திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்

பேரா. வி. முருகன்

 “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை  கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் அறிவியல்(Political Science) மற்றும் சமூகவியல் (Sociology) துறையில் உள்ள ஆராய்ச்சி வல்லுனர்களுக்காக எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி நூல்.

அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர்  தலைமை தாங்கி நடத்தினார்.  புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம் நன்கு தெரிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மார்க்சீய சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். அதனால் இந்த நூலைப் பற்றிய அவர்களது விமர்சனங்கள் மார்க்சிய பார்வையில் சொல்லப்பட்டவை அல்ல. இந்த விவாதம் முற்றிலும் சமூகவியல் பார்வையில் நடந்தவை. அவர்கள் அனைவரும் இந்தியாவில் கள ஆய்வு செய்த அனுபவம் உள்ளவர்கள்.  உதாரணத்திற்கு பாட்ரிக் ஹெல்லர் கேரளத்தைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்பவர்.

இந்தத் தொகுப்பிற்குள் போகும் முன் ஒரு குறிப்பைத் தர வேண்டும். இதில் பல சொல்லாடல்கள் வருகின்றன. Hegemony, Historic block என்ற சொல்லாடல்கள் கி்ராம்ஸி சொல்லும் கருத்துக்கள். Model, Solidarity, Status based inequality, Populism, Social Popular, Economic Popular போன்ற சொல்லாடல்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனாலும் இங்கு சமூகவியலுக்குரிய கலைச் சொற்கள் என்ற அர்த்தத்தில் இவை பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றி பேசும் போது Status based inequality என்பது ஜாதீய அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. Model என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமான சொல். ஆனாலும் சமூகவியலில் இன்னும் நுணுக்கமான விஷயங்களோடு தொடர்புடையவை.  பாட்ரிக் ஹெல்லர் மற்றும் பார்பரா ஹாரிஸ் வொய்ட் ஆகிய இருவரும் திராவிட மாடல் என்ற சொல்லாடலில் வரும் மாடல் என்ற கருத்தை மறுக்கிறார்கள். அதன் பொருள் சமூகவியலுக்குரிய கலைச்சொல்லாக மாடல் என்ற சொல்லைப் பார்க்கும்போது திராவிட மாடல் என்ற சொல்லாடலில் அது பொருந்தாது என்பதாகும்.  

 Solidarity என்பது பல வேறுபாடுகளைத் தாண்டி சில அடையாளங்களின் அடிப்படையில் ஒரு அணியாகத் திரள்வது. பிராம்மண எதிர்ப்பு, இந்தி/ சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற அடையாளங்களின் அடிப்படயில் இங்கு ஒன்று திரள்வது.  தங்களுடையேயுள்ள முரண்பாடுகளைக் கடந்து ஒரே அணியில் திரள்வது. உதாரணத்திற்கு,  பிராமாணரல்லாத முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வது. முதலாளிகளால் பாதிக்கப்பட்டாலும்  முதலாளிகளோடு போவதற்கு  தொழிலாளர்கள் இசைவு தெரிவிப்பது.  கலையரசனும் விஜய பாஸ்கரும் இந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கிராம்ஸியின் Historic Block சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 இணைய தளத்தில் இவற்றைப் பற்றி தேடினால் சமூகவியல் துறையிலேயே இந்தக் கலைச்சொற்களைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கள் இல்லை. இது இயற்பியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியலுக்கு மாறானது.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பொருள், அவர்களது ஆய்வு முறைகள், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை சுருக்கமாக வழங்கினார்கள்.

ஆசிரியர்கள் வழங்கிய அறிமுகம்.

  1. உலகில்  சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் மனித வளத்தில் வளர்ச்சியில்லை. அதே போல் மனித வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. இது ஏன்?
  2. ஒரு சமூகத்தில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வெற்றி பெரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. அதே போல் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதில்லை. இது ஏன்?

இந்த நிலைதான், பொதுவாக,  பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது.  அரசியல் அறிவியலில் மற்றும் சமூகவியலிலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பகுதியாகத்தான் இந்தத் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.

