தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இன்றைய பன்னாட்டு சூழல் மிகவும் சவாலானதாக உள்ளது. 2008இல் வெடித்த உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின் பல ஆண்டுகளாகவே உலக முதலாளித்துவ அமைப்பு மந்த நிலையில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தொற்றும் அதனையொட்டி அமலாக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும் மந்தநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் பன்னாட்டு பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது. ஓரளவு ஏற்றுமதியை சார்ந்துள்ள தமிழ் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதிப்பாக அமையும்.

இந்தியாவின் தேசீய பொருளாதார நிலைமை சாதகமாக இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தீவிர தாராளமய கொள்கைகளாலும் 2016 நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனையடுத்து அமலுக்கு வந்த குளறுபடியான ஜிஎஸ்டி ஆகியவற்றாலும் விவசாயம், சிறு,குறு தொழில்கள் உள்ளிட்ட முறைசாரா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி தாக்குதலாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வருமானவரி சலுகைகளாலும் மாநிலங்களின் நிதிநிலைமையும் மோசமானது. பெரும் தொற்றும் அதனை ஒன்றிய அரசு எதிர்கொண்ட விதமும் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகவே அமைந்தது.

எங்கே ‘திராவிட மாடல்’?

இத்தகைய சூழலில் 2022-23க்கான தமிழ் நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18 அன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் பல முறை ‘திராவிட மாடல்’ என்று தனது பட்ஜட்டை வர்ணித்துள்ளார். இதன் பொருள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு முன்னெடுக்கும் என்று சிலர் இதை புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் உண்மையில் தமிழ் நாடு அரசின் பட்ஜட் வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. இதர, மக்கள் நலன் சார்ந்த முனைவுகளும் இந்த பட்ஜட்டில் மிகக்குறைவுதான். இதன் பின்புலம் என்னவெனில் நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் தீவிர தாராளமய கொள்கைகளை பெருமளவிற்கு பின்பற்றுகிறார். அரசின் வரவு-செலவு இடைவெளி இலக்கை அடைவதற்கு செலவுகளை குறைப்பது மட்டுமே வழி என்ற தாராளமய கோட்பாட்டை அவர் ஏற்கிறார். இது பற்றிய விவரங்களை காண்போம்.

பட்ஜட் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு சொற்பமே

பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்த்தாலே, மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது என்பது புலனாகும். கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக, கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 13.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 32,599.54 கோடி ரூபாய். இப்போது அது 36,895.89 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதைப்போல கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஒதுக்கீடு 22,738 கோடியிலிருந்து 26,647 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 17.2 சதவீத உயர்வு.
ஆனால் பெரும்பாலான மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் உயர்வு எதுவும் இல்லை.

உயர்கல்வித்துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் 5,668.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 5,369.09 கோடி ரூபாய். சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற ஆண்டு 18,933 கோடி. ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் 17,901.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வீழ்ச்சியை இந்த ஒதுக்கீடுகள் காட்டுகின்றன. சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப் பாதுகாப்பு, ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி பட்ஜெட் மௌனம் சாதிக்கிறது.

வேளாண் துறை சார்ந்த முதலீடுகள் குறைவு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீர்வாக, தொடர்ந்து வேளாண்மையை நவீன மயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைப்போன்றே அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு நகரப்புறம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தவும் முயற்சி இல்லை.

2021-22 ஆண்டிலேயே சிக்கன நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை (fiscal deficit) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.8 % ஆக குறைத்துள்ளார் நிதி அமைச்சர். பதினைந்தாவது நிதி ஆணையம் அனுமதித்துள்ள 4.5% என்பதை பயன்படுத்தி வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகமாக செய்திருக்க முடியும். வரும் 2022-23 ஆண்டிலும் கூடுதலாக மூலதனச் செலவுகளை மேற்கொண்டிருக்க முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணத்தை கூட்டவும், கிராக்கியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் தவறி விட்டார்.

பதுங்கியிருக்கும் தாராளமய கோட்பாடு

இந்த விளைவுகள் எல்லாம், நிதிநிலையைப் உறுதிப்படுத்துவதற்கான ‘அவசர’ தேவையைப் பற்றி நிதியமைச்சர் சொன்ன கருத்துடன் ஒத்திசைவானவை. உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதப் பங்கு என்ற அலகில் கடன்களைக் குறைத்தல், நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்தல் ஆகியவை நிதிநிலையைப் உறுதிப்படுத்தும் அம்சங்கள். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது பட்ஜெட் உரையில் பிடிஆர் இப்படிச் சொன்னார்: “நிதிநிலையைப் பலப்படுத்துதல் என்பது அடிப்படைக் கொள்கை. தமிழ்நாடு நிதிப்பொறுப்பு சட்டம் சொல்லும் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, இனி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்த மாநில அரசு. அதே சமயம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக முதலீடும் செய்யப்படும்.”
இதிலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், நலத்திட்டங்களுக்கும், ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கும் இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் முரண்பாடு.

கல்வி மட்டுமல்ல; உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் மனித மேம்பாட்டுக்கு உதவும். இத்தகைய முதலீடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஏன் கருதப்படுகிறது? “பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்போது, சமூகநலனும், ஒட்டுமொத்தப் பொருளாதார முன்னேற்றமும் சமன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய இரண்டு (எதிர்மறை) பக்கங்கள்,” என்று தனது பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகாராஜன் சொல்லியிருந்தார். இப்பார்வையில் சிக்கல் உள்ளது.

மக்கள் நலன் காக்கும் செலவுகள் வளர்ச்சிக்கு எதிரானதா?

