் துறை ஆலைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை இக்காலகட்டத்தில் ஓரளவு அதிகரித்த போதிலும், மறுபுறம், ப்ளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயனத்தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐ,சி.எப்.(ரயில்பெட்டிகள்), பி.ஹெச்.இ.எல்.(மின்கலன்கள்), எம்.ஈர்.எல். (கச்சா எண்ணய் சுத்திகரிப்பு ஆலை) என்று பல நவீன தொழிற்சாலைகள் உருவாகின. தமிழக மின் உற்பத்தியும் 1950களில் இருந்து 1980கள் வரையிலான காலத்தில் வேகமாக அதிகரித்தது. 1950-51 இல் 156 மெகாவாட் என்ற நிலையில் இருந்து தமிழக மின் உற்பத்தி திறன் 1984-85 இல் 3344 மெகாவாட்டாக உயர்ந்தது.

தமிழக தொழில் வளர்ச்சியின் ஒரு அம்சம் அன்றும் இருந்தது, இன்றும் தொடர்கிறது. அது என்னவெனில், தொழில் வளர்ச்சி மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1982-83 இல் மொத்த ஆலைகளில் 21 % சென்னை – காஞ்சிபுரம் –திருவள்ளூர் மாவட்டங்களிலும் 17.2% கோவை – திருப்பூர் மாவட்டங்களிலும் இருந்தன. ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரி பாதியினர் இந்த ஐந்து மாவட்டங்களில் தான் பணியில் இருந்தனர். நிலைமூலதனத்தில் (fixed capital) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கும் இந்த மாவட்டங்களில் தான் இருந்தன.

மேலும் அகில இந்திய அளவில் அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து தொழில் துறை நெருக்கடி தீவிரம் அடைந்தது. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது. 1960-61 இல் இருந்து 1970-71 வரை பதிவு செய்யப்பட்ட ஆலை உற்பத்தி தமிழகத்தில் ஆண்டுக்கு 7.45% என்ற வேகத்தில் அதிகரித்துவந்தது. ஆனால், 1970-71 இல் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேகம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது. மத்திய அரசு பொதுத்துறை முதலீடுகளை வெட்டியதன் விளைவாக ஏற்பட்ட தொழில் மந்த நிலை தமிழகத்திலும் வெளிப்பட்டது. மேலும், மின்பற்றாக்குறை பிரச்சினையும் ஏற்பட்டது.

1950 களிலும் 1960 களிலும் தமிழகத்தில் தொழில் உற்பத்தி வேகமாக வளர்ந்தது என்பதையும், பல புதிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமாக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 1970 களில் தொழில் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது என்றாலும் 1980 களில் தமிழக தொழில் வளர்ச்சி மீட்சி அடைந்து ஆண்டுக்கு 4.6 % என்ற வேகத்தில் அதிகரித்தது.

தாராளமய காலத்தில் தொழில் வளர்ச்சி

1960-61 இல் தமிழக மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 % ஆக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்துவந்தது. 1990-91 இல் 33.1% ஆக இருந்தது. 1995-96 இல் 35.16% ஆக உயர்ந்தது. ஆனால் 1999-2000 இல் 31.05% ஆக குறைந்தது. குறிப்பாக 1980களில் 30% ஆக இருந்த ஆலைஉற்பத்தியின் பங்கு, 1990களில் 25 % ஆக குறைந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆலை உற்பத்தி வளர்ச்சியும் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக இருந்தது என்பது தெளிவாகிறது. சிறுகுறு தொழில்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் சிறு குறு தொழில்களுக்கான (ஏற்கெனவே இருந்த) சலுகைகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும் வங்கிக் கடன் வசதி குறுக்கப்பட்டதும் சிறுகுறு தொழில்களை பாதித்தது. இதனால வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாயின.

தமிழக ஆலை உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் 1990 களில் ஏற்பட்ட சரிவு 2003 வரை தொடர்ந்தது. பின்னர் ஓரளவு மீட்சி ஏற்பட்டது. 2004-05 தொழில் உற்பத்தி குறியீடு 100 என்று வைத்துக்கொண்டால், 2013-14 இல் 161.6 ஆக உயர்ந்தது. இதுவும் பிரமாதமான வளர்ச்சி விகிதம் என்று சொல்ல முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-14) முறையே 4%, 1% மற்றும் 4.3% என்ற அளவில் ஆலை உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்துள்ளது.

அனைத்திந்திய அளவில் தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 2011-12 கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 37000 தொழிற்சாலைகள் உள்ளன; இந்த ஆலைகளில் 19.41 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; ஆலை உற்பத்தியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய்; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு 76179 கோடி ரூபாய்.

2011-12 கணக்குப்படி இந்தியாவின் மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 17% தமிழகத்தில் உள்ளன; மொத்த ஆலைத் தொழிலாளிகளில் 14.45 %; மொத்த ஆலை உற்பத்தி மதிப்பில் 10.54%; மொத்த நிலைமூலதனத்தில் 8.28 %; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் 9.11%.

ஆக, தமிழகம் தொழில் துறையிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தில் ஏழில் ஒரு பங்கு தமிழகத்தில் உள்ளது.