 இந்தப் புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கியமான கருத்து:   தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி, மனித வளத்தில் வளர்ச்சி, (சமூக அந்தஸ்துகள் காரணமாக) ஜாதிய அமைப்பு காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஆகிய மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில்   திராவிட  இயக்கம்  சாதித்துள்ளது. இதையே திராவிட மாடல் என்று இந்நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (இதன் பொருள் திராவிட மாடல் என்ற ஒரு மாடல் இருக்கிறது என்றும், அது  மற்ற மாடல்களில் இருந்து வேறுபடுகின்றது  என்றும் கூறுவதாகும்) இந்த மாடலை மற்ற தென் உலக நாடுகளிலும் செயல் படுத்தலாம்..

(தென் உலக நாடுகள் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெற்கே உள்ள நாடுகள் என்பவையாகும். மூன்றாவது உலக நாடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்)

இதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

அரசியல் அறிவியல் என்ற துறைக்குரிய ஆய்வு என்ற முறையில் இதற்கு முதலில்  செய்ய வேண்டியது:  தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும்,   மனித வளத்தில்  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், ஜாதீய அமைப்பின் காரணமாக இருந்த ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளன என்பதையும், போதிய தரவுகள் மூலம் நிறுவதல் செய்ய வேண்டும் . அப்படி தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று தரவுகளைக் கொடுத்து நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள்.

 இரண்டாவதாக, எப்படி இது நடந்தது என்பதற்கான விளக்கத்தை தர வேண்டும்.  அவர்கள் தரும் விளக்கத்தின்படி, திராவிட மாடல் என்ற ஒன்று உள்ளது என்றும், அதன் மூலம் இந்த சாதனைகள் நடந்துள்ளன என்றும் வாதிடுகிறார்கள்.

மூன்றாவதாக, இந்த மாடலில் உள்ள குறைகள், அதன் வரம்புகள் இது எதிர்காலத்தில் எப்படி மேற்கொண்டு செல்லக்கூடும்  என்று சொல்கிறார்கள். அவர்களின் வாதங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்  எழுந்த ஒரு தனித்துவம் வாய்ந்த சமூக நீதி பற்றிய கருத்தோட்டம் இந்த வளர்ச்சிப் பாதைக்கான முக்கியமான காரணமாகும்.  இது சில அடையாளங்களை அடி்ப்படையாகக் கொண்டு இயங்கிய இயக்கத்தில் இருந்து அரசியல் இயக்கமாக மாற உதவியது. 

 பலவித வேறுபாடுகள் கொண்ட கீழ்நிலை ஜாதிகளில் உள்ள அனைவரையும் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட உயரடுக்கினரை எதிர்த்து,  கிராம்ஸி கூறும் historic block என்ற கருத்தாக்கத்தின் கீழ், ஒரு அணியாக  திரட்டப்பட்டதுதான் தமிழ்நாட்டின் வெற்றிக்கு முக்கியமான காரணம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு சமூக அமைப்பு விமர்சிக்கப் பட்டது.  திட்டமிட்டு  தொடர்ந்து நடத்தப்பட்ட அரசு தலையீடுகள் மூலம் ஜாதியின் அடிப்படியில் அமைந்த தொழில் உறவுகள் தகர்க்கப்பட்டதாக உரையில் சொல்லப்பட்டது.

கல்வி, சுகாதாரம், மூலதனம் மற்றும் உழைப்பாளர்கள் ஆகிய நான்கு தளங்களில் தமிழ்நாட்டில் நடந்தவைகளைப் பற்றி சுருக்கமாக ஆசிரியர்களின் உரையில் கூறப்பட்டது.

தேசிய அளவில் கல்வி உயரடுக்கினரை மையப்படுத்தி வளர்ந்தது. அதனால் பள்ளிக் கல்விக்குப் பதிலாக உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமில்நாட்டில், இதற்கு மாறாக, பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வி விரிவாக்கப்பட்டது. இடஒதுக்கீடு மூலமாக உயரடுக்கினருக்கு பாரபட்சமாக இருந்த கல்வியை ஜனநாயகப்படுத்தியது.

 சுகாதாரத்தில் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்புகள் செயல்பட்டன என்று சுட்டிக் காட்டப் பட்டது.

