இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !

– கே.பாலகிருஷ்ணன்

இலங்கையில், வரலாறு காணாத மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.  அதிபர், ஆட்சியாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கம் வலுத்துள்ளது. ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முழக்கம் இலங்கையின் அனைத்து தரப்பினரிடமும், அனைத்து மொழிகளிலும் எதிரொலிக்கிறது. சில முதலாளித்துவ கட்சிகள், மக்கள் உணர்வோடு மாறுபட்டு பேசிவந்தாலும், மக்களின் போராட்டக் குரல், ஒவ்வொரு நாளும் வலிமையடைகிறது.

இதன் விளைவாக பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் குடும்பத்தோடு வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மக்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவும், திசை திருப்பவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போயுள்ளன

போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள். ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வீடுகள் உட்பட அரச பதவிகளில் உள்ள பலரின் வீடுகளும் எரிக்கப்படுவதும், தாக்கப்படுவதுமாக சூழல்  கடுமையாகியுள்ளது.

உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக  பொலிவியா, நிகரகுவா, சிலி, பெரு, வெனிசுவேலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டதை கடந்த காலங்களில் காண முடிந்தது.

தற்போது, இலங்கையில், அந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்த உலகமய தாராளமய கொள்கையின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராகவும், 2020 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த நாட்டின் அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் 7 முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 40 க்கும் மேற்பட்ட ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு ஒட்டுமொத்த இலங்கை அரசும் ராஜபக்சேவின் குடும்ப அரசாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களின் கோபம் குவிந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினையும், உக்ரைன் – ரஷ்யா போரையும் நெருக்கடிக்கான காரணமாக காட்டிட ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

போராட்டத்தின் தொடக்கம்:

கோத்தபய ராஜபக்சே அதிபரானதும், கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் பலனடையும் விதத்தில் சில வரிச் சலுகைகளை அறிவித்தார். அந்த சலுகையால் இழந்த வரி வருவாயை நேரடி வரியின் மூலம் ஈடுகட்டவும் இல்லை.

2019 – பேரி020 ஆண்டுகளில், கொரோனா பெருந்தொற்றினால் சர்வதேச போக்குவரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ஏற்றுமதிச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகளும் இலங்கை பொருளாதாரத்தை நேரடியாகவே தாக்கின. தேயிலை, ரப்பர், மசாலா பொருட்கள் மற்றும் ஆயத்தை ஆடை ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் வரி வருவாய் மேலும் குறைந்தது, ஆனால் செலவினங்கள் அதிகரித்தன. ஏற்கனவே கடன் வெள்ளத்தில் மிதந்து வந்த இலங்கை, நெருக்கடியில் மூழ்க தொடங்கியது.

அன்றாட செலவுகளையும் கூட கடன் வாங்கி மேற்கொண்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், பொதுக் கடனுக்கும் இடையிலான விகிதம் 119 ஆக உயர்ந்தது. பட்ஜெட் பற்றாக்குறை 10 சதவீதத்திற்கும் கூடுதலாக ஆகியது.

அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் உழைப்பாளர்கள் தங்களுடைய வருவாயை மாற்று வழிகளில் குடும்பங்களுக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இவையெல்லாம் மற்றொரு பக்கத்தில் அன்னியச் செலவாணி கையிருப்பில் சரிவை ஏற்படுத்தின. டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

இப்படிப்பட்ட சூழலில், ராஜபக்சே அரசாங்கம் ‘எதேச்சதிகார முட்டாள்தனங்களை’ முன்னெடுத்தது. ரசாயன உரங்களின் இறக்குமதியை தடாலடியாக குறைத்தார்கள். உள்நாட்டு விவசாயிகள் மீது ‘இயற்கை உர’ பயன்பாட்டை திணித்தார்கள். ‘வேளாண் உற்பத்தியில் ரசாயன உரத்தின்  பயன்பாட்டை தடை செய்ததன் விளைவுகள் எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருந்தன’ என்று சர்வதேச நிதியம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

ஆம், நெல் உற்பத்தி இந்த ஆண்டில் 40-45 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கால்நடைத் தீவன உற்பத்தியும் சரிந்தது. இதனால் இறைச்சி விலை அதிகரித்தது. தேயிலை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ந்தது. பாதிக்கப்பட்ட  விவசாயிகள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பரவியது. விவசாயிகளுக்கு ‘நிவாரணம்’ கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நிவாரணமாக தரப்பட்ட தொகை, ரசாயன உர இறக்குமதிக்கு செய்திருக்க வேண்டிய செலவை விடவும் அதிகமாக இருந்தது. அத்தோடு, உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதால், அதையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

இதனால், இலங்கையில் கடுமையான விலையேற்றம் உருவானது. மின்சார உற்பத்தி வீழ்ந்தது. மின்வெட்டு உருவானது. எரிபொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளால் அவைகளும் விலை உயர்ந்தன. டீசலும், பெட்ரோலும், சமயல் எரிவாயு தட்டுப்பாடும் ஒவ்வொரு வீட்டையுமே பாதித்தது.  அனைத்து அத்தியாவிசய பொருட்களும் விலை உயர்ந்தன. மின்சார தட்டுப்பாடு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. மீன், பழம், காய்கறி சேமித்து வைத்து விநியோகிக்கும் குளிர்பதன ஏற்பாடுகளில் நெருக்கடியை உருவாக்கியது.

உணவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் வரிசையில் நிற்கும் மக்கள், அங்கேயே மரணமடைகிற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய ரூபாய் வேறு, இலங்கை ரூபாய் வேறு என்றாலும், அரிசி கிலோ ரூ.300, பால்பவுடர் ரூ.2 ஆயிரம் என  சாமானிய மனிதர்களுக்கு எட்டாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காத, பதுக்கல், தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த நிலைமைகளை கண்டித்தே மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள். இலங்கையின் நாடாளுமன்றத்தை சுற்றிலும் 3 கிராமங்களை அமைத்து, தங்கி போராட்டங்களை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பு போராடுகிறது. இந்த போராட்டங்களை போலீசாரைக் கொண்டும், தனியார் குண்டர்களைக் கொண்டும் அதட்டி அடக்கிவிடலாம் என்ற முயற்சிகள் பலிக்கவில்லை.

களத்தில் தொழிலாளி வர்க்கம்:

69 ஆண்டுகள் கழித்து, இலங்கை முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முழு அடைப்பு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு நிலவியது. பாடசாலைகள், விமான நிலையங்கள் உட்பட மூடப்பட்டன. தனியார் போக்குவரத்து நிறுவனங்களும், தொடர் வண்டிச் சேவைகளும் இதில் பங்கேற்றனர்.

நெருக்கடியின் அடித்தளம்

இன்றைய நெருக்கடியை சரியாக புரிந்துகொள்ள, வரலாற்று பின்னணியை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

1815 ஆம் ஆண்டு முதல், இலங்கை தீவு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இலங்கையின் மலைப்பாங்கான நில வளத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடித்து பிடுங்கவும் செய்தார்கள். பின் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கு ஏற்ற விதத்தில், பயன்பாட்டை மாற்றி அமைத்தார்கள். அதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்துச் சென்று, மிகக் கடுமையாக வேலை வாங்கினார்கள். இலங்கையின் மலைப் பகுதிகளில்  தேயிலை, காப்பி கொட்டை மற்றும் ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலையடைந்தபோது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு, மலையக தோட்டங்களில் நடந்தது. விடுதலைக்கு பின், உள்நாட்டில் வளர்ந்து வந்த முதலாளிகளும் – நிலவுடமை வர்க்கமும் ஆட்சியாளர்களாக மாறினார்கள். அவர்கள் அந்த சமூகத்தில் அடிப்படையான மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால், விடுதலைக்கு பிறகும், இலங்கையின் தோட்டத்தொழிலில் அன்னிய/தனியார்  மூலதனத்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதனால், தொழிலாளர்களின் கடும் உழைப்பில் விளைந்த உபரி அனைத்தும், வெளிநாடுகளுக்குச் சென்றது. அதே சமயத்தில், உள்நாட்டு தேவைக்கான உணவுப்பொருட்கள் உற்பத்திக்கு, சாகுபடி நிலப்பரப்பு  விரிவடையவில்லை. இதனால், தங்கள் உணவுத்தேவைக்காகவும் கூட இறக்குமதி செய்யும் நிலைமை தொடர்ந்தது.

இலங்கையின் சொந்த தேவைக்கான உணவு உட்பட இறக்குமதியை நம்பி இருப்பதும், உள்நாட்டு வளங்களை ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதுமான முரண்பட்ட சூழ்நிலைமை தொடர்ந்தது. இதுதான் இலங்கை தொடர்ந்து சந்தித்துவரும் நெருக்கடிக்கு அடிப்படையாகும். இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் இந்த அடிப்படையை மாற்றியமைக்கவில்லை.

கடனே தீர்வா?

இலங்கையின் விடுதலைக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு, ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சி உருவானது, ஆட்சியையும் பிடித்தது.  அவர்கள் சில முற்போக்கான திட்டங்களை அரைமனதுடன் அறிமுகப்படுத்தினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகிய நல்ல திட்டங்கள் மக்களுக்கு பலன் கொடுத்தன. வங்கித்துறை தேசியமயமாக்கப்பட்டது, சில ஆலைகள் தேசியமயமாகின.  ஆனால், பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியதும், நலத்திட்ட நடவடிக்கைகளே காவு வாங்கப்பட்டன.

இலங்கையின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்க தயாரில்லாத இலங்கையின் ஆட்சியாளர்கள், சர்வதேச நிதியத்தின் கடனுக்காக விண்ணப்பித்தார்கள். சர்வதேச நிதியமோ தனது கடன்களை ‘நிபந்தனைகளுடன்’ சேர்த்தே கொடுத்தது. இலங்கை தனது பட்ஜெட் செலவினங்களில், பற்றாக்குறையை குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு தரப்படும் மானியங்களை வெட்ட வேண்டும், தனியார் மற்றும் அன்னிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும், இலங்கை ரூபாயின் மதிப்பை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்கள்.

1970களில், உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரத்தழுவி வரவேற்றது. அதன் நோக்கத்திற்கு உடன்பட்டு ‘திறந்த பொருளாதாரத்தை’  உருவாக்குவதாக, 1977-78, 1979-82 மற்றும் 1983-84 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றார்கள். எப்போதும் போல, நிபந்தனைகளோடே அந்த கடன்கள் தரப்பட்டன. விலை கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன, உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டது, தொழிலாளர்களுக்கு கூலி குறைந்தது, நிதிச் செலவினங்கள் குறைக்கப்பட்டன, தனியார் – அன்னிய மூலதனங்களுக்கான ஊக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சீனாவா? அமெரிக்காவா?

இலங்கை அரசாங்கம் பெற்றிருக்கும் வெளிக் கடன்கள் அதிகரித்ததுதான் நெருக்கடிக்கான உடனடிக் காரணம் என்பதை மேலே பார்த்தோம். அமெரிக்க ஊடகங்களும், முதலாளித்துவ ஊடகங்களும் தற்போது இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு, சீனாதான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையா என்பதை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

 அந்த நாட்டின் கடன்களில் டாலர் அடிப்படையில் பெற்றவை 2012 ஆம் ஆண்டில் 36 சதவீதமாக இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 65 சதவீதமாக ஆகின. அதாவது இரட்டிப்பு ஆகின. சீனா நாட்டின் பணத்தில் பெறப்பட்ட கடன்கள் மொத்த கடனில் 2 சதவீதம் மட்டுமே ஆகும்.

இலங்கை வெளிச் சந்தையில் பெற்றிருக்கும் கடன்கள் 2004 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்தது ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் 56.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுவும் இலங்கை பெற்றிருக்கும் கடன்களில் 60 சதவீதம் பத்து ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டியவை ஆகும். சீனாவில் பெறப்பட்ட வெளிக்கடன்கள் 17.2 சதவீதம் மட்டுமே.

இப்படி, கடனும் அதற்கான வட்டியும் உயர்ந்துகொண்டே செல்ல, வருவாயோ வீழ்ச்சியை சந்தித்ததால் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் வருவாயில் 95.4 சதவீதத்தை, கடனுக்காகவே  செலவிட வேண்டிய நிலைமைக்கு இலங்கை வந்துவிட்டது.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கான காரணம், இலங்கை அரசாங்கத்தால் அச்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கப்பட்ட உலகமய-தாராளயம கொள்கைகளும், அதனை உலக நாடுகள் மீது திணித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்தானே அன்றி வேறல்ல.

ஆனால், இலங்கை ஆட்சியாளர்கள், 17 வது முறையாக சர்வதேச நிதியத்திடம் ‘நிபந்தனைக் கடன்கள்’ பெறுவதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளார்கள். புதிதாக வரவுள்ள நிபந்தனைகள், ‘பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்துவது, தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகளை அகற்றுவது, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் கட்டணத்தை உயர்த்துவது, ஓய்கூதிய விதிகளில் மாற்றம் செய்வது என மிக மோசமானவைகளாக இருக்கப்போகின்றன என்று தெரிகிறது. இந்த கண்மூடித்தனமான பாதையிலேயே இலங்கையின் ஆளும் வர்க்கம் பயணிக்கிறது.

பிரிவினை தந்திரங்கள்:

மக்கள் விரோத நடவடிக்கைகளால் இலங்கை மக்களிடையே எதிர்ப்புக் குரல் எழாமல் இல்லை. ஆனால் பிரிவினை விதைக்கும் அரசியல் சூழ்ச்சியைக் கொண்டே அதனை இதுவரையிலும் எதிர்கொண்டு வந்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இலங்கையின் குடிமக்களில், சிங்கள மொழி பேசுவோர் 75 சதவீதம் உள்ளனர். பவுத்த மதத்தை பின்பற்றுவோர் 69 சதவீதம். 24 சதவீதம் தமிழ் மொழி பேசும் மக்களில் இஸ்லாமியர்களும், மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடக்கம்.

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டக் களத்தில் தேசிய உணர்வு உருவெடுத்தது. ஆனால் இலங்கையில் அப்படியான தேசிய எழுச்சி உருவாகிடவில்லை. இதனால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அப்போதே வலுவாக முன்னெடுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாத்தியமானது.

விடுதலைக்கு பின், 1956 சிங்களம் மட்டுமே ஆட்சி மற்றும் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இலங்கை, புதிய அரசமைப்பு சட்டத்தை ஏற்றது. இந்த அரசமைப்பு சிங்களமே ஆட்சிமொழி என்றும், பவுத்தமே முதன்மை மதம் என்றும் கூறியது. மதச்சார்பின்மை மற்றும் மொழி உரிமை மீதான தாக்குதலாக இது அமைந்தது.

அடுத்து வந்த தேர்தலில் ‘சிங்களர்கள் மட்டும்’ என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றியை பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மேலும் மோசமாக மாற்றியமைக்கப்பட்டது. அதிபர் ஆட்சி முறை வந்தது. அதிகாரக் குவிப்பு ஏற்பட்டது. நீதித்துறையும் நிர்வாகமும் தங்கள் சுயேட்சைத்தன்மையை  இழந்து, ஆளும் கட்சிகளின் தலையாட்டி பொம்மைகளாக ஆகின.

இப்போது போராட்டக் களத்தில் முன்நிற்கும் மக்கள், இந்த ஒற்றை ஆட்சி முறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். சுயேட்சையான நீதித்துறையும், நிர்வாகமும் வேண்டும் என கோருகிறார்கள்.

உள்நாட்டு மோதல்கள்:

சொந்த மக்கள் மீது ஜனநாயக உரிமை பறிப்பு, அடக்குமுறைகளை ஏவிவிடுவது, அவசர நிலைகளை பிரகடனப்படுத்தி கொடூரமான தாக்குதல்களை தொடுப்பது போன்றவை இலங்கை ஆட்சியாளர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

இலங்கையின் ஆளும் வர்க்கம் சிங்கள இனவெறியை முன்னெடுத்த போதிலும், , அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடிய போது அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கொஞ்சமும் தயங்கியதில்லை.

அரசின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் நடத்திய பிரம்மாண்டமான போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. பொது வேலை நிறுத்த போராட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டுமென வற்புறுத்தி ஜனதா விமுக்தி பெரனா (ஜேவிபி) நடத்திய போராட்டங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுக்கப்பட்டன. இதன் விளைவாக 1971 ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் மீது ராணுவ தாக்குதல் ஏவிவிடப்பட்டு மொத்தத்தில் 14,000 இளைஞர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் 20,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு வாழ்விழந்தார்கள். அரசியலின் எல்லாத் தரப்பிலும் முதலாளித்துவ சக்திகளே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தமிழர் இயக்கங்கள்:

தமிழ் மக்களுக்கு, சம உரிமை கோரிய எழுச்சிகள் 1956, 1958, 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. ஆனால், நியாயமான உணர்வுகளை புறந்தள்ளிய ஆளும் வர்க்கங்கள், இனவாத அடக்குமுறைகளை முன்னெடுத்தார்கள்.1981 யாழ்ப்பான பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. 1983 அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டது, தமிழ் மக்கள் கூடுதல் துயரங்களுக்கு ஆளாகினர்.

1972 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பது செல்வநாயகம் அவர்களால் துவங்கப்பட்டது. 1980களில் எல்டிடிஈ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோ, இபிடிபி,டெலொ உள்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தன. ஆனால் ஒருகட்டத்திற்கு பின் இவற்றில் எல்டிடிஈ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும், தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தன. அவர்களை துரோகிகள் என்று கூறி தாக்கும் நிலைப்பாட்டை எல்.டி.டி.ஈ மேற்கொண்டது.

அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஒற்றுமையை கட்டமைக்கும் பாதையை புறந்தள்ளினார்கள். பொதுவாகவே இலங்கையில் தமிழர் மத்தியில் உருவான பெரும்பாலான அமைப்புகள் அங்குவாழும் மேட்டுக்குடியினர் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம் ஆகும். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவிய உணர்வுகளைக் கூட அவர்களால் ஒன்றிணைக்க முடியவில்லை. இவையெல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாகின.

தமிழ் நாட்டில் செயல்படும் பல பெரிய கட்சிகளும் கூட இங்குள்ள அரசியல் தேவைகளுக்காக ‘தனி ஈழம்’ என்ற முழக்கத்தை ஆதரித்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரம் என்ற சரியான நிலைப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

2099 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, உள்நாட்டு யுத்தத்தை ரத்த வெள்ளத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது. இறுதிக்கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதிகேட்கும் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் எப்போதும் போல கண்டுகொள்ளாமலே விடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில்’ 250 பேர் பலியானார்கள். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுவும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த சூழ்நிலைமைகளில் இருந்து மாறுபட்டதொரு ஒற்றுமை இப்போது இலங்கையில் உருவாகும் சாத்தியம் தென்படுகிறது. மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் சிங்களவர், தமிழர் என்ற இன வேறுபடுகளும், பவுத்தர், இந்து, முஸ்லிம், கிறுத்துவர் ஆகிய மத வேறுபாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன.  அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து உதவிகள் அனுப்புவதற்கான முயற்சிகளை எடுத்தபோது, இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நிலைமை மேலும் சாதகமாகிட, சிங்கள இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் மறு சிந்தனை மேலும் வலுப்பட வேண்டும். தமிழ் இயக்கங்களின் அணுகுமுறையிலும் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அனைத்தும் சரியாக நடந்தால், போராட்டங்களில் ஒரு பண்பு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒன்றுபடும் புள்ளி:

அதற்கு, இலங்கையின் போராட்ட முழக்கம், நவதாராளமய கொள்கைகளுக்கு எதிரானதாக கூர்மையடைய வேண்டும். அரசின் செலவினங்களை அதிகரிக்காமல் நெருக்கடியில் இருந்து மீள முடியாது, ஆனால் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளும், நவதாராளமய கொள்கைகளும் அதை அனுமதிக்காது. மக்கள் நல நடவடிக்கைகளை கைவிடச் சொல்லி அரசை நிர்ப்பந்திக்கும். இது துயரங்களை மென்மேலும் அதிகரிக்கும்.

தமிழ் மக்களும், சிங்கள உழைக்கும் மக்களும் கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு, ஒற்றுமையை வலுப்படுத்தி  செயல்பட வேண்டும். போராட்டக் களத்தில் பிரிவினையை தூவுவதற்கு ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய சக்திகளும் தொடர்ந்து முயற்சிப்பார்கள். அதற்கு எதிரான வலுவான ஒற்றுமையை போராட்டக் களமே உருவாக்கிடும்.

இலங்கையில் தொடர்ந்துவரும் முதலாளித்துவ – நிலவுடமை அமைப்புக்கு முடிவு கட்டும் பாதையில், போராட்டங்கள் கெட்டிப்பட வேண்டும். நவதாராளமய போக்கிற்கு முடிவுரை எழுத வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கான பாதை. இது நடக்குமானால், இலங்கை மக்களின் துயரங்களை நீக்கிடும் ஒரு இடதுசாரி மாற்றத்தை சாதிப்பது சாத்தியமாகும்.

கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்

  • பிரபாத் பட்நாயக்
    தமிழில் : சிபி நந்தன்

தேசிய புள்ளியியல் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் தேசிய நுகர்வோர் செலவீட்டு கணக்கெடுப்பை இம்முறை (அதாவது 2017-18ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பினை) வெளியிட மறுத்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் நாள் ‘தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் கசிந்த இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் 2011-12 முதல் 2017-18 வரை ‘தனிநபர் நுகர்வோர் செலவீடு’ 3.7 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவிக்கிறது. இதுதான் கணக்கீட்டை வெளியிட மறுப்பதற்காக காரணம். அதாவது (கசிந்த கணக்கீட்டு விபரங்களின்படி) சராசரியாக ஒரு இந்தியர் செலவிடும் தொகை மாதத்துக்கு 1,501 ரூபாயிலிருந்து 1,446 ரூபாயாக சரிந்துள்ளது. (2009-10 ஆம் ஆண்டின் விலைவாசி அடிப்படையில்).

உண்மையிலேயே தனிநபர் நுகர்வோர் செலவீட்டில் சரிவு ஏற்பட்டிருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது போன்ற சரிவு ஏற்படுவது கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுவே முதல் முறை. கடைசியாக 1971-72 ஆம் ஆண்டில் இதே போல் சரிவு ஏற்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் விளைச்சல் மோசமாக இருந்தது, ஒபெக் (OPEC) நாடுகள் ஏற்படுத்திய முதல் எண்ணெய் நெருக்கடியும் அதோடு சேர்ந்து நாட்டின் பணவீக்கத்தை பெருக்கின. இது மக்களின் வாங்கும் திறனை பிழிந்தெடுத்திருந்தது. இந்த சிக்கல்களை சரியாக கையாளாதது அரசாங்கத்தின் தவறு என்ற போதிலும், எண்ணெய் விலை உயர்வு போன்ற புற காரணிக்கும், எதிர்பாராத விளைச்சல் சரிவுக்கும் நாம் அரசாங்கத்தையே பொறுப்பாக்க முடியாது.

2017-18 ஆம் ஆண்டில் இது போன்ற, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய, எதிர்பாராத எந்த பாதிப்புகளும் இல்லை. கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்ட இந்த ஓராண்டில் பொருளாதாரத்தையே உலுக்கிப் போட்ட பாதிப்புகள் என்றால் அவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் தான். இந்த இரண்டுக்கும் மோடி அரசாங்கமே முழுப் பொறுப்பு.

இந்த இரு நடவடிக்கைகள் மட்டுமே தனிநபர் நுகர்வோர் செலவீட்டின் சரிவுக்கு காரணம் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்வோம். இந்த சரிவு குறிப்பாக கிராமப்புறங்களில் தான் மோசமாக நிகழ்ந்துள்ளது, அதாவது 2011-12 முதல் 2017-18க்குள் 8.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் நகர்ப்புறங்கள் சொற்பமான, அதாவது 2 சதவீத உயர்வை சந்தித்துள்ளன. கிராமப்புறங்களில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் தாண்டிய நெருக்கடியின் அறிகுறிகள் சில காலமாகவே புலப்படத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இருந்த நெருக்கடியை (மோடி அரசாங்கத்தின்) நடவடிக்கைகள் மேலும் மோசமாக்கிவிட்டன. (அதாவது) இவற்றை மேற்கொள்வதற்கு முன்பும் கூட நிலைமை அத்தனை சகிக்கக் கூடிய வகையில் இல்லை.