தமிழக அரசுகளின் முதலீட்டுக் கொள்கைகள்

இதுவரை தமிழகத் தொழில் வளர்ச்சியின் பல விவரங்களை சுருக்கமாக பார்த்தோம். இந்த வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அதற்கு பின்பு வந்த திராவிட கட்சிகள் ஆட்சியிலும் அரசுகள் பின்பற்றிய கொள்கைகளாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது 1967 வரை தான். விடுதலைக்குப் பின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அக்கட்டத்தில் பொதுத்துறை முதலீடுகளும் இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி என்ற கொள்கையும் ஓரளவு நவீன தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கின. பின்னர் 1966 முதல் 1970களின் இறுதிவரை தொழில் துறையில் நாடு தழுவிய தேக்கம் இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. தமிழகத்திலும் இது பிரதிபலித்தது. ஆனால் 1991 இல் துவங்கி மத்திய மாநில அரசுகளின் தொழில் கொள்கைகள் மாறின. தொழில் வளர்ச்சி என்பதில் அரசுக்கு பொறுப்பு மிக குறைவாகவே இருக்க வேண்டும் என்பதே கொள்கை நிலையாக மாறியது. தனியார் முதலாளிகளை, குறிப்பாக அந்நிய மற்றும் இந்தியப் பெரும் கம்பனிகளை தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்ளவைக்கும் வகையில் அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. மேலும் இக்கம்பனிகள் தங்கு தடையின்றி உற்பத்தியை மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துணை வசதிகளும் உத்தரவாதமாகவும் சலுகை விலையிலும் அளிக்கப்பட்டன. உற்பத்தி தங்கு தடையின்றி நடந்திட தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமைகளும் இதர ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. இது தான் ஹூண்டாயிலும் நோகியாவிலும், பாக்ஸ்கானிலும் இன்னபிற பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பனிகளின் ஆலைகளில் நாம் காண முடிந்தது. அந்நிய, இந்திய கம்பனிகளுடன் முதலீட்டுக் கொள்கை என்ற பெயரில் அரசுகள் போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும்   பாலும் வெளிச்சத்திற்கே வரவில்லை. இவை பற்றி வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் திமுக ஆட்சியிலும் கோரினர், அதிமுக ஆட்சியிலும் கோரினர். ஆனால் இன்றுவரை அத்தகைய எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

உள்நாட்டு சிறு குறு முதலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில்லை. மறுபுறம் தாராளமய கொள்கைகளின் கீழ் சிறு குறு தொழில்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஏறத்தாழ அனைத்து துறைகளும் பெரும் கம்பனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, மின்சார பற்றாக்குறை உள்ளிட்ட தாராளமய கொள்கைகளின் விளைவுகள் சிறு குறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளன. இது வேலை வாய்ப்பையும் பாதித்துள்ளது.

பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் தொழில் துறை வளர்ச்சியையும் அதன் தன்மையையும் பாதித்துள்ளது.

இந்த அரசு முதலீட்டு கொள்கைகளின் பின்புலத்தில் தமிழக தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை பற்றி பார்ப்போம்.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தமிழக தொழில் வளர்ச்சியிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியும் தேக்கமும் இருந்தாலும் உழைப்பாளி மக்களின் கடும் உழைப்பாலும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மூலதனசேர்க்கையாலும் கணிசமான அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. நவீன மயமாக்கல் ஏற்பட்டுள்ளது.உற்பத்தியின் கட்டமைப்பு பெருமளவிற்கு மாறியுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆலை தொழிலாளிகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு இந்த வளர்ச்சியில் எவ்வளவு பங்கு கிடைத்தது? வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது?

முதலா`வதாக, 2011-12 கணக்குப்படி ஆலைஉற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு (இது மொத்த உற்பத்தி மதிப்பில் இருந்து கூலி, சம்பளம் தவிர இதர –மூலப்பொருள், இயந்திர தேய்மானம் ஆகிய – செலவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை) 100 என்று கொண்டால், அதில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளமும் தொழிலாளிகளின் கூலியும் சேர்ந்து மொத்தமாக 35% தான். அதாவது ஒருநாள் உழைப்பில் (மேலாண்மை பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளத்தை சேர்த்துக்கொண்டாலும்) உழைப்பாளிகளுக்கு கிடப்பது 35%. முதலாளி உபரியாக பெறுவது 65%. மார்க்சின் மொழியில் கூறினால் சுரண்டல் விகிதம் – உபரி உழைப்புக்கும் அவசிய உழைப்புக்கும் உள்ள விகிதம் – 65/35 அல்லது கிட்டத்தட்ட 185%. அதாவது, உழைப்பாளிகள் தமிழகத்தில் ஆலை உற்பத்தியில் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்.

இரண்டாவதாக, ஒருவிஷயத்தைப் பார்க்கலாம். 1980களில் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் உழைப்பாளர் கூலியின் பங்கு 45% ஆக இருந்தது. 1990களில் 35% ஆக குறைந்தது. 2011-12 க்கு வரும் பொழுது இது மேலும் குறைந்து, உழைப்பாளர் கூலியும் மேலாண்மை ஊதியங்களும் சேர்ந்தே 35% பங்கு தான் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் பெற்றன. தாராளமய காலகட்டம் உழைப்பாளிகள் மூலதனத்தால் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்துள்ள காலகட்டம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

ஆலை உற்பத்தி துறையை பொறுத்தவரையில், உற்பத்தி அதிகரித்தாலும், பணி இடங்கள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன. பதிவு செய்யப்பட ஆலைகளில் உழைப்பாளர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள போதிலும், பதிவு செய்யப்படாத ஆலை உற்பத்தியில் பணி இடங்கள் குறைந்துள்ளன. சிறு குறு தொழில்முனைவோர் தாராளமய கொள்கைகளின் காரணமாக எதிர் கொள்ளும் நெருக்கடிகளும் இதன் பின் உள்ளன.

ஆக, ஆலை உற்பத்தி துறையின் தாராளமய கால வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வேலை இழப்பையும் அதிகமான சுரண்டலையும் பரிசாக அளித்துள்ளது. தொழில் துறையின் இதர பகுதிகளான கட்டுமானம், மின்சாராம், எரிவாயு மற்றும் தண்ணீர் வழங்கல் ஆகியவற்றை பொறுத்தவரையில் கட்டுமானம் மட்டுமே வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.

மின் உற்பத்தி துறை நெருக்கடியில் தொடர்வதை நாம் அறிவோம். 1990களிலேயே பொதுத்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு மின் உற்பத்தி திறனை பெருக்குவதற்குப் பதில் இத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அவர்களிடம் இருந்து காசு கொடுத்து மின்சாரம் வாங்கும் தாராளமய கொள்கைகள் துவங்கின. அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளாக தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் மின் உற்பத்தி துறை உள்ளது.வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது.