ஜாதிய அமைப்பின் காரணமாக பிறப்பின் அடிப்படையாலே சிலர் முதலாளிகளாகவும் சிலர் தொழிலாளர்களாகவும் உருவாகிய சூழ்நிலையில், உற்பத்தி தொழில்துறையின் வளர்ச்சியின் மூலம்தான் சமூகநீதி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஜாதிகளின் அடிப்படையில் அமையும் தொழில் வளர்ச்சி, நவீனத்துவத்தை தராது என்று கணிக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு மக்கள் புலம்பெயர்வது ஊக்குவிக்கப்பட்டது.  

மூலதனத் திரட்டலுக்கு எதிராக இல்லாமல், மூலதனக் குவியல் ஊக்குவிக்கப்பட்டது மூலதனக் குவியல் தொடர்ந்து நடந்தது. மூலதனக் குவியல் ஜனநாயகப்படுத்தப் பட்டது. தாழ்த்தப் பட்ட ஜாதியினரும் மூலதனக்குவியலில் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

பணியிடங்களில் உழைப்பவர்களின்  நிலை சரியாக இல்லாவிட்டாலும், பணியிடங்களுக்கு வெளியே அரசு செய்த பல பொதுநலத்திட்டங்கள் ( உதாரணத்திற்கு பொது விநியோக அமைப்பு) மூலமாக அவர்கள் வாழ்வு மேம்படுத்தப்பட்டது. மொத்தத்தில், இதை இடது பாப்புலிசம் என்று  ஆசிரியர்கள் கூறினார்கள்.

உரையாடலில் கலந்துகொண்ட ஆய்வாளர்களின் கருத்தை சுருக்கமாக காண்போம்.

பார்த்தா சாட்டர்ஜி:

இந்தப் புத்தகம் முக்கியமாக சொல்வது பாபுலிஸம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதாகும். பல மாடல்கள் உள்ளன. இதோடு  திராவிட மாடல் என்று மற்றொரு மாடல் உள்ளது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. மற்ற இடங்களில் இதை செயல் படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.  பண்பாட்டுத் துறைகளில்  நடக்கும் சில இயக்கங்களை அடித்தளமாக கொண்டு ஏற்படும் வளர்ச்சிப் போக்கு சில ஜனநாயக விளைவுகளை தர வாய்ப்புகள் உண்டு என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.

 இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவைகளின் அர்த்தம் என்ன? சொத்துடைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்குப் பதிலாக சமூக அந்தஸ்த்துகளில் ( இங்கு ஜாதி அடிப்படையில்)  உள்ள ஏற்றத்தாழ்வுகளை முக்கியமானவையாக எடுத்துக்கொள்வது விளிம்புநிலை மக்களுக்கு வளர்ச்சியை தரும். ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமான பொதுநலத்திட்டங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதி மக்களை மையப்படுத்தி பொது நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம்.

 திராவிடம் மற்றும் தமிழர்களின் கலாசாரம் என்ற அடிப்படையிலும், பிரமாணியம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலசாரம் என்ற அடிப்படையிலும், சமுதாயம் இரண்டாக  எதிரெதிராகப் பிளவுபட்டுள்ளது. இந்த  எதிர்நிலை பொதுவான இயல்பறிவாக ( Dravidan common sense) உருவாகிவிட்டது. வளர்ச்சிக்கான செயல்திட்டம் இந்த எதிர்நிலைகளின் அடிப்படையில் கட்டப்படுகிறது. முடிவில், இதை இடது பாப்புலிசம் என்று கூறுகிறார்கள்.

 இது எப்படி இடது பாப்புலிசம் ஆகும்? (பார்த்தா சாட்டர்ஜியின் கேள்வி) கம்யூனிஸ்டுகள் மூலதன திரட்டலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இங்கு தரப்படும்  மொத்த வாதமும் மூலதனத் திரட்டலுக்கு வசதி செய்து தருவோம் என்பதுதான். நிலச்சீர்திருத்திற்குப் பதிலாக கல்வியை அனைவரும் அடையக்கூடியதாக்குவது என்பதும், ஜாதி  அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தாக்குவது என்பதும் செய்தால் போதும். மற்ற ஏற்றதாழ்வுகளும் மற்ற பிரச்சனைகளும் அப்படியே இருக்கும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அப்பால் வெளியே அவர்களுக்கு தேவையான அளவிற்கு தகுந்தாற் போல் அரசு சில திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு  உதவுவது. இது மேற்கு வங்ககத்தயோ அல்லது கேரளாவையோ போன்றதல்ல. அந்த மாடல்களில் நிலச்சீர்திருத்தின் மூலம் உற்பத்தி பொருளாதாரத்தை மாற்றுவது. ஆனால் இவர்கள்  வேறு திசையினைக் காட்டுகிறார்கள்.  இந்த மாடலின் வரம்புகள் என்ன? எந்த அளவிற்கு மற்ற இடங்களில் இந்த மாடலை அமுல்படுத்த முடியும்? அவர்களே இந்த மாடலின் வரம்புகளையும், அது எதிர்காலத்தில் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகளையும்  இந்தப் புத்தகத்தில் விவாதித்துள்ளார்கள்.