இதற்கான தெளிவான ஆதாரம், உற்பத்தி குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது. உற்பத்தி பற்றிய விபரங்களும் நுகர்வோர் செலவீடுகளைப் பற்றிய விபரங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக அரசு தெரிவிக்கிறது, ஆனால் இது தவறு. ’வேளாண்மை மற்றும் வேளாண்மை சார் செயல்பாடுகளின்’ நிகர மதிப்புகூட்டப்பட்ட தற்போதைய விலையை எடுத்துக்கொள்வோம். இதுவே நாட்டில் வேளாண்மை சார்ந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களின் மூலம் ஆகும். இதை, நாட்டில் உள்ள வேளாண்மை சார்ந்துள்ள மக்கள்தொகையைக் கொண்டு வகுத்து, பின் அதை நுகர்வோர் விலை குறியீட்டினால் திருத்தினோமானால், வேளாண்மை சார் மக்களின் வருவாய் நமக்கு கிடைக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் இவர்களுக்கு கிடைத்த இந்த வருவாயின் அளவு, 2013-14 ஆம் ஆண்டு கிடைத்துவந்த வருவாயிலிருந்து சற்று சரிந்துள்ளது. விவசாயம் சார்ந்துள்ள மக்களுள் பெரும் நிலவுடைமையாளர்களும், விவசாய முதலாளிகளும் அடங்குவார்கள். மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய மொத்த வருமானத்தில் பெரும்பங்கு இவர்களுக்கே செல்கிறது. நாம் எடுத்துக்கொண்ட காலத்தில் இவர்களின் வருவாய் குறைந்திருக்க வாய்ப்பில்லை என கருதினோமானால், விவசாயம் சார்ந்து வாழும் பெரும் எண்ணிக்கையிலான, உழைக்கும் மக்களின் வருவாய் மிகக் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். நாம் எடுத்துக்கொண்டுள்ள நிறைவு ஆண்டான 2017-18 என்பதை (ஓராண்டு முந்தையதாக) 2016-17 என எடுத்துக்கொணாலும் (பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முந்தைய ஆண்டு), இந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. மோடி அரசு கருணையற்று செயல்படுத்திய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பின் பாதிப்புகள் என்பது, ஏற்கனவே பல்வேறு அரசுகளால் தொடர்ந்து திணிக்கப்பட்ட நவ தாராளவாத கொள்கையினால் சிக்கலில் இருந்த வேளாண் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டவை என்பது புலப்படுகிறது.

கிராமப்புறங்களில் 2011-12 முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை உணவுக்காக மேற்கொள்ளப்பட்ட தனி நபர் செலவு பத்து சதவீதம் வரை குறைந்துள்ளது. இது வறுமையின் அளவை கணிசமாக உயர்த்தியிருக்கக் வேண்டும். அரசின் கூற்றுக்கு மாறாக, கலோரி வழிமுறையின் படி கணிக்கப்படும் நாட்டின் வறுமையின் அளவு புதிய தாராளவாத கொள்கைகளின் காலம் முழுக்க உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது, 1993-94 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும், 2011-12 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும் ஒப்பிடுகையில் நமக்குப் புலப்படுகிறது. இந்த அளவு 2017-18 புள்ளிவிபரங்களில் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கக் கூடும்.

மோடி அரசு இந்த தகலை பதுக்குவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதற்கு முன்பும் கூட வேலையின்மை குறித்த விபரங்களை இந்த அரசு மறைத்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுவதை காட்டிய புள்ளிவிபரங்களை மக்களவைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெளியிடவில்லை. தேர்தலுக்கு பின்பாவது அந்த தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போதைய நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்களை வெளியிடவே போவதில்லை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டான 2021-22 வரை இந்த அரசு காத்திருக்கும், அதுவரை தனக்கு ஏற்ற முடிவுகள் வரும்படியாக கணக்கெடுப்பின் செயல்முறைகளை மாற்றியமைக்கும்.

இந்த விபரங்களை வெளியிடாததற்கு, அவற்றின் ‘தரம் சரியில்லை’ என அரசாங்கம் தெரிவித்துள்ள காரணம் வினோதமானதாக உள்ளது. இந்த சர்ச்சையை அதிகாரிகளிடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட “வல்லுனர்களிடமும்” மட்டும் முடிவு செய்வதற்கு கொடுப்பதை விட ஆய்வாளர்களிடமும், பொதுமக்களிடமுமே விட்டிருக்கலாம். விபரங்களை ளியிட்டுவிட்டு, இந்த விபரங்கள் தரமானது அல்ல, எனவே இதை வைத்துக்கொண்டு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருக்கலாம்.

சொல்லப்போனால், 2009-10 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐந்தாண்டு கணக்கெடுப்பில், நாட்டின் வறுமை 2004-05 ஆண்டை காட்டிலும் கணிசமாக உயர்ந்திருப்பது தெரியவந்தது. அப்போதைய அரசாங்கம், 2011-12 ஆம் ஆண்டு மீண்டும் பெரிய அளவிலான புதியதொரு கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. 2009-10 ஆண்டு ஏற்பட்ட வறட்சி கணக்கெடுப்பின் விபரங்களை பாதித்திருக்கக் கூடும் என இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும் 2009-10 க்கான கணக்கெடுப்பின் முடிவுகளை அப்போதைய அரசு வெளியிடவே செய்தது. 2011-12ல் நல்ல விளைச்சல் இருந்தமையால் எதிர்பார்த்ததைப் போலவே, கணக்கெடுப்பின் முடிவுகள் நுகர்வோர் செலவீட்டில் உயர்வையே காட்டின. ஆனாலும், இந்த கணக்கெடுப்பு நவ தாராளவாத கொள்கைகள் அமலாகும் காரணமாக வறுமை உயர்வதையே காட்டின.

கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.

நம்மை மேலும் கவலைப்பட வைப்பது என்னவென்றால், இந்த அரசு தனது பிம்பப்போதையினால், நாட்டின் புள்ளியியல் கட்டமைப்பைச் சிதைத்துவிடுமோ என்பது தான். இந்த புள்ளியியல் கட்டமைப்பு, பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் என்பவரால், ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது கட்டமைக்கப்பட்டது. அவர் அமைத்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு என்பதே அப்போதைய உலகின் மிகப்பெரிய மாதிரி கணக்கெடுப்பு. அதன் மூலம் கிடைத்த விபரங்கள் எந்த மூன்றாம் உலக நாடுகளிலும் இல்லாத அளவுக்கு விரிவானவை; பல்வேறு ஆய்வுகளுக்கு இன்றியமையாத உள்ளீட்டுத் தகவல்களாக அமைந்தவை. நம் நாட்டின் பெருமையாகவே இந்த கணக்கெடுப்பு இருந்து வருகிறது.

பிம்பப் போதையினால், செலவீடு குறித்த தகவலின் தரம் சரியில்லை என்று சொல்கிற இந்த அரசு அதற்காக தெரிவிக்கின்ற காரணம்: பிற அதிகாரப்பூர்வ பொருளாதார குறியீடுகளுடன் இந்த விபரங்கள் ஒத்துப்போகவில்லை என்பதே ஆகும். ஆனால், நமக்கு கிடைத்துள்ள மற்ற விபரங்களை வைத்துப் பார்த்தால், நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்கள் அவற்றோடு ஒத்துப்போகவே செய்கின்ற என்பது நமக்குத் தெரிகிறது. வேலையின்மை குறித்து முன்னர் கிடைத்த விபரங்களை இது உறுதிப்படுத்துகிறது, விவசாய வருமானம் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புள்ளிவிபரம் இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலையைக்குறித்து வந்துகொண்டிருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது என்பதையே இந்தப் புள்ளிவிபரமும் உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில், பிஸ்கட் போன்ற சாதாரண பொருட்களின் விற்பனை கூட சரிந்து வருகிறது என்கிற உண்மையை நுகர்வோர் செலவீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு உறுதிப்படுத்துகிறது.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த சூழலில், கிடைக்கும் ஒவ்வொரு புள்ளிவிபரத்தையும் பயன்படுத்தி எதிர்கொள்ளும் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், இது போன்ற முக்கியமான புள்ளிவிபரங்களை மோடி அரசாங்கம் பதுக்குகிறது. இது தான் சிக்கலில் இருந்து மீள இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை!

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்-1

பிரபாத் பட்நாயக்

தமிழில்: ஆர்.எஸ். செண்பகம்

(பேராசிரியர் பிரபாத்பட்நாயக் அதிபர்ஜுலியஸ் நெய்ரே பெயரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசியதன் தொகுப்பே இக்கட்டுரை)

சிறுஉற்பத்தித் துறையை கபளீகரம் செய்யும் முதலாளித்துவம்

முதலாளித்துவம் எப்போதுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தன்முனைப்புடன் கூடிய தன்னிச்சை நடவடிக்கைகளுடன் செயல்படும் அமைப்பு.  தன்னுள்ளே இருக்கும் பல உள்ளார்ந்த போக்குகளால் அது வழிநடத்தப்படுகிறது.  பொதுவான சூழலில், சாதாரண காலகட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் அரசானது, இந்த உள்ளார்ந்த போக்குகளுக்கு ஆதரவாக செயல்படும்; அந்த போக்குகளை தக்கவைக்க வேண்டிய அனைத்தையும் செய்யும்; மேலும் இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்.

அப்படிப்பட்ட முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகளில் ஒன்று –முதலாளித்துவ அமைப்பிற்கு முன்பு, ஒரு நாட்டில் வளர்ந்து தழைத்து வந்த பாராம்பரிய சிறு உற்பத்தித் தொழில்களை கபளீகரம் செய்வது.  இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை stock and flow என்ற இரண்டு வடிவங்களில் நிகழ்கிறது.  ஒன்று கையிருப்பு (stock) வடிவம்.  மற்றொன்று சுழற்சி இயக்க ஓட்ட (flow) வடிவம்.  (ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உள்ள ஒரு காரணியின் மாற்றத்தை flow காட்டும்.  Stock என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த காரணியின் அளவினை சுட்டிக்காட்டும். உதாரணத்திற்கு செல்வம் என்பது Stock.  வருவாய் என்பது flow.) பொதுவாக, முதலாளித்துவ அமைப்பின் அரசாங்கம் முதலாளிகளுக்குச் சாதகமாக செயல்படுகிறது.  இதன் மூலமாக, இந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தனியார் முதலாளிகள் தாங்களே நேரடியாக இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

Stock வடிவம்

Stock வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகள் பறிக்கப்படுவது என்பது அவசியமாகிறது.  அதாவது சிறுஉற்பத்தியாளர்களுக்கு இதுநாள்வரை அவர்களிடம் இருந்த உற்பத்திவழிமுறைகளின்மீது அவர்களுக்கிருந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன.  இந்த உற்பத்திவழிமுறைகளின் மீதான உரிமைகள், சிலநேரங்களில், முற்றிலும் இலவசமாகவே கையகப்படுத்தப்பட்டு விடுகின்றன.  இன்னும் சில நேரங்களில், பெயரளவிற்கு விலைகொடுக்கப்பட்டு வாங்கப்படுகின்றன.  உண்மையில், இந்தவிலை என்பது அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய விலையைவிட மிகக் குறைவாகவே இருக்கும்.  அதேபோல, சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன.  முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. 

Flow  வடிவம்

Flow வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகள் பறிக்கப்படுவதில்லை.  மாறாக, இந்த முறையில், சிறுஉற்பத்தித்துறையில் ஈடுபடும் அனைத்துப் பிரிவினரும் வருமானச் சுருக்கத்தினை எதிர்கொள்கின்றனர். 

1. அப்பட்டமான கொள்ளையின் மூலம்

2. சமமற்ற ஏற்றத்தாழ்வான பரிமாற்றத்தின் மூலம்

(மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான சமமற்ற பரிமாற்றத்தின் காரணமாக, அதாவது தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல், அவர்களிடமிருந்து உறிஞ்சப்படும் உபரி உழைப்பின் காரணமாகவும், சந்தையில் அவ்வப்போது நிலவும் அதிகப்படியான விலையினை தனது உற்பத்திப் பொருட்களுக்கு பெறுவதன் காரணமாகவும் மூலதனம் அதிகலாபத்தை பெறுகிறது.  இத்தகைய உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான சமமற்ற பரிமாற்றத்தின் மூலமாக)

3. அரசின் வரிவிதிப்புகளின் மூலம். அதாவது முதலாளித்துவ அரசு முதலாளிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு சாதகமாக வரிவிதிப்பு முறைகளை பின்பற்றும் என்ற வழிமுறையின் மூலமாக

4. பாரம்பரிய சிறுஉற்பத்தியாளர்களுக்கும் முதலாளித்துவ உற்பத்தியாளர்களுக்கும் இடையில் வர்த்தகச் சமநிலை இருந்தாலும், சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை பறித்துக் கொள்வதன் காரணமாக. இவையெல்லாவற்றாலும், சிறுஉற்பத்தித்துறையில் வேலையின்மை என்பது உருவாகி அதன்விளைவாக வருமானமின்மை என்பதும் வருமானக்குறைவு என்பதும் ஏற்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், காலனியாதிக்கத்தின்போது காலனிய நாடுகளில் தொழில்துறைகள் தகர்க்கப்பட்டதுபோல் பாரம்பரியத் தொழில்கள் நசிவடையச் செய்யப்படுகின்றன. இதனால் சிறுதொழில் புரிபவர்களிடையே வருமானச் சுருக்கம் உருவாக்கப்படுகிறது.

வேலையின்மையும் வருமானச் சுருக்கமும் ஏன்?

சமநிலைப்படுத்தப்பட்ட வணிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  அப்புறமும் ஏன் வேலையின்மை உருவாக்கப்படுகிறது என்பதனை கெய்னீசியன் கோட்பாட்டின் அடிப்படையிலோ அல்லது நியோ கிளாசிக்கல் கோட்பாட்டின் அடிப்படையிலோ தெளிவாகச் சொல்ல முடியவில்லை.  இந்த வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே இருக்கும் விவசாயத்திற்கான நிலப்பரப்பு அதேஅளவில்தான் இருக்கும்.  பெரும்பாலும் அதன் முழுபரப்பளவும் சிறுஉற்பத்திக்குப் பயன்படவும் செய்யும்.  ஆனால், பிரச்சினை எங்குள்ளது என்று பார்த்தோமானால், முதலாளித்துவ அமைப்பின்கீழ் முதன்மை விவசாயப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல, முன்பு சிறுஉற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களுக்குப் பதிலாக, தொழிற்சாலைகளில் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஒரு சமநிலை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆனால், இந்த இயந்திர தயாரிப்புகளின் ஏற்றுமதியினால், சிறுஉற்பத்தியாளர்களாக உள்ள கைவினை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.  கைவினைகலைஞர்கள் தங்கள் தொழிலை செய்யமுடியாமல் வேறுஎங்கும் செல்லவும் முடியாமல் துன்பப்படுகின்றனர்.  இதன் காரணமாக இவர்களின் உணவு மற்றும் மூலப்பொருட்களின் நுகர்வு அளவு குறைந்துபோகிறது.  நுகர்வின் அளவு குறையும்போது உற்பத்தியும் பாதிக்கப்படும்.  இதுவே வேலையின்மைக்குக் காரணமாகிறது. 

அதாவது சிறுஉற்பத்தியாளர்களுக்கான சந்தை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.  அதன்மூலம் வேலையின்மை உருவாக்கப்படுகிறது.  இதனால் அவர்களது வருமானம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.  இதன் விளைவாக அவர்களுக்கென உள்ள சந்தைஇடத்தில் அதிகமான எண்ணிக்கையில் போட்டி அவர்களிடையே ஏற்படுவதன் காரணமாக அதிக அழுத்தம் சிறுஉற்பத்தித்துறையில் ஏற்படுகிறது.  முதலாளித்துவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின்கீழ் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  இதைத்தான் 1913ல் ரோஸா லக்ஸம்பர்க் தன்னுடைய மூலதனச்சேர்க்கை என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

ஐரோப்பாவிலேயேகூட, 19ம்நூற்றாண்டின் இறுதியில், முதல்உலகப்போர் துவங்கும்முன்பு, முதலாளித்துவ தோற்றத்தின்போது, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென்ஆப்பிரிக்காவில் 50 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டைவிட்டு வெளியேறி வந்து குடியேறினர் என்று 1978ம் ஆண்டு ஆர்தர் லூயிஸ் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குறிப்பிடுகிறார். இப்படி குடியேறியவர்களால் உள்ளூர்வாசிகளின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.  இவர்கள் விவசாயம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டனர்.  அதனால் முதலாளித்துவத்தினால் ஏற்பட்ட வேலையின்மை என்பது ஐரோப்பாவிற்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்பட்டது.  ஆனால், இதுபோன்ற வாய்ப்புகள், மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவத்தினால் இடப்பெயர்வுக்கு ஆளானவர்களுக்குக் கிடைக்கவில்லை.  இன்றைக்கு அதற்கான வாய்ப்பு என்பதே இல்லை. 

எனவே, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சிறுஉற்பத்தித்துறையின் ஆக்கிரமிப்பு என்பது, மேலேகூறிய stock and flow வடிவத்தில், சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகளை ஆக்கிரமிப்பதன் மூலமும், அவர்களது உரிமைகளை பறித்துக்கொள்வதன் மூலமும், அந்தத் துறையிலே வருமானச் சுருக்கத்தினையும், வேலையின்மையையும் உருவாக்குவதன் மூலமும் முதலாளித்துவத்தால் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அரங்கேற்றப்படுகிறது

முதலாளித்துவ கபளீகரம் செய்வது என்ன? தவறான கண்ணோட்டங்கள்

சிறுஉற்பத்தித் துறையை முதலாளித்துவம் கபளீகரம் செய்வதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து குறைந்தது  4 தவறான கருத்துக்கள் அல்லது கண்ணோட்டங்கள் உள்ளன.

  1. முதலாவதாக,  “சிறுஉற்பத்தித்துறையை முதலாளித்துவம் ஆக்கிரமிப்பு செய்யும்போது, அந்தத் துறையில் இருந்து துரத்தப்படும் சிறுஉற்பத்தியாளர்கள் முதலாளித்துவ அமைப்பின்கீழ் பாட்டாளிவர்க்கமாக கிரகிக்கப்படுவர்.  இதே முதலாளித்துவ அமைப்பிற்குள் ஏற்கனவே வேலையின்றி வேலைதேடிக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கப் படையும் இருக்கும்.  ஆனாலும், இப்படி பாட்டாளிவர்க்கமாக மாற்றப்படும் சிறுஉற்பத்தியாளர்களின் துன்பம் என்பது ஒரு இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும்.  இது முதலாளித்துவம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும்போது, அந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியே அல்லாது இதனால் இரண்டு நிரந்தர முரண்பட்ட பிரிவுகள் என்பது எப்போதும் உருவாக்கப்படப் போவதில்லை” என்கிற கருத்து.

இது முற்றிலும் தவறான கருத்தாகும்.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் வறுமைக்கும் சீர்குலைவிற்கும் தள்ளப்படும் சிறுஉற்பத்தியாளர்கள், சிறுஉற்பத்தித் துறையிலேயே இருக்கவும் முடிவதில்லை.  தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக கிரகிக்கப்படுவதற்கான வாய்ப்பு என்பதும் இல்லை.   ஏனென்றால், முதலாளித்துவ அமைப்பின்கீழ் போதுமான வேலைவாய்ப்பு என்பது எப்போதும் உருவாக்கப்படுவதில்லைஐரோப்பாவிலேயே கூட, இது சாத்தியமாகவில்லை.  மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான சாத்தியம் என்பது இல்லவேஇல்லை. 

இதனை ஃப்ரடெரிக் எங்கல்ஸ், டேனியல் சன்னிற்கு எழுதிய கடிதத்தில், 1892ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே குறிப்பிடுகிறார்.  மார்க்சின் காலம் கழிந்து எத்தனையோ பத்தாண்டுகள் கடந்துவிட்டன.  வரலாற்று அனுபவங்கள் இப்போதும் இதனை உறுதிப்படுத்துகின்றன.  உதாரணத்திற்கு, சமீபத்தில், இந்தியப் பொருளாதாரம், உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு அதிக வளர்ச்சியை எட்டியது.  இந்த வளர்ச்சி மூன்றாம் உலக நாடுகளில் பின்பற்றப்படும் உலகமய நவீன தாராளமயத்தின் லாப விளைவுகளுக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது.   ஆனால், உண்மையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கேற்ற அளவிற்கு உயரவில்லை என்பதோடு, மிக அற்பமான வளர்ச்சியையே எட்டியுள்ளது.  மேலும், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை விகிதத்தோடு ஒப்பிடுகையில், இந்த வேலைவாய்ப்பு வளர்ச்சிவிகிதம், அதற்கும் கீழாகவே உள்ளது என்பதுதான் புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை. 

உதாரணத்திற்கு, 2004-2005ம் ஆண்டிற்கும் 2009-2010ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு 8 சதம் ஆகும்.  அதேநேரத்தில், ஒரு தொழிலாளி ஒருவருடத்தில் அதிகபட்சம் வேலையில் இருந்த காலஅளவின் அடிப்படையில், வேலையின் ”வழக்கமானநிலை”யின் விகிதத்தை கணக்கிட்டால், அது வெறுமனே 0.8 சதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  இது, அந்த நேரத்தில் இருந்த வேலைதேடும் மற்றும் வேலையில் இருந்த தொழிலாளர்களின் வளர்ச்சி விகிதமான 1.5 சதத்தோடு ஒப்பிடும்போது, அந்த விகிதத்தையும் விட குறைவாகும்.  எனவே, முதலாவது கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்படுகிறது

  • இரண்டாவதாக,  “புராதன மூலதனச் சேர்க்கை குறித்த மார்க்சின் விவாதம் முதலாளித்துவம் துவங்கும் காலக்கட்ட வரையறைக்குள்ளேயே நின்று விடுகிறது.  முதலாளித்துவ அமைப்பு உருவானபிறகு, அதனுடைய இயக்கவியலானது,  “மூலதனம்” நூலின் இரண்டாம் தொகுதியில், மறுஉற்பத்தித் திட்டங்களின் விரிவாக்கம் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுவதோடு ஒத்துப் போகிறது.  சிறுதொழில்களை கபளீகரம் செய்யும் அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் முதலாளித்துவத்தின் இயக்கவியலுக்கும் தொடர்பே இல்லை. கார்ல் மார்க்ஸ்கூட, முதலாளித்துவம் துவங்குவதற்கு முன்பு தோன்றிய பாரம்பரிய துறைகளை முதலாளித்துவம் கபளீகரம் செய்வது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை” என்ற ஒரு கருத்து நிலவுகிறது. 

இந்த கருத்து முற்றிலும் தவறானதுஏனென்றால், 19ம் நூற்றாண்டு முழுவதும், உலக முதலாளித்துவத்தின் இயக்கவியலை தக்கவைப்பதற்கான பங்கினை காலனியமும், காலனியாதிக்கமும் ஆற்றி வந்தது.  இது குறித்து எஸ்.பி. சால் போன்ற பொருளாதார வரலாற்றாய்வாளர்கள் ஆய்வு புத்தகங்களை எழுதியுள்ளனர்.  பிற்காலத்தில், மார்க்சே கூட, இந்தியாவில் இருந்து பெருமளவிற்கான உபரி லாபம் பிரிட்டனுக்குக் கொள்ளை கொண்டு போவது குறித்து, டேனியல் சன்னிற்கு 1881ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.  அந்த கடிதத்தில்,  “ஆங்கிலேயர்கள், ஆண்டுதோறும், இந்திய மக்களிடமிருந்து, பெருமளவு பொருட்களை, சம மதிப்பிலான எந்த ஈடும் கொடுக்காமல், அல்லது இந்தியர்களுக்குச் சேரவேண்டிய இந்திய மதிப்பின் அளவிற்கான தொகையையே கூட கொடுக்காமல், இன்னும் சொல்லப் போனால், ஏறக்குறைய இலவசமாக, இங்கிலாந்திற்கு கொண்டு செல்கின்றனர்.   இந்தத் தொகையானது இந்தியாவில் உள்ள 60 மில்லியன் விவசாய மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் மொத்த வருமானத்திற்கு சமமாகும்.  இது இந்திய மக்களை அதிகப்படியாக துன்பத்திற்குள்ளாக்கும் அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கையாகும்” என்று முதலாளித்துவத்தின் கபளீகரம் குறித்து எழுதியுள்ளார். 

இந்த அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கைக்கும் முதலாளித்துவத்தின் இயக்கவியலுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது அபத்தமானது.  வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், சிறுதொழில் துறையை ஆக்கிரமிக்கும் முதலாளித்தவத்தின் செயல்பாடு என்பது வெறுமனே அது பிறக்கும்போது மட்டும் நிகழ்வதல்ல. மாறாக, அது வாழும்காலம் முழுவதும் நிகழ்வதாகும்.  அதேபோல, சிறுதொழில் நசிவினால் கடுமையான துன்பத்திற்குள்ளாகும் சிறுஉற்பத்தியாளர்களை முதலாளித்துவம் தனது தொழிலாளிவர்க்கப் படையுடன் கிரகித்துக் கொள்வதில்லை.  இது முதலாளித்துவம் இருக்கும் காலம்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.  இந்த சிறுஉற்பத்தியாளர்கள் செல்லுமிடம் அறியாது துன்பத்தில் உழன்றுகொண்டுதான் இருக்கின்றனர்.  இந்த அம்சம் நவீன கிளாசிக்கல் பொருளாதார கோட்பாட்டினாலோ அல்லது சர்வதேச நிதியம் மற்றும் உலகவங்கி போன்ற நிறுவனங்கள் பின்பற்றும் இதுபோன்ற கொள்கைகளாலோ அங்கீகரிக்கப்படவில்லை.  மாறாக, அவை  “முதலாளித்துவத்தின்கீழ், பெருமுதலாளிகளும் பெருநிறுவனங்களும் அடையும் பலன்கள், சொட்டுச்சொட்டாக கீழே ஏழைகளைச் சென்றடையும்” என்ற trickle down theory -ஐ வலியுறுத்துகின்றன. 