கட்டுமானத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சீரான வளர்ச்சியாக இல்லை. பொதுவான பொருளாதார நிலாமையை ஒட்டியே இத்துறையின் வளர்ச்சி அமைய முடியும். இத்துறையிலும் இயந்திரமயமாக்கல் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதனால் துறையின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு கூடுவது சாத்தியம் இல்லை. மேலும் இத்துறையில் கிட்டத்தட்ட அனைத்து உழைப்பாளிகளுமே தினக் கூலிகளாகவோ ஒப்பந்தத் தொழிலாளிகளாகவோ உள்ளனர். கடும் உடல் உழைப்பு செய்கின்றனர். தொழில்செய்கையில் விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, தின கூலி பிற துறைகளின் அத்தக் கூலியை விட கூடுதலாக தோன்றினாலும் கட்டுமானத்துறையும் கடும் சுரண்டல் நிலவும் துறை தான்.

நிறைவாக

தமிழக தொழில் வளர்ச்சி பற்றிய இக்கட்டுரை நமக்கு சில அடிப்படை விஷயங்களை தெரிவித்துள்ளது. ஒன்று, இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி வேகமடைந்தது. 1950 முதல் 1990 வரையிலான காலத்தில் தமிழக தொழில் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசு உதவியுடன் கைத்தறி போன்ற துறைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக தொழில் துறை நவீனமயமாகியது. பாரம்பரிய துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. எனினும் ரசாயன பொருட்கள், ப்ளாஸ்டிக்ஸ், இயந்திர துறை ஆகியவை இன்னும் மிக வேகமாக வளர்ந்தன.

அரசின் கொள்கைகள் பிரதானமாக தொழில்வளர்ச்சியை பெரும் மூலதனங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் சாதிக்க முயன்றுள்ளன. 1990களுக்கு முன் மாநில தொழில் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை முதலீடுகள் முக்கிய பங்காற்றின. அதன் பிறகு தாராளமய கொள்கைகள் அமலுக்குவந்தன. இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருந்துள்ளது. ஆலை உற்பத்திவளர்ச்சி விகிதம் ஒருசில ஆண்டுகளில் அதிகமாக இருந்தாலும் பிற ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருந்தது. வேலை வாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, சிறு குறு தொழில்கள் நலிவுற்றன. பன்னாட்டு பொருளாதாரத்தின் பின்னடைவும் தமிழக ஏற்றுமதி சார்ந்த தொழில்களான ஜவுளி மற்றும் என்ஜினீயரிங் தொழில்கள் கடும் பாதிப்புக்கு அவ்வப்பொழுது உள்ளாயின.

வளர்ச்சி விகிதமும் நவீன மையமும் ஒருபுறம் இருக்க, வளர்ச்சியின் வர்க்கத்தன்மை எவ்வாறு இருந்தது? உழைப்பாளி மக்களுக்கு பெரும் பயன் தரவில்லை. மாறாக, வேலை வாய்ப்புகள் வளரவில்லை. வேலையின்மை பெரும் பிரச்சினையாக தொடர்ந்துள்ளது. உற்பத்தி திறனும் மொத்த உற்பத்தியும் பன்மடங்கு உயர்ந்துள்ள போதிலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கிய உழைப்பாளி மக்களுக்கு உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் கிடைத்த பங்கு குறைந்தது. சுரண்டல் விகிதம் அதிகரித்துள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு சார்ந்து நிற்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்நிய பெரும் மூலதனமும் இந்திய பெரும் மூலதனமும் ஏராளமான சலுகைகளை பெற்று தங்கள் லாபங்களை பன்மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளன. ஆனால் அவர்கள் விரும்பும் பொழுது, சலுகைகளை அனுபவித்த பின்பு, ஆலைகளை மூடி தொழிலாளிகளை வீதியில் நிறுத்துவது என்பது தமிழகத்தின் அனுபவம். தொழிலாளிகளின் ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுவதும் தமிழக அனுபவம்.

தாராளமய கொள்கைகளை எதிர்த்து உழைப்பாளி மக்களை திரட்டுவதன் அவசியத்தை இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

[1] பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும், மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளும் மின்சாரம் பயன்படுத்தாவிட்டாலும் இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றும் ஆலைகளும் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறை என்பதன் வரையறையாகும்.

Continue reading “தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2”

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

  • பிரகாஷ் காரத்

இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.

நிதி மூலதன ஆதிக்கம்:

நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.

மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கைவிடப்படும் கொள்கைகள்:

குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.

மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.

கிளறப்படும் அடையாளங்கள்

பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.

மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.

இந்துத்துவப் பரவலின் பின்னணி

பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.

தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.

தமிழக முதலாளித்துவம்

தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல்

வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.

திமுக-அதிமுக

திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.

சித்தாந்தப் போராட்டம்

எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.

இந்துத்வ திட்டம்

இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.

இடது ஜனநாயக மாற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.

தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.

