‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !

  • இரா. குமரகுருபரன்

(நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவலை பற்றி சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் – ஆசிரியர் குழு)

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழில் 1774-ஆவது ஆண்டில் தனியாரால் தொடங்கப்பட்டது, உலகிலேயே துரிதமாகச் செயல்படும் சுரங்கங்களில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கே. உலகின் மிகப்பெரும் பத்து சுரங்க விபத்துகளில் இரண்டு இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

தன்பாத் (ஜார்கண்ட்) தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் 28 மே 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் வெடித்துச்சிதறி 268 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சுரங்கம் தனியாரான ராஜா ராம்கருக்குச் சொந்தமானது.  இந்த விபத்தின் எதிர்வினையாக, தனியார் நிலக்கரிச் சுரங்கங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுத்தன.  இந்நிலையில், மத்திய அரசு 1971-72 ஆம் ஆண்டில் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியது. உலோகவியல் நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972 நிலக்கரிச் சுரங்கம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973 ஆகியன நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக. 27 டிசம்பர், 1975 சாஸ்நளா (ஜார்கண்ட்) நிலக்கரிச் சுரங்கம் வெடித்து அதன் உடனடி விளைவாக 32,000 கியூபிக் மில்லியன் தண்ணீர் உட்புகுந்த வெள்ளப்பெருக்கில் 383 சுரங்கத் தொழிலாளர்கள் (இதில் 130 பேர் ஒப்பந்த ஊழியர்கள்) சிக்கிப் புதைந்து மாண்டனர். இந்தச் சுரங்கம் பொதுத்துறை இஸ்கோவுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் உலகத்தரத்தில் உள்ளதாகச் சொல்லித் தப்பித்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றது. நாற்பது ஆண்டுகள் கழித்து 2012 ல் விபத்து குறித்த தீர்ப்பு வெளியானது. கவனக்குறைவினால் நடைபெற்ற விபத்து என்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஓராண்டுச் சிறையும் ஆளுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி

சரஸ்வதி’ சிற்றிதழ் தொடங்கிய காலம் முதலாகவே 1950களிலிருந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வந்தவர் கு.சி. பா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் மிக்கவர்.

ஜனசக்தி, தீக்கதிர் முதலான நாளிதழ்களிலும் தாமரை, செம்மலர், சிகரம் முதலான மாத இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய ‘சங்கம்’ புதினம் 1985 இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “செம்மலர் மாத இதழில் இவர் எழுதிய தாகம், சங்கம், சர்க்கரை உள்ளிட்ட படைப்புகள் தொடராக வெளிவந்தன. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி. தலைமுறை மாற்றம் முதலான நாவல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

‘சுரங்கம்’ நாவலின் பின்புலம்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புரமோத் தாஸ்குப்தா மையத்தில் கு.சி.பா. 1998 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது, அசன்சால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பிகாஸ் சௌதரியைச் சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவரது தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதும் முயற்சியைத் தொடங்கினார்.

பிகாஸ் சௌதரியின் வழிகாட்டலில் தன்பாத், ஜாரியா, அசன்சால் பகுதிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களிடையே தங்கி எண்ணூறு அடி முதல் ஆயிரத்து நூறு அடி ஆழம் வரை கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றறிந்து மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான தமது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி துணையுடன் வங்காளி, இந்தித் தொழிலாளர்களிடம் பேசிப்பழகி விவாதித்து, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை அறிந்து, புதினமாகப் படைத்துள்ளார்.

“மனித வாழ்வின் சிரமங்களும் பிரச்சினைகளும் எங்கும் ஒரேவகைப்பட்டதானதால் மனிதர்களைப் புரிந்து கொள்வதிலான தடைகள் இடையூறுகளாக அமையவில்லை என்பது சாதகமான விஷயம். இருப்பினும் அம் மக்களின் முழு ஆன்மாவையும் தரிசிப்பதென்பது சாத்தியமற்ற விஷயம். அம் மனிதர்களுடன் கைபிடித்து, அம்மனிதர்களுக்குள் உருவாகும் அகமனப் போராட்டத்தை வெளிப்படுத்துவதும் கடினமான ஒன்று. இச் சிரமங்களுக்கு மத்தியில்தான் அவர்களின் கரங்களைப் பற்றவும் ஆன்மாவை தரிசிக்கவும் முயன்றிருக்கிறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘சுரங்கம்’ கதைச் சுருக்கம்

வேலை, கூலி, உயிர்ப் பாதுகாப்பு என எந்த உத்தரவாதமும் அற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், இழப்பதற்கு ஏதுமின்றி. தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே விரயப்படுத்தி உழல்கின்றனர் முதலாளிமார்களின் கஜானாவை நிரப்புகிறார்கள். சிறு சிறு தவறுகளைச் சொல்லி நியாயமான கூலியையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் மேலதிகாரிகள். இதைக் களைவதற்காக போராடத் தங்களுள் ஒருவனான பிகாஸ் சௌதரியிடம் தலைமைப்பண்பு இருப்பதை மக்கள் சோதனைக்காலங்களில் உணர்கிறார்கள். பிகாஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறான். போராட்டம் தொடர்கிறது. பண்ணையடிமைகளாக இருந்தபோதிருந்து தொடரும் அச்சம் போராட்டப்பாதை ஊடாகக் குறுக்கிட்டுத் தடைசெய்கிறது.

எப்படியாவது காலம் மாறிவிடும்; காளி கண்திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பல தொழிலாளர்கள் இப்போது நிலைமையை உணர்ந்து தொழிற்சங்க உணர்வோடு வேலைநிறுத்தத்தில் இறங்கி, நிலக்கரிச் சுரங்கத் தொழில் நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டுமென அணிதிரள்கிறார்கள். சுரங்கம் அமைக்கத் தங்களது விளைச்சல் நிலங்களை இழப்பீடு ஏதுமற்று விட்டுக்கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளையும் தனி அமைப்பின் கீழ் இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறார் பிகாஸ். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம், உண்ணாவிரதம், முற்றுகை, சிறை என்று பலவழிகளில் போராட்டப்பாதை தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி ஒருவாறாக, நிலக்கரிச் சுரங்கம் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. ஆனால், முதலாளி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக, அரசுத் தலைமைப் பொறுப்பு, தனி அமைச்சர், பெர்சனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று நிர்வாக அமைப்பின் பெயர்களில் மட்டுமே மாற்றம். கூலி கூடினாலும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் அதே நடைமுறையான முறையற்ற சுரண்டல் தொடர்கிறது. தொழிற்சங்கத்தலைவராக பிகாஸ் பலமுறை எச்சரித்தும் சுரங்கக் கட்டமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக விபத்து நேர்ந்து, பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். சகலபகுதித் தொழிலாளர்களும் உயிர் நீத்தோரின் நினைவாகத் திரண்டெழுப்பிய அஞ்சலி கீதம் எதிர்கால சமத்துவ வளவாழ்வுக்கான எழுச்சி கீதமாகிறது.