  • மூன்றாவதாக சொல்லப்படும் இந்த கருத்தும் மேற்கூறிய அம்சத்தை உள்வாங்கவில்லை என்பதோடு, அது முற்றிலும் வேறான இன்னொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது.  இந்த கருத்து  “நியோ பாப்புலிஸ்ட் குணாம்சத்துடன் பேசுகிறது. விவசாயிகள் குறிப்பாக நடுத்தர விவசாயிகள் தங்களுக்கே உரித்தான நெகிழ்திறனுடன் முதலாளித்துவத்தின் தாக்குதல்களை தாங்கி நிற்கும் திறன் பெற்றவர்கள்” என்று விவாதிக்கிறது. 

இந்த கருத்து முற்றிலும் தவறானதுவிவசாயத்துறை நாளும் நசிவடைந்துவரும் சூழ்நிலையில், சிறுவிவசாயிகள் – சிறுஉற்பத்தியாளர்கள் விவசாயத்தை விட்டுச் செல்லாமல், அந்தத் துறையிலேயே தொடர்ந்து இருப்பதனை தங்களுடைய கருத்திற்கு ஆதாரமாகச் சொல்கிறது.  உண்மையில், விவசாயத்துறையின், சிறுவிவசாயிகளுக்கு –சிறுஉற்பத்தியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு என்பது, இந்த முதலாளித்துவ அமைப்பின்கீழ் இல்லாத நிலையில், விவசாயத்துறை நசிவடைந்தாலும் அதற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.  அதேபோல, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு விளைச்சல் என்று அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.   அப்படி அவர்கள் உதாரணமாகக் காட்டுவது சிறுசிறு பண்ணைகள் குறித்த புள்ளிவிவரங்களே ஆகும்.   உண்மையில், இவர்கள் எடுத்துக்காட்டாகக் கூறும் இந்த விளைநிலப்பரப்பில் குவிந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை பெரியது, நெரிசல் மிக்கது.  எனவே, ஒரு ஏக்கருக்கு இந்த அளவு விளைபொருட்கள் என்று சொல்லும்போது, அந்த விளைநிலப் பரப்பில் குவிந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அவர்களின் உற்பத்தித்திறன் படுபாதாள அளவில் குறைந்து போயுள்ளது என்பது தெள்ளத் தெளிவானது.

எனவே, முதலாளித்துவத்துடன் இணைந்து ஒரு  “திறன்மிக்க”,  “வலுவானசிறுவிவசாயமும் இருக்கும் என்பது ஒரு கட்டுக்கதைஅது விவசாயிகளின்  “துன்பத்தையும் துயரத்தையும்”, அவர்களின்  “செயல்திறனாக”  உருவகிக்கும் தவறினை செய்கிறது

  • நான்காவதாக சொல்லப்படும் கருத்து, போருக்குப் பின்னாலுள்ள பல்வேறு முதலாளித்துவ கட்டங்களுக்கும், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ கட்டத்திற்கும், மேலும், இன்றைய, தற்போதைய சூழலில் உள்ள முதலாளித்துவ கட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டினை துடைத்தழித்துவிட்டு பார்க்கின்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலான கருத்து இது.  அதாவது முதலாளித்துவ அமைப்பிற்குள், அதன் அமலாக்கத்தில், பல்வேறு கட்டங்களுக்குள்ளும் வேறுபாடுகள் இல்லை என்ற அடிப்படையிலான பார்வை. 

இந்த கருத்து முற்றிலும் தவறானதுஏனென்றால், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தவுடன் அந்தந்த நாடுகளில் அமைந்த ஆட்சிகள், தேச அபிவிருத்திக்காக தனியார் மூலதனத்தை நாடியபோதுகூட, முதலாளித்துவத்தின் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே அந்த அரசுகள் முனைந்தன.  அதேபோல, காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய ஆட்சியில், அரசு சமூகப் பொருளாதார விவகாரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.  இதுவே அதனுடைய தனித்தன்மையாக இருந்தது.  அந்தக் காலக்கட்டத்தில் சிறுஉற்பத்தித்துறையானது பாதுகாக்கப்பட்டதுடன், அதனுடைய வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டது.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவத் துறையின் ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.  இது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் அமலாக்கப்பட்டது.  மேலும், பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் அன்று அமைந்த அரசுகள் ஐரோப்பாவில் அமைந்ததுபோன்ற பூர்ஷ்வா அல்லது முதலாளித்துவ அரசுகளைப் போன்ற தன்மையில் அமையவில்லை. 

பிற்காலத்தில், ஐஎம்எஃப், உலகவங்கி போன்ற  பிரிட்டன்வுட்ஸ் அமைப்புகளின் நிர்பந்தத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார தாராளமயமாக்கல் என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேரத்தில் அமலாக்கப்பட்டது.  இறுதியில், உலக அளவில் நவீன தாராளமயமாக்கல் அமலாக்கப்பட்டபிறகு, முதலாளித்துவம் பெற்ற வெற்றியின் பின்னணியில், அதனுடைய தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளைக் கொண்ட குணாம்சம் வெளிப்படத் துவங்கியது.  அதிலிருந்து முதலாளித்துவம் அதிதீவிரமான ஆற்றலுடன் பெரும்சக்தியுடன் பகிரங்கமாக வளரத் துவங்கியது.  நவீன தாராளமய ஆட்சியின் கீழ், சிறுஉற்பத்தித்துறைக்கு முதலாளித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு என்பது பெரும்பாலும் இல்லை என்றே ஆனது.  தற்போதைய ”நவீன தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் அரசு” முதலாளித்துவ அமைப்பின்  “தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை”மீட்டெடுத்து, உள்நாட்டு பெருமுதலாளிகள் உலகமயமாக்கப்பட்ட நிதிமூலதனத்தோடு இன்னும் ஒருங்கிணைந்து நிற்கக்கூடிய வாய்ப்பினை உருவாக்குகிறது.

விவசாய சிறுஉற்பத்தித்துறையை உலகச் சந்தையின் விலைவாசி ஏற்றஇறக்கங்களுக்கு திறந்துவிட்டதன் காரணமாக, எப்போதுமே அவர்கள் அதிகக் கடனுக்கும், கொடிய வறுமைநிலைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.  மேலும், விவசாய இடுபொருட்களின் விலையில் அளிக்கப்பட்டுவந்த அனைத்து மானியங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.  விதைகள் வாங்குவதிலும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி  மருந்துகளை வாங்குவதிலும், சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதிலும், சர்வதேச வேளாண் வணிகத்தின் கருணையை எதிர்பார்த்து நிற்கச் செய்யப்படுகின்றனர். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்றவை தனியார்மயப்படுத்தப்பட்டதன் காரணமாக, அவற்றிற்கான செலவு அதிகரித்துள்ளது.  இதனால், சிறுஉற்பத்தியாளர்கள் பெரிய அளவில் கடனிற்கும், கொடிய வறுமைக்கும் தள்ளப்படுகின்றனர்.  இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பதில் இருந்தே, வறுமையின் தீவிரத்தை நாம் உணர முடியும்.  1991க்கும் 2011க்கும் இடைப்பட்ட இரு பத்தாண்டுகளின் கணக்கெடுப்பின்படி, விவசாயத் துறையில் இருந்து 1.5 கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி, மாற்றுவேலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.  இதனால் வேலைதேடும் தொழிலாளர்படையின் அளவு பெருத்துள்ளது.  இதனால், வேலையின்மை அதிகரித்துள்ளது என்று சொல்வதை விட, கேசுவல், பகுதி நேரம், மற்றும் இடைப்பட்ட நிலையிலான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று சொல்லும் நிலை உருவாகியுள்ளது.  வேலைதேடும் தொழிலாளர்படையின் அளவு பெருத்துக்கொண்டே செல்வதன் காரணமாக, முதலாளித்துவ அமைப்பின்கீழ் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் உண்மைஊதியம் குறைந்துகொண்டே போகிறது.  சங்கத்தின்கீழ் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் இதேநிலையில்தான் உள்ளது. 

அடுத்த பகுதி : மூன்றாம் உலக நாடுகளின் வறுமையும் தொழிலாளர் –விவசாயி கூட்டணியும்

இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை

  • வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த பல வாரங்களாக ஊடகங்களில் இந்திய பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரு முதலாளிகள் மீண்டும் மீண்டும் அவர்களது வர்க்க கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்கின்றனர். அவர்களுக்கு விசுவாசமாக உள்ள மத்திய பாஜக அரசு பெரும் நிறுவனங்களுக்கு தினமும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால் பொருளாதாரம் மீட்சி அடைவதற்குப்பதில் மந்தநிலை தீவிரமடைந்து வருகிறது.

பரவலான மந்தநிலை

துவக்கத்தில் மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள கிராக்கி சரிவும் அதையொட்டி நிகழ்ந்துவரும் ஆலை மூடலும் ஆட்குறைப்பும் தான் பிரதான கவனம் பெற்றன. 2௦19 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான ஐந்து மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் இத்துறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. மோட்டார் வாகனத்துறையில் மட்டும் வேலை இழப்பு 1௦ லட்சத்தை தாண்டலாம் என்று கருதப்படுகிறது. அடுத்தடுத்து, ‘விரைவில் விற்பனையாகும் நுகர்பொருள்’ (FMCG) சந்தைகள், ஜவுளி, வைரம் உள்ளிட்ட பொதுவான ஏற்றுமதி துறைகள் இவை அனைத்திலும் மந்தநிலை பரவியது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், என்று மேலும் விரிவான மந்தநிலை இன்று ஏற்பட்டுள்ளது. பரவலாக கிராக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி விகிதத்தை அதீதமாக உயர்த்திக்காட்டும் அரசின் கணக்கின்படி பார்த்தாலும்கூட,  ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தி மதிப்பின் – ஜிடிபி(GDP) யின் – வளர்ச்சி விகிதம்  கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சரிந்து வருகிறது. இது இன்றைய பொருளாதார அமைப்பு மற்றும் கொள்கைகளில் உள்ள தீவிர முரண்பாடுகளின் விளைவு தான்.

முதலாளித்துவமும் பொருளாதார மந்தமும்

முதலாளித்துவ அமைப்பில் பொருளாதாரம் வளர்வதும் ஒரு கட்டத்தில்   மந்தநிலை அடைவதும் பின்னர் மீட்சி ஏற்பட்டு வளர்ச்சி தொடர்வதும் வரலாற்று அனுபவமாக உள்ளது. பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலில்  முதலாளித்துவத்தின் இயக்கவிதிகளை விரிவாக ஆராய்ந்து அவ்வப்போழுது முதலாளித்துவ அமைப்பில் மறு உற்பத்தி ஏன் தடைபடுகிறது என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்.

முதலாவதாக, முதலாளித்துவ அமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் செயல்படும் அமைப்பு அல்ல. ஒவ்வொரு உற்பத்தி துறையிலும் அதன் சரக்கிற்கான விற்பனை வாய்ப்புகளை  முதலாளிகள்  அவரவர் செய்யும் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். இந்த நிர்ணயிப்புகள் தவறாக அமைந்திட வாய்ப்பு உண்டு. அவ்வாறு சில சமயங்களில் ஒரு முக்கிய துறையில் அதீதமான கிராக்கி நிர்ணயிப்பின் காரணமாக உற்பத்தி செய்யப்பட சரக்குகள் விற்பனையாகாமல் தேங்கிவிடும் நிலை ஏற்படும். இது இத்துறையுடன் சம்பந்தப்பட்ட இதர துறைகளிலும் கிராக்கி பிரச்சினையை ஏற்படுத்தும். சில முக்கிய துறைகளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதால் அளிப்புக்கும் கிராக்கிக்குமான இடைவெளி மிக அதிகமாகி மூலதன மறுஉற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும். இதனை, முதலாளித்துவ அமைப்பின் திட்டமற்ற, அராஜகமான தன்மையின் விளைவாக நாம் பார்க்கலாம். இது பொதுவான காரணம்.

குறிப்பான இரண்டு காரணங்களையும் மார்க்ஸ் விளக்குகிறார். ஒன்று, முதலாளித்துவத்தில், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான வர்க்க முரண்பாடும் முதாளிகளிடையேயான போட்டியும் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை இயந்திரமயமாக்கல் மூலம் உயர்த்திக்கொண்டே போகின்றன.  ஆனால். இவற்றால் நிகழும் ஆட்குறைப்பும் அதிகரிக்கும் வேலையின்மையும் சிறுமுதலாளிகளை பெரு முதலாளிகள் விழுங்குவதும், எண்ணற்ற சிறு உற்பத்தியாளர்களின் அழிவும் சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சிக்கு கடிவாளமாக அமைந்துவிடுகின்றன. எனவே முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளரும்பொழுது  அளிப்பு பெருகுவதும், முதலாளித்துவ அமைப்பின் வர்க்க தன்மை காரணமாக நுகர்வு சக்தியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு அளிப்பின் அதிகரிப்பிற்கு கிராக்கி ஈடு கொடுக்கமுடியாத நிலையும், இதனால் கிராக்கிசார் நெருக்கடியையும் மந்தநிலையையும் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகின்றன.

முதலாளித்துவத்தில் கிராக்கி என்பது தொடர் பிரச்சினை என்று கூறலாம். இரண்டாவதாக, முதலாளித்துவ வளர்ச்சியில் நிகழும் இயந்திரமாக்கல் நேரடி உழைப்பின் பங்கை குறைத்து, கடந்தகால உழைப்பு உறைந்திருக்கும் இயந்திரங்களின் பங்கையும் இதர மூலப்பொருள் உள்ளிட்ட உற்பத்திசாதனங்களின் பங்கையும் அதிகரிக்கிறது. ஆனால் உபரி மதிப்பு நேரடி உழைப்பின் மூலமே உருவாக்கப்படுகிறது. அதன் பங்கு குறைவது லாப விகிதத்தை காலப்போக்கில் குறைக்கும். இத்தகைய, நீண்டகால கண்ணோட்டத்தில் லாப விகிதம் சரிவது என்ற போக்கும் இடைவெளி விட்டு முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாவதற்கான காரணம்.

ஆகவே முதலாளித்துவத்தில் நெருக்கடியும் மந்தநிலையும் தவிர்க்க இயலாதவை என நாம் புரிந்துகொள்ளலாம். நீண்ட கால கண்ணோட்டத்தில், முதலாளித்துவ மறுஉற்பத்தி அவ்வப்பொழுது தடைபடுவது நிகழும்.

சமகால முதலாளித்துவமும் மந்தநிலையும்

 மார்க்ஸ் காலத்திற்குப்பின் முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவி பல மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிராக்கிசார் மந்தநிலையை தவிர்க்க அரசு தலையிட்டு செலவுகளை மேற்கொண்டு கிராக்கியை உயர்த்திக்கொடுப்பது என்ற “கிராக்கி மேலாண்மை” கொள்கைகளை மேலை நாட்டு ஆளும் வர்க்கங்கள் அமலாக்கின. (இக்கொள்கைகளுக்கு தத்துவார்த்த அடித்தளம் அமைத்துக்கொடுத்த பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் கெய்ன்ஸ் [Keynes] பெயராலும் இவை அறியப்படுகின்றன). 1945 முதல் 1974 வரை மேலை நாடுகளில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டது. கடும் மந்தநிலை எழவில்லை. இதில் கிராக்கி மேலாண்மை கொள்கைகளுக்கும் ஒரு பங்கு இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பின் தங்களது ஓரளவு வலுவை இழந்திருந்த மேலை நாட்டு வல்லரசுகள், இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில் மீண்டும் வலுப்பெற்றன. இப்பின்புலத்தில், பழைய காலனியாதிக்க முறைகளை நேரடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், வளரும் நாடுகளின் சந்தைகளை, மூலப் பொருட்களை,  அங்கிருக்கக் கூடிய மலிவான உழைப்பை எப்படி பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக மேலை நாட்டு வல்லரசுகள் 198௦களில் களம் இறங்குகிறார்கள்.  பன்னாட்டு கம்பெனிகள் ஒரு மிகப் பெரிய சக்தியாக வருகின்றன. குறிப்பாக, மேலை நாடுகளில் 1950 முதல் 1980 வரை இருந்த 30 ஆண்டு காலத்தில் சேர்க்கப்பட்ட ஏராளமான செல்வங்கள் (பெரும் பெரும் கம்பெனிகளின் லாபங்கள், மேலை நாட்டு உழைப்பாளிகளின் சேமிப்புகள்)  அனைத்தும் பன்னாட்டு சந்தைகளில் பணமாக உலா வருகின்றன. இதிலிருந்து  பண மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகில் நீங்கள் 80களில் பார்க்க முடியும். (பன்னாட்டு பணமூலதன வளர்ச்சிக்கு வேறு சில காரணங்களும் உண்டு.)  

இந்த பண மூலதன ஆதிக்கம் படிப்படியாக சோசலிச நாடுகளையும் சிதைக்கிறது. அங்கேயும் அதனுடைய செயல்பாடு துவங்குகிறது. இதேபோன்று, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் பன்னாட்டு பண மூலதனம் வரும்போது, பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தித்தருகிறது. முந்தைய காலங்களில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி, ஒரு வரம்புக்கு உட்பட்ட நிலசீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்தி வளர்ந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல இடங்களில் கடன்களை வாங்குகின்றன. 

இந்நிலையில், விரைவாக இந்த கடன்களை திருப்ப முடியாத நெருக்கடி நிலை ஏற்படும்போது, மேலைநாடுகள் சொல்வதைக் கேட்கிற இடத்திற்கு கடன் வாங்கிய நாடுகள்  வந்து விடுகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், உலக வர்த்தக அமைப்பு போன்ற  அமைப்புகளின் ஆதிக்கம் மேலைநாடுகளிடம் (ஐரோப்பா, அமெரிக்கா) இருக்கிறது. தொழில்நுட்பம், சந்தை, நிதி, தகவல் தொடர்பு ஆகிய  துறைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மேலை நாட்டு வல்லரசுகளும் பன்னாட்டுக் கம்பனிகளும்  ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த பன்னாட்டு சூழல் வளரும் நாடுகளுக்கு சொந்த காலில் நின்று வளருவது என்பதை  சவாலாக்குகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்ட பிறகு அமெரிக்கா தலைமையில் ஒருதுருவ உலகம் உருவானது. வளரும் நாடுகள் மேலும் கூடுதலாக மேலை நாடுகளை சார்ந்து வளரவேண்டிய நிலை வலுப்பெற்றது.

இதற்கு விதிவிலக்காக ஒரு சில சோஷலிச நாடுகள் சுயசார்பு தன்மையிலான வளர்ச்சிக்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன.  இவற்றில் மிக முக்கியமானது மக்கள் சீனம். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின்  சோசலிச புரட்சி செய்து, மக்கள் சீனம் வளர்கிறது. ஆனால், பொதுவான விதியாக, வளரும் நாடுகள் மேலை நாடுகளைச் சார்ந்து நிற்கின்ற நிலை பரவலாக உள்ளது.  மேலை நாடுகள், உலக வங்கி போன்ற அமைப்புகள்  மூலமாக வளரும் நாடுகளின் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். தேவை என்று கருதினால், நேரடியாகவும் தலையிடுகின்றனர். உலகவங்கி, ஐ எம் எப் நிறுவனங்களில் முக்கிய  பொறுப்பில் இருந்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார கொள்கைகள் வகுக்கும் பொறுப்புகளுக்கு வருகின்றதை தற்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் இது அதிகரித்திருக்கிறது.

நவீன தாராளமயம்

1980களுக்குப் பிறகு, உலக அளவில் மேலைநாடுகள் மீண்டும் பெரும் வல்லரசுகளாக முன்வரும்போது, 80களின் இறுதியில் 90களின் துவக்கத்தில் சோசலிச நாடுகள் பலவீனமடைகின்றன. இது ஒரு துருவ உலகத்தை நோக்கி உலகை தள்ளியது. அப்போது மேலை நாடுகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கிறது. அந்த பின்புலத்தில்தான், 90களின் துவக்கத்தில் இந்தியாவில் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள் அமலாகின்றன.  1960, 70களில் இருந்தது போல் நாம் இப்போது இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. அரசு முதலீடு செய்ய முடியாது, அரசிடம் பணம் இல்லை என்பதே புதிய கதையாடலாக வருகிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும்  பன்னாட்டு நிதி மூலதனங்களின் கைகள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் ஓங்குகின்றன. பெரும்பாலான இந்திய பெருமுதலாளிகள் உலகச்சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது, பிறநாடுகளில் முதலீடு செய்வது போன்ற  கனவுகளுடன் தாராளமய கொள்கைகளை வரவேற்கின்றனர்.

தாராளமயத்தின்கீழ், செல்வந்தர்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதில்லை.  செல்வந்தர்கள் மீது வரி போட அரசு தயாராக இல்லை. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அதே வேகத்தில் அரசின் வரி வருமானம் உயர்வதில்லை. “அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் கொடுத்து விடுவோம். பன்னாட்டு சரக்கு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு பணமூலதனம்  ஆகியவற்றின் மீதான அரசு  கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இது தான் உலக அனுபவம்.” என்ற கதையாடல் முன்வைக்கப்படுகிறது.

சமூக நலன் கருதி பெருமுதலாளிகள் மீது போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்ற குரல் தாராளமயத்தின்கீழ் ஓங்குகிறது. தனியார்மயத்தின் பகுதியாக, அரசுப் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு  துறைகள்கூட காசுக்கான பொருளாக, சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, முழுவதும் தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் கொண்டு வரப்படுகிறது. உலகமயம் என்ற பெயரில்  பன்னாட்டு கம்பெனிகள் இன்னும் விரிவாக இந்தியாவின் சந்தைகளுக்குள் நுழையவும், மூலதனத்தை பணமாக கொண்டுவந்து பங்கு சந்தைகளில், நாணய சந்தைகளில் ஊக வணிகம் செய்யவும்  சிகப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

உலகமயமாக்கத்தால் ஏராளமான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டதென்று சொல்லப்படுகிறது. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள், உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். மேலை நாட்டு பன்னாட்டு கம்பனிகளுக்கு சாதகமான விதிமுறைகள்,   பொருளாதார அம்சங்கள் என்ற குறிக்கோளை வைத்துத்தான் இந்த பயணமே நடக்கிறது. இக்கொள்கைகள் ஏகப்பட்ட மூலதனத்தை இந்தியாவில் உற்பத்திக்கு கொண்டுவரும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், ஏற்றுமதியை பெருக்கும், வறுமை ஒழிந்துவிடும் என்ற கதையாடல்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன

இந்தியாவின் முப்பது ஆண்டு அனுபவம்

30 ஆண்டு அனுபவம் என்ன? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு ((ஜிடிபி- சந்தை விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு)  பெருகுவதாக கணக்கு சொல்கிறார்கள்.   அப்படிஎன்றால், பிரம்மாண்டமாக உற்பத்தியும் வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை என்ன? என்னென்ன துறைகளில்  வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு வளர்ச்சி ஏற்படவில்லை? இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது? இது நிலைத்து நிற்குமா? நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பும்போது, பல சங்கடமான உண்மைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற இரண்டுமே அரசை விலக்கி வைத்துவிட்டு, பெரும் தனியார் முதலீட்டாளர்கள் (பெட்டிக் கடைகள் அல்ல)  பெரிய பெரிய முதலாளிகள், தங்குதடையின்றி நம் நாட்டில் செயல்படக்கூடிய வழிகளை ஏற்படுத்துகிறது.  அப்படியென்றால், இவர்கள் எந்தவொரு சூழல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியதில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கைதரத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. லாபத்தை ஈட்டுவது மட்டுமே அவர்கள் இலக்கு. எப்படி வேண்டுமானாலும் லாபத்தை ஈட்டலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்ட சூழல்தான் இங்கு உள்ளது.  

இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த  தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாம் பொதுவாக பேசுகின்ற  ஆலை உற்பத்தியும் பாய்ச்சல் வேகத்தில் நாட்டில் வளரவில்லை. நிகழ்ந்துள்ள வளர்ச்சியில் பெரும்பகுதி சேவைத்துறை (Service Sector) யில்தான்.

