இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)

(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வகுப்புவாத மோதல்கள்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத மோதல்களால் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அது அவநம்பிக்கை தரக்கூடிய ஒரு அம்சம்தான். என்றாலும் கூட, ஒரு மக்கள் கட்சி அதற்குத் தீர்வு காணும். உயர் வர்க்கங்கள் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடும் அதே நேரத்தில், இந்து-முஸ்லீம் ஆகிய இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்களிடையே மிக முக்கியமானதொரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. அதுவே சுரண்டல். இந்து-முஸ்லீம் தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலை கூரையின் கீழ் வேர்வை சிந்தப் பாடுபடுகின்றனர். இந்து –முஸ்லீம் விவசாயிகள் கொளுத்தும் வெய்யிலில் நிலத்தில் பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் இந்த இரு பிரிவினருமே சமமான அளவில் நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாலும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவரது முதலாளி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒரு முஸ்லீம் தொழிலாளிக்கு நல்ல ஊதியம் வழங்குவதில்லை. அதைப் போலவே,  ஓர் இந்து நிலப்பிரபு முஸ்லீம் குத்தகை விவசாயியை விட குறைவான குத்தகையை இந்து விவசாயியிடம் இருந்து பெறுவதில்லை. (குட்டி அறிவுஜீவிகள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுரண்டலுக்கு ஆளாகும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே விதி பொருந்தும்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம்பேர் சுரண்டல் என்ற ஒற்றைச் சரடால் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய வகுப்புவாத மோதல்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. பொருளாதார நலன்களைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்;  பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட துணிவுமிக்க ஒரு தலைமையை அவர்களுக்கு வழங்குங்கள். அப்போது இத்தகைய வகுப்புவாத மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சதிகாரக் கொள்கையின் அடித்தளம் உடைத்தெறியப்படும். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பது உண்மையே. எனினும், தேசியவாத இயக்கத்திற்குள் புகுந்து அதன் உயிரோட்டமான உறுப்புகளை அரித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு இதைத் தவிர வேறெந்த மருந்தும் இல்லை.

தேசியவாத இயக்கத்தின் சரிவுதான் வகுப்புவாத மோதலுக்கான உந்துதலை அளித்திருக்கிறது. தீவிரமான வெகுஜன நடவடிக்கை என்ற திட்டத்துடன் தேசியவாத இயக்கத்தை சீரமைத்தோம் எனில், அதுவே இத்தகைய உந்துதலை அப்புறப்படுத்தி விடும். அரசியல் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் கிளர்ச்சியும் மதவாத வெறித்தனத்தை விரைவுபடுத்தியுள்ளன. தேசியவாத இயக்கத்தை உறுதியானதொரு மதசார்பற்ற அடித்தளத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் இந்த மாபெரும் தவறினை திருத்திக் கொள்ள வேண்டும். உடனடி பொருளாதார கோரிக்கைகளுக்கான முழக்கங்களுடன், தேசியவாதம் என்ற பதாகையின்கீழ், பெருந்திரளான மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நிலக் குத்தகை, நில வாடகை, கந்துவட்டிக்காரர்களின் கொடும் வட்டி, விலைவாசி, ஊதியம், வேலைநிலைமைகள், தொடக்கக் கல்வி ஆகியவையே கிளர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மிகப் பெருமளவிற்குப் பாதிக்கின்ற இந்த ஒவ்வொரு அம்சத்தின் மீதும், அதன் வழியாகப் பெறவிருக்கும் நலனுக்கான அடையாளத்தை மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நம்மால் உணர்த்தவும் முடியும். எனவே, இவ்வகையிலான கிளர்ச்சியானது தேசிய இயக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் வகுப்புவாத நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கும்.

எனினும் ஜனநாயகரீதியான குறிக்கோள்கள் தேசிய சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை ஒரு வரலாற்றுரீதியான பின்னணியைக் கொண்டதாகும். எனவே, இந்த வகுப்புவாதப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் என்றதொரு பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும். தேசிய சிறுபான்மையினரின் நலன்கள் தேசியவாத மேடையின் முக்கியமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பினை தேசியவாத இயக்கம் தரத் தவறுமானால், அதைத் தருவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் நாடு முழுவதிலும் நேர்க்கோடாக ஒரு பிளவை ஏற்படுத்தும் வசதியும் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலமான இந்து தேசியத் தலைவர்களின் நடத்தையும் அறிவிப்புகளும் முஸ்லீம்களிடையே சந்தேகம் எழுவதற்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. மறுபுறத்தில், முஸ்லீம் தலைவர்களில் ஒரு பிரிவினரின் தாய்நாட்டை மீறிய தேசப் பற்று என்பது இந்து பிற்போக்குவாதிகளின் ஊறுவிளைவிக்கும் பிரச்சாரத்திற்குத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே அதீதமான போக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான நிச்சயமான காப்புறுதி என்பது பெருந்திரளான மக்களை அவர்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதே ஆகும். இந்த வர்க்க ரீதியான எல்லைகள் வகுப்புவாத அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மேலெழுந்தவாரியான பிரிவினைகளை மிக ஆழமாகவே தாண்டிச் செல்வதாக அமைகின்றன.