அதிமுக பிரிந்து வந்த பிறகு அவர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும்  விமர்சிக்கும் பகுத்தறிவு இயக்கத்தை கைவிட்டார்கள். இது பற்றிய விவாதம் இந்தப் புத்தகத்தில் இல்லை. இறுதியான கேள்வி: கலாச்சாரத்தை அடிப்படையாக இந்தப் பரிசோதனை தீர்ந்து விட்டதா? திராவிட மாடலில்  வளர்ச்சி தொடருமா?

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சி தரும் மாடல் இருக்க வேண்டும். அது அந்த இடத்தின் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுதான்,  இந்தப் புத்தகம் தரும் பாடம்.

ரீனா அகர்வாலா:

திராவிட மாடல் என்று ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என்று நினத்தாலும், இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, திராவிட மாடல் என்றால் என்ன என்று  புரியவில்லை. தமிழ்நாட்டில் மேலிருந்து நடந்ததிற்கும்,  கீழிருந்து நடந்ததிற்கும், மாறி மாறி இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. மேலிருந்து அரசு செய்த தலையீடுகள் மிகவும் பாராட்டப்படுகிறது.  தலைவர்கள் தந்த சில கருத்துக்கள், பல்வேறு நலவாரியங்களை அமைத்தது;  இட ஒதுக்கீட்டில்  செய்தது; சுகாதாரத்தில் செயல்பட்டது; அடிப்படை கட்டமைப்பினை நன்கு உருவாக்கியது போன்ற விஷயங்கள் அதிகமாகப் பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை ரீனா அகர்வாலா ஒப்புக் கொள்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் பாப்புலிஸம் இந்தப் புத்தகத்தில் பாராட்டப்படும் அளவைப் பார்க்கும்போது, அது என்ன அப்படிப்பட்ட பாப்புலிஸம் என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அது கம்யூனிசம் இல்லை. புத்தகத்தின் ஆசிரியர்கள்  மூலதனத்தை தாக்க மறுக்கிறார்கள் என்பதை ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.   இது ஒரு வகையான சமூக ஜனநாயகம்தானே.  ஆனாலும் தமிழ்நாட்டின் பாப்புலிசம் சமூக ஜனநாயகமில்லை என்று  கூறப்பட்டுள்ளது. . அது எப்படி? இன்றிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும், எந்த சமூகக் கட்டமைப்புகள் காரணமோ, அந்த கட்டமைப்புகளை மாற்ற முயற்சிக்காமல், அவற்றிற்குள்ளேயே செயல்படுவதுதான் அனைத்து சமூக ஜனநாயகங்களுக்கும் பொதுவானது.  கருணாநிதியின் ஆட்சியில்  தொழிலாளர்கள் மீது  தி,மு.க, அடக்குமுறையை ஏவி விட்ட வரலாறு உள்ளது என்று ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.

 தமிழ்நாட்டில் எப்படி பாப்புலிசம் அமுல்படுத்தப் பட்டது? அரசியல் தலைவர்கள் எதற்காக ஜாதிய அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு   விடுதலை பெற்று தர வேண்டும்? தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியமான தூண்டுகோலாக இருக்க வேண்டும். அ.தி.மு.க வை  பாப்புலிச அரசு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்? சொல்லப் போனால் இரு இயக்கங்களும், போட்டி போட்டுக் கொண்டு, பாப்புலிசத்தை அமுல் படுத்தின. தேர்தலின் பங்களிப்பை ஆசிரியர்கள்  குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவினரின் பிரதிநிதிகளும் அரசில் பங்கெடுப்பதன் மூலம் பாப்புலிசம் அமுல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால்  அடையாள பிரதிநிதித்துவ மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபடுகிறது?