இந்தியாவின் மொத்த தேச உற்பத்தியில் 60 சதவீதம் சேவைத்துறை. அடுத்து 23 அல்லது 24 சதவீதம் ஆலை உற்பத்தி, மின்சாரம், உள்ளிட்ட தொழில்துறை, மீதி 16, 17 சதவீதம் தான் விவசாயத்தின் பங்கு. ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டு மக்கள் தொகையில் 68.4% மக்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். மொத்த இந்திய மக்களில் பாதிக்கும் சற்று அதிகமானோர் வேளாண்துறை வருமானத்தை சார்ந்திருக்கிறார்கள். அந்தத் துறை சரியாக செயல்படவில்லை. அதில் பெரும் முன்னேற்றமில்லை. அந்தத் துறையில் பெரும்பகுதி மக்கள் சாகுபடி செய்வதையே லாபகரமாக செய்ய முடியவில்லை என்ற நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் சாகுபடியே செய்ய முடியாமல், செய்கிற சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல், விளைபொருட்கள் விலை சரிந்து, இடுபொருட்கள் விலைகள் ஏறி கடுமையான நெருக்கடியில் வாழ்கின்றனர்; கடன் கிடைப்பதில்லை.

இதெல்லாம் எங்கிருந்து வந்தது? தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை என்ன சொல்லியது? நாட்டை திறந்துவிடு, வெளிநாட்டிலிருந்து அந்நிய வேளாண் பொருட்கள் வரட்டும்; விலை குறையும்; இடுபொருள் விலையை ஏற்ற வேண்டும். மானியம் கொடுத்தால் அரசுக்கு பற்றாக்குறை அதிகரித்துவிடும். பற்றாக்குறை கூடினால் வெளிநாட்டு நிதி முதலாளிகள் இங்கு வரமாட்டார்கள். வெளி நாட்டு முதலாளிகளை குஷிபடுத்துவதற்கு, ஈர்ப்பதற்கு  அரசு தனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வரிகளைப் போடக் கூடாது, போட்டால், ஊக்கம் குறைந்துவிடும். இக்கொள்கை தான் விவசாயிகளின் வாழ்வை பறித்துள்ளது.

ஏரளானமான வரிகள் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவது போல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவெனில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வாங்குகிற மொத்த வரி என்பது தேசத்தின் உற்பத்தியில் 15,16 சதவீதம் கூட கிடையாது. அதில் 3 இல்  2 பங்கு சாதாரண உழைக்கும் மக்கள் கொடுக்கின்ற மறைமுக வரிகள் (கலால் வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி). சாதாரண மக்கள்தான் பெரும்பகுதி மறைமுகவரிகளை  கொடுக்கின்றனர். வரி கொடுப்பவர்கள் கோட்-சூட் போட்ட ஆள் என்று தொலைகாட்சிகளில் காட்டப்படும் பிம்பங்கள் உண்மைக்கு மாறானவை. வரிவசூலின் பெரும்பகுதி உழைக்கும் மக்களிடம் இருந்துதான் வருகிறது. வளங்களைத் திரட்டாமல், மக்களுக்கு தேவையான கல்வியையோ, ஆரோக்கியத்தையோ, அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ அரசு கொடுக்க முடியாது. அப்படி வருமானங்களை திரட்ட வேண்டுமானால், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் இடமிருந்து முறையாக வரிவசூல் செய்ய வேண்டும்.

அரசின் அணுகுமுறை

இன்றைக்கு மந்தநிலையை எதிர்கொள்ளக் கூடிய இடத்தில் என்ன முன்வைக்கப்படுகிறது? அரசு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும், வரி விகிதங்களை குறைக்க வேண்டும், அரசினுடைய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற குரல்தான் ஒலிக்கிறது. ஆனால், இந்திய நாட்டினுடைய தொழில் வளர்ச்சி நிலைத்தகு வளர்ச்சியாக இருக்க வேண்டுமானால், பெரும்பகுதி மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வருமானம் உயர்ந்தால்தான் பொருளை வாங்க முடியும்.

இன்றைக்கு, நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி, மந்தநிலை கடந்த 30 ஆண்டு வளர்ச்சி என்பது பெரும்பகுதி இந்திய மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்து இல்லை, என்பதை காட்டுடிறது. பெரும் வேலையின்மை, கொடிய வேளாண் நெருக்கடி, குறைந்த கூலி ஆகியவை நாட்டின் பெரும்பகுதி மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதை தெளிவாக்குகிறது. 

இந்திய நாட்டில் கிராக்கியை அதிகப்படுத்த என்ன வழி? மக்களின் நுகர்வு ஒருபகுதி. இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் பரவலான வருமான சரிவினால் மந்தமாக உள்ளது. இன்னொரு வழி  ஏற்றுமதி. (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின் மக்கள் நமது நாட்டின் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதியை வேகமாக நம்மால் உயர்த்த முடியவில்லை. தாராளமய கொள்கைகளை திணித்த பொழுது, இனி நாம்  ஏற்றுமதி அதிகம் செய்வோம். இறக்குமதியை அது தாண்டிவிடும், அதன்மூலம் அந்நிய செலாவணி அதிகம் வரும் என்றெல்லாம் கூறினர். கடந்த 3௦ ஆண்டுகளில் ஒரு வருடத்தில்கூட அது  நடக்கவில்லை. 30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு (goods) ஏற்றுமதி மதிப்பு என்பது இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பள்ளம் விழுகிறது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி நம்மை விட்டு போகிறது. அப்படியானால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்ன வழி? இரண்டு வழிகளில் வர்த்தக பற்றாக்குறை ஓரளவு குறைக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுலா துறை சார்ந்த சேவை துறை ஏற்றுமதி மூலம்   நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. வெளிநாடுகளில் உழைத்து வாழ்கின்ற இந்திய உழைப்பாளி மக்கள், கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்தும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள உதவுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து சரக்கு வர்த்தகப் பள்ளத்தை ஓரளவு இட்டு நிரப்புகிறது. அதற்குப் பிறகும் பற்றாக்குறை உள்ளது. இதுதான் நடப்புக் கணக்கு பற்றாக்குறை. இதனை எப்படி  ஈடு செய்வது? எப்படியாவது அந்நிய செலாவணியை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. அதனால்தான் அந்நிய மூலதனத்தை ஈர்க்க அரசு அவர்கள் காலில் விழுகிறது. “ நீங்கள் இங்கு வந்து தொழில் நடத்த வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. பங்குச் சந்தையில் சூதாடினாலும் பரவாயில்லை. பணத்தை கொண்டு வாருங்கள். வருடம் முழுவதும் எங்களுக்கு பணம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் லாபத்தை அடித்துக் கொண்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள் வந்தால் போதும்.”

என்கிறது இந்திய அரசு. அந்நிய செலாவணியை தொடர்ந்து வெளிநாட்டினர் இங்கு கொண்டு வரவில்லையென்றால், இந்திய பங்குச் சந்தை படுத்துவிடும். ரூபாய் மதிப்பு சரிந்துவிடும். இந்த நெருக்கடியில் நாம் சிக்கி உள்ளோம்.

உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு வளர்ச்சிப் பாதையை நாம் பின்பற்றவில்லை. தாராளமயத்தில் பெரிய முதலாளிகளுக்கு லாபம் இருக்கிறது. ஒருபகுதி நடுத்தர மக்களுக்கு கூட அதில் பயன் கிடைக்கிறது. ஆனால், பெரும்பகுதி இந்திய உழைப்பாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் முனைவோருக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு கடந்த 30 ஆண்டு கால தாராளமயம் அவர்கள் வாழ்வை பெரும்பாலும்  மேம்படுத்தவில்லை.  

நிலைத்தகு வளர்ச்சிக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம் 

சீனா விடுதலை பெற்றபோது, பெரும் மிராசுதாரர்களை எல்லாம் பலவீனப்படுத்தி, அவர்களது நிலங்களை கிராம விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். இன்று அவர்களுக்கு பிழைப்பிற்கு பிரச்சனையில்லை.

 நிலச்சீர்திருத்தம் என்பது பரவலாக மக்களின் வாங்கும் சக்தியை கிராமங்களில் சீனத்தில் ஏற்படுத்தியது. இதை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. கேரளா, மேற்குவங்கத்தில் அதை செய்யும்போது முன்னேற்றம் இருந்தது. இந்தியாவில் இன்றும் நிலக்குவியல் இருக்கிறது. பெரும்பகுதி நிலம் ஒரு சிறிய பகுதியினர் கையில் தான் இருக்கிறது. கிராமங்களில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். அதில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்கள்.அல்லது கால், அரை, ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலம் கொண்ட சிறு-குறு விவசாயிகள்.  ஒன்று விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அல்லது கூலி வேலை கிடைக்க வேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை.

  
கடந்த 5, 6 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு சுருங்கிவிட்டது. குறிப்பாக, மத்தியில் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதியை குறைத்துவிட்டது. இதனால் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வேறு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு 4, 5 வருடங்களில்மட்டும் தான் – 2004-2008 காலத்தில்  – வேலை வாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இப்போது, ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகள் படுத்து கிடக்கின்றன.  நடுத்தர வர்க்க மக்கள் பிரிட்ஜ், ஏசி, கார் வாங்குவர். ஆனால் எவ்வளவு வாங்குவர்?. இது ஒரு குறுகிய சந்தை. இது ஒரு சுற்று சுற்றும். அடுத்த சுற்றில் கிராக்கி இருக்காது. இதுவும்கூட, இத்தகைய நுகர்பொருட்கள் வாங்க, வீடுகட்ட, கட்டுபடியாகும் வட்டியில் வங்கிக்கடன் கொடுத்தும்  வரிச்சலுகைகள் அளித்தும் தான் நிகழ்ந்தது. இப்பொழுது வங்கி உள்ளிட்ட நிதித்துறை நெருக்கடியும் உள்ளது. நீண்ட கால கடன் கொடுக்க முன்பு உருவாக்கப்பட்ட வங்கிகளை மூடிவிட்டு, வர்த்தக வங்கிகளே நீண்டகால கடனையும் கொடுக்கலாம் என்ற கொள்கையால், பெரும் தனியார் கம்பனிகள் கட்டமைப்பு முதலீடுகளுக்காக பெருமளவில் கடன் வாங்கி, இப்பொழுது கொடுக்க முடியாமல் உள்ளனர். அரசும் அவர்கள் கடன்களை ரத்து செய்ய முனைகிறது. இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இன்று கடன் கொடுக்க முன்வரவில்லை.  நுகர்வு செலவுகளுக்கு கடன் கொடுத்து கிராக்கியை அதிகப்படுத்தும் வாய்ப்பு மிகக்குறைவு. பெரும்பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு, கிராக்கியை தொடர்ந்து தக்கவைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

வளர்ச்சி விகிதம் அல்ல, அதன் தன்மை தான் முக்கிய பிரச்சினை

 இந்தியாவில் மந்த நிலை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி ஜீரோ (பூஜ்ஜியம்) ஆகவில்லை. ஆனால் குறைந்து வருகிறது. கடந்த ஆறு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து 2௦19 ஏப்ரல் ஜூன் காலத்தில் அரசு கணக்குப்படியே  5% ஆக குறைந்துள்ளது. இதுவே மிகை மதிப்பீடு என்றும் உண்மையில் வளர்ச்சி விகிதம் 3% தான் என்றும் பல வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய அரசினுடைய நிதித்துறை ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து 2017,-2018 வரை, ஒரு ஆண்டிற்கு 4.5 சதவீதம் போலத் தான் இருந்துள்ளது.அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படும் விகிதத்தை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாகவே உள்ளது.” என்கிறார். இதன்படி கடந்த மூன்றுமாத வளர்ச்சி ஆண்டுக்கு 3 % தான்.

ஆனால் இதுவும் வளர்ச்சிதானே! உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி என்பது மொத்த உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. அது உங்களுக்கும் எனக்கும் கிடைக்கும் என்பதல்ல பொருள். தலா உற்பத்தி அதிகரித்தாலும் அதன் பெரும்பகுதி ஒரு சிறு பகுதி மக்களுக்கே போய்ச் சேரலாம். பெரும்பகுதி மக்களுக்கு முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கலாம். அப்படித்தான் இருக்கிறது.

பொருளாதாரத்தை முற்றிலும் அழித்த மோடி அரசின்  இரு நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் இரண்டு நடவடிக்கைகள் இன்றைய மந்த நிலைக்கு முக்கிய காரணம். ஒன்று, நவம்பர் 8, 2௦16 இல் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பண மதிப்பு நீக்கநடவடிக்கை.இது, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறு-குறு தொழில்களை, வணிகர்களை முற்றிலும் நாசப்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி. இது மிக மோசமாக, நிறைய குழப்பங்களுடன் அமலாகிவருகிறது. இது சிறு-குறு தொழில்களை மேலும் சீர்குலையச் செய்தது. அண்மை ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளதற்கும் இன்றைய பொருளாதார மந்தத்திற்கும் தாராளமய கொள்கைகள் மட்டுமின்றி, இவ்விரு நடவடிக்கைகளும் முக்கிய காரணங்கள். இவற்றால், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகளுக்கு கிடைக்கும் உண்மைக் கூலி ஜூனில் முடிந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிந்துள்ளது. வேளாண் அல்லாத பணிகளில் கூலி தேக்கமாக உள்ளது..விவசாயிகளின் வருமானமும் குறைந்துள்ளது.  கடன் வாங்கி செலவு செய்யும் இடத்தில் மத்தியதர வர்க்கம் கூட இல்லை. ரிசர்வ வங்கி வட்டி விகிதத்தை குறைத்து வருகின்ற போதிலும் கடன் வாங்க நுகர்வோரும் வரவில்லை. தனியார் துறை பெருமுதலாளிகளும் வரிசையில் நிற்கவில்லை. வரிவசூலில் பெரும் பற்றாக்குறைஏற்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் தெரியும். இப்பொழுது ரிசர்வ வங்கியிடம் இருந்து பெற்றுள்ள தொகையை வைத்து அரசு முதலீடுகளை மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கிகளை இணைப்பதோ, ரிசர்வ வங்கி கஜானாவை கைப்பற்றுவதோ மந்தநிலையை முடிவுக்கு கொண்டுவர உதவாது.

தீர்வு எங்கே?

பெரும்பகுதி மக்களைச் சார்ந்த நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமப் புறங்களில் முதலீடுகளை மேம்படுத்தி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் தேவையான கட்டமைப்பு என்ற உறுதிப்படுத்துகிற, அனைவருக்கும் வேலையையும் வருமானத்தையும்  உறுதிசெய்கின்ற  வளர்ச்சிப் பாதைதான்  ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.

உடனடியாக, ஊரக வேலை திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரித்து கிராமங்களில் வேளாண் உற்பத்திக்கு உதவும் முதலீடுகளை அரசு மேற்கொள்ளவேண்டும். பொதுத்துறை பங்குகளை விற்கும் நாசகர பாதையை கைவிட்டு பொதுத்துறை மூலம் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள. வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க பணி அமைப்பு, பாசன விரிவாக்கம் , தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவகையில்  முதலீடுகளை அரசு செய்யவேண்டும். நகரப்புறங்களுக்கும் வேலை உறுதி சட்டம் விரிவு படுத்தப்படவேண்டும். இதற்கான வளங்களை அரசால் திரட்ட இயலும். பெரும் கம்பனிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் செலுத்தவேண்டிய வரிகள் கறாராக வசூல் செய்யப்படவேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுபடியாகும் விலையையும் கொள்முதலையும் உறுதி செய்ய வேண்டும். சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கோரிக்கையான ஒரு முறை  கடன் ரத்து அமலாக வேண்டும். இவையெல்லாம் ஓரளவு மந்தநிலையை எதிர்கொள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

ஆனால் இவையே தீர்வாகாது. தாராளமய கொள்கைகளை அரசு  கைவிடுவது மிக அவசர அவசியம். இதற்கென, நிலசீர்திருத்தம் உள்ளிட்ட  நமது மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து மக்களை திரட்டும் பணியில் நாம் களம் இறங்கவேண்டும்.

உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…

பிரபாத் பட்நாயக்

தமிழில்: க.சுவாமிநாதன்

அமைப்பு சார் நெருக்கடியின் தனித்தன்மை என்ன தெரியுமா? அது மீண்டும் மீண்டும் நிகழ்கி்ற சுழல் நெருக்கடியில் (Cyclical crisis) இருந்தும், இடையிடையே ஏற்படும் நெருக்கடியில் (Sporadic crisis)  இருந்தும் முற்றிலும் வேறுபட்டது. முதலாளித்துவத்தின் அமைப்பு சார் நெருக்கடி என்பது அந்த அமைப்பின் பொதுவான வரையறையை மீறாமல் எடுக்கப்படுகிற ஒவ்வொரு முயற்சியும், அதாவது அதில் நிலவுகி்ற வர்க்க உள்ளடக்கத்தை பொருத்தே அமைவதுமான நடவடிக்கைகளும், நெருக்கடியை மேலும் ஆழமாக்கவே செய்யும் என்பதே ஆகும்.

இப்பொருளில் தற்போது நவீன தாராளமய முதலாளித்துவம் ஓர் அமைப்பு சார் நெருக்கடிக்குள் பிரவேசித்துள்ளது.

மேற்பூச்சுக்கள் மூலம் அதை சரி செய்ய முடியாது. மேற்பூச்சை கடந்து அமைகிற நடவடிக்கைகள் கூட நவீன தாராளமய எல்லைகளை கடக்காததாக இருக்கிற பட்சத்தில் அவையும் நெருக்கடியை சரி செய்யாது. உதாரணமாக, இறக்குமதி சுவர்களை எழுப்பி சந்தையை பாதுகாப்பது, அதாவது உலகமயத்தின் வினை ஊக்கியாய் இருக்கிற சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தை கேள்விக்கு ஆளாக்காமல் தீர்வினை தேடுவது போன்றவை.  இதையே டிரம்ப் அமெரிக்காவில் செய்கிறார். இது நெருக்கடியை இன்னும் தீவீரமாக்கவே செய்யும்.

உலகம் ஒரே சித்திரம்

நெருக்கடியின் அறிகுறிகள் நன்கு தெரிந்தவையே. 2008 நெருக்கடியின் பின்புலத்தில் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் ” மலிவுப் பணக் கொள்கை” (Cheap Money Policy) இருந்தது. அதனால் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு ஜீரோ வரை கூட நெருங்கின. இதன் வாயிலாக உலக முதலாளித்துவம் தற்காலிகமாக சுவாசிப்பதற்கான மிகக் குறைவான வழிகளை மட்டுமே திறந்து விட முடிந்தது. இதனால் மீண்டும் மீண்டும் அதிகரிக்கிற மந்தத்தையே அது சந்திக்க நேரிட்டது. அமெரிக்காவில் வணிக முதலீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தொழில் உற்பத்தி ஜுலையில் அதற்கு முந்தைய மாதத்தை விட 0.2 சதவீதம் சரிந்துள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் ஜெர்மனி போலவே சுருங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இதே சித்திரம்தான். இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, இந்தியாவிலும் இதே நிலைதான். சீனா கூட உலக மந்தத்தின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்து வருகிறது.

எல்லா இடங்களிலுமே கொள்கை உருவாக்குனர்களின் எதிர் வினை என்ன தெரியுமா? வட்டி விகிதங்களை குறைப்பதே. ஏற்கனவே ஐரோப்பிய மைய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை (Key interest rate) எதிர்மறை மண்டலத்திற்குள் (Negative region) தள்ளியுள்ளதோடு மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வட்டி விகிதங்கள் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ளன. இந் நடவடிக்கையின் பின்னுள்ள எதிர்பார்ப்பு என்ன? குறைவான வட்டி விகிதங்கள் அதிக முதலீடுகளைக் கொண்டு வரும் என்பது கூட பெரிதாக எதிர்பார்க்கப்படவில் லை. மாறாக குறைவான வட்டி விகிதங்கள் சொத்து விலை ‘குமிழிகளை’ (Asset price bubbles) உருவாக்கும் என்பதே. இக் குமிழிகளால் பயன் பெறுவோர் பெரும் செலவினங்களை செய்வார்கள். அதன் மூலம் கிராக்கி பெருக வாய்ப்பு ஏற்படும் என்பதுதான்  மதிப்பீடு.

“குமிழிகளின்” பின்புலம்

எதனால் இந்த ஒரே மாதிரியான வினையை எல்லா இடங்களிலும் உள்ள கொள்கை உருவாக்குனர்கள் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய உடனடி காலத்தில், அதாவது நவீன தாராளமய உலக மயம் அமலாவதற்கு முந்திய காலத்தில், அரசு செலவினம் அதிகரிக்கப்படுவதன் மூலம் கிராக்கியை உயர்த்துகிற நடவடிக்கை பின்பற்றப்பட்டது. எப்போதெல்லாம் மந்தத்திற்கான அபாயம் எழுந்ததோ அப்போதெல்லாம் இப்படி சரி செய்ய முடிந்தது. அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறையை தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ள முடிந்தது. மூலதனக் கட்டுப்பாடுகள் இருந்ததால், நிதிப் பற்றாக்குறைகள் காரணமாக மூலதனம் பறந்து போய்விடுமென்ற அபாயம் கிடையாது.

இதுவே பிரபல பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் கற்பனையில் உருவான உலகம். அவர் போருக்கு பிந்தைய காலத்திய முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர்.

அவர் நிதி மூலதனத்தின் சர்வதேச மயத்தை எதிர்த்தார். (“நிதி எல்லாவற்றுக்கும் மேலாக தேசியத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்றார்). அவர் அதற்கு கூறிய காரணம், நிதி சர்வதேசமயமாதல் தேசிய அரசின் வேலை உருவாக்க சக்தியை சிதைத்து விடும் என்பதே. இந் நோக்கத்திற்காக, அரசின் செலவினம் பெருகுவதை நிதி சர்வதேசமயமாதல் எதிர்க்கும்; அது தேசிய அரசை சிறை வைத்து விடும் என்பதே அவரின் எண்ணம். முதலாளித்துவ முறைமையின் காவலர் என்ற வகையில் கீன்ஸ் அச்சப்பட்டார். தேசிய அரசு வேலை உருவாக்கத்தை செய்ய முடியாவிட்டால் சோசலிச அபாயத்தை தாக்குப் பிடித்து முதலாளித்துவம் பிழைத்திருக்க இயலாது என்று நினைத்தார்.

நிதி மூலதனத்தின் விஸ்வரூபம்

என்றாலும் மேலை தேசத்து வங்கிகளில் பெருமளவு நிதிக் குவியல் நிகழ்ந்தது. வெளி வர்த்தக இடைவெளியால் அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து இக் காலத்தில் அதிகரித்தது; “ஒபெக்” (பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) நாடுகள் 1970 களில் எண்ணெய் விலை உயர்வால்  வருவாய் சேமிப்புகளைக் குவித்தது; மூலதனக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சர்வதேச நிதி மூலதனத்திடம் இருந்து எழுவதற்கு இவை காரணங்களாக அமைந்தன. நிதி மூலதனம் தனது விருப்பப்படி வலம் வருவதற்காக உலகம் முழுவதுமே தனக்கு திறந்து விடப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தது. இறுதியில்  வெற்றியும் பெற்றது.

இதன் மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது. இதன் பொருள், தேசிய அரசு, நிதி தலையீட்டின் மூலம் வேலை உருவாக்கத்தை நிலை நிறுத்துகிற பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதுமாகும். ஆகவே நிலை பெற்றுள்ள நவீன தாராள மய முதலாளித்துவ ராஜ்யத்தில், கிராக்கியை சந்தையில் உருவாக்குவதற்கான ஓரே வழி, சொத்து விலை “குமிழிகளை” தூண்டி விடுவதே ஆகும்; அதற்கு வட்டி விகித கொள்கையை பயன்படுத்துவதும் ஆகும்.

ஆனால் அரசு செலவினத்தை விருப்பப்படி நெறிப்படுத்த முடிவது போல் “குமிழிகளை” விருப்பத்திற்கு ஏற்பவெல்லாம் நெறிப்படுத்தி விட இயலாது. கொஞ்ச காலத்திற்கு 90 களில் ( டாட் காம் குமிழிகள் அமெரிக்காவில் உருவானது) மற்றும் இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் (அமெரிக்காவில் “வீட்டு வசதி குமிழி”) இது பயன்பட்டதான தோற்றம் கிடைத்தது. ஆனால் வீட்டு வசதி “குமிழி” வெடித்து சிதறிய பிறகு மக்கள் மனதில் தயக்கங்கள் ஏற்பட்டன. வட்டி விகிதங்கள் ஜீரோ அளவிற்கு கொண்டு வரப்பட்டும் புதிய “குமிழிகள்” ஏதும் அதே அளவிற்கு எழுவது இல்லாமல் போனது.