தேசிய நலனும் வர்க்க நலனும்

தொடர்ந்து வெடித்து வரும் வகுப்புவாத மோதல்கள் தேசிய இயக்கத்திற்கு பெருமளவிற்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. எனினும் இந்த இயக்கத்தின் இப்போதைய சீரழிவு தேசியவாத அணிகளுக்கு உள்ளே வர்க்க நலன்களின் அடிப்படையில் உருவாகும் மோதல்களின் காரணமாகவே உருவானதாகும். வேறெந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சமூகத்தைப் போலவே இந்திய சமூகமும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உறவு என்பது ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இந்த நாடு அந்நிய சக்தி ஒன்றினால் ஒடுக்கப்படுகிறது; சுரண்டப்படுகிறது. எனினும் இந்த ஒடுக்குமுறையின் அழுத்தமானது இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினரின் மீதும் சமமாக விழுவதில்லை. அதன் குறிக்கோள் என்பது அனைத்து மக்களையும் சுரண்ட வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தச் சுரண்டல் தங்கள் உழைக்கும் சக்தியைக் கொண்டு செல்வத்தை உருவாக்கும் வர்க்கங்களின் மீது மட்டுமே விழுகிறது. நாட்டின் 98 சதவீதம் பேராக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளுமே உள்ளனர். இந்திய சமூகத்தின் உயர் வர்க்கத்தினருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சச்சரவு என்பது அடிக்கும் கொள்ளையை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில்தான்.

உள்ளூரில் உள்ள நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகக் கொள்கையானது தங்குதடையற்ற பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் தங்கள் திறனை அவர்களால் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்திய தொழிலாளிகளும் விவசாயிகளும் உற்பத்தி செய்கின்ற மதிப்பில் பெரும்பகுதி ஏகாதிபத்தியத்தின் சட்டைப் பைகளை மேலும் ஊதிப் பெரிதாக்குகிறது. இந்திய முதலாளிகள் பெயரளவிற்கு இடைத்தரகருக்கான பங்கைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் கொள்ளையில் கிடைக்கும் இந்தச் சிறிய பங்கைக் கண்டு அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இறுதியில், இந்திய மக்களின் உழைப்புச் சக்தியின் ஆதாரம் முழுவதன் மீதான முன்னுரிமையை, அதிகரித்துக் கொண்டே போகும் பங்கைத்தான் அவர்கள் கோருகின்றனர்.

எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகத்திற்கு சவால் விடாமல் நாட்டை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை இந்திய முதலாளிகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. மேலும் இதை அவர்களால் தானாகவே செய்துவிடவும் முடியாது. அனைத்து மக்களின் புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக அல்லாமல் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டுவிட முடியாது. எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுமக்களின் எழுச்சி என்பது தேசிய முதலாளிகளின் மனக்குறைகளால் உருவானது. அதற்கேயுரிய காரணங்கள் அந்த எழுச்சிக்கு உண்டு. பெருந்திரளான மக்கள் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். அதன் காரணமாகவே, நாட்டின் ஒரே எஜமானனாக, ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிற தேசிய முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்தியத்திற்கு மிக மோசமான அச்சுறுத்தலை தரக்கூடிய வலிமை வாய்ந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிவதில்லை. இவ்வகையில் தேசிய நலன்கள் – அதாவது 98 சதவீதம் பேரின் நலன்கள் – வர்க்க நலன்களுக்காக பலி கொடுக்கப்படுகின்றன. நாட்டின் மீதான முழுமையான ஆளுமையை பெறுவதற்கான அதன் முயற்சி, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ற நிலையில் தேசிய முதலாளிகள் கூட்டாகச் சேர்ந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டதொரு உள்நாட்டு அம்சத்தின் உதவியின்றி எந்தவொரு அந்நிய சக்தியுமே ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. நிலையானதொரு அரசுக்கு ஒரு சமூக அடிப்படை இருக்க வேண்டும். (முதல்) உலகப் போர் வரையிலான காலத்தில் இரண்டு வகையான சமூக அம்சங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்து வந்தன. அவையே நிலப்பிரபுத்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஆகும். இந்த இரண்டு பிரிவினருமே மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர். இவ்வகையில் ஏகாதிபத்தியத்திற்கு உறுதியானதொரு அடித்தளம் இருந்தது.