  • தமிழில்: சிந்தன்

தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1

அறிமுகம்

இந்தியா விடுதலை பெற்று இன்றைய தமிழகம் தனி மாநிலமாக உருவான பொழுது தமிழகம் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருந்தது.காலனி ஆட்சியில் வேளாண் துறை பெரும்பாலும் தேக்க நிலையில் தான் இருந்தது.ஐம்பதுகளின் துவக்கத்தில் மாநிலத்தின் நெல் உற்பத்தி 20 லட்சம் டன் என்ற அளவில் தான் இருந்தது. மகசூலும் ஏக்கருக்கு ஏழு க்விண்டால்(700 கிலோ) என்று குறைவாகவே இருந்தது. தொழில் துறையிலும் பெரும் முன்னேற்றம் காலனி ஆட்சிக்காலத்தில் நிகழவில்லை. ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை என்று சில துறைகளில் நவீன ஆலை உற்பத்தி துவங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்தது.தொழில்துறையின் பெரும்பகுதி ஆலை அல்லாத முறைசாரா உற்பத்தியாகவே இருந்தது. தொழில்துறை உழைப்பாளர்களில் பெரும் பகுதியினர் முறைசாரா உற்பத்தியில் தான் இருந்தனர். கட்டமைப்பு துறைகளில் காலனீய அரசு மிகக் குறைவான அளவில் தான் முதலீடுகளை மேற்கொண்டது. 1950 இல் தமிழகத்தின் மின் உற்பத்தித்திறன் 160 மெகாவாட் என்ற அளவில் மிகவும் சொற்பமாக இருந்தது. சமூக குறியீடுகளிலும் நிலைமை மோசம் தான். தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம்1950களின் துவக்கத்தில் சுமார் 20%என்ற அளவில் தான் இருந்தது. உயிருடன் பிறக்கும் ஆயரம் சிசுக்களில் ஏறத்தாழ நூற்றைம்பது சிசுக்கள் ஒரு ஆண்டு நிறைவடையும் முன்பே இறக்கும் நிலை இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1951இல் (5 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில்) 20 % ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்குப்படி (7வயதிற்கு மேற்பட்ட)ஆண்கள் மத்தியில் 87 %, பெண்கள் மத்தியில் 74 %. 1950 இல் 150 ஆக இருந்த சிசு இறப்பு விகிதம்  2012 ஆம் ஆண்டுகணக்குப்படி 21 ஆகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 22,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.1950களின் துவக்கத்தில் 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி தற்சமயம் ஏறத்தாழ மூன்று மடங்காக 60 லட்சம் டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் தமிழக வளர்ச்சி விகிதம்5.38 %ஆக இருந்தது (இந்தியா 5.47%).1990-911998-99 களில் இது 6.02 % ஐ எட்டியது(இந்தியா 6.50%). தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980-1990களில் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தலா உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே3.87 % மற்றும் 4.78 % அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7 % ஐ எட்டியது.அடுத்த பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது.

இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், தாராளமய காலத்தில் – அதாவது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். மேலும் அதற்கு முந்தைய காலத்தை விட அதிகம் என்றும் கூறலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும்.

 

வளர்ச்சியின் துறைசார் கட்டமைப்பு

அட்டவணை 1 தமிழக மாநில உற்பத்தியின் துறைசார் விகிதங்களை தருகிறது:

Untitled-1

நாம் முதலில் கவனிக்க வேண்டியது, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி ஆகியவையை உள்ளடக்கிய முதல் நிலைத்துறையின் பங்கு மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 43.5% இலிருந்து செங்குத்தாக 7.8%ஆக குறைந்துள்ளது என்பதாகும். குறிப்பாக தாராளமய காலகட்டத்தில் –அதாவது, கடந்த 20-25 ஆண்டுகளில் – 23.42% இலிருந்து 7.81% ஆக மிக வேகமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக உழைப்பாளி மக்களில் வேளாண்மை துறையில் இருப்பவர்கள் சதவிகிதம் இன்றளவும் கிட்டத்தட்ட 40%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் இந்த சதவிகிதம் 51% ஆக உள்ளது. நவீன பொருளாதார வளர்ச்சியில் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கணிசமாக குறைவது வியப்பிற்குரிய விசயமல்ல. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேளாண் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் மிக மந்தமாகத்தான் அதிகரித்துள்ளன என்பது தமிழக வளர்ச்சியின் ஒரு முக்கிய ஊனம் ஆகும். அகில இந்திய நிலையும் இது தான். அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் 2011-12 இல் உழைப்புப் படையில் 64% வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் தான் இருந்தனர்.

இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் வேகம் இல்லை.சொல்லப்போனால், தாராளமய காலத்தில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61 இல் இந்த பங்கு 20.27% ஆக இருந்தது. 1980-81இல் 33.49% ஆக உயர்ந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதேநிலையில் தொடர்ந்தது. ஆனால் தாராளமய கட்டமான கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளில் இப்பங்கு சரிந்து 2012-13 இல் 29% க்கும் கீழே சென்றுவிட்டது. அது மட்டுமல்ல. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி (registered manufacturing) யின் பங்கு 1960-61 இல் 6.85% ஆக இருந்தது.இது 1990-91 இல் 16.22% ஆக உயர்ந்தது. ஆனால் தாராளமய காலத்தில் 2012-13 இல் கணிசமாக குறைந்து 11.56% ஆக உள்ளது. பதிவு செய்யப்படாத ஆலைத்துறை உற்பத்தியும் 5.17% ஆக சரிந்து 1960-61 இல் இருந்த 7.91% ஐயும் விட கீழே சென்றுள்ளது.

இந்த விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? தாராளமய கால வளர்ச்சி என்பது வேளாண்துறையிலோ, தொழில்துறையிலோ சாதிக்கப்படவில்லை. நவீன கால வளர்ச்சியின் இலக்கணமாக இருந்த தொழில்மயமாக்கல் இங்கே நிகழவில்லை. ஒருசில தொழில்கள் தமிழகத்தில் கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் விரிவடைந்துள்ளன என்பது உண்மை. மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, துணி மற்றும் பின்னலாடை துறை ஆகியவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். அனால் பொதுவான பலதுறை தொழில்மயம் இங்கே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எங்கிருந்து வந்துள்ளது வளர்ச்சி? மூன்றாம் நிலைத்துறை – இது சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது – தான் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்துறையின் பங்கு 1960-61 இல் 36.22% ஆக இருந்தது. 1990-91 இல் 43.4 % என்ற அளவிற்குத்தான் உயர்ந்தது. ஆனால் அடுத்துவந்த தாராளமய காலத்தில் சுமார் இருபது ஆண்டுகளில் 63.65% என்றார் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் உள்ளடக்கம் என்ன? உற்பத்தி மதிப்பு அடிப்படையில் சேவைத்துறையின் மிகப் பெரிய பகுதி என்பது நிதி மற்றும் ரியல் எஸ்டேட்தான். இது 2012-13 இல் சேவைத்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. 2012-13 இல் மாநில மொத்த உற்பத்தியில் நிதி மற்றும் ரியல் எஸ்டேட்டின் பங்கு 23.13% ஆக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாபெரும் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றெல்லாம் சித்தரிப்பது மிகையானது என்பது தெளிவு.

வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

துறைவாரி உற்பத்தி பெருக்கம், அதில் அதிகரித்துவரும் சேவைத்துறையின் பங்கு, தொழில்துறையின் மந்தமான வளர்ச்சி, வேளாண்துறையின் தேக்கம்/துயரம் இவை ஒருபுறம் இருக்க, தமிழக வளர்ச்சி பல்வேறு வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

பொதுவாக காங்கிரஸ் ஆட்சியிலும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது உண்மை. தமிழக கிராமப்புற மாற்றங்களை 197௦களின் இறுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் குரியன் 1961-62 முதல் 1971-72 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றி பரவலாக பேசப்பட்டிருந்தாலும், கிராமப்புறக்குடும்பங்களில் 1 சதமாக இருந்த பெரும் செல்வந்தர்களின் கையில் குவிந்திருந்த சொத்து மதிப்பு 1961-62 இல் 33% ஆக இருந்தது, 1971-72 இல் 39%ஆக உயர்ந்தது. இதே காலத்தில் உயர்மட்ட 10% நீங்கலாக மீதம் 90% குடும்பங்களிடம் இருந்த சொத்துப்பங்கு 27.43% இல் இருந்து 22.36% ஆக குறைந்தது. 1970களிலும் அதன் பின்பும் நில மறுவிநியோகம் என்பது இடதுசாரிகள் அஜண்டாவில் மட்டுமே இருந்தது. அரசுகள் இப்பிரச்சினையில் செயல்பட மறுத்துவிட்டன. 1990களிலும் அதன் பின்பும் எதிர்மறையான நிலச்சீர்திருத்தம் – அதாவது, உச்சவரம்பை உயர்த்துவது, உச்சவரம்பு சட்டங்களை செயலற்றதாக ஆக்குவது, செல்வந்தர்களுக்கும் கார்ப்ப்ரேட்டுகளுக்கும் சாதகமாக விதிமுறைகளை மாற்றி விலக்குகளையும் அளித்து நில ஏகபோகத்தை தக்கவைப்பது, வலுப்படுத்துவது என்பதே அரசின்கொள்கையாக இருந்துவந்துள்ளது. இது இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தும். 2001-2006 காலத்தில் அரசின் வசம் இருந்த நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்கு அற்ப குத்தகைக்கு அளிக்க மாநில அ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்ததும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் என்று 2006 இல் தேர்தல் வாக்குறுதி அளித்து, பின்னர் வழங்க அரசிடம் நிலம் இல்லை என்று தி,மு,க. அரசு நிலை எடுத்ததும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆக பல நிலா உச்சவரம்பு சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள போதிலும் நிலா ஏகபோகம் என்பது பெருமளவில் தகர்க்கப்படவில்லை.

அதேசமயம், வேளாண்வளர்ச்சிக்கு என்று அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களாலும் மானியங்களாலும் மிக அதிகமாக அபயன் அடைந்திருப்பது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித்துவ விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள்தான் என்று கள ஆய்வுகள் கூறுகின்றன. சில நஞ்சை பகுதிகளில் பாரம்பர்ய நிலப்பிரபுக்கள் நிலங்களை விற்று காசாக்கி வேறுதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இது அப்பகுதிகளில் உள்ள குடியானவ சாதியினருக்கு நிலபலத்தை கூட்டியுள்ளது. இவ்வாறு உருவாகியுள்ள பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நவீன உற்பத்திமுறைகளில் முதலீடு செய்துள்ளனர். வங்கி, கூட்டுறவு அமைப்புகள் அரசின் விரிவாக்கப்பணி அமைப்பு, அரசு மான்யங்கள் மற்றும் அனைத்து வேளாண்சார் திட்டங்களையும் ஏற்கெனவே இருந்த நிலப்பிரபுக்களும் இவ்வாறு வளர்ந்துள்ள பெரிய முதலளித்வ விவசாயிகள்/ பணக்கார விவசாயிகள் ஆகியோரும் பயன்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மற்றும் அந்நிய கம்பனிகளும் நுழைந்துள்ளன. இவர்கள் நேரடி விவசாயத்தில் ஈடுபடுவது குறைவு தான். ஆனால், அனைத்து இடுபொருள் சந்தைகளிலும் நுழைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், என்று அனைத்தும் இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதி யாக அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பும் விரிவாக்க அமைப்பும் பலவீனமடைந்துள்ளதால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை கூடுதலாக சார்ந்துநிற்கும் நிலை உருவாகியுள்ளது. நிறுவனக்கடன் வசதிகளும் சிதைந்துள்ளதால் லேவாதேவிகள், வர்த்தகர்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கியத்துவம் தமிழக வேளாண்மையில் அதிகரித்துள்ளது. 1970களில் இருந்தே பொதுப் பாசன வசதிகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கு குறையத்துவங்கியது. அரசு அளித்த மானியங்களை பயன்படுத்தி கிணற்று பாசனத்தை பம்புசெட்டுகள் வைத்தும் ஆழ்குழாய்கிணறுகள் அமைத்தும் பயன்படுத்தும் வாய்ப்புகள் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே குறைவாக இருந்தது. தாராளமய காலத்தில் இது கிட்டத்தட்ட எட்டாக்கனியாக ஆகிவருகிறது. நவீன பாசன முறைகள், நவீன வேளாண் இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஒருசிறிய பகுதி பெருமுதலாளித்துவ விவசாயிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் கைகளில் தான் குவிந்துள்ளன.