யதார்த்த சூழல் சித்திரிப்பு

மனிதர்கள், கறையான் புற்றுப் போன்ற குடிசைகளில் குடும்பம் நடத்துகின்றனர். கறையான் புற்றுக்கு பாம்புகள் வருவது வழக்கம்தானே? விஷப்பாம்புக்கடிக்கு இரையாகும் மக்களும் உண்டு. பன்றிகள், நாய்கள் படுத்த கெட்ட வாடை பகலில் உட்கார உதவும் கயிற்றுக் கட்டில், இரவில் குழந்தைகளிடமிருந்து கணவன் மனைவியின் அந்தரங்கம் காக்கும் தடுப்புச்சுவராக எழுந்து நிற்கும். ஆறுமணிக்கு காலைச்சங்கு ஒலித்ததும் கூண்டிலிருந்து சர்க்கஸ் வளையத்துக்குள் நுழையும் மிருகங்களைப்போல் சுரங்கத்துக்குள் நுழையும் தொழிலாளர்கள் கறையான் புற்றிலிருந்து ஈசல்கள் இறக்கை முளைத்துப் பறப்பது போல லிப்டிலிருந்து வெளியேறுகிறார்கள். மேல்பகுதி இயந்திரக் கொட்டகையில் ‘பிட் பாட்டத்தில்’ (உள் அடித்தளம்; இருப்பவர்களுக்குக் கேட்குமாறு மின்சார மணியொலிப்பு பணிநேரம் முடிவடைவதைத் தெரிவிப்பதும் விளக்கையும் ஹெல்மெட்டையும் தொப்பியையும் காவலாளியிடம் ஒப்படைத்துக் கையெழுத்திட்டு தொழிலாளர்கள் கீழிருந்து மேலாக வெளியேறுவதும் அடுத்த ‘ஷிப்ட் தொழிலாளர்கள் மேலிருந்து கீழிறங்கி அவசர அவசரமாக உள்வேலைக்கான உடைகளை மாற்றிக் கொண்டு கேப் லேம்ப்’ அறைக்குச் செல்வதும், ஹெல்மெட்-ஹெட்லைட்-பேட்டரி அணிகலன்களை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும் எந்திரத்தனமாக நடைபெறுகின்றன.

தண்டா (மூங்கில் கழி கொண்டு சுவற்றைத் தட்டிப்பார்த்து சுவர்க்கூரை வலுவை சோதிப்பது, ‘சேப்டி லேம்ப்’ மூலம் மீதேன் கேஸ், கார்பன்-டை- ஆக்ஸைடு கசிவு சோதிப்பது மைனிங் சர்தார் கடமை. நீர்க்கசிவு உடைப்பு சோதனை, நீர் எந்திரம் செயல்பாட்டைக் கண்காணிப்பது ‘பம்ப் கலாசி யின் பணி, நிலக்கரிப் படிவத்தை லேசான வெடிவைத்துத் தகர்க்கும் டிரில்லர்’ உடைபட்ட கரியை வெட்டிக் குவிப்பவர், அதை இரும்புத் தொட்டியில் அள்ளிப்போட்டுப் பாரம் ஏற்றுபவர்கள் என்று மூவகைப் பிரிவினர் இங்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.

கிணற்றுத்துளை வழி மேல்தளத்திலிருந்து இறங்கிவரும் மின்சார ஏணி, குடைவுச்சுவர் வழி ஒழுகும் நீர், மேற்கூரை இற்றுவிழும் ஓட்டை ஏணி, ஏணியின் துரு வாடை, கிரீசின் எண்ணெய் கமறல் ஏற்படுத்தும் குமட்டல் வாடை இருளில் ஏணி செல்லும்போது கூரையிலும் சுவர்களிலும் புரண்டோடும் ஊற்றுவெள்ளம். சுவர்ப்பக்கவாட்டு வாய்க்காலில் மழைவெள்ள இரைச்சல், ராட்சத மின் எந்திரங்கள் பள்ளங்களில் சேகரமான நீரை உறிஞ்சி தாரையாகக்கொட்டுவது, ஏணியிலிருந்து இறங்கிய தொழிலாளர்கள் ஒரேசமயத்தில் தங்களது ஹெல்மெட்கள் மூலம் இயக்கும் பேட்டரி வெளிச்சம் குறுக்களவு பதிமூன்று அடி – உயரம் ஒன்பது அடியுள்ள குடைவுப்பாதைகள், ஐம்பது அடி தடிமனான கிளைக் குடைவுத் தூண்கள் கரிப்படிவம் வரையிலான தோண்டுமிட எல்லைகள் என்ற சித்திரிப்புகள் யதார்த்தமான சுரங்கப்பாதைக்குள் திகிலுடன் நம்மைப் பயணிக்க வைப்பன.