எனினும் இந்த இரு சமூக சக்திகளுமே ஒரே மாதிரியான வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சாதகமான, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வந்த அதே நேரத்தில், விவசாயிகள் அவர்களது செயலூக்கமற்ற விசுவாசத்தின் காரணமாக உணர்வுபூர்வமற்ற ஆதரவை வழங்கி வந்தனர். உலகப் போருக்குப் பின்பு நிலைமை மாறிவிட்டது. விவசாயிகளின் செயலூக்கமற்ற விசுவாசம் சீர்குலைந்தது. அதற்குப் பதிலாக அவர்களின் கோபக் கனல் மிக்க கொந்தளிப்பு அவ்வப்போது எழத் தொடங்கியது. இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இப்போது மிக மோசமான வகையில் கலகலக்கத் தொடங்கியது. அதனை சமப்படுத்துவதற்கு புதியதொரு கூட்டாளியை அது கண்டெடுக்க வேண்டியதாயிற்று.

அந்தப் புதிய கூட்டாளிதான் (வங்கியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் இந்த வர்க்கத்தினரோடு நெருங்கிய தொடர்புடைய தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய) தேசிய முதலாளி வர்க்கம் ஆகும். உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் தேசிய இயக்கம் ஒரு புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதன் மோசமான விளைவுகளைக் கண்டு தேசிய முதலாளிகள் அஞ்சினர். பாதுகாப்பானதொரு வழியில் பயணம் செய்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். இவ்வகையில் இந்திய மக்களை சுரண்டுவதில் ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கட்சி மாறல் தேசிய இயக்கத்திலும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. சமரசமும் சரணாகதியுமே கொள்கையாக மாறின. வர்க்க நலன்கள் என்ற பலிபீடத்தில் மக்களை பலி கொடுப்பது என்பது 1922ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக நடைபெற்று வருகிறது. கூடவிருக்கின்ற புதிய சட்டமன்றமும் கவுன்சிலும் இதன் இறுதிக் கட்டமாக அமைகிறது. அது எத்தகைய வடிவத்தை மேற்கொள்ள இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆனால் அடிப்படையில் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான எதிர்ப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, ‘நாகரீகமாகவோ’ அல்லது ‘பதில் நடவடிக்கையாகவோ’ பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் இடையிலான பகைமையின் சமரசம் ஒரு தேசியப் புரட்சிக்கான அடிப்படைக் காரணத்தை அகற்றிவிடாது. இந்திய மக்களுக்கு விடுதலையின் அவசியம் தேசியவாத முதலாளித்துவ பிரிவின் நலன்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்திய மக்களை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவிப்பதில்லை. கிட்டத்தட்ட 98 சதவீத மக்கள் இன்னமும் அரசியல் உரிமைகள் இல்லாமல்தான் உள்ளனர். ஏகாதிபத்தியம் தனது பங்கைக் குறைத்துக் கொள்வதன்மூலம் உள்நாட்டு முதலாளித்துவத்திற்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவதில்லை. மாறாக, உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்காக செய்யும் உற்பத்திக்கும் மேலாக உள்நாட்டு முதலாளித்துவத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அதன்மூலம் உழைக்கும் மக்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில், தேசிய விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமாகும். தேசியவாத இயக்கம் என்பது பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய வெகுஜன இயக்கமாக இருக்கவேண்டும். இயக்கத்தின் வேலைத்திட்டம் சுயராஜ்யத் திட்டத்தில் இருந்ததைப் போன்ற குழப்பம் மற்றும் தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயப் பிரச்சினையில் தேசியவாத இயக்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கவேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயிகள். இந்திய சமூகத்தின் தற்போதைய நிலையில் இது மிக முக்கியமான பொருளாதார காரணியாகும். தேசிய விடுதலைக்கான இயக்கத்தில் அது உறுதியான பங்கை வகிக்கும். விவசாயிகளுக்கான போராட்டம் என்பது தேசியவாத இயக்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற ஏகாதிபத்தியம் சாமர்த்தியமாக முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பல மாகாணங்களில் நில உரிமையாளர் வர்க்கத்தின்மீது குத்தகை சீர்திருத்தச் சட்டங்களை அது கட்டாயப்படுத்தியுள்ளது. இது 1919-21இல் கடுமையான விவசாயக் குழப்பங்களால் உருவான ஆபத்தான சூழ்நிலையை கையில் எடுக்க உதவியது. விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, விவசாயத்திற்கான அரச ஆணையம் இருந்தது. இந்த நகர்வுகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உள்நோக்கம் விவசாயிகளுக்கு உதவுவது அல்ல; மாறாக அவர்களை ஏமாற்றுவதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்து ஏகாதிபத்தியம் எடுத்துச் செல்லும் இலாபத்தின் முக்கிய ஆதாரமாக விவசாயிகள் மீதான மிருகத்தனமான  சுரண்டல் அமைகிறது. ஏகாதிபத்தியத்தின் மோசமான திட்டங்களை முறியடிக்கவும், விவசாயிகளின் நம்பிக்கையை மீளப் பெறவும் தேசியவாத இயக்கம் ஒரு தீவிரமான விவசாயத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