 தமிழ் நாட்டின் பாப்புலிசத்தின் மற்றொரு அம்சம், கீழிருந்து நடக்கும் இயக்கம் ஆகும்.. சமூக நீதியின் எந்த அம்சம்  தமிழ்நாட்டின் பாபுலிசத்திற்கு முக்கிய பங்களித்துள்ளது? வர்க்க ரீதியான முரண்பாடுகளைத் தாண்டி, அனைத்து வர்க்கங்களின் இசைவை, சில அடையாளங்களின் அடிப்படையில் உள்ள, கூட்டொருமைப்பாடு ( solidarity) வழியாகப்  பெறுவது அவசியமானது என்று வாதிடப்படுவது  போல் தெரிகிறது. வளர்ச்சிக்கு கூட்டொருமைப்பாடு முக்கியமானதா? வர்க்கரீதியாக ஒன்றிணப்பதை விட ஜாதிய ரீதியாக ஒன்றிணப்பது முக்கியமான யுக்தியா?

நவீன கல்வியை எல்லோருக்கும் வழங்குவதும், அரசு வேலைகளில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும், நிலசீர்திருத்தத்தை விட முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் சரியாக இல்லாததை, பணியிடங்களுக்கு அப்பால் வெளியில் வலுவான நலத்திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டுள்ளது..

 இந்த மாடல் மற்ற இடங்களில் பின்பற்ற முடியுமா? அப்படி பின்பற்ற வேண்டுமா?

பார்பரா ஹாரிஸ் ஒயிட்:

 இந்தப் புத்தகம் எழுப்பும் மையக் கருத்து:  கலாசாரம் எப்படி ஒரு சமுதாயத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும்?  அரசியல் ரீதியாக  கடுமையாக உழைத்து பிராமணர்கள் அல்லாதவர்களால் ஒரு சமூகத் தொகுதி (block) உருவாக்கப்பட்டது. ஒரு கருத்தியலின் ஆதிக்கம் (hegemony) மூலம் பொருளாதார  மேம்பாடும், அரசு தலையீடுகள் மூலம் மூலதன திரட்டலையும், அமைப்பு ரீதியான மாற்றங்களையும் அடைய முடியும் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. கீழ்நிலைப்படியில் உள்ள ஜாதியினரிடம்   ஏற்படும் மூலதனம் திரட்டல் மூலம் சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை நிர்மாணிக்கும் இயந்திரம் என்ற கருத்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக திராவிடக் கூட்டணியைப் மையப்படுத்திய விளக்கத்தை  முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பாப்புலிசம் சிறு உற்பத்தியை (petty production) ஊகுவிக்கிறது. அது மூலதன திரட்டலையும் உருவாக்குகிறது. முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தைக் கொடுத்து முதலாளித்துவத்திற்கு ஆதரவு கொடுகிறது. உரிமைகளின் அடிப்படையில் உருவாகும் பாப்புலிசமும், அரசின் தலையீட்டால் உருவாகும் பாப்புலிசமும்,  முற்போக்கான இடது பாப்புலிசத்தைக் கொடுக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. தமிழ்நாட்டில் நிலவும் ஊழலோடு திராவிட மாடல் எப்படி இணைந்து இருக்க முடியும்? 

பாட்ரிக் ஹெல்லர்:

இது ஒரு மாடல் அல்ல. இது ஒரு வளர்ச்சிப் பாதை. இதில் வேறு எங்கும் காணமுடியாது என்று சொல்லக்கூடிய தனித்துவம் இல்லை. இது போன்று பல இடங்களில் நடந்துள்ளது. குறிப்பாக, பிரேசிலுக்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பிராமணர் அல்லாதவர்களிடம் உள்ள வர்க்கங்களிடம் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி  கலாச்சாரத்தின் ஒரு சமூகத் தொகுதி கட்டப்பட்டுள்ளது. இதே யுக்தியை வலதுசாரிகளும் செய்ய முடியும்.