ஏன் சமூகநலன் சார்ந்த செலவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவே வைக்கப்படுகிறது? சமூகநலத் திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே ஏன் பார்க்கப்படுகின்றன? ‘உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவை நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் மக்களின் உரிமைகள்’ என்று பார்க்கப்பட வேண்டும். ‘பெரிய மனதுடன்’ அரசு அளிக்கும் கொடைகள் அல்ல இவை. பிரச்சினை என்னவெனில் ’புதிய தாராளமயக் கொள்கை’ என்பது ‘சமூக நலனோடும்’ ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியோடும்’ ஒத்துப்போவதில்லை. சமூகநலனையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த, ஜனநாயகத் தன்மை கொண்ட வளர்ச்சியை முன்னெடுப்பதும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்ற பார்வைக்கும், ஜனநாயக அரசாங்கத்தை ‘திறமையான’ முதலாளித்துவ தாராளமய பொருளாதாரத்திற்கு பெருந்தடையாக, தொல்லையாகப் பார்க்கும் புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையில்தான் உண்மையான போராட்டம் நிகழ்கிறது.

புதிய தாராளமய அமைப்பில் ஏற்படும் ‘வளர்ச்சி’ கொழுத்த நிதி மூலதனத்தின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கவனித்துக் கொள்வதும், அதனால் சமத்துவமின்மையும், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருந்திரள் வறுமையும் அதிகரிப்பதும் உலகம் முழுவதும் காணப்படும் போக்குதான். அதற்காக வளர்ச்சியே வேண்டாமென்று பொருளல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

உண்மை என்ன?

நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப்பரவலின், ஊரடங்குகளின் கடுமையான விளைவுகள் மட்டுமல்ல; பொருளாதார வளர்ச்சி மந்தம், வேலையின்மை அதிகரிப்பு, சீறி உயரும் விலைவாசி ஆகியவையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மேலும், முறைசாராத் துறையை சீரழித்த 2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு என்ற நாசகார நடவடிக்கையும், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி படு தோல்வியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்திய துன்பம் மக்களை பாடாய்ப்படுத்துகிறது.

2017-18-க்கான உழைப்பு படை ஆய்வும், 2017-18-க்கான நுகர்வோர் செலவு ஆய்வும், 2018-19 ஆண்டை மையப்படுத்தி இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் நிலையைப் பற்றி சமீபத்தில் வந்த தேசிய மாதிரி ஆய்வும் மக்களிடையே பரவலாக நிலவும் துயரத்தை, வாங்கும் சக்தி இழப்பை, வெளிக்காட்டின. மற்ற சில மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனாலும் கிராமப்புற தமிழ்நாட்டு வேளாண் வீடுகளில் சராசரி மாத வருமானம் பற்றிய தேசிய மாதிரி ஆய்வு தரும் தகவல்களில் இருந்து, அந்தச் சராசரி வருமானம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை அறிய முடிகிறது. அறிவுபூர்வமாக வறுமையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட எந்த வரையறையின்படி பார்த்தாலும், கணிசமான அளவு கிராமத்து மக்கள் ஏழைகள்தான் என்பது அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.

ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 அல்லது 8 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்று பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தபின்பும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது மனதில் தோன்றுவது இதுதான்: நமக்கு வளர்ச்சி வேண்டும் நிச்சயமாக. ஆனால் அந்த வளர்ச்சி வேறுவிதமாக இருக்க வேண்டும்.

எத்தகைய வளர்ச்சி தேவை?

கிராம முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் பேணுதல் ஆகியவை மிக அவசியம். கிராமப்புறத்து, நகர்ப்புறத்து உட்கட்டமைப்பு, மற்றும் வேளாண் துறை ஆகியவற்றில் பொதுமுதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முழுமையான நில மறுவிநியோகமும், சிறுகுறு விவசாயிகளுக்கு அரசின் திட்டமிட்ட உதவிகளும் அவசியம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நிதி அடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, பெருமுதலாளி நிறுவனங்கள் மீதும் பெரும் செல்வந்தர்கள் மீதும் உரிய வருமான வரிகள் விதிக்கப்பட்டு, கறாராக வசூலிக்கப்பட வேண்டும். அதைப்போலவே முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்திருப்பது போல இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைத்துக் கொள்வதற்கு ஒரு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது.

முன்மாதிரி நடவடிக்கைகள் எங்கே?

அண்மை காலங்களில் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் பலரால் பயன்படுத்தப்படுகிறது. பிரபலம் அடைந்துள்ளது. எனினும் இதன் பொருள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்ற பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு முதல்வர் இந்த வெற்றி ‘திராவிட மாடல்’ பெற்ற வெற்றி என்று பொருள்பட கூறினார். இது அரசியல் களத்தில் கிடைத்த தேர்தல் வெற்றியை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது. சிலர் திராவிட மாடலுக்கு கொடுக்கும் விளக்கம் இது பொருளாதார வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டு நலிந்தவருக்கு சமூக பாதுகாப்பையும் அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதை என்பதாகும். ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இதுதான் நாட்டுக்கே பொருத்தமான பாதை என்று முழங்குகின்றனர்.