1923 தேர்தலுக்கு முன்னதாக சுயராஜ்ய கட்சி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“குத்தகைதாரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நிற்கிறது என்பது உண்மைதான்; எனினும் அது நிலஉரிமையாளருக்கு ஏதேனும் அநீதி விளைவிப்பதாக இருந்தால், அந்த நீதியின் தரம் மோசமாக இருக்கும்.”

தேசியவாத இயக்கம் விவசாயிகளின் தீவிர ஆதரவைப் பெற விரும்பினால், இந்த மேற்கோளில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நிலவுடைமை பெற்றவர்களின் வாக்குக்காக மீன்பிடிக்கும் கட்சிக்கு இத்தகைய வேலைத்திட்டம் அவசியம்; ஆனால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களை வழிநடத்த முன்மொழியும் ஒரு கட்சிக்கு இது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். நிலவுடைமையாளர்களின் சலுகைகள் நிரம்பிய நிலையைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால், விவசாயிகளுக்கு அநீதியை மட்டுமே இழைக்க முடியும். நிலவுடைமை வர்க்கம் என்பது விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சமூக ஒட்டுண்ணி. மேலும், கிட்டத்தட்ட நாட்டில் பாதியில் உள்ள நிலங்களுக்கு அரசாங்கமே நிலப்பிரபுவாக உள்ளது. நீதியின் சாரம் அங்கேயும் பொருந்துவதாக வேண்டும். எனவே, விவசாயிகளைப் பற்றிய சுயராஜ்யத் திட்டம் ஒட்டுண்ணி நிலஉரிமையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. தேசியவாத இயக்கத்தின் விவசாய வேலைத்திட்டம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். விவசாயிகளைச் சுரண்டும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முகவர்களுக்கு எதிராக இரக்கமின்றி அது இயங்க வேண்டும்.

தேசியவாத இயக்கத்தின் திட்டம்

தேசிய விடுதலைக்கான இயக்கம் ஒரு மக்கள் கட்சியால் மட்டுமே தலைமை தாங்கப்பட்டு வெற்றிபெற முடியும். தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி செயல்படும் ஒரு கட்சியால் அது வழிநடத்தப்படாவிட்டால், தேசிய விடுதலை இயக்கம் ஒரு சுக்கான் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கும். தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை பல ஆண்டுகளாகவே இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயராஜ்யம் என்பது தேசவிடுதலை என்பதைத் தவிர மற்ற எல்லாமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தேசத்தின் விடுதலையைப் பெறவேண்டும் என்பதாக இல்லாமல் இருக்குமானால், அத்தகைய தேசிய இயக்கம் அதன் உண்மையான பொருளை இழந்துவிடும். இதற்கு சட்டபூர்வமான அல்லது அரசியல்சட்ட ரீதியான விளக்கம் எதுவும் தேவைப்படாது.

இதன் பொருள் என்னவெனில், தனக்கே உரிய அரசாங்கத்தை நிறுவவும், அரசியல்ரீதியான, பொருளாதாரரீதியான, கலாச்சார ரீதியான என்பது போன்ற தனது காரியங்களை தானே பார்த்துக் கொள்ளவும் ஆன சுதந்திரம் என்பதே ஆகும். தேசியவாத வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படையான அம்சம் இதுவரை தெள்ளத்தெளிவாக நாட்டின்முன் வைக்கப்படவில்லை. தேசியவாத இயக்கத்தை மறுசீரமைப்பதற்கான முதல் செயலாக இது செய்யப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளின்கீழ் தேசியவாதிகள் பதவி ஏற்க வேண்டும் என்ற சர்ச்சையானது இந்த முக்கிய பிரச்சினையை குழப்பிவிடக் கூடாது. இன்று இருக்கும் அனைத்து தேசியவாத கட்சிகளும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அந்தஸ்து என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளன. அதையும்கூட உடனடியாகத் தரவேண்டும் என்றுகூட அவை கோரவில்லை. தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவம்அற்ற சட்டமன்றத்திற்கு ஓரளவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தீவிரமான சில பிரிவினரை திருப்திப்படுத்துவதாகவும்கூட இருக்கக்கூடும். இது தேசவிடுதலைக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது ஒரு கேலிக்கூத்தே ஆகும். அப்பட்டமான தேசத்துரோகம் என்றுகூடக் கூறலாம்.