இந்த நான்கு அறிஞர்களும் சமூக அறிவியலின்படி இந்தப் புத்தகத்தை விமர்சித்துள்ளார்கள்.  மிக விரிவான முறையில் எல்லாத் துறைகளிலும் கொடுக்கப் பட்டுள்ள தரவுகளுக்காக இந்த புத்தகத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் நடந்துள்ளது என்று இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை.   இந்த புத்தகம் மிக சாதுரியத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் நான் கருதுகிறேன். இது ஒரு வகையில்  அரசியல் அறிவியல்( political science) மற்றும் சமூகவியல் (sociology) வல்லுனர்களுகாக எழுதப்பட்ட ஆராய்ச்சி என்ற தோற்றமளிக்கிறது. அதே சமயத்தில் தி.மு.க. விற்கு  அரசியல் ரீதியாக நல்ல லாபம் தரும் நூலாகவும் அமைந்துள்ளது. அவர்களின் பிராச்சாரத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிராசாதம். குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சியை, சாதனையாக, கருத்தியல் ரீதியாக காட்டும் நூல். இடதுசாரி சித்தாந்தத்திற்கு மாற்றாக, இது திராவிட மாடலை முன்னிறுத்துகிறது.

திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

காங்கிரஸ் ஆட்சிக்காலம்

இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது   தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.   எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில்  இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்)   

 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம்.

நில உறவுகள்

1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன.

நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984  பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது.

1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள்  தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர்  நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723  ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது.

(இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga)  மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.)

2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில்  பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி

1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட  நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை.

இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின்  ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச  பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது.

அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு

தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை.

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.

தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள்.

தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக  விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்..

தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது.

.தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக  உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும்.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம்  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள்  கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான்  வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம்,  நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு  லட்சத்து  நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு.  ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