கதை மாந்தர்கள்

பிகாஸ் சௌதரி

கதை எழுதத் தூண்டிய பிகாஸ் சௌதரியின் சொந்த தொழிற்சங்க வாழ்க்கை காரணமாக, நாயகன் பெயரும் பிகாஸ் சௌதரியாகவே அமைந்துவிட்டது. அரசியல் தொழிற்சங்க வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் நிஜ மனிதர் தோழர் பிகாஸ் சௌதரி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் சௌதரி குறித்த நாடாளுமன்ற இணையதள விவரக்குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது மேற்கு வங்க மாநில சிபிஐ எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க மாநில இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில செயற்குழு உறுப்பினராகவும், நான்கு முறை மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற அவை உறுப்பினராகவும். மத்திய அரசின் நிலக்கரித்துறை தொடர்பான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றவர். புதின நாயகனும் இவரைப்போலவே தொழிற்சங்கவாதி; மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். தத்துவப் பார்வையும் அரசியல் வழிகாட்டுதலும் தீர்மானம் மேற்கொள்வதில் தெளிந்த ஞானமும் பெறவேண்டும். அத்தோடு நிறையப் படிக்க வேண்டும் என எண்ணினான். அன்றாட உழைக்கும் மக்கள் நடத்தும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் அரசியல் பொருளாதார. நடவடிக்கைகளையும் கற்றுத்தெளிவடைய ‘கணசக்தி’ பத்திரிகையைத் தற்பொழுது முறையாகப் படிக்க ஆரம்பித்தான். “கணசக்தி” என்பது மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஐ (எம்) கட்சி வெளியிட்டுவரும் வங்காள நாளிதழ் ஆகும்.

ஜமுனா குமாரி

பிகாஸ் பெற்றோர் இருவரும் காலமான பின்னர் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்துப் படிக்சு வைத்த பிகாஸின் அக்கா தம்பிக்குத் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமானால் வாழ்க்கை முன்னேறிவிடும் என்று நம்புபவள். ஒவ்வொரு முறையும் சுரங்கத்தில் தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம், மறியல் நடக்கும் போதும் நிர்வாகம், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகும் பிகாஸ், துர்காதேவி அருளால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிப்பதாக’ நம்பும் ஜமுனா குமாரி தம்பியின் சமூக வாழ்க்கைக்குத் தடை செய்யவில்லை. எனவே தம்பியின் தொழிற்சங்க சமூக வாழ்வு இடையறாது தொடர்கிறது.

சகுந்தலா தேவி

வஞ்சகனான சுரங்க முதலாளி திவாரியின் மனைவி சகுந்தலா தேவி ’கருணைமிக்க சூழல் கைதி’ பூர்வீக கிராம வாழ்க்கையை ஏக்கத்துடன் அசைபோடுபவள். ஏழையான தன் பெற்றோருடன் உறவு அறுபடக் காரணம் கணவனின் ‘ திடீர் ‘ பணக்கார புத்தியும், பணக்கார ஒழுக்கக்கேடும் என்பதை நன்குணர்ந்தவள். அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட சமூக உயர்வட்டாரம்’ பங்கேற்கும் தமது மகளின் ஆடம்பரத் திருமண நிச்சயதார்த்தத்தில் தன் பெற்றோர் பங்கேற்பது இழிவு எனக் கணவன் கருதவே மனவேதனை கொள்கிறாள். அவனைப்பழிக்கிறாள். அவ்வப்போது பல பெண்களுடன் பாலியல் சகவாசம் வைத்திருக்கும் தன் கணவனை அறிவாள். தட்டிக்கேட்டு தனது மணவாழ்வு முறிந்துபட்டால் வரும் வலியை உணரக்கூடியவள் என்பதால், எதிர்க்க இயலாது அமைதி காக்கிறாள். ஆனால் தன்னையொத்த

சீமாட்டிகளைப் போல, கணவனின் ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகும் பாத்திரமல்ல. பொதுவாக வில்லன் என்றாலே அவன் மனைவியும் அப்படித்தான் என்று சித்திரிக்கும் இலக்கிய பாத்திரங்களைப் போலல்லாதது சகுந்தலாதேவியின் பாத்திரப்படைப்பு.

கதையில் இடம்பெறும் அங்கத காட்சிகள் சமூக அழுக்குகள் அலசப்படும் இடமாக அமைகின்றன.

மாண்பற்ற முதலாளித்துவம்

ஒருமுறை சுரங்கத்தினுள் சிறுவெடி வைத்துக் கரிப்படிவத்தைப் பிளந்தெடுக்கத் துளையிடும்பொழுது தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கி விட்டது. அதை உடனடியாக அடைத்து விடும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் பெரிய விரிசல் ஏற்பட்டு நீர்ப்பிரவாகம் எடுத்து விடும். உள்ளே உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் ஒரு தொழிலாளி தன் முதுகை அத்துவாரத்தின் மீது சாய்த்து தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கி நின்று கொண்டான். தொழிலாளர்கள் முட்டுப்பலகையை எடுத்தோடி வந்தனர். உடன் புதிய நெருக்கடி ஒன்று உருவாகிவிட்டது. அவன் அமுக்கிக் கொண்டிருந்த துவார வடும்பை ஒட்டி தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கிவிட்டது. அவன் நகர்ந்து ஒதுங்கினால் போதும், சுவரில் பெரும்பிளவு உருவாகிவிடும் இதையுணர்ந்த பொறியாளர் உடன் ஆபத்தைத் தடுக்க அமுக்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீதே பலகைகளை அழுத்தி முட்டடிக்க உத்தரவிட்டான். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல உயிரோடு அத்தொழிலாளி சுவற்றில் அறையப்பட்டான் தன் சக தொழிலாளியின் உடல் மீது மனதைக் கல்லாக்கிக் கொண்டு மற்றவர்கள் அவ்வேலையைச் செய்து முடித்தனர். அவர்களால் மறுத்துப் பேசமுடியாத நிலை. சுரங்கப் பாதுகாப்புக்காகவும் தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகவும் அவன் தவிர்க்க முடியாமல் தன் உயிரைத் தியாகம் செய்தான். அந்த கொடும் நிர்ப்பந்தத்தால் விளைந்த தியாகம், நிர்வாகத்தால் சர்வ சாதாரணமாக கடந்து செல்லப்படுகிறது.