மக்களுக்கு முழுமையான சுதந்திரம், அதுவும் நிபந்தனையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தைக் கோருவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் என ஒரு மக்கள் கட்சி இருக்க வேண்டும்.

மேம்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு குடியரசு வகைப்பட்ட அரசை நிறுவுவது என்பதே தேசவிடுதலையின் உறுதியான வடிவமாகும்.

வயதுவந்தோர் அனைவரின் (ஆண் – பெண் உள்ளிட்டு) வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய சட்டமன்றம் மக்களின் உயர்ந்தபட்ச அமைப்பாக இருக்கும்; சாதி, வர்க்கரீதியான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். நாடு முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தப்படும்.

இந்த தேசிய விடுதலையானது மக்களுக்கு மேலும் உறுதியான வசதிகளைத் தருவதாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் உடனடியான பொருளாதாரக் குறைகளை நீக்குவதாக, உயர்ந்ததொரு வாழ்க்கைத்தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும். தேசவிடுதலையானது கீழ்க்கண்ட குறிக்கோளை நிறுவுவதாக அமைய வேண்டும்: நிலம் என்பது உழவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழும் ஒட்டுண்ணி வர்க்கங்கள் தங்கள் நலன்களை இழக்க நேரிடும். நிலவுடைமை வர்க்கத்தின் பாக்கெட்டுகளை வீங்கவைத்துக் கொண்டிருந்த பெரும்தொகைகள் இப்போது விவசாயிகளை, அவர்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதாக இருக்கும். நிலவாடகையானது அனைத்துவகையிலும் குறைக்கப்படும். பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத நிலங்களை வைத்துக்கொண்டு பரிதாபகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஏழை விவசாயிகளுக்கு நிலவாடகையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். கடன் கொடுப்பவர்களின் அத்துமீறலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேசிய அரசாங்கம் விரிவான விவசாயக் கடன்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும். விவசாயத்தில் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இலவச ஆரம்பக்கல்வி மூலமாகவும் விவசாயிகளின் கலாச்சார நிலை உயர்த்தப்படும்.

தேசிய அரசாங்கம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். நாகரீகமான வேலைநிலைமைகள் மற்றும் வீட்டுவசதி குறித்து சட்டம் இயற்றப்படும். வேலையில்லாத தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்.

ரயில்வே, நீர்வழிகள், தந்தி போன்ற பொதுப்பயன்பாடுகள் தேசத்தின் சொத்தாக இருக்கும். அவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே இயக்கப்படும்.

தொழிலாளர்கள் (விவசாயிகளும்) ஒன்றிணைவதற்கான முழு சுதந்திரமும், தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக வேலைநிறுத்த உரிமையையும் பெறுவார்கள்.

மதம் மற்றும் வழிபாடுகளில் முழுமையான சுதந்திரம் இருக்கும். தேசிய இன மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினர் சுயாட்சி உரிமையை அனுபவிப்பார்கள்.

பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து, தவிர்க்கமுடியாத வகையில் அவர்களை செயலில் ஈடுபடுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவை. (முதலாளித்துவ மற்றும் நிலஉடைமை வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல்) என்ற முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் துரோகத்தையும் தயக்கத்தையும் பொருட்படுத்தாமல் நாடு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலையை நோக்கி நகர வேண்டும். பாசாங்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து தேசிய காங்கிரஸ் விடுவிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நேர்மையாகவும் தைரியமாகவும் போராடத் தயாராக இருப்பவர்களே மக்களின் குரலை எதிரொலிக்கும் பேச்சாளர்களாக மாறவேண்டும். தேசவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் கட்சி, வாக்காளர்களில் சில அதிர்ஷ்டசாலிகளை அல்ல; வாக்குரிமையற்ற பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கட்சியாக மாற வேண்டும். தற்போது கவுன்சிலின் மாமன்றம் மக்கள் கட்சியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவே விழைகிறது. அது மேலும் பரந்த செயல்பாட்டுக் களங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தேசிய விடுதலை, அனைத்து வகையிலும் தேசிய வாழ்க்கையை முழுமையாக ஜனநாயகப்படுத்துவது – இதுதான் தேசியவாத மேடையின் அடிப்படையான தூண்கள். இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான போர் முழக்கம் இதுதான்: ”நிலம்- உணவு- கல்வி.”

தமிழில் : வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) , Download தொகுதி 36, இதழ் 3-4, ஜூலை-டிசம்பர் 2021 இல் வெளியானது. (சுருக்கப்பட்டது)

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை

விஜூ கிருஷ்ணன்

இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம்.

புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. விடுதலை ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து இந்தியாவை முழுமையாக விடு விக்கவில்லை. நிலப்பிரபுத்துவத் தில் இருந்து முதலாளித்துவத்திற்கான பயணத்தையும் நிறைவு செய்யவில்லை.

