பெரியாரின் பார்வையில் பகத்சிங்!

பேராசிரியர் இர்பான் ஹபீப்

தமிழாக்கம் – மல்லிகார்ஜூன்.எஸ்

நன்றி: தி இந்து நாளிதழ்

பெரியாருக்கு பகத்சிங் கடவுள் மற்றும் கடவுளின் அருளாட்சி என்பதில் நம்பிக்கை கொண்டவரல்ல என்றும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்றும் தெரியும். 1929 ஏப்ரல் 9 ஆம் தேதி பகத்சிங் தேசிய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையிலிருந்து அவர் ஒரு தேசிய மாவீரனாக கருதப்பட்டார். அதுவரைக்கும் அவர் நவ்ஜவான் பாரத் சபாவின் ஒரு சிந்தனா சக்தி படைத்த வாலிபன் என்றே அவரைச் சுற்றியிருந்த பஞ்சாப் வாலிபர்கள் நினைத்தனர். மேலும் பகத்சிங் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இயக்கத்தின் மிகப் பெரும் தத்துவவாதியாகவும் – தலைமறைவு இயக்கத்தின் மத்தியில் அவர் ஒரு புரட்சிவாதியாகவும் எண்ணப்பட்டார்.

ஏப்ரல் 9ம் தேதிய அவரது துணிச்சல்மிக்க நடவடிக்கை அவரை ஒரு தேசிய புகழ் மிக்கவராக அறிமுகப்படுத்தியது. மேலும் முன்பே திட்டமிட்டபடி பகத்சிங் மேற்படி வழக்குமன்ற மேடையை தனது சக இந்திய மக்களுக்கு தனது புரட்சிகரமான தத்துவங்களையும், திட்டங்களையும் முன்னறிவிக்கும் மேடையாக பயன்படுத்தினார். இதன் மூலம் இந்துஸ்தான் சோசலிஸ்ட் புரட்சிகர ஸ்தாபனத்தின் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் மத்தியில் முன்வைத்தார். அவர் சிறையிலிருந்து எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் வெளியே கொண்டு வந்து தேசிய அச்சகங்களின் மூலம் பிரசுரிக்கப்பட்டன.

1931 மார்ச் 23-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து கண்டன குரல்கள் காட்டுத் தீ போல் இந்தியாவெங்கும் உக்கிரமாக வீசின. மேலும் அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் எடுத்துச் சொன்ன அரசியல் கொள்கைகளுக்கு பரவலான ஆதரவும் கிடைத்தது.

எங்கோ தொலை தூரத்திலிருந்து வெளிவரும் குடியரசு என்ற தமிழ் வார இதழில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அச்செயலுக்கு தெளிவான ஆனால் கடுமையான முறையில் எதிர்க்கருத்து வெளியானது. பெரியார் மார்ச் 29, 1931 இதழில் ஒரு தலையங்கம் தீட்டினார். மேற்படி தலையங்கத்தில் காங்கிரசும், காந்தியாரும் பகத்சிங்கை சாவிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை கடுமையாக விமர்சித்திருந்தார். பகுத்தறிவு கொள்கையினை ஏற்றுக் கொண்டிருக்கிற, சாதிய ஒடுக்குமுறையினை எதிர்த்துப் போராடுகிற இளைஞர் பகத்சிங்கை தன் உற்றத் தோழனாக பெரியார் பார்த்தார். அவர் தனது தலையங்கத்தை எழுதத் துவங்கும்போதே தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதவர் எவருமில்லை; அவரை தூக்கிலிட்ட அரசாங்கத்தின் செயலை கண்டிக்காதவர் எவரும் இல்லை என்று குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைகள் பரவலாக அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தினை பிரதிபலித்தது.