உபரியின் அபகரிப்பு

இதற்கிடையில் எல்லா நாடுகளிலும், மொத்த உலகிலும் சராசரி கிராக்கி வீழ்ச்சி அடைவதற்கு இன்னொரு அம்சம் சக்தி மிக்க காரணியாய் அமைந்தது; அது மொத்த உற்பத்தியில் உபரியின் (Surplus) பங்கு அதிகரித்ததாகும்.  எல்லாவற்றுக்கும் மேலான உலகமயத்தின் பொருள்,  எல்லைகள் கடந்த மூலதனத்தின் சுதந்திரமான நகர்வே ஆகும். அதில் நிதி நகர்வும் அடங்கும். இது நிறைய தொழில் நடவடிக்கைகளை, அதிகக் கூலி உள்ள மேலை நாடுகளில் இருந்து குறைவான கூலி உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயரச் செய்தது.

வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை, மூன்றாம் உலக தொழிலாளர்களுடனான போட்டிக்கு உட்படுத்தியதால் முந்தையவர்களின் கூலி அளவுகளை குறைக்க முடிந்தது. அதே நேரத்தில் பிந்தையவர்களின் கூலி அளவுகளும் அவர்கள் பிழைப்பதற்குரிய மிகக் குறைவான மட்டத்திலேயே நீடிக்கின்றன. காரணம், இந்த இடப் பெயர்வுக்கு பின்னரும் மூன்றாம் உலக நாடுகளின் காத்திருக்கும் தொழிலாளர் படை தீர்ந்து போய் விடவில்லை என்பதே ஆகும். எனவே உலகளாவிய தொழிலாளர் உற்பத்தி திறனின் கூட்டு மதிப்பு அதிகரித்தும், கூலி அளவுகளின் உலகளாவிய கூட்டுத்தொகை அதிகரிக்கவில்லை.

அதீத உற்பத்திக்கான உந்துதல்

இத்தகைய உபரியின் பங்கு அதிகரிப்பு, அதீத உற்பத்திக்கான உந்துதலை உருவாக்குகிறது. வருவாயின் ஓர் அலகுக்குரிய நுகர்வு, உபரி ஈட்டுவோர் மத்தியில் இருப்பதை விட கூலி பெறுவோர் மத்தியில் மிக அதிகமாக இருப்பதே ஆகும். இந்த உந்துதலை அரசு செலவின அதிகரிப்பின் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் ஈடு கட்டியிருக்க முடியும். ஆனால் இது சாத்தியமற்றதாக ஆகி விட்டதால், ஒரே ஒரு எதிர் வினை மட்டுமே இந்த அதீத உற்பத்தி உந்துதலை எதிர்கொள்வதற்கு உள்ளது. அதுவே சொத்து விலை “குமிழிகள்” ஆகும். இந்த குமிழிகளும் சாத்தியமில்லாததால் அதீத உற்பத்திக்கான உந்துதல் கட்டு இன்றி முழு வேகத்தில் வெளிப்படுகிறது. இதையே இன்று நாம் காண்கிறோம்.

வட்டி விகிதங்களை குறைத்து நிலைமையை சமாளிக்கிற பாரம்பரிய கருவி இப்போது வேலை செய்யவில்லை. சராசரி கிராக்கியில் ஏற்படுகிற குறைபாட்டை சரி செய்வதற்கு அரசு செலவினத்தை உயர்த்துவதும் இப்போது செய்யப்படுவதில்லை. ஆகவே டொனால்ட் டரம்ப் தங்களது சொந்த நெருக்கடியை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்து சமாளிக்க முனைகிறார். இதற்காக சந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டிருக்கிறார். பதிலுக்கு பதில் எதிர்வினை என்ற முறையில் சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் துவக்கப்பட்ட  இந்த வர்த்தகப் போர், தற்போது உலக பொருளாதாரத்தின் நெருக்கடியை உக்கிரமாக்குகிறது.

ஏனெனில் இது உலக முதலாளிகளின் முதலீட்டிற்கு இருந்த கொஞ்ச நஞ்சம் ஊக்குவிப்பையும் அரித்து விட்டது. வட்டி விகிதங்களின் குறைப்பு அதன் முதல் நோக்கமான சொத்து விலை ” குமிழிகளை” உருவாக்கவில்லை என்பதோடு உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளில் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. உதாரணம் வால் ஸ்ட்ரீட். இது ஆகஸ்ட் 14 அன்று இதுவரை இல்லாத பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர் விளைவாக உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை பதிவு செய்தன.

பத்மாசூரன் கையும்- உழைப்பாளர் கரங்களும்

அரசு செலவினங்கள் உயர்த்தப்படுமேயானால் “மற்ற நாடுகள் மீது கை வைப்பது” ( beggar-thy-neighbour) என்கிற கொள்கைகள் தேவைப்படாது. அப்படியே அரசு செலவினத்தால் உயர்கிற கிராக்கி வெளி நாடுகளுக்கு கசிந்து விடக் கூடாது என்று சிறிது “சந்தை பாதுகாப்பு” நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்ற நாட்டு இறக்குமதிகளை பெரிதும் பாதிக்காது. காரணம் சந்தையே விரிவடைகிறது. ஆனால் அரசு செலவின அதிகரிப்பை செய்யக்கூடாது என சர்வதேச நிதி மூலதனம் கட்டளையிடுவதால் (இதனாலேயே பல நாடுகள் நிதிப் பற்றாக்குறை அளவுகளை கட்டுப்படுத்துகிற சட்டங்களை பெரும்பாலான நாடுகள் இயற்றியுள்ளன) ” மற்ற நாடுகள் மீது கைவைப்பது” (Beggar-thy-neighbour) என்ற கொள்கைகள் ஒரு நாடு பின் தொடர்வதற்குள்ள மிகக் குறைவான தெரிவுகளில் ஒன்றாக மாறிப் போயுள்ளது. இது எல்லோருக்குமான நெருக்கடியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதுவே அமைப்பு சார் நெருக்கடியின் தனித்த அடையாளம் ஆகும். சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடருகிற காலம் வரை, மேலும் உலக மூலதன பரவலின் வலையில் நாடுகள் சிக்கியுள்ள வரையில், நெருக்கடி தொடரும் என்பது மட்டுமின்றி அதை சமாளிக்க அமைப்பின் வரையறைக்குள் நின்று எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நெருக்கடியை தீவீரப்படுத்தவே செய்யும். சர்வதேச நிதி மூலதன மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முன்னேற என்ன தேவைப்படுகிறது? ஒவ்வொரு நாட்டிலும் உழைப்பாளி மக்கள் “மாற்று நிகழ்ச்சி நிரலோடு” ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பதே ஆகும்.

நன்றி: பீப்பி்ள்ஸ் டெமாக்ரசி ஆகஸ்ட் 25, 2019

இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி

வெங்கடேஷ் ஆத்ரேயா

முதலாளித்துவ அமைப்பிற்கு முந்தைய சமூகங்களில் பொதுவாக கூலி உழைப்பு என்பது கிடையாது. எனவே பகிரங்கமாக வேலை தேடித் திரியும் வேலையில்லா பட்டாளங்களும் கிடை யாது. இதன் பொருள் அச்சமூகங்களில் மனித உழைப்பு என்ற உற்பத்திக்கான வளம் முழுமை யாக பயன்பட்டது என்பதல்ல. அவரவர்கள் சுய தொழில் செய்துவந்த நிலையில் லாப வேட்டை யாலும் போட்டியாலும் உந்தப்படாத சூழலில் உழைக்கும் அளவும் நேரமும் பல்வேறு தொழில் களுக்கு இடையேயும் பருவங்கள் சார்ந்தும் வேறு பல காரணங்களாலும் சமூகத்தில் ஒரே சீராக இருந்ததில்லை. உற்பத்தி சக்திகளின் அளவு குறை வாகவும்  அவற்றின் வளர்ச்சி மெதுவானதாகவும் இருந்த அச்சமூகங்களில் சராசரி உழைப்பு நேர மும் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பங்கள் தம்மை மறு உற்பத்தி செய்து கொள் வதற்கு தங்கள் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர். (விதிவிலக்கு சுரண்டும் வர்க்கத்தினர் – பிறர் உழைப்பில் சுகபோக மாக வாழ்ந்துவந்த எஜமானர்களும் நிலப்பிரபுக் களும் அரச குடும்பங்களும் அவர்களது அடிவருடி களும்) 

முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில் உழைப்போர் ஒருபுறம் கடுமையாக சுரண்டப் பட்டாலும் அவர்களது உழைப்பு நேரத்தின் மீதும் உழைப்பு சக்தியின் மீதும் அவர்களுக்கு முழு உரிமை மறுக்கப்பட்ட போதிலும் அவர் களுக்கான அடிப்படை ஜீவாதார உத்தரவாதங் கள் இருந்தன. இவை இன்றைய நிலையில் இருந்து காணும்பொழுது மிகத் தாழ்வான வாழ்க்கை நிலையைத்தான் தந்தன என்றாலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலங்களில் உழைக்கும் மக்கள் அடிமைகளாகவோ, விவசாயி கள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர்களாகவோ இருந்தமையால் பகிரங்கமாக வேலை தேடித் திரியும் காட்சிகள் இல்லை. வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்ற தாக்குதல்கள் அவர்களை புலம் பெயரச் செய்ததுண்டு.  ஆனால் வேலையில்லா பட்டாளம் என்ற ஒரு சமூக நிகழ்வு அச்சமூகங் களில் இல்லை.  முதலாளித்துவத்தை நோக்கி நிலப்பிரபுத்துவ சமூகம் வேகமாக மாறிய காலத்தில்தான், உற்பத்திக்கருவிகளில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட, பலவந்தமாக பிரிக்கப் பட்ட இத்தகைய பட்டாளங்கள் சமூகத்தின் அன்றாட காட்சிகளாக மாறத் துவங்குகின்றன.

வேலையின்மை

முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியில் பெரும்பகுதி உழைப்பாளிகள் கூலி தொழிலாளி களாக மாறுவதும், முதலாளிகளிடம் வேலைக்கு சேருவதும் இயல்பான நிகழ்வாக தோன்றுகிறது. முதலாளித்துவ அமைப்பில்தான் முதல்முதலாக பெருமளவில் மனிதர்கள் வேலை தேடி அலைவ தும், வேலை கிடைக்காமல் தவிப்பதும் நிகழ் கிறது. இதனை இங்கு ஏன் சொல்கிறோம் என்றால் இந்தியா இன்னமும் முழு முதலாளித் துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சமூகம் என்பதை நினைவுபடுத்தவேண்டியுள்ளது. எனவே, இங்கு பகிரங்கமான வேலையில்லா பட்டாளங்கள் ஒருபக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சுயவேலை செய்வோர் மத்தியில் தங்கள் உழைப்பை முழுமை யாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் வேலையின்மை கணக்கில் வருவதில்லை. அதே சமயம், வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டோர்க்கு சமூகப் பாதுகாப்பு அற்ற நமது நாட்டில், ஏழை கள் ஏதாவது வகையில் உழைப்பை செலுத்திக் கொண்டேயிருந்தால்தான் வயிற்றை கழுவிக் கொள்ள முடியும். இதன் பொருள், பலரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இவர்களின் வரு மானம் மிகவும் சொற்பமாக இருந்தாலும் இவர் கள் வேலையில்லாதோர் கணக்கில் வரமாட்டார் கள். இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு இன்று இந்தியா  எதிர்கொள்ளும் வேலை யின்மை பிரச்சினையை பரிசீலிப்போம்.

வேலையின்மை அன்றும் இன்றும்

நாடு விடுதலை பெற்ற காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் (1928-1940) கால மகத்தான வளர்ச்சியும் மேலை நாடுகள் எதிர்கொண்ட (1929-1939) கால நீண்ட பொருளாதார பெரும் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் அரசாங் கம் மையப்பங்கு ஆற்ற வேண்டும் என்பதையும், மையப்படுத்தப்பட்ட  திட்டமிடுதல் அவசியம் என்பதையும், சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு உணர்த்தியிருந்தன. 1950 – 1966 காலத்தில் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் அமலாக்கப்பட்டன. கணிசமான அளவில் தொழில் துறை, கட்டமைப்பு துறை, நிதித் துறை, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட மனிதவளத் துறை சார்ந்த முதலீடுகளை பொதுத்துறை மூலம் அரசாங்கம் மேற்கொண்டது. பொதுத் துறை முதலீடுகள், இறக்குமதிக்குப் பதில் உள்நாட்டில் உற்பத்தி, குறுகிய வரம்புகளுக்குட்பட்ட நிலச் சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகள் உள்நாட்டு சந்தையை விரிவடையச்செய்தன. 1900-1950  கால ஐம்பது ஆண்டு தேக்க நிலையில் இருந்து இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 4ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது. நகர்ப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்புகள் வேகமாக வளர்ந்தன. மூன்றாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (1961 – 66) ஆலைத்துறை வேலை வாய்ப்பு ஆண்டுக்கு கிட்டத் தட்ட 6ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது.  நிலச்சீர் திருத்தம் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள் கிடப்பில் போட்டிருந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வர உதவியது. பொதுத்துறை முதலீடு கள் மூலம் பாசனமும் மின்சார உற்பத்தியும் அதிகரித்ததால் ஒரு பகுதி நிலங்களில் இரண்டு, மூன்று போக சாகுபடி சாத்தியமாயிற்று. 1960 களின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிடுதல் நெருக்கடிக்கு உள்ளாகிய போதிலும், அரசின் முதலீட்டு முடக்கத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், பசுமை புரட்சி மூலம் 1966 முதல் 1980கள் வரை விவசாயத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டமும் (ஐ ஆர் டி பி – IRDP) வேலை வாய்ப்புகளை கூட்டியது. ஆனால் துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையிலான  வேலை வாய்ப்பு கள் மற்றும் வேலையின்மை பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் முயற்சி 1970களில்தான் துவங்கி யது.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO – National Sample Survey Organization) 1972-73 ஆம் ஆண்டில் வேலை வேலை யின்மை பற்றிய நாடு தழுவிய ஆய்வை முதல் முறையாக நடத்தியது. அதன்பின் ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்குப்பின் இத்தகைய ஆய்வு கள் தொடர்ந்து மேற்கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு 1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10 ஆகிய ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2009-10 வறட்சி ஆண்டு என்ற காரணத்தை கூறி அன்றைய திட்டக்குழு 2011-12 ஆண்டில் மீண்டும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுகள் அனைத்தும் பொதுவாக சிறப்பாக செய்யப்பட்டன. இவற்றில் கிடைத்த புள்ளி விவரங் கள், அவை மீதான கருத்தாழமிக்க ஆய்வுகள் அடங்கிய அறிக்கைகள் ஒவ்வொரு ஆய்வுக்குப் பின்பும் தயார் செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்ட வடிவிலும் கூடுதலாக அண்மை ஆண்டுகளில் இணைய தளம் வாயிலாகவும் வெளியிடப் பட்டன. வேலையின்மை பற்றியஇந்த வெளிப் படையான அணுகுமுறையை மோடி தலைமை யிலான பாஜக அரசு பின்பற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெளிவந்துள்ள இவ்வறிக்கைகள் தாராளமய காலத்தில் வேலை வாய்ப்ப்புகள் முன்பைவிட குறைவான வேகத்தில் தான் அதிகரித்துள்ளன என்பதையும் வேலை யின்மை பிரச்சினை இக்கால கட்டத்தில் அதிகரித் துள்ளது என்பதையும் காட்டு கின்றன.

2011-12க்குப்பின் 2016-17இல் அடுத்த ஆய்வு நடந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு ஆய்வை நடத்தவில்லை. அந்த ஆண்டில் நவம்பர் மாதம் எட்டாம் நாள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி பிரகடனம் செய்தார். அதற்குப் பிறகு பணமதிப்பிழப்பு சூறாவளி ஒருபுறமும், அதன் மோசமான விளைவுகளை மறைக்க முயலும் மோடி அரசின் பிரச்சார சூறாவளி மறுபக்கமும் மக்களை தாக்கின. பல கேள்விகள் எழுப்பப்பட்டபின் 2017-18 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களஆய்வு முடிந்து அறிக்கையும் தயாராகி விட்டது. டிசம்பர் 2018 இல் தேசிய புள்ளியியல் ஆணையம் அறிக்கையை ஏற்று ஒப்புதலும் அளித்துவிட்டது. ஆனால் மோடி அரசு அறிக்கையை வெளியிடா மல் இன்றுவரை இழுத்தடித்துவருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் 2017-18க்கான ஆய்வு அறிக்கை வேலையின்மை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதை படம் பிடித்துக்காட்டுகிறது என்பதாகும். தாராளமய கொள்கைகள் மட்டு மின்றி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக் கையும், குழப்பம் நிறைந்த ஜி எஸ் டி அமலாக்க மும் வேலையின்மை பிரச்சினையை தீவிரப்படுத்தி யுள்ளன என்பதை ஆய்வின் தரவுகள் உறுதி செய்கின்றன.

வேலையின்மை புள்ளிவிவரங்கள்: சிறு விளக்கம்

வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் உழைப்புப் படை யில் இல்லை. குழந்தைகள், மிக அதிக வயதில் உள்ளவர்கள், பல காரணங்களால் வேலை செய்ய இயலாத நிலையில் உள்ளோர், படித்துக் கொண்டிருப் பவர்கள் என்று மொத்த மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர் பொருளாதார உற்பத்தி சார்ந்த வேலை செய்வதும் இல்லை; அத்தகைய வேலை தேடுவதும் இல்லை. இவர் களை உழைப்பு படைக்கு அப்பால் உள்ளவர்கள் என்று அழைக்கிறோம். இவர்களில் ஒரு கணி சமான பகுதியினர் வீட்டு வேலைகளில், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்வ தில் கடுமையாக உழைக்கும் பெண்கள் ஆவர். இவர்களின் உழைப்பு இன்றியமையாதது என்றா லும், இவ்வித உழைப்பு அதிகாரபூர்வ புள்ளிவி வரக் கணக்குகளில் தேச உற்பத்திசார் உழைப் பாக கருதப்படுவதில்லை. இந்த உழைப்பை மட்டுமே செலுத்துவோர் உழைப்பு படை என்ற கணக்கில் வருவதில்லை. மற்றொரு முக்கிய பகுதி பல்வேறு நிலை படிப்புகளில் உள்ள மாணவ மாணவியர் ஆவர்.

வேலையில் இருப்போர், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்ற இரண்டு வகையினர் சேர்ந்ததுதான் உழைப்பு படை. இதில் வேலையில் உள்ளவர்கள் வேலைப்படை யில் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து  1,000 பேரிடம் கணக்கு எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கணக்கெடுக் கப்படும்பொழுது 600 பேர் கடந்த ஒரு ஆண்டில் சில நாட்களாவது ஏதோ ஒரு பணியில் – சுய தொழில் அல்லது கூலி/சம்பள உழைப்பு – ஈடுபட்டிருக்கலாம். மேலும் ஒரு சிலர் – 25 பேர் என்று எடுத்துக்காட்டுக்காக கொள்வோம் – கடந்த ஒரு ஆண்டில் வேலை தேடியும் வேலை கிடைக்காதவர்களாக இருக்கலாம். ஆக உழைப்பு படையின் எண்ணிக்கை 625. மீதி 375 (1000 – 625 = 375) பேர் குழந்தைகளாகவோ படித்துக் கொண்டிருப் பவர்களாகவோ மிகவும் முதியோர் அல்லது வேறு காரணங்களுக்காக உழைக்கும் நிலையில் இல்லாதவர்களாகவோ இருக்கலாம். இவர்கள் உழைப்பு படையில் இல்லாதவர்கள். இந்த உதாரணத்தில் வேலையின்மை விகிதம் = வேலை கிடைக்காதவர்கள் / மொத்த வேலைப் படை =  25 / 625 அல்லது 1/25, அதாவது 4%.

வேலையின்மை விகிதத்தை கணக்கிடும் பொழுது என்ன கால வரம்பை வைத்து ஒருவர் வேலை யில்லாதோர்  பட்டியலில் இடம் பெறுகிறார் என்பது ஒரு முக்கிய கேள்வி. ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு வேலையில் (சுய வேலை, கூலி/சம்பள வேலை) இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஒருவாரம் அவருக்கு எங்கும் வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம். கடந்த ஒரு ஆண்டை வரம்பாக வைத்துக்கொண்டால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெற மாட்டார். கடந்த ஒருவாரம்தான் காலவரம்பு என்றால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெறுவார். 

நமது நாட்டில் வேலையில் இல்லை; எனவே வருமானம் இல்லை என்றால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதுதான் பெரும்பகுதி மக்களின் நிலைமை. இதற்கு விதிவிலக்கு செல்வந்தர்கள் மட்டுமே. தமது செல்வம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வேலை செய்யாமலே அவர்கள் வசதியாக வாழ முடியும். ஒரு ஆண்டு என்பதை கால வரம்பு என்று கொண்டால் உழைப்பு படையில்  மிகச்சிலரே வேலைஇல்லாதோர் பட்டியலில் இடம் பெறுவர். மற்றவர்கள் ஏதோ ஒரு கூலி / சம்பள வேலையில் அல்லது சொந்த விவசாயம், வர்த்தகம், தொழில் வேலைகளில் இருப்பார்கள். இவை எதுவும் கிடைக்காத நிலை யில், ஏதோ ஒரு சுய வேலையை உருவாக்கிக் கொண்டு வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருப் பார்கள். மிகச் சிலர்தான் வருடம் முழுவதும் வேலை தேடியும் கிடைக்காமல் இருப்பவர்களாக கணக்கில் வருவர்.

கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து ஒருவர் வேலையில் இருந்தார்; அல்லது இல்லை என்று முடிவுசெய்வதை  மாமூல் வேலை நிலை (usual status – US) என்று அழைப்பது வழக்கம். இதன்படி மேலே கொடுக்கப்பட்ட உதாரணத் தில் மாமூல் நிலை அடிப்படையில் வேலையின்மை விகிதம் 4ரூ. இதற்குப்பதில், “கடந்த ஒருவாரத்தில் நீங்கள் ஏதேனும் வேலை செய்தீர்களா?” என்று கேட்டு விவரம் சேகரிக்கலாம்.  கடந்த ஒருவார மாக வேலையில் இருந்ததாக நிர்ணயிக்கப்படும்  நபர்களின் எண்ணிக்கையையும், “கடந்த ஒருவார மாக வேலை தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை”  என்று சொல்லுகின்ற நபர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கை நடப்பு வாராந்தர நிலை அடிப்படை யில் மொத்த வேலைப் படையாகும். கடந்த வாரத்தில் வேலைகிடைக்காதோரின் எண்ணிக் கையை வாராந்தர நிலை அடிப்படையிலான மொத்த வேலைப்படையின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது ஊறுளு வேலையின்மை விகிதம் பொதுவாக, ஊறுளு வேலையின்மை விகிதம்  மாமூல் நிலை வேலையின்மை விகிதத்தை விட அதிகமாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 1,000 நபர்களிடம் கடந்த ஏழு நாட்களில் ஏதேனும் வேலையில் இருந்தீர்களா என்று கேட்டால் 550 நபர்கள் வேலையிலும் 50 நபர்கள் வேலை இல்லாமலும் மீதம் 400 பேர் உழைப்பு படைக்கு வெளியேயும்  இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், ஊறுளு வேலை  விகிதம் 50/ (550 + 50) = 50/600 = 1/12 அல்லது 8.33%

வேலையின்மை விகிதம் நகரம்/கிராமம், பாலினம், வயது, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படை யில் வேறுபடும். பொதுவாக இளைஞர்கள் மத்தி யிலும் கல்வி பெற்றவர் மத்தியிலும் வேலையின்மை விகிதம் சராசரியை விட அதிகமாக இருக்கும்.