விடுதலைக்குப்பின் இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்கி உற்பத்தி சக்தி களை கட்டவிழ்த்து விடுவதற்கு பதில் அவர்கள் ஒருபுறம் அரை நிலப்பிரபுத்துவ நில உடைமையாளர்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதற்கான கொள்கைகளை பின்பற்றினர். மறுபுறம், ஒரு பணக்கார விவசாயப் பகுதியையும் வளர்த்தனர். நிலப்பிரபுக்களுக்கு அதிகமான நட்ட ஈடு வழங்கப் பட்டது. அதேசமயம், ஜமீன்தாரி மற்றும் முந்தையகால சட்டபூர்வமான நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திட எடுக்கப்பட்ட சட்டபூர்வநடவடிக்கைகள் அரைமனதுடன் அமலாக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் தொடர்ந்து தம் கைகளில் பினாமி நிலம் உள்ளிட்டு பிரம்மாண்ட மான நிலக்குவியலை வைத்துக்கொண்டனர். குத்தகை தொடர்பான சட்டங்களை முடக்கி, சொந்த சாகுபடி என்றபெயரில் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி பல லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். பலலட்சக் கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மறு விநியோகம் நடக்கவில்லை. ஆளும் வர்க்கக்கொள் கைகள், பொதுமுதலீடுகள், கடன் வசதி, மானியங் கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாசனம் மற்றும் இதர அரசு திட்டங்களால் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் பயன்பெற்றனர். இது ஏற்றத்தாழ்வை அதிகரித்தன.

பெரும்பகுதி மக்களுக்கு வறுமையும் வேலையின்மையும் ஊட்டச்சத்தின் மையும் தான் கிடைத்தது. முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ ஆட்சி ஜனநாயக தன்மையில் வேளாண் பிரச்சினையை தீர்க்க தவறியது.

இந்திய புரட்சி ஜனநாயக கட்டத்தில் உள்ளது. புரட்சியின் தன்மை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிப்ரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு என்பதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி வேளாண் புரட்சியாகும். இதன் மையப்புள்ளியும் இயக்குசக்தியும் தொழிலாளி – விவசாயி கூட்டணி யாகும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறுதியான கூட்டணியின் அடிப் படையில் தான் நாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி செல்ல முடியும். மக்கள் முன்னுள்ள உடனடி இலக்கு இக்கூட்டணியின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் இணைத்து மக்கள் ஜனநாயக அமைப்பை நிறுவுவதாகும். திட்ட வட்டமான மாற்றின் அடிப்படையில் கிராமப்புற மக்களை மக்கள் ஜனநாயக முன்னணி திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை யான நேச சக்திகள் முற்றிலும் கருணையற்று சுரண்டப்படுகின்ற விவசாயத்தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ஆகும். சுரண்டலுக்கு உள்ளா கும் நடுத்தர விவசாயிகளும் நம்பகமான நேச சக்திகள். பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நமது வர்க்க கூட்டணியை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்பிரிவு உறுதியற்ற தன்மைகொண்டது. மைய மற்றும் நம்பகமான நேச சக்திகள் வலுவடைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் என்ற கருத்து உருவாகும் நிலையில் தான் ஒருபகுதி பணக்கார விவசாயிகள் மக்கள் ஜனநாயக முன்னணியின் பக்கம் வரக்கூடும்.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வேளாண் திட்டம் என்ன? மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான கடமை வேளாண் துறையில் உற்பத்தி சக்திகளை கட்டிப்போட்டுள்ள நிலப்பிரபுத்துவ, அரை நிலப் பிரபுத்துவ மிச்சங்களை எல்லாம் தவிர வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் முற்றிலும் அகற்றுவதாகும். நில ஏகபோகத்தை தகர்க்காமல், ஏழை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் லேவாதேவிக் காரர்களிடம் சிக்கியுள்ள கடன்சுமையில் இருந்து விடுவிக்காமல் நாட்டின் பொருளாதார, சமூக மாற்றம் சாத்தியமல்ல.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கடமை சாதி அமைப் பில் வேரூன்றியுள்ள ஒடுக்கும் சமூக அமைப்பை முற்றிலும் அழிப்பதாகும். பாலின அசமத்துவமும் ஆணாதிக்கமும் அழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம் மற்றும் கடன் ஒழிப்பை தொடர்ந்து, அரசு தலைமையில், பெரு வியாபாரிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பனிகளிடம் இருந்தும், கடுமையான விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தும், விவசாயி களை பாதுகாக்கின்ற சந்தை அமைப்பு உருவாக்கப் படும். வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவை வருமாறு: நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள்; எரிசக்தி மற்றும் பாசன வசதிகளை அதிகப்படுத்துவதும், அவற்றின் முறையான மற்றும் நியாயமான பயன்பாடும்; வேளாண் துறையில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவது; விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் இருப்பிட வசதிகள்; வேளாண்மைக்கும் இதர சேவைகளுக்கும் விவசாயி கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டுறவு அமைப்பு களை ஊக்குவித்தல்; உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை மலிவாக மக்களுக்கு அளிக்கும் வகையிலான முழுமையான பொது விநியோக அமைப்பு.