சோசலிச எதார்த்தவாதம்

எஸ். தோதாத்ரி சோசலிச எதார்த்தவாதத்தின் அடிப்படைகள் எனும் தமது நூலில் அதன் பண்புகளைக் கீழ்க்காணுமாறு கூறுவார். “உலக இலக்கிய அரங்கில் யதார்த்தவாதம் வளர்த்து வைத்திருந்த விதிமுறைகளை அடியொற்றியே சோசலிச எதார்த்தவாதம் எழுந்தது; எதார்த்தவாதத்தில் காணப்படும் சமூக ஆய்வு முறை வகைப்பாடான பாத்திரப்படைப்பு. சமூகத்தைப் புறவயமாக (objective) ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலும் தொடருகின்றன. சமூக விமரிசனமும் ஆழமாக இடம் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக சோசலிச எதார்த்தவாதத்தில் வேறு சில புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. உழைப்பு மனிதனது வாழ்வின் அடிப்படை என்ற நோக்கம் இந்த இலக்கியங்களில் காணப்படுகிறது சமூகம் இயங்கியல் பொருள்முதல்வாத முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை சித்தரிக்கப்படுகிறது. உழைப்பவனைச் சார்ந்து நிற்கும் போக்கு காணப்படுகிறது. இதனையொட்டிய வரலாற்று உணர்வும் மனிதநேயமும் சமூக உணர்வும் மற்ற இலக்கியங்களில் காணமுடியாத அளவிற்கு இந்தவகை இலக்கியங்களில் மிகவும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சூழமைவு

சுரங்கம் புதினம் முழுவதுமாக தொழிலையும் தொழிற்சங்கத்தையும் வளர்ப்பதாகவும், படிப்படியாக சமூக மாற்றம் கோரியுமாக வளர்கிறது. ஒடுக்கப்பட்ட முதல் போராட்டத்தில் சுரங்க முதலாளிகளின் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தெளிகிறான் பிகாஸ்.  சகதொழிலாளிகளிடமிருந்து எழுச்சி பெறும் ஒரு தலைமைப் பண்பாளனை அடையாளம் கண்டடைந்து, மேலும் போராட்டத்திற்கு ஊக்குவிக்கிறது தொழிலாளி வர்க்கம். எதார்த்தமான சூழலுடன் கிளர்ச்சிப் பிரச்சாரம் இணையவே கூடுதல் வலு கிடைக்கிறது. போராட்டம் வெற்றிபெறுகிறது. சூழல் கனியவே, சுரங்கத்தொழில் பொதுத்துறை வசமாகிறது,

கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பின் மீதான உரையாடல் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தனியார் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் தந்து ஏமாந்த விவசாயிகளையும் போராட்டத்தில் இணைப்பதன் தேவையை உணர்த்தும் தொழிற்சங்கத்தலைவர். வர்க்க சமரசமின்றிப் போராடும் தலைமையின் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் சமூக விமர்சனமாக விவாதங்களில் இடம் பெறுவதோடு முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றன.

சுரண்டலின் உச்சம்

கூலியைக் கூட ஏமாற்றிப் பிடித்தம் செய்து சுரண்டுவது முதலாளித்துவ நடைமுறை கந்துவட்டிக்காரர்களும் சாராயக்கடைக்காரர்களும் முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவைபுரிவது முதலாளித்துவ சுதந்திரத்தில் அனுமதிக்கப்படுகிறது. நியாயமான கூலிகேட்டு அணிதிரளாமல் பார்த்துக் கொள்வதில் இது முதலாளிகளுக்கு உதவுகிறது. சாராயம், கந்துவட்டியில் அவதியுறும் தொழிலாளர் வர்க்கம் இற்று அழிவதை முதலாளி வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. தன்னுயிரைத் திரணமாக மதித்து வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்கள் ஒருமுறையே சாகிறார்கள்; அடிமைகள் அன்றாடம் சாகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

வர்க்கப் போராட்ட பார்வை நாவலின் ஆதாரமாக ஓடுகிறது.  தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் மீண்டும் பிகாஸ் சௌதரி தலைமையில் அணிதிரள்கிறார்கள் வர்க்கப் போராட்ட எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத நிர்வாகம், தொழிலாளர்களை உளவறிய முயல்வதையும், திரள விடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டம்

‘சுரங்கம்’ புதினம் முழுவதுமே அனுபவ ரீதியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறியதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமை எவ்வாறு நிறைவேறியது? ஒன்றுபட்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் உருக்குப்போன்ற ஒற்றுமையினால் தான். அளவில் ஏற்படும் மாற்றம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோலக் குணத்தில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை முதலாளிகளுக்குச் சாதகமே. கூடுதல் எண்ணிக்கை இதர பகுதி தொழிலாளர்களையும் வேலை இழப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. ‘ஒற்றுமைக்கான போராட்டம், போராட்டத்திற்கான ஒற்றுமை என்பதை தொழிற்சங்க இயக்கம் இயங்கியல் அடிப்படையில் அணுகுவதால் முதல் தோல்வியிலிருந்து பெறும் படிப்பினை படிநிலைகளில் வெற்றியடைவதில் முடிகிறது.

முடிவுரை

நாவலின் காலகட்டம் 1975 வரைக்குமானது என்று ஆசிரியர் கு.சி.பா., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எண்ணற்ற போராட்டங்கள் மூலம் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்கு சுரங்கத்தொழில் மாறியது. இருந்தபின்னும் சுரண்டல் முறை தொடர்கிறது சுரங்கத் தொழில் இப்போது மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டும் சுரங்கத்தொழில் மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. 1972- 73 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட சுரங்கத்தொழில் சட்டங்கள், மார்ச் 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரியற்ற சக்கையான சுரங்கங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களை நாடுவதற்கு ஒப்பாக தொழிலாளர்களும் சக்கையானபின் தூக்கி வீசப்படுகிறார்கள். மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறைக்கு முடிவுகட்டும் வரை விடியல் இல்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் ‘மீண்டும் லாபம், அதிக லாபம் மட்டுமே குறிக்கோள்’ எனும் சுரண்டல் புதுப்புது வடிவங்களில் உருவாகிறது.

சுரங்கம் நாவலில்,“தன்பாத் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி பிறருக்காக எப்படி தன்னைத்தானே உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டான்? என்ற தொழிலாளர்களின் அடிமனதில் உறைந்துவிட்ட சித்திரம் வீரயுக எழுச்சிப்பாடலாக ஒலிக்கும். பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு.  சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …

– ந. ரகுராம்

ஒருஆறு, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை. அதனையொட்டி முளைக்கும் தொழிற் சாலை, அதன் மூலம் விளையும் நன்மை-தீமைகள் இவைகளை மையமாகக் கொண்டு கோவை மாநகரையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60 முதல் 70 ஆண்டுகளாக வாழ்ந்த மூன்று தலைமுறை மக்களின் வரலாற்றை பதிவு செய்கிறது முகிலினி நாவல்.