இப்பொதுவான அறிமுகத்துடன் தற்சமயம் நிலவுகின்ற வேலையின்மை விவரங்களை பரிசீலிப் போம்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி

2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்து கிறது என்பதை ஏற்கெனவே நாம் குறிப்பிட் டோம். இந்த தாமதமும் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பொறுப்பு தலைவர் திரு பி.சி.  மோகனன் அவர்களும் அதன் உறுப்பினர் தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜே. வி. மீனாட்சி அவர்களும் அந்த ஆணையத்தில் இருந்து தமது பதவிகளை ராஜினாமா செய்து வெளியே வந்த தற்கு ஒரு முக்கிய காரணம். இதுபற்றி திரு மோகனன் அவர்கள் அண்மையில் விளக்கி யுள்ளார். இந்த ஆய்வு அறிக்கையை அரசு வெளியிட மறுத்தாலும் பிசினஸ் ஸ்டான்டார்ட் என்ற ஆங்கில நாளிதழ் ஜனவரி மாத இறுதியில் அறிக்கையின் முக்கிய விவரங்கள் சிலவற்றை வெளியிட்டது.  இதன்படி, 1977-78 இல் இருந்து  2011-12 வரை 2% இல் இருந்து 2.5ரூ க்குள்ளேயே இருந்த மாமூல் வேலையின்மை விகிதம் 2017-18 இல் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து 6.1 % ஆக இருந்தது. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான அளவிற்கு, பல மடங்கு வேலையின்மை விகிததம் உயர்ந்துள்ளது. பாஜக அரசிற்கே என்ற விவரத்தை மறைக்கவே  எனவே தான்அரசு இதுவரை அறிக்கை வெளிவராமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விவரங் கள் எப்படியும் வெளியே வந்துவிட்டன. இப்பொழுது தனது தேர்தல் பிரச்சாரத்தில் வேலை வாய்ப்பு பற்றி தப்பி தவறிக்கூட பாஜக பேசுவதில்லை. இந்த அறிக்கை மட்டுமல்ல. இதே காலத்தில் வெளிவந்துள்ள இரு தனியார் துறை ஆய்வுகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான தகவல்களை கூறுகின்றன. ஊஆஐநு என்ற தனியார் நிறுவனம் – ‘Centre for Monitoring the Indian Economy’, அதாவது, “இந்திய பொருளாதாரத்தை கண் காணிக்கும் மையம்”, 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பணமதிப்பிழப்பு பிரச் சினையின் கடும் தாக்குதலால் 15 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டன என்று தெரிவித்தது. பின்னர், 2017 டிசம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான காலத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆய்வுகள்  2018 மே மாதம் வேலையின்மை விகிதம் 5.14ர% ஆக இருந்தது என்றும்  ஏப்ரல் 2019இல் 7.60% ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறு கின்றன. இதேபோல் பெங்களூரில் உள்ள  அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ஆய்வு ஒன்றில் நவம்பர் 2016 முதல் 2018 முடிய 50 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு ஒரு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும் குறிப்பிடுகிறது. ஏற்கெனவே, மத்திய அரசின் உழைப்பு வாரியம் – லேபர் ப்யூரோ – தனது செப்டம்பர் 2016 அறிக்கை யில் மாமூல் வேலையின்மை விகிதம் 5% ஐ எட்டி விட்டது என்று பதிவிட்டது. அதன்பின் லேபர் ப்யூரோ அறிக்கைகளும் வெளிவரவில்லை. இது தற்செயலான நிகழ்வு அல்ல என்றே கருதவேண்டி யுள்ளது. பணமதிப்பிழப்பு, அதன்பின் வந்த ஜிஎஸ்டி குளறுபடி இவற்றால் பொருளாதாரம் சிதைவுற்றுள்ள நிலையில் புள்ளிவிவரங்களை வெளியிடுவதே ஆபத்து என்று மோடி அரசு கருதுகிறது. தேசிய குற்றப்பதிவேட்டு வாரியமும் மூன்று ஆண்டுகளாக அறிக்கை களை வெளியிடவில்லை. மோடி அரசின் கீழ் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு நிறுவனம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற பல நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு வருவதைப் போல், மத்திய புள்ளியியல் அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு தரும் விவரங்கள் நமபகத்தன் மையை இழந்துள்ளன.  வேலையின்மை பிரச் சினையில் அரசுக்கு ஆதரவான விவரங்களை வெளியிடுவதற்கு அரசால் முடியவில்லை. முத்ரா திட்டம் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்த பிறகு பெருமளவில் வேலை உருவாக்கம் நிகழ்ந் துள்ளதான கதையாடலுக்கு அதுவும் கைகொடுக்க வில்லை.

அரசு மறைத்த அறிக்கை தரும் செய்திகள்

மோடி அரசால் இன்றுவரை மறைக்கப்பட் டுள்ள 2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கை பல முக்கிய விவரங்களை நமக்கு தருகிறது. இதன் ஒரு முக்கிய அம்சத்துடன் தொடங்கலாம். 2011-12 முதல் 2017-18  வரையிலான ஆறு ஆண்டுகளில் வேலைப்படையில் உள்ளவர் களின் எண்ணிக்கையே குறைந்துள்ளது. 2011-12 இல் நகரப்பகுதியில் 8.915 கோடி நபர்களும் கிராமங்களில்21.488 கோடி நபர்களும் ஆக மொத்தம் 30.4 கோடி மக்கள் வேலைப்படையில் இருந்தனர்.  2017-18 இல் நகரப்புறங்களில் 8.492 கோடி நபர்களும்  கிராமங்களில்  20.10 கோடி நபர்களும் என மொத்தமாக 28.6 கோடி நபர்கள் தான் வேலைப்படையில் இருந்தனர்.  அதாவது, மக்கள் தொகை இக்காலத்தில் பெருகியிருந்தா லும் வேலையில் இருப்போர் எண்ணிக்கை சுருங்கி விட்டது. கடும் வேலைப்பஞ்சம் நாட்டில் உருவாகியுள்ளது. ஏற்கெனவே 1983, 1993-94, 2011-12 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட என் எஸ் எஸ் ஆய்வுகளில் இருந்து தாராளமய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது. ஆனால், மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தாராளமய கொள்கைகளோடு கூடுதல் தாக்குதல்களாக – பெரும் தாக்குதல்களாக வேலை வாய்ப்பை அழித்தொழிப்பதில் பங்களித் துள்ளன. நாடு பாய்ச்சல் வேகத்தில் பொருளா தார வளர்ச்சியை தனது ஆட்சியில் சாதித்து வருவதாக தம்பட்டம் அடித்துவந்த பிரதமரும் ஆளும் கட்சியினரும், இதேகாலத்தில்  வேலை யில் உள்ளோர் எண்ணிக்கையே குறைந்துள்ளது என்ற செய்தியை மூடிமறைக்க கடும் முயற்சி செய்தனர். அதையெல்லாம் தகர்த்து இப்பொழுது இந்த அறிக்கை உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்து, வேலைவீழ்ச்சி பெரும் அளவிற்கு வேளாண் துறையை  பாதித்துள்ளது. கிராமங் களில் கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயத்தில் வேலை செய்யும் (உழைக்கும் வயதில் உள்ள) ஆண்களின் சதவிகிதம் 48 இல் இருந்து  40 ஆக குறைந்துள்ளது. ஆனால் பிற துறைகளில் வேலை கள் அதிகம் உருவாகவில்லை. இதன் விளைவாக வேலையில் இல்லாத ஆண்களின் சதவிகிதம் 20 இல் இருந்து  28 ஆக அதிகரித்துள்ளது. வேலை யில் இல்லாதவர்கள் சதவிகிதம் கிராமப்புற பெண்கள் மத்தியில் 50 இல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது. வேலையின்மை பிரச்சினை கிராமப்புற பெண்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப் படையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 9.39 கோடியாக இருந்தது. 2017-18 இல் இது 6.48 கோடியாக, ஏறத்தாழ 3 கோடி குறைந் துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப்படையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையும் 21.5 கோடியி லிருந்து 20.1 கோடியாக, 1.4 கோடி குறைந்துள்ளது.

வேளாண் நெருக்கடியின் இன்னொரு பரி மாணம் இது. வேலையின்மை பிரச்சினையும் வேளாண் நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதையும் நாம் காணமுடி கிறது. குறிப்பாக, கிராமங்களில் கூலி வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 7 கோடியே 63 லட்சமாக இருந்தது. இது    2017-18 இல் 5 கோடியே 67 லட்சமாக சரிந்துவிட்டது. கிராமப்புற பெண்களில் கூலி வேலை செய்தவர் கள் 2011-12 இல் 3 கோடியே 30 லட்சம். 2017-18 இல் இது 2 கோடியே 6 லட்சமாக, 1 கோடியே 24 லட்சம்  சரிந்து விட்டது. மொத்தத்தில், ஊரகப் பகுதிகளில் மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பிரச்சினை மிகவும் கடுமையாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

அதிகரித்துவரும் வேலை இன்மை விகிதம்

அடுத்தடுத்து 1970களின் பிற்பகுதியில் இருந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெளிவந்துள்ள என் எஸ் எஸ்ஒ- வின் அனைத்து அறிக்கைகளிலும் 2011-12 அறிக்கை வரை மாமூல் வேலையின்மை விகிதம் 2% லிருந்து 2.5% ஐ தாண்டவில்லை. ஆனால் முதன்முறையாக, 2017-18 ஆய்வறிக்கை மாமூல் வேலையின்மை விகிதம் 6.1% என்று ஆகியுள்ளது என சுட்டிக்காட்டுகிறது. இதுவே வேலையின்மை யின் கடுமையை குறைத்துக் காட்டுவதாகும். ஏனெனில், உழைப்புப் படையில் சரிபாதி பேர் சுய வேலையில் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மத்தியில் பகுதி நேரம் வேலையில்லா நேரமாக இருக்கும் வாய்ப்பு கணிசமானது. பகிரங்க வேலை யின்மையைத்தான் நமது புள்ளிவிவரங்கள் வெளிக் கொணர்கின்றன. எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த கணக்கின்படியான வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆகி யுள்ளது என்பது முக்கியமான செய்தி. மாமூல் நிலை வேலையின்மை விகிதத்திற்கு கடந்த ஒரு ஆண்டை கணக்கில் கொள்கிறோம்.  கடந்த ஏழு நாட்களை வைத்தும் வேலையின்மை கணக்கிடப் படுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட் டோம். இதில் கிடைப்பது நடப்பு வாராந்தர அடிப்படையிலான வேலையின்மை விகிதம் – CWS (Current Weekly Status) வேலையின்மை விகிதம் என்று இது அழைக்கப்படுகிறது. இது மாமூல் வேலையின்மை விகிதத்தை விட பொருத்தமான அலகு. இதன்படி 2011-12 மற்றும்  2017-18  விவரங் கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட் டுள்ளன:

வாராந்தர நிலை வேலையின்மை விகிதங்கள்

2011-12 (ஆண்கள்) 3.5  (பெண்கள்) 4.2   (நகரம்) 4.4 (கிராமம்)   3.4 (மொத்தம்) 3.7       

2017-18       (ஆண்கள்) 8.8 (பெண்கள்) 9.1 (நகரம்) 9.6 (கிராமம்) 8.5 (மொத்தம்) 8.9

கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையின்மை நிலைமை பெரிதும் மோசமடைந்துள்ளதை பார்க்கலாம். இதில் ஒருபகுதி தாராளமய கொள் கைகளின் தாக்கம். ஆனால் ஒரு கணிசமான பகுதி பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடி நிறைந்ததும், அடிப்படையில் மோசமானதுமான ஜிஎஸ்டி அமலாக்கத்தின் விளைவு.

இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை மேலும் தீவிரமாக உள்ளது. 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்கள் மத்தியில் வேலை யின்மை விகிதம் 13.6ரூ இல் இருந்து 27.2% வரை உள்ளது.

அடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களின் நிலமை கீழே தரப்பட்டுள்ளது:

படித்தவர் வேலையின்மை விகிதம்

                                   2011-12        2017-18                      

கிராமப்புற ஆண்கள்              3.6          10.5

கிராமப்புற பெண்கள்              9.7         17.3

நகர்ப்புற   ஆண்கள்             4.0          9.2

நகர்ப்புற   பெண்கள்             10.3         19.8

பணிசார்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றோர் நிலைமையும் மோசமாகவே உள்ளது. அவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம்  2011-12 இல்  5.9% (ஆண் 5.7%, பெண் 6.4%) ஆக இருந்தது. 2017-18 இல் 12.4% (ஆண் 13.8%, பெண் 10.4%) ஆக உயர்ந்துள்ளது.

பாஜக அரசு இந்த அறிக்கையை வெளியிட ஏன் மறுக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது!

இறுதியாக

இக்கட்டுரையில் நாம் பெரும்பாலும் வேலை யின்மையின் அளவு பற்றிய விவரங்களையும் கருத்துக்களையும் விவாதித்துள்ளோம். அவை நமக்கு சொல்லும் செய்தி தாராளமய கொள்கை களால் ஏற்கெனவே அதிகரித்துவந்த வேலை யின்மை மோடி அரசின் மிகத் தவறான இரு நடவடிக்கைகளால் – பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் – மிக அதிகமான அளவிற்கு சென்றுள்ளது என்பதாகும். முறைசாராத் துறை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த துறைதான் அதிக வேலை வாய்ப்புகளை கொண்ட துறை. கார்ப்பரேட் முதலீடுகள் மிகக் குறைந்த அளவில்தான் வேலைகளை உருவாக்கு கின்றன. பொதுத்துறை முதலீடுகள் மோடி ஆட்சியிலும் அதற்கு முன்பே அமலாக்கப்பட்டு வந்த தாராளமய கொள்கைகளாலும் சரிந்து வந்துள்ளன. இந்நிலையில் சிறு குறு விவசாயம், சிறு தொழில், சிறு வணிகம், வேளாண்மை, கைவினை தொழில்கள் போன்றவைதான் ஓரள விற்காவது வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்தன. மோடி அரசு இத்துறைகள் அனைத்தை யும் அழித்துவிடுவதில் பெரும் முனைப்பு காட்டு கிறது.

கள நிலைமை உழைப்பாளி மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. கிராமப்புற கூலி தொழிலாளி களின் வருமானம் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. விவசாயிகளின் விளை பொருள் விலைகள் மேலும் சரிந்து வேளாண் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசு மறைக்க முயலும் ஆய்வறிக்கை பல செய்திகளை சொல்லு கிறது. கூலி தேக்கமாக இருப்பது, சுய வேலையில் சராசரி வருமானம் மிகக் குறைவாக இருப்பது, இந்திய உழைக்கும் மக்கள் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 50 மணி நேரத்திற்கும் அதிகமாக பாடுபடுவது, அத்தகைய கடும் உழைப்புக்குப் பின்பும் சொற்ப வருமானத்தையே பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு நிலைமைகளை மாற்ற போராட்டங் களை திட்டமிட்டு நடத்த வேண்டிய சவால் ஜனநாயக இயக்கத்தின் முன்பு உள்ளது. இக்கட்டுரை யின் அளவு வரம்பு, வாசிப்பவர்களின் பொறுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வேலை யின்மை பிரச்சினையின் பல அம்சங்களுக்குள் நாம் செல்ல இயலவில்லை. பெண்கள், தலித்து கள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற உழைப்பாளிகள் ஆகியோர் கூடுத லாக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இவை பற்றியெல்லாம் கள அளவில் திட்டவட்டமாக பரிசீலித்து கோரிக்கைகளை உருவாக்கி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது அவசர அவசியம்.

பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

  • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
  • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
  • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
  • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
  • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
  • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
  • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
  • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
  • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
  • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
  • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
  • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
  • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
  • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
  • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

  • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
  • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
  • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

  • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
  • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
  • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
  • அதாவது “லிபரல்” சக்திகள்
  • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

  • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் …

பெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 3

முந்தைய பகுதி: <<<

வேளாண் நெருக்கடி

வேளாண் நெருக்கடியின் மிகத்துயரமான அம்சம் தொடரும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997 முதல் 2016வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத் தற்கொலைகளுக்கும் வேளாண்நெருக்கடிக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வேளாண் நெருக்கடியின் ஆழத்தை வேளாண்வளர்ச்சி பற்றிய விவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. தானியம், பருப்பு, எண்ணய்வித்துக்கள், கரும்பு ஆகிய முக்கிய பயிர்களை எடுத்துக் கொண்டால், 1981முதல் 1991வரையிலான காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி வேகமாக வளர்ந்தது. ஆனால் அடுத்த 20ஆண்டுகளில் – 1991முதல் 2010முடிய – இவற்றின் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் பெரிதும் குறைந்தது. மகசூல் உயர்வும் இதேபாணியில்தான் இருந்தது. நெருக்கடி1998 – 2004 காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது என்பது உண்மை. வேளாண்உழைப்பாளிமக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளேக காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவு கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண்பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், விளைபொருட்கள் விலைகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிதித்துறை சீர்திருத்தங்கள் விவசாயக் கடனைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமய கொள்கை கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண்விரிவாக்கம், வேளாண்ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது வினியோகமுறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன்வலையில் வீழ்ந்தன.

அதேசமயம், வேளாண்துறை நெருக்கடியில் இருந்த போதிலும், கிராமப்புற செல்வந்தர்கள் கொழுத்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பயிர்வாரியாகவும் பகுதிவாரியாகவும் காலவாரியாகவும் வேளாண்நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபட்டு இருந்தன. அதேபோல், வேளாண்பகுதிமக்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ-நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன்பெற்றுள்ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன. 1992 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில்கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண்துறையில் இயந்திரங்களின் உடமையும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற்கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இதன் பொருள் என்னவெனில், வேளாண்துறையில் கிடைக்கும் உபரிமூலம், உழைப்பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகளும் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நிலஉச்சவரம்பு சட்டங்களை நீக்குகின்றன. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களை இழப்பதன் மூலமும், அரசுகள் இயற்கைவளங்களை அடிமாட்டுவிலைக்கு பன்னாட்டு இன்னாட்டு ஏகபோகங்களுக்கு வாரிவழங்குவதன் மூலமும், ரியல்எஸ்டேட் கொள்ளை மூலமும் சிறப்புபொருளாதாரமண்டலங்கள் என்றவகையிலும் ஆரம்ப மூலதன சேர்க்கை பாணியிலான மூலதனக் குவியலும் தொடர்கிறது.

வேலைவாய்ப்பு

நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவில்லை. தொழில்துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், பணியிடங்கள் கூடவேஇல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் பெரும்பாலும் உழைப்பாளி மக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத அமைப்புசாரா பணிஇடங்களாகவே இருந்தன. 1993முதல் 2005வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுயவேலைஉட்பட) இருப்போர் எண்ணிக்கை 1கோடியே 20லட்சம் அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒருசெய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை வெறும் 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.

வறுமை

வறுமை பற்றி அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் நகைப்புக்கு உரியவை. அரசின் வறுமைக்கோடு என்பது ஒரு சாகாக் கோடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வறுமைகோட்டில் எவரும் வாழமுடியாது. ஆனால் சாகாமல் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 2011-12 தேசீய மாதிரி ஆய்வு தரும் விவரங்கள்படி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50க்கும் குறைவாக செலவு செய்தவர்களாகத்தான் கிராமப்புற குடும்பங்களில் 80% இருந்தனர். நகரப் புறங்களிலும் கிட்டத்தட்ட பாதிகுடும்பங்களின் நிலைமை இதுதான். ஒரு நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த விகிதம் நாலில் ஒன்றுதான். இது போன்ற இன்னும் பல துயர்மிக்க புள்ளிவிவரங்கள் உள்ளன! அதுவும் நாட்டுக்கு விமோசனம் என்று ஆளும் வர்க்கங்கள் விளம்பரப்படுத்திய தாராளமய கொள்கைகள் 22ஆண்டுகள் அமலாக்கப்பட்ட பின்னர்!

மலையும் மடுவும் போன்ற ஏற்றத்தாழ்வுகள்

ஒரு விஷயத்தில் தாராளமய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. அது எதில்என்றால், அசிங்கமான, ஆபாசமான அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்ததில்! தொழிலிலும் நிலஉடமையிலும் பொதுவாக சொத்து வினியோகத்திலும் நம்நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது என்றாலும், கடந்த 23ஆண்டுகளில் இவை பலப்பல மடங்குகள் அதிகரித்துள்ளன.

2008இல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் – அதாவது, 100கோடிடாலர் – சொத்து மதிப்புகொண்ட இந்திய செல்வந்தர்கள் எண்ணிக்கை 41ஆக இருந்தது. அதன்பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்துள்ளது. இது இந்த எண்ணிக்கையைக் குறைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2013இல் 53, 2014இல் 70என்று இந்த இந்திய டாலர் பில்லியனேர்கள் எண்ணிக்கை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளாக 5%க்கும் குறைவுதான். ஆனால் டாலர் பில்லியனேர்கள் வளர்ச்சிவிகிதம் அமோகம்!

2014இல் முகேஷ்அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 இந்திய டாலர்பில்லியனேர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 390 பில்லியன்டாலர். அதாவது சுமார் ரூ. 24லட்சம் கோடி. இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டி.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒருபங்கு ஆகும். முதல் பத்து செல்வந்தர்களின் மொத்தசொத்து மட்டும் தேசஉற்பத்தியில் கிட்டத்தட்ட 6% ஆகும்.

இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். டாட்டா குழுமத்தின் சொத்து 1990இல் 10,922கோடிரூபாயாக இருந்தது. 2012-13இல் இது 5,83,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (ஆதாரம்: டாட்டாஇணையதளம்). இதே கால இடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் RIL மற்றும் அதன் உபநிறுவனங்களின் சொத்து 3,62,357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின் ADAG கம்பெனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன.(ஆதாரம்: இக்குழுமங்களின்இணையதளங்கள்).

1991இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதனமதிப்பு 4மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல்நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)

நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.

மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கழிப்பறை இன்றி, குடிதண்ணீர் இன்றி, தலைக்குமேல் கூரைஇன்றி, வசிக்க வீடின்றி, குளிர்வந்தாலும் மழைபெய்தாலும் சாவை எதிர்நோக்கி வாழும் கோடிக்கணக்கான மக்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்தசோகையில் வாடும் பெண்கள், குழந்தைகள், பிறக்கும் 1000சிசுக்களில் 40சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவலநிலை (இது குஜராத் உட்பட பல மாநிலங்களில் அதிகம்) இப்படி தொடரும் கொடுமைப்பட்டியல்!

இதுதான் – பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் –தாராளமய வளர்ச்சியின் முக்கியதோர் இலக்கணம்.

மோடி அரசின் தீவிர தாக்குதல்கள்

ஊழல் மலிந்த யூ பீ ஏ அரசு தூக்கி எறியப்பட்டு பா ஜ க தலைமையில் 2014 மே மாதம் பொறுப்பேற்ற மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ளது. பாஜக அரசு விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மொத்த விலைப்புள்ளி உயர்வு முன்பை விட கூடியுள்ளது என்று அரசு தரும் புள்ளிவிவரங்களும், ரிசர்வ் வங்கியும், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளன.

இது நமக்கு வியப்பளிக்கவில்லை. காரணம், தாராளமயக் கொள்கைகளின் அறுவடைதான் தடையில்லா விலைஉயர்வு என்று நமக்கு அனுபவம் சொல்கிறது.முந்தைய அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக மோடி அரசு பின்பற்றுகிறது. பல ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால், அரசு செய்ய வேண்டிய முதலீடுகள் செய்யப்படாமல், அளிப்பை(Supply) அதிகரிக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டதால் ரூபாய் மதிப்பு சரிவதும் அதனால் விலைவாசி உயர்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 45 ரூபாய் என்பதிலிருந்து 67 ரூபாய் ஆக உயர்ந்தால் இறக்குமதிப்பொருட்களின் செலவு ரூபாய் கணக்கில் கிட்டத்தட்ட ஐம்பது சதம்  அதிகரிக்கும் என்பது தெளிவு.1991ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு பதிமூன்று ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது எழுபது ரூபாயை தாண்டியுள்ளது.

இதே காலத்தில் நமது நாட்டு இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மற்றொன்று இறக்குமதியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அது மட்டுமல்ல. தொடர்ந்து அரசு முதலீடுகள் வெட்டப்படுவது கட்டமைப்பு வசதிகளை கடுமையாகப் பாதிக்கிறது. பல முக்கிய துறைகளில் இறக்குமதியின் பங்கு அதிகரிக்கிறது. அரசின் தாராள இறக்குமதிக் கொள்கைகளும் இதற்கு இட்டுச்செல்கின்றன.

இவை அனைத்தும் உணவுப் பொருள் சப்ளையை அதிகரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அரசின் வேளாண் கொள்கைகள் தானிய உற்பத்தியின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாக உள்ளன. இதோடு கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, முன்பேர வணிகம் ஆகியவையும் சேரும் பொழுது விலைவாசி உயர்வின் வேகம் அதிகரிக்கத்தானே செய்யும்? இன்னொரு புறம் உணவு, உரம் , எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியங்களை அரசு தொடர்ந்து வெட்டுகிறது. இக்கொள்கைகள் விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணமாக உள்ளன.

அரசின் வரவு-செலவு கொள்கை  

பா ஜ க அரசின் மூன்று பட்ஜெட்டுகளிலும் தாராளமய கொள்கைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை உயர்த்தி மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிப்பளுவை ஏற்றுவதும் பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகளை குறைப்பதும் வரிஏய்ப்போருக்கு வெகுமதி அளிப்பதும்தான் பா ஜ க அரசின் வரிக்கொள்கையாக இருந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு துறை, நிதித்துறை உள்ளிட்டு எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு மீதான வரம்புகளை நீக்குவதும் இறக்குமதி வரிகளை குறைப்பதும்தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு சீமான்கள் கையில் தலா டாலர் 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7,000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்துவரி வேண்டாம்; வாரிசு வரி வேண்டாம்; வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன.[1] வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அழைப்பு விடுத்துள்ளது.

மோடி அரசு பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது. வளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில்தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது.