பகத்சிங், மிகக் குறுகிய கால அரசியல் வாழ்க்கையிலேயே, பஞ்சாபையும் கடந்து ஒரு தேசிய வீரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பது தான் அது. படிப்பாளிகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து கொடுத்த விளக்கங்களின் வழியாகத்தான் இந்த மனிதனின் ஆளுமை உருவாக்கப்பட்டது என்று நம்புவதற்கு இடமில்லை. பகத்சிங்கின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் பெரியார் மேலும் எழுதுகிறார், தான் மேற்கொண்ட கொள்கைகள் சரியானவைதான் என்ற உறுதியான மற்றும் உண்மையான முடிவுக்கும், தான் பயன்படுத்திய செயல்முறைகள் நியாயமானவைகள் தான் என்ற முடிவுக்கும் பகத்சிங் வருவாரேயானால், அவர் அப்படித்தான், அந்த முறைப்படித்தான் செயல்பட்டிருக்க முடியும்….

இந்தியாவிற்கு பகத்சிங்கின் கொள்கை தேவைப்படுகிறது என்பது தான் எங்களின் அசைக்க முடியாத கருத்தாகும். பகத்சிங்கின் கொள்கைகள் சோஷலிசம் மற்றும் கம்யூனிச அமைப்பை பிரதிபலிப்பவை என்று பெரியார் தெளிவாக உணர்ந்திருந்தார்; அதற்கு ஆதாரமாக பஞ்சாப் ஆளுநருக்கு பகத்சிங் எழுதிய கடிதத்திலிருந்து இரண்டு வரிகளை மேற்கோள் காட்டுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வரும் வரையிலும், மக்கள் ஏற்றத் தாழ்வான வாழ்க்கையினை வாழும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும். எங்களை கொன்று குவித்து அதை முடிவுக்கு கொண்டு வர முடியாது: வெளிப்படையாகவும் ரகசியமாகவும் அது தொடரும்.

பகத்சிங்கின் வழக்கு விசாரணையினையும் அவர் விடுத்த அறிக்கைகளையும் மிகவும் கூர்மையாக கவனித்து வந்த இந்திய மக்களில் ஒருவராக பெரியாரும் இருந்தார். 1929ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதியிட்ட பகத்சிங்கின் மிகவும் பிரபலமான அறிக்கையில் அவர் கூறியது, நேரத்தில் காப்பாற்றாவிட்டால், இந்த நாகரீகம் அதன் அடித்தளத்தோடு நொறுங்கிப் போய்விடும். அடிப்படை மாற்றம் தேவை. இதை உணர்ந்து கொள்பவர்களுக்கு இந்த சமூகத்தினை சோஷலிச அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கடமை உள்ளது. இது செயல்படுத்தப்படாத வரை, மனிதனை மனிதன் சுரண்டுவதும், நாடுகளை நாடுகள் சுரண்டுவதும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரை, மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் துன்ப துயரங்களையும் வெறியாட்டங்களையும் தடுத்து நிறுத்த முடியாது.

தந்தை பெரியார் அவர்கள் இந்த கருத்துக்களால் கவரப்பட்டு 1930ம் ஆண்டுகளில் தந்தை பெரியார் அவர்கள் தொழிலாளர்களையும் – விவசாயத் தொழிலாளர்களையும் ஸ்தாபனமாக அமைத்து பெருமுதலாளிகளையும் – நிலப்பிரபுக்களையும் எதிர்த்து போராட வழிகாட்டினார். இந்தப் போராட்டங்களினால் கோபமுற்ற காலனியாதிக்க அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதோடு ஒத்தக் கருத்துள்ள இதர ஸ்தாபனங்களையும் தடை செய்தது.

தந்தை பெரியார் தனது தலையங்கத்தில் பகத்சிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். சாதாரண ஆன்மீக கருத்துக்களின்பால் கவரப்பட்டவரும் அல்ல. ஆனால் அவர் ஒரு தன்னம்பிக்கை உள்ள மனிதன் என எழுதினார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற தனது புகழ் பெற்ற புத்தகத்தில் இது பற்றிய முழுமையான விஷயங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகம் முழுவதும் தனது சிறை வாழ்க்கையின் போதே அவர் எழுதி முடித்தார். இது ரகசியமாக வெளிக்கொணரப்பட்டு தேசப் பற்றுக் கொண்ட தேசிய பத்திரிக்கையான மக்கள் மூலம் வெளியிட்டது.