எழுத்தாளர் முருகவேள், மூன்று தலைமுறை வரலாற்றை, குறிப்பாக கோவை போன்ற தொழிற் சாலைகளும், தொழிலாளி வர்க்கம் மிகவும் எழுச்சியோடு வளர்ந்த ஒருநகரின் வரலாற்றை 500 பக்கத்திற்குள் கொண்டு வந்திருப்பது 100 யானைகளைக் கட்டி இழுப்பதற்கு சமம். அதை அவருடைய முன்னுரையிலேயே அறிந்து கொள்ள லாம். இத்தகைய பணியை பலரது உதவியோடு மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆலையும், தொழிற்சாலையும், அணுமின்நிலையங்களும் துவங்கப்படும்போதும் இவையனைத்தும் “வளர்ச்சிக்கானது” என மீண்டும் மீண்டும் ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கின்றன. “கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்காக அடிக் கல்நாட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வருகை” என்ற செய்தியை வாசிக்கும்போது பள்ளிச்சிறுவனாக இருந்த என்மனதில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றியது. உண்மை அவ்வாறில்லை; முதலாளித்துவ ஆளுகையில் எந்த வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

நாவலின் காலச் சூழல்:
1940 களில் பவானி ஆற்றை ஒட்டிய சிறுமுகை என்னும் கிராமத்திலிருந்து துவங்குகிறது நாவல். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நகருகிறது. மக்கள் அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும், கவலையுமின்றி வாழ்ந்து வந்தார்கள் என்று அர்த்தமல்ல. பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் உண்ண அரிசியின்றி கம்பும் சோளமும், கேழ்வர கும் உண்டு வாழ்ந்தார்கள். அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்று விடுதலை பெற்றபின்னர் இந்திய நாடு புதியதொரு யுகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தருணத்தில், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை திணிக்கப்படுகிறது. அப் போது, ஆடைஉற்பத்தி தொழிலை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கோவைநகரம் பொருளா தார பாதிப்புகளை எதிர்கொள்கிறது. முக்கிய மூலப் பொருளான பருத்தி பாகிஸ்தானிலிருந்தே இறக்குமதியாகிய சூழலில், கடும் பாதிப்புகள் உருவாகின.

விஸ்கோசின் இந்திய நுழைவு:
மாற்று வாய்ப்புகளைத் தேடிய ஆலைமுத லாளிகளில் ஒருவரான கஸ்தூரிசாமிநாயுடு, இத்தாலியை சேர்ந்த இத்தாலியானா விஸ்கோ ஸின் தொழில்நுட்பத்தை பெற முனைந்தார். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்து துவண்டு போயிருந்த இத்தாலியின் அந்த நிறு வனம், இசைவு தெரிவித்தது. வரலாற்றுப் பார் வையில் நோக்கும்போது, போர்தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டின் மூலதனமும், அடிமைப்பட்டுக் கிடந்து எழுந்து வரும் மற்றொரு நாட்டின் மூலதனமும் “முன்னேற்றம்” என்று கூறிக்கொண்டே ஒன்றாகப் பயணிக்கத் துவங்கின.

உற்பத்தியும், உடல் உபாதைகளும்:
சுற்றுப்புறத்திலிருக்கும் பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலை நம்பிக்கை கொடுத்தது. கோவை மில்களில் கிடைக்கும் கூலியைவிட ஓரிருமடங்கு அதிகமான கூலியுடன் வேலை கிடைத்தது. ஆலையின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் முன்னாள் இராணுவ வீரரும், தமிழ் ஆர்வலரும், திராவிடக் கொள்கையின் தீவிர பற்றாளருமான ராஜூவுடன், அவரது நண் பரும், கம்யூனிச ஈடுபாடுகொண்டவரும், தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட வருமான ஆரான் மேற்கொள்ளும் விவாதங்கள் வழியாக அன்றைய தமிழகத்தில் கம்யூனிச மற்றும் திராவிட சிந்தனைகளின் தாக்கம் நம் கண்முன் விரிகிறது.

கூலி கொடுக்கப்படும் நாட்கள் திருவிழாக் கோலமே. கூலி வந்தவுடன் தொழிலாளிகள் பலர் மேட்டுப்பாளையத்திற்கு செல்வதும், துணி மணிகள், இனிப்பு வகைகள் வாங்குவது என களைகட்டும்.

இத்தாலியிலிருந்து இறக்குமதியாகும் மரஅட்டை களுடன் கந்தகஅமிலம், சுண்ணாம்புக்கல் என பல வேதிப்பொருட்களைச் சேர்த்து ரேயான் செயற்கை இழை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளிகள் பல வேதிப் பொருட்களை கையாண்டு வருவதால் அவர் களுக்கு தோல் வியாதிகளும், நுரையீரல் வியாதி களும் என பல வியாதிகள் தென்படத் துவங்கின. ஆலையில் கணக்கராக வேலைபார்க்கும் ராஜூ வுக்கும் ஆஸ்துமா அறிகுறிகள் தென்படத் துவங் கின. கைநிறைய ஊதியம் வருவதால் யாரும் தங்களுக்கு வந்து கொண்டிருக்கின்ற வியாதி களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்ட தாகத் தெரியவில்லை.

யூகலிப்டஸ் அட்டைகள்:
மர அட்டைகள் இத்தாலியிலிருந்து இறக்கு மதி செய்வதற்கு பதிலாக, ஊட்டி நீலகிரி மலைத் தொடர்களில் வளர்ந்து கிடந்த யூகலிப்டஸ் மரங் களை கொண்டு தயாரிக்க முடிவு செய்தார்கள். மரங்களை வெட்டுவதற்கான உரிமைப்பெற அன் றைய தமிழக முதலமைச்சர் காமராஜரை, கஸ்தூரி சாமி நாயுடுவும் அவருடைய மாமனாரும் காந்தியவாதியுமான சௌந்தர்ராஜனும் சந்தித்து ஒப்புதல் பெற்றனர்.