சில படிப்பினைகள்

தாராளமய கொள்கைகள் பெரும் துயரங்களை மக்கள் வாழ்வில் அரங்கேற்றியுள்ளன. கடந்த பதினெட்டு  ஆண்டுகளில் 3லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு இவைதான் பிரதான காரணம். தாராளமய காலத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்துள்ளது. உருவாக்கப்பட்ட பணியிடங்களும் முறைசாரா, குறை கூலி தன்மையுடையவை. தொழில் வளர்ச்சியும் சுமார்தான். ஆலை உற்பத்தி சில ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள், தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதெல்லாம் உண்மை. இவை, நாம் ஏன் தாராளமய கொள்கைகளை முன்பின் முரணின்றி, சமரசமின்றி, எதிர்க்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

ஆனால், இதன் பொருள் இந்திய அரசின் வர்க்கத்தன்மை மாறிவிட்டது என்பது அல்ல. இந்திய அரசு பன்னாட்டு நிதி மூலதனத்தையும் அதன் உள்நாட்டுக் கூட்டாளிகளையும்தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் தவறானது. 198௦களின் இறுதியிலும் அதனை தொடர்ந்தும் சோசலிச முகாம் பலவீனமடைந்தது. 1990களில் அமெரிக்க ஆதிக்கத்தில் ஒருதுருவ உலகு அமைந்தது. நம் நாட்டில் இந்துத்வா சக்திகள் தலைதூக்கின. அதனையொட்டி இந்திய அரசியலில் ஒரு வலது நகர்வு ஏற்பட்டது. தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து இந்திய அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. நமது நாட்டில் வர்க்க பலாபலத்தை மாற்றுவதற்கான போராட்டம் இந்த மாற்றங்களை ஸ்தூலமாக ஆய்வு செய்து கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் “நிகழும் அனைத்தும் உலக நிதி மூலதன ஆதிக்கத்தால் மட்டுமே” என்று கருதுவது இந்தப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவாது. கட்சி திட்டம், இந்திய அரசு அதிகாரம்  நிலப்பிரபுக்கள் – முதலாளிகள் வர்க்கக் கூட்டின் கையில் உள்ளது என்றும், இந்த கூட்டிற்கு பெருமுதலாளிகள் தலைமை தாங்குகின்றனர் என்றும், இப்பெரு முதலாளிகள் காலப்போக்கில் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் இணைந்து செயல்படுகின்றனர் என்றும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் அனுபவமும் இதுதான். அதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் கட்டமைப்பிலும், பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிராமப்புற மாற்றங்களையும் நாம் ஸ்தூலமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நிலப்ரபுக்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்கின்றனர் என்பதை மறக்கலாகாது. பலதுருவ திசையில் உலகம் பயணிக்கிறது என்பதையும் இந்திய பெருமுதலாளிகள் உள்ளிட்ட இந்திய முதலாளி வர்க்கம் முழுமையாக ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளி இன்னும் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால், ஸ்தூலமான நிலமைகளை ஸ்தூலமாகஆய்வு செய்தே நமது இயக்கம் சரியான முடிவுகளுக்கு வர முடியும். தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள வர்க்க உறவு மாற்றங்கள் குறித்த இத்தகைய ஆய்வை கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. சில பூர்வாங்க முடிவுகளுக்கு கல்கத்தா ப்ளீனம் வந்தது. பணி தொடர்கிறது.

[1]தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணெய் வாங்கும் பொழுதும், எந்த ஒருபொருளையோ, சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடி தான்.

 

மீண்டெழுமா கிரேக்கம்?

 

  • இ.பா.சிந்தன்

 (முறையற்ற கடன் வலையில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கத்தை மீட்க, அந்த நாட்டு மக்களின் போராட்டம் மிகவும் சிக்கலான மாற்றங்களைக் கண்டுவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட பெல்ஜியத்தில் வாழும் இ.பா.சிந்தன் எழுதியுள்ள கட்டுரையை இங்கே வழங்குகிறோம். இவர் ‘அரசியல் பேசும் அயல் சினிமா’ என்ற புத்தகத்தால் பிரபலமாக அறியப்படுபவர். – ஆசிரியர் குழு)

  •  “கிரீஸ் திவாலாகப் போகுதாமே!”
  • “கிரீஸ் நெலமை ரொம்ப மோசமாம். இப்பவோ அப்பவோன்னு இருக்குதாம்”
  • “இனிமே கிரீஸ்ல யூரோவே இல்லாம போயிடும் போலே”

நம்முடைய பாரம்பரிய அரசியல் விவாதத்தளமான டீக்கடைகளிலும், நவீன விவாதத் தளமான இணையத்திலும் கடந்த சில நாட்களாகவே பரபப்பான பேச்சுப் பொருளாக கிரேக்கம் இடம் பெற்று வருகிறது.

கிரேக்கம் உண்மையிலேயே திவாலாகப் போகிறதா?

 

இன்று நேற்றல்ல. இப்படித்தான், கிரேக்கத்தின் நிலை சரியில்லை என்று சொல்லி, மக்களை வாட்டிவதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் அந்நாட்டின் ஆட்சியாளர்கள். அவர்களை ஆட்டுவிப்பது ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய கமிஷன் – ஐரோப்பிய வங்கி என்கிற மூவர் கூட்டணி. “கிரேக்கர்கள் சோம்பேறிகள்” என்று உலக மக்களின் பொதுப்புத்தியில் கருத்துருவாக்கம் செய்கின்றன ஊடகங்கள்.

 

உண்மை என்னவென்றால், உலகிலேயே அதிகமாக உழைக்கும் மக்களில், கிரேக்கர்கள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். மெக்சிகோ மற்றும் கொரியாவுக்குப்பிறகு, கிரேக்க மக்கள் வருடத்திற்கு சராசரியாக 2034 மணி நேரங்கள் வேலை செய்கிறார்களாம். அமெரிக்காவோ முதல் பத்து இடங்களிலும் இல்லை; ஜெர்மனியோ முதல் முப்பது இடங்களிலும் இல்லை.

 

திவால் என்கிற வார்த்தைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான பொருள் இருந்தாலும், மிக எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பைவிட கடன் அதிகமாக இருந்து, அந்த இடைவெளியை சரிசெய்ய மேலும் கடன் வாங்கமுடியாத நிலையும் உருவானால், அந்நாடு திவாலானதாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. கிரேக்கத்தின் நிலை இன்று அதுதான். அந்த நாட்டின் மொத்த உற்பத்தியைவிடவும், ஏறத்தாழ 200% அதிகமாக கடன் இருக்கிறது. இந்தியாவில் சத்யம் நிறுவனத்தின் இராமலிங்க ராஜு ஏமாற்றியதைப்போல, கிரேக்கத்தின் ஆட்சியாளர்களும் கிரேக்கப் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதாக, அந்நாட்டு மக்களை ஏமாற்றியும் வந்திருக்கிறார்கள்.

 

வரலாறு முக்கியம் அமைச்சரே!

 “நமக்கிருக்கிற மலை போன்ற கடனை இந்த தேசம் அழிக்கவேண்டும்; இல்லையேல் அக்கடனே நம் தேசத்தை அழித்துவிடும்” – அந்தரேஸ் (கிரேக்கப் பிரதமர் 1981​​-90; 1993-96)

“ஊதிய உயர்வெல்லாம் எக்காரணம் கொண்டும் கொடுக்க முடியாது.” – கான்ஸ்டாண்டினோல் (கிரேக்கப் பிரதமர் :1990-93)

“எந்தக் கேள்வியும் கேட்காமல் உங்களுடைய பணத்தையும் உரிமையையும் விட்டுக்கொடுப்பதாக உறுதி  கொடுங்கள். அப்போதுதான் நெருக்கடியிலிருந்து விடுபட முடியும்” – கோஸ்டஸ் சிமிடிஸ் (கிரேக்க பிரதமர் :1996-2004)

“நாம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறோம்.”- ஜார்ஜ் (கிரேக்கப் பிரதமர் 2009-2011)

 

கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு அரசியல் கட்சிகளும், மூன்று அரசியல் குடும்பங்களும் சில பெரிய முதலாளிகளும் சேர்ந்து கிரேக்கத்தை திவாலாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கடனை அடைப்பதற்கு மக்களுடைய பணத்தையே எப்போதும் பயனப்படுத்தி வந்திருக்கிறார்கள். நெருக்கடி இருக்கிறது என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கும் தேர்தல்களின்போதும், புதிய கடன்கள் வாங்குகிறபோதும், போலியான நம்பிக்கைகள் வழங்கத் தவறவில்லை.

 

“நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . கிரேக்கத்தின் நிதி நெருக்கடியை தீர்க்கிற முதல் ஆட்சியாளர்கள் நாங்கள்தான்” – யனேவாஸ் பப்பனடோனியோ (நிதி அமைச்சர் 1994-2001)

“நம்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் இரண்டாம் நிலை நாடுகளில் இருந்து, முதலாம் நிலை நாடாக நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்” – கிறிஸ்டோ டௌலகிஸ் (நிதி அமைச்சர் 2001-2004)

ஆண்டாண்டு காலங்களாக கடனிலேயே காலத்தை ஓட்டிய அரசாங்கங்கள், தற்போது நெருக்கடி நிலையின் போது மக்களின் மீது பழிபோடுகிறார்கள்.

“கிரேக்கம் எப்படி இவ்வளவு பெரிய கடனாளியானது என்று மக்கள் கேட்கின்றனர். உங்களுக்கு வேலையும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்தோம் அப்படித்தான் கடன் வந்தது” – தியோடர்ஸ் பங்கலோஸ் (கிரேக்க துணை அதிபர்: 2009-2012)

 முதலிரண்டு உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் கூடுதல் லாபங்களை அடைந்தது. அந்த 25 ஆண்டுகளில் மக்களின் வருமானமும், நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்தே அதிகரித்தது.

 

டேவிட் ஹார்வி குறிப்பிடும்போது, “நெருக்கடி இல்லாமல் முதலாளித்துவமே இல்லை. நெருக்கடி நிலை அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். முதலாளித்துவத்தில் இலாபம்தானே முதல் குறிக்கோள். ஆண்டுக்காண்டு இலாபம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உற்பத்திச் செலவைக் குறைப்பதும், விலையேற்றம் செய்வதும் இன்றியமையாததாகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபோது, அவர்களின் வாங்கும் திறனும் குறைந்தது. அது மீண்டும் முதலாளித்துவத்தை பாதித்தது. மக்களின் வருமானம் குறைந்ததால் பொருட்களின் நுகர்வும் வெகுவாக அதற்கு தீர்வாக (?!?) புதுவகையான முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் கடன் பொருளாதாரம். 1980 களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு போதிய பணம் கையிருப்பு இல்லையெனில், கடன் வாங்கி எதையும் வாங்கலாம் என்பன போன்ற கிரெடிட் திட்டங்கள் பிரபலமாக்கப்பட்டன. 1970 களில் தொடங்கிய நெருக்கடியை 20-30 ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு இத்திட்டங்கள் உதவின. ஆனால் 1990 களின் இறுதியில் கடனும் பெரும் சுமையாக மாறி பல்லிளித்தது.” என்று கூறுகிறார்.

 

அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனைகள் பெரிய அளவில் தலைதூக்கி, நிதியமைப்பே தகர்ந்து போனதும் இவ்வாறுதான்.

பொருளாதார நிபுணர் சமீர் அமின், ஐரோப்பிய நிலையைப் பற்றி குறிப்பிடும்போதுயூரோ நாணயத்தைப் பொருத்த வரையில் அதற்கென ஒரு தேசம் கிடையாது. தேசமில்லாமல் ஒரு நாணயம் இருக்க முடியாது. டாலரில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கென “அமெரிக்கா” என்கிற தேசம் இருக்கிறது. ஆனால், யூரோவிற்கு அதில்லை. ஐரோப்பா என்பது அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பாக உருவாகவில்லை. ஐரோப்பாவிற்கு அதன் உறுப்பினர்களின் மீது முறையான அரசியல் அதிகாரமும் இல்லை.”

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கல்கள்:

 

பெருமுதலாளிகள் தங்களது வியாபாரத்தை தங்குதடையின்றி நடத்துவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியமே உருவாக்கப்பட்டது. எளிய மக்களுக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாம் அந்த ஒன்றியத்திற்கு கவலையில்லை. உதாரணத்திற்கு, ஐரோப்பா முழுவதும் சீரான குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட நிர்ணயிக்கவில்லை

 

நாடுகளுக்கிடையிலான சமநிலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடக்கத்திலிருந்தே இல்லை. அதனால்தான் PIIGS (போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) போன்ற வரிய ஏழை நாடுகள் உருவாயின. பெயரளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா நாடுகளும் சமமென சொல்லப்பட்டாலும், “மைய நாடுகள்” என்றும் “துணை நாடுகள்” என்றும் இரண்டு வகையான நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. துணை நாடுகளில் நெருக்கடி மிகவும் தீவிரமாகவே இருந்து வருகிறது. ஜெர்மனி போன்ற மைய நாடுகள், யூரோ-வினால் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் எல்லா நாடுகளும் பெரிய போட்டியனை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் துணை நாடுகள் எப்போதும் போட்டியில் பின்தங்கியே இருந்து வந்திருக்கின்றன. அதற்கு யூரோ மிகமுக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

மூன்றாமுலக நாடுகளின் கடன் ஒழிப்புக்குழுவின் தலைவர், எரிக் துசன் கூறுகையில் “ஐரோப்பிய நாடுகள் இணைக்கப்பட்ட விதத்தினால்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. தெருவில் சிறிய போட்டிகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்தவரை அழைத்துக் கொண்டுபோய் பெரிய குத்துச் சண்டை வீரரான முகமது அலியுடன் மோத வைத்து, “உங்களில் யார் வெல்கிறார் என்று பார்ப்போம்” என்றால் எப்படி இருக்கும். அப்படியானதொரு போட்டியைத்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் சந்திக்க நேரிட்டது.

 

இடதுசாரிக் கட்சியின் துணைத் தலைவர், சாரா வாகன்னெக்த் இந்த ஏற்றதாழ்வைக் குறிப்பிட்டு “கடந்த சில ஆண்டுகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால், ஜெர்மன் தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 7% உயர்ந்திருக்கிறது. ஆனால், அதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் 27% உயர்ந்திருக்கிறது.” தெரிவித்துள்ளார். இந்த இடைவெளியே நமக்கு பல கேள்விகளுக்கு பதில் சொல்லும். ஜெர்மனியின் வளர்ச்சியை மற்ற நாடுகளால் பின் தொடரவே முடியவில்லை.

 

கிரேக்க நெருக்கடிக்கான காரணங்கள்:

 

கிரேக்கத்தைப் பொறுத்த வரையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு முக்கியமான காரணங்களை கவனிக்க வேண்டும். அந்நாட்டின் வரவை விட செலவு எப்போதும் அதிகமாகவே இருப்பதனால், பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. அதனால் கடன் அதிகமாகி, அதற்கான வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால், அடுத்து வருகிற ஆண்டில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமில்லாமல், கிரேக்கத்திற்கு வரலாற்று ரீதியாகவே கடன்கள் உள்ளன. இவையெல்லாமுமாக சேர்ந்து, கடன்களையும் பற்றாக்குறையையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருப்பதால், கிரேக்கத்தின் கடனும் பற்றாக்குறையும் மேலும் அதிகமாகியிருக்கிறது. அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், முழுக்கடனுக்கும் கிரேக்கமே பொறுப்பாளியாகி, அவர்களே திருப்பி செலுத்த வேண்டிய நிலை வரும். அதனால் உள்ளேயே இருக்க முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கிறது கிரேக்கம். இது கிரேக்கத்திற்கான நிலை மட்டுமல்ல. பிற துணை நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலிக்கும் பொருந்தும்.

 

1821 இல் கிரேக்கம் விடுதலை பெற்றதிலிருந்தே கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1980களில் கடன் அளவு மிகப்பெரிய அளவிற்கு உயரத் துவங்கியது. கடந்த 30-40 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் பின்பற்றிய தவறான வரிக் கொள்கையும் அதற்கு முக்கிய காரணம். அதிக அளவிற்கு கடன் வாங்கியதற்கு, கிரேக்கத்தின் ஆட்சியாளர்கள் யாருடைய நலன் சார்ந்து இயங்கினார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1980-90களில் பிரதமராக இருந்த அன்ட்ரியாஸ் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், பெரிய முதலாளிகளிடமும் நிறுவனங்களிடமும் நியாயமான வரியினைக் கூட வசூலிக்காததால், அரசுக்கு வருமானம் இல்லாமல் போனது, செலவு மட்டுமே அதிகரித்தது. அதோடு மட்டுமின்றி, நட்டத்தில் இயங்கி வந்த பல தனியார் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட்டார். அதனால், அந்நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வேலை பறிபோகாமால் தடுக்க முடிந்தது. ஆனால், உண்மையிலேயே மறைமுகமாக அவர் அதவியது அந்நிறுவனங்களின் முதலாளிகளுக்குதான். அவர்களின் நட்டத்தையும் அரசே ஏற்றதால், அரசின் கடன்களும் நிதிப் பற்றாக்குறையும் கிடுகிடுவென உயர்ந்தன.

 

அன்ட்ரியாசுக்குப் பிறகு வந்த பிரதமர் மிட்சோடகிசும் கடன் வாங்குவதைத் தொடர்ந்தார். அப்போதுதான், ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமான மாஸ்திரிக்த் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, நிதிப் பற்றாக்குறையை போக்க, தாராளமயமாக்கலை எல்லா நாடுகளிலும் அமல்படுத்த வேண்டுமென்றும், சந்தைப் பொருளாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அடுத்து வந்த பிரதமர் கோஸ்டாசின் காலத்தில், கடன் கொஞ்சம் குறைந்திருந்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்பகால மாய வளர்ச்சிகளும் காரணமாக இருந்தன. ஆனால் கோஸ்டாசோ, பெருமுதலாளிகளின் வரியை 10% குறைத்தார். அதன் மூலம் கிரேக்கத்தின் வருமானம் மீண்டும் குறைந்து, கடன் சுமை அதிகரித்தது.

அதிகரித்தன முறையற்ற கடன்கள்:

1927 இல் அலெக்சாண்டர் சாக் என்பவர் முறையற்ற/நியாயமற்ற கடன் என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அதன்படி, சில கடன்களை முறையற்றதாகவும் நியாயமற்றதாகவும் வரையறுத்து விடலாம். அவ்வாறு வரையறுக்கப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றார்.

“முறையற்ற கடனாக” அறிவிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கவேண்டும்:

  1. மக்களின் அனுமதி பெறப்படாமல் அரசாங்கமே தன்னிச்சையாக கடன் வாங்குதல்,
  2. வாங்கிய கடனை மக்களின் நலன்களுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல்,
  3. கடன் கொடுத்தவருக்கும் இவ்வுண்மைகள் தெரிந்திருத்தல்

ஆகிய மூன்றும் ஒரு கடனில் தொடர்புடையவையாக இருந்தால், அக்கடனை “முறையற்ற கடன்” என அறிவித்து, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்பதுதான் அக்கோட்பாட்டின் விதி.

சாக் முன்மொழிந்த இத்தத்துவம் முற்போக்கானதாகவும், அன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுவதாகவும் இருந்தது.

  • முதன்முறையாக அதனைப் பயன்படுத்தியது வேறுயாருமல்ல. அமெரிக்காதான். 1898இல் ஸ்பெயினிடம் போரில் வெற்றி பெற்று, கியூபாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது அமெரிக்கா. கியூபாவின் பெயரில், ஸ்பெயின் வாங்கிய கடன்கள் அனைத்தையும் அமெரிக்காதான் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், “முன்னாள் ஆட்சியாளர்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் முறையற்ற கடன்கள். அதனால் அதனை திருப்பிச் செலுத்தமுடியாது” என்று அமெரிக்கா மறுத்துவிட்டது.
  • மெக்சிகோவின் மன்னராக இருந்த மேக்ஸ்மிலியனின் ஆட்சி கவிழ்ந்து, குடியரசு ஆட்சி அமைந்தது. மேக்ஸ்மிலியன் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள், மெக்சிகோவின் புதிய ஆட்சிக்கு பெரிய பாரமாக இருந்தது. மேக்ஸ்மிலியனின் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாது என்று அரசு அறிவித்தது. அவருக்கு மரணதண்டனையும் வழங்கியது.
  • 2002-ல் ஈராக்கை ஆக்கிரமிக்க திட்டமிட்டது அமெரிக்கா. ஈராக் அமெரிக்காவின் வசம் வந்துவிட்டால், அதன் கடன்களுக்கும் அமெரிக்காவே பொறுப்பாகிவிடும் என்று அஞ்சியது. அதனால், போருக்கு முன்னரே ஈராக்கின் அனைத்து கடன்களும் சதாம் உசேன் வாங்கிய “முறையற்ற கடன்கள்” என்று அறிவிக்க போதுமான ஆவணங்களை தயார்செய்துவிட்டுத்தான், போருக்கே புறப்பட்டது அமெரிக்கா. 2003இல் ஈராக்கைப் பறித்துக்கொண்டபின், ஜி8 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், அதனை அறிவித்தனர். ‘ஈராக்கின் புதிய அரசு கடனின்றி இருக்கலாம்’ என்றனர். அவர்கள் செய்தது நியாயமானதுதான் என்று உலக மக்களை நம்பவைக்க, மிகப்பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது. ‘சதாம் உசேன் காலத்தில் வாங்கப்பட்ட கடன்கள் அனைத்தும், அவரது சொந்த செலவுக்கே பயன்பட்டது’ என்றும், ‘ஆடம்பர மாடமாளிகைகள் கட்டப்பட்டன’ என்றும் ஊடகங்களை வைத்து செய்தி பரப்பப்பட்டன. உலக மக்கள் நம்பினர். ஆனால், கடன்கொடுத்த பல நாடுகளும் அமெரிக்காவிடம் முறையிட்டன. “ஈராக்கின் கடன்களை தள்ளுபடி செய்தால், வேறு பலரும் இதேபோன்று தள்ளுபடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அது பெரிய பிரச்சனையாகிவிடும். காங்கோவில் மொபுட்டுவின் கடனையும், பிலிப்பைன்சில் சர்வாதிகாரி மார்கோசின் கடனையும், தென்னாப்பிரிக்காவில் முன்னாள் இனவெறி அரசின் கடனையும், தள்ளுபடி செய்யச் சொல்வார்கள்” என்று கடன்கொடுத்தவர்கள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். “முறையற்ற கடன்” என்கிற வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈராக்கின் கடன் விவகாரத்தை ஒளிவுமறைவாக அமெரிக்காவும் கடன் கொடுத்தவர்களும் பேசிமுடித்துக்கொண்டனர்.

மற்றொரு நாடு தனது சொந்த முயற்சியால், தன்னுடைய கடன்களை “முறையற்ற கடனாக” அறிவித்து நிரூபித்தும் காட்டியது. தென்னமெரிக்காவின் ஈக்வடார் தான் அந்நாடு.

கிரேக்கத்தின்முறையற்ற/நியாயமற்ற கடன்”:

 

கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா? அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார்? என்று கடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்க மறுத்திருக்கிறார்கள். தற்போது புதிதாக பதவியேற்றிருக்கிற கிரேக்க அரசுதான், இதில் புதிய முயற்சிகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது.

  • 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 1 பில்லியன் யூரோ வரையிலும் இலஞ்சம் கொடுத்து பல அரசு குத்தகைகளை பெற்றிருக்கிறது. ஒரு இலட்சம் யூரோ இலஞ்சம் வாங்கியதாக ஒரு முன்னாள் போக்குவரத்து அமைச்சரே ஒப்புக்கொண்டார். மற்றோர் அரசியல் கட்சியோ, ஒரு இலட்சம் யூரோவுக்கு மேல், கட்சி நிதியாக வாங்கினோம் என்றும் ஒப்புக்கொண்டது. பிரச்சனை பெருசாகிக்கொண்டிருந்ததால், சிறிய தொகையினை தண்டனையாகப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக் கொண்டது.
  • இது போன்று எண்ணற்ற வழக்குகள், பல பெரிய நிறுவனங்கள் மீது இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நகர்கின்றன. இப்படி கொடுக்கப்பட்ட லஞ்சப்பணமும் சேர்ந்ததுதானே  கிரேக்கத்தின் கடன்கள். அவையும் மக்கள் மீதே விழுகிறது.
  • 2001-ல், கிரேக்கத்தின் கடனை குறைத்துக் காட்டினால், மேலும் கடன் வாங்கலாம் என்பதால், சர்வதேச திருடர்களான கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை அணுகியது அப்போதைய கிரேக்க அரசு. ஜப்பான் நாணயமான யென்னிலும், டாலரிலும் இருந்த கிரேக்கத்தின் பல கடன்களை, மிகப்பழைய நாணய மாற்று விகிதத்தைக் கொண்டு மாற்றி, குறைவான கடன்கள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்கியது. இதன் மூலம், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் யூரோ வரை கட்டணம் செலுத்தியிருக்கிறது கிரேக்க அரசு. அதோடு மட்டுமில்லாமல், 2001-லிருந்தே வருடந்தோறும், கிட்டத்தட்ட 400 மில்லியன் யூரோ வரை அந்நிறுவனத்திற்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை கிரேக்கத்தின் கடன் மேலாண்மை நிறுவனமாக நியமித்தது 2010 முந்தைய கிரேக்க அரசு. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதைதான் அது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, யென்னிலிருந்து யூரோவிற்கு மாற்றப்பட்ட கடன்களிலும் நிறைய தவறு நிகழ்ந்திருப்பதால், 5 பில்லியன் யூரோவிற்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம். இவையாவும் கிரேக்க மக்களின் தலையில் கடன்களாக திணிக்கப்படுகிறது.
  • ஒரு பக்கம் கிரேக்கத்திற்கு கடன் வழங்கிக் கொண்டிருந்த ஜெர்மனி, மறுபக்கம் அப்பணத்தை எல்லாம் ஆயுதங்கள் விற்று திரும்ப எடுத்துக்கொண்டது. கிரேக்க  ஊழல் அரசியல்வாதிகளுக்கு பங்கு வழங்கப்பட்டமையால், இது எளிதாக நடந்திருக்கிறது. கடனையும் கொடுத்து, அதே பணத்தில் தன்னுடைய ஆயுத வியாபாரத்தையும் நடத்தியது ஜெர்மனி. யாருடன் போருக்கு செல்வதற்கு இப்படி ஆயுதங்கள் வாங்கி குவித்தது?