‘திராவிட மாடல்’ பற்றிய விரிவான விளக்கமும் விவாதமும் தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. நவீன தமிழ் நாட்டின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்த திராவிட சமூக சீர்திருத்த இயக்கத்தின் மகத்தான ஜனநாயகப் பங்கை அங்கீகரிப்பது மிகவும் அவசியம். எனினும், பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தவரையில், திராவிட கட்சிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் கட்சிகள் கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டு ஆட்சியாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதையும், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரமான தாராளமய கொள்கைகளை அமலாக்கிவரும் ஒன்றிய அரசாங்கங்கள் அனைத்திலும் இக்கட்சிகள் மாறி மாறி நேரடியாக பங்கேற்று அல்லது ஆதரித்து வந்துள்ளனர் என்பதையும், புறந்தள்ள இயலாது. பாராளுமன்றத்தில் தாராளமய கொள்கைகளுக்கும் அவற்றை அமலாக்கிட முன்மொழியப்பட்ட பல மசோதாக்களுக்கும் திராவிட கட்சிகள் ஆதரவு தந்து வந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசு தரும் புள்ளிவிவரக் குறியீடுகள்படி கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் பல மாநிலங்களை விட தமிழ் நாடு முன்னேறியுள்ளது என்பது உண்மை. நவீன பெரும் தொழில் வளர்ச்சியிலும் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு திகழ்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஒன்றிய அரசின் அங்கமாக, அல்லது அதற்கு ஆதரவாக இருந்ததால் பல மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் அரசுகளாக அடுத்தடுத்து வந்த திராவிட கட்சிகளின் அரசுகள் இருந்தன என்பதும் உண்மை. இதனால் நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பரவலாக வறுமை தொடர்வதை தடுக்க இயலவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலை பற்றி ஒன்றிய அரசின் புள்ளியியல் நிறுவனம் நடத்திய 2018-19 ஆண்டுக்கான ஆய்வு பெரும் தொற்றுக்கு முன்பே இக்குடும்பங்களின் சராசரி மாத வருமானம் மிகக் குறைவாக இருந்தது என்பதை தெரிவிக்கிறது.

பொது உடமை இயக்கத்தின் தீவிர போராட்டங்களாலும் முயற்சிகளாலும் நில மறுவிநியோகம் உள்ளிட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் நடந்துள்ளன என்றாலும், நில விநியோகம் தமிழ் நாட்டின் ஜனநாயக இயக்கங்களின் தொடரும் சவாலாகவே உள்ளது. அண்டை கேரள மாநிலத்தில் நிலசீர்திருத்தம் பொது உடமை இயக்கத்தின் தலைமையில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடந்தது. பெண்-ஆண் சமத்துவத்திற்கும் சமூக ஒடுக்குமுறைகளை தகர்க்கவும் முக்கிய பங்கு ஆற்றியது. புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் அமர்த்யா சென் ஒருமுறை நவீன ஆசியாவில் வளர்ச்சி என்ற சவாலில் சாதனை புரிந்துள்ள நாடுகளாக ஜப்பான், மக்கள் சீனம், தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றை குறிப்பிட்டு, இந்நாடுகளின் ஒரு பொது அம்சம் இவை அனைத்தும் முழுமையான நிலசீர்திருத்தம் நடைபெற்றுள்ள நாடுகள் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இந்த அனுபவங்கள் தமிழ் நாட்டு வளர்ச்சி பற்றிய விவாதத்திற்கும் வெளிச்சம் தரும்.

நீண்ட காலமாக சமூகநீதி பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டும் சமூக ஒடுக்குமுறைகளும் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்க மறுக்கும் சமூக விழுமியங்களும் தமிழகத்தில் ஏன் தொடர்கின்றன என்பவை போன்ற கேள்விகளையும் தமிழ் நாட்டு ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நிதி அடிப்படைவாதம் உதவாது

ஒரு ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய பரிசீலனை என்பதை ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழ் நாடு நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும் என்பதுதான். தனது பட்ஜெட் உரையிலேயே நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்பு அணுகுமுறையை விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு சட்டப்படி அளிக்கப்படும் தொகைகளை நிபந்தனையின்றி அளிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். இதுபோல் ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடன் இணைந்து எதிர்க்க தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும்.

நிதி அமைச்சர் கவனத்திற்கு இன்னும் ஓரிரு விஷயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும் தொற்றுக்கு முன்பிருந்தே பெரும் சிக்கலில் உள்ளவை தமிழ் நாட்டின் சிறுகுறு தொழில்கள். இவை கணிசமான அளவில் தொழில் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பங்காற்றுபவை. மேலும் பெரும் தொழில்களைவிட குறைந்த முதலீட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகள் தருபவை. நகர்ப்புற வேலை திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தி, சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலியில் ஒருபகுதியை இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மானியமாக வழங்கலாம். கேரள அனுபவத்தை உள்வாங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், நிதி மற்றும் பணியாளர்கள் தந்து உதவலாம். இது ஜனநாயக பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் மக்களுக்கு அளிக்கும்.

வேளாண் துறையில் விரிவாக்கப் பணி அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவதுடன், போதுமான அளவில் விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வகையில் வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் குழுக்களின் எண்ணிக்கையையும் செயல்பாட்டு திறனையும் உயர்த்த உரிய ஒதுக்கீடுகள் செய்யலாம். இங்கே நாம் குறிப்பிட்டிருப்பவை சில எடுத்துக்காட்டுகளே.
நிதி அடிப்படை வாதத்தை புறம் தள்ளி மக்கள் சார் அணுகுமுறையை பின்பற்றி தமிழ் நாடு மேலும் முன்னேற நம் முன் வாய்ப்புகள் உள்ளன.

அரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா?