சுருங்கச்சொன்னால், விவசாயிகள் மத்தியில் வர்க்க வேறுபாடு பெரிதும் அதிகரித்து ஒருபுறம் முதலாளிதத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் (பாரம்பர்யமாக ஊரின் நிலக்குவியலில் இடம் பெறாதிருந்தாலும் காலப்போக்கில் அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பயன்படுத்தி பணக்கார விவசாயி நிலையில் இருந்து) பெரிய முதலாளித்வ விவசாயிகளாக மாறியுள்ளவர்களுமே கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் ஆளும் வர்க்கமாக உருவாகியுள்ளனர். பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள “சமூக-பொருளாதார –சாதிவாரி கணக்கெடுப்பு” (SECC) தரும் விவரங்கள்படி, தமிழக கிராமப்புறங்களில் நூறு குடும்பங்களை எடுத்துக் கொண்டால், அதில் சாகுபடியை பிரதான வருவாயாக கொண்டிருப்பது 19 குடும்பங்களுக்கும் குறைவானவை தான் (18.63%). மறுபுறம், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் (65.77%) பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளது உடல் உழைப்பைத்தான். மேலும், சாகுபடிசெய்யும் குடும்பங்களை எடுத்துக் கொண்டால், ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) குறைவாக சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடிசெய்யும் குடும்பங்களில் 77%. ஆனால் இவர்கள் வசம் உள்ள சாகுபடி நிலப்பரப்பு மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 35.4% தான். இது தான் தாராளமய காலத்தில் தமிழக கிராமப்புற வர்க்க கட்டமைப்பின் தன்மை.

தொடரும்

சாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை

 

-கே. வரதராசன்

“நமது நாட்டை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டுமானால், இந்து சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சாதியத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் உயர்சாதி – தாழ்ந்த சாதி என்கிற இத்தகைய சாதிய அடுக்கினை அடித்து நொறுக்காது, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கூட அமைத்திட முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், புரட்சிகர ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் என்பதை சாதிய சமூகத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து தனியே பிரித்திட முடியாது.’’

தோழர் இ.எம்.எஸ். 1979இல் எழுதிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை. இவ்வாறு தோழர் இ.எம்.எஸ். கூறி முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்த பின்னரும், புரட்சிகர இயக்கத்தின் முக்கிய பணியாக இது இன்னமும் தொடர்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டின் பல பகுதிகளிலும், அடித்தட்டு மக்களின் வாழ்வில், சாதிய அமைப்புமுறை ஏவியுள்ள தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வதை இன்னமும் காண முடியும். `தொட்டால் தீட்டு’, `நிழல் பட்டால் தீட்டு’, ஏன், `தீண்டத்தகாதவர்களின் குரலைக் கேட்டாலே தீட்டு’ என்று கூறும் கொடுமை இன்னமும் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு வெளியே சுகாதாரமற்ற சேரிகளில் வாழும் முறை தொடர்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. அவர்களது குழந்தைகள் சாதி இந்துக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கோவில்கள் அவர்களுக்குத் திறக்காது. கிராமங்களில் உள்ள முடிதிருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நாட்டின் பல பாகங்களில் இதுதான் இன்றைக்கும் நிலையாகும்.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நாட்டில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில்அது இன்னமும் நீடிக்கிறது என்பதே யதார்த்தஉண்மையாகும். பலநூறு ஆண்டு காலமாக இத்தகையசாதியப் பாகுபாடுகள் மற்றும் சாதியின் பெயரால்கொடுமைகள் நீடிப்பது, ஏன்? இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் மனுதர்மசாஸ்திரம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகை வர்ணங்களை நியாயப்படுத்தி, நால் வருணத்தாரிலும் சிறந்தவன் பிராமணனே என்றும், ஏனென்றால் அவன் பிரம்மாவின் மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டவன் என்றும், இவர்களில் சூத்திரர்கள் தாழ்ந்தவனாகவே பிரம்மாவால் பாதத்திலிருந்து படைக்கப்பட்டவன் என்றும் கூறி, சூத்திரன் மற்ற மூவர்ணத்தாருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது.

உயர் வர்க்கத்தினருக்கு பிரத்யேக உரிமைகள் என்பதும், ஒடுக்கப்பட்டோருக்கு துன்ப துயரங்களே என்பதும் வர்க்க சமுதாயத்தில் உலகம் முழுதும் உள்ள நிலைமைதான். ஆயினும் சாதீய ரீதியாக மக்களைப் பிரித்து தீண்டாமைக்கொடுமை என்னும் கொடிய சமூக அமைப்பு முறை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள இந்து சமூக முறையில்தான். தீண்டாமைக் கொடுமையும், சாதீயப் பிரிவுகளும் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று நாட்டின் பல பகுதிகளில் பாமர மக்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து மத சாஸ்திரங்களின்படி நால்வர்ணம் அல்லது சாதியப் பிரிவுகள் என்பவை கடவுளால் உண்டாக்கப்பட்டவை. கீதையில் கிருஷ்ணர்என்ன சொல்கிறார்?

‘‘சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச’’

இதன் பொருள், நான்கு வர்ணங்கள் என்னால் அதாவது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைக்கூறிய ஆண்டவனுக்கு. அடித்தட்டைச் சேர்ந்த பக்தன் யாரேனும் சாதியமைப்பை உருவாக்கிய ஆண்டவனே அதை நீங்களே மாற்றித் தரவேண்டும், எங்களை அடிமை நிலையிலிருந்துகாக்க வேண்டும் என வரம் கேட்டு விடுவானோஎன்ற பயம் ஏற்பட்டிருக்கும் போலும். அடுத்தஇரண்டு வரிகளிலும் அதற்கும் வழிகாட்டிவிடுகிறார்.

‘தஸ்ய கர்த்தாரம மாம்

வித்ய கர்த்தார மன்யம்’

அதாவது, நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டதுதான் என்றாலும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது என்று கூறிவிடுகிறார்.

அதாவது, ஒவ்வொருவரும் தான் சார்ந்த வர்ணத்தின் கடமைகளைச் செவ்வனே செய்து வர வேண்டும். அதுவே அவர்களது `கர்மா’ – அதாவது கடமை.