 

ஜெர்மன் இடதுசாரிக் கட்சியின் துணைத் தலைவர் சாரா வாகன்னெக்த் , “2010 இல் கிரேக்க நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, ஜெர்மனி பல நிபந்தனைகள் விதித்தது, ‘கிரேக்கத்தில் ஓய்வூதியம் குறைக்கப்படவேண்டும்; மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட வேண்டும்;’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ஜெர்மனியிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதை மட்டும் நிறுத்தவே கூடாது என்கிற நிபந்தனையும் சேர்த்தே விதிக்கப்பட்டது.”

 

எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும், தங்களது ஆயுத வியாபாரம் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடக்கவேண்டும் என்கிற அவர்களின் எண்ணத்தை என்னவென்று சொல்வது.

 

2010 இல் கிரேக்கத்தின் நிதி நிலை சரியில்லை என்று அறிவித்த பின்னரும், 2.5 பில்லியன் யூரோவிற்கு போர்க்கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது பிரான்சு. 400 மில்லியன் யூரோவிற்கு ஹெலிகாப்டர்களும், 100 மில்லியன் யூரோவிற்கு ரபல் போர்விமானமும் வாங்கியிருக்கிறது முந்தைய கிரேக்க அரசு. இன்னும் பல போர் விமானங்களை வாடகைக்கு கொடுத்திருக்கிறது. 3 பில்லியன் யூரோவிற்கு நீர்முழுகிக் கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது ஜெர்மனி. இவையெல்லாம் நடந்தது 2010-க்குப் பின்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் இருக்கவேண்டுமென்றால், பிரான்சிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் தொடர்ந்து ஆயுதங்கள் வாங்கியே தீரவேண்டும் என்பது மறைமுக கட்டளை. இல்லையென்றால் கடன் பேச்சுவார்த்தைகள் சுமூகமாகச் செல்லாது.

  • உலகிலேயே அதிகமாக ஆயுத இருக்குமதி செய்கிற நாடுகளில் கிரேக்கம் 5-வது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுத இறக்குமதி சதவிகிதத்தைக் கணக்கில் எடுத்தால், சீனா மற்றும் இந்தியாவையும் பின்னுக்குத்தள்ளி உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது கிரேக்கம். ஆக, கிரேக்கத்தை திட்டமிட்டே ஒரு ஆயுத விற்பனை நிலமாகவே நடத்தியிருக்கின்றன ஐரோப்பிய மைய நாடுகள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியே வருவதற்கு, கிரேக்கத்திற்கு 370 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அது பெரிய தொகையாகத் தோன்றினாலும், மற்றுமொரு புள்ளிவிவரம் நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும்.

உலகின் பல நாடுகளில் உள்ள வங்கிகள், 2007-லிருந்து கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக திவாலானதாக அறிவித்தன. அதில் பெரும்பாலான வங்கிகள், அரசிடமிருந்து ஏராளமான பணத்தினை பெற்று, தங்களது நெருக்கடியைப் போக்கிக்கொண்டன. அவையனைத்தும் மக்களின் வரிப்பணம். உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மக்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டன.

 

நிறுவனம் டாலரில் பெற்ற தொகை கிரேக்கத்தின் தேவையில்எவ்வளவு %?
சிட்டி குழுமம் 2,513,000,000,000 680
மோர்கன் ஸ்டான்லி 2,041,000,000,000 552
மெரில் லின்ச் 1,949,000,000,000 527
பேங்க் ஆஃப் அமெரிக்கா 1,344,000,000,000 364
பார்க்லே பிஎல்சி 868,000,000,000 235
பேர் ஸ்டேர்ன்ஸ் 853,000,000,000 231
கோல்ட்மேன் சாக்ஸ் 814,000,000,000 220
ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து 541,000,000,000 147
ஜேபி மார்கன் 391,000,000,000 106
தாஷ் பேங்க் 354,000,000,000 96
யு பி எஸ் 287,000,000,000 78
கிரெடிட் சூசே 262,000,000,000 71
லேமன் பிரதர்ஸ் 183,000,000,000 50
பேங்க் ஒப் ஸ்காட்லாந்து 181,000,000,000 49
பிஎன்பி பரிபாஸ் 175,000,000,000 48
வெல்ஸ் ஃபார்கோ 159,000,000,000 43
டெக்சியா 159,000,000,000 43
வாகோவியா 142,000,000,000 39
ட்ரெஸ்ட்னெர் பேங்க் 135,000,000,000 37
மொத்தம் 13,351,000,000,000 3609

 

மேலும் சில சிறிய வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், 16 ட்ரில்லியன் டாலர்களையும் தாண்டுகிறதாம். பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், மக்களின் வரிப்பணம் வாரிவாரி இறைக்கப்படுகிறது. அதே ஒரு தேசத்திற்கே பிரச்சனை என்றால், அப்போதும் மக்களே சுரண்டப்படுகின்றனர். கிரேக்கத்தின் 370 பில்லியன் டாலரை தள்ளுபடி செய்தால், அந்நாட்டின் ஒரு கோடி மக்களும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடர முடியும்.

மீண்டெழுந்த அர்ஜெண்டினா:

அர்ஜெண்டினா என்கிற தென்னமெரிக்க நாடு 1824ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் கடனில் சிக்கியது. அப்போதிலிருந்து தொடர்ந்து கடன் தான். அதிலும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடன் கழுத்தை நெரித்தது. புதிய தாராளமயக் கொள்கைகளை சோதிக்கிற பரிசோதனை நிலமாகவே அர்ஜெண்டினாவை நடத்தியது சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.)

 

அந்நாட்டில் எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளிடம் கொடுக்க வைத்தது ஐ.எம்.எஃப். அரசின் நிதிவருவாய் குறைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லாமல் போயிற்று. 2001-ல் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராட துவங்கியதும், வேறுவழியின்றி ஐ.எம்.எஃப்-க்கு உறுதுணையாக இருந்த அர்ஜெண்டினா அதிபர் கார்லஸ் மேனம் ஓடி ஒளிந்துகொண்டார்.  வாராவாரம் அதிபர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தனர். நெருக்கடியின்போது  2003 இல் நடந்த தேர்தலில், நீதிக்கட்சி வெற்றிபெற்றது. கிர்சனர் அதிபராக பொறுப்பேற்றார். மக்கள் போராட்டங்களிலிருந்து வெற்றி பெற்ற அதிபர் என்பதால், ஐ.எம்.எஃப்-க்கு அடிபணியவில்லை.

 

ஒரு நாடு திவாலாகிறபோது இரண்டு முக்கியமான பிரச்சனைகள் அந்நாட்டின் முன் இருக்கும்:

  1. நாட்டின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி தொய்வடைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, அடுத்தவேளை சோற்றுக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியிருக்கும்.
  2. நாட்டின் உள்நாட்டு/வெளிநாட்டு கடன்களும் வட்டிகளும் திருப்பி செலுத்தமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கும்.

இவ்விரண்டில், புதிய அர்ஜெண்டினா அரசு முதல் பிரச்சனையை தீர்ப்பதிலேயே ஆர்வம் காட்டியது.

 

  1. அர்ஜெண்டினா திவாலானதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  2. கடன்களை மறு ஆய்வு செய்து, கடன் வழங்கியவர்களோடு விவாதித்து, கால அவகாசத்தை 2002-2008 வரையில் திருப்பித் தருவதற்கான திட்டத்தை முன்மொழிந்தது அர்ஜெண்டைனா அரசு.
  3. முதலாளிகளால் கைவிடப்பட்டு பூட்டுபோடப்பட்ட தொழிற்சாலைகளை, தொழிலாளர்களே ஆக்கிரமித்து நடத்தத் துவங்கினர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாக முடிவெடுத்தனர். எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும், விருப்பப்பட்டால் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம் என்று அர்ஜெண்டினா அரசு சட்டமே இயற்றியது. அதன்மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணியிழப்பு தடுக்கப்பட்டது.

 

வெனிசுலாவும் அர்ஜெண்டினாவிற்கு தன்னாலான உதவிகளை செய்தது. அர்ஜெண்டினாவின் கடன்களுக்கான பத்திரங்களை வெனிசுலா வாங்கியது. அதன்மூலம், அர்ஜெண்டினாவிற்கு கடன்களை தீர்க்க சிறிது காலஅவகாசமும் கிடைத்தது.

டங்கமறுத்த ஈக்வடார்:

தென்னமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய நாடு ஈக்வடார். ஆனால் ஈக்வடாரின் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டு மக்கள் பார்த்ததெல்லாம் சர்வாதிகாரமும், ஏழ்மையும், கடன்களும், பொருளாதார அடியாட்களையும் தான்.

 

1982இல் ஐ.எம்.எப்-ன் நிர்வாகிகள் சிலர் ஈக்வடாருக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்களோடு கடன்கொடுக்கத் தயாராக இருந்த சிலரும் உடன் சென்றனர். ஈக்வடாரின் தேவைகளையும், கடந்தகால கடனை திருப்பிச் செலுத்த பணம் தேவை என்கிற நிலைமையையும் குறிப்பிட்டு மேலும் கடன் வழங்கினர். கடன்தொகையின் முதல் ஏறிக்கொண்டே இருந்தது. வட்டியை செலுத்துவதற்கு, மீண்டும் கடன் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டது ஈக்வடார்.

 

இத்தகைய பொருளாதார தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடும் ஜான் பெர்கின்ஸ் என்ற முன்னாள் பொருளாதார அடியாள், “என்னுடைய முக்கியமான பணி, ஈக்வடார் இந்தோனேசியா போன்ற மூன்றாமுலக நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுவதுதான். அவர்களால் திருப்பித் தரவே முடியாத அளவிற்கு பில்லியன் கணக்கில் கடன்களைத் தருவது தான் என் வேலை. ஆனால் அந்நாடுகளுக்கு  ஒரு நிபந்தனை விதிப்போம், அவர்களுக்கு அளிக்கும் கடன்தொகையில் 90%த்திற்கும் மேலான பணத்தை அமெரிக்க முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் குத்தகைகள் கொடுப்பதிலேயே செலவு செய்யப்படவேண்டும் என்பது தான் அது. அந்நிறுவனங்களும் கடன் வாங்கிய நாட்டிற்கு சென்று பாலங்கள் கட்டுவது, போக்குவரத்து வசதிகளை நிறுவுவது போன்றவற்றை செய்வார்கள். அவையாவும் அந்நாட்டின் பணம் படைதவர்களுக்கே பயன்படுமேயன்றி, ஏழைகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த கடனில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கும். அந்நாடுகள் நிரந்தர கடனாளிகள் ஆகிவிடுவார்கள். ஆகா, நாங்கள் போட்ட பணத்தை எங்கள் நிறுவனங்களுக்கே வந்துசேர்ந்துவிடும். அந்த நாடும் தொடர்ந்து எங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டே இருக்கும்.”

 

1985 இல் துவங்கி 2005 வரை ஈகுவேடாரின் 50% வருவாய், கடன்களை திருப்பி செலுத்தவும், அதற்கான வட்டியை அடைக்கவுமே செலவிடப்பட்டது. இதனால் வருடத்திற்கு 3-4 பில்லியன் டாலர்களை ஈக்வடார் இழந்தது. ஆனால் நாட்டின் அடிப்படை தேவையான மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 4% கூட செலவிட முடியவில்லை. வறுமை தலைவிரித்தாடியது. நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது.

 

மாற்றத்திற்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய லூசியோ அதிபராகிற நேரத்தில் போராட்டங்கள் அடங்கின. ஆனால் அவர் மேலும் பல ஒப்பந்தங்கள் போட்டு, மக்களின் வரிச்சுமையை அதிகரித்தார்.

பல போராட்டங்களுக்குப் பின்னர் அந்த நாட்டின் அதிபராக பொருப்பேற்ற இடதுசாரியான ரஃபேல் கொரேயா, “சர்வதேசக் கடமைகளைவிடவும் நமக்கு முக்கியமான தேசக்கடமைகள் இருக்கின்றன. சர்வதேச கடன்களை அடைக்கும் நிலைக்கு முதலில் நாம் வருவோம். அதன்பிறகு, அவர்களுக்கு பதில் சொல்வோம். நாம் உயிரோடு வாழ்வதுதான் இப்போதைக்கான முன்னுரிமை. கடன்களை திருப்பி செலுத்துவது இரண்டாம் பட்சம்தான்” என்று அறிவித்தார்.

 

முதலில் ஈக்வடாரின் மத்திய வங்கியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த .எம்.எப். மற்றும் அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றினார்.

 

வெறும் பேச்சோடு நிற்காமல், பதவியேற்று 6 மாதகாலத்திற்குள் ஈக்வடாரின் கடன்களை மறுஆய்வு செய்வதற்கு தணிக்கைக்குழு ஒன்றை நியமித்தார். 22 பேர் கொண்ட அக்குழு, 14 மாதங்கள் ஆய்வு நடத்தி 1956 முதல் 2006 வரையில், ஐ எம் எப், உலக வங்கி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொடுத்த கடன்களும், எல்லா பரிவர்த்தனைகளும் அலசி ஆராயப்பட்டது. அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எந்த நாடும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரான்சின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி ஈக்வடாருக்கு கண்டனம் தெரிவித்தது நிதியமைச்சகம். எல்லா தடைகளையும் தாண்டி ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. மக்களின் முன்னிலையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 70% கடன் முறையற்ற கடன் என்று ஈக்வடார் அரசு அறிவித்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஈக்வடாரின் கடன்பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டவர்கள், மிகக் குறைவான விலைக்கு (20% அளவிற்கு) அதனை விற்றனர். இவற்றை மறைமுகமாக ஈகுவடார் அரசே வாங்கியது, இதனால் 3 பில்லியன் டாலர் அளவிலான பத்திரங்களை வெறும் 800 மில்லியன் டாலருக்கு ஈக்வடார் அரசு வாங்கியது.   இப்படி 7 பில்லியன் டாலர்கள் வரை சேமித்தது ஈக்வடார் அரசு.

 

பணக்காரர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்களா? வரிசெலுத்தியே பழக்கமில்லாத பெரும் பணக்காரர்கள் மீது ஈக்வடார் அரசு வரி விதித்துள்ளாதால், அந்த நாட்டில் குழப்பத்தை உருவாக்க பணக்காரர்கள் போராடத் துவங்கியிருக்கிறார்கள். ரஃபேல் கொரேயாவின் அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

கிரேக்கம் – இன்றும் நாளையும்:

அர்ஜெண்டினா மற்றும் ஈக்வடாரைப் போலவே மக்கள் போராட்டத்தின் வழியாக, சிரிசா என்ற கட்சியின் தலைமையில் ஒரு முற்போக்கான அரசு இவ்வாண்டு துவக்கத்தில் பதவியேற்றது. இழப்பதற்கு எதுவுமில்லாத ஏழைகள் தான் போராட வருவார்கள் என்று மார்க்ஸ் சொன்னதைப்போல, கிரேக்கம் மிகமிக மோசமான நிலையில் இருக்கும்போது தான் புதிய ஆட்சியே பொறுப்பேற்றது. அதனால், நெருக்கடியிலிருந்து மீண்டுவருவது கிரேக்கத்திற்கு அத்தனை எளிதானதல்ல என்பதை புதிய அரசு உணர்ந்தே இருந்தது. ஈக்வடாரின் பாதையைப் பின்பற்றி, கிரேக்கமும் “கடன் மறுஆய்வுக்குழு” அமைத்தது. ஈக்வடார் கடன்களை ஆய்வு செய்த குழுவில் பங்கெடுத்த பெல்ஜியத்தைச் சேர்ந்த எரிக் துசன் தான் இக்குழுவை தலைமையேற்று நடத்துகிறார். அவர் மூன்றாம் உலக நாடுகளின் கடன் ஒழிப்புக் குழுவின் சர்வதேசத் தலைவராகவும் இருக்கிறார். அக்குழு ஜூன் மாதம் வெளியிட்ட முதல் அறிக்கையின்படி ஏராளமான கடன்கள் “முறையற்ற கடன்கள்” தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில், மக்கள் மீது அதிக வரிகளை திணிக்கச் சொல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளை ஏற்கமாட்டோம் என்று புதிய அரசு அறிவித்தது. கிரேக்க அரசின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த யானிஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியமாட்டோம் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை பொருளாதார் தீவிரவாதிகள் என்று சாடினார்.

கிரேக்கத்தில் ஒரு இடதுசாரி அரசு அமைந்ததை ஐரோப்பிய கமிஷனாலும், ஒன்றியத்தாலும், ஜெர்மனியாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்னெப்போதையும்விட பேச்சுவார்த்தைகளில் கடுமையாகவே நடந்துகொண்டனர். ஆனால், அவர்கள் விதிக்கிற கட்டளைகள் எதற்கும் விட்டுக்கொடுக்காமலேயே இருந்தார் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ். ஐரோப்பிய முதலாளிகள் எல்லோரும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வர, யானிஸ் மட்டும் எளிமையாக எப்போதும் போல சாதாரண டீ சர்ட்டிலேயே மிகப்பெரிய பேச்சுவாத்தைகளில் பங்கெடுத்துவந்தார். சிக்கன நடவடிக்கைகள் என்கிற பேரில் எவ்வித நிதிநெருக்கடிகளையும் மக்கள்மீது திணிப்பதை யானிசும், சிரிசா கட்சியும் எதிர்த்தே வந்தன.

கிரேக்க அரசு முன்வைத்த எந்தத்திட்டத்தையும் ஏற்க ஐரோப்பிய ஒன்றியமும் தயாராக இல்லை. “முந்தைய அரசு ஒப்புக்கொண்டவற்றை எல்லாம் மாற்ற உங்களுக்கு உரிமையில்லை” என்று நேரடியாகவே கிரேக்கத்தின் புதிய அரசு அதிகாரமற்றது என்றனர்.

இதற்கிடையே “சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறீர்களா? இல்லையா?” என்று மக்களிடம் ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகளின் வற்புறுத்தலின் காரணமாக, வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது அரசு. “இல்லை” என்று சொன்னால், கிரேக்கத்தை யூரோவை விட்டே துரத்திவிடுவோம் என்றெல்லாம் மறைமுகமாக மிரட்டினர். கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகளும், முன்னாள் ஆட்சியாளர்களும் கூட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக “ஆம்” என்று வாக்களிக்கவே பரிந்துரைத்தன. ஆனால், மக்கள் எதற்கும் அஞ்சாமல், கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் “இல்லை” என்று தெளிவாக பதிலளித்திருந்தனர். (61 சதவீதம் பேர்)

இதனால் மேலும் கோபத்திற்குள்ளான ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்போது கிரேக்கத்தின் நிதியமைச்சரான யானிஸ் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். இங்கிருந்துதான் சிரிசா கட்சியின் தலைமையிலான புதிய அரசு மெல்ல தடுமாறத் துவங்கியது. வேறுவழியின்றி தன்னுடைய நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் யானிஸ். ஈக்வடாரின் ரஃபேல் கொரேயாவைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக விமர்சித்துவந்த கிரேக்கத்தின் நிதியமைச்சரை கடும் நெருக்கடி கொடுத்து பதவி விலக வைத்திருக்கிறார்கள்.

புதிய பேச்சுவார்த்தை… புதிய நெருக்கடிகள்…

கிரேக்க அரசு ஒரு இடதுசாரி அரசாக இருப்பதனாலேயே, ஐரோப்பிய ஒன்றியம் மிகக்கறாராக இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்பதுபோல, கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகள் ஒதுங்கியிருக்கின்றன. யானிசின் பதவிவிலகலைத் தொடர்ந்து மீண்டும் புதிய பேச்சுவார்த்தைகள் துவங்கின. தங்களால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று கிரேக்க பிரதமர் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்கு மாற்றாக, அவர்களே சில சீர்திருத்தங்களை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தொடர்ந்து பேசலாம் என்று கடுமையாக நடந்துகொண்டனர். 17 மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ஜெர்மனியும், கிரேக்கமும் அறிவித்தன. இறுதியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கிரேக்க பிரதமர் கையெழுத்திட்டார். கிரேக்க பாராளுமன்றத்தில் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்புதல் பெற்றுவிட்டு வருமாறு கிரேக்க பிரதமருக்கு காலக்கெடுவும் கொடுத்திருந்தனர்.

திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தம், மிகக்கொடூரமான பொருளாதாரப் போர் ஒப்பந்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

  • மதிப்புக் கூட்டு வரியினை உயர்த்த வேண்டும்.
  • ஓய்வூதியத் திட்டத்தை குறைக்கிற வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
  • அரசின் அதிகாரத்தை பல துறைகளில் குறைத்திட வேண்டும். அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கிற குழுக்களுக்கு அதிகாரம் அளித்திட வேண்டும்.
  • எல்லாவற்றையும் பார்வையிட ஐ.எம்.எஃப்.க்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களிடம் கேட்டுதான் எதையும் செய்யும் வேண்டும்.
  • நெருக்கடி மேலாண்மை அதிகாரத்தை ஐரோப்பிய கமிஷனுக்கு வழங்கிட வேண்டும்.
  • அரசின் வசம் இருக்கும் மின்சார துறையை, தனியார்மயமாக்க வேண்டும்.
  • முதலாளிகளுக்கு அதிகளவில் அதிகாரம் இருக்கும் வகையில், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த வேண்டும்.
  • நிதித் துறையில் அரசின் தலையீடு இருக்கவே கூடாது.
  • 50 பில்லியன் யூரோ வரையிலான அரசின் சொத்துக்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.
  • அரசு நிர்வாகத்தில் அரசின் அதிகாரத்தைக் குறைத்து, ஐரோப்பிய கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
  • கடந்த 6 மாத காலமாக புதிய அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை கிடப்பில் போட வேண்டும்.
  • எவற்றையெல்லாம் தனியார்மயமாக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும் ஆராய்ந்து அறிக்கை வழங்கும். அதனை கிரேக்க அரசு நிறைவேற்ற வேண்டும்.

என்ற நிபந்தனைகளை அந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

மக்கள் மீது நிதிச்சுமைகளை ஏற்றுவதை எதிர்த்தே, புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்களையும் கட்டாயப்படுத்தி, எல்லாவகையான நெருக்கடிகளையும் கொடுத்து, அதே கொள்கைகளை தொடர வைத்திருக்கின்றன ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும். கிரேக்கம் பயணிக்கவேண்டிய சரியான பாதை இதுவல்ல. சிரிசா என்பது மக்களின் போராட்டத்திலிருந்து உருவான இயக்கம்தான். மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்காவிட்டால், நாளை வேறொரு இயக்கமே உருவாகக்கூடும். நாடுதழுவிய வேலை நிறுத்தத்தை கிரேக்க தொழிற்சங்கங்கள் அறிவித்துவிட்டன. மக்கள் மீண்டும் வீதிகளில் போராடத் துவங்கிவிட்டார்கள். உலகெங்கிலும் சமூக வலைத்தளங்களில் கிரேக்கத்திற்கு ஆதரவு குவியத்துவங்கியிருக்கின்றன. “#ThisIsACoup” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கிரேக்க நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரும்போது, அவ்வொப்பந்தத்தையே நிராகரிக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். சிரிசா கட்சியில் உள்ள 109 மத்தியக்குழு உறுப்பினர்கள் (மொத்தம் 201 பேர்) இணைந்து, “பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களியுங்கள்” என்று தங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் வலதுசாரிகளின் ஆதரவையும் இணைத்துக்கொண்டு நிறைவேற்றிவிட்டனர்.

கடுமையான நெருக்கடியிலும் மிகச்சிறிய நாடான கிரேக்கத்தின் மக்கள் வலுவாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதும், நம்முடைய நாடுகளிலும் நுழைய முற்படும் பொருளாதார பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதும் இடதுசாரிகள் முன் உள்ள வரலாற்றுக் கடமைகள்.