1965 முதல் 1990 வரை:
அப்போது தமிழகம் அரசியல் மாற்றத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. நீதிக் கட்சி, பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம், திரா விட இயக்கங்களின் எழுச்சி இதனூடே கம்யூனிசக் கொள்கைகளும் வளர்ந்து கொண்டிருந்தது. ஆலை முதலாளிகளுக்கிடையேயான விவாதங்களின் போது இயல்பாகவே கம்யூனிசஎதிர்ப்பு இடம் பெற்றது, அத்தோடு குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பிராமணரல்லாத முதலாளிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குலக்கல்வி திட்டம் தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது என்ற எண்ணம் வெகுவாக வளர்ந்திருந்தது. மத்திய அரசு கொண்டுவந்த இந்தித் திணிப்பிற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை திமுக வெகுவாக தனதாக்கிக் கொண்டது.
பல கலவரங்கள், துப்பாக்கிச்சூடு என மாநிலம் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண் டிருந்தது. தொடர்போராட்டம் மத்தியஅரசைக் கீழ்ப்படிய வைத்தது. இத்தகைய சூழலில் தேர் தலில் திமுக வென்று அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார். 1969 இல் அண்ணா மறை விற்குப்பிறகு திமுக உடைந்துவிடும்; ஆட்சி கலைந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் முதலாளிகளின் பெரும்பகுதியின ரின் ஆதரவு திமுகவிற்கு இருந்தது. அதன் தலை வராகவும் தமிழகத்தின் முதலமைச்சராகவும் கருணாநிதி தன்னை உயர்த்திக் கொண்டார்.

“தனியார்த்துறை நிர்வாகிக்கும் எல்லாத்துறை யும் திறம்பட செயல்படும்” என்று கூறுவோர்கள் உண்டு. ஆனால் “அரசின் ஒத்துழைப்பின்றி இங்கே எந்தவொரு தொழிற்சாலையும் முன்னேற இயலாது”. ஊட்டி, நீலகிரி மலைத்தொடர்களில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி மரக்கூழ் உற்பத்தி செய்யும் பிரிவை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

காகிதம், அட்டை, கந்தக அமிலம், உரம், பூச்சிக்கொல்லி மருந்து என பல பொருட்களின் உற்பத்திகள் தொடங்கின. மரக்கூழ் உற்பத்தி 25 டன்னிலிருந்து 60 டன் என்ற இலக்கை நிர்ண யித்தது ஆலைநிர்வாகம். எப்படியாவது டெக்கான் ரேயான் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து விடவேண்டும் என்ற ஆவலோடு பல விவசாயக் கூலிகளும், பழங்குடியினரும் காத்திருந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வெட்டும் பணியில் 3 மாதங்களுக்கு ஈடுபட்டால் கம்பெனி வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் என்ற வாக்குறுதி யோடு, பழங்குடியினர் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும்குளிர், முதுகெலும்பு சில்லிடும் அதிகாலைப்பனியில் மரம் வெட்ட வைத்தார்கள். 3 மாத கடும்வேலைக்குப்பிறகு வீடு திரும்பிய மாரிமுத்துவுக்கு “கடும்பனி, சேறு நிறைந்த சகதியில் தொடர்ந்து வேலை பார்த்ததால் இரண்டு கால்விரல்களை துண்டிக்க நேர்ந்தது”.

உலக மாற்றங்களும், உள்ளூர் முதலாளிகளும்:
1980 களுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வு பரவலாக மக்களிடம் பரவியது. இதனையொட்டி நடை பெற்ற போராட்டங்களால் பல தொழிற்சாலை கள் நெருக்கடிகளை சந்தித்தன. சூழலியல் சார்ந்து ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இத்தாலியான விஸ்கோஸ் நிறுவனம் மரக்கூழ் மற்றும் ரேயான்நூலிழைகள் தயாரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.
இலாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கிக் கொண்டிருக்கும் கஸ்தூரிசாமி நாயுடு போன்ற முதலாளிகளுக்கு, ஐரோப்பாவின் இத்தகைய மாற்றம் விசித்திரமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தன. இப்போதும் கூட, ஒரு பேரழிவு நிகழும்போது எத்தகைய நடவடிக் கைகள் எடுக்கவேண்டுமென்ற அடிப்படை அறிவோ வசதியோ இல்லாமல்தானே இந்தியா போன்ற நாடுகளில் ‘வளர்ச்சி’ கட்டமைக்கப் படுகிறது!

பங்குகளின் மடைமாற்றம்:
இத்தாலியான விஸ்கோஸாவின் 24 சதவித பங்குகள் துபாயைச் சேர்ந்த சமியாவுக்கு மாற்றப் பட்டது. பின் டாடா குழுமத்தின் பங்குதாரரா கவுள்ள கேன்டி என்பவர் வசம் வந்தது. நீதி மன்றத்தில் சில முயற்சிகளுக்கு பின் கஸ்தூரிசாமி நாயுடுவும் தன்பங்குகளையும் கேன்டியிடம் விற்று விட முடிவு செய்தார். அவர் இதற்கு முன்னரே ரேயான் உற்பத்தியல்லாமல் டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் என்னும் தொழிற்சாலையை நிறுவி யிருந்தார். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயத்திற்குத் தேவையான பம்புசெட்டுகள், மோட்டார்கள் என டெக்கான் அக்ரோ கெமிக் கல்ஸ் நிறுவனம் வேறொரு பாதையில் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இலாபம்- அதிகஇலாபம்- கொள்ளைஇலாபம் என்ற நோக்கத்தோடு மட்டும் இயங்கும் தொழிற் சாலை, மரக்கூழ் உற்பத்தியளவை 60 டன்னி லிருந்து 250 டன்னுக்கு உயர்த்துவதை நோக்கி பயணித்தது.

முகிலியின் வேதிக் கழிவுகள்:
உற்பத்தி பெருகும்போது டெக்கான் ரேயான் ஆலையின் கழிவுகளும் பெருகின. அமிலமும், வேதிப்பொருட்களும் கலந்த கழிவுகள் இரவு நேரங்களில் ஆற்றில் டன்கணக்கில் திறந்து விடப் பட்டது. ஒருகட்டத்தில் தொழிற்சாலையிலிருந்து கூடுதுறைவரையிலான சுமார் 70 கிமீ தொலை விற்கு ஆறு முழுவதுமாக மாசுபட்டிருந்தது. இந்த நீரை குடித்த ஆடு, மாடு, மான் ஆற்றுநீரில் வாழ்ந்த மீன்கள் என அனைத்தும் பாதிக்கப் பட்டன. செத்து மடிந்தன.