சந்தோக உபநிஷத் வெளிப்படையாகவே கூறுகிறது: “நீ பிறப்பால் உண்டான உன் வர்ணத்தின் கடமைகளைச் செய்யவில்லை என்றால், பின் நீ அடுத்த பிறவியில் ஒரு `சண்டாளனாக’ (தலித்தாக) அல்லது ஒரு பன்றியாக அல்லது ஒரு நாயாக பிறப்பாய் என்கிறது. அதேபோன்று, நீ உன் வர்ணக் கடமைகளைச் செவ்வனே செய்து வந்தால் அடுத்த பிறவியில் அடுத்த உயர் வர்ணமான வைசியனாகவோ அல்லது சத்திரியனாகவோ அல்லது பிராமாணனாகவோ பிறப்பாய் என்கிறது.

இவ்வாறு பிறப்பால் உருவான உன் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்   என்று மனுதர்மம் மிரட்டுகிறது.

அதனால்தான் தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். “கிரீஸில் அடிமை உறவு முறை என்ன செய்ததோ அதையேதான் இந்தியாவில் வருண வேறுபாடு செய்தது. ஆனால் கிரிஸில் நடந்தது பேகால் நேரிடையான அடிமை – அடிமை எஜமான் என்பதற்குப் பதிலாக இந்தியாவில் வருண (சாதி) பிரிவினையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது.’’

“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் வருண (சாதி) முறையைச் சுற்றி மத ரீதியான ஒரு திரையும், வருணம் அல்லது சாதி என்பது கடவுளின் உருவாக்கம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது.’’

“இவைகள் மூலமாக கீழ்சாதிக்காரர்கள் தாங்கள் சுமக்க வேண்டிய அடிமை நுகத்தடியை சந்தோஷமாக சுமக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.’’

பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவற்றில் தீண்டத்தக்கவர் மற்றும் தீண்டத்தகாதவர் என இரு தரப்பிலிருந்தும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதும், அவற்றில் பயணம் செய்ததும் சமூகத்தின் நிலைமைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவர வில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவற்றின் மூலமாக “பிரித்தாளும் சூழ்ச்சி’’யையே அது பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டில் நிலவும் சமூக மற்றும் மத சம்பந்தமான பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என்று அறிவித்தது. ஆயினும் கூட, அந்த சமயத்தில் கல்வி என்பது உயர்சாதியினரின் ஏகபோகமாக இருந்ததால், அதன் செயல்பாடுகள் என்பவை உயர்சாதியினருக்கு உதவிடக்கூடிய வகையிலேயே இருந்தன.

1928 ஜூனில் மாவீரன் பகத்சிங் நடத்தி வந்த `கீர்த்தி’ ஏட்டில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக இரு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

“நம்முடைய நாடு உன்னதமானது என்று பீற்றிக்கொள்கிறோம். ஆனால் இந்த நாட்டில்தான் ஆறு கோடி பேரை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தொட்டாலே உயர்சாதியினர் தீட்டாகிவிடுவார்களாம். அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள் கூட சீற்றமடைந்து விடுவார். இருபதாம் நூற்றாண்டில்கூட இத்தகு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வெட்கக் கேடாகும். நம் நாடு ஓர் உன்னதமான ஆன்மீக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் அனைத்து மக்களும் சமம் என்பதை ஏற்கத் தயங்குகிறோம். அதே சமயத்தில், ஐரோப்பிய கண்டமோ புரட்சி குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளின்போது அவை சமத்துவத்தை பிரகடனம் செய்துவிட்டன. ஆயினும் நாம், தீண்டத்தகாதோர் பூணுhல் அணிந்து கொள்ளலாமா கூடாதா என்றும், அவர்கள் வேதங்களைப் படிக்கலாமா, கூடாதா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது பாகுபாடு காட்டினால் நமக்கு ஆத்திரம் வருகிறது. அவர்கள் நம் நாட்டிலும் இந்தியர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கவில்லை என்று புலம்புகிறோம். இத்தகைய விஷயங்களில் முறையிடுவதற்கு உண்மையிலேயே நமக்கு ஏதாவது உரிமை இருக்கிறதா?’’ என்று பகத்சிங் ஆச்சர்யப்படுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமல்ல, சுதந்திரம் பெற்றபின் கடந்த 67 ஆண்டு காலத்திலும் அதுதான் நிலைமை. தலித்துகளில் வாக்கு வங்கியைப் பெறுவதற்காக மேலெழுந்தவாரியாக சிற்சில சலுகைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டபோதிலும் அவர்களின் வாழ்வில் அடிப்படை மாற்றங்களைச் செய்யக்கூடிய வகையில் எந்தக் கொள்கையையும் ஆட்சியாளர்கள் அமல்படுத்தவில்லை. சாதியப் பிரச்சனையில் அனைத்து முதலாளித்தவக் கட்சிகளின் அணுகுமுறையும் இதுதான்.

“ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெருமுதலாளிகள் இயற்கையாகவே தங்கள் வர்க்க நலன்களைக் காத்திட வேண்டும் என்பதற்காக சமூகத்தில் நிலவிவரும் சாதிய அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்,’’ என்று பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டுகிறார்.

தங்கள் சுரண்டல் அமைப்புமுறையை மிக வலுவான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்காக, சாதீய ரீதியிலான மற்றும் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த அமைப்புகள் அனைத்துமே, நாட்டில் தலித்துகள் நிலைமை என்பது மிக மோசமாக இருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றன. கிராமப்புரங்களில் உள்ள தலித்துகளில் 70 சதவீதத்தினர் நிலம் இல்லாதவர்கள் அல்லது பெயரளவில் சிறிது வைத்திருப்பவர்களாவர். இதுவே அனைத்துப் பாகுபாடுகளுக்கும் ஆணிவேராகும். இவ்வாறான சமூகக் கட்டுமானத்தின் மீதுதான் ஒட்டுமொத்த சமூக சுரண்டல் அமைப்பே கட்டப்பட்டிருக்கிறது.