இறுதியாக

இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது.  இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச் சூழலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று அவர்கள் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தார்கள். தமிழக முதலாளிகள் முன்னுக்கு வந்த பிறகு அந்த பிராமண எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்படவில்லை. நீதிக் கட்சியினுடைய பாரம்பரியம்தான் நாங்கள் என்று திமுக தலைவர் இன்றும் கூறிக் கொண்டேயிருக்கிறார். அந்த பாரம்பரியத்தின் வர்க்கப் பின்னணி என்ன? நீதிக் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் பொருளாதார நிலையில் பெரும்பாலும் ஜமீன்தார்கள், மிராசுதார்கள். (பனகல் ஜமீன்தார் பெயரில் அரசு கட்டிடம் சைதாப்பேட்டை – பனகல் – பார்க் – டாக்டர் நடேசன் பார்க்.)
ஜமீன் ஒழிப்புக்காக கம்யூனிஸ்டுகள் போராடினர். காங்கிரஸ்காரர்களும் பெயரளவில் அதனை பேசினர். அந்நிலையில் ஜமீன்தார்களும், மிராசுதார்களும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதுதான் அதனுடைய வர்க்க நிலை. அதேநேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பிராமண எதிர்ப்பாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். கல்வியி லும் தொழிலிலும் பிராமணர்களுக்கு போட்டியிட அந்த எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆகவே அவர்கள் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். தொழில் முதலீட்டாளர்களும் அதற் குள்ளே இருந்தார் கள். இந்தியன் வங்கியை துவகிய இராஜா முத்தையா செட்டியார் மற்றும் இராமசாமி செட்டியார் நீதிக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டனர். நீதிக்கட்சியில் இருந்து கொண்டே அவர்கள் தங்களது தொழில்களை வளர்த் தனர். நீதிக்கட்சியின் ஆரம்பத்தில் (1916-1946) பிராமணர்கள் உறுப்பினர்களாக முடியாது என்று சட்ட விதி இருந்தது. ஆனால் அதன் இறுதி காலத்தில் பிராமணர்களையும் அக்கட்சி, உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு தன்னுடைய பிராமண எதிர்ப்புக் கொள்கையை மாற்றிக் கொண்டது.
சென்னை பிராந்தியம் முழுவதும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த இந்த முதலாளிகள் விரும்பினார் கள். இது, அவர்களின் வர்க்க சார்பு தன்மை. இதற்காக அவர்களுக்கு தனி நாடு தேவைப்பட்டது. ஆகவே திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. சென்னை ராஜதாணி என்பதுதான் திராவிட நாடு. வர்த்தகத்தில், தொழிலில், விவசாயத்தில் இவைகள் எங்களோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிராமண ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்றார்கள்.
கரிமுத்து செட்டியார், ராஜா சர் முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், அண்ணாமலை செட்டியார், பி.டி.ராஜன், எம்.ஏ.முத்தைய செட்டியார், தியாகராய செட்டியார் போன்றோர் முதலீடுகளைச் செய்தனர். கரிமுத்து தியாகராஜ செட்டியார், தென் மாவட்டத்தின் பஞ்சாலை முதலாளி. இவர்கள் அனைவரும் அப்போதே இணைந்து 1907ல் இந்தியன் வங்கியை துவங்கினர். பின்னர் அண்ணமலை செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பிறகு இராஜா சர் முத்தையா செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பர்மா, சிங்கப்பூர், போன்ற நாடுகளில்கிளைகளை துவங்கினர். ஜின்னிங் தொழிற்சாலை, பஞ்சாலை, பென்சில், அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் துவக்கினர்.
1942 மார்ச் 30ல் சுந்தரபாண்டி நாடார், சாமியப்ப முதலியார், ஏசி.முத்தைய செட்டியார் ஆகிய முதலாளிகள் கிரிப்ஸினை சந்தித்து திராவிட நாடு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கிரிப்ஸ் திட்டத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.
1944ல் பெரியார் நீதிக் கட்சியிலிருந்து விலகி திராவிடர் கழகம் உருவாக்கினார். உண்மை வரலாற்றை நேசிப்பவர்கள் சமூக தளத்தில் எந்த காலத்திலும் பெரியாருடைய பங்கை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். அதேநேரத்தில் பெரியார் எந்த காலத்திலும் ராஜா சர் முத்தைய செட்டியார் போன்ற முதலாளிகளையோ, ஜமீன்தார்களையோ எதிர்த்தது கிடையாது. ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் தவறு என்று கூட கூறியிருக்கிறார். சமூக வாழ்க்கையில் முற்போக்கா கவும், பொருளாதார வாழ்க்கையில் முதலாளித்துவப் பார்வையோடும் இருந்தது திராவிடர் கழகம். 1948ல் அறிஞர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமுலர் மந்திரத்தைக் கூறியே திமுகவை உருவாக்கினார். தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டாளர்களை மேலும் ஈர்ப்பதற்காகவே திரவிட முன்னேற்ற கழகம் சாதி மத வித்தியாசமில்லாமல் தென்னகத்திற்கு முதலீடுகள் வேண்டும் அல்லது திராவிட நாடு வேண்டும் என்று கூறியது. அவர்களுடையவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, என்ற கோசம் அனைத்து சாதி முதலாளி களும் வளர வேண்டும் என்பதுதான். இது ஒரு வர்க்க கோசம். தொழில் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கோசம்.