பகத்சிங் கண்மூடித்தனமான நம்பிக்கையினை கடுமையாக எதிர்த்தார்; பகுத்தறிவினை உணர்வோடு பற்றி நின்றார். தங்கள் சொந்த நலன்களுக்காக மக்களை கடவுள் பற்றிய அச்சத்தில் தொடர்ந்து வைப்பதற்கு சுரண்டல்காரர்கள் கையில் இருக்கும் ஒரு கருவிதான் மதம் என்று அவர் புரிந்து கொண்டிருந்தார்.

இந்துஸ்தான் சோஷலிச குடியரசுப்படையின் (பகத்சிங் செயல்பட்ட அமைப்பு) புரட்சியாளர்கள் ஒன்றை நன்றாக உணர்ந்திருந்தனர். அனைத்து மதங்களும் தார்மீக ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகளும் பசித்த மனிதனுக்கு பயனற்றவை, உணவுதான் அவனுக்கு கடவுள் என உணர்ந்திருந்தனர். பெரியார் எழுதிய தலையங்கம் அது தான் சரியானது என்று விளக்கியது. அவர் எழுதுகிறார், அம்மாதிரியான கருத்தை ஏற்றுக் கொள்வது என்பது சட்டத்தின் படி குற்றமாகக் கருத முடியாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று கருதப்பட்டாலும் கூட, அதற்காக யாரும் அஞ்ச வேண்டியதில்லை; ஏனெனில் பகத்சிங் உயர்த்திப் பிடித்த அந்தக் கொள்கைகள் யாருக்கும் எந்த தீங்கினையும் இழைக்காது, மக்களுக்கு எந்த இடிப்பினையும் கொடுக்காது. அக்கொள்கைகளை செயல்படுத்த நாம் முயற்சி செய்கிறோம்.

பகத்சிங் வகுப்புவாத மற்றும் பிரிவனை அரசியலுக்கு மட்டும் எதிராக நிற்கவில்லை. அவர் இந்திய சாதி அடிப்படையை அறவே வெறுத்து எள்ளி நகையாடினார். இது குறிப்பிட்ட சாதியில் பிறந்த மக்களை பிறப்பின் அடிப்படையில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியது. எனவே அவர், ஒரு பலம் வாய்ந்த தேசத்தை உருவாக்க வேண்டுமானால் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியான சுரண்டல் அனைத்தும் ஒழித்துக் கட்டவேண்டுமென தனது எழுத்துக்களிலும், பேச்சிலும் தொடர்ந்து வலியுறுத்தினார். தந்தை பெரியாரும் தனது தலையங்கத்தில் இதனை எதிரொலிக்கும் வகையில் தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் முதலில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற இந்த முறைக்கு முடிவு கட்டியாக வேண்டும். அதே ரீதியில் நாம் வறுமையை ஒழித்துக் கட்ட முதலாளிகள் கூலி உழைப்பாளிகள் என்ற முறை அகற்றப்பட வேண்டும். எனவே சோசலிசம், கம்யூனிசம் என்பது அந்த கொள்கை அமைப்பு முறைகளை ஒழித்துக் கட்டுவது தான் அந்த கொள்கைகளுக்காகவே பகத்சிங் தொடர்ந்து போராடினார்.  என்று எழுதினார்.

தந்தை பெரியார் தனது தலையங்கத்தில் முடிக்கின்றபொழுது முத்தாய்ப்பாக பகத்சிங் சாதாரண மனிதனுக்கு நிகழும் மரணத்தைப் போன்று நோயில் விழுந்து இறக்கவில்லை. தன்னுடைய விலைமதிப்பற்ற வாழ்வை தனது உயர்ந்த லட்சியங்களுக்காக இந்தியாவையும், உலகத்தையும் உண்மையான சமத்துவப் பாதையில் அழைத்துச் செல்வதற்காகவும், அமைதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தது என்பது அவரை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது. மற்ற எவரும் செய்ய முடியாத ஒரு சாதனையை நிறைவேற்றினார்.

பகத்சிங்கின் லட்சியமும், அவரது ஈடு இணையற்ற தியாகமும், போராடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகமூட்டுபவையாக இருக்கிறது. மறைந்த சேகுவேரா போல பகத்சிங் தொடர்ந்து மதச்சார்பற்ற சோஷலிச சமூக நோக்கங்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட, சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை நிராகரிக்கிற கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமூட்டுவார்.