2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தலித் மக்களில் கிராமப்புரங்களில் 35.4 சதவீதத்தினரும், நகர்ப்புரங்களில் 39 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். கிராமப்புரங்களில் உள்ள தினக் கூலிகளில் 61.4 சதவீதத்தினர் தலித்துகள். இது நகர்ப்புரங்களில் 26 சதவீதமாகும்.

மத்திய அரசுப் பணியிடங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 சதவீதமும், 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் முதல் நிலை (குரூப் `ஏ’)யில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 10.15 சதவீதமே நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் நிலை (குரூப் `பி’) பணியிடங்களில் இது 12.67 சதவீதமாகும். மூன்றாம் நிலை (குரூப் `சி’) பணியிடங்களில் இது 16.15 சதவீதமாகும். நான்காம் நிலை (குரூப் `டி’) பணியிடங்களில் இது 21.26 சதவீதமாகும். பழங்குடியினர் நிலை இன்னும் மோசம். அதாவது, அவர்களின் நிலை முறையே 2.89, 2.68, 5.69 மற்றும் 6.48 சதவீதமாக இருக்கிறது.

2001இல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தலித்துகளில் எழுத்தறிவு விகிதம் 47.1 சதவீதமாகும். இதர பிரிவினரில் 68.8 சதவீதமாகும். பெண்களுக்கிடையில் தலித்துகளில் 41.9 சதவீதத்தினரும், பழங்குடியினரில் 34.8 சதவீதத்தினரும், இதரர்களில் 58.2 சதவீதத்தினரும் எழுத்தறிவுபெற்றிருக்கிறார்கள்.

தலித் பெண்கள் மூன்று விதமானஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள்.தலித்துகள் என்ற முறையிலும், பெண்கள் என்றமுறையிலும் மற்றும் அவர்களில்பெரும்பாலானவர்கள் நாட்கூலிகள் என்றமுறையிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.மிகமோசமான பாலியல் துன்புறுத்தல்கள்,வசவுகள், அவமதிப்புக்கு அவர்கள்ஆளாகிறார்கள். இவர்கள் பிரச்சனைகளைமட்டுமே கையிலெடுத்துப் போராட்டங்களைநடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்.தலித்துகளின் பொருளாதார நிலைமைகள்இவ்வாறிருக்கக்கூடிய அதே சமயத்தில் அவர்கள்மீதான சமூக ஒடுக்குமுறைகள்எவ்வாறிருக்கின்றன? தமிழகத்தில்மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று,தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 40சதவீதத்திற்கும் அதிகமான அளவில்தீண்டாமைக்கொடுமைகள் இன்னமும்நீடிக்கின்றன.1981க்கும் 2000க்கும் இடைப்பட்ட 16ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும்குற்றச்செயல்கள் குறித்து 3 லட்சத்து 57 ஆயிரத்து945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால்இவற்றில் எத்தனையில் குற்றமிழைத்தவர்கள்தண்டிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே,நாட்டில் நிலவும் சமூகக்கொடுமைகளுக்கு எதிராக,

சாதீயப் பாகுபாடுகளால் ஏற்பட்டுள்ளசமத்துவமின்மைக்கு எதிராக, சமூகசீர்திருத்தவாதிகள், சாதி எதிர்ப்புப் போராளிகள்பலர் தோன்றியிருக்கின்றனர். தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர், ஜோதிபாய்புலே,ஸ்ரீநாராயணகுரு என் எண்ணற்றவர்கள் தங்கள்வாழ்நாள் முழுதும் இதற்காகப்போராடியிருக்கின்றனர். ஆயினும் கூட, நாட்டில்தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும்ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றனஎன்பதும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூகஅந்தஸ்து இன்னமும் அடித்தட்டிலேயேஇருக்கின்றன என்பதுமே இன்றைய நிலையாகும்.எனவே, இதனை ஒழித்திட வேண்டுமானால் நாம்மேற்கொள்ளும் போராட்டங்கள் சாதியஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை ஆகியஇரண்டுக்கும் எதிரான போராட்டங்கள்இணைக்கப்பட வேண்டும்.‘‘வெகுஜன ஸ்தாபனங்கள், தங்கள்பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும்அதே சமயத்தில் தீண்டத்தகாதவர்கள்,பழங்குடியினர், மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர்ஆகியோரின் பிரச்சனைகள் மீதும் தனிக் கவனம்செலுத்தி, அவற்றையும் தங்கள்கோரிக்கைகளுடன் இணைத்துக்கொண்டுபோராட்ட வடிவங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டஉழைக்கும் வர்க்கத்தின் மகத்தான படை மூலமாக,சாதிய பாகுபாட்டின் அடித்தளத்தை அடித்துநொறுக்கி, தீண்டத்தகாதவர்களின்அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,விவசாயப் புரட்சியை தீர்மானகரமான முறையில்முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயக சக்திகளுக்கு அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிதிறந்திடும், அனைத்து உற்பத்திச் சாதனங்களின்சோசலிசமயமாக்கத்தின் அடிப்படையில் மிகவேகமான முறையில் தொழில்மயம் ஏற்பட்டு,சாதியற்ற வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிமுன்னேற முடியும்’’ என்று தோழர் பி.டி.ஆர்.தன்னுடைய வர்க்கம், சாதி மற்றும் சொத்துஎன்னும் நூலில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வர்க்கப் போராட்டத்தை இருமுனைகளில் நாம் நடத்திட வேண்டியுள்ளது.ஒன்று சமூக சுரண்டலுக்கு எதிராக, மற்றொன்றுபொருளாதார சுரண்டலுக்கு எதிராக. வர்க்கப்போராட்டத்தை இவ்வாறு இரு கால்களின்மூலமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும்.ஏதாவது ஒரு காலை மட்டும்தான் எடுத்துவைப்போம் என்றால், போராட்டம் நொண்டவே செய்திடும். அதனை வீர்யத்துடன் முன்னெடுத்துச்செல்வது என்பது சாத்தியமில்லை. வரவிருக்கும்காலங்களில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் இரு கால்களில் நின்று போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று, மாபெரும் வெற்றிகளை எய்திடுவோம்.