இத்தகைய மாற்று வேளாண் திட்டத்தின் அடிப் படையில் கிராமப்புற மக்களில் பெரும்பான்மை யோரை மக்கள் ஜனநாயக முன்னணியில் திரட்ட முடியும். அதன் மூலம் ஆளும் வர்க்கங்களை தூக்கி யெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெல்ல முடியும். இது சோசலிசம் நோக்கிய நமது பயணத் தில் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

(கட்டுரையாளர் நிரந்தர அழைப்பாளர், மத்தியக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட். தமிழில் : வெங்கடேஷ் ஆத்ரேயா)

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

 

(முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு )

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும்  ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது திட்டத்தில் விளக்குகிறது.எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் அடிப்படையானது கட்சித் திட்டம்.

பொதுவாக தங்களது இலக்கு அல்லது இலட்சியம் பற்றி பல கட்சிகள் அவ்வப்போது பேசுவதுண்டு.”சமுத்துவ சமுதாயம் அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கடந்த காலங்களில் அதிமுக,திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சொல்வதுண்டு.சமத்துவம்,சமநீதி,என்றெல்லாம் அவ்வபோது தங்களுக்கு தோன்றுவதை பல கட்சிகள் கோஷங்களாக முழங்குவார்கள்.தங்களது சுய நலத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை அவர்கள் எழுப்புவார்கள்.அவர்களது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்காது.ஆனால்,”திட்டம்”என்று ஏற்றுக் கொண்டதை நடைமுறை  வாழ்க்கையில் சாதித்திட இடைவிடாது முயற்சிக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

திட்டம் – கட்சியின் உயிர்நாடி

கட்சி திட்டம் உருவாக்குவதில் ரஷிய அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது உதவியாக இருக்கும்.1898-ஆம் ஆண்டு ரஷிய சமூக ஜனநாயக கட்சி எனும் பெயரில் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்  துவங்கியது.ஒரு திட்டம் கட்சிக்கு தேவை என்று லெனின் கருதினார்.ஆனால் பலர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.கட்சித் திட்டம் உருவாக்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும்,தற்போது உள்ளூர் அமைப்புக்களை உருவாக்குவதும் கட்சி கொள்கைகள் மற்றும் தத்துவம் குறித்த எழுத்துக்களை அதிக அளவில் உருவாக்கி, மக்களிடையே பிரச்சாரம் செய்வதும்தான் முக்கிய பணி  என்று பலர் வாதிட்டனர்.

மனம் போன போக்கில் சில செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் ,ஒரு திட்டம் அடிப்படையில் கட்சி ஸ்தாபனத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும் லெனின் அழுத்தமாக  வாதிட்டார்.நமது கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு தேவை;அவற்றை விரிவாக்கவும்,வலுவாக்கிடவும் வேண்டும்;தனித்தனியான,அவ்வப்போது எழும் அன்றாட கோரிக்கைகளுக்காக மட்டும் துண்டுதுண்டான இயக்கங்களை நடத்துவதற்கு பதிலாக, சமூக ஜனநாயகக் கட்சியின் அடிப்படை இலட்சியங்களுக்கான ஒன்றிணைந்த இயக்கம் என்ற உயரத்திற்கு கட்சி செல்ல வேண்டும்;அதற்கு,கட்சித் திட்டம் தேவை என்பதனை லெனின் வலியுறுத்தினார்.

1899 -ஆம் ஆண்டு “கட்சித் திட்டத்தின் நகல் என்ற கட்டுரையில் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களிடமும் அறிவுஜீவிகளிடமும்,கட்சியின் தொடர்புகளை தரமிக்கதாக உயர்த்தி,கட்சியின் செயல்பாடுகளை அதிகரித்திட, ஒரு திட்டம் தேவை  என்று வலியுறுத்தினார்,லெனின்.அத்துடன்,கட்சித் திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள்   என்ன என்பதை அக்கட்டுரையில் லெனின் விளக்கினார். லெனின் சிறையில் இருந்த 1895-96 -ஆம் ஆண்டுகளிலிலிருந்தே  கட்சித் திட்டம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையொட்டிய  அவரது எழுத்துக்கள் கட்சித் திட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடியான   ஒன்று என்பதை உணர்த்துகிறது.