– வெங்கடேஷ் ஆத்ரேயா 

கடன் வாங்கவே கூடாது என்ற கருத்து குடும்பங்களுக்கே ஏற்புடையது அல்ல. வீடு கட்ட, கல்வி செலவுகளை ஈடு கட்ட என்றெல்லாம் கடன் வாங்குவது வழக்கமான நிகழ்வுகளாக ஆகியுள்ளதல்லவா? ஆனால் அரசு கடன் வாங்குவது கூட தவறானது என்ற பாணியில் பட்ஜெட்டுகள் பற்றிய விவாதங்கள் இப்பொழுது நடைபெறுகின்றன. இப்பிரச்சினை குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
நாட்டு வளர்ச்சிக்காக அரசுகள் முதலீடுகளை மேற்கொள்ள நிதி ஆதாரங்களை திரட்டுவது அவசியம். பட்ஜெட்டுகளை ஆய்வு செய்யும் பொழுது நடப்பு கணக்கு, மூலதன கணக்கு என்று பிரிப்பது தற்போது உள்ள அணுகுமுறை.

நடப்பு கணக்கு என்பது நடப்பு வரவுகள், நடப்பு செலவுகள் தொடர்பானது. இவற்றை “வருவாய் வரவுகள், வருவாய் செலவுகள்” என்றும் அழைப்பது உண்டு. ஒரு அரசாங்கத்திற்கு கிடைக்கும்  நடப்பு அல்லது வருவாய் வரவு  என்பதில் மூன்று வகை உண்டு: வரிகள், அரசு நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம், அரசு வழங்கிவரும் சேவைகளுக்கு (உ-ம்: மின் கட்டணம், கல்வி கட்டணங்கள்) வசூலிக்கப்படும் கட்டணங்கள். மறுபுறம்,  நடப்பு அல்லது  வருவாய் செலவு என்பது கட்டிடம், இயந்திரம் போன்ற புதிய சொத்தை உருவாக்காத  செலவை மட்டுமே குறிக்கும். (உ –ம்: அரசு ஊழியர்களுக்கு தரப்படும் சம்பளம்).
மூலதன கணக்கு என்பது மூலதன வரவுகள், மூலதன செலவுகள் தொடர்பானது. மூலதன செலவு என்பது ஒரு கட்டிடம், இயந்திரம் போன்ற புதிய சொத்தை உருவாக்கும் செலவுகளை குறிக்கும். மூலதன வரவு என்பது கடன் மூலம் கிடைக்கின்ற வரவையும் அரசாங்கம் அரசு சொத்துக்களை விற்பதன்மூலம் பெறும் வரவுகளையும் குறிக்கும்.

நமது நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1970களின் பிற்பகுதிவரை மத்திய அரசின் நடப்பு வரவு நடப்பு செலவை விட கூடுதலாகவே இருந்தது. அதாவது, நடப்பு கணக்கில் அரசுக்கு உபரி கிடைத்தது. இது அரசு முதலீடுகளை மேற்கொள்ள சிறிதளவாவது உதவியது. இந்த உபரியுடன் கடன் வாங்கியும் அரசு முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக மத்திய அரசின் நடப்பு செலவு நடப்பு வரவை விட கூடுதலாகவே இருந்து வருகிறது. ஆக, அரசின் மூலதன வரவுகள் – கடன் மற்றும் அரசு சொத்துக்களை விற்று (DISINVESTMENT) கிடைக்கும் தொகை – நடப்பு செலவுகளை ஈடுகட்டவும் பயன்படுத்தப்படும் நிலைமை உள்ளது. இது நீண்ட காலப்போக்கில் நிலைக்கத்தக்க ஏற்பாடாக இருக்க முடியாது. இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அரசின் வரிகொள்கைகள் மீது பெரு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் இருக்கும் செல்வாக்கே ஆகும். இன்றைய உலக மய சூழலில் இதற்கு ஒரு பன்னாட்டு அம்சமும் உள்ளது. தனியார் மூலதனத்தை ஈர்க்க வரிச்சலுகைகள் அளிப்பதில் நாடுகளுக்கிடையே போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினை கடன் வாங்குவது அல்ல; கடன் வாங்குவதற்கு முன், முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன? செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளின் வருமானம், லாபம், சொத்துக்கள் மீது தகுந்த வரி விதித்து அதனை முறையாக வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதன் வர்க்க தன்மையை இது வெளிப்படுத்துகிறது. இதனை செய்து, அதற்கு மேலும் நாட்டின் வளர்ச்சியை அதிகப்படுத்த தேவை என்றால், கடன் வாங்குவது தவறல்ல. கடன் வாங்கி அதனை முறையாக முதலீடு செய்து எதிர்காலத்தில் உற்பத்தியையும் அதன் மூலம் அரசின் வருமானத்தையும் பெருக்கி, வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான சவால்களை எதிர்கொண்டு, கடனையும் காலப்போக்கில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஆனால் ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் எண்ணற்ற, தேவையற்ற வரிச்சலுகைகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து கூடுதல் வரி திரட்டுவதே சாலச் சிறந்த வழி. இதற்குப்பதில் கடன் மூலம் வளங்களை திரட்டுவது என்பதில் ஒரு வர்க்க சார்பு உள்ளது. வசூல் செய்த வரி அரசுக்கு சொந்தம்; அதை நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் செலவு செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால், இதை தவிர்த்து கடன் வாங்கினால், எந்த செல்வந்தர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் அரசு கடன் வாங்கியுள்ளதோ, அக்கடனை அசலும் வட்டியுமாக அவர்களுக்கு அரசு திருப்பித் தந்தாக வேண்டும். அதாவது, செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதற்குப்பதில் அவர்களிடம் இருந்து கடன் வாங்குவது என்பது, செல்வந்தர்கள் சொத்தையும் பாதுகாத்துக் கொடுத்து அதன் மீது வட்டியும் தரும் வழியாகும்! வரி கட்ட நிர்ப்பந்திக்கப்படுவதை விட இதனையே  செல்வந்தர்களும் பெருமுதலாளிகளும் விரும்புவார்கள்!