ஆற்றைச் சுற்றிய விவசாய நிலங்கள் யாவும் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன. மக்களின் கோபம் மெதுவாக டெக்கான் ரேயான் நிறுவனத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந் தது. இதற்காக பல போராட்டங்கள், ஊர்வலங் கள், தெருமுனைக் கூட்டங்கள் என நாள்தோறும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. ஆற்றைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப் புகள் யாவும் தொழிற்சாலையை இழுத்து மூடக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.

ஆலையில் பணியாற்றிய ராஜூ குடும்பத்தார் அனைவரும் பவானி ஆற்றினை, முகிலினி என்றே அழைத்து வந்தனர். ராஜூவின் பேரன் கௌதம் கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வந்தான். அதேவேளையில் தனது தாத்தாவின் தமிழ்ப்புலமையும், தாத்தாவின் நண்பர்ஆரான் அவர்களின் இடதுசாரிக் கொள்கைகளையும் சிறுவயதிலிருந்தே கேட்டுவளர்ந்தான். ஆறு, அதையொட்டிய தனது குடும்ப வளர்ச்சியைக் கண்டு வளர்ந்த அவன், ஆற்றையும் சுற்றுப்புறச் சூழலை காக்கும் போராட்டத்தில் இயல்பாகவே தன்னை இணைத்துக் கொண்டான்.

உலக மயமாக்கலுக்குப் பிறகு சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்திய இடதுசாரி இளைஞர் அமைப்பு போராட்டங் களை நடத்தியது. வழக்கின் தீர்ப்புகள் ஆலைக்குச் சாதகமாக வந்தன. இந்த சூழலில், இளைஞர் அமைப்பின் கவனம் மலைவாழ் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் சங்கம் கட்டுவதை நோக்கித் திரும்பியது.

”டெக்கான் ரேயான் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்” என நதிநீர் பாதுகாப்பு அமைப் புகள் தொடர்ந்து குரல் கொடுத்தன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த காரணத்தால், தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இதுபற்றிய விவாதங்கள் இரு அமைப்புகளுக்குமிடையே நடந்து வந்தது.
“இப்ப நீங்க என்ன சொல்றீங்க, இந்த மண்ணை யும், ஆத்தையும் விட, இயற்கை வளத்த காப் பாத்திரத விட வேறென்ன உங்களுக்கு முக்கியமா படுது? உங்களுக்கும் கேன்டிக்கும் அப்படி யென்ன உறவு? ” என ஒரு இளைஞன் கேள்விகளை அடுக்கினான்.

இளைஞனை நோக்கி பேசிய தொழிற்சங்கத் தலைவர் நிதானமாக “கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை சற்று சிந்தியுங்கள். 40 க்கும் அதிகமான மில்கள் இங்கே மூடப்பட்டு விட்டது. ஒரு மில் மூடப்படும்போது அதற்கு காரணமாக நிர்வாகக் கோளாறு என்றே வெளியே கூறபட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு மில்லாக தொடர்ந்து மூடப்படும்போது அது நிர்வாகக் கோளாறோ அல்லது குளறுபடியோ இல்லை… டெக்ஸ்டைல் துறையில்தான் முதன்முதலாக உலகமயமாக்க லும், தாராளவாதமும் சோதித்துப் பார்க்கப் பட்டது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு ஆலை, அதாவது ஸ்பின்னிங், வீவிங், டிரையிங் என பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது. பல கிராமங்களிலிருந்து மக்கள் கோவை, திருப்பூர் நகரிலுள்ள ஆலைகளை நோக்கி ஆளும் வர்க்கம் நகர்த்தி வந்தது. தொடர்ச்சியான போராட்டங் கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்களின் மூலம் குறிப்பிட்ட சில சலுகைகளையும் வெற்றிகளையும் பெற்றோம்.

உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, தொழிலாளர்களின் நிலை மீண்டும் 40 , 50 ஆண்டுகளுக்கு பின்னே நகர்த்தப்பட்டு விட்டது. வேறுவழியின்றி பள்ளிக்குச் சென்று கொண் டிருந்த குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு, அவர்களை வேலைக்கு அனுப்பும் போக்கு காண முடிகிறது. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் மதவாதமும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வளர்க் கப்பட்டு வருகிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் தங் களுடைய செயல்பாடுகளை பூஜ்ஜியத்திலிருந்து துவங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆலை மூடப்பட்டால் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்து வீதிக்கு வருவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் கேள்விக்குறியாகி விடும்” என்றார்.

அத்தோடு நில்லாமல் “உங்களின் கோரிக்கை மிகவும் முக்கியமானது; நியாயமானது; நம் போராட்டங்கள் வருங்காலத்தில் உறுதியாக ஒரு புள்ளியில் இணையும்” என்றும் கூறினார். இதைக் கேட்ட கௌதமுடைய மனதில் “தொழிற்சங் கங்களும் நம்மோடு இந்த போராட்டத்தில் உடன் நின்றிருக்க வேண்டும். எது அவர்களை இந்தப் போராட்டத்திலிருந்து நம்மிடமிருந்து பிரித்து வைத்தது.” என்னும் கேள்வி ஆழமாக எழும்பியது.

தீர்ப்பும் அதன் பின்னரும்:
நதிநீர் பாதுகாப்பு போராட்டத்தில், அதிகார வர்க்கம் காவல்துறையைக் கொண்டு தடியடி, கண்ணீர்புகைக்குண்டு என வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டது. கடும் போராட்டத்திற்குப் பின் நீதிமன்றம் கழிவுகளை அகற்றவும், தொழிற் சாலையை நிரந்தரமாக மூடவும் தீர்ப்பெழுதியது. மறுமுனையில் அந்த ஆலையில் வேலை பார்த்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலையையிழந்து, ”ஆலையைதிற! அல்லது தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய ஓய்வுகால வைப்புத்தொகை மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் உடனே வழங்கு! தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே! “  என தொழிற்சங்கங்கள் ஆலைக்கு முன்பாக போராட்டத்தில் இறங்கினார்கள். நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர். ஆலை மூடப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்துவிட்டதா? என்னும் கேள்வி எழுந்தது. மூடப்பட்ட ஆலைக்கு உள்ளிருந்து மோட்டார்கள், இரும்பு சாமான்களை சிலர் திருடும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்தது. சிலர் சூழ்நிலையின் காரணமாக வலுக்கட்டாயமாக அத்தகைய திருட்டுவேலைகளில் திணிக்கப் பட்டனர். கோவை நகரில் 1990களுக்குப் பிறகு மதவாதம் காலுன்றியது.

அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பிய கஸ்தூரிசாமி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் பாலாஜி வந்ததும் வராதது மாக இயற்கை விவசாயத்தைப் பற்றி தனது குடும்பத்தினருடன் குறிப்பாக தனது தாத்தா கஸ்தூரிசாமி நாயுடு மற்றும் பாட்டி சௌதா வுடன் தீவிரமாக ஆலோசித்தான். “ஆர்கானிக் விளைபொருட்களுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சந்தை இங்கே உருவாகும்” என்று விவரித் தான். இவையெல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் 80 வயதைத் தாண்டிய கஸ்தூரிசாமி நாயுடு, பிறகு தனது பேரன் விவரித் ததை ஆமோதிப்பதுபோல தலையையசைத்து தனது சம்மதத்தையும் தெரிவித்துச் சென்றார். தங்களுக்கு சொந்தமான நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்வதைத் துவங்கினான் பாலாஜி.

கதைப்போக்கில் சாமியார்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறார் ஆசிரியர். ஆசிமானந்தசாமிகள் ஜக்கிவாசுதேவன் வகையறாக்களை ஞாபகப் படுத்துகிறார். விளைபொருட்களை வெளிநாடு களுக்கும் ஆசிமானந்தசாமிகளின் ஆசிரமத்திற் கும் விற்கும் தொழிலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தான் பாலாஜி.
அமெரிக்காவில் தகவல்தொழில்நுட்பத் துறை யில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வைத் தேடி நாடு திரும்பியிருந்த திருநாவுக்கரசுவிற்கும், கௌதமிற்கும் இடை யிலான கம்யூனிசம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய விவாதங்கள் வெளிப்படுகின்றன.

துறவி போல வாழத்துவங்கியிருந்த திருநாவுக் கரசைப் பார்த்து இது ஓய்வுக்கால வாழ்வு என்றும், ‘ஒவ்வொரு நாளும் ஏரி, குளங்கள், ஆறு, ஆற்றுமணல், காடு, மலை என அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக் கிறது, அதைப்பற்றி சிந்திக்காமல் தான் ஒருவன் மட்டுமே மாறுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?’ என்று கௌதம் கேட்கிறான். இருப் பினும் திருநாவுக்கரசின் நோக்கமும், தனது நோக்கமும் ஒருபுள்ளியில் நிச்சயம் இணையும் என்றே எண்ணினான்.

சூழலியலும், மார்க்சியமும்:
முதலாளித்துவம் எல்லாவற்றையும் லாப நோக்கிலேயே அணுகுகிறது. மக்களிடம் நுகர்வு கலாச்சாரத்தைத் திணிக்கும் உலகமயம், பாதிப் புகளை மூன்றாம் உலக நாடுகளிடமும், சாமானிய மக்கள் தலையிலும் கட்டி நழுவுகிறது. முதலாளித் துவத்தின் குழந்தைப் பருவத்திலேயே அதன் கோர முகத்தை இந்த உலகுக்கு காட்டிய மார்க்ஸூம் ஏங்கெல்சும் “சூழலியல்” ஒரு தனிக்கருத்தாக்க மாக அறிமுகமாகாத காலத்திலேயே, இது பற்றிய எச்சரிக்கை மணியைஅடிக்கத் தவறவில்லை.
“மக்களை, குறிப்பாக ஏழைகளையும் ஒதுக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலியல் பிரச்சனைகளை கட்சி கையிலெடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித் துள்ளது. இடது ஜனநாயகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, “சூழலியல் பாதுகாப்பும், ஆற்றல், நீர் நிலைகள் மற்றும் தேசிய வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண் டும்” என குறிப்பிடுகிறது.
மூலதனம் புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ்,”ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ, ஒரு குறிப்பிட்ட தேசமோ, ஏன் ஒட்டுமொத்த சமுதாயமோ அல்லது அனைத்து தேசங்களுமோ இவ்வுலகில் உள்ள இயற்கை வளங்களை ஒரு போதும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்து சமூகமும், மனிதர்களும் வெறும் பயனாளிகள் மட்டுமே. எக்காரணத்தைக் கொண்டும் உரிமை கொண்டாடிவிட முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

இயற்கையின் இயங்கியல் புத்தகத்தில் எங்கெல்ஸ், “மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் பிற மிருகங்கள் இயற்கையின் பயன்களை மட்டுமே அனுபவிக்கிறது. ஆனால் மனிதஇனம் இயற்கை வளங்களை அனுபவிப்ப தோடு மட்டுமின்றி அதனை அடக்கி ஆள்வதன் மூலம் அதை ஒடுக்கி வெல்லத் தலைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போதும் அதற்கான வெற்றி சன்மானமாக இயற்கை மனித இனத்தை வெல்கிறது.” என்கிறார்.
சூழலியல் இழப்புகளைக் கண்டுணர்ந்தோரிடம் எழும் இயல்பான அக்கறையும், சூழலியல் சிக்கல் களை ஏற்படுத்திய அதே முதலாளிகள் ‘இயற்கை விளைபொருட்கள்’ என்ற நோக்கில் சந்தை வாய்ப் பாக மாற்றிக் கொள்வதும் நாவலின் போக்கில் கண் முன் காட்சிப்படுகின்றன. இயற்கை வளங் களை வரன்முறையற்றுச் சுரண்டிக் குவிக்கும் முதலாளிகளும், அவர்களுக்குத் துணைபோகும் அரசுக் கட்டமைப்பும் – மிகத் தெளிவான பார் வையுடன் எதிர்கொள்ளப்பட வேண்டியவை. மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்கான நம் போராட்டத்திற்கு, முகிலினி வாசிப்பு உதவியாக அமையும்.