புரட்சி எனும் கருத்தாக்கம்

கட்சி திட்டம் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.புரட்சி என்பதற்கு அரிஸ்டாட்டில் துவங்கி ஏராளமான அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.வெறும் ஆட்சி மாற்றங்களை புரட்சியாகக் கருத முடியாது.மனித வரலாற்றில் வேறுபட்ட சித்தாந்தங்கள் அடிப்படையிலும் வன்முறை வழிமுறையிலும் பல அடிப்படையான மாறுதல்களை பல புரட்சிகள் நிகழ்த்தியுள்ளன.சமுகம்,பொருளாதாரம்,அரசியல்,பண்பாடு என பல துறைகளில் ஆழமான மாற்றங்களை புரட்சிகள் உருவாக்கியுள்ளன.

அடிப்படையான அதிகார மாற்றம்,ஆட்சி அமைப்பு முறையிலான மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்கள் உருவாக்கி,முற்றிலும் புதிய பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதுதான் புரட்சியாக கருதப்படும்.அது வரை ஆண்டு கொண்டிருந்த அதிகார கூட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்த மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.எனவே மக்களின் பங்குதான் புரட்சியில் முக்கியமானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிட்ட நாட்டில் அடைய வேண்டிய புரட்சி இலக்கினை தெளிவாக வரையறுக்கிறது.உழைக்கும் வர்க்கங்களின் உழைப்பைச் சுரண்டி தங்களது சொத்துடைமை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் சொத்துடைமை வர்க்கங்கலின் சமூக அரசியல் மேலாதிக்கத்திற்கு புரட்சி முற்றுப்புள்ளி வைக்கிறது.   முதலாளிகள்,நிலப்பிரபுக்கள்,அந்நிய நாட்டு மூலதன வர்க்கங்களின் கருவியாக விளங்கும்  அரசு அதிகாரத்தினை வீழ்த்தி, தொழிலாளி விவாசாயி மற்றும் உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதனை  புரட்சி சாதிக்கிறது.

இதுதான்  தொலைநோக்கு  இலக்கு. இந்த அதிகார மாற்றமே உண்மையான புரட்சி.இந்த புரட்சியை சாதிக்க,உழைக்கும் வர்க்கங்களை திரட்டுவதற்கு கட்சி மேற்கொள்ளும் வியூகம் கட்சித் திட்டத்தில் விளக்கமாக விரித்துக் கூறப்படுகிறது.தற்போதைய அரசு, அதன் வர்க்க குணம்,அதன் பலம்,பலவீனம்  குறித்து கட்சித் திட்டம் விளக்குகிறது. புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கத்துடன்  விவசாயப்  பிரிவினர் இணைந்து உருவாக்கும் வர்க்கக் கூட்டணி,புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைகிறது.இந்த இலக்கணங்கள்  அனைத்தையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. புரட்சி இலக்கினை எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும்  நிலை மாறிடவும்,ஒரு சிறு கூட்டம் சொத்துகுவியல்,, மூலதனக் குவியலை இடையறாது மேற்கொள்ள ,அரசு துணை நிற்க்கும் நிலை, மாறிட வேண்டுமென்பதும்  அன்றைய சோஷலிஸக் கனவாக இருந்தது. சோசலிசம் மலருவதற்கான முக்கிய கட்டமாக மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),1964-ஆம் ஆண்டு தனது திட்டத்தை உருவாக்கி உலகுக்கு அறிவித்தது.புதிய சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை 2002-ஆம் ஆண்டு மேம்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம் தனது இலக்கைப் பற்றி கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

“8.1 மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தனது புரட்சிகரத் திட்டத்தை இந்திய மக்கள் முன் வைக்கிறது. சோசலிசத்திற்கும்,சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும். இந்திய மக்களை விடுதலை செய்யும் இத்தகைய புரட்சிக்கு விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும்.உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியானது,ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித் துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டி யுள்ளது.மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை நமது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப திட்டவட்டமான வகையில் பயன்படுத்துவதன்மூலம் அரசியல், தத்துவார்த்த,பொருளாதார, சமூக, பண்பாடு என்கிற அனைத்து முனைகளிலும் நாம் வெற்றிகாணும்வரை நீண்ட நெடிய போராட்டங்களைக் கட்சி நடத்தவேண்டியுள்ளது.”

தெளிவான இந்த இலட்சியத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.

ஆழமான பொருள் பொதிந்த சொற்றொடர்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், அரை நூற்றாண்டு மக்கள் போராட்டங்களில் கிடைத்த பழுத்த அனுபவங்கள்,  மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த உட்கட்சி விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் ஆகியன அனைத்தும் உள்ளடங்கிய நூல் இது. பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.

(தொடரும்)