ஆனால் இன்று பெரு முதலாளிகளை சலுகைகள் பல கொடுத்து தாஜா செய்தால்தான் அவர்கள் முதலீடுகளை செய்வார்கள்; அதுவே வளர்ச்சிக்கு வழி என்ற தாராளமய கோட்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இதனை எதிர்த்து பொதுக்கருத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நியாயமான அடிப்படையில் போதுமான அளவிற்கு பெரும் செல்வந்தர்களிடம் இருந்து அரசு வரி வசூல் செய்து, பொதுத்துறை மூலம் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சியின் அளவையும் தன்மையையும் மேம்படுத்த முடியும்.

எனினும், அரசு கடனே வாங்கக்கூடாது என்ற நிலைபாடு சரியல்ல.

பழைய பாதையில் பயணம் : தமிழக நிதிநிலை அறிக்கை 2017–18

  • வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய அரசியல் அமைப்பில் அடிப்படையிலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப்பின் கடந்த எழுபது ஆண்டுகளில் இந்திய பெருமுதலாளிகளின் நலன் கருதி இந்த அதிகாரக்குவிப்பை அதிகப்படுத்த ஆளும் வர்க்கக் கட்சிகள் தொடர்ந்து முனைகின்றன. கடந்த காலங்களில் மாநில உரிமை பேசி வந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கிவரும் சூழலில் மத்திய மாநில அதிகாரப்பகிர்வு தொடர்பான ஜனநாயக கோரிக்கைகளை அவை வலுவாக முன்வைப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் மட்டுமே மாநில அதிகாரங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்துள்ள திமுக, அஇஅதிமுக இரண்டுமே கடந்த பல ஆண்டுகளாக மாநில உரிமைகள் பற்றி பெரும்பாலும் மௌனமாகவே உள்ளன. எப்போதாவது அவை மாநில உரிமைகள் பற்றிப் பேசினாலும் அந்த உறவுகளை ஜனநாயகப்படுத்த அவசியமான போராட்டங்களை முன்பின் முரணற்று நடத்திடவில்லை. இப்பின்புலத்தில், தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை பரிசீலிப்போம்.

கடும் கிராமப்புற நெருக்கடி

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டுமே பொய்த்துள்ள நிலையில் தமிழகம் கடும் வேளாண், ஊரகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அல்லது பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் இறந்துள்ளனர். நெருக்கடிக்கு காரணம் இயற்கை அவர்களைக் கைவிட்டது மட்டுமல்ல; அரசுகளின் தொடரும் தாராளமய கொள்கைகளும் கிராமப்புற உழைக்கும் மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு முக்கிய காரணம். இதுமட்டுமல்ல; மோடி அரசின் செல்லாக்காசு நடவடிக்கை விவசாயத்தையும் கிராம, நகர்ப்புற முறைசாரா தொழில்களையும் பெருமளவிற்கு பாதித்துள்ளது. கிராம, நகர உற்பத்தி மட்டுமே பாதிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதுவும் பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே வேளாண் துறையின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெல் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. 2001-02 இல் அரிசி உற்பத்தி 65.8 லட்சம் டன் என இருந்தது. 2013-14 வரையிலான அடுத்த 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மூன்று ஆண்டுகளில் மட்டுமே இதை விட அதிகமான அரிசி உற்பத்தி நிகழ்ந்தது. 2009-10 முதல் 2013-14 வரையிலான ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் என்ற அளவில்தான் இருந்தது. மொத்த தானிய உற்பத்தியின் வளர்ச்சியும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிக மந்தமாகவே இருந்தது. பொதுவாக வேளாண் உற்பத்தியும் விவசாயிகளின் வாழ்வும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வேளாண் மற்றும் இதர கிராமப்புற கூலி உழைப்பாளிகளின் நிலைமையும் இதேதான். நகர்ப்புறங்களிலும் பொருளாதார மந்த நிலையின் வெளிப்பாடுகளைக் காண முடியும். கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. தொழில் துறை வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இல்லை. வேலை விரிவாக்கம் என்பது அமைப்புசார் துறைகளில் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். முன்பு ரியல் எஸ்டேட்டும், கட்டுமானமும் தகவல் தொழில்நுட்பமும் நிதிசார் நடவடிக்கைகளும் ஓரளவு வருமானத்திற்கும் வேலை வாய்ப்புக்கும் நகரங்களில் கைகொடுத்தன. தற்சமயம் அங்குமே மந்த நிலைதான் உள்ளது. இத்தகைய பொதுவான மந்த நிலையை செல்லாக்காசு நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளது. பருவமழை பொய்த்ததும் டெல்டா பகுதி உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பரவியுள்ள வறட்சியும் மத்திய மாநில அரசின் கொள்கைகளும் சேர்ந்து தமிழகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன.

இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கிறதா?

பட்ஜெட்: மாநில அரசின் அணுகுமுறை

பட்ஜெட் சமர்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது. இப்பின்னணியிலும், ஜி எஸ் டி (பொருள் மற்றும் சேவை வரி) நடைமுறைக்கு வரவுள்ளதை காரணம் காட்டியும் புதிய வரிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், ஒட்டுமொத்த அரசு செலவும் மிகக்குறைவாகவே அதிகரித்துள்ளது.