பெரியாரும் அண்ணாவும் முகமது அலி ஜின்னாவை சந்தித்து, திராவிட நாடு கோரிக்கையை நீங்கள் ஆதரியுங்கள், நாங்கள் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கிறோம் என்றார்கள். அதற்கு முகமது அலி ஜின்னா ஆதரவு அளிக்கவில்லை. அம்பேத்கரும் திராவிட நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இவர்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு பின்வாங்கிவிட்டனர். ஜின்னா, பாகிஸ்தான் ஆளுநர், பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவர். அரசியல் ரீதியாக நேச சக்திகள் என்று கருதிய யாரும் திராவிட நாடு கோரிக் கையை ஆதரிக்கவில்லை. மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிக்கப்பட்ட பின், அந்த மாநிலங்களில் யாரும் திராவிட கோரிக் கைக்கு ஆதரவளிக்கவில்லை. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.
அண்ணாவின் பேருரைகளில் கூட, அவர் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எந்த இடத்திலும் எதிர்த்தது கிடையாது. கூடுதலான நிதி தமிழகத்திற்கு வேண்டும், கூடுதலான தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டும் என்கிற உரிமைதான் மாநில சுயாட்சி என்று வந்ததே தவிர வேறொன்றுமில்லை. இந்தியப் பெரு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சி தன்னுடைய தளத்தை விரிவுபடுத்துவதற்கு சிறு, நடுத்தர முதலாளி களை வளர்த்தெடுப்பதற்கு முயற்சித்தது. சந்தைகள் வளர்கிறபோது தமிழக முதலாளிகள் வேகமாக வளர்ந்தார்கள். அதற்கு முதலாளித்துவ வளர்ச்சி சூழல், காங்கிரசினுடைய 5 ஆண்டு திட்டம் அனைத்தும் உதவி செய்தது, இந்த உதவியால் தமிழக முதலாளிகள் பிராந்தியத்தைத் தாண்டி வெளியே செல்ல ஆரம்பித் தார்கள் இயற்கையாகவே அவர்களது சந்தை விரிவடைந்தது. தமிழக முதலாளிகள் தேசப்பொருளா தாரத்தில் பங்கு வகிக்கும் சூழல் உருவானது. அதன்பின் மத்திய அரசில் பங்கேற்பதற்கான தேவை திமுகவிற்கு வருகிறது. தங்களது வர்க்க அடிப்படையாக உள்ள தமிழக முதலாளிகள் தேசிய அளவில் தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கு,மத்திய அரசில் பங்கு பெறுவது அவசியம் என்ற தர்க்கரீதியான நிலைபாட்டுக்கு திமுகவினர் வருகின்றனர். அதிமுகவிற்கும் அதே போன்ற தேவை இருந்தது.
அவசர நிலையை எதிர்த்தது என்பது திமுகவின் வரலாற்றிலேயே முக்கியமானது. ஜனநாயகம் என்பது முக்கியதேவை. பிஜேபிக்கோ, காங்கிரசுக்கோ சர்வாதி காரம் தேவைப்படலாம், ஆனால் ஒரு மாநிலக் கட்சிக்கு சர்வாதிகாரம் தேவைப்படாது. ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் முறை கூட ரத்தானால் அது இறந்துபோய்விடும். வீடு இருந்தால்தான் போர்டு மாட்ட முடியும் என்பதில் திமுக தெளிவாக இருந்தது.
1990க்குப் பிறகு தேசிய முதலாளிகள் சர்வதேச அளவில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். ஹீண்டாய் இங்கு வருகிறது, தமிழக முதலாளிகள் தென்னாப் பிரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். ஒட்டுமொத்த மாக, மாநில முதலாளித்துவ கட்சிகளின் வளர்ச்சியை மூன்று படிநிலைகளாகப் பார்க்க வேண்டும்.
1, பிராந்திய சந்தை தேவைப்பட்டது,
2, பிறகு இந்திய சந்தை தேவைப்பட்டது,
3, இன்று உலகச் சந்தையும் தேவைப்படுகிறது, திமுகவும் அதிமுகவும் வெறும் வார்த்தைகளில் இந்த உலகமயத்தை எதிர்ப்பார்களே தவிர, அதன் பெருமுதலா ளிகளின் இளைய பங்காளியாக இருப்பதுதான் அவர்களுடைய வர்க்க நிலை. அவர்களுடைய மற்ற கொள்கைகளான, சாதி மறுப்பு போன்றவைகளெல்லாம் அவர்களுடைய பழைய கதை. இன்று அது தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆகவே, திராவிடக் கருத்தியல் என்பது அவர்களுடைய அன்றாட நிலையல்ல. ஏனெனில் இன்றைய உலகமயச் சூழலில் தனியார் துறை வேகமாக வளர்கிறபோது, இந்த கோஷங்கள் எடுபடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். திராவிடர் கழகம் பெண் விடுதலை, சாதி மறுப்பு போன்ற பிரச்சனைகளில் கூட கடந்த காலம் போன்று செயல்படுவதில்லை. இவற்றின் காரணமாகத்தான் பாஜகவோடு திமுக, அதிமுக கைகோர்க்க முடிகிறபோது அதனுடைய திராவிடக் கருத்தியல் என்பது அவர்களிடம் முற்றிலுமாக விடை பெற்று விட்டது என்றுதான் சொல்ல முடியும். தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் போன்றவற்றை முன்னுக்கு கொண்டு வந்ததில் திராவிடர் கழகத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த அம்சங்களில் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை இன்றைய இளைய தலைமுறையினருக்கும், அவற்றை வழிநடத்தி மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யுனிஸ்ட்களுக்கும் இடதுசாரிகளுக்கும் உண்டு.

(தொகுப்பு : சுதிர் ராஜா)