மாநில அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பதில், நடப்பில் உள்ள மத்திய மாநில நிதி அதிகாரப்பகிர்வு ஏற்பாடு காரணமாக சில சிரமங்கள் ஏற்படுகின்றன. எனினும் வரி வசூல் நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களை ஒழித்தால், வரிவருமானத்தை மாநில அரசால் கணிசமாக உயர்த்த முடியும். வரி அல்லா வருமானத்தை பொறுத்த வரையில், மிக முக்கியமாக, தாது மணல், ஆற்று மணல், கிரானைட் உள்ளிட்ட தமிழகத்தின் இயற்கை வளங்களை ஏலம் விடுவதில் உள்ள மகாஊழல்கள் மாநில அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பை ஆண்டு தோறும் ஏற்படுத்தி வருவதை சகாயம் அறிக்கை உள்ளிட்ட பல அரசு ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. இவற்றை சரிசெய்யவும், மாநிலத்தின் இயற்கை வளங்களை திறம்பட நிர்வகித்து, வரி அல்லா வருமானங்களை உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை.

மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான “உதய்” திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது கணிசமான வட்டிச்செலவுகளை தமிழக அரசின் மீது திணிக்கும். அதேபோல், மத்திய அரசின் கெடுபிடியின் விளைவாக தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் அனைவருக்குமான பொது விநியோக அமைப்பை தொடர்வதால் தமிழக அரசு கூடுதல் செலவுகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைமுறையில் இப்போக்கு பொதுவிநியோக அமைப்பை பலவீனப்படுத்துவதாகவே அமைகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்த சிறப்பு பொது விநியோக திட்டம் ஒரு சில மாதங்களாகவே அமலாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை. மக்கள் அரிசிக்குப் பதில் கோதுமை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நிதி ஆணையத்தின் கெடுபிடியை ஏற்று தமிழகம் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை (FISCAL RESPONSIBILITY AND BUDGET MANAGEMENT ACT – FRBM ACT) ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது. தாராளமய கொள்கைகளின் முக்கிய வெளிப்பாடான – மக்களுக்கான அரசு செலவுகள் வெட்டிச்சுருக்கப்படவேண்டும் என்ற நோக்கம் கொண்ட இத்தகைய சட்டம் அகில இந்திய அளவில் 2003 இலேயே நிறைவேற்றப்பட்டது. அதன்பின், நிதி ஆணையம் மூலமாக மாநில அரசுகளும் இத்தகைய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி மாநில பட்ஜெட்டில் நிதிசார் (FISCAL) பற்றாக்குறை – அதாவது, அரசின் மொத்த செலவுக்கும் அரசு பெறுகின்ற கடன் அல்லாத வரவுகளுக்குமான இடைவெளி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி. – GSDP) 3 %க்கு மிகாமல் இருக்கவேண்டும். இதன் பொருள் அரசு கடன் மூலம் பெரும் தொகை வரவு என்று கணக்கில் கொள்ளப்படாது என்பதாகும். மேலும், மொத்த செலவுக்கும் கடன் அல்லாத வரவுக்கும் இடையே உள்ள இடைவெளி சுருக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மத்திய மாநில அரசுகள் அமலாக்கி வரும் பொருளாதார கொள்கைகள் இந்த இடைவெளியை குறைக்க செலவைக் குறைக்கவே பிரதானமாக முற்படுகின்றன. மறுபுறம் செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும் வரிச் சலுகைகளும் வரி விலக்குகளும் மாநிலங்களின் வரிவருமானத்தை குறைக்கின்றன. மத்திய அரசு செஸ் மூலமும் சர்சார்ஜ் மூலமும் வரி வருமானம் ஈட்டும் பொழுது, மாநிலங்களுக்கு இதில் பங்கேதும் கிடையாது. இதெல்லாம் உண்மை என்றாலும், இவற்றிற்கு மத்தியில் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு மாற்றுக்கொள்கைகளின் அடிப்படையில் அரசின் வரவு செலவு திட்டங்களை அமைத்தும், கறாரான, ஊழலற்ற வரிவசூல் நிர்வாகத்தை உறுதிப்படுத்தியும் சமாளித்து வருவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒதுக்கீடுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1 நடப்பு ஆண்டுக்கும் வரும் ஆண்டுக்குமான சில முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் பட்ஜெட்டுகளில் அவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த சில விவரங்களை தருகிறது.

தமிழக பட்ஜெட் நடப்பு ஆண்டு (2016-17) ஒதுக்கீடுகளில் இருந்து வரும் ஆண்டுக்கான (2017-18) ஒதுக்கீடுகள் பெரும்பாலான துறைகளில் சிறிதளவே உயர்த்தப்பட்டுள்ளன. நீர்வளம் மற்றும் பாசனத் துறை மட்டும் சற்று கூடுதல் ஒதுக்கீடு பெற்றுள்ளது. ஆற்றல் துறையில் காணப்படும் அதிகரிப்பு டான்ஜெட்கோ கடன் மீதான வட்டிக்கே செலவாகிவிகும். கல்வித்துறையில் உயர்கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு அளவிலேயே உள்ளது. சுற்று சூழல் மற்றும் வனம், மீன்வளர்ச்சி, கால்நடை, தொழில்துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வரும் ஆண்டில் நடப்பு ஆண்டை விட பண அளவில் குறைந்துள்ளன.

மாநில மொத்த உற்பத்தி மதிப்பு வரும் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளதையும் விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டால், வரும் ஆண்டுக்கான ஒதுக்கீடுகளில் மாநில உற்பத்தி மதிப்பின் விகிதத்தில் பார்த்தால் உண்மை அளவில் முன்னேற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.

கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களுக்கு வேலை தரும் சிறு, குறு மற்றும் மிகச்சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 லட்சம் என பட்ஜெட் குறிப்பிடுகிறது. ஆனால் அத்துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டை விட வரும் ஆண்டில் அதிகம் என்றாலும் அளவில் அது சொற்பமான தொகை தான். மறுபுறம் , இந்நாட்டு, பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை (மத்திய அரசைப்போலவே)) மாநில அரசும் வழங்குகிறது. அச்சலுகைகளால் ஏற்பட்டுள்ள சமூக பயன் என்ன, பாதிப்பு என்ன என்பது பற்றி, இடதுசாரிக் கட்சிகள் கடந்த ஆண்டுகளில் பலமுறை கோரியும், இன்றுவரை ஒருவெள்ளை அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு சென்னையில் நடந்தபோது 2,42,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்தால் கூட, அதனால் உருவாகும் வேலை வாய்ப்பு நான்கு லட்சத்தி ஐம்பதாயிரம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடுக்கு ஓரிரு பணியிடங்களையே உருவாக்கும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தருவதும், சலுகைகளை வாரி இறைப்பதும் வேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை அரசு முன்னிறுத்தவில்லை எண்பதைத் தெளிவாக்குகிறது.

கைவிடப்பட்ட திட்டமிடுதல்

கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதி மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது நாடறிந்த உண்மை. ஆனால் தமிழகத்தில் இரு கழக ஆட்சிகளுமே உள்ளாட்சி அமைப்புகளுடன் வளங்கள், நிதி ஆதாரங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றை பகிர்வதில் விருப்பம் காட்டவில்லை. இப்பொழுதும் அந்நிலை தொடர்கிறது.

இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ஒரு தவறான அணுகுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடுதலைக் கைவிடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பொழுது உள்ள மாநில திட்டக்குழுவை கலைப்பதாகவும், அதன் இடத்தில் “மாநில வளர்ச்சி கொள்கைக்கான குழு“ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்தக்குழு மாநில அரசுக்கு அறிவுரைகள் வழங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான நீண்ட காலப்பார்வையும் ஒட்டுமொத்த திட்டமிடுதலும் தேச விடுதலை போராட்ட காலத்திலிருந்தே அவசியம் என கருதப்பட்டு வந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வந்தாலும், அரசு தொடர்ந்து பொருளாதாரத்தில் ஆற்றும் பங்கினை கணக்கில் கொண்டும் பன்னாட்டு, இந்நாட்டு பொருளாதார புற நிலைமைகள் தொடர்ந்து மாறிவரும் சூழலில் அவற்றை எதிர்கொள்ள திட்டமிடுதல் அவசியம் என்பதை கணக்கில் கொண்டும்தான் இக்காலங்களிலும் ஐந்தாண்டு திட்டங்கள் எட்டாம் திட்டம் (1992-97), ஒன்பதாவது திட்டம் (1997-2002), பத்தாவது திட்டம் (2002-07), பதினொன்றாவது திட்டம் (2007-12) மற்றும் பன்னிரண்டாவது திட்டம் (2012-17) ஆகியவை தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. ஆனால் மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த உடனேயே தனது தாராளமய பொருளாதார அணுகுமுறையை பிரகடனப்படுத்தும் வண்ணம் திட்டக்குழு கலைக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே விடாமல் அரசே உடனடியாக அமல் படுத்தியது. மோடி அரசு அதற்கே உரிய “ஜனநாயக” பாணியில் மத்திய திட்டக்குழுவை அழித்தொழித்தது. மோடி அரசின் நிலைபாட்டை அப்படியே ஏற்று தமிழ் மாநில அரசு பின்பற்றுவது அதன் தாராளமய அணுகுமுறையை மீண்டும் தெளிவாக்குகிறது. இதற்கு நேர்மாறாக, கேரள மாநிலத்தில் மாநில திட்டக்குழு சிறப்பாக இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுக்கான திட்டத்தை தயார் செய்யும் பணிகளை அது மேற்கொண்டுள்ளது. வரும் ஆண்டுக்கான ஓராண்டு திட்டத்தையும் சமர்ப்பித்துள்ளது.

7.2 கோடி மக்கள் வசிக்கும் தமிழ் நாடு மக்கள் தொகை அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏறத்தாழ சமம் ஆகும்.அத்தகைய ஒரு மாநிலத்தில் அதன் இயற்கை மற்றும் இதர வளங்கள், மனிதவளங்கள், தொழில்நுட்ப வாய்ப்புகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு நீண்ட கால திட்டங்களை உருவாக்குவது பலனளிக்கும் என்பதும் சாத்தியம் என்பதும் கேரளா நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். தாராளமய கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தாலும், மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் பல பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பொறுப்பேற்று செயல்படுத்திவரும் நிலையில், திட்டமிடுதலின் அவசியம் தொடர்கிறது. ஆனால் தமிழக அதிமுக அரசு இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளது. தனியார் பெரும் நிறுவனங்களிடம் நாட்டை ஒப்படைப்பதே அதன் வளர்ச்சி தொடர்பான அணுகுமுறையாக உள்ளது.

மக்களைப் புறக்கணிக்கும் மாமூல் பட்ஜெட்

தமிழகம் கடும் வறட்சியையும் வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடியையும் குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளும் சூழலில் இப்பிரச்சினைகளை சந்திக்க பட்ஜெட்டில் பொருத்தமான அணுகுமுறையும் இல்லை. இயற்கை வளங்கள் மூலமும் இதர வகைகளிலும் ஊழலின்றி செயல்பட்டு வளங்களை திரட்டும் முயற்சியும் இல்லை. வரி நிர்வாகத்தை சீர்செய்து வரி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறையும் இல்லை. மத்திய அரசுடன் போராடி கூடுதல் வளங்களைப்பெற முயற்சியும் இல்லை. அரசின் மக்கள் சார் செலவுகளை மட்டுப்படுத்தி நிதிசார் பற்றாக்குறையை குறைக்கும் வழிமுறைதான் உள்ளது.

அட்டவணை 1: தமிழக பட்ஜெட் – சில ஒதுக்கீடுகள் (ரூபாய் கோடிகளில்)

துறை

2016-17

தி. .

2017-18

. .

மீன்வளர்ப்பு

744

768

கால்நடை

1,189

1,161

சூழல் மற்றும் வனம்

653

567

நீர்வளம் மற்றும் பாசனம்

3,407

4,791

ஆற்றல்

13,856

16,998

தொழில் துறை

2,104

2,088

சிறு குறு மிகச்சிறு நிறுவனங்கள்

348

532

சமூக நலம்

4,512

4,781

பள்ளிக்கல்வி

24,130

26,932

உயர் கல்வி

3,679

3,680

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

9,073

10,158

 

குறிப்பு: தி. . –திருத்தப்பட்ட மதிப்பீடுகள், . . – பட்ஜெட் மதிப்பீடுகள்

மாநில அரசின் கடன் பற்றி

இறுதியாக தமிழக அரசின் நிதி நிலை குறித்த விவாதங்களில் பலர் மீண்டும் மீண்டும் அரசின் கடன் தொகை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அரசின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்றும், குறிப்பாக மக்கள் நல திட்டங்களை சுருக்கவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். உண்மை நிலை என்ன?

மாநில அரசுகளுக்கு வரி வருமானத்தை உயர்த்துவது சாத்தியம் என்றாலும் மிக எளிதல்ல. பொருளாதார வளர்ச்சியையொட்டி வேகமாக அதிகரிக்கும் வரி இனங்கள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மொத்த வரிவருமான பகிர்வில் அனைத்து மாநிலங்களுக்கான மொத்தப் பங்கு 32% இலிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் மத்திய அரசு பிறவகை வருமான பகிர்வில் மாநிலங்களுக்கு பாதகமான மாற்றங்களை செய்துள்ளதால் நிகரமாக மாநிலங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வருமானம் தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக பார்க்கையில் குறைந்துள்ளது. ஆனால் வளர்ச்சி தொடர்பான கூடுதல் பொறுப்புகள் மாநிலங்களிடம்தான் உள்ளன. இச்சூழல் மாநில அரசுகளுக்கு கடன் சுமையை ஏற்படுத்துகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

எனினும், இச்சூழலிலும் மாநில அரசுகள் வரிவசூலில் நிர்வாக மேம்பாட்டையும் கறாரான ஊழல் மறுப்பு அணுகுமுறையையும் பின்பற்றினால் வரிவருமானத்தை உயர்த்தமுடியும் என்பதும் உண்மை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசின் மொத்தக் கடன் வேகமாக அதிகரித்து வருகிறது எண்பது உண்மை. 2002-03இல் 43,815 கோடி ரூபாயாக இருந்த இக்கடன் 2008-09 இல் 83,144 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014-15 இல் இது ரூ 1,95,230 கோடியாகியது. 2018 மார்ச் மாத இறுதியில் இது 3,14,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. ஆனால் இதை எப்படி பார்க்கவேண்டும்? மாநில உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிட்டால், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக, மாநில அரசின் மொத்தக் கடன் தொடர்ந்து 20% ஐ ஒட்டியே உள்ளது. இது அபாயகரமான அளவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கேள்வி என்னவென்றால், கடனைக் கூட்டாமல் மக்கள் நல திட்டங்களை பாதுகாக்கவும், விரிவாக்கவும் முடியுமா என்பதுதான். முடியும் என்பதே நமது விடை. அதற்கு மாநில இயற்கை வளங்களை அரசே லாபகரமான வகையில் பயன்படுத்தவேண்டும். இவற்றை தனியார் கம்பனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருவதாக இருந்தால் ஊழலற்ற முறையில் அதனைச்செய்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். அதுமட்டுமல்ல. வரிவசூல் நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். இந்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளித்துவரும் பல்வேறு சலுகைகளால் நாட்டுக்கு ஏற்படும் பலன்களும் நட்டங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இறுதியாக, மாநிலங்களுக்கு கூடுதல் வருமான பங்கு கிடைக்கும் வகையில் மத்திய மாநில நிதி உறவுகளில் மாற்றம் காணப்படவேண்டும். இவற்றை எல்லாம் ஆளும் வர்க்கக்கட்சிகள் பரிசீலிக்க மறுக்கின்றன. தமிழக அரசுகள் – கடந்த காலத்திலும் சரி, சமகாலத்திலும் சரி – ஆளும் வர்க்க நலன்களை காக்கும் நோக்கிலேயே பிரதானமாக வரவு செலவு அறிக்கைகளை அமைத்து வருவதால், மாநில அரசின் நிதி நிலைமையில் சிக்கல்கள் தொடர்கின்றன.

பல பிரச்சினைகள் பற்றி கூடுதல் தரவுகளுடன் விவாதங்கள் தொடர வேண்டும் என்ற போதிலும், மொத்தத்தில்தமிழக பட்ஜெட் மக்களைப் புறக்கணிக்கும் பட்ஜெட் .